logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனிவர்)

மதுரகவி சுப்பிரமணிய முனிவர் இயற்றிய

புத்தமு தருந்திடும் புத்தேளி ருலகிற்
பொருந்துதிரி கூட கிரியிற்
புதுமதி யுடைந்தமுத மொழுகிவழி கின்றெனப்
பொங்குசிவ மதுகங் கையின்
றத்துமரு வித்திரள் கொழித்துவரு நித்திலந்
தண்சித்ர நதிய ருகெலாந்
தவளச் சுடர்படலை யிருளகல நிலவிடத்
தன்குமுதம் வாய்தி றக்கு
நத்துலவும் வாவிசூழ் நன்னகர்க் குற்றால
நற்குறும் பலவி னுறைவோ
னாதங் கடந்து பர வேதங் கடந்தவொரு
நடுவெளியின் மறைமு றையிடச்
சித்திரப் பொற்றொடிச் சிற்றிடைச் சத்திநற்
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

நானீண்டு சுழல்கின்ற யோனிவகை யெண்பத்து
நான்குநூ நாயி ரமெனா
நண்ணும் வழி யெல்லாம டைத்தெனக் குய்யுமொரு
நல்வழி தெரித்த பெருமான்
வானீண்ட கருமந்தி வின்டமது ரப்பலா
வண்சுளைய ருந்தி யோடி
மாங்கனி யுதிர்த்திடவு முடைமடையினிற்சாறு
வாரியாய் வருதல் காணூஉக்
கானீண்ட செண்பகக் காவூடு திரியமுது
களிற்றினம் பிடியி னுக்குக்
காதலிற் றிரடுளைக் கையான் முகந்தூட்டு
காட்சியின் வளம்பொ லிந்த
தேனீண்ட வருவிசொரி திரிகூட வரையிடச்
சிவகாம வல்லி மகிழ்ச்
சித்ரசயை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

ஈவதுஞ் சகலபுவ னப்பரப் பெல்லாம்பி
னிறுதுயி லொடுக்கு வதுமுன்
னிலகுதிரு விளையாட்டெனச்சற்று முணராத
விருண்மனக் கசட ரொடுசேர்ந்
தாவது மகிழ்ந்துவிடு வதுபானவுடலெடுத்
தன்றுமுத லின்று காறு
மலக்கழித் தேனைப் பெருங்கருணை வைத்தாண்ட
வற்புதம தென்சொல் லுகேன்
கூவிய குறச்சிறுமி மாரெலாம் வயிரங்
கொழித்துக் குவித்து மலையாக்
குதிகொண்ட வடவருவி மூழ்கிவினை யாடுதிரி
கூடவரை யிற்கு டமுழாத்
தேவதுந் துபியொலியி னண்டமுக டுடைபடச்
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

அரக்கெறி முருக்கல ரிதழ்க்கொடி நுசுப்பினா
ராசைக் கடற்குண் மூழ்கி
யறியாமை மேலிடச் செம்மாந் திளைக்கு மெனை
யாண்டகரு ணைக்கென் செய்கேன்
மருக்கணி மருப்பவர் நெருப்பன குருக்காந்தண்
மலர்மிசைச் சொரிய வறுகால்
வண்டின மருண்டேகி மாதங்க மதநீரை
வாய்மடுத் துண்டு கண்டோர்
விருப்புறு சுனைக்குவளை மெல்லிதழ்த் தவிசேறி
விரிசிறைப் பேட்டி னோடு
மென்குறிஞ் சிப்பண் பயின்றுகண் டுயில்கொள்ள
மேவுதிரி கூட வெற்பிற்
திருக்கடைக் கண்ணருள் சுரந்துயிர் களைப்பெற்ற
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னில் திருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

சூலுண்ட கொண்டலந் திருமேனி வண்டுழாய்த்
தொடையவனு மயனு மறியாத்
துரியங் கடந்தபர மானந்த வெள்ளந்
துளைந்தாட லென்று பெறுவேன்
கோலுலவு விற்கரச் செங்கட் கருங்குறவர்
கூவிளியி னோசை கேட்டுக்
குதிகொண்ட மதவருவி சிந்திடப் பிடியினொடு
கொலையானை வெருவி யோடி
வாலுளைக் கோளரிப் பேழ்வாய் முழைப்புக
வயக்குருளை யிடிமு ழக்கால்
வண்பொங்கு மா கடலில் வான்மீ னதிர்ந்துரும்
வளங்கொடிரி கூட வெற்பிற்
சேலுலவு செந்தா மரைத்திரு முகந்தன்னை
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

ஒக்கலைப் பொருளைமனை மக்களைப் பற்றியே
யுழிதருங் கொடிய னேனை
யுபயபரி புரசரண மலரளித் தாட்கொண்ட
வுன்னருட் கொப்பு முளதோ
மைக்கட் குறச்சிறுமி மாரெலாம் வெயிலுமிழு
மரகதப் பாறை நடுவண்
மதகரி மருப்பினாற் செந்தினை யிடித்தமது
வாக்குபு பிசைந்து சூட்டுக்
குக்குடக் கொடியுடைய முருகவேண் முன்றிலிற்
கொடுவந் தடுத்து வளருங்
குலமயிலினங்கள்விட் டிரவுபக லிடையறாக்
குரவைவிளை யாட்ட யருந்
திக்கெட்டு நிறைபுகழ்த் திரிகூட வரையிடைச்
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.


கற்புரையு நெஞ்சக் கடுப்பாவ மூடரைக்
காரியொடு பாரி யெனவுங்
காரென்று மணியென்று சங்கென்று கோவென்று
கற்பதரு வைந்தென் றுமே
பற்பல பிதற்றியே பாழுடற் கிரைதேடு
பாவியேன் றன்னை யென்னோ
பங்கயச் சேவடிகள் பாடும் படிக்கருள்
பதித்தெடுத் தாண்ட கருணை
பொற்புடைய கற்றைப் புதுத்தோகை நாகம்
புழைக் கையிற் கொண்ட லகிடப்
பொறியரவ மாணிக்க மணிவிளக் தேந்தத்த
போதனர்கள் யோகி ருக்குஞ்
சிற்பரம ரகசியத் திரிகூட வரையிடைச்
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடனம் புரிவ ரதனே.

கள்ள விழி வள்ளமுலை வெள்ளை நகை நள்ளிருட்
கற்றைக் கருங்கு ழலினார்
கலவிக் குடைந்துபன் னரகிற் படர்ந்துபின்
கருவுட் கிடந்து சுழல் வேன்
பள்ளமடை வெள்ளமென வுள்ளுருகி யன்புநீர்
பாய்த்தியிரு வினைப ழுக்கப்
பக்குவம் முதிர்ந்துசிவ புண்ணிய நிரம்பிநின்
பாதபது மம்பெறுவனோ
துள்ளுமிர லைக்கன்று வல்லியப் பறழினொடு
துயல் வரு கறிக்கொ டியெலாந்
துதைத்துழக் கிச்சினைய சோகத்தி னீழலிற்
துயிலுமுக் கூட வரையிற்
தெள்ளமுத மொழியுடைத் துடையிடைப் பிடிநடைச்
சிவகாம வல்லி மகிழச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடனம் புரிவ ரதனே.

உரையாடு மறைவழியை யுற்றுச் சிவாகமத்
துண்மையினை நம்பி யொழுகா
வுன்மத்த மேமிகுந் தெனதென்னும் யானென்று
மொன்றிய செருக்கின் வழியாப்
புயைாடு மிருவினைப் போகம் புசித்துநான்
பொய்ச்சடல மினியெ டாமற்
பூரண சுகோதயப் பெருவாழ் வெனக்கருள்செய்
பொன்னம் பலத்தி றைவனே
வரையாடு தாவி மேயும்பசுங் கொடியலது
மைக்கருங் கொடிய ணுகுறா
மகிமைசேர் திரிகூட வரையிற் சுயம்பைந்து
மன்றுகுற் றால மதனிற்
றிரையோடு கடல்வந்த திருவாணி யைந்தத்த
சிவகாம வல்லி மகிழ
சித்ரசயை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

ஆயிர முகக்கங்கை யலையெறிந் தாடமல
ராடகக் கொன்றை யாட
அரவாட வாலவெண் பிறையாட வெண்டலைக
ளாட வெள் ளறுகு மாட
ஞாயிறுத யம்பொரு சடாமகுட மாடவளர்
நகைமுகக் கருணை யாட
நாகக்குண் டலமாட வதளாட வொருகையி
னாதவெண் டுடியு மாட
மேயவொரு கையிலெரி யாடிட வமைத்தொருகை
விசியொரு கையா டவோர்
வீரவொண் கழலாட வுயிர் வர்க்க மானந்த
வெள்ளந் திளைத்தா டவே
சேயிதழ்ச் சீரடிச் சிவகாமி யம்மையிரு
திருநயன வண்டு மாடச்
சித்ரசபை தன்னிற் றிருச்சிலம் பொலிதரத்
திருநடம் புரிவ ரதனே.

Related Content