logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பனைசைப் புராணம் (பனப்பாக்கம் )

கணபதி துணை
திருச்சிற்றம்பலம்

விலாச காஞ்சி எனப்படும் பனப்பாக்கம் 

(பனப்பாக்கம் நாராயண முதலியார் மற்றும் கண்டி எல்லப்ப முதலியார் )

 பாயிரம்

விநாயகர் காப்பு

கந்தமென்மாமலர் ஊடுறைவோனரி கண் ணகல் விண்ணிறை, வை
குந்தல நீங்கி இரிந்திட வே அமர் கொள், கய முக அவுணன்
வெந்துயர் கொண்டுயர் ஆவிவிளிந்திட வெஞ்சமர் செய்தருள், சம்
பந்தவி நாயகனார் அடி சென்னி பதித்துப் பழிச்சிடுவாம்.          1 (1)

                                                               திருப்புலீசர்

சுருப்பொலி குழலியல் சுகித்த லால் உறு
கருப்பொலி அகன்றுஅருள் கதியைச் சார்தர
தருப்பொலி துடவைசூழ் தால மாபுரித்
திருப்புலி நாதனைச் சிந்தை செய்குவோம்.             2 (2)

                                                       மாயூர நாதர்

கேயூர மணிப்புயங்கொள் நாவலூர் நாவலன்சொற்கேள்வி இன்ப
மாயூர மனமகிழ்ந்து, அன்னவன் விருப்பின் படி பரவை மனையிற் கால், அன்
பாயூரச் சென்று அவள் தம் பிணக்கு அறுத்துச் சுகமளித்துப் பதத்தைஈந்த
மாயூர நாதன், இரு மலரடியென் மனத்தடத்துள் மலரும் மாதோ.   3 (3)

                                           சௌந்தர நாயகியார்

*சந்தமுறும் மலையரையன் தனையள் ஆகிச்
        சார்கயிலை மலைக்கிறைவன் தேவி யாகிப்
பந்தமுறும் உலகமெலாம் அளித்தும் தாழாப்
        பருமுலைசேர் குமரியெனப் படைத்தாள் ஆகிச்
சந்தமுறுங் கவிப்புனைய ஞானப் பாலைச்
       சண்பையர்கோன் தனக்களித்த தனத்தாள் ஆகிச்
கந்தமுறும் பொழில்தாலை நகரின் மேவும்
       கருணைபொழி சுந்தரிதாள் கருத்துள் வைப்பாம்      4(4)

*சந்தம் = அழகு

                                               காளத்தி நாதர்

நாளத்தின் உட்கிடந்த நாகர்வேந் தினைத்தொடர்ந்து நலித்தபாவம்
நீளத்தினுறச்செய்த கடம்பவனத்துற மடவார் நிறைந்த அன்பால்
காளத்தி நகர்க்கு ஏகும் *காலாற்றுத் துணையாகிக்கதி யை யீந்த
காளத்தி நாதன் இரு பதமலரை எஞ்ஞான்றும் கருதி வாழ்வாம்    5 (5)

*ஆற்றுத்துணை= வழித்துணை


                                       ஞானாம்பிகையார்

அளிமிகுநல் தவர்உளத்தில் வெளியாக இருந்தருளும் அதுவே அன்றி
$இளிமிகு வஞ்சகர்உளத்தும் தோன்றாமல் இருந்தருளி இருளைக் தேய்த்துக்
* களிமிகுவெம் பிறவியெனும் பெருங்கடற்குத் தோணியுமாய்க் கருதா நந்த
ஒளிமிகுசீர்க் கரைபுகுத்தும் உமை ஞானாம்பிகை பாதம் உன்னி வாழ்வாம்   6 (6)

$இளி= இழிவு  *களி= மயக்கம்


                                                   நடேசர்

சீர்தந்த மறைக்கோவுஞ் செழும்பணிலத் திருமாலுஞ் செறுநர்த் தேய்த்த
கூர்தந்த திரிசூலக் கரஇறையும் தங்கள் தொழில் குறையாதாற்ற;
வார்தந்த களபமுலை உமைகாண இருமுனிவர் மகிழ்ந்து போற்ற;
ஏர்தந்த மணிமன்றுள் எழில்நடனம் செய்பவர்தாள் இறைஞ்சி வாழ்வாம்.  7 (7)

                                          சிவகாம சுந்தரியார்

உருவளிக்கும் அயன்படைத்த உலகில் எண்ணான்கு
      எனும் அறத்தை ஓங்கச் செய்த
தருவளிக்குங் கரத்தாளைத் தந்திமுகன்
      உண்டகும்பத் தனத்தி னாளைக்
கருவளிக்கும் இருவினையாம் கன்மம் ஒழித்து
      அரியஇன்பம் காட்டும் முத்தித்
திருவளிக்கும் பதத்தாளைச் சிவகாம
       சுந்தரியைச் சிந்தை செய்வாம்.  8 (8)


                                  விநாயகக் கடவுள்

எண்டிசைகளும் பருவதங்கள் அகிலாண்ட முடன்
      ஏழ்கடலும் அம்பொன் மலையும்
அண்டபகி ரண்டமும் அதிர்ந்திட நடம்பயிலும்
      ஐயை யிதயம் சமழ்ப்பப்
பண்டொரு தினம்பதம் எடுத்து நடனம் செய் பசு
     பதி மகிழ்ந் தினிது உதவிய
கொண்டல் பொழிகின்ற தென மும்மதம் ஒழுக்கிய வொர்
     கொம்பன் இருதாள் பணிகுவாம். 9 (9)

                                சுப்பிரமணியக் கடவுள்

சமரில் நின்றிடு தானவர் இன்னுயிர்
* நிமிர வேல்கொடு நீக்கிய தென்ன, என்
திமிரம் யாவும் சிதைத்தருள் தந்திடக்
குமர வேளின் குரைகழல் ஏத்துவாம்.  10 (10)

*நிமிர = ஓட

                                   வீரபத்திரக் கடவுள்

*ஆரப் பத்தி அதள் அணி ஐம் முகற்
சார பத்தியிலாத ஓர் தக்கனை
ஈர பத்திர மோடு எழுந் திட்ட நம்
வீர பத்திரனால் வினை ஓட்டு வாம்.    11 (11)

* (ஆர்,அப்பு,அத்தி,அதள் = ஆத்தி, கங்கை, எலும்பு, தோல்)

                                    இலக்குமி நாரணர்

பங்கமு றும்பவ பந்தம தாமயல் பருதியின் முனம் இருள் போல்
தங்குறு மாறு இலதாகி அழிந்து நிசானுபவந் தருமால்
சங்கமும் நேமியும் அங்கையின் மீது தரித்துஉயர் தாலை நகர்
தங்கும் இலக்குமி நாரண னார்இரு தாள் மலர் துதி செயவே!   12 (12)

                                                       நாமகள்

தண்டார் சூடித் தாள் பரவ அடியார்.
கண்டே தண்டா யுதன்ஓர் காதம்
விண்டே போக விழிக்கடை நோக்கும்
வெண்டா மரையாள் மெல்லடி பணிவாம். 13 (13)

                                            திருநந்தி தேவர்

மருக்கிளர் கொன்றை வேய்ந்தோன் மலரடி தொழுவான் வந்த
தருக்கிளர் வானோர் தங்கள் தடமணி மகுட கோடி
குருக்கிளர் மணிகள் சிந்தக் குடங்கைவேத்திரங் கொண்டோச்சித்
திருக்கிளர் கயிலை காக்கும் தேவனைத் தொழுது வாழ்வாம்  14 (14)

                                                 நவவீரர்

காரவா குழல் கவுரியின் அருள்விழிக் கருணை
சேர வாகு வினாந் தகம் ஏந்தி சே ணாடர்
சூர ஆகுலந் தொலைத்திட உதித்த சுந்தரம் சேர்
வீரவாகுவே முதல் நவ வீரர் தாள் விழைவாம் 15 (15)

                           சமயா சாரிகள் (பொது)

அரவுகொன்ற பிள்ளை ஆவியடைய வேத வனமதில்
உரவு கொண்ட கதவு மீள  *ஒலியல் ஆறுவிட, நரி
பரியதாக, வந்துதித்த பாவலோர்கள் நால்வர் தம்
சரண அம்புயம் சிரத்தில் சாற்றி ஆடுவாம் அரோ 16 (16)

*ஒலியல்=ஆறு

                                   திருஞான சம்பந்தர்

ஈனமற்ற எழில்கடத்து அத்தியைப்*
பான லங்கண் பனிமொழிப் பைந்தொடித்
தேனருங்குழல் சேயிழை ஆக்கிய
ஞான சம்பந்தன் நற்பதம் ஏத்துவாம்.  17 (17)

*அத்தி=சாம்பல் 

                                               அப்பர்

கரணம் வாக்குஅணி காயம்இம் மூன்றையும்
அரணம் மூன்றுஎரித் தார்க்கருத் திப்பெரும்
*பரணம் நீங்கிய பைந்தமிழ்ச் சொல்லிறை
சரண் இரண்டு நெஞ்சத்துள் இருத்துவாம். 18 (18)

*பரணம்= பந்தம்

                                        சுந்தர மூர்த்தி

மந்தரப் புயமாலும் அறிவொணாச்
சுந்தரப்பதம் சோரப் பரவைபால்
* சந்து அரன் தனைத் தான் நடப் பித்த நல்
சுந்தரன் பொன் துணைச் சரண் தாழுவாம்.  19 (19)

* சந்து = தூது

                                         மாணிக்கவாசகர்

ஏத மார்பவத்து இன்னல் களைந்திடச்
சீத வார்பொழில் தில்லையுள் மேவிய
பூத நாதர்க்குக் கோவை புனைந்திடும்
வாத வூரன் மலர்ப்பதம் தாழுவாம். 20 (20)

                                                சண்டீசர்

ஈசனாரிட மேற்கு நின் மாலிய
மாசை யோடளித்திட்ட அடியர்தம்
பாச நீக்கிப் பயனளிக் கும்பவ
நாசனாகும் சண்டேசனை நாடுவாம்   21 (21)

                                                    சிவனடியார்

சீராரும் ஐந்தெழுத்தை செபித்து மணிக் கண்டிகை மெய் சிறக்கத் தாங்கி,
ஏராரும் திருநீறு புனைந்து மனம் மெய்ம்மொழியால் இயைந்த பத்தி
நீராரும் கடல்புவியில் பலவாறு புரிந்தருளை நிறையப் பெற்ற
காராரும் மிடற்று இறைவன் அடியவர்தம் கழலிணைகள் கருத்துள் வைப்பாம். 22 (22)

                                               ஆசிரியர் வணக்கம்

இக்குவல யத்தில் எழுத்(து) என்பது ஓரா
        எமக்குஅருள்செய்து அவை அறிவித்(து) இலக்கி யத்தின்
தக்கவரும் பயன்காட்டி இலக்க ணத்தின்
        தன்மையறிந் திடும் உணர்வு தந்த மேலோன்
மிக்க புகழ் ஐயன்நகர் மேவி வாழும்
        வீரசைவ மரபினிதாய் விளங்கத் தோன்றும்
தொக்கபுகழ்ச் சிவப்பிரகாச ஐயன் பொன்தாள்
       துணைக் கமலம் எம்முடியில் சூடி னேமால்.   23 (23)

                                                  முதல் நூல் வழி

தெளிவுறு சிந்தை வியாதமா முனிவன் தெளித்த மூவறு புராணத்துள்
அளியின முகளும் மலர்ச்சடைப் பரமன் ஆற்றல்கூர் புராணம் ஈரைந்தில்
ஒளிர்பிரமாண்ட முத்தர காண்டத்து ஓங்கு கைலாய சங்கிதையின்
வளமலிந்து உறு விலாச காஞ்சி யின்மா வண்மை யுண்(டு) அதையெடுத் துரைப்பாம். 24 (24)


முனந்தணிகை யில்வாழ் முருகவேள் கடலை
       முகந்துணும் முனிவனுக்கு உரைத்தான்
சினந்தவிர் அந்தச் செம்மலும் வியாத
       முனிவனுக்கு ஓதினன்; அவனும்
மனந்தனில் அன்பு மீக்கொடு ஆணவமா
       மாயைகன் மாதியைத் தணந்து
அனந்தனேர் அறிவுற்று ஓங்கிடு சூத
       அண்ணலுக்கு அவை இயம்பினனால்   25 (25)

                                      மொழிபெயர்த்த விதம்

போதமிகுந்(து) ஓரடியைப் புந்திவைத்துப்
          புகல்திருநாட்டுப் பொலிவும் புகழார் தாலைத்
தீதறு நன்னகர் தருப்பை வனச்சீர் கைலைத்
         திருவு முனி யாத்திரையும் உமையாள் நந்தி
நாதனவிர் அம்புலியாய்ப் பூசை செய்த
         நலனும் காளத்தியின் மான்மியமும் போகி
கோதகற்றிக் கொண்டதுவும் வாணி கேள்வன்
        குறித்து அருச்சித்து ஏத்திய அக்கொள்கை தானும்   26 (26)

தேன்பிளிற்றும் குல்லை அணி திருமால் பூசை
       செய்ததுவும் சிறுவிதி துன்புஒழித்த வாறும்
கான்பயில் இராகவன் பாவங்கள் தீர்த்த
      காதையும் மன்மதன் பூசை கணித்த வாறும்
நூன்முறை செங்கோல் இயற்றும் இயமன் சிந்தை
      நோதல் ஒழிந்து அமையும் அருள்வீரன் வந்த
மேன்மையும் நல் அகத்தியன் பூசித்த நேரும்
      விமலன் அருமணப் பெரு வினோதம் யாவும் 27 (27)

சீர்மருவும் ஆரியத்தில் உரைத்தவாரே
     செழித்தோங்கி வளர்பஞ்ச தால நீடிக்
கார் மருவும் எழில் பனைசைப் புராணம் தன்னைக்
     கனமருவும் அறு மூன்று சருக்கமாகத்
தார் மருவு புலவன் பின் நேமியோனைத் தான் நடக்கச்
      செய்து நதி தானே நின்று
நேர்மருவு *ஆறுவிடச் செய்த தாய
       நிகர் அறு நல்தமிழ் அதனால் நிரைத்திட்டேமால் 28 (28)

  *ஆறுவிட = வழிவிட, (காவிரிநதி சுந்தரர் தமிழ்க்கு வழிவிட்டது)


                       நூல் செய்ததற்குக் காரணம்

புரை அறு நல் வடமொழியில் உரைத்திருந்த
        புராணமதை நீ புகன்றவாறு ஏது என்னின்
நரை கயிலைப் புரைமகிமை உடையது இந்த
        நற்றலமாம் இதன்பெருமை நயந்து உரைத்தோர்
கரை அறும் இன்பெய்தி சுகமடைவர் என்று
       கண்ணுதல் வாக்கிய வேதக் கருத்தை ஓர்ந்து இத்
தரையினில் மெய்ஞ்ஞான முற எண்ணியாமும்
சாற்றினோம் பருணிதர்கள் தயையால் மன்னோ 29 (29)

                                    அவை அடக்கம்

தொல்புகழ் சான்றோர் மேய தொண்டைமா நாட்டின் மிக்க
பல்கலைப் புலமை சான்ற பருணிதர் முன்னமேரு
வில்லியோன் அமரும்தால வியன் நகர்க் கதையான் கூறல்
நல்லெழில் பொதுவர் வீதி நாடிமோர் விற்றல் மானும் 30 (30)

                                     இதுவுமது (வேறு)

பஞ்சகாவிய இலக்கணங்கள் முதல்
       பார்த்துணர்ந்த கவிவாணர் முன்
செஞ்சொலின் பொருள் தெரிந்திடும் புலமை
      தேக்கிடும் புலவன் யானும் என்று
அஞ்சுறாது அறைய எண்ணி வந்தமை; நல்
     ஆறு சூடி அணிநாகமும்
நஞ்சகோதரர்கள் ஆம் எனப் புகலும்
      நாங்கூழ் ஒக்கும் இவையால் அரோ 31 (31)

                                  சிறப்புப் பாயிரம்

முனம் திரு நன்வடமொழியில் இருந்ததைச் சீர்
      மருவு அவளுர் முற்குலத்தில்
கனம் தர ஓங்கிய திருவேங்கட நாதன் 
      மொழிபெயர்த்துக் கனிவாய் நல்க
வனந்தரஞ் செந்தமிழ்ச் செய்யுளால் நீவிர்
      உரைமின் என அணிசேர் தால
வனந்தனில் வாழ்பவர் வினவ இருமையினும்
      பயன்தரும் என் மகிழ்வினாலே 32 (32)


தேங்கமழ் பூங்கா உறையும் திருப்பனசை நகர் அதனில் சிறந்து மேவும்
காங்கேய னாற்கு இளைய நவ வீரா குலத்து உதித்து மிகக் கருணை வாய்ந்த
ஓங்குபுகழ்ச் சிவப்பிரகாசைய னிடைக்கலை பயின்ற உறுதி கொண்டு
தீங்கரும் இக்காதையை நாராயணன் எல்லப்பன் இவர் செப்பினாரே    33 (33)

                                                   பாயிரம் முற்றிற்று

                                                திருநாட்டுச்சருக்கம்

உமைநன் மணலைக் குவித்திலிங்க வுருவ மாக்கிப் பூசிக்குஞ்
சமையந் தன்னிற் கம்பைதனைச் சந்து விடுத்துத் தனக்குறிமெய்
அமையும்படி செய் தருள்கம்ப னமருந்தொண்டை நாட்டணியை
அமையும் புன் சொலறிவீனன் ஆவே னறிந்த படி யறைவேன்    1 (34)

ஆலமார் கடவுள் கணங்களுள் முதன்மை
       யான துண் டீரன் ஆண்டத னாற்
கோலமே வியதுண் டீரநன்னாடாய்க்
      கோதிலாத் தண்டக வேந்தன்
சிலமோ டரசு செய்ததால் உலகிற்
       சீர்பெறு தண்டக நாடாய்
ஞாலமேற் றொண்டை மான் புரந் ததனால்
      நவிற்றுவர் தொண்டை நாடென்றே   2 (35)

வட்டவாய்க் கமல மலர்த்திரு மார்பன் மருவிய கச்சப வடிவை
யட்டசூ லச்செங் கரத்தினோன் மகிழ்வோடமர்தரு காஞ்சிமா நகரை
விட்டொளி காலு மணியினாற் குயிற்று மேதகு மாரமாய்த்தன்பால்
இட்டமாய்க் கொண்ட பாலிநாடு ஒரு மூன்றெனச் சொலுஞ் சகத்துயர்ந் ததுவே 3 (36)

தரைசெறி யினிய போகம தருத்திச்
     சார்வினைத் துவக்கொழிந் ததற்பின்,
உரைசெறி யறத்தின் ஆற்றினா லுயிரை
     யுவமையில் அருங்கதி யியைத்து,
விரைசெறி தருவார் தனதரும் போகம்
     விலகுழிக் கிழக் கினி லிருத்தும்,
புரைசெறி துறக்க விண்ணினை யிழித்துப்
     புகன்ற (து) அத்தொண்டை நன்னாடு  4 (37)

கோள் தமக் குரிய நிலையினிற் பிறழ்ந்து
     கொண்டல் நீர் பொழிதரா விடினும்,
ஆள்வினை யதனா லிரும்புவி யதனை
     யகழ்தொறுந் துய்த் திடு நன்னீர்
நீள்திரை செறிஆர் கலியெனவோடு
     நிகரறு மாநதிக் குலத்தால்,
நாள்தொறும் ஏனை நாட்டினைப் பழித்து
     நக்கது தொண்டைமா நாடு.   5 (38)

அடியவர் குறையைத் தீர்ப்பதே விரத
      மாக்கொளும் பசுபதி யுரைத்த
முடிவிலா கமத்தின் முறைநெறி யொழுக்கு
     முப்பதோ டிரண்டெனு மறமும்,
மடிவிலா வின்ப நிறையும்விம் மிதமு
     மருவிய நீக்கமில் அணியாய்
படிமுழு தளித்த வுமையினா லணியப்
     பட்டதத் தண்டக நாடு 6 (39)

                                         (வேறு)

வாகையால் அறிவால்அன்பினா லருளால்
      வனப்பினாற் பெரும்புக ழதனால்
ஓகையாற் கலையி னுணர்ச்சியால் நெறியா
      லுற்றதோர் வலியினா லறத்தால்
ஈகையா லசைவின் மனத்தினால் வாழ்வா
      லிருங்குடி வளத்தினா னெறியால்
ஊகையாற் குலத்தாற் கீர்த்தியாற் குறைபா
      டுரைக் கொணாத் தொண்டைநன்னாடே 7 (40)

                                     (வேறு)

இப்பர் மாதரெண் ணிருந்தனந் தோய்தலி னிகழ்விற்
கப்பிடும் பொறி குல்லைக ளேய் தலிற் கணிப்பில்
ஒப்பி கந்திடுங் கவுத்துவ மணியுறைந் துள தாற்
றப்பின் மால்நிற மென்னலாந் தண்டக நாடே  8 (41)


இப்பர்=செட்டிகள்,  மாதர்= அழகிய,  இருந்தனம்= பெருஞ்செல்வம் .
இப்பர் மாதர்= இடைஸ்திரீகள்,  அழகிய இருந்தனம்= அழகிய பெரிய கொங்கை,
நிகழ்= பொருந்திய,  வில்= காந்தி, கப்பிடும்= பிரகாசிக்கும், 
பொறி= தேர், இகழ்வு இல்= இகழ்ச்சியில்லாத,  கப்பிடும்=பொருந்திய,
பொறி= இலக்குமி, குல்லை= வெட்சி,
துளசி கவுத்துவமணி= பதுமராகம் கவுத்துவமணி, மால்நிறம் =மால் மார்பு

மாயன் வெண்ணிற முகலியாய் மகபதி திசைக்குப்
போய தொத்துவென் முகிற்குழாம் புணரியி லண்மி
யாய வெண்டிரைப் புனல்முகந் தன்னவ னைவர்
நேய னாகவந் தெனக்கறுத் தந்தர நிறைந்த 9 (42)

முன்ன மோர்பகள் மலையினான் முகிலினம் பொழிய
மன்னு மாமழை தடுத்தகீழ் மழைக்குறா வணமுஞ்
சென்னி வண்கிரி கட்குறு செருக்கடங் கிடவு
முள்னிக் கண்ணனே மழை சொரிதரவர லொக்கும்  10 (43)

விண்ணு லாமுடி நந்திமால் வரைமிசை மின்னித்
தண்ணு லாம்பெரு நீர்மழை பொழிவன சலசக்
கண்ணு லாந்திரு நாயகன் பனைசைவாழ் கடவுட்கு
உண்ணி லாவுமன் பொடுபுன லாட்டுவ தொக்கும்  11 (44)

நீடு மாமலை நின்றுநீ ரிழிந்திடல் நிருத்த
மாடு மெண்குணத் தோன்றிரு முடிமிசை யணிந்த
கோடு வெண்பிறை யொழுக்கியவ முதெனக் குலவி
யோடி வந்ததை யொத்ததவ் வொலிகெழு நீத்தம்  12 (45)

முன்னர்த் தேனுவின் பயநிறை யான்வரை முகட்டிற்
றுன்னிக் காரினம் பொழிந்தநீர் தூயபா லளவிப்
பன்னர்க் காம்பெயர் பாலிமா நதியெனப் பாந்தள்
மன்னர்க் காஞ்சுமை வார்கலி வையமேற் பெயர்ந்த 13 (46) 

பரவை மாநிலத் ததிகது ரத்தினிற் படர்ந்து
மருவிப் பல்லிடம் வைகியாங் காங்கினும் வயங்குந்
திரவி யந்தனைக் கொண்டுதன் பதியினைச் சேர
வருவ போனதி வார்கட னேடியே வருமால் 14 (47)

களிகொள் நெஞ்சிலா மெலியர்தஞ் சிறையினைக் களைந்து
அளிகொள் வல்லவர் மீட்டழைத் தேகுத லனைய
தெளிகொள் நீத்தம்வார் திண்பெறுங் கரையினைச் சிதைத்தே
யொளிகொள் வாவியி லுள்ளநீர் கொண்டினி தோடும் 15 (48)

வான மீதுறு வலிகெழு கோளரா வாய்ந்த
வான வீர்ங்கதி ரென்னவங் காந்திட வளஞ்சேர்
கான மேவிநீ ள்திரையெனுங் கையினான் வதிந்த
யேன மாமருப் பினையெடுத் தெறியுமந் நீத்தம். 16 (49)

திரையிரும்புனற் றொண்டைநன் னாட்டினிற் றிகழுந்
தரைவ ளங்களை நிரப்புவ தன்றியுந் தகைசேர்
உரைசெய் யூழுறு செம்மணி யாதியா யுள்ள
வரைவ ளங்களுந் தந்திட வந்ததவ் வனமே * 17 (50)

வனம்= நீர்

சாப நீடிரைச் சாபநா ணடுவுறச் சார்ந்த
*சோப மாருமென் கொடியடு கூர்ங்கணை சுடர்செய்
தீப மோடுறழ் மரைமுகை யாக்கொடு $திரைமேற்
கோப மோடமர்க் கேகுதல் போன்றவக் குடிஞை 18 (51)

*சோபம் = அழகு, $திரை மேல்= கடலின் மீது


வேக மோடொரு ஞாங்கர்செம் மணியையும் வேறோர்
* வாகு நீலமா மணியையு மொதுக்கியே வரலால்
வாகை யோடிரு மருங்கினு மரியயன் மருவு
மேக பாதமூர்த் தியைக்கடுத் திருந்தவவ் விருநீர் 19 (52)

*வாகு= பக்கம் 

புகரில் வைகை, கா வேரி, கம் பாநதி, புகல் பொன்
முகரி பெண்ணை . சே யாறு, டனளவளாய் முழங்கு
மகர வாரியி னோங்கியா ருயிரினு மல்கு
நிகரி லான்றனை நிகர்த்தவப் பாலிமா நீத்தம்  20 (53)

அந்த மார்சிலம் படியினிற் பொருந்திமிக் கரிய
சந்த நித்திலத் தோடொளி மணிப்பணி தரித்துக்
சுந்த சந்தனந் திலகமெய் கமழ்தரப் புனைந்து
சிந்தை கூர்ந்தெழிற் பாலியாந் திருமகள் போந்தாள்  21 (54)

(அ. பொ-ள்) சிலம்படி= மலையடி- தண்டைக்கால்,  நித்திலத்தோடு- முத்தின்
காதணி: முத்துடன், மணிப்பணி - இரத்தினாபரணம். மாணிக்கமுடைய
பாம்பு: சந்தனம்= சந்தனமரம். திலகம் - மஞ்சாடிமரம், சந்தனம் - திலகம்

இளைத்து றாப்பெரு வாளைகள் தாக்கலின் இளநீர்
ஒளித்தி வாகரன் தேரிடை விசையினி லுறவாங்
கிளைத்து நீர்நசை யோடமர் அருணனுண் டிருந்தான்
அளிக்கும் ஊழெவண் இருக்கினும் அருத்துவ தியல்பே  22 (55)


                                                         (வேறு)

கள்ளவிழ் மலருஞ் சந்துங் கதிர்மணிக் குழையு நாவான்
விள்ளருஞ் சிலையுந் தாங்கி விரிமணித் திகிரி மேற்கொண்டு
எள்ளலின் மாக்கள் சூழ வெழிற்றிரை யாற்று வேந்து
பொள்ளெனக் கடலோர் காத மெதிர்புகுந் தழைப்பப்போமால் 23 (56)

(அ.பொ-ள்) மலரும் சந்தும் குழையும் சிலையும் தாங்கி=ஆறு, பூ,
சந்தனமரம் தளிர் ஒலி இவைகளையுடைத்தாய்; அரசன்= பூமாலை
சந்தனம் காதணி வில் இவைகளைத்தாங்கி, திகிரிமேற் கொண்டு=ஆறு,
மூங்கிலைத் தன்மீது கொண்டு, திகிரி மேற்கொண்டு= அரசன், இரதத்தின்
மேலேறிக் கொண்டு, மாக்கள்சூழ - ஆறு மிருகங்கள் சூழ,
மாக்கள்சூழ= அரசன் மனிதர்சூழ.

தோய்ந்தவர் புறத்து மாசுந் தொலைவிலா வகத்து மாசு
மோய்ந்திட வகற்றி மீட்டு முறாவகை புரிந்து போகந்
தோய்ந்திட வளித்து மேலைச் சுகமுறும் பதவி நல்க
வாய்ந்தவோர் நீத்தம்பாலி யல்லது மகியின் யாதோ. 24 (57)


அத்திரு நதியின் சீர்த்தி யறுகொடு தும்பை சூடு
நித்தனே யுரைக்க வேண்டு மன்றியா னிகழ்த்தற் கொண்ணா
வுத்தமத் தவஞ்செய் தாலு முயர்வுறா ரொருகாற் றோயின்
முத்தியை யடைவ ரென்னின் அதன்புகழ் மொழியற் பாற்றோ 25 (58)

ஆரணத் துதித்த வெண்ணெண் ணருங்கலை முதற்பன் னூல்போற்
பூரணப் பெருநீர் வெள்ளம் புனிதமா மகழி பொய்கை
வாரண வோடை யெங்கும் வளமுற வோடி வேத
காரண னடியா ருள்ளங் கனிந்தவன் பென நிறைந்த. 26 (59)

நிறந்திகழ் பாலி நீத்த நீண்மடை வழியாய்ச் செல்ல
வுறந்திகழ் மள்ள ரார்த்துள் ளுவப்புடன் குழுமிச் செய்க்கண்
டிறந்திகழ் பகடு பூட்டிச் சேயிழை மாத ரந்தாட்
புறந்திகழ் சிலம்பெ னச்சால் புவிகிழித் துழுவ ரன்றே 27 (60)

கூற்றுவ னூர்தி யன்ன கோடுயர் பகட்டேர் பூட்டி
யூற்றமோ டோச்சி மள்ள ருழும்பணை யன்னஞ் சங்கைப்
போற்றிடு மண்ட மென்னாப் பொருக்கென வெடுத்து விண்போய்
வேற்றுநந் தெனவி டுப்ப வீழ்தல்வெண் மதியை யொக்கும்  28 (61)


உழுதளி சேறு செய்வோ ருரப்பொலி யோசை யெங்கும்
பழுதற பதத்தினாற்றைப் பறித்ததை நடுவோ ரெங்கும்
இழுதைநேர்ந் திலங்கு சேற்றி லெழில்விதை விதைப்போ ரெங்கும்
வழுவிலிந் திரதெய் வத்தை வழுத்துதல் செய்வோ ரெங்கும். 29 (62)

பயிர்களை களைய வெண்ணிப் பாவையர் தம்மை நோக்கிச்
செயிரறு மொழியீர் நுங்கள் சேயிதழ் வதன மோடு
*அயில்விரி குமுதங் கஞ்சம் அடர்த்துநிற் கின்ற வென்ன
வெயில்விரி வளை கலிப்ப வெறுத்தவை களைதல் செய்வார் 30 (63)


*அயில்= அழகு

                                                  (வேறு)

செங்குமுதம் வாயெனவுஞ் செழுங்குவளைக் கண்ணெனவு
மம்புயமென் முகமெனவு மணிவள்ளைக் காதெனவும்
பம்புவளைக் கடைசியர்கள் பாரா தகழ்ந் தெறிவார்
அங்கெழுபுன் முதலியவை யனுக்குவதற் கஞ்சுவரோ  31 (64)

செழுமலர்க்காந் தண்முகிழ்போற் சிறுவிரலா ருழத்தியர்கள்
கொழுவயலி லுறவெந்தக் கொள்கையின்மைக் கண்களினாற்
பழுதுபடவெமையிகழ்ந்தோர் படர்வதென்னென் றறக்கொதித்(து)
எழிலமையுஞ் சேலினங்க ளெழுந்தவரை யெற்றிடுமால். 32 (65)

அம்புயமென் னறைமலர்க ளலர்ந்தடர்ந்த வதன் மருங்கில்
வம்புபெறுந் தனமாதர் வடிவநிழல் வாய்ந்திருத்தற்
செம்பதுமை மலரினுறை திருவுருவெண் ணிலவெடுத்து
வம்புறையு மலர்கடொறும் வதிந்தனபோல் வயனிற்பார். 33 (66)

அலைபுனற்றண் பணையகத்து ளார்ந்தசெழுஞ் செந்நெல்லோ
ரிலைபுடையின் வளைவுறமிக் கீர்ம்பசுமென் கதிர்களெலா
நிலைபெறவங் கெழுந்ததன்மே னிமிர்ந்தெழில்செய் திடுதோற்றங்
கொலைமதமால் யானையினங் குசங்களையொத் திருந்தனவால் 34 (67)

உண்ணவரும் புள்ளினங்க ளும்பர் மிசை யேயொதுங்கப்
பண்ணுவபோல் வாளையெங்கும் பாய்நலத்த பண்ணையினில்
வண்ணமிகுந் தோங்குபயிர் வான்பாலி நாட்டவர்செய்
புண்ணியமீ தென்றுணர்த்தும் படிவிளைந்த போலுமரோ. 35 (68)


நிவர் தருபைஞ் சுருள்விரித்த நிகரறுமென் பைங்கூழ்கள்
துவர்நிறமாய்ப் பால் நிறைந்து *சொற்பழுத்த விதந்தேர்ந்து
கவர்குலையைக் கொய்வனபோற் கடிக்குயங்கைக் கொண்ட ரிந்தே
தவர்புகழ்விண் ணளவினும்போர் சமைப்பர்கருங் கான்மள்ளர் 36 (69)

*சொல்=நெற்கதிர், கவர்=வாழை. கடி= கூர்மை, தவர்= முனிவர்.

போர்க்களஞ்சேர்ந் தவைசாய்த்துப் புரம் வியர்க்க வெடுத்தடித்துச்
சூர்க்கருங்கார் நிறப்பகட்டாற் றுவைப்பித்து *வழுதகற்றி
யார்த்தெழு  $வேற் றலம்வருவ தறிந்துபத டிகண்மாற்றிச்
சீர்த்திகழ்நென் மலையெனப்போர் செய்தனர்நன் மள்ளர்களே, 37 (70)

*வழுது= வைக்கோல் , $வேற்றலம்= காற்று

                                                       (வேறு)

வித்தினை யுணக்கு வார்களோர் பாலின்
      விரைதரு மஞ்சளிஞ் சிகளைக்
கொத்துடன் கிண்டி யெடுப்பரோர் பாலிற்
     கோதினற் கரும் பினைத் தடிந்து.
சுத்தவா லையினிற் கொடுப்பரோர் பாலிற்
     சுவைரத மட்டலோர் பாலின்
றத்தியே கமுகின் குலைதலைசாயத்
    தடிந்தவ ணுய்ப்பரோர் பாலின் 38 (71)

மன்னனுக் கோர்பா லாகிய கூற்றை
     மற்றவர்க் களித்து பினைந்தைத்
தென்புல வாணர் தெய்வநல் விருந்து
    தேடியிட் டதன்பினா வொக்கல்
தன்மனை மக்க ளோடுநான் குண்டி
   தகுதிகொ ளறுசுவை யருந்திப்
பின்னர்நால் வேத மோதல்சாத் திரங்கள்
பேசுதல் கேட்டவ னுறைவார். 39 (72)


* எள்ளிறுங் குழுந்து சாமை மஞ் சூர
       மேனல்கம் பவரையுங் கோதில்
கொள்ளரு முற்க மாடகி முதலாக்
       கொண்டபுன் செய்ப்பலன் வண்டி
விள்ளவே யிட்டுத் தம்மனை கொடுபோய்
      விரிமுக டுறும்படி யடுக்கித்
தள்ளரும் விருந்தோ டடியவர்க் கூட்டித்
      தகுமதி திகளை நோக் குறுவார் 40 (73)

* இறுங்கு= சோளம், மஞ்சூரம் - கடலை, ஏனல் - தினை,
 இரண்டாமடியில் கொள் அருமுற்கம் எனப்பிரித்து. கொள்ளும், அருமையாகிய பயறும்
 எனக்கொள்க.   முற்கம் = பயறு ஆடகி = துவரை.


                                              திணைமயக்கம்

உவரியிற் சூழிந் நிலத்தினிற் றிணிநான் குள்ளன மற்றவை நிற்க
அவைகளி னொன்றோ டொன்றுபோய் மயங்கு மருந்திணை மயக்கு ரைத்தருளத்
தவமுறுங் கச்சி யப்பமா முனிக்காஞ் சாற்றுத லெமக்கரி தெனினு,
மவனரு ளொடும்பா வாணர்தங் கிருபை யானுமங் கவையெடுத் தறைவாம். 41 (74)


தெங்கிருங் குரும்பை வெளிவரா முன்னர்த்
     திண்ணிய பாளையான் மூடிப்,
பொங்கமாய் வெளிவந் திட்டவோர் காலைப்
     போர்வை நீத் திடல்முகிழ் முலையுட்
டங்கிய வேலைக் கச்சினான் மூடித்
     தனம் வெளி வரக்கலை திறக்கு
மங்கையர் போலு மெனநகை முல்லை
     மலருதிர் தரக்கனி புடைக்கும். 42 (75)


மருதநிலத்திலுள்ள தெங்கினைப்பார்த்து முல்லை நிலத்திலுள்ள முல்லை
மலர் நகைத்தலால், அத்தெங்கு தன் கனியினால் அம்முல்லை மலரைச்
சிதைக்கும் . 


                                                         (வேறு)

* பெருகுழக்கும் வெளிலோசை கேட்டபுலிக் குருளை தமைப் பேணுந் தாயி
னுரியவருங் குரலாமென் றொலியடங்கி யெதிர்பார்க்கும் ஊற்றத் தோடு,
கரியநிறக் குயிற்குரல்கேட் டாங்கணிளங் குழவிகள்கண் ணயரா நிற்குஞ்
சுரிகுழல்கொள் செவிலித்தாய் தாலாட்டு மோதையெனத் துணிந்து மன்னோ . 43 (76)

*பெருகு= தயிர், வெளிலோசை=மத்தோசை

முல்லை நிலத்திற்றயிர்கடையு மோசையைக் குறிஞ்சி நிலத்திலுள்ள
புலிக்குட்டிகள் கேட்டுத் தன்றாய்க்குரலோசையென் றெதிர்பார்க்கும்.
மருதநிலத்திலுள்ள குயிலோசையை முல்லைநிலத்திலுள்ள சிறு குழந்தைகள் 
கேட்டுத் தன்றாய்மார் தாலாட்டோசையாகக் கொண்டு நித்திரைசெய்யும்.


*கிரிசரந்த னினமென்ள மகரமீன் றனை யெண்ணிக் கீள்வருக்கை
யரிய நறுஞ் சுளைவாரி வாரியுள வம்மீனை யடிக்கச் சீறிப்
பெரியகலை சுளையோடும் பெயர்ந்துகிரி யிடைமோதல் பெருங்கணேசன்
விரிவுறுவா கமங்கடலில் வீசவதை நந்திகொணர் விதமே போலும் 44 (77)

*கிரிசரம்= மலையானை, கலை=மகரமீன்

குறிஞ்சி நிலத்திலுள்ள யானை நெய்தனிலத்திலுள்ள மகரமீனை நெய்தல் நிலத்திலுள்ள
 பலாக்கனியாலடிக்க, நெய்தல் நிலத்திலுள்ள மகரமீன் குறிஞ்சி நிலத்திற் பாயும்,


மாதிரத்துச் சிறுமாத ரேனல்கவர் குரிஇயினங்கள் மறுக வீசும்
* பீதகத்தி னுறுதழற்செம் மணிவந்து தாக்கவந்தப் பெற்றி கண்டு
தாதுதிரும் பூம்பாளைத் தெங்கினிளங் காய்பறித்துத் தாக்கும் மந்தி
யேதமிலா வரதனமும் இளநீரு மீரிடத்து மியலு மாதோ. 45 (78)

*பீதகம் - பொன், தழல் - கவண்

குறிஞ்சி நிலத்திலுள்ள வேடப்பெண்கள் கவணில் எறியும் மாணிக்கங்கள்
 மருதநிலத்துத் தென்னைமரத்திலுள்ள குரங்கின் மீதுபட, அக்குரங்கு மருத 
நிலத்திலுள்ள தேங்காயைப் பறித்து குறிஞ்சிநிலப் பெண்களின் மீதெறியும். 


கணக்கிறந்த கொடிச்சியர்கள் ஊதநா தன்னெயிற்றைக் கானல் வாயின்
உணக்குமீ னிடைக்கிடைதந் தேகொளுவ ரப்பாக்கத் துறு நர் கோட்டை
யிணக்கியே தருபாக்கு மருதத்துத் தடதியர்கை யிப்பி முத்தைக்
குணிப்புடனீந் துஞ்சல்தரக் குழமகவை யதிற் கிடத்திக் குலவு வாரால் 46 (79)

ஊதநாதன் - தலைமையாகிய யானை,  எயிறு=  கொம்பு, கானல் - நெய்தல்,
பாக்கம்= குறிஞ்சி நிலத்தூர்

குறிஞ்சி நிலத்திலுள்ள பெண்கள் யானைக்கொம்பைக் கொடுத்து
நெய்தனிலத்திலுள்ள பெண்கள் விற்குமீனைக் கொள்ளுவார்.  அந்த
நெய்த னிலத்திலுள்ள பெண்கள் வாங்கின யானைக்கொம்பை
மருதநிலத்திலுள்ள தச்சருக்கு முத்துக்களைக் கூலியாகக்கொடுத்துத்
தொட்டில் செய்து கொள்ளுவார்கள்.


இருபுறவக் கருப்பொருளா மிளங்கிளியுங் குமிழுமுத்த மேயு மின்னார்
உருகுமொழி கற்கவுமூக கிற்கிணையா கவுமவண்வந் துற்ற தொக்கு
மருதவய லுறுகுவளை யாம்பன்முன மொழிநிலத்தின் வயங்கு மோடை
மருவுசுனை யுறலன்ன லார்விழிவாய் வளங்கவர வந்த தேய்க்கும் 47 (80)

இருபுறவமாவது - குறிஞ்சி, முல்லை முத்தமாவது - மருதநிலம்
குறிஞ்சி நிலத்திலுள்ள கிளியும், முல்லை நிலத்திலுள்ள குமிழம் பூவும்
மருத நிலத்திற் பொருந்தியது. மருதநிலத்திலுள்ள நீலோற்பலமும், ஆம்பலும், 
முல்லை நிலத்து நீரோடையிலும், குறிஞ்சி நிலச் சுனையிலும் பொருந்தியது


மருதமேய் மாதர் நாசி வளத்தினை மறைந்திருந்து
திருடின குமிழ மென்னாத் தேமலர் தூற்றக் கஞ்ச
மரு *மரை முல்லை நல்லா ரணிமுலை கவர்ந்த தென்ன
மருவிய குமிழும் வாய்த்த மதுசலம் உமிழு மாலோ 48 (81)

*மரை - தாமரை

மருதநிலத்திலுள்ள தாமரை, தங்கள் நிலத்திலுள்ள பெண்களின்
மூக்கினழகைக் குமிழமலர் திருடிக்கொண்டு முல்லை நிலத்திற்குப்
போயினதென்றலர் தூற்ற, முல்லை நிலத்திலுள்ள குமிழமலர் தங்கள்
நிலத்திலுள்ள பெண்களின் கொங்கையினழகைத் தாமரைமலர்
கிரகித்துக் கொண்டு மருத நிலத்திற்குப் போயின தென்று வாய் நீருமிழும்.
 


இனையநா னிலத்தி னுள்ள விருங்குடி யாவும் நீதி
தினையள வேனு மாறாத் திருத்தொண்டை நாட்டின் சீர்த்தி
கனைதிரைக் கடல்சூழ் வைப்பிற் கருதியா ருரைக்க வல்லார்
தனைநிகர் கற்ப நாட்டுஞ் சாற்றுதற் கரிது மாதோ 49 (82)

                                              திருநாட்டுச்சருக்கம் முற்றிற்று.
                                           பாயிரமுட்படத் திருவிருத்தம் - 82


                                                        திருநகரச் சருக்கம்

நந்தி டாவிலக் கணமுணர் நாவல ரருளாற்
சிந்தை கூர்மையி லேஞ்சில நாட்டணி தெரித்தேம்
அந்த முள்ளதோர் பனைசைமா நகரணி யறைவான்
உந்து மெம்மனத் தாசையா னுரைதர லுற்றேம்  1 (83)

                                            (வேறு)

பாதல மணிப்பூம் பொய்கை பாம்பிறை மரையி னாளம்
பூதல மணங்கொள் போது புகலரு மேனை நாடு
மீதல ரிதழ்க டொண்டை மேதகு நாடுள் ளேடு
தாதல ரப்பூங் கொட்டை தாலமா நகர மாமால், 2 (84)

அகலிட மென்னு மாதி னணிமுகம் போலும் அன்னாள்
சுகமுறு நுதலிற் றீட்டுஞ் சுந்தரத் திலதம் போலுங்
ககமெனுங் கண்ணே போலுங் கருதுமெவ் வுலகுங் கொண்ட
பகவனா ரகடு போலும் பனைசைமா நகர மம்மா. 3 (85)

திருமறு மார்ப னூருந் திசைமுக னுறையு மூருந்
தருவளஞ் செறியு மூருந் தனதனார் வதியு மூரும்
பொருவரு முரக ரூரும் பொலிவினாற் பொருந்தா தென்னாப்
பரிவுகொண் டிறைவன் மேவும் பனைசைமா நகர மாதோ. 4 (86)

இரவிவெண் மதிவ சுக்க ளெண்டிசைப் பாலர் சித்தர்
தருநிழ லுறையும் போகி தானவர் பகைவர் வேட்கைக்
கரிசறு முனிவர் நாகர் கருதிவந் தென்று நீங்காப்
பரிவுடன் பணிந்து போற்றும் பனைசைமா நகர மாதோ 5 (87)


கரும்பல நெல்லே யென்னக் கமுகல கரும்பே யென்ன
விரும்புறுங் குலைத்தெங் கல்ல மிளிர்கமு கெனவளர்ந்து
பொருந்திய வளங்க ளெல்லாம் பொலிவுட னோங்கி யார்க்குந்
தருந்திற முடைய தந்தத் தண்பணைச் சூழன் மன்னோ 6 (88)

ஆலைவாய்ப் புகையோ மாதர் ஆரணி கொள்ளுந் தங்கள்
*வாலமார் தரப்பு லர்த்து மகிற்செழும் புகையோ வன்றிச்
சீலமார் மறையோர் யாகத் தீத்திரட் புகையோ வென்ன
மேலெலா முகில்கள் தோய விளங்கிய மலர்ப்பூஞ் சோலை. 7 (89)

*வாலம்=மயிர்

சிறந்த செஞ் சாலி பாங்கர் செறிந்துநின் றோங்க வாங்கண்
விறந்தநெட் டிலைப்பூ வல்லி வீக்குறப் பூக நிற்றல்
அறந்தவா தருளும் பெம்மா னணிவிழாத் தருப்பைப் புல்லாற்
புறந்தழீஇ விளங்கா நிற்கும் பொற்கொடி மரமே போலும்   8(90)

மாதரார் மிடறெம் மோடு மானுமோ வென்று பூகத்
தூதுலாம் பாளை நிற்ற றகுதியன் றென்ன வெண்ணித்
தீதிலா தெழுசெஞ்சாலித் தீங்கதிர் துறடாக் கொண்டு
*காதகஞ் செயலே போலுங் கந்தியின் கழுத்திற் சாய்தல் 9 (91)

*காதகம்= கொலை, கந்து= பாக்குமரம்

பெருகுநீர்த் தடத்தி னோர்சார் பிறங்கிடு முகையைச் சார்ந்து
வரியறு காலாற் கிண்டி வார்மது வுண்டு றங்கல்
சரிகுழற் பெதும்பை மாதைச் சார்ந்தொரு விடலை யண்மித்
திருகிவா யமுத முண்டு காமத்திற் நிளைத்தற் போலும் 10 (92)

                                                           (வேறு)

தடங்களின் மட வனங்கள்தா மரையிடைத் தயங்க
நடஞ்செ யந்நலார் நடைக்குடைந் திடுவதை நாணி
யடங்கி யங்கன லிடையிருந் தருந்தவ மாற்றி
*யிடங்கொ ளும்படிக் கற்பதற் கெண்ணுவா னேய்க்கும். 11 (93)

* இடம்=பெருமை

மயில்கு யிற்சுக மந்நகர்ச் சோலையின் மருவ
லயிலெ னும்விழி யந்நலார் சாயலைக் குரலை
வொயில் கொள் சொற்களின் வளங்களைக் கற்குமா றுன்னிப்
பயில்வ தற்கொளித் திருந்திடு பான்மையை நிகர்க்கும். 12 (94)


கூட்டி னிற்பயில் பூவைகளாகமங் கூறுங்
கேட்டு மஞ்ஞைகள் மகிழ்வுட னடிக்குமென் கிளிகள்
பேட்டொ டும்பக ரைந்தெழுத் தோசையாம் பெரும்பண்
பாட்டு ளத்தமைத் தின்புறுந் *தூதுணம் பறவை. 13 (95)

*தூதுணம்= புறா


கடுவன் மந்திக்கீந் திடச் *சுளிக் கனிப்பணைக் கரத்தான்
முடுகிப் பற்றியீர்த் ததைவிடக் கருநிற முகிலின்
வடுவு றும்படி யுரிஞ்சிட வந்தநீர்த் துளியைப்
படுப னித்துவ லென்றுல கோரினம் பகர்தல் 14 (96)

*சுளிக்கனி= மாங்கனி

நாகர் வாழ்ந்திடு நகரிடை யித்தகை நலனுண்
டாகு மோவெனக் காண்பமென் றகழியு மெயிலுஞ்
சோக மின்றியே கீழொடு மேலுமாய்ச் சோராது
ஏகு கின்றன போலுமா லப்பதி யிடத்தே 15 (97)

முக்க ணான்புர மெரிசெட மேருவை * முனியாக்
கைக்கொள் வானது காற்புவி கவிழுமென் றறிந்து
நிற்க நான்முகன் பலமலை நிறுவிய தென்னத்
திக்கு நான்கினு மோங்குவ செறிந்தகோ புரமே. 15 (98)

*முனி=வில்

அண்ட கோளமுங் கிழியநீண் டகன்றகோ புரத்தால்
எண்டி சாமுகத்  திருள்வலி கெடுக்குமேழ் பரியோன்
கொண்ட தேர்செலா திருமருங் கினுஞ்செலல் குறித்துப்
பண்டை யோரிரண் டயனமென் றினிதுறப் பகர்தல் 17 (99)

அன்ன மாலயத் தயற்புறம் நிறுவியே யகம்போய்ப்
பன்ன காபர ணன்பதம் பணிந்து மீள் வதன்முன்
அன்ன லார்நடை விழைந்தவர் பின்செல வாங்கு
தன்ன தூர்தியைக் கண்டிலா தயன்மிகத் தளர்வான். 18 (100)

                                                (வேறு)

ஆடக மணிய னாங்கண் அமைத்தசெய் குன்றின் மீது
நீடு*மம் பாவி நீங்கல் நிகரறு காமங் கொண்டு
நாடிய தலைவர் காண நகைமுகங் காட்டித் தூசின்
மூடுபு திறக்கும் வேசை மாதரார் முலைகள் போலும். 19 (101)

* அம் மேகம், பாவி - பரவி,


அவலிடி யதிர்ச்சி யாற்றெங் கருங்கனி வயலின் வீழா
நவமுறு வளைகள் சேற்றின் * நளத்துட னமிழ்த்த நாளுந்
தவவடு வாலைச் சாறங் குறுத்தலுஞ் சங்க மேற்சென்
றுவமையில் வேழக் கான மூர்ந்துமுத் துதவு மாலோ 20 (102)

*நளம்=தாமரை

மங்கல வொலிக ளெங்கும் மகரதோ ரணங்க ளெங்கும்
பொங்கொலி முரச மெங்கும் பூரண கும்ப மெங்குஞ்
சங்கலம் பொலிக ளெங்குஞ் சதுர்மறை முழக்க மெங்குஞ்
செங்கதிர்த் தீப மெங்குந் திருவிழா வீதி யெங்கும் 21 (103)

பாசநீங் கியத வத்தோர் பரசிவ மதனை மிக்க
நேசமாய்க் கண்டு நெஞ்சம் நெக்குவிட் டுருகு மாபோற்
றேசுலா மதியைக் கண்டு தெண்ணிய நீரைக் காலு
மாசிலா இந்து காந்த மாளிகை வரிசை மாதோ 22 (104)

பொன்னிறச் *சதனத் தின்கீழ்ப் புறத்துமே னிலையி டத்து
மன்னிற நீலம் வைரத் தமைத்தகா லதர்கண் மேனாட்
பன்னரு மிறைவன் செங்கேழ் பதமுடி காண மாயன்
உன்னரும் பிரம னேன மன்னமாய்த் தேடலொக்கும் 23 (105)

*சதனம்= வீடு

                                                (வேறு)

நாய கற்றுரீஇ நவமணி குயின்றமா ளிகையின்
மேய வந்நலார் முகமதி துளங்கொளிப் பளிங்கிற்
பாய வெண்கதிர் திங்களென் றெணிக்கரும் பாம்பங்
கேய பின்னஃதெய்திலா மையிற்புறம் போமால் 24 (106)

துன்னு மாமதி முற்றமேற் றூக்குமேற் கட்டித்
தன்னி லார்த்தவெண் முத்தமும் வைரமுந் தயங்கி
மின்னு முண்மைகண் டறிகலா மேதினி யோர்கள்
இன்னுந் தாரகை மண்டல மெனவெடுத் திசைப்பார் 25 (107)

                                  (வேறு)

வான்றொடாம் பரத்தின் கனியடுப் பாக்கி வளைந்தகூன் குழிசியினிடைக்கோற்
றேன்றெளி வுலைவார்த் தறவுமிழ் மணியின் றெறு கனன் மூட்டிநித் திலத்தின்
வான்படு மரிசி பாலினாற் கழுவி வளமுறப் பெய்தமு தாக்கி,
மான்விழித் துவர்வாய் நுணங்குறா முலையர் மறுகெலாம் வண்டலாட் டயர்வார் 26 (108)


                                                         (வேறு)

பண்டரு மிசையி னோசை பாவையர் சிலம்பி னோசை
யெண்டகு முழவி னோசை யினியயா ழிசையி னோசை
தொண்டர்க டுதியி னோசை தோகையர் நடன வோசை
கண்டிஃதின்ன வென்று கழறலாந் தகைமைத் தன்றே 27 (109)


வீதியின் விழிவு தப்பா விருந்தினர்க் குணவு தப்பா
சாதியா சாரந் தப்பா தருமநன் னெறிகள்தப்பா
மாதர்கண் *முல்லை தப்பா மைந்தர்கள் விருத்தி தப்பா
ஆதிபாண் டரங்கன் பூசை யடியவர் பூசை தப்பா. 28 (110)

*முல்லை=கற்பு

                                                  (வேறு)

மனமெ னும்புலத் தினைவிசா ரத்தினான் மடக்கி
யினிய புந்தியா லுழுதரன் பத்திமை யென்னும்
அனக மாம்விதை யினைவிதைத் தரியபே ரன்பாம்
*வளநி றைத்தருட் சிவமெனும் பயிரினை வளர்ப்பார். 29(111)

*வளம்=நீர்

திதலை மென்முலைச் சுரிகுழற் றெரிவையர் முகம்போல்
மதிவ ளர்ந்துமொவ் வாமையின் மற்றவர் நுதல்போற்
சதிரு டன்கலை குறைந்துபார்த் தவ்வளஞ் சாரக்
கதியி லாமையி னுலகினு மதியெனக் கழறும். 30 (112)

சந்த மார்கதிர்த் தரளமென் முலைநெடும் பணைத்தோள்
கொந்து லாமலர்க் கோதையர் நடைபெறக் குறித்து
வந்து பின்றிரி பிடிக்குமந் நடைவரா மையினான்
மந்த மாவெனப் பெயரனாண் முதற்கொடு வகுத்தார். 31 (113)

                                                  (வேறு)

உதைபடு வனமத னனையவ ருரமே
ததைபடு வனவனி தையரிரு தனமே
பகைபடு வன * பகல படுபவர் மனமே
சிதைபடு வன $வரில் சேர்பவர் தொடையே  32 (114)

*பகல்படுபவர் - பிரிந்தவர். அரில்சேர்பவர் - ஊடல் கொண்டவர்


*மாவின முறைவன மனைதொறு மறுகான்
$மாவின் முறைவன மலர்தொறு மசையு
#மாவின முறைவன மதில்தொறு மதமார்
**மாவின் முறைவன வளமலி மறுகே  33 (115)

* மா - இலக்குமி, $மா - வண்டு, #மா - கொடி, **மா- யானை

                                                        (வேறு)

                                              பரத்தையர் வீதி

தினங்கொ ளும்படி *யிடையினை யிரவினிற் றெரிப்பேந்
தனங்கொ ளொன்றினுக் கிரட்டிகாட் டுவதலாற் றாரேம்
பொனங்கை யிற்பெறு வேமெனப் பொதுவர்வீ தியிற்கே
தனங்க $டேசிகர் கொடியினை நகைப்பபோற் றயங்கும். 34 (116)

* இடை - அளவு, மருங்குல், $தேசிகர் - செட்டிகள்

                                                      சிலேடை

மறைகள் காட்டிநற் சுவர்க்கத்திற் சேர்த்தலின் மாந்தர்க்
கறையு நல்லவா யமுதினை யருத்தியை யங்க
முறைக ளோதிப்பின் முடித்தலின் கணிகையர் வீதி
குறைவில் வேதியர் வீதியோ டொப்பன குறிக்கின் 35 (117)

வேதியருக்கு (இ-ள்) மறைகள் காட்டி = வேதங்களினொழுக்கத்தைக்
காட்டி, நல்சுவர்க்கத்தில் சேர்த்தலின்= நற்பதவியை யடைவித்தலின்.
மாந்தர்க்கு= மனிதருக்கு. அறையும் நல்ல ஆய் அமுதினை
அருத்தி= நன்மையாய் ஆய்ந்த உணவினை உண்பிக்கச் செய்து,  ஐ அங்க
முறைகள் ஓதி=பஞ்சாங்க கிரமங்களைச் சொல்லி, பின் முடித்தலின்=
 அவாளவாள் காரியங்களை நிறைவேற்றுதலால்

வேசியருக்கு (இ-ள்) மறைகள் காட்டி - இரகசிய ஸ்தானத்தைக்
காண்பித்து. நல்சுவர்க்கத்தில் சேர்த்தலின் - அழகிய தனத்தில்
அழுத்தலின்,  மாந்தர்க்கு= மனிதருக்கு,  அறையும் நல்லவாய் அமுதினை
அருத்தலின்= சொல்லற்கரிய நன்மைவாய்ந்த அதரபானம் அளித்தலின், 
ஐ அங்கம் உறைகள் ஓதி = அழகிய தேகத்திற் பொருந்திய தேன் நிறைந்த கூந்தலை, 
பின் முடித்தலின்= பின்பக்கத்தில் முடிப்பதனால் என உரைக்க


                                                          கடைவீதி

அலைலி லாவணந் தனிற்பணி யிழந்தவ ரங்கண்
மலையு மாந்தர்க ணெருக்கினோ மாதவர்க் கன்றித்
தலைவ ளைந்திற யாமையோ தந்தனச் செருக்கோ
தொலையு மப்பொரு டுருவின ரில்லையாற் றொடர்ந்தே 36 (118)
 


                          வேளாளர் வீதி (சிலேடை)

பொன்ன ரிச்சுமை யொடுநவ மணிகளும் பொருந்தி
நன்ன ரேரணி வளங்களு *நன்குறப் படலான்
மன்னு மந்நகர் சூத்திரர் வாழ்ந்திடு மறுகு
மன்னர் பின்னவர் வீதியை யனையது மாதோ 37 (119)

*நன்கு=மிகுதி

(இ-ன்) பொன்னரி= பொன்மாலை. அழகியநெல், நவமணி= ஒன்பது
இரத்தினங்கள், நவதானியங்கள், ஏர் அணி = அழகிய ஆபரணம். ஏருழும்= அழகு.


                                               வைசியர் வீதி

அதிக வட்டிக்கா சைப்படா ரருந்தவத் தமைந்த
நிதியி னைப்பெருக் குவருயிர் நேயர்க ளெனினும்
வதியு நாணய மில்லெனி லொன்றையும் வழங்கா
மதியுடைப்பெரு வணிகர் வாழ் வீதியும் பலவால் 38 (120)

                                           மன்னவர் வீதி

முடிமு தற்சொலு மூவெழு சின்னமுங் குழுவாந்
தொடிகொள் மந்திரி முதலிய வைவருந் துணையாங்
கெடிபெ றும்மதி யமைச்சர்மு னெண்மருங் கெழுமிப்
படிபு ரந்திடு மன்னவர் விதிபற் பலவால் 39 (121)

அரசர்க்குச்சின்னம் 21 அரசர்க்குக்குழு 5. அரசர்க்குத் துணைவர் 8.


                                         இதுவுமது

மனுமு றைப்படி வுலகினைப் புரந்துமற் றங்கைத்
தனுவி னாற்கர வடரொடு விலங்கினைத் தடிந்து
கனம தாமிரு மூன்றினி லொன்றெனுங் கடமை
தனதெ னக்கொளு மன்னவர் முன்றிலுந் தயங்கும் 40 (122)

                                      இதுவுமது

ஈகை யாளரிற் கன்னனே யுலுத்தனா குவனேர்
வாகை விற்றிறத் திராகவன் பின்றரு வானால்
தோகை மாதரிற் றிலோத்தமை யழகினிற் றோற்பள்
மாக மீதுயர் மாளிகை முறுகிடை வரினே. 41 (123)

                                      மறையவர்வீதி

இறைவ னொன்றென வுணர்ந்திரு வினையையு மிகந்து
செறியு மூன் றுதீ வளர்த்து நால் வேதமுந் தெரித்து
கறைசெ யைம்புலன் களைந்தறு தொழிலினைக் கைக்கொண்
டுறையும் வேதியர் வீதியாங் கெண்ணில வுளவால் 42 (124)


                                                 (வேறு)

சொல்வரிசை காட்டுவர்கள் தொழுங்குலத்து மாதவர்கண்
மல்வரிசை காட்டுவர்கள் மன்னரிள மாக்களெலாங்
கல்வரிசை காட்டுவர்கள் கனம்பரவு மிளங்கோக்கள்
நெல்வரிசை காட்டுவர்கள் நீதியுறும் பின்னவரே 43 (125)

வேரியம்பூங் கொம்பசையும் விதமென்னத் துவளுமிடை
நாரியர்க ளாடலுமின் னிசையொலியு நான்மறையுஞ்
சீரியசெந் தமிழ்த்து தியுந் திசையெட்டுந் தான்விழுங்கும்
பேரியமுங் கண்ணுறங்காப் பிஞ்ஞகனார் திருக்கோயில் 44 (126)

பெரும்புவியி லுள்ளவர் தம் பிணிதபுத்துப் பேரின்பந்
திருந்துமடி யார்மகிழச் சேவடியாம் பெருநிழலைக்
தரும்பரம னார்க்குநிழ றானளிக்க வைந்துருவாய்ப்
பொருந்திய *போந் தின்பெருமை புகலவெவர் திறத்தாமால் 45(127)

*போந்து=பனை


                                                     (வேறு) சிலேடை

வான ரம்பையு மாவைந் தருக்களுந்
தேனு வும்பூ வசந்தமுந் தீர்த்தருந்
தானமாவுந் தரித்தலி னப்பதி
யூன மற்ற  *வுயர்நிலை யொத்ததே. 46 (128)

*உயர்நிலை=தேவலோகம்

(இ-ன்) வான் அரம்பை - பெருமையுடைய தெய்வப்பெண்,ஆகாயமளாவிய வாழை:
 பூவசந்தம்= அழகிய இந்திரன் மாளிகை, புட்பவாசனை; 
தீர்த்தர்= கடவுளர், பரிசுத்தர் 
தானமா=ஐராவதம், கொடைக்குரிய செல்வம்

சத்த மாவுச்சி சார நிறீஇ *யினன்
நித்த மேழு நிமிடநின் றந்நகர்
வித்த கத்தை வியந்துகாண் பானெனில்
அத்தி ருப்பதிக் காரணி யோதுவார். 47(129)

*இனன்=சூரியன்

                                             (வேறு)
பூவினிற் சிறந்த சாதிமா மலர்போற்
      புலவரிற் சிறந்தவள் ளுவர் போற்
பாவினிற் சிறந்த வெண்கவி போற்செம்
       பசுக்களிற் சிறந்ததே னுவைப்போற்
காவினிற் சிறந்த கற்பக வனம்போற்
       கனிகளிற் சிறந்தமுக் கனிபோற்
றேவினிற் சிறந்த திரபுராந் தகன் போன்
       சிறந்தவப் பனைசையம் பதியே 48(130)

                           திருநகரச்சருக்க முற்றிற்று
                        
                           ஆகத் திருவித்தம் - 130


                        நைமிசாரணியச் சருக்கம்

ஆல மார்க ளத்தெ மண்ண லன்பு கூர்ந்த மர்ந்திடுந்
தால மாந கர்ப்பி றங்கல்* சாற்ற வல்ல ரியாவரே
சீல மேவு மாத வத்தர் சேர்ந்து மாத வஞ்செயுங்
கோல மேவு நைமி சங்கு லாய மேன்மை கூறுவாம். 1 (131)

*பிறங்கல்=பெருமை

*சூத லால் அனைய கொங்கை தொங்கல் பண்டி வாய்ந்துள
**பூத ரப்பு தல்வி நாதனை யுளம்பொ ருந்தினோர்
ஆத ரத்தி னோட மர்ந்த ருந்த வம்மி யற்றுதற்கு
ஏத மற்ற தானமாயிருக்கு நைமி சக்கடம் 2 (132)

*சூது=சொக்கட்டான், அல்=இருள், ஆல்= ஆலிலை, **பூதரம்=மலை

கனக மேவு மலர்நி றைந்த கற்பக டவிக்கணார்
இனிய போக மின்னல் என்றி கழ்ந்தி மாவ னத்திடை
அனக இன்ப மெய்த எண்ணி யருள்க வென்ன வீசனைப்
*புனிதன் வேண்டி னப்பொழிற் புகழ்ந்து ரைப்ப தாரரோ. 3 (133)

*புனிதன்=தேவேந்திரன்

நந்தன் மைந்த னுந்தி வந்த நான்மு கன்க டாவலால்
வந்த மைந்த பைம்பு னேமி வரமி குந்த நைமிசத்
துந்து சீல மேன்மை வாய்மை யொளிரு ஞான மாதவர்
எந்தை மீது சிந்தை சேர்த்தி யற்றி னார்கள் நற்றவம். 5 (135)

அன்ன காலை யக்க டத்தில் அமரு மாத வக்குழாந்
துன்னி யின்னல் தீர யாந்தொ டங்க வேண்டு மாமகம்
என்ன வென்று சாவி நம்மி டுக்க ணீங்கு சத்திரம்
என்னு நாம யாக மல்ல தில்லை யென்று தேர்ந்தனர். 6(136)

அனைய யாக மாற்று தற்கு அமைந்த பல்வ ளங்களுஞ்
சினமகன்ற முனிவர் அங்கு சேக ரித்து நற்சுப
தினமதின்ன லோரை வந்து சேரு நாள் உணர்ந்துநன்
முனிவர் தம்மை வருக என்ன மொழிமுடங்கல் போக்கினார். 7 (137)

பிருங்கி ரோம சன்க ணாசி பீடு றும்பு லத்தியன்
அருங்கை வல்லி யன்ம ரீசி யத்தி ரித்த தீசிதும்
புருங்க ருக்கன் வாம தேவன் புனித சூதன் குற்சரன்
சிருங்கி யோடு சனக னாதி முனிவர் வந்து சேர்ந்தனர். 7(137)


நிகரி லாத முனிவ ரோடு நேர்ந்து நைமி சத்துளார்
புகரி லாத சத்தி ரத்தைப் பூர்த்தி செய்ய எம்பிரான்
பகரும் ஆக மத்து ரைத்த படிவ குத்த குண்டமுன்
னிகவி லாதி ருந்து யாக மின்ப மோடு இயற்றினார் 8 (138)

*நிரத மோய்விலா(து) உஞற்றி நிகரின் முனிவர் யாவரும்
பரத மாடும் எம்மை யாள்ப ராப ரன்மு னாவிபு
தரர்க ளுண்ண அவிப கிர்ந்து தந்து பூர்த்தி செய்தவ
** பிருத நான மாற்றி யன்பு பெருக வீற்றி ருந்தனர் 9 (139)

* நிரதம் - எப்போதும்  ** அவபிருதஸ்நானம் - யாகபூர்த்தி செய்தபின் செய்யும் ஸ்நானம்.

தொக்கி ருந்த சவுன காதி முனிவர் சூதர் துணையடிப்
புக்கி றைஞ்சி யெம்மை யாட்கொள் புனித முன்னரெங்களுக்கு
அக்க மாலை யோனி றக்கு மவர்வ லச்செ விக்கமு
தொக்க மூல மனுவை யோது முயர்பெ ரும்ப திக்கணே, 10(140)

கயிலை யொக்கும் இந்த காசி காஞ்சி யென்ற தன்கதை
*குயிலு நீவி லாச காஞ்சி யின்வ ளங்கள் கூறிலை
பயில்வ தாய கச்சி யைங்கு ரோச வெல்லை யிற்படும்
எயில்கொ ளன்ன தலம கத்து வங்க ணீயி சைத்தியால் 11 (141)

*குயிலல்=சொல்லல்

என்று நைமி சத்து ளாரி சைக்க முக்கு றும்பினைக்
கொன்ற சூத முனிவன் *வாத ராய ணன்கு ரைகழல்
ஒன்ற வள்ள மைத்துச் செங்கை யுச்சி கூப்பி விழியினீர்
துன்ற நாத்த ழும்ப வன்பு தூண்ட வோது வானரோ 12 (142)

*வாதராயணன்= வேதவியாசன்.

                                            (வேறு)

அங்கணர்க் கிடமாய்ப் புவியினின் மருவு மாலய மறுபதோ டெட்டாம்
அங்கதின் மேன்மை யுறுதல மீரெட்டதனினு மனமுவந் துறையுந்
துங்கநற் பதிக ணான்குடன் ஒன்றாஞ் சொல்லுமிப் புரிகளே தென்னின்
கங்கைசேர் காசி காஞ்சி காளத்தி கருதருந் தில்லை மா மதுரை  13 (143)

இன்னக ரைந்தி னதிகமாய்த் தேவ ரிடமிலா துழல்வதா யுமையாள்
தன்னருந் தவத்திற் கிரங்கிவந் தாளுந் தலமதாய்த் தற்பரனுரையு,
நன்னக ராய காஞ்சியென் றொருமா நகருள ததற்கிணையாக,
வுன்னரு நகரொன் றுளததை விலாச காஞ்சியென் றுரைப் பர்கண்மாதோ . 14 (144)
  

அன்னநற் றலத்துப் பாலியென் றுரைக்கு மருநதி யொன்றுள ததன்பாற்
றுன்னியே மூலத் தோடுவா ருணமாந் துகளறு மனு வைவா யோதி
நன்னய *வங்குட் டத்தினு **மநாமி கையினு நாசிதொட்டந்நீர்
தன்னிடை மூழ்கி னுந்திவ லைகடாந் தாக்கினும் பரகதி தருமால் 15 (145)

*அங்குட்டம்=பெருவிரல், **அனாமிகை=பவித்திரவிரல்

ஆகவ னீய முதலிய முத்தீயாக்கலெத் தினுக்கழலைந்தி
னாகமும் வருந்த நடுவிருந் தேசெய் யருந்தவ மெத்தினுக்கலது
மூகமாக் குகையுட் டங்கியே யிருகண் முடியோ கிருத்தலெத் தினுக்கோ ,
சோகமற் றந்தக் குடிஞையின் பெயரைச் சொலவரு மோக்ககை வலியம் 16 (146)

அருமைகொள் தேவர் முனிவரர் சித்த ராய் அவதரித்தத னாலென்
றிருவுள வேகச் சக்கரா திபராய்ச் செனித்துல காளிலென்? மேன்மை
மருவிய விலாச காஞ்சியின் மயிலை மசகமீ சிதல்மரம் புற்பூ
*டுரு கிரி விலங்கு புட்புழு வாக வுதித்திடி னமலவீ டுறுமே.  17 (147) 

*உரு=அட்டை


                                                  (வேறு)

பனசையம் பதிநிறைநீ ரோடைவா விகள் சூழும் பண்பான் மிக்க
பனசையம் பதிக்கு நிகர் நகருளதோ வெனவெணிப் *பா வகியுநல் விற்
பனசையம் பலவேறிப் பார்த்துமில தாயக்கண்ணீ ராறா னானம்
பனசையம் பலமுமதற் கிணையென்ன வுலகிலெவர் பகரற் பாற்றோ. 18 (148)

*பாவகி=முருகன்

(இ-ள்) பல் - பலரும், நசை - ஆசைகொள்ளும், அம்பு - சலமானது, அதி
- அதிகமாக, நிறை - நிரம்பிய, நீரோடை - கயங்கள், வாவிகள் - குளங்கள்,
சூழும் - இவைகளாற் சூழ்ந்திருக்கும். பண்பால் - குணத்தினால், மிக்க -
மேன்மையுடைய , பனசையம்பதிக்கு - அத்தாலமாபுரிக்கு, நிகர் - ஒத்த, நகர் -
பட்டினம், உளதோஎன - இருக்கின்றதாவென, எணி - யோசித்து, பாவகியும் -
முருகக்கடவுளும், நல் - நல்ல, விற்பன - ஆச்சரியமான, சையம் - மலைகள், பல
- அநேகமாக, ஏறிப்பார்த்தும் - இவர்ந்துகண்டும். இலதாய் -
இல்லாமையினால், கண்ணீர் - ஆனந்த வெள்ளம் , ஆறானான் - ஆற்றைப்
போல் பெருக்கினான், நம்பன் - கடவுள், அசை - ஆடும். அம்பலமும் -
சிதம்பரமும், அதற்கிணையென்ன - அத்தலத்திற்கு நிகரென்று, உலகில்
பூமியில், எவர் - யாவர், பகரற்பாற்று - சொல்லுந் திறமுடையது என்க


காவிரிவாய்க் கவின்பனைசைக் கலுழியிடைக் கடைக்குலத்தோனாடு வானேற்
காவிரிவாய் முற்குலத்தோன் மனுவோதிக் குளித்ததனாற் காணும் பேறுங்
காவிரிவாய்க் குடநிறைக்குங் கங்கை தனிற் குடைந்ததனாற் காணும் பேறுங்
காவிரிவாய் தனுக்கோட்டிப் படிந்தாடும் பேறனைத்துங் காண்பன் மாதோ. 19 (149)

( இ ள்) கா = சோலைகள், விரிவாய்= விசேடமாய் , கவின்= அழகைத்தரும் ,
பனைசை = அத்தாலமாநகரத்தினுள்ள ,  கலுழியிடை= கலங்கல் நீரினிடத்து,
கடைக்குவத்தோன்= பஞ்சமத்தான், ஆடுவானேல்= மூழ்குவானாகில், காவிரி
வாய் - காவேரிநதியில், முற்குலத்தோன் - மறையவன், மனுவோதி= மந்திரஞ்
சொல்லி, குளித்து அதனால்= மூழ்கிப் பெற்றதனால், காணும் பேறும்= அடையும்
பிரயோசனமும், கா-காவடியிலுள்ள, விரிவாய் - விரிந்தவாயையுடைய, குடம்=
குடத்தில், நிறை - நிரம்பவிடும், கங்கைதனில் - கங்காநதியில், குடைந்து
அதனால்= மூழ்கிப்பெற்றதனாற்,  கருதும்பேறும் - எண்ணும் பிரயோசனமும்,
கா - துன்பத்தை, .இரி -ஓட்டுதல், வாய் - வாய்ந்த, தனுக்கோட்டி - சேதுவில்,
படிந்தாடும் - பொருந்திமூழ்கும் பேறு - பிரயோசனமும், அனைத்தும் - யாவும்,
காண்பன் அடைவான் என்க


புலி மயிலும் பூசைபரிந் திடுதால புரிநாதற் போற்று வோரம்
புலி மயிலும் பரினூர வாழ்ந்திடுவ தன்றியிசை போதத் திக்குப்
புலி மயிலும் புண்ணியர்கள் கொண்டாட யிம்மையின்பிப் புவனந் துய்த்துப்
புலி மையிலும் பர்களோடு மறுமையிலின் புறுவதெம்மாற் புகரற் பாற்றோ. 20 (150)

(இ-ள்) புலிமயிலும் - புலியும், மயிலும் , பூசைபுரிந்திடு= பூசைசெய்திடும் 
தாலபுரி= பனைசையம்பதியிலுள்ள , நாதன்= கடவுளை , போற்றுவோர் -
துதிசெய்பவர், அம்புலி - சந்திரனும், மை - மேகங்களும், இல் உம்பரில் -
மாளிகையின் மீது, ஊர= தவழ வாழ்ந்திடுவது - வாழ்வைப் பெறுவதும்,
அன்றி - அல்லாமல், இசை =கீர்த்தியானது. போத= மிகவாக
,திக்குப்புலிமையிலும்=திசைபத்தினும் உள்ள, புண்ணியர்கள்=சர்ச்சனர்கள்,
கொண்டாட=புகழ்ந்து சொல்ல, இம்மை=இந்தச்சநநத்தில், இன்பு=சுகத்தை,
இப்புவனம்=இந்தவுலகத்தில், துய்த்து=அனுபவித்து, புலிஇமையில்=கண் இமை சேர்தல் இல்லாத,
உம்பர்களோடு= தேவர்களுடன், மறுமையில்=மறுசநநத்தில், இன்புறுவது=சுகமடைவதை, 
எம்மால்=எம்போலிகளால், புகரற் பாற்றோ= சொல்லுந் திறத்ததோ என்க

                                                           (வேறு)

உடலினிற் கவய வங்களொவ் வொன்று முத்தம மென்பது கண்டும்
மிடலுள சிரமுத் தோத்தம மென்றே மெய்த்தவர் புகன் மொழி போலு
மடலவிழ் மலர்க ளூடுதா மரையே மாமல ரென்பது போலும் 
புடவியினுள்ள சிவக்குறி யின்மேற் போந்ததச் சிவக்கொழுந்தாமால் 21 (151)


அச்சிவ லிங்கந் தனையருச் சித்தேயம்பிகை மயிலுரு வகன்றான்
மெச்சிய நந்தி வேங்கையி னுருவை விலக்கின னறுதொழி லொழுக்கம்
நச்சிய மறையோற் கன்றுகா ளத்தி நாதனவ் வூரிடை நண்ணி
வச்சிர தேக மகவளித் தென்றும் வதிந்தனன் றென்கயி லையைப் போல் 22 (152)

இந்திரன் மகன்கே ரண்டமா முருப்போ யிடவருச் சித்தனன் றிருமா
லுந்தியின் வந்தோன் சிறகிழந் திட்ட வனச்சத முறத்தொழு திட்டா
னிந்திரை கொழுநன் றார்க்கியன் களத்தினெழுகன லவிந்திடப் பெற்றா
னந்தநற் றக்க னருஞ்சிவ நிந்தை யால்வரும் பாவநீங் கினனால். 23 (153)

தயரத குமரன் கானிடைக் கொடுபோய் தம்பியாற் சனகியை விடுத்த
செயிரினை யொழித்தான் மதனனு மரன்மேற் செழுமலர்க் கணையினை யெய்த
செயலினால் வந்த தீவினை யொழித்தான் றீக்கணும் பாசமுங் கொண்ட
வியமனு மரன்மேல் வீசிய பாச விடும் பையை யொழித்தன னன்றே. 24 (154)

உக்கிர னடைந்தோர் பார்த்திவன் சமண்மா சொழித்தறி வுறவவற் குரைத்தான்
மிக்கநற் கும்ப யோனிதன் பெயரான் மெய்ச்சிவலிங்கமேய் வித்தா
னக்கனங் கருமா மலைமக டன்னை நன்மணஞ் செய்தன னதனாற் 
றக்கவத் தலத்தின் பெருமையை யெவரே சாற்றுவர் தாரணி மீதே 25 (155)

ஆதியிற் கிரவுஞ் சத்தினை யழித்த வறுமுகக் கடவுளு மலய,
மீதினிற் றமிழாங் கடலினை வளர்த்து மேதினி சூழ்கருங் கடல்கைப்
போதினி லடக்கிக் குறுகென விந்தப் போருப்பினி லொருகரம் வைத்த
மாதவற் கரிய தணிகையி னுரைத்தான் மகிழ்ந்தெமைக் கேட்ட விக்காதை. 26 (156)

பொன்னவிர் சடிலப் புனிதமா தவனைப் போற்றியே தணிகையங் கிரியி
னின்னறீர் முருக வேளகத் தியனுக் கெத்தினுக் குரைத்தன னதனைப்
பன்னுவி ரென்ன நைமிச வனத்துப் பண்ணவர் வினவலு மகிழ்ந்து
பன்னகா பரணன் றிருவடி மனத்திற் பதித்தவை பகருவ தானான். 27 (157)

திரிபுரதக னனருள்விழி நோக்காற் செனித்த வீட்சாரணியத்தைக்
கரிசுறுமும்மைத் தமிழ்வலோன்மனதிற்காணுதற்குன்னியங்கணுகி
யுரியவிம் மிதங்க ணோக்குழீஇத் தவஞ்செய் துறை பரத் துவசமா முனிவன்
பரிவொடு முகமன் மொழிந்தவண் வதியும் பன்னசா லையிற்கொடு புக்கான். 28 (158)


அடைந்தவம் முனியை யாதனத் தேற்றி யருச்சனை செய்தன மருத்தி
மடந்தவிர் சிந்தை மாதவ விவணீ வந்தவா றேதெனக் கொடிய
விடம்புரைவஞ்ச வேடங்கொண் டுறையும் வெறிமுகத் தினள்தரு சேயைக்
குடங்கையிற் றடவிக் கொன்றவ னுவகை கொண்டுபின் கூறுவதானான் 29 (159)

மண்டல மீதிற் பரவுசெந் தமிழின் வருமொழிப் புணர்ப்பெழுத்தளவு
கொண்டுறை தருமைந் திலக்கண மறியக் கோலயாழ்ச் சுருதியினிசைப்ப
வண்டடர் குயில்க ளின்னிசை பாட மயினட மிடச்சினை வேங்கை
கண்டுபொன் சொரியு மிவ்வனத் தடைந் தேன் கழிந்ததென் குறையென விசைத்தான். 30 (160)

கேட்டமா முனிவ னுளத்தினிற் றேர்ந்து கிளர்நெடுஞ் சடிலமா தவவிந்
நாட்டுளா ரதனுட் பொருளினை விரித்து நவிலுதற் குரியரோ யானைக்
கோட்டணி முலைசெங் குமுதவா யசலக் குமரியை யிடத்தினி திருத்து
நாட்டமூன் றுடைய நாயக னுரைப்ப னணுகுதி கயிலையி னிடத்தே 31 (161)

இவ்வண முரைத்த பரத்துவா சன்ற னெழின்முக மருளொடு நோக்கிச்
* செவ்வண வுடலந் தழுவியப் பரிசே சேர்குவ னென விடை யேற்று
மைவணக் கூந்தன் மனைவியுஞ் சீட வருக்கமுஞ் சூழ்தரக் கிரியைக்
கைவண வலியால் வளைத்தவண் வாழுங் கயிலை யைச்சார வெண்ணினனால். 32 (162)

*செவ்வை=திருத்தமாகிய,  வண்ணம= வடிவு அமைத்த , வண்ணம்= அழகிய

                                    நைமிசாரணியச் சருக்கம் முற்றிற்று.

                                             ஆகத் திருவிருத்தம் - 162.

                                                  திருக்கயிலாயச் சருக்கம்

நைமி சந்தனை நனியி யம்பினாங்
கையின் மான்மழுக் கனல மேந்துமெம்
மையன் வாழ்கயி லாய மன்னதின்
மொய்கொள் சீர்த்திமேன் மொழிகு வாமரோ, 1 (163)

                                                        (வேறு)

அருத்தியி னடைந்து நந்தியெம் பெருமா னடியிணைதொழுதவன் விடுப்பக்
கருத்தினிலுவகை கூர்தரச் சென்றங் கண்கணீர் வழிதர வங்கைச்
சிரத்தினி லழுத்தி யரகர வென்னத் தேவரு முனிவரும் வேண்டப்
புரத்தினைச் சிரித்துப் பொடித்தவ னுறையும் பொருப்பது திருக்கயிலாயம். 2 (164)


கந்தரத் தூருங் காரியே முதலாங் கடவுளர் வாழ்பதங் கமல
வுந் தியிற் பிறந்தோ னுயர்பத முவண முயர்த்தவ னுறைபத மிவைக
ணந்திடப் பிரள யங்கள் கோத் திடுமந் நாளினு முலைவிலா தறிஞர்
புந்தியைப் போன்மேன் மேலுயர்ந் தோங்கும் புகழுடைத் தந்த மால்வரையே. 3 (165)

                                                    சிலேடை

திருந்திய வானக் கங்கைமேற் றரித்துச் சிரத்தின்மா கம்பட வகித்துப்
பொருந்தம ரங்க சக்கக முடலிற் பொறுத்துபொன் னிலங்கை ராவணனை
வருந்துறப் பொடித்து வளர்தரு புகழ்சேர் மாதங்கமுற்றுவானவர்க்காய்
திருந்தலர் புரத்தைத் தீயெழ நகைத்த சிவனையொத் திருந்ததக் கயிலை. 4 (166)

மலைக்கு (இ-ள்) திருந்திய - தெளிவுள்ள , வானக்கங்கை - ஆகாயகங்கையை,
மேல்தரித்து - தன்மேற்கொண்டு, சிரத்தில் - முடியில், மாகம்பட வகித்து -
ஆகாயமளாவத்தரித்து, பொருந்த= அமைய, மரம்= விருஷம், கசம்= யானை.
சுகம் - பறவை, உடலில் பொறுத்து - இவைகளைத் தன்மீது தாங்கி, பொன்
இலங்கை ராவணனை= அழகிய இலங்காபுரியையுடைய இராவணனென்னும்
அரக்கனை, வருந்துறப்பொடித்து - துன்பமடையும்படி அமிழ்த்தி,
வளர்தருபுகழ்சேர் - மிக்க புகழ் வாய்ந்த, மாதங்கம் உற்று= பெருமையுடைய
பொற்சன்னங்களைப் பொருந்தி,

சிவபிரானுக்கு (இ-ள்) திருந்திய - திருத்தமாகிய, ஆன் - இடபக்கொடியும்
அக்கு - எலும்பு மாலையும், அம்கை - அழகியகரத்தினும், மேல் - திருமேனியின்
மீதும், தரித்து= தாங்கி, சிரத்தில் - சென்னியில், மா - பெருமை பொருந்திய, கம்
- கங்கா தேவியை, பட - பொருந்த, வகித்து - தரித்து, பொருந்து - வாய்ந்த, அமர்
- யுத்தஞ்செய்யும். அங்கசன் - மன்மதனது, ககம் - அம்பை, பொறுத்து=
தன்மேல் தாங்கி, பொன்இல் - இலக்குமியின் வீடாகிய தாமரைமலர் போன்ற,
அம்கை - அழகிய கையையுடைய. இராவணன் - இருள் நிறமுடைய
மன்மதன், வருந்துற - துன்பமடைய, பொடித்து - எரித்து, வளர்தரு புகழ்சேர் -
மிக்க புகழ் வாய்ந்த,  மாது= உமையம்மையை, அங்கம் உற்று - தன்மேனியிற்
கலந்து, வானவர்க்காய் - தேவர்கள் நிமித்தமாய், திருந்தலர்புரத்தை -
பகைவரது திரிபுரத்தை, தீயெழ - அக்கினிப்பட, நகைத்த - சிரித்த, சிவனை -
கடவுளை, ஒத்திருந்தது - ஒப்பாயிருந்தது. அக்கயிலை அந்தக் கைலாயம் என்க

அரிதனை வகித்துக் குல்லையைத் தரித்தா ரணிகொள்சா ரங்கங்கையேந்தித்
திரிசிரற் கரையக் கோலமேற் கொண்டு செய்ய கோட்டங்களை வளர்த்துப்
பெரியகோத் திரங்கட் கேய்ந்தநற் றலைமை பெற்றரி யெனமுன மழைத்த
கரிகவர் கராவைக் கணத்தினிற் றுணித்த கண்ணனை நிகர்த்ததக் கயிலை. 5 (167)


மலைக்கு (இ-ள்) அரிதனை வகித்து - சிங்கங்களைத் தன்னிடத்தில் வைத்து,
குல்லையை - குராமரங்களை, தரித்து - உடைத்தாகி, ஆர் - பொருந்திய,
அணிகொள்- அழகைக் கொண்ட, சாரங்கம் - மான் கூட்டங்களை, கை -
பக்கங்களில், ஏந்தி - தாங்கி, திரி - சஞ்சரிக்கின்ற, சிரல் - சிச்சிலிப்பறவைகள்,
கரைய - ஒலிக்க, கோலம் - மிளகுக்கொடிகளை, மேற்கொண்டு - தன்மீது
கொண்டு,  செய்ய - செம்மையாகிய,  கோட்டம் - வாசனைப் பண்டங்களை,
வளர்த்து - விருத்தி செய்து, பெரிய கோத்திரங்கட்கு - பருத்தமலைகளுக்கு,
ஏய்ந்த - பொருந்திய, நல்தலமை பெற்று - நல்லமுதன்மையை வகித்து,

விஷ்ணுவுக்கு (இ-ள்) அரிதனைவகித்து - சக்கராயுதத்தைத் தரித்து,
குல்லையைத் தரித்து= துளபமாலையையணித்து, ஆர் - நிறைந்த, அணிகொள்
-அழகைக் கொண்ட, சாரங்கம் - வில்லை. கைஏந்தி - கரத்திற்றாங்கி, திரிசிரன்=
திரிசிரனென்னும் அவுணன், கரைய - துன்பமடைய, கோலமேற்கொண்டு
ஓர் ஆயுதத்தைக் கொண்டு. செய்ய - செம்மைதங்கிய, கோட்டங்களை
-பசுக்கூட்டங்களை,  வளர்த்து - விருத்தி செய்து, பெரியகோத்திரங்கட்கு -
பெரிய காடுகளுக்கு, ஏய்ந்த - பொருந்திய, நல்தலைமை பெற்று - நல்ல
முதன்மை பெற்று, அரியென முனமழைத்த - ஆதிமூலமே என முன்னங்கூவிய,
கரி - யானையை, கவர் - பற்றிய கராவை - முதலையை,  கணத்தினில் துணித்த
- சீக்கிரமாய்ப் போய்க் கொன்ற - கண்ணனை நிகர்த்தது அக்கயிலை -
விட்டுணுவை ஒத்திருந்தது அந்தக்கைலாயம் என்க.


நாவினற் கலைமா திருத்தலின் முகங்க ணான்கினு மறைபர வுதலின்
பூவினிற் பொலித லின்னன மேறப் பெறலினற் றண்டமேந் தலிற்செங்,
காவியங் கண்ணா கெனுங்களக்காமர் கனகியை யுடையவனுந்திப்,
பூவினிற் பிறந்து பூவினைப் படைக்கும் புநிதனை நிகர்த்ததக் குன்றம் 6 (160)

மலைக்கு (இ-ள்) நாவி - கஸ்தூரி மிருகமும், நற்கலை - நல்ல மானும், மாது -
விருப்பமாக, இருத்தலின் - வாசம் செய்வதால், முகங்கள் நான்கினும் - நான்கு
திசையிலும், மறை பரவுதலின் - வேதங்கள் துதி செய்வதால், பூவினில்
- பூமியினிடத்தில், பொலிதலின் - அழகுடனிருப்பதால், அனம் - கவரிமான்,
ஏறப்பெறலின் - தன்மீதிருக்கவைத்தலால், நல்தண்டம் - நல்லபொக்கசத்தை,
ஏந்தலின் - தாங்கியிருப்பதால்,


பிரமனுக்கு (இ-ள்) நாவில் - நாக்கில்,  நல்கலைமாது - நல்ல சரச்சுவதி.
இருத்தலின் - இருப்பதனால், முகங்கள் நான்கினும் - நான்கு முகத்திலும்,
மறைபரவுதலின் - வேதமோதலினால், பூவினிற்பொலிதலின் - புட்பத்தின்மீது
வாசம் செய்வதால், அனம் ஏறப்பெறலின்= அன்னத்தின் மீது
ஆரோகணித்தலால், நல்தண்டம் ஏந்தலின் - நல்ல தண்டாயுதத்தைக்
கைக்கொண்டிருப்பதால், செம்காவி அம்கண் - செவ்விய நீலோற்பலத்தை
யொத்த அழகிய கண்ணையும், நாகு எனும்களம் - சங்கென்று சொல்லும்
கழுத்தையும் உடைய, காமர் - அழகிய, கனகியை - இலக்குமியை,
உடையவன் - மார்பில்தரித்த விட்டுணுவின், உந்திப்பூவினில் - நாபிக்கமலத்தில், 
பிறந்து - உதித்து, பூவினைப்படைக்கும் - உலகத்தைச் சிருஷ்டிக்கும்,
புநிதனை - பிரமனை, நிகர்த்தது அக்கயிலை - ஒத்திருந்தது அந்தக்கைலாயமலை என்க.


சிறந்தவச் சிரமுந் தெளிவுறு சசியுந் தேங்கொளி துளும்புமா நிதியுஞ்
செறிந்தவைந் தருவுந் தேனுவும் வடிவு திகழ்தரு வெள்ளையானையுநல்
லறந்தவா தியற்று மையர்தங் குழுவு மனுதின முடைமையிற் சீர்சா
னறந்தமென் மலர்வா சிகைப்புய மணிந்த நாகர்கோ னனையதக் குன்றம் 7 (169)

மலைக்கு (இ-ள்) சிறந்த - சிறப்புற்ற, வச்சிரமும் - வைரமும், சசியும் -
சந்திரனும், தேங்கு -ஒளிதுளும்பும் - மிக்ககாந்திவீசும், மா - பெருமைபொருந்திய
 நிதியும் - பொன்னும், செறிந்த - நெருங்கிய ஐ-அழகிய,
தருவும் - மரங்களும்,  தேனுவும்- பசுவும், வடிவுதிகழ்தரு - அழகமைந்த,
வெள்ளை ஆன் - வெளுத்த ரிஷபத்திற்கு. ஐ - தலைவனாகிய கடவுளும்,
நல் அறம் - நற்கருமங்களை, தவாது இயற்றும் - விடாதனுட்டிக்கும்.
ஐயர் தங்குழுவும் - முனிவர்கூட்டங்களும், அனுதினம் உடைமையில் - தினமும்
பொருந்தியிருத்தலின்,


இந்திரனுக்கு (இ-ள்) சிறந்த= மேன்மையுடைய, வச்சிரமும் - குலிசாயுதமும்,
தெளிவுறு - அறிவிற்சிறந்த, சசியும் - இந்திராணியும், தேங்கு ஒளிதுளும்பும் -
மிக்க ஒளிவமைந்த,  மா - பெருமையிற்சிறந்த,  நிதியும் - சங்கநிதிபதுமநிதியும்,
செறிந்த= நெருங்கிய, ஐந்தருவும் - பஞ்சதருக்களும், தேனுவும் - காமதேனுவும்,
வடிவுதிகழ்தரு - உத்தம அங்கம் வாய்ந்த,  வெள்ளையானையும்= ஐராவதமும்,
நல் அறம் தவாது இயற்றும் - நல்ல தரும மார்க்கத்தை விடாது செய்யும்,
ஐயர் தம்குழுவும் - தேவர்கூட்டங்களும், அனுதினம் உடைமையின் - தினமும்
பொருந்தியிருப்பதால், சீர்சால் - மிக்க சிறப்பினையுடைய, நறந்த மென்மலர் -
மனம் நிறைந்த மெல்லிய புட்பங்களாலமைந்த, வாசிகை - மாலையை ,
புயமணிந்த - தோளில் தாங்கிய, நாகர்கோன்= தேவேந்திரனை,  அனையது=ஒத்தது.
அக்குன்றம் - அந்தக் கைலாயமலை  என்க.


ஈடிலக் கயிலை யினிற்பரமேச னெழுந்தரு ளிருக்கையுண்டதன்சீர்
சேடன்வான் மீகி யகத்தியன் முதலோர் தேர்ந்துரைப்பதற்கரி தாகும்
பீடுறு மம்மண் டபத்திடை மணியாற் பிறங்கொளிதுளும்பெழிற் சிங்க,
பீடமீ துமையோ டருள்விடை யிவரும் பிஞ் ஞக னிருந்திடு மேல்வை 8 (170)

கின்னரர் முனிவ ரியக்கர்காந் தருவர் கிம்புரு டாதிவா னவரும்
பன்னுதற்கரிய பழமறை நாவிற் பழிச்சிவந் திடரொழித் தாளுங்
கன்னலைப் பழித்த மொழியுமை யிடங்கொள் கண்ணுத லடி தொழு மமைய,
முன்னுதற் கரிய குறுமுனி யுலோபா முத்திரை யோடவணடைந்தே. 9 (171)

முன்னவன் பதும முகங்களுங் கிருபை முதிர்ந்திடு விழிகளுந் துவர்வாய்ப்
புன்னகை யரும்பும் பொலிவையு நோக்கிப் பொழிதர விழியிலானந்தந்
தன்னையு மறந்தா னந்தசா கரத்திற் றாழ்ந்தரு டிளைத்துப்பி னொருவா
றன்னவ னருளாற் றெளிந்தவ னடியிலன்புமீக் கூர்ந்தக மகிழ்ந்தே . 10(172)


நித்தவா னந்த நிருத்தனே சகள நிட்களச் சிற்சுகோ தயனே
சுத்தமெய்ஞ் ஞானச் சோதியே தோன்றாத் துணைவனே சுகப்பெருங் கடலே
முத்தனே மூவா முதல்வனே நீற்று முண்டனே தொண்டர்க ளேத்து
மத்தனே யுன்ற னடைக்கல மெனையா ளையனே யெனப்பல துதித்தான். 11 (173)

                                                       (வேறு)

இத்துதி கேட்டர னிதய மார்வமுற்
றெத்திறம் வேண்டுவ தியம்பு வாயெனப்
பத்தியோ டடியிணை பணிந்து ளத்தினின்
முத்தமி ழிலக்கண முணர முன்னினேன். 12 (174)


இன்னுமிக் கயிலையி லிருந்து பைந்தொடி
யின்னகைத் துவரித ழினிய மென்மொழி
மின்னிடை யுமையொடு மேவு நின்னடி
தன்னையான் றொழுதிடச் சார்ந்து ளேனரோ, 13 (175)

எனப்புகன் மொழியினுக் கிரங்கி யாருயி
ரனைத்தையும் படைத்தளித் தழிக்க வல்லவன்
மனக்குறும் பொழித்தருண் மாத வன்மன
மினித்திடு மிலக்கண மிசைத்தி யம்புவான்.14 (176)

பார்புக ழருந்தவம் பயின்று ளாய்நினக்
கார் * தர நாமெடுத் தறைந்த யாவுநற்
சீர்பெறு மடியர்தஞ் செவியி லேற்றுதற்
கார்கலி சூழுல கடைய வேண்டுமால். 15 (177)

*தரம்= சமானம்

எரிகதிர் மதிமுத லிணையில் கோள்களைப்
புரைபட வதரிடைப் போதல் நீக்கிவிண்
வரையுயர் விந்தமால் வரையி னுச்சியிற்
கரமுறப் பாதலங் காண வீழ்த்தியே. 16 (178)

அன்னதன் றெற்கினி லமருந் தண்டகந்
தன்னில்வா தாவிவில் வலனைச் சாய்த்தொரீஇத்
தன்னிகர் பொதிகையைச் சார்ந்தி லக்கியங்
கொன்னவி லிலக்கணங் குவல யத்தினில் 17 (179)

அடுத்துள மாணவர் தம்மை யாய்ந்துபின்
பெடுத்திலக் கியவிலக் கணங்க ளின்சுவை
மடுத்திட வுணர்த்திநீ மலயம் வாழ்கவென்
றடுக்கல்லில் லேந்தினோ னருளி னானரோ. 18 (180)

அருளிய முக்கண னடியி றைஞ்சியே
மருளறு முனிவரர் தேவர் வாழ்ந்திடுங்
கரிசறு வெள்ளியங் கயிலை விட்டியா
னொருவுதற் கென்னுள முவந்த தில்லையால் 19 (181)

இங்கிருந் தரியநின் கோல மெப்பொழு
துங்கணிற் கண்டிட றுதித்தல் விட்டியான்
மங்குமூன் றவத்தைசேர் மக்கள் வாழ்நிலந்
தங்குற விதித்திடிற் றமிய னுய்வனோ. 20 (182)

என்றடி தொழுமுனிக் கிரங்கி நீ தொழ
நின்றநம் முருவநித் தியமு யாணவந்
துன்றுறு மாயையின் றொடர்பு முள்ளதாற்
பொன்றுறு மிஃதெனப் புந்தி கொள்வையால் 21 (183)

நித்தியம் பூரணம் நிமல சின்மயம்
வித்தகம் பரவெளி விளங்கு நிட்களம்
பத்தியிற் படுபொருள் பகரு மின்னவை
வுத்தம நமதுமெய் யுருவ மாகுமால். 22 (184)

உண்மையா நமதுரு வுணர வுன்னினோர்
தண்மைகொ ளறிவினைச் சார வேண்டுமவ்
வண்மைசேர் ஞானமு வருத லெண்மையோ
திண்மையார் புவியினைச் சேர்ந்தி டார்க்கரோ. 23 (185)

அவனியி லடைந்துமட் டாங்க யோகம
துவகையோ டியற்றவஃ துறுமவ் யோகமு
முவமையிற் பொறையினா லுதிக்கு மாங்கவை
தவறிலாச் சித்தசுத் தியினிற் சாருமால் 24 (186)

அதுவரற் குஏ(து) அர னடியர் தங்களுக்
கிதமுடன் பணிவிடை யியற்ற லீதெலாம்
விதிமுறை யியற்றுதற் குரிய மேதினி
யதினுறி னமதுரு வடைத றிண்ணமாம். 25 (187)

ஆதலி னாங்கடைந் தமரர் போற்றிடு
மேதகு தலத்தினு மேன்மைத் தாகிநாங்
காதலி னமர்தரு விலாச காஞ்சியி
னோதருநங்குறி யொன்ற மைத்தரோ. 26 (188)

                                                 (வேறு)

தேன்படுசந்தின் வாசந் திசைதொறுஞ் சிறுகால் வீசும்
வான்படு சிகர மேய மலயமீ தடைந்து மாந்தர்
ஊன்படு கண்ணிற் காணா வுண்மைநம் வடிவை ஞானந்
தான்படு விழியி னோக்கிச் சார்தியென் றருளிச் செய்தான். 27 (189)

இண்டையஞ் சடையார் சொற்கேட் டெழுந்தடி பணிந்து போற்றி
யண்டர்நா யகனே நின்ற னருங்குறி காண்டி யென்றீர்
விண்டிடற் கரிய சீர்த்தி விளங்குமவ் விலாச காஞ்சிப்
பண்டைய சிறப்பின் மேன்மை பகரெனப் பரமன் சொல்வான். 28 (190)

அத்தல மகிமையாவு மணிகொளுந் தணிகை மேவிச்
சுத்தநுங் குரவ னாகுஞ் சுரேசனை வினவித் தேறிச்
சித்தமுற் றிருந்த சங்கை தீர்கென வருள லோபா
முத்திரை யுடனுந் தற்சூழ் முனிவரோ டடிப ணிந்தான். 29 (191)

முன்னவ னருளிச் செய்த மொழியினைச் சிரமேற் றாங்கி
யன்னவன் வாழும் வெள்ளி யத்திரி யொருவற் குள்ளம்
பின்னிடப் பரமன் வார்த்தை பெயர்ந்திடு மெனவி வேக
முன்னிழுத் திடவந் துற்றான் முனிவனும் புவியின் மாதோ. 30 (192)

                                     திருக்கயிலாயச் சருக்கம் முற்றிற்று.

                                             ஆகத் திருவிருத்தம் 192.


                               அகத்தியன் யாத்திரைச் சருக்கம்

வன்னியூ மத்தை கொன்றை வனைந்தவ னிடத்தின் மேவுங்
கன்னிமா துமையா ளுள்ளங் கலங்கமா திரமெடுத்த
வன்ன * கம் பத்தா னுய்ய வருள்சுரந் தோன்வாழ் கைலை
யுன்னத முரைத்தாங் கும்ப யோனியாத் திரையு ரைப்பாம்.  1 (193)

*கம் - தலை

கரமுறத் திரைநீர் தன்னைக் கடிதயின் றருளும் யோகி
அரிபரந் தொளிருஞ் செங்க ணம்மைவெம் முலைக்கோ டுற்ற
* மருமமா ரணியற் றாதை வண்டிமிர்ந் திசைகள் பாடும்
வரமுறு வான்றோய் கூர்ம வரையினைக் கண்டா னன்றே.  2 (194)

* மருமம் ஆர் அணியல் தாது ஐ வண்டு எனப் பிரிக்கவும்.


நேரிலாப் பவங்கள் செய்தோர் நேர்ந்தவக் கணத்தின் முத்தி
சாரவே யளிக்கு மிந்தத் தடங்கிரி யென்னு நாணா
லீரமா மதியோன் வாழவ் விறைமலை விளர்ப்பச் செய்கே
தாரவண் கிரியைக் கண்டான் றவத்தினிற் றலைமை கொண்டான். 3 (195)

                                                           ( வேறு )

காட்சி யாற்றமைக் கண்டிடு மாந்தரை
மாட்சி யோடுயர் வானுல கேற்றிடு
மாட்சி தங்கு மமல னுறைவிரூ
பாட்ச மென்னும் பதியினைக் கண்டனன் 4 (196)

வாத்தி யங்களி னோதையும் வண்மறைச்
சாத்தி ரங்கண் முழக்கமுந் தண்கட
லார்த்த வோசை யடக்கெழின் மானதக்
கேத்தி ரத்தைக் கிளர்தரக் கண்டனன்.   5 (197)

*குவரை யேந்திக் குடஞ்சுட்டைக் கோகுலத்
தவரைத் தந்தியைத் தையலைத் தாடொழு
பவரை யைவரைக் காக்கும் பகவனார்
துவரை தன்னைத் துரிசறக் கண்டனன்.   6 (198)

*கு= பூமி

உந்து மூழ்விலங் கின்னுயி ருண்டுளி*
சிந்து கோலஞ் சிலையலை யாயுடைச்
சுந்த ரத்தி யமுனை துலங்குகா
ளிந்தி யென்னு மெழினகர் கண்டனன்.  7 (199)

*உண்துளியெனப் பிரிக்கவும்

                                              (வேறு)

பிறைதவ ழலங்கல் வேணிப் பிஞ்ஞக னுறையுஞ் சீர்சால்
பிறபதி களையுங் கண்டு பெரிதுவந் தருச்சித் தேத்திக்
கறைமிடற் றவனுக்  *காசான் கருதருங் குமரனாக
வுறைதரு காசி மூதூ ருசி தவெல் லையி னடைந்தான். 8 (200)

*ஆசான்= சுக்கிரன்

மூசுவண் டினங்க ளெல்லா முரன்றிடு வனமுஞ் செம்பொற்
றேசுறு *சிதர்கொள் வாசத் தேமலர்த் தடமுங் கூனல்
காசறு முத்த மீனுங் கழனியுங் கடந்து மென்மேல்
வீசலை யுடைய கங்கை வியன்கரை கண்டு சார்ந்தான். 9 (201)

*சிதர்= மகரந்தம் 


சிங்கியா னதுகு ளிர்ந்துஞ் சீவனை யொழிக்கு மாபோற்
றங்குதண் ணீரெனப்பேர் தரித்தும் வெந்தழலாய்ச் சார்ந்தோர்
பங்கமா னதையெரித்துப் பற்பமா யியற்ற வல்ல
கங்கையின் விதியி னாடிக் களிப்பெனுங் கடலு ளாழ்ந்தான் 10 (202)

வாரியின் மறைக ளார்க்கு மறுகினை வலஞ்சூழ்ந் தேகி
நாரியைப் பாகம் வைத்த நம்பனா லயமுன் றாழ்ந்து
மாரியொத் திருகண் டாரை வழிந்திட வலஞ்செய் தேத்தி
வேரியங் கடங்கா றுண்டி விநாயகன் றிருத்தாள் போற்றி. 11 (203)

                                                      (வேறு)

மாட்சி மிக்க வரத்தை யடியர்பாற்
றாட்சி யின்றித் தரவுளங் கொள்விசா
லாட்சி யம்மை யணிவுரு வங்களின்
காட்சி யைக்கண் களிப்பக்கண் டேத்தினான். 12 (204)


போதனோ டுந்தி பூத்தவன் காணொணாச்
சோதி யாகத் துவன்றிய விச்சுவ
நாத னேயெனை யாட்கொளும் நம்பவென்
றோதி யீச னுறையிடம் புக்கினான். 13 (205)

உலக மேத்து முருவரு வாயவற்
#கலரி சேர்திரு மஞ்சன மாட்டிவண்
*டுலவை மாம துணாவல ராய்ந்தெடுத்
தலகி னாம மறைந்தருச் சித்தனன். 14 (206)

#அலரி=அழகு * உலவை=குலம்

இந்த வண்ண மிருந்துசின் னாள்கழித்
துந்து மார்வ முடனந் நகருறை
உந்தி வண்ண னடிதொழு தண்டநீள்
விந்த நோக்கி விரைவுடன் சென்றனன்.  15 (207)

தந்தி ரம்வரு டுந்தவ நாரத
னுந்து வஞ்சனை யாலுயர்ந் தோங்கிவா
னிந்து செங்கதி ராதிக் கிடர்தரு
மந்த சைய மருகணைந் தானரோ. 16 (208)

அன்ன வெற்பினைக் கண்ட வகத்திய
னன்ன யங்கொள வேநகைத் தவ்வரை
தன்னொ டும்பொதி யாசலஞ் சாரயா
னுன்னி னேன்வழி விட்டிடென் றோதினான். 17 (209)

கேட்ட வவ்வரை கேடீயென் னுள்ளத்து
ணாட்ட நீயறி கிற்றிலை நற்றவ
சேட்டு ளங்கும் பரிதி செழுமதி
யோட்ட முந்தடுத் தேன்வழி யுண்டுகொல், 18 (210)

போதி போதி யெனப்புக லுற்றகண்
டாதி நாம மகத்திடை யுன்னியே
நீதி யிற்செருக் குற்ற நெடுவரை
மீது செங்கைவைத் தான் றவ மிக்குளான். 19 (211)

அங்கை வைத்தழுத் துற்றலு மவ்வரை
பங்க முற்றுப் பிலத்திடைப் பட்டன
*பொங்க ரேயதத் தூடு புகுந்தவே
லெங்ங னாண்மைகொண் டார்கதி யெய்துவார். 20 (212)

*பொங்கர்=மலை

மலையு மட்டிட்ட தென்னுமம் மாற்றமிவ்
வுலகி னூடுபின் னுற்றன வும்பர்க
வலையொ ழிந்து வழுத்தி நறவுகான்
மலரை வாரி மழையெனப் பெய்தனர். 21 (213)

ஆய போதி லருந்தவ னந்தரந்
தோயு மென்பணைத் தண்டகச் சோலையிற்
றேயு நுண்ணிடைத் தேவியோ டாங்குறுந்
தூய மாதவர் சூழல் வந்துற்றனன். 22 (214)

உற்ற போதங் குயர்வரைச் சாரலிற்
குற்ற மென்பவெ லாமுருக் கொண்டுயி
ரிற்று மாள விருந்தவர் நூலெலாங்
கற்று ணர்ந்த முனிவனைக் கண்டனர். 23 (215)

நங்கு லத்தை நலிவுசெய் நாகருக்
கிங்க னாமிடர் தீர்த்திட வெய்தினா
னுங்கி னான்கட னீரை நொடிக்குளே
தங்கு மன்ன வனைத்தடி வாமெனா. 24 (216)

வெய்ய வஞ்சக வில்வலன் தம்பியைச்
செய்ய கண்ணுந் திரிமருப் பும்பெறு
மைய தாக்கி மறைமுனி யாகவந்
தையன் முன்ன ரடைந்திவை யோதுவான்  25 (217)


அடுத்தி ருந்தென் சிறுகுடி லய்யவெற்
றொடுத்தி ருந்த பவங்க டொலைந்திடத்
தடுத்தி டாதுப்பி லாப்புற்கை யேனும்வாய்
மடுத்துச் சேட மகிழ்ந்தரு ளென்றனன். 26 (218)

மன்னு காம மயக்க மிகுத்துளான்
சொன்ன சொல்லுண்மை யென்று துணிந்துபின்
றன்ன கத்துட் கருணை ததும்பிடப்
பன்னு வான்படி றென்றும் பழகிலான் 27 (219)

நாலு பத்தொடெ ணாயிர நற்றொகைச்
சீல மாமுனி வோரிற் சிறந்துளாய்
பால லோசன னாரருட் பார்வையாற்
கோல மெய்க்கதி கூடுலை நீயெனா. 28 (220)

முக்கு றும்பை முனிந்த முனிவரன்
றக்க வாசி புகன்று தவத்த நீ
புக்கி லேது புகன்ற மொழிப்படி
துய்க்க யானும் தொடர்குவ னென்றனன். 29 (221)

நாத நானிது காறு நயந்து செய்
மாத வப்பயன் வாய்த்ததென் றேயவற்
காத லோடு கடிமனை யிற் கொடு
தீதி லாதன மீதுறச் சேர்த்தனன் 30 (222)

இருத்தி நன்முக மன்க ளியம்பியே
திருத்த மாகுஞ் செழும்புன லிற்படிந்
துருத்தி ரஞ்சொலிப் பாவ மொழிக்கு நீ
றருத்தி யோடணிந் * தையி லடைந்தனன். 31 (223)

*ஐ இல்

புனித சாணங்கொ டில்லினைப் பூசிநற்
கனக குண்டங் கழுவி யடுப்பினில்
அனக வாரழ லாக்கி *மடை யமைத்
தினிய பாளித முற்று மியற்றியே   32 (224)

மடை= சோறு அமைத்து= சமைத்து, பாளிதம்= குழம்பு

                                      (வேறு)

தம்பியாந் தகரை யந்தத் தமிழ்முனி முன்ன ரீர்ந்து
வெம்பிய பிசிதம் நீக்கி வேறுவே றரிந்தெ டுத்துச்
*சம்பரங் கொண்டு மூன்று தரங்கழீஇச் சுத்தி செய்து
வம்புலா மிளகுப் பாதி மருவுசம் பாரங் கூட்டி  33 (225)

  *சம்பரம் -நீர்

அடுப்பினி லேற்றி யானெய் யமைவுற விடுத்துப் பின்னர்த்
துடுப்பினிற் றுழாவி மூடித் தூமணப் பொடிக் டூவிக்
கடுத்திடா வகைபொ ரித்துக் கமழ்தரப் பிட்டு செய்து
மடுத்துள * செப்ப வென்பி னாங்குழம் பினித மைத்தான் 34 (226)

*செப்பம்=மார்பு

பின்னர்மாங் கனிசெவ் வாழைப் பிலிற்றுதே னறிய பாக
றன்னருஞ் சாரந் தீம்பாற் சருக்கரைக் கண்டு கோற்றே
னன்னய மாகச் சேர்த்து நாரண னயனுங் காணா
முன்ளவன் பூசை கும்ப முனி செய வமைத்துப் பின்னர், 35 (227)

ஓடிவந் தடியிற் றாழ்ந்தின் றுனைப்பசி வருத்த நாயே
னீடிய காலந் தாழ்த்தே னினையலை யேழை குற்றஞ்
சேடுறு புனலிற் றோய்ந்து சிவலிங்க பூசை யாற்றி
வாடுத னீங்க வுண்டி வகையுண வருக வென்றான். 36 (228)

அன்னவை கேட்ட கும்ப யோனியு மருநீ ராடிப்
பின்னர் பூசனைமு டித்துப் பேருணாச் சாலை யெய்தத்
தன்னுயி ரிழப்போ னந்தத் தயையினிற் றாயனானை
மின்னொளிப் பீடத் தேற்றி மிசைதரு கலன்றி ருத்தி    37 (229)

ஐவகை யுண்டி யோடு மறுசுவைக் கறிப டைத்து
நெய்வழி தரவே பெய்த நீளன நடுவே வைத்தெம்
மையவின் னமுது கொள்கென் றடியினை பணிந்து போற்ற
மெய்யதென் றெண்ணி ஞான மிகுத்தவ னினி துண்டானால் 38 (230)

உண்டபின் வாய்கை பூசி யோரிடத் துறையும் வேலைப்
பண்டுதான் புசித்த வேறு பற்பல வுறுப்பு மொன்றி
மிண்டுட லயமாய் நிற்க வில்வலன் வரத்தை யுன்னி
யண்டரு நடுங்க வாய்விட் டழைத்திட நினைத்தா னன்றே. 39 (231)

தம்பிவா தாவி நின்றன் றசை யினை யுண்ட தீயன்
பம்பிய பண்டி கீறிப் பாரினில் வருதி யென்று
வெம்புவில் வலனு முக்கால் வீறுடனழைத்தல் கேட்டுக்
கும்பியூ டுறுவா தாவி கூறினன் வருவ லென்னா 40 (232)

அன்னவை கேட்ட கும்ப மாமுனி யறிந்து தீய
ருன்னிய கொடுமைக் கேற்ப வுதரத்தை வருடி யாங்கே
நின்னிலை தவறி மாய்தி யெனத்திரு நீறு பூச
வன்னிமண்டிய புதற்போன் மாய்ந்தனன் கொடியவெய்யோன். 41 (233)


பின்னர்வான் கொண்டலென்னப் பெருந்தவத்தவன் முன்னின்ற
முன்னவன் றம்பி மாய்ந்த முறையுணர்ந் தழன்று பொங்கித்
தொன்னிலை யுருவு கொண்டு தொடர்ந்தனன் தண்ட மேந்தி
யன்னிலை கண்ட தூயோ னரனெழுத் தைந்து மோதி 42 (234)

அங்கொரு குசையைக் கையேற் றரன்படை யாக வுன்னி
பொங்கெரி கதுவக் கண்கள் பொருக்கென விடுப்ப வன்னோன்
றங்குட லிருகூ றாகத் தடிந்துயி ரழித்த திப்பா
லெங்ஙனே பதக ருய்வா ரீசர்தம் மடியர் சீறின் 43(235)

                                                           (வேறு)

முன்னமார் கலிமுகந் துண்டமா முனிவரன்
பன்னருங் கொடியவப் பதகர்வாழ் வனமொரீஇ
மின்னைநே ரிடையொடும் மெய்த்தவக் குழுவொடுந்
தன்னைநேர் சீசயி லந்தனைச் சார்ந்தனன். 44 (236)

ஆங்குமைக் கண்டமோ டங்கைமான் மழுவையுந்
தாங்குமெய்ச் சச்சிதா நந்தனைத் தா துலாம்
பூங்குழற் சுந்தரப் பூதரப் புதல்வியோ
டோங்குபே ரன்பினா லுறுதவன் றொழுதரோ. 45(237)

தக்கணத் திசைவழித் தவர்தொடர்ந் திடநடந்
திக்குவின் மதனைமுன் னெரிபடுத் தியவரன்
கைக்கனிக் காயுல கைவலஞ் செய்குகன்
புக்கிவாழ் வேங்கடப் பூதரத் தெய்தினான். 46(238)

அந்தரத் தண்டர்தம் மயர்வொழித் தவுணர்பே
*ரந்தரத் துடல்கிழித் தாருயிர்ப் பருகும்வேற்
கந்தனைக் கண்டுபொற் கழலிணை தொழுதுபின்
றந்திபாம் பேத்துதென் கயிலையைச் சார்ந்தனன். 47 (239)

*அந்தரம்=இருள்

கண்டனன் றொழுதிணைக் கைகுவித் துச்சிரங்
கொண்டனன் *சிதமலர்க் கோதையோர் பாகனைப்
பண்டனைப் பண்கொடே பாடிவந் தனை செய்மார்க்
கண்டனைக் காத்தமைக் கண்டனைக் கண்களால் 48 (240)

*சிதமலர்க் கோதை= ஞானப்பூங்கோதை

அன்னதென் கைலைவிட் டாலநீள் வனமடுத்
தென்னையா ளுடையவ னெழினடங் கண்டுமற்
றுன்னருங் கயிலைவா ழீசனன் றோதிய
மன்னெழிற் றணிகைமா மலைவழிக் கொண்டனன். 49 (241)


                                                            (வேறு)

தெளிதரு கங்கை யாறுசூழ் காசித்தெற்கிரு நூறுயோ சனையி
லளியுளர் சோலையகழி சூழ் காஞ்சிக் காம் வடக் கிரண்டினிற் குணக்கே
யொளிர்கடன் மேற்கினைந்தினில் விரிஞ்சிக் குறுவடகிழக்கினி மூன்றில்
வளிகொள்கா ளத்திக் கேய்நிரு தியினில் வாய்த்தசீ பூரணக் கிரியில், 50 (242)


சுலவுறு பெருங்கட்புன்றலைப் பொறிகடோன்றுடற் *கீணவாலதிகொண்
டிலகுசா ரங்கம் பலவமைந் திருத்தலிதழ்விரி மலரணி கடம்பன்
மலைவிலொண் டொடியா ரிருவரை மணந்தான் மகட்கொரு மனக்குறை நேரி
னலிவகற்றினிய நவிலுதற் குறையு நாட்டமொத் திருந்தன வொருபால், 51 (243)

*கீணம்=குறைவு

கழைநிரை முன்னர் கமுகுதீங் கரும்பு காயிளங்கதிர் கொள் செஞ்சாலி
யிழையிடைப் புகுதா விணைமுலைக் கொடி நேரிடைக் கொடிச் சியர்கள் கா வேனற்
றழைதர வொன்றினொன்றுளே யுறுத றணி கையங் கிரிமிசை யிவர
விழைதரு மடியர்க் கமைத்த சோ பான மே யென விளங்குவ தொருபால். 52 (244)

ஆழ்தரு நிலைநீர்ச் சுனையிடைக் கருநத் தந்நலா ரரிதினிற் கொண்டு
வீழ்தரு நாக மணியினைப் பறவை விலக வொண் கவண் கொடு வீச
றாழ்தரு பொருள தென்னினும் விருப்பந் தருவதே லரியவா மரிய
*காழ்தரு மேனும் விருப்பிலார் விரும்பா ரென்பதற் கேய்ந்தன வொருபால் 53 (245)

*காழ்=ஒளி

கன்மிசை நொச்சிப் பாசிலை யன்னகான்மயிற் *றழைவிரித் தாட
வின்மணித் திரள்சிந் தருவியி னீட்டம் விசையுட னிழுமெனத் தாழ்த
னன்னெறிச் சேட னம்மயிற் கண்டு நடுங்கிமெய் வேர்த்து ளம்புழுங்கித்
தன்னுல கொல்லை சார்ந்திடற் கேகுந்தன்மையொத் திருந்தன வொருபால் 54 (246)

*தழை=கலாபம்

இன்னணந்  திகழும் வளங்கெழு வெற்பையியற்றமிழ் முனிவரனெய்தித்
தன்னிக ரில்லாத் தகைமைசேர் புநிதசரவணப் பொய்கை யின் மூழ்கிக் 
கன்னிபங் காள னைந்தெழுத் தோதிக் காமர்வெண் ணீறணிந் தடல்சூ
ரின்னுயிர் பருகு மையவேற் குமர னிணையடி தொழுதெழ நினைந்தே 55 (247)


குன்றிற கரிந்தோன் குறைதவிர்த் தாண்ட கூர்வடி வேற்குணக் குன்றே
வென்றிகொ ளவுணக் குலவிரு ளொழித்த விமலஞானத்தின மணியே
மன்றிடை நடித்தோன் மார்பிடை நடிக்கு மருமலர்ப் பதத்தருட் கடலே
யென்று பற் பலவாத் துதித்தடிக்கடி வீழ்ந் தெய்தினன் கோபுரவாயில், 56 (248)

ஆங்குறு பசுந்தார் துயல் வரு தடந்தோள டல்புனை வீரவா குவினம்
பூங்கழல் வணங்கி நிணப்புலால் கமழும் பொங்கொளிப் பரிதி வேற்கடம்பன்
பாங்குற விருக்குஞ் செவ்விதேர்ந் தறத்தின் பண் புறுந் தாலையம் பதியி
னோங்குறு புகழ்கேட் டுவந்திட வேட்ட வுளத்தனாய்க் குகன் முனமுற்றான். 57 (249)

எட்டினு மைந்தி னுஞ்சிலம் பணிந்த விணையடி தொழு தெழுந் தூறி
லுட்டிளை யார்வ முருக்கிட வெய்யோனுறுகிர ணத்தெதிர் வெண்ணெய்
பட்டதை யென்ன நெகிழ்ந்திரு விழியிற் பனிதரு மருவி நீர் வார
மொட்டுறு கஞ்ச மெனக்கரஞ் சிரத்து முகிழ்த்தி வை யோதுவதானான்.58 (250)

                                                              (வேறு)

கருணை சேர் முகங்கள் போற்றிக் கண்களீ ராறு போற்றி
பருணிதர் புகழ்முந் நான்கு படைக்கலக் கரங்கள் போற்றி
தருணவின் மணி போற்றோளிற் றாழ்செவிக் குழைகள் போற்றி
*கருணியை யனைய மார்பிற் கலந்தமுப் புரி நூல் போற்றி. 59 (251)

*கருணிய=மலை

மாண்டகு பசுங்க லாப மஞ்ஞையூர் பவனே போற்றி
யாண்டலைக் கொடியுயர்த்த வாறிரு புயனே போற்றி
காண்டகு செங்கேழ்க் கஞ்சக் கமலமென் பதத்தாய் போற்றி
பூண்டயங் கயில்வே லேந்தும் புநிதனே போற்றி போற்றி 60 (252)

இருவினைத் தொடக்கை யன்பர்க் கிரித்தரு ளிறைவ போற்றி
விரிதரு முலகை மேனாண் விதித்திடு முதல்வ போற்றி
கருதரு முயிர்க்கு ளெல்லாங் கலந்து வாழ் விமல போற்றி
யருமறை முழங்குஞ் சீபூரணகிரிக் கதிப போற்றி. 61 (253)

என்றெதிர் பழிச்சி நின்ற விருந்தவ னுடலந் தைவந்து
இன்று நீ வேட்ட தென்னே யியம்புதி தருது மென்னாக்
குன்றவர் மகள் வலத்துக் குமரவேள் வினவ விந்தக்
குன்றடக் கிய தவத்துக்குறுமுனி பணிந்து கூறும். 62 (254)

                                                (வேறு)
வேதமாதிகளி னுள்ளமெய்ப் பொருளின் விதிவிலக் கனைத்தையு மோதி
யேதமா ரிருண்மா மலத்திடை யாழ்ந்த வென்னை யின்னருளினா லாண்டா
யாதலா லடைவ தின்றொரு குறையு மழகமர் தாலையம்பதியின்
மேதையாம் பலவிம் மிதந்தனை வினவவேண்டிய விருப்பமே யல்லால், 63 (255)

திருவுளக் கருணை செய்தடியேற்குத் தெளித்தரு ளென்று முக் குறும்போ
டிருண்மலப் பகையை யிரித்தவன் மீட்டு மிருங்கழ லடிமிசை வணங்க
மருமலர்க் கடப்ப மாலையோனுளத்தின் மகிழ்வொடு தாலையம் பதியின்
பொருவின் மான் மியங்களிவையிவை யெனத்தாழ் புரிசடை முனிவனுக்குரைத்தான் 64 (256)

                                       அகத்தியன் யாத்திரைச் சருக்கம் முற்றிற்று

                                                       ஆகத் திருவிருத்தம் 256

                                                         சீமாயூரச் சருக்கம்

பொன்னவிர் சடிலச் சூதமா முனியைப் போற்றிநீ யருளிய காதை
தன்னிலெம் மனது குதுகல மடைந்த தாயினு முமைமயி லுருவ
மன்னகர் தன்னி லகற்றின ளென்ன வறைந்தனை யதன் விரி வெமக்குப்
பன்னுவீ ரென்ன நைமிசவனத்துப் பாவநா சகர்க் கவனறைவான். 1 (257)

துண்டவெண் பிறையோனடி தொழுந் தவத்தீர் தொலைந்தவோர் கற்பநூ றதன்முன்
வெண்டிரு நீறு புனையுமெம் பரமன் மேனியு முள்ளமுங் குணமுங்
கொண்டதென்றிசைப்ப வொள்ளொளி விரிக்குங் கோதிலா விரசிதக்குன்றி
னண்டர்நா யகனாஞ் சிவனு மையோடும் அணி மணி யாதனத்திருந்தான். 2 (258)

அரந்தையை யடியார்க் ககற்றருட் பரம னடிதொழக் காவதங் கமழும்
பெருந்துளி நறவு பிலிற்றிடுந் துளவப் பிணையலார் திரு மறு மார்பன்
முருந்துறழ் நகைவெண் பாரதி கேள்வன் மும்மத வெள்ளிபவூர்தி
யருந்தவ முனிவர் சித்தர்சா ரணர்க ளந்தரத் தெவரும் வந்தடைந்தார்.  3 (259)

அதுலனாம் பரம னவனியை யளித்த வமலையோ டினிதமர்ந்தரு ளுஞ்
சதுரது நோக்கிச் சங்கர சம்போ தாண்டவ சச்சிதா னந்த
முதுமறை முடிவின் விளங்கிய விமல மூர்த்தியே முக்கணானவனே
நதிமதி சூடும் நம்பனே ஞான நகமகட் சமேத சிற்சுகனே. 4 (260)

அருவமா யுருவா யருவுரு வாய வாதியே வகத்திருடு றந்தோர்க்
குரியவா னந்த சோதியாம் பொருளே யுயர் குணக் குன்றமாம் பரனே
வொருமையா மனத்துத் தூயவர் களிக்க வுமைமன மகிழவம் பலத்தே 
யிருமையு மளிக்கத் திருநடம் புரியு மீசனே யெனப்பல துதித்தார். 5 (261)

சுரி குழற் றுவர்வாய் முகமதி முருந்தின் றூநகைப் பாமகள் விளர்ப்ப
விரகுள விச்சா தரருமெய் மறந்து விழித்தகண் ணிமைத்திடா திருப்பக்
குரலெனு மிசையே முதலவா யேழுங் குழகனா ரிருகுழைக் கமுதாய்ப்
புரிநரம் புளருந் திவவுயாழிசைதும் புரு வுநா ரதருமொத் திசைத்தார் 6 (262)

கருமுகி லொலிபோற் கறங்கிடு முழவுங் கலைமதி நிகர்த்தொளிர் சங்குங்
கரமிகு வாணா சூரனும் பானு கம்பனும் வாய்கரமொத்து
இருவிசும் பிறைவோர் செவிகர முகிழ்ப்ப வெண்டிசா முகங்களு மதிரச்
சிரமதையுரக வேந்தனும் பனித்தல் செய்திடச் செழிப் புடனார்த்தார். 7 (263)

பாடுவர் சிலர் பொற் பதமலர் சிரத்திற் பரிப்பவர் சிலர் பவ மகல
நாடுவர் சிலர் மெய்ப் புளகம தரும்ப நண்ணுவர் சிலர்சுகஞானங்
கூடுவர் சிலர்கைக் கொட்டியார்த் தெழுந்து குதிப்பவர் சிலர் மனமுருகி
யாடுவர் சிலரிவ் வண்ணம தாக வாயின ரவையிடை மிடைந்தோர். 8 (264)

வாரமென் மேற்கொள் மனத்தின ராகி மாதவ ரெவருமங்கிருக்கு
நேரமுற் சாக மாவர வல்கு னெகிழிடை வாள் விழிக் கமஞ்சூற்
காரெனு மளகக் கனதனத் துவர்வாய்க் காரிகையுடன் பொழின் மேவ
மாரனைப் பொடித்தன் னோன்சதிக் கருள் செய் மால்விடை யவனினைந் தனனால்  9 (265)

வேங்கைபுன் னாகம் பாடலம் வகுளம் வேய்சுர புன்னைகர்ச் சூரங்
கோங்குமந் தாரை சண்பகம் பூகங் குராகடு வத்தியா லரசு
தேங்கம ழார மாதுளை யசோகு சிவந்திகூ விளைகுருக்கத்தி
தீங்கனிப்பலவு கடம்பகில் காயா திலகமா மருதநா ரத்தை 10 (266)


நாரிகே ளந்த மாலமுள் ளிலவு நமையரிச்சந்தன மாத்தி
பாரிசா தம்வெண்ணொச்சிவேம் பாச்சா பாலைசெம் மரம்பனை தேவ
தாரமா விலிங்க மிலந்தைவெள் ளாத்தி தாழை முந் திரியொடுகொய்யா
பேரரை நாவல் கற்பக மழிஞ்சி பிதிரொளி சோதிதிந் திருணி 11 (267)

முள்ளரை முருக்கு விளாமலை வேம்பு முள்ளிதா ளிப்பனை வாழை
கள்ளிணர் மதுக மோமைவெட் பாலை காட்டுவா ழைக்கரு நெல்லி
விள்ளரு மிருளிக் கொடியெலு மிச்சை விண்ணுயர்ந்திடு மருதாணி
யுள்ளம துவக்கும் புன் குகிச்சிலியோ டோங்கெலு மிச்சைநெல் லியுமே 12 (268)

கருந்துணர் துளசி குங்கும மேலங் கள்ளிதக் கோலநொச் சிலியுஞ்
செருந்திவெள் ளெருக்கு துத்தியூ மத்தை * சேயதி மதுரகர்ப் பூரம்
புரந்தரற் கிளையோ னணிந்திடுந் துளசிப் பொலிவுறு சுவேதபத்திரியுந்
திருந்திய லவங்கம்  ** வச்சிரங் கோட்டாந் திகழ் வசவாசி மென் தகரம். 13 (259)

*சே=சேரான் மரம், ** வச்சிரம்= சதுரக்கள்ளி

மல்லிகை சோதிக் கொடியொடு  சீந்தில் மதுரவள்ளிக்கொடி *சூரல்
துல்லிய மருவேர் முல்லைசம் பங்கி சோமவல் லிக்கொடி குருவேர்
**வல்லிகம் வயலை மாதவி யிரத்ந வல்லிபர்ப் பாடகக் கொடிநே
ரில்லென  வுரைக்கும் வல்லிசா தகதத்தி னிலதை வெள்ளிலைக் கொடி நிறைந்து. 14 (270)

*சூரல்=பிரம்பு , **வல்லிகம்= மிளகு

அரியின முழுது புரிமுறுக் கவிழ வலரரக் காம்பல் வெண் ணெய் தல்
யிருடுமி  *யென்று கண்டலர் மரைசே யிதழ்விரி முண்டகங் குவளை
வரிசையி னலர்ந்து மழையெனப் பொழியு மதுவினால் நிரம்பிய வாவிக் 
கரிசுறு நிரை நீ ரோடைகால் கூவங் கனதடஞ் சுனைபலவுளதால், 15 (271)

* என்று= சூரியன்

விண்டவா யெண்கு சூகரஞ் செந்நாய் மேதிகாட் டாமரை யுன்னிப்
புண்டரீ கங்கல் லானைசவ் வாதுப் பூஞைகத் தூரிமா மிரு கந்
திண்டிற லுறுமை யானனங் கடமை திரிமத வாரணஞ் சிறுத்தை
*மண்டலி ஞாளி யாளியெய் முயல் மான் மன்னரேர் கரந் திறற் கடுவன், 16 (272)

*மண்டலீ=பூனை

சக்கர வாகஞ் சசிநில வருந்துஞ் சகோரமன் றிற்சுக மாந்தை
குக்கில்பா ரத்து வாசநீர்க் கோழி கோகிலங் கூகைசிச் சிலிவெண்
கொக்குநா கணவா யனஞ்சிவல் காடை கொடிமயூ ரம்புறா நாரை
மிக்குறு வானம் பாடிசார்த் தூலம் வீயிறை கண்டபே ரண்டம். 17 (273)


தேவர்கண் முனிவ ரிருடிகாந் தருவர் சித்தர்விச் சாதரர் முதல
யாவரும் விண்ணா டுறையுமா னதம்விட் டிழிந்திவ ணாடுறு மரிய
மாவிரி சுதிரான் முருகுல வியபூ மரைவிரிந் தரியொலி மழுங்கா
சேவுயர் கொடியோன் கங்கைபோன்மென்னச் செப்பருந் தடம்பல வுளவால். 18 (274)


இத்தகை வாசத் தருமிரு கங்க ளிணர்க்கொடி செடி தடா கங்கள்
சத்தமிக் கெழுமென் சிறையுடைப் பறவைச் சாதிசா லங்களா னிறைந்து
புத்தியி லுயர்ந்த சேடன்வான் மீகி பூநின்று பூவையுண் டாக்கும்
வித்தகன் புகழுங் கயிலையின் மருங்கு விளங்குவ தோர்திருப் பழுவம் 19 (275)

கருமுகில் தவழக் காவிறன் சேவை கருதிவந் தடைந்தவ ரெவரு
முரைதரு வேத வொலியினாற் பழிச்சியுடன் வர னந்திமு னடப்ப
வரியய னுருவ மாறியுங் காணா வடிமுடி யுடையவெம் பரமன்
விரிதரு புகழ்சுந் தரவுமை யொடுவெள் விடையினி லிவர்ந்துவந் தமர்ந்தான் 20 (276)

கனிமுதிர்ந் தொழுகுங்கமழ்தரு செந்தேன் கரைபொரு நதி யெனப் பெருக
பனிமதி தவழு முயர்சினைப் பலவின் பலமதைப் பகடெனக் கொண்டங்
கனைவருங் காணக் கடுவனுந் தாவி யக்கரை மந்தியைச் சாரும்
புனிதமா வனத்துப் புதுமையை நோக்கிப் புராரிதன் பொற்றொடிக் குரைப்பான். 21 (277)

                                               (வேறு) நிரனிரை

மாத *ரோதிகை சக்குவள் களரிவண் கணைக்கா
லோத தற்கிணை யின்மையி னோடையிற் பதியஞ்
சூதொ டுற்பலம்  வள்ளை சங்கின வராற் சூழ்ந்து
சாதலுன்னிவந் திறங்கின போலுமாற் சதியே. 22 (278)

* ஓதி - கூந்தல், கை - கரம். சக்கு - கண், வள் - காது. களரி - கழுத்து, கணைக்கால், பதியம் - பாசை,
சூது=தாமரை, .உற்பலம் - நீலோற்பலம் - தழை - கலாபம். காழ் - ஒளி - வள்ளை - வள்ளையிலை
சங்கு - சங்கு. வரால் - மீன் சதி - பார்வதி


கரிய மென்சூழற் கலைமதி நிகர்க்குமொண் முகத்தா
யரிய நின்னிடைக் கொதுங்கியிவ் வனத்திடை யடைந்தே
பெரிய மும்மத வாரணங் கண்டலாற் பிறவா
வரியி னங்களெண் ணிலநிகழ் கின்றன வறிவாய் 23 (279)

வரிய மென்சிறைப்புள்ளின மதுவுணு மாலைக்
கரிய வண்குழற் கலைசொலு மறம்வளர் கரத்தா
யரிய நின்னடைக் கஞ்சியிக் கானிடத் தடைந்தே
பெரிய மால்கயப் பிடியினந் திரிதல் காண் பேதாய். 24 (280)


அன்ன மிட்டுணென் றவ்வை சொன் மேற்கொளு மறிஞர்
பன்ன ருஞ்சிவ னடியரோ டுணுவபோற் பரிந்து
கொன்ன விற்  *கொடி தானுமுன் னினங்களைக் கூவி
பின்ன ருண்டிகொள் பெருமையைக் காணுதி பேதாய்  25 (281)

*கொடி=காகம்

படியி லுள்ளன யாவையும் பயந்தநுண் ணிடையாய்
கடிய நின்குழற் காடென விருண்டவிக் கானில்
கொடிகொள் சிங்கமுங் கிரிசரத் தந்தியுங் கெழுமி
கொடிய தங்களுட்பகையின்றிக் குலவுதல் குறியாய் 26(282)
                                                 
                                               சிலேடை

வடம ணிந்துசூர் முதலறக் காய்ந்தொளிர் வள்ளிக்
கொடியி னோடுவே லேந்திவே டுவருடன் கூடிக்
கடிம ணஞ்செயப் பெறுதலிற் கௌரியிக் கானந்
திடமி குந்தநின் னிளையசே யனையது தெரிவாய், 27 (283)

முருகக்கடவுளுக்கு (இ-ள்) வடமணிந்து - முத்தாரந்தரித்து. சூர்முதல்
அறக்காய்ந்து= சூரபதுமன் முதலிய அசுரரைமிகக் கோபித்து, ஒளிர் -
பிரகாசிக்கும், வள்ளிக்கொடியோடு - வள்ளிநாச்சியாருடன், வேல்ஏந்தி -
வேலாயுதத்தைத் தாங்கி, வேடுவருடன்கூடி - மறவர்குலத்திற்சேர்ந்து,
கடிமணஞ்செயப்பெறலின் - நல்லவிவாகம் செய்யப்படுவதால்

வனத்திற்கு (இ-ள்.) வடம் அணிந்து - ஆலமரங்களை உடைத்தாகி, சூர்=
அச்சத்தை, முதல் அற - அடியோடுகெடுத்து, ஒளிர்= விளங்காநின்ற,
வள்ளிக்கொடியினோடு= வள்ளிக்கொடிகளுடன் , வேல் ஏந்தி=
வேலமரங்களைத்தாங்கி,  வேடுவர் - மறவர்கள், உடன்கூடி- ஒன்றுசேர்ந்து,
கடிமணஞ்செயப் பெறுதலின் - நல்ல வாசனையை வீசப் பெற்றிருத்தலால்....
கௌரி - பார்வதி, இக்கானம் - இவ்வனம், திடமிகுந்த - வல்லபமிகுந்த, நின் -
உன்னுடைய, இளையசேயனை - சுப்பிரமணியனை, அனையது - ஒத்தது.
தெரிவாய் - காண்பாய் என்க.

சக்க ரங்கொடு பாற்கவி பரித்துகோ தண்டஞ்
சிக்கெ னத்தரித் தத்தியைக் காத்துகட் செவிதன்
பக்க மேய்ந்தொளிர் பரிதியை மறைத்தலாற் பழுவம்
மிக்க நின்னருஞ் சோதர னனையகாண் மின்னே . 28 (284)

விட்டுணுவுக்கு (இ-ள்) சக்கரம் கொண்டு - சக்கராயுதத்தைக் கொண்டு,
பாற்கவிபரித்து= இலக்குமியைத் தாங்கி, கோதண்டம் - சிக்கெனத்தரித்து,
வில்லைக் கொண்டு.  அத்தியைக் காத்து - கஜேந்திரனை ரட்சித்து -
கட்செவிதன் பக்கம் எய்ந்து ,பாம்புகளைத்தன திருபுறத்தினுந்தரித்து.
ஒளிர்பரிதியை - பிரகாசிக்கும் சூரியனை, மறைத்தலால்=மறையப்படுத்தியதால்

வனத்திற்கு (இ-ள்)  சக்கரம் கொடு - சக்கரவாகப் புள்ளைக் கொண்டு, பால் -
கடமையையும், கவி=குரங்குகளையும் , பரித்து - தாங்கி, கோ=இலந்தைமரங்களையும், 
தண்டம் - ஊன்றுகோல்களையும், தரித்து -உடைத்தாகி, அத்தியை= அத்திமரங்களை,
காத்து= விருத்தி செய்து, கட்செவி= பாம்புகளை, தன்பக்கம் ஏய்ந்து- தனது பக்கங்களிற்பொருந்தி,
 ஒளிர்பரிதியை= காந்தி பொருந்திய சூரியகிரணத்தை, மறைத்தலால் - மறையப்படுத்துவதால்,
பழுவம் - இந்தவனம், மிக்க - மேன்மையுடைய, நின் - உனது, சோதரன் -விட்டுணுவை, 
அனைய - ஒத்தது. காண் - பாராய்- மின்னே - பெண்ணே என்க


தன்னி கர்ச்சுரும் பினஞ்சுதி பாடிடத் தடாரி
நன்ன யத்துடன் வானர முழக்கிட நாரை
பன்னு *பானொலி செயக்குயில் பண்ணிசை பயிற்ற
வன்ன மாமயி லாடுவ காணுதி வனிதாய்.  29 ( 285)

*பான் ஒலி= பான் வாத்தியம்

*என்ற ளாவிய வேயின தும்பரி னேறி
நின்று வானரங் கூத்தரி னாடிடு நிருத்தஞ்
சென்று சாரிகைக் குயில்தெரிந் துளமகிழ் திளைக்கக்
கொன்றை பொன்சொரிந் திடுதிறங் காணுதி கோ தாய். 30 (286)

*என்று= சூரியன்

மாத னச்சிறு மெல்லிடை மெய்க்கழை மானே!
சாத னங்களை யறிந்தவா வொழித்தருஞ் சலச
வாத னத்திருந் தைம்பொறிப் புலன்களை யடக்கித்
தீதி னம்பதம் விரும்பிய முனிவரைத் தெரிவாய். 31 (287)

கதிர்த்த பைந்தொடீக் கலையினங் கவரிக ளிரட்ட
வதிர்க்கு மோரிக ளருகிருந் தரசிய லறைய
மதத்த யானைக ளேவலிற் பற்பல வதியக்
கதத்த வெம்புலி யரசுசெய் வைபவங் காணாய். 32 (288)

சூழ்த்த மென்கறிச் சோதிமா விருக்கத்தைச் சூழ்ந்து
பூத்த முல்லையின் புதரின்கீ ழுறங்கிடு மெண்கின்
றோற்ற முன்பிரா வணனிர சிதக்கிரி தூக்கச்
சேர்த்த ணைத்தநின் றிறத்தினை நிகர்த்தசே யிழையே. 33 (289)

கோல மீக்கொளுங் கோற்றொடீத் தேவருக் குணவு
சால வேமணி யடித்தருத் தடியவர் சதுர்போல்
மேலெ லாந்திருத் தேவுரு மேவருட் சேதா
சீல மார்கள மணியசைத் திரைகொள றேர்வாய். 34 (290)

கான நல்லிசை பயிற்றிவந் திரந்தவர் களிக்க
வான னம்மலர்ந் தளித்திடு மறிவுளோ ரனைய
தேனி னங்கடே னருந்திடச் செறிந்தவான் சினைக
டான லர்ந்தளித்திடு திறன் காணுதி தையால் 35 (291)


கலைவ ளர்ந்திடு மதியுட றோய்ந்துகண் டூதி
நிலைபெ றச்செயுஞ் சினையுடைச் சண்பக நிறைந்த
வலகி லாமல ரரும்பியு மரியினுக் குதவா
திலையெனுங் குணத் தவனையொத் திருந்தநே ரிழையே. 36 (292)

மற்ற தொப்பிலா வடிவுடை மங்கைமா மரவம்
பொற்ப மைந்தலர் பூத்துநிற் கின்றவப் பொலிவு
கற்ப மைந்தொளிர் மகளிர் தங் கணவரைத் தழுவி
யற்ப மைச்சிறு மகவையீன் றணைத்ததொத்தனவால் 37 (293)

என்று தேனின மதுநுகர்ந் தரியபா ணிசைக்குங்
கொன்றை மாமலர்த் தொடையலம் புயத்தினிற் குலவும்
வென்றி சேரிறை விளங்கிழை யுமைக்குரைத் திட்ட
பொன்றி லாவளம் பொருந்திய பொதும்பரி னாப்பண். 38 (294)

                                             (வேறு)

ஆதிசேடன துச்சி யின்மிசை யத்தி வார மிருத்தி வெண்
சோதி சேர்படி கத்த மைத்த தளத்த தாய்சுடர் தோன்றுபூம்
பீத கத்தக டிட்டு யர்த்திய பீட மைந்தகு றட்டினில்
வீதி யாய்ப்பல கால்க ணாட்டி விளங்கு போதிகை வைத்தரோ. 39 (295)


செம்மணித்திர ளுத்திரந்துவர் செய்தமைத்த கொடுங்கைமேல்
மைம்மலிந்திடு மணிபரப்பிவிண் மறைவு செய்து புறத்தினில்
வெம்மையின்றிய விந்துகாந்த வியன்சுவர்ப்படி கப்படி
பைம்மையிற்பொலி மரகதத்தில் பதித்தசாளரப் பத்தியே. 40 (296)

சிந்துரக்கரி யாளிவல்லுளை சீயநற்பரி யஞ்சுகஞ்
சந்தமென்னடை யன்னமாமயில் தங்குதூண்வரி சைக்குளே
விந்தையாம்படி கத்தியற்றி விளங்குமொண்சுடர் சாலமோ
நந்துறாதொளி வீசிநள்ளிரு ணாடுறாம லகற்றுமே. 41 (297)

எண்டிசைக்கணு மேயிதற்கிணையில்லையென்றுரை செய்யுமம்
மண்டபத்தின் மருங்குமைவிழி மாதிரக்குய மின்மொழித்
தொண்டையங்கனி யொத்தவாயிதழ் சுந்தரத்துமை மாதுட
னண்டர்சூழ்தர வானுகைக்குமெ மண்ணலார்வமோ டண்மியே. 42 (298)

வேதனென்ன விளங்கிவாழும் விரிஞ்சனாலு மதன்புகழ்
நீதியாக வுரைக்கிலோநெடு நாளினும் முடி யாதென
வோதவுள்ளன மண்டபத்தெழி லோங்கன்மாமகள் காணவே
சாதலோடு பிறத்தலின் றிய சங்கரன்றெரி வித்தரோ. 43 (299)


நேரதில்லென வேயொளிர்ந்திடு நீளிரத்தின மண்டபத்
தாரமென்மலர் கேளிதற்ப மருங்கினண்மி யதன்மிசை
காரிருட்கதி ரோடுசேர்ந்து கலந்திருத்தலை மானவே
வாரணப்பொரு ளாகுமையனெம் மையையோடு மமர்ந்தனன். 44 (300)

வம்புலாமலர் மாலைவேய்மலர் மாதரோரிரு பாலினு
மம்மவென் பணி செய்கவென்றவ ராட்டிடப்பெறு மற்புதக்
கொம்மைவெம்முலைக் கோதையோடு குலாவிநின்று களித்திடு
மெம்மை யாளுடை யீசனார்வ மியம்பலான திறத்தவோ 45 (301) 

அவ்வயின்னுமை யண்டரண்ட மனைத்துமாகி நிறைந்திடு
மெவ்வமில்லரு ளீசனம்புய விணையடிப்பத மேத்தியே
செவ்விதாயெனை யாளுஞ்சந்திர சேகராயெ னுளத்துளே
யிவ்வயின் னொரு சங்கைநேர்ந்த தியம்புவேனது கேட்டியால் 46 (302)

சந்ததம்பொறி வண்டரற்று தருக்களோங்கு வனத்தினிற்
சிந்துரம்புலி யாளியாதி செழித்தமாமிரு கங்களு
மிந்துகாந்திய ருந்துபுள்ளெழு வாயபக்கி யினங்களும்
விந்தையாக விளங்கலென்னுரை விமலவென்றடி தாழ்ந்தனள். 47 (303)

கனிமிகுஞ்சுவை யனையமென்மொழி காரிருட்குழன் மாதுமை
வினவுரைக்கெதி ருரைகளின்றி விளங்குமுப்பொரு ளுண்மையை
யனகமாம்பரி பூரணச்சுக மார்ந்தயிக்கிய மேவிடச்
சனகனாதிய ருக்குரைத்தவர் தாமடைந்தனர் யோகமே. 48 (304)


                                                          (வேறு)

அந்தச் செய்தியை யமிழ் தரும் பனையசொன் னகிலக்
கொந்து வார்குழற் கொடியிடை யறிந்தவ ணிருந்த
விந்த மாமென விளங்குவெள் விடையினி லேறிச்
சந்த மாவனச் சிறப்பினைக் கண்டிடச் சார்ந்தாள். 49 (305)

ஆசி லாவமு தனையமென் மொழிகொளுமையை
நேச மாகிய விறைவனை நீங்கி மா மலரின்
வாச மேவிய வாவியின் றடங்கரை மருங்கு
காசி லானொடு கண்கவ ருன்னதங் காண்பாள். 50 (306)

வாச மார்தரு நீழலில் வதியுமிந் திரன்முன்
காசு லாமலர்க் கணிகைய ராடல்போற் சிறகி
னோசை *கோவென வொலித்திடக் கோமள மஞ்ஞை
வீசி யாடவும் வண்டிசை பாடவும் விமலை. 51 (307)

* கோ - ஒலிக்குறிப்பு 


கண்டு கேட்டுடல் கம்பித மின்றிமிக் கரிய
திண்டி றற்படை யவுண்ணா மயிடனைச் செற்ற
கண்டெ னும்மொழிக் கனியிதழ்க் கௌரியுண் மகிழ்வு
கொண்டு பற்பல கடிகைநீங் கிடக்குறித் திருந்தாள். 52(308)

கடம திற்பல விலங்கினைக் கண்டுகண் களிக்கச்
சடமெ லாம்வரிப் பொன்னெனத் தசைகெழும் பேழ்வா
யுடைய வெம்புலி யொன்றவ ணுலவிட வூழா
லிடப தேவனு மினிப்பொடு நோக்கின னிருந்தான். 53 (309)

கங்கை வார்சடைக் கண்ணுதல் மான்மழு தரித்த
செங்கை யார்சிரத் தெரியலந் தோளுடைத் தேவன்
துங்க மோனநிட் டையையொரீஇத் துகளறு மோங்கன்
மங்கை யுந்திற லானையு மருங்கினிற் காணான் 54 (310)

இவர்ந்து செல்லெழி லிமிலுடை விடையொடு மெமது
பவந்தனைத் தெறும் பனிமொழி யின்மையும் பரம
னுவந்து நோக்கியுற் றதையுணர்ந் தொருவலா லுள்ளங்
கவர்ந்தெ ழுஞ்சின மீக்கொளக் கவலடைந் தன்றே. 55 (311)

அன்று நீங்கிய விருவர்தஞ் செருக்கடங் கிடவோ
வின்று தம்முரு விகத்துளோர் கண்டுய வெணியோ
குன்றெ னுந்தனத் துமையொடு குண்டையைத் தணந்து
துன்று நாட்சில தனித்திருந் துறையவோ தூயோன் 56(312)

தூய மண்டபந் தனைவிடுத் தவணுறுந் துறவோர்
மேய விண்ணவர் கணத்தொடும் மேன்மைசார் கைலை
யாய மாமலை யமருமத் தாணியி னாப்ப
ணேயி னானவ னோக்கறி வாரெவ ரேயோ 57 (313)

நாத னீங்கலு மவ்வன நல்வளங் குறைந்து
பாத வங் கணின் றிடுதிறம் பவந்தனைக் கெடுத்த
மேதை யோர்களு மூழ்வழிக் காமத்தான் மெலிந்து
* போது மாதராற் பொலிவழிந் திருத்தல் போன் றனவால். 58 (314)

*போதல் - வரல்.

இன்ன வாறவண் வளமெலா மொழிந்துநூ லிழந்த
கன்னி போன்மெனக் கண்ணெதிர் தோன்றுமக் கடத்தைக்
கன்னி யாமெம தன்னையு நந்தியுங் கண்டீ
தென்ன காரண மீசனா லறிகுவ மென்னா 59 (315)


பரிவி னோடுமுன் னிருந்துழி யடைந்தெழிற் பரமன்
கரும மிக்குறு தவிசினி லிருந்திடக் காணார்
வெருவி யுள்ளநெக் குருகுபு வோடியே விரைவோ
டருவி பாய்தரு வெள்ளியங் குன்றினை யணைந்தார். 60 (316)

ஆங்க ணுற்றழ லாடியி னடியிணை யணைந்து
நீங்கு பார்வைபி னடைந்தென நிறைமகிழ் வெய்திப்
பூங்கு ழற்பக வதியுநந் தியுபதப் பூசை
தீங்கிலா தியற் றிடவவர்க் கிறைவனுந் தெரிப்பான். 61 (317)

                                                 (வேறு)

முன்னை யூழு லப்ப வென்னை நீவிர் நீங்கி மூசுவண்
டின்னி சைப்ப யிற்று சோலை யெய்தி மஞ்ஞை புலிநடந்
தன்னை நோக்கி யெனைம றந்த தன்மையா லடற்சகத்
தன்ன மஞ்ஞை யுந்  *த ரக்கு மாக வென்ற றைந்தனன் 62 (318)

*தரக்கு=புலி

ஆக வென்ற றைந்து சாப மன்று தன்செ விப்படச்
சோக மோடி ருந்து நெஞ்சு துண்ணெ னத்த ளர்ந்துமெய்
யேக நாத னடியில் வீழ்ந்தி றைஞ்சி யெந்தை யிப்பிழை
யேகு மாற ருட்க டைக்க ணித்தி யென்றி சைப்பரால்  63 (319)

*கோணி யாமை கோடு மோடு மாக மீது கொண்டுளாய்
**வேணி $வேணி யிற்ற ரித்து வேணி யாந்த லத்துளாய்
காண முன்னின் னன்ப ருக் கோர் #காணமீந்த ## காணியா
வாண வத்தி னால கந்தை கொண்ட வர்க்க கன் றுளாய் 64 (320)

*கோணி - பன்றி. ** வேணி - கங்கை . $ வேணி - ஆகாயம். அது - சிதம்பரம். 
#காணம் - பொன், ## காணி - தோல்

சிராத ராசு ராசு ராதி யோர்தொ ழுந்தி கம்பரா
சராச ராவி புதவி ராச சர்வ லோக சரணியா
பராப ரா // சுராரி யோடு பாரி லாடு பண்ணவா
வராக ரா, க ராக வர்ந்த பாலன் மீட்ட ளித்தவா.  **   65 (321)

// சுராரி= பேய்,  ,** சுந்தரர் முதலையுண்ட
பாலனை மீட்டது.

தசமு கத்த னுய்ய வன்பு தந்த வெங்க டாணுவே
கசமு கத்த ரக்க னைக்க னன்று ரித்த கர்த்தனே
யசமு கித்த னடல்கெ டுத்த  *வைய னார்த மையனே
திசைமு கத்து ளோர்கள் சேவை செய்ய நின்ற தேவனே. 66 (322)
 
* ஐயன் - ஐயனாரையன்

காமன் மெய்பொ டித்த நீல கந்த ராச வுந்தரா
*சேமன் வேணி மீது சோம சேக ராக்ரு பாகரா
வேமன் வீழ வன்றுதைத்த வெம்ப ராசி தம்பரா
மாமன் வேள்வி யைத்த விர்த்த மாத ராசி ராதரா 67 (323)

* சே - இகப்பு, மாது- கங்கையார். அரா= பாம்பையும்,  சிராதரா - சிரத்தில் தரித்தவனே


                                                                   (வேறு)

என்று பல துதிகள் புகன் றிமையமலை மானுமெழி லானு மீட்டு,
மன்றினடித் திடுபாத மலர்த்துணையை வழுத்தியுனை மறந்து காவிற்
சென்ற பெரும் பிழையதனைத் தீர்த்தடியே முய்யும் வகை செய்யவேண்டு
மென்றிரந்த விருவருக்கு மெம் பெருமான் கனிவொடிவை யியம்பலுற்றான் 68(324)

                                                                (வேறு) 

பாவிய வொலிசேர் திரையிக வாத பரவைசூழ் மாநில மதனி
லேவரும் போற்றப் பிரளயந் தனிலு மிகலுட னழிவிலா தோங்குந்
தாவிலாக் காஞ்சிக் காசுகத் திசையிற் றயங்குமோ ரைங்குரோசத்திற்
*கேவல முதவு கயிலையின் மேலாக் கிளர்ந்திடு மொருதல முளதால், 69 (325)

*கேவலம்=மோட்சம்

குடக்கின தெல்லை குறிக்கிற்பஞ் சீசன் கோயிலார் காவிரிப் பாகை
வடக்கினிற் புன்னா கீச்சுர நாதன் வாழ்தரு நென்மலி நகராங்
கடக்கரு மணிக்கண் டீசன்மாற் பேறு கருதரும் பூருவத் திக்கி
னிடக்கிறென் கீழ்ப்பா லின்வரா கேச மேய்ந்திடுந் தாமலம் பதியே. 70 (326)

இயம்புமித் தலத்தி னிடைமுனி வரர்க ளேத்துமோர் நகருளத தனிற்,
சுயம்பிர காசத் தூய்மையாய் விளங்குஞ் சோதிலிங் கத்தினை யடைந்து,
நயம்பெறச் சபரி செய்யினுஞ் சாப நையுமென் றெரிமழு மானுங்
$ கயந் * தரக் #கதளும் புனைந்திடு பரமன் கனிவொடு கழறின னன்றே 71 (327)

$ கயம் - யானை, * தரக்கு- புலி, #அதள்= தோல்

அகனிலத் திருளை யகற்றுசெங் கிரண வாதவ னெயிறுகப் புடைத்துக்,
ககபதி முதலோர் பாறிடத் தண்ணென் கதிரவ னுடலினைத் தேய்த்தோன்,
புகலுறு சாபம் பொன்னவிர் திதலைப் பொம்மல் வெம் முலையுமை யேற்று
சகமதி லிணையி லாதொளிர் புனித தாலை யம் பதியினைச் சார்ந்தாள்.  72 (328)

அயில் விழி யுமையு மயிலுரு வாய்முன்னறிவொழிந் தகனில வை ப்பிற்
பயில்பற வைகள் போற் சேவல்செம் போத்துப் பருந்தரி நா கண வாய்ப்புட்,
குயின்முத லாய குடிஞை யினூடு கூடிநீண்  முழையுடைக் குன்று
வெயில்விரி யிந்து காந்தமா மேடை விளங்குசெய் குன்றெலா முலவி, 73 (329)

புரிமுறுக் கவிழ்ந்து தேறல் வார்ந் திழியும் புதுமலர்ப் பொதுளல் கண் ணுற்று
வரியின முரன்று பூந்துகள் குடைந்து வருமது நுகர் ந்துளங் களிக்கும்
விரைகமழ்ந் தெங்கும் வீசுமென் மலர்கள் விர விய பற்பல தருக்கள்
வரிசைய தாக நிறைந்து விண் ணோங்கி வயங்கிய வுத்தியா னத்தும்.  74 (330)

எரிகதிர்ப் பசும்பொ னிமைத்திடு நாஞ்சி லெழிலிதூங் கெயிற்சிக ரத்தும்,
வரிசையாய்ப் பொறிக ணிறைந்து சேணோங்கு மணிநெடுங் கோபுரத் தலத்தும்,
மரகதக் கால்க ணிறுவிவான் மறைக்கு மண்டபத் துச்சியி னிடத்து.
மிரவலர் தம்மை விளித்தல் போனுடங்கு மெழிற்கொடி மீதினு மிருந்து. 75 (331)

குடவளை யினங்கள் வயாவுட னீன்ற குளிர்கதிர் வீசுநித் திலத் தை,
மடவனப் பேடை தாம்பெறு மண்ட மாமென மகிழ்ந்தடை கிடக்குந்
திடமுள கமுகின் மிடறொடித் தெழுந்த தீங்குலைத் திர டனை வளைக்கு,
மடைவுகொள் தொறடாங் கதிருடைச் செந்நெலரும்புலத் தாருண வயின்று . 76 (332)

உறைகழித் தொளிரு மிரத்தினத் தூணி னொளிவிரி கற்றையங் கதிருங்,
கறையிலா வெண்சாந் தணிந்தபித் திகையின் கணம்பொதி கிரணமு மொருங்கே,
நிறைதலாற் பகலு மெல்லுமாய்ந் தறியா நீண்மணி மாளிகை யும்பர்.
சிறகினை விரித்து மகிழ்வொடு நடனஞ் செய்தணி வீதியிற் றிரிந்து. 77 (333)

கழனியுட் புகுந்தங் குறுவலிப் பகட்டேர் கடவிவன் கருநிற மள்ள,
ருழுமொலி யுரப்பால் வெரீஇ யெழுந் தும்ப ரூடுசெல் பறவை களோடு.
தழையமென் சிறையை விரித்தடித் தசைத்துத் தாவியே விசையுடன் சென்று
மழைமுகி றவழு மணிக்கொடி யமைந்த மாளிகை மீதெலா மமரும். 78 (334)

இன்னணம் பலநா ளெய்திய வுருவிற் கேற்பவெங் கெங்கணு முழன்று
முன்னவன் மொழிந்த சாபவூ ழுலப்ப முகில்வரக் களிக்குமா மஞ்ஞை
பின்னரோர் பகலிற் பவப்பிணி யொழிக்கும் பிரசமா மலர்ச்சிவ கங்கை
தன்னைநேர்ந் தானாத் தருக்குட் னாடித் தண் புன லருந்திய தன்றே 79 (335)

அருந்துமவ் வளவிற் பண்டைய வறிவங்கணுகிடத் தான்செய் முற் பிழையால்,
விரிந்திடு தோகை மஞ்ஞையாய் விமலன் விதித்த துமித் திருப்பதியிற்
பொருந்திய சிவலிங் கத்தினைப் பூசை புரிந்தி டிற் றீர்ந்திடு மென்னாக்
கரைந்தவா சகமு முணர்ந்தறி வுருவாய்க் கம்பித மற்றிருந் ததுவே. 80 (336)


தரையினிற் புனித மாகுமக் கங்கை தனையொரீஇ விமலனைக் காணக்
கரையற வெழுந்த வன்புமுன் னீர்ப்பக் கட்புன லாறுபின் றள்ளத்
துரிசறு பனைசைத் தொன்னகர் முழுதுந் துருவிமெய் வேர்த்துடல் வெதும்பி
இரைகொளா தேங்கி யிருந்துபின் சோதி யிலிங்கமங் கிருத்தல்கண் டதுவே 81 (337)

கண்டதுந் தாயைக் கண்டசேய் போலக் கரையிலா தெழுந்தபே ருவகை
மண்டிடத் தணந்த காதன்மீக் கூர மகிழ்வுடன் சிறகராற் றழுவிக்
கொண்டுடல் புளகித் துளத்தினில் யாதுங் குறித்திடா திருவருக் கரிய
வண்டாநா யகனை யன்புடன் பூசை யாற்றிடக் கரு திய தன்றே. 82 (338)

கரையிறந் தெழுந்த வன்பெனுந் திருமஞ் சனத்தினாற் கவின்பெற வாட்டிப்
புரையிலா தொளிருந் தத்துவ மலரைப் புனைந்துயி ரோடு நல் லறிவை
விரைநறுந் தூப தீபமாய்க் காட்டி விண்ணென விளங்குமான் மாவை
யுரைதருந்தூய வமுதமா யருத்தி யுளமகிழ்ந் திருந்திடு மேல்வை. 83 (339)

மாதையோர் பாக மறைத்தவ னருளால் மயிலுரு வாஞ்சட மகன்று
தீதிலா விருளிற் றெரிதரு மின்னிற் றேசுமிக் கிலங்கெழி லமைந்த
மாதுரு வடைந்து மன்னுயிர்க் குயிராய் மருவுமெய்ப் பர மனா ரிரண்டு
பாததா மரையைச் செந்துவர் வாயாற் பழிச்சுத றொடங்கின ளன்றே. 84 (340)

ஆதியே, யண்ட மனைத்துமா யிலகு மமலனே யிருவருக் கரிய
சோதியே பிரச முமிழ்தரு கொன்றைத் தொங்கலார் மௌலியே யினையி
னீதியே சனக னாதியர் தமக்கு நிருமலப் பொருடெரித் திடும
னாதியே யடியா ரிருண்மல வலியை நலிவுசெய் ஞானவிண் மணியே. 85 (341)

பலபலா கமத்தின் படியருச் சனையான் பண்ணுமா றறிந்திலேன் பொன்னம்
பலதலா *தலத்தான் முயலகன் கர்வம் பாறிட மிதித் தருள் பரனே
பல **சிலா தலமாய்ப் # பட்டமங் கையி $ னாற் படுமியக் கியர்க்கருள் புரிந்து
பலபலா தவனுக் குதிர்ந்திட வறைந்த பரம னே போற்றிபோற் றியவே. 86 (342) 


*தலத்தால் - உள்ளங்காலால். ** சிலாதலம்= பாறை, # பட்டமங்கை= ஓர் ஊர், 
$ ஆல்= ஆலமரத்தின் கீழ்

விண்ணவர் முனிவர் சித்தர்யோ கியரும் விரும்பியுன் னடியிணை நீழ
னண்ணுமா றெண்ணித் துறுகலே போல நாளுமிந் திரியங்களை யொடுக்கிப்
பண்ணருந் தவஞ்செய் துணவொழித் திருந்தும் பாகவ னிடையினி திருந்துங்
கண்ணுறக் காண்டற் கரியவெம் பரனே காட்சிதந் தருளெனத் துதித்தாள். 87 (343)

                             (வேறு)

பங்கய மெல்லடி பைந்தொடி பாரக்
கொங்கை யுருத்திரை கூறுரை கேளா
திங்களோடாத்தி செழுந்துணர் கொன்றை
கங்கை தரித்தருள் கர்த்தனு வந்து 88 (344)


மான்மழு வேந்து மலர்க்கையு மார்பில்
வான்மதி போலும் வயங்கு முனூலுந்
தான்போலி வெய்த தயாபர னான்மேல்
வான்மலை மங்கைமகிழ்ந்திட வந்தான் 89(345)

இன்னமு தங்கனி யின்சுவை யாவும்
பின்னிடு மாறுரை பேசிடு மின்னே
கொன்னவி லுன்றுதி கொண்டு களித்தே
னென்னவு னெண்ண மிசைத்திடு கென்றான் 90(346)

தீன தயாபர னாகிய தேவன்
கானமர் மாமலர் காற்றுணை தாழா
தேனமர் தாரணி தேங்குழன் மாது
மானதம் யாவும் வகுத்துரை செய்வாள்  91 (347)

வாஞ்சையி னும்பர் வழுத்திடு சீர்சால்
காஞ்சியின் மாடு கவின்பெற லாலிந்
நாஞ்சி லெயிற்பெறு நகரை விலாச
காஞ்சி யெனப்பெயர் கழறுதல் வேண்டும் 92 (348)

இத்தல மீதிலெ னோடமர் வுற்றுப்
பத்திமை யோடு பழிச்சுனர் தங்கட்
குத்தம நல்வர மொன்றருள் செய்ய
நத்திய வென்மன நல்குதி யென்றாள் 93 (349)

மையொளிர் கூந்தன் மதர்த்த செழுங்க
ணையைநீ யுன்னிய வாறருள் செய்தோம்
மெய்யழ கோடு விளங்கலி னிற்குத்
தையல் சௌந்தரி யென்பெயர் தந்தோம் 94 (350)

என் றுமு னம்மை யிகந்திடு மஞ்ஞை
யொன்றுட னோக்கி யுருத்திர னாத
*னென்றுறழ் சோதி யிலிங்கம தூடே
யொன்றி யமர்ந்தினி துற்றன னன்றே  95 (35)

*என்று= சூரியன்


கந்தர மென்குழல் கண்டெனு மின்சொற்
செந்துவர் வாயுமை தேவி களித்தே
யந்தி நிறத்தழ லாடி யிடத்தின்
மைந்துற மன்னி வதிந்தனண் மாதோ 96 (352)

                                      எழுத்து வருத்தனை

ஒரு பொருள் பயப்ப தோர்சொல் கூறி யதனி லொவ்வோ
ரெழுத்து நீக்க வெவ்வேறு பொருள் பயப்பது.

                                                       (வேறு)

தால மாபுரித் தலத்தினிற் றாபதர் வாழுஞ்
சீல மேவிய கயிலையிற் றெரிசித்த வளவி
லால மார்களக் கண்டனா மைம்முக னிடத்துக்
கோல மாதுமை கொண்டது கைவகை யுவகை. 97(353)

தாலமா புரியில் கொண்டது. கை-பக்கம், கயிலையில் கொண்டது. வகை -பிரிவு,
தெரிசித்தவளவில் கொண்டது. உவகை - சந்தோஷம்

                                                              (வேறு)

தெரிந்திடும் யரல வக்கரத் துயிர் தாஞ் சேர்ந்துமென் மொழிமுதலாக
வருந்திற மின்றி யுயிரொடு மருவி வருதல்போ லுமையுளத் தீசன்
பிரிந்திடா திருந்துந் தற்செய லொன்றும் பிறங்கிலா டாலமா நகரின்
மருந்தன மொழிசுந் தரியுமை யரன் பால் மருவியெவ் வுயிர்க்குமுன்னா னாள். 98 (354)

ஐயவெம் பரம நோக்கினாற் சிகண்டி யங்கநின் றெழுந்தவைந் தருக்கள்,
வெய்யவ னெழுங்கீழ்த் திசையினிற் கமுகு மேற்றிசைப் பாளையந் தாழை
வையகந் துதிதென் றிசையில்கச் சூரம் வடக்கி னிற் பனையிவ ணாப்பண்,
டுய்யமார் தாளிப் பனையுமாய் செழித் துத் தோன்றிமிக் குயர்ந்தன வன்றே 99 (355)

சந்தமார் களபத் தனவுமை மயிலாஞ் சடத்தினிற் றோன்றிவா னோங்கி,
வுந்துள கமுகு தெங்குவா னவர்க்கு வண்பய னுதவியே மற்றைச்
செந்தரு பிதிர்தே வதைக்குரித் தான செழும்பல னளித் திடு சிறப்பாற்.
சந்தத மிமையோர் வந்துவந் திறைஞ்சுந் தகுதிபெற் றிருந்தன மாதோ 100 (356)

அத்தகு பஞ்ச தாலமா விருக்கத் தடியினி லன்னமென் னடையுந்
தத்தைபோன் மொழியும் பொற்றொடிக் கரமுந் தரித்தசுந் தரி யுமை யோடும்
நத்தணி குழையைத் தரித்தமா யூர நாதனு மினி தமர்ந் தடியார்
பத்தியோ டேத்திப் பணிந்திட வவர்க்குப் பயனளித் திருந்தன னன்றே 101 (357)

                                        (வேறு)

எழிலா ருமைமஞ் ஞையினுருவா யிறைவன் றனைப்பூ சித்ததனா
லழலா டியைமா யூரேச னாமென் றறைவ ரப்பதியை
யிழையா ரிறைவி மயிலுடலி லெழுந்த பனைக ளுறைவதனால்
வழுவில் தால புரமெனவே வகுப்பா ருலகில் வடசொல்லால் 102 (358)

பொன்னார் திதலைப் பூண்முலையாள் புகழ்சேர் விமலைப் பூசனைசெ
யென்னா யகனை யருச்சித்தே யேத்தித் தொழுதோ ரெஞ்ஞான்றுந்
துன்னார்வலியு நமன்வலியுந் தொலைத்துத் துயர்தீர்ந் திந்நிலத்தின்
மன்னாய் வாழ்வ ரெனச்சூதன் வனவா சிகளுக் குரைத்தனனால் 103 (359)
                       

                                                   சீமாயூரச் சருக்கம் முற்றிற்று

                                                      ஆகத் திருவிருத்தம் - 359.


                                                            திருப்புலிச் சருக்கம்

ஓது மஞ்ஞையி னுண்மைச் சரிதையை
வேத மாமெனக் கேட்டு வியந்தனம்
சூத ரேபுலி யின்கதை சொல்லெனு
மாத வர்க்கு மனமகிழ்ந் தோதுவான். 1 (360)

ஆர ணப்பொரு ளாய்ந்தவ ருள்விடை
நார ணிக்கிறை வன்சாப நல்கிய
கார ணத்திற் கடும்புலி யாகியித்
தார ணிக்கண் டருக்குட னுற்றதே. 2 (361)

வெய்ய வன்கதிர் மேவுத லின்றிமுட்
பெய்ய றைச்செந் தருக்கள் பிறங்கிடுஞ்
செய்ய கானினுந் திண்வரை மீதினும்
வெய்ய வூகம் விருப்பொடு சென்றதால்  3 (362)

*முதைய லும் # முளி முட்புறக் கானினுந்
ததைசெ ழுங்கொடி தாவுறு **மத்தமும்
புதரி யைந்த பெரும்புற வத்தினு
மதிக வேகமோ டெய்தி யடர்ந்ததால் 4 (363)

* முதையல் - முதுகாடு, #முளி - உலர்ந்த செடி. ** அத்தம் - வழி


தூங்கு கையுட் டுளைநெடு நாசிசேர்
வீங்கு மால்கரி யாவையும் வீழ்த்திபுற்
பாங்க ரோங்குமுட் பன்றியு மெண்கையு
நீங்க வாருயிர் நேர்ந்துகொன் றிட்டதால், 5 (364)


நிறை செழுந்தரு நீள்வனத் துற்றுறை
கறவை மேதி கடமை நரியெலா
மறலி யைக் கண்ட மன்னுயிர் போன்மெனக்
கறைசெ யும்புலி யைக்கண் டிரிந்ததே 6 (365)

ஆற லைக்கு மசடரைக் கண்டஞ்சி
வேறி டத்தில் விரைந்துறை மாக்கள் போற்
றூற டர்ந்த தொறுகன் முழைதொறும்
பாறி மாக்கள் பதுங்கி யமர்ந்ததே. 7 (366)

கரந்த கள்வரைக் காவலர் பற்றல் போல்
* விருந்த மோட வியாளந் துடர்ந்து போ
யரந்தை யெய்த வழித்தவ ணற்றவம்
புரிந்த வர்க்குறு புன்க ணியற்றியே,  8 (367)

*விருந்தம் - விலங்கின கூட்டம்


பருப்ப தங்க டொறுஞ் சென்று பாய்ந்துவா
னுருப்பொ லிந்தங் குறுமேட ராசிகண்
டிருப்ப திங்கய மேயுண வாமெனா
விருப்ப மோடதன் மீதுறத் தாவுமால் 9 (368)

                                      மாத்திரை வருத்தனை

ஒருபொருள் பயக்கும் ஒரு சொல் ஒரு மாத்திரை பெற்று
வேறு சொல்லாய் பொருள் பயந்து நிற்பது.


அளபொன் றான்மிகு பாம்பதி ரார்ப்பினால்
அளபொன் றான்மிகு சாதி யயர்ந்தன
அளபொன் றான்மிகு முன்னெழுத் தஞ்சின
அளபொன் றான்மிகு பானு வதிர்ந்தவே. 10 (369)

(இ-ள்.) அளபு ஒன்றால் மிகுபாம்பு= ஒரு மாத்திரை யேறிய பாம்பு (பாம்பு -
உகம் ) (அளபொன் றால்மிகு உகம் என்றமையால் ) ஊகம் - புலியென்னும் ஓர்
மிருகம், அதிர் ஆர்ப்பீனால் - ஒலிக்கும் முழக்கத்தால், அளபு ஒன்றால் மிகு சாதி -
ஒரு மாத்திரையேறிசாதி, (சாதி - நகம், ) (அளபு ஒன்றால் மிகு சாதியென்றமையால்)
நாகம் - மலை, அயர்ந்தன - சோர்வுற்றன. அளபு ஒன்றால் மிகு முன்னெழுத்து - ஒரு
மாத்திரை யேறிய முன்னெழுத்து (முன்னெழுத்து அ) , ஆ=பசு, பசு பயந்தன, 
(அளபு ஒன்றால்மிகுபானு=ஒரு மாத்திரையேறிய பானு. (பானு=தரணி), 
அளபுஒன்றால் மிகுதரணியென்றமையால்) தாரணி- பூமி, அதிர்ந்த கம்பித்தன.
 புலியின் முழக்கத்தால் மலை அயர்ந்தன, பசு பயந்தன, பூமி அதிர்ந்தனவென்னும் கருத்து.
 விருத்தம் -விலங்கின உட்டம்

பின்ற லின்றிப் பெரும்புவி மீதெலாஞ்
சென்று வெந்திறற் சீற்ற மிகும்புலி
கன்று சிந்தையோ *டோதிமங் கானொரீஇ
மன்ற லோங்கு மருத மடைந்ததால், 11 (370)

*ஓதிமம்=மலை

மாலை யாய்வரி வண்டுளர் சோலைசூழ்
பாலி நேய நதிக்கரைப் பாங்கரிற்
காலை யாய கரும முடித்துளோ
ரோல மேயிட் டுலையவந் துற்றதே.12 (371)

சேணிடைக் கண்ட தேயத் தவரெலாம்
வாணெ டுங்கண் மகளிரோ டேகியே
நீணெ டும்புற வத்து நெருங்கிட
மாணெ டும்புல் மலைத்ததென் றோதினான். 13 (372)

ஈது கேட்ட விருடியர் யாவருஞ்
சூத மாமுனித் துய்யசெந் தாமரைப்
பாத மேத்திப் பரம னருள் விடை
காதி நோய்செயக் கற்றதென் னோதென்றார். 14 (373)

                                          (வேறு)

வெம்மையை யொழித்த வேத வித்தகர் வினவு மாற்ற
மும்மையு முணர்ந்த சூத முனிவனு முணர்ந்தா னந்த
விம்மித முடையோ னாகி விருப்பொடு கருணை செய்தே
செம்மைசேர் நெறியி னின்றீர் தெரிவிப்பன் கேண்மி னென்றான்.15 (374)

நிலத்தியல் பாகத் தோன்று நீரென மாந்தர் தங்கள்
குலத்தியல் பற்றே யாகுங் குணமெனக் குணத்தின் மிக்க
நலத்தவொள் ளிடப தேவும் நண்ணிய வுருவிற் கேற்பக்
கொலைத்தொழிற் பயின்றான் யார்க்குங் குலத்தொழிற் கிழுக்கு முண்டோ 16 (375) 

என்னமெய்த் தவத்தின் மிக்கோ னியம்பலு முனிவர் சீர்சால் 
பொன்னடிக் கமலம் போற்றிப் புதையிருட் கதிரைக் கண்ட 
தென்னவெம் முளத்திற் சங்கை யிரிந்தன வெறுழ்மா வேங்கை
பின்னரெங் குற்ற செய்தி பேசெனப் பேச லுற்றான். 17 (376)


கான்மலை சோலை வாவிக் கடற்கரை திரிந்து பன்னா
ணான்கொரு கையோன் றந்தை நல்குமூ ழுலப்ப வந்து
தேன்விரி கொன்றை வேய்ந்த திகம்பர னிடமாக் கொண்ட
கான்பொழிற் செறிவி லாச காஞ்சியி னடைந்த தன்றே 18 (377)

மல்லலம் பரிச வேதி மருவிய விரும்பும் பொன்னா
மொல்லையி லென்ன வான்றோ ருரைத்திடு மொழிக்கொப் பாயவ்
வெல்லைகால் வைத்த ஞான்றே யெறுழ்வலிக் கொடுவரிக்குத்
தொல்லையி லிருந்த வெந்தீத் துர்க்குண மொழிந்த மாதோ 19 (378)

* கழிந்ததல் லோதி சாந்தங் கருணையா ருயிர்மே லன்பு
வழிந்தொழு குதலை மான மலர்க்கணா னந்த வாரி
பொழிந்திடப் புளக மெய்திப் போந்தவிக் குணத்தா லிந்தச்
செழுந்திரு நகரி லென்னோ சிறப்பெனத் தேடு  மேலவை. 20 (379)

* கழிந்தநல்லோதி - மிகுந்த நல்லறிவு


                                                  (வேறு)

வான ரம்பைய வான்சிலை யிலிங்கமா வமைத்து
வான ரம்பைய வருங்கனி வைத்துண வாக்கி
வான ரம்பைய ராடல்போன் மகிழ்ந்தெதிராட
வான ரம்பைய சேடனீண் மணிமுடி துளக்கும். 21 (380)

 (இ-ள்) வானரம்= குரங்குகள், பைய= மெல்ல, வான்= மேலாகிய, சிலை= கூழாங்கற்களை,
இலிங்கமாவமைத்து - கடவுளாக வைத்து, வான் ஆகாயமளாவிய, அரம்பைய -
வாழையினது, அருங்கனி - நல்ல பழங்களை, வைத்து உணவாக்கி= திருமுன்வைத்து
நிவேதித்து, வான் அரம்பையர்- தேவரம்பையர்கள், ஆடல்போல் - நடிப்பது போல்,
மகிழ்ந்து - களிகூர்ந்து, எதிர்= எதிரில், ஆட-கூத்தாட, வான் - மேலாகிய. அரம் -
பாதலத்திலுள்ள,  பைய= படத்தையுடைய, சேடன்= அனந்தனது. மணிமுடி= அழகிய
கிரீடத்தை, துளக்கும் - அசைக்கும்.

தேன்த ருக்களை முசுக்கலை பிணாவுடன் சேர்ந்து
தேன்த ருக்களை மலர்பறீஇச் சிலையினைச் சாத்துந்
தேன்த ருக்களை வண்டுகள் தோத்திரஞ் செய்து
தேன்த ருக்களைத் திகழிறால் சேர்ந்தினி திருக்கும். 22 (381)

(இ-ள்) தேன்= வாசனை பொருந்திய, தருக்களை - விருஷங்களினிடத்து, முசுக்கலை -
ஆண்குரங்கு. பிணாவுடன் சேர்ந்து= பெண் குரங்குடனணைந்து, தேன்= தேனை, தரு=
கொடுக்கும்படியான, களை - அழகிய, மலர்பறீஇ= பூக்களைக் கொய்து,
சிலையினைச்சாத்தும்= கல்லாலமைத்த கடவுளுக்குத்தரிக்கும். தேன்= பெண்
வண்டுகளோடு, தருக்கு= சந்தோடமாய், அளை= கலந்து, வண்டுகள் - பிரமரங்கள்,
தோத்திரம் செய்து= துதிபாடி, தேன்= அது,  தென் - கருமையானது. தருக்கு= மிகுந்த,
அளை= குகையில், திகழ் - பொருந்திய, இறால் - தேன் கூண்டில் சேர்ந்து= அடைந்து
இனிதிருக்கும் - சுகமாய் வதியும்

கரைய லைத்திடு மலையுடைப் பாலியின் கரையி 
னொருது றைக்கரி யாளிதன் புழைக்கையி னுறிஞ்சிப்
பருகு மொன்றொ டொன் றூட்டியே பரும்புலி முலைப்பா
லருகி னுற்றபுல் வாய்க்கருத் திடும்பசி யகல. 23 (382)

பச்சை யோந்திவெம் பசியினா லலைந்திடல் பாரா
விச்சை யோடிரை தேர்ந்ததற் கீந்திடு மஞ்ஞைக்
கச்ச மின்றிப்பை யானிழல் செய்திடு மரவை
மெச்ச கீரியும் பாதுகாத் தங்ஙனே மேவும் 24 (383)

அஞ்சு கத்தின்பார்ப் பாதவன் கிரணவெள் ளிடையி
னெஞ்சு யங்கிமெய் நெளிந்துற வதற்கிரா சாளி
வஞ்ச மின்றித்தன் சிறகினா னிழல்செய நந்தின்
* மஞ்ச நீர்முகந் துகுத்திடும் வாயினாற் பூஞை. 25 (384)

*மஞ்சு=குளிர்

இன்ன வாறுபுள் விலங்கின திருஞ்செய னோக்கி
யுன்ன தற்கரி தாமிறும் பூதுள மெய்திப்
பொன்ன வாம்வரிப் புலிமகிழ் வோடிவ ணின்னு
மென்ன விம்மித முண்டுகொல் காண்குவ மென்னா 26 (385)

செல்லு போழ்தினிற் செழித்தபுற் றாளியி னடியிற்
சொல்லு மெய்யறி வானந்த வுருவமாய்த் துரிய
வெல்லை வாழ்முத லாயடி யீறிலா விறையாய்ப்
புல்லு சோதிலிங் கந்தனைக் கண்டது புலியும். 27 (386)

கண்டு வீழ்ந்தெழுந் தானந்தக் கடலினுட் டிளைத்து
மண்டு காதலாற் கண்கணீர் மல்கிட வாடி
கொண்ட மெய்ப்புள கத்துட னுள்ளமுங் குளிர்ந்தே
யண்டர் நாயகற் கருச்சனை யாற்றலுற் றதுவால். 28 (387)

ஒலிமி கும்பல பறையெனப் பறவைக ளொலியும்
பொலியு நீலநீ ரோருக மவைகளிற் பொருந்தி
மலியும் வண்டொலி யுந்திகழ் தீர்த்தத்தின் மருவிப்
புலியு மூழ்கிநீர் வாயினின் முகந்தவண் போந்தே. 29 (388)

                                          (வேறு)

அத்திருமஞ் சனந்தன்னா லையனுடல் குளிரவபி டேக மாற்றி
மொய்த்தளிகள் கிண்டியுணா முனமேத முளவகற்றி முருகார் வாச
மெத்திசையுங் கமழ்தருநன் மலரெடுத்துக் கொடுவந்தவ் விறைக்குச் சாத்திப்
பத்தியு டனறுங்கனிகள் பறித்தலம்பித் தலைவன் முனம் படைத்த பின்னர். 30 (389)


அரும்பளிகை தாக்கியபி னப்பெயர்போ யலரெனும்பே ரானவா போற்
சுரும்பிமிருங் கொன்றையணி சூடுமர னருணோக்காற் றொடர்ந்த வெய்ய
விரும்புலியி னுருவகன்று பண்டையுரு வெய் திடலு மிணையி லார்வப்
பெரும்புணரி யிடைமூழ்கிப் பேச்சிறந்து நின்றதெம்மாற் பேசற் பாற்றோ, 31 (390)

நந்தியின்மேன் முனம்வைத்த நண்பானும் பூசைபுரி நலத்தி னானுந்
தந்துளவக் கொடுஞ்சாபந் தனையகற்றித் தடுத்தாளு நினைவா னீலக்
கந்தரமுங் கணபணகங் கணமழுமான் கரதலமுங் கங்கை கொன்றைக்
கொந்தமருந் திருமுடியு நாற்புயமு முப்புரிநூற் கொண்ட மார்பும். 32 (391)

அறுகுமதி தும்பையெருக் கணிசடையும் பவந்தெறுசீ ரக்க மாலை
யுறுபுயமுஞ் சூலடம ருகமபய வர தமிவை யுற்ற கையும்
*முறுகுகணு மதளுடையுஞ் சிரிசிரமு முனிவர்குழா முவந்து சாத்து
நறுமலரேய் சேவடியு முகத்தில் வழிந் தொழுகுமிள நகையுந் தோன்ற 33 (392)

*முறுகுகண்= விரூபாஷம்.

குரைகடல்சூ ழுலகர்புகழ் பனைசையில்வாழ் சிவலிங்கக் குறியிற் றோன்றி
விரிதருமா வொளிவிருக்கத் தரியபசுங் கொடிசூழும் விதத்தை மான
வெரிமணிப்பொ னணிகுலவுஞ் சவுந்தரநா யகியிடப்பாலினிது மேவ
வரியயனுங் காணாதா னிடபநந்தி காணவுவந் தடைந்தா னன்றே. 34 (393)

எனைத்துயிர்க்கு முயிராகு மீசனைமுன் கண்டளவி லினிய பாலிற்
றொனித்துமடல் விரிபசிய கதலியொட்டு மாவேரிற்றோன்று பாக
லினித்தகனி கலந்தருந்து வான்முனம்பின் னெய்தரிய வீர்ங்கோற்றேனும்
*பனித்ததென வுவகையின்மேற் பேருவகை பெருகவெதிர் பழிச்ச லானான் 35 (394)

* பனித்தல்=  சொரிதல் 

                                                              (வேறு)

சங்கரா போற்றி ஞாலந் தந்தவா போற்றி மாது
* பங்கரா போற்றி ஞானப் பண்ணவா போற்றி யோரீ
ரைங்கரா போற்றி கங்கை யணிந்தவா போற்றி வேதன்
** கங்கரா போற்றி நீல கண்டனே போற்றி போற்றி 36 (395)

*பங்கு அரா= பாதியிலுடைய அரசனே , **கம்கரா - சிரக்கையனே

முக்கணா போற்றி வேயின் முளைத்தவா போற்றி மன்றுட்
டக்கணா தகவென்றாடுந் தாணுவே போற்றி *யங்கஞ்
சக்கணா னயனுங் காணாத் தாண்முடி யுடையாய் போற்றி
யிக்கணா யடியேன் முன்வந் திடர்தவிர்த் தாண்டாய் போற்றி 37  (396)

*அம்கஞ்சக்கணான் - விட்டுணு 

மூலமா முதலே போற்றி முழுமணிச் சுடரே போற்றி
கோலமா மருப்ப ணிந்த கொற்றவா போற்றி யந்நா
ளாலமா ரமுதா யுண்டன் றளித்தரு ளரனே போற்றி
தாலமா புரியி லுற்ற தாணுவே போற்றி போற்றி 38 (397)

என்னநின் றேத்து நந்தி யிறைவனை யினிது நோக்கி
உன்னரு மனத்தி னுள்ள பொருடனை யுரைத்தி யென்ன
முன்னவன் மொழித லோடு முகமலர்ந் துருகி யன்பா
யென்னையாண் டடிமை கொள்ளு மிறைவனுக் கிதனைச்சொல்வான். 39 (398)

அரியய னறிய வொண்ணா வற்புத வடிவந் தன்னைத்
தெரிதர்த் தமியேன் முன்னஞ் செய்தவ மேதுங் காணேன்
கரிசுறு மெனது சாபங் கழிந்தன குறையொன் றில்லை
வரதநின் னடி நீங் காவோர் வரமெனக் கருளல் வேண்டும். 40 (399)

இனையன நந்தி யெம்மா னியம்பலு மிமய மாது
தனையிடப் பாகம் வைத்த சங்கரன் மகிழ்ந்து நீயு
மெனையகலாது தாங்கி யிருமென விசைத்துப் பின்னும்
நனையரு *மதலை வேய்ந்த நம்பன்மற் றிதனைக் கூறும் 41 (400)

*மதலை=கொன்றை

அமையுமித் தலத்தைச் சார்ந்தோ ரடைதலாற் சித்தி யின்ப
மிமையவ ரிதனை **யீச னிருக்கையென் றிசைப்ப ரன்பா
லுமையெனை வழுத்த மாயூ ரேசனென் றுரைப்ப ருன்னா
லெமையுல கவர்தி ருப்பு லீசனென் றறைவர் மாதோ 42 (401) 

**ஈசனிருக்கை=சிவதலம்

பனியமு தொழுகுந் திங்கட் பகிர்மருப் புடைய நந்திக்
கினையன புகன்று நின்ற விமையவர் முனிவர் காண
நனையவிழ் கடுக்கை வேணி நம்பனவ் விலிங்கந் தன்னிற்
பினையுருக் கரந்தா னந்திப் பெரிதுவந் திருந்தான் மன்னோ .43 (402)

இவ்வகை யீச னந்திக் கினியநல் வரம ளித்த
யெவ்வமி லிப்பு ராண மெழுதினோர் படித்தோர் காதிற்
செவ்வனே கேட்டு ணர்ந்தோர் திருவொடிம் மையிலின் பூர்ந்தே
யவ்வயி னரிய போக மடைகுத றிண்ண மாமால். 44 (403)


                                            திருப்புலிச் சருக்க முற்றிற்று.


                                             ஆகத்திருவிருத்தம் -403.


                                          திருக்காளத்திச் சருக்கம்

அளவில் கருணைச் குதனிவை யருள நைமி சாரணியர்
புளக முறுமே னியராகி மீட்டுந் துதித்துப் புலிக்க தையை
யெளிதி னுணர்ந்தோங் காளத்தி யீசன் சரிதங் கேட்க வுளங்
களிமிக் குடையோ மெனவினவக் கனிவோ டதனைக் கழறுவனால். 1 (404)

ஆல மமுதாக் கொண்டமரர்க் கருள்கூர் முதல்வன் செஞ்சடையிற்
பாலினரிய வெண்ணொளியைப் பரப்புங் கிரண மதிமரபோன்
சால வரசு புரிநகருட் டகைசேர் நகர மொன்றுளதா
லேல வதைரா மேச்சுரமென் றிசைப்ப ரெனலு மறுத்துரைப்பார். 2 (405)

அந்த நகரிற் கலர்பதுமத் தமருஞ் சதுமா முகக்கடவுள்
தந்தை பெயரு மிளந்திங்கட் சடையிற் புனைந்தோன் றன்பெயரும்
வந்து சேரக்கரும மென்கொல் வகுத்தி யதனை யென்றடியிற்
கந்த மலர் தூய்ப் பழிச்சு தலுங் கரும மொழிந்தோன் கனிந்துரைப்பான் 3 (406)

அணியா ரயோத்தி புரிவேந்த னரசர் பணியுந் தயரதனாந்
திணியார் திண்டோ ளவன் புதல்வன் சிறந்த புகழார் சீராமன்
மணியார் கொங்கைச் சிற்றவை சொன் மதித்துத் தனது மனைவியொடும்
பணியார் பணியுமிள வலொடும் படர்ந்தே கானிற் பயினாளில் 4 (407)

தலையீ ரைந்து நாலைந்து தடந்தோண் மலையு முளவரக்கன்
றொலையா வலிரா வணன்சோரத் தொழிலாற் சீதை தனைக்கொடுபோ
யலையா ரிலங்கை சேருதலு மரிவை தனைத்தே டினராகி
யுலையா மனத்தோ டுழன்றுமன மொருங்கு தேடிக் கண்டிலராய் 5 (408)

அடலார் சுக்கி ரீவனைநண் பாக்கி யவன்முன் னவன்வாலி,
யுடனே போர்செய் வலியிலனா யொளித்தங் கிருந்தே யொருகணை போய்ப்,
படவே பெய்து வாலி தனைப் படுத்துக் கவியின் வெள்ளத்தாற்
கடலை யடைத்துப் போயிலங்கைக் காவலனாரின் னுயிர்போக்கி 6 (409)

சீதை தனைக் கொண் டவண் மீண்டு திருவள ரயோத்திக் கேகின்ற
போதில் காந்தி விமானமப்பாற் போகாதிருக்க முறுக்கவிழத்
தாது குடைந்து பாண்முரன்று தங்கியறுகாற் றேனுகருஞ்
சீத மலர்வா சனைகமழுந் தெரியல் வேய்ந்த சீராமன்  7 (410)


உள்ளங் கவன்று குலக்* கோமா னுபய வடியை நினைந்தேத்த
விள்ளற் கரிய சடைமுடியும் விளங்கும் புரிநூற் கமண்டலமுங்
கொள்ளும் வசிட்ட மாமுனிவன் **கொள்ளார் முடிக ளுழச்சிவந்த
கள்ளீர்ங் கமல வடியுடைய , #கனலிக் குரிசின் முனமடைந்தான் 8 (411)

* கோமான் - ஆசாரியன், **கொள்ளார் - பகைவர் , # கனலி - சூரியன்

அப்போ தரக்க ராருயிரை யகற்றுங் கொடிய கோதண்டங்
கைப்போ துடையான் றவமுனிவன் காலில் விழுந்திக் காரணமென்
னிப்போ தடியே னிடரகல விதற்கோர் சூட்சி யியம்புகென
முப்போ துணருந் திறமுடைய முனிவன் கனிவோ டிவைமொழிவான். 9 (412)

பணியார் பணியுந் திறலுடையோய் பாதி மதிச்செஞ் சடைப்பரம
னணியா ரடியை யுளத்தமைத்த வடற் *கம் பத்தோன் சிரங்கரத்துக்
**குணியா லறுத்துக் கொன்றனையக் கொடிய பழிவந் தடுத்தவது
தணியா விலிங்கப் பதிட்டையலாற் றக்கோ யமைத்துத் தொழு கென்றான். 10 (413)

 * கம்பத்தோன்=இராவணன். ** குணில் - வில்,

தெருளார் முனிவ னுரைக்கவுளந் தெளிந்து விமானத் துடனிழிந்து
மருவார் மாலைத் துயல் தடந்தோண் மன்னன் சிவலிங் கக்குறிவைத்
தரியார்ந் திசைபா டலர்கொடுவந் தருச்சித் தேத்திக் குறைதவிர்ந்தா
னிருமா தவத்தீ ரத்தகையா லிராமேச்சுரமென் றியம்புவரால் 11 (414)

என்று கருணைச் சூதமுனி யிசைப்ப நைமி சாரணியந்
துன்று முனிவ ரடிபணிந்து தொலைவி னகரப் பெயருணர்ந்தே
மின்று முனம் நீர் மொழிந்துள நல் லிசைகூர் சரிதங் கேட்கவுளத்
தொன்று நசையே மென்னவதை யுயர்மா தவனு முரைப்பானால். 12 (415)

                                                    (வேறு)

அத்திரு நகரின் வாழ்வோ னருமறைக் குலத்து வந்த
வுத்தம னாதி சைவ னொருமறை நான்கா றங்கம்
புத்தியி லுணர்ந்தோ னீசன் பொற்கழ லருச்சித் தேத்தும்
வித்தகன் வெறுக்கை யாவும் வேட்டவர்க் குதவுந் தூயோன். 13 (416)

நிதி நிகே தனங்க ளெல்லா நிறைவுறக் கொண்டோன் சால
மதியினி லாதி சேட மகிபனை நிகர்த்தோன் வேத
விதிவிலக் கறிந்தோன் வாய்மை விரதமாக் கொண்டோன் ஞாலந்
துதிசெயு மவன்சொரூபா கரனெனச் சொல்லும் பேரான். 14 (417)

அன்னவன் மனைவி கல்வி யறிவுநல் லொழுக்கஞ் சீலந்
துன்னிய கற்பு சாந்தந் தோன்றுதற் கிடமாய்ப் பெண்க
டன்னருங் கலமா யுள்ளா டயைமிகு சுசீலை யென்ன
மன்னிய பெயரா ளின்னோர் மனையற நடத்து நாளில், 15 (418)

நன்னெறி காட்ட மைந்த னிலையென நைந்து துன்பந்
துன்னிய வுளத்த ராகித் தொலைவில் செல் வங்கடானேன்
பொன்னணி யில்லந் தானேன் பொருள்களே னென்ன நெஞ்சின்
மன்னிய வெறுப்புற் றீசன் மலரடி தொழுதி ருந்தார். 16 (419)

நலிவுகொண் டிருக்கு மந்த ணாளன் முன் னனிவ ருத்துங்
கலியினா லலமந் துள்ளங் கலங்கிய வொருவன் றன்னைப்
பொலனிறை தசும்பு தேடிப் போயடைந் தென்ன மாசி
னலனிறை யகண்டா னந்த நற்றவ முனிவந் துற்றான். 17 (420)

வந்தவம் முனிவர் கோமான் மனங்கனி வரநின் றேத்தி
யுந்தொளி பரப்புஞ் சீர்சா லுயர்தவி சிடையி ருத்தி
யெந்தமா தவமோ நாயே னில்லிடை யடைந்த தென்னக்
கந்தமென் மலர்க டூவிக் கைகுவித் தினைய சொல்வான். 18 (421)

ஐயநின் னடிய னேனுக் கரியதொன் றிலையே பூமேற்
செய்யவ ளருளும் பெற்றேன் செகத்தவர் புகழப் பெற்றேன்
றுய்யநல் வடமீ னென்னத் தோகையைத் தாரம் பெற்றேன்
வையகத் தெனக்கொப் பில்லை யெனினுமோர் மறுக்க முண்டால். 19 (422)

இகபர மிரண்டுக் கேற்ற விருநிதி யனைய நல்ல
மகவிலை யென்னு முள்ள மறுக்கமே மறுக்க மான
நிகரிலா கமபு ராண நிலையறி நிமலா வென்ற
னகமுறுந் துயரை மாற்றி யருளெனத் தொழுது சொன்னான். 20 (423)

அந்தண னுரைத்த வாய்மை யருந்தவ முனிவன் கேட்டே
யிந்தவா றிசைப்பன் மெய்ம்மை யிருபிறப் பாள கேண்மோ
மைந்தரு முண்டு நல்ல வாழ்வுமென் மேலு முண்டு
சிந்தையின் மகிழ்வு முண்டு தீவினை தீர்த லுண்டு. 21 (424)

பார்புகழ் குடத்திற் செய்ய பாற்கர னடைந்த திங்கள்
சீர்பெறு மமர பக்கத் திதிபதி னான்கில் வானோ
ரேர்பெறத் திருக்கா ளத்தி யீசனை யன்றி ராவி
லார்கலி யுலகி லேத்தி யரும்பத மடைந்து ளாரால், 22 (425)

அத்தினந் திருக்கா ளத்தி யப்பனுக் குரிய நாளாம்
புத்தியி லுயர்ந்த வேத புங்கவ திருக்கா ளத்தி
யத்தல மனைந்து மிக்க வகத்திய னாற்று நல்ல
முத்தியை யளித்தி டும்பொன் முகரிநன் னீரிற் றோய்ந்து 23 (426)


சொன்னவித் திங்க டம்மிற் றோன்றுநல் லரனி ராவி
லென்னையா ளுடைய காளத் தீசனைப் பூசை செய்து
கன்னல்பால் கதலி மாத்தேங் கனிபலா * வபூபம் பாய
சன்னமும் படைத்துத் தீபாராதனை புரித னன்றே 24 (427)

*அபூபம்= அதிரசம்

எனமுனி யுரைத்துப் பின்னு மியம்புவா னாதி நாளி
லனமிசை யூரு வானு மத்தியு மரவு நல்ல
கனிமொழிக் கருங்க ணாருங் கல்விசேர் கீரன் றானுந்
தினமரற் குரிய பூசை செய்சிவ கோசன் றானும். 25 (428)

அளவின்மா தவவ சிட்ட னகத்திய னாதி யானோர்
வளமுறப் பூசை செய்து மைந்தரும் வாழ்வும் பெற்றே
யௗவறு வலிமை யுற்றிவ் வவனியிற் போகந் துய்த்துத்
தளர்வில ராகி வெள்ளிச் சயிலத்தை யினிது சார்ந்தார். 26 (429)

ஆதலால் யான் சொல் வண்ண மாகநீ ரன்பா யெங்க
ணாதனாங் காளத் தீச நம்பனைத் தொழுவீ ராகிற்
காதலார் மகவைப் பெற்றுக் கைப் பொருள் பெற்று வாழ்ந்து
பூதநா யகன்வாழ் வெள்ளிப் பொருப்பையும் பெறுவீ ரென்றான் 27 (430)

இப்பரி சகண்டா னந்த விருந்தவ னுரைக்க வந்த
வொப்புய ரகன்ற வேத வுத்தம னுவகை மீக்கூர்ந்
தப்பரி சியற்ற னல்ல தாமென லொருமித் தந்த
செப்பரு மாக மாத சிவனிராத் தினமு ணர்ந்தே 28 (431)

இருந்தனன் முனிசொற் றிங்க ளிசைந்தபி னிறைவன் கங்குல்
வருந்தின முணர்ந்தே யவ்வவ் வருடமுங் காளத் தீசப்
பெருந்தகை முன்ன ரேதன் பிரியையோ டினிதாய்ச் சென்றங்
கருந்திறன் மகவை வேண்டி யருச்சனை யியற்றி னானால், 29 (432)

இப்படிச் சிலவாண் டாங்க ணிருவரும் போய்சே விக்க
வொப்பிறென் கயிலை யாளி யோங்குயர் கருணை யாலே
*வப்பிரக் கூந்த னீல மணைந்தன முலைமு கட்டிற்
** சுப்பிர மலர்க்க ணின் றுந் தொடர்ந்தன வுடல மெங்கும். 30 (433)

*அப்பிரம் - மேகம், ** சுப்பிரம்= வெளுப்பு

உண்டிலை யெனுநு சுப்பங் குறுநர்கண் ணோக்கிற் பட்ட
வெண்டரு புளிங்கா யுண்ண விச்சைகொண் டனநா மெய்யிற்
கண்டன பசுந ரம்பு கமலைசேர் சாந்தா னில்லி
லுண்டவர் வயிறு போன்மே லுயர்ந்தன வுதர மாதோ, 31 (434)


மாந்தளி ரனைய மேனி மதர்விழிச் சுசீலைக் கொன்பா
னாந்தகை மதிபோய் பத்தா யமர்மதி மாசி யாக
வாய்ந்திலன் விரத பங்க மாகுதல் வழக்கன் றென்னாக்
காந்தையோ டந்த ணாளன் காளத்தி வழிக்கொண் டானால் 32 (435)

                                                    (வேறு)

குறுகுகுறு கெனவிண்டு வினைப்பிடித்துக் குறுமுனிவன் குழைத்த வூரு
மறுகொ டெருக்கணி பரம *னுதுமபரவச் சபையதனி லாடு மூருஞ்
சிறுவியுறு கருநோயைத் தீர்க்க மருத் துவதியெனச் சென்றவூரு,
நிறைசெருத்த லான்றொழவுந் திருமூலன் கதிபெறவு நேர்ந்த வூரும் 33 (436)

*உதும்பரம் - செம்பு

1. திருக்குற்றாலம் 2 திருநெல்வேலி, 3. திரிசிரபுரம். 4. திரு ஆவடுதுறை

ஓலமிடு மிளவலுக்கா வியமனைவீழ்த் திடுபதியு முயர்சீ தேவி
நீலநிறக் கணவனுயிர் பெறப்பூசை புரிபதியு நிகமநான்குஞ்
சாலவர னடியேற்றிக் கற்கதவ மிடுபதியுந் தடத்தின் பாங்கர்
பாலகனுக் கன்றுமையாள் பாலளித்துப் பசிதீர்த்த பதியு மப்பால், 34 (437)

 1 கடவூர் 2. ஆரூர். 3. மறைக்காடு, 4 சீர்காழி

உணர்வுற்றங் கடைந்திறந்தோர் செவியினிடை மனுவையுப தேசஞ் செய்யு
மணிமுத்த நதித்தலமும் வரியரவு தொழுந்தலமு மறைக ணான்கு
மிணையற்ற பரமனடி யிணையேத்து தலமுமுமை யெண்ணாள் கென்ன
வணைவுற்ற வறம்வளர்த்தே யரியதவம் பயில்தலமு மடைந்து பின்னர் 35 (438)

1.விருத்தகிரி, 2 சிதம்பரம், 3.ஓத்தூர் 4 காஞ்சி

நதிமதியைத் தரித்த *வரா கீசனுறை நகரடைந்தன் னாதன் றன்னை 
விதிமுறையிற் றொழுதந்த வியன்பதியி லுறைவோரை விடையோன் வாழும்
பதியெவணுள் ளதுவெனலும் பார்வதியு மயிலுருவப் படிவம் நீங்கிக்
கதிபெறுமாத் தலமொருகாற் காவ தத்தி லுளததன் பேர்கழறக் கேண்மோ 36 (439)

வராகீசனுறையும் நகர் - தாமல்

திருமருவு பனைசைநக ரெனவுரைப்பர் வழிதவறித் தியங்கி யேனு
மொருதினமங் குறைந்தாலுஞ் சித்தியெலா மடைவரென வுரைப்ப நூல்க
ளருமறையோ யத்தலத்தை யடைதனல மெனமொழிய வந்த ணாளன்
புரிகுழல்மா தோடுமன மொருமித்துத் திருத்தாலப் புரியைச் சார்ந்தான். 37 (440)

கனிவொடுமை பூசித்த கண்ணுதலை யருமறையோன் கண்டு வாசப்
பனிமலர் தூய்த் தொழுதந்தப் பரம * நிகே தனத்துக்குத் தரத்தி லம் பைக்
குனிசிலையிற் றொடுத்துவிடும் விசைதூரங் குறுகசுடர்க் கிரண வெய்யோன்
கனிமொழியா டனது வயாக் காணமன மிலன் போன்மேற்கடலு ளாழ்ந்தான். 38 (441)

 * நிகேதனம் -வீடு  இமம் = அற்பம்


நமரிலளாய்த் தனியிருக்கு நாயகியா டனக்கு தவி நாம்செய் வோ மென்
றிமகிரணப் பிறைநுதலா வெழிலுடுக்க ளாரமதா விரத்த வான
மிமவரையிற் பட்டுடையா யிசைவானம் பாடிமே கலையா யேங்க
வமைகருநோய் தீர்மருத்து வதியென்னக் கங்குலும் வந்தடைந்ததன்றே. 39 (442)

திகந்தமுழு தும்பரவுஞ் சீர்த்தியுடைத் தென்கயிலைத் தலத்தின் மேவுஞ்
சுகந்தநறு மணங்கமழுஞ் சுரிகருங்கார்க் குழலுமையின் றுணையேயல்லாற்
சகந்தனில்வாழ் பவர்கடுணை யின்றிவயா வேதனையாற் றளர்ந்து வெள்ளி
நகந்தனில்வாழ் பவனருளா லாண்மக வைப் பெற்றரிய நலனே பெற்றாள் 40 (443)

அளிமுரலுங் கோகனக வரும்பவிழப் புள்ளினங்க ளார்ப்பு மல்கத்
துளிநறவம் பிலிற்றுமரைத் தொடைபுனையு மரு மறையோன்றுயர நீங்கக்
களிமதமா வுரிபுனையெங் காளத்தி நாதனுருக் கடிந்து செய்யு
மளிகிளரா டலைக்காண வாதவன்கீழ்த் திசையினை வந்தடைந்தா னன்றே 41 (444)

அருமறையின் பொருளுணரு மறுதொழிலோ னிகபரத்தை யளிக்க வல்ல
வொருமகவைப் பயந்துமன முவகையின்றித் தெளி நறவமொழுக்குங் கொன்றைப்
புரிசடையெங் காளத்திப் புண்ணியனைச் சிவநிசியிற் பூசை செய்யும்
விரதமினே கெடவந்த தென் றுமன நைந்துரு மெய்சோர் வேலை 42 (445)

* குயில்முகமென் சிகழிகையுங் குறும்படுநீ றணிநுதலுங் குழை யார் காது
மயில்படநித் திலமிடையா ரக்கமணி யணிகளமு மரையிற்பட்டும்,
வெயில்விடுகோ வணவுடையும் விளங்குமுனூ லசை மார்பும் **வெந்தை யேற்குங்
#கயிலழகா ரமைத்தண்டுங் கொண்டாதி சைவனெனக் காளத் தீசன். 43 (446)

*குயில் - அழகு. ** வெந்தை - பிட்டு # கயில் - கையில்

வீசியமென் சிறுகாலான் முக்கனியின் மணங்கமழும் விண்சேர் சோலைப்
பேசரிய தென்கயிலைப் பிறங்கலிடைப் பிறைநுதலெம் பிராட்டி யாயக்
காசணிமென் றிதலைமுலைப் புலமலர்க்கோ தையை யிருத்திக் கரந்து ஞாலத்
தாசகலுந் தாலபுரி யமர்மறையோன் காணவுவந் தண்மி னானால்  44 (447)

எண்ணரிய பரம்பொருளை யெதிர்சென்று திருவடியி னிறைஞ்சி யேத்தித்
துண்ணெணவாங் கேகொடுபோ யாதனத்தி னமர்வித்துத் தொன்மை நோற்ற
புண்ணியமே யுருவாக வந்தனைய பெரியோயெம் புன்மை தீர
நண்ணியதென் னீருறையு நகரேது னாம மெவை நாயேற் கின்னே 45 (448)


பகர்தருவா யென்றுசொரூ பாகரனும் வினவவவன் பரிவு நோக்கி
யகலிடமெங் கணுமிருப்பே மெமக்கெனவோ ரிடமிலைநீ
யறியாய் கொல்லோ, தகவுடனாண் டாண்டுதொறுஞ் சிவநிசியிற் றென் கயிலைத் தலத்தினீவிர்
நகமகணா தனைப்பூசை புரிந்தேத்துஞ் சமயத்தி னாங்கண் டேமால், 46(449)

நம்பெயர்கா ளத்தீச குருக்களென்ப ரன்பரக நாடி யாங்கே
செம்மைபெறக் கூடியவர்க் கினிதளிப்போ மித்தலத்துஞ் சிவனென் றன்பர்
தம்மையுளத் துளுமடியார்க் காணியவந் தோம்பரமன் றாளையேத்து
மும்மையிவண் கண்டேமற் றுன்முகஞ்சோர்ந் திருந்ததெவ னுரைத்தி யென்றான் 47(450)

அய்யகே ளரவணியுங் காளத்திப் பெருமானை யாண்டு தோறுந்
துய்யவர னிரவினிற்கண் டருச்சிப்ப தெனவிரதந் துணிந்துட் கொண்டே
வையமிசை யிதுகாறு மனுட்டித்து வந்தோமிவ் வருடந்தன்னிற்
பையரவி னுருக்கொண்ட பரமனைக்கா ணியயாமும் படரும் போதில், 48 (451)

தாலமா புரியெனுமித் தலத்தினிலாண் மகவினையென் சதியுமீன்றாள்
ஆலமார் கண்டனிர வாந்தினமு மின்றாக வண்மிற் றாலென்
சீலமார் விரதமினே கெடவந்த தெனவுளத்திற் செறிந்த துன்பஞ்
சாலவேயுளதென்னத் தனதுருவங் கரந்துவந்தோன் சாற்றலுற்றான். 49 (452)

ஆபத்து வந்தவிடத் தரும்பாவ மில்லையென வகிலத்தோர்கள்.
தாபித்தல் கேட்டிலையோ தண்மதியைச் சென்னிமிசை தரித்து ளானைக்
கோபத்தை யொழித்தகுணக்  குன்றனைய முனிவரர்தாங் குறித்தாங் காங்கே
பாபத்தை யொழித்தனரென் பதுபகரக் கேட்டிலையோ பகர்வன் கேளாய். 50 (453)
                        

                           (வேறு)

பதஞ்சலி வியாக்கிர பாதர் மன்றுளே
நிதந்தரி சனங்செயு நியம மாறிடா
விதந்தர வரனுளம் விரும்பிக் கூடலிற்
பதந்தரு நடனமும் பார்த்த தில்லையோ 51 (454)

ஆப்பனூ ரினிலர சாளும் பாண்டியன்
மாப்புகழ் பரவு சோ ழாந்த கன்முனம்
ஆப்புனை கொடியுடை யரனென் றுன்னிய
வாப்புரு விலிங்கமா யமர்ந்த தில்லையோ 52 (455)


இந்தச் சரித்திரம் திருவிளையாடற்புராணம் அருச்சனைப்படலம் 35-ம் செய்யுளின்
உரையிற் காண்க


எள்ளுத லின்றியே யிரக்கும் வைசிய
விள்ளருங் குலத்தினில் மிகுத்து வாழ்ந்திடுங்
கள்ளமில் வணிகமல் லய்யன் காண்டர
*வள்ளம திலிங்கமாய் வதிந்த தில்லையோ 53 (456)

*வள்ளம்= படி

இந்தச் சரித்திரம் வசவபுராணம் வணிக மல்லய்யர் சருக்கத்திற் காண்க 


வாசமென் மலர்த்தொடை வனையுங் காடவன்
நேசமோ டிழைத்ததை நீக்கி நின்றையூர்ப்
பூசலார் மனத்தினாற் புனைந்த வாலையத்
தீசனா ரன்புகூர்ந் திருந்த தில்லையோ 54 (457)

| இந்தச் சரித்திரம் பெரிய புராணம் பூசலார் நாயனார் சருக்கத்திற் காண்க 


ஆதலி னீயுமிங் கரனை யித்தின
மோதரும் பூசனை யுஞற்றி னாலுனக்
கேதமில் சிவதரி சனமு மீங்குறு
மாதவ காரண மனம தாகுமால்  55 (458)

தீதினான் மறைகளின் சிரத்து நின்றவ
னோதிய வாசக முணர்ந்து மற்றவன்
கோதைஞா னம்மையுங் குழகன் றன்னையு
மேதமின் மனத்தினி லிருத்திக் கூறுவான். 56 (459)

கூறுவ கேட்டியால் குணக்குன் றேயனாய்
நாறுபூஞ் சுனையுடை * நவிரத் தின்றகை
யூறுபா டொன்றிலாக் ** கடத்தி னுண்மைவா
னாறுசேர் சடையுடை யமலன் செய்கையே 57 (460)

* நவிரம் - மலை. ** கடம் - காடு,

முந்தொரு நாட்டவ முனிவ சிட்டனார்
சிந்தைகொள் புத்திர சோபந் தீர்தர
வந்தரத் துயர் கயா ரணியத் தண்மியே
வைந்தடர்த் தருந்தவ மாற்றி னானரோ 58 (461)

ஆயபோ தைந்தலை யரவு ருக்கொடு
பேயொடா டியுமவண் பிறங்கி லிங்கமாய்
தூயமேற் றிசைமுகந் தோன்ற வந்தடர்ந்
தேயமா முனிக்கரு ளளித்தி ருந்தனன்.59 (462)

இந்தவா றிறையவ னிருப்ப தோர்ந்துபூங்
கொந்துலா மலர்க்குழற் குமரி வல்லையின்
மைந்தர் *கோ வண்ணல்சீர் வடுக னாரியன்
சந்தமா ருருத்திரக் குழுவுஞ் சாரவே 60 (463)

*கோவண்ணல்= நந்தி

வெள்ளியங் கிரியினை விடுத்து வாக்கடத்
துள்ளுறு மன்னொ டுறைம யேச்சுர
வள்ளல்பா லடைந்தவண் வாழ்ந்தி ருந்தன
ளெள்ளலில் *புலமலர்க் கோதை யென்றரேர். 61 (464)

*புலமலர்க்கோதை= ஞானப்பூங்கோதை

                                     (வேறு)

அப்பொழு தருங்கயிலை யம்பொன்மக மேரோ
டொப்பறு *முவாக்கட றுறைந்த வதனாலே
செப்பரிய தென்கயிலை யென்று திரு நாம
மிப்புவியு ளோர்சொலி யிறைஞ்சினர்கண் மாதோ 62 (465)

*உவாக்கடறு=கயாரணியம்

வந்துபணி கின்றவரை வான்மதி மிலைந்த
வெந்தையிரு சேவடி யிருத்துமய லற்ற
புந்தியினி லுன்னுமவ ரைப்பொருவி லாச்சீ
ரிந்திர பதத்திலினி தேற்றுமிஃ தன்றி. 63 (466)

                            (சித்திரக்கவி ) (மாத்திரைவருத்தனை)

ஒருபொருள் பயக்கும் ஒரு சொல் ஒரு மாத்திரை பெற்று
வேறு சொல்லாய்ப் பொருள் பயந்து நிற்பது

ஓரள பேமிகுத் தோங்கிய வண்டின
மோரள பேத்மிகு தோங்கரை யன்றனோ
டோரள பேதமிகு தோங்கயர் வைக்கலந்
தோரள பேமிகு மெய்யகன் றுற்றவே. 64 (467)


இ-ள் ஓர் அளபேமிகுத்து ஓங்கியவண்டினம் - ஒரு மாத்திரை மிகுந்த
வண்டினம், (வண்டினம் - அளிக்கூட்டம் ) (ஒரு மாத்திரை மிகுந்த அளிக்கூட்டம்
என்றமையால் (ஆளிக் கூட்டம்) ஆளியென்னும் ஓர் மிருகக் கூட்டம், ஓர்
அளபேமிகுந்து ஓங்கு அரையன் - ஒரு மாத்திரை மிகுந்த அரையன் (அரையன் -
மன்) ( ஒரு மாத்திரை மிகுந்த மன் என்றமையால்) (மான் - கலை மான்கள்) தனோடு-
தன்னோடு, ஓர் அளபேமிகுத்து ஓங்கு அயர்வு - ஒரு மாத்திரைமிகுந்த அயர்வு,
(அயர்வு= களை) ஒரு மாத்திரைமிகுந்த களை என்றமையால் காளை= இடபத்தை,
கலந்து= சேர்ந்து, ஓர் அளபேமிகுமெய் ஒரு மாத்திரை மிகுந்த மெய் (மெய் - உடல்)
ஒரு மாத்திரை மிகுந்த உடல் என்றமையால், ஊடல் - பகை. அகன்று உற்ற
(அவ்விடத்தில்) நீங்கியிருந்தன. ஏகாரம் ஈற்றசை (ஆளிக் கூட்டம் மான்களோடு
இடபத்தைச் சேர்ந்து விரோதமின்றி யிருந்ததென்பது கருத்து.)
 


                                  (மாத்திரைச் சுருக்கம் )

ஒரு பொருள் பயக்கும் ஒரு சொல் ஒரு மாத்திரையைக் குறைப்ப
வேறு பொருள் பயக்கும் சொல்லாய் வருவது

வீரை தன்னி லோர் மாத்திரை வீந்தது
மாரந் தன்னி லௗபொன் றருகலு
மார மொன்றுமா யவ்வுழிக் கானவர்
சீரு ளொன்றொழி யார்ப்பொடு சேருமால் 65 (468)

(இ-ள்.) வீரைதன்னில் - வீரையென்னுஞ் சொல்லில் (விரை - வாரி ) ஓர்
மாத்திரை வீந்ததும், ஒரு மாத்திரையைச் சுருக்க வரியென்றாயிற்று, வரி= புலியின்
ஒலியும், ஆரம்தன்னில் - ஆரம் என்னுஞ் சொல்லில், (ஆரம்= ஆத்தி) அன்பு ஒன்று
அருகலும் - ஒரு மாத்திரையைச் சுருக்க, அத்தியென்றாயிற்று. அத்தி -
யானையொலியும், ஆரம் - ஆரம் என்னுங்சொல்லில், (ஆரம் - மாலை ) ஒன்றுமாய்
- ஒரு மாத்திரையைச் சுருக்க மலையென்றாயிற்று. அவ்வழி - அம்மலையில்
வசிக்கும், கானவர் - குறவர்களது, சீருள், (ஈயம்) ஒன்று ஒழி - ஒரு மாத்திரையைச்
சுருக்க- இயம் என்றாயிற்று. இயம் - வாத்தியத்தின், ஆர்ப்பொடு சேரும் - ஒலியொடு
கலக்கும் ஆல் - அசை. (புலியின் ஒலியும் யானையின் ஒலியும் மலையில் வசிக்கும்
குறவர் வாத்திய ஒலியுடன் சேர்ந்து ஒலிக்கும் என்பது கருத்து) 

                                                     (எழுத்து வருத்தனை)

ஒரு பொருள்பயப்பதோர் சொல் கூறியதனில் ஒவ்வொரெழுத்து நீக்க
வெவ்வேறு பொருள் பயப்பது

கண்கள் கொண்டன காந்தர்கள் கொண்டன
எண்கொள் பூடண மாயென்றுங் கொண்டன
பண்கொள் சாரலிற் பாசிழைப்பாவைமார்
மண்கொள் சீரணி மைதமை பேதமை. 66 (469)

(இ-ள்.) பண்கொள் சாரலிற் பாசு இழை பாவைமார் கண்கள் கொண்டன -
இசைநிரம்பிய மலைச்சாரலில் வாழும் நல்ல ஆபரணங்களணிந்த குறமகளிர்கள்
நேத்திரங்கள் கொண்டன, மண்கொள்மை - மாட்சிமை கொண்ட அஞ்சனம்,
காந்தர்கள் கொண்டன- கணவர்கள் மனைவியராக்கொண்டது. சீர்தமை - சிறப்பு
வாய்ந்த தங்களை,  பாவைமார் எண்கொள் பூடணமாயென்றுங் கொண்டது-
அக்குறமகளிர் மதித்தற்குரிய ஆபரணம் போல் எப்பொழுதும் கொண்டது.
அணிபேதமை - அழகிய அறியாமை குறமகளிர் கண்கள் கொண்டனமை.
கணவர்கள் கொண்டன. குறமகளிர் தமை= குறமகளிர் தாங்கள் கொண்டன பேதமை
என்பது - கருத்து.

நான்காம் அடி நிரல் நிரையாக மண் சீர் அணி மை தமை பேதமை கொள் என்னும்
வாக்கியத்தைக் கடைநிலைதத் தீபமாகச் சேர்த்து மண்கொள்மை - மாட்சிமை
கொண்டமை, சீர்கொள்தமை - சிறப்பைக் கொண்ட தம்மை, அணிகொள்பேதமை
அழகைக் கொண்ட பேதமை என விரிக்க


                                                            (திரிபங்கி)

ஒரு செய்யுளாய் உறுப்பமைந்து ஒரு பொருள் பயப்பதனை மூன்றாகப் பிரித்து எழுத
வெவ்வேறு செய்யுளாய்த் தனித்தனியே பொருள் பயந்து தொடையும் கிரியையும்
தனித்தனியே காணவருவது.

                                               (காப்பியக் கலித்துறை)

கந்தர மார்தடங் காவி னெலாங்கனி யார்தருவின்
பைந்தரு வீநெடுஞ் சார லெலாம்பனி மென்மலரைத்
தந்துள தேன்படுங் கூரி னெலாந்தனி மந்திகள் போய்
நந்திய தாலடர்ந் தேயளி போ நனி சிந்திடுமால் 67 (470)

(இ-ள்.) சுந்தரம் - ஆர் தடம் காவின் எலாம் தனி மந்திகள் போய் பனிமென் மலரை
நனி சிந்திடுமால் - மேகமளாவிய விசாலமான சோலைகளிலெல்லாம் வலி மிகுத்த
வானரங்கள் சென்று குளிர்ச்சி பொருந்திய பூக்களை மிகவாய் நீண்ட
மலைப்பக்கங்களிலெல்லாம் பழங்கள் நிறைந்த விருக்ஷங்கள் தரப்பட்ட தேன்
பெருகும், பைந்தருவீபடும் கூரின் எலாம் அடர்ந்தே அளிபோம்= பசிய
மரங்களினுள்ள பூக்களுதிர்ந்து கிடக்கும் சுனைகளிலெல்லாம் நெருங்கி வண்டுகள்
செல்லும்.

                                       (இக்கவியுள் பிரித்த செய்யுள்கள்)

                                                   வஞ்சித்துறை
கந்தரமார்  பைந்தருவீ
தந்துளதே னந்தியதால், 68 (471)

 (இ - ள் ) கந்தரம் ஆர் - மேகமளாவிய, பைந்தருவீ= பசிய மரங்களிலுள்ள பூக்கள், 
 தந்துளதேன் தரப்பட்டதேன், நந்தியது - பெருக்கமாயது.


                                                                          (செய்யுள்)

தடங்காவி னெல நெடுஞ்சார லெலாம்
படுங்கூரி னெலா  மடர்ந்தே யளிபோம். 69 (472)

(இ-ள்.) தடம்காவின் எலாம் - பெரிய சோலைகளெல்லாவற்றிலும், நெடும் காவின்
எலாம் - நீண்ட மலைப்பக்கங்களெல்லாவற்றிலும், படும் கூரின் எலாம்
அம்மலையிற் பொருந்திய சுனைகளெல்லாவற்றிலும், அடர்ந்தே அளிபோம்.
நெருங்கி வண்டுகள் செல்லும்.

                                                                       (செய்யுள்)

கனியார் தருவின் பனிமென் மலரைத்
தனிமந் திகள் போய்  நனிசிந் திடுமால். 70 (473)

(இ - ள். )கனியார் தருவின் - பழங்கணிறைந்த மரங்களிலுள்ள, பனிமென்மலரை -
குளிர்ச்சி பொருந்திய பூக்களை, தனி மந்திகள் போய் - வலிமிகுத்த வானரங்கள்
சென்று , நனிசிந்திடுமால் - மிகவாயுதிர்க்கும்.


                                                                  (கோமுத்திரி)

இரண்டிரண்டுவரியாக ஒரு செய்யுள் எழுதப்பட்டு - மேலுங்கீழும் ஒன்றிடையிட்டு
வாசித்தாலும் அச்செய்யுளே வருவது.

                                                          கலி விருத்தம்
கான கந்தனி லாமணி லேணமே
யேன லந்த னிடமதி லேயுமே
தான நாநமுந் தக்க குகையுளும்
வான ளாநகந் தொக்க குலையுறும். 71 (474)

(இ-ள்.) கானகந்தனில் ஆம் - காட்டினிடத்து உண்டாகிய, அணில் -
அணிற்பிள்ளையும், ஏணம் - மானும், ஏனல் - தினை விளையும், அம் - அழகிய,
தன்னிடம் அதில்= மலைச்சாரலினிடத்து, ஏயும்= அத்தினையினையுண்ணச் செல்லும்,
தானம் - யானையின் மதசலமும், நாநம் - கஸ்தூரியும், தக்க= பொருந்திய,
குகையுளும்= மலைக்குகையினிடத்து, வான்அளா- ஆகாயத்தையளாவிய, நகம்
- மரத்தினது, தொக்க - கூட்டமாகிய, குலை - பூங்கொத்துகள், உறும்= பொருந்தும்.


                                                                 சுழிகுளம்

ஒரு செய்யுள் எவ்வெட்டெழுத்தாக நான்குவரி யெழுதப்பட்டு மேனின்று
கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புறநின்று வந்துண்முடிய அவ்வரிநான்குமேயாகி
யச்செய்யுளே வருவது.

                                                                 வஞ்சித்துறை

சமமிக வாவாகும் மரநிழலய்யேகு
மினிறலு கனெய்வா  கழலுள வாகலவா. 72 (475)

 (இ - ள்.) சமம் - மோக்ஷவின்பத்திற்கு. இகவா ஆகும்= குறையாத (இன்பம்) 
தருவதாகிய, மரம்= மரங்களினது, நிழல் - நீழலில், அய் - அழகாக, ஏகும்= சென்று
(உறங்கும்) மின்= மின்னல்போலும், இறல் - சாம்நாளை, உகன்= ஒருயுக காலமாக
(எண்ணிய, ) எய்- காட்டுப்பன்றிகளினிடத்து, வா- விரைவை யுடைய, கழலுள -கால்நடையுள்ள, 
ஆ- காட்டுப்பசுக்கள்,  கலவா- சேராவாம்.

மரநிழலில் உறங்கும் முழுமல தேகியாகிய பன்றியுடன் நின்மல தேகியாகிய
பசுக்கள் சேராதென்பது கருத்து.

                                                       சருப்பதோபத்திரம்

நிரையாக அறுபத்துநான்கறை கீறி எவ்வெட்டெழுத்தால் ஒவ்வோரடியாகத்
தொடுத்த நான்கடியு மேனின்று கீழிழியவுங் கீழ்நின்று மேலேறவும் எழுதப்பட்டு,
மேனின்று கீழிழியவும் கீழ்நின்று மேலேறவும் முதல்தொடங்கி யிறுதியாகவும்
இறுதிதொடங்கி முதலாகவும் மாலை மாற்றாக நான்கு முகத்திலும் வாசித்தாலும்
அச்செய்யுளே வருவது.

                                                     கலி விருத்தம்

ஏமா றாமா மாறா மாயே, மாறா வீதா தாவீ றாமா
றாவீ யேகா காயே வீறா, மாயே காபூ பூகா யேமா. 73(476)

(இ-ள். ஏமாறா- சோம்பலில்லாத, மா - மிருகங்களும், மாறா- காய்ப்பு நீங்காத,
மா - மரங்களும், ஏம் - இறுமாப்பு, ஆறா - தணியாத, வீ - பஷிகளும், தாது
தாதுமாதுளைமரங்களும், ஆ - காட்டுப்பசுக்களும், ஈயேகா - வண்டுகள் நீங்காத.
மால்தாவு- மேகத்தையளாவிய, வீறுஆ - பெரிதான, கா - சோலைகளும், ஏவு=அம்பால்,
 ஈறா - பிளக்கப்படாத, மா - பன்றிகளும், பூ- இலைகளையும், பூ=பூக்களையும்,
 காயே - காய்களையுமே உடைய, மா - மாமரங்களும், ஏகா
(அம்மலையை விட்டு) நீங்காவாம்.

சோலை மிருகம் பஷி இவைகள் அம்மலையில் இருக்கின்றன என்பது கருத்து

                                                          காதை கரப்பு

ஒரு செய்யுள் முடிய எழுதப்பட்ட தனீற்று மொழியின் முதலெழுத்துத்
தொடங்கி ஒவ்வொரெழுத்து இடையிட்டுவாசிக்கப் பிறிதொரு செய்யுள்
போதுவது.

                                                   ஒருபோகு கொச்சகம்

உழனா விபனா கமெயே னமலீ
யழகா ருவநீ ணதியூ னமிலா
வழியா மெனமா வினன்னிரை மீள்வ
தழும்போ முனிவினர் வாகை விலார்.  74 (477)

(இ-ள்.) உழல் - காட்டில் திரியும், நாவி - கத்தூரிமிருகமும், பலநாகமும்=
அநேக யானைகளும், எய் - முள்ளம்பன்றியும், ஏனம் - பன்றியும், மலி - நிறைந்து.
அழகு - சிறப்பமைந்த, நீள்நதி - நீண்டகான்யாற்றுக்கு, மாவின் நல்நிரை - நல்ல
மிருகக் கூட்டங்கள், ஆருவ - நீரைக்குடிக்க, ஊனம் இலாவழி ஆம்என - குற்றமற்ற
வழியீதாகுமென்று (செல்ல, ) முனிவினர் - வில்லையுடைய வேடரது வாகை -
வெற்றி பொருந்திய, வில் தழும்பு=  வில்லினாலெய்த காயம், ஆர்- பொருந்தி, மீள்வ
- (அம்மிருகங்கள்) திரும்புவன, ஓ - அசைநிலை.

நாட்டிலுள்ள பல மிருகங்களும் கான்யாற்றில் நீர் குடிக்கச் சென்று வேடர்
வில்லாலடிக்கத் திரும்பினவென்பது கருத்து.

                                               காதை காப்பிற் கரந்தது

வானனி போழுவ
மீனின மாமெழி
லானதி நீருழ
லீனமெ னாவிழ  75 (478)


(இ-ள்) வான் ஆம்- ஆகாயகங்கையிலுள்ள,  மீன் இனம் - மீன் கூட்டங்கள்,
நீர்உழல்= அந்நீரில் சஞ்சரிப்பது, ஈனம்எனா - இழிவென்றெண்ணி, எழில் ஆ=
அழகாகிய,  நதி - அந்தக்கான்யாற்றில்,  விழ - வந்தடைய, நனி - மிகவும், போழுவ
-(ஆகாயத்தைக் ) கிழிக்கின்றன

ஆகாயகங்கையிலிருக்கும் மீன்கள் கான்யாற்றில் வந்தடைய ஆகாயத்தைப்
பிளக்கும் என்பது கருத்து.

                                                  உபயநாகபந்தம்

இரண்டு பாம்பு தம்முள் இணைவனவாக உபதேசமுறையால் வரைந்த
வற்று ளிரண்டுகவி யெழுதப்பட்டுச் சந்திகளினின்ற எழுத்தே மற்ற
விடங்களினும் உறுப்பாய் நிற்க வருவது.

                                                        கலிவிருத்தம்

தீம்பு னாகமுந் தேடளி நெல்லியு
மாம்புல் மாவரை மன்பீத னாத்தியால்
வேம்பு வேல்வனி நாகு புளிமர
மோம்பு கின்றதேக் கென்வள னோதுகேன். 76 (479)

(இ-ள். ) தீம் - மாதுரியம் பொருந்திய, புனாகமும் - புந்நாகமரமும், அளி
தேடுநெல்லியும்- வண்டுகள் இரைதேரும் நெல்லி மரமும், மாபுல் -
பெருமையுடைய சோதிப்புல்லும், மா- மாமரமும், வரை- மூங்கிலும், மன்பீதன் -
பெருமை வாய்ந்த சூரியனையளாவிய, ஆத்தி - ஆத்திமரமும், ஆல்= ஆலமரமும்,
வேம்பு - வேப்ப மரமும், வேல் - வேலமரமும், வனி - வன்னிமரமும், நாகு -
இளமைதங்கிய, புளிமரம்= திந்திருணிமரமும், ஓம்புகின்ற
பாதுகாத்து வளர்க்கின்ற தேக்கு - தேக்கமரமும் (உடைய) வளன்= (அம்மலையின்)
சிறப்பினை, என் ஓதுகேன் - யாதென்று சொல்லுவேன் (பலவித விருஷங்களும்)
அம்மலையில் உள்ளனவென்பது கருத்து.

                                                   இரண்டாவது

தும்பி காரிவேங் கையனா கந்தரை
பம்புந் தூயெலி மன்கெ வுளியரி
பைம்பொன் மாமுசு வன்காரி புன்னரி
பைம்பு னந்தகைப் பீலியென் னோய்விலை. 77 (480)

(இ-ள்) தும்பி - யானை, காரி - கரிக்குருவி, வேங்கை - புலி, அல்நாகம் -
கரும்பாம்பு, தரை பம்புந்தூய்எலி - பூமியில் மிகுதியான வெள்ளெலி, மன்கெவுளி
நிலைபெற்ற பல்லி, அரி - சிங்கம், பைம்பொன்மா= அழகிய பொன்னிறமுடைய
குதிரை,  முசுவன்= கருங்குரங்கு, காரி=கிளி, புல்நரி= அற்பகுணமுடைய நரி, தகைபீலி
அழகிய மயில் (இவைகள்) , பைம்புனம்= (அம்மலைப்பக்கங்களிலுள்ள )
தினைப்புனத்தில்,  ஓய்வு இலை - ஒழிதல் இல்லை (பலவித மிருகங்களும், பஷிக் கூட்டங்களும்,
அந்த மலைச்சாரலில் உள்ள தினைப்புனத்தில் நிறைந்திருக்கின்றன என்பது கருத்து 


                                                             மாலை மாற்று

ஒருசெய்யுளின் ஈற்றெழுத்தை முதலாகக் கொண்டு கீழ்நின்று
வாசித்துவரின் அச்செய்யுளே வருவது

தேடா வீகா சேமா லாரா
வாடா வாழை தாதே யாமா
மாயா தேதா ழைவா டாவா
ராலா மாசே காவீ டாதே.  78 (481)

(இ-ள்). தேன் தா வீ கா=  வானத்திலுள்ள விருச்சிகராசியைத் தோயா நின்ற
புட்பங்கள் நிறைந்த சோலையிலுள்ள,  சே மால் ஆர் ஆ வாடா - எருதுகளும்
பெருமையுடைய காட்டுப்பசுக்களும் உடல்வாடாவாம். வாழை தாது எய் ஆ மா
மாயா - வாழை மரமும் மகரந்தம் பொருந்திய ஆச்சாமரமும் மாமரமும்
(எந்நாளும்) அழியாது. தே தாழை வாடா வார் -ஆல் ஆ மா சேகு ஆ வீடாது.
கடவுள் (விரும்பாத ) தாழை மரமும் கெடாத நீண்ட ஆலமரமும் ஆச்சரியத்தைத்
தரும் அழகமைந்து வலிமிகுத்தனவாகி ( அம்மலையில் ) கெடாதிருக்கும், ஏ- ஈற்றசை

அந்தக் கயாரணியத்திலுள்ள மிருகங்கள் உடல்வாடாதென்பதும் அம்மலையிலுள்ள
மரங்கள் கெடாதென்பதும் கருத்து.

                                                            ஏகபாதம்

நான்கடிகளும் ஓரடிபோல் நின்று பொருள் வேறுபட்டு நிற்பது.

                                                    கலித்துறை

வானம் பரந்துடைக் குங்கயி லாயத்தன் வண்கிரியே
வானம் பரந்துடைக் குங்கயி லாயத்தன் வண்கிரியே
வானம் பரந்துடைக் குங்கயி லாயத்தன் வண்கிரியே
வானம் பரந்துடைக் குங்கயி லாயத்தன் வண்கிரியே. 79 (482)

                                                           (வேறு)

இவைபல வுடைய தென்கயி லாயத் திறைவனை யிம்பரி லனந்தந்
தவமுனி வரரு மும்பரும் விலங்குஞ் சதுமறை விதியினு மதற்குத்
தவறுறும் விலக்கு வழியினும் பூசைத் தகைபெறப் புரிந்துளத் துற்ற
கவலையை யொழித்துப் பவக்கடல் கடந்து கருதரு மின்ப மெய்தினரால் 80 (483)

இத்தகை யாங்கா ளத்திநா தன்வா ழியற்பதி தனக்கிதை யிணை யாய்,
வைத்தரன் றன்னை யருச்சியென் றுரைசெய் வாக்கையெவ்வாறு நம் புவ ல்யா,
னுத்தம நின்சொ லுண்மையென் றெண்ணாதொருவவு மனந்துணி கில்லே,
னத்தனாங் காளத் தீசனா ரருளெவ்வளவதோ வறிகிலே னென்றான். 81 (484)

என்றுரை மறையோ னுளத்துளன் பினையு மியைந்தவைராகமு மெண்ணி
நன்றுநன் றென்னா வுண்ணகை செய்தே நம்பனா மறையவ னுரைப்பான்
குன்றெனுங் கயிலைக் காசிகா ளத்தி குறைவில் சீர் காஞ்சியா மிவைகள்
பொன்றிதழ் சடிலத் திறைவன்வாழ் தலத்துட் புனிதமா மித்தல மதனுள் 82 (485)

உமையவ டக்க னியமன்வான் மீகி  யுபேந்திர னும்பர்கோ னுலகச்
சுமைகொளுஞ் சேட னையன் வெண் மலரார் *சுபாங்கியிங் கிவர் கொழுநர்களு
மமையெனுந் தோள்கெர் ளையைமுன் மைந்தனாகிய வைங்கரன் வியாதன்
**சமையொரு மூன்றிற் றோடுடைப் பாடற் சாற்றினோ னிவர்தொழுந் தலமாய் 83 (486)

*சுபாங்கி=இரதி, **சமை=வருடம்

எத்தகைப் பிரள யத்தினு மழியா திருத்தலிற் பிரளய சித்தென்,
றெத்திசை யவரும் புகழ்திரு நாம மியைதரப் பெற்றுவா னவருஞ்
சித்தரும் பரவும் புகழுடைக் காஞ்சித் திருநகர் சிறந்ததா மதினு
முத்தம மறையோய் சிறந்துள தலமொன் றுளவதையுரைப்பன்கே ளுதியால் 84 (487)

சுரர்தொழுஞ் சுரபித் தீஞ்சுவை யமுதந் தொக்குழீஇ யிழுமென விரங்கி
வரர்முனி வரர்கள் வசித்திடு நந்தி வரையினி லிருந்திரு பாலு,
நரர்மு தற்றேவர் தரிசன வளவி னன்கதி புகுத்தலை வீசி
*விளவினிருமருங் கரசா லாரமா விளவி னெழினிழ றாக்குபா னதியும் 85(488)

*விளவின்=விளாமரத்தின்


தெங்குகச் சூரங் கமுகுசீ தாளஞ் சேணள வுயர்ந்திடு பனையு 
மங்கைமா துமையி னுடலினுற் பவித்து வதிரதப் பட்டவிம் மிதமு
மெங்கணா யகியாங் கௌரியு மிடப தேவனு மிறைஞ்சிடு சிறப்புந்
துங்கமாம் விலாச காஞ்சியென் றுரைக்குஞ் சொல்லெழுத் ததிகமு முளதாய் 86 (489)

எழுதரு மறையி லிசைத்தபன் மனுவி *லெழுமைகா யத்திரி யேய்ப்பப்
பழுதறு முலகி லுள்ளநற் றலங்கள் பலவினுஞ் சிறந்தெவ ராலுந்
தொழவுள விவ்வி லாசகாஞ் சியினிற் றூயபா லிக்கரை மருங்கின் 
வழுவற வமல பூசனை யியற்றி வழுத்துதியரனெதிர் வருமால் 87 (490)

*எழுமை=எழுச்சி

ஈதுகா ளத்தி நாதனா ருரையென் றெண்ணுதி யென்சொலென் றெண்ணேல்
தோதக மலமெய்ச் சுகமுறற் றிண்ணஞ் சோகநீங் கெனச்சொலி மறைந்தான்
பாதகர் கணுக்கு மெணுக்கறி வரியபரமனு ளன்புளார்க்கென்று,
மாதவன் போலு மொளிகொளு முருவா யமர்ந்துளத் திருந்தருளமலன் 88 (491)

கைப்படு நெல்லிக் கனியெனப் பரனைக் கண்டுளந் தேறிலே னென்னா
மெய்ப்புள கரும்ப நாத்தடு மாற விம்மித முறுமனத் தினனாய்
மைப்புரை கூந்தன் மடநலாய் வந்த மறையவ னம்மையாட்கொள்ளு
மொப்பிலாக் காளத் தீசனா ரதைநா முணர்கில மென மொழிந் தனனால் 89 (492)

வேதவே தியனுஞ் சிவபிரான் மொழிந்த விதிப்படி யியற்றுவதென்னா
மாதர்மென் றரங்கக் கரங்களாற் றரள மணியினை யிருமருங் கொதுக்குந்
தீதிலாப் பாலிக் கரையினிற் சிறந்த சிவபிரான் றனை யுந்தென் முகமாய்
தாதவிழ் மலர்வேய் புலமலர்க்கோதை தன்னையும் பதிட்டை செய் தனனால் 90 (493)

தத்துவச் சேட்டை யொழிந்திடச் சுழுத்திச் சாருதல் போற்பல விருகந்
தத்திடும் பறவைச் சாதியி னொலியுந் தழங்குத லின்றியல் மருவ
வத்தன தடித்தா மரையுளத் திருத்தா தகம்பவ முறுமன மென்ன
வொத்திருண் டனமு னொளிகிளர்ந் தோங்கி யுயர்தலை யுடைய வவ் வானம். 91 (494)

இச்சிவ நிசியி லெம்மையாள் காளத் தீசனோ டிடமதி லமருங்
கச்சணி திதலை யரும்பிள முலைஞா னம்மையுங் கனவபி டேக
மிச்சையாய் வேத விதிப்படி யியற்ற வெண்ணிய மனத்தனாய் நியம
முச்சித மாருந் தானபா னாதி யுறுதொழிற் குறைவற முடித்து. 92 (495)

சுத்தியைந் தியற்றி நீர்தில நெய்மாத் தூளரி சனநெலி முள்ளி,
வித்தக வானைந் துங்கிரு தம்பால் வெண்டயி ரையமு தம்மா
கொத்துதிர் கதலி மாதுளை முருக்கு கூர்தம ரத்தைநா ரத்தை
தித்தியங் குளஞ்சித் தேன் திரட்டியபால் செங்கரும் பாட்டு தீஞ் சாறும் 93 (496)


நாரிகே ளப்பா னீயந லன்னம் நளிர்தரு வில்வநீர் பொன்னீர்
பூரணத் தெழுரத் நோதகம் பசுங்கர்ப் பூரவா சம்புனு கார
மாரண விதியி னமைத்திடு தாரை யற்புதக் கலசநீ ரிவைகள்,
காரணந் தவறா தொன்றன்பி னொன்றாய் காளத்தி யாண்டவன் றனக்கு 94 (497)

நிசியினி னான்கு யாமமுந் தவறா நியமமாய்த் திருமுழுக் காட்டி
யிசைபெறு பூதி சந்தனத் திலகமிட்டுமுத் தக்கதை தூவித்
திசையினிற் கமழ்தேன் சிந்துபூ மாலை சிறந்திடச் சாத்திவெண் டூசு
முசிதமோ டணிந்த *ராகமார் மணிப்பூ ணுகமணி பரமனுக் கணிந்தே. 95(498)

*இராகம்= நிறம்

சருக்கரை பாகு திரட்டுபாற் றெங்கு ததிமரு வோதன மருத்தி
விருப்புறு பாகு வெள்ளிலை யுதவி விரைகமழ் தூபதீ பந்தேர்
திருத்தகு நக்கத் திரமிணை மூன்று சீருறு பஞ்சம நாகங்
கருத்திரு நான்கு கயல்பஞ்ச தட்டு காயத்ரி வக்கதை கும்பம். 96 (499)

ஆகுமித் தீப மானதோ டைந்தா யமர்கிளை கருப்புரச் சோதி
வாகுட னெடுத்துக் கஞ்சனங் கவிகை வானிறக் கவரிநற் சிவிறி
ஆகம விதியி னெறிமுறை யுதவி யமலபூ சையை முடித் தாங்கே
யோகையா வெழுத்தைந் தோதியே வலம்வந் துளமகிழ்ந் தினையன வுரைப்பான் 97 (500)

                                             (வேறு)

புரியார்முகை விரியப்பணி பூந்தாது குடைந்து
விரைசார்மது நுகரும்வரி மேவுந்திரு வணியல்
வரைசேர்புய மீதேகொளும் *வரருக்கிட ரேசெய்
கருதார்புர மெரிசெய்தருள் காளத்தீச் சுரனே. 98 (501)

*வரர்=தேவர்

வாரார்குய ஞானாம் பிகை வலமேவிய வள்ளால்
சீரார்தரு மகவெற்கருள் செய்தாயதன் கைம்மா 
றாராயிலெ னுடலாவிபொ னல்லாற்பிறி தில்லேன்
காரார் பொழில் சூழ்தாலையில் காளத்தீச் சுரனே. 99 (502)

சிறுசீறடி மகவெற்கருள் செய்தாய்வினை கொய்தாய்
மறுவற்றிடு மறையோனென வந்தென்னை யளித்தா
யுறுமுத்தொழி லுனதென்பதை யென்மட்டிலுணர்ந்தேன்
கறையுற்றிடு களமார்தரு காளத்தீச் சுரனே. 100 (503)


வேலாயுத னையுமங்குசம் வேய்ந்தோனையு முதவுஞ்
சேலாகிய விழியாயிடர் தீரும்படி யடியேன்
பாலாகியே யருணல்வரம் பாரோர்துதி பனைசை
நாலாரண முடிமீதுறை ஞானாம்பிகை யுமையே 101 (504)

அறமுற்றிலு மீராழிநெல் லதனாற் செயு மனையே
பிறவித்துய ரதிலெய்த்திடு பேயேற் கருள்செய்வா
யறவர்க்குறு மிடமாய்திரு வழகார்தரு பனைசை
நறவக்குழ லிசைவண்டுறை ஞானாம்பிகை யுமையே. 102 (505)

எண்ணும் பொறி புலன்மாழ்கிமிக் கிடர்பட்டறி வழிய
வண்ணற்றரு மன்சேர்பொழு தடியேனிட மணுகித்
திண்ணந்தரு குடிலைப்பொருள் செவியிற்புகல் பனைசை
நண்ணும்மலை மகளாகிய ஞானாம்பிகை யுமையே 103 (506)

இவ்வாறு துதித்தேதொழு மறையோர்க்கரு ளீவா
னொவ்வாவெழின் ஞானாம்பிகை யுடனோடிட பத்திற்
செவ்வேளிப முகவன்றிரு மாலோடயன் மேவக்
* கவ்வேறிய நெஞ்சுள்ளவர் காணாவரன் வந்தான். 104 (507)

*கவ்= தீங்கு

                                          (வேறு)

வந்திடு மயன்மால் காணா வள்ளலை மறையோன் றானுஞ்
சிந்தையி லார்வம் பொங்கத் தெரிசித்து வணங்கி யேத்த
கந்தனை யளித்தோ னன்பாற் கருதிய பொருளை யெல்லா
முந்துற மொழிதி யென்ன முகமலர்ந் திவையு ரைப்பான் 105 (508)

விரிஞ்சன்மான் முதலா யுள்ள விண்ணவர்க் கரிய வுன்றன்
றிருந்தெழில் மேனி தன்னைத் தெரிசித்தேன் விழிகள் முன்னம் 
புரிந்துள தலத்தி னாய புணர்ப்பினை யறியே னின்னைப்
பரிந்துள மகிழ்வாய்ப் பூசை பண்ணுநல் வரமு மின்னும். 106 (509)

இமையவர் பரவு மிந்த வெழில் பெறு கேத்தி ரத்தி
லுமையுடனகலா தென்று முறைந்தருள் வரமு மன்பா
னிமலவுன் றனைப்பூ சிப்போர் நினைத்துள வரமு முன்றன்
கமலநேர் கழலி லென்னைக் கலந்தருள் வரமு மீவாய் 107 (510)


                                               (வேறு)

எனப்பூ சுரனீ திசைத்திடலு மிமவான் மகனா யகன் மகிழ்ந்துன்
நினைப்பின் படியா மெனவிசைத்து நிகரொன் றில்லாச் சிறுவன் மிசை
மனப்போ தினிற்பே ரருள் பெருகி வாயாற் பின்னு மரு *மதலை
நனைப்போ தணிந்த பொலன் வேணி நாத னிதனை நவிற்றுவனால் 108 (511)

*மதலை= கொன்றை

திருமா துறையு மித்தலத்திற் செழுமா மணிப்பொற் சினகர மொன்
றருமா மறையோ யெமக்கியற்றியளவில் சுகபோ கங்கணுகர்ந்
திருமா வினையை யொழித்தெனது யிணையா ரடியி லெய்து மெனா
வருவா யுருவாய் நின்றிலங்கு மையனிலிங்கத் தடைந் தனனால் 109 (512)

                                                       (வேறு)

எல்லையி லுவகைக் கடலினுண் மூழ்கி யிருக்குணர் மறையவ னீசர்க்
கொல்லையிற் றளியு முமைக்குச்சே திமமு முஞற்றிமெய்ப் பத்தியிற் றவறா
தல்லுநன் பகலு மருச்சனை பலவு மருமறை விதிப்படி யியற்றிச்
சொல்லருந் தலத்திற் பற்பகல் செல்லச் சுதனொடுந் துணையொடு மிருந்தே . 110 (513)

பிறையணி முக்கட் பிஞ்ஞக னருளைப் பெருந்துணை யாக்கொடு தான்மு.
னுறைதரு பதியிற் புகுந்தனன் பின்ன ரொப்பிலத் தாலை யம்பதியிற்
கறைகளக் காளத் தீசனுந் தன்னைக் கருதுறு மடியவர் தமக்குக்
குறைவறப் புத்தி முத்திக ளியாவுங் கொடுத்தினி தமர்ந் தன னன்றே. 111 (514)

                                       திருக்காளத்திச் சருக்க முற்றிற்று.

                                              ஆகத் திருவிருத்தம் - 514


                                            இந்திரன் பூசனைச் சருக்கம்

கருதார்கள் புரமூன் றினுந்தீ யெழச்செய்த காளத்தியீச்
சுரநாதர் கதைகேட் டு வந்தோ மருந்துண்ட சுரர்வாழ்புரிக்
கரசாயி னோன்வந் தருச்சித்த தோதென்னு மருமாதவர்க்
கொருவாத தவவாய்மை யுளசூத முனிபின் புரைக்கின்றனன் 1 (515)


உயரத முடையவ னோங்க யோத்திம
னயரத மொழியின னாம வேலினான்
றுயரத ரிடைச் செயுஞ் சோரற் காய்ந்தவன்
றயரத னெனும்பெயர் தாங்கு செம்மலே.2 (516)

சத்திரஞ் சாதுர்மா சியமு னாமகங்
*குத்திரத் தியற்றியுங் கோளர் தஞ்சிரந்
தத்திர தம்பரி தாக்கி வெற்றிகொள்
புத்திர ரிலாமையாற் புழுங்கி நொந்தனன். 3 (517)

*குத்திரம்=விரைவு

*விசிட்டமே வுறுதவ விரதம் பூண்டுள
வசிட்டனுந் தனையர்மேல் வாஞ்சை வைத்துளம்
**நொசிட்டநீ $நோன்பரா லியாகஞ் செய்ததி
#னுசிட்டமே பெறுவையே லுறுமென் றோதினான். 4 (518)

*விசிட்டம் - மேன்மை, **நொ - துன்பம். சிட்ட= சீடனே, $ நோன்பர்=- தவசிகள்,
# உசிட்டம் - உச்சிட்டம்

கேட்டவவ் வளவினிற் கிளரு மாமக
நாட்டவல் லவரெவர் நவிலெ னக்கலைக்
கோட்டுமா முனியலாற் கூடி டாதவர்
நாட்டினிற் கழையென நாதன் கூறினான். 5 (519)

எவ்வழி யருந்தவ னிருந்து ளானவ
னிவ்வுழி வருவதற் கியையு மோவெனத்
தெவ்வுழித் திறம்பெறு முரோம பாதனா
டவ்வுழி யமர்ந்துளா னணுகி லெய்துவன். 6 (520)

என்னலு முனிவனை யிறைஞ்சி மன்னவன்
றன்னருஞ் சேனைதற் சூழ ரோமபா
தன்னக ரடைந்துநற் றரும சீலனம்
மன்னவற் கண்டுள மகிழ்வு கூர்ந்தனன்.7 (521)

தன்னுழி யடைந்தவத் தயர தன்பதப்
பன்னருங் கமலமேற் பணிந்து ரோமச
னென்னைநீர் வேண்டியிங் கெய்தல் கூறெனத்
தன்னருங் குறையினைச் சாற்ற லுற்றனன். 8 (522)

மைந்தனில் லாக்குறை மனத்து ணீங்குதற்
கைந்தடர் வசிட்டன தடியி றைஞ்சினேன்
கொந்தலர் சடைகலைக் கோட்டு மாமுனி
வந்திடி லுன்னெணம் வாய்க்கு மென்றனன். 9 (523)

அம்முனி யுன்பதி யமர்ந்தி ருத்தலின்
செம்மனீ யவனையென் னோடு சேர்த்துமா
வெம்மைசெய் மனக்குறை விலக்க வேண்டினேன்
பொய்ம்மையி னெறியுடைப் புநித வென்றனன். 10 (524)

மன்னவற் கரையவுன் வாய்மை யின்படி
யுன்னருங் கலைமுனிக் குணர்த்தி யாமுநின்
பொன்னக ரடைகுவன் பொருந்து சேனையோ
டுன்னக ரடைகென வுற்று ளானரோ 11 (525)

உற்றபி னுரோமபா தோங்க னூன்முறைக்
கற்றவ ரியாவருங் கைதொ ழுந்திறத்
துற்றதன் மருகனுக் குரைத்த ழைத்துதிண்
பொற்றடந் தேரினிற் பொருந்தினானரோ, 12 (526)

யானையு மிரதமு மிவுளி யீட்டமுந்
தானையு முவரியிற் றன்னைச் சூழ்தரப்
பானுவின் குலத்திறை பதியை யண்மியே
மானவி லொற்றரால் வரவை யோதினான். 13 (527)

                                              (வேறு)

விலைக்கோட்டி மலர்க்கணையெய் வீரமதன் காமவெறி
வலைக்கோட்டுங் கண்மாதர் வரவறியா மேவந்தோன்
தலைக் கோட்டுத் தரித்துலகில் சார்ந்துவரு தாபதனாங்
கலைக் கோட்டு முனிவரவைக் காதலுடன் கேட்டு வந்தே. 14 (528)

இரண்டொருயோ சனைதூர மெதிர்சென்று முனிவர்பத
மிரண்டொருதன் முடிவணங்கி யெம்பிரான் வருகவெனத்
திரண்டபுயத் தயரதமன் றிருமறுகி னுடன் கொடுபோ
யரண்டருமா ளிகையினிற்சிங் காதனத்தி லிருத்தினனால் 15 (529)


மக்கட்பே றின்மையினம் வசிட்டனும்மா லெய்துமெனப்
பக்கமுட னுரைத்தனனெம் பரிவகல வப்பேற்றை
யிக்கணத்திற் சுதன் மகம தியற்றியருள் கென வேண்ட
வக்கலைக்கோட் டருந்தவனாங் காகுக வென் றியைந்தனனே. 16 (530)

மகப்பொருளைக் குறைவின்றி மன்னுதவ வாறிருது
மகப்பொருடேர் கலைமுனிவ னாற்றியா குதிநிறைக்க
மிகப்பெரும்பூ தஞ்சிரசின் மேற் *கூழ்தட் டதிற்பிண்டஞ்
சுகப்படக்கொண்டினிதுதவித் துண்ணெனச் **சித்தொளித்ததுவே. 17(531)

*கூழ்=பொன், ** சித்து= யாகம்

அச்செழிய வமுதினையாங் கருந்தனன் சொற்படியே தன்
கச்சணிமென் முலைமாதர் காரிகையார் மூவருக்கு
மெச்சமிலா தளித்துவகை யெய்து தய ரதமன்னன்
*கொச்சையிலா வுலகனைத்துங் கொண்டாட விருந்ததற்பின் 18 (532)

*கொச்சை=இழிவு

ஆசலைசெய் யைங்கணைபோ லைம்பொறியா லலைவுண்டே
யூசலைப் போன் மனமுழலா தொடுக்குதய ரதன்மனையாங்
கோசலைதன் றிருவயிற்றிற் குழவியென வவதரித்தான்
வீசலைகொள் பாற்கடலில் விழிதுயிலு மாதவனே. 19 (533)

மொய் *கேசி போலிடையு மொய்த்த நறு மணங்கமழு
#மைகேசி யன்னநடை மௌவனகைக் கொவ்வையிதழ்க்
கைகேசி பெற்றெடுத்தாள் காதலனாக் காதலொடு
**கைகேசி சூதனன்றன் கரத்திலமர் படையையரோ 20 (534)

*கேசி=சிங்கம்,  #மைகேசி= கறுத்த மயிர், ** கைகேசி=சூதனன் என்பதில் கை=ஒழுக்கம், கேசி 
சூதனன்= கண்ணன். 

*சுமுத்திரைகொ ணன்** னடையுந் தூயுடையு நற்குணமும்
$விமுத்திரையாஞ் செம்மேனி விரைகுழலாண் மனமுவந்து
#சமுத்திரையி லெழுமமுதந் தனைநிகரா மவியுண்டு
சுமுத்திரையி லக்குவன்சத் துருக்கனையுந் தானீன்றாள் 21 (535)

*சுமுத்திரை= நிதானம், நடை=ஒழுக்கம் , $ விமுத்திரை= பூந்தளிர், # சமுத்திரை= சமுத்திரம்

மக்களைப்பெற் றெடுத்தரசன் மாநிலத்திற் களிதூங்க
மிக்ககலை களைப்பயிற்றி மிகுவாழ்வி லிரந்திடுநாட்
டொக்கமுனி வரரோடுந் தூயகவு சிகன்வேண்ட
வக்கணமே ராகவனை யனுசனுடன னுப்பினனால் 22 (536)


ஏராருந் தாடகைசெற றேய்ந்தவரு மக முடித்து
வாராருந் தனமாக வழியினுறு கன்மிதித்துனன்
* நீராரு மிதிலையிற்போய் நெடியவிலை முறித்ததற்பின்
றாராருங் குழலுடைய சானகியைக் கைப்பிடித்தான் 23 (537)

*நீர்= சலம்

அத்திரநே ரம்பகச்சா னகியோட யோத்திநகர்
புத்திரனேர் தலைக்கண்டு புளகரும்பத் தயரதனு
** மித்திரனே ராதனத்தின் மீதிருத்தி யிவ்வுலகைச்
சத்திரநீ ழலிலரசு தான்புரிய வருள் செய்தான். 24 (538)

** மித்திரன்=சூரியன்

இத்திறங்கை கேசியறிந் திருண்டபெருங் கான் புகுதக்
குத்திரத்தாற் கலைக்கயிலக் குவனொடும்வை தேகியொடு
மத்திரமாய்த் தாய்மொழியை வரிசிலையோ னுளத்தமைத்துச்
சித்திரகூ டப்பொருப்பைச் சேர்ந்திருக்கு மமையத்தே. 25 (539)

வானவர்கோன் மகனொருநாண் மண்ணுலகின் வனத்தெய்திக்
கானமர்பூஞ் சோலையின்வாய்க் களித்திருக்குங் காகுத்தன்
பானலஞ்சொற் பன்னியெழிற் பண்புணர்ந்து காமுகனாய்த்
தேனலரும் பூங்கணையாற் சிந்தையுழன் றனன்மாதோ. 26 (540)

விரகமுறு மனனாகி விளைவதுமே லறிகிலனா
யரியதகைச் சானகியா ளங்குயந்தீண் டிடக் *கொடியி
னுருவினனாய்ப் புகலரிய வுன்னதஞ்சேர் தவச்சாலை
யொருவிலளா யாங்குறையு மொண்டொடிபா லுற்றனனால் 27 (541)

*கொடி=காக்கை

கரியநிறச் சுரிகுழலுங் கணைபுரைசே யரிக்கண்ணும்
விரிகதிர்மா மதிநுதலும் விளங்கெழிற்சண் பகமூக்கு
மெரிநிகர்மா மணிக்குழைக ளி லங்குமக ரச்செவியுந்
துரிசறுவித் துருமவிதழ்த் தூத்தரள வின்னகையும். 28 (542)

வலம்புரிநேர் கந்தரமும் வாடுகொடி போனுசுப்பு
நலம்பெறுமும் மடிவயிறு நற்கனியாம் பெருந்தனமுந்
தலம்புகழுங் *கவர்குரங்குஞ் சரத்தூணிக் கணைக் காலுஞ்
சலங்கெழுதா மரையடியுந் தனிக்கலனா ரவயவமும். 29 (543)

* கவர் - வாழை


உடையதிருச் சானகியா மொண்டொடியு மொருதனியா
யுடையளிது போதுளத்தி லுறுமெண்ண முடித்துமெனக்
கொடியுருவா கியசயந்தன் கூர்நகத்தாற் றனங்கீண்ட
வடிவுடைவேற் றயரதன்சேய் வந்தெதிர்ந்து கண்டனனால், 30 (544)

விந்தமலை யனையபுய விறல் வேந்தன் கோபமனத்
துந்தமருங் குளதருப்பை யொன்றெடுத்தோ திமமுயர்த்தோன்
மந்திரமுச் சரித்துயிரை வவ்வாது தொடர்கென்னச்
சிந்துதலுங் கணைதுரத்தத் தெருமரலுற் றோடினனால். 31 (545) 

அரியிடத்து மயனிடத்து மபயமெனச் செலவவருங்
கரிசறுமிக் கணைவிலக்கக் கருதலர்முப் புரநகையா
லெரிபடுத்தோன் றன்னாலு மிசையாதக் காகுத்தன்
விரைமலர்த்தா ளடைதியென மீண்டவன்றாள் வீழ்ந்ததுவே. 32 (546)

அஞ்சலென வந்தவரை யாதரிப்போ னாதலினாற்
றஞ்சமென வந்துசரண் டழுவியவா யசநோக்கிக்
கஞ்சமலர்க் கண்ணொன்றே கணைக்கிலக்கா யீந்தசுர
வஞ்சகரி னிவ்வனத்தில் வாழுதியென் றுரைத்தனனால் 33 (547)

அம்மொழியேற் றவ்வனத்தி லடசுரனாய்க்காரி 
தம்மதலை யெமதுபிரான் றன்னருளில் லாதவர்போற்
செம்மையுறு குலத்தருமஞ் சிறிதின்றி யுயிர்க்கிடர்செய்
தும்மைவினை வந்துலப்பத் தமகுணமுற் றுறைந்தனனே. 34 (548)

                                              (வேறு)

இவ்வகை யெலாஞ்சுரர்த மிறையவ னறிந்து
கொவ்வையிதழ் கொண்டவயி ராணியொ டரன்வா
ழவ்வரை யடைந்திடப வண்ணலடி தாழாச்
செவ்விதி னுரைத்தெனிடர் தீரென விரந்தான். 35 (549)

வானவர்க ணாயகன் வகுத்தமொழி கேளா
ஞானவெளி தன்னிலுறை நந்தியுணயந்தே
தானவர் முடித்தலை தடிந்தகுலி சத்தோ
யூனமுறு தீவினை யொழிக்கவழி கேண்மோ 36 (550)


புந்தியில னாயசுரர் போலிட ரிழைக்கு
முந்தன்மத லைத்துய ரொழிந்திடுக வேவ
* சுந்தரையி லூழ்வழி தொடர்ந்துளபவத்தைச்
சிந்திடுமோர் தாலநக ருண்டவை தெரிப்பாம் 37 (551)

*வசுந்தரை=பூமி

தாலமிசை மேன்மையுறு தாலநகர் தன்னி
னீலிமயி லாயிடபம் நீள்புலியு மாகி
யாலவிட முண்டருளு மையனடி யேத்திக்
கோலமுறு தன்வடிவு கொண்டனர்கண் முன்னம். 38 (552)

இத்தகைய மாநகரி லெய்தினர்க ளீசன்
பத்தியொ டருச்சனைகள் பண்ணினர்கள் வாயாற்
புத்தியொடு சேயவடி போற்றினர்கள் வீடாஞ்
சித்தியடை வாரதன் சிறப்பெவர் தெரிப்பார். 39 (553)

அத்தல மதற்குன தருஞ்சு ததெனா டண்மிச்
சித்தமொரு மித்தரிய சீதமலர் கெண்டவ்
வத்தனடி யைத்தொழுவை யாயினமரர்க்கு
ளுத்தம மனக்குறை யொழிந் தருளு மென்றான். 40 (554)

என்றுசொலு நந்தியிறை யின்கழ லிறைஞ்சிக்
குன்றின திருஞ்சிறை குறைத்தவ னெழுந்து
துன்றுசசி யோடவனி துன்னுமக னோடுஞ்
சென்றன னிரும்பனைசை சேர்ந்தரனை யோர்ந்தான். 41 (555)

ஓர்ந்தன னருங்குமர னோடுசிவ கங்கை
சேர்ந்ததனின் மூழ்கிமதி சேகரனை நேர்ந்தின்
பார்ந்துடல் மயிர்ப்புள கரும்பநனி யாசை 
கூர்ந்தரனை வானவர்கள் கோன் * சபரி செய்வான். 42 (556)

*சபரி= பூசை

ஆலமர் களத்திறை யருச்சனை யியற்ற
வேலுமுப கரணமுள யாவையு மெடுத்தே
சீலமுட னெய்திடு கெனச்சிலரை யேலக்
காலினும் விரைந்தமரர் *கற்பம தடைந்தே 43 (557)

* கற்பம் - தேவலோகம்.

ஐந்தரு வளித்திடுபொன் னாடையணி வாசச்
சந்தன நெடுங்கழை சருக்கரை மதுக்கால்
கொந்தல ரலங்கல்கனி கோற்பிரச மோடா  
னைந்துமுது வானுதக மாமிவை யனைத்தும். 44 (558)

குறைவற விமைப்பிலவர் கொண்டணுகி தேவ
ரிறையிணை யடித்தொழு திருந்தினி தளிக்க
மறைமுறையின் மஞ்சனம் தாட்டி மலர் சூட்டி
கறையுறு களப்பரனை *காரிதுதி செய்வான். 45 (559)

*காரி=இந்திரன்

                                                      (வேறு)

அருவா யுருவா யருவுருவா யகண்டா காரப் பேருருவாய்
வரவா யடியர் பவத்துயரை வாட்டி யோட்டி வினைவலியாற்
கருவா யகப்பட் டுழலாமற் கழலார் பதுமத் திருவடியைத்
தருவா யென்ப தறியாமற் றளர்ந்தேன் கருணைப்பரஞ்சுடரே 46 (560)

ஒன்றா யிரண்டா யைந்தாகி யுயர்வான் முதலா யையைந்தாய்
நன்றாய் தீதாய் நடுவாகி ஞாலங் காத்த நாயகனே
குன்றா முலைசுந் தரவுமைதன் கொழுந வமரர் தினம்பரவு
முன்றா ளடைந்தே னல்வினைவந் துலப்ப வடியே னுய்ந்தனனால் 47 (561)

அடியார்க் கெளிய னெனவுலக மறைதற் கேற்க வென்மதலை
கொடியாக்கொண்ட வுருவகற்றிக் குறைதீர்த் தெனையு னடியரிலோ
ரடியா னெனவிவ் வுலகியம்ப வருள்வா யெனவுன் பாலடைந்தேன்
கடியார் கொன்றை முடியுடையேயாய் காவா திருத்தல் கடனன்றே. 48 (562)

என்னா வாகண் டலனிசைப்ப விறைவன் களிகூர்ந் திவர்க்கருள
முன்னா விமய வல்லியுடன் மூரிச் சினவென் விடையிவர்ந்து
துன்னா முனிவர் பண்ணவர்க டொழுது போற்ற வானிறைவன்
முன்னா வடைந்தான் பகைவர்புர மூன்று மெரிசெய் முழுமுதல்வன். 49 (563)

அதுபோ தமரர்க் கிறையவன்மிக் கார்வத் துடன்கண் டகமகிழ்ந்து
புதுமா மணங்கொள் சேவடியம் புயமென் மலரைத் தொழுதேத்த
வுதமார் வனசத் துறைமடவா ருச்சிப் புனையு மணிச் * சுடிகை
நிதமுந் தோயச் சிவந்தவடி நிமலைக் கொழுந னீதிசைப்பான் 50 (564)

* சுடிகை= முடி

தருநா டுறையுமமரரிடர் தவிர்த்தே வரிவண் டினமுரலு
மருவாரணிய லணியாக வனையுந் திருத்தோட்ட தயா தன்சேய்
தருசா பங்க டொலைத்தனமுன் சயந்த னொடுநின் சதியுடனே
பெருவா னடைதி யெனப்பரமன் பேசிப் படிவங் கரந்தனனால் 51(565)

திதலைப் *புளக மரும்புதனத் தேவி யோடுஞ் சயந்தனெனு
மதலைப்  **புளக மரும்பமக வானு மகியிற் பஞ்சாங்க
விதமெய்ப் # புளக மரும்பவிரு விழிநீர் பெருக விழுந்தெழுந்து
சதமெய்ப் புனித மகத்திறையுந் தணந்தா னரன்வாழ் திருக்கோயில்  52 (566) 

* புளகம் வீங்குதல்  ** புளகம் - மகிழ்ச்சி  # புளகம்= மயிர் சிலிர்த்த

                                                 (வேறு)

ஆங்கதற்குத் தென்மேற்கி லம்புவிடும் விசைமூன்றி
லோங்குமுயர் சிவலிங்க மொன்றியற்றிப் பூசித்துத்
தேங்கமழுங் கற்பகத்தின் செழநிழற்கீழ்த் தவிசேறிப்
பாங்கினிற்புங் கவர்சூழப் பண்ணவர்கோ னினிதிருந்தான் 53 (567)

அந்தவர னிந்திரனுக் கருணவொளி யாகவெளி
வந்ததனா லரணாச லேசனென வசுந்தரையோர்
முந்தமொழிந் திடுவரந்த மூர்த்தியினை யடிதொழுவோ
ரிந்திரன்வா ழுலகடைவ ரெனச்சூத னியம்பினனால் 54 (568)

                                              இந்திரன் பூசனைச் சருக்க முற்றிற்று.

                                                  ஆகத் திருவிருத்தம் - 568


                                                       பிரமனருச்சனைச் சருக்கம்

என்றுசொலுஞ் சூதமுனி யிணையடியைத் தொழுதேத்தி
நன்றுலவுந் திருவுள்ள நைமிசா ரணியத்தோர்
குன்றினிருஞ் சிறகெறிந்தோன் குறைதவிர்த்தல் கேட்டுவந்தோம்
பொன்றிகழ்பங் கயன்பூசை புரிந்தவைசொல் லுதியென்றார். 1 (569)

ஆங்கவரீ துரைத்திடலு மன்புமனத் தினின்மிகவு
மோங்கிமுனி வரைநோக்கி யுயர்பனைசைத் தலத்திலயன்
றீங்கறப்பூ சித்தவகை செப்புவன்யான் கேண்மினெனத்
தேங்குமருட் கடற்சூத னன்பினொடுஞ் செப்புவனால்  2 (570)

உலகமுழு தும்படைப்போ னொருபகற்றன் னணிநகரி
விலகொளிவீ சுஞ்செம்பொ னெரிமணிக்கோ யிலினுள்ளா
லலர்தருமா யிரந்தோட்டா டகமலரி னம்பொகுட்டிற்
பலர்புகழ்நா ரதனாதிப் படிமத்தோர் புடைசூழ  3 (571)

அடலுறையுங் குலிசவைவா ளாயிரங்கண் ணன்முதலாங்
கடவுளர்க ளிருமருங்குங் கைகட்டி நிறைந்து நிற்ப
வடிவுடைய வியக்கர்விஞ்சை மன்னவர் * நால் வகையும்பர்
சுடர்மணிசே ருரகர்சித்தர் சுற்றிமிடைந் தனரிருப்ப 4 (572)

* நால்வகையும்பர்= ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள்
எண்மர், மருத்துவர் இருவர், எனநால்வகையாகிய முப்பத்து மூன்று கோடி தேவர்கள்,

ஏழிசையோ ருருக்கொண்ட வெனவெழில்கந் தருவரெலாம்
யாழிசையாற் செவிநிறைப்ப விழைநுசுப்போ திமக்கொங்கை
தாழிருங்கூந் தற்றுவர்வாய்த் தளிரியலார் மிகுதீம்பா
லாழியின்வெண் டிசைமருட்டு மழகியவெண் மயிர்வீச 5 (573)

பொன்னுறழ்வேத் திரமதனைப் பொருந்தியகை யினர்முன்னின்
றின்னரிவ ரென்றுரைக்க விறைஞ்சிடுவோர் தமைக்காணாத்
தன்னருளை யவரவர்க்குத் தக்கபடி யீந்தொருநாற்
சென்னிமக  மேருவெனச் சிறந்தினிதா யரசிருந்தான். 6 (574)

அந்தவமை யத்தினின்மிக் கார்க்குமலை கடலதனின்
முந்தவெழுந் துளவமுது முழுமதியுஞ் சேர்ந்தொன்றாய்
வந்தவுரு வெனத்திகழும் வடிவுடைய திருமேனி
சந்தனமார் குவிமுலைவாள் தனையுறழ்கண் ணிசைமடந்தை. 7 (575)

சேயவொளிக் கலனெறிப்பச் சீறடிநூ புரங்கலிப்ப
மேயமழை வளரைம்பான் மெல்லியலார் புடைசூழ
நேயமண மகன்பரியுண் ணெகிழுநடை யால்வந்து 
நாயகனோ டிருந்தனள்பூ நாண்மலர்ச்சேக் கையின் மீதே 8 (576)

இத்தகைய வயனூரு மெழிலார்செஞ் சூட்டன்னம்
புத்தியில்மா னதவாவி புகுந்தாட நினைந்தொருநா
ளுத்தமவா வியிற்புகுந்தங் குறுவனங்க டமைச்சீறிக்
குத்தியல காலுகிராற் கொடுந்துயர்மிக் கிழைத்தனவால்  9 (577)


அனங்கடமை யரசவன மஞரிழைத்தல் கண்டுமிக
மனங்கசிந்தம் மானதமு மறிதிரைக்கை யாலனத்தைச்
சினந்தரிய சிறகாவிழச் சேதிப்ப வெகினமிக
மனந்தளர்வுற் றெழில்குன்றி மலரவன்மு னடைந்தனவால் 10 (578)

                                                      (வேறு)

பாரதி கொழுந னன்னப் பறவையை நாலி ரண்டு
கூர்விழி யதனா னோக்கிக் குலவுமுன் சிறகர் வீந்த
காரண முரைத்தி யென்னக் கண்கலுழ்ந் தெகின மாங்கு
நேரிலா விடர்வந் துற்ற நிலைமையை யுரைத்த தன்றே. 11 (579)

சீர்மலி சலசத் துண்டஞ் சேயரித் தடங்கண் வள்ளை
யேர்மலி மகர கேள்வி யிக்குவிற் புருவஞ் சீர்சால்
வார்மலி குவவுக் கொங்கை வாமமே கலைநு சுப்புக்
கார்மலி குழல்வெண் மேனிக் கலைமகள் கேள்வன் கேளா. 12 (580)

ஊழ்வினை வலியா லிந்த வன்னத்தின் சிறகர் வீழத்
தாழ்வினை நிகழ்ந்த தெம்மாற் றடுக்கலாந் தகைமைத் தன்றே
வாழ்வினை யுயிர்க்கு நல்கும் வண்புக ழான்பா லுற்றிச்
சூழ்வினை தொலைத்து மென்னாத் துணிந்தன னன்ன வூர்தி 13 (581)

அனிச்ச மென் மலரி னொய்ய வாய்சிறை யனத்தை யேந்திப்
பனித்தட நெடுங்கண் வேயைப் பழித்ததோட் குலவுக் கொங்கை
யினித்தமென் மொழிம ருங்கு விழைபுரை மலைமா தோர்பாற்
றனித்திடா திருக்க வைத்தோன் சார்தருங் கயிலை சார்ந்தான். 14 (582)

புதுமணங் கமழா நிற்கும் பொன்னிற மலரின் மேவும்
விதியவன் பவளச் செங்கான் மென்சிறை யனத்தை நோக்கி
நதிமதி புனையும் வேணி நம்பனைத் தொழுநர்க் கிந்த 
மதிநிறக் கயிலை காக்கும் மாதவ னருள்முன் வேண்டும். 15 (583)

என்னமா மலரின் மேய விறையவன் புகலச் செஞ்சூட்
டுன்ன மன் னவன்செந் தாளி லுச்சி சேர்த் திரசி தக்குன்
றின்னருங் காவல் செய்யு மெம்பிரான் பெருமை முற்றும்
பண்ணுவீ ரென்ன வானோர் பண்ணவன் பகர லுற்றான். 16 (584) 


முன்னமோர் பகலிக் குன்றின் முராரிவா னவர்வ சுக்க
ளுன்னருங் கருடர் சித்த ருருத்திர ருரகர் திக்கின்
மன்னவ ராதி யானோர் மருங்கர கரவென் றேத்த
வன்னமென் னுமையோ டெம்மா னணிமணித் தவிசி ருந்தான் 17  (585)

அருளுடை யமல மூர்த்தி யமர்தரு மமையத் தன்னோன்
றிருமுனம் விபஞ்சி வல்லோன் சென்றிசை பாடி யேத்தக்
கருமிடற் றிறைவன் வேண்டுங் கருத்தினை யியம்பு கென்ன
கருதருங் குற்ற மூன்றுங் கடிந்தநா ரதனி சைப்பான் 18 (586)

ஒருவனாய் முதல்வ னாகி யுறுவரங் கொடுப்போ னாகி
மருவுமுக் குணங்க ணீத்து மனத்திடை நினைத்தற் கொண்ணாத்
திருவரு ளுடையோய் நின்றன் சேவையின் பலத்தா லெம்பா
லொருகுறை யில்லையேனு மொன்றுள திசைப்பன் கேண்மோ 19 (587)

                                                               (வேறு)

உலகு யிர்க்குயி ராகிய மார்ந்தரு ளுரக கங்கண வுன்புகழ் பொன்றி மண்
ணுலகி லஞ்செழுத் தோசையு நீறுநல் லோத்து கீதவொலியுமெய்ப் பத்தியு
மிலகு கண்டியுங் காவியு மாந்தர்பா லின்மை யாகிச் சமணெறி மல்கிமேற்
குலவு சைவமகி மைவிர தங்கள் குன்றியம்புவி பார மிகுந்ததால் 20 (588)

ஆல மொத்த வசுரர் விபுதரை யச்சு றுத்தலை யொத்தம ணர்க் குழாஞ்
சால நீடித் தழைத்தருங் குன்றினிற் சாருந் தீப மெனப் பொலி வுற்றது
ஏலு மண்ணி லிசைத்த வெழிற்குடத் திட்ட சோதி யெனவுன் னடியவர்
கோல மின்றிக் குறைந்துநின் மந்திரங் கூறவஞ்சிக் கொடுந்துயர் மூழ்கியே. 21 (589)

எந்த நாளில் விடரொழி வாகுமென் றேங்கு நின்னடி யார்துய ரேகவே
சந்த மார்மண் ணுலகில்வந் தக்கொடுஞ் சமண ழித்துத் திரிவித பத்தியை
நந்த லின்றி நடத்திட வென்னுள நாடி னே னெனு நாரதர் நோக்கியிந்
நந்தி யென்னையொப் பாவ னவன்றனால் நானி லத்தி லுறுகுறை போக்குதும் 22 (590)

என்ன வோதம யத்திம வான்மக ளீச னைத்துதித் துப்பணிந் தோதுவாள்
பன்ன ருங்கணம் பற்பல வற்றினும் பண்பு பெற்றவனாமென்று நந்தியைச்
சொன்ன காரண மென்னென வாரணத் தோல ணிந்தரு டோன்ற னுளந்தனி
லுன்ன ருங்களிப் போங்க வமலைகே ளோது வேனென வோத  லுற்றானரோ. 23 (591)


சீல மேவுஞ் சிலாதர னோர்தினஞ் திருப்ப ருப்பதஞ் சேர்ந்து நிருதியிற்
*காலை மாரி யருந்தியு நோற்றனன் கால மூன்றரைக் கோடிச் சமைச்செல
யேல வேண்டுவ தென்னென் றவனுழியெய்தி யீகுதுங் கேளென வன்பினிற்
சால வேகரங் கூப்பியுன் போலொரு தனையன் வேண்டு மெனக்கெனச் சாற்றினான். 24 (592)

* காலை - வாயுவை, மாரி - நீரை 

அவனி டத்தினி லுற்றுள வன்பினா லந்த வண்ண மளிக்குவ லென்றுபின்
றவறி லாதெனைத் தாங்குமிந் நந்தியென் றன்னைப் போனின் மலமன முள்ளவன்
பவமி லான்றவ மேயுரு வாயினான்பகரு தற்குரி யானுப சம்புவாய்
புவன மூன்றுந் தொழுந்திற மேய விப் புனித னுன்னரும் புத்திர னாவனால் 25 (593)

என்று நந்தி யெழின்முக நோக்கிநீ யெய்தல் வேண்டு மிவர்க்குப் புதல்வனா
யன்றி யான்சென் றுதித்திடல் வேண்டுமென் றறைய வங்கன யோனிச னாயுதித்
தொன்று நம்பதத் தன்பருட் சிந்தைசீரோங்கு பத்திக ளியாவு முடன்பிறந்
தன்று சிற்பரதத்து வம்பாலதாயரும் பெறற்குருதியான முணெண் ணையாய். 26 (594)

வேத மென்மழ லைச்சொற்க ளாயதில் விள்ளு கின்ற சிவாசார மேகொளுங்
கோதி னன்னடை யாக்ருபை யாகமா குடிலை யின் னுயி ராயமை *கோபதி
யேத மிற்றவஞ் செய்வ தமரர்கண் டேது வேண்டிப் **படிவமுற் றானதை
யோத வேண்டு மெமக்கென வுற்றவர்க் கும்ப தத்தினி லிச்சை வைத்தானலன். 27 (595)

*கோபதி - நந்திதேவன், ** படிவம் - நோன்பு.

ஓது நம்மிடத் தேநசை வைத்தெமை யுறுவ தெண்ணின னுட் கருத் தெம்முடன்
போது வீரெனிற் காட்டுகின் றோமெனப்போந்த வர்க்கெதிர் நந்தியின் கண்ணுறப்
பாத தாமரை யிற்பணி நந்தியைப் பார்த்து னக்கெவை வேண்டும் பகரென
நீத விப்பிர மாதி பதவியை நினைகி லேனின் பதம்பெற வேண்டினேன். 28 (596)


வேண்டி னேனெனு நந்தியைப் பார்த்தெழில் வீறு முன்னுட லைப்பரி சித்திடத்
தூண்டு நல்விடை யாக்கொண் டனமினே துண்ணெ னக்குறட் காங்கண நாதனா.
யீண்டி நம்பதத் தன்புடன் மேவுதி யென்று நல்வர மீந்தன மாதலான்
மாண்ட ருங்கணந் தன்னிற் சிறந்துளான் மான வன்னெனை யாமென வெண்ணுதி 29 (597)

                                                             (வேறு)

என்று கடுக்கை யிளம்பிறை சென்னி
துன்றழ லேந்தி துணர்த்தொடை வேய்ந்த
மன்ற நறுங்குழன் மாதுமை யுள்ள
மொன்ற மொழிந்தன னோர்ந்தன னன்றே. 30 (598)

என்றய னோத விருஞ்சிறை யன்னம்
வென்றிகொ ணந்தியின் மேன்மை யுணர்ந்தே
னின்றென தின்ன லிசைத்திடர் தீரு
மென்றடி யேத்தி யியம்பிய தன்றே. 31 (599)

இவ்வகை யன்ன மிசைக்க விரிஞ்ச
னவ்வி மழுக்கர நந்திமு னெய்திச்
செவ்விதின் மாமலர் சேவடி யேத்தி
யவ்வெகி னத்திடர் யாவு மறைந்தான். 32 (600)
                                                        
                                                       (வேறு)

இவ்வணந் திசைமா முகத்தவ னிசைப்ப விணையிலா நந்தியு முரைப்பான்
கௌவையங் கடல்சூழ் மாநிலத் துயரிக் கயிலையங் கிரியினை யனைய
செவ்விய காஞ்சிப் புரியென வுரைக்குஞ் சீருறு தல முள ததினு
மவ்விய மறுக்கு மொருதல முளதா மதன்பெய ரறை குவன் கேண்மோ 33 (601)

                                                      (வேறு)

விலாச காஞ்சி யென்று வான விபுத ரேத்து நகரதிற்
பலாச வின்னிறங்கொ ளம்மை யோடமர்ந்து பண்ணவ
ரெலாஞ் சமூக மாகிவந் திறைஞ்சி யேத்த வின்பமோ 
டுலாச மாம யூர நாத னுற்றி ருப்ப னாமரோ 34 (602)

அந்த நற்ற லத்தி லண்மி யார்ம திச்ச டைப்பரன்
சிந்த ழற்க ணமனு ரஞ்செ குத்த தாள ருச்சனை
சிந்தை யன்பு கொண்டு ஞற்றில் சிறக ரற்ற டைந்துள
நிந்தை நீங்கு மென்று ஞான நிமல நந்தி யோதினான். 35 (603)


அந்த வார்த்தை கேட்டு நந்தி யடிப ணிந்து விடைகொளீக்
கந்த வாச மலரின் மேவு கடவு டன்ன னத்துயர்
சிந்தி யின்ப டைந்த தென்ன சிந்தை யார்வ மோடெழுந்
தெந்தை வாழ்வி லாச காஞ்சி யெகின மேந்தி யுற்றனன். 36 (604)

உற்ற மான்ம கன்ற *னுன்ன மோடு வாண ரேத்திடப்
பெற்ற தால மாந கர்ப்பி றங்கு கீர நதியினீ
ருற்று மூழ்கி விதிவ ழாது ஞற்று பூசை யாற்றிவந்
**தற்ற நோக்கி யெம்பி ரான ருட்ப தத்தி றைஞ்சியே. 37 (605)

* உன்னம் - அன்னம் ** அற்றம் - சமையம்,

எழுந்தி ருந்து தன்கை யெட்டெ டுத்து முச்சி சேர்த்துளத்
தழுந்து மன்பி னாலி ரண்டு கண்க ணீர ரும்பவே
தொழுந்தொ றுந்தொ ழுந்தொ றுந்த னுடன டுங்க வேசிவக்
கொழுந்தை யன்பி னோடு கைகு வித்து வாழ்த்தி னானரோ. 38 (606)

                                                         (வேறு)

சிலையத் திரியார் தவளநகைச் செவ்வா யுமையோ டிடபமிசை
தொலைவற் றொளிருஞ் சுரர்முனிவர் தொகுதி சூழ வந்துனது
கலைமிக் குயருந் துதிகேட்டுக் களிவுற் றனத்தின் கவலொழித்தே
மலைவற் றிலகு மிப்பதியி லரனைப் பதிட்டை செய்யென்றான். 39 (607)

ஏற்றுக் கொடியோ னருண்மொழிகேட் டிதய மகிழ்ந்து மலரடியைப்
போற்றி வணங்கிப் புறம்போந்து பொன்னார் தளிக்குத் தென்றிசையிற்
சாற்றுங் கடிகை யரையளவிற் சார்ந்து மறைநான் கினுமெட்டா
தேற்றும் பரனைப் பரிவுடனோ ரிலிங்க மெனவாங் கமைத்தனனால், 40 (608)

அந்த வகண்ட காரமதா யனைத்து மளிக்கு மருவுருவாய்
முந்த விளங்கு மிறையைமறை மொழிந்த முறையாற் பூசித்தே
கந்த மலரோ னன்னமிசைக் கலைமா துடன்றன் னகரடைந்தா
னந்த வரனைப் படியின் மிசை யறைவர் விரிஞ்சே சுரனென்றே. 41 (609)

இந்தச் சரிதந் தனையன்பா யிதையங் களிக்கக் கேட்டவரு
மந்தக் கறைசேர் மிடற்றிறைவ னருளா ரடிபூ சித்தவருஞ்
சந்தத் தொலைவி லப்பதியிற் சார்பா யிருந்து வாழ்பவரும்
பந்தப் பெருநோ யகன்றுபெரும் பரமபதத்திற் றுன்னுவரால் 42 (610)

                                    பிரமனருச்சனைச் சருக்க முற்றிற்று.

                                                 ஆகத் திருவிருத்தம் - 610


                                             திருமால் பூசனைச் சருக்கம்

இன்ன வாறெடுத் தியம்பிய முனியடி யிறைஞ்சிப்
பன்ன ருந்தவ நைமிச ரெழுந்தல ருறைவோன்
றன்ன ருங்கதை சாற்றினை சக்கர பாணி
யின்ன ருங்கதை யிசையெனச் சூதனு மிசைப்பான் 1 (611)

                                                     (வேறு)

கருணை பொழியு மரீசிதருங் கலைதேர் முனிவன் காசிபனார்
பொருவிற் பொலிதே வியர்விநதை புகழ்கத் துருவை யெனுமடவா
ரரிய மகவைப் பெற்றிடுமா றன்பாய் தவத்தை யிழைத்திடலுஞ்
சுரிமென் குழலார் முனங்கண்வன் றோன்றி நின்றான் றுயர்தீர 2 (612)

மடவா ரோடி யடிதொழுதார் வருமா முனிவ னருள்சுரந்து
பிடிபோ னடையீர் வேண்டுவன பேசி லளித்து மெனப்புகல
சடையார் முடிமா தவவிரண்டு தனையர் தடுத்தற் கருமாற்ற
லுடையா ராக வளித்தியென்றா ளுயர்மா விநதை யெனுந்தக்காள் 3 (613)

கரும்புங்கனியுங் கைக்குமொழிக் கருமென் குழல்கத் துருவை யென்பா
டிரங்கொண் டிடுமோர் நூற்றைந்து சிறுவர் பெறவேண் டினனென்றாள்
விரும்பு மிருவ ருள்ளத்தில் வேண்டும் வண்ணங் கருவளித்து
வரஙடகொ டவத்தின் சூழலிடை வதிந்தானருமா மறையோனே. 4{614) 


பலநாட் கருவைச் சுமந்தெழில்கொள் பனிமென் மொழியா ரிருவோரு
நிலமேற் சிறுவ ருதித்தலின்றி நிகழுங் காலை யோர் நாளி 
னலியா தொருத்தி நூற்றைந்து நவில்மற் றொருத்தி யோரிரண்டு
மிலகா ரண்டங் களையீன்றாரிருமா நிலத்திற் றவமிக்கார் 5 (615)

பயந்த வண்டந் தமைக்காத்துப் பயிலுங் காலை யோர்பகலி
னயந்த மொழிகத் துருவைதரு நற்சூலண்ட முகையவிழ்ந்து
னயந்தாங் காதி சேடனெழின் மருவுந் தக்க கன்முதலா
வியைந்த நூற்று நால்வருமோ ரிணையின் மகளு முதித்தனரால். 6 (616)

மைந்தர் கலைகள் பயின்றுலகில் வருமா ரணங்கண் முழுதோர்ந்து
சிந்தை மகிழ்ந்து சிறந்திடுநாட் டெரிவை விநதை பொறுத்திலளாய்
நைந்த வுளத்தோ டினிவருத னாடா தண்டந் தனைப்பிதிர்த்தாள்
சந்தச் சிதைவிற் றிருமேனி தாங்கு முடவ னுதித்தனனால் 7 (617)


தன்னாய் மதிநேர் முகநோக்கிச் சரீர முழுது முற்றாமுன்
கொன்னா ரண்டந் தனையென்னோ குலைத்தா யதனான் முடமாக
வின்னா ளுதித்தே னாதலினுன் னிளையாட் கேவ லியற்றிடுதி
யென்னா வீன்றா டனைச் சபித்தா னிருதா ளின்றி யெழுந்தோனே 8(618)

மெய்வேர்த் துடல நடுநடுங்கி மிக்கநாணந் தனையலைப்ப
பெய்மே கலையாள் படுதுயரின் பெற்றியறிந்தே யருள் சுரந்து
பையா ரல்கு லுனக்கிளையாள் பணியை யாற்றி யினியெய்தும்
வையார் துண்டக் காளையினிவ் வலிய சாபங் கடத்தியென்றான் 9 (619)

அந்த மொழியைக் கேட்டொன்று மறையா தச்சத் துடனிருப்ப
நந்துமுட லா லருணனென நாட்டுங் குமரன் றினக ரற்குச்
சந்தத் திகிரிப் பரிதூண்டத்தகுஞ்சா ரதியா யடைந்த தற்பி
னைந்த விடையா ளண்டமதை நாளும் புரந்தே யிருந்தனளால் 10 (620) 

                                                            (வேறு)

உற்ற நாடனி லொருபகல் விநதைகத் துருவை
மற்றை சேடிய ரொடுதிரைக் கருங்கடன் மருங்கி
னுற்று நோக்குறு மேல்வையி லுச்சவச் சிரவங்
குற்ற மொன்றிலா மெய்யுடன் குலவிநின் றனவால் 11 (621)

அருண னைப்பயந் தவளிது வெண்பரி யென்ன
வரிநெ டுங்கணாண் மற்றவள் வாற்புறங் கறுப்புண்
டரிவை நீயறி யென்றன டோற்றவ ளடிமை
புரித லாகுமென் றுரைத்தன ளதற்குளம் பொருந்தி, 12 (622)

கிட்டி நோக்குவோம் வாவெனக் கெடுதிநே ரிடுமென் 
றிட்ட மாயா வினைப்பயந் திட்ட வேந் திழையுஞ்
சட்ட மாயிதை நாளைகாண் குவமெனச் சாற்ற
வட்ட மாமுலை விதிவழி மதிமயங் கினளால் 13 (623)

மீண்டு மாளிகை வந்தனர் கத்துருப் பெயராண்
*மாண்ட மைந்தரை யழைத்துறு செயலெலாம் வகுத்துப்
பூண்ட யங்குறும் விநதைதோற் றிடப்புகழ் பரிவா
லீண்டி மையுறுத் திடுமெனப் புதல்வரு மிசைப்பார் 14 (624)

*மாண்ட= மாட்சிமைப்பட்ட


என்ன கூறினை யிதற்கியா மிசைகிலோ மென்ன
வன்னை கேட்டக நொந்துவெஞ் சினத்துட னகில்
மன்ன னாஞ்சென மேசெயன் மகத்திடை மாள்க
வென்ன மைந்தரைச் சபித்தன ளியைகில ரென்றே. 15 (625)

அன்னை யோதிய சாபத்திற் கஞ்சியோர் நாகந்
தன்னை யீன்றவள் சேவடி தாழ்ந்தெழுந் தடியேன்
சொன்ன வாறு செய் குவனெனச் சுவர்க்கநின் றிழிந்த
பன்ன ரும்பரி வாற்புறம் பற்றிநின் றனவால். 16 (626)

பிற்றை நாடனி லருக்கனைப் பயந்தபெய் வளையைக்
கற்றை யாயுள தோகையிற் கறுப்பினைக் காட்டிப்
புற்றி னுட்பயி லரவினைப் பயந்தபொற் றொடியுஞ்
சொற்ற சொற்படி தாதியாந் தொழில்செயக் கொண்டாள் 17 (627)

நறும ணக்குழல் விநதையிப் பணிசெயு நாளி
லுறுமொ ரண்டமு முடைந்ததிற் கலுழன்வந் துதிக்க
மறுமை யின்பய னின்றடைந் தெனமன மகிழ்ந்தாள்
பெறுத லாவதோர் பேறெனன் மக்கடம் பேறே. 18 (628)

இன்ன வாறுமைந் தனைப்பெறும் விநதையை யெழிலார்
பின்னை கண்டுளம் புழுங்கிநீ பெற்றவிச் சிறுவன்
மன்னுமென்மகார் பணியினை மகிழ்வுட னியற்றப்
பன்னு வாயெனப் பணியினைப் பயந்தவள் பகர்ந்தாள். 19 (629)

நீதி யாகுநன் னெறிவழா விநதைதன் சேயைக்
* காதை மேவுகா கோதரக் காதலர்க்கடிமை
பேதி யாதுநீ செய்யெனப் பெற்றதாய் மொழியை
யாதி வேதமென் றுணர்ந்தவ னவர்பணி புரிந்தான்.20 (630)

*காதை=கொலை

நாட்கள் பற்பல கழிந்தபி னம்பியு மீன்றா
டாட்க ளிற்பணிந் தன்னையே நாமிவர் தங்கட்
காட்ப டுஞ்செய லதனையெற் கறைகுவை யென்றான்
வாட்க ணாண்முன நடந்தவை வகுத்திட வுணர்ந்தான். 21 (631)


ஒன்றொர் நாளவர்ச் சுமந்துட னும்பரூர் தாவி
*யென்று வாழ்தரு பதிபுக **விரும்பைக ளியாவுந்
துன்று வெம்மையாற் றுடித்துயிர் சோர்ந்துடல் வெதும்பி
பொன்று வேதனை யுறுதல்கண் டம்மனை புலம்பி. 22 (632)

* என்று= சூரியன் , ** இரும்பை=  பாம்பு

சிந்து வார்திரைச் செம்மலின் செய்யசீ றடியைச்
சிந்தை யிற்கொடு செபஞ்செய மகிழ்ந்துதண் மாரி
சிந்தி னான்மெலி வற்றனர் தெரிந்தில ளாகி
யந்த வித்தகக் கலுழனை யடிமை கொண் டிருந்தாள். 23 (633)

பின்னை யோர்தினம் பிரியமாய் கத்துரு மைந்தர்
தன்னை நோக்கியக் கலுழனோர் விரகுரை சாற்று
மென்னை வேண்டினு மிமைப்பினி லளிக்குதுந் தாதி
யென்ன வேவல்செய் தாயிடர் தவிர்த்திடி னென்றான். 24 (634)

கத்து ருப்பெயர் மாதுதன் காதலர் களித்தே
சுத்த முற்றபுத் தமுதினைத் துய்த்திட வளித்தா
லித்தி னம்மும தேவலை யகற்றுது மெனலும்
வித்த கன்மன மிசைந்தனன் விநதை பால் வந்தான். 25 (635)

எந்தை யெங்குளா னியம்புதி யிமையவர்க் கிறையா
மிந்தி ரன்பதிக் கெய்திநல் லமுதெடுத் தீந்து
முந்து நின்குறை முடிப்பனென் றுரைத்தலு முருகார்
கந்த மாமலர்க் குழலினாள் கருணைபூத் தனளே 26 (636)

கந்த மாதன விலங்கலி னுந்தையார் கசிவான்
முந்து நற்றவ மாற்றினன் மொழிந்துள வமுதை
யிந்த மாநிலத் தெடுத்துநீ யெய்திடு மளவுந்
தொந்தி யிற்சுடும் பசிக்கிரை சொல்லுவன் கேட்டி 27 (637)

இந்து வார்சடை யெம்பிரா னடிதொழு துளத்திற்
பந்த நீங்கிய தவர்பயி லிமயமால் வரையிற்
பந்த வேடரெண் ணிறந்தவர் பயிலுவர் பருகி
யந்த நல்லமு தேந்திவா வெனவிடை யளித்தாள். 28 (638)

கேட்ட பன்னக வைரியுங் கேழ்கிள ரனைதன்
றாட்டு ணைக்கணேவீழ்ந்தனன் சாற்றின ளாசி
சேட்டை யூதையாற் செறிதரு வரைகளுஞ் சிதற
வாட்டிக் கந்தமா தனவரை யடைந்தனன் வலியோன் 29 (639)


                                               (வேறு)

ஆங்கிவ னணுகியே யந்த மால்வரைப்
பாங்கெலா முணர்ந்தபின் பயந்த தந்தையார்
தாங்கிய பெருந்தவச் சாலை யெய்தியே
பூங்கழல் பணிந்தனன் பொருவின் மைந்தனே. 30 (640)

வருகையின் முன்னரே மைந்தன் றன்வலி
பெருகிடு மாறெலாம் பெயர்ந்த றிந்தவ
னிருகையாற் றழுவியாங் கினிய வாசிசொற்
றுருகினான் சிந்தையு முடலு மாமுனி. 31 (641)

வந்தவா றனைத்துமம் மாமு னிக்கிவன்
சிந்தையார்ந் திடும்படிச் செப்பி நிற்றலு
மந்தணன் வாழ்த்திநல் லமுது வவ்வியே
யுந்திமீண் டிடவர முதவி னானரோ 32 (642)

மைந்தநீ போதியென் றுரைப்ப மற்றவன்
கந்தமா தனகிரி கடந்தி மைப்பினிற்
சிந்தையி லன்பிலாச் சிதடர் வாழ்தரு
மந்தநல் லிமவரை யடைந்து ளானரோ 33 (643)


                                                              (வேறு)

ஆறலை கள்வ ரருந்தவர் தங்கட்
கூறுசெய் துட்ட ருவர்த்துழி வாயாற்
கூறிடு வஞ்சர் கொடும்பழி பாவ
மேறிய மெய்ய ரிருந்தனர் கண்டான். 34 (644)

கண்டிடு புள்ளர சுங்கனி வாய்நல்
லுண்டி கிடைத்தென வுள்ள மகிழ்ந்தக்
கண்டக ரைச்சிறு காலி னெடுத்தே
யுண்டனன் வெம்பசி யோய்ந்திட வன்றே 35 (645)

ஆங்கொரு வனையயில் கால்கள னழலத்
தாங்கிய துயரொடு தரைமிசை யுமிழப்
பாங்கரின் மறையவ னெனவொரு படிவந்
தாங்கி *யரிப்பகை தன்னெதிர் நின்றான். 36 (646)

* அரிப்பகை - கருடன்

பூசர னாகிய புனிதனு மலணே
யாசறு தார்க்கிய னடியிணை தாழா
தேசுறு வானவர் தேய மடைந்தே
வாசவன் மன்றில் வதிந்தனன் மன்னோ . 37 (647)

பொன்னவி ருஞ்சடை புங்கவர் சூதன்
றன்னிரு சேவடி தாழ்ந்து வணங்கி
யென்னிவ னந்தண னாகிய தெங்கட்
கன்னதை யோதென வத்தவ னோதும் 38 (648)

கராங்குல வியபைந் தடமும் வண்காவுங் கனகவான் மாடமுஞ் சுலவுங்
கிராடமா நகர்வா ழந்தணர் குலத்தோன் கிளர்மறை யாகமஞ் சிறந்த,
புராணமுற் றுணர்ந்தோனீதியா சாரம் பொறைநிறையறிவுடை யவனித்
தராதலம் புகழுங் கீர்த்தியை வகித்தோன்சனாதர னெனப்பெயர் தரித்தோன் 39 (649)

*பாம்பழுங்கழுவ மகல்புற வடிகண் படிவமொண் டொடையிள வரம்பை
காம்பெனுந் தோளி கற்பினிற் சாலி கல்வியிற் கலைமக ளுணர்வி
லாம்பரி சுரைசெய் யமைச்செனத் தக்கா ளருநடையினிலன மனையாள்
சாம்பவி யெனுமன் னான்குல மனைவி தன்னோடு மினிதுவாழ் காலை. 40 (650)

* பாம்பு - சர்ப்பம். அழுங்கு - ஆமை, அழுவம் - கடல் அகல் - அல்குல், புறவடி - பாதம்,
கண்= நேத்திரம். பாம்பை ஒத்தது அல்குல், ஆமையை ஒத்தது பரதம், கடலை ஒத்தது.
நேத்திரம்.

அன்னவர்க் களவின் றாகிய நிதியுண் டாயினு மருமக வில்லாப்
பன் னருந் துயராங் கடலினு ளழுந்திப் பருவர லுற்றிடு நாளி
லுன்ன ருந் தான தருமமெண் ணிலவா வுஞற்றிடு பருவமொன் றினிலேர்
மின்னிடை வீங்கி முலைமுகங் கறுத்து மிளிர்வயா வுற்றன ளன்றே.41 (651)

பாற்கடல் வருந்தி விடமதை யீன்ற பரிசெனச் சூதவின் கனியிற்
றோற்றிடு கிருமி போலுமோர் மைந்தன் றோன்றவாங் கவர்கொளு மகிழ்வி
னாற்றலை யென்னோ வுரைப்பதன் னவர்க ளருமையா யவன்றனை வளர்க்கக்
கூற்றென வளர்ந்தான் சுமித்திர னெனப்பேர் கூயழைத் தின்பினிற் குளித்தார். 42 (652)


களித்தினி திருக்குங் காலையி லீன்ற கான்முளைக் கைந்தெனும் பருவத்
தளித்தவ னிறந்தா னன்னவன் மனைவி யாற்றல ளாகிநீர் விழிக
டுளித்திட வரற்றித் துயருழந் தாவி துறந்தன ளன்ன வன் றன்னை
யளித்திடற் குரியா ராருமில் லவனா யரும் பெறற் றுன்பினி லாழ்ந்தான் 43 (653)

நாள்சில கழியச் சுமித்திர னென்பா னனிபெருஞ் செல்வவே மாப்பால்
வாள்புரை கண்ணார் மயக்கினுட் பட்டு வருந்திமுன் றந் தைசே கரித்த
நீள்பெருஞ் செல்வ மனைத்தையு மழித்து நேடிய முற்பவ வினையாற்
கோள்நிறை யுள்ளக் கொடியரைக் கலந்தே குணமிறுன் மதியின னானான் 44 (654)

தங்குல வொழுக்கந் தவறியா ருயிரைத் தடிந்ததன் *றடியினைப் பருகித்
துங்கமா மறிவைக் கெடுத்திடு மதுவைச் சோர்வற நுகர்ந் துகா மத்தான்
மங்கையர் மோக வலையினுட் சிக்கி வன்மன வேடரைச் சார்ந்து
பொங்கிய கானிற் புகுந்தஞ ரிழைக்கும் புளிஞர்தங் குலத்தினுட் புக்கான். 45 (655)

*தடி=மாமிசம்

போந்தவன் * சவரர் தம்மொடு வனத்திற் போய்ப்பல விலங்கினை மாய்த்து
வாய்ந்தவிம் மிதசு கோத்திர முனிவன் மகிமையாய்ந் தறிந்திடா தணுகி
மாந்துதல் வேண்டு மதுவுடனிந்த மாமிசந் தனை யென விழியிற்
காந்திடு சினமீக் குறவொரு சாபங் கழறுவ னின் னண மாதோ, 46 (356)

பீடுறு மறையோர் தங்குலத் துதித்தும் பேரறி வொழுக்கமா சாரங்
கூடுத லின்றிக் குறவரோ டணைந்து கொடும்பவத் தொழிலை மேற்கொண்டு
காடுறு தலினித் தசைமது நுகருங் **கவுண்டனா குகவெனக் கலங்கி
மூடனா மடியேற் குறுபுலைத் தன்மை முடியுநா ளோதெனப் பணிந்தான். 47 (657)

**சவரர்=வேடர், **கவுண்டன்=புலையன்

பணிந்தவக் காலை யுளமகிழ்வோடு பகருவ னாட்சில கழியத்
தணிந்திடாப் பசியால் விநதையின் மகனுஞ்சார்ந்துனை யுண்டியென் றெடுத்துக்
கணந்தனி லயிலக் கண்டமுற் றுருப்பங் கனன்றிட வுமிழ் வனவ் வேலை
யணைந்தவிச் சாப மகன்றுவே தியனா யடைகுவை விண்ணுல கென்றான். 48 (658)


அத்தவன் மொழியாற் புலமைவிட் டொழிந்தே யந்தண னாகி விண் ணடைந்தான்
இத்திற மவன்றன் செயலென முனிவ ரின்ப முற் றெம்பவ மறுக்கும்
வித்தக முனம்நீர் விளம்பிய காதை விரித்திடல் வேண்டுமென் றடியிற்
பத்தியோ டிறைஞ்ச வேத நூற் பகிர்ந்த பண்ணவன் றனையுனி யுரைப்பான். 49 (659)

                                                        (வேறு)

கதக்கொடுஞ் சரத்தாற் கொல்லுங் கடுந்தொழி லியற்கை பூண்ட
மதக்கொடுங் கசடர் தம்மை வரையறப் புசித்து மிக்க
விதத்துறு தாதை யோடு விநதையை நினைந்து விண்ணோர்
பதத்திடை புகுவ துன்னிப் பறந்தனன் பறவை வேந்தன். 50 (660)

வாயுவு முட்கப் பானு வழிதிகைத் தஞ்ச வஞ்சாக்
காயழற் சமனும் வென்றிக் கலைமதித் திங்க டானு
மேயநற் றலையி றைஞ்ச விரும்புவி நடுங்கத் திண்மைத்
தாயமென் சிறகர் வீசி யமரர்தம் பதியிற் புக்கான் 51 (661)

அக்கணம் மமுதைக் காக்கு மணிதிறற் காவ லாளர்
தொக்குழி யிருப்பத் தேவர் தொகுதியு மிமைபோற் காக்க
வக்கினித் திரளி னாய வரணிடை யமுதங் கண்டே
கைக்கொளப் புகுந்தா * னாகர் கடுஞ்சமர் புரிந்தார் மாதோ 52 (662)

*நாகர்=தெவவர்

                                                    (வேறு)

மழுவி னாற்சிலர் வண்கதை யாற்சில
ரெழுவி னாற்சிலரீட்டி யினாற் சிலர்
கொழுவி னாற்சிலர் கூர்ங்கணை மாரிகள்
பொழிவி லாற்சிலர் போர்புரிந் தாரரோ. 53 (663)

தென்றி சைக்கணிற் றேவரு மேற்றிசை
நின்ற திக்கி னி ருபருங் கீழ்ப்புறம்
வென்றி யெண்மர் விபாகர ராதியோர்
சென்று வீழச் சிறகசைத் தானரோ. 54 (664)

ஈது கண்டழன் றிந்திரன் கான்முளை
மோது வெஞ்சமர் மூண்டு சரங்கொடே
காதி வீசக் கடுஞ்சிறைக் காற்றினாற்
போத நொந்து புறங்கொடுத் தோடினான். 55(665)

தவள மால்வரை தாட்கொடு போந்தென
கவள முண்ணுங் கடத்தயி ராவதம்
பவள வாய்விந தைத்தரு பாலன்மேற்
* சவளம் வீசிச் சமர்செய் திளைத்ததே 56 (666)

*சவளம்= ஈட்டி

ஒருவர் போன தொருவ ருணர்ந்திலார்
செரும லைந்தவர் சிந்திய பின்னரின்
மருவுநல்லமு தந்திக ழும்வயிற்
பொருவி றந்தவன் போய்ப்புகுந் தானரோ 57 (667)

செந்த ழற்பிழம் பொன்று செறிதலு
மந்த வானதி நீர்கொ டவித்தமு
*தந்த ரத்தி னணுகலும் வாளரா
** தொந்தங் காப்பச் சுடர்க்கண் சிவந்தனன். 58 (668)

*அந்தரம்= இடை, **தொந்தம்=இரண்டு

வாள ராவிரண் டுந்தலை வாலுறத்
தாளி னாற்கிழித் தின்னுயிர் சாய்த்தபின்
மீளி மொய்ம்பன் விரும்பமு தந்தனைக்
கோளி லாக்கரங் கொண்டு களித்தனன். 59 (669)

அகல்வி சும்பி னடலுட னேகலும்
நகம றுத்தவ னண்ணிச் சகித்திலன்
இகலு டன்வயி ரந்தனை யேவினன்
ககப திச்சிற கோர்மயிர் காய்ந்ததே. 60 (670)

அன்ன போதம ரர்க்கிறைக் கோதுவா
னுன்ன லாதெனை நீவந் தொறுத்தனை
முன்ன வன்பணி யும்முனி யங்கமு
முன்னி நெஞ்சி லுதவின னோர்மயிர். 61 (671)

ஏவு நின்படை யேண்டனுக் கீந்திலன்
மேவி வைகுதி யென்று விருப்புடன்
றாவில் சீருடைத் தார்க்கியன் கூறலுந்
தேவர் கோனினைந் தான்றிரு மாலையே  62 (672)


                                        (வேறு)

நிறத்தபசுந் துகிறிகழப் *பதும மோங்க
          நீண்டகரத் தைம்படையு நிலவு காட்ட
பொறுத்தசெழுந் துளவுவிரை கமழ **கேள்வி
         பொருந்துகுழையிரண்டுமிரு சுடர்களேய்ப்ப
வெறித்தகவுத் துவமணிமார் பிலங்க வண்டத்
         திமையவரு மிருடியரு மிறைஞ்சி யேத்த
நெறித்தகரு டனுக்கெதிர்வந் துதித்து நின்றா
        னீளுலகோ ரடியளந்த நீல வண்ணன்.  63 (673)

* பதுமம் - முடி. ** கேள்வி - காது

அடல்வயிரத் திண்டோள்தார்க் கியன்வ ணங்கி
       யடிதொழுது நின்றிடலு மமரர் வேண்டக்
கடல்கடைந் தோனீதுரைப்பான் கருணையன்பாற்
       கடைப் பிடித்தநெறி முறையாற் கதியான் மிக்க
மிடலுடையோ யுனைநிகர்வா ரிலையென் றெண்ணி
       மேவியுனைக் காணவந்தோ முனது ளத்தி
னிடரொழிய நீவேண்டும் வரங்களெல்லா
       மீண்டளிப்போ மெனமுனிசே யியம்பு கின்றான்.  64 (674)

படியதனி னெறிமுறைமை படைத்து நின்றன்
       பதமலரி லன்போங்கிப் பன்னாள் வாழக்
கடிகமழுந் துளவுடையோய் தருகவென்னக்
       களிப் பொடளித்தவனு ரைப்பான் கருட னேயென்
னடிதரிக்கு மூர்தியுமாய்க் கொடியு மாய்நீ
       யாகுகநின்பிளி னிகரொருவ ராகா ரென்றான்
முடிமதன னுறழ் வனப்பான் மகிழ்ந்தவ் வாய்மை
      முடிதரித்தா னிந்திரனு மொழிவ தானான். 65 (675)

முண்டகத்தா ரணிமார்ப வென்னை முன்ன
      முன்னவனென் றறைந்தவித மொழிக வென்னத்
துண்டமதி வேணியரற் கன்பு பூண்ட
      தூயதவக் காசிபர்க்குத் துணைவி யான
கண்டனைய மொழிவிநதை மைந்த னான
      காரணத்தா லுனதனுச னானே னென்று
கொண்டனிகர் மேனியனா ரருள்கொண் டோனுங்
       கூறினான் போகிமகிழ் கொண்டா னன்றே.  66 (676)

எனையளித்தா ளதிதியுனை  விநதை யீன்றா
      ளிருந் தாதை நமக்கொருவ னாக வெம்மூர்
தனையணுகி வானவர்த முயிர்கொண் டிப்பாற்
      றாழியொடு மழுதேந்திச் சார்த னன்றோ
வனமுடையை யறிவுடையை நெறிவ ழாத
      வளனுடையை யுனக்குரைக் கும் வழியொன் றுண்டோ
வினியவமு தெமக்கலது பிறர்பா லீந்தா
     லிசையாமோ வெமக்கருளி யிசைகொ ளென்றான் 67 (677)

மகபதிசொற் செவிப்புகலு மகிழ்ந்தங் காந்தண்
     மலர்க்கரங்கூய் வய வேந்தே வாய்த்த வன்னை
யகமெலியுங் குறைதவிர்க்க வவள்பின் வந்தா
    ளளித்தவராக் குழுவினருக் கமுத மீவா
னிகலுடன்வந் தனனென்சொற் றவறாய்ப் பீழை
    யெய்திடினு மெய்து கவிங் கென்னை யீன்றாள்
சகமதனிற் பணியியற்றிச் சுகமிழந்து
    சார்ந்திருத்த லபிமதமோ 'சாற்றா யென்றான் 68 (678)

மலையனைய விருபுயத்தா னுரைத்த மாற்ற
    மகபதிகேட் டோருறுதி வகுக்க லானா
னலையமுதை யவர்க்களித்து னன்னை யோடு
    மடிமைதவிர்த் திட்டபின ரந்த வான
நிலையமுதை யான்கவர்வ னவர்க்கெய் தாம
   னீளமரர்க் காயிதையிந் நெறிசெய் யென்றா
னலைதலிலா வுவணனதற் கிசைந்து நன்றென்
    றருள் புரிந்தான், போகிமகிழ்ந் தறைவ தானான். 69 (679)

அன்புடையா யெனக்கினிய கேண்மை வன்மை
    யாருயிர்நல் லனு சனிவை யான தாலே
யின்புறநீ வேண்டும்வரம் யாவு மின்னே
   யீவனிசைத் திடுதியெனக் கலுழன் கேட்டே
துன்பிழைத்த கருஞ்சுருண்மென் கூந்தற் செவ்வாய்த்
   துவரிதழ்கத் துருவைதருஞ் சுதர்க ளெல்லாம்
பின்பெனக்கே யுணவாகிப் போகும் வண்ணம்
    பேசுகவென் றடி தொழுதான் பிழையொன் றில்லான். 70 (680)

அந்தவிதம் வரமுதவி வாழ்த்தி வானோ
    ரகமகிழ்ந்தா ரச்சுதன்மீண் டடைந்தான் போகி
தந்திரமா யருவாகி வரப்புள் வேந்து
    தாரணியி லடைந்தமுதந் தன்னைக் காட்டிப்
பந்தமுறுந் தாயேவ லகற்றி யிப்பாற்
    பசுந்தருப்பை மிசையமுதைப் பதிய வைத்து
முந்தமுழு கிச்சுசியா யருந்து மென்றே
     மொழிந்தகன்றா னன்னையுடன் மொய்ம்பின் மிக்கான். 71 (681)


அக்கணமே நீராட வனந்த னாதி
    யரவமெலா மகலவரி யணைந்தாங்குற்ற
தக்கசுதைத் தசும்பதனைக் கவர்ந்து வானி
    சார்ந்தமரர் காப்பாக்கித் தருக்குற் றான்பின்
புக்கவர்மீண் டமுதிலதாற் புலம்பி யுற்ற
   புல்லினையப் புயங்கமெலாம் பொருந்த நாவா
னக்கவிரண் டாயதமு தேந்த லாலே
    நற்புனிதந் தருப்பையுநண் ணியது மாதோ, 72 (682)

* அனந்தரம்பன் னகவைரி யருள்சே ரன்னை
     யடிதொழுது நிகழ்ந்துளவா றனைத்து மோதி
**வனந்தருபைந் துளவணிந்தோன் மலர்த்தாள் போற்றி
     மறையவனை யயின்ற வெப்ப வாதை நீக்கக்
கனம்பெறுவை குந்தநகர் காண வேண்டுங்
     கருணையுடன் விடையருளிக் காப்பா யென்றான்
மனந்தனின்மா மகிழ்வெய்தி வருத்த நீக்கி
    வருவாயென் றன்னை வழங்கி னாளால்  73 (683)

* அனந்தரம் - பின்பு  **வனம் - அழகு.

அவ்வுரைகேட் டகமகிழ்ந்தே யசல மெல்லா
     மலைந்திடப்பொற் சிறக சைத்தா காய மேவி
கொவ்வையிதழ்ப் பனிமொழியங் குவவுக் கொங்கைக்
     கோற்றொடிமா மலர்த்திருவைக் கூடி நாளுந்
தெவ்வருயிர் செகுத்திடுமால் சிறந்து வாழுந்
     திவளொளிகால் வைகுந்தஞ் சேர்ந்து வாச
மவ்வனகை விநதைதரு மைந்தன் சீர்சான்
    மாயவனைப் பணிந்திதனை வகுக்க லானான். 74 (684)

உலகனைத்து மீன்றவனை யீன்ற வுந்தி
    யுடையவனே யும்பரிடர் தவிர்ப்பான் வாரி
யுலையநெடு மந்தரமிட் டுரகத் தாம்பா
    லுயரமுதங் கடைத்தளித்த வுரவோய்வேத
நிலையுணரு மறையவனை யயின்ற தாலென்
    நெஞ்சினிடைப் புழுக்கமிக நிறைந்த வந்நோய்
பலகலையு நான்மறையும் பழிச்சும் பாத
    பங்கயத்தோ யகற்றிடெனப் பணிந்து நின்றான். 75 (685)


விரைகமழ் துளவத் தாமம் வேய்ந்தவ னதனைக் கேட்டுத்
தரையினிற் றீமை யெல்லாஞ் சார்ந்திட விருந்தா ரேனுந்
திரைகட லுலகில் யார்க்குஞ் சிறந்தவர் மறையோர் மற்று
முரைதரு மாதி சைவ வுத்தமன் மிசைந்தா யந்தோ  76 (686)

உரமுறு முனது கண்ட முருப்பமிக் கடைந்து துன்ப
மருவிய வந்நோய் தீர மானயில் மானுங் கண்ணித்
திரிபுரை கேள்வன் பாங்கர் சேர்தும்நீ வருக வென்னா
கரிசறு கலுழ னோடு கரியவன் கயிலை சார்ந்தான். 77 (687)

நெடியவன் கயிலை காக்கு நீண்டமுடி நந்தி யெம்மா
னடியினில் வணங்கி யுற்ற வனைத்தையு மொழியக் கேட்டுப்
படியினி லன்றி யிந்தப் பவமொழி யாது கன்றா
லடிபட விளவெ றிந்தோ யறைகுவண் கேட்டி யென்றான் 78 (688)

வசுந்தரை யதனின் மிக்க வளங்கெழு தலங்க டம்மி
னிசைந்தரன் வீற்றி ருக்கு மிருந்தல மொன்றுண்டந்த
விசும்பள வுயர்ந்த கீர்த்தி விலாசகாஞ் சியின லாது
பசுந்துள வணிந்தோ யிந்தப் படரக லாது கேண்மோ 79 (689)

அப்பதி யடைந்து நீயே *ரம்மையோ டினிது வாழு
மொப்பிலா மாயூ ரேச னுயரடி யருச்சிப் பாயேற்
செப்பருங் கலுழன் கண்டத் தீயொழிந் தகலு மின்னே
யிப்பரி சியற்று கென்றா னிமையவர் வணங்குந் தாளான். 80 (690)

* ஏரம்மை - அழகம்மை 

நந்தியிவ் வாறு கூற நான்முகன் றன்னை யீன்ற
பைந்துழாய் மார்ப னுள்ளம் பரிவுடன் விடைகொண் டேத்திச்
சிந்துசூழ் புவியி னந்தி செப்பிய விடத்தே நீத்தோன்
மைந்தனாங் கலுழ னோடு மகிழ்வுட னடைந்தா னன்றே. 81 (691)

*பாடலி நுகர்ந்தே யாறு பதங்கணற் சுருதி கூட்டு
நீடிய பசுமென் றோகை நிலவெறி சுகமும் பூவை
யோடிளங் குயிலும் பண்ணா ரொலிகெழு கீத மோதுந்
தோடவிழ் வாசப் பூவின் றுணர்கெழு சோலை சேர்ந்தான் 82 (692) 

*பாடலி - தேன்

கோங்கரும் புதன மாடக் கொடியிடை துவண்டு வொல்கத்
தேன்றுளி வெயர்வு சிந்தச் சிலீமுசு மிசைகள் கூட்டப்
பூங்குயில் கழையிற் பாடப் புயனிறத் தவன்மு னின்று
மாந்தளிர்க் கரத்தை நீட்டி வனமக ளாடி னாளால் 83 (693)
 

இந்நகர் திகிரி யேந்து மிறையவ னடைத லாலெத்
தொன்னக ரெல்லாம் போற்றச்சுகப்பய னடைந்தே னென்னி
னன்னல முறுவோர் யாவர் நானிலத் தெனப்பூ மாது
பொன்னிகர் பொரியைச் சிந்தல் போன்றன சோலைப் பூக்கள் 84 ( 694)

நிலமகட் கேள்வற் கன்பாய் நிறைத்தகா வணம்போற் செவ்வி
நலமிகு மலர்ந்த சோலை நண்ணிநோக் கினனவ் வேலை
சலமொழி தவத்தோர் பன்ன சாலையு மகமுந்தூய
பொலனுல கத்தோர் தங்கும் பொலிவுங்கண் டதிச யித்தான் 85 (695)

                                                (வேறு)

அவ்வயின் வாழ்தரு மந்தணர் வானோ
ரெவ்வமின் மாதவர் வந்தடி யேத்த
நவ்வி விழித்திரு நாதன் மகிழ்ந்தே
நவ்வி கரத்தனை நாடினன் போனான். 86 (696)

வெற்றிகொள் வானவர் வேந்தும் வணங்கப்
பற்றை விலக்கிய பண்ணவ ரோடுங்
கற்றை மயிர்ச்சடை கண்ணுதன் மூர்த்தி
குற்றமி லாதமர் கோயி லெதிர்ந்தான். 87 (697)

அளந்திடு தற்கரி தாய்மறை நான்குந்
தளர்ந்து மெலிந்த தனிச்சுட ராகி
வளர்ந்து நிமிர்ந்துயர் வானிறை கின்ற
களங்கமில் சோதியை யன்பொடு கண்டான் 88 (698)

வந்திடும் யோகியர் மாதவ ருவண
னிந்திர னாதிய ரியாரும் வியந்தே
மந்திர வித்தை வணங்கி வழுத்த
விந்திரை நாயக னின்ன துதிப்பான். 89 (699)

                                    (வேறு)

ஆதியே யண்ட மனைத்து நிறைந்தொளிருஞ்
சோதியே வானோர் தொழுதேத்து மாதுமையின்
பாதியே யன்னருளப் பங்கயத்தில் வீற்றிருக்கு
நீதியே யுன்பெருமை யாரே நிகழ்த்துகிற்பார் 90 (700)


சேலொத்த கண்ணா டிகைக்கத் திரையிலெழு
மாலத்தை நேரி லமுதா யருந்தியும்ப
ரோலத்தை நீக்கியரு ளுன்பெருமை யோதஞ்சூழ்
ஞாலத்துள் யாரே நவில வலனுடையார் 91 (701)

எண்ணரிய பல்லுயிரி லெங்கு நிறைந்து மறைக்
கண்ணரிய துண்மை யணுவாய்த் திரிபுரத்து
நண்ணலரைக் காய்ந்த வுன்ற னகைத்திறமிம்
மண்ணுலகில் யாரே மதிக்குந் திறமுடையார். 92 (702)

என்றே பலவா யியம்பித் துதித்திடலு
நன்றே யிவனுளத்தி னாட்டியவன் பென்னவரன்
குன்றே பயந்தருள்பொற் கொம்பனையா டன்னுடனுன்
முன்றோன் றினமால் மொழிதுதியைக் காணெனலும். 93 (703)

மாண்டகுசீர் முத்த மணியேய் முறுவலுமை
காண்டரலு முள்ளக்கனிவோ டதிசயித்தென்
னாண்டவனே யின்னே யருள் செய் திடுகவவன்
வேண்டியவா றென்னா விளம்பித் தொழுதிடவும். 94 (704)

                                           (வேறு)

மறியும் வாண்மழு வுங்கரம் வயங்குற மதியும்
வெறிகொள் வார்சடை மீதினில் விளங்குறப் படத்திற்
பொறிநெ ருங்கிய பணியணி பூண்டுமை யோடு
மிறைவன் வானவ ரேத்திட விடையினில் வந்தான். 95 (705)

அரிய ரன்றிரு வடியினி லன்பொடு வணங்கிப்
பரவி நின்றனன் பரமனும் பரிவுடன் மகிழ்ந்து
விரவு பங்கயக் கைகளான் மெய்யெலாந் தடவி
வரைவின் மாமணித் தவிசிருத் தின்னணம் வகுப்பான். 96 (706)

பகரும் வேதமா மொழிகளாற் பழுதிலா வன்பி
னிகரி லாதெனைத் துதித்தலி னின்னையார் நிகர்ப்பார்
புகரில் மொய்ம்பநீ புந்தியி லோர்ந்திடும் பொருளைப்
பகர்தி யென்றலு மீதெடுத் துரைத்தனன் பரிந்தே. 97 (707)

சகந்த னின்மிகு மொய்ம்பினிற் சமமிலா விந்த
சகுந்த ராசன்மென் மிடற்றுறுந் தணிவிலாப் புழுக்க
மிகந்தி டும்படிக் கருள்செய வேண்டுமென் றிரக்க
நகந்த ருங்கொடி நாயக னன்பொடு நயந்தே. 98 (708)


பரிமு றுக்கவிழ்த் தின்னிசை புரிந்துதா தளைந்து
வரிம துக்கொளுந் தாமரை மாலையன் மிடற்றி
னெரிய வித்தன னின்றுதொட் டாயிடைத் தவள
வரியி யைந்திடு மவன்றனை வாகன மாக்கி  99 (709)

உரைசெ யும்பரூ ரொத்துவா னுலவிய வுசிதப்
புரிசை சூழுமித் தாலமா புரியிலெஞ் ஞான்றும்
விரைசெ யங்கருங் குழலிலக் குமியுடன் மேவி
சரச மோடிருந் திடுகவென் றிறையவன் சாற்றி. 100 (710)

நாட ரும்பர மாகிவிண் ணவர்தின நயக்கும்
வீட லில்லருஞ் சோதிலிங் கத்தினுண் மேவிச்
சேட னாதிய வறிஞருந் துதித்திடத் தேவ
ரேட விழ்ந்தபூ மழைபொழிந் திடவினி திருந்தான். 101 (711)

இமிலு டைச்சின விடையவன் மொழியினுக் கியைந்து
சமமி கந்தவத் தற்பர னடியினிற் றாழ்ந்து
நிமல மாந்திருத் துளவணி * நிறமுடைத் திருமா
னிமிரு மாமணிப் புரிசையின் வாயிலை நீங்கி 102 (712)

*நிறம் - மார்பு

வருண னாசையின் வாளிமூன் றோடிய தூரத்
தருண மாமுடி யச்சுத னமரர்கள் பரவத்
தருண மாமலர்த் தையலோ டணிபெறச் சார்ந்து
கருணை கூர்ந்தெழிற் ககபதி யுடனமர்ந் திருந்தான். 103 (713)

அவனை லக்குமி நாரண னென்னவே யலைசூழ்
புவியி லுள்ளவர் புகலுவர் பொன்னடி மலரைக்
கவினு றத்திரு மஞ்சன மாட்டினோர் கருதும்
புவன போகமோட் சங்களைத் தந்தவர்ப் புரப்பான். 104 (714)

இந்த மாக்கதை யிசைத்தவர் கேட்டவ ரெவரு
மைந்தவர் மாநிதி மனைமுதல் வுளனெலாந் துய்த்துப்
பைந்து ழாய்திருத் தாமமார் பண்ணவன்வாழ்வை
குந்த மேவியா நந்தவா ரிதியினிற் குளிப்பார். 105 (715)


                  திருமால் பூசனைச் சருக்க முற்றிற்று.

                       ஆகத் திருவிருத்தம் - 715.

                                     தக்கன் பழி தீர்த்த சருக்கம்

தாதலர் கோதை யிலக்குமி நாயகன் சரித மெனுஞ்சுவையார்
தீதறு தெள்ளமு தைச்செவி வாயில் தெவிட்டுற மாந்தியிறும்
பூதை யடைந்தன மேல்சிறு விதிகதை புகலென நைமிசம்வாழ்
மாதவர் வேண்ட வரம்பெறு சூதன் வகுத்திவை யோதுவனால் 1 (716)

முந்தொரு நாடன தூரி லதீதர் முனிக்கண மும்பரவக்
கந்த மலர்ப்பிர மன்றவி சேறி கனம்பெற வைகினனா
லந்த பதத்தி லவன்றரு மைந்தரீ ரைவரி ல்தக்கனவண்
வந்தர விந்த பதந்தனை நெஞ்சில் வழுத்தி வினாவினனே. 2 (717)

முன்னவ னாயம ரர்க்கிறை யாய்திரி மூர்த்திக ளுள்ளுயர்வாய்ப்
பன்னரு மெவ்வுயி ருக்குயி ராயமர் பண்ணவன் யாவனென
வன்னிற மேனிகொ ளத்தனும் யானு மருஞ்சம ராற்றுழியோர்
வன்னி சிலோச்சய மாகி வளர்ந்தவன் * வானுற வாழிறைவன் 3 (718)

*வானுற= மேன்மை பொருந்த

என்றய னோதவொர் கன்ம மிழைப்பவ னிருதொழி லாற்று முமக்
கென்றுமில் வன்மை யடைந்தமை யென்கொ லெனச்சுத னேயிதுகே
டுன்றிய பல்லுயி ரோடெமை வானவர் தொகுதியை யீற்றிலழித்
தென்று மிருப்பவ னன்றியு மெம்மு ளிருந்திரு தொழில்புரிவான். 4 (719)

எம்மொடு மொருவ னெனப்பெயர் தாங்கி யியற்றுவ னோர் தொழிலைப்
பொம்ம லுறும்முயிர் தோறு மரும்பில் பொருந்திய வாசமென
வெம்மரு ணாத னிருப்பன வன்மறை யாவு மெமக் கருளச்
செம்மைய தாயினி தோர்ந்தன மஃதில் சிறந்தவ னெம் மிலரோ. 5 (720)

ஆதலி லன்னவ னேயிறை யாகு மருந்தளை சூழணுநாங்
காதலி லன்னவ னருள்பெறு மடியவர் கருதிய தெய்துவராற்
சூதினை யன்ன முலைச்சயி லந்தரு தோகை யிடத்திலுறுங்
கோதி லரன்றனை யடைகுதி யென்றனன் குளிர்மலர் வாழ்குரிசில் 6 (721)


நாட்டமொ ரெட்டை நாயக னன்பி னவிற்றுதல் செவிபுகலும்
பாட்டளி துதைமது *மதலை யணிந்திடு பரனிறை யெனவோர்ந்து
வாட்டமின் மானத வாவி யடைந்ததில் வருடமொ ராயிரமாய்
நாட்டமொர் மூன்றுடையானை யருந்தவ நாடி யியற்றினனால் 7 (722)

*மதலை=கொன்றை

இன்புறு மாதுமை யோடிட பத்தி லிவர்ந்தரு ளெம்மிறைவந்
தென்பெற வேண்டினை யோதுதி யென்ன வெழிற்பத மலரடி வீழ்ந்
துன்பணி தேவர்க ளென்பணி செய்யவு முமைமக ளாகவுநீ
யென்* மரு காகவு மருள்செய வேண்டு மெனத்தொழு தோதினனால்  8 (723)

*மருகு= மருமகன்

*அறுகறல் தும்பை யணிந்தவ னன்ன தளித்து மறைந்தபினர்
நறைகெழு மாமல ரோன்புரி தக்க நகர்க்கர சாய் **முல்லைக்
கிறையவ ளாகு $மறைக்கொடி வேட்டொ ரிரண்டு சகத்திரமாங்
கறையறு காளைய ரீன்றிரு பானெழு கன்னிய ரீன்றனனால் 9 (724)

*அறுகு= அறளி,  **முல்லை=கற்பு $மறைக்கொடி= வேதவல்லி

அந்தமு வொன்ப தணங்கிளை *ராம னகங்களி தூங்கவளித்
திந்துவை நோக்கி யியம்புவ னோர்குறை யின்றி சமத்துவமாய்
சந்ததம் வாழுதி யென்றரு ளோடுரை சாற்றி விடுத்தபினர்
நிந்தையி லாதவ ரோடு கலந்து நிகழ்த்தின னூழ்வலியால். 10 (725)

*ராமன்=சந்திரன், நிகழ்த்தல்=நடத்தல்

ஆர லதற்கிளை யாளுவர் மேன்மிக வாதரம் வைத்தவர்முத்
தார மணிந்த குயந்தழு விச்சுக வம்பர மூழ்கினனற்
பீரலர் கொங்கைய ரேனைய மாதர் பிதாமு னடைந்திதனைச்
சீருற வோதி வருந்திமெய் வாடி திகைத்தழு தேங்கினரால். 11 (726)

அங்கு சினந்தமுதாகர னுக்கழ கார்கலை தேய்ந்தொழியப்
பங்கமில் சூணிலை தந்தன னைந்தொரு பதுகலை போயபினர்
தங்கிய வோர்கலை யோடுமை பாகனை சார்ந்து துதித்திடவக்
கங்கை தரித்தவ னும்முடி வைத்தினி கலைபெற வென்றனனே. 12 (727)

அவ்வர மேற்ற லவன்கலை முற்று மடைந்து பின் வானெழலுந்
தெவ்வடு தக்க னேனுந்திற லோனிவை தேர்ந்து தனாதுரையை
நவ்வி கரத்த னகற்றின னென்றுள நைந்தர னைக்கறுவி
யெவ்வமில் புலக முனிச்சொலி னாற்சின மின்றி யிருந்தனனே.13 (728)


                                             (வேறு) 

ஈது நிற்க விருணிறப் பூதமேற்
பாதம் வைத்த பரனரு கேயுமென்
சீத வாண்முகத் தேவியைத் தக்கநன்
மாதெ னப்பெறு மாதன மோதுவாம். 14 (729)

ஆலத் தொங்கு மருங்கயிலா யத்திற்
சீலத் தோங்கிய சிங்க வணைமிசை
யாலத் தார்கள னார்ந்துறை போதுமை
சாலத் தாழ்ந்திவை சாற்றுதன் மேயினாள். 15 (730)

தேவ ரியாருந் திகைத்தழ நேமியின்
மேவி வந்த விடமயில் நாதனே
வோவ லின்றி யொளிருநின் மெய்வடி
வாவ தோதென வைம்முக னோதுவான். 16 (731)

நாம ரூபக் கிரியை நணுகிலம்
நேம வெப்பொரு ளாயு நிகழுவம்
வாம மாருரு வாயரு வாய்ப்பல
வேம நல்லுரு வாயு மியைகுவம் 17 (732)

என்று ரைத்த விறையடி தாழ்ந்துமை
யொன்று நம்முரு வொன்றிலை யென்றநீ
துன்று பல்லுரு வுண்டெனச் சொற்றது
நன்று நன்றென நம்ப னவிலுவான். 18 (733)

மாதெ னாதரு ளின்வடி வாமவை
பேத மில்லை யறியெனப் பேசலு
மாத லாலிங் கதுவென் வடிவமென்
றாத ரத்தொடு அரற்கெதி ரோதினாள். 19 (734)

உன்னை நம்மெதி ராவியந் தோதினாய்
நின்னு ளும்புவி நேரு முயிருளு
மன்னி யாங்கு மருவி யியற்றுவ
மன்ன தில்லெனி லாஞ்சடம் யாவுமே.  20 (735)

காணு மாறுள தாயி னீ காண்டியென்
றாணும் பெண்ணு மலியு மென் றாகிய
தாணு மான்முதற் றானவர் தங்களுட்
டோணு நல்லுணர் வீதல் துறந்தனன். 21 (736)


ஒப்பி லாவிறை யோர்கண மித்தகை
செப்ப மோடுறத் தேவர்க்கும் யாவர்க்கும்
பற்ப லாண்டெனப் பட்டவர் தங்கடன்
றப்பி யேசட மாயிருந் தாரரோ 22 (737)

ஆய போதஞ் சனக்க ணரிநிறக்
காய மாமலர்க் கார்தரு மென்குழல்
வேயை வென்று வெருட்டிய தோளுமை
நேய மோடு நிகழ்த்துதன் மேயினாள். 23 (738)

பொன்ன வாஞ்சடைப் புண்ணிய வென்பிழை
யுன்ன லாதுளத் தோங்குயிர் யாவையு
மின்னல் தீர வெழுப்பென் றடிதொழு
தன்னை வேண்ட வரனருள் கூர்ந்தரோ 24 (739)

ஊறில் பன்னோ ருருத்திரர் தங்களை
யீறி லீச னெழுப்ப வுவர் விரை
நாறு பூஞ்சடை நம்பரன் *றன்னைத்தான்
மாறில் பூசைசெய் மாநகர் வந்தரோ, 25 (740)

*தன்னைத்தான் பூசித்ததலம் - திருவிடைமருதூர்.

ஆர ணத்தின் முடிவி லமர்ந்திடும்
பூர ணப்பொரு ளைப்புனி தத்துடன்
வார ணப்புவி வாழ வருச்சனை
கார ணப்படி செய்திடக் கண்ணுதல் 26 (741)

ஈடி லாருயிர் யாவு மெழுப்பநற்
சேட னாதியர் சிந்தை தெளிந்துவா
னீடு மாமுடி நீள்கயி லாயமேற்
கூடி யீசற் பணிந்திவை கூறுவார். 27 (742)

                                       (வேறு)

அளவி றந்தநா ளறிவெலா மொருவியே சடமா
     யாற்ற வேண்டிய கடனிகந் தெண்ணிறீ  திசைந்தேங்
களைக ணேயவை யொழிந்திடக் கருணைகூ ரென்னக்
    கருது மப்பவ மலைமக ளிடத்தின தாகு 
முளமெ லிந்திடே னும்பதத் தடைதிர் நீரென்ன
    வுரைத்து முப்புர மெரித்தவ னுமையைநற் றக்க
னுளம கிழ்ந்திடு மகளென வாழுதி யவணுற்
    றுன்னை மாமணஞ் செய்குது மெனவுமை வணங்கி 28 (743)

புரிமு றுக்கவிழ்த் தின்னிசை யளியின முரன்றுபூந்து
     கட்குடைந் தரிய வின் மதுவுணு மதிக
விரைக மழ்ந்த வார்க் *குவதமஞ் சரிபுனை தடந்தோள்
     விமல நாதனை யகன்றுமா மணியுநித் திலமுங்
கரைக ளிற்றிரைக் கரங்கொடு வீசுகாளி ந்திகமல
     மேல்வலம் புரிவடி வாய்ப்பல நாளங்
கரியமெய்ப் பரன்றிருப் பெயருச்சரித்தமர்ந் தாளலகிலா
     வுயிர்களுக் குயிராகுமெம் மன்னை 29 (744)

*ஆர்க்குவதம்= கொன்றை

அந்தவேலையி லரும்புகழ் மாசிமா மகத்திலலைகொ
     ளந்நதி நீர்குடைந் தாடவேற் றக்கன்
கந்த வார்குழ லாரணக் கொடியுட னணுகிக் கருவொ
     ழிக்குமப் புனிதநீர்ப் படிந்துமீள் பொழுதி
லந்த மில்லவ னிடம்பிரிந் தவளொரு பாங்க ரலரின்
    மேல்வலம் புரியதா யிருத்தல்கண் டெடுக்கச்
சந்த மாரிளங் குழவியா யினண்மகிழ்ந் துமையே
    சார்ந்த னள்ளென மறைக்கொடி தளிர்க்கரத் தளித்தான் 30 (745)

பின்ன *ரூழ்மிகப் பெருகுநன் மணிநெடுங் கொடிகள்பெரிய
     மாகமீ தாடுமா டங்களாற் பிறங்குந்
தன்ன தூர்புகுந் திருந்தன னருந்திறற் றக்கன் சாரு
     மாவல்மீக் கொளக் கௌ ரியையுசி தமதாய்ப்
பன்னும் வேதவல் லியும்வசளர்த் தெடுத்தனள்
     பரிவாய்ப் பகரு மையைந் தாண்டவ ணிருந்தபின் பரம
னன்னர் மாமணஞ் செய்திடத் தவஞ்செய்வ
     லென்னா நாரி கூறிடத் தந்தைதா யுளந்தனி னயந்தே 31 (746)

* ஊழ்=ஒளி

பொன்னு லாமணி மாடமப் புரிக்கய லியற்றிப் பொன்னை
     யன்னசேடி யரொடு மதில்விடப் பொருந்திப்
பின்ன ராண்டுசென் றிடத்தவம் பிரியமோடியற்றப்
     பேசு மாறிரண் டாண்டுவந் தடையவம் பிகைசேர்ந்
துன்னதம் பெறு தக்க மாபுரியினி லுயர்வெண்
  *ணுபயராசியை யூர்ந்தருள் பரன்மறை யவனா
யன்ன மன்னவன் வாழ்தலத் தடைதலு மரியவன்ப
    ரென்றெதி ரெழுந்து போய் வணங்கின ளமலை. 32 (747)

* உபயராசி - இடபம்.

உமைமு கந்தனை யுருத்திர னோக்கியோர் பொருள்வேட்
     டுன்னிடத்து வந்தேனஃ தீவையே லுரைக்க
வமைவ னென்னவை யரிசிதர் மழைமதர் நெடுங்
     ணம்மை நீவிரும் பியதுரை யஃதெனக் கிசைந்தா
லிமையி னிற்றரு வேனதை நவிறிநீ யென்ன
       விசைய வுன்னை நான் மணந்திடு மிச்சையாலிங்கு
வமைதி யோடுவந் தனமதை யகற்றிடே லென்னவார
       ஞர்க்கட லழுந்தி மெய் வியர்த்தெம தன்னை 33 (748)

அமல மாகிய வள்ளைமீ தருமணங் கமழுமலர்ந்த
     காந்தள்வந் தணைந்தெனத் துணைச்செவி கரத்தா
னிமலை மூடுபு குமுதவாய் திறந்தர வணியு
    நிருத்தன் மாமணஞ் செய்திடத் தவஞ்செயு மென்பா
லமைவு றாமொழி புகன்றனை யாதலா லிவிண்விட்
    டகன்று போவெனக் கடிதுவை தொருபுற மகல
வுமைம ணாளன் மெய் வடிவினை யொருவற முணரா
     துமையு ணர்ந் திடக் காட்டநீர் விழியுகத் தொழுதாள் 34 (749)

ஆங்கு சேடிய ரனைவருங் கண்டுள மகிழ்ந்தே 
     யரிய வேதியன் மாயமிக் கறிபவன் கொல்லோ
வீங்கு நம்மிறை யவளெமை நோக்கிலா ளென்னே
     யெனப்பு கன்றுசிற் சிலதிய ரவண்விரைந் தோடி
தேங்கொ ளித்திரண் மணிமுடிச் சிறுவிதி முன்னஞ்செய்தி
     யாவையு மியம்பிடச் சிந்தையி லர்னென்
றோங்கு தன்னறி வாலறிந் தகமகிழ்ந் தரன்முனுற்றடைந்
     தரு மறைகளாற் பழிச்சியீ துரைப்பான். 35 (750)

அலைகொள் வாரிதி சுலவுபே ரவனியி னுயிருக்
     கரிய தந்தையா மண்ணலே யெனதுமா நகருக்
கிலக நீரெழுந் தருளுமென் றிசைத்துடன் படுத்தி
     யிமய மாமயி லுடன் கொடு வந்தரி யணைமீ
துலக நாதனை யிருந்திடச் செய்தபி னுமையை
     வுளக்க ளிப்பொடு மறைக்கொடி புல்லிநீ ராட்டி
யிலகு பன்மணிக் கலன்களிட் டெவ்வகை யுயிர்க்குமிறைவன்
     பாங்கர விளங்கொடி தனைவிடுத் தனளால் 36 (751)

சுரும்ப ரற்றுபூங் குழலுமை சோதியின் பாங்கர்த் துலங்க
    வீற்றிருந் தருள்பொழு திமையவ ரயன்மால்
கரும்பை வென்றசொற் கௌரியின் மாமணங் காண்பான்
    கடிது வந்தணைந் திறைஞ்சியே கடிமதுக் கொன்றை
யரும்ப ணிந்தவெஞ் சடையவன் பாங்கர்வந் தடைந்தா
   ரடல்மி குத்துள தக்கனு மப்பொழு தெழுந்தே
யிரும்பு னற்றளிர்க் கரங்கொடு மறைக்கொடி விடுக்க
   வீச னார்கம லக்கழல் விளக்கியேத் தினனால் 37 (752)

அன்பி னோடருச் சனைபுரிந் தான்கரத் துமையினங்கை
      வைத்தென தரியமா தவத்தினின் வந்தென்
கன்னி யாய்கலி தீர்த்திடுங் கௌரியைக் கடலின்கடுவடக்கிய
      கடவுணிற் களித்தன னென்னா
சொன்ன மாமணிக் கரகநீர் விடுப்பவங் குறையுஞ்சுரர்வி
      ருப்பினிற் புகழ்ந்தனர் மகிழ்ந்தனர் துளிக்கு
மின்மதுப்பொழி கொன்றையான் மறைந்தன னிப்பா
      லிமய வல்லியங் கெய்திய துயரியம் பரிதால். 38(753)

கமல நான்முக னார்திரு மகனிவை காணாகனலெ
    னச்சினந் தெழுந் திரு கரம்புடைத் தார்த்திங்
கெமைம தித்திலன் மறைந்திழி பளித்தன னென்னா
     வெம்பிரான்றனை வசைமொழி புகன்றன னிப்பால்
விமலை பண்டுபோன் மிகவெயில் விரியரண் மனையை
     வேயை வென்றதோண் மாதரோ டடைந்துள மெலிந்து
வமல மார்தவ மியற்றின ளியற்றலு மகிழ்ந்தெம் 
     மன்னை முன்னருள் விடையின்மீ தரனடைந் தனனால், 39 (754)

அரிய யற்கரி யான்விடை மேற்கொடம் பிகையை
     யடைந்த னன்கள தபுதமா கிரியினை யப்பா
லரிவை மாரிது தெரிந்தயன் மகன்புடை யடைந்திவ்வரிய
    செய்கையை யுரைத்தலு மரன்றனை யிகழ்ந்து
பொருவி றக்கனந் நாண்முதன் மதித்தில னிருப்பப்புனித
     வானவ ரவையறிந் தறைகுவர் புரத்தை
யெரிப டுத்திய கடவுளை யெண்ணலன் றக்கனிறத்தல்
     சத்திய மவைநமக் குறுமென லெண்ணா . 40 (755)

                                           (வேறு)

பாகெ னும்மொழி யுமையையும் பரமனார் தனையும்
யூக மோடிகழ்ந் தாருயி ரோடெவ ருய்ந்தார்
சோக நீங்குதி யித்துனைச் சொல்லுவஞ் சூழ்ச்சி
யேக னோடுமை தன்னைநீ சென்றழை யென்றார். 41 (756)

என்ற விண்ணவர் தங்களை யவணுறந விருத்திக்
குன்ற வில்லிவா ழிரசிதக் குன்றினைக் குறுக
வென்றி சேர்கண நாதரெம் மிறையினை வெறுத்த
வொன்று புன்மையோ யிறைமுனம் போகலென் றுரைத்தார். 42 (757)

சமழ்ப்பு டன்சிறு விதிதன திடத்தினைச் சார்ந்து
விமைப்பி லாதவிண் ணவர்களுக் கிச்செயல் விளம்பி
யுமைக்கி டந்தரு சிவனைநீ ருன்னலீர் தொழலீ
ரெமைப்ப ரம்பொரு ளென்னவே தொழுதிரு மென்றான் 43 (758)

என்ன சொல்லுகே னீசனை யிகழ்ந்தெவ ருய்ந்தா
ரன்ன செய்தியை யிமையவர் கண்டவ ரலரோ
பன்னு தக்கனார் சொல்வழி தாமுடன் பட்டார்
முன்னை யூழ்தனை யாவரால் வென்றிட முடியும் 44 (759)

அந்த மாமொழிக் கியைந்துவிண் ணவரெலா மகன்றார்
கந்த மாமலர்ப் பிரமனோர் மகஞ்செயக்கருதி
மைந்தர் தம்மை மான் முதற் சுரர் தமைக் கொடு வருக
வுந்தி வெம்மைகொ டக்கன்முன் னுரைத்ததை யுன்னா 45 (760)

இறுதி யாருயிர்க் கெய்தினு மெய்துக வென்னா
வுறுதி கொண்டரன் வாழிர சிதக்கிரி யுற்றுக்
கறையி லாதொளிர் நந்திமுன் விடுத்திடக் களத்திற்
கறையி ருத்திய கடவுளைத் தொழுதுளங் கசிந்தே. 46 (761)

எந்தை கேளொரு மகமியற் றுவணவ ணெய்தி
நந்த லில்லருள் செய்கென மகிழ்ந்துயர் நந்தி
வந்தி டச்செய்வோம் போகென நான்முகன் வணங்கி
வந்து சத்திய வுலகினின் மகிழ்வுடன் வதிந்தான் 47 (762)

மிக்க மாமக மவன்செயத் தொடங்கலும் விண்ணோர்
தக்கனோடவ ணடைந்தனர் வேள்வியின் சாலை
செக்கர் வேணிய னேவலாற் சாரதர் செறிய
வக்க ணந்தனி னந்திவந் தடைந்தன னப்பால் 48 (763)

காண ரும்புகழ் நந்தியின் வரவினைக் கண்டு
வாணி கேள்வனங் கெழுந்துகை குவித்துடன் வணங்கி
மாணு லாந்தவி சிருத்தினன் மனங்கொதித் தயன்சேய்
நாண மீக்கொளத் தனைமறந் தின்னண நவில்வான் 49 (764)

அலர வன்முன மணுகியிங் கிவனையா ரழைத்தார்
நிலவு லாமதி தவழ்கயி லாயம்வாழ் நிமலன்
கலக மேசெய வுந்திய நந்தியைக்கருதி
பலசி றப்பியற் றுவதழ கோவெனப் பகர்ந்தான், 50 (765)

அந்த வாசகங் கேட்டய னன்புட னளித்த
சுந்த ரம்பெறு மைந்தனுக் கரன்றிறஞ் சொல்லக்
கொந்து லாமலர்க் கோதைசேர் திருப்புயங் கொண்ட
கந்த வேளனை யான்சிறு விதியிவை கழறும் 51 (766)

எள்ளு நீர்மைகொள் பித்தனா யிருந்திடு மீசன்
விள்ள ரும்மகத் தவிபெறற்குரியனோ வேண்டாங்
கள்ளு லாந்திருந் துளவணி கமலைநா யகனுக்
குள்ளு வந்ததை யீதலே யுறுதியீ தல்லால் 52 (767)

மாறு செய்திடி லுன்னையந் நேரமே மடிப்பன்
வேறு செய்கலை யென்னலும் நந்தியும் வெகுண்டு
ஏறு யர்த்தவன் றனையலா தெழின்மக முடிப்போர்
வீறு சேர்முடி போகவென் றுரையது விளம்பி 53 (768)

வந்த சாரதக் குழுவுட னந்தியெம் வள்ளல்
சந்த மார்பொழில் சூழ்தரு கயிலையஞ் சயிலத்
திந்து சேகரன் றாடொழு தனைத்தையு மியம்பி
யந்த மார்திருக் கோபுர வாயிலை யடைந்தான்.54 (769)

வேதன் யாகமுங் குலைந்தது விண்ணுளோ ரெவரு
மீதை யஞ்சியே மகஞ்செயா திருந்தன ரிப்பாற்
போதன் மாமகன் வேள்விசெய் வதற்குளம் பொருந்தி
தீதி லாவிறற் கம்மியற் கூயிவை செப்பும். 55 (770)

யாக சாலையொன் றியற்றுதி யெனவதற் கியைந்து
நாகர் கம்மிய னமைத்தனன் கண்டுள நயந்து
வேக மாகிய வொற்றரை விளித்தடல் தக்க
* னேக னல்லது வேறுள தேவரை யெல்லாம். 56 (771)

* ஏகன் - சிவன்,

மன்னு மிவ்விடைக் கொணர்கென வணங்கின ரேகி
சொன்ன போதரி யாதிய வானவர் துன்னி
யன்ன வேள்வியை யடைந்தனர் மாலைவென் றடல்சேர்
மின்னி ருஞ்சடை ததீசிமா முனிவன்மே வினனால்  57 (772)

என்ன காரண மெங்களை யழைத்திசொல் லென்ன
முன்ன மேயெனக் கரும்பகை முக்கணேய் மூர்த்தி
தன்னை நீக்கியே யருமகஞ் செய்திடச் சமைத்தே
னன்ன தற்குமை யழைத்தன னெனமுனி யறைவான். 58 (773)

முக்க ணாயகன் பெருமையை முனிவனு மொழிந்து
செக்க ரஞ்சடைத் தேவனெத் தேவர்க்குந் தேவன்
தக்க வன்னவன் பகைகொடு மகஞ்செயச் சார்த
லொக்கு மோவுனக் கென்னலு மவர்க்கெதி ருரைப்பான். 59 (774)

கோல ஞாலமோ டுயிரினைக் கொல்லுமோ கும்பித்
தோலொ டாமையி னோட்டினைச் சுமக்குமோ சூலஞ்
சால வேந்துமோ பலிகொளச் சாருமோ சாதஞ்
சீல மேவிய படையெனத் திரியுமோ தேவன் 60 (775)

நஞ்செ யிற்றட னாகம தணியுமோ நவையிற்
குஞ்சி மீதுவெண் டலையினைத் தரிக்குமோ குழையில்
விஞ்சு றாதசங் கணியுமோ விடமென வெறுக்கா
தஞ்சு மாலம தருந்துமோ வாதியா மணணல். 61 (776)

ஈம மாடவு மொருத்தியைத் தலைமிசை யிருத்தி
வாம பாகத்தி லொருத்தியை வைக்கவு மகிழ்ந்து
காம மோடுசந் ததியினை யீனவுங் கருத்தி
னேம மாகவு நினைக்குமோ யாவுமா நிமலன். 62 (777)

என்று பற்பல வசைசொலக் கேட்டவவ் விருடி
வென்றி யாயதற் குரியகா ரணங்களை விளம்ப
நன்றி கொன்றவத் தக்கனுட் சினங்கொடு நகைத்துக்
கொன்றை யானுக்கிங் கவிகொடேன் போவெனக் கொதித்து 63 (778)

இந்து லாஞ்சடை யெம்பிரான் றனையலா தியற்று
மிந்த மாமக மொல்லையி னழிகவென் றியம்பி
நந்து ளான்றனை வெந்நிடக் கண்டமா நலத்தோ
னெந்தை யாரடி யாருட னேகின னிருக்கை 64 (779)

                                             (வேறு)

மாசி லாத பெரும்பு கழ்த்தவ மன்னு மாமுனி சென்றபி
னாசி லாவமு தாடை யாடக மார மற்றுள யாவையு
நேச மோடவ ராசை தீர்ந்திட நீதி மாமறை யாளர்பால்
வீசி வேத னளித்தி டுஞ்சிறு விதியு மம்மக மாற்றினான். 65 (780)


அன்ன வாறு தெரிந்து மாடக யாழி சைத்திடு நாரத
னென்னு மாமுனி வெள்ளி யங்கிரி யெய்தி கங்கை யணிந்தவெம்
முன்ன வன்றிரு முன்னர் வந்தடி முடிபு னைந்தவ ணிற்றலு
மென்னை யாளுடை யீச னோக்கி யிருங்க டற்புவி தன்னிலே 66( 781)

இந்த நாணிகழ் கின்ற தென்னென வீச வானவர் தம்மொடுங்
கந்த மாமலர் மீது றைந்திடு கடவு டந்திடு புதல்வனோர்
சிந்து சூழ்புவி தன்னி லிட்டி செயத்தொ டங்கின னென்னசே
லுந்து கண்ணுமை யாளெ ழுந்தர னுபய பாதம் வணங்கியே 67 (782)

இறைவ யான்மக மாற்றல் கண்டிவ ணெய்து வேன்விடை யருளெனா
நிறையு மாதர வாலு ரைத்திட நீள்க டற்சடு வுண்டமைக்
கறைமி டற்றரன் விடைகொ டுத்திட கனக *மானம தூர்ந்துபின்
நறைம லர்க்குழன் மாதர் சூழ்தர நாரி **யத்தனை நண்ணினான். 68 (783)

*மானம் - விமானம். ** அத்தன் - தந்தை

கூற்றி னாவிது வாகு மென்றசொல் குருதி தோய்கொடு வாளுடை
மாற்ற ருந்திறன் மான்ம கன் மகளை யோர்ந்திழி வாயசொல்
லூற்ற மோடுரை செய்து வெள்விடை யூர்தி யானையு நிந்தையா
மாற்ற மோதிநீ போதி யென்று வகுத்து ரைத்தன னாமரோ. 69 (784)

ஆங்க ரன்றனை நிந்தை கூறிட வம்மை யுட்சின மீக்கொடே
தீங்க கன்றொளிர் வெள்ளி யங்கிரி சேர்ந்து முக்க ணருட்கடற்
பாங்க டைந்தவர் பாத மீது பணிந்து னைப்பொரு ளாயுளந்
தாங்கி டாவடல் தக்கன்வேள்வி தவிர்த்தல் செய்யெனவேண்டினாள். 70 (785)

அம்மை கூறிய வாறு செய்திட வாறுகொன்றைய ணிந்திடு மெம்மை
யாளுடை யான்ம னத்தினி லெண்ண லுந்திரு வார்ந்துள
செம்மை சேர்நுதல் விழியி னின்றொரு சென்னி யாயிர மோடுவந்
திம்மெ னப்பரன் முன்னு தித்தன னெழில்மி குத்துள பத்திரன். 71 (786)

அந்த வேளையி லுலகை யீன்றருளம்மை கொண்ட சினத்தினா
லைந்து நான்குநூ றாங்க ரத்தொடு மாயி ரம்வத னத்தொடும்
வந்து தோன்றின டொய்யில் வெம்முலை வாகை சேர்தரு காளியின் 
சந்த மார்தரு வீர னாரயல் சார்ந்தி ருந்தன டாரமாய். 72 (787)

அன்ன காலையி லந்த காரியை யமல மார்தரு மமலையைப்
பன்ன ருந்திறல் வீர னாங்கு பணிந்தெ ழுந்தினி பணியெனக்
கென்னை யென்னலு மீச னெம்மை யிகந்தி டுஞ்சிறு விதிமகந்
தன்னை யுற்றவி தந்தி டென்றுநீ தக்க வாறுரை சாற்றுவாய். 73 (788)

அளித்தி டானெனி லந்த வேள்வி யழித்த வன்றலை வீழ்த்தியே
களித்தி ருந்தபண் ணவர்களாவி கழித்து மீளுதி யென்றரன்
சுளித்து ரைத்தவை கேட்டு வந்து சுடர்த்தொ டித்துவ ரின்னித
ழிளைத்த நுண்ணிடை காளியோடு மிருங்கு றட்குழு வோடுமே. 74 (789)

தக்கன் யாக மடைந்து வாயிலில் சரர தத்திறல் வீரரை
நிற்க வைத்தத னுட்பு குந்தட னீடு தக்க னியற்றுசீர்
மிக்க யாக முறுத்து நோக்கி வெகுண்டு வானுறு மேறெனக்
கொக்க ரித்தன னமர ரோடினர் குணமி லானிவை யோர்ந்தனன். 75 (790)

                                                (வேறு)

வீரன்முக நோக்கிமலர் வேதனரு டீயோன்
யாரையிவ ணுற்றசெயல் யாதுரைநீ யென்னத்
*தாரைவிழி கொள்ளுமைத னாதிறை விடுத்த
தீரனவி வாங்கவி தினத்திவ ணடைந்தேன். 76 (791)

*தாரை=நேரோடல்

தாவிலவி யீதியென சாற்றவு மழன்று
மூவுலகி லுள்ளவர் மொழிந்திடி னுமந்த
கோவிடைய னுக்கவி கொடுப்பதிலை யென்றா
னாவிதரு வான்பரம னார்க்கவித ராதே. 77 (792)
 |
தக்கவறி வற்றவடல் தக்கனிவை சாற்ற
மிக்கவுணர் வுற்றதிறல் வீரனம ரர்ப்பார்த்
தொக்கசெய லோவிது வுமக்கென வுரைப்பச்
சொக்கலொ டிருந்துரைசொ லாமலவ ணுற்றார். 78 (793)

உக்கிர னழன்றுதன தொப்புயர்வி லாத
கைக்கமல மேவிய கடுங்கதையி னான்மா
றிக்குமுக னாமிலர் திகைத்தவனி வீழ
வக்கண மெறிந்தன னறிந்தமர ரஞ்சி. 79 (794)

திகந்தமதி லோடினர் சினம்பரவு தக்க
னகந்தளர்வு றத்தனிமை யாயவ ணிருந்தான்
சகந்தனி லிருந்தவர் தவஞ்செய்தடை வெள்ளி
நகந்தனி லிருந்துவரு நாதனிவை செய்வான். 80 (795)

அக்கமணி மாலைபுனை யண்ணலை யிகழ்ந்த
தக்கனுயர் சென்னியை தடிந்தனலி லிட்டான்
றொக்கவிமை யோர்பல துதித்திட விரங்கிப்
பக்கமுறு *மைத்தலை பதித்துயி ரளித்தான் 81 (796)

*மை=ஆடு

தறிதலை தனக்கமரர் தாவிமிக வேண்ட
மறிதலை யளித்தவுடன் மாணடி யணிந்தே
வறிதலை தராதெனது வன்பழி யொழிக்கப்
பெறுதலை யறிந்துவழி பேசென விரந்தான். 82 (797) 

மன்னாக மன்னபுய வாகைபெறு வீரன்
முன்னாக நின்றதிறன் மொய்ம்பன் முகறோக்கி
சொன்னாக மீதுதுவ சங்களசை யும்வெண்
*கைந்நாக னூரனைய கச்சிவட மேற்கின். 83 (798)

*வெண்கைநாகம்=வெள்ளை யானை

தோடு றுசெவ் வாம்பலிதழ் துன்னுமர விந்தக்
காடு தடத்தினிற் கயற்குல முலாவக்
கோடுறுவெண் கோடுகுமி றும்பணைகொ ளம்பொன்
நாடு றுமி லேகர்மிக நாடும்வள முற்றே. 84 (799)

திருப்பனசை யென்றொரு செழுந்தலம துண்டாங்
கிருப்பனறு மாமலர்கொ டேத்தினவர் தம்மைக்
கருப்பயிலல் நீக்கிசுரர் காணரிய வின்பத்
திருப்பவமை விக்குமெம தீசன்மயூ ரேசன். 85 (800)

அன்னவிறை வற்கய லயிந்திர திசைக்கண்
டுன்னலுறு மோர்கடிகை தூரமதி லன்ப
ரின்னறவிர் தாந்தோன்றி யீசனெனு நாம
மன்னுசிவ னுண்டுபணி வார்பழி யகற்ற  86 (801)

ஞானமரு வும்பெரிய நாயகி யுடன் சீர்
வானவர் தினம்பரவ வைகின னவண்போ
யூனமி லருச்சனை யுஞற்றிதுதி செய்யென்
றானையுரி போர்த்தவ னளித்தவ னிசைத்தான். 87 (802)

பின்னர்சிறு விதிதனது பீழையை யகற்றக்
கன்னல்வயல் சூழுமெழில் காஞ்சியை யடைந்து
பன்னதிக ளுங்குலவு பாலிநதி யாடி
நன்னக மகட்கிறையை நாடின னடைந்தான்.88 (803)

சோதிமுடி வானவர் துதித்தடி வணங்க
வேதமனு வாதிபல வேதிய ரியம்ப
மாதுமை தனக்கிட மகிழ்ந்தினி தளித்த
வாதிபயில் கின்றுழி யடைந்தனன் விரைந்தே  89 (804)

அளந்திடுவ தற்கரிய தாகி யயன்மாலுந்
தளர்ந்துடல் சலித்தவழ றாணுவென வோங்கி
வளர்ந்துயர நீடியகல் வானினிறை கின்ற
களங்கமறு சோதியெதிர் கண்டன னுவந்தே 90 (805)

கதிபெற வடைந்தமரர் கண்டுபணி யும்வா
னதிமதி மிலைந்தசடை நாதன்மகிழ் வெய்த
விதிமுறையி னாற் *சபரி மிகவினி தியற்றி
விதியவ னளித்தசிறு விதியிவை துதிப்பான்.91 (806)

*சபரி=பூசை

                                           (வேறு)

மாசார்ந் தறிவழிக்கும் வன்கருவச் சேற்றினிடைக்
கூசாமல் மூழ்கிக் குறைதலைய னானதன்றி
*தாசார்ந்து கெட்டேன் றலைவனாந் தாந்தோன்றி
யீசா கடைக்கணித்திவ் வேழைக் கிரங்காயோ. 92 (807)

*தா=கேடு

காயமா காயமெனக் காணா துனைக் காய்ந்து
பேயனே னென்னோ பிழைக்குடன்பட் டேனிந்தச்
சேயனேன் குற்றமெலாந் தீர்க்கவருள் சேர்பெரிய
நாயகியை வாமமுறு நாதா விரங்காயோ. 93 (808)

மாதா பிதாகுரவன் மற்றுமனை மக்களுநீ
யேதா னெனவுளத்தி லெண்ணா திடருழந்தேன்
வேதாவுந் தண்டுளப விண்டுவுங்கா ணாச்சுயம்பு
நாதா கருணைசெய்திந் நாயேற் கிரங்காயோ. 94 (809)

                                                          (வேறு)

இவ்வணந் தக்க னிருகணீ ரரும்பவெழிலுடல் வேர்க்கமெய் நடுங்கச்
செவ்வணத் தாலந் தழும்பி சொற்றளரச் சீருளங் கசிந்து நின்றேத்த
மைவணக் குழலா டன்னுட னிறைவன் மால்விடை மீதிவர்ந் தணுகி
யுய்வண நின்றன் குறைதவிர்த் தனமென் றுறு சிவ லிங்கமு ளுறைந்தான் 95 (810)

கன்னவி றிரடோ டக்கனும் வியந்து கருணையங்  கடலெனு மரனை
மின்னெனு மிடையா டன்னொடும் பூசை விளங்குமா கமப்படி முடித்துப்
பின்னரட் டாங்க மாகவே பணிந்து பிஞ்ஞகன் றனைவிடை யேற்று
வுன்னருந் தக்க மாநகர் புகுந்தங் குளமகிழ்ந் தினி துறைந் தனனால் 96 (811)


தெரியலர் மகுடத் திரட்படு கழற்காற் றேனுகர் விரைகமழ் நறு ம்பூந்
தெரியல்வேய் தடந்தோட் சிறுவிதி பூசை செய்தவவ் விறை யவன் றன்னை 
வுரைதரு மொழியாற் பழிச்சுனர் பூசை யுஞற்றுன ரருச்சனை புரிந்தோர்
புரைதவிர் போக மிம்மையிற் றுய்த்துப் பொருந்துவர் பரகதி மன்னோ 97 (812)

உனைப்பணி வார்க ளெனைப்பணி தரவென் றோர்பெறு வரம்பெறு தக்கன்
மனச்செருக் கதனாற் சிவபெரு மானை மதித்திடா தவமதித் தலினாற்
றனக்குறு தலைபோய் தறிதலை யெனும்பேர் தான்பெறி னுலகுளா
ரெவரே யுனற்கரும் பரனைப் பழித்திடி னுய்வாருண் டெனி னுரையவ முறுமால், 98 (813)

                                         தக்கன் பழி தீர்த்த சருக்க முற்றிற்று.

                                                 ஆகத் திருவிருத்தம் - 813.


                                                இராகவன் பாவமொழித்த சருக்கம்

என்றுரை முனியை யிருடியர் வணங்கி யிருவினைக் குறும்பெறி தவத்தோய்
நன்றறி வில்லாத் தக்கன்மாக் கதையை நாங்கள் கேட் டகமகிழ்ந் தனஞ்சீ
ரொன்றிய தாச ரதியவ ணடைந்தே யோது மெம் பரமசிவன் றன்னை 
யன்றவன் பூசை புரிந்தமாக் கதையை யறைகென முனிவனு மறைவான்.1 (814)

ஆதவன் குலத்தி னுதித்தவ னணிசே ரயோத்தியம் பதியினுக் கரையன்
றீதறு நாமந் தயரத னென்னச் சிறந்தவ னவன்றரு புதல்வன்
றாதவிழ் நறுந்தார்த் தசரதாத் மசனுந் தாய்மொழி மதித்தடை யலர்காய்
நீதிசே ரிளவ லொடுமனை யோடு நெடியகா னகத்தினிற் பயினாள். 2 (815)

தலைகளை யிரண்டோ டைந்து நான் கென்னுந் தடம்புய மலையுள வரக்கன்
தொலைவிலா வடலி ராவணன் சோரத் தொழிலினாற் சீதையைக் கொடுபோ
யலைகடல் நாப்ப ணிலங்கைசே ருதலுமரிவையைத் தேடின ராகி,
யுலைவிலா மனத்தோ டுயர்தரு வனம்புக் கொருங்குறத் தேடியுங் காணார் 3 (816)

அடல்கொள்சுக் ரீவன் றனையடுத் தரிய னாருயிர்த் தோழனென் றாக்கி
மிடல்கெழு வாலி யின்னுயிர் வீய மீளிவெங் கணையினை விடுத்துக்
கடல்புரை தருவா னரப்படை யுடனார் கலியடைத் திலங்கையை யடைந்து
குடல்தலை சரியச் சென்னியீரைந்து கொண்டவ னாருயிர் போக்கி 4 (817)

சீதையாந் திருவைக் கொண்டவண் மீண்டு சிறந்துள வயோத்தி யைச் சேர்ந்து
கோதிலாத் தனது தம்பிய ரோடு குலவிவாழ்ந்திடும்பொழு தோர்நாள்
தாதுலாமலர் மாலிகையணி தடந்தோட் டசரதராமனார் சபையின்
மேதையா யறிவின் மிகுத்துள வமைச்சர் மென்முக மெதிர்ந்திவை விளம்பும். 5 (818)

பக்குவா பக்குவங் களையறிந் திப்படியென வுரைத்திடு மமைச் சீர் 
தக்கவிந் நாட்டி லுறைதரு சனங்க டம்மிலிப் பொழுதுதா னுரைக்கு
மக்கதை யுரைமி னென்றுவாள் சங்கோ டாழிவிற் கதை யிவை யொழிந்து
மொய்க்குமா புகழோ டயோத்திவீற்றிருந் தோன் மொழிந்திட வவரிவை மொழிவார். 6 (819)

வந்தெறி கடலை மலைகளா லடைத்து மதிளிலங் காபுரி யழித்து
வெந்திற லரக்கர் குலத்தைவே ரறுத்து விண்ணவர் கோன்றலை யெடுப்ப
இந்திர சித்தைக் கொன்றிரா வணனை யீரைந்து தலையறுத்துருட்டுஞ்
சுந்தர வில்லிக் கெதிரிலை யென்று சொல்லுவார் தொல்லுல குள்ளோர், 7 (820)

ஆங்கவ ரிவ்வா றுரைத்திடக் கேட்ட வரசர்கோ னவர்களை நோக்கி
நாங்களிந் நகரி னாட்டினிற் பிறக்கு நன்மையுந் தீமையுங் கேட்டுத்
தீங்கவை யகற்றச் சிந்தனை செய்துஞ் செப்புமிவ் விரண்டு நீர் கேட்ட
நீங்க ளொன் றுக்குங் கூசலீ ரென்ன நின்மல கேட்டியென் றுரைப்பார். 8 (821)

மன்னவ னிராமன் மானபங் கத்தை மனத்தினை வைத்திலன் வானோர்க்
கின்னல்செய் தொழுகு மிராவணன் கொடுபோந் திடை விடா தீரறு திங்கள்
தன்னொடு நகரி தனிற்சிறை வைத்த தையலைத் தாரமாய்க் கொண்டு
பின்னையும் வாழ்க்கை பேரிழுக்கென்று பேசுவார்  பெருநிலத் துள்ளோர் 9 (822)


புத்தியிற் சிறந்தோ ருரைத்திடும் வெஞ்சொற் புகுதலு நிறத்தினி லொளிவே
றைத்தது போல வுளைந்துதன் சிந்தை தளர்ந்து பின்மானபங் கத்தன்
வித்தக விலக்கு மணன்றனைக் கூயிம் மெல்லியற்  சனகியைச் சான்றோர்
முத்தியை விரும்பி தவஞ்செயுஞ் சாலை முன்விடுத் திவண் வருகென்றான். 10 (823)

 
தசரத ராம னுரைத்திடுஞ் சொல்லைத் தடுத்திட மனமிலா தவனாய்
திசையெலா மொளிகாற் றேரினிற் றமையன் றேவியை யிருத்திமா தவர்க 
ளிசைவுடன் றவஞ்செய் கானகம் புகுந்தங் கிணையில்வரன் மீகியாச் சிரமத்
தசைவிலாக் கற்பிற் சிறந்தவை தேகி யரிவையை விடுத்தடைந் தனனால் 11 (824)

அனந்தரந் தமைய னடியிணை வணங்கி யருணிறை சனகியை யரிய
வனந்தனில் விடுத்த வகையினை யிளவல் வகுத்திடக் கேட்டவவ் வள்ளவன்
மனந்தனி லடைந்த துயரினைச் சொல்லும் வரம்பினதாகுமோ நகர்வாழ்
சனந்தெரிந் திதையந் தாங்கருந் துன்பஞ் சார்ந்தவ ணொருவின ரின்பம். 12 (825)

இவ்வண மிருக்கு மேல்வையி னொருநா ளெழிறவ வசிட்டனங் கணுகக்
கைவணச் சிலையா லரக்கரைக் காய்ந்தோன் கடிதெழுந் தடியிணை வணங்கி
யுய்வணம் வந்தீர் வருகென வழைத்தங் கொளிர் மணி யாதனத் திருத்திப்
பைவணப் பாந்தள் வாயின்மண் டூகம் பட்டதொத் தடியனேற் கென்னோ .13 (826)

கம்பமி லெனது சிந்தைநொந் தறிவு கலங்கிவெந் துயர்பல செறிந்தங்
கெம்பியர் தடந்தோ ளெறுழ்வலி குன்றி யென்மன வூக்கமுந் திரிந்தே
யும்பரூர்க் கிணையா வோங்கிய வென்ற னுயர்பதி வளமெலாங்குன்றி
யிம்பரி லுறைவ தென்னதை யடியேற் கியம்பென வருந்தவ னிசைப்பான். 14 (827)

தரங்கவார் கடல்குழ் தரணியி லுள்ளார் சாற்றிய புன்மொழி கேளா
யிரங்குவண் டினமா ரிணர்த்தொடை வேய்ந்தே யெழிலியைப் பழிக்குமென் கூந்தற்
றிரங்கொண்முல் லையினிற் சிறந்தமை திலியைச் செழித்தகான் விடுத்தவத் தீதா
லுரங்கிளர் வைர வேற்கர வள்ளா லுற்றனை யடைந்தவிக் கொடுமை 15 (828)

எனத்தவ முனிவ னிசைத்திடக் கேட்ட விராகவ னெழுந்தவ னடியைக்
கனைத்துவண் டிமிருங்கடிமலர் தூவிக்கனிந்த மென்மொழியினாற் பழிச்சி
மனத்தினான் வாக்கான் மதித்திடற் கரிய மாதவ வெனைத்தொடர் விழுமந்
தனைத்தவிர்த் தாளென் றிரந்திடக்கேட்ட தவத்துயர் வசிட்டனீதிசைப்பான் 16 (829)

ஒலிதிரைக் கடல்சூ ழுலகினிற் பஞ்சா யுதமொழித் துதித்திடு மரசே
வலிகெழு முனைச்சூழ் பவமொழிந் தகலும் வகையுள தெவையெனி னுரைப்பன்
பலவினைத் தொடக்காற் படருழுந்தோரும் பவமகன் றிடுவதற் குரிய
நலமலி புகழ் சேர் தலமுள முந்நீர் ஞாலமே லந்நெடுந் தலத்தில் 17 (830)

                                                     (வேறு)

உலக மளித்த வுமைமயிலினுருவா யிருந்து பூசித்தா
ளலகில் புகழ்சேர் நந்திவரி யங்கமாய்நின் றருச்சித்தான்
சுலவு விழிவேற் கோகனகைத் துணைவன் பரிவாற் கைதொழுதா
னிலகு கமலத் தயன்பலநா ளிருந்தே யெகினத் திடரொழித்தான் 18 (831) 

கந்தமலர்க்கற் பகவேந்தன் கருதும்பயன்பெற் றினிதுவந்தான்
சந்தமறைதே ரோர்பனவன் றனதுகவல்தீர்ந் தருள்பெற்றான்
விந்தை யிலங்கும் புயங்கொண்ட விறல்சேர்தக்கன் பவமொழிந்தான்
சிந்தை மகிழ்ந்தே யளவிறந்தோர் சேர்ந்தங்கரிய செயல்பெற்றார். 19(832)

பாரின்மாதுத் தரியம்போற் பரந்துவருமப் பாலாற்றின்
றீரத்திருக்குந் தாலநகர் சேர்ந்து சிவனைத் தெரிசித்தார்
சேரும்பவங்கள் கடைக்காலிற் செறியும்பூளை மலராகும்
வீரவதற்கு நிகர் தலங்கள் வேறு புவியில் யான்காணேன். 20 (833)


                                          (வேறு)

அதினுறு பெருமை முற்று மறைந்திட வூழிசெல்லு
மதியுறு மிராம வாங்கு வைகியப் பரனைப் போற்றி
யெதிருறு பவத்தை நீக்கி யேகுதல் கரும மாகுங்
கதிர்மணிவண்ணா வென்றான் கருவினைக் கடலை வென்றான் 21 (834)

வீம்புசேர் முனிவன் கூற மெலிவொழிந் தடவி ராமன்
பூம்பொறை விமாக மூர்ந்து போந்தவ ணிறங்கி யந்தக்
காம்புறழ் தோளி பங்கன் கழலிணைப் பூசை செய்தே
யாம்பலம் போது வாயா லன்புறத் துதித்தான் மாதோ. 22 (835)

அன்புடன் றுதித்துப் போற்ற வரன்மிகக் கருணை யாகி
மின்பிறழ் மேனி யோடும் விளங்குமான் மழுவி யோடு
மென்புறு மாலை யோடும் மென்னையா ளுடைய வையன்
முன்புற நின்றான் கண்டான் மூரிவிற் றடக்கை வள்ளல் 23 (836)

கண்டிடு மைய னுள்ளக் களிப்பினாற் றுதிசெய் தேத்த
வொண்டொடிப் பாக னன்பா லுரைத்தன னிராம நீமுன்
வண்டுவீழ் மலர்ப்பூங் கோதை மலர்த்திரு வனைய மாதைக்
கொண்டுபோய் காணில் விட்ட கொடும்பழி யொழித்தோ மிப்பால், 24 (837)

வளம்பெறு முன்றன் மாட மணிநகர் போதி யென்ன
வளந்திடற் கரிய வாற்ற லரக்கர்தங் குலத்தைக் காய்ந்தோ
னுளம்பெறு மகிழ்ச்சி பொங்க வொளிர்விமா னத்தி னேறித்
தளம்பல சூழ வையன் சார்ந்தன னயோத்தி மாதோ. 25 (838)

                    இராகவன் பாவ மொழித்த சருக்கம் முற்றிற்று

                                  ஆகத் திருவிருத்தம் - 838.


                                            மதனனருச்சனைச் சருக்கம்

தன்னே ரில்லாச் சூதனிரு தாளைப்பணிந்து நைமிசர்க
ளன்னே யனையாய் கோதண்ட ராமன் கதைகேட் டகமகிழ்ந்தே
மின்னேய் வேணி யரன்றனைவேள் மிகுந்த மகிழ்வா லருச்சித்துத்
தன்னோ தகவு தீர்ந்தசெயல் சாற்றுகென்னச் சாற்றுவனால் 1 (839)

தீரஞ்சுமந்த புயமுடைய திறல்சேர் சூர னிழைத்தகொடுங்
கோரஞ் சுமந்த வானுலகக் கோமா னிடருற் றாற்றானாய்
நாரஞ் சுமந்த மலர்ப்பொய்கை நாட்டிற் றனது மனைவியொடும்
வாரஞ் சுமந்த வானவர்தம் வருக்கத் தொடும்வந் தடைந்தனனால், 2 (840)

நீரார் புயல்தோய் விண்ணளவு நீண்டமேரு மலையதனைத்
தாரார் புயவிண் ணவரிறைவன் சார்ந்தெம்மிறைவன் றனைக்குறித்துச்
சீரார் தவஞ்செய் திடுமமையந் தெளிந்தமுனிவர்க் கருள் செய்யுங்
காரார் மிடற்றுக் கண்ணுதல் செங் கண்ணா யிரத்தோ னெதிர்வந்தான் 3 (841)

வந்தார் தமைக்கண் டவரடியை வணங்கி வெஞ்சூர் தடிந்தெனது
சிந்தா குலந்தீர்த் தருள்செயெனச் செப்பக் கேட்ட திகம்பரனெம்
நந்தா விளக்கா மகனொருவ னாடியவுணக் குலமழித்துப்
பைந்தார்த் திணிதோட் பார்த்திவநின் பயந்தீர்த் திடுவ னெனமறைந்த 4 (842)

ஆங்குப் புனித னகன்றிடலு மமரர் கோமா னுளத்தார்வந்
தாங்கிக் கமல நிதிப்பொ குட்டிற் றங்கும் பிரமன் பாலடைந்து
தீங்கு பெறுசூர் புரிதுயருந் திகழ்செஞ் சடையான் செப்பியதுந்
தாங்கு வயிர வாட்கரத்தோன் றாளிற்பணிந்து சாற்றினனால் 5(843)

போத னரிவிண் ணவரோடும் பொறிநா யகன்பா லடுத்திதனை
யோத வரிநான் முகன்றனைப் பார்த் தொப்பில் பரமன் மாதவர்க்கு
வேத முடிவின் பொருட்குறியால் விரித்துக் காட்டயோ குற்றான்
நாத னதனைத் தவிர்ந்திமவான் நங்கை தனைமா மணஞ்செய்தே. 6(844)

அடலார் மகனைத் தருவனதற் கனங்கன்றனைக்கூ யனுப்புமென
மடலார் பதுமத் தயனமரர் மருவ வொருபா லிருந்தலைகொள்
கடலார் முரசக் காமன்வரக் கணித்தா னந்தக் கணத்தின்மகட்
கடலார் படையோ னிளந்தென்றற்  *கவரி யூர்ந்து வந்தனனால், 7 (845)

*கவரி=தேர்

வந்த மதனை நோக்கியரன் மருவும் யோக நீங்கிமலை
தந்த மகளை வேட்ப நின்கைச் சாபத் தலர்மென் பூவாளி 
சிந்தி வருக வெனக்கரத்தாற் செவியைப் பொத்தி சிவசிவவென்
றந்த மொழியை மறுக்கமல ரயன்சூ ளறைவே னெனவனங்கன், 8 (846)

இந்த வசையைச் சுமத்தலினன் றீச னாற்சே ரிடரென்னாப்
புந்தி யினிற்றேர்ந் திரதியொடும் புகழார் கும்ப முனிவரையின்
சந்த மளவி வருந்தென்றற் சயந்த மிசையூர்ந் தரன்வாழு
மந்த மிகுவெண் கைலைமலை யடைந்து வணங்கித் துதித்தனனால். 9 (847)

ஆங்கு மதவேள் கரும்பைவளைத் தலரம் பேவ விறனந்தி
தாங்குவெகுளி கொடுசீறத் ததையு மலர்வா ளிகள்வானிற்
றேங்க மதனன் வணங்க வுன்றன் சீரார் வரவே தென்ன நிகழ்ந்
தாங்கு மொழியக் கேட்டவிடை யண்ண லுவந்தீ தறைகுவனால் 10 (848)

பாதி மதியைத் தரித்தருளெம் பரமன் யோகத் திருத்தலினவ்
வாதி யெதிரிற் செல்லற்க வணியார் மேலை வாயின்வழி
போதியெனப் போந்தங்கரன்மேல்பூ மென்வாளிதனைச்சிந்த
வேதமுதல் வன்விழிதிறக்க வீய்ந்தா னிரதி தோய்ந்தானே. 11 (849)

                                     (வேறு)

அந்தவேலை யிரதி காந்த னாகம் வெந்த வாறறிந்
திந்து வன்ன முகமு லர்ந்தி ருங்க ணீர்த தும்பவே
கந்து கத்த னத்திரண்டு கையி னால றைந்துபின்
வந்து முக்க ணெந்தை பாத மலரில் வீழ்ந்த ரற்றினாள்.  12 (850)

பண்ணி சைந்த குதலை யின்சொல் பசிய கிள்ளை யொன்று வீழ்ந்
துண்மெ லிந்து பதைப தைத்து ழன்று தேயு மாறுபோற்
பெண்ண ருங்க லம்ப தைத்து பெரிது நொந்து பொருமியே
துண்ணெனாவெ ழுந்தவ் வெந்தை தூய தாளி றைஞ்சியே 13 (851)

வேத மாகி முனிவர் காண வேத மோதும் விமலமா
மாதி யாய னாதி யாகி யப்பு றத்து மொப்பிலாச்
சோதி யாய்ச்சு யம்ப்ர காச தோற்ற மாகி யிருவகைப்
பேத மாகி நின்ற ஞான பிரண வத்தி னுருவமே. 14 (852)

அறிவி லாத சிறியர் தீமையார்பொ றுப்பர் நீயலான்
மறியு லாவு பாணி கோப மாற்றி யுன்ற னருளினால்
வெறியு லாவு மதனி யற்றும் வினைபொ றுத்தென் கந்தரஞ்
செறிப சும்பொன் மங்க லஞ்செ ழிக்க நல்கெ னக்கெனா 15 (853)

தானை யேற்றி ரக்க லுந்த ழற்கண் மேரு வில்லினான்
ஞான யோக நீங்கி யுண்ண யந்து நாம வேற்கணாய்
வான மேவு மிமய மாதை மாம ணம்பு ரிந்துநின்
வேனி லானை யீது மென்ன விமைய வெற்பின் மேவினாள். 16 (854)

இன்ன வாறு ரைத்து பின்னர் யோக மாச ரித்துவா
ழென்ன மாத வர்க்கி யம்பி யிமய வெற்பி னுற்றிடுங்
கன்னி முன்னர் கடுவ டக்கு கண்டன் மூத்த வந்தண
னென்ன வேக வம்மை நோக்கி யிருக ரங்கன் கூப்பியே. 17 (855)

தொழுது நிற்ப வாதனத்தில் தோன்றல் மேவிநீ தவம்
பழுது றாது புரிதல் யாது பகர்தி யென்ன வன்னையும்
விழுது நேர்ச டைப்பி ரானை வேட்டல் வேண்டி னேனெனக்
கழுது கூளி யொடுந டஞ்செய் கடவு ளென்றி கழ்ந்தரோ. 18 (856)

இன்று னைக்க லக்கும் வேள்வி யெண்ணி யான டைந்ததிங்
கென்று ரைக்க வெம்பி ராட்டி யெரியெ ழச்சி னந் தெதிர்
நின்றி டாது போதி போதி நீதி யற்ற வேதியா
வென்றி சைக்க விடையின் மீதி லிறைவ னாக நின்றனன். 19 (857)

காத லாகு மெம்பி ரானைக் கண்டு கைகள் கூப்பியே
பேதை தேர்ந்தி டாது ரைத்த பிழைபொறுக்க வேண்டுமென்
நாத வென்ன வீச னந்த நவையெ லாந்து தித்தவா
மாது கொண்ட னந்த வத்தை மாற்று நாளை வேட்டுதும் 20 (858)

எனவி யம்பி வெள்ளி வெற்பை யெய்தி யோகர் வாயிலா
வினிய சைல வேந்த னுள்ள மிசைவு கண்டு பனிவரை
புனித னெய்த மேனை பாத பங்க யங்கள் பூசியா
நனிக லன்றி ருத்தி மாதை நாத னோடி ருத்தினாள். 21 (859)
 
மாசில் பூத ரத்த னீரை வள்ள லத்தம் விட்டரற்
காசி லாத வெனது மாத ளித்த னென்ற னன்பொனின்
றூச ணிந்த மாய னாதி சுரர்க ளார்த்து வாழ்த்தினார்
பேசு நார தாதி யோர்பி றங்கு கீத மேத்தினார். 22 (860)

                                                           (வேறு)

மறைமுடிக் கடவு ளுரைப்படிப் பிரமன் மங்கலச் சடங்குக டொடங்கக்
குறைவற நிறைந்த மங்கல நாணைக் கோதிலாப் பரன் கரங் கொண்டே
பறையறை முழங்கப் பார்ப்பதி மிடற்றிற் படரொளி விரித்திடத் தரித்து
நிறைவலஞ் சுழிகொள ழல்வலங் கொண்டுநி கரிலா வரியணை யிருந்தான். 23 (861)

பின்னரெம் பிரானைப் பிராட்டியோ டயன்மால் பிறருளோர் யாவரும் பணிந்தார்
மன்னிய விரதி வணங்கிவே டன்னை வள்ளலே யளித்தரு ளென்ன
வுன்னினன் மதனன் றோன்றவெம் பரமனொளிரதிக் குருவனாய் மற்றோர்க்
குன்னரு மருவ னாகுகவென்றே யோதிமா திரதிபால் விடுத்தான். 24 (862)


அந்தமா மதன னழல்விழிப் பரம னடியிணை வணங்கிநின் றேத்தி
யெந்தையே  நின்ற னெழிறிரு மேனி யிளைத்திடச் சரந்தொடுத் தலினால்
வந்தவெம் பவந்தீர் வழியெனக் கருளி மனக்கவ லொழித் தியென்றுரைக்க
விந்துமா முடியோ னிரதிகா தலனுக் கின்னண மெடுத்தினி தியம்பும் 25 (863)

கொவ்வைவா யுமையுங் கோவிறை யவனுங் கொண்டபா வந்தனை யொழித்த
கவ்வையங் கடல்குழ் மாநிலத் துயர்ந்த கயிலையங் கிரியினை யனைய
செவ்விய தால புரியெனப் புவியிற் சீருறு தலமுள ததினீ
நவ்வி நோக் கிரதி யுட னடை குதியே னாம்பழி யகற்றுது மென்றே 26 (864)

வேதநான் முகவ னெகினமா யௗற்றின் விளங்குசெந் தாமரை மலரின்
மாதுநா யகன்சூ கரமதாய் முடியு மலர்ப்பதந் தேடியுங் காணா
நாதனார் விடைதந் துமையொடு கயிலை நண்ணினா னைங் கணைக் கிழவன்
றாதுலா மலர்மென் கோதையா ளிரதித் தையலோ டளவளாய் மகிழ்ந்தே 27 (865)

தென்றலந் தேருந் திகழ்மதிக் குடையுஞ் சிறந்திடு மகரகே தனமும்
வென்றிகொள் வேழ வியனெடுஞ் சிலையும் விரைமலர்ப் பகழி யுங் கொண்டு 
மன்றலங் குழலா ளிரதியோ டிரவிமண்டல முறு மதில் புடைசூழ்
குன்றலிற் செல்வத் தாலையம் பதியாங் கோநக ரெல்லைவந் தடைந்தான். 28 (866 )

ஆங்குபன் னதிக்கு மரசென விளங்கு மலைகொள்பா லாற்றினிற் குடைந்து
வீங்கணி புயத்தில் விரைகமழ் நறுந்தார் விளங்கிய விறல் செறியனங்கன்
றாங்கெழி றனது மெய்யெலாந் திகழச் சாந்த வெண் ணீற்றினைப் பூசிப்
பாங்குறுஞ் சிகரக் கோயிலுட் புகுந்துபராபர மூர்த்தியைக் கண்டான். 29 (867) 

சூழ்ந்தனன் றுதித்தான் றொழுதனன் பலகாற் றூயதண் புனல லர் கொண்டு
வாழ்ந்திடு மரனைப் பூசனை புரிந்தான் வழுத்தினான் மதுமலர்த் தாண்மேற்
றாழ்ந்தன னுருகித் தடங்கணா னந்தத் தண்புனல் சொரிந்திட நின்றா 
னாழ்ந்தனன் பவத்தி லையகாத் துன்ற னருட்கரை சேர்த்தரு ளென்றான்  30 (868)

உருகியிவ் வண்ண மனங்கனுந் துதிப்ப வுளமகிழ்ந் தெம்பிரான் கருணை
பெருகிடச் செய்ய பவளவாய் மலர்ந்து பெட்புறு மனங் கவா வென்றங்
கருகினி லழைத்தே யன்பநீ புரிந்த வருச்சனைக் குகந்தன முன்பாற்
பொருவறு பவமுந் தீர்ந்ததென் றுரைத்துப் புராரிபின் னையுமிது புகன்றான் 31 (869)

அரியவித் தலத்தி னமதருங் குறியொன் றமைத்துன தணிகிளர் நகரம்
பரிவுட னகல்கென் றிணையிலி யாய பரம்பர னுரைத்தன னதுகேட்
டெரியிடு மிழுதா யுளங்கசிந் துருகி யிறையவற் பணிந்து கீழ்த் திசையீ
ரிருகணை விடுதூ ரத்தினி னல்ல விடமது தேர்ந்தக மகிழ்ந்தே 32 (870)

அந்தநல் லிடத்தி லமரர்வான் பதிபோ லணிநக ரொன்றெடுத் தளிசூழ் 
கந்தமென் கமலப் பொய்கையுண் டாக்கிக் கறைமிடற் றையனைத் துதித்துத்
தொந்தம்விட் டகலத் தண்புன றோய்ந்து தூயவெண் ணீற்றினைத் தரித்துச்
சிந்தையிற் பஞ்சாக் கரத்தையே நினைந்து சிவலிங்க வுருவமொன்றி யற்றி 33 (871)

சயிலமா துமையைத் திரிபுரை யெனப்பேர் சாற்றியப் பரனிடத் தமைத்துத்
தயிலமா னிடத்தைந் தையமு திழுது தண்சுவைப் பாறயிர் செழுந்தேன்
வயவிலார்ந் தெழுசெங் கரும்பினல் லிரதம் வண் பழம் பிழிந்தமென் சாறு
புயலள வியதேங் காய்ப்புனல் சாந்தம்புகலருந் தபனநீ ரிவற்றால் 34 (872)


மறைமுறை பிறழா தொன்றன்பி னொன்றாய் மனுப்புகன் றெண் டிசை கமழு
நறைமல ரயன்மு னேடியுங் காணா நாரமார் முடிமிசை யாட்டி,
நறியமென் வாசத் தேய்வையு மணிந்து நாண்மலர் கூவிளந் தரித்துக்
கறையிலா தொளிருங் காழகக் கலனைக் கவினுறக் கரங்க ளாற்புனைந்து. 35 (873)

அரம்பைமா வருக்கை யதிரசந் தேங்கா யாவின்பா லின்சுவை யனமும்
வரம்பறப் படைத்து வெள்ளிலை துவர்க்காய் வைத்தற வோரெலாந் துதிக்கத்
திறம்பெறத் தீப தூபமுங் கொடுத்துத் திருந்துப சாரமு மியற்றி
நிரம்புபல் லுயிராய் நின்றவன் றன்னை நேயமோ டருச்சனை புரிந்தே 36 (874)

தேவர்க டேவே சின்மயப் பொருளே சிற்சுகக் கருணையங் கடலே
பூவரு மயன்மால் புங்கவர் யாரும் புகலருந் துரியமெய்ச் சுடரே 
மூவருக் கரசாய் முளைத்தநின் மலனே மூதறி வுடைய நிட் களனே
யேவரும் பணியு மிறைவனே யுலகி லிணையிலா நந்தனேபோற்றி  37 (875)

 
எனப்பல விதமா யிருகணீ ரரும்ப விணைக்கரஞ் சென்னி சேர்த்திதயம்
பனிப்பொடு துதித்துப் பாதபங் கயத்திற் பணிந்திடப் பரமனார் மகிழ்ந்து
வனப்புறு மேனி யுமையொரு புறமு மதியணி சடையுமுக் கண்ணுந்
தனிக்கையின் மானு மழுவும்வண் கடுக்கைத் தாருமே றூர்தியு மானான் 38 (876)


மணிவிடை மீதின் மறைபுகழ் பெருமான் வந்தெழின் மதனன்முன் றோன்றித்
துணிபொடு நீசெய் பூசனைக் குகந்தோந் தொலைவிலா நின்னகர்க் கினிநீ
யணிகிள ரிரதியோடடைந் தானா வார்வமோடடைதியென் றறைந்தே
தணிவுறு மிலிங்கசீ மதனிடை மறைந்தான்சம்பரா ரியுநக ரடைந்தான். 39 (877)

நலங்கிளர் மதனன் செய்நக ரதனை நல்லமா நகரமென் றுரைப்பார்
புலங்கொளு முள்ளத் தன்னவன் பூசை புரிதலான் மதனநாய கனென்
றிலங்குறு புவியோ ரியாவரும் புகலவ் விறைவனைப்பூசனை யியற்றின்
மலங்கெடுத் தொழியாப் பவந்தொலைத் துயர்ந்தவாழ்வு பெற்றோங்குவ ரென்றான் 40 (878)

                                  மதனனருச்சனைச் சருக்க முற்றிற்று

                                          ஆகத் திருவிருத்தம் - 878


                                             இயமனருச்சனைச்சருக்கம்

களங்கமிலா வுள்ளத்தோ னிவ்வாறு கழறு தலும்
வளங்கொணைமி சாரணிய மாதவரு மகிழ்வோங்கி
விளங்குமத னன் கதைகேட் டனமியமன் வினைதீர்ந்தே
யுளங்களிகூர்ந் தவையுரைத்தி யெனச்சூத னுரைக்கின்றான். 1 (879)

வற்கலையாய் மருங்குடுத்த வண்டவமார் மிருகண்டன்
முற்கலமா முனிசெய்தவ முதிர்ச்சியினால் வந்துதித்த
பொற்கலைமா மணிப்பணிகள் பூண்டறலை நிகர்குழலா
*லற்கலைசெய் மருத்துவதி யணங்கினைவேட் டினிதிருந்தான். 2 (880)

* அல் -இருள்,

இருந்தபொழு தெச்சமிலா வின்னலி னான் மனைவியுட
னருந்தவன்கா சியையடைந்தே யணிகிளர்கங் கையிற்குடைந்து
திருந்தியசெஞ் சடைப்பரனைச் சிந்தனைசெய் தரியதவம்
வருந்தியிருந் தருமதலை வரம்பெறவேண் டினன்மன்னோ 3(881)

அருந்தவமோ ரியாண்டியற்ற வழற்கரத்தோன் வரந்தரவவ்
விருந்தவன்முன் றோன்றியுன தெண்ணமொழிந் திடுகெனலும்
பொருந்தியவோர் மகவையருள் புரிகவெனப் புரமெரித்தோன்
முருந்துறழ்புன் னகைபுரிந்தே மொழிந்திடுதன் மேயினனால் 4 (882)

தீயகுண மகம்பாவஞ் செறிதலுட னறிவின்மை
யேயுமுடம் வெதிர்மூகை யிருவிழிநோக் கிலனாகி
யாயவய தொருநூறு மரும்பிணியி லுழப்போனாய்
நேயமுட னொருபுதல்வ னீகுதுமோ நெடுந்தவத்தோய் 5(883)

கோலவனப் பிற்சிறந்து குறைதலிலா வடிவமுட
னேலுறுவன் பிணிகளின்றி யெம்மிடத்தி லன்புளனாய்
காலமுமெண் ணிரண்டுபெற்றுக் கலைகள் பல பயின்றுவல்ல
பாலகனைத் தருதுமோதின் னெண்ணமெவை பகர்தியென்றான் 6(884)

இருமைதரு தவத்துயர்ந்த விருபிறப்போ னிவையுன்னி
*புரமுயிர்வா ழாண்டு குறைந் திருந்தாலும் புலமைமிகுத்
தொருகுறைவி லாக்கையனா யுமதிடத்தி லன்புநிறை
தருமகவை வேண்டினன்யான் சசிதரவெற் கருளென்றான் 7 (885)

*புரம்=உடல்

இன்னவகை மனத்துணிவா னிசைத்திடலு மரனுனக்கு
நன்றிபெறு காதலனை நல்கினமென் றருள்புரிய
நின்றதவ முனிபோற்றி நேயமுடன் காசிநக
ரொன்றிசுற் றத்தவரோ டுறைந்திருந்தா னுறைநாளில் 8 (886)

கடனிலத்திற் றுயர்நீங்கக் கருதரும்புண் ணியமோங்க
வடன்மிகுமா தவருய்ய வருட்சைவந் தழைக்கவுமை
யிடமுடை யோன் கிருபையினா லேமனழிந் திடவன்னான்
றுடியிடைகா தலியுதரத் தோர்கருப்பந் தோன்றியதால் 9 (887)

                                             (வேறு)

தப்பறு வலத்தில்பொறை தாங்கிசுவை நீங்கி
மெய்ப்புறு புளிக்கறியின் மேலுளம் விரும்பி
செப்புறு வயிற்றினிடை சேர்மதலை யேமன்
றுப்புறுநல் வாயிடுவ துண்டுவகை தோய்ந்தாள். 10(888)

இத்தகை மருத்துவதி யெட்டுடனி ரண்டா
வைத்தமதி பின்செல வயாவுட னுளைந்தே
சுத்தநல வோரையில் சுபக்கிரக மெல்லா
மொத்தபொழு தோர்மக வுயிர்த்தினி துவந்தாள் 11 (889)

காரொலி யெனப் *பவன துந்துபி கலிப்பப்
பேரொலியி னாசிபல பேசின **ரதீதர்
நீரொலிசெய் மாகட னெடுந்தரையு ளோர்க
ளோரிலரிவ் வாறென வுவப்பினை யடைந்தார். 12 (890)

*பவனம்=தேவலோகம் , ** அதீதர்= தேவர்

தண்டதர னுக்கிடது தார்புயமு நீற்றுத்
தொண்டரடி யார்வலது தோளுமினி தாடக்
கண்டவனை நோக்கிமிரு கண்டன்மகிழ் வாய்மார்
கண்டனென வேபெயர் கணித்தன னிலத்தே. 13 (891)

மாசிலொளிர் வான்மதியின் மைந்தன்வளர் போதிற்
பேசுமறை யின்படி பிறங்குவினை முற்றுந்
தேசுற நிரப்பி தெளி வாயகலை யெல்லா
மாசற வுணர்த்தவர னாதியென வோர்ந்தான். 14 (892)


                              (வேறு)

கங்கைமதி சடைப்பரனை யிறைஞ்சி யன்னான்
      காற்பதுமந் தொழுமடியார் காலிற் றாழ்ந்தே
யிங்கிதமார் குரவனைமுன் வணக் கஞ் செய்தங்
     கேதமறு முனிவர்தமை யேத்தி யீன்ற
மங்களமா கியமேலோர் மாசில் பாத
     மலரிணைசென் னியிற்சூடி மறையின் மேலாய்த்
தங்குமுத லாச்சிரம வொழுக்கந் தன்னிற்
    சார்ந்தனனெண் ணரும்பிறவி தன்னை நீப்போன் 15 (893)

இந்தவித மாகவவ னியறுங் காலை
    யெண்ணிரண்டாண் டிசைந்திடலா லிணையி லாத
மைந்தனைநோக் கித்தமது வடிவு சோர்ந்து
    மனமுருகி யெரியிலிடு மெழுகை யொத்துத்
தந்தையுமீன் றிடுமனையு முளம் வேறாகித்
   தனித்தனியே விம்மிவிம்மித் திகைத்துச் சால
வெந்துயராம் பெருங்கடலி னிடையே மூழ்கி
   விழிதுயிலா திரவுபக லுணைந்து நொந்தார். 16 (894)

அங்கதனைத் திருமதலை கண்டாங் கீன்றோ
    ரடியிணையிற் பணிந்தவரை யணுகி நீவிர்
சங்கையதாய்ப் பருவரலுற் றேங்கு கின்ற
    தன்மைதெரிந் திடவடியேற் குரையு மென்னப்
பொங்கமுட னம்மொழியுட் கொண்டு மைந்த
    புகழ்பெறவே நீயிருக்க நம்பால் வேறே
பங்கமுறுந் துயர்குறுகி மெலிவ துண்டோ
   பரன்பதுமத் தாடொழுவோய் பகரக் கேண்மோ 17 (895)

இணர்கடுக்கைத் தாரணிவோ னுனக்கு மேனா
    ளீரைந்தோ டாறுவய தீந்தா னன்னாட்
புணர்தலினா லுளத்தவலங் கொண்டோ மென்னப்
    புகலவவர் முகநோக்கிப் புழுங்கல் வேண்டா
முணர்வுதரும் பரம்பரனைப் பூசித் தேத்தி
    யுலம்பொருதோ ணமனாற்றல் கடந்து சீர்த்தி
கொணர்வனென வேதுக்கள் பலவுஞ் செப்பிக்
   குரைகழலிற் றாழ்ந்துவிடை கொடுமி னென்றான். 18 (896)

கருவொழிக்குங் கான்முளையை யணைத்துப் புல்லிக்
    கருதருமுற்றுயர் நீங்கிக் களித்துப் பெற்ற
யிருகு ரவர்விடையளிக்க வீச னென்னு
    மிணையிலியி னருளுமன்புந் துணையாய்ச் செல்லப்
பொருவறுமுள் ளத்தின்மிக மகிழ்ச்சி பொங்கப்
    பொள்ளெனவவ் விடைவிட்டுப் பெயர்ந்துபோகித்
திருமணிகன் றிகையெனும்பேர் செப்பா நின்ற 
    செம்பொனா லயம்புக்கான் றிறலின் மிக்கான். 19 (897)

அனன்மெழுகாய் மனமுருக விழியானந்த
   வருவிதர வரன்கோயில் வலஞ்செய் தீசன்
முனமணைந்து பதமலரை முடியிற்சூடி
    முனிபுதல்வன் றென்புலத்தினொருசா ரெய்தித்
துனிவகல வரனுருவங் கண்டு பன்னா
    டோடவிழு நறுமலராற் றூயபாத
நனிமகிழ்வி னருச்சித்துத் தொழுதி ருக்கால்
    நாவாரத் துதித்திருக்கு நாளினோர்நாள் 20 (898)

ஈசனுமவ் வழியெய்தி யெமைநீ யன்பா
   யேத்திடுபூ சனைக்குவந்தே மிளையோய் நீயும்
பேசுகவேண் டியபெறுதற் கென்னத் தேவன்
    பிரசமலரடி போற்றி பிதாம கன்மான்
மாசில்பெரும் புகழுடைய தேவர்க் கெல்லா
    மாதேவ னாகியநின் மலனே காலன்
பாசமதி லடியனேன் சிக்கா துய்யும்
    படி நேர்வந் துதவென்னப் பரிந்தி ரந்தான், 21 (899)

அஞ்சலையஞ் சலைநீயந் தகனுக் கென்னா
      வடிமுடியிற் சேர்க்கவுமிக் கார்வம் பொங்கி
யுஞ்சனநா னினியென்ன வோத வோத
      முறுவிடமுண் டோன்மறைந்தா னந்த வேலை
பிஞ்ஞகனீந் திட்டவய தெண்ணி ரண்டும்
     பின் செல்ல வானிடைமா விசைகொண் டொல்லை
மஞ்செனவொர் யமதூதன் றோன்றி மைந்தன்
     மாபூசை கண்டணுகா தகன்று போனான். 22 (900)

அந்தவிறற் றூதன்விரைந் தியமன்பாத
    மடைந்தமரர் புகழ்தருமெம் மிறைவ கேட்டி
யுந்தனுரைப் படிசென்றேன் காசி தன்னி
   லுமாபதியை மார்க்கண்ட னருச்சிக் கின்றா
னெந்தவிதத் தினுமவன் பா லெய்த வொண்ணா
    தேக்கமுட னனல்கண்ட புலிபோ லஞ்சிச்
சிந்தைதளர்ந் திங்குனைவந் தடைந்தே னென்ன
    செப்பவதைக்கேட்டழல் போற் சினமீக் கொண்டான். 23 (901)

கற்படிதோ ணமன்றனது பாங்கர் மேவுங்
    காலனெனு மமைச்சனொடுங் கரிய நீல
வெற்படி கொண் டெனவிளங்கு மேதி மீதில்
   வேழமென வெரிந்புகுந்து வீரர் சூழ
விற்படுபொற் கவிகைமுடி மேனி ழற்ற
    விளங்குகரத் தினிற்பாச தண்ட மேந்தி
பொற்படியுள் ளவர்நடுங்கக் காசி மூதூர்
    போந்தறனைப் பூசைசெயும் புதல்வற் கண்டான் 24 (902)


மைந்தவுளத் தென்னினைந்தாய் யாது செய்தாய்
     மறுக்கமுடி யாதூழிமுறையு மீசன்
றந்தசொலு மிதையறியா தீசன் பாத
    தாள்பூசை பவம்போக்கு மன்றிப் பாச
முந்தவிலக் கவும்வலதோ படைத்துக் காத்து
    முடித்திடுமுத் தேவருனைக் காத்திட் டாலு
முந்தனுயிர் கொண்டன்றி மீளேன் றிண்ண
    மொல்லையென்பின் வருகவென வுரைத் தான்மன்னோ 25 (903)

காதலனாங் கதுகேட்டு மறலி கேளாய்
    கடவுளடி யார்க்கிறுதி யில்லை யோர்சார்
சாதலடை கினுநின்பாற் சாரார் வெள்ளிச்
   சயிலமடை குவரவர்தந் தன்மை கேட்டி
தாதவிழு மலர்ப்பிரமன் றுளவத் தாமன்
   றருநிழலி லுறைமகவான் சுரர்க டம்மை
யாதரத்தி னொடு மதியார் வினையினீங்கி
   யருளின்ப வீடிம்மை யடைகு வாரால் 26 (904)

அவர்பெருமை யறியாம லகிலத் தார்போ
   லகத்தினித் தனையாங்கவ் வடியார்ச் சார்ந்து
சிவபூசை செயுமென்ற னுயிர்க்குந் தீங்கு
    செயநினைத்தா யிவை யெல்லா முன்னா விக்குத்
தவருறுமிங் ககன்றிடுதி யென்னக் கேட்ட
    தண்டதர னிருவிழிதீ யெழச்சி னந்தே
யிவனிலைமை யறியாது பாசம்வீசி
   யீர்த்திடலுற்றானது போதினைய செய்வான். 27 (905)

இவையுணர்ந்த மைந்தனர னடியை யேத்தி
     யிணையடி நீ ழலைப்பிரியா திருந்தான் வானோர்
தவமுனிவன் மகனிறந்தா னெனவை யுற்றார் 
    தருமனிழுத் திடுபாசங் கழுத்திற் சார்ந்து
மவலமிலா மார்க்கண்டன் முன்ன ரீச
   னடைந்துநின் பால் வருதுன்பந் தீர்க்கின் றாம்நீ
கவலையுறே லெனமொழிந்து சினந்து வாமக்
   காலிலுதைத் தானடுவன் கார்போல் வீழ்ந்தான் 28 (906)

வீழ்ந்திடுபோ தயனாதி விண்ணோர் வாழ்வு
    வீடுற்ற தெனமருண்டார் வேலைஞாலம்
போழ்ந்தனதா னையுமூரும் பகடு மேங்கிப்
    பொள்ளெனவீழ்ந் திறவுற்ற புனிதன் பாதந்
தாழ்ந்ததுபோ துயிர்காப்பா னரனுண் டேமன்
    சார்ந்தெமையென் செய்வனெனச் சந்தப்பாவி
னாழ்ந்த பொருட் டுதிபலசெய் மைந்தற் காணூஉ
    உவரியயனுங் காணாதான் மகிழ்ந்து ரைப்பான். 29 (907)

மைந்தவெமை நீமுந்து வழுத்தல் செய்த
    மாசறுபூ சைக்குளத்தின் மகிழ்ந்தோ மத்தா
லந்தமிலா வாயுணினக் களித்தோ மென்னா
    வறைந்திலிங்கத் திடை யடைந்தா னனைய காலை
புந்தியினி லரனுருவை யுன்னி நீங்கிப்
    புணரியினீர் விழியுகுக்கப் புலம்பி நைந்த
தந்தையனை தாடொழுது தாழ்ந்தா னன்னார்
    தழுவியணைத் துளமகிழ்வு சார்ந்தார் மன்னோ . 30 (908)


                                          (வேறு)

இங்கித குணங்கண் மேய விரவிசேய் நிகரி ராம
லிங்கபூ பனைய டைந்த விரவலர் வறுமை யெல்லாம்
பங்கம தடையு மாபோற் பார்புகழ் மறையோன் சைவ
மங்கைபா கன்றா ளேத்த மாய்ந்தது விதியு மாதோ 31 (909)

அன்னவன் றனக்கு மிக்க வஞர்செயு மியம னாவிப்
பின்னம தடைத லாலிப் பெருங்குவ லயத்தின் மீது
மன்னுபல் லுயிர்க ளோங்கி மாய்விலாப் பான்மை யாலே
பன்னரும் படியின் மங்கை பரம் பொறா தயர்ந்து சோர்ந்தாள். 32 (910)

பின்னருங் கயிலை மேவிப் பிஞ்ஞக னடியிற் றாழ்ந்தே
யென்னிடர் தவிர்க்க வாவி யிறுக்குமந் தகன்செய் தீமை
யுன்னலை பொறுத்தன் னோனுக் குயிரளித் தருடி நீரிங்
கென்னுரை மறுத்தி டேலென் றிணையடி வணங்கி வேண்ட. 33 (911)

அந்தக வெழுக வென்னா வமலநா யகன்செவ் வாயான்
முந்தருள் புரித லோடு முடிந்தகூற் றுவனெ ழுந்து
வந்தனன் கமல பாதம் வணங்கின னினது செந்தா
ளெந்தனன் மேனி தீண்ட விடரகன் றுய்ந்தே னென்னா  34 (912)

போற்றின னவனை மூன்று புரமெரித் தவனு நோக்கிச்
சாற்றுவ னீறு கண்டி தரித்தெமை நினையு மன்பர்
தோற்றிடிற் பணிந்த வர்க்குத் துயர்செயா தின்சொற் கூறி
கூற்றுவ நீங்கு கென்னாக் குழகன்வாய் மலர்ந்தா னன்றே 35 (913)

என்றிறை மொழிய வேம னிணையடி தொழுதுன் பாத
மொன்றிய மனத்தி னான்மே லோர்ந்திடா தெறிந்த பாசஞ்
சென்று நின் மேனி மீதுஞ் செறிந்தன வதனா லுற்ற
வன்றிறற் பவத்தை நீக்கு வாயெனப் பரமன் கூறும் 36 (914)

தோடுறு கமலத் தோடு துளிமதுக் குவளை யாம்பற்
காடுறு கமல வாவிக் கயலினங் குதித்தங் காடக்
கோடுறு தவளக்கோடு குமிறுந்தண் பணைசூழ்ந் தம்பொன்
னாடுறு மமரர் தாமு நாடுந்துண் டீர நாடு 37 (915)

நிறம்பயின் முந்நூல் பெற்றோர் நீதிமா மறைநூல் கற்றோர்
திறம்பயி லரசர் வாசச் *சீரகத் தாமர் கொங்கைப்
**பறம்பயி னெடுங்கட் செவ்வாய்ப் பார்மகள் புதல்வர் முன்னா
வறம்பயில் குடிக டுன்று மந்தனாட் டகத்தி னாப்பண் 38 (916)

*சீரகத்தாமர் - வணிகர்,  **கொங்கைப் பறம்பு=  தனம் மலை

புன்றலைக் கரிய செங்கட் புரிமருப் பெருமை வாயான்
மன்றலைக் கமழும் வாவி மலர்பல மேய்ந்து வாவித்
துன்றலைப் புனல தார்ந்து சுரந்துறச் சொரியுந் தீம்பால்
கன்றலைத் துண்ண வூட்டிக் காஞ்சிமா நிழலிற் றுஞ்சும். 39 (917)

அரும்புறு கமலச் சூழி யதனினின் றெழுந்து வாளை
சுறும்புறு மலர்த்தண் சோலைச் சூதநற் கனிகள் சிந்துங்
கரும்புறு வேலி சூழ்ந்த கழனியிற் கதிர்ச்செஞ் சாலி
தரும் *பொறி முத்தந் தங்குந் தாலமா நகரொன் றுண்டால் 40 (918)

* பொறி - பொலிவு

அத்திருத் தலத்தின் மேனா ளனங்கனா லருச்சித் தேத்தும்
வித்தகக் குறியைப் பூசை விதிப்படி புரிய னாங்குன்
சித்தசஞ் சலத்தை நாமே தீர்க்குது மென்னத் தாவும்
பெற்றமீ திவரு மீசன் பிரியமோ டுரைத்தான் - மன்னோ 41 (919)

ஆங்கது கேட்ட கால னார்வமோ டெழுந்தே யந்தத்
தீங்கறு தலத்தை நாடித் தெரிந்தடைந் தனங்கன் பூசை
பாங்குற வியற்று மெங்கள் பரமனைக் கண்டா னந்தந்
தேங்குறப் பூசித் தேத்தி சித்தமொத் தினைய கூறும் 42 (920)

 
ஆலமா மரத்தி னீழ லருமறை முதனூ லெல்லாஞ்
சீலமா முனிவ ரானோர் தேறவே யருளிச் செய்த
வாலமா மதியைத் தாங்கும் வளர்சடை முதலே கோட்டுப்
பாலமா னேந்துஞ் செங்கைப் பாலலோ சனனே போற்றி 43 (921)

                                            (வேறு)

என்றுபல துதிகள்புகன் றிட்டெருமை யேறேறு மியமன் மீட்டு
மன்றினடித் திடுபாத மலரடியைத் தொழுதிடலு மலைமா னோர்பாற்
றுன்றமழு மான்கரமுந் தொடுகடனஞ் சயில்களமுந் துலங்கு மார்பி
னின்றசைவெண் புரிநூலுந் துலங்கமழ விடைமீது நிமலன் வந்தான் 44 (922)

கந்தமலர்த் தார்புனையுங் காலன்மிசை யழலேந்தி கருணை கூர்ந்து
முந்தவுன்கைப் பாசமென்மே லெறிந்ததனால் வரும்பாவ முழுது மின்னே
நைந்தகலச் செய்தனனென் றாதரத்தோ டுரைத்துமலை நங்கைபாகன்
சுந்தரமாஞ் சிவலிங்கக் குறிகரந்தான் சுரர்மலர்க டூவினாரால் 45(923)

அந்தவிறை யவனைமுன மனங்கனும்பின் னியமனுமா யருச்சித் தேத்த
வந்தபெயர் மதனாந்த கேசனென வார்கடல்சூழ் வையத் துள்ளார்
சந்தமுறப் புகல்வரந்தத் தற்பரனைப் பணிந்து பின்பு *தண்ட மேந்தி
நந்தலின் மேற் றிசைவழிகொண் டீரிண் **டேவிசைதூர நடக்கு மேல்வை 46 (924)

*தண்டமேந்தி=இயமன், **ஏ=அம்பு

விண்ணகடு கிழித்தோங்கி விளங்குநெடுங் கொடிமதிலும் விமல மாய
"தண்ணொளி பொனமணி குயிற்றுஞ் சந்தமிகுங் கோபுரமும் *சயம்பு வாலும்
பண்ணரிய தூபியுமென் பதுமமலர்த் தடமுமுடைப் பனவர் போற்றுங்
கண்ணுதல்மா யூரேச நாதர்சின கரங்கண்டு களித்தா னன்றே. 47 (925)

*சயம்பு= பிரமன்

கொங்கலர்மா மதுப்பிலிற்றுங் கோதையர்குங் குமநீரைக் குழைத்துத் சிந்து
மங்கலமா மறுகேகி வளர்நெடுங்கோ புரக் கோயில் வதிந்து வானோர்
தங்கடலை வனைச் சூழ்ந்து தாழ்ந்துபல துதிமறை யாற் சாத்திப் போந்து
குங்குமமார் தனஞானப் பூங்கோதை நாய கன்வாழ் கோயில் புக்கான். 48 (926)

துங்கமறை யவன்முன்னந் தொழுதேத்துங் காளத்திச் சுடர்க் கொழுந்தைப்
பங்கயனே முதலாய பண்ணவருக் கருமருந்தைப் பனிமென் சீதக்
கங்கைபொலன் வேணியின் மேற்கவின் காட்டுங் கண்ணுதலைக் கண்டு தாழ்ந்து
மங்கலமாந் துதிபுகன்று விடை யேற்றுத் தம்பதியின் மன்னினானால்  49 (927)

                                இயமனருச்சனைச் சருக்க முற்றிற்று.

                                              ஆகத் திருவிருத்தம் - 927

                                         
                                                வீரபத்திரச்சருக்கம்


சுதன் புகன்ற வாசகமாஞ் சுவைசே ரமுதைச் செவிவாயாற்
போத வயின்று வியப்பெய்திப் புனித முனிவர் சூதனிரு
பாதந் தொழுது நமன்காதை பகரக்கேட்டோ மினிவீரன்
றீதில் காதை தெரிமினெனச் சிந்தை மகிழ்ந்து செப்புவனால் 1 (928)

                                             (வேறு)

பொன்னி னாய பொருப்பின் மரகத
மென்னு நீள்கொடி மேவிய போலெம
தன்னை போடு மறவரி யானென்றும்
மன்னி வாழ்கயி லைத்திரு மாமலை. 2 (929)

தேவன் வாழ்தரு சீருடைத் தாதலின்
மேவு நான்மறை யும்விரி ஞாலமுந்
தாவின் மாதவஞ் செய்திடத் தங்கிய
மாவ றந்திரண் டுள்ளதை மானது. 3 (930)

ஓங்கு மாகயி லாயத்தி னுச்சிமேற்
றேங்கு சோதிச் செழுமணி யொன்பதாற்
பாங்கு றச்செய்த பண்பியன் மண்டபந்
தாங்கு சந்திர காந்தத் தளவிசை 4 (931)

மீதி ளங்கதிர் கோடி விளங்கல்போற்
சோதி வீசித் துளும்பி வளங்கொள் சிங்
காத னத்தி லரனுமை யாளுடன்
வேத வோசை மிகவந் திருந்தனன். 5 (932)

                                         (வேறு)

அந்த வமையத் தம்புயக்க ணரியு மலர்மீ துறைவோனுங்
கந்த மலர்மென் கண்ணிபுனை ககனத் திறையு மெண்டிசையிற்
சந்த முறவா ழெண்மருநற் றகைசேர் பதினோ ருருத்திரரு
நந்த விலாப்பன் னிருசுடரு நவசித் தருமெண் வசுக்களொடு 6 (933)

போத முறுமோ ரெழுவருஞ்சீர் பொலியுஞ் சனக னாதியரா
மேத மறுநான் முனிவரரு மிணையில் கருட கின்னரருங் 
கீத மறைகிம் புருடருமேர் கிளருஞ் சீர்சா லுரகருநற்
*சாத மருவு விஞ்சையருஞ் சார்ந்தேய ரனைத் துதித்தனரால் 7 (934)

*சாதம்= உண்மை

ஆங்கேர் திருநா யகன்மீதி லையன் சார்ந்தம் புயன்மேற்கை
பாங்கா யமைத்துப் புரந்தரன்செம் பதுமைப் பாதம் வருடவொளி
நீங்கா திலங்கா தித்தன்மதி நீள்சா மரைவீ சத்தனவன்
தேங்கா நந்தத் தோடடப்பை சிறப்பா யிடவங் கமர்காலை. 8 (935)

இசைநா ரதனத் தன்சபையி னிடஞ்செல் லமையந் தெரிந்து ணுழைந்
தசையா மனத்தி னன்பினணைந் தடிதாழ்ந் தெழுந்து கரஞ்சென்னி
மிசைசேர்த் தவனி யுறுநீதி விளம்ப மனத்தி னினையு முனந்
திசையா சிடையான் றெரிந்துவந்த செய்தியதனைச் செப்பென்றான் 9 (936)

விண்ணே முதலா முலகனைத்தும் விதித்தோம் பீதாம் பரனெற்றிக்
கண்ணார் கடவு ளுனதாணைக் கடவா திருந்து முத்தொழிலும்
பண்ணா விருப்ப ரெனினறியாப் பதமு முளதோ பாரினிடைப்
பெண்ணா யாணா யலியாயிப் பேதங் கடந்த பெரியோனே. 10 (937)

என்னாத் துதித்து மண்ணுலகி னெழில் சேர் விலாச காஞ்சிக்கோர்
மன்னா வச்சி ராங்கதப்பேர் மருவப் பெற்றோன் *காகோளி
தன்னீ ழலின்முக் குடைநிழற்றத் தங்கு மருகன் றனைத்தேவென்
றுன்னா வருகமதத்துறைவோ னொருவ னுளனங் கவன் றன்னால் 11 (938)

*காகோளி= அசோகம்

                                                           (வேறு)

இனிய வேத வொழுக்கமு மாகமத் தேய்ந்த நீதியுங் குன்றியதாற்சடை
புனித நீரைத் தரித்திடு மண்ணலே புவனி மேனின்பெரும்புகழ்  பொன்றியுன்
னினிய பத்தியு மஞ்செழுந் தோசையுமெய்யி னீறு மிலங்கிய கண்டியு
மனிதர் பாலின்றி யற்பச் சமணெறிமல்கிச் சைவகிமை மறைந்ததால், 12 (939)

விடத்தை யொத்த வசுரர் விபுதரை வெருட்டல் போலச் சமணர் மிகையினாற்
குடத்தி லிட்ட விளக்கென நின்புகழ் கூறு மன்பர் குவலயத் துண்மறைந்
தடக்க மாகி யிருக்கச் சமணரே யரியகுன்றின் விளக்கது போலவே
திடத்த ராகியத் தென்றிசைச்செம்மினர் செப்பும்வேத சிவாகமச்செய்திபோய். 13 (940)

அந்த கார மடைந்துன் னடியவ ரஞ்ச ழுத்தை யறையவு மஞ்சியே
யெந்த நாளிற் றுயர மொழிவமென் றிரங்கு கின்றனரேழுல காளிநீ
யந்த மண்ணி லணைந்தச் சமணரை யாழ்த்தி மூவிதமானநின் பத்தியே
வந்தி டும்படி செய்துன் மகிமையே மல்கியன்பர் வளர வருளென 14 (941)

அறந்த வாத முனிவர்க் கிறையவ னாகு நாரத மாமுனி வேண்டநற்
றிறந்த வாத திருமலன் புன்னகை செய்து வீரன் றிருமுகநோக்கியே
*மறந்தவாதநின் பன்னியோடே கியாழ்மைக் கருங்கடற் பாரகஞ் சேர்ந்தெழி
னிறந்த வாதவெண் பூதிவிழி மணிநியம மோடணியச் செய்வதற்குமுன் 15 (942)

*மறம்=வீரம்

                                                   (வேறு)

வச்சி ராங்கத மன்னனைத் திருத்தியுன் வயமாக்
கிச்சி வச்சம யத்திற மிதுவெனத் தேற்றிப்
பொச்ச மிக்கரு கச்சம யத்துறு பொய்யி
லிச்சை வைத்துழ லேலிட ருறுமென வியம்பி 16 (943)

அனைய வன்றனோ டந்நக ருறைதரு மாக்க
டனையுஞ் சைவர்க ளாக்கியூர் தம்மையும் புதுக்கி
நனைகொள் கூந்தனின் னாயகி யோடிவ ணடைதி
யெனவி ளம்பியே விடைகொடுத் திருந்தன னெம்மான் 17 (944)

அவ்வுரை செவிப்ப டாமுனடி பணிந் தணிசி ரத்திற்
றிவ்விய முடியுந் தோளிற் சிறந்தவொண் டொடியுங் கையிற்
றெவ்வரை வாட்டும் வாளுஞ் சிங்கத்தி னுரியின் கச்சுஞ்
செவ்விய மலர்ப்ப தத்திற் றேங்கொலிக் கழலும் பூண்டு 18 (945)

நஞ்செனக் கருநி றத்த நாலிரு பூத முத்தின்
விஞ்சிய குடைக விக்க வீரர்கள் கவரி வீச
வஞ்சியர் நடிக்கக் காளம் வாயில்வைத் தூதப் பேய்கள்
கஞ்சுகி மாக்கள் வீரங் கழறவந் திரத மூர்ந்தான். 19 (946)

அண்டரு மறுக வாய்விட் டதிர்ந்திடு பம்பை வேயின்
விண்டிடு நாதஞ் சங்கம் வீணைதப் பட்டை பேரி
மண்டொலி தவண்டை கண்டா மணியொடு சின்ன மார்ப்ப
வெண்டிசை போர்ப்பத் தூளி யெழுந்தன பூத வெள்ளம், 20 (947)

மழைதவழ் குடுமி வேய்ந்த மலைகளு மணம்பொ திந்த
தழைவிரி வனமுந் தூய தடம்பல கடந்து மன்னன்
பிழைதவிர்த் தின்ப வீட்டைப் பெரிதுவந் தளிக்கச் சீர்சா
லழகிய தாலை மூது ரடைந்தன னடல்சேர் வீரன். 21 (948)

அடைந்தவ ரார வார வதிர்ச்சியை யருகர் கேட்டு
மிடைந்தன ரெதிர்ந்து நீவிர் வெள்ளெலும் பணிந்தோ னன்பு
தொடர்ந்துளீ ராகை யாலித் தொன்னக ருற்றீ தென்னா
மடங்கலை யனந்த மேதி மறித்தபோன் மறுத்தா ரன்றே 22 (949)

மறித்தவ ராக்க நூறி மாயையிற் பொருந்தி பங்கி
பறித்தவர் தடைக்கு நாமுட் படுவதோ வெனவுள் ளுன்னிச்
செறுத்தவர்ப் பழித்தீ சன்வாழ் சினகரம் புகுந்தார் கண்டங்
கறுத்தவ னளித்தாற் கெண்ணுங் கருமங்கை கூடா துண்டோ 23 (950)

ஈதிவ ணிருக்க முன்ன ரெதிர்ந்தடல் குறைந்த கோளர்
பூதிசா தனங்க ணீக்கிப் பொய்ச்சம யத்து ளாழ்ந்து
மேதினி காக்கும் வைவேல் வேந்தன தடியி றைஞ்சித்
தீதற நடந்த யாவுந் தெரித்தனர் விரித்து மன்னோ 24 (951)

படிற்றொழுக் குடைய வஞ்சப் பாதக ருரையைக் கேளாக்
கடற்புவி புரக்கும் வேந்தன் கதுமெனச் சினந்து தீய
வடற்படை மருங்கு சூழ வமணமா சகன்றான் போன்று
மிடற்றினில விடத்தை வைத்தோன் மிளிருமா லயத்துட் புக்கான் 25 (952)

ஆயபோ தமைத்த சிங்கா தனத்தினி லடியர் சூழக்
காயுமா தவன் போன் மேவுங் கனைகழல் வீரன் றன்னைப்
பாயுடைப் பாசிப் பல்வாய்ப் பாதக னெதிர்ந்து நோக்கிக்
காய்சின வுரைகள் புண்ணிற் கடவுவேல் போற்பு கன்றான். 26 (953)

சாம்பலை நுதலிற் பூசுஞ் சழக்கநின் னூரும் பேரும்
பாம்புரிப் புரிசை சூழிப் பதிவரு செயலுந் தேற
மேம்பட வுரைமி னென்றான் மிக்கபத் திரைக்குக் கேள்வன்
கோம்பிய வுளத்தி னோடு கொற்றவற் குரைப்ப தானான். 27 (954)

சீவரப் போர்வை தாங்குந் திறலுடை நிருப நம்மூர்
யாவரும் புகழுங் கைலை யாம்புறச் சமயந் தன்னின்
மேவிய வீரர் தம்மை வெறுத்திடும் வீர னென்பேர்
தேவியைப் பாகம் வைத்தோன் றிறமுனக் கறைய வந்தேன் 28 (955)

என்னவுக் கிரன்சொல் கேட்ட வினையில்பூ பதிகொ தித்துப்
புன்னகை புரிந்தே யாரும் பொருந்திடா வென்புந் தோலும்
பன்னக முங்கொக் கீர்க்கும் பன்றியின் கோடு மாமை
வென்னிலா ரோடுந் தீண்டா வெண்டலை முதலா வின்னும். 29 (956)

அசுத்தமாம் பொருளை நல்ல வணியெனக் கொள்ளும் பித்தன்
வசத்தனா கியநீ யென்முன் வந்தவ னியம மாகும்
நிசத்தினை யுரைப்பே னென்ன னேரிழை சுகத்தை மத்தன்
நசித்தலி லோர் ஞா னிக்கு நவிற்றுவ தேய்க்கு மென்றே. 30 (957)

காய்சினத் தறுகண் வேழக் காவல னுரைத்த மாற்றம்
வேயினைப் பழித்த மென்றோள் வீரிதன் கொழுநன் கேளாத்
தீயினு மிகக் கொதித்துச் சிந்தைநொந் துருத்து விம்மிக்
காயழ னெற்றிக் கண்ணைக் காட்டினன் சிறிது மாதோ 31 (958)

அதுபொறா தழலிற் பட்ட வந்தளி ரென்ன வாடக்
கதுமெனப் புரத்தில் வெப்பங் கதுவவா ருயிர்விட் டேகும்
விதமென வயர்ந்தா னாங்கு வீரர்மந் திரிமுன் னானோர்
மதிமிக மாழ்கி யந்த மன்னனை யுபச ரித்தார். 32 (959)

பின்புயிர்த் தரிய தேகப் பெருந்தழ லாற்றா னாய்வெள்
ளென்பர வாரம் பூண்ட விணையில்வீ ரன்பூந் தாளுக்
கன்புடை யவன்போ லண்மி யச்சமுற் றாநந் தத்தோ
டின்புட னடிய ரேத்து மெழிலிணை யடியிற் றாழ்ந்தே 33 (960)

தொடுகடற் புவியை யாண்டு துயர்தரு நரகத் தாழப்
படுமென தறிவுக் கேற்ற படியிணை யில்லா நின்னைச்
சுடுமொழி பலவாச் சொல்லித் துன்புறச் செய்தே னந்தோ
கெடுவதன் முன்னர் புத்தி கெட்டிட லியற்கை யாமால் 34 (961)

அறிவிலா தடியேன் செய்தீங் கனைத்தையும் பொறுத்து நாயேன்
குறைதவிர்த் தின்ப மோட்சங் கொடுத்திடுஞ் சைவ மல்லாற்
பிறிதொரு நெறியிற் செல்லாப் பேரறி வளித்து யர்ந்த
மறைவழி யொழுகும் நீதி வகுத்திடென் றடியிற் றாழ்ந்தான். 35 (962)

அடிபணிந் தரசன் வேண்டா வகமலர்ந் தருளி யன்னோன்
முடிமுதற் பரிச மெல்லா முளரிமா மலர்க்க ரத்தாற்
றடவியவ் வெப்ப நீங்கத் தணித்தய முகத்தைத் தக்கன்
முடியணி முகமா வைத்தோன் முதல்வனுக் குரைப்ப தானான். 36 (963)

                                           (வேறு)

மாவிர தம்பசு பதங்களா முகமுயர் வாம
மேவுசை வம்வை ரவமிதற் கியைந்தவெம் வேதந்
தாவு பஞ்சராத் திரம்பட் டாசாரியஞ் சமண
மோவு புத்தமீ மாஞ்சைலோ காயித மொவ்வா 37 (964)

ஆன விங்கிவற் றுட்புறச் சமையத்தி லடைந்தே
யீன மாங்கொலை செயச்சொன தேவென விகழ்வை
வான நாடடை தரச்செயி னோமமும் வசையோ
வூன ருந்திடக் கொன்றிட லெமக்குமொவ் வாதால், 38 (965)


நீவி ரக்கொலை செய்திட லின்றுகொ னிலையென்
றோவி லாப்புழு மலநிறை பாண்டமா முடல
மேவு மாருயி ரலைதரப் பிணியினான் மெலியி
னோவ கல்விரோ சனமதை நுங்கிடு காலை 39 (966)

உங்க டங்குட ரையுமுனே கிழித்ததி லுழன்று
தங்கி வாழ்புழுக் களையெலாம் வேறுபா சனத்தி
னுங்கி யேயிருந் திடவுண வளித்துபின் னுகரும்
பொங்கு சம்பிர தாயமுண் டாமெனிற் புகல்வாய் 40 (967)

புன்ம யிர்த்தொகை கருப்பையி லேய்தரப் பொருந்தும்
பின்ன ரும்பெறு மங்கதிற் புழுவெனும் பேனுண்
டன்ன தற்கெனப் பங்கியைப் பிடுங்கிடி லவைக
ளென்ன வுண்டுசீ வித்திடு மெனவதை யெடுத்தீர் 41 (968)

பொருந்து நின்குர வர்களெழு மூவரும் புவியில்
வருந்தி றந்தம தன்னையர் வயிற்றினை வகிர்ந்து
குருந்து மைந்தரா யுறுவரங் கவர்களைக் குருவாய்
திருந்த வைத்து நீர் செப்புவ தத்திநாத் தியரோ 42 (969)

அளவி லான்மகோ டியையெலாம் புரப்பதற் கமையப்
பளகு பல்லுயி ராகுவ னெனி னுங்கள் பரமன்
பிளவு கூரிய வாய்குரண் டமதெனப் பிறந்தா
லுளப சிக்கவ னுண்பது புற்கொலோ வுரையாய் 43 (970)

யோனி வாய்வழி வருவது தீதென வுணர்ந்தே
யீன மாருடல் வகிர்ந்துறு வாரெனி னீன்ற
மானெ டுங்கணா ளுயிர்கெடும் பழியினால் வருத்த
மான தீநர குறுவரோ கடவுள ராவார்.44 (971)

வானி னூடெழு மதியுடல் தைவர வளர்ந்த
தேனு லாங்கனி படுசினை யரசின் கீழ் செறிந்தோ
னீன மொன்றிலா நிர்ச்சிந்த னெனினும் திறைவன்
ஞான மோடு நும் பிடகநூ லெவ்வணம் நவின்றான் 45 (972)

அரிய நான்குபூ தமும்புணர் பேதமே யல்லா
லுருவி னுக்குயிர் வேறிலை யென்றுநீ ருரைப்பீர்
இரவி னிற்றுயி லும்பொழு துன்முகத் தேறு
மரவைப் பூகத்தின் பேதமு மறிந்ததோ வறையாய் 46 (973)


உருவ மும்முயி ரும்பிறி தில்லையென் றுரைப்பீ
ருருவ மிங்கிருந் திடும்பொழு துயிர்துறந் துளதான்
மருவு மிங்கிதன் றிறத்தினை யோர்ந்திடின் மன்னா
வுருவ மும்முயி ரும்பிறி தேயென வுணர்வாய் 47 (974)

                                        (வேறு)

இவையெலாங் கேட்ட மன்ன னெந்தையே யால நீழற்
றவமுறு முனிவர் முன்னே சங்கரன் கூடு நிட்டைக்
கெவைமுதற் கார ணந்தா னீசர்க்கு மேலு மீச
னவனுளன் போலுந் தேவர்க் காதியன் னவனா கானே 48 (975)

என்றுரை மாற்றங் கேட்ட சிம்புளா மிறைவ னக்கு
நன்றறி வென்ப தில்லா நவையுறுஞ் சுமட கேண்மோ
வொன்று நோய்க் காம ருந்தை யொருவயித் தியன்கை வைத்தல்
தன்பிணி தனக்கா வோவித் தாரணி தனிலு ளார்க்கோ 49 (976)

ஆட்டுவா னாடிக் காட்டல் போலுமென் றறியாய் நன்னூ
லூட்டுவா னோதல் போலென் றுணருவை யொழிவி லீனங்
காட்டிய *பிடக வேத மெனும்பெயர் கணிப்பை யாயின்
**மாட்டிய குறைகொள் வேத மாமென மருவு மன்னா 50 (977)

*பிடகம் - பிச்சை அதுகுறைவு. ** மாட்டிய - பொருந்திய

என்றெம தையன் கூறற் கேந்தல்வாய் திறவா னாகி
யொன்றுறு மூமர் போலு முற்றவ னுறைதல் கண்டு
பின்றையே சைவ மென்னப் பேசுமெம் மார்க்க மின்ன
தென்றுரைத் திடுவ கேட்டி யெனவுரை செய்யு மெந்தை. 51 (978) 

பூசுவ திருவெண் ணீறு புனைதல்கோ மணியா மீச
னாசிலைந் தெழுத்தை யோத லவனடி யாரைப் போற்ற
லேசிலாப் படிகம் பாண மெனுமிலிங் கம்பூ சித்தல்
மாசிலாச் சிவசம் பந்தம் மருவுதல் சைவ மாமால். 52 (979)

வியர்த்தல்கண் ணீர்த்த தும்பல் வியந்துட லங்கம் பித்தல்
நயந்துமெய் நடுங்கல் வாய்ந்த நாத்தழு தழுத்தல் கண்ட
மயிர்த்திடப் பருத்தல் சிந்தை யரன்செய லெண்ணி யெண்ணி
வுயிர்த்திட லாங்கு ணங்க ளுடையவ ரடிய ராவார். 53 (980)

சிவனடி யவர்க ளில்லாத் தேயம தணுகார் மிக்க
நவவடி விலிங்க பூசை நாடிடா துணவு கொள்ளார்
தவவடி வுடைய வன்பால் தம்மைவிட் டகலார் வாட்டும்
பவமறுத் தாளு மெங்கள் பரனடி யவர்க டாமே. 54 (981)

அமவென வலறக்  கேட்டோ ராருயிர் கொன்ற ருந்தார்
சமமெனச் சிவனோ டெண்ணி வேறொரு தெய்வஞ் சாரார்
இமில்விடைத் தருமத் தெய்வ மென வெணிப் பூசை செய்வார்
நமசிவ யச்சோ கம்பா வனையினி னாட்க ழிப்பார் 55 (982)

திருமறை நான்கும் பாதஞ் செழுஞ்சுட ரம்பு லிக்கண்
மருவிய வுடலந் தேவர் மறிக்கும்வா லைந்தெ ழுத்தாம்
வெருவுரு கொம்பி ரண்டும் விதியரி சாணந் தானு
மருவுரு வில்லா வீச னாம்பசுத் தன்சொ ரூபம் 56 (983)

அடியரா யுள்ளார் காலை யருங்கடன் முடித்த பின்னர்
கடிகொணீர் கொண்டு நான்கு கால்கள்வால் முகங்க ழீஇக்கோ
வடியினன் மலர்க டூவி யருச்சனைத் தூப தீப
மொடிவிலா தியற்று வார்க ளுறுதியைப் பயப்ப தோர்ந்தே  57 (984)

இவ்வகை யியற்றல் சைவ மிதற்கினுஞ் சிறந்த வீர
சைவமென் றெவரும் போற்றுஞ் சமயமுண் டதனி டத்திற்
கொவ்வைவாய்க் கயனெ டுங்கண் கோற்றொடி யுமையாள் பங்க
னவ்விய மகன்ற வுள்ளத் ததிவிருப் புடைய னாமால் 58 (985)

எவையினி னதிகம் வீர சைவம தென்பை யாயி
னவையறு சிவமும் யாமும் வேறென நாட்டங் கொள்ளுந்
துவிதபா வனையி லாதத் துவிதமார்க் கத்திற் சேர்த்துப் 
புவியினி லங்க லிங்கப் புணர்ச்சியைப் பொருத்து மாதோ 59 (986)

                                        (வேறு)

விலங்கு பக்கி யென்பி லாக்கை விரிம ராம ரம்புலென்
றிலங்கு பன்ம யற்கி டஞ்செ யிழியு டம்பெ டாமலே
வலங்கொள் மானி டப்பி றப்பில் வந்து திப்ப னாயின்வண்
டலங்க டோறு முன்செய் நற்ற வத்தி னாற்ற லாகுமால் 60 (987)

மானி டத்து தித்தும் நல்ல வண்மை தங்கு மரபினிற்
றானு தித்த லரிது மஃது சாரி னல்லொ ழுக்கமார்
ஞானி யாவ தரிது மிக்க ஞானம் வந்த டுப்பினு
மீன முள்ள சமய நீத்தி லிங்கியாவ தரிதரோ 61 (988)

ஆவி னுக்க டுத்தநோ யகற்று தற்க தன்கணே
மேவு பாற்க றந்த ருத்தி மிக்க ணங்கொ ழித்தல்போ
லாவி யுள்ளி ருக்கு மெங்க ளமல நாத னங்கையி
லோவு மாற ளித்து பின்னு முள்ளி ருத்து மாரியன்.62 (989)

ஓது கின்ற காக நேர்க்கி ரண்டி னுள்ளு மோர்மணிப்
பேத மின்றி யுழலு கின்ற பெற்றி போலு மங்கையி
னாத னுட்பு றம்பெ னச்சொ னவையி லீரிடத்தினு
மேத மின்றி யேபொ ருந்து மென்று ளங்கொ ளேந்தலே 63 (990)

உணர்வெ னச்சொல் செச்சை யொன்றி லோதுபத்தி யாந்தொடர்
புணர்த ரச்செய் தேவை ராக புனித வத்தி ரத்தினிற்
துணர்க டுக்கை யோனை வைக்குந் தூய்தமைந்த நெஞ்சினோ
னுணர்வு தங்கும் வீரசைவ முற்ற பத்த னாகுமால் 64 (991)

அருளெ னுங்க வந்த மாட்டி யார்ந்த சாந்த மாம்வரை
மருவு சாந்த ணிந்தி யங்கு மாசி லிந்தி யங்களாம்
விரைகொ டார்பு னைந்து மிக்க * மேதை யாகு மமுதினைப்
பரம னுக்க ளிப்போ **னையர் பரவு வீர சைவனால் 65 (992)

*மேதை=அறிவு, **ஐயர்=வானோர்

அன்ன வீர சைவ ருக்க ருத்தி மிச்சி லுண்டவர்
தன்ன டிப்ப ணிந்தனோர் களேவ லாற்றுவோர்
பன்னு தேவர் முனிவ ராதி யோர்நி தம்ப ணிந்திட
மன்னி வாழ்வ ரென்று நான்கு மறைக ளோது மாலரோ 66 (993)

அரனை யங்கை யார வைத்த கத்து வேறு தேவரைப்
பரமனெ னப்ப ணிந்தோ ரைந்து பாத கத்த ராவரால்
சரண ருக்கோர் சாதிபேத முண்டெ னுஞ்ச ழக்கர்துன்
மரண வேத னைக்குளாகி மாய்வர் திண்ண மீதரோ 67 (994)

இன்ன வீர சைவ மார்க்க மென்று வீர னோதலும்
மன்ன னீது கேட்டு பின்ம னத்ததி னார்வ மிக்கெழுந்
தென்ன மாத வங்கண் முன்ன மேழை யேனி யற்றினே
னென்ன மாம லர்ப்ப தத்தி றைஞ்சி யீது ரைப்பனால். 68 (995)

நார சிங்க மங்க நாம முற்று ளாய்சரண் சிம்புள்
கோர நுங்கி யும்பர் காத்த * கோக்க ணாத னேசரண்
சார தங்க ளெண்ணில் கோடி தங்கி யேவல் செய்திடுந்
தீர வங்க லிங்க சைவ தீக்கை செய்ய வேண்டுமால். 69 (996)

*கோக்கணாதன் - பசுபதி.

                                                    (வேறு)

என்று பணிந்திடு மன்ன வனைக்கணி னேய்தரு தீக்கையொடு
பின்றலி லாச்சிவ தீக்கைகள் செய்தபி னேபெரு மான்புகலுங்
குன்றுறழ் தோளுடை மன்னவ நின்னகர் கூடிய மாக்களெலா
மொன்றிய பூதி யணிந்துய சைவ வொழுங்கி லிருத்துவையால் 70 (997)

மன்னனு மன்னக ருள்ளவர் தங்களை வம்மி னெனக் கூ.வித்
தொன்னிலை பெறுசிவ தீக்கை தொடங்குதல் துணிபென வோதுதலும்
முன்னவ னாரரு ளைப்பெறு முதியரு மூரிவில் வேந்தனுரை
தன்னை யிகழ்ந்தில ராதலி னும்மொழி தட்டில மென்றனரால் 71 (998)

அன்னவ ரோடர தனமுடி வேந்த னடைந்தெம தடிகளடி
முன்ன ரிறைஞ்சி யிவர்க்கருள் தீக்கை முடித்திட லேதுணிபா
மென்னலும் வீர னிசைந்தவர் பீடை யிரிந்தக லும்படிசெய்
துன்னரும் வீரசை வப்படி தீக்கை யுஞற்றி விடுத்தனனால் 72(999)

அந்நகர் வாழ்தரு வோர்க்குப தேச மறைந்தபி னுக்கிரனும்
மன்னவ கேளுன தின்னக ரின்கண் மழுங்கின தேவருறை
நன்னய வாலய மன்னதை சிற்ப நவின்ற திறத்தினரா
லுன்னத மாக வியற்றுதி யென்ன வுரைத்தினு மோ துவனால் 73 (1000)

நித்திய மோடுநை மித்திய மாதிய நிகரறு பூசையுட
னுத்தம மாமறை வித்தக ராற்பிர மோச்சவ முந்தவறா
தித்தரை யோர்புக ழச்செய் தரும்பய னெய்தி நிசானுபவத்
தொத்துபி னத்துவி தப்பொரு ளோடினி தொன்றுவை யென்றனனால். 74(1001)

அவ்வுரை கேட்டக நைந்தடி காளும தடியிணை யொருவிநிலத்
தெவ்வண முய்குவ னென்றடி தாழு மிறைக்கருள் செய்தடலோ
டிவ்வுல காளு மிருந்திற லோயெம தின்னுரு வங்கண்டே
யெவ்வமில் பூசைசெய் யென்றெழில் கைலையை யெய்தினன் வீரனரோ 75(1002)

கன்னவி றோளுடை மன்னவ னெஞ்சு களிப்பொ டெழுந்திமயப்
பொன்னவி ருந்தித லைப்புணர் பூண்முலை மனோகர னாம்பூவை
பன்னரு மெம்மயூ ரேசனை யொல்லையில் பரிசன ருடனணுகி
முன்ன மனைத்தெறு தாளிணை சென்னி முடித்து வழுத்துவனால் 76(1003)

                                                    (வேறு)

படிமுழு தானாய் போற்றி பசுங்கொடி பாகா போற்றி
துடிமழுக் கரத்தாய் போற்றி துவளும்வார் சடையாய் போற்றி
சடிலவெண் பிறையாய் போற்றி தவளவெண் ணீற்றாய் போற்றி
யடிநடு முடிவு மில்லா வத்தனே போற்றி போற்றி. 77 (1004)

பைம்பொன்மால் வரையை வில்லாப் படைத்தருள் பரனே போற்றி
வம்புலா மலர்க்கண் மாலை வாளியென் றெடுத்தாய் போற்றி
சிம்புளாய் நார சிங்கச் செருக்கொழித் தவனே போற்றி
கம்பமால் களிற்றைக் காய்ந்த கடவுளே போற்றி போற்றி. 78 (1005)

போதமாய்ப் போதங் காட்டும் பொய்யிரு ளில்லா விந்து
நாதமாய் நாதங் காட்டும் ஞானநற் பொருளாய் நான்கு
வேதமாய் வேதத் துள்ள விரிபொருளாகி யைந்து
பூதமாய்ப் புவியை யாக்கும் புனிதனே போற்றி போற்றி 79(1006)

என்னாத் துதித்தேத்தி யேந்தல்மனோ வேகமுந்தம்
பின்னாக்குந் தூதர்தமை விட்டே பெருஞ்சிற்ப
நன்னூ லுணர்ந்தவரை நாடியழைத் தேநகரும்
பொன்னா லயமும் புரிகென்றா னாங்கவரும் 80 (1007)

நாடினார் கீர நதிய தன்தென் பாலகழி
பீடுசேர் நாஞ்சிற் பெருமதிலுய் யானமும்ப
ரோடு * மாலோன்றவழ் **செய் யோங்கலொளி யார்சிகரி
யாடுசீ லைக்கொடிசே ராடரங்கு பீடிகையும், 81 (1008)

*ஆலோன்= சந்திரன். ** செய்யோங்கல் - கட்டுமலை.

முன்னகரு நான் மாட மூரிப் பெருந்தெருவுஞ்
சன்னலமை மாடமன்ன சத்திரங்க ளுஞ்சதுக்கஞ்
சொன்ன மணி யாலிழைத்த சோபானக் கூவல்களு
மன்னமுறைந் திடுதடமு மரியுளர்சோ லையுமமைத்தார் 82 (1009)

நவமணிகண் முன்னாக நாற்றுங் கடைவீதி
பவமகற்றும் வேத பட்டார கர்வீதி
தவமியற்றும் நீத்தோர் தமனியப்புக் கில்லரையர்
குவடனைய தோள்வணிகர் கோமா ளிகையியற்றி. 83 (1010)

நான்காங் குடியினர்க ணல்வீதி வான்றோயு
மான் பூண்ட தேர்யானை மாத்தங் கிடுநிலயங்
கான்றோய் மலர்மாலை காலாட் படைவீரர்
மீன்போன்ற கண்மாதர் மேவுமனை யுஞ்சமைத்து. 84 (1011)

என்னா யகன்மே விடமாங் கருவீடு
மன்னீக்குஞ் சோதியந்த ராளமர்த்த மண்டபமுந்
தன்னே ரெழிலம்மை சார்தளியு மேரிடப
நன்னா யகர்க்கணிசேர் நன்னிலய முஞ்சமைத்தார் 85 (1012)

ஏரம்பன் கந்த னெழில்தெய்வ யானைவள்ளி
வாரம் பணைத்திருத்தோள் வலவைவடு கன்தண்டி
சூரன் மதிவிரிஞ்சன் சொல்லருமொன் பான்கிரகம்
வீரஞ்சே ரின்னோர் விளங்கா லயமெடுத்தார். 86 (1013)

கண்ணப்ப னுக்கருள்செய் காளத்தி நாதருக்கும்
வண்ணமலர்ப் பூங்கோதை வாய்ந்துளஞா னம்மையர்க்கும்
பண்ணவர்போற் றும்வீர பத்திரற்கும் மாவுடைய
கண்ணனுக்குங் கதிர்மதிதோய் கனகால யங்கண்டார். 87 (1014)

வானுயர்கோ புரந்தூபி வாரெயில்பொன் கொடித்தம்ப
மீனமிலாப் பலிபீட மீசனுமை யேரம்பன்
கானுலவுந் தாரணியுங் காங்கேயன் தண்டியிவர்
தானிவருந் திருத்தேரிச் சகங்களிக்கச் செய்தனரால், 88(1015)

கண்டான் விழுந்தான் கரமுகிழ்த்தா னுச்சியின்மே
லெண்டோளற் கேற்றதென வெண்ணி மனமுருகிப்
பண்டா விடுந்துதிகள் பண்ணித்தன் மெய்மறதி
கொண்டான் பினுமுணர்வு கூடுதலு மென்செய்வான்.89 (1016)

                                   (வேறு)

அருமறை தெரிந்த வந்த ணாளராற் சுபதி னத்தி
லிருமையும் பயக்கு மீசற் கெடுத்தவா லயத்தி னோடு
திருவுறை நகர்க்குஞ் சாந்தி செய்துநற் குடிக ளேற்றி
யருவுரு வில்லா வீச னாமுதற் றேவர்க் கெல்லாம். 90 (1017)

ஆகம விதியிற் கும்ப மமைத்தபி டேகஞ் செய்தே
வாகைசேர் நித்திய நைமித் தியமொடு வழுவில் பூசை
யேகநா யகன்மு னாய விறைவருக் கியற்றி மாதோர்
பாகனுக் கணிவி ழாவும் பண்ணின னிணையி லாதான் 91 (1018)

குற்றமில் வச்சி ராங்கக் குரிசிலு முலக மாண்டு
கற்றையஞ் சடைதோய்வீரக் கழலுடை வீரன் பாதம்
பெற்றனன் கடல டக்கும் பெருந்தவ முடையோ யென்னா
மற்றடம் புயத்துச் செவ்வேண் மகிழ்வுட னிசைத்துப் பின்னர். 92 (1019)

அற்றைநாண் முதலா யந்த வணிநக ரதனின் மேவு
கற்றைவார் சடையிற் றிங்கட கண்ணிவேய் திருப்பு லீசன்
நற்றவப் பலத்தா லண்மி நயமுடன் போற்று வார்தங்
குற்றம தொழித்து முத்தி கொடுத்தினி திருப்பன் மாதோ. 93 (1020)

ஆதலி னவன்வாழ் தேய மனைத்தினு மதிக மென்னாப்
பாதலத் துறையு நாகர் பண்ணவர் முனிவர் சித்த 
ராதர வாகப் போற்று மத்திருப் பதிக்கு நாம 
மோதுவர் தசம தாக வுரைப்பனப் பெயரைக் கேண்மோ 94 (1021)

                                      (வேறு)

நந்த லில்மயூ ரப்புரி புலிப்புரி நகராள்
குந்த வேலுடை வச்சிராங் கதப்புரி குலவுஞ்
சந்த மார்தரு விலாசகாஞ் சிப்பெயர் சார
வந்த தாலையம் பதிபனைப் புரியினும் வகுப்பன். 95 (1022)

போதில் வாழ்விதி புரமயிந் திரபுரம் புகழ்கொள்
நீதி யில்சிறு விதியெனும் பெயர்நிலை நிற்க
வோது தக்கமா புரிகலி யாணமா முறையுள்
சோதி லிங்கமா புரமதின் விரிவையுஞ் சொல்வாம். 96 (1023)

                                             (வேறு)

கார்தரு சுருண்மென் கூந்தற் கணைபுரை மதர ரிக்கண்
தார்தரு குவவுக் கொங்கைச் சங்கரி யவிர்க லாப
மார்தரு மயிலாய்ப் பூசை யாற்றின ளரனை யன்ன
சீர்தரு செயலின் மாயூ ரப்புரி யென்றே செப்பும். 97 (1024)

தத்துவங்கடந்து நின்ற சாம்பவ மூர்த்தி தன்னோ
டொத்தவெண் ணிடப  தேவ னுழுவையி னுருவாய்ப் பூசித்
தத்தன தருளைப் பெற்றா னாதலாற் புலியூ ரென்றே
யுற்றன பாச மைந்து மொழித்துமேற் கதியைச் சார்வோய், 98 (1025)

மெச்சுமா மகுடம் பூண்ட மேதினி யரசர்க் கெல்லா
முச்சித மான மான்றே ரூர்ந்துல களிக்குங் கொற்ற
வச்சிராங் கதப்பேர் மன்னன் வகுத்தபி னன்ன கர்க்கு
வச்சிராங் கதவைப் பென்றே வழங்குவ தணிகொ ணாமம். 99 (1026)

பூஞ்சடைப் பரமன் கண்ணைப் பொத்திய பாவந் தீர
வாஞ்சையி னுமைபூ சித்து வரம்பெறு சிறப்பி னோங்குங்
காஞ்சிமா நகரைச் சார்ந்து கவின்பெறு தலின்வி லாச
காஞ்சியென் றொருபே ரியாருங் கழறுவ ரன்ன கர்க்கே. 100(1027)

வேலையம் புவியி லோங்கவ் வியநக ரதனிற் றெங்கு
கோலமீந் துப்புற் றாளிப் பனையிவை கூடி யொன்றாய்ச்
சாலவே நீடித் தோங்குந் தன்மையி னுரைப்ப ரான்றோர்
தாலமா நகர மென்றுந் தனி பனைப் பாகை யென்றும். 101 (1028)

வட்டவாய்க் கமலப் புத்தேள் வடிவுடைப் பரியா மன்னங்
கெட்டவான் சிறக ருற்றுக் கிளர்தரச் சௌந்த ரேசன்
மட்டவிழ் பாதம் போற்றி வதிந்திருத் தலினா லவ்வூர்க்
கிட்டனர் வாணி கேள்வ னிருக்கையென் றிருநி லத்தோர் 102 (1029)

அந்தர வரம்பை மாத ரருகிருந் தேவல் செய்யச்
சுந்தரி யுடனே வந்து சுரர்பதி காதல் கூர்தன்
மைந்தனுக் காகச் சின்னாள் வசித்தலி னாம தேய
மித்திர புரியென் பார்க ளிருந்தவக் கிழமை யோனே 103 (1030)

திக்குகள் புகழுஞ் சீர்த்திச் சிறுவிதி துயரந் தீர
முக்கணன் மழுமான் செங்கை மூர்த்தியைப் பூசித் தேத்தித்
தக்கவான் சிறப்பி னோடு சார்தலாற் றுறவோ யின்னுந்
தக்கமா புரியென் றந்தத் தலத்தினுக் கமைந்த தன்றே. 104 (1031)

வெயிலிழைக் கருங்கா ரைம்பால் வெண்ணகைத் துவர்வா யையை
மயிலுரு வகன்று நல்ல வடிவடைந் துற்ற ஞான்று
சயிலவில் லுடைய ஞான சங்கரன் மணந்த வாற்றா
லெயில்கலி யாண மாவூ ரென்றனர் கவிவ லோரே 105 (1032)

ஆதியிற் சுயம்பாய்த் தோன்றி யடியவர் பிறவி நீக்கு
மாதவன் குரவ னாதி வானவர் பணிம யூர 
நாதனார் வடிவின் காந்தி நானிலம் போர்ப்பக் கண்டு
சோதிலிங் கப்பேர் சாரச் சொற்றன ரப்ப திக்கே 106 (1033)

இத்தகைத் திருநா மத்தோ டீரிரு கூற்று வானோர்
சித்தர்சா ரணர்க ளேத்துஞ் சிறப்பொடு திரிலோ கத்தும்
வித்தக முடைய தாகி விளங்கிடு மருணி றைந்த
முத்தர்கள் பரவுஞ் சீர்சான் முனிவநீ யறிதி யென்றே, 107 (1034)

குருதியைப் புரைசெஞ் சூட்டுக் குக்குடம் வலனு யர்த்த
பரிதியை நிகர்த்த வைவேற் பாணியங் கருணை மூர்த்தி
யுரைசெயக் கும்ப யோனி யுளமகிழ் வோடு திவ்ய
திருமரை யிகக்குஞ் செய்ய சீறடி பணிந்து நின்று  108 (1035)

ஐம்புல னையுமொன் றாக்கி யகத்தழுக் ககற்றி யன்பு
பம்பிய சிந்தை யாரப் பாவனை செய்து வாயால்
நம்பன்மந் திரத்தை யோதி நாண்மலர் கரத்தாற் றூவி
வம்பவிழ் கடம்பற் கீரெண் வகைவழி பாடி யற்றி 109 (1036)

இருணிறக் கருமென் கூந்த லேவிழிக் கனிவாய் முல்லைத்
திருநகை யிடைக்குத் துன்பஞ் சேர்தரப் புளக முற்றுத்
தரளவெண் கோவை யார்ந்த தனத்தியர் வடிவேற் கந்த
னிருமருங் கமருந் தெய்வ யானைவள் ளியையும் வாழ்த்தி 110 (1037)

திறமிகு சூரனாதித் திருந்தலர் செகுத்து விண்மீ
துறுபவ ரிடுக்க ணீக்கு முத்தமக் குருவே போற்றி
யறவர்கொண் டாடுந் தாலை யம்பதி மான்மி யங்கேட்
டுறுபிற விப்பேறுற்றே னுன்னடித் தொழும்ப னேனே. 111 (1038)

விம்மிதம் பலவாய்த் தோன்றி விளங்குமப் பதியைச் சார
வெம்மையாண் டடிமை கொள்ளு மெந்தையே விடைதா வென்ன
மும்மைதேர் முனியு லோபா முத்திரை யோடு தாழ
வம்பிகைப் பயந்த செவ்வே ளருளின னகம கிழ்ந்தே 112 (1039)

                           வீரபத்திரச் சருக்க முற்றிற்று

                                 ஆகத் திருவிருத்தம் - 1039.

                                
                                     அகத்தியன் பூசனைச் சருக்கம்

சூதனிப் பரிக சொற்ற போதுதூய் வனத்திற் றுன்னு
மாதவர் மகிழ்ந்து கேட்டு மலரடி வணங்கி வீரன்
காதையைப் புகன்றீ ரார்க்குங் கடல்நுகர்ந் தவன் செய்பூசை
யோதுதி யைய வென்றார் மற்றவ னுரைப்ப தானான். 1 (1040)

                                              (வேறு)

அந்தரத் துயர்திருத் தணிகை யார்ந்தநங்
கந்தனைப் பிரிந்தொரு கணமும் வாழ்கலாச்
சிந்தனை யுடையவன் றிருப்பு லீசனை
வந்தனை செய்தடி வணங்க வெண்ணியே. 2 (1041)

அருந்தவன் குறினெடி லணைந்த தாமென
சுரிகுழற் கனிமொழித் துணைவி பின்வர
விரிதரு பாலைபா தவம்வி ளங்கிய
சுரநனீ ரோடையுந் தொலையச் சென்றரோ 3 (1042)

பாலைநீர் வேட்டவர் பான்மை யாமெனத்
தாலமா நகரினைச் சார்ந்து தான்களி 
கூலவார் கடலினுட் குளித்து நேர்வளஞ்
சீலமார்ந் திலகுதன் றேவிக் கோதுவான். 4 (1043)

செறிமலர்ச் சோலையைச் சேரு மில்லென
சிறையவெண் குருகினஞ் செய்யி னுள்ளமீன்
குறிவரக் கவர்ந்துதாங் கொண்டு போவதை
மறிநிகர் விழிமட மாது நோக்குவாய். 5 (1044)

பரியெரி கதிர் மணிப் பசும்பொற் கிண்ணநீர்
பருகுதல் போன்றசூற் பணில மாரமார்
தருவய னெற்கதிர் தாழ்ந்து தாமரை
விரிதரு வாயிடை விளங்குந் தோற்றமே. 6 (1045)

முழங்குவண் டினமிசை முரன்று தேனுண
வழங்குதண் கடிமலர் வகித்து விண்ணவர்
பழங்கவர் விரும்புதண் பாத வங்களை
தழங்கொலிச் சீறடித் தையல் கண்டிடாய் 7 (1046)

வான்முக டுரிஞ்சிட வளர்ந்த தண்டலைத்
தேன்மரங் களைக்கொடி சேர்ந்து சுற்றின
கூன்படு முதியவர் கொண்ட மெய்யின்மேற்
றோன்றிடு நரம்பெனச் சொலற்க மைந்ததால், 8 (1047)

கிள்ளையுங் குயில்களுங் கீத சாலமும்
விள்ளரு மலர்த்துகண் மேய்ந்த தென்றலுங்
கள்ளவிர் சினைதொறுங் காண மேவலா
லெள்ளலில் மாரன்பா சறையை யேய்க்குமால். 9 (1048)

வித்தகர் மகிழ்ந்துளம் வியக்குஞ் சோலை வாழ்
தத்தையும் பூவையுந் தாவி லாப்பர
முத்தியை யடியவர்க் கருளு மூர்த்தியின்
சுத்தபஞ் சாக்கரஞ் சொல்லல் கேட்டிடாய் 10 (1049)

தொன்மரம் பாசிலை யுதிர்ந்து தோன்றிய
மென்றளி ரோடிவண் விளங்கு நீர்மைசீர்
துன்றிய பசும்படா மொருவித் தூசிலா
வென்றிகொள் செம்படாம் விரித்தல் போலுமே. 11 (1050)

கழையையுங் கந்தையு முறிக்குங் கார்நிறப்
புழைநெடுங் கரத்துயர் போத கத்துவார்
கழலுடைக் காவல ரயர்வு நீக்குமிப்
பொழிலினார் மண்டபப் பொலிவு நோக்கிடாய். 12 (1051)

வானவர்க் கருள்செயு மமையம் வந்ததா
லூனமி லடியரை யோடி வாவெனத்
தானழைத் திடுவபோற் றயங்கு நுண்கொடி
மேனிமிர் கோபுர மிளிரல் கண்டிடாய் 13 (1052)

குழவிவெண் மதிவடங் கிடந்த குங்குமத்
தெழில்வரை யனையதோ ளிளைஞ ரொள்ளொளிக்
குழைபொரு சேல்விழிக் குவவுக் கொங்கையர்
விழைவொடு பயின்றிடும் வீதி நோக்கிடாய் 14 (1053)

                                 (வேறு)

என்று கூறிதன் மனைவியை மகிழ்வுசெய் தின்ப
மன்றல் வீதியைக் கடந்துபோய் விழியினான் மதனைக்
கொன்ற வெம்மையாள் பரனுறுங் கோயிலைக் குறுகிக்
குன்றி னைக்குறு கென்றவ னரற்றொழக் குறித்தே. 15 (1054)

தன்னின் மூழ்குநர் பவவினை தனித்தெழுந் தரற்றி
மின்னும் வானிடை யெழுந்து போம் விதமென விரைந்து
*தென்னி றப்பிர மரமது வுண்டுளந் தெவிட்டி
யின்னி சைப் **பயின் றேகலர் தீர்த்தம தெதிர்ந்தே . 16 (1055)

* தென் - கருமை , **பயின்று ஏகு அலர் எனப் பிரிக்க


தூமமென்குழற் பைந்தொடித் துவரிகழ்த் துணையோ
டேம மாய்விதி முறைபடிந் திருகர முகிழ்த்து
வாம மார்சிரம் வைத்தணி சினகரம் வலமாய்
நேம மோடுவந் தரனிடம் வதிந்தன னீத்தோன். 17 (1056)

சிற்சு கோதய மநுபவ நிற்குணத் தெளிவாந்
தத்து வந்துரி யஞ்சுயம் பாகிய சத்து
சித்தொ டின்பமூ லஞ்சுக மாமெனச் சிறந்து
கர்த்த னாயெழுஞ் சோதியை முன்னுறக் கண்டான் 18 (1057)

கண்டு வீழ்ந்தெழுந் திருவிழி நீர்த்துளி கால
விண்டு சொன்மொழி தழுதழுத் திடவுடல் விதிர்ப்பக்
கொண்ட வன்புரு வாய்க்குறு முனிமகிழ் குளித்து
வண்டர் நாயகர்க் கருச்சனை செய்திஃ தறைவான். 19 (1058)

                                   (வேறு)

தோகையிள மயிலுரு வங்கொண் டவையை
     சுந்தரி யாயிருந் திடச்செய் தவனே போற்றி!
வாகைமிகு புலிவடிவ நீக்கி நந்தி வள்ளலென
     வாழவரந் தந்தாய் போற்றி,
பாகெனுஞ்சொ லயிராணி யீன்றமைந்தன்
     படுந்துயர் தீர்த் தின்னருள்பா லித்தாய் போற்றி,
கோகனகக் குரிசிலுள மகிழ வன்னக்
     குறைத விர்த்தேர் வடிவமுறக் கொடுத்தாய் போற்றி. 20 (1059)


மணிநிறவண் ணப்பெருமான் பணித்து வாழ்த்த
     மையறுதார்க் கியன்றுயர மாய்த்தாய் போற்றி
பணியணி யெம்பெருமவுனைச் சீற்றத்தோடு
     பழித்த விறல்தக்கனிடர் தொலைத்தாய் போற்றி
குணிகொளிரா கவனருச்சித் தேத்த வன்னோன்
     குறையனைத்துங் கெடுத்தகுணக் குன்றே போற்றி
பிணியவிழுந் தாரளக விரதி கேள்வன் 
     பெரும்பூசை கொண்டுபிழை பொறுத்தாய் போற்றி  21 (1060)

கரும்பகடூ ரியமனறை துதிகேட் டானாக்
     கவலையெலா மொழித்த வருட்கடலே போற்றி,
அரும்பவிழ்தா ரணிவச்சி ராங்க தன்செய்
    யரும் பணி கொண் டகமகிழா னந்தபோற்றி
சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் கரிய கூந்தற்
    சுந்தரியை யிடத்திருத்துந் தூய போற்றி,
யிரும்புவியி லுளவுயிர்க ளெல்லா மோங்க
     வெழுந்தபெருஞ் சோதிமய விறையே போற்றி 22 (1061)

ஆதிநடு முடிவுமிலா வகண்டா போற்றி
    வனாதரரா பத்தொழிக்கு மமலா போற்றி
பாதிமதி முடிதரித்த பரனே போற்றி
    பண்ணவராதியர் பணியும் பாதா போற்றி
வேதவிறு தியிலுறையும் விகிர்தாபோற்றி
   விரிசடைமான் மழுதரித்த விநோதா போற்றி
போதவடி வுடையசுகப் புநிதா போற்றி
    பொய்யறு வோர் துதிபரனே போற்றிபோற்றி 23 (1062)

                                             (வேறு)

எனத்துதித்த விருடியருக் கரசாகுங் குறுமுனியை யெழிலார் தால
வனத்துறைமா யூரேச னிலிங்கத்தி னின்றுருவாய் வந்து நோக்கி
மனத்துறுமா சொழித்தமுனி வரனேநின் பூசைதுதி மகியி லுள்ள
வனைத்தசரா சரவுயிர்க்கு மிதமாகி நமக்குமினி தான தென்னா 24 (1063)

தக்கவருள் சுரந்துகுறு முனியை யழைத் தரியகரந் தலைமேல்வைத்துப்
பக்குவமாய்ப் புறந்தடவி யெமையொப்பாய் நீயேநின்பன்னி சீர்சா
லிக்குவல யந்தழைய வறம்வளர்க்கு முமையொப்பாளிதனாற் சேட
னக்குமணி முடிப்புவியி லுமைப் போல்வா ரியாரேமெய்ஞ் ஞானத் தன்றே 25 (1064)

அரியதுனக் கொன்றுமிலை யான்றருவ தெவன்கறையா  ரயில் வேற் கண்ணின்
றெரிவையொடு பொதியவரை யடைந்திடுக வெனக்கருணை   செய்தி லிங்கத்
துருவுகரந் தெழிற்பரமன் றனதிச்சை வடிவாக வோங்கி நின்றான்
விரியுநெடுங் கடல்குடித்தோன் றன் பெயரா லொருலிங்கம் விதிக்கவெண்ணி 26 (1065)

                                   (வேறு)

நான மென் குழற் சுந்தரி கேள்வனை நாடி
வான கம்படி யுந்திருப் பாலியின் வடபா
லானு யர்த்தவன் றிருவுருக் கண்டிடத் தமையத்
தான மாரகி லாண்டநா யகியையுஞ் சமைத்தே. 27 (1066)

கால காலனை யும்பக வதியையுங் கண்டு
கோல வார்திரைக் கருங்கடல் குறைபடக் குடித்த
சீல மாமுனி மகிழ்திளைத் தில்லவ ளொடுநற்
பாலி மாநதி யடைந்ததில் விதிமுறை படிந்து. 28 (1067)

ஆனை யேந்தியைப் பஞ்சகவ் வியத்தினா லாட்டிச்
சோனை மாரிபோற் குளிர்ந்திடக் கலசநீர் சொரிந்தங்
கீன மின்மலர் மநுவினா லருச்சனை யியற்றி
வான நல்லமு தூட்டியே யெதிர் நின்று வணங்கி 29 (1068)

                                                 (வேறு)

அங்க ணாசர ணம்மடி யார்தவப்
பொங்க மாகிய புண்ணிய னேசரண்
கங்கை வார்செஞ் சடையிற் கரந்திடும்
புங்க வாசர ணென்றடி போற்றியே. 30 (1069)

போற்றி மால்விடைப் புண்ணியன் பால்விடை
யேற்றுக் காஞ்சிசென் றேகம் பனைத்தொழு
தூற்றெ னும்படிக் கண்கணீ ரோடிடச்
சாற்ற ரும்புலி யூரினைச் சார்ந்தரோ 31 (1070)

பின்ன ரீசன் பெருங்கரு ணைக்கொடே
யின்ன லில்தமி * ழேந்தலி னெய்தினான்
கன்னன் மென்மொழிக் காரிகை யாளொடு
முன்ன ருந்தவ முத்தமிழ் மூர்த்தியே. 32 (1071)

* ஏந்தல் - மலை

                                           (வேறு)

குறுமுனிவன் பூசித்த குறிக்ககத்தீச் சுரனென்றும்
நிறையருளப் பரனாருர் நெடும்புலிமா நகரென்றும்
மறைமொழியும் முனிவீர்காள் வகுத்தனரம் மாதலத்தி
லுறைபவரா யுட்சீர்மை யுடையவரா மென்றுரைத்தான் 33 (1072)

                    அகத்தியன் பூசனைச் சருக்க முற்றிற்று

                                    ஆகத் திருவிருத்தம் - (1072)


                                               விவாகச் சருக்கம்

நைதலிலாச் சூதனையுண் ணாடிமுனி வரரேத்தி
மைதவழ்நீண் மலயமதில் மாமுனிசேர்ந் தமையறிந்தோம்
மெய்தவனே யெழிற்பரமன் விமலசவுந் தரியை மணஞ்
செய்ததிறத் தினையெமக்குச் செப்புகென வவனுரைப்பான். 1 (1073)

மாதேவ னாணையினான் மஞ்ஞைவடி வானவுமை
தீதேது மில்லாமற் றேங்கிய தண் கங்கையினாற்
போதாலை யானனனைப் பூசைபுரிந் தத்துவித
நாதாவெ னச்சொலிமெய்ஞ் ஞானமது பெற்றமர்ந்தாள் 2 (1074)

ஆதரத்தோ டிந்தவித மம்பிகையாள் பூசைசெயச்
சீதநதி மதிவனையுஞ் செஞ்சடையோன் சிந்தைமகிழ்ந்
தேதமறு மந்திநிறத் தெழிலோங்க வெள்ளேற்றின்
மீதமரர் யோகியர்மென் மேற்றுதிப்ப முன்னடைந்தான். 3 (1075)

ஆசையுடன் பூசித்த வங்கயற்க ணம்மைமுனம்
நேசமுட னின்றிடவந் நேரிழையுட் களிகூர்ந்து
$ மாசைநிறச் சேவடியா மாமலரைத் தொழுதேத்த
வீசனிருங் கருணையினா லியம்பினனோர் மாற்றமரோ 4 (1076)

$மாசை=பொன்

முன்பெனது மொழிகொண்ட முரணொழிந்த தினியுன்னை
மன்புலவர் ஞானியரிம் மாநகரிற் காண்டரவே
யின்பமர்மென் பனிமொழியா யிருமணஞ்செய் குவனென்ன
வன்பருளத் துறைபரம னறைந்தனன்மா துளமகிழ 5 (1077)

அம்மென்மர கதநிறத்தாட் கிவையுரைத்து வருகிருந்த
கொம்மைமுலைத் திருநாதன் கோதறு சீர் முகநோக்கி
யிம்மலைமா மகடன்னை யீண்டெழிலார் மேடமதி
தம்மில்வரு நன் மகத்திற் றாமணஞ்செய் திடுவோமால் 6 (1078)


பரிந்ததற்காங் காரியம்நீ பாரெனவெம் மிறையியம்ப
விரிந்தகுல்லைத் தாரணியும் விண்டுசிவ கணங்களைக்கூ
யரிந்தசிர மாலையர்க்கு மம்பிகைக்கு மணஞ் செயுரை
புரிந்தரிய தேவரிவண் புகவழைமி னென விடுத்தான் 7 (1079)

திசைக்கதிபர் வானவர்விஞ் சையருரகர் தினகரன்மு
னிசைக்கிரகங் காந்தருவ ரியக்கர்மல ரவன்முதலோர்
நசைப்புகழ்சேர் வைகுந்த நகரினுளார் கயிலாய
மிசைப்பயில்வோ ரியாவர்களும் விரைந்துவந்தங் குற்றனரால் 8 (1080)

பானலங்கண் டுவரிதழ்மென் பனிமதிவாண் முகநரந்தப்
பூநிறையுங் கருங்கூந்தற் பொற்றொடிப்பாற் கவிகளபத்
தூனமிலாக் கொங்கைமுக டுரிஞ்சுநிறக் காயாம்பூ
மேனியன்சொற் படியாங்கு விண்ணவர்கம் மியனியைந்தே 9 (1081)

விலைவரம்பு கண்டறியா மிக்கொளிசேர் மணியான்விண்
டலையிலெழு மொருகோடி தரணிதரை யுற்றன போற்
*றொலையிலணி மண்டபமுஞ் சுந்தரத்தண் ணித்திலத்தாற்
பொலிவுடைய காவணமும் புகழ்பெறவே நிருமித்தான். 10 (1082)

*தொலை=உவமை

                                     (வேறு)

இலகும்பல வளமோங்கிய வெழிலார்திரு நகரு
மலகின் றுயர் நிறைவீதியு மழகேய்தர வருணங்
குலவும்நவ மணிமாலைகள் போத்தெங்கணு மிடுவார்
நிலவும்மதி காந்தங்களி னீண்மேடைகள் வனைவார். 11 (1083)

வாழைக்கழை பூகத்தரு வானம்பொர நடுவார்
தாழைப்பன சத்தீங்கனி சரமாயவ ணிடுவார்
கூழைப்பட வீதித்தலை குளிர்சந்த மிறைப்பார்
மாழைப்பது மைகடேரினில் மன்னும்படி வைப்பார். 12 (1084)

வாசப்பனி நீராற்றரை மணமாமெழு கிடுவா
ரேசற்றகல் யாணப்பொடி யாற்கோலம திடுவார்
வீசப்புது மணமாமலர் தொடைஞான்றிட விடுவார்
தூசுக்கொடி சோதிப்பரி துகணீக்கிட நடுவார். 13 (1085)

அங்கிக்கதி ராந்தீபம தணியாக நிரைப்பார்
வங்கத்தொளி வாட்டும்முளை வண்பாலிகை வைப்பார்.
துங்கக்கம லஞ்சேர்தரு தூய்தார் நிறை கும்பந் 
தங்கத்தினி னமைவேதிகை தன்மீதமர் விப்பார். 14 (1086)

தேமென்குழ லார்தத்தம வருணத்தோடு சேர்வார்
பூமன்றுதி நதிபாலியில் போயாடுவர் குழுமி
யேமந்திகழ் தருவூசலி லேறிக்களி கூர்வார்
வாமந்தழை பூவம்மனை மகிழ்வோடினி தெறிவார் 15 (1087)

மின்பாய்மணி யார்ப்பணி மிளிர்மாமுலை யணிவா
ரன்பாயனை வோரும்விளை யாடல்வினை புரிவார்
பொன்பாரர மின்னாரிறும் பூதெங்கணு நாடித்
தென்பாலுறு வேதண்டமி தென்பார்தனி யென்பார் 16 (1088)
 
                                    (வேறு)

வேலைசூ ழுலகரும் விண்ணி னாடருஞ்
சீலபா தலத்தருஞ் சிவன்ம ணத்தினுக்
கேலவே  மனமகிழ்ந் தீண்டி வைகிய
தாலமா நகர்வளஞ் சாற்றற் பாலதோ 17 (1089)

வந்தது மேடநன் மதியின் மாமக
மெந்தையே மணத்தினுக் கெழுக வென்று முன்
தந்தியைப் புரந்தவன் சாற்றச் சங்கரன்
*மந்திரி யானன மகிழ்ந்து நோக்கினான் 18 (1090)

* மந்திரி= குபேரன் 

நோக்கலு முனமயன் மாலு நோக்கொணா
யாக்கையின் மணிப்பணி யகற்றி வாரிசப்
பூக்கையின் மணிப்பணி புனைந்து மண்டபச்
சேக்கையி னமர்தரச் செய்திட் டானரோ 19 (1091)

எழின்மணக் கோலமோ டிறைவ னீடிலா
விழைமணி மண்டப மேவி வைகிட
நிழல்முடிக் கதிரிரு ணீக்கிச் சோதியம்
பிழம்பெழ வெயில்மிகப் பெருகிற் றாலரோ 20 (1092)

அண்டர்கந் தருவரோ டருக்க ரம்புலி
பண்டரு விஞ்சையர் பரவு தாபதர்
விண்டொடு பனிமலை வேந்த னாதியோர்
மண்டப நிறைந்திட வந்து மொய்த்தனர் 21 (1093)

நாரண னேவலி நளின மங்கையு
மாரணன் றுணைவியு மடைந்து மால்வரைக்
காரண மாதுமை கரங்கொண் டாடகப்
பூரணப் பீடிகை பொருத்தி னாரரோ 22 (1094)

வாசனை யெண்ணையால் வசந்த மாட்டியோர்
ஓசனை கமழ்பொடி உடம்பிற் பூசியே
ஆசறு கங்கையே யாதி *புட்கரத்து
ஆசையோடு அம்பிகைக்கு அமைய வாட்டினார் 23 (1095)

* புட்கரம்= நீர்

தரையெலா மதித்தொரு தந்துக் கோதினும்
புரையிலாக் கோசிகப் புனித வாடையைப்
பரையரை யழகுறப் பார்த்து டுத்திமென்
விரைகுழற் ககிற்புகை விளங்க வூட்டினார் 24 (1096)

                                      (வேறு)

கடிகமழ் புழுகு நானங் கலந்துமைக் குழற்கு நீவி
முடிவனைந் திசைகள் வண்டு முரன்றிடு மொலியல் சூடி
கடிகையோ டிலங்கு திங்கட் சுடர்ப்பிறை கவினச் சாத்தி
படிநிக ரறுங் *கர்ப் பூரப் பட்டநன் னுதலி லார்த்து. 25 (1097)

*கர்ப்பூரம்=பொன்

மகரமென் செவியிற் றோடும் வாளியும் பிறவும் பூட்டிப்
புகரறு தரளத் தொங்கல் பொருந்துமூக் கணிபு னைந்து
நிகரறு மரைக்க ரத்தி னிறைமணிக் கடகத் தோடு
பகரெழிற் சூடகப்பொற் பணியினை மிலைந்து மாதோ 26 (1098)

முழுமதி நிலவு காலு முத்துசெம் மணிமா நீலங்
கழிபெருங் கிரணத்துப்பு கலந்தவங் கியைக்கைப் பூட்டிப்
புழுகவிர் சாந்த நானம் பூதரத் தனத்திற் பூசிச்
செழுமையாய்த் தொய்யி றீட்டிச் சிறந்தகச் சதன்மேல் வீக்கி 27 (1099)

மாழைநன் வடமுஞ் சோதி மணியணி வடமு மாரக்
கேழுறு வடமுங் கொங்கை கிளர்தரப் புனைந்து மல்குங்
காழொளி மணியிற் செய்மே கலையணி யிழைம ருங்கிற்
றாழுற வனைந்து சீர்சால் சரோருகத் திருச்செந் தாட்கே. 28 (1100)

தண்டையோ டிலக வார்க்குஞ் சதங்கைபா டகமு மார்த்துத்
தண்டுறழ் மென்றோண் மேன்முந் தானையின் போக்கிச் செஞ்சேற்
கெண்டைநேர் விழிக்கு மையைக் கிளர்தரத் தரித்து மேலாந்
துண்டவெண் பிறைநு தற்குத் தூயசிந் துரமுந் தீட்டி 29 (1101)

செப்பரும் பரமா னந்தச் சிவன்மன மகிழ வெங்கு
மொப்பனை யில்லா வெங்க ளுமைசவுந் தரிக்கிப் பாரி
னொப்பனை யியற்றி மிக்க வொளிகிள ராடி காட்டிக்
கப்புர தீப மேற்றிக் கண்மிச்சி லொழித்தா ரன்றே 30 (1102)

                             (வேறு)

இப்பரி செழிற்கொடி யிடைக்கஞ ரிழைக்கும்
பொற்கிரி யெனுந்தரள பொம்மன்முலை மானார்
செப்பரிய பாரதி செழுந்திரு மடந்தை
கைப்பரிசு காட்டியுள் களித்தனர் களிப்பால் 31 (1103)

அந்தரர்க டம்மெழி லருங்கொடி யினார்கள்
சிந்துரமி லங்குநுதல் சித்தர்மட வார்கள்
கந்தருவர் பன்னியர்கள் காமரு மியக்கர்
தந்திருவ னார்களிரு தாடொழுது சூழ 32 (1104)

தாம*சி குரத்திரதி தாழ்விலயி ராணி
சாமரை யிரட்ட **சவி சாலிகுடை தாங்கப்
பூமகளு நாமகளும் பொற்கைமல ரேந்த
மாமணி பொன் மண்டப மருங்குகொடு வந்தார். 33 (1105)

*சிகுரம்=சுந்தல், **சவி= அழகு

வெங்கனல் கொழுந்துபடர் வேள்வியிடை யிட்ட 
துங்கமுறு மேடெரி சுடாவகை புரிந்தோன்
மங்கல மிலங்குதொடை மாலையணி வோனெஞ்
சங்கரன் வலத்திலுமை தன்னையமர் வித்தார்  34 (1106)

                                 (வேறு)

இணையறுமக் காட்சியையங் கிருந்தவர்கண் டகமகிழ்ந்துள் ளிறும்பூதெய்தி
கணையலரங் கசன்வடிவங் கரியாகக் கனல் விழியிற்கடிந்த நாதன்
துணைவனெனப் பெறவிந்தச் சுரிகுழலங் கயற்கண்ணித் துவர்வாய்ப் பூமென்
பிணையனையாள் செய்ததவப் பேறெனைத்தோ வெனவெடுத்துப் பேசாநின்றார். 35 (1107)

எறும்புமுத லெறும்பிவரை யாயவுயிர்க் குயிராகு மிறைவ னார்வந்
தறம்பலவு மியற்றுமெழிற் சில்லோதிச் சவுந்தரியா மமுதன்னாளைத்
திறம்பெறமா மணமுடித்தற் குரியனவாய்த் திகழ்தலினாற்றிருவா ரிந்தப்
*புறம்பெறுமிந் நகரியற்றும் புனிததவப் பயனென்னோ புகறியென்பார். 36 (1108)

*புறம்=மதில்

கற்றவர்த முளக்கோயிற் கனிவொடினி தமர்ந்துலகைக் காக்கவெண்ணிக்
$ கற்றவராற் புரம்பொடித்த கண்ணுதலின் கடியையிரு கண்ணிற்காணப்
பெற்றபெருஞ் சிறப்பதனாற் பெரும்புவியி னமைப்போலப் பேரா னந்த
நற்றவஞ்செய் தவரினிய நரர்சுரரி லுண்டுகொலோ நவில்வீ ரென்றார். 37 (1109)

$கல்தவர்= மலைவில்

விடைத்தரும மூர்த்தியிம விண்டுவினிற் சுரர்முனிவர் வியந்துகாண
நடத்தியவப் பெருங்கடியை நரர் மகிழ்ந்து கண்டுவகை நயப்பதாகப்
படத்தரவின் சுமையாமிப் பாரிலியற் றிடக்கருணை பாலித்தானென்
முடித்தலையி லிணையடியை முடித்தஞரைத் துடைத்தருளிம் முதல்வனென்பார். 38 (1110)

அந்தவமை யத்தனிக ளருந்தியுவட் டெடுக்குமது வமைந்த வானச்
செந்தருவுஞ் சுரபிமணி செழித்தவிரு நிதியுமவண் செறிந்தெமையன்
சிந்தை மகிழ் மணத்தினுக்காந் திறமுதவ மாதவர்கள் சிறந்த வேத
மந்திரமா னதையியம்ப மறைக்கிழவன் சடங்கனைத்து மகிழ்வாய்ச் செய்தான் 39 (1111)

சோதிடத்தின் றுறைதேருஞ் சுரர் குருநன் மனவோரை துன்னிற்றென்னப்
*போதகநே ரிமையவரைப் புண்ணியன்கேட் டினிதெழுந்து புகழ்சேர்தோளி
லாதவன்போ லுத்தரிய மரையசைத்தம் மடமயிலை யரளாற் கூவிக்
கோதறுமென் மடியிருத்திக் குவித்திருக்குஞ் செந்நெலின்மேற் கொண்டு வைகி. 40 (1112)

*போதகம்=யானை

நிறங்கிளரம் புயமீது நிகர் காந்த ளலர்ந்ததென நிருத்த னாமெம்
பிறங்கலுறு மரன் கரமேற் பேரிமய வல்லி  # சயம் பேண வைத்துப்
* பிறங்கலென வளரிளமென் முலைத்துவர்வாய் மேனைதரும் **பிசிதம் விட்டான்
கறங்கவுயர் நிலத்தோர்துந் துயிமுழக்கிக் கற்பகப்பூக் கவிழ்த்து நின்றார். 41 (1113)

#சயம்=கை, *பிறங்கல்=பெருமை, ** பிசிதம்=நீர்


                                         (வேறு)

வாசமுறு மாமலர் வதிந்துறை விரிஞ்சன்
நேசமுட னாகம நெறிப்பசுவி *னேயம்
மாசிலெழு தாலுவினு மாந்திட விடுப்பத்
தேசுற வதிர்த்துட னெழுந்தன செழுந்தீ  42 (1114)

*நேயம்=நெய்

ஆடின ராம்பையர்க ளாரமுத கீதம்
பாடினர் பரிந்திருவர் பண்ணவர்க ளார்வங்
கூடின ரராவென குதித்தனர்கை சென்னி
சூடினர் மணச்சுவைக டுய்த்தனர் களித்தார்.  43 (1115)

ஆதிமறை நான்குட னருங்கருவி யோதை
மாதிர முறும்படி வலத்தறிஞ ரார்ப்ப
சோதிதரு மங்கல வடந்தனை தொடுத்தான்
பாதிமதி சூடிய பரன்மன மகிழ்ந்தே . 44 (1116)

பின்றனது பன்னியொடு பேயுட னடிப்போன்
கன்றுதலில் வெண்பொரி கரங்கொடொளி யார்வந்
துன்றிய செழுஞ்சுடர் சுவைத்திட வளித்து
வென்றிமறை யோர்கொள வெறுக்கைபல வீந்து. 45 (1117)

கார்க்குழல் சவுந்தரிதன் கைம்மலர் பிடித்துத்
தீர்த்தனவ ணாரழல் சிறந்திட வலஞ்செய்
தார்த்தியுட னையைபத மம்மியி லமைத்துச்
சீர்த்திகொ ளருந்ததி செழும்படிவு காட்டி 46 (1118)

பணச்சுமை கொள் பாரினிவை பண்பினொழு கற்கே
மணத்தினியல் யாவையு மறைப்படி முடித்தா
னிணர்க்குழல் கறுத்தவிழி யாளிரதி யேற்பக்
கணத்தில்மத னைத்தரு கடற்கருணை வள்ளல் 47 (1119)

                                            (வேறு)

பூரண கருணை நாட்டப் புண்ணியன் றனக்கு மிந்தத்
தாரணி யாவு மீன்ற தாய்சவுந் தரிக்கு மீடில்
வாரணி முலையார் தேவ மடந்தையர் தொடிமென் கையா
லாரண மொழியா லேத்தி யாலம தெடுத்தார் மன்னோ . 48 (1120)

காண்டரற் கரிய நோன்றாட் கடவுடா னடைந்த கோல
மீண்டடைந் தனமென் றேமா *லிறைசுர ருரக ரானோர்
வேண்டிய வணம்பூ சித்தார் விளங்கிழை யுமையா ளீன்ற
மாண்டகு மிருவர் செந்தா மரைமல ரடியிற் றாழ்ந்தாள்.49 (1121)

*இறை=பிரமன்

மன்றலுக் கடைந்தோ ரெல்லா மகிழ்வுறச் சுரபி நின்று
சொன்றியு மறுவ கைத்தீஞ் சுவையமு தளிக்கத் தாரு
கன்றலில் வரிசை நல்கக் கரியவ னினிமை கூறக்
கொன்றையஞ் சடையோ னும்பூங் கோதையு மகிழ்ந்தா ரன்றே. 50 (1122)

இவ்வகைத் திறத்தான் மன்ற லெழில்பெற முடிந்த பின்னர்
தெவ்வர்தம் புரம்பொ டித்த தேவனுஞ் சுகந்த நாறு
மவ்வலங் கூந்தல் வாட்கண் மரகத வல்லி யுஞ்சீர்
கவ்விய நகரிற் கோலங் காட்டிடக் கருணை கொண்டார். 51 (1123)

இமையவர் பரவு முக்க ணெம்பிரா னிமில்க ருங்கோ
டமையும்வெள் விடைமீ தேறி யமர்ந்தன னிளமென் கொங்கை
யமையுறழ் திணிதோண் மென்சொ லையரி மழைம தர்க்க
ணுமைசெழுஞ் சூட்ட னத்தி னுற்றனண் மகளிர் சூழ. 52 (1124)

தேவதுந் துமியொ லிப்பல் லியத்திரள் திரையி னார்ப்ப
வேவருந் துதிசெய் நார தாதியர் கீதம் பாட
மாவெழி லதனின் மிக்கூர் வசிதிலோத் தமையா ரோடு
கோவையங் கனிவாய் மாதர் குழுவெலாம் நடனஞ் செய்ய. 53 (1125)

கின்னர ரியக்கர் நாகர் கிளரெழின் மகளிர் கூடி
நன்னய விசைகள் பாட நாகர்கோன் பிரம்பு கொண்டு
சன்னதி விலக்கச் சீர்சால் *தனஞ்சய னிருளை யோட்ட
நன்னிலைச் சனகனாதி ஞானிய ரோத்தி யம்ப 54 (1126)

*தனஞ்சயன்= அக்கினி

சுடர்மணி மோலி வேய்ந்த சுரர்பல நெருங்கிச் சூழத்
தொடர்கரி கலினப் பாய்மாத் துன்னுமப் பனைசை மூதூ
ரிடர்தரு பிறவி நோய்விட் டிரிதரத் தொழுந்தொ ழும்பர்
படர்கெடுத் தருளு முக்கட் பண்ணவன் வலம்வந் தானால் 55 (1127)

* துல்லிய மறுமிக் கோலத் தூய்மையை வானு ளோரும்
நல்லிய லுறுமெய்ஞ் ஞான நாகரும் புவிய ளோரும்
வல்லியம் பூசித் தேத்தவ் வளமிகு பதியோ ருங்கண்
**டல்லகண் டங்க ளெல்லா மகற்றிநின் றார்வ முற்றார். 56 (1128)

*துல்லியம்= உவமை   ** அல்லகண்டம்= துன்பம்

தூய்மணி மாட வீதி சூழவந் தகன்று வானத்
தேய்தருஞ் சிகரி வாயி னெய்திடக் குழைக டாவிப்
பாயரி மதர்நெ டுங்கட் பாவையர் பலருங் கூடி
யோய்தலில் மணவாழ்த் தோத வுழைகர னுவகை கூர்ந்தே 57 (1129)

துகளறு மணியி னாற்செய் சொன்னமண் டபத்தி னாப்ப
ணிகரில்சிங் காத னத்தி னிமலையோ டமர்ந்தாங் குற்ற
ககபதி விரிஞ்ச னாதிக் கடவுள ரவர வர்க்குத்
தகவிடை யளித்தா னந்தஞ் சார்ந்தினி திருந்தா னன்றே. 58 (1130)

சூலபா ணியனார் வைகிச் சுகமண முடித்தற் காமத்
தாலமா நகரின் மேன்மைச் சரிதையை யெண்ணில் கோடி
காலமா யுரைத்திட் டாலுங் கடைபெற லருமை யாமிஞ்
ஞாலமே லதற்கொப் பான நகர்பிறி திலையென் றோர்வீர். 59 (1131)

ஆகையா லதனின் மேவி யமர்ந்தவெங் கருணை மூர்த்தி
யோகையாம் புராண காதை யுரைத்தவர் கேட்டோர் முத்திப்
போகமாம் பொருளைத் துய்த்துப் புனிதராய் வாழ்வர் நீரவ்
வேகமாந் தலத்தி னெய்தி யிறைவனைத் தொழுதி ரென்றான் 60 (1132)

                                      (வேறு)

அன்னையின்மெய்த் தவம்வளர்க்கு மருட்சூதன றைந்தமொழி யமுதமாந்தித்
தன்னிகரில் லாதொளிர்நை மிசத்தறிஞரெம்முளமாந் தகளி யொன்றப்
பின்னமிலா விச்சரிதை யெனுஞ்சுடரைப்பிறங்கவைத்துப் பிறவி மாய்த்தீ
ரென்னவுரைத் திணையடியி லிறைஞ்சிடவு முனிவனுந்த னிருக்கை புக்கான். 61 (1133)

சீலமுனி யகன்றதற்பின் றிருவளர்நை மிசவனத்துச் சிறந்தோ ரியாருந்
தாலவனத் தினிலடைந்து தண்ணமுத நதியாடிச் சனக னாதிக்
காலவிருக் கத்தடியி லமர்ந்தருள்பா லித்தவெம தையன் பாதக்
கோலமலர் முடிதரித்துக் குறைவறுநன் முத்தியினிற் கூடினாரால் 62(1134)

                                 (வேறு)

வேதநூற் றுறைகள் வாழி விளங்குநற் றவங்கள் வாழி
நீதமா மகங்கள் வாழி நீதிநூல் வல்லோர் வாழி
போதவிண் ணுலகு வாழி புணரிசூ ழுலக மெங்கு
மாதமும் மாரி பெய்து வண்மையோ டினிது வாழி. 63 (1135)
 
வேதிய ரொழுக்கம் வாழி வெற்றிகொள் மன்னர்வாழி
நீதிசேர் செங்கோல் வாழி நீணகர்ப் பனைசை வாழி
யாதியி னருளி னாலங் கமர்ந்துறை மாக்கள் வாழி
யோதிய புராணம் வாழி யுன்னரு மடியார் வாழி 64 (1136)

பூதிருத் திராக்கம் வாழி பூண்பவ ரென்றும் வாழி
கோதிலாச் சைவம் வாழி குருவரு ணிறைந்து வாழி
தீதிலைந் தெழுத்தும் வாழி சிறந்தஞா னியர்கள் வாழி
ஆதியின் சரிதங் கேட்கு மன்பினர் வாழிவாழி. 65 (1137)

                                           (வேறு)

இதமுறு சகாத்த மூவறு சதத்தோ டியையுமை யைந்தினிற் றிகழும்
துதிபெறு சோப கிருதெனு மாண்டுத் துலாமதி யதனி லிப் பனசைப்
பதிபுரா ணக்கா தையைவிட மயின்று பண்ணவர் துயர்தவிர்த்தாண்ட
நதிமதி புனைந்த நம்பன் மாயூர நாதனார் கருணைகொண் டுரைத்தேம். 66 (1138)

                                           விவாகச்சருக்க முற்றிற்று.

                              பாயிரமுட்படச் சருக்கம் 19 க்குத் திருவிருத்தம் 1138.

                                             திருப்பனைசைப் புராணம் முற்றிற்று.

Related Content