logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

ஆவடிநாதேச்சுர சுவாமி நான்மணி மாலை (குப்புசாமி ஆச்சாரி)

சிவமயம்

வில்வாரணி தீ. குப்புசாமி ஆச்சாரி அவர்கள் இயற்றிய

காப்பு

வான்புகழும் ஆவடியான் மன்னுவில்லை யெம்பரன்மேல்
நான்மணிமா லைத்தமிழா நானியம்ப - மூன்றுகணன்
நால்வாய னைங்கரத்தன் நற்கங்கை சூடினவன்
கால்துணையாக் கொள்வேன் களித்து.

                                   நூல் (வெண்பா)

மாதவர்க ளானிறைந்து வாழ்வில்வ மாநகரில்
ஏதமகல் கோயி லிடத்தமர்ந்து - தீதகற்றும்
ஆவடிநா தேச்சுரனா ரந்தா மரைபோன்ற
சேவடியைக் கொள்வேன் சிரம்.     (1)

                                       கட்டளைக் கலித்துறை

சிரபுர சம்மந்தன் தென்னவன் வெப்பஞ் சிதைத்துதவுந்
திருவாமூர் வாகீசன் தங்குடர் நோயதைத் தீர்த்துதவும்
பெரு மொரு செங்கல்லை யாருரன் பொன்னாகப் பெற்றதுவும்
வரவில்வ மாநக ராவடி நாத! நின் மாட்சிமையே.      (2)


                                                      விருத்தம்

சிமைய மோங்கு மலைச்சிலையாச் செங்கை
          வாளி திருமாலாய்
அமையப் புவியைத் தேராக்கி யடையார்
          புரத்திற் கவையெல்லாஞ்
சுமைய தாக்கொண் டணுகியதை துலங்கு
         சிரிப்பா லெரித்தீரேன்?
உமையா ளுடனே வில்வநக ருறைவா
         யுரைப்பா? உணர்ந்திடவே!    (3)

                                    நேரிசை ஆசிரியப்பா

உணர்ந்துதீஞ் சுவைமிக் குடைய வாகும்
         நிணந்தனைக் கல்லையில் நிறைய வமைத்தும்
வாய்க்குடந் தன்னில் வழியநீர் நிறைத்தும்
         ஆய்மலர்த் துணரை யருஞ்சிரஞ் செருகியும்
இதுபோ தீசர்க் கேதுதீங் கெய்ததோ
        அதுபோய்க் காண்பமென் றடைந்துநின் முடிமேல்
வாய்நீ ரூற்றியும் வண்மலர் சாத்தியும்
        ஆய்தசை யுன்றனக் கன்புட னூட்டியும்
அன்பே யுருவா யமர்ந்திடு நாட்களில்
         நின்னொரு கண்ணில் நீரொழு கிடவே
கண்டுதன் மனது கலங்கியித் தீமை
         கொண்டிது செய்த கொடுமையர் யாரோ
என்றெணி நாற்புறத் தெங்கணுந் தேடியும்
          ஒன்றொரு வருமாங் குற்றிலராக
பச்சிலை மருந்து பலகொணர்ந் தாற்றியும்
         அச்செயல் மாறிடாது ரத்தமாய்ப் பெருகிடக்
கண்டுதன் னுள்ளக் கருத்தழிந் தனராய்
         எண்டடு மாறி யிதற்கெது செய்வலென்று
உன்னியுள் ளோர்ந்தன ரொருகண் ணிடந்து
         நின்கணி லப்ப நிறுத்தினா யிரத்தம்
பெருகிடா வாறு பிரிதொறு கண்ணிலும்
        வருபெரு குருதியை வராவணம் மாற்ற
மற்றொரு தன்கணை வாளியாற் களைய
        லுற்றிடு பொழுதினி லுமதுபே ரருளால்
நில்லு கண்ணப்ப! நில்லென வோதி
        ஒல்லையில் தடுத்தே யுயர்வாழ் வினிதீந்
தெல்லையில் வளமார் வில்லையி லமர்ந்து
        நல்லருள் வாய்ந்தோய்! நாவலர் போற்றும்
ஆவடி நாத! அருளார்
        சேவடி போற்றத் தினமெனக் கருளே.   (4)

                                                       வெண்பா

அருளார்ந்த வில்வை யமர்வோயுன் தாளில்
இருளார்ந்த வென்னை யிருத்தாய் - கருளார்
கடுவிடத்தை வில்வையுளாய்! கண்டமதி லேற்றிலையோ
நடுநிலையே யாமலவோ? நன்கு,  (5)

                                         கட்டளைக் கலித்துறை

நன்றல தாகிய தீவினை யாவுந யந்து செய்வார்
ஒன்றல வாகிய பல்லருள் செய்யு முனை நினையார்
கொன்றுழன் றேதிரி துர்ச்சன ராமிக் கொடியவர்கள்
என்றுந ரகம்விட் டேறுவரோ? வில்வை எம்பரனே!   (6)

                                               விருத்தம்

எம்பரனே! வில்வநக ரெழிலார்ந்த
         ஆவடியா! யிலங்கா நின்ற
கம்பைநதி தன்னிலுமை தனச்சுவடு
          மார்பேற்றாய் காதன் மிக்கே
பம்புதமிழ்ப் பாண்டியன்கைப் பிரம்படிவெந்
          தனிலேற்று பார்த்தன் வில்லால்
சம்புவெநீ! சிரத்திலடித்தி டவேற்றாய்!
         இவையெதனால் சாற்று வாயே!    (7)

                                         நேரிசை ஆசிரியப்பா

வாயகற் கடனீர் வயிறு நிரம்ப
          ஏயுமா றுண்ட எழிற்கரு மேகம்
தொண்டைநா டதனில் தூயசவ் வாதெனும்
         விண்டொடு மலையின் மேம்பட பொழிதலின்
இழிபெரு வெள்ளமார்ந் தெஞ்சுரா தோடி
         வழிமிரு கண்டவள நதிபாய்தலின்
வயல்வளர் செந்நெல் வளமிகுந் தோங்கி
         மயலகல் பெரியோர் மன்னிவாழ் பதியாம்,
வில்வமா நகரின் விளங்குயர் கோயிலின்
          எல்லை இலாத எழிலருள் வாய்ந்த
ஆவடிநாத! நீ அழகொடு பவனி,
          சேவடி பலர்தொழ செவ்விதின் வருங்கால்,
மஞ்சே யளகமும் மதியேய் வதனமும்
          கஞ்சமேய் விழிகளுங் காந்தளேய் கைகளும்
மயிலேய் சாயலும் வல்லேய் நகிலும்
          குயிலேய் குரலுங் கொவ்வையே யதரமும்
அன்னமேய் நடையு மமுதேய் சொற்களும்
          மின்னே யிடையு மேவுமென் னருமகள்
கண்டன ளழகாங் கடல்கரை காணாள்
          விண்டொரு மொழியும் விளம்பின ளில்லை
மருவரு மனத்தில் மான்மழு சூலம்
          வருமத ளாடை மன்னிய சடைமுடி
அணிபல கொண்டநின் னழகினால் மயங்கிப்
          பணிவுடன் பார்த்த பார்வைநீங் காளாய்
மற்றுமுன் தோற்றம் மனத்தினி லிருத்திச்
          சுற்றமோ டேகித் தொன்மனை யுட்புகுந்
தணைதனிற் சாய்ந்தும் அயர்ச்சிமிக் கெய்தியும்
          துணைபிரி யன்றிலின் றுயரமிக் கடைந்தும்
ஒருவகை நில்லாள் உறுமதன் கணையால்
          பெரிதுபுண் பட்டு பிறங்குயர் மேனி
நிறமிக மாற நிரைவளை சோர
         தறமுயர் மேனி தளர்ந்தன ளாகி
நின்னினை விமைப்பி னேரமும் நீங்காள்
          தன்னிலை மாறித் தழலிழு தென்ன
உருகினை வாட்குன் ஒப்பிலாக் கொன்றை
         மருமலர் மாலை மகிழ்வோ டளித்தியேல்
உறுதுயர் நீங்கி யுயர்ச்சிமிக் கடைவாள்
        பிறிதினால் நீங்காள் பெருந்துய ரந்தோ
ஆவடிநாத! அருளுவை
        சேவடி போற்றுதல் செய்குவன் அரனே!    (8)

                                                      வெண்பா

அரனே!வில் வாரணிவாழ் ஆவடியாய்! நின்றாள்
கரனேர் குவித்துள்ளே கண்டார் - உரனேய்ந்த
காலனார் தந்தோற்றங் கண்களினாற் காண்பதவர்க்
கேலுமோ! கால மெல்லாம்.   (9)

                                        கட்டளைக் கலித்துறை

காலன் றமரென்னைக் கைத்தண்டின் மோதிக் கடுநரகிற்
கேல வழைத்திடு முன்னமே யுன்னிட மேய்ந்ததமர்
சாலவு நீள்பிரம் பாலடித் துன்கழல் தாழடியார்
பாலழைத் தேக வெனக்கருள் வில்வைப் பராபரனே.  (10)

                                                     விருத்தம்

பரனே! யிவள்பஞ் சணையைப் பனிமா
           மதியைக் கடலை
உரனே தருநல் லுணவை யுடுவைக்
         குழலை யிரவைத்
திரனே யுயிர்தா தியரைத் திருவில்
         வையுளா யிகழ்வாள்
அரனே! உனையே மறவாட் கருளா
        ததுநிற் கழகோ!   (11)


                              நேரிசை ஆசிரியப்பா

அழகுறும் பொன்மலை யணிபெறு வில்லதாய்
அழகனாகிய அரியுயர் பாணமாய்ப்
         புவியுயர் தேருமாய் பூமன் பாகனாய்
         அவியுணும் அமரர்க ளனைவரு முய்ந்திட
நாற்பெரு வேதமும் நவில்தரு வாசியா
யேற்புறக் கொண்டுசென் றதிலார் தம்புரம்
           மூன்றையு முறுவலின் முழுதும் தீய்ந்துக
           மான்றிகழ் கரத்தவ! மாய்த்தனை மாய்த்தநாள்
மேம்படு தவத்தின் மேயவர் மூவர்க்கும்
ஆம்பத மீந்ததோ ரருணினைந் தாபுரி
           ஆவடிநாத! உன்னரு மலர்ச்
           சேவடி போற்றுவஞ் சீர்பெற நினைந்தே!   (12)


                                              வெண்பா

நினைந்துன்றன் பத்திசெயு நேயவடி யார்பால்
நினைந்தெனைச் சேர்த்தாள்கை நினதே - வனைந்தமதி
தாங்குஞ் சடையில் தனியரவஞ் சூடிலையோ!
ஓங்கு வில்வை யாவடியா யோது!  (13)

                                       கட்டளைக் கலித்துறை

ஓதுறு மைந்தெழுத் தோதிச் சிரமிசை யோங்குகரந்
தீதற நன்கு குவித்துன் றளிவலஞ் செய்திருந்தால்
காதுற ஆயிரம் காலர்வந் தாலுங் கருத்தழியேன்
ஈதிலை வில்வையு ளாயென்சொல் வேனவற் கேற்புறவே.  (14)

                                              விருத்தம்

ஏற்புறுமா வாரூரில் தியாக னென்றே
        யெழிலாந்த திருநாம முகம னன்றே
மாற்கரிய வுலகுழுது வாழ வீந்தாய்
       மலையமலை யகத்தியற்குத் தமிழை யீந்தாய்
நூற்குமிக நுண்ணிடையாட் குடற்கூ றீந்தாய்
       நுவலறுநின் னிருகழல்யா னோற்க யீந்தாய்
சாற்றுகுபே ரற்குநிதி யீந்தாய் வில்லை
       சதுர்மிகுந்த வாவடியாய்! சாற்றுங் காலே.  (15)

                                     நேரிசை ஆசிரியப்பா

காலமோர்ந் தருமலர் கைகொடு பூசை
ஏலநன் கியற்றா வேழையேன் றனக்கு
         வில்வமா நகரில் விளங்குமா வடியாய்!
         நல்லவர் துதிக்கு நல்லருட் கடலே!
மலரவ னொருதலை வள்ளுகிற் கூட்டினை
மலரவன் மகன்தலை மறிதலை யாக்கினை
         மலரவர் பலர்தலை மாலையா ஆக்கியே
         மலரென வணிந்தனை மலர்மிக மலர்ந்திடு
தாருக வனமுறை தவர்விடு தலைதனைத்
தாரணி தலைமிசைத் தங்கிட வேற்றனை
        சாலவே நின்கழல் சார்ந்து
        ஏலவே பணிதலை என்றலைக் கருளே. (16 )

                                                           வெண்பா

அருளார்கா ழிப்புனித ரப்பருய ராரூர்
மருளகற்றுஞ் சுந்தரர்க்கும் மாண்போ டொருதினமும்
மாறாத பத்தியையான் மன்னுவில்வை யாவடியாய்!
ஆறா தியற்ற வருள்.  (17)

                                            கட்டளைக் கலித்துறை

அருட்பர! தந்தைபா லெண்ணிரண் டாண்டுய ராயுளளித்
திருட்புறத் தேமனுக் கஞ்சிய மார்க்கண்ட னேத்திடவே
மருட்டும வன்தனை மாய்த்த தெழில்வில்வை மாநகர்வாழ்
கருட்கள வாவடி யாயுன் னருட்பெருங் காரணமே. (18)

                                                               விருத்தம்

காரணங் கடந்து காரியங் கடந்து
          கற்பனை யாவையுங் கடந்து
பூரண வாறா தாரமும் கடந்து
          புனிதநற் பரவெளிக் கப்பால்
ஆரணந் தேடிக் காணொணாப் பரமே
           யாவடி நாதனென் றோங்கித்
தோரண மிடைந்த வில்லையி லமர்ந்தாய்!
          துகளறுத் தாள்குவை யெனையே. (19)

                                        நேரிசை ஆசிரியப்பா

என்னருந் தாய்நல் லெழின் மிகவாய்ந்த
அன்னைசுந் தரியா மாய்மொழிப் பாகா!
           நினைமற வாத நேயமார் பெரியோர்
           வனைதரு கலையம் மாதவர்க் களித்தும்
முளைநெல் லரிசியால் மூள்பசி போக்கியும்
வளம்படு கீரைமா வடுநினக் கருத்தியும்
          நீரணி புனிதரை நேயமாய்ப் போற்றியும்
         ஆறணி சடையநின் னணிகோ வணநேர்
ஈடடை வதற்கா யியல்தரா சேறியும்
கூடையிற் பூச்சிதர் கோக்கரி குறைத்தும்
          தாலிகுங் கிலியந் தனக்கெதிர் மாற்றியும்
          கோல்வளை கூந்தல் கொடுத்துள மகிழ்ந்தும்
மன்னிய குழல்வழி மாண்புக ழிசைத்தும்
நின்னையுண் பிக்கவே செந்நெலை யொதுக்கியும்
             துகிலழுக் காற்றிநற் றுறவிகட் களித்தும்
             இகல்செயுந் தந்தை தாள் இரண்டதாத் துணித்தும்
அப்பர்தம் பெயரையே யகத்தார்க் கமைத்தும்
அப்பினா லாலயத் தணிவிளக் கேற்றியும்
            இனைய முதற்பல வெண்ணிலாத் தொண்டுகள்
            அனுதினம் மாறிடா தாற்றினர் தமக்கே
எல்லையில் நல்வள வில்வையிற் கோயில் கொள்
சொல்லருங் கருணையாய்! தூய்மறை முடியினோய்!
            ஓவற வீந்தனை யொப்பிலா வின்பம்
            ஆவடி நாத! யான் அவ்விதஞ் சிறிதும்
சேவைசெய் தறியேன் சிறியவன்
ஆவலி னின்மாட் டடைந்தன னுய்வனோ!   (20)

                                                   வெண்பா

உய்யும், முறையொன் றுஞற்றகிலே னோர்ந்துபுகல்
மெய்ய ருறவதையும் மேவுகிலேன் - பொய்யில்
அருந்தமிழ்ப்பா மாலைவில்வை யாவடியா யாத்துத்
திருந்தவணிந் துய்யவருள் செய்.   (21)

                                           கட்டளைக் கலித்துறை

செய்ய பெருங்கரு ணைக்கட லென்றுனைத் தேவர்களும்
பொய்யில் சதுர்மறை யும்புக லும்மொழி பொய்ப்படுமே
வெய்யன் சழக்க னறமிலி மாபெரு வீணனென
அய்ய வெனை வில்லையாவடி நாத! அகற்றிடிலே.  (22)

                                                      விருத்தம்

அகற்றிய தீவினை யாளர்களே நெருங்
           கற்புத நின்னவையில்
புகற்குரி யானல னென்று சிரித்தெனைப்
            போவென நீக்கிவிடுவார்
பகற்கன வாயிடு மென்னெணம் வில்வைப்
           பராபர! பார்த்தருளி
நகற்குறியேனை பிழைபொறுத் தாங்கணோர்
           நல்லிடஞ் சேர்க்குதியால்.   (23)


                                          நேரிசை ஆசிரியப்பா

சேர்ந்துநல் லோர்களைச் சீர்பேறு பெரியோர்
ஆர்ந்தற நூல்கள் அறைபல வற்றுளே
           மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
            நிலமிசை வாழ்குவர் நீடூழி யென்றும்
துறந்தவர் தூய்மை சொலவரி தென்றும்
அறத்தினா லின்ப மளவிலை யென்றும்
           அகத்துறுப் பாவ தன்பே யென்றும்
           முகநக நட்பது முறையல வென்றும்
செய்நன்றி மறப்பது சீரல வென்றும்
மெய்யொடு மடக்க மேன்மைய தென்றும்
          ஒழுக்கமே யுடையா ருயர்ந்தோ ரென்றும்
          வழுக்கே பிறனில் மனக்கொள லென்றும்
பொறை யெனு நற்குணம் போற்றனன் றென்றும்
அறமாவ தழுக்கா றகற்றலே யென்றும்
         நடுவின்றிப் பொருட்செயின் குடிபொன்றும் என்றும்
         கடுவென பிறன்பழி கருதற்க வென்றும்
தீவினையே பெருந் தீயதா மென்றும்
ஈவது நன்றுபோ யிரப்பிழி வென்றும்
          அருளெனுந் தூய்குண மழனெ வுரைத்தும்
          இரவலர்க் கீதலே யின்பமா மென்றும்
இன்னன வள்ளுவ ரியம்பிய கேட்டுத்
தன்னமு மென்னிடஞ் சொன்னவை இன்மையில்
          பன்னரு நின்னருட் பார்வைஎன் மேற்கொடு
          தன்னிய னாக்கவுந் தருமுனக் கல்லவோ!
மன்னிய நின்னருள் மாட்சியுற் றோங்குமால்
பொன்னகர் போன்றுள இந்நகர் வில்வையாம்
         நன்னகர் கோயில்கொள் நாயக!
        ஆவடி நாதவென் னாய் மொழி யீதே!   (24)

                                                வெண்பா

இதுமுறையோ? வன்றோ? வியைந்தனவென் றோர்ந்தோர்ந்
ததிதநெறி காணா தலைவேற் - கிதமோ
டகன் றபொரு ளோதிவில்வை யாவடியா யன்போ
டுகந்தகுரு வாவருவை யோர்ந்து.  (25)

                                 கட்டளைக் கலித்துறை

ஓர்ந்துரை வில்வையி னாவடி நாத! வுமையவளுடன்
ஆர்ந்துயர் கண்ணுக்கு நெற்றிக்கு நூலி நமரிடைக்குஞ்
சேர்ந்தழ கானவு வமையி வோங்கிச் சிறந்ததென்றோ?
கூர்ந்தநன் மானு மதியு முடுக்கையுங் கொண்டதுவே.  (26)


                                                            விருத்தம்

கொண்டாடு தேவர்க்கு மரிதாய ரசிதத்து
            கோடொன்     றுபொன்
விண்டாவு வேதண்ட மொன்றோட றம்யாவு
            மேவிச் செயுந்
தண்டாத மலைவல்லி நும்பாலி ருக்கத்த
           லையோட் டினில்
கண்டார்ந கைக்கப்பு றத்தேனி ரந்தீர்நற்
           கண்மூன் றுளீர்.   (27)

                                            நேரிசை ஆசிரியப்பா

மூன்றுகண் னெனவொளிர் முச்சுட ரிருந்துங்
கான்றொளிர் நகைப்பினால் கரித்தனை புரத்தை
               இந்திரன் செய்பழி யெளிமையிற் போக்கினை
               சந்தமார் வெண்கரி சாபமும் நீக்கினை
வெள்ளி யம்பலந்தனில் வியன்கூத் தாடினை
அள்ளியுண் பசிக்கா வரியகுண் டோதரற்
               கன்னக் குழியுட னாற்றுநீ ரீந்தனை
               மன்னிய மாதுலன் வடிவில் வந்தனை
மாக்கட லழைத்தனை மாணிக்கம் விற்றனை
கோக்கரி வேல்கொடு கொன்றனை தீயதாம்
               மாயப் பசுவை மடித்தனை பொன்னிக்
               கேய வுருக்கெலா மேய்ந்தபொன் னாக்கினை
கால்மாறி யாடினை கைவளை விற்றனை
ஏலவே விறகை யெடுத்தனை தலைமிசை
               சுந்தர பாண்டிய தூயநல் லரசாய்ச்
               செந்தமிழ் நாட்டைச் சீர்பெற வாண்டனை
நாரைக்கு முக்தி நல்கினை கீரனை
நீர்நிலைக் கரையில் நிலைபெற வேற்றினை
             இன்னனப் பலவியப் பியற்றிய முதல்வ!
             என்னரு வினைமாய்த் தெழிலுறச் செய்தல்
நினக்கொரு பெரிதோ! நின்மல தேவே!
வனப்புடை வில்வமாநகர் வதியும்
          ஆவடி நாத! வெற் கருளே
           சேவடி தொழுதனன் சீர்பெற வுகந்தே.   (28)

                                                      வெண்பா

உகந்தனையே கல்லாலு மொப்பருவில் லாலும்
இகழ்ந்துபிரம் பாலுமுனை யெற்றப் - புகழ்மேய
ஆவடியாய்! வில்வை யருட்பரனே! யென்னென்பேம்
காவெனையு நீங்கேனின் கண்,  (29)

                                      கட்டளைக் கலித்துறை

கண்ணில் நகத்தி லெயிற்றிற் சிலம்பணி காலதனில்
எண்ணி விழித்துத் திருகிச் சிரித்துதைத் தெண்ணரிய
அண்ணலே! மதனை விதியைப் புரத்தினை யந்தகனைப்
புண்ணுறச் செய்வில்வை யாய்! மலை வில்லேன் புகலுவையே!   (30)

                                                விருத்தம்

புகலும் புகலிக் கிறையொ டடியர்
             பொலியும் படகு நடவின
இகலிற் கடலிற் றமிழ்ச்சொ லரசர்
             கெறிகற் கலனிற் கடவின
தகுநற் பரவை கணவற் களவிற்
            றகுநென் மலைக ளுதவின
மிகுவில் வையினிற் பசுவி னடிய!
           மிளிருன் னருளின் வகை களே.    (31)

                                         நேரிசை ஆசிரியப்பா

வகையிலர் மிடியுளர் வாயிலர் தமக்கும்
தகுதியில் கால்கரந் தானிலர் தமக்கும்
           கண்ணிலா ரறிவிலர் களைகணில் லவர்க்கும்
           கண்ணிய நூலறி கல்வியில் லவர்க்கும்
நண்ணிநல் லுதவிசெய் நவையறு மனமும்
புண்ணிய நூல்பயில் புகரறு புலமையும்
          பிறர்க்கவை யோதிடப் பெருமித வறிவும்
         அறத்தின தாறுசெல் லன்பர்மே லன்பும்
தமிழ்பயி லான்றவர் தம்மிடை நேசமும்
உமிழ்கல னாசைநீத் துயர்தமி ழாசையும்
          குலமெலாம் அருள்வழிக் குலவும் ஒருமையும்
          இலகுபல் கடவுளர் ஏகமென் கொள்கையும்
நாட்டிற் குழைக்கவும் நல்லவர் சேர்க்கையும்
பாட்டினில் நின்னையே பாடிடுந் தன்மையும்
           ஆவடி நாத! வெற் கருளித்
           தாவறு வாழ்க்கை தரத் தகும் நினக்கே.  (32)

                                                          வெண்பா

நின்ற னருகுறையு நேயசண்டி கேசருக்கே
என்றன் குறையை யியம்பிடுவாய் - தன்றந்தை
கால்புடைத்தா ரென்றன் கடுவினையுந் தான்புடைப்பார்
ஏல்புடைய வில்வையுளாய்! இன்று. (33)

                                 கட்டளைக் கலித்துறை

இன்றென வென்று மிகுந்திடு வோமென வெண்ணினனாக்
குன்றி யளவின தாயினு நற்செயல் கூடிலனே
நின்றிரப் போர்களைச் சீறுவென் வில்வை நிருமலனே
ஒன்று மறிந்தில னெற்கொரு நல்வழி யோதுவையே (34)

                                                            விருத்தம்

ஓது முறையொடு மூவரருளுத
             லுற்ற திருமறை யோதிலேன்
வாது புரிபவ ரோடு மருவியெ
              வாதை மிகவுறு பேதையேன்
மாதர் வழிகளிலேகி யகல்கிலன்
              மாய வலையறு மோசொலாய்!
வேத முடியதின் மீதி லுறைபவ!
              வில்வ நகரமர் தூயனே!  (35)

                                           நேரிசை ஆசிரியப்பா

தூயவ! வில்வை துகளறு நகரின்
நாயக! வாவடி நாதகேள் சோலைச்
         சீதவண் காழிச் சேய்தனக் கருள
         மாதுட னணுகி வளம்பெறு பாலீந்
தோதறு ஞான மூட்டிய கருணையும்
நாதனே! யாமூர் நாவர சர்க்கே
        சூலைநோ யீந்து சொல்லொணாத் துன்பம்
        ஆலைவாய்க் கரும்பி னடையுமா றருளி
உடனதைப் போக்கி யொப்பிலா னந்தம்
தடையறப் புரிந்த தக்கநற் கருணையும்,
        இருங்கடி மன்ற லியற்றிடு காலை
        பெருங்குடி மக்கள் பேணிவாழ் பதியாம்
மணம்வரு புத்தூர் மணவரைக் கேகி
மணமக னாக மன்னுசுந் தரனைப்
          பொய்த்துணுக் கொன்று பொருந்தக் காட்டி
          மெய்யுறு தொண்டனாய் மேவுறப் பேசி
வன்றொண்டன் றன்னை வலிய வழைத்து
நின்தொண்ட னாக்கு நிகரறு கருணையும்,
            கல்லால் நிகரும் கவின்குருந் தடியில்
            வல்லா னாக்கி வழிபடச் செய்து
திருவா சகமுந் திருக்கோவை யாரும்
ஒருவா தியற்று மொருவாத வூரருக்
          குயர் பதமளித்த ஒப்பிலாக் கருணையும்,
          மயர்வறு மனத்தேன் மதித்தவை யோதற்
கறிவின் மிகுந்த வாற்ற லில்லேன்
சிறியருட் சிறியன் றீமையிற் பெரியன்
          இருள் வினைபோக்க யினியதீம் பாலும்
          மருள்மிகு சூலை மாபெரு நோயும்
மணவினை மாற்றமும் மரநிழ லதனில்
அணைதலும் வேண்டுமோ! வருட்கணி னோக்கஞ்
          சிறிது போதாதோ! செம்மலே!
          இது செயல் நினக்கோ வெளிதினு மெளிதே.  (36)

                                                       வெண்பா

எளியனெனை யின்னொருதா யின்மகவா கொள்ளாத்
தளிமிகுந்தின் னோர்கன்னி யான்ற - களியாற்
கணவனெனக் கொள்ளாது கற்றார்வாழ் வில்வைப்
பணவரவின் கங்கண! கண் பார்.  (37)

                                           கட்டளைக் கலித்துறை

பார்புகழ் தில்லை நடங்கண்ட தில்லை பரிவுடனே
நார்மிக மேவுமண் ணாமலை யென்னுள்நண் ணாமலையே
ஏர்திக ழொற்றி எளியனுக் கொற்றி யிருந்ததனால்,
கார்தவழ் வில்வைய! என்வினை வெல்வைநற் காரணனே! (38)

                                                            விருத்தம்

காரண னாவாநீ பாரண மாவாநீ
             கனவரை தவராநீ மனதுறை பொருளாநீ
வாரண வுரியாநீ நாரணர் புகழ்வாநீ
           வரநதி சடையாநீ கரமதி லுழையாநீ
பூரண வொளியாநீ சீரணி மழுவாநீ
          புகலியற் கருள்வாநீ தகவினர் கெளியாநீ
ஆரண மொழிவாநீ மாரணம் புரிவாநீ
        ஆபுரி யுறைவாநீ கோவடி உடையானே.   (39)

                                              நேரிசை ஆசிரியப்பா

உடையவ! வில்வையி லோங்கிய கோயில்
புடைபரந் தோங்கு பொன்மய மாய
         எண்ணிரு கால்களா லிலங்குறு மண்டபத்
         தொண்ணுதல் சுந்தரி யொருபுற மிலங்க
அரியுரு வாசனத் தழகுற வமர்ந்து
உரியநற் கங்கையு மொண்மதி யரவும்
         கொன்றையு மெருக்குங் கூவிளமாதி
         நன்கமைந் தோங்கு நளிர்சடை முடியும்
முக்கணுங் கருநிறம் மொய்த்துறு கண்டமும்
தக்கநான் முகர்பலர் தலையின் மாலையும்
         மான்மழு டமருகம் மருவிய கைகளும்
         தேன்பொதி பூந்தொடை திகழ்தரு மார்பும்
புலியத னாடை பொருந்திய யிடையும்
பொலிவொடும் அன்பர் புந்தியி லொளிர்வணம்
         கசமுக னறுமுகன் கவினுற வமரவும்
         திசைமுக நாதியர் திசைதிசை யேத்தவும்
பல்லிய முழங்கவும் பத்தர்கள் நெருங்கவும்
எல்லையில் தமிழ்மறை யெண்ணில ரோதவும்
          ஆவடி நாத!நீ யமர் திருக் கோலம்
           தாவறக் கண்டுயான றாழ்ந்தன னிருபதம்
ஓவற மகிழ்ச்சிமிக் குவந்தன னாதலின்
தீவினை யொழிந்தவத் தீமைகள்
           மேவுறா தென்மன மேவுமா தவரையே.  (40)


                                                    முற்றிற்று

Related Content

ஆவடிநாதேசுவரர் தோத்திரப் பாமாலை (குப்புசாமி ஆச்சாரியார்)