logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)

சிவமயம்

இயற்றியவர்  வில்வாரணி தமிழ்ப் புலவர் தீ. குப்புசாமி ஆச்சாரியார்

காப்பு

அரியதோர் வில்வா ரணிஆ வடியார்க்கு
உரியதோர் மாலை யுரைப்பாம் - பிரியமதாக்
கேட்டதருட் செய்வானைக் கேடொன்று மில்ஒற்றைக்
கோட்டவனை யுள்ளத்தே கொண்டு.

                                                           நூல்

பூவினிற் சிறந்த அருணையம் பதிக்குப்
           புகரறு வடதிசை யதனிற்
பாவலர் நிறைவில் வாரணி நகரில்
            பலர்புகழ் கோயிலி லுறையும்
காவிநேர் விழியார் சுந்தராம் பிகையின்
            காதல நின்பத மலரில்
ஆவலால் தமிழ்ப்பாத் தொடுத்தணிந் திடச்செய்
           ஆவடி நாதஎம் பரனே.  (1)

தும்புரு நார தாதிய ரியக்குந்
          துரிசறும் இசைபுகுஞ் செவியிற்
செம்மையில் அரிண மிடக்கையி லிருந்து
         சிலைத்தலுங் கேட்டுறு வதுபோல்
இம்மையே யடியே னியம்பிடு புன்சொல்
        ஏற்பது தகுமுனக் கன்றோ
அம்மையே யப்பா வாபுரி யுறையும்
         ஆவடி நாதஎம் பரனே. (2)

நினதரு மன்பர் பாட்டொலி முன்னர்
        நெறியிலென் பாட்டொலி குயிலின்
கனவொலி முன்னர்க் கருங்கொடி யொலியாய்க்
      கருதிட லன்றிவே றுளதோ
மனதினைக் கணவ ருறைவிட மாக்கி
      மணாளரின் மனந்தம திடனாய்
அனநடை மாதர் வாழுமா புரியில்
      ஆவடி நாதஎம் பரனே.  (3)

விடங்கலந் தனைய தீவினை விழைவேன்
        மிகவுயர் வுடையநின் னேழு
விடங்கநற் றலங்க ளடைந்துநின் பாத
        வியன்தரி சனமது புரியேன்
அடங்கவிச் சென்ம மொழிமா றறியேன்
       ஆதனேன் தனக்கரு ளுவையால்
அடங்கரு முலகேழ் தொழுந்தகை யுடையாய்
        ஆவடி நாதஎம் பரனே. (4)

குற்றமே பலவாய்ப் புரியினுஞ் சிறியர்
         கோளொழித் தவர்தமை மேலாஞ்
சுற்றமே யென்ப ரிதுநின் தரிய
         தூயநல் வேதவாக் கன்றோ
நற்றவ மில்லே னான்மிகச் சிறிய
         னவைபல வுளனகற் றுவைமா
லற்றவர் பலருந் தொழுமரு  ளுடையாய்
         ஆவடி நாதஎம் பரனே.  (5)

காட்டினிற் புகுந்தே யிந்தன மெறிந்து
       கருதுநின் றலைமிசைச் சுமந்து
பாட்டியல் மதுரை வீதியிற் புகுந்து
       பத்திர னடிமையா னென்று
கேட்டிடு மேம நாதனுக் கியம்பி
       கீர்த்தியைப் பத்திரற் களித்தாய்
ஆட்படு மெனையு மாண்டரு  ளுவையால்
      ஆவடி நாதஎம் பரனே. (6)

சலந்தர னெனுமா தயித்தியன் கயிலை
       சார்பொழு தவனெதிர் நீபோய்ப்
பலந்தரு காலாற் றிகிரியொன் றியற்றிப்
       பகரரு மவன்றலை யழித்தே
நலந்தனி லுயர்வில் வாரணி நகரி
      னல்லரு  ளுடனமர் பரனே
அலந்தனை யகற்றி யடியனுக் கருள்செய்
      ஆவடி நாதஎம் பரனே.  (7)

நீற்றொளி புலித்தோற் கழற்குழை யொருபா
      னிகரறு மற்றொரு பாலிற்
சாற்றிடு திலகம் பட்டுடை சிலம்பு
      சதுர்மிகு தோடிவை யொருபாற்
கூற்றினை யுதைத்தா யுனதரும் பெரிய
      கூற்றினைப் புகழவு முறுமோ
ஆற்றணி சூழ்வில் வாரணி யமரும்
     ஆவடி நாதஎம் பரனே.  (8)

பூவண மேய பொன்னனை யாடன்
       புல்லிய வுருக்கெலா மரிய
மாவணத் தங்க மாக்கிநீ யுதவ
       மகிழுட னின்னுருக் கண்டு
தூவண வழகா வெனத்தொழு தணைக்கத்
       துகளறு கதியவட் களித்தாய்
ஆவண மோங்கு மாபுரி யமரும்
      ஆவடி நாதஎம் பரனே.  (9)

அரியயன் போரின் மலையுரு வானா
         யருஞ்சிலை யொருமலை யேற்றா
யுரியமா துலனு முறைவதற் கிடனு
        மோங்கிடு மலைகளா தலினாற்
பரிவுறு மெனது மனமெனுங் கல்லிற்
        பரிவுட னிருத்தலுந் தகுமே
அரியறி யாத மலர்ப்பத முடையாய்
       ஆவடி நாதஎம் பரனே.  (10)

தலைமிசை யொருமான் கரமதி லொருமான்
         தயங்கிடு மிடப்புற மொருமான்
பலவுரு வாய பசுவுல கினுக்கோர்
        பகரரு நீயொரு பெருமான்
நிலமிசை யெம்மான் களுமுணர் வரிய
       நின்புகழ் பேசவு மெளிதோ
அலமர லொழிவில் வாரணி யுறையும்
       ஆவடி நாதஎம் பரனே.  (11)

வழித்தனித் தேகும் வணிகனுக் காக
       வாம்பரி மீதுசே வகனாய்
வழித்தொடர்ந் தேகி வழிபறிப் பாளர்
      வரும்வழி விடுத்துநீ மீண்டும்
வழித்துணை யாகி வருமிடர் தீர்த்த
       வழித்துணை நாதவெற் கருளே
அழித்திடும் பிறவி யுடையவர் சூழும்
        ஆவடி நாதஎம் பரனே.  (12)

அந்தகன் தூதர் கைத்தடி யுடனே
       அயடியனே னெதிர்வரு முன்னர்
விந்தைசே ருனது சிவகண நாதர்
       வியன்தரி சனம்பட வினிதே
கந்தைநேர் தோளின் மனைவியரூடற்
       கால்படு கால்சுவ டதைநல்
அந்தமா வுடையர் வாழுமா புரியின்
      ஆவடி நாதஎம் பரனே.  (13)

மகவிரு டிகளேழ் பெயர்களைத் தொழுது
       மாயையி னெழுகுணந் தொலையேன்
சுகமுறு முப்பா னொருமுனி   வரையுந்
      தொழுதெனக் கிடர்செயுந் தீய
பகைமுனி வொழித்துத் துயர்செயுங் கொடிய
      பவமதை யகற்றுநா ளுளதோ
அகமல ருறையு மருண்மணிச் சுடரே
     ஆவடி நாதஎம் பரனே.  (14)

ஐயம  தீந்துண் ணெனமறை யறைந்து
       மாதுலர் வரிற்றுரத் திடுவேன்
தெய்வம  திகழே லெனப்பல மொழிந்துந்
        தினந்தின மிகழ்ந்தவந் திரிவேன்
பொய்யுரை புகல லெனப்புல மையினர்
       புகலவும் புகன்றினி துறுவேன்
ஐயனே யினியுன் கழலடை குவனோ
       ஆவடி நாதஎம் பரனே. (15)

பொன்னெனப் பொலியு நின்சடைக் காட்டிற்
        பூத்திடுங் கொன்றையு மறுகுந்
துன்னுறு மெருக்கும் கூவிள மனைத்துந்
        துளிர்த்திடக் கருதிகொ லாங்கே
உன்னருங் கங்கை யாற்றினைச் சுமந்தீ
       ருயர்மொழி பலபல வாய்ந்தே
யன்னதிற் றமிழ்நன் கோதுமா புரிவாழ்
        ஆவடி நாதஎம் பரனே.  (16)

ஈனசம் பந்த மொழிந்திட வரிய
       வெழின்மிகு நின்னருள் பெருமெய்ஞ்
ஞானசம் பந்தன் புகலியர் தலைவ
        நற்பதந் தொழவருள் புரிவாய்
வானசம் பந்த முடையபுத் தேளிர்
       வந்துவந் தனுதினந் தொழுமாறு
ஆனசம் பந்த வாபுரி யுறையும்
        ஆவடி நாதஎம் பரனே.  (17)

நீற்றறை யதனை நின்பத நிழலாய்
      நிறுவியுங் கடலுறு கல்லைப்
போற்றுறு நாவா யாக்கியு மரிய
      புகலருங் கரையிலுய்த் தருள்செய்
மாற்றரு மரிய நாவர சன்றன்
       மலர்ப்பதந் தொழவரு ளுவையா
ஆற்றுடன் மதியுங் கொன்றையுஞ் சூடும்
       ஆவடி நாதஎம் பரனே.  (18)

ஒருமணஞ் சிதைத்தே யடிமைய தாக்கொண்டு
       உயர்வுட னிருமணஞ் செய்து
பெருமைகொள் தோழ னாகவுங் கண்டு
       பிறங்கிடு யானைமேற் கயிலை
வருமுறை செய்து வாழ்வுதந் தனையவ்
      வள்ளலைப் பாடுமா றருளாய்
அருமறு கெருக்கு மணிசடைச் சூடும்
      ஆவடி நாதஎம் பரனே. (19)

திருப்பெருந் துறையிற் குருந்தின தடியிற்
       திருமறைப் பொருண்முடி வதனை
விருப்புட னீயே யருளிய பின்னர்
      விமலவீ டளித்தினி தாண்ட
கருப்புக லில்லா வாதவூ ரண்ணற்
      கழலிணை தொழவருள் புரிவாய்
அருப்பக னெனக்கோ ராணிலை கண்டாய்
      ஆவடி நாதஎம் பரனே.  (20)

நின்னுடை வாம பாகம துறையு
       நிகரறு சுந்தராம் பிகையின்
தன்னுரு வாய வாறெழு சத்தி
      தங்களி லொருவரை யேனும்
மன்னவே பணியே னாதலி னென்மேன்
      மருவிடு சலமதை நீக்கி
அன்னயை யென்பா லருள்புரி யச்செய்
      ஆவடி நாதஎம் பரனே.  (21)

மாயிரு மதுரை தனபதி வணிகன்
      மாபெரு முனதரு ளுடையான்
ஆயின தானீ யவனுறு வடைந்தே
       யவனரு மருகனைத் தழுவி
வாய்திறந் தழுது வையக மறிய
       வளந்தரு மாதுல னானாய்
ஆயிலுன் கருணைக் களவையு முண்டோ
      ஆவடி நாதஎம் பரனே.  (22)

விதிதலை கண்டி காலனைக் கடவூர்
       விதிமகன் பரியலின் மதனை
யதிபுகழ்க் குறுக்கை யந்தகா சுரனை
      யரியநற் கோவலில் வழுவூர்
துதிகர கயனை வதிகையிற் புரத்தை
      தூயவிற் குடிசலந்  தரனை
அதிசின முடனே யிவர்தமை வென்றோய்
      ஆவடி நாதஎம் பரனே. (23)

செம்மைசேர் முழந்தா ளிரண்டுடன் கைகள்
       செவ்விய செவியொரு நான்கு
விம்மித மார்பு நெற்றியோ டெட்டும்
        வியனில மண்பட வீழ்ந்து
சம்புவே யுனையான் தினம்பணி புரியச்
        சழக்கனுக் கருளுநா ளுளதோ
அம்புநேர் விழியாள் சுந்தரி பங்கா
        ஆவடி நாதஎம் பரனே. (24)

ஆயிர மலர்கொண் டாயிரந் தரமுன்
      அரும்பதம ருச்சனை புரியேன்
ஆயிர மலருள் குறையினு மொன்றே
      அம்பகம் பெயர்க்கவுந் துணியேன்
ஆயிரந் தரமு முன்கழ லடவே
       யன்றியெற் கொருகதி யுண்டோ
ஆயிர மொழியில் தமிழ்மிக விரும்பும்
       ஆவடி நாதஎம் பரனே.  (25)

காலனோ வருவன் கடாமணி யோசை
       காதினி லடிபடு முனமுன்
பாலைநேர் நிறவெள் விடைமணி யோசை
       பாலியேன் செவிப்பட லினிதே
நூலைநே ரிடையா ளுமையினை யிடத்து
       நுவலுறு கங்கையைச் சிரத்தும்
ஆலமோ கழுத்து மமர்திருக் கோலத்
        தாவடி நாதஎம் பரனே.  (26)

நந்தியெம் பெருமா னுமதருஞ் சவையின்
       நடுவணின் விடுவதி லெனினு
மந்திலிற் கடையோர் சிறிதிட மெனக்கா
       வளித்திட வவர்க்கருள் புரிவாய்
சுந்தர மதனின் விடமதை யமைத்த
       கருணையி லிதுவுமொன் றிலையே
அந்திக மிலதோர் கொடிநிக ராவே
        னாவடி நாதஎம் பரனே. (27)

திருமறை தெறிதண் டீசரோ டென்னைத்
       தீமைகொ ளிவனையும் பாரென்
றொருமொழி யுரைப்பா யுரைத்திடிற் றந்தை
       யோங்குறு தாடுணித் தவரென்
பெருமலை வினைத்தாள் போக்கியென் றனையும்
       பெரியவுன் றாளதிற் சேர்ப்பார்
அருமலைச் சிலையா யாயுரி யுறைவாய்
      ஆவடி நாதஎம் பரனே. (28)

உன்பத மொன்றே பொருளெனக் கருதும்
       உயர்வுடை யடியவ ரெனிலோ
நன்பத மருளி மாதுல னானாய்
        நயமொழி யன்னையு மானாய்
துன்புடை யிருளில் வழித்துணை யானாய்
       தோழனின் றூதனு மானாய்
அன்பருக் கருளுன் புகழ்சொலப் போமோ
       ஆவடி நாதஎம் பரனே.   (29)

அரியுதித் திடுமு னெழுந்தரி நுகரா
        வருமல ரெடுத்ததைத் தொடுத்தே
யரிதனக் கரிதாம் பதமலர் சாத்தி
        யரியநற் றொண்டது புரியேன்
அரிபரந் திடுகண் சுந்தராம் பிகையின்
       அருண்மொழிக் குருகுமெண் டோளா
அரியுழுங் கொன்றைச் சடைமுடி யாயெம்
         ஆவடி நாதஎம் பரனே.  (30)

திரமுள னாகும் விநாயக மூர்த்தஞ்
        சிறந்துள பன்னிரண் டதிலோர்
உரமுள வடிவ மொன்றினுக் கேனும்
       உளமுறப் பணிபுரிந் திலனாற்
கரமதைந் துடையோ னென்றனைக் கோபங்
       காட்டிடா வகையருள் புரிவாய்
அரமரை வேற்கண் சுந்தரி பாகா
       ஆவடி நாதஎம் பரனே.   (31)

நந்தியெம் பெருமா னின்னருஞ் சவையின்
       நடுங்குறத் தேவர்கள் பிரம்பால்
உந்தியே யோங்கி யடித்திட வொதுங்கி
       உடனெருங் குயரிய விடநான்
வந்திட வருள்செய் துன்பெருங் கருணை
       வாழ்வருள் நாளுமெற் குளதோ
அந்தியி னலரி தனைநிகர் வடிவே
      ஆவடி நாதஎம் பரனே.  (32)

உருத்திர ராய பதினொரு வரையும்
       உயர்வுடை யாயுத மாக்கி
வரத்திரு முருகன் கரத்தினிற் கொடுத்து
      வலியசூ ரழித்து அமருலக
உரத்துட னிருத்தி வரவவற் கருள்செய்
       தும்பரார் வினைதவிர் வள்ளால்
அரத்துறை யமர்ந்து மாபுரி யமர்ந்தாய்
      ஆவடி நாதஎம் பரனே.  (33)

உன்னையா னொருகாற் றொழுகைசெய் தடிமை
      உறலதை யேற்றடி யேற்கு
மன்னவே விருகாற் றருதலுன் றொழிலே
      மற்றிரு வேந்தொழி லதனில்
என்னதேற் றுனது தொழிற்புரியந் திலையால்
      இதழ்விரி மரைமல ருறைவோன்
அன்னமாய்ப் பறந்து மறிகிலா முடியாய்
      ஆவடி நாதஎம் பரனே.  (34)

பொங்கொளி நீறு நுதலணி தோறும்
       புகழ்பெறு ஞானசம் பந்தன்
துங்கமோ டுரைத்த தூய்திரு நீற்றுத்
       துகளறு பதிகநன் கோதி
யிங்ஙனே யணியேன் யாங்கன முன்றன்
       இணையடி மலர்நிழ லடைவேன்
அங்கணா வில்வா ரணியினி லமர்வோய்
       ஆவடி நாதஎம் பரனே. (35)


யாழ்பெரு மிசைதேர் ஞானசம் பந்தன்
       எதிரதர் மறித்திடு புத்தன்
பாழ்பெருந் தலைமேற் காரிடி வீழ்த்தப்
        பட்டன னிறந்ததை மான
வேழ்பெரும் பிறவி பட்டழிந் திடவே
        இடியதை வீழ்த்துமா றருளாய்
ஆழ்பெருங் கடலி னருளினை யுடையாய்
        ஆவடி நாதஎம் பரனே.  (36)

கராவொரு மகவை யுண்டுபன் னாட்கள்
       கழிந்திடச் சுந்தர னிசையாற்
தராமிசை யுயிரோ டுமிழ்தரச் செய்தாய்
        தமியனின் தமிழிசை கேட்டுப்
பராபர வெனது மனமெனுங் கராத்துள்
       பகுத்தறி வெழச்செய லரிதோ
அராவணி யேபே ரணியெனக் கொள்வாய்
       ஆவடி நாதஎம் பரனே.  (37)

மன்னிய புரங்கண் மூன்றையு மெரித்த
          மாபெருந் தீயினிற் சிறிதால்
என்னருங் கொடிய காமமுன்   னாறா
       மெயிற்புரத் தையுமெரித் திடுவாய்
துன்னிய வேழு லோகமேன் முடியாய்த்
      துலங்கிய சிவவுல கமர்ந்தும்
அன்னிய மலவென் றாபுரி யமரும்
        ஆவடி நாதஎம் பரனே.  (38)

வீதவோத் தூரின் மிகவுயர்ந் தெழுந்த
       வெறிமிகு மாண்பனை நிலைபோய்
நாதனே யதுபெண் பனையுரு வாக்குஞ்
       ஞானசம் பந்தனை யதுபோல்
தீதுற மெனது குணமிதை மாற்றித்
        திகழ்தரு நற்குண மாக
ஆதனே னெனக்கே யமைவுற செயச்சொல்
         ஆவடி நாதஎம் பரனே.  (39)

சுகமதிற் றோயான் றலமதிற் சேரான்
       சுகந்தரு மூர்த்தியும் பாரான்
இகமதி லிவனோர் சுகமலி யதனால்
       இவற்கரு ளெனவொரு மொழிநீ
மிகமெலி யெற்காச் சுந்தராம் பிகைக்கு
       மேவுற மொழிந்தருள் புரிவாய்
அகமில ரானோ ரகந்தொரு முறையும்
       ஆவடி நாதஎம் பரனே.  (40)

வெங்குரு மேய ஞானசம் பந்தன்
        விடையமர்ந் தருளுநின் கோலம்
அமங்கையாற் றந்தை யறிந்திடக் காட்டு
        மதைநிக ரொருவரெற் கிலையால்
திங்களூர் சடையாய் விடையிவர் கோலந்
        தீயனேன் காணுநா ளுளதோ
அங்கணா கயிலை யமர்பெரு வாழ்வே
       ஆவடி நாதஎம் பரனே. (41)

கருதறு நின்னா லயம்வலம் வரவோ
       கான்முட மாகுவன் கைகள்
திருவுறத் தொழவும் முடமிரு கண்ணோ
        தெரிசனஞ் செயபெருங் குருடே
மருவுன் னாம முரைசெய மூங்கை
        மலர்ப்பத மடைவதெங் ஙனமோ
அரவுடன் மதியை யணிசடைச் சூடும்
        ஆவடி நாதஎம் பரனே.   (42)

பூம்புக லூரிற் றிருப்பணிக் காகும்
        புல்லிய செங்கலைப் பொன்னே
யாம்படி யியற்றி யரியநின் தோழற்
        களித்தனை யென்மனக் கல்லை
ஓம்புபொன்னாக்கி யதனினின் பாத
        வொளிமணி பதிக்குநா ளுளதோ
ஆம்பலின் குரலார் சுந்தரி பங்கா
      ஆவடி நாதஎம் பரனே.  (43)

திங்களூர் சடையாய் திங்கணேர் நுதலார்
       தீங்கனி வாய்ச்சுவை பெரிதென்று
இங்கனே வுறுவே னெண்ணிய யாவு
       மீகுவை நீயென லறியேன்
துங்கமா முடியி லொருபெணைச் சுமந்து
      துகளறு பதத்திலோ ராணை
அங்கணா மிதித்து நடித்திடுங் கூத்தா
      ஆவடி நாதஎம் பரனே.  (44)

வாசியின் முறையில் வாயுவை யடக்கி
       வகைவகை யோகமே புரிந்தும்
பேசிடுந் தவங்கள் யாவுநின் னடியைப்
       பேணில ரெனிற்புக முறுமோ
பூசுர வாதி சைவரோ ராறு
        பொழுதினும் பூசைநன் காற்றி
ஆசுக ளுலகி லகற்றிட வெழுந்த
        ஆவடி நாதஎம் பரனே. (45)

மங்கையர் கனிவாய் மருந்தென மகிழ்வேன்
       மருவுநின் கனிவதை மகிழேன்
துங்கமா மவர்தம் முகமதி புகழ்வேன்
      தூயநின் சடைமதி புகழேன்
புங்கமா முனது புலியத ளிகழ்வேன்
       பூவையர் மேகலை யிகழேன்
அங்கணா இனியுன் னருளடை குவனோ
        ஆவடி நாதஎம் பரனே.  (46)

நின்னுடை மூர்த்த மிருபதோ டைந்து
       நிலைபெற மனத்திடைப் பதித்துப்
பொன்னெனப் போற்று மவர்பெருந் தகைமை
       புகல்பவ ரிலைமிக வுயரோர்
கன்னியை மணக்க பலபல வாண்கள்
        கலந்துயர் வில்வமா நகரில்
அன்னமுங் காணா யமர்ந்தது வியப்பே
        ஆவடி நாதஎம் பரனே. (47)

புலியதள் கரித்தோல் சிரவடம் பாம்பும்
      புல்லுமோ ராமையி னோடு
நலிவுசெய் விடமோ டிவைசுமந் திடுவாய்
      நாயினேன் பதத்தினிற் கிடந்தால்
வலிதருஞ் சுமையோ வன்கொடி யேனை
       வள்ளலே கடைக்கணித் தருளாய்
அலையுறு கடனஞ் சமுதுசெய் பரனே
       ஆவடி நாதஎம் பரனே. (48)

காமமே வெகுளி மயக்கமென் றிந்தக்
      களைகளை வேரறக் களைந்து
நேமமா யன்பா நீரதைப் பாய்ச்சி
       நிரம்புறு பத்தியாம் வித்தைச்
சேமவென் மனமாஞ் செய்யதிற் பதித்துச்
       செவ்விய பயிர்செய வருளாய்
ஆமமே னியநற் சுந்தரி பங்கா
        ஆவடி நாதஎம் பரனே.  (49)

பாவியேன் மனத்துன் கழலொடு சிலம்பு
        படுபுலித் தோலொடு பட்டும்
மேவுறு திருவெண் ணீற்றொடு சாந்தும்
         விரவிய கரியதள் கச்சு
மோவர விருந்தே வுயர்பத மடையு
          மொள்ளிய வாழ்வுமெற் குளதோ
ஆவிகள் நிறையு மாபுரி யமரும்
         ஆவடி நாதஎம் பரனே.  (50)

உன்னையா னெதிரிற் றரிசனை புரிபோ
       துரோமமுஞ் சிலிர்த்திலன் வாய்விட்
டென்னையே மறந்து மழுதிலன் கண்ணீ
       ரிலன்குறு வியர்வையு மில்லேன்
மன்னவே துடித்துத் தழுதழுத் திலன்நா
       மருவுமென் னுடலமு முதடும்
அன்னவே கண்டம் விம்மல னருள்யா
       தாவடி நாதஎம் பரனே. (51)

நின்னுடை யடிய ரவைதனிற் புகுத
        நேரெனு மவர்தமை யெழுதுந்
தன்னுடை யரிய புத்தகத் தெனையுந்
         தகவுற வெழுதிவைத் திடுமா
றுன்னறு நந்தி யெம்பெரு மாற்கே
        யொருமொழி யுரைத்தரு ளெந்தாய்
அன்னநன் முரசே முழங்குமா புரிவாழ்
         ஆவடி நாதஎம் பரனே.  (52)

அடியவர்க் காக நீசெயும் விளையாட்
        டருங்கதை செவியுற விரும்பின்
நடிகைய ராடிப் பாடிடும் பாட
        னாடியே வியப்புறுஞ் செவிகள்
படிமிசை நடஞ்செய் குஞ்சித பாதம்
        பார்த்திட விரும்பினென் கண்க
ளடிமிதித் தாடு மவர்நட நோக்கும்
       ஆவடி நாதஎம் பரனே. (53)

அரம்பையர் பலருஞ் சொல்லர செதிரி
       லாடியும் பாடியும் மயக்கத்
திரமுள மனது சிறிதள வேனுந்
       திரிதலை யொழித்துன திருதா
ளுரமுட னிருந்து முறுதியை யேய்ப்ப
       வூத்தையே னெனக்கருள் புரிவாய்
அரமக ளிருந்தங் கணவருந் தொழுமா
       ஆவடி நாதஎம் பரனே. (54)

காஞ்சிமா நகரில் மண்ணுரு வாயும்
       காளத்தி யினில்வளி யாயும்
ஆஞ்சிடு மானைக் காவினி னீராய்
      அருணையில் தீயுரு வாயுந்
தோஞ்சிடுங் கருணைத் தில்லையில் வெளியாய்த்
      தோன்றியு மாபுரி யின்கண்
ஆஞ்சியைக் கொண்டே யடைந்தனை போலும்
       ஆவடி நாதஎம் பரனே. (55)

கச்சிமேற் றளியே யிடைச்சுரங் கடவூர்
      கடிக்குளங் கள்வனூர் காவூர்
பச்சியேச் சுவரங் கஞ்சனூர் கானூர்
     பவேசுவங் கருவிலி களரே
யச்சிறு பாக்க மகத்தியான் பள்ளி
     யனையவு முனதிட வற்றில்
அச்சய னாக வமர்ந்தருள் புரிவோய்
     ஆவடி நாதஎம் பரனே. (56)

வாய்மைசா லன்ப ருறவுநற் சீலம்
      வயங்குறு தவமரு ளடக்கந்
தூய்மையுஞ் ஞான நயவுரை யினிமை
      துகளறு மேலவர் தொழுகை
பேய்மனக் கொடியே னொன்றையு மறியேன்
       பெருமித மடையுநா ளுளதோ
ஆய்தமிழ் மொழிவில் வாரணி யுறையும்
      ஆவடி நாதஎம் பரனே. (57)

வாக்கினா லியற்று நற்குண நான்கும்
        வயங்குறு முடல்வழி யியற்று
நீக்கறு மரிய குணமொரு மூன்று
       நிகரிலா மனமதா லுஞற்று
மேக்குறு மினிய குணமொரு மூன்று
       மேயவிப் பத்துநா னடைய
ஆக்குறு விப்பா யாபுரி யமரும்
        ஆவடி நாதஎம் பரனே. (58)

முழுவதுந் துறந்த துறவிகட் காணின்
        முன்னியே யெதிர்கொளல் பணிதல்
பழுதில தாய வாசனத் திருத்தல்
        பன்னரும் பதமது கழுவி
வழுவலில் தீப தூபமும் புகழ்தல்
        வளவருச் சனையமு தேந்தல்
அழகுறு விழியா யிவைபுரி தரச்செய்
         ஆவடி நாதஎம் பரனே.  (59)

கலகமே விரும்பு மனதுடை யவனான்
       கலம்பகம் பாடியுந் துதியேன்
பலதமிழ்க் கோவை பாடிட வறியேன்
      பலபெருங் கோவமே யுடையேன்
நலதொரு மாலை பாடிநான் பணியேன்
       நங்கையர் மாலையே யுடையேன்
அலமரும் பிறவி யாங்கன மகல்வேன்
       ஆவடி நாதஎம் பரனே. (60)

திரமுள யோக மைந்துட னைந்துந்
       திரம்பெற வியற்றிநல் வீட்டின்
றிரமடை பவருன் பதத்துணை யிலரேற்
       றிருவரு ளதையடை குவரோ
தரமிகு கதலித் தேன்பெருக் கோடித்
       தாழ்வயல் நிரப்பியும் பின்னர்
அரலையு மடையு மாபுரி யுறையும்
       ஆவடி நாதஎம் பரனே. (61)

ஆயிரத் தெட்டுச் சிவத்தலங் களையான்
       அடைந்திலன் கேட்டிலன் நினைந்து
தூயநற் புகழைப் புகழ்ந்திலன் நின்றன்
        தூமல ரடிநிழல் வருமோ
கோயிலை வலம்வந் தெண்வகைப் பத்திக்
       குறைவறப் புரிந்தனு தினமும்
ஆயுநின் தொண்டர் சூழா புரிவாழ்
       ஆவடி நாதஎம் பரனே. (62)

செம்மலே நினக்காம் மலர்வனம் வைத்தல்
      செறிமல ரெடுத்ததைத் தொடுத்தல்
கம்முயர் கோயி லலகிடல் மெழுகல்
      கவின்பெறு கோலமு மிடுதல்
செம்மைசேர் தீப மேற்றிட லரிய
       சிவனடி யரையுப சரித்தல்
அம்மவோ விவைசெய் யன்பரிற் கூட்டாய்
       ஆவடி நாதஎம் பரனே.  (63)

விளங்குமுன் கண்டத் தடக்கிய விடமே
      வெளிவிரிந் தெனவிருள் விரியும்
பளிங்கெனுஞ் சடைநீர் கொதிப்புட னெங்கும்
      பரந்தென வெண்ணிலா பரவுந்
துளங்குநின் பாம்பி னுயிர்ப்பெனத் தென்றல்
      தொடர்தரு மெங்கனஞ் சகிப்பா
ளளங்கருங் குழலாட் களிதரு கிற்பாய்
     ஆவடி நாதஎம் பரனே.  (64)

வஞ்சக  னான வென்மல முனது
        வழங்குகைக் கெதிர்விதி தலையோ
கஞ்சநே ரான விழிக்கெதிர் மதனோ
        கண்டநே ரெதிர்கடு விடமோ
வெஞ்சுரா தகன்ற சடைக்கெதிர் புனலோ
        வெழினகைக் கெதிர்திரி புரமோ
அஞ்சினு மெளிதாத் துஞ்சுத லுறுமே
        ஆவடி நாதஎம் பரனே. (65)

பாவியேன் மனமுன் றிருவடிக் காக்கிப்
       பணிசெய விருகர மாக்கி
நாவினைத் திருவைந் தெழுத்தினுக் காக்கி
       நவிலுமித் திரிகர ணங்கள்
மேவிய வுனது திருவரு  ளாலே
      மேம்படு வாழ்வுமெற் குளதோ
ஆவுதி பலவேற் றாபுரி யமரும்
       ஆவடி நாதஎம் பரனே. (66)

நினதரும் பவனி கண்டநாள் தொடங்கி
       நினைவினிற் புலியதள் மழுமான்
கனமுறுஞ் சடைக்கா டெருக்கலர் கொன்றை
      கவின்கொளு மார்பதிற் பூணூல்
இனவெலாம் விரும்பி இகுளையும் வளையும்
      இகழ்தலிற் கலிங்கமும் வெறுத்தாள்
அனகனே யவளுக் கருளுதி கண்டாய்
      ஆவடி நாதஎம் பரனே.  (67)

தினமுனைக் கல்லா லெரிந்திடு மரிய
       தீதறு சாக்கிய னார்தம்
மனமதிற் பூவாய் மதித்தனர் நீயும்
         மலரென வேயதை யேற்றாய்
நினைவினி னீயு மவருமே யணர்ந்தீர்
        நீள்புவி கல்லென வறையும்
அனகனே வுன்ற னாடல்காண் பவரார்
       ஆவடி நாதஎம் பரனே.  (68)

திரமிகு திருசம் பந்தருக் கென்றன்
       தீவினை முழுதுணர்த் துவையேல்
அரவதின் விடத்தைத் தீர்த்தவ ரடியேன்
       அரும்பவ விடத்தையுந் தீர்ப்பார்
இரவுகள் பகலு முனைத்தரி சிப்போர்
       எறிதிரைக் கடலொலி யடங்க
அரகர வெனும்வில் வாரணி யமரும்
        ஆவடி நாதஎம் பரனே.  (69)

கடலினிற் சிலையை யம்பிய தாகக்
        கடத்திய சொல்லர சர்க்கென்
உடலினை மீட்டு முறாவண முரைசெய்
       ஓங்கிய பெருவிடம் வேழந்
திடமுறக் கடந்தோ ரெனதிடர்ப் பவமுந்
       தேய்வுறச் செய்குவ ரன்றோ
அடன்மிகு மறையின் முடியமர் பவனே
        ஆவடி நாதஎம் பரனே. (70)

சங்கிலி கணவற் கென்னுடை நிலைமை
           சாற்றுவை யேலவர் முன்ன
மங்கையிற் பொன்னை யாற்றிடை வீழ்த்தி
           யருங்குளத் தெடுத்தவ ரெனையும்
பங்கம தொழித்துப் பவத்தினின் றெடுப்பார்
          பரமவுன் பூதியே யணியா
அங்கமீ தணிவோர் வாழுமா புரியில்
         ஆவடி நாதஎம் பரனே. (71)

ஆதனேன் மாதர் பள்ளிநா னடைவேன்
       அகத்தியான் பள்ளியை யடையேன்
ஓதுறு தாயின் கருவதை யடைவேன்
        உயர்கரு வூரதை யடையேன்
மாதவர் தொழுமா மறைவன மெனக்கே
        மறைவன மாயதா லந்தோ
ஆதலி னானுன் கழலடை குவனோ
        ஆவடி நாதஎம் பரனே. (72)

மனத்தினால் நினைத்து வாக்கினால் துதித்து
        மருமலர் கையினால் தூவிக்
கனத்துயர் கோயில் காலினால் சூழ்ந்து
        கம்மதால் வணங்கில னந்தோ
தனத்துயர்ந் தவர்கள் தருமமே மேலாந்
        தரமென வுணர்ந்தனு தினமும்
அனைத்தையு மீயு மாபுரி யுறையும்
       ஆவடி நாதஎம் பரனே. (73)

பேதைமா ருடன்சேர் பஞ்சணைப் பள்ளி
        பெரிதென மகிழ்ந்தறப் பள்ளி
தீதகல் திருக்காட்டுப்பளி யுடனே
         திருச்சிராப் பளிநனி பளியோடு
ஏதமில் தலங்க தெரிசனம் புரியேன்
         என்னையாட் கொள்வதும் புகழே
ஆதவன் தவழுங் கோயிலி லுறைவோய்
         ஆவடி நாதஎம் பரனே. (74)

கருணையங் கடலே கடலுறு மமுதே
         காண்பரி தாகிய சிவமே
மருமலர் மணமே மாதவர் பெரும        
         மறைமுடி யமர்பெரு முடிவே
திருவுறை மார்பன் விதிமுத லோர்க்குந்
         தேவனே யெனவுனைத் துதியேன்
அருவமு முருவு மாகிய தலைவ
         ஆவடி நாதஎம் பரனே. (75)

கருப்பிரி வதற்கே யெண்ணம திலனாற்
        கருக்குடி வாஞ்சியங் கருதேன்
விருப்புறு மூன்று வேட்கை மீதுறலால்
        வேட்கள மெனுநினை விலனாற்
திருக்கினின் றகலே னாதலி னினது
         திருக்கழுக் குன்றமு மணையேன்
அருப்பனேன் குறையைக் கருதிடா தருள்வாய்
        ஆவடி நாதஎம் பரனே. (76)

நகர்தனிற் சிறந்த வயோத்தியே காசி
        நவிறரு காஞ்சியே மாயை
மிகுபுக ழவந்தி மதுரையே துவரை
        மேலிடு மிந்நக ரங்கள்
தகுமிவை யேழி னிகரென வன்றோ
        தயைமிகுந் தாபுரி யமர்ந்தாய்
அகமல ருறைவோய் ஆளுவை யெனையும்
       ஆவடி நாதஎம் பரனே. (77)

கருநிறக் காலன் வலியகைத் தண்டால்
       கடையனேன் கலைமிசை யடிபட்டு
உருபில வளற்றி லாழ்வுற லொழிந்தே
       யுயர்வுறு நந்திகைப் பிரம்பால்
பெருமடி பட்டுன் திருவடி நீழற்
        பெறவரு ணாளுமெற் குளதோ
அருமருந் தனையா யாபுரி யுறைவாய்
         ஆவடி நாதஎம் பரனே. (78)

செல்வமே பொருளா மதிப்பவர் பின்போய்ச்
         செறிவுறு கால்களு மோய்ந்து
தொல்லையே யடைந்து துயருறு வதினுந்
          தூயநின் னடிதொழு கின்ற
நல்லவர் பின்போ யிளைப்பது நலனே
           நாவலர் தமிழினை யாய்ந்தே
அல்லுநன் பகலு மோதுமா புரியோங்கு
           ஆவடி நாதஎம் பரனே. (79)

கருங்கட னீரை மணலினை யளந்து
        கருத்துடன் கணக்கிட லாகும்
பெருங்கண மான நின்னுடைத் தொண்டர்
         பெரும்புகழ் கணக்கிடப் போமோ
விருங்கவி வாணர் பற்பல ரணைந்தே
         யெந்தநூற் பொருளையுந் தெரிந்தே
அருங்களிப் போடு மகலுமா புரியில்
           ஆவடி நாதஎம் பரனே. (80)

ஞானசம் பந்தர் நாவினுக் கரசர்
        நம்பியா ரூரரு மிவர்தாம்
தேனக முடைய பதிகம தோதித்
        தெரிசனம் புரியநற் றலங்கண்
மானவோ ரிருநூற் றெழுபதி னான்கின்
         மன்னிவீற் றிருந்ததை யேய்ப்ப
ஆனக முழங்கு மாபுரி யமர்ந்தாய்
        ஆவடி நாதஎம் பரனே. (81)

நின்சடை யதனின் மதியொடு மரவு
         நிலைபெற வினிதமைத் ததுபோல்
புன்மைதீ ரடியார் குழுவினுள் எனையோர்
        புறத்தினி லிருத்திட வருளாய்
மின்னிடை மருத வுழத்தியர் நடைக்கு
       விருப்பமுற் றோதிமந் தொடர
அன்னியஞ் சொற்க ளவாவுமா புரியில்
        ஆவடி நாதஎம் பரனே. (82)

கூவிள மறுகு கொன்றையு மெருக்கும்
       குறையிலாப் பலமலர் கொண்டுன்
தேவியல் பாத மருச்சனை புரிவார்
       திருத்தளி நிதம்வலம் வருவார்
பாவினைப் பாடி நினைத்தொழு வோர்கள்
        பதம்பணிந் திடவெனக் கருளாய்
ஆவிகள் தோறுங் கலந்துறை பவனே
       ஆவடி நாதஎம் பரனே. (83)

ஆயுநற் றமிழ்நூ லாலய மமைப்போர்
       அதிற்பல நூல்களை நிறைப்போர்
மேயவந் நூலின் பொருளினை யுணர்த்தி
       மிளிருறத் தமிழ்க்கலை வளர்ப்போர்
தூயவத் தமிழ்க்கே தொண்டது புரிவோர்
       துரிசறு பொருளதற் களிப்போர்
ஆயவித் தூயோர் செயலெனக் கருள்வாய்
        ஆவடி நாதஎம் பரனே. (84)

மடையினில் வாளை யெனவடி யெடுத்து
        மறுவகல் கழுமல வேந்தர்
அடைபெறு பாடற் றொடங்குமு னருள்கூர்ந்து
        அஞ்செழுத் தெழுதிய தாளஞ்
சடுதியிற் கோலக் காவினி லீந்தாய்
         தமிழ்நசை மிகுதியி னன்றோ
அடியனேன் தனக்குந் தமிழறி வுறச்செய்
        ஆவடி நாதஎம் பரனே. (85)

பண்ணினேர் மொழியா ளெனத்தொடர் பாடல்
        பத்தையுங் கேட்டுநா வரசர்
எண்ணிய படியே திருமறைக் காட்டி
       எழின்மறைக் கதவினைத் திறந்தாய்
தண்ணருந் தமிழின் சுவையினி தறிவார்
        தாமலாற் பிறரினி யுளரோ
அண்ணலே தமிழ்நா னறிகில னருள்வாய்
        ஆவடி நாதஎம் பரனே. (86)

நென்மலை தந்துங் குண்டையூர் நின்று
       நிகரிலா ரூரிடைக் கொடுத்தும்
பொன்மிக வீந்தாற் றிடையினி லுய்க்கப்
          பொற்கம லாலயத் தளித்து
மின்னநின் தோழற் கினியன செய்தது
          இயம்புறு தமிழ்மகிழ் வன்றோ
அன்னநற் றமிழ்ச்சொல் சிறிதறி வுறச்செய்
          ஆவடிநாதஎம் பரனே. (87)

தருநிழல் வாழ்வும் விதிபத வாழ்வுந்
           தயங்குவை குந்தநல் வாழ்வும்
மருவுவர் சிலர்நின் பதமருச் சனைசெய்
          மகத்துவ முறுதலி னன்றோ
தருவுல கோர்கால் நிலம்பட வலம்போந்து
         அவமிலங் கண்களாற் காணும்
அருண்மிக வுடைய மெனத்தொழு தடையும்
          ஆவடி நாதஎம் பரனே. (88)

வானுறு மரியின் வெயில்தனை மறைக்க
         வயங்குநற் காழியர் தலைவன்
தானுகந் தேறுஞ் சிவிகையும் தகுடையும்
         தந்துமா நிழல்புரிந் தனையால்
தீனனேன் வீனையின் பவவெயி லதனைத்
          திருவடி நிழல்புரிந் தொழிப்பாய்
ஆனகம் பலவு முழங்குமா புரிவாழ்
          ஆவடி நாதஎம் பரனே. (89)

கோவண மீந்தும் கலையமே கொடுத்தும்
           குறைவறு மறம்புரி பவர்க்கே
கோவண மீந்தும் கலையமே கொடுத்தும்
            குறைவறு பதத்தையும் கொடுத்தாய்
பாவணம் பாணர் பாடுவ கேட்டுப்
            பஞ்சரக் கிளியது பாடு
மாவண நிறையு மாபுரி யின்கண்
            ஆவடி நாதஎம் பரனே. (90)

தாலியை மாற்றிக் கொணர்ந்தகுங் கிலியந்
        தனக்கெதி ரளவிலாத் தனமத்
தாலியைத் தந்த கற்பர சிக்கே
         தந்ததைக் கனவிலு முரைத்தாய்
ஏலுமுன் கருணை யென்னெனப் புகல்வன்
          எதிர்பொரு தகரிடி யொலியால்
ஆலியைத் தலைவி யணையுமா புரிவாழ்
           ஆவடி நாதஎம் பரனே. (91)

குறிப்பறிந் தடியார் கலையொலித் தீயுங்
           குறிப்புணர் வார்க்கென திடர்நீ
குறித்திடி லதுபோ லென்மல வழுக்கைக்
           குறைவற வொலித்தருள் புரிவார்
குறித்தநாட் கணவர் வரப்பெறார் கூடற்
          குறியினை யிழைத் திழைத் தயறும்
அறத்துறை மகளிர் வாழுமா புரியில்
          ஆவடி நாதஎம் பரனே. (92)

மருவிடு மலைமே லுறுநின தடிகள்
       வன்மனத் திருத்திட லரிதோ
பெருகொளி மலையை வளைத்ததை யேய்ப்பப்
       பேயனேன் மனம்வளைப் பரிதோ
கருநிற மான முயலக னழுத்தும்
        கருங்கழல் கொண்டெனக் கிடர்செய்
அருவருப் பான ஆணவ மழுத்தாய்
         ஆவடி நாதஎம் பரனே. (93)

கூற்றுவ னடியை விட்டிடா தவரே
         கூறுநின் னடியைவிட் டவர்காண்
மாற்றறு விதிகைப் பட்டக லாதார்
         மருவுமைந் தெழுத்தினை யகன்றார்
தோற்றுநின் கருணைக் கடல்கடந் தவரே
          தொண்டரை மதித்தில ரிவர்கள்
ஆற்றுவ தெங்கன் சமனெடுங் கோபம்
         ஆவடி நாதஎம் பரனே. (94)

விரும்பியே திருநள் ளாறுநான் புகுதேன்
         விரும்பின ளாறுபோய்ப் புகுவேன்
திருந்திய கூந்தற் காடதை மகிழ்வேன்
           சிறந்தவெண் காடுசெங் காடு
மருந்தினு மினிய கழைப்பசுங் காடு
           மற்றிவைப் பொருளென மகிழேன்
அரும்பெருந் தீயேற் குன்னருள் வருமோ
              ஆவடி நாதஎம் பரனே. (95)

பொற்புறு முனது புகழ்க்கவி பாடிப்
             பொருள்விரித் தனுதின மோத
விற்பன புலமை யோர்களிற் கவியும்
              விளங்கிடு கமகனு மன்றிச்
சொற்பெரி தோதும் வாதியும் வாக்கி
             சொல்லுமின் னோர்களிற் சேரேன்
அற்புறு கடலே யாபுரி யுறையும்
              ஆவடி நாதஎம் பரனே. (96)

தாமரை யலர்த்துஞ் ஞாயிறு முகைகள்
          தவிர்தரப் போதுக டமையே
ஏமுற வலர்த்துங் கொள்கைபோ லிறைநீ
          யியைதரு பக்குவர்க் கன்றித்
தாமுற முத்தி யுயிர்க்கெலா மொருங்கே
           தராநிலை யுணர்கில ரந்தோ
ஆமிறை யியல்போ வென்பவர்க் கிரங்காய்
           ஆவடி நாதஎம் பரனே. (97)

கடனிறை நீரிற் கலந்திடு முவர்ப்புக்
            கடல்வெளிக் கியைந்திட லின்றே
கடவுணின் னிறைவிற் கலந்தமன் னுயிரின்
            கார்மல மத்தகைத் தேயால்
கடனிறை நீரினுவர்ப்பினைப் பாற்றுங்
               காரென வென்மலம் பாற்ற
அடலுறு குருவாய் வருகவா புரிவாழ்
              ஆவடி நாதஎம் பரனே. (98)

நித்தியா நித்ய விவேகமே யாதி
          நிமலசா தனங்களை யுற்று
வித்துவான் குருவைச் சிரத்தையோ டடைந்துன்
           வீட்டை விசாரமெற் கருளாய்
பத்தியோ டுற்றுப் பரவடி யார்க்குப்
            பரகதி யளித்தெதிர் தோன்றும்
அத்தியா சங்க ளனைத்தையு  மொழிக்கும்
             ஆவடி நாதஎம் பரனே. (99)

கருதலை திவலை நுரைகளா தியசா
          கரமளித் தடக்குத லென்னப்
பரசக சீவ னாதியவடக்குன்
            படிவினை யடியனேற் கருளாய்
குருதரு கல்வி மிக்கவ ருறையுங்
             கூவிளம் பதியலங் கரிக்க
அருகினிற் சுந்த ராம்பிகை யொடுமே
                   வாவடி நாதஎம் பரனே. (100)

                                         - முற்றிற்று -


                                            கடைக் காப்பு

குடமுனியொப் பாகியதீ குப்புசாமி யாச்சாரி
மடமிகந்து மனமலர வனைந்திடுவில் வாரணியா
வடிநாதன் பாமாலை யாமிதனை யன்போடு
படித்தோருங் கேட்டோரும் பரகதியை அடைகுவரே.


 
 

Related Content