logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி

சிவமயம்
திருச்சிற்றம்பலம்

சி. சு. கண்ணாயிரம் அவர்கள் இயற்றிய

காப்பு

ஐந்து பதத்தின் சமட்டியே கண்ணா ரருளுருவாய்
ஐந்து பிணிப்பின் வலிதெறு செங்கர மைந்துளனாய்
ஐந்து களிற்றின் குறும்படர் பட்டிமா அந்துணையாம்
ஐந்து முகவிறை காலவ வீச னருந்தமிழ்க்கே.

                                                 நூல்

பூவும் புனலு மறுகும் தளிரும் பொலிகரனாய்
மேவு முறையிற் றினமு முனதாள் விரைமலரில்
தூவுந் தவத்தின் பயனெனக் காசிபத் தூயவற்கே
ஏயும் புதல்வனென் காலவ னீந்தாய் எழிற்சுடரே!    (1)

எழிலார் புதல்வனைத் தந்தை திருப்பெய ரிட்டுவப்பர்
பொழிலார் பதியில் பொருந்துந் திருவுடைப் புண்ணியனே
அழியாத் தவத்தினன் நீதரப் பெற்ற அருந்தவன் பேர்
விழியார் நுதலுன் பெயரென நிற்றலென் விள்ளுதியே!    (2)

விண்டோய் மதிப்பிறை தங்குஞ் சடைமுடி வேதியனே;
கண்டோய் எரிநடுக் காமனை வைத்த கருணையனே;
எண்டோள் நுதற்கண் இறையவன் நாமென் றியம்புநரை
அண்டே லெனமுன் அறைந்தனை காலவ அந்தணற்கே   (3)

அங்கம் அழிதலை மான்புலி மாவுரி அன்னவற்றால்
பங்க மடைந்த மறையவ னென்னும் பழியொழிய
கங்கை தரித்தனை காலவ ஈசக் கறைமிடற்றாய்
நங்கை யுறையுன் உடலிடம் மண்ணுமோ நன்னதியே!  (4)

நதியு மதியு மரவு நிலவு நளிர்சடையாய்
புதிய மலருந் தளிருங் கொடுபணி புங்கவற்கே
கதியை அளித்தவன் நாமம் புனைந்தனை காலவனே!
விதியை அழிக்கும் விறலடி சூட்டுக வேதியனே!    (5)

வேதிய! வேள்வியும் வேள்வியுள் நின்றவி வேட்பவனும்
மாதியை பாகனு மாகிய காலவ மாபரனே!
தாதியை கொன்றை நினதுரு வண்ணம் தழைத்தொளிர
ஓதிய மெய்தரு யோகத் தவமென் உரைத்தருளே.  (6)

உள்ளங் கருவறை ஊனுடல் கோயில் உயிரதுதான்
வெள்ளம் விரிசடை! யுன்றன் சிவக்குறி மேதினியில்
கள்ள மறுசெயல் பூசனைக் காலவன் காயமதைத்
தள்ளுந் தொழிலுன் தளிபாழ் செயலதென் சாற்றுதியே  (7)

சாற்றிய முந்நூ லுவந்தே அரசு தருநிழலில்
வீற்றுள னாகிவெம் பன்றி விடக்கினை வேட்கையுடன்
ஏற்றவ னாகிய புத்தன் பொழிலவை ஏழனையும்
தோற்றி இருத்தித் துடைக்குமெம் காலவத் தூமணியே  (8)

தூசெனத் திக்கணி நக்கன் தரணியிற் சூழொளிகால்
காசெனக் கொல்லாமை நன்கு வெளிப்படக் காட்டுதவன்
மாசெனக் காயம் மதித்த காலவனென் மாநிதியே;
ஆசெனப் பாசம் அறுத்து நமையாள் அருண்மலையே!   (9)

அஞ்சு முடியானல் லாறு முடித்தவன் அஞ்சுரமேழ்
கொஞ்சு மொழிதவன் எட்டெனு மூர்த்தம் குலவுனனாய்
விஞ்சு நவந்தரு பேத நிலையினன் மேற்கதியைத்
தஞ்ச மடைபத்தன் காலவற் கீந்த தனிமுதலே!   (10)

தஞ்ச மடைந்த அருங்குணக் காலவத் தண்டவர்க்கும்
வஞ்சங் கொடுயிரை வாங்குவெம் காலனென் வன்கணற்கும்
செஞ்சொற் புலவர் துதிகட்கும் தந்தநின் சீர்மருவும்
கஞ்சம் உளமரை ஏற்றருள் காலவக் கண்ணுதலே!  (11)

கங்கையுங் காஞ்சியுங் காலவ தீர்த்தமுங் காசறவே
தங்கியும் வீழ்ந்துந் தவமுயல் செஞ்சடைச் சங்கரனே;
பொங்கிய ஆவியின் மாசுண மாசுணப் பூணொளிரும்
செங்கையி லங்கிய! எற்கருள் நிற்புகழ் செந்தமிழே!  (12)

செந்தமிழ் முன்னம் அகத்தியற் கீந்த செழுநிதியே;
அந்தமில் நற்றவக் காலவன் நெஞ்சுள் அவிர்சுடரே;
பந்தமும் வீடும் உயிர்களுக் காய பரம்பொருளே;
பிந்தியு முந்தியு மின்றுள்ளாய் வாழிய! பிஞ்ஞகனே!  (13)

பிறவா நெறிநில் புளியுந் தொடரும் பிறப்பொழியிற்
பிறவா நெறிகள் மருவலில் காலவப் பீடினனும்
பிறவா நெறியைப் பெறுதல் வியப்போ பெருவிடையாய்
பிறவா நெறிகள் அணையா தருள்பி றவிதொறுமே.  (14)

பிறவா நெறியில் இறந்த கொடுவினைப் பேதையரும்
பிறவா நெறிபெறில் ஈண்டுப் பிறந்துயர் பேறுடையார்
அறவா! இறந்தபின் அஃதுறல் வேண்டும்; அருந்தலத்துள்
இறவாப் பனையதை என்றுறும் காலவ ஈச்சுரனே!    (15)

ஈருரி போர்வை; எழின்மலர் மத்தம்; இடையறுவை
சீருரி வன்புலி; என்பணி; நஞ்சம் திருவமுது;
வேரிய ஆதனன் ஓடுண் கலமிடம் வெஞ்சுடலை;
காரிய மேனியள் காதல் எதுகொடு காலவனே?   (16)

காலவன் நற்றளி சூழ்க: கமலமென் கைம்மலரச்
சீலவன் முன்னம் குவிக: விழிப்புனல் தெய்வநதி
காலவன் மஞ்சன மாகுக; நன்னாக் கவிமலரம்
மேலவற் போற்றுக; இன்னும் உயர்கதி மேவுதற்கே!  (17)

மேருச் சிலையவ; மெய்தவக் காலவ மேலவற்கே
சீருள் சிவமலி மூர்த்தம் அனைத்தின் சிறப்புடனே
கூறும் மகிழ்வுடன் போற்ற வருபயன் கூறிடினும்
நாருள் உளத்துள் குறியே நயந்ததென் நாயகனே!   (18)

நாக மகளவள் அஞ்சி நடுங்கமுன் நண்ணியவெந்
நாக முரித்துடல் போர்த்தநற் காலவ; நன்மணியே
நாக முலகுடன் காக்கும் அருள்நிதி; நற்றவக்கார்
நாக நிறனுனைத் தாங்குநாள் ஏறெவண் நண்ணியதே   (19)

நஞ்ச மமுதென உண்டவ! காலவ! நன்னிதியே!
அஞ்சுள பூத முதலிய எல்லா மடைவுறவே
செஞ்செவே மாயையுள் சேரத் திருநடம் செய்தருணாள்
செஞ்சுடர் நின்கரம் சேர்வழி யாதெனச் செப்புகவே!    (20)

செப்புச் சிலைநிகர் சத்தி நினதுருச் செம்பகுதி
ஒப்பில் எதிர்வரு செய்தி அடியனுக் கோங்கிருளாய்த்
தப்பில் தவமுயல் காலவற் கோங்கு தவனனென
அப்பின் சடைமுடிக் காலவ! நிற்றல் அமைவுடைத்தோ?  (21)

அமைவெலுந் தோளி உலகெலா மோம்பும் அசலமகள்
உமையவள் நின்றன் குணங்குணி நீயென ஓத்துரைக்கும்;
இமையவன் காதல் சுதையெ நீங்க எழிற்கயிலை
அமையொரு தண்ணிய தீயெனக் காலவ! ஆர்ந்தனையோ?   (22)

ஆத்தி இதழி வழிவழி பொன்னிறம் ஆர்ந்திடவே
காத்துத் தவம்செய் கவின்சடைக் காலவக் கண்ணுதலே;
தூத்தண் சுரநதி பன்னாள் சடையிடைத் தோய்ந்துறைந்தும்
கூத்த! சடைநிறம் கொள்கிலள் காரணம் கூறுதியே!    (23)

கூடும் தவமுனி மற்றொரு கூடு குறுகிலனாய்
வீடு பெறவருள் வித்தக! நான்மறை வேதியனே!
நாடும் நினக்கொரு பேரூர் இலையென நாட்டியபின்
ஆடுநற் காலவ னூரெனச் சாற்ற லமைவுடைத்தோ?   (24)

அந்தகன் மார்பில் அயிற்படை பாய்ச்சி அவன்துதிகொள்
கொந்தகக் கொன்றைய! காலவ னெஞ்சிற் குளிர்மதியே!
நொந்துடல் விட்ட சுமதியும் உய்வகை நோக்கினையே;
வந்துறு தோற்றம் அனைத்திலும் போற்ற வழங்கருளே;   (25)

வல்லிய வச்சிரன் கற்பக மாலை வளரகலம்
புல்லிய என்பும் உவந்தருள் காலவப் புண்ணியனே!
நல்லியல் நம்பி நளிர்தமிழ் மாலை நயந்தபினும்
அல்லியை நெஞ்சில் அரும்புமென் சொல்லும் அணிந்தருளே. ( 26)

அரசம் பருச்சுனன் கொள்ள அடிகொளும் ஆண்டகையே;
அரசம் பலமதில் ஒத்திவர் நிற்காண் அமைச்சருரை
அரசம் பலமதில் ஆட்டயர் காலவ அங்கணனே
அரசம் பலமிதில் ஆடும் அருண்மலை ஆகுவையே. (27)

ஆனிரை ஆயன் அடல்விடை யான அருந்தவத்தால்
ஆனிரை ஆயன்நம் காலவன் மேனி அருத்தமுற்றான்;
ஆனிரை அஞ்சளி மேன்மையில் மேய்த்தார் அடிச்செருப்பும்
ஆனிழல் அண்ணல் உலகுற;   மாற்பே றதிசயமோ?  (28)

அட்ட வடிவினன் ஏழிசை ஆயினன் ஆறணிந்தான்
சிட்டன் திருமுடி ஐந்துளன் நான்மறை சொல்சதுரன்
நட்டன் விழிமூன் றிருபா லுடலினை நச்சொருவன்;
கட்டும் அரவரைக் கச்சையன் காலவக் கண்ணுதலே. (29)


கங்கைக் கடவா முறையினில் விண்ணிழி காரிகையென்
கங்கை சடைமிசை வைத்தவன், கார்நிறக் கந்தரத்தன்;
கங்கை கடலென உண்டவன் சென்னிக் கழற்றுணையன்;
கங்கை மருத்தின் கரந்தரு காலவக் கண்ணுதலே.  (30)

காவுடை ஆனூர்தி; விண்ணுள் இமையவர் கற்பகநற்
காவுடை ஆட்சி சதமகற் கீயக் கவிகரத்தன்;
காவுடை கம்முன் பணியக் கழல் தரு கண்ணுதலோன்;
காவுடை தாங்குவர் போற்றிப் பணிசெயுங் காலவனே!   (31)

காலம் கடந்தவன்; காலம் கடவுநன்; கைத்துடியன்;
காலம் இறப்பு நிகழ்வெதி ரென்னக் கவைத்திலங்கக்
காலம் அவையென நிற்போன் பொதிகைக் கவின்வரையின்
காலம் திருப்பேரூர் வந்தணை கோயிலுட் காலவனே. (32)

காவி னறுமலர் தொண்டர் சொரிதரக் கல்லளித்த
காவி நறுமலர்க் கண்ணிகைப் பற்றிய காவணத்தே
காவி அறுவை தரித்தோ; தவிர்த்தோ கலந்தனைசொல்
காவி லருந்துற வென்பவை காத்தருள் காலவனே!   (33)

காட்டுக் கரியுரி போர்த்த கனன்மழுக் கையினனும்
காட்டுக் குரியரி போர்ப்படை ஈயக் கவிகரனும்
காட்டுக் கரியுரி போதாத் தவமுனி காலவற்குக்
காட்டுக் கரியுரி போதும் உடலழி கண்ணுதலே!   (34)

கரிசினர் என்பைச் சுரநதி பெய்யிற் கதியுறுவர்;
எரிசினத் துன்புறார் என்பர்; நகுதலை எப்பொழுதும்
குரிசினின் செஞ்சடைக் கங்கை படிதலிற் கோதொழியும்
பரிசினை யுற்றதோ காலவ! பல்லிறு பாம்பதுவோ?  (35)

பாம்பணை மன்றின் பரதமுள் காணியைப் பாம்புழுவை
ஓம்பின கண்டும் உவகை திளைத்தநல் ஓங்கலினாள்
தேம்பணை சூழும் அரசமன் றாடலின் சீருரிமை
காம்பணை தோளி பெறுவதற் கூடலென் காலவனே?   (36)

காயம் பொலிவுற நோற்றான் மலரிடக் காயமற்றான்;
காயம் பொலிவுறு நீற்றான் மலரிடக் காயமற்றான்
காயம் இழந்தவன் இட்டவை அஞ்சு கடிமலரே;
நேயம் மலிதவன் இட்டது காலவ! நெஞ்சமதே. (37)

நெற்றி விழியது தந்தது மால்மகன் நீறதுவே
நெற்றி விழியது தந்தது செவ்வேள் நெடுந்தகையே
பற்றி அடர்த்தது முன்னம் பருங்கைப் பருப்பதமே
பற்றி அடர்ந்தது முப்புரம் காலவ! பாழுறவே!  (38)

பாயும் குடையும் இருக்கையு மாகப் பயிலரவன்
பாயும் குடையும் இரும்படை போழும் பயில்விடையாம்
பாயும் குடையும் இரும்புனல் அம்புலி பம்புசடைப்
பாயும் இதழியில் தேனுணக் காலவப் பார்த்திவர்க்கே. (39)

பார்த்திவன்; நம்மாள் பசுபதி; கூற்றம் பதைத்தணைநாள்
பார்த்திவன் நம்மாள் பசுபதி நின்னாள் பரிசிலது;
பார்த்தகல்; மீண்டெழாய்; கூற்றென ஓட்டும் பரிசுடையான்
கார்க்குலம் நாணும் மிடற்றினன் பேரூரெங் காலவனே. ( 40)

கார்வரை மேவ உரித்தவன்; கங்கை கவின்சடையன்;
கார்வரை மேவ உரியவன் நல்கிய கட்பொறியன்;
கார்வரை ஏறி மயிலினம் ஆடும் கழனியெல்லாம்
கார்வரை நின்று பொழிபதி காக்குமெங் காலவனே.  (41)

காதலை மேவுங் குழையினன் வெற்பின் கனங்குழைதன்
காதலை மேவும் குழையுடற் காலவன் காதலிடம்
ஓதலை ஓம்புநர் உள்ளம் உவப்புற ஒண்நிதியம்
ஈதலை ஓம்புநர் இன்னிறை பேரூர் எழிற்பதியே. ( 42)

எற்றுந் திரைப்புனற் காஞ்சியை ஆட எனக்களித்தான் ;
முற்றும் இருவினை நீங்கவெண் நீறு முழுகவைத்தான்;
பற்றும் துணையெனப் பாத மிரண்டும்; பணிந்திசைக்கக்
கொற்றத் தமிழ்நா அளித்தனன் காலவக் கோமகனே.  (43)

கோபதி ஆயன்; மனைவிகோல்; கோக்குலம் கோக்குலமே;
கோபதி காப்பிடம் முல்லை; இருவினை கோநுகர்தல்;
கோபதி ஆக்களை இல்தரல் மீட்டலைக் கூர்ந்துணரில்;
கோபதி காலவன் ஆக்கல் ஒடுக்கல் குறிப்பிடுமே.  (44)

குளிர்புனல் வெண்மதிச் செஞ்சடை தாங்குங் குருமணியே!
குளிர்புனற் காஞ்சித் திருமுழுக் காட்டிக் குடந்தமிட்ட
மிளிர்தவன் காலவற் போற்ற வடிவிலா வித்தகமென்;
களிதர எய்திய காயமில் பேறதன் காரணமோ!  (45)

காயமில் பேறு கலந்த அரசுடன் காழியரும்
துயநின் கோயிலுள் தொண்டர் தொழும்வகை தூயசிலை
ஆயநற் காரணம் காலவற் காகும் அமைவிலதோ?
வேயமர் தோளி இடமமர் காலவ விள்ளுதியே!   (46)

விட்ட இலக்கணை ஆவதும் விட்டும் விடலிலதொர்
சட்ட இலக்கணை ஆவதும் விட்டிடாச் சார்புளதாம்
சிட்ட இலக்கணை ஆவதும் காலவன் சீருயிருள்
கெட்ட புறப்புறர் ஆதியர் பாலுறு கேண்மைகளே.  (47)

கேட்டார் பிணிக்கும் தகையன; கண்முன் கிளரொளிய;
ஊட்டார் அமுதமாய் நாவில் நிலைப்பன ஒன்றிணைந்த
கூட்டார் நறுமண நல்குவ; தென்றல் குளிருறுவ;
தீட்டார் மதிற்பதிக் காலவன் சீர்மைகளே.  (48)

சீர்மலி கல்வி திருமனை ஆரத் திகழ்சிலரும்;
கார்மலி நெஞ்சம் வறுமை பிணியில் கவல்பலரும்
நார்மலி நெஞ்சில் நறுமலர் ஏந்தி நறுந்தமிழின்
பார்மலர் காலவன் தாழுநர்: தாழாப் படிறருமே. (49)

பட்டி; படிறணை கண்டன்; குறைமதி; பாம்பினுடன்
எட்டி எருக்குள காட்டில் இறந்தவர் என்பணியன்;
ஒட்டி உலர்ந்த வயிறுடைப் பேய்கள் உறவுடையன்;
மட்டில் சலந்தலை மத்தனெங் காலவ மாபதியே, (50)

மாவதி நெஞ்சகம் மாபதி யாக மகிழ்ந்துறைவன்
மாவதி வஞ்சம் வகிர்ந்தவற் றந்த மழவிடையன்
மாவதி கொன்றையின் மாவணம் இன்னமும் மாவுயர
மாவதி மார்பளி காலவன் மாவருள் மாறிலதே  (51)

மாமலை தூக்கி விழிமழை பெய்தவன் மாய்த்தொழித்து
மாமலை தூக்கி இழிமழை காத்தவன் மாதவனா
மாமலை தூக்கிய காலவன் வேண்டி மணம்புணர்ந்தாள்
மாமலை நோக்கி கொடியிடை கொண்ட மலர்த்திருவே.   (52)

மலரினில் நாற்றம் மகதியில் நாதம் மணியதனில்
நிலவும் ஒளியும் கனியில் மதுரமும் நிற்றலெனச்
சொலவல ஒன்றிரண் டன்றென ஓதுந் தொடக்கதனில்
கலவுவன் முத்தியி லாருயிர் காலவக் கண்ணுதலே.   (53)

கஞ்சம் கரசரண் கண்கள் முகமென் கரிவரதன்
பஞ்சப் பரதமுள் பாதமெய் எண்மைப் பரிசதனை
நெஞ்சம் குலவிலன்; மற்றது காலவன் நீடவன்றான்
செஞ்சொற் கவிமலர் தூவி வழுத்தும் செழுநிதியே.  ( 54)

செம்பொற் சிலையது கைச்சிலை; தோழன் செழுநிதியின்
அம்பொன் இரண்டமை செங்கரன்; முற்றத்தில் ஐந்தருக்கள்,
உம்பர் சுரபி, மணியெனிற் காலவ! உன்னடிக்கே
நம்பி! அளிப்பதற் கென்னுளேன், ஏழை, நவிலுவையே.  (55)

நவ்வியைப் பாகம் அமைத்தவ! நட்டம் நவிலுமுன்றன்
செவ்விய பொன்னடி நெஞ்சினைச் சாத்தும் திறமதெண்ணில்
திவ்விய! நீதரு மாயையின் காரியம்: தீக்குணங்கள்;
ஒளவியம் கொள்கலம்: காலவ! ஆசெலாம் ஆர்ந்ததுவே. ( 56)

ஆர்க்கும் அலைமலி காஞ்சிப் புனற்குடம் அன்புடனே
போர்க்கும் கரியுரிக் காலவற் காட்டப் பொறுப்பதிலை
ஈர்க்கும் நறுமண நாண்மலர் தேடி இளைப்பதிலை
பார்க்குள் பிறந்தொழி பங்கம் விடலெவண்? பாவிநெஞ்சே!  (57)

பாறு விரும்பிய ஓட்டில் வளையுடன் பாவையர்பெய்
சோறு விரும்பிய காலவன் சுந்தரத் தொல்பதியுள்
நீறு விரும்பிய மேட்டில் புரள்கிலை நெக்கிலையுள்;
ஆறு விரும்பிய குற்றமுள் நெஞ்சே! அழிகுவையே.  (58)

அங்கணன் காலவன் தொண்டர்க் குதவா அருநிதியம்
பங்கமுள் நெஞ்சப் பரத்தையர்; கள்வர்; பழிவழக்கர்;
வெங்கனல்; சூது; பிணி, மது; ஆதி விதவிதமாம்
துங்கமில் பாழ்மடு வீழ்ந்து மறைந்து தொலைந்திடுமே.  (59)

தொலைவில் திருநனி என்றும் நிலையுறல் சூழ்குவையேல்
மலைவில் திருக்கரன்; காலவ மாபரன் மாணுருவம்
அலைவில் மனக்கிழி தீட்டிய காலவன் அன்பரவர்
விலையில் பதத்துகள் சென்னிகொள்; நெஞ்சே! விரகிதுவே.  (60)

விண்ணவர் போற்றிசெய் காலவன் சந்நிதி மேவுநரின்
திண்ணிய கன்மனம் மென்கனி யாதலின், செங்கரத்தை
நண்ணிய வெற்பு சிலையாய்க் குழைவுறல் ஞாலமதில்
எண்ணிய போதில் அதிசய மாதல் இயல்புடைத்தோ?  (61)

இன்னியம் ஆர்க்கும் எழிற்றளிக் காலவ எம்மிறையே
பொன்னியை நின்வணம் கைச்சிலை மேவப் பொருந்தியதோ
துன்னிய பொன்வணம் மற்றது கொள்ளலில் தூக்கினையோ
மன்னிய பேரருள் பங்கினன் விள்ளுக மாற்றமதே!   (62)

மாசுணம் என்பு நகுதலை ஆமை மலரவன்மால்
தேசுணும் கொம்புடன் ஓடு அணிபவன், சேயிழையார்
காசுணு நற்கலன் நச்சல் அறிந்தநம் காலவனே
மூசுணும் பூங்கைச் சுமத்தினன் பொன்வரை முற்றிலுமே.  (63)

முற்ற முரசொலி கோயிலின் காலவ முக்கணனே!
கொற்றச் சிலையொன்றே சாலுநின் வன்மை குறித்திலங்க:
வெற்றிப் பகழிநாண் கார்முகம் மேவி விளங்கலென்னே
கற்றைச் சடைமுடி எந்தை விளக்குக காரணமே.  (64)

காலவ ஈச்சுரன் வழிபாடு :

காரண மூன்றில் நிமித்தமென் காலவ! காசினியைக்
காரண மாயையிற் காரெனு மேனி கரத்துணையாச்
சீரணி எல்லா உலகமும் ஆக்குஞ் சிவமுதலே!
பூரண கும்பம் அமைத்தனன் நெஞ்சம் புகுந்தருளே.  (65)

புரிசடைக் காலவப் புண்ணிய! ஆருயிர்ப் பொன்னிருக்கைத்
துரிசறு பட்டு விரித்து நறுமலர் தூவியதில்
'கரிசுறு  கண்ட! எழுந்தருள்' என்று கரங்குவித்தேன்;
எரிகடர் மேனி ! இனிததில் மேவி இருந்தருளே (66)

இந்தணி செஞ்சடைக் காலவ ஈச்சுர ஈடிலனே!
சந்தணி தீபம் புகைமலர் நீரிலை தாங்கிநின்னை
வந்தனை செய்ய விரும்பினன் தூவித்தை வாலுருவம்
வந்தணை! நாயினேன் வந்தனை செய்து வளமுறவே. (67)

வண்மை முடிமுகம் ஐந்துடன் ஐந்தும் வளர்கருணைத்
திண்மை இதயமும் நாபியும் தாள்களும் செம்முகங்கள்
தண்மை மலர்நிகர் கண்முன் றுறழைந்தும் தாங்கியருள்
எண்மைக் கிடமெனுங் காலவ! பூசனை ஏற்பதற்கே.  (68)

ஏற்றமுள் காலவ! பாத உதகம் இனிதமைத்து
நாற்றமுள் அர்க்கியம் உண்ணீர் வடித்து நறுமலர்பெய்
தோற்றமுள் நன்னீர் திருவுரு ஆட்டிடத் தொன்மறைகள்
சாற்றிய வண்ணம் அமைத்தனன் என்னென் தவப்பயனே!  (69)

தவநனி சுந்தரக் காலவ! மேனி தவழ்ந்தொளிரும்
நவமணி நல்லணி மாலியம் ஆடைகள் நன்ககற்றி
உவமனில் நிற்குத் தயிலநன் காட்டி உளந்தழைக்கச்
சிவநனி புண்ணியம் யாது புரிந்தேன் சிறியவனே!   (70)

சிங்கத் துரியுடைக் காலவச் சீரார் செழுஞ்சுடரைத்
தங்கக் கலசமுள் மஞ்சட் குழம்பது சாத்துதற்குத்
துங்கத் திருமலர் மேலவன் காணாச் சுடர்முடியை
எங்கட் கிறைதர மேனில் தவமென் எழிற்கரமே?  (71)

எழிலது நண்ணி எழிலுறு மேனி இனிதளையும்
விழியதை மீளாச் சிறைகொளும் காலவ வேதியநின்
சுழியது மேவும் புனற்சடை மாவின் துகட்குழம்பு
இழிவது செய்வன் உவந்ததை ஏற்றருள் ஈடிலனே.  (72)

ஈடும் உயர்வுமில் காலவ! நின்றன் எழிலுருவம்
கூடும் திசையெட்டும் விண்ணும் நிலனும் குடைந்தபினும்
ஓடும் எனிலிக் கலசமுள் நெல்லி உறுகுழம்பு
நீடும் உவகையில் ஆட்டும் நெறியென் நிகழ்த்துகவே.  (73)

நிழலில் உலர்த்திய வில்வ இலைத்துகள் நீர்க்குழம்பை
அழலின் நிறப்பொற் கலத்தில் நிறைத்துன் அணிமுடியில்
தழலின் நிறத்துத் திருமேனிக் காலவத் தற்பரனே!
முழவின் முழக்குடன் ஆட்டி அழிப்பனென் முன்வினையே.  (74)

முத்தன் அருவன் உருவன் முதுமையன் மூப்பதிலாச்
சுத்தன் விமலன் முழுதறி காலவன் தூமுடியிற்
புத்தம் புதுத்திரு மஞ்சன நுண்டுகட் பொற்குழம்பைப்
பத்தர் திருக்குழு வாழ்த்தெழ ஆட்டுவன் பாங்குறவே.  (75)

பாரிட மெங்கணும் பாரிடஞ் சூழப் பலிதிரிவான்
ஓரிட மெங்கும் உறைவதற் கில்லான் உடம்பினிலும்
சீரிடம் சேயிழை கொள்ளநில் காலவன் சென்னிமிசைப்
பேரிடர் நீங்கநல் ஆனைந்தும் ஆட்டுவன் பீடுறவே.  (76)

பீடுடைப் பேருர் நகருடைக் காலவப் பிஞ்ஞகனின்
ஏடுடைக் கொன்றை யணிமுடி செம்பொன் எழிற்கலத்தால்
நாடுடைத் தொண்டர் துதியெழ ஐந்துடை நல்லமுதம்
கேடுடைத் தீவினை நீங்குற ஆட்டுவன், கேடிலனே.  (77)

கேள்வியின் மிக்கார் பணிபெறு கேடறு கீர்த்தியனென்
ஆள்வினை ஆள்பவன், காலவ நாதன் அணிமுடியென்
வேள்வியின் தீமிசை ஆநெய் சொரிந்து வெகுண்டணையும்
மூள்வினை எற்றுவன் மற்றது மோய முழுவதுமே  (78)

முன்னவன் காலவன் மேனி இளஞ்சூடு மொய்த்துளநீர்
பொன்னங் கலத்தினில் ஆட்டிக் குளிர்தண் புனல்சொரிந்து
பின்னர்ப் பசுவின் நறும்பால் தயிர்தேன் பெருஞ்சுவையுள்
கன்னல் கனிகளின் சாறவை பெய்வன் களிமிகவே.  (79)

கண்ணார் இளநீர் பொதிகையின் சாந்தம் கமழ்பனிநீர்
எண்ணார் திருநீறு, பொன்மணி ஐந்தளிர் எண்மலர்கொள்
தண்ணார் உதகம், சுரநதி ஆட்டித் தழன்மழுவன்
பண்ணார் மனுப்புனல் காலவற் காட்டிப் பணிகுவனே.   (80)

பணிவளர் மேனியின் ஈரம் அகற்றிவெண் பட்டுடுத்து
மணிவளர் பொற்கலன் பூட்டி நறுமலர் மாலைகளும்
துணிவளர் வெண்மதிச் செஞ்சடைக் காக்கித் தொடர்ந்துவரும்
பிணிவளர் தோற்றக்கே டெற்றெனக் காலவற் பேணுவமே.  ( 81)

பேணுந் தவமுனி காலவன் காயமில் பேறளித்தான்;
ஊணும் உயிர்கொலு நஞ்சம்: அதனையும் உள்விழுங்கான்;
தாணு, முழுமுதல், காலவன் கைதொடத் தாரணியில்
வீணுள் அலையுமென் ஆவி படைத்தேன் விருப்புடனே. (82)

விரிசடைக் காலவக் கண்ணுதல் ! நிற்கு விரைகமழும்
பரிசுடைப் பத்தங்கத்  தூபம்; படரொளிப் பன்முகமுள்
கரிசறு தீபம்; புருட மிருகம் ; கரும்பணியின் 
எரிசுடர்; தோல் ; புலி ; அன்னம் ; பரி ; யரி ; ஏர் விளக்கும்  (83)

ஏவுவெஞ் சூலம் கொடிவிடை வண்டு எழுங்கதிரைக்
கூவும் பறவைமெய் அங்கம் அடக்கவல் கூர்மமுடன்
மேவுஞ் சுருக்குநற் சத்தி விளக்கிவை மிக்கொளிரத்
தேவுட் பெரியநற் காலவ! காட்டினன் தீங்கறவே.  (84)

தீதில் தவமுனி காலவன் சென்னி திருவடியென்
போதில் பொவிவுறச் சாத்திய காலவப் புண்ணியனே!
கோதில் கருப்பூர ஐங்கிளைத் தீபம் குலவெழிலுள்
சோதி வரிசையுன் பஞ்ச முகமுன் சுழற்றினனே.  (85)

சுற்றும் சடைமுடிக் காலவன் தாழ்ந்த சுடர்மணியே!
குற்றம் சிறிதுமில் திங்கள்முன் ஆடி குவிகவிகை
உற்ற கவரி விசிறிகள் காட்டி உபசரித்தேன்
முற்றுந் துணைதரு காலவ! எற்றென் முழுவினையே.  (86)

முழுதுந் தவவுரு வானவன் காலவ மொய்ம்பனுக்கே
எழுதுன் எழிலுரு ஐந்துறழ் ஐந்தின் இயல்புரைத்தோய்!
கழுதுடன் அல்லிற் களிநடம் செய்யும் கழலினனே!
தொழுதடி வாழ்த்திச் சுழற்றுவன் சூடச் சுடரினையே.   (87)

சுடருந் தவவுருக் காசிபன் கான்முளைத் தூமனத்தில்
அடரும் மழுவுடன் மான்மலி கோலம் அளித்துவப்பாய்!
இடருள் வினைமலை எற்றுந் திருமுறை இன்தரங்கம்
படரு முறையில் இசைத்துனைத் தாழ்ந்து பணிகுவனே.  (88)

பரதம் தமிழ்பயில் நாவிலுன் கீர்த்தி பரவியவன்
சரதம் எனக்கற் றளிசெயுங் கந்தநற் சாமியடி
விரத மெனவென் முடிக்கணி யாக்கிய வேதியனே!
அரதன உட்டளி ஆக்குவன் காலவ ஆரமுதே!   ( 89)

ஆநிலை யண்ணல் பதிசேர் கயற்பெய ரம்மைதந்த
மாநிலங் கொண்ட நிவந்த நிகழ்த்துநல் மாவிழவில்
மாநலத் தேரூர் மருங்கினில் மூவர் மதுரவிசைப்
பாநல மாரும் பரிசருள் காலவப் பாவகனே!  ( 90)

பாலைப் பருகிப் பரமலி ஞானமெய் பாலகரும்
சூலைக் குலர்ந்து தொழும்பா யணைந்துயர் சொல்லரசும்
ஆலைக் கரும்பினை நேர்சுவை அஞ்சொல் அமுதளித்தார்
காலைக் கதிர்சடைக் காலவன் பாடானென் காலவனே!   (91)

காலவ! நின்ன அரையவ னாக்கிக் கடிவலஞ்செய்
மேலவன், தூய பிருங்கி முனிவனை முன்பொருநாள்
ஏலவும் முக்கா லவனாக் கருணைசெய் ஏற்றினனே!
சாலவும் மூன்று கரணமும் ஒன்றுந் தவமருளே!   (92)

தவநிதி; காலவன் தோய்ந்த அருளெனுந் தண்கடலே
நவநிதி வேண்டிலன், நானில ஆட்சி நயந்திரவேன்
சிவநிதி என்றும் செறிந்துள நின்றாள் திருவணையப்
பவநிதி நற்பதம் நான்கும் நயந்தருள்: பாங்குறவே!  (93)

பாருள் அமுதென் தமிழினை முன்னம் படைத்துவைத்தாய்
சீருள் அதன்சுவை என்நா அளைந்து திளைக்கவைத்தாய்
நாருள் மனத்தினுள் நின்றுன் புகழ்கள் நவிலவைத்தாய்,
காருள் களத்திறை! காலவ! நின்னருள் கங்கிலதே!  (94)

கங்கில் தவமுயல் காலவன் காயம் கதுவிலனாய்த்
தங்குந் திருவடி நீழல் அருளிய தண்டருவே!
பொங்குந் துயர்தரு தீவினை ஓவாப் புலைநெறியர்
இங்குன் பதியினில் மாண்டிடில் வீடெனல் ஏற்புடைத்தோ ? ( 95)

ஏருள் உடலிலன் இல்லுள் அரையவன்; ஏகனென்றும்;
சீருள் இருகுழை முக்கணண் நான்மறை செப்பினவன்;
ஓருந் திருவெழுத் தைந்தினன்; ஆறமர் ஒண்முடியன்;
காருள் மிடற்றினன்; ஏழிசை போற்றுமெங் காலவனே.   (96)

காடு நுழைகிலன்; காயம் ஒறுக்கிலன்; கைத்துணையில்
ஓடு சுமந்திலன்; தீட்டிலன் நெஞ்சினில் உன்னுருவம்;
நாடும் நகரமும் நின்றளி நாடிலன் நானெனினும்
பாடுவன் நின்புகழ்; காலவ! பாசம் பறித்தருளே.  (97)

பஞ்சப் பரத நவிலுமெங் காலவப் பாரிடனே!
நெஞ்சக் கிழியிலுன் மாமனு வாக நிலைத்தொளிரும்
அஞ்சக் கரமெனும் வெல்படை தீட்டி அனுதினமும்
வஞ்சப் பிறப்பற ஓதியுய் பேறு வழங்குதியே. (98)

வணங்குவ துன்றாள்; வழுத்துவ துன்பெயர்; வாரமுடன்
இணங்குவ தன்பர் திருக்குழு: காலவ! இன்னருளின்
மணங்கமழ் நின்றளி சூழ்வவென் தாள்கள்; மறிகடல்போல்
அணங்குவ தென்கொல் அலையலை யாயென் அருவினையே.  (99)

அருவினை நண்ணினும் அஞ்சீர்! அடியீர்! அணைவிரிவண்!
கருவினுள் எய்தினும் காயம் கருவியாய்க் காலமுற்றும்
மருவுவம் காலவற் காதலென் நோன்பை மனத்தகத்தே
பொருவரும் காஞ்சிப் பெருநதி ஓம்புமிப் பூவிருந்தே,  (100)

                                             வாழ்த்து

காலவக் கண்ணுதல் வாழி! குடக்குக் கவின்றிலையா
மேலவர் தாழ்பதி வாழி! அலையெனு மென்கரத்தால்
சாலவும் தாழ்காஞ்சி வாழியில் வந்தாதி சாத்திமகிழ்ந்
தேல விளக்குநர் இன்பெய்தி வாழி இருநிலத்தே.

              திருப்பேரூர்க் காலவேச்சுரக் கலித்துறை அந்தாதி முற்றிற்று.

                                                 திருச்சிற்றம்பலம்.

Related Content