logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

துறைசை மாசிலாமணி ஈசர் அந்தாதி

மகாமகோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ வே சாமிநாதையர் இயற்றிய  

                                                திருச்சிற்றம்பலம் 

1.  வாழும் துறைசை வளர்மாசி லாமணி வள்ளல்மலத்
     தாழும் படிஅடி  யாரைஒட்  டாஅருள் ஆகரனைச்
     சூழும் படிஉண் விடையாய் எனத்துதி சொல்லும் துயர்
     போழும் படிநுங் களைஇனி தாள்வன்நற்  புத்தியிதே.

2. புத்தி இலாதவன் நின்சீரை வாழ்த்திப் புகழுதற்குப் 
    பத்தி  இலாதவன் நின்அடி யார்கள்தம் பால்மருவச்
    சுத்தி இலாதவன் எங்ஙனுய் வேன்வளந் தோய்திருக்கோ
    முத்தியில் ஆதவன் நேர்மாசி லாமணி முன்னவனே .

3. முன்னவ  னேதொல் மரத்தடி மேவி முனிவர்க்கிதம்
    சொன்னவ னேதுறை சைக்கர சேஎச் சுரர்களுக்கும் 
    மன்னவ னேபவ னேமாசி லாமணி வன்னிஒளி 
   அன்னவ னேஅடி யேனையும் ஆளல் அழகுஉனக்கே.

4. அழகார்தென் கோமுத்தி  வாழ்மாசி லாமணி அண்ணலைத்தேன்
     ஒழுகார் அணியும் சடையாள வாள்கண் உமையொடும்வாழ்
     குழகாவென் றேத்திற்  குறைதீர்த்து அடியர் குழாத்தினொடும் 
     பழகாத பாவம் தொலைத்தே அருளுவன் பாவிநெஞ்சே. 

5. பாவித்து அறிகிலன் நின்னை நின்பாத பதுமத்தினைச் 
   சேவித்து அறிகிலன் மங்கையர் மோகத் தினையகல 
   ஓவித்து அறிகிலன் எங்ஙன்உய் வேன்நன்கு உணர்ந்திடும்அவ்
   ஆவிக்கு அமுதனை யாய்திருக் கோமுத்தி அற்புதனே. 

6.  அற்புத னேதிருக் கோமுத்தி வாண அமுதுஅயில்கா(து)
    அற்புதர் வாழ முனமாலம் உண்ட தயாளஉடல்
    புற்புதம் நேர்வ தெனநினைந் தேநின்புரா  ணம்படித்து 
   அற்புத ஓப்பி உள்ளே நினைக்காண அருள்புரியே.  

7.  அருளிடத் தாய்திருக் கோமுத்தி நாத அமரரன்று
     வெருளிடத் தாய விடமயின் றோய்விகிர் தாகொடிய
     மருளிடத்  தாதன் றனைப்போகட் டேயிவ் வருத்தமறத்
     தெருளிடத் தாரொடும் சேரச் செயாத செயலெவனே.

8.  செயலோடு வாக்கும் மனமும் நின்றாளைச் செறிதலின்றி
     அயலோடும் ஈங்கிதற்கு யானென்செய் கேனர வாபரணா
     கயலோடு நீர்ப்பொன்னிக் கோமுத்தி வாண கவலையொழிந்
     துயலோ டுறஅடி யேற்கோ ருபாயம் உரைத்தருளே.

9.   உரையாமல் நின்பெயர் நின்சீரை நித்தமும் உன்னியுன்னிக்
      கரையாமல் நாள்கள் பலகழித் தேபுன் கவலைஉற்றேன்
     வரையாமல் நின்னை வழுத்துவன் ஆளல் வழக்கதன்றோ
     திரையா மலக மலிதிருக் கோமுத்திச் சிற்பரனே.

10 .  சிற்பர அம்பலத் தானந்த நாடகம் செய்துஅருள்வோய்
         நற்பர மேட்டி நளினா தனத்தன் நணுகரிய 
         பொற்புஅர வான்றுறை சைக்கர சேயெனப் புந்திநினைந்
        தற்பக லேத்தில் கிடையாப் பொருளு மவனியுண்டே.

11.  அவமே வருந்தி யகமே நவிற்றி யலைந்தலைந்து 
        தவமே செயாத தவறுடை யேனையுந் தாங்கனன்றே
        நவமே தருவளக் கோமுத்தி  நாத நவில்பரம 
        சிவமே கவாகனன் முன்னா மமரர் சிகாமணியே.

12.   மணிவாக் கருளி மறையவர்க் காத்த வகையினையுள்
         எணிவாக்கு மெய்மன மூன்றுநின் றாளிணைக் கீந்துநினைத் 
        துணிவாக் குறித்தனன் ஆண்டரு ள்வாய்வளச்  சோலைவெம்மை
        தணிவாக்கு கோமுத்தி மாநகர் வாண தயாநிதியே.

13.  தயாநிதி யேகற் பகதரு வேதன தாஇந்திரா
       நயாஎன வேமுழு மூடரை  ஏத்தி நலிந்துநொந்தேன் 
       கயாதிகள் மேவுறு கோமுத்தி வாணகங்  காதரவெம்
       பயாதிகள்  தீர்த்தருள் பாலிப்பையோ இந்தப் பாவிக்குமே.

14. பாவூடு உழலும் குழல்போல் அலையுமிப் பாவியின்தன் 
       நாவூடு மெய்ம்மை யுறுநாள்எந் நாள்நவி லாய்மதியம்
      காவூடு செல்லும் திருக்கோ முத்தீச கங்காதரவெண்
       சேவூடு மேவும் அழகா கயிலைச் சிவக்கொழுந்தே.

15.   சிவமார் அடியர் திருக்கூட்டத் தோடு செறிதலின்றி
        அவமார் கொடியர் மருள்கூட்டத் தோடும் அணுகிநொந்தேன்
        தவமார் முனிவரர் சித்தர்கள் யோகர்கள் தங்கியென்றும் 
         நவமார் வளத்திருக் கோமுத்தி மேவிய நாயகனே.

16.  நாயக கோமுத்தி நாத கங்காதர நஞ்சமுறும் 
        பாயகத் தூடு பயில்பரந் தாமன் பணிபதத்தாய்
        சேயகம் நன்கிலை யேனும் பராமுகம் செய்திடுதல்
        தாயகம் உண்டுகொ லோஅடி  யேனுயச் சாற்றுதியே.

17.     சாற்று கிலேன்நின் பெரும்புகழ் தன்னைத் தளர்ந்துருகிப்
          போற்று கிலேன்நின் சரணார விந்தம் புகைசினத்தை 
         ஆற்று கிலேன்விடை யத்திடை ஓடுறும் ஐந்தினையும் 
         பாற்று கிலேன்திருக் கோமுத்தி யாய்அருள் பாலிப்பையே.

18.    பாலித் திருநதிப் பைதிரக் கச்சிப் பரமமிக 
        ஆலித் தெழுநதி வேய்ந்தாய் துறைசை அமலவெனை 
        வாலிக் கனைய மொழியார் மயலில் வருந்தவிட்டே
        ஓலித்துப் போற்றவும் வாளா இருத்தல் உனக்கழகே . 

19.    உனதார் அருளை உறுவதென் றோதுய ருற்றலைந்து 
          தனதாஎன் றேபல  வீணரை  ஏத்தித் தளருகின்றேன்
          வினதா சுதன்பதி போற்றும்  துறைசை விமலவையா
          னனதா பதசனகா தியர்தம்மை அன்று ஆண்டவனே. 

20.     ஆண்டாண்டு தோறும் நுகர்போகம் தன்னை  அனுபவித்தே
           மாண்டாங் குறுவதல் லால்எவர் தாம்மன  மேநிலையார் 
            சேண்டாங்கு மாளிகைக் கோமுத்தி யானைத் திகம்பரனைப் 
          பேண்டாங்கு  எனையெனப் போற்றுதி யோடும் பிறப்பிறப்பே.

21.     பிறக்கும் துயரமும் நோய்பல வாட்டப் பெரிதுமயர்ந் 
           திறக்கும்  துயரமும் யானினி நீங்க வினிதருள்வாய்
          நறக்குந் தளவுமை வாமத் தினாய்அர நாமத்தினாய்
          சிறக்கும் தமிழ்த்திருக் கோமுத் திமேய திகம்பரனே .

22.      திகம்பரன் தில்லை வனத்தாடு றும்குஞ் சிதபதத்தான்
            இகம்பரம்  கான்ற பதமாக்கொள் வோர்க்குஅரு ளெம்பெருமான்
            நகம்பரன் கோமுத்தி நாயகன் தேவர்கள் நாதனினி 
           அகம்பர வாத மொழித்து ஆளுவனிவ் வடியனையே.

23.    அடியோ வதலங்  கடந்துசெல் லாநின்ற தம்புலியார்
          முடியோ விசும்பு கடந்ததெவ்  வாறுனை முன்னுவனியான் 
         துடியோ வரிய கரத்தாய் துறைசைச் சுராதிபவெப் 
          படியோ நினைநினைப் பார்கடல்  சூழிப் படியினரே. 

24.    படியென்றும் இன்றி  யொளிர்பர மேட்டி பராபரவெண்
         கொடியென்றும் ஏறெனக் கொண்டாய்  துறைசை வைகும்பகவா
          மடியென்று மேவு மயக்கங்கள்  யாவும்  மனத்தகன்றுன் 
          அடிஎன்று கண்டு களிப்பேன் அடியேன் அவனியிலே.

25.       அவனிமுன்  னாயஎண் மேனிய  வாடர வங்கத்தவிப் 
            புவனி கொண்டாடும் துறைசைப் புராதன புத்தமுதே
             நவனிதியாம்  நின்சர  ணாரவிந் தங்கள் நான்பணிந்து
             தவனிதம் ஆற்றல் என்  றோபல வாய தளர்வகன்றே.

26.      தளரத் தளரக் கவலைகள் வந்தெனைத் தாக்கவுமியாழ் 
           உளரத்த நங்கையர் மோகத்தில்  மேவி உழலுகின்றேன் 
           வளரத்த நந்தன மாக்கோமுத்   தீச  வழுத்தினர்பால்
           கிளரத்த வாசம் கெழுமத்த என்றுஉனைக் கிட்டுவனே.

27.     கிட்டாத ஒன்றும்உண்  டோநின் கருணை கிடைத்திடிற்றே
          மட்டார் கடுக்கை வனைசடை யாய்சிறு மைந்தரென்றும் 
          வட்டாடும்  வீதித் திருவா வடுதுறை  மாநகராய்
          தட்டாதுன் தாளைச் சதாகாலம் ஏந்துத் தகையருளே.

28.     தகையும்  கவிசொலும் சால்பும் பலகலை தாம்பயிலும் 
          வகையும் சினமகல் வண்ணமும் மேவ வரமருள்வாய்
          பகையும் உறவும் இல்லாதாய் அதுல பராபரவெத் 
          திகையும் விசும்பும் புகழும்  துறைசைச் சிவபரனே. 

29.     பரமன்னும் சிந்தை அவரோடு நாளும் பயில்வொழிந்தா
           துரமன்னும் தீயர்கள் நட்புறு வேனைத் துறந்துவிடேல்
          கரமன்னும்  செந்தழ லாய்திரி சூல கபாலஎன்றும்
           வரமன்னும்  கோமுத்தி வாழ்மா சிலாமணி மாநிதியே. 

30.    மாவொன்று கொன்றை வரநதி வேய்பவ ளச்சடையான் 
          பாவொன்று கோமுத்தி வாணன்எண் ணான்கறம் பாலித்தருள் 
          ஆவொன்று பூசை செயவதை யாண்ட வழகறைய 
          நாவொன்று பெற்றனன் அந்தோ இதற்கென்ன நான்செய்வனே.

31.       செய்வாய் கழையொளிர்  கோமுத்தி யானைத்தியா  னம்செய்து
            நைவாய் அலையவன் நாமங்கள் நாளும் நவில்தலிலாய்
            ஐவாய் அரவணி யத்தாவென் றேத்தி அலரவன்தாள் 
            பெய்வாய் அலையெங்  ஙனமுய்தி யோகொடும் பேதைநெஞ்சே. 

32.     பேதையர் நோக்கம்  தினநோக்கி யுந்துறு பித்தரொடும் 
           வாதை அனந்தந் தரம்செய்து மிக்க வருத்தமுற்றேன்    
           சூதை அடரும் முலைமலை மாது இடச் சோதிகொடும் 
           தீதை ஒழித்தருள் கோமுத்தி வாழும் சிவக்கொழுந்தே.

33.    கொழுந்தும் மருவும் மணமார் மலரும் குளிரடிதூய் 
          அழுந்தும் சுகத்தின ரோடடி யேனையும் ஆளல்நன்றே
          விழுந்தும் துதித்தும்  கரைவார்க் கருளும் விமலவுறின் 
         அழுந்துன் பகற்றும்  திருக்கோமுத் தீச  அருட்கடலே.
  
34.    அருளா ரிடத்த னவையார்  நடத்த னனுதினமும் 
          தெருளா ரிடத்தன் பிலாமா திடத்தன் திறன்மிகவுற் 
          றிருள்பா  ரிடத்த னிவர்பா ரிடத்த னெவருங்கண்டு
         வெருளார் படத்தன் துறைசைப் பிரானென் விழுத்துணையே. 

35.  விழுமெழுங்   கோமுத்தி  எங்கேயென் றென்னை விளம்புமுவந்(து)
       எழுமெனை ஆளுவன் கொல்லோ  அவனென்று இயம்புந்திசை 
        தொழும்பசு வாய்வரி னன்றோ அருள்வன்  துனைந்தெனுநின் 
        றழுமலங்  காரஞ் சிதைக்கும் அவட்கின் றருளண்ணலே.

36.   அண்ணியர் தங்கள்சிந் தாமணி கோமுத்தி யத்தனித்தன் 
         பண்ணியன்  மென்மொழி பங்கங்கங் காளன் பதமலரை 
          எண்ணி யருச்சித் தருந்தமிழ் பாடி இறைஞ்சமுன்செய்   
        புண்ணி யமின்ன தெனவோர்ந் திலனிந்தப் பூதலத்தே. 

37.  பூவோ இரதம் பொருமுனி யோமலை பொன்றலில்கூர்
          ஏவோ முகுந்தன் இருசுட ரோவிர தத்துருளா
      மாவோ சதுமறை யெண்ணான் கறமும் வளர்த்தருளும் 
       ஆவோ மனைவளக் கோமுத்தி வாழுமை யானனுக்கே.

38.  ஐயா னனனை அரவா பரணனை ஐங்கரனைக் 
        கையா றிரண்டு டையானைப் பெற்றானைக் கவரியுறை 
       மெய்யானைக் கோமுத்தி மேலானைப் போற்றி விழைந்துநெஞ்சம் 
       நையாமல் ஏழையர் பால்ஓடு மால்என்ன நான்செய்வவே. 

39. நான்எனது என்னும் அபிமானம் அற்றுன் நறுமலர்த்தாள் 
      தான்எனது என்னும் படியடி யேனுக்குத் தந்தருள்வாய்
     வான்எனது என்னும் பொழில்திருக் கோமுத்தி வாணவெழில் 
     மான்எனது என்னும் விழியொப் பிலாமுலை வாமத்தனே. 

40.  வாமத் தொருத்தி தனையும் துறைசை வரன்குடிலச் 
       சேமத் தொருத்தி தனையும் கண்டாளிச் சிறுமருங்குல் 
       காமத் தொருத்தி தனைமறந் தாள்பொற் கமலையெனும் 
       நாமத் தொருத்தி தனைநிகர்த் தாணிற நங்கையரே.

41.  நங்கைத் திருமடந் தைக்குரம் ஈந்தருள் நாரணனோர் 
      பங்கைக் கவர்ந்தனன் பங்கயனோர் பங்கைப் பற்றினன்விண்
      கங்கைச் சடையர் திருக்கோமுத் தீசர் கறுத்துவரும் 
      வெங்கைக் கரியுரித் தார்க்கத னான்மெய் வெளியென்பரே. 

42.    வெளியோ டிடவம்  புவித்தேர் செலுத்தி விரைந்துசித்துக்
         களியோ டிடமுப் புரஞ்செற்றல்  போன்ற கதையிருந்தும் 
          அளியோ லிடும்பொழிற் கோமுத்தி வாண ரருஞ்செயலை 
        தெளியோ டுணர்தலில் லாதே யுழல்வர் சிலரிதென்னே .

43. சிலருரு மாறிவிண் மீதே திரியச் சிலரிரியக் 
      கலர்சில  ரேற்றுரு வஞ்சிதைந் தோடக் கவின்றுறைசை
      மலர்பரன் தக்கன் மகஞ்சிதை  திட்ட  வகையறிந்தும் 
      பலரவன் சேவடி போற்றா  திருக்கும் பரிசெவனே. 

44.  எவனைந் தொழிற்கு மிறையென் றியம்பும் இயல்புடையான் 
       அவனைந் திரக்கு மவர்க்கருள் கோமுத்தி யண்ணலைம்மு 
       கவனந் திமேனியன் ஞானியர் தந்நெஞ் சகத்துறைவோன்  
       பவனென்   றுநித்தம் துதித்தே அருச்சனை  பண்ணுநெஞ்சே.

45.  பண்ணீர் தினந்துதி பங்கயத் தாளைப் பணிதல்செய்யீர்
      எண்ணீர் அவனை இயம்பீ ரெழுத்தஞ் சுமேதமற
      நண்ணீ ரவன்றலஞ்  செய்யீர் வலமவன் நல்தவரோ 
     டுண்ணீர்எவ் வாறுநங்  கோமுத்தி யானரு ளுற்றிடலே. 

46.  உற்ற இடத்து நினையோர்ந் துருகல் ஒழியத்துயர் 
       அற்ற இடத்து நினையேற் கருள்வைகொல்  அவ்விரண்டும் 
       பெற்ற இடத்து நினைந்தார் அலதருள் பெற்றவரார்
        கொற்ற இடத்து வலிதெறும் கோமுத்திக் கொற்றவனே.    

47.  கொற்றவர் ஆயினும் இல்லற வாழ்க்கை கொடிதென்றுன்னி 
       அற்றவர் ஆயினும்  இல்லற வாழ்க்கை யடைந்துஞற்றும் 
       மற்றவர் ஆயினும் கோமுத்தி யானை வழுத்திலரேல்
       உற்றவர் ஆயினும் பற்றவ ரோவ வுறுதியுண்டே.     

48.      உண்டாகும் ஊறு நினையா தடியன் உனதடிக்குத் 
          தொண்டாகும் நாளும் உளதோ குகற்குட் சுரந்துபயம்
          செண்டாகும் சீரொப் பிலாமுலை  வாமத் தினாய்கருணை
         கொண்டாடு வாகனன் தந்தாய் துறைசைக் குருபரனே.  

49.  குருவாய்த் திருவுருக் கொண்டற வோர்க்குண்மை கூறியநின்
        திருவாய் மலர்ந்தடி யேனுய வோருண்மை செப்புநலம்
        வருவாய் இலாதபுன் வாழ்க்கை யனுய்யும் வகையறியேன்           
       கருவாய் முளைத்தருள் கோமுத்தி நாத கங்காதரனே. 

50.  கங்கா நதிச்சடைக் கங்காள கோமுத்திக் கணுமையோர் 
        பங்கா னதிகம் பரவலஞ் செய்யப்பங் கானதென்றாள் 
        எங்கா னதிக்கொடிப் பிப்பில மித்தவர் எங்குளர்மற்
       றிங்கா னதிப்பிய மெங்குண்டென்  னேனிருந் தென்பயனே. 

51.  என்பய னென்றுண ராதரி யோடும் எதிர்த்துடற்ற 
       முன்பய னாப்பட் சிரங்கொய்த  செங்கை முதலவதோற்
      புன்பயன் பேதுமி லார்வாழ் துறைசை புகுந்துறைய 
       இன்பயன் மாதக் களித்தாய் கருணை இருந்ததென்னே. 

52. இருமா வருந்தி யுருமாறு  முன்னம் இறைஞ்சமனம் 
      வருமா பொறியும் பொருமாவிவ் வாறென மாழ்கினன்யான் 
       திருமா தவன்கட் டிருமா மலாலத் தினையயின்றோய்
       தருமா திமிக்குக் கருமாறு கோமுத்தி சங்கரனே. 

53. சங்கரன் தேவி சகிதன் துறைசைச் சதாசிவன்முன் 
       னம்கரன் ஆதியர்ச் செற்றோற் கரியன் நளினமணி
       கங்கரன் ஐங்கரன் தந்தைகங் காதரன் காதலர்பால்
      தங்கரன் பிப்பிலத் தண்ணிழ லானென்று சாற்றுநெஞ்சே. 
  
54.  சாற்ற இனிக்கும் புகழ்திருக் கோமுத்திச் சங்கரனைப்
       போற்ற இனிக்கும் புகழ்புண் ணியங்கள்  பொருந்துநுமை 
       ஆற்ற இனிக்கும் இதைவிடுத்தே பொன்று அமரரடி 
      தூற்ற இனிக்கும் மலர்தேடும் உங்கள் துணிபெவனே.  

55. துணிமதி யாளர்நம் சொன்னத் தியாகர் துறைசைவெற்பில்
      தணிமதி யாளுமுக மடந்தாய் இங்ஙன் சாற்றிடில்நீ
      பிணிமதி யாளர்என முகம்வா டிப்பெரி தும்நொந்து 
      அணிமதி யாளர் வருவார் அவர்க்கென் னறைகுவனே.   

56.  அறைந்திட முற்றுங்கொ லென்றுயர் நீக்க அடைபவர்யார்
       குறைந்திட முற்றுங்கொல் நின்னையல் லாதருள் கூரெங்கணும் 
      நிறைந்திட  முற்றுங்கொள் காவிரிக் கோமுத்தி நீணகர்வாய்
     உறைந்திட  முற்றும்ஒப் பில்லா முலைக்கரு ளுத்தமனே. 

57. உத்தம மாதவர் யோகியர் சித்த ருறைதுறைசைக்
     கத்த மதாசலத் தோலணி தோள கதியடைய  
     நித்தம் அகத்திய னார்பணி பாத நிராமயவிம்
     மத்த  மனத்தன்  நினைத்தினம் போற்றநல் வாக்கருளே. 

58.  வாக்குடன் நெஞ்சுமொன் றாய்நித முன்னை வணங்கிடயான்
     பாக்குடன்  வெற்றிலை வைத்தழைத் தாலும் பகைக்கின்றவான்
     மாக்குடன் மாலை வனைமா னிடவரி வன்மையகல்
     பாக்குடன் மாச்சிம்புள் வேடங்கொள் கோமுத்திப் பண்ணவனே.

59. பண்நவ மேவச் செயுமொழி வாழிடப்     பாகவழற்
    கண்ணவ நாதி பரவளக் கோமுத்திக் காரணவான்
     எண்ணவ பேத முடையாயென் றேத்த இனிதருள்வாய்
    நண்ணவ மேதினம் செய்யும்பொல் லாதவிந் நாயினுக்கே.

60.  நாயாய்க் கடைப்பட்டு நெஞ்சம்புண் ணாகியிந் நானிலத்தில்
       ஓயாக் கவலை யடைந்தடுத் தேனை ஒழித்துவிடேல்
       சாயாத் திறல்விடைப் பாகா வுயிர்கட்குத் தந்தையொடு 
       தாயாய்த் துறைசை வளர்மாசி லாமணிச் சங்கரனே.  
 
61.  சங்கணி செங்கை எழிற்றா ருகாவனத் தையலர்கள் 
      அங்கணி யாரறி வெல்லாம்கொ ளுன்னை அடுத்திடுமென்
      பொங்கணி யாரறி வெல்லாம் தெரிவையர் போக்கனன்றோ
       கொங்கணி பூம்பொழில் கோமுத்தி நாத குணக்கடலே.

62.  குணமாதி யற்றவ னென்பார் புரந்தெறக் கோளரவக் 
        குணமாதி யுற்றவன் யாவனென் பேன்திருக்  கோமுத்தியங்
        கணமாதி யான மனத்தா யறிஞர் கருத்தினென்றுங்
        கணமாதி யாமைந் தெழுந்தாய் கயிலைக் கணபதியே. 

63.  கணமா யினுநின் திருத்தாளை நெஞ்சங் கரையவுன்னி
       எணமா யினுமுதி யோரைஎண் ணாமல் இகழ்ந்துதிரி 
       பிணமா யினுமுழ னாயடி யேன்செய் பிழைபொறுப்பாய்
       விணமா யினுங்கிளர் கோமுத்தி மேய விடையவனே.

64. விடையே றுமையர்  திருக்கோமுத் தீசரிவ் வீதிவரக்
      கடையே முணர்ந்து    வரம்பெறச் சென்றெதிர் கைகுவித்தேம்
      தடையே யிலாத ஐம்படை யேவமாரன் றணந்தனந்தாள்
      நடையே கொளுங்கண் படையே தணந்தன நாணமுமே.

65. நாணாது லுத்தரிடஞ் சென்று பாடல் நவின்றுபயன்
      காணாது ழலிக்கடை யேனை யாளக் கடனுனக்கே
      பேணாது கைவிடிற் காப்பவ ராரெனைப் பின்வளங்கள்
      கோணாது மிக்கெழு கோமுத்தி வாழ்மலைக் கோதண்டனே.

66.  கோதண்ட மாகச் சிலைகொண்டு முப்புரம் கொன்றழியா
       மூதண்ட வாணர் துயர்தீர்த்த கோமுத்தி முக்கணவம் 
       மாதண்ட பாணி தமர்வந்து சால வருந்திச்செயும்
       வாதண்ட விட்டு விடாதே மெலியிவ் வறியனையே.

67. வறிதே யிருந்து கலைபயி லாது  மயங்கிவஞ்சக்
       கிறிதேர் முழுமகர் கூட்டங்  கெழுமுமக் கீழ்மையறச் 
      செறிதே னலம்பும் பொழிற்றிருக் கோமுத்திச் சிற்பரனை
       மறிதே யுவார்கைம் மலரானை என்றும் வணங்குதுமே. 

68. வணங்கத் தலையுண்டு வாழ்த்திட வாயுண்டு மன்றவுன்னி
       இணங்கக் கருத்துண் டினிமயங் கேம்விண் ணிமையவர்வாய்
      வுணங்கக் கிளர்திருக் கோமுத்தி நாதனை உத்தமனை 
      பிணங்கப் படவர வார்த்தானை வேணிப் பிரான்தனையே.

69.  தனையர் களாப்பன் னிருகரத் தானையொர் தந்தனைப்பெற்
     றினையல் விண்ணாடர் அகன்றிடச் செய்த இறையவனை 
      நனைபொழில் கோமுத்தி நாதனைச் சீத நறும்புனல்கொள்
      வனைசடைக் கண்ணுதல் வள்ளலை  ஈசனை வாழ்த்துவமே. 

70. வாதா சனவுடன் மீதம்பு  ராசி வளர்பவனும் 
       போதா சனனும் பணிந்துறல் ஓர்ந்தும் புகழ்த்துறைசை
       நாதா சனனங்  கடந்த பரானந்த நாரியர்கள்   
       மாதா சனன்புற் றுனைவணங்  காத   வகையெவனே.

71. வகைவகை யாமலர் வாளிதொட் டான்மதன் மாங்குயிலும் 
       அகைபகை யாக வனுதினங் கூவு மயலவருந் 
       தகைநகை யாலலர் தூற்றுவர் கோமுத்திச் சங்கரனெண்
       திகையுகை யானுடை யான்சடை யானருள் செய்வதென்றே. 

72.  செய்யாத வெந்தொழில் செய்தேயுன்  றாளைத் தியானித்துளம் 
        நையாத னந்தந் தினங்கழித் தேனினிதா னென்செய்கேன் 
         பொய்யாத வேதச் சிரத்துந் துறைசைப் புரத்துமொளிர்
         ஐயா தழலணி கையா வளியன டைக்கலமே. 

73. அடையார் புரஞ்செற்ற வாரரு ளாள வயிலுறுசூற் 
        படையார் நறுமலர்க் கையாய் பிரம கபாலவயன்
       மடையார் தவள வளைமுரல் கோமுத்தி வாணவினிக் 
       கடையார்தம் மோடு மிடையாத வண்ணங்   கடைக்கணியே.   

74.  கடைக்கணி யாவடி யார்துயர்  தீர்க்குங்  கருணையனீர் 
       மடைக்கணி யாவெள் வளைமுத்த மீன்று வருதுறைசைச் 
       சடைக்கணி யாவெண் மதியணி  வான்றனைத் தாழ்ந்தவன்சீர்த் 
       தொடைக்கணி யாவைத்துப் பாடிப்பல் பாத்தொடை சூட்டுவமே.

75. சூட்டார் அரவணி  கோமுத்தி மேய சுராதிபன்தன்
      தாட்டா மரையைப் பணியாது நொந்து தளருகின்றேன் 
      மாட்டார் விருப்பம் உறுவார் யாவரும் வைதுதம்மிற்
      கூட்டா ரினியென்ன துன்புறு மோவிக் குவலயத்தே. 

76. குவலய மஞ்சத் தெறும்வலி வெங்கதக் கூற்றுவனும் 
      அவலமிக் காற்ற வரினென்செய்  வேனனலங்  கையிற்கொள்
      சிவதிருக் கோமுத்திச் சிற்பர தேவி திகழிடத்தாய் 
     பலவலை யூடடி  யேனுழ லாதுகண் பார்த்தருளே. 

77. பாவாதி வல்லர்  இவரென வேசையர் பால்மயங்கி
      நோவாதி வீணரை மேவாதி நிச்சலு நொந்துநொந்து
      சாவாதி நல்வள மேவா வடுதுறைத் தண்பதியின் 
      மேவாதி நாயகன் றாட்டா மரையை விழைதிநெஞ்சே.

78.  விழைவாய் மகளிர் எழினலங் காணவிவ் வீண்மையினால் 
        பிழைவாய் மிகவும் அகப்பட் டனையென்ன பேச்சினியால்
        உழைவாய் முனிவ ரொருநால் வருக்கற மோதிவளைக் 
        குழைவாய் தருதிருக் கோமுத்தி நாதனைக் கூடுநெஞ்சே.

79.  கூடும் படிநில மேல்விர லாற்சுழி கூட்டிமிக 
       வாடும் தமிய ளுயிர்கலங்  காத  வகையருள்வாய்
       தேடும் பிரம னரிக்கரி யாய்வளத் தில்லைமன்றுள்
     ஆடும் பதபங் கயத்தாய்  தென்கோமுத்தி அற்புதனே.

80.  அல்லார் களத்த மலாதிருக் கோமுத்தி யங்கணநூல்
      கல்லா தநாயிற் கடையேன் எனினும் கருத்தினிடை
      எல்லா முனதருள் என்றிருப் பேன்பொய் யிதுவன்றிழி  
       பொல்லா தவர்வருத் தும்படிநீ செய்பு துமையென்னே.

81. என்னேயென் னேகணப் போதா யினுந்தனை யெண்ணுநர்க்கு 
      பொன்னேர் சடையன் திருவா வடுதுறைப் புண்ணியன்தான் 
      தன்னே ரிலாத நலந்தந்தெப் போதுந் தகநினைவேற் 
      கன்னோ மிகுதுன் பளித்தே வருத்துறு மற்புதமே.

82. அன்னையன் னான்திருக் கோமுத்தி மாநகர் அண்ணலொளிர் 
       பொன்னையன் னான்சடை முன்னகைத் தான்முப் புரமெரியத் 
      தன்னையன் னான்அரு ளாகரன் சங்கரன்  தன்னினையும் 
      என்னையன் னான்சிறி தாயினு நெஞ்சிடை எண்ணிலனே.

83. எண்ணுவன் கோமுத்தி யீசன் கமல இணையடியை 
       நண்ணுவன் ஓர்ந்த வளவுந் தினந்தின நற்றுதிகள் 
      பண்ணுவன் தீயவெம் பாவப் படிறப் பதகருடன்   
      ஒண்ணுவ னோமரு வேன்மரு வேன்நல உண்மையிதே.    

84. உண்மை யாவவவு மாதுலர் வெம்பசி ஒப்புதற்குக் 
      கண்மை யவாவவும் பாரோர் தவறு கரைந்திடினும் 
      தண்மை யவாவவு நல்வரந் தாவித் தமியனுக்கு 
      வண்மை யவாவுங் கரத்தாய் துறைசை மகாலிங்கமே. 

85.  காத்திரம் வந்த வரலாறு ளத்திற் கருதுகிலார் 
       சாத்திரம் பற்பல கற்பா ரதற்குத் தகநடவார் 
       தோத்திரம் செய்கிலர் கோமுத்தி நாதனைத் தூயவருட் 
      பாத்திரம் அன்னவர் ஆகார்மற் றாவர் பவத்தினுக்கே.

86. பவத்துயர் தன்னை யொழிக்குநின் பாத பதுமமுன்னித் 
      தவத்துயர் வுற்றுத் தளர்வகன் றோர்வது தானுணர்ந்து 
      சிவத்துயர் முத்தி யடைய கிலார் அவர் சென்மமென்னே
      அவத்துயர் யார்க்கும்  அகற்றுந்  துறைசை யிலங்கணனே.

87. அங்கண வாரணி வேணிய வாட ரவாவணிந்த 
       கங்கண முக்கண வக்கண னோடெண் கண்ணுடன்முற்
      றுங்கண னாதியர் ஓராப்  பெருமை யமலவென்று 
      நங்கண லோவத் துறைசைப் பிரானை நவிலுவமே. 

88. உவமையில் நின்றன் பெருமையை உன்னி உளங்கரைந்து 
      தவமயல் உற்று அடியார் இடைமேவுபு தங்கலென்றோ
      சிவமயி லூர்பவன் ஆதியர் போற்றித் தினம்பணியும் 
     நவமயில் நாயகன் அத்தா துறைசையின் நாயகனே.

89. நாதா வளைக்குழைக் காதா கமல நயனன்பணி 
     பாதா எனத்துதி ஓதேன் எனினும் படியினிடைத் 
     தீதாதிகளறுத் தாள்வார் எவரெனச் சிந்தைசெய்வேன்
     ஆதார நீயெற் கருள்வாய்  துறைசை யிலங்கணனே.

90. அண்டா பரணன் அருட்கடல் ஏற்றி  வரங்கணனல் 
      வண்டார் கடுக்கை மலர்த்தொடை வேணி வரதன்மகிழ்
      கொண்டா வடுதண் டுறைநகர் மேய குணமலையைக் 
      கண்டால் அளவில் பெரும்பாக் கியமவர் கைவசமே. 

91. கையா னனத்தனை ஈன்றானைக் கோமுத்திக்  கண்ணுதலை 
     ஐயா னனத்தனை யாரா அமுதை அநகனைக்கார் 
     மெய்யா  னனத்தனை அத்தனை நித்தனை வேண்டித்துதி 
     செய்யா னனத்தல்  நைவுஇயாவு முறேனெந்தச் சென்மத்துமே.

92. செந்நாப் புலவ ரிடைமேவி நூன்முனஞ்  செய்தநினை 
      உன்னாக் கருத்தி னனுய்வதெவ் வாறுரை உன்னலருள் 
      மன்னாக் கமல பதத்தாய் துறைசை வரவிசும்பின் 
      மின்னார் புயனிகர் கந்தரத் தாயருள் வேதியனே. 
  
93.  வேதா கமங்கள் நவில்நின் பெருமை விதமுணரேன் 
       மாதா வயிற்றி னிடையென்று மேவி வருந்துகிற்பேன் 
       ஈதா நினது கருணைய தாம்பொன்னி ஈர்ந்துறைசை 
       நாதா அகில விநோதா  பலபவ நாசனே.

94. நாசஞ்செய் மூன்று புரநொடிப் போதினி னாசமுற 
     வாசஞ்செய் கோமுத்தி யற்புதன் தாளிணைக் கன்பதில்லேன் 
      வாசஞ்செய் ஐம்படை யான்மயல் மேவி மனஞ்சலித்தேன் 
      பாசஞ்செய் வெய்ய வருத்தம்எவ் வாறினிப் பாற்றுவனே.

95. பாற்றினத் தோடு கழுகுபுன் நாய்நரி பார்க்குமுடம் (பு) 
     ஏற்றின மீதொழி யக்கரு தாமல் இதற்கிதமே
     ஆற்றினம் வீணரைப் போற்றினம் எங்ஙன்  அருளடைதல்
      தாற்றினஞ்  சோலைக்  கழகாம் துறைசைத் தனிமுதலே.

96.  தனியே இருந்து மனமொன்றி ஐந்தும் தகைதல்செய்து 
       துனியே அறநின் றனைநினைந் தேத்திதொழு தல்செய்யேன் 
       இனியேய் துயரம் எவனே அறிந்திலன் ஏழையன்வான் 
       பனியேய் பிறைத்துணி வேய்திருக் கோமுத்திப் பண்ணவனே.

97.  பண்ணல மார்மொழி விண்ணல மாரிடைப் பார்ப்பதியோ 
       டெண்ணல நின்னை மனத்தே துறைசை எழினகரின் 
       நண்ணல நின்னடி யார்தமை ஏத்தி நவிலவரோ
       டுண்ணலஞ் சென்மம் ஒருவிவ் வாறினி யுய்குவமே.  

98. உன்பாத பங்கய மேத்தி உய்யாமல்  உழலுமிந்த 
     வன்பாத கன்றனை நீக்கல் செயாதருள் வாய்வலிய 
     கொன்பா ரிடத்தொடு மாநட மாடும்  குழகவிடும் 
     என்பா ரணியுடை யாய்திருக் கோமுத்தி எண்புயனே . 

99. எண்ணாது  நின்னைப் பலநாள் கழிந்தன என்னசெய்வேன் 
     அண்ணா துறைசை அமலா நிகரில் அருட்கடலே
     புண்ணார் மனமுடை யேன்கடை யேன்மயற் புந்தியுளேன் 
      திண்ணார் மறதிக் கடலினின் றீர்த்தருள் செய்குவையே . 

100. சேயா யருளடி யேனுக் கெனிலயன் திண்சிரங்கொய் 
       கையா கழலணி காலா நிகரில் கயிலைமலை 
       ஐயா துறைசை அமலா ஒருபொரு ளாகவெனை 
       வையார் மதித்தலைச் செய்யார் திருவருள் வாழியவே. 

                       முற்றும் .  

Related Content