logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்புடைமருதூர்ப் பள்ளு (இராமநாத கவிராயர்)

இராமநாதக் கவிராயர் பாடிய

விநாயகர் வணக்கம்
வெண்பா

புள்ளிமறிக் கையார் புடார்ச்சுனலிங் கற்கிசைந்த
பள்ளிசைக்கென் பால் அமுது பாலிக்கும் -கள் இதழி
யானைமுகத் தான்வழிஓர் ஆறுமுகத் தான்பணிபோர்
ஆனைமுகத் தான்பொன் அடி.  (1)

                                                     சிவ வணக்கம்
                                              கட்டளைக் கலித்துறை

படிகம் பசும்பொன் கறுப்பொடு
       சோணமும் பால்நிறமும்
குடிகொண்ட(து) ஐம்முகம் ஐம்மூன்று
       கண்கர்ண குண்டலங்கள்
துடிகொண்டு சூலமும் மழுவும்
       இவைகொண்டு தொண்டருளப்
பிடிகொண்ட கைபத்துப் பத்தா
       யுதம்வெண் பிறைமுடியே.   (2)

தித்திக்கும் பூசத் திருநாள்
      சிறப்பும் சிவகணத்தோர்
பத்தித் தொழும்புசெய் கோவிலும்
      மேலைப் படித்துறையும்
சத்திக்(கு) இடம்தரு மெய்சாய்ந்த
      லிங்கமும் தண்மருதும்
எத்திக் கினும்கிடை யாதிது
      போல எளியனுக்கே.    (3)

                                                            சிந்து

சீர்பூத்த வெள்ளேற்றினர் நீற்றினர்
      செம்மையர் நிலமாநிறக் களம்பார் நம்பார்
      திங்கள் கங்கையை முடித்தவர் நடித்தவர் தென்மருதூரர்

தார்பூத்த கிரீடத்தர் மாபத்தர்
     தங்கள் நெஞ்சினில் இருப்பினர் பொருப்பினர்
     தமியேனுக்(கு) அருள்புரி லேபனசுந்தரர் பள்இசைக்கே

போர்பூத்த தடந்தோளினால் பாலிக்கும்
     பொன் இலங்கையன் மோலிக்கும் நீலிக்கும்
     பொன்மான் என்(றோதும்) மானுக்கும் வன்மீன் தனக்கும்

பேர்பூத்த கைவாளி (கண்டவர் விண்டவர்)
     பெருக்கொடு சக்கரம் தொடுத்தவர் விடுத்தவர்
     பிந்தாது தண்டாவளம் அழைக்க முன்வந்தார் துணையே.  (4)

                                               அம்பிகை துதி

பரவை முன்றினில் சென்றவர் நின்றவர் பாலகனைக்
      கொன்றவர் தின்றவர் படைமதனைக்
      காய்ந்தவர் சாய்ந்தவர் பணி ஆபரணர்

விரைகமழ் கொன்றைத் தாமத்தர் ஈமத்தர் மின்னார்புடை
      பாகத்தர் யோகத்தர் மெய்சாய்ந்தவர்
      பேசும்பெருமாள் மேல் பள்ளிசைக்கே

வரி உழு வர்மலர்த் திருமகள் மருமகள் மலர்வனசத்தில்
      பிறந்தவள் சிறந்தவள் வறியேன் உள்ளம்
      புகுந்தவள் மிகுந்தவள் மஞ்சார் குழலாள்

தெரிகவிஞர் தியானத்தி ஞானத்தி சிவன்வரப்
      பிரசாதத்தி வேதத்தி செந்தமிழ்ச் சுயவாக்கு
      எங்கள்மரபுக்கு வந்தவள் துணையே.     (5)

                                           அவையடக்கம்

பொருனை நதித்துறையவர் இறையவர் புள்ளிமறிப்
       பாணியர் வேணியர் புடைமருதுக்குள் இருந்தவர்
       அருந்தவர் போற்றிய பாதர்

பரிவொடு சித்தன் அழைத்தவர் தழைத்தவர்
       பரகதித்துணை தான்என்று நின்இன்று
       பரவுபுடார்ச் சுனலிங்கற்கேற்ற சொற்பண் ஏசலிலே

தெரிதரு சொற்கள் இடையினில் தடையினில்
       சிதறுசொல் கொஞ்சம் இருக்கினும் பெருக்கினும்
       சிலதளங்கள் மசகினும் பிசகினும்
       செந்தமிழ்ப் புலவோர்கள்

ஒருகுறை யுஞ்சொல்லார் இபமுகன் உமையாள்
       உடைகுகன் முதுமொழி களையுரைத் தெனது
       புன்மனத் தினில்புகுந் தருள்குவரே.   (6)

                                         மூத்தவள் வருகை

                                                   சிந்து

பூசு சந்தன வரிக்குறி யொழுங்கும்
       பொன்மோ திரத்திடை விரல்அழுங்கும்
       புதுத்தலை பணிப்பட் டாங்கெடுத்ததும் விரித்துடுத்ததுவும்

வாச மஞ்சளின் கன்னச் சிங்காரமும்
       வடநீ லக்கலத்து வளதன பாரமும்
       வஞ்சிக் கொடிஎன்னும் நுண்ணிடையும் அஞ்சுமென்னடையும்

நேசமும்கருங் கொண்டையும் வண்டையும்
       கீழ்ப்படுத்துங்கண் கெண்டையும் முன்கையில்
       கிலுங்கிய காப்பணியும் கழுத்துக்குள் இலங்கியபணியும்

தேசிகம்பெறு நுதற்குறு வேர்வையும்
       செறுக்கிடக் கொண்ட மதுவெறிப் பார்வையும்
       சிறந்திட மருதூர் மூத்தபள்ளி தோன்றினாளே.

                                           இளையவள் வருகை

                                                       சிந்து

மஞ்சையும் மதிப் பிஞ்சையும் நஞ்சையும்
        வள்ளையும் மலர் எள்ளையும் கிள்ளையும்
        மலையையும் பொரு சிலையையும் கிளையையும் இதல்லால்

கஞ்சமும் மலர் அஞ்சமும் சிங்கமும்
        கதலியும் சினை மிகுந்தவராலும் கருங்குழல்
        நுதல்விழி செவிநாசிசொற் கனதனபுருவம்

மிஞ்சிய பசுந்தோள் முத்தலர் முகமென்னடை இடை
       துடை கணைக்கால் எனவிதி வகுக்கின்றநாளில்
       இப்படிப் படைத்திடும் உறுப்புடனே

அஞ்சியகரி காத்தவர் பதந்தொழு தளிகையில் இருந்தவள்
        நெற்றிமேல் தினம்அணி நாமம்பெறு
        பள்ளிஎனும் இளையவள் தோன்றினளே.    (8)

                                               உழவன் வருகை

                                                    கலிவிருத்தம்

கண்ணை இரு பக்கம் வெட்டிக் காட்டுதுணைப் பள்ளியர்கள்
எண்ணை யொழு குழல் ஏந்திழையார் வந்தபின்பு
மண்ணை அளந் தோரறியா மாமருதூர்ச் சாய்ந்தபிரான்
பண்ணை பயிருஞற்றுகின்ற பள்ளன்வந்து தோன்றினனே.   (9)

                                                    குடும்பன் வருகை
 
                                                              சிந்து

சல்லடத்தில் கச்சைகட்டி
           மெல்லடி பெயர்த்து
           எற்றி வெற்றிக் - கைத்தடி சுற்றி

குல்லவட்டப் பொட்டுமிட்டுக்
          வெட்டு கொட்டும் தொழில் வைத்து
          கொண்டு தொண்டிக் கள்ளுக்குடப் - பண்டியில் ஓட

பல்லமுத்தி வண்டுறுக்கி
          வீசைமுறுக்கித் திருத்திப்
          பத்திடத்திலே குதித்து வட்டமிட்டாடி

நல்லபக்தி மானெனவே
           சாய்ந்தவரைத் தினம் போற்றும்
           நாறும்பூக் குடும்பன் வந்து தோன்றினானே.     (10)

                                     குடும்பனின் வீரப்பேச்சு

சித்தனுக்குச் சாய்ந்தவர் பத்தர்துணை துதியார் நாவை
           சிக்கெனப் பன்னரி வாளால் ஒக்க அறுப்பேன்
அத்தர்மரு தூரர்புகழ் பக்தியாய்க் கேளாதார்
           செவியைத் துளைப் புற்றென்று கொட்டால் செத்தி எரிவேன்
சத்திபங்கரை பதித்திடார்கள் நெஞ்சில் கொழுவேற்றி
           தரிசறந் தரிசழித்துப் பரிசு கொடுப்பேன்
பித்தர்நா  றும்பூவை எண்ணி நித்தமும் கும்பிட்டார் கையை
          பெரும்கயமார் துளைக்குள் நெருக்கியடிப்பேன்.     (11)

                                            உழத்தியர் வருகை

செஞ்சரண மிஞ்சுபுகழ்த் தென்மருது மெய்சாய்ந்தோர்
நஞ்சுதனை உண்டவர்நன் னாடதை யுரைக்க
மஞ்சளைப் பூசுங்கழுத்து மைக்குழலும் ஆய்க்கப்படாய்
பஞ்சடிமெ லப்பெயர்த்துப் பள்ளியர்கள் வந்தனரே,  (12)

                                              குடும்பன் பேச்சு

இந்திரன்பிர மகத்தியைத் தவிர்த்தவன் பணிக்கு
       இசைந்தவர் கருவூர்ச் சித்தர்க்கு ஏன்என்று சொன்னோர்
மந்திர மறைபொருளார் தண்பொருனைத் தென்கரை
        மருதிடத்திலே சுயம்புவாக முளைத்தோர்
சந்திர சடையார் மெய்சாய்ந்தோர் பூசைஅமுது படிக்கும்
        சந்திதொறும் அபிஷேகம் முந்திச் செய்யவும்
கொந்து கொந்தாய் நெற்பயிற் கரும்பு வாழைப்பயிரிட்டுக்
        கொண்டிருக்கும் நாறும்பூக் குடும்பன் ஆண்டே.    (13)

                                                 கலிவிருத்தம்

துள்ளிஅலை மோதும் துறைப்பொருனைக் குள்மருதூர்ப்
பள்ளியர்கள் ஆரூர்ப் பரவைமுன்பு பாவலற்காய்
நள்ளிருளில் தூதுசென்ற நாறும்பூ நாயகனார்
முள்ளிவள நாட்டின் முறைவளங்கள் சொல்வாரே.

                                                              நாடு
    
                                                             சிந்து

பக்தி மாடக்கொடி விண்ணினில் தோயும்
           பருதிமேற் படவே உடல்தேயும்
சித்திர மேடை முகப்பில் துலங்கும்
           சிற்பிகள் செய்பொன் உருக்கள் இலங்கும்
சத்திர சாலையும் வர்த்தகர் வாழும்
          தமனியப் பொக்கிஷ வீடெங்கும் சூழும்
அத்தர்மெய் சாய்ந்தவர் கீர்த்தியைப் பாடிக்கொண்
         டாடல்சேர் முள்ளி நாடெங்கள் நாடே.     (15)

காவெல்லாம் குயிற்பிள்ளை படிக்கும்
       கண்டு மாமயில் நின்று நடிக்கும்
பூவெல்லாம் வரிவண்டு ஆர்க்கும்
      புதியதேன் உண்டு அரும்பசி தீர்க்கும்
தேவர் ஆலயம் எங்கும் நெருங்கும்
      திருத்திகழ்பதி எந்தமருங்கும்
நாவலோர் பின்பு பாயல் சுருட்டி
       நடந்த மால்முள்ளி நாடெங்கள் நாடே. (16)


                                                           ஊர்

கொஞ்சப் பட்டது தொட்டிலில் பிள்ளை
       குத்தப் பட்டது நெல்லோடு நீறு
அஞ்சப் பட்டது கள்உண்ணல் மேலோர்
      அறுக்கப் பட்டது வெள்ளைத் தளைகள்
கெஞ்சப் பட்டதுபேய் மந்த்ர கட்டினில்
       கீறப் பட்டது பாய்நெய்யும் கோரை
மிஞ்சப் பட்டவர் சித்தர்க்குச் சாய்ந்தவர்
       மேவி வாழ்மரு தூர்எங்கள் ஊரே.   (17)

பறிக்கக் கண்டது மண்பெருச் சாளி
      பறக்கக் கண்டது எழும்பிய புள்ளு
மறிக்கக் கண்டது ஒருவிளை யாட்டு
      மயக்கக் கண்டது இருள்வரும் காலம்
முறிக்கக் கண்டது தின்னும் கரும்பு
      முடங்கக் கண்டது இளம்பிறை கீற்று
அறிக்கைப் பண்பினர் சேர்கடி காபுரி
      ஆனை காத்தவர் ஊர்எங்கள் ஊரே.   (18)

                                      கலிவிருத்தம்

தீட்டுபுகழ் மாதவம்சேர் சித்தனுக்குச் சாய்ந்தபிரான்
நாட்டின்வளம் ஊரின்வளம் நன்றாகச் சொன்னதன்பின்
மீட்டும்எதிர் நின்றுதம்மில் வீறுகொண்ட பள்ளியர்கள்
கோட்டிளமாஞ் சோலைக் குயிலைக்கூ வென்பாரே.     (19)

                        உழத்தியர் குயிலைக் கூவச்சொல்லுதல்

                                                    சிந்து

இந்திரனார் பிரமகத்தி ஒழித்தஇ லேபன
             சுந்தரர் இருக்கும் - மருதூர் தழைக்கக் 
                                                                          கூவாய் குயிலே

அந்தரிநெற் படி இரண்டு கொண்டு அகிலமெங்கும்
          அறம் வளர்க்கும் ஆவுடைத்தாய் வாழவே
                                                                          கூவாய் குயிலே.    (20)

தருமமாதவக் கோயில் சாய்ந்தவரைப் பூசைசெய்யும்
         தலத்து நம்பிமார் வாழக்
                                                                          கூவாய் குயிலே

மறுவில்லாதவர் சன்னதித் தொழிலை நித்தம்
           நிறைவேற்றி வந்தபரி சனர்வாழக்
                                                                        கூவாய் குயிலே.    (21)

குடமுனி கைக்கமண்டபத்தில் வரும்பொருனைக் கால்புரவும்
           குளப்புரவும் நெல் விளையக்
                                                                       கூவாய் குயிலே

கடனைநதி அணைப்புரவும் இருபூவும் நெல்விளைந்து
            கதித்(து) ஓங்கி வாழ்கவே
                                                                      கூவாய் குயிலே.    (22)

காதார்ந்த விழித்துணைஎன் ஆவுடைத் தாயுமவள்
            கணவரும் நன்றாக வாழக்
                                                                      கூவாய் குயிலே
மாதாந்தம் ஒருமூன்று மழைபொழிந்து தமிழ்ப்பாண்டி
          வளநாடு தழைக்கவே
                                                                      கூவாய் குயிலே.  (23)

                                                     மழைவேண்டல்

                                                       கலிவிருத்தம்

தண்டிச்செய்த காரியத்தில் சந்தோஷ மாய்க்கோயில்
மண்டிவரும் பேர்வைத்த மருதூரர் நன்னாட்டில்
விண்டுலவி வானில் வெகுமழைபெய் யும்குறிக்குத்
தொண்டுசெய்யும் தெய்வப்பள்ளர் தோத்திரங்கள் செய்வாரே.   (24)

                                                      சிந்து

மழைதருவீர் மழைதருவீர்
         மாதம் மூன்று மழைதருவீர்
குழைவிரிதென் பொதியமலைக்
         குறுமுனியே மழைதருவீர்.     (25)

ஐங்கரரே இருள் அகற்றும்
          செங்கரரே மழைதருவீர்
சங்கரரே ஆவுடையாள்
          பங்கரரே மழைதருவீர்.   (26)

மெய்யனாரே புகழ்சொரிமுத்
        தய்யனாரே மழைதருவீர்
துய்யனாரே தமிழ்மருதூர்
       அய்யனாரே மழைதருவீர்.    (27)

வயிரவரே நெல்முதலாய்ப்
       பயிர்தழைய மழைதருவீர்
கயிரவவாய் எழுதையலீர்
       செயிர் அறுநீர் மழைதருவீர்.  (28)


                                        மழைமேகம் வரல்

                                             கலிவிருத்தம்

கண்டகண்ட தெய்வம்எல்லாம் கைஎடுத்துப் போற்றியபின்
தண்டமிழ்சேர் தென்மருதூர்ச் சாய்ந்தபெரு மான்அருளால்
மண்டலம்எல் லாம்செழிக்க மாரிபெய்யும் என்றுகனக்
கொண்டல்வரக் கண்டுமள்ளர் கூத்தாடிக் கொண்டாரே.    (29)
                            
                                              சிந்து

           
இன்றுநாளை வெள்ளம்வரத் தென்றல் வீசுது - விண்ணில்
          இந்திரவில்லும் இட்டதுகார் வந்துவிட்டது
குன்றிலே ஒழுங்காய்மஞ்சு சென்றிறங்குது - கொல்லம்
         கொங்குமின்னல் எங்கும்மின்னி குதூகலிக்குது
அன்றில்தேரை தாலம்நீரில் சென்றலறுது - சேல்வந்து
        ஆர்ப்பு அரவம் செய்யுதென்று பள்ளர்கள் எல்லாம்
வென்றிமரு தூர்ச்சிவனை நின்று தொழு(து) - தம்மில்
        மெத்தக்குதித் தாடிப்பாடிப் பத்திசெய் வாரே.   (30)

                                             கலிவிருத்தம்

சத்தமே கங்களும்போய்ச் சக்கரத்தெண் ணீரை ஒரு
மித்(து) அனே கம்கவர்ந்து மிக்கமரு தூர்ப்பரனார்
பத்தர்மோட் சம்பெறப்பா லிப்பதுபோ லத்தமிழ்நா
கத்தின் மேற்படிக்குக் கால்ஊன்றிப் பெய்ததுவே.    (31)

                                   குறிஞ்சியில் மழைவரவு

                                                    சிந்து

                                                குறிஞ்சி

பெய்தமாரி வாரிநிகர்த்துப்
         பிறங்கலை விடுத்து இறங்கியே
பெரியதருக் கிஞ்சுகத்தையும் - சினை
       விரியுமலர் சண்பகத்தையும்

மைதவழ்ந்துசெல் வேங்கையும் - எங்கும்
       எய்திநின்றசை கோங்கையும்
வரைக்குறவர்செவ் வாழையும் - அவர்
      எரிக்க வேட்டகில் காழையும்

செய்திகழ்மலை நெல்லையும் - குறத்
     தையலார்உறை இல்லையும்
சிந்துரச்சிறு கன்றையும் - மணச்
     சந்தனத்தரு ஒன்றையும்

கைதிரைக்கிடை உருட்டி இழுத்துக்
     கந்தனைச்சென்று சந்தித்தே
காலில்விழுந்து விழுந்து - தொழுது
     பாலை நிலத்தில் எழுந்ததே.    (32)

                             பாலைநிலத்தில் மழை
                   
                                            சிந்து

எழுந்த வெள்ளம் பாலைநிலத்தில்
           ஏறியே எங்கும் மீறியே
                    எயினர் இருக்கும் இருப்பையும் - கழுகு
                               இருந்து பறக்கும் இருப்பையும்

தழைந்து வளர்ந்த பாலையும் - மறத்
          தறுகண்ணர் விடும் வேலையும்
                     சரங்கள் தொடுக்கும் தனுவையும் - மிக
                                நெருங்கி இருக்கும் மனுவையும்

செழுஞ் செவ்வரிக்கண் புறவையும் - தசை
          தின்னும் செண்பகப் பறவையும்
                    சிறியகாடை தானையும் - உருட்டிச்
                                சென்றுபாலைக் கிழத்தியே

தொழுந்தயவொடு சுழிகள் சுழித்துச்
        சூழ்ந்து வலங்கொண்(டு) - இறைஞ்சியே
                    சொல்லுதற்(கு) இனிதாகிய
                                முல்லை நிலத்தில் மிகுந்ததே.     (33)

                                           முல்லை நிலத்தில் மழை

                                                         சிந்து

மிகுந்த வெள்ளம் முல்லை நிலத்தில்
           மேவி எங்கும் தாவியே
                        வெண்ணெய்ப் பானை உறியையும் - கூட்டி
                                      வீட்டில் ஆட்டு மறியையும்

முகந்து மோர்விடும் குடுக்கையும் - ததி
          முட்டு பதலை அடுக்கையும்
                        முதிர்ந்த சாமிக் கூட்டையும் - மண்ணில்
                                      முளைத்த குருத்தின் மூட்டையும்

அகந்தொறும் கடலைச் சம்பையும் - பசு
         ஆடு மேய்க்கும் கம்பையும்
                       அகன்றிடும் விரி ஓலையும் - தகர்ந்(து)
                                      அப்புறம் தள்ளித் துள்ளியே

புகுந்து முகுந்தர் பதத்தில் விழுந்து
         போற்றிச் சாத்தில் வேகமாய்ப்
                        பொதுவியர் நிலம் தன்னை விடுத்து
                                      பொது நிலத்திநனில் சாய்ந்ததே.    (34)

                                          
                                               மருதநிலத்தில் மழை

                                                              சிந்து

சார்ந்த வெள்ளம் மருத நிலத்தில்
        தத்தித் திடரைக் குத்தியே
                      சாடிக் கரும்பைப் பிடுங்கியே - செல்லச்
                                   சனங்கள் உயிர்கள் நடுங்கியே

சோர்ந்து பதறி ஓடவே - கம்புள்
        தோகையும் வரும் கூடவே
                    சுழிக்குள் நிழற்றிக் குருக்கையாவிச்
                                 சுறுக்கொ டழுத்து வருகையால்

சேர்ந்த வரிக்கல் அணையும் காலும்
          செழிக்கக் குளங்கள் கெழிக்கவே
                     செந்நெற் பயிர்கள் செழிக்கவே - எங்கும்
                                  செழிக்கப் பெருகிப் புறப்பட்டே

ஊர்ந்து பெரிய வாவி கூவம்
              ஊதும் பெருக்கித் திரைக்கையால்
                       ஒலித்துஇந் திரனைப்பரவி நெய்தல்
                                    நிலத்தின் புறத்தின் எடுத்ததே.   (35)


                                      நெய்தல் நிலத்தில் மழை

                                                    சிந்து

எடுத்த வெள்ளம் நெய்த நிலத்தில்
         எங்கும் பரந்து நிரந்தெல்லாம்
                  இழுத்துப் பள்ளர் இருப்பையும் - பண்ணை
                                    மரத்தில் பெரிய கருப்பையும்

பொடிக்கப் பிடித்த சள்ளையும் - தெரு
         புறத்துத் தெட்டு முள்ளையும்
                   புதியசெப்புமஞ் சணையையும் - பள்ளர்கள்
                                  படுத்தபஞ் சணையையும்

உடுத்தி வைத்திடு சேலையும் - பெண்கள்
        எடுத்தணி முத்து மாலையும்
                     உவர்க்கழிக்கரைத் தாளையும் - இவை
                                   ஒக்கத் திரட்டிக் கொடுவந்தே

அடுத்த வருணன் சரணிலே - குவித்து
         அணிகள் அணிந்த மணப்பெண்போல்
                    ஆவித்தலைவன் வாரிக்(கு) இறைவன்
                                அவனை மணந்து கலந்ததே.   (36)


                                         ஆற்றுநீர் பெருகுதல்

                                                              சிந்து

கலந்த நதிப்பெண் கடலுக்(கு) இறைவன்
         கணவன் மகிழக் கூடவே
                  கதிரவன் எழும்உதய கிரியைக்
                             கதித்து விசைகொண் டாடவே

மலங்கு கோளை சாளை பாளை
          மசறி கெழுறு தேழிமீன்
                    மயிலை நெடுவிலாங் கினோடு
                             வரால் திமிங்கிலம் போத்தமீன்

பிலங்கொள் வழுவை கொழுவை உழுவை
       பிலத்த குறவை பறவைமீன்
                   பெரியதேடு கசலி பசலி
                               பிடிப டாத கெண்டைமீன்

பொலிந்து வரியில் கிடந்த திவைகள்
      எதிர்கொண் டேறச் சாய்ந்தவர்
                 பொருனை ஆறு பெருகி வாரப்
                                புதுமை பாரும் பள்ளிரே.    (37)

                                            மீன்கள்

                                             சிந்து

ஆரல் கடலில் கரும்பு குதிப்போ(டு)
         ஆயிரை பயிந்தி எண்ணைமீன்
                     அதிகமாக வளர்ந்த பனைமீன்
                                     அது அல்லாமல் இந்திமீன்

பாரம் வகிக்கும் கப்பலைச் சிறு
        பாறு படகைத் தகர்க்கு மீன்
                    பஞ்சிலை நிறையஞ்சிலை சிறு
                                      பாசி மீனோடு கூனிமீன்

கூரிய முள்ளு மத்தி கடந்தை
        கொழுத்தை கும்பழ மணையிலே
                   குதித்துக் குளத்தில் குதிக்கக் காலில்
                                      குதிக்க வயற்குள் குதிக்கவே

பூரியோர் மனம் களிக்க வேவரும்
          கடனையாறு கூடு நீர்ப்
                   பொருனை ஆறு பெருகி வாரல்
                                   புதுமை பாரும் பள்ளீரே.     (38)


                                  பண்ணைக்காரர் வருதல்

                                                கலிவிருத்தம்

பாரில் எங்கும் நீர்நிறைவால் பற்றுவிளை வாம் அதற்குச்
சீரினங்கு காலம் என்றே சீக்கிரத்தி னால்எழுந்தே
ஏரிசைந்த கொன்றை யந்தார் ஈசர்மரு தூரர்வயல்
காரியம்பார்க் கின்றபண்ணைக் காரன்வந்து தோன்றினானே.   (39)

                                                              சிந்து

சுற்றெல்லாம் கொசுக்கள் கூடிப்
       பற்றி யரித்தே - வீளை
               துத்தலிட்ட போதில் பூப்பட்
                              டிற்ற கணக்கும்

வற்றல் உடம்பும் நிறைந்த
       தெற்றுப் பல்லுமாய் - ஒரு
                வாய்க்குள் தம்பலச்சா றோடப்
                             பாக்குத் தின்பதும்

முற்றல் குரங்கு மூஞ்சியும்
        சோற்றுக்கை கழுவி விட்டு
                  முட்டிக் காலும் கழுதைக்
                             குட்டிக் காலுமாய்

வெற்றிமரு தூர்த் தலைவர்
       பற்றெல்லாம் பயிரேற்ற
                  வீறுகளே கூறு பண்ணைக்
                               காரர் வந்தார்.     (40)

                                    பண்ணைக்காரரிடம் முறையீடு

                                                       சிந்து

சொல்லவா மருதூர்மூத்த பள்ளி என்பாராம் - சற்றும்
          துச்சுச் சொல்லாள் என்றவளை மெச்சிக் கொள்வாராம்
சல்லி இளையாள் துர்ச்சனப் பள்ளி என் பாராம் - தம்மைச்
          சட்டை பண்ணாமல் பேசுகிறாள் கெட்டிஎன் பாராம்
செல்லியைத் தமக்குமோக வல்லிஎன் பாரம் - அவள்
         சிற்றிடைக்குள் ளேமனது பற்றுதென் பாராம்
நல்லவன் குடும்பனென்று சொல்லிக் கொள்வாராம் - சற்றும்
         நட்டம் இல்லாப் பண்ணைப்பயிர் சட்ட நயினார்.    (41)

                                                          கலிவிருத்தம்

வெற்றித் தமிழ்மருதூர் மெய்சாய்ந் தவர்கோயில்
பற்றுப் பயிரேற்றப் பள்ளன்எங்கே என்றதிலே
கற்றைக்குழலி பண்ணைக் காரனார் முன்புவந்து
முற்றத்தில் காட்சிவைத்து மூத்தபள்ளி கண்டாளே.    (42)

                                                மூத்தவள் முறையீடு
                                                        
                                                       சிந்து

முட்டை பதினெட்டு வைத்துக் கும்பிடுகிறேன் - கொஞ்சம்
         முக்குறுணி அவல்வைத்துக் கும்பிடுகிறேன்
பெட்டைக் கோழி எட்டுவைத்துக் கும்பிடுகிறேன் - வண்ணப்
         பெட்டியும் பாக்கும் இந்தாரும் கும்பிடுகிறேன்
தட்டைத்தலை நயினாரே கும்பிடுகிறேன் - கிட்டத்
         தள்ளித்தள்ளி வாராதையும் கும்பிடுகிறேன்
ஒட்டலக்கா(து) அழகனாரே கும்பிடுகிறேன் - பள்ளன்
         உளவினையம் சொல்லக் கேளும் கும்பிடுகிறேன்.   (43)

ஆசையும் பாசமும் அவள்மீதிலே வைத்தான் - வைத்த
         அன்றுமுதல் இன்றளவும் என்னைக் கைத்தான்
காசலையாய்ப் பற்றுக்குள்ளே போகவும் செய்யான் - பண்ணைக்
          கத்தரித் தோட்டத்தில் வீழ்ந்த மண்ணையும் வையான்
ஏசுவார்க்(கு) எல்லாம் இடமாய் உடம்பெடுத்தான் களத்தில்
          எட்டுக்கோட்டை நெல்திருடிக் கடன்கொடுத்தான்
கூசாமலே ஏசும் இளையாளுக்கே பள்ளன் - முற்றும்
          கொத்தடிமை யானான் உம்மை எத்துவான் ஆண்டே.    (44)


திண்ணைக்குள்ளே வாராதேயும் பள்ளன் இங்கில்லை  இதைத்
            திட்டமாக வேமனதில் எண்ணும் என்சொல்லை
உண்ணப் பொசிப்புக் கொடுத்த இளையசிறுக்கி - வீட்டுக்கு
           உள்ளே இருந்து அறுக்கிறான் சள்ளைக்கறிக்கு
பண்ணைப் பருவத் தாட்சியால் நீர் அங்கே சென்றாய் - மெத்தப்
            பஞ்சரித்(து) இல்லைஎன்றே பகட்டுவள் நன்றாய்
கொண்ணைக் கோலாய் உம்மைவைத்து வேலையில்மூண்டே
           கொண்டவன் காமப்பேய் மெத்தக்கொண்டான் காண்ஆண்டே.  (45)

                                            இளையவள் செயல்

                                                  கலிவிருத்தம்

சாய்ந்தபெரு மான்மருதூர் தன்னில் மூத்தாள்உரையை
ஆய்ந்து பண்ணைக்காரன் இளையாள் வீட்டில் கூப்பிடவே
காய்ந்துநறும் பால்குடித்துக் கைஅணைக்குள் ளேகிடந்து
தோய்ந்தபள்ளன் இல்லைஎன்று சொல்லவெளிக் கொண்டாளே   (46)

                                                               சிந்து

கொட்டிலுக்குள் பள்ளன் இல்லை
         கெட்டியாய்ப் பார்த்துக்கொண்டு போம்நயிந்தே - வாகைக்
                   குளத்திலே போனானோ பண்ணைக்
                             களத்திலே போனானோ காணேன் நயிந்தே

பெட்டிக்குள் மூடி வைப்பதோ
       சட்டிக்குள் மூடி வைப்பதோ நயிந்தே
                பித்துக்கொண்ட பேர்போல வன்மம்
                            வைத்துக் கொண்டு அதட்டுகிறீர் நயிந்தே.   (47)

செங்குளம் உடைத்ததென்றே
        அங்குளவர் வந்துசொன்னார் நயிந்தே - வெகு
                 தேறுதலைக் காரன் மாறுதலைக்
                           கே எடுத்தான் நயிந்தே

அங்கையில் குதிரைமூளை
       கொங்கணிச் சுமையும் உண்டுநயிந்தே - வெள்ளம்
                 ஆற்றிலே இறங்கிப் போனான் - நேற்றுநடுச்
                           சாமத்திலே நயிந்தே.   (48)

என்ன சொல்லிநீர் வைதாலும்
      பின்னமாக நினைப்பானோ நயிந்தே - மூத்த
               ஏலக்குழலாள் - இந்திர
                       சாலத்துக்கு உள்ளானான் இப்போ நயிந்தே

தன்னை அறியும் முன்னே வந்து
          என்னை அவனுக்கீந்தேன் நயிந்தே - எந்தத்
                    தண்ணீரில் விழுந்தானோ - என்
                           கண்ணீருங் கையுங் கண்டிரே நயிந்தே. (49)

எப்பொழுது தேடியிடும்
          கப்பலைநான் காணப்போறேன் நயிந்தே - சாய்ந்தோற்கு
                      இப்படி பண்ணை வேலைக்கு ஆள்
                                  இப்படியில் கிடையாது நயிந்தே

வெப்பம் எல்லாம் உம்முடனே
         செப்பியல்லோ ஆறுகிறேன் நயிந்தே - என்னை
                   வேறுகூறாய் எண்ண வேண்டாம்
                                    தாறுமாறும் மாகச் சொல்லேன் நயிந்தே,      (50)

                                          குடும்பனைக் கேட்டல்

                                              கலிவிருத்தம்

ஆகட்டும் என்றுபண்ணை யான்களத்துக்கு அப்புறத்தில்
போகட்டும் என்றுவந்த பூரியோ னைப்பார்த்து
நீகட் டுரைகுடும்பா நித்தர்மரு தூர்பற்றிச்
சேகட்டாய் ஆடுவைக்க இன்றுபோ என்றானே.  (51)

                                                            சிந்து

ஆடுகுட்டி கூடுகெட்டி
          யாக்கக்கொண்டு வாறேன் என்றுள்
     ஆடிக்குள்ளே இருக்கும் இடைக்
           குடிக்குள்ளே சென்றான்

மாடக்கோனார் தவசிக்கோனார்
          ஆண்டிக்கோனார் எங்கே போனார்
     வாசிக்கோனாரே நீர்சொல்லும்
           பேசிக் கொள்ளுவோம்

தேடித்திரிந்து எங்கும் பார்த்து
           கூட்டிக் கொண்டு வாருமென்று
     திட்டமாகப் பள்ளன் சொன்ன
           சட்டபடிப் படிக்கே

ஓடித்திரிந்த பேரும் வந்(து)எல்
          லோரும்மெய்சாய்ந் தோர்பண்ணைக்கு
     உரம்வைக்கநா ளைக்குவாமே உத்
           திரம் இப் போதென்றார்.   (52)

                                 நாறும்பூக் கோன் வருதல்
  
                                              கலிவிருத்தம்

நஞ்சருந்தி னோர்மருதூர் நாறும்பூ நாதர்பற்றில்
மிஞ்சுரங்கள் ஏற்றிவெகு பொலிஉண் டாக்குதற்கே
பஞ்சரங்கள் முன்பனுப்பி பள்ளன் உரை தப்பாமல்
குஞ்சரம்போல் நாறும்பூக் கோன்வந்து தோன்றினனே.   (53)


                                                           சிந்து

நடுவட்ட நெற்றிமிசை இடுபட்ட நாமமும்
        நாகரிக மான உடல்மேல் - முட்டநாமமும்
தடிசுற்று கைக்குளே விரிஇட்ட ஓலையும்
         சடையாது கொண்டுதிரி கடைகாலும் - மூர்த்தமும்
மடிக்குளே வைத்த நூற்பையும் தோற்பையும்
        சேகரங் களுங்கன கூட்ட மாகவே
குடிமுற்று வாழமெய் சாய்ந்த லிங்கத்தையே
       கும்பிடு நாறும்பூக் கோன்வந்து தோன்றினானே.   (54)

                                              கலிவிருத்தம்

மிக்கபண்ணை யான்குடும்பன் மீறாயன் தன்னுடன்போய்ச்
சொக்கநாச்சித் தாய்க்கோர் சூல்ஆடு நேர்ந்துவிட்டு
நக்கர்மரு தூர்ப்பரமர் நாறும்பூ நாதர்வயல்
ஒக்கஊர் மேற்கென்று உரைத்தபடி சென்றானே.    (55)


                                              கிடை கட்டல்

                                                   சிந்து

கோனாரே ஆடு வைக்கும் வயலுக்கு
       வகைகேளும் குறிப்பாக உரைப்பேன்
                                                               என்று குறிப்பான்

மீனாரைக்கு ஒதுங்கு பற்றல்  முகமும்
       கொல்லன் மேடும்வேம் படிகாற்போ
                                                               கிடைகாற் போக்கும்

தானாக உழுத சல்லி அணைஞ்சான்
       வயலும் தமிழ்ராம நாதன்
                                                                 கவி வயலும்

நானாதிக் கினில்மற்றுள வயலும் குடும்பன்
       பண்ணை நயினார் சொற்படி
                                                                காண்பித் தனனே.   (56)

சந்திக்கோன் பாங்காட்டை எழுப்பி
        நடந்த தில்லைதன் எல்லைவிட்(டு)
                                                              அசைவானோ குடும்பா

செந்திக்கோன் ஆடுகொண்டு கொண்டுதிரிந்
        தேதேடுபணம் செம்மலுடன் போக்கின்
                                                               இங்கு வாரான்

விந்தைக்கோன் நாட்டைத் தம்பிக்கு அளித்தே
         பட்டம் கட்டிவிட்டுத் திரிந்தான்
                                                                 ஓர்விளை யாட்(டு)

இந்தக்கோன் களைக்காண மாட்டாய் என்ன
        நல்லதென்று மற்றக்கோன் களைச்
                                                                  சென்றழைத் தான்.   (57)


எட்டிக்கோ னுடைய வாத்தாடும் நாட்டுப்புறத்து
      இருளக்கோன் இரண்டு வகுப்பாடும்
மொட்டைக்கோன் ஒருகிடை வெள்ளாடும்
     வீரக்கோன் முருகக்கோன் போற்றிக்கோன் ஆடும்
குட்டித்தாய் ஆடும் விறுதாடும் நாறும்பூக்
      கோன் ஆட்டினுடன் வயற்குள் வளைந்தே
கெட்டிக்காரன் இளையாள் வீட்டில் கிடைக்குவயல்
       கிடையைவிட்டுக் குடும்பன் நடந்தானே.    (58)

                                          கலிவிருத்தம்

வெள்ளிவரை யார்மருதூர் மெய்சாய்ந்த நாதர்பண்ணைப்
புள்ளிவயற் காடுவைக்கப் போனகதை கேளும்என்றே
முள்ளிவள நாட்டில்வளர் மூத்தபள்ளி சாடிப்பள்ளன்
கள்ளமெல்லாம் சென்றுபண்ணைக் காரனுடன் சொல்வாளே. (59)

                                                    சிந்து

பறக்குது நயிந்தே - எனக்குஉடல்
                    பறக்குதே நயிந்தே
      வயற்கிடைப் பருவம் நன்றாச்சே
                    உரம்வைத்து பொலிகண்டு போச்சே

மறக்கவும் படுமோ - அவனுக்கு
                     மறக்குணம் கெடுமோ
       ஆட்டையும் வளைந்தன்னுடனே - அவள்
                    கோட்டில் நுழைந்துந் திடனே

சிறுக்கிதன் மயக்கம் பிடித்ததில்
                      உறைத்திடு தியக்கம் படைத்தவன்
       செய்தியை நிரைப்பேன் - சித்தத்தில்
                    எய்திட உரைப்பேன்

அறுக்கிற கதிரே - கட்டெண்
                    பதெடுத்துக்கொண் டெதிரே
       ஆருக்கும் பயமோ - எனச்செல்வன்
                    சேரிக்குள் ஆண்டே.   (60)

நானொரு மாதம் இளையவள்
                  தானொரு மாத முதியவள்
     ...........................
                 அஞ்சாறு வருஷம் அங்கடைந் தேன்பேறு

தானவள் வசமாய் மதிகெட்டுப்
                 போன னன் நிசமாய்
      அதுசித்தம் தனில் அறிந் திருக்கும்
                 கனவசை எனதுள்ளம் பெருக்கும்

ஆனதந்தி ரத்தை விடுத்தனன்
                 ஈனமந்திரத்தைப் படித்தனன்
     ஆருக்கும் வணங்கான் இருந்தனன்
                 ஊருக்கும் இணங்கான் இருந்தனன்

சூனியம் வைக்கும் தொழில் அறிவான்
                ஆனவன் கைக்கும் காலுக்கும்
      துளைமரஞ் சேர்த் தெய்தினமே
                 தயைசெய் வீர் ஆண்டே.     (61)

குஞ்சரம்போலே எருமைஎட்டு
              அஞ்சுபொன் னாலேவிலைமெத்தக்
குறைச்சதைக் குறியான் இலுப்பைக்
              குறிச்சிபற் றறியான்

வஞ்சகச் சொல்லான் - செங்குளப்
             புஞ்சையிற் செல்லான் - திருப்பணி
      மாட்டையு மறியான் - வளமருதத்
              தீட்டையு முறியான்

சஞ்சல மனத்தான் - என்னுடன்
             மிஞ்சின சினத்தான் ஒருபொதி
       சர்க்கரை கொடுத்தான் ஒருபொதி
              சர்க்கரை எடுத்தான்

கஞ்சியும் வாரான் - வரச்சொல்லிக்
           கெஞ்சினும் சேரான் - அவனுடல்
      கறைகக்க அடித்தால் - என்மனக்
           குறைநிற்பது ஆண்டே.  (62)

கரும்பையும் ஆட்டான் - வளைக்கும்
          பிரம்பையும் நாட்டான் - தெழிகொடிக்
    கால்கட்டைத் தடியான் - அதில்போய்
          ஏர்கட்டி அடியான்

விரும்பியே பற்றல்முகம் வெள்ளம்
          நிரம்பியே துற்றலீடு திடர்
     வெட்டியும் பறியான் - பறித்தமண்
           எட்டியும் எறியான்

பெரும்பகை எனக்கே அவன் - பின்பு
           வரும்பகை தனக்கே அறிகிலன்
     பேய்ப்புத்தி அலவோ - உமக்கென்ன
           வாய்ப்புத்தி சொலவோ

உரம் பிளந்திடவோ - வரிகண்டன்
             தரம் பிளந்திடவோ
     மாதினில் உரைத்தது - மரத்தில் அடித்
            துயிர்குடித்திடிர் ஆண்டே.    (63)

                                   இளையவளின் பாசம்

                                          கலிவிருத்தம்

சாடிசொன் னாள்ஏகத் தமிழ்மருதூர் அத்தர்மன்றுள்
ஆடினவர் பற்றுரம்வைத் தார்தமைப்போல் செய்திசொல்ல
ஓடிவந்தான் கள்ளன்என்றே ஓர்ந்துபண்ணைக் காரனவன்
வாடிமுகம் சோர மரத்தில் அடித்தானே. (64)

                                                        சிந்து

அடித்திடு மரத்திலே
         கிடக்கும்பள் ளனைத்தேடி
இடிக்கும் இடுப்புகொண்டை
         இளையாள் வந்தனளே. (65)

சையோகக் குறையாலே
        சதிகாரி மருதூராள்
அய்யோ மரத்திலே
       அடித்தாளோ குடும்பா.  (66)

நெட்டூரீ வன்னெஞ்சி
        நெடுநீலி கனவெள்ள
நட்டாற்றில் உனைத்தள்ளி
        நடந்தாளோ குடும்பா.  (67)

வினைப்பெண்டாய் முதல்கொண்ட
       வெகுபாவி வரப்போறாள்
உனைக்கண் டால்எனைக் கொல்வாள்
       ஓடிப்போ பள்ளி. (68)

கேளெல்லாம் மருதூரில்
        கிரிஈசர் அருள் உண்டு
வாழலாம் சுகிக்கலாம்
        அலராதே பள்ளி. (69)

                                 மூத்தவளின் செயல்

                                     கலிவிருத்தம்

கொட்டிலிலே சென்றிளைய கொம்படக்கிப் போய்கிடக்கச்
சட்டியிலே சோறுகறி தான்எடுத்து மூத்தபள்ளி
பெட்டியிலே வைத்துஎம் பெருமான் மருதூரில்
பட்டினியே தான்கிடக்கும் பள்ளன்முன்பு வந்தாளே.   (70)

                                                    சிந்து

என்னைச் சுகமாய்க்
             கூட்டி வாழ்ந்தாய்
     ஒருகுறை அற்(று) இருக்கையிலே
              தலைகீழாய் வீழ்ந்தாய்

சின்னச் சிறுக்கியைத்
            தேடி எடுத்தாய் . எடுத்ததில்என்
       சேர்க்கையும் வாழ்க்கையும்
          அவளுக்கே கொடுத்தாய்.   (71)

தொடையிற் புண்ணை
           வெளியிலே காட்டேனென்று - இருந்தால்
   சும்மா குதித்தாய்
           மரத்தில் போட்டேன்

விடுவித்துக் கொள்வாய்
             அவளைக் கொண்டு
     பண்ணைக்கார மேற்பிறந்த
             நயினாரைக் கண்டு.  (72)

வரிகண்டா வண்டாடத் தண்டா - அந்த
            மடைச்சிறுக்கி வீட்டினுக்குத் தொண்டா
பிரிவுண் டாக்கு இளையபள்ளி தனையும் -
              மரத்தில் உன்பால்
      பிடித்து அடிக்கிறேன் ஒழியும் வினையும்.  (73)

                            உழவன் பேச்சு

நடந்துகொள்ள அறியாமல் நடந்தேன் - அதனாலே
         நலிந்துநிலை மரத்திலே கிடந்தேன்
கிடந்துகழி யாமல்என்னைக் காப்பாய் - சாய்ந்தவர்தம்
         கிருபையினால் வந்தாய்நீ காப்பாய்.   (74)

                      மூத்தவள் பண்ணைக்காரரிடம் வேண்டுதல்

                                                    கலிவிருத்தம்

சோதிமுகம் வாடுபள்ளன் சொல்லிரக்கத் தால்மரமப்
போதுவிட மூத்தபள்ளி போய்மனைக்கும் போகாமல்
மேதினியில் வாழ்மருதூர் மெய்சாய்ந் தவர்கோயிற்(கு)
ஆதிமுதல் வந்தபண்ணை யான் இடத்தில் சென்றாளே.  (75)

                                                      சிந்து

எங்கள் நயினாரே கும்பிட்டேன்
                   கும்பிட்டேன் ஆண்டே - உமை
       எங்கெல்லாம் தேடி இடைந்து
                   மறுகினேன் ஆண்டே

செங்குளம் வாகைக்குளத்தில் போய்த்
                   தேடினேன் ஆண்டே - பின்பு
       தென்பத்தில் வடிவட் டத்திலும்
                  போனேன் ஆண்டே

புங்கடி யினிலே நிற்கிறீர்
                  என்றார்கள் ஆண்டே - அங்கே
       போனேன் விசாரித்தேன் காணேன்
                   திரும்பினேன் ஆண்டே

துங்கன் வயித்தீ .............
                   நெய்விளக்கு - நடத்தும் வயல்
        சன்னாசி வட்டத்தில்
                   கண்டேன்காண் ஆண்டே.      (76)

விண்ணப்பம் செய்கிறேன் நான்வந்த
                    செய்தியை ஆண்டே - பள்ளன்
        மேனாம்பு தீர்த்தீரே நீர்
                     ஆண்பிள்ளைச் சிங்கம் ஆண்டே

பண்ணைப் பருவம் முடங்கிக்
                     கிடக்குதே ஆண்டே - கோயில்
        பற்றுக்கள் எல்லாம் பயிரெற்று
                     வான்விட்ட லாண்டே.     (77)

வேலைக்கு வாராமல் போனாலும்
                     நான்பிணை ஆண்டே - அடிமெத்தக்
        கிடந்து......
                     வருத்தப் படுகிறான் ஆண்டே

காலைப் பிடித்து எனக்கு
                  ஆணையிட்டுத் தந்தான் ஆண்டே - அவன்
        கால்மரம் விட்டுச் சேர்மானம்
                   செய்வீர் பண்ணை ஆண்டே.    (78)

                                         காளை வருகை

                                         கலிவிருத்தம்

பள்ளிசைத் தாள்வசமாய்ப் பள்ளனைவிட் டாயோ
வெள்ளை நொப்பாய்க் கொடுத்து மீறுபண்ணை யான்கேட்க
முள்ளிநாட்டுக் குலமுளைத்த மருதீசர் பண்ணைக்கு
உள்ள ஏர்க்கால் விதைமாடு ஒக்கவகை சொல்வானே.   (79)

                                                     சிந்து

பெரியதான முகவாளக் கலப்பைதன்
            பேரைநாட்டி ஓர்நாட்டில் இருக்கும்
விரியுமாமல ரோன்நுகம் நாளை
            விளங்குபூவில் வழங்கிட வைத்தான்
கருதும்வேலைக் கயமாம் அக்கரைக்
             கருவூர்த்தேவர் துறையினில் காணும்
தரையில் போனதல்லால் மத்தயெத்தின்
             தான்என்பால் இங்குஇருக்கும் காண்ஆண்டே.   (80)


தென்பொதிய மலை அதனில் சென்று
             தேக்கிலே நல்லவாக்குள் ளதாய்வெட்டி
இன்பம் ஆகிய ஏர்க்கால் நுகக்கால்
             இசைந்தமேழி யுழக்கா ழுக்குத்தி
பின்புநல்ல கயமாம் வள்ளைக்கை
            பெருமையான கொழுப்பட்டு நூல்வடம்
அன்பது சுவடாயுன் வெற்றினம்
           அங்கங்கே பண்ணைக்குண்டு காண் ஆண்டே.  (81)

                                         நெல் வகை

சித்திரக்காலி சீரகச் சம்பா
          செஞ்செம்பாச் சிறுவெள்ளை செம்பாளை
முத்துவெள் ளைப்பெரு வெள்ளை, நன்மலை
            முண்டன காடை கழுத்தான மிளகி
குத்தினாலும் அரிசி படாது
            குறுவை நம்பிசம் பாத்துய்ய மல்லி
இத்தனை வித்தும் சேரிலே கட்டி
            இருக்கி றேன்வைத்து இருக்கிறேன் ஆண்டே     (82)


                                                     காளை வகை

கள்ளக் காளை ஒன்றுண்டு மாக்காளை
          கறுத்த காளை காறான் பின்பு போச்சு
வெள்ளைக் காளை யுடன்சிவலைக் காளை
          மேவுகோயிலை விட்டுவ ராது
கிள்ளைக் காவில் மணிகண்டக் காளையைக்
           கெட்டியாய்க் காணலாம் மலைக்குள்ளே
புள்ளிக் காளைகள் இப்படிப் போனது
          போகத்தான் மற்றுண்டு காண்ஆண்டே.    (83)

மொட்டைக் காளை விரிதலைக் கொம்பன்பின்
        மூக்குப்பீறி குறால் ஒற்றை நாடி
சுட்டிக் காளை மயிலைபொற் காளை
        துரத்தி ஆட்களைப் பாய்வெள்ளைக் காளை
கட்டைக் காளைமுன் பட்டடை பீறி
        கறுத்தக் காளை தொழுமறை செம்மறை
ஒட்டலக் காளை இவைஎல்லாம் களத்திலே
        ஒருமிக்க நிற்குதே பண்ணை ஆண்டே.    (84)

முன்பு நின்று செய்த தொழில்கள்
        மூன்று மொழி பள்ளனுடன்
பின்பு சொல்லு வான்ஓர்
        பிலத்த செய்தி கேள்எனவே
அன்பர் தொழும் தென்மருதூர்
       அத்தர் பண்ணை யான்வயற்குள்
இன்பமுடன் நாள் ஏரிட
        முகூர்த்தம் சொல்லுவானே.     (85)

                                          ஏர் பூட்டல்

                                             சிந்து

ஆதித்த அத்தம் நல்ல தாளிக்கரணம்
          அமிர்த யோகம் பஞ்சமியாம் பஞ்சாங்கம்
சோதிச்சு மீனத்துச் சுக்கிரன் எனவே
          சுருதிஅறிந் தோர்நல்ல முகூர்த்தம் விதித்தார்
பேதிப்புஒன் றில்லைசாய்ந்த பெருமான் பண்ணைப்
           பெருக்கமாய் வாழ்நாள் ஏரிடு போஎன்றே
ஓதிப்பண்ணை நயினார் அனுப்பக் குடும்பன்
           ஏர்க்கலப்பை கொண்டுவர நொடியில் நடந்தான்.  (86)


                                             உழவர் பெயர்கள்

மருதன், கலுங்கன், வேடன், அணைஞ்சான், இருளன்
             மாடன், பெரியான், மொண்டி, வள்ளி உடையான்
அருதன், புலியன், கால் குட்டி, கலியன்
             அரசன், கப்புக்காற் பூலான், சுந்தன், வேலன்
பெரிய சடையன், சாத்தன், வீரன், புங்கன்
             பிச்சன், முருகன், சிங்கன், சண்ணைத்தடியன்
எருதும் பகடும் பூட்டிக் குரவை முழக்கி
             இத்தனை பேரும் நாள் ஏரிட்டே உழுதார்.  (87)

வெகுநேரம் உழுதபின் ஏரை நிறுத்திவிட்டுப்
           பூட்டும் காளைக்குள் ஓர்வெறிப் போர்க்காளை
தகைவோரைப் பாய்ந்துமேற் கேநுகமிட் டோடத்
           தனதுபள்ளர் பின்ஓடித் தவித்துப் போனார்
மகிழ்வாகவே நாறும்பூக் குடும்பன் எழுந்து
           வலம்சுற்றி ஓடிமுன்னே வந்து மறித்துப்
பகையாளரைப் போல்கொம்பைப் பிடித்தான் அடித்தான்
            பயமில்லாமல் பாயவே கதறி விழுந்தான்.      (88)

                                       இளையவளும் மூத்தவளும் வருதல்

                                              கலிவிருத்தம்

இத்தாரணியில் மருதீசர்க்கு ஏற்ற பள்ளன்
பத்தாள் பலவான் பதறிவிழுந் தேகிடக்க
முத்தாரப் பூண்முலையாள் மூத்தபள்ளி பார்க்கவர
அத்தாணி நல்லூராள் அங்கவளும் வந்தாளே.    (89)

                                                     சிந்து

சொன்னமலை உனக்கிடு சோடோ - மிகுத்தபெலத்
          துடியனைக் குத்துவதும் ஒருமாடோ
என்னகதை யாகஇருந்த தய்யோ - புலியானை
          எண்ணாமல் பிடித்தபெலம் பொய்யோ
முன்னம் அயன் விதித்தவிதி அலவோ - காளைகுத்த
          மூர்ச்சை அடைந்தாய் அதைஎன் சொலவோ
பொன்னிதழிப் பரமர் மருதூராய் - கோயிற்பண்ணைப்
           புள்ளிப்பள்ளர் எனவிழித்துப் பாராய்   (90)

என்னைஒரு நாளும் பிரியாயே - நான்வெறுப்பாய்
           எத்தனை சொன்னாலும் குறியாயே
உன்னையே இலக்குஎன் றெண்ணிஇருந்தேன் - மனம்குளிர
           ஒருதரம் ஏறிட்டுப் பார்பின் வருந்தேன்
சன்னையாய்ப் பார்த்துக்கொண்டு போனாள் - மூத்தபள்ளி
           சந்தோஷ மாய்ச்சிரிக்க லானாள்
பின்னமாய்ச் சிவன்பழுதில் தள்ளார் - சாய்ந்தவர்தம்
           பேர்க்குடி நீஎழுந் தீர்ஏடா பள்ளா.   (91)

                                            உழவன் எழுதல்

                                                  கலிவிருத்தம்

பள்ளியர்கள் சொன்ன பாதக வார்த் தைசெவிக்(கு)
உள்ளிசைவ தால்தளர்ச்சி யொடுவிழித்துப் பார்த்துப்
புள்ளிமறிக் கையார் புடார்ச்சுனலிங் கத்தை எண்ணித்
துள்ளிஎழுந்து ஏர்பூட்டச் சோர்ந்தபள்ளன் நின்றானே.  (92)

                                                நாற்றுப்பாவுதல்

                                                       சிந்து

காளை குத்த விழுந்த பள்ளன்
      வாளை ஒத்த விழியார் கண்காண
             மெய்ப்போடு எழுந்து சற்றும்
                     நாணம் உற்றும் நகைத்தான்

தாள் பதித்து நிலத்தினில் நின்றான் - விலக்கி
        ஏர்பூட்டித் தனது பற்றில்
                 முகமுழுதும் தரிசு
                        தடித்தும் அறுத்தான்.    (93)

                                              உரைப்பாட்டு

தேளி போத்தி ஒதுங்க உள
            வேழும் ஒக்க உழுது மரந்திருத்தி
அடி, தேவேந் திரனை வாழ்த்தி நன்முகூர்த்தம்
           பிசகாமல் சாய்ந்தவர் பொற்பதத்தை நெஞ்சில்
நடுவில் வைத்து விதை எடுத்து
            நாற்றுப் பாவினனே.     (94)

                                                  சிந்து
               
நாற்றுப் பாவின விதைக்கோர் ஏழு
               நாள்நீர் பாய்ச்சி
      நாலு நாழிகை செறுத்து அப்பாலும்
                வெட்டி விடுத்தான்

சேற்றுக் கால்முழைக் கறுப்புக் கொடுத்து
                எழும்பித் தலைக்கவிந்து செருமி
      எட்டிவளர் நாற்றைப் பருவம்
                இட்டுப் பிடுங்க

ஆற்றுக்கால் ஆட்டியர்க்கும் கொடுத்து
                மதுக்குடித்து எழும்பி
       அத்தர்மரு தீசர்பண்ணை
               ஆண்டவன் முன்உரைக்க

வேற்றுப்பேச் சுரையாமல் - ஏர்க்
               கலப்பை கொடு
       செல்என்று விளம்பு மொழிப்படிக்குப்
                பள்ளன் உழுந்தொழிற்கு நடந்தான்.    (95)

                                                கலிவிருத்தம்

ஆரிதழி சூடுசடை அத்தர்மரு தீசர்பற்றில்
ஏருமுழுவ தெங்குரையும் என்றுபள்ளன் கேட்கநல்ல
காரிய மேஎன்று பண்ணைக் காரன் அவிசேகப்
பேரியுழ வென்றுசொல்லப் பேசாதங்கு ஏகினனே.   (96)

                                                          சிந்து

அக்கரைப் பற்றில் அவிஷேகப் பேரி
      ஒக்க உழுது தெழிஆக் கினபின்
             இக்கரைப் பற்றில் உழவை நெருக்கி
                    எங்கும் உழுவித்தே

சொக்கமாய்க் கயமரமும் அடித்துத்
       தோன்று பெரம்பு மிதித்துக் - கயல்கள்
                துள்ளு தெளிக்குள் நாற்றைப் பிடுங்கிச்
                        சுமந்து குவித்தபின்

வக்கணைப் பண்ணை நயினார் கையினால்
        மஞ்சணை எண்ணெய் வாங்கிச் சிட்டியில்
                வெற்றிலைப் பாக்கும் ஈசானத்
                         திக்கினில் அமைத்தே

செக்கர் வானக்கனத்தை வாழ்த்தித்
    ....................................
                   தீர்க்கமாக் குரவை இடியின்
                            ஆர்க்க முழக்கியே.     (97)

                                               நாற்று நடுதல்

செங்கையால் நாற்றைப் பண்ணை நயிந்தே
                சிறப்பாய் எடுத்துத் தாரும் எனவே
      தெரிந்து கொடுக்க வாங்கிச் சாய்ந்த
                 சிவனைத் துதி செய்தே

பங்கய முகத்தழகு நெற்றியில் இரண்டு முதலைப்
                பகிர்ந்துதான் வைத்துப்
       பட்சத்துடனே எட்டுத்திசையும்
                பார்த்துக் கும்பிட்டே

இங்கிதமாக நிரையை வகுத்துக்
                கொங்கைக் குடங்கள் குலுங்கப்
       பள்ளியர் இரண்டு பேருந் தெழிக்குள்ளே
                   கால்வைத்து இறங்கிப் பிணங்கியே

மங்களம் எனக்குரவை மூன்றும்
                  வாய்கொண் டெழுப்பிக்
      குனிந்து நெருங்காமல் கலவாமல் நாற்றைப்
                   பறிக்க வாரும் பள்ளீரே.   (98)

                                                  உழத்தியர் பெயர்கள்

சின்னி வடிவி பெரிய சிவனி
       செம்பி கருப்பி வள்ளி திருவி
                 செல்லி கறும்பி அருதி யணைஞ்ச
                        செவிடி ஆவுடை

நன்னி வன்னிச்சி குருந்தி மாடி
        நாகி தவுடி பூலி வேலி
                 நாச்சி சடைச்சி சுந்தி இருளி
                        நல்லி  பூரணை கொன்னச்சி

சின்ன நாச்சி காளி கூளி
        பொதுவி அய்யன் அடியாள்
                    குப்பி காத்தி பொய்யிலாள்

பொன்னியும் செங்கைச் சுறுக்கினுடனே
        புதிய தெளிக்குள் நாற்றை எடுத்துப்
                  போட்டிங்கு ஒருவர்க் கொருவர்தாம்
                          நட்டுக் காட்டும் பள்ளீரே.  (99)

                                           எள்ளல் பேச்சுகள்

                                              கலிவிருத்தம்

முக்கண்மரு தீசர்பண்ணை முந்தநட வேணும்என்றும்
அக்கதிரை நாற்றெடுத்து வேர்வைசிந்த வந்தபள்ளி
ஒக்கலையில் பிள்ளைதனை ஓடிப்போய் வாங்குபள்ளன்
கைக்கடங்காக் கொங்கைரண்டும் கட்டிப் பிடித்தானே,    (100)


                                                           சிந்து

பின்னு பவளச் சடையினார் - மலர்ப்
                பொன் இதழித் தொடையினார்
      பேசும் பெருமாள் சாய்ந்த நாதர்
                 பெரிய கோயிற் பண்ணையில்

கன்னி காணிக்கு அடுத்த யாழங்
                 காளநெய் விளக்குப் புறம்ஒரு
       கட்டளை யுடன் கிராமராய
                 பட்டர் வயலும் நடுகச்சே

பொன்னி கழுத்தில் வழித்த மஞ்சணைப்
                 பூச்சிலே - விழி வீச்சிலே
        புருவக்குனிப்பு நெரிப்பிலே - மயல்
                  பெருகச் சிரித்த சிரிப்பிலே

தன்னியத் துணை நெருக்கிலே - பள்ளன்
                   பின்இதழ்த் துவர் முருக்கிலே
      தவிக்கிறான் அனுபவிக்கவே - கரம்
                  குவிக்கிறான் பாரும் பள்ளிரே.  (101)

அத்தி தரித்த தோளினார் - சிவ
                  பத்தர் வழுத்தும் தாளினார்
      ஐங்கரன் குகன் பணிபு டார்ச்சுன
                   லிங்கர் பண்ணை வயற்குள்ளே

தத்த மாக நாறும்பூ நம்பி
                 ராச வல்லிக்கோன் வயலுடன்
       தழைக்கும் லேபன சுந்தர நம்பி
                 தனது வயலும் நடுகச்சே

முத்திரை விட்டு எறிந்ததும்
                 வடத்தினை விட்டுப் பறிந்ததும்
       முக்கி கூப்பிட நடந்ததும் - தெழி
                  நாற்று நிரையும் கிடந்ததும்

இத்தனை சளம் கண்டதும் - பள்ளன்
                  மத்திமம் மிகக் கொண்டதால்
        எல்லாத் தாட்சியும் பண்ணையான் - அங்கே
                  நில்லாத் தாட்சி பள்ளீரே.   (102)

கலைப்பெண் இருக்கும் அஞ்சத்தார் - செல்வம்
                  நிலைப்பெண் இருக்கும் நெஞ்சத்தார்
      காணுதற்கு அரியவர் மெய்சாய்ந்த
                   தாணு வரதர் பண்ணையில்

தலத்துக்குள்ள செங்குளப் பற்றும் - வாகைக்
                     குளத்தங் கரைப் பற்றும்
         சம்பிரம மானன ஆத்தான
                     நம்பி வயலும் நடுகச்சே

அலைச்சுக் குலைஞ்ச நாற்றிலே - சிலர்
                  பிறக்கித் தெரிந்து சேற்றிலே
        அரிசி அமிழ்த்திப் பதிக்கவே - அவள்
                   புரசு சம்மட்டி மிதிக்கவே

வலிச்ச சிறுக்கி கொங்கையைப் - பிடித்து
                   அடிக்க ஓங்கு செங்கையை
        மணிக்கட்டில் பள்ளா தறிப்பேன்என்று - அவள்
                   எதிர்த்திட்டாள் பாரும் பள்ளீரே. (103)

செம்பியும் சின்ன நம்பியும்
           நெட்டைச் சிலம்பியும்
                        கட்டைக் கரும்பியும்
                                  சித்தனுக்கே மெய்சாய்ந் தவர்

தம்பிச் சான்மகள் பொதுவியைப் பார்த்துச்
        சன்னையாய் வையத் தொடங்கினார்
                   சாட்சிநீ ஏடி யீச்சி பாரென்று - தன்
                            வாய்திறவாது அடங்கினாள்

வம்பளப்பதில் மிஞ்சினாள் - பின்பு
          வலியகோப நெஞ்சினாள்
                    மார்பில் முலையை அறுக்கட்டோ - பத்து
                              வார்த்தைக்கு அப்பாலும் பொறுக்கட்டோ

கெம்பிற வாயைக் கிழிக்கட்டோ - என்ற
            கெருவக் காரி மொழிக்கட்டோ
                     கெடிப்பெண் அவர்கள் உதட்டிலே - எட்டி
                                   இடிக்கிறாள் பாரும் பள்ளீரே. (104)


இந்திரன் பணி பாதனார் - தமிழ்ச்
       சுந்தரன் விடு தூதனார்
              எங்கள் சாய்ந்த நாதர் பண்ணை
                       இலுப்பக் குறிச்சிப் பற்றுடன்

தந்திர சிகாமணி நம்பி காந்தீசுர நம்பி
         சதாசிவ நம்பி
                 தழைக்கும் விக்கிரம பாண்டிய நம்பி
                            தங்கள் வயலும் நடுகச்சே   

தொந்தி அணைஞ்சிக் கடுக்கவே - நின்ற
        சுந்தன் கொழுந்தன் சரசமாய்த்
                  துட்டப் பயல் அங் கவள்கைக் கிடுக்கில்
                            சூட்சமாய்க் கூச்சம்காட் டினான்

அந்தவகை கண்டவள் பள்ளன் - பிலவந்
        தனவன் கன்னத்திலே
                  அடித்ததும் அப்பயல் துடித்ததும் சண்டை
                            பிடித்ததும் பாரும் பள்ளீரே. (105)

ஆறு தலையில் சுமந்தவர் - மருது
                 அடியில் குடிகொண்டு அமர்ந்தவர்
           ஆய்ந்தகலை வல்லவன் சித்தனுக்குச்
                  சாய்ந்தவர் பண்ணை நடுகச்சே

கூறு பகிர்ந்த நிரைக்குள்ளே - சின்னி
                  குவித்த நாற்றுத் திரைக்குள்ளே
       குடிக்கு மாகக் குமட்டியே - எடுத்துக்
                  கொட்ட வருகுது எனச்சொல்லி

ஏறிவரம்பி லேநின்றாள் - பள்ளன்
                 ஓடி விழுந்து மேசென்றான்
       என்னடி உனக்கென்னடி பாக்கைத் தின்னேடி
                 இந்தா தின்னேடி

மீறு மயக்கம் போமேடி - நெஞ்சைத்
                  தடவு பேரைப் போல
        விம்முமுலையைப் பிசைந்து பிசைந்து
                 கும்முறான் பாரும் பள்ளீரே. (106)


                                                     பயிர் வளர்ச்சி

                                                      கலிவிருத்தம்

மண்டலத்தில் மீறு மருதூரில் கோயில்குடி
கொண்ட முக்கண்ணார் எனை ஆட்கொண்ட நக்கனார் அருளால்
நண்டசைக்கும் நாளேரிட்டு நாளையிலே கூன்நிமிர்ந்து
விண்டலத்தை நோக்கி விரிகுருத்துப் பார்த்ததுவே.   (107)

                                                   பயிர் அரிதல்

                                                            சிந்து

உய்யலாம் எனமீறி நடும்
                      செய்யெலாம் அமிர்தம் தேறி
       உட்கறுப்பொடு குழைந்தே - வளரப்
                     பயிர்களைக் கழைந்தே

கையினால் முழம் இரண்டே
                      என வளர்ந்தே
     ......................
          ....................

அய்யர் சாய்ந்தவர்க்கு இணங்கித்
                     தொழும்பர் போல்தலை வணங்கி
    ..........................
                       யெல்லாம் சருகாடிச் சென்று

கொய்யவே பள்ளன் ஓடி மீறி
                 வார்த்தைகள் விண்டான் - பண்ணைக்காரன்
                           நாள் கதிர் கெண்டான். (108)

அறுப்பெல்லாம் அறும் என்றான் - பண்ணையாள்
                     எல்லாம் ஒக்கச் சென்றார்
          அங்கங்கே சிலர் புகுந்தார் - வயல்
                     எங்கும் கூறுகள் வகுந்தார்

மறுத்துக் கூறெங்கும் நிரைந்தார் - அரி
                     வாளைப் பூட்டிக்கை விரைந்தார்
          வயலில் வீழரி பார்ப்பார் - கட்டு
                      வைத்தபால் களம் சேர்ப்பார்

நிறுத்து போர் சரித்திடுவார் - பிணை
                  யலுக்குள்ளாய் கதிர் விடுவார்
      நெல் எல்லாம் விழப்பெயர்ப்பார் - வைக்கோல்
                  தொல்லையால் உடல் வெயர்ப்பார்

திறத்தால் பொலி கூட்டிப் - பதர்
                  முறத்தால் வீசிக் காட்டித்
      திட்டமாய்ப் பிள்ளையார் வைத்துக் கும்பிட்டு
                  அப்பால் பள்ளன் எழுந்தான்.  (109)

                                       நித்திய பூசைக்கு நெல்

                                                கலிவிருத்தம்

அத்திதரித் தோர்மருதூர் அத்தனார் நெற்களஞ்சியத்தில்
புத்தி அளக்கின்ற தன்றியார்க்கு அளப்பதென்று பள்ளன்
பத்தியுடன் கேட்பதிலே பண்ணையான் சொற்படிக்கு
நித்திய பூசைக்கு முதல்நெல் அளக்கச் சொல்வானே.    (110)

                              
                                 திருப்புடை மருதூர்ப் பள்ளு முற்றும்

Related Content