logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

அண்ணாமலை பஞ்சரத்தினம்

திருச்சிற்றம்பலம் 

சீர்கொண்ட செம்பொற் சிலம்பொலி யலம்பிடும் செஞ்சரண கஞ்சங்களும்
    சித்ரமிகு புலியதளி னாடையும் நீற்றணி சிறந்திலங் கிடுமேனியும்
கார்கொண்ட விடமுண்ட கண்டமும் மான்மழுக் கருதுதம ருகவஸ்தமும்
    கங்கையொடு திங்களுந் தங்குமுயர் வேணியும் கனககுழை தொழ்குசெவியும்
தேர்கொண்ட அன்பருக்கருள் கருணை விழிகள் சிறந்தவதன முமிலங்கத்
    தெரிசன மெனக்கனுதினம் கொடுத்தெண் ணியவை சித்தியாம் படிமுடித்தாள்
ஆர்கொண்ட புயல்பரவு சோலையொடு கழனிக ளமைந்துதிரு வோங்குநகராம்
    அண்ணா மலைக்கதிப உண்ணா முலைத்தலைவ அண்ணா மலைத்தேவனே.  (1)

அஞ்சமிசை வருமயனு மம்புயங் கண்ணணு மமரர்பல ரும்பரவிடும்
    ஐயனே சூலதர கையனே துய்யநீற் றணிவிளங் கிடுமெய்யனே
வஞ்சமிகு நெஞ்சற்பாற் சென்றுமிக கெஞ்சியே வாடியோடித் திரிந்தே
    வாணாளை வீணாக்கி யுள்ளங்கரைந் திடும்வாழ்க்கை யெற்கரு ளாமலுன்
செஞ்சரண கஞ்சம் திறைஞ்சுநய மிஞ்சவருள் தேக்கியே காத்தருளுவாய்
    செப்பரிய வேதமுடி வினினட மிடும்பாத தேசிகவி னோதவமலா
அஞ்சமெனு மென்னடை வஞ்சியர்கள் கொஞ்சிவள ரணிமாட மிகவிலங்கும்
    அண்ணா மலைக்கதிப உண்ணா முலைத்தலைவ அண்ணா மலைத்தேவனே.   (2)

வடிவமிகு மங்கையர்கள் மென்மலர்க் குழலிலும்வளர் பிடியை நிகர்குடையிலும்
    மாயமிகு பொடியணிப் பூச்சிலுங் கைவீசுவரி சைமிகு உரிமைதனிலும்
துடியெனும் இடையிலும் வண்ணமிகு உடையிலும் துப்புவா யிதழ்மொழியிலும்
    சொல்லரிய அம்பைநேர் விழியிலுஞ் செப்பெனத் தோன்றுமிரு தனமதனிலுள
கடியவீடர வின்படநிகர் நிதம்பயிலும் செழுமைமிக் கதலிநிகர் துடையிலும்
    வடிவிலுஞ் சிக்கியே கர்மாங்கடத்தனே வாடிடாமல்
அடியனுமை போற்றுநல் வாழ்வெனக் கருளியே அஞ்சலென் றாதரிப்பாய்
    அண்ணா மலைக்கதிப உண்ணா முலைத்தலைவ அண்ணா மலைத்தேவனே.  (3)

சம்பந்தப் பர்சுந்தரர் வாதவூரரொடு தண்டமிழ் வல்ல புலவர்
    தங்களது தியேற்றவர் கருத்தை நிறைவேற்றியே தற்காத்ததுவுமன்றி
உம்பருட னடியவர்கள் போற்றிக்கிரங்கி யவருள்ள மிகுமகிழ் சிறக்க
    உற்றவல் லிடர்களைந் தரியசுக பதவியை உதவிமுன் னாளவிலையோ
நம்பிந்த சிறியவன் முறைகேட்க வில்லையோ நாதனேவர்மமோ
    இன்னாள் காறு மேயுற்ற துன்பமோ பெரிதுமா நாயகா அன்புவைத்தே
அம்புவியின் பேரின்ப வாழ்வினை யுதவியே அண்ணலே ஆதரிப்பாய்
    அண்ணா மலைக்கதிப உண்ணா முலைத்தலைவ அண்ணா மலைத்தேவனே.   (4)

அருமைமிகு நினதிருச் சரணமெக்காலமு மகலாதுளே யிருத்தி
    அன்பெனும் புனலாட்டி இன்சொலா மலர்சாற்றி அரியதமிழாற் போற்றியும்
கருணை சற்றேனு மில்லாமலிவ் வடிமையைக் கலங்கவிடு வதுநீதியோ
    கடையனென் முன்சொற் கிரங்கியே மங்கள சுகானந்தவாழ் வுதவுவாய்
தருண மிதுவேபரம சுந்தரி மணவாளா சதானந்த சுகுணதீபா
    சலனபவ மலரஹித தாரக சொரூபா ஸ்ரீசச்சிதா னந்தபரமே
அருணகிர ணஜ்ஜோத்தீ யம்புயப்பா தனேஅடி யவர்க்கருள் நாதமா
    அண்ணா மலைக்கதிப உண்ணா முலைத்தலைவ அண்ணா மலைத்தேவனே.  (5)


                    முற்றும் 
 

Related Content