logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

உண்ணாமுலையம்மன் சதகம் (மகாவித்வான் சின்னகவுண்டர்)

திருச்சிற்றம்பலம்

இயற்றியவர்  மகாவித்வான் சின்னகவுண்டர்

காப்பு நேரிசை வெண்பா


உண்ணா முலைமாய னோங்குதங்கைச் சங்கரிமே
லுண்ணா முலைச்சதக மோதுதற்குக்- கண்மூன்று
வேழ முகத்தானை வேழ முகத்தானை
வேழ முகத்தானை வேண்டு.

            அவையடக்கம்

பார்மிசையி னாவலர்மு னானுமொரு புன்சொலைப் பகர்வதென் சமதையெனிலோ,
    பாதலந்  தனிலாதி  சேடனுயரண்டம் பணாமுடி தனிற்சுமந்த,
சீர்நிகரியானுமண் டஞ்சுமப்பேனெனச் சிற்றெறும் புகளுமுட்டை,
    சிதைந்தவொட் டைச் சுமந்ததுபோலவென்  கவித்திறமையா மிதுவலாமல்,
கூர்மையொடு தான்பெற்ற பிள்ளைசிறு வயதினிற் குளறுகிற மழலை மொழியைக்
    குற்றமென்றேகற்ற பெரியோர்க ளிகழ்வரோ குலவுவா லாம்பிகைபெயர்,
சார்வாகவிதனுள் ளிருக்கையாலியாவருஞ் சரியென்று கைக்கொள்ளுவார்,
    தக்கபெரியோர்களம் மிக்கசிறு பிழையையும் தான்பொறுத் தருள்செய்வரே.  


                நூல்

உலகமிசைமேவிய சராசரத்தெழுவகையி லுண்டானபேத மதனி,
    லுள்ளுயிரதாய் நின்று விளையாடியுங்கருணை, யோங்கு பிரணவ வுருவமா,
யிலகுதிரி யட்சர சடாட்சர பீசாட்சரத்தினியபஞ் சாட்சரத்தோ,
    டேற்குமைம் பதினுடனோ ரட்சரந் தன்னிலுமியல் பஞ்சகிர்த்திய முதலாய்,
பலபலவிதங்களாய்நின்ற பொருணீயென்று பழமறைகண் முறையீடுதலால்,
    பகரவினி வேறுமொரு தெய்வமுண்டோ சொலும் பரப்பிர்ம ஞானவடிவே,
தலைவியரு ளோங்கார ஸ்ரீங்கார வல்லி சிவசத்தியே முத்தி முதலே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணா முலையம்மையே.    (1)

            பிராமணரியல்பு

கதிரோனுதிக்குமுனெழுந்து ஸ்நானஞ்செய்து காயத்திரி செபதபமெலாங்
    கருதிவழுவாமலே முடித்தபின் றிரிசந்தி காலருக்கியங்கொடுத்து
அதிகபுகழ்சேர்கருதி நூல்கற்கவும் வேள்வி யாகங்கள் செய்விக்கவும்
    அறிவுடன் பலசாத்திரம் பிரசங்கிக்கவு மவனிமிசையெவர்களுக்கும்
விதிவழியறிந்து சாதகமெடுத்தோதவும், மிக்கதவமேன்மையதனால்
    வேதியர் தமைத்தெய்வ மென்றுகலியுகமதில் விளம்புவர்கள் யாவருந்தான்
சதுர்மறையி லெட்டாத திருநயனவல்லியே சாம்பவி கன்னியரசீ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணா முலையம்மையே,   (2)

            அரசரியல்பு

ஆளுகையி  னுலகிற் பிறக்குஞ்சமாசார மன்றாடகம் விசாரித்
    ததற்குமேலேத்தனஞ்  சொல்லுமதி யுக்தியா யமைச்சனொருவனையுநேமித்
தேளிதப்பயலென்னலார்முடி துணித்தவனியெங்குமொரு குடையுளாக்கி
    யிதமுறுஞ் சேவகர்க் கவரவர்தராதரத்தேற்ற சம்பளமுமீய்ந்தே
நாளினுக்குக் குடிகளுழுத பூமிக்கநிதி ஞாயமுடனே தெண்டியும்
    நாலெட்டறத்தையுஞ் சீலமுடனேசெய்து நல்லசற்குண மிசைந்து   
தாளினிற் பணிபவர்க் காறுதலை சொல்வதுந் தரணியான் மன்னர்முறைமை
    தருமேவு மருணைகிரி  யீசர்பா லுறையுலகு தாயுணா முலையம்மையே.  (3)


            மேழிச்சிறப்பு

செகதலந்தனிலாசர் மனுநீதி முறைமையும் செய்யவேதியர் தர்மமும்
    சித்தவொரு மைத்தவமு முத்திநிலையும் புகழ்சிறந்த தேவதைமகிமையும்
சுகவனிதை மேலின்ப மயல்கொள்வதும் பொருட் சுருதியொடு பலகாவியம்
    சொல்கல்வியுங் கருணையில்லிலறமுந் திவ்யசுந்தர விலாசவெழிலும்
அகமகிழ்ந்திடு செல்வமும் பரிவுதாரமு மதிக்குல மேன்மை வளமும்
    அடையலரை வெல்வதுங் கீர்த்திப் பிரதாபமு மஞ்செழுத் துணர்வுநிலையும்  சகலமும்
புவிமிசையில் வேளாளர் மேழியின் றனதுடைய பெருமையலவோ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணா முலையம்மையே  (4)


            நல்வழிப்போதனை

அதிகாலமேமாக கணபதி தனைப் பணிந் தகல்வதை மறக்கவேண்டா
    மதிகமயல்கொண்டு நற்கற்புடைய வனிதை மேலாசையது வைக்கவேண்டாம்
துதிபெறுந்தாய் தந்தை குருவுடன் பெரியோர்கள் சொல்லதனை யிகழவேண்டாம்
    சோர்வுற்ற கொலைகளவு பொய்யுடன் கந்தையுஞ் சொப்பனத்திலு வேண்டாம்
நிதிமமவாதையாலே பரதேசியர்க் கன்னமது நேராதிருக்கவேண்டாம்
    நீணிலந்தனையாளு மரசரை வணங்காம ணேருடன் பகைக்கவேண்டாம்
சதியது வராமலிப்படி, மனிதருக்கியல்பு சாற்றினோந் தருமநெறி தான்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (5)

        
            மனிதரில் தெய்வமென்பவர்


அந்தணர்க்கனதானமீய்வதும் வேள்வியாகங்களை முடிப்பிப்பதும்
    அரும்பொருளளித்தீச ராலயஞ்செய்வித்து மதினந்தனம்படைத்தும்
செந்தமிழ்க்கவிஞர்பாடுந் தமிழ்கேட்டுமிச்செகமெலாங் கீர்த்திபெற்றும்
    சிவனை மறவாதஞ்செழுத்திருதயத்தினிற் றியானித்துவரு முறைமையும்
பந்துஜன மொடுபுவியி லியார்க்குமொரு தீங்குறைபண்ணா திருக்கையாலும்
    பரிவுடன் புவிமிசையிலெவர்க்கு நல்லவனெனும் பதிவிரதநிலைமையாலும்
சந்ததமுமிப்படிப் புகழ்பெற்ற மனிதரைத் தான் தெய்வமென்று சொலலாம்
    தருமேவு மருணை கிரியீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (6)


            பசிவேளையினில்லாதவை

மதுரநவரசமொழுகு கல்வியும் விச்சித்ரவசனமுங் கனபெருமையும்
    மங்கையர் கண்மேலதிக விரகசல்லாபமும் வண்மையுந் தன்மைநயமும்
சதிருடன் பணியணிந்திடுநாகரீகமும், தனயர்மேல் வருபிரியமும்
    தங்குபுகழ்மானமு மிங்கிதமுயற்சியும் தாடாண்மை யோங்குதவமும்
நிதிமிசையவர்க்கள விலாசையும் புகழுற்ற நேமமும் சூல்வளமையும்
    நிசமாகவிதயமொரு வழிபடுதலுந் திறமைநேர்ந்த புயபலசமர்த்தும்
சதிருடன் பசிவந்தபோதிலிவ் வகையெலாம் சற்று நில்லாது கண்டாய்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (7)


            பயனற்றவை

குருவுரைக்காத வுபதேசமும் பரிமளங் கொண்டிருக்காதமலருங் கூறரிய
    கணவனில்லாததொரு விதைவையுங் குஞ்சரமிலாத தளமும்,
தருவெடுத்துற்பன முரைக்காத மந்திரியும் தனயரில்லாச் செல்வமும்,
    சமயகாலங்களுக் குதவாதபந்துவும் தனமில்லாதவ ரிளமையும்,
நெறிமுறைமை யில்லாதவேந்தனுங் கபடத்தை நேமிப்பர் விசுவாசமும்,
    நேருடன் பயிர்விளைவு தாராதபூமியும், நின்புகழ் சொலாதபேரும்
சரிவரப் புவி மிசையிருந்தென்ன காரியஞ்சாரிசமதேது முளதோ,
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.    (8)

            இல்லையென்பவை

ஆனபல நூலெலாங் கற்றவரிலைத்தலையி லயனெழுத்தறிவதில்லை, அந்திபகலுந்
    தனைப் பணிவோர்க்கு வினையில்லை யாசைக்கு ரோசமில்லை 
மானமது  போனபின் வருவதில்லைக்கவிசொல் வாணருக்குப்
    பகையிலை மாதர்மன தளவறிவ திலையுடன் கவரி மானகப் படுவதில்லை
யீனமுடனே பொருளிலாசை வைப்பவர்களுக்கினிய புகழ்வருவதில்லை யெண்ணரும்
    கனதனம் பெற்றாலு மறையவர்களேற் காதிருப்பதில்லை
தானமது முப்பத்திரண்டறம் வளர்த்திட்ட சாம்பவியருள் சத்தியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே  (9)

        இன்னார்க்கிது முன்னிற்கும்

சுத்தரண வீரருக்குக் கோபமுந்திடும் சோரற்குப் பொய் முந்திடும்
    தோதகக் கள்ளிக்கு விழியினீர் முந்திடுஞ் சொற்புரட்டோது மடைய
லுத்தருக் ககடவிகடங்களது முந்திடு மியோகிகட் கறிவுமுந்தும்
    ஓங்குகவி வாணருக்குக் கல்வி முந்திடு முன்பதத்தினையெனாளும்
சித்தமதில் வைப்பார்க்கு மெய்ஞ்ஞானமுந்திடுந் தியாகிக்குக் கைமுந்திடும்
    தினமுமாயத் துறையிலனி யாயமுந்திடுஞ் சேய்க்கழுகையே முந்திடும்
சத்திகௌரி மாரிசிவ சாம்பவி மனோன்மணி சர்வசீவாத்ம வுருவே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (10)

            ஒன்றிலொன்றடக்கம்

துடிமிக முழங்குபல வாத்தியமெலா நாகசுரமதிற் குள்ளடக்கம்
    சுகமிகுங் காமுகர்கண் மயல்கொண்ட வேளையிற்றோகையர்க்குள்ளடக்கம்
படியினை வளைத்திட்ட சப்தசாகரமெலாம் பண்புதமிழ் முனியடக்கம்
    பாரிடந் தனிலுற்ற  வடுவனைத் துஞ்செய்ய பருதிமதி யாலடக்கம்
அடையலர்  கண்முடியிடறு வீரராயினு மரசராக்கினைக்குள்ளடக்கம்
    ஆதியடி யாருமறி யாததிரிலோசனனு மன்பரிதயத்தடக்கம்
தடமுறுங்கருணைவிழி யம்பிகாமலை யுதவுதற்பரீ இடியர்பாகா
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (11)

            தாசிகளியல்பு

காரொத்தகுழலினைச் சீவிப்பகுந்ததிற் கழல்மலரினைப் புனைந்து
    கலை நுதலிலிற் கனகதிலதமிட்டுக் கயற்கண்ணிலஞ்சன வரைந்து
வாருற்ற குங்குமக் கொங்கையிற் பரிமள வசந்த பாளிதஞ்சவ்வாது
    வாடைக டிமிர்ந்துபட் டாடை சிற்றாடை யீ துவகையுடன் கொய்துடுத்துச்
சீரொடு சரிந்த முக்கா டொருபுறந்தனந் தெரிவ தொயிலாய் மறைத்துச்
    சிலம்பொலி புலம்பிட நடந்திகழ் திறந்தினிய சிறுநகைசெய்திளை  ஞர்வாழும்
சார்பினிற்சென்று விழிவலைவீசி மயல் தருவர்  தாசிகண்டத்தை யிதுவாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (12)


            இதுவுமது

பொதுமடந்தையர் வீடு சதுர்பரவு கச்சேரி புலகுமனையங் காடியாம்
    புந்தியதுவஞ்சகத் தொம்பையவ ளங்கம் பொருந்து வாடாகைமட்டமாம்
நிதிதருங் கொங்கைவிளை  யாடு பந்தாமல்கு னேர்ந்தவர்து வைக்கு முரலாம்
    நிதமுமவளிதழ் தணீர்ப்பந்தலினில் வந்தவர்க ணீர்பருகு கலசவாயாம்
விதமுடன்றழுவுகைக் கிணைதேரின் வடமாகு மிக்கநகை வேம்புரசமாம்
    வேதை தருவார்களவ ராசையது பாஷாண மேதினியிலிப்படியெலாஞ்
சதிகண்டிருந்து மவண்மயல்வலையி லைவதேன் சற்றறிவிலாத பேர்கள்
    தருமேவு மருணை கிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (13)


            இதற்கு இதுநலமென்பவை

கற்றறிவிலாதபர மூடர்களிடத்தினிற் கருதுவிசுவாசமதினுங்
    கல்விநெறி யறிகின்ற பெரியோர்கள் சிந்தையிற் காண்குபகை மிகநல்லதாம்
உற்றசொற்களோ திடும்புசொலுமனைவியருடன் கூடி வாழ்வதினிலும்
    ஓங்குகையி லோடு கொண் டுலகெலாஞ் சென்றிரந் துண்பது மிக நல்லதாம்
பற்றலரிடத்தி லடிபோற்றியே சீவனம்பண்ணிப் பிழைப்பதினிலும்
    பங்கமுறு சடலத்தொழித் துயர் விடுப்பதும் பார்மிசையிலே நன்மையாம்
சற்றுநின் கிருபையுண் டானவர்கணியமித்த சங்கதியெலா நன்மையாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (14)

            மனிதரிற்சுணங்கர்

காசொன்றுமீயாத லுத்தனும் புகழுற்ற கல்வியறியா மடையனும்
    கருதுமனையாளை யொருவர்க் கீய்ந்துதான் றினங்காலட்சியஞ் செய்பவனும்
நேசமுட னன்பிலா மங்கையரை வலுமையொடு நித்திரையிற் போகிப்பனும்
    நிலையிலாப் பொய்சொலுங் கசடனோடசனு நிந்தையுற்றிடு சோரனும்
தூசழுக் குடனணிவ தொடுமேனி சற்றுஞ் சுசீகரமிலாக் காளையும்
    துற்சனம் பலவித விளைப்பனும் புவியினிற் சொற்கொளித்தாய்த்திரிவனும்
தாசசிவயோகியை யிகழ்ந்தவனுமிவரெலாந்தரணியிற் சுணங்கனெனலாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (15)

            தீமையென்பவைகள்

தேவரீரல்லாதுவேறு கதியிலையெனத் தெண்டனிடுவோர் கண்மீது
    சிந்தையிற் கபடம்வைத் தனுதின மலர்க்கிடறு செய்வது கொடுந்தீமையாம்
பாவலரிடத்தினிற் செந்தமிழ்க் கேட்டுநற் பசுவுநல் காமலேபின்
    பாகட்டு மென்று வீணாய் நடப்பித்தும் பவமுறு கொடுந்தீமையாம்
காவலரிடத் தருகிருந்த முதருந்தியுட்கவ டுளவறிந்த பின்பு கருதுமெதிராளியைச்
    சேர்ந்து சமர்புரிவதுங் கடியதோர் கொடுந்தீயதாம்
தாவுபரிமளகந்த குங்குமபயோத ரத்திரிவையே வித்து முதலே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை  யம்மையே.  (16)


            பெருமையென்பவை

மக்களொடு பதினாறு மறிவிலர் பிறந்தென்ன வரிசையொடுவெருமையல்ல
    மன்னுகல்வித் தொழில் விவேக சற்குணனுமொரு மகவு பெறுவது பெருமையாம்
மிக்கதன தான்ய சம்பத்துகள் நேகமுமிருப்பதது பெருமையல்ல
    மேதினியிலேற்பவர்க் கீய்ந்துபுகழெங்கும் விளக்குவது வெகுபெருமையாம்
பக்குவமுறுஞ்சமரி னின்று வீண் பாஷையது பகருவது பெருமையல்ல
    பற்றலர்கண் மகுடமுடி யற்றிடப் பொருதுவது பராக்கிரமம் வெகுபெருமையாம்
தக்கபுகழ் மெய்ஞ்ஞான வல்லியே யருமறைத் தலைவியே யோங்காரியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (17)

            கபடசன்னியாசிகள்

நெற்றியிற் றூளித விபூதி ருத்திராக்கமும் நேசமுறு சடைமுடியுடன்
    நிசமான காவிகாம்பரமும் மணிந்தே மிக நேமமும்
பலவிரதமும், கற்றுணர்ந்தவரனைய சாஸ்திரப் பிரசங்கமும் கையினிற் செபமணிதனை
    கண்மூடி யெண்ணுவது மெப்பொழுது மரனையே கருதுவதுபோன் மொழிவதும்
நற்றவம்புரிகின்ற யோகீசர்வாதமுறை நான்கோடி செய்வமென்பார்
    நாலாறு கைக்கொண்டவ்  வேகராத்திரியிலே நன்றாயொளிந்துவிடுவார்
சற்பனை செய்திந்த வகைவேடம் புனைந்த கடுதான் வளர்ப்பார்கள் வெகுபேர் 
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (18)

            நன்மையிற்றீமை

தேடரிய தருமத்தை நாடினு மவர்க்குமொரு தீமைகள் வராதிராது
    சிறந்தவின்பத்தளவு துன்பமுங்கூடவே சேர்ந்தே வராதிராது
கூடுநிதியெனினூற்றி லொன்றினிற் கழிவுடன் குத்துகளிராதிராது
    கோகநகமேவிய தடாகத்திலுங்கொட்டி கூடி நில்லாதிராது
நாடிரவி மதியுமொரு கணமாயினும் மரவினான் மறைபடாதிராது
    நற்கருப்புக் கட்டியாயினும் கண்மண்ணு நாடாமலேயிராது
தாடகைசம்மார மால் துணைவியே கருணை விழித்தையலே செய்ய புகழார்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே,   (19)

            சிறுமையிற்சிறுமை

ஆசைதரு வேசியொடு நேசமதுவாயினு மதுவுமொரு சிறுமையல்ல
    வன்புடன் காசுதாராமலே ஜாடையாயகலுவது வெகு சிறுமையாம்
பாசமுறு வறுமையா னொந்துடன் மெலிந்து மலைபவது மொரு சிறுமையல்ல
    பாக்கியமிருந்து மிலையென்று பாசாங்குமொழி பகருவது வெகு சிறுமையாம்
நீசர் துரையாயினா லவரிடங் கைகட்டி நிற்பதுஞ் சிறுமையல்ல
    நிதமுமனையாடமக் கேவறான்புரிகுவது நிந்தையுற்றிடு சிறுமையாம்
சாசுவதமாய்ச் சிரஞ்சீவி மார்க்கண்டனைத் தாபரித் தெமனைவென்ற
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (20)

            இன்றியமையாமை

பாவலர்க் குன துசெய லல்லாதுசற்றுமவர் பைந்தமிழ் முடிப்பதில்லை
    பகரறியவிந்திரன் செய்கையில்லாம லிப்பாரின் மழைபொழிவதில்லை
யேவல்புரி கண்ணாளர் தொழிலை யல்லாமலே யெத்தொழிலு மாவதில்லை
    யோம்பர்தனை முந்தி நினையாத கருமங்களேதொன்று மாவதில்லை
மாவிருதர் பஞ்சவர் முகுந்தனருளல்லாமல் வன்சமரில் வென்றதில்லை
    வனலட்சுமி கிருபையில்லாம லியாவர்க்கு மகிழ்செல்வம் வருவதில்லை,
தாவுமல்லிகை முல்லை  யிருவாட்சி சண்பகந் தண்கோடி படர்ந்தபஞ்ச
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (21)

            கன்மத்தால் வருபவை

கற்பித்த வித்தையை மறந்த சடனாவதுங்  கயமுன்செய்தகர்மம்
    கல்வியறியாதவர்க்குப் பாரியாவதுங் கருது பெண் செய்த கர்மம்
சிற்புத்தி யாலேபோய் பொய்ச்சாட்சி சொல்வதுந் தெளிந்து செய்திட்ட கர்மம்
    சிவமாலை மதபேதமொடு தூசணிப்பதுந் தீராதகர்மமாகும்
கற்புற்ற மனைவி விபசாரியா வதமந்த நாயகன் செய்தகர்மம்
    நளசக்கிரவர்த்தியடி கைத்தொழில் புரிந்ததும் நவிலவொண்ணாதகர்மம்
சற்பூரணிபார பரிகரக பாலியே சாம்பவீ சிவகாமியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே,  (22)

            தனத்தால் துக்கமென்பவை

தனமதை வருத்தமாய்த் தேடவும் வியாகுலஞ்சார்ந்திடு மந்நிதியையொருவர்
    தான்கடன் கேட்கக் கொடுக்கவும் வியாகுலந்தந்தபின் சொன்ன கெடுவில்
தினநடந்ததை மெல்லவாங்கவும், வியாகுலந் தெண்டியே கைக்கொண்டினிச்
    சீரல்ல  வூரொம்மலாகு மென்றெண்ணியே செப்பமாய்ச் சொப்பிலிட்டு
மனைதனிற் கல்லிப்புதைக்கவும் வியாகுலம் வைத்த பொருளுக்கு மோசம்
    வாராதிராப் பகல்காக்கவும் வியாகுலம் வலுவரசர் சோரர்பூமி
தனதிலாவன லிவையிலொரு மோசம் வந்திடிற் சாகும்வரை வியாகுலந்தான்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (23)

        இன்னார்க்கின்னதிட்டமென்பவை

படிமிசையி லரசுபுரி மன்னருக் கதிகபொன் பாலிப்பர் மீதிலிஷ்டம்
    பரமசிவனுக்குரிய தவமுயலு மெய்ஞ்ஞான பத்தர்களிடத்திலிஷ்டம்
வடிதமிழுணர்ந்த கவிஞோர்களுக்கீகை புரிமாந்தர்க ளிடத்திலிஷ்டம்,
    மகிலதிக முற்றவிப சாரிக்கு வாலிபவசீகரர்தம் மீதிலிஷ்டம்
அடிமைவானர வெள்ள மெழுபத்திரண்டில் ராமையனுக் கனுமானிஷ்டம்
    அந்திபகலுந்தனைக் கருதித்துதித்தலே யடியனுக்கிஷ்டமம் மா
சடைதிகழ் வினோதபரி பூரணி தயாதிவ்விய சாம்பவீ யேழைபாகா
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (24)

            உலகம் பலவிதம்

காசினியின் மானிடர்க் கயன் விதிப்படியாலே கன்ம வினைவந்தபோது
    ணிகாரர்தமதிட முறைக்கவு முறைப்பாடு கண்டு தீர்த்திடுவனென்பார்
வீசுபுகழ் சோசியரிடத் துரைத்தாலவனுமிக நவக்கிரகாதிகள்
    விரோதித் திருக்கின்ற துபசாந்தி செய்திடவு வேண்டுமென்றே யுரைப்பார்
நேசமுறுதெய்வ மாடுவர்களைக் கேட்கிலுன்னீதியுயர் வீட்டிலுள்ள
    நேரானதெய்வமது சீராடுதென்பார்கணி சவைத்தியர்களைப் பார்த்
தாசைவைத்திது தொந்தரோகமென்பார் விதியின் சங்கதியை யாருமுறையார்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (25)

            இதற்கிதுநலமென்பவை

அட்டதிக் கொன்னலரை வெட்டிசெயங் கொண்டவ் வரசாட்சி செய்வதிலும்
    அரனடியரா யஞ்செழுத் தெண்ணிமெய்ஞ் ஞானமறிவது மிகச்சிலாக்கியம்
வட்டமிட்டுக் கிரமயிற்குழகன் வடகிரியை வலமாகவந்ததினிலும்
    மதகரிமுகக் கடவுள் சிவனை வலம்வந்து கனிவாங்கினது வெகுசிலாக்கியம்
துட்டவினை தொலைய வுலகத்தி னுளதலமெலாஞ் சுற்றியே தொழுவதினிலும்
    சுந்தரமுய  ரருணைகிரியிற் றிருக்கார்த்திகை சோதிகாண்பது சிலாக்கியம்
சட்டமுடனெவ் வுயிர்க்குயிரான பார்வதீ சமய முதலான பொருளே
    தருமேவு மருணைகிரி  யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (26)

        இன்னாருக்கின்னார் விரோத மென்பவை

சொற்புத்தி கேளாத மைந்தர்கள்தன் றந்தைக்குச் சொல்லரியசத்திராதி
    தொலையாத கடன்வைத் திறந்தபின் றந்தையுஞ்  சுதனுக்குச் சத்திராதி
உற்பித்தசிசுவேற தாமளவுமா தாவி னுயிருக்குச் சத்திராதி
    யுட்புகுந்தர சர்பாற் கோட்சொல்லுவோர் தமக்கூரெலாஞ் சத்திராதி
சர்ப்பத்தினுக்கு மண்மீதினிற் கையினிற் றடிகொள்வர்  சத்திராதி
    தன்மனைவி கொடுமைசொலி லென்றவவள் சல்லியந்தணியாத சத்திராதி,
சற்றுமிவைபிசகிலைப் புவிமிசை யிவர்களைச் சத்துருவெனச் சொல்லலாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (27)

            பலனற்றவை

கோத்திர முயர்ந்தென்ன சாத்திரமிலாதவன்  குலவீனனாகுமலவோ
    கொடிய வாபத்திலுதவாததெய்வ மம்மிக் குளவியின் சமதையலவோ,
மாத்திரையிருந்தென்ன தாதுநிலையறியாத வைத்தியனு மூடனலவோ,
    மாடமாளிகையலங்காரித் துமாதரில மனையிடம் பாழதலவோ
ஆத்தினிடை சென்றதிற் றீர்த்தமாடாவிடி லரும்பாவி தானுமலவோ
    அரிய பஞ்சாட்சரத் துபதேசமில்லாத வசடனும் பிரேத மலவோ
தாத்திமியதாவெனத் திருநடனவம்பலத் தானவர்கள் புகழ்கின்ற
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (28)

            அற்பர்களியல்பு

புல்லறி வுளோர்தமக் கதிகாரம் வந்திடிற் புகழறத்தினை விரும்பார்
    புண்யவதி விரதைமேன் மயல்கொள்ளுவார் களிப்புடனுதாசனம் விள்ளுவார்
அல்லுபகலுங் கொடிய கோணினைத் தெவர்களையு மகடவிகடஞ் செய்குவார்
    அன்புடன் பெரியோர்களுக்கிடறு புரிகுவாரதிக கருவங்களுடனே
நல்லுருவினிற்சாய்ந் தெனக்கு நிகரிலையென்று நட்டணைகள் பேசி மெல்ல
    நகைசெய்து மீசைமேற் கைபோடுவார் தன்னடத்தையைப் பார்த்தபின்பு
சல்லியப்படுவர்க்கு நின்கிருபை தங்குமோ தங்காது சற்றுமவர்பால்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (29)

            உலுத்தர் உதவார்

காட்டின் மரமாயினும் நிழலுதவுமறிவிலாக் கழுதையும் பொதி சுமக்கும்
    கதரிச்சுணங்கனுங் கள்ளனை யகற்றிடுங் கைத்துரும் புதவியதிகம்
வீட்டுறும் வாறுகோல்சுத்தமது செய்திடும் வேலிபயிரைக் காத்திடும்
    மிதியடியுமுள்பெவய்யலுக் குதவிசெய்திடும் வீழ்பழய சுவருமறைவாம்  
நாட்டுவதின் மலசலாதிகண் மருந்துக்காகும் நட்பிலாலுத்தநியார்க்கும்
    நல்குபகாரமிலை யாகையாலே முன்னனவின் றதற்கிணையாவரோ,
தாட்டுணையலாதியான்  வேறுகதி யறிகிலேன் றருமஞானக் கொழுந்தே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (30).

            நல்லோரியல்பு

நல்லசற்குணர்தமக் கதிகாரம் வந்திடினு நாவினிற் பொய்யுரைக்கார்
    நம்பினோர்தமை யாதரிப்ப ரெல்லோர்க்கும் நல்வசனமே பகருவார்
சொல்லரிய தருமத்தை செய்குவா ரொருவர் செகத்தினுக் காசைவையார்
    தூயபிறர்  மனைவியைத் தாயெனச் சிந்தையிற் சொப்பனத்திலு மெண்ணுவார்
அல்லலெளியன் வலிய னுரேனுமவர் வழக்க நியாயமது வுரைக்கார்
    அரன்றிருப் பதமலரை யெப்பொழுது மிருதயத் தகலாமல் வைத்து நினையுந்
தல்லிபார்ப்பதியெனத் துதிசெய்வா ராகையால் சாயுச்சிய மீய்வதரிதோ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (31)

            சின்ன மனிதர்

அன்புடன் வாங்கிய கடன் கொடாமனிதனு மபசத்தியமுள மனிதனும்
    அன்னையொடு தந்தை சொல்லிகழ்கின்ற  மனிதனு மபயமென்றஞ்சிமிகவே
நன்மைபெற வந்தோர்க்கு வீண்சொல்லு மனிதனும் நயகுணமிலா மனிதனும்
    நாடோநறும் வேட்டகந் தனி துண்ணு மனிதனும் நல்லோரை யிகழ் மனிதனும்
இன்பமனையாளை வேசிக்கடிமை செய்யவிட்டி தயமகிழ்வுறுமனிதனும்
    ஈனர்களிடத்திலுற வானவீண் மனிதனு மிவர்களெல்லோரு மெளிதாய்த்
தன்பெருமையில்லாத சின்னமானிடரெனச் சாற்றுமே யுலகுமுழுதும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (32)

        இணைசொலிற்பயனிலாதவை

அருங்கானின் மிருகத்தை மானென்று மென்ன பெண்ணான மானிணையாகுமோ
    ஆமணக்கன் விரையை முத்தென்று மென்ன திகழாணிமுத் திணையாகுமோ
வருங்காமனைப்புலவர் வேளென்று மென்சுப்ர மண்யவேட்கிணையாகுமோ
    வள்ளலிருபத்தொருவரென் றென்னவடகைலை வள்ளலுக்கிணையாகுமோ
திறமிலா லோபரைக் கர்ணனென் றென்னவர் தியாகமப்படியீவரோ
    தெய்வமெத்தனை பணிந்தாலு நின்பதசேர்வை செய்வதற் கிணையாகுமோ
தரைமிசை யிலிவர்களுக் கிணைசொலிற் பயனில்லை தற்பரானந்த வொளியே
    தருமேவு  மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (33)

            பழவினைப்பயன்

பொன்னுலகையாளிந்திர னகலியா லாயிரம் பொருது விழியுருவதானான்
    புகழரிச்சந்திரன் விசுவாமித்திர முனியினாற் புலையனுக் கடிமையானான்
முன்னநளனைச் சனியனானவர் தொடுத்தவர் முயன்றென்ன பாடுபட்டார்
    முகுந்தர் ஜானகியுடன் பதினான்கு வருடமும் மொய்வனந்தனி லுறைந்தார்
பன்னரியசேடனுங் குன்மவலியாலுடல் பதைத்தகமெலிந் துழன்றான்
    பகருமுன் பெரியோர்கள் விதியாலலைந்திட்ட பண்டுகதை கேட்டிருந்தும்
தன்னைமுன் வினைவிடாதென்றிராமல் மனிதர்தான் விசனமடைவதேதோ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (34)

                தியாகிகள்

சீருலவு கர்ணனும் புகழ்பெற்ற குமணனும் திருசீதர நந்தியும்
    செயவெண்ணை நல்லூரி னிற்சடைய னும்பரிவுசேர்ந்த சீதக்காதியும்
காரனையகாதலச் சேந்திகாத்தானெழிற் கதிக்கு நல்காமனும்
    பின்கணிசமுறு கச்சியப்பனு மதிக பெரியனுங் கதிருண்டங் காளத்தியும்,
ஏருலவுசோமனு மியரெலாம்புவிமிசையிலினிய தமிழுக்கிரங்கி,
    யிரவலர்க் கோயாம லீந்தேதியாகியென்றெண்ணருங் கீர்த்தி பெற்றார்
சார்புகுணமில்லாத லுத்தருக்கவர்களைச் சரியெனப் பாடலாமோ,
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே  (35)

            பாவவழி

அந்தணர்களுடைமையைத் தெண்டம்பிடித் தீவதது புண்யமலபாவமாம்
    அன்ன சத்திரமதின் முகநோக்கியன்ன மிடவது புண்யமலபாவமாம்
முந்துசம ரிற்றாளில் வீழ்வசமாகவே மொழிவதது வெகுபாவமாம்
    றேவியைப் பரிகனை முக்கொல்வதுனைச் சௌரியா மலபாவமாம் முன்னவன்
சந்ததிகளுடனுண்ண வேயச்ச முறுவ துந்தான் சுத்த மலபாவமாம்
    தனதான்ய வர்க்கமதி லாபவிலைவிற்பதுஞ் சம்பாத்தியமலபாவமாம்
சந்ததமு மிவ்வகை நடத்தியிற் பாவங்கடானணுகல் கலிமகிமையே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (36)

        புண்ணியத்தரலாமென்பவை

குலவீனர் சிவனடிய ராகிலவ ரைப்பணிதல் கொஞ்ச மலவேபுண்யமாம்
    கொடியபகை யாளருக் காபத்திலுதவுவது கோழைமதியலபுண்யமாம்
தலையைத் துணிக்க வேவிடுமம்புதப்புவது தாட்டீ கமலபுண்யம்
    சகல சௌபாக்கியமுடனே வாழ்ந்திருப்பதுந் தன்றிறமையலபுண்யமாம்
நிலையாய் பெருங்காற்றில் வீழ்ந்தவன்றப்புவது நீந்துவலிய புண்ணியம்
    நெடியவாருதியெய்தி மீள்வதும் மீகாமனிலைமையல் வெகு புண்ணியம்
சலதரமடந்தை பூங்குழலியே புவியினிற் றங்குபுண்யங்களி துவாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (37)

            பயனற்றவர்

கண்ணிருந்துங் கண்ணிலாதவர்களாரெனிற் கல்விகல்லாதபேராம்
    காலிருந்துமுடவ ராரெனிற்சிவதலங் கருது மிதியாத பேராம்
மண்ணுடன் பொன்னிருந்தன்ன மீயாதவர்கள் வாயுள்ள பெரியநாயாம்
    வாயிருந்தும் முனது திருநாமமொருதினம் வழுத்தவறியாரூமையாம்
பண்ணிருந்தும் பாடவல்லமையிருந்து முனைப்பாடாதவன் புலையனாம்
    பரிவாக விருகையிருந்துங்குவித்துனைப் பணியாதவருமூடராம்
தண்மையுள விம்மனிதர் புவியிற்பிறப்பதினாற்றனென்ன பலனோசொலும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (38)

            வைசியரியல்பு

சீரிலாமடையரோ டிணங்கிலார் வியாபாரஞ் சிந்தையாய் வந்தபேர்க்குச்
    சித்தமொப்பிப் பத்ரமெழுதிப் பசும்பொனைச் செயலாகவே யுதவுவார்
ஆர்வமுடனே கணக்கா சரமதனிலே யரைவீச முந்திரியெலாம்
    ஆராய்ந்து பார்த்தெழுதி நிலுவைதண்டிப்பொன்னை யருமையாய்ச் சேர்ப்பர்பின்னும்
கூர்மையொடுவேளையா வேளையுமதிற் கரங்கொண்ட மட்டும் பொருளினைக்
    கொள்ளுவதி னாயிரமிலக்க மாயினுமனங்கோணாது செலவழிப்பார்
தாரணிதனிற் பிரபலஞ் சிறந்திடுவைசியர் தங்கடனியற் கையி துவாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (39)

            உலகவழக்கம்

வரிசைப்பிடாரிக்குப்  பொங்கல்வையாமலே மழைபெய்யவில்லையென்பார்
    வந்தகொடுநோயறிந்த வுழ்த மீயாம விம்மனிதனுமிறந்ததென்பார்
சரிவரச் செய்தொழின் முயற்சியில்லாமலேதான் குடியிளைத்ததென்பார்
    தன்றிறமையாலே முன்சொன்னபடி தப்பாது சபதமு முடித்தனென்பார்
ஒருவனவனெதிராளி போனபின்பதி கனகயோகம் வந் துற்றதென்பார்
    உபாத்தியாயர் திறமில்லையாகையாலே மகற்குயர்கல்வி யில்லையென்பார்
சரியிவையெலாமீசர் செய்கையென்றறியாமற் றரணியின் மயங்குவார்கள்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (40)

            ஒன்றாலொன்றுவரும்

தனதென்றகூசாம லரசர்மனைசெல்வோர், தனக்கிழிவ வந்து நேரும்
    தன் கணவனற்ற பெண்ணாருமில்லாவிடிற்றாய வீடுவந்து சேரும்
நினைவு பேதித்துப் பிதற்றவர்தனைப் பித்தனிவனென்று சொல்வ ரியாரும்
    நிணமொத்த விசுவாசமும் பொருள்வழங்குவதி னெடிய பகைவந்து சேரும்
பனகமொடு பலநாளுமே பழகிலொரு தினம் படுவிடந் தருகமீறும்
    படிமிசையிலருணையை நினைத்த பொழுதே பஞ்சபாதக மொழிந்து தீரும்
தனியுன துபாதமல ரல்லாது துணையில்லை தமியன்மேற் கிருபையாகும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (41)

                பொது

மாணிக்கமீய்ந்ததெனு மரவத்தையுலகத்து மனிதர் நம்புவதுமுண்டோ
    மாகனதனம் படைத்தாலுங் கொடாதவரை வையகம் புகழ்வதுண்டோ
பூணிக்கையான நற்றமிழ்வாணர் நாவினிற் பொய்தட்டவட்டமுண்டோ
    புலிபசித்தாலுமது தசையருந்தாமலே புல்லினைத் தின்பதுண்டோ
நாணியெதிராளிமுன் வார்த்தைசொல் வார்களது ஞாங்கரும் வெல்வதுண்டோ
    நாசன் கைபடவுயிர் மீண்டு வந்திப் பெரிய ஞாலத்து முய்வ துண்டோ
காணிக்குமேன்மைச் சவ்வாதுக்குமோவிலை சரியென்றுசொல்வ துண்டோ
    தருமேவு மருணை கிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (42)

        ஒன்றாலொன்று பயன்படாது

வேதாந்த மெய்ஞ்ஞான நூலுணர்ந்தென்ன கொடு வெகுளிமன துள்ளிருக்க
    மிகநய வொழுக்க முடன் வார்த்தைசொலி லென்னவவன் வெகு லோபியாயிருக்க
வாதாடியெதிர்செய்து நின்றென்ன கூறியவழக்கிளைத்தே யிருக்க
    வரிசை யாபரணங்கள் பூண்டென்னமெய்ம்முக வசீகரமிலா திருக்க
கேதாரமொடு தீர்த்தயாத்திரைகள் சென்றென்னகெடுத னினை வுள்ளிருக்கக்
    கெம்பீரமாய்க்கைடிய லாயுதமெ டுத்தென்னகெச பேடியாயிருக்கத்
தாதாவேயுலகுக்கு மாதாவே யெழுவகைச் சராசரத்திலும் முறைந்த,
    தருமேவு மருணை கிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (43)


            மூடர்கள்

சகலகலை கற்றுணர்ந்தா லுஞ்சினத்தைத் தவிர்க்காதவன் மூடனும்
    தந்தைதாய் சொற்புத்தி சிந்தையிலு மெண்ணாது தள்ளிவிடுவோன்மூடனும்
அகமகிழ்ந்தரிசிவன் பூசையினி னினைவு வேறாவ னொருபரமூடனும்
    அன்பிலார் வீட்டிலே வலியவே சென்றுதா னன்னம்புசிப் போன்மூடனும்
சகமதிற் பெண்வார்த்தைகேட் டொருவர்மேற் சண்டைதான் செய்குவோன் மூடனும்
    தயாளுவே, யென்றவர்க் கீவரை விலக்கிடுந் தயையிலாதவன் மூடனும்
தகவிலாதானையே வேறு பங்காக்குவோன் சண்டாள மூடனாகும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (44)

            பயன்படாதவை

உரியவேளானையுஞ் சகுனமது செய்ததா  லுயிர்ப்பீடையது துலையுமோ
    வொருவர் வாழ்வது பொருந்தாமலே காய்ந்ததாலுயர்பவி சவர்க்குவருமோ
பரிபூரணானந்த ஞாயமறியாவிடிற் பரமபதமுங் கிட்டுமோ
    பண்டுநோய்க்குத் தெய்வம்வேண்டியே பொங்கலொடு பலிகொடுத்தாற் போகுமோ
அரியவாருதி நீரினைத்தாகமானபே ரள்ளியுமருந்தலாமோ
    அடையலர்கண் முன்கையிலாயுத மெடுத்தபின்னஞ்சியும் நிற்கலாமோ
சரியெனக்கொருவர் நிகரிலையென்றியாவருந் தன்னையே புகழலாமோ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (45)

        இதனையிவரறிவரென்பது

வித்துவானருமைதனை வித்துவானறியாமல் விண்மூடர் தாமறிவரோ
    வியாபார நிலைவரந் தனவைசியரறியாமல் வேறொருவர் தாமறிவரோ
பத்தரிட தவமகிமை யீசனாரறியாமல் பலதேவர் தாமறிவரோ
    பருவரதி மதனுருவை யறிவா தல்லாமலிப் பாரிலொரு மாதறிவளோ
எத்திசையின் விடயரதமுனிவ ரறியாமலிசைய தும்புருவறிவரோ
    வெழில் கமலமுளமதுவை வண்டினமருந்தாம லேதமுள தவளையுணுமோ
சத்தியேநின் மகிமை யாரறியவல்லார்கள் சண்முகனை யீன்றவனையே
    தருமேவு மருணை கிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (46)

            ஒன்றிலொன்று பயன்

பண்புற்றசுதிகூட்டி யிசையுடன் படியாத பைந்தமி ழினிப்பிறாது
    பருவகாலத்தில் விரைதெளியாதபயிரும் பலித்தேவிளைந்திடாது
நண்ணுபொருளில்லாதவர் சொல்வசன மரசர்சபை நடுவிடினும்பிடியிராது
    நடுவழிமறித்தடித்துப் பொருள்பறிப்போர்க்கு நல்லொழுக்கந்தயவிரா
தெண்பத்துநான்குநூ றாயிரஞ்செந்துநீ யில்லாமலுயிரிராதே
    ஈசருன் றிருமங்கலச்சலிகையல்லாம லேநஞ்சை யுண்பதேது
தன்புத்தியில்லாதவர்க்கு ஞானங்களைச் சாற்றினு மறிவிராது
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (47)

        இதற்கிதுவேண்டுமென்பது

வச்ரமகுடந்தரித் தரசுபுரிமன்னர்க்குவாக்கின் மனுநீதி வேண்டும்
    மன்னுகல்வித் தொழிலு மெளிதல்ல விரவுபகல் மனதிற் கருத்துவேண்டும்
உச்சிதமுடன் சபையி னுட்கார்ந்தபோதினி முதாரணைகள் சொல்லவேண்டும்
    ஒரு நாள தாகிலுந் திருக்கார்த் திகைக்குவந் துந்தனைப் பணியவேண்டும்,
எச்சுவிச்சித்ரமுடன் வித்தைசெய்யினு மிருகையேந்தியே யிரக்கவேண்டும்
    ஏதுமொரு கருமங்கள் கோரிக்கை செயுமிடத் தெண்ணியே யிரக்கவேண்டும்,
சச்சிதானந்தபரிபூரணி யகிலம துதந்த காரணி சாம்பவி
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (48)


அதிகபுகழ் பெற்றிடுஞ் செல்வ நிலைநிற்குமோ வாங்காரமனதிலெண்ண
    வவரவர்கள் முன்செய்த கர்மநோய்த் தீவினைக் கயலாரை நொந்துமென்ன
மதியாமலெவரையும் வகைசொல்லுவோர்கட்கு மானமரியாதை யென்ன
    வந்தவுடனே மகிழ்ந்துபசரிக்காதவன் வாசலிற் செல்வதென்ன
பதிதொறு மிரந்துண்பவர்க் கினியசுடுசோறு பழஞ்சோறு பஞ்சமென்ன
    பக்தி யிதயத்திலில் லாதவன் சிவபூசை பண்ணுவதிற் பலனமென்ன
சதுர்மறை புகழ்ந்திடுங் கருணை நிறைவாரியே சைலகோனுத வுமயிலே
    தருமேவு மருணைகிரி  யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (49)

            நன்னகரம்

சித்ரமணி மேடையுஞ் சத்ரநிறை சாலையுஞ் சிறந்தரத வீதியழகும்
    தெங்கையில் பலா வெலுமிச்சை கதலிக்கமுகு சேர்ந்திலகு சோலைவளமும்
பத்திரமதானகற் கோட்டையுஞ் சிகரப்ர பலபல மதிற்கோயிலும்
    பங்கேருகத்தட முமெங்கெங்கு நிதி சிறப்பான கடைவியாபாரமும்
உத்யோகபுருடர் ரதகஜபரிபதாதியு முறைந்திருக்கின்ற வலிவும்
    உற்றசங்கீத சாகித்ய முளபாடலு மோங்குதாசி கண்டன மாஞ்
சத்தமும் முரசுபலவாத்தியமுட னிவையெலாம் தங்குவது நன்னகரமாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (50)

            உலகவியல்பு

சிறந்தநிதி யுள்ளபே ரந்நியர்க ளென்னினுந் தெருவீதிவரவு காணிற்
    சிந்தையின் மகிழ்ச்சியொடு கைதொழுது கார்த்திகைத் திங்களின் பிறையென்னவே
விறல்பெறவு நீங்கள் வந்தது நல்லவேளையென் வீட்டில் வரவேணுமென்று
    மெத்தவு மகிழ்ச்சியோ டுபசரித்தே மணைவிரித்ததி லிருத்திவைத்து
திறம்பெற்ற பட்சணங்காய்கறி படைத்துணவு செய்த பினுரைப்பர் பூர்வத்
    தினிலுங்கடாயெங்கள் கிளையினிற் பெண்ணென்று சேதி பெரியோர்கண் மொழிவர்
சரசமுடனீங்கள்வந் துறவாட விலையென்று சலிகைகொண்டாடுவார்கள்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (51)

            இதுவுமது

தனமிலாதவனதிக பவிசாளி தன்பந்து ஜனமென்று வீடுவந்தால்
    தயவுடன் வந்தவனை வாவென் றழைத்திடார் சற்று நேரத்தினப்பால்
மனமது சலித்து நீயாரென்று கேட்கவுன் மைத்துன னியானென்னவே
    வரலாறு கேட்டபின் னுந்தனைக் கண்டியான் வாடிக்கையில்லையென்பார்
தினமிரண்டாயிடிற் பெண்டுகளுமெள்ளச் சினந்து தட்டைப் பிதுக்கிச்
    செப்புவர்கள் சாடையாய்க் கெதிகெட்டு வீண் சோறு தின்னவந்தவனென்பார்கள்
சனமல்ல  வெனவவனை வலியவே தட்டிவிடல் தரணிமானிடர் முறைமையாம்
    தருமேவு மருணைகிரி  யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (52)

            மானிடசென்மமல்லார்

மகிமையுள சிவயோகியென்று தலைகீழ்நின்று வயிறது வளர்க்கவெண்ணி
    வம்புசெய்தே காசுவாங்குவனு மியோகியல வௌவாலெனுஞ் சென்மமாம்
அகமறிவிலாமலே யான் பெருவைத்தியனென் றசாத்ய கொடுரோகத்தினு
    கௌடதஞ்செய்தவுடனே கூலிவாங்குவோனவன் வேசரி சென்மமாம்
பகல் முழுதுமென்றங்கை யென்னன்னையென்றே பரிந்திரவில் வந்தெனக்குப்
    பாரியென்றே முறைமயக்கிப் புணர்ந்திடும் பாவியொருநாய்ச் சென்மமாம்
தகுமிவர்களைக் காலனாரென்ன தண்டனைக டான்செய்வரோ வறிகிலேன்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (53)

            பொது

எம்பிரானருளலது மூவுலகிலே முயலுமெத்தொழி லுமாவதல்ல
    வினியரசவாதமுறை புவிமீது மானிடர்க  ளெல்லோரு மறிவதல்ல
தம்பி தமயற்குமுன் பங்குபதியிலை யென்று தள்ளுவது நியாயமல்ல
    தருமங்கொடுப்பவரை யீயவொண்ணாதவகை தடுப்பதுவு நியாயமல்ல
கெம்பீர கயமீது வருபவனைச் சுன்னமது கேட்பதும் புத்தியல்ல
    கொடியரசு தனதென்று படியிலுளபேரைக் கெடுப்பதுந் தருமமல்ல
சம்புவைப்பரிசெய்த பரமசிவனடி முடிகள் சகலருங்காண்பதல்ல
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (54)

        சகாயத்தாகலாமென்பவை

சுந்தரமுயர் தீபந்துகளது விளங்கிடத் தூண்டுகோலொன்று வேண்டும்
    சூழ்ந்த சதுரங்க தளபடைசேனை யேவிடச் சொல்லாளி யொருவன் வேண்டும்
மந்திரஞ் சித்திக்கவேண்டுமெனின் மனமது மகிழ்ந்து குருவாக்குவேண்டும்
    மறையவரை யெதிர்கொண்ட போதுமிக வழிபாடு வந்தனைகள் செய்யவேண்டும்
கந்தர மிசைந்திராகத்தொடு படிக்கிலுங் கல்வியைக் கருதவேண்டும்
    கடியநடையான துரகதமெனினு மிராவுத்தர் கையிற் சவுக்குவேண்டும்
கந்ததமு மிடி யாலலைந்திடினுமழியாத தருமசிந்தனை முன்வேண்டும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (55)

            தகாத மனைவி

ஆரடி வீட்டிலே பரதேசி யொருவனுக் கன்னமிடுவென்றகணவ
    னாரையொரு பார்வை பார்த்தென் பாவமேன் கொள்கிறா யுனக்கறிவில்லையோ
சீருற்றமக்களுக்கே யன்னமிலையென்று சீறுவாளேது பதர்தான்
    சீர்கெட்டதென வெண்ணி மனிதில் வைத்தவ்வாறு செப்பொணாதையர்மெத்தத்
தூரத்திருந்துவந்தா ரன்னமிடு வெனச்சொல்ல வும்பின் னேதுநின்
    றுக்கத்துக்கெத்தனைநா ளழுவேனென்று வசைசொல்லவும் வெகுண்டடித்தால்
தாரைபோல் விழியினர் சோரவழு தூரெலாஞ் சலிகைசொலு மனைவி நமனாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (56)

            சிறப்பிலாதவை

சித்தமகிழ் வடைகின்ற புத்திர பவிசில்லாத செல்வஞ்சிறப்பிராது
    திருமங்கிலியங் கழுத்தில்லாத மாதரிட தேகமுஞ் சிறப்பிருக்கா
தொத்திலாப்புகழ்பெற்ற காவேரி யணுகாதவூருஞ் சிறப்பிருக்கா
    துன்கிருபை தங்காது பூதலந்தன்னிலே தொன்றுஞ் சிறப்பிராது
சத்தசுர மறிவிலா ரஸ்தமதில் வீணைசங்கீதஞ்சிறப்பிராது
    தலையலங்காரமதுவை யாததேரழகு சற்றுஞ்சிறப்பிராது
சத்திசிவ சாம்பவி காதலி மனோன்மணி சடாதரி வேத முதல்வீ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே, ( 57)

            விதிப்பயன்

குன்றாத  சகலசௌபாக்கியமொடு வாழ்வதுங் கொடுங்  கலியடைந்துழல்வதுங்
    கூர்மையொடு கல்விகற்று ப்ரஸங்கித்தலுங் குறுகிமடையனுமாவதும்
ஒன்று நூறாய் வம்மிசம் பிரபலிப்பதும் ஒழிந்திலாதே விடுவதும்
    ஊமை  கூன்  குருடு முடமுடலாயெடுப்பது முறுமழகிலழகாவதும்
மன்னர்வலி யாரெளியராவதும் மெளியராம் மன்னராவது மெலாமுன்
    வரலாறயனெழுத் தெள்ளள வுந்தப்பாது மற்றொருவரலாறாகுமோ
தன்னையே சார்ந்து குங்குமபணிபயோதரச் சச்சிதானந்த பரையே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே. (58)

            இன்னார்க்கிதுதவி

பாங்குய றுவடவரைக் குதவியா மஷ்டகுல பருவதங் கமழ்சிறந்து
    பளபளென வளர்தா மரைக்குதவி நீர்சித்திர பானுவுக்குதவி வாய்வாம்
ஓங்குபுகழ் விண்ணவர்க் குதவி குகனார் கையிலுக்கிர வடிவேலாயுதம்
    உற்றசங்கீத செந்தமிழ் ராகமோதுவோர்க் குதவிதம்பூர் புவியினில்
தேங்கு பயிருக்குதவி மேகவருஷித்தல்சிறு சேய்க்குதவி யாகுமன்னை
    திக்கரசருக்குதவி மதிமந்திரி சுந்தரண சேவகர்க்குதவி கைவாள்
தாங்குநின் கருணையருளல்லாது வேறுதவி தமியேனுக் கேதுமுளவோ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே, (59)

            சிறந்தவை

வரிசையுளநவரத் தினத்திற் பிரகாசமுள மாணிக்கமது சிரேஷ்டம்
    மங்கையர்க்குள்ளதிக கற்புநிலையுற்றகுண மாதருந்ததி சிரேஷ்டம்
அரியமந்திரமதிற் பிரணவந்தேவருக்கு மரிதாகு மதுசிரேஷ்டம்
    அம்புவியிலேகோச லத்தரிச்சந்திரனே யரசரில் வெகுசிரேஷ்டம்
பரிவுகந்திடுசத்த சாகரமதிற்றிருப் பாற்கடன் மிகச்சிரேஷ்டம்
    பண்ணுபழமொரு தமிழி லிந்நிலற்செய் கையதுபகர் திருக்குறள் சிரேஷ்டம்
தருவுயர்ந் திடுசிவஸ் தலமதிற் சிரேஷ்டநீ தங்குபுக ழருணை நகராம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (60)
        
        மாதராற் கெட்டவர்கள்

புவிமிசை யிராவண னிறந்ததுங் கீசகன் பொன்றினது விண்ணுலகில் வாழ்
    புரந்தரர்க்காயிரங் கண்ணான துந்தவப் புனிதசாதனன் மாண்டதுந்
தவநிலை கலைக்கோட்டு மாமுனி குலைந்ததுஞ் சாரங்கனூனமான
    சங்கதி மிங்கித முயர்ந்த நூற்றொருவர்கள் சமர்க்களத் தேபட்டதுங்
கவியினத்துற்றபல வாலியுயிர் போனதுங் கனவணிய கோவலனைமுன்
    கருதரிய மதுரையில் விருதாசர் கொன்றதுங் கபடமயிடன்போன துந்
தவளித முறுங்கொங்கை மாதரால் வந்திட்ட தாழ்வுகுறையென்பர் பெரியோர்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (61)

        மேலோருக்கு எப்பொழுதும் மேன்மை

மேதினியின் மேன்மக்கள் கெட்டாலு மவருக்கு மேன்மைமரியாதையுண்டு
    வேய்வளைந் தாலுமது நிகழ்கின்ற சிவிகையின் மேற்கொண் டிருப்பதுண்டு
நீதரச வாதமுறை கெட்டாலு வைத்தியம் நேர்ந்தே பலிப்பதுண்டு
    நிகழ்கரியிறந்திடினும் வீணல்லவஸ்திதனை நிதிதந்து கொள்வருண்டு
சூதலா யோகிகட் கிகமதிற்சுகமில்லை சொர்க்கத்தின் முத்தியுண்டு
    சுகமதனரூபியென்றாலு மிரதிமாட்டுஞ்  சுரூபமொடு தோற்றமுண்டு
தாதகியில் வாசமில் லாவிடினு மரனுடைய தலைமீதிருப்ப துண்டு
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.   (62)

            ஒப்பில்லாதவை

முருக்குப் பெருத்திடிற்  றூணாகுமோ பட்சி முட்டை யண்டமுமாகுமோ
    மூடர்நிதி தேடினஞ் சர்ச்சனர்க ளாவரோ முலைகளுறுமலையாகுமோ
விருப்பமில்லாத பேய்ச்சுரை கரிக்காகுமோ வென்றதென் சுக்கிரனாமோ
    மிக்கபனை கற்பகத் தருவாகுமோ தவளை வெற்றிபெறு தவளையாமோ
இருக்கிலும் பெறாப்பிள்ளை தன்பிள்ளை யாகுமோ வெழுது மடன் மாதாகுமோ
    வீனவெள் ளாட்டிதன் பெண்டாவளோ நீரிநிற் கயல்முடுவதாமோ
தருவருடதலமெலாம் புகழ்தங்கு மருணைத் தலத்தினுக் கொப்பாகுமோ
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (63)

            இன்னார்க்கிதுநாசம்

தெரிவையர்கண்மேலதிக விரகமுற்றிடுவரிட தேகமும் பொருளுநாசம்
    தெய்வசந் நிதியினின் றபசத்தி யங்களைச் செய்வர்குல முழுதுநாசம்
தருமசிந் தனையிலாத் துன்மார்க்கவேந்தரைச் சார்ந்திடும் குடிகணாசம்
    சவ்வாதெத் தனையிலொரு பணமளவுல சுண்ணமது தான்கலக் கிடவுநாசம்,
உருகதலிவேய்சிப்பி நண்டிவைகள் கற்பமுண்டாயி லுயிருக்குநாசம்,
    உள்ளங்கலக்கிலடி லெத்தகருமங்க ளியாதொன் றுமில்லாமநாசம்
சருவபாவங்க ணோய்மிடியலாநின துடையதாள் பணியநாசமாகும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (64)

            உலகத்தார் மயக்கம்

ஐயமிட்டுண்கவென வௌவையா ருரைத்தநூ லறிவகத் தெண்ணாமலை
    யநேகமாய் நீதிநெறி முறைமையை வியாசமுனி யருளினா ரென் றுவல்ல
செய்யகுரு முனியுடன் பதினெண்ம  ரும்பலவுஞ்  செப்பினா ரென்று வீணாய்த்
    திரிவதானலமேது நதிமூழ்கியேதலஞ் சேவிப்ப தேதுபயனோ
வையமதின் மெய்சித்தி யாமெனக் கற்பமு வழுத்தினா ரதனையெண்ணி
    மானிடர்க  ணிசமெனக் கருதுவா ரதுநினது மகிமையல்லாமல் வேறோ
தையலே பரிமள மடந்தை பங்கேருகத்தற் பரானந்தவல்லி
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (65)

            பொது

சிறுபிள்ளையாயினும் புத்திநிலைசாத்திரவழி தெரிந்தொழுகுவன் பெரியவன்
    சிந்தைகோ ணாமலொரு தாம்பூலமாயினுந் தெரிந்து தவுவது தர்மமாம்
பரிவுள்ளபங்கேரு கத்திரளநேசம் படர்ந்திருப்பது தடாகம்
    பவமுறுஞ் சீற்றமுப் பாசமுமொழித்திருப் பவனுமெய்ஞ் ஞானயோகி
புருடனைத் தெய்வமென் றெண்ணியே பூசித்தபூவையே கற்புடையவள்
    புதியவறு சுவைமிகுதி யாகவேசேர்த்துப் புசித்திடுவதே போசனம்
சருவபூ டணமெனும் பரிவுள்ள வஸ்திரந் தரிப்ப தலங்காரமாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (66)

            இன்னார்க்கிதுபிரியம்

சூழ்ந்திரவியாலுலர்ந் திட்டபயிருக்குமழை சொரிவதாலே கெற்சிதம்
    சோரற் கமாவாசை யிரவினிற் பிறர்மனை சுரங்கமிட வேகெற்சிதம்
தாழ்ந்தவிப சாரிக்கு வருசோர நாயகர் தனைக்காண வுங்கெற்சிதம்
    சமரிலொன் னார்படை முறந்தோடில் வெற்றிபெரு தறமனைத்துங் கெற்சிதம்,
வாழவுணரைக்குகன் வேற்றுணித் திடுபோதில் வானவர்க்குக் கெற்சிதம்
    மந்திரயிரசம் பெருகுகனி பெருகுகனி சிறந்திடு தோப்பில்வருக மிகவே கெற்சிதம்
தார்குழலி நீயெங்கு நிற்பதா லீரேழுதல மனைத் துங்கெற்சிதம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே. (67)

                இல்லை

அறிவிலா மூடர்முன் கல்விப் பிரஸங்கமதி  லழகில்லை யின்பமில்லை
    யையமிட் டுண்ணாத வர்க்குமெய்ப்புகழ்கீர்த்தி யறமில்லை வரமுமில்லை
துரியதுரி யாதீத மறியார்க்கு மெய்ஞ்ஞான சூட்சமில்லை மோட்சமில்லை
    சுத்தரணவீரருக் கெந்நாளுமனதினிற் றுயரிலைப் பயமுமில்லை
யிருதயக் கபடமிகு கங்கமணியத்தினுக் கிதமிலைப் பயமுமில்லை
    யெவ்வுயிர்க்குயிரான வீசனார்க் கெப்போது மிறப்போடு பிறப்பில்லை
சருவலோகாம் பிகாவென்றுனைப் பணிவர்க்குத் தாழ்வெனுங் குறையதில்லை
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (68)

            இன்னார்க்கிதுண்டு

அதிகபல சாத்திரம் கற்றுணர்ந் தவர்களுக் கறிவுடன் மேன்மையுண்டு
    அபயமென வந்தவரை யஞ்சாதே யென்பவர்க் கறமுண்டு திறமையுண்டு,
பதிவிரதைமாதர்மே லாசைவைத்திடிலதிக பாவமொடு பகையுமுண்டு
    பாலடிசிலுண்ணகமதற் கிரண்டகஞ்செயிற் பழியுண்டு வழுவுமுண்டு
சுசிதானமறிவிலாற் பாடுசங்கீதமதில் சுகமில்லை குற்றமுண்டு
    துன்மார்க்க மூடரோ டிணங்கியுற வாடினாற் சூதுண்டு வாதுமுண்டு
சதுர்மறையி லெட்டாத திருநயன வல்லியே சத்தியே வேதமுதலே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே. ( 69)

            துன்பமென்பவை

துலையாத்திரித்திர நோயடைவ துந்துன்ப வினைசூழ்ந்திடினு மதிக துன்பம்
    சொல்லிகழு மனைவியொடு வாழ்வதுந் துன்பமெய்  சுசீகரமிலாது துன்பம்
பலகால முந்துயிலு வது துன்பமாவயிறு பசியா திருந்த துன்பம்
    பாங்குயர்ந் திடினு முட்கலிணத்தை யெண்ணாத பரியேறுவது துன்பமா
மிலகு மனுநீதியில் லாவரசரினி லிருப்பது மனேக துன்பம்
    எதிராளியைத் தினம் வணங்குவது துன்பமக வில்லாத ததிக துன்பம்
சலத்திற்கராவெற்ற மாலின் சகோதரி சாம்பவி மதுரையரசி
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (70)

            இன்பமென்பவை

சிந்தையின் மகிழ்ச்சியுறு செல்வமின்பம் பரசிவனடியராவதின்பம்
    செகதலப் பிரக்யாதி யாதிவன்பந் தருமசிந்தனை மிகுந்தவின்பம்
தந்திமுகனைக்கால மேதொழுவ தின்ப நற்சனர்கள் சேர்வையின்பம்
    சத்புத்ரனைப் பெற்றெடுப்பதின்பங்கல்வி தானறிந்ததிடுவதின்பம்
கொந்தலர்ந் திடுபுட்படுணிவதின்பம் நேமகுருவி னுபதேசமின்பம்
    குணமிக்க மனைவியுட னில்லறந்தன்னிலே கூடி வாழ்ந்திடுவ தின்பம்
சந்ததமுநின்பதம் பணிவதற்கின்பமே சாயுச்சிய மெற்கருளுவாய்
    தருமேவு மருணைகிரி  யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (71)

            நரகமெய்த வழி

கற்பு வனிதைக்குமொரு தப்பிதஞ் சொல்வதுங் கள்ளுண்டடஞ்செய்வதுங்
    கனிந்தொருவர்தேடரும் பொருளபகரிப்பதுங் கடுங்கொலைத் தொழில் புரிவதும்
செப்புகுருவைத் தூடணிப்பதுஞ்  சிவனடியார் சிந்தைநலியச் செய்வதும்
    தியாகமேற்பவர்தமக் கீய்வரைவிலக்கிடுதீமையும் வாய்வலுமையில்
ஒப்பினவருக் கழிவுசெய்து கைக்கூலியாங் குடன் கொள்வதும் பிறரிடத்
    துய்யவேசையோகமது செய்திவையெலா முதுநரகில் வீழ்வதற்குத்
தப்பிலாமற்செயலும் தடமென்றறிந்து மித்தரணியின் மயங்குவார்கள்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (72)

            நாவலர்வறுமை

ஒருகாசு மீயாத லுத்தப்பிசாசர்களை யோங்குபுகழ் கன்னனென்று
    முரியசெந்தமிழ்சற்று மறியாத மூடர்களை யுயர்ந்தகுறு முனிவனென்றும்
விருதாவினிட மதினாறு பொய்கூறு வரைமிக் கரிச்சந்திரனென்றும்
    மெய்ம்முகவ சீகரமிலாதவரை ரஞ்சிதமிகுந்த மன்மதனென்றும்
வெஞ்செருமுனையி லாயுதமெடுக்காத பேடியை செயவீம சேனனென்றும்
    செந்தமிழினாலும் புகழ்ந்து புவிமனிதரைத் தினந்தினம்
பாடுவதினாற் றரைமிசையான லவர்க்கலையாத வறுமையைத் தானடைந் தார்களம்மா
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (73)

            இதிலிதுமேன்மை

பாவில் வெண்பாக்கலித்துறை யதிகமலரினிற் பங்கேருகக்கமலமாம்
    பட்சியிற் கருடனே யதிகமாங் கீர்த்தியிற் பாண்டி வேளாளராகும்
கோவிலினி  லதிகநின் சந்நிதி பிலத்தினிற் கொடுவிடச் சேடனதிகம்
    குலவு பழமொழியினிற் குறளதிகமலையினிற் குன்றாவிரண்யவரையாம்
காவினிற் கற்பகத்தருவதிக மாதினிற் கற்புடைய வனிதையதிகம்
    கரியிலதிகம் வெண்மையயிராவதம் நதிக்கரையினிற் கங்கையதிகம்
தாவுருண்மேவு திரிகோணத் துயர்ந்த சிவசங்கரீ யருள்வாரியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (74)

        இன்னாருக்கின்னார் விரோத மென்பவை

அருளது நிறைந்திடும் வைகுந்தமாலுக்கு மவுணருக்கும் விரோதம்
    ஐயமிலுணர்ந் தோர்க்கு மூடர்க்கு மெந்நாளுமாகாது வெகு விரோதம்
பரிதியொடு மாமதிக்கும் ராகுகேதெனும் பாம்பினுக் கும் விரோதம்
    பரிமள சவ்வாதினிற் சுண்ணமது சேராது பழுதுண்டு வெகு விரோதம்
அருமறையர் கணிகைக்கு வைத்தியர் சுணங்கனோ டவரினத் தார்விரோதம்
    அம்புவியை யாள்கின்ற கெம்பீரத் துறைகளுக் கடையலர் கண்மேல் விரோதம்
தரணிதனி லிவர்களொருவர்க்கொருவர் பகையென்று சாற்றினோ முலகரறிய
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (75)

            பயனற்ற செலவு

அடங்காத மோக விகாரத்தினான் மகிழ்ந்தரிவையர்க் குதவுபொருளும்
    அறிவகற்றிச் சிறுமை வெறிதருங் கள்ளினுக்கன்புட னளித்தபொருளும்
உடன்படாமற் கோளுரைக்கின்ற பாதகரை யுறவு செய்தீந்த பொருளும்
    ஒருவர்க்கொருவர் சூதாடு சங்கதியினா லொப்பியே தோற்ற பொருளும்
திடங்கொண்ட வாதமுறை தெரியாமல் வீணிலே தீயிற சுட்ட பொருளும்
    செப்பு மிப்பொருளெலாம் புண்ய விஷயத்தினிற் சேர்ப்பித்த பொருளல்லவாம்
தடங்கொண்ட நீரிற்கரைத்த புளியாமென்று சாற்றினேன் பலரறிவுறத்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே,  (76)


            தருமகாரியம்

பூவினின் மகத்தான சாலை நீர்ப்பந்தரும் புகழுடனமைத்தருமம்
    புட்பஞ்சிறந்த திருநந்தவனப் பயிர் பொருந்தவே செய்த தருமம்
கோவிலணிசிகர கோபுர மண்டபஞ் செயுங்கொள்கையு மநேகதருமம்
    யாகூபந் தடாகங் குளம் வாவிசெய்வித்தல் கூறவரிதான தருமம்
யாவருமிலாதவர்க்குரிய மணமே செய்வதது மகிமையுற்ற தர்மம்
    அன்னசத்திரமுடன் நன்னயமடங்களுண்டாக்குவ துயர்ந்த தர்மம்
தாவு புகழேசிறந்தோங்கு பரிபூரண தயாபரீ முத்தி முதலே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே, ( 77)

            அஞ்ஞானிகள்

சகலமுநமக்குளேயல்லாது கோவிலிற்றானென்றுமில்லையென்பார்
    சமுசாரமாய்கையது வீணான தொல்லையாஞ் சந்நியாசம் நல்லதென்பார்
பகரரிய வேதாகமம் புராணங்களைப் பழுதுமுன் சொன்னதென்பார்
    பரிவாகவீரேழு புவனத்திலும் புண்யபாவமே தில்லையென்பார்
மகிமையுளபனிரண்டு சமையமுஞ்சமையத் துண் மந்திரமுமில்லையென்பார்
    வாயிலிப்படி யிரைப்பார்கள் சிலபேர் தங்கண் மனதின் மெய்ஞ்ஞானமறிவார்
தகைமையுட னுலகைப் பழுத்திகழு மறிவிலாச் சண்டாளர் மெத்தவம்மா
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (78)

            பகைக்கவொண்ணார்

கருதி நூலறியுமந் தணரையுங் கல்விமுறை துகளறக் கற்றவரையும்
    தொல்புவியை யாளுமன்னவரையும் மன்னரிடதோளமைய மைச்சர்தமையும்
விருதணிந்திடு சுத்தவ கருணீ கரையுமிக வயித்தியர்கள் தமையும்
    விபரிதமகா மந்திரவாதியருடன் றினம் வேண்டுகுரு தேசிகனையும்
அறிவுயர்ந்திடுதபோ தனரையுந்தன்னபிப் பிராயந்தெரிந்த வரையும்
    அரிதானபஞ்சத்தி லாதரித்தோர்களுட னாகுமிப்பதினொருவரை
தரணிமிசையெவர்களும் பகைசெய்யலாகாது தனதா யிருக்கவேண்டும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (79)

            உமையுதவி

மன்னுபுகழீச்சுரர் வெந்நஞ்சுண்ட மகிமையும் மழு மான்றிருகரத்தில்
    வைத்த மகிமையும் வேதனைச் சிரமறுத்திட்ட மகிமையுடன துவலாமல்
நன்னயமதக் கரியுரித்து முப்புரமதை நகைத்தெரித்திடு மகிமையும்
    நல்லகற்பினிகளது கற்பகற்றியவடிவு நவிலவொண்ணா மகிமையும்
மின்ன முயலகனையு மிதித்ததொடு நமனையு விழவுதைத்திடு மகிமையும்
    மிகுதக்கன் வேள்வியை யழித்த மகிமையினோடு வெற்றிபெறு மகிமைகளெலாம்
தன்னிகரிலாதநின் மங்கல்யமகிமையின் சலிகையல்லாமல் வேறோ
    தருமேவு மருணைகிரி யீ சர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (80)

            திருமாதிருப்பு

வில்வத்திலுங்கந்த மலரிலும் மும்மத மிசைந்த வேழத்தின் மிசையும்
    வெம்பரிமுகத்திலும் மிரணகளந் தன்னிலே வீரமாய்ச் செல்வர்பாலும்
நல்ல பசுதன்னிலும் பாலினுந் தேனிலும் நாகரிகவனிதைபாலும்
    நவிலரியபங் கேருகத்திலுங் கடலிலும் நற்பாங்குடங்கொடியிலும்
இன்னிலிரஞ்சித மிகும்மனையிலுந் தெளிந்திடு நீரிலரசர்வதனத்
    திலுமுதாரணைத் தொழிலி லுந்துய்யவன்பாலு மியல்வல்லவர் மொழியிலுஞ்
சல்லாபமாயவன் மார்பினுந் திருமாது சலியா துழந்திருப்பா
    டருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (81)

            திரவிய வகை

நாடுபடு திரவியம் பயறு செந்நெற்கதலி நற்கனிபசுக் குரகதம்
    நயகரும் பொடுபின்பு நகர்படுந்திரவியம் நவில்வது கருங்குரங்கு
நீடுகண்ணாடிபித்தனுமரசர் காட்டானைநெடிய காடுறு திரவியம்
    நிருதமயினாபியு மிறாலரக் கொடுதேனு நீழ் கடற்றி ரவியவகை
கூடுமுத்துச் சங்குபவள முப்புக்கோர்வை குலவுமலைபடுதிரவியம்
    கோஷ்டமொடு குறுமிளகு குங்குமந்தக்கோலங் குளிர்சந்த மைந்துமாகும்
சாடிய மகாசூரபற்பனை வதைத்திட்ட சரவணனை யீன்றவனையே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (82)

            உமைமயம்

புவனமென்றும் பெருங் ககனமென்றுங்கரும் புனல்பரவு மவரியென்றும்
    போதமென் றுங்கருணை வேதமென்றுந் திவ்விய புண்யமெய்த்தலமுமென்று
மவுனமென்றும் ஞான மந்திரமென்றும் மெழு வகையிலுறு தோற்றமென்றும்
    வாசமென்றுந் தலைவிசேடமென்றும் மகிமை வாய்ந்திடுந் தெய்வமென்றுங்
கவனமென்றும் நல்லவுவணமென்றும் மறிவிற்கட்டழித்தின் பலமுலவும்
    கடாட்சமென்றும் மதிக மோட்சமென்றிப்படிக் கருணையொடு சகலவடிவாய்த்
தவராமலெங்குநின்ற பொருணீயென்று சாற்றுகிற தாரணமெலாம்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (83)

            சரியை

பரிவுகந்திடுதேவ ராலயந்தொழுதலும் பகரரியகங்கை முதலாய்
    பாரிலுளபுண்யதீர்த் தங்கண் மூழ்கலு மிதயபக்தியொடுமலர் சாத்தலும்
பொருள் வழங்கியுமே திருப்பணி முடித்தலும் பொருந்துதீபம் வைத்தலும்
    புகழுடன் திருவலகு செய்தலும் மெழுகலும் போதமெய்ஞ்ஞானியர்களை
யறிவினிற்கண்டுள மகிழ்ச்சியொடு பணிதலு மன்புடனே யுண்டியிடலும்
    அம்முலவு வாவிகூபங்கள் செய்வித்தலும் ஆகுமிவ்வவனிமிசையில்
சரியையாமிதன்படி நடப்பவருமுன்பதஞ் சார்ந்திடுவர் சாலோகமே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே,  (84)

            கிரியை

கந்தவர்க்கமுமதிக கிளர்மணப்புகையுடன் கவின் கொடீபமுமன்புடன்
    கமழ் சிறந்தோங்குதிரு மஞ்சனாபிடேகங்கனிந்துநற் புனல்சொரிந்துங்
கொந்தலர்த்திடு புட்ப முங்கொண்டு மாய்கையின் குணமனைத் துங்களைந்து
    கூறவரிதான பரமானந்தவடிவையுங் கொண்டிதய பக்தியுடனே
யைந்துஞ் சுத்திகள் செய்த கப்புறமிறைஞ்சியு மங்கியின் கடன் முடித்தும்,
    அறிவுடன் சிந்தையொரு வழியிலே கொண்டு மைந்தட்சரத்தாலு மானே
சந்ததமுமிப்படிப் பூசிப் பாகிரியையோர் தானடைவர் சாமீபமே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (85)


            யோகம்

முக்குணம் புலமைந் துடனடக்கியே மூலமாய் வினையடைத்து
    முற்றுமிகவே யதைப்பக்குவத் தொடுவழிமுடித் தொருவழிப்படுத்தி
சிக்கெனும் படியாகவே பிடித்தருணையொளி சேர்ந்திடும் பிர்ம்மமதுபோல்
    திகழ்கின்ற தாண்டவச் சிலம்பொலியுடன் சிறந்திட்ட வருளென
மிகுந்தமிக்கபுக ழஞ்செழுத்தோரெழுத் துருவதாய் விளங்கிடுந்
    தன்மைகண்டேமேவு பெருவழியினுக்கே புக்கினோராகி மெய்யுரு பெற்றுவாழ்வார்
தக்கதொரு வேட்டுவனை மண்புழுவெனச் சொலத்தகுமி யோக சாரூபமே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே. ( 86)

            ஞானம்

அரிதான சுருதி நூலாறு சாஸ்திரசமைய மாறிரண்டிரு பத்தியெண்
    ணாகமம் பதினெண் புராண பலகலையெலா மறிந்து தேர்ந்திடுதல் பின்னும்
உரியதாயாகமப் பொருளினது செய்தியை யுவமைபல வெனவறிந்தே
    யுள்ளந்தெளிந்தறி விசைந் துழலுமாய் கையினுலைவு முதலாகநீத்து
பரிவாக வேண்டவரி தாகுநற்சிவபோத பண்பனைத்துந் தெரிந்து
    பாசமென்ன ணுவளவு நெஞ்சினிற் கொள்ளாது பகுத்தறிவினாலறிவது
சரியுள்ளஞானத் தியற்கைநாலாம் பதந்தருமென்பர் வேதமுதியோர்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (87)
            
            தத்துவம்

பூதமைந் தரிதான புலனைந்து வாக்குமுதற் புகலுகரு மேந்திரியமைந்து
    போதமிகு ஞானேந்தரிய மைந்தரியதாய்ப் புகழ்கின்ற கரணம் நான்காம்
ஓதரிய நாடிபத்தாதார மாறுபிணி யுறுமூன்று கோசமைந்து
    ஊனுற்ற வாயில்களொன்பதெனவே மொழிவரோங்கிய வாயுக்கள் பத்தாம்
ஆதியுளமல மூன்று குணமூன்று மண்டலமூன்றரிதானதாது வேழு
    அற்புத மிகுந்தவி காரமிரு நான்குட னவத்தையோ ரைந்துமாகும்
தாதையே தொண்ணூறோடாறு தத்துவமெனச் சாற்றினார் ஞானமுறையோர்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (88)

            பதரென்பவர்

பலபேர்கள் வாய்தனைப் பார்த்துமே தன்னொழிற் பாராத வன்னொருபதர்
    பாரிசற்குணமோ டிருக்கவப் பாவையைப் பயினியாதவ னொருபதர்
இலகு சம்பத்துகளிருந்துமே, யிரவலர்க் கீயாதவன் வீண்பதர்
    எதிராளி வந்துறச் செய்தபொழுதுள்ளதை யியம்புவோன் மதியிற்பதர்
உலகினிகரிலையென்று தன்னையே தான்புகழ்ந்துரைப்ப தறிவிலாப்பதர்
    உள்ளமட்டும் வேட்டகந்தனி லுண்பவனு மூதாரியானபதராம்
தலைவிபக வதிபுராதனி மனோன்மணி நிர்த்தாண்டவீ யருமைமணியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (89)

            திறமுடையவர்கள்

மிக்கசெரு முனைதனிற் பின்கொடாமற்சென்று வெட்டுவோ னதிகதிறவான்
    மிடிதுன்ப வினைகோடி வரினுந்தன் றைரியம் விடாதவனு மதிகதிறவான்
சிக்கெனவிடுத்த கருமங்களை முடிக்கின்ற சிந்தையனு மதிகதிறவான்
    திண்புவியிலி யார்க்குநல் லவனெனப் பேர்கொண்ட செயலுடைய னதிகதிறவான்,
மைக்கடலினிற்செல்லு வங்கமீ துற்றபல மாலுமியு மதியதிறவான்
    வரிசையுளகல்வியிற் கண்டதைக் கற்கின்ற வல்லபனு மதிகதிறவான்
தக்கபுகழானந்த ஞானவாருதி பராசக்தியே கைலையரசே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (90)

                பொது

பொய்வசன மெத்தனை யுரைக்கிலொரு மெய்ம்முன் பொருந்தியது நிலைகொளாது
    புல்லருக் கதிகவுபகாரமே செயினுமலர் புத்தியிற் றவிராது
தையலர்கணமே  லதிகமயல் கொள்ளு வோர்மனஞ்சற்றும் வெட்கப்படாது
    சந்ததிகள் பெற்றதிது போதுமெனவே பெற்றதாய்க்குஞ் சலிப்பிராதே
யையமிட் டுண்டவர்க் குரியபுகழ் மேன்மையாமன்றி யொருகுறைகள் வாரா
    தனுபோக வினைதனை பலமிலாப் பெரியோர்களாலும் விலக்கொணாது
சையமாதவதம் பூசி தபாரத நேமியே சந்திரசேகரநாமியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே. (91)

            அரிதென்பது

அடங்காத சண்டமாருதமதைச் சிமிழினி லடைக்கினுங் கடலிற்சென்
    றாழமிவ்வளவென வுரைக்கினும் பிசகாத வட்டகுல பருவதத்தைத் திடங்கொண்டு
கையினிற்செண்டடிக்கினு மாதிசேடனொடு மல்லுயுத்தம்
    செய்துவெல்லினு மறிவிலாதா தவர்கருத்தைத் திருத்தினுங் கஜமெட்டையும்
அடங்காமல் வாலைப்பிடித்துச் சுழற்றினும் மாதரித யத்தினளவை
    மண்மிசையி லெவராலு மரிவதரிதென்றே வழுத்தினர் தமிழ்வலோர்கள்
தடங்கொண் டுலாவுபூம் பொழில் களெங்கெங்குமேசார்ந்திலகு வேதமுதலே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (92)

        இது இதனைத் தருமமென்பது

கல்விகற் றடினிலா தென்னதரு மென்னிலோ கருத்தினல்லறிவு தருமம்
    கருத்தினிடை நல்லறிவ தென்னதரு மென்னிலோக னிந்தரன் றனைவிரும்பும்
தொல்புவியி லீசனருளென்ன தருமென்னிலோ சோர்வற்ற புண்யமுதவும்
    சொல்லரிய புண்யமவை யென்ன தருமென்னிலோ தோற்ற மெய்ஞ்ஞான முதவும்
நல்லுற்ற மெய்ஞ்ஞான மென்னதருமென்னிலுன் னளினபத சேர்வை தருமந்
    நளினபொற்பத சேர்வையென்னதரு மென்னிலோ நாடுசாயூச்சிய மீயும்
வல்லியே நின்கிருபையுண்டாக்கி லிவையெலாந் தானாக வந்துசேரும்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே. ( 93)

            சமயங்கள்

நேமமுயர்சைவமொடு பாசுபதவைரவம் நிருமலக்காளாமுகம்
    நேர்ந்திடும் வாமமா மாவிரதமிவையாறு நிசமான வுட்சமயமாம்
பூமிசையி னுலகாயி தம்பௌத் தஞ்சமண் புகலுகாட் டாசாரியம்
    பொருந்திமீ மாஞ்சையொடு பாஞ்சராத்திரமெனும் புறச் சமையமிவைகளோறா
றாமரைப் பனிரண்டு சமயத்தி லுலவுமுய ரைம்பதினோடோரட்சரீ
    யத்கோண சத்கோண முக்கோண வீட்டில் வளையாடுமருளானந்தியே
தாமிசமிலாம வெளி யேனையாட் கொளவருக சமய மீதருமையுமையே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (94)


            அரிதானவர்கள்

குலமுழுது மோட்சமடை யத்தவஞ் செய்த ரவிகுல பகீரதன் போலவும்
    கூறுபதி னாலாண்டி லனலில் விழுவே னெனக் கூறுபரதன் போலவும்
இலகுமகனைப் பிரிந்துயிர்வைத் திரேனென்றிறந்த தசரதன் போலவும்
    இசைந்திடுங் கணவர்மொழி தப்பாமலேவல் செய்திடு தபதியைப்போலவும்
நிலமிசையின் மருவுஞ்சகோதரர் பிதாவுடன் நேயமறு மனையாட்டியும்
    நெடியரா யரியதவ மேசெயினுமவர்போல நேர்ந்திடுவ தரிதுகண்டாய்
தலைவிகங்காளி மகிடா சூரசம்மாரி தற்பரீ சத்திபரையே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (95)


        ஸ்திரீயுடன் புணரொணாக்காலம்

வருட சங்கராந்தியிற் றிங்கண் முன்பின்னிலும் வளர்பிறைப் பிரதமையிலும்
    மதிவிளங்கும் பூரணத்திலும் பிதுர்தலைவி வாய்ந்திடுஞ் சிரார்த்தத்திலும்
இருணிறைந் திடும மாவாசையொடு ஜென்மநா ளியல்பொடு பிறந்த நாளும்
    இனிய மங்கையர் பூமலர்ந்தநாள் மூன்று தவமேற்கின்ற விரதநாளும்
அரிவையுடனே கூடலாகாது கூடினாலதிக பாவங்கணேரும்
    ஐசுவரிய நில்லாது திருவகலும துவலாலாயுளுங் குறையுமென்றே
தரைமிசையின் முன்னே ருரைத்தனர்க ளாகையாற் சாற்றினே னுலகமறியத்
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (96)

            பிரயாணத்துதவி

கையினிற்றண்டொன்று துப்பட்டுமோர் பணங்காலில் வலிதானகுறடும்
    கட்டுசாதந் தாகநீர்கொளப்பாத்திரங்கன லுலவிசெய்யவயமும்
தொய்யல் தருவெள்ளிலை யடைக்காயுடன் சுண்ணந் தூயவொரு நாழியரிசி
    சொன்னதிவை யாவையுந் தைரியத்தொடுகொண்டு சோர்விலா நல்வேளையில்,
துய்யகரிமுகனறி பணிந்துபின் வழிசெலத் துணையாகுமிவை நன்மையாம்
    சூழிவனையுளகிலுளமானிட வருக்கறிவு தோன்றவே சொன்னதிவையாம்
தையலே யீராறு சமய முதலாய் நின்றதற்பரி பச்சைமணியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (97)

            புகழ்பெற்றோர்

மெய்வாசகந்தனி  லரிச்சந்த்ரனே கொடையில் மிக்கபுக ழுறிகர்ணனே
    விரதநிலை காப்பதிலு ருக்குமாங்கதனெனும் வேந்தனே யவனிமிசையில்
செய்யுமுபகாரமதில் விக்ரமாதித்தனே செருவலர்க் கஞ்சியபயம்
    செப்பின ரடைக்கலங்காத்திடுதல் விசயனே திவ்யரவிகுலம் விளங்க
மெய்த்தவஞ்செய்தவன் பகீரத னொருத்தனே மேவுமிப்படி மிசையிலே
    வேந்தர்களி லிவ்வகைக்கீர்த்தி யிவர்கட்களால் வேறொருவருக்குவருமோ
தையலே முப்பத்திரண்டறம் வளர்த்திட்ட சாம்பவீ பொன்வல்லியே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (98)

            புராணங்கள்

விரிந்த பொருள் மச்சமார்க் கண்டேயம் வாமனம் விளங்கு வைணவலிங்கம்
    விண்ணவர் புகழ்சைவ நாரதீயம், பதுமம் மேன்மைதரு மாக்கினேயம்
தெரிதரும் பௌடிகம் பிர்மகை வர்த்தமிகு சீருலவு பாகவதமும்
    திகழ்கின்ற ஸ்காந்த மெழில்கூர்மமொடு வராகமும் திருதிதரு பிர்மாண்டமும்
வரந்தரும் பிர்மமுயர் காரூட மென்பதினெண் வாய்ந்தவெம் புராணமிவையாம்
    மாநிலந் தனிலரசருக்கரசியாய் வந்து மாறனுக் கருள்செய்தநீ
தருஞ்சிறியனுக்கினிய பேரின்ப முதவுவாய் தருணமிது கைலையரசே
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (99)

                பொது

உலகவாழ் வைப்பொய்யென் றேமனதி னுக்கறிவுறுத்தியு மனத்தினாசை
    யொழியாது மானிடவருக் கரிய காரிருருள்ளத் திலறிவுமின்னும்
நலமிகுந்திடு நினது பாதத்தாமரை மலரை நம்புமடியற் கருளுவாய்
    நாயகி சராசரக் காரணி பூரணி நாரி யயிராணி தேவி
மலைராசகன்னி பவானி  முக்கண்ணி பரை மாதவி மலையந்தரி
    மனோன்மணி பராபரி சத்திசங் கரியையை மாசிலா மேத வுருவே
தலைவி மரகதவல்லி பகவதி யுருத்திரை சாம்பவி பிராட்டி பஞ்ச
    தருமேவு மருணைகிரி யீசர்பா லுறையுலகு தாயுணாமுலை யம்மையே.  (100)
    
            வாழி

சங்கரன் மாயன்வாழி சதுர்முகன் முருகன் வாழி
யைங்கரன் வாழிதேவ ரனைவரும் வாழி வாழி
இங்கித சதகந்தன்னை யெழுதினோர் படித்தோர்கேட்போர்
பங்கமில்லாமலச்சிற் பதித்தவர் வாழி வாழி.


        உண்ணாமுலையம்மன் சதகம் முற்றிற்று.

            திருச்சிற்றம்பலம்.

 
 
 

Related Content