logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பாதிரிப் புலியூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி (சிவ சிதம்பர முதலியார்)

திருச்சிற்றம்பலம் 

மகாவித்வான் இயற்றமிழாசிரியர்  கா. ரா. சிவ சிதம்பர முதலியார்  இயற்றிய 

                                                                   காப்பு

திருவுங் கலைமா மகளுமகிழ்ந்
    திருக்குந் திருப்பா திரிப்புலியூர்ப்
பரமன் சரணத் தொருபதிற்றுப்
    பத்தந்தாதி பகர்ந்தணிவான்
அருணகிரண சுவணவெற்பின்
    அருவி பாய்ந்தால் எனவொழியாக்
கருணை மதம்பாய் வலம்புரிக்கைக்
    களிற்றின் இணைப்பூங் கழல்தொழுவாம்.


                                                                  நால்வர் துதி

திருந்தும் சிவஞா னச் செழும்பால்
    தேவி பாலுண் மறைச்சிறுவர்
இருங்கற் புணையாற் கரையேறி
    எம்மாற் கிசைநா மங்கொடுத்தோர்
பொருந்தும் பரனைத் தூதுவிட்டோர்
    பொய்தீர் வாத வூரரெனும்
அருஞ்செந் தமிழ்மா மறைவிரித்த
    அடிகள் நால்வர் அடிபணிவாம்.


                                                                                        நூல்
      
                                                       ( அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் )

1. சீர்பூத் திலங்கும் மறைச் சிலம்பும்
    சிலம்பும் பொலம்பூந் திருவடியும்
கார்பூத் தொளிர்கண் டமும் அபய
    கரமும் காட்டிக் கருணையினால்
பார்பூத் தளிக்கும் பெரியம்மை
    பாக மாகப் பலநலனும்
ஏர்பூத் திடும்பா திரிப்புலியூர்
    இறைவா யெனதுள் ளுறை வாயே.


2. வாயால் நின்னைப் பலநவிற்றி
    வழுத்தும் விழுத்தொண் டர்கட்கெலாம்
தாயாக் கருணை புரியுமெங்கள்
    தலைவா வலைவாய்த் தனித்துரும்பாய்
மாயாப் பவத்தின் இனியலைய
    மாட்டேன் தாட்டா மரையருள்வாய்
தேயா வளம்சேர் புலிசைவளர்
    திருப்பா திரிவாழ் சிவக்கொழுந்தே.

3.  கொழுந்தாய்ச் செழுந்தேன் பிலிற்றுமலர்க்
    கோடார்ந் துயர்பா டலத்தின்முளைத்
தெழுந்தே யெமையாட் கொளவமர்ந்த
    எந்தாய் ப்ரவஞ்ச விருட்கடல்வாய்
விழுந்தே யழுந்தா வணமுன் அருள்
    வேண்டும் பருவம் இஃதருள்வாய்த்
தொழுந்தே வர்களுந் தொழுந்தேவே
    தோன்றாத் துணையெஞ் சுடர்ச்சோதீ.

4.    சோதி யாயன் றாதியந்தம்
    துருவும் இருவர் தொடர்ந்தறியா
நீதி யேநின் மலவடிவே
    நெறிநால் வர்கள் நன் குணர்ந்தவனு
பூதி யேவொண் பாதிரிப்பூம்
    புலியூர்க் கரசே நின்பெருஞ்சீர்
ஓதி யுணரேன் உணர்ந்தாரின்
    உறுவேன் எவ்வா றுய்வேனோ.

5.   உய்வே கருதி யிளமைக்கண்
    ஒருங்கே துறந்திட் டுனையடைந்து
பொய்வேர் களைந்து தலைப்பட்டுப்
    போந்தார் உரவோர் புலைநாயேன்
வைவேற் கருங்கண் மடமகளிர்
    மாயத் தழிந்தேன் வாளாவென்
செய்வேன் திருப்பா திரிப்புலியூர்ச்
    சிவனே யருளுன் திருவருளே.

6.   அருளார் அமுதப் பெருங்கடலே
    அன்பர் அன்பான் அகப்படுக்கும்
பொருளே புன்னைப் பொன்சொரியும்
    பூம்பா டலவண் புலிசையுளாய்த்
தெருளா தார்மும் மதில்ஒருங்கு
    செற்ற கொற்றத் திண்சிலையாய்
இருளார் மலத்தேற் குன்கடைக்கண்
    ஈந்தாட் கோடற் கிதுததியே.

7.    ததியும் வதியும் மதிக்கின்வெளி
    தானாம் வெணெயு மெனவுலகார்
நதியும் மதியும் பொதியு முடி
    நம்பா வன்பர் நணும் வணஞ்சு
மதியும் நிதியும் கதியுமருள்
    வள்ளால் புலிசை வாழ்வேபொன்
பதியும் விதியும் துதிசெயுநின்
    பாதம் பணியப் பணியெனக்கே.

8. எனக்கே பெருமான் நீதமியேன்
    எல்லாம் வல்ல இறையோய் மற்(று)
உனக்கே யடிமை நின்னி னல்லால்
    ஒருவர் தயைக்கிங் கெதிர் நோக்க
நினைக்கேன் எல்லாம் நின்பரமே
    நிமலா கன்னி வனத்தமர்ந்த
பனக்கேழ் நறும்பொற் பூங்கடுக்கைப்
    புரிபுன் சடையெம் புண்ணியனே.

9. புண்ணியற் சுடர்வேல் புகுத்தலொக்கும்
    பொல்லாப் புல்லர் பொருளில் மொழி
நண்ணித் தமியேன் செவியுறுதல்
    நம்பா புலிசை நாயகனே
கண்ணிற் சிறந்த வுறுப்பி லபோல்
    கதிக்காம அறிஞர் கருணைமொழி
வெண்ணிக் கரும்பே வினையேற்கு
    வேண்டும் உயுமா விரைந்தருளே.

10. விரைந்தொள் ளெரிவீழ் விட்டிலென
    வேற்க ணார்பால் வீழ்ந்துடலம்
திரைந்து நரைத்துக் கோலூன்றித்
    திரிதந் தொழிவேற் குன்பெருஞ்சீர்
கரைந்துள் ளுருகிப் புகழ்ந்திடுமா
    கருணை புரிந்தொண் புலிசையுளாய்
வரைந்தென் மனத்தே திருத்தாளும்
    வைத்தாய்க் கென்கைம் மாறுளவே.


                                                    (எழுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம் )

11. மாறிலாக் கருணை மாப்பெருங் கடலே
    மதிதவழ் வரநதி யருவி
யாருலாம் சிகரத் தம் பொனொண் மலையே
    யாதியே கோதிலா வமுதே
சேருலாம் கமலப் பணைகள் சூழ் திருப்பா
    திரிப்புலி யூருறை சிவனே
தேறிலாச் சிறியேன் சிந்தையைத் திருத்திச்
    செந்நெறிக் காக்கல்நின் கடனே.

12. நின்கடன் எனையும் ஏன்றுகொண் டருளல்
    நின்மலா நிச்சலும் அடியேன்
தன்கடன் மனம்வாக் குடலநின் பணிக்கே
    சார்ந்திடல் சூர்ப்பகை தடிந்த
மென்கடம் பணியொள் வேலவற் பயந்தோய்
    விழவறா வீதிவாய் இயங்கள்
மன்கடன் முழங்கும் பாதிரிப் புலியூர்
    வரதவுத் துங்கமா மணியே.

13. மணிகளும் கனகத் திரள்களும் கொழித்து
    வரைக்கருஞ் சாந்தின்வெண் கரியின்
திணிகெழு மருப்பும் கொணர்ந்தெறி கெடிலத்
    தென்கரைப் பாதிரிப் புலியூர்
அணிகிளர் மணிப்பொற் சினகரத் தமர்ந்த
    அண்ணலே யானந்த விளைவே
பிணிகொளும் ஆக்கைப் பிறப்பிறப் பொழிப்பான்
    பிடித்தனன் உன்னடிப் புணையே.

14. புணையென நின்பொற் பூங்கழல் தராயேல்
    பொக்கவாழ் வுடையவிப் பூமேல்
துணையெனக் கியாவர் சொல்லுக வெம்மான்
    சோத்தமுக் காலுநின் னருட்கே
கணையெனக் கமலை கணவனைக் கண்ட
    கண்டனெ மைஞ்ஞவில் கண்ட
பணையென மறைகள் பணைத்தபா திரிக்கீழ்ப்
    பண்ணவா விண்ணவர் பதியே.

15. விண்ணவர் இயக்கர் முனிவரர் வசுக்கள்
    வியன்திசைப் பாலகர் உரகர்
மண்ணகத் தோர்மற் றியாவரும் வேண்டும்
    வரம்இரந் தேத்திமா மலர்தூய்த்
தண்ணருள் பெறுநின் பாடலேச் சுரத்தைச்
    சார்ந்த வோர் முயல்வீ டுறுமேல்
கண்ணகல் ஞாலத் திப்பதிக் கிணையாக்
    கழறலாம் படித் தெதோ கருதில்.

16. கருதுமெய் யடியார் களைகணே யவர்தங்
    கருத்தினுள் இனிக்குமாக் கரும்பே
சுருதியின் முடிவே அம்முடி தொடராச்
    சோதியே சுகச்சுடர்ப் பிழம்பே
பருதிவெண் மதியொள் ளெரியெனும் முக்கட்
    பகவனே பாதிரிப் புலியூர்
ஒருதிரு வுருவாய் ஓங்குசிற் பரனே
    உய்யுமா றருள்திரு வுளமே.

17.  உளங்களி துளும்பும் திருவெண்ணீற் றொளியும்
    உமையமர்ந் திலங்கிடத் தழகும்
களங்கனி யனைய களங்கிளர் கவினும்
    கனவிலும் மறப்பனோ வடியேன்
வளங்கெழு புலிசை மாநகர் உடையாய்
    வண்டமிழ் வாக்கினுக் கரசை
இளங்கதிர் எழுதெண் டிரைக்கருங் கடனின்
    றேறவிட் டருளிய விறையே.

18. இறைவனே! யடியர்க் கெளியனே! புலிசை
    ஈசனே! தேசுலாம் சடைதோய்
பிறையனே! யெவர்க்கும் பெரியனே! சிறியேன்
    பிழைபொறுத் தருளும் எம்பி ரானே!
கறைகெழு மழுவாட் படையுடை முக்கட்
    கத்தனே! சித்த னே! கவினான்
மறையனே! என்றுன் வார்புகழ் வாழ்த்தும்
    வாழ்க்கையே சாலமாண் புடைத்தே.

19. மாண்புடை யடியர் தமைமரு வாமே
    மங்கையர் கொங்கையே மருவி
வீண்புலாற் குடிலை யோம்பியெஞ் ஞான்றும்
    விழற்குநீர் இறைத்துழல் வேற்குங்
காண்பதற் கரிய தன்திரு வடியைக்
    கருதுமா கருணையீந் தாண்டான்
சேண்படர்ந் தோங்கும் பாதிரிப் புலியூர்ச்
    சிவக்கொழுந் தீசசின் மயனே.

20. சின்மயன் எங்கள் சிவபிரான் தேவ
    தேவன் தற்சேர்ந் தசேதனரைத்
தன்மய மாக்கும் சச்சிதா னந்த
    தற்பரன் பொற்பொது நடிக்கும்
நன்மையன் சகத்திர கலையொடுந் திகழும்
    நற்பதி யாதெனின் நறும்பூம்
பொன்மயக் கமலம் பாதிரி பூக்கும்
    புலிசையம் பதியது வாமால்.


                                                                        (நெடிலடிச் சந்தக் கலித்துறை)

21. மாலும் அயனும் தத்த மதத்தான் வலிகூறி
மேலும் அடியும் துருவியும் அறியா விமலேசன்
பாலும் அமுதும் ஒத்தென் னுளத்தே பயில்வுற்றான்
ஆலும் குயிலார் பொழில்சூழ் புலிசையின் அம்மானே.

22. அம்மான் அமரர்கள் அணிமுடி தாழ்த்திட் டடிபோற்றும்
பெம்மான் புலிசைப்பெருமான் கரிமால் உரிபோர்த் தோன்
செம்மான் மழுவாட் படையுடை முக்கட் சிவனென்றே
விம்மா வெருவாத் தொழுதெழு பவர்வினை விண்டாரே.

23. விண்டுந் தொண்டு புரிந்துஞ் சாந்தொடு விரைமென்பூக்
கொண்டுங் கண்துளி கூர்தர வின்னே நமரங்காள்
பண்டும் இன்றும் என்றும் உளானைப் பணிமின்கள்
வண்டுந் தேனும் பண்தழை கன்னிநன் வனமுற்றே.

24. உற்றார் பெற்றார் ஒண்மனை மக்களும் உடல்விட்டே
அற்றார் உயிரொழி யக்கா லொருதுணை யாவாரோ
கற்றார் புகழ்கடை ஞாழ லான்கழல் கண்டேத்தப்
பெற்றால் மடமன னேபிற வாவருள் பெறலாமே.

25. பெறலாம் திருவருள் பிணியொடு மூப்புச் சாக்காடும்
அறலாம் அமரர்க் கறிவர்தாம்பத மதுமேவி
யுறலாம் பாடல வளநக ரானடி யுற்றாயேல்.
திறலார் மனனென் கட்டுரை திண்ணம். தேர்வாயே.

26. தேர்ந்துன தடியார்க் கடிமைசெ யாது திகைத்தாலும்
ஓர்ந்துனை யுணரா தூன்றனை யோம்பி யுழன்றாலும்
வார்ந்தபுன் சடையாய் பாடல வாணா மதிசூடி
கூர்ந்தருள் என்பால் புரிகுத லேநின் குணமாமே.

27. குணம்பல பேசிக் கூத்து தடித்துக் குழைவாய் நெஞ்(சு)
இணங்கிநின் வார்புக ழேத்திடு நன்னாள் எந்நாளோ
பணந்திகழ் துத்திப் பணியணி யெண்டோட் பரமேட்டி
மணங்கமழ் அந்தண் பாடல நீழல் வாழ்வானே.

28. வான்வளி யெரிநீர் மண்கதிர் மதியிய மானனென்று
ஆனநற் றிருவுரு வைந்திரண்டொன்றென வானோனே
தேனம ரும்பல வகைமலர் மலர்பா திரிமன்னும்
கானம மர்ந்தோய் அடியேன் படுதுயர் களைவாயே.

29. களைகண் எனக்கண் டுன்கழல் சேர்ந்தார் கரையேற
இளையவர் கொங்கையின் மங்கியொர் நாயேன் அழிவேனோ
தளையவிழ் பூம்பா டலவா ணாவருள் தந்தாள்வாய்
அளைபயில் அரவம் அசைத்தழ லாடிய வடிகளே.

30. கேளும் கிளைமனை யாளும் சுதரொடு கிழவோரும்
மாளும் பொழுதுத வாரென் றறியுநன் மனனேநீ
யாளும் புலிசை யினையன் றுய்யநல் அரவிந்தத்
தாளும் ஈரிரு தோளும் துதிகதி கழைவோமே.


                                                                   (எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)


31. தழைக்கும் செஞ்சடைக் காடும்அக் காட்டிடைத்
    தவழும் திங்களும் தண்மணி நீலமிட்(டு)
இழைக்குந் தன்மையை யொத்தொளிர் கண்டமும்
    இலங்கு முக்கணும் ஏத்தடி யோருளம்
குழைக்கும் கோலவெண் ணீற்றொளி யுங்குழல்
    குழவும் பாதமு மாய்க் கொடுங் கூற்றன்வந்(து)
அழைக்கும் போதுவந் தஞ்சலென்றாளுவாய்
    அங்க ணாகடை ஞாழலின் அண்ணலே.


32. அண்ண லேயென தாருயி ரேயுயிர்க்
    கான நற்றுணை யேயிணை மற்றில்லாப்
பெண்ண லாளொரு பாகம் அமர்ந்திடும்
    பெற்றி யோய்இப் பெறலரும் யாக்கையால்
மண்ணு ளேபிறந் தேன்பயன் நண்ணிலேன்
    மாய வாழ்க்கை மகிழ்ந்தனன் மன்னனே
விண்ண ளாம்விரைப் பூந்துணர்ப் பாடல
    வித்த காவருள் வைத்திடல் வேண்டுமே.

33. வேண்டும் நின்மலர்ப் பாதத் திலங்கிடும்
    மெய்ம்மை யன்பு விமலபஞ் சாக்கர
தூண்டு செக்கர்ச் சுடர்ப் பரஞ் சோதியே
    சுத்த நித்தச் சுகாநந்த வாரியே
மாண்டு மீண்டுபி றந்துழல் வார்களோ
    வஞ்ச னேன்மனச் சஞ்சல மாற்றுவார்
பாண்டு மைந்தர்க்குப் பாசு பதமருள்
    பாடலேச பராபர மூர்த்தியே.

34. மூர்த்தி யேமுத லேமுதல் ஈறிலா
    முக்க ணாபன் மொழித் தொடை யார்த்துநான்
சாத்தி லேன்நின் திருவடிக் கன்பொடு
    சங்கரா சிவனே முறை யோவென
ஆர்த்தி லேன்அழு தேன்இலை மெய்விதிர்த்(து) 
    ஐய னேயடி யன்எங்ஙன் உ ய்குவேன்
தீர்த்த மாக்கெடி லம்வலம் சூழ்தரச்
    செய்திடும் பாட லேச்சுரச் சித்தனே.

35. சித்த னாயுயர் மாணிக்க வாசகச்
    செம்மலுக் கருள்செய் திடுஞ்செய் கையும்
பத்த ராம்அப் பரைக்கரை யேற்றிடும்
    பான்மையுங் கண்டுபா தத்தை நண்ணினேன்
கத்த னேகரு ணாகர மூர்த்தியே
    கயிலை மாமலைக் கண்ணுத லேயுன்றன்
சித்தம் வைத்தெளி யேனையும் ஆட்கொள்வாய்
    தேவ தேவதிருப் பாடலேசனே.

36. ஈச னேயெனை யேன்றுகொண் டாண்டிடும்
    எந்தை யேபந்த பாச விருட்டினை
நாச மாக்கத் துசங்கட்டி யால்நிழல்
    நண்ணு சின்மயா னந்தநா தாந்தனே
தேச னேதிருப் பாடல மாவனச்
    சித்த னேநின் திருவரு ளாலெனை
ஆச கற்றிய ழைத்தருள் நல்கினால்
    ஆர்கொ லோமறுப் பார்அருள் ஐயனே.

37. ஐயடைந் துமிடற் றிற்கண் பஞ்சடைந்(து)
    அறிவழிந் தவமே வெய்ய அந்தகன்
கைய டைந்து துயரடை யாதுநற்
    கதிய டைந்துயு மாறது கேண்மினோ
மைய டைந்தகண் டன்வளர் பாடல
    வனம டைந்தவன் மாமலர்ச் சேவடி
யைய டைந்திடப் பெற்றிடு வீர்களேல்
    ஆர்கொ லோநுமக் காவரொப் பாகவே.

38. ஆக மல்கிய நீற்றொளி வெண்மையும்
    அவிர்புன் சடையார் எழிற்செம் மையும்
பாக மல்கிய தேவிப் பசுமையும்
    பார்த்தென் பாபக் கருமையென் றோட்டுவேன்
மாகமல்கிய சிற்சபை வாணனே
    மணிகள் மல்கிய வாளரப் பூணனே
பூக மல்கிய சோலைகள் சூழ்திருப்
    புலிசை மாநகர்ப் பூதநன் நாதனே.

39. நாத னேபர நாதத்தின் அந்தமா
    நம்ப னேயும்பர் நண்ணற் கரிய மெய்ப்
போத னேபசு போதந் தவிர்த்தெனைப்
    புனித னாக்கும்பொன் னம்பலத் தாடிய
பாத னேதிருப் பாடல மாநகர்ப்
    பண்ண னேசண்பைப் பாவலர் சொற்றமிழ்
வேத னேவிகிர் தாநினை வந்தணுகும்
    வேட்கை யேயென்றன் வேட்கை விமலனே.

40. விமல நோக்கது நோக்கிப் பரிசித்து
    மென்ம லர்ப்பதம் சூட்டி விளக்கிட்டு
மும்மல வேரறுத் தாட்கொளுஞ் சற்குரு
    மூர்த்தி யாயென்ற னக்கருள் செய்குவாய்
அமல னேயடி யார்க்கமு தேயெங்கள்
    அப்பனே யென்ன ரும்பெறற் செல்வமே
கமல வாவிகள் சூழ்கன்னி காபுரக்
    கார ணாபரி பூரண வள்ளலே.

                                                                               (சந்த கலிவிருத்தம்)


                                                                                 (கிள்ளை விடு தூது)

41. வள்ளைக்குழை மலர்மென்குழல் மலைமாதுமை தவம்கூர்
பிள்ளைப்பிறை மிலையுஞ்சிவ பெருமானுறை விடமாம்
கள்ளைக்குவ ளைகள்வாயுமிழ் கடைஞாழலின் மருவிக்
கிள்ளைக்கர சேவென்துயர் கிளத்தாய்தலை வோர்க்கே.

42. தலைமாலையின் எழிலும்மூவர் தமிழ்மாலையின் உயர்வும்
மலைமாமகள் அவிர்செஞ்சடை யழகுங்குழை யொளியும்
கலைமானுரி யுடையும்பொலி கடைஞாழலும் அயில்மூ
விலைவேலுநன் குடையானவ னெனையாளுடை யானே

43. உடையான்மழுப் படையானதள் உடையானடை யுடைமால்
விடையான்கழுக் கடையான்கதிக் கொடையான்மிளிர் விரிசெஞ்
சடையானழுக் கடையார்மனத் திடையான் பதையிதழித்
தொடையான்விழுக் கடைஞாழலெந் தோன்றாத்துணை யோனே.

44.  துணையும்பெருத் திருவும்பவத் துயராழிதொ லைக்கும்
புணையும்புக லிடமும்முயர் பொருளும்புக லொருநாற்
றிணையின்வளம் மிகமன்னிய திருப்பாதிரிப் புலியூர்
இணையில்லவென் எம்மானடி யிணையாகும் எமக்கே.


45. கேதங்கெடுத் தாள்வானுன கிளர்சேவடி வழுத்தும்
போதங்கொடுத் தருள்நின்னருட் டிறம்யாதெனப் புகல்கேன்
காதங்கமழ் தருதண்டலை யயலேகதிர் முத்தம்
ஓதங் கொணர்ந் திடுபாடல வுயர்மாவன வுரவோய்.


46. ஓயாக்கவ லையின்வீழ்மனம் ஒருக்கிவினை யருக்கித்
தாயாச்சுரந் தருள்நல்குநின் சரணஞ்சரண் அடைந்தேன்
தூயாவட புலியூருறை சுகபூரண கரணா
வாயாலெனை வாவென்றொரு வசனம்புக லாயோ.

47. புகலென்றுனை யடுத்தும்மெனைப் பொல்லாதவைம் புலனும்
மிகக் கொண்டிடத் தகுமோவேழை யென்செய்குவல் எந்தாய்
உலகில்வள மோவாப்புலி யூராவவை யொருங்கே
மிகவும்பணி செயுமாறருள் விமலாவடி யேற்கே.

48. அடியேனுன தடியாரவை யணுகேன்புகழ் பலவும்
படியேன்பல தினமும்மவப் பாழுக்கிறைத் தையா
குடிகேடனு மானேனெனைக் கூவிப்பணி கொள்ளாய்
செடியேறிடத் திகையாவணந் திருப்பாடலத் தேவே!

49  பாடும்மடி யவர்தொல்வினைப் பருவேர்பறித் தவர்க்கோர்
வீடும்மரு ளொருபாடல வியன்மாநகர் இறையே
மாடுந்தவ மணியுங்கண்டு மகிழ்கின்றபுன் மதிபோய்
ஓடும்பர லதுவும்மெனு முணர்வென் றருள் வாயே.

50. உணர்வுக்குணர் வதுவாயொளிர் உயிர்முற்றிலும் முறைநிற்
புணர்வுற்றியான் எனதற்றுயர் பொழுதெப்பொழு துரையாய்
துணரிற்பிர மரமொய்த்திசை முரலற்புத மிகுபொற்
பணைமிக்குயர் ககனத்தொடு படர்பாடல வனனே.

                                                                                         கலித்துறை


51. வனத்திற் பொலிகா னலைவாய் மடுப்பான் மதித்தே
யினத்திற் பிரிந்தெய்த் திடுமா னதையொத் தயர்ந்தேன்
தனத்திற் றிகழ்தா ரணமாதர் கடம்மி னன்பாய்ப்
புனத்திற் றழைகொன் றையநன் றீபுலி சையானே.

52. ஆனேறி வந்தே யடியார் இடரான நீக்கும்
கோனே யெனக்கோர் குறைபா டதுகூடு கிற்றேல்
வானே யணவுந் திருப்பா டலவாண வென்பேன்
ஏனேன் எனமா தொடும்வந் தெனை யேன்று கொள்ளே.

53. கொள்ளா யெனில்தாய் அனநீ யெனைக்குன்ற வில்லீ
தள்ளா தொழிவார் எவர்தண் ணருள்சால நல்கும்
வள்ளால் அடியேற் கழியாத மெய்வாழ்வு தந்தாள்
கள்ளார் நறும்பூந் துணர்ப்பாட லக்கான்உளானே.

54. கானம் பொறிவண் டிசைபா டவக்கான வேடன்
ஏனந் தனைத்தேடி முன்போந் தவனெந்த வாறோ
ஆனந்த சுகம்பெற நால்வருக் கால நீழல்
மோனந் தனைவாய் திறவாது மொழிந்த வாறே.

55. மொழிந்தோர் மொழியம் மொழியாற் பிரவஞ்ச மோகம்
அழிந்தோர் அழியாப் பரமாநந்தம் அண்ணும் வண்ணம்
பொழிந்தாள் குவைதண் ணருளொண் ணம்புலிசை வாழ்வே
இழிந்தே விடுவேன் இலையேல் மன்றவெம்பி ரானே.


56. பிரானென் றுனைக்கூ விளிகொண்டும் என்பே துதீர்ப்பான்
வராநின் றிலையேல் விடுவே னலன்வந் திடெம்மான்
அராவும் மதிமத் தமுநித் தமுமாட் சிகொண்டே
விராவுஞ் சடையாய் திருப்பா டலமே யகோவே.

57. கோவாகி யிம்மா நிலமாளக் குறுக கில்லேன்
தேவா தியர்தம் பதவாழ்க் கையுஞ்சிந் தைசெயேன்
மூவா முதலே நினதாட் கன்புமுற்றல் வேண்டும்
ஓவா வருட்பா டலநாத வுதவு வாயே.

58. ஆயும் பொழுதோர் கடைஞா ழலினா தியேநீ
தாயுந் தந்தைசற் குருதெய் வமுந்தான் எனக்கே
யாயண் டசராச ரமாகி யவற்ற மர்ந்தும்
தோயுஞ் செயலற்று நின்றாயுன் றன்சூழ்ச் சியென்னே.

59. சூழ்ச்சித் திறலானையெந் தோன்றாத் துணையை விண்ணோர்
காட்சிக் கரியானை நல்லூழ் உறக்கண் டுகொண்டேன்
சேட்சென்று சென்றெங் கணுந்தேடித் திகைத்திந் நன்னாள்
மாட்சிப் படும்பா டலமா மணிமந் திரத்தே.

60. திரத்தே திருவஞ் செழுத்துண்மை தெளிந்து தேறி
வரத்தே துமின்றிச் செலவாகி யென்வல் வினைப்பொன்
பரத்தே பரமாவ தென்றோ சொலும்பா திரிப்பூம்
புரத்தே வினங்கொன் றைதுன் றாரளிப்புட் குழாமே.

                                                                        
                                                                            கலி விருத்தம்

61. புள்ளும் ஏனமும் புக்கறி யாததோர்
நள்ளுங் கீழொடு மேலுமில் ஞாயத்தைக்
கள்ள னேன்கடல் சூழ்கடை ஞாழலின்
உள்ளுளே கண்டிங் குய்ந்திடப் பெற்றனே.


62. பெற்றம் ஏறிப் பலிக்குழல் பெற்றியன்
கற்றோ ருள்ளக் கவலை களைபவன்
மற்றென் சிந்தை திறைகொண்ட வானவன்
உற்ற பாடலங் கைதொழு துய்ம்மினே.

63.. உய்யும் வண்ணம் உணர்த்துவன் கேள்நெஞ்சே
தையல் நங்கையொர் பங்குடைச் சங்கரன்
வையம் ஏத்த வளர்திருப் பாடலம்
ஐயம் இன்றி யடையின்வீ டாகுமே.

64. ஆகும் ஓர்பர மானந்த வாழ்பதம்
ஏகும் வல்வினை மாயை யிருட்குழாம்
சாகும் யான்என தென்னுஞ் சழக்கது
நாகப் பூணினன் பாடல நண்ணினே.

65. நண்ணுமின் உய்ய எண்ணுநம ரங்காள்
மண்ணுண் டிவ்வுடல் மாய்வதன் முன்னரே
எண்ணும் எண்ணம் எமக்கருள் செய்திடும்
கண்ணு தற்பர மன்கடை ஞாழலே.

66. ஞாழ லுஞ்செழுங் கொன்றைய தாகமும்
தாழையும் தாம ரைமுனம் பூத்தநற்
காழுடைப் பாடலேசன் கழலலால்
ஏழ்பவத்திங் கொருமருந் தில்லையே.

67. இல்ல றத்தில் இருக்கிலென் ஏற்றவோர்
நல்ல றத்தின் நடக்கிலென் நன்னெஞ்சே
எல்லை யில்லருட் பாடலே சன்கழல்
வல்லை யேலுயர் வாழ்வது திண்ணமே.

68. திண்ண னார்கண் முகத்தினும் தேத்துழாய்க்
கண்ண னார்கண் கழலினும் பூண்டதீ
வண்ண னார்என் மனக்கண் புலிசையின்
எண்ண னாரினி யெங்கணும் பூண்பரே.

69. பூண்டொர் பாய்வெம் புலியத ளாடையார்
மீண்டொர் தண்புலி வேண்டவந் தாண்டவர்
சேண்ட யங்கம் புலிச்சென்னிப் பாடலம்
நீண்ட வொண்புலி யூர்நினைந் துய்ம்மினே.


70. மின்னி லங்கும் புரிசடை வேதியன்
தென்னி லங்கையர் கோன்தலை யூன்றினான்
மன்னி லந்தண் வடபுலி யூர்தனைத்
துன்னி லந்தகன் தாள்தொழு தோடுமே.

              
                                                                         (அறுசீர் ஆசிரிய விருத்தம்)

71. தொழுது நெக்க கங்கரைத்து
    சொரிதரக் கண்ணீர்த் தாரை
அழுதுடல் கம்பித் தாடி
    அங்க ணாவென வரற்றிப்
பழுதி லாவடி யர்போற்றும்
    பண்ணவ பாட லேச
இழுதை யேனுனை மறந்திட்
       டெங்ங னோவுய் குவேனே.


72. வேனில் நண்பக லின்னன்னீர்
    வேட்கை யால்விடாய்த் தோன்பொய்கைப்
பானியம் எதிர்கண் டாங்குன்
    பரிவுறும் கருணை கண்டேன்
தேனொடு ஞிமிறும் வண்டும்
    திளைக்குந்தண் துணர்ப்பூஞ் சோலை
வானக டுரிஞ்சுங் கன்னி
    வனமினி துகந்த வாழ்வே.

73. வாழ்வெது வென்றால் நின்தாள்
    வாழ்த்தும்நல் வாழ்வே வாழ்வு
தாழ்வதும் தலைநின் பொற்றாள்
    தாழ்த்திடாத் தாழ்வே யாகும்
ஊழ்வினைத் தொடர்பால் அந்தோ
    வுனையினும் உணரா துள்ளம்
மாழ்குவேற் கிரங்கு கண்டாய்
    புலிசைமா மணிச்செங் குன்றே.

74. குன்றினைக் கொன்ற குன்றாக்
    கொற்றவேற் குமரன் என்றும்
வென்றிவில் விசயன் என்றும்
    வெறும்படிற் றுரையா நாளும்
புன்றொழிற் புல்லர்ப் பாடிப்
    புழுங்கியுள் ளழுங்கி யெய்த்திட்(டு)
இன்றுனை யடைந்தேன் எந்தாய்
    யேன்றுகொள் புலிசை யானே.

75. புலிசையாய் ஒருநா யேனைப்
    புரியிரு வினையும் மூன்றாம்
வலிசெயும் மலமும் நான்கு
    வகைக்க ரணமும் ஐந்தாய்
நலிபு லனுங்கா மாதி
    யாறுநன் கொருங்கே யேற்றுக்
கலிசெய்தா லெங்ஙன் உய்வேன்
    காத்தல்நின் கடன்கண் டாயே.

76. கண்பொலி நெற்றி யானும்
    கடுவமர் கண்டத் தானும்
உண்பலிக் குழன்றிட் டானும்
    உள்குவார் உள்ளத் தானும்
பெண்பயில் பாகத் தானும்
    பிறப்பிறப் பொழிப்பான் தானும்
புண்பயில் சூலத் தானும்
    புலிசைமா நகரத் தானே.


77. தானவற் கடிந்த கொற்றச்
    சக்கரந் திருமாற் கீந்த
வானவன் எங்கள் கன்னி
    வனத்தினி திருக்கக் கண்டிங் (கு)
ஊனம தொழித்தி டாமே
    உதிர்சரு காதி தின்று
கானமும் குகையும் சார்வார்
    கருத்தென்னோ காண்கி லேனே.

78. காணநின் வடிவைக் கண்ணும்
    கருதிடக் கருத்தும் நின்தாள்
பூணநற் சிரமும் பூசை
    புரிந்திடக் கரமும் நின்சீர்
பேணவோர் அன்பும் போற்றப்
    பிறங்குநா வதுவும் ஈந்தாய்
தாணுவே புலிசையாய்நின்
    தண்ணருள் என்சொல் கேனே.

79. என்சொல் கேன்என் சொல்கேனோ
    ஏழையேன் இதயம் என்னும்
வன்சிலை யதனை முன்னோர்
    வரிசிலைச் சிலைவ ணக்கும்
பொன்செயும் சடையான் நங்கள்
    புலிசையான் கனிவித் தன்னோன்
தன்செயற் காக்கி  யிட்ட
    தன்மையைத் தமிய னேனே.

80. தமியனேன் சாக்கி ரத்தும்
    சார்துயில் கூடும் போதும்
இமைவிழித் திடுமக் காலும்
    இருங்களி துயருற் றாலும்
கமையினும் வெகுளி பொங்குங்
    காலும்நின் கழற்கால் உன்னி
உமையருந் தவம் செய்பாட
    லேசநான் உயர்ந்திட் டேனே.


                                           (எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் (தாண்டகம்))


81. உயர்வகலம் பருமைநுண்மை யில்லான் தன்னை
    உள்குமவர் உள்ளத்தின் உள்ளே நின்று
துயர்களைய வல்லானை யெங்கள் தோன்றாத்
    துணையினை யெண்டோள் முக்கட் சுயம்பு தன்னைப்
புயல்தவழ்பூஞ் சோலையய லுடுத்த வொண்பூம்
    பொய்கைவளம் சிறந்தவட புலிசை யென்னும்
வியனகரிற் கண்டடைந்தார் எவரே யேனும்
    விண்ணவர்செய் பணிபூண்டு வீடுற் றாரே.

82.  விண்ணாகிக் கடலாகி மலையு மாகி
    விரிசுடர்கள் ஒருமூன்றாய் விபுல மாகி
எண்ணாகி யெழுத்தாய்ஏழ் இசையு மாகி
    அவ்விசையின் இன்சுவையாய் இலங்குகின்ற
கண்ணாகிக் காண்பொருளும் காட்டு வானும்
    கருத்துமாய்க் காண்பவனும் தானே யாகிப்
பெண்ணாகி யாணாகிப் பிறவும் ஆனார்
    பிறங்குதிருப் பாடலத்தெம் பெரியார் தாமே.

83. தாமேமுத் தொழிலியற்ற வயன்மா லோடு
    சங்கரனு மாயவர்க்குட் டலைமை பூண்டு
பூமேவு வான்தலையின் ஒன்றைப் போக்கி
    புவியிடந்தான் இரப்பப்போர் ஆழி நல்கித்
தேமேவு முடியிதழி வழிபட் டேத்தும்
    சேய்ஞ்ஞலூர் மறைச்சிறுவர்க் கந்து மற்றென்
னோமேவும் புன்மொழிக்கும் கடைக்கண் ஈந்தார்
    நற்றிருப்பா திரிப்புலியூர் நம்ப னாரே.

84. நம்பனைநம் பும்மடியார் இடுக்கண் தீர்க்கும்
    நாதனைப்பா திரிப்புலியூர் நயந்த தேனைக்
கொம்பனைய நுண்ணிடையாள் காண மன்றுள்
    குனித்தருளும் தனிப்பொருளைக் கொழுந்தேன் பில்கும்
பைம்பொன்னித ழிப்படலை முடியிற் சூடிப்
    பாயுமால் விடைநடவும் பால்நீற் றானை
வம்பனேன்பி ழைக்கிரங்கும் மணியை யந்தோ
    வாழ்த்தாதே வாளாநாள் மாய்த்திட் டேனே.

85. மாய்த்திட்டோம் நாளவமே யென்றென் றெண்ணி
    வருந்தாதே மடமனமே மறலி மாளச்
சாய்த்திட்ட தாள்மலரும் பிறவித் தாபந்
    தணித்தருளும் தன்மையுங் கொண்டிருஞ் செஞ்சாலி
காய்த்திட்டு வளஞ் செழிக்கும் பழன வேலிக்
    கன்னிவனத் திடை நமக்கோர் கருணை யாழி
வாய்த்திட்ட ததினழுந்திப் பருகித் தேக்கி
    மாசகன்றின் புறுவமென்பின் வருகு வாயே.

86. வருகுருவாய் இருவினையொப் புமையுற் றோர்தம்
    மாமுடிதாள் மலர்சூட்டி வாழ்விப் பானே
திருவுருவம் அருவுருவம் அருவ நான்கும்
    திகழொன்றும் ஈரிரண்டும் ஆய தேவே
பெருகருளெம் பிராட்டிபுரி யருந்த வத்தைப்
    பெரிதுவந்த பெருமானே யெனநிற் போற்றி
முருகவிழ்பூம் பாடலஞ்சென் றடையப் பெற்றேன்
    முக்கணாவெ னைக்காத்தல் முறைமை யாமே.

87. ஆமாறு ஒன்று ணர்த்துவன்கேள் நெஞ்ச மேநீ
    யஞ்செழுத்தை யோதிவெண்ணீ றணிந்து வானோர்
கோமான்தன் பாடலேச்சு ரத்தை நாளும்
    குறுகிவலம் புரிந்துபணிந் தெழுந்தன் போடும்
பூமாலை பாமாலை புனைந்து சாத்திப்
    புரிந்துபணி யடியர்தமைப் பரனென் றெண்ணும்
தூமாண்பும் உறுவையெனிற் சொன்னேன் சொன்னேன்
    துயரறுத்துப் பரகதியிற் றுன்ன லாமே.

88. துன்னஞ்சேர் கோவணமும் சூல வேலும்
    தூநீற்றுப் பொக்கணமும் தோள்கள் நான்கும்
பொன்னந்தக் கழலணிபா துகையு மாகப்
    பொலிந்தவொரு தவவேடம் பூண்டு சென்றே
யன்னங்கொண் டிடுமினெனக் கடிஞை யேந்தி
    யந்நலார் வளைகவர்ந்தீர் அழகி தன்றோ
தென்னஞ்சோ லைகள்புடைசூழ் பாட லேசச்
    செல்வரே நீர் கொள்திருவேடப் பண்பே.

89. பண்ணார்ந்த மூவர்தமிழ் ஆரம் பூண்டோன்
    பருவரைத் தோள் நான்குடையைம் முகன்வே ணிக்கண்
விண்ணோர்ந்த வாறுடையன் இசையேழ் வல்லன்
    விளங்கிடுமெண் குணன்வகைமை யொன்ப தானோன்
தண்ணார்ந்த பாடலத்தின் கண்ணார் நீழல்
    தனின் முளைத்தென் பிறவிமுளை களைய வல்ல
பெண்ணார்ந்த பாகத்தன் அவனுக் கன்பு
    பெருக்காதென் செய்கின்றீர் பேதை யீரே.

90. பேதையீர் நும்பேதும் கோதுந் தீர்ந்து
    பிறங்கிடுமே தையராவீர் பேசக் கேண்மின்
தாதைதாள் எறிந்தவர்க்குத் தாதை யானோன்
    தாயில்பன்றிக் குருளைகட்குத் தாயாய் வந்தோன்
வாதைதீர்த் தடியரைவாழ் விக்குமூவா
    மருந்தானோன் மகிழ்கன்னி வனம்புக் கன்னோன்
காதைதான் பலகேட்டுக் கண்ணீர் மல்கிக்
    கரைந்துளநம் பாவென்னக் கரைத்தி டீரே.


                                                                 (எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியச் சந்த விருத்தம்)


91. கரையி லாப்பெருங் கருணையங்கடற்
    கடவுள் நின்சரண் சரணம், நால்வர்கட்
குறையி லாப்பெரும் பொருளு ணர்த்திய
    வொருவ னேசரண் சரணம், ஒண் பொருள்
வரைவி லான்மதிள் மூன்றும் எய்ததன்
    மைந்த னேசரண் சரணம், வார்கடல்
திரையு லாவுதண் பாட லேச்சரச்
    செல்வ னேசரண் சரண மப்பனே.

92. அப்ப னேயரு ளன்னை யேயெனை
    யாண்ட தேசிகா சரணம், ஆரருட்(கு)
ஒப்பி லன்னை யாம்பெரிய நாயகிக்(கு)
    உரிய நாயகா சரணம், அன்பர்கட்(கு)
எய்ப்பி டத்தினில் வைப்ப தாகிய
    எண்கு ணத்தனே சரணம், நீர்மலி
துப்பு றழ்ந்தவார் சடைகொள் பாடலச்
    சோதி யேசரண் சரணம் என்றுமே.

93. என்றும் எங்கணும் நீங்க கிற்றிலா
    ஏக நாயகா! சரணம் வெள்ளியங்
குன்று மன்றுமே கம்ப மாணியங்
    குழியு மேவினாய் சரணம் ஐம்புலன்
வென்று நன்றுனை யெண்ணு வாருளம்
    மேவு நாதனே சரணம் மென்மலர்
துன்று கின்றபொற் பாடலேச்சுரச்
    சுகசொ ரூபனே சரணம் ஐயனே.

94. சரணடைந்தவர்க் கருள்சு ரந்திடும்
    சங்க ராசரண் போற்றி; மானொடும்
கிரண வொண்மழுப் படைய ணிந்தகைக்
    கேடி லாய்சரண் போற்றி; வேணியில்
தருண வெண்மதிக் கண்ணி சூடிய
    தற்ப ராசரண் பொற்பு சித்தனாய்
அருண வண்கதிர்த் தேசு பூண்டுமன்(று)
    ஆடு பாடலத் தனக போற்றியே.

95. அனக சிற்பர வடிவ மாயபா
    டலமி லங்கிடு மம்பொன் மாமயா
சினக ரத்தமர்ந் தருளு முக்கணெஞ்
    சிவபி ரான்சரண் போற்றி யைந்தலைப்
பனகபூடணா போற்றி மாற்றரும்
    பாப நாசனே போற்றி மாமறைச்
சனக னாதியர்க் கருள்க லால்நிழல்
    சம்பு வேசரண் போற்றி தாணுவே.

96. தாணு வேயுனக் கபய மாயினேன்
    தத்து வப்பொருள் யாது மோர்ந்திலா
வீண னாயினும் அடிய னேன்தனை
    விட்டி டேல்சரண போற்றி யும்பரார்
காணொ ணாதவோர் கயிலை வானவா
    கன்னி காபுரக் கடவு ளேநினைப்
பேணு மன்புதந் தருளு போற்றியெம்
    பிஞ்ஞ காசரண் போற்றி போற்றியே.

97. போற்றி சைத்திடுங் கங்கை நங்கையைப்
    புனித மாக்கினாய்ப் போற்றி செந்தழற்(கு)
ஆற்றல் நல்கினாய் போற்றி பாடலத்
    தணிசெய் நீழலாய் போற்றி மாதவச்
சீற்ற மில்புலிக் கால்முனிக்கருள்
    செய்த நாதனே போற்றி யன்பர்க்காக்
கூற்றி னைக்கு மைத்திட்ட பங்கயக்
    குரிசில் போற்றிநின் கோலம் போற்றியே.

98. கோல நீற்றனே போற்றி கண்மணிக்
    கோவை மார்பனே போற்றி தண்ணருள்
நீல கண்டனே போற்றி மால்விடை
    நிலவு கின்றவண் துவச போற்றிதிண்
ஞாலம் உண்டவன் தனையி டத்துடை
    நாய காசரண் போற்றி நீண்டவெம்
பாலலோசனா போற்றி பாதிரிப்
    புலிசை மேவிய பரம போற்றியே.

99. பரமு னக்கெனைப் பாது காத்திடப்
    பாட லேசனே போற்றி வீழ்ந்துடல்
சரம முற்றிடும் பொழுதுன் அற்புதத்
    தாள்கொடுத்தருள் போற்றி வேதநற்
சிரமி ருக்குநற் பரசி வக்கொழுந்
    தீச சிற்பரா போற்றி போற்றியோர்
வரவுத் தமசித் தசாமி யேநின்
    மாமலர்ப் பாதம் போற்றி போற்றியே.

100. மாமலர்ப் பாதம் போற்றி பாயுநின்
    மால்வி டைக்கொடி போற்றி கொன்றையந்
தாம னேசரண் போற்றி சுண்ணமாத்
    தவள நீற்றனே போற்றி தண்மைசேர்
சோம சேகரா போற்றி நித்தனே
    சுத்த வத்துவே போற்றி போற்றிவண்
தேமலர்ப் பொழிற் பாடலேசமெய்த்
    தேவ போற்றிநின் சீர்கள் போற்றியே.


                                            முற்றும்.

Related Content

அருணைப் பதிற்றுப்பத்து  அந்தாதி  (வண்ணச்சரபம்  தண்டபாணி சுவா

கலைசைப் பதிற்றுப்பத்து அந்தாதி