logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

குலசை உலா (தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர்)

திருச்சிற்றம்பலம் 

தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் இயற்றிய 

காப்பு: கற்பகவிநாயகர்


 
காருலாந் தென்குலசைக் கச்சிகொண்ட ஈசுரர்மேல்
சீருலாப் பாடத் திறன்நல்கும்- மேருக்
குவடுசுவடுபடக் கொம்பால் எழுதும்
கவடுபடாக் கைக்கற்ப கம்.

                                                                       சிவபெருமான் பெருமை

சீர்பூத்த தாமரை போற் செங்க ணெடுமாலுந்
தார்பூத்த மார்பிற் சதுர் முகனும் - ஏர்பூத்த

பூப்பொலிந்த சேவடியும் பொன்முடியுங் காண்பரிய
தீப்பிழம்பாய் நின்ற திருவுருவன் - கூப்புமிரு

கையுடையா ருள்ளக் கமலா லயமுடையான்
பொய்யுடையா ருள்ளம் புகுதாதான் - மெய்யுடைய

ஏகன் அநேக ன்இரண்டற் றகலாத
போக மளிக்கும் பொருளானோன் - போகமுறும்

எல்லா வுயிர்க்கு முயிராக யவரவர்கள்
செல்லுங் கருத்தில் செறிவானோன் - வல்லார் சொல்         (5)

வாக்குமனா தீதன் மறைகளுக்கு ம் எட்டாதான்
போக்குவர வில்லாத பூரணத்தன் - நோக்கரிய

முக்குணத்தின் மூவரையுந் தோற்றிமுறை யேயவர்க்குத்
தக்கவகை முத்தொழிலுந் தானளிப்போன் - மிக்க

உருவ ன்அருவ ன்உருவருவ மில்லான்
இருள னொளிய னிவையில்லான் - பொருவில்லா

ஐந்தொழிலுஞ் செய்தே யழகியசிற் றம்பலத்து
நந்தலிலா ஞான நடம்புரிவோன் - அந்தமிலா

நித்த ன்அநாதி நிமலன் பிறவாத
சுத்த னறிவன் சுகாதீதன் - அத்துவிதன்     (10)

வேல்போலுங் கண்ணி விமலையுடன் வீற்றிருக்கும்
பால்போலும் வெள்ளிப் பருப்பதத்தான் - மேலொழுகு

கங்கைச் சடையான் கறைமிடற்றான் கண்ணுதலான்
பொங்கரவப் பூணான் புலித்தோலான் - பங்கமிலா

வேதப் பரிபுரத்தான் வீரக் கழலுடையான்
பூதப் படையான் பொருவிடையான் - சோதிதரும்

வெண்ணீற் றழகன் விளங்குமண்ட பிண்டமெல்லாம்
எண்ணீற்றிற் காணா திறப்பிப்போன் - வண்ணமுற

ஆக்குவோன் காப்போ னழியா மலப்பிணியை
நீக்குவோன் வீட்டி னிறுத்துவோன் - பாக்கியமாம்     (15)

எங்கள் மலைமடந்தை யெவ்வுயிரும் பெற்றெடுத்துங்
கொங்கை தளராக் குமரியாள் - பொங்கியசீர்க்

காஞ்சிப் பதியிலருட் கம்பைத் திருநதியில்
வாஞ்சை மிகுத்து வழிபடவே - யாஞ்சலமாய்

வெள்ளம் பெருகிவர விம்மி விதிர்விதிர்த்துத்
தள்ள வொழியா ததுகண்டே - யுள்ளணைத்துக்

கொள்ளத் திருமலர்க்கைக் கோல வளைத்தழும்பும்
வள்ளத் தனக்குறியும் வைத்திருப்போன் - எள்ளரிய

பேரருளி னாலே பெருமைத் தமிழ்க்கொழிக்குஞ்
சீருடைய பாண்டித் திருநாட்டுக் - காரிலகுங்       (20)

கொண்ட லுறங்குங் குளிர்ந்தமலர்ச் சோலைகளில்
தண்பவள வல்லி தழைத்தேறும் - எண்டிசைச்சூழ்

மாடமொடு மாளிகையும் மண்டபமுங் கோபுரமும்
ஆடரங்கும் பொன்னா லமைத்திட்ட - பீடுடைய

தேராரும்  வீதித் திருக்குலசை மாநகரிற்
பாராருங்கீர்த்தி யொரு பாண்டியன்முன் - ஆராத

ஆசை யொடுந்தவஞ்செய் தன்பாயவன் வேண்ட
மாசில் வடிவாயுதித்து வாழந்திருப்போன் - பேசிலென்றும்

பூவுந் தளிரும் புதுவடுவுங் காய்கனியும்
மேவு மொருமா வியப்புடையான் - மூவுலகில்   (25)

எல்லா வழகு மெடுத்துத் திரட்டி வைத்த
உல்லாச மான வுருவுடையான் - நல்லோர்தங்

கண்ணாரமுதங் கருணைப் பெருமாட்டி
யொள்நீலக் கண்ணா ளொளிர்முகத்தாள் - எண்ணான்கு

அறம்வளர்த்த நாயகியென் னம்மை மணவாளன்
பிறைமுடித்த செஞ்சடை யெம்பெம்மான் - மறைவடித்த

வாயன் திருநமச்சிவாயன் பதத்தினிற்செவ்
வாயன்பு வைத்தார்தம் வாயினான் - மேயதொரு

கங்கையா னோங்குசிவ கங்கையான் மானேந்து
செங்கையான் செங்கையான் செங்கையான் - மங்கையுறும்    (30)

அங்கத்தா னங்கத்தா னங்கத்தான் பூதியணி
சங்கத்தான் சங்கத்தான் சங்கத்தான் - தங்கத்

திருக்கார் முகத்தான் திகையானன் மூன்று
திருக்கார் முகத்தான் றிகையான் - பெருத்தொலிக்கும்

ஓதப் பரவையா னுன்னுந் திருமுடிமேல்
ஓதப் பரவை யுடையபிரான் - சீதமுறப்

பொங்கு மணமும் புதுமலரும் போலுலகம்
எங்கும் நிறைந்தருள மெம்பெருமான் - தங்கும் வினை

தீண்டா வுருவன் றிருநாமங் கச்சிகொண்ட
பாண்டீ சுரனாம் பரஞ்சோதி - காண்டகுசீர்    (35)


                                                                                பவனி

மாணிக்க முத்து வயிரமணி முதலாம்
ஆணிப் பசும்பொனழுத்தியபல் - தூணத்து

இலங்குமணி மண்டபத்து ளெத்தேவும் போற்ற
நலங்கொ ளரியணையி னாப்பண் - வலங்கொள்

இருக்கோய் விலாமலெடுத் தேத்த வுமையோடுந்
திருக்கோயி லுள்ளிருப்பச் செவ்வி - அருக்கனைநேர்

பாவேந்தர் போற்றும் பசும்பொற் கிரீடமுடி
மூவேந் தரும்நன் முனிவர்களும் - யாவர்களும்

மாட்சிக் கடைவாயில் வந்தீண்டி யெம்பெருமான்
காட்சியளித் தெங்களையுங் காவென்ன - ஆட்சியாய்ச் (40)

சித்திரைத் திங்கள் திகழ்வசந்த காலத்திற்
பத்தரெல்லாம் காணப் பவனிவர-அத்தன்

திருவுள்ளத் துள்ளச் சிறப்புடைய தோழர்
அருகணைந்து கைத்திறத்தினாலே - கருணைபொழி

ஞானப் பிழம்பான நல்லதிரு மேனிதனக்
கான முறையே யலங்கரிப்பான் - மேன்முடியிற்

பொன்னின் மகுடம் பொலிவித் தழகொழுகும்
மின்னுதலில் வெண்ணீறு வேய்ந்திட்டுக் - கன்னமதில்

எண்டிசையுஞ் சோதி யெறிக்கு மிருமகர
குண்டலங்க ளிட்டுக் குவடனைய - திண்டோளிற்  (45)

கேயூரம்  பூட்டிக் கிளரொளிச்செங் கண்டத்திற்
காயொளிசேரக்கு மணிக்கண்டிகைசேர்த் - தாயிரம்பொன்

சோதிக் கதிர்போல் துலங்குந் திருமார்பிற்
சீதத் தரளத் திருவடமும் - பேதமுறு

செம்பொற் சரப்பளியுஞ் சேர்சன்ன வீரமுடன்
பம்புபதக் கங்கள் பரப்பியே - வம்பறாத்

துய்யதிருக் கொன்றைத் தொடைமாலிகையணிந்து
கையின் மணிக்கங் கணம்பூண்டு - செய்யகதிர்

மன்னுதர பந்தனமும் மாணப் பிணித்துறீஇப்
பன்னிறத்த பீதாம் பரமெடுத்துத் - தன்னிகரில்     (50)

சுந்தரம் பூத்துச் சுடர்பூத்த பொன்னரையின்
முந்தப் புனைந்து முழந்தாளில் - அந்தமிலா

ஏதிலுயிர்க் கெல்லா மிவனே யிறைவனென்னும்
நாகக் கழலணிந்தும் நற்கமல - பாதத்தில்

தக்கன் புரிவேள்விச் சாலையில்தன் மேலெழுந்த
உக்கிர மெல்லா மொழிவதற்குச் - செக்கர்ப்

பருதி யிருகாலும் பற்றி யிருந்தாங்கு
அரவமணி நூபுரமும் ஆர்த்துத் - தெரிசிப்போர்

                                                                                            அம்மை அலங்காரம்

கண்ணிற் கருத்திற்கடங்காத் திருக்கோலம்
மண்ணிப் பணியமலை மகுடப் பெண்ணமுதம்     (55)

ஆனதிருப் பூமகளும் ஆய்ந்தகலை நாமகளும்
ஞான மணக்கும் நறுங்குழலில் - வானமுறு

கற்பகத்தின் பூமலைந்து காதிற் குழைதரித்து
விற்பொலியு நெற்றி மிசையழகாய் - அற்புதமாய்ச்

சுட்டி யணிந்து சுடர்ப்பட் டமுமணிந்து
வட்டமுறு பொட்டு மகிழ்ந்திட்டு - சிட்டர்க்கு

அருட்கடைக்கண் நோக்கி யநுதினமு - மின்பஞ்
சுரக்கும் இருவிழிக்குஞ் சுற்றித் - திருக்கிளரும்

மையணிந்து மார்பின் மணமா லிகைநிறைத்துக்
கையில் வயிரக் கடகமிட்டுச் - செய்யவொளிப்    (60)

பொன்னரி யாரம் புரளும் படிதரித்துப்
பன்னரிய பின்னும் பணிதரித்து - மன்னியசீர்க்

கோங்கரும்பைப் போலுங் குரும்பை தனைப்போலும்
பூங்கமலம் போலும் புணர் முலைமேல் - தேங்கமழும்

குங்குமம் பூசிக் குளிர்சாந்த மும்புழுகுந்
தங்குங் களபத் தளறணிந்து - சிங்காரத்

தொய்யிலெழுதித் துணையொன் றுரையாமல்
ஐயந் தருநுசுப்பிற் கைந்தருமுன் - நெய்தளித்த

செம்பட் டுடுத்துத் திருமே கலையணிந்து
செம்பஞ் சழுத்திமலர்ச் சீறடியில் - கம்பிவிதப்    (65)

பாடகமும் ரத்னப் பரிபுரமுங் கிங்கிணியுங்
கூடக் கலந்தணிந்து கோலமுற - நாடிமிகச்

சித்திரித்த தேவி செழிக்க அறம்வளர்த்த
உத்தமியோ டுந்திருநல் லோரைதனில் - வித்தகமாய்ப்

பூங்கோயிலுள்ளிருந்து புண்ணியனார் போதரலும்
பாங்கான நந்திப் பழவிடையை - ஓங்கியசீர்

நற்கோலஞ் செய்துபெரு நாத மணிபூட்டிப்
பொற்கோவை யாரம் புனைந்து - முற்கொணர

வெள்ளை யிடப மிசையேறி மாதருளங்
கொள்ளையிட வாயில்வெளிக்கொள்ளலுமே - தெள்ளியசீர்ச்   (70)

                                                              
                                                                                  உடன் வருவோர்

செந்தா மரைக்கைதனில் தெய்வப் பிரம்பெடுத்து
நந்தீசுரனார் நடுவணையப் - பந்தியாய்

வந்து வசுக்கள் திரு வாயான் மறையோத
அந்தரத்தில் துந்துமியை துங்கலிக்கப் - புந்தியுறு

சத்த இருடிகளுஞ் சார்ந்து ஆசிகளுரைக்கச்
சுத்தசிவ யோகியர்கள் சூழ்ந்துவரச் - சித்திரஞ்சேர்

எல்லாக் கலையுமுண ரீராறு சூரியரும்
பல்லாண் டெடுத்துப் படித்துவர - வல்லாண்மைச்

சாரணர் விச்சா தரரியக்கர் கிம்புருடர்
காரணர் கின்னரர்கள் காந்தருவர் - தாரமுறு   (75)

கின்னரியா ழேத்தியருட் கீர்த்தியெல்லாம் வாசிப்பத்
தன்னே ருருத்திரர்க டாம்பழிச்சப் - பன்னரிய

தும்புரு வீணைச் சுவையொழுக்க நாரதனார்
கொம்பு நரலக் குழலியம்ப - இம்பர்களும்

எண்ணிறந்த கோடி யிமையோர் களுந்துதிப்பக்
கண்ணிறைந்த முத்தர் கணஞ்சூழப் - புண்ணியநன்

மாமுனிவரெல்லாரு மங்கலச்சொல் வாழ்த்தெடுப்பப்
பூமாரி யெங்கும் பொழிந்திழியச் - சேமமிகு

நாவாரத் தேவார நண்ணுதிரு வாசகமும்
பாவாணர் பண்ணிற் படித்தோத - ஓவாமல்  (80)

அங்கிபசும் பொன்னா லமைத்த மணியகலிற்
குங்கிலியத் தூபங் கொடுத்துவர - அங்கத்தின்

வண்ணங் கரிய மறலி மறவாமல்
எண்ணும் படைக்கலங்கள் ஏந்திவர - உண்மகிழ்ந்து

நண்ணு நிருதி நகையுமிழு மாபரண
வண்ணமணிப் பேழை மருங்கேத்த - வுண்ணிறைந்த

சீரணங்கு  கோவருணன் சீதநீர் பூரித்த
பூரண கும்பம் புடையெடுப்பத் - தோரணஞ்சூழ்

வீதியெல்லாம் வாயு விளக்கி விரைகமழுஞ்
சீதப் பனிநீர் தெளித்துவர - நீதியினால்    (85)

அம்புவியோர் போற்றும் அளகா புரிக்கரசன்
செம்பொன் மழைமாரி சிந்திவரக் - கம்பமிலா

ஈசானன் வந்தடைப்பை யேற்ப எழிற்சோமன்
கூசாமல் வெற்றிக் குடைபிடிக்குத் - தேசாருஞ்

சொற்கோ கிலம்போலச் சொல்லு மரம்பையர்கள்
பொற்காற் கவரி புடையிரட்ட - விற்காலும்

அட்டநா கங்க ளணியார் விளக்கெடுப்ப
வெட்டுநா கங்க ளெதிர்முழங்கப் - பட்டின்

இடபம் பொறித்த வெழின்மிகுந்த வண்ணக்
கொடிக ளடியார்கைக் கொள்ள - வடிவுடைய    (90)

பாரிடங்க டாமசையப் பாரிடங்க டாமோடி
யாடி அரகரவென் றார்த்திடவே - மாடமறு

கூடு வரும்பொழுது குஞ்சர மாமுகத்தன்
மூடிக வாகனத்தின் முன்செல்ல - நாடியசீர்

வள்ளிமண வாளன் மயில்வா கனமுகைக்கப்
புள்ளனத்தின் வேதன் புடைபடாத் - தெள்ளுந்

திடக்கருட னேறித் திருமா லிறைவன்
இடப்புறத்திற் செல்ல விழியுங் - கடத்தினையார்

அந்தமுறு நாற்கோட் டயிரா வதத்தேறி
இந்திரன் பின்னே யிசைந்துவர - அந்தரத்திற்    (95)

சாரிவரு மரபிற் றழைத்தொரு செண்டேந்திக்
காரிக் கடவுள் களித்துவரப் - பேரழகின்

ஆலால சுந்தரரும் மற்புதநா வுக்கரசும்
பாலறா வாயனென்னும் பண்டிதனுஞ் - சோலைத்

திருவாத வூரற் சிகாமணியுந் தாதை
யிருதாளுஞ் செற்ற இறையும் - அருகணைய

சிங்கத்தி லேறித் திரிசூலி நீலிவர
அங்கன்னி மாரெழுவ ராதரிக்க - இங்கிதமாய்

மேனைமுத லுள்ளிட்ட விண்ணின் மகளிரெல்லாம்
நானா விதத்தி னடம்புரியத் - தூநீராங்     (100)

கங்கை முதலாங் கடவு ள்நதி யேழும்
பொங்கி மகிழ்ந்து புடைசூழ - மங்களமாய்

வெற்றி முரசும் விளங்குங் குடமுழவுஞ்
சுற்றியவார்ப் பேரிகையுந் துந்துபியும் - பற்றுதுடி

கல்லவட மொந்தை கறங்குபட கம்முருடு
சல்லரிகைத் தாளந் தழைகுணிச்சங் - கல்லெனுஞ்சீர்

தண்ணுமை சங்கந் தடாரி சலஞ்சலங்கள்
மண்ணிய கொக்கரையு மத்தளமு - மெண்ணிலா

அண்ட முகடு மதிர்ந்து கிடுகிடென
எண்டிசையு மண்டி யெழுந்தார்ப்ப - இண்டை  (105)


                                                                              
                                                                            கட்டியம் கூறுதல்


தரித்தசிவன் வந்தான் சதுர்மறையை வாயால்
விரித்தசிவன் வந்தான் வில்வேடன் - புரத்தை

எரித்த இறை வந்தா னெதிர்த்தகரி வேங்கை
யுரித்த இறை வந்தா னொருவன் - சிரத்தை

நெரித்த அரன் வந்தா னிறுத்துதிரி சூலந்
திரித்தகரன் வந்தான் செழுந்தீக் - கரத்தை

முரித்தபரன் வந்தான் முளரியயன் சென்னி
பிரித்தபரன் வந்தான் பெருநீர் - வரத்தான்

பரித்தபிரான் வந்தான் படர்புரிசை வேவச்
சிரித்தபிரான் வந்தான் சிவந்த - உருத்திகழும்   (110)

பொன்னின் சடாமகுடன் போந்தா னெனப்புகன்று
பன்னுதிருச் சின்னம் பணிமாறப் - பொன்னுலகத்து

அண்டர் திருமுனிவ ரைம்பொறியும் பின்றொடரக்
கொண்ட அறிவுடையோர் கொண்டாடித் - தண்டனிட்டுச்


                                                                                                 பத்துறுப்பு (தசாங்கம்)


சங்கர னென்னுந் தழைத்த திருநாமன்
மங்கலஞ்சேர் வீரை வளநாடன் - தங்கியமால்

ஆணவ மாசி னழுக்ககல நாம்மூழ்கும்
பேணருஞ்சீர்த் தண்பொருநை பேராற்றான் - காணரிய

தெள்ளிய அன்பர் திருவுள்ளம் போல்விளங்கும்
வெள்ளிக் கயிலாச வெற்புடையான் - கள்ளமுறு   (115)

பேதப் புறச்சமயப் பித்தர் செவியடைப்ப
நாதத் தொனியெழுப்பு நன்முரசான் - ஆதரித்த

தொண்டர்க் கிரங்கித் தொடுத்து வரும்பகையை
மண்டி யறுக்கு மழுப்படையான் - விண்டலத்தில்


எல்லாக் கொடியு மிணையல்ல வென்றோங்கும்.
வில்லாரும்  வென்றி விடைக்கொடியான் - நல்லநெறி

போற்றா திருந்து புரைநெறியை யுண்டாக்கும்
மாற்றாரை வெல்லு மதகரியான் - ஊற்றிதழ்த்தேன்

உண்ட அறாக்கீதம் ஒழியாமற் பாடி மகிழ்
வண்டறாக் கொன்றை மலர்த்தாரான் - பண்டாய   (120)

ஏழுலகத் துள்ளார்க்கும் எவ்வரமுந்தான் அளித்து
வாழுங் குலசை வளநகரான்- வாழியென

எண்ணுந் தசாங்கமிவை எம்மருங்குங் கோடிக்க
அண்ணலார் கோமறுகில் ஆங்கணையக் - கண்ணார்


                                                                                           குழாங்கள்


கருப்புச் சிலையுடைய காமன் படைகள்
அருப்பம் பெடுத்தோட ஆங்கே - விருப்பமிகுஞ்

சீரியத்தி னோசை யமுதஞ் செவிதேக்கச்
சூரிய காந்திச் சுடர்மணியும் - நீர்பிலிற்றுஞ்

சந்திரக் காந்தத் தடமணியுங் கொண்டிழைத்த
மந்திரங்க ள்தெற்றி மணிவாயிற் - பந்தியுறும்   (125)

மாளிகையற் சூளிகையின் மாடகூ டப்பரப்பிற்
சாளர வாயில் தலங்களிலும் - மீளரிய

பத்தி முதிர்ந்து பரமனுக்காட் பட்டவர்போற்
சித்தஞ் சிவனிடத்திற் சென்றேற - முத்தம்

பவளவள் ளத்திற் பதித்ததுபோற் செவ்வாய்த்
தவள நகையுடைய தையல் - துவளிடையார்

காலிற் சிலம்பு கலகலெனக் கைவளைகள்
ஓலிட் டகல்வார்போ லுக்கிடவே - மாலளிக்குங்

கொங்கைக் குடங்குலுங்கக் கொம்புக் குழைக்காது
பொங்கு மணியூசல் போலாடச் - சிங்கவிடைக்   (130)

கூறை யவிழக் குழல்விழ மாதவரும்
வீறழிய மின்னுக் கொடி போல - ஏறியெங்கும்

அன்னங் கிளிபோலும் ஆடுமயில் போலும்
பன்னு மெழுபருவப் பாவையருந் - துன்னியே

கண் நிறையக் கண்டு களித்துமலர்க் கைகூப்பி
யுண்ணிறைந்த நாணமெல்லா மோட்டெடுப்ப - நண்ணி

உடையவரே யென்பா ரொருத்தியிடங் கொண்ட
சடையவரே யென்பார் தளர்வார் - நடைபெயராச்

சித்திரம்போ னின்று திகைப்பார் நகைப்பார்கள்
அத்த னழகே யழகென்பார் - எத்தவமுன்   (135)

செய்திருந்தோ மென்று சிலர் சிந்திப்பார் வந்திப்பார்
வெய்துயிர்த்து விம்மி விழுவார்கள் - ஐயனே

சற்றே திருக்கடைக்கண் சாத்தீ ரெனப்பகர்வார்
குற்றேவ லெங்களையுங் கொள்ளு மென்பார் - பற்றினிமேல்

உம்மை விடஇல்லை யொருவரெமக் கென்றுரைப்பார்
கொம்மை முலைகாட்டிக் குழைந்திடுவார் - வெம்மையுறும்

அக்கினியைக் கண்ட அரக்கா யுருகியிவர்க்
கொக்குமோ நம்மழகு மோவென்பார் - திக்குலவுங்

கண்முத்தஞ் சிந்திக் கலுழ்வார் வலம்புரியின்
வெண்முத்தம் போன்மெய் வெளுத்தயர்வா - ரொண்மொய்த்த (140)

எவ்வனமும் நீருடையீ ரானக்கால் எம்முடைய
எவ்வனத்தை வௌவிடுவ தென்னென்பார் - திவ்வியமாங்

காஞ்சி யுடையாரே காணோம் லெம்மிடையிற்
காஞ்சியுடை கொள்ளல் கரவென்பார் - வாஞ்சைக்

கரவளையீர் நீரென்றுங் காதலுடையேங்
கரவளையைக்  கொள்ளைகொள்ளுங் காதல் - உரையுமென்பார்

எற்பணியு  மக்குணத்தீ ரென்றக்கால் எம்முடைய
பொற்பணியை யேன்கவர்ந்து போதிரென்பார் - முற்பணியே

ஆர்க்குவத மெங்கட் களியாம னீரருள்வது
ஆர்க்குவத னாம்புயத்தீ ரங்கென்பார் - பார்க்குங்கால்  (145)

நாண்மதியங் குள்ளவரே நாடிவரு மெம்முடைய
நாண்மதியை நீர்கவர்தல் நன்றென்பார் - நாணிக்குக்

கைச்சரபங் கொண்டவனைக் கண்ணா லெரித்ததுபொய்
மெய்ச்சாப மிட்டவனை வெல்லுமென்பார் - இச்சைமிகத்

தூண்டா விளக்கனைய சோதிப் பிரானழகை
வேண்டுமட்டுங் கண்ணால் விழுங்குவார்கள் - ஆண்டவனே

எப்போ திரங்குவீ ரென்பார் இரங்கிவிடில்
தப்பாமோ நும்பெருமை தானென்பார் - இப்படியாய்த்

தேங்கமழும் பூங்குழலார் செப்பியிரு பாலுமுறப்
பாங்கியர்க ளெல்லாம் பரிவெய்த - ஆங்கொருத்தி (150)

                                                                              பேதை

எண்சுவையுந் தோற்றுமியற் சுவைபோற்கொண்டாடும்
பெண்சுவையாள் பேதைப் பிராயத்தாள் - கண்சுவையாய்ச்

சிற்றி லிழைத்துச் சிறுசோ றடுவாள்போற்
கற்றிலொழுக்கமெல்லாங்கைக் கொள்வாள் - மற்றறவில்

பேதையர்போ லன்றிப் பெருந்தகைமை யுள்ளுறுத்த
கோதில் அமுதக் குணத்தினாள் - காதரஞ்சேர்

ஆல முறாத அராப்பணம்போ லல்குலாள்
நூலனைய சிற்றிடை நோ னாதென்றோ - சாலப்

பெரியோர் தவம்பிழைக்கு மென்றோ பிறப்பில்
உரியோ ருடைவரென வோர்ந்தோ - தெரியாது  (155)

மந்திர வெற்றிமுயல் வல்லோன்கைச் செப்பிலுறை
பந்தின் மறைத்த பயோதரத்தாள் - சந்தமலர்

வாரி முடியா மலர்க்குழலாள் மையல்தரு
வேரி யுறாஅதர விம்பத்தாள் - நாரியர்கள்

கொண்டாட லன்றிக் கொழுநருளங் கொள்ளாத
ஒண்டொடியாள் சூழு முரைசெய்யாள் கெண்டையங்கண்

நோக்கம் இருநோக்க நோக்காதா ளாடவரை
ஏக்கழுத்தஞ் செய்யாத இன்னுரையாள் - வாக்கினிய

நாப்பயிலும் பூப்புலவர் நற்கவிபோற் சொற்பொருள்கள்
ஏற்ப முடியாத ஏந்திழையாள் - வாய்ப்பவே   (160)

கத்தூரி சாத்திக் கமழ்பட் டெடுத்துடுத்து
முத்தணிந்து முல்லை முகையவிழுங் - கொத்தணிந்து

பொன்னரியா மாலைகைக் கொண்டுபுறம் போதரலும்
அன்னமே யார்க்கணிவா யென்றொருத்தி - பன்னுதலும்

எல்லா வுயிர்க்கு முயிரா யெமையாள
வல்லான் குலசை வளர்கடவுள் - நல்லாய்கேள்

பாலவிழிக் கச்சிகொண்ட பாண்டீசர்க்கென்றாளவ்
வேலையிலே எம்மான் விடைதோன்றிக் - கோலத்து

எழினோக்கிக் கைதொழுதா ளிம்முறைமை நோக்காள்
வழிநோக்கி னாள்மதன னூர்க்குப் - பழியார்க்கும்    (165)

பூங்குழலா ளாங்ககலப்  பொற்கொடிபோற் பொற்பினாள்
தேங்கொள் கமலத் திருவன்னாள் - பாங்கார்  

                                                                                பெதும்பை

பெதும்பைப் பிராயம் பிரியாதாள் சொல்லும்
அதும்புங் கடலமுத மன்னாள் - விதம்பெறவே

சித்திரித்த தெய்வ வுருவா ளிளைஞர்பாற்
பத்திசெய்யுஞ் சாயற் பசுங்கிள்ளை - நத்தனைய

கந்தரத்தாள் மஞ்ஞைக் கவின்சேருஞ் சாயலாள்
சிந்தூரந் தீட்டுந் திருநுதலாள் - கொந்தளப்பொன்

னோலை யணிகாதி லொண்கொப்புச் செஞ்சுடர்கள்'
போல வணிந்த பொலன்கலத்தாள் - நீல   (170)

விடமு ம்அமிர்தும் விரவ விரவிக்
கடலுவர்த்துக் காமர்க்கிலாத - வுடலிதுவென்று

ஆடவர்க ளுன்னநிறை யஞ்சனஞ்சேர் வேல்விழியாள்
ஏடவிமும் பூங்கொத் தெழிற்சுட்டி - யாடகத்தால்

செய்ததலைக் கோலஞ் சிறந்தகுழற் காரிருளைப்
பைய அகற்றிப் பதிவிருந்து - மையறுசீர்த்

திங்க ளெனுமுகத்தாள் செந்துவரு முத்தமுந்
தங்கிய ஆம்பல் தனிவாயாள் - சங்கனைய

கண்டத்திற் சாந்தணிந்து கைக்கு வளைபூட்டித்
துண்டத்தின் மூக்குத்திதோற்றுவித்துக் - கெண்டையங்கட்கு   (175)

அஞ்சனமுஞ் சாத்தி அணிகிளரும் பூங்கச்சைக்
கஞ்சமுகைக் கொங்கைக் கலங்கரித்து - நெஞ்சகத்தின்

உண்மை மறையிரண்டி லொன்றுதுணி வொண்ணாத
வண்மையிடைபட்டான் மறைப்பித்துக் - கண்ணெகிழாக்

கிண்கிணி தாட்கணிந்து கேயூரந் தோட்பூட்டிப்
பண்கிளரு மேகலையும் பாரித்து - விண்கவின்செய்

தாரகைசூழ் மேருத் துணைபோல்தண் முத்துவடம்
வாரார் முலைமேன் மகிழ்ந்தணிந்து - நேராய

தோழியர்க ள்தற்சூழச் சோலைமலி பூங்காவிற்
பாலனைய சொல்லாள்பந் தாடுதலும் - மாலுக்கும்   (180)

மாலளிப்பான் வந்தான் மலரயற்கும் மேலான
ஆலமுண்ட பெம்மா னணைந்தானென்று - ஓலமிடுஞ்

சின்னத்தி னோசை செவிவார்ப்பச் சென்றோடிப்
பொன்னொத்த கொன்றையனைப் போற்றினாள் - மின்னொத்த

இட்டிடையிற்பூந்துகிலும் ஏரார்மணிவண்டும்
விட்டறிவு நாண்தோற்று மெய்விதிர்த்தாள் - வட்டமுலை


                                                                                             மங்கை


மங்கைப் பிராய மருவியதோர் மானனையாள்
பங்கயமும் பாதிச் சிறுமதியுந் - துங்கமலி

நற்காம ரூபி கவிர்முல்லை நாளாம்பல்
லொக்க அமைத்தமதி யொன்றென்ன - எக்காலுஞ்    (185)


செந்தமிழோர் கட்டுரைக்குந் தெய்வத் திருமுகத்தாள்
 கந்தகத்தைச் செற்ற கவின் முலையாள் - சந்தமலர்ச்

சூற்கொண்ட கொண்மூச் சுரிகுழலாள் சொல்லினாற்
பாற்சுவையுங் கீழ்ப்படுத்தும் பைந்தொடியாள் - காற்றுணைக்குச்

 செம்பஞ் சழுத்திச் சிலம்பு கலந்தொலிப்பக்
கொம்பன்ன நுண்ணிடையிற் கோசிகத்தைப் - பம்ப

அலங்கரித்துக் கச்சிறுக்கி யாரம் புனைந்து
புலம்புமணி மேகலையும் பூட்டி - இலங்குமணிச்

சூடகமுங் கங்கணமுந் தோள்வளையும் பூட்டியபின்
பாடகமுந் தாள்மேற் பரிபுரமும் - ஆடகத்தாற்    (190)

செய்தபணி யெல்லாஞ் சிறக்க வணிந்துதரத்
தையலர்க ளோடுந் தனியிருந்து - பைய

மிழற்றுகிள்ளை யோடு வியந்துரைக்கு மேல்வை
அழற்படைய மூவிலைவே லண்ணல் - தொழப்பவனி

வந்தான் வந் தானென்று வண்சின்னம் வாழ்த்தெடுப்ப
அந்தர துந்துபிக ளார்ப்பொலிப்பச் - சந்ததமும்

பாற்கடலில் தோன்றும் பருதியு மப்பருதி
மேற்பிறங்கு வெண்மதியும் வெல்லவே - நாற்பதமும்

வேத வடிவானவெள்விடைமேல் வெண்குடைக்கீழ்ச்
சோதிச் சடாமவுலி தோன்றுதலும் - நாதனே   (195)

என்றென்றுருகி யிடைநுடங்க மெய்வியர்ப்பத்
தன்றுணையில் லாத தனிக்கொடி போல் - நின்று

துவண்டு துவண்டு சுருண்டு சுருண்டு
கவன்ற மனத்தாற் கழறி - அவன்தாரைக்

கொள்ளைகொண்டாள் போற்கணங்கு பூத்துக்குலக் கொழுந்து
பள்ளமடை போலுருகிப் பாங்ககன்றாள்- ஒள்ளொளியாள்


                                                                       மடந்தை


மற்றொருத்தி பொற்பார் மடந்தைப் பிராயத்தாள்
கற்றவர்க்குங் காமநூல் கற்பிப்பாள் - வெற்றிமதன்

சேனைக்கு வாய்த்த திருவீரலட்சுமியாள்
மானொத்த வஞ்ச மதர்விழியாம் - பானற்பூப்  (200)

பூங்குமிழ் தொண்டை புணர்முத்தம் பொன்னூசல்
வாங்குவிற் சாணை வளர்மதியம் - ஓங்கிய

கோணமும் பாலிகையுங் கோதின் மணிநகையும்
பூணணியுங் காதும் புரூரமு - மாணமைந்த

கஞ்சனை போன்ற கபோலத் துணையிரண்டும்
வஞ்சமில்லா ஆனைமு மாய்மயங்க - மஞ்சனைய

கூந்தற்கு வெண்மலர்கள் கொண்டணிந்து தோற்றமறல்
பாய்ந்திரண முற்ற பரப்பொப்பச் - சாந்தணிந்து

குங்குமந் தோய்ந்த குவிமுலைகள் கோங்ககற்றிப்
பங்கயத்தின் செவ்வியாய்ப் பாரிப்ப - மங்கலநாண்   (205)

தோய்ந்தகளம் பூங்கமுகின்றோற்றந் தரவிணைத்தோள்
வாய்ந்த மணிக்கழையின் வண்மைதரப் - பாந்தள்

கடிதடத்திற் செம்பட் டுடுத்தரைஞாண் கட்டி
அடியிணைகட் கம்பொன் குயின்ற - வடிவுடைய


பாதசரந் தண்டை சதங்கை பயில்வித்துச்
சீதமுத்து மாலை தெரிந்தணிந்து - மாதரார்

கைதொட்டமைத்த களபவண்டன் மட்டித்து
மையிட்டு வாட்க ணலங்கரித்துப் - பொய்யிட்ட

சிற்றிடையார் சூழத் திருந்தமளி மேலிருந்து
வெற்றியா ழங்கே விரித்தேந்தி - மற்றுமோர்  (210)

வீணையிசை கூட்டி விமலை யொருபாகன்
தாணுவின் செந்தமிழாற் சந்தவிசை - யேணவிழப்

பாடிய வேலை பரமன் சடாதாரி
நாடரிய மால்விடைமேல் நண்ணுதலும் - மாடகயாழ்

கைவிட்டு வாயிற் கடைகழிந்து கண்ணுதலை
நெய்விட்ட கூந்தலா ள்நேர்தொழுதாள் - மெய்விட்டுக்

கண்முத்துந் தார்முத்துஞ் சிந்தக் கலைகலைய
வெண்முத்தஞ் சேர்ந்த இதழ்துடிப்ப - வண்ணப்பூ

மேனி விதிர்ப்பமொழி விம்மப் பரவசமாய்க்
கானிவரும் பூங்கொன்றை கைக்கொண்டாள் - மானொருத்தி    (215)


                                                                              அரிவை

ஆயிழையார் போற்றும் அரிவைப் பிராயத்தாள்
பாயொளிசேர் பங்கயமும் நீலமும் - வாய்விரியும்

ஆம்புலஞ் செங்கிடையுஞ் சைவலமு முண்மையாற்
றேம்புணரும் பூம்பழனச் செவ்வியாள் - காம்பிணையும்

வெற்பும் விடவரவு நீர்ச்சுனையு முண்மையாற்
பொற்பார் குறிஞ்சித் திணைபோன்றாள் - கற்பரும்பும்


பூங்குமிழுங் கொவ்வையு முண்மையாற் போதலர்ந்து
தேங்கமழு முல்லைத் திறம்போன்றாள் - வான்றிறல்சேர்

பஞ்சா னனமும் பகைத்துடியுங் காளையர்கள்
நெஞ்சம் பதைத்தழிய நேர்நின்று - வஞ்சகமாய்ப்  (220)

பற்பகல் கொள்சூறையு முண்மையாற் பாலையெனுஞ்
சொற்பொலிவும் நற்றிணையாய்த் தோன்றினாள் - விற்பொலியும்

வித்துருமஞ் சங்கம் மிளிர்தவள வெண்முத்தம்
ஒத்த கயலினமு முண்மையால் - நத்தூரும்

நெய்தலே போல்வா ள்நெரித்த கருங்குழலாள்
கொய்தளிர்ச்செம் மேனிப்பூங் கொம்பனையாள் - வையகத்தை

அல்குலால் வென்றாள் அரைஞாண் கலைதிருத்தி
தொய்யின்மேற் பூத்தொத்துச் சூழ்தந்து - தையலாள்

சந்தனத்தின் மட்டித்துச் சாந்தங் குழைத்தணிந்து
கந்த மலர லங்கல் கைபுனைந்து - செந்தழலின்   (225)

மின்னுமணி யாபரண வெய்யிலிருள் கால்சீப்ப
அன்ன மனையா ரலங்கரிப்பப் - பொன்னனையார்

கூடவிருந்து குரல்விளரி கொண்டிசைக்கும்
ஆடகயாழ் வாங்கியிசை வாசிப்பத் - தோடவிழும்

ஆர்க்குவதம் பூண்ட வழக னணிவிடைமேற்
கார்க்குவளைக் கண்ணா ளொடுங்கலந்து - பார்க்கெல்லாம்

போகமுத்தி தந்து புரக்க எழுந்தருளும்
வாகனத்திற் பூண்ட மணியேறுண்டு - ஆகங்

குழைந்துமறு கூடேகிக் கோலமணித் தேர்முன்
விழுந்தெழுந்து விம்மிதமாய் நின்று - தொழுந்தகையாள்  (230)


அன்னையீர்க் கெல்லாம் புராரி யெனதளவுங்
கன்னல்  சிலைக்களித்த கையாளன் - என்ன

மிழற்றுமலர்க் கூந்தல் விரிக்கும் முடிக்கும்
இழக்குங் கலைதிருத்து மெங்கும் - பழச்சுவையுங்

கந்தமும் பூவு மெனக்கலந்த காட்சியாள் 
சிந்தை அவிழ்ந்து திகைத்தொழிந்தாள் - இந்த
 


                                                          தெரிவை

அரிவைப் பதம்பிரியா அந்நலார் போற்றுந்
தெரிவைப் பிராயத்துச் சேயிழையாள் - வரிவண்டார்

காரிருளி னாலே கடக்களிறுங் கட்டுரையாற்
 சார வரும்புரியுந் தாபித்துச் - சீர்மருவு   (235)

முத்த நகையின் முகமதியின் மான்விழியின்
வைத்த கணையாய் மருவியே - வித்தகமாம்

மேனிதனு அத்தாணி மெல்லியஅல் குல்தடமாய்
வானிவருங் கேதனமுன் கைவடிவாய் - ஞான

விழியழலான் மாயும் வியன்மதன ன்ஆகம்
அழியா திருத்து மழகாள் - எழிலாரும்

பாதலத்தி னின்றிழிந்த பையராவந்தரத்தின்
மீதேறி மேரு முடிமறைத்த - நீதிதர

உந்தியெழுந்த உரோமவல்லி யோடொன்றிப்
பந்தித்த கச்சின் பணைமுலையாள் - வந்திக்கும்  (240)


இந்து அமுதந் துளித்தாங் கெழின்முகத்தின்
முந்தவொளிர் கோணத்தோர் முத்தினாள் - சந்ததமும்

அவ்வமுத முண்ண வரும்புலவர் போலயலே
செவ்விதரும் ஆரத் திரள்வடத்தாள் - கொவ்வை

இதழமுதம் மாறாத வேரா னனத்தால்
சிதைவு படமதியைச் செய்வாள் - விதம்விதமாய்ப்

பட்டெடுத்துச் சூழ்ந்து பரும மணிபுனைந்து
கட்டழகின் மேலழகாய்க் கண்களிப்ப - வட்டமிடும்

பூந்தார் அணிந்து புனைசந்த மட்டித்துச்
சாந்தந் திமிர்ந்து தவத்தோர்க்கும் - வாய்ந்தளவும்   (245)

பற்றிப் பிரியாத பண்பினாள் செய்குன்றின்
முற்றிழையா ரோடும் முறுவல்செய்து - கற்றையந்

தோகைமயி லாடல் கண்டுதுணர்ப் பூக்கொய்து
பாகுண்டு வல்லுப் பரப்பியதின் - மோகமாய்

ஆடும் பொழுதில் அரணமொரு மூன்றெரித்துக்
கூடலரைச் செற்றபிரான் கொல்லேற்றான் - ஏடவிழ்பூங்

கொன்றை யணிந்த குழகன் வரும்பவனி
யின்றுணையா மாதரார் வந்திசைப்பத் - தன்றொழிலாங்

கோட்டி யொழிந்து விரைந்து குலமடந்தை
தாட்டுணைப் பூங்கமலந் தாழ்ந்திறைஞ்சி - நாட்டார்கள்    (250)

காணவே வண்டுங் கலையும் அடியுறையாய்
நாணாம லிட்டு நலந்தோற்றாள் - மாணமைந்த

                                                                             பேரிளம்பெண்

முற்றிய தெய்வக் கனிபோன் முதுக்குறைந்த
பெற்றிமைசேர் பேரிளம் பெண்மையாள் - கற்றுத்

திருந்தினர்க்கே நல்லமுதாய்ச் சேர்வாளல் லார்க்கு
வருந்த அணங்காய் வதிவாள் - கருந்தடங்கண்

அம்பரத்தை யுண்பான் அயலிறங்குங் கார்க்குழுப்போற்
பம்பிவளர் கேசப் பரப்பினாள் - வம்புலாங்

கூந்தலதி லணிந்த ஆரவடங் கொண்மூவும்
வாய்ந்த அதன்றுளியு மாய்வியங்கச் - சாந்தத்    (255)

திலகம் பருதிபொரத் திங்களிடை வான்மீன்
உலவுவது போன்முத் தொளிரச் சலசத்தின்

நித்திலமே யன்றியிரு நீலநிரை பவளம்
வைத்தன போலு மலர்முகத்தாள் - சித்தசன்போர்

வென்றூதும் வெற்றி வியன்சங்கம் போற்களத்தாள்
மன்றற் களபம் வனைந்ததன்மேல் - ஒன்றவணி

கச்சறுத்து விம்மிக் கதிர்த்திறுமாந் தாடவரை
யச்சுறுத்துங் கொங்கை யமுதகடம் - வெச்செனவுந்

தண்ணெனவுங் காட்டித் தனக்குவமை யில்லாத
பெண்ணரசுக் காமகுடம் போற்பிறங்க - வண்ணவளை   (260)

முன்கைக் கணிந்து முதாரிகட கம்பூண்டு
சங்கத்திற் றண்டை சதங்கையிட்டுப் - பொங்கொளிசேர்

பன்மணியாற் செய்த பரும மரைக்கசைத்து
வன்னப்பூம் பட்டுடுத்து மையெழுதி - மின்னொளிசேர்

பொற்கலன்க ளெல்லா மவயவந்தோ றும்புனைந்து
பற்பலராம் மங்கையர்கள் பாங்கிருப்பப் - பொற்கவரி


கொந்தளத்தின் மீதேற வாசல் குணகடலின்
வந்துதித்த வெண்டரங்கம்போல் வயங்கச் - சந்தனப்பூங்

காவி னடுவண் கதிர்ப்படிகங் கொண்டிழைத்த
வோவிய மண்டபத்தின் ஒண்ணுதலார் - மேவிவைத்த   (265)

சிங்கஞ் சுமந்த திருந்தமளி மேலேறிப்
பங்கயப்பூம் பாவையன்னாள் பண்ணமைந்த - மங்களமாம்

மூவரொருவர் பலரொருவர் முன்னோர்கள்
யாவர் செழுந்தமிழு மேத்தெடுத்துத் - தேவன்

சிவனிறைவன் கச்சிகொண்ட பாண்டீசன் சேர்ந்தார்
பவமகலச் செய்யும் பரமன் - தவம்வளர்த்த

மங்கையிடங் கொண்ட வரதன் வரதெனென்றென்று
அங்கங் குளிர்ந்திருக்கு மல்வேலை - சங்கமொடு

சின்னங்கள் பேரி தடாரி திசை திசையே
மன்னுமொலி கேட்டு மகிழ்வெய்தி - அன்னைமீர்   (270)

யாமே தவஞ்செய்தே மென்றென் றுரைத்துவந்து
கோமறுகி லீசன் குலவிடைமேற் - சேமமுடன்

வீற்றிருக்குங் கோலம் விழிகுளிரக் கண்டவன்றாள்
போற்றி யிறையே பொலந்தொடியார் - மாற்றமெல்லாஞ்

செஞ்செவியிற் சேராமற் சேமித்தாய் மும்மைவிழிக்
கஞ்சத்தால் வவ்வுங் கருத்தெவன் கொல் - நஞ்சணிந்த

கண்டனே யென்று கசிந்தாள் அகங்குழைந்தாள்
தொண்டை யிதழுங் துடிதுடிப்பக் - கொண்ட

புளகத்தாள் வேர்வை பொடிப்ப வவிழ்ந்த
அளகத்தாள் மால்கொண் டகன்றாள் - உளமுற்றும்    (275)


வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோளென்னும் - பாட்டின்

பொருளுக் கிலக்கியமே போல்வார் களீசன்
அருள் போலு மாறா அழகார் - புரளும்

ஒரு குடங்கைக் கண்ணா ரொளிவளரு மார்பில்
இரு குடங்க ளேந்து மிடையார் - திருமகட்கு

மாலாக்குங் கோமளஞ்சேர் மங்கைநல்லா ருள்ள மெல்லாங்
கோலா கலமாகக் கொள்ளைகொண்டு - வேலா

வலயஞ்சூழ் வீரை வளநாட்டிற் செல்வக்
குலசா புரியுறையுங் கோமான் - அலகில்   (280)

கருவிடைமேற் செல்லாமற் காட்சியளித் தியார்க்கும்
ஒரு விடை மேற் போந்தா னுலா.
                                                    


                                                               குலசை உலா முற்றிற்று.

                                                                  திருச்சிற்றம்பலம்.

அருஞ்சொற்பொருள்:

காப்பு : குலசை குலசேகரன் பட்டினம், சுவடு அடையாளம், கவடு-கிளை,
வஞ்சகம் . 1.சதுர்முகன்-பிரமன், 2.திருவுருவன்-சிவன், 3. உள்ளம்-மனம்,
4.போகம்-பேரின்பம், 6. மனாதீதன்-மனத்திற்கு அப்பாற்பட்டவன்

8. பொருவில்லா-ஒப்பில்லா 11.பருப்பதம்-மலை 12. கறைமிடற்றான்-
நீலகண்டன் 13. விடை-காளை 14.ஈற்றில் -பிரளய காலத்தில் 15.மலம்-
ஆணவம், கன்மம், மாயை 16.மடந்தை-பார்வதி 19.குறி-அடையாளம்.

27.எண்ணான்கு - முப்பத்திரண்டு 30.சிவகங்கை - தீர்த்தம், செங்கையான்-
திருவாதிரை நட்சத்திரத்திற்கு உரியவன், செம்மையாகிய செயல்
 உடையான், கொடைக்கையுடையவன். 31. அங்கத்தான் - திருமேனியுடையவன்,
எலும்புமாலையுடையவன், மலைநாடு அங்கங்கள் உடையவன்

32. தங்கக்கார்முகம்-பொன்மலையானவில், திகை-திசை, மூன்றுதிருக்கு-
மூன்று திருக்கண்; திகையான்-மயங்காதவன் 33.பரவை-பாற்கடல், 
38. இருக்கு - வேதம், அருக்கன்-சூரியன் 44.கன்னம்-செவிகள்.

 46. கேயூரம் - தோள்வளை, அக்குமணி -உருத்திராட்சம் 48. வீரம்- வீரசங்கிலி 
54. பருதி - சூரியன், நூபுரம்-சிலம்பு, 55. மண்ணி - அபிடேகம் செய்து 
57.மலைந்து - அணிந்து, வில் - ஒளி

62. கோங்கரும்பு, தாமரை மொக்கு தனத்திற்கு உவமை 63. புழுகு-புனுகு,
களபம் - கலவைச் சந்தனம் 64. துணை-ஒப்பு, நுசுப்பு-இடை, 68. விடை - காளை

70. இடபம்-காளை. 72. கலிக்க-முழங்க 75. தாரம்-உச்ச இசை, 76.பழிச்ச -புகழ 
77. இம்பர் - இவ்வுலகினர் 81. அங்கி-அக்கினி

82. மறலி-யமன் 86.அளகாபுரிக்கு அரசன் - குபேரன், கம்பம்-நடுக்கம்,
87.சோமன் -சந்திரன் 88.வில்-ஒளி 89. நாகம்- யானை 91.பாரிடங்கள்-பூதகணங்கள்
 91. மறுகு - தெரு 92. மூடிகம் - பெருச்சாளி

94. கடம் - மதநீர் 95. அந்தரம் - வானம் 96.மா-குதிரை - காரிக்கடவுள்-அரிகரபுத்திரர்
 97. பாலறாவாயன் - திருஞானசம்பந்தர் 98. இறை-சண்டேசுரர் 
100. மேனை - மேனகை 104. சலஞ்சலம் - சங்கு 105- இண்டை - தலைமாலை

106. வேள் - மன்மதன் (இங்கு) 107. ஒருவன் - இராவணன் 109. பெருநீர்-கங்கை, 
110. புரிசை-முப்புரங்கள்,   மால்- மயக்கம் 

119. புரை நெறி-தீய ஒழுக்கம் 123. காமன் படைகள் - பெண்கள் 124. இயம்- வாத்தியம் , 125. மந்திரம் - வீடு 
126. குளிகை - உச்சி மண்டபம்  128. தையல் - மகளிர்.

129 ஓலிட்டு - ஓசையெழுப்பி, உக்கிட-நழுவ  131. கூறை-ஆடை
134. இடம் - இடப்பாகம் 135. அத்தன் - அப்பன் சிவன் 138. கொம்மை-திரண்ட, 140. மெய் - உடல்

141, வனம் - வர்ணம், எவ்வனம்-இளமை 142. காஞ்சி - ஊர், காஞ்சி-மேகலை 
142. வாஞ்சை - அன்பு, இரவு - ஒளித்த, செயல் அளையீர் - செய்யீர், 143. கரம்-கை 
144. எற்பு - எலும்பு 145. ஆர்க்குவதம் - கொன்றை மாலை 146. நாண்மதி - ஒரு நாள் வளர்ந்த சந்திரன்; 
நாணம் மதி இக்கு-கரும்பு (வில் உடைய மன்மதனை)

153. காதரம் - அச்சம் 154. அரா -பாம்பு, பணம் - படம் , நோனாது-பொறாது. 
155, பிறப்பு - பெண்பிறப்பு 156. வெற்பு - மலை , வல்லோன்-செப்பிடு வித்தைக்காரன் , 
பயோதரம் - முலை 157. வேரி - தேன், அதரம்- இதழ்கள் 159. ஏக்கழுத்தம் - தலையெடுப்பு 160. பூ - இளமை

164. பாலவிழி - நெற்றிக்கண் 165. நூற்கு - நூலுக்கு 167. அதும்பும்-ஒலிக்கும் 168. நத்து - சங்கு 
169. கந்தரம் - கழுத்து, சாயல் - மென்மை, ஓலையணி காது, கொந்தளம் - தலைமுடி 
170. பொலன் - பொன் 174 துவர்- பவளம்

175. துண்டம் - மூக்கு 176. கஞ்சம் - தாமரை, முகை - மொக்கு, 178. கேயூரம் - தோள்வளை 181. மால் - காதல் 
183. இட்டிடை - இடுகிய இடை,  வண்டு - வளையல் 185. கவிர் - முள் முருங்கைப் பூ (இதழ்க்கு உவமை)
முல்லை - பல், ஆம்பல் - வாய்

190. சூடகம்-கைவளை, பாடகம் - காலணி,  பரிபுரம் - சிலம்பு 192. ஏல்வை - சமயம் 194. பதம் - பாதம், பருதி - சூரியன்

198. சுணங்கு - பசலை நிறம் 200, பானல் - கருங்குவளை 201, தொண்டை-கோவைப்பழம், 
சாணை - கல் 202. கோணம் - மூக்கு, புரூரம் - புருவம் 203. கஞ்சனை-கண்ணாடி, 
ஆனனம் - முகம் , மஞ்சு - மேகம் உவமைகள் அடுக்கடுக்காண்க
204. அறல்-கருமணல் (கூந்தல்) கோங்கு - கோங்கின் அரும்பு 206. கழை- மூங்கில்

210. அமளி-இருக்கை, 2/1.தாணு -சிவன், 212. மாடகம் - முறுக்காணி, 
213.கண்ணுதல்-சிவன், 214.கண்முத்து-கண்ணீர்த்துளி, கலை- ஆடை,
முத்தம்-பல், 215. விதிர்ப்ப-நடுங்க, கான் - நறுமணம் 217, சைவலம்- பாசி,
216-218.உவமைநயம் காண்க. 218-219 உவமைநயம் காணலாம்.

220. பஞ்சானம் - சிங்கம் 221.வில்-ஒளி 222.வித்துருமம்- பவளம், உவமை நயம் காண்க 
224.தொய்யில்- உடலில் சந்தனக்கோலம், 225.மட்டித்து -அறைத்து 226.கால்சீப்ப-போக்க 
227.விளரி-ஒரு ராகம், மணி-மணி ஓசை 231.கன்னல் சிலை-கரும்புவில்

233.கந்தம் மணம் 234.பதம்-பருவம், அந்நலார்- பெண்கள் 234-235 
மன்மதன் களிறு இருள் அவன் குதிரைகிளி 236. முல்லை - கணை, தாமரை
அம்பு குவளை அம்பு 237. கேதனம் - கொடி 235-38 மன்மதன் உறுப்புகளையுடையாள் 
239-40. உவமை நயம் காண்க 241.இந்து-சந்திரன

244. பருமம்-மேகலை 247.பாகுண்டு -தாம்பூலம் தரித்து, வல்-சூதுக்காய், 
249.குழகன் -இளமை உடையவன் 250. கோட்டி-கூட்டம், மடந்தை-அம்பிகை 
251. வண்டு- வளை,  அடியுறை - பாதகாணிக்கை, 253. அணங்கு- துன்பம் தரும் தெய்வம்.

255.ஆரவடம்- முத்துமாலை 256-57 உவமைகள் , சித்தசன் - மன்மதன், 
258.களம்-கழுத்து 259.கடம்-குடம் 261.முதாரி-ஒருவகை வளையல், 264.கொந்தளம் -கூந்தல் 
267.மூவர் - தேவாரம் பாடியவர், ஒருவர்-மணிவாசகர், பலர் - திருவிசைப்பா பாடியவர்

269. வரதன்-திருமால், வரதன்-அருள்செய்தவன் 271.கோமறுகு-அரசவீதி,
273. மும்மை விழி - மூன்றுகண்கள், வவ்வும் - கவர்கின்ற, கருத்து-திருவுள்ளம் 
274 தொண்டை - கோவைப்பழம் 275. புளகம் - மயிர்க்கூச்சு, 276.திருக்குறள் அமைந்துள்ளது.

278.குடங்கை-உள்ளங்கையளவு அகன்றகண் 279.மால்-மையல், கோமளம் - மென்மை, 
வேலாவலயம் - கடல்சூழ்ந்த 280.குலசாபுரி- குலசேகரப்பட்டினம் , அலகில் - அளவில்லாத, 
281. கருவிடை - பிறவிகளின் இடையில், மேல் - இனிமேல் பிறவாது இருக்க,  ஒருவிடை - ஒப்பற்ற காளை


 
 

Related Content

திருக்குற்றாலச் சித்திரசபைத் திருவிருத்தம் (சுப்பிரமணிய முனி