சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருவிடைமருதூர் அம்பலவாண தேசிகர் இயற்றியருளிய திருச்சோற்றுத்துறை தலபுராணம்
(மூலமும் - உரையும்)
1. பாயிரம் 1-13
2. புராண வரலாறு 14- 25
3. நாட்டுச் சிறப்பு 26-60
4. நகரச் சிறப்பு 61-84
5. தலச்சருக்கம் 85- 108
6. தீர்த்தச் சருக்கம் 109-175
7. மாக நீராடல் சருக்கம் 176- 212
8. துலா நீராடல் சருக்கம் 213- 242
9. சேடச் சருக்கம் 243-269
10. கவுதமச் சருக்கம் 270-312
11. சூரியச் சருக்கம் 313- 338
12. சுசன்மச் சருக்கம் 339 - 355
13. கேதார விரதச் சருக்கம் 356- 388
14. சோம வாரச் சருக்கம் 389- 408
15. சிவராத்திரிச் சருக்கம் 409-447
விநாயகர் துதி
1. ஞானம் பொழியு மலர்நயன
நாதன் சோற்றுத் துறைப்பரமன்
தேனம் பொழியு மலரிதழிச்
சிவன்மாக் கதையைத் தமிழ்செய்ய
வானம் பொழியும் புவிதழைக்க
வளரா கமமா மறைவிளங்கத்
தானம் பொழியுங் கரடதடத்
தந்தி முகத்தோன் சரண்பணிவாம்.
பொருள் உரை:- திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியிருக்கின்ற
பரமனாகிய சிவபெருமான் ஞானம் பொழியும் தாமரைமலர்போன்ற
கண்களையுடைய தலைவர். அப்பெருமான் தேன் பொழியும் இதழையுடைய
கொன்றைமாலை அணிந்துள்ளார். அச்சிவபெருமானுடைய புராணத்தைத்
தமிழில் சொல்ல மழை பொழியவும் மண் வளம் பெறவும் வளர்கின்ற
ஆகமங்களும் மறைகளும் விளக்கம் பெறவும், திருவருளாகிய மதநீரைப்
பொழியும் மத நீரையுடைய யானைமுகக் கடவுளாகிய விநாயகப்
பெருமானின் திருவடிகளை வணங்கு வோமாக என்றவாறு.
குறிப்புரை:- இதழி - கொன்றை மலர். தானம் பொழியும் - தானம்
ஈகை, கொடை, மதநீர், பொழியும். யானைக்கு மதம் நீர் பொழிதல் உண்டு.
யானைமுக விநாயகப் பெருமான் திருவருளை மதநீர் போன்று
பொழிகின்றார் என்பதாம்.
1. பாயிரம்
ஓதனபுரேசுவரர் துதி
1. நீர்கொண்ட கடல்சூழு முலகமுதற்
புவனமெலா நிலாவு சோதி
ஏர்கொண்ட பரமசிவ வுல்லாச
மெய்ஞ்ஞான வின்ப மாகிச்
சீர்கொண்ட பரங்கருணை யுருவாகித்
தொலையாத செல்வ ராகும்
பார்கொண்ட செழுங்கீர்த்தி யோதனபு
ரேசர்பதம் பணிந்து வாழ்வாம். (1)
பொ-ரை:- நீராலாகிய கடலால் சூழப்பட்ட இப்பூவுலகம் முதல்
இருநூற்று இருபத்து நான்கு உலகங்கள் எல்லாவற்றிலும் விளங்குகின்ற
பேரொளியானவரும் பெருமை மிக்க பரமசிவமாகிய மகிழ்ச்சி என்னும்
வீடுபேறும் மெய்ஞ்ஞானத்தால் பெறும் பேரின்பமுமாகியும் சிறப்பு மிக்க
மேலான கருணையே உருவமாகியும் என்றும் குறையாத செல்வராகவும்
விளங்குகின்ற பெருமானாகியும் உலகம் முழுதும் செழுமையான
புகழையும் உடைய திருச்சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள
சிவபெருமான் திருவடிகளை வணங்கி வாழ்வோமாக என்றவாறு.
கு-ரை:- புவனமெலாம் - இருநூற்று இருபத்து நான்கு புவனம்.
பரமசிவ உல்லாசம் - வீடுபேறு, மெய்ஞ்ஞான இன்பம் - பேரின்பம்.
ஓதனபுரம் - சோற்றுத்துறை. ஓதனம் - சோறு.
அன்னபூரணி துதி
2. மணியொளிபோற் றெளிபுனலி னிறைகுளிர்ச்சி
போன்மல ரின்மணம் போற்பாட
லணியிசைபோல் நறுந்தேனி னுறுசுவைபோற்
பரமசிவத் தபேத மாகித்
தணிவினுமார்ப் பயிர்தழைப்பக் கருணைபொழிந்
திளைப்பாற்றுந் தாயாஞ் செம்பொற்
பணியிலகு வன்னமுலை யன்னபூ
ரணிமலர்த்தாள் பணிந்து வாழ்வாம். (2)
பொ-ரை:- நவமணிகளில் பொருந்தியுள்ள இயற்கை
ஒளிபோலவும் தெளிந்த நீரில் நிறைந்துள்ள குளிர்ச்சி போலவும்
மலரினிடத்துள்ள மணம்போலவும் பாடலில் உள்ள அணியும் இசையும்
போலவும் இனிய தேனிலுள்ள சுவைபோலவும் மேலான
சிவபெருமானிடத்து நீக்கமற இடபாகம் பெற்றும் நீர்வற்றிய வறண்ட
நிலையிலும் பயிர்களெல்லாம் தழைத்து வளர கருணையை (மழையாகப்)
பொழிந்து இளைப்பாற்றுதலைத் தரும் தாயாகி, சிவந்த பொன்னாலாகிய
ஆபரணங்கள் அணிந்துள்ள அழகிய முலையினையுடைய அன்ன பூரணி
அம்மையின் தாமரைமலர் போன்ற திருவடிகளை வணங்கி வாழ்வோமாக.
கு-ரை:- தணிவு - குறைவு, நீர் வற்றிய நிலை. பணி - ஆபரணம்.
விநாயகர் துதி
3. அந்திநிறத் தொந்திவயி றைந்து
செங்கை யேகதந்தத் தண்ணலீசன்
முந்துமகிழ்ந் தளித்தருளு மைந்தனுந்தி
யெழுநாத முதல்வ னன்பாற்
புந்திதனில் வந்தனைசெய் பத்தரிடர்
போகவிக போகம் வீடு
தந்தருளுந் தந்திமுகத் தெந்தையிரு
பாதமலர் தலைமேற் கொள்வாம். (3)
பொ-ரை:- அண்ணலாகிய சிவபெருமான் முதலாவதாக
மகிழ்ந்து அளித்தருளிய மைந்தனாகிய விநாயகப் பெருமான், மாலையில்
தோன்றும் செவ்வானம் போன்ற சிவந்த நிறத்தையும் தொந்தி வயிற்றையும்
ஒரு கொம்பையும் உடையவராகி முதலில் எழுகின்ற ஓங்காரத்தின்
முதல்வராவார். அவரை அன்பால் புத்தியில் நினைந்து வழிபாடு செய்கின்ற
பத்தர்களின் துன்பங்களைப் போக்கி இவ்வுலக இன்பங்களையும்
வீடுபேற்றினையும் தந்தருளுகின்றவர். அந்த யானைமுகத்து எந்தையாகிய
விநாயகப் பெருமானின் தாமரை மலர்களாகிய திருவடிகளைத் தலைமேல்
கொண்டு வணங்குவோமாக என்றவாறு.
கு-ரை:- உந்தி எழு நாதம் - ஓங்காரம். உந்தியெழு நாதமுதல்வன்
- விநாயகப் பெருமான்.
சுப்பிரமணியர் துதி
4. ஓரானை யுயர்த்தவர்க்குச் சேயானை
வானானை யுறுமார் பானை
போரானைக் கிளையானை யிளையானை
நறைபரந்து பெருகு நீபத்
தாரானை யாறுமுகத் தானையரு
ளானைவள்ளி தனமாத் துங்கச்
சீரானை மேவுபுயச் சிலையானை
மலையானைச் சிந்தை செய்வாம். (4)
பொ-ரை:- ஒப்பற்ற விடையைக் கொடியாக உயர்த்திய
சிவபெருமானுக்கு மகனும் தெய்வயானையைத் தழுவும் மார்பை
உடையவனும், கயமுகாசுரனைப் போரில் வென்ற யானைமுக விநாயகப்
பெருமானுக்கு இளையவனும், தேன் நிறைந்து ஒழுகும் கடம்ப மலர்
மாலையை அணிந்தவனும், ஆறுமுகத்தை உடையவனும் அருளை
வழங்குகின்றவனும், வள்ளியம்மையினுடைய தனமாகிய மலையில்
தோயும் சிறப்புடையவனும் விளக்கம் பொருந்திய மலைபோன்ற தோள்
களையுடையவனும், மலைகள் தோறும் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய
சுப்பிரமணியப் பெருமானைச் சிந்தையில் வைத்து வணங்கு வோமாக.
கு-ரை:- ஓரானை - ஓர்+ஆன் +ஐ, ஒப்பற்ற விடையை, காளையை.
போரானை--போர்+ஆனை --போர்மேல் வந்த யானைமுக அசுரன்.
இளையான் - 1. இளைக்காதவன், 2. சிறியவன். துங்கம் - மலை, பெருமை.
திருஞானசம்பந்தர் துதி
5. பரஞானக் கடல்படிந்து காழிமலை
பொருந்தியமண் பதகர் என்னும்
இரவான தொழியமின்னிப் புத்தர்சிரத்
திடிவீழ்த்தி யிலகுஞ் சைவ
வரமான பயிர்தழைப்ப மங்கையருக்
கரசிமயில் மகிழ்ச்சி கூரத்
திரமான பதிகமழை பொழிமுகிலாங்
கவுணியனைச் சிந்தை செய்வாம். (5)
பொ-ரை:- பரஞானம் என்று சொல்லப்படுகின்ற சிவஞானத்தில்
படிந்தும் சீர்காழி என்னும் மலையில் வந்து தோன்றி, சமணராகிய
தீயவர்கள் (பாதகர்கள்) என்னும் இரவானது ஒழிய மின்னியும், புத்தர்
தலையில் இடியை விழும்படி செய்தும் இறைவனால் வரமாக அருளப்பட்ட
சைவம் என்னும் பயிர் தழைத்து வளரவும் மயில் போன்ற அழகுடைய
மங்கையர்க்கரசியார் மகிழ்ச்சியடையவும், திருவருளைப் பெற்றுத்தருகின்ற
பதிகமாகிய மழையைப் பொழிகின்ற முகிலாக விளங்கும் கவுணிய
குலத்தில் தோன்றிய திருஞானசம்பந்த சுவாமிகளைச் சிந்தையில்
நினைத்து வணங்குவோமாக
கு-ரை:- திரம் - மாற்றமுடியாதது, உறுதியானது.
திருநாவுக்கரசர் துதி
6. சிலைநாணிற் பொருந்தியம்பு ராசிதனைக்
கடந்தவருட் டிறத்தான் வெள்ளி
மலையாளி யென்னவிட மமுதாக்கிச்
சமணிருளை மாற்றும் பானு
நிலையான கைத்தொண்டால் வாசியிலாக்
காசுபெற்ற நிமல மூர்த்தி
தொலையாத பரஞான திருநாவுக்
கரையனடி தொழுது வாழ்வாம். (6)
பொ-ரை - திருநாவுக்கரசு நாயனார் (மன்மதனுடைய) வில்லில்
பொருந்திய மலரம்பினால் விளையும் காமவேதனையைக் கடந்த
அருளையுடையவர்; வெள்ளிமலையாகிய கயிலை மலையில் வீற்றிருக்கும்
சிவபெருமான் விடத்தை உண்டது போன்று சமணர்கள் வஞ்சகமாகக்
கொடுத்த விடம் கலந்த பால்சோற்றை உண்டு இறவாமல் வாழ்ந்து,
சமணம் என்ற இருளைப் போக்கும் கதிரவனாக விளங்கினார்; நிலையான
கைத்தொண்டாகிய உழவாரத் தொண்டால் வாசியில்லாத
பொற்காசினைச் சிவபெருமானால் பெற்று அடியார்களுக்கும்
மற்றவர்களுக்கும் அன்னமளித்தார். மலமற்ற பெரியார்; என்றும் அழியாத
மேலான சிவஞானத்தை உடையவருடைய திருவடியை வணங்கி
வாழ்வோமாக.
கு-ரை:- சிலைநாணில் பொருந்திய அம்புராசி - காம வேதனை,
திருநாவலூரர் துதி
7. திருநாவ லிடத்துதித்து நரசிங்க
முனையரசைச் சேர்ந்த சைவன்
ஒருமாவி லேறிவஞ்சி மணம்புணரப்
புத்தூரி லுற்றோன் வெற்பிற்
பெருமாது மகிழ்பாகன் மொழியதனால்
சங்கிலிகைப் பிடித்த வேழம்
வருஞானத் தமிழமுதக் கடலான
சுந்தரனை வணங்கி வாழ்வாம். (7)
பொ-ரை:- சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவலூரில் அவதரித்து
நரசிங்கமுனையர் அரண்மனையில் வளர்ந்த சைவர் ஆவார்; சடங்கவி
என்பாரின் மகளை மணம் செய்துகொள்ள ஒருகுதிரையில் ஏறி புத்தூர்
என்னும் ஊருக்கு வந்தவர்; கயிலைமலையில் பெருமைக்குரிய
உமாதேவியார் மகிழும்படி பாகம்கொண்ட சிவபெருமானின் திருவருளால்
சங்கிலியாரை மணந்த வேழம் போன்றவர்; வருகின்ற ஞானத்தமிழாகிய
அமுதக் கடலாக விளங்கிடும் சுந்தரரை வணங்கி வாழ்வோமாக.
திருவாதவூரர் துதி
8. முத்தநகை மரகதத்தை யிடங்கொண்ட
வொருவயிர முழுநீ லத்தை
வைத்தமணி கண்டனுயர் வெள்ளியிற்கோ
மேதகங்கொள் வானோர்க் கெட்டாச்
சுத்தனிரு பதபுட்ப ராகமிக
வந்துபெருந் துறையில் ஞானச்
சித்திபெரு பவளவாய் மாணிக்க
வாசகனைச் சிந்தை செய்வாம். (8)
பொ-ரை:- சிவபெருமான் முத்துப்போன்ற பற்களையும் மரகதம்
போன்ற நிறத்தையுமுடைய பார்வதி தேவியை இடப் பாகம் கொண்டவர்;
ஒரு வயிரம் போன்ற ஒளியுடையவர்; முழு நீலநிறமுடைய நஞ்சைக்
கண்டத்தில் அடக்கிய திருநீலகண்டர்; உயர்ந்த வெள்ளி மலையாகிய
கயிலையில் தலைவராக விளங்கு கின்றவர்; மேதகம் என்னும் ஒருவகை
யாகத்தை செய்யும் வானோர்களுக்கு எட்டாத தூயவராவார். புட்பராகம்
போன்ற சிவந்த நிறமுடைய அவருடைய இரண்டு திருவடிகளும்
பெருந்துறையில் அருளுடன் வந்து பவளம் போன்ற வாயை உடைய
மாணிக்கவாசகருக்குச் சிவஞான தீக்கை செய்தவர். சிவபெருமானால்
ஞானச்சித்தி பெற்ற மாணிக்கவாசகரைச் சிந்தையில் நினைத்து
வணங்குவோமாக.
கு-ரை:- மேதகம்- கோமேதகம், நவமணிகளில் ஒன்று.
இச்செய்யுள் முத்து, மரகதம், வயிரம், நீலம், மணி, கோமேதகம், புட்பராகம்,
பவளம், மாணிக்கம் முதலான நவமணிகளின் பெயர் அமைத்துப் பாடிய
சிறப்புடையது.
சிவனடியார் துதி
9. ஐம்பொறிக ளெனுமரவ வாயின்வரு
விடயவிட மதுமீ தூர்ந்தே
தம்புலனை யெழுவேக முடன்மயக்கத்
தருட்பார்வை சார்ந்து நாளும்
இம்பர்மணி மந்திரங்கள் மருந்தெனக்கண்
டிகையினையைந் தெழுத்தை நீற்றை
நம்புமடி யவரடிகள் முடியாக
நாமுடிமேல் நயந்து கொள்வாம். (9)
பொ-ரை:- ஐம்பொறிகள் என்னும் அரவத்தின் வாயிலினின்றும்
வரும் போகப்பொருள்களின் மீது உண்டாகும் ஆசை என்னும் நஞ்சு
(விடம்) மிகுதியாக ஊர்ந்துவந்து தம்முடைய புலன்களை மிகுந்த வேகத்
துடன் ஒவ்வொரு நாளும் மயக்கிட, விடத்தை நீக்கிட இவ்வுலகில்
மணியாலும், மந்திரத்தாலும், மருந்தாலும் நீக்குவது போன்று (பிறவி
என்னும் விடத்தைப் போக்க) இறைவனுடைய திருவருளை வேண்டி
ஒவ்வொரு நாளும் மணிக்குக் கண்டிகையையும் (அக்குமாலையையும்)
மந்திரத்திற்கு ஐந்தெழுத்தையும் மருந்திற்குத் திருநீற்றையும் நம்பும்
அடியவர்களின் திருவடிகளை நாம் நம் முடிமேல் விரும்பி சூடிக்
கொள்வோமாக.
கு-ரை:- எழு வேகம் - எழுகின்ற வேகம், ஏழாம் வேகம்,
விடத்திற்கு ஏழுவகை வேகம் உண்டு. விடய விடம் - புலன்கள் நுகரும்
போகமாகிய விடயப்பொருள்.
திருவிடைமருதூர் தெற்கு மடவளாகம் ஆரப்பநாத சுவாமி துதி
10. உன்னுகலைக் குறைமதியும் கனல்விழியு
மிளமூர னகையார்ந் தின்பந்
துன்னுகலை நிறைமதியுங் கருணைநய
னமுஞான வடிவுந் தாங்கி
என்னையெழு பவக்கடலி னெடுத்துயர்ந்த
அருட்கடலி லேற்ற வந்த
பன்னுபுகழ் வளர்மருதூர்ச் சிவஞான
தேசிகன்தாள் பணிந்து வாழ்வாம். (10)
பொ-ரை:- சிவபெருமான் மானுட வடிவம் தாங்கி நினைக்கப்
படுகின்ற கலை குறைந்த மதியை நிறைத்து நிறைமதியமுடனும், கனல்
விழியை மாற்றிக் கருணை பொழியும் கண்களுடனும், இளம்
புன்முறுவலை ஞான வடிவமாகவும் தாங்கி வந்து என்னை மிகுகின்ற
பிறவிக்கடலினின்றும் எடுத்து உயர்ந்த அருட்கடலில் ஏற்ற வந்த மேலான
புகழையுடைய வளர் திருவிடைமருதூர்ச் சிவஞானதேசிகன் திருவடி
பணிந்து வாழ்வோமாக.
கு-ரை:- எழு பவகடல் – எழுகின்ற பிறவிக்கடல், சிவபெருமானே
சிவஞானதேசிகராக வந்தார் என்று கூறுகின்றார்.
அவையடக்கம்
(கலிவிருத்தம்)
11. அலையெறி யெழுகடல் அகலம் யாவையும்
நிலவிய பெரும்புறக் கடலின் நீரெலாம்
பலதுளை யுழக்கினால் அளக்கும் பான்மையாம்
இலகரன் கதையையான் இயம்ப வெண்ணலே. (11)
பொ-ரை:- அலை வீசுகின்ற ஏழு கடல்களின் பரப்பில் விளங்கும்
பெரிய புறக்கடலின் நீரை எல்லாம் பல துளைகளையுடைய சிறிய
உழக்காகிய அளவைக் கருவியினால் அளந்து கணக்கிட விரும்பும் செயல்
போல அரனாகிய சிவபெருமானுடைய சோற்றுத்துறைப் புராணத்தை
அடியேன் மிகவும் எளிதாக இயம்ப எண்ணிய செயல் வியப்புடையது.
கு-ரை:- உழக்கு - சிறிய அளவைக் கருவி. இலகரன் - இலகு அரன். இலகு - சுலபம், இலேசு.
12. நஞ்சமு மமுதென நயந்து பித்தனென்
றெஞ்சிய சொல்லையும் விரும்பு மீசற்கு
வஞ்சமின் மனத்தினேன் வழுத்து புன்சொலும்
செஞ்சொலே யெனத்திருச் செவிக்கு மேற்குமால். (12)
பொ-ரை:- திருப்பாற்கடலில் வந்த நஞ்சையும் அமுதமாகும்
என்று விரும்பி உண்டும், சொல்லத்தகாத சொல்லாகிய பித்தன் என்னும்
சொல்லையும் விரும்பி ஏற்றும் கொண்ட ஈசனாகிய சிவபெருமானுக்கு
வஞ்சமில்லா மனத்தையுடைய அடியனேன் புகழ்ந்து துதிக்கும் புல்லிய
சொல்லும், செம்மையான சொல்லேயாம் என்று தம் திருச்செவியில்
ஏற்றுக்கொள்வார் என்றவாறு.
கு-ரை:- எஞ்சிய - தகாத,
13. எறிதிரைக் கடலுவ ரெனினுங் கங்கைநீர்
செறியின்விண் புலவரும் சிறப்பென் றாடல்போல்
அறிவிலேன் புன்சொலின் அமலன் மாக்கதை
உறைதலிற் புலவரும் உவந்து கொள்வரால். (13)
பொ-ரை:- அலைவீசும் கடலில் உள்ள நீர் உவர்ப்பு நீராயினும்,
அக்கடலில் கங்கை நீர் கலப்பதால் விண்ணுலகத் தேவரும் புனித நீர்
என்று தீர்த்தம் ஆடுவார்கள். அதுபோல் அறிவில்லாத அடியனேன்
புன்சொல்லில் அமலனாகிய தூய சிவபெருமானின் பெரிய புகழுடைய
புராணம் விளங்குவதால் இவ்வுலகப் புலவரும் மகிழ்ந்து ஏற்றுக்கொள்வார்கள்.
கு-ரை:- விண் புலவர் - தேவர்கள்.
பாயிரம் முற்றிற்று
2. புராண வரலாறு
14. சீதமுற்ற சடைப்பரமற் கினியவெள்ளி
மாமலைபோல் திகிரி யேந்தும்
மாதவர்க்குப் பாற்கடற்போல் நறைபரந்து
மதுவொழுக மலருந் தெய்வப்
போதனுக்கு மனோவதியாந் திருநகர்போல்
அடற்குலிசம் பொருந்து சொர்க்க
நாதனுக்கைந் தருவனம்போல் முனிவர்க்குச்
சிறந்தபெரு நலத்த தாமால். (1)
பொ-ரை:- குளிர்ந்த கங்கையைச் சடைமுடியில் தரித்துள்ள
சிவபெருமானுக்கு இனிய இடம் வெள்ளி மலையாகிய கயிலாய
மலையாகும். பெரிய மலையைப் போன்ற சக்கராயுதத்தை ஏந்தியுள்ள
திருமாலுக்கு இனிய இடம் திருப்பாற்கடலாகும். மணம் மிகுத்து தேன்
ஒழுகும் தாமரை மலரை இடமாகக் கொண்டுள்ள நான்முகனுக்கு இனிய
இடம் மனோவதி என்னும் நகரமாகும். வலிமையுடைய குலிசப்படையை
யுடைய சொர்க்கத்தின் தலைவனாகிய இந்திரனுக்கு இனிய இடம் ஐந்தரு
வனம் என்பதாகும். அதுபோல முனிவர்களுக்குச் சிறந்த நன்மையைத்
தருகின்ற இனிய இடம் திருச்சோற்றுத்துறை என்பதாகும்.
கு-ரை:- மனோவதி - பிரமன் வதியும் நகரம். ஐந்தரு--
அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்னும் மரங்கள்.
15. அவத்தொகைக்குப் பரிகாரம் அருங்கலைக்குக்
குருபீடம் அளவில் காமம்
எவற்றினுக்கும் பெரியபகை நிலமகளுக்
கொருதிலகம் இடைய றாத
பவக்கடலுக் கொருதோணி யறியாமை
யெனுமிருட்கோர் பானு மேன்மை
தவத்தினுக்கோர் உறையுள் முத்தி
தனக்குவழி சித்தசுத்தி தான மாமால். (2)
பொ-ரை:- அளவில்லாத பாவங்களுக்குப் பரிகாரத் தலமாகவும்,
அரிய கலையாகிய சிவஞானத்திற்குக் குருபீடமாக விளங்குமிடம்,
அளவில்லாத ஆசை எல்லாவற்றிற்கும் பெரிய பகையாக விளங்கும் இடம்,
நில மகளுக்கு ஒப்பற்ற திலகமாக விளங்குமிடம், இடைவிடாமல்
தொடர்ந்து வருகின்ற பிறவியாகிய கடலிலிருந்து வெளியேற உதவும்
தோணியாகவும், அறியாமை (ஆணவமலம்) என்னும் இருட்டுக்கு ஒப்பற்ற
சூரியனாகவும், தவம் செய்வதற்கு நல்ல இடமாகவும், முத்தி பெறுவதற்கு
வழிகாட்டும் தலமாகவும் சித்தத்தைத் தூய்மை செய்யும் இடமாகவும்
உள்ளது திருச்சோற்றுத்துறை தலமாகும்.
கு-ரை:- அவம் - பாவம்.காமம் -ஆசை. பவக் கடல் - பிறவியாகிய
கடல்.. பானு - சூரியன். தானம் - இடம், தலம்.
16. மானின்முலை புலிக்குருளை வாய்மடுக்குங்
கோளரியின் வயிற்று நாப்பண்
ஆனையிளந் தனிக்கன்று துயில்பயிலும்
பச்சோந்தி யன்பாய் நீல
மானமணித் தோகையுடன் மருவுமெலி
யுடன்பழகும் வாள ராவும்
ஈனமுறும் பகைதவிர்ந்து பிறவிலங்கும்
புள்ளினமும் இனிது மேவும். (3)
பொ-ரை:- மானின் முலையில் புலிக்குட்டி வாய் வைத்து பால்
குடிக்கும். சிங்கத்தின் வயிற்றுப் பகுதியில் யானையின் தனித்தக் கன்று
தலைவைத்து உறங்கும்.. பச்சோந்தி நீல நிறமுடைய சிறந்த தோகை
பொருந்திய மயிலுடன் அன்பாய்ப் பழகும். எலியுடன் ஒளிபொருந்திய
நாகம் விளையாடும். விலங்கு இனங்களும் பறவை இனங்களும் குறையை
யுடைய பகையை விட்டு ஒன்றுடன் ஒன்று இனிமையாகப் பழகும் தலம்
திருச்சோற்றுத்துறையாகும்.
கு-ரை:- கோளரி - சிங்கம். குருளை - குட்டி. வாள் அரா - ஒளி பொருந்திய நாகம்.
17. தந்தியினஞ் சந்தனத்தின் நறுந்தழையை
முறித்தடுக்கித் தனது கையால்
உந்துதுகள் மிகவிளக்கிப் புனன்முகந்து
தெளித்துமன முவந்து போற்றும்
அந்திமகம் புரிவோர்போல் அரணிகடைந்
தழலமைக்கும் வாள ராவும்
அந்தண்மணி விளக்கேந்தும் வராகமுழு
தெழும்புதலை யகற்று மாதோ. (4)
பொ-ரை:- யானைகள் தன்னுடைய துதிக்கையால் சந்தனத்தின்
மணம் பொருந்திய தழைகளை முறித்து அவற்றை அடுக்கி வைத்து
குப்பைகளைக் கூட்டி ஒதுக்கித் தள்ளியபின் நீரினை உறிஞ்சி எடுத்து
வந்து தெளித்து, இடத்தைத் தூய்மை செய்து பின் மன மகிழ்ச்சியுடன்
இறைவனைப் போற்றி வணங்கும். ஒளியுடைய காலை நண்பகல் மாலை
ஆகிய அந்தி வேளைகளில் அந்தணர்கள் வேள்வி செய்ய தீ வளர்ப்பது
போல், பாம்பும் அரணி மரக்கட்டையைக் கடைந்து தீ யுண்டாக்குவதுடன்
தன்னுடைய மாணிக்க மணியால் விளக்கேந்தும். முளைத்து வரும் செடி
கொடிகளைப் பன்றிகளும் உழுது அகற்றும்.
கு-ரை:- தந்தி இனம் - யானைக் கூட்டம்.
18. சாதிமகிழ் மந்தாரை செருந்திகுருந்
தாத்தியலாத் தமால மாலம்
போதியகில் சந்தனங்குங் குமங்காஞ்சி
கோங்குவஞ்சி புன்னை சூதம்
பாதிரிசெண் பகம்வேங்கை செயலைமரா
மரங்குரவம் பாலை தேக்குச்
சோதிமரம் வன்னிகடு நெல்லிபுரோ
சுதும்பரமுஞ் சூழ்வ தாமால். (5)
பொ-ரை:- சாதி, மகிழ், மந்தாரை, செருந்தி, குருந்தம், ஆத்தி,
தமாலம், ஆலம், அரசு (போதி), அகில், சந்தனம், குங்குமம், காஞ்சி,
கோங்கு, வஞ்சி, புன்னை, மா (சூதம்), பாதிரி, செண்பகம், வேங்கை,
அசோகம் (செயலை), மராமரம், குரவம், பாலை, தேக்கு, சாதிலிங்கம் (சோதி),
வன்னி, கடுநெல்லி, புரசை (புரோசு), அத்தி (தும்பரம்) ஆகிய மரங்கள்
சூழ்ந்துள்ள தலமாகும்.
19. இத்தகைய வனம்நைமி சாரணிய
மெனவுரைப்பர் இதனின் ஞான
உத்தமரா கியசவுன காதிமறை
முனிவரர்கள் ஒருங்கு மேவி
வைத்ததழல் பெருவேள்வி துடங்கிநிறை
வேற்றிமன மகிழுங் காலை
வித்தகமூ வாறுபுரா ணங்களுணர்
சூதமுனி விரும்பி வந்தான். (6)
பொ-ரை:- இத்தகைய வளம் மிகுந்தது நைமிசாரணியம்
என்னும் வனமாகும். இதனில் வாழும் ஞானம் மிகுந்த உத்தமராகிய
சோனகர் முதலான முனிவர்கள் ஒன்று சேர்ந்து தீ வளர்த்து பெரிய
வேள்வி தொடங்கி இனிது நிறைவேற்றியதனால் மனம் மகிழ்ந்து
இருக்கும் காலத்தில் பதினெண் புராணங்களையும் கற்றுணர்ந்த
பெருமையுடைய சூதக முனிவர் அங்கு வந்தடைந்தார்.
20. வந்தவனை வந்தவினை வென்றமுனி
வரரெதிர்போய் வணங்கி யேத்தி
எந்தையிவன் வருகசிவ கதையமுதக்
கடல்வருக வியல்வி யாதன்
சிந்தைமகிழ் முனிவருக கதிவருக
சிவபத்தித் தெய்வ வல்லி
கொந்துகொடு படர்தருவே வருகவென
முகமனுரை கூறி னானால், (7)
பொ-ரை:- முன்பே வந்த சஞ்சித வினையை வென்ற
நைமிசாரணிய முனிவர்கள் அங்கு வந்து சேர்ந்த சூதமுனிவரின் எதிர்
சென்று வணங்கி போற்றி எங்களுக்குத் தந்தையாக விளங்குபவரே
வருக! சிவபுராணங்களை உணர்ந்த அமுதக் கடலே வருக! பெருமை
விளக்கும் வியாச முனிவரின் மனம் மகிழத் தக்க முனிவர் பெருமானே
வருக! எங்களின் வீடுபேறாக விளங்குபவரே வருக! சிவபத்தி என்னும்
தெய்வக்கொடி முழுதும் படர ஆதாரமான மரம் போன்று விளங்குபவரே
வருக! என்று புகழுரை கூறி வரவேற்றார்கள்.
21. கூறியபின் மாறில்பன்ன சாலையினில்
ஆதரவிற் கொண்டு சென்றே
ஏறுமணி யாசனமிட் டதிலிருத்தி
யருக்கியமு மியல்பி னீந்து
பேறுதருஞ் சிவதருமஞ் சிவகதையைச்
சூழ்ந்திருந்த பெற்றி போலத்
தேறுமனத் தருந்தவர்கள் சூதனைச்
சூழ்ந் திருந்தனர்கள் தெரிந்து சொல்வார். (8)
பொ-ரை:- அதன்பின் சிறப்பான பன்னசாலைக்கு அன்புடன்
அழைத்துச் சென்று மணிகள் பதித்த ஆசனத்தில் அமரவைத்தபின்
அருக்கியமும் அன்புடன் கொடுத்தார்கள். வீடுபேறு தரும்
சிவதருமத்தையும் சிவபுராணத்தையும் சுற்றியிருந்த தன்மைபோல
சூதமுனிவரை நைமிசாரணிய முனிவர்கள் சூழ்ந்திருந்து ஆராய்ந்த
சொற்களால் சொல்லலுற்றனர்.
22. செய்தவத்தின் பயனெளிதின் வெளிவந்த
தெனவந்தாய் சேரார் ஊர்மூன்
றெய்தநித்தன் கதையமுதம் எமதுசெவிப்
புலனிறைத்தாய் இன்று முன்போல்
பொய்தவிரக் கதையின்மிகு மற்புதத்த
தொருகதைநீ புகலவ்வாய் என்ன
மெய்தளிர்த்து மயிர்சிலிர்த்து விழிமுகிழ்த்துப்
பரவசமாய் விளித்துச் சொல்வான். (9)
பொ-ரை:- சிவபெருமானை வணங்கிய பயனாக சிவபெருமானே
நேரில் வந்தது போன்று எங்கள்முன் வந்துள்ளீர்கள். பகைவர்களாகிய
முப்புரத்தவர்களை அழித்த சிவபிரானின் புராணத்தை எங்கள் காது குளிர
உரைத்தீர். முன்போல் இன்றும் எங்கள் பிறவி கெட சிவபுராணத்தின்
மிகுதியான அற்புதம் உடைய ஒரு கதையை நீவிர் எங்களுக்குச்
சொல்வீராக என்று சொன்னார்கள். அதுகேட்ட சூதமுனிவர் உடல்
பரவசமுற மயிர் சிலிர்த்து கண்களில் கண்ணீர் துளிர்க்க பரவசத்துடன்
அம்முனிவர்களைப் பார்த்து கூறலுற்றார்.
23. அந்தணர்கள் எவ்வுயிர்க்குஞ் செந்தண்மை
பூண்டொழுகு மறவோர் என்ன
வந்தமுறை விளக்குதற்கும் முறைபகர்ந்தீர்
உமையம்மை மணாளன் முன்னாள்
கொந்தவிழ்பூங் கடம்பனுக்குக் கூறவவன்
சதுர்முகற்குக் கூற வந்த
அந்தணனும் என்குரவற் கருள்புரிய
வவனெளியேற் கருளி னானால், (10)
பொ-ரை:- எல்லா உயிர்களிடத்தும் செவ்விய தண்ணளியைப்
பூண்டு ஒழுகுதலால் அந்தணர் என்போர் அறவோர் ஆவார் என்ற
திருக்குறள் கருத்தை விளக்குதற்கு வழி கூறினீர்கள். முன்னாளில்
பார்வதி பாகன் கொத்தாக மலரும் கடம்ப மாலையை அணிந்துள்ள
முருகனுக்குக் கூற, முருகன் நான்முகனுக்குக் கூற, நான்முகன்
என்னுடைய தந்தையாகிய வியாச முனிவர்க்குக் கூற, அவர்
திருச்சோற்றுத் தலபுராணத்தை எனக்குக் கூறி யருளியனார்.
24. அக்கதைமெய்க் காந்தமதி னருட்சோற்றுத்
துறைமகிமை யந்தோ வந்தோ
மிக்கரச மாகியதை மனம்பொருந்தக்
கேண்மினென வியாதர் போற்றிச்
செக்கரெனச் செவந்தொளிரும் செஞ்சடில
முனிவரற்குச் செய்ய சூதன்
தக்கபரி சுரைத்தனனால் அடியேனும்
அம்முறையைத் தமிழால் சொல்வேன். (11)
பொ-ரை:- உண்மையாக மனதை மகிழ்விக்கக் கூடிய மதிலால்
சூழப்பட்ட அருட்சோற்றுத்துறையின் பெருமை மிகவும் இனிமையானது.
அதை மனம் ஒன்றிக் கேட்பீர்களாக என்று வியாச முனிவரைப் போற்றி
வணங்கிப் பின் மிகவும் சிவந்து ஒளிவிடும் செஞ்சடை முனிவர்களுக்குச்
சூதமுனிவர் தக்கவிதமாக உரைத்தார். அடியேனும் அப்புராணத்தைத்
தமிழால் சொல்வேன் என்றவாறு.
25. சொன்னதலம் பெருந்தீர்த்த மாகநா
னத்தினொடு துலாக்கா வேரி
பன்னுபிணி மணிசேடன் கவுதமன்சூ
ரியன்சுசன்மாப் பயில்கே தார
மன்னுவிர தஞ்சோம வாரபலன்
சிவநிசியின் மருவு மேன்மை
என்னவிரு சருக்கமொரு பதினொன்றால்
இக்கதையை யியம்பு வாமே. (12)
பொ-ரை:- சொல்லப்பட்ட தலம், தீர்த்தம், மாகநீராடல், துலாக்
காவேரி நீராடல், சேடன் சருக்கம், கவுதமர் சருக்கம், சூரிய சருக்கம்,
சுசன்மச் சருக்கம், கேதார விரதச் சருக்கம், சோமவாரச் சருக்கம்,
சிவராத்திரிச் சருக்கம் என்னும் பதினொரு சருக்கங்களால் இந்த
புராணத்தைச் சொல்லுவேன் என்றவாறு,
முற்றிற்று
3. நாட்டுச் சிறப்பு
(கொச்சகக் கலிப்பா)
26. சகமெனமுன் சதுர்முகத்தோன் சமைத்தநிறை பூந்தடத்தில்
திகழவளந் தருநாவற் றீபமெனும் பூங்கொடிமேல்
புகழெனுமா மணந்தினமும் பொருந்துதிசை தொறுவிரிக்குஞ்
சுகவனச வலராகுஞ் சோணாட்டின் அணிபுகல்வாம். (1)
பொ-ரை:- நான்முகன் படைத்த உலகம் என்று சொல்லப்
படுகின்ற பூக்கள் (நாடுகள்) நிறைந்த தடாகத்தில் (நீர்நிலையில்)
பொருந்திய வளமெலாம் தருகின்ற நாவலம் தீபம் என்னும் பூங்கொடியில்
புகழ் என்று சொல்லப்படுகின்ற மணத்தை நாள்தோறும் எல்லா
திசைகளிலும் பரப்புகின்ற சுகத்தைத் தருகின்ற தாமரை மலராகிய
சோணாட்டின் அழகை (பெருமையை) சொல்வேன் என்றவாறு,
கு-ரை:- உலகத்தை நீர் நிலையாகவும், மற்ற நாடுகளைப்
பூக்களாகவும், இந்தியத் திருநாட்டைத் தாமரைக் கொடியாகவும்
சோணாட்டைத் தாமரை மலராகவும் ஆசிரியர் உருவகித்துள்ள அழகு
சிறப்பானது.
27. உரைத்தசைய வரைமுதலி யரங்கமட்டு மோருருவாய்
இரைத்தகருங் கடலளவும் இரண்டுருவாய் யிசைந்தொலிக்குஞ்
திரைத்தநதி பலகாலுஞ் செறிதலினால் செழும்பொன்னி
நிரைத்தநில மகள்சுழுநை நாடியென நிலவுமால். (2)
பொ-ரை:- சையமலை என்று சொல்லப்படுகின்ற இடம் முதலாக
திருவரங்கம் வரையில் ஒரு உருவத்தோடு (ஒரு நதியாக) விளங்குகின்றது.
திருவரங்கம் முதலாக ஒலிக்கின்ற கருங்கடல் வரையிலும் இரண்டு
உருவமாக விளங்குகின்றது. பொருந்தி ஒலிக்கின்ற அலையை உடைய
காவிரி நதி பல கால்வாய்களாகப் (பலகாலும்) பிரிந்து பாய்ந்து வளம்
செய்வதனால், ஒழுங்காக நிறுத்தப்பட்ட நிலமகளுக்குக் காவிரி நதி
சுழுநை நாடியாக விளங்குகின்றது.
கு-ரை:- காவிரி நதி திருவரங்கத்திற்கு அருகில் கொள்ளிட
மாகவும் காவிரியாகவும் பிரிகிறது. கொள்ளிடத்தில் செல்லும் நீர் கடலில்
கலக்கிறது; ஆனால் காவிரியில் பாயும் நீர் பயிர்களை வளர்த்து வளம்
சேர்க்கின்றது. அதனால் இது இரண்டு உருவம் பெறுகிறது.
28. ஓங்குவரைப் பொலிதலினால் உமைபாகன் றனைநிகர்க்கும்
தாங்குபல வுயிர்களெலாந் தருதலிற்போ தனைநிகர்க்கும்
வாங்கியதண் கடலிடத்தின் மருவலின்மா யனைநிகர்க்கும்
தேங்கியமுத் தினங்கொழிக்குந் திரைகுலவும் புனற்பொன்னி. (3)
பொ-ரை:- மிகுந்த முத்தினங்கள் பெருகியிருக்கும் அலைவீசும்
நீரையுடைய பொன்னி நதி உயர்ந்த மலையில் தோன்றி வருவதால்
கயிலையில் வீற்றிருக்கும் உமை பாகனாகிய சிவபெருமானை ஒத்திருக்
கின்றது; பலவுயிர்களைத் தந்து தாங்குவதால் பொன்னி நதி தாமரை
மலரின்மேல் இருக்கும் நான்முகனை ஒக்கும்; அப்பொன்னி நதி நீரைக்
குளிர்ந்த கடலில் கலந்து இருப்பதால் திருமாலை ஒக்கும் என்பதாம்.
கு-ரை:- சிவபெருமான் கயிலையில் எழுந்தருளியுள்ளது போன்று
பொன்னியும் மலையில் தோன்றியுள்ளதால் சிவபெருமானுக்கு ஒத்ததா
கின்றது. நான்முகன் பலவுயிர்களைப் படைக்கின்றதுபோல பொன்னியும்
பலவுயிர்களும் தோன்றி வளர்வதற்குக் காரணமாக இருப்பதால் நான்
முகனை ஒத்து விளங்குகின்றது. திருமால் பாற்கடலில் தங்கியுள்ளதுபோல
பொன்னிநீர் கடலில் கலந்து தங்குவதால் திருமாலுக்கு நிகராக
விளங்குகின்றது என்று ஆசிரியர் கூறுகின்றார்.
29. ஒருங்குவரு நாற்பாலி னொழுக்கமிகக் காட்டுதலாற்
றிருந்துபல துறைகடொறுந் தெளிவுபெற வருதலினால்
விரும்பிமுப் பொருளினையு மேதினிமேல் விளக்குதலாற்
பொருந்தியமெய்த் தேசிகரே போலுமாம் புனற்பொன்னி. (4)
பொ-ரை:- உண்மை பொருந்திய ஆசிரியர், பொருந்திய நான்கு
வருணத்தார்களின் ஒழுக்கத்தைக் கற்பிப்பார்; திருத்தமுற கலைகளின்
பலதுறைகளையும் தெளிவுபட விரித்து உரைப்பார்; விருப்பம் உடைய அறம்
பொருள் இன்பம் என்னும் மூன்று பொருளினையும் விளக்கி உரைப்பார்.
அதுபோல, பொன்னி நதியும் நான்கு வருணத்தாரையும் நீர்ப் பெருக்கினால்
வளம் சேர்த்து வாழ வைக்கின்றது; பொன்னி ஆற்றின் கரைகளில் உள்ள
இறங்கு துறைகளில் தெளிவான நீருடன் வந்து தீர்த்தமாக வினைகளை
நீக்கி வாழ்வைத் தெளிவுபெற வைக்கின்றது; பொன்னி நாட்டில் வாழும்
மக்களுக்குப் பலவளத்தையும் கொடுத்து அறம் பொருள் இன்பம் பெருக
வாழ வைக்கின்றது. அதனால் பொன்னி நதி உண்மைத் தேசிகரைப்போல்
விளங்குகின்றது.
30. மணம்பொருந்து தலைவரையே மருவிவிரு மாட்சியினால்
இணங்கியநற் கற்புநிலத் தெய்தலினா லெஞ்ஞான்றும்
குணங்கிளரு மச்சநிறை கொள்கையுட னிறைதலினாற்
புணர்ந்தகுல மடந்தையரே போலுமாம் புனற்பொன்னி. (5)
பொ-ரை:- குலமடந்தையர் தாம் மணந்துகொண்ட காதல்
தலைவனையே கூடி பெருஞ் சிறப்பினால் பொருந்திய கற்புநெறியை
நிலைக்க வைப்பதுடன் எப்பொழுதும் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு
என்னும் குணங்கள் நிறைந்து விளங்குவர். அதுபோல பொன்னியும் தான்
ஓடிவரும் பொன்னி நாட்டையே வளமாக்குகின்றது; சிறப்பு பொருந்திய
நிலத்திற்கு நீர் வளம் தவறாது கொடுக்கிறது; அச்சம் கொண்டு
பெருவெள்ளமாக வராமல் நிறைகுணத்தோடு நாட்டை வளமாக்குகின்றதனால்
குலமடந்தையரை ஒத்து விளங்குகின்றது.
31. தண்டலையில் மலர்த்தடத்திற் றடவயலிற் குளப்பரப்பில்
மண்டுபல கானதியின் மடைவாயின் மதகுகளின்
எண்டிகழும் பொருட்பேதம் யாவையினு நிறைந்தோங்கும்
அண்டர்பிரா னருள்போல வாற்றுநீர் பரந்தனவால். (6)
பொ-ரை:- சோலைகளிலும், மலர் நிறைந்த பொய்கைகளிலும்
அகன்ற வயல்களிலும் குளப்பரப்பிலும் பெருகியுள்ள பல காட்டு
நதிகளிலும் மடையின் மதகுகளிலும் பொன்னி ஆற்றின் நீர், எட்டுத்
திசைகளிலும் பொருள் வேறுபாடு உடைய எல்லாவற்றினும் நிறைந்து
விளங்குகின்ற அண்டர்பிரானின் திருவருள் போலப் பெருகி நிறைந்தது.
32. காவிரியின் புனல்பரந்த களமருளும் வளவயலிற்
ஆவினிலைந் துகந்தபிரான் அருள்பொருந்து மவருளம்போல்
மேவுகடி னங்கரைந்து மென்மையுறப் பன்னிறத்த
சேவினமும் பகட்டினமும் தெரிந்தினஞ்சேர்த் தினிதுழுவார். (7)
பொ-ரை:- காவிரியின் நீர் பெருகியுள்ள வளமான வயல்களில்
பல நிறமுடைய இனக்காளையுடன் காளையையும், இன எருமையுடன்
எருமையையும் பொருந்தும்படி சேர்த்து, ஆவினில் ஐந்து உகந்தாடும்
பிரானாகிய சிவபெருமான் அடியார்களுக்கான அருளைப் பொருந்திய
உளம்போல உள்ளம் கொண்ட உழவர்கள், கடினமான மண்
மென்மையுறும்படி உழுவார்கள்.
33. கருமுகிலின் மழைவளனுங் காவிரியின் புனல்வளனும்
இருபானு முறைவளனு நிலவளனுந் தண்டலையின்
வருவளனுஞ் செழுங்குடிகள் மனமுவந்து தினம்புரியும்
தருமவளன் பாடியுழுந் தரையொலிவான் றனையளக்கும். (8)
பொ-ரை:- கரிய மேகத்தால் வரும் மழை வளத்தையும், காவிரி
நதியின் நீர் வளத்தையும், சூரிய சந்திரர்களால் வரும் வளத்தையும்,
நிலத்தின் வளத்தையும், சோலைகளால் வரும் வளத்தையும், செழுமையான
நற்குடி மக்கள் தினந்தோறும் செய்கின்ற தரும வளத்தையும்
பாடிக்கொண்டு உழவர்கள் உழுவதனால் உண்டாகும் தரையொலி
வானுலகம் வரையில் கேட்கும்.
34. ஆற்றன்மிக வுழுததற்பி னடல்வளவர் கடகளிறு
வேற்றுமுடி யெடுப்பதுபோல் வியனாற்று முடியெடுத்தும்
போற்றுகுலம் நான்கினையும் புகழரசர் நடுவதுபோல்
நாற்றுநடுங் கடைசியர்கள் நலங்குலவும் வயலெங்கும். (9)
பொ-ரை:- மிகுந்த வலிமையுடன் வயலை உழுதபின், போர்வல்ல
சோழர்களின் வலிமையுடைய களிறு வேற்று அரசர்களின் தலையில்
உள்ள முடியை எடுப்பதுபோல உழவர்கள் நாற்றுமுடியை எடுப்பார்கள்.
புகழையுடைய சோழ அரசர்கள் போற்றுதற்குரிய நான்கு குலத்தவரையும்
நாட்டில் நிலைபெற வாழவைப்பது போன்று நன்மை பொருந்திய வயலில்
எல்லாம் உழத்தியர்கள் நாற்று நடுவார்கள்.
35. நற்குலத்துப் பிறந்தவரை நலிவுசெய்யு முட்பகையை
அற்புடைமைக் கேளிரின மறிந்துகளைந் தெனப்பயிருள்
உற்பவித்த மலர்க்களையை யொளிமுறுவற் கடைசியர்கள்
பொற்கரத்துக் களைந்துகளை பொருந்துவர்கள் நுதல்வியர்ப்ப. (10)
பொ-ரை:- நல்ல குலத்தில் பிறந்தவரை அவருடைய
உறவினர்களே உட்பகையாக இருந்து துன்பம் விளைவிப்பர். அவ்வாறு
உட்பகையானவரை இனம் கண்டு அவரை விலக்குவது போல
விளைவிக்கும் பயிரில் தானே தோன்றிய மலர்களாகிய களைகளை,
ஒளியுடைய புன்முறுவல் செய்யும் உழத்தியர்கள் தங்களுடைய
பொன்போன்ற கைகளால் நெற்றியில் வியர்வை உண்டாகக் களைந்து
அகற்றி பயிர்களைக் காப்பர்.
36. கட்டகளை மலர்பொழிதேன் கால்பரந்து மதகுதொறும்
இட்டபல கையுமகற்றி யெப்பாலு நிறைபுனலை
பொட்டுநுத லுழத்தியர்கள் பூந்துவர்வாய் மடுத்தருந்தி
மட்டவிழும் புனற்சுவைதான் மதுரமெனப் பகர்ந்திடுவார். (11)
பொ-ரை:- களைந்த களைகளாகிய மலர்களிலிருந்து வழியும் தேன்
வாய்க்கால்களில் கலந்து மதகு பொருத்தி வைக்கப்பட்டுள்ள
பலகைகளை அகற்றி எல்லா இடத்திலும் நிறைந்திருக்கின்ற நீரை
நெற்றியில் பொட்டு வைத்துள்ள உழத்தியர்கள் தங்கள் பூப்போன்ற சிவந்த
வாயைவைத்துக் குடித்தபின் தேன் கலந்த நீரின் சுவை மிகவும்
இனிமையாக உள்ளது என்று சொல்லுவார்கள்.
37. அம்புயத்து மதுவருந்தி யவசமுற வருங்களமர்
தம்புயத்து முலைதிளைப்பத் தழுவியுறை மலர்ச்சோலைக்
கம்புயத்தோன் பலவடிவாய்க் கவின்பொதுவர் மாதர்பலர்
செம்பணைத்தோ டழுவியுறுஞ் செழுஞ்சோலை யெனத்திகழும். (12)
பொ-ரை:- வளமான பிருந்தாவன சோலையென மலர்ச்
சோலையில் கண்ணன் பல வடிவம் கொண்டு இடைக்குலப்
பெண்களுடைய செழுமையான தோள்களைத் தழுவி இருக்கின்ற காட்சி
தாமரை மலரின் தேனையுண்டு பரவசம் (மயக்கம்) உற்று இருக்கின்ற
உழவர்கள் தம்முடைய மார்பில் காதலியின் முலை பொருந்த தழுவிய
நிலையில் உள்ள காட்சியை ஒத்திருக்கும்.
38. உத்தமர்தங் கரதலத்தி லுதவியநற் றானமென
மெத்தியசெஞ் சாலியின மிகச்செழித்துப் பணைத்தோங்கிச்
சுத்தநறும் பாலனைய கருவிருந்து சூன்முதிர்ந்து
வைத்தமர கதப்பசுமை வாய்ந்துகதி ரீன்றனவால். (13)
பொ-ரை:- உத்தம பெரியோர்களின் கைகளில் உதவப்பெற்ற
நல்ல தானத்தின் பயனைப் போல மென்மையான செந்நெல் பயிர் மிகவும்
செழித்து, கிளைத்து, உயர்ந்து, வளர்ந்து மரகதம் போன்ற பசுமை பெற்று
நல்ல சூல்கொண்ட கதிர்விட்டு விளங்கின.
39. ஈன்றகதிர் பலவிதமா யேய்ந்தமிகு புலன்கடொறும்
ஆன்றபல பொறிகளென வளர்ந்துபல கலையுணர்ந்தான்
ஏன்றவறி வுளநிரம்பு மியல்பெனப்பா னனிபரந்து
தோன்றுபரி முகங்காட்டி விளைந்தனநெற் கதிர்த்தொகுதி. (14)
பொ-ரை:- அறிவுத் துறையில் பலவாகப் பொருந்தியுள்ள
துறைகள் தொறும் மாட்சியுடைய பலவித அறிவுகளும் வளர்ந்து பல
கலைகளையும் உணர்ந்தவனுடைய பொருந்திய அறிவு நிரம்பும் தன்மை
போன்று ஈன்ற கதிர் விளைந்து வளைந்து இருப்பது குதிரை முகம் காட்டி
காட்சியளித்து நின்றன நெற்கதிர்கள்.
40. விளைந்தகதிர் கண்டுழவர்
விண்ணவர்கோன் றனைப்பரவி
வளைந்தகொடு வாட்பூட்டி
யரிந்தரிகள் வகைவகையாய்
அளந்தறிதற் கருஞ்சுமைக
ளாக்கினர்கள் கொடுபோந்து
களந்தனிற்சேர்த் துயர்வரைபோற்
கதிர்ப்போர்கள் பலவமைத்தார். (15)
பொ-ரை:- உழவர்கள் விளைந்த நெற்கதிரைக் கண்டு,
தேவர்களின் தலைவனாகிய இந்திரனை வணங்கி, வளைந்த கதிர்
அரிவாள் கொண்டு அரிந்து, அரிகளாக்கி அவற்றைப் பெரிய
கட்டுகளாக்கி தூக்கிச் சென்று களந்தனில் சேர்த்து உயர்ந்த
மலைபோன்ற கதிர் போர்கள் பல குவித்தனர்.
41. ஆற்றியபோர் பரித்துவிரித்
தடற்பகடுங் கடுநடைய
ஏற்றினமும் வலமுறையா
லினிதுநடத்தினர் வைக்கோல்
மாற்றியபின் மாருதந்தான்
வழங்குவழி பதர்போகத்
தூற்றினர்கள் பழுதகற்றிச்
சொற்காணும் புலவரைப்போல், (16)
பொ-ரை:- கதிர் போர்களைப் பிரித்துக் களந்தனில் பரப்பி
போர்க்குணமுடைய எருமைகளையும் கடும் நடையுடைய காளைகளையும்
பிணித்து கதிர்மேல் வலமாக சுற்றி வரும்படிச் செய்து, பிணையல்
அடிப்பார்கள். பின்னர் வைக்கோலை உதறி எடுத்தபின் காற்று அடிக்கும்
திசைக்கு ஏற்ப பதர் போக பழுதான சொற்களை நீக்கித் தூய சொற்களைக்
கொண்டு பா புனையும் புலவரைப் போன்று நெல்லைத் தூற்றுவார்கள்.
42. நல்லநவ மணிவரைபோ னவையகலும் படிதூற்றி
நெல்லின்வகைத் தனித்தனியே நிறைபொருந்தக் குவையாக்கி
அல்லலகற் றிடுமரசர்க் காறிலொன்றீந் தேனையகொண்
டில்லறத்திற் கியம்புமுறை யியற்றுவர்கள் இயல்பாக, (17)
பொ-ரை:- பதர் போன்ற குற்றங்கள் போக தூற்றிய நெல்லை,
நல்ல நவமணிகளின் மலைபோன்று நெல்லின் வகைக்கு ஏற்ப வரிசையாக
தனித்தனியான குவியலாகக் குவித்து வைப்பர். பின்னர் குடிகளின்
துன்பங்களை நீக்கி அரசாளும் அரசர்க்கு ஆறில் ஒரு பங்கு
கொடுத்தபின், மீதம் உள்ள நெல்லை இல்லத்திற்கு எடுத்துச் சென்று
இயல்பாக இல்லறத்திற்கு ஏற்ற முறையில் பயன்பெறச் செய்வார்கள்.
43. பயிலுவன வறநெறிகள் மாளிகையின் பாங்கரெலாம்
அயிலுவன விருந்தினங்கள் ஆய்வனவா கமப்பொருள்கள்
குயிலனமென் மொழிமாதர் குலவுமணி யாபரண
வெயிலனவீ திகணிலவும் வியனகரம் பலவுளவால். (18)
பொ-ரை:- மாளிகைகளில் எல்லாம் அறநெறிகள் கடைப்பிடிக்கப்
படுகின்றன; மாளிகையின் பக்கம் எல்லாம் விருந்தினர்கள் உபசரிக்கப்
படுகின்றனர்; ஆகமப் பொருள்கள் ஆராயப் படுகின்றன; குயில்போன்ற
இனிய சொல் பேசும் பெண்கள் அணிந்துள்ள மணியாபரணங்களின் ஒளி
வெயில் என வீதிகளில் பரவும். சோழ நாட்டில் இதுபோன்ற நகரங்கள் பல
உள்ளன.
44. அளியினங்கள் முரல்சோலை யகலமெலா மருமறைநூல்
கிளியினங்கள் விரித்துரைக்கப் பூவையினங் கேட்டுருகும்
தெளிபளிங்கி னிறம்படைத்த செழும்புனற்பூந் தடந்துறையில்
ஒளிவிளங்கு நகைமாத ருடனாடு மோதிமங்கள். (19)
பொ-ரை:- சோலையின் பரப்பில் எல்லாம் வண்டு இனங்கள்
ஒலி செய்யும்; அரிய மறைநூல்தனைக் கிளிகள் விரித்து உரைக்கக் கேட்ட
நாகணவாய்ப் பறவைகள் உருகி நிற்கும்; தெளிந்த பளிங்கு போன்ற நீர்
நிறைந்துள்ள பூக்கள் உடைய தடாகத்தில், ஒளி பொருந்திய நகை
அணிந்துள்ள நீராடும் பெண்களுடன் எருமைகளும் நீரில் படிந்திருக்கும்.
வேறு
(கலிவிருத்தம்)
45. தெறுகயல் பாய்ந்திடத் தீம்ப லாவினில்
யுறுகனி யுடைந்துபொற் சுளையு குப்பன
மிறைபுரி யரசரை வேந்தொ றுத்திட
திறையெனப் பொதிநிதி யளிக்குஞ் செய்கைபோல். (20)
பொ-ரை:- குற்றம் செய்யும் அரசரை வேந்தன் படையெடுத்துத்
தண்டிக்க, தோற்ற அரசர்கள் வேந்தனுக்குத் திறையாக நிறைந்த நிதியை
அளிப்பதுபோல், சினம் பொருந்திய கயல் மீன் துள்ளி இனிய
பலாக்கனியின்மேல் பாய்ந்திடலும் பலாக்கனி உடைந்து பொன்போன்ற
சுளைகள் மிகுதியாக கீழே சொரியும்.
46. வாவின வாளைகள் வாய்ந்த சோலையிற்
றாவிமென் மலர்த்துகள் சார்ந்து மேற்செலன்
மேவிய மகத்தொழின் முடித்த வேதியர்
தேவுடல் கொண்டுவிண் சேறல் போலுமால். (21)
பொ-ரை:- தொடங்கிய வேள்வியை முடித்த வேதியர்கள் தேவர்
உடல் பெற்று வானுலகம் செல்லுதல் போன்று, பொருந்திய சோலையினில்
வாளைகள் துள்ளிப் பாய்தலால் மெல்லிய மகரந்தப்பொடி பொருந்தி மேலே
செல்லும் வாளைகள் காணப்படுகின்றன.
47. கயலின நறைவிரி கமலப் போதினில்
இயல்பொடு பிறழ்வன இளைஞர் சிந்தையின்
மயலுறப் பொருள்விலை மாதர் வாண்முகம்
பயினமர் விழிபிறழ் பான்மை போலுமால். (22)
பொ-ரை:- இளைஞர்களின் சிந்தையில் மயக்கத்தை
உண்டாக்கும் பொருள் மகளிரின் ஒளி பொருந்திய முகத்தில் விளங்கும்
விழியானது சுழலுவது போல தேன் நிறைந்த தாமரைப் பூவில் கயல் மீன்
உழல்வது காணப்படும்.
48. கோங்கலர் நீலஞ்செய் குன்றின் மீதசைந்
தாங்குபொன் னிறமுற வதனி னாவலந்
தீங்கனி பொருந்தல்பொன் னுரைத்துச் செட்டிகள்
ஓங்கிய மெழுகினி லொற்ற லொக்குமே. (23)
பொ-ரை:- கோங்கின் பூ நீலநிறம் உடைய குன்றின் மீது
அசைந்து அங்கு பொன்னிறம் உண்டாக்குகின்றது. அதன்மீது நாவல்
மரத்தின் இனிய கனி காற்றில் அசைந்து பொருந்தும் காட்சி
பொற்கொல்லர் உரைகல்லில் பொன்னை உரைத்துப் பின் மெழுகு
கொண்டு அப்பொன்னை ஒற்றி எடுத்தலை ஒத்திருக்கும்.
49. அருவியி னிலகிய வார மாலைகள்
மருவிய தமனிய மாளி கைக்குலங்
கிரியென மிளிர்வன கேகயங்கள்போற்
பரிவுட னினிதவண் இருப்பர் பாவையார். (24)
பொ-ரை:- அன்புடன் அணிந்த மாலைகள் அருவியில்
மிதக்கின்றன. பொன் பொருந்திய மாளிகைகள் மலையென
விளங்குகின்றன. அவற்றில் மயிலைப்போன்ற சாயலையுடைய பெண்கள்
இனிமையுடன் விரும்பித் தங்கி இருக்கின்றனர்.
50. நரந்தமு னூறுசெய் நாளி கேரத்திற்
பொருந்தின நீரின்மேற் பூகப் பாளைகள்
விரிந்துறல் காமுகர் வடுச்செய் வெம்முலை
வருங்கணி கையர்துகின் மறைத்தல் மானுமே. (25)
பொ-ரை:- வருத்தும் நாரத்தை தென்னையின்மேல்
பொருந்தினதும், நீர் பரப்பின்மேல் பாக்கு மரத்தின் பாளைகள் விரிந்து
பொருந்தினதும் கணிகையர் பெரிய முலைமேல் காமுகர் செய்த
நகக்குறியைத் (வடு) தம்முடைய ஆடையால் மறைப்பதைப் போன்றதாகும்
51. பலகுழு வுட்பகைப் பசிய றாப்பிணி
கொலைபுரி புறப்பகை குறும்பு மில்லையாய்
நிலவிய விளையுளு நீடு செல்வமும்
உலகிய லறிஞர்தங் குழுவு மோங்குமால். (26)
பொ-ரை:- (சோழ நாட்டில்) பகையான பல குழுக்களும்
உட்பகையாய் இருப்பவர்களும் பசிப்பிணியும் பிற பிணியும் கொலை
செய்கின்ற புறப்பகையும் கலகம் விளைக்கின்றவர்களும் இல்லை. நல்ல
விளைச்சலும் நீண்ட செல்வமும் உலகியல் அறிவு உடைய அறிஞர்கள்
கொண்ட குழுவும் சிறந்து விளங்குகின்றது.
52. வருபுன லேரிகள் வாவி கூபங்கள்
இருநில வுயிர்புக லெய்து மூதெயில்
அருள்புரி மாமட மன்ன சத்திரம்
திருமலி யாலயஞ் சிவணு மூர்தொறும். (27)
பொ-ரை:- நீர் வரத்து உடைய ஆறுகள் ஏரிகள் குளங்கள்
கிணறுகள் பெரிய நிலத்தில் உள்ள உயிர்களுக்குப் பாதுகாப்பாக
விளங்கும் பெரிய கோட்டைகளும் அருளைப் புரியும் மடங்களும் அன்ன
சத்திரங்களும் தெய்வ அருள் நிறைந்த ஆலயங்களும் (சோழநாட்டில்
உள்ள) ஊர்கள் தோறும் நிறைந்து விளங்குவனவாம்.
53. பூதிசா தனங்கள்மெய்ப் பொருளென் றெண்ணுவார்
ஓதுமைந் தெழுத்தினை யன்றி யோதிடார்
மாதுபா கனைத்தின மனத்தி னுன்னுவார்
நீதியி னிற்பரின் னிலத்து மாந்தரே. (28)
பொ-ரை:- சோழ நாட்டில் உள்ள மாந்தர்கள் விபூதி முதலான
சாதனங்களை மெய்ப்பொருள் என்றே நினைப்பார்கள்; உண்மைப் பொருள்
என்று ஓதப்படுகின்ற ஐந்தெழுத்தை அன்றி வேறு எதையும் ஓதுதல்
செய்யார்; மாதாகிய உமையை ஒரு பாகத்தில் உடைய சிவபெருமானை
நாளும் மனத்தில் எண்ணிக் கொண்டிருப்பார்கள்; நீதியின் வழியில்
ஒழுகுவார்கள்,
54. தேவெனக் கொழுநரைச் சிந்தை செய்தவர்
ஏவலி னியற்றுவர் தருமம் யாவையும்
மேவுநாற் குணநிறை விருந்து போற்றுதல்
ஓவிலா வணியென யுவப்பர் மங்கைமார். (29)
பொ-ரை:- (சோழ நாட்டில் உள்ள) பெண்கள் தம் கணவரைத்
தெய்வம் என்று எண்ணி அவர் சொல்லும் பணிகளைச் (மனம்
கோணாமல்) செய்வர்; தருமம் எல்லாம் பொருந்திய நான்கு குணத்தையும்
உடையவர்; நிறைந்த விருந்தினரை உபசரித்தல் அழிவிலா அழகாகும்
என்று உபசரித்து மகிழ்வர்.
55. உறுபொருள் பரிசில ருவப்ப நல்கியே
பெறுபுக ழுலகினி னிறுவிப் பெட்புறு
பொறுமையு மொழுக்கமுங் குலமும் போற்றிடும்
மறுமறு வள்ளியோர் வாழ்க்கை மன்னுமே. (30)
பொ-ரை:- (சோழ நாட்டில் உள்ள) வள்ளலாக விளங்குவோர்
தம்மிடம் வரும் பரிசிலர்களுக்குத் தக்க பொருள்களைப் பரிசிலர் மனம்
மகிழக் கொடுத்து அதனால் வரும் புகழை உலகினில் நிலைநிறுத்துவர்;
பெருமை யுடைய பொறுமையும் ஒழுக்கமும் குலத்தையும் போற்றுவார்கள்;
குற்றமற்ற வள்ளல்களின் வாழ்க்கை என்றும் நிலைபெற்றதாகும்.
56. கன்னலும் பனசமும் கமுகும் வாழையும்
செந்நெலும் காடெனத் திகழு மெங்கணும்
அன்னமுஞ் சொன்னமும் அணியும் ஆடையும்
பன்னெடுங் கிரியெனப் பல்கு மெங்கணும். (31)
பொ-ரை:- (சோழ நாட்டில்) கரும்பும் பலாவும் பாக்கும் வாழையும்
செந்நெல்லும் எங்கும் காடுபோல் வளர்ந்து விளங்கும்; அன்னமும்
தங்கமும் ஆபரணமும் ஆடைவகைகளும் பல பெரிய மலையென
எவ்விடத்தும் பெருகி விளங்கும்.
57. தண்டலை மலர்பொழிற் றண்ணந் தேன்மழை
அண்டர்கள் பொழிதரு மலர்ந்த பூமழை
உண்டென வள்ளியோ ருதவு பொன்மழை
கொண்டலின் மழையொடு குலாவு மெங்கணும். (32)
பொ-ரை:- சோலைகளில் மலர்ந்துள்ள மலர்களிலிருந்து
பொழியும் குளிர்ந்த தேன் மழையும், தேவர்கள் உலகத்தில் உள்ள கற்பகம்
போன்ற மரங்களில் மலர்ந்த பூக்கள் பொழிகின்ற பூமழையும், வள்ளல்கள்
உதவ இருக்கின்றது என உதவுகின்ற பொன்மழையும், மேகத்தின்
மழையோடு எவ்விடத்தும் பொழியும்.
58. வாரண வொலிபரி மாவின் சீரொலி
காரணன் விழாவொலி கமலன் இந்திரன்
நாரணன் பரமனைப் புகழு நல்லொலி
ஆரண வொலியுடன் அமரும் எங்கணும். (33)
பொ-ரை:- யானைகளின் பிளிற்றொலியுடன் குதிரைகளின்
கனைப்பொலியும், எல்லா உயிர்களும் உலகங்களும் தோன்றி நிலைத்து
இருப்பதற்கு மூலமாக இருப்பவனாகிய சிவபெருமானுக்கு எடுக்கின்ற
விழாக்களின் ஒலியும், பிரமன் இந்திரன் திருமால் முதலியோர்
சிவபெருமானைப் புகழ்ந்து வாழ்த்தும் நல்ல ஒலியும் வேதங்களின்
ஒலியுடன் எல்லா இடங்களிலும் பொருந்தி ஒலிக்கும்.
59. போற்றிய வேள்வியிற் புரிந்த பேரொளி
தோற்றுமா மணியொளி சுடரும் பூணொளி
ஏற்றிய விளக்கொளி யிலங்கு ஞாங்கர்வெண்
ணீற்றொளி யொடுதினம் நிலவு மெங்கணும். (34)
பொ-ரை:- விரும்பிச் செய்யப்பட்ட வேள்வியில் எழுந்த வேள்வித்
தீயின் பேரொளியும், விளங்கும் நவமணிகளின் ஒளியும், தரித்துள்ள
ஆபரணங்களின் ஒளியும், ஏற்றிய விளக்குகளில் வரும் ஒளியும்,
ஒளியுடைய பூசப்பட்ட வெண்ணீற்றின் ஒளியும் நாளும் (சோழ நாட்டில்)
எவ்விடத்தும் விளங்கும்.
60. மன்னுமிப் பெருவள மெவையும் வாரிசூழ்
என்னில வளங்களு மிதனுண் மேவலான்
தன்னில நாடெனு நாடெ வற்றினும்
பொன்னிநன் னாட்டணி பொலிவு பெற்றதே. (35)
பொ-ரை:- நிலைபெற்ற இந்த பெரிய வளம் எல்லாமும் கடல்
சூழ்ந்த கடல் வளங்களும் சோழ நாட்டில் பெருகியுள்ளதால் உலகில் நாடு
என்று சொல்லப்படும் எந்த நாட்டை விடவும் பொன்னி நாட்டு அழகு
மிகவும் சிறப்புடையதாம்.
நாட்டுச் சிறப்பு முற்றிற்று
4. நகரச் சிறப்பு
61. தோற்றிமெய் நீதிபெறு சோழவள நாட்டில்
தேற்றமிகு பொன்னியுயர் தென்கரையின் மன்னி
ஆற்றல்செறி பஞ்சநதி யூர்க்கணிய தாகும்
போற்றுபுக ழோதன புரத்தினணி சொல்வாம். (1)
பொ-ரை:- மெய்யான நீதிமுறையைத் தோற்றுவித்து அதன்படி
ஆட்சி செய்யும் சோழவள நாட்டில் தெளிவு மிகுந்த பொன்னி நதியின்
உயர்ந்த தென்கரையில், நிலைபெற்று ஆற்றல் மிகுந்த திருவையாறு
என்னும் தலத்திற்கு அருகில் உள்ள புகழால் போற்றப்படுகின்ற
சோற்றுத்துறையின் அழகினைச் சொல்லுவாம் என்றவாறு.
62. தூமணி தருக்குலவு சொர்க்க நகரென்றே
பூமியென லன்றிவளர் புண்ணிய மியற்றும்
வாமநிறை பூதலமு மாகுமென வாழ்த்தும்
ஏமமுடன் வந்தவ ணிருந்தனைய திவ்வூர். (2)
பொ-ரை:- தூய நவமணிகளும் தேவ தருக்களும் நிறைந்த
சொர்க்க நகரம் என்றே சொல்லும் படியானதும் பூவுலகம் என்பதன்றி
புண்ணியம் செய்யும் அழகு நிறைந்த உலகம் என வாழ்த்தும்படியான
பாதுகாப்புடன் (சொர்க்க நகரம்) வந்து இருந்தது என்று சொல்லும்படியான
ஊர் சோற்றுத்துறையாகும்.
63. நம்புதன தன்றினமும் நாதனை வணங்க
செம்பொனள கைக்குளுயர் திண்கைலை தன்னை
உம்பர்தொழ வைத்ததென வோதன புரத்துள்
அம்பிகை மணாளனுறை யாலயம் இலங்கும். (3)
பொ-ரை:- விரும்பப்படும் குபேரன் சிவபெருமானை நாளும்
வணங்குவதற்காகவும் செம்பொன்னால் ஆகிய அளகாபுரி நகரத்துள்
உயர்ந்த வலிமையுடைய கயிலையைக் கொண்டுவந்து தேவர்கள்
தொழுவதற்காகவும் வைத்ததைப் போன்று திருச்சோற்றுத்துறையில்
அம்பிகையான பார்வதி பாகனாகிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும்
திருக்கோயில் விளங்குகின்றது.
64. ஆலய நெடும்புரிசை யாடக முகப்பின்
மாலயனும் இந்திரனும் வந்துபொழி கின்ற
கோலமலி பொற்றருவி னற்றுணர் குலாவிச்
சாலுமக மேருவி னுயர்ந்தொளி தயங்கும். (4)
பொ-ரை:- ஆலயத்தின் உயர்ந்த மதில் சுவரின் பொன்முகப்பில்
திருமாலும் பிரமனும் இந்திரனும் கொண்டு வந்து சொரிகின்ற அழகு
மிகுந்த பொன்தருவின் பூங்கொத்து பொருந்தி மகாமேரு மலையைவிட
உயர்ந்து ஒளியுடன் திகழும்.
65. சென்றுமணி மன்னர்முடி தேவர்மகு டங்கள்
ஒன்றினுட னொன்றினி துரிஞ்சவுதிர் பொற்றூள்
அன்றலகின் மாற்றியரு ளன்பர்புற முய்ப்ப
குன்றென விளங்குவன கொண்டல்குடி கொள்ள. (5)
பொ-ரை:- மன்னர் மணிமுடியும் தேவர்களின் முடிகளும் சென்று
ஒன்றினொடு ஒன்று மோதி உரிஞ்சுவதனால் உதிரும் பொன் துகளைத்
துடைப்பத்தால் அடியார்கள் அலகிட்டு வெளியில் கொட்டியுள்ள துகள்
மேகம் படிய மலைபோன்று விளங்குகின்றது.
கு-ரை:---சோற்றுத்துறைப் பெருமானை வணங்க வந்த
மன்னர்களும் தேவர்களும் தங்கள் முடிகளை எடுத்து வைத்துவிட்டு
வணங்க வருவர். அப்பொழுது உண்டாகும் துகளாகும் இவை.
66. மோதுமலை வாவியின் முயன்றெழுவ ரான்மீன்
மேதிமடி மோதவரு பான்மடையின் மேவி
போதமிகு கங்கைநதி போற்கழனி புக்கு
மீதெழு பயிர்த்தொகை விளைந்திட வளர்க்கும். (6)
பொ-ரை:- அலைகள் மோதும் வாவியில் உள்ள வரால் மீன்
துள்ளிப் பாய்வதால், எருமையின் பால்மடியில் மோதி அதனால் சுரக்கும்
பால் மடையைச் சேர்ந்து, மரக்கலம் மிகுந்த கங்கை நதி போன்று வயலுள்
பாய்ந்து பயிர்த்தொகை மிகுதியும் உயர்ந்து வளரும்படி விளைய வைக்கும்.
67. ஆதிமறை யோதிமக மாற்றிமிகு தானம்
ஓதும்வகை செய்திவை பிறர்க்கு உறுவித்துக்
காதல்சிவ னார்சரண கஞ்சமிசை வைக்கும்
வேதியர்கள் மேவியுறை வீதிகள் விளங்கும். (7)
பொ-ரை:- பழமையான மறையை ஓதி வேள்வி இயற்றி மறையில்
சொன்னபடி மிகுதியான தானம் பிறர்க்குப் பயன்படும்படி செய்து,
அருளுடைய சிவபெருமான் திருவடியாகிய தாமரையில் தானப்பொருளை
வைக்கும் வேதியர்கள் விரும்பி வசிக்கும் வீதிகள் விளக்கம் பெறும்.
68. உன்னுமுயிர் யாவையு முவக்கும்வகை தத்தம்
மின்னிரதம் பாய்புரவி மேதகைய வேழம்
மின்னிவர் படைக்கல வினைத்தொழில்கள் கற்கும்
மன்னவர்கள் வீதிபல மன்னுமவண் மாதோ. (8)
பொ-ரை:- நினைக்கப்படும் உயிர்கள் யாவையும் மகிழும்
வண்ணம், மன்னர்கள் தத்தம் ஒளியுடைய தேர், பாய்ந்து செல்லும் குதிரை,
சிறந்த யானை, ஒளி பொருந்திய படைக்கலம் ஆகியவற்றில் பயிற்சி
பெறும் வீதிகள் பல அங்கே நிலைபெற்று விளங்கும்.
69. தம்பொருளி னேனையர் தரும்பொருளை யெண்ணி
நம்புமணி யாடைபணி நற்பொருள்கள் விற்றும்
அம்புவி கிளைத்துமுய ரானிரை புரந்தும்
செம்பொன்மிகு மாவசியர் வீதிபல சேரும். (9)
பொ-ரை:- தாம் கொடுக்கும் பொருளையும் அதற்கு மாறாக
தாம் பெறும் பொருளையும் ஆராய்ந்து பெற்று விரும்பும் மணிகளையும்
ஆடை வகைகளையும் ஆபரணங்களையும் நல்ல பொருள்களையும் விற்று
அழகிய நிலத்தை நிறைத்தும் பசுக்களின் நிரையைப் பாதுகாத்தும் வரும்
சிவந்த பொன் மிகுதியும் பெற்றுள்ள வணிகர்கள் வாழும் வீதிகள் பலவுள.
70. சீர்குலவு சைவமுறை செப்புநெறி செய்தே
ஏர்தரும் வளப்பொருள் எவர்க்கும்நனி நல்கி
ஆர்வநிறை வாய்மைபொறை யானகலை கற்கும்
பார்மகள் பெறும்புதல்வர் வீதிபல பாங்கர். (10)
பொ-ரை:-சிறப்பு நிறைந்த சைவத் திருமுறைகளில்
சொல்லப்படுகின்ற ஒழுக்கத்தின் வழி ஒழுகியும், ஏரினால் வரும் வளமான
பொருள்களை எல்லோர்க்கும் மிகவும் கொடுத்தும், விருப்பம் நிறைந்த
வாய்மை பொறை ஆகியவை கொண்டு உள்ள கலைகளை எல்லாம்
கற்கும் நிலமகளின் (தவப்) புதல்வர்கள் வாழும் வீதிகள் பல உள்ளன.
71. அன்னமலி சாலையி னணைந்தவ ரெவர்க்கும்
செந்நெலடி சிற்கறிநெய் தீங்கனி கொழும்பால் (செழும்பால்)
கன்னலொட பூபவகை கண்டினிய செந்தேன்
இன்னமுத நன்னய மியம்பியிசை விப்பார். (11)
பொ-ரை:- சோறு பெருகியுள்ள அன்ன சத்திரத்தை
அடைந்தவர்கள் எல்லோருக்கும் செந்நெல்லில் ஆக்கிய சோறும், கறியும்,
நெய்யும், இனிய பழத்துடன் கொழும்பால், கரும்புக்கட்டி, பணியாரம்,
கற்கண்டு, செந்தேன் முதலான பொருள்களை இனிய சொல் சொல்லிக்
கொடுத்து உபசரிப்பர். அபூபம் = பணியாரம்.
72. ஈசனடி யாரையெதிர் கொண்டுமனை யெய்தி
வாசநிறை நீர்கொடு மலர்ப்பதம் விளக்கிப்
பூசனைபு ரிந்தினிய போனகமு நல்கிப்
பேசுதுதி செய்துடல் பெறும்பயனி தென்பர். (12)
பொ-ரை:- வருகின்ற ஈசனுடைய அடியார்களை எதிர்கொண்டு
அழைத்துச் சென்று தம் மனையில் இருத்தி அவர்களுடைய திருவடிகளை
வாசம் நிறைந்த நீரினால் கழுவி மலரிட்டு அர்ச்சித்து, வணங்கி இனிய
உணவும் கொடுத்து அவர்களைத் துதித்து பின் பிறவி எடுத்த பயன் இது
என்று கூறி மகிழ்வர்.
73. வீதிக ணறுந்துகள் விளக்கியதன் மீதே
சீதநறு மென்புனல் தெளித்தலர் விரிப்பார்
சோதிமணி வேதிகை தொறும்புழுகு நீவிப்
போதுமலி வாசநிறை பொற்குடம் நிறைப்பார். (13)
பொ-ரை:- வீதிகளில் நல்ல குப்பைகளைக் கூட்டி ஒதுக்கித்
தள்ளியயின் குளிர்ந்த மணம் பொருந்திய நீரைத் தெளித்து மலர் பரப்புவர்.
ஒளி பொருந்திய திண்ணைகளில் புனுகு பூசி மலர் மாலை அணிவித்து
மணம் நிறைந்த நிறை பொற்குடம் வைத்திருப்பர்.
74. கன்னல்கமு கங்கதலி கந்தமலர் மாலை
துன்னுகொடி மாமகர தோரண நிரைப்பார்
மின்னுசுட ரோவியம் விதானமு மமைப்பார்
சின்மயன் விழாவணிகள் இன்னபல செய்வார். (14)
பொ-ரை:- கரும்பையும் பாக்குப் பாளைகளையும் வாழை
மரத்தையும் மணம் வீசும் மலர் மாலையையும் மாவிலையுடன் கூடிய மகரத்
தோரணத்தையும் தொங்க விடுவர். அழகிய சுடர் ஓவியங்களால் விதா
னம் (மேற்கூரை) அமைப்பார்கள். ஞான சொரூபியான சிவபெருமானுக்கு
எடுக்கும் விழாவுக்கு இதுபோன்ற பல அலங்காரங்களையும் செய்வர்.
75. செங்கைவளை யோலிட வெயர்த்துளிகள் சிந்தத்
தொங்கலசை யக்குழல்கள் சோரவதி பாரக்
கொங்கைகள் குலுங்கமணி வாய்மழலை கொஞ்ச
மங்கையர்கள் பந்துவிளை யாடுவன மாடம். (15)
பொ-ரை:- சிவந்த கைகளில் வளையல் ஒலிக்கவும், வியர்வைத்
துளிகள் நிலத்தில் சிந்தவும் கழுத்தில் அணிந்துள்ள மாலைகள்
அசையவும், கூந்தல் தொங்கி அசையவும், மிக்கப் பாரமான கொங்கைகள்
குலுங்கவும், மணிபோன்ற அழகிய வாயையுடைய மழலைகள் கொஞ்சவும்
மாடங்களில் மங்கையர்கள் பந்து விளையாடுவர்.
76. மாகனக மேடைமிசை மன்னுமெழில் பெற்ற
கோகனகை போன்மருவு கோதைமட வார்கள்
பாகனைய தந்திரி விபஞ்சி பயிலோசை
ஓகையுறு கின்னரர்தம் முள்ளமு மயக்கும். (16)
பொ-ரை;- பெரிய பொன் மேடையில் நிலைத்த அழகு பெற்ற
இலக்குமியை ஒத்து விளங்கும் மாலையணிந்த பெண்கள், இனிய
ஓசையுடைய யாழ் வீணை முதலியன வாசிக்கும்போது எழும் இனிய
ஓசையினால் மகழ்ச்சியுற்ற கின்னரர்களுடைய உள்ளமும் மயக்கம்
அடையும்.
77. ஆனமக முற்றிவரு மந்தணர் தடந்தேர்
தானவினை செய்தரசர் ஏறிவரு தந்தி
யீனமி லமைச்சரின மேறிவரும் வாசி
வானவர்கள் ஊர்தியொடு வீதியின் மயங்கும். (17)
பொ-ரை:- செய்த வேள்வியை முடித்து வரும் அந்தணர்களின்
பெரிய தேர்களும் தானம் கொடுத்த அரசர்கள் ஏறி வரும் யானையும்
குற்றமில்லாத மந்திரிகள் ஏறி வரும் குதிரைகளும் வானவர்கள் ஏறி வரும்
ஊர்திகளோடு வீதியில் நெருங்கிக் காணப்படும்.
78. மேடைமிசை மைப்புயலை வேறுபிடி யென்றே
ஆடல்மத வெங்களி றணைக்க முகிலார்க்கும்
நீடுமொலி யஞ்சிமட வார்புலவி நீங்கி
ஓடிமண வாளர்புய முற்றுற வணைப்பார். (18)
பொ-ரை:- குன்றின் மேல் ஆடும் மதம் பொருந்தி சினமுடைய
ஆண்யானை கரிய மேகத்தைப் பெண் யானை என்று எண்ணி
அணைக்கவும் அம்மேகம் முழக்கம் செய்யும். நீடிய அந்த இடியொலியைக்
கேட்ட மடம் பொருந்திய பெண்கள் தங்களின் ஊடலைத் தணிந்து ஓடிச்
சென்று தம் மணவாளரின் தோள்களை முழுதும் சேர்த்து அணைத்துக்
கொள்வர்.
79. செஞ்சொன்மறை வேள்விவிதி செய்யுமொலி யோர்பால்
அஞ்சனவி ழிக்கொடிகள் ஆடலொலி யோர்பால்
பஞ்சரம டக்கிளிகள் பாடலொலி யோர்பால்
விஞ்சையர் கலைப்பொருள்வி திக்குமொலி யோர்பால். (19)
பொ-ரை:- திருச்சோற்றுத்துறையில் செஞ்சொல்லாலான
மறைகளை ஓதி விதிப்படி வேள்வி செய்யும் இடத்தில் உண்டாகும் ஒலி
ஒரு பக்கம் கேட்கும்; மை பூசிய விழிகளையுடைய கொடிபோன்ற
பெண்கள் ஆடும் ஆட்டத்தின் ஒலி ஒரு பக்கம் எழும்; மடமுடைய
கிளிகள் பாடுகின்ற ஒலி ஒரு பக்கம் கேட்கும்; வித்தியாதரர்கள் கலைப்
பொருளை விதிக்கும் ஒலி ஒரு பக்கம் உண்டாகும்.
80. அட்டிலெழு குய்ப்புகை யகிற்புகை மகத்தின்
மட்டெழுந றும்புகை கரும்பினில் வருஞ்சா (று)
இட்டமுறு பாகுபட விட்டபுகை கூடி
தொட்டகட லுண்டமுகில் போன்றுதிசை சூழும். (20)
பொ-ரை:- சமையல் செய்யும் இடத்தில் தாளித்தலால்
உண்டாகும் நறும் புகையும், அகில் புகையும், வேள்வி இயற்றும் யாகத்தில்
உண்டாகும் நறும் புகையும், கரும்பினில் வரும் சாற்றைப் பாகாகக்
காய்ச்சும் புகையும் கூடி கடலில் உண்ட நீரால் ஆகிய மேகம் போன்று
எல்லாத் திசைகளிலும் சூழ்ந்திருக்கும்.
81. மன்றல்வினை யெங்குமணி வாய்மழலை மைந்தர்
முன்றிலிடை யெங்குமண மொய்ம்பரொடு மாதர்
அன்றிலென மேவுபரி யங்கமனை யெங்கும்
தென்றலுல வும்புதிய தெற்றிநிறை யெங்கும். (21)
பொ-ரை:- மணவிழா எங்கும் அழகிய வாயையுடைய
மழலையர்களும் சிறுவர்களும் நிறைந்திருப்பர்; மனைகளின் முற்றத்தில்
உள்ள கட்டிலில் எல்லாம் மணம் புரிந்த தம் வீரனுடன் அன்றில் பறவை
போன்று இணைந்து இருப்பர்; எங்கும் உள்ள புதிய திண்ணை முழுதும்
தென்றல் உலவும்.
82) பாதவமு மேதகைய பத்தியொடு மேவுஞ்
சாதிமருண் மாவுமுயர் தானமிக வாற்றும்
வாதுபுரி கந்துகமு மந்திரம்வி ளங்கும்
சீதமலி காவுமகிழ் செய்யபல நல்கும். (22)
பொ-ரை:- மரத்தோப்புகளில் மேன்மை பொருந்திய பத்தி
செயல்கள் விளங்கும்; சாதி விளங்கும் மாமரமும் தன் கனி வகையால்
தானம் மிகவும் செய்யும்; தருக்கம் செய்கின்ற குறுநில மன்னர் (கந்துகம்-
குறுநில மன்னர்) மந்திரத்தின் பொருளை விளக்கம் செய்வர்; குளிர்ச்சி
பொருந்திய சோலையும் மகிழத்தக்க நல்ல பல பொருள்களைக் கொடுக்கும்.
83. மங்குலிரு ளேயிரவு மன்னிமெழின் மாதர்
கொங்கையினை யேபெருகு வன்மையொடு கூடும்
தங்குமிடை யேதினமு மின்மையொடு சாரும்
அங்கோர்புத லேகளவெ னப்படுத லந்தோ. (23)
பொ-ரை:- வானத்தின் இருளே இரவுடன் நிலை பொருந்தி
அழகிய பெண்களின் மார்பினை மிக்க வலிமையுடன் சேரும்;
(பெண்களிடம்) பொருந்திய இடையே இல்லாமையோடு சாரும் (இல்லாமை
என்பதே சோற்றுத்துறையில் இல்லை; பெண்களின் இடையே
இல்லாமையைச் சேரும்) அங்கு உள்ள ஒரு புதரின் மறைவிலேயே
களவொழுக்கம் நடை பெறும் (திருட்டு என்பது இல்லை என்பதாம்).
84. மன்னிவளர் கோகனக வாசமல ராளும்
அன்னமிடு மண்டநிரை யாளும்மக மீதிற்
பன்னுபல நூலொடுப யின்றுறையு மென்றாற்
றொன்னகர் இதன்பெருமை சொல்லவெவர் வல்லார். (24)
பொ-ரை:- நிலையாய் வளர்கின்ற மணம் தருகின்ற தாமரையில்
வாசம் செய்யும் இலக்குமியும், அண்டங்கள் முழுவதற்கும் அன்னமிடுகின்ற
அண்டங்களை எல்லாம் ஆளும் அன்னபூரணியும் ஓதப்படுகின்ற பல நூல்களோடு
பயின்று எழுந்தருளியுள்ளனர் என்றால் தொன்மையான திருச்சோற்றுத்துறையின்
பெருமையை யாரால் சொல்ல இயலும்? இயலாது என்பதாம்.
நகரச்சிறப்பு முற்றிற்று
5. தலச் சருக்கம்
85. பொன்னம் பொறிவண் டினம்பருகும்
பூந்தேன் பொழியுஞ்சோலை
மன்னும் புகழோ தனபுரியுன் மகிமை
முழுது மியம்பவெனில்
அன்ன முயர்த்த கடவுளுக்கு மடங்கா
தெளியே னியன்றவணம்
மின்னுஞ் சடில முனிவரர்காள் விரிப்பா
மெனச்சூத னுமுரைப்பான்(ம்) (1)
பொ-ரை:- ஒளி பொருந்திய சடையை உடைய முனிவர்களே!
பொன் நிறமான புள்ளிகளை உடைய வண்டினங்கள் பருகும் பூந்தேனைப்
பொழிகின்ற சோலைகள் நிறைந்த புகழையுடைய திருச்சோற்றுத்
துறையின் பெருமையை முழுதும் சொல்வதற்கு அன்னக்கொடியை
உடைய பிரமனாலும் இயலாதாகையால் எளியேனாகிய நான் இயன்ற
அளவில் விரிவாக சொல்வேன் என்று சூதமுனிவர் கூறினார்.
86. கண்ணன் முதலாம் விண்ணவர்கள்
கனிந்து பணிந்து மகிழ்ந்தேத்த
அண்ண லுமையா ளிடன்கைலை யரியா
சனத்தினினி திருப்ப
வண்ண மணிமா மயிலுயர்த்த வள்ளி
மணாளன் வணங்கியென்(து)
எண்ண நிரம்பும் வகையருளின் இயம்ப
வேண்டும் எனத்துதித்து. (2)
பொ-ரை:- கண்ணன் முதலான விண்ணவர்கள் கனிவுடன்
பணிந்து மகிழ்ந்து போற்றி வணங்கவும் அண்ணலாகிய சிவபெருமான்
உமையம்மையை இடப்பாகம் கொண்டு கயிலை மலையில் அரியாசனத்தில்
இனிதிருந்த காலத்தில் அழகிய மணிபோன்ற பெரிய மயிலை வாகனமாக
வணங்கி, என்னுடைய எண்ணம் நிரம்பும்படி அருள்கொண்டு இயம்ப
வேண்டும் என்று வணங்கி
87. உலகின் மனிதர் பாவவித முயற்றி
நரகில் கிடந்தபினும்
சிலபுள் மரங்கள் புழுவிலங்காய்
செனித்தும் வறிய ராய்ச்செனித்தும்
கலக வினைகள் செய்துகதி காணா
துழல்வார் விரைந்தெளிதின்
இலகு கதிசேர் உபாயமுரை யென்ன
வரன்சொல் கதையிதுவே. (3)
பொ-ரை:- உலகில் உள்ள மனிதர் பலவிதமான பாவங்களைச்
செய்ததனால் நரகில் கிடந்து துன்பம் அனுபவித்த பின் சில வகை
பறவைகளாகவும் மரங்களாகவும், புழுவாகவும் விலங்கினமாகவும்
பிறந்தும் வறியவராகப் பிறந்தும் துன்பம் உண்டாகும் தீய வினைகளையே
செய்து திருவடிப் பேறு காணாமல் மீண்டும் மீண்டும் வரும்பிறவியில்
உழல்பவர்களாக உள்ளனர். அவர்கள் விரைவாகவும் எளிதிலும்
விளங்குகின்ற வீடுபேற்றினைச் சேர்வதற்கு வழியினை உரைத்தருள
வேண்டும் என்று சொல்லியதற்குச் சிவபெருமான் கூறிய கதை
இதுவாகும் (என்று சூத முனிவர் சொன்னார்.)
88. காலந் தவறாக் காவிரித்தென்
கரைக்கண் நாளும் விளங்கிவியன்
ஞாலங் குலவும் புகழ்ப்பஞ்ச
நதத்திற் கணித்தா நாடோறும்
ஏலும் பெருமைப் பூந்துருத்திக்
கினிய கிழக்கி னிலங்குவது
சூலந் தரித்த சிவன்விரும்புஞ்
சோற்றுத் துறையாம் புகழ்நகரம். (4)
பொ-ரை:- காலம் தவறாத நீர் வரத்துடைய காவிரி நதியின்
தென்கரையில் இடம் அகன்ற உலகத்தில் எல்லா நாளும் பேசப்படுகின்ற
புகழையுடைய திருவையாற்றிற்கு அருகில், நாளெலாம் பொருந்திய
பெருமை யுடைய பூந்துருத்திக்கு இனிய கிழக்கில் விளங்குவதும், சூலம்
தரித்த சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள சோற்றுத்துறை என்னும்
புகழுடைய நகரம் ஒன்று உள்ளது.
89. அனாதி யாகிப் பரிசுத்த
மாகி யெவர்க்கு முத்திதனை
மனாதி வருந்தா தளிப்பதனால்
வரமார் முத்திச் சேத்திரமாய்
வினாவு தலங்கள் எவற்றினுக்கும்
மிகுமுத் தமமாம் அப்பதிதான்
இனாத பிறவிப் பெருங்கடல்விட்
டேற்றுந் தோணி யெனத்தகுமால். (5)
பொ-ரை:- அச்சோற்றுத்துறை அனாதியானது பரிசுத்தமானது
எல்லோர்க்கும் மனம் முதலான கருவிகள் வருந்தாமல் முத்தியைத்
தருவதால் வரம் தருவதில் உயர்ந்த முத்தித் தலம் என்றுரைக்கப்படும்;
சொல்லப்படுகின்ற தலங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த உத்தமமான
தலமாகும். அதனால் துன்பம் மிகுந்த பிறவியாகிய பெரிய கடலிலிருந்து
வெளியேற்றுதற்கு உதவும் தோணியை ஒத்ததாகும்.
90. நாடு புகழ்பார்ப் பதிநகர
நயந்த வன்னா வதரணமே
சேட புரிபாற் கரபுரியே
சிறந்த கவுத மேசமுதல்
பாட வினிய பலபெயரும்
படைத்துத் தினமுஞ் சிறந்தோங்கும்.
ஆடல் புரியும் சிவன்விரும்பி
யாளும் சோற்றுத் துறைநகரம். (6)
பொ-ரை:- நாளும் சிறந்தோங்கும் சோற்றுத்துறை நகரமானது
நாடுகள் புகழும் பார்ப்பதி எனவும் நகரங்கள் விரும்பிய அன்னாவதரணம்
எனவும் சேடபுரி எனவும் பாற்கரபுரி எனவும் சிறப்புடைய கவுதமேசம்
எனவும் பாடுவதற்கு இனிய பல பெயரும் உடையதாகும்.
91. இரைக்குங் கடல்சூழ் புவியிடத்தோர்
இயர்வ ரேனும் தேவர்களும்
உரைக்கும் புகழோ தனாபுரியில்
ஒருவா தொருநாள் வசிப்போர்கள்
விரைக்கற் பகப்பூ நறுநிழலில்
விண்ணோர் பரவ வீற்றிருந்து
வரைக்குங் குமப்பூண் முலைமடந்தை
வாம பாகன் அருள்பெறுவார். (7)
பொ-ரை:-ஒலிக்கும் கடலால் சூழப்பட்ட உலகத்தோர் வாழ்த்தி
(இயர்வரே) னும் தேவர்களும் வாழ்த்து உரைக்கும் புகழுடைய
சோற்றுத்துறையில், நீங்காது ஒருநாள் வசிப்போர் மணமுடைய கற்பகப்பூ
உடைய கற்பக மரத்தின் மணம் வீசும் நிழலில் விண்ணவர்கள் வணங்க
வீற்றிருக்கப் பெறுவதுடன், குங்குமம் தரித்த முலையையுடைய மலை மகளை
இடப்பாகத்தில் உடைய சிவபெருமான் அருளையும் பெறுவார்.
92. அவ்வூர் வழியாய் நடந்தாலும்
அதன்பேர் பலவும் இசைத்தாலும்
எவ்வூர் அன்னபுரி யெனவே
யிசைத்தார்க் கிதுவென் றியம்பிடினும்
செவ்வூர் அதனைக் கண்களிக்கத்
தெரிசித் துவகை திளைத்தாலும்
வெவ்வூழ் வினையின் வலைத்தொடக்கை
விடுப்பார் நமனைத் தடுப்பாரால். (8)
பொ-ரை:- சோற்றுத்துறை வழியாய் நடந்து சென்றாலும், அதற்கு
உரிய பல பெயர்களையும் கூறினாலும் எவ்வூர் சோற்றுத்துறை என்று
கேட்டவர்க்கு இவ்வூர் என்று சுட்டிக்காட்டிக் கூறினாலும், செம்மையான
சோற்றுத்துறையைக் கண்கள் களிப்பையடைய தரிசித்து மகிழ்ச்சியில்
திளைத்தாலும், கொடிய வினையின் வலைக்கட்டை விடுப்பதுடன்
எமனையும் தம்மிடம் வாராமல் தடுப்பர்.
93. சாற்றுந் தலத்துத் தவம்வேள்வித்
தானம் ஏனைப் புண்ணியங்கள்
போற்றுந் திறத்தோர் அணுவளவு
புரிந்தால் மகமே ருவினோங்கி
யாற்றும் பலன்கள் அனந்தமென
அண்ணல் உமையாட் கருள்பொழுது
தோற்று மகிழ்ச்சிப் பெருகயில்வேல்
தோன்றற் கலது தோன்றாவால். (9)
பொ-ரை:- தவம் வேள்வி தானம் மற்றைய புண்ணியச்
செயல்கள் செய்யும் திறமுடையோர் சொல்லப்படுகின்ற சோற்றுத்துறைத்
தலத்தில் அணுவளவே செய்தாலும் அச்செய்கையின் பலன் மகாமேரு
மலையினும் உயர்ந்து பெருகிப் பலவாகும் என்று அண்ணலாகிய
சிவபெருமான் உமையம்மைக்கு உரைத்தருளும்பொழுது, கேட்டிருந்த
கூரிய வேல் படையுடைய பெருமைமிக்க முருகப் பெருமானுக்குத்
தோன்றிய மகிழ்ச்சியின் அளவு பிறர்க்குத் தோன்றாது.
94. எட்டு விதமாஞ் சித்திகளும்
இயல்பாம் இட்ட சித்திகளும்
மட்டு விரியும் பசுந்துளப
மாயன் பதவி முதலாக
அட்ட திசையோர் பதவிகளும்
அட்ட மூர்த்தி யருளுலகும்
தட்டில் பரம முத்தியுமத்
தலமே கொடுக்கும் இதுசரதம். (10)
பொ-ரை:- அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிரார்த்தி,
பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் முதலான அட்டசித்திகளும்,
இயல்பாக உள்ள விருப்ப சித்திகளும், தேன் பெருகும் பசிய துளசி
மாலை யணிந்த திருமாலின் காத்தல் பதவி முதலான எட்டுத்திசை
காவலர் பதவிகளும், அட்டமூர்த்தியாகிய சிவபெருமானின் அருளுலகமாகிய
சிவலோகமும் இவ்வுலகில் பரம முத்தியும் சோற்றுத்துறைத் தலமே
கொடுக்கும். இது உண்மை.
95. பேசும் பெருமை மிகச்சிறந்த
பெருமான் விரும்போ தனபுரியின்
மாசு தவிர்ந்து நனிதெளிந்த
மதியோர் வசிக்க நினைப்பார்கள்
ஆசு பொருந்தா வருந்தவத்தீர்
அவ்வூர் நினையார் தமைநினைக்க
கூசும் எமது மனமெனவே
குரவன் உரைத்தான் அநுபவமே. (11)
பொ-ரை:- சிவபெருமான் விரும்பி எழுந்தருளியுள்ள பெருமை
மிக்க சிறந்த சோற்றுத்துறையில் குற்றம் விலகி மிகவும் தெளிந்த
அறிவுடையோர் வசிக்க விரும்புவார்கள். குற்றம் இல்லாத அரிய
தவத்தைச் செய்தவர்களே! சோற்றுத்துறையை நினையாதவரை என் மனம்
நினைக்கக் கூசும் என்று தன் அநுபவத்தைத் தலைவனாகிய சூத
முனிவர் கூறினார்.
96. பூத பசாசத் துறுதுயரும்
புகல்வஞ் சனையால் வருதுயரும்
ஓது மகாபா தகத்திறனும்
முப்பா தகத்தின் திறமனைத்தும்
தீது புனைசொற் பனம்வறுமைத்
திறமுஞ் சமபா தகத்திறனும்
பேத முறுதீ வினைத்திறங்கள்
பிறவுந் தீர்க்கும் தலமிதுவே. (12)
பொ-ரை:-பூதத்தால் வரும் துன்பமும் சொல்லப்படும் வஞ்சனையால்
வரும் துன்பமும் சொல்லும் மிகப்பெரிய பாவங்களும் கொலை களவு
காமம் என்னும் மூன்று கொடிய பாவங்களால் வரும் துன்பம் எல்லாமும்
தீய கனவுகளும் வறுமைத் துன்பமும் சமபாதகத்தினால் வரும் துன்பமும்
வேறுபட்ட தீ வினைகளினால் வரும் துன்பங்களும் பிற துன்பங்களும்
தீர்க்கும் தலம் சோற்றுத்துறையாகும்.
97. நிலத்து மனிதர் அறியாமல்
நிகழ்த்தும் வினையைப் பரிகாரம்
விலக்கும் அறிந்து புரிவினையை
விலக்காக் கோடி பிறப்பினுமித்
தலத்தில் அறிந்தும் அறியாதும்
சாலப் புரியும் வினையெல்லாம்
இலக்கு பருதி முனமிருள்போல்
ஏகும் ஏகும் இதுசரதம். (13)
பொ-ரை:- இவ்வுலகத்து மனிதர் அறியாமல் செய்யும்
பாவங்களைப் பரிகாரம் நீக்கும்; ஆனால் அறிந்து செய்யும் பாவத்தைப்
பரிகாரம் விலக்காது. ஆயினும், கோடி பிறப்புகளில் இத்தலத்தில் அறிந்தும்
அறியாமலும் செய்யும் ஏராளமான பாவங்கள் எல்லாம், விளங்குகின்ற
சூரியன் முன்னால் இருளானது நிற்காத தன்மை போல நீங்கும் நீங்கும்.
இது உண்மை என்பதாம்.
98. காமம் வெகுளி மோகமதங்
கடிய லோப மாற்சரியம்
ஏம முறுகோள் பரநிந்தை
யின்ப முறுந்தீ யவரெனினும்
சோமச் சடில சிவன்மகிழும்
சோற்றுத் துறையில் சேர்வரெனில்
சேம நிதியா முத்திநலஞ்
சேர்வர் பிறவிக் கடல்சேரார். (14)
பொ-ரை:- காமம், கோபம், மோகம், மதம், உலோபம், மாற்சரியம்
என்னும் ஆறு பகைகளும் துன்பம் தரும் கிரகங்களும் சிவநிந்தையும்
இன்பம் பெறும் தீயவராயினும் மதி தவழ் சடையுடைய சிவபெருமான்
மகிழ்ந்து எழுந்தருளியுள்ள சோற்றுத்துறை சேர்ந்தாரானால் சேம நிதி
போன்ற முத்தியாகிய நன்மையை அடைவர்; பிறவிக்கடல் சேரமாட்டார்.
99. தாரந் தனயர் மனைநிலங்கள்
தனதா னியநித் தியமென்று
பேரம் புவியின் மயங்குநரும்
பெருமான் சோற்றுத் துறைசேரில்
சாரங் கனிந்த சுகமுத்தி
சார்வாரினைய தலஞ் சாரார்
வாரம் பெறப்பொற் கொழுப்பூட்டி
வரகுக் குழுவார் தமையொப்பார். (15)
பொ-ரை:- மனைவி மக்கள் வீடு நிலம் தனம் தானியம் இவை
நிலைத்திருக்கும் என்று பெரிய நிலவுலகில் மயங்கி இருப்போர்
சிவபெருமான் எழுந்தருளியுள்ள சோற்றுத்துறை சேர்வாரேயானால்
இனிமை நிறைந்த சுகமான வீடுபேற்றினை அடைவார். இந்த தலத்தைச்
சாராதவர் வாரத்திற்குப் பொருள் பெற விரும்புவார் பொன்னேர் பூட்டி
வரகுக்கு உழுபவரை ஒத்தவராவார்.
100. கண்ணு மயங்கி மயிர்நரைத்துக்
காதுங் கேளா தறிவுமிழந் (து)
உண்ணும் பதமும் வெறுப்பதன்முன்
உடலுந் திருவு நிலையிலையென்(று)
எண்ணி யினிய போகமுற்றி
யெய்த வேண்டி யித்தலத்தின்
நண்ணு வார்கள் அறிவுடையார்
நண்ணார் நரகத் தொருநாளும். (16)
பொ-ரை:- கண் மயங்கி மயிர் நரைத்து காது கேளாது அறிவும்
இழந்து உண்ணும் உணவும் வெறுப்பதன் முன் உடலும் செல்வமும்
நிலையில்லை என்று எண்ணி உலக இன்பத்தை வெறுத்து (வீடு) பெற
விரும்பி இத்தலத்தை அடைபவர் அறிவுடையவர்களாவர்; ஒரு நாளும்
நரகத்தைச் சேரமாட்டார்கள்.
101. யாகம் தீர்த்த யாத்திரைகள்
இனிய தவங்கள் தானமுதல்
ஆகுந் தருமம் புரிந்துபயன்
அடைதற் கரிதாய் கலியுகத்தில்
சோகந் தவிர்ந்த பெருந்தவத்தில்
சோற்றுத் துறையில் இவைபுரிந்தார்
பாகம் பொருந்து பயன்மிகவும்
பலிக்கும் கலிக்கும் பயமிலையால். (17)
பொ-ரை:- கலிகாலத்தில் யாகம் தீர்த்த யாத்திரை இனிய
தவங்கள் தானம் முதலான பயனுடைய தருமம் புரிந்து பயன் அடைதல்
அரிதாம். கவலை நீங்கப் பெற்று பெருந்தவத்திற்கு இடமான
சோற்றுத்துறையில் இப்புண்ணியங்கள் செய்தவருக்குப் பயனாகிய பங்கு
மிகவும் கிடைக்கும்; கலியாகிய துன்பத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை.
102. பண்ணார் மொழியால் அரமகளிர்
பாடும் அமுதஞ் செவிபருக
விண்ணோ ராகிச் செம்மாந்து
விரைக்கற் பகப்பூ நீழலிருந்து
நண்ணா வசுரப் பகைதொலைத்து
நாளும் மகிழும் வாழ்வினுமத்
தண்ணார் சோற்றுத் துறையிலொரு
தருவாய்ப் பிறத்தன் மிகவினிதால். (18)
பொ-ரை:- பண் நிறைந்த பாடலால் தேவ மகளிர் பாடும்
இசையமுதைச் செவி பருக விண்ணவராகி இறுமாப்புடன் மணமுள்ள
கற்பகப்பூ நிறைந்த கற்பக மரத்தின் நிழலில் வீற்றிருந்து, அணுக முடியாத
அசுரப் பகையை வென்று எல்லா நாளும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்ற
வாழ்க்கையை விட குளிர்ச்சி நிறைந்த சோற்றுத் துறையில் ஒரு மரமாக
பிறத்தல் மிகவும் இனிமை பயக்கும் என்பதாம்.
103. அந்தத் தலத்தோர் துயில்வதெலாம்
அரிய சமாதி யெனத்தகுமால்
அந்தத் தலத்தோர் எவற்றை
நினைந்தாலு மரிய தியானமதாம்
அந்தத் தலத்தோர் எவற்றையுரைத்
தாலு மறைகள் ஓதுதலாம்
அந்தத் தலத்தோர் எங்ஙனடந்
தாலும் தீர்த்த யாத்திரையே. (19)
பொ-ரை:- சோற்றுத்துறைத் தலத்தோர் உறங்கும் உறக்கம்
அரிய சமாதியை ஒக்கும்; அத்தலத்தோர் எதை நினைத்தாலும்
அந்நினைவு அரிய தியானமாகும்; அத்தலத்தோர் எவற்றைக் கூறினாலும்
அவ்வுரை மறைகள் ஓதுவதாகும்; அத்தலத்தோர் எங்கு நடந்தாலும் அது
தீர்த்த யாத்திரையை ஒக்கும் என்பதாம்.
104. அப்பொற் பதியோர் ஏதுபுரிந்
தாலும் பெரிய தவமாகும்
அப்பொற் பதியோர் நுகர்தலெலாம்
அமைத்த வேள்விச் செயலாகும்
அப்பொற் பதியே சிவலோகம்
ஆகும் என்னில் அத்தலத்தில்
இப்பெற் றியினை யெடுத்தெவ்வா
றிசைப்பர் இசைப்பா வாலம்மா. (20)
பொ-ரை:- அந்தப் பொற்பதியாகிய சோற்றுத்துறையில் உள்ளோர்
எதைச் செய்தாலும் அது பெரிய தவத்தை ஒக்கும்; அந்தப் பொற்பதியோர்
அநுபவிக்கும் போகம் எல்லாம் பொருந்திய வேள்வியின் பயனாக
வந்தவையாகும்; அந்தப் பொற்பதியாகிய சோற்றுத்துறையே
சிவலோகமாகும் என்றால் அத்தலத்தின் பெருமையை இசைப்பாவால்
எடுத்து எவ்வாறு பாட இயலும்? பாட இயலாது என்பதாம்.
105. ஆன தலத்தைத் தெரிசித்தோர்க்
காகு ஞானம் போகமெனில்
ஞான மயமாய் நித்தியமாய்
நாத முடிவாய்ப் பரசுகமாய்
மோன முடிவாய் அருள்வடிவாய்
முகுந்தன் அறியா மூர்த்தியையித்
தான மதனில் தெரிசித்தோர்
சாரும் பயனுக் களவுண்டோ. (21)
பொ-ரை:- மேலான சோற்றுத்துறையைத் தரிசித்தவர்க்கு
ஞானமே போகப் பொருளாக அமையும் என்றால், ஞான வடிவமாய்
நிலைத்தப் பொருளாய் நாதத்தின் முடிவாய் மேலான(பர) இன்பமாய்
மோனத்தின் முடிவாய் அருளின் வடிவாய் திருமால் அறியாத
மூர்த்தியாகிய சிவபெருமானை இந்தச் சோற்றுத்துறையில் தரிசித்தவர்
அடையும் பயனுக்கு அளவும் உண்டோ? அளவு இல்லை என்பதாம்.
106. வெள்ளை மதிய நதிபுனைந்த
விமலன் விரும்போ தனபுரியின்
உள்ள மகிழ்வால் ஒருபிடிசோ
றொருவர்க் களிப்போர் வேதமெலாம்
தெள்ளி யுரைத்த பேரறிவில்
திருமா மறையோர் ஆயிரம்பேர்க்
கொள்ள வாறு சுவையடிசில்
கொடுத்த பயனைப் பெறுவாரே. (22)
பொ-ரை:- வெண்மதி கங்கைநதி இவற்றைச் சடையில்
தரித்துள்ள விமலனாகிய சிவபெருமான் விரும்பி எழுந்தருளி யிருக்கும்
சோற்றுத்துறையில் வாழும் மகிழ்ச்சியால் ஒருவர்க்கு ஒரு பிடி சோறு
உள்ளம் மகிழ்ச்சியுடன் கொடுத்தவர், வேதம் எல்லாம் தெளிவாக உரைத்த
பேரறிவு உடைய திருமாமறையோர் ஆயிரம் பேர்க்கு வயிறார ஆறு
சுவையுடன் உணவு கொடுத்த பயனை அடைவர்.
107. வேத மருளுந் தேவேசர்
வியன்கா விரிவில் லவநாதர்
ஆதி கவுத மேசர்வரம்
அருளும் அர்த்த நாரீசர்
சோதி தரும்பாற் கரநாதர்
தொலையாச் செல்வர் நாகீசர்
ஓதும் ஒப்பி லாதவரும்
ஓத னேசர் பெயராமால். (23)
பொ-ரை:- வேதம் அருளும் தேவேசர், அகன்ற காவிரி வில்லவ நாதர், ஆதி கவுதமேசர்,
வரம் அருளும் அர்த்தநாரீசர், சோதி வெளியிடுகின்ற பாற்கரநாதர், அழியாத
செல்வத்தையுடைய நாகீசர், சொல்லப்படுகின்ற ஒப்பில்லாதவர் என்பன
சோற்றுத்துறை ஈசரின் திருப்பெயர்களாகும்.
108. சொல்லும் இனிய பெயர் எவையும்
துயிலும் பொழுதும் யாத்திரையாய்
செல்லும் பொழுதும் நோயுடலில்
சேரும் பொழுதும் உரைத்தவர்பால்
ஒல்லுங் கொடிய வினையனைத்தும்
ஒழியும் சினத்தபகை தொகையை
வெல்லுந் திடமு நினைத்தனவு
மேவுஞ் சரதம் இதுசரதம். (24)
பொ-ரை:- சொல்லப்படுகின்ற இனிய பெயர் எவையும் உறங்கும்
பொழுதும், யாத்திரை செல்லும் பொழுதும், உடலில் நோய் வந்துற்றபோதும்
உரைத்தவரிடத்தில் வந்தடைந்த கொடிய வினை அனைத்தும்
அழிந்துவிடும்; சினத்துடன் கூடிய பகைக் கூட்டத்தை வெல்லும் உறுதியும்
நினைத்தன கிடைக்கவும் பெறும் என்பது உண்மை, இது உண்மையாம்.
தலச் சருக்கம் முற்றிற்று
6. தீர்த்தச் சருக்கம்
109. கருது தலத்தின் பெருமையிது
காமம் வெகுளி களைப்போக்கி
யுருகு கருணைப் புனல்பாய்ச்சி
யுயர்மா தவமாம் பயிராக்கி
பருக வினிய சுகமுத்தி
பலனை நுகரு முனிவரர்காள்
மருவு புகழோ தனபுரியின்
வருகா விரிமான் மியமுரைப்பாம். (1)
பொ-ரை:- இதுவரையில் சோற்றுத்துறையின் பெருமையினை
உரைத்தோம். காமம் வெகுளி முதலான குற்றங்களை நீக்கி உருகும்
கருணையாகிய புனலைப் பாய்ச்சி உயர்ந்த தவமாகிய பயிரை வளர்த்து
நுகர்வதற்கு இனிய சுகமாகிய முத்தியாகிய பலனை நுகர்கின்ற
முனிவர்களே! இனி புகழோடு விளங்கும் சோற்றுத்துறையின்பால்
வருகின்ற காவிரி நதியின் பெருமையைக் கூறுவோம்.
110. கோடி பலவாம் பெருந்தனத்தக்
குலத்தின் மிகவுஞ் சிறந்திருக்கும்
ஆடி வருபற் பலதீர்த்தம்
அளிக்கும் பயனை யொருங்களிக்கும்
கூடி யொருகால் மூழ்கினர்தம்
கொடிய செனன வினையகற்றும்
தேடி யொருதே சத்திருந்து
சிந்தை செயினுஞ் சிறப்பருளும். (2)
பொ-ரை:- காவிரி தீர்த்தத்தில் மூழ்குவோர்களுக்கு பல
கோடியாம் பெருந்தனம் உடைய குலத்தில் மிகவும் சிறந்திருக்கும் படியான
தன்மையை உண்டாக்கும். பற்பல தீர்த்தங்களில் ஆடுவதால் உண்டாகும்
பயனைக் காவிரி தீர்த்தமே ஒருசேர அளிக்கும். ஒருமுறை வந்து
காவிரியில் மூழ்கினால் கொடிய பிறவி வினையைப் போக்கும். வேறு
தேசத்தில் தேடிச் சென்று இருக்கும்பொழுது சிந்தையால் எண்ணினாலும்
சிறப்பு அருளும் பெருமை உடையது காவிரி தீர்த்தம்.
111. அறிவும் பொறையும் விதரணமும்
அருளும் புகழும் அருங்கதியும்
நெறியுந் திருவும் ஒப்புரவும்
நிதியுங் குணனும் நீதிகளும்
செறியுந் தவமுங் கல்வியுந்தந்
திரமும் வரமும் மந்திரமும்
பொறியுஞ் செயமு மிகவுளவாம்
பொன்னி நதிநீர் ஆடுநர்க்கே. (3)
பொ-ரை:- பொன்னி நதியில் நீராடுபவர்களுக்கு அறிவும்
பொறுமையும் ஞானமும் அருள் குணமும் புகழும் அரிய சிவகதியும்
ஒழுக்கமும் செல்வமும் ஒப்புரவும் பெருநிதியும் நல்ல குணமும் நீதிகளும்
நிறைந்த தவமும் கல்வியும் நல்ல நூல் பயிற்சியும் வரமும் மந்திர
உபதேசமும் நல்ல உடல் உறுப்புகளும் வெற்றியும் மிகவும் கிடைக்கும்.
112. வறுமை தவிரும் பிணிதணியும்
மதமும் கதமும டமையும்போம்
கறுவு பகையும் சஞ்சலமும்
கவலை முழுதும் கடிதகலும்
குறுகும் அலகை பூதபயம்
குறுகா கொடிய வினைதொலையும்
மிறுகு நிரயத் துயர்நீங்கும்
வருகா விரிநீர் மூழ்கினர்க்கே. (4)
பொ-ரை:- ஓடி வருகின்ற காவிரி நீரில் நீராடுபவர்களுக்கு
வறுமை நீங்கும், நோய் நீங்கும்; செருக்கு சினம் அறியாமை ஆகியவை
நீங்கும்; சினமுடைய பகையும் மனப் போராட்டமும் கவலையும் முழுவதும்
விரைவாக அகன்றுவிடும்; நெருங்கி வரும் பேய் பூதம் ஆகியவற்றால்
வரும் பயம் அணுகாது; கொடிய வினையும் தொலைந்துபோகும்;
நெருக்கித் துன்புறுத்தும் நரகத் துன்பம் நீங்கும் என்பதாம்.
113. அம்பொன் தருவின் நறுநீழல்
அரியா சனமும் அளிமுரலும்
வம்புற் றிடுதா மரைத்தவிசும்
வாரி யகிலம் படைத்தேந்தும்
விம்பச் சுடிகைப் பணியணையும்
மேவி யிருப்பர் விருப்பாகி
உம்பர்க் கரிய கைலையினும்
உறைவார் நிறைகா விரிபடிவார். (5)
பொ-ரை:- நிறைந்த காவிரியில் நீராடுவோர் அழகிய
பொன்னுலகில் கற்பக மரத்தின் நல்ல நிழலில் அரியாசனத்தில்
வீற்றிருக்கும் பேறு கிடைக்கப்பெறுவர்; வண்டு ஒலிக்கின்ற புதிய தாமரை
மலரில் வீற்றிருக்கும் பிரம பதவியும் கிடைக்கப் பெறுவர்; மேலே படத்தால்
கவிழ்க்கப் பெற்ற பாம்பு அணையில் படுத்திருந்து கடலால் சூழப்பட்ட
உலகத்தைப் படைத்துக் காக்கும் திருமால் பதவியும் பெற்றிருப்பர்;
விருப்பத்துடன் தேவர்களுக்கு அரியதான கயிலை மலையில் வாழும்
பேறும் கிடைக்கப் பெறுவர் என்பதாம்.
114. அந்த நதியை வணங்கினர்கள்
அலர்செங் கமல வணங்கினர்கள்
அந்த நதியைத் துதித்தவர்கள்
அவல மருவா துதித்தவர்கள்
அந்த நதியைக் கண்டவர்கள்
அணிய துயருக் கண்டார்கள்
அந்த நதிப்பேர் பகர்ந்திடுவர்
அளவில் செனனம் அகன்றிடுவார். (6)
பொ-ரை:- அந்தக் காவிரி நதியை வணங்கியவர்கள் மலர்ந்த
செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளை வணங்கிய பயனைப்
பெறுவார்கள்; அந்தக் காவிரி நதியை துதித்தவர்கள் துன்பம் சேராமல்
பிறந்தவர்கள் ஆவர்; அந்தக் காவிரி நதியைக் கண்டவர்கள் நெருங்கிய
துயரம் அடையப் பெறார்கள்; அந்தக் காவிரி நதியின் பெயரைச்
சொன்னவர்கள் அளவில்லாத பிறவியை விட்டு நீங்கிவிடுவர் என்பதாம்.
115. அந்நீர் எடுத்த கரத்தினர்கள்
அகிலம் விளங்குங் கரத்தினர்கள்
அந்நீர் தினமும் அருந்தினர்கள்
அயர்வு தவிர்க்கு மருந்தினர்கள்
அந்நீர்க் கரையினிருந் தவர்கள்
அறிவு முதிரும் இருந்தவர்கள்
அந்நீர் வாடை முகந்தவரே
அழியா இன்ப முகந்தவரே. (7)
பொ-ரை:- அந்தக் காவிரி நீரை முகந்து எடுத்த கரத்தை
உடையவர்கள் உலகம் முழுவதும் புகழும் கரத்தை யுடையவர்களாவர்.
அந்தக் காவிரி நீரைத் தினமும் குடித்தவர்கள் உடல் தளர்ச்சி நீக்கும்
மருந்தைக் குடித்தவர்களாவர்; அந்தக் காவிரி நதிக் கரையில்
வாழ்பவர்கள் முதிர்ந்த அறிவுடன் இருந்தவர்களாவர்; அந்தக் காவிரி
நீரின் மணத்தை முகர்ந்தவர்கள் அழியா இன்பத்தைப் பெற்றவராவார்
என்பதாம்.
116. பொன்னைக் கவர்ந்தார் பிரமகத்தி
புரிவார் மதுவை நுகர்ந்தவர்கள்
முன்னைக் குரவன் மனைவிதனை
முயங்கு மவரிங் கிவர்களுடன்
மன்னிப் பயில்வார் எனுமைந்து
மாபா தகருங் காவிரியின்
உன்னிப் படியின் அவ்வினையை
யுருப்பார் கதியின் இருப்பாரே. (8)
பொ-ரை:- பொன்னைத் திருடியவர்கள், பிரமகத்தி பாவம்
செய்தவர்கள், மதுவைக் குடித்தவர்கள் முதன்மையான குருவின்
மனைவியைக் கூடியவர்கள், என்னும் இவர்களுடன் அண்ணன்
மனைவியைப் புணர்ந்தவர்கள் என்னும் ஐந்து பெரும் பாவங்களைச்
செய்தவர்களும் காவிரி நதியில் மனம் பொருந்த நீராடினால் அந்தப்
பாவங்களை விட்டு நீங்குவார்கள்; அத்துடன் சிவகதி பெற்று வீட்டுலகில்
இருப்பவர்களாவர்.
117. கொடிய வுப்பா தகத்திறனுங்
கூறுஞ் சமபா தகமனைத்தும்
ஒடிவில் வருண வாச்சிரம
வொழுக்க வழுக்குந் தீவினையும்
படியில் வருபாத் திரமல்லார்
பாலிற் றானம் புரிபழுதும்
மடிவி லேனைப் பாவமும்போம்
வருகா விரிநீ ராடுநர்க்கே. (9)
பொ-ரை:- கொடிய மகாபாதகத்தால் வரும் துன்பமும்
சமபாதகமும் குறைவில்லாத வருண ஆச்சிரம ஒழுக்கத்தில் இருந்து
நீங்கும் பாவமும் உலகில் தகுதி யில்லாதவர்களுக்குக் கொடுக்கும்
தானத்தால் வரும் பாவமும் அழியாத மற்றைய பாவங்களும் காவிரி
நீராடுதலால் நீங்கும் என்றவாறு.
118. மாதப் பிறப்பு பன்னிரண்டு
மருவு மமாவா சிகளெவையும்
காதற் பருவம் ஈராறும்
கருது மாதந் தோறும்வரும்
தீதற் விடுபஞ் சமியேகா
தசியும் இனிய துவாதசியும்
கோதற் றிடுநற் கெசச்சாயை (கோட்சாயை)
குளிர்மார் கழிநாண் முப்பானும், (10)
பொ-ரை:- தமிழ் மாதப் பிறப்பு நாட்கள் பன்னிரண்டும்,
அமாவாசை நாட்களும் முழுமதி நாட்கள் பன்னிரண்டும் மாதந்தோறும்
வரும் தீது அகற்றும் பஞ்சமிதிதி நாட்களும் ஏகாதசி துவாதசி நாட்களும்
குற்றம் நீக்கும் கிரகண நாட்களும் குளிர்ந்த மார்கழி மாத முப்பது
நாட்களும்,
119. அருக்கன் பூசத் திருவோணம்
அத்தம் உயர்திங் களினோணம்
பெருக்குஞ் செவ்வாய் அசுபதி
சீர்பேசு புதன்ரோ கணியநுடம்
விருப்ப மருவும் அசுபதிநாள்
வியனட் டமியும் வியாழத்தில்
பருத்த வத்தம் வெள்ளியீரே
வதியே ரத்தம் அட்டமியும் (11)
பொ-ரை:- ஞாயிற்றுக் கிழமையில் வரும் பூசம், திருவோணம்,
அத்தம், முழுமதி நாளில் வரும் திருவோணம், பெருகி வரும்
செவ்வாய்க்கிழமையில் வரும் அசுபதி, சிறந்த புதனில் வரும் உரோகணி
அநுடம், விருப்பம் நிறைவேறும் அசுபதி நாளில் வரும் அட்டமியும்,
வியாழக்கிழமையில் வரும் அத்தம், வெள்ளிக்கிழமை வரும் இரேவதி,
அட்டமியில் வரும் அத்தம் ஆகிய நாட்களும்,
120. சனிரோ கணியும் அசுபதியுஞ்
சாற்றுங் கிரண மோரிரண்டும்
நனிவை திருதி விதிபாத
நண்ணு முகாதி மனுவாதி
மனுகார்த் திகைஞா யிற்றினுடன்
மற்றை மாத ஞாயிறெலாம்
உனுமா ளயமாம் பக்கமகா
வுதய மர்த்தோ தையமிவையும் (12)
பொ-ரை:- சனிக்கிழமையில் வரும் உரோகணி நாளும், அசுபதி
நாளும் சொல்லப்படுகின்ற சந்திர கிரகணம் சூரிய கிரகணம்
அகியவைகளும், வைதிருதி நாளும், வியதீபாத நாளும், யுகாதி நாளும்,
மனுவாதி நாளும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமை நாட்களும், மற்றை
மாத ஞாயிற்றுக்கிழமை நாட்களும், மகாளய அமாவாசை நாளும் , பக்க
(உத்தராயண, தட்சிணாயண) மகா உதய நாளும், அர்த்தோதய நாளும்
முதலான நாட்களும்,
121. எடுத்து மொழியுத் தமதினமாம்
இவற்றின் இயலோ தனபுரத்தின்
அடுத்து வருகா விரியாடி
யரனைப் பணிவார் யாரேனும்
தடுப்பில் வினைபோய்ச் சாமீபம்
சார்வார் சிவனுக் கிரும்பொருள்கள்
தொடுத்த மணிமா லைகள் பணிகள்
சுரபி யாதி கொடுப்பவரும் (13)
பொ-ரை:- எடுத்துச் சொல்லப்படும் தமக்கு உரிய(பிறந்த நாள்)
தினமும் ஆகிய இவற்றில் பொருந்திய சோற்றுத்துறையில் அடுத்து வரும்
காவிரியில் நீராடி சிவபெருமானைப் பணிபவர்களுக்கு தடுக்க முடியாத
வினை அகன்று சிவபெருமான் அருகில் இருக்கும் பேறு பெறுவர்.
சிவபெருமானுக்குப் பெரும் பொருள்களும் கட்டப்பட்ட மணி மாலைகள்
ஆபரணங்கள் பூமி தானம் (நிலதானம்) முதலான கொடுப்பவரும்
122. தோற்று மறையந் தணர்தமக்குச்
சுரபி யசுவங் கெசம்பூமி
போற்று திலங்கன் னிகைதானம்
புரிநூ லணியு முபநயனம்
தேற்ற மிகவும் புரிவார்க்குத்
தீர்த்த மியாவுந் தருபலனும்
ஏற்ற மருவும் யாகமெலாம்
இயற்றும் பலனுஞ் சிவதலத்தின் (14)
பொ-ரை:- இறைவனால் சொல்லப்பட்ட மறையை ஓதும்
அந்தணர்களுக்கு நிலம், குதிரை, யானை, ,காராம்பசு, எள், கன்னிகை
தானம், முப்புரிநூல் அணியும் உபநயனம் செய்வித்தல் ஆகியன வெளிப்பட
மிகவும் செய்வார்களுக்குத் தீர்த்தம் யாவற்றிலும் நீராடும் பலன்
கிடைக்கப் பெறும். பெருமை பொருந்திய வேள்வி எல்லாம் செய்த பலனும்
சிவ தலத்தில்,
123. வருசோ டசமா தானமெலாம்
வழங்கும் பலனும் உளவாகும்
தெருள்செய் பிதிர்மா திருதினத்திற்
சிரார்த்தந் தனையித் தலப்பொன்னி
கரையின் யியற்றிற் பிதிர்க்கெல்லாங்
கதியை யடைவார் அவர்குலத்தில்
வெருவும் வறுமை இலதாகும்
மிகுமுத் தமமைந் தரைப்பெறுவார். (15)
பொ-ரை:- பதினாறு வகையான தானங்கள் வழங்கிய பலனும்
கிடைக்கப் பெறுவர். தெளிவு செய்கின்ற தந்தை தாய் ஆகிய இருவர்
நினைவு தினத்தில் சிரார்த்தந்தனை இத்தலத்தில் பொன்னி நதியின்
கரையில் செய்தால் முன்னோர்கள் எல்லோரும் சிவகதியை அடைவர்;
செய்தவர் குலத்தில் உள்ளோருக்கு அச்சம் தரும் வறுமை இல்லையாகும்;
மிகுந்த உத்தம புதல்வரைப் பெறுவார்கள் என்றவாறு.
124. இகலும் பாவம் பருதிமுனம்
இருள்போல் அகலும் இனியசிவன்
மிகவும் அவர்பால் கருணைசெயும்
வியன்முத் தியுமங் கவர்பெறுவார்
புகலும் பெரிய விப்பலன்கள்
பொருந்து முகம னன்றேற்றிற்
பகவர் அறிய கலியுகத்தில்
பலிக்கு மிதுநிச் சயமாமே. (16)
பொ-ரை:- பகைத்துத் துன்புறுத்தும் பாவம் சூரியன் முன் இருள்
போல் அகன்றுவிடும்; அருளுடைய சிவபெருமான் அவர்களிடம் கருணை
செய்வார்; சிறந்த முத்தியையும் அவர் பெறுவார். சொல்லப்பட்ட அந்தப்
பெரிய பலன்கள் உபசாரமாக சொல்லப்பட்டது அல்ல. காளை வாகனத்தில்
ஏறிவரும் கடவுள் அறிய கலியுகத்தில் இது உறுதியாகப் பலிக்கும்
என்றவாறு. (இது இவ்வாறு இருக்க இனி)
வேறு
125. தேடு கின்ற நிதிகளுஞ் சிறந்த கல்வி யாவையும்
கூடு நல்லொ ழுக்கமுங்கொள் குடிகள்மேவு கொடிநகர்
நீடு தேவ லோகமென்ன நிலைமையாமோர் நகர்தனில்
நாடு செம்பொன் வசியர் தங்கள் நற்குலத்தோர் சம்பகன். (17)
பொ-ரை:- தேடப்படுகின்ற பலவகை நிதிகளும் சிறந்த கல்வி
எல்லாமும் கூடிய நல்ல ஒழுக்கமும் கொண்ட குடிகள் வாழுகின்ற கொடி
உயர்த்திய நகரம் ஒன்று இருந்தது. உயர்ந்த தேவலோகம் என்று
சொல்லும்படியான நிலைமை உடைய அந்த நகரினில் நாடுகின்ற சிவந்த
பொன்னை வணிகம் செய்யும் வணிகர் தங்கள் நல்ல குலத்தில் தோன்றிய
சம்பகன் என்பவன் வாழ்ந்து வந்தான்.
126. வனச மங்கை யனையகாந்தி மதியை வேட்டு மானிலத்
தனக மான வில்லறஞ்செய் தன்புமேவி வாழுநாள்
சினமி லாச்சு சீலனுந் துர்ச்சீல னுந்தன் மைந்தராய்
இனிய வாரி யமுது நஞ்சு மீன்றதென்ன யீன்றனன். (18)
பொ-ரை:- சம்பகன் தாமரை மலரில் வீற்றிருக்கும் இலக்குமியை
ஒத்த காந்திமதியை மணம் புரிந்து இந் நிலவுலகத்தில் பாவமற்றதான
இல்லறம் செய்து அன்பு பொருந்தி வாழும் நாளில் அவன் மனைவி
இனிய பாற்கடல் அமுதையும் நஞ்சையும் கொடுத்தது போன்று சினம்
இல்லாத சுசீலன் என்பவனையும் துர்ச்சீலனையும் பெற்றாள்.
127. இருவரான மைந்தர் தம்மை யீன்ற தானாத சம்பகன்
பெருமை வாணிகம் புரிந்து பெருகு மைந்து கோடிபொன்
கருதி யீட்டி நல்லபூமி கன்று காலி முதலெலாம்
மருவி யின்ப முற்று முற்றும் வயதுமெண்ப தானபின். (19)
பொ-ரை:- இரண்டு மைந்தர்களைப் பெற்ற சம்பகன்
பெருமையுடன் வாணிகம் செய்து பெருகிய ஐந்து கோடி பொன்னைச்
சிந்தித்து ஈட்டி நல்ல நிலம் மாடு கன்று முதலான எல்லாம் சேரப் பெற்று
இன்பத்துடன் வாழ்ந்து முற்றிய வயது எண்பது ஆனபின்,
128. நரைமுதிர்ந்து காலயர்ந்து நடைதவிர்ந்து தண்டுகொண்
டுரைதளர்ந்து மறவிசால வுற்றசத்த னாகியே
கரைதவிர்ந்த செல்வமைந்தர் கன்றுகாலி மனைவியை
புரைதவிர்ந்த காதலோடு புரத்தல் செய்குவாரிலை. (20)
பொ-ரை:-நரை முதிர்ந்து நடை தளர்ந்து இயல்பான நடையை
விட்டு தண்டு கொண்டு நடந்து சொல் தடுமாறி மறதி மிகவும் வந்து
சத்து இல்லாதவனாகிய நிலையில் அளவில்லாத செல்வம் புதல்வர்கள்
மனைவி மாடுகன்று இவற்றைக் குற்றம் இல்லாத அன்போடு காத்தல்
செய்வார் இல்லை. அசத்தன் = வலிமையில்லாதவன்.
129. யாதுசெய்வ தென்று நெஞ்சி ரங்கிமாழ்கும் வேலையில்
மாதுபாகர் அருளின்முன்ன மன்னு புண்ணியத்தினான்
ஓதுஞானம் வந்து மேவ வுறுகணொன்று மின்றியே
தீதுதீரு மாறு மாறில் சிந்தையொடு செப்புவான். (21)
பொ-ரை:-என்ன செய்வது என்று மனம் இரங்கி கவலை
கொண்ட நேரத்தில் பார்வதி பாகத்தை உடைய சிவபெருமான்
அருளினால் முன்னம் செய்த புண்ணியத்தின் பயனாக ஓதிய ஞானம்
வந்து உதவ துன்பம் இன்றியே தீமை நீங்குமாறு வேறுபாடு இல்லாத
சிந்தையுடன் சம்பகன் சொல்லலுற்றான்.
130. திவச மொன்றி லேனுமாதி தேவர்பூசை செய்திலேன்
நவசொரூப சுகவி லாச நாதர்நாம மோதிலேன்
புவனமீதில் கோயில்கோபு ரங்கள்சோதி மண்டபம்
தவநிலாவு புரிசை வாவி சாலைசோலை செய்திலேன். (22)
பொ-ரை:- சிரார்த்த நாள் ஒன்றிலேனும் தேவர்க்குப் பூசை
செய்திலேன்; ஒன்பது சொரூபமுடைய சுகமான மூர்த்தம் உடைய
சிவபெருமான் திருப்பெயரை உச்சரிக்கவில்லை; இந்த உலகத்தில்
கோயில் கோபுரம் ஒளி மண்டபம் தவம் நிலவுகின்ற மதில் சுவர் குளம்
சாலை சோலை முதலியன செய்திலேன் என்று கூறினான்.
131. விப்பிராதி யமலனன்பர் வேண்டும் வண்ணம் நுகரவே
இப்புவிக்கண் ணன்னதான மினியதாக வுதவிலேன்
ஒப்பிலாத புனலருந்த வுதவுபந்தர் செய்திலேன்
தப்பிலாத நிரையவாதை தள்ளுமா றதெங்ஙனே. (23)
பொ-ரை:- மேலும், அழகனாகிய விமலனுடைய அடியார்கள்
விரும்பிய வண்ணம் அன்னதானம் இவ்வுலகில் செய்யவில்லை;
ஒப்பில்லாத தண்ணீர் அருந்த உதவும் தண்ணீர்ப் பந்தல் செய்து வைக்க
வில்லை; தவறாத நரகத் துன்பம் எவ்வாறு நீங்கும் என்றான்.
132. போன செய்கை யெண்ணிநெஞ்சு புண்பொருந்தி யாவதென்
ஈனம் யாதும் இன்றிமுன்னம் ஈட்டிவைத்த நிதிகளுள்
ஆன வேதம் ஓதுமீசன் அன்பரந்த ணர்க்கெலாம்
தான மாயி ரண்டுகோடி தமனியங்கள் ஈந்தனன். (24)
பொ-ரை:- மேலும், இதுவரை நடந்தவற்றை எண்ணி மனம்
புண்ணாவதால் என்ன பயன்? ஒன்றும் இல்லை என்றான். பின்னர், குறை
எதுவும் இல்லாமல் முன்னம் சேர்த்து வைத்த நிதிகளுள் வேதம் ஓதும்
ஈசன் அன்பராகிய அந்தணர்கள் எல்லோருக்கும் தானமாய் இரண்டு
கோடி பொன் கொடுத்தான்.
133. காதன்மைந்த ரிருவருக்கி ரண்டு கோடி கனகமும்
போதநல்கி நின்றகோடி பொன்னைநான நீவுகார்
ஓதிமைக்கண் மனைவிகொள்ள வுதவிநல்ல சம்பகன்
மாதவத்தின் மனைவி பின்னர் வரநடந்து வந்தரோ. (25)
பொ-ரை:- அன்புடைய புதல்வர் இருவருக்கும் இரண்டு கோடி
பொன்னைக் கொடுத்தான். பின்னர், போதுமான அளவு கொடுத்தபின்
மீதம் உள்ள கோடி பொன்னை மணம் பொருந்திய கரிய கூந்தலையும்
மை பூசிய கண்ணையும் உடைய மனைவிக்குக் கொடுத்தான். அதன்
பின்னர் மாதவம் செய்த மனைவி பின்னால் நடந்து வர வந்தான்.
134. கரத்தி னெல்லி போலநல்ல கதிகொடுக்கு மோதன
புரத்தின் மன்னி யன்னமல்கு பொன்னிமூழ்கி வந்துபின்
சிரத்தையாக மாதுபாகர் சேவைசெய்து ஞானமா
நிருத்தருக்கு நூறுபத்து நிதியமுள்ள துதவியே (26)
பொ-ரை:- உள்ளங்கை நெல்லிக்கனி போல நல்ல வீடு பேற்றைக்
கொடுக்கும் சோற்றுத்துறையில் தங்கி அன்னப் பறவை நிறைந்துள்ள
பொன்னி நதியில் நீராடி வந்த பின் பார்வதி பாகருக்குச் சேவை செய்து
ஞானக்கூத்து ஆடும் கூத்தப்பிரானுக்கு ஆயிரம் பொன் நிதியாக
உதவினான்.
135. பண்ணு வந்த னைத்திறங்கள் பலபுரிந்து பாங்கோர்பார்
நண்ணி யீச னார்தியான நன்மையோடு கூடியே
கண்ணுறங்கு போது நல்லகதி பொருந்து சம்பகன்
எண்ணு நாளு வந்துகாய மினிதுநீங்கி னானரோ. (27)
பொ-ரை:- நல்ல வீடு பேற்றுக்குப் பக்குவப்பட்ட சம்பகன்
செய்யக்கூடிய வழிபாடு முறைகள் பலவும் செய்து ஒரு பக்கம் அடைந்து
ஈசனாரைக் குறித்து தியானம் செய்வான்; நன்மையோடு பொருந்திய கண்
உறக்கம் கொள்ளும் போது நாளும் எண்ணிவந்த ஒருநாள் உடலை விட்டு
உயிர் இனிது நீங்கப் பெற்றான்.
136. பரவுகேள்வன் ஆவிநீத்த பான்மைபாரி காண்டலும்
மரணமாக வேதுணிந்து மருவுகாய நீக்கினாள்
விரவுகாத லிருவரும் பொன்மே விமான மூர்ந்துசந்
திரனுலாவு நதியணிந்த சிவனுலகம் எய்தினார். (28)
பொ-ரை:- வணங்கிய கணவன் உயிர் நீத்தத் தன்மையை
மனைவி கண்டவுடன் துணிந்து மரணமாகவே உடலை விட்டு உயிரை
நீக்கிக் கொண்டாள். பொருந்திய காதல் உடைய சம்பகனும் அவன்
மனைவியும் பொன் விமானத்தில் ஏறி பிறைமதியும் கங்கை நதியும்
அணிந்துள்ள சிவபெருமான் உலகத்தை அடைந்தனர்.
137. பொன்னி மூழ்கி யீரைஞ்ஞூறு பொன்னை முக்க ணம்பனுக்
குன்னி நல்கு புண்ணியத்தி னுயர்ந்த லோகம் எய்தினார்
இன்ன தாதை தாயிறந்த வியல்புணர்ந்த மைந்தர்தாம்
மன்னு நீர்க் கடன்கள் ஆற்றி மனைய றத்தின் வாழுநாள். (29)
பொ-ரை:- சம்பகன் பொன்னி நதியில் நீராடி ஆயிரம் பொன்னை
முக்கண் உடைய தலைவனுக்கு மனம் பொருந்த நினைத்துக் கொடுத்த
புண்ணியத்தால் மனைவியுடன் உயர்ந்த சிவலோகம் அடைந்தான்.
இவ்வாறு தந்தையும் தாயும் இறந்த செய்தியை உணர்ந்த மைந்தர்
தாங்கள் நிலையான நீர்க்கடன்களைச் செய்து பின்னர் இல்லறத்தில்
வாழ்ந்து வந்தனர்.
138. மெத்து வஞ்ச முள்ளதம்பி வேறு வாழ நாடிமுன்
வைத்த செம்பொனேர் பகிர்ந்து வாங்கி யங்கண் வைகியே
சித்த மெண்ணு வாறு செய்து தீவினைத் திறத்தினுள்
நித்தமேவி யவல னாகி நிந்தை செய்ய யாவரும். (30)
பொ-ரை:- அந்நாளில், மிகவும் வஞ்சம் உள்ள தம்பியாகிய
துர்ச்சீலன் தனித்து வாழ விரும்பி முன்னர் பங்கிட்டுக் கொடுத்த இரண்டு
கோடி பொன்னில் பாதி பங்கிட்டு வாங்கிக் கொண்டான். பின்னர்
அந்நகரில் தங்கி மனம் எண்ணியவாறு தீவினைகள் செய்து தீயச்
செய்கையுள் தினமும் ஈடுபட்டு வறுமை அடைந்து யாவரும் இழித்து
உரைக்க வாழ்ந்தான்.
139. பொய்யரான தூர்த்தர் கூத்தர் போர்செய் மல்லர் புகழுவோர்
கையர் சூதர் ஆடல் பாடல் கற்றபேர்கள் காமுகர்
தையலார் கள்கொள்ள ளவுள்ள தனமெலாம் இறைத்தவன்
மையலாகி மெய்வருந்தி வறிய னாகி மறுகினான். (31)
பொ-ரை:- பொய்யரான வஞ்சகர், கூத்தாடுவோர், சண்டை
செய்யும் மல்லர், முகத்துதி செய்து புகழ்வோர், கீழ்மக்கள், சூதாடுவோர்,
ஆடல் பாடல் கற்றவர்கள், காமுகர், விலைமகள்கள் முதலானோருக்குத்
தானமாக பொன்னை எல்லாம் இறைத்தான். அதனால் மோகம் கொண்டு
உடல் வருந்தி வறியவனாகிக் கவலையடைந்தான்.
140. வனத்து றைந்து வழியின் மேவு வார்தனங்கள் ஆடைபூண்
கனத்த பாண்ட பாத்திரங்கள் கவர்ந்து கொண்டும் அவர்தமை
சினத்தடித்து வாதை யோடு சிதைவு செய்து நகர்களின்
மனத்தி லச்ச மொன்றுமின்றி வந்து சோரஞ் செய்துபின். (32)
பொ-ரை:- காட்டில் தங்கி அவ்வழியில் வருவோரின்
பொருட்களையும் ஆடை ஆபரணம் கனத்த பாண்டங்களையும்
பாத்திரங்களையும் கொள்ளையடித்துக் கொண்டும் அவர்களை
சினத்துடன் அடித்துத் துன்பத்தோடு கொலையும் செய்தான். நகர்களில்
மனத்தில் அச்சம் ஒன்றும் இல்லாமல் கற்பழித்தான்.
141. கள்ளை யுண்டு கொள்ளை கொண்டு களவுசெய்யு நாளையில்
விள்ளு காவலாளர் கண்டு வெட்டி யாவி போக்கினார்
உள்ள மஞ்சு கள்வருக் குடம்பு தள்ளு மென்றுமுன்
தெள்ளி யோர்கள் சொன்ன வாய்மை தெரியலான துலகின்மேல். (33)
பொ-ரை:- இவ்வாறு கள்ளைக் குடித்து கொள்ளையடித்தும்
திருடியும் வாழ்கின்ற காலத்தில் திருட்டைக் கண்டுபிடிக்கும் அரசனுடைய
காவலர்கள் துர்ச்சீலனின் திருட்டைக் கண்டுபிடித்து இழுத்துச் சென்று
அவனை வெட்டி அவன் உயிரைப் போக்கினர். பிறர் 'உள்ளம்
அஞ்சும்படித் திருடும் கள்வர்களுக்கு உடம்பு தள்ளும்' என்று தெளிந்த
அறிவுடைய பெரியோர்கள் முற்காலத்தில் சொன்ன பழமொழி உண்மை
யானது என்று உலகில் உள்ள எல்லோருக்கும் தெரியும்படியானது.
142. இறந்த பாவி யாவி தன்னை யியம தூதர் யாதனைக்
கறைந்த மெய்யி னுள்ளடைத் தருங்க யிற்றி றுக்கியே
சிறந்த கால னவையின் முன்பு சென்றுவிட்ட போதவன்
கறங்குகண் பிறங்கு மங்கி காலன் வன்சொல் கூறினான். (34)
பொ-ரை:- இவ்வாறு இறந்த பாவியான துர்ச்சீலனின் உயிரை
எமனுடைய தூதர்கள் யாதனா சரீரத்தில் (நரகர்களுக்குக் கொடுக்கப்படும்
உடல்) அடைத்து கடுமையான கயிற்றினால் இறுகக் கட்டி சிறந்த
காலனின் அவையில் கொண்டு போய் விட்டனர். அப்போது சுழலும்படியான
கண்ணில் சினம் மிக காலனானவன் கூறலுற்றான்.
143. கூறி யென்றும் ஏறிடாத கும்பி பாக நரகினுள்
ஊறு செய்தழுத்து மென்று ரைத்த போது தூதரும்
ஈறிலாத நிரைய மீதில் இவனை யிட்டு வைத்தனர்
ஆறிடாத துயரம் எய்தி யவனி ரங்கு கின்றனன். (35)
பொ-ரை:- அப்போது காலன் இவனை என்றும் மிகுந்துள்ள தீ
எரியும் நரகத்தில் வெளி வராதபடி அழுத்தித் துன்புறுத்துங்கள் என்று
கூறினான். காலன் தூதர்களும் முடிவில்லாத நரகத்தில் இந்தத் துர்ச்
சீலனை இட்டு வைத்தார்கள். அங்கு அவன் குறையாத துன்பத்தை
அடைந்து வருந்துகின்றான்.
வேறு
144. இளையோ னியலீ தினிமுன் னவனாம்
வளையா துயரு மகிமைச் சுசீலன்
விளைவா கியநல் வினையே புரிவான்
களைவா னிகலுங் கரிசான் றவையே. (36)
பொ-ரை:- இளையோன் நிலை இதுவாகும். இனி மூத்தவனாகிய வளையாத
பெருமையால் உயரும் சுசீலன் விளைகின்ற நல்ல வினையையே செய்வானாகி
பகைத்தல் குணத்தை நீக்கி சான்றாண்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான்.
145. பரிகப் படிநாள் பலவா கியபின்
தகவுற் றரிதிற் தனையின் றவர்கள்
திகழ்மெய்க் கதியை நிலவப் புரியும்
புகழ்மிக் குயரோ தனமா புரியின். (37)
பொ-ரை:- இவ்வாறு பல நாட்கள் சென்றபின் சிறந்த
கருணையுடன் அரிதாய் தன்னை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு
விளங்குகின்ற மெய்யான சிவகதியை பெற்றுத் தரும் புகழ் மிகுந்த
உயர்ந்த சோற்றுத்துறையை அடைந்தான்.
146. சென்றங் கதிர்வெண் திரைமுத் துமிழும்
மின்றங் கியகா விரிநீர் மூழ்கிப்
பொன்றங் கிதழிப் புரிபுன் சடையோன்
மன்றம் பொலிதாள் வனசம் பரவி. (38)
பொ-ரை:- சோற்றுத்துறை வந்து அங்கு ஒலிக்கின்ற
வெண்மையான அலையானது முத்துக்களை வீசும் ஒளி பொருந்திய
காவிரியில் நீராடி, பொன்போன்ற இதழையுடைய கொன்றைப் பூவை
புரிசடையில் அணிந்துள்ள சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயிலுக்குச்
சென்று திருவடியாகிய தாமரை மலரைப் போற்றி வணங்கினான்.
147. பெருமைப் பதியில் பிரியா தமர்வான்
தருமச் சிவபூ சனையுந் தவமும்
இருளற் றிடுமா றிரவும் பகலும்
ஒருமைச் செயலன் புடனே புரிவான். (39)
பொ-ரை:- பெருமையுடைய சோற்றுத்துறைத் தலத்தில் தங்கி
தருமம் மிக்க சிவ பூசையையும் தவத்தையும் தன்னுடைய இருளாகிய
அறியாமைத் துன்பம் நீங்குவதற்காக இரவும் பகலும் ஒன்றுபட்ட
மனத்துடனும் மிகுந்த அன்புடனும் செய்யலுற்றான்.
148. தானச் செயலுந் தடையின் றுதவி
ஞானப் பெரியோர் நவின்மா மறையோர்
மோனத் துறைமா முனிவர்க் கடிசில்
வானத் தமுதாய் மகிழ்வுற் றுதவி. (40)
பொ-ரை:- பலவிதமான தானங்களையும் குறைவின்றிச்
செய்தான். அத்துடன் ஞானிகளுக்கும் மறை ஓதுபவர்களுக்கும் பேசாது
மௌனமாக இருக்கும் முனிவர்களுக்கும் தேவலோகத்தில் உள்ள
அமுதத்திற்கு நிகரான உணவை மகிழ்ச்சியுடன் கொடுத்து உதவினான்.
149. உயர்மண் டபமும் ஒளிமா ளிகையும்
புயல்வந் துறைகோ புரமா மதிலும்
செயல்பொற் குடமார் சிகரத் திரளும்
வியல்மைப் புரள்வா விகள் சோலைகளும். (41)
பொ-ரை:- உயர்ந்த மண்டபங்களும், ஒளியுடைய
மாளிகைகளும், புயல் வந்த காலத்து பாதுகாப்பாகத் தங்க புயல்
கோபுரங்களும் மதிலும் பொன்னாலாகிய குடம் போன்ற சிகரங்களும்,
எருமைகள் புரளும் அகன்ற குளங்களும், சோலைகளும் செய்து
அமைத்தான்.
150. படிமக் கலனும் படர்சா மரையும்
கொடிபொற் குடையும் குளிர்முத் தணியும்
கடிகைப் பணியுஞ் சுடர்பொற் கலனும்
சடிலப் புனலுத் தமனுக் கழகாய். (42)
பொ-ரை:- கண்ணாடியால் ஆன கலன்களும், வீசும் சாமரையும்,
கொடிகளும், பொன்குடையும், குளிர்ந்த முத்து அணி வகைகளும், ஒளி
பொருந்திய பொன்னாலாகிய கலன்களும், சடையில் கங்கையைத்
தரித்துள்ள உத்தமனாகிய சிவபெருமானுக்கு அழகாய் செய்வித்தான்.
151. செய்வித் தகிலுந் திகழ்குங் குமமும்
மைவிட் டொளிர்மான் மதபா ளிதமும்
மெய்வத் திரமும் விரிபட் டினமும்
(ஐ)மைவத் திரனா ரணிதற் குதவி. (43)
பொ-ரை:- அகிலும் விளங்கும் குங்குமமும் இருள் விட்டு ஒளி
செய்யும் புனுகும் சந்தனமும் மெய் ஆடைகளும் பட்டாடைகளும் நஞ்சைத்
கண்டத்தில் வைத்துள்ள சிவபெருமானுக்கு அணிதற்குக் கொடுத்து உதவினான்.
152. பெற்றா னிவனிற் பெறுபே றுலகின்
மற்றார் பெறுவார் வழுவா தெனவே
கற்றார் புகழக் கருதப் பதியில்
உற்றான் வருடம் ஒருபத் தளவும். (44)
பொ-ரை:- இந்த உலகினில் சுசீலனைப் போல் பெரும் பேறு
பெற்றவர்கள் வேறு யார் உள்ளார் என்று கற்றறிவுடையவர்கள் புகழ
அந்த சோற்றுத்துறையில் பத்தாண்டுகள் அளவும் வாழ்ந்து வந்தான்.
153. குறையா தொழுகுங் குளிர்கா விரியின்
நிறைநீர் முழுகு நியமத் தொடர்பால்
இறையோன் அருளோ டெளிதெய் தினனே
முறையா மணிமா முதற்சித் திகளே, (45)
பொ-ரை:- குளிர்ந்த காவிரியின் நிறைந்த நீரில் நீராடும்
குறையாது ஒழுகும் ஒழுக்கத்தின் தொடர்பால் இறைவன் சிவபெருமான்
திருவருளோடு முறையான அணிமா முதலான அட்டசித்திகளும் சுசீலன்
எய்தப் பெற்றான்.
154. மனதின் புறவே வருமார்த் தியதாய்
உனுசித் தியானால் உரவோன் ஒருநாள்
அனலின் பதியும் புனலின் பதியுங்
தனதன் பதியும் சடிலன் பதியும். (46)
பொ-ரை:- மனத்தின் சார்பால் நிறைந்ததாய் உள்ளதும்
எண்ணப்படுகின்ற சித்திகளினால் வலிமையுடைய சுசீலன் ஒருநாள்
அக்கினியின் நகரான தேசோவதி, புனலின் பதி, குபேரன் நகரான
அழகாபுரி, சடைதரித்த சிவபிரானுடைய கயிலை முதலான நகர்களுக்குச்
சென்றும்,
155. மகவான் உலகும் மறமார் நிருதித்
தகவோன் உலகும் தனியெய் தியபின்
அகழ்பா விகள் வெந்நிரயம் புகுதப்
புகல்சீர் இயமன் புரம்வந் தணைய. (47)
பொ-ரை:- இந்திரனுடைய உலகமாகிய தேவலோகத்திற்கும்,
தென்மேற்குத் திசைக்கு அதிபதியான நிருதியின் உலகத்திற்கும்
தனியாகச் சென்று திரும்பியபின், பெரும் பாவிகள் தங்கியுள்ள கொடிய
நரகம் புகுந்து சிறப்பாகச் சொல்லப்படும் இயமன் நகர் வந்து சேர்ந்தான்.
156. இயமன் பரிவால் எதிர்கொண் டிமையத்
தையல்பங் கினனோ தனமா புரியின்
வியனன் குயர்கா விரிநீர் மூழ்கும்
நியமம் பெறுநின் னிலையார் புகல்வார். (48)
பொ-ரை:- இயமன் அன்புடன் எதிர் கொண்டு அழைத்து
இமவான் மகளைப் பாகத்தில் உடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள
சோற்றுத்துறையில் அகன்றதும் மிகவும் உயர்வுடையதுமான காவிரி நீரில்
நீராடும் ஒழுக்கத்தைப் பெற்றுள்ள உன்னுடைய பெருமையை யாரால்
சொல்ல இயலும் என்றான்.
157. என்பால் அணையுற் றமையென் னெனலும்
உன்பா லுலகத் துறுதீ வினையோர்
துன்பார் நிரையத் துயர்கண் டறிதற்
றன்பால் அணைகுற் றனன்யான் எனவே. (49)
பொ-ரை:- என்னிடம் வந்துளது யாது காரணம் பற்றி என்று
இயமன் கேட்டான். சுசீலன் உன்னுடைய உலகத்தில் மிக்க தீவினையோர்
துன்பம் மிகுந்த நரகத்தில் அடையும் துயர் கண்டு அறிதற்காக உன்பால்
யான் வந்தனன் என்று கூறினான்.
158. தீயார் கொடுமைச் செயனீ யறிதற்
கேயா தெனவவ் வியமன் புகல
ஓயா நரகத் துயர்பா விகளைப்
போயான் அறியப் புரியு மனமே. (50)
பொ-ரை:- தீயார் கொடிய செயல்களை நீ அறிதல் பொருந்தாத
செயலாம் என்று இயமன் சொல்லவும், ஓயாத நரகத் துன்பம் அடையும்
பாவிகளைப் போய் யான் அறியதற்கு என் மனம் விரும்புகின்றது என்று
சுசீலன் கூறினான்.
159. ஒன்றுந் தடைநீ யுரையாய் எனுமத்
துன்றுந் தவனைத் துணையிற் கொடுபோய்க்
கன்றுந் துயரிற் கவல்வோர் அருகில்
சென்றங் கவரைத் தெரிவித் தனனே. (51)
பொ-ரை:- நீ ஒரு தடையும் சொல்லாது இருப்பீராக என்று
சுசீலன் சொன்னான். பின்னர் இயமன் நாடி வந்தவனைத் துணையோடு
கொண்டுபோய் வருத்தும் துயரில் வாடுவோர் அருகில் அழைத்துச்
சென்று அங்கு அவர்கள் செய்த பாவ வினையைத் தெரிவித்தனன்.
வேறு
160. அன்னமரும் பசியினருக் கருத்தாமல் அயில்வார்தந்
துன்னுசிர மதினாவில் சொரியுமழல் இருப்பாணி
பன்னுபல வறைந்தானைப் பகிர்ந்தரிந்து நுகர்வித்தும்
பின்னும்யம படர்வருத்தப் பெருவாய்விட் டரற்றுவதும். (52)
பொ-ரை:- பெரும் பசியுடையவர்க்கு அன்னம் உண்ணக்
கொடுக்காமல் தாம் தனியாக உண்ணுபவர் இறைச்சியுடைய தலையில்
உள்ள நாவில் பழுக்கக் காய்ச்சிய இருப்பாணி பல அடிப்பார்கள்; அவன்
உடல் உறுப்பை அரிந்து தின்னும்படி செய்வார்கள், பின்னும் பலவிதமாக
யமனுடைய தூதர்கள் வருத்துவதனால் துன்பத்தில் வாய் விட்டு
அரற்றுவார்கள்.
161. தொடுதோல்பா துகையுடனே தூயவர்முன் னடந்தோரைக்
கடுவார்முட் கதையதனால் காயமெலா முற்றுறுத்தி
விடுவானற் புனலொழுக்கி வேறிருப்பு முளையறைந்து
கொடுவாளால் அரிந்தரிந்தூன் குறைத்தொழுக்க வருந்துவதும். (53)
பொ-ரை.- தோல் செருப்பை அணிந்து தூயவர் முன்னே நடந்து
சென்றோரைக் கடிய முட்கதையினால் உடல் முழுவதும் அடித்துத்
துன்புறுத்துவார்கள்; நல்ல நீரை ஊற்றி வேறு இருப்பு ஆணியை அடித்தும்
கொடிய வாளால் உடலில் அரிந்து தசையைக் குறைத்து வருத்துவதும்
செய்வார்கள்.
162. பிறர்மனையாள் நலநுகரும் பேதையழற் பாவையினை
யுறமருவி யூனுருகி போய்ந்தழிய நமன்தூதர்
வெ(வி)றகெனவே யெரித்தற்பின் வெய்யவழற் பாறையின்மேல்
நெறுநெறென வெலும்பொடிய வடித்தெரிவாய் நிறுத்துவதும். (54)
பொ-ரை:- பிறர் மனைவியைப் புணர்ந்த அறிவற்றவர்களை
நெருப்புப் பாவையினை அணைக்கும் படி செய்து உடல் வெந்து அழியும்படி
செய்வார்கள்; இயமன் தூதர்கள் உடலை விறகு போல எரித்துப் பின்
நெருப்புப் பாறையில் கிடத்தி நெறுநெறென ஒலிக்க எலும்பு ஒடிய
அடிப்பார்கள்; அடித்து நெருப்பில் நிற்க வைப்பார்கள்.
163. குரவர்தமைப் பிழைத்தொழுகுங் கொடியோர்கள் விழிகடொறும்
விரவுகனல் ஒழுகூசி மிகச்சொருகி யவர்நாவில்
பரவிருப்பு முளையறைந்து படிவமெலாங் குருதியெழக்
கரமுறுவாள் கொடுதுணித்துக் கடுநரகில் அழுத்துவதும் (55)
பொ-ரை:- பெற்றோர்களுக்குத் தீங்கு செய்த கொடியோர்களின்
விழிகளில் தீயில் காய்ச்சி பழுத்துள்ள ஊசிகள் அதிகம் செருகுவார்கள்;
அவர் நாவில் இரும்பு முளை அறைந்து உடம்பெல்லாம் இரத்தம் ஒழுக
கைகளை வாளினால் அறுத்துக் கடு நரகில் நிறுத்துவார்கள்.
164. சிவனையவன் அடியவரைத் திருவருள்சொல் லாகமத்தை
அவமுறவே பழித்திகலி யபகா(சா)ரம் புரிந்தோரை
பவவுடல மடித்தொடித்துப் பாரவழ லக்குடத்தில்
கவலுறவே யடைத்தெரிக்கக் கதறியவர் வருந்துவதும். (56)
பொ-ரை:- சிவபெருமானையும் அவர் அடியார்களையும்
திருவருள் அடைவிக்கும் மறையையும் ஆகமத்தையும் வீணாகப் பழித்து
வெறுத்து அபசாரம் செய்வோரின் அழியும் உடலை அடித்தும் ஒடித்தும்
மிகுந்த நெருப்புடைய குடத்தில் அடைத்து எரிப்பதனால் அவர்கள்
வருந்துவார்கள்.
165. கொடுப்பதனைத் தடுத்தோருங் கொலைகளவு புரிந்தோரும்
அடுத்தவரைக் கெடுத்தோரும் அசத்தியரும் பிறர்பொருளை
எடுத்தவரும் புண்ணியத்தை யெண்ணிவிலை பகர்ந்தோரும்
நடுக்குறவிவ் வினைமுதலா நவைபுரிந்தோர் வருந்துவதும். (57)
பொ-ரை:- ஒருவர் பிறருக்குப் பொருள் கொடுக்கும்போது
தடுத்தவரையும், கொலை களவுசெய்தோரையும் பிறரைக்
கெடுத்தவரையும் சத்தியம் இல்லாதவரையும், பிறர் பொருளைத்
திருடியவரையும், புண்ணியத்தை விலைக்கு விற்றவர்களும்,
நடுங்கும்படியான இவ்விதமான பாவ வினைகள் செய்தோர் துன்பம்
அடையும்படி இயமன் தூதர்கள் செய்வார்கள்.
166. கண்டுமன மிரங்கிவரு காலையிலோர் தீநரகில்
மண்டுதுய ரொடுமொருவன் வாயொழியா தரற்றுமொலி
தொண்டுபுரி நற்சீலன் தூயசெவிப் புலனுறலும்
பண்டுதெரி யந்தகவிப் பாதகன்யா ரெனப்பகரும். (58)
பொ-ரை:- இவற்றை எல்லாம் சுசீலன் கண்டு மனம் இரங்கி
வருகின்ற பொழுது, ஒரு தீய நரகத்தில் மிகுந்த துன்பத்துடன் ஒருவன்
வாய் ஓயாது அரற்றும் ஒலி தொண்டு செய்யும் நல்ல சுசீலன் செவிகளில்
விழவும் தொன்மையான அறிவுடைய அந்தகனே! இந்தத் தீயவன் யார்?
என்று கேட்டான்.
167. அருந்தவனே நினக்கிளையோ னாமிவன்செய் பாதகத்தால்
பெருந்துயர நரகினிடைப் பொருத்துகின்றே னியானென்ன
பொருந்துமிவன் இடரகன்று புகலருநற் கதியடைய
திருந்தும்வழி யுரையெனுநற் சீலனுக்கந் தகன்மொழியும். (59)
பொ-ரை:- அரிய தவத்தையுடையவனே! இவன் உனக்கு
இளையவனாகும். இவன் முன் செய்த தீவினையால் பெரும் துன்பம்
உடைய நரகத்தில் யான் இவனை அடைத்துள்ளேன் என்றான். அதுகேட்ட
கசீலன் பொருந்திய இவனுடைய துன்பமானது அகன்று புகுவதற்கு அரிய
நற்கதியை அடைய திருந்தும் வழியை உரைப்பாயாக என்று கேட்டதும்
இயமன் சொல்லலுற்றான்.
168. சீர்மேவோ தனபுரியில் செழித்துவரு காவேரி
நீர்மூழ்கு புண்ணியத்தின் நீர்மூன்று நாட்பலனை
நார்மேவு மனம்விரும்பி நல்கினிவன் துயர்நீங்கிப்
பார்மேவு புகழ்பொருந்தப் பரகதிசென் றடைகுவனால், (60)
பொ-ரை:- சிறப்பு மிகுந்த சோற்றுத்துறையில் மிகுத்து நீர் வரும்
காவேரியில் நீராடிய புண்ணியத்தில் மூன்று நாள் பலனை மன
விருப்பத்துடன் நீ கொடுத்தால் இவன் துன்பம் நீங்கி உலகில் புகழ் பொருந்த
மேலான சிவ கதியைச் சென்று அடைவான் என்று இயமன் சொன்னான்.
169. என்றும்வரு புனற்பொன்னி யிடையாடும் பலனவற்றுள்
ஒன்றிரண்டு நாட்பலனை யுதவுதலுந் துற்சீலன்
நன்றுகொடு நரகிலுறுந் துயர்முழுதும் உடனீங்கிக்
கன்றுமரா விழுங்கியுமிழ் கதிர்போலத் தோன்றினனால். (61)
பொ-ரை:- என்றும் வற்றாது ஓடிவரும் நீரையுடைய
பொன்னியாற்றில் நீராடிய புண்ணிய பலனுள் ஒன்றிரண்டு நாள் பலனை
சுசீலன் கொடுத்து உதவியதும் துர்ச்சீலன் நரகத்தில் உற்ற துன்பம்
முழுவதும் நீங்கப் பெற்று சினமுடைய இராகு கேது விழுங்கிப் பின்
உமிழ்ந்த சூரிய சந்திரனைப் போலத் தோன்றினான்.
170. உத்தமர்கள் உடன்பிறந்தார் ஒழியாத விடரொழிவார்
மெத்தியநற் பொருளெவையு மேவிநுகர்ந் தின்புறுவார்
நித்தனருட் பரகதிசேர் நிலைமையுமங் கணித்தாமால்
அத்தகையார் தமக்குலகின் அருள்பொருள்வே றுளதோதான். (62)
பொ-ரை:- உத்தமர்களும் உடன் பிறந்தவர்களும் தீராத துன்பம்
தீர்ந்து மிகுதியான நல்ல பொருளை யெல்லாம் பெற்று அவற்றை
அநுபவித்து இன்பம் அடைவார்கள்; நித்தனாகிய சிவபெருமான் அருள்
பெற்று மேலான சிவகதியை சேரும் தகுதியும் அங்கே அருகில்
உள்ளதாகும்; அத்தன்மை உடையோர் தங்களுக்கு உலகில் அருளும்
பொருளும் வேறு வேண்டியதுள்ளதோ? வேண்டாவாம்.
171. ஆங்கமைய மதுதன்னில் அமரர்விமா னம்பொருந்த
ஓங்கிவன்பே ருவகையுள முன்னியவ னதிலேறி
பாங்கிலரம் பையராடல் பாடலொடு சுரர்பரவ
பூங்கமழ்கற் பகநாட்டிற் பொருந்தினல னார்ந்தனனால். (63)
பொ-ரை:- அந்த நேரத்தில் தேவர்களின் விமானம் அங்கு
வந்தது; மிகுந்த பெரிய மகிழ்ச்சி உள்ளத்தில் பெருக அதில் ஏறி அருகில்
தேவ மாதர் ஆடல் பாடல் புரியவும் தேவர்கள் போற்றவும் கற்பகப் பூ
மணம் வீசுகின்ற கற்பக நாட்டை அடைந்து நலன்களைப் பெற்றான்.
172. தொல்லுலகோர் புகழ்வர்க்கந் துற்சீலன் எய்தியபின்
நல்லொழுக்க நெறிபயிலு நற்சீலன் யமனைவிடுத் (து)
அல்லலொழித் தருள்பொன்னி யற்புதத்தை யெடுத்தேத்தி
ஒல்லெனநண் புடனேகி யோதனமா புரத்தணைந்தான். (64)
பொ-ரை:- தொன்மையான உலகத்தில் உள்ளோர் புகழக்கூடிய
பெருமைகளை எல்லாம் துர்ச்சீலன் பெற்றான். பின்னர் நல்ல ஒழுக்க
நெறியில் நாளும் வாழும் நல்ல சுசீலன் இயமனை விட்டு நீங்கி துன்பம்
ஒழித்து அருள் அளிக்கும் பொன்னி நதியின் சிறப்பினை எடுத்துப்
போற்றி பின் விரைவாக நட்புடனே சென்று சோற்றுத்துறை அடைந்தான்.
173. அத்தலத்துப் பெருமைவியந்(து) அருட்பொன்னி நதிதோய்ந்து
புத்திரர்கா தலியுடனே புண்ணியம்பன் னாளியற்றி
நித்தனருளாலுடல நீக்கினான் அவன்தேவி
ஒத்தமனக் காதலினால் உடன்மரண மாயினளே. (65)
பொ-ரை:- அந்த சோற்றுத்துறையின் பெருமையை வியந்து
அருள் அளிக்கும் பொன்னி நதியில் நீராடி புத்திரர்கள் மனைவியுடனே
புண்ணியம் பல செய்து வருநாளில் நித்தனாகிய சிவபெருமானின்
அருளால் உயிர் நீங்கப் பெற்றான். அவன் மனைவி ஒத்த மனத்தோடு
கூடி அன்பினால் உடன் மரணம் ஆயினாள்.
174. ஆயபொழு திருள்சீய்க்கும் அருணகண கிரணமணி
மேயவிமா னம்பொருந்த விமலர்திரு வருணாடி
ஏயபுகழ் மனைவியுட னேறினான் அப்பொழுதே
தூயவிசும் பிடைநாத துந்துபியா ழொலிமுழங்க. (66)
பொ-ரை:- (சுசீலன் உயிர் நீங்கிய) அப்பொழுது இருள் நீக்கும்
ஒளியுடைய சூரிய ஒளி போன்ற ஒளியுடைய விமானம் அங்கு வந்து
சேர்ந்தது. விமலராகிய சிவபெருமான் திருவருளை நினைந்து ஒத்த
புகழையுடைய மனைவியுடன் அவ்விமானத்தில் ஏறினான். அப்பொழுது
தூய வானில் துந்துபி யாழ் முதலியன ஒலி முழங்கவும்,
175. நந்திகணத் தவர்கொடுபோய் நற்கயிலை வரையுய்ப்ப
அந்தமிலாக் கணத்தரச னாகியவ ணினிதிருந்தான்
இந்துநதிப் பரன்மகிழும் இத்தலத்தின் மகமாதம்
வந்துபொன்னி நதிபடிவார் மகிமையினி வகுத்துரைப்பாம். (67)
பொ-ரை:- நந்தி கணத்தவர்கள் சுசீலனை நல்ல கயிலை
மலையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவன் முடிவில்லாத பூத
கணத்திற்கு அரசனாகி அங்கு இருந்தான். (இது இவ்வாறு இருக்க)
இந்தப் பொன்னியின் கரையில் உள்ள சிவபெருமான் மகிழும் இந்தத்
தலத்தில் மாசி மாதம் பொன்னியில் நீராடுவார் பெருமையை இனி எடுத்து
உரைப்போம் என்று சூத முனிவர் கூறினார்.
தீர்த்தச் சருக்கம் முற்றிற்று
7. மாக நீராடல் சருக்கம்
(அறுசீர் ஆசிரிய விருத்தம்)
176. தண்டமிழ் நாட்டி லுள்ளான் சதுர்மறைக் கடற்கோர் எல்லை
கண்டமா தவத்தின் மேன்மைக் கற்கர்கோத் திரத்தில் வந்தான்
பண்டைமுப் புரிநூன் மார்பன் பகர்ந்ததுர்ப் பாக்கிய னென்போன்
கொண்டலை யனைய கூந்தற் குணசரா வதியை வேட்டு, (1)
பொ-ரை:- தண்டமிழ் நாட்டில் நான்கு மறையாகிய கடலுக்கு
ஓர் எல்லை கண்ட பெரும் தவத்தின் பெருமையுடைய கற்கர்
கோத்திரத்தில் பழமையான முப்புரி நூல் அணிந்த மார்பையுடைய
துர்ப்பாக்கியன் என்று பெயரையுடையவன் மேகம் போன்ற
கூந்தலையுடைய குணசராவதியை மணம் புரிந்து வாழ்ந்துவந்தான்.
177. தந்தையர் தாயர் நல்ல சகோதர ரொடுவாழ் நாளில்
சிந்தனைக் கிசைந்த வாறே தீச்செயல் புரிந்தான் அன்னோர்
நொந்துளம் இரங்கி யன்பா னோவுறச் சினத்த காலை
உந்துநன் னிதியில் தன்கூ றுள்ளது பகிர்ந்து கொண்டான். (2)
பொ-ரை:- துர்ப்பாக்கியன் தன்னுடைய தந்தை தாய் நல்ல
சகோதரர்களுடன் வாழ்ந்து வந்த நாளில் தன்னுடைய மனத்தில்
தோன்றியவாறே தீச் செயல்களைச் செய்து வந்தான். அவனுடைய தந்தை
தாய் சகோ தரர்கள் மனம் நொந்து உளம் இரங்கி கொண்ட அன்பால்
சினம் கொண்டதுபோல் கண்டித்த பொழுது உள்ள நல்ல சொத்தில் தன்
பங்கினைப் பங்கிட்டு வாங்கிக் கொண்டான்.
178. விழியினான் மருட்டித் தங்கள் மெய்ந்நலம் விலைமீக் கூறி
மொழியினால் உறவு காட்டி முயக்கியே பொருளும் வாங்கிப்
பழியொடு பாவம் நல்கும் பரத்தையர் இணக்கத் துள்ளக்
கழிபெருங் காமத் தாலே கனகமு மறிவுந் தோற்று. (3)
பொ-ரை:- தங்கள் விழியை உருட்டி மருட்டியும் தங்கள் உடல்
அழகைக்காட்டி மிகுந்த பொருளை வாங்கிக் கொண்டு வாய்
வார்த்தையால் அன்பு உடையவர் போல் உறவு காட்டி அவர்களைப்
புணர்ந்து அதற்காகப் பொருளையும் வாங்கிக் கொண்டு பழியையும்
பாவத்தையும் கொடுக்கும் விலைமகளிர் உறவை விரும்பி உள்ளத்தில்
கொண்ட மிக்க பெரிய காமநோய் தன்னால் அரும் பொருளையும்
அறிவையும் (விலை மகளிர்பால்) தோற்றான்.
179. சாலியை யனைய பாரி தன்முகந் தனையு நோக்கான்
வாலிபர் துட்ட ராடல் வல்லவர் இனமாய்க் கூடிக்
கோலிய பாவங் கட்கோர் கொள்கல மாகிக் காம
நீலியர்க் குதவ வேண்டு நிதிகிடை யாமல் வாடி, (4)
பொ-ரை:- அருந்ததியை (சாலி - அருந்ததி) ஒத்த மனைவியின்
முகத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் வாலிபர்களாகவும்
துட்டர்களாகவும் சூதாட வல்லவர்களாகவும் உடையார்பால் கூடிச் சூழ்ந்த
பாவங்களுக்குக் கொள்கலமாகி காம மயக்கத்தைத் தரும் நீலிபோன்ற
விலைமகளிர்க்குக் கொடுக்க வேண்டிய பொருள் கிடைக்கப் பெறாமல்
மிகவும் வாடினான்.
180. நீதிசேர் சோழ நாட்டோர் நிதிநிறை யந்த ணாளன்
கோதிலா தொருநாள் பாரி குலமக ளுடனே கங்குற்
பாதியில் துயில முன்சொல் பதகனோர் உபாயத் தாலே
தீதில்வண் கதவு தன்னைத் திறந்துகொண் டகத்துள் சென்று. (5)
பொ-ரை:- நீதி நிலை பெற்ற சோழ நாட்டில் ஒரு செல்வமுடைய
குற்றம் இல்லாத அந்தணன் ஒரு நாள் தன் மனைவி மகளுடன் நடு
இரவில் உறங்கிக் கொண்டிருந்தான். முன்னே சொன்ன துர்ப்பாக்கியன்
என்னும் பாவி ஒரு தந்திரத்தாலே குற்றமில்லாத வளமான கதவைத்
திறந்துகொண்டு உள்ளே சென்றான்.
181. விழிகர மாக நாடி வியன்பொருள் கவரச் செல்லும்
வழிதெரி யாதுதுஞ்சு மைந்தனை மிதித்தான் காலில்
அழுதலின் முத்த மாலை யகப்பட வதுகைக் கொண்டவ்
வழிதகன் அகலும் எல்லை எழுந்தனன் அந்த மைந்தன். (6)
பொ-ரை:- பெரும் பொருள் திருடச் செல்லும்போது கண்களில்
இருள் மறைக்க வழி தெரியாது (அந்தணன்) மகனுடைய காலை மிதித்து
விட்டான். (கால் வலியால்) மகன் அழுதான் (மகன் கழுத்தில் கிடந்த)
முத்து மாலை கைக்கு அகப்பட அதைக் கையில் எடுத்துக்கொண்டு
பெரும் பாவியான துர்ப்பாக்கியன் அவ்விடம் விட்டு அகலும்போது
(அந்தணன்) மகன் எழுந்துகொண்டான்.
182. மைந்தனைத் தந்தை தாய்போல் வருடினன் வருடும் போதில்
தந்தைதாய் கரமன் றென்றத் தனயனங் கவன்கால் பற்ற
உந்திய விசையால் தள்ளி யோடலும் வீய்ந்தான் மைந்தன்
வெந்தொழில் அவன்கால் பட்டு விழித்தனர் துயின்றார் எல்லாம் (7)
பொ-ரை:- எழுந்த மகனைத் துற்பாக்கியன் தந்தை போலவும்
தாய் போலவும் தன் கைகளால் வருடிக் கொடுத்தான். அவ்வாறு
துர்ப்பாக்கியன் வருடும்போது தந்தை தாய் கைகள் அல்ல என்று மகன்
உணர்ந்து அத்தனயன் அங்கு அந்த துர்ப்பாக்கியன் காலைப் பிடித்துக்
கொண்டான். உடன் அவன் மிகுந்த வேகத்தோடு மகனைத் தள்ளிவிட்டு
ஓடினான். கீழே விழுந்த மகன் (அடிபட்டு) இறந்தான். கொடுந்தொழில்
செய்யும் துர்ப்பாக்கியன் கால்பட்டு உறங்கியவர்கள் எல்லாம் விழித்து
எழுந்தனர்.
183. துஞ்சினார் விழித்து வாயில் தொறுந்தடை செய்து நெஞ்சம்
அஞ்சியே கள்ள னாமென் றவரவர் கூகூ வென்றார்
எஞ்சலின் நகரார் யாரும் ஏற்றிய தீபத் தோடு
வஞ்சமில் மறையோன் வீட்டின் வந்துபேர் அரவ மாற்றி. (8)
பொ-ரை:- உறங்கியவர்கள் விழித்துக்கொண்ட பின்னர் வீட்டை
விட்டு வெளியில் செல்லும் வழிகளிலெல்லாம் திருடன் வெளியேறாமல்
இருக்கத் தடைகளை உண்டாக்கினர். அஞ்சிய மனத்தினராய் திருடன்
வந்துள்ளான் என்று எண்ணி எல்லோரும் கூ கூ என்று கூவினார்கள்.
அருகில் உள்ள நகரத்தார் எல்லோரும் ஏற்றிய தீபத்தோடு வஞ்சம்
இல்லாத மறையோனாகிய அந்தணன் வீட்டிற்கு வந்து பெரிய ஆரவாரம்
செய்தனர்.
184. விப்பிரன் புதல்வன் மாய்ந்த விதமுமுத் தணிகைக் கொண்ட
துப்பில்சோ ரனையும் கண்டு சூழ்ந்துவந் தனர்கள் யாரும்
தப்பிடா வகையால் அன்னோன் தனைப்பிடித் திறுகக் கட்டிக்
குப்புற லுற்றுத் தண்டாற் கொதித்தனர் அடித்தார் கூடி. (9)
பொ-ரை:- வேதியன் மகன் இறந்த விதமும் முத்து மாலை
கையில் வைத்திருக்கும் அறிவற்ற திருடனையும் கண்டு அவனைச்
சூழ்ந்து எல்லோரும் வந்து நின்றனர். அத்திருடன் தப்பிடாமல் இருக்கும்படி
அவனைப் பிடித்து (கயிற்றால்) இறுகக் கட்டிக் குப்புறப் படுக்க வைத்து
எல்லோரும் கூடி சினத்துடன் அடித்தனர்.
185. அடித்திடும் விதன மாற்றா தவனுயிர் இறந்தான் வேதம்
படித்தபுத் திரனைக் கொன்ற பாவத்தால் பிரம கத்தி
பிடித்ததக் கள்வன் தன்னைப் பெரும்பசி தாக மேவி
வடித்திடு சூல வேற்கை வயிரவர் ஒறுப்ப வாடி. (10)
பொ-ரை:- அடித்த துன்பம் தாங்காமல் துர்ப்பாக்கியன் உயிர்
துறந்தான். வேதம் படித்த அந்தணன் மகனைக் கொன்றதால்
அத்திருடனை பிரமகத்திப் பாவம் பிடித்தது. அவனுக்குப் பெரும் பசி
தாகம் உண்டாயிற்று. கூரிய சூலம் வேல் முதலியன கையில் கொண்ட
வயிரவர் தண்டிக்க மிகவும் துன்புற்றான்.
186. அம்பரத் துழன்று பன்னாள் அருந்துயர்க் கரைகா ணாமல்
இம்பரின் மனிதர் யாரும் இயல்வழி மருங்கோர் போதிக்
கொம்பரில் வைகி யாங்குக் குறுகுவோர் தம்மை மாய்த்துச்
செம்புனல் குடித்தான் உண்டு தீங்குசெய் திருக்கு நாளில். (11)
பொ-ரை:- பல நாள் தாங்குதற்கரிய துன்பத்திற்குக் கரை
காணாமல் வானில் உழன்றான். பின்னர் இவ்வுலகத்திற்கு (பேய் வடிவில்)
வந்து மனிதர்கள் இயல்பாகச் செல்லும் வழியில் உள்ள அரச மரத்தில் ஒரு
கிளையில் தங்கிக் கொண்டு அங்கு வருவோர் தம்மைக் கொன்று சிவந்த
இரத்தத்தைக் குடித்தான். இவ்வாறு தீங்கு செய்து இருக்கும் நாளில்,
187. நாட்டினில் உயர்ந்த சோழ நாட்டினில் வேத வாய்மை
காட்டிய ஒழுக்கங் குன்றாக் காசிபர் குலத்தோர் பார்ப்பான்
சூட்டிய புகழின் மேன்மைச் சுதற்மனல் லமிர்தம் விண்ணோர்க்
கூட்டிய சிவனார் மேவும் ஓதன் புரமேற் செல்வான். (12)
பொ-ரை:- நாடுகள் எல்லாவற்றிலும் சிறந்த நாடான
சோழநாட்டில் வேதத்தில் சொல்லப்பட்ட ஒழுக்கத்தில் குன்றாத காசிபர்
குலத்தில் தோன்றிய ஒரு பார்ப்பான் (ஒருநாள்) புகழ்ந்து சொல்லப்படும்
மேலான நல்ல தேவாமிர்தம் தேவர்களுக்குக் கொடுத்த சிவபெருமான்
எழுந்தருளியுள்ள சோற்றுத்துறை வழியாகச் சென்றான்.
188. செல்பவன் பரம னாமஞ் செப்பியங் கேகும் போதில்
நில்லென வரசின் மேய நிருதனுந் தீங்கு செய்தற்
கொல்லென வரலும் பார்ப்பான் உரைசெயுஞ் சிவநா மத்தின்
நல்லொலி செவியில் ஏற நடுங்கிமுன் வணங்கி நின்றான். (13)
பொ-ரை:- வழிச்சென்ற பார்ப்பான் பரமனாகிய சிவபெருமானின்
திருநாமத்தைச் சொல்லிக் கொண்டு சென்ற பொழுது அரச மரத்தில்
தங்கியிருந்த நிருதனாகிய துர்ப்பாக்கியன் “நில்" என்று சொல்லி
பார்ப்பானுக்குத் தீங்கு செய்வதற்காக விரைந்து வந்தபொழுது, பார்ப்பான்
சொல்லி வந்த சிவநாமத்தின் நல்லொலி அவன் காதில் கேட்டது.
கேட்டவுடன் அவன் நடுங்கி பார்ப்பான் முன் வணங்கி நின்றான்.
189. நின்றபா தகனை நோக்கி நீயெவன் நினக்குச் செய்கை
யொன்றிய வாறே தென்ன உயர்ந்ததன் குலமு முன்செய்
நன்றலச் செய்கை யாவு நண்ணிய பவமுஞ் சொல்லி
இன்றுமைக் கண்டேன் என்பால் இடரகன் றறிவும் பெற்றேன். ( 14)
பொ-ரை:- வந்து நின்ற பாவியாகிய துர்ப்பாக்கியனைப் பார்த்து
"நீ யார்? உன் செய்கைக்குக் காரணம் யாது?" என்று கேட்டான். அதற்கு
அப்பாவி தன் உயர்ந்த குலத்தையும் முன் தான் செய்த தீய செயல்கள்
யாவற்றையும் சொல்லி அதனால் வந்த பிரமகத்தி பாவத்தையும் சொல்லி
'இன்று உம்மைக் கண்டதால் என்னிடம் உள்ள துன்பம் நீங்கிட நான்
அறிவும் பெற்றேன்' என்று சொன்னான்.
190. சிறியவர் பெருமை யோரைச் சேர்ந்திடிற் சிறுமை நீக்கி
அறிவுநல் லொழுக்கங் காட்டி யருங்கதி புகவுஞ் செய்வர்
நெறியிது சரத மன்றோ நீயெனை முழுதுங் காத்தல்
உறுதியாம் என்ன நன்றென் றுரைத்து நீயஞ்சல் என்றான். (15)
பொ-ரை:- 'சிறுமை குணம் உடையவர் பெருமை உடையவரைச்
சேர்ந்தால் அவர் சிறியோரின் சிறுமையை நீக்கி நல்லறிவு புகட்டி
நல்லொழுக்கத்தையும் காட்டி அரிய சிவகதியை அடையச் செய்வர். இது
உண்மையாகும். நீவிர் என்னை முழுதும் காத்திடல் வேண்டும்' என்று
அப்பாவி கூறினான். வழிச்சென்ற பார்ப்பான் 'நல்லது' என்று உரைத்து
'நீ அஞ்ச வேண்டாம்' என்றான்.
191. சுதன்மனு முடன்கொண் டேகித் துர்ப்பிரக் கியனை யன்னா
வதரண நகரிற் கோர்சார் வைகென நிறுத்தித் தான்போய்
விதவித மணியும் பொன்னும் வேழவெண் மருப்புஞ் சாந்தும்
முதலிய திரையால் வீசி முழங்குகா விரியைக் கண்டு, (16)
பொ-ரை:- பார்ப்பனன் அறிவற்ற அந்த பாவியை உடன்
அழைத்துச் சென்று சோற்றுத்துறை நகரில் ஓரிடத்தில் தங்குக என்று
தங்க வைத்தபின், தான் மட்டும் தனியே சென்று பலவிதமான
மணிகளையும் பொன்னையும் யானையின் வெண் தந்தத்தையும் சந்தன
மரத்தையும் தன் அலையால் கரையொதுக்கும் அலை யொலிக்கும்
காவிரியைக் கண்டான்.
192. தொழுதுபின் னயலார் அன்னம் தோகையர் போகம் எண்ணெய்
பழுதென விலக்கி யோர்காற் பாரணம் புரிந்திவ் வூரில்
வழுவிலா வருடம் ஒன்று வைகிநாள் தோறும் பொன்னி
முழுகுவேன் என்ற காதன் முதிர்ச்சியாய் நியமம் பூண்டு (17)
பொ-ரை - காவிரி நதியைக் கண்டு தொழுது பிறர் கொடுக்கும்
அன்னம் பெண்கள் போகம் எண்ணெய் இவை குற்றம் என்று விலக்கி
ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டும் உண்டு இவ்வூரில் ஒரு வருடம் தங்கி
நாள்தோறும் காவிரியில் நீராடுவேன் என்று அன்பு மேலீட்டால் நியமம்
பூண்டான்.
193. இரவிவந் தெழுமுன் பொன்னி யீர்ம்புனல் ஆடித் தற்பித்
தரனெழுத் தைந்தும் ஈரை யாயிரஞ் செபித்து வேதம்
வரன்முறை யோதி ஞான வரதரோ தனபு ரேசன்
சரணிரு போதுஞ் சேவை சாற்றுமுப் போதுஞ் செய்து. (18)
பொ-ரை:- சூரியன் உதிக்கும் முன்பாக எழுந்து காவிரியின்
குளிர்ந்த நீரில் நீராடி நீர்க்கடன் செய்து சிவபெருமானின் ஐந்தெழுத்தைப்
பத்தாயிரம் முறை செபித்து வேதத்தை முறையாக ஓதி ஞான வரதராகிய
சோற்றுத்துறை ஈசனின் திருவடிகளில் நல்ல மலர்களைச் சாற்றி
முப்போதும் தொண்டு செய்து வந்தார்.
194. ஈசனுக் கநேக தீப மேற்றியந் தணர்கள் யார்க்கும்
வாசநெய் யடிசில் ஈந்து வருபவன் மாக மாதத் (து)
ஆசகன் முப்பால் நாளும் ஆடிய பலன வற்றுள்
பாசமின் மூன்று நாளைப் பலனையப் பதகர்க் கீந்தான். (19)
பொ-ரை:- ஈசனுக்குப் பலப்பல விளக்குகள் ஏற்றியும்
அந்தணர்கள் எல்லோருக்கும் மணம் வீசும் நெய்யடிசில் கொடுத்தும்
வந்தான். மாசி மாதத்தில் தினமும் சிவபெருமானின் மூன்று வேளையிலும்
நீராடிய பலன் அவற்றுள் குற்றம் இல்லாத மூன்று நாள் நீராடிய பலனைப்
பாவியாகிய துர்ப்பாக்கியனுக்குக் கொடுத்தான்.
195. ஈதலும் பிரம கத்தி யேகிய தனைய காலை
போதமுங் குணமு மேவப் பொலிந்துதுர்ப் பாக்கி யன்தான்
சீதமுத் தணிகி ரீடந் திகழ்மணிப் பதக்க மாடை
காதணி யணிந்து தோன்றுங் கவினுறு தேவ னானான். (20)
பொ-ரை:- இவ்வாறு மூன்று நாள் பலனைக் கொடுத்தவுடன்
அப்பாவியின் பிரமகத்திப் பாவம் அகன்றது. அந்த நேரத்தில் ஞானமும்
நற்குணமும் அடையப்பெற்றான். துர்ப்பாக்கியன் குளிர்ந்த முத்தணியும்
கிரீடமும் மணிகள் பதித்த பதக்கமும் ஆடையும் காதணியும் அணிந்து
அழகிய தேவனாகத் தோன்றினான்.
196. அக்கணம் அமரர் மானம் அணைதர வதனில் ஏறி
பக்கம்வெண் கவரி வீசப் பனிமதிக் கவிகை தாங்கி
இக்கென வீணை நாதம் இசைத்தபி னயத்தோ டாடி
மைக்குழல் மடவார் விண்ணோர் மருங்குறப் பொலிந்து நின்று. (21)
பொ-ரை:- அப்பொழுது தேவர்களின் விமானம்அங்கு
வந்துசேர்ந்தது. அதில் அவன் ஏறியதும் பக்கங்களில் வெண்மை நிறமான
கவரி வீசவும், குளிர்ந்த மதிபோன்ற கொடை பிடிக்கவும், மைபோன்ற
கூந்தலையுடைய தேவமகளிர் வீணை இசைத்தும் நயத்தோடு ஆடியும்
வர விண்ணோர் சூழ்ந்து நின்றனர்.
197. வலமுறச் சுதர்மன் பாதம் வணங்கியீர்ம் பொன்னி யாடும்
பலமதின் மூன்று நாளைப் பலனெனக் களித்த லாலே
யலல்செயும் பிரம கத்தி யகன்றுவா னவனு மாகி
இலகுபாக் கியமும் பெற்றேன் இவணினின் னருளும் பெற்றேன். (22)
பொ-ரை:- சுதர்மனை வலமாக வந்து அவன் பாதங்களைத்
துர்ப்பாக்கியன் வணங்கினான். வணங்கி குளிர்ந்த பொன்னி நீராடிய
பலனில் மூன்று நாள் பலன் எனக்கு அளித்ததால் துன்பம் செய்யும்
பிரமகத்தி பாவம் அகன்று தேவனாகி விளங்கும் பாக்கியமும் பெற்றதுடன்
இவ்விடத்தில் உம்முடைய இனிய அருளையும் பெற்றேன் என்றான்.
198. இனியெனக் கறியும் பான்மை யியம்பெனச் சுதன்மன் கூறும்
அனிதமாங் களவு கோறல் ஆகிய பாவஞ் செய்தோர்
துனிசெய் பேய் நிருதர்தாரு சளுகர மாதி யாவாம்
மனிதராய்ப் பிறப்பர் மண்மேல் மன்னிய தர்மம் செய்தோர். (23)
பொ-ரை:- இனி எனக்கு நல்லறிவைப் புகட்டுங்கள் என்று
துர்ப்பாக்கியன் வேண்டினான். அதற்குச் சுதன்மன் ‘தீமை பயக்கும் களவு
கொலை முதலான பாவங்கள் செய்தோர் அச்சம் தரும் பேய், நிருதர்
(அரக்கர்), மரம்(தரு), புழு முதலானவையாகப் பிறப்பர். இவ்வுலகில்
நிலைத்த தருமத்தைச் செய்தோர் மனிதராய்ப் பிறப்பர்' என்று கூறினான்.
199. மானிடர் தமிற்சி றந்த வருணம்நான் காம வற்றுள்
மேனிலை வருண மூன்றும் வேதமோ துவதே நீதி
ஈனமில் சதுர்த்த ரானோர் இதியாச புராண மிக்க
ஞானவா கமங்கள் ஓதி நன்னெறி படர்த லாமால். (24)
பொ-ரை:- மேலும் ‘மானிடர் தம்மில் நான்கு வருணத்துள்
சிறந்த மேநிலை வருணம் மூன்றும் வேதம் ஓதுவதே செய்யத்தக்க
நீதியாகும். குற்றமில்லாத நான்காம் வருணத்தோர் இதிகாசம், புராணம்,
மிகுந்த ஞான ஆகமங்கள் முதலானவற்றை ஓதி நல்ல நெறியில் நடத்தல்
வேண்டும்' என்றான்.
200. சூத்திரர் தமக்கு நான்கு தொல்குல மடந்தை மார்க்கும்
யேத்திய வேதந் தன்னை யியம்புதல் கேட்டல் ஆகா
நாத்திகழ் தமிழால் வேத நற்பொருள் உரைத்த லாகும்
நீத்திடு மாதர்க் கென்றும் பிரணவம் உணர்த்த லாகா. (25)
பொ-ரை:- 'சூத்திரர்களும் தொன்மையான நான்கு வருணத்துப்
பெண்களும் போற்றப்படும் வேதத்தை ஓதுதலும் வேதம் கேட்டலும்
ஆகாத செயலாகும். நாவில் விளங்கும் நல்ல தமிழால் வேதத்தின் நல்ல
பொருளைச் சொல்லலாம். ஒதுக்கப்பட்ட (நீக்கப்பட்ட) பெண்களுக்கு
என்றும் பிரணவத்தை உரைக்கலாகாது' என்று கூறினார்.
201. கடும்பசி தீர வால காலமுண் டனரே லாவி
விடும்பரி சன்றி யுய்யார் விதமிது போலப் பாசம்
எடும்படி மாதர் வேத மரும்பி ரணவத்தை யோதில்
கொடும்பெரு நிரயஞ் சேர்வர் கூறுமோ ரயுத காலம். (26)
பொ-ரை:- 'கடுமையான பசியை உடைய ஒருவன் தன்
பசியைத் தீர்ப்பதற்காக ஆலகால நஞ்சை உண்டானானால் அந்த நஞ்சு
அவன் பசியைப் போக்காமல் அவன் உயிரைப் போக்கும். அதுபோல
பாசம் நீங்க வேண்டி மாதர் வேதத்தையும் அரிய பிரணவத்தையும்
ஓதினால் கூறப்படும் பதினாயிரம் ஆண்டு காலம் கொடுமை நிறைந்த
நரகத்தை அடைவர்.
202. காலமோ ரயுதஞ் சென்றாற் கடுநிர யத்தை நீங்கி
ஞாலமேற் றீயசென்மம் நண்ணுவர் ஆத லாலே
சாலநல் லொழுக்கஞ் செய்வோர் தத்தமக் கியன்ற நூலை
ஏலவே மொழிதல் நீதி யிதனைநன் கறிதி யின்னும். (27)
பொ-ரை:- “பதினாயிரம் ஆண்டு காலம் சென்றபின் கடுமையான
நரகத்தை விட்டு நீங்கி உலகத்தில் தீயதான பிறவியை அடைவர்.
ஆதலால் மிகவும் நல்ல ஒழுக்கத்தில் நிற்போர் தத்தமக்கு உரிய நூலைப்
பொருந்தக் கற்றல் நீதியாகும். இதனை நன்கு அறிவாயாக' என்று
கூறினான். மேலும்,
203. குறளைபொய் யயலோர் குற்றங் கூறுதல் சிறிது மாகா
விறலுறு மலின யாக்கை யானென மதித்தல் வீணாம்
அறமியற் றிடுதும் என்ன அடாதன செயலுந் தீதாம்
பிறர்குணங் கூறல் ஆசை பெரும்பிணி யுறாமை நன்றே. (28)
பொ-ரை:- 'புறங்கூறுதல், பொய் சொல்லுதல், அயலவர்
குற்றங்களைக் கூறுதல் ஆகியவை சிறிதும் செய்தல் கூடாது.
வலிமையுடைய அழுக்கான இந்த உடலை யான் என்று அகங்கரித்தல்
வீணான செயலாகும். அறம் செய்கின்றேன் என்று சொல்லி செய்யத்
தகாத செயல்களைச் செய்தல் தீமையைப் பயக்கும். பிறர் நற்குணங்
களைக் கூறுதலும் ஆசைப் படாமையும் பெருநோய் உறாமையும்
நன்மையாகும்' என்றான்.
204. செய்யுமிப் பூசை தம்மிற் சிவபூசை சிறந்த தாகும்
செய்யுமிச் செபங்கள் தம்மில் சிறந்ததைந் தெழுத்தே யாகும்
செய்யுமித் தானம் தம்மில் சிறந்துள தன்ன தானம்
செய்யுமிம் மூன்றும் வல்லார் சிவனெனத் தொழவே வல்லார் (29)
பொ-ரை:- 'செய்யத் தக்க பூசைகளில் சிவ பூசை செய்தல்
மிகவும் சிறந்ததாகும், செய்யக் கூடிய செபங்களில் சிறந்தது சிறந்ததான
ஐந்தெழுத்தை ஓதுவதேயாகும், தானங்களில் சிறந்தது அன்னதானமாகும்.
இந்த மூன்றையும் செய்ய வல்லவர்கள் சிவன் என்றே தொழத்தக்கவராவார்' என்றான்.
205. ஓதிய விவற்றை மெய்யென் றுணர்திநீ சுவர்க்க மேவி
தீதில்போ கங்கள் பன்னாள் சிறப்புடன் புசித்துப் பின்னர்
நீதியிவ் வறிவி னோடு நீள்கட லுடுத்த பார்மேல்
ஆதியாம் வருண மேய வதிகர்த்தன் புதல்வ னாகி (30)
பொ-ரை:- 'சொல்லப்பட்ட இவற்றை உண்மைப் பொருள் என்று
உணர்வாயாக! நீ சொர்க்கம் சென்று தீமை இல்லாத இன்பங்களைக்
சிறப்புடன் பலநாள் அனுபவித்துப் பின்னர் நீதியோடு கூடிய அறிவினுடன்
நீண்ட கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் முதன்மையான வருணத்தில்
அதிகர்த்தன் என்பானுக்குப் புதல்வனாகப் பிறப்பாய்.'
206. நற்கன சேவ னென்னு நாமமும் பொருந்தி வேத
விற்பன னாகி வாழும் வேலையில் விசுவா மித்திரன்
அற்புத மாக மேவி யஞ்செழுத் துபதே சித்து
சிற்சில தருமம் எல்லாம் தெரிவிக்க இனிது தேர்ந்து, (31)
பொ-ரை:- 'நல்ல கனசேவன் என்னும் பெயரைப் பெற்று வேதம்
ஓதுவதில் விற்பனனாகி வாழும் நாளில் விசுவாமித்திரர் என்னும் முனிவர்
அதிசயமாக அங்கு வந்து ஐந்தெழுத்தை உனக்கு உபதேசித்து சிற்சில
தருமங்களை அறிவுறுத்த அவற்றில் இனிமையாகத் தேர்ச்சி பெறுவாய்.
207. தலங்களில் சிறந்த விந்தத் தலத்துவந் தநேக தன்மம்
நலப்பெறப் புரிந்து முத்தி நண்ணுவாய் என்று கூறி
வலம்பெறு சுதர்மன் நின்றான் வானவர் வடிவு பெற்றோன்
துலங்குபொன் னுலகு மேவிச் சுகமெலாம் நுகர்ந்து பின்னர். (32)
பொ-ரை:- ' பின்னர் தலங்களில் எல்லாம் சிறந்ததான இந்த
சோற்றுத்துறைத் தலத்திற்கு வந்து அநேக தருமங்களை நன்மை
உண்டாகும்படி செய்து இறுதியாக முத்தியைப் பெறுவாய்' என்று கூறி
வன்மை பெற்ற சுதன்மன் அங்கு இருந்தான். அப்போது வானவர் உருவம்
பெற்ற துர்ப்பாக்கியன் விளங்குகின்ற பொன்னுலகை அடைந்து எல்லா
இன்பங்களையும் அடைந்தான். அதன் பின்னர்,
208. சூழ்கடல் புவியில் முன்னைத் தொல்லறி வுடனே தோன்றி
வாழ்கன சேவ னாகி வருகவு சிகன்போ தித்த
ஊழ்முறை யொழுக்கம் போற்றி யோதன புரத்தின் மேவி
ஏழ்பவத் துயரு மாற்ற வெண்ணில் புண்ணியமுஞ் செய்து. (33)
பொ-ரை:- துர்ப்பாக்கியன் கடலால் சூழப்பட்ட இவ்வுலகில்
முற்பிறப்பில் பெற்ற அறிவுடனே பிறந்து கனசேவன் என்னும் பெயரைப்
பெற்று வாழ்ந்து வந்தான். கவுசிகன் என்னும் முனிவன் போதித்த
தொன்மை யான ஒழுக்க முறையைப் பாதுகாத்து சோற்றுத்துறை தலம்
வந்து ஏழ் பிறவியில் வந்த பாவங்களை நீக்கும் பொருட்டு
எண்ணிக்கையில் அடங்காத புண்ணியங்களைச் செய்தான்.
209. மாகமா தத்தில் பொன்னி வரநதி யாடி எங்கள்
ஏகநா யகனை வாழ்த்தி யிறைஞ்சியிங் கமர்ந்து பன்னாள்
மோகமாம் வலையை நீக்கி முடிவிலா முத்தி சேர்ந்தான்
பாகமார் முனிவீர் நீரும் படிந்திடில் முத்தி யாமால், (34)
பொ-ரை:- மாசி மாதத்தில் கங்கைக்கு நிகரான பொன்னியில்
நீராடிய பின்னர் எங்களின் ஒரே தலைவனாகிய சிவபெருமானை வாழ்த்தி
வணங்கி இந்த சோற்றுத்துறையில் பல காலம் தங்கி மோகம் என்று
சொல்லப்படும் பாச வலையை நீக்கியபின் முடிவில்லாத முத்தி
இன்பத்தைப் பெற்றான்.
210. பாவிகள் சென்று பொன்னி படிந்திடின் மாக மாதத்
தோவில்பா வங்கள் தீரும் உற்றிய பாவ மில்லார்
ஆவிமெய் வருந்தா வண்ணம் அருங்கதி யடைய வேண்டி
தாவிலா தொருகால் மூழ்கில் சாலவும் அமையு மாதோ. (35)
பொ-ரை:- மாசி மாதத்தில் பாவிகள் சென்று பொன்னியில் நீராடினால் தீராத
பாவங்கள் தீருவதால் தம்மை அடைந்த பாவம் இல்லாதவராவார். உயிரும்
உடலும் வருந்தாத வண்ணம் அருமையான சிவகதியை
அடைய விரும்பி வருத்தம் இல்லாமல் ஒருமுறை பொன்னியில் நீராடினால்
மிகவும் நன்மை உண்டாகும் (சிவ கதியை அடைவர்).
211. தானமும் தவமும் யோகத் தகுதியுஞ் செபமு மோம
மானவும் பிதிர்கன் மங்கள் ஆகிய வவையு மேலாம்
ஞானமு மேனைத் தீர்த்த நானநற் பலனுஞ் சேர்வர்
ஊனமில் மாக மாதத் தொருதினம் பொன்னி மூழ்கில். (36)
பொ-ரை:- குறை இல்லாத மாசி மாதத்தில் பொன்னி நதியில்
ஒரு நாள் நீராடினால் தானம் தவம் யோகம் வேள்வி பிதிர் கன்மங்கள்
ஆகியன செய்த பலனை அடைவதுடன் மேலான ஞானமும் மற்றைத்
தீர்த்தங்களில் நீராடும் நல்ல பலனையும் ஒருசேர அடைவர்.
212. பழியொடு பாவ பேதம் பன்னுதுர்ப் பாக்கிய னானோன்
மொழிதரு மாக நான மூன்றுநாள் பலத்தி னாலே
ஒழிவிலாப் பிரம கத்தி யொழிந்துமே லுலகம் பெற்றால்
அழிவிலம் மாத முற்றும் ஆடுவார் பயன்யார் சொல்வார். (37)
பொ-ரை:- பழியோடு பலவித பாவங்களையும் செய்த
துர்ப்பாக்கியன் என்பவன் பிறரால் சிறப்பாகச் சொல்லப்படுகின்ற
பொன்னியில் மூன்று நாள் நீராடும் பலத்தினால் ஒழியாத பிரமகத்திப்
பாவம் ஒழியப் பெற்று வீட்டுலகம் பெற்றான் என்றால் அழிவில்லாத மாசி
மாதம் முற்றும் நீராடுவார் பெறும் பயனை யாரால் சொல்ல இயலும் ?
சொல்ல இயலாது.
மாக நீராடல் சருக்கம் முற்றிற்று
8. துலா நீராடல் சருக்கம்
213. போதவங்கு சத்திலைந்து போர்க்களிற்றை வென்றுமுன்
காதரந்த விர்ந்து முத்தி காதலித்த முனிவீர்காள்
ஓதனேசர் காவிரிக்கு ளுண்மையன்பின் ஐப்பசி
மாதமூழ்கு மான்மியத்தின் வன்மையொன்று கூறுகேன். (1)
பொ-ரை:- மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து
புலன்களாகிய போர்க்களிற்றை ஞானம் என்னும் அங்குசத்தால் வென்று
தொடரும் தீவினையைத் தொடராமல் தவிர்ந்து முத்தியை விரும்புகின்ற
முனிவர்களே! ஓதனேசருடைய காவிரியில் உண்மை அன்புடன் ஐப்பசி
மாதத்தில் நீராடும் புண்ணிய சிறப்பின் வலிமை ஒன்றைக் கூறுகின்றேன்
கேட்பீர்களாக!
214. நீடுசெல்வ மேவுநாடு நீதிநாடு கோசலம்
தேடுமுட்பொ ருட்தொகைக்கோர் சேமவைப்ப யோத்தியிற்
கோடுவென்ற கொங்கைமாதர் கொண்டகற்பு வேதியர்
பீடுமன்னர் நீதிகண்டு பெய்யுமாத மும்மழை. (2)
பொ-ரை:- நீண்ட செல்வமும் நீதியும் நிலைத்துள்ள கோசல
நாட்டில் உண்மைப் பொருளாகிய பரம் பொருளைத் தேடுகின்ற
ஞானத்தின் குவியலைப் பாதுகாப்பாக வைத்துள்ள நகர் அயோத்தியாகும்.
அங்கே குன்றை வென்ற மார்பகத்தையுடைய பெண்களின் கற்பு
ஒழுக்கத்திற்காக ஒரு மழையும், வேதியர்களுக்காக ஒரு மழையும்,
பெருமையுடைய மன்னனின் நீதிக்காக ஒரு மழையுமாக மாதம் மூன்று
மழை தவறாது பெய்யும்.
215. ஏத்துமன்ன கர்க்குவேந்தன் ஏற்றெதிர்ந்த மாற்றலர்
காத்திரத்த ரத்தமுண்டு கக்குசோதி வேலினான்
வேத்தவைக் குலக்கிரீட மேவிரத்தின நீடொளி
மாத்தளி (ர்) த்த பல்லவத்தின் மன்னுபொற் பதத்தினான். (3)
பொ-ரை:- போற்றப்படும் அந்த நகரமாகிய அயோத்தியின்
வேந்தன் தன்னை எதிர்த்த பகைவர்கள் மீது சினம் கொண்டு
அவர்களின் உதிரத்தை உண்ட ஒளி திகழும் வேலையுடைவனாவான்.
அவன் மற்ற அரசர்களின் குலமுறை கிரீடங்கள் பொருந்துவதால்
அவற்றில் உள்ள இரத்தின மணிகளின் பெருவொளி திகழும் நிலைபெற்ற
பொன்போன்ற பாதத்தை உடையவன்.
216. ஆரருட்குப் பாரிபாரி லாவிகட்கோர் ஆவியான்
தீரவெற்பு தாரதாரு சேனைவெள்ள மிக்குளான்
சாரமுற்ற நூலெனச்சொல் சாகரத்தின் எல்லையான்
பேரெழிற்கு வேணிகர்த்த பெருமைபெற்ற தசரதன். (4)
பொ-ரை:- ஆரருளாகிய கொடைக்குப் பாரி போன்றவன்,
உயிர்களுக்கு எல்லாம் உயிர் போன்றவன், எல்லையாக மலையையும்
மந்தாரம் தேவதாரு போன்ற மரங்கள் நிறைந்த காடுகளையும்
உடையவன், வெள்ளம் போன்ற படைகளை மிகுதியாக உடையவன்,
பொருள் பொதிந்த நூல் என்று சொல்லப்படும் கடலுக்கு எல்லை
கண்டவன் (நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன்), பேரெழிலுக்கு முருகனை
ஒத்த பெருமை பெற்ற தசரதன் என்பவனாவான்.
217. எவ்வனத்தில் அட்டதிக்கும் எய்திவெற்றி கொள்ளவே
செவ்விமத்த கத்ததந்தி சிறுவாசி யேறுதேர்
கவ்வைமெத்து தானைவீரர் கந்தரத் திரைத்தெழீஇம்
பவ்வமொத்து மேலவந்து பச்சிமத் திறங்கியே. (5)
பொ-ரை:- தசரதன் தன்னுடைய இளம் பருவத்தில் எட்டுத்
திசைகளிலும் சென்று வெற்றி பெற விரும்பி செம்மையான மத்தகத்தை
யுடைய யானை, குதிரை, ஊர்ந்து செல்லும் தேர், ஆரவாரம் மிகுந்த
படை வீரர்கள் முதலிய நாற்படையும் மேகம் போன்று முழக்கம் செய்து
எழுந்து கடலைப் போல ஆரவாரம் செய்ய மேற்குத் திசை சென்றான்.
218. அண்டலாரை மோதியாவி யந்தகற்கு நல்கியே
கொண்டவூனி ரத்தமச்சை கூளிகங்க முண்ணவே
மண்டுபோரி யற்றிவெற்றி மாலைசூடி மீண்டுமின்
ஒண்டிறற்கொள் பூருவத்து முத்தரதி சைக்கணும். (6)
பொ-ரை:- தசரதன் தன்னைச் சேராதாரை மாய்த்து அவர்களின்
உயிரை எமனுக்குக் கொடுத்து உடல் இரத்தம் மச்சை இவற்றை கூளி
கழுகு ஆகியவை உண்ணக் கொடுத்தான்; மிகுந்த போர்களைச் செய்து
வெற்றி மாலை சூடி மீண்டு வந்தான்; பின்னர் ஒப்பற்ற துணிவு கொண்டு
கிழக்குத் திசைக்கும் மேற்குத் திசைக்கும் சென்றான்.
219. சென்றுவெங் கொடுத்தபேர்கள் தேகமோடு செல்லநாம்
இன்றுவென்று போதுமென் றெதிர்ந்து போர்செய் மன்னரை
கொன்றுவீர மங்கைசெங்கை கொண்டவிற் சிரத்துற
வன்றுதெக்க ணத்தினுந்த னாணையுய்க்கு மன்னவன். (7)
பொ-ரை:- சென்று, தசரதன் திரை கொடுத்தவர்களை
உயிருடன் செல்ல விட்டு இன்றைக்கு வெற்றி கொண்டு செல்வோம் என்று
எதிர்த்த மன்னரைக் கொன்று வீர மங்கையின் செங்கையில் தலையைக்
கொடுத்தான். பின்னர் தென் திசையிலும் தன்னுடைய ஆணையைச்
செலுத்த மன்னன் விரும்பிச் சென்றான்.
220. சேனையோடு சென்றுதேவ தேவன்மெய்ச் சிராமலை
யானைபூசை செய்தகாலை யாறுவேதி கண்டியூர்
ஏனைநற்ற லத்துவைகி யெந்தசேவை செய்துகை
மானைமேவு மோதனேசர் வண்பதிக்கண் எய்தியே. (8)
பொ-ரை:- சேனையோடு தசரதன் சென்று தேவதேவனாகிய
சிவபெருமான் மெய்யாக எழுந்தருளியுள்ள திருச்சிராமலை, யானை பூசை
செய்த திருவானைக்கா, திருவையாறு, திருவேதிகுடி, திருக்கண்டியூர்
மற்றும் பல நல்ல திருத்தலத்திற்கு சென்று எந்தையாகிய
சிவபெருமானுக்குத் தொண்டு செய்து மானைக் கையில் ஏந்தியுள்ள
சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருச்சோற்றுத்துறை என்னும் வளமையான
திருத்தலத்திற்கு வந்தான்.
221. போற்றுதன்சொல் போனிறைந்து பொய்த்திடாத காவிரி
ஆற்றுநீர் படிந்துமுக்கண் ஆதிபாத வம்புயந்
போற்றுபத்தி யார்பணிந்து சொல்லினாற் றுதித்தபின்
நாற்படைக்கு லத்தொடேனை நற்றலத்தி னேகுவான். (9)
பொ-ரை:-போற்றப்படும் தன்னுடைய சொல்போல நிரம்பிய
என்றும் வற்றாத நீரையுடைய காவிரியில் நீராடி, முக்கண் பெருமானின்
ஆதி பாதமாகிய அழகிய தாமரையில் போற்றப்படும் பத்தி நிறைந்த மனத்துடன்
பணிந்து குற்றமற்ற சொற்களால் துதித்தான். பின்னர் தன்
நாற்படையுடன் மற்றுமுள்ள திருத்தலங்களுக்குச் செல்ல முற்பட்டான்.
222. தேறுதேரி வர்ந்துபாக செல்லவுந்து கென்னலும்
மாறில்பாக னுந்தவந்த வையவைய மீதினில்
தாறுபாய்த ரங்கமோடு தம்பமாகி நின்றதால்
ஆறில்மன்னன் என்னிதென்ன வுன்னுகின்ற வேலையில் (10)
பொ-ரை:- சிறந்த தேரில் மன்னன் ஏறி பாகனிடம் தேரைச்
செலுத்தும்படி ஆணையிட்டான். மாறுபாடு இல்லாத பாகனும் தேரைச்
செலுத்தினான். ஆனால் அந்தத் தேரானது பூமியின் மீது இழுத்துக்
கட்டப்பட்ட தூண்போன்று நிலையாக நின்றது... மனம் பொறாத மன்னன்
இது என்ன என்று கேட்ட பொழுது,
223. செல்லலற்ற தங்குலஞ் செழிக்கவந்த தேசிகன்
நல்லசிட்டர் சொல்வசிட்டன் ஞானலோச னத்தினால்
வல்லவாறு கண்டநின்ற மன்னனோடு செப்புவான்
சொல்லரக்கர் கோனுரத்த தோளன்விற்கை ராவணன். (11)
பொ-ரை:- துன்பம் இல்லாத தங்கள் குலம் செழுமையாக
இருப்பதற்காக வந்து அமைந்த குருவும் நல்ல சீடனால் போற்றப்படும்
வசிட்ட முனிவன் தன் ஞானத் திருட்டி (ப் பார்வை) யால் நடப்பதைக்
கண்டு மன்னனிடம் 'அரக்கர்க்கு அரசன் எனப்படும் வலிய தோளை
உடையவனும் கையில் வில்லைப் பிடித்தவனு மாகிய இராவணன்,
224. ஆயவேத நால்வரங்க ளார்வமோடு பெற்றவன்
மாயவல்ல வன்பயந்த மைந்தனிந்திர சித்துமெய்
சாயலுள்ள புட்கரச மத்தனென்ற தம்பியும்
ஞேயமாக வுள்ளதீர னேரிலாத வன்கணன். (12)
பொ-ரை:- (இராவணன்) ஆராயப்பட்ட நான்கு வேதங்களையும்
வரங்களாக விருப்பத்தோடு பெற்றவன் மாயம் செய்வதில் வல்லவன்
பெற்ற மகன் இந்திரசித்து, அவனுடைய உண்மையான சாயல் உள்ள
புட்கர சமத்தன் என்ற தம்பியுடன் விருப்பமாக உள்ள தீரன் ஒப்பில்லாத
கொடியவன்,
225. அவன்மிகுந்த மாயரூபி யாகிவந்துன் னிரதமும்
இவனியங்கி டாதுநின்றி டத்தடுத்து நின்றனன்
கவடுகொண்ட வவனைவெற்றி காணவெண்ணி லெண்ணிலா
புவனனாத ரோதனேசர் பொற்பதிக்கு ளன்பினால். (13)
பொ-ரை:- 'அந்த இந்திரசித்து மிகுந்த மாய உருவத்தோடு
மறைந்து வந்து உன்னுடைய தேரைச் செல்லாது நின்றிட தடுத்து
நிற்கின்றான். வஞ்சகம் கொண்ட அவனை வெற்றி காணவேண்டுமெனில்
அளவில்லாத உலகங்களுக்குத் தலைவனாகிய சோற்றுத்துறை ஈசனின்
பொன்னார் திருவடிக்கு அன்பினால்'
226. பொங்குசங்கி னங்குலவு பொன்னியாற்றில் ஐப்பசித்
திங்கண்முற்று மூழ்கிநாதர் சேவைசெய்யில் வெற்றியாம்
இங்குவந்த தந்தமாத மிதுவுநன்மை யித்தலத்
துங்கமான கவுதமாதி தாயர்பேறு பெற்றதால். (14)
பொ-ரை:- மிகுந்த சங்கினங்கள் வாழும் பொன்னி யாற்றில்
ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி சிவபெருமானுக்குச் சேவை செய்தால்
வெற்றி வரும். நீ இங்கு வந்தது இந்த ஐப்பசி மாதமாகும். இதுவும் உனக்கு
நன்மையேயாகும். இத்தலம் புனிதமான கவுதமர் முதலான முனிவர்களின்
தாயார்கள் வீடு பேறு பெற்ற தலமாகும்.
227. இசைத்தவாறு செய்தநின்முன் னெய்திலந்த ராவணன்
விசைக்கொண்டஞ்சி யோடுமென்று மேன்மையைந் தெழுத்தையும்
நசைத்தசிந்தை மன்னனுக்கு நல்கினானம் மன்னனும்
அசைப்பிலைப்ப சிக்கணாளை யாறுமாறு மூழ்கியே. (15)
பொ-ரை:- சொன்னவாறு நீ செய்திடில் அந்த இராவணன் உன்
முன் வந்தால் அச்சம் கொண்டு விரைவாக ஓடிவிடுவான் என்று சொல்லி
மேன்மையான ஐந்தெழுத்தை நைந்த மனத்தை உடைய தசரதனுக்கு
உபதேசித்தான். தசரதனும் நிலையான ஐப்பசி மாதத்தில் முப்பது
(ஐ+ஆறும்) நாட்களும் காவிரியில் (ஆறு) நீராடினான்.
228. ஈசர்சேவை செய்துதேரி லேறியூரும் வேளையில்
ஆசடாத தேர்நடத்த தவ்வரக்கன் அஞ்சியும்
மாசனாக னோடினானம் மன்னனைத்த டுத்தனன்
தேசமெச்சு கும்பகர்ணன் தீரனங்கு வந்தரோ. (16)
பொ-ரை:- நீராடிய தசரதன் சிவபெருமானுக்குத் தொண்டு
செய்தான். பின்னர் தேரில் ஏறி செல்லத் தொடங்கின நேரத்தில் குற்றம்
அடையாத தேரைச் செலுத்த அந்த அரக்கன் அஞ்சி ஓடினான்.
அப்பொழுது நாடுகள் எல்லாம் புகழும் கும்பகர்ணன் என்னும் தீரன் அங்கு
வந்து அத்தேரைத் தடுத்தான்.
229. தடுக்கவஞ்சி மன்னன்வந்து தையல்பாகர் சன்னதி
அடுத்துநின்ற னாதிநின்கண் அன்புசெய்யும் யாவரும்
கடுத்தபேய ரக்கர்பூத கணவிலங்கு நஞ்சமென்
றெடுத்தவைக்கு மஞ்சிடார்கள் எனக்கிவ்வச்சம் எய்துமோ.? (17)
பொ-ரை:- கும்பகர்ணன் தேரைச் செல்லாமல் தடுத்ததற்கு
அச்சம் கொண்டு பார்வதியைப் பாகம் கொண்ட பரமர் சந்நிதி வந்து
நின்று 'உன்னிடம் அன்பு செய்யும் யாவரும் சினம் கொண்ட பேய்,
அரக்கர், பூதகணம், மிருகம், நஞ்சு என்ற இவைக்கு அச்சம்
கொள்ளமாட்டார்கள். ஆயின் எனக்கு இந்த அச்சம் வரலாமோ? என்றான்.
230. காக்கவேண்டு மென்றபோது கண்ணிலங்கு நெற்றியான் (நெத்தியான்)
ஆக்கமான கருணைநல்கி யைங்கரப் பிரான்முகம்
நோக்கியிந்த மன்னனெஞ்சி னோய்செய்கும்ப கன்னனை
தூக்குகா லிரண்டும்விண்டு சோரமோது கென்றனன். (18)
பொ-ரை:- ஐயனே! என்னைக் காத்தருள் செய்ய வேண்டும்
என்று வேண்டிய பொழுது நெற்றிக்கண் நிமலன் பொருந்திய கருணை
செய்து ஐங்கரப் பெருமான் விநாயகரைப் பார்த்து இந்த மன்னன்
தசரதனுக்கு மனத்தில் அச்சம் உண்டாக்கிய கும்பகன்னனை நடக்கும்
கால் இரண்டும் இற்று விழுமாறு மோதுக என்று கூறினார்.
231. சொற்றபோதில் ஆகுவூர்தி சூழிராக்க தன்பதம்
அற்றுவீழ மோதலோடும் அசைவிலாமல் நின்றனன்
உற்றவானு மேகநாதன் ஓர்ந்துருத்து நண்ணலும்
அற்றவற்றி ரண்டுகாலும் ஆளமோதி விட்டனன். (19)
பொ-ரை:- இவ்வாறு இறைவன் கூறியவுடன் செல்லும் தேரை
வளைத்து நின்ற இராக்கதன் கால்கள் இற்று விழுமாறு விநாயகர்
அடித்ததால் அவன் அசையாமல் நின்றுவிட்டான். மேகநாதன் அறிந்து
சினம் கொண்டு அங்கு வந்தான். வந்தவன் இரண்டு காலையும்
வலிமையுடன் விநாயகர் அடித்தார்.
232. காலொடிந்து) அயர்ந்துதம்பி காதன்மைந்தர் இருவரும்
மாலொடுங்கி டந்ததன்மை மனத்தறிந்து ராவணன்
மேலோர்வேந்த னாலிவ்வண்ணம் எய்தலங்க வன்றனை
ஓலொடுங்க வன்றுகட்டி யுறுவனென்று வந்தனன். (20)
பொ-ரை:- தன் தம்பி கும்பகர்ணனும் அன்பு மகன்
மேகநாதனும் காலொடிந்து தளர்ந்து மயக்கத்துடன் கிடப்பதை
இராவணன் அறிந்து 'வேறொரு வேந்தனால் இவ்வாறு எய்துவதோ?
செய்த அவனுடைய உயிர் ஒடுங்க வலிமையுடன் கட்டிக்கொண்டு
வருவேன் என்று சொல்லிக்கொண்டு அங்கு வந்தான்.
233. வந்தா நெடுங்கைக ணாலைந்து கொடுகட்டி மனுவா மயோத்தி யிறையைத்
தந்தா வளங்கொண்ட புலிபோல் எடுத்தேகுஞ் சமையத்தில் அத்தி முகவன்
அந்தோ வரக்கன்பு யங்கால்க ளறுமாற டித்தா னடித்த பொழுதின்
கந்தார் புயங்கால்கள் வீழநொந்து படிமீது கருமேக மென்ன விழலும், (21)
பொ-ரை:- இராவணன் வந்து தன் இருபது நீண்ட கைகளாலும்
மனுவாகிய அயோத்தி மன்னன் தசரதனைக் கட்டி தந்தம் உடைய
வளமான யானையைப் புலியானது எடுத்துச் செல்வது போன்று தூக்கிச்
சென்ற பொழுது யானைமுக விநாயகர் அரக்கனுடைய தோள்கள் அற்று
விழுமாறு அடித்தார். அடித்த பொழுது வலிய தோள்களும் கால்களும்
வீழ வருந்தி நிலத்தின் மீது கரிய மேகம் போன்று விழுந்தான்.
234. கூடுற்ற வன்சேனை விழுமீச்ச மரமுள்ள குலையிற் சிதைந்து திசைதோ
றோடுற்ற திச்செய்கை கண்டீசன் அருளான்மெய் யுயர்வாகை பெற்ற வரசன்
நீடுற்ற மணிமாலை முதலான பூண்வர்க்க நிறைபூமி தன்னி லுதிரச்
சேடுற்ற சிவனோத னேகன்ற னிருபாத திகழும் புயங்கள் புகழ்வான். (22)
பொ-ரை:- ஈச்ச மரத்தில் உள்ள பழக்குலை சிதைந்து
நாலாபுறமும் பழங்கள் ஓடுவது போல ஆயுதம் தரித்த சேனை வீரர்கள்
விழுவது கண்டு, ஈசன் அருளால் உண்மையான உயர்ந்த வெற்றியைப்
பெற்ற தசரதன் நீண்ட மணிமாலை முதலான ஆபரணங்களைப்
பூமிதன்னில் நிறையும்படி கொடுத்தான். பின்னர் பெருமை பொருந்திய
சோற்றுத்துறை ஈசனின் விளங்கும் இரு திருவடி தாமரையைப் புகழ்ந்து
வணங்கினான்.
235. எண்ணுக் கடங்காத பதுமத்த ருவணத்த ரிமையோர்கள் ஆதி யெவரும்
மண்ணிற் சனித்தங்க மடிவாதி யறியாமை மருவிக் கறங்கி னுழல
பண்ணிப் புறங்கா டரங்காடி மாயாத பரிபூ ரணத்து முதலே
கண்ணுற்ற வடியார்கள் முன்வந்து துயரங்கள் களைவார்கள் உன்னி லெவரே. (23)
பொ-ரை:- தாமரையில் வீற்றிருக்கும் பிரமன், கருடனில் ஏறி
வரும் திருமால், எண்ணற்ற தேவர்கள் எல்லோருக்கும் 'இவ்வுலகில்
பிறந்தவர்க்கும் தாமத குணம் அறியாமை முதலியன பொருத்தி காற்றாடி
போன்று சுழல விட்டு ஊர்ப் புறங்காட்டை அரங்கமாகக் கொண்டு ஆடும்
குறையாத பரிபூரணமான முழுமுதல் பெருமானே! அடியார்களுக்கு வரும்
துயரங்களைத் தானே முன்வந்து போக்கக் கூடியவர் உன்னை விட்டால்
வேறு யாவர் உளர்? ஒருவரும் இல்லை' என்று புகழ்ந்தான்.
236. அளியேகண் மணியேநல் லருளேவிண் ணமுதேமெய் யழகே யெழுந்தனர்க்
கொளியே!புன் மறுவற்ற மதியேமும் மலமற்ற வுயிரே பரந்த பரைமேல்
வெளியே!சொல் பிரமாண மறியாத பிரமெய்வி யன்ஞான வின்ப மதுவின்
களியேயெனப் பன்னு துதியோதி நிலமீது கனிவாய் விழுந்து தொழுதான். (24)
பொ-ரை:- மேலும், 'கொடையே! கண்ணின் மணியே! நல்ல
அருளே! விண்ணோர் அமுதமே! மெய்யான அழகே! துதிப்போர்க்கு
ஒளியே! புல்லிய கறையில்லாத மதி போன்ற அழகரே! என்
உயிர்போன்றவரே! பரந்த ஞான வெளியே! சொல்லாகிய வேதத்தால்
உண்மை நிலை அறிய இயலாத மேலான உண்மையான பரந்த
ஞானத்தால் வரும் இன்ப மதுவாகிய களிப்பே!' என்று பலவாறு புகழ்ந்து
துதித்து நிலத்தின்மீது விழுந்து உருக்கமுடன் தசரதன் தொழுதான்,
237. அக்காலை பரமேசன் வெளிவந்து புவிவீழும் அரசன்றன் மேனி தடவி
மிக்கா யெடுத்தங்கண் அருள்செய்து வானுன்னை மிகநா மகிழ்ந்த னமிவண்
எக்காலும் வருபொன்னி நதியில் துலாமாத மினிதா கயெவர் மூழ்கினுந்
தக்கார்க ளாவார்கள் பயமேது மடையார்கள் தகுமட்ட சித்தி பெறுவார். (25)
பொ-ரை:- தசரதன் இவ்வாறு வணங்கிய பொழுது சிவபெருமான்
நிலத்தில் விழுந்து வணங்கிய அரசனை எடுத்து அவன் உடலைத் தடவிக்
கொடுத்து அவனுக்கு நல்லருள் செய்து உன்னை மிகவும் நாம்
மகிழ்ந்தனம். இவ்விடத்தில் எக்காலத்திலும் ஓடிவரும் பொன்னி நதியில்
ஐப்பசி மாதம் இனிய மனத்துடன் எவர் நீராடினாலும் அவர்கள் மேலான
தகுதியுடையவர்கள் ஆவார்கள், அவர்கள் அச்சம் அடையார்கள்,
தகுதியான அட்டமா சித்திகளும் பெறுவார்கள்'
238. துலைமாதம் வருவைந்தாறு மிப்பொன்னி நதிமூழ்கு சுகமாயன் உன்றன் மகனாம்
நிலைமேவு வாயந்த மகன்வீர ரொவெந்து நிசிபோ லிராவண னைமுன்
அலையாத படைதம்பி மகனாகு மிவர்தம்மை யடுகின்ற வண்மை தருவோம்
அலையா வசிட்டன் சொல்மனுவைச் செபித்தெம்மை வழிபாடு செய்தி யெனவே. (26)
பொ-ரை:- ஐப்பசி மாதம் முப்பது நாளும் இந்தப் பொன்னி
ஆற்றில் நீராடிய பயனால் மாயனாகிய திருமால் உனக்கு மகனாக வந்து
பிறக்கும் தன்மையை அடைவாயாக. அந்த மகன் இரவு போன்ற
இராவணனையும் அவனுடைய படையையும் அவன் தம்பியாகிய
கும்பகர்ணனையும் அவன் மகனாகிய இந்திரசித்தையும் கொல்லும்
வலிமையைத் தருவோம். மனம் அலையாத வசிட்டன் சொன்னபடி
மீண்டும் ஐந்தெழுத்தை ஓதி எம்மை வழிபாடு செய்வாயாக' என்று ஈசன்
கூறினார்.
239. மறைவாயின் மொழியீசன் மறைவாக வவ்வண்ண மகிபன் புரிந்து வரலும்
துறையார் வசிட்டன்றன் அரசன்பொ ருட்டுற்ற துலைமாத முற்று மூழ்கி
முறையான சிவபூசை செய்தானம் மாதத்து முடிவின் கணந்த முனிவற்
கிறையோனும் வெளிவந் தனன்கோடி துதிகூறி யியல்பில் பணிந்து புகல்வான். (27)
பொ-ரை:- மறை ஓதும் வாயால் சிவபெருமான் இவ்வாறு
கூறியதும் யாரும் அறியும் வண்ணம் தசரதன் பொன்னி ஆற்றில் நீராடி
ஈசனை வணங்கி வந்தான். பல துறையிலும் வல்லவனாகிய வசிட்டனும்
தன் அரசனுக்காக ஐப்பசி மாதம் முழுதும் காவிரியில் நீராடி முறையாக
சிவ பூசையும் செய்தான். அந்த ஐப்பசி மாத முடிவில் வசிட்ட முனிவனுக்கு
இறைவன் வெளிப்பட்டுக் காட்சி தந்தார். வசிட்டன் கோடிக் கணக்கான
துதி மொழிந்து முறையாகப் பணிந்து வணங்கிச் சொல்லலுற்றான்.
240. அரக்கர்க்கு மிகவஞ்சி னானெஞ்சி னில்மன்னன் அபயங் கொடுத்தி யெனலும்
பரத்துற்ற கயிலாய மலையைத் துளங்கச்செய் பதகன்ற னாவி கவர
வரச்சக்ர மாலந்த நிருபற்கு மகனாக வருவானம் மைந்த னவுணன்
இரக்குற்ற குலமோடு மடியச்செய் வானஞ்ச லெனநாதன் வானில் மறைய (28)
பொ-ரை: வசிட்டன் 'மன்னன் தசரதன் மனத்தில்
அரக்கர்களிடம் மிகவும் அச்சம் கொண்டான். அவனுக்கு அபயம்
கொடுப்பீராக' என்று வேண்டினான். சிவபெருமான் 'மேலுள்ள கயிலாய
மலையை அசைக்கச் செய்த பாவியின் உயிரைக் கவர்வதற்காக வரமாக
சக்கரத்தைப் பெற்ற திருமால் அந்த அரசனுக்கு மகனாக வருவான்.
அந்த மகன் அவுணனுடைய குலத்தோடு அவனை மடியச் செய்வான்;
அஞ்சற்க' என்று சொல்லி தலைவனாகிய சிவபெருமான் வானில்
மறைந்தார்.
241. நண்ணுந்து லாமாத மதிலோத னேசத்தி னளிர்பொன்னி மூழ்கு மகிமை
விண்ணும்ப ருங்கூற லரிதென்று கொண்டாடி மேலோன் வசிட்ட முனிவன்
பண்ணுந்து தேர்மன்னன் உடனேகி னானீடு பதியா மயோத்தி தனிலிவ்
வண்ணந் தெரிந்துற்ற மயல்போ யணைந்தார்கள் மாழ்குற் றிலங்கை யவுணர். (29)
பொ-ரை:- வரும் ஐப்பசி மாதம் சோற்றுத்துறையில் குளிர்ந்த
பொன்னி நதியில் நீராடும் பெருமை வானில் உள்ள தேவர்களாலும்
சொல்லுதற்கு அரியதாகும் என்று புகழ்ந்து மேலோனாகிய வசிட்ட
முனிவன் விரைந்து செல்லும் தேரை உடைய தசரதனுடன் பெரிய
நகராகிய அயோத்திக்குச் சென்றான். தசரதன் மீண்டு சென்றதை அறிந்த
மயக்கம் உற்ற இலங்கை அவுணர்கள் மயக்கம் தெளிந்து மீண்டு
சென்றார்கள்.
242. கிளர்பானு குலமன்ன னிதின்மூழ்கிய யவுணோர்கள் கிளைகேடு மேவ வலைசேர்
துளவாகை மாயன்றன் மகனாகு வரமேவு துணிபால் விளங்கு தருமம்
வளரோத னேசத்தின் மருவுந் துலாமாதம் வருபொன்னி மூழ்கு பெருமை
உளமீதுணர்ந் தின்ன படியென்ன வரிதென்று வந்தா ரிருந்த முனிவர். (30)
பொ-ரை:- ஊக்கமுடைய சூரிய குல மன்னன் தசரதன் இங்கு
நீராடியதால் அவுணர்கள் உறவினர்களோடு துன்பம் அடையவும்,
அலையுடைய திருப்பாற்கடலில் துயிலும் துளசி மாலையுடைய
வெற்றியடைய மாயனாகிய திருமால் அந்த அரசனுக்கு மகனாக வரும்
வரத்தைப் பெற்றதை அறிந்த துணிவால் விளங்குகின்ற தருமம்
வளர்கின்ற சோற்றுத்துறையில் பொருந்தும் ஐப்பசி மாதத்தில் காவிரியில்
நீராடும் பெருமையைத் தங்கள் உள்ளத்தில் உணர்ந்து, இதில் நீராடலின்
பெருமை இத்தன்மையது என்று சொல்வது அரிதாம் என்று முனிவர்கள்
இருந்தனர்.
துலா நீராடல் சருக்கம் முற்றிற்று
9. சேடச் சருக்கம்
243. காதார் குழையு டையான் மகிழ்கவி யோதன புரியின்
மீதா னதுலா காவிரி மேன்மைச் செயல் கூறி
ஆதர மோரா றும்ப ரனடி யுந் தெரி சூதன்
பாதா ளவிசா லாதிப சேடன் கதைப கர்வான். (1)
பொ-ரை:- காதில் குழையணிந்துள்ள சிவபெருமான் மகிழ்ந்து
எழுந்தருளியுள்ள சோற்றுத்துறையில், காவிரியில் ஐப்பசி மாத நீராடலின்
பெருமையைச் சொல்லிய பின் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம்,
அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்னும் ஆறு ஆதாரங்களையும் பரமன்
திருவடியையும் தெரிந்து வைத்துள்ள சூத முனிவன், இடம் அகன்ற பாதள
உலகத்தின் தலைவனாகிய ஆதிசேடனின் கதையைக் கூறலுற்றான்.
244. மேனாளய னுயிரானவை மேவும்பொறை யுடல்கள்
ஆனாதுல கீரேழ்கடல் அமைத்தானவை தாங்க
வானார்குல வரையெண்டிசை விரைமேருவை வைத்து
நானாளுமவ் வுலகங்கட னடுவுற்றழுந் தியதால். (2)
பொ-ரை:- முற்காலத்தில் பிரமன் உயிர்களையும் அவற்றைத்
தாங்கும் உடல்களையும், கெடாத உலகங்கள் பதினான்கையும்,
கடல்களையும் படைத்தான். பின்னர் அக்கடல்களைத் தாங்க வானுயர
குலமலையை எட்டுத் திசையும் வைத்து பெரிய மேரு மலையையும்
படைத்தான். அவற்றின் பாரம் தாங்காமல் பூமி கடலில் அழுந்தியது.
245. அலைவுற்றிடு புவிசஞ்சல மாகச் சுரர்முதலோர்
மலைவுற்றய னுலகுற்றவன் மலர்த்தாள் பணிந்தின்னல்
சொலலுற்றபின் உமதாமிடர் தொலைப்போ மெனச்சொல்லி
கலைகற்றிடு சேடன்றனைக் கமலாலய னோக்கி (3)
பொ-ரை:- நீரில் மூழ்கிய நிலத்தைக் கண்டு துயர் கொண்ட
தேவர்கள் முதலியோர் செய்வது அறியாது திகைத்து, பிரமனுடைய
உலகத்திற்குச் சென்று அவனுடைய மலர் போன்ற அடி பணிந்து தங்கள்
துன்பத்தைக் கூற, பிரமன் 'உமக்கு உண்டான துன்பத்தை நீக்குவோம்
என்று சொல்லி கலைகள் பல கற்ற ஆதி சேடனைக் கண்டு, தாமரையில்,
வீற்றிருக்கும் பிரமன் சொன்னான்.
246. வலையாய்மிகு சூதார்வினை யில்லாப் பணிமன்னா
நிலைநீரிடை யசையாவகை படமாயிர நிரையாந்
தலைமீதுறத் தரிப்பாயெனச் சயிலாதிப மேருப்
பலமால்வரைப் பரியாப்புவி யொருவேன் பரிப்பதுமே. (4)
பொ-ரை:- 'சூழ்ச்சி மிகுந்த சூது முதலான வினை இல்லாத
படத்தை உடைய மன்னனே, நிலம் நீரிடை அசையாமல் நிலையாக
இருக்கும் வகையில் படம் ஆயிரம் வரிசையாக உடைய தலையின் மீது
நிலத்தைத் தாங்கிக் கொள்வாய்' என்று பிரமன் சொன்னான். அதற்கு
ஆதிசேடன் 'கயிலாயம் மேரு முதலான பெரிய பல மலையை உடைய
தாங்க இயலாத பூமியைத் தனி ஒருவனாய்த் தாங்குதல் கூடுமோ?
என்றான்.
247. எனலுஞ்சது முகனம்புவி யெடுக்கும்பல னுனக்கு
முனவன்றன தருடந்திடு மெனலும் பணிமுதல்வன்
மனதன்புடன் விடைகொண்டு பின்வந்தே புவியெடுத்தான்
கனமங்கது பெரிதாய்த்தலை கவிழ்ந்தானுடல் வளைந்தான். (5)
பொ-ரை:- என்று ஆதிசேடன் கேட்டதும் பிரமன் 'அழகிய
பூமியைத் தாங்கும் வலிமை உனக்கு முன்னவனாகிய சிவபெருமான்
தந்திடுவார்” என்றான். அது கேட்ட படத்தையுடைய ஆதிசேடன் மனத்தில்
அன்பு கொண்டு பிரமனிடம் விடை பெற்று வந்து பூமியைத் தூக்கினான்.
பூமியின் கனம் (எடை) அதிகமாய் இருத்தலால் பூமியைத் தூக்கமுடியாமல்
தலை கவிழ்ந்து உடல் வளைந்தான்.
248. உதிரம்பல வாய்கக்கிட உயிராதுள மயங்கி
எதிரும்பல நாள்போனபின் னியல்பில் தெளிவுற்றே
மதியந்திகழ் சடையானருள் தன்னானிலம் வகிக்குஞ்
சதுர்வந்திடும் என்றானயன் என்செய்குவன் தமியேன். (6)
பொ-ரை:- ஆதிசேடன் வாயிலிருந்து மிகுந்த இரத்தம்
வெளிப்படவும் மூச்சு விடாமல் மனம் மயங்கிய நிலையில் பல நாட்கள்
சென்றபின் தானாகவே மயக்கத்திலிருந்து தெளிவு பெற்றான். பின்னர்
'நிலவு தங்கிய சடையை உடைய சிவபெருமான் திருவருளால் நிலத்தைத்
தாங்கும் வலிமை வந்திடும் என்று பிரமன் சொன்னான். தனியனாகிய
தான் என்ன செய்வேன்? என்று நினைத்தான்.
249. ஓயாதிது செய்வாயென வொருவன்தனை வேண்டில்
வாயாவிது செய்வேனென வந்தானிது செய்தற்
கேயாதெனின் மாயாவுடல் விடலேயினி தென்பர்
தூயோரது நானேசெய்வ னெனச்சேடனுந் துணிந்தான். (7)
பொ-ரை:- இடைவிடாது இதனைச் செய்வாயாக என்று
ஒருவனை வேண்டிக் கொண்டால் மறுக்காமல் 'இது செய்வேன்' என்று
சொல்லி வந்தபின் 'இது செய்ய இயலாது' என்றால் இந்த உடலிலிருந்து
உயிரை விடலே இனிது என்று தூயோர் சொல்வார்கள். உயிர் விடும்
அச்செயலை நான் இப்பொழுது செய்வேன் என்று ஆதிசேடன் உயிர்
விடத் துணிந்தான்.
250. துணிகின்றவப் பொழுதேமனத் துயரந்தனைத் தவர்நீ
ருணியன்பொடு சோற்றுத்துறை நடூர்மேல் தவம்புரியின்
மணிகண்டன தருளாற்பல மலைவாருதி பலசூழ்
அணிதங்கிய புவிதாங்குறு வலிதா னுனக்கமையும். (8)
பொ-ரை:-ஆதிசேடன் உயிர் விடத் துணிந்த பொழுது
‘மனத்துயரைத் தவிர்வாயாக! நீ அன்போடு சோற்றுத்துறையாகிய நல்ல
ஊரில் தவம் செய்தால் நஞ்சணி கண்டன் நல்லருளால் பல மலைகள்
கடல்கள் சூழ்ந்துள்ள அழகிய பூமியைத் தாங்கும் வலிமை உனக்கு
உண்டாகும்'
251) பிற்றைத்தல மிசைகோடிநல் வருடந்தவம் செயினும்
முற்றைச்செயும் யோகத்திற் முதலானவை செயினும்
பற்றிப்புவி யின்மீது பரிக்குந்திறம் வருமோ
உற்றுத்தெளி வாய்நீயெனும் உயர்வான் மொழிகேளா, (9)
பொ-ரை:- ‘பிற தலங்களில் விருப்பம் கொண்டு கோடி ஆண்டு
அளவும் தவம் செய்தாலும் முழுமையாகச் செய்யும் யோகம் முதலானவை
செய்தாலும் பூமியைத் தாங்கும் வலிமை வருமோ? வரப் பெறாது. இதை
ஆராய்ந்து தெளிவாய்' என்று உயர்ந்த வானத்தில் அசரீரி மொழி
கேட்டது.
252. சேடன்மன மகிழ்வாயுயர் சிவனாரருள் கருதி
நாடன்பொடு சோற்றுத்துறை நகரில்கடி தணுகி
நீடுந்தவ நிலையெய்துற நேரத்தய னணுக
பாடும்பரி வொடுமுன்னியல் பரிசானவை யாவும். (10)
பொ-ரை:- ஆதிசேடன் மனத்தில் மகிழ்ச்சி கொண்டு
சிவபெருமான் திருவருள் வேண்டி அன்பு சேரப்பெற்று சோற்றுத்துறை
நகரை விரைவாகச் சென்று நீண்ட தவத்தைச் செய்ய முற்பட்ட நேரத்தில்
பிரமன் அங்கு வந்தவுடன் சேடன் 'தவம் செய்யும் முறை யாவும்,
253. சொல்லித்தவ முயலும்படி சொல்வாயென வேதன்
அல்லற்றிற மொழியப்பெல மணையச்சிவன் வெளியாய்
ஒல்லைத்திரு வருடந்திட வொழியாவிட ரொழிய
வெல்லத்தகு மொருமந்திரம் விதியாலுரை செய்வான். (11)
பொ-ரை:- மற்றைச் செயல்களையும் சொல்லி தவம் செய்ய
அருள்வாய்' என்றான். பிரமன் துன்பத்தின் வலிமை தொலைய தாங்கும்
வலிமை உண்டாக சிவபெருமான் வெளிப்பட்டு வந்து திருவருள் தந்திட
ஒழியாத இடர் ஒழிய வெற்றியைத் தரும் ஒரு மந்திரம் முறைப்படி உரை
செய்தான்.
254. தருமந்திர ராசன்பொருள் தருமம்பல நாமம்
பெருகின்பருள் வீடுந்தரு பெருமைத்திரு வுருவாம்
விரவும்பொருள் வடவித்துறு மிகுசாகைகள் போல
உருகுங்கலை வேதாகம முதவும்மொரு முதலாம். (12)
பொ-ரை:- உரைத்த இந்த மந்திரம் மந்திரங்களுக்கு எல்லாம்
அரசன் போன்றது. பல பொருளும் தருமமும் புகழ் பெருகி இன்பத்தைத்
தரும் வீடும் அருளும் பெருமை உடைய திருவுருவாகும். மிகுந்த
பொருளுடைய நெருக்கம் மிகுந்த சாகைகள் உடைய வேதம் போன்று,
மனம் உருகும் கலைகளும் வேதாகமம் முதலானவையும் உதவக் கூடிய
ஒரு முதற் பொருளாம்.
255. நாலாரண வாரிக்கொரு கரையாமதை நவிலின்
மேலாமறி வெல்லாம்வரும் வேதச்சிர மெல்லாம்
கோலாகல மாகத்துதி செய்யுங்கடல் கொடுத்த
ஆலாலம் தமுதாய்நுகர் சிவன்மேனியு மாமால். (13)
பொ-ரை:- இம்மந்திரம் நான்கு வேதங்களாகிய கடலுக்கு ஒரு
கரையாகும். இம்மந்திரத்தைச் சொன்னால் மேலான அறிவு எல்லாம்
வரும், வேதச் சிரமெல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்த்தும், பாற்கடல் கொடுத்த
நஞ்சு தன்னை அமுதாக உண்ட சிவபெருமானின் உருவம் (சிவ
சாரூபம்) உண்டாகும்.
256. அஞ்சத்தகும் பாவத்திரள் அகலச்செயு மதுதான்
அஞ்சக்கர மாகும்பிர ணவத்தோடெழுத் தானாம்
அஞ்சொற்றிரு மனுவாலர னாராதனை செய்யென்
றஞ்சத்தினை யூர்வோனுப தேசித்தவ ணகல. (14)
பொ-ரை:- அஞ்சத் தகுந்த பாவத்தின் கூட்டம் எல்லாம்
அகலும்படிச் செய்யும், அம்மந்திரம் பிரணவ எழுத்தோடு கூடிய
ஐந்தெழுத்தாகும். அழகிய சொல்லாலாகிய திருமந்திரத்தால் ஆராதனை
செய்வாய் என்று அன்னத்தை ஊர்தியாக உடைய பிரமன் உபதேசம்
செய்து அவ்விடத்திலிருந்து சென்றான்.
257. அன்னானுரை முறையேபணி யரசன்சிவ மனுவைப்
பன்னாவரு நாடோறுமுப் பதினாயிரஞ் செபித்துச்
சின்னாள்புனல் காற்றுண்டுறு சின்னாளுப வாசம்
முன்னாதர வொடுசெய் துளமுறுதாமரை மலரின். (15)
பொ-ரை:- பிரமன் உரைத்த விதிப்படியே படம் உடைய
அரசனாகிய ஆதிசேடன், சிவ மந்திரத்தைச் சொல்லி நாள்தோறும்
முப்பதினாயிரம் முறை செபித்தான். சிலநாள் நீர் காற்று உண்டும், சில
நாள் ஏதும் உண்ணாமல் முற்பட்ட அன்புடன் தாமரை மலரால் உளமார
அருச்சனை செய்தும் வழிபட்டான்.
258. பிறைகூவிள நதிதங்கிய பின்னற்சடை முடியுந்
நிறைபூதியி னுதலுஞ்சுடர் நிலவுந்திரு விழியும்
மறையாகம மலரும்பிர வாளக்கனி வாயும்
கறையார்தரு மிடறுமெழிற் கனியுந்தட மார்பும். (16)
பொ-ரை:- பிறை, வில்வம், கங்கை முதலியன தங்கியபின்னப்பட்ட
சடையை உடைய திருமுடியும் விபூதி நிறைந்த நெற்றியும், ஒளி பொருந்திய
திருவிழியும், மறைகளையும் ஆகமங்களையும் மொழியும் பவளம் போன்ற
கனிவாயும், கரிய நிறமுடைய கண்டமும், அழகு நிறைந்த அகன்ற மார்பும்,
259. கொடுவன்புலி யதளுந்தொனி குமுறும்பர நாதத்
திடுகிண்கிணி மணியுந்தமை யெண்ணும்பரி பாகர்
படியும்படி சுகவாருதி தருபங்கய பதமும்
இடுகுங்கொடி யிடையாளையு முடையான்றனை எண்ணி. (17)
பொ-ரை:- கொடிய வலிய புலியின் தோல் உடையையும்,
உறுகின்ற பரநாத ஒலி செய்யும் கிண்கிணி மணியும், தம்மை நினைத்து
வீழ்ந்து வணங்குகின்ற பக்குவம் உடையவர்களுக்கு இன்பக் கடலை
அருளும் தாமரைத் திருவடியும், நுண்ணிய இடையையுடைய பார்வதியைப்
பாகமாக உடைய சிவபெருமானை எண்ணி (தவம் செய்தான்).
260. எழுத்தோவிய மெனவேபுரி தவநீர்மையு மியலின்
வழுவாவன விழுதாமென ஒருகார்வமும் வையம்
முழுதாரொளி மதிவேணியர் கண்டேசுரர் முனிவோர்
தொழுதேவர விடைமீது மைதன்னோ டெதிர்தோன்ற. (18)
பொ-ரை - எழுதப்பட்ட ஓவியம் போன்று அசையாது இருந்து
தவம் செய்யும் தன்மையும், இயல்பாம் தன்மையில் விலகாது நெய்
ஒழுக்காம் என ஒழுகும் அழகும் கண்டு, ஈசன் உலகம் முழுதும் நிறைந்த
ஒளியுடைய மதிசூடிய சடையர் தேவர்கள் முனிவர்கள் தொழுது வர,
விடையின் மீது பார்வதியுடன் ஆதிசேடன் முன்பு தோன்றினார்.
261. கண்டானுயர் சேடன்விழி களித்தான் மகிழ்குளித்தான்
கொண்டானுடல் புளகந்தலை குவித்தானிரு செங்கை
விண்டானிட ரெல்லாமொழி குழறிப்புவி வீழ்ந்தான்
தண்டாமரை மலராமிரு சரணத்துணை துதிப்பான். (19)
பொ-ரை:- உயர்ந்த சேடன் சிவபெருமானை நேரில் கண்டு
கண்கள் களித்தான்; மனம் மகிழ்ச்சியில் திளைத்தான்; உடல் புளகம்
கொண்டான்; தலைமீது இரு சிவந்த கைகளையும் குவித்து
வணங்கினான்; துன்பம் எல்லாம் விலகப் பெற்றான்; உரை தடுமாற
நிலத்தின் மீது விழுந்து வணங்கினான்; குளிர்ந்த தாமரை மலர் போன்ற
இரு திருவடிகளையும் துணையாம் எனப் போற்றி வணங்கினான்.
262. வேதாகம மொழியாலுணர் விபுவானவ சரணம்
நாதாபர சுகவாருதி நயனானன சரணம்
ஓதாதுணர் கருணாகர வுமைவல்லவ சரணம்
பூதாதியி னிறையோதன புரிநாயக சரணம். (20)
பொ-ரை:- 'வேதங்களாலும் ஆகமங்களாலும் போற்றப்படும்
எங்கும் வியாபித்துள்ள தேவனே! அடைக்கலம்; தலைவனே! வீட்டின்பக்
கடலே! நெற்றிக் கண்ணனே! அடைக்கலம்; ஓதாமல் உணர்கின்ற
கருணைக்கு இடமான உமையொரு பாகா அடைக்கலம்; பூதகணம்
முதலானவர்க்கு இறைவனே! சோற்றுத்துறைத் தலைவனே அடைக்கலம்'
என்று போற்றினான்.
263. கங்காநதி மதிசூடிய கனகாசல சரணம்
சங்கார்குழை யுடையாய்படர் சடைவேதிய சரணம்
சிங்காசன முயிராயுறை சிவசங்கர சரணம்
அங்காவிரி மணவாளயெய் யருண்மேனிய சரணம். (21)
பொ-ரை:- 'கங்கையும் மதியும் சடையில் அணிந்துள்ள
மேருமலையானே அடைக்கலம்; சங்கக் குழையணிந்து நீண்ட
சடையுடைய வேதம் ஓதுபவனே அடைக்கலம்; சிங்கத்தை ஆசனமாக
வீற்றிருக்கும் சிவசங்கரனே அடைக்கலம்; அழகிய காவிரி
ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கும் மணவாளனை ஒத்த அருளையே
மேனியாக உடையவனே அடைக்கலம்'
264. மானார்கர தலநாயக மகிழ்பூரண சரணம்
ஆனாவநு பவநிட்டையை யருள்பூரண சரணம்
நானாவித செககம்பித நயநாயக சரணம்
பூனாரணர் பணியோதன புரியற்புத சரணம். (22)
பொ-ரை:-'மானைக் கையில் ஏந்தியுள்ள தலைவனே!
மகிழத்தக்க பூரணனே அடைக்கலம்; கெடாத நிட்டையாகிய அநுபவத்தை
அருள்கின்ற பூரணனே சரணம் ;பலவிதமான உலக இசைக் கமக
இன்பத்தின் தலைவனே அடைக்கலம்; வேதத்தை ஆபரணமாக
{பூன்(ண்)+ ஆரனர்= பூனாரணர். எதுகை நோக்கி 'ண் 'ன்' ஆனது} க்
கொண்ட பிரமன் பணிந்து வணங்கும் சோற்றுத்துறை அற்புதனே
அடைக்கலம்',
265. என்றாயிர வாயாலிசை பெருகாபுகழ்ந் தேத்தி
நின்றேபர வசமாகிய சேடன்றனை நிமலன்
நன்றேசெயு நின்பூசனை நாமின்புறு கின்றோம்
ஒன்றாயினு மொழியாவகை தருவோம்வர முரையாய். (23)
பொ-ரை:- என்று தன் ஆயிரம் வாயினால் இறைவன் பெரும்
புகழைப் புகழ்ந்து போற்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் நின்ற ஆதிசேடனை,
மலமற்ற சிவபெருமான் நோக்கி 'நன்மையே செய்யும் உன்னுடைய
பூசையால் நாம் மகிழ்கின்றோம். ஒன்றும் தவறாத பலன்தரும் வரம்
தருகின்றோம், என்ன வரம் வேண்டும் என்று கூறுவாய்' என்றார்.
266. என்னப்பணி யீசன்சொலு மெளியேன்மன முனையே
உன்னத்தலை யுனையேதொழ வுன்சீர்சொல வென்வாய்
நின்னைக்கர மர்ச்சித்திட நின்சீர்செவி வினவ
மன்னிப்பத நின்னாலயம் வலம்வந்திட வேண்டும். (24)
பொ-ரை:- இவ்வாறு சிவபெருமான் ஆணையிட்டதும்
ஆதிசேடன் 'எளியேன் மனம் உன்னையே நினைக்கவும், தலை
உன்னையே தொழவும், வாய் உன் புகழைச் சொல்லவும் கைகளால்
உன்னை வணங்கி அர்ச்சனை செய்திடவும், உன்னுடைய புகழையே காது
கேட்கவும் கால்கள் என்றும் உன்னுடைய ஆலயத்தில் வலம் வந்திடவும்
வரம் அருள வேண்டுகின்றேன்' என்றான்.
267. பொய்யானவை கோணிந்தை புறங்கூறல் பொறாமை
செய்யாமையும் இன்னும்பகர் தீதின்மையும் வேண்டும்
மையார்கட லேகோதக மாய்வான்மிசை வரினும்
அய்யாசிவ பத்தித்திற மசையாமனம் வேண்டும். (25)
பொ-ரை, பொய், கோள், பிறரை நிந்தனை கூறல், புறங்கூறல்
இவை சொல்லாமையும், பொறாமை கொள்ளாமையும், இன்னும்
சொல்லப்படும் தீமை தரும் செயல்கள் இல்லாமையும் வரமாக வேண்டும்'.
இருள் நிறைந்த கடலளவு குற்றம் வான்மிசை வந்தாலும் ஐய்யனே! சிவ
பத்தியாகிய வலிமையில் அசையாத மனம் வேண்டும்'.
268. வரமொன்றினும் அகிலங்கடல் வாய்புக்கசை தலினால்
சுரரந்தணர் முதலோர்மிகு துயரப்படு கின்றார்
திரமொய்ம்புடன் அகிலச்சுமை பரிக்கும்பெரு திறனும்
தருகென்றனன் அளித்தன ருடானே யுருவானோன், (26)
பொ-ரை:- பூமி கடலில் மூழ்கி இருப்பதனால் தேவர்கள்
அந்தணர் முதலியோர் துன்பப் படுகின்றனர். குறையாத வலிமையுடன்
உலகச் சுமையைத் தாங்கும் பெரிய வலிமையை வரம் ஒன்றினால்
தருவீராக' என்று ஆதிசேடன் வேண்டினான். உருவாய்த் தோன்றிய
சிவபெருமான் உடனே அவன் வேண்டிய வரத்தை அருளினார்.
269. ஈந்தான்மிசை வருசங்கரன் ஏகப்பணி யெவைக்கும்
வேந்தாகிய சேடன் புவிமிசையற்புத மெய்தி
யாந்தாரணி யொருகாலமும் அசையாவகை பொறுத்தான்
பூந்தாரணி சிவனோதன புரிச்சீர்சொலற் கெளிதோ. (27)
பொ-ரை:- வரம் அருளிய சங்கரன் விரைந்து மறையவும்,
பாம்புகள் எல்லாவற்றிற்கும் வேந்தனாகிய ஆதிசேடன் பூமியிடம்
அதிசயத்துடன் வந்து அழகிய உலகம் ஒருகாலமும் அசையாமல்
இருக்குமாறு தாங்கினான். இவ்வாறு வரம் அருளிய பூமாலையை
அணிந்துள்ள சிவபெருமான் எழுந்தருளியுள்ள சோற்றுத்துறையின்
பெருமையை சொல்லவும் எளிதாகுமோ? எளிதாகாது.
சேடச் சருக்கம் முற்றிற்று
10. கவுதமச் சருக்கம்
270. பணமணி யிலங்கு மனந்தன்மெய்த் தவஞ்செய் பரிசையு மாங்கதற் கிரங்கி
மணமலி யிதழிச் சடையினர் அருளும்வரத்தையு முரைத்துளங் கரைத்தாய்
குணமக மேருக் கவுதமனன்னங் கொடுத்தமாக் கதையமு தெளியோம்
உணவருள் புரிந்தெம் மிடர்ப்பசி தணிப்பாய் உத்தம தானமா மிதுவே. (1)
பொ-ரை:- படமும் மணியும் உடைய அனந்தன் மெய்யான தவம்
செய்த சிறப்பையும் ஆங்கு அதற்கு இரங்கி மணம் மிகுந்த
கொன்றையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமான் அருளிய
வரத்தையும் சொல்லி உள்ளத்தை உருகச் செய்தாய். குணத்தில் சிறந்த
மகமேருவுக்கு நிகரான கவுதம முனிவன் அன்னம் கொடுத்த
மாக்கதையாகிய அமுதை, எளியோங்கள் உண்ண (கேட்க) அருள் புரிந்து
எம்முடைய துன்பமாகிய பசியை நீக்குவாய். அது உத்தமமான
தானமாகும்' என்று முனிவர்கள் கூறினார்கள்.
271. ஆங்கவர் மொழியச் சூதனும்விளம்பும் அணிதிகழ் ஓதன புரத்தின்
ஓங்கிய முனிவன் கவுதமன் சரிதம் உவப்பவர் பவக்குறும் பெறிந்தார்
தேங்கமழ் சோலை சூழுமையாற்றில் திகம்பரன் மலரடி வணங்கி
நீங்கலில் அன்பால் அன்னகர்ப் பாங்கர் நிலவுமாச் சிரமமொன் றமைத்து. (2)
பொ-ரை:- முனிவர்கள் இவ்வாறு கேட்கவும் சூதமுனிவர்
சொல்ல ஆரம்பித்தார். அழகு விளங்கும் ஓதனபுரத்தில் உயர்ந்த
புகழையுடைய கவுதமன் சரித்திரத்தை விருப்புடன் கேட்டு மகிழ்பவர்கள்
பிறவியாகிய தீமையை விட்டு நீங்கியவர்களாவர். தேன் மணம் வீசும்
சோலைகள் சூழ்ந்த திருவையாற்றில் நக்கனாகிய சிவபெருமானின்
திருமலரடி வணங்கி நீங்காத அன்புடன் அந்த நகரின் ஒருபக்கத்தில்
கவுதம முனிவர் விளங்கும் ஒரு ஆச்சிரமம் அமைத்திருந்தார்.
272. அதனிடை வதிந்து நாடொறு மையாற் றடிகளின் அடிகளை வணங்கி
மதனுடை விடய வைம்பொறிக் களிற்றை மதியெனு மங்குசத் தடக்கி
யிதமுட னெவர்க்கு மன்னதா னஞ்செய் திருத்தலு நருமதை நதிப்பால்
விதமுறு நாட்டில் துவாதச வருடம் விண்முகின் மழைபொழிந் திலதால். (3)
பொ-ரை:- அந்த ஆச்சிரமத்தில் தங்கி நாள்தொறும்
திருவையாற்றில் எழுந்தருளியுள்ள சிவபெருமானின் திருவடிகளை
வணங்கி காம விகாரமுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐந்து உறுப்புகளாகிய யானையை அறிவு என்னும் அங்குசத்தால் அடக்கி,
இனிய அன்புடன் எல்லோர்க்கும் அன்னதானம் செய்து வாழ்ந்தார்.
அப்பொழுது வடக்கில் நருமதை நதி பாயும் நாட்டில் பன்னிரண்டு
ஆண்டுகள் வானில் மேகம் தோன்றி மழை பொழியவில்லை.
273. சென்னெலா முதலா நன்செயின் வளனும் சிறுபய றாதிபுன் செய்யின்
மன்னிய வளனு மினிய தண்டலையின் வளங்களும் விளைவிலவாக
இன்னல்செய் பசியால் உயிரெலாம் வருந்த வியன்மறை யோதி நன்குணர்ந்து
துன்னிய வொழுக்கம் உயிரினும் ஓம்புந் தொன்மையோ ரிலக்க வந்தணர்கள். (4)
பொ-ரை:- செந்நெல் முதலான நன்செய் பயிர்களும், சிறுபயறு
முதலான நிலைத்த புன்செய் பயிர்களும், சோலைகளில் கிடைக்கப் பெறும்
பழம் முதலானவைகளும் விளையாமையால் துன்பம் செய்யும் பசியால்
உயிர்கள் எல்லாம் வருந்தின. அவற்றை நன்கு உணர்ந்த, பரந்த
மறைகளை ஒதக்கூடிய நெருங்கிய ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
தாகக் காக்கும் தொன்மையான இலக்க (நூறாயிர) அந்தணர்கள்,
274. மனுநெறி வளர்க்குந் தாதகியலங்கல் வளவர்தம் பொன்னிநன் நாட்டில்
அனுதினம் வளங்கள் எவைகளும் பெருகியவரவ ரின்புறு கின்றார்
எனுமுரை வினவி யந்தணர் குடும்பம் யாவையு முடன்கொடு போந்து
கனைதிரை தரளங் கரைதொறுஞ் சொரியுங் காவிரி நாட்டினில் எய்தி (5)
பொ-ரை:- மனு தருமத்தை வளர்க்கின்ற ஆத்தி (தாதகி)
மாலையை அணிந்துள்ள சோழ மன்னர்கள் ஆளுகின்ற நல்ல பொன்னி
நாட்டில் நாள்தொறும் வளங்கள் எல்லாம் பெருகிக் கொண்டே இருப்பதால்
அவரவரும் (எல்லோரும்) இன்பத்துடன் இருக்கின்றனர் என்னும் செய்தி
கேட்டறிந்து அந்தணர்கள் தம்முடைய குடும்பத்தை உடன் அழைத்துக்
கொண்டு ஒலிக்கும் அலைகள் கரைகளில் முத்துக்களை ஒதுக்கும்
காவிரி நாட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
275. அலமரு பொழுதின் அஞ்சலென் றருளு மரன்மகிழ் திருவையா றணுகி
நலகவு தமமா முனிவனாச் சிரம நண்ணலு மம்முனி யெதிர்வந்
திலகுமின் முகமு முளத்துறு முவகை யாவையும் வெளிப்படு மின்சொல்
பலவுநன் கிசைத்தே யுடன்கொடு புகுந்தான் பரிவெலாம் உருவுகொண் டனையான். (6)
பொ-ரை:- துன்புறும்பொழுது அஞ்சற்க என்று திருவருள் புரியும்
அரனார் மகிழ்ந்து எழுந்தருளி இருக்கும் திருவையாற்றில் நன்மையுடைய
கவுதம முனிவருடைய ஆச்சிரமத்தை அடைந்தனர். வந்தவர்களை எதிர்
சென்று விளங்கும் இனிய முகத்துடன் உள்ளத்தின் மகிழ்ச்சி எல்லாம்
வெளிப்படும்படி இனிய சொற்கள் பலவற்றை நன்மை உண்டாகச் சொல்லி
அன்பே உருவான கவுதம முனிவர் ஆச்சிரமத்தின் உள்ளே அழைத்துச்
சென்றார்.
276. பந்தமோ டணைந்த வந்தண ரெவர்க்கும் பஞ்சநன் னதிப்பரன் அருளால்
அந்தவெண் மலைபோல் குவிந்த தண்டுலமு மாடகமலை நிகர்ப ருப்பும்
முந்துபன் நிறத்த வரைநிகர் மற்றை யுபகரணங்களும் பெற்றே
ஐந்துறு திறத்தின் அறுசுவை யுண்டி யளித்தனன் அவரவர்க் கவராய். (7)
பொ-ரை:- பற்றோடு வந்து சேர்ந்த அந்தணர் எல்லோருக்கும்
திருவையாற்றுப் பரமன் திருவருளால் வெள்ளிமலை போல் குவிந்திருக்கும்
அரிசி (தண்டுலம்) யும், பொன்மலை போல் குவிந்துள்ள பருப்பும் பல நிறம்
உடைய மலைகளைப் போன்று குவிந்துள்ள மற்றைப் பொருள்களும்
கொண்டு ஐந்து பொறிகளும் களிக்க ஆறு சுவையுடைய உணவை
அவரவர் விரும்பியவாறு அளித்தான்.
277. இம்முறை வினவி மற்றைய நாட்டி னியலுமூன் றிலக்க வந்தணர்கள்
அம்முனி யன்ன சாலையி னணுக வவர்க்கு மம்முறை யனமளித்தான்
தம்மனை யிருந்து தம்பொரு ளுண்ட தகைமைபோன் நானிலக் கத்தோர்
செம்மறை யவர்கள் இராப்பகல் அடிசில் சிந்தையுற் றருந்தினர் இருந்தார். (8)
பொ-ரை:- இவ்வாறு கவுதமன் உணவிடும் முறைமையைக்
கேட்டறிந்த மற்றைய நாட்டிலிருந்த மூன்று இலக்க (நூறு ஆயிரம்)
அந்தணர்கள் கவுதம முனிவரின் அன்ன சாலைக்கு வந்தனர்.
அவர்களுக்கும் முன் சொன்ன முறையில் கவுதம முனிவன் அன்னம்
அளித்தான். செம்மையான மறையை ஓதும் நான்கு இலக்கத்தவர்களும்
தம்முடைய மனையில் இருந்துகொண்டு தம்முடைய உணவை உண்ட
தன்மை போல் இரவும் பகலும் சிந்தை மகிழ உணவு உண்டு அங்கேயே
தங்கினர்.
278. இருந்தவர் சோம யாகமே முதலாம் யாகங்கள் மறைமுறை புரியே
விரும்பினர் இருந்த நிகழ்ச்சியை யுலகில் வேதியர் எண்ணிலார் கேட்டு
கரும்பொடு செந்நெல் கமுகுமுத் திறைக்குங் கழனிசூழ் திருவையாற தன்பால்
அருந்தவம் நிறைக்குங் கவுதமாச் சிரம மணைந்தனர் முனியக மகிழ்ந்தார். (9)
பொ-ரை:- அவ்வாறிருந்த அந்தணர்கள் சோம யாகம் முதலான
யாகங்களை மறையில் சொன்ன முறையே விரும்பிச் செய்து இருந்தனர்.
இவ்வாறு இருந்த நிகழ்ச்சியை உலகத்தின் மற்றைய இடத்திலுள்ள
கணக்கற்ற வேதியர்கள் கேள்வியுற்று கரும்பு செந்நெல் பாக்கு முத்து
முதலானவை பெருகியுள்ள வயல்கள் சூழ்ந்துள்ள திருவையாற்றில் அரிய
தவத்தைப் பெருக்கும் கவுதமரின் ஆச்சிரமத்தை வந்து சேர்ந்தனர். அது
கண்டு கவுதம முனிவர் மகிழ்ச்சி அடைந்தார்.
279. மகிழ்ந்தபின் அளவில் இலக்கமா மறையோர் மனப்படி யினிய பாலடிசில்
புகழ்ந்தனர் அருந்தும் போனகஞ் சமைக்கப் பொழுதிலை யேவலோ போதா
அகந்தனில் அன்பாய்க் கவுதமன் எவர்க்கும் அனங்கொடுப் பானென வுலகின்
நிகழ்ந்ததோர் மொழிக்கும் பழுதுறுமாலென் னிலைமையோ சாலவுமினிதே. (10)
பொ-ரை:- அந்தணர் வருகைக்கு மகிழ்ந்த பின், 'கணக்கில்லா
இலக்க மறையோர் விருப்பப்படி இனிய பாலடிசிலும் புகழ்ந்தோர் உண்ணும்
உணவும் சமைப்பதற்கு வேண்டிய நேரம் (பொழுது) இல்லை. அத்துடன்
சமைப்பதற்கான பணியாள் (ஏவல்) போதுமானவர் இல்லை. உள்ள
அன்புடன் கவுதமன் எல்லோர்க்கும் அன்னம் அளிப்பான் என உலகில்
எழுந்துள்ள புகழ் மொழிக்கு ஊறு உண்டாகுமோ? என் நிலைமை மிகவும்
இனியதாக உள்ளது' என்று கவுதம முனிவன் நினைத்தான்.
280. கதிர்விரி பதும ராகமே முதல கவின்மணித் தொகையல சோதி
முதிர்தம னியத்தின் குவையல மகுட முதலிய வணிகலனல்ல
புதிய பட்டாடை விதமல வரிய பொருள்களோ பலவல வொருசான்
உதரமே நிறைக்கு மோதனங்கேட் போர்க்குதவிடார் உடலமும் உடலோ. (11)
பொ-ரை:- 'ஒளி பெருக்கும் பதுமராகம் முதலான அழகிய மணி
வகைகள், சோதி மிகுந்த பொற் குவியல், மகுடம் முதலான மணி
வகைகள், புதிய பட்டாடை வகைகள், அரிய பொருள்கள் முதலான
கேட்காமல் ஒரு சாண் வயிற்றை நிறைக்கும் அன்னம் கேட்போர்க்கு
அன்னமிடாத பிறவியும் ஒரு பிறவியா? என்று நினைத்தார்.
281. யாவர்களேனுந் தன்னைவந் தடைந்தோர் இன்னலை முன்னமே யகற்றி
மேவினசெய்கை நிறைவுறப் புரிதன் மேன்மையதா மதையறிந்தும்
ஆவதுபுரியத் தகாவெனக் கிரங்கி யடைந்தவிக் கவலை தீர்த்தளிப்பான்
சேவுயர்பதாகை யோதன புரியிற் சிவனெனத் தெளிந்தவ ணெய்தி (12)
பொ-ரை:- 'எவராக இருப்பினும் தன்னை வந்து
சேர்ந்தவர்களின் துன்பத்தை முன்னதாகப் போக்கிய பின் அவர் விரும்பிய
உதவியை நிறைவுறச் செய்வதே மேலானதாகும். அதை அறிந்து தகுந்த
உதவி செய்ய இயலாமல் மனம் கலங்கிய கவலையைத் தீர்த்து அருள்
செய்பவர் இடபக் கொடியுடைய சோற்றுத்துறை சிவபெருமானே' என்று
மனம் தெளிந்து சோற்றுத்துறை வந்தடைந்தான்.
282. ஆலய மதனை மும்முறை வலஞ்செய் தண்ணல் சந்நிதிமுன மிறைஞ்சிச்
சாலவும் புவியில் ஐந்து மெட்டுறுப்புஞ் சார்வுறப் பணிந்தெதிர் நின்று
கோலவன் பருவி விழிதர நீற்றிற் குலவுவண்டலை யுடல்விரவ
ஏலவே செங்கை யுச்சியில் குவித்தே யியல்மறைப் பொருள்கொடு துதிப்பார். (13)
பொ-ரை:- கோயிலை மூன்று முறை வலம் செய்து
அண்ணலாகிய சிவபெருமான் சந்நிதி முன்னர் நின்று தன் உடலின்
ஐந்து உறுப்பும் எட்டு உறுப்பும் நிலத்தில் நன்கு பொருந்த விழுந்து
வணங்கி இறைவன் முன் நின்று அன்பினால் அழகிய விழிகளில்
கண்ணீர் அருவிபோல் வடிய தலை உடல் எங்கும் திருநீறு விளங்க
சிவந்த கைகளைத் தலையின் உச்சியில் நன்கு உயர்த்திக் குவித்து
விளங்கும் மறையில் சொல்லப்படும் புகழ் மொழிகளைச் சொல்லித்
துதித்தார்.
283. கோதிலா வடியார் குறைதவிர்த்தருளக் குரைகழல் புனைந்த பொற்பதனே!
நாதவேதாந்த சிரத்தின் மீதிலங்கு ஞானவம் பநட நவில்வாய்
கீதவாரமுதே! வாணவப் படலஞ் சிதைத்துயிர்க் கண்ணொளி விளக்கும்
போதபூரணனே! யோதன புரத்தெம் புனிதனே! புண்ணிய முதலே. (14)
பொ-ரை:- குற்றம் இல்லாத அடியார்களின் குறைகளைத்
தீர்த்தருளும் ஒலிக்கும் கழலை அணிந்துள்ள பொன்போன்ற
திருவடியோனே! நாதத்தின் முடிவாகிய வேதாந்த சிரத்தின் மேல்
விளங்கும் ஞானம் பெருக நடம் புரியும் பெருமானே! கீத ஆரமுதே!
ஆணவமாகிய படலத்தைக் கிழித்து உயிர்க்கு ஞான ஒளியை
விளக்குகின்ற ஞான பூரணனே! சோற்றுத்துறை எம்முடைய புனிதனே!
புண்ணியத்தின் முதலாக விளங்குபவனே!
284. அருவமும் உருவும் மருவுரு விரண்டு மன்றியே சராசரம் எல்லாம்
உருவதாய் மருவும் பரமனே! யெய்ப்பில் உதவுநிட் சேபனே சுரர்க்காய்
பொருசிலை பிடித்துத் திரிபுரம் பொடித்த புராதனா! யிராவணன் புரிந்த
பெரும்பிழை பொறுத்தாய் ஓதன புரத்தெம் பிஞ்ஞகா! வுள்ளுறைப் பொருளே! (15)
பொ-ரை:- உருவம் இல்லாமையும், உருவம் உடைமையும்,
இரண்டும் கலந்த அருவுருவம் ஆகியவை யாகவும், அவை அன்றி
அசையும் பொருள் அசையாப் பொருள் ஆகியவற்றின் உருவத்தில்
கலந்திருக்கும் மேலானவனே! இளைத்த காலத்தில் உதவுகின்ற புதையல்
(நிட்சேபம்) போன்றவனே! தேவர்களுக்காகப் போரிடும் வில்லைப் பிடித்துத்
திரிபுரம் பொடி செய்த பழமையானவனே! இராவணன் செய்த பெரிய
பிழையைப் பொறுத்துக்கொண்ட சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள
தலைக்கோலம் அணிந்துள்ளவனே!
285. நம்பினர்க் கிரங்குங் கற்பகத் தருவே! நலமலி கருணையங் கடலே!
இம்பரு மும்பர் முழுவதுந் தொழும்பர்க் கீய்ந்தமெய்க் கடவுள் மாமணியே!
செம்பொனே! தேனே! மாலயன் தேடுஞ் செல்வமே! யிமயமீன் றெடுத்த
கொம்பனார் குலவு மோதன புரத்தாய்! குழகனே மழவிடை யவனே. (16)
பொ-ரை:- நம்பினவர்க்கு இரங்கி அருளும் கற்பக மரமே!
கடலளவு நன்மை மிகுந்த கருணை பொழிபவனே! இவ்வுலகத்து
மனிதர்க்கும் தேவர்களுக்கும் அடியார்களுக்கும் முழுதும் அருள்
கொடுத்த மெய்யான கடவுள் மாமணியே! செம்பொன் போன்றவனே!
தேன் போன்றவனே! திருமால் பிரமன் அடிமுடி தேடும் செல்வம்
போன்றவனே! இமயமலையரையன் பெற்ற பார்வதி மகிழும்
சோற்றுத்துறையாய்! குழகனே! இளைய விடையை உடையவனே!
286. இப்படிப் பரனைத் துதித்தபின் அன்பால் இலகிய கருணையுத் தமியை
மைப்படி நயனக் கண்ணியே! யுமையே! மாயையெல் லாம்வல் லவளே!
செப்புலகு எவையுந் தாங்குசிற் பரையே! சிவனுள மகிழ்ச்சி செய்பவளே!
ஒப்பிலா தவளே யெண்ணிலா வுயிரை யொருங்குபெற் றளித்தநற் றாயே. (17)
பொ-ரை - என்று இவ்வாறு சிவபெருமானைத் துதித்த பின்
அன்பினால் கனியும் கருணை வடிவான உத்தமியான பார்வதி தேவியை
மைப்படிந்த கண்ணையுடையவளே! உமையே ! மாயை செய்வதில்
வல்லவளே! சொல்லப்படுகின்ற உலகம் எல்லாவற்றையும் தாங்குகின்ற
பராசத்தியே! சிவபெருமானின் உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாக்குபவளே
ஒப்பில்லாதவளே! எண்ணிக்கையில் அடங்காத உயிர்களை எல்லாம்
ஒருசேரப் படைத்து அருள் செய்த நல்ல தாயே!
287. தாரகை போலு முத்தமா லிகையாய்! தமனியக் கலசவெம் முலையாய் !
வீரவாள் விழியாய் அணுவினுஞ் சிறிய மெல்லிடை யாய்பிடி நடையாய்
ஆரவெண் ணகையாய்! கொவ்வைவா யமுதே! யருணிறை சலதியே யீரேழ்
பாரவர் பரவு மோதன புரியில் பரமனார் விரும்புபார்ப் பதியே. (18)
பொ-ரை:- நட்சத்திரம் போன்று ஒளிவிடும் முத்து மாலை
யுடையாய்! பொற்கலசம் போன்ற தனத்தை உடையாய்! வாள் போன்ற
கண்ணையுடையாய்! அணுவினும் மெல்லிய இடையாய்! பெண் யானை
போன்ற நடையுடையாய்! வெண்மையான மாலைபோன்று வரிசையான
பற்களை உடையாய்! கொவ்வைப் பழம் போன்ற சிவந்த வாயினாய்! அருட்
கடலே! பதினான்கு உலகத்தவர்களும் வணங்கும் சோற்றுத்துறையில்
எழுந்தருளியுள்ள சிவபெருமான் விரும்பும் பார்ப்பதியே!
288. பன்னுயிர் எவைக்கும் ஊட்டுதற் கன்ன பாத்திரம் இடக்கையில் பரித்து
மன்னிய கிரண விரத்தினத் தெறுவி வலக்கையின் அனுதினங் கொண்ட
அன்னபூ ரணியே! யோதன புரியின் அன்னமே கன்னலங் குதலை
இன்னய மொழியாய் அன்பருக் கெளியாய்! இலகிய ஞானசுந் தரியே. (19)
பொ-ரை:- சொல்லப்படும் உயிர்கள் அனைத்திற்கும்
நாள்தோறும் சோற்றுப் பாத்திரம் இடக்கையில் தாங்கி, நிலைத்த
ஒளிவிடும் இரத்தின அகப்பையை வலக்கையில் வைத்துள்ள
அன்னபூரணியே! சோற்றுத்துறையின் அன்னப் பறவையே! கரும்பு போன்ற
இனிய நயமான அழகிய மழலை மொழியாய்! அன்பருக்கு எளிவந்தவளே!
மென்மையான ஞானசுந்தரியே!
289. அஞ்சலென் றருள்வாய் எனத்துதித் துங்கட் கடைக்கல மடைக்கலம் என்பால்
எஞ்சலில் வேத முணர்ந்த வந்தணர்கள் எண்ணிலார் வந்தனர் அவருக்
கைஞ்சுவை யடிசில் அமைத்திடின் முடியா தாதலால் அன்னரா சியையுஞ்
செஞ்சுவைக் கறியே முதலுப கரணத் திரள்களுங் கொடுத்தெனைப் புரப்பீர். (20)
பொ-ரை:- 'அடியேனை அஞ்சல் என்று அருள் செய்வீராக'
என்று துதித்து, 'அடியேன் உங்கட்கு அடைக்கலம் அடைக்கலம்.
என்னிடத்து முடிவில்லா வேதத்தை உணர்ந்த எண்ணிக்கையில்
அடங்காத அந்தணர்கள் தஞ்சம் என வந்துள்ளனர். அவர்களுக்கு இனிய
சுவையுடைய உணவு சமைத்திடல் இயலாதது. ஆகையால் அன்ன
(சோற்று) வகைகளையும் சிறந்த சுவையுடைய கறி வகைகளையும்
கொடுத்து என்னைப் பாதுகாக்க வேண்டும்' என்று வேண்டினார்.
290. சொற்றவிவ் வரநீர் தராவிடி னூறு துணிபட வெனதுவன் சிரத்தை
அற்றிட மோதி யுயிரினை விடுவேன் அந்தணர் நிமித்தமா னிமித்தம்
உற்றிடு குரவனடியார் நிமித்தம் ஒப்பிலா வுங்கள் நிமித்தம்
முற்றிய வுயிரைத் துறந்திடின் அவர்க்கு முத்திநிச் சயமென மொழிந்து. (21)
பொ-ரை:- 'சொல்லப்பட்ட இவை இங்கு வரும்படித் தராவிடில்
காயத்தால் எனது வலிய தலை அறுபட்டு விழும்படி மோதி உயிரை
விடுவேன். இவ்வேண்டுதல் அந்தணர்களுக்கானது. எல்லா உயிர்களுக்கும்
தலைவரான உம்மடியார்களுக்காக, ஒப்பில்லாத உங்களுக்காக,
மேலான என் உயிரை விட்டுவிட்டால் அந்த அந்தணர்களுக்கு வீடுபேறு
உறுதியாகக் கிடைக்கும்' என்று கூறினார்.
291. மிக்கவைந் தெழுத்தால் ஓதன புரியின் விமலனை யுலகமா தாவை
தக்கவா றன்பு பெருகிடத் தயில தாரைபோல் தியானமுற் றிருந்தான்
அக்கணம் அடியார்க் கெளிய சங்கரனும் அருளுரு வானவம் பிகையும்
பக்கமோர் இரண்டில் விநாயகன் அயில்வேல் பண்ணவர் இருவரு மருவ. (22)
பொ-ரை:- 'சோற்றுத்துறையின் மலமற்ற சிவனை உலகப்
பெருந்தேவியைப் பொருந்திய அன்பு பெருகிட எண்ணெய் ஒழுக்குப்
போன்று இடைவிடாமல் மேலான ஐந்தெழுத்தை உச்சரித்துக் கொண்டு
இருந்தான். அந்த வேளையில் அடியார்களுக்கு எளிவந்த சங்கரனும்
அருளே உருவாக அமைந்த உமையம்மையும் அவர்கள் இரண்டு பக்கமும்
விநாயகரும் கூரிய வேலாயுதத்தை ஏந்திய முருகனும் சேர்ந்திருக்க'
292. சூலம்வாள் கணிச்சி சக்கர மழுதவல் தோமரம் வச்சிரம் பிண்டி
பாலமுற் கரமே யாதியா இலங்கு படைக்கலந் தரித்தசா ரதர்கள்
ஏலவெண் டிசையுஞ் சூழ்வர முனிவோர் இசைமறை யெடுத்தெடுத் தேத்த
சாலவிண் ணவர்கள் பூமழை பொழியச் சகமெலாம் ஒளிமயமாக. (23)
பொ-ரை:- 'சூலம், வாள், கோடரி, சக்கரம், மழு, உயிர்
கொல்லும் இருப்பு உலக்கை, வச்சிரம், பிண்டி, சம்மட்டி முதலான
பொருந்திய ஆயுதங்களை ஏந்திய பூதகணங்கள் எட்டுத் திசைகளிலும்
சூழ்ந்து வரவும் முனிவர்கள் இசையோடு வேதங்களைப் பாடல்களைப் பாடி
வாழ்த்தவும், விண்ணவர்கள் பூமழை பொழியவும், உலகங்கள்
எவ்விடத்தும் ஒளி நிறைந்திருக்கவும்,
293. நாரணன் பிரமன் இந்திரன் முதலோர் நயமொழி யியம்பினர் பரவப்
பூரண புனித நித்தியா னந்த புராதன பராபர மூல
காரண பரம வென்றரு ணந்தி கைப்பிரம் பசைத்தியா வரையும்
சீரணி பொருந்த விலக்கிமுன் வரவே திசையெலாம் இசைமய மாக, (24)
பொ-ரை:- 'திருமால் பிரமன் இந்திரன் முதலானோர் 'எங்கும்
நிறைந்தவனே! தூயோனே! நிலைத்த பேரின்பனே! தொன்மையோனே!
மேலதற்கும் மேலோனே! யாவற்றுக்கும் மூல காரணமாக உள்ளவனே!
என்று இனிய மொழிகளைச் சொல்லிப் போற்றவும், நந்தியெம் பெருமான்
தன் கைப்பிரம்பை அசைத்து எல்லோரையும் ஒழுங்கு பொருந்த விலக்கி
முன் வரவும், எல்லாத் திசைகளிலும் இசை நிரம்பி இருக்கவும்,
294. வெள்ளிமால் வரைமேல் பவளமால் வரையும் வியன்மர கதமணி வரையும்
உள்ளமார்ந் துறைதல் போற்சிவ னுமையாள் உடன்விடை யூர்ந்தெழுந் தருள
பள்ளமீது யர்ந்த புனன்மிகப் பாய்ந்த பான்மைபோல் சென்றுமுன் வணங்கி
எள்ளலில் புவியில் கிடந்தநற் றவனை யிருவரும் எடுத்துமெய் வருடி. (25)
பொ-ரை:- வெள்ளி மலையின் மீது பவள மலையும் பெரிய மரகத
மணி மலையும் சேர்ந்து இருப்பது போல் சிவபெருமானும் உமாதேவியும்
காளையின் மீது ஏறி எழுந்தருளியதும் மிக உயர்ந்த இடத்திலிருந்து
பள்ளத்தை நோக்கி நீர் ஓடி வருவது போல விரைந்து சென்று நிலத்தின்
மீது விழுந்து முனிவன் வணங்கவும் கிடந்த முனிவனை சிவபெருமானும்
பார்வதியும் தூக்கி அவன் உடலைத் தடவிக் கொடுத்தார்கள்.
295. எல்லையில் நீதித் தவகவு தமனே யியம்புக வரமெலாம் எனலும்
முல்லைமென் முகைபோல் அன்னமா மலையும் முதிரொளித் தமனிய வரைபோல்
சொல்லுமெண் பருப்பு நவமணி வரைபோல் சுவைக்கறி விதமுமுக் கனியும்
நல்லவா மபூப விரைகளுந் தயிர்பால் நறுநெய்யாங் கடல்களும் பிறவும். (26)
பொ-ரை:- 'அளவில்லாத நீதியும் தவமுமுடைய கவுதமனே!
வேண்டிய வரமெலாம் சொல்வாய்' என்று பெருமான் ஆணையிட்டார்.
அதைச் செவி மடுத்த கவுதமன் 'முல்லை அரும்பு போன்ற சோற்று
மலையும் சிறந்த ஒளியுடைய பொன்மலை போன்று சொல்லப்படும் எட்டு
வகையான பருப்பு வகைகளும், நவமணி மலைபோல் சுவையான கறி
வகைகளும் முக்கனிகளும், நல்ல பணியாரமும், மணப்பொருள்களும்,
கடல்போல் பால் தயிர் நெய்யும் பிறவும்'
296. சுசிருசி னதத்தோ டளித்தவை தினமுந் தொலைவிலா தென்னைவந் தடைந்தார்
பசிதவிர்த் தருள்வாய் யென்னலும் பரமன் பார்பதி யினைமுகம் பார்த்து
கசிவுடை முனிவன் உரைத்தன வெல்லாம் காவிரி வடிவமாய் வந்து
நொசிநுசுப் பணங்கே கொடுத்தருள் என்று நுவன்றனன் கவுரியு மிரங்கி (27)
பொ-ரை:- திருவருளுடன் அருளி அவை நாளும்
தொலைவில்லாது என்னை வந்தடைந்த அந்தணர்களின் பசியைப்
போக்கி அருள்வாயாக' என்று வேண்டினான். அப்போது சிவபெருமான்
பார்வதியின் முகத்தைப் பார்த்து 'மெல்லிய இடையுடைய அணங்கே!
அன்புடைய முனிவன் வேண்டிய எல்லாம் காவிரி வடிவாய் வந்து
கொடுத்தருள்வாய்' என்றார். உமையம்மையும் இரக்கம் கொண்டு,
297. அன்புரு வான கவுதம முனிவ வஞ்சலை பகர்ந்தன வெல்லாம்
இன்பமார் பொன்னி நதிவடி வாகி யீகுவேன் என்றருள் புரிந்து
துன்பிலிந் நகர்ப்பால் பத்தியோ சனையுந் துயர்பசி யணைவுறா தென்றாள்
முன்பெலாம் பொருந்து மிடர்களைந் துவகை முற்றினான் கவுதம முனிவன். (28)
பொ-ரை:- 'அன்பே உருவான கவுதம முனிவனே! அஞ்சற்க. நீ
வேண்டிய எல்லாம் இன்பம் நிறைந்த பொன்னி நதியின் வடிவில் வந்து
ஈவேன்' என்று அருள் புரிந்து, துன்பம் இல்லாத இந்த நகரத்திலிருந்து
பத்து யோசனை தூரம் அளவும் துயரமும் பசியும் வந்து அடையாது'
என்று அம்மை கூறினார். அது கேட்டு கவுதம முனிவன் முன்பு தான்
பெற்ற துன்பம் நீங்கி மகிழ்ச்சியில் நிறைந்தான்.
298. ஆயகா லையினி லிருவரு மறைந்தார் அருந்தவன் அத்திசை நோக்கி
நேயமாய் இறைஞ்சி யருண்முறை பார்க்க நிலவுகா விரிக்கரை யெய்தி
தூய சித்திரநல் லடிசிலின் வரையுந் தொட்டகை யன்றியும் சொல்லும்
வாயெலா மணக்குங் குய்ப்புகை கறியின் வருக்கமும் பருப்புமாம் பொருப்பும். (29)
பொ-ரை:- அந்த வேளையில் பெருமானும் பிராட்டியும்
மறைந்தனர். கவுதமன் பெருமான் மறைந்த திசை நோக்கி அன்புடன்
வேண்டினான். பின்னர் அம்மை அருளும் முறைமையினை
அறிந்துகொள்ள கவுதமன் காவிரிக் கரைக்குச் சென்றான். அங்கே தூய
அழகிய உணவின் மலையும் தொட்ட கை அல்லாமல் (கறியின் பெயரைச்)
சொல்லும் வாய் முழுதும் மணம் நிறைக்கும் தாளிதம் செய்த கறியின்
வகைகளும் பருப்பு வகைகளின் மலையும்,
299. அண்பனீ ரூறும் அபூபமா மலையும் அருஞ்சுவை முக்கனி வரையும்
தண்புனல் மதுரந் தருமிள நீருஞ் சருக்கரை விதப்பருப் பதமும்
பண்புறு தயிர்பால் நறுநெயாங் கடலும் பாகுமெல் லிலைமுக வாசம்
விண்பயில் பொருப்பும் பிறவுமே நிறைத்து விமலைகா வேரியாய் இருந்தாள். (30)
பொ-ரை:- வாயில் எச்சில் ஊறும் அப்பம் வகைகளின் மலையும்
இனிய சுவையுடைய முக்கனி மலையும் குளிர்ந்த இனிய நீர் உடைய
இளநீரும் சருக்கரைகளின் மலையும் கடல் போன்று நல்ல தயிர் பால்
நெய் பாகு வகைகளும் மெல்லிய மணம் நிறைந்த தாம்பூலமும்
முதலானவை விண்ணை முட்டும் மலையளவு நிறைத்து மலமற்ற
மலைமகள் காவேரியில் எழுந்தருளி இருந்தாள்.
300. காவிரி வடிவாய் நினைத்தன வெல்லாங் கணக்கில வகைநிறைத் துமையாள்
மேவின கருணை கவுதமன் கண்டு வியப்புடன் அகமகிழ்ந் தன்பால்
மீவலினணைந்த வந்தணர் எவர்க்கும் அன்னதா னந்தினம் அளித்தான்
ஓவில்விப் பிரரும் நுகர்ந்தினி திருந்தார் உயர்முனி கவுதமாச் சிரமம், (31)
பொ-ரை:-- உமையவள் காவிரி வடிவாய் எழுந்தருளி நினைத்த
எல்லாப் பொருள்களையும் நிறைத்துள்ள பெருங்கருணையைக் கண்டு
வியந்து உள்ளம் மகிழ்ந்தான். பின்னர் அன்பால் விரும்பி தன்னிடம்
வந்துள்ள அந்தணர் எல்லோருக்கும் நாள்தோறும் அன்னதானம்
அளித்தான்; அந்தணர்களும் குறைவில்லாது உண்டு உயர் குணமுடைய
கவுதமன் ஆச்சிரமத்தில் இனிது இருந்தனர்.
301. மெய்த்தவம் நிறைந்த கவுதமன் பெரிய வேள்வியை விதிமுறை துடங்கி
பொய்த்தலில் காத லொடுநிறை வேற்றிப் புனல்படிந் திருந்தனர் தமக்கும்
உய்ந்தநல் நிதிய முதலவாந் தானம் உதவினன் நருமதை நதிப்பால்
மொய்த்த வந்தணர்தங் கிளைக்குப நயன முதலிய மங்கலச் செயலும், (32)
பொ-ரை:- உண்மைத் தவம் நிறைந்த கவுதமன் பெரிய
வேள்வியை மறைவிதி முறையில் தொடங்கி உண்மை அன்போடு நிறைவு
செய்து, காவிரி நீராடி தம்மிடம் தங்கி இருந்தவர்களுக்குப் போதுமான
அளவு பொன் பொருள் முதலான தானம் உதவினான்; நருமதை நதிப்
பகுதியில் இருந்து வந்திருந்த அந்தணர்களின் சிறுவர்களுக்கு உபநயனம்
முதலான மங்கலச் செயல்களைச் செய்தான்.
302. சதுர்மறை யாகம் பிதிரெதிர் கன்மஞ் சாந்திரா யணமுதல் தவங்கள்
விதம்விதம் புரிய வேண்டிய வாறே விப்பிரர் மகிழ்வுறப் புரிந்தான்
அதிர்திரை சுருட்டு நருமதை நாட்டி னந்தர முகின்மழை பொழிந்து
முதிரிடர் தவிர்ந்து வளமெலாம் விளைந்த முறைமைவந் தவர்சொலக் கேட்டார். (33)
பொ-ரை:- நான்கு மறை யாகமும், பிதிர்களுக்குச் செய்யும்
கருமமும் சாந்திராயணம் (ஒரு மாதம் இருக்கும் விரதம்) முதல் பலவிதமான
தவங்களைச் செய்ய வேண்டிய முறையில் அந்தணர்கள் மகிழும்படி கவுதமன்
செய்தான். ஒலிக்கின்ற அலை சுருளும் நருமதை நாட்டில் வானில்
மேகம் தோன்றி மழை பொழிந்து பெருந்துன்பம் நீங்கிப் பயிர்கள்
விளைந்த வளத்தை முறையாக வந்தவர்கள் சொல்ல அந்தணர்
கேட்டனர்.
303. தம்பதிக் கேகும் படிகவு தமர்க்குச் சாற்றினர் அந்தணர் அவனும்
நம்பிய பரிவால் விலக்கினன் பின்னும் நண்ணினர் வருடமொன் றதன்பின்
இம்பரில் புகழை யெமைப்புரந் ததனால் எய்திய முனிவனுள் ளளவும்
நம்பதிக் கேக விசைகிலன் என்ன நாட்டினர் உபாயமொன் றவமாய். (34)
பொ-ரை:- அந்தணர் தங்கள் நகருக்கு வரும்படி கவுதமனை
அழைத்தனர். கவுதமன் மிகுந்த அன்பால் அவர்கள் அழைப்பை
மறுத்தனன். பின்னும் ஒரு ஆண்டு சென்றபின் நருமதை நாட்டு அந்தணர்
எங்களைப் பாதுகாத்ததனால் இவ்வுலகில் புகழைப் பெற்றுள்ள முனிவன்
தான் உள்ளளவும் நம்முடைய நகருக்கு வர விரும்பான்' என்று அநீதியாக
ஒரு சூழ்ச்சி செய்தனர்.
304. வஞ்சனை தனிலோர் பசுவினை வகுத்து வயலிடை மேய்ந்திடப் புரிந்தார்
கஞ்சனை யனைய கவுதமன் விளைவு காணவே இன்னதை நோக்கி
நெஞ்சுறு பரிவால் கெச்சவென் றொருகோல் நீட்டினன் பசுவினை விலக்க
அஞ்சையும் வென்ற முனிவனாச் சிரம மணைந்தபின் வஞ்சனைப் பசுவும். (35)
பொ-ரை:- அந்தணர் வஞ்சனையாக ஒரு பசுவை உண்டாக்கி
வயலில் மேயும்படி செய்தனர். கண்ணாடியைப் போன்ற மனம் தெளிந்த
கவுதமன் விளைச்சலைக் காக்க வஞ்சையான பசுவை அகற்ற
உள்ளத்தில் மிகுந்த அன்பால் அதனிடம் செல் (கெச்ச) என்று சொல்லி
ஒரு கோலை நீட்டினான். புலன்கள் ஐந்தையும் வென்ற கவுதம முனிவன்
ஆச்சிரமம் சென்றபின் வஞ்சனைப் பசுவும்,
305. வீழ்ந்துயிர் இறந்த பசுவெனக் கிடப்ப விரவிய வந்தணர் எல்லாம்
சூழ்ந்துகோ கத்தி கவுதமன் புரிந்தான் தூயனோ விவனெனப் புவியில்
வாழ்ந்தவர் எவர்க்கு முனிவரர் எவர்க்கும் வாயினில் வந்தவா றுரைத்தார்
ஆழ்ந்தபே ரறிஞர் என்கொலென் றயிர்க்க வந்தணர் தங்கணா டடைந்தார். (36)
பொ-ரை:- விழுந்த பசு இறந்து கிடந்தது. அங்கு வந்திருந்த
அந்தணர்கள் எல்லோரும் பசுவைச் சூழ்ந்து கவுதமன் பசுக் கொலை
செய்தான்; இவன் தூயவனோ? என்று கூறினார்கள். முனிவர்களும்
மற்றவர்களும் கவுதமனைத் தங்கள் வாயினில் வந்தவாறு பேசினார்கள்.
ஆராய்ந்து அறியும் பேரறிஞர் - இது என்கொல்' என்று ஐயுற்றனர்.
வந்திருந்த அந்தணர்கள் தங்கள் நருமதை நாட்டிற்குத் திரும்பினர்.
306. இருபிறப் பாளர் பசுவைவஞ் சனையால் இயற்றிய முறைமையு மவர்கள்
ஒருவரு மொழியா துரைத்தசொற் படிறும் உணர்ந்தருட் கவுதம முனிவன்
வருடமோர் பதின்மூன் றளவும்வெம் பசியால் வருந்திடா தளித்தருள் எம்மை
பெருநிலத் திகழ்ந்த விவர்மறை யிகழ்ந்து பிதற்றுபா சாண்டர் களாகி. (37)
பொ-ரை:- இருபிறப்பாளராகிய அந்தணர் பசுவை வஞ்சனையாக
உண்டாக்கிய முறையையும், அவர்கள் எல்லோரும் கூறிய வஞ்சனைச்
சொற்களையும் உணர்ந்த கவுதம முனிவன் 'பதின்மூன்று ஆண்டு
அளவும் கொடிய பசியால் வருந்திய அந்தணர்களுக்கு அன்னம்
அளித்துக் காத்த என்னைப் பெரிய நிலத்தில் இழித்துக் கூறிய இவர்கள்
உளறும் பிற மதத்தவர்களாகி'
307. திருவெண்ணீ றதனைத் தெய்வவைந் தெழுத்தை திருவடை யாளமா மணியை
நிருமலா கமத்தை யருட்பர சிவனை நேசமாய் நிகழ்சிவார்ச் சனையை
கருதுமா லயத்தைத் தொண்டரைப் பரமன் கதையினை நாடொறு மிகழ்ந்தே
மருவிய பாவ மதோகதி வழிக்கு வலம்பொதி சோறதா யீட்டி, (38)
பொ-ரை:- 'திருவெண்ணீற்றை, தெய்வத் தன்மை வாய்ந்த
ஐந்தெழுத்தை, திருவடையாளமான அக்கு மாலையை, நிருமலன் கூறிய
ஆகமத்தை, அருளுடைய மேலான சிவனை, அன்புடன் செய்யும் சிவார்ச்சனையை,
வழிபடும் ஆலயத்தை, அடியார்களை, பரமன் புகழ் பாடும்
புராணங்களை, எல்லா நாளும் இகழ்ந்து நரக உலகம் உண்ணும் சோறாக
அங்குத் துன்புற்று'
308. மண்ணினை யூர்த்த புண்டர மாக மாசுடல் எங்கணுந் தரித்து
மெண்ணிய சங்கு சக்கிராங் கதத்தை யீட்டுநற் றமிழ்தெலுங் கிவற்றின்
நண்ணுவிற் பனராய்த் தங்குல மடவார் நாடுசூத் திரர்தமை விரும்ப
கண்ணிய நாலாங் குலத்துமா தரைத்தாம் காதல்செய் மனத்தருமாகி. (39)
பொ-ரை:- “மண் புழுதி ஊறிய உடல் எங்கணும் அழுக்குப்
படிந்தும் எண்ணப்படும் சங்கு சக்கரம் கதை முதலானவற்றைச் சேர்த்து
நல்ல தமிழ் தெலுங்கு ஆகிய நாட்டைச் சேர்ந்து வில்லை ஆயுதமாய்
எடுத்துக்கொண்டு (வேட்டையாடியும்), தம் குலத்துப் பெண்கள் சூத்திர
ஆடவரை விரும்ப, வேடனாகிய (கண்ணியன் - வேடன்) நாலாம் குலத்துப்
பெண்களைத் தாங்கள் காதல் செய்யும் மனம் உடையவராகி'
309. ஆரண விதியால் அன்றிமா யவனை யருச்சனை செய்துசூத் திரரைச்
சேரவந்தனை செய்தியாகமே முதலாச் செயும்பல நியமும் விடுத்து
தாரணி யதனில் அவத்தரா கென்னச் சபித்தனன் சபித்திடு முறையே
பேரஞர் பொருந்தி யந்தணர் உழன்றார் பெருமுனி பெருமையார் புகழ்வார். (40)
பொ-ரை:- வேத விதியை இல்லாமல் திருமாலை அருச்சனை
செய்தும், சூத்திரரைச் சேர்ந்து அவர்களைப் பணிந்தும் யாகம் முதலாகச்
செய்யும் பல ஒழுக்கத்தையும் விட்டுவிட்டு உலகில் வீணராகுக என்று
சபித்தார். கவுதமர் சபித்தபடி பெரிய துன்பம் பிடித்திட அந்தணர்கள்
துன்பத்தில் புரண்டனர்.
310. நாவரு மொழியான் முனிவனை யிகழ்ந்த நருமதை நாட்டிலந் தணர்கள்
பாவகா ரிகளாய் விடலரு நிரயப் படுகுழிக் கரூகரா தலினால்
யாவரே யெனினு மரனடி யவரை யினியநல் லடிசிலீந் தவரை
மேவர விகழ்ந்தோர் கொடியதீ வினையெவ் விதத்திலும் அகற்றுவ தரிதே. (41)
பொ-ரை:- நருமதை நாட்டு அந்தணர்கள் நாவில் வந்த (வாயில்
வந்த) சொல்லால் கவுதம முனிவனை இகழ்ந்து உரைத்தனர். அவர்கள்
பாவிகளாகி விட்டு விடாத நரகக் குழிக்கு நேசர்கள் ஆயினர்.
ஆதலினால், யாராக இருப்பினும் அரன் அடியவரையும் இனிய நல்ல
உணவு கொடுத்தவரையும் விரும்பி இகழ்ந்தவர்கள் பெறுகின்ற கொடிய
பாவ வினையை எந்த விதத்திலும் நீக்குவது அரிதாகும்.
311. இவ்வண்ண நிகழ்ந்த பின்னரும் பரனை யினிதுணர் கவுதம முனிவன்
செவ்வனே யன்ன தானம்யா வர்க்கும் சிறப்புடன் அளித்தவண் உறலால்
அவ்வணி நகர மோதன புரமா மண்ணலும் ஓதனே சுரராம்
வெவ்வினை தவிர்மா தவன்செயும் பூசை மேவலாற் கவுதமே சுரனாம். (42)
பொ-ரை:- இவ்வாறு நடந்த பின்னரும் மேலானவனாகிய
சிவனை அன்புடன் உணர்ந்த கவுதம முனிவன் மீண்டும் செம்மையாக
அன்னதானம் எல்லாருக்கும் சிறப்புடன் அளித்து அந்நகரில்
தங்கியதனால் அந்த அழகிய நகரம் சோற்றுத்துறை என்றும்
அண்ணலாகிய சிவபெருமானுக்கு “ஓதனேசுரர்" என்றும் கொடிய வினை
தவிர்ந்த மிக்க தவத்தைச் செய்த கவுதமன் பூசை செய்து வழிபட்டதால்
“கவுதமேசுரன்" என்றும் பெயர்கள் உண்டாயின.
312. அறுசுவை யினிய வுபகர ணத்தோ டன்னமா மலைகுறை வறவே
உறுமுறை பெறவே காவிரி யுருவாய் உமையவள் அளித்தகா ரணத்தால்
மறுவில்சீர் கவுரி அன்னபூ ரணியாய் மருவுகா வேரிவல் லவராய்
நிறைதரு மொருபேர் படைத்தனர் அடியார் நினைத்தன நினைத்தவா றருள்வார். (43)
பொ-ரை:- ஆறு சுவையுள்ள இனிய கறி வகைகளோடு பெரிய
குறைவுபடாத சோற்று மலையைத் தக்க வழியில் பெறுவதற்கு உமையவள்
காவிரி உருவாய் வந்து அளித்த காரணத்தால் பொருந்து காவேரி
வல்லவராய் 'அன்னபூரணி' என்னும் மனம் நிறைவு தரும் ஒரு பெயர்,
அடியார் நினைத்தவற்றை நினைத்தவாறு அருள் செய்கின்ற குற்றம்
இல்லாத புகழுடைய கவுரி பெற்றார்.
கவுதமச் சருக்கம் முற்றிற்று
11. சூரியச் சருக்கம்
313. முயலும் ஐம்புலன் வழியினை முனிந்துமுக் குறும்பின்
மயலெ றிந்துணர் கவுதமன் சரிதைவா னமுதம்
இயலு றும்படி யருளினை யெழுகதிர்க் கடவுள்
உயவ ருஞ்செய லுரையென முனிவர் உரைத்தார். (1)
பொ-ரை:- 'மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும்
ஐம்புலன்களினால் உண்டாகும் அவாவினை அடக்கி, மனம் புத்தி
அகங்காரம் என்னும் மூன்று அந்தக்கரணங்களின் சேட்டைகளாகிய
மயக்கத்தைப் புறந்தள்ளி, அறிவுடைய கவுதம முனிவனின் வரலாறாகிய
தேவாமுதத்தை இயற்கையாக அருந்தும்படி அருள் செய்தீர். இனி
உதிக்கும் சூரியக் கடவுள் பிழைக்கும்படி நடந்த வரலாற்றைச்
சொல்வீராக' என்று நைமி சாரணிய முனிவர்கள் கேட்க சூதமுனிவர்
சொன்னார்.
314. பரந்த காரிருள் அகன்றிடப் பேரருள் பரப்பி
அரந்தை தீர்த்திடு மாறிரண் டாதவர் தம்முட்
பொருந்து மெய்க்கவி படைத்தபூ டரவெனும் புகழோன்
திருந்து சிந்தையன் கவுதமன் செயலெலாம் தெரிந்து. (2)
பொ-ரை:- எங்கும் விரிந்துள்ள கரிய இருள் நீங்கும்படி ஒளி
விரித்துத் துன்பம் போக்கிடுகின்ற பன்னிரண்டு சூரியர்களில் ஒருவனும்,
பொருந்திய மெய்யான கவி செய்தருளிய பூடரன் என்னும் பெயரை
உடைய புகழையுடையோன் திருந்திய மனத்தையுடையவன் கவுதம
முனிவனின் செயல்களைத் தெரிந்து,
315. யாமு மெண்ணிய வரமெலாம் பெறுவதற் கிதுவே
தோமு றாநெறி யாமெனத் தனதுளந் துணிந்து
நாமு னாகிய துதிகொடு கற்பக நாட்டோர்
தாமும் வாழ்த்திய வோதன புரியினைச் சார்ந்து. (3)
பொ-ரை:- எண்ணிய வரமெலாம் யான் பெறுவதற்குக் குற்றம்
இல்லாத வழி இதுவே யாகும் என்று தன்னுடைய உள்ளத்தில் துணிவு
கொண்டு, கற்பகநாட்டுத் தேவர்கள் நாவினால் துதித்து வாழ்த்திய
சோற்றுத்துறையை வந்து சேர்ந்தான்.
316. பொன்னி நன்னதி படிந்துவெண் ணீறுடல் பூசி
மன்னு நன்மணி யணிந்தெழுத் தைந்தையும் வழுத்திச்
சொன்ன பாதக மனைத்தையும் அகற்றிநற் சுகிகள்
துன்னு விக்கிமெய் மந்திரம் இவையெனச் சூழ்ந்து. (4)
பொ-ரை:- பூடரன் நல்ல பொன்னியாற்றில் நீராடி, உடல் முழுதும்
திருவெண்ணீறு பூசி, நிலைத்த ஒளியுடைய நல்ல மணிகளை அணிந்து,
திருவைந்தெழுத்தை உச்சரித்து, சொல்லிய பாவங்கள் அனைத்தையும்
போக்கி நல்ல சுகபோகிகள் அறிவித்த மெய்யான மந்திரம் இவையாம்
என்று ஆராய்ந்து,
317. பூத்த சீருருத் திரமொடு சமகமும் புருட
சூத்த முந்திகழ் தருபஞ்ச சாந்தியுஞ் சுருதி
ஏத்து காலங்கள் மூன்றினும் புனல்படிந் தியல்பின்
நாத்த ழும்புறச் செபித்தனன் நியமமாய் நாளும். (5)
பொ-ரை:- வெளிப்பட்ட சிறந்த உருத்திரம், சமகம், புருட சூத்தம்,
விளங்குகின்ற பஞ்ச சாந்தி, சுருதி இவற்றை நாள்தோறும் போற்றும் மூன்று
காலங்களிலும் நீராடி, நாவானது தழும்பு ஏறும்படி நியமமாய் உச்சரித்தான்.
318. முந்துமா தத்துப் பகலுண விரண்டென மொழிய
வந்தமா தத்தி ராவுணல் மூன்றெனு மதியின்
நந்து தாரணை பாரணை நான்கெனு மதியிற்
றந்த கந்தமே யுணலைந்து மாதத்திற் சாகம். (6)
பொ-ரை:- இவ்வாறான காலத்தில் முதல் மாதத்தில் பகலில்
உணவு உண்டு, இரண்டாம் மாதத்தில் இரவு உணவு உண்டு, மூன்றாம்
மாதத்தில் நத்தைக் கூடு அளவு காற்றைக் கும்பித்து உணவாக உண்டு,
நான்காம் மாதத்தில் வீசும் காற்றில் வரும் மணத்தினையே உணவாக
உண்டு, ஐந்தாம் மாதத்தில் தழையை உணவாக உண்டு,
319. சலில மாறெனு மாதத்தி னேழுமா தத்தின்
மலியும் வாயுமெட் டாமதி தனிலுப வாசம்
பலித வொன்பதின் வாய்த்தன பணையொரு பத்தின்
நலிய வொன்றையும் பார்த்திடல் இன்றியே நலியும். (7)
பொ-ரை:- ஆறாம் மாதத்தில் நீரையே உணவாக உண்டு, ஏழாம்
மாதத்தில் எங்கும் நிறைந்த காற்றை உணவாக உண்டு, எட்டாம்
மாதத்தில் எதையும் உண்ணாது உபவாசம் இருந்து, பயன் தரும் ஒன்பதாம்
மாதத்தில் நீர்நிலையில் வாயால் நீர் உண்டு, மெலிவு தரும் பத்தாம்
மாதத்தில் ஒன்றையும் பார்க்காமல் மெலிவு அடைந்தான்.
320. திங்க ளோர்பதி னொன்றினிற் செப்பல்கே ளாமை
துங்க மாறி ரண்டினிற் றொடாமையொன் றினையும்
இங்கு மேவுபன் மூன்றினின் மணமுயிர்த் திடாமை
தங்குசித் திரைப்பருவ மேயா தியாய்த் தவங்கள். (8)
பொ-ரை பதினோராம் மாதத்தில் பிறர் சொல்வதைக்
கேளாலும் உயர்ந்த பன்னிரண்டாம் மாதத்தில் ஒரு பொருளையும்
தொடாமலும் விளங்கும் பதின்மூன்றாம் மாதத்தில் உயிர் மூச்சு விடாமலும்
சித்திரை மாதம் முதலாகத் தவங்கள் இருந்தான்.
321. மருவு மற்றொரு சித்திரைப் பூரணை வரையும்
அரிதி னாற்றிமெய்க் கவுதமர் சொற்படி யரனார்க்
கிருமை வெள்விடை மணிக்கொடி யேற்றியே யியலால்
விரவு நாளிரு நான்கினும் வாகன விழாவும். (9)
பொ-ரை:- பொருந்தும் மற்றொரு சித்திரை மாதத்து முழுமதி
நாள் வரையிலும் அரிதான இந்த தவத்தைச் செய்தான். பின்னர்
மெய்ப்பொருள் கண்ட கவுதம முனிவர் சொன்னபடி சிவபெருமானுக்குப்
பெருமையுடைய அழகிய விடைக்கொடி ஏற்றி எட்டு நாட்களிலும்
இயல்பாகப் பொருந்தும் வாகனங்களில் திருமூர்த்திகளை எழுந்தருளச்
செய்து திருவிழாவும் எடுத்தான்.
322. செப்பு காஞ்சன விரதமே லொன்பதாந் தினத்தில்
அப்பு வேணியான் வருந்திரு விழாப்புரந் தன்னாட்
டப்பி லின்சுவை யபூபங்கள் விசித்திரோ தனங்கள்
ஒப்பி லாத பேரன்பி னைவேத்திய முதவி. (10)
பொ-ரை:- ஒன்பதாம் நாளில் சொல்லப்படும் காஞ்சன விரதம்
இருந்து, கங்கையைச் சடையில் தரித்துள்ள சிவபெருமான் தேரில்
வரும்போது குறைதல் இல்லாத அப்ப வகைகளும் பலப்பல அன்ன
வகைகளும் மிகுந்த பேரன்பினால் நைவேத்தியம் செய்து,
323. தீர்த்த நல்விழா வொருபதாந் தினத்தினில் செய்தே
கார்த்தி கேயனைப் பெருந்திரு நுதல்விழிக் கருணை
மூர்த்தி யாலயத் தினிதெழுந் தருளவே முயன்று
ஆர்த்தி தீரவே யன்பினால் துதிசெய்வான் அருக்கன். (11)
பொ-ரை:- பத்தாம் நாளில் நல்ல தீர்த்த விழாவும் செய்து, பெரிய
அழகிய நெற்றிக் கண் கருணா மூர்த்தியின் ஆலயத்தில்,
கார்த்திகேயனை (முருகனை) இனிதாகவே எழுந்தருளச் செய்து துன்பம்
தீரவே அன்பினால் சூரியன் வழிபாடு செய்வான்.
324. வேத வாருதி முகட்டெழும் வியன்சுவை யமுதே!
போத சீவனு முள்ளவா றறிந்திடாப் பொருளே!
மாத போதன ருளத்திடைப் பதிக்குமா மணியே!
பாத தாமரை செப்புற நடநவில் பரனே. (12)
பொ-ரை:- வேதக் கடலின் உச்சியில் எழுகின்ற பரந்த
கலையாகிய அமுதே! ஞானமே வடிவான சீவனும் உன்னை உள்ளவாறு
அறிய முடியாத பொருளே! பெரிய தவத்தைச் செய்த தபோதனர்கள்
தங்கள் உள்ளத்தில் வைத்துப் போற்றும் மாமணியே! என்று முருகனைத்
துதித்தான். பின்னர் சிவபெருமானைத் துதிக்கும்போது திருவடித்
தாமரை சிவக்கும்படி நடம் செய்கின்ற மேலானவனே! என்றும்,
325. திருவடிப் பிழைபுரிந் தவர்க்கருள்செ யாச்சிவனே!
பொருமலர்க் கணைவே ளுடல்பொடித்த புண்ணியனே!
வெருவமுப் புரந்தழலெழ நகைசெய்த விகிர்தா!
அருள்கொழித் தகன் அன்னபூ ரணியிடத் தவனே. (13)
பொ-ரை:- தேவரீர் திருவடிக்குக் குற்றம் செய்தவர்களுக்கு
அருள் செய்யாத சிவபெருமானே! மலர்களை அம்பாகச் செலுத்தும் பெரிய
மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய புண்ணியனே!அச்சம் உண்டாகும்படி
முப்புரம் எரிய சிரித்த விகிர்தனே! திருவருள் மிகுத்து எங்கும்
நிறைந்துள்ள அன்னபூரணியை இடப் பாகத்தில் உடையவனே!
326. வாங்கு தெண்கடல் விடமமு தாக்கிய மருந்தே
ஓங்கு பாசவல் லிருளெலாந் துரந்தபே ரொளியே
தாங்கு பல்லுயிர் அனைத்தையும் போற்றுபைந் தருவே
தேங்கு பொன்னிசூழ் ஓதன புரத்துறை சிவனே. (14)
பொ-ரை:- வளைந்த தெளிந்த கடலில் எழுந்த நஞ்சை
அமுதாக்கிய மருந்து போன்றவனே! பெரிய பாசமாகிய வலிய இருள்
(அறியாமை) எல்லாவற்றையும் அருகில் வராமல் துரத்திய பெரிய ஒளி
(ஞான) வடிவினனே! பலவான உயிர்கள் அனைத்தையும் தாங்கிப்
பாதுகாக்கும் மரம் போன்றவனே! நீர் நிறைந்துள்ள பொன்னி நதி
சூழ்ந்துள்ள சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!
327. இருக்க னாதியாய்த் துதிசெயும் பரமனே யென்று
வருக்க மாகிய புளகங்கள் உடலெலா மருவ
உருக்க முற்றிரு கரங்குவித் தஞ்சலி யோங்க
அருக்கன் அன்பொடு துதிசெயப் பேரருள் அமலன். (15)
பொ-ரை:- வேதம் ஓதும் பிரமன் முதலானோர் வணங்கி வழிபாடு
செய்யும் மேலானவனே! என்று உடல் உறுப்புகள் எல்லாம் மயிர்சிலிர்க்க
மனம் உருகி, தலைக்குமேலே கைகளைக் குவித்துக் கும்பிட்டு பூடரன்
என்னும் சூரியன் அன்போடு வணங்கினான். அது கண்டு பெரிய
அருளுடைய மலமற்ற சிவபெருமான்,
328. கங்கை தங்கிய சடைமுடிப் பிறைக்கதிர் காட்டத்
தங்கு நீணுதற் றிருவிழி யிருளெலாஞ் சாடப்
பொங்கு பேரொளி யானனம் இன்னருள் பொழியத்
துங்க நீற்றினுத் தூளம்வெண் ணிலவெனச் சூழ. (16)
பொ-ரை:- கங்கை தங்கிய சடைமுடியில் பிறைமதியை வைத்தும்
நிலைத்த நீண்ட நெற்றியில் உள்ள திருவிழி இருள் (அறியாமை)
எல்லாவற்றையும் விரட்டவும், மேலும் மேலும் பெருகும் பேரொளியுடைய
முகத்தில் இன்னருள் பெருகவும் உயர்ந்த திருநீற்றின் பொடி
வெண்ணிலவு என விளங்கவும்,
329. மறைக னிந்தசெவ் வாயின்வெண் ணகைமகிழ் வழங்கப்
பொறைசெ றிந்ததேன் இதழிமா லிகைபுயம் பொலிய
நறைப ரந்தசெம் மார்புமுந் நூலணி நயப்பக்
குறைத விர்ந்தகை யபயமும் வரதமும் குலவ. (17)
பொ-ரை:- மறைகளை இனிமையாகச் சொல்லும் சிவந்த வாயில்
உள்ள வெண்மையான பற்கள் மகிழ்ச்சியை (புன்சிரிப்பை) வழங்கவும்,
இனிமை நிறைந்த தேனையுடைய மலர் மாலைகள் தோளில் அழகு
செய்யவும், சந்தனம் பூசப்பட்ட அகன்ற சிவந்த மார்பில் முப்புரி நூல்
அழகுடன் விளங்கவும், குறை நீக்கும் ஒரு கை அஞ்சேல் என்று
அருளவும், ஒரு கை திருவடியைக் காட்டவும்,
330. கண்டபேர் மலகடினமும் வெண்ணெய்போல் கரைய
தொண்டர் மாலயன் சுரர்செய செயவெனத் துதிப்ப
வெண்டி சாமுக மெங்கணு மேத்தொலி யிசைப்ப
மண்டு சீரொளி யிலிங்கநின் றிறையவன் வந்தான். (18)
பொ-ரை:- (சிவபெருமானைக்) கண்டவர்களின் மலமெனும்
கடினமான கட்டி வெண்ணெய் போல உருகவும், அடியார்கள் திருமால்
பிரமன் தேவர்கள் முதலியோர் செய செய (வெற்றி வெற்றி) என்று சொல்லி
வணங்கவும், எட்டுத் திசைகள் எல்லாவற்றிலும் இசையால் போற்றி
வணங்கும் ஒலி பெருகவும் மிகுந்த சிறப்பான ஒளியுடைய
இலிங்கத்திலிருந்து எங்கும் நிறைந்துள்ள சிவபெருமான் வெளிப்பட்டுக்
காட்சி தந்தான்.
331. வந்து தோன்றிய வோதன புரியரன் மலர்த்தாள்
சிந்தை யன்பொடு செங்கதிர் பணிந்துடல் சிலிர்ப்ப
முந்து கண்கணீர் சொரியவெக் காலமு முதிரா
சுந்த ராவெனைப் புரந்தருள் எனப்பல துதித்தான். (19)
பொ-ரை:- வந்து தோன்றிய சோற்றுத்துறை அரன் தாமரை
போன்ற திருவடியைச் சிந்தையில் தோன்றிய அன்போடு செங்கதிரோன்
பணிந்து, உடலில் வியர்வை உண்டாகக் கண்களில் கண்ணீர் முற்பட்டுத்
தோன்றி வழிய 'எக்காலமும் மாறாத அழகனே! என்னைப் பாதுகாத்து
அருளுவாயாக' என்று பலவாறு போற்றி வழிபட்டான்.
332. ஆய காலையில் இறைதிரு வுளமகிழ்ந் தருக்கா!
தூய வானநின் செபங்களுந் தபங்களும் துதியும்
நேய மாகநா மகிழ்ந்தனம் பெறும்வரம் நின்பால்
ஏயு மாறினி யுரையெனச் சூரியன் இசைப்பான். (20)
பொ-ரை:- அவ்வாறு கதிரோன் வணங்கிய பொழுது
சிவபெருமான் திருவுளம் மகிழ்ந்து 'சூரியனே, நீ செய்த தூய்மையான
தியானங்களையும் தவங்களையும் துதியையும் நாம் அன்போடு ஏற்று
மகிழ்ந்தோம். என்பால் பெற வேண்டிய பொருந்தும் வரத்தை இனி
உரைப்பாயாக' என்றார். அருக்கன் சொல்லலுற்றான்.
333. கிரகம் யாவர்க்குந் தலைமையு மெனதொளி கெழுமிப்
பரவிடும் பொருள்புனி தமாமு றைமையும் பாரில்
விரவு மாருயிர்க் கண்ணொளி யென்னொளி மேவிக்
கரவி லாதெலாங் காண்டலுந் தந்தருள் கனிவால். (21)
பொ-ரை:- 'கோள்கள் எல்லாருக்கும் தலைமைப் பதவியும்,
என்னுடைய ஒளி விரிந்து பொருந்தும் பொருள் புனிதமாக ஆகும்படியும்,
உலகில் வாழும் உயிர்களின் கண்ணொளியோடு என்னொளி பொருந்தி
மறைக்கப்படாமல் எல்லாப் பொருள்களையும் உயிர்கள் காணவும்
அன்புடன் வரம் தந்தருளுக' என்றான்.
334. துணிவின் யானுனைப் பணிதலால் பாற்கரே சுரப்பேர்
அணிக நீயுனைச் சித்திரைப் பருவநா ளதனில்
பணியும் யாவர்க்கு மிகபர மிரண்டையும் பணிப்பாய்
தணிவி லாவருட் பரமனென் றனனிறை சாற்றும். (22)
பொ-ரை:- 'குறையாத அருளைத் தருகின்ற மேலான
இறைவனே! துணிவுடன் நான் உம்மைப் போற்றி வணங்குதலால் நீவிர்
''பாற்கரேசுரன்'' என்ற பெயரை அடைவீராக. தேவரீரைச் சித்திரை மாதப்
பருவ நாளில் வணங்குகின்ற எல்லாருக்கும் இவ்வுலக வாழ்வும் மேலுலக
வாழ்வும் இன்பமாய் அமைய ஆணை யிடுவீராக' என்று பணிந்தான்.
அது கேட்ட இறைவன் கூறுவர்,
335. புகன்ற யாவையுந் தந்தனம் நீநமைப் பூசை
மகிழ்ந்து செய்தமை யாவரு மறிய நாமருவித்
திகழ்ந்த வச்சிவ லிங்கமேற் சித்திரை மதியின்
மிகுந்த சித்திரை நாளந்தி தொறுமொளி விரிப்பாய். (23)
பொ-ரை:- 'நீ கேட்ட வரம் எல்லாம் அருளினோம். நீ எம்மை
மகிழ்வுடன் வழிபாடு செய்தமையை எல்லோரும் அறியும் விதமாக நாம்
பொருந்தி விளங்கும் அந்த சிவலிங்கத்தின் மேல் சித்திரை முழுமதியில்
சித்திரை நட்சத்திரம் கூடிய நாளில் (ஆண்டு தொறும்) ஒளி விரித்து
வணங்குவாய்' என்று சிவபெருமான் ஆணையிட்டார்.
336. விளங்கு மப்பொழு தெமைதெரி சித்தவர் விழைவால்
உளங்கொள் அவ்வரு டம்புரி பாவம்விண் டொழியும்
களங்க மின்றியே சித்தசுத் தியும்வருங் கதியும்
துளங்க வென்னிரை யத்துயர் பொருந்திடார் துணிபே. (24)
பொ-ரை:- 'அவ்வாறு நீ வழிபடும் பொழுது எம்மை
வணங்குவோர் அந்த ஆண்டு விருப்பத்துடன் மனம் பொருந்த செய்த
பாவம் எல்லாம் விடுபட்டு அழியும்; களங்கம் இல்லாமல் சித்தத்தில் தூய
எண்ணம் வரும்; வீடுபேறும் அடைவர்; விளங்குகின்ற கொடிய நரகத்
துன்பம் அடையார்; இது உறுதியாகும்' என்று அருளினார்.
337. உனக்கு வேதனை ஆண்டுகள் தொறுமிலை யுருகும்
மனத்தி லன்புடன் அத்தின முனைப்பணி வார்பால்
அனைத்து நோயிலை மிடியிலைப் பாயச மருத்தின்
நினைத்து நீபுரி விழவினைக் கண்டவர் நிமலா. (25)
பொ-ரை:- உனக்கு ஆண்டுகள் தொறும் துன்பம் இல்லை;
உருகிய மனத்தோடு அன்புடன் உன்னை வணங்குவோருக்கு எல்லா
நோயும் இல்லை; தரித்திரமும் இல்லை; பால் சோறு அருந்தி மனம் விரும்பி
நீ செய்த விழாவினைப் பார்த்தவர்கள் தூயவர் ஆவார்'
338. ஆய்ந்து கொள்கென இன்னமெய் வரமெலாம் அருளி
ஏய்ந்த பேரொளி மின்னெழுந் தம்முகி லிடைபோய்த்
தோய்ந்த வாறிலிங் கத்திடை மறைந்தனன் சோதி
வாய்ந்த சூரியன் தன்னுல கடைந்தனன் வணங்கி. (26)
பொ-ரை:- இவற்றைத் தெரிந்து கொள்க' என்று உண்மையான
வரங்களை எல்லாம் அருளிய பின் மிகுந்த பேரொளியுடைய மின்னல்
மேகத்தில் தோன்றி மறைந்தது போன்று பேரொளி யுடைய சிவபெருமான்
இலிங்கத்தில் மறைந்தருளினார். வரம் பெற்ற சூரியன் பெருமானை
வணங்கித் தன்னுடைய உலகத்திற்குச் சென்றான்.
சூரியச் சருக்கம் முற்றிற்று
12. சுசன்மச் சருக்கம்
339. புண்ணியமெய்ச் சிவபாதப் புணையை மேவிப்
பொங்குதுயர்ப் பிறவியெனும் புணரி நீந்தி
நண்ணுதிரு வருட்கரையி லேறி முத்தி
நாடணுகிச் சிவபோகம் நாளு மேவும்
பண்ணவர்காள் பருதிசிவ பூசை செய்த
பலனிதுமே லோதனமா பதியின் மேவித்
திண்ணியசத் தியினாலோர் மறையோன் அன்பால்
திருப்பணிசெய் துய்ந்த கதைசெப்பு கின்றாம். (1)
பொ-ரை:- சிவ புண்ணியத்தின் பயனாக மெய்ப்பொருளாகிய
சிவபெருமானின் திருவடி என்னும் ஓடத்தைப் பற்றி, பெருகுகின்ற
துன்பமான பிறவி என்னும் கடலைக் கடந்து, திருவருள் என்னும் கரையை
அடைந்து, முத்தி என்னும் நாட்டை அடைந்து சிவபோகமாகிய
பேரின்பத்தை நாளும் நுகர்கின்ற முனிவர்களே! இதுவரையில் சூரியன்
செய்த சிவபூசையின் பலனைக் கூறினோம். சோற்றுத்துறையில் தங்கி
உறுதியான சத்தியினால் ஒரு மறையோன் அன்பால் சிவபெருமானுக்குத்
திருப்பணி செய்து திருவடிப் பேறு பெற்ற கதையினை இனிக் கூறுவோம்.
340. மங்களமென் றொருநகரில் சுசன்மா வென்னும்
மறையவனல் லொழுக்கமுளான் மைந்தர் பாரில்
அங்கவர்கள் யாருமிலான் வறுமை யாலே
யாதுலனாய்த் தீர்த்தயாத் திரைமேற் கொண்டு
கங்கைவளர் காசிபிர யாகை காஞ்சி
கனகலமா கேதாரம் சோம னாதம்
சங்கமஞ்சாய்க் காடுசுவே தாரண்ணிய மாரூர்
சத்திமுற்றம் வாஞ்சியம்வே தாரண்ணியம் புகலூர். (2)
பொ-ரை:- மங்களம் என்று சொல்லப்படும் நகரத்தில் நல்ல
ஒழுக்கம் உடைய சுசன்மன் என்னும் வேதியன் இருந்தான். அவனுக்குப்
புதல்வர்கள் முதலான உறவினர் யாரும் இல்லை. அவன் வறுமையால்
தரித்திரனாகி தீர்த்த யாத்திரையாக கங்கைக் கரையில் உள்ள காசி,
பிரயாகை, காஞ்சி, கனகலம் (அரித் துவாரத்திற்கு அருகில் உள்ளது),
கேதாரம், சோமனாதபுரம், சங்கமம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு,
திருவாரூர், சத்திமுற்றம், திருவாஞ்சியம், திருமறைக்காடு, திருப்புகலூர்
முதலான தலங்களுக்குச் சென்றான்.
341. இடைமருது மாயூரம் ஆடுதுறை துருத்தி
யேடகமை யாறுசிராப் பள்ளிதிருப் பழனம்
கடனாகை காளத்தி கழுக்குன்ற மதிகை
காறாயில் குடவாயில் கடம்பவனந் தருமை
குடமூக்கு முதலான தலங்களில்சென் றிலங்கு
குளிர்தீர்த்த பலனுதவுந் திருச்சோற்றுத் துறையின்
இடமாக வந்துபொன்னி நதியாடி யிறைவன்
இணைமலர்ச்சே வடியிறைஞ்சி யேத்திமகிழ்ந் தன்பின். (3)
பொ-ரை:- மேலும், திருவிடைமருதூர், திருமயிலாடுதுறை,
ஆடுதுறை, திருத்துருத்தி, திருவேடகம், திருவையாறு, திருச்சிராப்பள்ளி,
திருப்பழனம், திருக்கடல் நாகைக் காரோணம், திருக்காளத்தி, திருக்கழுக்
குன்றம், திருவதிகை, திருக்காறாயில், திருக்குடவாயில், திருக்கடம்பவனம்,
திருத்தருமபுரம், திருக்குடமூக்கு முதலான தலங்களுக்குச்
சென்று வணங்கிய பின்னர், விளங்கும் குளிர்ந்த தீர்த்தம் ஆடும்
பலனைத் தருகின்ற சோற்றுத்துறைக்கு வந்து காவிரி நதியில் நீராடி,
இறைவனாகிய சிவபெருமானின் இணையாகிய மலர்போன்ற திருவடி
களை அன்புடன் போற்றி வணங்கி மகிழ்ந்தான்.
342. புறத்தணுகி யந்தணர்கள் மனைக டோறும்
புகுந்தேற்று மாதுகரம் புசித்துச் செக்கர்
நிறத்தானை நெஞ்சினினைத் தொருவன் வீட்டில்
நித்திரைசெய் தனன்கனவி னிமலன் மூப்பாய்ச்
சிறப்புடையந் தணன்போல வந்தியா மிவ்வூர்ச்
சிவனெம்பேர் தொலையாத செல்வ ராகும்
பெறச்சிறந்த கருணையொடு நீங்காமல் விளங்கிப்
பேணியிருக் கின்றனமிப் பெருஞ்சோற்றுத் துறையில் (4)
பொ-ரை:- ஆலயத்தின் புறத்து வந்து அந்தணர்களின் வீடுகள்
தோறும் சென்று பிரமச்சரியாய் இருந்து பிச்சை ஏற்று உண்டு
செம்மேனியனாகிய சிவபெருமானை நெஞ்சில் நினைத்தபடி ஒரு வீட்டின்
முன்புறம் உறக்கம் கொண்டான். உறங்கும்போது கனவில் சிறப்புடைய
வயது முதிர்ந்த அந்தணனாக வந்து 'யாம் இவ்வூர் சிவன், என்பெயர்
“தொலையாச் செல்வர்” என்பதாகும். பெறச் சிறந்த கருணையோடு
சோற்றுத்துறையில் நீங்காமல் தங்கி இவ்வூரைப் பாதுகாத்துக்
கொண்டிருக்கின்றோம்'.
343. எமதுசின கரமிகவும் பழுதான ததனை
யெழில்பொருந்தப் புதிதா வியற்றுதியாங் கதற்கு
தமரமுறு காவிரித்தென் கரையிலொரு கிணற்றிற்
தமனியமெண் ணிலவத்த மனியத்தை யெடுத்தே
அமர்தரச்செய் பணிவிடைக்காக் கெனவிறைவன் மறைந்தான்
அந்தணனும் விழித்துமிக்க வதிசயத்துக் காலை
கமலமலர் குலவுபொன்னி நதிபடிந்து நித்திய
கன்மமுடித் ததன்பின்பு கண்ணுதல்சொற் படிபோய். (5)
பொ-ரை:- யாம் எழுந்தருளியிருக்கும் ஆலயம் மிகவும் பழுதான நிலையில்
உள்ளது. அதனை அழகு விளங்கப் புதிதாக மாற்றியமைப்பாயாக.
அதற்காக ஒளி பொருந்திய காவிரியின் தென்கரையில் ஒரு
கிணற்றில் அளவிலா பொன் உள்ளது. அப்பொன்னை எடுத்து அழகு
பொருந்தச் செய்யப்படும் பணிவிடைக்குப் பயன்படுத்திக்கொள்' என்று
சிவபெருமான் கூறி மறைந்தருளினார். அந்தணன் விழித்து மிகவும்
அதிசயம் அடைந்தான். காலை வேளையில் தாமரை மலர் மிகுத்துள்ள
பொன்னி நதியில் நீராடி நாள்தோறும் செய்ய வேண்டிய கன்மங்களை
முடித்துக் கொண்ட பின்னர் நெற்றிக்கண் நிமலர் கூறிய இடம் சென்றான்.
344. மாற்றுயர்ந்த பசும்பொன்னெண் ணிலாதனவக் கிணற்றின்
மன்னுதல்கண் டகமகிழ்ந்து மரபினவை யெடுத்தே
ஏற்றமுடன் ஓரிடத்தில் தொகுத்திறைவர் கோட்டம்
இயற்றிடுகிற் பரைவருவித் தியல்பினொடு தொடங்கும்
காற்றலைமை யரசனொடு சுசன்மனிதி வைப்புக்
கண்டெடுத்தான் என்றுசில கசடர்சொல வேந்தன்
ஆற்றலுறு சிலரைவிடுத் தந்தணனைக் கொடுபோய்
அருஞ்சிறையில் வைத்துநிதி யத்தனையும் கவர்ந்தான். (6)
பொ-ரை:- உயர்ந்த மாற்றுடைய பசுமையான அளவில்லாத
பொன் அந்தக் கிணற்றில் இருப்பதைச் சுசன்மன் பார்த்து உள்ளம்
மகிழ்ந்தான். பின்னர் எடுக்க வேண்டிய முறைமையோடு அவற்றை
எடுத்தான். அவற்றைப் பெருமையோடு ஓரிடத்தில் குவித்து வைத்தான்.
இறைவற்குக் கோயில் கட்டுபவரை வரவழைத்து முறையாகத் தொடங்கும்
பொழுது, கீழோர் சிலர் சுசன்மன் பொற்குவியலைக் கண்டெடுத்தான்
என்று தலைமையுடைய அரசனிடத்தில் கூறினர். அதுகேட்ட அரசன்
வலிய வீரர்களை அனுப்பி அந்தணனைக் கைது செய்து கொடிய
சிறையில் அடைத்து விட்டு அப்பொற் குவியலைப் பிடுங்கிக் கொண்டான்.
345. இச்செயல்கண் டந்தணன்போல் இறையரசன் கனவில்
எழுந்தருளி யுறுபொருளும் உனதெனினும் இதுகேள்
வைச்சபொரு ளினைநமது கோயில்புதி தாக
வளருமெழி லுடன்வகுக்க மறையவன்பால் அளித்தோம்
அச்செயலை யறியாமல் நிதியனைத்துங் கவர்ந்தாய்
அவனையுமோர் சிறையில்வைத்தாய் ஆவதுசெய் திலையான்
நிச்சயவே தியன்சிறையும் விடுத்துநிதி யனைத்தும்
நீயுதவி லினிததனை நிகழ்த்திடாய் எனிலே. (7)
பொ-ரை:- அரசன் செயலைக் கண்ட இறைவன் அரசனுடைய
கனவில் அந்தணன் போல் எழுந்தருளி புதையல் பொருள் உனக்கு
உரிமையுடையது என்றாலும் நான் சொல்வதைக் கேட்டு நடப்பாய், புதிதாக
நமது கோயில் சிறந்த அழகுடன் கட்டுவதற்காக மறையவனிடம் வைத்த
பொருளைக் கொடுத்தோம். அச்செயலை அறியாமல் அந்தணனைச்
சிறையில் அடைத்துவிட்டு பொற்குவியல் அனைத்தையும் நீ கவர்ந்து
கொண்டாய். கோயில் கட்ட வேண்டியதையும் செய்யவில்லை. சிறையில்
உள்ள வேதியனை சிறைவிடுத்து பொன் பொருள் அனைத்தையும்
அந்தணனிடம் திருப்பிக் கொடுத்து, ஆலயம் அமைக்கும் பணிக்கு நீ
உதவி செய்யாவிடில்'
346. அடலுறுநின் சதுரங்க மனைவிமு தலாகும்
அவரையுநின் னையுநாச மாக்குவமென் றுரைத்து
நடனவிறை மறைந்தனனப் பொழுதரசன் துயில்போய்
நடுநடுங்கிப் பயந்தந்த நள்ளிரவுப் பொழுதில்
விடலரிய சிறையைவிடுத் தந்தணனைப் பணிந்து
மேன்மை யறிந்திலன் புரிந்த மிகைபொறுப்பீர் என்று
படவரவன் அருள்கனவு முரைத்துநிதி யனைத்தும்
பாலித்தான் இனியென்னால் பயமணுகா தெனவே. (8)
பொ-ரை:- 'போரிடும் நால்வகைப் படையும் உன்னுடைய
அரண்மனையும் விழுந்துவிடும். வீரர்களையும் உன்னையும் உன் மனைவி
முதலோரையும் அழித்து விடுவேன்' என்று சொல்லி நடமாடும்
சிவபெருமான் மறைந்தார். அப்பொழுது அரசன் உறக்கம் கலைந்து பயந்து
நடுநடுங்கினான். அந்த நள்ளிரவு நேரத்தில் சென்று கொடிய சிறையிலிருந்து
அந்தணனை விடுவித்து அவனை வணங்கி 'உம்முடைய
பெருமை அறியாமல் உனக்குத் தீங்கு செய்ததைப் பொறுத்துக் கொள்வீர்'
என்று சொல்லி, படமெடுக்கும் பாம்பை அணிந்துள்ள பரமன் கனவில்
எழுந்தருளியதைச் சொல்லி, பொற்குவியல் அனைத்தையும் திருப்பிக்
கொடுத்து 'இனி என்னால் அச்சம் உண்டாகாது' என்று கூறினான்.
347. ஆதரவில் பரமசிவன் அருளைநினைந் துருகி
யந்தணன்பார்த் திபன்கொடுத்த வருநிதியங் கொடுபோய்த்
தீதகலுஞ் சிற்பவிதி தேர்ந்தவர்சொற் படியே
திகழுமதி லேழுமுயர் சித்திரமா ளிகையும்
மேதகுகோ புரவிதமு மண்டபத்தின் விதமும்
வியன்யாக சாலைமுதல் விளம்பியசா லைகளும்
பேதமிலாக் கற்றளமும் வாயிலுந்தெற் றிகளும்
பிறங்கியபொற் சோபன விதங்களும் குயிற்றி. (9)
பொ-ரை:- அன்புடன் பரமசிவனின் திருவருளை மனத்தில்
உருக்கமுடன் நினைந்த அந்தணன் அரசன் திருப்பிக் கொடுத்த
பொருளைக் கொண்டு தீதில்லாத சிற்ப விதி தேர்ந்தவர் கூறியபடியே
விளங்கும் ஏழு மதில்களும் உயர்ந்த அழகிய ஆலயமும் சிறந்த கோபுரமும்
விதானமும் பலவகை மண்டபமும், அகன்ற யாகசாலை முதலாக எல்லா
வகைக் கூடங்களும், வேறுபாடு இல்லாத கல்லாலாகிய தளமும் சித்திரக்
கூடங்களும், வேதிகைகளும், பெருமையுடைய பொன்னாலான
திருமஞ்சன மண்டபங்களும் கட்டினான்.
348. பாலமரும் பிரதமமே கம்பைபத்ம யாளம்
பகர்கண்டங் கழுத்துகு முதமொடுபட் டிகையே
காலுயரம் வீரகண்டந் தாடிகுடம் பலகை
கவினுறையுத் திரத்தினொடு மெழுதகம்போ திகையே
தூலமுறு மேழிருக்கை கபோதம்வே திகையே
தூக்கோடு சந்திரநிலை மாநாசிக் கூடு
கோலமுறு சித்திரநா சிக்கூடு மாலை
கொள்ளுமுனைப் பாதிகெற்ப கிரகமதிற் குயிற்றி. (10)
பொ-ரை:- அழகு பொருந்தும் ஆலய முன் பகுதி, கொடிக்கம்பம்,
தாமரை பீடம், சொல்லப்படும் கண்டம், கழுத்து, அல்லி மலருடன்
சித்திரமுள்ள சுவர்த்தலம்,, தூண் பீடம், வீரகண்டம், தாடிகுடம், பலகை,
அழகு பொருந்திய உத்திரம், சித்திர சொரூபம், சுமையடைக் கல்,
உறுதியான ஏழிருக்கை, மாடம், பலிபீடம், தூக்கு, சந்திரநிலை, பெரிய
கதவுநிலைச்சட்டம், அழகிய கதவுநிலைச்சட்டம், மகாமண்டபம், கருப்பக்
கிரகம் முதலியன கட்டினான்.
349. ஐங்கரற்குத் தென்திசையில் ஆறுமுகற்கு வடக்கில்
அரிதனக்கு மேற்றிசையில் அருள்சபா பதிக்கு
துங்கவீ சானதிக்கிற் சோமாக்கந் தருக்குத்
துலங்குபெலி நாயகர்க்குச் சொலுநிருதி திசையில்
செங்கனக வாலயஞ்செய் தங்கவரை யங்கண்
சிற்பனா கமஞ்சொல்பிர திட்டையுஞ்செய் வித்து
பொங்குமனற் றிசையாதி யீசதிசை யளவும்
பொருந்துமொரு மண்டபத்தைப் பொலிவினுடன் இயற்றி. (11)
பொ-ரை:- ஐந்து கரமுடைய விநாயகருக்குத் தென் திசையிலும்,
ஆறுமுகவருக்கு வடக்குத் திக்கிலும், திருமாலுக்கு மேற்குத் திசையிலும்,
அருளுடைய நடனமாடும் சபாபதிக்கு தூய ஈசான திக்கிலும்,
சோமாக்கந்தருக்கும் விளங்கும் வயிரவருக்கும் தென்மேற்குத்
திசையிலும், சிவந்த பொன்னாலாகிய ஆலயம் அமைத்து அங்கு சிற்ப
ஆகமம் கூறுகின்றபடி எழுந்தருளச் செய்து பெருகும் தீயின் திசையாகிய
தென்கிழக்குத் திசையிலிருந்து வடகிழக்குத் திசை அளவும் பொருந்திய
மண்டபம் அழகுடன் கட்டினான்.
350. சிவாநுமதி யொடுகுகனைப் பிரதிட்டை புரிந்து
திருவீதி நான்கிலுறு சிவத்துவிசர்வை திகர்கள்
அவாவுறுமெய் யாடலொடு பாடலியற் றிடுவோர்
ஆதியாம் பரிசனரை யறிந்துகுடி யேற்றி
உவாவதனைப் புனைந்தசிவன் பூசையெவை களுக்கும்
உபகரண மெனவுரைத்த வெகுவிதபாத் திரமும்
தவாமனிறை திரவியமும் ஆடையணி கலனும்
தாசர்தா சிகள்பூமி தனதான்னி யம்மே. (12)
பொ-ரை:- சிவபெருமான் திருவருள் கொண்டு குகனாகிய
முருகனை எழுந்தருளச் செய்து திருவீதி நான்கிலும் சிவத்தொண்டு
செய்கின்ற வேத மார்க்கம் உடையவர்களையும், விருப்பத்தோடு
உண்மையான ஆடல் பாடல் செய்வோர் முதலான ஏவல் செய்வோர்
பலரையும் தகுதியறிந்து தகுதியான இடத்தில் குடி யமர்த்தினான்.
பிறைமதி தரித்துள்ள சிவபெருமான் பூசைக்கு வேண்டிய உபகரணம்
என்று சொல்லப்படும் எல்லா வகை பாத்திரங்களும் குறையாது
நிறைந்துள்ள திரவியமும் ஆடை வகைகளும் அணிகலன்களும் கோயில்
தொண்டு செய்யும் தாசர்களையும் தாசிகளையும் நிலம் தனம் தானியம்
முதலானவைகளையும்,
351. வேண்டுமற்றைப் பொருள்களை நித்தியமா யமைத்து
விமலனுக்கு மிமையமலை மெல்லியற்கும் விதியால்
ஈண்டுகும்ப வபிடேக மியற்றுவித்துத் தானம்
எண்ணில்வகை கொடுத்தபின் இயன்மறையின் பொருளாற்
பூண்டவன்பி னோதனபு ரேசனையு மன்ன
பூரணிதன் னையும்பலவாய்ப் புகழ்ந்துநும தருளால்
காண்டகுமா லயமமைத்தேன் உவந்தருளுவீர் என்னக்
கண்ணுதலோ னெதிர்தோன்றிக் கருணையொடு புகலும். (13)
பொ-ரை:- தேவைப்படும் மற்றையப் பொருள்களையும்
நிலையாகக் கிடைக்கும்படி செய்தான். பின்னர் மலமற்ற ஈசனுக்கும்
இயமலை யரசன் மகள் மெல்லியளாகிய பார்வதிக்கும் விதிப்படி திருக்குட
நீராட்டும் செய்வித்தான். அத்துடன் தானம் அளவில்லாமல் கொடுத்தான்.
பின்னர் ஓதனபுரேசரையும் அன்னபூரணியையும் மிகுந்த அன்புடன்
விளங்கும் மறையின் பொருளால் புகழ்ந்து போற்றி 'உமதருளால்
காண்பதற்கு இனிய ஆலயம் அமைத்தமையை மகிழ்வுடன் ஏற்றருளுவீர்'
என்று கூறி வணங்கினான். அப்பொழுது நெற்றிக்கண் நிமலர் அவன்
எதிரில் தோன்றிக் கருணையோடு கூறலுற்றார்.
352. இகத்திலுனக் கெண்ணியபூ மியுந்தனதா னியமும்
எழின்மணியு முதலான பாக்கியமு மீந்தோஞ்
சுகத்தினுடன் விவாகமுநாம் விரைவினியல் விப்போம்
தோன்றுபுத்திர பவுத்திரருஞ் சுற்றமுமிக் கியாக
மகத்துவமா மெமதுபக்கத் திடமுனக்கா மென்று
வரமளித்துத் தனதனைமுன் வரவழைத்துச் செல்வம்
மிகப்பெரிது முதவுகெனச் சுசன்மாவுக் களகை
வேந்தனளித் தன்னிதியம் வேண்டுவன வெவையும். (14)
பொ-ரை:- 'இவ்வுலகத்தில் உனக்குத் தேவையான நிலம், தனம்,
தானியம், அழகிய மணி வகைகள் முதலான நற்பேறுகளைக்
கொடுத்தோம்; சுகம் பெறும் திருமணமும் விரைவில் நாம் செய்விப்போம்;
புத்திரர்களைப் பெற்றும் பேரக் குழந்தைகளுடனும் மிகுந்த
உறவினர்களுடனும் வாழ்ந்து இறுதியில் எம்முலகம் வந்து எமது
பக்கத்தில் இருப்பாய்' என்று வரம் அளித்தபின், குபேரனை அழைத்து
'சுசன்மனுக்கு மிகப்பெரிய செல்வம் கொடுப்பாய்' என்றார். சுசன்மாவுக்கு
அளகாபுரி வேந்தனாகிய குபேரன் தன்னிடம் உள்ள நிதியத்தில் இருந்து
வேண்டுவன கொடுத்தான்.
353. கவுதமனோ டுன்புதல்வி சுசீலையை யிங்கிவர்க்குக்
கல்யாணஞ் செய்கவெனக் கலைமதியம் புனைந்த
மவுலியனே நின்னருளாற் செய்வனெனப் பணிந்தான்
வள்ளல்பரா சரனோடு மறையின்வழி யிவற்குச்
செவியமணஞ் செய்கவென மறைந்தனன்பின் முனிவன்
சீலமுறு விரதசமா வர்த்தனமுஞ் செய்து
புவிபுகலு மதுவர்க்கங் கோதான முதலாய்ப்
புரிந்துசுசி லையைச்சுசன்மாப் பொருந்தமணம் புரிந்தான். (15)
பொ-ரை:-சிவபெருமான் கவுதம முனிவனிடம் 'உன் மகள்
சுசீலையை சுசன்மாவிற்குத் திருமணம் செய்வாய்' என்றார். கவுதமன்
'கலைநிறைந்த மதியைப் புனைந்த பெருமானே! நின்னருளால் மணம்
செய்விப்பேன்' என்று கூறிப் பணிந்து வணங்கினான். சிவபெருமான்
'வள்ளல் பராசர முனிவனைக் கொண்டு மறையில் சொல்லப்பட்ட வழியில்
மணம் செய்வாய்' என்று சொல்லி மறைந்தார். பின்னர் கவுதம முனிவன்
ஒழுக்கம் மிகுந்த விரதமாகிய பிரமசரியம் நிறைவு செய்யும் சடங்கை
(சமாவர்த்தனம்) செய்து உலகம் புகழும் மதுவர்க்கம் பசு தானம்
முதலானவை கொடுத்து தன் மகள் சுசீலையைச் சுசன்மா ஏற்கத்
திருமணம் செய்தான்.
354. மணம்புணர்ந்த சுசன்மாவு மனைவிநல நுகர்ந்து
வங்கிசவுத் தாரகரா மைந்தரையும் பயந்தே
இணங்குமக்கி னிட்டோம மேபவுண்ட ரீகஞ்
சத்திரமா தானமுட னசுவபெந்தனம் எவையும்
அணங்கினரும் அமரர்களு மகிழும்வகை யாற்றி
யப்பதியில் வாசமா யநேகநாள் மருவிக்
குணங்கிளரு மனைவியுட னாயாச மரணம்
குறுகியது பெருகியது குறைவில்சிவ போகம். (16)
பொ-ரை:- மணம் செய்துகொண்ட சுசன்மன் தன் மனைவியுடன்
இல்லறம் நுகர்ந்து தனக்குப் பின் வாரிசாக மகனையும் பெற்று பதினோராம்
நாள் செய்யும் வேள்வியும், முழுமதி நாளில் செய்யும் வேள்வியும் செய்து
அன்னசாலைகள் கட்டி தானமும் செய்து இடுப்பில் அரைநாண் கட்டும்
சடங்கையும் பெண்களும் தேவர்களும் மகிழும்படி செய்து,
சோற்றுத்துறையில் பல காலம் வாழ்ந்து குணம் மிகுந்த மனைவியுடன்
உடல் சோர்வுறும் மரணம் எய்தி குறைவில்லாத சிவபோகத்தை
அடைந்தான்.
355. பெற்றவர்கள் பாவீடு பெற்றபின்பு புதல்வர்
பெருமை தருமப்பதியில் பிரியாமல் உறைந்து
நற்றவருங் கற்றவரு நாளுமன மகிழ
நண்ணியபுண் ணியந்தாதை போலநயந் தியற்றிச்
சிற்றிடைப்பொன் மானெடுங்கட் கருங்குழற்செங் கனிவாய்ச்
செழுங்களபப் புளகமுலை சிற்பரையோர் இடத்தின்
உற்றபுரன் ஓதனமா புரேசனிரு சரணம்
உன்னிமைந்தர் சுற்றமுடன் உவந்துமகிழ்ந் திருந்தான். (17)
பொ-ரை:- பெற்றோர்கள் சிவலோகம் சென்றபின் சுசன்மன்
புதல்வர்கள், பெருமையுடைய சோற்றுத்துறையில் ஒற்றுமையுடன் வாழ்ந்து
நல்ல தவத்தையுடையோரும் கற்றவர்களும் நாளும் மகிழ்ச்சி அடைய தன்
தந்தை போல நல்ல புண்ணியத்தை விரும்பி செய்தான். பின்னர்
சிற்றிடையும் நீண்ட கண்ணும் கரிய குழலும் சிவந்த கனிவான வாயும்
செழுமிய களபம் பூசிய பருத்த தனத்தையும் உடைய பார்வதியை
இடபாகத்தில் பெற்றுள்ள சோற்றுத்துறையில் எழுந்தருளியுள்ள
சிவபெருமானின் இரு திருவடிகளையும் மனத்தில் எப்பொழுதும் நினைந்து
தம் மக்கள் உறவினர்களுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திருந்தான்.
சுசன்மச் சருக்கம் முற்றிற்று
13. கேதார விரதச் சருக்கம்
356. வரம் விரும்பிய சுசன்மனற் சரிதையை மகிழ்ந்து
பரவ சத்தராய்ச் சடைமுடி துளக்கு பண்ணவருக்
கரன னிக்கையால் உமையவள் ஆற்றுகே தார
விரத நற்செயல் மேன்மையச் சூதனும் விளம்பும். (1)
பொ-ரை:- வரத்தை விரும்பிய சுசன்மன் கதையை
மகிழ்ச்சியுடன் சொல்லக் கேட்ட உண்மைப் பொருளை விரும்பும்
சடைமுடியுடன் விளங்கும் முனிவர்களுக்குச் சிவபெருமான் விருப்பால்
உமையம்மையின் கேதார விரத நற்செயலின் மேன்மையைச் சூத
முனிவன் சொல்லலுற்றான்.
357. ஆதி நாளினின் மந்தர கிரிக்குகை யமரும்
பூதி மேனியின் புண்டர நுதலினன் சாந்தன்
ஓது சுத்தன்மெய்ச் சிவபத்தி யுடையவன் ஓங்கும்
வேதன் மைந்தனாம் வியன்சனற் குமாரமெய்த் தவன்முன். (2)
பொ-ரை:- ஆதி காலத்தில் மந்தர மலையில் ஒரு குகையில்
திருநீறு பூசிய மேனியனாயும், மூன்று கோடுகளாக நெற்றியில் விபூதி
அணிந்திருந்தவனும், அமைதியான மனம் உடையவனும், தூய்மையான
உள்ளம் உடையவனும், மெய்ப்பொருளாக விளங்கும் சிவனிடத்தில் பத்தி
உடையவனும், உயர்ந்த வேதத்தை ஓதும் பிரமனுடைய மகனுமாகிய
சிறந்த சனற்குமாரன் என்னும் மெய்யான தவத்தை உடையவன் முன்பாக
358. பிருங்கி மாமுனி வந்தடி பணிந்தன னன்பின்
விரிந்த புண்ணிய விதமெலாம் அறிந்தவித் தகனே
அரந்தை சேர்புவி யாழ்வெனும் புனலிடை வாடி
வருந்து வோர்க்கவை தீர்த்திடு திவ்விய மருந்தே. (3)
பொ-ரை:- பிருங்கி என்னும் பெயரையுடைய பெரிய முனிவன்
வந்து அவருடைய பாதங்களை வணங்கி 'பெருகியுள்ள புண்ணிய
வகைகளை யெல்லாம் இறைவன்பால் கொண்ட அன்பினால் அறிந்துள்ள
அறிஞனே, துன்பம் நிறைந்த உலகில் ஆழமான நீரினில் அகப்பட்டு வாடி
வருந்துவோருக்கு அந்தத் துன்பத்தைத் தீர்த்து வைக்கும் மருந்து
போன்றவரே'
359. யாதும் நீயறி யாதிலை யெண்ணிலா வருடம்
மாத வங்கள்யான் புரிந்துமெய் வருந்தியும் பரமன்
ஏத மில்லருள் புரிந்திலன் இனியருள் புரியும்
நீதி யீதெனும் உபாயமொன் றருளென நிகழ்த்த. (4)
பொ-ரை:- 'நீ அறியாதது எதுவும் இல்லை. எண்ணிக்கை
இல்லாத ஆண்டுகளாக உடல் வருந்தி பெரிய தவங்களை நான்
செய்திடினும் சிவபெருமான் துன்பம் இல்லாத அருளைத் தரவில்லை.
இனி இறைவன் அருளைப் பெறும் நீதியான வழி இன்னது என்னும்
உபாயம் ஒன்றைக் கூறி யருளுக என்று கூறினான்.
360. சனற்கு மாரனப் பிருங்கிசொல் வினவியே தயவாய்
உனக்கு நின்மல னருள்புரி யுபாயமொன் றுளதால்
மனத்தி லன்பொடு கேளதி ரகசிய மாறாச்
சினத்த தீவினைப் பனிக்குயர் பருதிபோல் திகழும். (5)
பொ-ரை:- பிருங்கி முனிவன் சொன்னதைக் கேட்ட
சனற்குமாரன் அன்புடன் 'உனக்கு மலமற்ற சிவபெருமான் அருள்
புரிவதற்கு உபாயம் ஒன்று உள்ளது. மனத்தில் அன்புடன் இரகசியமான
இதைக் கேட்பாயாக. அது ஆறாத சினத்துடன் வரும் தீ வினையாகிய
பனிக்குச் சூரியன் போன்று விளங்குவதாகும்' என்றார்.
361. அலகில் சித்திகள் யாவையு மளிப்பது பூசா
பலனெ லாந்தரு வதுசிவனீ மகிழ்வது பகரில்
இலங்கு பத்தியி னியற்றுநற் பிதக்கண மிதனை
விலகி னார்செயும் பூசையும் வீணெனும் வேதம். (6)
பொ-ரை:- 'அந்த உபாயம் அளவில்லாத சித்திகள் எல்லாவற்றையும்
தரக்கூடியது, சிவபெருமானைப் பூசை செய்யும் பலன்
எல்லாவற்றையும் தரக்கூடியது, உமையம்மை மகிழக்கூடியது,
விளங்குகின்ற பத்தியுடன் செய்யக்கூடியது, இதனைச் செய்யாது விலகி
மற்றைப் பூசைகளைச் செய்வது வீணாகும் என்று வேதம் கூறும்'
362. எங்கள் சங்கர னன்றியே தேவர்கட் கீரெண்
மங்க லில்லுப சாரபூ சனைதரு மகிழ்ச்சி
செங்கை மான்மறித் தேவர்க்குப் பிதக்கண மகிழ்ச்சி
தங்க வேசெயு மெனப்பல வாகமஞ் சாற்றும். (7)
பொ-ரை:- இந்த விரதத்தால் குறைதல் இல்லாத பதினாறு
வகையான உபசார பூசனை செய்த மகிழ்ச்சியைத் தேவர்களுக்கு
உண்டாக்கும், செங்கையில் மானைத் தாங்கியுள்ள தேவனாகிய சிவபெருமானுக்கு
இவ்விரதத்தின் மகிழ்ச்சி எப்பொழுதும் நிலைத்திருக்கும் என்று
ஆகமங்கள் கூறுகின்றன.'
363. இனைய தாகிய சிவன்மகிழ் பிதக்கண மிதனை
நினையு மன்பொடு புரியென நிகழ்த்தலும் பிருங்கி
முனிவ னன்னது முடிவுற நினையென முனிவன்
அனைய தாகென வுரைத்தனன் பிருங்கியு மன்பால். (8)
பொ-ரை:- இவ்வளவு பெருமை உடைய சிவபெருமான் மகிழும்
இந்த விரதத்தை மனதில் அன்போடு செய்வாயாக' என்று சனற்குமாரன்
கூறவும், பிருங்கி முனிவன், 'அந்த விரதம் செய்யும் வகையினை
நினைப்பாயாக' என்று வேண்டவும், 'அவ்வாறே விரதம் நோற்கும்
வழியினை' சனற்குமாரன் கூறினான். பிருங்கி முனிவன் அன்போடு,
364. வணங்கி யன்னவன் விடைகொடு போந்தக மகிழ்ந்தே
அணங்கி னல்லவ ளாகிய யுமையினை யன்றிப்
பணங்கொள் வாளராப் பணியணி பரனையே பரிவால்
இணங்கு மைந்திரண் டாண்டெலாம் பிதக்கண மியற்ற. (9)
பொ-ரை:- சனற்குமாரனை வணங்கி விடைபெற்றுச் சென்று
உள்ளம் மகிழ்ச்சியோடு பெண்களுக் கெல்லாம் நல்லவளாகிய
உமையம்மையைத் தவிர்த்துப் படமுடைய ஒளி பொருந்திய பாம்பினை
அணிந்துள்ள மேலான சிவபெருமானை நினைந்து அன்புடன்
விருப்பத்தினால் பத்து ஆண்டுகள் தவம் செய்தான்.
365. நம்ப னச்செயல் மகிழ்ந்தன னல்வரங் கொடுத்தற்
கும்பர் மாமுனி பிருங்கிமுன் இனிதெழுந் தருளக்
கொம்பனாளுமை கூறுவாள் குணகுணி யென்னா(து)
உம்பர் நாயக பிரித்தனன் என்னையும் உனையும். (10)
பொ-ரை:- நம்பினார்க்கு அருளும் சிவபெருமான் பிருங்கியின்
தவத்திற்கு மகிழ்ந்து நல்ல வரம் கொடுப்பதற்காகத் தேவர்கள்
முனிவர்கள் புடை சூழ பிருங்கி முனிவன் முன்பாக இனிமையாக
எழுந்தருளினார். அப்பொழுது உயிர்களுக்குக் கொழுகொம்பு போன்ற
உமையம்மை 'தேவர்களின் தலைவரே! குணத்தையும் குணத்தையுடைய
குணியையும் நினைக்காமல் உன்னையும் என்னையும் பிரித்து
இம்முனிவன் தவம் செய்துள்ளான்' என்று கூறினாள்.
366. நின்னை மாத்திரம் பிதக்கணஞ் செயுமிவன் நிலைமை
நன்மை யோவரம் கொடுத்தரு ளேலென நவிற்ற
மின்ன னாயுனை மனத்திடை வணங்கினன் மிகவும்
அன்ன வன்தனை முனியலை யெனநயந் தருள, (11)
பொ-ரை:- நின்னை மட்டுமே நினைத்துத் தவம் செய்த இவன்
நிலைமை நன்மை உடையதோ? (இல்லை) இவனுக்கு வரம் கொடுத்து
அருள் செய்தல் வேண்டா' என்று பார்வதி கூறினாள். 'மின்னலைப்
போன்ற ஒளியுடையவளே! உன்னை மனத்திடை மிகவும் வணங்கினான்.
அவனிடம் சினம் கொள்ளாதே' என்று இனிமையாகச் சிவபெருமான்
கூறினார்.
367. ஆயி னென்றனக் கொருவர மளித்தபின் னவர்க்கு
நேய மார்வரம் அருளெனக் கருள்வர நிகழ்த்திற்
தூய நின்திரு மேனியில் பாதியென் சொரூபம்
ஏயு மாறருள் செய்வதென் றுமையவள் இயம்ப. (12)
பொ-ரை:- 'ஆயினும், எனக்கு ஒரு வரம் அளித்தபின் அந்த
பிருங்கி முனிவனுக்கு அன்பு நிறைந்த வரம் அருளுக. எனக்கு அருளும்
வரத்தில் தூய்மையான உம்முடைய திருமேனியில் பாதி பாகம் என்னுடைய
உருவம் பொருந்துமாறு அருள் செய்க' என்று உமையம்மை வேண்டினாள்.
368. செப்பு மிவ்வர மருந்தவம் புரிந்தலால் சேரா
திப்பு விக்கணென் றிறைசொல வத்தவ மிதுவென்
றொப்பி லாதவள் உரையென வுன்னியே யெல்லாம்
தப்பி லாதளிப் பதுநமக் குவகைசெய் தகைத்தாய். (13)
பொ-ரை:- சிவபெருமான், அரிய தவம் புரிந்தாலன்றி நீ கேட்ட
வரம் சேராது' என்று சொன்னார். அவ்வாறு பாகம் பெற எந்த வகைத்
தவம் செய்யவேண்டும் என உரைப்பீர்' என்று ஒப்பில்லாத உமையம்மை
உரைத்தாள். அதற்குச் சிவபெருமான் 'எண்ணிய எல்லாவற்றையும்
தரக்கூடியது, நமக்கு மகிழ்ச்சியை அளிப்பதும் ஆகும்.'
369. விரைவி னிற்பய னல்குகே தாரமா விரதம்
உரைசெய் யாகம விதிப்படி யாங்கதை யுஞற்றில்
விரைவி னித்தியா னந்தமா நமதுமெய் வடிவிற்
பரையு னக்கொரு பாதிநல் குதுமெனப் பகர்ந்தான். (14)
பொ-ரை:- விரைவாக பயன் அளிப்பதாகிய கேதார விரதத்தை
ஆகம விதியில் சொல்லியபடி செய்தால் விரைவில் நிலைத்த இன்பமாம்
நம்முடைய மெய் உடலில் பராசத்தியாகிய உனக்கு ஒரு பாதி
கொடுப்போம்' என்று கூறினார்.
370. பகர்ந்த வாசக முமையவள் கேட்டருட் பகவ!
நிகழ்ந்த வவ்விர தஞ்செயு முறைமையுஞ் செய்தற்
குகந்த வுத்தம தலமுநன் கியம்பென வுமையே
புகழ்ந்து மூன்றுநாட் செய்யவு மொருவழிப் புகலும். (15)
பொ-ரை:- இறைவன் சொன்னதைக் கேட்டு உமையம்மை
'அருள் தரும் இறைவரே! கேதார விரதம் செய்யும் முறைமையும்
செய்தற்கு ஏற்ற உத்தம தலமும் கூறுவீராக' என்று உமையம்மை சிவ
பெருமானை மூன்று நாள் புகழ்ந்து பூசை செய்தபின் பெருமான் விரதம்
இருப்பதற்கான வழியைக் கூறினார்.
371. மதிசெய் கன்னிமா தந்தனின் மதிவளர் நவமி
யதுதொடங்கியம் மதிகுறை சதுர்த்தசி யளவும்
துதிசெய் மூவெழு தினத்தினுஞ் சுடரெழு வதன்முன்
புதுவிரைப் புனல் நானமும் நியதியும் புரிந்து. (16)
பொ-ரை:- அறிவு பொருந்திய புரட்டாசி மாதத்தில் வளர்பிறை
நவமி நாள் தொடங்கி முழுமதிநாள் வந்தபின் தேய்பிறையில் சதுர்த்தசி
நாள் அளவும் வழிபாடு செய்து இருபத்தொரு நாட்களிலும் சூரியன்
உதிப்பதன் முன்னர் எழுந்து, புதிய மணமுடைய நீரில் நீராடி நித்திய
கருமங்களையும் செய்து'
372. கவிய மைந்தமு தைந்தொடு கனிகரும் பிரதம்
செவிய நல்லிள நீர்கள் கந்தோதகஞ் சேரும்
திவிய மானசுத் தோதகந் திருவெழுத் தைந்தான்
அவியன் னாய்திரு வுருத்திரஞ் சமகநன் மனுவால், (17)
பொ-ரை:- 'இனிய ஐந்து வகை உணவு வகைகளோடு பழம்
சருக்கரை சாறு நல்ல செவ்விளநீர், முதலியன படைக்க வேண்டும். சுத்த
நீர் சேரும் புனிதமான நன்னீர்க்கடல் மூழ்கி திருவைந்தெழுத்தை
உச்சரித்து திருவுருத்திரம் சமகம் ஆகியவற்றை நல்ல மனு நூலில்
சொன்னபடி சொல்ல வேண்டும்',
373. முந்து மன்பினால் எமையபி டேகித்து முடிவில்
பைந்து கிற்கதி ரொளிதிகழ் ரத்தினா பரணம்
சந்த னங்கருப் பூரமான் மதமகில் சாத்திக்
கந்த மாமலர் மாலைக ளாலலங் கரித்து, (18)
பொ-ரை:- ‘முற்பட்டு வரும் அன்பினால் எம்மை அபிடேகம்
செய்த பின், பசுமையான புத்தாடை அணிவித்து சூரிய ஒளிபோன்று
ஒளியுடைய இரத்தினம் முதலான மணிகளால் ஆன ஆபரணங்களை
அணிவித்து, சந்தனம் கருப்பூரம் மான்மதம் அகில் முதலியன சாத்தி,
மணம் பொருந்திய மலர்களாலான மாலைகளால் அலங்காரம் செய்ய
வேண்டும்'.
374. பருப்பின் போனகம் பாயசம் மிளகுநெய் பதங்கள்
கருப்பிற் கட்டியின் போனக மறுசுவை கறிகள்
விருப்பொடு வாய்த்திடு மபூபங்கள் நறுங்கனி விதங்கள்
சருக்க ரைப்புனல் பானிய மருத்துக தயவால், (19)
பொ-ரை:- “பருப்பு உணவு, பாயசம், மிளகு நெய் முதலானவற்றால்
ஆன இனிய உணவுகள், சருக்கரை சேர்ந்த உணவு, ஆறு
சுவையுடைய உணவு வகைகள், விரும்பி உண்ணப்படும் பணியார
வகைகள், இனிய பழ வகைகள், சருக்கரை நீர் முதலான கலந்த பானகம்
முதலியவற்றை அன்புடன் படைத்திடல் வேண்டும்'.
375. திருந்து பாகிலை சேர்ந்ததக் கோலமோ டேலம்
பொருந்து சாதிநற் காயில வங்கக்கர்ப் பூரம்
அருந்து மைந்தெனச் சொலுமுக வாசமு மளித்து
வருந்து றாவகை தூபமுந் தீபமும் வழங்கி. (20)
பொ-ரை:- 'நல்லதான வெற்றிலைப் பாக்குடன், அருந்தும் ஐந்து
என்று சொல்லப்படுகின்ற தக்கோலம், ஏலக்காய், நல்ல சாதிக்காய்,
இலவங்கம், வங்கக் கர்ப்பூரம் ஆகியவை சேர்ந்த முகவாசமும் அளித்து
துன்பம் உண்டாகாத வகையில் தூபமும் தீபமும் காட்ட வேண்டும்',
376. மின்னு மாசிப்பச் சைக்கையாந் தகரையே விளவு
மன்னு வில்லுவ மிலந்தைநன் னொச்சியே வன்னி
துன்னெ ருக்கொடு நந்தியா வர்த்தமே தும்பை
யன்ன மல்லிகை யறுகுமா விட்டுணு கிரந்தி. (21)
பொ-ரை:- ஒளியுடைய மாசிப் பச்சை, கையாந்தகரை, விளா,
நிலை பெற்ற வில்வம், இலந்தை, நல்ல நொச்சி, வன்னி ஆகிய
இலைகளையும், நெருங்கிய எருக்கம் பூ, நந்தியாவர்த்தம், தும்பைப் பூ
மல்லிகை, அறுகு, பெரிய விட்டுணுகிரந்தி ஆகியவையும்,
377. அலரி மாதளை நெல்லிபித் திகைமண மடுத்து
நலிவில் பாரிசா தங்கணா யுருவியே நாவல்
இலகு பத்திர நாமமா யிரமருச் சித்துப்
புலரு மற்றைநாள் பாரணம் விதிப்படி புரிவாய். (22)
பொ-ரை:- அலரிப் பூ, மாதுளை, நெல்லி, சாதிமல்லி, பாரிசாதம்,
நாயுருவி, நாவல், சிறிய பச்சிலை ஆகியவை கொண்டு ஆயிரம் பேர்
சொல்லி அருச்சனை செய்து, மறுநாள் பொழுது விடிந்தபின் பாரணம்
விதிப்படி செய்யவேண்டும்.
378. கூறு மிவ்விர தந்தனைக் குவலயத் தோங்கி
ஏறு சீர்புக ழோதன புரத்துநீ யெய்தித்
தேறு சிந்தையில் செய்தனை யெனின்முனஞ் செய்யும்
பேறு கிட்டுமென் றுரைத்தனன் வரைத்தனுப் பெருமான். (23)
பொ-ரை:-கூறிய இந்த விரதத்தைப் பூவுலகில் ஓங்கி வளரும்
சீரையும் புகழையும் உடைய சோற்றுத் துறை சென்று அங்கு ஆராய்ந்து
அறிந்த சிந்தையுடன் நீ செய்வாயாயின் முன்னம் நீ கேட்ட வரம் கிடைக்
கும்' என்று மலையை வில்லாகப் பிடித்த சிவபெருமான் உரைத்தார்.
379. கங்கை சூடிதாள் பணிந்தருள் விடைகொடு கனிவாய்
துங்க வானவர் பரிசனஞ் சேடியர் சூழத்
தங்கு முத்தம வோதன புரியிடைச் சார்ந்தே
எங்கள் அம்மைகே தாரநல் விரதத்தை யியற்றி. (24)
பொ-ரை:- எங்களுடைய அம்மையானவர் கங்கையை முடியில்
சூடியுள்ள சிவபெருமான் திருவடி பணிந்து அவரிடம் விடைபெற்று
உயர்ந்த வானவர்கள் பணியாட்கள் சேடியர் சூழ மேன்மை தங்கும்
சோற்றுத்துறை வந்து சேர்ந்து நல்ல கேதார விரதத்தைக்
கடைபிடித்தார்கள்.
380. துதித்த காலையில் பாற்கடன் மீதுசெஞ் சோதி
பதித்த வாதபர் கோடியோர் இளங்கதிர் பரப்பி
யுதித்த தென்னவெள் விடையின்மேல் உமையவள் முன்னம்
மதித்த வண்ணமே தோன்றினான் பேரருள் வண்ணன். (25)
பொ-ரை:- இவ்வாறு விரதம் இருந்தபொழுது பால் கடலின் மீது
சிவந்த ஒளி பொருந்திய கோடி சூரியர் ஒன்று சேர்ந்து ஒருஇளம் கதிரைப்
பரப்பிக் கொண்டு உதித்தது போன்று, பேரருளையே வடிவமாக உடைய
சிவபெருமான் உமையம்மை முன்பு தோன்றினார்.
381. தோன்று தன்கண வனைமல ரடியிணை தொழுதே
ஆன்ற வேதமு மளவிடா ஞானவா ரமுதே
யூன்று மன்பிலேன் புரிந்தவிவ் விரதநீ யுளத்தில்
ஏன்று வந்ததே பேறினி யரியதென் னெனக்கே. (26)
பொ-ரை:- தோன்றிய தன் கணவராகிய சிவபெருமான் திருவடி
இணையை வணங்கி, பெருமை யுடைய வேதத்தாலும் அளவிட முடியாத
ஞானமாகிய ஆரமுதே, நிலைத்த அன்பில்லாத அடியேன் புரிந்த இந்த
விரதத்தை மனதால் ஏற்றுக்கொண்டு என் முன் காட்சி தந்ததே நான்
பெற்ற பெரிய பேறாகும். இனி எனக்கு அரியது என்ன இருக்கின்றது?
(ஒன்றும் இல்லை).
382. என்று கூறலு மிறைதிரு வுளமகிழ்ந் தெமது
நன்று மேனியில் பாதிதந் தோமென நங்கை
துன்று மாமணிச் சோதியை மரகதச் சோதி
யொன்றி யோர்புறத் திருந்தெனச் சிவனிடத் துறைந்தாள். (27)
பொ-ரை:- என்று அம்மை கூறியதும், சிவபெருமான் உள்ளம்
மகிழ்ந்து 'என்னுடைய நல்ல மேனியில் பாதியை உனக்குத் தந்தோம்'
என்று கூறியதும் நெருங்கிய பெரிய மாணிக்க மணியின் சோதியை
மரகதச் சோதி சேர்ந்து ஒரு புறத்து இருந்ததுபோல் சிவபெருமானிடத்து
உமையம்மை பாகத்து அமர்ந்தாள்.
383. கால மன்னதிற் செஞ்சடைக் கருங்குழல் கலக்க
பால நீற்றொடு சிந்துரத் திலகமும் பயில
ஏல ராவணி யொடுமுத்த மாலிகை யிலங்க
கோல வன்புலி யுரியொடு பட்டுடை குலவ. (28)
பொ-ரை:- அவ்வாறு உமையம்மை ஒருபாகம் பெற்ற பின்னர்
செஞ்சடையும் கரிய குழலும் கலந்து காணப்பட்டது; பால் போன்ற
வெண்ணீற்றொடு சிவந்தத் திலகமும் விளங்கியது; பொருந்திய பாம்பு
அணியுடன் முத்து மாலையும் விளங்கியது; அழகிய புலித்தோலுடன்
பட்டாடையும் தோன்றியது.
384. விந்து நாதமொன் றாயுயிர்க் கிருஞ்சுக விளக்கம்
நந்தனார் விழிச்செம் பஞ்சின் குழம்பொடு நணுகத்
தந்தை தாயிரு வோரையு மோருருத் தன்னில்
இந்த மாநிலத் தெவர்களுங் கண்டிளைப் பாற. (29)
பொ-ரை:- விந்துவும் நாதமும் ஒன்றாய்ச் சேர்ந்து உயிர்களுக்குப்
பெரிய சுகத்தைத் தரும் பொருட்டு சிவபெருமான் திருக்கண்ணும்,
செம்பஞ்சு பூசிய அம்மையின் திருக்கண்ணும் அருகிருக்க, தந்தை தாய்
இருவரையும் ஓர் உருவத்தில் இந்த உலகத்தில் உள்ளோர் எல்லோரும்
கண்டு துன்பம் நீங்கினர்.
385. ஆதி நாயகன் அத்தனா ரீசுர னானான்
போது வானவர் போதுமா மழையினைப் பொழிந்தார்
ஓது பத்தர்கள் ஒலிபரந் தோவலா (ஓங்கலால்) லுலகம்
நாத மாமயம் என்பது நாட்டுமெந் நாளும். (30)
பொ-ரை:- ஆதி நாயகனாகிய சிவபெருமான் அர்த்தனாரீசுவரன்
ஆனதைக் கண்ட வானவர்கள் எல்லோரும் பெரிய மலர் மழையினைப்
பொழிந்தார்கள். போற்றும் அடியார்கள் ஒலி மிகுந்து ஆரவாரம் செய்தலால்
'உலகம் நாதமயமானது' என்னும் பெயர் எந்நாளும் நிலைபெற்றது.
386. இமைய மீன்றருள் தோகையும் ஓகையுற் றிருப்பக்
கமைநி ரம்பிய பிருங்கிமா முனிக்கரன் கனிந்து
தமைவ ணங்குநின் மனந்திரு கோயிலா நமக்கே
அமைபெ ருங்கணத் தலைவனீ யாகவென் றருளி. (31)
பொ-ரை:- இமயமலை யரசன் பெற்ற மயிலைப்போன்ற சாயல்
உடைய பார்வதி யம்மை மகிழ்ச்சியுடன் இருக்கின்ற காலத்தில் பொறுமை
நிறைந்த பிருங்கி மாமுனிக்குச் சிவபெருமான் கனிவுடன் 'எம்மை
வணங்கும் நின் மனம் திருக்கோயிலாகும்; நமக்குப் பொருந்திய பெரிய
சிவகணத்திற்கு நீ தலைவனாகுக' என்று வரம் அருளினார்.
387. உத்த மத்தல மானவிவ் வோதன புரியில்
சத்தி யோடெமை வலஞ்செய்வாய் எனமுனி தாழ்ந்து
பத்தி யாலிரு வோரையும் வலஞ்செய்து பரன்பால்
வைத்த பார்ப்பதி கருணையும் பெற்றக மகிழ்ந்தான். (32)
பொ-ரை:- 'உத்தம தலமாகிய இந்த சோற்றுத்துறையில்
சத்தியோடு எம்மை வலம் செய்வாய்' என்று சிவபெருமான் கூறவும்
பிருங்கி முனிவன் தன் சிரம் தாழ்த்தி பத்தியுடன் சத்தி சிவன்
இருவரையும் வலமாகச் சுற்றி வந்து வணங்கி, சிவபெருமானிடத்தில்
அன்பு வைத்துள்ள பார்வதியின் கருணையையும் பெற்று உள்ளம்
மகிழ்ந்தான்.
388. கன்ன லின்மொழி யமுதினைக் கண்ணுதற் கருத்தி
இன்னல் செய்விட வேகந்தீர்த் தருளுமை யிசைப்பான்
என்னை விட்டுனை வலஞ்செய்வோர் மதுநுகர்ந் திரங்கு
மன்ன வண்டுரு வெடுக்குமா றருளென வளித்தான். (33)
பொ-ரை:- அமுதினைக் கண்ணுதல் பெருமானாகிய
சிவபெருமானுக்கு ஊட்டி, துன்பம் செய்கின்ற நஞ்சின் வேகத்தைத்
தீர்த்து அருளும் கரும்பு போன்ற இனிய மொழியுடைய உமையம்மை,
'என்னை விட்டு உன்னை வலம் செய்கின்றவரைத் தேன் உண்டு
மயங்கும் வண்டு உருக் கொள்ளுமாறு அருளுக' என்று மொழிந்ததைக்
கேட்ட சிவபெருமான் (அவ்வாறே ஆகுக என) அருளினான்.
கேதார விரதச் சருக்கம் முற்றிற்று
14. சோமவாரச் சருக்கம்
389. அம்புய நாண்மலர் வதனத் தம்பிகைகே தாரநோன் பாற்றி நீண்ட
செம்பவளச் சடைப்பரமன் இடப்பாகஞ் சேர்ந்திருந்த திரமீ தாமால்
இம்பருல குயிரெவையும் உமதுயிராம் எனக்கருதி யிரங்கி நாளும்
நம்புதவம் புரிமுனிவீர் இனிசோம வாரபலன் நயந்து சொல்வாம். (1)
பொ-ரை:- அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற முகமுடைய
பார்வதிதேவி கேதார விரதம் இருந்து சிவந்த பவளம் போன்ற நீண்ட
சடையுடைய மேலான சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்ற பெருமை
இதுவாகும். இவ்வுலகத்து உயிர் எல்லாம் உங்கள் உயிரெனவே மதித்து
நாளும் இரக்கம் கொண்டு சிறந்த தவம் செய்யும் முனிவர்களே! இனி
சோம வார விரதப் பலனை விரும்பிச் சொல்லுகின்றேன்.
390. நன்மைதரு மறிவுதவங் கல்வியுஞ்செல் வமுங்கொடுக்கும் நாளும் பெற்ற
தன்மையுறு பிறப்பகற்றும் தரணியொடு வானாளத் தருஞ்சீர் செய்யும்
துன்மரணந் தவிர்க்குமடற் பகைதொலைக்கு பரமுத்திச் சுகமும் நல்கும்
வின்மதிசூ டியபரமன் மகிழ்சோம வாரமியல் விரதந் தானே. (2)
பொ-ரை:- வில் போன்று வளைந்த பிறையைச் சூடிய மேலான
பரமனாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் சோம வார விரதம்
புரிந்தால் நன்மை உண்டாகும்; அறிவு தவம் கல்வி செல்வம் ஆகியவை
கொடுக்கும்; நாளும் தொடர்ந்து வரும் பிறப்பை அறுக்கும்;
மண்ணுலகத்தையும் வானுலகத்தையும் ஆளக்கூடிய சிறப்பைக்
கொடுக்கும்; துன் மரணம் வராமல் தடுக்கும்; கொல்ல வரும் பகையை
அழிக்கும்; (எல்லாவற்றிற்கும்) மேலான முத்தியாகிய சுகத்தையும்
கொடுக்கும்.
391. பொன்னவிருஞ் சுணங்கலர்ந்த புளகமுலை யயிராணி புடையின்மேவ
மின்னனைய நுழைமருங்கின் மேனகையும் உருவசியும் விரும்பி யாடக்
கின்னரர்கள் யாழ்முரலக் கிளிமழலை மதிவதனக் கொண்டை நாட்ட
வன்னமுலை யரம்பையர்கள் மணிக்கவரி முறையிரட்ட வசந்தமேவ. (3)
பொ-ரை:- பொன் போன்ற தேமல் படர்ந்த பருத்த தனமுடைய
அயிராணி பக்கத்தில் வர, மின்னலைப் போன்ற இடையுடைய மேனகையும்
ஊர்வசியும் விருப்பத்துடன் ஆடிவர, கின்னரர்கள் யாழ் வாசிக்கவும், கிளி
போன்ற மழலை மொழியும் நிலவு போன்ற முகத்தையும் பெரிய தலைக்
கொண்டையும் அழகிய முலையுமுடைய அரம்பையர்கள் அழகிய கவரியை
வீசிக்கொண்டு வரவும் வசந்த காலம் வரவும்,
392. விண்ணவர்கள் மணிமகுட விதமுரிஞ்சிப் பதஞ்சிவப்ப விரைகு லாவும்
தண்ணென்மது மழைபொழியுஞ் சந்தான மலர்சொரியச் சலசம் பூத்த
வண்ணமுகி லிருந்ததென மடங்கலணை மீதிருந்து வானோர் கோமான்
நண்ணு முனிவர ராசி நவிலவிய னுலகரசு நடத்து நாளில், (4)
பொ-ரை:- விண்ணவர்களின் மணி பொருந்திய முடி படுதலால்
பாதம் சிவந்துபோகவும், மணம் நிறைந்த குளிர்ந்த தேன் மழைபோல
பொழியும் சந்தான மலர் சொரியவும், தாமரை பூத்த அழகிய மேகம்
போன்ற மென்மையான அரியணையில் வீற்றிருந்து வானவர்
கோமானாகிய இந்திரன் அருகில் உள்ள முனிவர்கள் ஆசி வழங்க பரந்த
வானுலகத்தை ஆண்டு வரும் நாளில்,
393. விருத்திரனென் றொருநிருதன் மேவலர் தம்முயிர் குடிக்கும் வீரவேலோன்
கருத்திலுறு வெகுளியினால் கனல்பொறிகள் சிதறிய செங்கண்ணான் என்னா
தருக்கினுயர் வடவரையைத் தண்டமெனத் தடித்தெடுக்குந் தறுகணாளன்
உருத்திகழும் வடவனலும் உளநடுங்கிச் சிகையொடுங்க வரப்புச் சொல்லான். (5)
பொ-ரை:- விருத்திரன் என்னும் பெயரையுடைய ஓர் அரக்கன்
பகைவர்களின் உயிரைக் குடிக்கும் வீர வேலை ஏந்தியவனாவான். அவன்
உள்ளத்தில் உண்டாகும் சினத்தினால் தீப்பொறி சிந்தும் சிவந்த
கண்களை உடையவனாகும். அகங்காரத்தால் உயர்ந்த இமயமலையைத்
தண்டாயுதம் போல சினந்து எடுக்கும் ஆண்மையுடையவனாவான். உரு
விளங்கும் வடவைத் தீயின் உள்ளமும் நடுங்கித் தலை ஒடுங்கும்படியான
உரத்த சொல்லையுடையவன் ஆவான்.
394. தானவர்தம் குலம்விளங்கச் சனித்தமரர் முதல்வனொடு சமருஞ் செய்ய
வானவுல கெய்துதலும் வாசவனும் வெள்ளைமத மலையி லேறி
யானபடைக் கடல்சூழ வார்ப்பரவந் திசையோர்ப்ப வணைந்தான் என்னார்
ஊனகுவேல் விருத்திரனும் உறுபடையோ டறைகூவி யுருத்து வந்தான். (6)
பொ-ரை:- அசுரர்கள் குலம் விளக்கம் பெறப் பிறந்த விருத்திரன்
தேவர்களின் தலைவனாகிய இந்திரனோடு போர் செய்ய தேவருலகத்தை
அடைந்தான். இந்திரனும் மலைபோன்ற மதம் பொருந்திய வெள்ளை
யானையின் மீது ஏறிப் பொருந்திய கடல் போன்ற படை சூழ்ந்து வந்து
ஆரவாரம் செய்த ஒலி எட்டுத் திசையும் எதிரொலிக்க வந்தான்.
பகைவர்களின் ஊன் பொருந்திய வேலையுடைய விருத்திரனும் தக்கப்
பெரும்படையோடு வீரம் பேசிக்கொண்டு சினத்துடன் வந்தான்.
395. இருபடையும் படைவழங்கி யெதிர்ந்தபொழு ததிர்ந்ததுல கெழுந்த சோரி
நிருதர்தலை புயங்கரமன் னிலைதடிந்தார் அமராட னிருதர் வானோர்
குருமவுலி சிரங்கரந்தோள் குறைத்தனரப் பொழுதமரர் கோமான் செங்கை
பொருசிலைநா ணெறிந்தசுரர் போர்தொலைந்து பயந்தோடப் புறமுங் கண்டான். (7)
பொ-ரை:- இரு படையும் ஆயுதங்களை விட்டு போர் செய்த
பொழுது உலகம் நடுங்கியது; இரத்த வெள்ளம் பரந்தது. அசுரர் தலை
தோள் கை ஆகியவற்றைத் தேவர்கள் வெட்டினர். அசுரர்கள் தேவர்களின்
ஒளி பொருந்திய முடியுடைய தலை கை தோள் ஆகியவற்றை வெட்டி
வீழ்த்தினர். அப்பொழுது தேவர்களின் அரசனாகிய இந்திரனின்
செங்கையில் இருந்த போரிடும் வில்லிலுள்ள நாண் ஒலி செய்து
அசுரர்கள் போரில் தோற்றுப் பயந்து புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.
396. கண்டபொழு தசுரர்சிறை கைச்சிலையை வளைத்து நெடுங் கணை கடுவி
அண்டரிறை யெதிர்வரலும் அவனுமடற் சிலையைவளைத் தநேகவாளி
மண்டுமவ னிரதமிசை மார்பின்மிசை தோளின்மிசை வழங்கி யார்த்தான்
கொண்டசினத் தவுணனுமக் கொடுங்கணையை யடுங்கணைகள் குறித்து விட்டான். (8)
பொ-ரை:- இந்திரன் புறமுதுகிட்டு ஓடும்பொழுது அசுரர்
தலைவன் தன் கையிலுள்ள வில்லை வளைத்து நீண்ட அம்புகளை
விட்டுக்கொண்டே தேவர்களின் அரசனான இந்திரனின் முன்பாக
வந்தான். இந்திரனும் போரிடும் வில்லை வளைத்து அநேக அம்புகளை
அந்த அசுரனின் தேர் மீதும், அசுரன் மார்பின் மீதும் தோளின் மீதும்,
மிகுதியாக விட்டு ஆராவாரம் செய்தான். அது கண்டு அவுணனும் சினம்
கொண்டு கொடிய அம்புகளைத் தன்மீது எதிர்ந்து வந்த இந்திரனின்
அம்புகளின் மீது விட்டான்.
397. இம்முறையே விருவர்களும் இகல்புரிய வவுணன்வலிக் குடைந்த வானோர்
செம்மல்பல முறைசமரஞ் செய்தும் வெற்றி யுற்றிலனச் செய்கை யாலே
வெம்முனைவன் றகறெனவே பின்வாங்கி முன்னடந்து மேவி வெல்வான்
அம்மவினிச் செயுஞ்சூழ்ச்சி யாதெனும்போ தருட்குரவன் அணைந்து சொல்வான். (9)
பொ-ரை:- இந்த முறையே இருவரும் போர்புரிய அவுணன்
வலிமைக்குத் தோற்ற தேவர்களின் அரசனான இந்திரன் பலமுறை
போரிட்டும் வெற்றி பெற்றிலன். தோல்வியாலே கொடிய போரில் வலிய
ஆடு பின்வாங்குவது போன்று இந்திரனும் பின் வாங்கிச் சென்றான். இனி
போரில் வெல்வதற்கு என்ன தந்திரம் (சூழ்ச்சி) செய்யலாம் என்று
நினைத்த பொழுது, அவனுடைய அருள் குருவான வியாழன் அங்கு
வந்து கூறினான்.
398. சிந்தைசெயும் வரமுதவு மோதனமா புரத்தின்விரிச் சிகமா தத்தில்
வந்துபொருந் திடுசோம வாரவிர தம்புரியும் மரபால் செய்யின்
அந்தமிலா விருத்திரனைக் கொன்றுமலர்த் தொடைவாகை யணிவாய் என்ன
எந்தையிது செய்குவமென் றிந்திரனும் அந்நகரத் தினிது போந்து. (10)
பொ-ரை:- சிந்தையில் உள்ள வெற்றியைத் தரும் வரத்தைப்
பெற சோற்றுத்துறை என்னும் தலத்தில் கார்த்திகை மாதத்தில் வருகின்ற
சோம வாரத்தில் (திங்கள் கிழமையில்) விரதத்தை மரபு வழுவாமல்
செய்யின் அழிவில்லா விருத்திரனைக் கொன்று வாகை மலர் மாலையை
அணிவாய்' என்று குரு (வியாழன்) சொன்னான். அது கேட்ட இந்திரனும்
'எந்தையே! இந்த விரதத்தை நான் புரிவேன்' என்று சொல்லி
சோற்றுத்துறைக்கு இனிதாகச் சென்றான்.
399. ஆதரவின் மதிவாரத் தலர்கமழுங் காவேரி யாற்றின் மூழ்கி
ஏதமிலா வைந்தெழுத்தைச் செபித்தாரா தனையியற்றி யிரவு தன்னில்
சீதமதி யணிந்தசிவன் சேவைசெய்து பின்பசனஞ் செய்திவ் வாரம்
மாதமுழு தினும்விரதம் புரிந்துபரன் மலரடியை வழுத்துங் காலை. (11)
பொ-ரை:- அன்போடு திங்கள் கிழமையில் மலர் மணம் கமழும்
காவேரியில் நீராடி, குற்றமில்லாத ஐந்தெழுத்தைத் தியானம் செய்து,
சிவபெருமானுக்கு ஆராதனை செய்து, இரவு வேளையில் குளிர்ந்த மதி
அணிந்துள்ள சிவபெருமானுக்குப் பணிவிடை செய்து பின்பு
உணவுண்டான். இவ்வாறு கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்
கிழமைகள் அனைத்திலும் விரதம் புரிந்து மேலான சிவனின் மலர் போன்ற
திருவடியைப் போற்றி வணங்கிய காலத்தில்,
400. செஞ்சடையில் பிறையிலங்கத் திருமுகத்தி னருள்விளங்கத் தேவர் போற்றும்
மஞ்சனமா மிடறிலங்க விடையினெம்மா னெழுந்தருள வமரர் கோமான்
கஞ்சமல ரடிவணங்கி யஞ்சலிசெய் தாயிரங்கண் களித்து நிற்பப்
பஞ்சனமெல் லடிப்பாகன் வேண்டும்வரம் பகர்தியெனப் பணிந்து சொல்வான். (12)
பொ-ரை:- சிவந்த சடையில் பிறைமதி விளங்கவும்,
திருமுகத்தில் அருள் தோன்றவும், தேவர்கள் போற்றும் மைபோன்ற கரிய
கண்டம் விளங்கவும் காளையின் மீது அமர்ந்து தோன்றியருளினார்.
தேவர்களின் அரசனான இந்திரன் பெருமானின் தாமரை போன்ற
திருவடிகளை வணங்கி கைகளைத் தலைக்கு மேல் குவித்துத் தன்
ஆயிரம் கண்களும் களிக்க நின்றான். பஞ்சு போன்ற மென்மையான
திருவடியை யுடைய பார்வதியைப் பாகம் கொண்ட சிவபெருமான்
இந்திரனை நோக்கி 'வேண்டிய வரத்தைச் சொல்வாய்' என்றார். இந்திரன்
சிவபெருமானைப் பணிந்து.
401. வீரமிகு விருத்திரனை வெல்லும்வரம் அருள்கவென விளங்கு சோம
வாரவிர தப்பலனால் அவனைவெல்லும் வலியுனக்கு வழங்கி னோமென்று
ஈரமதி யணிந்தபரன் பகர்ந்தருள விந்திரன்வா னெய்தி யந்நாட்
கோரவிருத் திரனுயிரைக் குலிசமுணக் கொடுத்துவெற்றி கொண்டா னன்றே. (13)
பொ-ரை:- 'வீரம் மிகுந்த விருத்திரனை வெல்வதற்கு வேண்டிய
வலிமையைத் தந்தருள்க' என்று வேண்டினான். குளிர்ந்த நிலவை
அணிந்துள்ள மேலான சிவபெருமான், 'நீ சோமவார விரதம் புரிந்ததனால்
அதற்குப் பலனாக விருத்திரனை வெல்லும் வலிமை உனக்குக்
கொடுத்தோம்' என்றருளினார். இந்திரன் வானாடு எய்தி, பின்னர்
விருத்திரனுடன் போர் செய்து குலிசாயுதத்தால் விருத்திரனுடைய
உயிரைக் கொன்று வெற்றி கொண்டான்.
402. அளகைநகர்க் கிறைவனிந்த விரதமோ தனபுரத்தி னணைந்து பத்தாண் (டு)
உளமகிழு மன்பினுடன் உஞற்றுதலா லோதிமத்தை யுயர்த்து ளானும்
துளவணியு மாதவனும் தொடர்வரிய சங்கரற்குத் தோழ னாகி
வளனுதவு சங்கநிதி பத்மநிதிக் கதிபதியாய் மன்னி னானால். (14)
பொ-ரை:- அளகாபுரிக்கு அரசனான குபேரன் சோற்றுத்
துறைக்குச் சென்று பத்தாண்டு காலம் உள்ளம் மகிழும் அன்பினுடன்
சோமவார விரதத்தைப் புரிந்ததனால் அன்னக்கொடியை உயர்த்தியுள்ள
பிரமனும், துளசி மாலை அணிந்துள்ள திருமாலும் காண்பதற்கு
அரியவனான சங்கரனுக்குத் தோழனாகி வானுலகத்தில் சங்கநிதி,
பதுமநிதி பெற்று நிலைத்து வாழ்ந்தான்.
403. சிவபத்தி சிரோமணியாய்ச் சகலகுரு வாய்த்தியான சீல னாகி
தவசித்தி சிவபூசை மாதவத்தோர் எவர்களுக்குந் தலைமை பெற்றோன்
பவமுற்று மகற்றுதுரு வாசமுனி வரனிந்தப் பதியின் மேவி
நவமுற்ற மதிவார விரதமொரு நூறாண்டு நயந்து செய்தான். (15)
பொ-ரை:- சிவபத்தியில் சிரோமணியாகவும், எல்லோருக்கும்
குருவாகவும், தியானம் செய்கின்ற ஒழுக்கம் நிறைந்தவனாகவும்,
தவத்தால் சித்தி பெற்றவனாகவும், சிவபூசை செய்கின்ற மாதவத்தோர்
எல்லோருக்கும் தலைமையைப் பெற்றுள்ளவனும், பிறவியை முழுவதுமாக
நீக்கியவனுமான துருவாச முனிவன் இந்தச் சோற்றுத்துறைக்கு வந்து
ஒரு நூறாண்டு காலம் நன்மை தரும் சோமவார விரதத்தை விருப்புடன்
செய்தான்.
404. இவ்விரத மிவனாற்று முறைகங்கா தரனுளத்தி லெண்ணி வானோர்
பவ்வமொறுத் தோன்று திப்பப் பவளவரை மேனிலவு பரந்த தென்ன
செவ்வியமெய்த் திருமேனி நீறிலங்க வுமையுடனே சிறந்து தோன்றி
எவ்வரம்வேண் டுவதென்றான் முனியரனை வணங்கியெழுந் திதனைச் சொல்வான். (16)
பொ-ரை:- இந்த சோமவார விரதத்தைத் துருவாச முனிவன்
புரிவதைக் கங்கையைத் தலையில் தாங்கியுள்ள சிவபெருமான்
உள்ளத்தில் எண்ணி, கடல் போன்ற தேவர்கள் தலைவனான இந்திரன்
போற்றி வணங்க பவள மலைமேல் நிலவு படிந்தது போன்று செம்மையான
மெய்த் திருமேனியில் திருநீறு விளங்க உமையுடன் சிறப்பான
தோற்றத்துடன் காட்சியளித்து 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டான்.
துருவாச முனிவன் சிவபெருமானைக் கீழே விழுந்து வணங்கி எழுந்து
சொல்லுவான்.
405. நின்னையருச் சித்துவலம் வந்துதொழ நின்கதையி னேச மாக
உன்னருணா மத்தையுரைத் தென்னுடைய விருத்தியெல்லாம் உனக்கே யாக்கி
பன்னுசரா சரங்களெல்லாம் நின்வடிவாய்க் கண்டுசிவ பத்தர்க் கென்றும்
அன்னமுதல் உபரிக்க வவர்கடெரி சனந்தினத்தி னன்பு மேவ. (17)
பொ-ரை:- 'உன்னை அருச்சனை செய்து வலம் வந்து
வணங்கவும் நின்னுடைய கதையில் விருப்பம் உண்டாகவும், உன்
திருவருள் கூடிய பெயரைச் சொல்லவும் என்னுடைய தவப்பயன் எல்லாம்
உனக்கே ஆக்கியும், தோன்றியுள்ள அசையும் உயிர்கள் அசையா
உயிர்கள் அசையாப் பொருள்கள் எல்லாம் உன்னுடைய வடிவே என்று
காணவும் சிவ பத்தர்களுக்கு நாள்தோறும் அன்னம் முதலியன கொடுத்து
உதவவும் நாள்தோறும் அவர்களைக் காண்பதில் அன்பு கொள்ளவும் வரம்
வேண்டும்',
406. பலகடல்கள் ஒன்றாகப் பரந்திடுபோ தினுமசையாப் பத்தி மேவ
அலகில்வரம் புரிந்தருள்வாய் ஞானவொளி யேயயன்மா லாதி யோர்கள்
குலவுமருச் சனைமகிழ்ந்த கொற்றவனே யென்றுமுனி கூறச் செம்பொன்
இலகுமக மேருவில்லி யிசைத்தலைதந் தனமிதுகே ளென்று கூறும். (18)
பொ-ரை:- அத்துடன், 'ஞான ஒளியைத் திருமேனியாக
உடையவனே! பிரமன் திருமால் முதலியோர் விரும்பிச் செய்யும்
அருச்சனைக்கு மகிழ்கின்ற வெற்றியை உடையவனே! பல கடல்கள்
ஒன்று சேர்ந்து என்மீது மோதிடினும் உன்மீது மனம் மாறா பத்தி கொள்ள
வரம் தந்தருள்வாயாக' என்று துருவாச முனிவன் கூறினான். மகாமேரு
வில்லாக வளைத்த சிவபெருமான் 'நீ கேட்டதைக்
கொடுத்தோம். இதைக் கேட்பாய்' என்று கூறினார்.
407. அபராத மியற்றார்பாற் சபதமிசை யேலிசைத்தா யாயி னிந்தச்
சுபமான வரம்பலியா தென்றுமுனி யருண்முறையே துணிகு வோமியான்
உபமான மில்லாய்நான் எவ்வுலகுஞ் சென்றுவரு முரநல் கென்றான்
தபராசன் உரைத்தவரம் கொடுத்திறைவன் மறைந்தனனத் தவனுஞ் சென்று, (19)
பொ-ரை:- 'குற்றம் செய்யாதவரிடம் சபதம் செய்யாதே.
செய்தால் இந்த சுபமான நல்ல வரம் பலிக்காது' என்றார். துருவாச
முனிவன் 'அடியேன் தங்கள் திருவருள் வழியே செய்வேன். உபமானம்
இல்லாத பெருமானே! அடியேன் எல்லா உலகங்களுக்கும் சென்று வரும்
வலிமை தந்தருள்க' என்று வேண்டினான். தவம் செய்வதில் அரசன்
போன்றவனான முனிவன் கேட்ட வரத்தைக் கொடுத்து சிவபெருமான்
மறைந்தார். தவம் செய்த முனிவனும்,
408. எல்லார்க்கு மருள்புரிதற் பொருட்டுலகம் யாவையினு மிலங்குகின்றான்
வல்லார்க்கு முலையிடத்தான் றிருச்சோற்றுத் துறையின் முனிவரர்வா னோர்கள்
நல்லார்க்கும் பொருந்தினர்இவ் விரதத்தால் கார்த்திகையி னண்ணு திங்கள்
அல்லாத திங்களிலிவ் விரதஞ்செய் திடினுமெண்ணில் பொருட்கதிப ராவர். (20)
பொ-ரை:- எல்லார்க்கும் அருள் செய்வதற்காக வலியவர்களுக்கும்
தோற்காதவன் எல்லா உலகங் களுக்கும் சென்று வருகின்றான்.
திருச்சோற்றுத்துறையில் செய்யப்படும் முனிவர்கள் தேவர்கள்
நல்லோர்கள் ஆகியோர்களுக்குப் பொருந்திய இந்த சோமவார
விரதத்தைக் கார்த்திகை மாதம் அல்லாத மற்றைய மாதங் களில்
சோமவார விரதம் செய்தால் எண்ணிக்கையில் அடங்காத பொருட்
களுக்கு உரிமை உடையவராவர்.
பாடபேதம்: அல்லாத திங்களினோன் பாற்றிடினும்
மெண்ணில் பொருட் கதிப ராவர்.
சோமவார விரதச் சருக்கம் முற்றிற்று
15. சிவராத்திரிச் சருக்கம்
409. காம மாதி களைந்த முனிவர்காள்!
சோம வார மகிமையைச் சொற்றனம்
வாம மாதினன் மாசிவ ராத்திரி
ஏம மேன்மை யினிதெடுத் தேத்துவாம். (1)
பொ-ரை:- காமம் முதலான குற்றங்களை விட்டு நீங்கிய
முனிவர்களே! இதுவரை சோமவார விரதத்தின் பெருமையைக்
கூறினோம். இடப்பாகம் உமையம்மையை உடைய சிவபெருமானின்
சிவராத்திரி விரதத்தால் பெறும் பாதுகாப்பையும் பெருமையையும் இனி
எடுத்துச் சொல்லுவாம்.
410. திருந்து பாடற் செழுந்தமி ணாவலர்
இருந்த சங்க மிலங்கிய கூடலிற்
பொருந்து வேடன் பொருசிலைச் சம்பகன்
மருந்தில் கூற்றின் வடிவென வந்தவன். (2)
பொ-ரை:- மேலான பாடல்களைச் செய்யும் செழுந்தமிழ்
நாவலர்கள் வீற்றிருந்து சங்கம் ஆய்ந்த கூடல் நகரமான மதுரையில்
போரிடும் வில்லையுடைய எதிர்க்க இயலாத கூற்றுவனைப் போல சம்பகன்
என்னும் ஒருவன் இருந்தான்.
411. அடுத்த கூட லரங்க மெனும்பதி
நடுச்செ றிந்திருள் நண்ணிய கானிடை
வடுக்கொள் சிந்தையன் மன்னி வழிச்செல்வார்
நடுக்க மெய்த நலிவுசெய் தங்கவர். (3)
பொ-ரை:- கூடல் அரங்கம் என்னும் நகரத்தின் பக்கத்தில்
உள்ள, நள்ளிருள் என்று சொல்லக் கூடிய இருள் செறிந்த
காட்டினிடத்தில் தங்கி இருந்து, கொடிய மனத்துடன் அந்த வழியாகச்
செல்வோர் நடுங்கும்படி துன்புறுத்தி அங்கு அவர்கள்,
412. கைக்கொள் செம்பொன் கலன்களி யாவையும்
துக்க மெய்திடச் சூறைகொண் டப்பொருள்
மிக்க காமத்து வேசியர் பானல்கி
தக்க வந்தணர் தங்கொலை யுஞ்செய்து. (4)
பொ-ரை:- கொண்டு வரும் செம்பொன்னால் ஆன ஆபரணம்,
பொருள் முதலான எல்லாவற்றையும், கொண்டு வந்தவர்கள் துன்பம்
அடையும்படி கொள்ளையடித்து, அப்பொருளை மிகுந்த காமத்துடன்
வேசியர்களிடம் கொடுத்து, தகுதி வாய்ந்த அந்தணர்களைக் கொலையும்
செய்து வாழ்ந்து வந்தான்.
413. சொன்ன நற்குலத் தோகையர் தங்களை
வன்மை செய்து மருவத் திரிபவன்
பொன்ன ரங்கம் புகழ்திரு வானைக்கா
வென்னு மூரி லிறைவர் தனங்களை. (5)
பொ-ரை:- அவன் புகழுடைய நல்ல குலத்துப் பெண்களை
வலிமையுடன் கற்பழித்துத் திரிகின்றவன். பொன்னம்பலம் புகழுடைய
திருவானைக்கா என்னும் தலங்களில் இறைவருக்கான செல்வங்களை
414. கரவிற் கொண்டு கரவடர் தம்மொடு
விரவிச் சோர மிகச்செய் வானோர்நாட்
டிரவெற் பான சிராமலை நல்விழா
பரவச் செல்லும் பலரொடு சென்றுதான் (6)
பொ-ரை:- திருடிக் கொண்டு, திருடர்களோடு சேர்ந்து களவு
மிகுதியாகச் செய்து தேவர்கள் மலையான திருச்சிராமலையில் நல்ல
திருவிழா காண்பதற்குக் கூடிச் செல்லும் பலரொடு சம்பகனும் சென்றான்.
415. ஆல யந்தனில் எய்தி யரும்பொருள்
கோல வஞ்சகன் கொண்டு புறப்படத்
தாலம் விண்புகழ் தானிகர் கண்டவன்
ஓல வாரி யுடைந்தெனக் கூவினார். (7)
பொ-ரை - திருவானைக்கா ஆலயத்தின் உள்ளே புகுந்து
அங்குள்ள அரிய பொருள்களைக் கொடிய வஞ்சகன் திருடிக்கொண்டு
புறப்படும் பொழுது, வானோரால் புகழப்படும் அத்தலத்தில் பூசை செய்யும்
குருக்கள் கண்டு கடல் உடைந்தது போன்றோலி உண்டாக ஓலமிட்டுக்
கூவினார்.
416. நிறைந்த வஞ்ச நெடுஞ்சிலைச் சம்பகன்
உறைத்த கள்வ ருடன்பயந் தோடலும்
கறைக்கொள் வன்படைக் கைக்கொடு காவலர்
துறைப்பொ ருந்திசை தோறும் வளைத்தனர். (8)
பொ-ரை:- வஞ்சகம் நிறைந்த நீண்ட வில்லையுடைய சம்பகன்
பதுங்கி இருந்த கள்வருடன் பயந்து கொண்டு ஓடினான். வலிமையான
ஆயுதங்களைக் கையில் வைத்துள்ள குற்றம் புரிவோரைப் பிடிக்கும்
காவலர்கள் நான்கு திசைகளிலும் வந்து வளைத்தனர்.
417. வேட்டைக் கானில் வியன்வலைச் சூழலன்
கோட்டுக் கேழல் குலத்தொடு சேர்ந்தென
வீட்டத் தோடு மிவனகப் பட்டெதிர்
கூட்டத் தோடு கொடுஞ்சமர் செய்தனன். (9)
பொ-ரை:- காட்டில் வேட்டையாடுவோர் நீண்ட வலையை
விரித்து வைத்திருப்பர். அந்த வலையில் கோடுடைய பன்றி தன்
கூட்டத்தோடு அகப்பட்டுக் கொண்டதைப் போன்று சம்பகன் அகப்பட்டுக்
கொண்டான். காவலர் கூட்டத்தோடு எதிர்த்துக் கடுமையான
போரிட்டனர்.
418. சாம மொன்றிற் றகுஞ்சமர் செய்தபின்
காம வேடர் கலங்கி விழுந்தனர்
நாம வேட்டுவன் நண்ணும் படுகரில்
வாம மாக மறைந்தனன் கண்டிலர். (10)
பொ-ரை:- ஒரு சாமம் அளவும் கடுமையான போர் செய்தபின்
பேராசையுடைய வேடர்கள் மயங்கி விழுந்தனர்.சம்பகன் என்னும்
பெயருடைய வேட்டுவன் அருகில் உள்ள இருண்ட வழியில் காவலர்
காணாமல் இடப்பக்கமாக ஓடி ஒளிந்தான்.
419. காவ லாளர் கரவடன் கொள்பொருள்
யாவு மேவ வெடுத்தரன் கோவிலுள்
ஓவி லாவகை யுய்த்தவர் ஏகினார்
தாவில் சம்பகன் றானிரப் பார்கள் போல் (11)
பொ-ரை:- திருடர்கள் (கரவடன் - திருடன்) கொள்ளையடித்த
பொருள் எல்லாவற்றையும் ஒருசேர எடுத்து ஒன்றும் குறையாமல் அரன்
கோயிலுள் சேர்த்த பின் காவலர்கள் தங்கள் இடத்திற்குத் திரும்பினர்.
தங்குமிடம் இல்லாத சம்பகன் பிச்சை எடுக்கின்றவனைப் போன்று,
420. கந்தை சுற்றிக் கரத்தினில் ஓடுகொண்
டிந்த வேளை பிழைத்தனம் என்றுபோய்
அந்தண் மாநக ரந்தொறுஞ் செல்பவன்
வந்தவ் வோதன மாபுர மெய்தினான். (12)
பொ-ரை:- கந்தை யாடை உடுத்திக் கொண்டு, கையில்
பிச்சையோட்டை எடுத்துக் கொண்டு இந்த வேளை பிழைத்துக்
கொண்டேன்' என்று நினைத்தபடி அழகிய பல நகரங்கள் தோறும் பிச்சை
எடுத்துக் கொண்டே சோற்றுத்துறைக்கு வந்து சேர்ந்தான்.
421. அன்று நற்சிவ ராத்திரி யாதலால்
கொன்றை சூடிடுங் குழகன் தெரிசனைக்
கொன்றி வந்தனர் உத்தமர் எண்ணிலார்
கன்று வேடன் களவு கருதியே. (13)
பொ-ரை:- (சம்பகன் சோற்றுத்துறை வந்த) அன்று நல்ல
சிவராத்திரி நாள் ஆனதால் கொன்றை மாலை சூடுகின்ற இளையோனாகிய
சிவபெருமானைக் கண்டு வணங்க எண்ணிலாத உத்தமர்கள்
கூட்டமாக வந்தனர். அற்பனான வேடன் (சம்பகன்) திருடும் நினைப்போடு,
422. ஊணு மின்றி யுறக்கமு மின்றியே
பேணு நண்பக லும்பெருங் கங்குலும்
தாணு வாலயம் தாபதர் சேரிடம்
மாணு வீதி மறுகுதொ றெய்தியே. (14)
பொ-ரை:- உணவு உண்ணாமலும் உறக்கம் இல்லாமலும் நீண்ட
பகல் நேரத்திலும் இரவு பெரும் பொழுதிலும் சிவபெருமான் கோயிலையும்,
தவவேடத்தவர் கூடியுள்ள இடத்தையும் பெருமையுள்ள வீதிகளையும்
சுற்றிச் சுற்றி வந்தான்.
423. அயர்வு நோக்கினன் அங்கங் கவரவர்
செயல்செய் யன்பிற் சிவனைத் தொழுதலால்
துயில்பொ ருந்திலர் சோர்விலர் ஈதலால்
அயில்கொள் காவலர் ஆர்த்தனர் எங்கணும். (15)
பொ-ரை:- (கோயிலுக்கு வந்துள்ளவர்கள்) அயர்ந்து (ஏமாந்து)
இருக்கும் நேரத்திற்காக சம்பகன் காத்திருந்தான். அங்கங்கு உள்ள
அனைவரும் தங்கள் அன்புடன் கூடிய செயலால் சிவபெருமானை
வணங்கிக் கொண்டிருந்ததனால் உறக்கம் கொள்ளாமலும் சோர்வு
கொள்ளாமலும் இருந்தனர். இதுவன்றி, ஈட்டியை ஏந்திய காவலர்கள்
எல்லா இடங்களிலும் அதட்டித் திரிந்தனர்.
424. வண்ண மிங்கிவை நோக்கிய வஞ்சகன்
என்றுஞ் சோரஞ் செயும்வழி யென்னென
யுண்ணி யத்தவர் போலரன் கோயிலுள்
நண்ணி னான்சென்று நான்கெனும் யாமத்தில். (16)
பொ-ரை:- இங்கு இவ்வாறு உள்ள சூழலைப் பார்த்த
வஞ்சகனாகிய சம்பகன் எல்லா நாளும் திருட்டு செய்வதற்கு என்ன வழி
என்று மனதில் நினைத்துக் கொண்டு, அங்குள்ள தவம் செய்பவர் போன்று
அரன் கோயிலுள் நெருங்கிச் சென்று நான்காவது யாமத்தில்,
425. ஆங்கு நாதன் அருச்சனை செய்பவர்
தாங்கு நாற்பஞ்ச சாந்திகள் சமகங்கள்
பாங்கு சீருருத் திரசெபம் பண்ணுவோர்
ஓங்கு மற்றைத் தரும முஞற்றுவோர். (17)
பொ-ரை:- கோயிலின் உள்ளே நாதனை (சிவபெருமானை) சிலர்
அருச்சனை செய்தனர்; சிலர் தாங்குகின்ற நான்கு பஞ்சசாந்திகள்
செய்தனர்; வேறு சிலர் சமகங்கள் ஓதினர்; அழகிய சிறந்த உருத்திர
செபம் சிலர் செய்தனர்; உயர்ந்த மற்றைத் தருமங்களை வேறு சிலர்
செய்தனர்.
426. எவ்வி டத்தும் இயைந்தநற் றீபமும்
செவ்வி திற்பகற் போலச் செறிந்தன
வவ்வு சோரம் புரிதற்கு வாய்த்திடா
தெவ்வ மோடு புறந்தனில் எய்தலும் (18)
பொ-ரை:- எல்லாவிடத்திலும் பொருந்திய நெருக்கமாக இருந்த
நல்ல விளக்குகள் செம்மையாக பகல் போன்ற ஒளி பரப்பிக் கொண்டு
இருந்தன. பிறர் பொருளைக் கவரும் திருட்டைச் செய்வதற்கு வாய்ப்புக்
கிடைக்காமல் துக்கத்தோடு திருடன் கோயிலின் வெளியே வந்தான்.
427. கங்குல் நீங்கக் கனைகதிர் தோன்றலும்
பொங்கு காவிரி யாடிப் புனிதர்போல்
தங்கு பிச்சையில் தன்பசி மாற்றியே
மங்க லில்லா(த) மறுநகர் எய்தினான். (19)
பொ-ரை:- இவ்வாறான வேளையில் இருட்டு விலகி திரண்ட
ஒளிக்கதிருடைய சூரியன் தோன்றியது. பெருகி வரும் நீருடைய
காவிரியில் சம்பகன் நீராடி புனிதனைப் போல வேடம் கொண்டு பிச்சை
எடுத்துத் தன் பசியை ஆற்றிக் கொண்டு குறைவில்லாத வேறு நகரத்தை
அடைந்தான்.
428. பாவம் அச்சம் பழிபகைக் கேதுவாய்த்
தாவி லன்னிய (ர்) தாரம் விரும்புறும்
ஓவின் மூட ரொடுதினங் கூடியே
மேவு சோர விருத்தி தவிர்ந்திலன். (20)
பொ-ரை:- பாவம், அச்சம், பழி முதலானவற்றைச் செய்து
கொண்டு, ஓரிடத்தில் தங்காமல் (உறைவிடம் இல்லாமல்) பகைக்குக்
காரணமான பிறர் மனைவியைக் காமுற்று வாழ்ந்து, விட்டு விலகாத
மூடரொடு தினம் கூடிக்கொண்டு, விருப்பத்தோடு மிகுதியான திருட்டை
நீங்காமல் செய்தான்.
429. எண்ணு நாட்பல விம்முறை செல்வுழி
மண்ணி லங்க மரித்தனன் ஆவியைத்
துண்ணெனச் சமன்றூதுவர் கொண்டுபோய்
நண்ணு நீதி நமன்முன் விடுத்தனர். (21)
பொ-ரை:- இவ்வாறு பலநாள் வாழ்ந்த பின்னர் சம்பகன்
மண்ணில் உடல் இறந்தான். உயிரைக் காலனுடைய தூதர்கள் விரைவாக
இழுத்துச் சென்று இயமன் முன்பாக நிறுத்தினர்.
430. சீறு மந்தகன் சித்திர குத்தனைக்
கூறி வன்செய் கொடுமைகள் என்றலும்
தேறி யோதுவன் தேருதி யீங்கிவன்
ஏறு பாவங்கள் எண்ணில செய்தனன். (22)
பொ-ரை:- சீற்றம் கொண்ட இயமன் சித்திரகுத்தனை அழைத்து
'இவன் செய்த கொடுமைகளைக் கூறுக' என்று கூறினான். சித்திர
குத்தன் 'ஆராய்ந்து சொல்லுவேன் தெரிவீராக. இவன் பெருகிய
பாவங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவு செய்துள்ளான்.'
431. ஆயி னுங்கள வாசையி னாலுணல்
மேய நித்திரை விட்டுச் சிவநிசித்
தூய சோற்றுத் துறைதனில் மற்றைநாள்
ஏய பிச்சை யெடுத்து நுகர்தலால். (23)
பொ-ரை:- ஆயினும், சிவராத்திரியில் தூயதான திருச்சோற்றுத்
துறையில் திருட்டு செய்யும் ஆசையினால் உண்ணாமலும், உறங்காமலும்
இருந்து பொருத்தமாக மறுநாள் பிச்சை எடுத்து உண்டான்.'
432. அதுசி றந்த விரதமென் றானதால்
கதமெ னச்செயும் பாவங் கழிந்ததால்
விதுமு டிப்பவன் வெள்ளி மலைக்கிவன்
சதுர மாய்ச்செல வுய்ப்பது தக்கதே. (24)
பொ-ரை:- 'இவ்வாறு இவன் செய்தது சிறந்த விரதமானதால்
சினம் கொண்டு இவன் செய்த பாவங்கள் எல்லாம் கழிந்தன. ஆகையால்,
இவனைச் சந்திரனைத் தலையில் சூடிய சிவன் எழுந்தருளிய கயிலை
மலைக்குச் செல்லும்படி சாமர்த்தியமாய்க் கொண்டு விடுவதே தகுந்த
செயலாகும்' என்று சொன்னான்.
433. என்னும் வேலையில் ஈசன் அருளினால்
நன்மை நந்தி கணத்துடன் நண்ணினான்
பன்னு கூற்றுப் பயந்தெதிர்ப் போய்ப்பணிந் (து)
இன்ன குற்றம் பொறுத்தருள் என்றலும். (25)
பொ-ரை:- இவ்வாறு சித்திர குத்தன் கூறிய வேளையில்
ஈசனுடைய திருவருளினால் நன்மை மிகுந்த நந்தியம்பெருமான் பூத
கணங்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். கூற்றன் என்று சொல்லப்படுபவன்
அவர் எதிர் சென்று பணிந்து வணங்கி 'அடியேன் செய்த குற்றத்தைப்
பொறுத்தருள வேண்டுகிறேன்' என்றான்.
434. நாத னோன்பு நயந்தமை யோர்ந்திடா(து)
ஏதம் நீசெய்த தென்னெனச் சீறியே
சாது பூதரில் காலனைக் கட்டிநீ
போது மென்று புளினனை மானமேல் (வேடனை) (26)
பொ-ரை:- நந்தி தேவர் ‘நாதனாகிய சிவபெருமானுக்கு உகந்த
சிவராத்திரி விரதம் செய்தமையை உணராமல் நீ எதற்குத் துன்பம்
செய்தாய்' என்று கேட்டார். பின்னர் நற்குணமுடைய பூதரிடத்தில்,
'காலனைக் கட்டி இழுத்துச் செல்வாய்' என்று சொன்னார். பிறகு
வேடனை விமானத்தில்,
435. ஏற்றி வெள்ளி வரையிலுய்த் தங்கவன்
சாற்று பூதத் தலைமை பெறச்செய்து
கூற்றைப் பார்ப்பதி கொண்கன்முன் விட்டனன்
போற்று கூற்றம் பணிந்து புகலுவான். (27)
பொ-ரை:- ஏற்றி வெள்ளிமலையாகிய கயிலாயத்தில் கொண்டு
சேர்த்து அங்கு அந்த வேடனைக் கூடியுள்ள பூதகணங்களுக்குத்
தலைமை பெறும்படி செய்த பின்னர், இயமனைப் பார்வதியின் கணவனான
சிவபெருமானின் முன்பு விட்டார். போற்றப்படும்
கூற்றுவன் சிவபெருமானைப் பணிந்து சொல்லுவான்.
436. நாத சம்பகன் நன்மையை நாடிலர்
தூதர் என்முன் னுனைவிற் கொணர்ந்தனர்
காதல் நீதிக் கணக்கை வினவிநின்
பாத மேவுறு பத்தன் இவனென. (28)
பொ-ரை:- 'தலைவ! தூதர் சம்பகன் செய்த புண்ணிய
நன்மையை உணராது விரைந்து என்முன் கொண்டு வந்தனர். அன்புடன்
நீதிக் கணக்கைக் கேட்டறிந்து, இவன் உம்முடைய திருவடியை அடையும்
பத்தன் என்று'
437. கருத்தி லுண்ணிக் கயிலையில் உய்ப்பனென் (று)
அருத்தி செய்பொழு தந்நந்தி தேவர்வந் (து)
உருத்தெ னைப்பிடித் தோர்சம் பகனையும்
திருத்த மிக்கவித் திண்வரை யேற்றினார். (29)
பொ-ரை:-' மனதில் நினைத்து, இவனைக் கயிலையில்
சேர்ப்போம் என்று ஆசை கொண்டபொழுது நந்தி தேவர் வந்து
சினம்கொண்டு என்னைப் பிடித்ததுடன் சம்பகனையும் புனிதமானதும்
வலிமையானதுமான இந்தக் கயிலை மலையில் சேர்த்தார்'.
438. தந்த சம்பக னாலருட் சாமிநின்
செந்தி ருப்பதச் சேவையும் பெற்றனன்
நந்தி தேவர் ஒறுத்தலி னான்செயும்
அந்த மில்பிழை யாவு மகன்றதால். (30)
பொ-ரை:- 'பெருமானே! சம்பகன் அருளால் உம்முடைய
சிவந்த திருவடியைப் பணியும் பேறு பெற்றேன். நந்தி தேவர் என்னை
தண்டித்ததனால் நான் செய்த முடிவில்லாத குற்றங்கள் எல்லாம்
அகன்றுவிட்டன'.
439. இன்று காத்தருள் என்னலும் எம்பிரான்
நன்று நின்பிழை நாம்பொறுத் தோமினித்
துன்று சோற்றுத் துறையில் சிவநிசி
யன்று புத்தி புத்தியோ டாயினும். (31)
பொ-ரை:- 'இன்று என்னைக் காத்தருள்வீராக' என்றான். எம்
தலைவராகிய சிவபெருமான், 'நல்லது, உன் பிழையை நாம் பொறுத்தோம்.
இனி அருகிலுள்ள சோற்றுத்துறையில் சிவராத்திரி யன்று அறிந்தோ
(புத்தியுடனோ) அறியாமலோ (புத்தி இல்லாமலோ)
440. சேவை நானஞ் சிவார்ச்சனை செய்பவர்
யாவ ராயினும் பத்தரா வார்நமக்(கு)
ஆவ நாங்கவர்க் கல்லலி யற்றிடேல்
மேவி யின்சொல் விளம்பி வணங்குவாய், (32)
பொ-ரை:- 'தொழுதல், நீராடல், சிவார்ச்சனை ஆகியவற்றை
யாவர் செய்தாலும் அவர் நமக்குப் பத்தராவார். ஆதலால் அவர்க்குத்
துன்பம் செய்யாதே. அருகில் சென்று இனிய சொல்லைச் சொல்லி
வணங்குவாய்'
441. ஒழுக்கந் தன்னை யுயிரென வோம்பிய
வழுக்கி லன்பர்க்கு வந்திடர் நீசெயில்
இழுக்கு தண்டஞ்செய் வோமென் றிறைசொல
வழுக்கில் காலனும் அஞ்சி வணங்கியே. (33)
பொ-ரை:- 'ஒழுக்கம் தன்னை உயிராகப் போற்றும் தவறுகள்
இல்லாத அன்பர்க்கு நீ வந்து துன்பம் செய்தால் கீழான தண்டம்
செய்வோம்' என்று இறைவன் சொன்னார். தவறு இல்லாத காலனும்
அச்சம் கொண்டு வணங்கினான்.
442. அண்ண லேயுன் னருண்முறை செய்வனென்(று)
எண்ணு நல்விடை கொண்டபின் இன்னருள்
நண்ணு நந்தியை நாடி வணங்கியே
வண்ண மேவுதன் மாநகர் எய்தினான். (34)
பொ-ரை:- அண்ணலே! உம்முடைய அருளாணையின்படி
செய்வேன்' என்று இயமன் சொல்லி, நினைக்கும் நல்ல விடைகொண்டு
சென்றான். பின்னர் இனிய அருளைத் தந்திடும் நந்தி தேவரை அணுகி
வணங்கிய பின் அழகு விளங்கும் தன்னுடைய பெரிய நகராகிய
எமபுரிக்குச் சென்றான்.
443. வெம்பு தீவினை வேடனுஞ் சேவையால்
எம்பி ரான்கணத் துக்கிறை யாயினான்
நம்பு நற்சிவ ராத்திரி மேன்மையை
உம்ப ராலும் உரைப்பதற் கொண்ணுமோ. (35)
பொ-ரை:- வெம்மையான தீவினையுடைய வேடனும் விரதத்தால்
எம்பிரானுடைய பூத கணத்துக்குத் தலைவனாயினான். ஆதலால்
மேலானது என்று நம்பப்படும் நல்ல சிவராத்திரியின் சிறப்பைத்
தேவர்களாலும் சொல்லுவதற்கு இயலாது.
444. அரிய மாதவத் தந்தணீ ரோதன
புரியின் மேன்மையைப் புத்திவைத் தின்புறத்
தெரியு மெய்ச்சிவ பத்தர்க்குச் செப்புமென்(று)
உரிய சூத முனிவரன் ஓதினான். (36)
பொ-ரை:- 'அருமையான பெரிய தவமுடைய அந்தணர்களே!
சோற்றுத்துறையின் சிறப்பை உள்ளத்தில் வைத்து இன்புறத்
தெரிந்திருக்கும் மெய்யான சிவபத்தர்களுக்குச் சோற்றுத்துறை
தலபுராணத்தைக் கூறுவீர்களாக' என்று தகுதியான சூத முனிவன்
கூறினான்.
445. ஓது சூதனை யுத்தம மாதவர்
காதல் செய்து புராணக் கனியமு (து)
ஆத ரத்தி னுகர்ந்தன்ன பூரணி
மாது பாகனை வாழ்த்தி மகிழ்ந்தனர். (37)
பொ-ரை:- (வேதம்) ஓதுகின்ற சூத முனிவனை உத்தமமான
பெரிய தவத்தைச் செய்த முனிவர்கள் அன்புடன் புராணமாகிய கனி
போன்ற அமுதினை ஆசையுடன் நுகர்ந்து அன்னபூரணி அம்மையைப்
பாகம் கொண்ட சிவபிரானை வாழ்த்தி மகிழ்ந்தனர்.
புராண பயன்
(வேறு)
446. ஓதன மாபுரி மான்மியம் நாடொறு மோதி யுரைப்பார்கள்
காதலி னாற்பொருள் ஓதினர் மாகதை காது நிறைப்பார்கள்
பூதல மீதர சாளுவர் வானவர் பூமி புரப்பார்கள்
மேதகு ஞானமு மேவி யுலாச மெய்வீடு பெறற்பாலர். (38)
பொ-ரை:- திருச்சோற்றுத்துறையின் சிறப்பை நாள்தோறும் ஓதிச்
சொல்பவர்களும், அன்பினால் அதன் பொருளைச் சொல்பவர்களும்,
பெரிதான புராணக் கதையைக் காது குளிரக் கேட்பவர்களும் இந்த
பூமியின் அரசராய் ஆளுவர்; தேவலோகத்தைக் காக்கின்ற இந்திரனாவர்;
மிகுந்த பெருமையுடைய ஞானத்தைப் பெற்று மெய்யானபேரின்பம் தரும்
வீடு பேற்றினைப் பெறத் தகுதியுடையவர் ஆவார்.
(வேறு)
447. பலங்கொள் மறையா கமங்கள்சிவ பத்தர் மழைபார்த் திபர்வாழி
நலங்கொள் பசுவந் தணர்தரும நாடுந் தானந் தவம்வாழி
துலங்கு மன்ன பூரணிவாழி தொலையாச் செல்வர் பதம்வாழி
இலங்குஞ் சோற்றுத் துறைமகிமை யியலும் புராணத் தமிழ்வாழி. (39)
பொ-ரை:- உயிர்களுக்கு உறுதி தருகின்ற மறை, ஆகமங்கள்,
சிவபத்தர்கள், மழை, அரசர் வாழ்க! நன்மை தரும் பசு, அந்தணர், தருமம்
மிகுந்த நாடு, தானம், தவம் வாழ்க! விளங்கும் அன்னபூரணி திருவடி
வாழ்க! அழியாத நிலைத்த செல்வத்தையுடைய சிவபெருமான் திருவடி
வாழ்க! விளங்குகின்ற சோற்றுத் துறையின் பெருமையைச் சொல்லுகின்ற
புராணமும், சொல்லுகின்ற தமிழும் வாழ்க!
சிவராத்திரிச் சருக்கம் முற்றிற்று
திருச்சோற்றுத்துறை தலபுராணம் முற்றிற்று
திருச்சிற்றம்பலம்