logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

புலியூரந்தாதி (யாழ்ப்பாணத்து மாதகல்  மயில்வாகனப் புலவர்)

திருச்சிற்றம்பலம்

யாழ்ப்பாணத்து மாதகல்  மயில்வாகனப் புலவர் இயற்றிய

காப்பு 

கற்பகங்  காக்குங் கவுரி பங்காளன் கருதரிய 
கற்ப கங்காளன் புலியூ ரந்தாதி கதிதரு சங்
கற்ப கங்கா தரன்செம்மல்   செம்முக்கட் கயமுகத்துக்
கற்பகங் காணெமைக் கொண்டே புகல்வித்துக் காப்பதுவே. 

பூவார லங்கலம் பொற்கொன்றை வேணியர்  பொன்னுடையார்
பூவாரலங் கலந்தா ரெனுமேற்றினர் போதமன்றிப்
பூவா ரலங் கலமைந்த  மைக்கண்டர் பொருகணிச்சிப் 
பூவாரலங் கலங் கைப் புலியூரர் புகலெமக்கே.     (1)

புகமந்தரங் கொடு வேலையி னாட்டும் புலவரைவெம்
புக மந்தரங் கொடுவந்த நஞ்சுண்ட புனிதனைச் சம்
புக மந்தரங் கொடுரகஞ் செயும் புலியூரனைநம்
புக மந்தரங் கொடுங் கார் வினைபோலப் புரிய னெஞ்சே.   (2)

புரியாத வன்பிற் பிரியா வவுணர் புகுந்திருக்கும் 
புரி யாதவன் பற்பொடிபடுத் தோனுரபூதர முப்
புரி யாதவன் றொழுதென் புலியூர் புகழாரையருள்
புரியாதவன் பத மெய்யன்பினாற் புணர்ப்பாய் மனனே.   (3)


பாயசங் கண்டு பரியாக்கி  யத்த பத்தர்க்கினிய 
பாயசங் கண்டு நிகர் புலியூர பகையை வெல்லு 
பாய சங்கண்டு கரத்தாற் கரியவ பாழ்வினைக் குப்
பாய சங்கண் டொடராதெனை யாள்க பராபரனே.   (4) 

பர செம்மலை நிகரும் புலியூர பராபர தா
பர செம்ம லைமுக நாரிபங்காள பரிக்கு மங்கைப்
பர செம்மலை வினையுந்தெறு சூலப்படைய வெனப் 
பர செம்மலை மனமேக தியேயம்பல மதற்கே.   (5) 

அம்பலவா விமலா வென்றிடார்க் கருளா தபங்கை 
யம் பல வாவியலர் புலியூரருக்கா நலம் வே
ளம்பல வாவியடர்ப்ப  திவ்வூரவரா யெடுக்கு 
மம்ப லவாவியலர் தூற்றுவார்க் கவையாக வின்றே.    (6) 

கவின்றிருந்  தும்பையுங் கொன்றையுஞ் சூடிய கண்ணுத லே
க வின்றிருந்தும்  புலியூர் நடராசகங்கா தர வென் 
க வின்றிருந்தும்  பின்முடிதன் மெய்யே நரகங்களிலே
க வின்றிருந்தும்   வெளிறும் வினை தீர்ந்திடுங்காண் மனமே.   (7) 

மனந்தனங்கந்தரு  சொல்லாலவன் பணிவாய்த்துவிடா
ம னந்தனங் கந்தரஞ்சேர் புலியூரனை வந்திப்பர் வா
ம னந்தனங்  கந்தர மென்னடையார் கண்வலையிற்படா
ம னந்தனங் கந்தலென்பார் பவசாகர மாய்ப்பவரே.   (8)

கரமா யருந்துதிக்கை மலையாய்ப் பிறவாய்க்  கருஞ்சூ
கரமா யருந்துதியென்று விடாதெனைக் காத்தருள்சக்
கர மாயருந்து திரணிரை மேய்க்குங்  கழிபொருந்து
கர மாயருந் துதிக்கும் புலியூர கங்காதரனே .   (9) 

கங்காதரன் புலியூர்நகர்  காவலன் காருண்ய மே
கங்  காதர நற்கவுரி பங்காளன்  கருதரு மோ
கங்  காதரன் பரனென்று புத்தேளினங்  கைதொழு சங்
கங் காத ரன்பர்க்கினிய  ரல்லார்க்குக் கசந்தவரே  (10)

சந்தங்க மழுங்கலாவகை யன்பர்க்குத்  தாம் நடந்தோர் 
சந்தங்  கமழும் புலியூரர் வெற்பிலென் சாந்தணி வா
சந் தங்க மழுந்தணி முலைதோய் மைந்தரை மறந்த 
சந்தங்கமழும்படி கொய்  திம்மைய  றணிவதின்றே.  (11)

மையலங்காரம் பயில்கண்டர் வண்புலியூரர் வைத்த 
மைய லங் காரம் பமாகிப்  பெருகிவரக் குளிரா
மையலங்காரம் பகைத்திட வாடைவருத்திடத் திண்
மையலங்  காரம் படர வெவ்வா றுயிர்வாழ் பரிசே.   (12)


பரிசன வேதியர்சூழ் புலியூரர் பத்தர்க்கினிய 
பரிசன வேதியர் பாதவ மேவு மனோபவனாம் 
பரிசனவேதிப் படைமன்னர் நின்முலைப்  பாரவிலைப் 
பரிசநவேதிணி  பொன்கொடு வந்தனர் பான்மொழியே.   (13)

பானகந்  தந்தம் வலிகெட வோங்கிப் பணைத்ததிரும் 
பானகந்  தந்தம்பயில்   கரித்தோலினன் பாவவிடாய்ப் 
பானகந்தந்தன நேரிடைபங்கினன் பத்தரைவைப்
பானகந்தந்த புலியூரெனிற் கெடும் பாசமன்றே.   (14)

சமன்படரால்  வருவே தனை தீரத்  தகுவினைகள் 
சமன்பட  ராசத  தாமத சாத்துவிகங்  கெடப்பா
சமன்படரானதறப்  புலியூரிற்  றகையுளவா
சமன்படரா  நின்ற   வல்லிபங்கா கதி  தந்தருளே.   (15)

கதிதந்தரு விழந்தோடும்பர்க் காய்ப்புரங் காய்ந்தவின்ன
கதிதந்தரு  கயிலைக்  கிறைவா கருவித்திரும 
கதிதந்தரு  சொல்லிடையாள் பங்காக மலம்பணைச்ச 
கதிதந்தரு  நறவார்  புலியூர வெற்காத்தருளே.   (16)

காப்பதிற்றாறுயிர்  யாமென நீ நற்கலைகளடங் 
காப்பதிற்றாறு சதுவி தங்  காட்டவுங்  காண்கிலனற்
காப்பதிற்றாறு   வளவயன் முக்கனிக்கட் கஞ்சமங்
காப்பதிற்றாறுகுக்கும்   புலியூர் கனகாலயனே.   (17) 

கனகமலைச் சிலைவேணிப்  பிரானைக் கயல்வயற்கோ
கனகமலைச்சிலைக் காவியிற்பாயுங் கவின்கொள்  வள்ளைக் 
கன  கமலைச்சிலை  மார்பனும்  போற்றற் கரும்  புலியூர்க் 
கனகமலைச்சிலை  வாணனைப்  போற்றிற் கதியவர்க்கே.  (18)   

அவரஞ்சி   வந்தயினாகாரிவாகன  ராகத்தில்வா
ழவரஞ்சிவந்தடி போற்றுமை பாகனகக்கருமை 
யவரஞ்சிவந்தகுமம் புலியூர னெனக்கருளி 
யவரஞ்  சிவந்தபதம் பெறலாகு  மைந்தக்கரமே.  (19)

கரமஞ்சரிதரு  வென்னற்க  நீசரைக்கட்டுகட்சீ
கரமஞ்சரிதருமம் புலியூரற்கியமன்கடிந
கரமஞ்சரிதரு மாயைந்நெஞ்சே நங்கருவினையக் 
கரமஞ்சரிதரு மென்றே மொழிக கனவிலுமே  (20) 

கனவைப்படைத்  தணத்தார்  மூவர்பாடல் களித்திரண்டு
கனவைப் படைத்தவர் தென்புலியூர் வரைக்காதலரைக் 
கனவைப் படைத்தணையத் துயில்காண்கிலன்  கங்குலும்புக்
கனவைப்படைத்  தமலர்க்கோலிற் பாங்கியெற் கண்டிக்கவே.  (21) 
    

கண்டலராக   முடிபுனை யானைக் கருதினரா
கண்டலராக  வைக்கும்புலியூரனைக்  காதைமுகங்
கண்டலராக மதாடகமா மெழிற் காரிகையாள்
கண்டலராக  மிகுந்தனள் கேட்ட கணத்தினிலே.  (22) 

கணத்தினிலேற்று    வருமன்பு  செய்யிற்   கருதுசிவ 
கணத்தினிலேற்று  நினை மனமே   சொற்கதிர்  செய்வயற்
கணத்தினிலேற்றுக் கயல்பாய் கவின்புலியூரரைப்பொக்
கணத்தினிலேற்றுத்  திரிந்தாரை நீதியிற்  காதலித்தே.   (23)

திரியும் பணியு   மிதழியுமாருஞ்  சிறந்திடுபா
திரியும் பணியும்புனை புலியூரர் சிவார்ச்சனைப்பத்  
திரியும் பணியுந்  தொழிலும் விடார்க்குச்  சிறந்தநெய்தோய் 
திரியும் பணியுந் தியவிளக்காஞ்  சிவஞானமதே.   (24) 

அதரங் கரங்களிலவ  மங்காந்தளழகுறத்தோ
யதரங் கரங்கவர்  பூங்குழன்  மாதுருவாய்மருவி 
யதரங் கரங்கன் பணிபுலியூர னென்றாற்பிறவி 
யதரங் கரங்கவடைத்  தமுதாக்கு  மருள்வருமே.   (25) 

வரவந்தகாரம்  பயில்கண்டர்  பூமகண்  மார்பிடங்க 
வரவந்த காரம்புகொண்டிகல்  வாட்டி மகிழ்ந்தபுங்க 
வரவந்தகாரம் புலியூரர்மன்னினர்  மற்றென்றன்மேல் 
வரவந்தகாரம் யமின்றுனக் கேவரிலந்தரமே .   (26)

அந்தரங்கம் பகர்ந் தாயிழையார்  செய்யதிமயலா
மந்தரங்கம் படுவேலையில் வீழ்ந்திங்  கழிகுவனோ
வந்தரங்கம்பயின்  மாலயன் போற்றற்கரும்புலியூ
ரந்தரங்கம் பயின்றாடிய  பாத வமாதங்கனே.   (27)

மாதங்கங்  கோடுவிற் றோடாக்கி  வண்புலியூரின்மத
மாதங்கங்  கோடுறப் பாய்ந்தவப்போதிவண் மாழ்குறவிம் 
 மாதங்கங்  கோடு   மருவிய குன்றிடை வந்தவரார் 
மாதங்கங்  கோடுமுன் வந்தளித்தா  னொருமன்னவனே.  (28)

மன்னாவலை யுடைத் தோற்றந் தபநின் புகழ்மறவா
மன்னாவலை யுரைத்துப் பெறுவேன் கொன் மதிமுடியா
மன்னாவலையுறு தீவிற் சிறந்திடும் வண்புலியூர்
மன்னா வலை யுறழ்கண்டா  வுன்றாண் மலர்த் தாமரையே.   (29)

தாமரைப்பாலரும் புல்லுரி சாத்தினர் தங்குகரத் 
தாமரைப்பாலத்தர் தென்புலியூர் வரைத் தண்டுளபத் 
தாமரைப் பாலரை யன்னீருமாதுந் தசையொடிங்கே
தாமரைப்பாலருந்தித்  தங்கு மேகத்தடமரிதே.  (30)

தடங்கடி வேங்கை நிழலொருவித் தவிக்கும் பெரும்பாந்
தடங்கடிவேங்  கையுங்   காட்டிடில் வேங் கடஞ் சார்ந்த கடி
தடங் கடி வேங்கை யுரியார்புலியூரிற் றையல்கஞ்சத்
தடங் கடிவேங்கையலர்வயலாக சரிப்புண்கிலே  (31)

புண்டரிகத்தர் தொழும் புலியூரர்  வெண்பூதியணி
புண்டரி கத்தர்புயலார் பொருப்பினிற் போற்றுதிசைப் 
புண்டரிகத் தரத்தார்நின் மறக்கவும் போது மனம்
புண்டரிகத் தரவக்குயிலா  லன்று போந்தவரே .  (32)

தவராக மாகனகச்சிலை கொண்டவன் றந்தமெழுந் 
த வராகமாக வரிதேடரியவன் றண்புலியூர்த்
தவராக மாக ரமானோ னெமக்கருட்டன்மைதந்து
தவ ராகமாக வொளியானைப் போற்ற றகுதி நெஞ்சே.  (33)

குதிக்கும் புரையற்ற  பந்தெறிந்தோவண் கொழுங்கயல்கள்
குதிக்கும் புனல்குடைந்தோ விளநீருக்குங்  கோட்டிணைத்த
குதிக்கும் புகறருகொங்கை யென்வாட்ட்ங்குணக்குன்றனான்
குதிக்கும் புகழ்பெறு தென்புலியூர் வரைக் கோமளமே.  (34) 

வரையா வனலிபி வேதன்செய்யா தன்பர்மாட்டணுவாய்
வரையா வனலிபெண்ணாணா யன்றாபவன்  வண்புலியூர்
வரை யாவனலிதர மன்னவா மெய்வருத்தமுறேல்
வரையா வனலி கரியா நம்மாதை மணந்தருளே.   (35) 

மணக்குஞ் சரதத் திருமாற் கரியவர் வண்புலியூர்
மணக் குஞ்சரர் நம்மறந்தனர்  சேவல்வரும் பெடையை 
மணக் குஞ்சரந்தை பெடையாற்றப் புள்ளுறை வான்கழியே
மணக்குஞ்சரமெய்துவேளெதிர்ந்தா னெங்ஙன் வாழ்குவமே (36)

குவலயம் போது வண்டுண்ணு மப்போது குறித்திடு சங்
குவலயம் போது கரத்தன்பர் வேட்டனர் கூட்ட மென்சொல்
குவலயம்போது கண்ணாய் சபை வாணரைக் கூடித்தொழக்
குவலயம் போதுறு தென்புலியூர்வல்லி கூறுகவே  (37)

வல்லிக் கரம்பயில் வேன்முலைசொல்  விழிமானுமந்த
வல்லிக் கரம்பை யுவமையன்றே நண்ப வாள்சனன
வல்லிக்கரம்பையமு தன்பர்க்காம்  புலியூரர்வரை 
வல்லிக்கரம்பற்றி நீக்கிலை யங்ஙனென் மால்கடற்கே.  (38) 

மாலுக்கு வந்தன செய்யாமற் போற்றிடின்மாயையெனு  
மாலுக்கு வந்தனவாய்  வருவார் மற்றி யானெனதா 
மாலுக்கு வந்தனை செய்துமுன்வாழ்த்த வளையருளி
மாலுக்கு வந்தபுலியூரர்  மாகவண் கங்கையரே.  (39)

கங்கைப் பொருவரு செஞ்சடையார் கமலாலயனார்
கங்கைப் பொருளெனக் கொண்டிரந்தார் தமைக்காய்தருமோ
கங் கைப்பொருவினராகத்துள்ளார்  செங்கயல்வயலிற்
கங்கைப்பொரு  புலியூர ரென்பார்க் கில்லை கன்மங்களே.  (40)

கன்மத்த முந்து பவங்கெடவேண்டிற் கடல் கடையக்  
கன்மத்தமுங்  கொளுமால்விடைப்பாகன்  கடுக்கையலங்
கன்மத்தமும் புனையும் புலியூரன்கருதுமைம்மு
கன்மத்த மும்மைக்கரியுரியான் புகழ்கற்றிடுமே  (41)

கற்கடகத்தளை முக்கனி தூர்க்கும் கவின்புலியூர்
 கற்கடகத்தரு  நெஞ்சினன் காணவுங்  காட்டுங்கொல் லோங்
கற்கடகத் தணிகாசினி போற்றிடக்கைவலம்பு
கற்கடகத் தகுகாயுணும்  போதர்கருத்தனையே .   (42) 

தனக்கரி யானைச்  சசின்துணையானைத்  தகும்பணியா
தனக் கரியானைப் பிரமனை யாள்பவன் றன்னையெண்ணான்
றனக்கரியா னைம்முகன் புலியூரன்சதுரனென்னா
தனக்கரியானை யன்றா னென்னை யாளுந் தனிமுதலே  (43) 

முதலைக் கயவரைக் கன்னலின்மாய்த் தடன்மொய்ம்புகெழு 
முதலைக்கயவரை போற்றிய மான் முதற் றேவர் பொரு 
முதலைக் கயவரைச்செற்ற பிரானை முதுபுலியூர் 
முதலைக்கயவரைப்  போதால் வணங்கினர் முத்தர்களே.  (44) 
முத்தருக்கும் பயின்மூர்க்கருக்குந்  தவமுற்றிநிற்கு 
முத்தருக்கும் விண்ணதிர்த்திடித்தோங்கி  முழங்குமுரு
முத்தருக் கும்பமுலை மங்கைபங்கர் முதுபுலியூர்
முத்தருக்கும்  வனப்பாரிருதா ளென்முடிமணியே  (45) 

மணியருந் துங்க  கயமுகத் தேவு மருவுசுப்ர 
மணியருந் தும்புரு நாரதரும்  புகழ் வண்புலியூர்
மணி யருந்தும்விடத்தார்  சிவகாமி மருவியர
மணியருந்தும்விடையா ரெனப்போற்ற லென் மாகடனே (46)

கடக்கரு மத்தகைமா மகந்தன்னிற் கலந்தசுரர்
கடக்கரு மத்த  மிகச்செற்ற கூத்தன் கவின்புலியூர்க் 
கடக்கருமத்தக் கரியுரித்தோ னன்பர்க்காய்கருவி
கடக் கருமத் தளைக்கட்டறுக்குங்கதிர்ச் சேகரமே  (47)

சேகரிக்குஞ் சரத்தோல்புனைந்  தூர்பவன் றேங்கடுக்கை
சேகரிக்குஞ் சடைத் தென்புலியூரன்  சிறுபிறைசேர்
சேகரிக்குஞ் சன்னுவிக்கு நன்காதலன்றீ  யவினைச்
சேகரிக்குஞ் சரமென்போம் நடம்புரி  செம்மலையே  (48)

மலையசத்தார் தரு கொங்கை மின்னாரை  மகிழ்ந்தொருவா
மலைய சத்தாதி விடயத்தின் மூழ்குற்று மாழ்குவனோ
மலையசத்தானங்கை வீட்டியத்தக்  கன்மகத்தின்மற்ற
மலையசத்தாகச்செயும் புலியூருறை வானவனே  (49)

வானவன் பாலன்றுபாணன்கை   யோலை வரைந்தனுப்பும் 
வானவன் பாலன்ன பூதியினான் மயிலோன்பயில் 
வானவன் பாலன் றலைக்கறியுண்டவன்  வண்பதஞ்சேர்
வானவன்பாலனம்வாழ் புலியூரை  வணங்குதுமே   (50)

குதலைப் பணியமொழி மங்கைபங்கனைக் கொல்விடங்கக்
குதலைப் பணியணியும்  புலியூரனைக் கூடிவணங்
குதலைப் பணியதவப்பயனால் யமகோட்டியின்மாழ்
குதலைப் பணியறுத்தென்மனக் கல்லைக் குழைவித்ததே.  (51)

வித்தகத்தா லரவம்புலிக்காக விழுப்பொதுமே
வித்தகத்தாவென நிர்த்தம்புரிந்து  மெய்ஞ்ஞானமுணர்
வித்தகத்தா புலியூராவினியென்  வினைகளெனும் 
வித்தகத்தாற் பவமங்குரியாமல்  விலக்குகவே  (52)

குகரப் பருப்பத மங்கை பங்காளர் கொடிறிறந்து
கு கரப் பருப்பதத் தோலுரியார் குலவும் புலியூர்க் 
குகரப்பருப்பதங்கொள்வார் கொளார்க் குளங்கூசியொருங்
கு கரப்ப ருப்பதன்மேற் கதிர்போல் வந்து கூடுவரே  (53)

கூடம்புடைத்த வயிற்கண்ணி  கேள்வன்  குளிர்புலியூர்க் 
கூடம்புடைத்த மலைமுலை மாதின் குறுமுயலின் 
கூடம்புடைத்த முகங்கண்ணெனவுண்டுகொல் வண்டுகாள்
கூடம்புடைத் தட வாரிசம் நீலங்கொளக் கண்டதே.  (54)

கண்டதுண்டம்  பழ முண்டனசொல் வளைகாமர் குமிழ்க் 
கண்டதுண்டம்பயி லொண்டொடி  வஞ்சியைக்  கைதவரைக்
கண்டதுண்டம்படுத்தும்  புலியூரர்   கனவரையிற்
கண்டதுண் டம்பக நண்பாவெனெஞ்சங்கலக்கியதே  (55)

கலகத்த நங்கனைச்  செற்றுழல்  பூவைக்கவின்மலயக்
கலகத்த நந்த தவமுனியாற் சமங்கண் டொரூபக்
கலகத்தனம் பயின் மென்னடையாளைக் கலந்தவன் ச 
கலகத்தனம் புலியூர னென்றால் வருங்  கைவலமே  (56) 
 
வலம்புரியும்  கழுநீருங் குலாவுமதுமலர்ச் சை 
வலம் புரியுங் குழலன்பர்தணந்தபின்  வண்புலியூர் 
வலம்புரியுங்  கொணராழியு மாதர்க்கு வான் பகையாய் 
வலம்புரியுங் குயிலுந் துணையாய வசந்தனுக்கே  (57)

சந்தநத்தேவை நிகர்களக்  கண்டையலார் மொழி காற்
சந்தனத்தேவைகு வேள்கணை பாறிடத்தாரணிவா
சந் தனத்தேவைத்து வண்புலியூரரைத் தந்தருளுஞ்
சந்தனத்தேவை யல்லாற் பணியேன் றெய்வந் தாம் பிறவே.  (58)
தானங் கடியிடநீள் கரித்தோலினர் தண்புலியூர்த்  
தானங் கடியிடமாநடராசர் தணத்தலிற் சந்
தானங் கடியிடராக வில் வேள்  சலசத்தை யெடுத்
தானங் கடியிட வந்தது மாரன் சதுரங்கமே  (59)

துரங்கமுந் தானையும்  யானையுந் தேருமிச்சொல்லிடுஞ்  சா
துரங்கமுந் தந்தருளும் புலியூரன்றுதித்தவர்க் கோ
துரங்க முந்துங்  கண்ணனுக் கரியான்றொண்டினர்க்  குறுமா
துரங் கமுந்துஞ்  சடையானல்கு  முத்திச் சுகந்தனையே  (60)

கந்தனை யாகமங்  கேட்டாற்குமை மணங்காட்டி யெறுழ்க்
கந்தனை யாக வந்தாற்கரியானைக் கதங்கொ டக்கன்
கந்தனை யாகத்தடு புலியூரனைக்  கண்டுகண்டு 
கந்தனை யாகவக் கண்ணார்  மயலைக் கடந்தனையே. (61)

தனையாதரிக்கும்  பிரமத்தை யோதெனச்  சண்முகநா
தனையாதரிக்கும் புகழ்ப்புலியூரனைத் தாணுவைநித் 
தனையாதரிக்கும்பர்தாரு  வென்றோர்கிலர்  சார்பவப் பந்
தனையாதரிக்குமந்தே விருப்பா ரித்தரணியிலே  (62)

தரணியி லேகையைசேர் புலியூர தருகவரந் 
தரணியிலே கைதவத்துழலாமற்  சதுமறை வி
தரணியிலேகை வரையாம லெய்து சமன்படர்வை 
தரணியிலே கைதொடுத் தயர்தண்டந்  தகாதெனக்கே  (63) 

தண்டாதிருக்குஞ் சடைப்  புலியூர தபனியக் கோ
தண்டா திருக்குழைச் சங்காகராவிச்சகந்தனிலே
தண்டாதிருக்கு மொழிந்தருள் வெள்ளித்தடக்குலவே
தண்டாதிருக்கு முடித்தாளெனைப்  பொய்தகாமலுக்கே  (64)

காம தகனந் தருவீர செய்க்கனிக்கட்கள் பெரு 
காமதகனந்தரம்பாய்கவின்  புலியூரகலங்
காமத கனந் தகுகரிச்சன்  மகன்மக்கடன்மீ
காம தகனந்தமை யாண்டருளுன்  கழற்சித்தியே   (65)

சித்திரைக்குண் மதன்போர்க் கிலக்காய  சென்மச் சலரா
சித்திரைக்குப் பதைத்துச் சலியார் சிற்சபைதனி னே
சித்திரைக்கும் மறைத் தென்புலியூரன் றிருக்கரம்வீ
சித் திரைக்குண்ணின்று  தூக்கிய பாதத்தைச் சிந்திக்கினே.   (66) 

சிந்துரமுங்  கிரியும்  பகச் சூரன் சிதைந்துடன 
சிந்துரமும் முயிரும் பிளவாகச்  செய்சேயு மைங்கைச்
சிந்துரமுந் தொழு தென்புலியூரற் றிகழுநுதற்
சிந்துர முந்திய வந்தரிபங்கற் றியானித்துமே.  (67)

ஆனித் திருவிழவிற் கண்டு போற்றிடுமப்படித்தி 
யானித்திரு மெங்களம் புலியூரனை யன்புடைமை 
யானித்திருவு முடலு மெல்லா நிலையன்மை கண்டீ
ரானித் திரு முற்பவமறுப்பீ ரரும் பாதகரே.  (68) 

பாதவத்தைக் குறித்தேழெய்த கேழன்முன்  பார்க்கரிய 
பாதவத்தைக்கு மெய்ப் பங்களித்தோய் புலியூர்ப்பதி யப் 
பாதவத்தைக் குறுகே னுயிர் போமப்பகலிடைத் தப்
பாதவத்தைக் குதவுற்றிடுவாய் பரிந் தஞ்சலென்றே.   (69)

சலஞ்   சலம் போலற்ற தாபதர் போல வென்றன்னையுமஞ்
சலஞ்ச  லம்போருகத்தா டந்தவாவெனத்  தந்தருளாய் 
சலஞ்சலம் போதென்றறல்  பாய்வயலிடைச் சஞ்சலமாய்ச் 
சலஞ்சலம் போதுளைந் தோடுந் தமிழ்ப்புலியூரவனே.   (70)

புலியரவங் கண்டு கொண்டாட  வாடும் புராதனனம் 
புலியரவங் கங்கைசேர் சடையான் றிருப்பொற்பதத்தைப்
புலியரவங் கணசங்கர வண்புலியூர வென்னார்
புலிய ரவங் கடியா துழல்வாரிப் புவனியிலே.  (71)

புவனமுங் காலுங் ககனமு மற்றும் புணர்ந்து மன்றாய்ப் 
புவனமுங் காலு மமுத கதிரும் புனைந்துகருப் 
புவனமுங் காலுந் தரளம்புரள்  புலியூரனைநம்
புவனமுங்  காலு மழகுந் தியானித்துப்  போற்றுநெஞ்சே. (72)

சேட னென்றோதிய  செவ்வே ணடுவொற்றுச் சேருமவன் 
சேட னென்றோர் புகழ் தென்புலியூரவன் றெய்வதவி 
சேட னென் றோமறுப்பான்  பதிமீது மதேர்செயல்குற்
சேட னென்றோ வெற்கருடருமோதுந் திகிரிமின்னே.  (73)

திகிரிக் கனநிகர் மாலாக மீதுறை செங்கமலத் 
திகிரிக் கனமுலை வாணி யிந்த்ராணி தினந்தொழுஞ் சீர்த்
திகிரிக் கனன்மொழி மங்கை பங்காளர் திகழ்புலியூர்த்
திகிரிக் கன முத்தென வுதித்தா ரெங்க டெய்வதமே.  (74)

வதனங்களை யைந்துடைப்  புலியூரன் மரபுடைத்தெய் 
வத நங் களை யகழ்மன்ன னென்றோர்க்கு வளர்ந்துமிகு
வதனங்களையுறு மோடை செய்கா மனைவன்மைபுகு 
வதனங் களைங் கதி மாக் கரிவைய மகுடங்களே   (75)

குடந் தந்திரி  முலைச்சொல்லீ ருலகங் குளிர்புனற் ச
குடந் தந்திரி   பென்பவர்க் கிகலேகுறிப்பீர்  புரிவன் 
குடந்தந் திரிகரணம் முமக்கே செய்வன் கோமதன் ம 
குடந் தந் திரித்திடுவீர் புலியூரர் தங்குன்றிடத்தே .  (76)

இடந் தாலமாவுறை  யன்றிலும் பேடு மெழிற்சத்தி மார் 
பிடந் தாலம் வைத்திடு மூவரும்போன்  மின்னு மேந்தலு மண் 
ணிடந் தாலம்வா ழரியேற்றோ னுறையிணர்மேய்ந் திகன் ம
கிடந் தாலமன்னு மியற் புலியூர்நகர்க் கேகினரே.   (77)

ஏகாச லம்ப மியறிருமார்ப  விரணியமா
மே காசலம் பயில்விற் புலியூர வெண்ணான்கறஞ்செ
யே காசலம் பணிசேர் கொங்கைபங்க வென்றேத்தி னல்லா
லேகா சலம்படி தொல்வினையாய விருட்கடலே.   (78)

கட னாகமன்னு கயிலையினான்  கருதார்க் கொருவி   
கட னாகமன் புலியூரன்பரோர்கிலர்கொல் கவினார்
கட னாகமன்ன கடிதடத்தாயெமைக் காய்வதுவே
கடனாக மன்  பிறைப்பன்  மாலைக்கூற்ற  மங்காந்ததுவே   (79)

காந்தத்தில் வீழு மிரும்பினைப் போற் கனற் கண்ணுதலிற்
 காந்தத் திலகநுதலாண் மருங்குறை கத்தனை யே
காந்தத்தில் வீழிற் கவின்புலியூரன் கமலமதங்
காந்தத்தில் வந்த களிவண்டிற் றோன்றுங் கருத்துறவே.  (80)

கருத்தர வல்குலவர்  பானிறுத்துங் கசட்டுயிர்காள்  
கருத்தர வல்ல வினைகெடல் வேண்டிற் கல்லானிழல் யோ
கருத்தர வல்லசலச் சிலையார் புலியூர்க் கருணைக் 
கருத் தரவலமிலா ரெனப்போற்றல்  கைகோள்கடிந்தே.  (81)
கோகநகத்தைச்சகச்  சணி மாமுலைக்  கோதைநல்லார் 
கோகனகத்தை  நிகர் முகத்தா ரென்று கூறி மகிழ்  
 கோகனகத்தை விடாய்புலியூரனைக் கூடியைய 
கோ கனகத்தையை பங்க வென்னாய் கும்பிக்காய் கொடிறே.  (82)

காயத்தைக் கும்பியை நன்றெறிரோங் கைக்கடுங் கணையிற்
காயத்தைக் கும்பி விழியிற் படோங்  கதியைப் பரமா
காயத்தைக் கும்பிடு மன்பர்க் கமுதைக் கதிரை நற் ச
காயத்தைக் கும்பிநுதற் புலியூரனைக் கைதொழுதே (83)

கை வல மும்மைத் தொழிற் புலியூரக ஞலுமது 
கை வலமும் மிகு முப்புரந் தீயிட்ட கண்ணுதலே
கைவலமும்  மிடமும் மறியாத  கருத்திலிக்குங்
கைவலமும்  புரிந்தா டற்பரை யிருகண்மணியே (84)

தற்கங்கள் செய்யுஞ் சமயங்கடோறுஞ் சரிப்பவன் மா
தற் கங்க மைஞ்செழுத்தாம்  புலியூரன் சகத்தவ ரோர்
தற் கங்க மாகம மாரணந்தந்தவன்  றாழ்புலிப்பா
தற் கங்கருநடங்காட்டி யென்பார்க் கில்லை தற்கையமே (85)

கைச்சுந் தரித்து மணியும் புனைந்த  கதிர்முலை யோ
 கைச் சுந்தரி  வல்லவன்  புலியூரன் கறுத்துமுன் ன
கைச்சுந் தரியலரைச் சிதைத்தோன்  பொய்க் கபடிகளைக் 
கைச் சுந்தரி  விடையா னுடையான் கழல் பாடுதுமே  (86)

பாடலங் கந்தம் பயில்சடையார்  பதுமத்துமள்ளர் 
பாடலங் கந்தத்  துழும் புலியுரர்  செம்பங்கி யிரு 
பா டலங் கந்தகற்   செற்றாரென  வொன்று பாடுகிலீர் 
பாடலங்கந்தமை யாதினுக் கோதுவிர் பாவலரே  (87)

பாவிக்குண் மிக்கபெரும் பாவி யான் புலியூர்ப்  பதி யப்
பாவிக்கு  நேர்மொழி பங்கா வெனாதவன் பாடுமிந்தப் 
பாவிக்குவலய  மீதேவழங்கவும் பண்ணிய வாற்
பாவிக்கு மன்பர்க் கமுதா மதிகன் பதாம்புயமே (88)

பதாம்புயங் காண வொருகா னனிவரம் பாலிப்பதப் 
பதாம்புயங்கும்  புயக்கண்ணற் கெட்டாதபொழி யிரு 
பதாம் புயங் கொண்டவற் செற்ற பகவ பணாமணிமொய்ப் 
பதாம் புயங்காபரணப்  புலியூர நின்பான்மையதே  (89)

பானம் பரிந் துடையா ரில்லின் மோழை பயின்றநற்சோ
 பானம் பரிந்து திரிய விடார் மிகு பத்திமையிற் 
பானம்பரிந்துமுடிப்  புலியூரர்  பதாம்புயத்தின் 
பானம் பரிந்துவிடுவார் நம்மின்னலைப் பாண்மனமே  (90)


பாணித் திலக மெனுங்கங்கை வேணியனைப்  பதுமப் 
 பாணித் திலமன்ன துண்டத் தனப்பொற் பரிய பொருப் 
பாணித்தில நகைசேர் புலியூரனைப் பாடிநெஞ்சே 
பாணித்தில மினியெ வ்வண்ணமோ நம்பவஞ்சிந்துமே  (91)

சிந்தாமணி தென்ற லன்றிலு மற்று மென்சிற்றுயிரைச் 
சிந்தா  மணியைச் சிதைவிக்கு மாற் செகந் தாளிரக்கச் 
சிந்தாமணி துளவத்தோன்  பரவுந் திகழ்புலியூர்ச் 
சிந்தாமணியை  வரக்கண்டிலே  னின்னந்  தேனினமே.  (92)

தேனினம்பார்ந்து தெவிட்டி யுவட்டிச்  செருக்கு மிகுந் 
தேனினம்பாய்  கொன்றையன்  புலியூரனைச் சென்றுபணிந்
தேநினம்பாத செலவாற் புலத்தவர்  தீமைசிதைத் 
தேனினம் பாவிநெஞ்சே செல்வனோ பழிச்சென்மத்திலே  (93)

மத்தன் பராபரை கொண்கன்  முகிறொடு மந்தரமா
மத்தன் பராக மலர்த் தாதிறைத்து  மணத்தபது 
மத்தன் பராவுறு தென்புலியூரன்  மனமெனுஞ் சே
மத்தன்பரா  லறியப்படுவா னெங்கு மாய்ந்திருந்தே .   (94)

இரும்பனகத்தைக் குழைத்த மின்னே யிரங்கா தினிதா
யிரும் பனகத்து நுஞ்சாரலிற் கேட்கு மிரண்டுறழை 
யிரும்ப னகத் திரளிற் கொலைசூழ்வதி லீர்ம்புலியூ
ரிரும்பனகத் தணியான் சிலம்போசை யெனுஞ் செல்வமே  (95)

செல் வாரணக் குழற் கண்டத்தர் மாயையுட்  சேர்ந்திடினுஞ்
செல் வாரணமுதற் சென்ம முற்றாலு  மென்செய்திடினுஞ்
செல்வா ரணக்கணிச்சிப் புலியூர சிறியன் முத்திச்
செல்வா ரணவு நின் றாண்மறவா  வரஞ்செய்தருளே   (96)

செய்யா னனந் தங்கு சேக்கை  யம்வாரிசத் தேன்பெருகிச் 
செய்யா னனந்தலை பாய் புலியூரன் செழுங்கருணை 
செய் யானனந் தமை யைந்துடையான் றிருமேனிமிகச் 
செய்யா னனந்தரஞ் சேர்வா னஞ்சிந்தை யென் பஞ்சரமே   (97)

பஞ்சரங் கண்ட கிளிமொழி பாக பவ வதன 
பஞ்  சரங்கன் பணியும் புலியூர வெனப்புகழ்பா 
பஞ் சரங் கன்றிட வாடு நெஞ்சே நம்பவங்களெனும் 
பஞ்சரங்கற்கழலாம்  பயில்விக்கு மின்பச்சுகமே  (98)

சுகம் பன்னகஞ் சொனிதம்ப மம்பாலிகை தூய நற் கிஞ்
சுகம் பன் னகஞ் சசியின் சின்னநண்ப  வத்தோகைக்குநஞ்
சுகம்பன்ன கண்  கழுத்தம்புலியூரர் சுடர்க்கிரிமேற்
சுகம்பன் னகங்கொள்ளுமோ மெய்யெலா மச்சுராபுத்தமே  (99)

புத்திக்குறும் பசுந் தேனமுதாம்  புலியூரரெனிற் 
புத்திக்குடைய கலைமங்கை சேரும் புரையில்பொருப்
புத் திக்குலவிப் புகழ்மிகநீடும் புவனியிலே 
புத்திக்குரிய பொருடந்து மேவிடும் பூந்திருவே   (100)

                     புலியூரந்தாதி  முற்றிற்று .  

                             திருச்சிற்றம்பலம் .

Related Content