logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருத்துறையூர் சிவபெருமான் பதிகம்

திருவாமாத்தூர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் அருளிய

 காப்பு வெண்பா   

மழைக்கவினார் கூந்தல் மடமங்கை யொடும் வந்தன்(று)
அழைக்கும் திருத்துறையூர் அப்பா!  - உழைக்க(ண்) பின்னார்
தம்மை நிலத்தை தனத்தை விழைந்து செல்வம்
இம்மையின் தந்(து) ஆண்டருள்வா யே!

                                               நூல்
                                    எண்சீர் தாழிசை

பொன்னை நாடி நாடி நொந்து
        புலர்ந்த துன்பம் போதும் போதும் 
உன்னை நம்பிச் சித்தி எட்டும்
       உற்று வக்கும் உவகை ஈவாய்!
முன்னை வேத முடிவில் ஆடி
     மூவர் போற்றும் முதல்வன் ஆனாய்!
தென்னை போலும் வாழை நீடும் 
     திருத்து றையூர்ச் சிவபி ரானே!   (1)

தங்கம் வெள்ளி செம்பு இரும்பே
     தங்கள் தெய்வம் என்று கொள்வார்
அங்கண் ஞாலத் திகழல் கண்டும்
     அடியே னேன்இங் கயர லாமோ?  
கொங்க ரும்பென் தும்பை யோடு
   கொக்கு இறகும் புனைய வல்லாய்!
திங்கள் தோறும் விடிவு நீடும் 
  திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (2)

மைக்கண் மங்கை பங்கில் வாடி
   வானகத் தோர்வி டையில் வந்து
திக்க டங்க வெல்லும் ஆண்மை
  சிறிய னேனுக்கு அருள்வ தன்றோ?
சக்க  ரம்பெற்று உலக ளிக்கும்
  தகுதி மாயன் சார வைத்தாய்
செக்கர் ஒல்கும் மேனி எந்தாய்
  திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (3)

பங்க  யத்தோன் எழுதி வைத்த
  பாழ்வி திக்குஇங்கு அயரும் என்னை
துங்க வானோர் புகழும் வண்மை
  தோய நல்கும் வலிஇல் லாமோ?
சங்க  ணிந்த செவியு ளானே
  தவள நீற்றால் முழுகும் எந்தாய்
சிங்கம் ஒன்றின் உரிவை பூண்டாய்
  திருத்து றையூர்ச் சிவபி ரானே!   (4)

இத்த ரையில் தமிய னேன்சொல்
   ஏற்ற தெய்வம் எவ்வளவோ வுண்டு !
அத்த  னைக்குள் அதிக ஆசை
   அடைந்த நீயும் அருள்செய் யாயோ?
பித்தன் என்னப் பேசி ஏசும் 
    பெற்றி யோனைப் பேணி ஆண்டாய்!
சித்த ருக்கோர் தலைமைப் பெற்றாய்
   திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (5)   

பாத  கங்கள் பலவும் செய்யும் 
    படிநர் இன்பம் பருகும் நாளில்
ஏதம் எய்தி இடையுமா றிங்கு 
   எனைவி டுத்தார் யாவர் கொல்லோ?
வேத நூலோன் தலையில் உண்டாய்
  விடஅ ராவே மிக அணிந்தாய்
சீத நீரைச் சடையில் வைத்தாய்
  திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (6)

அங்கண் ஞால மகள்அழக் கண்டு
   அரிஎழுந் திட்டருள் செய்கி லையோ
எங்கள் நெஞ்சம்  வாடு கின்ற
   இனிய பேறென் றுதவி ஆள்வாய்
கங்க ணக்கை கவுரி பங்கா
   கரைமி டற்றுக் கடவு ளானே
வெங்கண் வெள்ளை விடையு கப்பாய்
    திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (7)

கவைகொள் வான்காற் பன்றி பின்னோர்
  கரிய  வேடன் உருவம் எய்தி
அவைபு ரிந்தாய் தமியனே னுக்கு 
  அருள்செ யாமை அறம் தாமோ?
குவைய பொன்னும் நெல்லும் நல்கிக்
  கோடிப் பாடல் கொண்ட நம்பா
சிவைய மர்ந்த பங்கு ளானே
   திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (8)

இருவ ராய மைந்தர் ஆணையான் 
  விரும்பும் இன்ப முற்றும் 
தருக இவ்வா றேது மாறென்
  தலைய சைத்த  தலைவன் வேறோ?
பொருவில் வண்மைச் சுந்த ரற்குப் 
  போத சாரம் புகலும் மெய்யா
தெருவில் என்றும் வாளை முழங்கும் 
   திருத்து றையூர்ச் சிவபி ரானே!  (9)

பல்வ ரங்கள் நல்கி நால்வர்
   பதிகம் எண்ணிப் பலஅ ணிந்தாய்
கல்வ ரைச்சேய் மதலை யாம்என் 
  கவிய ணிந்து யான்கருத நல்காய்
சொல்வ தஞ்சும் சிட்ட ருக்கோர் 
   குரவன் என்றோர் பெயர் புனைந்தாய்
செல்வ மல்கிப் பெரிதி லங்கும் 
    திருத்து றையூர்ச் சிவபி ரானே!   (10)

Related Content

திருத்துறையூர் சிவலோக நாயகி பதிகம்

நெல்லைக் கலம்பகம் (வண்ணச்சரபம்  தண்டபாணி சுவாமிகள்)