logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்

திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய

காப்பு வெண்பா

எண்ணும் திருத்துறையூர் ஈசரிடத் தெப்போதும் 
நண்ணும் சிவலோக நாயகியே - விண்ணுமண்ணும் 
போற்றிசைக்க வாழ்ந்துனது பொன்னடியுட் போய் மாயைச்
சேற்றிலபி  ழாதிருக்கச் செய்.

                                            நூல்

                               கொச்சகக் கலிப்பா

காராழி முரசுடையான் கைக்காண விட்டமராடச்
சேராமல் நின்னடியார் தொழும்பெனக் கிடந்திடல் வேண்டும் 
ஆராறும் அறிவதனுக்கு அறியார்க்கும் அருளச்செய்தாய்
சீராறும் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (1)

அவணிவந்து ஒரு கனவில் அருள்புரிந்த  விதம்கண்டும் 
இவணீண்டுயான் நனவினிடை இளைத்துழைக்க  தகும்கொலோ?
புவனேசர் போற்றும் பொதுவிடை நன்னடமாடும் 
சிவனாரும்  திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (2)

கயல்போலும் எழிலார்நின்  கடைக்கண் அருள்புரியாமல்
வியனாரும் பூதலத்தில் மெலிந்திருக்க விட்டுவிடேல்
புயல்போலும் நிறத்தம்மே புலவோர்க்கும் தவத்தோர்க்கும் 
நயமோங்கும் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (3)

நந்தலில் நின்புகழ்கூறா நாவலரில் சிலர்பேறும் 
இந்தமகி தலத்தடையாது யான்வருந்த செயலாமோ? 
பைந்தண் வயல்மலி யாரூர்ப் பரவைகோன் முதலார்சொல் 
செந்தமிழார் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !    (4)

அருள்ஒரு   சற்றுஅளித்திருந்தும்   அகிலமிசை அலமரச்செய் 
மருள்களையாது இருப்பதுநின் வண்புகழுக்கு அழகாமோ? 
சுருள்குழற் பைங்கொம்போ போல்தோலுடுப்பார் தொழநின்றாய் 
தெருளுதவும்  திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (5) 

பாவவினைக்கு இலக்காகிப் பரிதவிக்கும் படியேனுக்கு 
ஆவல்முற்றும் ஈந்தருளி ஆளும்விதம் அருளாயோ?
சேவணியும் கொடிநம்பர் தினம்உருகத் திகழ்நங்காய்
தேவர்புகழ் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !    (6) 

என்னதுவாய் பலதேவர்க்கு இனியதுநீ இசைந்தாலும் 
உன்னருட்கே  மனம்நாளும் உழைக்கும் உண்மை அறியாயோ? 
மின்னனையார் பலராகி விளங்கு வள்ளம் மயிலே
தென்னன்அஞ்சும்   திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (7)

ஐவர்களும் பெறலாரும் நின்அடிச்சுவடென் தலைமேவப்
பெய்வதற்கென் விழிநேர் பிறங்கொருநாள் உதியாதோ? 
மைவழிந்த கருங்கண் மடமான் அனையார் வானையார்க்கும் 
செய்வளஞ்சேர் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (8)

கூரறிவில் சிறியேனும் குறித்தபடி அருள்செய்து 
பாரணங்கின் துயர்தீர்த்துப் பரகதிச்சேர்ந்திடப் பார்ப்பாய்
சூரனைக்கொல் வேலானாய் சுரரோடு நரர்போற்றும்  
தேரழகார் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (9)

ஆறுநெறிப் பொதுவாகும் அந்தணன்போல்  அடியேனும் 
வீறுபெறக் குறித்தமைநின் விழிக்கடையின் செயலன்றோ?
மாறுபடா மதிபோலும் வான்முகத்தோர் மணிக்குன்றே
தேறுதமிழ்த் திருத்துறையூர்ச் சிவலோக நாயகியே !   (10)

நெருப்புளழ் கற்புடையாளை  நெடுமாலுக் கிளையாளத் 
திருத்துறையூர்ச் சிவன்வாழ்வாம் சிவலோக நாயகியைச் 
சருப்புசிப்பார் ஊர்வேண்டாத் தண்டபாணியின் பாடல் 
ஒருப்படும் சிந்தையில் துதிப்பார் உள்ளிய பேறடைவாரே !   (11)

                                   கணபதி வெண்பா

செல்வம் பொலியும் திருத்துறையூர் சித்தரைப்போல் 
வில்வம் புனைந்த சடைவேழமே  - பல்வரமும்
இவ்வேளை நல்கி எனையும் இலங்கிலைவேற்
செவ்வேளைப் போல்மகிழச் செய்.

Related Content

திருத்துறையூர் சிவபெருமான் பதிகம்