சிவமயம்
கடவுள் வாழ்த்து
பூமேவு புடார்ச்சுன புண்ணியற்கே அவர்புகழாம்
பாமேவு நால்வகைய சொல்மலரால் பத்திபெற
நாமேவுஅக் கரநாரே நாராகத் தொடைஇயற்றக்
காமேவு மருதடிஐங் கரன்அடியைக் கைதொழுவாம் (1) 1
கூறும்பூ உடையோனும் குவலயப்பூக் கொண்டோனும்
தேறும்பூ அடிமுடியும் தேடுதற்கும் தேற்றாதார்
ஆறும்பூ வும்புனையும் அஞ்சடையார் அன்பூறு
நாறும்பூ நாயகர்தம் நாறும்பூம் பதம்நவில்வாம் (2) 2
வேறு
பூவி ளங்குக! புண்ணியர் மல்குக!
கோவி ளங்குக கொண்டல் பொழிகுக!
சேவி ளங்கு சிவன்பணி நீடுக!
மாவி ளங்கும் வளங்கள் பொலிகவே! (3) 3
மருத வாணனைப் பூசிக்கும் வண்மையார்
சரதர் இந்தச் சரித்திரம் சாற்றுவோர்
வரதர் உட்புற மெய்அடி யார்துதி
பரவும் வாய்மையர் பண்பினர் பல்கவே (4) 4
மருத நாதன் மகிமையை வாழ்த்துவோர்
சரத வாழ்வும் சந்தானபந் தானமும்
கருது ஞானமும் பெற்றுக் கடவுளாய்த்
திருவி ளங்கிச் சிவகதி சேர்வரே (5) 5
பேசு நால்வர்க் கருளிய பிஞ்ஞகன்
வாசம் உற்றிடு மால்வ ளம்பதி
மாசி லாதச தாசிவ மாமணித்
தேசி கன்பதம் சென்னியில் சேர்த்துவாம் (6) 6
மண்டலத்தினில் நால்வகை மாட்சிநூல்
பண்டு கண்டவன் பாலகன் பால்வந்த
புண்ட ரீகபு ரம்புகழ் தேசிகன்
கண்ட காதைஇ வைஎன்பர் கற்றுளோர் (7) 7
வாழ்க தெட்சண காசி வளம்பதி
தாழ்வி லாத புடார்ச்சுனஞ் சார்ந்தருள்
சூழ்இ லேபன சுந்தரன் தொல்கதை
ஏழ்பெ ரும்புவி எங்கும் விளங்கவே (8) 8
பூதி நாயகர் புடைமா மருதீசர் கயிலேசர்
புனித யோகர்
தாதுலாவி நாறும்பூ நாதர் மனுவரதர்
சம்பு வாணர்
வேத காரணர் சாய்ந்தோர் சித்தர்பால்பேசும்
இலேபன வினோதர்
ஆதி கோமதி சேர்வுடை மாது பாகர்
எமதகத் துளாரே.. (9) 9
காவுடைய கருங்குழலும் கருணைபொழிந் தருள்விழியும்
கமலம் மேவு
பூவுடைய மலர்முகமும் புனைகாதும் துவர்இதழும்
பொன்பூண் ஏந்து
மாவுடைய கனதனமும் வளைக்கரமும் பட்டுடையும்
அழகு வாய்ந்த
ஆவுடைய நாயகியார் இருசரணக் கோலமும்எம்
அகத்துள் வைப்பாம். (10) 10
சந்தவரை முனிகடத்திற் சைவரை தனில்புனிதன்
தவத்தால் சார்ந்து
முந்தையொரு கொடிபோல்வந் தேகவிழ்க்கக் கண்டுமுனி
முனிமுன் தோன்றி
சிந்துரஆ னனன்இவன்என் றறிந்திலேன் எனக்கரத்தால்
சிரத்தில் தாக்கி
வந்தனைசெய் திடம்புரிந்து மகிழ்மருத வாரணத்தை
வணக்கம் செய்வாம் (11) 11
திருமானை உரத்தில்வைத்துச் செகமானைப் புணர்வோனைத்
தேசம் பூத்த
பெருமானை இருபாகப் பெம்மானைத் தந்தை எனப்
பெறும்எம் மானைப்
பொருமானை என்மானைப் பொருமிகண் வேடர்குலப்
புனமான் முன்பு
வரும்ஆனை முகற்கிளைய மலைமானின் மருமானை
வணக்கம் செய்வாம் (12) 12
வெள்ளி மால்வரைக் கயிலையில் வேதியன்
மால்முதல் விண்ணோர்க்கு
வள்ளல் நல்கிய படிஐந்து சபையினும்
மகத்துவம் மருதின்பால்
புள்ளி நாகனும் புலிப்பத முனிவனும்
போற்றிடப் பொதுமேவிக்
கள்ள லர்க்குழல் காணவே நடமிடும்
காரணன் கழல்போற்றி. (13) 13
நல்லோர் சூழ்ந்திட நயந்து சனகன்
முதல்நான் மறைகளெல்லாம்
வல்ல வர்க்கிசை யச்சொல் இறந்த
பொருளே தான்இதுவே
அல்லா தொன்றிலை அறிவீர் என்றே
அருளால் அருள்செய்து
கல்லா லின்நிழல் அமர்ந்த கார
ணர்தம் பதம்போற்றி (14) 14
இந்திரனே முதலான எண்மர்இமை யோர்கள்எலாம்
சந்திரசே கரர்தம்மைத் தொழுசமையம் பெறுதற்காய்
மந்திரம்சூழ்ந் திவர்மலர்த்தாள் வணங்கிமகிழ்ந் திவாவானைச்
சிந்தைகளிப் புறவணங்கச் செய்தநந்தீ சுரர்பணிவாம். (15) 15
கவளயா னையை உரித்த கறைமிடற் றானை யன்னத்
துவளரு மறையோன் கற்பம் தோற்றிடு முன்னைத் தொல்லை
தவரிறை தருமம் எல்லாம் தான்ஒரு வடிவாய்த் தோன்றிப்
பவனமால் விடையாய்த் தாங்கும் பசுபதி பதங்கள் போற்றி. (16) 16
அரனருள் மைந்தர் நால்வர்க் கமைத்தஆச் சிரமம் தன்னில்
கரிமுகன் பிரம சாரி காங்கயன் கிருக சாரி
அரிஅர புதல்வன் வானப் பிரத்தனே ஆகும் யோகி
பரியெகி னத்தின் மேவும் பயிரவற் றொழுது வாழ்வாம். (17) 17
மாக்களை உகைத்துச் சேரர் தோழரும் வஞ்சி நீங்கி
மேக்குயர் கைலை எய்தி விமலன்பால் அரசர் சாற்றும்
பாக்களைப் புவியில் தந்த பண்புடைச் சாத்தன் தாளை
நாக்களால் பரவிப் போற்றி நன்முடி தரித்து வாழ்வாம் (18) 18
பொருதுகா னவளை மாய்த்துப் புகர்கொடு புவியில் சார்ந்து
சுரர்குரு விதித்தவாறே தாககே சுரத்தில் வந்து
மருதினில் தவம்செய் தன்பால் மனுவர தனைப்பூ சித்துப்
பிரமதோ டத்தை நீங்கும் புனிதனைப் பேணி வாழ்வாம் (19) 19
பாந்தராய் அருள்சிவசம் பந்தராய் உமைமுலைப்பால்
பரிந்துண் பாராய்ச்
சாந்தராய் மறையவராய்ச் சைவபரி பாலகராய்த்
தலைவ ராய்மன்
காந்தராய் உறைபவர்பால் கருத்தராய் மணவாது
கடந்த ராய்நன்
பூந்தராய் தனில்ஞானப் புனிதராய் வந்தவர்தாள்
போற்றி வாழ்வாம். (20) 20
வேறு
அந்தரர் முதலோர் உய்ய ஆழிநஞ் சமுதம் உண்ட
கந்தரன் போல அன்னோன் கருணையால் அமண்கார் ஆழி
தந்தநஞ் சமுதம் உண்டு தரணியில் சைவம் ஓங்க
வந்தருள் கின்ற நாவுக் கரசரை வழுத்தி வாழ்வாம். (21) 21
அடிமுடி இருவர் தேடி அளந்திடற் கரியார் தம்மைத்
தொடர்வுடைப் பதிகம் பாடித் தோழமை யாகக் கொண்டு
படியினில் பரவை ஊடல் பரிந்திடத் தூது கொண்ட
முடிவிலா நாவ லூரன் முளரிஅம் பதங்கள் போற்றி. (22) 22
நாவல்ல தமிழால் இந்த நல்தல உண்மை தன்னைப்
பூவல்லிப் பதிகம் தன்னில் பொந்தைநாம் பரவி என்றும்
பாவணி வாச கத்தில் பாடிய வாத வூரர்
சேவடிக் கமலப் போதைச் சிந்தித்தெப் போதும் வாழ்வாம் (23) 23
தாதைதாள் தடிந்து பெற்ற தண்டிநா யகர்தாள் போற்றி
பூதிசா தனம்பு ரந்த கோதையார் பொற்றாள் போற்றி
மாதொரு பாகர்க் கன்பாம் வரம்பினால் தொழும்பு செய்து
நாதராய் இருந்த தொண்டர் நாயன்மார் சரணம் போற்றி. (24) 24
செந்தழல் புரையும் மேனிச் சிவனருள் வரத்தினாலே
விந்தைவெற் படக்கி விண்ணோன் வேண்டுதற் கங்கை யாலே
உந்துவா திரை அடக்கி உலகெலாம் நிலைபெற் றோங்கச்
சந்தவெற் பதனில் வந்த தமிழ்முனி சரணம் போற்றி. (25) 25
வேறு
சிந்தை யாற்சிவ மூழ்கி அழைத்திட
எந்தை சாய்ந்தவர் ஏன்என் றெதிர்மொழி
உந்தி காட்டும் வழிஉறு வாய்என
வந்தி டும்கரு வூரனை வாழ்த்துவாம் (26) 26
எந்தை பூதிவா தாக்கி சைந்திட
வந்து கோயில் திருப்பணி வாய்ப்புடன்
உந்த வேசெய் மனுகுல உத்தமன்
கந்த நாள்மலர்ப் பாதம் கருதுவாம். (27) 27
வெள்ளை மேனியில் வெண்மலர் மாலையும்
வெள்ளை ஆடையும் வெண்பணி யும்புனை
வெள்ளை ஓதிம வேதியன் நாவில்வாழ்
வெள்ளை வாரிசத் தாள்பதம் வேண்டுவாம். (28) 28
பன்னும் வேதப் பரமற்குப் பத்தியாய்
மன்னு கின்ற திருப்பணி மாண்புடன்
நன்ன லங்கொளச் செய்திடு நாயன்மார்
பொன்னம் பொற்கழல் போற்றிப் புனைகுவாம். (29) 29
கடவுள் வாழ்த்து முற்றும்
பாயிரம்
மாத வன்சுகன் கேட்க மகிழ்வுடன்
வேதம் மேவும் வியாசன் அருளிய
காதை யைத்தவ யோகர் கழறென
சூத மாமுனி சொல்லல் உற் றான் அரோ. (1) 30
பதினெண் நூலில் பரன்இயல் பத்தினுள்
கதிவி ளங்கிய சைவத்தில் தோன்றிய
மதித ருநதிச் சேத்திர வைபவ
விதியின் தோன்றிஇக் காதை விரிந்தவே. (2) 31
சொல்லும் இவ்வியல் தூய பொருநைசூழ்
மல்லல் அம்பதி மன்னு புடார்ச்சுனச்
செல்வன் செய்கை தெழியும் கருத்தான
பல்பெ ரும்புகழ் பாலித்த பான்மையே. (3) 32
பொருவி லாஇச் சரிதையைப் போற்றுவோர்
கருது நாற்பயன் எய்துவர் நற்கதி
தரும்இக் காவியம் சாற்றுனர் கேட்குனர்
பெருமைச் சைவ சமயப்ர தாபரே. (4) 33
ஏற தேறும் இறைவன் கீர்த்தியைக்
கூறு கின்ற வடபதக் கொள்கையைத்
தேறி மெய்அரு ளால்முனி செப்பிய
மாறி லாத திராவிட வாய்மையால். (5) 34
முதிய பாவிருத் தம்துறை முற்றுற
விதியி னால்உரை என்று விரும்பிஇப்
பதியி னில்பெரி யோரும யற்பதி
மதியி னில்பெரி யோரும் வகுத்தனர். (6) 35
நல்ல தென்றவை காரணம் நாட்டியே
எல்லை நான்குடன் பயிலும் இயற்றமிழ்ச்
சொல்லி னால்தமி யேன்செயச் சூழதல்
கல்ல ணைக்கணில் செய்பணி காட்டுமே. (7) 36
பாயிரம் முற்றும்
அவையடக்கம்
ஆணிப் பொன்அமை யும்பணி இவ்விடம்
பூணற் கென்றறி யேன்புகல் சொற்கலை
வாணற் கொவ்வில வேனும் வான்சொலைப்
பேணிக் கொள்கப் பெரியோர் பெருமையால். (1) 37
வேறு
மணியினால் கனகம் தன்னால் வழங்குறும் பணிம திப்பேர்
அணியுலோ கத்தால் மற்றால் அமைபணி அகற்று வாரோ
பணிமிகச் செய்யாப் பொன்னும் பைம்பொனே அதுபோல் ஈசன்
துணிவுடைக் கீர்த்தி என்று துகள்அறுத் துட்கொள் வாரே. (2) 38
எலும்புவெண் டலைஎ ருக்கோ டேனக்கொம் பாமை யின்நன்
கலம்பல அன்றி நஞ்சார் கட்செவி கங்கை கண்டத்
திலங்கவே இவைஅ ணிந்தார்க் கேழையேன் உரைக்கும் புன்சொல்
அலங்கலும் புனைவார் என்றே அதுவும்ஓர் உறுதி தேர்ந்தேன் (3) 39
அவையடக்கம் முற்றும்.
கயிலைச் சிறப்பு
மெய்யர் மெய்யினில் பூசும்வெண் ணீறுபோல்
துய்ய பான்மையில் தோன்றும் கயிலைதான்
வையம் ஈன்றருள் வாலை உமையுடன்
ஐயர் வீற்றிருக் கும்திரு ஆலயம். (1) 40
புகழ்உருக் கொண்ட தெனப்பவப் பூதரம்
துகள்இ லாதவர் சிந்தையில் தோன்றுவோர்
சகள மாக நிறைந்திடும் தாபரம்
நிகளம் தீர்அயி ராவணம் நிற்பது. (2) 41
மற்ற மாவும் பகைஇன்றி வாழ்வது
சுற்றும் தேவர் முனிவர் துதிப்பது
பற்றி லாதவர் பற்றும் பதிஅது
கற்ற வர்பர வும்கயி லாசமே. (3) 42
போற்று கின்றஇப் பூதரம் தன்னிலே
ஏற்று கந்த இறைவர்தம் கோயிலில்
சாற்று கோபுரம் சூழ்சந்தி தானத்தில்
மாற்றம் இல்லதோர் மானத வாவியே. (4) 43
அந்தத் தீர்த்தத் தருகில் அணிபெறும்
சந்தம் மேவும் தமனியத் தால்பொலிந்
துந்தும் ஆயிரக் கால்மண் டபம் உள
தெந்தை யன்பர்க ளெய்தி யிருப்பிடம், (5) 44
வேறு
மன்னுமண் டபத்தா லின்கீழ் வதிந்தர னுக்கோர் வைகல்
சொன்னநூற் பொருளை முன்னம் சூர்தடிந் திடும்வேற் கந்தன்
அன்னைதன் மடியில் எய்தி அனைத்தும்தேர்ந் ததனை அன்பால்
துன்னிய சனற்கு மாரர் அகத்தியர் தமக்குச் சொன்னான். (6) 45
சொல்லிய பொருளை எல்லாம் துரிசறு சனற்கு மாரன்
நல்லவி யாசற் கோத நயப்புடன் தெளிந்தன் னானும்
கல்விசேர் சூதற் கோதச் சூதமா முனிவன் கற்றுப்
பல்பெரு முனிவற் கோதப் பயன்பெறு முனிவன் ஓர்கால், (7) 46
பூதலம் தனில்சி றந்த நைமிசா ரணியம் போந்தான்
மாதவம் இயற்றி அங்ஙன் வதிகின்ற மவுன யோகர்
போதக வாணர் போத சாதகர் பொய்யைக் காய்ந்தோர்
ஆதரம் பெருகு பக்கிரி மரீசியோ டைங்கி ராவே (8) 47
காசிபன் சாது கன்னன் கர்க்கன்கண் ணுவன்வ சிட்டன்
பேசுமுற் கலன்சி லாத முனிசங்கன் பிருகுத் தங்கன்
கோசிகன் பரத்து வாசன் கோதமன் குமுதன் பார்க்கன்
மாசுதீர் முனிமார்க் கண்டன் முதலிய மாத வத்தோர், (9) 48
பன்னகா பரண யோக சமரச பருதி வாணர்
தன்னையாற் றிருபோ தற்ற இடத்தினில் சயன முற்றோர்
சொன்னவே தாக மத்தோர் சுயம்பிர காச நீரார்
மன்னுமா சற்றோர் யாரும் எதிர்கொடு வந்து சூழ்ந்து, (10) 49
பாதங்கள் பரவி யோக ஆதனம் இட்டுப் பண்பால்
போதுடன் சாந்தம் கந்தம் அருக்கியம் புனலால் போற்றிக்
கோதிலா முகமன் கூறிக் கரைஇலாக் குணங்கள் பேசி
மாதவ முறையால் வாழ்த்திச் சூதரை வணங்கிக் கேட்பார்(11) 50
நாங்கள்செய் தவத்தால் இங்ஙன் நண்ணினீர் நம்பன் கீர்த்தி
ஓங்கிய மேன்மை யான சிவத்தல உண்மை யெல்லாம்
பாங்கினில் உரைத்தீர் முன்னும் இன்னமும் பருக ஆசை
தீங்கிலத் தலவி சேடம் தீர்த்தம்நின் மலன்வி சேடம், (12) 51
மூவகை ஒருங்கு மொய்த்த முன்னவன் பதிவி சேடம்
மாவுள மனையீர் எங்கட் கருள்செய்வீர் என்ன அன்பாய்
மேவிய தவவி யாசர் விருப்புடன் உரைத்த வாறே
தாவிலா மகத்வம் ஆன சரித்திரம் சாற்று கேமால், (13) 52
பகுத்திடும் சுருதி நான்கில் பரப்பிய பொருளின் உண்மை
இகத்தவர்க் காக மூவா றியம்பிய புராணம் தன்னில்
சகத்தைஉண் டவற்கு நாலாம் சதுமுகற்கிரண்டாம் சண்ட
முகத்துடன் இரவி தீக்கொன் றொன்றதாய் மொழிந்த தின்னும், (14) 53
முன்னவ புராணம் பத்தில் முதல்சைவ நூல்மொ ழிந்த
பன்னுசங் கிதையில் ஒன்று பரமசங் கிதையில் காண்டம்
சொன்னநான் கதனில் சேத்ர வைபவச் சுருதி தன்னில்
தென்னிலம் அதனில் காசிச் சேத்திரம் ஒன்றுண் டாமால் (15) 54
அத்தலம் புடைசேர் கின்ற அருச்சுனம் அதனில் வேத
வித்தக முனிவர் நீவிர் விருப்புடன் வேண்டு கின்ற
உத்தமப் பொருள தான உயர்பதி தீர்த்தம் ஈசன்
நித்திய விசேட மாக நிகழ்வது நிகழ்த்து கேமால், (16) 55
அவனிசேர் தவலோ கம்தான் சிவலோக மான இந்தச்
சிவன்நகர்ப் பெருமை எண்ணிச் சேர்ந்திடப் பெறுகின் றோரும்
தவம்உயர் ஞானம் மேவிச் சீவன்முத் தர்களாய்ச் சார்வர்
இவர்களுக்கு எய்தும் பேறு வேறுஎவன் எண்ணும் காலே. (17) 56
எத்தலத் தினும்வி சேடம் ஒன்றிரண்டு எய்தும் இந்த
மெய்த்த லம்மூவி சேடம் விளங்கிய மேன்மை யாலே
முத்தலத் தினிலும் நன்காம் முறைஅறிந் திங்ஙன் எய்த
வித்தகர் ஆகி மேலாம் வீடுபெற்று உயர்வர் என்றே, (18) 57
சகத்தணி திலகம் என்னும் தண்புடை மருத மாத
மகத்துவத் தலத்தின் எல்லை வருசரம் அசரம் ஆன
தொகுத்திடும் உயிர்கள் தம்மில் தொல்வினை உடலை நீங்கத்
தகைத்திடும் வேளை ஈசன் தாயுடன் விடைமேல் சார்ந்து (19) 58
பயம்ஒருவு என்று சாற்றிப் பசுவினை மடியில் ஏற்றி
வெயர்வினை முந்தி யாலே விமலைமாற் றிடவே ஈசன்
தயவுடன் வலதுகாதில் தாரக உபதே சத்தை
நயமுடன் ஓதி வேண்டும் நல்வரம் அளிப்பான் அன்றே. (20) 59
மெய்த்தல் உண்மை இன்னும் விளம்புதும் விடையம் நீங்கும்
சித்தர்கள் ஓர்கா லத்தில் செங்கம லத்து மேய
உத்தமன் திருமால் இந்திரன் முதலிய உம்பர் போற்ற
நித்திய சபையில் எங்கோன் நடம்செய்து நின்ற வாறும், (21) 60
மாதவன் காசி தன்னில் மாதவன் உபதே சத்தால்
பூதலத் தரனைப் போற்றிப் புடை அருச் சுனத்தில் வந்து
நாதனைப் பரவி எங்கோன் அருளினான் நதியின் நீரால்
போதகம் தன்னைக் காத்து முதலையைப் பொருத வாறும்,(22) 61
விண்பகை யாய்எ திர்ந்த விச்சுவன் தன்னை வென்று
திண்படு பாவம் நீங்கத் தேசிகன் விதித்த வாறே
மண்புகழ் புவியில் தென்பால் மருதுடன் மருதாய் ஒன்றித்
தண்படு முகில்ஊர் அண்ணல் தவத்தினில் சார்ந்த வாறும்,(23) 62
இந்திரன் தன்னை நேடி இமைய வருடனே போந்த
சுந்தரி விரத மாற்றிச் சுந்தரன் தன்னைப் போற்ற
வந்தரன் மருதில் தோன்றி மருத்துவன் பாவம் தீர்த்து
நந்தல்இல் வரங்கள் நல்க நல்வளம் பெற்ற வாறும், (24) 63
மனுபதி இவண்வந் தெய்தி மருதனைக் காணான் மாழ்கி
உனிஅருச் சுனத்தில் வேலை உய்த்ததில் பாய உள்க
அனையவன் செய்கை கண்டே அரன்அவண் எய்தப் பெற்று
நனியவான் பணியை முன்னி நற்றவம் செய்த வாறும், (25) 64
சிவன்பணி கருதி வேந்தன் செய்திடும் தவத்துக் காகப்
பவன்அந்த இலிங்கத் தின்பால் பாவனை வடிவாய்த் தோன்றித்
தவமனுக் கருத்தின் பாங்காய்ச் சங்கரன் அங்ஙன் வைக
உவமையில் குணபால் கோயில் உவப்புடன் செய்த வாறும் (26) 65
பங்கயன் காசி எய்தப் பரன்அவன் முன்பு தோன்றி
கங்கையின் சோத கம்நின் கதையினால் மருதில் காண்பாய்
அங்கண்எய் திடுவாய் என்றான் அதுமுற்றி அருச்சு னத்தில்
தங்குநா யகனைப் போற்றித் தண்டம்தா பித்தவாறும், (27) 66
பதியத்தி தீர்ந்தவாறும் பனவனி சத்தை உற்ற
விதியவிர்த் தானன் பாவம் வீய்ந்திடு செயலும் வெள்ளை
மதியன்கோ தமனால் வால சதானந்தர்க் களித்த வாறும்
நிதிதரு பவுத்தம் நீங்கி நிருபர்கோன் பெற்றவாறும், (28) 67
கதியல தந்த னுக்குக் காட்டிய செயலும் கங்கை
நதியின்பால் கருவூ ரற்கு நல்கிய நலனும் நாதன்
விதிமணக் கோலம் போற்றி விருப்புடன் அருச்சு னத்தில்
பொதிகைமா முனிவன் வந்து புகழ்வரம் பெற்ற வாறும், (29) 68
பங்கயன் திருமால் ஆதிப் பண்ணவர் முதலாய் யாரும்
புங்கவர் முனிவர் யாரும் புடை அருச் சுனத்தில் வந்து
மங்கையோர் பாகன் தன்னை வழிபட்டுத் தார கத்தைச்
சங்கரன் அருளப் பெற்றுச் சாயுச்யம் பெற்ற வாறும், (30) 69
பின்னும்ஓர் காலம் தன்னில் பிறைமுடிப் பெருமான் தன்னை
மன்னவன் மாறன் போற்றி வரங்கள்பெற் றுய்ந்த வாறும்
கன்னியாம் பொருநைத் தீர்த்தம் காசினி நதியாய் ஓங்கித்
துன்னுவோர்க் கருளி முந்நீர்ச் சங்கமம் சுலவு மாறும், (31) 70
பழமறை பரவும் ஆத்தி வனப்பதிப் பண்பும் தென்பால்
குழகன்வாழ் பூவ னத்தின் கொள்கையும் அதற்குத் தென்பால்
விழவுய ரரிகைச் சேத்ர மேன்மையும் மேல்பால் மூன்றாய்
அழகிய பரமன் வைகு மடிகைமா னகர்ச்சி றப்பும், (32) 71
முனிவரர் அருச்சித் தேத்தும் முறைமையும் முன்னை ஓர்கால்
பனிவரை இமயச் செல்வி பாலகன் தந்த வாறே
மனியசந் தானச் சூதன் வகுத்தனன் வகுத்த வாறே
கனிவுடன் தொகையிற் கூறி வகைஇனிக் கழறல் உற்றேன். (33) 72
திருநகரந் தீர்த்தமான வரலாறு திருநடனம்
புரிபுனிதன் தவ மோட்சம் அரிபரவ லாதிமனுப்
பரவல் ஆலயம் பிரம ரப்பதி யத்தியவிர்த்தானன்
தரும்அல கைஉரு நீங்கும் வாலசதானந்தமுனி (34) 73
அகனீங்கு பவுத்த மதனல தந்தன் அருட்சித்தன்
சகம்நீங்கு குறுமுனி தாரக மோட்சம் தமிழ்வேந்தன்
தொகையாக நாலைந் தரஞ்சூழ்ந்த தலஞ் சொலவைந்தாம்
வகைஇரு பத்தோ ரைந்து படலவிரி பகுத்து ரைப்பாம். (35) 74
- வரலாறு முற்றும் -
நாட்டுப் படலம்
மழைவளம்
மன்செய் காலத்தில் ஆதிமா மனுமறை வழியே
மின்செய் வாளினால் கலிப்பகை ஒதுக்கிமே தினியை
முன்செய் கோலினால் முறைநிறுத் திடவளம் ஓங்கும்
பொன்செய் குன்றெனும் பொதிகைநாட் டணியினைப் புகல்வாம். (1) 75
மைய்ய வாநிறக் கடல்எனும் மன்னன்வான் என்னும்
செய்யும் மெய்வகை அமைச்சுடன் தேர்ந்துமா நிலங்கள்
உய்ய வேதன தரசுசெய் வதனையே உன்னி
வெய்ய கோடைமேல் மிகைசெய நாற்படை விதிப்பான். (2) 76
வானெலாம் மள்ளர் மின்வாள் வார்முரசு அசனிஆர்ப்பத்
தானம் தொழுகும் வேழம் சாகரம் உழந்த கொண்டல்
பானுரை கவரி மச்சம் பாய்திரை வாசி யாகச்
சேனையாய் அணிவ குத்துத் திரைமுகில் இரதம் ஊர்ந்தே, (3) 77
வான்வழிப் படர்ந்துகார் மலையப் பாசறைத்
தானம தெய்திவிண் தாரத் தெழுந்ததன்
மானநீர்ச் சேனையால் மதித்து மேவலர்
கானலார் பாளையைக் களையச் சூழ்ந்ததே. (4) 78
தனுஎனும் இந்திர சாபம் கோட்டிமின்
கனைசெறி சோனையாம் கணைகள் தூவியே
வனைதரு கூளித்தேர் மன்னை மாற்றிவான்
புனைகடல் ஆழியால் புவனம் காத்ததே. (5) 79
தென்மலை உச்சியில் பொழிதல் தெண்டிரை
மன்னவன் வழிபட வந்து மஞ்சன
முன்னவன் நாறும்பூ முடியி னிற்சொரிந்து
இன்னபொன் மலர்களால் இறைஞ்சல் மானுமே, (6) 80
வானவன் அமுதலர் கொண்டு வானவர்
வானவர் குறுவழி பாடு செய்வன
வானவன் வானமார் மலையின் மாமழை
வானவ மணியுடன் சொரிந்த வண்ணமே. (7) 81
விண்டுயர் மஞ்சனம் விமலர்க் கீய்ந்தென்ன
விண்டுயர் மலையினில் விண்டு பெய்தவை
விண்டுரை தந்தனம் பொழிந்த வேணிநீர்
விண்டுவிற் கொடுபுனை விளைவை ஓதுவாம். (8) 82
வேறு
விரைசெய் சந்துசூழ் பொதிகையின் மேல்மழை விரவி
அருவி கான்றிழி அழகுதான் அந்தரத் தெய்வச்
சுரபி நாயகன் முடியின்மேல் சுரந்தபால் அதனைச்
பரவி யேசொரி கின்றன ஒத்தன பண்பே. (9) 83
சொரிந்திழி அருவிசூழ் காஞ்சி மேகலை
மரஞ்செறி பொதிகையாம் வனிதை மாதனத்து
அரும்பெறல் ஆரம்ஒத் திடும் அன் றேல்உயிர்க்கு
இரங்கிவீழ் பாலெனும் இசைக்கல் ஆகுமே. (10) 84
வரைபெறு வனமகள் வனமும் சோலையும்
குரைவுடன் தவழ்ந்துகால் கொடுந டந்துமென்
கரைஉடைந் திடவிளை யாடிக் கன்னிநீர்
புரைதவிர் வண்டலாட் டயர்ந்து போனதே. (11) 85
குறிஞ்சிபால் முல்லை பண்ணை கோல்வளை நெய்தல் என்னும்
சிறந்தபூ மகளிற் காயாய்ச் செவிலியின் அமுதம் ஈய்ந்து
பெறும்பல பருவம் தந்து பேணியே பரைஒப் பாக
அறம்பல இயற்றி நாளும் அருமையாய் வளர்க்கும் அன்றே. (12) 86
மணந்தவன் மனையிற் செல்லும் மங்கல மகளிர் போல
வணங்கிடை வஞ்சி மீதிற் காஞ்சிவாய்ந் தணிமுத் தாரம்
இணங்கிட வளையும் தோடும் கூந்தலும் இசைந்தங் குள்ள
கணந்தரு பலவும் கொண்டு கன்னிநீர் கடல்மேற் செல்லும். (13) 87
பொதியமாம் வனிதை கொங்கைக் குவட்டினில் பொதிந்த சாந்த
மதுமலர்க் கூந்தல் தாது வாசமார் ஏலம் மற்றப்
பதிவரை மாதர் ஆடும் பழுக்கரி சனமும் கூடி
நதியினிற் கலங்கி நல்லோர் உளம்என நணுகிற் றன்றே. (14) 88
அலர்தலை உடைய தாலும் அரவமும் தரித்த தாலும்
தலைஅணி வேணி யாலும் தரைவழிப் படுத லாலும்
கலைவரி வேங்கை சுற்றிக் கடுக்கையும் புனைத லாலும்
சிலைவரை உடையோன் போலும் சிறந்தது பொருநைத் தீர்த்தம். (15) 89
வான்வழிப் பிறத்த லாலும் வரைதனை வளர்த்த லாலும்
தேன்நிகர் சொல்லி னாலும் திசைஎலாம் அமுதம் ஊட்டித்
தான்வளர்த் திடுத லாலும் தண்புனல் தலைவற் சார்ந்து
தூநலம் படைத்த கன்னி இமையமன் தோகைக் கொப்பாம். (16) 90
வளைஉறு பாணி யாலும் வாரிபால் மேவ லாலும்
குளிரலர்த் தாரை யாலும் குவலயம் கொள்வ தாலும்
நளிர்கம லத்தாள் பூமான் தன்னிடம் நயந்தே ஆர்வம்
விளைவுறப் பெருகும் உந்தி விறல்அரி நிகர்க்கும் அன்றே. (17) 91
பங்கய மேல தாலும் படைத்திடும் குணத்தி னாலும்
தங்கிய வனத்தி னாலும் தகும்கடம் ஏற்ற லாலும்
மங்குல்மே னியனால் உந்தி பெற்றிட வருத லாலும்
பொங்கிய பொருநை நீத்தம் பூமனைப் போன்ற தன்றே. (18) 92
ஈறிலா வேலை முன்கொண் டெறிந்துசூர் அலைவாய் முற்றக்
கூறங்கே கயமேற் கொண்டு கூர்வள்ளிக் கொடியைச் சார்ந்தும்
ஆறிரு கையால் தேனும் தினையும் கொண் டார்த லாலே
மாறிலாப் பொருநை கந்த மைந்தனை மானும் அன்றே. (19) 93
வரைவளர் அகிலார் சந்து வன்னிமந் தாரம் கொன்றை
விரைமலர் வினைந்து வேழ மாவருக் கைநல் வாழை
உரைதரு கனிதேன் கொண்டே உந்துநீர் சாய்ந்தோர் தம்மைத்
திரைவளைக் கையால் பூசை செயவரும் தொண்டர் போலாம். (20) 94
வேறு
வருக்கைமா வாழைத் தீங்கனி வழிந்திழி
பெருக்குதேன் சேறுடன் பொருநை பெய்குளம்
தருக்குநீர் நிலந்தொறும் சார்ந்து பேணியே
முருக்கிய உவர்கடிந் துவரி மொய்த்தவே. (21) 95
இன்னணம் பெருக்குயர் பொருநை யின்துறை
மன்னவன் ஆணையால் உலகம் வாழ்தல்போல்
துன்னுநீர் வினைஞரால் சார்ந்து கால்வழி
செந்நெலை வளர்த்திடும் செய்கை பூண்டதே, (22) 96
வேறு
வெள்ள நீர்பரந் தருவிகால் ஓதையும் வேலை
மள்ளர் ஓதையும் வருபுனல் சிறைசெய்கம் பலையும்
கள்ளு லாவிய கன்னலைப் பாகுசெய் கறங்கும்
பள்ள நீரொலி தன்னைமாற் றுவநதிப் பாலே. (23) 97
அணையிற் கூடலால் வாரமே பெருக்கலால் அகன்கால்
பிணையற் கேற்றலால் கட்டியே கிடைக்கையால் பிறியா
மணிமுத் தாடலால் உவரியிற் சேரலால் வருநீர்
துணைவற் கூடியே தோய்பவர் போகத்தைத் தோற்றும். (24) 98
நீர்ப ரப்பிய நிலம்தொறும் நெறிகொடு மள்ளர்
ஏர்ப ரப்பியே உழுபவர் இறைவலி வளமைச்
சீர்ப ரப்பியே சேறுசெய் நாறுசெய் வார்கள்
பார்ப ரப்பியே பயிர்செய்து வளம்படுத் திடுவார். (25) 99
மேன்மை ஆகிய பலன்களை எய்துவான் வேண்டித்
தான மேசெயத் தவம்தர கிளர்குநல் தவம்போல்
ஏன மேபெறும் உழவர்கள் இடுபயிர் எங்கும்
வான மேபொழி பருவத்தால் வளர்வன அன்றே, (26) 100
வேலை யாம்எனும் மடுவில்வீழ் மேதிகள் பொழிந்த
பாலை வாளைகள் பருகியே யுகழ்தரப் பணைத்த
சோலை நீள்கனி உதிர்தலிற் பனசத்தேன் சுளைவிண்
டாலை பாய்நறை யத்துடன் பாய்வன அயலே, (27) 101
களைகட்டல்
திருவந் தெய்தியே வளம்பெறு செல்வர்கள் செல்வம்
தருமம் செய்திடத் தழைவபோல் தழைந்திடும் பயிர்க்குக்
கருவன் கால்மள்ளர் களைகளை பதம்எனக் கருதிப்
பருவம் காட்டிடக் கடைசியர் பணைதொறும் படர்வார். (28) 102
நறவம் மாந்துவர் கடைசியர் நகைமுகத் தரும்பச்
சுறவு நோக்குவார் கன்னலோ சென்னெல்சொல் என்பார்
புறவு நோக்குவார் சாடைகள் பேசுவார் புகுவார்
அறலின் ஆர்ந்தசெய்க் கணியதாய்க் களைஅகற் றிடுவார். (29) 103
ஊடி னார்எறி தார்எனக் கஞ்சம்உற் பலம்தேன்
பாடும் ஆம்பல்வாய் விழிமுகத் துவமையும் பாரார்
நாடி யேயுடை யவன்பணி யால்பகை நாட்டிச்
சாடி யேகளை வார்உற வோர்ந்திடார் தகைத்தே, (30) 104
வேறு
மள்ளர்தம் மிகுவெள் ளம்போல் வளர்முதல் வலையம் போலக்
கொள்ளவார் குரல்முன் தோன்றிக் குஞ்சரக் குழாத்தி னூடு
விள்ளிரதம் போல வாய்ந்து வெம்பரத் திரள்மு கம்போல்
தெள்ளுநெற் கதிர்க விழ்ந்து சிறந்தன சாலி யெல்லாம். (31) 105
பேரின்பத் தமுதுண் பார்கள் பேணிய விளைவு போலும்
நாரியர் பருவம் கண்டு நசைஉணர் வகைந யப்பால்
சாரியும் ஈரைந் தாம்பூந் தருவிளை வறிந்து சார்ந்து
சேரின்ப விளைவும் போல விளைந்தன செந்நெற் சாலி (32) 106
வண்டொலி நீலம் ஆம்பல் வனசமும் படவ ரிந்து
கண்டரிச் சும்மைத் தாக்கிக் கதிர்வரை எனப்போர் செய்து
கொண்டுவை களைய மேதி ஏறுடன் குமையத்தூற்றி
எண் தொகு சாலி பந்தி ஏற்றியே இல்லில் உய்ப்பார் (33) 107
புன்னில விளைவுள் ளிட்ட பொதும்பரின் விளைவுங் கானந்
தன்னிடை யவரை தோரை சாதிகள் உளது மற்றுங்
கன்னலு முதலிட் டெல்லாங் கரையிலா வளங்க ளாக்கி
பன்னும்நல் அறங்கள் செய்வார் பகரும் இல் லறத்தி னோரே. (34) 108
அஞ்சுமா றாணை போக்கி அஞ்சுறா தவனி ஆளும்
மஞ்சுறா வுயர்த்த தொன்றற் கஞ்சிலார் என்று போக
வஞ்சுணா வறுசு வைத்தா லஞ்சுநீங் கிடுமூ வர்க்கு
மஞ்சுகா ரணர்க்கும் பூசை யன்புட னியற்றி வாழ்வார். (35) 109
வேறு
சரிதை மெய்பெற நிலம்பெறத் தாழ்விலா தாற்றிக்
கிரிகை நன்முதற் குறுவிரைப் பூக்கிளர் யோகம்
புரிகை கால்வழி அன்பின்நீ ராற்புலங் கரந்து
வருகை ஞானம்போல் அமுதுண்டு மகிழ்சிறந் திடுவார். (36) 110
வேறு
அன்பர்கள் உற்ற போதில் அடிபணிந் தஞ்சி யேசூழ்ந்
தின்பம்உற் றினியபேசி இன்சுவை அமுத ருத்தி
பொன்புனை ஆடை நல்கிப் போற்றுவார் பொருநை சூழ்ந்த
நன்பதி உற்ற மாந்தர் நாள்தொறும் நயத்தால் மாதோ, (37) 111
வேறு
நீடு நல்அறம் இயற்றுவோர் நீள்மறு கெங்கும்
மாட மாளிகை உபரிகை மந்திர மகங்கள்
நாடு சாலைகள் நாவலோர் பட்டிமண் டபங்கள்
பீடு தங்கிய பெருமதிச் செல்வங்கள் பிறங்கும். (38) 112
பொருள் இரண்டினில் அளகையோன் தேயலால் பொருள்கள்
வரும்இ ரண்டுமின் னாட்டுள மற்றிதற் குவமை
தெருளும் யோகரால் தேவரால் திரிபுவ னத்தும்
துருவி னும்கிடை யாதுற்றோர் புண்ணிய சுதரே. (39) 113
மலைஒன் றேறிய வண்டுகள் பாடுவ மைந்தர்
கலைஒன் றேறிய கலவிகள் கழறுவ காதல்
வலைஒன் றேறிய மவுணரை நோக்குவ மாதர்
அலைஒன் றேறிய பாகுசெய்ப் பாய்ந்திடும் அயலே. (40) 114
சோலைவளம்-- இது மாத்திரைப் பெருக்கம்
ஒன்று நீங்கிய மாகத்தை ஆற்றுவோர்க் குவந்தே
ஒன்று நீங்குகா னகம்தனை உதவிடும் கடுக்கை
ஒன்று நீங்கிய வாரியின் இசையினுக் குவப்பாய்
ஒன்று நீங்கிய மகரந்தம் தேமலர் உகுக்கும். (41) 115
இது மாத்திரைச் சுருக்கம்
மருதம் மேவிய கிளிமறை ஓதுவ பூவை
சுருதி கூட்டுவ சொற்குயி லாம்எனச் சோலை
கருதி யேசிரம் கம்பிதம் செயஎனக் கண்ணீர்
சொரியும் வேங்கைகள் சொனம்தரும் செம்மலால் துணிந்தே (42) 116
கோல மென்மலர்க் கொம்பராம் வனிதையர் குழைந்து
தாலம் பங்கயத் திலைகொடு தளிர்க்கையால் சார்ந்து
நீல நிம்பமுத் துடனிராஞ் சனங்கள் சென்னீ ராடி
சாலும் போதுறு மணந்தவர்க் கியற்றுவ சாலை. (43) 117
திங்கள்வெண் குடைநி ழற்றச் செறிகந்தி கவரிவீச
மங்கலம் குயில்இ சைப்பக் காமரம் இசைப்ப வண்டு
பங்கயங் களாசி ஏந்த முழவம்பைந் திரைகள் ஆர்ப்ப
ஐங்கணை வசந்தன் காவில் அரசுவீற் றிருத்தல் மானும். (44) 118
வண்டு பாடுவ மயில்விரித் தாடுவ குயில்வாய்
விண்டு நேரிசை கூடுவ ஆம்பல்வாய் விள்வ
கெண்டை நேர்விழி உற்பலம் காட்டுவ கிளர்ந்து
கண்டெ னும்சொலார் பயில்அரங் கிசையுமக் காவே. (45) 119
மலரின்தண் டலையை நோக்கி மன்னிய கருமே கங்கள்
கலைமதி முகத்தி னார்தம் கூந்தலைக் கவர்ந்தீர் என்னத்
தலை அசைத் தன்னார் ஓதி தன்னைநீ ரேக வர்ந்தீர்
அலரென நாணம் உற்றே அந்தரத் தேகிற் றன்றே. (46) 120
வேறு
வரைவளர் குறிஞ்சியும் வனம்கொள் முல்லையும்
கரைஇலா வளம்தரு மருதும் கம்பலைத்
திரைதரு நெய்தலும் செறிந்த தன்பொருள்
தரைஎலாம் மயங்கிய தன்மை சாற்றுவாம். (47) 121
குறிஞ்சியின் தேன்களும் கொல்லை மூவினத்
துறும்ததி பால்களும் மருதம் ஓங்கியே
சிறந்திடும் கன்னலு மறத்திற் சிந்திய
நிறம்தரு நீர்களும் உவரி நீத்ததே. (48) 122
தேனுடன் தினைகளும் செலுத்தி முல்லையிற்
கானவர் கொள்ளுடன் கள்ளும் கொள்வன
நானமும் தேரையும் நல்கி ஆயர்கள்
மானிலத் தெரிசனஞ் சென்னெல் மாறுவார். (49) 123
பண்ணும் சந்தில்வாழ் அறுபதம் குறிஞ்சியாழ் பழனப்
பொன்ன லர்த்திய தாமரை வண்டுக்குப் புகன்று
துன்னும் கம்பலை யாழினைப் பயிலுவ தோகை
அன்ன பார்ப்பினுக் கடைகிடப் பனஅளிக் கயலே. (50) 124
மேதி சாரலில் தினைதறித் தம்மடு மேவிப்
போது லாம் அறல் உழக்குவ போதகம் மருதில்
தீதி லாக்கழை குதட்டியே தேம்பொதி சோலைச்
சூதம் மேவியே முறச்செவி துளக்கியே துயிலும், (51) 125
பாறு மேவிய பாலைமுல் லைச்சிறார் படர்ந்து
சூறை ஆடுவ குறிஞ்சியிற் சூறைமா ருதம்போல்
வீறு சான்றிடு மீளியும் விடலையும் நாகத்
தேறி யேபடர் கறியினை எறிந்துகுப் பனவே. (52) 126
வேலை மேவிய துவர்க்கொடி சந்தன விருக்கத்
தோலை மேவியே படர்வன மருதமாம் துறையும்
சீலர் சாடிய சிற்றிலால் வெகுண்டழச் சிறுமின்
பாலர் மேல்அணி முகத்தினைப் பரிந்தெறி வனவே. (53) 127
நெய்த லங்களிப் பரத்தியர் கொடிச்சியர் நேர்ந்து
துய்ய முத்தினுக் கெடைக்கெடை ஏனலைச் சொரிவார்
மைய ஓதிய உழத்தியர் முல்லைமா தர்பால்
தொய்யி லால்எழு துவமுலைச் சுவட்டினைப் பார்த்தே, (54) 128
மாது ளங்கனி விளத்தை மாதரார்
காது வேற்கண்ணி னைக்கவர்ந்த நீயென
ஓதிடில் ஆதனம் உனக்கும் உண்டெனத்
தாதுக நாணொடும் தலைக விழ்ந்ததே. (55) 129
கும்பம் போன்ற காய்க்கு ரும்பையின் தாழையைக்
கூந்தல் என்றுயர் போந்த
அம்பல் பேசுவ கவர்ந்தனை யன்னலார்
முலையை என்றதை நாடிக்
கும்பம் என்றுயர் தாழையும் அவர்குழல்
கவர்ந்தும் கட்டறியாய் என்
றும்பர் ஓங்கியே தலை அசைத்திடு
வன ஓங்கியே உய்யாமை (56) 130
வேறு
வரிச்சு ரும்பு வயிர்இசை வந்துலாய்
விரிக்குஞ் சாமர மேகம் எதிர்புகை
செறிக்குந் தோகை அரம்பையர் சந்தனக்
கிரிக்குள் ஈசன் பவனி கிளைக்குமே. (57) 131
வேள்வி யின்புகை வேடர் புனத்தெறி
காழ கில்புகை கங்குலைக் காட்டுவ
நீள்சி னைப்பணை முத்த நெடுவரை
சூழ்ம ணிக்குலம் சொற்பகல் காட்டுமே. (58) 132
அருவி ஓசையும் ஐவனம் தூற்றுவோர்
கருவி ஓசையும் கானம்செய் காமரம்
மருவி யாழ்செயும் ஓசையும் கண்டுவான்
உருமின் ஓசை ஒதுங்கிடும் உட்கியே. (59) 133
கயிலைநா யகன்புடை மருதக் காவினில்
நயமுடன் இருத்தலால் நம்பன் வில்எனும்
வயமுறு மேருவே பொதியம் வந்திழி
பயன்மலி பொருந்தமே பரந்த கங்கையே. (60) 134
அகத்தி யனிறை சாகத் தணிந்துறு
மகத்து வவான்நீர் வரும்பொ ருந்தமே
சகத்தியல் கடந்தவர் சாரும் நீர்மையால்
சிகைத்தனிப் பொதிகையே கயிலை செப்பவே. (61) 135
அங்க யற்கணாள் தனைப்பாணிப் பட்டதும் அமலன்
மங்கை யோடுயர் திருமணக் கோலத்தை மலையும்
தங்கு மாதவற் கருளிய தன்மையும் தமிழால்
பொங்கு வேதமும் பொலிந்திடு கிளர்ந்ததிப் புவியே. (62) 136
மகத்து வம்பெறு பொதிகைநாட். டினுக்குப மானம்
சகத்தில் வேறிலை அதன்பயன் முழுவதும் சாற்ற
அகத்தி யற்கிணை யானபேர்க் கும்அரி ததனை
இகத்தில் யான்சொல முடியுமோ இயன்றவா றிதுவால். (63) 137
நாட்டுப்படலம் முற்றும் .
நகரப்படலம்
பொதிகைநாட் டியல்பினைப் புகன்று மற்றதின்
அதிகம்ஆ கியதலம் ஆன பதிக்கிணை
மதிபுனை சோலைசூழ் மருத மாநகர்ப்
பதிவளம் இயன்றவா பகரல் உற்றனம். (1) 138
புண்ணிய வனிதையும் புகழ்செய் மங்கையும்
தண்அளி அன்பெனும் சரதப் பேதையும்
பண்அமர் நீதிநூல் பருவப் பாவையும்
நண்ணிய தலம்மண நகரம் என்பவே. (2) 139
கடல்நெடுந் துகில்உடைக் கன்னி நாடெனும்
மடமகள் தனவரை வயங்கு மாலையே
தடநெடும் பொருநையூர் சார்ந்த மாமணி
நடுமணி மருதமா நகரம் என்பவே. (3) 140
சாகரம் வேலியாம் தரணி பொன்னிலம்
பூகதம் சூழ்வயல் பொருந்த நாடதில்
வாகுசேர் கன்னலாம் வளங்கொள் ஊரதன்
பாகுசேர் கட்டிமா மருதப் பாடியே,(4) 141
பாருடைக் காஞ்சியே அறம்ப லித்தது
சீருடை அளகையே பொருள்சி றந்தது
தாருடை வானமே போகம் சார்ந்ததாம்
ஏருடை முத்திவீ டிவ்அ ருச்சுனம். (5) 142
அத்தலம் மூன்றினும் அமைந்த தொவ்வொரு
வித்தகம் இந்நகர் விரும்பு வோர்பெறு
நித்திய அறம்பொருள் இன்ப நீர்மையும்
உத்தம மோட்சமும் உறுவ திந்நகர். (6) 143
இந்நகர் சிவநகர் என்ப மானத
நன்னதி பொருநையே நதியின் பாங்கர்வாழ்
பொன்னணி கற்பகம் புடைஅ ருச்சுனம்
மன்னிய நாயகன் மருத வாணனே. (7) 144
சொல்வளத் தாரகச் சுருதி வாய்மையும்
நல்வித சாதன நலத்தை ஈவதும்
கல்வியைத் தருவதும் கவலை தீர்ப்பதும்
செல்வம்மே வியபுடை மருதச் சேத்திரம். (8) 145
செய்ய பூமகள் சேர்ந்தசெந் தாமரை
துய்ய பூமகள் சோதிஅம் போருகம்
சையம் ஈன்ற மகள்இம யாசலம்
வையம் ஏத்தும் மருதெனும் மாநகர். (9) 146
படியில் மிக்க மருதெனும் பைந்தொடி
வடிவிற் சூழ்ந்திடும் காஞ்சிவ ளந்திகழ்
கொடியில் பூத்த குலமலர் கொய்தளிர்
கடிகொள் காவும் கழனியும் காட்டுமே. (10) 147
ஆர ணத்தொடெண் எண்கலை ஆய்ந்திடும்
கார ணத்தரும் காமுகர் இன்பமும்
வாரி ணக்கிய தனமட வார்களும்
சீரி ணக்கிய செல்வரும் சேர்பதி. (11) 148
எங்கும் செல்வம் நிறைந்திடும் இல்களே
எங்கும் அன்னங்கள் ஈபவர் சாலையே
எங்கும் புண்ணியர் போற்றும் இடங்களே
எங்கும் உத்தமர் எண்ணிலர் என்பவே. (12) 149
வீதி தோறும் விழா அணி காளையர்
போது சாந்தம் புனைந்துயர் பொன்எனும்
மாதர் மைந்தர் மகிழ்ந்தினி தாய்உறை
ஏதம் அற்றவர் வாழ்பதி எங்கணும் . (13) 150
வேறு
ஆரண விதிகளும் ஆக மங்களும்
காரண ஒழுக்கமும் கருணை அன்பினால்
ஓரணி மனைகளில் விருந்தி யற்றுவோர்
சீரணி முகமனும் சிறந்த வீதியே. (14) 151
மணங்கள் எய்துவ காவும் மனைகளும்
அணங்கு செய்வத கங்களும் மாதரும்
வணங்கிச் சூழ்வன மைந்தரும் சாலியும்
இணங்கு வீதிகள் எங்கணும் இன்னவே. (15) 152
சந்த னம்அகில் சண்பகம் தண்பலா
மந்த ரம்மகிழ் புன்னைநன் மாதவி
கொந்த லர்க்கொன்றை கோங்குடன் கூவிளம்
கந்தி பாடலம் காவுகள் எங்கணும். (16) 153
புன்கும் புன்னையும் பூம்பொரி தூற்றுவ
நன்கு முப்பழ மும்தரு நல்குவ
வின்கு லைக்கமு கம்அரை ஏந்துவ
தென்த திக்குப சாரம்செய் சோலையே. (17) 154
வனங்கள் எய்துவ தாமரை யாம்பலே
வனங்கள் எய்துவ தாமரை யாம்பலே
யனங்கள் எய்துவ சாலை யுவளக
மனங்கள் எய்துவ சாலை யுவளகம். (18) 155
மாக மஞ்சிவர் மாளிகை மஞ்சியே
நாக மிஞ்சிய நன்புற மிஞ்சியே
சோக மிஞ்சிடும் சொல்லெழுத் தஞ்சினால்
மேக மஞ்சனம் வீசிய வீதியே. (19) 156
தோகை வஞ்சி சுருங்கிடை வஞ்சியே
மேக மென்குழல் மின்னார மென்குழல்
பாக ணஞ்சனம் பானற்கண் அஞ்சனம்
வாகு டன்பயில் வீதியே போகமே. (20) 157
அஞ்சு மாறுள தானில வஞ்சுமே
எஞ்சு மாறுமின் னார்இடை எஞ்சுமே
நஞ்சு மாறுமின் னார்விழி நஞ்சமே
கஞ்ச மாதலாத கடிநகர், (21) 158
வளமு லாவு வனசத் திருப்பிதே
வளமு லாவு வனசத் திருப்பிதே
களம ரஞ்செய் கவிதைக் குரல்களே
களம ரஞ்செய் கவிதைக் குரல்களே. (22) 159
அரசர்கள் நடத்துதேர் ஒலியு மன்னவர்
பரிதொடுத் திடுநடை ஒலியும் பாகர்கள்
கரிசெல நடத்துகம் பலையும் கஞ்சமார்
திருவளர் மங்கலம் சிறந்த வீதியே (23) 160
மதிஉ லாவுவ சோலையும் மேலவர் மனமும்
துதிஉ லாவுவ பூகதர் புனிதர்வாய்த் தொகையும்
கதிஉ லாவுவ மருதமும் கந்துக நடையும்
நிதிஉ லாவுவ மனைவளர் நீதியின் நெறியே (24) 161
கொடி அனார் இடையும்மா ளிகையும் மென்கொடி
வடிவினார் ஓதியும் மறுகும் மாலையே
அடிகளும் மாடமும் அணியும் வெண்பொடி
புடவியர் புகழ்ந்திடு பொன்செய் வீதியே (25) 162
கானமார் சோலையும் தடமும் கந்தரம்
வானமார் காவும்நன் மனையும் கற்பகம்
தானமர் மேலவர் தையுந் தானநீர்
தூநலர் மேவிய மருதத் தொல்நகர். (26) 163
வனசம் ஆம்பலம் உற்பலம் சைவலம் முகம்வாய்
முனைய வேல்விழி கூந்தலா முல்லையே கோங்கம்
சினைஅ ரம்பைமென் மூரல்தோள் செந்தனங்குரங்கா
நனைய சண்பகம் மேனியா மருதநா யகிக்கே. (27) 164
மல்லிகை குவளைசெவ் வந்தி மாமருப்
பில்கிய பித்திகை வாச்சி பிச்சிமென்
முல்லை கேதகை வளைமுடித் துலாவிய
செல்வளர் சிகழிகை மருதச் செல்வியே. (28) 165
பண்ணிய லாள்பயில் பதுமச் சேக்கைபொன்
மண்ணிய மேல்நிலைப் பதியின் மல்கிய
எண்ணிலாக் கொடிகளும் இலங்கி ஆடுதல்
விண்ணவர் கருடர்வ ழைக்கு மேன்மையே (29) 166
பளிங்கி னால்செய்த பதியின்மேல் செம்மணிப்பத்தி
வளங்கொள் மேல்நிலை தனில்பயில் மகளிர்கள் வழங்கல்
தழங்கு நீரில்செந் தாமரை மலர்களில் சார்ந்து
விளங்கு கின்றசெந் திருக்கள்வீற் றிருப்பது விளைக்கும். (30) 167
தழையும் கும்பமும் மாலையும் கயல்தருப் பணமும்
கழையும் சங்கமும் கொடிகளும் காட்டிய வீதி
குழைமென் கொங்கைமே கலைவிழ கொடிறுதோள் கண்டம்
இழைஇ லங்கிடை மங்கல மகளிரை இணையும். (31) 168
விழவ றாதன வீதியும் சோபனம் மேவி
மழவ றாதசம் பன்னஇல் லங்களும் வயலில்
உழவ றாதபைம் போகமும் உலப்பிலா தோங்கு
முழவ றாதது முன்னவன் கோயில்அம் மூதூர், (32) 169
தோரண நிரைகளும் துழனி ஆடுவோர்
காரண நிரைகளும் கந்து சீறிய
வாரண நிரைகளும் வாசிப் பந்தியும்
தேரணி நிரைகளும் சிறந்த வீதியே. (33) 170
சொற்படு கலைகள்தேர் தொகையின் செல்வரும்
பொற்புடை நிதியரும் பொருந்தும் வேள்வியால்
அற்புடை ஆடவர் அன்றிச் சேர்கலாக்
கற்புடை மகளிர்வாழ் கவின்கொள் வீதியே. (34) 171
விஞ்சையர் மகளிர்பால் வேசை மாதர்கள்
மிஞ்சிடப் பாடியே வீணை வெல்குவார்
வஞ்சியர் ஊடலால் அவுணர் மார்பமும்
குஞ்சியும் பஞ்சடிச் சுவட்டுக் கோலமே. (35) 172
வேறு
மின்னுருப் பொலிந்த மங்கை யார்கள் வெம்மை மைந்தர்மேல்
கன்னல்வேள் சரங்களான கண்கள் மூரல் வதனமே
அன்னபோதி னால்அடர்த்தும் அனையர் கொங்கை யானையால்
துன்னுமார் பகம்பொரச் சுரந்த காமம் மூழ்குவார். (36) 173
வேறு
மாதர் காம வலைப்படு மைந்தர்கள்
தூதி யங்கும் தொழிலரைப் போற்றுவார்
பேதை யார்பணி பேணுவர் பேதையார்
கோதை அங்கம் புகழ்வர்கொண் டாடுவர். (37) 174
அன்ன மென்நடை யாருடன் ஆடவர்
மின்னு மேகமும் மேவின தொப்பவே
மன்னு தண்சுடர் முற்றமஞ் சத்தினில்
கன்னல் பால்கலந் தென்னக் கலப்பரே. (38) 175
முத்தம் தாஎன மோகமின் னார்களைச்
சித்தம் ஒன்றிச் சிறுகலை பற்றியே
நத்தி நத்தி நயந்து நளினத்தில்
அத்தம் சேர்த்தி அணைகுவர் ஆடவர். (39) 176
அன்ன பான்மையர் இன்னிசை யாழ்வலோர்
மின்ன னார்பயில் ஊடல் விலக்குவோர்
இன்ன லார்விடு தூதின் இயங்குவோர்
முன்னி ஆவணம் எங்கணும் முற்றுவோர் (40) 177
வேறு
வேளை வென்ற மைந்தர் தம்மை விரக மான பார்வைசேர்
வாளை வென்ற கண்களால் வலைப்ப டுத்து மாதர்கள்
தோளை நவ்வி யேதி ரிந்த சுரதசீலர் கள்பின்
னாளை என்றி ராதுசுனம் நாட்டுவார் அனேகரால், (41) 178
விழவுகண்டு மைந்தர்மாதர் மிகமகிழ்ச்சி எய்துவார்
குழைகள் காஞ்சி பணிகள் இன்ன புதியகோல மேசெய்வார்
புழகிதம் கொளச்சுகந்த களபமும் புனைகுவார்
அழகம்நீவி ஆடிநோக்கி அழகுசெய்த மைப்பரால். (42) 179
கோல வாய்முலை யும்கோவை முத்தமே
குமுத வாய்முலை யும் கோவை முத்தமே
மேலும் மாதர்கை வண்டுகள் ஆடுமே
விரிம லர்தொறும் வண்டுகள் ஆடுமே
சோலை யாவும் மயில்கள்உ லாவுமே
சூரர் கையு மயில்கள்உ லாவுமே
மாலை நேர்குழல் மாலைவ னங்களே
மருத மெங்கணு மாலைவ னங்களே. (43) 180
சோலை யெங்கு மணியுங் குழைகளே
தோகை யாரணி யும்பொற் குழைகளே
ஏல வார்குழல் சாயல்க லாபமே
இலங்கு மின்னிடை மேலும்க லாபமே
காலி சைந்த சிலம்புப யோதரங்
கால சைந்த சிலம்புப யோதரஞ்
சாலுஞ் சீர்மலர் சூழு மருச்சுனச்
சம்பு மேன்மலர் சூழு மருச்சுனம். (44) 181
மணந்த வர்வர நாட்டந் தழைத்திடு
மறுகி லக்கண நாட்டந் தழைத்திடும்
புணர்ந்த மாதர்கண் வேலைக் கடுக்குமே
போது லாங்குளம் வேலைக் கடுக்குமே
இணங்கும் யோகர்க்கு நண்பாந்த வந்தரு
--ன கிழைஞர்க்கு நண்பாந் தவந்தரு
மணங்க னாரித ழாம்பலந் தந்திடு
மரும கத்தினர்க் காம்பலந் தந்திடும். (45) 182
கழனி மாதர் கமலங் களையுமே
கருது பாவங் கமலங் களையுமே
விழவ றாதன காவண மெங்கணும்
விரித லையதெங் காவண மெங்கணு
மழவ றாத வளங்கொள் மனைகளே
மகளி ராடு கழங்கம் மனைகளே
அழகு மேவிந் திரதரு வார்பதிக்
கன்பு மேவிந் திரதரு வார்பதி. (46) 183
நலந்தரு வீதியின் நாள்தொ றும்புரி
பலந்தரு வளங்களைப் பகர்ந்த னம்இனிக்
குலந்தரும் அந்தணர் முனிவர் கொள்கைசேர்
தலந்திகழ் ஆவணப் பெருமை சாற்றுவாம். (47) 184
வேறு
ஒருமை யாளர்இருபிறப்பர் உதவு மூன்று நூலினார்
அருமை நான்கு வேதம் ஓதி ஐயராகி அறுதொழில்
பெருமை யோர்கள் எழுகடற் புவிக்குள் எட்டு பிறைவையைத்
தருசு டர்க்க ருக்கியம்செய் சந்தியா பனத்தரே. (48) 185
மகவ ளர்க்கும் நீரதென்ன மகம்வ ளர்க்கும் மாண்பினால்
அகன்நெ கச்செய் தவியைவா னவர்க்க ருத்தும் அன்பினார்
பகவ னுக்கு வந்து பூசை செய்கு வோர்கள் பதுமன்நன்
முகம திற்பி றந்து வாழும் முனிவர்வீதி இவணதே. (49) 186
முஞ்சி நாணர் தோல ணிந்த நூலர்முண்ட கத்தொடைக்
குஞ்சி வாய்ந்த குடுமியார்கள் குரவ னைப்ப ணிந்துபின்
அஞ்சி நூல்ப யின்ற டங்கி ஆர ணப்ப குப்பினை
விஞ்சு சந்தை கூட்டி ஓதி மேவி டங்கள் எங்குமே. (50) 187
குண்டி கைக்கை முண்டி தத்தர் கோல நீறு தாங்கியே
புண்ட ரத்தர் மணிஅ ணிந்த புனைகல்லாடை தாங்குவோர்
தண்டில் வைத்த கோவ ணத்தர் தரணி விட்ட ரன்தனைக்
கண்டு பெற்ற மவுனம் உற்ற காட்சி யாரும் அவணதே. (51) 188
முற்று றந்த மோன யோகர் முழுதும் வைதி கத்தினார்
கற்ற நூலர்க் கன்பு வாழ்வு கந்த போதர் காலினைப்
பற்றி யேஅ டக்கல் உற்ற பரிவுகண்ட ரன்தனைப்
பெற்று வேறு காண்கி லாத பெருமை யோரும் இவணதே, (52) 189
வேறு
சரிதையே முதல்இ யற்றிச் சாயுச்ய வாழ்வு பெற்றோர்
விரதியர் ஐந்தும் வென்றோர் கோபத்தை வெறுத்த மெய்யர்
பருதிபோல் இருள கற்றிப் பரப்பிய யோகச் சோதி
மருவிய மாண்பின் மிக்கார் மன்பதை ஒத்து வாழ்வார். (53) 190
வேறு
அந்தணர் முனிவரர்க் கமைந்த வீதியின்
சுந்தரம் உரைத்தனம் வாகை யந்தொடைச்
சந்தமார் புயமுடை சத்தி ரிக்குலம்
வந்தமன் னவர்திரு மறுகு சாற்றுவாம். (54) 191
வேறு
உலக நீதிமன் னவர்கள்செங் கோல்முறை உய்க்கும்
பலத ராதல மன்னர்கப் பங்களும் பன்னூல்
கலைகள் ஆய்ந்தவர் கல்வியின் செல்வமும் காக்கும்
அலகி லாதநல் அறங்களும் மந்திரர் அமைச்சும். (55) 192
ஆட கம்பயில் சாலையில் அம்புநேர் விழியார்
நாட கம்பயில் நூல்முறை நாட்டிய சிறப்பும்
நீடு மாந்தரும் நிதிக்குவை அடுக்கலும் நெறிநூல்
பீடு சான்றவர் சூழும்அத் தரணியில் பெருகும் (56) 193
சிலைப யின்றிடு கழகமும் சேர்படைக் கலத்தால்
கொலைப யின்றிடு வென்றியும் வீரர்கள் குழுவும்
மலைப யின்றதேர் நடத்திடு மைந்தரும் வாரி
அலைப யின்றெனும் துரங்கசா லையில்அணி வகுத்தே. (57) 194
மனமெ னச்செலும் வாசியைச் சாரியால் கதியால்
வினையி னால்பரி வேடம்ஒத் திடவிளை யாடி
முனைய வெலவார்... --க முனைப்போர்
தனைஉ ஞற்றுவார் வாரணம் பெருதிடத் தளைவார். (58) 195
கூற்றெ னச்செலும் கறையடி உகைக்கமேல் கொதித்துக்
காற்றெ னச்சுழல் புழைக்கையால் முகிலினைக் கசக்கி
ஏற்றநன் னீர்குடித் துக்களி மும்மதம் எய்து
தாற்று மாவினை நடத்துவோர் வீரமும் தயங்கும். (59) 196
இத்த கைத்தரு மறுபுலச் சொல்அரும் இயற்சொல்
முத்த மிழ்க்குல வேந்தர்களுடன் குழுவுடன் மொய்த்த
பித்தி கைத்திரு மாடமும் கூடமும் பிறங்கும்
சத்தி ரிக்குல மன்னர்கள் ஆவணச் சார்பே (60) 197
வேறு
முன்னைமாற் றவள்பழித்த மொழிபழுதாய் அவள்நாண
வன்னியுடன் கிணறுலிங்கம் மதுரைதனில் அழைப்பித்த
பொன்னையாள் அவதரித்த புகழ்ஓங்கும் வணிகர்குல
மின்னுமா ளிகைசெறிந்த வீதியினை விளம்புவாம். (61) 198
வேறு
மின்திகழ் மணிப்பூண் நாய்கர் வெறுக்கையின் மணிகள் வேறு
துன்றுபல் வண்ணத் தூசு சுவைதரும் பொருள்கள் ஈது
சென்றுகொள் பவர்கட் குள்ளம் செவிகளில் அமுதம் ஊறத்
துன்றிய பரிசு கூறிச் சொல்லினும் இலாபம் கொள்வார் (62) 199
மன்றல்ஆ வணம்எலாம் கரும வார்த்தையே
தென்றலான் கணைபொரச் செல்வழிப் ...........
பொன்திகழ் முலையினார் புணர்ப்பின் ஆடல்போல்
சென்றகண் பொருளின்மேல் திரும்பி டாதரோர் (63) 200
வேறு
ஐந்திணை நிலத்தில் உள்ள அரும்பொரு ளான யாவும்
சுந்தர வளம்சேர் மாடம் துன்னிய உடுக்கள் போலும்
சந்தமார் மணியின் கோவை சார்ந்தொளி வீசு கின்ற
திந்திர வில்லின் தோன்றும் வைசிகர் வீதி ஈதால், (64) 201
அறையும்ஈ றாரீ ரெட்டால் ஐந்துறா தவனி காக்கும்
இறைஇறை போக நின்ற ஏர்வளப் பொருள்கள் எல்லாம்
முறைஒக்கல் பிதிர்த்தான் தெய்வம் முனிவரர் விருந்துள் ஆர்க்கும்
குறைவிலா தளிக்கும் வேளாண் குலத்தவர் மறுகு ரைப்பாம். (65) 202
செயல்வினை உழவின் வேளாண் செய்கையின் திறத்தி னாலே
இயல்புடை மூவர் தம்முள் இருபிறப் பாளர் தம்மைத்
தயவினால் அறுதொ ழிற்கும் தவறிலா காத்தி றைக்கும்
புயல்என ஈந்து காத்தும் புவியினை வளர்க்கும் நீரார். (66) 203
வணிகர்க்கு வாணி பம்செய் வகைப்பொருள் ஈந்து காத்தும்
பணிதக்க பெரியோர் தம்மைப் பரிவினால் பாது காத்தும்
மனிதர்க்கா பரணம் என்ன இரும்புகழ் தரித்தே அன்பாய்த்
துணிவுற்ற அரசற் கான மந்திரித் தொழிலும் செய்வோர் (67) 204
பொருவிலார் உற்ற போதில் பொள்ளென எழுந்தி ருந்து
பிருதுவி மீதில் தாழ்ந்து சூழ்ந்துபே ரின்பம் எய்தி
வரும்இவர் நம்மைக் காக்கும் மாதொரு பாகன் என்றே
அருமையால் அன்னம் சொன்னம் அளித்தவர் ஆசி ஏற்பார். (68) 205
இருக்கறை விதியை நீங்கா தியற்றுவோர் இல்து றந்த
கருத்தரைக் காக்க இல்லம் கருதுவோர் கைம்மா றின்றி
வருத்தம்உற் றாலும் ஈவோர் வணக்கத்தார் வாய்மை காப்போர்
அருத்திஇவ் வண்மை யானோர் வீதியின் அணிகள் ஈதால், (69) 206
வேறு
பண்ண யந்த ரப்ப கர்ந்து பாடு கின்ற பந்தமும்
உண்ண யந்த ரக்க னிந்து லாவு கின்ற உவகையும்
கண்ண யந்த ரக்க லந்த காதல் உண்மை காட்டியே
நண்ணும் வேசை மாதர் மேவு நளின வீதி நவிலுவாம். (70) 207
சித்தி ரத்தி னும்செ றித்த தெற்றி வைத்த பாவினும்
பத்தி ரத்தி னும்க லந்த பாவை யாரும் மைந்தரும்
முத்தம் வைத்தி டப்பொ றித்த முன்றில் கண்ட மோகர்கள்
வைத்த சிந்தை ஈர்ந்தி டச்செய் மாதர் மாடம் எங்குமே. (71) 208
ஆசை வைத்த மைந்தர் தம்மை ஆடை ஊட்டி அந்நலார்
பாசம் வைத்த இவர்எனப் பரிந்த சிந்தை யோடழாய்
நேசம் வைத்த காமிகத்தர் நிலவு சொர்க்கம் இதனிலும்
பேசி டச்சி றந்த சொர்க்கம் எதுஎ னப்பி தற்றுவார். (72) 209
சூதம் மேவு சோலையில் சுலாவு கின்ற தீயளிச்
சூதம் நேரும் விழியி னார்கள் தோள்ந யந்த கேள்வர்பார்
சூத னுந்த னங்கள் ஈந்து சுகமுறும்த னத்துடன்
சூதி ணங்க ஆடி வென்று தொகைப்படும்தனங்கொள்வார். (73) 210
வேறு
அலகிலா துலகில் சாதி நான்கில்அவ் வருக்கம் இன்றி
நலமிகும் உயர்ந்த சாதிக் கிழிந்தபெண் நலிந்த ஆணுக்கு
இலகிய உயர்ந்த மாதர் ஏற்பவும் இரண்டும் கூடி
நிலவிய பலவாஞ் சாதி நெறிகொடு நிகழும் மாதோ. (74) 211
அந்தந்தப் பகுதி அன்றி ஆச்ரமம் நான்க தாகி
பந்தமாய் உறைவோர் எய்தும் பதிகளும் உளது பாரில்
இந்திர லோகம் என்னும் எழில்புடார்ச் சுனத்தின் கீர்த்தி
தந்துமுற் றுரைக்க நானோ வல்லவன் சாற்றும் காலே. (75) 212
நகரப்படலம் முற்றும்
தலவிசேடம்
அம்பரம் அம்பர மாகச் சூழ்கின்ற அம்புவியில்
உம்பர் தொழும் புகழ்உடுத்த தமிழ்நாட்டில் உயர்ந்(த)நறும்பூங்
கொம்பர்சூழ் புடைமருதம் குலவிவளர் புண்ணியமே
விம்பமுறு தலவிசேடப் பெருமை விளம்புவாம் (1) 213
ஆதியில் ஒருகா லத்தில் அவனியே முதல யாவும்
ஓதமாம் கடலில் மூழ்க உகமுடி வுற்ற காலைச்
சீதமார் பிரள யத்தில் சிதைவிலா தித்த லத்தை
நாதன்கைச் சூலம் தன்னில் நாட்டினான் வேத நாடன். (2) 214
நாதன்தன் இடத்தொ டுங்கும் நாரணன் முதலோர் தம்மில்
போதனை அழைத்து முன்போல் புவிகளைச் சிருட்டி என்ன
வேதனும் படைக்கல் உற்றான் மேதினி முதல யாவும்
ஈதனில் முனிவோர் தோன்றி இருவினைக் கெண்ணில் தோற்றம். (3) 215
வந்திடும் அவாவும் சாதி நான்கில்ஆண் பெண்மற் றுள்ள
தந்திடும் குலம்அ னேகம் சார்ந்திடும் உயிர்கட் கெல்லாம்
பந்தமாம் தொழிலும் மற்றைப் படைத்திடு நூலும் அன்றி
முந்தும்ஆச் சிரமத் தோர்க்கு முறைதரும் விதிவி லக்கும், (4) 216
தருவது வேதம் அன்றி வேறில்லை என்று தாம்செய்
தருமமும் நூலே அந்த மறைதனைக் கருதிக் காணத்
துருவிடும் போதில் எங்கும் தோண்டிடா வகையினாலே
பரமன்பால் கயிலை தன்னில் பவுடிகம் பெறுமோ மென்றே, (5) 217
தவத்தினைப் புரிந்தார் ஈசன் முனிவர்பால் சார்ந்து நீவிர்
புவிக்கணே வேதம் நான்கும் புடார்ச்சுனம் முதலாய் நின்று
நவிக்கரன் தனைப்பூ சித்து நண்ணிய ததனை அந்தச்
சிவத்தலத் தினிலே சென்று பெறுகெனச் சித்தர் எல்லாம், (6) 218
பூதலம் அதனில் வந்து புடைமரு தரனைப் போற்றி
வேதம்நான் கினையும் பெற்று வியந்தனர் முனிவர் என்று
சூதமா முனிவன் சொல்ல முனிவர்கள் துதித்துப் பின்னும்
நாதனை வேதம் போற்றும் நலத்தினை விரிப்பாய் என்றார். (7) 219
வேறு
ஆதியில் கிருத யுகத்தினில் இருக்கும்
வேதம்மெய் அருச்சுனம் ஆகி
நீதியால் பணிந்தும் திரேதநீள் உகத்தில்
நிமலனைத் தயித்திரிய மதமா
வேதமே ஆம்பிர விருக்கமாய்த் துதித்து
மேயது வாபர யுகத்தில்
ஓதிய சாம வேதவெண் சம்பாய்
உறுதிகொண் டுழைநின்று பணிந்தும் (8) 220
சீர்தர மூன்று யுகத்தினும் போற்றும்
செயலதாம் பொய்செறி கலியாம்
பேர்தரு யுகத்தும் அவ்வகை யான
பின்ஒரு வேதமும் முறையே
நீர்தரு வேணி நிமலனைச் சூக்க
உருவினால் பணிவதா நிறைந்த
ஏர்கொள்முத் தருவில் இந்திரன் முதலா
எண்ணிலார் இருந்தவம் புரிந்தார். (9) 221
இவ்வகைத் தாய மூவகைத் தருவும்
பிறப்பிறப் பின்றிஎக் காலும்
திவ்விய வடிவாய்ப் பணிபவர் தங்கள்
பிறவியை ஒழித்திடும் செயலாய்
நவ்விசேர் கரத்தார் அருளையே பொருந்தி
நாள்தொறும் வதிந்திடும் நலத்தால்
அவ்வியம் அகற்றும் இத்தல மகிமை
யாவரும் அளந்திடற் கரிதால். (10) 222
வேறு
இன்பமார் மருத நீழல் முத்திஎய் திடம தாகும்
அன்பினால் அதனை ஈவோன் அருச்சுன வாண னாகும்
தென்புவிக் கங்கை கூடும் திருவேணி தீரம் ஆகும்
நன்பத வியதாம் இந்த நகர்த்திரு நாமம் சொல்வாம். (11) 223
வேறு
சிவநகர் தென்கயிலை சீவன்முத்தி புரம்மணம்சேர்
அவனிதனில் இந்த்ரபுரி ஆம்பிரபதி ஆதிபுரி
தவநகர்தென் பால்காசி தாரகே சுரம்மருதென்
றுவமைஇலாப் பூதிநகர்க் கோதுவர்இன் னும்பலவே. (12) 224
வேறு
பாவமோ சனம்செய்து பரத்தை ஈதலால்
சீவன்முத்தி யைத்தரும் சேத்திரம் ஆதலால்
ஆவுடை யாள்எனும் அமலை மேவலால்
பூவில்இத் தலத்தினேர் புகலல் பாலதோ. (13) 225
ஆணவம் முதலிய அகற்றும் சீலினி
மாணும்இத் தலத்துமுத் தருக்கள் மற்றிதைக்
காணுவோர்க் கின்பமா ஞானக் கண்ணினால்
பேணுவோர்க் கானந்தம் பெருக்கும் என்பவே. (14) 226
புண்ணியர் சேரும்இத் தலத்தில் போந்திட
எண்ணியே ஓர்அடி எடுக்கில் ஓர்பரி
பண்ணிய யாகத்தின் பயன்உண் டாம்பதி
அண்ணினோர் பெறும்கதிக் களவின் றால்அரோ. (15) 227
வேறு
பிறவி சாகரப் பெருவெள்ளம் கடப்பவர்க் கிந்த
நறைத ரும்புடார்ச் சுனம்புணை அதிலுறை நாதன்
அறம தாகிய காலினால் செலுத்தியா றரந்தைச்
சிறையை நீக்கியே முத்தியாம் கரையினில் சேர்க்கும். (16) 228
பாவகா ரியர்கட் கெய்தா திப்பதி வதிய முன்னந்
தாவிலாத் தருமச் சார்பால் சார்பவர்க் கெய்தும் முத்தித்
தேவுயர் தலத்தை உன்னிற் செய்பவந் தீரும் சேர்ந்தார்க்
காவன அனைத்தும் நல்கும் அருங்கதி அளிக்கும் மாதோ. (17) 229
இத்தல மகிமை ஓர்கால் இமையவட் கிறைவன் சாற்றும்
உத்தமம் உரைப்பாம் அண்டம் புருடன்தன் உருவம் தன்னில்
தைத்தலம் காசி காஞ்சி காளத்தி அவன்சு வாச
மத்திக எடுக்கல் மூன்றாம் அருச்சுனம் அவன்கண் ணாமால். (18) 230
இதனில்வண் பொருநை சூழ்ந்த எழில்புடை அருச்சு னந்தான்
முதல்வன்வ லக்கண் ஆகும் மொழிந்தமெய் அவய வத்தில்
அதிகம்நேத் திரமே என்ன அறைவர்அத் தன்மை யாகிப்
பதிதனில் மேன்மை யான இத்தலம் பரமத் தானம். (19) 231
சிமையம்ஆர் கயிலை மூலம் திங்களூர் தினக ரேசம்
அமைதரு அரன்கண் தில்லை தெரிசனைக் கருளுங் கற்போர்
தமைஅருள் காள கத்தி தாணுவே அருணை தாலத்
திமையவ ருதிப்போர் ஆரூர் இலிங்கம்நீ ரானைக் காவே. (20) 232
இவ்வகைத் தானம் எல்லாம் எமதட்ட மூர்த்தம் இந்தத்
திவ்விய முத்தித் தானம் திகழ்உப தேசச் சேத்ரம்
எவ்வம்இல் மருதம் நாமே எனச்சிரம் சாய்ந்து காட்டி
அவ்வகை இருப்போம் காண்போர்க் கடையாள மாகத் தானே. (21) 233
திருவளர் சீவன் முத்தி அருச்சுனம் தெரிசிப் போர்க்கு
கருதுவ எய்தும் சோரக் கலிகவர்ந் திடுமுன் கன்மம்
வெருவுறு மயக்கம் தீரும் விலங்குபேய் பிணிவிலங்கும்
பெருமகிழ் வெய்தும் இம்மைப் பிறப்பின்நல் பேற தாமால், (22) 234
இத்தல மகிமை இவ்வா றறிந்தவர் இடைவி டாமல்
நித்தனை வழிபட் டேத்தி நெடுங்கிரி வலங்கொண் டுள்ள
சித்தம்அ தான மோன சிந்தனை உடைய ராகி
முத்தியை எய்தி நின்றார் பெறுபலன் மொழியற் பாற்றோ, (23) 235
என்றிறை அருளிச் செய்த எழில்புடை மருதம் என்னும்
நன்றிசை பெற்ற மூதூர்க் குவமையா தென்று நாடில்
மன்றல்அம் போதனாலும் வழுத்துதற் கரிய தான
மின்திகழ் மாடம் ஓங்கும் சிவன்நகர் என்பர் மேலோர். (24) 236
கருமத்தால் பாடல் ஆடல் காட்சியால் கலவி மாதர்க்
கொருமித்த மனத்தால் வெய்யோன் உமிழும்ஆ தவத்தால் பெய்யும்
வருடத்தா லேனும் இந்த மருதில்மாத் திரைப்போ தேனும்
நிருமித்து வதியப் பெற்றோர் நிருமலன் கயிலை நீங்கார். (25) 237
பொன்னினைக் கொடுவந் தேனும் புண்ணியம் விரும்பி னோர்கள்
இன்னல்கூர்ந் திருந்தானாலும் ஏவல்யார்க் கியற்றி யேனும்
துன்னிய சுமை ஏற் றானும் சூழ்ந்தையம் ஏற்றா னாலும்
மன்னுதா ரகத்தை நல்கும் இந்நகர் வதிய வேண்டும். (26) 238
பன்னிஇத் தலத்தில் செய்த பாவபுண் ணியம்இ ரண்டும்
தன்னிலே மிகுதி யாகும் வேறொரு தலத்தில் செய்த
துன்னிய பாவம் இங்குத் துகள்கண்ட சூறை போலும்
மன்னுவோர் வினைகள் ஓட்டும் தண்டத்தின் மகிமை தானே. (27) 239
காசியே அயோத்தி மாயை முதலிய கதிசேர் கின்ற
வாசமார் பதிகட் கெல்லாம் மகிமையாய் வளம்பெற் றோங்கி
நேசமாய் அருள்சேர் கின்ற நிருமல உலக மான
பேசுவோன் நகரம் ஈதைப் பேசுவோர் பிறப்பற் றோரே. (28) 240
வேறு
பத்தி யும்தரும் பண்பும் பரிவும்நல்
புத்தி யும்தரும் புன்மை அகற்றிடும்
சித்தி யும்தரும் சீவன் மருவிய
முத்தி ஆன புரம்இதை முன்னிலே. (29) 241
இத்தலத்தில் யார்ஒருவற் கேனும் அன்னம்
ஈதல்ஆ யிரம்எதிகட் கீந்த பேறாம்
நித்தமும்எத் தலத்தினிலும் வதியும் பேறோர்
நிசியில் இவண் வதிபலனாம் இங்கு நீங்கா
உத்தமநல் உயிர்மற்றும் இலிங்க ரூபம்
உரைசெபமாம் உலவுநடை வலம்அ தாகும்
வித்தகர்க்கூண் செயல்வேள்வி விருந்து காப்போர்
விரும்பும்உப சாரம்எலாம் விமலன் பூசை (30) 242
பொருநையில்இந் திரமோட்சம் படிந்துபுடர்ச் சனம்பரவிப்
போந்து கோயில்
மருவிவலம் செய்துமையை மழுவலா னைப்பணிந்து
மனுவை ஓதிக்
கருதிவரு பெரியோர்கள் உடன்கூடித் துதிகூறிக்
கணப்போ தேனும்
மருதமுத்தித் தலத்துறுவோர் வானமுத்தித் தலம்நீங்கா
மகிமை யோரே (31) 243
- தலவிசேடம் முற்றும் -
தீர்த்த விசேடம்
முத்தலத் தினுக்கு முதல்தலம் சீவன்
முத்திய தானஇத் தலத்தின்
உத்தமம் உரைத்தாம் முத்தர்கள் வலமாய்
உலவியே உயிர்களுக் கினிதாய்ச்
சித்திதந் தடைந்தோர் செய்வினைப் பவங்கள்
அனைத்தையும் சிதைத்தருள் சிறந்த
வித்தகப் பொருளை விளங்கிய தீர்த்த
விதிவிசே டத்தினை விரிப்பாம். (1) 244
ஆதியில் புடைசேர் அருச்சுனத் தரனை
அரிஅயன் முதலினோர் கண்டு
நாதனைப் பரவிப் புகல்வர்இக் குறியை
நறும் புனல் மலரினால் நாங்கள்
காதலால் போற்றக் கருதி இங் கடைந்தோம்
கங்கைஒன் றருள்எனக் கருதி
வேதநா யகனும் அவர்க்கருள் சுரந்து
விருப்புடன் இன்னன விளம்பும். (2) 245
அகத்தியன் கடத்துப் புனிதநீர் இங்ஙன்
அடைந்திடப் புரிகுதும் அதனால்
சகத்தினில் நீவிர் பூசனை புரிவீர்
என்னவே சங்கரன் சாற்றி
மகத்துவ முனியான் நதிவர நினைந்தான்
வான்நதி மழைமுழக் கெனவே
இகத்தவர் புகழ எழுந்துடன் ஏக
இவர்கண் டின்பம்எய் தினரால். (3) 246
ஈசனைத் தொழுதெவ ரும்நதி மூழ்கிக்
கடன்முடித் திறைவனுக் கிந்த
வீசுநீர்க் கங்கை மஞ்சனம் ஆட்டி
விரைமலர் தூவியே பழிச்சி
நேசமோ டெளிதாய் வரங்கள்பெற் றிருந்தார்
நிறைபுனல் இதனிடை நிலத்தே
வாசவன் முதலோர் ஓடிட அடையும்
வளங்களும் மகிமையும் வகுப்பாம். (4) 247
மண்பரவும் புடைமரு தூரிலே
மன்னும் உத்தர வாகினி தீர்த்தத்தில்
பண்புடன் படியப் பலன் ஒன்பது
பான்மை உள்ள கிறுச்சனம் நல்கிடும்
எண்ப தோடொரு நான்கு கிறுச்சனம்
இந்திர மோட்சம் படிபவர்க் கெய்திடும்
விண்பரவுந்தைப் பூசந்துலா
விடுமேட நலவிடு மிக்க பலன்களே. (5) 248
தோன்றும் பாதல கங்கை பொருநைநீர்
சுலவு கின்ற கடனை நதியுடன்
மூன்றும் கூடித் திரிபத கைப்பெயர்
முத்தி நல்கிடும் மடுவினில் மூழ்கு
கீன்றி டும்பலன் என்பான் கிறுச்சனம்
இவைதண்டா யுததீர்த்தம் இதன்கீழுக்
கான்ற மாண்ட வியாசன் தீர்த்தமோ
டைந்தும் ஆட ஐங்குற்றம் அகற்றுமே. (6) 249
மாற்றம் உள்ள மற்றுள தீர்த்தமுன்
வந்து தோய்ந்த வளம்பெற்ற வளம்தரு
நாற்றி சைப்பதி போற்றும்இத் தீர்த்தத்தில்
நாளும் மூழ்க நலம் தரும் உண்மையாய்ப்
போற்று வோர்க்குப் புதல்வரும் செல்வமும்
புந்தியில் சிந்தை செய்பொரு ளும்தரும்
கூற்றம் சீற்றம் கொடுவினை கொண்டநோய்
குற்ற மும்தவிர்த் துக்குணம் நல்குமே, (7) 250
எங்கும்வாழ் தீர்த்த மான சேனைகட் கிறைவி யாகும்
மங்கள தீர்த்தம் என்னும் பொருநையாம் கங்கை மாது
பங்கினன் சிரத்தில் உற்றும் பாகமும் வேண்டி யன்றோ
இங்குயர் வலம தாகம் எய்திடும் இயல்பு தானே. (8) 251
இப்பெரும் தீர்த்தம் தன்னை ஆடினோர் இறைஞ்சி னோர்பின்
இப்பெரும் தீர்த்த மேன்மை உரைத்துளோர் இசைந்து கேட்போர்
இப்பெரும் தீர்த்தம் ஈசற் கியற்றுவோர் இயற்று விப்போர்
இப்பெரும் தீர்த்தம் கொள்வோர் இறைசிவ லோகம் நீங்கார். (9) 252
இச்சிவ தீர்த்தப் பான்மை இசைத்திடில் பரத்துக் கேணி
இச்சிவ தீர்த்தம் காண்பார்க் இறையில னயனும் கங்கை
இச்சிவ தீர்த்தம் யார்க்கும் பவித்திரம் இயற்ற லாலே
இச்சிவ தீர்த்தம் தார கத்தினை இயற்றும் அன்றே. (10) 253
செப்பருந் தீர்த்தம் ஆடிச் சிவபரன் தன்னைப் போற்றி
முப்பெருந் தேவர் வாழும் முத்திமண் டபத்தில் எய்தி
மெய்ப்படு சுத்த பஞ்சாட் சரத்தினை விளம்பப் பெற்றோர்
கைப்படு கனிபோல் முத்தி எய்துவர் கதிசேர் வாரே. (11) 254
எங்கும்வாழ் தீர்த்தம் எல்லாம் தம் இடத் தெய்தி ஆடும்
அங்கவர்க் கருளி அன்றோர் பவங்களைச் கிரிகித் தந்தப்
பொங்கிய தவந்தாந் தீரப் புடைஅருச் சுனத்தில் எய்தி
மங்கள தீர்த்தம் ஆடி வரங்களும் பெற்று மீளும். (12) 255
புண்ணிய இத்தீர்த் தத்தில் புன்மையோர் பொருந்தி னாலும்
பண்ணிய பாவங்கள் போக்கிப் பரகதிப் படுத்தி விக்கும்
திண்ணஈ தென்னை என்னில் தெருப்புறக் கழிவு நீரும்
கண்ணக நதியிற் சேரிற் கங்கை நீரான வாபோல் (13) 256
வேறு
இருக்கில் உரைத்த விதிகருதி இருக்கும் மேலோர் தமக்கீந்து
முருக்குஞ் சாப மதியாட முருக்குஞ் சாப வினைநீங்கும்
பெருக்கு மயனத் தினில் ஆடப் பிறவி நீங்கும் பிழைநீங்கும்
அருக்க உதயத் தினில்ஆட வருக்க முடன்நற் கதி அடைவார். (14) 257
தீர்த்தம் இதன்பால் செயும்யாகம் தென்பால் உற்ற பிதிர்யாகம்
தீர்த்தம் இதன்பால் சிவபூசை யனப்பூ சைதெ சதானம்
தீர்த்தம் இதன்பால் இருமுகிசேர் கோதா னங்கள திருமேவும்
தீர்த்தம் இதன்பால் செயில்ஒன்றுக் கனந்த பலனாய்ச் சிறந்திடுமே (15) 258
ஆண்டொன் றுக்கிந் நதிமூழ்க அசுவ மேத யாகம் ஒரு
தாண்டும் தொண்ணூ றியற்றுபலம் தரும்நித் தியமும் சார்வோர்க்கு
வேண்டும் பலனும் இம்மையிலே விளையும் பலனும் மேதினியில்
ஈண்டும் பலனும் சாயுச்யம் எய்தும் பலனும் இயற்றிடுமே. (16) 259
தென்பால் காசிக் கங்கைதனைக் காணத் தீண்டச் சிந்திக்க
அன்பால் துதிக்க நீராட அவலம் களையும் கவலையறும்
இன்பா சுரியம் மிகஉண்டாம் இனிய சுபசோ பனம்எய்தும்
வன்பால் செய்யும் பவம்நீங்கும் வாணாண் நீங்கும் வினைபோமே (17) 260
கண்ட பொழுது மகிழ்வுற்றாங் கலந்தால் தேகம் புனிதம் உறும்
அண்டர் தொண்ட ருடன் ஆடும் அதனைக் காண ஆகம் எலாம்
கொண்டால் எய்தும் பயிர்என்னக் குழைந்து ரோமக் குச்செறிந்து
பண்டை வினைகள் தமைஒழிந்தார் வருவார் தாம்ப்ர பன்னியையே(18) 261
விண்ணவன் பிரம தோடம் வேதியன் நீச கத்தி
திண்ணிய மறையோன் தேவி செய்திடும் பதிய கத்தி
அண்ணிய திதிஅ கற்றி அலகையோ டரக்கி தீர்ந்த
புண்ணிய இத்தீர்த் தத்தின் புகழ்மையார் புகழற் பாலார். (19) 262
உத்தம இத்தீர்த் தத்தில் உற்றவர்க் கொவ்வோர் காலம்
வித்திய பவங்கள் நீக்கி மெய்க்கதி உதவும் தானம்
இத்தென உரைப்பாம் தென்பால் இபம்தனக் கருளும் தீர்த்தம்
நத்தணி கரத்தோன் தீர்த்தம் நாரணன் கோயில் மேல்பால். (20) 263
அதன்வடக் கான முன்றீ சுரத்தன்ஆ லயத்தின் மேல்பால்
நதியின் முன் றீச தீர்த்தம் நவகன்னி மாதர் தீர்த்தம்
இதன்வடக் கெண்பான் விற்கோல் எய்திய இடத்தில் தானே
மதிமுடி ஈசன் ஈந்த மணிகர்ணி தீர்த்தம் மாதோர். (21) 264
வேறு
பொதிகை முனிவர்க் கருள்தீர்த்தம் புனித வாம தேவர்க்குக்
கதிநல் கியதோர் பிரயாகைத் தீர்த்தம் கடந்தப் பால்வடபால்
நதியில் ஈரெண் பான்விற்கோல் நாலும் கடந்து நாப்பணுறும்
விதிசேர் திரிவே ளியில் ஐந்து தீர்த்தம் முன்பு விரித்தனமால். (22) 265
இதற்கு வடபால் ஈரைந்து தனுவி னுபமன் னியதீர்த்தம்
இதற்கு வடபால் ஈரைந்தில் ததீசி தீர்த்தம் இந்திராணி
இதற்கு வடபால் இருமூன்று தனுவிற் குலடி போசனமாய்
இதற்கு வடபால் இருங்கமலை கலைமான் இவர்கள் தீர்த்தமதால்.(23) 266
இதற்கு வடபால் தனுவொன்றாய் எண்ணில் திருமூ லத்தானம்
இதற்கு மேற்குக் கவுதமராம் இதற்கு மேற்குக் குறுமுனிவன்
இதற்கு வடக்கு நந்திகளாம் இதற்குக் கிழக்கு மகதிமுனி
இதற்குக் கிழக்கு மித்ரமுனி இதற்கு வடக்கெண் கணன்தீர்த்தம். (24) 267
இதற்கு மேற்குச் சிவதீர்த்தம் இதற்கு மேற்குப் பரைதீர்த்தம்
இதற்கு வடக்குப் பிறியமக ரிதற்குக் கிழக்கெண் வசுதீர்த்தம்
இதற்குக் கிழக்கில் அவிர்த்தானன் இதற்கு வடக்கிந்திரமோட்சம்
இதற்கு மேற்கு வசிட்டமுனி இதற்கு மேற்கில் இருக்காமால். (25) 268
இதற்கு வடபால் அரக்கியுரு ஏகல் இதன்கீழ் அலகைவிடல்
இதன்கீழ் இபமா முகன்தீர்த்தம் இதற்கு வடபால் ஏகசுதர்
இதற்கு மேல்பால் ஆதிமனு இதற்கு மேல்பால் அலதந்தன்
இதற்கு வடபாற் புறமதந்தீர்ந் தினிய சைவ தீர்த்தம் அரோ (26) 269
இதற்கு வடபால் ஈரெண்கோல் எய்தும் அதினில் கருவூரான்
மதிக்குந் தீர்த்தம் அங்ஙன்எழு மாதர் தீர்த்தம் வடமேல்பால்
பதித்த சாலைத் தடம்அங்ஙன் பதுமன் ஓர்கால் பரமனுக்காய்
விதித்த யாகத் தீர்த்தம்அவை சாலா தீர்த்தம் விளங்குமவண். (27) 270
வேதி மிருததீர்த் தம்படிய வேதை மிருத்து முதல்நீங்கும்
சீத நதியின் தீர்த்தமெலாம் திளைத்தார் பேறு செப்புவதோ
பூதி தீர்த்தம் மருதினில்தென் கீழ்பால் பூதி எடுத்தணிய
நீதி தருஞா னப்பேறா நிருமித் தனநித் தியம்பெறுவார். (28) 271
இந்தத் தீர்த்தம் நாற்பதுடன் ஐந்தாம் இதற்குப் பொதுப்பெயர்தான்
எந்தை ஞானம் தருதீர்த்தம் இனிய தார கத்தீர்த்தம்
கந்த மருத வனத்தீர்த்தம் தென்பால் கங்கை நதித்தீர்த்தம்
நந்தி தீர்த்தம் சிவதீர்த்தம் நளின தீர்த்தம் இதன்நாமம். (29) 272
-தீர்த்தவிசேடம் முற்றும்-
மூர்த்தி விசேடம்
புடைஅ ருச்சுனம் மேவிய புண்ணிய மடுவில்
கடனை தண்பொரு னாநதி கங்கைஇம் மூன்றும்
உடன்நி றைந்ததீர்த் தத்திரு மகிமையை உரைத்தாம்
விடைய வன்திகழ் மூர்த்திவி சேடத்தை விரிப்பாம். (1) 273
பொதிகை யிற்படர் பொருநைசூழ் புவிகளிற் புனித
நதிஅ ணிந்தவர் தானத்தில் அறுபத்து நான்கு
முதிய என்பதாம் அதனில்மூ எட்டில்முன் தோன்றும்
அதிகம் இத்தலத் தமர்குறி என்பர்கள் அறிஞோர். (2) 274
அந்த நாள் அயன் அரிஅரன் ஆதி அநாதி
விந்து நாதமே சிவம்சத்தி விதிவழி ஒடுங்கும்
முந்து தத்துவங் களில் அவை கடந்திடும் முடிவில்
தொந்த மேசெயும் ஒருவன்இச் சுடர்க்குறி யாமால். (3) 275
ஈறி லாதவன் எங்குமாய் நின்றவன் என்றும்
மாறி லாதமெய் அன்பர்கள் மனத்துளான் மருதின்
பேற தாயினோன் பேருல கீன்றருள் பேதை
கூற தாயினோன் குடிலையாய் நிறைந்ததிக் குறியே. (4) 276
கோதி லாதஎண் குணத்தவன் கொண்டிடும் கோலம்
பூத லம்புனல் பொங்கழல் வாயுவான் பொலிந்த
ஆத வன்மதி இயமானன் அட்டமூர்த் தமதா
ஓத நின்றிடும் ஒருவன்இம் மருதினில் உறைவோன். (5) 277
பேசு கின்றநான் மறைக்கும்எட் டாத்தவ பிலத்தால்
பேசி யேஅழைக் கின்றமா தவருடன் பெட்பாய்ப்
பேசு கின்றவர் மனுவொடும் பேசிய குணத்தால்
பேசு கின்றநா யகர்எனப் பெயர்படைத் தனரே. (6) 278
இரங்கும் ஓர்சொலை வாகனம் ஆகவும் இனிதாய்
வரந்த ரும்பரை யாகவும் வைத்தவர் முடிமேல்
தரங்க நீர்எனும் தாமரைத் தொடையலாள் தனது
புரஞ்சு லாவுறும் வளத்தினர் பூதிவித் தகரே. (7) 279
வேறு
தலமதில் மேன்மை பெற்ற தண்மரு துறைவோர் தம்மைக்
குலவரை என்ன ஓங்கு கோபுர தாப ரத்தை
நலமுடன் கண்டோ ரேனும் சாய்ந்தநா யகரைப் போற்று
மலபரி பாகம் உற்ற மாதவர் ஆவர் அன்றே. (8) 280
புலனுடன் பொறிக லங்கும் போதுயிர்க் கபயம் நல்கி
வலதுசோத் திரத்தில் தார கத்தினை வழங்கி முத்தி
நிலமதில் அருளும் இந்த நின்மல மூர்த்தி மூஎட்
டிலகிய மூர்த்திக் காதி எப்படி போலும் என்னில் (9) 281
கலைகளில் வேதம் போலும் கவிகையில் கனமே போலும்
சிலைதனில் மேருப் போலும் திருவிற்றே நிதியம் போலும்
அலைபுனல் அதனில் கங்கை ஆவினில் காம தேனு
நலமலி புண்ணி யத்தின் நாயகன் பூசை போலும், (10) 282
புவியினில் மருதம் போலும் பூவினில் நாறும் பூவே
தவமதில் உயிர்கட் கன்பு சார்ந்திடும் தன்மை போலும்
கவைகொள்பா தவத்தில் தாரு உறுப்பினில் கண்கள் போலும்
நவைஇலா இன்பம் தன்னில் பேரின்ப நன்மை போலும், (11) 283
தானத்தில் அதிகம் அன்ன தானமாம் தரணி யோரில்
வானத்த ரவரில் மிக்கோர் வானநா யகரே வான
மீனத்தில் சோமன் போலும் வேள்வியில் துரகம் போலும்
மோனத்தால் அரனைக் காண்பார்க் கிக்குறி முதலாம் அன்றோ, (12) 284
ஆதியும் நடுவும் ஈறும் அல்லதோர் அதீதம் ஆகும்
பேதமும் பிணிப்பும் ஆகும் அல்லவாம் பிரமம் ஆகும்
போதமும் கடந்த நாத பூரண புனிதம் ஆகும்
ஓதிடும் அளவுக் கெட்டா ஒருவன்இம் மருது ளானே. (13) 285
வேறு
காண்பானும் காட்சியுமாய்க் கள்ளமனம் இல்லார்க்குப்
பூண்பானும் பூணுமாய்ப் புண்ணியமும் புகழுமாய்
ஆண்பாலாய்ப் பெண்பாலாய் அவைகடந்த அப்பாலாய்
மாண்பான மருதீசன் தனக்குவமை வகுக்குங்கால், (14) 286
வேறு
மேருவுக் குவமை அந்த மேருவே வேலை சூழ்ந்த
பாரினுக் குவமை பாரே பள்ளநீர்க் குவமை மற்றே
காரினுக் குவமை காரே கருதின்சிந் தாம ணிக்குச்
சீர்பெறு நிதியம் என்பா ரானபோல் சிறப்பு வாய்ந்த, (15) 287
திருப்புடை மருதில் வாழும் செல்வனுக் குவமை அந்த
விருப்புடை யோர்கட் குண்மை விமலனே ஆகும் வெற்பார்
அருப்புடைத் தனத்தி யோடும் அருள்வழி நடத்தும் செய்கை
உரைத்திடில் உதவு நட்புக் கொற்றுமை போலும் அன்றே. (16) 288
எள்ளிடை எண்ணெய் போலும் இரவியும் சுடரும் போலும்
வள்ளலும் புகழும் போலும் மலரும்வா சனையும் போலும்
ஒள்ளழல் வெதுப்பும் போலும் உதகமும் குளிரும் போலும்
பள்ளநீர் உருவம் போலும் பாகுறும் இரதம்போலும். (17) 289
மருவிஇங் குறைந்து வாழும் அவர்களைப் பணியப் பெற்றோர்
விரவிய பாவம் எல்லாம் வெவ்வழல் பட்ட பஞ்சாம்
பரிதிஎன் றூழைக் கண்ட பனிஅதாம் பரந்து சூழும்
உருமனைக் கண்ட பாம்பாம் உலவையைக் கண்ட தூளாம். (18) 290
அரிகண்ட வேழம் போலும் அஞ்சுறா அதனைக் கண்ட
வரிகொண்ட சிறுமீன் போலும் மாதவர் தம்மைக் கண்ட
பெரியதீ வினைகள் போலும் பிழம்புறும் சுடரைக் கண்ட
இருளது போலும் பாரில் இட்டுணார் செல்வம் போலும், (19) 291
அன்பிலா தவரைக் கண்ட ஆதுலர் போலும் இல்லோர்க்
கின்பம் எய் திடவே நின்ற துன்பம் அ திரியல் போலும்
வன்பிணி மருந்தைக் கொண்ட வாறெனும் மழையைக் கண்ட
கொன்பயில் கோடை போலும் குலைகுலைந் தோடும் மாதோ. (20) 292
விதிப ராவு புடார்ச்சுன நாயகன் மேலோர்
இதயம் மேவும் இலேபன சுந்தர இறையை
உதய காலத்தில் உமையுடன் இறைஞ்சிட உலகில்
புதல்வர் பேறுடன் பொருள்களும் மகிமையும் பெறுவார். (21) 293
சீல மாகவே கடும்பகல் போற்றச்செங் கோலால்
தாலம் மூன்றையும் புரந்திடும் தகைமைசேர் மாலை
மூல லிங்கம்ஓர் ஆயிரம் மூர்த்தியை உன்னிச்
சால வும்தொழும் பலன்தரும் யாமத்தில் சார்ந்தே, (22) 294
துதிசெய் வோர்கள் நாற்பயன் பெறுவார் சுருதியினால்
நிதமும் போற்றுவோர் தேவரே நிருமலன் பணியைக்
கதியை வேண்டியே செய்பவர் கணங்களே வழுவா
விதியை உற்றவர் விமலராய் வீற்றிருப் பாரே, (23) 295
பக்கம் தன்னில்பன் மூன்றினும் பருவத்தும் பணிய
மிக்க செல்வமும் கல்வியும் ஞானமும் விளையும்
செக்கர் அஞ்சடை நாயகன் நிசிதனில் செய்ய
நக்க பங்கயம் போற்றுவோர் நாதர் ஆ குவரே. (24) 296
சாய்ந்த நாயகன் சந்நிதா னத்தினில் தீபம்
பாய்ந்த லோகத்தால் பாத்திரம் பட்டுடை வருக்கம்
காந்தி சேர்நவ மணிப்பணி கற்பணி கவிகை
வாய்ந்த வாசனைத் தீம்புகை ஆடல்வாத் தியங்கள், (25) 297
மாலை சந்தனம் மஞ்சனம் ஆட்டநெல் மதுத்தேம்
பாலோ டன்னநல் வருக்கம்வேள் விகள்பல .......னில்
ஏலு மாறுப கரிப்பவர் அணுஒன்றுக் கெண்.....
சீலம் ஆகிய கற்பங்கள் சிவபதம் சேர்வார். (26) 298
தென்பால் காசிநாதர் சிவக்கொழுந் தீசுரர் தென்கயிலை
பொன்பாய் புடைமா மருதீசர் பூதி வரதர் நாறும்பூ
இன்பர் சாய்ந்த இலிங்கரி லேபன சுந்தரர் பெ...
ளன்பர்க் கருளும் முத்தீசர் அரியதார கேசுரரே. (27) 299
வேறு
வேத நாதர் புனிதேசர் மித்தி ரேசர் விதியுடனே
சீத ரேசர் மனுநாதர் சித்த நாதர் அகத்தீசர்
கோத மேசர் மூலேசர் குடிலே சுரராம் பிறவ....
போத வாணர் சம்புவனர் புகளை யைந்தாய்ப் ......... (28) 300
தீர்த்தம் ஆடி நீராடிச் செய்ய அக்கு வடம் புனைந்து
மூர்த்தி வாழும் புடைமருதில் முத்தி மாமண்டபம் எய்தி
சேர்த்த பஞ்சாட் சரம்இயன்ற சத்தி செபத்துச் சரிப்போர்தம்
கீர்த்தி பேசுவோர் மகிமை எம்மால் கிளக்க முடியாதே. (29) 301
- மூர்த்தி விசேடம் முற்றும் -
1. நடம்புரி படலம்
சூதயோகியரை எய்தி துடக்கறு முனிவர்.......ல
பாதங்கள் பரவி மேற்சொல் தொகையினில் படன மேசெய்
தாதரம் பெருக விண்ணோர்க் கருளிய வகையை யெங்கட்
கோதுதல் வேண்டும் என்ன முகமலர்ந் துரைக்க லுற்றார். (1) 302
ஆதியில் கயிலா சத்தில் அன்றுதைப் பூசந் தன்னில்
வேதனும் மாலும் வேள்வி நாதனும் விண்ணு ளோரும்
நாதனை எய்திப் போற்ற நலமிகு நடனம் அன்னோர்க்
காதரம் பெருகக் காட்ட அடியிணை பழிச்சு கின்றார் (2) 303
புண்ணிய முதலே போற்றி பூதநா யகனே போற்றி
விண்ணவர்க் கிரங்கி நஞ்சம் உண்டருள் விகிர்தா போற்றி
அண்ணலே போற்றி எங்கள் அற்புத நாதா போற்றி
தண்ணளி யான ஞானத் தற்பரா போற்றி போற்றி (3) 304
முற்றுணர்ந் தவனே போற்றி முடிவில்இன் புடையாய் போற்றி
உற்றதன் வயத்தாய் போற்றி உணர்வியற் கையனே போற்றி
மற்றியற் பாசம் நீங்கி வரம்பிலா ஆற்ற லான
பற்றுதூ யுடம்பாய் போற்றி பரம்பொருள் உடையாய் என்ன, (4) 305
அளவிலாத் துதிகள் செய்தார் அவர்கள்பால் அன்பு கூர்ந்து
வளமிகு செயலால் வேண்டும் வரம்பெறு வீர்கள் என்ன
நளிர்புனல் தரித்தோன் கூற நற்பதம் பணிந்து மாயோன்
முளரியோன் முதலோர் கேட்போர் முத்திநா யகனே இந்த, (5) 306
நடத்தின்நற் செயலும் தீர்த்த நன்மையும் திருநாள் வாழ்வும்
துடக்கறுத் தவர்கள் செய்யும் துதிகளும் பொருந்தும் இந்த
இடத்தினில் பணிந்தி ருக்க எங்களுக் கருள்வாய் என்னப்
படத்தர வசைத்த நாதன் நந்தியைப் பார்த்துக் கூறும் (6) 307
தலத்துயர் முத்தி நல்கும் தானமாய்த் தார கத்தின்
குலத்துயர் பதியாய் வேதக் குடுமியாய்க் குடிலை யான
நலத்ததென் மருதில் நாமே நடனம்கொண் டருள் வதாலே
பலத்துயர் பரமர் நித்ய சபைஎனப் பகர லாமே. (7) 308
தரைக்கணில் அதிகத் தெய்வத் தானங்கள் அனந்தம் தன்னில்
உரைத்திடத் தரணி லிங்கம் உற்பவம் முத்தி நல்கும்
பிருத்துவி ஆரூர் ஆகும் பேசிடில் அப்பு லிங்கம்
திரைப்புனல் பொன்னி சூழ்ந்த தென்திரு ஆனைக் காவே. (8) 309
வதிபவர்க் கெய்தும் முத்தி வன்னியாம் சோதி லிங்கம்
நிதிபெற நினைக்க முத்தி நீடுகா ளத்தி வாயுப்
பதிஅதன் பெருமை கேட்கப் பரகதி நடனம் ஓங்கும்
கதிதரு வான லிங்கம்' கருதியே தரிசிப் போர்க்கே. (9) 310
இறக்கமுத் தியதாம் காசி எழில்புடை மருதக் காசி
சிறக்கும்இ ரத்னம் ஓங்கித் திகழ்சபை திருஆ லங்கா
நிறக்கன கத்தால் மேவும் நெடுஞ்சபை தில்லை யாகும்
துறக்கநா டென்னும் கூடல் இரசத சபையாய்த் தோன்றும். (10) 311
பொருநைசூழ் தீர்த்தம் தன்னில் பூந்துறை நெல்லை மீதில்
தருவளர் பணைசேர் கின்ற தாம்பிர சபைய தாகும்
திருவளர் திருக்குற் றாலம் சித்திர சபைய தாகும்
மருதமா பதிதான் நித்ய சபைஎன வழங்கும் மாதோ, (11) 312
உதித்திடக் கருதக் கேட்க உண்மையாய்க் காணப் போற்ற
வதித்திட இறக்க முத்தி வழங்கிடு மகத்வம் நல்கும்
கதிக்கிட மான தென்பால் காசிக்கா சினிபோல் மூன்றாய்
விதித்திடும் உலகில் இல்லை தெரிசிக்க வேண்டு வோர்க்கே. (12) 313
பூமியில் முத்தித் தானம் புடைமரு தென்னும் காசி
நேமிதென் கயிலை யாகும் நீங்கிடா ததனில் நித்தம்
வாமமே கலையாள் காண மகரபூ சம்போல் என்றும்
சேமநல் நடனம் செய்து திருவிழாக் கொள்வோம் அங்ஙன் (13) 314
துத்தியம் உதவு மின்னோர் தங்கட்குச் சுதின நித்த
முத்திசேர் கின்ற சீவன் முத்திஅம் பலம தான
நித்திய சபையில் ஈவோம் அவன்வர நிகழ்த்து கென்றான்
இத்திற வசனம் நந்தி இவர்கள்பால் இசைக்க லுற்றான். (14) 315
கேட்டுள்ளம் மகிழ்ச்சி எய்தி கிளர்நந்தித் தேவைப் போற்ற
சேட்டவர் பரவுந் தெய்வத் திருக்கயிலாயத் தண்ணல்
பாட்டளி முரலும் கஞ்சப் பாதங்கள் பரவி ஏத்தி
நாட்டம்பெற் றிடும்பே றெய்தும் இத்தலம் நண்ணி னாரே. (15) 316
பூசம்சேர் மகர மாதம் பொங்கிய புடைசேர் கின்ற
வாசமா மருதில் ஈசன் மகிழ்விழாக் கண்டு மன்னி
நேசமோ டுவந்து போற்றி நித்திய பரமா னந்த
ஈசநா றும்பூ நாத என்றுபன் முறையால் ஏத்தி, (16) 317
பூசித்து மலரால் போற்றிப் புனிதமா தவங்கள் செய்தார்
காசிக்கோன் விடைமேல் தோன்றிக் காட்சிதந் தவரை நோக்கி
மாசற்றீர் வம்மின் வம்மின் மன்னிய நடனம் காண்பீர்
தேசற்ற வளிவி லாத இத்தலம் சேரப் பெற்றீர். (17) 318
தன்னில்ஆ னந்த மான தாண்டவம் புரிவோர் நீவிர்
துன்னியே பணிவீர் என்று சுதினநல் வரங்கள் நல்கி
அன்னடம் புரிந்தான் எங்கோன் அம்பலம் அதனில் போற்றி
மன்னினார் மாயோன் ஆதி மாதவர் மகிழ்ந்து போற்றா, (18) 319
கண்ணகன் ஞாலமும் கற்ப கந்திகழ்
விண்ணுடன் யாவரும் விரும்பு லோகமும்
புண்ணியர் எண்ணிலார் பொருந்து பூமியும்
மண்ணில்வாழ் மருதம்என் றறைந்திட் டார்அரோ, (19) 320
ஆதவன் கண்டதா மரையின் அன்னதாம்
போதக முகமலர்ந் தின்ன போற்றுவார்
நாதனே நித்திய சபையில் நாடக
பாதனே பரைஉமை பாக போற்றியால் (20) 321
இப்படி யேபுகழ்ந் தேத்தும் மேலவர்
மெய்ப்படு புகழுமாய் விருப்ப மோடெழீஇ
மைப்படி கண்டனை வணங்கி வாழ்த்தியே
ஒப்பிலா தளவளாய் உவந்தி ருந்தனர். (21) 322
நடம்புரி படலம் முற்றும்
2. விருத்திர வதைப் படலம்
விடையவன் கடவு ளோர்கள் விரும்பிட நடன சேவை
புடைஅருச் சுனத்தில் ஈந்த புகழ்இது புனித நாதன்
அடல்செயும் அசுரை வென்ற பழிதனை அகல வேண்டி
இடமதில் மருதோ டொன்றித் தவம்செயும் இயல்பு சொல்வாம். (1) 323
மாதவர் யாரும் போற்றி மலரடி வணங்கிக் கேட்பச்
சூதமா முனிவன் சொல்வான் தும்பையோ டறுகு வேய்ந்த
பூதநா யகன்வ ரத்தால் புவனமும் யாவும் ஈன்ற
காதலா கமலப் புத்தேள் காசிப முனியைத் தந்தான். (2) 324
காசிபப் பிரமற் கான கற்புடை அதிதி என்னும்
பேசிய திதிமி னென்னும் பெண்கள்ஓர் இருவர் தம்மில்
ஆசில்சீர் அதிதி பெற்றாள் அமரரை; அசுரர் தம்மை
நேசமோ டுவந்து பெற்றாள் திதியவள் நிகழும் நாளில், (3) 325
அந்தரர் அசுரர் தாயா தியர்களாய் அகங்கா ரம்கொண்
டுந்தவே ஒன்றுக் கொன்று வீறுடன் ஒன்ன லாராய்
வந்திகல் புரிந்த காலை அசுரரை மாய்த்தோர் விண்ணோர்
இந்தவா றசுரை ஈன்ற திதிஅறிந் திரங்கி நின்று, (4) 326
உளந்தடு மாறி என்செய் குதும்என உன்னி ஆசான்
விளங்கிய பதம் பணிந்து வேண்டுகோள் விளம்பி ஐய
வளங்கொள்எம் மக்கள் ஆன அசுரரை மாய்த்தார் விண்ணோர்
அளந்தறி காலம் பார்த்தே எனஅழு தழுங்கி னாளே. (5) 327
நின்னருள் வரத்தால் தந்த நிருதரை நிருமித் தென்றன்
இன்னல்தீர்த் தாள்வாய் என்றே இறைஞ்சுவாட் கிரங்கி வெள்ளி
மன்னவன் புகல்வான் உன்றன் மனத்துயர் தீரும் வண்ணம்
நன்னல மாகச் செய்தும் நடுக்குறேல் நங்கை என்றான். (6) 328
திதியுறு வருத்தம் தீரச் செப்புவான் திங்கட் செல்வன்
அதிதிகா சிபன்இ யற்று ம்அருமகத் துறுவோம் நீயும்
கதியுடன் வருதி மாறு காட்டிய சமிதை நெய்யால்
விதியுடன் இயற்றில் அந்த வேள்வியின் விருத்தியாக, (7) 329
அசுரனும் மைந்த னாக அவதரித் திடுவான் அன்னோன்
விசுவமாய்ச் சுரரை வெல்வான் என்றவட் குணர்த்தி வெள்ளி
வசுவினுக் குதவும் யோக வானிட முற்றித் தன்மைக்
கசிவுடன் உரைக்க மாதும் காசிபற் றொழுது நின்றாள். (8) 330
சுக்கிரன் வேள்வி நண்ணிச் சொற்பெறு முனிவ னோடு
அக்கினிக் குதவும் போழ்தில் அருள்எனத் திதியும் கூற
மிக்கவள் உரைமேல் உள்ளம் மேவிடச் சுரபே தத்தால்
அக்கணம் பழுவென் றோரா தாகுதி மனுவால் ஆற்றி, (9) 331
வேறு
நோக்கினன்அவ் வன்னிதனை நோக்கஒரு பானு
ஆக்கினை யினால்அழிவில் வந்தவத ரிப்பான்
பாக்கியம் இவர்க்குவரு பாலகன் எனத்தான்
தாக்கியகொல் கொண்டசுரர் தாம்மகிழ் வுறத்தான். (10) 332
செந்தழல் அழன்றசிறு குஞ்சியொடு சீறு
மந்தழ குன்றிநிகர் அம்பகமும் வீர
தந்தமுறு மந்தநகை கொண்டுதரு வாழும்
இந்திரனோ டந்தரரும் ஏகிட உதித்தான். (11) 333
வந்ததொரு பாலகனை மாதவன் வழங்கச்
சிந்தைகொடு வாங்கிஅவர் சேவடி பணிந்தே
உய்ந்தனன் எனத்திதியும் ஓகையுடன் எய்தி
எந்தைபுகர் முன்பணிவித் தேதிதி இசைப்பாள், (12) 334
மிக்கமக வுக்குறுதி செப்பென விரும்பிச்
சுக்கிரனும் அன்பொடு சுதற்குவகை யாலே
இக்கனலில் எய்துதலின் எக்கியவி யோனி
தக்கதென வேபெயர் தரித்தனன் அதன்பின் (13) 335
ஆசிபல நல்கினன் அரும்புதல்வ னுக்கு
காசிபன் மிகுந்தகரு ணைத்திருவு ளத்தால்
வீசுபுகழ் எய்துவரம் மேன்மைகள் அளிப்பான்
ஆசொழிக என்றசுர மைச்சனருள் செய்தான். (14) 336
மைந்தனுறு வாலுழைய சிங்கம்என வேவந்
தந்தமிகு வீரமுடன் அன்னையை வணங்கி
விந்தைஅசு ராதிகளின் மேன்மைபெறு வண்ணந்
தந்தருள் எனக்கழறி யேசரணம் உற்றான். (15) 337
உற்றதொரு பாலனை உவந்தனை மகிழ்ந்தே
எற்றுகடல் சூழ்புவி எவைக்குமர செய்தி
பற்றலர் இகந்துபரி வெய்துவை பராவி
அற்றமுனி காசிபர் அருள்பெறுதி என்றாள். (16) 338
புத்திரனும் அன்னைவச னம்தலை புனைந்தே
அத்தருள் காசிபரை எய்திஅடி போற்றி
இத்தரணி யேமுதல யாவும்அர செய்த
வித்தகம தாகஅருள் செய்என விளம்ப, (17) 339
மைந்தனை வியந்துமுனி வாஎன அழைத்தே
புந்தியுரை செய்துவளர் பொன்மயவ னத்தெம்
தந்தையை மனத்தில்உனி யேதவம் முயன்றால்
விந்தைமலர் அம்புயன் மிகுந்தவரம் நல்கும், (18) 340
அன்னவரம் எய்திஅசு ராக்குமுத லான
மன்னவனும் ஆகிவளம் எய்துவை வரத்தால்
முன்னியன யாவும்முடி யப்பெறுவை என்னச்
சொன்னமுனி யைப்பரவி யேசுதனும் வந்தான். (19) 341
வேறு
முன்னிய யாவும் எய்த ஆசிகள் மொழிந்த வாறே
மன்னிய முனிவர் போற்றி மனுஉப தேசம் பெற்றுப்
பொன்மய வனத்தில் போந்தே தவத்தினைப் புரிவான் போவான்
சொன்னஅவ் வனத்தில் சேர்ந்தான் எக்கிய யோனித் தோன்றல். (20) 342
சாற்று கின்றமெய்த் தவத்தினைக் கருதியே சார்ந்தான்
சீற்றம் மிக்கதோர் அரிகரிப் பகைத்திறம் ஒழியா
மாற்றம் இல்வரைச் சாரலில் குற்றிபோல் வதிந்தே
ஏற்ற நற்றவம் செய்தனன் கண்டவர் இரங்க. (21) 343
விஞ்சை கொண்டெழு நாவெரி விதியினால் சொலித்த
அஞ்சு தீயின்மேல் ஆறையும் அவித்தவன் அருளால்
உஞ்சல் ஆடிய சிக்கமே வறிதிகொண் டேறிக்
கஞ்ச நாள்மலர்க் கடவுளைக் கருதியே நோற்றான். (22) 344
யோகம் மேவியே விழியினை அந்தரத் துய்த்து
வேகம் ஆகிய காலினை அடக்கிமெய் அங்ஙன்
சோகம் அற்றனன் உணர்வன்றிச் செயலன்றிச் சுரர்கள்
வேகம் அற்றிட இப்படி நோற்றனன் வெகுநாள். (23) 345
அரிய நற்றவம் ஆண்டுநூற் றிருபதின் அளவும்
புரிய எக்கிய யோனிதன் தவாக்கினி பொங்கி
விரியும் வையகம் விண்சுவர்க் கத்தினும் மேவி
எரிய தென்னவே வெம்மையை இயற்றிட இதுதான், (24) 346
யாதெ னச்சுவர்க் கத்தினர் முதலியர் யாரு
ஏத வெம்மை வாட் டிடும்இவை எக்கிய யோனி
பூத லத்தினில் புரியும்த வாக்கினி போந்து
வேதை செய்வதென் றுணர்ந்தவர் ஆற்றலர் வெருண்டு, (25) 347
சத்திய லோகம் சார்ந்து தாமரை வாணன் தன்னை
துத்தியம் செய்து பாதம் பரவியே தொழுது நின்றார்
அத்தனே அசுரன் செய்யும் தவாக்கினி யான வெம்மை
எய்த்திடத் தாகச் சோகம் இயற்றிட யாங்க ளெல்லாம் (26) 348
அஞ்சியே உனைஅ டைந்தேம் அடைக்கலம் என்று தாழ்ந்தார்
கஞ்சநாண் முகத்து வேதா கடவுளர் தமக்கி ரங்கி
அஞ்சல்என் றபயம் தந்தே அனத்தினை உகைத்த கன்றே
மிஞ்சவே தவம்செய் எக்ய யோனிபால் மேவி னானே. (27) 349
மேவிய வேதன் முன்பு தவத்தினான் விழித்தெழுந்து
பூவலர்ப் பாதம் போற்றிப் புண்ணிய முதலே பூவில்
நாவினாள் பாகா போதா நான்முகத் தொருவ வானோர்
தேவனே போற்றி என்று தோத்திரம் செய்து நின்றான் (28) 350
நின்றவன் தன்னை வேதா நோக்கிநீ தவம்செய் நீர்மை
நன்றென நின்க ருத்தே தெனவினாய் நவிற்று கென்னத்
துன்றுமற் றவன்ப ணிந்து சொற்றுவான் சுலவு பாரில்
பொன்திகழ் உலகில் சொர்க்க புவனத்தில் உள்ளோர் தம்மால், (29) 351
சூலம்மழு வாட்படை தோமரம் முசலம்
வேலம்பி தனால்எனை வென்றிடா வரமும்
ஞாலம்முத லாயின புவனமும் யானே
கோலின்வழி யாளவும் தந்தருள் கூர்வாய் (30) 352
என்ன துள்ளத்தில் எண்ணிய யாவையும் எய்த
மன்னு மேனிகாத் திரமதாய் நாள்தொறும் வளர
அன்னை அத்தன்நீ யாவையும் படைத்திடு மலரில்
துன்னு நான்முகத் தொருவனே இத்துணை வரமும், (31) 353
தந்த ளிக்கெனப் போதனும் தயவினால் தந்தே
மைந்த என்றனன் எக்கிய யோனிஇவ் வரங்கள்
இந்த வண்ணமே பெற்றனன் துதித்தனன் எழில்சேர்
சந்த வேதனும் சத்திய லோகத்தைச் சார்ந்தான். (32) 354
ஏட விழ்ந்தமா மலரவன் ஈந்திடும் வரத்தால்
நாடொ றுமிவங்க மிக்கென வளாந லத்தால்
சேடர் யாவரும் ஓங்குமெய் விருத்தியால் சிந்தை
நீடி யேவிருத் தாசுரன் என்னவே நிகழ்த்தி, (33) 355
பெயர்வி தித்தனர் விதிதர மேற்பெறும் வரத்தால்
புயல்நி றத்தவன் எனப்புவி அந்தரம் பொருந்தும்
வயமு டைத்துயர் தேகத்தன் மன்னுமூ வுலகும்
சயம்ப ரத்தினி ஆண்டனன் பூண்டிடும் தருக்கால். (34) 356
அழுந்து நேசமொ டசுரரை உயர்த்திட அமைந்தே
எழுந்து வானுளோர் தங்களைப் பொருவதற் கெண்ணி
தொளுந்தன் தானைகள் சூழ்வரப் போந்துவெங் கதந்தான்
கொளுந்த வேவிருத் தாசுரன் சுரர்கள்மேல் கொதித்து, (35) 357
போந்து வான்வழி பொருந்திட விண்பதி புகுவான்
பாய்ந்து சென்றிடும் பரிகரி தேர்படைக் கலங்கள்
வேய்ந்த மள்ளர்கள் வெள்ளமும் பள்ளிநீர் விரியச்
சாய்ந்து சூழ்வரத் தருக்குடன் சூறைபோல் சார்வான். (36) 358
வேறு
அதிர்ந்து வரும் ஆக்கிரம வீரன்அவன் முன்னே
எதிர்ந்தசரம் மற்றசரம் யாவும் இரி வெய்தி
ஒதுங்குற உயிர்ப்பில்வரு சூறைஉல வைக்கே
அதுங்கவிழி மாவடவை யாம் எனவும் மேவா. (37) 359
அண்டமுக டுந்தமுடி அடிகொடகி லந்தான்
விண்டிட நடந்தசுரன் மேவிட விரைந்தே
கண்டவர்கள் ஓடவளர் கைகள்திசை மேவக்
கொண்டல்உரு முக்குரல் கொதித்தமுளை வாயால், (38) 360
விண்ணவர்கள் மன்னபொர வாஎன விளித்தான்
துண்ணென எழுந்தமரர் சூழ்படை திருத்தி
அண்ணல்அயி ராபதனம் அமர்க்களம்அ துற்றே
எண்ணமொடு போர்வினை இயற்றிட எதிர்ந்தான். (39) 361
வேறு
தேவ வீரர் ஆர்த்தெழுந்து சிலைகள் கோடி மெய்திரிந்து
ஆவ மீதினில் தெரித்த னேகவாளி அவுணர்மேல்
ஏவி டக்க னன்றோனார் எதிர்த்துவாளி மாறியே
தூவி டச்சி வந்த மாகர் தோல்கைவாள் சுழற்றினார் (40) 362
தான வீரர் ஆயிரம் தருக்கு வாளி ஏவிட
வான வீரர் ஆயிரம் மறுத்து வாளி தூவினார்
சோனை என்ன எய்தவாளி சொல்லுகின்ற இருவகைச்
சேனை வீர ரும்கலந்து செருவி ளைத்து நின்றனர். (41) 363
வேறு
கோலம்பு முள்வா யம்பு கோடம்பு பிறவா யம்பு
வேலம்பு விடவா யம்பு மிகுகனல் வடவா யம்பு
சூலம்பு சுழல்வா யம்பு சுரிகைவாய் அம்புள் ளிட்ட
மாலம்பி னாலும் மாறி மாறிவந் தடுபோர் செய்வார். (42) 364
தேரு கைத்த வயவ ரோடு தேரு கைத்த வயவரே
கோர முற்ற பரிய ரோடு கோர முற்ற பரியரே
வாரணத்த பாக ரோடு வார ணத்த பாகரே
போரில் உற்ற வீர ரோடு போர்வலத்தர் பொருவராய், (43) 365
மல்லரோ டெதிர்த்த மள்ளர் வாள ரோடு வாளரே
வில்லரோ டெதிர்த்த வில்லர் வேல ரோடு வேலரே
சொல்லரோ டெதிர்த்த சொல்லர் சூல ரோடு சூலரே
வெல்லு மள்ளர் ஆர்ப்பெ ழுந்து மிகுசமர்ப் பொருதரோ (44) 366
வானம் ஒத்த யானை யில்பெய் வாளியேஉடுக்கணம்
மீனமற்றி லாழி தைத்து விடுதல் மேக நுழைசுட
ரான தப்பு றத்தெழும் பலகவு சொரி யந்தி பான
றானை யிற்செ றுத்த வின்ன சமர்செய் கின்ற தளமரோ (45) 367
கொள்ளி கொட்பு றுத்தசாரி கோலெ னச்செல் வேகமா
வெள்ளம் உற்ற கடலும் வானும் விரிய முற்று தூள்எழ
பள்ளநல் தரங்கம் ஒத்த பாயுமா அனேகமா
வள்ளி லைக்கை வேலயத்த வாசிவெள் ளச்சுமால் (46) 368
வாழி யெட்டு மலையி னோடு மற்று முள்ள வரையதோ
ஏழி சைத்த அரியினோடு எழுந்த பானு இரதமே
ஆழியிற்செ றித்தபா றடுக்கும் ஆர்க லித்திரள்
பாழி மொய்த்த பாகர் உய்த்த பாண்டில் வைய மீண்டதே. (47) 369
கந்து கச்சி ரிப்பின் ஓசை கவிழ்ம தக்களிற்றின் ஓசை
தந்திரத் தேரின் ஓசை சங்கின் ஓசை எங்கணும்
வந்து ரத்த வயவர் ஓசை வாள்படைக் கலத்தொலி
அந்தரத்தர் நாடு முட்டி அப்புறத்தெ ழுந்ததே (48) 370
சாரி சுற்றி மாரி எற்றி நேர்எ திர்த்த தானவர்
வீரி யத்தர் வீற டக்கி வெற்றி பெற்ற வென்றதம்
தாரி சைத்த தோள்பு டைத்த தறுகண் வீரர் மறுகவே
வாரி எற்றி வாரி எற்றிவல்ல போர்ம லைந்தனர். (49) 371
இத்திறத்த போர்வி ளைத்தி றந்து ளோர்கள் எண்ணிலார்
தைத்த வாளி யோடி ழிந்து சாய்ந்து ளோரும் எண்ணிலார்
மைத்த குஞ்சி தாரி னோடு மாண்டபேர் அனேகரால்
மெய்த்த மார்பில் நேமிதைக்க வீய்ந்தவெங் களத்தரே. (50) 372
கால்சி தைந்த நீர ருங்கோல் கரிசிதைந்த பாகரும்
மேல்சி தைந்த போர ருஞ்சொல் வெகுளிசிந்து வீரரும்
தோல்சி தைந்த தோள ருங்கை வாள்சி தைந்த சூரரும்
பால்சி தைந்த தார ருஞ்செய் பைங்க ளத்தி றந்தனர். (51) 373
மொழிசி தைந்த பாக ரோடு மூரி வையமற்றன
சுழிசி றந்த துரக மோடு சூரர்வேகம் அற்றன
அழியும் வெம்ப டைக்க லத்தோ டாண்மை யற்ற வங்ஙனம்
விழியி னோட றுங்க பந்தம் வெங்களத்தில் ஓடவே. (52) 374
செந்நி லத்திறந்து ளோர்கள் சோரி யாறு செல்லவே
பன்னி ணத்த குவியல் மீது பாரி டங்கள் கூளிகள்
கன்னி யைத்து தித்திறைஞ்சி உண்ணவே களிப்புடன்
துன்னி ஆடல் பாடல் செய்து தொகுபிணம் சுவைக்குமால், (53) 375
காக மோடு பாறும் வேறு கழுகினங்கள் கவ்வியே
வேகமற்ற பிணம லைத்து மேதை சுற்று மூளைவாய்
யாக முற்ற வேசு ழற்ற அதனொடுங்கு றைத்தலை
மாக முற்றி வீழ்வ தற்ற வாரியொத்த களரிவாய். (54) 376
மயங்குவீரர் மயல்தெளிந்து வல்ல போரில் முற்றியே
பயங்கொளார் மலைந்திடார் பணைத்ததோள் புடைத்துடன்
வயங்கொள் வெஞ்சி னத்தராகி மதியினைப் பிளந்தெனத்
தயங்கும் வக்ர தந்தவாய் மடித்து மென்று சாடுவார். (55) 377
தகுவ வீரர் தேவ வீரர் சாரி மாறி வேல்பிடித்து
எஃகம் உற்ற வெழுவெ டுத்த இருதிறத் தலைவரும்
வெகுவி தந்த போர்வி ளைத்து வீரர்சாய .............
தகவனும் பொன் நாடனும் தனித்தெழுந்து சமர் செய்வார். (56) 378
சுரர்பதி வருண பாணம் தொடுத்தனன் அசுரன் துள்ளி
எரிசரம் தொடுத்துச் சீற்றம் தணிந்தனன் இமையோர் வேந்தன்
பரிதிஅத் திரம்கொண் டெய்தான் பதிகனும் சசிவிட் டார்த்தான்
அரிஅரிக் கணையை விட்டான் அவுணன்சிம் புள்ளால் அட்டான் (57) 379
நாகர்கோன் சூறை ஏவ நாகமாப் படைவிட் டார்த்து
வேகம் தகற்றக் கள்வன் வெள்ளைவா ரணத்தி னானும்
மோகமாப் படைவிட் டார்த்தான் தகுவனும் முயன்று ஞான
வாகைவா ளியினால் எய்தான் வான்உளோர் யாரும் அஞ்ச. (58) 380
இவ்வகைத் தேவ பாணம் எய்தபின் எழுவி னாலே
மைவண அசுரன் வென்றான் வாசவன் புறகிட் டோடத்
தெவ்வினை அட்டோன் வாகை சூடினான் செழுங்கோ டேங்க
கைவினை அதனால் தேவர் பொருள்எலாம் கவர்ந்தான் மன்னோ. (59) 381
வானமும் திசையும் பாரும் மற்றதில் உள்ள வான
தானமா நிரையும் பாய்மாத் தரங்கமும் தடந்தேர் யாவும்
கானமும் மணியும் பொன்னும் காமதே னுவும்கால் கின்ற
மேனிதி களும்கைக் கொண்டான் வேதியன் வரத்தினாலே. (60) 382
புரந்தரா தியர்ம றைந்தோர் எங்ஙனம் புகுவோம் என்ன
இரங்கிட அகப்பட் டோரைச் சிறையினில் இட்டான் அன்ன
அரம்பையர் இடுக்கண் எய்த ஆண்டனன் அசுரன் இன்னல்
கரந்திட உருவம் மாறி மகபதி கருது கின்றான் (61) 383
புந்தியில் எண்ணி இன்ன புதழ்தரு மதிஎன் றோர்ந்தே
இந்திரன் தேவ ரோடும் சத்திய லோகத் தெய்திக்
கந்தமா மலரில் மேய கடவுளைப் பணிந்து நின்று
வந்தவே தனைகள் தீர முறையிட்டார் வணங்கி னாரே. (62) 384
கமலமா மலரில் மேய கடவுளே கருணை மூர்த்தி
தமலம்நீங் கியவே தாவே சகலபல் லுயிரை ஈன்ற
அமலனே வாக்கின் செல்விக் கன்பனே அயனே என்றென்
றிமையவர் முதலோர் போற்ற இவர்தமை நோக்கி வேதன், (63) 385
பகருவான் முகம்பு லர்ந்து பருவர லுடன்இங் கெய்தும்
தகமைஏ துரையும் என்னச் சாற்றுவார் விருத்ரன் என்னும்
இகல்புரி அசுரன் செய்த இடுக்கணால் அவதி எய்திப்
புகல்இலா துனைஅ டைந்தோம் புரந்திட வேண்டும் என்றார். (64) 386
செங்கையால் அமைத்து நீவிர் அஞ்செலீர் என்றான் தேவர்
தங்குறை புகல்வார் எங்கள் பொருள்எலாம் தகுவர் கொண்டார்
பொங்கிய பகையைப் போக்கிப் பொன்நகர் எங்கட் கீவாய்
பங்கய முதலே என்று பரவினார் பணிந்து நின்றார். (65) 387
விண்ணவன் தன்னை நோக்கி வேதநான் முகத்தோன் கூறும்
எண்ணிலா தவங்கள் முன்னம் இயற்றினோன் எக்ய யோனிக்
கண்ணிகழ் பெயரோன் ஓங்கு காயத்தால் விருத்ர காலன்
தண்ணளி இல்லான் மேலாம் காசிபன் வேள்வி தந்தோன். (66) 388
வன்னியை நிகர்வோன் சுக்ரன் வழங்கிடும் வரங்கள் பெற்றோன்
உன்னரும் திறலோன் தன்னை வெல்லுதற் குறுதி ஒன்று
மன்னிய யாகம் தன்னில் சுரபேத மந்தி ரத்தால்
துன்னினோன் அதனால் அற்ப வாழ்வினோன் சுகுணம் இல்லோன். (67) 389
விண்ணவர் பகையாய் வந்த விறலினோன் வேண்டப் பெற்ற
எண்ணிய வரத்தி னாலே இளம்பிறை எனவ ளர்ந்து
நண்ணிய பருமத் தாலே விச்சுவம் நயந்து நின்ற
திண்ணிய புயத்தி னானைச் செயித்திடச் செய்வ தொன்று (68) 390
வேறு
உன்னுடை வச்சிரம் உவனை வென்றிட
முன்னிய மழுங்கிய முனையில் மொந்தையான்
துன்னிய அவையவம் துண்டம் செய்திட
மின்னிய கூர்மையால் வேறு வேண்டுமால் (69) 391
வேண்டுதற்கு யோசனை விரித்து மேருப்பால்
ஆண்டுயோ கம்புரி ததீசி அந்தணன்
காண்தகு மெய்முது கென்புகை கவர்ந்து
ஈண்டுவச் சிரம்செயில் இவனை வெல்லலாம். (70) 392
என்றுநான் முகன்இசைத் திருடி எய்திடம்
சென்றும திடர்சொலில் தீர அம்முனி
நன்றென ஈகுவன் நடமின் நீர்என
மன்றலம் தருஉறை மன்ன னேமுதல், (71) 393
அமரர்கள் அனைவரும் அயனைப் போற்றியே
சிமயமா மேருவின் பக்கம் சென்றுநாம்
தமைநிகர் முனிவனை அடைந்து சாற்றியே
எமதுயர் நீங்கலாம் என்று போயினார். (72) 394
வழிகொடு போந்தனர் வான்உ லாவிய
தழைஅவிழ் சந்தனம் செருந்தி சண்பகம்
குழைநிறை பனசமாம் கோங்கு பாடலம்
கழைவளை காஞ்சியும் கலந்த காஎலாம். (73) 395
விண்தொடு யூகமும் வேள்விச் சாலையும்
பண்தரு மறைவலோர் பன்ன சாலையும்
கொண்டல்ஆர் சோலைசூழ் குவளை வாவியும்
கண்டுகண் களிப்புறக் கருதிப் போந்தனர். (74) 396
வானவர் அனைவரும் ததீசி மாமுனி
தானுறை இருக்கையைச் சார்ந்து தண்ணளி
மோனம தாகிய முனியை வாழ்த்தினார்
மானத மவுனயோ கத்தை மாற்றியே. (75) 397
முனிவனும் விழித்துமுன் எய்தும் விண்ணவர்
தனைஉப சரித்துநன் முகமன் சாற்றிப்பின்
அனைவரும் இமையவர்க் கரசும் இங்ஙனம்
மனுவதென் என்றுரை வழங்கி னான்அரோ (76) 398
அந்தரத் தசுரன்வந் தடர்செய் போரினில்
இந்திரன் என்னையும் இமையர் யாரையும்
சிந்திட அவன்செயும் தீமை ஆற்றலால்
எந்தைஉன் இடந்தனில் எய்தினோம் என்றார் (77) 399
ஆற்றலம் அசுரன்செய் அவதி நீங்கிட
மாற்றம்இ லாதஎம் வருத்தம் நோக்கியே
நீற்றினால் அழகிய முனிவ நின்அருள்
தோற்றிடச் செய்தெம துயரம் நீக்குவாய் (78) 400
பங்கயன் வரம்பெறு பதகன் மாய்ந்திட
எங்கள்தம் உலகினில் யாங்கள் எய்திட
அங்கதற் குறுதியும் அருள வேண்டுமால்
துங்கமா முனிவனே எனத்து தித்தனர். (79) 401
விசுவமாய் வந்திடும் விச்சு வாசுரன்
நசியவே அவன்தனை நாங்கள் வென்றிட
உசிதமாய் வச்சிரம் ஒன்று செய்திடக்
கசிவுறும் அன்பனே கருதி வந்தனம் (80) 402
என்னெனில் நின்உடம் பினில்இ ருப்பது
தன்னிகர் முனிவஎம் இடர்த விர்ப்பது
பொன்எனப் போற்றிவிண் குடிகொள் பொன்நகர்
தன்அர சளிப்பது தருக என்றனர். (81) 403
சாற்றுதும் நின்முது கென்பு தான்அது
ஆற்றிய முனிவனே அருளிச் செய்எனச்
சேற்றிதழ்த் தாமரை வாச செங்கதிர்
தோற்றிய தெனமுனி மலர்ந்து சொல்லுவான் (82) 404
இன்னலம் தான்பெற இடுக்கண் மற்றையோர்
துன்னுதல் தேர்கிலார் தொன்மை என்னவே
என்னுயிர் கவர்வதற் கிவண்வந் தெய்திநீர்
நன்மையே புகன்றனர் நன்று நீர்அரோ. (83) 405
யாவதா கிலும்இரப் பென்ன எய்தினோர்க்
கீவதே இசைபடல் இலைஎன் றேசொலல்
சாவிலும் இழிவிலும் சழக்கென் பார்களே
ஆவுடன் ஈதலே அழக தாகுமால் (84) 406
வேறு
வானவர்க் கரசை நோக்கி மாமுனி அருளிச் செய்வான்
தேனவிழ் தாரு நாட்டில் திரைக்கடற் புவியிற்செல்லா
தேனைய திசையிற் போகா என்உடம் பெய்தும் என்பு
தானதென் றதற்குக் கைம்மா றியாதெனச் சாற்றினானே. (85) 407
பூதமும் நோயும் பேயும் புள்விலங் கந்தியாய
பேதமும் பெற்றோர் தாமும் பிருதுவி தானும் பேசில்
வேதனும் சலிக்கத் தோற்றி அழிந்திடுமெய்யில் வந்த
ஏதமும் தீரும் காலம் இமையவர் எய்தி னாரே. (86) 408
சீயுறு நாற்றம் பற்றும் ஊனுடல் செறிந்த என்பின்
காயமும் வழும்பு மூளை இறைச்சியும் கதுவ ஒன்பான்
வாயுறு மலமும் ஐவர் வருத்தமு மாறும் வேளை
மீயுறு தேவர் யாரும் விருந்தென மேவினாரே. (87) 409
மன்றலம் தாரு நாடர் மகிழ்வுற அசுரன் தன்னை
வென்றிட இமையோர் எல்லாம் விண்குடி யேற வானில்
ஒன்றிய குலிசம் ஆக உறுசெயல் உலகம் யாவும்
நின்றிடப் புகழைப் பெற்றுப் பொன்றுநான் நீங்கு வேனால் (88) 410
புகழுடம் பதனைப் பெற்றுப் பொய்யுடல் நீத்தும் என்னா
அகமகிழ்ந் தட்ட மூர்த்தி அடியிணை மனதில் உன்னிப்
தகைமைசால் கரணம் ஒன்றித் தத்துவம் கடந்து நின்ற
சுகநெறி அடைய நின்றான் சோதிமா முனிவன் தானே. (89) 411
சுயம்பிர காசம் எய்திச் சுழிமுனை ஆதா ரத்தில்
வயம்பெறு பிரம ரந்த்ர வழியுறும் வளிமேற் செல்ல
நயம்பெறு நிட்டை ஒன்றி நாதபூ ரணத்தில் ஞான
சயம்பெறக் கபாலம் கீண்டு விமானத்தில் சார்ந்தான் மன்னோ. (90) 412
ததீசிமா முனிவன் விண்ணில் சார்ந்திடச் சதவேள் விக்கோன்
முதலிய தேவர்அந்த முனிவரன் முதுகின் என்பைக்
கதியுற வாங்கித் தேவ கம்மன்கைக் கொடுப்ப அன்னோன்
விதிபெறக் குலிசம் செய்தான் விண்ணவர் தலைவற் கீந்தான். (91) 413
சதமுளச் சதமுள் வேய்ந்த தபனன்ஒத் திலங்கச் செய்த
விதவினைப் படையை மேலோன் தாங்கிட விறல்இ ழந்தான்
மதனைவென் றவனை உள்கி வணங்கியே மலரி னாலே
சுதினமாய் வழிபா டாற்றித் தொல்வலி பெற்றான் அன்றே, (92) 414
இந்திரன் வயிர வேலை இறைஞ்சிப்பூ சித்தெ டுத்தான்
கந்தர மின்னின் தோன்றும் காட்சிபோல் களிப்பின் ஓங்கி
அந்தரர் யாரும் போற்ற அவனிஉண் டவன்போல் நின்றான்
முந்திய பகையை வெல்ல முன்னினான் அனிகம் மொய்ப்ப. (93) 415
தானைவன் முனைமேல் செல்லச் சாரணர் தமக்கு ணர்த்தி
வானவற் றலைவர் சூழ வயப்பரி வீரர் வீழத்
தானமாப் பாகர் சூழத் தடந்திகழ் இரதம் சூழத்
மானவெண் களிற்றில் ஏறி மல்பொரு களத்தில் வந்தான், (94) 416
படைக்கலம் பதினெட் டான ஆயுதம் படைத்த செங்கை
யுடைத்தறு கண்ணர் ஆர்ப்புக் கேட்டெழுந் தொன்னலார்கள்
வடைச்சிலைத் தெழுந்தால் என்ன விதுப்பிளந் தனைய வாயிற்
கடைப்படும் எயிற்றர் மிக்க கோபாக்னி கண்ண காலர் (95) 417
வன்பட்ட வாடகை வீரர் மடித்தவாய் உருமுச் சொல்லர்
கொன்பட்ட பகழி வில்லர் கொட்புற்ற பரியின் பாகர்
முன்பட்ட போரில் மூண்டு தேவர்மேல் முனைத்து நின்றார்
மின்பட்ட குலிச வேலைத் தகுவன்மேல் இமையோர் வேந்தன், ( 96) 418
விடுத்தனன் அதுபோய் வென்று விருத்திரா சுரன்தன் மெய்யை
வடுப்பட அவன்சி ரத்தை வதைத்திட வருடம் ஒன்றின்
இடைப்படு நாள்கள் முற்றும் இவன்உடல் ஈர்ந்து துண்டம்
படச்செய்து குறைத்த தாகப் பதகனும் மாண்டு போனான். (97) 419
விருத்திரன் தன்னை வென்று விண்ணவர் தலைவன் வாகை
தரித்தனன் இமையோ ரெல்லாம் சதமகன் தனைவ ணங்கத்
திருத்தகு தவிசில் எய்திச் சிறந்தினி திருந்தான் தேவர்
வருத்தம் அ தகன்றார் வான லோகத்தில் வந்து சார்ந்தார். (98) 420
மருக்கமழ்ந் தலர்ந்த தாரு மந்தர வளத்தில் மேவும்
தருக்குமால் யானை யுச்சி இச்சிர சயிந்த வங்கள்
குருக்கிளர் பதுமம் சங்க நிதியம்மா மணிக்கு லங்கள்
பெருக்குமற் றுளவும் எல்லாம் பெரிதுவந் திட்ட தன்றே. (99) 421
அண்ணலார்க் குடையோர்க் குற்ற தடுத்தவர் உறுவார் என்றே
பண்ணவர் பழமை கூறும் பான்மையத் தன்மை யாதர்
திண்ணமே புனிதன் உற்ற தீவினை உற்றார் தேவர்
விண்ணவன் மகிழ்ச்சி எய்த வியந்தனர் மேலோர் எல்லாம். (100) 422
வாசவன் உற்ற காலை அசுரனை உதைத்த சாயை
நேசமாய்த் தன்னைப் பற்ற நிறம்குன்றி புந்தி மாழ்கி
ஆசுகொண் டவலம் உற்றே அந்தர நாடன் விம்மா
மாசுறா நகையா வாடா மம்மரின் உழக்கு மாதோ. (101) 423
இம்என வாய்ம டிக்கும் இடர்உறும் எங்கும் சோரும்
வம்என ஓடும் மீளும் மாழ்குறும் சிவதா என்கும்
தும்மிடும் சோரும் வாயைச் சுவைத்திடும் சுழற்றும் கண்ணை
விம்முறும் விழிக்கும் வேர்க்கும் வெடிபட விரட்டும் விள்ளும் (102) 424
இத்தனிச் சாயை செய்யும் இன்னலால் இந்தி ரன்தான்
வைத்தசோர் வயர்ச்சி யாலே வருந்துற வானோர் எல்லாம்
எய்த்திடும் மனத்தர் ஆகி இவைகழிந் திடவே எண்ணி
வித்தக வியாழன் முன்பு விளம்பிட வேண்டும் என்று, (103) 425
சென்றவன் அடியில் வீழ்ந்து தேவர்மன் னவனுக் குற்ற
துன்றுறும் இனைய துன்பம் சொல்லியே தீரும் வண்ணம்
நன்றருள் புரிவாய் என்ன நாகர்தம் குரவன் கூறும்
பொன்றுபா வங்கள் புத்தி பூருவம் அபுத்தி பூர்வம் (104) 426
இவைகளால் வந்த பாவம் இயம்புதும் யாவர்க் கேனும்
நவைபுரிந் திடுதல் செய்யும் நன்றியைக் கோறல் நல்லோர்க்
கெவையவம் புரிதல் மூவர்க் கிடரினால் ஈறு செய்தல்
அவைதரும் அத்தி தோடம் ஆகிய பாவந் தன்னில் (105) 427
விரைத்தகொன் றையன்து ரோகம் அன்றியே விளையும் பாவம்
தரைக்கணில் அனுபவத்தால் சார்ந்திடும் பரிகா ரத்தால்
புரைப்பட நீங்கும் அன்றிப் புல்மரம் புள்வி லங்காய்த்
திரைப்படும் துரும்ப தென்னத் திரிந்திடும் செனனம் தோறும், (106) 428
விரித்திடில் மிகுதி யாம்வெவ் வினையினால் உழல்மே லோனை
வருத்திய பாவம் நீங்க மரமதாய்ச் செனித்து மண்ணில்
தரித்தவர் இழைப்பு நீங்கச் சாயையாய் இருக்கில் தீரும்
கருத்தனால் உரைத்த நூலில் காட்டிய விதியி னாலும், (107) 429
குரவனால் தீரும் என்று குறித்துவந் திடுவ தாலே
மரமதாய் வரினும் மிக்க மகத்துவம் உளது மண்மேல்
பரமதாய் உறுதி யான புகழ்மையும் பதவிப்பேறும்
வரமதாய் எய்தும் என்று வழங்கினான் மறைவல் லோனே. (108) 430
பகைத்தவன் தன்னை வெல்லின் பாவங்கள் உளதோ என்று
சகத்திர நயனத் தண்ணல் தன்உல கத்தோர் கேட்ப
மிகப்படு குரவன் கூறும் மெய்த்தவ விளைவி னாலும்
மகத்தினில் பிறத்த லாலும் அவன்தனை வதைத்த சாயை, (109) 431
பொதிகைசூழ் தென்றல் நாட்டில் பொருநைசூழ் புடைசேர்கின்ற
கதிதரும் மருதில் ஒன்றித் தவத்தினைக் கருதிச் செய்யில்
புதிய இப் பாவம் தன்னைப் பூதிநா யகனே தீர்ப்பான்
நிதிதரும் மருதின் மேன்மை யாவரே நிகழ்த்தற் பாலார் (110) 432
எனஉரைத் தருத்தி யோடும் இமையவர் வேந்தை நோக்கி
மனத்தினில் அச்சம் கொள்ளேல் என்றருள் வழங்க லோடும்
புனிதனுக் குற்ற பாவப் புரையணு அகன்று புந்தி
கனிதரப் போற்றி நின்றான் இன்னமும் கழறும் மாதோ. (111) 433
மருதினில் வதிவாய் வேறு மரமதாய் நிற்கில் மற்ற
நிருதர்கள் ஊறு செய்வார் நீசிவ மருதில் ஒன்றிப்
புரிகுவை தவத்தை என்றான் புகன்றிடும் குரவன் தன்னை
மருமலர்ப் பாதம் போற்றி விடைபெற்று வணங்கிச் சென்றான். ( 112) 434
சகந்தனில் உயர்ந்த தெய்வத் தன்மரு ததன்பால் மெய்யாம்
மகங்களும் பொழிலும் தீர்த்த மகிமையும் பொருந்தும் இந்த
அகந்தனில் உருவம் மாறி அருச்சுன மாகத் தானே
புகன்றிடும் படியாய் நின்றே அரிதவம் புரிய லுற்றான். (113) 435
- விருத்திர வதைப்படலம் முற்றும் -
3. இந்திரன் பழிதீர்ந்த படலம்
விருத்திரன் தன்னை வென்று விண்ணவன் மருதாய் மேவும்
சரித்திரம் உரைத்தும் அன்னோன் தவத்தினுக் கிரங்கிச் சாய்ந்தோர்
அருச்சுனத் திடையில் தோன்றி அவன்பழி யதனைப் போக்கிக்
கருத்துறக் காட்சி நல்கிக் கதிதந்த கதையைச் சொல்வாம். (1) 436
மருதமாய் உருவம் மாறி மகபதி மனம்மெய் வாக்காம்
திரிகர ணங்கள் ஒன்றித் தேசிகன் விதித்த வாறே
அரியவாய் எவர்க்கும் தோற்றா தாரையு மடக்கி யங்க
தருவினால் சிவத்தை உன்னித் தவத்தினைப் புரிந்த காலை, (2) 437
தருவுறை கின்ற தெய்வத் தரணிமன் னவனுக் குற்ற
பிரமதோ டம்தான் நீங்கப் பிருதுவி மீதில் தானே
மரமதாய் எய்தவேண்டும் வழிஎவன் வகுப்பீர் என்னக்
கருதிய முனிவர் கேட்ப முனிவரன் கழறல் உற்றான் (3) 438
செனனகா ரத்துக் கேது திரிவித கரணம் ஆன
மனமொடு வாக்குக் காயம் மூன்றினில் வந்த பாவ
வினையது நினைக்கும் பாவம் விதிதவ றாக நின்று
நனிவரு பாத கம்செய் நீசமாய் நடத்தும் மாதோ. (4) 439
வாக்கிற் றருபாவம் விளைந்திட மாக்களாகும்
நோக்கிற் றிகழ்காய மதாற்செயும் நோய்க்குப் பாவம்
தூக்கிற்றருவாகி உதிக்குமிதிற் சொல்மேலோ
னாக்கைக் கையினா லசுரன்றனை யட்டதாலே (5) 440
விண்ணம் திகழ்தாருவின் நீழலில் மிக்க வேந்தன்
கண்ணம் புவி மீது ககத்தரு வாகி நின்ற
வண்ணம் இவைஎன்று வழங்கினன் மாதவத்தோன்
நண்ணும் வினைதீர்வது கேட்க நவிற்று கென்றான். (6) 441
இமையாத நாட்டத் திறையோன் தவம் எய்தமற்றை
இமையோர்கள் வேந்தை இமையோருட யிந்திராணி
இமையாள் தலங்க ளமுதமூன்றினு நேடியெய்தா
திமையா சலத்தி இறைதன்னை இதயத்துன்னி. (7) 442
வேறு
மீண்டுதம் இருக்கை எய்தி விண்ணவர் குரவன் ஆன
மாண்டபீ தகன்முன் பெய்தி வந்தனை புரிந்து மங்குல்
ஆண்டவர் இன்றி அந்த காரத்தில் அடைந்த விண்ணும்
சேண்திகழ் பொருளும் யானும் என்றிவை செப்பி நின்று. (8) 443
பணிந்திடும் சதியை நோக்கி பகருவான் குரவன் மாதே
அணங்குறேல் மகவான் இங்ஙன் அணைந்திடப் புகல்தும் என்றோன்
மணங்கமழ் பொதிகைக் கீழ்சார் மருதினில் தவம்செய் கின்றான்
இணங்கிய தேவ ரோடும் எய்திநீ அவனைக் காண்பாய் (9) 444
ஏகுதி அமர ரோடும் இறைவளர் மருதின் சீர்த்தி
ஆகிய சிறப்புச் சொல்லில் மிகுதியாம் அதினின் உண்மை
தோகையே சிறிது ரைத்தும் சுவர்க்கநாட் டினிலும் மேலாம்
மேதினிச் சிவலோ கம்தான் வேண்டிய வரங்கள் நல்கும். (10) 445
திருவளர் கலைமான் ஞானச் செல்வியும் தவம்செய் கின்ற
அருமைய பதிஅ தன்பால் அளவிலார் பேறு பெற்றோர்
பொருநைசூழ்ந் திடுவ தாலே புண்ணியக் காசி யாகும்
தருஎனும் மருதக் காவே சம்புவாய்த் தழைக்கும் தானே. (11) 446
திவ்வியப் பதியைச் சூழ்ந்த தென்திருக் கங்கை நீரில்
பவ்வியம் இலர்க ளேனும் படிந்திடில் வேண்டும் பேறும்
அவ்வியம் அகற்றி ஞானத் தருள்வழி நடத்தும் பேறும்
நவ்வியம் கடவுள் பாதம் நணுகிடும் நலனும் எய்தும். (12) 447
குய்யத்தில் குய்யம் ஆகும் கோமளை யுடனே வாழும்
மெய்வளர் அதீதம் ஆன புடார்ச்சுன விமலன் தன்னை
எய்தியே பணிகின் றோர்கள் இருமையில் வேண்டும் பேறும்
உய்வகை அருளும் மேலைப் பதவியும் உறுவர் அன்றே. (13) 448
இந்தநன் மகிமை சேர்ந்த மூவகைச் சிறப்பும் எய்தி
உய்ந்தவர் எண்ணி லாதார் நீயும்அத் தலத்தை உற்றுச்
சுந்தரன் அருளி னாலே சுவர்க்கநா யகனைப் பெற்றே
இந்திர லோகம் மேவி இனிதுவீற் றிருப்பாய் என்றான். (14) 449
என்றதே சிகனைப் போற்றி விடைபெற்றுச் சசிஎன்றோதும்
மன்றலம் குழலாள் மேலை வானவ ருடன்எ ழுந்து
பொன்திகழ் தருவை நீங்கிப் பூவுல கதனில் எய்திக்
குன்றமார் இமயச் சார்பில் குணமுடன் எய்தும் ஏல்வை, (15) 450
கவல்கரந் திடவே அங்ஙன் கமலைவெண் கமலை மேவும்
தவளமா திவர்கள் தம்மைச் சசிஉளத் தெண்ணலோடும்
அவர்கள்அங் கடைந்து மானே அமரரோ டெய்தி இங்ஙன்
சவலம்உற் றாற லைந்த தன்மைஏ தெனவி னாவ, (16) 451
நடந்திடும் செய்கை எல்லாம் நவிற்றுவன் நாக லோக
மடந்தையர்க் கரசி போற்றி மலர்மகள் இருவர் தம்பால்
அடங்கலர்ச் செற்ற பாக சாதனர்க் கடுத்த துன்பும்
இடந்திகழ் குரவன் கூறும் இயற்கையும் இசைத்தாள் பின்னும், (17) 452
புடைமரு தெய்தி அங்ஙன் புனிதனைக் காண்பான் வேண்டி
நடையுறு தேவ ரோடு நணுகினன் நளினத் தெய்வ
மடநலீர் மூவி சேடம் மன்னிய பதியில் எம்மை
உடையவன் தனையும் காண உதவிசெய் திடுவீர் என்றாள் (18) 453
சொற்றஅப் படியே மாதர் சுந்தரி யுடன்இங் கெய்தி
நற்றவ மித்ர யோகி தவம்செயும் நதிஓ ரத்தில்
உற்றவர் தம்மைப் போற்ற உவந்திவர் தம்மை நோக்கி
அற்றவன் உரைப்பான் இங்ஙன் அவம்செயல் அறையும் என்ன, (19) 454
அருந்தவா தேவ லோகத் தயிராணி இவள்உன் பாதம்
திருந்தவே தொழஅ ணைந்தாள் என்றிரு மாதர் சொல்லக்
கருந்தடங் கண்ணி உன்றன் கணவன்இங் குற்றான் நீயும்
பெருந்தவம் புரியிற் காண்பாய் பேதைஇத் தீர்த்தம் பேணி, (20) 455
ஆடியே ஐமுகனை உள்கிப்பூ சனைஆற்றி
அன்பில் தானே
நீடுமா பதிவிரதம் நீபுரிவாய் எனச்செப்ப
நின்ற மாதும்
கூடிஇரு மாதருடன் முனிவனைத் தாழ்ந் தவ்விரதம்
குறித்துச் செய்யப்
பீடுதரும் விதிஉரைக்க வேண்டும்என மற்றதவைப்
பிதற்று மாதோ (21) 456
கன்னிமதி தனில் அமர பக்கமதில் பதினான்கு
காறு நோற்கும்
விரதம்இவை முதற்பக்கத் தட்டமியே
முதல வாக
மன்னியமூ ஏழ்வைகல் வதனமிவை வருடமதி
நாள்மூன் றொன்றாம்
இன்னபடி யேவகைஇவ் விரதவிதியால்
இசைக்கல் உற்றாம். (22) 457
திங்களெனும் கன்னிதனில் சொன்னதிதி முதல்நாளில்
சிறந்த வேழத்(து)
ஐங்கரனைப் பூசித்து வரம்பெற்றுச் சங்கற்பித்
தனிக்கை எய்திப்
பொங்கழலைப் பூசித்துப் புனிதநூ லோற்கியன்ற
புரிந்து மேலோர்
தங்களுட னேகஅச னம்பொசித்துச் சிவசரிதை
தன்னைக் கேட்டு, (23) 458
உமைபதியைத் தகட்டெழுதி உமைலிங்கக் கும்பதா
பனம்முன் னாக
அமையநிறு விப்பூசை ஆகமத்தால் இயற்றி அம்பொன்
வள்ளம் மீது
குமையுறுபஞ் சானனமும் கோதிலாப் பண்ணியமும்
குளம்பால் அன்னம்
அமையநெய் வேதனம்அ ருத்திஅடைக்காயும் அருக்கியமும்
அமைய நல்கி, (24) 459
சிவனைஉமை யவளைவழி பட்டுக்கன்னிகைநோற்ற
சிறந்த நூலால்
தவமிகுந்த இருபானோர் இழைமுடிந்த சூத்திரநாண்
தழைத்துக் காப்பு
நவமிகவே வலக்கைதனில் புருடருக்கு நாரியருக்
கிடக்கை நாடி
உவமையில ராத்தரித்துத் தருப்பைநுனிப் புல்அருந்தி
உறுக மாதோ (25) 460
மூவேழென் றுரைத்தநாள் முழுவதும்பால் பழம்பொசிக்கும்
முறைமை ஒன்று
தாவாஇத் தொகைப்பணிய ரந்தினம்ஒன் றாம்இவைகள்
தன்னை நீத்தா
காவாரும் பலம்பொசிக்க நலமாகும் வேறொன்றைக்
கருதல் ஆகா
ஓவாதே அரன்நாமம் சிந்தித்தே இவ்விரதம்
உஞற்ற வேண்டும் (26) 461
விரதமுடி வினும் முன்போல் விளைத்துத்தெம் பதிபூசை
விதியின் ஆற்றி
இரதலிங்க பூசனையும் இயற்றிப்பா ரன்மாற்றி
இடுக இந்தப்
பரவுதிரு விரதத்தைப் பார்ப்பதியும் பிருங்கிருடி
பான்மை யாலே
கருதிநா யகன்மேனி அகலாது பெறுதும் எனும்
காப்ப தானாள். (27) 462
கேதாரம் தனில்இந்த வகைஇயற்றிப் பெற்றாள்உன்
கேதம் தீர
ஆதாரம் தரும் இந்த வரியரவி தந்தன்ன
அதிகம் ஆன
மாதானந் தனில்இயற்ற வரும்மிக்க பலன்என்பார்
மாதே இந்தப்
போதாரும் சம்புவனத் திடை இயற்றிப் புனிதனொடும்
பொலிவாய் என்றான். (28) 463
சுந்தரி நீ இத்தலம்போற் றிடச்செய்யும் தவம் யாதோ
சுவர்க்கம் மேவும்
அந்தரரும் வெகுதவத்தால் அணுகுவர்இத் தலத்துண்மை
அறையல் பாற்றோ
முந்தையருந் தவம் இயற்றி முனிவர்களும் வதிகின்றார்
மூன்று பூவில்
இந்தவளங் கிடையாதால் இவ்விலிங்கம் பணிவோர்கள்
இறைஆ வாரே (29) 464
ஒருநாள்இத் தலம்வசிக்கில் சோடசதா னப்பலனை
உதவும் இந்தப்
பொருனாந திக்கணிலும் படிந்திடுவோர் பவம்போக்கிப்
புனிதம் நல்கும்
திருமாலும் திருமாதும் திசைமுகனும் கலைமாதும்
சிறந்த இந்த
மருதான வனமகலா மகிமைசொல முடியாதால்
மாதே என்றான். (30) 465
இவ்விடத்தில் இவ்விரதம் நின்கவலை ஒழித்தின்பம்
நல்கும் என்று
செவ்வியமா முனிகூறும் திடம் தேர்ந்து சசிவிரதம்
செய்தா ளாக
மைவளரும் கண்டர்தமை வானவர்கள் தனித்தனியே
வணங்க இங்ஙன்
எவ்வம்அற இலிங்கம்தா பித்தினிய பூசனைகள்
இயற்றி னாரே. (31) 466
முனிவர்உரைத் திடும்படியே சசிஇயற்றிப் பூசனையும்
இயற்றிப் பின்னும்
கனிவரும்இவ் விரதமொடு கட்டளைமுற் றிடஅங்ஙன்
கலந்து சேரும்
துனிவகற்றும் கன்னிபதி னான்கன்றி மதிதோறும்
சுதினம் ஆக
மனுமுறையா கம்இயற்ற அரனருளால் ஒருதினத்தில்
வானம் மீதில். (32) 467
சத்தம்முழங் கினதொன்று சசிநீசெய் தவத்தினுக்குத்
தழைந்தோம் என்று
நித்தனார் ஆகாய வாணியால் இந்திரனை
நீசேர்ந் தின்பம்
துய்த்திடுவாய் ஐயுறேல் எனமொழியத் துதித்திறும்பூ
தெய்தி மிக்க
சித்தம்மகிழ்ந் தயிராணி பணிந்தெழுந்து சிவன்அருளே
என்று தேறி, (33) 468
வான்மொழியால் அரன் அருளிச் செய்தவச னம்கேட்டு
மகிழ்ச்சி எய்தித்
தேன்மொழியால் தோத்திரம்செய் திறைஞ்சினாள் அன்பென்னும்
வலையில் சேரும்
மான்உறுகொன் றைக்கடவுள் சசிகாண அருச்சுனத்தில்
உதயம் ஆகித்
தான்அரிய கோடரத்தில் சிவலிங்க வடிவாகத்
தான்கண் டாளே. (34) 469
கண்டவுடன் பணிந்தெழுந்து கைதொழுது சிவனைஇங்கு
காண என்ன
மண்டுதவம் புரிந்தேன்நான் எனமகிழ்ந்து பரவசமாய்த்
துதிகள் வாயால்
விண்டுபுள கிதம்உறவே ஆனந்த மாரிஇரு
விழிகள் சேரப்
பண்டைவினை ஒழிந்தின்பப் பயன்பெற்றேன் புடைமருதப்
பரனே என்று, (35) 470
சுந்தரனை வழிபாடு செய்திடவேண் டுவனஎலாம்
துருவி யேற்றி
எந்தையைப்பூ சனைதொடங்கி இறைவிதியி னால்பரவி
இறைஞ்சித் தேவர்
சிந்தனைக்கும் எட்டாத சிவானந்தப் பேரொளியே
தெளிவார் உள்ளத்
தந்தம் இலா மறைப்பொருளே அகண்டபூ ரணவாழ்வே
அமலா என்று, (36) 471
வேறு
பணிந்தனள் சிவலிங் கத்தி னின்றொரு படிவம் கொண்டே
அணிந்தவெள் விடைமேல் ஏறி அந்தரம் அதனில் ஐயன்
இணங்கிய தேவி யோடும் இனிதெழுந் தருளி வானோர்
கணங்கள்மந் தார மாரி பொழிந்திட இயங்கள் ஆர்ப்ப. (37) 472
அந்தர மகளிர் ஆட ஆகர முழக்கம் கொண்டே
சுந்தர முனிவர் ஏத்தச் சுயம்பிர காசம் ஆக
இந்திரை காணாக் காட்சி இனிதளித் திறைஞ்சி நின்ற
பைத்தொடி அவளை நோக்கி வேண்டுவ பகர்தி என்றான். (38) 473
துதித்துநின் றிதனை வேண்டிச் சுந்தரி புகல்வாள் ஐய
நிதிப்பெரு வளம்உ லாவும் பொன்னகர்க் கிறையும் நீங்கா
மதிப்பெரு வானோர் தாமும் மலைந்திடச் செயித்தான் வானோர்
பதிக்கொரு பகைவன் யாவும் படைத்தவன் வரத்தி னாலே. (39) 474
தடிந்தனன் அவனை வானோர் தலைவனும் பிரமச் சாயை
தொடர்ந்திடக் குரவன் கூறும் சொற்படி இந்தக் காவில்
படர்ந்தனன் அந்தப் பாவம் தடிந்துபார்த் தருளி னாலே
திடம்தர வேணும் என்று சுந்தரி செப்பி அங்கண், (40) 475
வந்தனை புரிந்து தாழ்ந்தென் மனத்துயர் நீங்கும் வண்ணம்
இந்திரன் தன்னை ஈவாய் இறைவனே என்று போற்றச்
சுந்திரிக் கபயம் நல்கித் தும்பையோ டறுகு வேய்ந்த
சந்திர வேணி நாதன் இந்திரன் தன்னைக் கூவா (41) 476
ஒப்பருந் தவத்தோன் எங்கோன் உதவிய வசனம் கேட்டு
மெய்ப்படு விரவி னொல்லே வெள்ளநீர்ப் பள்ளம் கண்ட
அப்படி ஓடித் தாழ்ந்தே அன்புளம் ததும்ப நின்று
செப்புறழ் தனத்தி பாகச் செல்வனை விடைமேல் கண்டான், (42) 477
அப்பணி அரனை வேந்தன் அன்பொரு வடிவம் ஆக
இப்படி தன்னில் கால் அற் றிடுமரம் என்ன வீழ்ந்து
முப்புரம் செற்றார் தம்மைப் பணிந்தனன் முகம லர்ந்து
வைப்பிலான் கண்ட தொத்து மனம்மெய்வாக் கொன்றி மன்னி, (43) 478
வணங்கி அஞ் சலித்து நின்று வாய்புதைத் தமல போற்றி
குணம்கடந் தருள்மெஞ் ஞானக் கோலமே போற்றி மேரு
இணங்கிய சிலையாய் போற்றி இறைவனே போற்றி ஏல
மணங்கமழ் குழலி பாக மணாளனே போற்றி போற்றி (44) 479
காலனை உதைத்தாய் அன்று கான்முளை தன்னைக் காக்க
வேலனைப் பெற்றாய் சூரர் வீறடங் கிடவே வெல்ல
ஞாலம தினனல் தீரப் புரத்தினை நகைத்துச் செற்றாய்
தாலமா மசுரைக் காய்ந்து தாலந்தற் காத்தாய் போற்றி (45) 480
காரணா சரணம் வானோர் கர்த்தனே சரணம் கங்கா
தாரணா சரணம் திங்கள் சடையினில் நிலாஅ ணிந்த
பூரணா சரணம் அன்பர் புண்ணிய சரணம் பூண்ட
ஆரணா சரணம் வேதத் தருச்சுன வாணா என்று (46) 481
துதித்துநின் றிந்தி சாதி பண்டைநாள் அமுதம் துய்க்கும்
மதித்தொரு கடல்க லக்க வாசுகி மந்தி ரத்தால்
விதித்திடும் போதில் நஞ்சம் அமரமேல் வெள்ளம் போலக்
கொதித்திடக் கண்ட விண்ணோர் குலைகுலைந் துனைஅ டைந்தே (47) 482
அஞ்சினம் என்றார் அப்போ தபயம்தந் தவரைக் காத்து
நஞ்சினை உவந்து கண்டத் தணிந்திடு நலம்பொலிந்த
வஞ்சனைக் கொன்ற பாவம் மாற்றியே யாங்கள் உய்யத்
தஞ்சம்நீ சரணம் என்றான் தருவுறை மகவான் தானே. (48) 483
எனத்துதித் திறைஞ்சி நின்ற இந்திரன் இந்தி ராணி
தனைத்திருக் கண்ணால் நோக்கிச் சங்கரன் அருளிச் செய்வான்
வினைத்துயர் தீர்ந்த திங்ஙன் இத்தல விசேட மான
அனைத்தையும் புகல்வாம் என்றான் அனைத்துமாய் நின்ற அண்ணல்(49) 484
வேறு
எண்ணிலாத தோர்கிரேத முதல்யுகம் நான்கும் இவை
அண்ணியதோர் சதுர்யுகம் அவை இரண்டா யிரம்கொண்டு
நண்ணும்யுகம் நான்முகனுக் கொருநாளாம் நளினமலர்ப்
புண்ணியனோர் கோடிஅழிந் திடுங்காலம் புவிகேள்வன், (50) 485
தனக்களந்த நாள் ஒன்றாம் அதுநிற்கச் சதுமுகனும்
மனத்தொகையில் அளவுபடா மாயனும்வா னவர்க்கரசாம்
இனத்தொகையில் பத்திலக்கத் தெண்பதினா யிரவர்களும்
வினைத்தொகையால் இவ்விலிங்கம் தனைப்பரவி வேண்டும்வரம், (51) 486
பெற்றார்கள் நீயும்பூ சனைசெய்து வரம்பெறுவாய்
அற்றால்இத் தீர்த்ததலம் மூர்த்திஅநா தியதாக
உற்றதால் இவ்விலிங்கம் தனக்குவமை உலகத்தில்
மற்றுவே றில்லைஇந்த வையகத்திற் சிவத்தலந்தான், (52) 487
ஆயிரத்தெட் டெனஉரைப்பர் அவ்விலிங்கத் தெரிசனத்தின்
தூயபலன் ஓர்இரவு தெரிசிக்கும் துணையாகும்
மாயிருஞா லம்தன்னில் மற்றும்உள தலம்தீர்த்தம்
போயாடி வதிபவர்இப் புனிதநதித் தலந்தன்னில், (53) 488
ஓர்காலம் மூழ்குபலன் ஓர்பொழுது வதிந்தபலன்
தேர்வார்க்கப் படியாகும் யாதென்னில் சித்தி புரம்
பார்மீதில் சிவலோகம் பத்திருநான் கினில்முதலாம்
சீர்சால்இத் தலம்உறைவோர் சீவன்முத்தர் இத்தலத்தில் (54) 489
மரம்முதல மணவரையும் சிவலிங்க வடிவாம்இத்
தரையில்ஒரு பணிதருமம் ஒன்றனந்த மாய்ப்பொலியும்
விரையார்கற் பகநாடவேதம்நம துருஎன்னும்
மருதிதனின் மகிமைஇனும் மகிழ்ந்துகேள் எனவகுக்கும் (55) 490
காரணன் மருதிதன் படைக திக்கிட
மாரணங்கொடு களபதன மதனவளர்
ஏர்பெறு சாய்கைதோ லிலைகள் சத்தமா
சீர்பெறு கோடிமந் திரங்கள் சேகெலாம் (56) 491
மந்திரம் புவனம்பூ தத்துவங்கள் காய்
முந்திய தளிரதன் ஓசை முச்சியே
தந்திர உச்சியாம் வேர்கள் சத்தமே
இந்தவாக் குதவிய நிழவிரக்கமே (57) 492
புடையது பிரணவம் புனித இத்தரு
விடையினின் றவத்தினால் உன்னை எய்திய
படுபழி அகன்றிடப் பகர்தும் பாவங்கள்
உடைபட நான்குகூ றாக உன்னியே (58) 493
மண்மரம் மாதர்நீர் மற்றும் நால்வர்பால்
திண்ணிய புவிக்குவா மரத்தி னில்பிசின்
பண்மொழி யார்தம்மேல் பூப்புப் பாணியில்
தண்நுரை யாகவே சார்க ஏவினார். (59) 494
நால்வரும் இப்பழி நாங்கள் எய்திடும்
சால்பெனில் பெறுபலன் தருக என்றனர்
ஆல்வதங் களுக்கமையும் நல்வரம் மேலவர்
மேலவன் ஈந்தனன் விதியின் என்பவே (60) 495
மாதர்க்குறு கருஉற்பவ வரையும்கண வன்தோள்
நீதத்துறு முறைசேருக நீருக்கிறை வையினாற்
சீதத்துட னேஊறுக சிதைபட்டிடு மானுக்
கோதப்பல தழைவெய்துக வடுஉற்றிடும் புவிக்கே (61) 496
அதனால்அஃ தமைவெய்திட அருள்செய்துபின் அமலன்
சதவேள்விய எனநோக்கி உனைச்சார்ந்திரும் சாயை
நிதம்ஆகிய மருதில்தவம் நீசெய்தத னாலும்
சுதனாம்உனை நோக்கும் செயலாலும்துகள் அற்றே (62) 497
நீங்கும் பிரமச் சாயை தனக்கின் னிலைசெய்தோம்
ஓங்கும் வரங்கள் என்றலும் உயர்இந் திரன்வணங்கி
ஈங்குற்றதோர் தீர்த்தம்தனக் கேஇந்திர மோட்சம்
பாங்குற்றஇந் நகர்இந்திர புரியாகவும் பணிப்பாய் (63) 498
வரனின் பெயர் புனிதேசுவரன் எனவும்மரு திந்திரத்
தருவாகவும் பணிப்பாய்தரை எங்கும்புகழ்ந்தென்றும்
பரவத்திரு அருள்செய்குவை எனச்சாய்ந்தருள் பரமன்
மருவிக்கிரு பையினாய்மிக மகிழ்ந்தீந்தனம் என்றான். (64) 499
தினம்பூசனை செய்யும்பலன் திகழ்சித்திரை விடுவில்
மனம்பூருவத்துடன் போற்றிட வருடப்பலன் நல்கும்
அனம் சூழ்நதி நீராடிஇவ் வரனைப் பணிந் தரசே
கனம் சூழ்குழல் அயிராணி யுடன் காவலர் சூழ (65) 500
வானோருடன் விசும்பெய்திஅம் மந்தார நிழல்கீழ்
ஏனோர்பணிந் தரியாசனம் இடமீதிறை கொண்டே
தானாள்குவை எனவிண்ணவர் தலைவற்கருள் செய்தே
மேனாடி மறைந்தான்அருள் விடையோன்குறி யிடையே (66) 501
துகள்நீங்கிடு மணியேஎனத் தோன்றிச் சுரசிங்கம்
திகழ்வுற்ற சுரச்சாயை துறந்தா றுதிசெய்தான்
அகம்நெக்கிட நதி ஆடினன் அமலன்தனை அன்பால்
தகநக்கலர் திருமஞ்சனம் சார்ந்தங்கனி அமுதம், (67) 502
மற்றும்உள உபசாரநல் வகைசெய்து வணங்கிப்
பற்றுந்திட வேபூசனை பரிவிற்செய்து பரனைக்
கற்றன்புறும் வகையால்மரு தக்காஉறை கடலே
சொற்றந்தரு விடையாய் மதிக்கோவேசரண் என்றான் (68) 503
விண்ணவர் தலைவா போற்றி மித்திரர் பரவ நின்ற
புண்ணிய முதலே போற்றி புரங்கள்மூன் றெரித்தாய் போற்றி
துண்ணெனக் கயமா வீழத் தொலைத்ததன் தோலை வாங்கித்
திண்ணிய கலையாய்ப் போர்த்த சிவக்கொழுந் தீசா போற்றி (69) 504
விருத்திர பிரமகத்தி எனைவிடுத் தேகச் செய்த
அருத்தனே போற்றி இந்த அருச்சுனப்புடையில் தோன்றித்
திருத்தமாய் உமையா ளோடும் செங்கண்மால் விடையில் ஏறிக்
கருத்தனான் காண வானில் காட்சிதந் தளித்தாய் போற்றி (70) 505
என்னா இறைஞ்சி மிகமகிழ் வெய்தி இந்திரனும்
இமையோரும் இம்மருதில்வாழ்
மின்னாரும் வேணிதனில் மதிசூடும் நாயகனை
விடைபெற்று விண்ணுலகத்தில்
பொன்னார்வி மானமிசை ஏறிப்பொ லிந்தினிது
பொன்தருவை எய்தி அங்கண்
நன்னாக மேதினிஉ ளார்பரவ முறைசெய்து
பேரின்பம் நண்ணி னானே. (71) 506
அன்றுதொட் டாதிஅருச் சுனநாதன் அருளிய
படியந்த விறையோன்
ஒன்றிய மேட விடுத்தொறு மெய்தி
உமையொரு பாகனை வணங்கக்
கொன்றைவைத் தவனும் கோமதி யுடனே
குடிஞையாம் மந்திர மோட்சத்(து)
என்றும்அவ் விடைமேல் காட்சிதந் தருள
இருந்தன சராசர மெல்லாம் (72) 507
- இந்திரன் பழிதீர்த்த படலம் முற்றும்
4. சீதரப் படலம்
விடையவன் அருளி னாலே விண்ணவர் தலைவன் பாவம்
புடைஅருச் சுனத்தில் போக்கி நெறிதந்த புகழ்ஈ தைய
நெடியமாற் கருள்பு ரிந்து நிறைமரு தினில்மற் றோனால்
கடகரி தன்னைக் காத்த கதையினைக் கழறல் உற்றாம். (1) 508
அம்முனி அருளிச் செய்வான் அருந்தவர்க் காதி நாளில்
தம்முனோர் சகரர் உய்யப் பகீரதன் தவத்தி னுக்காய்
நம்மைஆ ளுடைய நாதன் நல்கிய தெய்வக் கங்கைச்
சும்மையங் குடிஞை மேவுந் துவாரகை மூலந் தன்னில், (2) 509
சுதனந்த மாயன் அங்கோர் லிங்கம்தா பித்துத் தூய்நீர்
சதமலர் சுகந்தம் சாந்தம் சருவினாற் பூசை செய்தான்
விதம்பெறச் சாற்றும் போது கழிக்கநீர் வழிமி திந்த
பதம்தனில் புலிக்கால் பெற்ற பண்ணவ னான மேலோன். (3) 510
கண்டனன் தானும் பூசை செய்திடக் கருதி எய்தித்
தொண்டுசெய் பவரை நோக்கி துவாரகை தனில்தூ யோனை
விண்டுபூ சித்த போது வெள்ளத்தில் வருவ தாகும்
மண்டும்அப் பூவை வாரி வருகெனப் பணித்தான் மன்னோ. (4) 511
பணித்தலும் அந்தச் சீடன் பகருவான் பணிந்து நின்று
பிணித்தலில் வியாக்ர பாதப் பெரியமா முனிவன் ஈன்ற
குணத்துப மனிய மேலோய் கொடுவரிற் குற்ற மாகும்
மணித்தலை அரவப் பாயல் மாயன்பூ சித்த மால்யம் (5) 512
இந்தநன் மலர்கள் என்றார் இவன்சிவ தீக்கை இன்றி
கந்தநாண் மலரால் பூசை செய்தது களிக்க லாகா
உந்துபூ என்றான் தொண்டர் உதவினார் அதனை மாயோன்
புந்தியால் உணர்ந்து நொந்து முனிவன்பால் போந்தான் மன்னோ (6) 513
வந்தனை செய்து நின்று வழுத்தினான் அவனை வந்த
சிந்தையா தெனவி னாவச் சிவகுரு வாகி இப்போ
எந்தைஎற் குபதே சம்செய் தருள்என இறைஞ்ச லோடும்
உந்திபூத் தவனுக் கன்பாய் உபமனி உபதே சித்தான். (7) 514
பூசனை புரியும் வாறும் புகன்றனன் புந்தி யார
நேசமோ டுவந்து பெற்று நீலமா மேனி அண்ணல்
தேசிகற் போற்றிப் பின்பு சிந்தையின் ஆர்வத் தாலே
ஆசிலாக் கிரிகை தன்னால் மனுவினால் அரற்பூ சித்து, (8) 515
வாசமாய்ச் சிலநாள் வைகி மன்னிய கங்கை சூழும்
காசிவிட் டகன்று மாயை கடந்துகா உயர்ந்து சால்பாய்
மாசிலாத் துவரை யெய்தி மாயவன் மதுரை தன்னில்
ஈசனைப் பூசித் தேத்தி இருநிலம் புரக்கும் நாளில், (9) 516
கிட்டின தீர்த்தம் தன்னில் கிட்டிண மதுரைக் கோயில்
நட்டனை நாள்கள் தோறும் பூசிக்கும் நலத் தினாலே
இட்டமாய் ஒருநாள் தன்னில் இயற்றுபூ சனைக்கு வந்தே
சுட்டவெண் நீறு பூசும் தோன்றல் முன் தோன்றினானே (10) 517
பூசனை உவந்த வள்ளல் புவனம்உண் டோனை நோக்கி
ஆசிலாய் நினக்கு வேண்டும் வரம்எவன் அளிப்ப என்னக்
கேசவன் பணிந்து நிர்த்த தெரிசனம் கிடைக்க வேண்டும்
மாசுடல் தோற்றம் நீங்கி வரதநிற் பணிய வேண்டும் (11) 518
என்னவே வேண்டும் மாயோற் கிறையவன் அருளிச் செய்வான்
முன்னிய பெறுதி நம்பால் முதன்மையாம் தொண்ட நீயே
மன்னிநாம் வதியும் தென்பால் மருதினில் வருதி மற்றைத்
தென்னிலப் பொதியச் சார்பில் தென்கயி லாயம் ஆகும். (12) 519
அன்னகர் சீவன் முத்தி தரும்அலால் அதனில் மாய்வோர்
பொன்னடி எய்தத் தார கப்பொருள் உபதே சிப்போம்
தன்னிகர் சாரூபத்தை எய்திச்சா யுச்யம் செய்வார்
மன்னிய செனனம் நீங்கும் வந்தவண் வதிகு வோர்க்கே. (13) 520
ஆதலால் சிரீத ராநீ அவ்விடத் தெய்தில் உன்தன்
காதலின் படியே நிர்த்தக் காட்சிதந் தருள்வோம் என்று
வேதஆ கமங்கட் கெட்டா மெய்ப்பொருள் ஆகி நின்ற
சோதிஈ துணர்த்தி மாயோற் கின்னமும் சொல்லும் மாதோ (14) 521
வெண்ணாவல் உவந்து வாழும் மிக்கநந் தனத்தில் எய்தி
கண்ணால்நற் காட்சி கண்டு களிப்புடன் கவுரி யான
பெண்ணாவ லுடனே சேரும் பெரியநம் குறியைப் பேணித்
தண்ணார்பூங் கமலச் செல்வி தன்னுடன் சாரும் நாளில், (15) 522
ஆனைஒன் றெழுந்து வந்தே அறலினை அணையும் அங்ஙன்
மீனுலாம் கயத்தில் வாழும் வெங்கராம் ஓடி வந்து
தானம தொழுகும் வேழம் தனைப்பிடித் திடஅத் தந்தி
ஊனம்அ தெய்தா ஆதி மூலம்என் றோலம் செய்யும், (16) 523
அப்பொழு ததனைக் காக்க அருள்உனக் களிப்போம் என்று
செப்பியே மறைந்தான் எங்கோன் திருவளர் மார்பன் அந்தம்
ஒப்பிலா மருதம் எய்தி உடையநா யகனைப் போற்றித்
துப்புறழ் சடையோன் தன்னைத் தோத்திரம் செய்கின் றானால் (17) 524
புடைமரு தரனே போற்றி புண்ணியப் பொருளே போற்றி
விடைஉயர்த் தவனே போற்றி விண்ணவர் தலைவா போற்றி
மடல்அவிழ் கொன்றை வேய்ந்த மதிச்சடை முடியாய் போற்றி
கடல்விடம் உண்ட நாதா காரணா போற்றி போற்றி (18) 525
இப்படித் துதிப்ப முன்நாள் அருளிய படியே எங்கோன்
முப்படி பரவும் தெய்வ முத்திஅம் பலத்தில் தானே
மைப்படி உருவன் காண வழங்கினன் நடன சேவை
கைப்படி கனிபோல் கண்டு கருணையங்கடலில் ஆழ்ந்தேன், (19) 526
துண்டவெண் பிறையும் பாம்பும் தும்பையும் தொண்டர் சாத்தும்
இண்டையும் கங்கை யாறும் இதழியும் இணங்கச் சூடி
அண்டம்மூ தண்டம் ஆட ஆடிய அழகா போற்றி
கொண்டலை நிகர்த்த கூந்தற் கோமளை பாகா போற்றி (20) 527
அண்டர்நா யகனே போற்றி எனப்பணிந் தகிலம் உண்ட
விண்டுமெய் புளகம் உற்றே மெய்மயிர் சிலிர்ப்ப வேர்வை
கொண்டுநாத் தழுத ழுப்பக் குழைந்துகை குவித்து நாதன்
புண்டரி கத்தாள் போற்றி போர்விடைப் பாகா என்றே, (21) 528
துதித்தடி பணிந்து போற்றிச் சுந்தரன் தனைப்பூ சிக்க
நதிப்புனல் சாந்தம் வில்வம் நறுமலர் கனிவர்க் கம்பால்
மதுத்ததி வருக்கம் ஆதி வகைவகை இயற்றி மல்க
விதிப்படி அமைத்துப் போற்றி வீற்றினி திருக்கும் வேளை, (22) 529
தடம் அதில் முதலை வந்த தன்மையும் தந்தி அந்த
மடுவினில் வந்த வாறும் வன்கராம் பிடிக்கக் கூவும்
கடகரிக் களித்த வாறும் இடங்கரைக் காய்ந்த வாறும்
நெடியமால் நின்ற வாறும் நிகழ்த்தென முனிநி கழ்த்தும். (23) 530
பூதிநா யகனை நித்தம் பூசித்துப் புடவி பூத்த
வேதன்தன் உலகும் வெள்ளி வெற்பும்விண் ணவர்கள் வாழும்
பீதமார் உலகும் வைகுண் டப்பெரு நகரும் எல்லாம்
ஈதெனக் கண்டு மாயோன் இன்புற இருக்கும் ஏல்வை, (24) 531
தேவுல கினில்வாழ் வாம தேவமா முனிவன் என்போன்
மாவெலி இடத்தில் வந்து மூஅடி மண்இ ரந்த
காவலன் பாதம் சேரக் கருதியே காசி என்னும்
தாவிலா வளங்கொள் மூதூர் தன்னிடத் தெய்தி அங்ஙன் (25) 532
திரிபத கையினில் மேவித் திசைமுகன் தன்னை நோக்கி
வரம்அளித் திடுவாய் என்று தவம்செய மலரோன் தோன்றிப்
பரவிய முனியை நோக்கிப் பலபகல் தவம்செய் கின்றாய்
பெரிதுநாம் உவந்தோம் வேண்டும் வரம்எவன் பேசு கென்றான். (26) 533
மாமுனி வாம தேவன் மாயவன் மலர்த்தாள் சேரப்
பூமனே அருள வேண்டும் எனஅவன் புகலும் போதில்
தாமரைக் கிழவன் சாற்றும் தக்கண காசி என்னும்
மாமதி தவழும் சோலை ஆம்பிர வனத்தில் வந்து, (27) 534
தென்திசைக் கங்கை ஆடித் திகழ்புடை மருதில் எய்திக்
கொன்றைவே ணியனைப் போற்றிக் கோதிலாத் தவம்செய் என்ன
மன்றலார் வனச வேதா வாய்மலர்ந் தருளிப் போனான்
நன்றெனத் தாரு நாட்டு நல்தவ முனிவன் தானே, (28) 535
ஆம்பிர வனத்தில் எய்தி அனத்தினான் உரைத்த வாறே
தாம்பிர வன்னி ஆடிச் சாய்ந்தநா யகனைப் போற்றி
மாம்பல நறுந்தே னூறும் கரையில்வன் மீகத் துள்ளே
பாம்பணைத் துயிலும் மாயன் பதம்பெற இருந்து நோற்றான். (29) 536
ஒப்பிலான் தவம்செய் காலை உற்றகந் தருவர் தம்மில்
செப்பிலா ஊவன் என்போன் திருநதி ஆட வந்து
விப்பிரன் தவம்செய் புற்றில் ஏறியே விளையாட் டெய்தி
அப்பினில் குதித்து மீண்டும் அப்படி யாவூ வன்தான் (30) 537
ஆடிடப் பதநீர் சிந்தி அருந்தவன் சிரசில் வீழச்
சாடினான் தன்னை நோக்கித் தவத்தினுக் கூறு செய்த
கேடனே எனமொ ழிந்தான் கேதுறு முதலை யாய்நீர்
நாடியே கிடப்பாய் என்று கோபத்தால் யோக நாதன், (31) 538
சவித்தலும் அறிவு குன்றி இடங்கராய்ச் சார்ந்தான் பின்பு
பவித்திர வாம தேவன் தவத்தினுக் கிரங்கிப் பார்மேல்
அவித்தன்பா சத்தன் காணத் தோன்றினான் அவனி உண்டோன்
குவித்தகை முனியை நோக்கி வேட்கையா தென்று கூற, (32) 539
நின்பதம் அடைய வேண்டும் என்றனன் நெடியோன் இந்த
இன்பமூன் றீசன் பாகத் திருக்கின்றோம் இவன்தாழ் சோதி
அன்பனே என்று நல்கி வைகுந்தம் அடைந்தான் தேவர்
பொன்பதி முனிவன் தானும் பொற்பதம் பொருந்தி னானே. (33) 540
அந்தரன் முனிவன் பெற்றிக் கதைஇது ஆகூழ் என்றான்
வந்தொரு முதலை யான வண்ணமும் சொன்னோம் வண்மை
இந்திர சும்ம ராசன் இபராசன் ஆகி ஆம்ப்ரச்
சந்தமார் காவில் வந்து சாபம்நீங் கியதும் சொல்வாம். (34) 541
இந்திரை வாழும் மார்பன் இருநிலத் தெதிர்ஒன் றில்லான்
இந்திர வியைநேர் கண்ணான் எழில்சிட்டர் துட்டர் தம்பால்
இந்திரன் முடித கர்த்த இறையவன் வங்கி சேசன்
இந்திர சும்மன் என்போன் இப்புவி புரக்கும் ஏந்தல், (35) 542
மனுமுறை நடத்தும் செங்கோல் வழுதிமன் னுயிரை எல்லாம்
தனதுயிர் போலக் காக்கும் தன்மையான் தரும சீலன்
பனுவலின் துறைகள் ஆய்ந்தோன் பருவத்தின் மழைநேர் கையான்
இனியன்யா வர்க்கும் சாலி மணப்படை எய்தும் வேந்தன், (36) 543
செவ்விய னேனும் நூலோர் சிவன்அன்பர் தம்மைப் போற்றான்
பைவளர் அரவப் பாயர் பரனைப்பூ சிப்பான் ஆக
எவ்வெவர் வருகி லேனும் பூசனை அமைய என்றே
அவ்வவர் தமக்கு ரைத்தே அமைவுறு முகமன் மற்றும், (37) 544
வேண்டிய செய்கை யாவும் விசாரித்து விடுமின் என்ன
ஈண்டுமந் திரர்கட் கோதி இச்சையில் இருப்பான் தன்னைத்
தூண்டிமன் செயலை நாடிக் குறுமுனி சோதிப் பான்போல்
ஆண்டுவந் தனன்வ ணங்கி ஆசனம் ஈந்த மைச்சர், (38) 545
முகமன்நன் குரைத்தார் வேந்தன் வந்திலான் எனமு னிந்தான்
தகவுடன் முனியைப் போற்றிச் சாற்றுவார் வழுதி தம்பால்
புகல்கின்ற வகைஉ ரைத்துப் பூசிக்கும் அமையம் ஈதால்
வெகுளியாம் அவன்பால் செப்பில் என்றனர் முனிவெ குண்டான், (39) 546
சிவமுனி அழைக்கும் செய்தி சாற்றிடில் செழியன் சீறும்
தவமுனி வசனம் தப்பில் சபித்திடும் தன்னைத் தப்பும்
உவமையில் விதம்எவ் வாறென் றொருதலை துணிந்து மன்னன்
நவமலர்ப் பாதம் போற்றி முனிவந்த செயல்ந வின்றார். (40) 547
குடமுனி என்ப தேரான் தாபதர் குறுகி னாரேல்
இடும்உப சாரம் என்றே உரைத்திட எய்திச் சொல்லும்
கடனிலை எனமு னிந்தான் முனிவனும் கறுத்தான் என்றால்
படும்வகை அறியான் செவ்வி இலைஎனப் பகரும் என்றான். (41) 548
மன்னனால் முனிவற் காவ தென்என்று மதிவல் லோர்கள்
பன்னகம் பூண்ட கோலப் பரன்அன்பர் தம்மால் ஆகும்
என்னவும் முனியில் எல்லாம் இடரதாம் இவைஎண் ணாத
தென்னனுக் குரைக்கில் தீதாம் செயல்வினை தெரிவோம் என்று, (42) 549
நிகழ்கின்ற பருவம் நொந்து நின்றனர் முன்வெ குண்டான்
நகமுனி வெகுளி கேட்டு நணுகினான் மன்னன் தன்னை
அகலிடம் விட்டுக் கானில் ஆனைஆ கெனச்ச பித்தான்
சகம்எலாம் புரக்கும் கோனும் நடுக்குற்றுச் சலனம் எய்தா, (43) 550
முனிபதம் பணிந்து நின்று பழிச்சிமுன் னவனே இந்த
துனிவினை அகற்றி நான்செய் துன்பிழை பொறுத்துத் துய்ய
கனிவிலேன் ஏற்ற சாபம் கழிந்திடக் கருணை செய்கென்
றினியநல் வசனம் கூற இரங்கியே முனிஇ சைக்கும். (44) 551
மதத்தினால் கரியே ஆகி மனுமுறை மையினால் நீசெய்
விதத்தினால் மதிக்கே டின்றி வனங்களில் மேவிச் சார்வாய்
இதத்தினால் பதவி தன்னை எய்துவாய் என்றான் மேலோர்
அகத்திடில் புகல்ஒன் றில்லை யாவர்க்கும் கருதும் காலே. (45) 552
ஆண்டுநூ றகன்ற காலை ஆம்பிர வனத்தில் நீயே
ஈண்டுவாய் வழிபா டாற்ற இருந்தீர்த்தம் ஆடப் போவாய்
நீண்டகார் முதலை உன்னைப் பிடித்திட நீஅந் நேரம்
ஆண்டகா ரணனைக் கூவ அருச்சுனன் அருளி னாலே, (46) 553
கேசவன் ஓடி வந்து கேதம்அ தகற்றும் சாப
மோசனம் ஆகும் என்று முனிவரன் உரைத்துப் போனான்
காசினி காக்கும் மன்னன் அப்படி கரியாய்க் கானில்
பாசடை பறித்துப் போற்றிப் பலபகல் திரியும் நாளில், (47) 554
சிந்துர வனத்தைப் போற்றித் தென்னரு கெய்தி அங்ஙன்
சிந்துநீ ராடும் போதில் திண்கராம் பிடிக்கச் சீறிச்
சிந்துர வேழம் ஆதி மூலம்என் றோலம் செய்யா
சிந்தையில் உணர்ந்து வேதச் சிரப்பொருள் அந்த வேளை, (48) 555
பொன்மலர் கொண்டு தன்னைப் போற்றுபொற் புயத்து மாயோன்
தன்னைஉள் கிடவே ஓடிச் சார்ந்தரன் பதம்ப ணிந்தே
பன்னகா பரணா நான்செய் பணிஎவன் பகர்தி என்ன
மன்னும்இவ் வாவி தன்னில் வந்ததோர் வார ணம்தான் (49) 556
நீர்படிந் திடும்அவ் வேளை அம்மடு நிலவு கின்ற
சூர்உடல் கராம்எ ழுந்து தும்பிதன் கையைப் பற்றிப்
பேரிடர்த் துயரம் செய்யப் பேதுறா அதனை இன்னே
சாரஇக் கணத்தில் சென்று தந்தியைக் காப்பாய் என்றான். (50) 557
மாயவன் கணத்தில் போந்து மடுவினில் எய்தி வன்மீன்
மாயவே சக்க ரத்தை வலம்திரித் தெறிந்து மாற்றி
மாய்வுறா யானை இன்னல் மருதநா யகன்வ ரத்தால்
மாயமா என்றோன் கைமத் தகத்தில்வைத் தபயம் என்றான். (51) 558
விடையின்மேல் உமையா ளோடும் விளங்கியே மருத வாணன்
புடைஎழுந் தருளிச் செய்து போதகம் தனைப்பு ரந்த
மடல்அவிழ் துளவி னாற்கும் வாரணன் தனக்கும் அன்பு
கடல்என ஈந்தான் தேவர் கடவுளர் யாரும் போற்ற (52) 559
அப்பொழு தரியை நோக்கி அடுகராம் தன்னை மாய்த்துச்
செப்பரும் யானை காத்த செயலினால் யானை காத்த
மெய்ப்பொருள் என்று ரைத்தார் விண்ணவர் மலரின் மாரி
துப்புறத் தூவி ஆர்த்தார் துந்துமி ஐந்தும் ஆர்ப்ப (53) 560
ஆனையின் வடிவம் நீங்கி அரசனும் அரன்தாள் பெற்றான்
மோனமா முனிவர் யாரும் முதலையை அட்ட தாலே
தானம தடுகை என்று சாற்றினார் தண்து ழாயோன்
வானவன் தன்னைப் போற்றி மலரடி வணங்கி னானே. (54) 561
மருதநா யகன்மா யன்பால் மகிழ்ந்திந்த வாவி என்றும்
தருகய மோக்க தீர்த்தம் சார்ந்தவர் இடுக்கண் தீர்க்கும்
மருவினோர் பவங்கள் மாற்றும் என்றுரை செய்து மார்பில்
திருவளர் மார்பன் தன்னைத் தென்னரு கிருத்தி னானே. (55) 562
மாதவன் மகிழ்ந்து முந்தை வாக்குரைப் படியே இந்த
நீதமும் தந்தாய் என்று நிருத்தனைப் பூசித் தன்பாய்ப்
பாதங்கள் பணிந்து போற்றிப் பங்கய மாதி னோடும்
ஆதர வுடனேஅங்ஙன் ஆலயம் அமைத்தி ருந்தான். (56) 563
தெய்வஇத் தீர்த்தம்ஆடு கெந்திரு முதலை செய்த
எவ்வம்அ தகன்ற துண்டோ எனவினா வியபோ தற்கிங்
குய்திறன் அருளிச் செய்தார் உம்பல்வேந் தவனி தன்னில்
மைநிற முதலை தாம்ப்ர நதிவழி வந்து சேர்ந்து, (57) 564
செக்கர்மெய் சாய்ந்தோன் தன்னைச் சிறிது முன் புண்ணி யத்தால்
எக்கரின் உணர்ந்த போதில் இறையவன் அருளி னாலே
சக்கர வாணன் மூன்றீ சுரனுடன் சார்ந்த ளித்துத்
தக்கபா சறையிற் காக்க உய்ந்தெனச் சாற்றி னாரே. (58) 565
சொற்றஇத் தலத்தில் செய்த தோடம்இங் ஙனம்தீ ராதால்
மற்றொரு தலத்தில் தீர்க்கும் மற்றொரு தலத்தில் செய்த
பற்றுறு பாவம் இந்தப் பதியினில் தீரும் என்று
கற்றவர் முன்பு ரைத்த காரணம் இதுவாம் அன்றே. (59) 566
-சீதரப் படலம் முற்றும்-
5. ஆதிமனுப் படலம்
மருத்துவ மருத நாயகன் அருளால்
மாயவன் முதலையை மாய்த்து
வெருக்கொள்வா ரணத்தைக் காத்திடும் செயலை
விரித்தனம் மேல் ஒரு மனுவின்
அருத்திசேர் மருமான் அயோத்தியம் பதியான்
ஆதிமா மனுஎனும் அரசன்
திருத்தகும் இந்தத் தலத்தினில் எய்திச்
சிவன்அருள் பெற்றதைத் தெரிப்பாம். (1) 567
முனிவரர் கேட்பச் சூதமா முனிவன்
மொழிகுவான் முன்ஒரு யுகத்தில்
தனிஇரா தந்த்ர கற்பகா லத்தில்
தாமரை மலரினான் தனது
புனிதமாம் வலது புயத்தினில் பிறந்த
புங்கவன் எனும்சுவா யம்பு
மனுஎனும் தலைவன் வரத்தினால் உதித்த
மைந்தனாம் மகபதி நிகர்வோன், (2) 568
பூ மகன் படைத்த புவிபுரந் திடுவோன்
புனிதவத் திரன்எனும் விரத
மாமனு இவன்சேய் அங்கிதீ ரக்கோ
மன்னுமே தாதிமென் பவுட்டுச்
சேமசோ திட்டு மனுத்திகழ் துதிமான்
திருமனு வவ்வியன் சவனக்
கோமனு எழுவர் இவர்எழு வேலைக்
குவலயம் புரந்திடும் குரிசில் (3) 569
இவரில்முன் வந்த வங்கிதீ ரன்தான்
நுவல்கடற் புவிக்கிறை இவன்சேய்த்
தவம்திகழ் பரதன் தழைத்தகிம்புருடன்
தான்அரி கேதுமால் பத்ரா
சுவதாமனனனிளா விரதக்கோ
சொலுமிர வியன்இர ணியனே
நவம்திகழ் குருவன் எனும்நவ கண்ட
நரபதி இவரில்முன் வந்த, (4) 570
பரதகண் டத்துப் பார்த்திபன் ஈன்ற
பாலர்இந் திரன்கசே ருகனாம்
நரபதி தாம்பிர பன்னியன் கபத்தி
நாகனே சவுமியன் நலம்சேர்
மருவுகந் திருவன் வருணனே என்னும்
மன்னவர் எண்மர்கள் மகளோர்
தெரிவையாம் குமரி இவர்கட்குத் தனது
செகத்தினை ஒன்பதாய்த் தெரித்தான். (5) 571
நவம்நிகழ் கண்டம் தனையர்தம் பெயரால்
நாட்டினன் அவ்வுரை நலம்சேர்
இவர்களில் வருணாங் குலமனு ஈன்றோன்
இறையெனும் ஆதிமா மனுவாம்
தவம் உயர் வேந்தன் தந்தைதன் புவியும்
குமரிதன் கண்டமும் தாங்கி
உவமையில் செங்கோல் செலுத்தியே புரக்கும்
ஒருதனி வேலுடை உரவோன், (6) 572
மன்னும யேந்த்ர மலையமே சையம்
முதலிய மலைகளும் காவும்
பொன்னியே கங்கை பொருநையே முதல
புண்ணிய நதிகளும் பிறவும்
அந்நதி தீரத் தணிசிவ நகரும்
அதனுறு விசேடங்கள் அனைத்தும்
தன்னதாம் புவியில் சார்ந்திடப் பெற்ற
தண்அளி மேவிய தவத்தோன் (7) 573
தவங்கள்ஓர் உருவாய்ச் சார்ந்திடும் தக்கோன்
தருமம்நீள் சத்தசா கரம்சூழ்
புவனமத் தியில்வாழ் கின்றபூ சக்ர
வாளபூ தரவரை ஓங்கும்
சவுரிய புகழான் மேருவின் குவட்டில்
சாற்றிய வலம்தரு கொடியான்
கவனவாம் பரித்தேர் கரிபரி வெள்ளக்
கடல்அனீ கம்செறி கதிரோன் (8) 574
வேறு
கற்றவர்க் குரிய கண்ணான் கரியலாக் கரிய கண்ணான்
உற்றவர்க் கினிய சொல்லான் ஒன்னலர் வணங்கும் தாளான்
செற்றவர் புரங்கள் செற்ற செஞ்சடை யுடையான் தாளைப்
பற்றிய மனபா கத்தான் பண்புயர் பான்மை யுள்ளான் (9) 575
வருணம் நான் கதனில் வந்தோர் தம்மை ஆச்சிரமம் நான்கிற்
குரியவர் தம்மை வேதத் துறுதியாம் மார்க்கம் தன்னைத்
தரணியைச் செலுத்தும் நீதித் தன்மையாம் சக்க ரத்தை
விரியவே காத்தெந் நாளும் வளர்த்திட வந்த வேந்தன் (10) 576
வாவியின் உகழ்ந்து வாளை வானமீ துயர்ந்த தெங்கில்
தாவிஅப் புறத்தில் வான்மீன் தனைப்பொரும் தாவி லாத
ஓவியப் புறத்தில் தோன்றி உம்பர்நா டிழிந்த தென்னக்
காவுயர் அயோத்தி என்னும் கடிநகர் தன்னில் வாழ்வோன் (11) 577
தக்கவே தாக மங்கள் சாத்திரம் உணர்ந்த சான்றோன்
மக்கர்சிங் களர்பாஞ் சாலர் மாளவர் முதலாய் உள்ள
மிக்கமன் னவர்கட் கெல்லாம் வேந்தன்வேள் வனப்புவாய்ந்தோன்
சக்கரம் நடாத்திக் கோலால் தராதலம் பரிக்கும் தக்கோன் (12) 578
சாரங்க வல்லி என்னும் தன்திருத் தேவி யோடும்
சீரங்க வளங்க ளோடும் இல்லறம் செலுத்தும் நாளில்
பாரங்கம் பரிக்கும் பாலன் பயந்திடும் பருவந்தாழ்க்க
நேரங்கள் தோறும் சிந்தை நிறைந்திலர் நிறைந்தசெல்வர் (13) 579
எண்ணிலாப் பொருள்பெற் றாலும் இந்திர திருப்பெற் றாலும்
மண்ணெலாம் ஒருங்கு போற்றும் வாழ்வுடன் மதிபெற் றாலும்
பண்ணமர் கலைபெற் றாலும் பயில்மனைக் கழக தான
புண்ணியப் புதல்வர் இல்லா வாழ்க்கையும் புன்மை என்றே, (14) 580
பருமத்த யானை வேந்தன் காசியம் பதியில் எய்தித்
தருமத்தின் வழியே நின்று சங்கரன் பாதம் போற்றி
ஒருமித்த கருத்தி னாலே உறுமகப் பெறுவேன் என்று
நிருமித்த படி அங் கேக நினைந்திது செய்வ தானான் (15) 581
முன்னிய படியே போத மந்திர ருடனே முன்னித்
தன்னிலத் திருத்து வோரை நிறுவிப்பின் றக்கோர் சார்வாய்
நன்னிதிப் பொதியும் கொண்டு நால்வகைத் தானை சூழத்
துன்னிய பாகர் உய்க்கும் பொன்னணி துரகத்தேரில் (16) 582
தாரணி வேந்தன் தேவி தன்னுடன் எழுந்து போந்து
காரணன் உறையும் தானம் கருத்துறப் பணிந்து சென்று
சீரணி காசி எய்தித் திகழ்கின்ற கங்கை யாடி
நீரணி மேகம் என்ன நிதிமழை நெடியோற் கீந்தான். (17) 583
வரநதிக் கரையில் எய்தி மந்திரம் அடைந்து மன்னன்
புரகரன் தன்னை ஏத்தித் தான்ஒரு புனித லிங்கம்
விரைவுடன் அமைத்துப் போற்றி ஆலயம் விதித்தெங் கோனைப்
பரவினன் பரனை நோக்கித் தவம்செய்யும் பான்மை பூண்டான். (18) 584
கந்தடு கரட நால்வாய்க் கறையடி யானை வேந்தன்
எந்தையை மனம்மெய் வாக்கில் இருத்தியே ஒருமித் தெய்திச்
சிந்தனை தெளிந்தி ருந்தான் சிலபகல் கழிந்தோர் நாளில்
நந்திஅவ் விலிங்கம் நின்று நரபதி கனவில் தோன்றி, (19) 585
ஆதிமா மனுவே நீசெய் பூசனை அதிக யோக
நீதியில் இயற்று பான்மைக் குவந்தனம் நினக்கு வேண்டும்
பூதலம் புரக்கும் மைந்தன் புடைஅருச் சுனத்தில் ஈவோம்
மேதினி அவண்நீ எய்திப் பணிசெய்வாய் அவ்வி சேடம் (20) 586
மங்குல்ஊர் தியன்சேர் கின்ற மருதவை வழுதி நாட்டில்
தங்கமாம் பொதிகைக் கீழ்பால் துகளிலார் பரவு கின்ற
திங்கள்ஊ டேகும் சோலைச் சிந்துர வனம்சேர் கின்ற
கொங்கிவர் சம்பு மேவும் குவலயம் தென்பால் காசி, (21) 587
பொருநையும் கடனை யும்சூழ் புண்ணியச் சங்க மத்தின்
திருநதி வலம்அ தான தென்புவிக் கயிலை என்னும்
மருமலர்த் தடம்சூழ் கின்ற வளந்திகழ் வனப்பு வாய்ந்த
பெருமைசேர் அருச்சு னந்தான் பிறைதரித் தவனைப் போலும், (22) 588
வேறு
பதிஎத்தலத் தினும்மேன்மைய பரன்தாரக மனுவைக்
கதிபெற்றிட உயிர்க்கந்திய காலத்துப தேசம்
விதியிற்செயு மதன்உண்மைகள் விளங்குங் குறுவன
பொதிகைத்தலத் துரைசெய்திடும் உனக்கென்று புகன்றான். (23) 589
பின்னும்உள தீர்த்தம்தலம் பேசும்அதில் பெரியோர்
துன்னும்இடம் நீகண்டவண் துலங்கும் பணிசெய்ய
மன்னுமரு தில்தோன்றி உன்மனத்தின் வழிஅருள்வோம்
என்னும்சிவன் அருள்செய்தனன் இறைவன் பணிந்தெழுந்தான். (24) 590
அறைந்தங்ங னம்உறைந்தான் அரன்அருளக் குறிஇடையே
மறைந்தான்விழித் திதுநன்றென மகிழ்ந்தான்பின் துதித்தான்
நிறைந்தான்சக லதும்ஆகிய நிருத்தன்பணி நிகழ்வால்
சிறந்தேவிடை பெற்றேகினன் திகழ்காசியி னின்றும். (25) 591
மதுராபுரி மாயாபுரி வரணாசி வண்குமரி
கதிசேர்வந் திகைகாஞ்சி மெய்க் காளத்தி இறைஞ்சித்
துதிசெய்து கழுக்குன்றுடன் சோணாசலம் போற்றி
அதிகைப்பதி வீரட்டம் அணைந்தங்கு பணிந்தே. (26) 592
பொன்பாய்பொது இறைஞ்சிப்புனல் சூழ்வீதி பணிந்தே
அன்போடிறை வன்காவிரி நதிஆடினன் அங்கண்
மின்பாய்சடை யான்ஆலயம் எல்லாம்மிகத் தொழுது
தென்பால்திரு ஐயாறுசி ராப்பள்ளி பணிந்தே, (27) 593
சோணாடு கடந்தேமதி தோயும்பொழில் சூழும்
சேணாடெனும் தமிழ்மீறிய தென்நாடதில் உற்றான்
பூணாய்அர வம்தாங்கிய புனிதன்உறை கூடல்
தூணாயதில் அரியாய்இர ணியற்காய்ந்தவன் துதிக்கும், (28) 594
கடல்சூழ்பதி பணிந்தேகறைக் கண்டன்உறை கோயில்
இடம்எங்கணும் தொழுதேவையை இரும்பூவணத் தெய்திப்
படவாள்அர வம்தாங்கிய பரமன்உறை கோயில்
வடிவாக இயற்றிப்பணிந் தேவந்தனன் மன்னன். (29) 595
கொடிசேர்மதில் கருவைப்பதி குறுகிக்குழ கற்கே
படிஇல்லதோர் பணிசெய்து பணிந்தான்பரன் எய்தும்
தடமாம்திரி கூடாசலம் தனைப்போற்றினன் சார்ந்தான்
கடமாமுனி உறைசந்தனக் காவார்வரை கண்டான். (30) 596
முக்கள வைத்தெரி சித்ததி னுள்ள முகுர்த்தங்க
ளொக்களையும் பணிவுற்றனன் அங்கண்உறை சோலை
மிக்குயர்தண் டலைசிந்தலர் கொண்டலைமேல் ஓங்கிப்
பக்கம் உறுந்திரள் முத்தலை வந்து படிக்கேறும், (31) 597
தண்பொரு னாநதி கண்டு மகிழ்ந்து தடஞ்சாரல்
திண்சிலை மேல்அணி மஞ்சு படிந்த திறத்தாலே
கண்சின வேழம்மு ழங்கிட ஓடு கருங்கொண்டல்
விண்புக நீள்கை பிசைந்தறல் மென்று விரிந்தாரும், (32) 598
தன்நிகர்மா மலைஉந்திய தேனொருசார் வோடும்
பன்மலர்நீ டருவிப்புனல் சாடொலியுற் பாங்காக்
கன்னிலம்மீ துயர்சந்தன முந்தகிலுங் கானந்
துன்னிய ழாய்வரு தென்றல் இளங்குளிர் தோய்ந்தங்கண் (33) 599
மன்னவர் மன்னன் வளங்கள் புகழ்ந்து மகத்துக்கள்
தன்னில்வ ளர்ந்து தவம்புரி சாலைகள் தனில்எய்தி
மின்னிரு டிக்கண் மாதவ ரைத்தொழு தேமேவத்
தன்னிகர் வோர்முக மன்புக லச்சர ணம் பெற்றே, (34) 600
கண்டு மகிழ்ந்தவன் எல்லை கடந்து கடம்பொங்கும்
தெண்டிரை மானதி வானவர் ஆடு திறங்கண்டான்
விண்டுயர் சந்தம் உறும்குவ டெய்திய மேலோனை
அண்டர்கள் போற்றி மங்கண கன்றப்பால் (35) 601
மன்னும் உலோபா முத்திரை அந்தண் மலர்ப்பாதந்
துன்னும் இடந்தொ ழுதேமுனி வோர்தொகை தான்சூழ
மின்னும் வியாக்கிர வாசன மேவி வியந்தன்பாய்த்
தன்னிய மங்கொடி ருந்துறை யுந்தவ னைக் கண்டான். (36) 602
கண்டனன் அன்பு கசிந்திட வந்து கனிந்தோகை
மண்டுமெய் மண்துகள் கொண்டிட உண்டுறை வண்டாடும்
புண்டரி கப்பதம் முன்பு பணிந்து புனைந்தேநா
விண்டு தழைந்து மகிழ்ந்து வியந்து துதிக்கின்றான். (37) 603
குன்றை அடர்த்தருள் கொண்டுயர் குன்றே குரைநீரைப்
பொன்ற அயின்றிடு போதா வாதா வியினோடும்
துன்றிய வில்வல னைத்தெறு தூயோய் துகள்இல்லா
மின்திகழ் வேணி விளங்கிய மாதவ னேஎன்று, (38) 604
நின்று பணிந்திடு மன்னனை மாமுனி நேர்நோக்கித்
துன்று புவிக்கர சேமனு நீதி துலங்கச்செய்
தென்றும் நிறுத்திய வண்புக ழாய்இம யச்சாரல்
குன்றுடை யோன்என மிக்க தவம்செய் குணத்தோனே (39) 605
வேறு
என்னவே முகமன் கூறி இங்குநீ வரல்யா தென்ன
மன்னவன் முனியைப் போற்றி மகவினை வேண்டிக் காசி
நன்னக ரிடத்தில் சென்று நாதனைப் பூசித் தேனால்
முன்னவன் கனவில் தோன்றி முனிவரன் பொதிகை நண்ணி, (40) 606
குறுமுனி வனைப்ப ணிந்தான் கோவுறை மருதின் சீர்கள்
அறைகுவன் அதுகேட் டங்ஙன் எய்துவை அவண்உன் னாலே
நிறைதிருப் பணியும் கொண்டு நினதுளம் மகிழ்ச்சி எய்தப்
பெறுவரம் அளிப்போம் என்று பிஞ்ஞகன் அருளிச் செய்தான். (41) 607
அப்பணி ஈசன் சாற்றும் அப்பணி கொண்டிங் குற்றேன்
திப்பிய வரையில் வாழும் சிவம்உணர் முனியே என்றான்
துப்புறழ் வேணி அண்ணல் கூறிய சுதின வாக்கு
மெய்ப்புக ழான்இம் மன்னன் இங்குற்ற வியப்பு நோக்கா, (42) 608
அதிசயம் அடைந்தான் எங்கோன் அருளினை உவந்தான் ஆதி
மதிதரு மனுவே என்று மலர்முகம் மகிழ்ச்சி எய்தி
விதியுறு முனிவன் தானும் வேந்தனுக் கிருக்கை நல்கத்
துதிகொடு முனியைப் போற்றித் தோன்றலும் இருக்கும் ஏல்வை, (43) 609
அப்பொழு தகத்தி யன்பால் அம்புய மலரின் மூன்று
துப்புறழ் மலர்கள் பூத்த தூய்மைபோல் முகத்தில் தோன்றிச்
செப்பிள கொங்கை தோன்றச் சிறுமியாய்ப் பொருநைச் செல்வி
மைப்படி கூந்த லாள்ஓர் வாலையாய் வந்து நின்றாள் (44) 610
மனுஇவள் தன்னை நோக்கி மற்றிவள் யார்கொல் என்ன
முனிவனை வினவ லோடும் மொழிகுவான் முன்னோன் தன்பால்
பனிமலைச் செல்வி தந்த பங்கய மாலி நீராள்
தனியருள் தரங்கவல்லி தாம்பிர பன்னி என்பாள், (45) 611
அறைகுதும் அவள்தன் செய்கை அதில்இந்த வரையின் மேன்மை
இறையவன் கயிலைக் கொப்பாம் எப்படி யென்னில் அங்கு
நிறைகலை நூற்றுப் பத்து நிலவும்இவ் வரையில் அன்றிக்
குறைவிலாத் தென்ற லாலே உயிர்க்கின்பம் கொடுக்கும் மாதோ. (46) 612
இறையவன் உயிர்கட் கின்பம் என்பதும் இவையே ஆகும்
முறைதனில் பொதியக் குன்றும் கயிலையும் முதல்வற் கென்றும்
உறையிடம் ஆகும் என்றே உரைத்திடப் பட்ட திந்த
நறைகமழ் வரையில் நாம்வந் திடுசெயல் நவிலல் உற்றாம். (47) 613
ஆதியில் இமய ராசன் அருமகப் பேறு வேண்டி
கோதையாள் மேனை யோடும் கூடியே தவம்செய் காலை
மாதவ உருவாய் அன்னோர் தமக்கொரு மகளாய்த் தேவி
சாதகி யாய்வ ளர்ந்து தவம்செய்தாள் அரனை நோக்கி. (48) 614
மாதிவள் தவத்துக் காக வரதனும் வந்து நோக்கிப்
பேதைபால் ஒருமுத் தாரம் பெட்புடன் தரித்தான் அன்னாள்
பூதநா யகனைப் போற்றிப் புண்டரி கத்தார் பூட்டி
நாதநீ என்னை வேட்க நற்றவம் புரிந்தேன், என்றாள். (49) 615
என்றிடு மொழிக்கி சைந்தே இறையவ ளுடனே எங்கோன்
வென்றிசேர் இமய ராசன் விதித்தமண் டபத்தில் எய்த
மன்றலந் திருவி ழாவின் மணத்தினைக் காண்பான் போந்தார்
பொன்திகழ் அலங்கல் மார்பன் பூவுறை பிரம தேவன், (50) 616
மன்றலந் தாரு நாடன் முதலிய வானோர் ஏனோர்
துன்றிய உருத்தி ராதி தொகுகணத் தார்கள் மேலை
நின்றுழல் உருத்தி ராதி நீலலோ கிதர்கூர் மாண்டர்
மின்திகழ் மேனி அண்ணல் மெய்அருள் பெற்று வாழ்வோர் (51) 617
ஆடகே சுரர்வ சுக்கள் அட்டமூர்த் தங்கள் அந்தார்
சூடிய கேத்ர பாலர் துகையிலா அண்டந் தோறும்
நீடிய கடவு ளானோர் நிருதர்விஞ் சையர்கள் அன்றிக்
கூடிய திக்கில்உள்ளோர் முனிவர்கள் குவல யத்தோர் (52) 618
மற்றுளோர் யாரும் தங்கள் மரபுளோர் மாதர் மைந்தர்
சுற்றுசே னைக ளோடும் சுலவுவி மானத் தோடும்
கற்றன கழறிப் போற்றிக் கடவுளர்கல் யாணம் காண
உற்றனர் தங்கள் தங்கள் ஊர்திகள் உகைத்துப் போந்தார். (53) 619
கந்தமோ டுருவு தாங்கிக் கானமும் மலையும் மற்றும்
இந்திர மாவுங் கோளும் நாள்களும் உடுக்கள் யாவும்
சிந்தையோ டெய்த அங்ஙன் யாவரும் செறித லாலே
இந்தமே தினிஉ யர்ந்த திமயமால் வரைதாழ்ந் தன்றே, (54) 620
நிற்பது கண்டு வானோர் நிமலனைப் போற்றி அந்தப்
பொற்புயர் வரையில் வந்தோர் யாவரும் புந்தி மாழ்கிச்
சொற்பல முறையோ என்றார் நேர்பட அருள்வாய் தொல்லை
அற்புத என்று தாழ்ந்தார் அரன்அதற் கருளிச் செய்வான் (55) 621
அப்பொழு தெனைஅ ழைத்தே அன்பன்நீ எனக்கொப் புந்தன்
மைப்படி கூந்தல் செவ்வாய் மாதுநம் உமைஒப் பிந்த
வெற்புநேர் அமையத் தென்றல் வெற்பினுக் கேகுவாய் என்
றிப்புவி மகிமை எல்லாம் இயம்பினன் உரைக்க டங்கா. (56) 622
அதுநிற்க பின்னும் ஈசன் அற்புத மணக்கோ லத்தை
புதுமலர்ச் சோலை சூழ்ந்த பொதிகையில் காண்பாய் என்று
மதிவைத்த சடையோன் கூறி வனசத்தார் இவளை ஈந்தான்
நதிஉற்ற கடத்தில் ஏந்தி வந்ததை நவிலல் உற்றாம். (57) 623
இமையமால் வரையில் எங்கோன் ஈந்திடும் இவள்தன் னோடும்
உமையவள் கணவற் போற்றி விடைபெற்றவ் வோங்கல் நீங்கிச்
சிமையமால் வரையாம் இந்தப் பொதிகையில் சேருங் காலைச்
சமையகல் யாணக் கோலம் சங்கரன் தரப்பெற் றுய்ந்தோன், (58) 624
அற்புதம் அடைந்தேன் எங்கோன் அருளிய வனசத் தாராம்
பொற்புடைக் கண்ணி தன்னைப் பொதிகைநா யகற்குச் சாற்றிப்
பற்பல துதிகள் செய்தென் பதுமமா லிகைஇம் மங்கை
சிற்பரன் அருளி னாலே சிறந்திடு நதியாய்ப் போந்தாள். (59) 625
வாலைதன் செயல்இ தாகும் மன்னர்கள் மன்ன காசி
நீலமா மிடற்றோன் வாக்கால் அருளிய நிமலன் வாழும்
கோலமா மருதே தென்னில் குவடிதன் கீழ்சா ராகச்
சாலும்இந் நதிசூழ்ந் தோங்கி இருப்பது சாற்றக் கேளீர் (60) 626
இந்நதி சூழ்ந்த காசி எழில்புடை மருதின் மேன்மை
தன்னிகர் புருடன் கண்ணாம் தாரக முத்தி நல்கி
மன்னிய உயிர்கட் கிம்மை மறுமையு மகத்வம் நல்கிப்
பொன்நக ரத்தின் மேலாம் சிவபுரம் புகுத்தும் மாதோ. (61) 627
புடை அருச் சுனமே சத்தி புடைஅருச் சுனமே நாதன்
புடைஅருச் சுனமே நாதம் புடைஅருச் சுனமே விந்து
புடை அருச் சுனமே வேதம் புடைஅருச் சுனமே போதம்
புடை அருச் சுனத்தின் பூவே புடைஅருச் சுனற்கு நாமம். (62) 628
ஆதியில் கற்ப கம்சேர் பொன்நக ரத்தில் பாக
சாதனன் பரவும் இந்தத் தலத்தினில் போக்கிப் பின்னும்
நீதிநல் வரமும் பெற்றான் நீயும்இத் தலத்தில் வேண்டும்
காதலின் நினைந்த எல்லாம் கருத்துறப் பெறுவாய் என்றான். (63) 629
அப்புடை யருச்சுன மதுத்தர முகத்தநதி
அப்பதிய தென்றுமுனிவன்
செப்பிஅ வணிற் செலுதி திங்களொடு கங்கையணி
செம்மல்அருள் செய்ததனிலே
மெய்ப்புகழ் உறும்பணி விருப்புடன் உனைக்கொடு
விதித்திடுவன் என்று மனுவுக்
கொப்பில்சிவ மந்திரம் உரைத்துறுதி செப்பிஅவன்
ஒல்லையில் விடுத்தனன் அரோ. (64) 630
அன்றுமுனி வன்தனை வணங்கிவிடை கொண்டுவகை
ஆகி அர சன்னபொழுதே
குன்றதனி னின்றும் வழி கொண்டுறு குழாத்தினொடு
கோதைஅரு விப்புனல்உலாய்
மன்றல்தரு முக்களவில் மங்கலை யுடன்பரமன்
வண்கழல் இறைஞ்சி மகிழ்வாய்த்
தென்றல்உறு சோலைதிகழ் கின்றபதி யும்தொழுது
சிந்தைகொடு வந்தபொழுதில், (65) 631
சாதிமகிழ் சந்தொடு தழைந்தபொழில் சூழவளர்
தண்மருதி தென்று பெரியோர்
ஓதவெகு வாய்அளவி லாதமகிழ் வுற்றுமெய்
உளந்தருசொ லொன்றிபொரு மித்
தேதம்அக லக்குட நதிக்குடக மேவுகரை
எய்திஇறை போற்றிஇனிய
சீதநதி யுற்றதனில் ஆடிநிய மஞ்செய்து
திருப்புடை நகர்க்கண் உறுவான். (66) 632
அருச்சுன நவ்வல் எய்தித் தவத்தர்ஆச் சிரமங்கள் போற்றி
அருச்சுனன் புயங்கள் ஓர்ஆ யிரம்அரிந் தவனும் காணா
அருச்சுனப் புடையில் மேவும் அமலமா இலிங்கம் தன்னை
அருச்சனை செய்ய எண்ணி ஆவலோ டணையும் போது, (67) 633
குழைத்துவிண் படரும் கோட்டுக் கொழுநிழல் மருதத் தாருத்
தழைத்திடும் பசிய தோற்றம் தண்துழாய்ப் படலைத் தாரோன்
றிழைத்திடப் புவனம் மூன்றும் மூன்றடி அளந்து செவ்வே
மழைத்தபைங் கிரிபோல் நின்ற வண்ணம்ஒத் திருந்த தன்றே, (68) 634
விளங்கரை பருமம் மேவும் விரிமுடி மஞ்சு மேவும்
இளங்கனங் குடைஉ லாவும் இயல்நிறம் பசுமைகாட்டும்
வளந்திகழ் காமன் யோக மருதனும் மனுவாம் தாரு
களங்கனி அனைய கண்டன் கற்பினாள் போலும் அன்றே, (69) 635
நதிசுலா மருதைக் கண்டு நாடியே நயந்து சென்று
துதிகொடு செயநின் றேத்தப் புடையில்வாழ் சுயம்பு தன்னை
மதிமுக மாதர் மூவர் வணங்கிடக் கண்டு வந்தான்
புதியன மனுவைக் கண்டு கன்னியர் புடையின் மேவ. (70) 636
அருகினி லெய்த அங்குப் பரவிடும் அந்நல் லாரை
விரைவினில் காணான் ஆகி வந்தவன் வியந்து பின்பு
மருதினில் புடைவி லுற்று மன்னுமா இலிங்கம் தன்னை
பரவிடப் பார்க்கும் போதில் காண்கிலன் பழங்க ணுற்றான். (71) 637
நிருமலன் அருளால் உற்றேன் நெறிதவ றினனோ என்று
பரதவித் தவத்தி பூர்வ பாவங்கள் உளதோ அன்றிக்
குருமொழி தவறுற் றேனோ எனப்பல சூழ்ந்து கோமான்
பரமனை உளத்தில் எண்ணித் துதித்திடும் பான்மை பூண்டான். (72) 638
நித்தனே பத்தி இல்லேன் நெறியிலேன் பொச்சாப் புற்ற
எத்தன்என் றிகழ்ந்தாய் ஆகில் என்செய்வேன் இமய மாதுக்
கத்தனே யானே செய்வ தறிகிலேன் அருள வேண்டும்
கர்த்தனே என்று நைந்து கவன்றனன் கருது கின்றான் (73) 639
மாதர்கள் போற்றி நின்ற வரதன்இங் ஙனம்மறைந்தே
பாதவத் தொழித்த தென்னோ பழவினைப் பகுதி தானோ
வேதனை யான இந்த விடக்கினைச் சுமந்தேன் வீணே
ஆதலால் இந்த யாக்கை அகற்றுதல் துன்பென் றெண்ணி (74) 640
எனஉளம் ஒருமித் தேந்தல் இங்ஙனம் மருதில் தானே
தனதுகை ஞாங்கர் வேலைத் தாக்கிஅவ் வேலின் தாளின்
மனவயிர் சத்தாற் பாய மதித்திந்த வழிய தாக
உனிநெடு வேலை வாங்கி ஓச்சினான் மருதில் ஊறாய் (75) 641
உய்க்கின்ற பசு மரத்தில் ஊன்றிய ஆணி என்னத்
தைக்கின்ற வெற்பு றத்தில் சாடியே மாய உன்னி
மைக்குன்ற வேழத் தின்பால் மடங்கல்பாய் வனவே போல
எய்க்கின்றோன் உன்னும் வேளை ஈசன்அப் பொழுதில் தானே, (76) 642
எய்ப்பிடத் தினில்வைப் பென்னும் இறைஇலிங் கமதாய்த்தோன்றி
பைப்பணி அணிந்தோன் ஓர்கை நீட்டிப் பார்த்தி பநில்என்று
செப்பியே தடுத்தான் அங்ஙன் திருமகன் கேட்டுக் கண்டு
தற்பர வசத்தன் ஆகித் தன்வினை மறந்து தாழ்ந்தான். (77) 643
பணிந்தவன் எழுந்து நின்று பரமஇலிங் கத்தைப் பார்த்தான்
குணங்குறி கடந்தோன் மேனி வலப்புறங்குருதி பொங்கி
நிணங்கிளர் வதனைக் கண்டான் நிலத்தினில் வீழ்ந்தான் சோக
அணங்கினை உற்றான் முற்ற அதுதெளிந் தரசன் பின்பு, (78) 644
எழுந்தனன் நிலத்தில் பாய்ந்தான் ஈசன்நின் உருவில் சோரி
வழும்பதாக் கின்னான் என்று மனமெலாம் உருக மாழ்கி
அழுங்கினன் சோர்ந்தான் என்செய் குதும்என அழிந்தான் நின்று
பழங்கண்உற் றானே நான்செய் பாதகம் தவிர்ப்பாய் என்றான். (79) 645
கரும்போன்செய் பிழையும் அன்றிக் காலன்செய் பிழையும் பார்த்தன்
அரும்பிழை தனையும் மாறன் அடித்திடும் பிழையும் காத்தாய்
குரும்பைவெம் முலையாள் பங்கா அறிவிலாக் கொடியேன் செய்த
பெரும்பிழை பொறுத்துக் காப்பாய் பிஞ்ஞகா சரணம் என்றான். (80) 646
என்றுளம் வருந்திப் போற்றும் இறைமகன் தனைப்பு ரப்பான்
கொன்றைவே ணியன்முன் போலக் கோடரத் தூடா காயம்
ஒன்றிய வாணியாலே உரைத்தருள் புரிவான் ஒல்லை
நன்றுநின் செய்கை எல்லாம் நயம் என்று நவில்வான் பின்னும். (81) 647
மருதிவை சிவமே என்று மலயமா முனிவன் கூறக்
கருதுநீ வேலால் இந்தக் ககத்தினில் ஓச்ச லாலே
திருவுரு நமது மேனி வலப்புறம் சினவேல் தைக்க
இரணமாம் சோரி சோரக் கண்டனை இதற்குத் தீர்வு, (82) 648
துன்றுசெந் நீர்பாய் புண்ணில் பூதியைச் சொரிவா யாகில்
நின்றிடும் சோரி அந்த நீர்மையால் பூதி நாதன்
என்றபேர் நமக்கெப் போதும் இயல்பதாம் இன்னும் அந்த
வென்றிவெற் புடையான் நாமம் புடைஅருச் சுனம்என் பாரே. (83) 649
வலப்புறம் வழும்பா யென்று தோற்றியே வைய மீதில்
உலப்பிலான் உறுவை வேலால் உறுகணோய் நீசெய் தற்கு
குலத்தசாந் தாதி கூட்டுந் தைலத்தாற் குளம்பால் ஆட்டி
நலத்துடன் வருவாய் என்று நாயகன் நவிலக் கேட்டு, (84) 650
வரன்திரு வலது மெய்யில் வடுவுறுஞ் சோரி நீங்க
அரன்அருள் செய்த வாறே அயில்படு சோரி மாறன்
விரைகமழ் பூதி அப்ப நிற்பது கண்டு வேந்தன்
புரகரன் தனைத்து தித்தான் புளகிதம் உற்று நின்றான். (85) 651
முனிவரர் அரஎன் றார்ப்ப முகைஅவிழ் கற்ப கத்தின்
பனிமலர் விண்ணோர் தூற்ற பஞ்சநா தங்கள் ஆர்ப்ப
இனியவீ பூதி நாதர் இவர்என இயம்பி மேலோர்
கனிவுள மகிழ்வால் ஏத்தக் காவலன் துதித்துள் அன்பாய், (86) 652
இரங்கினன் இவர்தாம் செய்த திருவிளை யாடல் எண்ணி
புரந்தருள் மனுப் பணிந்தே புரகரா அடியேன் செய்த
அரும்பிழை பொறுத்தாய் அந்தோ அம்பிகை பாகா என்று
வரம்பல எய்த நின்றோன் வரதனை வணங்கிப் போற்றி, (87) 653
வந்தனை செய்தெங் கோனைப் பூசிக்க மஞ்ச னாதி
சந்தன மலர்கள் வில்வம் தருநெய்வே தனம்அ டைக்காய்
கந்தம்ஆர் தூப தீபம் கனிவுடன் இவைக ளாலே
சுந்தரன் தனைப்பூ சித்து வணங்கியே துதிக்கின்றானால். (88) 654
புரகரா போற்றி வேதப் புடைஅருச் சுனத்தில் வாழும்
கரமதா சலத்தோல் போர்த்த கண்ணுதல் போற்றி கங்கை
அரவுடன் மதிஅ ணிந்த அமலனே போற்றி அன்பர்
பரவிட அருள்சு ரக்கும் பரமனே போற்றி போற்றி. (89) 655
செழுந்தரு எறிந்த வேலால் தேவனே தினக ரன்போல்
எழுஞ்சிவ லிங்கத் தூறாய் இயற்றியே என்னை ஆண்டாய்
உழுந்தள வாக்கி நஞ்சம் உண்டுவிண் ணோரை அன்று
கொழுந்தரு வேற்றிக் காத்த குழகனே போற்றி போற்றி. (90) 656
காமனைக் காய்ந்தாய் போற்றி கனல்விழிக் கனலே போற்றி
மாமனை வேள்வி தன்னில் மாய்த்தவ போற்றி மாறாம்
பூமனைக் கண்டி மீதில் பூமுடி அரிந்தாய் போற்றி
தாமமா யவன்சி ரத்தைத் தடிந்ததற் பரனே போற்றி (91) 657
சாக்கியன் எறிந்த கல்லும் திண்ணன்தாட் செருப்பி னாலே
நீக்குமா லியமும் வேடன் நிசியினில் இட்ட வில்வக்
காக்கிளை இலையும் மிக்க காதலால் இவைகள் எல்லாம்
பாக்கிய மாகக் கொண்டீர் அதனொடும் பரிவி லாதேன். (92) 658
எறிந்தவேல் படுந்த ழும்பும் அணிந்தெனை ஆண்டு கொண்டு
நிறைந்தவெம் பிழைபொ றுத்த நிமலனே போற்றி போற்றி
மறிந்தபுண் தனக்குப் பூதி மருந்தென மதித்த ணிந்து
சிறந்தஅப் பெயரும் பூண்ட சிவபரம் பொருளே போற்றி, (93) 659
எனத்துதி செய்து நின்றான் இழந்தவன் பொருள்கண் டென்ன
மனத்துறும் இன்ப வெள்ள மறிகடல் மீது வாழ்ந்தான்
அனைக்குநே ரான எம்மான் அருள்பெற வேண்டும் என்று
மனுப்பணிந் தன்பால் போற்றி வதிந்துநோற் றிருந்தான் மன்னோ. (94) 660
ஆதிமனுப்படலம் முற்றும்
6. ஆலயம் காண்படலம்
மனுபதி வனிதை யோடு மருதினில் எய்தி வைகி
முனிவன்சொற் படிஎங் கோனைப் பூசனை முடித்தல் ஈதாம்
இனிஅவன் தனக்கு நாதன் இலிங்கத்து நின்று தோன்றி
நனிவரம் உதவப் பெற்றுப் பணிசெய்த நலம்உ ரைப்பாம் (1) 661
ஆதிமா மனுத்தான் பின்னர் அரன்அருட் செயலை நோக்கி
நீதியால் துதிகள் கூறி நிருமலன் தாளை உன்னிச்
சோதியாற் கால யந்தான் செய்திடச் சூழ்ந்து பார்த்தே
கோதிலாப் பணிகள் செய்யக் கருதியே குறித்துத் தேர்வான். (2) 662
புடைமரு துற்றார் மற்றைப் புடையெலாம் நதியாய் ஓங்கி
இடையெலாம் சரிவாய் உற்ற திவ்விடைப் பணிசெய் தாலும்
உடையவற் குறுவி மானம் செய்திடல் உறாதென் றுன்னி
விடையவன் அருள்எவ் வண்ணம் விதிக்குவ பெறுதும் என்னா, (3) 663
கருதினன் கதிகொ டுக்கும் ககநிழல் உற்று நோற்பான்
திரிபத கையில் மூழ்கித் திருவெண்ணீ றணிந்து தெய்வ
விரைமலர் முதல் வான வேண்டுவ வருத்தி வேந்தன்
மருதினான் தனைப்பூ சித்து வணங்கினான் வழுத்தி வாழ்த்தி, (4) 664
வந்தனை செய்து தாழ்ந்து வானவர் தலைவா போற்றி
இந்திரன் பழிதீர்த் தாண்ட ஏறுயர்த் தவனே போற்றி
கொந்தலர் இதழி வேய்ந்த கோமளை பாகா போற்றி
பொந்துசேர் மருதம் மேவும் புண்ணிய புராண போற்றி, (5) 665
அருத்திசோத தையம் நீங்கும் அடியவர் வேண்டு கின்ற
கருத்தினை முடிக்க வல்ல காரணா போற்றி உன்றன்
உருத்தெளி வித்துக் காட்டி மறைந்தற் கொறுக்க உன்னும்
வருத்தம்அ தகற்றி என்னை ஆண்டருள் மருதா போற்றி, (6) 666
எண்ணிய கருமம் முற்ற யான்உனை எய்தி னேன்அவ்
வண்ணமே முடிக்க வந்து வரம்அளித் தருள வேண்டும்
பண்ணவர் பரனே பானுப் பாகவன் மதிஇம் மூன்று
கண்ணினால் உலகம் காக்கும் கருணையங் கடலே போற்றி (7) 667
சரதநா யகனே போற்றி எனத்துதி சாற்றிப் பின்னும்
விரதமாய் வேந்தன் அங்கன் சாந்திரா யணம்விதித்துக்
குருவச னத்தின் மேவிக் குசதுனி யறல்பொ சித்து
பரவியே தவம்இ யற்றும் பரிவுகண் டகத்தில் உன்னி, (8) 668
ஆடல்ஏ றழகன் தானே அரசனுக் கருள்வான் ஆகக்
கோடரத் தமர்ந்த சோதி இலிங்கத்தில் அங்கு ரித்தே
தேடிய இருவர் காணாத் திருவளர் கமலப் பாதம்
சூடிடச் சமயம் என்று சுருதிபா துகையாய்த் தாங்க, (9) 669
செக்கரஞ் சடையும் காள கண்டமும் திகழ்முந் நூலும்
முக்கணும் நான்கு தோளும் மொய்ஒளி விளங்கு நீறும்
அக்கர வார்த்த வேங்கை அதளுடை அரையும் தேவி
பக்கமு மனுமை நோக்கும் பார்வையு மாகத் தோன்ற, (10) 670
அப்பொழு தமலன் தன்னை யானும்இ றைஞ்சி அன்பாய்
மெய்ப்புகழ் கூறித் தேகம் விம்மிதம் உற்றான் கீர்த்தி
செப்பியே மலரின் மாரி தேவர்கள் தூவி ஆர்த்தார்
துப்புறு கண்ணீர் மாரி துளும்பியே வேந்தை நோக்கி, (11) 671
மருதினான் அருளிச் செய்வான் மனுவழி வந்த மன்னா
பரவிநீ நமக்கு வந்த பூசனை ஆற்றிப் பண்பாய்
விரதமும் ஆற்றி நம்மைத் துதித்தனை மிகம கிழ்ந்தேம்
புரவல நினக்கு வேண்டும் வரம்எவன் புகல்தி என்றான். (12) 672
பணித்தலை உலக மன்னன் பணிவுடன் வணங்கிக் கேட்பான்
குணித்திவன் வந்து தோன்றும் குறிதனக் கால யந்தான்
கணித்திடும் படியே செய்யக் கருதினன் கருத்துக் கேற்ப
இணக்கமாய் அருளவேண்டு பரகதி எனக்கு வேண்டும் (13) 673
புடைமரு துற்ற தாலே பொங்கிய கோயில் செய்ய
இடமிகல் போதா என்செய் குதும்என ஈசன் சாற்றும்
தடநெடும் புயத்தாய் இந்தத் தண்மரு தின்கீழ்ச் சார்பாய்
நடுவுற இலிங்கம் தோன்றும் நலம்பெறக் காண்பாய் அங்ஙன். (14) 674
மயன்தனை அழைத்துச் சிற்ப நூலினில் வகுத்த வாறே
இயல்புடன் ஆல யந்தான் இயற்றுதி பணிகள் எல்லாம்
முயலுதி முற்றும் வண்ண மின்னின்றுன் கருத்துக் கேற்ற
செயல்வழிக் கூட்டு கேம்என் றருளினான் சீத ரேசன் (15) 675
அனைக்குநே ரான எங்கோன் அம்பிகை பாகத் தண்ணல்
நினைத்திடற் கரிய நாதன் நின்றகோ லத்தி னோடே
பனித்தவான் வழிம றைந்தான் பார்த்திபன் பணிந்து போற்றி
மனத்துறு மகிழ்வால் அங்ஙன் வதிந்தினி திருக்கும் ஏல்வை, (16) 676
அரசன்மெய் அன்புக் காக அரன்வெளிப் பட்ட செய்கை
தரையெலாம் தெரியும் வண்ணம் மேருவைச் சார்ந்து சூழ்ந்து
முரசறை விப்பான் போல முளரியை அலர்த்தும் செங்கேழ்
இரவியோன் எழுந்து மேலைத் திசைவழி ஏகி னானே. (17) 677
பகற்பொழு திறைவற் கீசன் பாலித்த கோலம் என்னும்
அகத்தினில் உவகை எய்தக் காட்டுதற் கணைவான் போல
சிகைத்தனிப் பிறையும் தோன்ற செக்கர்வான் மேனி தோன்ற
முகத்துடு முறுவல் தோன்ற வந்தது முளரி மாலை. (18) 678
இருட்கலி துரந்த மன்னன் இகத்தவர்க் கின்பம் தோன்ற
அருட்கணால் நோக்கிச் சீத மதிக்குடை யதனால் தானே
தெருட்பெறுபுகழை மூன்று செகத்தினும் பரப்பல் போல
மருட்படு மாலை நீங்கி மதியவன் உதயம் செய்தான். (19) 679
புண்ணிய மன்னன் கோயில் கண்டிடப் புடையி னின்றும்
வண்ணமெய் மருதின் கீழ்சார் வந்திடும் சுயம்பு தன்னைக்
கண்ணினால் இன்று யானும் கண்டருள் பெறுவேன் என்ன
எண்ணியே எழுந்தான் போலும் இரவிவந் துதயம் செய்தான். (20) 680
காசர்கள் உள்ளம் போன்ற கனைஇருள் அகன்று ஞான
நேசர்கள் உள்ளம் போல விளங்கின நேமி வையம்
தேசுடைப் பருதி தோன்றும் முன்அர செழுந்து செய்யும்
மாசுதீர் கடன்மு டித்து வந்திடும் போதில் அங்ஙன், (21) 681
அருச்சுனப் புடையில் உற்ற இலிங்கத்தைக் காணா தன்பன்
வருத்தமாய் மயங்கி நிற்ப மற்றதன் கீழ்சார் பாகக்
கருத்தன்பொற் கோயில் ஊடே தோன்றிடக் கண்டா னந்த
நிருத்தம்ஆ டினன்பே ரின்ப நிறைகடல் மூழ்கி னானே. (22) 682
மருதடி இருந்த வண்ணம் மற்றதன் கீழ்பால் கோயில்
கருதிய நூறுக் கெற்பக் காரணன் சுபேட்சை யாலே
பருதிபோல் விளங்கி வைகப் பரமனைக் கண்டு போற்றிப்
புரவலன் மகிழ்ச்சி கூர்ந்து போற்றினன் புளகம் உற்றான். (23) 683
நாயகற் குறையு ளான கோயில்நற் சூத்தி ரத்தால்
வாய்மைசேர் சாத்தி ரத்தால் வகுத்திட மயனைக் கூவி
தூய்நிலம் குறித்தி லங்க சோதனை வகையும் தூக்கி
நேயமோ டுவந்து செய்ய நிருமித்தான் நிருபன் மன்னோ, (24) 684
ஓரைகொண் டனிக்கை செய்து சிற்பநூல் உரைத்த வாறே
சீர்பெற மயன்வி தித்த ஏவலோர் சிவனைச் சூழ்ந்த
பாரினில் வாணங் கண்டு பணிசெய்வ தற்கு வேண்டுஞ்
சார்புக ளுடனே கூடச் சமைந்தனர் வினையின் தக்கோர். (25) 685
பரைதரும் யோகா சத்தி யாதரம் பதும பீட
நிரைதரும் மதலை போதி நிலவிய வட்டம் பட்டம்
மரைதிகழ் மேரு என்னு மதில்கவு தகமே வாரி
உரைதரு பால்வி மான மாளிகை உஞற்றி னாரே. (26) 686
கற்பம்நீ டியவி மானம் அடிமுதல் முடியின் காறும்
சிற்பநூல் இருபான் கோலால் செய்ததில் சிறப்ப தாகப்
பற்பல விதித்த ருத்த மண்டபம் பாங்கி னூடே
விற்பொலி மாயன் வேதா விண்ணவன் முதல்விண் ணோரே. (27) 687
அட்டதிக் கினும்இ யற்றி ஆமைமேல் பதுமம் ஆதி
பட்டம்எட் டெட்டின் கீழே பாணிவட் டத்தின் மேலே
எட்டிய நாகம் பூதம் இடையிடை விமான சிங்கம்
வட்டனை யாழி மேலே வானவர் வருக்கம் மல்க, (28) 688
நந்தியா வர்த்தம் வாணி பத்திர நாக பீடம்
விந்தைசேர் சிறியா வர்த்தம் விருத்தம்எண் பத்து நாலாம்
பந்திசேர் வீர பீடம் பத்திர பீடம் பாலிற்
கந்திரு வோர்சூழ் கின்ற காமரு பீடம் மாதோ, (29) 689
இந்திர திசையில் பானு நந்திமா காளர் இந்து
வந்திடும் அனந்தர் நந்தி வளர்கின்ற பூத பீடம்
தந்ததென் பால்சீ கண்டர் சத்தமா தர்களங் காரன்
சிந்துர முகன்மேல் சிங்கா தெண்டமுண் டியரே கந்தா, (30) 690
உத்தரம் பிருங்கி துர்க்கை விசையன்ஒண் திருக்கள் வாணி
சத்ததே சிகரே காளி கண்டிஈ சானம் காரி
மத்தியில் சாத்தன் இந்த வகைப்படி பரிகா ரத்தர்
மெய்த்தவர் பாணத் தின்பால் விதித்தனர் விதியி னாலே. (31) 691
மாகமோ டுயர்ந்த மாமண் டபம்சபா மண்டபம்சீர்
ஆகம பீடம் குண்ட மண்டபம் அடியார் போற்றும்
போகமண் டபம்உள் ளிட்ட ஒன்பது முகிற்தம் கொண்ட
ஏகமண் டபம்இ யற்றி நந்தியை எதிர்வி தித்தார். (32) 692
வாகுசேர் அறுகால் பீடம் மணிஅணி மண்ட பம்சொல்
தோகையர் நடன மாடம் சுரர்பயில் மண்ட பம்சீர்
யாகமண் டபம்பு ழைக்கை யாழித்தூண் நிறுவி ஓங்கு
மேகம்வந் துறுச தாமண் டபம்மடைப் பள்ளி வேறு, (33) 693
சுற்றுள தேவர் தான மதிற்புறஞ் சோதி யாடற்
குற்றஅம் பலம்உ யர்ந்த கோபுர மியங்க ளோங்கு
மற்றமண் டபம்து ளைத்த வரையிணை என்னும் வாய்தல்
நற்றவர் சுற்றும் வீதி கூபநான் கெல்லை வீதி, (34) 694
திருமதில் இவைகள் எல்லாம் சிறப்பதாய்ச் செய்து தேவி
உருவினை நிறுவ எண்ணி யுதற்கரன் அருள்எவ் வண்ணம்
புரிவது தெரிய ஈசன் தனைஉள்கிப் போற்றி நின்றான்
பரைஉருக் காண எங்கோன் பார்த்திபன் தனக்கு நல்கும். (35) 695
வேறு
மனுவின் செவிபெற மதிதங் கியமுடி
வானவா ணியினால் மனுவே நாம்
உனைஇவ் விடம் அதில் மிகவும் பணிகொள
உறும் அன் பொடுமிக வருபோதே
தனுவென் றிடுநுதல் உமைஉன் தனைநிகர்
தலம்ஆ கியபுடை மருதத்தை
இனமும் கண்டிட அடியே னுக்கருள்
என்றாள் பின்தொடர் கின்றாளே. (36) 696
அப்போ தவள்தனை அங்கண் நிறுத்தி
அவட்கு மொழிந்த தருட்செய்தி
தப்பா தொன்றது மனுநாம் வதிவ
தனுக்கா கும்பணி தான்செய்தே
துப்பா கும்இதழ் உன்னையும் நிறுவத்
தொழும் அப்பொழுதினில் நினைவோ நீ
இப்பால் வந்திட நந்திக் கருள்வோம்
என்றப் படிசொனம் இது போதே. (37) 697
சிமையக் கயிலையில் வளர்சத் திகள்பணி
திருவுரு அருளே திகழ்வான
உமையைத் தருகுவம் நிறுவக் கோயில்செய்
துய்வாய் எனஅரு ளினன்ஒல்லை
குமைவுற் றுளவொடு அரனைத் துதிசெய்து
கொண்டே வலமதில் அன்பாக
இமையப் பாவையும் உறையப் பணிசெய்
தியற்றப் பரைவரும் எழில் சொல்வாம். (38) 698
முன்னவன் விசுவ கன்மனை உள்க
முந்திவந் தடியிணை வணங்கிப்
பன்னகா பரணா எனைஅழைத் திட்ட
பணிஎவன் கூறெனப் பகர்வான்
மன்னவன் செய்யும் பணியினில் பரையை
வதிட்டைசெய் திடஅளித் திடவே
தன்நிகர் இமயக் கோமதி என்னும்
கொடுமுடித் தானம்ஒன் றுளதால், (39) 699
அதனில்வாழ் சிலையால் நிகரிலா உருஒன்
றமைத்திவண் தருகென அவனும்
நதிஅணி பரனைத் தருட்பணியை...................
.................................................................... (40) 700
திருவுரு இங்ஙன் உறுவது தெளிந்து
தெண்ணிலா மதிநதி புனைந்த
மருமலர் வேணி வானவன் நந்தி
வரதனைப் பார்த்துமை யவளைத்
தருகுவை அழைத்தி என்னலும் நந்தி
சங்கரன் அடிதொழு தகிலம்
புரையிலா தோங்க விரைவினில் சென்றான்
புனையிழை வனிதைபோந் திடவே. (41) 701
கயிலையை அடைந்து கவுரிதாள் பணிந்து
கங்கைநா யகன்பணித் தருளும்
செயலினை மொழியத் தேவியும் ஈசன்
முன்னருள் திறத்தினைத் தெளிந்து
பயிலும்நன் மருதக் காவுயர் சோலைப்
பழம்பதி வளம் எவன் பகர்தி
தயவுள நந்தித் தவத்தனே என்னச்
சங்கரி தனைத்தொழு திறைஞ்சி, (42) 702
சாற்றினன் வேதப் புடைமரு தின்பால்
தவத்தர்வாழ் பதிகளும் சம்பு
மாற்றமில் வனமும் ஆம்பிர வனமும்
மலர்த்திரு வாணிஇந்த் ராணி
போற்றிய தவமும் பொருநையின் வளமும்
புரந்தரன் பாவத்தைப் போக்கி
ஏற்றமாம் சிவனை வழிபடு தவமும்
இறையவர் இடங்களும் மற்றும் (43) 703
உரைத்திடற் கரிய வளமெலாம் அங்குண்
டுமையவ ளேஅவண் மனுவாம்
தரைக்கொரு வேந்தன் பணியெலாம் செய்தான்
சங்கரி உனக்கும் ஆ லயந்தான்
பரைக்குயர் நூலால் வகுத்தனன் அவனைப்
பரித்திடு தற்கும்அப் புவனம்
விரைத்திடு தற்கும் அருளிப்பா டென்று
விளம்பியே வேண்டினன் விடையோன். (44) 704
இமையவள் கயிலை நீங்கி இப்புவ னத்தை உன்னி
நமையெலாம் புரக்க இங்கு நண்ணுவா ளாக நங்கை
உமைதனைச் சூழ்ந்து போதும் உருத்திர கன்னி மார்கள்
அமையன தடந்தோள் ஓங்கு மேழுவா னனைஆ ராதித்தார்கள். (45) 705
பன்னியர் திசையின் பாலர் பன்னியர் பதுமம் மேவும்
கன்னியர் அரம்பை மாதர் கவின்பெற யாரு மேவல்
முன்னர்நின் றியற்றி மானஞ் செலுத்திட முதன்மை யோருந்
துன்னிய பேதை யோரும் சூழ்வர எழுந்தாள் மன்னோ. (46) 706
மரைகள்பிச் சங்கள் பீலி ஆலவட்டம் பணிகள் மாற
விரைமலர் விண்ணோர் தூற்ற வியங்களும் விம்மி ஆர்ப்பத்
தரையினில் இழிந்து போந்து தக்கண காசி மேவித்
திரைதரு கங்கை யாடித் திருப்புடை மருதம் எய்தி, (47) 707
வலங்கொடு மகிழ்ந்து வந்து மந்திரம் எய்திச் சூழ்ந்தே
இலங்குநுண் ணிடையாள் ஈசன் முன்பெய்தி இறைஞ்சி ஏத்த
நலங்கனிந் தருளும் எங்கோன் நாயகி தன்னை நோக்கிக்
குலந்தரும் இமய மாதே குவலயத் திந்த தானம், (48) 708
சத்திபீ டங்கள் தம்மில் தாரக சத்தி பீடம்
முத்திநன் னெறியைக் காட்டும் முதற்சத்தி பீடம் இந்த
உத்தம மருதம் ஆகும் யோகமா தர்களும் போற்ற
நித்தியம் விளங்கும் மாதே நீஇந்தப் பீடத் தெய்தி, (49) 709
வலதுபால் உற்றெந் நாளும் வதிந்திட மனுவுங் கோயில்
இலகவே செய்தான் இங்ஙன் விசுவனால் இயற்று நீலச்
சிலையுரு எய்தி வாழ்வாய் திருமகன் வதிட்டை செய்ய
நலமுடன் உறுவாய் என்று நாதமுற் றிருப்பாய் என்றான் (50) 710
இன்னகர் கயிலை ஆகும் இறைவியே நீயும் நாமும்
இன்னகர் வதிவோர் சீவன் முத்தராய் இயற்றி வாழ்வோம்
இன்னகர் சீவன் முத்தி புரம்இதில் எய்தப் பெற்றே
இன்னல்தீர்ந் திடஇ றப்போர்க் கிறுதியில் அவர்பால் எய்தி, ( 51) 711
தாரக உபதே சத்தை மற்றவர் செவியில் சாற்றித்
தாரகம் கொடுத்து நம்பொன் உருவினைத் தருதல் செய்வோம்
தாரணி மகுடம் சூட்டி நம்உல கதனைச் சாரத்
தாரகை ஒளிபோல் வைப்போம் தணந்திடா திருப்போம் என்றாள். (52) 712
தேவியும் அரனை நோக்கிப் பணிந்துநின் றிதனைச் செப்பும்
தாவிலா மயனால் செய்த உருவினில் சார்ந்தெந் நாளும்
மேவுவன் மனுவி தித்த கோயிலில் வியந்து வாழ்வேன்
ஆவிநீ அளித்த வாறே அல்லாதென் சுயம்வே றாமோ (53) 713
ஆகிலும் உருத்தி ராதி யாவர்க்கும் அருளிச் செய்யும்
பாகம்அ தளிக்க வேண்டும் என்னஅப் படியே நல்கி
ஏகனும் உருவை நோக்கி மயனுக்கும் முகமன் ஈந்து
தாகம்உற் றிடும்உள் ளத்து மனுவின்கண் சார்ந்து சாற்றும், (54) 714
வாரிசூழ் புவிக்கு மன்னன்நீ வகுத்த
வல்லிதன் கோயிலில் மயனால்
ஆரிய உமையாள் சிலைவகுக் கெனவே
அமைத்தஅத் திருவுரு நமது
சீரிய சனிதா னத்திருப் பதனை
தேவிதன் ஆகமப் படியே
ஏர்பெறக் கொடுபோய்ப் பிதிட்டைசெய் எனவே
இசைத்தனன் கனவினில் எங்கோன். (55) 715
அதுஉணர்ந் தரசன் அஞ்சலி முகிழ்த்தே
அகமகிழ்ந் தமைச்சர்பால் இயம்பிக்
கதும்என எழுந்து கருணையம் கடலைக்
கருத்துடன் போற்றிஆ லயத்தில்
பதுமமண் டபத்தில் சேர்ந்தருள் உருவைப்
பார்த்திலக் கணம்எலாம் பரவி
மதிநிறை நூலோர் மறைவழி இமய
மாதுரு நன்கென வணங்கா, (56) 716
ஆகம முனிவோர் தம்மையும் வரித்தே
அயன்முடி விடவரை ஆய்ந்த
யோகநாள் செய்த ஓரையில் உமையை
யோகபீ டத்தினில் உய்த்து
தோகைதன் நாமம் கோமதி வனிதை
சுந்தரி எனப்பெயர் சாற்றிப்
பாகநூல் அமைந்த வண்ணமும் சொன்ன
தானமும் யாகமும் பன்னி. (57) 717
மனுமகிழ் வுற்றுக் கவுரியை அழைத்து
வந்திடு நந்தியை வதிட்டை
முனம்நிறு வியபின் கயிலையைச் சூழ்ந்த
மூரிநந்திகளினாலவர்களு
மனைவிமா னத்தைச் சூழ்ந்துவந் தனரால்
வரையுமான விமானஞ் சூழ்ந்
தினிதுட னிருக்க னியற்றின னிருந்தார்
யாவரும் போற்றிட என்றும் (58) 718
பிறியா வுடையாள் தன்னையும் ஈசன்
தன்இடப் பாகத்தில் பிதிட்டை
மறிவாழ் கையான் அருளினால் அம்பொன்
மன்னிய திருவுரு அமைத்து
முறையால் நிறுவி உருத்ரமா தர்களும்
மொய்ம்புடை யோகமா தர்களும்
நறையார் மொழி அட் சரவனி தையரும்
நயந்திட நிறுவினன் பணிந்தான். (59) 719
கோமதி பாதத் துணைமலர் போற்றிக்
கோமளக் கொவ்வைவாய்க் கோதாய்
பூமக ளுடனே பார்மகள் பரவும்
புண்ணியப் பொற்றொடிப் புனிதாய்
வாமமே கலையாய் மதிமுக மானே
மருதினில் வளர்மனோன் மணியே
சேமதா ரணியே திவ்யபூ ரணியே
தேவிநின் சிலம்படிக் கபயம், (60) 720
பூரணி புனிதை புண்ணிய வனிதை
புங்கவர் பரவுபொற் பாத
நாரணி அகில காரணி இமய
நங்கைஅஞ் சுகமொழி நாரி
வாரணி தனத்தி வாதிஆ வுடைய
வல்லியே கோமதி மாதே
ஆரணி அமிர்த ரூபிஆ னந்தி
அம்பிகை நான்உன தபயம், (61) 721
எனத்துதித் திறைஞ்சி இமயவள் பாகத்
திறைவனை யேறணி குடியாய்
தனுத்திகழ் மலையாய் அருள்எனும் கடலே
சங்கரா தாணுவே சசிவாழ்
புனல்சடை முடியாய் பொங்கர வணிந்த
பூதநா யகபுராந் தகனே
அனல்கண்நெற் றியினாய் அருச்சுன வாணா
அகிலகா ரணஉன தபயம், (62) 722
மற்றும் இம் முறையால் மனுக்குல வேந்தன்
வணங்கிமா மதிலுடன் வசந்தம்
பெற்றமண் டலமும் இருபிறப் பாளர்
பெருமைசேர் வீதியும் பிறவும்
நற்றவர் இருப்பும் நறுமலர் வனமும்
நாற்பெருந் தெருவும்நா னிலத்தோர்
உற்றஆ வணமும் சோலைஉய் யானமும்
உவகையால் சூழ்தர இயற்றா, (63) 723
கீட்டிசைக் கரிய சாத்தனும் தென்பால்
கிஞ்சுக வில்வநாண் மலரின்
தோட்டிதழ் அன்னை வனிதையும் மேல்பால்
தும்பிமா முகத்தனும் வடபால்
பாட்டளி துதையும் பாடலங் கடந்தற்
பாலையின் கன்னியும் பணைசூழ்
நாட்டவர் பரவு நான்குவீ தியினும்
காவல ராகநாட் டினனால். (64) 724
ஆலையத் துறுப்பும் அணிஅலங் காரத்
தைவகைப் பொருள்உலோ கமும்பொன்
காலுயர் மணியால் அமைத்த ஆ பரணம்
கவின்கிளர் சின்னம்எண் வகைய
நீலகண் டரைப்பூ சிப்பவர் முதலா
நிறுவியே நித்யநை மித்யம்
சீலநல் திருநாள் வாகனா திகள்தேர்
தீர்த்தமா மண்டபச் சிறப்பும், (65) 725
இவ்வகை பலவாம் பணிகளும் இயற்றி
ஏறுயர்த் தவரையும் எதிர்வாழ்
கவ்வையாம் பதத்து நந்தியார் தமையும்
கவிர்எனக் கவின் கொளும் அதரத்
திவ்விய சாயல் அன்னைஎம் அன்னை
தன்னையும் செழுமல ராலே
பவ்விய முடனே பூசனை செய்து
பத்திசேர் மனவழிப் பற்றால், (66) 726
சாரங்க வல்லி யானதன் தேவி
தன்னுடன் தரைபுகழ் மன்னன்
நேரங்கள் தோறும் பணிந்தெழுந் தன்பாய்
நேசனே போற்றிநின் மலனே
காரங்கொள் களத்தாய் கதிர்இளம் பிறையின்
கண்ணியும் பாம்புடன் அறுகும்
நாரமும் புனைந்த சடையனே மருத
நாதனே சரண்என நவின்றே, (67) 727
நாடொறும் பூசித் தன்பாய் நலம்பெறு பணிகள் செய்து
வீடுசேர் மன்னன் வாழ்வு பெற்றினி திருக்கும் போது
சேடவர் பணியும் தெய்வ மனுவின்தே சிகர்வ சிட்டர்
கூடிய முனிவ ரோடும் கோவுறை மருதம் உற்றார். (68) 728
வேறு
மந்தா கினிஆ டிவளந் திகழும்
கொந்தார் மருதின் குவைமே வியசீர்
எந்தாயை வணங்கி இணங்குநிலை
யந்தா னரனுக் கரசாற் றுபணி (69) 729
கண்டே மனம்எய் துகளிப் பினொடும்
வண்டே மலர்மாலை வனைந்த நெடுந்
திண்டோள் மனுவைச் செறியத் திருவார்
விண்டோ வியமா ளிகைமே வினனே. (70) 730
வசிட்டன் வருசெய் தியைவா யில்உளோர்
உசித்தம் பெறுமன் னனிடத் துரையா
பசிக்கும் பொழுதில் பதம்உற் றதெனாக்
கசித்தன் போடெ திர்ந்துகலந்தனனே. (71) 731
வேறு
பாதங்கள் பரவி ஏத்திப் பரஞ்சுடர் அருளைப் பெற்ற
போதங்கொள் முனிவா நீஎன் புன்குடில் இதனில் எய்த
ஏதங்கள் தீர்ந்தன் புற்றேன் இங்கெழுந் தருள என்னா
மாதங்க மன்னன் போற்றி மகிழ்ந்திட முனிவன் சாற்றும். (72) 732
எழில்செறி வளங்கள் ஓங்கும் இப்புடை மருதின் சீர்கள்
அழிவிலான் அருளிச் செய்ய அனைத்தையும் அறிந்தாய் அந்தோ
பழியுறு மகவான் போற்றிப் பவம்தவிர்த் தனன்பின் வேண்டிக்
கழிவிலாப் பதம்அ டைந்து கடவுளர்க் கரசன் ஆனான். (73) 733
இப்பதி போல்மற் றெங்கும் இலைஎன இயம்பி எந்தை
செப்புதற் கரிய சீர்த்தி செப்பியே அளவ ளாய்மீ
விப்பிர முனிவன் மன்ன னுடன்எழீஇ விமலற் போற்றத்
துப்புறழ் வேணி அண்ணல் ஆலயம் சூழ்ந்து போந்து, (74) 734
துதித்தடி பணிந்து போற்றிச் சோதியான் தனைப்பூ சிக்க
விதிப்படி வேண்டும் எல்லாம் அமைத்துமெய் விமலற் கன்பால்
ததிப்படி அபிடே கத்தால் சந்தனக் குழம்பால் ஆட்டி
நதிப்புனல் ஆட்டி நன்பட் டாடையும் நகைத்தன் போதும், (75) 735
சாத்திச்சந் தனம்கற் பூரம் தகரம்குங் குமமே கோட்டம்
சேர்த்திமா மதம்உள் ளிட்ட சிறந்தலே பனத்தால் மட்டித்
தாத்திதா ரோனை நோக்கி அழகிதென் றமலர்தம்மை
ஏத்திலே பனமா தேவ சுந்தரா எனத்து தித்தார். (76) 736
சங்கரா சரணம் மூலச் சம்புவே சரணம் பாதித்
திங்களும் புனலும் வேய்ந்த தேவனே சரணம் மாலும்
பங்கயத் தவனும் தேடப் பருப்பதச் சுடராய் நீண்ட
பொங்கழல் உருவம் ஆன புண்ணியா சரணம் போற்றி, (77) 737
எனத்துதித் திறைஞ்சி நின்ற இருவருக் கெதிரே ஈசன்
சினப்பொரு விடைமேல் தேவி பக்கமும் திங்கள் வேய்ந்த
தனிச்சடை முடியும் காள கண்டமும் தவள நூலும்
அனல்கணும் புயங்கள் நான்கும் அபயம்செய் கரமும் ஆக, (78) 738
தோன்றினன் செயலற் றங்ஙன் துதித்தனர் கண்டு போற்ற
ஈன்றஆன் கன்றை நோக்கும் இயல்பென மனுவை நோக்கி
வான்றவம் நீசெய் கின்ற மந்திரப்பணிக்கு வந்தோம்
சான்றவ ருடன்நீ சாற்றும் இலேபன சவுந்த ரப்பேர் (79) 739
நண்ணின நினக்கும் பெயர் நாட்டினம் நாடாள் கீர்த்திப்
புண்ணியப் புதல்வர் ஈந்தோம் புவிதனில் இன்னும் பன்னாள்
எண்ணிய போகம் மூழ்கி எம்உல கடைவாய் உன்பேர்த்
தண்ணளித் தீர்த்தம் தோய்வோர் சந்ததிப் பேறும் சார்வார், (80) 740
திரம்என விடையோன் கூறத் தேவர்கள் ஆக்கங் கூறத்
தரைபுகழ் மன்னன் போற்றித் தாழ்ந்தனன் எங்கோன் அங்ஙன்
பரம்அதாம் சிவலிங் கத்தில் புகுந்தனன் பண்பு சான்ற
அரையன்மெய்ப் புளகம் உற்றே அளவிலா மகிழ்சி றந்தான். (81) 741
வேறு
அண்ணல் எதிர்ந்தருள்நல்கிய தன்மை அகத்துவ கைக்கிணையாய்
எண்ணிய ஏற்றனம் என்ன மகிழ்ந்தியல்பான விழிக்குருடன்
கண்ணை விழித்திடல் பெற்றன போலும்இலோன்மிகு கைப்பொருளை
மண்ணிடை பெற்றனன் போலும் வியந்தனன் மாதினுடன் பணியா (82) 742
பெற்றம் உவந்தருள் நாய கனைப்பணி வுற்றருள் பெற்றபினும்
நற்றவ நீத வசிட்டரும் மன்னவனுக்குயர் ஆசிநலம்
உற்றிட நல்கி உவப்பொடும் ஏகிட உண்மையுடன் பணியா
அற்றவர் ஆசி அடுத்தனம் என்றாக எய்தினன் அவ்வளவே. (83) 743
வேறு
மலர்முக மன்ன வன்தான் மன்பதை காத்து வாய்மை
மலர்மகள் என்ன வாய்ந்த அணங்கினோ டளவு நீடி
நலம்மலி வுற்றி ருக்கும் நாடனி லங்கை யால
விலையெனும் வயிற்கருப்பம் எய்தினள் மதிஈ ரைந்தில். (84) 744
ஆன்றவ ரளக்கும் நாளில் அமைந்திடு மோனந் தன்னில்
தோன்றுபுத் திரற்கு நாமம் சுந்தர மனுஎன் றிட்டுச்
சான்றநன் மைந்த னுக்குத் தன்முடி தரித்து வையம்
மூன்றையும் புரக்கும் கீர்த்தி முறைபுரிந் திருந்தான் மன்னோ. (85) 745
தருசிவ தருமன் தண்மரு துற்றோன்
தனகா ரியமே சார்வாய்
இரவும்நண் பகலும் இடைவிடா தியற்றி
இம்மையில் பெற்றவன் இனிய
கரை இலா இன்ப பூரண ஞானக்
கதிஅடைந் தான்கழல் பாத
விரைகமழ் மலரின் வண்டெனப் பொருந்தி
விரவினன் மனுகுல வேந்தன். (86) 746
மைநிகர் கூந்தல் அன்னைகோ மதித்தாய்
வதிந்திட மயன்அளித் திட்ட
மெய்யர்வாழ் மருதில் இந்திர நீலம்
விளங்கிய திருவுரு இன்னாட்
பொய்யுகத் தவர்க்குத் தக்கதாம் நிறமாய்ப்
பொலிந்தினி திருந்தனள் புனிதை
துய்யகோ மதிஅக் குவடதா யினதால்
சுந்தரிக் கப்பெயர் சொற்றான். (87) 747
மருதினான் மேனி மன்னன்வேல் எறிந்த
வடுவினால் வலப்புறம் வழும்பாய்க்
கருதிட இன்றும் என்றும்யா வர்க்கும்
காட்டியே இருந்தனன் கசிவாய்ப்
பரவிடு வோர்க்குப் பங்கயன் முதலோர்
தங்கட்கும் இரங்கியே பரிவால்
அருள்திரு உருவே ஆவுடை மாதாய்
அரன்தர உமையவள் அமர்ந்தாள். (88) 748
துகள் இலா வசிட்ட முனியுடன் மன்னன்
தூரியும் நானமுன் புழுகும்
அகம்மகிழ் வுடனே சந்தன களப
மணிந்ததால் அருச்சுனன் தனக்குத்
திகழலே பனசுந் தரன்என என்றும்
திருப்பெயர் சிறந்தன செல்வ
நிகழும்நா யகன்பேர் துதிப்பவர் என்றும்
நித்யகல் யாணர்ஆ குவரே. (89) 749
-ஆலயம் கண்ட படலம் முற்றும் -
7. சதுமுகப் படலம்
புனிதவத் திரன்பூ பாலன் புடைமரு தீசர் வைக
நனிய ஆலயம்செய் வித்து நன்பொருள் பெற்றல் சொற்றாய்
இனி அம்போ ருகனார் எய்தக் காசிஇத் தலமே என்று
மனியசோ தனையால் கங்கை வழித்தண்டம் வருதல் சொல்வாம். (1) 750
அத்திசூழ் புவிகள் எட்டும் அவனிசூழ் கரிகள் எட்டும்
துத்திசேர் நாகம் எட்டும் சொல்லிய வரைகள் எட்டும்
இத்தெலாம் பிரள யத்தில் இறந்திடும் காலத் தேயும்
நித்தியன் ஒருவன் போல நின்றிடும் காசி என்றே, (2) 751
முத்தொழில் புரியா நின்ற மூவரில் முன்னூல் வேதன்
அத்தனைப் பரிவி யாகம் செய்திட அத் தலத்தில்
மெய்த்தவ வழியால் போந்து விமலனைப் பூசித் தேத்த
நத்துறு கங்கை ஆடி நதிக்கரை ஏறி அங்ஙன், (3) 752
தன்பெயர் இலிங்கம் ஒன்று தாபித்துத் தனக்கு வேண்டும்
இன்பம்எய் திடவே பூசை இயற்றியே தவம்பு ரிந்தான்
அன்பினுக் கிரங்கி எங்கோன் அவ்விலிங் கத்தி னின்று
மின்புரி சடையும் காள கண்டமும் விளங்கு நீறும், (4) 753
முக்கணும் நான்கு தோளும் மூரிஏ றதனில் தேவி
பக்கமும் ஆகித் தோன்றிப் பங்கய நீசெய் கின்ற
மிக்கநல் தவம்வி யந்தோம் வேண்டிய வரம்கேள் என்றான்
நக்கபொன் முளரி பூத்த நான்முகன் தொழுது நின்றே, (5) 754
உன்னைப்பூ சிக்க வேண்டும் உனதுசூ லத்தால் தாங்கும்
இன்னக ரத்தில் யாகம் செய்திட வேண்டும் என்றான்
அன்னது கேட்டு நாதன் அதிகம் இத்தலத்தி லேயும்
நன்னல முத்தி நல்கும் நகர்ஒன்று நவிலக் கேண்மோ (6) 755
தெய்வதா ருவிற்சி றந்த பூதரம் என்ன ஓங்கி
ஐவரில் முதலாம் சோதி ஆரண வடிவ மான
திவ்வியப் புடைசேர் கின்ற அருச்சுனம் சிறந்து வாழும்
உய்பவர்க் கதுபோல் வேறே உலகினில் இல்லை மாதோ. (7) 756
பொதிகையின் சார்பில் ஓங்கும் புண்ணிய புவனம் தன்னில்
அதிகம்ஆ கியத லங்கள் அனந்தம்உண் டதனில் கங்கை
நதியெனும் பொருநை சூழ்ந்த நகர்புடை மருதம் ஆகும்
துதிபெறும் அதனில் வாழும் உயிரெலாம் சுரர்கள் ஆகும். (8) 757
சிவகண நாதர் வாழும் தெய்வஅத் தலத்தில் நம்பால்
தவமுடன் பூசை செய்து யாகமும் செய்து தந்த
நவமலர் அயனே போற்ற நலம்பெறு வரங்கள் ஈவோம்
புவனியில் கயிலை அந்தப் புடைமரு தினில்ஏ கென்றான். (9) 758
போதகன் பணிந்து ரைப்பான் புண்ணியம் செறிஇக் கங்கை
நாதனே அங்குண் டோதான் நயந்தருள் செய்வாய் என்னச்
சீதநீர் வேணி இந்தத் திருவேணி அதனில் உன்தன்
காதையை அமிழ்த்தல் செய்வாய் காட்டுதும் சோத கந்தான், (10) 759
கங்கையின் சோத கந்தான் கண்டிட உன்கைத் தண்டம்
இங்குயர் திரிப தாகைச் சங்கமம் இதனில் தானே
முங்கிட அமிழ்த்தின் தண்டம் முளைக்கும்அ தெவ்வி டந்தான்
அங்கது தென்பால் காசி ஆகுமாம் அந்தத் தண்டம், (11) 760
அமிழ்த்திடில் அதுபா தாள கங்கைஆ றாகச் சென்று
தமிழ்த்திசை யினில்உ ரைத்த கடனைசேர் சங்க மத்தில்
இமைப்பிலார் ஆடும் தாம்ப்ர நதியினில் எழும்பும் ஆங்கே
அமைக்கென தண்டம் தன்னை எனஅரு ளினன்ம றைந்தான். (12) 761
ஈசனைப் பணிந்து வேதன் இணையிலாத் தண்டம் தன்னைக்
காசிவே ணியில்அ மிழ்த்திப் படிந்தவன் கரையில் உள்ள
நேசனைப் போற்றி அன்பால் நெகிழ்திருச் சயிலம் போற்றி
வாசவன் மாயன் போற்றி வழிபடும் கோயில் வாழ்த்தி, (13) 762
வாயுலிங் கம்பூ சித்து மாவின்கீழ் இருந்த கோவைத்
தாயுமை பூசை செய்த தளியையும் தாழ்ந்து போற்றித்
தேயுவாம் மலையைப் போற்றித் திருக்கழுக் குன்றம் போற்றிப்
பாயுமுத் தாறு சூழ்ந்த பழமலைப் பதியைப் போற்றி, (14) 763
அந்தர லிங்கம் போற்றி வாழியி லானைப் போற்றிச்
சிந்துர முகவன் போற்றும் திருப்பதி போற்றித் தெய்வப்
பந்தணை நல்லூர் முத்தம் குடந்தைஆ ரூர்ப ணிந்து
சந்திரன் போற்றும் கோயில் ஐயாறு தனைப்ப ணிந்தே, (15) 764
மற்றுள தலமும் போற்றி ஆனைக்கா வணங்கி மூன்று
நற்றவர் பரவும் வெற்பை நண்ணியே பூசித் தேத்திக்
கற்றவர் மதுரை போற்றிக் கடல்இரா மீசம் மற்றும்
முற்றுற வணங்கி வேழம் முளைத்தவன் தன்னை முன்ன, (16) 765
வணங்கியே குற்றா லத்து வன்பலா இறைஞ்சி மற்றும்
அணங்கர வசைத்தோன் வாழும் பதிபணிந் தடவி சூழும்
மணந்திகழ் மருதை மேவி வணங்கியே பொருநை ஆடி
இணங்கிய கடனை கூடும் சங்கமம் எய்தி அங்கண், (17) 766
வந்திடும் போதில் தண்டம் எழுந்தது கண்டு மாயோன்
தந்திடும் புதல்வன் உள்ளத் ததிசயம் எய்திச் சார்ந்தான்
அந்தரத் தமரர் போற்ற அரவிந்தன் தண்ட தீர்த்தம்
இந்தமுக் கூடல் என்றே இறைஞ்சினார் ஏத்தி னாரே. (18) 767
போதினான் நதிஇ ரண்டும் பொழிந்தமத் தியினில் கங்கை
சோதனை யாகத் தோன்றும் வேணியில் தோய்ந்தான் அங்கண்
மேதினி மணாளன் தோன்றச் சாட்சியாய் விதிதண் டத்தை
நீதமாய் எடுத்துக் கொண்டு நிகர்இலா மகிழ்சி றந்தான். (19) 768
தண்டசோ தனையால் கங்கை சார்ந்தது கண்டோம் என்றே
அண்டர்கோன் மோட்ச தீர்த்தத் தருகினில் ஆடி ஏறிப்
புண்டரி கத்தோன் சென்று புழைக்கைமா முகனைப் போற்றி
முண்டகப் பதம்ப ணிந்து முன்னவன் தன்னை உள்கி, (20) 769
பிரமமாய் நின்ற வேத விருக்கமாய்ப் பிறைசேர் கின்ற
மருதமும் அதன்பால் வாழும் மாதவர் வதியும் பண்பும்
சுருதிகூ றியபுள் வாழும் சோலையு மாலை நீடும்
திருவளர் சிறப்பும் தெய்வத் தானமும் திசையோர் வாழ்வும் (21) 770
கண்டிறும் பூது கொண்டே கடவுளர் பரவும் தெய்வ
விண்டலர்த் திருவின் மேலாம் விடையவன் மருதைச் சூழ்ந்து
தண்டலை சூழும் கோயில் மருந்தினைத் தாழ்ந்துள் எய்தி
வண்டலர் கொன்றை வேணி வரதனை வணங்கி நின்றே, (22) 771
பூசனை இயற்ற வேண்டும் பொருள்களும் அமைத்து வல்லே
ஈசனுக் குவப்ப தாக எண்கணன் தீர்த்தம் ஆடி
ஆசிலாக் கடன்மு டித்துச் சங்கற்ப மாற்றி யக்கு
மாசிலா நீறு தாங்கி அன்பொரு வடிவம் ஆகி, (23) 772
கங்கைமஞ் சனத்தி னாலும் காமதே னுவின்ஐந் தாலும்
ஐங்கனி அமுதத் தாலும் அளவிலா வருக்கத் தாலும்
சங்கரர்க் குவந்த சந்த னாதியால் அபிடே கித்து
மங்கல உபசா ரத்தால் வான்பரி வட்டம் சாத்தி, (24) 773
கற்பக மலரால் கன்னி களபம்சேர் சந்த னாதி
அற்புத மான தொங்கல் ஆபர ணாதி யங்கம்
பொற்பணி மணிக ளாலே புனைந்தலங் காரம் செய்து
பற்பல மனுவால் ஏத்திப் பாத்தியா சமன மாற்றி, (25) 774
வானுயர் அமுதம் கன்னல் வளம்படு கனிவர்க் கம்பால்
தேனெய்பண் ணியம்அ டைக்காய் திருமுன்நே வேதித் தன்பாய்
ஏனைய தூப தீபம் இனியசோ டசம்இ யற்றி
கோனமார் வில்வம் சாத்திக் கடவுளுக் குவப்ப தாக, (26) 775
மந்திர புட்பம் சாத்தி அரன்எழில் நோக்கி நின்று
புந்தியால் இறையைப் போற்றப் புரிந்ததெத் தவமோ என்று
சுந்தரன் தன்னைச் சூழ்ந்து பணிந்துநா ஆரும் சொல்லால்
சிந்தனை செய்து முன்பு சேவையால் பணிந்து நின்றே, (27) 776
சங்கரா சரணம் மூல சம்புவே சரணம் மங்கை
பங்கனே சரணம் நீற்றுப் பரமனே சரணம் நெற்றிச்
செங்கணா சரணம் எங்கள் தேவனே சரணம் செங்கைப்
புங்கவ சரணம் பூத நாயக சரணம் போற்றி (28) 777
வேறு
சரணம் மாமரு தீசனே நின்அடி சரணம்
சரணம் ஆவுடை யம்மைதன் மணாளனே சரணம்
சரணம் மால்அயற்கரிய தீச் சயிலனே சரணம்
சரணம் மங்கலம் ஆகிய தனிமுதல் சரணம், (29) 778
தெக்கண காசி காட்டித் திரிவேணி இதனில் தானே
முக்கணா பிரம தண்டம் முளைத்திடக் காட்டு மூவேல்
மிக்கவ சரணம் வெள்ளை விடையவ சரணம் என்று
செக்கர்முண் டகத்தோன் போற்றிச் செய்தனன் திளைத்து நின்றான்(30) 779
அப்பொழு தமலன் அந்த இலிங்கத்தில் அங்கு ரித்தே
எப்பெருந் தேவும் போற்ற இமையவ ளுடனே தோன்றிச்
சுப்பிர மடந்தை பாகா சுருதிமா மனுவால் நம்பால்
ஒப்பிலா தியற்றும் பூசைக் குவந்தனம் உனக்கு வேண்டும். (31) 780
உத்தம வரம்கேள் என்றான் உந்தியில் உதித்தோன் போற்றிப்
பத்தியாய்ப் பணிந்து காசிப் பதிஇதன் சோத கந்தான்
மெய்த்ததண் டதனால் காட்டி வித்தனை வேணிக் கங்கை
மத்தியில் தண்ட தீர்த்தம் இவைஎன வழங்க வேண்டும் (32) 781
இத்தலத் துன்னை என்றும் பூசிக்க வேண்டும் இந்த
முத்தியாம் பதிக்கும் இந்த மூர்த்திக்கும் தீர்த்தத் துக்கும்
நித்தம்என் பெயர்து லங்க நின்அருள் செய்ய வேண்டும்
மத்தநின் பதவி வேண்டும் என்றடி பணியும் போதில். (33) 782
இன்னன தந்தோம் யாவும் படைத்திடும் இயல்பு தந்தோம்
மன்னுதண் டத்தை இங்கு வதிட்டைசெய் ததைப்பூ சிப்பாய்
பின்னும்உன் தனக்கு வேண்டும் பதவியும் பெறுவாய் என்று
மின்அவிர் சடையான் கூறி இன்னொன்று விளம்பு மாலோ. (34) 783
வேறு
அம்போ ருகநீ செய்திடும் பூசைக் குவந்தோமால்
தம்போ லவும்மிகு வானவர் தாம்உண் ணுதற்கினிய
நம்பூ தரவட மேல்திசை நாடித் திகழ்யாகம்
எம்பால் உறச்செய் வாய்என இசைத்தான் அரவசைத்தான். (35) 784
நாட்டம் திகழ்நுத லான்அருள் நாட்டம் கொடுமறைந்தான்
ஏட்டம் மலரோன் போற்றினன் இறைஈந் திடுமொழியைக்
கேட்டன் பொடுவட மேல்திசை தனிலே கிளர்யாகம்
வேட்டன் பொடுவிரை வில்செய எழுந்தே அவன்விதித்தான், (36) 785
மகம்செயும் சாலை கோலி அசுவமா மேத யாகம்
சகம்தனில் இன்பம் எய்தத் தாருநாட் டவர்க ளோடும்
உகந்திறை யவனுக் கன்பாய் உஞற்றியே உதவு நீரால்
அகந்தவா நெறியி னாலே ஆற்றிஅந் தரர்கட் கீந்தான், (37) 786
வேறு
சந்நிதி யின்கீழ் சார்பில் தண்டமும் பதிட்டை செய்து
பன்னரும் பூசை ஆற்றிப் பண்புறச் சாறும் ஆற்றிக்
கன்னலை நிகர்த்த சோதிக் கடவுளைப் பரவிப் போற்றி
இந்நிலத் தின்பம் பெற்றுத் தன்அர செய்தி னானே. (38) 787
வேறு
அழியாப் பதிநிதிச் சங்கம தீர்த்தத் தவதரித்தே
தெளிவெய் திடத்தண் டந்தரு திரிவேணி சங்கமமா
மொழியிற் பலன்என் பான்கிறுச் சனமூழ் கிடஎய்தும்
எளிதில் பலன்பெறு வாரிம தண்டங் களும்இலரே (39) 788
வேறு
வெம்பரி யாகம் செய்த சாலையில் மேவும் தீர்த்தம்
இம்பரிற் சாலா தீர்த்தம் இதில்படி வோர்கள் மேலை
உம்பர்வாழ் பதவி சேர்வார் உடன்உறை சாலை நாதன்
அம்பகம் போற்று வார்கள் அரன்பதம் அடைவ ரன்றே. (40) 789
வேறு
பொன்பாய் புடைமா மருதமிதை
பூவின் உறைவோன் சோகத்தால்
தென்பால் காசி இதுஎன்று
திகழ்கைத் தண்டம் கங்கைவழி
அன்பாய் எய்த அதற்கென்றும்
சாட்சி யாக அச்சுதன்தான்
இன்பமாக என்றும் இருந்
திசைப்போர்க் கினிதாய் எய்தினனால். (41) 790
- சதுமுகப் படலம் முற்றும்-
8. பதியத்தி தீர்ந்த படலம்
தலமதில் தென்பால் காசி தண்டசோ தனையால் கண்ட
அலரவன் வழிபட் டேத்திப் பெற்றதை அறைந்தாம் ஆங்கே
மலடியாம் பெயரை மாற்றி மகவளித் திடும்தீர்த் தத்தில்
குலடிசெய் பாவம் போக்கிக் கதிபெற்ற குணண்உ ரைப்பாம் (1) 791
சீர்திகழ் கண்டல் சூழ்ந்த வாரிசேர் தீரம் தன்னில்
ஏர்திகழ் பதியில் வாழ்வோன் இருபிறப் பாளன் எஞ்சா
நீர்திகழ் மதியோன் இல்வாழ் நேரிழை இரதி போல்வாள்
கூர்திகழ் வேற்கண் மங்கை குலடிஎன் றுரைக்கும் பேராள், (2) 792
கண்டபேர்க் கணங்கொப் பாவாள் கணவனுக் குரிமை இல்லாள்
உண்டியும் உதவாள் கள்ளக் காதலற் குள்ளம் வைத்து
மண்டியே பூசல் செய்து மணந்தவற் றணந்தெந் நாளும்
கொண்டவற் கிடரே செய்யும் கருத்துடைக் கொடிய பாவி, (3) 793
உள்ளக்கா தலினால் காமம் துய்த்திட உன்னி வந்த
கள்ளக்கா தலன்பால் சேர்ந்து கலக்கும்நாள் ஒருநாள் தன்னில்
எள்ளத்தாம் அளவும் குற்றம் இன்றிய கணவன் கண்டு
விள்ளத்தான் இழிபென் றெண்ணி மெள்ளத்தான் ஒதுங்கிப் போனான்(4) 794
பொறுமையால் மனத்துள் கொண்டு புகன்றிடா நின்ற வேத
அறுதொழில் ஆட்சி யானை அழிதகை யவளும் கண்டு
மறுமணத் தவனைத் தான்சேர் வகையினை அறிந்தான் என்று
கறுவுறு வானை யன்னாட் கொன்றிடக் கருதி வந்தாள். (5) 795
அரையிருள் அற்றம் பார்த்தே குலடிஈ தமையம் என்றே
உறுதுயில் கொள்ளும் போதில் ஓங்குகூன் வாளி னாலே
மறுஇலான் தனைஅ ரிந்து வதைத்தனள் மனம்வே றாகி
இறைவனாம் பிணம்ஒ ளித்தே இல்அகன் றேக உன்னி, (6) 796
அழிதகை அவளுக் கான அன்புளான் தன்பால் கூடி
வழிகொடு வேற்றூர் போக மனத்தினில் எண்ணி வந்து
மொழிதடு மாறி வேண்டும் பொருள்களு முகந்து கொண்டு
பழிதனக் கஞ்சா வேதப் பன்னிஅப் படியே சென்றாள். (7) 797
இல்அகன் றிருள்யா மத்தில் ஏதிலா னுடனே வேற்றூர்
செல்லும்கான் அதனில் வேடர் செயிர்த்திடச் சேர்ந்தான் ஓட
வல்லிசேர் இடையாள் கையிற் பொருளினை வலிந்து கொண்டு
கல்லிடை சோரர் ஓடக் காரிகை தனித்தாள் மன்னோ. (8) 798
துணையின்றி வனத்தில் எய்த்து நின்றிடும் துணைவி சோர்வைக்
கணவனாம் மறையோன் பார்த்துக் காரிகை தனைச்சேர்ந் தென்ன
மணமகன் பிரம கத்தி வடிவமாய் மனையைப் பற்றிப்
பிணியுறும் வங்கைச் சேர்ந்த உடும்பெனப் பிடித்த தன்றே, (9) 799
பதிஅத்தி பிடித்த லைப்பப் பங்கமாய்ப் பேய்கோள் பட்டு
நதிஉற்ற வரையும் கானும் நகரியும் இடங்கள் எங்கும்
கதிஅற்ற மதியால் குறைக் காற்றுழல் காசை வீப்போல்
கொதிஉற்ற உலைபோல் வெம்பிக் குலடியும் அலைவ தானாள். (10) 800
கொன்றிலான் தனைஒ ழித்துக் கைக்குள பொருளும் கொண்டு
சென்றய லுடன்வேற் றூர்போய்ச் சேர்குதும் என்னும் செய்கை
ஒன்றுதான் நினைக்கத் தெய்வம் வேறொன்றை உதவும் என்ப
தின்றிவள் தன்னால் காணப் பெற்றனர் இறும்பூ தெய்தா, (11) 801
பூவினில் பொன்னே போல்வாள் பொங்கழல் படும்பூப் போலாய்
ஆவென அலறும் சோரும் அழும்விழும் அந்தோ அச்சோ
பாவமோ சிவதா என்கும் தாகத்தால் பாணி தேடும்
நோவுறும் விம்மும் வல்லே விழித்திடும் நொய்யும் சோரும். (12) 802
தனக்கன்பன் அந்த ணாளன் தனைக்கொன்று சோர இன்பம்
மனத்துறச் செய்கை யான பாவத்தின் வழக்கி னாலே
சினத்துடன் செல்வர் எள்ளத் திரைத்துரும் பெனவே சென்று
வனத்துறும் அலகை போல மாய்ந்திடா தெளியை ஆகி, (13) 803
அலைந்திடும் நாளில் மூப்பும் அணைந்திட அவலம் உற்றே
உலைந்திடக் கூர்மம் குட்டம் உறுபிணி வருத்தத் தாலும்
அலைந்திடும் குலடி இந்த வனத்திடை வரும்அவ் வேளை
துலைந்திடப் பாவம் நீங்கும் அதிசயம் சொற்றக் கேண்மின். (14) 804
பிச்சைபுக் குழன்று வாடும் பேதையாள் கணவன் தன்னை
நச்சவே கொன்ற பாவி எனஉரைத் திடந லிந்தே
அச்சம்உற் றுழல்வாள் முன்னை அணுவினல் வினையால் இந்த
உச்சியிச் சிரவன் போற்றும் தலத்தினை உற்றாள் மன்னோ. (15) 805
வந்திடும் பொழுதில் புத்தி மயக்கமும் வினையும் நீங்க
விந்தைநன் மருதைக் கண்டாள் இடர்களைந்தின்பம் உற்றாள்
கந்தமார் பொருநை என்னும் கங்கையின் நீரைக் கண்டு
முந்துதா கத்தால் ஓடி நீர்குதடித் திடவே முன்னி, (16) 806
திருமகள் வாக்கின் செல்வி தீர்த்தத்தின் அருகில் திங்கள்
மருவிய குடையால் காக்கும் மனுபதி தீர்த்தத் தென்பால்
பெருகிய நதிஇ டத்துப் பெட்புடன் நீரை மொண்டு
பருகிடக் குனிந்த போதில் பெருவெள்ளம் பரப்பி ஓங்கி, (17) 807
வந்திடச் சலத்தி ழுக்கிக் குலடியும் வனத்தில் வாழ்ந்தே
உந்தவே சுழிப்பட் டூழின் சுழிப்படர் அகன்று ழன்ற
முந்திய பாவம் நீங்கச் சிவசிவ எனமொ ழிந்தே
எந்தையைத் துதித்தி றந்தாள் மரணசந் தியினில் எங்கோன். (18) 808
விடையின் மேல் உமையா ளோடும் விண்ணினில் காட்சி நல்கிப்
புடைமரு தீசன் இந்தப் புவியினில் யாரும் கேட்கக்
கடைகொள்பார்ப் பனிசெய் பாவம் கற்பங்கள் நரகுற் றாலும்
விடும்அல இத் தலத்தை மேவிஇத் தீர்த்தம் தன்னில், (19) 809
மேவிடப் பெற்ற தாலே வினைஎலாம் ஒழிந்தாள் இங்குப்
பாவங்கள் ஒழித லாலே பாபவி நாச தீர்த்தம்
பூவினில் இவைஎன் றெங்கோன் புகன்றுபோர் விடையி னினின்றும்
தாவிப்பார்ப் பனிதன் காதில் தாரக மனுவை ஓதி, (20) 810
அறந்திகழ் தேவி யோடும் அமலைசா ரூபம் ஈந்தான்
கறங்கிசை நாதம் ஐந்தும் ஆர்த்திடக் ககன விண்ணோர்
நிறந்தரு மலர்கள் தூவ நிருமலன் இலிங்கத் துற்றான்
இறந்தபார்ப் பனியும் சாரூ பத்தினை எய்தி அங்கண், (21) 811
நின்றிட விமானம் கொண்டு விண்ணவர் நிறைந்து நேர்ந்து
பொன்திகழ் குலடி என்னும் புண்ணிய மனையாள் தன்னை
மின்திகழ் விமானத் தேற்றி விடையவன் கயிலை மேவச்
சென்றிடக் கண்டார் யாரும் திளைத்தனர் இன்ப வெள்ளம். (22) 812
வான்வழி விமான மீதில் வந்தபார்ப் பனிமின் னாளும்
கோன்உறை கயிலை எய்திக் கொண்டல்ஊர் இமய வல்லி
தேன்அலர் மலர்த்தாள் போற்றிச் சிலதியாய் ஏவல் செய்யும்
தூனலார் தம்மில் மேன்மை பெற்றனள் சுதினம் உற்றாள். (23) 813
- பதியத்தி தீர்ந்த படலம் முற்றும்
9. அவிர்த்தானப் படலம்
பதியத்தி குலடி தன்னைப் பற்றிய பாவம் தீர்த்த
கதைமுற்ற உரைத்தாம் இன்னும் கல்யாண புரத்தில் தானே
விதிஉற்ற பிரம சாரி அவிர்த்தானன் வினையைத் தீர்த்து
மதிபெற்ற கதியைத் தந்த வகையினை வகுத்து ரைப்பாம். (1) 814
சுந்தர முனிவர் கேட்பச் சூதமா முனிவன் சொற்று
முந்திய கற்பம் தன்னில் மொய்த்தபா தவங்கள் சூழ்ந்த
உந்திசூழ் புவனம் தன்னில் ஒருபதி உம்ப ரோடு
நந்தியார் மருவு கின்ற நந்திமால் வரையின் பாங்கர், (2) 815
புனந்திகழ் மகத தேசம் தனில்ஒரு புரத்தில் உள்ளான்
வனைந்தபுண் டரிகத் தாமன் மறையவன் வயங்கு நூலான்
கனந்தவ றாத நான்கு கலைமறை கற்ற வல்லான்
சினந்தவிர் புந்தி யான்அங் கணன்எனும் பெயர்சி றந்தோன். (3) 816
நம்பனைத் துதித்தெந் நாளும் நலம்பெறு நன்மை உள்ளான்
உம்பரும் கவிஅ ருத்தி உறுபலன் பெறுதும் என்றே
இம்பரில் விதியால் யாகம் இயற்றுதற் கிசைவால் வேள்வித்
தம்பம்ஒன் றமைப்பான் எண்ணிச் சார்ந்திடும் சீடர் தம்முள், (4) 817
அந்தணன் பிரம சாரி அவிர்த்தானன் தனைஅ ழைத்தே
மந்திர யாகம் செய்யக் கருதினன் மகத்தி னுக்குத்
தந்திரப் படியே யூகம் சமைத்திடத் தருவாய் என்னப்
புத்தியில் உணர்ந்து மிக்கோன் விடைபெற்றுப் போதும் எல்லை, (5) 818
வினைஞரோ டேகி ஆசான் விதித்திடும் பணிமேல் கொண்டு
சினைசெறி காவு சூழ்ந்த செறிவனம் தன்னில் எய்திக்
கனைசெறி முகில்சூழ் கின்ற வரைகளும் கலந்து நாடி
முனைவன்நூல் சொன்ன வாறே முயலுவார் முற்ற எண்ணி (6) 819
விதிப்படி எக்யதாரு வேண்டியே வனங்கள் தோறும்
மதிப்புடன் வினைஞர் போக மறையவன் தனித்தான் காகம்
கொதிக்கநீர் வேட்கை உற்றே கொடுவெயில் சோகத் தாலே
நதிப்புனல் தேடிக் காணா மூர்ச்சித்து நலிவான் அங்ஙன், (7) 820
மள்ளியாம் புலைஞர் வாழும் வனம்என அறியா தேகிக்
கள்ளியின் சூழல் தன்னில் களைத்தனன் உற்றான் மேலோர்
எள்ளிய சாதிக் குண்ட கேதுவா மீதா னின்ற
துள்ளிய கயல்போல் கண்ணாள் தோகைகந் தற்பமானி (8) 821
என்னும்ஓர் தையல் அங்ஙன் எய்தினள் இந்தச் சார்பில்
துன்னிய பிரம சாரி சுந்தரன் மதனன் போல
மன்னினோன் தன்னைக் கண்டாள் மாரனோ வானோர் தம்மில்
பொன்னிநா டிழிந்து போந்த புனிதனோ இவன்தான் என்ன, (9) 822
மின்னிடை யாள்கண் டாவி சோர்ந்தனள் விரகம் உற்றே
என்னிவன் செயல்தான் என்னே என்றுநைந் திவனைச் சேர
முன்னியே அவன்பால் எய்தி முன்நின்றாள் அயர்ச்சி யானோன்
இன்னல்தீர்ந் திவளை நோக்கி யார்கொல்என் றெண்ணி இந்த, (10) 823
வரைஅர மகளோ கானில் வழங்கிடும் தேவோ என்னப்
பிரமசா ரியில்மிக் கோனும் பிரமையால் இவளை நோக்க
மருவுதற் கமைந்த நீராள் வனத்திடை வரும்நீ யார்என்(று)
உரைசெய்தாள் தகையால் வாடி உற்றனன் என்று சொற்றான். (11) 824
பின்அவன் புலைஞன் மாதைப் பேதைநீ யார்இங் குற்ற
தென்என ஐயோ னும்இங் குற்றபு லைஞர்க் கெல்லாம்
மன்னவன் என்ற கன்னி யான்என்றாள் மறையின் வாய்மை
முன்னவன் அயர்ச்சி நோக்கித் தீர்ந்திட முன்னிச் சொல்வாள் (12) 825
அரம்பையின் கனியும் தேனும் அளிக்குவன் அயின்ற யர்ச்சி
காத்திடு வாய்என் றோதக் காளையாம் மறையோன் சொல்வான்
வரம்பிலாப் புலைஞர் தம்பால் வாங்குதல் கூடா தென்றான்
விரும்பிஆ வத்து வேளைக் காம்என்றாள் விடாய்மிக் கானும், (13) 826
வாங்கியே புசித்துக் காட்டு மடுவில்நீர் பருகி அங்ஙன்
தேங்கிய மயக்கம் தீர்ந்தான் தென்றலான் தெறும்அம் பாலே
பாங்கினில் யாரும் இல்லாப் பதமும்ஒத் திருந்த பண்பால்
கோங்கிள முலையாள் நின்ற குறிப்பினைக் குறித்து நோக்கா, (14) 827
வேறு
ஏந்தெழில் அமுதம் உமிழ்முலைப் பணைப்பும்
ஈர்ங்கனித் தொண்டைஅம் துவர்வாய்ச்
சேந்திதழ்த் துடிப்பும் சிறந்தமென் குழலும்
சேலென கண்களின் றொழிசங்
காந்தளம் கையும் கலைநெகிழ் இடையும்
கண்மணி நகைஇளங் கதிரும்
வாய்ந்திடு மயிலார் சாயலும் ஆக
நின்றிடும் வனிதையை மறையோன், (15) 828
கண்டுளம் மயலால் கருதிவிள் ளாது
வைதிகக் கருத்தினால் கவர்ச்சி
கொண்டிடும் இவளைக் கூடிட முயன்று
கொம்பரின் அசைந்துகூர் விழியாம்
வண்டெனும் பகழி ஏவியே அவன்தன்
மனத்தினைக் கவர்ந்தனள் வாய்ந்த
ஒண்தொடி சாடை உரையினால் மருவ
ஒல்குவிட் டுடம்படல் உற்றான். (16) 829
புலைஞன்மா துடனே புலைஞனாய்க் கூடிப்
போகம்உற் றுறவுடன் பொருந்தி
நலங்கெட மூவரு டம்நண் ணியபின்
நாளில்நீ சத்துவம் மூடி
அலந்தர மனம்வே றாகிஉள் இல்லா
ஆனைஉண் கனிஎன அயர்ந்து
சலந்தரு குறைநோய் சயமுட னீழல்
சார்ந்திடப் புலைச்சியும் தள்ள, (17) 830
சரத்தினால் வாடி அவ்விடம் பிரிந்தான்
துயரம் உற் றுறுகண்நோய் துன்பம்
வருத்திட அரவம் வுளைந்திடு மதிபோல்
மயங்கிவாய் குதட்டியே மாளாக்
கருத்தவ லம்அதாய் அலகைகோள் பட்ட
கவலனாய்ப் பசியுடன் காடும்
விருத்தமும் நாடும் நகரியும் கடந்தான்
வேர்வையும் தாகமும் மெலிவும், (18) 831
கொண்டுசண் டாள வடிவமாய்க் கோஊன்
கொண்டிடும் கோதனை எதிரே
கண்டபேர் ஓட மதுவுடன் கள்வன்
அருந்திய கயவனைத் துயரம்
மிண்டுசெய் குணத்தால் யாவரும் இரங்க
வெறியனாய்த் திரியும்நாள் இவற்குப்
பண்டை நல் தவம்ஓர் அணுஎனும் பயனால்
பாதகம் நீங்கிடல் பகர்வாம். (19) 832
ஆறலைந் துற்றோன் வரும்பொழு திந்த
அருச்சுனப் பதியினில் கங்கை
மீறிய நதியில் தீர்த்தம் கொண் டாட
விண்ணவர் மண்ணவர் விரவி
ஏறதே றுவந்த இறையவன் கீர்த்தி
இயம்பியே ஏகுவா ருடனே
மாறிலா துற்றான் வருபவர் தம்மை
வினவியே மருதினில் வருவான். (20) 833
மூவகைச் சிறப்பும் பொருந்தும்இவ் வெல்லை
காண்டலும் முனியும்நீ சத்வம்
தாவிடச் சற்றே மயக்கமும் தெளியத்
தன்அறி வெய்திடச் சம்போ
தேவனே சிவனே சிவசிவ என்று
சிந்தனை செய்துதோத் தரித்தான்
பாவகன் இவன்செய் பாதகம் நீங்கப்
பரமனை நினைந்திது பணிக்கும். (21) 834
வேறு
வேறொரு கதியும் இன்றி வீழ்ந்திடக் கடவன் பாவம்
மாறவே தீர வேண்டி வரதனும் இரங்கி வல்லே
ஏறின்றி உமையாள் இன்றி எதிஎன எழுந்து தோன்றி
வீறுசெய் பாவம் தீர வேதியன் தனைவி ழித்தான். (22) 835
பார்வையால் வசனப் பண்பால் பாதக வினைகள் நீங்க
வேர்வைசேர் இவனை நோக்கி மெலிவுற இவண்நீ வந்த
யார்என வரவே தென்ன அறைகுவான் அடியேன் கஞ்சத்
தாரவன் ஈன்ற மைந்தன் சார்ந்தனன் வனத்தில் ஓர்நாள், (23) 836
யூகம்கொள் வதற்காய் உற்ற பொழுதினில் ஒருத்தி நீச
தேகம்கொண் டவள்என் சிந்தை கவர்ந்திடத் தியக்கம் எய்தி
மோகம் கொண் டாளைக் கூடி முயங்கியே நீசம் உற்றேன்
ஆகையால் இனிமேல் இல்லா அவதியும் பட்டேன் ஐயா (24) 837
பொங்கரும் காடும் நாடும் பொருப்பினும் புகுந்த லைந்தேன்
எங்கணும் திரிந்தேன் இப்போ திங்குற்றேன் எளியை ஆகித்
துங்கமா மருதில் வந்தேன் என்றவன் உண்மை சொல்லி
மங்கைபா கம்கரந்த முனிவரை வணங்கிப் பின்னும், (25) 838
எய்ப்பிடத் தினிலே என்னை ஆளுதற் கெதிரே தோன்றி
வைப்பென வந்தீர் என்பால் வலிசெயும் வாதை யான
மெய்ப்பிணி நீங்கும் வண்ணம் விளம்பிட வேண்டும் என்னப்
பைப்பணி கரந்த யோகர் பாதங்கள் பரவி நின்றான். (26) 839
இரங்கினன் திருவுள் ளத்தில் எம்பிரான் இவனை நோக்கி
வரம்பிலா தியற்றும் நீஉன் வல்வினை மாய்வ தெங்ஙன்
அரம்பையின் கனியால் வந்த அவதிஎன் றறைந்து நீயும்
புரந்தருள் மருதம் எய்தப் பெற்றதால் புகல்வோம் கேண்மின் (27) 840
கொலைசெயப் புரியும் தேறல் கொண்டிடச் செயும்கு லந்தான்
நலிதர இயற்றும் கேண்மை நன்றியைக் கொல்லும் நல்ல
புலன்அறி வினைக்கெ டுக்கும் பொன்கள வுடன்பொய் புல்லும்
இலைஎனும் காமம் துய்ப்போர் எய்திடா நரகம் இல்லை. (28) 841
வேறு
பலகற்பமும் பலநாள்களும் பதைப்புற்றிடக் கொடிய
மலம் முற்றிய நரகத்திடை மன்னிக்கிடந் தாலும்
கொலைமுற்றிட வேசெய்துறு கோஊனை அருந்தும்
புலைபற்றிய நீயும்கரை ஏறும்புகல் இலதால், (29) 842
நீசத்திதன் மோகத்துற நீசத்துவம் ஆனாய்
பேசிற்பிழை யாம்உன்பெயர் பிதற்றப்பிணி உற்றே
பாசத்தொடு நரகெய்திய பதிசேருவர் பாப
நாசப்படும் உனைச்சேர்த்திட நரகங்களும் நடுங்கும், (30) 843
வேறு
பாதகத் துருவம் நீஇப் பதிவிசே டத்தி னாலே
ஏதம்அ தகலும் வண்ணம் இயம்புதும் இன்னல் ஆன
வேதனை யாவும் தீர விதிதீர்த்தம் இதன்மேற் பாலில்
சீதநீர் ஆடில் உன்றன் தீவினை தீரும் கீழ்பால், (31) 844
வான்கங்கை சூழும் இந்தத் திருப்பதி வணங்கி மன்னி
நான்கெல்லைப் புறத்து நாமு லிருதர நசையிற் சூழ்ந்து
தேன்தங்கு மருதைப் போற்றிப் புறத்தொட்டித் தீர்த்தம் ஆடிக்
கோன்தங்கு கோயில் சுற்றுப் பணிசெய்து கொண்டு பின்னும், (32) 845
சிவன்அடி யார்கட் கேவல் செய்துதீ வினைஅ கற்றும்
அவன்கண்ணின் மணியும் நீறும் அணிந்தரன் தன்னை உள்கி
இவன்உறில் வரும்தைப் பூசத் தினத்திந்தத் தீர்த்தம் ஆடில்
பவம்அறும் வினைஅ கன்று பவித்திரம் எய்திப் பண்பால், (33) 846
குருஉப தேசம் பெற்றுக் குலத்தில்உத் தமனும் ஆகிப்
பரனையும் வழிபட் டிந்தப் பதியினில் வதிவாய் பன்னாள்
மருவிய மணம்மு டித்து மனையுடன் மகங்கள் செய்தே
இருநிலத் தின்பம் எய்தி இறுதியில் இங்குற் றானே. (34) 847
கார்கெழு கூந்த லோடும் கறைக்கண்டன் எழுந்து காட்சி
நேர்தரப் போற்று வாய்நின் உயிர்உடல் தன்னை நீங்கிப்
பேர்தரும் போதில் இங்ஙன் பேசுநா யகன்உன் காதில்
தாரக மனுவை ஓதப் பெற்றுச்சா ரூபம் சேர்வாய் (35) 848
வேறு
என்று சித்தர் இயம்பி மறைந்தனர்
நன்றிங் குற்றவர் நாதன்என் றெண்ணியே
கொன்றை வைத்தவர் என்னையும் ஆட்கொள
இன்றிங் குற்ற அதிசயம் என்கொலாம். (36) 849
பாதமும்முடி யும்பணி யப்பண்டு
வேத னும்திரு மாலும்விண் பாதலம்
மோதி எய்த்தனர் காண்பரு முன்னவன்
பேதை யேற்கெளி வந்ததெப் பெற்றியோ, (37) 850
தேனலங் கொன்றை திங்களும் சூடிய
வான நாயகன் மாமரு தத்தில்வாழ்
கோன வனெனை ஆளக் குறிப்புடன்
ஈன னுக்கெளி வந்ததெப் பெற்றியே. (38) 851
வேறு
எனத்துதித் திறைஞ்சியே
கனக்குழற் கணவனார்
தனக்குரைத்த தகைமைதான்
மனத்துறத்தண் மருதநீள், (39) 852
கரையில் வந்து கம்பலைத்
திரைஅலம்பு சிந்துபார்
பொருநை பொங்கு புனலினில்
விரைவில் மேவி மூழ்கியே, (40) 853
மாலைபெற்ற மருதையே
சாலவும் பணிந்து சார்ந்
தாலயத் தான் பணிக்
கோலர் வீதி குறுகியே (41) 854
வேறு
நித்தியம் இருபால் நான்கு நெறிவிதப் படியே சூழ்ந்து
புத்தியும் வீடும் நல்கும் புறத்தொட்டித் தீர்த்தம் கொண்டு
சுத்திசெய் தரசைச் சூழ்ந்து சுற்றுள பணியும் செய்து
பத்தியால் அன்பர்க் கேவல் பரிவுடன் இயற்றிப் பண்பால், (42) 855
புகழ்தரும் ஐயம் ஏற்றுப் புசித்திரு போது நீங்கா
அகம்நெகிழ் வுறச்செய் போதில் அணைந்தலும் மகர பூசத்
தகைமைசேர் நாள்வந் துற்ற தரணியோர் இமையோர் யாரும்
தொகைகொடு தீர்த்தம் ஆடத் தோன்றினார் சுதினத் தாலே. (43) 856
மகவினை வேண்டி நன்கு மனம்விளை வதனை வேண்டிப்
புகழினை வேண்டி இன்ப புவனபாக் கியங்கள் வேண்டி
நகைமணி நகையா ரோடு நண்ணினோர் கதியை வேண்டி
இகமகன் றவரும் யாரும் எய்திட இத்தி னத்தில், (44) 857
நாயகன் தீர்த்தம் நல்க ஞாலத்தோர் யாரும் நண்ணிப்
பாய்புனல் தீர்த்தம் ஆட அவருடன் பாவம் நீங்கும்
தூயவன் தானும் ஆடத் துகள்தரு நீச மெய்போய்த்
தோய்பவர் காணச் சொன்ன தேகமாய்த் தோன்றி னானே. (45) 858
யாரும்கண் டதிச யித்தார் யாவன்இம் மகன்தான் என்னாக்
காரடர் நிறத்த மெய்போய்க் கனகமாய்த் தோன்றக் கண்டு
சீரவன் தன்னை உற்று வினவிடத் தெளிந்தார் கொன்றைத்
தாரவன் தீர்த்தம் இந்தத் தன்மைய தென்று போற்றி, (46) 859
துதித்திட விடையின் மீது தோகைகோ மதிஓர் பாலாய்
மதிச்சடைக் கடவுள் தோன்றி காட்சிதந் தன்ன வானோர்
பதிப்பல குலத்தி னோதம் பாலிட அவிர்த்தா னன்தான்
கதிக்கடல் அனையான் தாளில் கம்பித்து வீழ்ந்தெ ழுந்து, (47) 860
புரகரா சரணம் வேதப் புடைமரு ததனில் வாழும்
கரமதா சலத்தோல் போர்த்த கடவுளே சரணம் கங்கா
தரசடா டவியல் திங்கள் தழைத்தவ சரணம் சாய்ந்த
பரமனே சரணம் தேவி பாகனே சரணம் போற்றி (48) 861
நீசமாம் துடக்கில் எய்தும் என்னையும் நின்தாள் போற்றும்
பூசுர ருடன்சேர்த் தாண்ட புண்ணியா சரணம் பூவில்
வாசவற் கருளும் தெய்வ மருதநா யகமா தேவ
ஈசனே சரணம் என்றே இறைஞ்சினன் இருபி றப்பான். (49) 862
விடையினில் காட்சி தந்த விமலனும் இலிங்கத் தெய்த
உடையநா யகனைப் போற்றி அவிர்த்தானன் உவந்து கோயில்
புடைவலம் கொண்டி றைஞ்சிப் புனிதநா யகனைப் போற்றிச்
சடையவன் அருளைப் பெற்றுத் தாபதன் இருந்த போதில், (50) 863
இருபிறப் பாள னேல்நம் இருக்கினுக் குரியான் என்று
மரபினாற் கெண்ணம் கொள்ள வாய்மையால் மறைநூல் ஓதக்
குரவனால் பெற்றுப் பூணல் நூல்கடி முடித்துக் கொண்டு
பொருநைசூழ் மருதின் மேன்மை யாவையும் புகலக் கேட்டு, (51) 864
சிறந்தபார்ப் பனவன் ஆனோன் திகழ்புடார்ச் சுனபு ரத்தின்
அறந்தரு மகிமை எண்ணி அரனருட் படியே இன்பம்
நிறைந்திட மணமும் செய்து நிலவிய யாகம் செய்தே
உறைந்தனன் பன்னாள் பின்னாள் இறுதியில் உமையோர் பாகன், (52) 865
அந்திய சந்தி யத்தில் அந்தர ருடன்எ ழுந்தே
வந்தவிர்த் தானன் காதில் மனுவினை உபதே சிக்கப்
பந்தம்அ தகன்று மேலைப் பதவியை எய்தி னானால்
இந்தநன் மகிமை கேட்டோர் இன்பவீ டெய்து வாரே. (53) 866
திகழ்அவிர்த் தானன் பவத்தினை அகற்றும்
தீர்த்தத்தில் ஆடுவோர் செய்யும்
துகள்பெறு நீசத் துவம்முத லான
துன்பமும் தீருவார் துகள்தீர்
புகழ்பெறு முனிவர் சூதரை வணங்கிப்
புனிதநா யகன்கதை இன்னும்
மகிழ்வுடன் உரைப்பீர் என்றலும் முனிவன்
வழங்கிடும் செயலினை வகுப்பாம். (54) 867
- அவிர்த்தானப் படலம் முற்றும்-
10. வால சதானந்தப் படலம்
மறைஅவிர்த் தானன் பாவம் மாற்றிய திதுமேல் வாச
நறைஇத ழியனைப் போற்றும் நாரதன் செய்கை யாலே
பிறியமா தவன்சேய் வால சதானந்தன் பிழையை நீங்கி
இறையருள் பெற்று வாழும் தன்மையை இசைக்கல் உற்றாம். (1) 868
நாரத முனிவன் ஓர்கால் நாகலோ கத்தை நண்ணக்
கார்கெழு பரியோன் போற்றி வினவிடக் கங்கை நீத்தே
சார்வதென் றுரைக்கக் காசி தனில்நிகழ் தன்மை கேட்கப்
பூரணன் தன்னைப் போற்றிக் கங்கையின் புகழைச் சொற்றான். (2) 869
அப்பொழுது அந்த ரத்தோர்க் கதிபன்நம் மகதி வீணை
விப்பிரன் தன்னை நோக்கி மேதினி யுறுதி போலும்
இப்புவிக் கில்லை என்றான் இசைத்திடில் ஆண்டுக் கங்கை
மெய்ப்பதி தனிலும் மேன்மை உடையது வேறொன் றுண்டால், (3) 870
அதுபுடை மருதக் காசி ஆம்பிர வனம்சூழ் கங்கை
நதிவரு பொருநை அங்கண் நண்ணுவோர் புனித சீல
விதிஅவர்க் கிறுதி காலம் மேவிடில் விமலன் அந்தப்
பதியினில் தார கத்தை அருளியே பதவி நல்கும். (4) 871
அதனிடை எனக்கு வந்த அரும்பழி தீர்ந்த தந்தோ
கதிதரும் கங்கை என்று சோதகம் காட்டக் கண்ட
விதிமுதல் ஆனோர் போற்றி வேண்டிய வரங்கள் பெற்றார்
மதிஎன மகிமை கேட்ட முனிவரன் வையம் எய்தி, (5) 872
சங்கரற் பரவி நைமி சாரணி யத்திற் கர்க்கன்
அங்கிரர் முதலோர் போற்ற அவ்விடை வதிந்த போதில்
புங்கவன் சூத யோகன் புடைமரு ததனின் மேன்மை
உங்களுக் குரைத்த காதை உண்மையா தெனஉ ரைப்பார். (6) 873
புவிக்கொரு திலகம் ஆகும் புடைமரு தின்சீர் சொல்லில்
அவத்தநோய் வினைகள் தீர்க்கும் அவ்விடை வதியப் பேரும்
தவித்திடும் உயிர்கட் கந்திச் சந்தியில் அன்னை கூட
நவிக்கரன் எழுந்து தார கத்தினை நவிலும் பின்னும். (7) 874
வேண்டிய வரம்கொ டுக்கும் விளம்பிடில் அத்த லத்தின்
காண்டகு மகிமை சொல்லக் கணக்கினில் அடங்கா தென்றார்
மாண்டவி யாச ரோடு மகதிமா முனிவன் போந்தே
ஈண்டுதென் மருதைக் காண வந்தனர் பொதிகை யின்பால். (8) 875
முனிவனை வணங்கிக் கங்கை சூழ்புடார்ச் சுனத்து முன்னி
மனுவினால் செய்த கோயில் மகத்துவம் கண்டு வானோர்
தனிமுத லோனைப் பூசை செய்திடச் சங்கற் பித்தே
கனிவுடன் பணிந்து சூழ்ந்து கதிதரும் பதியில் உற்றார், (9) 876
மன்னிய மருதை நோக்கும் போதினில் வளங்கொள் சோதி
துன்னிய தென்னத் தோன்ற அதிசயம் மனத்தில் தோன்றச்
சென்னியால வணங்கிக் கங்கைத் திருநதி ஆடி ஏறிக்
கன்னிஓர் பாகன் முன்பு பணிந்தனர் காத லோடும். (10) 877
ஆலயம் எய்தித் தாழ்ந்தே ஆவர ணத்தில் உற்ற
வேலுடைக் கடவுள் கோட்டு வேழமா முகன்உள் ளிட்ட
பாலரை வணங்கி ஈசன் தனைப்பரி வுடனே பூசை
ஏலவார் குழலா ரோடும் செய்திட இயல்தீ பங்கள், (11) 878
வேண்டிநின் றருளைப் பெற்று வேண்டிய மஞ்ச னாதி
ஆண்டவற் குவப்பச் சந்த னாதிசேர் தயிலக் காப்போ(டு)
ஈண்டிய பாலோ டைந்து கவ்வியம் இளநீர் கன்னல்
காண்டகும் அமுதம் ஐந்து கனிமது வருக்கத் தாலும் (12) 879
ஆட்டியே உதகம் சாந்தம் அருக்கியம் ஆடை வில்வம்
பூட்டும்ஆ பரணம் சாந்தம் சுகந்தத்தால் புனிதன் மெய்யில்
தோட்டிதழ் மலரால் இண்டை சுருக்கணி துதிக்கை மாலை
நீட்டிய பத்திக் கண்ணி தொத்தலர் நெருங்கு மாலை, (13) 880
வகைவகை யாகச் சாத்தி வான்பெறும் அமுதம் மற்றால்
மிகுநெய்வே தனஞ்செய் திட்டம் வேண்டியே மகதி நாதன்
அகமகிழ்ந் தரனை நோக்கி அழகிதென் றலரால் தோன்று
திகழுரு அற்பு தத்தைத் தெரிசித்தான் சிந்தித் தானே. (14) 881
வேறு
விடையவன்தன் மேனிஅலங் காரம் நோக்கி
விளங்குநா றும்பூவின் விமலா என்று
படர்ஒளிசேர் நாயகனைப் பழிச்சும் போதில்
பண்ணவர்யா வரும்மகிழ்ந்து பரனுக் கிந்தத்
தொடையதனின் காரணமாய் உற்ற நாமம்
துகளிலா மூவுலகும் துதிக்க என்றே
கடவுளர்தோத் திரம்செய்தார் மகதி வீணைக்
கருணைமுனி பணிந்தெழுந்து கரங்கள் கூப்பி, (15) 882
புரகரநா யகபோற்றி பூத நாத
புண்ணியபூ ரண போற்றி பொங்கு கங்கை
அரவிதழி ஆமைதும்பை அறுகு வேய்ந்த
அமலனே போற்றிஅச லத்தை வில்லாய்
மருவியகா ரணபோற்றி மருதம் மேவும்
வாரணத்தோல் போர்த்தவரைப் புயனே போற்றி
நரைவிடையின் மீதேறு நங்கை பங்கா
நாறும்பூ நாயகநின் நளினம் போற்றி. (16) 883
என்றுபணிந் திறைஞ்சுநா ரதன்தான் காண
இறைமருத நாயகன்வெள் விடையின் மீதே
மன்றலங்கொள் கூந்தல்ஆ வுடைத்தாய் கூட
மன்னிஎழுந் தருளிவா னவர்கள் சூழக்
கொன்றைஅணி வேணியும்முந் நூலின் மார்பும்
கொண்டல்அன கண்டமும்குண் டலம்சேர் காதும்
என்றுமுத லாயினமுக் கண்ணும் ஆக
எதிர்காட்சி கொடுத்தருள இறைஞ்சி னானால், (17) 884
வேறு
மெய்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் விள்ளவேர்த் தகம்நெ கிழ்ந்தே
பைஅரா அசைத்தோன் தன்னைப் பணிந்தெழுந் தன்பி னாலே
கைகொடு சிரமே கூப்பிக் கசிந்திடும் போதில் ஈசன்
நைகருத் துடையோன் தன்னை நாரத முனிவன் என்றே, (18) 885
அருளினால் நோக்கி வேண்டும் அன்புதந் தனம்நீ இந்த
மருதிடத் திருந்து நம்பால் மகதியாழ்ப் பணிசெய் வாய்என்(று)
அரன்அளித் திடவே தாழ்ந்து வாய்புதைத் தடியேன் என்று
புரையிலான் போற்ற ஈசன் இலிங்கத்தில் பொலிந்தான் மன்னோ. (19) 886
சங்கரன் அருளைப் பேணி நாரதன் வியந்து சார்ந்தே
எங்கணும் கடையா திந்தத் தலத்தினில் இறைவன் நல்க
மங்கலம் பெற்றோம் என்றே மனமகிழ்ந் திருந்து வீணை
செங்கையால தடவிப் பாடிச் சிவனுக்கற் புதம்அ தாக, (20) 887
பணிசெய்து யோகத் தெய்திப் பரனைப்பூ சித்து நாளும்
மணிகண்டன் தன்னைப் போற்றி மருதமர்ந் திருக்கும் போதில்
அணுகிய முனிவர் இந்த அரன்தரு செயலை எல்லாம்
குணமுடன் மகிழ்ந்து கூறக் கேட்டுளம் கொண்டு கூர்ந்தே. (21) 888
முன்பாய் உற்றோர் தமைநோக்கி
முனிவன் உரைப்பான் மூலம்உறும்
தென்பால் தோன்றும் ஆச்சிரமம்
யாதென் றிடலும் செப்புவார்
வன்பார் முனியே பிறியமகர்
ஆற்றும் இடம்என் றறைந்திடலும்
தன்பால் எய்தா விதம்தெளியக்
கருத்தை உணர்வான் சார்கின்றார். (22) 889
சான்றோற் போற்ற மிகும்
ஈன்ற பிரிய மகமுனிபால்
மகதி வீணை முனிஎய்தத்
தேன்தங் கியநன் மலர்தூவி
முகமன் உரைத்தே திருமுனிவர்
ஆன்ற தவத்தாய் எவணின்றும்
.....................................................
போந்தசெயல் என் றறைந்திடலும், (23) 890
மகதி வீணை முனிஉரைப்பான்
வான்தங் கியகற் பகநிழலும்
தொகைகொள் தேவ கன்னியரும்
சுரர்கள் வாழ்வும் சொலற்கரிய
தகைமை உடைய சிவவாழ்வும்
தவத்தோர்க் கெய்தும் அப்பதிபோல்
மகிமை உளதோ எவ்வுலகும்
வான்நாட் டருமை வரம்புடைத்தோ, (24) 891
பணியும் கலையும் அருள்புரியும்
பஞ்ச தாரு வின்பான்மை
உணவி னாறு வகைஉதவும்
உம்ப ராக்கள் உயர்செல்வம்
மணிகள் உதவும் வான்பரியும்
அயிரா பதமும் வானவள
நணிய களகந் தருநகரும்
நலங்கொள் மேனை உருவசியும், (25) 892
மணியார் கொங்கைத் திலோத்தமையும்
வாரி கடைந்து வரும்அமுதும்
தணிவில் பொருளும் முப்பான்முக்
கோடி தேவர் தாழ்ந்துநிதம்
பணியும் வகையும் சிவிகையினைச்
சத்த முனிவோர் பரிப்பதுவும்
அணியும் போக மடவாரும்
பயில்அந் தரநா டதுதன்னை, (26) 893
கண்டு மகிழ்ந்தோம் உமக்குரைக்கக்
கருதி வந்தோம் எனக்கழறிக்
கொண்டல் பயிலும் பொதியமலை
குறுகச் சென்றான் அதுநிற்க
அண்டர் நாட்டுக் கதிபதிதான்
ஆகப் பிரிய மகற்காசை
மண்டத் தவங்கள் செய்துபெற
மதித்தே தென்பால் வந்தனனால் (27) 894
புனிதன் முதல்எத் தேவர்களும் பொருந்தி முனிபால் போந்தவர்கள்
தனது குறைபா டதுதீர்க்கும் தவத்தைப் போலும் மகத்துவந்தான்
உனில்வே றுளதோ தனைநிறுத்தி உயர்ச்சி அகற்றி எளியதுக்கே
கனியும் அவர்போல் பிரியமகர் கருதி யோகம் தனைச்செய்தார் (28) 895
பொதிகை அகன்று நாரதனும் பொன்னா டெய்திப் புனிதன்பால்
விதிசேர் மகத்தால் பொன்உலகம் வேண்டிப் பெற்றாய் இவைவேண்டிப்
பதியிற் பிறிய மகமுனிவர் தவம்செய் கின்றார் எனப்பகர்ந்தான்
மதிவைத் திடுமா முனிவரனே உன்னால் அறிந்தேன் எனவாழ்த்தி, (29) 896
தேவேந் திரன்இச் செயல்நினைந்து தேவ ராகி எம்பதவிக்
கேவ ரேனும் முயன்றிடில்வந் தேதம் அவர்பால் இயற்றிமிகத்
தாவில் வேணித் தவமுனிவர் தவத்தர் ஆனாற்(கு) இதுதகுமோ
பாவு தவத்தை அழிப்பன்என எண்ணி இந்தப் படிசெய்வான், (30) 897
நறிய தாரு நிழல்பிரியா நலம்கொள் அரம்பை நாரியரில்
கிறுதா சிப்பெண் தனைஅழைத்துக் கேதம் ஆன தவம்இயற்றும்
அறவோன் தவத்தைப் புவியினில்சென் றழித்து வாஎன் றிடஅவளும்
பிறிய மகர்தம் தவச்சாலை சேர்ந்த பீத நாடிழிந்து, (31) 898
அணிபெறும் அரம்பை மாதும் அமுதயாழ்ப் பயிற்சி யாலும்
மணிவளர் இடையைச் சூழ்ந்த வனத்துகிற் சாயலாலும்
கணிகையின் பருவத் தாலும் காமப்பார் வைக ளாலும்
பணிகொள்பந் தென்னும் கொங்கைப் பணைப்பிறு மார்பி னாலும் (32) 899
இவ்வுலகோர் உயிர்உண்ண ஏமனுரு மாறாடிச்
செவ்வியஅம் புயமலரின் தேன்உண்ணும் தேன்எனவே
நவ்விவிழி யால்முனிவன் நல்லகருத் தைக்கவர்ந்தாள்
மைவிழியார் மயல்உற்றார் தமக்கும்ஒரு மதிஉண்டோ, (33) 900
காமவலை யிற்கலந்து கருத்துவே றுற்றிடவே
தேமொழிஇங் கிதத்தாலும் சோமரச வகையாலும்
தாமவள்கொங் கைக்குவடே சார்வாகத் தவம்செய்தான்
மாமன்னு தவத்தோனும் மயங்கில்எவர் மயங்காரே. (34) 901
கன்மம்விடு மோயார்க்கும் ககனபுவ னம்போந்த
பொன்அனைய கிறுதாசிப் பூசையுட னேபொருந்தி
நன்னலங்கொண் டேசிலநாள் கழிந்ததன்பின் னால்நினைந்த
தன்மையதொன் றேநடந்த தகைமையதொன் றெனத்தணந்தார். (35) 902
வேறு
பிறர்பால் பொருளுக் காசையுறின் பேணும் பொருள்போம் எனப்பெரியோர்
உறவே உரைப்பார் அதுதவறோ உம்பர் அரசற் குடையதெலாம்
திறமாய் எய்த இயற்றுதவம் திறம்பத் தவம்போய்த் தேவரசன்
உறவும் போன புல்அறிவென் றோர்ந்து மலய மலை உற்றார். (36) 903
பிறிய மகர்தம் பிழைநினைந்து பிரிந்த பின்பு தெய்வப்பெண்
பிறிய மாட்டா உளத்துடனே பிறைசேர் இமய வரைநண்ணிப்
பிரிய முடனே தவர்அளித்த பிள்ளை தனையும் பெற்றதனைப்
பிரியக் குவட்டின் புடைவைத்துப் பேதை வான நாடுற்றாள். (37) 904
மாகம் உயர்ந்த பொதிகைமலை மன்னு கின்ற முனிசெய்யும்
யாகம் தனக்கப் பொழுதினிலே யாரு முனிவர் செல்லுனரில்
மோகம் முனிந்த கவுதமரும் முனிவன் பன்னி அகலிகையும்
தாகம் ஆக வருமார்க்கத் திமய வரையின் சார்வுற்றார். (38) 905
உமையாள் உதிக்கப் பெற்றதவத் துயர்ந்த கனகத் துறுகின்ற
இமய மலையின் கற்புடைக்குள் இளஞ்சேய் இரங்கும் குரல்கேட்டு
நமைஆ ளுடையாள் உதித்ததுபோல் நலங்கொள் குழவி க்குரல் என்னத்
தமைஆ தரிக்கும் தவத்தோர்கள் தாம்அங் குற்றார் தாம்கண்டார். (39) 906
உதய காலத்தெழும்கதிர்போல் உற்ற சிறுவன் தனைஎடுத்துக்
கதம்நீங் கியமெய்க் கவுதமரும் கருதி இரங்கி மகிழ்ந்திந்த
விதம்ஏ திவண்மே விடும்சேய்தான் வேறன் றோதி விழைவாலே
பொதிகைக் கேகும் பிரியமகர் புதல்வன் இவன்தான் எனஓர்ந்து, (40) 907
வேறு
பாலகன்தன் னைப்புல்லிப் பன்னிதன்கை யில்கொடுத்து
வாலராய் இவனை உன்தன் மகவதாய் வளர்த்தி என்ன
நீலம்நேர் விழியினாளும் நேசமோடிச் சேய்தன்னைக்
கோலமாய் வளர்த்து வந்தாள் கோதமன் மகிழ்ச்சி கூர்ந்து, (41) 908
வாலராய் வளர்ந்த இந்த மைந்தனைக் கண்டா னந்தம்
சாலஎய் திடவே வால சதானந்தன் எனப்பேர் சாற்றிச்
சீலமாய் இவர்க ளோடும் தென்தமிழ்ப் பொதிகை சேர்ந்தான்
மேலவர்க் கமுதம் ஊட்டும் யாகத்தின் விழவு நோக்கா, (42) 909
முனிவரன் கூட்டம் தன்னில் முயங்கிய பொழுதில் அங்கண்
நனிவரும் தவத்தின் மிக்கார் யாவரும் கலந்து கங்கைத்
தனிமுதல் ஈசன் கீர்த்தி சாற்றுவா ராகச் சாய்ந்த
புனிதன்தன் மகத்து வங்கள் பேசிடப் புளகம் உற்றே. (43) 910
கேட்டவன் மருதை ஓர்ந்து கெவுதமன் கிடைத்தல் எண்ணி
வாட்டமில் முனிவ ரோடும் மலயவெற் பதனி னின்றும்
கேட்டவர் பரவும் சாய்ந்த சிவபரஞ் சுடரைப் போற்றப்
பாட்டளி முரலும் தெய்வ மருதமா பதியை நோக்கி, (44) 911
எழுந்ததா வாம்பொழு தெதிர்ந்தவரை எய்தித்
தொழும்பிரிய மகரும்மிகு துதிசெய மகிழ்ந்தே
செழும்புதல்வன் உம்முடைய சேயும்இது என்னத்
தழைந்தமன தாய் நினது தனையன்அவன் என்றார். (45) 912
கோதமனும் அன்னபடி கொண்டுகும ரற்கு
வேதமுத லாயின விளம்பிவிரை யார்தண்
சூதமலி வாழைபுடை சூழ்மருதம் ஓங்கும்
பூதலம்அ துற்றுவரு போதில்அவண் உற்றார். (46) 913
மாதவர்கள் யாவரும் வந்தடி வணங்கக்
கோதமனும் மங்கலம் எனும்குல நதிக்கண்
நீதமுடன் ஆடிநிய மங்களும் முடித்து
வேதம்நிறை மாமருதை மெய்யுற வணங்கி, (47) 914
மந்திரம் அணைந்துகுட வாயிலில் வரும்போ
தெந்தைதிரு ஆணைகொடு நின்றிரு புறத்தும்
சந்தம்நிறை வீணைகொடு சார்ந்துபணி வாசல்
கந்திருவர் கண்டுதடை செய்தனர் கணத்தோர். (48) 915
கோதமர் வரும்செயல் குறித்தவனி கொண்ட
நாதர்அறி யும்படி நவிற்றஉயர் நந்தி
நீதனிடம் உற்றவர் நிகழ்த்தநிம லன்பால்
போதம்உணர் நந்திஇறை பொற்பதம் வணங்கி, (49) 916
முனிவர்இவண் உற்றசெயல் முந்திமொழி கின்றான்
பனிமதி முடிக்கடவுள் பாலரில்முன் வந்த
கனிபெறு களிற்றுமுக னைக்கருத வந்தான்
தனிமகவை நோக்கிமுனி யைத்தருதி என்றான். (50) 917
அன்னபடி மாமுகவன் ஆதியடி பேணித்
தன்உருவை மாறிஒரு தன்பிரம சாரி
என்னவடி வாகிவரு கோதமனை எய்தி
முன்னவன் அருட்படி முடிக்கஇது முன்னி, (51) 918
வந்தமுனி வன்தனை வரும்செயல் வினாவக்
கந்திருவர் செய்ததடை கவுதமர் கிளத்த
இந்தஇடர் வந்தவகை இபமுகனை ஏத்தாப்
பந்தம்உறு குற்றம்என முனிவர்இது பன்னும் (52) 919
முந்தைவரும் ஆச்சிரம முனிவரனை நோக்கி
எந்தையை வழுத்தமுனம் இபமுகனை ஏத்தும்
அந்தவய னத்தினை அறைந்திடுவை என்ன
இந்தமரு தப்புடையில் எய்திடுதி அங்கே, (53) 920
நிருதிஉறை ஐங்கரனை நீவழி படற்கே
மருதடியில் மேல்புறம்அ தில்திகழ்வ ளம்சேர்
பொருநையினில் ஆடிநிய மம்செய்து புரக்கும்
கரிமுகனை எய்திவிதி யின்படி கருத்தால், (54) 921
வேறு
பூசித்து வழிபா டாற்றப் புழைக்கைமா முகவன் தோன்றி
நேசித்த பேறு நல்கி நிருமலற் போற்ற ஏகும்
வாசல்பின் தடையும் தீர்த்து வரங்களும் அருளும் என்று
பேசித்தாம் எய்த அங்ஙன் பெட்புறு முனிவன் தானே, (55) 922
விரதசா ரியள்சொல் போற்றி மெய்என்று கருதி இந்தக்
கரிமுகன் தீர்த்தம் ஆடிக் கடன்முடித் தனுக்கை பெற்று
நிருதிஐங் கரனை வேத விதியினால் நிகழப் பூசித்(து)
அருளுடன் பலவர்க் கங்கள் பண்ணியம் அமைய ஏற்றி, (56) 923
அருச்சனை புரிந்து நின்றே அடிதொழு தன்பி னாலே
கருத்தனைக் குறித்து வேண்டக் கருணையாய் நின்ற வேதச்
சிரத்துறு பிரம சாரி திருவுரு மறைந்து தெய்வ
மருக்கிளர் கொன்றை யண்ணல் மகவென வடிவு கொண்டான். (57) 924
அரவிந்த மலர்போல் தாளும் ஆனைமா முகமும் பேழைத்
தரமுந்து வயிறும் அங்கை தாங்குமோ தகமும் நூலும்
பருமம்சேர் கரம்ஓர் ஐந்து பந்தியும் படர்முன் கொம்பும்
வரமுந்து கருணை நோக்கும் வளிதரு முறம்சேர் காதும், (58) 925
ஆகுவா கனமும் தோன்ற முனிவன்கண் டதிச யித்துத்
தாகமோ டடியேற் காகத் தான்ஒரு பிரம சாரித்
தேகம்அ தெடுத்து வந்த செயலினை அறிந்தேன் அல்லேன்
சோகம்அ தகற்றி ஆளத் தோன்றுசுந் தரனே போற்றி. (59) 926
ஐந்தொரு கரனே போற்றி அரவணி சடையோன் ஈன்ற
சிந்துர முகனே போற்றி தெய்வநா யகனே போற்றி
வந்தெனைத் தடுத்தாட் கொள்ள மலரடி காட்டி என்றன்
புந்தியைத் திருத்த வல்ல புனிதனே போற்றி என்று. (60) 927
வணங்கிய முனிக்கன் பாக வரங்களும் நல்கிக் கோயிற்
கிணங்கிய வாயில் காவல் எய்தினோர் தடையும் நீக்கி
அணங்குடன் நிமலன் மேவும் ஆவர ணத்தைச் சூழ்ந்து
குணங்குறி கடந்த சோதிக் குழகன்முன் விடுத்தான் அன்றே. (61) 928
அண்ணலைப் பணிந்தெ ழுந்தே அன்புறு முனிவன் போற்றிப்
பண்ணவன் தனைப்பூ சிக்கப் பரமதீர்த் தத்தில் ஆடி
உண்ணிறை அருளி னாலே உதகத்தால் மலரால் சாந்தால்
விண்ணுறை அமுதால் பூசை விதிப்படி செய்து பின்னும், (62) 929
அண்ணலைப் பணிந்தெ ழுந்தே ஆயிரம் மனுவி னாலே
எண்ணிய வில்வம் சாத்தி இறைவனைத் துதிசெய் கின்றார்
உண்ணிறை அன்பி னாலே உமைஒரு பாகா போற்றி
தண்ணிலா முடித்த ருட்கோல் நடத்திய தலைவா போற்றி (63) 930
வானவா போற்றி என்று வணங்கிடும் போதில் அங்ஙன்
கூனல்அம் பிறைத ரித்த கோமளை பாகன் எய்தி
மோனமா முனிவன் காண முன்நின்றான் முனிவா நீசெய்
மேன்மைஅர்ச் சனைக்கு வந்தோம் மிகுதியும் என்று கூறி, (64) 931
திசைவளர் ஈசா னத்தில் திருமூல தீர்த்தம் ஆடி
நசையுடன் பிரம தண்டம் நாடிட நதிகள் கூடி
அசைவுறும் மடுவின் கீழ்பால் ஆகிய தீர்த்தம் கொண்டு
கசிவுடன் ஆட்டி நாளும் பூசிக்கக் கடவாய் என்று, (65) 932
புகன்றுநம் வலப்பால் வாழும் புளிவிருக் கத்தில் மேவி
இகந்தனைக் கடந்தோய் யோகம் புரிதிஎன் றியம்பி ஈசன்
உகந்தவா விலிங்கத் தெய்தக் கவுதமன் உவந்து போற்றி
அகந்தவா நெறியால் எங்கோன் அருளிய படியே வந்து, (66) 933
மூலதீர்த் தத்தில் ஆடி முளரியோன் தண்ட தீர்த்தம்
சாலவே கடத்தில் ஏந்திச் சங்கரற் காட்ட வேண்டிக்
காலங்கள் தோறும் மேல்பால் கணபதி தனைஇ றைஞ்சி
சீலமோ டனுக்கை பெற்றுச் சிவனுக்கற் புதம்அ தாக, (67) 934
சந்தனம் சுகந்த மாலை சார்ந்தஆ பரணம் தூசு
கந்தமா பள்ளித் தாமம் கனிவர்க்கம் பஞ்ச கவ்யம்
இந்துவார் அமுதம் பால்தேன் இனியநெய் வேத னங்கள்
முந்துதூ பாதி மற்றும் உதவிய உபசா ரத்தால், (68) 935
பூசித்துப் பணிந்து போற்றிப் புடைவலங் கொண்டு புள்ளித்
தூசற்குப் பூசைக் கான துகள்இலாப் பணிகள் செய்யும்
மாசற்ற சீட ரோடும் ஆம்பிர வனத்தில் எய்தித்
தேசுற்ற யோகம் செய்து முனிவரன் திகழும் நாளில், (69) 936
மண்ணுளோர்க் கின்பம் நல்கும் வாவியும் சோலை மாடுந்
தண்ணிலா முத்து மாதர் தனங்களும் சந்த்ர காந்தக்
கண்ணகல் இடமும் தென்றல் காலும்பன் னீரும் சாந்தும்
உண்ணயந் திடவே சேரக் கோடைவந் துற்ற தன்றே. (70) 937
வேறு
இளவேனல் இவள் ஆகம் தனம் எய்தும்பொதி யசலத்
தளவார்படர் மருமாலதித் தண்பந்தரும் சார்ந்த
வளமார்இளந் தென்றல்செறி வனகாலம கிழ்ந்தே
அளியார்தடம் காஎய்திஅப் பதியோர்உருப் பகலார் (71) 938
வண்ணமென் கோவின் மாதர் மைந்தரம் மனம்உள் ளுற
அண்ணல்வேள் பகழி ஏவ அதிவிர கங்கள் மேவப்
பண்ணயம் தருவார் வீணை பயிலமாந் தளிர்கள் கோதிக்
கண்ணயந் தளிகள் பாடக் கோகிலம் கழறும் மாதோ. (72) 939
மாதர்கள், துயிலைத் தென்கால் மறைத்தலை ஒழிக்கக் கொங்கை
தூதராய் மைந்தர் உள்ளம் சோர்தரக் கொண்டு சூதிற்
போதினில் உய்ப்ப அன்னார் புணையினால் சிக்க வார்ப்ப
வாதையால் மீட்கல் காணார் தென்றலை வந்திப் பாரே. (73) 940
வேறு
வசந்தன் எய்திடில் முருக்கிதழ் புரசலர் மாவின்
அசைந்தி டும்தளிர் தழல்என அகன்றிட மயில்கள்
பசந்த காவினில் குயில்அழைத் திடக்கிளி பரிமேல்
இசைந்த காமனுக் கியற்றிய தீபம்போல் இசையும், (74) 941
தேடியே கணவன் தன்னை விழைமினார் முகங்கள் செம்மல்
ஊடிட அலர்கள் தூற்றல் உலவையால் அலர்கள் தூற்றல்
கூடல்தேன் மலரிற் கூடல் கூட்டுதல் மதன்அம் பென்று
நீடிய மலர்கள் பூத்து நிறைந்தன நெடிய சோலை, (75) 942
ஆடவர் உற்ற இன்ப துன்பமும் அன்னார் கற்பின்
நீடிய மாதர் எய்தும் நெறிஎன நின்ற காவில்
கோடையால் இலைஉ திர்ந்தே கொழுவிய கொடியும் அங்ஙன்
வாடிடத் தழைந்த போதில் வல்லியும் தழைந்த தன்றே. (76) 943
காந்தள்கை கழைகள் மென்தோள் கண்கரு விளம்சொல் கன்னல்
சேந்திதழ் இலவம் நாசி குமிழ்களம் சிறந்த பூகம்
கூந்தல்நீள் கூந்தல் கோங்கம் கொங்கையாம் குறங்கு வாழை
மாந்தளிர் மேனி மென்கா மாண்இழை மடவார் போலும். (77) 944
இவ்வகைத் தாய சோலை எய்திட வேடை என்னும்
அவ்வியம் அகற்றச் செல்வார் அணி அலங் காரத் தாலே
செவ்விய திருஒப் பான தெரிவைய ருடன்செய் கோலம்
கவ்விய பரித்தேர் ஊர்தி ஏறியும் காவிற் செல்வார். (78) 945
மாதவி சாதிமா மதுகம் மாதுளம்
தாதகி வேங்கைமந் தாரம் சந்துசூழ்
போதணி பாடலம் வகுளம் பூகம்நீள்
கோதைசேர் காவினில் குறுகல் மேயினார். (79) 946
இலைஉதிர் கொம்பில் எய்தி இரங்கியே பேடைப் புள்ளின்
மெலிவகன் றிடமேல் ஆலும் சாவலை வியந்துள் ஊறிக்
கலைவளர் மாத ரோடும் கலந்துறும் கணவர் தென்கால்
உலவிய நீழல் கூடி உவந்துகண் களிப்பர் மன்னோ. (80) 947
நாறிய தளிரைக் கோதிக் கோகிலம் நவிற்றக் காமன்
மீறிய கன்னல் கோட்டித் தும்பிநாண் விரையப் பூட்டி
ஊறிய விரகர் தங்கள் உள்ளம்ஊ டுருவ ஏவும்
தேறிய மலரை மூட்டிச் செயம்பெறும் தென்றல் காலம். (81) 948
மங்கைய ருடன்க லந்து மகிழ்ந்துகை கோத்துக் கொங்கை
பங்கயம் என்ற போதில் பரிந்தும்அன் னவர்பால் ஊடிச்
செங்கயல் இனங்கள் சேப்பச் செய்பிழை பொறுப்பீர் என்று
தங்கரம் கொண்டு மேனி தைவரத் தழுவிச் சார்வார். (82) 949
பிடிஎனச் செல்வர் மாதர் பின்தொடர் வேழம் போலக்
கடகளி றனையார் கூடிக் கலந்திட இந்த நீழல்
இடம்எனக் குயில்அ னார்கா எய்திய கனியை நோக்கக்
கொடிவளர் கனியை நோக்கும் குமரரை மருவல் செய்வார் (83) 950
நறுந்தண்கா அதனில் மைந்தர் நயந்தமென் கனியை நாட்ட
மறிந்தசெல் மாதர்க் கீவர் வாசமெல் இலைஅ ருத்தி
நிறந்தமா மலரை நோக்கி நிறைமலர்க் காவு லாவிச்
சிறந்தபண் தருக்கள் பாடிச் செருந்தியின் நீழல் சேர்வார் (84) 951
இந்தணிந்த எழில்வளர் சோலைசூழ்
கந்த நன்மரு தம்கமழ் காஎலாம்
கொந்து சேர்குழல் வல்லியர் கொய்மலர்ச்
சந்த மாலிகை மோந்து தரிப்பரால். (85) 952
மின்ன னார்விரும் புமலர்க் கொம்பரை
மன்னர் கண்டு வளைத்த ளிக்க மணந்
தன்ள லார்களித் தைங்கணை யான்பொர
முன்னர் வந்திதழ் முத்தம் அருந்துவார். (86) 953
சோலை வாணர்கள் சொல்வளம் காட்டலும்
காலும் தென்றலில் கம்பிதம் உற்றுவார்
சேலும் நீலமும் சேர்மதர்க் கண்ணினார்
மாலும் நேச மவுணரை மன்னுவார் (87) 954
வேறு
குழைத்த கொம்பரின் மலர்கொய் யாதின் னொருகொம்பைத்
திழைத்து நோக்குவர் பிழையுண்டோ வெனவன்பன் றிகைக்கக்
கழையார் வாகை பற்றிப் பின்னொரு காவில்
தழைத்த கொம்பரின் மலரினைத் தாஎனத் தளர்வார். (88) 955
கின்னரிக் குரல்வி ளைத்தும் கிளைக்குழக்கை ஓசைகேட்டும்
மன்னரும் மாதர் தாமும் மகிழ்ந்திட ஏவல் மாக்கள்
பன்மலர் நல்க வாங்கிப் பரிந்துமோந் தளக பாரம்
தன்இடை அணிந்து தோழி மாதர்க்கும் தழைய ஈவார். (89) 956
வாழைமேல் தேன்கூ டென்பார் காணில்வாய் ஊறு வார்என்
தோழிஎன் கணவற் கன்றித் துய்த்திடல் பிறர்க்கெட் டாதென்(று)
ஏழையார் மொழிதல் நோக்கி இறையவர் மதன்அம் பாலே
காழ்மணித் தனத்தா ரோடும் கலந்துகண் களிப்பர் மன்னோ. (90) 957
இலைஉதிர் மரத்தை நோக்கார் இயல்புளோர் இல்லோர் தம்மை
நலம்உறப் பாரார் போலும் செல்வரை நயப்பர் அன்ன
பலநற்காய் இலைபூ மொய்த்த பாதவந் தன்னைக் கூடிக்
கலமுற்று தனத்தார் கேள்வர் காலவே னலைக்க ளிப்பார். (91) 958
உளத்தினை முருக்கும் காலம் முருக்கலர் இவைஎன் றுன்னார்
கிளைக்கனி விகையினாலே கேள்வரைக் கடைக்கணித்து
விளைக்குமே சோகம் என்ற சோகத்தை வியவார் மேவி
வளைக்கையார் காவை நீங்கி வாவியில் சேரு வாரே. (92) 959
வேறு
வாச மாமலர் வாவிநீர் படிந்திட வளையும்
நேச மாதர்கள் மவுணர்கள் நேர்ந்திட மொய்த்த
பாசி மேல்அனம் குரண்டம்நீர்ப் பறவைகள் இரியல்
தூசி மேல்அவர் துரந்திட ஓடல்ஒத் துளவே. (93) 960
பகைஞர் மேலிடப் புறகிடா வீரர்போல் பயத்தால்
துகைஞர் மெய்நடுங் குவதெனச் சுழல்மரை நீலம்
தகைந்து மேவலர் சரத்தினால் கேடகத் தடங்கும்
வகைஞர் போலவன் கைதையுள் வாளைமொய்ப் பனவே. (94) 961
வேறு
நேரிசை வண்டு மொய்த்த அரவிந்தம் நீலம் ஆம்பல்
வார்கலை என்னும் போலே வளைந்தலம் பிடுநீள் வாவி
காரிளஞ் சோலை மொய்த்த கரைஉலாம் கவின்கொள் பொங்கர்
நாரியர் கணவர் கூடி நல்விளை யாடல் செய்வார். (95) 962
வாவியில் அடைந்து மாதர் தங்களில் மகிழ்ந்த ளாவி
மேவுறும் விரகம் பொங்க வேணிழை சிவிறி வீசிக்
காவிஅம் கண்கள் சேப்பக் கலந்தவர் ஒத்து நின்றே
ஆவியின் அரிய கேள்வர்க் ககம்நெக ஆடல் செய்வார். (96) 963
மாணிழை மடநல் லாரும் மவுணரும் வரிசை யாக
வேணிழை சிவிறி வீசி மெய்புழு குற்ற தன்மை
கோணிலை திரியா ஏல்வை மின்னுடன் கொண்மூ ஓங்கிப்
பாணமும் சிலையும் வீசும் சாரலைப் பகர லாமே. (97) 964
வதனமும் கமலமும் வாயும் ஆம்பலும்
சிதர்விழி நீலமும் செப்பில் ஒன்றின
விதம்அறி யாதுதேன் வீழ்ந்து மொய்ப்பன
மதிமுக வனிதையர் மேய வாவியே. (98) 965
அரிசனம் சாந்தமை அளிகொள் காசறை
வரிதரு மல்லிகை மாலை மற்றெலாம்
விரிதிரை வாவிகட் கீந்து மின்அனார்
உரியவர் கைபிடித் துதகம் நீந்துவார். (99) 966
கரையினில் ஏறிமெய் புலர்த்திக் கண்கவர்
அரவுரிப் பண்பினை அனைய வைவனத்
தரையினில் அரியதூ சணிவர் தன்கலை
நிரைதரப் பூட்டுவார் வஞ்சி நீவுவார். (100) 967
அழகுறத் தலைப்பணி ஆற்றி மல்லிகை
குழலினுக் கணிந்துதம் கொழுநன் மெய்யெலாம்
புளகம்உற் றிடத்தன பாரம் போர்த்திடக்
களபமும் பூசுவார் கலன்கள் பூண்பரால். (101) 968
அரைதரு கலைநெகிழ்த் தணிவர் அன்பர்மெய்
விரகமுற் றிடத்தனம் காட்டி வேலைநேர்
வரிவிழித் தொழிலுடன் மவுணர்க் கூடியே
உரைசிறந் திடமகிழ் வூட்டி ஒல்குவார். (102) 969
கரையினில் அம்மனை கழங்கு பந்துகை
விரைதரு காந்தளால் விளைத்து விந்தையாய்
அருவிஒத் திடுமணி ஊசல் ஆடியே
மருவிய மாதர்கள் நறவும் மாந்துவார். (103) 970
பாசனத் தடல்வாள் ஊன்றுந் தன்மைபோல் பருக வாக்கும்
வாசமுற் றியதேன் கொள்ள வாய்ப்பெய்தந் நிழலில் தோன்றும்
காசறைக் குழலும் கண்ணும் முகமும்நாக் கவரக் கண்டிவ்
வேசையர் யார்என் றுன்னி மின்அனார் வெகுண்டு நோக்கா, (104) 971
மிச்சில்என் றகல்வார் ஊற்றம் வேறுகா ணாதொ ழிக்கும்
இச்சிறி யவள்எங் கென்னாக் காண்கிலா தின்னும் நோக்க
வச்சுவாய் அருந்தும் போதில் வதனவான் மதியும் தோன்ற
இச்சசி யினைத்தா என்ன அன்பனை இரப்பர் பின்னும். (105) 972
இன்னமும் மதிநீ தேறல் எய்துபா சனத்தில் எய்தில்
மன்னனெற் பிரிந்த போது வகுத்துநீ அல்லை யோமான்
தன்னிடத் திருத்து நாதன் தலைக்கணி என்றும் பாரேன்
கொன்னிடல் செய்வேன் வாவா எனக்குறித் துரைப்பர் மாதோ, (106) 973
ஏடிவா தோழி என்னைத் தேடித்தா என்னைத் தேடும்
ஆடவன் தன்னைத் தேடி அளித்திஎன் றறைவர் அன்பால்
பாடியே மகிழ்வர் வண்டைப் பதுமத்தின் கையால் ஓச்ச
நாடியே கழலிற் பாயப் பார்த்தரன் நலிகு வாரே. (107) 974
இளையையாய் ஏடி நானோ அல்லனோ என்னைத் தேடி
விளைவுறும் அன்பன் தன்னை வெறுத்திலேன் எனவி ழித்தே
அளவளாய் அன்பால் கூடி ஆனனம் இணைத்தே அங்ஙன்
வளமுறு மதுவை நோக்க யாரவள் உடன்எம் மன்னன் (108) 975
பொருந்துவ கெட்டேன் என்னப் பூசலால் ஊடி நீடி
விருந்தினர் ஊற்றம் காணாள் விரைநற வுணும யக்கால்
பருந்தெனச் சுழல்வர் வேர்ப்பர் பாகர்மேல் வீழ்வர் பண்பிற்
கருந்தடங் கண்கள் சேப்பக் கலந்தவர்க் காட்டுங் கள்ஊண், (109) 976
மதுக்களிப் பகன்று தென்றல் மருவிய சந்த்ர காந்தப்
புதுப்புனல் பொழிய வானம் பொருந்துதண் சுடர்மேல் தோன்றப்
பதிக்கணில் உலவி வீணை பயின்றிடப் பந்தர் மேவித்
ததிப்பதம் அருந்திப் பாகம் சார்ந்தசீ தளநீர் மாந்தி, (110) 977
சந்தன களபம் பூசித் தைவரு தென்றல் காலக்
கொந்தலர் சுகந்தம் வேய்ந்து குங்குமம் பன்னீர் வீசி
ஐந்தெனும் விடயம் நீங்கும் அவர்களும் மயங்க அன்பால்
மைந்தாக ளுடனே மாதர் மகிழ்ந்திடும் வசந்த காலம். (111) 978
இவ்வகை வசந்த காலத் தினியசிந் துரத்தில் எய்தி
அவ்வியம் அகன்ற சிந்தைக் கவுதமன் அரிய யோக
நவ்விசேர் கரனை உள்கிச் செய்துநா யகன்பூ சைக்குச்
சைவவே டத்து வால சதானந்தர் தவிசுக் கேற்ப, (112) 979
பணிசெயும் போதில் ஓர்நாள் பன்மலர் வனத்தில் எய்தி
நணியபூக் கொய்யும் போதில் நலந்திகழ் ஏக யோகத்
தணிவுடை உளத்தர் ஈன்ற தையலாள் பிறபா பத்தி
மணிமுகத் தனத்தாள் தோழி மாருடன் வனத்தில் வந்தாள், (113) 980
வந்துபூக் கொய்து கானில் வசந்தவீ ணைகண் டாத்தி
இந்தெனும் முகத்தார் பாட இளையவர் தளவம் கோத்துத்
தந்திட வாங்கி மோந்து சார்ந்தவர்க் குதவித் தாழ்ந்தே
கொந்தளம் அதனில் சூடிக் கொம்பனார் விளையாட் டெய்தி (114) 981
வேறு
வரும்பொழு தறிகிலிகை மைந்தன் மாதினை
ஒருங்குற நோக்கியே உள்ம யங்கியே
கருந்தடங் கண்ணியை எய்திக் காமம்உற்
றருந்தினன் கண்களால் அளவில் ஆசையால், (115) 982
நின்றிடும் மைந்தனை நெறிகொள் கூந்தலும்
துன்றிய விரகத்தால் சோகம் முற்றியே
மின்திகழ் வளைஉக வேனி லான்பொர
மன்றல்செய் திடவு மையல்பொ றாமலே, (116) 983
மாதவிச் சூழலும் வல்லி மல்லிகைப்
போதுலாம் பந்தரும் பொருந்தி மேவிய
சீதள நீழலில் சேர்ந்து புல்லியே
ஆதர வுடன்அவண் அகன்று போயினார். (117) 984
மனத்தினில் பயத்துடன் மாதை நீங்கியே
தினப்படி நியதிபோல் சிறுவன் தண்டலை
வனத்துள பலங்களும் குசையும் மாமலர்
இனத்துடன் கூடையில் எடுத்துச் சென்றனன். (118) 985
சாலையில் எய்தினான் தவம்இ யற்றியே
சீலமா தவனிடம் சேர்ந்த போதினில்
காலம்மூன் றையும்உளம் கருதும் கோதமன்
வாலச தானந்தை மதித்துக் கூறுவான். (119) 986
வேறு
வனத்திடை வேட்கை உற்று மாதரைக் கலந்து மாய
வினைத்தொழிற் குரியை நீயும் கொடுவந்த வேண்டும் எல்லாம்
அனைத்தையும் களைக மிச்சில் ஆனதென் றறைந்து மிக்க
சினத்துடன் எழுந்து கண்தீச் சிதறிடச் சீறிச் சொல்வான். (120) 987
கேதக மாமுனிவன் ஈன்றபிறபா பதிபால்
சோகம்உறு நீயும்அவள் சோர்வினால் உனைமருவ
ஆகஇரு வரும்பிழைக்கும் காமம்எனும் அவத்தையினால்
தாகம்உற வேஅலகை ஆகஎனச் சபித்தனனால். (121) 988
அப்பொழுது புகல்காணா தழுங்கிஅடி வீழ்கின்ற
விப்பிரனை மடவரலை வெகுளிதீர்ந் தரியமுனி
செப்புவான் முகம்நோக்கித் தென்பொதிய முனியாலே
இப்பிழைநீங் கிடும்அஞ்சேல் என்றருள இடர்ஒழிவார். (122) 989
சபித்தமுனி சாபத்தால் பேயுருவே உதித்திடத் தணந்து
கவித்தபுதற் காடெலாம் கரைந்துகரைந் துலவை இடைத்
துவைத்துளியும் பஞ்சுபோல் கழன்றுவினை யின்துடக்கால்
அவித்தயாக் கையர்இவர்கள் அலம்வரும்அந் நாள்தன்னில். (123) 990
நாரதன் எழுந்து பொதிகையில் அடைந்து
நலந்திகழ் குறுமுனி தன்னை
வாரமாய்ப் பணிந்து கவுதமர் பூசை
மருநா யகர்க்கியற் றியதோர்
சீரையும் புகழ்ந்து தாரவன் றனாலேக
சுதமுனி ஈன்றசெந் திருவாம்
தார்கெழு கூந்தல் தன்னுடன் வால
சதானந்தர் சாபகா ரணத்தால், (124) 991
அலகைஆ யினர்என் றறைந்தநா ரதனோ(டு)
ஆரம்மே வியமலை அன்பன்
பலகலை உணர்ந்தோர் தம்மொடும் போந்து
மருதமா பதியில்வந் தெய்தி
மலம் அகற் றியதீர்த் தம்குடைந் தன்பால்
வலங்கொடு மந்திரம் அடைந்து
கலைமதி வேணிக் கடவுளைப் போற்றிக்
கவுதமர் தம்மையும் கலந்தே, (125) 992
அளவளாய்ப் போற்றி முத்திமண் டபத்தில்
அருச்சுன நீழலில் அமர்ந்தே
இளமதி முடியில் இழிந்தவன் னியின்நீர்
இருங்கரை மேவிய இயல்பாம்
வளம்உலா வியமெய்த் தலவளம் பேசி
மாண்டவி யாசமா முனியும்
விளைவினை முனியும் சுதரும்இங் கலகை
ஆயினோர் வினைஅகன் றிடவே. (126) 993
கருதிடும் பொழுதில் சுருள்மயிர்ப் பகுவாய்க்
கறைஉரு அரக்கியின் வடிவாய்
உரும்என வெடித்த உரையொடும் உரோமம்
உலவிய உளியம்அ தென்ன
வரைஎன ஓங்கி வனத்திடை உயிரை
வாயிடைப் பருகிநெட் டுயிர்ப்போ (டு)
எரிதவழ் சூர நகையுடன் விரைவால்
எய்தினாள் இங்ஙனம் இருந்தோர், (127) 994
யாவரும் வெருவி இவைஎன்கொல் என்னா
ஏகமா சுதமுனி இயம்பும்
பாவைதான் இவள்இ ராட்சதை முந்தைப்
பாவத்தின் வலியினால் பட்டுச்
சாவதா னதுமே அங்கிரா முனிவன்
சாபத்தால் வேந்தன்மா திவள்இப்
பூவினில் இந்தப் புன்மைநீங் கிடவே
போந்தனள் என்றனன் போதன். (128) 995
விரியவே உரைப்பீர் என்றலும் விளம்பும்
மேகமார் சோலைசூழ் விந்த
வரையினுக் கருகோர் புவிபுரந் திடுவோன்
மனுகுல வண்மையான் வாய்ந்த
பருதிபோல் வருமி ரெட்சரா சன்கோல்
பரிந்திடும் சித்திர கேது
முருகலர் தாரான் மகள்தராப் பதிப்பெண்
முன்ஒரு காலங்கள் தன்னில், (129) 996
அளவிலாச் செல்வ அமுதெனும் திருவாள்
அந்தரத் தோர்களும் புகழும்
இளமைசேர் பருவத் தெழிலுடை மடந்தை
இருங்கணை விழியினால் பட்டோர்
உளம்மிக உருகி உடைந்தவர் மிக்கோர்
உழையரோ டாடிட அணைவாள்
வளமிகு வனத்தில் மலர்கொய்து லாவி
வரும்பொழு தங்ஙன மல்கும், (130) 997
மங்குலார் சோலை சூழ்ந்திடும் வனத்தில்
மவுனயோ கத்தினில் வதியும்
அங்கிரா இயற்றும் மலர்வனத் தெய்தி
அவர்சிவார்ச் சனைக்குறு மலரைச்
செங்கையால் எடுத்தே மோந்தனள் குழலிற்
கோத்தனள் அதுகண்டு சீடர்
புங்கவ முனிபால் உரைத்திட வெகுண்ட
போதினில் அவளும்அங் குற்றாள் (131) 998
அங்கிரா முனிவன் அரிவையை நோக்கி
அர்ச்சனை மலர்கொய்தாய் அதனால்
தங்கிராப் பகலும் தனிமையாய்ச் சுழலும்
அரக்கிய தாகெனச் சபித்தான்
திங்கள்சேர் முகத்தாள் நடுங்கிஉள் உடைந்து
திருவடி பணிந்திவை தீரப்
புங்கவ நினது திருவுளம் இரங்கிப்
பொறுக்கெனப் பரவிடப் புகலும். (132) 999
உருஎழில் நீங்கும் அரக்கியின் உருவம்
ஒருபதொன் பான்பத மொழிந்தால்
மருதிடை முனிவோர் வதிந்திடும் வனத்தில்
வந்திடும் வேளைமா தவத்தோர்
திருவிழிப் படுவாய் மோசனம் ஆகும்
என்றனன் திருந்திழை நீங்கக்
கருஉரு அடைந்தே அரக்கியாய்த் திரிந்தாள்
கவலைநீங் கிடவரும் வேளை. (133) 1000
இத்தலத் துற்றாள் இவள்என முனிவன்
இசைத்திட யாவரும் இரங்க
மைத்தவழ் கண்ணாள் பொருநையில் எய்த
வளர்அருட் கண்அளித் தருளிப்
பைத்தலை அரவப் பரமனைப் போற்றும்
பருப்பதப் பொதியமா முனிவன்
வித்தக முனிவோர் தம்முடன் எழுந்து
விமலன்தன் மந்திரம் விளம்பி, (134) 1001
திருத்தம தான சித்ததீர்த் தத்தின்
தென்புற மடுவினில் அறலை
அரக்கியின் உருவம் அகன்றிடக் கையால்
அள்ளியே தெளித்தனன் அந்த
உருக்கெட முன்னை உருவுவந் தெய்த
உணர்வுடன் முனிவனைப் பணிந்தாள்
பெருக்குளோர் யாரும் அதிசயம் அடைந்தார்
பேசுவோன் பதியில்வந் துற்றார். (135) 1002
மோசனம் ஆன கன்னியும் எங்கோன்
முன்பணிந் தருளினை அடைந்தாள்
மாசக லாகதி மோசன தீர்த்தம்
ஈதென வழுத்தின வானோர்
ஆசைவல் வினையால் அலகைஆ யினரும்
உய்ந்திட அமையம்ஈ தென்றே
நேசமாய் ஏக சுதமுனி வன்தான்
நினைந்திது தீரஇந் நேரம், (136) 1003
ஆகிரு சனத்தால் அலகைஆ யினரை
அடைக்குவம் எனநொடித் தழைக்க
வேகமாய் அலகைச் சத்தம்ஒன் றெய்த
மிக்கவர் யாதென வினவ
ஏகமா சுதரும் இருவர்தம் செயலை
இசைத்திடக் குறுமுனி இரங்கி
வாகுசேர் கின்ற கோதமர் தம்மை
வணங்கியே அருள்என மகிழ்ந்து, (137) 1004
பார்த்திட அலகை நீங்கியே பழைய
படிஉரு எய்தினார் அவரைத்
தீர்த்தம்ஈ தாடி வரஅருள் செய்யச்
செப்பும்அத் திறம்முடித் தடியில்
சேர்த்துறப் பணித்தார் முனிவர்கள் இறும்பூ
தெய்தினார் திகழ்குறு முனியைத்
தோத்திரம் உரைத்துப் பரவினார் மேலைச்
சுரர்களும் பூமழை தூர்த்தார். (138) 1005
வேறு
புகலரிய தீர்த்ததலம் மூர்த்திஇது போலும்
அகிலதலம் மீதரிது அளக்கில்அதன் உண்மை
சகம்உதவு வோனும்அறி யாதசய குய்யம்
திகழுவதெ னக்கழறி மலயமுனி செப்பும், (139) 1006
ஏகசுத மாமுனிவ னேஇவர் தமக்கே
யாகபலன் இங்ஙனம் இயற்றுகென யாவும்
யோகம்அத னால்அறியு முதிப உனக்கே
தாகம்உறு காரியம் எனக்குமகழ் தானே, (140) 1007
என்னஇரு வோர்களுடன் ஏகசுத யோகர்
தன்நிகரில் கோதமர் தமிழ்க்குறு தவத்தோர்
மின்னுசடை வேதியர்கள் யாரும்விம லன்தன்
சந்நிதி அடைந்திறைவன் தாள்பரவி நின்றே, (141) 1008
போற்றினர் அரன்புகழ் புகன்றனர்தம் முன்னே
ஏற்றுடைய நாயகர் எழுந்தருளி இங்ஙன்
நோற்றமுனி கோதமுனி குறுமுனியை நோக்கிச்
சாற்றும் உயர் மாமுனிவ என்றருள் தரித்தே, (142) 1009
அரக்கிஉரு வோடலகை ஆயினர்கள் பாவம்
கரக்கஅவர் மேல்புனல் தெளித்தனிர் களைந்தீர்
சுரக்கும்இவர் ஆசைதொலை யச்சுதர்கள் தங்கட்(கு)
இரக்கம்உள தண்புளியில் இவர்மணம் முடிக்க, (143) 1010
சாலைதுரு விச்சகல ரோடணிகள் செய்தே
ஆலயம் இதற்கழகு றும்படிகல் யாண
மாலைபுனை வித்துவது வைப்பணி முடிப்பீர்
சீலம்உற என்றனர் பினும்சிறி துரைப்பார். (144) 1011
வேறு
வால சதானந்தருக்கும் மாதுபிற பாபதிக்கும்
சாலும் அலகையு மகுவைத்தடிணந்த மடுவில் படிவோர்
சீலராய்ச் செல்வம்உறும் அலகைபோம் சீறரக்கி
கோல மோசன தீர்த்தம் ஆடினும் இக்குணம்பெறுவார். (145) 1012
கோதமர் படிந்ததிரு மூலதீர்த்தம் குடைவோர்
பாதகம் அகன்றுபர மானந்த பதம்பெற்று
நீதம்உற வேவாழ்வர் எனநிகழ்த்தி நிமலன்தான்
போதம்உறு சிவலிங்கத் திடைப்புகுந்து பொலிந்தனனால். (146) 1013
ஈசன்அரு ளின்படியே ஏகசுதர் முதலான
ஆசகன்ற முனிவருடன் அகத்தியரும் கவுதமரும்
வாசமுறும் ஆம்ப்ரவனம் மகிழ்ந்தெய்தி மைந்தனுக்கும்
மாசில் பிறபா பதிக்கும் மணம் நேர்ந்து மதித்தனரால், (147) 1014
மணவினை கோலி ஈசன் மகிழும்ஆ லயம்வி ளக்கி
அணிஅலங் கார முற்ற அம்பொனால் அழகுசெய்தே
பணிதிகழ் வேள்விப் பந்தர் பாலிகை விதானப் பந்தி
சணிவுளத் துடையோர் கூட்டம் சார்ந்துமங் கலத்தர் ஆகி, (148) 1015
விதிவழி மணம்செய் வித்தார் வேட்டமா தவர்மென் சாயல்
மதிநுத லோடு தென்பால் ஆச்ரமம் எய்த வாய்ந்த
பதிமணம் உற்ற தாலே மணநகர் புகைவ ரந்தே
கதியுடன் உறங்காப் பண்பால் புளிப்பெயர் கழறு வாரே. (149) 1016
என்றும்இப் படிய தான எகினமா வனத்தில் எய்தி
மன்றல்செய் மைந்தர் பாதர் கவுதமர் மலய வாசர்
கொன்றைவே ணியனைப் போற்றி இருந்தனர் குடபால் எய்திச்
சென்று தீர்த் தம்கு டைந்து திருவில்லீச் சரத்தைப் போற்றி, (150) 1017
பணிவொடு கும்ப யோகன் பொதிகையில் படர்ந்தான் இப்பால்
கணபதி தீர்த்தம் ஆடிக் கயமுகன் தன்னைப் போற்றிக்
குணபதி முனிவன் ஆன கோதமன் புளியில் மேவி
இணைஇலா தினிய யோகம் புரிந்தென்றும் இருக்கின் றானால். (151) 1018
சதானந்தர் கதையைச் சாற்றும் சூதமா முனியைத் தாழ்ந்து
பதானந்தம் பரவி இந்தப் பதிமகத் துவத்தில் இன்னும்
கதானந்தம் உரைப்பீர் என்று முனிவர்கள் கழறப்பாண்டிச்
சுதானந்தப் பிழையை நீங்கி அருள்பெறு தன்மைசொல்வான். (152) 1019
--வாலசதானந்தப் படலம் முற்றும்-
11. புறமதம் தீர்த்த படலம்
பரமதா ரகநல் லூரில் அலகைமோ சனத்தின் பான்மை
உரைசெய்தீர் இன்னும் இந்த உத்தமத் தலத்தில் தானே
அரவணி நாதன் செய்த சரித்திரம் அறைவீர் என்ன
புரிசடை முனிவர் கேட்பச் சூதர்தாம் புகலல் உற்றார். (1) 1020
வேறு
பிறைவளர் வேணிப் பிஞ்ஞகன் அருளால்
பேய்உரு அகன்றலர் மணத்தால்
நிறைவரம் பெற்ற தறைந்தனம் பாண்டி
நிருபன்ஓர் கன்னிகை மயக்கால்
புறமதம் சேர்ந்து தமரினை வெல்லப்
புந்திசெய் திவ்விடை வரும்போ(து)
இறைஅருள் வரத்தால் அவன்மனம் திருத்திச்
சைவராய் உய்த்தவாறி சைப்பாம். (2) 1021
வேறு
திருந்து வார்பொழில் சூழ்மண வூரினில் செல்வம்
பொருந்தி வாரிசூழ் புவிகளும் பாண்டியும் புரப்போன்
பருந்து பந்தர்செய் வேலினான் பஞ்சவர் மரபில்
வரும்சு ருக்கொடிச் சித்திர சாபமா றன்தான் (3) 1022
நாளும் பலவளம் படுத்தியே பாண்டிநா டதனை
ஆளும் மன்னவன் அதிபல தானையால் அடல்செய்
தோளி னால்வளர் சென்னிசேர் நாட்டின்மேல் சூழ்ந்து
வாளி னால்அமர் பொருதுகைக் கொண்டிட மதித்தான். (4) 1023
தானை சூழ்வர எழுந்தவர்க் கொற்றரால் சாற்றி
யானை தேர்பரி வீரர்ஆ யுதம்அணி வகுத்து
மான மேல்கொடு காஞ்சிமா நகரினில் வாழும்
கோன்மை சேர்இட பத்துசன் மேல்அமர் குறித்தே. (5) 1024
வந்த போதிட பத்துசன் வழுதியோ டமர்செய்
தந்தி இல்லனாய்த் தான்ஒரு புள்ளுவந் தனையே
புந்தி செய்தனன் போலுமே செழியன்பால் பொருந்திச்
சிந்தை யாய்க்கலந் திடஒன்று மனத்தினில் தெளிந்தான். (6) 1025
தன்மகள்சந் திரபதியைத் தமிழ்வேந்தன் மணந்திடவே
நன்முதிய ரால்இயற்றி நாள்வரைந்து மணம்புணர்த்திப்
பின்வரிசை பெறச்செய்தான் பெட்புறும்அந் நாள்தன்னில்
இன்னலங்கொண் டிடச்செழியற் கெழில்புதல்வர் தமைஈன்றாள். (7) 1026
வழுதிமைந் தரில்முன் வந்த சுசேடணன் மவுலி தாங்கிப்
பழுதிலாப் புவனம் மல்கப் பரிக்கும்நாள் சித்ர சாப
விழுமியன் இமய வல்லி பங்கில்வாழ் விமலன் தன்னைத்
தொழுதுபூ சித்து நாதன் துணைஅடி நீழல் சேர்ந்தான். (8) 1027
வேறு
பன்னு கீர்த்திச் சுசேடணன் பாண்டியன்
நன்னி லம்புரக் கின்றஅந் நாளிலே
துன்னு கின்ற வடதுளு வத்திலே
மன்னு கின்ற மிலேச்ச மதத்துளான், (9) 1028
இன்னி லத்திறை வன்முதல் யாரையும்
தன்ம தத்துறச் செய்திடும் சால்புதான்
என்னெ னக்கரு தியிது வேசெய
உன்னி யேநவ மாமணி உய்த்தனன். (10) 1029
தான்பெ றுங்காந் தியான தரங்கனி
மான்த னக்கணி மாமணி யால்பொதிந்
தூன்த தும்பிய வேலன் உளத்தையே
நான்க வர்ந்திடு வேன்என நண்ணினான். (11) 1030
கருதிப் போந்தகாஞ் சகன கன்னியாம்
பிருதுவிக்கண் எழுந்து பிறைக்குலத்
தொருவன் தன்மண வூரினில் உற்றனன்
வரும்அச் செய்தியை மன்னற் குரைக்கவே (12) 1031
மாம ணிப்பொதி கொண்டுவந் தோம்எனக்
கோம கற்குரைப் பீர்எனக் கோன்கடைக்
காமர் வாயிலர் காவலர்க் கோதிடத்
தாமிங் குத்தரு வாய்எனச் சாற்றவே. (13) 1032
ஏவ லாளர் இவனை அழைத்திடக்
காவ லன்முன் வரும் அக் காஞ்சகன்
மேவு நன்மணி மிக்க வெறுக்கையும்
தூவி டும்படி வந்து துதித்தனன் (14) 1033
வேந்தன் நோக்கினன் மிக்க வெறுக்கையால்
வாய்ந் திடும்அள காபுரி மன்னனோ
வாய்ந்த நன்மணி யத்தன்என் றுன்னினான்
காந்த ரங்கனி தன்னையும் கண்டனன். (15) 1034
உலகில் இல்லதோர் ஓவிய மேஇவள்
கலைத ரும்பிறை காட்டிய மேகமே
இலகு கூந்தல் எரிமணிச் சுட்டிதான்
நிலவைக் கவ்விய கேது நிகர்க்குமே. (16) 1035
தோற்றந்தரு நீலஞ்சுழல் புரியு முளைத் தொழிலால்
கூற்றங்கொலை பயிலச் செயுங்குழைகூர்ந்து நடக்கும்
மாற்றமில் வரிஓடிய வண்டேவலின் மதனை
ஆற்றுங்கயல் போல்துள்ளி அமர்ந்தம்புறழ் விழியே. (17) 1036
எள்ள ரும்பிய மூக்கணி இந்துவின் அழகை
மெள்ள வந்துமுன் நோக்குறு மீனையே அனைய
கள்ள ரும்பிய முல்லைசெங் கயிரவத் திடையே
விள்ளும் தன்மைய தென்னும்வாய் மென்மொழி அமுதே. (18) 1037
சுரிவளை கந்தரம் தோள்ப சுங்கழை
சரிவளை முன்கையாழ் காந்தள் தாமரை
வரைபயில் அங்கையாம் மாந்த ளிர்க்கும்நேர்
விரல்பவ ளங்களாம் உகிர்வெண் முத்தமே. (19) 1038
வேறு
கோங்கிள முகையோ குரும்பையோ செப்போ
கோகன கம்திகழ் அரும்போ
பாங்குயர் சூதோ பலவளம் சிறந்த
பருப்பத மோசெழும் பந்தோ
மாங்கணை வசந்தன் மணிஅணி முடியோ
வார்திகழ்ந் தாரம்மேல் தாங்கி
நீங்கிடா திறுகிப் பணைத்திறு மாந்த
நேரிழை இவள்இரு தனமே. (20) 1039
வண்டணி ஒழுங்கோ வல்லியோ வரைசேர்
வயிற்றணி ஆலமோ உந்தி
தெண்டிரைச் சுழியோ சிங்கவோ விழையோ
சேந்துள பிடிக்கடங் கிடையோ
தண்டர ளம்சேர் மேகலை புனைந்த
தானைசூழ் அரவமோ நிதம்பம்
கண்டகு கதலி குறங்குகால் காளங்
கந்திரு குறிகம டம்தான். (21) 1040
அரிபெயும் சதங்கை நூபுரம் அசைந்த
ஐவளை இலங்கவே ஆற்றும்
பரிபுரம் அணிந்த பாதமெல் விரல்தான்
பவளத்தின் சூழல்பங் கயந்தான்
விரிதளிர் மேனி சாதியின் போது
விழைபவர் மனம்கவர் சாயல்
கருவுலாம் தோகை அனநடைக் கிவளைக்
கருதியே கமலனைத் தாங்கும். (22) 1041
இவ்வகை உருவின் தரங்கனி மானாள்
இவன்பினே தோற்றிட இறைவன்
செவ்வியின் நோக்கக் காஞ்சகன் உரைப்பான்
செந்திரு மார்பனே சிறந்த
நவ்விநேர் விழிஎன் மகள்இவள் நின்பால்
நவமணி நான்கொடு வந்தேன்
அவ்வியம் அகற்றும் இம்மணி புனைவோர்க்
கவைவர லாறுகேள் என்றான். (23) 1042
திங்கள்அம் குலத்து மன்னவன் வியந்து
திருமணி யாவையும் நோக்கி
எங்குள இவைதான் என்றலும் மிலைச்சன்
இயம்புவான் இந்திர திசைபார்த்
தங்கமோ டிருந்து கருந்துகில் பரப்பி
அதில்நவக் கிரகமாய் வைத்துப்
புங்கவர் வியப்ப வலன்உரு அதனில்
போந்திடும் மணிஎனப் புகன்றான். (24) 1043
யாதெனில் முன்னாள் வலன்புரி தவத்தால்
யாவையும் ஈன்றளித் தழித்த
பூதநா யகன்பால் அழிவிலா வரங்கள்
புரிந்திடப் பெறும்அவன் புகல்வான்
ஏதமேல் வளவும் புகுந்திடா என்பால்
இன்னல்எய் திடினும்இவ் வுடல்தான்
நீதம்எய் திடவே நவமணி யாக
நின்அருள் செய்என நிமலன், (25) 1044
தந்திடப் பெற்ற தவத்தினால் புனிதன்
தன்னுடன் பொரவெகு சமரில்
இந்திரன் ஆற்றா தோடினான் பின்வந்
திறைவலா தாணிடத் தெய்திப்
புந்திவஞ் சனையால் வென்றிடப் புகழ்ந்து
பொருவிலா வரந்தர வல்லே
வந்தனன் என்றான் புறகிடு நீயோ
வழங்குவை உனக்குநான் வகுப்பேன் (26) 1045
தருகிலேன் ஆகில் அமர்க்குடைந் தோடும்
சமத்தனே யான்எனச் சபதம்
விரையவே புகலப் புனிதனும் யான்செய்
வேள்வியாற் றவையினுக் காவாய்
வருகென உரைத்தான் வழங்கினான் அந்தட
படிவலா சுரன்எனும் வள்ளல்
பொருவிலா தியற்றும் மகத்தினில் ஆவாய்ப்
போந்தனன் யூகத்தில் யாத்தே. (27) 1046
வாய்புதைத் தபையை வாங்கினார் வலனும்
மந்தர மலர்பொழிந் திடவே
பாய்கதிர் விமானம் உற்றுமேல் எய்தப்
பசுவின துருஎலாம் பாரித்
தூமணி யாகத் தோன்றின வவையிற்
சோரிமா ணிக்கம்பல் முத்தம்
சேய்நிறப் பவளம் தசைவயி டூர்யம்
செம்மல்தன் பித்தைகண் நீலம், (28) 1047
வச்சிரம் என்பு புருடரா கம்தான்
வலனவை நிணங்கள்கோ மேதம்
பச்சையே பித்தம் எனநவ மணியும்
பாரியாத் திரகிரி முதலா
மெச்சவே தோன்றும் சார்விடம் பிறப்பு
வியந்திடும் ஒளிநிறம் சாதி
நச்சிய குற்றம் சோதனை தெய்வ
நவமணி அணிபலன் நவில்வாம். (29) 1048
சிங்கள மக்கந் தும்புரு காளஞ்
சிறந்தநால் யுகத்தினும் தோன்றித்
தங்குசா தரங்கங் குருவிந்தஞ் சௌகந்
திகத்துடன் சார்ந்தகோ வாங்கம்
பங்கய ராகம் பத்துடன் இருநான்
காறுடன் பகர்ந்தநா லாகும்
பொங்குசா தரங்கம் மாதுளம் பூவித்
தழல்கல் லாரம்புண் டரிகம், (30) 1049
இரவிகச் சூலம் தீபமே கோபம்
எழிலியா மிறைகுரு விந்த
குருவளர் அரத்தம் பொன்முயற் குருதி
குன்றிசெங் காந்தள்தி லோத்தம்
தருவளர் திலதம் பலசலர் சௌகந்
திகம் அசோ கந்தளிர் குயிற்கண்
மருவளர் இலவம் ஐவணம் வஞ்சி
மாழைகோ வாங்கொளி குரவே, (31) 1050
குதம்பையின் மலர்கொவ் வைக்கனி செங்கற்
குணிதமாஞ் சோதனை திணன
நிதம்பெற மீகீழ் சூழ்சுடர் ஆகி
நிலவிய துத்தமம் புனைவோர்
சதம்அரி யாகங் கன்னிகை யன்னந்
தரைபசுத் தானமோ டைந்தும்
விதம்பெற எய்திப் பகையினை வெல்வர்
வெறுக்கைமே விடுவர்கள் பின்னும், (32) 1051
பெறுவர்கள் மக்கள் பேறுடன் பின்பு
பேசிய மணிஉறு குற்றம்
புறநிறம் கீற்றுப் புள்ளடி புள்ளி
புரைமணி தனக்கெலாம் பொதுவாம்
மறையவர் முத்தம் வயிரம்மன் னவர்மா
ணிக்கமே துப்புடன் வணிகர்
நிறவயி டூர்யம் புருட விராகம்
நெறிதரு கின்றகோ மேதம், (33) 1052
மரகதம் நீலம் பின்னவர் முத்தம்
மன்னிய தலசமே சலசம்
உரியன பதின்மூ வகைப்படும் சங்கம்
ஒள்ளிய இப்பியாம் ஏனம்
கருமுகி லால மருணமாங் காண்டம்
கழைகன்னல் மீன்தலை பசுமை
பொருகரி யாழி சாலிளென் றெய்வம்
புனலிறை தீயமன் புனிதன் (34) 1053
கற்புடை மடவார் கண்டமும் ஆகும்
கவின்புறா முட்டையின் திரட்சி
பொற்புலை முடுவொத் திடும்ஒளி நன்றாம்
புலன்தவிர் முனிவரன் என்பும்
மற்புயன் என்பும் வயிரமா மணிகள்
தனக்கெலா மகிமையாம் பச்சை
அற்புதன் பித்தம் பறவைகொண் டீர்ந்தண்
டதனிடைச் சிதறிடத் தோன்றும். (35) 1054
இன்னமும் வினதை அருணன்உற் பவித்த
முட்டைஓட் டினைஎழில் கருடன்
தன்அரை யினில்யாத் திடஅது தப்பிச்
சாகர வைப்பினில் உதித்த
பின்னும்மோ கினியோ டிறையவன் தொடரப்
பிறந்திடும் அரிகரன் கருடன்
உன்னி இந்தியத்தைக் கவ்வி ஒத் ததுந்..
துலுக்கிலும் உதறஉற் பவித்தே, (36) 1055
காடம்சுப் பிரமே காளம்மூ வகைய
கலுழனில் பச்சையாம் காடம்
பீடுயர் சாதி சகுணச தோடம்
சகுணத்தில் பிறந்திடு மாறு
காடம்உல் லகிதம் போசலம் முத்தம்
கவின்பெறு விதுகம்முத் தகமாம்
தோடலே சாஞ்சிதம் துட்டமே தோடம்
மூற்சித மேமந்த தோடம். (37) 1056
தோடம்என் றின்ன நிறம்கிளி மயிலின்
தோகைபுற் குல்லைதா மரைநெல்
ஏடதாம் முன்னை விதியினால் வலன்கண்
இந்திர நீலமா நீலம்
ஆடல்விச் சுவனை முடித்திடும் பழிதீர்
அரும்பரி யாகத்தின் புகையால்
சாடுமா விழியில் ஒழுகிய பூளை
ஒன்றுதன் கண்ணுடல் தாங்கா, (38) 1057
பருதிதன் தேவி வனமதிற் பேடைப்
பரியதாய் நோற்றிடப் பானு
கருதியே தானும் குரகத வடிவாய்க்
கலந்திடச் சிதறிய தாது
இருவகை நீலம் நிணங்கள்கோ மேதம்
எழில்நிற நெய்த்துளிகோ டீர
புருடவி ராகம் வலன்கப மசுரைப்
பொருதிடும் என்மர்வா ரத்தே. (39) 1058
கக்கும்இம் மணியால் அந்தர நாடு
கண்டனர் மந்தர வரையின்
பக்கம்இம் மணியாய் இருப்பது பரமன்
அருளினால் பெற்றவன் உரோமம்
மிக்கவை டூர்யம் இளாவிர தத்து
விரவின கோரக்கம் மகதம்
மக்கம்சிங் களமாம் மலையபா ரிசமும்
வந்திடும் நிறங்களை மயிலே. (40) 1059
வலன்தசை துவர்தென் புலத்தவர் இடத்தும்
மதுகயி டவர்வசத்தும்
விலங்கலை மகவான் குறைத்திடும் போதும்
விளங்கின நிறம்கிளி மூக்கோ
டலர்முருக் கம்பூ வாகும்இம் மணிக்குத்
தெய்வதம் அருக்கனே முதலாம்
மலர்வல்லி சாதி மந்தரம் கழுநீர்
வனசம்உற் பலம்நந்தி மவ்வல் (41) 1060
இவ்வலர் சாத்தி இறைஞ்சியே தரிப்போர்
இருங்கடல் சூழ்புவிக் கரசாய்
நவ்விசேர் விழியார் போகமும் பவிசும்
நாற்கரு விப்படை முதலாம்
செவ்விதின் பெறுவார் அலகைநோய் செறுநர்
ஊற்றமும் எய்திடா சிறந்த
கவ்வொளி சூழ்ந்த மணிஇவை என்று
காஞ்சகன் கவுரியற் கீந்தான். (42) 1061
இன்னமும் ஒன்று புகலுவேன் உன்நோக்
கெய்திய இவள்பிறக் கும்கால்
சொன்னஆ காய வாணிஒன் றுளது
தொடைபுனைந் திடும்இவள் கணவன்
இன்னிலம் முதலா என்னிலத் தினுக்கும்
இறைஎன இறைவரம் அளித்தான்
மன்னவ இவண்நீ மணப்பதற் கிசைவேன்
வாய்மைஒன் றீகுவை யானால், (43) 1062
என்னலும் உளத்தில் உன்னிய படியே
இவன்மொழிந் தனன்என இறைவன்
மின்நகு மூர லுடன்காஞ் சகனை
வியந்துநீ வேட்டவை என்னே
நின்உளம் வியப்ப ஈகுவன் வாய்மை
நிறைமையும் ஈகுவன் என்றான்
என்னது மதத்தைப் பொருந்துவை ஆகில்
இவளைநீ மணப்பதற் கிசைவேன், (44) 1063
உன்னது கிளைஞர் யாரும்எம் மதத்தை
உற்றிட உறுதிவேண் டுகிலோம்
மின்இடை மயிலைத் தருகுவன் என்றான்
வேந்தனும் அதற்கிசை வுற்று
தன்உடன் பிறந்த வீரசே னனையும்
தகைமைசேர் மந்திரர் தமையும்
துன்னிய கிளைஞர் தம்மையும் நாட்டோர்
தம்மையும் தொகுத்திவை நிகழ்த்தும், (45) 1064
காந்தரங் கனியை வேட்பக் காஞ்சகன் மதத்தைச் சேர்ந்து
பாந்தமாய் இருக்க வேண்டும் என்றனன் பன்னூல் வல்ல
மாந்தரும் மதிவல் லோரும் மற்றுளார் யாரும் சொல்வார்
வேந்தர்தம் மேவ லாறே அன்றிவே றெமர்கட் குண்டோ. (46) 1065
என்றுரை செய்து பின்னும் இயம்புவார் இளைய மன்னு
மன்றுனை யான போதெந் திரியும்வந் தரசை வாழ்த்தி
நன்றுரை செய்தாய் நீதி ஞாயமோ நலமோ நாடும்
பொன்றுமே புன்ம தத்தைப் பொருந்துதல் புந்தி யாமோ? (47) 1066
மோகத்தால் ஞாயம் விட்டு முன்பினில் லாத முன்னும்
சோகத்தை ஒழிநீ வேண்டில் சுவர்க்கத்து மடவார் தாமும்
வேகத்தால் வருவர் இந்த விதிஇலாக் குலத்து வந்த
போகப்பூண் முலையி னாளைப் பொருந்துதல் கூடா தென்றார். (48) 1067
இவ்வுரை கேட்ட வேந்தன் இருவரை முனிந்து யாம்சொல்லப்
பவ்வியம் இன்றி நீவிர் பகர்ந்தனிர் பண்பாம் என்றே
அவ்விய நெஞ்சி னான்இவ் அறிஞரைச் செயிக்க எண்ணி
வெவ்வுரை புகன்றான் இந்த விதத்தினை இளைய வேந்தன், (49) 1068
மந்திரி யுடன்அ மைந்து வாய்மைசேர் தானை யோரில்
வந்தவர் சிலரை ஈட்டி மறைந்துபோய் முனிசேர் கின்ற
சந்தன வரையில் நண்ணித் தவத்தரைத் தாழ்ந்து போற்றிச்
சிந்தைசெய் திருந்தார் இப்பால் செழியன்பின் னவளை வேட்டு (50) 1069
கரஞ்சகன் மதத்தை உற்றுக் கவல்உறக் கன்னி தேயம்
இருந்தனன் ஓடிச் சென்ற இருவரும் எதிரி யாகப்
பொருந்தஏ கினர்என் றெண்ணிப் புந்திசெய் தமைச்சர் தம்மில்
பெரும்படை உக்ரன் தன்னைப் பெட்புற நோக்கிச் சொல்வான். (51) 1070
வீரசே னன்போ தேந்திரி இவர்தலை விரைவிற் கொண்டு
சாருவீர் என்னத் தாழ்ந்து தானைசூழ் வரஎ ழுந்து
சேரவே துருவுஞ் செய்தி தெரிந்துதென் குன்றத் துற்றோர்
ஏரணி முனியைப் போற்றி இச்செயல் இயம்பி னாரே. (52) 1071
அச்சமோ டுரைக்கும் செய்தி முனிஉணர்ந் தபயம் தந்து
மெச்சவே அருள்நோக் கீந்து மெய்ச்சிவ கவசம் தன்னை
இச்சையால் உபதே சித்துப் புடைமரு ததனில் எய்தி
நச்சர வணிந்தோன் தன்னைப் போற்றுவீர் நாதன் அங்கண் (53) 1072
வந்துமைக் காத்து வேண்டும் வரங்களும் வழங்கும் என்று
செந்தமிழ் முனிவன் கூறிச் செயம்பெறு வீர்செல் கென்றான்
சுந்தர முனியைப் போற்றித் தொன்புடை மருதை நோக்கப்
புந்தியில் கவலை நீங்கப் புரத்தினில் வந்து சேர்ந்து, (54) 1073
தஞ்சம்என் றரனை உள்கிச் சம்புசங் கரமா தேவ
நஞ்சணி கண்ட என்று துதித்தனர் நந்தி தன்னைச்
செஞ்சடை முடியோன் கூவிச் செழியனோ டமைச்சைச் சேர்ந்தே
அஞ்சல்என் றுவகை கூறி அழைத்துவா எனஅப் போதில், (55) 1074
நந்திவே தியன்போல் தோன்றி நரபதி தம்பால் எய்திச்
சிந்தையில் மகிழ்ச்சி பொங்கச் சிவன்உமைக் காப்பான் என்று
முந்துற மொழிந்த ழைத்து முன்னவன் முன்னர் உய்த்தார்
அந்தணர் தம்மைக் காணார் அருச்சுனே சுரனைக் கண்டார். (56) 1075
தொழுதனர் அடியில் வீழ்ந்து துதித்தனர் துணைவன் செய்த
பழுதெலாம் உரைத்தார் இன்னும் பழியினுக் கஞ்சா தெம்மை
விழிதரச் சென்னி கொய்து வீழ்த்திட உக்ர வீரன்
வழுதிதன் ஆணை யாலே வருகின்றான் என்று நைந்தார். (57) 1076
அமையம்ஈ தெம்மைக் காக்க அருச்சுன வாணா என்று
குமையும்சோர் வுள்ளத் தோடும் குவித்தகை யவராய் நின்றார்
இமையவள் கணவன் அங்கோர் சித்தர்போல் எய்தி எங்கோன்
உமைஇங்குப் பாது காப்பான் உடன்வர வென்ற ழைத்து, (58) 1077
கூட்டிவந் துறுதென் கீழ்பால் குகையதன் வாயில் தன்னில்
மூட்டிய அழலாய்த் தோன்ற முன்புவந் ததைவ குந்து
காட்டியே குகையில் உய்க்கக் கவுரியன் அமைச்சன் மற்றும்
ஈட்டிய சேனைக் கெல்லாம் இடம்தர இருக்கின் றார்கள், (59) 1078
எதியதாய் வந்த நாதன் இக்குகை தனில்இ ருப்பீர்
மதியவன் குலத்தோன் ஏவ வருபவர் தாமும் காணாப்
பதியிது வாயி லுக்குள் படர்எரி கதவ தாகும்
அதுவன்றிக் காவல் நாமே அஞ்சல்என் றருளி னானே. (60) 1079
பொய்மதம் தீரும் உங்கள் புந்தியின் கவலும் நீங்கும்
மெய்மகிழ் வுடன்இ ருப்பீர் என்றுரை விளம்பக் கேட்டு
நைமனம் உடைய நம்மை நாதனைப் பணிய நல்கிக்
கைமறி கரந்த மெய்யர் கரந்தபின் எதிவே டத்தால், (61) 1080
வந்தவர் அவரே இந்தக் குகையிடம் வாயில் காட்டி
உய்ந்திடு வீர்என் றோதும் உடையவர் எவரே என்னாப்
புந்தியில் புகழ்ந்து நாதன் பொன்அடிக் கன்பு பூண்டு
தந்தமில் மகிழ்ந்து கொண்டு தகைமையின் இருக்கும் போது, (62) 1081
காவலாய் இருந்தார் அந்தக் கனலில்யோ கம்பு ரிந்த
தாவிலா விரதர் போலத் தவத்தராய் ஓங்கும் சித்தர்
மேவினி துற்ற போதில் உக்கிர வீரன் எங்கும்
ஏவல ருடனே தேடி எய்த்தனன் இங்குற் றானே. (63) 1082
யாகம் நீடுபு டார்ச்சுனப் பதியினில் யாரும்
வேக மாய்வர மதிமயக் கெய்தியே மிகுந்த
தாகம் மேவவ மகோதரப் பிணிவந்து சாரத்
தேகம் ஈனராய் உக்கிரன் முதலினோர் திகைத்தார். (64) 1083
ஆகி மாஉள கரிஉள ஞமலிமற் றியாவும்
பாகு நீங்கிடப் பதைப்புடன் இறந்தஅப் பதத்தில்
தாக மாய்ச்சிலர் வெளிப்பட இருந்தசந் நியாசி
யோகர் பால்வந்து தகைக்குநீர் வேணும்என் றுரைத்தார். (65) 1084
நீவிர் யார்என உக்கிரன் தூதுவர் யாம்நீர்
ஆவி தந்தெமக் கருளுவீர் என்றலும் அவர்பால்
தேவி நீங்கிய சித்தர்தாம் திருவுளம் இரங்கித்
தாவி லாதும திடர்கெடத் தருதும்என் றபயம். (66) 1085
தந்து பூதிஈந் திடப்பணிந் தேந்தியே தரித்தார்
கந்த நீரதாய் அஞ்சினார் கவலையும் நோயும்
சிந்த வேமகிழ்ந் ததிசயம் எய்தினார் சென்றே
இந்த நன்மையை உக்கிரன் தன்னிடத் திசைத்தார். (67) 1086
இன்னல் எய்தினோன் உண்மைஎன் றிசைந்துமெய்ச் சித்தர்
தன்னி டத்தில்வந் தடிபணிந் தான்தகை தீர
மன்னு பூதிஈந் தனன்சித்த தீர்த்தத்தின் வடகீழ்த்
துன்னு ஞானதீர்த் தம்குடைந் தாடிவா சொல்வோம். (68) 1087
வேறு
என்றயோ கரைத்தாழ்ந் திந்தத் தீர்த்தத்தில் எய்தித் தானும்
தான்றிய சேனை யோரும் தோய்ந்தனர் தோய்ந்த போதில்
கன்றிய ரோகம் தீர்ந்து கவின்கொள எழுதல் கண்டு
கொன்றையம் சடையார் ஆடல் இதுஎன மகிழ்ச்சி கூர்ந்தார். (69) 1088
சேனையோ டெழுந்து தென்கீழ்த் திசையினில் வாயில் காவல்
மோனரைப் பணிந்து சூழ்ந்து முன்னர்வந் தழலை நோக்கப்
பானலம் சுண்டர் நோக்கால் பரிசத்தால் வசனப் பண்பால்
தான்இடர் நீங்கக் கண்டார் குகையினில் தானை யோடும். (70) 1089
வீரசே னனையும் கண்டார் மிகுந்தஎம் குற்றம் எல்லாம்
தீரவே பொறுக்க வேண்டும் என்றடி பணிந்தார் சேர்ந்தார்
நீருலாம் சடையார் நோக்கு மந்திரத் திருந்தார் இப்பால்
பாரெல்லாம் பரிக்கும் மன்னன் இச்செயல் பகரக் கேட்டான். (71) 1090
எரிதுள்ளி எழுந்தால் என்ன வெகுண்டனன் இருகண் சேப்பப்
பரிவெள்ளம் பரித்தேர் வெள்ளம் பல்படைக் கலத்தின் வெள்ளம்
கரிவெள்ளம் காலாள் வெள்ளம் கரைஇலாக் கடல்அ னீகம்
விரவியே விரைந்தெ ழுந்து சூழ்வர எழுந்தான் போந்தான். (72) 1091
சென்றுநாம் செயித்து மீள்வோம் என்றுதென் பூமி நோக்கிக்
குன்றுடன் கானி யாறும் பின்தள்ளிக் குமரிச் சேர்ப்பன்
தன்துணை மதிஅ மைச்சன் உக்கிரன் முதலோர் சார்ந்த
பொன்திகழ் பொருநை சூழ்ந்த புடை அருச் சுனத்தில் போந்தான். (73) 1092
காந்தரங் கனியாம் தேவி காஞ்சக னான மாமன்
பாந்தமாய் உளர்அ னேகர் யாரும்இப் பதியில் எய்தப்
போந்தையாம் புணர்ப்பு நீங்கிப் புண்ணியன் அருளி னாலே
வேந்துளத் தெண்ணி வந்த வினைமறந் தின்பம் உற்றான். (74) 1093
கீட்டிசை கழிந்து தென்பால் வந்தனன் கிடைத்தான் சித்தர்
காட்டம்செய் நெருப்பின் மேலே கதிர்எனத் தோன்றக் கண்டான்
நாட்டம் அங் கவர்மேல் வைத்துப் பணிந்தனன் நாதன் அங்கண்
கோட்டம்தீர் இறையைக் கூவிப் பூதிஈந் திடக்கு வித்தே, (75) 1094
வாய்புதைத் திடஅ ணிந்தான் மற்றுளோர் தமக்கும் ஈந்தான்
வேய்அன தோளி யோடு காஞ்சகன் வீழக் கண்டு
தூயநீ றளித்து வந்தே ஞானதீர்த் தத்தின் கீழ்பால்
பாய்புனல் சைவ தீர்த்தம் படிந்திவண் வருவீர் என்றான். (76) 1095
என்றஅப் படியே செய்ய எதியினைப் போற்றி ஏந்தல்
சென்றகா ரணம்ம றந்து சித்தத்தில் மகிழ்ச்சி கூர்ந்தே
நன்றெனத் தானை யோரும் ஞானதீர்த் தத்தில் ஆட
அன்றிறை அளித்த வாறே அனைவரும் ஆடல் உற்றார். (77) 1096
நதியினில் ஆடி மீண்டு ஞானமோ னியர்பால் அற்றார்
துதிசெய நெருப்புக் குண்டம் தோய்குண்டம் அதுவாய்த் தோன்ற
இதனிலும் படிவீர் என்றான் காஞ்சகன் இறையோன் தேவி
முதலினோர் ஆடி ஏற முன்புபோல் கனவாய்த் தோன்ற, (78) 1097
கண்டதி சயித்தார் ஞானக் கண்ணர்தம் கருணை யாலே
தொண்டராய்ச் சைவர் ஆகித் தொல்வினை மதம்ம றந்தார்
அண்டர்நா யகர்தாம் சித்தர் எனநின்றார் அழைக்கப் பின்னே
மண்டியே செல்வம் உற்ற மந்திரம் அதினில் எய்தா, (79) 1098
ஈசனைப் பணிவீர் என்ன இறைஞ்சினார் இன்னும் சித்தர்
நேசமோ டரசை நோக்கி நிகழ்த்துநீ புறமத த்தான்
மாசுடைத் தானாய்த் தீர்த்தோன் இந்திர வீர சேனன்
தூசுடைத் தானை யோடும் இவண்வந்து துதிக்கின்றாரே (80) 1099
அவரையும் பாது காப்பாய் அவர்க்கொல நினைத்த தோடம்
பவநெறிக் கேது வாய்புன் மதம்பற்றும் பாவம் இந்தப்
புவனியில் தீரும் காலம் இத்தலம் போந்தாய் பின்னும்
கவலைதீர் தீர்த்தம் ஆடிக் களங்கம்அற் றிடுத லாலே, (81) 1100
இந்நகர் சீவன் முத்தி இகத்தவர்க் கின்பம் நல்கும்
நன்னெறி காட்டும் இந்த நதிமூர்த்தி மகிமை எல்லாம்
தன்நிக ராம்வி சேடம் சாற்றிட அடங்கா தென்றார்
மன்னனுக் கிளையான் உக்ரன் மந்திரி தமைவ ரித்தே. (82) 1101
கலந்திடச் செய்தார் நின்ற கருணைகூர்ந் திடுமெய்ச் சித்தர்
இலங்கொளி போல இந்தச் சிவலிங்கத் தெய்தக்கண்டார்
அலங்கலம் கொன்றை வேயா அரன்எமக் கருள நாம்செய்
பலம்தரு தவம்தான் என்னோ எனப்பர வசத்தன் ஆனான். (83) 1102
சிவனருள் மகிமை எண்ணிச் சிவன்அரு ளியதென் கீழ்சார்
நவைதவிர் பூதிக்குண்டம் ஆகவே கண்டு நாதன்
தவர்என வந்தார் செய்த நீறெனத் தான்எ டுத்துப்
பவம் அறத் தரித்துக்கொண்டு பாங்குளோர் தமக்கும் ஈந்தான். (84) 1103
இச்செயல் யாரும் கண்டார் இவைஅதி சயம்என் றுன்னி
நச்சர வணிந்தோன் தன்னைப் பூசித்து நாவால் போற்றி
நிச்சரைப் பணிந்து பூதி நீற்றர்என் றார்கள் அன்று
மெச்சவே இன்றும் என்றும் விளங்கின பூதிக் குண்டம் (85) 1104
வருசுசே டணனும் தம்பி மந்திரி முதலோர் யாரும்
பருவரை மருத வாணன் பாதங்கள் பணிந்து போற்றி
நரைவிடை உடையோன் தன்பால் வந்தது நாதன் சித்தாய்
ஒருகுகை தன்னில் வைத்துக் காத்ததும் உக்ரன் மேற்சேர், (86) 1105
பருவர லான ரோகம் பற்றிய செயலும் தீர்ந்த
பொருவிலா மகிமை யாவும் இளையவன் புகலக் கேட்டுப்
பெருவரை மார்பன் இந்தப் பேசுநா யகனைப் போற்றி
உருகிஇம் மகிமை எண்ணி உவப்புடன் துதிக்கின் றானால் (87) 1106
அறிவிலேன் செய்த பாவம் அனைத்தையும் நீக்கி என்னை
மறுவிலா துன்தாள் போற்ற வரம்தந்த வரதா போற்றி
சிறுவனுக் காயுள் ஈந்த செல்வனே போற்றி செங்கண்
பொறிஅர வுடையாய் போற்றி புடைமரு தரனே போற்றி (88) 1107
மங்கைதன் மோகத்தாலே புறமதம் மருவி நின்ற
எங்களைப் பாது காத்த தன்றிஇச் செயல்பு ரிந்த
பங்கனுஞ் சைவம் ஆக்கிப் பவுத்தம்தீர்த் தளித்த ஞான
புங்கவ போற்றி பூதி தந்தருள் புனிதா போற்றி (89) 1108
வேடம்கொண் டென்பால் வந்தே மெலிவினை அகற்றி ஆண்ட
ஆடல்ஏ றழகா போற்றி என்றடி பரவும் போதில்
சேடுலாம் வசனம் ஒன்று செழியநீ இவண்இ ருந்து
பீடுலாம் பணியும் செய்து பின்வந்த வீர சேனன், (90) 1109
மந்திரி இவரைக் கண்போல் வைத்திவண் மேல்பால் வைகிக்
கந்தடு கரட நால்வாய்க் கரிபரி முதல காத்துப்
பந்தமோ டுறுவாய் பாகப் புறமதம் தீர்த்த பண்பால்
கந்தமார் சைவ தீர்த்தம் ஆடுவோர் கவலை தீரும். (91) 1110
பூதிதந் திடுவ தாலே பூதிமா புரம்என் றோதி
மாதவர் பணிவார் என்ற அந்தர வசனம் கேட்டு
நீதிசேர் மன்னன் இங்கு நிகழ்திருப் பணியும் செய்து
காதலால் பணிந்து மேல்பால் காவலன் இருந்தான் மன்னோ. (92) 1111
வழுதிஉற் றிடவே செய்த வழுதிமா நகரம் ஆகும்
பழுதிலாத் தீர்த்த மூர்த்திப் பதிஇதன் பண்பு தன்னை
விழுமியோர் கேட்பச் சூதன் விளம்பினான் இதன்வி சேடம்
அழிவிலா தின்னும் சொல்வான் அருந்தவர்க் கருளி னாலே, (93) 1112
- புறமதம் தீர்த்த படலம் முற்றும்-
12. அலதந்தப் படலம்
மணவூர்இறை கருதும்பழி மாற்றிப்புற மதமும்
தணவாதவல் வினையும்தடிந் தேசைவம தாக்கிக்
குணம்நல்கிய திதுகொன்றையன் அருள்கொண் டலதந்தன்
இணையில்தவம் செயமற்றிவன் பரம்எய்தல்இ சைப்பாம். (1) 1113
முசிஎன்றொரு வசுவேந்திரன் முன்ஓர் உகம் தன்னில்
அசைவின்றிய நலம்தங்கிய அலதந்தனை ஈன்றான்
வசையின்றிவர் வாழ்நாளினில் மகவான்தனைப் பொரவே
விசைகொண்டரி கரிதேர்படை வீராள் அணி வெள்ளம், (2) 1114
தொகைசூழ்வர முசிஇந்தின் சுவர்க்கத்தலம் உற்றே
மகவானுடன் தொகைநூ றொரு வருடம்பொரு துடைந்தான்
மிகைசெய்தனன் மகவான்என அலதந்தனும் வெகுண்டு
பகைகொண்டவன் தனைவென்றிடப் பலம் இன்றிய பரிசால், (3) 1115
மானம்பொரு திடநன்சுவை வகைஉண்டிபு சித்தும்
கானம் செவிஉற்றும்சுக காயம் பெறத்துயின்றும்
நானம்கள பம்பூசியும் நல்இன்பம்மு யன்றும்
தானென்பயன் உயிர்தாங்கிஇ ருக்கின்றவை தன்னால். (4) 1116
என்னும்பல கவல்உற்றனன் இணையில்புகர் தம்பால்
முன்நின்றுப ணிந்தேமுசி தனைஇந்திரன் வென்றே
துன்னும்இயல் பினைச்சொற்றனன் சூழ்ச்சித்தொழில் சொல்லி
மன்னும்பகை வென்றேஉய வழிநல்குவை என்றான். (5) 1117
குரவன்புகர் அலதந்தனைக் குணமாய்முகம் நோக்கி
விரவும்தவம் புவிமீதினில் வேதப்புடை மருதில்
நிருமித்தவண் புரிவாய்எனில் நேசித்தன முடியும்
கருமம்என விடைகொண்டுதென் கயிலைப்பதி உற்றான். (6) 1118
புடைமாமரு துற்றேபுரி சடையோன்தனைப் போற்றி
இடம்நன்றெனத் தவம்செய்தனன் இச்செய்தியை இமையோர்
படிமன்னவன் அறிந்தேபடைத் திடும்வேதனை எய்தி
அடிபோற்றிட வருசெய்தியை அலரோன்வின விடவே, (7) 1119
எம்மோடமர் செய்தான்முசி எனும்தானவன் அவனைத்
தம்ஆருயிர் அகலும்படி தானேதடிந் தனனால்
அம்மாணவன் சேய்ஆகிய அலதந்தனும் தவத்தால்
கைமாபிலம் பெற்றெம்மொடு போர்செய்திடக் கருதி, (8) 1120
தவமேபுரி கின்றான்புடை மருதத்தலம் அதனில்
அவன்ஆற்றிய முறைகாண்என அலரோன்அதற் கிசைந்தே
இவனோடிவண் உற்றேதவம் இயற்றும்செயல் ஆன
சிவபூசையின் தருயோக திறம்கண்டிது செய்யும் (9) 1121
வேறு
பூசனைக் கிடையூ றியற்றுதல் கூடா
திதற்கினிப் புணர்தரு சூழ்ச்சி
பேசிடில் வேறொன் றாம்எனில் தடிவாம்
பிலத்தினால் அதுநிற்க பின்னும்
யோசனை யாதென் றுணர்ந்தனன் தவத்துக்
கூறுசெய் யாதுசெய் திடவே
நேசமாய் அதனுக் குருவிலா மாயை
ஒன்றினை நிருமிதம் செய்தான், (10) 1122
ஏவுவான் செய்த வேசனை யான
காஞ்சனை எய்தியே என்னை
மேவுவான் அழைத்த வினைஎவன் புகல
வேண்டும்என் றுரைத்திட விதிதான்
ஆவலால் தவமே புரிஅல தந்தன்
அமையம்பார்த் தவன்இடத் தடைந்து
நாவினில் இருந்து பிரமைஞா னம்தர
வென்றிடும் சொலைநவின் றிடுவாய். (11) 1123
இடைவிடா திந்தப் படிஉரை செய்ய
இயற்றுவாய் இவன்பெற வேண்டி
உடையவன் எய்தி உறுபலன் வினவும்
ஓதுநாத் தழும்புறும் வசனம்
படைஎனப் புகல்வாய் நடவென மாயை
படர்ந்தவன் பாலினில் எய்திச்
சடையவன் அருள்பெற் றிடத்தவம் செய்யும்
தகுவன்நா வுற்றிது சாற்றும். (12) 1124
நெடியவன் பிரமன் தேடவும் காணா
நிருமலன் நிருதனைப் புரக்க
வடிவுகொண் டிவண்இம் மாயையைக் கடந்து
வல்லதாம் பதம்பெற வேண்டும்
கடன்உள தென்னக் கணங்களோ டெய்தி
கால்உணும் கண்செவிப் பகுவாய்
விடஅர வசைத்தோன் எழுந்தல தந்தா
நீசெயும் பூசனை வியந்தோம். (13) 1125
வேண்டிய வரம்கேள் என்றலும் அசுரன்
எந்தையை விண்ணவன் வென்ற
காண்தகு பழியால் கடவுளர் வேந்தை
வென்றிடக் கருதியே இயற்றும்
மாண்தகு செயலை மறந்தனன் மாயை
நாள்தொறும் வாயினில் இருந்தே
ஈண்டிய பிரமை ஞானம்தா என்னும்
இயற்றிடும் சொல்லும்ஏ கினவால், (14) 1126
பணிந்தனன் அருளால் பரமஞா னம்தா
என்றனன் பனிமதிச் சடையோன்
அணங்குடன் எய்தி அளித்தனன் அவன்செய்
தவங்கள் ஒன் றசுரன்தன் துதியைக்
குணங்கவே வேதன் மாயையால் இயற்றிக்
குணித்ததொன் றிவன்குழ கற்கே
இணங்கியே பூசைத் தவம்அவம் போமோ
இறைபர ஞானம்எய் தினனால். (15) 1127
இவ்வகை நடந்தும் பூசனை இயல்பென்
றிந்திரன் பிரமனே முதலோர்
நவ்விசேர் அத்தன் அருளையே நயந்து
நலம்உறு மருதினில் எய்தி
அவ்வியம் தீர்க்கு மசுரல தந்தன்
ஆடிய தீர்த்தத்தில் ஆடித்
திவ்விய மலரால் சீதரே சுரர்க்குச்
சிறப்புடன் பூசனை செய்து, (16) 1128
சமரினில் முசியைத் தடிந்ததற் குவன்றன்
சந்ததி தவம்செய்து வெல்ல
அமைவுசெய் திடவே அவன்வினை கடிய
அலரவன் மாயையை அமைக்க
இமையவள் பாகா உனதருள் அதனால்
இருவர்தம் பழுதினை அகற்றிச்
சமவினை ஆக்கி முத்திதந் தனையால்
என்றிமை யவன்சரண் பணிந்தான். (17) 1129
இப்படிப் பிரமா வும்துதித் தனனால்
இறைமரு தீசுரன் இயல்பை
முப்படி யோரும் புகழ்ந்தனர் பணிந்தார்
முறைமையால் முனிவுடன் வந்த
செப்பிய இருவோர் தம்பதி உற்றார்
சித்தர்போற் றியசிவன் செய்யும்
ஒப்பிலா இயல்பை இன்னமும் கேட்க
ஓதுவான் சூதயோ கியனே. (18) 1130
அலதந்தப் படலம் முற்றும்-
13. கருவூர்ச் சித்தப் படலம்
அலதந்தன் தவத்தி னாலே அயன்குய்யம் கடந்து முன்னை
மலபெந்தம் கடந்து ஞான வழிபெற்ற திதுமேல் வள்ளல்
தலம்வந்த கருவூர்ச் சித்தர் அழைத்திடச் சாய்ந்தேன் என்றப்
புலன்வென்றோர் வந்து போற்றும் தன்மையைப் புகலல் உற்றாம். (1) 1131
சீர்வளர் கயிலை மேவும் சிவகண நாதர் தம்மில்
பேர்வளர் தரும கேது எனஒரு பெரியோன் மேருச்
சார்பில்வாழ் மணிகண் டேசன் தன்மகள் திலதை தன்னை
ஏர்பெற மணம்பு ரிந்தோன் இன்பம் உற் றிருக்கும் நாளில், (2) 1132
மகவொரு நூறு பெற்றான் மைந்தரில் முன்பி றந்த
தகைமைசால் சோம புத்ரன் கயிலையை அகன்று சம்பு
திகழ்தரு கனியின் சாறு சிறந்தநீத் தத்தில் சேல்கள்
உகள்தரு நதிசூழ் போக பூமியும் உடைய ஆகி, (3) 1133
தலம்புகழ் எழுமான் தேரோன் சந்திரன் இவரைச் சார்ந்த
இலங்கிய நாளும் கோளும் எய்திய உடுக்கள் யாவும்
வலம்கொள வரைக்கு வேந்தாய்க் கனகத்தின் மயமாய் ஓங்கி
நலம்கொளும் பூத ரத்தின் பாரிசம் நண்ணி னானே. (4) 1134
பொன்மயம் ஆன கானப் புடவியின் சாரல் மீது
பன்மலர்ச் சோலைகண்டு மகிழ்ச்சியால் பயிலும் போதில்
அன்னிலை வாழும் பானு மித்திர வேடன் அன்பாய்
நன்னலம் கூர்ந்து பெற்ற தராபதி எனும்நா மத்தாள், (5) 1135
கன்னிநன் மலர்கள் கொய்து புதுமலர்க் காவில் எய்த
அன்னிலை அடைந்த சோம புத்திரன் அவளைக் கண்டு
மின்ஒரு வடிவம் கொண்ட விளங்கிழை யோமா மேரு
மன்னவன் மகளோ மாகத் தரம்பையோ அணங்கோ என்ன, (6) 1136
எண்ணினன் கண்டான் ஐயம் உற்றனன் இவள்தன் சாயை
கண்இமைப் பதனால் விண்ணோர் கன்னிகை அல்லள் காலோ
மண்ணினில் பொருந்த லாலே மாகுல மகளாம் என்ன
உண்ணினைந் திவள்தன் நோக்கின் குறிப்புணர் வென்னே என்னே. (7) 1137
காமுற்றான் மதன பாணம் கருத்தழிந் திடத்து ளைக்க
ஏமுற்றான் மயலால் நீடி இத்தரா பதிபால் எய்திச்
சோமுற்றான் மின்னே நின்பால் சுகம்உற்ற ஆசை கூர்ந்தேன்
தாமுத்தம் என்றான் சோம புத்திரன் தன்னை நோக்கி, (8) 1138
கான்உற்ற வனிதை சொல்வாள் காமுற்ற செயலால் சேரத்
தான்உற்ற சாதி அல்ல தமர்கள்ஈ தறியில் என்னை
வான்உற்ற உன்னைக் கொல்வார் வல்லைநீங் கிப்போ கென்றாள்
தேன்உற்ற சொல்லைக் கேட்டுத் தெளிவுகொண் டேகி னானே (9) 1139
தவத்தினில் மிக்கோ ரேனும் தன்வினைச் சார்வந் துற்றால்
பவத்தர்ஆ குவர்உய்த் தாலும் ஊழ்வினைப் பகுதி போமோ
அவத்தம்உற் றதைவிட் டேக அரிவையும் அகன்றாள் இந்தக்
கவர்ப்படு செயலை வேடன் அறிந்தனன் கவலை உற்றான், (10) 1140
தான் பெற்ற தையல் தன்பால் சார்ந்தனன் சாற்று கின்றான்
வான்பெற்ற முனிவர் சொன்னால் வாமன பாகச் சார்பால்
ஊன்பெற்ற செயலை மேலோர்க் குதவிடா திகழ்ந்தாய் உன்பால்
மீன்பெற்ற விழியாய் குற்றம் விளைந்ததென் றுரைத்து மீண்டும், (11) 1141
அக்குற்றம் அதனால் கன்ம பூவனத் தவத ரித்தே
தொக்குற்ற புருட வேட்கை இன்றியே சுழல்வாய் என்று
மிக்குற்ற வேடன் சாபம் விளைத்தனன் வினை யினாலே
இக்குற்ற மொழியாள் செய்கை இத்திறம் நிற்க இப்பால், (12) 1142
சோமபுத் திரன்தான் சென்று கயிலையில் தொகுக ணத்தோர்
தாமுற்று சபையில் நாதன் சந்நிதி இருந்து சந்தப்
பாமுற்று வீணைபாடும் தந்தைபால் படரப் பார்த்தே
ஏமுற்ற மாந்தர் போல இழிவுற்றாய் எனமு னிந்தான். (13) 1143
கானவர் கன்னிக் காசை பூண்டனை கருதும் சீரால்
மானிடப் பிறப்பில் எய்தி மான்விழி யார்மேல் ஆசை
தானிலா தெளிய னாகித் தரணியில் திரிவாய் பின்னர்த்
தேனுலாம் இதழி பூண்ட சிவத்தலத் தெய்திப் போற்றி, (14) 1144
வரும்பொழு திந்தத் தோடம் அறிந்துபின் கைலை தன்னில்
பொருந்துவாய் என்ன முன்னோன் புகன்றனன் அந்தோ காமம்
விரும்பினோர்க் குறுதி உண்டோ வெந்நர கென்பர் மேலோர்
தரும்பிற விக்கோர் வித்தாம் வினைசெறி கலம்அ தாமால். (15) 1145
விழுந்தடி பணிந்தான் சாப வினைவசத் தாகி வெற்பில்
தொழும்பரி சகன்று பாரில் தொன்மைசால் இந்த்ர நீலச்
செழுங்கிரி சார்பில் வந்த சவுசம நதிதீ ரத்தில்
முழுங்குகெற் பேச்சு ரத்தில் முதல்வரு ணத்தில் வந்த, (16) 1146
பூதியார் என்பார் முந்நூல் அணிந்திடும் புனிதர் வேதம்
ஓதிய இவர்தம் பாரி கலாபதி வயிற்றில் உற்ற
நீதியால் பிறந்தான் கெற்பேச் சுரன்என நிகழும் காலை
ஆதியில் அகன்ற வேடத் திரிதரா பதிஅவ் வூரில், (17) 1147
மறைதெளி வுற்ற பூதி பூடணன் மனைவி யான
பிறைநுதல் பவளச் செவ்வாய்ச் சவுந்தரி வயின்பி றந்தாள்
நறைதரு மொழியாள் காதம் பரிஎனும் நாமம் பெற்றுக்
குறைவிலாப் பருவம் எய்திக் கொம்பனார் குழுவி னோடு, (18) 1148
அம்மனை பயின்று பந்து கழங்குடன் ஆடி ஊசல்
தம்மனை மகிழ்ச்சி பொங்கத் தனக்கழ கியற்றிச் சார்ந்து
கம்மனு தடங்கள் ஆடிக் காவினில் பூக்கள் கொய்து
வெம்முலை பாவைக் கூட்டிச் சிற்றிலால் விளையாட் டெய்தி. (19) 1149
வளரும்நாள் இவளை முன்னே வளர்வினைத் தொடர்பால் மற்றைக்
குளிர்நகர் தன்னில் வாழும் சிவபூதி குமர னுக்கு
விளைவினால் இவளைப் பேசி விவாகம்செய் வதற்கு நேர்ந்து
கிளைஉளோர் கூடி ஈசன் திருவுளம் கேட்ட போது. (20) 1150
தொடர்ச்சியால் வேட்கை இல்லை இவர்கட்குத் தொல்லை நாளில்
வடுப்படர் சாபத் தாலே மணம்இலை என்று பார்மேல்
திடப்படும் அறிஞர் கேட்கச் சிவனருட் செயலால் வானின்
இடைப்படும் அசர வாணி எழுந்தன இதனைக் கேளா, (21) 1151
கேட்டலும் கடிம ணத்தைக் கடிந்தனன் பூதி மைந்தன்
வாட்டம்ஒன் றின்றி யோகம் பூண்டுவான் செல்வோர்க் கேணி
நாட்டமாம் கோகன் னத்தில் நண்ணிநன் குற்றான் அன்பு
மூட்டஆன் செவிஇ லிங்க மூர்த்திசந் நிதியின் முன்னே, (22) 1152
பணிந்தனன் வலம்கொண் டான்முன் பரவினன் பங்க யத்துக்
கிணங்கிய பாத பூசை இயற்றியே ஒருசார் பெய்தி
வணங்கியே தவம்பு ரிந்தான் மல்லிகார்ச் சுனத்து வள்ளல்
அணங்கர வசைத்த சோதி அங்கெழுந் தவனை நோக்கி, (23) 1153
உறுதவம் புரிந்த செய்கைக் குவந்தனம் உனக்கு வேண்டும்
பெறுவரம் என்னே என்னக் கலாபதி பெற்ற மைந்தன்
மறுஇலா வரங்கள் கேட்பான் வணங்கியே வழுத்தி நின்றே
அறுவகைக் குற்றம் நீக்கி அட்டமா சித்தி வேண்டும், (24) 1154
நின்பதம் அடையும் வண்ணம் நான்செயும் நெடிய பாவத்
துன்பமும் கழிய வேண்டும் சுத்தசா யுச்யம் வேண்டும்
என்பர வணிந்தோய் என்று துதித்தனன் இடை அ றாத
அன்பனே தந்தோம் என்றான் இன்னம்ஒன் றருளிச் செய்வான். (25) 1155
அறிவுசேர் கருவூ ரானே என்றழைத் தன்பால் நோக்கித்
தறுகண்வே டத்திக் காசை கொண்டனை தரணி உற்றாய்
தெறுகின்ற பாவ சேடம் தீர்ந்திடத் தெக்க ணத்தில்
உறுபுடார்ச் சுனமாம் காசிச் சேத்திரம் ஒன்றுண் டாமால், (26) 1156
அத்தலத் தெய்தி ஆங்கே மதுவுடன் ஊன்அ யின்றால்
பொத்திய புசிப்பு நீங்கும் புடைமரு தன்பால் வேண்டும்
சித்தியும் பெறுவாய் பின்பு கயிலையைச் சேர்வாய் என்று
நித்தனார் அருளிச் செய்தவ் இலிங்கத்துள் நிறைந்தார் அன்றே. (27) 1157
விடம்திகழ் கண்டன் பாலில் விடைபெற்று விலங்கல் சூழ்ந்த
கடங்களும் கானி யாறும் கல்அதர் வனமும் நீந்திப்
படம்கிழித் தரவை நூக்கும் பச்சைமா மயிலோன் வாழும்
தடம்திகழ் சயிலம் மேவும் சரவணன் தன்னைப் போற்றி, (28) 1158
விடைபெற்ற சித்தர்அங்ஙன் விளங்கிய உரோமர் தம்பால்
அடைவுற்றார் தமது பண்பும் அரன்அருட் செயலும் தென்பால்
புடையுற்ற மருதிற் போகப் புகன்றதும் புகன்றார் யோகி
நடைபெற்ற சித்தர் தம்மை நோக்கியே நவிலு கின்றார். (29) 1159
உலகினில் அனேக தெய்வ தானம்உண் டதனில் உண்மை
இலகினோர்க் கெளிதில் நல்கும் இகபரம் எல்லாம் ஒன்றாய்
மலர்தரு மேல்ஆ தாரம் மருவிய மருதப் பொந்தில்
அலர்தரும் பொருள்ஏ காந்தம் அப்பதி வகையைக் கேண்மோ (30) 1160
பூதமும் கலையும் பூத்த புடையில்வாழ் பூத நாத
வேதனைப் பரவும் காலம் விதியுகம் பதினெட் டிற்கு
நாதனும் மனுவும் செங்கோல் நரபதி முதலோர் போற்றும்
சீதர நாதன் என்றார் அத்திறம் செப்ப வேண்டும், (31) 1161
வேறு
என்றுபணிந் தவர்க்குரைப்பார் அனந்தயுகம்
பதினான்கு கோடி ஈசன்
துன்றிறைவன் நாதன்நா ராயணனாம்
தொகைகொள்அற் புதங்க மந்தம்
வென்றிதார்ச் சுனத்துடனே தாண்டவமாம்
வின்னசன விண்ணாய் மாகம்
மன்றுதரு மையுதமே யையுதமே
மணியாரன் மணிபி ராணன் (32) 1162
திருவளரும் விசுவிசுவே விசுவாசன்
அலங்கிருதன் கிரேதா திரேதா
மருவளர்து வாபரமே கலியுகமே
இவைவகுத்த வருடம் சொன்ன
விரிவாகும் விமலனே சோமேசன்
சங்கரனே விசுவ நாதன்
பரைஆகன் மாதேவன் பசுபதிகங்
காதரனே பரசு பாணி, (33) 1163
பூதநா யகன் உருத்ரன் விரூபாட்சன்
சங்காரன் புவன நாதன்
ஆதிகா ரணன்திரி புராந்தகனே
ஆனந்தன் அசல மூர்த்தி
சோதிமூ வாறீசன் சொன்னயுக
மன்னவர்கள் மந்த்ர காளன்
காதுமோ கத்தம்பன் புராந்தகனே
கடல்வண்ணன் கலங்காக் கண்டன், (34) 1164
அதிவீரன் தெசதரனே வச்சிராங்கன்
வகடகன் ஆதி வேதன்
நிதிவீர வல்லாளன் பூச்சக்ரன்
உருத்திரனே நீல லோசன்
மதிநேசன் அரிச்சந்த்ரன் இராமனே
பாண்டவனே வாலி ஆகும்
விதிமார்க்கத் திவர்எல்லாம் யுகம்தோறும்
பூசித்து வேண்டி னாரால், (35) 1165
அத்தலத்துக் கொப்பாக ஒருதலமும்
இல்லைஎன அறையும் வேத
மெய்த்தலத்தில் நீசென்றால் வினை நீங்கும்
வேண்டும்வரம் பெறுவாய் என்றே
உத்தமமா முனிகூறி உவகையுடன்
சித்துகளும் உபதே சித்தான்
சித்தன்எனும் கருவூரன் திருப்புடார்ச்
சுனம்நோக்கிச் செல்கின் றானால், (36) 1166
பணிந்துகா ளத்தி போற்றி பரைதவப் பயனால் மாவின்
கணம்கொளும் நீழல் தன்னில் கம்பைமா நதியில் பூசை
இணங்கவே செய்யும் கோயில் இறைஞ்சியே இருக்கு வேதம்
வணங்கிய பதியும் போற்றி மாற்பேறு வழிபட்டிப்பால், (37) 1167
பின்உள தலமும் என்பு சாம்பர்பெய் கும்பம் தானும்
கன்னிகை யான ஊரும் இருவர்கள் கழுகாய் வாழும்
தன்நிகர் குன்றும் நாதன் தாள்முடி காணா தார்க்கு
வன்னியூ கம்போல் நின்ற வரையையும் வணங்கிப் போந்து, (38) 1168
பொதுவினில் நடனம் போற்றிப் பூந்தராய் வழிபட் டேத்தி
முதுகிரி பணிந்து மூவர் முயங்கும்அப் பிலவூர் முன்னித்
துதிசெய்து மூன்று கோடி காவினைத் தொழுது சூழ்ந்து
பதிபல பணிந்து சையப் பருப்பத வழிகொண் டெய்தி, (39) 1169
அய்யாற்றில் கயிலை போற்றி அமலனைச் சிலம்பி யானை
எய்யாமல் இகலிப் பூசை இயற்றும்ஊர் எறும்பி யூரும்
மைஆடு சோலை சூழ்ந்த திரிசிரா மலையும் போற்றிப்
பைஅரா மலையும் தென்பால் பசுமலை பரவி வைகி, (40) 1170
கொடுங்குன்றம் பரங்குன் றேத்திக் குறும்பலாத் திரிகூ டத்தில்
நெடுங்குன்றீ சுரனை ஏத்தி மற்றுள நியமம் போற்றிக்
கடுஞ்சலி லம்வாய் கின்ற சலிலமும் கடந்து வானம்
தொடுங்கிரிப் பொதிகை எய்தி முனிவனைத் துதித்து மீண்டு. (41) 1171
பாவநா சத்தில் வந்து பழமறை நாதற் போற்றிக்
காவுசூழ் வேளை மேவும் காசியே சுரனை ஏத்தி
தாவிலாப் பொருநை சூழ்ந்த கண்ணுவத் தலத்தை வாழ்த்திப்
பூவையில் வணங்கிப் போந்து புடைஅருச் சுனத்து மேல்பால், (42) 1172
வந்திடும் கருவூர்ச் சித்தர் வெள்ளத்தால் வடபால் உற்றார்
உந்திநீர் தணியக் காணா தோங்கியே மிகுத்தல் கண்டு
பந்தம்அ தகற்றும் எங்கோன் தனைத்தென்பால் பதியில் போற்ற
இந்தஆ றிடையூ றாக இருப்பதெவ் வாறென் றுன்னி, (43) 1173
பசித்திடும் பதத்தில் உற்ற பதத்தினை ஊட்டும் கையைப்
புசிப்பதற் கூறாய்ப் பற்றிப் பிடித்திடும் புதுமை போல
வசித்திடற் கினிய தானம் கிடைப்பது வரத்தால் அன்றிச்
சுசிக்கொணா அன்ன தான சோதனைப் பயனாம் என்றே (44) 1174
உந்திநீர்ப் பெருக்கை நோக்கி உமைநாதன் தன்னை உள்கிச்
சிந்தவா னியாறால் தோன்றும் சிவனைநா றும்பூ என்றே
தந்தழைத் தனன்அன்பாகத் திருச்செவி மாந்திச் சாய்ந்தே
எந்தைஏன் என்று கேட்டு வாஎன இசைக்கின் றாரால், (45) 1175
ஏனெனக் கேட்டு நாதன் வாஎன இசைத்த லாலே
நானருள் பெற்றேன் என்று, சித்தர்தாம் நயந்து பின்னும்
வானநா யகனைப் போற்றி வரநதி கடந்து வந்து
மான்அணி கரத்தாய் உன்றன் மலரடி வணங்க வேண்டும், (46) 1176
கிருபைதந் தருள்வாய் என்றான் கேதம்அ தகற்றி ஆளும்
மறிபுனை கரத்தான் பின்னும் வரநதி பின்நோக் காதே
நெறிகொடு முன்பு நோக்கி நேர்வரக் கண்டாய் என்றான்
அறிவரன் அச்சொல் கேட்டே அப்படி வரும்அவ் வேளை, (47) 1177
பொதுவியர் எழுவர் வந்து புண்ணியா உன்பின் னாலே
நதிகடந் திடுவோம் என்றார் திரும்பிநீர் நதிநோக் காமல்
மதியுடன் வருவீர் என்றான் வரும்வனி தையர்பின் நோக்க
விதியுடன் எழுவர் ஆகி வீற்றினி திருக்கின் றாரால். (48) 1178
இவைவகுத் துரைக்க வேண்டும் எனும்முனி வரர்க்குச் சூதன்
அவைவிரித் தருள்வான் நாக லோகத்தில் அரிவை யின்னார்
புவனமுற் றெழில்காண் பாராய்ப் போந்தனர் ஒருவ னத்தில்
தவன்ஒரு வனைக்கண் டாங்கே வினோதமாய்ச் சார்ந்தார் அன்றே (49) 1179
அவ்வனத் திடையில் யோகம் புரிந்திடும் அருந்த வத்தோன்
இவ்விடை முறுவல் காட்டித் தவத்தினுக் கிடையூ றுற்று
நவ்விஅம் கண்ணார் முல்லைப் பொதுவியர் நாரி மாராய்க்
கவ்வியம் சுமந்து மாறும் கன்னியர் ஆவீர் என்றான். (50) 1180
பொதுவியர் ஆகும் மாதர் புந்தியில் கவலை கூர்ந்தே
இதுகழிந் திடப் பணிந்தார் எழப்புகன் றிரங்கிக் கூறும்
அதிதிநீர் பொதுவி மாதர் ஆகியே ததிகொண் டங்ஙன்
நதிகடந் திடவே செல்வீர் பெருகிடும் நதியின் பாங்கர், (51) 1181
கருநகர்ச் சித்தர் அங்ஙன் கடநதி கடந்து தென்பால்
மருதமர் அமுதைப் போற்ற வந்திடும் அந்த வேளை
பொருநைநீர் கடக்க நீவிர் போதனைத் தொடர்வீர் அங்ஙன்
பருவரல் ஒழிந்து நாக பன்னியர் ஆவீர் என்றான். (52) 1182
அவ்வியல் பதனால் அன்னார் அருட்சித்தர் தம்பால் எய்திப்
பவ்விய மாகத் தானே முனிபகர் வசனம் கொண்டு
கவ்வைகொள் தரங்க நீரில் கதியுற வந்தார் இந்தத்
திவ்வியச் சித்தர் சொல்லைச் சோதனை செய்வான் எண்ணி, (53) 1183
மறித்துநீர் வாரி நோக்க வரநதி இழுக்கக் கண்டு
செறித்திடு முல்லை மாதர் சித்தரை அழைத்தார் இந்தத்
திறத்தினைக் கரையில் சேர்ந்த சித்தர்தாம் நோக்கத் தீர்த்தம்
நிறைத்திடும் புனலில் தானே நின்றனர் எழுவர் ஆகி, (54) 1184
என்றருள் செயத்தெ ளிந்தார் எய்திய சித்தர் தாமே
கொன்றையன் அருளை உன்னிக் கோயிலை நோக்கிக் கோல
மன்றலாம் மருதம் எய்தி வானவன் பரவு கின்ற
வென்றிவெள் விடையார் தம்மை வழுத்திட விரைவி னோடும், (55) 1185
பொருநையில் ஆடித் தெய்வப் புடைமரு ததனில் எய்திப்
பரவிநா றும்பூ நாதர் பதமலர் பணிந்து போற்றிக்
கருதிநான் அழைக்கப் பேசும் கருணைவா ருதியே போற்றி
பரைஒரு பாகா போற்றி பைங்கண்ஏ றுடையாய் போற்றி (56) 1186
தேவவிப் பிரனே போற்றி திங்கள்சேர் சடையாய் போற்றி
மூவர்கள் முதல்வா போற்றி முப்புரம் எரித்தாய் போற்றி
சேவுயர் கொடியாய் போற்றி தெய்வநா யகனே போற்றி
ஆவுடை மாது பாகா அமலனே போற்றி போற்றி (57) 1187
பொங்கர வணிந்தாய் போற்றி புண்ணியா புனிதா போற்றி
கங்கையோ டிதழி வேய்ந்த காரணா போற்றி வன்னித்
துங்கமா மலையாய் நின்ற சோதிநா யகனே போற்றி
சங்கரா போற்றி என்னச் சாய்ந்தவன் தோன்றி னானே. (58) 1188
செய்தநின் துதிக்கு வந்தோம் சித்தனே என்று மற்றைத்
துய்யனை நோக்கி வேண்டும் வரம்எவன் சொல்வாய் என்னச்
சைவஇ லிங்கம் நின்றும் சார்ந்தசிற் பரனைப் போற்றி
ஐயனே கயிலை எய்திப் பணிசெய அமைக்க வேண்டும், (59) 1189
அய்யனே நான்அ ழைக்க அருங்குறி சாய்ந்த கோலம்
மெய்யனே என்பேர் தோன்ற என்றும்இப் படிவி ளங்கி
வையகம் புரக்க வேண்டும் என்றடி வழுத்தும் போதில்
தெய்வகா ரணன்இ சைந்தே சித்தருக் கருளிச் செய்வான். (60) 1190
மையலில் வேடச் சாதி வனிதைபால் நீம யங்கி
நைதலின் பாவம் தீர்ந்தாய் நமதருள் வாய்மை யாலே
உய்தவ யோகம் பெற்றாய் உனக்கருள் வரத்தி னாலே
எய்தியே இத்த லத்தை இறைஞ்சிடப் பெற்றாய் இங்கே, (61) 1191
வசிக்குவை பாவ சேட வாசனை தீர வேடர்
புசிப்புநீ புசித்த வன்றிப் புவியினில் வினைகள் போகாக்
கசிப்புறு சாத்தன் வந்து காளியை ஏவிக் கள்ளும்
பசிக்குண வான ஊனும் பாலிப்பன் பருகி உண்டு, (62) 1192
வினைகழிந் தின்ப முற்றி விளங்கிய தலங்கள் போற்றிப்
பனிமதிக் கடவுள் வாழும் பருப்பதம் எய்திப் பண்பால்
கனிதரு வீணை பாடும் பணிசெய்து கணங்க ளோடு
மனிஇனி துறைவாய் என்று வழங்கினான் வரங்க ளோடு, (63) 1193
காட்சிதந் திலிங்கத் துற்றான் கருநகர்ச் சித்தன் இப்பால்
மாட்சிமை யாகத் தானே மருதனை வணங்கி மற்றோன்
ஆட்சியால் ஐயன் பாலில் அடைந்தனன் அவனும் அன்பால்
நாட்சிறு முல்லை மூரற்காளியாம் நங்கை தன்னை, (64) 1194
ஊன்மது இவற்கீ வாய்என் றுரைத்தகன் றனன்ஊர்ச் சித்தன்
மான்அணி கரத்தர் ஈன்ற வரதன்சொல் வகையால் வந்தத்
தேன்நிகர் மொழியாள் கூடச் சிறந்தமு லேச்ச ரத்தில்
கான்உறும் வன்னி யின்பால் உற்றனர் கருத்தி னாலே. (65) 1195
கன்னியும் சித்தர் தாமும் கருணைவன் னியில்வாழ் கின்ற
பன்னகா பரணற் போற்றப் பரமனும் மாதை நோக்கி
வன்னியின் காயும் தேனும் மதுவுடன் ஊன்அ தாகத்
துன்னுசித் தனுக்கீ வாய்என் றுரைத்தனன் தோடம் நீங்கி, (66) 1196
குமரியும் இறைவன் சாற்றும் கொள்கையின் படியே அந்த
அமையமே வன்னிக் காயைத் தேனினை அளிக்கச் சித்தர்
விமலன்தன் தாளை உன்னி வாங்கியே புசித்தார் மேவும்
தமலமும் அகன்று பின்பு நாதனைத் தாழ்ந்து போற்றி, (67) 1197
புடையுற்ற மருதில் எய்திப் புண்ணியன் தன்னைப் போற்றி
விடைபெற்று வெளியில் ஐயன் பாலில்நீர் வேட்கை என்றான்
தடமுற்றிப் புசிப்பாய் என்று சாத்தனும் உரைப்ப உன்பால்
மடுவற்றக் கடவ தென்று சித்தனும் வழங்கிக் கீழ்பால், (68) 1198
வளர்கின்ற வாலை மாதர் கோட்டத்தில் வந்து நோக்கி
உளம்மன்னு தாக வேட்கை ஒழித்திடு வீர்கள் என்றான்
களம்வைத்த கண்ணார் கூடி இகழ்ந்தனர் கருத்தில் கொண்டு
தளமுற்று சிலைஆ கென்னச் சபித்தனன் கீழ்பால் சார்ந்தான். (69) 1199
மணிகண்டர் கானை எங்கோ னரிகையில் வணங்கித் தென்பால்
நணிஉற்ற தவவ னத்தில் பூமிநா யகரைப் போற்றி
அணிபெற்ற நதியின் பாங்கர் மூலநா யகரை அன்பால்
பணிவுற்றுச் சோம நாதர் தம்மையும் பரவி னாரே. (70) 1200
வாமைபோற் றியரோ மேசர் மகிழம்மை நாதம் போற்றி
பாமன்னு கோட தேசர் கோடகேச் சுரம்ப ணிந்து
தேமன்னு சோலை சூழ்ந்த திருநெல்லை வேய்முத் தீசர்
காமன்னு குசைக்காட் டீசர் காந்தீசர் கழல்ப ணிந்தார். (71) 1201
அதிகமேன்மைய தாம்பிர வன்னி
அகன்கரைப் பதி எங்கணும்
துதிசெய்துத்தர கோச மங்கை
துதித்தி றைஞ்சிய சித்தர்தாம்
கதிகொள் யாறொடு கல்லும் வெம்பரல்
அத்தமும் கடந்தெய்தியே
நதிஉ லாவிய பதிஉலாம்கயி
லைப்பருப்பதம் நண்ணினார். (72) 1202
- கருவூர்ச் சித்தப் படலம் முற்றும்
14. அகத்தியப் படலம்
கருவூரர் அழைக்கப் பூதிக் கடவுளார் அவர்க்கே நின்று
திருமேனி வளைந்து காட்டித் திருச்செவி மாந்தி வாஎன்(று)
அருளுடன் அழைக்க வந்து பூசித்த தறைந்தாய் அன்பால்
சிரகமா முனிவன் போற்றும் திறத்தினைச் செப்பல் உற்றாம். (1) 1203
பாசமும் வினையும் நீங்கிப் பழுதறத் தம்மைச் சேர்வார்
ஆசுகள் ஆன எல்லாம் அகற்றிஐ முகன்தன் பாதம்
நேசமாய் அகத்தில் கொண்டு நித்தமும் வழிபா டாற்றும்
தேசுசேர் முனிவர் கேட்கச் சூதமா முனிவன் செப்பும். (2) 1204
முன்உ ரைத்திடும் கதையினில் அகத்திய முனிவன்
பொன்உ ரைத்திடும் இமகிரிப் பூதரம் தன்னில்
மின்அன் னாளுடன் மேருவில் லோன்மணக் கோலம்
தென்வ ரைக்கணே தரிசிக்கச் சிவன்அருள் செய்தான். (3) 1205
அன்ன தன்மையால் அகிலம்நேர் நிற்கஆர் அணிந்தோன்
முன்ன ருட்படி முனிவரன் பொதிகையில் முன்னி
மன்னு காரணம் கண்டனன் வதியும்அந் நாளில்
தென்பு டார்ச்சுனம் தெரிசிக்கச் சிந்தையில் சிறந்தான். (4) 1206
வேறு
முக்களா வனத்தைப் போற்றி முத்தலை சிந்தும் வேணி
நக்கபங் கயத்த டம்சூழ் வடதரு முதலில் நண்ணித்
தெக்கணா மூர்த்தம் கொண்ட சின்மயன் தனைவ ணங்கி
மிக்கதீர்த் தம்ப டிந்து முனிவரன் விருப்பால் வைகி, (5) 1207
அவைகடந்து பாதாள கங்கை மேவி
அகத்திரு மூலத் தானம் போற்றி
நவைகடந்த காசிபர் போற்றியதென் வேளை
நாயகனைப் பரவியே நதிசேர் வேணி
உவமைஇலாக் கண்ணுவமா முனிதீர்த் தத்தின்
உவந்தாடிக் கண்ணுவசங் கரனை உள்கிப்
பவன்அடிபோற் றிக்கீழ்பால் பொருநை மீதில்
பகர்ந்தவலஞ் சுழித்தீர்த்தம் படிந்து மேல்பால், (6) 1208
வேறு
பழமறை பரவும் பூவைப் பதியினில் பரனைப் பூசை
விழைவுறச் செய்வான் எண்ணி மணலினால் விதித்தான் எங்கோன்
குழைவினால் கோட்டி செய்யக் கோட்டிநா யகர்என் றோதி
மழவிடை யோனைப் போற்றி முனிவரன் வதிந்த பின்பு, (7) 1209
வழிகொடு தலங்கள் போற்றி வழிபட்டு வடபால் ஏகி
அழகிய பொருநை சூழ்ந்த காசியை அடுக்கும் போதில்
தழைவுறு மருதச் சோலை சம்புவின் தாரு மிக்க
குழைமிகும் ஆம்பி ரம்சூழ் கோனகர் கண்ணுற் றானால். (8) 1210
ஆனந்த காவி தென்றே அளவிலா மகிழ்ச்சி எய்தி
கான்உந்து மதுக ரங்கள் இசைப்பது கன்னம் மாந்தத்
தேன்உந்து சுகந்த வாசம் நாசிகை திளைப்பத் தெய்வ
வான்உந்து மருதன் கீர்த்தி நாவினில் வாணி ஊட்ட, (9) 1211
தென்றலம் பயிற்சி தேகம் புளகிதம் தேக்கச் செல்வ
மன்றலந் தருவை மான வளங்கள்கண் டுவட்ட வான
மின்தயங் கிளையார் ஆட விருந்தென ஐவர் மேவ
நன்றென இமைய மீதில் மன்றலை நயக்கு மாலோ, (10) 1212
இவைஎன இறும்பூ தெய்தி ஏகிடில் ஆற்றின் கீழ்பால்
தவமுனி ஈசன் கோயில் தான்கடந் தப்பால் சென்றே
அவண்வன்னி தீர்த்தத் தின்பால் ஆடிடும் போதில் வானில்
சிவன்விடை தன்னில் எய்தித் திருக்குழை மணியும் சிந்தி, (11) 1213
அமிழ்தெனும் செவிக்கின் பூற அந்தர வாணி யாலே
தமிழ்அருள் முனியே தென்பால் சம்புவைத் தொழுதே கென்றே
உமிழ்தரு வசனம் கேட்டே உள்ளம்நெக் குருகி அன்பாய்க்
கமழ்தரு நதியை ஆடிக் கடன்முடித் தருளை உன்னி, (12) 1214
கொன்றையஞ் சடையான் கோயில் எய்தியே கும்பிட் டேத்தி
நின்றிடும் போதில் அங்ஙன் நிமலன்மூன் றுருவாய்த் தோன்ற
நன்றெனப் போற்றி இந்த நலம்எலாம் அருள வேண்டும்
என்றருந் தவங்கள் செய்தான் எந்தையும் இரங்கித் தோன்றி, (13) 1215
மூவரும் ஒன்றாய் நின்ற மூர்த்தம்ஈ தாகும் முன்னம்
ஆவலால் உன்பால் வந்தெம் மணிகழை முத்தம் சிந்திக்
கூவினோம் என்ன லோடும் குழைந்துநின் றிறைஞ்சி ஏத்தித்
தாவில்மூன் றுருஒன் றாகத் தழுவினான் தாப தன்தான். (14) 1216
சகத்தில்மூன் றீசர் என்றே சாற்றியே விடைபெற் றிப்பால்
மகத்துவ நதியில் சிந்து மணிகன்னி தீர்த்தம் என்றே
உகத்தவர் புகழ்வ தாக உகந்தருள் நாமம் சாத்தி
அகத்திய முனிவன் அன்போ(டு) அருச்சுன நகரில் போந்தான் (15) 1217
புடைமரு துற்று வாழும் புண்ணிய முனிவ ராகும்
விடயம்அ தகன்ற சிந்தைக் கவுதமர் மித்ரர் வெண்மைச்
சுடர்தரு சம்பு மேவும் ஏகமா கதநல் யோகர்
மிடைதரு தேவ ரோடும் எதிர்கொள விருப்பி னோடும், (16) 1218
முத்திமண் டபமாம் தொன்மை அருச்சுனம் முதலில் எய்திப்
பத்தியாய் இறைவன் கீர்த்தி பகர்ந்தினி திருக்கும் போதில்
அத்தலை அரக்கி தோன்ற அவள்வர லாறு கேட்டே
உத்தம நதியில் சாபம் ஒழித்தனன் உவந்து பின்னும், (17) 1219
அந்தரத் ததிரும் சத்தத் துடன்அல கையர்கள் எய்த
இந்தவல் வினையர் யார்என் றிசைத்திட ஏக யோகர்
முந்துகா ரணம்உ ரைத்தார் முனிகவு தமர்முன் பாக
வந்திடும் அலகை தீர்த்து மூழ்கிவந் திடவ ழங்க, (18) 1220
அலகையின் வடிவம் நீங்கி அப்பணி முற்றி அங்ஙன்
உலவினர் இரதி கூட வேள்உவந் தென்னக் கண்டு
நலமிகு மணம்பு ணர்த்தி நல்கிட நவின்றார் கேட்டே
இலகுமா தவர்கள் போற்றி முனிவரை இறைஞ்சி னாரால், (19) 1221
சடைமுடி முனிவர் போற்ற அகத்திய முனிவன் சார்ந்து
விடையவன் தன்னை உள்கி விரிபுனல் ஆடி ஏறிக்
கடன்முடித் தனுக்கை பெற்றுக் கயமுகன் தனைப்பூ சித்துத்
தடமதில் சூழ்ந்து கீழ்பால் சந்நிதி பணிந்தெ ழுந்து, (20) 1222
மேவிய போதில் உற்ற மெய்த்தவர் முனியைப் போற்றி
மூவகை மண்ட பத்தில் அருச்சுன முத்தித் தானம்
தாவிலா நடனம் கொண்ட சபைஒரு சேவை அன்றித்
தேவமண் டபம்ஈ தென்றார் தேவர்கட் கருளும் தானம். (21) 1223
சந்நிதித் துசத்தம் பத்தின் சார்ந்ததென் அருகில் ஓங்கும்
பொன்நகர் மண்ட பத்தில் பொதியமா முனிவன் எய்தத்
துன்னுமா தவர்கள் எல்லாம் சூழ்ந்துடன் போற்றி செய்து
நன்னெறி அருளிச் செய்து நலம்தர வேண்டும் என்றார். (22) 1224
நன்னெறி அருளும் நாதன் நவிற்றிடும் கீர்த்தி ஐந்தாம்
புன்னெறி அகற்றும் பஞ்சாக் கரமணி பூதி பூசை
மன்னுபு ராண மேன்மை மகத்துவம் அருள்வாய் என்னத்
தன்னுளம் கருணை பொங்கித் தமிழ்முனி அருளிச் செய்வான். (23) 1225
அக்கரம் ஐந்தே ஐந்தில் ஐம்பத்தொன் றைஐந் தாகும்
தக்கதாம் வகைகள் ஐந்து சாற்றிடில் ஆதி மூலம்
மிக்கநல் தூலம் சூக்கம் மேன்மைய சுத்த மாகச்
சக்கரத் தடைவே அங்கம் தரித்தல்உச் சரித்தல் சொல்வாம். (24) 1226
ஈரிரண் டொன்ப தைந்தில் ஏழுடன் ஏழும் ஆறும்
சீரதாம் எட்டி ரண்டும் சேர்வது திரியா றெட்டாம்
நேரெழுத் தைந்தும் ஒன்றே நின்மயம் ஆமை ஊமை
பேரெழுத் தாறும் ஒன்றே பிதற்றிடில் ஆறு பேதம், (25) 1227
முந்திய காலை மத்தி அந்திய முறையே ஓத
உந்திநேர் இதயம் நாவே உருச்செய உச்சரிக்கும்
மந்திர மவனம் தீர்க்கம் புலுதம்மாத் திரைவ சிக்கச்
சந்தனம் கடுக்கை வில்வம் சாய்கையிற் சரும முற்றே. (26) 1228
இவ்வகை கணிக்க முத்துப் பவளமே முதல்இ ரத்னம்
உய்வகை ஆகும் கோடி மடங்கதாம் உருத்தி ராக்கம்
திவ்விய பலன்செப் பாமே மற்றவர் தெரிசி யாமே
அவ்வகை அறிவோர் செய்வோர் அவர்செப யோகர் ஆமே. (27) 1229
அக்கர விதிஈ தாகும் அண்ணல்தன் கண்ணில் தோன்றும்
அக்கமா மணிவி சேடம் விளம்புதும் மேன்மை யான
தக்கதோர் முகம ணிக்குச் சாற்றிடும் ஒருவன் தெய்வம்
தொக்கும்ஏ காட்ச ரத்தால் துதிப்பவர் துகள்இலாரே. (28) 1230
பெறுபலன் பிறவி நீங்கும் பேதைபா கன்தாள் சேர்வர்
இறையவன் இருமு கம்தான் ஈரெழுத் தெண்ணும் காலைக்
குறைவிலா விந்து நாதம் குறைவிலாப் பதத்தைச் சேர்வர்
திறிமுகம் மூன்றெ ழுத்தே சிவன்அழல் உருவம் சேர்ப்போர். (29) 1231
கறைஅணி கண்டன் மேவும் கயிலைவீற் றிருப்பர் கஞ்ச
மறையவன் தெய்வம் ஆகும் மன்னுநான் முகம ணிக்கே
இறையவன் எழுத்து நான்கும் எண்ணியே இயற்று வோர்கள்
நிறைதரு செல்வம் எய்தி நிலத்தினில் வாழ்வர் அன்றே, (30) 1232
ஐமுகம் ஐமு கன்தான் அஞ்செழுத் ததனை வேண்ட
உய்வகை அருளும் பாவம் ஒழித்திடும் உண்மை நல்கும்
தெய்வதம் காதன் ஆறு முகம்எழுத் தாறே சேர்ப்போர்
பைஅர வுலகம் போற்றிப் பதவியும் சேரும் பாரே (31) 1233
இருவகை இன்பம் நல்கும் எழுமுகம் ஏழ்எ ழுத்தே
குருவின துருவம் ஆகும் குறைவிலாப் பேறு நல்கும்
வரும்இரு நான்கெ ழுத்தே மாயவன் முகம்எட் டாகும்
திருமிகு செல்வம் உண்டாம் தீவினை தீரும் அன்றே, (32) 1234
நவம்தரு முகம்தான் ஆனை மாமுகன் அவ்எ ழுத்தே
தவம்தரும் ஈரைந் தான முகம்அது சத்தி யாகும்
பவம்தச எழுத்தே ஆகும் பரித்துளோர்க் கெண்ணி லாத
உவந்தருள் சருவ சித்தும் உண்டாக்கும் உண்மை யாமே. (33) 1235
பதினொரு முகம்உ ருத்ரர் வருணமை எழுத்தே பார்க்கின்
நிதிமுதல் கலைகள் நல்கும் நிச்சயம் ஈரா றான
கதிதரு முகம்ஆ தித்தர் அவர்மனுக் கணிக்க நல்கும்
அதிகமாம் பேற ளிக்கும் அரும்பிணி யாவும் நீக்கும். (34) 1236
மூன்றொரு பத்தும் கூடும் முகமணி தரிக்கில் முத்தி
ஈன்றிடும் எட்டைந் தாக எண்ணிய முகுர்த்தம் தெய்வம்
தோன்றும்அவ் எழுத்தை ஓதச் சுயம்பிர காசம் நல்கும்
ஆன்றதோர் கவுரி சங்கம் அர்த்தநா ரீசம் ஆகும், (35) 1237
திவ்விய ஞானப் பேறாம் திரிசங்கம் அணிவோர் சீவன்
மெய்வகை முத்தர் என்று விளம்பிடும் வேதம் எல்லாம்
சைவமா மணிஒன் றேனும் தரிப்பவர் தரும சீலர்
நவ்வியன் பூசை கங்கை ஆடிடும் நலம்சேர் வாரே. (36) 1238
உருத்திர மணித ரிப்போர் உலகத்தில் உதயம் ஆன
திருத்திகழ் சிறப்பும் ஞானச் செல்வமும் திகழ்வர் அன்றித்
தருத்திகழ் மகவான் ஆகிப் பின்புசா யுச்யம் சார்வர்
கருத்துடன் இவைஉ ரைத்தாம் பூதியின் காதை சொல்வாம்.. (37) 1239
அண்டங்கள் சமிதை யாக அழற்கணன் அன்றெ ழுந்து
கொண்டவந் தியினில் கொண்ட சேடம்கோ பூழ்தி யாகும்
எண்திசை உய்யு மாறும் ஈசனும் மனுவும் எல்லாம்
வெண்திரு நீறே என்பர் தன்விதி விளம்பல் பாற்றோ. (38) 1240
மற்றைய பலவாய்த் தோன்றும் மதிநிறப் பூதி வாய்மை
சொற்றிட கற்பந் தானே உவகற்ப மாமஞ் சூடு
நற்றவர்க் கொன்றே ஆகும் ஞானமே பூதி ஆகும்
பெற்றகு லத்தால் பூதி அஞ்சனம் சாந்தம் பேணே, (39) 1241
சொன்னபூ தியினால் ஏவு சூலமுத் திரையால் சாத்த
மன்னுபுண் டரஞ்சை வர்க்கு மாயற்கூர்த் துவம்வ குத்தான்
முன்னுபுண் டரம்வ லப்பால் மூவர்முச் சுடர்இ டப்பால்
அன்னமத் தியில்ம யேசன் சதாசிவன் அனந்த னாமே. (40) 1242
புண்ணியர் இவர்தி யானம் போற்றிஆ கமத்தால் சாத்த
எண்ணிய பலன்கொ டுக்கும் இருவினை நீக்கும் பூதி
அண்ணல்தன் பூசை மூன்றாம் அவைசுத்த மேக மாகும்
விண்ணவர் குழாம்தான் மிச்ரம் கேவலம் விமலை கூடல், (41) 1243
வாருணம் அருநீர்த் தானம் மன்னும்ஆ வின்றூழ் பூதி
சேருமா னதந்தான் ஐந்தும் தீர்த்தமாம் தேக சுத்தி
சாருறு கின்ற நியாசம் சமட்டிதத் துவம்வி யட்டி
ஆருறு மாதுர் நியாசம் ஆகமத் தடைவே செய்வார். (42) 1244
அருமறை யதிதி யாகி யமாகுதி வெலியை வேள்வி
திருவளர் குருஇ லிங்கம் சிறந்தபொத் தகமே அக்கம்
இருள்வலி உடன்ஐந் தாகும் சிவபூசை இயற்று கின்ற
கருமபூ சைகள்அ னேகம் கருத்துடன் இயற்று வோர்க்கே. (43) 1245
சொன்னபூ சனைக்கு நாதன் சோடச வகைஇ லிங்கம்
என்எனில் இதய பூசை இயற்றிடு ஞான பூசை
பன்னுகூ விளம்க டுக்கை பதுமைஅம் புலிமி ருத்து
மன்னுசந் தனமாச் சித்ரம் இலைகிள்ளல் வன்னி பூதி (44) 1246
கன்னலின் கட்டி வெண்ணெய் கோமயம் இவைக ருத்தால்
பன்னமும் குடங்கை நீரும் பரிந்திடப் பலன னந்தந்
துன்னுபூ சனைஇ யற்றச் சொலும் அட்ட புட்பம் அன்றிப்
பொன்மலர் இரத்னம் காந்திப் போதுகாய் கனிநூ லக்கம், (45) 1247
செந்நெலின் அரிசி குல்லை செவ்வந்தி துருவை யன்றி
நன்மருக் கொழுந்து மாசி மல்லிகை இடுவோர் நல்லோர்
மன்னிய திரவி லிங்கம் மற்றுள சலன லிங்கம்
இன்னதில் திரம்எட் டாகும் விதிவழி இயற்று வோர்க்கே, (46) 1248
சூதர்சொல் லியபு ராணத் தொகையினைச் சூழ்ந்து கேட்போர்
ஏதங்கள் அறப்ப டிப்போர் எழுதுவோர் இறைஞ்சி நிற்போர்
பாதுகாத் திடும்பு ராணம் பூசிப்போர் பழுது தீர்ந்து
நாதன்வாழ் கயிலை தன்னில் நண்ணிநற் கணத்தர் ஆவார். (47) 1249
மன்னுபு ராணம் கேட்க மனவியா குலம்அ கற்றும்
துன்னுமெய்ச் சரிதை கேட்கத் துகள்தவிர்த் தின்பம் நல்கும்
பன்னும்ஆ கமங்கள் கேட்கப் பழவினை எல்லாம் பாறும்
சொன்னஇச் சுருதி கேட்கச் சுபமிக அருளும் அன்றே. (48) 1250
திருவளர் புராணம் ஓதச் செல்வங்கள் மிகவும் உண்டாம்
வருமிருத் துகளும் நீங்கும் வாதைபோம் செனனம் மாறும்
அருமையாம் மகப்பே றுண்டாம் அரும்பிணி யாவும் நீக்கும்
பெருமையும் திருவும் நல்கும் பிஞ்ஞகன் பதவி சேர்க்கும். (49) 1251
நவைஅறு புராணம் கேட்க ஞானமும் வீடும் நல்கும்
சுவைதரும் அறிவு நல்கும் சுயம்பிர காசம் உண்டாம்
சிவதரி சனம்கி டைக்கும் செகத்துளார்க் கருள்கொ டுக்கும்
தவமிகும் தத்து வத்தின் சாரமும் தரிக்கும் அன்றே. (50) 1252
அறம்பொருள் இன்பம் நல்கும் அருளிய சரிதை கேட்கப்
பிறங்கிய கீர்த்தி நல்கும் பேரழ கினைக்கொ டுக்கும்
சிறந்திடும் உண்மை நல்கும் தெளிவுறும் சினம்த விர்க்கும்
வறந்திடும் போதில் உற்ற மழையதாம் மன்னு யிர்க்கே. (51) 1253
மண்ணினில் ஈயாச் செல்வர் வறுமையோ ரினினு மாண்டோர்
பெண்ணினில் குணம்ஒன் றில்லாள் பேயதாம் பிதற்று கின்ற
விண்ணவன் சரிதை கேளார் இருஞ்செவி விறுதா அன்றிக்
கண்உளோர் முகத்தி ரண்டு புண்உளோர் கருதும் காலே. (52) 1254
முகம் அதனில் கண்இருக்க முன்இருக்கும் பொருள்தேடி
முயலு வாரும்
மகம்அதனில் விளக்கிருக்க அழல்தேடித் திரிவாரும்
அரையி லேதான்
மகவிருக்க அம்மகவைப் புறம்தேடும் மயக்கரும்போல்
வளர்பு ராண
இகபரசா தனம்கொடுக்கும் நூல்இருக்க வேறுநூற்கு
இரங்கு வாரே. (53) 1255
வேறு
பொருள்வகை இல்லா தார்க்குப் புவிதனில் புகழ்உண் டாமோ
அருள்வழி இல்லா தார்கள் அறத்தின்பம் அறிகு வாரோ
குருஅருள் ஞானம் இல்லார் கொன்றையன் அடிசேர் வாரோ
திருவளர் புராணம் கேளார் செவிஇலார் செவிஇ லாரே, (54) 1256
அண்ணலைப் பூசி யாருக் கரும்பொருள் கிடையா தன்றி
எண்ணிய முற்றா முன்செய் தவத்தினால் அன்றி இல்லைப்
புண்ணியம் உடையோர்க் கன்றிப் புராணகேள் விகள்பொ ருந்தாத்
தண்அளி உடையோர்க் கன்றித் தருமமும் சாரா தன்றே. (55) 1257
பன்னுபு ராணக் கேள்வி இன்றிஓர் பலன்உண் டாமோ
மின்னுல கத்தோர்க் கென்று முனிவர்க்கு விரித்துக் காட்டி
இன்னன எல்லாம் செப்பி எழுந்திமை யவர்கள் போற்றும்
மன்னுமண் டபத்தை நீங்கி மலயமா முனிவன் வந்து, (56) 1258
விதிவழி அரனைப் பூசை இயற்றிட விரதம் உற்றே
மதிநிறம் ஆன கற்ப நீற்றினை வனைந்து ருத்ரன்
நுதல்விழி அதனில் தோன்றும் நுவல்கின்ற பன்மூன் றான
பதிமுக மணித ரித்தே பாவித்துப் பரவிப் பின்பு. (57) 1259
பூதபி ராணா யாமம் போகபூ ரகம்நா லெட்டாம்
நாதகும் பகம்கும் பித்தல் விலகலை எட்டெட் டாகும்
மேதகு இரேச கம்தான் விடுதல்ஈ ரெட்டாம் மார்க்கம்
சாதகத் தியற்றி அர்க்யம் தாபித்தா கமத்தின் சார்வே, (58) 1260
கணபதி கலைமான் வாசக் கமலமான் கடவுள் நந்தி
இணையிலா கங்கை காளா யமுனையத் திரத்தூ வாரா
துணைபுரி துவார பாலர் சூழ்திக்கில் எண்தி காந்தர்
கணைவிழிக் கன்னி கால வயிரவன் காவ லாளர், (59) 1261
முதலினோர் தம்மை வேண்டி முன்னவன் பணிக்கூ றின்றி
அதனையும் தீர்த்துத் தன்னை அவனதாய் இயற்றி ஆறு
விதமதா சனங்கற் பித்து விமலனை நிறுவி வேண்டி
நிதம்உற இலிங்க சுத்தி நேசத்தால் செய்து போற்றி, (60) 1262
பஞ்சசத்தி இதுவரையும் வடமேல் பாலில்
பதிதரும்ஐங் கரத்தனும்பைங் கடம்பி னானும்
கஞ்சமக்க டனையும்பின் வடபால் சத்த
குருவினையும் நிறுவிக்கை தொழுது வேண்டி
அஞ்சுமுகக் கரத்தர்ஆ சத்தி யாலும்
அர்ச்சித்த வகையங்க மாறி பங்கிய
மிஞ்சுவிர லானிசித்து வித்யா தேகம்
விமலனைப்பா வனைகொண்டு விதியால் சாத்தி, (61) 1263
மந்திரத்தால் கிரிகைபா வனையால் மற்றும்
மதிக்கும் ஆ வாகனதா பனமார்க் கத்தில்
முந்துசந்தி தானசந் நிரோதா னங்கள்
முற்றியபின் முத்திரைஅஞ் சலியும் செய்து
கந்தம்உறப் பணிமாறி அர்க்யம் ஈந்து
கனித்ததுடை யினைத்தண்டிக் கடவுட் காக்கி
விந்தைபெறும் அஞ்சனம்எள் தயிலக் காப்பு
விரைசேர்மா நெல்லிஅரி சனத்தின் காப்பு, (62) 1264
பஞ்சகவ்வி யம்பஞ்சா முதமும் ஆட்டிப்
பால்தயிர்நெய் யெழவென்னீர் பலத்தின் காறு
மிஞ்சுதேன் கருப்புநீர் இளநீர் வில்வம்
மென்கொழம்பு தாரைபதா கையினாலே வேண்டித்
தஞ்சம்ஆ கியபதமந் திரத்தால் ஆட்டிச்
சந்தனச்சே றாட்டிச் சிவகும்பஞ் சங்க
நஞ்சணிகண் டனுக்காட்டி இடைக்கிடையே உதகம்
நலம்பெறவே அட்டபுட்பம் அணிந்துபணி மாறி(63) 1265
அருக்கியநீர் ஒற்றாடை பரிவட்டம் சாந்தம்
அறுகுவில்வம் துளவாதி அரிசிஅணி சுகந்தம்
மருக்கொழுந்து தொடைமாலை இண்டைமலர்க் கண்ணி
வகைசாற்றி மணிஇலங்கும் ஆபரண மாலை
குருக்கிளரு முடிகுழைகள் முதலான சாற்றிக்
கோமளஞ்சேர் பொன்மலரால் அர்ச்சித்து வணங்கித்
திருக்கிளர்தத் துவத்திரயம் விதிப்படியே செய்து
திகழவே பணிமாறித் திவ்வியல யாங்கம், (64) 1266
போகாங்கம் அர்ச்சித்துப் பூசித்துப் பஞ்சரஆபரண
பூசைசெய்து புனிதை யைஅர்ச் சித்து
மோகாந்தம் பணிமாறி அமுதமது வருக்கம்
முதலான அறுசுவையும் பலவர்க்கம் பணியம்
வாகுபெறு கனிவர்க்கம் பானீயம் அடைக்காய்
மாறியே இட்டமுற வகுத்துவசா ரங்கள்
ஏகாந்த மந்த்ரபுட்பம் சகத்திர நாமம்
இயற்றிஇறை விழிக்குநிகர் கூவிளம்அர்ச் சித்தே(65)1267
பரவசம்எய் திப்பரனே போற்றி திங்கள்
பாம்புடனே அணிந்துபகை தீர்த்தாய் போற்றி
கரமதா சலஉரிபோர்த் தருள்வாய் போற்றி
கங்காள விடம்உண்ட கண்டா போற்றி
புரதகன பூதநா யகமா தேவ
புண்ணியபுங் கவபுடார்ச் சுனத்தில் மேவும்
வரதநா றும்பூநா யகனே போற்றி
மாதுகோ மதிமான்ம ணாளா போற்றி (66) 1268
பூசனையைப் புரிவானும் நீயே வேண்டும்
பூசனைகொண் டருள்வானும் நீயே பூவில்
வாசமாய் நீரினுக்குத் தண்ணாய்த் தீய்க்கு
மன்னுவெதுப் பாய்அழலால் வளரும் சோதித்
தேசுருவாய்ச் செய்வகையின் பொருளாய் வேதம்
செப்பியஉண் மைத்திறமாய்த் தெளிவார் உள்ளத்(து)
ஆசகல அமர்ந்திடும்அற் புதம்அ தாகி
அருள்கொழிக்கும் மெய்ஞ்ஞானத் தமுதே போற்றி (67)1269
அற்புதனே போற்றிஎனத் துதித்து நான்செய்
அரும்பிழைகள் பொறுத்தருள்என் றடியில் வீழ்ந்து
தற்பரனை வளைந்துமன திட்டம் வேண்டித்
தகும்காலம் அர்ச்சித்துத் தழலை ஓம்பி
நற்குசையால் சமித்துநறு நெய்யி னாலே
நண்ணுமதைத் தகித்தவர்க்கா குதிசெய் திந்தப்
பொற்புறுபூ சனையைஅரன் தனக்குத் தத்தம்
பொருந்தவே செய்துநித மான பூசை, (68) 1270
முடியாத தியற்றிபின் சண்டாந்தம் போற்றி
முனிவணங்க முன்னவனும் முனிகாண எழுந்து
விடைஏறி உமையோடும் காட்சி நல்கி
வேண்டும்வரம் கொடுத்தீசன் மெய்சாய்ந்த மூர்த்தி
இடைஎய்த அகத்தியரும் பூசித்து நாளும்
இன்புற்றங் ஙனம் உறைந்தே இறைவிநிகர் பன்னி
துடி இடைஉ லோபாமுத் திரைமாதும் தாமும்
துதிகொண்டு பொதிகையினில் மேவினார் அன்றே. (69)1271
- அகத்தியப் படலம் முற்றும்-
15. தாரக உபதேசப் படலம்
அகத்திய முனிபூ சித்த தறைந்தனம் அருந்த வத்தோர்க்(கு)
அகத்தரு ஈசன் காதை உரைத்தகா ரணர்தம் மோடும்
சகத்தினில் சீவன் முத்தித் தலம்எய்திச் சம்பு வின்பால்
மகத்துவ தார கத்தைப் பெற்றிடும் மகிமை சொல்வாம். (1) 1272
வாகுசேர் முனிவர் எல்லாம் சூதரை வணங்கி எங்கட்(கு)
ஓகையாய்ப் புடார்ச்சு னத்தின் உண்மையை யோக சொற்றாய்
ஆகமக் காட்சி யாலே அறிந்தனம் அதனால் அந்த
ஏகனைக் கண்டு போற்ற ஏகுவோம் எனஇ யைந்தே, (2) 1273
வாதரா யணர்மார்க் கண்டர் மரிசிவான் மிகர்வ சிட்டர்
சூதர்மற் றவர்பால் உள்ளார் சகர்முதல் எழுந்து காசி
நாதனைப் பரவித் தங்கள் நன்மனக் குறிப்பை ஓதி
வேதகா ரணனைப் போற்ற வேண்டியே விடைபெற் றார்கள். (3) 1274
அங்குநின் றெழுந்து சத்த புரிகண்டார் அரன்பால் ஆறு
திங்களும் தேவர் போற்றும் சிலோச்சயம் தெரிசித் தாறு
மங்கல தினத்தில் முத்தி வழங்கினார் மலையைப் போற்றி
நங்கைபூ சித்த மாவை நண்ணினார் நாதற் போற்றா, (4) 1275
பறவைசேர் வேதக் குன்றம் பரவியே பழையெ லும்பு
முறையினால் பாவைஆன முதுபதி போற்றி மூன்று
பொறைதொழ மலைமி தந்த புண்ணிய புரியைப் போற்றி
மறைதொழு பதியும் வன்னி மலையையும் வணங்கி வந்து, (5) 1276
தில்லையில் எய்தி நாதன் திருநடம் போற்றி மாயை
எல்லையைக் கடந்தோர் சூழத் தபோவனத் தெய்த அங்ஙன்
பல்பெருந் தலத்த ரோடு பதஞ்சலி வியாக்ர பாதர்
சொல்வளர் துதிகள் கூறி எதிர்கொடு சூழ்ந்து வந்து, (6) 1277
பணிந்திருக் கையினில் உய்த்துப் பரவியே பரவி னோர்கள்
வணங்குத லொடும்வி னாவ வரவுரைத் தருள்வார் இந்த
அணங்கர வுலகில் தென்பால் ஆறுறை அருச்சு னத்தின்
குணங்களை ஆக மத்தால் கூறிய காட்சி கண்டோம். (7) 1278
மன்னிய பொறியால் காண வந்தனம் என்றார் தம்மைப்
பன்னக முனிவன் பாதன் முதலினோர் பணிந்து வேண்டித்
தென்னகர்க் காசி உண்மை எங்கட்குத் தெரிப்பீர் என்ன
முன்னவன் ஆன வேத முனிவரன் மொழிகின் றானால் (8) 1279
வேறு
திருமால் பிரமன் இந்திரனே முதலாம் தேவர் யாவர்களும்
ஒருகா லத்துக் கயிலைதனில் ஒருங்கு கூடி மருங்கெய்திப்
பெருமான் இடத்து வழிபட்டுப் பிரள யத்தும் அழியாத
இருமா நிலத்துச் சிவதலம்தான் எங்கட் கருள வேண்டும்என, (9) 1280
பூசை புரிந்து தவம்இயற்றப் புனிதன் இவர்கள் முன்தோன்ற
வாச மலரோன் முதலோரை நோக்கிப் புகல்வான் இவ்வரைநேர்
பேசில் பொதுகை யாம்நமது பிறைவே ணியில்வாழ் பயிரவிதான்
ஆசில் பொருந்தம் அவண்உலவும் பதிகள் யாவும் அமரர்பதி, (10) 1281
சிவனைப் போற்றும் தவயோகர் சிறந்த பதிசூழ் சிவலோகம்
அவனி தனிலே இந்த்ரபுரி அங்ஙன் வாழும் அருச்சுனமே
நவசத் திகளில் முதல்சத்தி நமக்கா தார சத்தியதாம்
உவமை உரைக்க அதற்குவமை அதுவே என்று மறைஉரைக்கும். (11) 1282
அந்தப் பதியின் மகத்துவங்கள் அறைதும் இன்னும் அகிலம்எலாம்
சிந்தப் பிரள யம்தோன்றும் காலம் தனிலும் சிதையாத
முந்தைப் பதிதென் பால்காசி மூரி வடகா சித்தலமும்
சந்தச் சூல நுதிதனிலே தரித்து வாழ்வோம் சாற்றும் கால், (12) 1283
முத்தி கொடுக்கும் அப்பதியில் வாழ்வோர் சீவன் முத்தர்களாம்
அத்த கைமைப் பதிசீவன் முத்தி புரம்எய் தில்விளங்கும்
சத்தி தார கத்துருவாம் சார்வோர்க் கந்தத் தாரகத்தைச்
சித்தி பெறவே வலக்காதில் உபதே சிப்போம் செப்பும்கால், (13) 1284
கிருமி முதலாம் உயிர்யாவும் கேதம் தீர்அவ் வெல்லைதனில்
மரணம் ஆகும் பொழுதினிலே மாதவ் வுயிரை மடிஏற்றிப்
பிரிவின் துன்பம் அதுநீங்கத் துயிலால் வீசப் பிரமமனுத்
தருதா ரகத்தை வலச்செவியில் தார கேசன் சாற்றும்என, (14) 1285
கேட்ட மேலோர் எல்லாரும் கிளர்ந்து தேக புளகிதமாய்
நாட்டம் தழைத்த சிந்தையுடன் எழுந்து நாவால் துதிசெய்து
தாட்டா மரைகள் மிகப்போற்றித் தழுங்கும் கங்கைச் சடைதனிலே
தோட்டார் கொன்றைக் கண்ணிபுனை சோம சேக ராஎன்றே, (15) 1286
வழுத்தி வாழ்த்தி அப்பதியின் மகிமை கேட்ட மாண்பதனால்
விழுப்பம் உடையேம் ஆயினமால் விமல மூர்த்தி அப்பதியை
ஒழுக்க முடனே யாம்பணிய உறுதி நல்கி உயர்பிரமம்
பழுத்த தார கத்தினையும் பாலித் தருள வேண்டும்என, (16) 1287
துதித்த மேலோர் தமக்கருளிச் செய்தான் தூயோர் விடைபெற்று
நதித்தண் துறைசார் பயிரவி சூழ் நவைதீர் தென்பால் காசிஎனும்
பதிக்கண் வந்து நேசமுடன் பரனைப் போற்றிப் பலன்பெற்றுக்
கதிக்கே இடம்ஆ கியபதியில் வதிய உற்றார் காசினியில், (17) 1288
என்ற யோகா திபரோடும் இனிய புடைமா மருதெய்த
மன்றம் போற்றும் முனிவர்களும் வான்மார்க் கத்தால் தலங்கள்எலாம்
சென்று போற்றிக் காவேரித் தேசம் கடந்து திரிசிரமாம்
குன்றம் போற்றி நான்மாடக் கூடல் பரங்குன் றமும்பணிந்து, (18) 1289
மற்றும் உள்ள தலங்கள்எலாம் வணங்கித் திரிகூ டம்பணிந்து
கற்றோர் சூழ்ம லையசலக் கடமா முனிவர் தம்மோடும்
சுற்று பொருநைப் பதிகள்எலாம் தொழுது சுரர்கள் துதிக்கின்ற
கற்றை வேணிச் சிவன்அமர்ந்த கதிசேர் பதியின் கண்உற்றார். (19) 1290
முத்தி புரமே இதுஎன்று முன்னி ஆல யத்தெய்திச்
சித்த நாதன் தனைப்பரவிப் பூசை செய்து சிந்தித்துப்
பத்தி யுடனே துதிசெய்து பரம தார கப்பிரம
நித்த மனுவை எங்கள்செவி நிரம்ப நல்க வேண்டும்என, (20) 1291
தவமா முனிவர் யாவர்களும் சரணம் பணிந்து துதிசெய்தார்
சிவநா யகனும் சிவலிங்கத் திடையே நின்றும் தேசுருவாய்ப்
பவன்ஆ காய வாணியினால் பகர்வான் மனுவைப் பாலிப்போம்
சுவைஆர் மருதுற் றிடும்என்னச் சுருதி வழியால் சார்கின்றார். (21) 1292
புடைசேர் மருதை வலம் கொண்டு புனிதன் பரவ அருள்கொடுத்த
படிவ நாதன் தனைப்போற்றிப் பரம முத்தி மண்டபத்தில்
கடிதில் வரும்அப் பொழுதினிலே கவுரி பாகன் கதிதாங்கிச்
சடையும் தாங்கி முனிபோலச் சார்ந்தான் சார்வோர் தமைநோக்கி, (22) 1293
பாதி மதியம் மறைத்துவரும் பரமன் புகலும் பார்தனிலே
நீதி தரும்இந் நகர்போல நேமி மூன்றி னும்கிடையா
தோதில் அதிகம் எனநமர்கட் குறுதி நல்கி உதவவளர்
மாது பாகன் இவன்என்றே வணங்கி அருள வேண்டும்என, (23) 1294
சொற்றிடு நல்தவம் முன்வெகு காலம்
சோர்வற மாமலை கானகம் அன்றிப்
பெற்றி தரும்தலம் மேவி இழைக்கப்
பெறுபலன் இத்தலம் மேவிடல் செய்யும்
முற்றிய நல்வினை யாலும் முயன்றோர்
முன்உள மும்மையில் இத்தலம் முன்னிப்
பற்றினர் இத்தலம் மேவுவர் அன்றிப்
பாவக ருக்கிவை கூடுதல் இலையால். (24) 1295
உண்மைகொ டித்தலம் மேவிட உன்னி
ஓர்அடி வைத்திட ஓர்பரி யாகம்
திண்மை யுடன்புரி யும்பலன் நல்கும்
தேவரும் இத்தலம் மேவிடு தற்கே
கண்இமை யாது புரிந்துறை கின்றார்
கடவுள ரும்இவண் எய்திட எளிதோ
வண்மை தரும்கரி முகனொடு காரி
வயிரவர் கின்னரர் தடைபல மாதோ , (25) 1296
இத்தகை மைப்பதி யைநினை வோரே
எண்ணிய எய்துவர் இவண்வர வுன்னி
வைத்திடு காலே வலம்வரு காலாம்
மற்றித னைத்தொழு கைக்கரம் ஆமால்
பத்தி யுடன்பணி சிரமே சிரமால்
பரவிடு நாவே நாஉளம் விளையத்
துய்த்திடும் விழியே விழிஎன வேதம்
சொல்வன இவைபோல் வேறிலை மாதோ. (26) 1297
உத்தம இத்தலம் மருவிட உறுவோர்
உலகினில் மிகுவெகு தவமொடு தானம்
வித்தக நல்வினை பத்திசெய் பாவனை
விழைவொடு செய்திடல் விதியுட னேபொன்
நித்தம் வழங்குதல் கோஉறு தானம்
நிலனொடு கன்னிகை அன்னம் நிலாவத்
துய்த்திடல் செய்வது வாவிகள் கூபம்
சுமைபெறு கல்லொடு சோலைகள் செய்தல், (27) 1298
வேள்வி இயற்றுதல் சிவன்அடி யார்க்கே
மெய்ப்பணி புரிகுதல் விழையும னத்தால்
வாள்விழி உமைகண வற்குறு பணிகள்
மாண இயற்றுதல் மறையவ ருக்கே
நீள்பதி ஈகுதல் நிறைமலர் மொய்த்த
நிலவிய நால்வகை நந்தனம் வைத்தல்
நாள்அலர் இண்டைதொ டைக்கணி சாத்தல்
நவமணி நாயக னுக்கணி வித்தல், (28) 1299
சிவன்அடி யார்வரில் எதிர்கொடு சென்றே
செம்மைய னோக்குறல் சிந்தைவி யந்தே
அவர்அடி போற்றுதல் முகமன்உ ரைத்தே
ஆசனம் ஈகுதல் அலர்கொடு தூவித்
தவரைவ ழுத்துதல் சூழுதல் பாத
தண்புனல் ஆடுதல் தயவுடன் நம்மைப்
புவிதனில் ஆளவும் வருசிவன் என்றே
போற்றுதல் மனதிட் டப்படி புரிதல், (29) 1300
வேறு
கோஅருந்தஅ றுகருத் திக்குளிர்
வாவியில் பருகச் செய்தல் மாண்புடன்
ஆஉரிஞ்சுகல் நாட்டல் அதர்ச்செல்வோர்
பாவு நீர்உணும் பந்தர் இயற்றுதல், (30) 1301
அதரி னுக்கணி சாலைஅ மைத்திடல்
நிதமும் ஐவகை வேள்வி நிறுத்துதல்
விதிம ணப்படி வேட்டல் வெகுள்விடல்
மதியி னால்கடப் பாட்டில் மருவுதல், (31) 1302
எண்வ கைப்பத்தி செய்தல் இயல்பினால்
வண்மை யாய்மெய் உறுதி வழிநிற்றல்
உண்மை நாளும் செலுத்தல் உறுதியே
நண்ண வைத்தல் நடுநிலை காத்திடல், (32) 1303
இறைவன் கீர்த்தியை நாளும் இயம்புதல்
பொறுமை பூத தய்வு புரிகுதல்
வறுமை எய்தினும் மாண்பால் ஒழுகுதல்
அறுவகைக் குற்றம் முக்குற்ற மாறுதல் (33) 1304
தருமத் தின்வழி நிற்றல் தவத்தினால்
அரிய நல்விர தங்களை ஆற்றுதல்
மருவு தன்உயிர் போல்மன் உயிரையும்
பெருகப் போற்றிடல் பேணும் வரம்புறல், (34) 1305
மூவகை யாகம் செய்தல் முச்சகா யம்இ யற்றல்
தேவென அறம்செய் வோரைத் தேர்குதல் புலனைச் செற்றல்
ஊவினை நயத்தி டாதல் உடன்படா திருத்தல் ஓதல்
ஆஉயர் கொடியாற் கான அருட்சிவ பணிகள் ஆற்றல் (35) 1306
இவ்வகை முதல வான புண்ணியம் இயற்றி நாளும்
செவ்விதின் நோற்க எய்தும் பலன்கள்இச் சேத்தி ரத்தைக்
கவ்வைநீங் கிடக்கொ டுக்கக் கருதிஇத் தலத்தைச் சேர்வார்
நவ்விசேர் கரத்தர்க் கன்பர் ஆயிடும் நலம்சேர் வாரே. (36) 1307
புண்ணியர் அன்றி மற்றோர் இந்நதி போதற் கெய்தாத்
தண்அளித் தருமத் தாறே தாம்பிர வன்னி தானம்
பண்ணின்முன் சொன்ன அந்தப் பலத்தினை நல்கும் அன்றி
நண்ணுமுக் கோடி தீர்த்தம் ஆடிய பலனும் நல்கும். (37) 1308
விரும்பின செயல்கொ டுக்கும் வினைப்பயன் தன்னை மாற்றும்
அரும்பிணி யாவும் நீக்கும் அரியபா வங்கள் போக்கும்
வரும்சன னங்கள் மாற்றும் வறுமைபுன் மயக்க றுக்கும்
பொரும்கவல் போக்கும் இந்தப் புண்ணிய தீர்த்தம் மாதோ, (38) 1309
கன்னியில் கவுரி நோற்ற விரதம்அக் கன்னி வேட்ட
நன்மதி முப்பா னாள்கண் நவத்துடுத் தனுசு முப்பான்
இன்னதி ஆட நூறு மடங்குயர் பலனை ஈயும்
பொன்மதி மகர பூச மாமகன் புனிதன் பெற்ற, (39) 1310
மேடநல் விடுநாள் ஆடில் விழைபலன் நூற்றுப் பத்தாம்
ஆடகம் அரிபால் அன்னம் ஆடைநல் கிடின்அந் நாளில்
பீடுசேர் அயுதம் நல்கும் பிதிர்க்களுக் கருத்தில் மேலாம்
வீடுசேர்ந் திடும்பு லத்தோர் விமலனைப் பூசித் தேத்த, (40) 1311
இவ்வகைப் பலனில் கோடி மடங்கதா வேவி லிங்கம்
அவ்வியம் அகன்றோர் உள்ளத் திருந்தருள் அறிவு ரூபன்
நவ்வியங் கரன்அ னேகன் நவில்சிவ யோக போகன்
திவ்விய சிற்கு ணாளன் சிதம்பர தேசி னானே. (41) 1312
மண்டலம் எல்லாம் மேதை வரைஎன்பு மாம்உ ரோமம்
தெண்டிரை உதிரம் ஆகும் திரிசுடர் கண்கள் ஆகும்
கொண்டல்கள் போர்வை ஆகும் கோதைகள் கவசம் கொண்டோன்
அண்டம்ஆ பரணம் ஆகத் தாங்கும்அற் புதன்இ வன்தான் (42) 1313
வேறு
அட்ட மூர்த்திதன் அன்பர்கட் காகவே
இட்ட மாம்அபி டேகத்தி லிங்கமே
சட்ட மானநெய் வேதனம் சங்கமம்
சிட்டனுக் கிரகந் தேசிக ரூபம் (43) 1314
வேறு
மூவகை தன்னில் சுத்த மாயையைக் கடந்த மூர்த்தி
மூவகை யோர்க்கும் எட்டா மூலகா ரணனே ஆகும்
மூவிரு நான்க தான காரிய முடிவாய் வோர்க்கு
மூவகை யாக நின்று பொருள்தனைக் காட்டு முன்னோன், (44) 1315
மனுசாந்தம் உன்மனா தீதம்மனோ தீதம்
மருவுநிரா மயமான மயகுணப்பிரு சாதந்
தனபரா பரசாந்தம் நிர்க்குணம்நின் மலமாம்
சாந்தம் நிரா தாரதிறுவ நிச்சலம் நிட் களவ
உனுசாத அதுலம்நித்தம் நிராலம்பம் நிறுவ
உதவியஅற் புதஞான பூரணா போக
அனுபவமெய் அசிந்திய சூக்கும சூன்னியம் ஆகும்
ஆனந்தா காரமதாம் தற்பாதிக் காலம். (45) 1316
சின்மயகுண் டலிகிபுகத் திலங்குநித்த மனுவாம்
தெளிவுயர்சோ டசகலையாம் தீபஒளி மின்சேர்
பொன்இரதம் இருசுடர்மா ணிக்கம்முத லாகும்
போந்தகலை மேதையருக் கீசகலை விந்தாம்
உன்னும்விட கலைஅருத்த சந்திரன்நி ரோதி
உற்பவித்த நாதநா தாந்தகலை சத்தி
மின்னும்வியா பினிசமனை உன்மனைஈ ராறாம்
வியோமரூ பிணிஅனந்தை அனாதை அனாசிருதை (46)1317
இவையாகும் மூலமுதல் அங்குலம்பத் தாறே
இசைத்திடுமாத் திரைகள்மூன் றாதிமனம் அந்தம்
சிவன்சதா சிவப்பரமே அதிதெய்வம் ஆகும்
திகழ்புரு டத்துவம்மூ எட்டாகும் இரண்டில்
தவமான காலம்முதல் ஆறாகும் மாயை
தருசுத்த வித்தைஈ சுரம்சாதாக் கியமே
புவனசத்தி வகைக்கொன்றிந் திகைமுதலே ஆன
புவனம் அஞ்சு சிவதத்வம் புகலுமுப்பான் ஆறே. (47)1318
செந்தழல்இந் திரவிவான் தீபம்மின்மா ணிக்கம்
தினகரனு ருயிர்முக்கால் நிறம்அ தாகும்
தந்திடுஞா னாகாயம் சாகரம்கண் ணாடி
தருமதியம் சூரியன்பின் அளவிலாச் சுடராம்
வந்தஒலி சூனியமென் குணம்விடுவ மேழாம்
வளர்பாதம் இரண்டாகும் சுமாமா றாகும்
வந்தமல வாசனைதீர்த் திடும்முத்தி நல்கும்
பரிபூர ணானந்த பராபரமந் திரமே (48) 1319
வேறு
தாரகம் என்ப தொன்றே தாரகம் அனந்தம் ஆகும்
தாரகம் மூலம் ஆகும் தாரகம் முத்தி என்ப
தாரகம் உன்ம னாதீ தப்பொருள் முடிவு தானாம்
தாரகம் இவ்இ லிங்க தற்பர சிவமே சான்றாம். (49) 1320
காரகக் கருவி தன்னை ஞாபகம் காட்டு மாபோல்
ஆரகத் துருவைக் கண்கள் ஆடியில் அறிவித் தால்போல்
தாரக உருஇ தென்று சாற்றினான் தார கம்சே
ரோகஇலிங் கத்தின் பாற்பு லிங்கம்போல் எய்தி னானே. (50) 1321
மாதவர் யாரும் ஈசன் வழங்கிய மனுவைப் பெற்றுப்
போதமும் புலனும் ஒன்றாய்ப் புண்ணிய சரணம் என்றார்
நாதனம் போல உற்று நல்கினான் எனம கிழ்ந்து
பாதங்கள் பரவித் தாழ்ந்து பழிச்சியே பரவும் போதில், (51) 1322
ஒருமுனி பன்னி அங்கண் இறந்திட உமையோ டீசன்
விரைவுடன் வந்து தேவி வீய்ந்திடும் உயிரைக் கையால்
மருவியே மடியில் ஏற்றி மன்னுயிர் பிரிவின் துன்பம்
இரியமுன் தானை யாலே விசிறிட இறைவன் எய்தி, (52) 1323
உடன்வலச் செவியில் தார கத்தினை உபதே சித்து
விடையினில் கவுரி யோடு விளங்கியே காட்சி நல்க
மடல்அவிழ் பூவின் மாரி வானவர் பொழிய வானக்
குடமுழாம் பஞ்ச நாத வாத்தியம் குமுறி ஆர்ப்ப, (53) 1324
வேறு
சிவகணங்கள் அவ்வுயிரைத் தேவவிமா னத்தேற்றித்
தவநெறிமேல் செலக்கண்டு தவயோகர் யாவர்களும்
புவனியின்மேல் பணிந்தெழுந்து போற்றினார் புதுமைஎனப்
பவன்அருளின் திறம்கண்டு பரன்முன்பு பணிந்தெழுந்து, (54) 1325
அளவிலா மகிழ்வெய்தி ஆவுடையாள் தன்னோடும்
தளம்உலா வியகொன்றைத் தாரகே சுரன்தன்னை
உளம்மெய்வாக் குறப்போற்றி உருகிஇவர் செயல்உன்னி
வளமிகுபூ சனைஆற்றி வணங்கியே துதிக்கின்றார். (55) 1326
வேதகா ரணசரணம் மேதினியில் சிவலோக
நாதகோ மதிபாக நம்பனே சரணம்நதி
சீதமா மதிஅறுகு சிறந்தவே ணியசரணம்
போதஅறி வானந்தப் புடைமருதற் புதசரணம். (56) 1327
வேறு
திருவளர்தா மரைசரணம் தேவர் யாரும்
தெரிசிக்ககாட மீய்ந்த செல்வம் போற்றி
தருவில்உறை இந்திரன்தன் பழியை நீக்கித்
தான்வேண்டும் வரம்ஈந்தாய் சரணம் மாலுக்(கு)
அருள் அளித்த சுந்தரனே சரணம் ஆதி
அரசனைமுன் பணிகொண்டாய் சரணம் ஆதிப்
பிரமாவுக் குயர்காசி இதுஎன் றீந்தாய்
பின்புபதி யத்திதவிர்த் தாண்டாய் போற்றி. (57) 1328
தைப்பூசத் தவிர்த்தானன் பாவம் போக்கிச்
சதானந்தன் அலகைமோ சனம்அ தாக்கி
மெய்ப்பாகத் தந்தவா சரணம் வேம்பன்
மிலைச்சமதம் தனைத்தீர்த்தாய் சரணம் மேலோர்க்(கு)
ஒப்பாக அலதந்தன் தனக்க ளித்த
உமைபாக னேசரணம் கருவூர்ச் சித்தர்க்(கு)
இப்பால்நல் திறம்அளித்தாய் சரணம் கும்ப
முனிஇறைஞ்ச ஈந்தவா சரணம் போற்றி (58) 1329
அரியமா தவம்புரிந்த வேடமகட் குண்மை
ஆகியதோர் பொருள்ஆகி அன்பும் ஆகித்
தருதார கத்தைஉப தேசம் செய்தாய்
சானமன தம்போற்றும் தகைமை ஈந்தாய்
பிரியாத பதம்அளித்துக் காட்சி தந்த
பிஞ்ஞகனே சரணம்என்றும் பேசு நாதா
மருதம்மே வியவாணா சரணம் என்றே
வாழ்த்தினார் தோத்தரித்து வணங்கி னாரால். (59) 1330
பின்புமுனி வோர்எல்லாம் பேசு நாதன்
பீதமலர்த் தாள்போற்றிப் பிரிய மாட்டா(து)
இன்பம்உற விடைபெற்றுச் சூத ரோடும்
இத்தலத்தைப் போற்றியே விடைபெற் றேகிப்
பொன்புனையும் நைமிசா ரணியம் போந்தார்
பொருட்டினால் தெளிந்தஇந்தப் புகழைத் தானே
அன்புடனே உலகுளோர் துதித்து வாழ்க
அறைந்தஈ தறிவோர்க்கா னந்தம் ஆமே. (60) 1331
- தாரக உபதேசப் படலம் முற்றும்
16. வீரமார்த்தாண்டப் படலம்
தாரணி மருதில் யோகா தியர்கட்குத் தார கத்தைத்
தார்அணி கொன்றை அண்ணல் சாற்றிய திது மேல்இன்பம்
தார்அணி தனத்தாள் பாகன் வீரமார்த் தாண்டன் என்னும்
தாரணி வேந்தன் தன்னைப் பணிகொண்ட தன்மை சொல்வாம். (1) 1332
தசரதன் ஈன்ற பாலன் திறல்அரி இராம தேவன்
அசைவிலா அயோத்தி நீங்கி அணங்குடன் வனங்கள் எய்தி
நசைதரும் இளவ லோடும் நண்ணிநாள் கழிக்கும் காலை
வசதிகொள் பொதிகைத் தென்பால்வயிரமா மலையில் எய்தா, (2) 1333
விலங்கலின் வனப்பும் மேலை விண்ணவர் முனிவர் வாழும்
தலங்களும் காவும் தீர்த்த தடங்களும் சனகி யோடும்
பொலன்தரு குவடும் கண்டு பொருந்துசா மளவன் ஈன்ற
நலந்தரு கங்கை கொண்ட கோமதி நதியில் ஆடி, (3) 1334
இரணமா முனிவன் வேண்ட ஈசன்முன் கங்கை ஈந்தான்
தரணியாம் வயிர வேந்தன் தான்அந்த நதியை வேண்டிச்
சரண்என முனியைப் போற்றத் தந்தனன் பாரி யாக
வரநதி வயிர யாறாய் வந்திடு நதியும் கண்டு, (4) 1335
வதியும்நாள் அங்ஙன் ஒன்று நடந்திடும் வரவு சொல்வாம்
விதியினை யாவ ராலும் வெல்லுதற் கரிதே யார்க்கும்
மதியினால் கடத்தல் கூடா மற்றவை புசித்தல் வேண்டும்
எதியெனு மான தாலே இவ்விடை இவ்வ னத்தில், (5) 1336
மாதினை இளவல் காப்பாய் வைத்துமால் பிரிந்த போது
பேதையை இளவல் தானே பிரிந்திடா தருகில் உற்ற
போதுகள் கொய்வான் நின்ற பொழுதில்ஓர் அரக்கி வந்து
சீதையை உற்றாள் அங்ஙன் நடந்திடும் செய்கை சொல்வாம். (6) 1337
அன்னவள் அரக்கர்க் கெல்லாம் அரசிரா வணன்பின் வந்தாள்
தன்நிகர் பூட ணன்முன் தகுகும்ப கருணன் சூர்ப்ப
மின்னகை துணைவ ரோடு மேம்படு தவங்கள் செய்தே
முன்னவன் கொடுக்க வேண்டும் வரங்களும் பெற்றோன் முற்ற. (7) 1338
இலங்கையில் இறைமை கொண்ட இராவணன் இமையோர் தங்கள்
குலங்களுக் கேதம் செய்யும் கொடியகோல் உடையோன் தங்கை
நலம்தரு திருவை வவ்வ நாடியே இளவல் தோன்றி
வலம்தரும் அரக்கி போலும் வந்ததிங் கபாயம் என்று, (8) 1339
மனதினில் கொண்டு கையால் மயிரினை ஈர்த்துப் பற்றி
முனையவாள் கொண்டு மூக்கை முலையினைச் செகுத்தான் முன்னோன்
தனைஉறக் காதல் கொண்டு சார்ந்தசூர்ப் பனைஎ ழுந்து
வினைதரு வீரம் கூறி ஏகினாள் விளைவு சொல்வாம். (9) 1340
கரன்திரி சிரன்பால் எய்திக் கரைந்தனள் அவரும் மேவிச்
சரந்தனால் இறந்தார் சூர்ப்ப நகைஇரா வணன்பால் சார்ந்து
வருந்தினாள் புரண்டு வீழ மன்னனும் அவமா னம்கண்(டு)
உரந்தனில் நடுக்கு றாதே செய்தவர் உளர்யார் என்னா, (10) 1341
பார்த்தனன் அழுகை மாற்றிப் படைகளை எழுப்ப நோக்கி
வேர்த்தனன் செயிர்த்தான் இந்த விளைவினைக் கேட்க அந்தச்
சூர்த்தனி அணங்கு சொல்வாள் தொடுகடல் அமுதால் செய்த
கார்க்குழல் அணங்கொன் றங்கே கண்டனன் கருத்தில் நேர்ந்தே. (11) 1342
உன்றனக் காகும் என்றே அவட்கொடு வரவே உன்னிச்
சென்றனன் அவள்தன் கேள்வற் கிளையவன் செயிர்த்து மேவிக்
கன்றிஇச் செயல்வி ளைத்தார் கரன்திரி சிரனைக் கோத்தார்
வென்றிவே லோய்என் றாள்பின் விளைவது கருதா வீரன், (12) 1343
அருகரை நோக்கி மாரீ சன்தனை அழைமின் என்னத்
தருதலும் அவன்பால் உற்றுச் சாற்றுவான் தங்கை வந்தே
உரைதரு செயலும் அன்னாட் குற்றதோர் உவமை இல்லாப்
பெரிதவ மானம் ஆன துயரமும் பிதற்றிப் பின்னும், (13) 1344
உனக்கும்இம் மானம் உண்டேல் அவ்வரை எய்தி உற்று
வனத்திவட் கிடர்செய் தாரை மாய்த்தவண் இருந்த தெய்வ
நனைப்பது மினியைக் கொண்டு நண்ணுவோம் என்றான் நின்ற
சினத்தவேல் மாரீ சன்தான் செப்புவான் உள்ள செய்தி, (14) 1345
இருபது புயப லத்தோய் இசைக்கின்ற வார்த்தை முற்றும்
துருவிட வேண்டும் அங்கே சொற்றவன் மாந்தர் அன்று
பெருவிறல் இரணி யற்காய் பெரியமால் போலும் அன்னாள்
மரைமலர்த் திருவே யாதாய் முடியுமோ வலிதாய்ப் பின்னும், (15) 1346
ரகுகுலத் துதித்தோன் ஆழிக் கரத்தினான் சனகன் செல்வ
மகள்தனை மணந்தோன் தாயர் வஞ்சனை வலத்தி னாலே
அகிலம்அ தகன்று கானில் அனையர்மூ வரும்போய் ஆறும்
சிகரியும் முரம்பும் கானும் திரிந்தனர் அவரை எய்தி, (16) 1347
செயிர்த்திடல் கருமம் அல்ல திருவைச்சேர்ந் திடுதற் கெண்ணல்
வியப்பல வினைகள் முற்றும் என்றுபுந் திகள்வி ளம்ப
அயிற்படை அரக்கன் சீற அறிந்துடன் மாரீ சன்தான்
மயக்குறு துயரன் ஆகி வல்லைபோய் முடிப்போம் என்றான். (17) 1348
தான்நினைக் கின்ற தெய்த அரக்கனும் தறுகண் தானைச்
சேனைகள் சூழத் தேர்மேல் செல்லமா ரீசன் தானும்
மானினைப் பிடிக்கத் தான்ஓர் மான்என வடிவம் கொண்டு
கானினைக் கடந்து தென்பால் கல்வரை எய்தி அங்கண், (18) 1349
மரவுரி தரித்து மூன்றாம் ஒழுக்கினை ஆற்றும் மாயன்
விரதஆச் சிரமத் தோர்பால் உழையின்வெவ் வுருவு கொண்டான்
திருமகள் காண ஆடி நின்றனன் இதனைச் சென்று
தருகெனக் கணவற் கோதத் தலைவனும் சாற்று கின்றான். (19) 1350
பிணைஅல அசுர மாயை என்றனன் பின்னும் இந்த
இணைஇலா மான்போல் கண்ட தில்லைஎவ் விதம்ஆ னாலும்
குணமெலாம் மாயை உள்ளீர் கொடுவரத் தக்க தென்று
கணைசெறி சிலையி னாரைப் பணிந்துபின் கழறும் போதில், (20) 1351
திருவுளத் தெய்திச் சென்று பிடித்திட அகன்று சேய்த்தாய்ச்
சரம்என ஓடும் மீளும் தன்மையைக் கண்டு மாயை
வரவது என்று தேர்ந்து சரத்தினை விடுத்தான் மான்தான்
ஒருகுரல் இட்டான் கேட்க ஒலித்தது மாண்ட தங்கண், (21) 1352
சத்தம் என் றெய்தக் கேட்டாள் இளவற்குச் சாற்று கின்றாள்
மத்தவெங் களிற்றாற் கென்னோ துருவிவந் திடுவீர் என்ன
மெய்த்தனி இளவல் நீர்இத் தனியிடை மேவ ஏகேன்
அத்தனுக் கூறொன் றுண்டோ என்றனன் வெகுளி ஆனாள். (22) 1353
கண்ணனைப் பெற்றா ளேனும் கண்மல ரவள்ஆ னாலும்
பெண்மதி என்ப தெல்லாம் பேதைமை அன்றோ போலும்
நண்ணிலக் குமணன் தன்னை நசைஇலா துரைத்துப் பின்னும்
துண்ணெனச் செல்வாய் என்றாள் துயரினால் பிரிந்தான் பின்பு (23) 1354
இதுபொழு தற்றம் பார்த்தே இரவியின் நிழல்போல் நின்ற
விதிஇலா அரக்கன் தேர்மேல் மின்னைமின் சாலை யோடும்
மதியைவான் அமுதை நாகம் வவ்வுறு செயலே போலப்
பதியினில் கவர்ந்து சென்றான் களவுசெய் பரிசி னானே. (24) 1355
வேறு
சோரக் காடென்று சொல்லுவர் மேலையோர்
ஆர வேமிகு பட்டினம் ஆயினும்
பாரின் மீதப் பெயரே பரித்தது
சார்வு பெற்றிடும் சத்திய மாநகர். (25) 1356
அன்ன கானில் அருணம்வென் றோன்பின்பு
துன்னு தம்பியைக் கண்டு துயர்உற்றான்
பன்ன சாலையும் பங்கய மாதையும்
அன்ன வன்கவர்ந் தேகினன் அவ்வழி, (26) 1357
சென்று தேடித் திகைப்புற் றளவிலா
தொன்றும் இன்ன லுடன்அயர் வெய்தியே
துன்று போதில் புன்னாகப் பொதும்பர்சூழ்
கின்ற தங்ஙன் கிடைத்தனன் கேடிலான். (27) 1358
புரம்எ ரித்த புனைவன நாயகர்
இரவி என்ன இருந்த குறியினை
அரியும் தம்பியும் கண்டஞர் நீங்கியே
பரவி யேபணிந் தார்துதித் தார்அரோ, (28) 1359
கருணைநா யகனே போற்றி காரணா போற்றி இந்தத்
தருணம்நான் காணக் காட்சி தந்தருள் சதுரா போற்றி
அருணநாண் மலர்இட் டேத்தும் அடியவர்க் கமுதே போற்றி
வருணநீர் நஞ்சம் உண்ட வரதனே போற்றி போற்றி (29) 1360
சவலமாய் ஆற லைந்தே சாற்றிட முடியாத் துன்பக்
கவல்கொடு வந்தேன் சோகக் கடலினைக் கடத்திக் காப்பாய்
சிவபரஞ் சுடரே என்று சிந்திக்கும் போதில் அய்யன்
பவம்அற வாணி யாலே பாதுகாத் திடுவான் எங்கோன். (30) 1361
துயர்அகன் றிடுவீர் இந்தத் துன்பினைச் செய்தோன் தன்னை
செயமுடன் வென்று சீதை தன்னையும் சேர்வாய் என்று
நயமுடன் அருளிச் செய்தான் படியந்த நாய கன்தான்
செயமுடன் கிடைத்த தாலே சிறந்தவர் வரதர் என்றார். (31) 1362
இன்னநா யகன்இ ருக்கும் வனத்தைஇந் நகர மாக
மன்னவன் மருமான் வீர மார்த்தாண்ட வன்மன் என்போன்
தன்நிகர் தவத்தான் அன்பாம் புண்ணியத் தடத்தான் சீல
நன்னயன் முகில்போல் காக்கும் நளிர்மலர்க் கையி னானே. (32) 1363
உறுதிநூல் கற்ற மேலோன் உயர்சிவ ஞான சீலன்
கறுவகல் உண்மை யுள்ளான் அருள்பெறு கருத்து வாய்ந்தோன்
நறியபூந் தாரான் சோரா டவியில்நா யகற்கு வேண்டும்
திறமிகு பணிகள் செய்து திருவொடும் பொலியும் நாளில், (33) 1364
காசியில் ஏகி வானின் கங்கைநீ ராடல் வேண்டும்
நேசன்பால் விடைபெற் றேகி நெடும்புடை மருதில் உற்றான்
வாசவன் பரவும் திங்கள் வனைஇந்த்ர வரதன் தன்னைப்
பாசவல் வினைகள் தீரப் பரவிடும் பான்மை பூண்டான். (34) 1365
வேறு
பொருநை ஆடிப் புனற்கரை ஏறியே
தருமம் நல்கித் தனது கடன்முடித்(து)
அருள்நயந்து சங்கற்பித்(து) அனுக்கைபெற்(று)
ஒருமையாய் முத்தி மண்டபத்(து) உற்றனன். (35) 1366
வெற்றி யானை முகனை விதியினால்
பற்று பூசனை ஆற்றிப் பரவியே
சுற்று மாமதில் சூழ்ந்து சுரர்பணி
முற்றம் எய்தி முறையினால் பணிந்துபோய், (36) 1367
திருமுன் பெய்திச் சிவக்கொழுந் தீசனைப்
பரவும் போதில் பரமன் கிருபையும்
நிருபன் அன்பும் நிரம்பின போலுமா
வரனைப் போற்றிமெய் ஆனந்தம் ஆகியே, (37) 1368
தோத்திரம் செய்து சொல்அள வில்லதோர்
சீர்த்தி ஆகத் தயிலம் முதல்திகழ்
ஆத்த னுக்கபி டேகம் அருங்கலம்
சாத்து மாலைபட் டாடைசந் தங்களும், (38) 1369
அணிசெய் தனன்மு தற்பல ஆற்றியே
கணிதம் இல்உப சாரமும் செய்துகார்
மணிவி ளங்கு களனையும் மாதையும்
பணிவி னோடு பரவுதல் செய்கின்றான். (39) 1370
பத்தி வலையில் படுமணியே பரனே போற்றி பாகம்நின்ற
சத்தி உமைகோ மதிமேவும் சாய்ந்த நாதா போற்றிஉயர்
சித்தி தருவாய் போற்றிதென்பால் திகழும் காசி தனில்மேவும்
முத்தி தந்து பணித்தாள்வாய் போற்றி போற்றி முன்னவனே ! (40) 1371
விரைஆர் சாந்தம் விரும்பிஅணி விகிர்தா போற்றி விதிபரவும்
பரைகோ மதிபா கம்கலந்த பரனே போற்றி பாம்பினுடன்
திரைஆர் கங்கை புனைந்தசடைத் தேவே போற்றி சிறியேன்தன்
புரைசேர் பாவம் போக்குமரு தீசா போற்றி புண்ணியனே ! (41) 1372
வாசம் தொடர்ந்தார் இதழிபுனை மணியே போற்றி மருதில் உறை
ஈசா போற்றி மெய்சாய்ந்த இறைவா போற்றி ஏறுயர்த்த
நேசா போற்றி ஆவுடைய நிமலை பாகா சித்தனுக்காய்ப்
பேசு நாதா போற்றிபிறை அணியும் பெருமா னேபோற்றி ! (42) 1373
வேறு
போற்றிஎன மிகப்பரவிப் பணிந்தேத்திப் புறம்போந்தே
ஏற்றுடையோன் நகரில்இறை எய்தியே துயில் கொள்ளச்
சாற்றும்இர வினில்எங்கோன் தார்வேந்தன் துயில் உணர்ந்து
மாற்றம்இலாக் கனவில்எழுந் தருளியே வகுத்துரைப்பான். (43) 1374
மின்னுசடை முனிபோல முன்எய்தி விழைவினுடன்
மன்னகேள் காசிஇவை மலரோன்சோ தனைகண்டான்
இன்னதலம் மேருகிரி மந்தரம்எங் கோன்கயிலை
பொன்னுலக முதல்ஆகும் மகத்துவமுள் புவிதன்னில் (44) 1375
புடைமருதின் சிறப்பெல்லாம் புகலமுடி யாதேனும்
கடையுகத்தும் தெட்சணா காசியே முத்திபுரம்
விடையவன்தா ரகமனுவை விதிப்பன்இறு தியில்அறிவை
உடையவர்இத் தலம்நீங்கார் உண்மைஇது அன்றியே, (45) 1376
புவியில்இவை மோட்சபுரி புரவலவா எனஅழைத்துத்
தவயோகர் சாலைஇது சதவேள்வி யோன்போதன்
உவணம்உயர்த் தோன்முதலாய் உள்ளதே வர்கள் இவரால்
சிவமுதலாய் அறிவித்துச் சித்தம்எலாம் குடிகொள்ள, (46) 1377
காட்டிஅறி வித்தெங்கோன் கரந்தனனால் காவலனும்
நீட்டுபுள கிதம்உற்றுத் துயில்விழித்து நிருமலன்தாள்
நாட்டிமனத் தறிவித்த நன்மைநினைந்(து) இறும்பூதால்
வாட்டம்இலா அமைச்சர்க்கும் மற்றோர்க்கும் வகுத்துரைப்பான், (47) 1378
யாவர்களும் அதிசயித்தார் யாம்கண்ட நால்வகையாம்
மேவவரும் காட்சிஇனி மேதினியில் இவைபோல
மூவுலகத் தினும்இல்லை மூவர்க்குத் தெரியாத
தேவுலகம் இதுஎன்று சித்தம்மகிழ் சிறந்தனரால். (48) 1379
மிக்கபூ சனைஆற்றி வேண்டியே பணிந்தேத்திச்
செக்கர்வா னவன்கோயில் பணிசெய்து திருப்பணிக்கும்
தக்கபூ சனைவிழாத் தருமம்முதல் எவற்றினுக்கும்
திக்குநிகழ் வகைஇயற்றி ஒக்கலுடன் சிறந்திருந்தான். (49) 1380
தென்பால்கங் கையில்ஆடித் திரிவேணி பிரயாகை
பொன்பாயும் நதிசூழ்ந்த புடைமருதின் சிறப்பெல்லாம்
இன்பால்கண் டிவைகாசி தனில்அதிகம் என்பதனை
அன்பால்கண் டாதரித்தே அன்பருடன் அமர்ந்தங்ஙன், (50) 1381
பல்ஆண்டிப் படிஎய்தும் பருவத்தில் பார்வேந்தன்
வில்ஆண்ட சிலையானை மெய்சாய்ந்த விடையானைச்
சொல்ஆண்ட துதியாலே துதிசெய்து சோரவனத்
தில்ஆண்டு பரவிவரும் ஈசனையும் எண்ணினனால். (51) 1382
எண்ணும்மனத் தின்படியே இறையவனை வேண்டியே
அண்ணலே கருவூரான் அழைத்தருள மெய்சாய்ந்த
வண்ணமாய் இருந்ததனை வையகத்தோர் அறிந்தேத்த
நண்ணினீர் அவைபோலும் நாயேற்கும் நல்குவீர், (52) 1383
இக்கோலம் அத்தலத்தில் எய்திடவே அருள்செய்ய
முக்கணா வேண்டும்என நாள்தோறும் முயன்றேத்திப்
பக்கமாய் ஆலயத்தில் பஞ்சலிங்கம் சிறந்திடவே
முக்கியமாய்ப் பதிஇயற்றி மூர்த்திகளை வதிட்டித்தே, (53) 1384
சிறந்தபூ சனைஆற்றி ஆதிரைமண் டபம்செய்தே
உறைந்தநா ளினில்எங்கோன் ஒருகாலம் தெரிசனத்தில்
அறம்தவா மன்னாஉன் அரியநகர்க் கேகுதியால்
கறங்கிலா உளத்தின்வழி வருதும்நாம் கழறக்கேள், (54) 1385
(55 பாடல் கிடைக்கவில்லை )
சோரவனப் புரகரன்பால் துகள்இலாய் நீகாண
வாரமாய் இக்கோலம் வழங்குதும்யாம் வணங்குவாய்
ஆரநாம் சத்தியவா சகம்உரைத்தோம் ஆதலால்
பார்உளோர் உய்யநீ இப்பெயரே பரித்திடுவாய், (56) 1386
என்றிறைவன் அருள்செய்ய இறைவனும்எங் கோன்அருளை
நின்றுமனத் தினில்நேர்ந்தே நிறைஅன்பால் போற்றியே
கன்றும்ஆ வும்போலக் கசிந்துவிடை பெற்றகன்று
சென்றனனால் அவன்முன்பு சேர்ந்தனனால் தேவேசன். (57) 1387
மன்னவனும் அந்நகரில் மங்கலவாழ்த் துடன்ஏகிப்
பின்னகனைச் சென்றேத்தப் பேசுநா யகன்கோலம்
முன்அருளின் படிசாய்ந்த முதல்வனாய்க் காட்டுதலும்
தன்னைமறந் தானந்தம் தலைக்கொள்ளத் தார்வேந்தன், (58) 1388
ஆடினான் பாடினான் அற்புதனாய் அகம்மகிழ்ந்தான்
நீடினான் இறைஅன்பால் நித்தனுக்கா தரவுமிக
நாடுபூ சனைஆற்றி நாறும்பூ நாயகன்தாள்
சூடியே சத்தியவா கீசுரா எனத்துதித்தான். (59) 1389
சத்தியவாக் கின்வழியே சார்ந்ததால் சங்கரற்கு
நித்தியம் ஆ கியபெயராய் நிகழ்ந்ததால் நீடுலகில்
அத்தனைப்பூ சித்துவரம் அலகிலா தவர்பெற்றார்
உத்தமனுக் கானபணி செய்தனன்வேந் துரவோனே. (60) 1390
பின்புபல நாள்போற்றிப் பேரின்பம் உற்றனனால்
அன்புடைய வீரமார்த் தாண்டநிதி அரசானோன்
பொன்பதும மாதுவளர் புடைமருதீ சுரன்கீர்த்தி
என்சிறிய புந்தியால் இயம்பலாம் தகைமைத்தோ. (61) 1391
அன்புடைய அடியவர் தம்கருத்தின் வழி ஆற்றும்
இன்புடையார் அருள்தன்னை எவர் அறிவார் அறிவுடையார்
தன்புடையார் அவர் அடி என் தலைமீது தரித்திடுவேன்
பொன்புடைமா மருதீசர் புகழ்விளங்கப் பூவெல்லாம். (62) 1392
வாழ்க தெட்சண காசி வளம்பதி
தாழ்வி லாதபு டார்ச்சுனம் சார்ந்தருள்
சூழ்இ லேபன சுந்தரன் தொல்கதை
ஏழ்பெ ரும்புவி எங்கும் விளங்கவே. (63) 1393
- வீரமார்த்தாண்டப்படலம் முற்றும் -
17. தாம்பிரவன்னிப்படலம்
மங்கள கல்யா ணத்தின் மகிமையை மலயம் தன்னில்
செங்கையார் காட்டக் காணும் திருமுனி கரகம்உற்ற
நங்கைஆர் அணிநா தற்கு நல்கிய மாலை என்னும்
பொங்கிய கங்கை யான பொருநையின் வரவு ரைப்பாம். (1) 1394
ஆதியில் ஒருகா லத்தில் அளவிலா மகத்வம் எய்தும்
போதமா முனிவர் யாரும் பூமனை வணங்கி எங்கட்கு
ஆதரம் பெருக நல்கும் அசைவிலா அழிவற் றோங்கும்
மாதவம் புரியத் தக்க வனம்எங்கட் கருள்வாய் என்றார். (2) 1395
பூமனும் இசைந்து காசைப் புல்லினால் சக்க ரம்போல்
தாம்விட அதுசென் றெங்கே சார்ந்திடும் அவ்வ னம்தான்
நேமிசா ரணியம் ஆகும் நீங்கள்இச் சக்க ரம்சேர்
காமனும் இடத்தில் எய்தக் கருதிய நல்கும் என்றான், (3) 1396
மாதவர் யாரும் நேமி வதிந்திடும் வனத்தில்எய்திக்
கோதமர் முதலாய் உள்ளோர் இருந்தனர் குழுமி அங்கண்
வேதகா ரணராய் உள்ள விழுமியர் ஐவர்வந்தார்
ஓதிடில் தலைமைபெற்ற சவுநகர் இடத்து தித்தோர் (4) 1397
வாதரா யணர்பால் கற்ற சாமந்தமுனிவர் வாய்ந்த
வேதம்நான் கினையும்கற்ற வைசம்பா யனர்வி ளங்கும்
பேதம்இல் சயில வாசர் சுமந்துமா முனிபின் வந்த
நேசமாம் சூத ரோடும் ஐவரும் நிலவு கின்றார். (5) 1398
காசிபர் மகதி யோகர் கர்க்கர்கண் ணுவர்வ சிட்டர்
பேசிய இவர்க ளோடும் பெட்புடன் உவந்த போதில்
ஆசிலா வெதிரி காராச் சிரமத்தோர் அணைந்தோர் அங்ஙன்
கூசிநின் றெதிர்கொண் டேத்திக் குணமுடன் முகமன் கூறி (6) 1399
அவருடன் எய்திச் சூதர் அடிபணிந் தரிய தீர்த்தம்
இவண்என உரைக்க வேண்டும் எனப்பர விடஇ யம்பும்
புவனியில் கங்கை தென்பால் பொதிகையே பூத நாதன்
பவனது முடியில் போந்த தாம்பிர பன்னியாகும் (7) 1400
அந்நதி மகிமை தன்னை உரைத்திடற் கரிய தாகும்
முன்எமக் குரைத்த ஆசான் மொழிவழி மொழியல் உற்றாம்
தன்னிக ரருமை தேர்வாய்ச் சார்ந்திடும் தக்கன் ஓர்கால்
துன்மகம் செய்தான் காணத் தோகையும் நினைந்து நாதன் (8) 1401
தன்னடி பணிந்து யாகம் சார்ந்தனள் தையல் தன்னை
மன்னவன் நோக்கல் இன்றி வரதனை அன்றி மற்றோர்
இன்னயா கத்தி னுக்கே இறைஎன உணர்ந்து செய்தான்
அன்னதைக் கண்டு தேவி அவ்விடம் அகன்றாள் போந்தாள் (9) 1402
நிந்தனை புகன்ற தெல்லாம் நிமலன்பால் நிகழ்த்த நீல
கந்தரன் மனதில் கண்டு வீரபத் திரனைச் சென்று
அந்தவெந் தழலை அங்கே அமைந்தவர்க் கமையும் தண்டம்
சிந்திடச் சிதைத்து மீள்வாய் என்னஅச் செல்வன் எய்தி (10) 1403
அழித்துமீண் டனனால் அந்த அறிவிலாத் தக்கன் ஈன்ற
மழைக்குழல் என்ற பேரை மாற்றிட வேண்டி எங்கோன்
தழைத்திடும் அமையம் நோக்கிச் சாற்றினாள் அதற்கி சைந்து
கழைக்கையாய் இமய ராசன் தவம்மகக் கருதிச் செய்தான் (11) 1404
அவற்குநீ மகவ தாக அவதரித் திடுவாய் அன்னோன்
உவப்பநீ வளரும் எல்லை உன்னைநாம் வேட்ப தற்கே
தவத்தினைப் புரிவாய் அந்தப் படிமணம் தகவிற் செய்து
பவப்பெயர் தனைம றைப்போம் என்னவே பகர்ந்தான் எங்கோன் (12) 1405
திருவுளப் படியே தேவி இமயவன் செல்வி யாக
உருவுகொ டெய்தி மேனை உதவிய முலைப்பால் உண்டு
வருமதிப் பிறைஒப் பாக வளரும்நாள் பரன்பால் அன்பு
பெருகிடத் தவமேற் செல்லும் பேதைதன் கருத்தை நோக்கா (13) 1406
மன்னன்அவ் வரையில் சாலை வகுத்திட வனிதை எய்திப்
பன்னரும் தவங்கள் செய்தாள் பரமன்அங் கெழுந்து காட்சி
மின்னிடைக் கருளிப் பின்பு வேள்விமண் டபம்செய் வேந்தன்
பொன்னணி இமயக் கோயில் போதுவான் போதில் அங்ஙன் (14) 1407
இறைதரும் இலக்கம் எண்பான் நான்குயிர் அடங்கும் ஈரேழ்
பொறையினிற் கலையைப் பூதம் காலங்கள் பூமன் மாயன்
கறைஅணி கண்டன் புத்தேள் காக்கும்ஓர் அண்டம் இவ்வா(று)
அறைதரு பலவாம் அண்டத் தனைவரும் இமயத் தானார் (15) 1408
அவ்வரை இவரை எல்லாம் பொறுத்திட அமையும் என்னில்
தெவ்வரைப் பொடித்த நாதன் திருவிளை யாடல்செய்வான்
இவ்வரை தாங்கி டாது சாய்வ போல் இயற்ற யாரும்
கவ்வைகொள் மனத்தர் ஆனார் கடவுளர் யாரும் எய்தி (16) 1409
வேறு
நமை ஆள் உடைய நாயகன்பால் நண்ணி இந்த நல்புவனம்
சமையா கிடச்செய் தருள்வேண்டும் என்று சரணம் பணிந்திடவே
இமையோர்க் கிரங்கி இத்திருநாட் கெய்தும் கும்பமுனிவனைப் பார்த்(து)
உமைபால் மணக்கோ லம்காண்பாய் பொதிகைக் கேகென் றுரைத்தனரால் (17) 1410
பின்னும் உரைப்பான் தேவிதவப் பெருமை நோக்கி முத்தாரம்
தன்னை ஈந்தோம் பரைஎம்பால் தரித்த கஞ்சத் தார்இதுவாம்
முன்னில் இவைதாம் பிரவேணித் தீர்த்தம் முனியே எனஈந்தான்
மன்னு கடத்தில் தரித்தவனைந் திடுபோ தெல்லாம் வான்நதியாய் (18) 1411
வரும்என் றுரைத்தே ஈந்ததொடை வாங்கி வரதன் அருள்படியே
விரதக் கடத்தி லேதாங்கி வேள்விக் கோலம் தென்வரையில்
தருவோம் என்ற படிநினைந்தே சார்ந்த தமது பன்னியுடன்
கருதிப் பொதியா சலம்எய்த எழுந்தான் கருணை முனிவரனே (19) 1412
துங்க பத்ரி கேதாரம் தோன்றும் ஏமகூ டம்கடந்து
கங்கை படிந்து வாரணாசி கயைக லந்து காந்தாரப்
பொங்கு கிரிபோந் தரவிந்தப் பூமான் உறையும் திருச்சயிலம்
அங்கண் அகன்று வில்வலன்வா தாவி விந்த மதம் அடக்கி (20) 1413
காஞ்சி கழுக்குன் றம்கன்னம் திருக்கா ளத்தி வீரட்டம்
வாஞ்சி திருஅம் பலம்ஆரூர் மன்னு சைய வரைஎய்தி
பூஞ்சோ லைக்கிந் திரன்வேண்ட பொன்னி நதியும் உண்டாக்கி
மாஞ்சோ லைகள்சூழ் பள்ளிமலை மதுரை பரங்குன் றினைவணங்கி (21) 1414
கருவை திரிகூ டம்பணிந்து கலைக்கோட் டுவன்பூ சித்ததலம்
மருவும் சயிலம் பணிந்தேத்தி மலையார் சாரல் முக்காவைப்
பரவிப் புருடன் பூசித்த பரனைப் பணிந்து பாங்கான
அருவி கொழிக்கும் முத்தலைசூழ் ஆர மலையை அடைந்தனனால் (22) 1415
பொதிகை தன்னில் முனிவர்குழாத் துடனே மணக்கோ லம்போற்றி
மதிமத் ததர்ஈந் திடக்கொணர்ந்த வனசத் தாரை மலயம்அதில்
நதியாய்ப் பெருகிப் போற்றி செய நம்பன் முடியே நாகமுடி
அதனில் பெருகி அறல்பொங்கி அருவி யாக ஆர்த்ததுவே (23) 1416
நஞ்ச ணிந்த கண்டரன் றுரைத்த நாக எல்லைதான்
அஞ்சு யோச னைப்பரப்ப தகன்ற நாப்பண் ஓர்கிரி
விஞ்சி டாத சாய்கை மேவும் வெஞ்சு டர்க்க ரந்தொடா
தஞ்சியே ஒதுங்கும் உச்சி ஆர நீழல் அங்ஙனே (24) 1417
விசுவனால் விதித்தசாலை மேவும் யோகி வெற்புறும்
உசிதம் ஆன நதியைநீ உவர்ச்செ றிந்த ஓதநீர்
வசைஅறச்செல் வாயுகத்தர் வான்உ ளோர்ப டிந்திட
விசையை எய்தி அவர்பவங்கள் ஏக வுஞ்செய் வையென (25) 1418
என்று ரைத்த வாச கத்தெ ழுந்தவேணி இருவிசும்
பொன்றிஎங்கும் மருவிஓடும் அருவிஓடும் உவரிபோல்
மன்ற லந்த ருப்பறித்து மலயம்ஊடு வழிகொடு
சென்றலம்பி டும்த ரங்கம் முத்தொ டும்சி றந்ததே (26) 1419
அறல்இ யங்கு மலர்கள் ஓதி அம்பகம்த ரும்கயல்
பிறழ முத்த ரும்பு மூரல் பெய்வளைத்த ரங்கமே
உறழ்க ரங்கள் குமிழி ஆரம் ஓங்குகங்கை நுரைஎனும்
நிறையு மேக லம்பு னைந்த வரந திப்பெண் நிலவுமால் (27) 1420
ஈசன்முன்அ ளித்திடும்ப டிக்கிந் நீர்செ லுங்கரை
வாசம்ஆன தலம்அனந்தம் அதனில் வாதராயணன்
பேசு தானம் அறுப தோடி ரண்டி ரட்டி பின்னல்நீர்த்
தூசின் மல்கு பதிஎ லாம்து தித்திடத் தொடங்கியே (28) 1421
ஓரைகொண் டெழுந்தபேரி யுடன்எ ழுந்த முனிவரன்
சார எய்த முன்உ ரைத்த சங்க ரேசர் தானமே
ஆர மாம லைக்கணே அனந்தம் உண்ட தன்கணே
நீர்பு னைந்த பொதிகை நாதர் பத்திரேசர் நிலவுமால் (29) 1422
வேறு
முன்னவன் தீர்த்தம் முனிகட தீர்த்தம்
மூலநா யகர்கயி லேசர்
மன்னிய பொதிகை மாதவன் தீர்த்தம்
மானத தீர்த்தம்வான் உள்ளோர்
பன்மலர் பொழியும் பயிரவி தீர்த்தம்
பால்மழை நிலவிய தீர்த்தம்
சின்மய தீர்த்தம் வரப்பிர காசர்
செந்திரு வார்படி தீர்த்தம் (30) 1423
சிலையுடன் அம்பு சேர்ந்திடும் தீர்த்தம்
சிவன்உருச் சிலைகொளும் படியே
தலைவன்நல் வரங்கள் பெற்றிடும் வாணன்
தன்பெயர் தீர்த்தம் அவ் விலிங்கம்
அலைபொரும் விராட்டு மாரிஷி தீர்த்தம்
அங்ஙனம் பரசுரு அடுக்கல்
கலைமகள் ஆறு காளிந்தி ஆறு
கலந்தமுக் கூடலாம் கங்கை (31) 1424
நிலைதரு கின்ற பாண்டவ தீர்த்தம்
நிலவிய இருநதி கூடு
மலையில்முக் கூடல் பரதர்வான் மீகர்
வாருண நதிஅதன் கீழ்பால்
பலர்புகழ் கின்ற கேசவ நாதர்
பாங்கினில் கேசவ தீர்த்தம்
கலைதரும் ஊர்திக் காரிதன் தீர்த்தம்
காதலித் தனதரும் கமலம் (32) 1425
கன்னியர் தீர்த்தம் காசிப தீர்த்தம்
கங்கைவந் தாடிய தீர்த்தம்
மன்னிய துர்க்கா தீர்த்தம்மேல் தடக்கீழ்
வருநதி மலைமக ளுடனே
பன்னகா பரணன் தருமணக் கோலம்
முனிவரன் பரவிய தீர்த்தம்
துன்னுகல் யாண நாயகர் தம்கீழ்
சுயம்பிர காசநல் தீர்த்தம் (33) 1426
சக்கர தீர்த்தம் சாயம்பு தீர்த்தம்
தழைத்தமுன் பாபவி நாசம்
முக்களா வனத்தில் முளைத்தமா இலிங்கம்
உண்டிந்த மூர்த்திசந் நிதியில்
சுக்கில தீர்த்தம் வணிகன்செய் பாவம்
தொலைந்திட ஆக்குவ திறம்எண்
திக்கிலும் ஆடத் தீர்கிலா திந்தத்
தீர்த்தத்தில் தீர்ந்திடும் இயல்பால் (34) 1427
பாவவி நாச தீர்த்தம்அவ் வணிகன்
பதம்பெறு தீர்த்தத்தின் வடபால்
மூவுல கோரும் படிந்திடு சாலா
தீர்த்தம்முக் கூடலாம் தீர்த்தம்
தேவர்கள் தேவன் நாவில்வாழ் தீர்த்தம்
திகழ்தரும் உரோமச தீர்த்தம்
தாவிலா விசுவ நாயகன் அங்கே
தழைத்திடும் சனகமா தீர்த்தம் (35) 1428
பொருவிலாக் கங்கை பொங்கிய தீர்த்தம்
போகவ தீர்த்தத்தின் கீழ்பால்
வருதிரு மூல லிங்கம்உண் டிப்பால்
வளர்திரு மூலதீர்த் தத்தின்
அருகினில் தீப தீர்த்தத்தின் கீழ்பால்
அரும்புழு மாறிய தீர்த்தம்
மரகதம் மேவும் காசிப நாதர்
தீர்த்தமே வடகயி லேசர் (36) 1429
கண்ணுவ தீர்த்தம் கோமதி மேவும்
கண்ணுவ நாயகர் இப்பால்
எண்ணிய நல்கும் பூரண யாறு
இயன்றபா லாறுசிந் தாறு
தண்ணதி நாக நதிகலி யாறு
சாவியா றுடன்சர நதியே
மண்ணதி கோரை யாறுடன் மணிமுத்
தாறுவா ருணநதி யாக (37) 1430
இந்நதி எல்லாம் தாம்பிர வேணிக்
கிணைஇலாச் சேடியர் இதன்கீழ்
மன்னுசக் கரமே வலஞ்சுழி மேல்பால்
கோடிநா யகர்அவண் வதியும்
சின்மய தீர்த்தம் ஆனந்த நாதர்
செப்பிடும் அங்ஙனம் வடபால்
தன்நிகர் ஆகும் மங்கள நாதர்
மங்கல தீர்த்தத்தின் சார்மே (38) 1431
எல்கை தென்பால் காசிஅதன் எல்கை தென்பால் கெசமோட்சம்
சொல்லும் மூன்றீ சுரதீர்த்தம் மூன்றீ சுரர்தென் புத்தீசர்
வில்லி நாதர் இதன்கீழ்பால் விடைஆர் கும்ப முனிதீர்த்தம்
நல்ல முனிவோர் பணிதீர்த்தம் கடனா நதிசங் கமதீர்த்தம் (39) 1432
இதற்கு வடபால் சந்நிதியில் இந்திர மோட்ச தீர்த்தம்இவை
கதிக்க அழியா மதிலாடக் கடவு ளோர்க்கும் எண்பதுடன்
விதித்த நான்கு கிறுச்சனத்தின் பலனை நல்கும் வேதமுடன்
மதிக்கொம் புடைய கெசமுகனும் வானோர் கோவும் அவண்வதியும் (40) 1433
நாறம் பூநா யகர் அங்கண் நதியின் பாங்கர் ஆலயம்கொண்
டீறில் செல்வம் அளித்தருளும் இந்தப் பதிதென் பால்காசி
மாறில் மந்தா கினித்தீர்த்தம் மறையோன் கொண்ட சோதனையால்
பேறு தரும்தண் டாதீர்த்தம் பின்னும் சித்த தீர்த்தம்அரோ (41) 1434
அதன்கீழ்ப் பரம தீர்த்தமுடன் ஞான தீர்த்தம் புறமதம்தீர்
நிதமாம் சைவ தீர்த்தம்இவை நெடியோன் தீர்த்தம் முதலாக
நதிஉத் தரவா கினிஎல்கை நாற்ப துடனை நதித்தீர்த்தம்
விதிநா யகர்க பாலீசர் கடுக்கை நாதர் வேதீசர் (42) 1435
இடப தீர்த்தம் இடபேசர் பூவ ணேசர் புட்பவனம்
சுடரோன் தீர்த்தம் அருணேசர் சொல்லும் அதன்பால் எழுதீர்த்தம்
கடக தீர்த்தம் பூமிசார் அரிகை நாதர் கறைக்கண்டர்
வடபால் அரிஅர்ச் சனைநாதர் வன்னி ஈசர் வயித்தீசர் (43) 1436
வடபால் சத்தீ சுரர்திரிபு ராந்த கேசர் வயிரேசர்
குடபால் வளரும் மணிக்கிரீசர் ஆத்தி நாதர் கும்பீசர்
விடையார் தீர்த்தம் ஈரைந்தா மேவு கயிலை நாயகரே
தடம்ஆர் கின்ற சயிலேசர் தென்பால் சயில தீர்த்தம்அரோ (44) 1437
சோம நாதர் அத்தீர்த்தம் சுதின விதிபா தப்பிரியர்
தாம்மே வியதீர்த் தம்சகல பாவம் போக்கும் சத்திபுரி
வாமை தொழும்உ ரோமேசர் மேக நாதர் மதிநாதர்
கோம தீசர் கும்பீசர் கோட கேச ரத்தீர்த்தம் (45) 1438
காமே வியதென் வில்வவனர் சவுந்த ரேசர் கடனாத
மாமே வியஇ ராமீசர் காளத் தீசர் மார்க்கண்டர்
சோம நாதர் சொக்கேசர் சோதி வனத்தில் சோதீசர்
பூமே வியவங் குண்டீசர் மேகநாதர் புவனேசர் (46) 1439
அப்பு லிங்கர் அமுதீசர் கயிலை நாதர் அகிலேசர்
செப்பு சஞ்சீ வினிதீர்த்தம் திருமூ லேசர் செகநாதர்
முப்பார் போற்றும் முனிநாதர் முகில்சேர் வேங்க டாசலரே
அப்பால் சாம ளாநதியந் தியசங் கமத்தி மந்த்ரேசர் (47) 1440
அக்கி னீசர் வடதளியார் அமலர்சிந்து பூந்துறையில்
முக்கண் உடையார் சத்தபுரி முனிவர் போற்றும் மூலநதி
மிக்க தீர்த்த மூலேசர் வேய்முத் தீசர் பாதாள
தக்க கங்கை தனில்என்பு தான்பூ ஆன தன்மையினால் (48) 1441
முத்தி தீர்த்தம் கோடீசர் அகிலாண் டீசர் முருகேசர்
சத்தி தீர்த்தம் சத்தமுனி சடாயு தீர்த்தம் சடையுடையார்
அத்தர் நடனம் தருதீர்த்தம் அருண நாதர் அகத்தீசர்
நித்திய மான உருத்ரேசர் உருத்ர பந்த நெறிதீர்த்தம் (49) 1442
சித்தி தீர்த்தம் சத்ததலம் திரிபு ராந்த கேசுரரே
பத்தர் சூலை தீர்த்தருளும் பரம தீர்த்தம் பால்வண்ணர்
அத்தி முகவன் அருள்தீர்த்தம் அண்டா பரணர் அகத்தீசர்
சுத்த கங்கை படிதீர்த்தம் சொக்க நாதர் சோதீசர் (50) 1443
கேசவ தீர்த்தம் கெந்திரு தீர்த்தம்
கெருட தீர்த்தம் கிளர்நந்தி
வாசவ தீர்த்தம் மங்கள நாதர்
வருண நாயகர் வழுதீசர்
பாசுருப், பகவன் பரவிய கயிலைப்
பரனுடன் காரி நாயகனே
ஆசிலா நதியில் அமரும்நா கீசர்
ஆனந்தர் வீரபாண்டீசர் (51) 1444
வேறு
முந்தை முதலைக் கருள்தீர்த்தம்
மூன்றீ சுரமே முக்கூடல்
எந்தை கயிலைக் கிறைதீர்த்தம்
குசையார் வனத்தில் ஏறுடையார்
வந்த மூலர் சித்தேசர்
வழுதி நாதர் கயிலேசர்
உந்தி மீதில் வீரேசர்
உக்கி ரேசர் ருத்திரேசர் (52) 1445
அதற்கப் பால்தென் பாண்டீசர்
சொக்க நாதர் அருள்தீர்த்தம்
உதிக்கும் உக்ர பாண்டீசர்
வரகு ணேசர் உமைதீர்த்தம்
நதித்தண் துறைசார் வைகுந்தை
நாதர் கயிலை நாயகரே
நிதிக்கோன் பரவும் அளகேசர்
நீலகண்டர் சிவதீர்த்தம் (53) 1446
சங்கர தீர்த்தம் காந்தீசர் தரும தீர்த்தம் தருமேசர்
மங்கல மேனி ஆதீசர் வளரும் தீர்த்தம் பதினைந்தாம்
பொங்கு நவலிங் கப்பதிகள் புவன தீர்த்தம் புவனேசர்
பங்க யாச னன்தீர்த்தம் பரவு மனவத் தமர்நதியே (54) 1447
சத்த தீர்த்தம் கயிலேசர் தழங்கு கங்கை பொழிதீர்த்தம்
மத்தர் காசி நாயகரே அத்தி ரீசர் அகிலேசர்
மத்த யானை பூசித்த வார ணேசர் மதிநாதர்
நத்தார் தீர்த்தம் சுந்தரரே விசுவ நாதர் நாகீசர் (55) 1448
பூமான் தீர்த்தம் சரசநதி புவனதீர்த்தம் புவனேசர்
கோமான் வாயு லிங்கேசர் குலசே கரர்கோ மளதீர்த்தம்
வாம னேசர் வன்னீசர் வருண தீர்த்தம் வருணேசர்
சோம லிங்கர் மதிதீர்த்தம் சுக்கி லேச ரத்தீர்த்தம் (56) 1449
நார சிங்க ரத்தீர்த்தம் நன்மை கொடுக்கும் நவைநீக்கும்
வாரி தீர்த்தம் சங்கமத்தில் வருண தீர்த்தம் வருணேசர்
சூர்சாய்த் திட்ட வடிவேலர் சுலவும் வதனா ரம்ப முதல்
ஆரோ டிதழி அணிந்தருளும் அமல தீர்த்தம் அளவிலரோ (57) 1450
இவைஎ லாம்தென் குறுமுனிவன் படிந்தே போற்றி ஏறுயர்த்தோன்
சிவையோ டிருந்த தானங்கள் யாவும் பரவித் திரும்பிவரும்
புவனம் தனிலும் சேயுள்ள பூத நாதன் பதிபோற்றி
உவமை இல்லா மலயம்அதில் உற்றான் பதிமுக் கியம் உரைப்பாம் (58) 1451
மூலம் ஏழும் முனிஏழும் மொய்த்த கயிலே சுரர்ஒன்பான்
சீல முனிவோர் பதிஏழோ டைந்து தேவேந் திரன்போற்றும்
நீல கண்டர் பதிஏழு நீடும் சுடர்கள் ஈரந்தாம்
பாலர் போற்றல் பனிரண்டாம் பதிகள் அறுபான் ஒருநான்கே (59) 1452
வடபால் கங்கை தென்பாலில் தாம்பிர வேணி மற்றும் உள
தடமா நதிகள் அவைகூடும் சலதி தீர்த்தம் தனக்கொப்பாய
இடுமா தீர்த்தம் வேறில்லை உலகில் என்றே இசைத்துப்பின்
கடமா நதிச்சங் கமதீர்த்தம் கருதப் படியக் காசினியில் (60) 1453
வேறொன் றில்லை இதுபோலும் விளம்பில் மகத்வம் மேலான
பேறு கொடுக்கும் பொருனைநதி வந்து பலனைத் தந்திடுமால்
கூறும் அடியார் மேனியினில் குறைகள் போக்கிப் புண்ணியமாம்
நீறு புனைந்தோர் முடிக்கணியாம் தீர்த்த மகிமை நிகழ்த்துவாம் (61) 1454
வேறு
இறைஞ்சியே படிவோர் இருவினைப் பவமாம்
கடலினைக் கடப்பவர்க் கிந்த
அறந்தரு நதியே ஓடமாம் மற்ற
அவனிவாழ் தீர்த்தமாம் படைக்குச்
சிறந்திடும் தலைமை பெற்றிடும் பொருநைத்
தீர்த்தத்தின் இயற்பெயர் செப்ப
நிறந்தரு தாம்ப்ர பன்னிமா லேயி
நிடகலை உருத்திர கலையே (62) 1455
அகன்மிசை தன்மாத் திரைமருத் துவதி
யாம்பிற பதிமணி மாதர்ப்
பகவதி அமிர்த ரூபிஆ னந்தி
பராபரை மங்களா லையையே
திகழ்மகோ தயையே முத்திமுத் திரையே
திரிபத கான்மிகை பொருநை
தகைமைசேர் மாலா ரூபினி பிரம
நாதையே தாபநா சினியே (63) 1456
திரைதரு கருணா சினிநரா யணியே
திவ்வியப் பொருந்தம்என் றின்ன
உரைதரும் இருபத் தாறெனத் தவத்தால்
உமையவள் கணவனுக் குதவும்
அருமைய வான தாம்பிர நிறத்த
அரவிந்த மாலைஎன் றுரைக்கும்
பொருநையின் நாமம் புகன்றிட வல்லார்
புண்ணியன் பதம்பொருந் துவரே (64) 1457
வருணனும் ஒருகால் கயிலையை அடைந்து
மாதொரு பாகனை வாழ்த்தித்
தருணநா யகனே பூதலம் அதனில்
சகலபா வங்களும் போக்கிக்
கருதிய நல்கும் தீர்த்தஉத் தமங்கள்
இவைஎனக் கருணைசெய் தடியேற்
கருள்தர வேண்டும் என்றலும் எங்கோன்
ஆழிநா யகற்கிவை புகல்வான் (65) 1458
கோமகன் வேண்ட நமதுயர் வேணிக்
கொண்டலை அளித்தனம் அன்றிச்
சோமன்வங் கிசத்தில் வருபகீ ரதன்செய்
சொலற்கருந் தவத்தினால் சூடும்
தேமொழி மந்தா கினிதனை அளித்தோம்
தென்பொதி யாசலம் செல்லும்
மாமுனி வேண்டப் பின்னும்அந் நீரை
மாலிகை எனவழங் கினமால் (66) 1459
சிரகநீர் அதனை வரநதி யாகத்
தெய்வலோ கத்தினுக் கிறையோன்
விரைமலர் வனத்தில் பெருகுதல் வேண்ட
வேழமா முகத்தவன் காக
உருவதாய்ச் சென்று கரகநீர் கவிழ்த்தான்
உதுவரும் காவிரித் தென்பால்
பொருநையாய் முனிவன் தருகமண் டலநீர்
போந்ததென் றுரைத்தனன் பின்னும் (67) 1460
இம்பருள் அதிகம் பொருநையே எமது
வேணியில் இழிந்தவை அதனால்
தம்பிரான் வேணித் தீர்த்தமே தாம்பிர
வேணியாய்ச் சாற்றுவர் சாற்றல்
அம்புவி தனிலே இடவகை செய்யுள்
வழியினால் அமைப்பதும் அன்றிச்
செம்புநேர் ஒக்கும் செயலினால் பின்னும்
செப்புவர் என்றுசெப் பினனால் (68) 1461
வணங்கியே கேட்ட வருணனும் இசைந்து
மாமுனிக் கரகத்தால் வந்த
அணங்கெனும் பொருநை அன்னையை வேண்டி
ஆடியே யாகம்ஒன் றியற்றிக்
குணம்குறி கடந்த பூவணே சுரன்தன்
குரைகழல் வணங்கியே வேண்டும்
இணங்கிய வரமும் பெற்றனன் புட்ப
வனத்திடை எய்திஅங் கிருந்தான் (69) 1462
பூறுவம் சென்ற வாகினி ஆடும்
புண்ணியம் தனில்பதின் மடங்காம்
கூறும்உத் தரவா கினிதனில் ஆடக்
கூடிய நதிஇரு மடங்காம்
தேறுவோர்க் களிக்கும் முத்தியை நல்கும்
தேன் அலர் கொன்றையான் திருமுன்
மாறிலா நதியாய் இருக்கும்அத் தானம்
படிந்திட வரும்பலன் அனந்தம் (70) 1463
பொருநைநீர் தன்னால் விளைபொருள் புசிக்கக்
கிடைக்குனர் யாவரே எனினும்
மருவுவர் பொருநைப் பதிதனில் இந்நீர்
மன்னியே புசித்திடப் பெற்றோர்
திருமிகப் பெறுவர் குடத்தினில் எடுத்துச்
சேண்வரு டங்கள்சென் றிடினும்
விரைதரும் குறையா மேன்மையும் உளதாம்
மிகுவெள்ளம் பெருகிய காலம் (71) 1464
பூசனை இயற்றப் புண்ணியம் அனந்தம்
பொங்கிய தனுவில்இந் நீரைப்
பாசனத் தெடுத்து விரதம்அ தாகிப்
பரன்உறை மிக்கநல் பதிகள்
ஈசனுக் கியற்ற எண்ணிலாப் பலனாம்
எந்தத்தீர்த் தங்களும் தங்கள்
மாசுகள் தீர மாசியில் ஆடும்
வந்தியும் மகப்பெறும் அன்றே (72) 1465
தரணியில் தீர்ந்தோர் பவத்தைஆ டாது
தண்ணதி கடந்தவர்க் களிக்கும்
வருபுனல் இதனை ஆடிடார் மறந்தார்
வழிபடார் நிந்தனை வசனம்
உரைசெய்வோர் உறுவோர் உத்தம நதியில்
உமிழ்பவர் உழையினில் மலநீர்
விரவினர் இவர்கள் வெந்நர குறுவார்
என்றுதான் விளம்புவ வேதம் (73) 1466
வேறு
தாம்பிர வேணி தன்னைச் சந்திக்கத் துதிக்கத் தானம்
ஆம்பரி வுடனே செய்ய அருகினில் அன்னம் சொன்னம்
காம்பன தோளி பங்கன் பூசனை கருதிச் செய்ய
வாம்பரி மகத்தின் பேறாம் வருபலன் அனந்தம் ஆமால் (74) 1467
இவ்வகைத் தாய வேணி மகத்துவம் இயம்பக் கேட்கப்
பவ்விய முடன்சிந் திக்க எழுதிடப் படிக்கப் பெற்றோர்
அவ்விய வினையின் நீந்தி அரும்பெறல் செல்வம் பெற்றுத்
தெவ்வினைக் கடந்தின் பம்சேர் சிவன்அடி நீழல் சேர்வார் (75) 1468
- தாம்பிர வன்னிப்படலம் முற்றும்-
18. ஆத்திவனப் படலம்
பார்த்திவர் போற்றிய வீர பாண்டிய நாதர்
பழமறை நாயகர் பதிசேர் மணிக்கிரீபர்
சேத்திர பாலகர் சிறந்த தேவிபாகர்
திங்கள் முடியார் கதையைச் செப்ப வேண்டிக்
காத்திரம் சேர்ஐங் கரத்து நால்வாய் முக்கண்
களபமணி இருகோட் டோர்வதனம் காட்டி
ஆத்தியதாய் ஆதாரப் பொருளைக் காட்டும்
ஆத்திவிநா யகர்பாதம் அகத்துள் வைப்பாம் (1) 1469
ஐவகைய தொழில் இயற்றி அந்தந்தத் தொழில்தோறும்
அவையாய் நின்று
செய்வகையும் செய்வானும் தினகரனும் சந்திரனும்
தேசம் ஆன
வையகம் நீர் தீக்காற்று வானம்இய மானன்இரு
நான்காய் ஒன்றாய்க்
கையில்அப யம்புனைந்த கயிலாய நாயகன்தாள்
கருத்துள் வைப்பாம் (2) 1470
பையரவம் பரித்தருளும் பார்எலாம் பயந்தகொடி
பரிவாய் உன்னி
நையுமனத் திருத்தொண்டர் நளின உளம் கோயில்கொண்ட
நாத ரூபி
உய்யும்வகை எனக்கருளி உதவிபுரிந் தாண்டதிரு
உமையாள் பாண்டி
வையமதில் வளர்வதன மதிஅரிய நாயகிதாள்
வணங்கி உய்வாம் (3) 1471
ஆம்பிர வனத்தின் பாங்குயர் வனத்தில்
ஆத்திசேர் நாயகன் தனக்குத்
தாம்பரி வியற்றும் தோழமை புரிவோன்
சந்ததி போற்றிய தலைவன்
காம்பன தோளி கவுரியோ டுறையும்
கங்கைசேர் காரணன் பாண்டி
வேம்பன தாராற் கருளிய கயிலை
வேதியன் காதையை விரிப்பாம் (4) 1472
அருந்தவர் கேட்பச் சூதமாமு னிவன்
அருளிய தீர்த்தவை பவத்தின்
பரந்தசேத் திரத்தின் மகிமையில் ஒன்பான்
பதியில்இப் பதிவளம் கேட்க
விருந்தென வந்த வீரசே னற்கு
விளம்பினான் மிகுதவம் ஓங்கு
மருந்தென வந்த சங்கமா யோகி
மனம் உறக் கற்றதை மகிழ்ந்தே (5) 1473
முன்ஒரு யுகத்தில் மறைகள்பூ சித்த
முன்னவன் கோயில்கொண் டருளும்
பன்மலர் ஆத்தி வனத்திடை உவந்த
பழமறை நாயகன் பரையோ
டின்னிலம் மகிழ இருக்கும்நாள் தனில்இவ்
இறைவனைத் தோழனாம் இயக்கர்
மன்னவன் பயந்த மணிக்கிரீ பன்தான்
வழிபடு மகிமையை வகுப்பாம் (6) 1474
வேறு
சாபன்னி மனுகா லத்தில் தழைத்தபா ராத்ரி என்னும்
தூபம்நீள் அகில்இட் டோங்கும் சுந்தர வரையின் பாங்கர்
நீபம்நீள் கின்ற பத்ரா டவிஎனும் நிகழ்ந்த காவில்
பூபதி அளகை வாழும் புரவலன் ஈன்ற மைந்தன் (7) 1475
சண்பகம் நிறைந்த சோலை ஆடிடச் சார்ந்த போது
விண்புகு கோட்டுச் சாதி வேங்கைவேய் விரையார் புன்னை
பண்படும் அளிகள் பாடும் பனசம்மந் தாரம் கோங்கம்
நண்பகற் பிரபை தோன்றா நலம்தரு கானந் தன்னில் (8) 1476
சோகமே அகற்ற லால்அ சோகம்என் றொருபேர் சாற்றும்
மாகம்ஆர் தருவு மற்று மதமயல் அடங்கா வண்ணம்
போகம்மே லிட்ட போன்ற புளகம்பூந் தளிரே ஆன
மேகம்ஆர் சோலை தங்கு வளங்களை வியந்தார் அங்ஙன் (9) 1477
கருப்புவில் வளைத்துக் காத லாருடன் பொருதல் காட்டும்
சுருப்புநாண் பூட்டி முல்லைச் சூதப்பூ மலர்அ சோகோ
டருப்புறு வனசம் நீலம் ஐவகைப் பாணம் மேவி
மருப்புறு கைதை வாளால் வீசிய மதனே போலும் (10) 1478
காவெலாம் வசந்தம் எய்தக் கார்படு காலத் துற்ற
மேவிய மதர்ப்பி னோடு விதிர்ப்பெலாம் அகன்று வெம்மை
பாவிய காலம் தன்னில் பாதலம் முதலாய் உள்ள
தாவில்எவ் வுயிர்க்கும் கோடை தழல்கண்ட மெழுகே என்ன (11) 1479
வசந்தம்ஆர் காவில் எய்தி மாதர்கள் அடைப்பை தாங்க
பசந்தபூம் பந்தர் நாப்பண் பண்ணயந் திசைப்ப ஒர்ந்தே
இசைந்தவில் மதனும் போதா தெழில்இவன் என்ன வாய்ந்த
நிசம்தவ றாத தோழன் நிதிமைந்தன் நிலவும் ஏல்வை (12) 1480
மூவகை மலர்க ளான முளரிசெங் குமுதம் நீலம்
காவிகள் அலர்ந்து மொய்த்த கடிமலர் வாவி ஆட
மேவிய கவின்கொள் சாயல் மின்உருத் திரிந்து வேறு
பூவியல் மாலை போலும் பொலிந்துயர் பொன்னே போலும் (13) 1481
அந்தர தேயம் நின்றும் ககனம்ஆர் வழியே போந்து
வந்தனர் காவின் ஊடு மாதர்கள் சித்ர சேனக்
கந்திரு அன்னான் பெற்ற கன்னிகை கவிர்கொள் செவ்வாய்
அந்தளிர் மேனி லீலா வதிஎனும் அணங்கி னோடும் (14) 1482
கும்பநா தன்தான் பெற்ற கொம்பாம்மென் சித்ர லேகை
அம்புய முகத்தாள் இன்னோர் அணிஅலங் காரத் தோடும்
வம்புயர் தனத்துத் தோழி மாதர்கள் சேடி மானார்
விம்பவாய் கனிந்துள் ஊறிச் சூழ்வர மேவினாரே (15) 1483
காவினில் இழிந்து சோலைக் கவின்எலாம் கண்டு கண்டு
பூஅலர் கொய்து பொங்கர் எங்கணும் புல்லிப் பின்பு
வாவியில் படிவோம் என்ன வனிதையர் மலரைநோக்கி
ஆவியின் இனிய தோழி அம்மலர் தருக என்ன (16) 1484
இப்படிப் பயிலும் போதில் இருவரும் பிரிந்து வேறோர்
மைப்படி காவுள் ஆடிச் சேடியர் வளங்கள் காட்ட
துப்பிதழ்ச் சித்ர லேகை தோழியோ டொருபால் ஏகி
அப்புறம் அணையும் போதில் அங்கொரு சோலை கண்டாள் (17) 1485
இவைமிக வளங்க ளாம்என் றெண்ணியே எய்தும் போதில்
சுவைதரு கன்னல் கோட்டுச் சுந்தர மதனன் போல
நவைஇலா மணிக்கி ரீபன் நாதயாழ்ப் பாடல் சூழக்
கவைதரும் கோட்டுத் தாருக் காவினான் இருத்தல் போல (18) 1486
கடிமலர்ப் பந்தர் நாப்பண் கவின்கொள்ஆ சனத்தை நீங்கி
படியினில் பயிலா நின்றான் பைந்தொடி கண்டு பாரில்
வடிமதுத் தாரு நாட்டில் மன்னனோ வேளில் வாய்ந்த
முடிவிலா அழகன் யார்என் றுன்னியே முயக்கம் உற்றாள் (19) 1487
இவனைநாம் முயங்காவிட்டால் இவ்வுடல் முடிவேன் என்னும்
கவனமாய் எய்திப் போந்து காமனை நிகர்த்தோன் காலில்
புவனியில் தாழ்ந்து நின்று புரவல நின்மேல் ஆசைக்
கவலல்உற் றேன்காண் என்று காமுற்றாள் கழறும் போதில் (20) 1488
மன்னனும் இவளை நோக்கி வாரியில் வந்த மின்னோ
கன்னலின் சுவையோ தெய்வக் கற்பகக் கனியோ காமன்
பன்னிய பருவம் கற்கும் பவளத்தின் கொடியோ பாரில்
துன்னிஇங் கெய்திப் போற்றும் சுந்தரி இவள்தான் என்னா (21) 1489
மனமயக் குற்று நின்று மாதரைக் களவில் சேர்கை
கனம்அல வரைதல் செய்தே கலப்பது கற்பதாகும்
எனமொழிந் தெமது மாதே எங்குளாய் இவண்வந் தெய்தும்
நனவென்கொல் யார்பெண் நீதான் என்றனன் நகைத்து நின்றாள் (22) 1490
மாதர்க்குச் சுயம்ஒன் றுண்டோ மதலையாம் பருவம் தன்னில்
தாதைகீழ் அடங்க வேண்டும் தனப்பரு வத்தி னாலே
மேதகு கணவன் கீழாம் மின்னிகழ் விழைவி னாலே
ஓதிடின் மைந்தர்க் கீழாம் எனவிதி உரைத்தான் பின்னர் (23) 1491
சாயலும் நகையும் கண்டு தன்குலம் என்று கண்டு
வேய்உறு தோளி நீயார் வினவிட விள்ளாய் என்றார்
தாய்தந்தை சுற்றம் இன்னார் தத்துவம் என்றாள் இங்ஙன்
தோய்வுறல் கூடா துந்தன் தமரினைத் தொகுத்தி ஆகில் (24) 1492
அவர்களை உசாவி யானே அவர்களால் உதக தானம்
தவர்கள்முன் வேள்வி முன்பு சாட்சியால் தளிர்க்கை பற்றித்
துவைகுதும் என்றான் இந்தச் சுந்தர லேகை சென்றே
இவைஇரு குரவற் கோதி எய்துதும் என்ன நீங்கும் (25) 1493
பதிபுகுந் தினைய செய்தி பகருதற் கன்னை பாலில்
விதிதனைப் புகல்வாள் சோலை மேவியே விளையாட் டெய்தி
புதியநாண் மலர்கள் கொய்யும் போதிலே புத்திக் கேற்ற
மதிநிகர் கணவன் தன்னைக் கண்டது மற்றும் எல்லாம் (26) 1494
உரைத்தனள் அவன்தன் மேன்மை உண்மையும் உறுதி நல்லோன்
புரைக்கிடன் இன்றிச் சொற்ற புதுமையும் புகலக் கேட்டு
விரைத்தளிர் அன்ன மேனி அன்னைதன் மேலோர்க் கோத
வரைப்பதம் என்னச் சுற்றத் தாருடன் வரைவு கூற (27) 1495
அவர்களும் இசைந்து தோழன் மைந்தனுக் காகும் என்றார்
தவர்களோ டெழுந்துகும்பன் கிரிபன்பால் சார்ந்து தங்கள்
பவமுறை பேசி ஒத்த பண்பினால் இசைந்த போதில்
தவநிகழ் கின்ற தொன்று நாரியர் இருவர் தம்மில் (28) 1496
பிரிந்துபோய்ப் போது கொய்த பிறைநுதல் கரிய கூந்தல்
கருந்தடங் கண்ணி லீலா வதிஅந்தக் காவை நீங்கி
மருந்தெனும் தோழி சித்ர லேகையைத் துருவி வந்து
அருந்துதற் கரிய இந்த அடவியின் வளனை நோக்கி (29) 1497
கொண்டுதன் மனம்உ வந்து கொள்கையில் அமைத்து நேடிக்
கண்டனள் தென்றல் காவில் கதிர்வளர் பளிங்கு மாட
தண்தர ளத்தால் தூங்கு தமனியப் பந்தர் மீது
வண்டலர் தாரினானை வனிதையும் கண்ணுற் றாளே (30) 1498
இந்திர லோகத் துள்ள இறைவனோ இங்குற் றார்கள்
அந்தர நாடர் தாமோ என்னவை உற்று நின்று
சுந்தர மன்னன் தன்னைத் தொழுதனள் இவளும் ஆசை
முந்தினாள் தோழி தன்னை முயங்கினள் முன்வந் தெய்தா (31) 1499
இவன்இவள் மேலே ஆசை உற்றனன் என்று நோக்கித்
தவனனைக் கண்ட போதின் தன்மைபோல் அளவி லாத
உவமைஇல் மயல்கொண் டங்கன் உற்றமர் செய்திஎல்லாம்
அவள்நனி அறிந்து தான்ஒன் றறைகுவள் ஆகி அன்பாய் (32) 1500
உன்னிடத் தியானும் மையல் உறுகின்றேன் இதற்கொன் றுன்னை
முன்னைவந் துறவு கொண்டே முற்றிழை யவளை முந்தப்
பன்னியர்க் கோடி யான எமர்களும் பண்பின் தீட்டப்
பின்னைநீ வரைதல் செய்தி என்றனள் பிரமை யாலே (33) 1501
காமனுக் கிணையி னானும் கன்னியர் இவளைச் சேர
வாமற்றை எழில்கொள் மைந்தர் ஆயினோம் இல்லை என்ன
ஏமுற்ற இனிய சாயல் இளமயில் இவளை நோக்கி
நீமற்றை அரிவை யாகச் செய்யலாம் நிகழ்ந்த தொன்று (34) 1502
உன்னையே மரபில் உள்ளான் ஒருவனுக் குறுதி பேசி
மன்னின செயலால் உன்னை நாம்மணந் திடுதல் கூடா
தென்னவே உரைத்த போதும் இவர்கள்தம் இளமை யாலே
பன்னிநான் ஒருபோ தேனும் புணர்ந்திடப் பாலை என்றாள் (35) 1503
முறைஉண்டோ ஞாயம் உண்டோ மோகம்உற் றவளுக் கென்னா
நிறைதவ றாத மன்னன் நேரிழை அவளைப் பின்னும்
மறையினில் வழுவாம் என்றான் மதர்நெடுங் கண்ணும் வாய்ந்த
பிறைநுதல் மயில்மென் சாயல் பெண்கொடி மயல்பொருளாய் (36) 1504
தனித்தொரு காமன் செய்யும் மயக்கையார் சாற்ற வல்லார்
சினத்துடன் சபிப்பேன் என்று செப்பினாள் செம்மல் தானும்
வினைக்கிடம் இதுஎன் றங்ஙன் வெறுத்திட வேல்கண் ணாளும்
மனக்கவல் உற்றுச் சீற்றம் உந்தியே வலித்துச் சொல்வாள் (37) 1505
என்னைநீ வெறுத்த லாலே இயைந்துறும் இவளும் நீயும்
பொன்எனும் அழகு குன்றிப் புவியினில் பனிப்புக் கொள்ளத்
துன்னியே குட்ட ரோகம் தொடர்ந்திடச் சோர்வு கொண்டு
பன்னகம் கொள்ள நின்ற பருதிஒப் பாகத் தானே (38) 1506
நீசம்ஆ கியப சாசாய் நேர்படக் கடவீர் என்று
பேசியே சபித்தாள் அந்தப் பெண்தரு சாபம் ஏற்றார்
ஆசினால் சபித்தாள் தன்னை அப்படி அழகு மாறி
மாசுறக் கடவாய் என்று சபித்தனர் வழக்கி னாலே (39) 1507
காமவல் வினையினாலே மூவரும் கடைய தாகி
ஏமம்ஒன் றின்றிக் கானத் தெய்தியே இடர்உ ழன்றார்
சோமனே முதலாய் உள்ளோர் பட்டதைத் துருவிப் பார்க்கில்
மாமயல் கொண்டார்க் கன்றோ துன்பத்தை வகுத்த தம்மா (40) 1508
பின்பொரு ஏது இன்றிப் பிழைப்படும் தம்மால் வந்த
துன்பினை நீங்கு மாறு சொற்றிடு முதியோர் காணா
தென்செய்வோம் என்ன எண்ணும் இரங்கிடும் மயங்கும் செல்லும்
கன்மமோ என்று ரைக்கும் முற்றிய கன்மத் தாலே (41) 1509
காடும் கல்அதர் அத்தமும் கானியா
றோடும் சூழலும் ஓங்கு வரைகளும்
நாடும் மற்றை நகரியும் ஞாயில்சூழ்
மாடும் நாடி மறுகில் மறுகியே (42) 1510
இன்னல் எய்தித் திரிபொழு தேர்பெறு
முன்னர்த் தோன்றிய ஓர்இடம் முந்தினார்
அன்ன சோலைசூழ் ஆலயப் பாங்கரில்
முன்னர்த் தோன்றினன் வேழ முகத்தனே (43) 1511
இந்த வேளை எமதிடர் தீர்த்திட
வந்த நாதன் இவன்எனக் கண்டுவாழ்ந்
தந்தம் இல்லதோர் ஆனந்தம் எய்தியே
கந்த நாள்மலர்ப் பாதம் கருதினார் (44) 1512
மணிக்கி ரீபன் வருத்தும் பிணியினைத்
துணித்தல் செய்யும்இத் தோன்றல்என் றேமனம்
கணித்தினாடனிற் காவென்று வாசனைக்
கிணக்கம் பற்றி இருந்தனன் என்பவே (45) 1513
இத்தி றத்தில் ஒழுகிய நாளிலே
அத்தி ஆனனத் தான்அருள் கூர்ந்தனன்
பித்தர் போல்வரு மைந்தன் பிணிகெட
முத்தன் வாணியி னால்மொழி கின்றனன் (46) 1514
இன்னமும் சிலநாள் ஏங்கல் உள்ளன
மன்னு தீர்த்தம் வான்திரு ஆலயம்
துன்னி யேபடி தோமத் துதிசெய்வீர்
அன்ன நாளில்அங் கோர்தடம் தோன்றுமால் (47) 1515
எங்கன் உள்ளன தென்றிடில் தென்திசை
அங்க ளம்மடு ஆடிடும் போதினில்
துங்க வன்பிணி தீரும் துகள்அற
மங்கை பாகன் வயிரவக் கோலமாய் (48) 1516
வந்து தோன்றி வருத்தம் எலாம்தவிர்த்
தெந்தை நல்வரம் ஈகுவன் என்றுரை
தந்த என்மகிழ் வெய்திச் சரண்பணிந்
திந்த நன்மைகொ டெங்கணும் போற்றியே (49) 1517
தென்தி சைக்கண் எழுந்தனன் சிந்துர
வென்றி யான்அரு ளின்படி மேவியே
துன்றும் ஓர்நகர் அவ்விடம் தோன்றிட
சென்று கண்டனர் பாவங்கள் தீருவோர் (50) 1518
கண்ட தன்புறத் தெய்திஅப் பால்கறைக்
கண்டன் ஆலயம் தோன்றக் கவின்கொளும்
கண்டல் குழ்தடம் ஒன்றுடன் கண்ணுற்றா
கண்டெ னும்மொழிக் கன்னியர் தம்முடன் (51) 1519
இரங்கு நீர்த்தடம் ஆடி எழுந்தனர்
தரங்க மென்றுடும் பிற்றெறு நோய்கள்தாம்
முருங்கல் நீங்கிட முன்எழில் மேனிதான்
கருங்கல் நீங்கிய காரிகை என்னவே (52) 1520
கோள்க டந்த குரூஉச்சுடர் என்னவே
வாள்வி டும்உரு எய்திமற் றீர்த்தத்தின்
நாள்வ ரும்பலன் நன்மையைப் பேசிடும்
வேளை தன்னில் விமலன் வெளிப்பட்டான் (53) 1521
வேறு
பயிரவக் கோலம் காட்டப் பணிந்தவர் தம்மை நோக்கிக்
கயிரவ வாய ரோடும் கருத்தழிந் தவைக ழிந்திச்
செயிர்அறு தீர்த்தம் ஆடித் தீர்ந்தனிர் இந்தத் தீர்த்தம்
வயிரவ தீர்த்தம் ஆகும் மகிமைநாம் வழங்கக் கேண்மின் (54) 1522
பஞ்சபா தகங்கள் தீரும் படிபவர்க் கருமை யான
எஞ்சலில் செல்வம் பாலித் தெளிதினில் முத்தி நல்கும்
அஞ்சிடும் உங்கள் பாவம் அகற்றிய தன்மை யாலே
விஞ்சையாம் மோட்ச தீர்த்தம் என்றருள் விளம்பும் நாதன் (55) 1523
தன்அடி பணிந்து நின்று தம்கரம் சிரசில் கூப்பிப்
பன்னகா பரணா போற்றி பயிரவக் கோலம் பாலித்
தின்னிலத் தெம்மை ஆண்ட இறைவனே போற்றி இந்த
நன்னலம் நாங்கள் எய்த நயந்தருள் நாத போற்றி (56) 1524
எனத்துதித் திறைஞ்சி நின்ற இவர்கள்மேல் அன்பு கூர்ந்து
வனப்பினுக் கிணைஇ லாதீர் வம்மின்கள் மணிக்கி ரீபா
தனக்கிணை யான இந்தத் தரணியில் ஆத்தி மேவும்
புனல்சடை முடியி னாற்குப் பொங்கும் ஆலயங்கள் செய்வாய் (57) 1525
அவ்விடைப் பனைக்கை நால்வாய் ஐங்கர மைந்தன் தன்னை
செவ்விதின் விதித்துப் போற்றிச் சிறப்புடன் இங்கு வைகி
நவ்விசேர் விழியி னாரை நன்மணம் புனைதி இந்தத்
திவ்விய நாதன் வேண்டும் சீர்களும் தருவான் என்ன (58) 1526
அருள்செய்து மறைந்தான் எங்கோன் அருட்படி மணிக்கி ரீபன்
பொருவிடை யோனைப் போற்றிப் புரந்தவன் அருள்மேற் கொண்டு
தரையினில் அதிகம் ஆன தலம்இதென் றெய்தித் தாழ்வில்
கரைஇலாப் பணிகள் செய்து கயமுகன் தனைவி தித்து (59) 1527
பூசனை நடத்தி ஆத்தி புரத்தினுக் கழகி யற்றி
ஈசனை ஐங்க ரத்த இபமுகன் தன்னை எய்தி
வாசனை மலர்இட் டேத்தி வாரண முகத்தாய் போற்றி
தேசிகா எம்மை ஆண்ட தேவர்கள் முதலே போற்றி (60) 1528
ஐங்கர நாதா போற்றி ஆகுவா கனனே போற்றி
திங்கள்அம் பிறைசேர் கோட்டுத் தெய்வநா யகனே போற்றி
பங்கய பாதா போற்றி பவளமா மலையே போற்றி
கங்கைநா யகன்தன் மைந்தா கருணைவா ரிதியே போற்றி (61) 1529
என்னவே உமையாள் பெற்ற இபமுகன் தனைஇ றைஞ்சிப்
பின்னவன் தாதை யான பிறைமுடிப் பெருமான் எங்கள்
முன்னவன் தனைஅர்ச் சித்து மும்முறை வலம்செய் தேத்திப்
பன்முறை துதிக்கின் றானால் பாவம்அ தகன்ற பாலன் (62) 1530
காரணம் இன்றி வந்த கன்னியர் வலித்துக் காம
வாரியில் படுத்த மோக மயல்விளை மகளி ராலே
நீரினில் பாசி என்னும் நெடுந்துயர் அகற்றி ஆண்ட
பூரண முதலே போற்றி புண்ணிய நாதா போற்றி (63) 1531
திங்களும் பிறையும் பாம்பும் திருமுடிக் கணிந்தாய் போற்றி
மங்கையோர் பாகம் வைத்த வாரண உரியாய் போற்றி
பங்கய பாதம் தந்து பணித்தருள் பகவ போற்றி
எங்களை ஆண்டு கொண்ட இறைவனே போற்றி போற்றி (64) 1532
என்றுமூ வருமே போற்ற இறைஎழுந் தருளி வேண்டும்
பொன்றிலா வரம்கேள் என்னப் பொன்அடி பணிந்துநின்று
நன்றெனும் தீர்த்த மூர்த்தி நகரினுக் கடியேன் பேராய்
நின்றிட வேண்டும் நாதா நின்பதம் வேண்டும் என்றான் (65) 1533
இறைஅருள் செய்து லிங்கத் தெய்தினான் இமையோர் எல்லாம்
நறைமலர் தூவி ஆர்த்தார் நதிபுனை மணிக்கி ரீப
மறையவன் மணிக்கி ரீப நகரம்மற் றப்பேர் தீர்த்தம்
குறைவிலா தன்றும் என்றும் நிகழ்வதிக் கொள்கையாலே (66) 1534
நாதனைப் பணிந்து பின்பு நாரியர் இருவர் தம்மை
வேதியர் சடங்கி யற்ற வெவ்வழல் முன்னம் வேட்டுக்
காதலி யார்க ளோடும் கவின்பெறு நகரில் பன்னாள்
ஆதர வுடனே வைகி அகன்றுதன் அகிலம் புக்கான் (67) 1535
இத்திறம் உரைத்த யோக நாதனை இறைஞ்சி இந்த
மைத்தகண் டத்தி னாற்கு மணக்கிரீ பப்பேர் வந்த
உத்தமம் இதுவா மென்று முடிகொண்ட உறும்பேர் இந்த
நித்தனுக் கெய்தும் அந்தக் கதையினை நிகழ்த்த வேண்டும் (68) 1536
என்னவே கேட்ட வீரமா சேனற்
கியம்புவான் எறிதிரை முந்நீர்
துன்னுசூழ் உலகில் பின்னும்ஓர் உகத்தில்
தோன்றிய சொலற்கரும் கொற்கை
நன்னிலப் பாண்டி நாயகன் அமுத
கிரணன்பால் தோன்றும்நட் புடைய
மன்னவன் இவனை மறுபுலப் பகைவன்
பொருதிட மதித்துவந் துதித்தான் (69) 1537
பொரவரும் அவனோ டெதிர்ந்துபோர் புரியப்
புரவிதேர் புகர்முக வயமாத்
திரைநிகர் வீரர் வெள்ளமும் தெளித்துச்
செயம்குறித் ததிர்ந்துகண் சினத்துத்
தருமுனைப் படைகள் வகுத்தணி ஆற்றிச்
சாரிமா றிச்சர மழையால்
இருவகைத் தானை யரும்பொழிந் திடவே
இதனில்ஒன் னார்படைக் கிடைந்தே (70) 1538
கவுரியன் தானை உடைந்திடப் பாண்டி
காவலன் கவனைஉற் றிந்தப்
புவிதனில் ஆத்தி வனத்திடை உற்றான்
புண்ணியன் தனைக்கண்டு போற்றிச்
சிவன்எனை ஆள இவண்வதிந் தனனே
என்றுகை சிரசின்மேல் கூப்பிப்
பவன்அடி தொழுது மறுபுலப் பகைவன்
தனைப்பொரப் பரிந்துகாத் தருள்வாய் (71) 1539
மனம் அழிந் தெய்த்து மாற்றலர்க் குடைந்த
மானமும் இழிவும்மா றாத
சினமுடன் வேறு புகல்இலாக் கவலைத்
திரைமுந்நீர் எய்தினோம் சிறந்த
அனைஎன வருவோய் கரைதனில் எய்த
அருங்கலம் என்னவே அணைந்தாய்
உனைஅலால் வேறு கதிஇலேன் கண்டாய்
ஒன்னலார் புரம்உகைத் தவனே (72) 1540
கருணைவா ரிதியே இற்றைநாள் போரில்
தகைந்துகாத் திரட்சித்த தாலே
புரம்இவண் ஆத்தி வனத்தில்உன் கோயில்
புதியன பணிகளாய்ச் செய்து
பரவிட உறுவேன் பரமனே இன்னும்
பணித்தன பணிகளும் பரிப்பேன்
வரம்அளித் தருள்வாய் மறைவளர் வாணா
வரதனே எனவணங் கினனால் (73) 1541
என்றமன் னவனுக் கிரங்கியே பொருதற்
கெய்துநா முநீ நென்னல்
சென்றென முயல்வாய் என்றச ரீரித்
திருவுள வசனம்மே விடலும்
நன்றென மகிழ்ந்து மற்றைநாள் எழுந்து
நால்வகைத் தானையோ டணைந்து
வென்றிடப் பொரும்அவ் வேளையில் கொன்றை
வேணியன் வீரர்போல் எழுந்தான் (74) 1542
மன்னவற் குவரி வருவது போல
வாம்பரி ஆயிரம் மள்ளர்
துன்னவே ஒன்றுக் கதிகமாய்த் தோன்றச்
சோழனும் கண்டுதன் சேனை
தன்னுடன் ஓடத் துரந்துபாண் டியற்குத்
தாதகி யான்முடி தன்னை
பன்னகா பரணன் பறித்தது சூட்டி
பல்வளம் சிறந்திடப் பரித்தான் (75) 1543
வேறு
மானமும் மகிழ்வும் நல்கி வழுதிமன் னவற்குத் தானே
தேனலர் கொன்றை அண்ணல் திருவுரு மறைந்து வானில்
தானச ரீரி ஒன்று தண்டமிழ் நாட்டில் நீயே
கோனணிமு டியைக் கொண்ட கூடலான் என்றான் கோமான் (76) 1544
வேறு
வென்றுமுடி கொண்டபாண் டியன்என்னும் பெயர்விளங்க
அன்றருளிச் செய்தனன்அந் நாயகற்கும் அப்பெயர்தான்
என்றும்நிகழ்ந் திடமன்னன் இறைஞ்சிவேண் டினன்இறையோன்
நன்றுமகிழ்ந் தப்பெயரை நலம்பெறவே தரித்தனனால் (77) 1545
அந்தநாள் முதல்என்றும் ஆத்திவன நாயகற்குப்
பத்தமாய் வென்றுமுடி கொண்டபாண் டியநாத
எந்தையார் எனஉலகம் ஏற்றிடநின் றனஇறைவன்
கந்தநாள் மலர்பரவிக் கசிந்துருகிப் போற்றினனால் (78) 1546
வேதகா ரணசரணம் வென்றுமுடி கொண்டருளும்
நாதபூ ரணசரணம் நாயேனைப் பொருள்படுத்தி
வேதைபுரி மாற்றானை வென்றருளி வெற்றிஅருள்
மாதுசேர் மேனிமணிக் கிரிபவா னவசரணம் (79) 1547
ஆத்திவனத் தாலயமும் அணிவிழா முதலான
சூத்திரமும் திருநகரும் தொலைவிலாப் பெருவளமும்
பாத்திபன்செய் தனன்பதிக்குப் பெயர்பாண்டீ சுரம்என்றார்
சேத்திரநா யகன்மகிமை செப்பலாம் தகைமைத்தோ (80) 1548
மணித்திகழ்ந்த வழுதீசர் வரஇதுபின் கலியுகத்தில்
மணிக்கிரிமைந் தனும்நகரும் மற்றும்உள வளங்கள்எலாம்
மணல்திடர்பட் டிடக்கிடந்த வருடம்அது சிலசெல்ல
மணித்துகள்அற் றிடுவதென மற்றவைதான் வழியாலே (81) 1549
பறித்திடப்பின் சிலதோன்றப் பதிக்கிடமாய் உறுவதென
மறிக்கரத்தார் திருவருளால் மயிலின்வா ரணக்கொடியோன்
குறக்கொடியோ டினிதிருந்த கோலம்தோன் றப்பழைய
மறைப்பரமர் சிவலிங்க வடிவுதோன் றிடமகிழ்ந்தே (82) 1550
பொருநைவளம் பதியார்கள் கண்டுபூ சித்தெழிலாய்
வருநாளி லேதொண்டை மண்டலவே ளான்தலைமை
அரியநா யகமன்னன் அவனிபுரந் திடும் அந்நாள்
பெருகவே சிவதருமம் பேணியே வருகின்றான் (83) 1551
முன்செய்த தவமகிமை முற்றுதலாய் வரும்வேளை
மின்செய்த வேணியற்கு விளங்குதிருப் பணிசெய்யப்
பொன்வந்த புயன்இங்ஙன் போந்திடவே புவிவாழ்க
இன்னன்பின் தலமகிமை கேட்டுமகிழ்ச் சியின்எய்தி (84) 1552
இதுபோலும் பேறுநமக் கில்லைஎன இணைஇலா
மதிவேணி தனைக்கண்டு வணங்கிமகிழ்ந் தன்பினால்
துதிசெய்து கயிலாய நாயகா எனச்சொல்லிப்
புதியபணி செயஎண்ணிப் புண்ணியன்தன் அருள்வேண்டி (85) 1553
விரதமாய் அவண்இருந்தான் வேந்தவன்தன் கனவினிலே
சரதமறை பூசிக்கத் தாழ்ந்தெமைவேண் டுதலாலே
இரசதமால் வரைநீங்கி இவ்வுலகில் போந்தேமால்
புரவலநின் மனம்நினைத்தல் கூடிவரும் எனப்புகன்றே (86) 1554
ஆதலால் இத்தலத்தில் நமக்கருமைப் பணிஇயற்றிப்
பூதலம்போற் றுவைஎன்று புண்ணியன்அங் ஙனம்போந்தான்
நீதன்இவை மனத்தெண்ணி நிருமலன்தன் அருள்போற்றிப்
பாதமலர் பணிந்தேத்திப் பணிசெய்யத் தொடங்கினான் (87) 1555
கற்பகரம் முதலாகக் கணபதிசுற் றாலயமும்
சிற்பசாத் திரப்படியே செய்துதிருக் கயிலாய
வெற்பனுக்கு வடகீழ்பால் விமலைதிரு வுருஅமைத்து
அற்புடனே அனைநாமம் அரியநா யகிஎன்றே (88) 1556
பெயர்விதித்து ப்ரதிட்டைசெய்து பின்புபஞ்ச லிங்கம்முதல்
செயல்பெறஅவ் விடத்தியற்றிச் சுற்றுசிக ரத்துடனே
புயல்வளர்மென் சோலைகளும் பொன்னாடை ஆபரணம்
கயல்விழியார் முதலான கருவிகளும் கண்டனனால் (89) 1557
வீதிவிழா முதலான மிகுபொருளும் முந்நூலோர்
ஓதுமட முவளகமும் உள்ளிட்ட முதல்அமைத்தான்
நீதநகர்க் கரியநா யகபுரம்என் றேநிகழ்த்திப்
பூதலம் எலாம்புரந்து புண்ணியன்பொற் பதம்பெற்றான் (90) 1558
ஆத்திவனப் படலம் முற்றும்
19. புட்பவனப் படலம்
பூத லம்புகழ் பூவண நாயகன்
காதை யைக்கரு திச்செயக் கந்தடு
போத கத்து முகன்புழைக் கையினான்
பாத பங்கயம் போற்றிப் பரவுவாம் (1) 1559
வேறு
உலகம்எலாம் உளம்குளிர உறுமகிழ்வின் வடிவாகி
உம்பர் வாழும்
தலம்அதனுக் கமுதாகித் தமனியம்சேர் மழையாகிச்
சான்றோர்க் கெல்லாம்
பலமுதவும் தருவாகி நிதியாகி மதியாகிப்
பரமா னந்தப்
புலன் அறிவாய் ஓங்கிவளர் பூவணநா யகன்பாதம்
புந்தி சேர்ப்பாம் (2) 1560
தவரூப முதல்ஈன்று தண்கிருபை தான்தளிர்த்துத்
தானாய் எங்கும்
அவனிமுழு வதும்பூந்தேன் அருந்துயரம் தனைக்காய்ந்தே
அன்பர் உள்ளம்
சிவம் நிறையத் தான்பழுத்துத் தெய்வமணம் கமழ்ந்துலவத்
திகழும் செய்ய
புவனவரைப் படர்ந்தகொடி பூந்தேவி அம்பிகைதாள்
போற்றி வாழ்வாம் (3) 1561
புயல்படி சோலைத் தென்திருப் பூவ
ணேசுர நாயகன் புகழைத்
தயவுடன் எங்கட் கருள்என நேமி
சாரணி யத்துறு தவத்தோர்
சுயமுணர் லயமெய்ச் சூதமா முனியைத்
தொழுதடி பரவிட மகிழ்ந்து
நயமுடன் தீர்த்த வைபவம் தெளிந்து
நல்கிய சரிதையை நாமும் (4) 1562
கொங்கலர் கொன்றைக் குழகனை வழுத்தும்
கோதிலாக் குணங்களில் மிக்க
உங்களுக் கறைவாம் என்றவன் உரைத்த
ஒப்பிலா மகிமையை உணர்ந்த
சங்கயோ கியரைத் தாழ்ந்திந்த வகையைச்
சாற்றிட வேண்டும்என் றிரந்து
பங்கயம் வழுத்தும் வீரசே னற்குப்
பகர்ந்திடும் காதையைப் பகர்வாம் (5) 1563
புங்கவர் பரவும் பூவணே சுரனைப்
புனிதைபூந் தேவிஅம் பிகையைச்
சிங்கவா கனத்தாள் மயிடனைக் காய்ந்த
திரிமுனைச் சூலத்தாள் செப்பார்
கொங்கையில் ஆர்த்த கச்சிளங் குமரிக்
கொம்பனாள் துர்க்கையார் கோதை
பங்கய மலரால் பூசனை இயற்றிப்
பங்கயம் பரவியே வருநாள் (6) 1564
நிகழ்ந்ததோர் பருவம் நகரினில் சிறந்த
நேமியோர் வழிபடு நேமி
புகழ்ந்தபூங் காஞ்சி புரத்தினுக் கருகாய்ப்
பொலிந்ததோர் புண்ணிய நகரில்
திகழ்ந்திடும் வணிகன் தனந்தனிற் சிறந்தோன்
செந்திரு மாதுடன் வாழும்
அகழ்ந்தஏ னத்தான் வாழ்வென வாழ்வோன்
அவன்தரு மக்கள்ஓர் இருவர் (7) 1565
புண்ணியம் கோடியே பூவினில் பொலிந்து
போந்தபொன் அனையாள்இப் புவியில்
எண்ணுதற் கரிய எழில்வளர் மேனிக்
கிணைஇலா இம்பரில் சிறந்த
பெண்ஒரு கன்னி பிழைஇலாக் குமரன்
இவர்கட்கு மணங்களைப் பேணிக்
கண்ணினுக் கணியாக் கவின்மனை பெருக்கிக்
காதல ருடன்கனிந் திடுநாள் (8) 1566
மக்களைப் பிரிந்து மனையுடன் வணிகன்
வான்அடைந் தனன்மதி மருண்டு
துக்கசா கரத்தில் பொருந்துதோன் றவரும்
ஒருதலை தேற்றிடத் துணிந்து
தக்கஇல் லறத்தில் வாழும்நாள் தன்னில்
சண்பக வல்லிதன் கணவன்
மிக்கநீர் வேலை மரக்கலம் ஓடி
விழைபொருள் கொணர்தும்நாம் என்ன (9) 1567
வாரிமேல் சென்றோர் இருதுவில் வருதும்
என்னவே மைத்துனர்க் கியம்பித்
தார்அணி புயத்தான் சென்றபின் வனிதை
தமையன்இத் தையலைக் காத்துச்
சீருடன் வரும்நாள் இருதுவும் கழிந்து
சென்றதோர் வருடமும் செல்வ
நாரிதற் கிளையாள் கணவனைக் காணா
நலிதலைக் கண்டுநல் தமையன் (10) 1568
வேலைமேல் சென்ற துருவிமைத் துனனை
மீட்பல்என் றெண்ணியே நமக்குச்
சீலம்உற் றிடுபாந் தவர்களும் இலைஇச்
சிறுமியை யார்அடைக் கலமாய்ச்
சாலவைத் திடுதும் என்றுளம் உன்னித்
தன்நகர் நீங்கியே சார்வில்
கோலம்ஆர் தங்கை அவளுடன் காஞ்சித்
திருநகர் குறுகியே அங்ஙன் (11) 1569
வணிகரில் ஒருவன் வசுதைநேர் பொறையான்
மதிநிகர் தயவினான் வாய்மைத்
துணிவுடை மனத்தான் துகைஇலா நிதியான்
துணைவியும் சொலற்கரும் குணத்தாள்
தணிவுடை உளத்தார் இவர்களைச் சார்ந்தார்
தங்கையும் தமையனும் ஆகப்
பணிவுடன் நின்று பகர்ந்தனர் உங்கள்
பண்பினைக் கேட்டிவண் வந்தோம் (12) 1570
எனச்சொலும் வணிகன் தன்முகம் நோக்கி
இறைதிருக் காஞ்சியூர் வணிகன்
மனத்துறும் கவலை முகத்தினில் நிகழ
அருந்திரு மக்களீர் வந்த
வினைத்துகை யாவ தென்னவே வினவ
விளம்புவான் மேல்திசை யினிலே
தனித்ததோர் நகரம் தனில்அமர் குடியும்
தந்தைதாய் இறந்ததும் சாற்றி (13) 1571
இவள்எங்கை கணவன் எறிதிரை முந்நீர்
ஏகின செய்தியும் இயம்பி
அவனைநான் துருவிக் கொடுவர வேண்டும்
அற்றை நாள் வரைஇளை யவளைத்
தவம்உறு செயலீர் தயவுடன் காக்கும்
தத்துவம் உங்களுக் கென்ன
உவமைஇல் இவளே உங்கள்தம் புதல்வி
உறுதியாய்ப் பரிக்குவீர் என்ன (14) 1572
கையினில் கொடுத்துப் பரவசம் செப்பிக்
கன்னியைக் காப்பது கடிதாம்
மெய்யிவண் வம்பாம் மிகுதியும் உளதாம்
மேன்மைநம் குலத்தினுக் கிழுக்கே
எய்திடா தருள்வீர் என்றிம்மூ வரையும்
இறைவியாள் காமக்கோட் டத்தின்
மைவளர் குழல்கா மாட்சிசந் நிதியில்
அழைத்துப்போய் வணங்கிமுன் நின்று (15) 1573
தோத்திரம் செய்து தாய்தந்தை இவர்பால்
துணைஎனச் சுருதிபோல் இவளைக்
காத்திட உரைத்தேன் கவுரிகா மாட்சிக்
கன்னியே நீயும்காத் தருள்வாய்
பூத்திகழ் பதத்தைப் போற்றினேன் என்றான்
புனிதையாள் விடைபெற்றுப் புணரி
நீத்தமேல் சென்றான் தன்னையே நேடிச்
சென்றபின் நிகழ்ந்தவை இப்பால் (16) 1574
பெண்ணினுக் காசை பெருக்கிய பருவப்
பெண்ணினைப் பெற்றவ ரினிலும்
புண்ணியக் குரவோர் போற்றுதல் செய்து
புனைமணி மாடத்தில் பொலிவாய்
நண்ணியே கடிகொள் நாரியர்சூழ
நாப்பணில் வைத்திவள் நமக்குப்
பண்ணிய தவமாய் வந்தவள் இந்தப்
பணிமொழி என்றுளே மகிழ்ந்து (17) 1575
பேறிலா நமக்கோர் பேறென வந்த
பெண்கொடி இவள்எனப் பேணி
ஈறிலா நமது தனங்களும் இவட்கே
என்றுதன் இல்லுடன் இயைந்தே
மாறிலா மகிழ்வாய் இருக்கும்அந் நாளில்
வளம்படு காஞ்சியில் அரசன்
ஊறிலா தளிக்கும் கொற்றவன் மன்னன்
உறுவிர கத்தில்மிக் குள்ளான் (18) 1576
அக்கினி வன்மன் என்னும் பெயரினான் அனங்கன் வாளி
தொக்கிய நெஞ்சி னான்பால் தூதுவர் உரைக்கும் செய்தி
மிக்கவேல் அரச கேண்மோ விண்அரம் பையரில் மேலாம்
தக்கநல் எழில்வேல் உண்கண் தாமரைத் தையல் போல்வாள். (19) 1577
வேறு
வன்னச் சிந்துரம் வாய்ந்து மதம்பொழி
கன்னக் கச்சின் நிகழம் கறுத்துக்கண்
மின்னு மாமுலை யானையின் மேல்அணி
பொன்னந் தூசு முகபடாம் போன்றதே (20) 1578
மலரில் தேன்உணும் வண்டெனும் மான்முகத்
திலகு கண்ணுக் கிணைசொலில் இக்கெனும்
சிலையில் காமன் செறித்திடு நீலஅம்
புலகில் ஆடவர் தம்உயிர் உண்பதே (21) 1579
இன்னமும் அவள்எழில் இயம்பக் கேண்மரோ
பின்னகத் துக்கிணை முகிலைப் பேசிடில்
அன்னவை நேர்நிலா தகள தந்தரம்
பன்னிய சோமனும் நுதற்குப் பாதியே (22) 1580
பண்சி றந்த பணிமொழி பைந்தொடி
விண்சி றந்த மதிமுகம் வில்லைநேர்
ஒண்சி றந்த புருவமெல் லோன்குகன்
கண்சி றந்திடும் ஊசலைக் காட்டுமே (23) 1581
முத்தம் முல்லை அரும்பிவள் மூரலே
ஒத்த பைங்கழைத் தோளிபொன் ஒண்தொடி
கைத்த லம்தளிர் காந்தள் கவின்கொடி
எய்த்த நுண்இடை ஏந்திழைக் கென்பவே (24) 1582
மேக லைக்கிணை மெல்லியல் ஆடைமேல்
மோகமைந் தர்உயிர் மொய்த்த முத்தமே
சோக பாசப்பொன் நாணில் துலங்கவே
போக வேள்தன் இருப்பிடம் போன்றதே (25) 1583
பொன்னம் பூஞ்சிலம் பார்த்திடும் பூம்பதம்
அன்ன மென்னடை அந்தளிர் மேனியாள்
வன்னத் தூசணி மாமயில் சாயலாட்
கிந்தி லத்தில் இணைஇலை என்பவே (26) 1584
வேறு
சண்பக வல்லிஎன்னும் தளிர்நிறத் தையல் சாந்த
அண்படும் அயலூர் போந்த அணிகுழல் வணிகன் கன்னி
பண்படு சொல்லாள் இந்தப் பதிபுகந் தணியள் செல்வ
நண்புடை வணிகன் இல்லில் நண்ணினாள் நங்கை என்னா (27) 1585
அவள்உனக் காகும் என்றார் அறிவிலா மன்னன் தானும்
தவம்இதன் றென்னான் வேறு தருமமும் நோக்கான் சாலப்
பவமிகு பழியும் ஓரான் பாதகன் மதன்அம் பாலே
இவளைஎவ் வாறு கொள்வ தென்றிவன் எண்ணும் ஏல்வை (28) 1586
மந்திரர் அறியின் தீதாம் மந்தணம் ஆகத் தானே
புந்தியில் உரைபோ தித்த பொய்பழிக் கஞ்சார் தம்மை
வந்திடப் புகல வந்தார் தமைநோக்கி வணிகன் இல்லில்
முந்தியே புகுந்து ழக்கி வலியினால் முடிப்பீர் என்று (29) 1587
மன்னவன் உரைத்த வாறே வணிகன்இல் வதியும் மாதைச்
சொன்னஅப் படியே கொண்டு சுருதியின் வழிநோக் காதான்
தன்இடத் துய்க்க வேறோர் தனிஇடம் சார ஏவ
மின்னுமா டத்தில் வைத்தார் மேல்வரும் விளைவு நோக்கார் (30) 1588
பின்பவன் தூதர் தாமே பேதையாட் கிசைக்கும் செய்தி
பொன்பணி ஆடை உள்ள புவனங்கள் போகம் யாவும்
உன்மனக் கிசையத் தானே உன்னதாப் பெறலாம் நீதான்
மன்மனக் கிணையில் பாரி ஆகநட் படைவாய் என்று (31) 1589
மன்னவன் உரையை மாற்றம் மாதொன்றும் வாளா நின்றாள்
இன்னம்ஓர் வேளை பேசி இணங்குதல் செய்வோம் என்று
பொன்னினைப் பிரிந்து போனார் பொற்புறு கற்பு வாய்ந்த
மின்இடை என்செய் வாளாய் மிகுதுயர் எய்து விம்மி (32) 1590
கற்பெனும் படையி னாலே காரிகை உயிர்இ றந்தாள்
அற்பனாம் மன்னன் தானும் அச்செயல் கண்டி ரங்கிப்
பொற்பினுக் குவமை இல்லாள் பொறைஇலி இவளை ஈமத்
திற்புகச் செய்தும் என்னாப் பிணத்தினை ஈமம் சேர்த்தார் (33) 1591
பஞ்சுடன் மஞ்ச தான மஞ்சத்தில் படுத்தல் போலே
வெஞ்சிதர்த் தானத் தேற்றி வெவ்வழல் மாலை போர்த்தார்
அஞ்சன விழிக்கா மாட்சி அருளினால் இங்கோர் பூதம்
துஞ்சிய பிணத்தை வந்து தூக்கிஆ காயத் தூடே (34) 1592
கொண்டெழுந் தனவால் இப்பால் கொம்பினை இழக்கப்பட்ட
வண்டலர் கூந்தல் மாதும் வணிகனும் மன்னன் செய்த
மிண்டிறற் பழியை நாடி வெந்துயர் அடைந்து விம்மிக்
கண்தரு புனலில் ஆழ்ந்து கரைந்துநைந் தாவி சோரும் (35) 1593
இருசிறை இழந்த புள்போல் இரங்கியே அலம்வந் தேங்கி
எரியினில் வீழ்ந்து மாய்ந்தார் இவள்கண வனைமுன் தேடித்
துருவியே கொணரச் சென்ற தமையனும் துணைவ னோடே
திரைவளர் பதியை நீங்கித் திருவளர் காஞ்சி சேர்ந்தார் (36) 1594
அவர்களும் இங்ஙன் உற்ற அரும்பழி கேட்டு வல்லே
தவம்முயன் றரிதின் பெற்ற தவர்கள்இத் தன்மை காணா
துவர்கள்முன் உய்ந்தார் அந்தோ உறுதுணை யாக உய்த்த
இவர்களும் இவளால் அந்தோ இறந்தனர் வாய்மை யாலே (37) 1595
உயிர்கொடுத் துறுதியான புகழ்பெறும் உரவோ ரோடும்
கயல்விழி மங்கை யோடும் கனலியில் எய்தி நாமும்
செயிர்அறும் உடலை நீத்துச் சேர்வதே திடம்என் றுன்னிப்
பயில்உடம் பதனை மாய்த்தார் பாவையாள் ஒருத்தி யாலே (38) 1596
தீவினை புரிந்த வேந்தன் செய்கையால் ஐவர் மாய்ந்தார்
பாவியாம் மன்னன் மாதை ஈமத்தில் படுத்த மற்றைக்
காவிநேர் விழியாள் வேந்தன் கலந்திடக் கவன்றான் என்னா
ஆவியில் உறவு கொண்டு கலப்பதற் கணுகல் போலே (39) 1597
திறிஅத்தி வேந்தைச் சேரத் திகைத்துநன் மதிம யங்கிப்
பிறிவுற்ற மானபோல் எய்திப் பிதற்றிநாக் குழறி எய்த்தே
எறியற்றி அலையில் எய்தும் துரும்பென இடர்உ ழந்து
பொறிஅற்ற பாவி நானே என்றெழும் போகும் மீளும் (40) 1598
கோஎனும் இவன்செய் கின்ற கொடுமைக்குத் தக்க தீதோ
சாவினில் அதிகம்ஆன சங்கடம் சாரும் என்று
யாவரும் இசைக்கக் கேட்டே யாதுசெய் குதும்நாம் என்னப்
பூவினில் வீழும் சோரும் புரிகுழல் தன்னைத் தேடும் (41) 1599
மன்னவன் வருத்தம் தீர மந்திரி மார்மற் றுள்ளோர்
என்னநாம் செய்தும் என்னா இருபிறப் பார்இ ருக்கிற்
சொன்னஅப் படியே செய்து துகளினைத் தீர்ப்போம் என்ன
முன்னவர் தமைஅ ழைத்து முன்னம்இப் பாவம் செய்தார் (42) 1600
தீர்ந்தவர் உளர்கொல் என்னத் திருமறை யோர்கள் செப்பும்
காந்தழல் வேள்வி செய்து கபிலையைப் பனவற் கீந்து
பாந்தமாய் அன்னம் சொன்னம் பலதெச தானம் பண்ணி
ஆய்ந்தவர் பரிகா ரத்தின் விதிப்படி ஆற்றின் தீரும் (43) 1601
என்றஅப் படியே செய்தார் இவ்வினை நீங்கல் காணார்
கன்றினை இழந்த ஆன்போல் கதறுவான் கற்பி னாளைக்
கொன்றஇப் பழிக்குத் தீர்வு குரவனால் தீர்கில் அன்றி
நின்றிடல் அரிதென் றெண்ணி நிருபனோ டெழுந்து போந்தார் (44) 1602
ஆசிரி யனைப்போய்த் தாழ்ந்திவ் அரும்பிணி அகற்ற வேண்டும்
நேசனே என்று கூற நிமலையால் தீர்தல் அன்றிப்
பேசிடற் கரிய பாவப் பெண்பழி மற்றோ ராலே
வீசிடத் தகாதென் றெண்ணி வேந்தனை அழைத்துக் கொண்டு (45) 1603
அறம்திகழ் ஆசான் தானே அம்பிகை தனைப்ப ணிந்து
சிறந்தகா மாட்சி தேவி திருமுன்னர் எய்தி இந்தத்
தறும்பிணி தீர்க்க வேண்டும் சங்கரி யேஎன் தாயே
நிறம்தளிர் மேனி யாளே நித்தில நகையாய் போற்றி (46) 1604
காரணி அமிர்த ரூபி கவுரிகா மாட்சித் தேவி
பூரணி இமய ராச புதல்வியே புனிதர் பாகத்
தாரணி அகிலம் ஈன்ற அம்பிகை அகிலம்உண்ட
நாரணற் கிளைய மாதே நங்கைஉன் அபயம் நானே (47) 1605
பரித்திட வேண்டும் என்று பன்முறை பரவி நின்றே
அரித்தடம் கண்ணி நீயே தீர்த்திடில் அன்றி வேறே
உரைத்திடப் புகல்ஒன் றில்லை வேந்தற்கென் றுறுதி கொண்டு
விரைக்கம லங்கள் போற்றி விசனத்தின் மேவி னாரே (48) 1606
சிலபகல் கழிந்த பின்பு திருவுளத் திரங்கித் தேவி
நலம்மலி குரவோன் கேட்க நவிலுவாள் கனவில் தோன்றிக்
குலமக ளுடன்ஐந் தோரைக் கொன்றமன் னவன்தன் பாவம்
பலபகல் எரிவாய்க் கும்பி நரகிடைப் பயின்றிட் டாலும் (49) 1607
கழித்திடாப் பழிக்கு நம்பால் கரைந்தனை ஆத லாலே
செழிந்திடச் செய்தும் என்னாத் தீவினை தீர ஒன்று
வழங்குதும் எனவி ழித்தான் மன்னனை நோக்கும் போதில்
அழன்றகுஞ் சியதோர் பூதம் பிணத்தினைக் கொடுவந் தங்கண் (50) 1608
அரசன்தன் சிரசில் ஏற்றி அகன்றது போலும் முன்னை
உரைசெயற் கரிய துன்பத் துணைவிலும் பதின்ம டங்காய்
விரைசெறி தாரான் எய்தும் வேதையைக் கண்டு வேந்தன்
குரவனும் துயரம் எய்தி அன்னையைக் கும்பிட் டேத்தி (51) 1609
சந்நிதி முன்பு நின்று தையல்அன் னையைத்து திப்பான்
முன்அறம் வளர்த்த தேவி அல்லையோ முந்நூல் மைந்தன்
மன்னுபா தகத்தைத் தீர்த்து வருபழிக் கஞ்சும் நாதன்
தன்னுடன் தீர்த்தல் பொய்யோ சாற்றுநீ இரங்க வேண்டும் (52) 1610
பெருநிலம் பரிக்கும் கோலான் பிணம்பரித் திருந்த இன்னல்
வருவினை களைவாய் என்றான் பிணமும்ஓர் வவ்வி பற்றி
முருகலர் தாரான் சூட்டும் முடியினில் உடும்பு போலாய்க்
கரைஇலாத் துயரம் எய்தும் பொழுதினில் கவுரி பின்னும் (53) 1611
எய்ப்பிடத் தினில்வைப் பென்ன இன்னும்ஓர் உறுதி கூறும்
திப்பிய குரவ கேண்மோ திருவளர் காஞ்சி மன்னன்
அப்பிணம் சுமத்த லோடும் அவனுடன் நீயும் ஏகிப்
பைப்பணி சுமந்த பாரில் பகீரதி முதலாம் தீர்த்தம் (54) 1612
எங்கணும் ஆடி அந்நீர் அஞ்சடை இறைவன் கோயில்
தங்கிடம் பணிந்து தாம்ப்ர வன்னிசேர் மருதின் கீழ்சார்
முங்கிடக் குணபம் பூவாய் முந்தியே மிதத்தில் காண்டும்
அங்கனம் இவன்தன் பாவம் அகன்றிடக் கடவ தென்ன (55) 1613
அந்தர வாணியாலே அன்னைகா மாட்சி கூற
வந்தனை செய்து வேறு வசனிக்க மாற்றம் இல்லை
இந்தவெங் கோலத் தோடே இறைவனுக் கிமவான் செல்வி
தந்தஉத் தரவால் தீரும் தாழ்வில்லை என்று நேர்ந்து (56) 1614
தேசிக னுடனே மன்னன் சிறந்ததம் பதியை நீங்கிக்
காசியில் எய்திக் கங்கை முதல்உள கவின்கொள் தீர்த்தம்
மாசுநீங் கிடவே ஆடி வல்வினை தீர வேண்டி
ஈசன்மெய்ப் பதிகள் எய்தி இறைஞ்சியே பணிந்து போற்றி (57) 1615
வேறு
அங்கண் அகன்று நருமதைகா ளிந்தி கோதா விரியமுனை
துங்க பத்ரி காவேரி தோன்றிக் கிடக்கும் திக்கிடையே
சங்கை இல்லாத் தீர்த்ததலம் எல்லாம் சார்ந்து தண்பொருந்தம்
பொங்கு தீர்த்தப் புனல் கண்டார் புணர்ந்த பாவ வினைவிண்டார் (58) 1616
புடைமா மருதின் குணபாலில் போந்தார் புயல்சூழ் சோலைகளும்
தடம்நீ டியதண் டலைவனமும் சார்ந்த கருப்பஞ் சாறொழுகிக்
கடம்நீ டியமுள் புறக்கனியில் கலந்த சுளையைச் சேறாக்கி
இடம்நீ டியதண் வயல்விளைக்கும் எழிலார் பதியில் இறைகோயில்(59) 1617
கண்டு நமது பவம்இங்குக் கரக்கும் என்னக் களிப்பெய்தித்
தொண்டர் ஆடும் துறைஎய்திச் சுமையாம் பிணத்தைத் தாங்கிவரும்
வண்தார் இறைவன் மூழ்கிடலும் வனிதைப் பிணமே மலர்ஆகித்
தண்டா நீரில் மிதந்திடலும் தாங்கா உவகை தலைக்கொண்டார் (60) 1618
குரவோன் மூழ்க அவன்அடியில் குறுகி மன்னன் கும்பிட்டுக்
கரவாக் காத லுடன்ஆடிக் கவலை வெகுநாள் உற்றதெலாம்
பரைகா மாட்சி அருளால்எம் பாவம் தீர இப்பதியை
விரவிப் படிய நேர்ந்திடலால் வினைநீங் கினன்என் றுளம்மகிழ்ந்து (61) 1619
கரைஇ லாத மகிழ்வுடனே கரையில் ஏறிக் கறைமிடற்ற
பரனை ஏத்திப் பதம்பரவிப் பழித்தான் செய்யும் வினைப்பவம் இத்
தரையில் நீங்கப் பெற்றனனால் தலத்தில் அதிகம் இவைஎன்று
விரைஆர் மலர்கள் கொடுவந்து விமலற் போற்ற வேண்டும்என (62) 1620
தலத்தின் மகிமை மிகஎண்ணி தணவாத் துயரப் பெண்பழிமுத்
தலத்தும் தீரா ததனைஇந்தத் தலத்துத் தீர்த்த தயவுபுரி
நலத்த கங்கா தரற்போற்ற நவைதீர்த் தாண்ட நறுமலர்சேர்
சலத்த சடையும் கரந்தென்னைத் தான்ஆண் டருளும் சற்குருவே (63) 1621
ஈசன் வடஆல் நீழல்கீழ் இருந்த கோலம் கரந்தருளி
ஆசான் ஆக எமைஆள அருணம் காட்டி அது பிடிக்க
மாசில் மானே எனவந்து வடிவம் காட்டி மானிடமாய்
தேசு பொருந்த வந்தருளும் சிற்சற் குருதே சிகவாழ்வே (64) 1622
ஆசா பாசத் தெனைப்பற்றும் ஆபத் தேக அருள்செய்த
ஆசா ரியனே அன்றிஒரு கருமம் இல்லை அவனாலே
ஆசா னதுநீங் கிடும்அன்றி அரனால் இயற்றும் அனைத்தறிவும்
ஆசா ரத்தால் பூசைபுரிந் தரனைப் போற்றப் பெறுவதுவும் (65) 1623
எல்லாம் குரவ னால் அளிப்ப தன்றி உலகத் திருவினைக்கு
நல்ஆ றுரைத்துப் பக்குவத்தின் வழியே நடத்தி நன்மைதரப்
பொல்லாங் குளதெல் லாம்கடிந்து போதம் கொடுத்துப் புனிதன்அருள்
வல்லார் ஒப்ப மாட்சிதரும் குரவன் அருளே வலியதென (66) 1624
ஆசா ரியனைத் துதிசெய்திவ் அரன்அர்ச் சனையை ஆற்றுதற்குப்
பூசா நியமத் துறும்வழியைப் புகல வேண்டும் எனப்போற்றத்
தூசாய் யமுனை நீர்உடுத்த தோன்றல் குரவோன் சுருதிவழி
பேசா நிற்கும் விதிஉரைத்தான் பிறைசூ டியைப்பூ சித்திடவே (67) 1625
அரசன் வேண்டு வனஇயற்ற ஆசான் அர்ச்ச காளுடனே
சுருதி கூறும் விதிவழியே சுருதி நாதன் தனக்குவப்பாய்
வரைவி லாத அபிடேக மாலை சாந்தம் வகைசார்ந்து
விரைசேர் நெய்வே தனம்அடைக்காய் வேள்வி வில்வ அர்ச்சனைகள் (68) 1626
ஈரெட் டான உபசாரம் இயற்றி இறைவற் கினிதாகச்
சீர்எட் டியதோத் திரம்உரைப்பார் செல்வர் தேவர் தமைப்புரந்த
கார்ஒட் டியநேர் மணிகண்டா காலற்காய்ந்து கான்முளைக்கு
வீரட் டத்தில் விதிஅளித்த விமலா பரிவிண் ணவர்கோவே (69) 1627
இந்நாள் என்னைத் துயர்செய்திரி அத்தி பாவ இடர்அகலத்
தன்ஆ தரவு தந்தாண்ட தரும் மூர்த்தி தாரணியில்
பொன்நா டென்னும் இத்தலபுண் ணியதீர்த் தத்தில் பிணம்பூவாய்
மின்னா நின்ற வகைசெய்த விமலா சரண்விண் ணவர்கோவே (70) 1628
நாதா சரணம் எனை ஆண்ட நம்பா நறிய நளினமலர்ப்
பாதா சரணம் பகைதீரப் பணியும் மதியும் அணிந்தசடைப்
போதா சரணம் பூவணமா நகரில் பூந்தே வியைப்பொருந்தும்
நீதா சரணம் சரணம்என நிருபன் துதித்து நின்றனனால் (71) 1629
வேறு
புரவ லன்செய் பூசனைக்கு வந்த வள்ளல் புரவலன்
பரிவு கண்டு துதியினுக்கி ரங்கி யேபரித்திடக்
கருதி யேஇ லிங்கம் நின்று கதிர்எ ழுந்த தென்னவே
வருணம் நான்கில் முன்பு வந்த மாத வத்தர் போலவே (72) 1630
புண்ட ரத்த நுதலும்மெய் புனைந்தநூல் புரண்டதோள்
குண்ட லத்த கோலம் வாய்ந்த குறுநகைக்கு ணத்துடன்
அண்டர் தொண்டர் அன்புவாய்ந்த அவர்கள் உள்ளம் ஆகிய
முண்ட கத்த முந்து பாத முண்ட கத்தர் முன்நின்றார் (73) 1631
அடிபணிந்து துதிசெய் கின்ற அரசை நோக்கி அடிகளாய்
வடிவு கொண்ட விமலர் கூறும் மன்ன நீயும் வழிபடும்
ஒடிவில் பூசை துதியினுக் குவப்பினால் மகிழ்ந்தனம்
படியில் வேண்டும் வரம்எ வன்ப கர்ந்தி டென்ன மொழிகுவான் (74) 1632
அய்ய என்நி மித்தம் ஆக அவமிருத்தி எய்தியே
நைத லோடும் ஐவர் வாழ்வு நலிய வேஇ றந்தனர்
உய்யு மாறு புரிதல் வேண்டும் உந்தி நீரில் ஒழுகியே
தையல் மேனி பூஅ தாக எய்தி டச்செய் தகைமையால் (75) 1633
தென்தி ருப்பூ வனம்அ தாய்ச்சி றந்தி ருக்க இந்நகர்
கொன்றை வைத்த குழக னேநி னக்கும் நின்கொ டிக்கும்மெய்
துன்றும் இத்து றைக்கு நாமம் தோன்று பூஅ தாகவே
நன்று நல்க வேண்டும் என்ன நாதன் நல்கி னான்அரோ (76) 1634
ஆன தால்அ வற்கு நாமம் அரியபூவ னேசுரர்
தேன்அ தான மொழியி னாள்பூந் தேவி செல்வம் ஓங்கிய
தான மும்தென் பூவனம் தழங்கு தீர்த்தம் பூவனம்
மான்உ லாவு கையர் தந்த வரம்அ தான தென்றுமே (77) 1635
வேறு
வரம்அளித் ததனை நல்க மறையவன் நிதமும் போற்றிப்
பரவிய துர்க்கை தன்னைப் பார்த்திந்தத் தீர்த்தத் தின்பால்
விரவிய மலர்கள் மேலே மிதக்கும்அம் மலரை வாரித்
தருகுவை மலர்யா தென்றால் தையல்தன் உருவமாகும் (78) 1636
யாதெனில் விபரம் சாற்றி யானைவேந் திவன்த னாலே
சாவது கருதிச் செற்ற சான்றவர் ஐவர் தம்மில்
பூவில்நீர் ஒருத்தி அந்தப் பூவினுள் உதிக்கும் போக
மூவர்கள் வணிகர் ஒர்பெண் முயன்றிவன் அளிப்பாய் என்றான் (79) 1637
அருள்செய வேண்டும் என்றான் ஆற்றிடைத் தீர்த்தப் பாங்கர்
மருவியே மிதக்கும் பூவை உய்த்திடில் வனசப் பூவில்
திருஎன வருவாள் அந்தத் தீர்த்தத்தை நோக்கிக் கூவ
வருவார்கள் மற்றையோரும் வழங்குவை வல்லை என்றான் (80) 1638
துர்க்கையும் உடன்எ ழுந்து சோதியார் அளித்த வாறே
மிக்கநீர் தன்னில் எய்தி மிதந்திடும் பூவை வாரி
அக்கரை தனிலே எய்தி அழைத்திட அவரும் போந்தார்
தக்கநீர் குளித்தெழுந்த தன்மைஒப் பாகத் தானே (81) 1639
இவர்களோ டேகி நாதன் இணைஅடி பரவி நின்றாள்
அவர்களும் பணிந்து நின்றார் அலரினை நீலி அங்கண்
சிவசன்னி தானத் துய்க்கச் சிவன்அருட் பார்வை யாலே
நவைஇலாக் கன்னி வந்து தோன்றினாள் நன்றிப் பூவில் (82) 1640
தையலும் எழுந்து போற்றத் தம்பரி சொழிந்து சார்ந்தோர்
உய்வகை இவண்வந் துற்ற அதிசயம் ஓர்இ டத்தும்
தெய்வதம் இவர்போல் காணோம் சிறியதாம் கைம்மா றென்னே
பெய்திடு முகிலுக் குண்டோ பிருதுவி என்று பேணி (83) 1641
பாததா மரைகள் போற்றிப் பார்த்திபன் பணிந்தன் பாகப்
போதகம் உரித்துப் போர்த்த புயங்களுக் கபயம் பொற்பார்
மாதொரு பாகத் துற்ற வள்ளலுக் கபயம் மன்னும்
சீதள மதிஆர் சென்னித் திருமுடிக் கபயம் சேர்க (84) 1642
பூதநா யகனே போற்றி பூவண நாதா போற்றி
கோதைபூந் தேவி பாகா குணமெனும் குன்றே போற்றி
மாதுகா மாட்சி தேவி வழங்கிய கருணை யாலே
பூதலம் எல்லாம் போந்த புன்மையேன் பாவம் போக்கி (85) 1643
இத்தலம் அதனில் உய்ய இடர்கெடுத் தென்னை ஆண்ட
முத்தனே போற்றி என்ன முகிழ்த்தகை முடிமேல் ஏற
நைத்தஆ னந்த வெள்ளம் நயனங்கள் பொழியத் தேகம்
நெய்த்திடும் புளகம் பொங்கி நிமலனைப் போற்றி நின்றான் (86) 1644
பூவினில் உதித்து நின்ற சண்பக வல்லி போந்து
பாவினான் என்னால் உற்ற பரிசிவை வேந்தனாலே
மேவிய செயலை எல்லாம் மறந்துவிண் ணவனைப் போற்றத்
தாவதன் போல்வந் தெங்கோன் அவர்கள்மேல் தயவு கூர்ந்து (87) 1645
அன்புளம் ததும்பி நின்றே அபயம்தந் தருள்பு ரிந்தே
இன்பம்உற் றெல்லீர் நீவிர் இந்நகர் வதிந்தப் பாலநும்
பொன்பதி உற்றுத் தோழன் பொலிவெய்திப் புகழால் வாழ்வீர்
பின்புநம் உலகம் எய்திப் பேரின்பம் உறுவீர் என்றார் (88) 1646
அன்னவர் விடைபெற் றேக அரசனை நோக்கிப் பாவம்
உன்னைவிட் டகன்ற தாகத் திரிஅத்தி உறவுக் கொன்று
பன்னியின் பரிகா ரத்தால் பகர்தும்நாம் இதன்கி ழக்குத்
தன்நிகர் கன்னி பேரால் தலம்ஒன்று செய்து தன்னில் (89) 1647
பொன்னினால் அவளைப் போலே பொற்புறும் உருவுசெய்து
மன்னுசண் பகமா தென்னும் பெயர்இட்டு ப்ரதிட்டை செய்து
துன்னும்ஆ லயமும் செய்து சுபமிகப் பூசைக் காற்றி
அந்நக ரத்தில் நூலோர்க் குவளகம் அமைத்துப் போற்றி (90) 1648
அவர்கட்கு வேண்டும் செல்வம் அமைத்தவண் நிறுவி இந்தக்
குவலயத் தரனுக் கன்பாய் ஆலயம் கோலிச் செய்து
நவம்நிகழ் குடியும் ஓம்பி நால்வகைச் சாதி அங்கம்
உவமைஇல் திருநாள் வீதி உறுதிசேர் தரும சாலை (91) 1649
குறைவிலா தியற்றின் பாவக் குறைக்கிவை பரிகா ரம்தான்
இறைவனே செய்திப் பாரில் இன்னும்நல் வரங்கள் பெற்றுப்
பிறைவளர் மாடம் ஓங்கும் காஞ்சிமா நகரம் பேணித்
திறைகளும் கொண்டு பின்நாள் சிவபுரி சேர்வை என்று (92) 1650
சங்கரன் உரைத்துச் சோதி ததும்பிய இலிங்கத் தெய்தத்
திங்களங் குடையான் போற்றிச் செப்புதற் கரிய இன்பம்
பொங்கிய கடலில் ஆழ்ந்து புளகம்உற் றினிஓர் போகம்
எங்களுக் குளதோ பெற்றேன் என்றிறும் பூதி னோடும் (93) 1651
தோத்திரம் உரைத்துச் சிற்ப சூத்திரப் படிபொற் கோயில்
சாத்திர முறையே செய்யத் தகும்வினை ஞரைவ ரித்துப்
பூத்திகழ் வனத்தார் சொன்ன புதுமையை ஓர்ந்து போற்றிப்
பார்த்திபன் மகிழ்ச்சி கூர்ந்து பணிசெயும் பான்மை பூண்டான் (94) 1652
இவைஎலாம் செய்யத் தக்க இரும்பொருள் வரித்துச் செய்வான்
சிவையுடன் இனிதிருக்கும் சிறந்தபூ வனத்தில் நாதர்க்
குவமைஇல் மண்ட பங்கள் ஓங்குசுற் றால யங்கள்
நவம்திகழ் கோபு ரங்கள் நாற்புற மதில்கள் மற்றும் (95) 1653
வேண்டுவ அமைத்து வீதி விழாஅணி மாட கூடம்
பூண்டதெற் றிகளும் செய்து பூவண நகரும் செய்து
காண்தகு வேள்விச் சாலை கதிதரு நியம சாலை
நீண்டகால் இயற்றிக் கீழ்பால் நிலத்தில்ஓர் நகரம் தன்னை (96) 1654
சத்தியின் பெயரால் கண்டு சண்பக வல்லி என்னும்
நித்தியல் விளங்கத் தானே பொன்னினால் நிருமித் தந்த
உத்தம உருவைப் போற்றி ஓங்கும்ஆ லயமும் செய்து
மெய்த்தவே தியர்கட் கில்லம் விதித்துவேண் டுபவும் செய்து (97) 1655
சத்திமா நகரில் சத்தீ சுரனையும் தாபித் தங்ஙன்
நித்தியன் கோயில் செய்து நிருமலன் தனக்கு வேண்டும்
உத்தம வகைஇ யற்றிச் சொல்நிலைஉய் யானம் செய்து
பத்தியாய்ப் பின்னும் வேண்டும் பணிகளும் செய்து பண்பாய் (98) 1656
அன்னசா லைகள்நீர்ப் பந்தர் அறப்புறம் இயற்றி ஐவர்
தன்னைஈன் றளிக்க என்ற சங்கரன் அருளால் தந்த
கன்னிகை தனக்கும் வேறு கவின்கொள்ஆ லயம்இ யற்றிப்
பின்னைநீர் உலக மன்னன் பிஞ்ஞகன் தன்னைப் போற்றி (99) 1657
திருவளர் பூவணத்தில் சிலபகல் வதிந்து காஞ்சிப்
பெருநகர் எய்திச் செங்கோல் பெருக்கியே இருந்தான் அங்கு
மருவிய வணிகர்தாமும் வரதனைப் போற்றித் தங்கள்
குருமணி மாடம் ஓங்கும் குலப்பதி தன்னில் எய்தி (100) 1658
தனதன்போல் வாழ்ந்து பின்நாள் சங்கரன் பதவி சார்ந்தார்
முனைவன்தன் அருள்நி னைந்து மூவுல கோரும் போற்றித்
தனிநகர்ப் பூவ னேசர் சரண்பணிந் தன்பி னாலே
மணியதோர் துர்க்கா தீர்த்தம் வளர்புட்ப தீர்த்தமாலோ (101) 1659
அக்கினி வன்ம தீர்த்தம் அன்றிநால் தீர்த்தம் அங்கண்
மிக்கதோர் இடப தீர்த்தம் விளங்கிய வருண தீர்த்தம்
முக்கிய முனிவர் தீர்த்தம் மூலதீர்த் தங்கள் ஆடித்
தக்கபூ வணனைப் போற்றித் தம்பதி சார்கின் றாரால் (102) 1660
அகத்திய முனிவன் போந்தே அரியபூ வணத்தில் உற்ற
மகத்துவ தீர்த்தம் ஆடி வாலைய வரனைப் போற்றி
ககத்தருப் பதியில் உற்றான் கஞ்சமா மலரோன் போற்றி
இகத்தினில் வரங்கள் பெற்றான் இதன்புகழ் எண்ணு றாவே (103) 1661
புண்ணியம் நிறைந்து விம்மும் பூவண நகரில் என்றும்
நண்ணிய விசேடம் ஈதால் நயந்தவர் படித்தோர் கேட்போர்
எண்ணிய பதவி சேர்வார் இத்திறம் உரைத்த யோகி
அண்ணல்வாழ் அரிகை மேவும் கதையினை அறையல் உற்றான் (104) 1662
- புட்ப வனப் படலம் முற்றும் -
20. அரிகைப் படலம்
திருவளர் ஆரிய நாதர் செய்கையைக்
கருதிய காதையைக் கழற வெள்ளநீர்
தருமதம் பொழிந்தருள் தந்தி மாமுகத்
தொருவனை நாள்தொறும் உளத்தில் உன்னுவாம் (1) 1663
நாரணனும் நான்மறையும் நளினம் மேவும்
நான்முகனும் வானவரும் நாகம் மேய
வாரணனும் மனத்தாலும் அளவை யாலும்
வாழ்த்துதற்கும் எட்டாதார் அரிகை மன்னும்
காரணகா ரியம்கடந்த கருணை நாதர்
கவுரிபெரி யவள்பாகம் கலந்த யோகர்
ஆர்அணிந்த வேணிதனில் அறுகு வேய்ந்த
அரியநா யகர்பாதம் அகத்துள் வைப்பாம் (2) 1664
சுரிகுழல் கவினும் தோடார் சுந்தரக் குழையும் சோமன்
பரவிய முகமும் வாயும் பைந்தொடிக் கரமும் பச்சை
உருவமும் தனமும் பொற்பட் டுடையும்பூம் பதமும் ஓங்கும்
பெரியநா யகியார் பாதம் பெட்புடன் பேணி வாழ்வாம் (3) 1665
வேதவி யாசர் சுகமுனி வேண்ட
விளம்பிய காதையை விரிவாய்
ஓதுதல் வேண்டும் சூதமாமு னியே
ஒப்பிலா நின்பதம் பணிந்தோம்
ஆதர வுடனே என்றலும் முனிவன்
அம்பிகை கணவனைத் தொழுது
மாதவர் நேமி சாரணி யத்தோர்
தமக்குரை செய்தனன் மகிழ்ந்து (4) 1666
அச்சரி தையினில் தெளிந்தவர் புகன்றார்
அருந்தவச் சங்கமா யோகி
பச்சைமே னியன்போல் பரித்திடும் வீர
சேனற்குப் பகர்ந்தனன் அதனில்
நச்சர வணிந்த அரிகைநா யகனை
நச்சழல் தீர்ந்திட வேண்டி
நிச்சலும் போற்றி நேமியோன் பரவ
நின்றதை நிகழ்த்துதல் செய்வாம் (5) 1667
தேவர்கள் அசுரர் மற்றைத் திசைஉளோர் திருமால் இந்த்ரன்
பூவில்வாழ் கின்ற புத்தேள் புண்ணிய இருடியோரும்
தாவிலா அமுதம் துய்க்கப் பாற்கடல் தாழி தன்னில்
மேவுமந் தரம்மத் தாக மிருகவா சுகிநாண் ஆக (6) 1668
சந்திரன் அடைய தாகச் சார்ந்திடும் தகுவர் ஓர்பால்
அந்தரர் ஓர் புறத்தும் அணைத்துவா சுகிபா சத்தால்
உந்தவே கடைய நின்றார் உமையவள் கணவன் தன்னைச்
சிந்தனை செய்யா தங்கள் திறத்தினால் திருக வாங்கி (7) 1669
கடைந்திடும் போதில் அங்கண் கட்செவி கடைவாய் நஞ்சம்
உடைந்திடப் பிரள யத்தில் உவரிநீர் உருத்தால் ஒத்துப்
படர்ந்திடக் கண்ட தேவர் பதைபதைத் துடல்து டித்தே
அடைந்தனர் கயிலா யத்தில் அடைக்கலம் என்று தாழ்ந்தார் (8) 1670
அண்ணலே போற்றி நின்னை அன்றியே நாங்கள் யாரும்
பண்ணவ ருடனே கீர வேலையிற் பதமுன் கண்டே
உண்ணவே எண்ணல் நன்றால் உய்விலாச் சிறியோம் செய்த
திண்ணிய பிழைபொ றுத்துத் திருவுளம் இரங்க வேண்டும் (9) 1671
பாலர்கள் செய்யும் குற்றம் மேலவர் பரிக்கல் பாற்றே
நீலமால் முதலோர் எண்ணும் நினைவொன்று விளைவ தொன்றே
சீலமாய் இயற்றல் ஒன்று தெய்வத்தால் நடத்தல் ஒன்றாம்
சாலஐ யுறவொன் றில்லை முன்னவர் சாற்றும் சொல்லே (10) 1672
அப்படி ஆன தாலே அறிவிலா தியற்றும் எங்கள்
ஒப்பிலாப் பிழைபொ றுத்தே உய்ந்திட அருள வேண்டும்
திப்பிய முதலே போற்றி சிவதயா பரனே போற்றி
பைப்பணி அணிந்தாய் போற்றி பரமனே போற்றி என்று (11) 1673
முறையிட்ட சும்மை கேட்டு முனிவுடன் வந்த நஞ்சைப்
பிறையிட்ட சடையோன் சித்தத் திரங்கியே பிரப்பக் கோலில்
உறையிட்ட நந்திக் கேவ உழுந்தள வுய்க்கக் கொண்டே
கறையிட்ட கண்டம் காட்டிக் கடவுளர் தம்மைக் காத்தான் (12) 1674
மால்அயன் வணங்கி நின்று வாரியில் பிறந்த நஞ்சம்
சாலவும் எம்மைச் சீறிச் சார்ந்தன தீர்த்தாய் இன்னும்
கால்கின்ற விடத்தின் காங்கை யால்உடல் கறுத்துக் கன்னி
மேல்உள வினையி னாலே வருத்திடும் விளைவு தீர்ப்பாய் (13) 1675
செயல் அழிந் துன்னை அன்றிச் செய்வினை திறம்பிடாதோ
உயிர்உண வந்த நஞ்சை உழுந்தள வாக்கி உண்டு
தயவினால் பின்னும் காத்தாய் என்றிடல் சழக்க தாமே
கயிலைநா யகனே கைம்மா றியாதெனக் கழல்ப ணிந்து (14) 1676
செக்கர்அம் சடையில் பாம்பும் திங்களும் அணிந்தாய் போற்றி
முக்கண்எம் பிரானே போற்றி முப்புரம் எரித்தாய் போற்றி
கொக்கிற கணிந்தாய் போற்றி கோமளை பாகா போற்றி
பொக்கவர் மனத்துக் கெட்டாப் பூதநா யகனே போற்றி (15) 1677
சம்புசங் கரமா தேவ சயம்புவே சரணம் போற்றி
உம்பர்கள் தலைவா போற்றி உமைஒரு பாகா போற்றி
நம்பினோர் தம்மைக் காக்கும் நாதனே போற்றி போற்றி
செம்பொருள் துணிவே போற்றி தெய்வநா யகனே போற்றி (16) 1678
காங்கயன் தன்னை ஈன்ற கர்த்தனே விடத்தின் காங்கை
நீங்கிடச் செய்ய வேண்டும் எங்கட்கு நிமலா போற்றி
தாங்கிடல் ஆற்ற கில்லோம் தற்பரா என்றார் தம்மைப்
பாங்கினில் அழைத்துக் கூறும் பண்பினைப் பகரல் உற்றாம் (17) 1679
மாலயன் தன்னைக் கொன்றை மாலையன் அழைத்துச் சொல்வான்
ஆலவாய்ப் பணிஅளித்த விடம்இது அழலம் காலும்
ஞாலத்தின் அரிகை என்னும் தலம்அதில் நண்ணி நீவிர்
சூலத்த கடவுட் போற்றத் துலையும் இவ்விட நோய் என்றான் (18) 1680
ஆலத்தை அமுதாய் உண்டு வானவர்க் கருளிச் செய்தார்
வேலையில் பிறந்த தஞ்சம் எமக்குவெவ் வழல்போல் ஆமோ
பாலநேத் திரத்தார் கோபப் பார்வையின் பண்போ அன்றிச
சாலநாம் வருந்தும் செய்கை யாதென எண்ணிச் சார்வார் (19) 1681
கருதியே இருவர் அந்தக் கயிலைநா யகன்அ ளித்த
வரம்நினைந் தமல மூர்த்தி வந்தெமைப் புரக்கும் என்று
சுருதியால் பரவித் தாழ்ந்து சுந்தரன் விடைகொண் டிப்பால்
பரன்உறை தலங்கள் போற்றி அரிகையின் பால்உற் றாரால் (20) 1682
முகில்செ றிந்தபைந் துணர்மலர்ச் சோலையும் முகிழ்வாய்
நகில்செ றிந்தநா ரியர்பயில் வளங்களும் நதிசூழ்
அகில்செ றிந்தசந் தனவரைத் தென்றலும் அழகார்
துகில்செ றிந்திடு கொடிகளும் மாடமும் துலங்கும் (21) 1683
ஏட்டி தழ்க்கம லங்களும் காவியும் இணைந்து
காட்டும் ஓடையும் கனங்குழை மாதர்கள் கீத
நாட்ட மும்திகழ் நாவலோர் நால்வகைப் பாவால்
சூட்டு கானமும மும்முர சோதையும் தொனிக்கும் (22) 1684
என்றருள் வசனம் கேட்டே இவ்வுரை யினில்எ மக்குக்
கொன்றையன் விடம்தீ ராதே குவலயம் தனில்ஏ கென்ற
வென்றியை அறிகி லேமால் எனவிதியுடனே மாலும்
நன்றெனத் துவரைஎய்தி அரன்செயல் நவிற்று கின்றார் (23) 1685
அதற்குமேல் திசையில் தென்பால் கயிலையை அகன்று போந்த
உதக்கினில் தரளம் சிந்தி உறும்கரை யினில்விளைந்த
நித்திரள் கன்னல் செந்நெல் நித்திலத்துடனே வாரிப்
பதிக்கணில் வீசுகின்ற பொருநையில் படிந்து போற்றி (24) 1686
மாட மாளிகை மந்திரம்உ வளகம் சதுக்கம்
கூட சாலைகள் கோபுரம் தெற்றிகள் குழுமி
ஆட ரங்கமும் அறம்பல இயற்றிய அணிசேர்
பீடு தங்கிய சாலையும் பிறங்குபே ரூரில் (25) 1687
வரைவ ளங்களும் மலைப்புற முல்லையின் வளமும்
திரைவ ளங்களும் செறிந்தன வீதியின் சிறப்பும்
உரைஇ றந்தன உம்பரும் இம்பரும் உலவும்
கரைஇ லாச்சிறப் போங்கிய நகரினைக் கண்டார் (26) 1688
ஊர்தி நின்றிழிந் துவப்புடன் திருஎல்லை வணங்கி
நீர்தி கழ்ந்திடும் வேணியன் நிலையம்அ தெய்தித்
தேர்தி கழ்ந்திடும் திருமுன்றில் பணிந்துசிந் தனையோ
டார்தி சழந்தமெய் அன்புடன் சந்நிதி அணுகி (27) 1689
பரவி அட்டபஞ் சாங்கமாய்த் தாழ்ந்தெதிர் பணிந்து
சிரசின் மேல்கரம் குவித்துக்கண் துளித்திடத் திளைத்தே
விரவு காதல்மெய் புளகம்உற் றிடவிதி மாயன்
கரம தாசலம் உரித்திடும் கடவுளைத் துதித்தார் (28) 1690
முதல்வன் அன்றியே தாங்கள் செய்திறன் எலாம் மொழிந்தார்
அதில் நிகழ்ந்தன அவதிகள் யாவையும் அறைந்தார்
மதிபு னைந்தருள் வளர்சடை மீதினில் வளம்சேர்
நதிபு னைந்தவ னேஅருள் செய்என நவின்றார் (29) 1691
தொண்டர் நாதனை அருச்சனை புரிந்திடத் தொடங்கி
மண்டு காதலில் மஞ்சனம் மதுநெய்பால் முதலாய்க்
கொண்டு சந்தனம் அரனைநி வேதனம் குளம்பால்
தண்ட லைக்கனி வெள்ளிலை தண்புகை மற்றும் (30) 1692
வழுவில் ஆகம விதியினால் பூசித்து மனுவால்
பழுதில் வில்வஅர்ச் சனைசெய்து வேள்வியால் பரவி
எழுநி கர்த்ததோள் இருவரும் இறைஞ்சிமுன் நின்று
மொழிவர் தோத்திரம் முன்னவ முக்கண்எம் பிரானே (31) 1693
போத காரண சரணம் புனித பூரண சரணம்
சீத மாமதி அறுகு திகழ்ந்த வேணிய சரணம்
கோதையாள் ஒருபாகம் கொண்டகோ வேசரணம்
தாதுலா வியநினது பாததா மரைசரணம் (32) 1694
வேதகா ரணவோஎம் வேதனையைத் தீர்க்கவரு
நாதபூ ரணவோமெய் நாதாந்த நாயகவோ
தாதுலாம் கொன்றைபுனை தற்பரா னந்தசிவ
போதவோ புண்ணியவோ புன்மைதீர்த் தெமை ஆள்வாய் (33) 1695
எந்தாய் அகிலம்எலாம் ஈன்றாய் எமைஆள
வந்தாய் நினையார்பால் வாராய் மதியுடனே
கொந்தார் நறுந்தொடையல் கொன்றையாய் கோமளம்சேர்
தந்தாய் புரைசேர் தமியேற் கிரங்காயே.... (34) 1696
விண்ணோர் முதலே விழுப்பொருளே மெய்தெளிவார்
அண்ணா அமுதே அரனே ஒருபாகப்
பெண்ஆர் திருமேனிப் பெம்மானே பெட்புறுநீர்த்
தண்ஆர் சடையாய் தமியேற் கிரங்காயே (35) 1697
வேறு
என்றின்னன துதிகூறி இரந்தே இருவோரும்
பொன்தங்கிய புரிபுன்சடைப் புரம்மூன் றெரிசெய்த
கொன்தங்கிய திரிசூலியைக் குழையாமனம் உருகா
நின்றன்பொடு துதிசெய்திட நிகழ்கின்றவை புகல்வாம் (36) 1698
புகழ்கூறிய இருவோர்தமைப் புரிபுன்சடை அண்ணல்
தகைவாய்அப யம்தந்து கைஅமைத்தே தமதிச்சைச்
சுகவாழ்வில் இருந்தான்அரு குறும்தோகை எழுந்தே
பகவான்தனைப் பணிந்தன்பொடு பகர்செய்தி உரைப்பாம் (37) 1699
பாகத்துறு பரைஅம்பிகை எழுந்தேபர மனைத்தாழ்ந்
தாகத்தொரு வடிவாகிய அமலாஇது போதுன்
தேகத்தரு கேவெம்மை வரத்தக்கன செய்கை
நாகத்துரி உடையோய்அவை நவில்வாய்என நவின்றாள் (38) 1700
மாகத்துற இகலாய்ஒரு வரைநின்றிடப் பானு
போகப்புலின் இலதால்ஒரு புறம்உற்றன போலும்
சோகத்துடன் இருவோர்முனம் தேடித்துரு விடநீண்
டூகத்தழ லாய்நின்றனிர் ஒருகால்அழல் மலையாய் (39) 1701
யாதுற்றன இவைபோல்வன என்றாள்எழில் ஆரும்
போதுற்றனள் துதிசெய்தனள் புரம்மூன்றையும் எய்த
கோதற்றவன் புகலும்குக னைத்தந்தருள் கோதாய்
மாதுற்றிடு புயன்பூமகன் பால்வாரியின் எய்தா (40) 1702
வேறு
அமுதம்கண் டிடமுயன்றார் சாமள விடம்ஆர்ந் தோங்கித்
தமதுயர் மேனி கன்ற தவனனிற் காங்கை சார
எமைஇரும் கயிலை எய்தி ஏத்தினார் தீர்தற் கின்னோர்
தமைஅருள் இத்த லத்தில் வருகெனச் சாற்றி னேம்ஆல் (41) 1703
ஆகையால் இவண்வந் துற்றார் அவர்கள்தம் காங்கை தீர
வாகுடன் அரனைப் பன்னாள் பூசிக்கில் வலிய பாவம்
ஏகிடும் என்றார் நின்ற இறைவியும் எம்பி ரானின்
பாகம்அ துற்றார் காங்கை படர்ந்திடல் ஆற்று கில்லேன் (42) 1704
முன்னொரு காலம் தன்னில் பிருங்குமா முனிவ னாலே
பன்னுமெய்க் கேதா ரத்தில் அடைந்துநின் பாகம் வேண்டிக்
கன்னியில் அரிய தான விரதத்தைக் காப்ப தாலே
மன்னின பாதி மேனி வழங்கினை பெற்றேன் மாதோ (43) 1705
பூவும்வா சனையும் போலும் புனலும்சீ தளமும் போலும்
தாவிலா திருந்தோம் இந்நாள் சாற்றுதற் கரிய காங்கை
நாவினாள் கொழுநன் மாயன் பொருட்டினால் நண்ணிற் றென்றாள்
தேவர்கள் தேவே நல்காய் திருவுளத்திரங்கி என்றாள் (44) 1706
அரன்வடக் கருளும் பூசை ஆற்றிடும் அவர்கள் நீங்கார்
பரிவுறும் துயர்தீர்ந் தன்றிப் பரைஇதன் கீழ்பால் கோயில்
உரிமைகொண் டருள்வாய் இன்னார் நீங்கில்எம் இடத்தில் உற்று
மருவுவை என்றான் தேவி பிரிவது வழக்கோ என்றாள் (45) 1707
என்னலும் ஈசன் கூறும் இவ்வனல் எட்டெட் டாகச்
சொன்னஅப் பதத்தின் காறும் சுடும்அந்த எல்கைக் கப்பால்
பன்னியே வதிவாய் என்றான் பணிந்தந்தப் படியே நின்றாள்
மின்னிடை மகிழ வேண்டி இன்னமும் விதிக்கு மாலோ (46) 1708
நந்தியை நோக்கி நீயும் நாயகி ஆலயத்தில்
முந்தியே உறுவாய் அன்னை மொழிவழி முயன்று முன்னும்
சிந்தனை உணர்ந்தெம் பாலில் தெளிந்தது செப்பென் றோதி
மந்திர மாதர் சூழ விடுத்தனன் மாதை நோக்கி (47) 1709
பூசனை புரிந்து வேண்டிப் போற்றுவோர் நம்பால் வேண்டும்
மாசிலா வரமும் நல்கி வரும்உப சாரம் எல்லாம்
ஈசொரி யேமுன் கொள்வாய் இப்பதிக் கிறைவி நீயே
பேசிடில் பெருமை பெற்றாய் ஆதலால் உனக்குப் பேர்தான் (48) 1710
பெரியநா யகியாம் நம்மைப் பின்னுமோர் உச்சிக் காலம்
பரவுவாய் நீயும் என்று பரமன்அங் கருளிப் போனான்
அரன்அருள் பெற்று நாதன் ஆலய முன்னர் நின்றாள்
இருவரும் பூசை செய்து பெறுகின்ற இயல்பு சொல்வாம் (49) 1711
இருவரும் அநேக காலம் இறைஞ்சிட இரங்கி எங்கோன்
திருவுருக் கொண்டி லிங்கத் தினில்நின்றும் திகழும் செங்கேழ்ப்
பருதிபோல் உதயம் செய்து பாற்கடல் என்னும் பூதி
மருவியே இவர்கள் தம்மேல் மகிழ்ந்தருள் பார்வை யோடும் (50) 1712
செக்கர்அம் சடையும் காள கண்டமும் திகழ்முந் நூலும்
முக்கணும் நான்கு தோளும் மூரிவில் புருவம் நாரி
பக்கமும் அன்பர் தம்மைப் பாதுகாத் திடும்பொற் பாத
நக்கபங் கயமும் தோன்ற நகைநிலா முறுவல் பூப்ப (51) 1713
எழுந்து முன் நின்றான் போற்றும் இருவரை நோக்கிப் பல்நாள்
தொழும்பரி வுடையீர் நுங்கள் தோடமும் சுரமும் தீர்ந்த
செழுந்திரு நன்னாள் இன்னாள் திசைஎலாம் போற்றிசெய்ய
வழங்கிய பதிஇ தாகும் வாரிநஞ் சயில்வ தாலே (52) 1714
நீலகண் டப்பேர் பெற்றேம் நினக்கும்அந் நீலம் போன்ற
ஆலம்போர்த் ததனால் மேனி அந்நிறம் ஆன தாலே
ஞாலத்தோர் கருமால் என்று நவின்றிடு நிலம்உண் டாக
சீலத்த போதன் முன்பு பெற்றிடும் திறத்தி னாலே (53) 1715
அவற்கொன்றும் எய்தா தென்றான் அன்பிரு வடிவம் ஆகச்
சிவப்பரம் பொருளைப் போற்றும் செம்மலீர் இன்னும் வேண்டும்
உவப்புறும் வரம்கேள் மின்கள் என்றலும் உவகை கூர்ந்து
தவத்தர்கள் பணியும் தேவே சரணம்என் றடியில் வீழ்ந்து (54) 1716
நாதனே நினக்கும் இந்த நகர்க்கும்மும் மதத்த நால்வாய்ப்
போதக முகற்கும் திவ்ய புண்ணிய தீர்த்தத் துக்கும்
நீதமாய் எங்கள் பேராய் நிகழ்ந்திட வேண்டும் என்றும்
வேதமந் திரத்தால் பூசை விதிபெறச் செய்நாள் தோறும் (55) 1717
இந்நகர் நீங்கி டாமல் இருந்திரு வோரும் உன்தன்
பொன்அடி பணிய வேண்டும் என்றனர் புரம்மூன் றெய்த
முன்னவன் அருளிச் செய்து மூர்த்தியில் மொழித்தி ருந்தான்
பன்னரும் பலன்கள் பெற்றார் பரவசம் எய்தித் தாழ்ந்தார் (56) 1718
அரியநல் லூர நாதன் ஐங்கரன் தீர்த்தம் என்று
பரமனால் அளித்த வாறே பண்புற நின்ற தென்று
மருமலர் அயனும் மாலும் அர்ச்சித்து வருவ தாலே
தரும்அரி அயன்அர்ச் சிக்கும் தலம்என விண்ணோர் சாற்றி (57) 1719
பூமழை பொழிந்து போற்றப் பொன்நகர்க் கிறையோன் புத்தேள்
தாமரை யோனை மாலைத் தாழ்ந்துற இவர்க ளோடும்
கோமளை தன்னைப் போற்றிக் கோயிலை வளைந்து தாழ்ந்து
தேமலர்க் கொன்றை யானை வழிபட்டுச் செல்வம் பெற்றார் (58) 1720
காங்கையால் அயன்மாற் காகக் கவுரியாள் காமற் காய்ந்தோன்
பாங்கினை அகன்ற பின்பு மற்றவர் பரனைப் போற்றித்
தீங்கினை அகன்று பெற்ற செயல்இவை திருமால் பாதம்
பூங்கமழ் கண்ட கர்ணன் கதையினைப் புகலல் உற்றாம் (59) 1721
கணிகொண்ட கழனி சூழ்ந்த காசியே முதலாய் உள்ள
தணிவிலா தோங்கும் சத்த தலத்தினில் அதிகம் ஆன
பணிவளர் அரவப் பாயல் பண்ணவன் மாயை வாழும்
மணிகண்ட கர்ணன் என்போன் மாயவன் மதம்மேற் கொண்டோன் (60) 1722
செந்திரு மார்பன் வாழும் திருப்பதி எல்லாம் சென்று
வந்தனை செய்வோன் கங்கை வனைந்தவன் பெயர்வரம்பின்
சிந்தனை செய்யான் சொல்வோர் செப்பிடக் கேட்கும் என்று
நிந்தனை செய்து காதில் நெறிமணி தூக்கி நேர்வான் (61) 1723
சிவன்அடி யாரைக் காணில் சீற்றம்மிக் குழன்று சேய்நின்
றவர்களை அரனைத் தூஷித் தடுங்கலால் எறியப் பட்ட
பவம்உறு கணங்கள் போலப் பண்பினை அறியா தெய்த்தே
இவண்நெடு நாள்கள் இவ்வா றெய்தியே திரியும் ஏல்வை (62) 1724
காதினில் கண்டம் தூக்கும் கருத்தினால் கண்ட கர்ணத்
தீதன்என் றுரைத்தார் இன்னோன் செல்லும்நாட் கணியன் ஆகி
ஏதமாய் உறுதி எய்த ஈந்தனன் இவனை யேஓர்
சீதரன் வைகுண் டத்தில் சேர்த்தனர் சேர்ந்த பின்பு (63) 1725
சூக்கும உருவு தாங்கிச் சுந்தர மாலைப் போற்ற
நோக்குடன் சென்ற போதில் நுவல்கின்ற வாயிற் சீலர்
தாக்கிய சொல்லி னோடு சந்நிதா னத்தில் உய்ப்பப்
பாக்கியம் என்று வீழ்ந்து பகவன்தாள் பணிந்து நின்றான் (64) 1726
பச்சைமால் இவனை நோக்கிப் பாரினில் பவுத்தர் போல
நச்சணி கண்டன் தன்னை நாயகன் அடியார் தம்மை
விச்சையால் அறிவி லான்போல் வீண்உரை பேசி நிந்தை
வைச்சுரை புகன்றாய் அந்தோ பாவத்தில் வலியன் ஆனாய் (65) 1727
விடையவன் தன்னை என்னை விதியினை மேலோர் தம்மைக்
கடையராய் நிந்தை சொல்வோர் அளவிலாக் கற்ப காலம்
இடர்உழன் றிம்பர் எய்தி ஈனராய் விலங்காய்ப் புள்ளாய்ப்
படர்உழன் றுருள்போல் எய்திப் பதைப்புடன் நரகில்வீழ்வார் (66) 1728
தரணியில் அரனை அன்பர் தங்களை நிந்தை சொன்னாய்
நரகிடை நீங்காய் நீயும் நணுகிடக் கடவை என்றான்
விரைமலர்ப் பாதம் போற்றி அறிவிலாச் சிறியேன் வெய்ய
புரையினைப் பொறுக்க வேண்டும் எனநைந்து புலம்பும் ஏல்வை (67) 1729
சீதரன் உளத்திரங்கிச் செவியினில் கண்டம் தூக்கிப்
பாதங்கள் பணிந்தோன் தன்னைப் பார்த்திந்தப் பாவம் தீர
மேதினி தன்னில் எய்தி விளங்கிய அரிகை என்னும்
பூதல நகரில் போதி புண்ணிய நகரில் வாழும் (68) 1730
திங்கள்அம் சடையான் தன்னைத் தெரிசித்துத் தவங்கள் செய்து
பங்கயம் பரவி ஏத்தப் பரமனும் காட்சி நல்கி
மங்களப் பதவி ஈவான் நாமும்அவ் அரனை வாழ்த்திப்
பொங்கழல் துயரும் நீந்திப் புனிதனைப் போற்றுகின்றோம் (69) 1731
உடையவன் ஆணையாலே ஒவ்வொரு காலம் இங்குப்
படிபவர்க் கருளிக் காவல் பரித்திடு வோம்பார் தன்னில்
இடைவிடா தங்கு வாழ்வோம் இந்தவை குண்டம் தன்னில்
புடவியல் அதிகம் ஆம்அப் பொன்நகர் புகலும் காலே (70) 1732
புண்ணிய வடிவம் ஆகும் புகல்அடைந் தவர்க்கெந் நாளும்
நண்ணிய பலன்கள் நல்கும் நவையினை மாற்றி நான்காய்
எண்ணிய பருவம் ஈயும் இறைவனை அத்தீர்த் தத்தைக்
கண்ணினால் காணப் பெற்றோர் கயிலையில் காவல் பூண்டோர் (71) 1733
தலம்அதில் பெருமை பெற்ற சாமன வனம்அ தாகும்
அலகிலார் ஒருவன் என்னும் அரன்உறை பதியில் நாமும்
விலகிடா தவண்இ ருப்போம் எனவிண்டு விளம்ப லோடும்
நலமிகக் கண்ட கர்ணன் அரியய நல்லூர் எய்தா (72) 1734
கண்டனன் கண்ட கர்ணன் கரைஇலா வளங்கள் ஓங்கும்
புண்டரீ கத்தன் வாழும் புரம்இதற் கிணைஒப் பொன்னார்
விண்டுவாழ் உலகி னுக்கும் அதிகமாய் விளங்கும் இவ்வூர்
அண்டர்கோ னுக்கும் காண ஆயிரம் கண்போ தாவே (73) 1735
என்றிறும் பூதி னோடும் இந்நகர் எய்தி எங்கள்
கொன்றைவார் சடையான் மேவும் ஆலயம் குறுகித் தாழ்ந்தே
நன்றெனும் காத லோடு நாதனை வணங்கிச் சூழ்ந்து
கன்றினால் கனிஎ றிந்தான் அருளினைக் கழறினானே (74) 1736
பாதமும் முடியும் பண்டு பன்றியும் புள்ளும் ஆகி
வேதனும் மாலும் தேட வெளிப்படா தொருங்கு நீண்ட
சோதியார் தூணில் காட்டும் சுந்தர விடங்க போற்றி
நீதியே அறிவானந்த நிருத்தனே போற்றி போற்றி (75) 1737
காரணா சரணம் வெள்ளிக் கயிலையாய் சரணம் கங்கை
நாரியைச் சடையில் வைத்த நாதனே சரணம் நான்செய்
பாரமாம் பாவம் போகப் பாதுகாத் தருள வேண்டும்
ஆரணா சரணம் எங்கள் அரியய நாதா போற்றி (76) 1738
இன்னன அளவிலாத துதித்தனன் ஏற தேறும்
மன்னவன் முன்றில் எய்தி மாதவம் புரிந்து நின்றான்
பன்னெடு நாட்கள் இந்தப் பால்ஒரு பதத்தில் எங்கோன்
முன்னர்வந் தெய்திக் காட்சி கொடுத்தனன் முனிவன் தாழ்ந்தான் (77) 1739
துதிசெய்து நிற்கும் போதில் சுந்தரன் விடைமேல் தோன்றத்
ததிகொண்ட மாயன் போதன் சார்ந்திரு பாகம் தோன்றக்
கதிதந்த வகையைக் கண்டு கருதிமூ வரும்ஒன் றான
மதிஅறிந் திலனே என்று வணங்கினான் வாழ்த்தி னானே (78) 1740
அறிவிலேன் செய்யும் குற்றம் அரும்பெருங் கருணை யாலே
பொறுமைகொண் டருள வேண்டும் புண்ணிய முதலே போற்றி
கறுவிவீழ் காலற் காலால் கட்டழித் தவனே போற்றி
பிறைவளர் சடையாய் போற்றி பிஞ்ஞகா போற்றி போற்றி (79) 1741
பெரியநா யகிம ணாளா பேதகம் இல்லாய் போற்றி
அரிஅயக் கடவுள் போற்றி அரிஅய நாதன் ஆகி
விரிபொழில் அரிகை மன்னும் விமலமூ வுலகம் ஆன
புரம்இதில் மேவி வாழும் புண்ணிய முதலே போற்றி (80) 1742
எனப்பல துதியால் போற்றும் இவனைநேர் நோக்கி ஈசன்
உனக்கு வேண் டியது யாதென் றோதலும் பணிந்து ரைப்பான்
தனக்கிணை யான இந்தத் தலத்தினில் உனது தாளை
மனத்தினில் அழுத்தி வாழ்க வரம்தர வேணும் என்றான் (81) 1743
வேறு
அவ்வண்ணம் செஞ்சடையோன் அருளிச் செய்தே
அவன்காண மூவர்களும் ஆல யத்தில்
செவ்வண்ணன் திருமேனி இலிங்கம் எய்தத்
தெரிசித்தான் தேன்அமுதக் கடலில் ஆழ்ந்தான்
மைவண்ணக் கந்தரனை மனத்தில் உன்னி
மலர்ப்பாதம் சிந்தித்து வாழ்வு பெற்றான்
இவ்வண்ணம் கதிபெற்ற கண்ட கர்ணன்
யாவர்க்கும் தோற்றிடநோற் றிருக்கின் றானால் (82)1744
கண்டகர் ணன்தான் பின்னும் காதலால் அரனைப் போற்றிக்
கொண்டுபூ சிக்கும் நாள்அக் கோயிலின் குடபால் தன்னில்
வண்டலர் கொன்றை வேணி வரதலிங் கம்தா பித்துப்
புண்டரீ கத்தாள் போற்றி வழிபட்டுப் புனிதம் பெற்றான் (83) 1745
இவ்வண்ணம் இருவர்பணி தலத்தில் வாழும்
இறைவிபா கத்துறையும் இறைவன் தன்னைக்
கைவண்ண மலர்குவித்துக் கருதிப் போற்றக்
கனதனமும் சம்பத்தும் கவலை இல்லாப்
பைவண்ணப் பணிதாங்கும் உலகம் போற்றும்
பதவியும்இம் மையில்பெற்று மறுமைப் பாலும்
செவ்வண்ணல் பதம்பெற்றுத் திவ்யம் எய்திச்
சிவலோகத் தரசாள்வர் திண்ணம் தானே (84) 1746
இவ்வியல்பாம் சந்நிதியில் கமல தீர்த்தம்
இருந்தீர்த்தம் ஈசானம் இமவான் தீர்த்தம்
செவ்வண்ணல் தீர்த்தம்கீழ் பாலில் தென்பால்
சிறந்தமணி கருணிவான் தீர்த்தம் மேல்பால்
பைவண்ணச் சாத்தன்அருந் தீர்த்தம் மேல்பால்
பரத்துவா சன்தீர்த்தம் வருணன் தீர்த்தம்
தெய்வஅனிலன் திசையில் அனுமன் தீர்த்தம்
தினம் ஆடச் சிவலோகம் அடைவர் அன்றே (85) 1747
வேறு
அச்சுதன் மதம்மேற் கொண்டோன் அரிகையில் பாவம் நீங்கும்
மெய்ச்செயல் இதுவாம் முன்னை வேதன்மால் வெம்மை தீர்ந்த
இச்செயல் உணர்ந்து மேலை இந்திரன் ஆதி வானோர்
நச்சணி கண்டர்ப் போற்றிப் பூசித்த நலம் உரைப்பாம் (86) 1748
மூசுதேன் முகை அவிழ்த்து மதுஉண்டு முழங்கும் தாரு
வாசவன் வானோர் எய்தி வரதனை மலரி னாலே
ஆசிலா துபசா ரத்தால் அருக்கிய அபிடே கத்தால்
பூசனை மரபின் ஆற்றிப் போற்றினர் துதிசெய் கின்றார் (87) 1749
வரிஅர வணிந்தாய் போற்றி மாதொரு பாகா போற்றி
கரியினை உரித்தாய் போற்றி காலனைக் காய்ந்தாய் போற்றி
பரிபுர பாதா போற்றி பரவுவார் பற்றாய் நின்ற
அரிஅய நாதா போற்றி அந்தரர்க் கமுதே போற்றி (88) 1750
விண்ணவா போற்றி வேத வித்தகா போற்றி விஞ்சைப்
பண்ணவா போற்றி முன்னம் எங்களைப் பரிந்தாட் கொண்ட
அண்ணலே போற்றி யாவும் ஆகிய அமலா போற்றி
கண்ணினுள் மணியே போற்றி கருணைவா ரிதியே போற்றி (89) 1751
எனத்துதித் திறைஞ்சி னார்கள் போற்றிட இடப மீதில்
கனங்குழை யுடனே தோன்றி காட்சிதந் தனனால் இன்னோர்
வினைத்துயர் நீங்க நோக்கி வேண்டிய வரம்யா தென்ன
உனைப்பணிந் தென்றும் பொற்ற உறுதிதந் தருள வேண்டும் (90) 1752
பண்ணவர் பூசைக் கேற்றப் பாரிசா தனப்பைம் போதால்
விண்ணில்வாழ் காம தேனு மிகும்ஐந்தால் மணியால் வேண்டும்
திண்ணிய பொருளும் தேவ நடனதுந் துபியும் மற்றும்
மண்ணினில் கொடுவந் தென்றும் வழிபட வேண்டும் ஆலோ (91) 1753
இவ்வரம் அருள வேண்டும் எனப்பணிந் திறைஞ்ச லோடும்
நவ்விசேர் கரத்தினானும் தந்தனம் என்று நாதத்
திவ்விய இலிங்க மீதில் சேர்ந்தனன் பணிந்து தேவர்
கவ்வையாம் பதத்து நந்திக் கடவுளைப் பணிந்தி ருந்தார் (92) 1754
இந்திரன் அங்ஙன் வேறோர் இலிங்கம்ஒன் றமைத்துப் பூசை
மந்திர வழியால் பற்றி வழிபட்டான் மாகத் துற்ற
அந்தரர் யாரும் ஒவ்வோர் இலிங்கங்கள் அமைத்துப் போற்றிப்
புந்தியால் பரவி நாதன் அருள்பெற்றுப் பொன்னா டுற்றார் (93) 1755
பின்னொரு யுகத்தில் ஆதி மன்னவன் பெற்ற மைந்தன்
மன்னிய சுந்த ரேச மாறமன் னவன்தான் இந்த
முன்னவன் மகிமை கேட்டு முப்புரம் செயித்த நாதன்
பொன்னகர் எய்தித் தாழ்ந்தான் பூசித்துத் துதிசெய் தானால் (94) 1756
சங்கரா சரணம் மூல சயம்புவே சரணம் திங்கள்
பொங்கர வுடன்அ ணிந்த புண்ணிய சரணம் பூமேல்
பங்கயன் மாயன் போற்றிப் பரிவினை அகற்றி ஆண்ட
அங்கணா சரணம் எங்கள் அரிஅய நாதா போற்றி (95) 1757
விண்ணவர் பூசித் தேத்த வியந்தருள் புரிந்தாய் போற்றி
அண்ணலே போற்றி என்றே அகம்மகிழ்ந் தடிப ணிந்து
தண்ணளி யுடன்இ ருந்து தற்பரா நினக்குக் கோயில்
எண்ணிய படியே செய்ய அருள்தர வேண்டும் என்று (96) 1758
விரதம்உற் றிருந்தான் எங்கோன் வேந்தவன் கனவில் எய்திப்
பரிதிபோல் உலகம் தன்னில் பகைஇருள் ஒதுக்க வந்த
புரவல பூத லத்தில் புண்ணிய நகரம் ஈதால்
விரைவினில் கோயில் செய்வாய் இலிங்கவி சேடம் சொல்வாம் (97) 1759
பூவினில் தானே தோன்றிச் சுயம்புவாய்ப் போற்ற நின்ற
தாவர இலிங்கம் முன்னோர் மனுக்கள்மா னிடர்தா பித்தும்
தேவர்கள் முனிவ ராலும் சித்தர்கள் இயக்க ராலும்
காவியம் கண்டர்க் கண்ட நம்குறி அனந்தம் காண்மின் (98) 1760
இவ்வகை இலிங்கத் துள்ளே இவ்விலிங் கத்தின் மேன்மை
கவ்வைகொள் தரங்க வேலிக் கடலிடைப் பிறந்த நஞ்சம்
செவ்விய மலரோன் மாயன் தேகத்தில் காங்கை எய்த
அவ்வினை அகலப் போற்ற அவர்வினை தீர வேண்டி (99) 1761
இத்தலம் அதனில் வைகி இருவர்தம் இன்னல் தீர்த்துக்
கைத்தலத் துற்ற நெல்லிக் கனிஎன இருந்ததாகும்
உத்தம மன்ன என்றே அருளினால் இலிங்கத் துற்றான்
பத்தியாய் விழித்து வேந்தன் பரவியே பழிச்சுகின்றான் (100) 1762
புளகிதம் உற்று மன்னிப் புண்ணியன் அருளிச் செய்த
அழகிவன் மேன்மை யோர்க்கும் அமைச்சற்கும் அறியச் செப்பிக்
குழகனுக் கன்பு மிக்கான் சிற்பநூ லோரைக் கூவிப்
பழமறை பகரும் பண்பால் பரமன் ஆலயம்எ டுத்தான் (101) 1763
ஆலயத் துறுப்பு மற்றும் அணிநகர் திருநாள் வீதி
மேல்உள தேவ தாயம் விதிவழி நிறுவ வேண்டும்
காலநித் தியநை மித்யம் கடவுட்குச் சிறந்த பூசை
சீலமாய் இயற்றிப் போற்றச் சிவன்ஒரு சித்தர் ஆகி (102) 1764
மன்னனை நோக்கி நீசெய் மந்திரப் பணிக்கு வந்தோம்
இன்னம்ஒன் றுவது கேட்டி இந்திரன் பூசித் திங்ஙன்
பொன்நகர் விதிஅ மைத்தான் பூவில்அவ் விதியால் நீயும்
நல்நிய மங்கள் ஆக நடத்துவாய் நாளும் என்றான் (103) 1765
அந்தரர் போற்றும் இந்த அரிகைக்கு வாய்த்தேன் என்றே
சுந்தர மாற மன்னா சுதினப்பெ ருக்கை ஈந்தோம்
சிந்தையில் விளைதல் பெற்றுச் செகத்தினில் இன்பம்துய்த்து
நந்தல்இல் செல்வம் பெற்று நம்உல கடைவாய் என்றான் (104) 1766
அண்ணல்இப் படிஅறைந்தே அவ்வடி வுடன்ம றைந்தான்
கண்ணுதல் அருளைப் பேணிக் கசிந்தனன் கடவுள் நல்கும்
வண்ணமே பெற்றோன் மேலை வளம்எலாம் இவண்வருத்தி
உண்ணிறை மகிழ்வி னாலே நடத்தினான் உலவா தென்றும் (105) 1767
கற்பக மலரினாலும் காமதே னுவின்பால் நல்கும்
அற்புத அமுதத் தாலும் அந்தர மகளிர் ஆடல்
பற்பல வகையினாலும் பஞ்சவாத் தியத்தி னாலும்
பொற்புயர் விதியி னாலே பூசனை புரிந்திட் டானால் (106) 1768
அப்படி அன்றும் என்றும் அருச்சனை புரிவதாகும்
விப்பிர முனிகாள் ஈது வேதவி யாசர்கூறத்
தப்பிலா துணர்ந்த திந்தச் சரித்திரம் உங்களுக்குச்
செப்பினம் கற்றோர் கேட்டோர் சிவபதம் சேர்வர் அன்றே (107) 1769
இத்திறம் உரைத்தசங்க யோகியோ டிறைவன் ஏகி
உத்தமத் தலங்கள் போற்றி உளமகிழ் சிறந்தி ருந்தார்
முத்தமிழ் முனிவ ரோடு முதுபதி உற்றார் மூன்று
வித்தகர் ஒன்றாய் நின்ற விமலன்கீர்த் திகள் உரைப்பாம் (108) 1770
அரிகைப்படலம் முற்றும்
21 மூன்றீசுவரப் படலம்
மூதெயில் சூழும் மூன்றீ சுரத்தில்மூன் றீச நாதர்
காதையைத் தமிழால் செய்யக் கந்தடு கரட நால்வாய்
மாதருள் புதல்வன் கந்த மைந்தன்முன் வந்த தெய்வப்
போதக முகத்தன் பாதப் போதகம் போற்றி வாழ்வாம் (1) 1771
மால்ஆகி அயன்ஆகி மன்னும்உருத் திரன்ஆகி
வானம் ஆகிக்
கால்ஆகி அனல்ஆகிக் காண்டமுமாய்ப் பிருதுவியாய்க்
கதிர்கள் ஆகி
வாலைமர கதமாது பாகமாய் நிறைந்துவளர்
வன்னி நாதர்
மூலேசர் சித்தேசர் மூன்றீசர் பாதமலர்
முடிமேல் வைப்பாம் (2) 1772
மஞ்சுநிகர் குழல் போற்றி மதிவதன மலர்போற்றி
அஞ்சனவேல் விழி போற்றி அணிமுத்த நகைபோற்றி
கொஞ்சுகிளிக் கரம்போற்றி கோங்கரும்பின் குயம்போற்றி
வஞ்சிமர கதமாது வனசமலர்ப் பதம் போற்றி (3) 1773
மாதவர் கேட்பச் சூதன் வழங்கிய கதையை மன்னன்
ஓதுதல் வேண்டும் என்னச் சங்கயோ கியன்உ ரைப்பான்
போதனும் அரனும் மாலும் பூசித்து மூன்று லிங்க
நாதன்ஆ கியம கத்து வத்தினை நவிலல் உற்றாம் (4) 1774
ஆதியால் அயன்மால் ஈசன் அவனிநீர் வித்தாய் நின்று
பேதம்இலா தொன் றாகிப் பிறங்கிய செயலை யார்க்கும்
வேதங்கள் முதலாய்க் காட்டி விதித்தனர் பயன்தே றாதார்
வாதங்கள் தீர்ந்தே உய்ய வழிபடும் மகிமை சொல்வாம் (5) 1775
இறையவன் முடியும் தாளும் எய்திட இருவர் தேடிப்
பறவைபன் றியதாய்க் காணார் பருப்பத நெருப்பாய்க் கண்டார்
விறல்அரி அவதா ரத்தில் விமலன்கா தைகள்உ ரைத்தார்
அறிவினால் அறிந்தும் மாயை அவலத்தால் சவலம் உற்றே (6) 1776
திரிகுநா மதமேற் கொண்டோர் தெளிவிலார் நிந்தைபேசி
நரகிடை மேவா வண்ணம் நல்கிட வேண்டும் என்று
பரவிமூ வரும்பூ சிக்கப் பரமனும் காட்சி நல்கி
உருஒன்றில் மூன்றாய்த் தோன்றி உய்ந்திட அருள்செய் கின்றான் (7) 1777
மூவரும் ஐவர்தாமும் முதல்ஒன்றே முளரிப் பூவில்
தாவிலா இதழ்அ னேகம் சாற்றிடில் ஒன்றே போலத்
தேவர்கள் நீவிர் என்றே என்னவாய் மலர்ந்து செப்பித்
தாவிலா இலிங்கம் மூன்றீ சுரன்எனச் சாற்றி னானே (8) 1778
மூவர்க்கும் மேலாம் எங்கோன் அருள்தர மூவர் அந்தத்
தாவிலா இலிங்கத் தெய்திச் சார்ந்தனர் ஆதலாலே
சேவுறை நாதன் மூன்றீ சுரன்எனத் திகழ்ந்தான் இந்தப்
பூவுளோர் தேவர் போற்றப் பொலிந்தினி திருக்கின் றானால் (9) 1779
மூன்றுரு இலிங்கம் ஆன முறைஇது முதல்ஒன் றாகத்
தோன்றுநா யகனை வேதம் பூசிக்கத் தொடங்கும் காதை
ஏன்றவா றுரைப்போம் கேண்மின் இவன்திரு வாக்கி னாலே
கான்றமெய் வன்னி ஆக நிழல்செயும் கவின்உ ரைப்பாம் (10) 1780
முடிவினில் உலகம் யாவும் பிரளயம் மூழ்க மூல
வடிவினன் பொருட்டால் பின்னும் வழங்கிட உற்ற கால
நெடியவன் உந்தி பூத்தோன் தந்திட நிலவும் யோகர்
படியினில் யாகம் பூசை பயின்றிடும் விதிப யக்கும் (11) 1781
வேதநூல் அன்றி இல்லை மெய்ப்பொருள் விளங்கத் தேடும்
போதினில் விதிநூல் அன்றிப் புகல்இலை என்று யோகா
மாதொரு பாகன் வெள்ளி வரையினில் தவம் முயன்றார்
ஆதிகா ரணன்எ ழுந்தே ஆலநீ ழலினில் எய்தி (12) 1782
தேசிக வடிவம் ஆகித் திருவருள் கூர்ந்து நின்றான்
நேசமாய் முனிவர் யாரும் நிருமலன் தாள்பணிந்தே
ஈசனே எனத்து தித்தார் இங்குநீர் தவம்பு ரிந்தே
யோசனை யாதென் றோத வேதம்நா லுரைக்க வேண்டும் (13) 1783
சங்கரா எனத்து தித்தார் தவர்கள்மேல் அன்பு கூர்ந்து
பொங்கிய வேதம் நம்மைப் பூசிக்கத் தவம் முயன்று
துங்கம்ஆர் வன்னி யாகத் தோன்றிமூன் றீசு ரத்தில்
அங்கெமைப் போற்று கின்ற தவ்வகை அருளக் கேண்மின் (14) 1784
அலகிலாக் கலைகட் கெல்லாம் முதன்மையாம் ஆதிவேதம்
உலகில்ஆ ரணங்கள் காயாய் உயரும்பஞ் சாயி உண்மைப்
பலம்அதாய்ச் சாயை சாயை பணைத்தஇம் முதலாம் வன்னி
நிலவியே நெடுநாள் போற்றிப் பூசித்து நின்ற காலை (15) 1785
அப்பொழு தவ்வி லிங்கத் ததிகரித் தமலன் தோன்றி
வைப்புநூல் வன்னி நம்கண் வன்னியில் தோன்றி வந்த
இப்பெரு விருக்கம் நீயே இந்நிழல் நமக்கு நீழல்
ஒப்பிலா தியற்றி வாழ்வாய் வேண்டும்யா தெனஉ ரைத்தான் (16) 1786
வன்னிதன் பெயரால் ஊரும் இலிங்கமும் வழங்க வேண்டும்
என்னநல் வரங்கள் நல்கப் பெற்றவன் இறுத்த லாலே
துன்னுமா தவத்தீர் நீவிர் அத்தலத் தெய்தித் தொன்மைப்
பன்னகா பரணற் போற்றப் பாலிக்கும் வேதம் தன்னை (17) 1787
பெற்றுளம் மகிழ்வீர் என்று பேசியே மறைந்தான் எங்கோன்
சுற்றமா முனிவர் எல்லாம் கயிலையை அகன்று தென்பால்
நற்றமிழ்ப் பொதிகைக் கீழ்பால் நவகன்னி மார்பு ரத்தில்
உற்றனர் அரனைப் போற்றி உயர்தவம் புரிந்த போதில் (18) 1788
சித்தநா யகன்முன் போலத் தேசிக வடிவாய்த் தோன்றி
மெய்த்தநால் வேதம் தன்னை விரித்துணர்த் தருளி வேண்டும்
உத்தம வரங்கள் நல்கி உயர்சிவ லிங்கத் துற்றான்
அத்தனைக் கன்னி மார்கள் போற்றும்அன் பினைஉ ரைப்பாம் (19) 1789
தவத்தினால் சூர பற்பன் தாருகன் சிங்க சூரன்
பவத்தினால் பலவாம் அண்டப் பார்அளித்தி டும்அப் போதில்
அவத்தனாய் அறிவு நீங்கி மமதைகொண் டகிலம் யாவும்
நவைக்கொளும் படியே பானு கோபனை நல்கினானே (20) 1790
அரசுசெய் சூர பற்பன் அவம்புரி செய்கை யாலே
சுரர்தமை ஏவல் கொண்டு சுரபதி முதலோர் தம்மை
விரைவுடன் சிறையில் இட்டான் விண்ணவர் சிலர்கள் சென்று
பரமன்பால் இந்தத் துன்பப் பாட்டினை உரைப்பல் என்ன (21) 1791
இமையவர் யாரும் போந்து மந்தர கிரியில் எய்தி
அமையம்யா தெனவி னாவி அவ்விடைச் சாரும்போதில்
இமையமால் வரையில் மேனை இமயமன் தவத்தி னாலே
உமையைஅன் னார்கட் குண்மை மகவதாய் உயிர்க்க ஏவி (22) 1792
மவுனயோ கத்தில் ஈசன் உறைந்தனன் மவுனம் நீங்கிப்
பவன்அருள் பெறுதற் கெவ்வா றென்னப்பண் ணவர்கள் யாரும்
தவனம்உற் றிருந்தார் எண்ணி மாரனைச் சார்ந்த வன்பால்
உவமைஇல் முகமன்கூறி உம்பர்கள் இடுக்கண் தீர்ப்பாய் (23) 1793
என்றுநல் வசனம் ஓத இமையவர்க் கிரங்கி மாரன்
துன்றும்யோ கத்தி ருந்த சோதியார் தம்பால் மோகம்
ஒன்றிய பூவின் வாளி ஏவினான் உமையோர் பாகன்
வன்திறல் செய்தான் தன்னைத் தழல்கணால் விழித்து மாய்த்தான் (24) 1794
அவன்துணை இரதி வேண்ட அனங்கனாய் அளித்தான் எங்கோன்
சிவன்தவம் நீங்கல் கண்டு தேவர்கள் முறையிட் டார்த்தார்
தவந்தனால் சூர பற்பன் தனக்குறு வரங்கள் ஈந்தாய்
அவன்தனால் இடுக்கண் எய்தி அந்தரர் யாரும் வந்தோம் (25) 1795
அண்ணலே எனத்து தித்தார்க் கபயம்தந் தசுரன் தன்னை
நண்ணிவெல் வதற்குச் சேயை நாம்அளித் திடுவோம் என்ன
விண்ணவர்க் கச்சம் நீங்கி வெந்தழல் கண்ணில் ஆறு
துண்ணெனும் பொறிவி டுத்தார் சுரர்பகை மாயத்தானே (26) 1796
பொறிஇரு மூன்றும் ஆறு முகம்அதாப் பொருந்த ஆரல்
அறிவுடன் உருஒன் றாக ஆறுமா முகனைத் தாங்கி
மறிதிரைச் சரவ ணத்தில் வைத்தனர் வந்த சேயை
அறலனாள் வளர்க்க வந்த அரன்மகன் தனக்கப் போதில் (27) 1797
ஆயுத வீரர் வேண்டும் என அரன் அகத்தில் தோன்றக்
காயும்வேற் கந்தன் காதை கவுரியை அழைக்க ஓடி
வேயுறு தோளி அந்தப் புரம்விட்டு விரைவி னோடு
நாயகன் முன்னர் எய்த நவமணிச் சிலம்பில் ஒன்று (28) 1798
தெறித்திட இவள்தன் சாயை சேர்ந்தநன் மணிஒன்பான்மேல்
குறித்திட ஈசன் ஒன்பான் கன்னியர் தோன்றக் கோலம்
நிறைந்தகன் னியரை நோக்கக் கருவுடன் நேர்ந்த போதில்
அறக்கொடி மனத்தில் கோபம் உற்றனள் அந்நல் லாரை (29) 1799
கருவினை உயிர்த்திடாது சபித்தனள் கன்னி யர்கள்
பெருமித வருத்தம் உற்றார் பேதையர் தம்மை நோக்கி
அரன்அருள் செய்வன் இந்தக் கயிலையை அகன்று தென்பால்
திருவளர் பொதிகைக் கீழ்பால் போய்த்தவம் செய்வீர் என்றான் (30) 1800
பின்னும்அவ் இடத்தோர் சேத்ரம் பேசிடில் பெருமை பெற்ற
மன்னிய பொதிகை இந்தக் கயிலைநேர் வளம்கொள்பூமி
பொன்உல காகும் அந்தப் புவிதனில் வந்த நீத்தம்
நன்னதி கங்கை ஆம்அந் நகர்அது நமது லோகம் (31) 1801
ஆகையால் புடைசேர் கின்ற அருச்சுனம் உளத தன்பால்
மாகவர் ஆடும் தீர்த்த வரநதி வாரந் தன்னில்
ஏகநா யகன்மூன் றீசன் ஆகிய இடத்தில் எய்தி
யோகமே புரிவீர் உங்கள் வருத்தம்அ தொழியும் என்றான் (32) 1802
ஈசன்ஏ வலினால் எய்தி இங்ஙனம் தவங்கள் செய்தார்
மாசிலா விடைமேல் எங்கோன் வனிதையோ டெழுந்து முன்நின்று
ஆசிலாத் தவம்செய் கன்னி யர்க்கருள் புரிவாய் என்ன
நேசமாய் உமையை நோக்கி நின்மலன் அருளிச் செய்தான் (33) 1803
அப்பொழு தமலை அந்தப் பெண்கள்பால் அமைத்தசாப
மைப்புநீங் கிடவே நோக்க வனிதையர் கருஉ யிர்த்தார்
துப்புறு வீரர் தோன்று போதினில் துளியால் வேர்வை
மெய்ப்படும் போதில் ஒன்பான் இலக்கவீ ரரும்பி றந்தார் (34) 1804
வேறு
பிறந்தநவ வீரர்கள் பெலாக்கிரமம் உற்றே
சிறந்தஇவர் சேய்துணைவர் ஆகஎன வேசெய்
துறைந்தவர் அனேகரையும் உதவியப தாவி
அறந்தர அமைத்தமரர் உய்யஅருள் செய்தான் (35) 1805
அத்தகைமை நிற்கஅயி ராணிஅருள் பெற்றே
இத்தகைய வீரரை உயிர்த்தபின்இம் மாதர்
முத்தனை வணங்கிவர முற்றமகிழ் வெய்திச்
சித்தன்அரு ளால்உயர் சிவன்பதம் அடைந்தார் (36) 1806
இத்தகைமை பெற்றதல முக்கியம்இ தென்றே
அத்தன்அருள் பெற்றுயர் அகத்தியன் எழுந்தே
தத்துதிரை மொய்த்தபொரு நைக்கரை இதன்பால்
நித்தனை வணங்கமுனி நெறிகொடிவண் எய்தா (37) 1807
மேல்நதியி னில் படிய வேமுனிவன் உற்றான்
ஆனபொழு தில்பரமன் அன்னையொ டெழுந்தே
வானில்விடை மீதுலவ மாமுனி பணிந்தான்
தேன்இதழி யன்குழை சிறந்தமணி தன்னில் (38) 1808
வேறு
ஒருமணி நதியில் வீழ அகத்தியன் உவந்து போற்ற
மருமலர் இமையோர் தூற்றி வான்குழை மணிபொ ருந்தும்
பெருமையால் இத்து றைப்பேர் மணிகர்ணி தீர்த்தம் என்றார்
பரமனும் முனிவன் கேட்க வான்சொலால் பகரு கின்றான் (39) 1809
இவ்விடை வன்னி ஈசன் தனைப்பணி வாய்என் றோதி
வெவ்விடை யோன்எ ழுந்தான் போற்றிமே தினியில் வேண்டும்
திவ்விய ஞான போகம் தரும்இந்தத் தீர்த்தம் ஆடிப்
பவ்விய முடனே வன்னிப் பதியினை முனிவன் சார்ந்தான் (40) 1810
குறுமுனி வன்னி மேவும் குழகனைப் பூசை செய்ய
நறுமலர் மஞ்ச னாதி நல்லசாந் தமுதத் தாலும்
இறைவனுக் கிணைஇ லாத இனியநல் உபசா ரத்தால்
உறுதியாய்ப் பரவி நின்ற பொழுதினில் உமைஓர் பாகன் (41) 1811
மூன்றுகூ றாகத் தோன்ற முனிவரன் நடுக்கம் உற்றே
தோன்றும் இவ் வகையா தென்னத் துதித்திடும் போதில் ஈசன்
வான்தரு சொல்லி னாலே மால்அயன் அரன்இம் மூவர்
தான்திகழ் மூன்றாம் என்னச் சாற்றினான் சாற்றும் வேளை (42) 1812
பங்குமூன் றாகத் தோன்றும் பரமன்ஓர் குறியாய்த் தோன்ற
இங்கெமக் கருள மன்னும் இறும்பூதென் றெண்ணி இந்தச்
சங்கரன் தனக்கு மூன்றீ சுரன்என நாமம் சாற்றி
மங்கைஓர் பாகன் தன்னை வாழ்த்தினான் வணங்கினானே (43) 1813
மூவராய் வதிந்த இந்த மூர்த்தம்நான் காண இங்ஙன்
தாவிலா திருந்த கோலம் தந்துதன் உருவம் காட்டிப்
பூவுளார் முதலோர் காண இருந்தனை போற்றி போற்றி
சேவுயர் கொடியாய் போற்றி சித்தநா யகனே போற்றி (44) 1814
வேதியா போற்றி விண்ணோர் விரைமலர் தூவிப் போற்றும்
நாதனே போற்றி தெய்வ நான்மறைப் பொருளே போற்றி
சோதியே போற்றி முன்னம் தும்பியைப் பாது காத்த
மாதொரு பாகா போற்றி வன்னிநா யகனே போற்றி (45) 1815
வேறு
அன்பர்கட் கமுதே அருள்வரை கனியே
தென்பதிப் பொருனா தீரசின் மயனே
மின்மர கதப்பெண் விமலவித் தகனே
தொன்மறைத் தலைவா எனத்துதித் தனனால் (46) 1816
மூன்றீச நாயகனுக் ககத்திய முனீசுரன் என்று
சான்றோர்கள் புனைந்தேத்தத் தமிழ்முனியும் வரம்பெற்றுத்
தேன்தாழும் கொன்றைபுனை சித்தர்பால் விடைபெற்று
வான்தாழும் புனிதேசர் தமைவணங்க மருதுற்றான் (47) 1817
குறுமுனிவன் படிதீர்த்தம் அகத்தியதீர்த் தம்குடைவோர்
வறுமைநோய் பாவம்போம் வனிதையர்கள் படிதீர்த்தம்
இறைதீர்த்தம் மணிகர்ணி கைத்தீர்த்தம் பிரயாகை
மறைதீர்த்தம் கெசமோட்சம் சித்தர்வழி பாடுரைப்பாம் (48) 1818
கயிலைவாழ் கணத்தில் சோம கேதுபொன் வரைசூழ் காவில்
பயிலும்வே டத்திக் காசை உற்றதோர் பாவத் தாலே
மயலுடன் புவியில் எய்தி மானிடச் செனனம் உற்றான்
இயல்பினால் வேட்கை தீர்ந்தான் இறையவன் அருளி னாலே (49) 1819
சித்துகள் பெற்றுச் சித்தர் ஆகித்தென் மருதில் எய்தி
முத்திநா யகனை நாறும் பூஎன அழைக்க முன்னோன்
பத்திசேர் வசனம் கேட்டுப் பரன்திரு மேனி சாய்ந்து
வித்தக மாக வாஎன் றிடமிகு வெள்ளம் நோக்கா (50) 1820
முன்வற்றக் கண்டு தென்பால் முன்னிமுன் னவனைப் போற்ற
மின்உற்றோன் உரைக்கும் வேடச் சாதிபால் வேட்கை தீர
மன்உற்ற மதுவும் ஊனும் புசித்திட வினைகள் மாறும்
தென்உற்ற பதியில் போகென் றேவிடக் கருவூர்ச் சித்தர் (51) 1821
வந்தனர் வன்னி யூர்வாழ் வரதனை வணங்கும் போதில்
வந்தான வன்னிக் காயைத் தேனைஊன் மதுஅ தாகத்
தந்திடக் கன்னியாலே சாற்றினன் தரவே உண்டு
பந்தமும் வினையும் நீங்கிப் பரமனைப் பரவு கின்றான் (52) 1822
ஆனுயர் கொடியாய் போற்றி அடியவர்க் கமுதே போற்றி
தேனினை வன்னிக் காயைத் தேறல்ஊ னாகச் செய்து
மானிடம் உற்றசாப வல்வினை தீர்த்தாய் போற்றி
மேனதி அணிந்தாய் போற்றி வேதநா யகனே போற்றி (53) 1823
பாததா மரைகள் போற்றி எனப்பர விடும்அவ் வேளை
நாதனும் காட்சி நல்கி நவிலும்நின் துதிக்கு வந்தோம்
போதனே நினக்கு வேண்டும் வரம்எவன் புகலு கென்ன
நீதன்நின் பெயர்தான் சித்த இலிங்கமாய் நிகழ வேண்டும், (54) 1824
நின்னருள் பதவி வேண்டும் என்றனன் நிமலன் ஈந்தான்
பன்னரும் வரங்கள் பெற்றுச் சித்தனும் பரமன் பாலில்
துன்னிய விடைபெற் றிப்பால் சுயபுடார்ச் சுனத்தில் உற்றான்
மன்னவன் பரவு கின்ற வகையினை வகுத்து ரைப்பாம். (55) 1825
வேறு
மன்னவன் மாமது ரைப்பதி மாறன்
பன்னு சவுந்தர பாண்டிய ராசன்
பொன்நிதி மாமழை எனஅருள் பூபன்
தென்னவர் ஏறுயர் செழியனும் ஓர்நாள் (56) 1826
வேறு
பூவணையில் துயில்கொள்ளும் பொழுதில் அவன் கனவினிலே
சேவுயர்த்தார் எழுந்தருளித் தென்னவன்தென் பொதிகைக்கீழ்
மூவர்களும் ஒன்றாக முயங்கிய தோர் சிவத்தலம்தான்
தேவர்தொழும் புடைமருதத் தென்சார்பில் திகழ்ந்திலங்கும் (57) 1827
அத்தலத்துப் பணிகள்எல்லாம் பிரளயத்தில் அழிந்ததனால்
நித்தனுட னேதலமும் நிலையமும்நித் தியம்அதனில்
சித்திதரும் பணிசெய்து சிந்திதம்எ லாம்பெற்று
முத்திபெறு வாய்என்று மொழிந்தான்அங் ஙனம்மறைந்தான் (58) 1828
எழுந்துணர்ந்து மந்திரற்கும் இனியவர்க்கும் இவைஉரைத்துத்
தொழும்பணிசெய் துய்வன்எனத் துரகத்தேர் மேற்கொண்டு
செழுந்தரளக் குடைதானை சூழ்ந்துவரச் சித்தநகர்க்
கொழுஞ்சுடர்ச்செம் மேனியனைக் கும்பிடும்கொள் கையன்ஆகி (59) 1829
நெறிபோந்து பலகடந்து நிலவுபொரு னாநதியின்
துறைசேர்ந்து நீராடித் தும்பைநதி அறுகணிந்த
பிறைவேணி மூன்றீசப் பெருமான்நன் னகர்மேவிக்
குறையாத மகிழ்வினொடு குழகன்கோ யிலைஅணைந்து (60) 1830
பணிந்துதுதித் திறைஅருளால் பலவான திருப்பணியும்
இணங்கும்விழா ஆபரணம் முதலாக இயற்றியபின்
அணங்குடனே தென்பாலில் அரசன்தன் பெயர்விளங்க
வணங்கிஆ லயம்செய்து சொக்கரையும் வதிட்டித்தான் (61) 1831
தென்புறம்சொக் கேசனையும் திகழும்மூன் றீசனையும்
இன்பமுடன் பணிந்தேத்தி இறைமைபுரிந் தேபலநாள்
அன்புடனே வதிந்தினிதாய் அரசன்அரன் அருளாலே
பொன்பதியோர் புகழ்ந்தேத்தப் பொலிந்துபதம் கலந்தனனால் (62) 1832
பின்னும்இவன் மரபுளோரில் பெற்றிடும்சண் பகமாறத்
தென்னவன்ப ராக்கிரமன் தென்காசி கண்டருளும்
மன்னவன்இவ் அரன்தனக்கு வகைஇயற்றிப் பணிசெய்து
பன்னெடு நாள் புவிகாத்துப் பரமன்அருட் பதம்பெற்றான் (63) 1833
மூன்றீசர் கதைஇவ்வா றிதனைமுயன் றிடுவோர்கள்
சான்றோர்க ளுடன்கூடிச் சாற்றுனர்கேட் குனர்தரிப்போர்
கான்தேரும் மது இதழிக் கண்ணியன்பொன் கழல்தொழுவோர்
வான்றாரும் மகிழ்வெய்தி வரதன்அருள் பெறுவாரே (64) 1834
வாழ்க தெட்சண காசி வளம்பதி
தாழ்வி லாதபு டார்ச்சுனம் சார்ந்தருள்
சூழ்இ லேபன சுந்தரன் தொல்கதை
ஏழ்பெ ரும்புவி எங்கும் விளங்கவே (65) 1835
மூன்றீசுவரப் படலம் முற்றும்
திருப்புடை மருதூர்ப் புராணம் முற்றும்