சிவமயம்.
விநாயகர் துதி
நீர்கொண்ட கடலாடைப் படிமிசையேழ் வருக்கவுயிர் நிறைசெஞ்சாலிக்(கு)
ஏர்கொண்ட பருவத்திற் கருணைமழைக் கிடைவிடா திறைக்கும் பைம்பொன்
வார்கொண்ட வல்லபைப்பெண் முலைக்குவடு திளைக்குமொற்றை மருப்புநால்வாய்ச்
சீர்கொண்ட வேழமுகப் பெருங்கடவுட் புயலிருதாள் சென்னி சேர்ப்பாம். (1)
திருவளர்செம் மணிமார்பி னயன்முதலோர் தொழுதேத்தச் செழும்பொன் மேருத்
தருவளர் திண் பொலங்குவட்டின் முனிமொழிந்த கதைவரைந்த தன்மைபோலும்
உருவளர்பெண் பாலிருக்குந் தந்தைசொல்லா கமம் நல்லோ ருள்ளமென்னும்
மருவளர்தா மரைப்பொகுட்டி னெழுதுமொற்றைக் கொம்பனடி வணக்கம் செய்வாம் (2)
நாகலிங்கர் துதி
பூமேவு பொன்வளரு மணிமார்பன் பாரதிப்பெண் புணருங்கேள்வன்
மாமேவு புருகூதன் வானவர்மா தவமுனிவர் மற்றை நல்லோர்
தேமேவு மிதையதட மலர்ந்துசச்சி தானந்தச் செழுந்தேன் பில்குங்
காமேவு திருமருதூர் நாகலிங்கரிணை மணித்தாட் கமலம் போற்றி. (1)
சீர்தந்த வுருவமிரண் டிணையாகி யுருவருவத் தேசொன்றாகிப்
பேர்தந்த வருவமொரு நான்காகிப் பஞ்சசத்திப் பெருமானாகி
யேர்தந்த வருள்வடிவா யெல்லாமா யல்லவுமா யிருக்கும் வையை
நீர்தந்த தடம்புடைசூழ் மருதூர்நா கேசர்பத நெஞ்சுட் கொள்வாம். (2)
சவுந்தரநாயகியம்மை
பனிவரையின் முளைத்துவிழிச் செழுங்கருணைத் தளிரீன்று பார வெள்ளித்
தன்வரையிற் பெருந்தருவைத் தழுவியண்ட கோடி முற்றுந் தழைத்து மிக்க
முனிவரைவ ருளங்கிளர்சத் ததுபூத்துச் சித்தெனுங்காய் முகிழ்த்தா னந்தக்
கனிவரையா தேகொடுக்கு மழகியபைங் கொடியிருதாள் கருது கிற்பாம். (3)
மருதவன விநாயகர் துதி.
மலைவளைத்த தந்தைமடி மிசையிருந்து சடையடவி மலிதண் கங்கை
யலைவளைத்த பாணிமுகப் பாணிமடுத் தெறிகடனீ ரருந்துங் காரிற்
கொலைவளைத்த நுதல்விழிவெங் கோடைகுளிர்ந் திடப்பொழிந்த குணங்கண் டம்மை
தலைவளைத்து முத்தமிடும் மருதவனப் பிள்ளைபதந் தலைமேற் கொள்வாம் (4)
முருகன்றுதி
மைவேலைக் குருகுபெயர்க் குன்றநெடுஞ் சூதமென வஞ்ச வெம்போர்
செய்வேலைக் குடி துடைத்துக் கூறிரண்டு படுத்திவிண்ணோர் தியக்கந் தீர்க்குங்
கைவேலை நிகர்க்குமென மான்மகடன் விழிவேலைக் களிக்குந் தேவைப்
பொய்வேலை புரிந்துளவைம் புலனடங்கக் கருத்தினிடைப் போற்றல் செய்வாம் (5)
தெக்ஷணா மூர்த்தி.
மறந்தருமும் மலச்செருக்கின் மருளாமற் பாகமுற வருத்தி யெங்கும்
நிறைந்தவருட் சுடர்சூட்டி யுயிர்ப்போத மொழித்தயிக்க நிலைமை யீட்டி
யறந்தருநற் சனகாதி முனிவரற்கு வடநிழற்பா லமைந்து ஞானத்
திறந்தருமுத் தியைக்காட்டுந் தெக்கணா மூர்த்திபதஞ் சிந்தை செய்வாம் (6)
நடராஜர் துதி.
ஊனமா யையிற்சுழலுஞ் சரவசர வுணர்வுக்கு ளுணர்வாய் நின்றுந்
தானமா கரந்துறைவ தெவ்வண்ணம் படைப்பானுந் தனிக் காப்பானு
மேனமா யன்னமாய்த் தேடியுங்கா ணாதன்பர்க் கெளிதாஞ் சோதி
ஞானவா காசநடந் தெரிசித்தேழ் பவத்தொடர்ச்சி நவைக டீர்ப்பாம் (7)
ஆதித்தன்றுதி.
பயில்பிறவிக் கங்குன்மலப் படமொழித்துப் பத்தருளப் பதுமம் பூப்பக்
கயிலையுறை மருதீசன் கண்ணாகி யுதித்தெழுசெங் கதிரோன் றன்னை
யயில்விழியார் முலைதிளைத்துக் கேவலத்தின் மூழ்குமவர்க் ககிலங் காணத்
துயில்விலகி வெயில்விரிக்குஞ் செம்பருதிப் புத்தேளைத் தொழுதல் செய்வாம் (8)
வைரவன்றுதி,
கோணிலவும் பிறைபொருவுங் கூரெயிற்று வாய்முடுவற் குதிரை யானைப்
பாணியிற்கங் கணம்புனைந்து வுரகமணி வெயில்விரிக்கும் பண்பினானை
வேணியரன் றிருக்கோயில் காப்பானை நிருவாண வேடத்தானை
வாணிலவு முத்தலைவேல் வடுகனைச்செந் தமிழ்பாடி வணக்கஞ் செய்வாம் (9)
சண்டீசர் துதி.
பொன்னிநதிப் பாலிருந்து கையாற் சிவலிங்கப் பூஜை செய்து
மன்னுதியா னத்திலே யிருந்த நாட் கிவனன்பு மறந்தானாகிப்
பன்னுமருச் சனையழித்தான் குருவென்றுந் தந்தையென்றும் பாராமற்றாட்
பின்னமுற வீசியரன் பெரும்பதம்பெற் றான்புகழைப் பேசு கிற்பாம். (10)
நந்திகேச்சுரர் துதி.
அண்டபிண்ட பூதபே தஞ்சுமக்கும் பிரகிருதி யகண்டானந்தங்
கொண்டவெல்லா மணுவொன்றிற் கூட்டிவைத்தவ் வணுவனந்த கோடிமுற்றும்
பண்டையருட் சத்திவசத் தேற்றியந்தச் சத்திதன்னிற் பாதியாக்கித்
தண்டலின்றித் தாங்குமவன் றனைத்தாங்கு நந்திதிருச் சரணம் போற்றி (11)
வாணி துதி.
பல்லுயிர்க்கும் பொதுத்தந்தை சிவந்தநாவிற்
பதிந்துந்தன் பால்வண்ணம் பழுதுறாமே
நல்லுரைசார் மறையின்பக் கலுழியூடே
நண்ணியுந்தன் வெள்ளாடை நனைந்திடாமே
எல்லுலவு பகற்காலங் கங்குற்காலம்
இருபொழுது மலர்தவள கமலமென்றே
சொல்லுமென திதையசிங்கா தனத்தேவைகுஞ்
சுகவாணி துணைச்சரணந் தொழுதல் செய்வாம் (12)
விஷ்ணு முதலிய தேவர்கள் துதி.
அக்கவன சக்கடவு ளவனுரத்துத் திருமடந்தை யன்னமூர்த்தி
மிக்கசிம்புள் வடிவெடுத்தோன் பூரணைபுட் கலைகொழுநன் விந்தை மாது
மைக்கருங்கண் மருதவன மாகாளி யெழுவர்கன்னி மார்க ளானோர்
திக்கதிப ரெண்மரொடும் முப்பத்தி முக்கோடி தேவர் போற்றி. (13)
ஸ்ரீ ஞானசம்பந்தர் துதி.
நாடேறும் வையயிலே டெதிர்சென்றேற
நடலைதருஞ் சமண்முகர் நவைகடீர்ந்து
வீடேறுந் திறமின்றி யிடும்பை யேறி
வெங்கழுவி லேறவெறி வெம்பு சூடிச்
சூடேறுஞ் சுரத்தொடுகூ னொழிந்து தேகஞ்
சுகமேறச் சைவநெறித் தொண்டர் முற்றும்
ஈடேறத் தண்டரளச் சிவிகையேறும்
இருங்காழிப் பிள்ளைபத மேத்து கிற்பாம். (14)
வாகீசர் துதி
உடல்குழைய மொழிகுழற விழிநீர்மல்க
வுளத்திலன்பு கனிந்தொழுக வுரகனுச்சிக்
கடல்புடைசூழ் புடவியிடைத் தலங்கடோறுங்
கவியலங்க லணிந்தரனைக் கண்டு போற்ற
நடை நடந்து காறளர்ந்திட் டிருகையூன்றி
நடுக்கமுறத் தவழ்ந்துபொய்கை நன்னீர்மூழ்கி
வடகயிலைப் பொருப்பையா றதனிற்கண்ட
வாகீச ரிணைமணித்தாள் வணக்கஞ்செய்வாம். (15)
சுந்தரமூர்த்தி துதி.
காதுகொண்டு கேட்குமவர்க் கின்பவெள்ளங்
கரைபுரள மனங்கொண்டு களிக்கின்றோர்கட்
கீதுகொண்டு பாசவிருட் படலநீங்கி
யிணையிலருட் சுடரெங்கு மெறிப்பவெற்பின்
மாதுகொண்ட பாகர்விரும் பாகந்தோன்றி
வரமதுர பாகம்பா மாலைமல்கத்
தூதுகொண்டு நடந்திளைத்த வடியிற் சாத்துஞ்
சுந்தார்தஞ் சீர்த்தியினைத் துதித்தல் செய்வாம். (16)
மாணிக்கவாசகர் துதி.
பொருந்துறை பிலிற்றுங்கொண்டல் பொலிதடஞ் சோலைமன்னும்
பெருந்துறை நகரிற்பெம்மான் பெருகுதன் கருணைவைத்துக்
குருந்துறை தாமுன்றன்னைக் கொடுத்தருட் டேறன்மாந்தி
யருந்துறைப் பதிகம்பாடு மையர்தாள் வணக்கம்செய்வாம் (17)
திரிலோகத்திலுமுள்ள சிவனடியார்கள் துதி.
மீதல மதனிற்பொங்கும் வெண்டிரை யளக்கர்சூழ்ந்த
பூதல மதனிற்றெய்வப் பொலன்மணிச் சுடிகைப்பாந்தட்
பாதல மதனிற்பெண்ணோர் பாகன்பா லன்புவைத்துக்
கோதலஞ் சார்வதில்லார் கோகன கத்தாள் போற்றி, (18)
திருவெண்காடர் துதி.
பழியாமனந்த பவத்தொடர்ச்சி பாற மலபா கந்திருத்தி
மொழியாமொழியாந் தனிமொழியை மொழிந்தா னந்தப் பெருஞ்செல்வம்
அழியாமொழியாந் திருப்பதியி லடியேன்பெறமுன் சிவஞானம்
வழியாத்தந்த வெண்காடர் வனசத் திருத்தாள் வணங்கிற்பாம். (19)
கடவுள் வாழ்த்துப் பாயிரம் முற்றிற்று..
2. புராண வரலாறு
புண்ணியமாங் கங்கைமுத னதிக்கண்மூழ்கிப் பொன்னிதழி புனைசடிலன் புரங்கள் கண்டு
மண்ணிலுயர் நயிமிசமா வனத்தினெய்தி மறைமுனிவர் தொழுதுமிக வணங்கிக் கேட்ப
நண்ணிமுன்னஞ் சூதமுனி நற்புராண நான்மூன்று மூவிரண்டு நவிலுங்காலைத்
தண்ணிலவு மாக்கினே யத்திலிந்தத் தமிழ்மருதூர்ச் சிவசரிதை சாற்றுமாறும் (20)
வைகநதி யின்சிறப்பும் பாண்டி நாட்டு வளமையுந்தென் மருதவன நகரப்பண்பு
மெய்கிளருஞ் சிவதலங்க ளனைத்தினுக்கும் விசேடமரு தூரென்னு மேன்மைதானுங்
கைகிளருங் கருநெல்லிக் கிணைவிசேடங் கமழ்தீர்த்த மீரேழிற் கண்டபேறு
முய்கைதருந் தலம்பலவி னிலிங்கமூர்த்தி உயர்வாமிவ் விலிங்கமென வுரைத்த வாறும் (21)
தகுவசிட்டர் முனிசீட ராயிரம்பேர் தம்மைமுனங் காதிசேய் சபித்தவாறு
மிகுமிந்த மருதவனத் தன்னோர்கட்கு வெஞ்சாபமருதீசர் விலக்குமாறும்
புகுமார்கட் கீச்சுரகீ தையினையன்பாற் போதித்து முத்திதந்த புதுமைதானும்
மகிமைதரு மிப்பதியில் வசிக்கவேண்டி மருதவனம் வில்வவனம் வந்தவாறும் (22)
கந்தருவர்க் கிறைமாணி பத்திரற்குக் கமழ்மருத வனந்தன்னிற் காட்சிதந்து
சந்திரசே கரநயினா ரருளினாலே தகுவரமுந் தமிழ்முனியைப் பொதியத்தேவ
விந்தமலை யடக்கியவன் மருதார்வந்து விடையூர்தி யைத்தொழுதே யியமனீச
முந்துமண வூர்ச்சுயம்பு லிங்கம்போற்றி முதுமலையைத் திருந்துதவ முயலுமாறும் (23)
தேவியழ கியநங்கை பார்ப்பனிப்பெண் திருவுருவு கொண்டு திரு நாகநம்பி
மாவைநிகர் தேவநங்கை யிருவருக்கும் மகளாகி வளர்ந்திருப்ப மருதூரீசர்
ஆவலுடன் மணந்தந்த மன்றற்காட்சி யகத்தியமா முனிவர்க்கன் றளித்தவாறும்
மூவர்பிரா னாகேசர் செம்பொற்பாத முந்துரக பதிபூசை முடித்தவாறும். (24)
குருவாகி வந்தாதி சேடனுக் குக்குலவுசிவ ஞானம்போ தித்தபண்பு
மருவாவிப் படிசுமக்குந் திசைப்பாந்தட்கு வரமளித்துத் தாபரித்த மகிமையுஞ்சீர்
தருவாழ்வு வேண்டிவந்த மதிமானுக்குத் தனந்தலையாப் பொற்கிழியைத் தந்தவாறுந்
திருவாருஞ் சிவநிசியில் வேடனன்பு சிறிதுமிலான் கயிலாயஞ் சேர்ந்தவாறும் (25)
போதம்போ தித்தெவர்க்கும் பிறப்பிறப்புப் போகவரு ளானந்த போகமீவான்
வாதம்போ தித்துநா கய்யனுக்கு வறுமைதீர்ந் திந்திரன்போல் வைத்தவாறுங்
கீதம்வா சிக்குங்காந் தருவப்பெண்கள் கிரிக்குமரி பாங்கியராய்க் கிளருமாறும்
நாதநா கேசர்மரு தூர்ப்புராண நற்கதையின் வரலாறு நடந்தவாறே. (26)
மன்னுமிர சதப்பொருப்பின் மதிமவுலிக் கடவுள்மலை மகள் பாற்கூறப்
பின்னுமலர்க் குழலுமைப்பெண் பாரதிக்கன் றருள்புரியப் பிரமிமுன்னம்
பொன்னுலகிற் சுரர்குருவாம் பொற்பாலன் பாலுதவப் பொன்பாலெய்திப்
பன்னுகலை முழுதுணர்ந்த கோதமன்பெற் றத்திரிக்குப் பகர்ந்தானன்றே. (27)
அருமறைகூ றத்திரிமுன் றுருவாசற் கினிதளிப்ப வன்னோன் முன்னம்
பெருகுபரா சரற்கியம்பப் பின்னைவியா தனுக்கன்னோன் பேசச்சூதன்
குருவெனச்சென் றடைந்தவன்பா லுணர்ந்தபடி யிருடியர்கள் கும்பிட்டேத்த
வருநயிமி சாரணியத் திருந்துமரு தூர்ப்பெருமை வழங்கினானே. (28)
பண்ணைதிகழ் தென்மருதூர் நாகலிங்கர் பார்மீது விளையாடல் பாடவெண்ணி
லெண்ணுதொகைக் கடங்குமோ பிரமகற்ப மியம்புகினுந் தொலைவரிதென் றிசைத்தான் முன்னங்
கண்ணிடந்து சிவனடியிற் சாத்துங்காவற் கடவுடிரு வுந்தியென்னுந் தடத்திற்பூத்த
தண்ணறுந்தா மரைப்பொகுட்டுத் தவிசின்வைகிச் சகமனைத்து மீன்றபொதுத் தந்தையென்றார் (29)
எறிதரங்கக் கடல்கிடந்த புடவிநாப்ப ணிலங்குபொருப் பனைத்தினுக்கு மரசுமேருச்
செறிதருமே ழுலகிற்கா தாரமாகித் திருந்துமா யிரத்தெட்டுச் சிகரமோங்கு
நெறிதருமிப் பொன்மலைக்குத் தென்பாற்சம்பு நெடுந்தீவிற் சிவதலமீ ரைஞ் ஞூற்ரெட்டுக்
குறிகிளருந் திருப்பதிக ளிவைகட் கெல்லாங் குருநகர மாவதிந்த மரு தூரம்மா. (30)
புராண வரலாறு முற்றிற்று.
இவ்வண்ணம் நயிமிசா ரணியத்துண் மாதவர்கட் கினிய சூதன்
செவ்வண்ண மருதீசர் சீர்த்தியினை வடமொழியாற் றெரிந்துரைத்தான்
அவ்வண்ணம் பொருட்படுத்திச் சாமிதீட் சதருரைப்ப வடியனேற்கீ
துய்வண்ண மெனமருதூர் புராணத்தைத் திருவருளா லுரைக்கின்றேனே (31)
அவையடக்கம்
வான்பொலிந்த மழையசுத்தஞ் சுத்தமாகி வதிந்தநில மெவ்வயினும் வழங்குங் கஞ்சத்
தேன்பொலிந்த புண்ணியமா நதிக்ககணெய்தித் தீர்த்தமெனப் பேர்விளங்கிச் செவ்விதாமாற்
கான்பொலிந்த வேணியெம்மான் றன்பாலன்பால் கற்றவர்மற் றவரென்னுங் கருணை தோன்றிற்
றான்பொலிந்த புகழ்பாடத் தருவனிந்தத் தமிழறிஞர்க் கியற்பாவாய்த் தழைக்குமாதோ (32)
ஈசன்மரு தூர்க்கடவுளீமத்தாடற் கெதிரலகை யாட்டம்போ லெழுந்த வெய்யோன்
மூசுகதிர்க் கெதிர்ப்படுமின் மினிபோல்வேள்வி முற்றுதற்குப் பரிதேடுஞ் சகரர்தொட்ட
வீசுதிரை யளக்கரெதிர் சிறுகூபம்போல் வெற்புரைவெம் புலிக்கெதிரிற் புலிவீரம்போற்
பேசுமிலக் கணந்தெரிந்த பெரியோர் முன்னம் பேதையேன் புன்பாடல் பிதற்றுமாறே. (33)
என்னையுணர்ந் திலனெளியேன் மருதூரீச னெனக்குள்ளே யிருந்துணர்த்து மியற்கைகாணேன்
றன்னருளாற் பாடுவித்த கவிதையுண்மை தன்கவிதைக் கெனைமகிழுந் தகையே தென்னில்
அன்னைதந்தை தங்கள்சிறு மகவுக்கன்பா லன்னைதந்தை யெனப்பயில வளித்த வண்ணம்
பின்னையந்தப் பிள்ளைச்சொல் மழலைக்கின்பம் பெருகிமுத்தங் கொள்வரந்தப் பெற்றியாமால் (34)
அரங்கேற்றியவிடம்.
பரமர்திரு நாகேசர் சன்னதியிற் சிறந்ததிருப் பணிநடாத்திச்
சரமசரந் தொழுங்கடவுட் செவ்வந்தி லிங்கமுனி தழைக்குங்காலம்
புரவரனை யருச்சனைசெய் நம்பிமார் பதநம்பிப் புராணம்பாடி
யிரவிகுலன் சேதுபதி ரகுநாதன் சபையிலரங் கேற்றினேனே. (35)
ஆக்கியோன் பெயர்
நம்பரருள் விளங்குமரு தூர்ப்புரா ணம்பகர்ந்தோன் ஞானவாக்கி
கம்பைநகர்க் காராளர் மரபினிற்சுப் பிரமணியன் கருணைமைந்தன்
செம்பொருணா வலர்மகிழ்சிந் தாமணிசிற் றம்பலவன் றெண்ணீர்வேலி
யம்புவியில் வெண்கமலை யருட்பனுவல் பெற்றதமி ழரசுதானே.(36)
நூற்பயன்.
கரமான்செஞ் சடைதழைக்கும் பச்சறுகு மென்றுதின்று கங்கையென்னுந்
திரமான திரைத்தரங்க நீர்குடித்து வளரவைக்குந் திருநாகேசர்
வரமான தருள்கிறபா ராதலா லிந்த மருதூர்ப் புராணம்
உரமாகக் கற்பவருங் கேட்பவருங் கடவுளர்க்கு முயர்ந்தோர் மாதோ (37)
கண்ணுண்டே மருதூர்ச்சன் னதியைக்காணக் காதுண்டே புராணகதை கேட்க நாவிற்
பண்ணுண்டே நாகோர் கீர்த்திபாடப் பாணியுண்டே யவர்பாதம் பணிந்தர்ச்சிப்ப
மண்ணுண்டே யுமிழ்ந்தவனு மயனுங்காணா வடிவுண்டே காட்சிதர வலப்பாற்பச்சைப்
பெண்ணுண்டே யவண்முன்னம் பெறுமிரண்டு பிள்ளையுண்டே நம்பாதார் பெறும்பேறென்னே.(38)
வாழ்த்து.
வேதமுத லந்தணர்கள் வாழ்கவேந்தர் மிக்கமனு முறைதழைப்ப விளங்குங்கற்பு
மாதர்தழைந் திடமுதுநூற் கவிஞரோங்க வருதிங்கள் மும்மாரி வளஞ்சுரப்ப
நீதமா தவஞ்செழிப்ப நியமமல்க நேயமிகு சிவஞான நிலைபெற்றிந்தப்
பூதலமேற் றென்மருதூர்ப் புராணபாடம் போற்றுகின்ற சைவநெறி பொலிகமாதோ (39)
3. சூதச்சருக்கம்,
ஒருபொருட்டா லன்புருகி வினையிரண்டுங் குணமூன்று மொருவியோட்டி
வருகரண நான்கியங்கும் வன்பொறிக ளைந்தென்னும் வாயின் மாற்றித்
திருகுமறு சமயநூற் சழக்கொழிந்து பவமேழுந் தீரநீத்துக்
கருதருமெண் டிசைவிளங்கு மகண்டசச்சி தானந்தங் கலந்ததூயோன் (1)
சுருதியங்க மாகமநூன் மிருதிபுரா ணம்பகருந் தொன்மை யாவும்
கருதியருட் சரியைமுதற் கிரியையோ கங்கள்கரை கண்டேயெங்கும்
பருதிபோற் சான்றாகு ஞானவா னந்தவெள்ளம் படிந்துபாசம்
பொருதுபகை தீர்ந்துதிரு மருதூரன் செழுங்கருணை பூண்டமேலோன். (2)
முற்பிறப்பிற் சதுர்த்தவரு ணத்துதித்தந் தணர்க்கேவல் முடித்துவாழ்நா
ணற்புனித வேதவியா தற்கடிமைத் திறம்புரிந்த நட்பினாலே
யற்புதமா மகத்தெழுந்த கும்பஜல மந்திரங்கொண் டாட்டித் தெய்வ
வுற்பவந்தந் தொளிர்முன்னூல் சந்திகா யத்திரியு முதவப்பெற்றான் (3).
தெய்வவிரு டிக்கணத்தின் மிக்கெனவே வியாதமுனி சிறப்புச்செய்து
சைவநெறி தப்பாமற் சித்தாந்த வேதாந்த சமம்போதிப்ப
வைவருக்க மலபாகம் பிறந்தருளே வடிவாகி யகண்டானந்த
மெய்விளங்கும் பரம்பொருளி னொன்றிரண்டற் றிடுமயிக்க மேன்மைபெற்றான். (4)
மூன்றுகா லமுமுணர்ந்து முத்தியுஞ்சித் தியுமடைந்தோன் முன்னீர்வேலி
தோன்றுபார் புகழ்ந்தேத்தும் சூதமுனி சிவதலங்க டொழுது தொன்னூல்
ஆன்றகேள் வியினமைந்த சீடரொடு நயிமிசவா ரணியத் தெய்திக்
கான்றொழுகு மலர்நரவங் கமழமா தவரிருக்கை கண்டான் மன்னோ (5)
வெவ்வினைதீர்ந் தவணுறைந்த பெருந்தவர்கள் சூதமுனி மேவலோடு
மெவ்வமுறு மிருட்படலம் விழுங்குகதிர்ப் பருதிகுணக் கெழுதனோக்கி
வௌவுசுரும் பிசைமிழற்று தாமரைகண் முகமலர்ந்த வண்ணமென்ன
வவ்வவர்தங் கண்களிப்ப வுளங்குளிர்ந்தாண் டெதிரெதிர்வந் தஞ்சலித்தார்.(6)
அடிபணிந்த முனிவரர்க்கங் காசிபகர்ந் தனன்சூத னன்னோர் முற்றுங்
கடிதெழுந்து கங்கைநறு நீர்கொடுசே வடிவிளக்கிக் கந்தஞ்சாத்திக்
கொடிமலருஞ் செடிமலருங் கோட்டுமல ருந்தூற்றிக் கும்பிட்டேத்திப்
படிமணங்காற் றூபமொடு தீபவா ராதனையும் பரிவிற்செய்தார். (7)
இருக்கும்விதி முறைதிறம்பா தூபசரித்துப் பாசமெனு மிடும்பைமாள
முருக்கியெமக் கருடோன்ற வந்தவரத் தினிதென்று முகமன்கூறித்
தருக்கிளர்நந் தாவனத்தி னறியமலர்ப் பந்தரிற்பொற் றவிசின் மீதே
மருக்கிளர்தா மரைப்பூமேல் விரிஞ்சனென வைத்திருபால் வாழ்த்தி நின்றார். (8)
செய்யதிரு வடிநோவ நடந்திளைத்த வழிவருத்தந் தீர்ந்து சூத
னையமறு மன்புடையீ ரினிதிருத்தி ரென்றுபணித் தருள்க வன்னோ
ருய்யுநெறி பெற்றனமெ ன்றுவகையுட னிருந்தன ராண்டொளிருந் தோற்றம்
வையமிசை யிருணீக்கு முழுமதிசூ ழுடுவினங்கண் மானுமன்றே.(9)
இருந்தமுனி வரர்சூதன் முகநோக்கி யெமக்குணர்விங் கெய்துமாறு
பொருந்துபதி னெண்புரா ணப்பொருணீ வான்முறையாய்ப் புகல்கவென்னத்
திருந்துவியா தன்சரண மிதையபங்கே ருகத்திருத்திச் சேவித்தும்பர்
அருந்துமமு தன்னமரு தூர்ப்புரா ணப்பெருமை யறையலுற்றான் (10)
வேறு
மங்கைபாகனுக் கீரைந்து மாலுக்கு நான்கு
பங்கயாசனக் கடவுளுக் கிரண்டு வெம்பருதி
யங்கியிங்கிவர்க் கொவ்வொன்றே யறைந்தனர் வியாத
ரெங்குமொன்பதிற் றிரட்டியாம் புராணத்தி னெல்லை. (11)
சிறந்தசைவ மெய்ப்பவுடிக மார்க்கண்டஞ் சீர்த்தி
நிறைந்தகூர்ம மெயிலிங்கம் வராக நீள்காந்தம்
பறைந்தமச்சம் வாமனம் பிரமாண்ட மிப்பத்தும்
அறந்தழைத்தன சிவபுரா ணப்பெய ராமால் (12).
பலங்கொள் காருடநாரதம் விண்டு பாகவதம்
நலங்கொள் பைந்துழாய் மௌலிதன் சரித்திர நான்கும்
இலங்குநற் பிரமம் பதுமமென விரண்டுங்
கலங்குறாத சீர்மண் பொதுத்தந்தை தன்கதையாம் (13).
ஆக்கினேய மொன்றே கனற்கட வுளுக்காகும்
பாக்கியத் தரும்பிரம கைவர்த்த முற்பனுவல்
காக்கும் பானுவின் பெருமையைச் சொல்பெருங்காதை
யாக்கங் கூர்பதினெண் புராணங்க ளென்றமைந்த (14)
தெரிசனங் குமாரந் துருவாசங் காந்தருவம்
பரிய நாரசிங்கஞ் சிவதருமங் காபிலமே
அரிய வாமன நாரதீயம் பிரமாண்ட
முரிய வாருணங் கானிக முயர்வ வுசனகம். (15)
இன்ப மோங்குநற்பிரம கைவர்த்த மாரீச
மன்பு கூர்ந்திடு பாரசரந்தரும கேசமதா
மன்பதைக்குள சவுமிய மிருடியர் வகுத்த
வொன்பதிற் றிரண்டுப் புராணங் களுமுளதால், (16)
என்று சூதமா முனிவர னியம்பலு மிருந்த
மன்றல்வார் சடை மாதவர் மகிழ்ச்சியின் மலர்ந்தார்
துன்றுபல் புராணங் களுஞ்சொல் கெனச்சூதன்
நன்றுநன் றென வியாதனைப் போற்றிநன் கிசைப்பான். (17)
இந்து வேணியற் கியைந்தன புராண மீரைந்து
முந்த வோதிப்பின் மால்கதை நான்கையு மொழிந்தே
சந்த வேதியன் சரித்திர மிரண்டையுஞ் சாற்றிச்
சுந்தரத் தழல் சீர்த்தியு மிதம்பெறச் சொல்லும். (18)
வேறு
ஆக்கினே யந்துடங்கி யத்தியா யம்பகர்ந்த தறுபதாகும்
பாக்கியம்பெற் றீரிதன்மேன் மருதீசன் கதையினைநாம் பகராநின்றேந்
தேக்குபெருந் தலமனைத்து மீசனுக்கோ ருடம்பாகிச் சிறந்திருக்கு
நோக்குகின்ற வுணர்வொக்கு மருதூரென் றதன்பெருமை நுவல்கின்றானே.
சூதச்சருக்கம் முற்றும்.
4. வைகை நதிச் சருக்கம்.
பொன்னுளே நிறைந்தசோதிப் புனிதமொப் பெனவே யீசன்
என்னுளே யிருந்த தோரேன் யானென தெனுமிரண்டுந்
தன்னுளே கவர்ந்து கொண்டு சகமெலாந் தானேயானான்
பின்னுளே நிறைந்த வின்பம் பேசியென் பிறப்பற்றேனே. (1)
கங்கைகா ளிந்திசிந்து காவிரி யமுனை பம்பை
துங்க பத் திரிநற் கோதா வரிசரச் சுவதி யாதி
மங்கல தீர்த்தங் கோடி வைகைக்கு நேர்படாதென்
றெங்கணா கேசர் சொன்ன தின்னதிப் பெருக்கஞ் சொல்வாம்.(2)
தரைவளர் மருதூ ரெம்மான் றவளநீ றணியுந் தெய்வ
விரைவள ருருவ மென்ன விண்ணிடைப் பரந்தமேகந்
திரைவளர் பௌவத் தெண்ணீர் தேக்கியங் கவன்போ லோங்கும்
வரைவள ரணங்கின் பச்சை வடிவென மீண்டதன்றே. (3)
மருதுறை பெம்மான் றொண்டர் மனோலய மியற்றா நிற்பச்
சுருதிக ளறியா வண்ணந் தோன்றருட் சுடரின் மின்னித்
தருபர நாத மென்னத் தனிவிசும் பிடையதிர்ந்து
கருதரும் பரமா னந்தக் கருணைபோல் வருடங்கான்ற.(4)
இருந்திரு மருதூர் நாக லிங்கபூ சனைவிரும்பிப்
பொருந்துநற் சேடனம்பொற் பஃறுளைப் பொன்னின் வள்ளந்
திருத்துகைக் கொண்டனந்த தாரைவிண் டொழுகச் சீதந்
தரும்பகி ரதிநீர் நல்குந் தனியபி டேகம் போன்றும். (5)
மேற்றிசை படருஞ் சந்தப் பொருப்பிடை மேகமென்னச்
சாற்றுறு வடம்பல் கோடி தவளவீழ் படரா நின்ற
தோற்றம் தெனவும் வில்வ வனத்துளோ ரன்னஞ் சொன்னம்
போற்றுனர்க் கருள்வ போன்றும் பொழிமதத் தாரைபூத்த (6)
பம்புநீ ரமலையோங்கப் பன்மணி கொழித்து விண்ணிற்
கம்பொலிந் தொளிருஞ் சந்தக் கனபொருப் பருவி யீட்டம்
நம்பவந் தீர்க்குநாக நாயகர் புயத்திற் சூட்டுந்
தும்பையந் தொடையல் கோடி துயல்வரும் பரிசு தோன்றும். (7)
குங்குமங் கொட்டமந்தண் குலவுதக் கோல மேலந்
தங்குகா ழகில் படீரஞ் சாதிநற் றந்திக் கொம்பு
புங்கவாண் மஞ்ஞைப் பீலி பொன்மணி மலிவகண்டு
மங்குறா தனைத்துங் கொண்டு வணிகர்போல் வந்த வைகை, (8)
மாதவர் கலைவல் லோர்கண் மறையவ ரிடத்து நல்காப்
பாதக ரீட்டிவைத்த பழம்பொருண் முழுதும் வாரி
ஏதிலர் கொள்க வன்னோ ரேக்கமுற் றிருக்கும் வண்ணம்
பூதர மிருப்ப வுள்ள பொருள்கணீர்க் கவர்ந்த மாதோ.(9)
பார்மிசைத் திணைக ளைந்திற் படுபொருண் முழுதும் வாரி
யோர் நிலத் துறுவ மற்றை யோர்நிலத் துய்க்கும் நீராற்
சார்தரு கொழுநர் நாளுந் தருவினைப் பகுதி தானு
மூர்மனத் தொழிலாஞ் சீவ வுணர்வும்போன் றிருந்ததன்றே. (10)
புரைபடு பூதபேதப் பொறிகர ணங்க ளாதி
வரைபடு சுத்தத்து வத்தொடிம் மலங்கணீத்துப்
பரைபட ரின்பத் தெல்லாம் பரமெனத் தோன்றுமாபோற்
றரைபடு பொருள்க ளெல்லாந் தன்னெனப் பொலிந்த நீத்தம்.(11)
பருப்பதம் பிறந்த பச்சைப் பசுங்கொடி யணைந்து தெண்ணீர்
விருப்பமா கங்கை பூங்கா வேரிமேற் கொண்டு வேங்கை
யுருப்பொலி தோல்படுத்த துலகெலா மறியக் காட்டித்
திருப்புனை மருதூ ரீசர் திருவுருக் கொண்ட வைகை. (12)
பனிமொழி வரையில் வந்து பரமர்நா கேசர் செவ்விப்
புனிதமெய் தழுவியின்பம் பூண்டுபூ வம்பு வேழம்
இனியபொற் காந்தள்கொண்ட வியற்கையிற் குருகலம்புங்
கனிமொழி யழகுநங்கை காட்சியிற் பொலிந்த வைகை.(13)
சங்கொடு நேமிதாங்கித் தவழ்ந்து நீண்மருதந் தாக்கி
மங்கல வனசமேலே மணம்பொலி திரு நிறைந்து
பொங்குபூ நிலமடந்தை புணர்ந்துபா ருதிப்பான் மேவிச்
செங்கண்மால் வடிவ மென்னச் சிறந்தது வைகை நீத்தம். (14)
கடலிடைப் பிறந்துநின்ற கற்புடை யொழுக்கங்கொண்டு
மடலுடைக் கமலமேவி மன்னுயிர் தழைப்ப நல்கி
யிடர்படா துலகங்காக்கு மெழிலியை மணந்து செல்வ
நடமிடு கனகையென்ன நடந்தது வைகை யாறு(15)
சீதவொண் பூமேனான்கு திசைமுகம் விளங்கித் தன்பால்
வேதபா ராயணத்தோர் வியந்திரு மருங்குஞ் சூழ்வித்
தேதமி லன்னமேற்கொண் டிருங்கலை மான்மணந்து
போதமா லுந்திதோன்றிப் பொதுத்தந்தை நிகர்க்கும் வைகை.(16)
வெண்ணிறப் படிகமென்ன விளங்குநன் மேனி தோன்றிப்
பண்ணையே பழகிச் சொல்லிற் பதிந்தன பொருளைக் காட்டித்
தண்ணறா வொழுகும் வண்ணத் தாமரை யிருப்பதாகிப்
பெண்ணினிற் பெரும்பேர் பெற்றுப் பிரமியைப் பொருவும் வைகை.(17)
வெயில்விரி வயிரஞ்சார்ந்து வெள்ளாம்பன் மேலேயேறிப்
புயலையூர்ந் தண்ட ரூரிற் புகுந்துலாய்ப் பவனிவந்து
பயில்கண்கள் பலவுண்டாகிப் பகர்மரு தம்புரந்தாங்
கியலுடை யரம்பை சூழ்ந்தே யிந்திர னிகர்க்கும் வைகை.(18)
பற்பல கொடியி னீட்டம் படர்ந்துநன் மணங்கண் டோங்கிக்
கற்புடைக் கொம்பர் மேவிக் கவின்கிளர் மணிவிளங்கிப்
பொற்புற வனம் படைத்துப் பூப்பொலி திரைகள் சார்ந்து
நற்புகழ் மருதூ ரென்னு நகரென வந்தவைகை.(19)
பரமத மடக்கும் வண்ணம் பன்மத மடக்கி வேதச்
சிரமிசைப் பொருளைக் காட்டுந் தெளிவெனத் தெளிந்து தென்னன்
சுரமறுத் திடல்போற் கோடைச் சுரமறுத் தியற் சம்பந்தர்
வரமுறப் பகர்தே வார மலிந்தபோன் மலிந்த வைகை. (20)
குலவுநற் றும்பி யீட்டங் கொக்கிருந் தொகுதிகொண்டு
பலபல விரதஞ் சொத்துப் பகரணி சிறந்த தானை
வலமிடந் தன்பாற் றோய்ந்து மன்னுயிர் புரக்குந் தெய்வத்
தலமெனுஞ் சேதுராச தளபதி நிகர்த்த வைகை (21)
கூட்டிமுன் செல்லுங் கொண்டன் மாமிதன் குணத்திற் கேற்ப
வீட்டிருந் தொழுகி வெற்புக் கணவனைச் சின்னாண் மேவிப்
பாட்டியென் றிருந்த பூப்பெண் டுணையொடும் பௌவத் தாய்பால்
ஈட்டுநீர் வைகை நங்கை யேகுவான் போன்றதம்மா.(22)
வேறு
தென்னி லைப்பரி சென்னத் திகழ்ந்த தான்
முன்னி லைத்தமு கவனைச் செய்கவென்
றன்னி லைப்புறங் காப்பவ ரார்ப்பவே
நன்னி லைப்பெரு நாட்டவர் நண்ணுவார்.(23)
நாடி மள்ளர் மரங்க ணறுக்கியூர்
தேடு கொள்ளைச் செறுனர் களமென
வோடி வெள்ளமு றாதணையுற் றெதிர்
கோடி வெள்ளங் குதிரை நிரைப்பரால்,(24)
ஆற்ற லைப்புன லோதையு மம்மலை
போற்ற லைக்கரை யேற்றுவர் பொம்மலுங்..........
வேறு
வைகையின் வளத்தைச் சூதமாமுனிவன் வசனித்த வடமொழி மருந்தை
மெய்கிளர் புளகம் பூப்பவே செவியின் மிசைந்துளங் களித்து வெம்பிறவிப்
பொய்கெழு மாயைப் பெருங்கடல் கடந்தெம் புகலரும் பிரமவா னந்தங்
கைகிளர் நெல்லிக் கனியெனக் கண்டே மென்றனர் மறைமுடி கண்டோர் (25)
வைகை நதிச்சருக்கம் முற்றிற்று.
5. பாண்டிநாட்டுச் சருக்கம்.
புகழ்ந்து வேதியர் போற்றுநா கேசனைப் பொரவந்
திகழ்ந்த காலனைக் காலினா லடர்த்தவெங் கோனைச்
சகங்க ளல்லவாய்த் தனையன்றிச் சகமில தென்னு
மகண்ட பூரண வானந்தச் சுடரையஞ் சலிப்பாம்.(1)
திங்க டோறு மும்மழை பொழிதரத் தெண்ணீர்
பொங்கு வைகையந் திருநதி பெருகின்ற புலமைச்
சங்க வாணர்தந் தமிழெனத் தழைத்தன தடங்கள்
கொங்கு தங்குநீ டேரிகள் குளமெலா நிறைந்த (2)
மருத மாவனத் தெந்தைநல் லருளினை வாழ்த்தி
யிருது மூவிரண் டெனுமவைக் கியந்தவே ளாண்மை
கருதி நற்பயி ரேற்றுவ ருழவர்தங் களிப்பாற்
சுருதி வாணர்தஞ் சொல்லெனச் சொல்வளஞ் சுரப்ப (3)
விழவு காண்பவர் பொருவெழிற் கடைசியர் விரிநீர்
துழவி வண்டுமுத் தெடுப்பவர்க் கண்ட கந் துடர
மழவுத் தண்மைசார் மள்ளரேர் பற்றினர் வயலி
லுழவு கோல்கொடு தாக்குறா துழுவன பகடு (4)
நண்ணி நென்முளை வித்தினர் நகைமதிப் பிள்ளை
விண்ணி லேவளர் கலையென மீக்கொடு வளர்ந்து
புண்ணி யம்புரிந் தவர்பெருந் திருவினிற் பொலிந்து
பண்ணை யாவைக்கு நடத்தகு நாறெலாம் பலிக்கும். (5)
இனங்கொள் வண்டிசை பாடமா முகில்முழ விசைப்ப
மனங்க னிந்தெழிற் கிள்ளைதா ளஞ்சொல மந்தி
யனந்த லாகுமார்க் கந்தரத் தோகைநின் றாடக்
கனங்கொள் பிப்பில மாஞ்சிரக் கம்பிதங் காட்டும் (6)
வயலின் மேதிகள் கன்றுளிக் கனைத்திட மடுவிற்
புயல் பொழிந்தெனப் பொழிந்தபால் கால்வழி புக்கி
யயலு றாதுநீர் வயன்மடை யடைத்தசோ றள்ளி
யுயருந் தாமரை யோடைமீ துணவிருந் தூட்டும். (7)
வேறு
சொல்லினிற் பொருளடங்குந் தன்மைபோற் சொல்லி னுள்ளே
நல்லியற் கருவிருந்து நகைமுகக் கணிகை மாதர்
புல்லிய விறுமாப்பென்னப் புறங்கதிர்ப் போக நீட்டி
வல்லியங் கற்புமின்னார் வளைந்தன விளைந்த வன்றே.(8)
இருவினை யொப்புநோக்கி யீசர்தந் தொண்ட ருள்ளத்
தருளறி விக்குமாபோ லற்றம்பார்த் துழவர் காலப்
பருவம துணர்ந்துசாலிப் பயிர்வளப் படுத்தி வெய்யி
லருதிநீர் பாய்ச்சிநாளுங் காப்புற விளைவ பண்ணை (9)
குலவுநா கேசர்வேணிக் குழுவிவெண் டிங்க ளென்ன
நிலவுமி ழிரும்பாற்பண்ணை நெற்கதிர் கொய்து வாரிப்
பலபல சும்மைசேர்த்துப் பாற்களப் படுத்தி வெய்யோன்
வலமுறு மேருவென்ன மள்ளர்போர் வகுப்பார் மாதோ (10)
போரினை மும்மைநாளிற் பொருகரும் பகடு பூட்டிச்
சார்புறத் துவைத்த பின்னர் சமைந்தவை களைந்து தூற்றி
யூருறை தெய்வம்பார்ப்பா ருறுதொழி லவர்க்கு நல்கிக்
கூர்குடிக் கைந்துபாகங் கொடுத்தொன்றை யரசு கொள்ளும்.(11)
குடிபெறும் வாரமைந்தும் வண்டியிற் கொடுபோய்த் தத்தம்
நெடியமா ளிகையி லுய்ப்பார் நிரம்பவே தேவருக்கு
முடியுந்தென் புலத்தவர்க்கும் முறைமைசால் கிளைஞ ருக்கும்
படிமிசை விருந்தினர்க்கும் பகுத்தபின் மாந்த ருண்பார். (12)
எள்ளுநற் சாமையேன லிறுங்குகேழ் வரகு கம்பு
கொள்ளுறு மவரைதோரை குறுவர கிவுளி வாலி
கொள்ளுகோ தும்பைசோளஞ் செழும்பய றதன்வ ருக்க
முள்ளன சகடமேற்றி யுவப்பொடு மனையி னுய்ப்பார் (13)
தாழையி னெற்றும்பூகந் தருதுவர்க் காயுந் தாற்று
வாழையின் பழனுநெல்லி வருக்கைமாக் கனிகாய் செங்கண்
வேழமார் சாற்றையட்ட வெல்லங்கற் கண்டு சீனி
சூழ்பெரும் பண்டியேற்றி வழிதொறுந் துவைப்பச் சேறாம். (14)
மண்டபஞ் சாலைதெய்வ மாளிகை மடநீர்ப் பந்த
ரெண்டவர்க் குதவுமன்ன சத்திர மிருந்த டாகங்
கொண்டலிற் பல்லியங்கள் குளிறுதேர் விழவி னோங்கிக்
கண்டவர் மனமுங்கண்ணுங் களிப்பன வூர்க டோறும் (15)
புனிதமாந் தெய்வமன்றிப் புலைபடு புத்தேள் போற்றார்
மனிதர்தான் விலக்குபக்கி மற்றுள்ள வுயிர்கள் யாவுந்
துனிபடர் கொலைகட்காமஞ் சோரம்பொய் சொல்கை நீக்கி
யினிதுபுண் ணியந்திறம்பா தீசனை வணங்கு வாரால் (16)
காமிக்கு மிச்சைகோபங் கனங்கெடு முலோப மோகம்
வாமிக்கே றகந்தை தீய மதம்பொறா மச்சரஞ்சீர்ப்
பூமிக்கு ளெவர்க்குமாகப் புலைபடு குணஞ் சற்றேனு
நேமிக்கை விடுத்துநல்லோர் நிலைபெற்ற பாண்டி நாடு (17)
பண்ணிய பாவம்வந்து பலிக்குமென் றஞ்சித் தெய்வப்
புண்ணிய நதிநீராடிப் புகலனுட் டானம் போற்றிக்
கண்ணெனு மஞ்செழுத்தைக் கருதிநல் லிலிங்கத் தாபித்
தெண்ணியர்ச் சனைபுரிந்தே யிருப்பரெக் குலத்தினோரும் (18)
வேதிய ரரசர்வைசிய ரோடுவே ளாளர் நான்குஞ்
சாதிபல் வருணத்தாருந் தாழ்ந்தபுன் குலத்தோர் தாமு
மாதவர்த் தொழுதுதத்த மனத்தினிற் களங்க மற்றுப்
பூதியஞ் செழுத்திலிங்க பூசையி னன்பு பூண்டோர்.(19)
நவநிதி தழைத்துப்பொற்பூ நங்கைவீற் றிருந்து மேலோர்
தவநெறி விளங்கிமிக்க தருமநீ டருந்தங் காமம்
பவமறு முத்திநான்கும் பயில்வன திறம்ப வின்றிச்
சிவனுல கத்தின்பண்பு சிறந்தது பாண்டிநாடு (20)
தாரம்பு சத்தோர்வேள்விச் சாலையின் புகையுந் திங்கள்
ஏர்தந்த சடையார்பூசைக் கேற்றிடு தூபந் தானும்
நேர்தந்த ககனமெங்கு நிரம்பலின் வசந்த நாளைச்
சீர்தந்த மழைநாளென்று சிறைவிரித் தாடு மஞ்ஞை (21)
மண்முதற் கரணபேத வழிவரு சீவ போதந்
தண்மலி யருட்பாலாக்கிச் சத்துவ குணம்பெற் றோங்கிப்
பண்மலி தேவாரங்கள் பாடிநா கேசர் பாத
வுண்மைசா லன்புபூண்ட வுத்தமர் பாண்டி நாட்டோர். (22)
இருசெவிப் பணியாய்ப்பூண்ப தெழின்மரு தூர்ப் புராணந்
தருகரப் பணியாய்ப்பூணத் தவத்துளோர் தங்கட் கீகை
வருபதப் பணிநாகேசர் மருவுசன் னிதியைச் சூழ்தல்
குருவருட் பணியேயன்றிக் குறித்திடார் பாண்டி நாட்டோர்.(23)
சொன்னதா னம்பூதானஞ் சுரந்துபால் பொழிகோ தானங்
கன்னிகா தானமாடை கலன்மணி யிபமாத் தான
மென்னதா னங்கள்செய்து மிணையுண்டோ போது மென்னு
மன்னதா னமதேமிக்கென் றளிக்கின்றோர் பாண்டி நாட்டோர்,(24)
நறைகிளர் நிம்பக்கண்ணி நாயகர் புரக்கு நாட்டி
னிறைவளஞ் சூதன்செப்ப நேசமுற் றின்ப மெய்தி
மறைநெறி திறம்பிடாத மாதவ ரன்பு கூர்ந்து
முறைவளர்ப் பருதிகண்ட முளரியி னகம லர்ந்தார்.
திருச்சிற்றம்பலம்.
பாண்டிநாட்டுச் சருக்கம் முற்றும்.
தென் திருமருதூர்ப் புராணம்.
6. மருத நகரச் சருக்கம்.
ஊனந்தந்த மும்மலச் சுழியுள் ளுறச்சுழிக்கும்
ஈனந்தந்த வேழ்பவக் கடல்விடக் கரையேற்றி
ஞானந்தந் தெனையருள் வடிவாக்கி னானலமார்
வானந்தந் தருநாக நாயகரை யஞ்சலிப்பாம் (1)
பாதியம்பரம் புலியதட் பாதியம் பரமு
மாதியம்பரம் பொற்கலை கவின்பெற வணிந்தா
ரோதியம்பர நாதமாய்த் தாண்டவ முஞற்றுஞ்
சோதியம் பரமெனு மருதூர்வளஞ் சொல்வாம். (2)
பாவலர்க்கு நாத்திரு மருதூர் வளம்பாடத்
தேவருண்டதெள்ள முதெனத் தித்திக்குந் தடமுங்
காவுஞ்சன்னதிக் காட்சியுங் கண்டகண் களிக்கும்
யாவர்க்குஞ் செவிக்கிப் புராணப்பொரு ளினிக்கும் (3)
கடிகொள் சன்னதி விமானமோ கமழ்சிவ லோகத்
தடியரேறுதற் கேணியீ தென்றுல கறையுங்
கொடிபுனைந்திடு கம்பமா வலிதரக் கொண்டு
படியளந்தவ னெடியமால் பதத்தினைப் பொருவும் (4)
சண்டனைத்தெரு நாகலிங் கேசர்சன் னதியைக்
கண்டகண்களே கடவுளர் கண்ணெனக் காட்டும்
அண்டவேழுல கிற்குமோர் மேருவா தரம்போற்
கொண்ட வேழ்நிலை வகுத்தெழில் பூத்தகோ புரங்கள் (5)
விடத்துப் பத்தர மாசுணந் தொழுபொது விமல
னடத்துப் பத்திசை நாதவொண் சிலம்பணி நற்றா
ளிடத்துப் பத்திசால் வயிரமுற் றவரிதை யம்போற்
றிடத்துப் பத்திசார் வயிரத்தூண் சிறந்தமண் டபங்கள் (6)
புலிதொடர்ந் தெனத்தொடர்ந்து மும்மலப் பகை போக்கி
யொலிசெய் நாதமுங் கடந்தபூ ரணவொலி காட்டி
வலிதியானென தெனுமிரு செருக்கையும் வாங்கிப்
பெலிகொளுந் தெய்வமர சிருந்தது பெலிபீடம் (7)
ஆயிரத்தெட்டு முடிகெழு மேருவி னமைந்த
தூயநாகலிங் கேசர்தஞ் சன்னதி சூழுஞ்
சேயசக்கர வாகவெற் பதுபொரூஉந் திமிரங்
காயுஞ்சோ திசா லேழுயர் மதிட்பிர காரம் (8)
பவமொழித்தரு ணாகதீர்த் தந்தினம் படிந்து
கவலையற்றுவெண் ணீறணிந் தெழுத்ததைந்துங் கருதித்
தவமியற்றியா கம்பகர் முறைமை தப்பாமற்
சிவவருச்சனை நம்பிநன் னம்பிமார் செய்வார் (9)
வேதவோதையு மாகம முழக்கமும் விடைமே
லாசார்மரு தூர்ப்புரா ணம்பக ரார்ப்பு
மோதுஞ்சைவமா தவர்கடே வாரத்தி னொலியுஞ்
சீதவாரியுங் கொண்டலும் பயமுறச் செய்யும் (10)
தெய்வம்பேணி நந்தாவனஞ் செய்துபூ வில்வங்
கொய்வர்மாலை கட்டுவர் சந்தம்வி பூதியுங் கொடுப்பர்
உய்வதாகிய சரியைநற் கிரியைமா யோகஞ்
சைவஞானமுஞ் சாப்பதிர் தவசியர் தாமே (11)
கழையின் கண்டுபாற் கனியெனக் கனிந்த சங்கீத
மழையும் விஞ்சையர் பாடுவர் மீட்டுவார் வீணை
யழகுவல்லிநுண் ணிடையரம் பையரிடந் தழுவிப்
பழகும் வல்லிய ராடுவார் பரதகே ளிக்கை (12)
நாகநாயகர் சன்னதி நகரத்து நாப்பண்
மாகமேற்கயி லாயமா புரத்தெழின் மானு
மாகையான்மரு தூர்மிகு மழகுகாண் டற்கோ
பாகசாதனன் கண்களா யிரம்பெற்ற பண்பு (13)
வேறு
அகரவேதியர்த மகிமையைச் சொல்கே னந்தணீர் கேண்மின்க ளகரம்
பகருமக்கரங் கட்குயி ரென நின்ற பண்பென நாகலிங் கேசர்
சிகரமேன்மவு லித்திரண் மணிக்கெல்லாஞ் சிறப்புநா யகமணி யென்ன
நிகழ்தரும்வருண மனத்திற்கு மன்னோர் நெறிதருந் தேசிக ரானோர்(14)
வேதமாகமஞ் சொற் சாத்திரங் கலை நூல் விஞ்சைவல் லவர்கள்பால் வணங்கி
யோதலோ துவித்தல் வேட்டல்வேட் பித்தலுறு பொருட்டான சோடசமும்
ஈதலொத்திடுதல் மூவிருதொழிலு மியற்கையா மெச்சமோ ரைந்துஞ்
சாதனமுத்திக் கீதெனமுடிப்பார் சந்திவந் தனைத்திறந் தவிரார் (15)
வெளிப்பட வுதிக்குங் கொலைமுத லைந்தும் வெம்புகா மாதியோ ராறும்
ஒளித்துளே யெழும்புங் கொடியபா தகங்க ளொருபதி னொன்றதா மனைத்துந்
தளிப்புல னடக்கிச்சச்சி தானந்த சாட்சிநா கேசரென் றுணர்ந்து
களிப்புறப்பகர் வேதாந்த சித்தாந்த சமரசங் கண்டவ ரவரே (16)
பொற்புறுகணவன் புசித்தபின் புசித்துப் பூவணைத் துயின்றபின் துயின்றே
யிற்புணர் துயில்விட் டெழுமுன மெழுந்து ளின்பங்கண் டின்பத்தி னெய்தி
யற்பமதெனுந்துன் புற்றவர்தமைத்தே வெனத்தொழு தடங்கிடா ரருமைக்
கற்பிலக்கணத்தை விளக்குவார் திருவிற் கவின்கிளர் பார்ப்பன மடவார் (17)
பதுமினிப்பெண்கள் புருடர்பாஞ் சாலர்பண் பொடுதழுவு மாளிகைவான்
மதிதொட நீண்ட மேனிலைமாட மணியினும் பொன்னினும் விளங்குந்
துதிபெறுதுறக்கம் பகல்விளக் கென்னத் தோற்றதிம் மருதமா நகர்க்குக்
கதிர்கெழும்பரிதி கண்டுகண் கூசுங்க வின்கெழும் விப்பிரர் வீதி (18)
விரும்புநற் கரும விதிவழா நல்லோர் மிகுமிரண் டாம்வரு ணத்தோர்
அரும்பெற லரசர் நடக்கையுஞ் சொல்கே னருண்மறை கற்பதே யன்றித்
திரும்பவே தியர்க்குச் சொலப்படார் செங்கோல் செய்முறை திறம்பிடார் தானம்
வரும்பெரி யவர்க்குக் கொடுப்பதே யன்றி வாங்குத லவர்கட னன்றே (19)
குடிபெறப் பைங்கூ ழூதிப மைந்து கூறுதந் தொன்றதே கொள்வர்
படிமிசை வருண முறைதிறம் பினரேற் பயமுறத் தண்டமே புரிவர்
மிடிபடுந் தீமை விடுத்துநற் றருமம் விழைவுற மேதினி புரப்பார்
கடிவன கடிந்து காப்பன காக்குங் காவலர் வீதியுஞ் சொல்வாம் (20)
நீலமால் வெற்புத் தாளொடு பிறந்து நெடிதுசஞ் சரிப்ப போல் வேழஞ்
சாலவே யந்தப் பொருப்பின்வா ரருவித் தாரையி னுதங்கடத் தாரை
கோல நீண் மருதூர் வீதியிற் செறுக்கொண் டதின்மண்டு தேரொடு வாசி
கால்கெழு மனிகந் துகைத்திட வுடனே காய்ந்தெழு தூளியைக் காட்டும் (21)
கடலிடைத் தரங்க மெழும்புவ போலக் கடினவாம் பரிமிசை யரசர்
நடை நடம் பாச்சல் பாடகவீதி நவின்றதூ வாளமேல் வட்டந்
துடர்வரு மைந்து கதிமுறை நடாத்திச் சூழ்வரத் தேவுயர் கோமான்
வடபொருப் பெனவே வருவன்றென் மருதூர் மணிகிளர் தெருத்தொறும் பவனி (22)
பல்லிய முழக்கம் பரியணு மரவம் பாரவா ரணப்பொரும் பொம்மல்
வல்லியர் நுசுப்பு முலைச்சுமை சுமந்து வளைதல்கண் டடிச்சிலம் பலம்பன்
மெல்லியல் வீணைப் பாடகர் களிப்பு விருதுகஞ் சுகர்பயி லோசை
சொல்லிய வொலியிற் புணரிவா யடங்குந் துழனிசால் கொண்டலுந் துளங்கும் (23)
வேதியர் களிப்பத் தசமஹா தானம் விருப்புறக் கொடுத்துவந் தடைந்த
ஆதுலர்க் கம்மை யளகையர்க் கரசு மஞ்சலிக் குந்திரு வமைத்து
மாதவர் தவத்திற் கியைந்தன வழங்கி வந்தனை புரிந்துதென் மருதூர்
நாதர்நா கேசர் பதந்தொழு தேவர் நாயகன் வசிக்கும்பொன் வீதி (24)
கொக்கென விளர்த்துக் கொடியெனக் கருகுங் குணமுறா திலக்கணம் பழுத்துப்
புக்குளங் களிப்பக் கேட்பவர் செவிக்கும் பொருட்பொலி வமுதென ருசித்துத்
தக்கசொற் செல்வ முதுதமி ழறிந்து தருவெனத் தருவரி சையினான்
மிக்கபா வலர்கள் துதிக்குநற் றனதன் விளங்கிய வீதிநன் மருதூர் (25)
விண்டலத் தமர ரருச்சுன புரத்தைவெள் ளியங்கிரிக் கிணையென்று
மண்டலத் திறங்கி வேதியர் சைவ மாதவர் வடிவுகொண் டேகிக்
கண்டல மும்மைச் சுடருடைக் கடவுள் கமலமென் பதந்தொழு மவ்வூர்க்
கொண்டலிற் கனகக் கொடையினர் வணிகக் குழுவுறை வீதியும் பகர்வாம் (26)
தள்ளுறாத் தருமியே லேலசிங்கந் தமனியப் பாளமுன் கடலின்
உள்ளுறப்போட மீனதைவிழுங்கி யொருங் கவன் பால்வந்த துணர்ந்து
கொள்ளுமச் சரக்கிற் குள்ளவூ தியத்தைக் கூட்டிவிற் றிடுவதே யன்றி
யெள்ளலில் வணிகர் கெடுவியா பாரமேழைய ரிடத்திலும் புரியார் (27)
கயல்பொருங் கண்ணி யழகியநங்கை காதல்கூர் நாகலிங் கர்க்குப்
புயன்மழை யன்ன மணியபிடேகம் பொன்னபி டேகமே பொழிந்து
செயலரும் பூசைக் குபயகட் டளையுந் திருத்திநற் றிருப்பணி நடாத்தி -
நயமிகுமின்பந் துயத் தருட்கருணை நண்ணுதல் வணிகர்தந் தொழிலே (28)
வேறு
சாத்திர விதிவழாமற் றழைக்குமா யிரமென் றோங்கு
கோத்தி ரச்சியர்வீசுங் கொடைசிவ ஞானம் பெற்றோர்
பாத்திர மெனக்கொ டுத்துப் பரிப்பர்தென் மருதூ ரீசர்
நேத்திரங் கருணைபொங்க நேசம்பெற் றினிது வாழ்வார் (29)
மாவண மானக்காந்து மணிப்பணி கற்பகப்பூங்
காவணங் காட்டும் பட்டுநீள் கட்டுவற்கந்
தேவணங் குள்ளோர்வந்து தெரிசிக்க நயனங்கூசு
மாவணங் கண்டுதேவ ரணி நகர் தோற்றதன்றே (30)
பாணிக்கண் காசொன்றின்றிப் பழந்துணி சுற்றிச்சோர்ந்து
நாணிக்கண் பார்மேல்வைத்து நயஞ்சொல்லி யிரப்பார்க்கன்பா
லாணிப்பொன் வயிரம்பச்சை யணிமுத்தம் பதுமராகம்
மாணிக்கம் பிச்சையள்ளி வழங்குவார் வணிகர்மாதர் (31)
செங்கதிர்க் குலம்விளக்குஞ் சேதுவுக் கரசன்மெச்சு
மங்கல வமைச்சுத்தானை வணங்குநற் பிரதானிக்க
மெங்கணுந் துதிக்குமட்ட வணைகணக் கெழுதுகிற்பார்
கங்கைமான் மரபில்வந்த காராளர் தெருவுஞ்சொல்வாம் (32)
மாடமா ளிகைசதுக்க மச்சுவீ டுப்பரீகை
கூடங்கா வணமாசாரங் கொலுவிருப் பன்னசாலை
நாடக வரங்குவாயி னண்ணுபொன் முகப்புச்செய்கை
யாடகத் தொன்பானென்னு மரதனம் பதித்ததம்மா (33)
ஆலமர் கடவுள்வாழு மணிமரு தூரிற்பெண்கண்
மாலெழிற் கொங்கைக்கொவ்வா மருண்டனம் வேறுமென்று
காலமு மிடனுநோக்கிக் கதிர்மணித் தவிசுகோடி
மேல்வர மனைகடோறு மெற்பட விருந்தமாதோ (34)
தெள்ளெழின் மருதூர்க்கங்கைத் திணையுளோ ரகங்கடோறுந்
துள்ளுகால் விசிறமேழித் துவசநின் றாடுந்தோற்றங்
கொள்ளுவே மல்லேமீதற் குணத்தெனக் கொள்வீரென்று
வள்ளியோர் தம்மைக்கோண வலித்துநா வளைப்பதேய்க்கும் (35)
மனைமனை தொறுங்காராளர் மருதவ னேசர்சீர்த்தி
புனைமரு தூர்ப்புராணப் பொருட்பிர சங்கங்கேட்பார்
வினைதவிர் ஞானியர்க்கு வேண்டுவ ததிபாலன்ன
மனைமகார்க் கூட்டுந்தன்மை யருத்திப் பின் சேடங்கொள்வார் (36)
பண்ணிய பயிரிற்கண்டு பார்க்கலா முழவர் செய்த
புண்ணய மென்றேயவ்வை புகன்றசொற் பழுதுறாமே
மண்ணில்வித் தொன் றனந்த வருத்தனை விளைவுண்டாக்கு
மெண்ணிலிப் புண்ணியம்பூ வீன்றவர் தமக்கேயெய்தும் (37)
பிள்ளைநா கணவாய்க்குஞ்சு பேசுவ தென் றும்பச்சைக்
கிள்ளையின் மொழியீதென்றுங் கேட்பவர் செவிக்கின்பேற
வள்ளவார் குழைநின்றாட வரநதி குலத்துமாதர்
விள்ளுவாய் மழலையென்றும் வேற்றுமை தோன்றாதன்றே (38)
மங்கைநல் லருந்ததிப்பெண் மைக்குழர் சுனீ திமேனை
செங்கையா ளன்னைகாயத் திரியன சூயைநங்கை
பங்கய வதனலோபா முத்திரை பாவைமாரிற்
கங்கைமான் மரபிற்பெண்கள் கற்புக்கண் ட திசயிப்பார் (39)
பொன்னணி மருதூர்வாழிப் பூமகார் மழவுக்காலந்
தென்னணி தமிழையாய்ந்து திவாப்பொழு தினிதுநீங்கும்
மன்னிரு கற்புத்தத்த மனைவியர் மணம்பாராட்டி
யன்னவர் தங்கட்கின்ப மருத்தலாற் கங்குற்போமால் (40)
வேறு
நாகநீர்ப்பொய்கை படிந்து நீறணிந்து நல்லெழுத்தைந்து முச்சரித்துத்
தோகையஞ்சாய லழகியநங்கை துணைமலர்ப் பதந்தொழுதேத்தி
வாகைமூவிலைவேற் கடவுளைப்பணிந்து மறைமுறை மனையறம்வளர்க்கை
பாகுபோன்மொழியர் கங்கைமான்மரபிற் பத்தினிப்பெண்கள் பண்பாமால் (41)
மருவுபொன்மடைந்த மாலுடன்வாழும் வைகுண்ட மாளிகையென்னத்
தருமநீள்செல்வம் பிள்ளைவெண் மதிபோற் றழைந்திட நன்மகப்பெறுவார்
ஒருமைசார்மந்தா கினிகுலமடவா ருயிர்த்துணைத் தெய்வமென் றெண்ணிப்
பெருமைகூர்த்தத்தங் கணவரைத் தொழுவார் பெய்யெனப் பெய்திடுமழையே (42)
புங்கவர்மகளிர் திருத்தகுமருதூர் புண்ணிய நகரென வெண்ணிப்
பங்கயத்தயனை வேண்டி நற்றருமம் பண்ணலா லன்னவன்படைத்த
மங்கைமாரன்றோ மிக்கவேளாளர் மரபினில்வந்தவ தரித்தோர்
அங்கவர்தெய்வக் கற்புடைமாத ராகையா லந்நகரதிகம் (43)
வேறு
நன்மரு தூரிற்சோதி நாகநா யகர்க்குக் கோயில்
பொன்மணிக் கதிரெறிப்பப் புனைந்தவன் புயங்கர் கோமான்
பின்மனுப் பதினான்கென்பார் பெருந்திறற் சோழர் கொங்கர்
தென்மது ரைக்குவேந்தர் திருப்பணி செய்தார் முன்னம் (44)
அன்னவற் கிணைசொற்சேது வரசருந் திருநா கேசர்
பொன்னடி பணிந்துசெய்த திருப்பணி புகழற் பாற்றோ
மன்னவர் மகிழ்ச்சிகூர மணியஞ்சொற் கணக்குத் தானந்
துன்னுகட் டளை நடாத்திச் சுகிப்பர்கா ராளர் மாதோ (45)
பரமுனி தடுத்தாட்கொண்ட பண்டார மெனுங்கா ராளன்
வரநதி முடித்தவேணி மருதீசர்க் கன்பி னாற்சுந்
தரவட மேருவென்னச் சமைத்தகோ புரவி மானந்
திரமுறுங் கோயில்கண்டான் றேவர்கண் டதிச யித்தார் (46)
பகர்ந்த செவ்வந்திலிங்க பண்டார மெனுங்கா ராளன்
அகந்தவிர் முனிநாகேசர்க் கன்புளோன் பின்னோர் காலந்
திகழ்ந்தசன் னதிமுகப்புச் செய்ததற் கன்றோ சேடன்
மகிழ்ந்திடுஞ் சிரக்கம்பத்தான் மண்ணுல கசைந்த தன்றே (47)
திருந்துசெவ் வந்திலிங்கச் செயமுனி நாகதீர்த்தம்
பொருந்திமண் வெட்டிக்கண்ட புதுமையென் னென்று சொல்கே
னிருந்தமண் ணொருசாண்மட்டுண் டினியொரு கொட்டு வெட்டத்
தருந்திறற் சேடன்சென்னி தைக்குமென் றதனை விட்டான் (48)
கங்கையான் மரபில்வந்து கடவுணா கேச ரன்பு
தங்குநற் பத்திபெற்றுத் தவம்பெற்று ஞானம் பெற்றுச்
செங்கன கத்தினாலே திருப்பணி நடாத்தி வாழ்ந்தோர்
அங்கவர் மகிமைதன்னை யாரவை யளந்து சொல்வார் (49)
கைக்கொடைக் கிணையோ கற்பக மரமாங் கவடுளதிலை யென்பதுண்டு
தக்கவெண் சங்கஞ் சுழிமுகங் கல்லிற் சார்ந்தசிந் தாமணிபதுமம்
புக்கனபங்கங் கபிலையேர் மாடு புயலியும் பயமடைந்ததுவா
மிக்கவொண் மருதூ ரிருக்கும்வே ளாளர் விஞ்சையர்க் குதவுதாயன்றோ (50)
வேதியர் விளங்கு மயன துமரபும் வேந்தர்சூ ரியன்மதிமரபும்
ஆதிசால் வணிகர் தனபதிமரபு மருங்கங்கை மரபுழவோரும்
ஓதிய மரபு விதிமுறைநிறுவி யொளிர்கம லஞ்செயவாகை
போதிருந்தொன்றி குவளைப்பூந் தொடையல் பொலிவுறச் சூட்டினன்மனுவே (51)
அந்தணர்சுருதி மொழிப்படி தவத்திற் கமைந்தன தருமமே புரிவார்
முந்துபார்வேந்தர் மனுமுறை புரப்பார் மும்மைப்பான் முழுதுணர் வணிகர்
தந்தனங்கொடுத்துச் சரக்கினைக்கொண்டு தருவியா பாரமே செய்வர்
இந்தமானிலப்பெண் மைந்தர்கள்பருவத் திசைந்தனர் பயிரிடுந் தொழிலோர் (52)
அவனிமீதுள்ள தொழிற்கெலாத் தொண்ணூற் றாறுசா தியின்முறை வகுத்துத்
தவுமிகுந்தலங்க ளாயிரத்தெட்டுந் தழைவுறக் குடியிருத் தியநாட்
பவம றமருதூர்ப் புண்ணியதலத்தைப் பார்த்தனன் பன்னிரண் டாண்டு
சிவநிசியிலிங்க வருச்சனைசெய்து திருவடி பெற்றனன் மனுவே (53)
இத்தகைமருத வனநகர் வளமை யிசைத்தன னயிமிச வனத்தின்
முத்தர்களாகு முனிவரர்கேட்ப மொழிந்தனன் சூதமா முனிவன்
அத்தகையன்னோர் செவிக்கினிதான வனந்தவா னந்தமே பெருக
வுத்தமமிந்தச் சிரவணமென்றே யுடம்பெலாம் புளகித முற்றார், (54)
மருதநகரச் சருக்கம் முற்றும்.
7. தலவிசேடச் சருக்கம்.
கருதுபூ தப்பழிப்பு முதன் முப்பத் தாறென்னுங் கருவிக்கூட்டந்
தருமாயை கருமமிரண் டும்மலமுந் தீர்த்தென்னைத் தன்னைக்காட்டி
யருள்வடிவு தந்தகண்ட பூரணவா னந்ததவெள்ளத் தயிக்கஞ்செய்த
மருதவனத் தெம்பிரான்சு யம்பிரபை ரூபத்தை வணங்குகிற்பாம் (1)
தொன்மறைதேர் சூதமுனி நயிமிசா ரணியமுனித் தொகுதிகேட்ப
நன்மருதூர் நகர்வளமை சாற்றுதலு மகமகிழ்ச்சி நண்ணப்பெற்றார்
முன்மகிமேற் சிவதலங்க ளீரைஞ் ஞூற் றெட்டினுள்ளு முதன்மையாகு
மன்மகிமைத் தலவிசே டம்பகரவேண்டுமென வசனிக்கின்றான். (2)
ஞாலதா மரைமணக்குங் கங்கைதிகழ் காசியெனு நகரந்தன்னிற்
சீலதா மதரேனுஞ் சென்றுடலம் விடுமளவிற் சிவன்வந்தெய்தி
மூலதா ரகப்பிரம வுபதேசம் வலச்செவியின் மொழிந்துசால
மேலதா மானந்த முத்தியளித் திடுவரென்று வேதஞ்செப்பும், (3)
பாரூருந் தேர்வளவன் மகவினொடு மந்திரியும் பசுவின்கன்று
மேரூரு மூவுயிரு முடனிறந்து சிவன்வரக்கண் டெழுந்தமூதூர்
சீரூரும்பிருதிவிதான் சிவலிங்கம் பூசைபண்ணத் திருமான் பெற்றா
ளாரூரிற் பிறந்தவரே பிறந்திறவா முத்திபெற்றா ரவர்கடாமே. (4)
தெண்ணாவ லோர்துதிக்குந் திருநீறிட் டான்மதிள்சூழ் திருவானைக்கா
நண்ணாவ லோரவர்க்கு நாதாந்தச் சுகப்பிரபை நாட்டம்வைத்து
மண்ணாவல் பெண்ணாவல் பொன்னாவ லொழித்தருளை வழங்கவேண்டி
வெண்ணாவ னிழலுறையு மப்புலிங்கஞ் சேவித்தார் மேலோர்தாமே (5)
இருணிரம்பு மலச்செருக்கா லிவன்பெரிய னியான்பெரிய னென்றுமேனாண்
மருணிரம்பு பிரமன்மால் சிவன்வாக்காற் சொல்கவென வந்துகூறத்
தெருணிலவு நந்திருத்தாண் முடிகண்டோர் பெரியரெனத் தேடிக்காணா
வருணகிரி வன்னிலிங்க நினைக்கமுத்தி தருமென்றே யறைந்தவேதம் (6)
வாளத்திற் பொருநயனக் கன்னிமார் சிவகோசன் வருங்கண்ணப்பன்
நீளத்தி பணிசிலந்தி நக்கீரன் றெரிசிக்க நின்றோர் வாழும்
நாளத்திற் கண்டகஞ்சேர் பொன்முகரி நதிகொழிக்கு நலமார்ஓங்கல்
காளத்தி வாயுலிங்கங் கண்டோரே சிவயோகங் கண்டோர்தாமே (7)
மதஞ்சலிக்கும் புகர்வேழ முரித்தோன்முப் புரமெரித்தோன் வருத்தங்கொண்டு
நிதஞ்சலிக்கு மெனைப்புரக்கும் பெருமானம் புலிப்பாத நிறைமானுக்கும்
பதஞ்சலிக்கும் பதஞ்சலிக்கு நடமியற்றுந் தில்லையெனும் பழையவூரான்
நதஞ்சலிக்குங் கரத்தொடுநின் றம்பரங்கண் டவர்கண்டார் நவைதீர்முத்தி (8)
விழித்துணையாம் விரிஞ்சபுரத் தொருவணிகன் சிவன் றிருத்தேர் விழவுகாண்க
மொழித்துணையா மோலைவிடப் பன்னிதுணை யில்லையென முரட்டுமாமி
பழித்துணைய நீதந்தை தாயிலியோ வென்றுரைக்கப் பதைக்குங்காலை
வழித்துணையாய்த் தாய்தந்தை வடிகொண்டு வந்தவர்போல் வருதேவேங்கை (9)
வையமெலாம் வயலவையின் முதற்கரைச்செய் நதஞாங்கர் வளமைத்தேயஞ்
செய்யகத்திற் கரும்புதொண்டை மண்டலமச் சாறொப்புத் திருந்துமூர்கள்
துய்யசா றடுகட்டி காஞ்சியெல்லை சருக்கரைநேர் துலங்குமவ்வூர்
செய்யுங்கற் கண்டதுசன் னதியேகாம் பரலிங்கந் தித்திப்பாமே (10)
நீலங்காட் டியமேனி நீலிபழிக் கெழுபதுபேர் நெருப்பின்மூழ்கி
ஞாலங்காட் டியபுகழ்ச்சி வேளாளர் திருப்பழசை நகரஞாங்கர்
ஆலங்காட் டுறைவர்கங்கைக் கரையில்வைத்த வோடமென வமைந்தபிள்ளைக்
கோலங்காட் டியபிறைசேர் வேணியா ருயிர்க்குயிராங் கூத்தர்தாமே (11)
கருக்கடலின் கரைகாண வாதவூ ரருக்குக்கிரங்கிக் கறங்குதெண்ணீர்ப்
பெருக்கழுவக் கடல்சூழ்ந்த நெடும்பாரின் மலையரசன் பெண்பாலன்பான்
மருக்கமழ்பூந் தொடைசூட்டு மணக்கோலங் காட்டுபிரான் வாழுமூதூர்த்
திருக்கழுக்குன் றேகயிலைக் கிணையென்பார் தென்புவியிற் றெரிந்துளோரே (12)
உலவுநீர்க் காவிரிப்பூம் பட்டினத்துப் பிள்ளயிந்த வுலகைநீத்துக்
குலவுதிரு வொற்றியூர் சிவதலமென் றிருந்தநாட் குழுமிக்கூடும்
பலசிறா ருடன்குழியைப் பறித்திரிந்து தனைமறையப் பணித்துத்திங்க
ணிலவொழுகும் படிகலிங்க வடிவமைந்த தறிவாரிந் நிலமேல்யாரும் (13)
நலஞ்சிறந்த விருத்தகிரிப் பெரியநா யகியிடத்தார் நற்றாள் கண்டு
பலஞ்சுமந்த கைகுவித்துத் துதிவிளம்பு விபுதருமன் பதைமற்றோருங்
கலஞ்சுமந்து பொற்பமைந்த வயிராணி மணவனைச்செங் கதிரோன்பண்ண
நிலஞ்சுமந்த பாந்தணிகர் தவஞ்செய்தே மில்லையென நினைப்பர்தாமே (14)
பாவாரம் பகமன்ன திருநாவுக் கரசர்வந்து பணிந்தநாளின்
மேவாரம் புரந்தகையால் வெண்ணீறு படத்தடிந்தார் வீரட்டானம்
மாவாரம் புயத்தடஞ்சூழ் திருவதிகை தனில்வயிற்று வலியுமாற்றித்
தேவாரம் பாடுகெனப் பணித்தருளிப் பவப்பிணியுந் தீர்த்தார்தாமே (15)
தக்கமிடுஞ் சமண்மூகர் திருநாவுக் கரசர்தமைத் தண்டஞ்செய்து
கைக்கயிறு கொண்டிறுக்கக் கற்றூணஞ் சேர்ந்தழுவக் கடலிற்பாய்ச்சப்
புக்கசுரைப் பற்றலென மிதந்துவந்து கரைசேரப் புதுமைகாட்டும்
முக்கணுடை யவர்திருப்பா திரிப்புலியூர் தொழுதவரே முத்திசேர்ந்தார் (16)
பவமென்றுஞ் சாவென்றுந் துறக்கமென்றும் பாவமென்றுந்
தவமென்றும் யானென்று மென்னதென்றுங் காண்பனசங் கற்பஞான
மவமென்ற திவையனைத்துந் திருவருட்செஞ் சுடர்தோன்ற வகண்டானந்தச்
சிவமொன்றே மேலிடுமீ தனுபவித்தா ரிதையமொக்குந் திருவாமாத்தூர் (17)
கஞ்சநதி மூழ்குமட வியர்கூந்தல் கடனீருண் கார்களொக்கும்
பஞ்சநதித் தலங்கண்டோர் பஞ்சபா தகந்தொலைத்துற் பவங்கடீர்வார்
வஞ்சனதி சினமுருட்டு மறலிவிழப் பொருதிருத்தாள் வரதன் றன்னைச்
செஞ்சனதி புகுந்துதெரி சித்தோர்கள் பெருமையெம்மாற் செப்பற்பாற்றோ (18).
சுத்தமிகு மையாறு திருப்பழனந் திருச்சோற்றுத் துறைமெய்ஞ்ஞானம்
புத்திதரு திருவேதி குடியினொடு கண்டியூர் பூந்துருத்தி
சித்திதரு நெய்த்தானந் தினம்பிரதக் கணமாகச் சென்றுசென்று
சத்ததலம் வலம்வருவோர் சத்தாந்தச் சுயஞ்சோதி சந்திப்பாரே (19)
பன்னிருகைப் பிள்ளைபொன்னி வடகரையோ ரத்திருந்து பாதம்போற்ற
மன்னுவெள்ளை வேழமுகப் பிள்ளைபெற்ற தந்தைதாய் வாழுங்கோயின்
மின்னிகழு மாதனத்தும் பொன்னினுஞ்செய் நகர்நாப்பண் மேவச்சூழ்ந்த
பொன்னிவலம் வந்திறைஞ்சிப் போதலால் வலஞ்சுழிப்பேர் புனைந்தமூதூர்(20)
நம்பமுற்றுங் கருணைவைத்து நம்பழைய வினைதுலைக்கு நம்பர்செம்பொன்
அம்பலத்து நடம்புரிவ ரம்பரமா புலிச்சரும வம்பரம்பூண்
சம்புவெனும் பெயருடையார் சம்புபரி வடிவமைத்தார் சம்புகாத்தார்
கும்பமுனி பூசித்த கும்பலிங்க முளைத்தெழுந்த கும்பகோணம் (21)
அறந்தவா நெறிகாட்டிப் பட்டினத்துப் பிள்ளைக்கன் றருட்பாலூட்டித்
துறந்தமலப் பகைவிலக்கு மருதீச ரடிமுடியிற் சூட்டுமவ்வூர்
சிறந்ததிரு விடைமருதூர் வயதுநூ றுள்ளமட்டுந் தெரிசியாமே
மறந்துகா லங்கழிப்போர் வன் விலங்குச் சென்மமன்றி மனிதரன்றே (22)
பூவுலகின் மனிதவுருக் கொண்டுதுலா மாதத்திற் புலரிக்காலைக்
காவிரித்தெண் ணீர்படிந்து நீறிட்டே யைந்தெழுத்துங் கருதிமூர்த்தி
மூவர்களும் வரைதடிந்த குலிசன்முதன் முப்பத்து மூன்றுகோடித்
தேவர்களுங் கவுரிமா யூரத்திற் சிவனைவந்து தெரிசிப்பாரே (23)
பார்மிசைவெஞ் சமண்மூடர் சைவத்தைத் தூடணித்த படிறு நீக்கக்
கார்மயிலை யூர்வானைக் கவுனியர்க்கு மகனென்னக் காட்டித்தேவி
வார்முலைப்பா லுணப்பணித்துத் தேவாரம் பாடுகென வாக்குந்தந்து
பேர்மருவு சம்பந்த னென்றழைத்த சிவனருளிற் பிறங்குங்காழி (24)
கள்ளிருக்கும் மயக்கம் போல் யானெனதென் றிடும்போதக் கலக்கங்கொண்டு
தெள்ளிருக்கு முதன்மறையு மாகமமுந் தேராமற் றிகைப்பர்மாந்தர்
புள்ளிருக்கும் வேளூர்க்கு வந்தாரே வருண்மருந்து பொசிக்கத்தந்தே
யுள்ளிருக்கு மலப்பிணியைத் தீர்க்கநல்ல வைத்தியருண் டுண்மைதானே (25)
உண்டிக்கு நெற்கொள்ளப் பன்னிதிரு மங்கிலிய முதவத்தூபங்
கொண்டிக்கு மொழிமடந்தை பாகற்குப் பணிசெய்தார் குறையாச்செல்வ
மண்டிக்கு விண்டுதிக்கப் பெற்றவூர் மிருகண்டு மகவைமுன்னங்
கண்டிக்க வருநமனைத் தண்டிக்குஞ் சிவன்வாழுங் கடவூரம்மா (26)
பெண்காடு புக்குவழி தப்பியலை வார்குடும்பப் பேய்பிடித்து
மண்காடு மலைதீவாந் தரமுழன்று பசிப்பிணியால் வாடாநிற்பர்
எண்காடு தனைப்பிடித்துக் கொல்வன போல் வருநமனுக் கிரையாய்ப்போவர்
வெண்காடு தனையடைந்து முக்குளமூழ் கிச்சிவனை விரும்பாமூடர் (27)
பாயுமா னதையேந்து பாணியான் றிரிசிராப் பள்ளியான் சீ
ராயுமா றங்கமறை யாகமங்க ளியம்புதற்கு மப்பாலானோன்
றாயுமா னவனெவர்க்குந் தந்தையுமா னவனசரஞ் சரமாய் நின்றோன்
ஏயுமான் மாலினுக்கு மலபோத மறத்தோன்று மீசன்றானே (28)
ஆதவனந் தரஞ்செலுத்து மாழித்தேர்ப் புரவியிளைப் பாகுங்காலை
மாதவனத் தீர்ந்திடப் பச்சிலைவிசிறி வீசரம்பை வளரும்வாவிச்
சீதவனந் திகழ்பதுமத் தவிசிற்பொன் னணங்கிருந்து சிறப்புநல்கும்
வேதவனந் தெரிசித்தார் திருவருளா னந்தபத மேவினாரே (29)
வெங்காட்டம் படுதழலிற் பசித்தேபிள் ளைக்கறியும் வெள்ளைச்சோறுஞ்
செங்காட்டங் குடிநகரிற் சிறுத்தொண்ட ரகத்தருந்தித் திரும்பமைந்த
னங்காட்டங் கொடுவரவே யழைத்தார்தந் திருவடியை யஞ்சலித்துக்
கொங்காட்ட மலர்தூய்க்கும் பிடப்பெற்றார் கடவுளர்கும் பிடப்பெற்றாரே (30)
நெஞ்சடைநா ணிறைசோர்ந்த கலைச்சிக்குத் தலைவளைத்து நெருக்குபாசம்
அஞ்சடைய வென்றிகொண்ட கலையனுக்குத் தலையெடுத்தா ராரோவென்னின்
மஞ்சடைதண் சோலைமலர் மதுவொழுகு திருப்பனந்தாள் வரதரென்னுஞ்
செஞ்சடைவே தியரன்றோ பல்லுயிர்க்குந் தொல்லுயிராய்ச் செழிக்கின்றாரே (31)
அகல்விசும்பு கால்பசுந்தே னதிலிரதம் பூமணமத் துவிதமென்னச்
சகலவுயிர் கட்குமுயிர் தாமாகி நின்றுவினைச் சமஞ்சோதித்துப்
பகலொளிவந் திருடுரக்கும் பண்புபோ லருள்காட்டிப் பாசம்போக்கிப்
புகலெனவந் தடைந்தவர்க்குப் புகலிடமாங் கடவுளுறைப் புகலூரம்மா (32)
மைதவழ்ந்து பொழிமழையிற் கவிதைமழை பொழிகின்ற வன்றொண்டர்க்குப்
பைதவழும் பணிமணிப்பொற் பணிதரித்து வரிசையிட்டார் பசியதன்றோ
வெய்துசென்மந் தொறும்புரிந்த விருவினையீ சன்செயலென் றெண்ணித்தொண்டு
செய்துவந்தோர் தெரிசிப்பார் கடனாகைக் காரோணத் தெய்வமூதூர் (33)
கோவடுதண் டம்புரிந்து மனிதர்குற்றந் தீர்க்குஞ்செங் கோன்மையொப்போ
தீவடுவெங் கொலையாதி காமாதி யைந்தானுஞ் செய்தாரேனும்
ஆவடுதண் டுறையீசர் குருவடிவங் கொண்டேவந் தடிமைகொண்டு
நாவடுபான் முக்கனிதேன் ஒத்திருக்கு முத்தியின்ப நல்குவாரே (34)
ஆதியந்தங் கடந்தசுயப் பிரபையெனு மின்பசுத்திக் கப்பால்ஞானச்
சோதியந்த மாமகண்ட பூரணவா னந்தசத்தி தோய்ந்தார்தாமே
சாதியந்த ணன்வடிவு கொண்டுபண்டு சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள
வேதியர்முன் வழக்கேற்றி வெற்றிகொண்டா ரிருந்ததிரு வெண்ணைநல்லூர் (35)
பாடல்வளம் பெற்றசங்கப் பலகையின்கீழ் நின்றாரும் பாண்டிப்பெண்ணை
யேடலரு நிம்பத்தார் சூட்டிமணம் புரிந்தாரு மெல்லாந்தாமா
யாடல்புரிந் ததிலதிகம் அறுபத்து நால்விளையாட் டாடினாருங்
கூடல்வளர் சொக்கேசர் பத்திபண்ண முத்திதருங் கொடையினாரே (36)
இனவாச கஞ்சொல்வ தென்றறியேன் றிரிகரண மெனநூல்செப்பு
மனவாச கஞ்சடமோ மித்தையா னெனதென்னும் வஞ்சன்வாழ்வைக்
கனவாசென் றுணரென்னக் கனவில்வந்து மெஞ்ஞானக் கண்கொடுத்தார்
புனவாசற் பழம்பதியா ரெவ்வுயிர்க்கும் பதியாகிப் பொலிகின்றாரே (37)
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தரருட் சேவடியைக் கும்பிட்டேத்தப்
பெற்றாலம் மாமனிதப் பிறவிநல்ல தல்லவெனிற் பிறந்துமென்னாங்
கற்றாலங் கவர்புகழைக் கற்கைநன்று வேறுகலை கற்கைபாவ
முற்றாலத் தலவாச முறவேண்டுங் கிடையாதார்க் குறுதியுண்டோ (38)
உருவாப்புச் சிறிதெனினும் பெருந்தேரை நடத்துகிற்கு முண்மைபோல
மருவாப்பல் பவத்திற்கு மூலமா ணவமதனை மாற்றும்வண்ணம்
வெருவாப்பன் னகவிடத்தை நீக்கிவிடு முவணமென விளக்கங்காண்பார்
திருவாப்ப னூரிறைவ ரருள்வாய்ப்பப் பெற்றவரே சீவன்முத்தர் (39)
ஆடகமா மதின்சூழ்ந்த தென்கூடல் வழுதிவெப்பு மங்கக்கூனுங்
கேடகத்து ளேயிருக்குஞ் சமண்மூடர் முரணுமற்றுக் கிலமதாக
மாடகமாந் திரைவைகை நள்ளாற்றுத் தேவாரம் வரைந்துவிட்ட
வேடகஞ்சேர்ந் தேடகமாம் பெயர்பெற்ற தலமீசற் கின்பமூதூர் (40)
பந்துமுலை கவின்மணக்கும் பச்சைவடி வாளிருக்கும் பாகர்வேய்க்குள்
வந்துதித்த முத்தரெனுந் திருநாமந் திசைமணக்க வாழ்வார்கோயி
லுந்துதாம் பிரவருணி நீர்மணக்கு நதிஞாங்க ருத்தியானஞ்
சிந்துபூந் துறைமணக்கு நெல்வேலி தமிழ்மணக்குந் தெய்வமூதூர் (41)
ஐயிருதிக் கரசீன்றோ னன்னதொகைச் சென்னியனை யடுங்காற்சூழு
மையிருணேர் பிரமகத்தி வந்துற்றுங் கந்தமா தனமால்வெற்பிற்
பொய்யிலதோர் சிவலிங்கம் பூசைபுரிந் திறைஞ்சிமுத்திப் புனிதனாகிக்
கையிலிடுஞ் சிலைநுதியாற் சேதுவிற்புண் ணியதீர்த்தங் காட்டினானால் (42)
அன்னதடஞ் சேதுவெனப் பெயர்பெற்ற கருங்கடனீ ராடியாடிப்
பொன்னொளிர்பூண் முலைசுமந்த மலைவளர்பூங் கொடியைமுக்கட் புனிதன்றன்னை
மின்னெழிற்பன் னகமணிகள் வெயில்விரிக்குஞ் சினகரத்தை வியந்துகண்டோர்
பின்னவர்க்குப் பின்னவரு முன்னவர்க்கு முன்னவராம் பெருமையோரே (43)
சுரும்புமலர்ச் சம்புறலுங் கனியென்றே கிள்ளையினந் துடராமொய்க்கு
மரும்புறவ முகில்தடவு மாடானைத் திருநகர மகிலகோடி
தரும்புகழ்கொண் டோங்குதல மினிதுறையு மமிர்தவல்லித் தையல்பாகன்
பெரும்புலன்றாட் புணைதிடத்திற் பிடித்தவரே கரைகண்டார் பிறவிப்பௌவம் (44)
புரங்குன்றச் சிறுமுருவல் கொண்டேவெண் ணீறுகண்டான் புயங்கம்பூண்டான்
உரங்குன்றச் சூர்தடிந்த மகவுரைக்கு மழலைமொழி யுபதேசம்போ
லிரங்குன்றன் சீடனான் குருபரனீ யெனப்புகழ்ந்தா னிருக்குமவ்வூர்
பரங்குன்றத் தொழுதார்தம் பரங்குன்றா னந்தவெள்ளம் படிந்தார்தாமே (45)
மொழிகைக்கும் பொய்பேசார் முறைமைதிறம் பார்மித்தை முரட்டுமாயை
விழிகைக்குங் காட்சிக்கும் விரும்பிடா ரத்தலங்கண் மேவிக்காண்பர்
அழிகைக்கிங் குடன்பட்டுப் பஞ்சபா தகம்புரியா ரறமேசெய்வார்
சுழிகைக்குட் சுயம்பிரபைத் திருமேனி நாதர்பதந் தொழப்பெற்றாரே. (46)
மான்மிகுமா யைகருமங் கடிதாண வம்மெனுமும் மலங்கணீக்கித்
தானமரும் பசுபோதம் வில்லுமிழும் பரிதிகண்ட தமம்போற்போக
மேனிலவு திருவருட்செஞ் சுடர்தோன்ற வானந்தம் விளங்கப்பெற்றே
யானெனதற் றவரன்றோ திருப்புதுவை யீசனடி யிறைஞ்சினாரே. (47)
எந்தவன மிருக்கினுநே ரன்றேகற் பகவனத்திற் கியம்புங்காலை
யந்தவன மனைத்துமொரு தினைத்துணையு மிணையொவ்வா வழகுபூத்த
கந்தவனங் காளையெம்மான் சொந்தவன முந்தவனங் கடவும்புத்தே
ணந்தவனந் தீரவொரு நந்தவனஞ் செயினுமுத்தி நல்குமென்றான் (48)
நோயிலழுந் தார்மிடிபட் டிரவார்மும் மலப்பாச நுழையார் வீண்சொல்
வாயின்மொழி யார்மறந்தும் பஞ்சபா தகஞ்செய்யார் வஞ்சம்பண்ணார்
தீயில்விழுங் கீடமென நிரையமுறார் நல்லருட்பால் சிறந்துவாழ்வார்
கோயில்வலஞ் சூழவந்து கொடுங்குன்றத் தீசர்பதங் கும்பிட்டோரே (49)
ஆவணமுந் தோரணமுந் தேரோடு தெருவீதி யழகுமம்பொற்
காவணமுங் காண்கின்றோ ரளகையென்பர் மூதறிஞர் கயிலையென்பர்
பூவணமாம் பதியீசர் மூவரசர்க் கானந்த போகந்தந்து
மாவணமின் பொன்னனையார் பக்திபண்ணச் சித்திமுத்தி வழங்கினாரே (50)
பெண்படைத்த பாகத்தார் கருணைதிரு வுருவாகப் பிறங்குமாயைக்
கண்படைத்த வுயிர்களுக்குத் தனுகரண முதனான்குங் காட்டவேண்டி
விண்படைத்துக் கால்படைத்துக் கனல்படைத்துந் நீர்படைத்து வேலைசூழ்ந்த
மண்படைத்த நாட்படைத்த பதிதிருவுத் தரகோச மங்கைமூதூர் (51)
சங்கரநா ராயணவாழ் வாராசை பால்வண்ணர் தழைக்குஞ்சோலை
கொங்குகமழ் கருவைநல்லூர் மந்திரிநா யகரிருந்து குலவும்பாலை
சிங்கநக ரஞ்செழுவை யியமனீச் சுரம்மணவை செழிக்கும்விஞ்சை
மங்களமார் சிவதலங்க ளாயிரத்தெட் டினுமதிகம் மருதூரம்மா (52)
மருதவனம் வில்வவனங் கவுரிபுரங் கமலைவனம் வாணிவாசந்
திருவளருஞ் சாலிபுரந் தேவயிந்தி ராணிபுரஞ் செயமாதேவி
மருவுமக லிகைநகரம் பரமபதம் பிரமபுர மகவுல்லாசம்
பெருகிவளர் சந்திரமங் கலம்பருதி நல்லூராம் பேருண்டின்னும் (53)
சீர்விளங்குங் குமரபுரஞ் செழித்தகபி லாபுரஞ்சீர் மாணிபத்திரன்
பேர்விளங்கும் புரமாதி சேடபுரம் பிலத்துவழி பிறங்குஞ்சீர்த்தி
யேர்விளங்கும் வாசுகிமங் கலந்தக்க நகர்புயங்க ராசவாசம்
பார்விளங்கும் பதுமபுர மாப்பதும நகரமெனப் பகருமாதோ (54)
சங்கநகர் குளிகபுர மகத்தியீச் சுரந்தெய்வத் தானம்பின்னு
மெங்கணயி னார்கோயி லிசைந்தபெய ரிருபத்தெட் டென்றும்வேத
மங்கையழ கியநங்கை வலப்பாகர் நாகேசர் மகிழ்ச்சிகூர்ந்து
தங்கள் கரங் குவித்துநின்று துதித்தவர்க்கு நினைத்தவரந் தருவர்தாமே (55)
மருதூரிற் பிறக்கமுத்தி மருதூரி லிறக்கமுத்தி மன துவைத்து
மருதூரை நினைக்கமுத்தி மருதூரென் றோர்வசனம் வழங்கமுத்தி
மருதூரைக் கேட்கமுத்தி மருதூரைத் தெரிசிக்க மகத்தாமுத்தி
மருதூரே சச்சிதா னந்தகயி லாசமென்றே மறையுரைக்கும் (56)
மருவுசிவ தலங்களா யிரத்தெட்டின் மருதவன மகிமைபார்க்கி
லுருவுறுப்பிற் கண்களே பிரதானம் போலன்பர்க் குவந்துமுத்தி
தருவதிந்தத் தலமென்றே சிவசாட்சி சிவசாட்சி தப்பாதென்னத்
திருவடியென் முடிசூட்டும் வேதவியா தன்பகர்ந்த திடமீதுண்மை (57)
விதிமுதலாம் விண்ணவரிற் சிவன்வேதங் களிற்சாமம் வீசுதெண்ணீர்
நதிபலவிற் கங்கைதரு வனங்களிற்கற் பகச்சோலை நரலையேழிற்
றுதிபரவு பாலாழி யரதனத்தின் மாணிக்கந் துறக்கமொப்பாம்
பதிபலவி னாகேசர் வாழ்மருதூர் அதிகமெனப் பயின்றார் முன்னோர் (58)
வேறு
செயிரில் விசேடந் திருமரு தூரென்
றுயிர் நிகர் சூதன் உரைத்தது கேளா
நயிமிச வடவியி னன்முனி வோர்கள்
கயிலையிவ் வுடலொடு கண்டவ ரானார்
திருச்சிற்றம்பலம்
8. தீர்த்தவிசேடச் சருக்கம்.
பருதியுதையம் பலகோடி படருஞ்சுடர்விட் டெரிப்பதெனச்
சுருதிமுடிவிற் பொலிந்திடுதன் சோதிவடிவைத் தொண்டிசைந்து
கருதியிறைஞ்சு மவர்க்கெளிதிற் காட்சிகொடுத்துக் கதிநல்க
மருதவனத்துள் வீற்றிருக்கும் வரதன்றிருத்தாள் வணங்குகிற்பாம் (1)
வளம்பெற்றிருக்கு நயிமிசப்பேர் வனத்துளுறையு மிருடியர்க
ளுளம்புத்தமுத ருசிப்பொழுக வுமையாள்மணவன் றலம்பலவும்
விளம்பக்கேட்குந் தவம்பெற்றோ மென்னத் தீர்த்த விசேடத்தைக்
களம்பெற்றிலதோ சூதமுனி கல்லுங்கரையக் கழறுவான் (2)
ஈசன் றலங்க ளாயிரத்தெட் டேற்றமவைக்குண் மிக்கென்னத்
தேசிற்பொலிந்த மருதவனத் தெய்வத்தன்மை யனந்தமதில்
வீசுந்தரங்கப் பெருந்தீர்த்த விசேடம்பகரச் சேடனுக்கு
மாசிலிணைநா வாயிரம்வாய் வகுத்தான்பண்டை மறையோனே (3)
ஓங்குஞ்சிவசன் னதிக்கெதிரே யுயர்ந்ததீர்த்த விசேடத்தைத்
தேங்குமன்பாற் சிவஞானந் தேர்வார்கேட்பச் செவிகட்கு
மீங்குப்படிந்தா ரினிப்பிறவா ரின்பவருட்செஞ் சுடராகி
நீங்கலின்றி மருதீசர் நேயத்தழுந்தி நிலைபெறுவார் (4)
குடபால்வாயின் மருதீசர் கோயிற்கெதிரே குளிர்ஞான
தடமார்கின்ற ததன்மகிமை தண்டாமரையோன் சுருதிமொழி
யிடமாய்ப்புகழ்ந்துந் தொலைவிலதென் றெய்த்தானென்னி லியானதனைத்
திடமாய்ப்புகறற் கடங்குமதோ சிலவிண்டிங்ஙன் செப்புகென (5)
செப்பலரிதாஞ் சிவஞானத் தீர்த்தத்தரங்கப் புனன்மூழ்கி
யப்புச்சடையன் பதம்பூசித் தரந்தைதீர்ந்து வரம்பெற்றோர்
ஒப்பிலுமையாள் பொன்மடந்தை யுயர்பராதிநல் லருந்ததிப்பெண்
கொப்புக்குழைமின் னயிராணி கொற்றக்குமரி யகலிகைமான் (6)
சங்கபாணி சதுமுகத்தோன் றவளவிபனைச் சபித்தமுனி
திங்கள்பச்சைப் பரித்தேரோன் சேவற்றுவசன் கபிலமுனி
துங்கமாணி பத்திரன்பார் சுமக்குஞ்சேடன் றிசைப்பாந்தள்
அங்கங்குறுகு முனிமுதலோ ரருமைத்தவப்பே றடைந்தோரே (7)
இருபத்தைந்து பேரன்னா ரிந்தத்தீர்த்தம் படிந்தோர்பின்
வருபத்தியினாற் சோதிலிங்க வரதன்றிருத்தாள் பூசித்துத்
தருபத்துதையங் குறித்தபடி தவத்தாலதிகப் பேறுபெற்றுச்
சொருபச்சாட்சி தாமாகித் துலங்குமவர்க்குத் தொகையுண்டோ (8)
இன்னபேர்பெற் றிருந்தவத்தோ ரீசன்பூசை புரியுமந்நாட்
சொன்ன தீர்த்தப் பெயர்வகுத்துச் சொல்லக்கேளீர் முனிக்கணத்திற்
கன்னன்மொழிப்பெண் ணுமைதவத்திற் கவுரிதீர்த்த மெனுமுலகம்
பன்னுமிந்தப் பெருந்தீர்த்தம் படிந்தார்பெயரும் பகர்கிற்பாம் (9)
கமலைதீர்த்தஞ் சரச்சுவதி கற்புச்சாலித் தீர்த்தமெழில்
அமரர்பரவுஞ் சசிதீர்த்த மரியேறூர்ந்தாள் வீரவதி
விமலவிதய வசலிகைப்பேர் விளங்குதீர்த்த மால்கண்ட
வமுதவிரசை தாமரைமே லமரும்பிரமன் பெருந்தீர்த்தம் (10)
தேவேந்திரனைச் சபித்திடுகோ தமனார் தீர்த்தஞ் செங்கழுநீர்ப்
பூவேந்திதழைத் திறப்பநிலாப் பொழிசந்திரபுட் கரணிபச்சை
மாவேய்ந்துலவு தேர்நடத்தி வருசூரியபுட் கரணிதமிழ்ப்
பாவேந்தெனக்கும் பனைப்பணித்தோன் படிந்தபெருங்காங் கேயதடம் (11)
தனையோர்கபில தடமாணி பத்ரசரசு நாகதடங்
கனதையனந்த புட்கரணி கமழுந்திருவா சுகிதீர்த்தம்
மன துருசிக்குந் தக்கதடம் மணக்குங்காற்கோ டகதீர்த்தம்
புனிதமான பதுமகங்கை புகழ்மாப்பதுமப் பெயாதீர்த்தம் (12)
சங்கதீர்த்தங் குளிகதடந் தழைக்குங்கும்ப புட்கரணி
யிங்குப்பகர்ந்த விருபானைந் தென்னும்பேர்பெற் றெழின்மணக்குந்
திங்கட்குழவிப் பிறைவேணித் திருநாகேசர் சன்னதிமுன்
பொங்குந்தரங்கக் கடற்புவிமேற் புகன்றபெரும்புண் ணியதீர்த்தம் (13)
கிருபைதழைக்குங் கவுரிமுதற் கிளர்ந்தகும்ப னீறாக
வருமித்தவத்தே பெயர்பெற்று வளங்கொள்பிரம கற்பமொன்று
தருமவ்வளவு மொவ்வொருபேர் தழைக்குமிருபத் தைந்துகற்பம்
பெருகுங்கால மானதிந்தப் பேரேவிளங்கு மென்றென்றும் (14)
இந்தத்தடத்தின் றிருநாம மிருபத்தைந்து மூச்சரித்து
வந்திப்புனலிற் படிந்தவர்க்கு மாபாதகம்போ மிவையோதிச்
சிந்தித்திசைந்த வெத்தீர்த்தஞ் சென்றுமூழ்கு மவர்தமக்கு
நந்திப்பரிமே னாகேசர் நண்ணித்தருவார் பெருஞ்செல்வம் (15)
முந்துமனந்த கோடிபவ முழுதுமடைந்த கொடும்பாவம்
புந்திமறந்து செய்தனவும் புகும்பாதகமென் றஞ்சாமற்
சிந்தையிடும்பிற் செய்தனவுந் தீருமென்றார் மருதீசர்
வந்துநாகத் தடமதனின் மாகஸ்நானம் புரிந்தவர்க்கே (16)
நாகத்தடத்திற் படிந்தவர்க்கு நண்ணுங்கொடும்பா தகந்தீரும்
மாகத்தடங்கங் கையின்மூழ்கி வரும்பேரெய்தும் பிணிதீருஞ்
சோகத்தடரு நல்குரவு தோன்றாதென்றுஞ் செல்வமுண்டா
மாகத்தடர்மும் மலந்தீர்ந்திட் டருளைப்பெறுவார் சத்தியமே (17)
துள்ளித்திரைநீர்த் திவலைபடத் தொன்மாநிலத்தைத் தனிப்புரப்பர்
அள்ளித்தெளித்தோர் துறக்கவுல கரசுபெறுவா ரள்ளியந்நீர்
உள்ளிற்கொள்ள விலக்கணங்கற் றோதும்புலமைத் திறம்பெறுவார்
தெள்ளித்தெளிந்த நீர்குளிப்பச் சேர்வர்பிரம பதந்தானே (18)
திருந்துசிவபுண் ணியந்தழைக்குந் தேவிதீர்த்த மித்தடத்தைப்
பொருந்துமன்பாற் றெரிசிக்கப் புகழ்ச்சிகேட்பத் துதிகூற
மருந்து நிகரு மப்புனலை வாரிச்சென்னி மிசைதெளிப்பத்
தருந்தண்ணறவோர் துதிகொள்ளச் சண்டாளர்க்கும் பவந்தீரும் (19)
பருதிமதியி னிணைவாரம் பசும்பொன்வெள்ளித் துணைவாரம்
அருண்மூவிரண்டு பன்னொன்றங் கமர்பன் மூன்று பன்னான்கு
மருவுமீரு வாவென்னு மகத்தாந்திதிதிங் கட்பிறப்பிற்
சுருதிபகர்ந்த நாகதடந் தோய்ந்துநியமத் துறைமுடித்து (20)
வள்ளன்மருதூர் நாகலிங்கர் வளருங்கோயில் வலம்வந்து
கிள்ளைமொழிப்பெண் ணழகியமான் கேள்வர்தமக்குத் தீபமுறை
யுள்ளவாரா தனைக்கால மோர்மூவிரண்டுஞ் சேவைசெய்து
தெள்ளும்விரத முடிப்பவர்க டெய்வத்தன்மை செப்பவற்றோ (21)
கண்கொண்டுரக தீர்த்தத்தைக் கண்டோர்வசிப்பர் சாலோகந்
தண்கொண்டிடுமப் புனல்படிந்தோர் சார்ந்தேகளிப்பர் சாமீபம்
பண்கொள்கோயில் வலம்வந்து பணிந்தார்க்கெய்துஞ் சாரூபம்
பெண்கொள்பாகன் பணிவிடையைப் பெற்றாரற்றார் பிறப்பிறப்பே (22)
இங்குஞானத் தடம்படிந்தா ரிருபத்தைந்து பேர்களையுஞ்
செங்கைகூப்பி யுச்சரித்துச் செக்கைத்திங்கட் பிறப்புமுதற்
றங்குமிருபத் தைந்துநாட் டடத்தின்மூழ்கி நியமமுறை
யங்குப்புரிந்து நாகேச ரமர்சன்னதியை வலம்புரிந்து (23)
சிந்தையுவந்து தேவர்பணி தீபவாரா தனைகண்டு
முந்தும்வேத பாரகற்கு முயன் றுதானங் கொடுத்திறைஞ்சி
வந்தசைவப் பெருந்தவர்க்கு மகத்தாமன்ன மினிதளித்துத்
தந்தமுணவோர் பொழுதருந்தித் தவமிப்படியே செயவேண்டும் (24)
வாங்குமருங்கு வழகியமின் மகிழ்நற்சோதி யிலிங்கேசர்
ஓங்குமுள்ளங் குறித்தவர முவந்துதருவர் மறுமையினு
நீங்கலின்றிக் கடவுளர்கண் ணின்றுதுதிப்ப வரிணையமேற்
கோங்குமுலையார் நடங்கண்டு குலிசனாகப் பணித்திடுவார் (25)
வேறு
பஞ்சவிஞ்சதிப் பேர்பெறுந் தீர்த்தநீர் படிந்து
விஞ்சுசைவநூல் விதியனுட் டானமும் விரும்பி
யஞ்செழுத்தினை யாயிரத் தெட்டுருவஞ் செபித்துத்
துஞ்சலின்றிய தானங்கள் வழங்குவ சொல்வாம் (26)
மன்னுமுத்தமத் தானமத் தடங்கரை மருங்கிற்
பன்னும் வேதியர்க் களிக்குனர் தம்முகப் பதுமம்
முன்னிதந்தரு மிதயதா மரைமிசை மோகப்
பொன்னிருந்தருள் புரிவளென் றச்சுதன் புகன்றான் (27)
வேறு
அரம்பையொண் பலவுசூத மதிகமுந் திரிகைசாதி
தரும்பழ மடுபாலின்பந் தந்தபா யசமானெய்தேன்
வரும்பணி யாரந்தோசை வடைதயிர் புல்லகண்டங்
கரும்படு கண்டுசீனி கறிமுப்பா னிரண்டுங்கூட்டி (28)
சீதவொண் சாலிமூரல் செவ்விதி னமைத்துமிக்க
வேதியர்க் கருத்திஞானம் விளங்குமா தவர்க்குமிட்டுச்
சாதிவே றெவர்க்குநல்கத் தருமந்தத் தடத்தின்பாங்கர்
பாதக முழுதுந்தீரும் பணித்தடம் பணிந்தபேர்க்கே (29)
தரணியி னாகதீர்த்தம் படிந்தவர் தைப்பூசத்தி
லிரணிய தானமீந்தா ரிந்திர னிறைஞ்சவாழ்வர்
பரணியிற் சபாதுகந்தம் பரிமள தானம்பண்ணத்
திரணிதி யளகைச்செங்கோல் செலுத்திடு குபேரனாவார் (30)
பருதியை மதியைப்பாம்பு பற்றுமக் கிரணகால
மருதமா வனத்தினாக வாவியின் மூழ்கிநின்றே
யொருபண மேனுந்தான முதவினோ ரிலம்பாடெய்தார்
திருவிலர் காசொன்றீயச் செல்வம்வந் தோங்குமன்றே (31)
பூதானந் தந்திவாசி பொன்பொலி சிவிகைத்தானங்
கோதான பணிமணிப்பூண் குலவிய தீபத்தானம்
மாதானங் கிரகஞ்செந்நெல் வத்திரம் வித்துக்கன்னி
காதானந் துலாபாரஞ்சொற் கடுங்கால புருடதானம் (32)
இரும்பிணி தீர்ப்பதாமா லிங்கன தானங்காரிற்
கரும்பசுத் தானம்மிருத்யுக் கம்பள தானமியாரும்
விரும்புநல் லாலவட்டம் விசிறிபா துகைகொடைக்கு
வரும்பெருங் கவிகைநெய்பான் மாதிலந் தயிலதானம்
கேசவன் வடிவாஞ்சாலக் கிராமதா னத்தினோடு
நேசமா மிலிங்கதான நிரம்புதண் டுலதானஞ்சீர்
பேசரன் கோயின்முன்னர்ப் பெருந்தீர்த்த மூழ்கியிந்த
மாசறு தானஞ்செய்வார் கயிலையில் வசிப்பர்மாதோ
திருச்சிற்றம்பலம்
தீர்த்த விசேடச் சருக்கம் முற்றும்,
9. பஞ்சமகா தீர்த்தச் சருக்கம்
இருந்தசிவ ஞானதடம் பூருவப்பேர் பின்னிருபத் தைந்துநாமம்
பொருந்துதடஞ் சன்னதிமுன் விளங்குகின்ற ததன் பெருமை புகன்றேமின்னுந்
திருந்துமைந்து புண்ணியதீர்த் தங்களுள வெனச்சூதன் செப்பஞானந்
தருந்தகைமை யிருடியர்க ளவையுமுரை செய்கவெனச் சாற்றுகின்றான் (1)
வைகைநதி நீர்படிந்து மருதூர்வந் தெருதூரும் வள்ளற்போற்றி
யுய்கையெவர்க் குறுமவரே வாணாள்வீ ணாள்படுத்தா துண்மைசார்ந்தோர்
செய்கமலத் தடங்கேணி யேரிபங்கே ருகவோடை செழிக்குநாகப்
பொய்கைமுத லந்நதிநீர் பரந்துகங்கா தீரமெனப் பொலிவுதோன்றும் (2)
வேறு
கண்ணார் நுதலோன் றிருக்கோயிற் பிரகாரத்திற் கருதிரதிப்
பெண்ணாரிறந்த கணவனுயிர் வேண்டிப்பெறுமங் கலதீர்த்தம்
பண்ணார்குதலை மொழிமருத வனமாகாளி பரிந்துறையும்
விண்ணார்சிகரச் சினகரத்து வடபால்மிளிர்பத் திரைதீர்த்தம் (3)
சாற்றுமரு தூர்த் தென்கிழக்குத் தண்ணார்கமல வோடையெனப்
போற்றுங்களபுண் ணியதீர்த்தம் புயங்கராச னுடனிகலுங்
காற்றுக்கிறைவ னட்பாகுங் கனலிதிசையிற் கன்னவரை
தோற்றுநெறியிற் புகல்சருவ தீர்த்தமொன்று தூய்தாமல் (4)
செந்தாமரைப்பெண் ணவர்நோன்பு செய்யுமுலகின் மடமாதர்
நந்தார்கமல வோடையிலே நன்னீர்மூழ்கிக் கற்பவிதி
சிந்தாகுலந்தீர்ந் தியற்றிடுவார் செல்வம்விளங்கி வந்தியருஞ்
சந்தானங்கள் பெற்றின்பந் தழைப்பார்மருதூர்த் தலந்தனிலே (5)
பெருநாகேசர் சன்னதிநற் பிரகாரத்தின் மங்கலப்பேர்
தருநற்றீர்த்தம் புகர்வாரந் தன்னிற்படிந்த கன்னியருந்
திருமங்கலஞ்சேர் மடவாருஞ் செல்வக்கணவர் வரப்பெறுவர்
அருமைத்தான மகப்பெறுவ ரழகுமடந்தை யருள்கொண்டே (6)
கலகநயனி மருதவனக் காளிகோயிற் கெதிராகக்
குலவுங்குளிர்பத் திரைதீர்த்தங் கூர்ந்துமூழ்கப் பெற்றவர்கள்
உலகின்மிருத்து வினைகடப்பா ருயரும்பெரும்பாக் கியம்பெறுவர்
அலகைவிலகும் பிணிதீரு மரும்பாவங்க ளகன்றிடுமே (7)
உரகவரசன் மருதவனத் துமையாண்மணவன் பதம்போற்றிப்
பரவையுலகிற் கங்கைமுதற் பலவா நதியிற் படிந்தபலன்
விரவவேண்டு மெனக்கேட்ப வேணிப்பெருமா னழைத்ததடஞ்
சுரர்வந்திப்ப வருஞ்சருவ தீர்த்தம்படிந்தார் துகளற்றறார் (8)
திருச்சிற்றம்பலம்.
பஞ்சமகா தீர்த்தச் சருக்கம் முற்றும்.
10. இந்திர தீர்த்தச் சருக்கம்.
திக்குக்காவற் கடவுளருஞ் செய்ததீர்த்த முண்டதனிற்
புக்குப்படிந்து வரம்பெற்றார் புதுமையனந்த மன்னவையின்
மிக்குச்சருவ தீர்த்தமென விளம்பச்சூதன் முகநோக்கித்
தக்கமுனிவர் மகிழ்கூர்ந்து சாற்றுகென்னச் சொல்கின்றான் (1)
முன்னநெடுமா லிதையமலர் முளரியிருக்குந் திருமடந்தை
தன்னைப்புகழ்ந்து சங்கீதஞ் சமுகத்திருந்து வாசித்த
வன்னநடைப்பெண் கந்தருவ வணங்குக்கீந்தா ளணிகுழலிற்
பொன்னந்தருவின் வாடாத பூமாலிகையப் பொன்னணங்கு (2)
கையிற்கொடுத்து நின்னிதையங் கருதும்பெருங்கா மியநல்குந்
தையலேகென் றளித்தலுமே தகுமாலிகையா ழிடைசுற்றி
யையமறவிண் ணெறிவரக்கண் டருமாதவனற் றுருவாசன்
மையன்மடவா யாண்டேகி வருதியென்று வினவினான் (3)
விண்டுவுலகிற் றிருமுன்னர் வீணவாசித் தணியலங்கல்
கொண்டுவந்த செய்திசொலக் கூர்ந்துமுனிவன் றொழுதேத்தத்
தொண்டுசெய்யு மெளியேனைத் தொழவுந்தகுமோ வெனப்பணிந்து
வண்டுபடியாக் கற்பகப்பூ மாலைகொடுக்க வாங்கினான் (4)
வாங்கிவந்த துருவாசன் மகவான்பதிக்கு வருங்காலை
தூங்கலிகந்து புருகூதன் சுரர்தந்தொகுதி முனிக்கணத்தோர்
பாங்கிற்சூழ மணிமறுகிற் பவனிவரக்கண் டம்முனிவ
னோங்குஞ்சுருதி யாசிபகர்ந் தொளிருந்தொடையல் கைகொடுத்து (5)
திருமின்கூந்தன் முடித்ததொடை சிந்தையிசைந்த வரமுதவும்
அருமையீதென் றறைதலுமே யங்கீகரியான் றோட்டிகொடு
முருடன்வாங்கி வெள்ளானை முடியிற்போட வத்தும்பி
கருதலின்றித் துதிகொண்டு கண்ணிவாங்கி நிலஞ்சேர்த்து (6)
காலிற்றுவட்டக் கண்டுமுனி கனன்றுவடவைக் கனலென்னச்
சாலச்சினந்துன் பெருஞ்செல்வந் தரங்கத்திரைப்பாற் கடலொளிப்ப
நூலிற்பகருந் திரைவழூஉ நுளையர்போலப் போதிரெனப்
பாலித்திட்டான் கொடுஞ்சாபம் பசியாலிமையோர் பரதவித்தார் (7)
தேவர்க்கரசுந் தேவர்களுந் திரைசூழுலகின் மனிதவுரு
மேவிக்கனிகா யடகருந்தி மெலிந்துகயிலைக் கிறையோனைப்
பாவித்திருப்பத் திறற்பரசு பாணிதோன்றித் தென்மருதூர்க்
கோவிற்கேகித் தவம்புரிகக் கொடுபோமென்றான் பெருஞ்செல்வம் (8)
குலிசன்முதலாப் பெருந்தேவர் குழுவுங்கலிப்புற் றிரப்புற்றார்
மெலிவுதவிர்க்கும் மருதவன மேவிச்சிவதீர்த் தம்படிந்து -
வலிசெய்சூலப் படையானை வணங்கியருமா தவமியற்றிப்
பொலிசன்மறையோர் குலமென்ன வசித்தாரந்தப் புரந்தனிலே (9)
மீச்சுராளா யிருந்தோர்கள் வில்வவனத்தில் வந்தபின்னர்ப்
பூச்சுராளாய் நல்லகரம் புதுக்கியுரைந்து தவமுயல்க
வீச்சுரன்வந் தமரர்தமக் கிறைவனனவிற் போதிப்ப
வீச்சுத்தரங்கத் தீர்த்தமந்த நகர்க்குக்குணபால் விளக்கினான் (10)
விளங்குங்குலிசத் தீர்த்தமென் விளம்புநாமஞ் சாத்தியதிற்
களங்கத்தீர மூழ்கிநிதங் காளகண்டர் பதம்போற்றி
யுளங்கூர்தவத்தி னெடுங்கால முஞற்றவொருநாண் மருதீசன்
றுளங்குங்குஞ்சிச் சடை துலங்கச் சோதியிலிங்கத் திடைதோன்றி (11)
இரவியனந்த மோர்வடிவுற் றெழுந்ததென்னக் கதிரெரிப்ப
விரவுங்கருணைத் திருமுகமும் வெற்புமடந்தை யிடப்பாலு
மரவப்பணியும் புலியுடையு மடரும்விடைமேற் கணஞ்சூழப்
புரசைநிகரான் காட்சிதரப் புத்தேட்கிறைவன் போற்றினான் (12)
தேவர்முழுதுங் கரங்குவித்துச் செயசெயென்று வணங்கிநிற்பக்
காவற்கடவுண் முகநோக்கிக் கடலைக்கடந்த கடவுளர்கண்
மேவச்செல்வங் கொடுத்தியென விளம்பித்துருவா சனையழைத்துப்
பாவச்சாபந் தவிர்த்தியெனப் பணித்தான் மருதூர்ப் பரம்பொருளே (13)
அன்னமுனிவன் சிவனடிபெற் றரந்தைதீரத் தொழுதேத்தி
முன்னைச்சாபந் தீர்கவென மொழிந்துகலியை மொசிப்பிக்கப்
பின்னர்நெடுமான் மந்திரத்தைப் பிடுங்கித்திரைப்பாற் கடலிட்டே
சொன்னமத்து மதிதூண்வா சுகிசேர்வடமென் றினிதழைத்து (14)
தேவரசுரர் வலமிடமாய்ச் சேர்ந்துகடைதி ரெனப்பணிப்ப
மாவன்மையிற் கடைதலுமே வானத்தமரர் பெருஞ்செல்வம்
மேவப்பண்டை யிருந்தபடி விண்ணோர்க்குதவச் சுகம்பெற்றார்
சேவிற்பெருமான் கோவிலெய்திச் சிவலிங்கத்திற் கரந்தானே (15)
இந்தக்குலிச தீர்த்தத்து ளிலம்பாடெய்தி மிடித்தோரும்
வந்துபடிந்து பிரமபுர வரதன்கோயில் வலம்வந்து
சிந்தைமகிழ்ந்து பிரமேசர் திருத்தாளொருமண் டலம்பணிய
வந்தக்கடவு ளோர்பெற்ற மகத்தாஞ்செல்வம் பெறுவரோ (16)
பிரமவிருடி காசிபன்பாற் பெருகுங்காத லவுணப்பெண்
விரதைமணந்து பெற்றபிள்ளை விருத்தியசுரன் றனைப்பண்டு
முரனிற்கொலை செய் மகபதியை முந்துதுடரும் பிரமகத்தி
பரமன்மருத வனத்திடைதன் பண்டைத்தீர்த்தம் படிந்தொழிந்தான் (17)
கடவுட்கற்பின கலிகையைக் களவின்மகவான் கலந்ததனை
நடலை தீர்ந்த கோதமப்பேர் ஞானமுனிகண் டுடன்சபிக்கச்
சடலமுழுதும் யோனிபெற்ற சாபந்தீர மருதவனத்
திடமாமிந்தத் தடமுழ்கி யீரைஞ்ஞூறு விழிபெற்றான் (18)
ஈங்குப்பகரிந் திரதீர்த்த மிதனின்மாகத் திங்களிசை
யோங்கும்வைகா சித்திங்க ளுயருந்துலைமா சித்திங்க
ணீங்கலின்றித் தினமூழ்கி நிருத்தன்கவுரி புரத்தீசன்
றேங்குங்கருணை தரத்தருமஞ் செய்தார்பேறு செப்பவற்றோ (19)
பகருங்குலிச தீர்த்தமதிற் படிந்தார்வரம்பெற் றதைச்சூதன்
சுகரேமுதல நயிமிசப்பேர் சொல்லுங்கானத் திருடியர்க்கு
மிகவுமுரைப்பக் களிகூர்ந்து வியந்தார்கனலிக் கிறைதீர்த்தம்
புகல்கவென்ன வத்தீர்த்தப் புகழ்ச்சியனைத்துஞ் சொல்கின்றான் (20)
திருச்சிற்றம்பலம்.
இந்திர தீர்த்தச் சருக்கம் முற்றும்.
11. அக்கினி தீர்த்தச் சருக்கம்.
தேவர்க ளியற்றும்வேள்வி திருமறை யவரியற்ற
மேவுநல் லவிற்பாகத்தை விளங்குறா மலச்செருக்காற்
பாவக னெனதுமிச்சிற் பண்ணவ ருண்பதென்று
நாவரு மிகழ்ச்சிசெப்பி நகைத்தனன் மகவான்முன்னர் (1)
ஆயிடை யிருந்தவிண்ணோ ரருட்குரு வழன்றுசீறித்
தீயெனு நாமம்பெற்ற தீயையாற் பிரமஞானத்
தூயவ ரவையிற்செங்கை சுட்டியிங் கிகழ்ந்ததோட
மேயநீ நின்றன்பாணி துணிக்கவென் றிட்டான்சாபம் (2)
அன்னவன் சபித்தசாப மையிரு தேரோன் பெற்ற
மன்னடற் சாபமீன்ற வாளியிற் றப்பாதாகும்
பின்னொரு காலந்தக்கன் பெருமக மழித்தவீரன்
றுன்னுசீற் றத்தாற்செங்கை துணித்தன னழலியன்றே (3)
திருவருட் செயலீதென்று சிவனதஞ் செழுத்தையுன்னி
யிருகண்ணீர் சொரிந்துமூர்ச்சித் திடுமவத் தையிலேயீசன்
பெருவிடை மீதுதோன்றப் பிறங்குதீக் கடவுள்கண்டு
மருமலி வேணியெம்மான் மலரடி பணிந்துபோற்றி (4)
நின்னுதற் கண்ணென்றென்னை நேசமுற் றினிதுவைத்தி
யுன்னருண் மறந்தார்தம்மி னுறுதுய ரெனக்குவந்த
தென்ன பா தகஞ்செய்தேனிங் கெய்திய தீமையென்னப்
பொன்னவன் சபித்தசாபம் புதந்ததென் வினையீதென்ன (5)
விண்ணவர் பொசிப்பதுன்றன் மிச்சிலென் றுரைத்தபாவ
நண்ணியிங் குனதுசெங்கை நறுக்குவித் ததுநீயஞ்சேல்
மண்ணுல கதனின் வேக வதிநதி வடபான்மிக்க
புண்ணிய மருதூரென்னப் பொலிந்தது கயிலைக்கொப்பாம் (6)
வேறு
அப்பதியின் மனிதவுருக் கொண்டுநீ செல்குதியென் னகரினந்த
வொப்பறுசன் னதிக்கெதிரே தேவதடம் பாவங்க ளொருங்குநீங்கும்
அப்புனலை யடைந்ததிகா லையின்மூழ்கிக் கோயில்வல மாகவந்து
கொப்புநிறை திருவாத்தி நிழலிருக்குங் கயமுகனைக் கும்பிட்டேத்தி (7)
தீவவா ராதனையிற் சிவலிங்கத் தெரிசித்துத் தினந்தப்பாம
லோவலின்றி யஞ்செழுத்தை நெஞ்சழுத்தி யாயிரத்தெட் டுச்சரித்து
மேவவொரு மண்டலத்திற் செய்தபா தகந்தீர்ந்து விடுபட்டோடும்
மாலொடுமந் நகரத்தின் றென்கிழக்கி லொருதடமுண் டாக்கிப்பின்னும் (8)
அத்தடத்துத் தினம்படிந்து வன்மீக மிருத்திகையா லமைத்தலிங்கஞ்
சுத்தமறை சைவநெறி யாகமத்தின் விதிப்படியே சொல்லும்பூஜை
பத்திவழா தோராண்டு பூசிக்க வறுபட்ட பாணி நல்கிச்
சித்திமுத்தி தருதுமென மறைந்தனன்பா வகன்மூர்ச்சை தெளிந்தான்மன்னோ (9)
சிவனுரைத்த படிதடமுஞ் செய்துபா வகனாண்டு திருந்தமூழ்கித்
தவமியற்றத் தென்மருதூர்ச் சோதிலிங்கத் திடையீசன் றானே தோன்றி
யவனிமிசை யழலிக்குக் கைமுளைக்க வரமருளி யந்தலிங்கத்
துவமையில்லான் கரந்தனன்பா வகன்றனது பதியினிற்சென் றுறைந்தான் மாதோ (10)
மருதவனப் பெரும்பதியி லக்கினிதீர்த் தத்தடநீர் வசந்தகாலங்
கருதுறுஞ்சித் திரைப்பிறப்பிற் பவுரணையி னமரபக்கங் கழிந்தபின்ன
ரரிதெனுமூன் றாந்திதியிற் படிந்துமறை யவர்க்குப்பொன் னளிக்குந்தானம்
பெரிதுசைவ மாதவருக் கன்னதா னம்புரிவார் பிறவாரன்றே (11)
பொறிபுலனந் தக்கரணம் பதினான்கு மொழித்துணர்வைப் பொருந்துமேலோர்
அறிவினுக்கு மகிழ்ச்சிதர வக்கினிதீர்த் தப்பெருமை யறைந்துபின்னுஞ்
செறிதருதெக் கணதிசையிற் சண்டதடா கப்பெருமை செப்புகின்றே
னெறியுடையீர் கேண்மின்க ளெனச்சூத முனிமகிழ்ந்து நிகழ்த்தலுற்றான் (12)
திருச்சிற்றம்பலம்.
அக்கினி தீர்த்தச் சருக்கம் முற்றும்.
12. இயம தீர்த்தச் சருக்கம்.
பண்டுசெங்கோற் கடவுண்மிரு கண்டருண்மார்க் கண்டனெனும் பத்திமானைத்
தண்டுகொண்டு தாக்கவரக் கண்டுசிவன் றிருத்தாளாற் றண்டித்தோட்டித்
தொண்டுபுரி பாலனுக்குச் சிரஞ்சீவிப் பதத்திருந்து சுகிப்பநல்கி
மண்டலமேற் சமனரசை மாற்றிவிட்டாள் பூமடந்தை வந்துதோன்றி (1)
எம்பெருமான் பதம்பணிந்து சொல்லுவாள் பாவியரை யெடுக்கமாட்டேன்
வெம்புநம னில்லையே லெவ்வுயிர்க்குஞ் சாவில்லை மிகுந்தபார
நம்புமெளி யேன்சுமையிங் காற்றுகிலே னென்றுரைப்ப நம்பனன்பால்
அம்புவியிற் காலனுக்கங் குயிர்கொடுத்து வருதியென வவனும்வந்தான் (2)
வந்துநமன் சிவனடியைத் தொழுதடியேன் செய்தபிழை மாற்றவேண்டுந்
தந்தைதாய் குருவினொடு தெய்வநீ சந்ததிநான் சகித்தியென்ன
நந்தமது தொண்டனைநீ நலிந்தபா தகந்தீர நண்ணிச்சோலை
சிந்துநறை வயல்பாயும் பருதிபுரத் திருந்துதவஞ் செய்கவென்றான் (3)
பிள்ளைமதிச் சடைக்கடவு ளிசைத்தவண்ணங் கூற்றுவனப் பேரூரெய்தித்
தெள்ளுபுனற் றடமந்த நன்னகர்க்குத் தெக்கணத்திற் செய்துநாளு
முள்ளமொருப் படமூழ்கி நியமம்பார்த் திபலிங்க முவந்தபூசை
கள்ளமறப் புரிந்துதிருக் கோயில்வலம் வந்தரனைக் கனிந்துபோற்றி (4)
வேதியர்க்குஞ் சைவர்க்கும் வேண்டுவன தானங்கள் வியந்துநல்கிப்
போதுமந்நா ளிந்தநகர்க் கைங்கடிகை குடதிசையிற் புகலும்வைகைச்
சீதநதி வடகரையிற் சிவலிங்கம் பிரதிட்டைசெய்து செம்பொன்னாலே
சோதியர தனமிழைத்த திருக்கோயில் கயிலையெனத் துலங்கச்செய்து (5)
சோலைமடந் திருவாயின் மணித்தேர்மண் டபம்புதுக்கித் துதிக்குமன்ன
சாலைசிவ பூஜைமுறை சமைத்துநகர் குடியேற்றித் தனதனூரைப்
போலியம னீச்சுரமாம் பெயரிட்டுச் சிவனுக்குப் புனைந்தநாமம்
மாலியம னீச்சுரரென் றுலகியம்பச் சாத்திமரு தூர்க்குவந்தான் (6)
வந்துசிவ நாகலிங்கர் தீவவா ராதனையின் வணங்கிநிற்பப்
பந்துமுலை யழகியிமின் மணவாளர் விடைமீது பண்பிற்றோன்றி
வந்தகநின் பாவந்தீர்ந் தனைநமது தொண்டர்தம்பா லணுகவேண்டா
முந்தவுன தாதிக்கஞ் செலுத்துகவென் றேமறைந்தான் முக்கட்கோமான் (7)
புயல்பொழியுந் துலைமாதந் தனுத்திங்க ளிரண்டின்மிகப் புலரிக்காலை
யியமதீர்த் தம்படிந்து நியமவிதி முடித்தரனைந் தெழுத்துமோதி
யயனெடுமால் காணாத நாகலிங்கர் திருவடியை யஞ்சலித்தாற்
பயமுறுகூற் றிலைபிணிபோம் பாதகம்போம் வெந்நரகிற் படிந்திடாரே (8)
எனவிருடி கணங்களிப்ப வியமதீர்த் தப்பெருமை யிசைப்பயாரும்
மனமுருகிப் பேரின்ப வானந்த மீக்கொண்டு மகிழ்ச்சிகூர்ந்து
கனமுனிவன் சூதனைத்தண் மலர்தூவி யருச்சித்துக் கரங்கள்கூப்பி
வினவிநிரு தியின்றடமு முரைத்தியென வன்னவனும் விளம்பா நின்றான் (9)
திருச்சிற்றம்பலம்.
இயம தீர்த்தச் சருக்கம் முற்றும்.
13. நிருதி தீர்த்தச் சருக்கம்.
நிருதி யென்பவர் நீடர மங்கையர்
பருதி வந்தெழு காலையிற் பைந்திரை
பொருது நன்னீர் கடல்புகுந் தாடினர்
கருதி யன்னவன் கைகொடு பற்றவே (1)
கண்டு மங்கையர் சிந்தை கலங்கியே
தண்ட பாணிக் கடைக்கலஞ் சாற்றினர்
மண்டு கோப வயிரவ மூர்த்திநல்
லண்டர் வந்திப்ப வார்த்தெதிர் தோன்றினான் (2)
பற்றி யந்த நிருதியைப் பார்விழ
வெற்றி மோதித் தெழும்புமக் கோசத்தை
யிற்றி டத்துணித் தஞ்சன்மி னீரென
மற்றம் மாதரை வான்செல வுய்த்தனன் (3)
நின்ற காரி பதத்தை நிருதியுஞ்
சென்றி யான்செய்த தீமை பொறுத்திநீ
யென்று வேண்ட வடுக னியம்புவான்
மன்றற் சோலை மருத வனத்திலே (4)
பொருந்து பாவங்க டீர்க்குமப் பொன்னக
ரிருந்து தெக்கண மேற்கி லிருந்தடந்
திருந்த நின்பெயர்த் தீர்த்தமுண் டாக்கிநீ
வருந்த லின்றி மணப்புனன் மூழ்கியே (5)
நேம நிட்டை நிலைபெறச் செய்துபின்
காமர் கோயில் கனிந்து வலமுறா
வாம பாக மலைமக ணாயகன்
றாமரைப் பதம் போற்றித் தவஞ்செய்வாய் (6)
என்று ரைத்த வயிரவ னேகலு
நன்றெனக் கொடு நண்ணி நிருதிதான்
மன்ற லம்பணை வாணி புரத்தினிற்
சென்று தெக்கண மேற்கிற் றிரைத்தடம் (7)
நிருதி தீர்த்தமி தென்று நிலத்துளோர்
கருது புண்ணியப் பொய்கைகண் டானதிற்
பருதி வந்தெழு காலையிற் பாய்புனல்
சுருதி சொன்முறை தோய்ந்தன னாண்டரோ (8)
மன்னு தன்பெரு வாவியின் மூழ்கிப்பின்
சன்னதிக் கெதிர் நாகத் தடத்திலே
முன்னந் தோயெழு மூன்றொரு நால்வரை
யுன்னி யுள்ளமு வந்துநின் றேத்தியே (9)
தீர்த்த மாமத் திருமரு தீசனை
ஏத்தி நாகவன் மீகத் தெடுத்தமண்
பார்த்தி பச்சிவ லிங்கநற் பண்புறச்
சாத்த வில்வத் தருமஃ தாயிரம் (10)
வாசப் பன்மலர் மற்றுள கொண்டரன்
பூசை யட்ட வணைப்படி பூசித்து
நேசித் தான்மரு தீச னெடும்புகழ்
பேசிக் கொண்டு வரும்பிர தக்கணம் (11)
நித்த மிப்படி நேசித்துப் பூசித்துப்
பத்தி செய்து பணிந்தன னாண்டுசென்
றத்தன் மாமரு தீச னழகிய
தத்தை யோடுந் தனிலிடைத் தோன்றினான் (12)
நெஞ்ச மன்பு நிறைந்த நிருதிகண்
டுஞ்ச னன்றமி யேனுன் கருணையாற்
பஞ்ச பாதகந் தீர்ந்துன்ப தம்பெற்றேன்
அஞ்ச லென்றெனை யாண்டருள் கென்றனன் (13)
சால நீசெய் தவமகிழ்ந் தேமினி
மேல வாந்தர வேண்டுவ தென்னென
ஞாலம் பேடியென் றேசுற நாணினேன்
கால கால கருத்திது வென்றனன் (14)
அஞ்ச லஞ்சலுன் னங்கவி லிங்கமோ
மஞ்ச முன்னுள தன்மை வளருமுன்
னெஞ்சு தன்மினை யன்றி நினைப்பதோ
பஞ்சின் மெல்லடிப் பாவையர் தம்மையே (15)
கன்னி நாணறுங் கைமை யயலவன்
பன்னி மாயப் பரத்தை தொழும்பினள்
சொன்ன மாதர்த் தொடார்பெரி யோர்தொடி
லின்னல் காட்டு மெழுநர கெய்துவார் (16)
ஆகை யான்மனு நீதிய ழித்திடா
தோகை கொண்டெமை யுள்ளத் திருத்துதி
போக வென்ன நிருதிபு கழ்ந்துபோய்
ஏகித் தன்பதி யெய்தியி ருந்தனன் (17)
ஆடித் திங்க ளணிகெழு மீருவா
நாடிச் சென்று நிருதிநன் னீர்த்தடந்
தேடி மூழ்கிச் சிவனைத் தெரிசிக்கக்
கோடி மாமகப் பேறு குலாவுமே (18)
சோதி யஞ்சடைச் சூத விருடினன்
னீதி தங்கு நிருதி தடத்தினை
யோதி யந்த முனிவரு வந்துளம்
பேதி யாவரு ணத்தடம் பேசுவான் (19)
திருச்சிற்றம்பலம்.
நிருதி தீர்த்தச் சருக்கம் முற்றும்.
14. வருண தீர்த்தச் சருக்கம்.
கழுகு பூசிக்குங் கழுக்குன்ற மெனுஞ்சிவ தலத்தி
னுழுவை யின்சரண் முனியருட் பூரண யோகி
வழுவு றாதுநற் றவம்புரிந் துறையுநாண் மனித
ரழுக ணீவர மாரிநீர் மறுத்ததத் தேயம் (1)
நாட்டில் வாழ்பவர் புலிச்சரண் முனிவனை நண்ணித்
தோட்டி ருந்தடந் தாமரைத் துணையடி தொழுதார்
வேட்டு வந்ததென் னென்றனன் விளம்புவார் மேகங்
காட்டு நன்மழை யின்றியே பயிரெலாங் கரிந்த (2)
* அவ்வை வாசக நல்லவ ரொருவருண் டாயிற்
செவ்வை யாங்கவர் பொருட்டுநன் மழைபெயுந் தேயந்
தவ்வை தீருமத் தன்மைபோற் றரணிமீ தெம்மை
வெவ்வி டர்க்கடல் வீழ்ந்திடா தெடுக்கநீ வேண்டும் (3)
*அவ்வைவாசகம் = ஆப்தர்மொழி
ஆகை யாலுன திணைப்பதந் தஞ்சமென் றடைந்தே
மேக நீர்பொழிந் துய்கநீ செய்கென விளம்பச்
சோகந் தீர்ந்தரு மழைதரு கேமெனச் சொல்லி
சோகை தோன்றவே வருணமந் திரத்தையுச் சரித்தான் (4)
ஏழு நான்முறை திறம்பிடா துச்சரித் திருந்து
சூழு மேகங்க டோன்றில தும்பரிற் சுடுதீ
யூழி போவதொத் துதித்தது சீற்றமோர் வருணன்
வாழு மோவுடல் சுரம்புகப் பணித்தனன் வாக்கால் (5)
காய வெஞ்சுரங் கனவெனப் பற்றுலுங் கடிதிற்
றூய நன்முனி சாபமொன் றுணர்ந்துமுற் றோன்றிப்
பேய னேன்பிழை பொறுத்தியென் றிணையடி பிடித்து
மாய வெஞ்சுர மொழித்தியென் மழைவருங் காண்டி (6)
என்று போற்றலும் வருணனுக் கிரங்கியவ் விருடி
யன்று நல்லெழுத் தைந்தையு முச்சரித் தணிநீ
ருன்றன் மேனியிற் பூசுக வென்றளித் துடனே
நன்று வெங்கடுஞ் சுரந்தவிர்த் திடுமென நவின்றான் (7)
ஒரு கணத்துநீ றணிதலு முடற்சுரந் தணிந்த
பெருமை காழியிற் கவுணியன் பிள்ளைமுன் னாளி
லருமை நீறெடுத் தணியுங் கூடலுக் கரசன்
கருவில் வந்தகூன் காய்ச்சலுந் தவிர்ந்தது கடுக்கும் (8)
வருணன் தேவனப் புலிச்சரண் முனிவனை வணங்கி
யருணன் வெய்யிலிற் பொடிந்தன பயிரெலா மன்றே
தருண மங்கைய ரின்பவா னந்தமாந் தன்மை
பொருண யப்பட மாரிவந் துலகெலாம் பொழிந்த (9)
ஆறு கால்குள மேரிநல் லோடையம் புயப்பூ
நாறு வாவிதண் பணையெலா நிரம்பநன் னாட்டோர்
தேறு செல்வம்பெற் றுய்ந்திடப் பணித்தலுஞ் சினம்போய்க்
கூறு மம்முனி நம்முளங் கொதித்தவெம் பாவம் (10)
வழுதி நாட்டுநீர் வைகைக்கு வடகரை மருங்கிற்
றெழுது விண்ணவர் நித்தமுந் துதிக்குந்தென் மருதூர்
முழுதும் புண்ணிய பூமியம் முதுநகர்க் குடபாற்
பழுது நாதநா கத்தட மதற்குமேற் பக்கம் (11)
உனது நாமமிட் டொருதடம் விளங்கவுண் டாக்கித்
தினமு மூழ்கிநா கத்தட மதற்குமேற் பக்கம்
மனதி லஞ்செழுத் தோதியோர் மண்டலம் வலஞ்சூ
ழுனைவி டுத்தது நீங்குமென் றம்முனி யுரைத்தான் (12)
சொன்ன வண்ணமே மருதமா வனத்திடை தோன்றி
மன்னு நீர்க்கிறை சிவன்றிருக் கோயின்முன் மகத்தாம்
பன்ன கத்தடம் படிந்தரன் றிருவடி பணிந்து
பின்ன தற்குமேற் பக்கமாந் தடமொன்று பிறங்க (13)
கண்டு தன்பெயர் வருணதீர்த் தம்மெனக் காட்டி
மண்ட லம்படிந் தானருச் சனைவிதி மதித்தான்
அண்டர் நாயகன் விடைமிசைக் காட்சிதந் தருளித்
துண்ட துண்டமாய்ப் பாவங்க டுணிபடத் துரந்து (14)
தொடுக டற்கிறை நின்றிசைக் கேகெனச் சொல்லி
கடுவுண் கண்டனச் சோதிலிங் கத்திடைக் கரந்தான்
அடுசு ரம்பெரு நோய்முதற் பிணியெலா மகலும்
படுமந் நீர்துளி பருகவென் றுமையவள் பகர்ந்தாள் (15)
விஞ்சை வேதிய ரித்தடம் வியப்பொடு மூழ்கிச்
செஞ்ச வேவரு ணச்செபஞ் செய்யநா ளெட்டின்
மஞ்சு சூழ்ந்துநன் மழைமொழிந் தேரிக ணிரம்பிப்
பஞ்சந் தீரநெற் பயிரெலா முயிர்வந்து பலிக்கும் (16)
சுருதி சொல்லுநீர்க் கிறைதடந் தோய்ந்திடு மவர்க்குப்
பருதி யேமுத லொன்பது கிரகமும் பகைத்துப்
பொருத லின்றிநற் சுபமுறச் செல்வமும் பொலிகத்
தருத லுண்மையாஞ் சத்தியஞ் சத்திய மிதுவே (17)
ஏயுந் தண்புனல் வருணதீர்த் தத்தினை
வாயு தீர்த்தமும் பகருவன் கேண்மின்கண் மன்னுந்
தாயி னன்புளீ ரென்றனன் சூதனத் தவத்தோர்
நீயெ மக்கருள் கென்றனர் அம்முனி நிகழ்த்தும் (18)
திருச்சிற்றம்பலம்.
வருணத் தீர்த்தச் சருக்கம் முற்றும் .
15. வாயு தீர்த்தச் சருக்கம்
சத்திய வுலகந்தன்னிற் றாமரைத் தவசின்வைகு
முத்தமன் சரணம்போற்ற வும்பரிற் கங்கை நங்கை
முத்தணி நிலவுகால முகங்கவி னொழுகவந்து
பத்தியி னஞ்சலித்துப் பணிந்தவ ணின்றகாலை (1)
கண்டுகாற் கடவுள்சூறைக் கடுஞ்சுழன் மடுத்துவீச
வொண்டொடி யுடுக்கையாட யோரிடத் தொதுங்கலோடு
மண்டமர் முனிவர்மற்று மவையுளோர் கண்முகிழ்ப்ப
மண்டெழி லவயவத்தை வருணன்பார்த் திச்சையுற்றான் (2)
கைகொடு குறியைமூடிக் கலையினை யெடுத்துடுத்துப்
பெய்வளை வருணன்மீதிற் பெருமய லுற்றேயுள்ள
நைவது முகத்திற்றோன்ற நாணினள் போலநின்றாள்
மொய்வளர் கமலப்புத்தேண் மூவர்தங் கருத்துமுன்னி (3)
விழிமலர் சிவந்துசீறி விரிகடற் கிறையைநோக்கி
அழிவுறக் கலைசோர்மங்கை யவயவங் கண்டகாதல்
விழிகளிற்றோன்றாநிற்றி விடுபடா திந்தப்பாவ
மொழிகமா னிடப்பிறப்பிற் குருகுலத் துதிப்பைபோதி (4)
கங்கைநின் கருத்தவன்மேற் காதலுற் றதுவுங்கண்டே
மங்கைநீ வருணனுக்கே மனையவ ளாகிப்பார்மேல்
அங்கிருந் தினிதுவாழ்வுற் றவனொடும் பாவந்தீர்ந்து
தங்குநும் பதியிற்சேர்க வென்றொரு சாபந்தந்தான் (5)
கன்னிமேற் சூரைவீசுங் காற்கிறை வதனநோக்கிப்
பன்னரும் பாவந்தீர்க்குங் கங்கைபாற் பாவம்பெற்றாய்
இன்னபா தகத்தைத்தீர்த்தற் கெறிதிரைக் கடல்சூழ்பாரிற்
செந்நெலங் கழனிசூழுந் தென்மரு தூரிற்சென்று (6)
மானிட வுருவுகொண்டு வைகைநீர் படிந்துபின்னர்
ஊனிட ரொழிக்குநாக வொண்சுனை மூழ்கிப்பச்சைத்
தேனிட மிருக்குமீசன் றிருவடி பணிந்தவ்வூர்க்குத்
தானமாம் வடமேற்கெல்லை தடமொன்று திருந்தக்கண்டு (7)
அருந்தவம் பலிக்குமுத்த ராயணத் தானித்திங்கள்
திருந்துநின் னாமத்தீர்த்தத் திரைப்புனல் காலைமூழ்கி
யிருந்துநற் படிகலிங்கத் திறைவனை யருச்சித்தேத்தப்
பொருந்துபா பங்கடீரும் போகெனச் சபித்துவிட்டான் (8)
திசைமுகன் பணித்தவாறே திருமரு தூர்க்குவந்து
வசைமுகம் புணர்ந்தபாவ மாற்றுகை மனத்தினெண்ணி
யிசைமுகங் கண்டகாலுக் கிறையவ னாகதீர்த்த
விசைமுகத் தரங்கநீரின் மூழ்கினன் வினைகடீர்ப்பான் (9)
மானிட வுருவங்கொண்ட வாயுவுக் கிறைவன் வில்வக்
கானமு நாகநாதர் காட்சியுங் கண்டுகோயில்
ஆனதை வலம்புரிந்தே யருந்தவர்க் கன்னமீய்ந்து
ஞானவே தியர்க்குத்தான நானான்கு நல்கினானே (10)
நன்னகர் வடமேற்பக்க நலம்புனை வாயுதீர்த்தம்
என்னவே யுலகம்போற்ற விருந்தட மொன்றுண்டாக்கி
யன்னதின் மகரத்திங்கண் முதல்வரு மானிமட்டும்
பின்னுமத் தடத்தின்மூழ்கி யருச்சித்தான் படிக லிங்கம் (11)
திருமரு தீசர்க்கன்பு சேர்திருப் பணிகள் செய்து
வருதிருத் தேர்விழாவின் வரிசையு நடாத்துநாளிற்
பெருகுமா வணிமூலத்தில் பெண்ணொரு பாகத்தோன்றல்
கருதரும் விடைமேலேறிக் காட்சிதந் தருளக்கண்டான் (12)
ஞானபூ ரணனேபோற்றி நாகநா யகனே போற்றி
மோனமா முணர்வேபோற்றி முத்திக்கு வித்தேபோற்றி
மானழ கியமடந்தை மணவாள போற்றியான்செய்
யீனபா தகந்தவிர்க்கு மிறைவனே போற்றியென்று (13)
மாருதத் திறைவனேத்த மருதமா வனத்துளீசன்
சீருற மகிழ்ந்துசெப்புந் திசைமுக னிசைத்தசாபம்
பாரபா தகம்பறிந்து பருதிமுன் பனியிற்போகுஞ்
சார்புனன் மூழ்கநின்பொற் றடந்தரும் வரமனந்தம் (14)
வாயுவுக் கிறைவநீபோய் வானுல கடை தியென்னப்
போயினன் மருத்துப்பின்னர் புரம்பட நகைத்தபுத்தே
ணேயநல் லிலிங்கத்தூடே நிலைபெறக் கரந்தானிந்தப்
பாய்திரை வாயுதீர்த்தம் படிந்தவர் பிறவாரன்றே (15)
வேறு
என்று கூறி சூதனை முனிவர ரிறைஞ்சி
நன்று வாயுவுக் கிறைதருந் தீர்த்தம்நீ நவின்ற
மன்றல் வாசகங் கேள்விக்கின் னமுதென மதித்தே
முன்ற னன்பினாற் பவந்தொலைத் தனமென வுரைத்தார்
திருச்சிற்றம்பலம்.
வாயு தீர்த்தச் சருக்கம் முற்றும்.
16. குபேர தீர்த்தச் சருக்கம்.
பின்னு மாமறைச் சூதமா முனிவரன் பேசும்
பொன்னி ருந்தொளி ரளகையர் காவலன் பொய்கை
மன்னு தென்மரு தூர்வயின் விளங்குமம் மகிமை
தன்னை யுஞ்சொல மறக்குமோ வுளத்திடை தரிப்பீர் (1)
மறைதெ ளிந்துப நிடதவாக் கியம்பகர் மகிமைத்
துறைதெ ளிந்தகம் பிரமமென் றேகண்டு துடங்கு
நிறைபெ ருந்தவ வதிட்டனே முதலிய நியமங்
குறைவி லாதநல் லிருடிய ரெழுவருங் கூடி (2)
பார மேருவின் றெக்கணம் பரதகண் டத்திற்
சேரு மாயிரத் தெட்டெனுஞ் சிவதலஞ் சென்று
நார வேணியங் கடவுளைப் பணிந்துநல் லளகை
சாகும் புண்ணியத் தலமென வந்நகர் சார்ந்தார் (3)
அந்த வொண்பதிக் கோயில்கண் டளகையீச் சுரனை
யிந்து வாணுதற் கனகவல் லியைப்பணிந் தேத்தி
வந்து பத்துநாள் வசித்ததி லிருந்தன ரவரை
முந்து கண்டவர் வயிச்சிர வணன்வயின் மொழிந்தார் (4)
அயர்ந்து ரைத்தசொல் லுணர்ந்திலன் பத்துநா ளளவும்
பயம்பு குந்துகண் டிறைஞ்சிலன் பதினோராந் தினத்தின்
நயம்பு குந்தபொற் சிவிகைமீ தேறி நாற் படைசூழ்ந்
தியம்பு மோதையு மியம்பதி னெட்டெழுங் கலிப்பும் (5)
குலவு தெண்டிரைக் கடலெனக் கொண்டலே ழென்ன
வுலகி லெண்டிசைக் கடகரி செவிடுபட் டொடுங்கக்
கலக வாள்விழி மடந்தையர் களிநடங் காட்ட
விலகி வில்லுமி ழரதனம் புனைபணி விளங்க (6)
வேத மந்தண ரிருமருங் குஞ்சொல வியவான்
கீதர் மாதர்சொ லிணைசெவிக் கமுதெனக் கிடைத்த
தாத லான்மெல மெலநடந் தரன்றிருக் கோயிற்
சீத கோபுர வாயிலிற் சிவிகைவிட் டிழிந்து (7)
முந்து கோபுர வாயிலின் முன்முகப் பிருக்கு
மந்த வேழ்முனி வருக்கடி பணிந்தில னருகே
வந்தி ருந்தன னந்தணீ ரென்வயின் வாரா
திந்த வூர்க்குளீ ரைந்துநா ளிருந்ததென் னென்றான் (8)
மாயை யால்வந்த செல்வத்தைப் பொருளென மதித்தாய்
தூய மாதவர்த் தொழுதிலை யுணர்விலி தூர்த்த
நீயுனக் கிந்தப் பெருந்திரு நிலைகொலோ நில்லா
நேய ஞானமில் லாமையாற் கெட்டது நெஞ்சம் (9)
கொண்டல் காட்டுமின் னிந்திர சாலநீர்க் குமிழி
மண்டு பேய்த்தடந் தேர்க்கனா வொப்பதிவ் வாழ்க்கை
யண்டர் வந்தனை புரிந்திடு மருந்தவர்க் கண்டுந்
தெண்ட னிட்டுநீ வணங்கிலை யிணங்கிலை சீச்சீ (10)
கந்தம் பூப்பணி துகில்புனைந் துறவுளோர் கலிப்ப
வந்தி யங்கறங் கிடநர வாகன மேறிப்
பந்து வுஞ்சொலங் கேட்கிலர் பார்க்கிலர் பேசார்
இந்த மாந்தரிற் பிணமிகு மீகையா லீண்டு (11)
விஞ்சை வல்லியைப் புணர்ந்தவன் பணிவது மிளிர்செங்
கஞ்ச வல்லியை யணைந்தவன் பணிவதுங் கருணை
நெஞ்ச வல்லியை மணந்தவன் பணிவது நிறைந்த
வஞ்செ னுந்திரு வெழுத்தினை யுச்சரிப் பவரே (12)
ஞான பூரணர் திருவுளங் கொதிப்புற நடந்தோர்
ஈன பாதக ரங்கவர் பெருந்திரு விழப்பார்
ஆன வாயுளு மருப்பமாம் பலியிரந் தலைவார்
ஊன மாநர கேழினுங் கற்பமுற் றுழைப்பார் (13)
கனத்த செல்வமாம் பிணிவரிற் கண்ணொளி மழுங்கும்
மனத்த வூமர்போ லுரையறுஞ் செவிசெவி டாகும்
மனத்தை நுங்குறும் யானென தெனவரு மயக்கஞ்
சினத்த விப்பிணி மிடியெனு மருந்தினாற் றீரும் (14)
உறுமென் றெண்ணிய செல்வமப் பகுதிமுன் னொருங்கிச்
சிறுமை தந்தவெம் பணியெனச் சிதைவுறப் பாம்பு
குறுமை யாயினும் பெருந்தடி கொடுபுடைப் பவர்போல்
வறுமை யெய்தெனச் சபித்தனன் வசிட்டமா முனிவன் (15)
வெய்ய சாபம்வந் துறுதலுந் திருவெலாம் விலகிக்
கைபு னைந்தபொற் பணியெலா மிரும்பெனக் கருத்து
துய்ய மாமுக மெழில்கெடத் தவ்வையாள் சூழ்ந்து
பொய்த ரும்புலைச் சேரிபோ லான தப்பு ரமும் (16)
நிதிம றைந்தது புட்பக மொழிந்தது நீடுங்
கதிகெ ழுந்தடந் தேர்முத நாற்படை கரத்த
ததிக மங்கைய ரனைவரும் புலைச்சிய ரானார்
மதிக றந்துநூன் மறத்தன ரியக்கர்தம் வருக்கம் (17)
ஆன காலையிற் பிங்கலன் பயம்பிடித் தயர்ந்து
ஞான மாதவர் திருவடி பணிந்தன னடுங்கி
யீன னென்பிழை பொறுத்தருள் செய்கவென் றிரப்ப
மோன முற்றமற் றறுவரும் வசிட்டனை யுன்னி (18)
எந்தை யீங்கிவன் செய்பிழை யெங்களுக் கிரங்கிப்
புந்தி யிற்பெருங் கருணையாற் பொறுக்கநீ வேண்டுந்
தந்த சாபமீண் டொழிவுறச் சாற்றுக வென்ன
வந்த ணீர்நுமக் காகநாந் தீர்த்துமென் றருளி (19)
ஆடகஞ்சுட லக்கண மாறுகை போல
நீட கந்தைசெய் தனதனீ வாவென நிகழ்த்து
நாட கம்பணை நடுவன சாலிகள் கன்னற்
காட கம்பெறு வளம்பெற வைகை நீர் காலும் (20)
மீன கேதனன் மண்டல மதனிடை விளங்கு
ஞான பூமிநல் வருச்சுன புரமெனும் நகரத்
தான நின்பெயர்த் தீர்த்தமொன் றுத்தரத் தமைத்துன்
னீனந் தீர்ந்திட வருடமொன் றிருந்ததின் மூழ்கி (21)
கனக லிங்கமொன் றமைத்துநீ விதிப்படி
தினமும் பூசித்துத் திருமரு தீசனை யிறைஞ்சி
மனது வைத்தருந் தவம்புரிந் தாற்சிவன் வந்துன்
நினைவின் வண்ணமே கரந்தன பாக்கிய நிரப்பும் (22)
என்று ரைத்தந்த முனிவரவர் தம்பதிக் கேக
வன்று மானிட வடிவெடுத் தருச்சுன புரத்திற்
சென்று நாகநீர்த் தடம்படிந் தான்மகிழ் சிறப்ப
மன்ற னீறணிந் தஞ்செழுத் தினைமனத் துன்னி (23)
ஆணி யம்பொன்னிட் டரதனம் பதித்தவக் கோயில்
நீணி லப்பெருங் கோபுரத் தெதிர்பட நின்று
கோணில் வீதியங் கப்பிர தக்கணங் கொண்டு
மாணி பத்திர னிலிங்கசன் னதிவலம் வந்து (24)
நாத வந்தமாஞ் செழுஞ்சுடர் நாகநா யகனை
வேதன் மால்பணி தீபவா ராதனை வேளை
யாத னேனென தடுங்கலி தீர்த்தியென் றழுதுன்
பாத மேதுணை யன்றிவே றிலையெனப் பணிந்தான் (25)
வானர் வந்திக்குந் தென்மரு தூர்வட மருங்கி
லான தீர்த்தந்தன் பெயர்பெற வமைத்தன னதிலே
தானம் பண்ணுவன் கனகத்தாற் சிவலிங்கஞ் சமைத்துள்
ளூனந் தீர்ந்திட வருச்சனை புரிகுவ னுவந்து (26)
அன்ன வண்ணமோர் வச்சர மருந்தவ மியற்றப்
பன்ன கேச்சுர னழகிய வுமையொடும் பண்பாற்
றன்ன தன்புள தோழனென் றிரங்கிமுற் சாபத்
தின்னல் போகவெவ் விடையிவர்ந் தெதிர்வரக் கண்டான் (27)
கண்டு பிங்கலன் படிமிசை பணிந்துளங் களிப்பன்
விண்டு கண்கணீர் பொழிகுவன் வீழ்ந்தெழுந் தாடி
மண்டு மன்புறக் குழைந்துபல் கால்வலம் வருவ
னண்டர் நாயக நின்னருட் செயலிதென் றறைவன் (28)
நிலவுத் திங்களை நேர்ந்தச கோரமு நிறைநீ
ருலவு கொண்டலைக் கண்டன மஞ்ஞையு முலகிற்
குலவு நல்லெழில் வசந்தநா ளிசைந்தகோ கிலமு
மிலகு பானுமுன் பதுமமு மொத்தன் னியக்கன் (29)
பண்டி லங்கையி லரக்கர்கோ னெனையிடர்ப் படுத்தக்
கண்டு வேங்கைமுன் னுழையெனக் கயிலைவந் தடைந்தேன்
தொண்டு கொண்டெனைத் தோழமை கொண்டுபார் துதிப்ப
வண்டர் வந்திப்ப வளகையர்க் கரசென வமைத்தாய் (30)
இற்றை நாள்வரை நின்னருள் மறந்திலே னெளியேன்
முற்று மாதவர்ப் பணிகிலாப் பாமர மூடஞ்
சற்றுண் டென்வயின் வசிட்டமா முனிவரன் சபிக்கப்
பெற்ற பாக்கிய மொழிந்தபாக் கியனெனப் பெயர்ந்தேன் (31)
இன்று தீர்ந்திட விரங்குதி யெனப்பணிந் தேத்த
நன்று நன்றுநீ யஞ்சலென் றருண்மொழி நவின்று
மன்ற லொண்சடை வசிட்டமா விருடிமார்க் கண்ட
னின்ற காசிப னங்கிரா புலத்திய நிமலன் (32)
கும்ப யோனிநற் கவுதம னெழுமுனிக் குழுவை
நம்ப னோக்கிநீர் ஞானமா முனிவர ரும்மை
யிம்பர் வந்தனை புரிந்திடா திருந்தன னிதுவும்
வெம்பு தொல்வினை யனுபவ மெவரையும் விடுமோ (33)
குறித்த சாபமுந் தகுமிது நுங்கண்மேற் குறையோ
பொறுத்து வெங்கலி தீர்கெனப் புகன்றிட வேண்டு
முறுத்து நம்பெருந் தோழனென் றுரைத்தசொல் லுண்டே
மறுத்தி டாதருள் வீரென வழங்கினர் முனிவர் (34)
பிங்க லர்க்கருள் செய்துபின் பிஞ்ஞகன் மருதூர்
தங்கு தண்சுட ரிலிங்கத்திற் கரந்தனன் றனதன்
பொங்கு தன்பெருத் திருவரப் புளகிதம் பூத்துச்
செங்கண் மாலென வளகைநன் னகரிடைச் சென்றான் (35)
மாது கொற்றவை தவஞ்செயும் விசயமங் கலத்திற்
சத ளந்தரு தனதவா வியதெனுந் தீர்த்தம்
பாத கம்புரிந் தவர்வந்து மூழ்கினும் பாறும்
ஏதங் கூர்கலி தீர்ந்திடும் பெருந்திரு வெய்தும் (36)
திருவ யிச்சிர வணன்றரு தீர்த்தநீர் மகிமை
யிருடி யர்க்குநற் சூதமா முனிவர னிசைப்பக்
கருதி யன்னவர்க் களித்தனர் பவக்கடல் கடந்தெஞ்
சுருதி வாக்கெனச் சடைமுடி துளக்கின னன்றே (37)
திருச்சிற்றம்பலம்.
குபேர தீர்த்தச் சருக்கம் முற்றும்.
17. ஈசான தீர்த்தச் சருககம்.
மருதவனத் தீசானத் தடமகிமை யுரைக்கின்றேன்
முருகுவிருந் தொளிர்நயிமி சவனமுனி வரர்கேண்மின்
கருதுமுமக் கிதுபழுத்த ஞானரசக் கனியென்னச்
சுருதிதெளிந் தியானெனதற் றிடுசூதன் சொல்கின்றான் (1)
வேறு
அத்திரி யென்னு மருந்தவ முனிவர னாச்சிர மத்தருகே
நத்தொளிர் முத்திள நிலவொழு குந்திரை நன்னீர் வாவியினிற்
பத்தினி விரதந் தருமுனி மங்கையர் பண்புற நீராடிச்
சுத்தச லங்கிளர் கும்பமெ டுத்தனர் துகளற வருகாலை (2)
இத்தரை யுத்தர குணதிசை காவல்கொ ளீசா னக்கடவுள்
முத்தித ருங்கயி லைக்கிரி சூழ முரட்பா ரிடவனிகம்
நித்தமு றைந்திடு மவையிற் கருமலை நேரொரு கணபூத
மத்தமி குந்திடு மதுவுண் டங்கே வருவதை யெதிர்கண்டார் (3)
கண்டுப யந்தவ ரோடிம ருங்கிற் கமலக் குடமெல்லாந்
தண்டுத வின்றித் தரைவிழ வீசித் தள்ளா டுகை தன்னைப்
புண்டரி கன்பொரு மத்திரி முனியொடு புகுமிரு டியர்காணா
மண்டுசி னங்கொடு பாரிட மதனை மறித்தனர் நில்லென்றார் (4)
மங்கையர் கண்டு பயந்தவ ரோட மருட்டினை நீயாருன்
சங்கமி ருப்பிட மெவ்விட மிங்கோர் தவமுனி வரர்வாசம்
வெங்கடு மதுவை நுகர்ந்திவ ணெய்தினை வெறியல கைச்சென்மப்
பங்கம தெய்துக வென்றொரு சாபம் பதநித் தந்தனனால் (5)
அப்படி யந்தர வலகைச் சென்ம மடைந்துநெ டுங்கால
மிப்படி மீதறி வில்லோர் தம்வயி னெய்திப் பலிகொண்டுஞ்
செப்பிடு சண்டிகை வயிரவன் அனுமன் செண்டா யுதனிவர்தங்
கைப்படு பாசங் கொண்டுபி ணிப்பக் கட்டுண் டலைகிற்கும் (6)
நந்திடு மந்தர வலகைய லைந்திடு நாளிற் றிரிசூலந்
தந்திடு செங்கைக் கடுமுடு வற்பரி தனையூர் வடுகேசன்
சிந்தையி ரங்கிநல் லத்திரி முனியைச் சென்றடி பணிகென்ன
மந்திர மோதி விடுத்தன னம்முனி வாசத் திடைவந்து (7)
திருவடி வந்துவ ணங்கிச் சிறியேன் செய்பிழை யாலலகை
கருவடி வெய்திமெ லிந்தன னன்றே கண்ணீ ருகநிற்ப
வெருவுத லொழிகுதி யஞ்சலை நீமுன் மேவுற லெவணென்னத்
தருநிகர் முனியே கயிலைக் கிரியிற் சார்பாரிடமென்ன (8)
தகுமீ சானக் கடவுட் காகச் சாபமொ ழித்தனமான்
மிகுதிரை வைகைத் திருநதி வடபால் வில்வவ னத்திடைநீ
புகுவட கீழ்பா லங்கொரு தீர்த்தம் புகழ்கயி லைக்கிறைபேர்
மகிழ்வுறு மீசா னத்தட மென்றோர் வாவிச மைத்ததிலே (9)
அன்பொடு மாகத் தானம் பண்ணுதி யணிதிரு நீறிடுதி
மின்புரை மனதை யொருப்பட நிறுவுதி மிக்கஞ் சக்கரமு
மின்பமெ னக்கருள் கென்றுசெ பிக்குதி யிறைசன் னதிசோதி
பொன்புனை கோயில்வ லம்வரு கிற்குதி புகழ்ந்துது தித்திடுதி (10)
தீவந் தெரிசனை பண்ணுதி யீசன் றேவியு டன்வந்துன்
பாவமு டன்வரு தாபந் தீரப் பாவித் தருள்கிற்கும்
போவென் றம்முனி யத்திரி சொல்லப் பூதந் தென்மருதூர்த்
தேவருள் பெற்றிட வடகுண திக்கொரு தீர்த்தம மைத்ததுவே (11)
ஈசா னத்தட மொன்று துக்கி யினங்கற் படிகட்டி
யாசா னத்திரி சொற்படி மாகத் தண்ணீ ரிடை மூழ்கிக்
கூசா மற்கண் மனிதவு ருக்கொடு குலவுவெண் ணீறிட்டுப்
பேசா மற்றிரு வைந்தக் கரமும் பெருகுஞ் செபமுற்றி (12)
கோவில் வலங்கொடு தீவுத் தெரிசனை குலவித் துதிகூறி
மேவொரு திங்கள் பணிந்திட வொருநாள் விடைமீ துமையுடனே
காவடர் மருதூர்த் திருநா கேசன் காட்சித ரக்கண்டு
பாவட ருந்துதி சொல்லிம கிழ்ந்து பணிந்தது பாரிடமே (13)
அரகர சிவசிவ சங்கர பரம வனந்தகிரு பாகரமுப்
புரஹர சந்திர சேகர விரணிய பூதா சாரங்க
கரதல சூல கபாலசு மங்கள கவுரிம னோகரசுந்
தரமரு தூரம கேசிசி தம்பர தாண்டவ சரணநம (14)
என்றுது திப்பக் கருணைபு ரிந்தர னேதுக ருத்தென்னச்
சென்றுமுன் னத்திரி யாச்சிர மத்திற் செய்பிழை யுண்டதனா
லொன்றிய பாவந் தொடரா தருடந் துன்னடி யவரேவ
னன்றிது வெனவே பணிவிடை செய்திட ஞானம் பெறவேண்டும் (15)
என்னவு ரைத்தது பாரிட மீச னிருந்தண் ணளிகூர்ந்து
நன்னெறி வேண்டினை யப்படி திருவருண் ஞானவ ரந்தந்தே
முன்னைவி னைத்தொடர் முழுதுமொ ழிந்திட மோகித் தனமென்னப்
பன்னியி லிங்கத் தூடுக ரந்தான் பச்சைப் பெண்பாகன் (16)
கண்ணுத லருள்பெற் றுக்கண புருடன் கயிலைக் கிரிசென்றான்
எண்ணிலி மனிதர்க ளீசா னத்தட மிதனிடை மூழ்கினபேர்
மண்ணுலக கிற்பல வலகைபி டித்து வருந்துங் கலிபடுநோய்
நண்ணுத லின்றிப் பாசமொ ழிந்தார் நாகேச் சுரனருளால் (17)
மாதிர மெட்டுங் காவல்பு ரிந்தருள் வாசவன் முதலெண்மர்
பாதக முழுதறு புண்ணிய தீர்த்தப் பண்பது சூதமுனி
யோதம கிழ்ந்தே நயிமிச வடவியு வந்துறை யிருடியர்தாம்
ஏதம கன்றே ஞானம் பெற்றன மென்றுது தித்தனரே (18)
குருமரு தீசன் கோயிற் கெதிரே குடபால் ஞானதடம்
மருதவ னம்புவி யுண்டா மந்நாள் வந்தது மின்னாம
மிருபதொ டைந்தா மிந்நீர் மூழ்கின ரெண்ணில் கற்பங்கள்
வருவன தோறு மவ்வவர் தம்பேர் மருவுந் தரைமீதில் (19)
ஞானத டந்திரு வைகைப் பெருநதி நல்லத டாகங்க
ளானவை யீரேழ் புண்ணிய தீர்த்தமு மாடின ரெவரேனும்
வேனில்பொ ரும்பல பாவந் தீரவி ளங்குந் திருவெய்தி
வானவர் வந்தனை செய்யக் கயிலைவ சிக்குவர் சத்தியமே (20)
திருச்சிற்றம்பலம்.
ஈசான தீர்த்தச் சருக்கம் முற்றும்.
18. மூர்த்தி விசேடச் சருக்கம்.
பூதமைந் தகற்றிப் பொறிபுலன் கழித்துப் புலைபடுங் கரணபே தத்தி
னேதமு மொடுக்கிக் காலமே முதல வெழுவகைக் கருவிவே றாக்கி
யாதிசா ரசுத்த தத்துவ நீக்கி யடைந்தமும் மலப்பகை தொலைத்துக்
கோதற வெனைத்தன் பதநிழ லிருத்துங் குருமரு தீசனைப் பணிவாம் (1)
இளைத்திடுஞ் சிந்தைச் சூதனென் றிகழ லிக்கதை சிவசரித் திரமாம்
விளைத்திடு மின்ப மெய்யுணர் தவத்தீர் வியப்பொடு கேண்மின்கள் வேதன்
கிளத்தெழு புவனம் படைத்தநா ளன்பு கெழுமுதன் மருதமா வனத்துண்
முளைத்தெழுஞ் சுயம்பு விலிங்கமீண் டொளிரு மூர்த்திதன் விசேடமு மொழிவாம் (2)
வேதமா கமந்தொல் கலைபுரா ணங்கள் விளம்புவ பதிபசு பாசம்
ஓதுமுப் பதமப் பதப்பொருள் வினவி லுயர்பதம் பதியென வுரைக்கு
மாதலான் பதியோ வுருவரு விரண்டு மானதொன் றன்றிலைக் குணங்க
ளோதுறு சுட்டுங் குறியிலை மலங்க ளொன்றிலை யொன்றதே விளங்கும் (3)
அலகிலா வுயிர்கட் குணர்த்துபே ருணர்வா யசலமா யகண்டபூ ரணமாய்
யிலகுநற் சத்துச் சித்தொடா னந்த யிலக்கணம் பொழிந்ததாய்ச் சத்துண்
மலைவற வுயர்ந்த மகத்துக்கும் மகத்தாய் மதிக்கொணா வணுவினுக் கணுவாய்
புலவுடல் வாக்கு மனம்படாப் பொருளாய்ப் புகன்மரு தீசனாம் பொருளே (4)
அத்தகை நிறைந்த வகளவொண் சிவத்தில் அனந்தலீ லைக்கொரு சத்தி
வித்திடை விருக்கங் கரந்துறை வதுபோல் வேறின்றி யிருக்கினு மந்த
வத்தமத் தெய்வ வுயிர்கட்கு ஞான முணர்த்துநன் னடனமோர் பக்க
நித்தமுஞ் சகள வுருவமைத் தான நிருமித நடனமோர் பக்கம் (5)
முன்னருட் சத்தி தன்னிடத் திருந்து முளைத்துந்தான் முளைத்திடா முதல்வன்
பன்னரும் பசுவோ வடுத்தது காட்டும் படிகம்போற் பாசஞ்சார்ந் தநாதி
பின்னமுற் றதனாற் றிருவுள மிரங்கிப் பிறப்புற மாயைதந் ததுதான்
மன்னிரு வினையுஞ் சமம்பெற வதனான் மலபரி பாகமாம் வகைக்கே (6)
எவ்வகை யிறைவன் கருதுமோ வதனுக் கியைந்தருட் சத்தியுங் கருதுஞ்
செவ்விர வியினிற் கிரணமே போலச் சிவத்தினிற் சுயம்பிர பையதாய்ச்
சவ்விகற் பங்கூர் பறையதோ வகண்ட சச்சிதா னந்தவா திக்கம்
பௌவநீர்க் குமுழி திரை நுரை பண்பிற் பகரிச்சை ஞானமொண் கிரியை (7)
திருவருட் கன்னி சிவன்பணித் தனவே திருந்துபற் பல்லுரு வெடுப்பத்
தருசிவ னவைக்குட் கருணையே யுயிராய்த் தாங்கியுந் தாக்கற நிற்பன்
அருடரக் கிளருங் குடிலைமா மாயை யதிலெழு நாதவிந் துவிலே
வருவன முழுதுஞ் சிவத்தொடு சத்தி வடிவமே யன்றிவே றில்லை (8)
நாதவிந் துவிலே சதாசிவன் மயேசன் நவிலுருத் திரனொடு திருமால்
வேதனீங் கைவர் சிவன்முகத் துதித்தோர் வியன்மனோன் மணிமயேச் சுவரி
மாதுமை கமலை வாணியம் மடவார் வடிவமுந் திருவருள் வடிவாம்
பூதபே தந்தொன் மாயையைங் கருமம் புகன்மல பாகமாம் பொருட்டே (9)
மூவகை யான்மா வுண்டெனச் சுருதி மொழிந்ததே யுண்மைசீ வான்மா
மேவுமந் தரவான் மாப்பர மான்மா விளம்புமான் மாவொரு மூன்றிற்
சீவவான் மாவின் றன்மையே தென்னிற் றீயில்வே மிரும்புபோ லுடம்பு
மேவுக் கரண புவனபோ தத்தில் வீழ்ந்துநா னெனதெனும் மலத்தால் (10)
அந்தர வான்மா வம்புயத் திலைநீ ரதனிடை வேற்றுமை போலச்
சந்தத மீசன் செயலுணர்ந் துட்கிச் சார்ந்துந்தன் செயலொழிந் திருக்கு
நந்தலில் பருதி கண்ணொளிக் குதவு நன்றிபோற் பல்லுயிர்க் குணர்வா
முந்தருட் சத்தி மணவன தயிக்கம் முத்திபெற் றதுபர மான்மா (11)
மானதைக் காட்டி மான்பிடிப் பவர்போன் மன்னுயிர்ப் பக்குவங் கண்டு
தீனுதற் செங்கண் மதிநதி வேணிச் சினப்புலித் தோலுடை மற்று
மானவை கரந்து மானிட வுருக்கொண் டவனிமேன் மும்மலத் தவர்க்குத்
தானருட் போதஞ் சால்புறக் காட்டிச் சதானந்த முத்தியைத் தந்தும் (12)
இருமலத் தவர்க்கு முறுதியா முருக்கொண் டிணையடி சூட்டியா னந்த
மருவுறப் பணித்து மொருமலத் தவர்க்கு மன்னருட் பேருணர் வளித்துங்
குருமரு தீசன் ஞானமா நடனங் கூர்ந்தினி தாடுவ தோர்பா
லுருவெடுத் துயிர்கண் மாயையாற் சுழல வூனமா நடஞ்செயு மோர்பால் (13)
தேசிக வடிவ மானந்த வடிவந் திருந்துமெஞ் ஞானமாம் வடிவ
மாசறு மகண்ட பேரொளி வடிவம் வளர்பஞ்ச வதனசர் வேச
நேசமார் பிரம னெடியமால் வெள்ளை நீறணி யுருத்திர மூர்த்தங்
காசறு மயேச நால்வரு முருவக் காட்சிமூர்த் தியரிவ ராமே (14)
உருவரு விரண்டு சதாசிவ ரூப முயர்விந்து நாதமே லோங்கி
வருபெருஞ் சத்தி சிவத்தொடு நான்கும் வளங்கிள ருபமென விசைப்பார்
தருமந்த வடிவ மொன்பதுஞ் சகலத் தனிமுதல் வடிவமர மின்னும்
அருடரும் விசுவேசச் சுரஞ்சிதம் பரத்தி லாடல்கூர் நடேச்சுர வடிவம் (15)
தெக்கணா மூர்த்த மர்த்தநா ரீசந் திருந்துபிட் சாடன மூர்த்தம்
மிக்குயர் மயான வுருத்திரன் கணேசம் விளம்புநற் சுப்பிர மணியம்
மைக்கடு நீல கண்டமா மூர்த்தம் வயிரவம் வீரபத் திரமாந்
தக்கதொல் வடிவம் பஞ்சவிஞ் சதிப்பேர் தரித்தவன் றிருமரு தீசன் (16)
வேறு
வாக்கி னாற்றொடர் மனத்தினான் மதித்தகா யத்தால்
தோக்கி யாவரும் நோக்கொணாப் பொருளுறு நாமம்
ஆக்கு கின்றவ னவனவை கணக்கிலா வமலன்
காக்கும் யாவையுங் கருணயா லருளினைக் கருதி (17)
அருளை நோக்கிடு மவதர மொவ்வொன்றி லருளே
யுருவு கொள்ளுமவ் வுருவினுக் குயிரதா யுறைந்து
தெருளு நாமரு பந்தரு மவ்வவர் செய்கை
கருது கின்றவை முடிக்குவன் காண்மரு தீசன் (18)
பவ்வ மாம்பிறப் பெழுவகைத் தோற்றத்தும் படிந்த
வவ்வு யிர்க்கெலா முயிர்க்குயி ராய்நிற்கு மமலன்
கவ்வு கின்றஞா னமுங்கரு மமுடன் காட்டிச்
செவ்வி தாகவே நடத்துவன் றிருமரு தீசன் (19)
பூமுதற் பஞ்ச பூதமொண் பருதி பூங்குவளை
காமுறுந் திங்கள் நல்லுயிர் கணிப்பில கோடி
யாமிவ் வெண்வகை யங்கமா மண்டபிண் டங்கள்
தாமு மேயென விச்சுவேச் சுரப்பெயர் தரித்து (20)
அண்ட மொன்றினொன் றமைந்தன வண்டபிண் டாண்டம்
பிண்ட வண்டத்திற் பிரமவண் டங்களு மனந்தம்
கண்ட தாரவன் பெருமையை விச்சுவக் கடவுள்
கொண்ட கோலமே சரவச ரங்களின் குழுவே (21)
சகல ரூபமாம் விச்சுவேச் சுரன்புயந் தழீஇக்கொண்
டகில கோடியு மீன்றன னந்தமா மாயை
பகரு மாயையைத் தனதுகட் டளைப்படி பணித்தான்
நிகரி லாதவன் மருதவ னத்துறை நிமலன் (22)
அண்ட மொன்றுதன் வடிவெனத் தனித்தனி யமைத்துக்
கொண்ட விச்சுவ மூர்த்திதன் னுடம்பினிற் குலவும்
பண்டை நாளுல கம்பதி நான்கையும் பதிந்த
துண்ட தோமுகப் பாதல வுலகமோ ரேழும் (23)
விரும்பு மேலுல கூரத்த * மாருக்க மேருப்
பெரும்ப டிக்கணே நின்றிடு மடிமுடி பிறங்கத்
தருங்கி ரிக்குண்மும் மண்டலஞ் சமைத்தவா தார
மொருங்கு மூவிரண் டுண்டுமேற் சுழிமுனை யுச்சி (24)
*மாருக்கம்= மார்க்கம்.
உச்சி மேற்குரு மண்டலந் துவாதசத் தோங்கு
மச்சு ழிப்பெயர் நாமமூ லச்சுட ரதுதான்
வைச்ச பிங்கலை யிடையிரு நாடியின் மாறித்
தைச்சு வாயுவை வாசிகொண் டூதினன் றாக்கி (25)
வானி லேற்றுகை யிரேசக மாத்திரை யெண்ணான்
கான பூரகம் வாங்குவ தெண்ணிரண் டாகும்
ஞான கும்பக நிறுத்துவ தறுபத்து நான்கு
மேனி வந்தொளிர் கிரணதா ரைச்சுடர் விளங்கி (26)
திருந்து மேருவுக் கெண்டிசை யுள்ளவோர் திக்கிற்
பொருந்து ஞானமூ லச்சுடர்க் கிரணங்கள் பொலிந்த
விருந்த புண்ணிய சிவதல மாயிரத் தெட்டுத்
தருந்த ரைக்கணே யிலிங்கரூ பங்களாய்ச் சமைந்த (27)
இன்ன தன்மையம் மேருவுக் கெண்டிசை யிடத்து
மன்னு மவ்வரை நடுவொன்று நவகண்ட வரைப்புந்
துன்னு கின்றன சுயம்புவா மிலிங்கங்க டோன்றி
அன்ன பண்புமே லுலகமோ ராறினு மமைந்த (28)
துதிக்க மண்முத லெட்டங் கவிச்சுவச் சொரூபன்
மதிக்கு நிட்டையின் மூலமாம் பேரொளி வளர்ந்து
கதிக்கு மேழுல கத்தினுங் கதிர்வடி விலிங்கம்
பதிக்கும் பண்புதொல் லுயிர்க்கெலாந் தனதருள் பலிப்ப (29)
சாற்று பொன்வரைத் தெக்கண சம்புநற் றீவில்
ஏற்ற மாந்தலத் தொவ்வொரு கிரணமே யிலிங்கத்
தோற்றந் தென்மரு தூர்ப்பதி யிலிங்கத்தொண் சுடர்கள்
போற்று மாயிரத் தெட்டுறப் பொலிந்ததே விசேடம் (30)
இந்த வண்டத்தி னியற்கைபோ லெண்ணிலி யண்டம்
வந்த வண்டபிண் டங்களு மப்படி வயங்கும்
அந்த வண்டங்க ளெவற்றினு மருதமா வடவி
நந்தி யூர்தியே சுயம்புலிங் கங்களாய் நண்ணும் (31)
தும்புத் தீவினி லாயிரத் தெண்சிவ தலங்க
ளும்பர் மாதவ முனிவரர் வந்தனைக் குரித்தாம்
நம்பி நற்றவம் புரிகுனர் வேண்டுவ நல்கும்
வெம்பு தீயரைக் காணவொண் ணாதெல விலக்குந் (32)
உத்த மர்க்குநல் லுத்தம வரம்பல வுதவும்
மத்தி மர்க்கெலாம் மத்திம பலத்தையே வழங்கும்
புத்தி கெட்டிடு மதன்மியர்க் கிடுக்கணே பொருத்துஞ்
சித்தி யவ்வவர் வினைப்படி சிவனருட் செய்கை (33)
ஆத லாற்றல மாயிரத் தெட்டினுந் தவங்க
ளேத மின்றியே செய்குனர்க் கின்பமே கொடுக்கும்
மாது பாகத்தன் மருதமா வனந்தெரி சித்தோர்
பாத கத்தவ ராயினும் பாதுகாத் தருளும் (34)
விளம்பு மிம்மரு தூருறை மூர்த்திதன் விசேட
முளம்பு குந்தருளு ணர்த்திய துரைத்தனன் சூதன்
வளம்பு குந்தசீர் நயிமிச வனத்துமா தவர்கள்
தளம்ப லின்றியே கம்பமும் புளகமுஞ் சார்ந்தார் (35)
திருச்சிற்றம்பலம்.
மூர்த்தி விசேடச் சருக்கம் முற்றும்.
19. ஆயிர முனிவர்க்குச் சாபம் வந்த சருக்கம்
கன்மனக் கயவனேன் கள்வ னென்னினுந்
தொன்மலப் பகைவிடத் துறந்து பேரின்ப
நன்மனம் பொலிதர ஞானம் போதிக்குந்
தென்மரு தூருறை சிவனைப் போற்றுவாம் (1)
அருந்ததி மணவனுக் கமைந்த சீடர்க
ளிருந்தவர் தங்கள்சே யிகலிற் காதிசேய்
தருந்தவ மகத்தவர் சார்கி லாரெனப்
பொருந்தவே சபித்தனன் புளிக ராகவே (2)
பயின்முனி வரர்தவம் பலித்த பண்புளோர்
வயினிகழ் சாபந்தான் வந்த தென்னென
நயிமிச வனத்துளார் நாடிக் கேட்டலு
மியலுணர் சூதனங் கியம்பு வானரோ (3)
இரவிதன் குலமுதன் மனுவென் பானவன்
மரபுளோ ரெண்ணிலர் மாலிற் காப்புறு
தரணிபர் தமிற்றிரி சங்கு வென்பவன்
விரவுநல் லிளமைபோய் விருத்த னாயினான் (4)
மகவரிச் சந்திரன் றனக்கு மாமுடி
தகமையாற் புனைந்துநீ தரணி யாள்கெனப்
புகழ்பட நிறுவினன் போற்றுந் தன்குலம்
பகர்குரு வசிட்டர்தாள் பணிந்து செப்புவான் (5)
ஐயநின் னடியனேன் ஆயுண் மூப்பினேன்
மெய்யனேன் மகவு மேதினி புரப்பயான்
செய்யவேண் டுவகடன் செய்து முற்றினேன்
உய்யவேண் டுவகட னொன்றுண் டுன்வயின் (6)
யாதெனிற் சொல்லுகே னினிது கேட்டியா
லோதுமிம் மானிட வுருவை யும்பர்தஞ்
சோதிசா லுருவெனத் தோன்றப் பண்ணுதி
மேதகு புட்பக விமான மேற்றுதி (7)
விண்ணவ ரெதிர்கொடு மேவப் பண்ணுதி
நண்ணுபு கற்பக நறுந்தண் பூமழை
மண்ணுல கினில்வரு டிக்கத் துந்துமி
தண்ணுமை முதலபல் லியந்த யங்கவே (8)
இணங்குகந் தருவர்யா ழிசைப யின்றிட
வணங்கெனு மரம்பைய ராடல் காண்வரக்
குணங்கொள்வா சவனெதிர் கொள்ள வேகிநான்
மணங்கிளர் பொன்னகர் வாழ வேண்டினேன் (9)
என்றுநற் றிரிசங்கு வியம்பக் கேட்டலு
மன்றலம் புனைசடை வகிட்டன் சொல்கின்றான்
நன்றுநீ சொல்லினை நடத்தும் தன்மைகே
ளொன்றுநல் வேள்வியோ ராண்டு ஞற்றவே (10)
மகத்தினுக் கியைந்தன மறைமொ ழிப்படி
யிகத்தினிற் பலபொரு ளீட்டி யும்பர்கள்
அகத்தினுக் குவகையுண் டாக்கி லன்னவர்
மிகத்தல விரும்பிநம் வேட்கை நல்குவார் (11)
என்னவே வசிட்டமா விருடி செப்பலும்
மன்னவன் மொழிகுவன் மதிய தொன் றிலென்
நன்னிலை வேள்வியை நடத்து வித்தெனை
யுன்னுபொன் னகரிடை யுய்ப்ப ருண்டரோ (12)
இத்தகை முனிவர ரிடத்திற் சென்றவர்
சித்தியாற் பொன்னகர் சேர்வன் பாரென
மத்தரிற் றிரிசங்கு மதிப்பு றாமலே
யுத்தமக் குருமுன முரைத்த காலையில் (13)
பருதியின் குலமுதற் பாரின் வேந்தர்கள்
குருமொழி திறம்பிடார் குறிப்பின் வைகினார்
வருதிநீ வசிட்டனை மாற்ற வல்லையோ
விருதியம் பினைகுரு வேறு நாட்டுதி (14)
வாழ்ந்தனை நீயென வசிட்டன் கோவைத்தீச்
சூழ்ந்தது வடவையிற் சொல்லற் பாலதோ
போழ்ந்துயிர்க் கோறல்செய் புலைஞர் தொண்டெனத்
தாழ்ந்துநீ போகெனச் சாப மீய்ந்தனன் (15)
புரவல னவ்வணம் புலைஞ னாகியே
பரவலர் தொழுகழற் பாத மேமுதற்
சிரதல வந்தமெய்த் தேசு நீங்கித்தன்
னுரவலி யடங்கிநல் லுரைம றந்தனன் (16)
இலங்குபொற் பணியெலா மிரும்பு போன்றன
துலங்கெழி லுடுக்கைபோய்த் துணிந்த சீரையாய்ப்
பொலங்கெழு முடம்புவெம் புலவு நாறவே
கலங்கினன் சிந்தனை கவினி கழ்ந்தனன் (17)
குருமொழி யிகழ்ந்திவன் கொண்ட கோலத்தைத்
தெருவிடைக் கண்டவர் சீசி யென்னவே
மருவுதன் கோயிலின் வாயில் புக்குழித்
தருகடை காக்குனர் தள்ளப் போயினான் (18)
ஓர்ந்தனன் வசிட்டனுக் குடைந்தி டைந்துகான்
சார்ந்தவன் காதிமன் றந்த கோசிகன்
சேர்ந்தன னரசிய றீர்ந்து மாதவங்
கூர்ந்தன னவனிடங் குறுக வெண்ணியே (19)
அத்திரி சங்குவா மரசன் யோகியர்
வித்தகன் கவுசிக வேத மாமுனி
பத்திரப் பன்மலர்ப் பதுமத் தூடுறக்
கைத்தலங் குவித்தவன் காலில் வீழ்ந்தனன் (20)
யாவனீ நம்வயி னீண்டை வந்ததென்
மேவுகை விளம்பென விளம்பு கின்றனன்
மாவகங் காமுனி வசிட்டன் சாபத்தாற்
பூவுல கரசுநான் புலைய னாயினேன் (21)
பொன்பொலி நகரிடை போதற் கெண்ணினேன்
பின்பொரு வச்சரம் போந்து பின்னென்றான்
அன்புசான் முனிவனுண் டளிப்ப னெற்கென
நின்பெயர் சொல்லினே னீச னாக்கினான் (22)
எனதுபேர் திரிசங்கு வென்று செப்பலு
மனமுவந் தாசிகள் வழங்கி யன்பனீ
யுனதுசா பந்துடைத் தொரு மதிக்குளே
புனிதமாம் பொன்னகர் புகுதப் பண்ணுகேன் (23)
அஞ்சனீ காக்குது மரசர் தீபமே
சஞ்சலம் விடுத்திநின் சாபந் தீர்ந்ததால்
வஞ்சக வசிட்டனென் வலிமைக் கொப்பனோ
வெஞ்சுவ னெனக்கவு சிகனி யம்பினான் (24)
செப்புமக் கவுசிகன் றேசி கன்மொழி
தப்புமத் தோடமூந் தழலிற் பஞ்சுபோல்
அப்பொடி யாக்குநல் லஞ்செ ழுத்தினைத்
தப்புறா மற்றிரி சங்குக் கோதினான் (25)
அஞ்செழுத் துச்சரித் தவனி ருந்தன
னெஞ்சுறத் திரிசங்கு நிமித்தங் கோசிகன்
விஞ்சைவல் லமையினால் வேள்வி முற்றிடச்
செஞ்சவே விருடியர்ச் சேர்க்க வெண்ணினான் (26)
தோமறு திரிசங்கு சுவர்க்கஞ் சேர்கநா
மோமவேள் வியைமுடித் துதவ வேண்டுமான்
மாமுனி வசிட்டன்றன் மைந்த ராயிரர்
சாமவே லையில்வரத் தவசி யீட்டுதி (27)
ஆகையா லவர்தமை யழைத்திங் கெய்தெனப்
போகவிட் டவன்சொலப் புலைய னும்பர்வாழ்
நாகமுற் றிடமகம் நாங்கள் செய்கிலே
மேகென வன்னவ ரிசைத்த தோதினான் (28)
பெருந்தழ லெனச்சினம் பிறந்து கோசிகன்
அருந்தவ ரிருந்துகா னடைந்து வேள்விக்குத்
தருந்தவ ரிழைத்தநீர் சாபங் கொண்மின்கள்
பொருந்துமுப் பவந்தொறும் புளிஞ ராகநீர் (29)
என்றலு மனைவரு மெழுந்து மாதவக்
குன்றெனு முமக்குநாங் குறைகள் செய்திலே
முன்றுடர் வினையென மொழிந்து போற்றினார்
நன்றென வோர்மொழி நல்கினானரோ (30)
ஆயிரம் பிறப்பினிற் புளிஞ ராய்த்திரிந்
தாயிரம் பவந்தொலைந் தந்த மாம்பவத்
தாயிரம் பெருகுமர்ச் சுனபு ரத்திலே
யாயிரம் வருடமுற் றருந்த வஞ்செய்வீர் (31)
செய்தவம் பலித்தபின் சிவனிம் மானிட
மெய்தருந் தேசிக வேடங் கொண்டுமக்
கெய்தரு முத்திசே ரின்ப நல்குமீ
துய்திற னும்பிறப் பொழிவ துண்மையே (32)
என்னுமுத் தரங்கொடுத் தெழுந்து கோசிகன்
றன்னுழைக் கேகின னென்னச் சாற்றிய
நன்னெறிச் சூதனை நயிமி சாடவி
மன்னெழின் முனிவரர் வணங்கிக் கூறுவார் (33)
ஏர்தரு கவுசிக னியற்று வேள்வியுட்
சார்திரி சங்குதன் சாபந் தீர்ந்ததுஞ்
சீர்கெழு துறக்கத்திற் சேர்ந்த வண்ணமுஞ்
சோர்வுறா துரையெனச் சூதன் சொல்கின்றான் (34)
கருடன துருவுளங் கருதி நிற்கவே
வருவிட மொழிந்துடல் வாழ்வு நல்கல்போற்
குருவருள் வடிவுளங் குறித்து நிற்கவே
யிருண்மல மொழித்துநீ டின்பத் துய்க்குமே (35)
தேசிகன் சொரூபமே சிவசொ ரூபமாந்
தேசிக னுள்ளமே சிவன துள்ளமாந்
தேசிகன் வாக்கியஞ் சிவன்சொல் வாக்கியந்
தேசிக னுண்டதே சிவநி வேதனம் (36)
ஊனிறை சோணித மூறிப் பாலதா
மான்முலை யல்லதப் பால ளிக்குமோ
கூன்முயற் கோடுகொன் குருவை யல்லது
நான்முகத் தவனுக்கு ஞான மெய்துமோ (37)
ஒருமொழி முப்பொரு ளுணரச் செப்புமக்
குருமொழி மறுப்பவன் கொடிய பாதகன்
பருவர லுழந்தெழு பவத்துஞ் சார்ந்துபின்
வெருவுவெந் நரகிடை வீழ்வ னூழிநாள் (38)
பூரணா வுணர்வினிற் பொருந்து மானந்த
பாரண னென்னும்பார்ப் பனம காமுனி
காரண குருவவன் கடைக்கட் பார்வையான்
மாரணப் பிணிச்சிவ னனற்கு மாய்ந்தவே (39)
பெரியவ ரருளினாற் பிறவி தீர்ந்துபோம்
பெரியவர் கோபத்தால் பிறக்குந் துன்பங்கள்
பெரியவர்க் கன்புளோர் பெரிய ராகுவர்
பெரியவ ரல்லது பிரம மில்லையே (40)
ஆதலால் வசிட்டனா மகண்ட ஞானிதன்
பாதமே திரிசங்கு பணிந்து போற்றியென்
பேதமை யாற்சொன்ன பிழைபொ றுத்தியென்
றோதவே சாபமன் றொழிவ துண்மையே (41)
அன்னமிட் டவர்மனை யகத்தி னிற்பொருள்
கன்னமிட் டவரெனக் கபிலை கொள்ளவே
தன்னதிங் கெனச்சமர் விளைத்த வன்னவ
னன்னவ னிடத்திவ னடைத றக்கதோ (42)
கோசிகன் சொன்முறை குறிக்கு மைந்தர்கள்
மாசடை மனத்தரை வரவ ழைத்துத்தான்
பேசுமந் திரம்பல பிதற்றி வேள்வியைப்
பூசுர ரின்றியே புகுந்து முற்றினான் (43)
அட்டமா சித்தியை யரனி டத்திலே
இட்டமாய்ப் பெற்றதன் னிடும்பை யாலவன்
றொட்டது பலிக்கையாற் றொடங்கும் வேள்வியி
னுட்டழ லிடத்திருந் துதித்த பூதங்கள் (44)
ஆடகக் குடங்கள்கொண் டண்டத் தெண்டிரை
நீடெழிற் கங்கைநீர் நிமிடத் துய்த்தனர்
தேடருந் தீர்த்தமத் திரிசங் கன்புலைப்
பீடைதீர்ந் தொழிகெனப் பேசி யாட்டினான் (45)
அப்புலை யுருவொழிந் தமரர் மேனியா
யொப்பிலாப் பலமணி யுடுக்கை யாதியாய்
மெய்ப்புனி தம்பெற விளக்கிப் பொன்முடி
யைப்புனைந் தனன்கவு சிகன வன்கையால் (46)
பின்னொரு மந்திரம் பேசி வேள்வியின்
மன்னுபொன் விமானமும் வரவ ழைத்தனன்
றன்னுகற் பகமலர்த் தொடையல் வேய்ந்தனன்
பொன்னெழிற் கந்தங்கள் பூசி விட்டனன் (47)
கடவுளர் சூழ்வரக் கறங்கு பல்லிய
நடனசங் கீதங்க ணல்ல ரம்பையார்
அடவுடன் பயின்றிட வனைத்தும் வேள்வியிற்
றிடமிகு கவுசிகன் சிருட்டித் தானரோ (48)
தருவிமா னந்திரி சங்கு மேற்கொடு
திருவளர் பொன்னகர் சேர்கென் றேவினான்
ஒருநிமி டத்தினி லும்ப ரூர்செல
வருதல்கண் டமரர்கள் மனங்கொ தித்தனர் (49)
குருமொழி திறம்புமக் கொடிய பாவிக்கு
வருபுலைப் பிறப்பினை மாற்றிக் கோசிகன்
சுருதியின் விதிமுறை துறந்து சொர்க்கவீ
டொருமதி மகம்புரிந் தும்பர்க் கேவுமோ (50)
என்னையித் துணையிவ னிடும்பை விண்ணுளோர்.
வென்னையீந் தோடவே வெல்ல வல்லனோ
பின்னையிங் கிவன்வலிப் பெருமை காண்குதும்
என்னவே விமானங்கீ ழிரங்கத் தள்ளினார் (51)
தலையது கீழுறத் தள்ள மானத்திற்
புலைபடு திரிசங்கு புலம்பி நெஞ்சக
மலைவுறக் கோசிகற் கபய மென்னவே
நிலையதந் தரத்திடை நின்னி லென்றனன் (52)
நன்றுநன் றிதுவென நகைத்து நான்புரி
வென்றியைக் காண்குவர் விண்ணு ளோரினி
மன்றலந் தாமரை வைகு வான்முத
லொன் றவே ழுலகமு முயிர டங்கலும் (53)
மேருவுங் கடல்களும் வெற்பு நேமியுங்
சார்பிர மாண்டமுஞ் சராச ரங்களும்
பாருமோர் நொடியினிற் படைப்பன் வேறெனத்
தாருகா வசுரனிற் றலைது ளுக்கினான் (54)
விண்டுவும் வேதனும் வேணி யீசனுங்
கண்டவர் வல்லவங் காட்டு வானென
மண்டலத் திறங்கினர் வரலுங் கோசிகன்
றெண்டனிட் டவருடன் செப்பு கின்றனன் (55)
தெரிதிரி சங்குதற் சேர்ந்த செய்கையும்
பரிவொடு விண்புகப் பண்ணும் வேள்வியும்
தரிபடா தமரர்க டள்ளும் வன்மையும்
அரியா னயனொடு மறிய வோதினான் (56)
மூவருங் கவுசிகன் முனிவு மாற்றினார்
பாவியை விண்புகப் படுதல் குற்றமாய்
மேவுக திரிசங்கு மீன்ப தத்திலே
யாவிசார் துறக்கவீ டஃதென் றாக்கினார் (57)
விண்ணவர் தம்மொடு வெறிப்பி லாவகை
நண்ணுதி கோசிக நயந்தி ருத்தியென்
றுண்ணிறை யன்புசா லுறவு கூட்டினர்
மண்ணிழி மூவரும் வானிற் புக்கனர் (58)
இயல்பினிற் சூதமா விருடி செப்பலும்
நயிமிச வனத்துளோர் நாங்க ளிக்கதை
பயில்வன கேட்டன பாவந் தீர்ந்தவெம்
முயிருடல் குளிர்ந்ததென் றுவகை பூத்தனர் (59)
திருச்சிற்றம்பலம்,
ஆயிரம் முனிவர்க்குச் சாபம் வந்த சருக்கம் முற்றும்,
20. ஆயிரம் முனிவர்க்குச் சாபம் தீர்ந்த சருக்கம்.
கரவு நாயகம் புகுதல்போற் சயவர்பாற் சென்றே
யிரவு நாயகம் யானெனச் சொல்லினு மென்னா
மரவு நாயக மட்டமா நாகமு மன்பாற்
பரவு நாயகர் நாகநா யகர்பதம் பணிவாம் (1)
தென்ன வன்பணி திருமரு தூர்சிவன் விசேடம்
பன்னு கின்றவுன் மொழியினை யுளத்தினிற் பதித்தே
மென்ன மாதவர் செப்பலும் புளகமுற் றிருந்தும்
மன்னு மன்புடைச் சூதமா முனிவரன் வழங்கும் (2)
தகுவ சிட்டர்தஞ் சீடரைக் கவுசிகன் சபிக்கப்
புததவ் வாயிர வேடசென் மங்களும் போக்கி
மிகுதி யந்தவெம் பவங்களு மொழிந்தநாள் வில்வத்
தொகுதி சூழ்தரு மருச்சுன புரமெதிர் தோன்ற (3)
ஐந்து பாதகம் புரிந்தவ ராயிரம் வேடர்
வந்து தென்மரு தூரிடை வசிதராய் வசித்தார்
இந்து சேகரன் கோயில்கண் டிறைஞ்சவு மில்லார்
முந்து மப்பதி மகிமையுங் கேட்கிலர் மூடர் (4)
பாவ மென்பதும் புண்ணிய மென்பதும் பாரார்
மேவு மானிடப் பிறவிசார் விலங்கெனு மிலேச்சர்
ஆவல் கொண்டெவர் பொருளையுங் கவர்ந்திடு மவத்தர்
வாவு தெண்டிரை ஞானதீர்த் தக்கரை மருங்கில் (5)
மடந்தெ ருத்திண்ணை தோப்புநன் மண்டப மேடை
மிடைந்து நந்தன வனத்தின்வே லியின்விற கொடிப்பர்
தடந்தி ருக்குளங் குறித்திலர் சலசரம் பிடிப்பர்
துடர்ந்து குக்கிடந் துருவைநீர்ப் பறவைக டுரப்பார் (6)
கோறல் செய்குவா ரிருவர்கு ழாங்குழாங் கூடிச்
சாறு செய்குவர் சோறுகா ரிறுங்குவெஞ் சாமை
நாறு பாண்டத்துத் தவிட்டொடுங் கிண்டுவர் நாய்க்கு
வேற ருத்துவர் மஞ்சின்பேர் சிக்குவர் விகடர் (7)
அன்ன ரிப்படித் தென்மரு தூர்வயி னகந்தை
யின்ன லீட்டுவெம் பாதக மிழைத்தன ரேனும்
நன்ன கர்க்குளே வாழுநர் நாவெடுத் தொன்றுஞ்
சொன்ன தில்லைநா கேச்சுரன் சொல்வரென் றிருந்தார் (8)
கருது மின்னகர்க் கோபுரங் கண்டுமண் டபத்திற்
சுருதி யந்தண ரருந்தவர் தமைக்கண்டுந் தொழாது
நிருதர் போலவே நிற்பர்கள் என்னினு மவ்வூர்
மருவு காட்சியே முன்னையூழ் வினையெலா மாய்த்த (9)
அன்று தங்குதற் கடுத்தவூர் யாதென நெறிப்பா
னின்ற பேர்தமை வினவலு நீவீர்தென் மருதூர்
சென்று றைந்துபின் னேகுதி ரென்றசொற் செவியி
னன்றெ னப்படக் கேட்கையாற் பாவங்க ணசித்த (10)
எந்த வூர்வயி னிறங்கிநா மிருந்தன மிருந்து
வந்த வூர்களின் மருதமா வனமொன்றே வசதி
சிந்தை கூர்ந்தன மென்றவர் சொலத்தெரி சிப்பா
வைந்து பாதகந் தீப்படு பஞ்சுபோ லவிந்த (11)
இருபத் தைந்துபேர் கடவுளர் மூழ்கின ரிடுபேர்
மருவப் பெற்றமெய்ஞ் ஞானதீர்த் தத்திலவ் வதிக
ருருவத் திற்படர் வேர்வையுந் தீரவுட் குளித்தார்
அருமைத் தாமென வுண்டன சமையலு மந்நீர் (12)
தெய்வத் தீர்த்தமென் றறிந்திலர் திளைக்கவுந் தெண்ணீர்
கைவைத் துண்ணவுஞ் சமைக்கவும் பொசிக்கவுங் கண்டே
மெய்வைக் குந்தவத் தன்மைபோற் பாவங்கள் விலகிச்
சைவப் பேறுபெற் றாரொரு தினத்திவ்வூர் தங்கி (13)
துனித விர்க்குமவ் வூர்வயின் றுயின்றனர் துயிலக்
கனவில் வெள்விடை யேகயி லையதெனக் கவுரி
தனதி டத்தொரு மரகதப் பொருப்பெனத் தானோர்
புனித மாணிக்க வரையென வலப்புறம் பொலிக (14)
துகிர்ம லைத்தலை முழுமதி நிலவொளிர் தோற்றம்
பகர்வெண் ணீற்றொளி பாலிதா முச்சுடர்ப் பண்பு
திகழு மம்பகக் கருணையங் கடற்றிரைத் தரங்கஞ்
சகம டங்கலுந் தழுவல்கண் டுயிர்ப்பயிர் தழைப்ப (15)
பவளக் காடெனப் படர்சடைப் பகீரதிக் கரையிற்
றவள வோடம்போற் றண்பிறை வெண்கதிர் தழைப்பக்
கவளக் கம்பமாத் துவள்கணப் போர்வையின் காட்சி
செவளத் தந்திவான் மறைத்தெழு கொண்டலைச் சிவண (16)
தங்கை மீதுறைந் தொளிர்சடை யறுகம்புற் நின்று
கங்கை யாற்றிடைக் கறங்குநீ ரருந்துகன் றுழையும்
பொங்கி ருஞ்சுடர்க் கணிச்சியும் புலியத ளுடையும்
தங்கு கந்தர நீலமுங் கனல்களுந் தயங்க (17)
பன்னு கூவிளங் கரந்தைவெண் டும்பைபைங் கொன்றை
மன்னு சல்லகி யென்புமா லிகைமலி யறுகு
மின்னு கொக்குவெண் சிறகர்தண் புன்னைதுள் ளெருக்குத்
துன்னு பன்மணிச் சேகரம் புனைமணந் துள்ள (18)
துன்று பாரிருட் பொருள்பல மறைக்குந்தான் றுலங்கு
மொன்று மின்றென வொளித்துத்தன் னுருவமுங் காட்டா
வென்றி யானவத் திமிரவெம் படலத்தை விழுங்கி
என்ற னந்தமொப் பன்றென வருட்சுட ரெறிப்ப (19)
விளங்கு வேதியர் வேதபா ராயணம் விளம்ப
களங்க மில்லதே வாரமே முதலிய கவின
வுளங்கொள் பண்ணொலி சைவமா தவர்கணின் றொலிப்பத்
துளங்கு பல்லிய முத்தியிற் கொண்டலிற் றுவைப்ப (20)
தேவர் மாதவ ராகரா வெனுமொலி திசையின்
மாவும் பாந்தளுஞ் சிரங்கம்பங் கொள்ளமந் தாரப்
பூவொ டைந்தருப் பூமழை பொழிதா மருத
மாவ னந்திகழ் சிவன்பெரும் பவனிவந் தனனால் (21)
பாத கம்புரி கிராதரா யிரவர்கண் படையின்
போது சொர்ப்பன வவத்தையே சாக்கிரம் பொலிகக்
காத லித்தரன் காட்சியைக் கண்டனர் களித்துச்
சீத வெண்ணெய்தீக் கண்டதொத் துருகினர் சிந்தை (22)
கண்க ளானந்தக் கலுழிநீர் பொழிதரக் கனிந்த
பண்கொ ளேழிசை மூவர்தே வாரமும் பாடி
யொண்க டற்கடைந் தெடுத்ததெள் ளமுதமுண் டவர்போ
னண்க ளிப்புற நடித்தனர் தோத்திர நவின்றார் (23)
ஆன காலையக் கனவிலே யவர்முக நோக்கி
ஞான நாயக நாகலிங் கேசனன் கியம்பு
மோன மாதவக் கவுசிகன் சாபத்தின் முன்னா
ளீன மாம்பவத் தெய்துபா வங்கணக் கில்லை (24)
மனமு தற்றிரி கரணவஞ் சமதொன்று மல்லீர்
கனதை நற்றவம் புரிந்தநீ ரூழ்வினை கலக்கப்
புனித நும்பெருந் தன்மைபோற் கிராதரிற் புகுந்து
வினைய ரந்தையாற் புலைபடு பிறப்பிடை வீழ்ந்தீர் (25)
முன்னை நல்வினைப் புண்ணியங் கைதர முன்னீர்
அன்ன நீண்டவெம் பவக்கடல் கடக்குநா ளெய்தி
மன்னு பாந்தளுக் கிறைபணி மாமரு தூரிற்
பின்ன மின்றியீண் டொருதினம் வசிக்கவும் பெற்றீர் (26)
ஆனந் தந்தருங் கயிலையீ தருந்தவர்க் கன்றி
யீனந் தங்குவோர் தங்கவு மிடங்கொடா திவ்வூர்
தானந் துஞ்சிவ ஞானியாக் கேவல்செய் தனவுண்
டூனந் தீர்த்துநந் திருவரு ளுதவவீண் டுற்றீர் (27)
வரும்வ ழிக்கணே தரிக்குமூர் வினவினீர் மருதூர்
திருவி ருக்குமூர் வசதியென் றறிந்துளோர் செப்பக்
கருது நற்செவி கேட்கவுங் கண்களி கூரப்
பெருகு புண்ணியத் தலமிது காணவும் பெற்றீர் (28)
சன்ன திக்கெதிர் வாவிநன் னீர்கொடு சமைத்து
மன்னு மத்தட மூழ்கியோர் பொழுதுண்டு வசித்தீர்
முன்ன டுத்தமும் மலப்பகை தீர்ந்தது முனிவன்
பன்னு சாபமும் விட்டது கெட்டது பாபம் (29)
மாம லர்ப்பது மத்தவி சிருந்தொளிர் மருதூர்
நாமங் கேட்கவுங் காணவுஞ் சொல்லவு நன்னீர்த்
தேம ணித்தடந் திளைத்துண்டு வேதியர் தெருவின்
ஓம மீதெழு புகைமணங் கொள்ளவு முயர்ந்தீர் (30)
பஞ்ச விந்தியத் தால்வந்து புண்ணியம் பலித்தல்
கொஞ்ச மோநம தாயிரத் தெண்கலை குலவும்
விஞ்சை லிங்கசன் னதியெதிர் கண்டதே விசேடம்
வஞ்ச மிக்கநும் பாதகம் வேரொடும் மாய்ந்த (31)
சோதி யம்பல மிந்நகர் துறக்கவீ டிணையோ
வோதி ருஞ்சிவ லோகமென் றெண்ணுதி ருவந்து
மாத வம்புரிந் திவணுறைந் திருத்திர்நாம் வருதுங்
கோதொ ழித்துஞா னந்தரக் குருவடி வாகி (32)
என்று தென்மரு தூர்நயி னார்தம்வாக் கியம்பி
நின்ற காலையிற் கவுசிக நிமலன்றாள் வணங்கி
யன்று நானிந்த முனிவரை யகந்தையாற் சபித்தே
னின்று தீர்த்தருள் செய்கவென் பிழைபொறுத் தென்றான் (33),
தவத்தி னோர்தமைச் சபித்ததா னீசெயுந் தவங்கள்
அவத்த மாயின திரிசங்கு மைந்தனா லரிதிற்
புவித்த லத்துநின் சாபநீக் குதியெனப் புலையேன்
சிவச்சு டர்க்கணென சாபமும் பாவமுந் தீர்ந்த (34)
எனவு ரைத்தந்தக் கவுசிகன் சாபந்தீர்ந் திவரை
மனதி லிப்பிழை பொறுத்தனுங் கடனென வணங்கித்
தனதி ருப்பினை யடைந்தனன் சகத்திர தவத்தோர்
அனைவ ருக்குநல் வரமரு தீசரன் றருளும் (35)
சைவ மாதவ ராதியித் தலத்திடைத் தவஞ்செய்
துய்ய நீவிர்க ளாயிரம் வருடமீண் டுறைந்து
மெய்வி ளங்கவ னைவரு முத்தியின் மேவச்
செய்வ துண்மைநா மென்றரன் சன்னதி சேர்ந்தான் (36)
வேறு
கனவி னிற்சிவ தெரிசனங் கண்டவர் கண்படையது நீங்கித்
தினக ரோதைய முன்னமே விழித்தனர் செழுஞ்சடை செங்காவிப்
புனைத ருந்துகில் கமண்டலந் தண்டுவெம் புவியுழைச் சருமாதி
யுனித வாதன வுருத்திர நேத்திர வொண்மணிச் செபமாலை (37)
பண்டு பூசித்த சிவலிங்கம் பாத்திரம் பதிந்தசா தனபண்டங்
கொண்ட மெய்தவப் பணிவிடை மைந்தர்கள் குறையின்றி மற்றேது
முண்டெ னக்கொடு தேடிவைத் தனவெலா மொருங்குவந் தனகண்டார்
மண்டு தீவினைக் கிராதராம் பிறப்பொரீஇ வந்தது தவவேடம் (38)
மிக்க வேதபா ராயண மாகமம் விளம்பருங் கலைஞானத்
*தக்க மாதிநற் சாத்திரம் புராணமுன் சாதித்த சிவயோகம்
புக்க தாமனு வாதியெண் ணெண்வகை பொருந்துசித் திகளியாவும்
ஒக்க வேமறந் திருந்தன வுணர்வுளே வுதித்திட முழுதோர்ந்தார் (39)
*தக்கம்= தர்க்கம்
குலவு காதெழிற் கந்தரஞ் சிரமுரங் கூர்கரங் கண்ணாக
விலகி வில்லுமி ழுருத்திர மணிப்பணி வியப்பொடு புனைந்தாராய்த்
தலைமை பெற்றமுன் நூல்புனை வைதிகச் சைவமா தவராகி
நிலவு கான்றெனப் பொலிதிரி புண்டர நீற்றொளி கவின்மல்க (40)
பேயி றங்குவ போலவந் திறங்குமப் பேதையா யிரம்பேரும்
மாயி ருஞ்சுடர்ப் பருதிவந் துதிக்கையின் வருந்தபோ தனராகி
யேயுஞ் சன்னதிக் கெதிர்சிவ தீர்த்தஞ்சார்ந் திருபத்தைந் திமையோருந்
தோயுந் தீர்த்தமென் றறிந்தவர் நாமங்கள் சொல்லிநீர் படிந்தாரே (41)
தீர்த்த மாடினர் காவியந் துகிலுடை செரித்தனர் பரிதிக்கு
நாத்தி ருந்தமந் திரஞ்சொலி யருக்கிய நல்கினர் நாணாளும்
மாத்த மாகிய வஞ்செழுத் துச்சரித் தணிகெழும் வெண்ணீறு
சாத்திப் பின்னனுட் டானமு முடித்தனர் சாதனந் திறம்பாமல் (42)
அஞ்செ ழுத்தையு மாயிரத் தெட்டுரு வமைத்தபின் னுளத்துள்ளே
சஞ்ச லத்தைவிட் டிலிங்கவா ராதனை சவுரமுன் சண்டாந்த
நெஞ்சி ருத்துபூ சனைபுரிந் தார்பண்டை நியதிவந் தனைமுற்றி
விஞ்சை யுத்தமர் சன்னதி வலம்வந்து விமலனைப் பணிந்தாரே (43)
இன்ன மாதவர் சன்னதிக்கு குடதிசை யிருந்தடா கஞ்சூழ
மன்னு சோலையி னெண்டிசைப் பாலகர் வகுத்தவா வியின்ஞாங்கர்
துன்னு தோப்பினிற் றூண்கிளர் மண்டபத் தொகுதியி னிதமாகும்
பன்ன சாலையி லிருந்தன ரருந்தவம் பலித்ததென் றவரெல்லாம் (44)
சாலைப் பண்ணை சூழ் தடமரு தூரில்வாழ் சதுமறை யவராதி
நாலு வர்ணமாம் பலகுடி மாந்தரு நண்ணினர் சிவன்கோயின்
மேலைக் கோபுர வாயிலிற் கூடியே வியந்தொரு மொழிவிண்டார்
கால மீதினிற் கேட்கிலங் காண்டிலந் தனியதி சயமென்று (45)
அழகு நங்கையு நாகநா யகரும்பொன் னணிவிடை மீதேறிப்
பழகுந் தேவர்க ளனைவருஞ் சூழ்வரப் பவனிவந் ததுங்கண்டே
மழக ளிற்றுமா முகன்குகன் மூடிக மயின்மிசை வரக்கண்டெங்
குழுவ ரம்பையர் நடஞ்செயக் கண்களி கூர்ந்துவீ தியிற்கண்டே (46)
காணுங் கண்களுக் கெத்துணை யதிசயக் காட்சிமா நாகேசர்
பூணும் பொற்பணி மணிச்சுடர்க் கெதிர்வெயிற் புங்கவன் கண்கூசு
நீணி லத்திலே பிறப்பையு மொழித்தனர் நிருமலன் பதம்பெற்றே
மானு மச்சிவ தெரிசனங் கனவிலே வரக்கண்டேம் யாமென்ன (47)
யாமுங் கண்டன மியாமுங்கண் டனமரு தீசர்தந் திருக்காட்சி
பூமி யுள்ள நாள் வந்ததித் தலங்கனாப் புதுமைநம் பொருட்டன்றாற்
றாமிவ் வூர்வயிற் றரித்தனர் நென்னலிற் றவமிலாப் புலைவேடர்க்
காமென் றெண்ணின மருக்கன்வந் தெழுமுன மருந்தபோ தனரானார் (48)
இத்த லத்துநா மியாவருங் கனவிலே யெம்பிரான் றிருக்காட்சி
கைத்த லத்துநன் னெல்லியங் கனியெனக் கண்டன ரிவ்வேடர்
சுத்த வைதிகச் சைவவந் தணர்களாய்த் தொன்முனிக் கணமாகி
யத்தன் சேவடிக் கன்பராய்த் தெரிசித்த வதிசயஞ் சொல்லற்றோ (49)
அங்கி யைக்கண்ட வெண்ணெய்போ லுருகினர் அழுதனர் தொழுதார்முன்
னெங்க ளைக்கவு சிகமுனி சபிக்கையா லிடர்ப்பிறப் பிடைவீழ்ந்தே
மங்க லம்புனை யழகிய நாயகி மணவநின் சரண்பெற்றே
மெங்க ளுக்கினிப் பிறப்பிறப் பில்லதோ ரின்பவீ டருள்கென்றார் (50)
கங்கை வார்சடை நாகநா யகரருட் கருணையங் கடலாகி
யங்க வர்க்கிடர்ப் பெரும்பவந் துடைத்தன ராயிரம் பருவத்துந்
தங்கி யித்தலத் தருந்தவஞ் செய்மின்க டனித்தமுத் தியைநல்க
வுங்கண் மானிட வுருக்கொடு வருதுமென் றுரைத்துடன் மறைந்தாரே (51)
குலவு தென்மரு தூருளார் யாமெலாங் கூடிநின் றிவைகண்டேம்
உலகி லெம்பிரான் கருணைபெற் றோர்களி லுயர்ந்தவ ரிவர்தாமே
மலைவு தீர்ந்தன நகருளோ ரனைவரும் வருதிர்மா தவர்தம்மை
யிலகு மன்பொடு காண்டுமென் றவரிடத் தெய்தியஞ் சலிசெய்தார் (52)
அஞ்சலித் தவர்க் காசிகண் மொழிந்தபின் னிம்முனிக் கணஞ்சொல்வார்
வஞ்ச மற்றநீர் திருமரு தூர்க்குளே வாசமுற் றிடப்பெற்றீர்
விஞ்சு தேவரே மானிட வுருக்கொடு மேவினீ ரிவ்வூர்க்கு
நெஞ்சி னட்பொடு காண்மின்க ளெங்களை நீவிருஞ் சிவரூபம் (53)
நென்னல் வந்ததுந் தரித்திவ ணுறைந்தது நிகழ்கன வினிற்காட்சி
மன்னு வெள்விடை மேற்சிவன் பவனியாய் வந்ததுந் தொழுதேத்து
முன்னுங் கோசிகன் சாபம்போய்ப் பண்டையின் முனிவரர் வடிவாகி
யின்ன றீர்ந்தது மிருடியர் மொழிந்தன ரிருந்தவூ ரவர்கேட்ப (54)
முனிவர் செப்பலு மருதமா வனத்துள்ளோர் மொழிகுவர் யாமுங்கள்
புனித மாமுகங் காண்வரப் பண்டுநாம் புரிந்தயோ கமதன்றோ
நனியிவ் வூர்வயி னிருந்துநற் றவஞ்செய்வீர் நாங்கணும் பணிசெய்வேம்
இனிமை கூர்ந்தநுங் கனவிற் காட்சியை யாமுங்கண் டனமென்றார் (55)
அந்த வாசகங் கேட்டலு முனிவரர் அதிகமா முகப்பெய்திக்
கந்த வார்குழ லழகிய நாயகி காதல னருளென்றே
சிந்தை கூர்தர வாழ்த்தியூ ரவர்கட்குத் திருவெண்ணீ றதுநல்கி
யிந்து சேகர னருள்பெற்றீர் நும்மனைக் கேகுவீ ரெனச்சொன்னார் (56)
மேவு தென்மரு தூர்நயி னார்பதம் விரும்புமவ் வூருள்ளோர்
யாவ ருந்தவ விருடியர் தவத்தினுக் கியைந்தன பணிசெய்யப்
பாவ சென்மம்போய் வாவுமித் தியப்பிர பஞ்சவா தனைபோக்கி
மாவ சிட்டர்தா ளிதையதா மரைமிசை வைத்தருந் தவஞ்செய்தார் (57)
என்னத் தொன்மறைப் பெருங்கடல் கடைந்ததி லெடுத்தருள் சிவஞானப்
பன்ன ருந்திருத் தெள்ளமு தத்தினைப் பாலிக்குங் குருவாகி
மன்னு நற்கதை பகர்ந்தனை சூதநீ மகிழ்ச்சிபெற் றனம்யாங்கள்
முன்ன மீனைப் பூசித்த பேறென மொழிந்தனர் முனிவோரே (58)
திருச்சிற்றம்பலம்.
ஆயிரம் முனிவர்க்கு சாபந்தீர்ந்த சருக்கம் முற்றும்,
21. ஆயிர முனிவர்க்குத் தசகாரியம் போதித்த சருக்கம்.
யோக நாயக ருத்தமி யழகிய நங்கை
பாக நாயகர் பருதிமேற் றிசைபடுஞ் செக்கர்
ஆக நாயக ரருச்சுன புரத்துறை யனந்த
நாக நாயகர் நடம்புரி செஞ்சர ணவில்வாம் (1)
ஆயி ரம்பெரு முனிவரோ ராயிரம் வருடந்
தூய தென்மரு தூர்வயின் றவஞ்செயச் சொல்லிப்
போயி லிங்கத்திற் கரந்தருள் புராரியங் கவர்க்குத்
தாயி னன்புற முத்தியைத் தந்தவா றென்னை (2)
இயம்பு கென்றந்த நயிமிச வனத்துளோ ரிசைப்ப
நயம்பு குந்தவச் சூதமா முனிவர னவிலும்
பயம்பு குந்தசெஞ் சடையினார் மானிடப் பண்பிற்
சுயம்பு ரூபமாய் வந்தவா தொன்மரு தூரில் (3)
வந்து கோயிலின் வாயிலோர் மண்டபத் திருப்ப
வந்த வூருறை யந்தண ரனைவருங் கண்டார்
இந்து சேகர ரிவரென வணங்கின ரிருக்கு
முந்து மாயிர முனிவரும் பணிந்தனர் முறையின் (4)
பிரமசா ரியாம் வடிவுகொண் டிருப்பர்பின் னொருநாள்
உரமுன் னூல் சிகை யொழிந்தசன் னாசியா யுறைவர்
வரமி குந்தியைந் தருள்வனப் பிரத்தரென் றிருப்பர்
திரமு றுங்கிர கத்தர்போற் கருமமுஞ் செய்வார் (5)
சடைமு டிக்குவர் சமைந்தகா வியந்துகி லுடுப்பர்
அடைய விட்டதி வன்னவாச் சிரமியர்க் கணிதோ
லுடையு டுப்பர்விட் டொழிந்துநிர் வாணியா யுறைவர்
அடையு நம்பெயர் மருதவ னேசரென் றறைவர் (6)
புதிய நல்லனம் பொசிக்கெனப் பொசிக்கிலே மென்பர்
மதியின் மண்டலத் தமுதுண் பேமென வசனிப்பர்
முதிய நூற்பொருண் மொழிகுவர் மோனமுற் றிருப்பர்
அதிச யந்தனைக் கண்டன ராயிரம் பெயரும் (7)
கனவில் வந்துதங் காட்சிதந் தருள்விழி காட்டி
வனவி லங்குறுங் கிராதராம் பிறப்பினை மாற்றித்
தனதன் வந்திக்குந் தென்மரு தூர்வயின் றவநாற்
றினமுஞ் செய்கமுன் பணித்தவ ரிவரெனத் தேறி (8)
வந்து தாண்மிசை யாயிர முனிவரும் வணங்கி
நந்தி மேல்வரு நம்பவோர் விண்ணப்பம் ஞானஞ்
சிந்தை கூர்ந்தருள் செய்வதெந் நாளெங்கள் செனனப்
பந்த வேலைவிட் டருட்கரை சேர்கநீர் பணிப்பீர் (9)
பழியைத் தீர்க்கெனத் திருவடிக் கடைக்கலம் பகர்ந்தார்
விழியி னீரூக வடியற்ற மரமென வீழ்ந்தார்
புழுதி மேற்பட வுடற்பிர தக்கணம் புரண்டார்
எழுதி ரஞ்சற்க வென்றனர் திருமரு தீசர் (10)
பருவ நான்கிற்கு மேலதாஞ் சத்திநி பாதம்
இருவி னைச்சமம் பிறந்தநீர் நுந்தமக் கீண்டு
திருவ ருட்பதஞ் சூட்டயாம் வந்தனஞ் சிந்தை
வெருவ லென்னைநீர் கேண்மின்க ளென்றரன் விளம்பும் (11)
பண்டை வேதமர கமஞ்சொலும் பதிபசு பாசம்
உண்டு முப்பத மவையினிற் பதியுயர் சிவமாந்
தொண்டெ னுப்பசு வனந்தபே தந்தொடர் பாசம்
மண்டு மாணவ மாயைவெங் கருமமும் மலமாம் (12)
பதியெ னுஞ்சிவ இலக்கணம் பல்லுயிர்த் தொகுதிக்
கதிக மாமுயி ராயுணர் வுக்குணர் வாகி
விதிவ ழாமலைங் கருமமும் வினைப்படி யருளாற்
சதிரு டன்புரந் தனைத்தினுந் தாங்கற நிற்கும் (13)
செறிப சுப்பளிங் கடுத்ததாஞ் சிற்றறி வுடைய
கிறிகை யின்றியா ணவத்தினிற் கேவல னாகு
நெறியி னிற்கரு விகளொடுஞ் சகலனாய் நிகழும்
அறிவு தந்தருள் அறிவிக்கச் சுத்தமுற் றமையும் (14)
பாசத் தன்மையோ வனாதியோ பசுக்களைப் பற்றி
மாசு பூத்திடு மாணவப் பெயருடை மலந்தர
னாசி லாமைசா ரிருவினை யொப்புற வகலு
நேச முத்தியிற் பிரபஞ்ச மறைப்பதாய் நிற்கும் (15)
அருவ மாய்த்தனு வாதியா யேகமாய்ச் சித்தாய்
மருவு நித்தமா யீசற்கோர் சத்தியாய் மயக்கா
யிருள்வி யாபக மாயிணை மாயையா மியற்கைக்
கரும நல்வினை தீவினை யருமையாய்க் காட்டும் (16)
ஆக மும்மலப் பாசமொன் றேயதன் பொதுப்பேர்
நாக நாயக ரருள்விழி திறக்கநா சமதாய்ப்
போகு மப்பசுப் போதம்யா னெனதெனும் பொய்மை
மாக மீதெழு மிரவிமுன் னிருளென மறையும் (17)
முத்தி சேர்தச விலக்கணங் கேண்மின்கள் முனிவர் -
தத்து வங்களி னுருவமத் தத்துவக் காட்சி
யத்தை நீக்குதத் துவசித்தி யாத்தும சொரூபம்
நித்த வாத்தும தெரிசனம் நீடதன் சுத்தி (18)
சிவசொ ரூபம்பின் சிவதெரி சனஞ்சிவ யோகம்
பவம றுஞ்சிவ போகமிப் பத்திலக் கணமாம்
இவை தெளிந்தவர் சச்சிதானந்தமா மிறைபாற்
பவமொ ழிந்திட வயிக்கம்பெற் றவரது பகர்கேம் (19)
அருவ மாயையே காரணந் தொண்ணூற்றொ டாறு
கருவி காரிய மதிலறு பதும்புறக் கருவி
பெருகு மண்முத னாதவந் தம்மெனப் பிறங்கி
வருவ நாலொன்ப தகக்கரு விகளென வழங்கும் (20)
இதன லாத்தும தத்துவ மிருபத்தி னான்கு
விதறு கால்முன வித்தியா தத்துவ மேழு
ததைத ருஞ்சிவ தத்துவ மைந்தவை சாற்றில்
அதர்க றந்தபா லாத்தும மன்றென வறிதிர் (21)
ஒத்த தத்துவப் பெயர்தொழில் காண்டலே யுருவஞ்
சித்த தன்றிவை சேடமென் பதேதெரி சனமாம்
தத்து வக்குப்பை கழன்றதே தத்துவ சுத்தி
நித்த வாத்தும விலக்கணங் கேண்மின்க ணீவிர் (22)
மண்மு தற்சிவ தத்துவ வரைக்குமோர் சடமாந்
தண்மை யீதென லொன்றொய்த் தள்ளிநா முணர்த்த
வுண்மை கண்டிவை யொழிந்திடு முணர்வதொன் றுண்டே
திண்மை யாமஃ தாத்தும சொரூபமாய்த் தெளிவீர் (23)
இருளு மாணவஞ் சார்ந்தந்த விருளதா மீசன்
அருளச் சார்ந்தபின் னருள்வடி வாகுமச் சார்வா
மிருமை நீத்துயிர் தனித்ததைக் கண்டவ ரில்லை
கருணை வைத்தருள் காட்டவே தன்னுருக் காணும் (24)
ககன மேயிட மிருளுக்குங் கதிரவ னொளிக்கும்
நிகழும் வேற்றுமை யின்றியொன் றாகிநிற் பதுபோற்
பகரு மாணவ மல்லைமற் றருளல்லைப் பார்நீ
திகழி ரண்டிற்கு மிடமென லுயிர்தெரி சனமாம் (25)
இடங்கொ டத்துவஞ் சடப்பகுத் தறிவதொன் றில்லை
நடங்கொள் சீவனோ வறிவிக்க வறிந்தது நாடி
லடங்க லுஞ்சிவ னருளுணர்த் திடுமதி லடங்கித்
தொடங்கு தன்செய லொழிவதே யாத்தும சுத்தி (26)
நயனங் காண்பன ஞாயிறு காட்டுமத் தகையோ
லுயிர்கள் சிற்றுணர் வுணர்த்திட வுணருமவ் வுயிர்க்குச்
செயன டத்துகைத் திருவருட் சத்திமுற் சிவனே
யுயருஞ் சாட்சியென் றறிந்தவன் சிவனுரு வுணர்ந்தோன் (27)
துளங்கு பானுவைக் கிரணமே தோற்றுவித் திடல்போற்
களங்க மில்லருள் காட்டவே யீசனைக் கண்டு
வளங்கொ டன்னிடத் தொளிர்வபோன் மன்னுயிர் முழுதும்
விளங்கக் காண்பது சிவதெரி சனமிது மெய்யே (28)
என்றுந் தொல்லுயிர் முழுவது மிறையவ னிடத்தே
நின்ற வவ்வுயி ரிடத்திலே நிறையிறைக் கிருப்புத்
துன்ற கண்டபூ ரணசச்சி தானந்த சொருபத்
தொன்றி ரண்டறக் கலந்துறை வதிசிவ யோகம் (29)
சிவனு மானந்தந் திருவரு ளானந்தஞ் சிவன்கொள்
நவசொ ரூபமு மானந்த நல்லுயிர்த் தொகுதி
யவனை யல்லது வேறிலா வானத்த மகண்ட
புவன மானந்த மென்றுணர்ந் ததுசிவ போகம் (30)
கலைவி சாரணை கருமஞ்சங் கற்பமாங் கருத்து
மலைவு செய்யுமும் மலக்கடற் சுழிபுக்கு வருந்த
லுலகில் யானென தென்றெழும் பொய்யினை யுவத்தல்
விலகி நல்லருட் செயல்வழி மேவலே முத்தி (31)
ஆண வங்கிள ரவத்தைபுக் கறிவழிந் தாலுங்
காண வந்தடர் மாயையிற் கலங்கினைந் தாலும்
பூண வந்தெழு கருமம்புக் கினுஞ்சிவ போதந்
தோண வந்தவா னந்தமே துகளறு முத்தி (32)
நிட்டை யிற்கர ணங்களை யடக்கியே நினைப்பு
விட்டி ருக்கவுங் கருத்தனோ விடையகஞ் சுகன்றான்
சுட்ட றுப்பதும் பணியற நிற்பதுந் துரிய
மிட்ட மாஞ்சிவ னருள்பெற்ற சீவருக் கில்லை (33)
பேய்பி டித்தவே பிடியுண்ட வுயிரம்மா னவர்க்குக்
காய மும்மையுங் கரந்துதன் செயலதே காட்டும்
ஆயுங் காலையத் தன்மைபோ லரனருள் வெளிப்பட்
டேயுஞ் சீவபே தங்கெடு மியானென தில்லை (34)
சிவனு ணர்த்திட வுணர்வன சீவபே தங்கள்
அவன ருட்செய லல்லது செயலில்லை யார்க்கும்
பவந டத்துகை யிருவினை யால்வரும் பண்பு
கவர்ம லங்களை நீக்கிநல் லருண்முத்தி காட்டும் (35)
பருதி வெய்யிலிற் றாரகை திமிரவெம்படல
முருவ வேற்றுமை தோன்றுமோ வொளியிலே யயிக்கம்
பெருகு பூரண சச்சிதானந்தமே பிறங்கின்
மருவு நல்லணுப் பாசமொன் றிரண்டற மறையும் (36)
அவமி கும்பஞ்ச பாதகஞ் செயுமவ ரேனுந்
தவமி குந்தமெய்ஞ் ஞானியர் தம்பணி சாரின்
உவமி னல்லருட் கங்கைதன் முழக்கங்கண் டோடிச்
சிவமெ னுஞ்சச்சி தானந்த வாழியிற் சேர்க்கும் (37)
கலைகள் கற்பதுந் தர்க்கங்கள் செய்வதுங் காண
வுலையி லெய்ப்பது மியானென தென்பது மொழித்துள்
ளலைவ கற்றியே குருசொல்வ தொருமொழி யந்த
நிலையி னிற்பதே திருவருட் பூரண நிஷ்டை (38)
திசைக டந்தொளிர் பூரணச் சிற்சுட ராகி
யசையும் ஞானிய ரியானென தற்றவ ரிவரின்
நசையு நெஞ்சினர்ப் பாவிக்கி லாவதென் னன்ன
மிசையு மாந்தரி னினைத்திடிற் கடும்பசி விடுமோ (39)
சித்தி யோகமே சிவனதைந் தெழுத்தையுச் சரிக்கை
பத்தி யோகமே பாவந்தீர்ந் திடல்பரை ஞானச்
சத்தி யோகமே பேரின்ப சாதன மாகும்
முத்தி யோகமா னந்தபூ ரணமதாய் முடியும் (40)
சரிதை யும்பெருங் கிரியையும் யோகமுஞ் சாதித்
தரிதெ னுந்தவ மியற்றவே ஞானமுண் டாகும்
பெரிது மாமரம் வளர்ப்பவர ரும்புபூப் பெருங்காய்
வருகொ ழுங்கனி மதுரபக் கணந்தரும் வகைபோல் (41)
சுகவு டம்பினிற் சுக்கில முள்ளநாள் வரைக்கும்
புகழ்மின் னார்கண்மே லாவலுண் டாமது போனால்
இகழ்வு தோன்றுமூ ழுள்ளமட் டுஞ்சகத் தாசை
மிகவுண் டாமந்த வினைவிட வாசையும் விடுமே (42)
ஆறு தாண்டுவா ரோடமாட் சேகரித் தவர்க்குக்
கூறு கூலிகைக் கொடுத்தந்த வோடமேற் கொண்டு
சேற லாங்கரை சேர்ந்தவன் குறித்தவூர் சென்றால்
வேறு மோடமேன் மீண்டுவந் தாலது வேண்டும் (43)
அன்ன தன்மைபோற் சரிதையுங் கிரியையு மனுட்டித்
தன்னு யோகமு மியற்றிமெய்ஞ் ஞானத்தை யுற்றேன்
பின்னு மம்முறை மூவனுட் டானமும் பிடிக்கி
லென்னை காரண ஞானமேற் சாதன மில்லை (44)
உடலு மிந்திய முங்கர ணங்களை யொடுக்கிக்
கடவு காலசை யாமலே கண்கள்வாய் முடி
யிடர்ப டாமலெவ் வறிவுதிக் கினுமரு தீசன்
தடமெ னத்தெரி சிப்பதே ஞானவா னந்தம் (45)
முந்து நூல்பகர் பதிபசு பாசமும் முதலும்
எந்தக் காலமு நீக்கமில் லாமலே யிருந்து
மந்த வாறுதோன் றாமலே மறைத்தவா ணவம்போல்
வந்த வானந்த நிறைவினுண் மறைந்ததே முத்தி (46)
வன்னித் தம்பன வல்லவர்க் கழல்சுடா வாறு
பன்ன ருஞ்சிவ ஞானியைப் பழவினை பற்றா
முன்னை யிங்குத்தீ பாண்டவா சந்தொழின் முடிந்த
பின்னைக் கும்பகா ரன்றிகி ரியின்விசைப் பெற்றி (47)
மன்ப தைக்குள்ளே விடையின்மே லுமையொடும் வரக்கண்
டின்ப மெய்துநல் லறுபத்து மூவர்போ லெவர்காண்
முன்பு சாத்திர முறையறிந் தென்னமுக் கணன்மே
லன்பி லாதவர்க் கருளிரங் காதென வறிதிர் (48)
கேவ லப்படு மவத்தையுங் கருவியின் கிரியை
மேவு கிற்பன சகலத்தும் வெறிபடும் விடைய
வாவ லற்றிடு சுத்ததத் துவஞ்சிவன் செயலாஞ்
சீவ னுக்கொரு செயலென்று மிலையெனத் தெளிவீர் (49)
அரனி டத்திலே சீவனுக் கியல்பதா மயிக்கஞ்
சரதஞ் சத்திய மத்தகை தெளிந்திடார் தன்மை
பரவு பாசமீ தறிவதே ஞானமிப் பவம்போய்ப்
பிரம வானந்த பூரணம் பெறுவதே பேறு (50)
மனமு தற்கர ணங்கள்சார் தொழில்வரை யுண்டோ
வெனதி யானெனும் போதமுற் றெழுவன வெல்லாம்
புனைம லர்க்கொன்றைச் சடையர்தந் திருவருட் போத
மெனவு ணர்த்திட வுணர்ந்தவர்க் கினிப்பிறப் பில்லை (51)
என்று தென்மரு தூர்ப்புயங் கேசர்போ திப்ப
நன்று நன்றென வாயிர முனிவரு ஞானம்
மன்று ளேநடம் புரிசரண் பணிந்தெதிர் வணங்கி
நின்று தோத்திர மியம்பினர் நெஞ்சுநெக் குருகி (52)
பந்த வேலையைக் கடந்தன மியாமெனப் பணிய
யிந்து சேகர ருமையொடும் விடைமிசை யேறி
வந்து காட்சிதந் தவர் தமை மானமீ தேற்றி
வந்த வானந்த வயிக்கமா முக்திதந் தருளி (53)
மன்னு தென்மரு தீச்சுர ரிலிங்கத்தில் மறைந்தார்
என்னச் சூதமா முனிவர னியம்பலு மிலங்கு
மன்ன மூர்திநேர் நயிமிச வடவிவாழ் முனிவர்
கன்ன லஞ்சுவை செவிகளா லுண்டெனக் களித்தார் (54)
துலங்கு மூவிலைச் சூலத்தர் தொன்மரு தூரர்
அலங்க லஞ்சடை வசிட்டர்தம் மைந்தரா யிரர்க்கும்
இலங்கு ஞானத்தைப் போதித்த வீச்சுர கீதை
கலங்க லின்றியே கற்றவர் முத்தியிற் களிப்பார் (55)
திருச்சிற்றம்பலம்.
ஆயிர முனிவர்க்குத் தசகாரியம் போதித்த சருக்கம் முற்றும்.
22. மருதவன வில்வவனமகிமைச் சருக்கம்.
துதி
வானாட ரேத்து மருதூரை வணங்கி லேனைத்
தானாகி வந்து தடுத்தாட்கொண்ட தம்பி ரானை
மீனாள் கருங்கண் மணவாளனை வேரி சார்தண்
பூனாளு மிட்டுப் பதம்பூசித்துப் போற்றல் செய்வாம் (1)
கந்தங் கிளர்தேன் கமழ்நைமிசக் காட்டில் வாழ்வு
கந்தோ ரொளிர்செஞ் சடைமாதவ ரால முண்டோன்
வந்திந்த வில்வ மருதோங்கு வனத்து வைகு
முந்தும் பரிசென்னெனச் சூதன்முற் காதை கூறும் (2)
மன்னுந் தவலோகத்து விண்ணவர் வந்து பாரிற்
பன்னுந் தலமாயிரத் தெட்டினும் பச்சை வண்ணக்
கன்னன்மொழி மங்கைதன் பங்கனைக் காண வந்தோர்
தென்னன்பெருங் கூடலிற் சொக்கரைச் சேவை செய்து (3)
குடபாற் பெருங்கூடல் கண்டேபின் குணக்கி னேகித்
தடமார் திருப்பூவண லிங்கத்தைச் சார்ந்தி றைஞ்சி
யிடமாதொடு வீரையின் மேவுசோ மேச ரைக்கண்
டுடனே யெமனேச் சுரர்பாத முவந்து போற்றி (4)
உய்கைத்தரு மங்கிளர் பாண்டிய னோங்கு நாட்டில்
வைகைக் கரைக்கு வடபால் வனமொன்று கண்டோர்
செய்கைச் சிருட்டிக் கிறையீசற்குச் செய்த சோலை
மெய்கற்பகச் சோலை யணங்கென வேதஞ் செப்பும் (5)
நெடிதோங்கிய பிப்பிலந் தொன்மர நிற்குஞ் சூதம்
வடிதேன்கொள் குடக்கனி யாசினி வாழை தாழை
படிசார்ந்தன கோழரைக் குங்குமம் பாடலந்தண்
கடிதூங்கெழிற் புன்னைநற் றென்னை கடம் புசம்பு (6)
அணிதந்தன பூக நெடும்பனை யத்தி யித்தி
கணிகொண் டொளிர் வேங்கைச தாபலங் காம்பு வேம்பு
திணிதென்றுள சிந்தகங் கோங்கெழிற் சீர்ந ரந்தம்
பணிசென் றடை சந்தனஞ் சண்பகம் பச்சை பன்னீர் (7)
மணமுந்திரி கைத்தரு மன்னுபே ரீஞ்சு நெல்லி
கணமாய்வளர் சாதிமந் தாரம்பொற் காஞ்சி யாத்தி
தணவங்கிளர் சோதி விருக்கஞ் சாயா விருக்கங்
குணமுந்திய கற்பகப் பாதவங் கோடி கோடி (8)
கிளர்பூமது வுண்டுவண் டேழிசை கீதம் பாட
வளர்தோகை மயூர மரம்பை மடந்தை மாரின்
விளருங் கனசாரி நடஞ்செய மிக்க கிள்ளைப்
புளருஞ்சொற் பயிற்றுவ தாளங்கள் போலு மாதோ (9)
தாட்டித்திமி தித்திமி யெனக்கவி தான்கு தித்துக்
கோட்டுப் பலவின் பழமத்தளங் கூனிக் கொட்ட
ஈட்டுஞ்சில மந்திகுந் திக்குந்தி லாகு போடக்
காட்டிற்கருங் கோகில மெச்சரிக் கையு ரைக்கும் (10)
அளிபாடிசைத் தண்டலை நாடக மாடரங்கிற்
களிகூர்ந்துட னேயர சுஞ்சிரக் கம்பங் கொள்ளத்
துளிதேன்மலர் சிந்துவ போற்பணி சூட்ட லேய்க்கும்
வளியென்னுமத் தென்றன்மின் னார்கண் மருங்கு லாவ (11)
கடிகொண்மலர்க் கொன்றை மகிழ்ந்துபொற் காசு வீச
வடிகொண்டதென் மாங்கனி சிந்துவ மந்தி யுண்ணும்
பொடிகொண்மக ரந்தந்தண் புன்னையம் போதி றைப்பக்
குடிகொண்டதச் சோலைம காமுனி கூட்ட மம்மா (12)
வடபாலது சாலக்கி ராமந்தென் வைகை யாறு
குடபாலியம னீச்சுரங் கீழ்க்கொழு வூர தெல்லை
கடவாமரு தூர்திசைக் குத்திசை காவ தங்காண்
நடமாடரன் சன்னதி யந்நகர் நாப்ப ணென்ப (13)
நகரிற் புறத்தெல்லை நந்தாவன நண்ணு பூங்கா
வகையப் பதிச்சுற்ற தெல்லா மருதத் தண்சோலை
மிகுநற் றிருச்சன் னதிசூழ்வர வில்வக் காடு
தகுமித் தலம்வந்து கண்டார் தவலோகத் தேவர் (14)
குடர்வெம் பசிகொண்டு பல்சீவனைக் கொன்று தின்றார்
மிடையுங் கடுந்தீ நரகேழினும் வீழ்த லெண்ணிப்
படருங் கொடுங்கான் விலங்கும் பறவைக் குழாமும்
மடருங் கனிகா யிலைமூல மம்போத ருந்தும் (15)
சிங்கத்தொடு தும்பியி னந்தழீஇச் சேர்ந்து வாழுங்
கங்குற் பணையிற் கிடையாட் டினையண்டர் காவரர்
வெங்கட்புலி யானினைக் கண்டெதிர் வீழ்ந்தி றைஞ்சுந்
தங்கைக் கிளைவாயின் முத்தங்கொளுஞ் சார்ப ருந்தும் (16)
தண்ணீரின் மச்சம் பிடித்துண்ணுமோ சைவக் கொக்கு
யெண்ணீதி திறம்பு மோபட்சியும் மேர்வி லங்குந்
தண்ணீர்மை யுணர்ந்து நடப்பன வாஞ்சர்வ சீவவர்க்கம்
வண்ணீர்மை விளங்கு மருதீசர் மகத்து வத்தால் (17)
வந்தார் தவலோகத்து விண்ணவர் மாந்தர் தம்மின்
முந்தா ரணப்பூ சரர்வேட முயன்று கொண்டார்
சந்தார் மருதூரை வலங்கொடு தாழ்ந்தி றைஞ்சி
நந்தார் தடஞான வாவித்துறை நன்னீர் மூழ்கி (18)
நயினார்திருக் கோயின்முன் விண்ணவர் நாளும் வைக
மயனார் செயுமா யிரக்கான் மணிமண் டபத்தில்
வியனார் புலிக்காலர் பதஞ்சலி வேண்டி நின்று
பயினான் மறையுந் தொழுமைந்து பதஞ் செபித்து (19)
இயமன் னியமாதி யட்டாங்க வியோக சித்திச்
செயலங்க முன்னேழு முடித்தபின் செய்ச மாதி
நயனம்மிரண் டுஞ்சமன் சேர்முனை நாசி யின்கீழ்ப்
பயனங்குலி பன்னிரண் டெல்லையிற் பார்வை நாட்டி (20)
பகர்மும்மலப் பாசத்திற் சிந்தனை பாய்தன் மாற்றிப்
புகலுஞ்சிவ பூரண வாரணப் போத நல்கி
மிகுநல்லருட் பிற்படத் தாடலை மேவுந் தன்மை
யகமென்ன தெனுஞ்சுட் டறப்பணி யற்றி ருந்தார் (21)
நினைப்புமறப் புங்குடி போகிய நிட்டை முற்றித்
தனைத்தந்தெனைக் கொண்டன னென்றவர் தம்மிற் றாமே
யினப்பண்பொடு பேசியன் னோர்மரு தீசர் கோயி
லனைத்தும்பிர தக்கண மாகவந் தஞ்ச லித்தார் (22)
அழல்கண்ட வெண்ணெய்க் கிணையாகு மானந்தக் கண்ணீர்
விழைவுள்ள மன்பாற் றொழுதாடினர் வேத னென்பான்
றொழவுந் தெரிசிக்கவு மெத்தவுஞ் சொற்கை கண்வாய்
பழகப் பதினாயிரந் தந்திலன் பாவி யென்பார் (23)
இவ்வண்ணமந் தத்தவ லோகமுற் றெய்துந்தேவர்
செவ்வண்ணம் பெற்ற மருதீசரைச் சேவை செய்து
முய்வண்ண மாக வுறைந்தார்பத் தாண்டவ் வூரில்
வெவ்வண்ணவ மாகுந்தவப் பால்பெற்ற மேன்மை கண்டார் (24)
தென்மாமரு தூரிற் பிறக்கநாட் சென்றி றக்க
மன்மாதவம் பண்ண வெழுத்தைந்தும் வாய்மை கூறப்
பொன்மாமணிக் கோயில்சூழ் போதப் புராணங் கேட்க
மின்மானுமத் தீவவா ராதனை வேளை காண (25)
கறைக்கண்டர் தென்மாமரு தூரெல்லை காவ தத்தி
லிறக்கும்பிறக் குமுயிர்த் தோற்றங்க ளேழ்வ கைக்குஞ்
சிறக்குந்தனி முத்தியுண் டாமெனச் செய்பு ராண
நிறைக்குங்கதை கேட்கப்பெற் றார்சிவ நேச முற்றார் (26)
சுரவாசிரி யன்மரு தூர்வந்து தோன்றத் தேவர்
பரவாவிரு சேவடி போற்றிப் பணிந்து நின்றார்
திரவாசி பகர்ந்திருப் பீரெனச் செப்ப நீர்தாம்
வரவாமரு தூர்க்கெய்திப் புண்ணியம் வாய்த்த தென்றார் (27)
மருதும்பெரு வில்வமு மிந்நகர் வந்த தென்னோ
குருவிங்கருள் கென்றனர் மந்திரி கூறு கிற்பான்
றருசத்திய லோகமு னிக்கணஞ் சார்ந்து வேதன்
றிருமெல்லடி சென்றுவ ணங்கலுஞ் சிந்தை கூர்ந்து (28)
மிகுமாதவர் வந்ததென் னென்றந்த வேதன் கேட்பத்
தகுமாறொரு நல்வரம் வேண்டினஞ் சாற்று கின்றேம்
பகுபற்பல யோனியிற் சார்ந்து பவத்தி னொந்தெம்
புகுநல்ல மரத்தினிற் பாவம் பொருந்தல் காணேம் (29)
மற்றைப் பிற்பய னென்னை மரப்பி றப்பி
னொற்றைப் பிறப்பெய்தி நன்மாதவர்க் கோங்கு நீழன்
முற்றக் கொடுக்கச் சிவபூஜை முயற்சி யுள்ளோர்
நற்றத் தகுபத் திரம்போது நயந்தெ டுப்ப (30)
ஈசற்கினி தாகுநல் லோர்க ளிருக்கு மூரில்
வாசிக்க நற்புண்ணிய ரந்நிழல் வந்தி ருப்ப
நேசித் திடும்பிறப் பொன்றதே நீங்குங் காலை
யாசற்ற முத்தி பெறச்செய்கென் றடைந்த னம்யாம் (31)
என்னத் தவத்தோ ரிவைகூற விரங்கி வேதன்
பன்னுற் றனன் பூமி படைத்தநாட் பண்டை யவ்வூர்
மின்னைச் சிரிக்குஞ் சிவச்சோதி விளங்க லிங்க
முன்னைக் கலையா யிரத்தெட்டு முளைத்தெ ழுந்த (32)
அந்தப் பதிக்கண் மருதாடவி யாக வுந்தண்
முந்தற் புதவில்வக் காடாயு முளைத்தி ருப்பீர்
இந்தப்பிறப் பொன்றுசென் றான்முத்தி யெய்து கிற்பீர்
சிந்தைத்துயர் தீர்கவென் றேயயன் சென்மித் தானால் (33)
அம்மா முனிவோர் பிறந்தாரம் மரங்க ளாகிச்
செம்மா மருதூரென்று நாமந் திருந்திப் பின்னு
மிம்மா நிலம்வில்வ வனமென்று மேத்து கிற்குஞ்
சும்மாவுரைத் தேனல்ல வானந்தச் சோதி சாட்சி (34)
ஈதன் றியுமந்த ரங்கத்தி லிசைப்ப துண்டு
காதந்தரு மெல்லையி லேழ்வகைக் காண்பி றப்பிற்
போதும்முயிர் யாவையு முத்தி பொருந்த றிண்ண
மோதுண்மை யென்றே மறையண்ண லுரைத்து விட்டான் (35)
இந்தக் கதைமந் திரிகூற விருந்த தேவர்
வந்தித்து வணங்கினர் மால்விடை மீது தோன்ற
வந்திப்புது வண்ணனைக் கண்டடடி யஞ்ச லிப்பீர்
சிந்தித்தன பெற்றிருப் பீருங்கள் சிந்தை கூர (36)
திருவைந் தெழுத்தா யிரத்தெட்டுச் செபஞ்சே பித்துத்
தருசன் னதியைப் பிரதக்கணந் தான்பு ரிந்து
வருதீவ வாராதனை கண்டு வணங்கி வாழ்த்தி
யொருசந்தி யோர்மண்டலந் தான்கனி யுண்டு கொண்டு (37)
இத்தன்மை நீவிர் விரதம்புரிந் ஈண்டி ருக்கக்
கத்தன்மரு தீசனென் றூர்ந்தெழிற் காட்சி தந்து
நித்தந்தரு சித்தியு முத்தியு நீட ளிப்பன்
சுத்தம்பெறு வீரென மந்திரி சொல்லி னானால் (38)
சரதங்குருச் சொன்முறை நற்றவ லோகத் தேவர்
விர தம்புரிந் தார்மழ வெள்விடை மீதி லேறி
வரதன் வரக்கண்டு வணங்கினர் வாழ்த்தி நின்றார்
புரவந்தகன் வேண்டுவ தென்னெனப் போற்றிச் சொல்வார் (39)
தண்ணம் பிறைவேணி யந்தவ லோக மெல்லாம்
மண்ணம் பரமுள்ள நாள்பொன் மலரப் பதத்தி
னண்ணுங் கருத்து மறவாமை நற்பத்தி பூணப்
பண்ணென் றுரைத்துப் பணிந்தார் மலப்பற்று நீங்க (40)
செறிமுச்சுட ரம்பகன் றென்மரு தீசன் செப்பு
மறிவுக் கறிவாகி யிருந்துமக் கன்பு தந்தேம்
பிறிகிற்ப தில்லைநினைக் கும்வரம் பெற்றி ருப்பீர்
நெறிநற்றவ லோகத்துச் சேருதிர் நீவி ரென்றான் (41)
தாளைப் பணிந்தா ரிமையோர் தவலோகஞ் சாரா
வேளைப்பொடித் தார்மறைந் தாரிந்த மேன்மை யெல்லா
நீளப்பகர்ந் தான்றவச் சூதனன் னேசம் பெற்றார்
வாளைத் தடஞ் சூழ் நிமிசாடவி மாதவத் தோர் (42)
திருச்சிற்றம்பலம்.
மருதவன வில்வவன மகிமைச் சருக்கம் முற்றும்.
23. மாணிபத்திரன் வரம்பெற்ற சருக்கம்,
பிருதிவி முதல நாதமீ றாகப் பிறங்குதொன் மாயைவெங் கரும
மிருண்மல நீங்கி யுயிர்வெளிப் படுத்தி யானென தென்பது மொழித்துத்
திருவரு ளுணர்த்துந் தன்மையுங் காட்டிச் சீவபோ தச்செயல் விலக்கி
வருபவந் தீர்த்து நம்பினர்க் கின்பம் வழங்குநா கேசரைப் பணிவாம் (1)
பின்னரு மந்த முனிவரர் மருதூர்ப் பிஞ்ஞகன் சரித்திர முளதே
லன்னவை முழுதுங் கேட்கவென் றெங்கட் கன்புள தென்னவச் சூதன்
மன்னுகாந் தருவ வுலகினுக் கிறைவன் மாணிபத் திரனுப நிடதம்
பன்னுதற் கரிதாந் தென்மரு தீசற் பணிந்தவன் பெற்றதைப் பகரும் (2)
வாய்ந்தகாந் தருவ வுலகினுக் கரசன் மாணிபத் திரனெனும் பெயரோ
னேய்ந்தன வுலகத் தியற்கையைக் கருதி லின்பமுந் துன்பமு முடைந்து
மாய்ந்தன பிறக்கும் பிறந்தன மாயும் வாழ்க்கையும் வறுமையு நிலையன்
றாய்ந்தவர்க் கெல்லாம் பொய்யதா மென்றே யருந்தவந் துடங்கவென் றெண்ணி (3)
தருமநீ டருத்தங் காமிய முனிவர் தமதுவாக் கியமுறை கேட்பன்
கருதுயிர்க் கோறல் களவுகட் காமங் கழறுபொய் பகர்ந்திடல் கருத்தின்
மருவுவெங் காதல் சினமுலோ பந்தீ மச்சர மதம்படா மோக
மெருவுசங் கற்பஞ் செய்குவன் றரும மொழிவுறா துஞற்றவெண் ணுவனால் (4)
இத்தகை கருதி நன்னெறி நடக்க வெண்ணுவன் மனமொருப் படாமே
தத்துவநீ ரிடையிற் படுசுழி சூறைச் சதாகதிப் பம்பரம் போலே
வைத்தவந் நிலையி னின்றிடா தலைந்து வழுவலாற் புண்ணி யகரும
மொத்திரா வண்ண மொன்றையுன் னிடவே றொன்றதாயத் திறம்பிநெஞ் சுலைவன் (5)
மாதவந் தொடங்கித் திரவயி ராக்ய வன்மைசா திக்குமவ் வளவிற்
பாதகம் வந்து புகுந்துளந் துளங்கிப் பரந்துநெஞ் சுழலுமந் நாளிற்
கோதமன் வரலுங் கண்டபடி தொழுது கூறினன் றன்மனக் கவலை
யாதவ னுணர்ந்து விளம்புறு முன்னா லாவதோ மனத்தினை யடக்க (6)
உளத்தினை யடக்கத் தவம்புரி வன்மை யொண்ணுமோ வரியயற் கேனுஞ்
சளத்தினைச் செய்யு மாயையா தென்னிற் றன்மன மன்றிவே றுண்டோ
கிளத்துமம் மாயை குருவினா லடங்குங் கிளர்குரு வுனக்கெவ ரென்னில்
வளத்ததென் மருதூர் ஞானதே சிகரான் மனப்பகை தீருமென் றுரைத்து (7)
பின்னுமக் கோத மன்மொழி கிற்கும் பெருமைசா லெழின்மரு தூரிற்
சன்னதி முன்னர் நாகநீர்ப் பொய்கை தன்னிலோ ராண்டதிற் படிந்து
பன்னனுட்டான முடித்துநீ றிட்டுப் பார்த்திப விலிங்கம்பூ சித்துச்
சென்னியஞ் சடையான் கோயில்சூழ் வந்து தீபவா ராதனை கண்டு (8)
தானமீ ரெட்டுஞ் செய்தொரு சந்தி சாற்றுபா யஸமினி தருந்தி
வானவர் களிக்கும் விரதம தாற்றின் மால்விடை மீதரன் வந்தே
யானென தென்னுஞ் செருக்கினை மாற்றி யீரிரு பாதமு மியம்பி
ஞானவா னந்தந் தருவனென் றுரைத்து நன்முனி போயின னன்றே (9)
மாமுனி யுரைத்த வண்ணங்காந் தருவ மாணிபத் திரன்மரு தூரி
னாமநீர் நாகத் தடம்படிந் தரற்கு நல்லருச் சனைபுரிந் தேத்திக்
கோமள வல்லி மணவனை மகிழ்ந்து கோயில்சூழ் வலங்கொடு வணங்கு
நேமமோர் வருடஞ் சென்றபின் விடைமே னிருமலன் றந்தனன் காட்சி (10)
கண்டுகண் களித்து மாணிபத் திரன்செங் கதிர்வெயில் வெண்ணெய்போ லுருகி
யண்டர்நா யகனே யென்றடி வணங்கி யறைவன விரதமாங் கியற்றின்
மண்டுமென் மனமா மாயைவந் தலைப்ப வருவிப ரீதங்க ளனந்த
மெண்டருந் தருமம் புரிகவந் தடுப்ப தெத்தனை பாவமென் செய்கேன் (11)
புண்ணிய விரதம் புரியுமத் தினத்திற் புகுங்கன வினிற்புலை மாதா
நண்ணுறுங் கலவி யனுபவந் தோன்று நயந்துநன் மாகநீ ராடி
லெண்ணுத லின்றிப் பூத்தமங் கையர்பா லின்பமுற் றிடமன மிசையுங்
கண்ணுத லுனதஞ் செழுத்தைநான் செபிக்கக் கண்ணுறக் கங்கொடு மறக்கும் (12)
இப்படி யெந்தத் தவம்புரிந் தாலு மெண்ணரும் பாவமுற் றேறும்
அப்படி யலையு மனமொரு நிலைக்கே யடக்கிநீ தருகவென் றிசைத்தேன்
மெய்ப்படி கோத மன்னிடத் தன்னோன் வியன்மரு தீசன்றா ளிறைஞ்சிற்
செப்புசற் குருவாய் நின்மன மடங்கத் திருத்துவ னென்றருள் செய்தான் (13)
ஆதலி னுனது பதமல ரடைந்தே னடியனே னென்றடி தொழலு
மாதொரு பாகன் கழறுவ னந்தோ வன்மைசா தித்தனை சீவ
போதமோ மனத்தின் றொழிலினை யடக்கும் பொருந்தெம தருட்செயல் காண்டி
யேதமொன் றில்லை யானென தென்னு மிருசெருக் கையுமொழித் திருத்தி (14)
எத்தொழில் புரிதி யத்தொழின் முழுது மெமதருட் செயலெனக் கண்டால்
உத்தமத் தொழிலே நடப்பன காண்டி யுளமொருப் படுந்தவ முஞற்றிற்
பெத்தகே வலத்துஞ் சகலத்துஞ் சுத்தப் பெருமைசா ரிடத்தினு நம்பால்
வைத்தநல் லருளின் செயலதே யன்றி மற்றுநின் செயலிலை மைந்தா (15)
கண்ணொளி யதனைக் கதிரொளி கவர்ந்து காணுங்கண் ணனைத்திற்குங் காட்டும்
வண்ணம தெனநந் திருவரு ளுணர்ந்த மன்னுயிர் காண்பன வனைத்து
மெண்ணமற் றிருத்தி யென்றரன் சொல்ல விருவினை யெற்கிலா தரனே
அண்ணலின் றுயர்ந்தேன் அரகரா வென்றா னன்புளோன் மாணிபத் திரனே (16)
தென்மரு தீசன் மாணிபத் திரற்குச் சேறிநின் னுலகினுக் கெனவே
நன்மைசால் விடைதந் தேகெனச் சென்றான் ஞானச்செஞ் சுடரெனு மிலிங்கந்
தன்மனை யாகப் புகுந்ததிற் கரந்தான் றற்பர னென்னவச் சூதன்
பன்முனி வருக்குப் பகர்ந்தன னவரும் பரமபோ தகமெனப் பணிந்தார் (17)
இவ்வகை ஞான மாணிபத் திரன்பெற் றெய்திய கதையினை யெழுதிச்
செவ்வையிற் படிப்பார் செவியுறக் கேட்பார் தெளிவொடு கற்றபேர் இகத்துத்
தவ்வைதீர்ந் தின்பச் செல்வமுற் றிருப்பார் தழைக்குவர் துறக்கவீ டடைந்து
பௌவம தென்னும் பவத்துயர் கடந்து பரமசா யுச்சியம் பெறுவார் (18)
திருச்சிற்றம்பலம்.
மாணிபத்திரன் வரம்பெற்ற சுருக்கம் முற்றும்,
24. அகத்தியச் சருக்கம்.
புலகமே நெல்லாகப் பொருந்துமிசெந் தவிடுமுளை
குலவியதண் டுலமறைத்துக் கொண்டதனைத் தீட்டுவர்போ
லுலகுயிர்க்கு மும்மலமு மொழிந்தருளின் வடிவாக்கி
யிலகுமரு தூரீச னிணைமலர்த்தாள் வணங்குவாம் (1)
பாதமலர் தொழுமாணி பத்திரற்கு மருதீசன்
ஏதமெலாந் தீர்த்ததுபோ லின்னுமுள தேற்சொல்வீர்
சூதரே யெனவினவத் தொன்னயிமி சாடவியின்
மாதவர்தம் மனங்களிப்ப மகிழ்ந்துபின்னுங் கூறுவான் (2)
முந்துலகிற் பன்மலைக்கு முதலரசு மேருகிரி
யெந்தவுல குந்தாங்கி யிருக்கின்ற வாதாரஞ்
சந்திரன்வெங் கதிர்ப்பருதி தாரகைசூழ் வருகின்ற
வந்தமலை யுடனிகலி யறவளர்ந்த தணிவிந்தம் (3)
மேலவரைப் பகைத்திகலி விபரீத முழுமூடர்
சாலமகத் துவங்காட்டுந் தன்மைபோல் விந்தமலை
காலமுறும் பரிதிபாற் கலைத்திங்கண் முதற்கிரக
மேலவுல வுறுங்ககன வெளிவீதி யடைத்ததால் (4)
கதிருதய மத்தமனங் காணாமே கடவுளர்கள்
முதுமறையந் தரகமன முனித்தொகுதி கந்தருவர்
விதிமுறையிற் புரிநியம விரதமுறை திறம்பினரான்
மதிமருண்டங் கனைவோரும் வானுலகம் பலகடந்து (5)
மறைபுகல்சத் தியவுலகின் மண்பொதுத்தந் தையைவணங்கி
முறையிட்டார் விந்தகிரி முரணிவட வரைக்கிணையாய்
நிறையவளர்ந் தேககன நெடுவீதி யடைபட்டுச்
சிறையிழந்த பறவையெனந் திகைத்தின்றோம் வழிதேடி (6)
சந்திவிர தமதொழிந்து தவமிழந்தேங் கருணைபுரிந்
திந்தவிப ரீதமகற் றிடுகவென்றார் திசைவதனன்
வந்துபகர்ந் தவர்க்கிரங்கி மயக்கமொழித் திடுதுமெனப்
பைந்துளவோன் வைகுண்ட பதமடைந்தா னவரோடும் (7)
விந்தகிரி மேருவுடன் விகடித்து வளர்ந்ததுவு
முந்தமரர் முனிவரர்தம் முயற்சியுறு தவமிழந்து
சிந்தைகலங் குவதுமயன் செப்பவுணர்ந் தனனெடுமால்
வந்தவர்தம் முடனேகி மாகயிலைப் பொருப்படைந்தான் (8)
பல்லுயிர்க்கு மலபாகப் பருவமாம் பக்குவத்தி
லெல்லையில்லா வானந்த வின்பரசந் தருமவனுந்
தொல்லுலக நாயகனுஞ் சோதிமதிச் சுடர்வன்னி
யெல்லொடுமூ வம்பகனு மெனுமரனைக் கண்டார்கள் (9)
பருதிகண்ட கமலமும் பசுங்கமலச் சார்சுரும்புங்
கருதுபுயல் கண்டசிறைக் களிமயிலு மெனமகிழ்ந்து
கருதிமுடி வுபநிடதச் சுடரேயென் றடிவணங்கி
வரு துயர்விண் ணவரடைந்து வந்தவகை மாலுரைப்பான் (10)
ஐந்துமுகத் திருவரசே யண்ணலே நின்னடிக்கீழ்
வந்தடைந்தார் விண்ணவரு மாதவரு மவர்க்கபயந்
தந்துநீ புரத்தியெனிற் றடமேரு வுடனிகலி
விந்தமலை விசும்படைத்த விபரீதந் தீருமே (11)
என்னவிண்டு மொழியலுமே யீசனப யஞ்சாற்றி
மன்னுதிக ளம்பொழிதண் மலையரசன் மகளாகுங்
கன்னியுமை தனைமணந்து கந்தனையீன் றவனாலே
துன்னுசூர் முதறடிந்து சுரர்தமைக்காப் பதுதுணிந்தேம் (12)
ஆதலால் மன்றலுக்கெம் மருகிருப்பீ ரெனக்கழறி
ஏதமிலான் விடையேறி யிமயகிரிக் கெழுந்தருளி
யோதுமே ழுலகிலுள்ளோ ரொருங்குவர வழைத்தியென
வாதரநந் திக்கிசைத்தா ளனைவரையு மழைத்தியென (13)
நந்திமுடங் கலைவிடுப்ப நாற்றிசையே ழுலகுள்ளோர்
வந்துபனிப் பொருப்பெய்த வடபூமி தாழ்ந்ததனால்
அந்தமுறுந் தென்பூமி யஃதுயர்ந்து நிற்றலுமே
கொந்திதழிச் சடைப்பெருமான் குடமுனிவா வெனக்கழறி (14)
கும்பமுனி வந்தீசன் கோகனத் தாள்பணிந்து
நம்பவெனை வருதியென நற்பணியே தெனக்கேட்ப
வம்புவிதென் பாலுயர்ந்த தெனவடபாற் றாழ்ந்ததா
லிம்பர்நிலஞ் சமனாக வெழிற்பொதியத் திருத்திநீ (15)
என்றுசிவ னியம்பிடலு மெழிற்கும்போ தயன்மொழியு
மன்றல்புரி மணக்கோல மகிமைதெரி சித்திடலே
யுன்றனரு ளுணர்த்தவே யுணர்ந்தீண்டு வந்தவெனைத்
தென்றிசைவெற் புறைந்திட நீ சேறியென வருளாமோ (16)
குடமுனிவ னிந்தமொழி கூறுதலுஞ் சிவனுரைக்குந்
தடமலையா சலமிருந்த தமிழ்நாட்டின் வைகநதி
வடகரையின் மருதவனம் வளர்மறையோ னாகநம்பி
யுடன்மனைவி தேவநங்கை யுவப்பினுக்கோர் மகளாகி (17)
உமையவள்வந் தவதரிப்ப வோங்குமணம் நாம்புரிந்தும்
மதுமணக்கோ லமுமுன்னை வரவழைத்துக் காட்டிடுதுஞ்
சமயமிது விந்தமலை தரையழுந்த மிதித்துநீ
சிமையமெனுஞ் சந்தவரை சேர்ந்துசுகத் திருத்தியால் (18)
ஈசனிந்தப் படியுரைப்ப வியந்துகும்ப முனியுரைக்கு
நேசவும்பர் முனித்தொகுதி நிறைந்திருப்ப விப்பணிக்குப்
பேசலின்றி யெளியேனைப் பெரும்பான்மை யாகவெண்ணித்
தேசுதரு நின்னருளின் செயலென்றே செய்கின்றான் (19)
செந்தமிழ்ச்சொற் கும்பமுனி தென்திசையை நோக்கியவன்
வந்தவழிக் கெதிர்விந்த மலைவளர்ந்து நின்றதனை
யந்தமுனி பெருவிரற்கொண் டழுத்தினா னம்மலைதான்
இந்தநிலத் தழிந்திவிட்ட திடரொளிந்தா ரிமையோரே(20)
பண்டுவிரா தனைமுனிந்து பத்திரதன் மகன்கழலான்
மண்டுதரை யிடையழுத்தும் வண்ணம்போல் வரையழுந்தக்
கண்டகுறு முனிவழியிற் காசிமல்லி கார்ச்சுனம்பேர்
கொண்டதிருக் காளத்தி கொழுங்காஞ்சி கழுக்குன்றம் (21)
ஞானக் கணத்தீச னடம்புரியுங் கனகசபை
தானபலந் தருங்கமலை தடங்கடற்றண் மறைக்காடு
மானபுனல் வாயிலிரா மேசமுதற் றலம்வணங்கிக்
கானிலவு மருதவனங் கண்டுகளித் தெதிர்வணங்கி (22)
மேவுதமிழ் மருதூரின் வீற்றிருக்கு நாகேசர்
கோவிலெதிர் நாகதடங் கூர்ந்திடுபுண் ணியதீர்த்தம்
ஆவலொடுந் தினமூழ்கி யணிகிளர்வெண் ணீறிட்டுத்
தாவினிய மம்புரிந்து தனியிலிங்கம் பூசித்து (23)
திருக்கோயில் வலம்வந்து தீபவா ராதனைகண்
டிருக்கோல மிடுவானை யெம்பிராட் டியையிறைஞ்சி
யருட்கோலச் சீடரொடு மந்நகருற் றேழாநாள்
மருக்கோலத் துளவுபுனை மால்விடைமீ தரன்றோன்றி (24)
தேவர்முனி வரர்வணங்கத் தெசநாதங் குமுகுமெனக்
காவமரும் பணைக்கோட்டுக் கற்பகப்பூ மழைபொழியப்
பூவுலகோர் வந்திப்பப் புகழ்வேத வொலிகறங்க
மாவெனும்பார்ப் பனமடவார் மங்கலசோ பனம்பாட (25)
காரேழுங் கடலேழுங் கறங்கலிற்பல் லியங்குமுறப்
பாரேழுந் தனிதாங்கும் படவரவுஞ் செவிடுபடத்
தேரேழு பசும்புரவி செலுத்தவரு செம்பருதி
யோரேழா யிரங்கோடி யுதித்ததென வொளிதோன்ற (26)
போர்பொருதுந் திரைக்கங்கைப் பூவையவள் புருவநடுச்
சார்கீற்று நாமமொன்று சடையினிடை வெளிதோன்று
மேர்பரவு மிளம்பிறையொன் றினிதிருந்து நிலவொழுகக்
கார்பரவு கறைக்கண்டங் களங்கனியிற் கவினொழுக (27)
வருந்தலின்றி யின்பமே வழங்குமெழிற் செவ்வுடம்பிற்
றிருந்துமுழு மதிக்கிரணச் செழுந்தாரை செம்மைநிறந்
தருந்தகைசால் பவளமலை தனில்வீசுந் தன்மையெனப்
பொருந்தவெண்ணீ றிட்டதிரி புண்டரக்கீற் றொளிவிளங்க (28)
சென்னியினுங் கந்தரத்துந் திகழுரத்துஞ் செவியிடத்து
முன்னலருங் கரதலத்து முருத்திரமா மணியணிந்த
தன்னதொகை யாயிரத்தெட் டழகுபெற வேபுனைந்து
பொன்னிதழி மலர்வேணிப் பொறிச்சுரும்பர் மறைமுழங்க (29)
காணிக்கை சேதுபதி கனிந்துபுனை சரப்பணிபோற்
பாணிக்கங் கணமவுலி பகர்வயிரக் குண்டலஞ்சீர்
ஆணிப்பொன் னிடைபதித்த வரதனங்க ளவைநாப்பண்
மாணிக்க மிட்டிழைத்த மணிப்பதக்கம் வெயிலெறிப்ப (30)
திருவரைஞா ணிலங்கவடிச் சிலம்புதண்டை கலகலென
வருள்வடிவம் பெற்றிருக்கு மழகியநா யகிமருங்கிற்
கருணைபொழி திருநயனங் களித்திருப்ப மருதவனத்
தெருவீதிப் பவனிவரச் செந்தமிழ்மா முனிகண்டான் (31)
கண்டவுடன் களிகூர்ந்து கனியுமன்பு நிவநீத
மண்டுவெயிற் படவுருகும் வண்ணம்போ லுளமுருகிப்
புண்டரிக நயனநீர் பொழிந்துடம்பு புளகித்துத்
தண்டமிழ்மா லைப்பதிகஞ் சாற்றுகின்றான் குடமுனிவன் (32)
(பதிகம்)
துகளுறுமும் மலக்சுழியிற் சூறைபடுஞ் சருகானேன்
நிகள்பந்த பவத்தொடர்ச்சி நீயொழிப்ப தெக்காலம்
அகளசக ளந்தெளிந்த வருண்மூர்த்தி நாகநம்பி
மகளைமணம் புரிதுமென்ற மருதூரெம் பெருமானே (33)
காலூருந் தேர்வேளைக் கனற்கண்ணாற் காய்ந்தனையென்
பாலூரு மாசைமனப் பகைதடிந்தாற் பழுதாமோ
மேலூரும் பிள்ளைமதி மிலைந்தசடை மவுலியாய்
மாலூர மனந்தழைக்கு மருதூரெம் பெருமானே (34)
பண்டுனது சத்தியெனும் பரைவடிவு சுகரூபங்
கண்டுகளி கூர்ந்துநான் கரந்துறைவ தெக்காலம்
விண்டுதிகால் கங்கையுடன் மிளிர்பவளச் சடைக்காட்டின்
வண்டுபடி கொன்றைபுனை மருதூரெம் பெருமானே (35)
நித்திரைகே வலஞ்சகல நிகழ்பணிசுட் டறநீக்கிச்
சுத்தகே வலங்காட்டிச் சும்மாவென் றொருவசன
முத்தமற்குச் சொல்வைநீ யுரைக்கநான் பாத்திரமோ
வத்திரமைந் துடையாய்தென் மருதூரெம் பெருமானே (36)
இயன்மணக்குந் தமிழரசென் றெனக்குவரந் தந்தனையுன்
செயன்மணக்குந் திருவடியைத் தினம்பாடத் தருவதெந்நாள்
புயன்மணக்குஞ் சந்தமலை பொழிமழைசால் வைகைவெள்ளம்
வயன்மணக்கு நென்மணக்கும் மருதூரெம் பெருமானே (37)
காரிட்ட தடஞ்சோலைக் காழியுறை சம்பந்தர்
சீரிட்ட கவிக்குமணிச் சிவிகைதந்தா யெனைக்காப்பா
யாரிட்ட பைங்கூந்த லழகியநா யகிகனக
வாரிட்ட கொங்கைபுணர் மருதூரெம் பெருமானே (38)
துன்னுமுப்பத் தாறென்னுந் தொகைக்கருவி மாயைமலப்
பன்னுபுண்ணி யம்பாவம் பகர்கரும மலஞ்சீவன்
முன்னொடுபின் னறியாமை மூலமல மவைநீங்க
மன்னருணான் பெருவேனோ மருதூரெம் பெருமானே (39)
யானெனதா மிருசெருக்கு மிகந்துனருள் சாராமே
கானலுண்ணீ ரெனச்சுழலுங் காட்டுமான் போலானேன்
ஆனணைந்த கன்றெனவுன் னம்புயத்தா ணம்பினேன்
மானணைந்த பாணியெம்மான் மருதூரெம் பெருமானே (40)
குடமேயெற் பெற்றதுநான் குடிக்கமுலைப் பாலுண்டோ
விடமேவு மம்மையெனை யெடுத்துமுலைப் பாலூட்ட
வுடன்மேவு முயிர்க்குதவி யுறவளர்த்த தந்தைநீ
வடமேரு வில்வளைத்த மருதூரெம் பெருமானே (41)
நாதவந்த நிகர்கயிலை நற்பொருப்பி னாமிருப்ப
வேதவந்தம் பொருவுசந்த வெற்பிடைநீ யிருந்தனையேற்
பூதவந்தஞ் சமனாகும் பொதியமுனி வரின்மிக்க
மாதவநீ செல்கென்ற மருதூரெம் பெருமானே (42)
இப்பதிகத் தமிழ்மாலை யீரைந்து கவியுமன்பாற்
செப்பினர்க்குங் கேட்பவர்க்குஞ் சிந்தையுறக் கற்பவர்க்கு
மொப்பிலிக பரஞ்செல்வ முயர்முத்தி தந்திடுதி
மைப்படிந்த கண்ணிபங்கா மருதூரெம் பெருமானே (43)
என்றுதமிழ்க் குறுமுனிவ னேத்துதமிழ் மாலையினை
நன்றெனவே யுளங்களித்து நன்மருதீ சன்பகரும்
அன்றுமுத லியர்மூவ ரறைந்ததே வாரம்போன்
மன்றல்கமழ்ந் துலகுள்ள வரைக்குமிது நிலையாமால் (44)
புனைந்தபூ மாலையினும் புனிதமாந் திருத்தொண்டர்
வனைந்ததமிழ் மாலையிலே மகிழ்ச்சிநமக் கெஞ்ஞான்றும்
அனந்தபுர மிவ்வூரி லந்தணப்பெண் மணம்புரிந்து
நினைந்ததந்தக் காட்சியினை நீகாணத் தருதும்நாம் (45)
பூவுலகஞ் சமஞ்செய்யப் பொதியமலைக் கேகென்னத்
தேவர்பிரான் விடைகொடுப்பத் திருவடியஞ் சலிசெய்து
மூவர்முத லியர்க்கிணையாய் மொழிபனுவற் கும்பமுனி
யேவல்புரி சீடரொடு மியமனீச் சுரஞ்சார்ந்தான் (46)
வைகைநதி நீராடி மகத்தாகு நியமவிதிச்
செய்கைதிறம் பாதியற்றித் திறற்சண்டன் பூசைபுரிந்
துய்கைபெறுஞ் சிவலிங்க மொண்மலர் கொண் டருச்சித்து
மெய்கனிந்த கும்பனவன் மேவினான் முத்திவசம் (47)
அங்கிருந்த சீடரொடு மணிவிஞ்சைப் பதிதொழுது
மங்கலபுண் ணியபுரமாம் மணவூர் சென் றதிலுறைந்த
திங்களிளம் பிறைவேணிச் சிவலிங்கப் பெருமானைக்
கொங்குகமழ் மலர்தூவிக் கும்பமுனி பூசித்தான் (48)
முளைத்தெழுந்த சிவலிங்க மூன்றுநா ளருச்சித்தான்
வளைத்தகட லினையுண்ட மாமுனிவ னென்றுரைப்பக்
கிளைத்தநயி மிசவனத்தோர் கிளர்சூதன் முகநோக்கித்
திளைக்குமின்ப மணவூரிற் சிவன்வந்த சரித்திரமும் (49)
அருந்தவஞ்செய் பவர்தவங்கண் டருட்பேறு தந்ததுவுந்
திருந்தவுரைத் திடுகவெனச் செப்புறவம் முனியுரைக்கும்
பொருந்துதடங் கலியாண புரத்திலிங்கத் தோன்றுகதை
திருந்துகும்ப முனிதனது சீடருக்குச் செப்பினான் (50)
அக்கதையைச் சொல்கின்றே னதிசயநீர் கேண்மின்கண்
மிக்ககுழந் தையிற்றரும வேதவதி வந்தணப்பெண்
டக்கமகி ணன்காசித் தலஞ்சேர்ந்து மரித்தனன்பின்
புக்கவந்நாட் டினிற்பஞ்சம் பொசிப்பேதுங் கிடையாமல் (51)
தான் பெற்ற வாண்மகவு தவழ்ந்துலவுஞ் சிறுகுழந்தை
யூன்பெற்ற முலையின்பா லுணவின்றி மெலிவதுங்கண்
டேன்பெற்றே னிப்பிள்ளை யென்றெடுத்துக் கலைசேர்த்து
மீன்பெற்ற துவசபதி மிக்கதிரு நன்னாட்டின் (52)
வைகைநதித் தென்மருங்கு மணவூர்சேர்ந் தனடுயிலிற்
பொய்கழறும் பாதகரிற் புயங்கமவ ளைத்தீண்டக்
கைகழன்ற புள்ளென்னக் கயினியுயிர் போயினபின்
னுய்கைபெறா தழுகுழந்தைக் குமையுமீ சனுமிரங்கி (53)
சீலமிகு மந்தணனுந் தேவியும்போல் வந்துமுலைப்
பாலுணவு தந்துடனே பதினாறு வயதாக்கிச்
சாலவந்த தாய்மரணச் சடங்குமக வாலியற்றி
மேலவனென் றுலகியம்ப வேதமா கமம்பயிற்றி (54)
பரம்பொருளும் பரையணங்கும் பார்ப்பான்பார்ப் பனியாகித்
திரம்பெறுதம் மகவாக்கித் திருந்தவளர்ந் ததுகண்டு
நிரம்பவுனக் கிச்சையென்கொ னீயுரைத்தி யெனக்கேட்ப
வரம்பைநிக ரங்குலப்பெண் ணாய்ந்துமணஞ் செயவேண்டும் (55)
என்றுரைத்த மகவுக்காங் கியைந்தகுலப் பெண்பார்த்து
மன்றல்புரிந் தில்வாழ்க்கை வரிசைக்கு வேண்டுவன
துன்றுபொரு ளீட்டுதற்குத் துலையாப்பொற் கிழிகொடுத்து
நன்றிகிள ரவ்வூரி னால்வேத வந்தணர்பால் (56)
வேதியனும் பார்ப்பனியும் விப்பிரமைந் தனைக்கொடுபோய்க்
காதலுங்கண் மகவாகக் காப்பாற்றிக் கோடிரெனப்
போதம்போ லேயுரைப்பப் பூசுரருஞ் சொல்கின்றார்
மாதவனீர் தாய்தந்தை வடிவாகி வளர்ந்தீரே (57)
வியன்மறையா கமம்பயிற்றி மிக்கமண முடிப்பித்தீர்
அயனுமுமக் கிணையல்ல வமைத்தபடி நடத்துகிற்பே
மியலுனது நாமமே தெமக்கருள வேண்டுமெனத்
தயவுடைய சுயம்புநாஞ் சவுந்தரநா யகியிவள்பேர் (58)
ஈசனுமை யாமிருவ ரிம்மகவுக் கிரங்கிவந்தேங்
காசகல வெமதுதிருக் காட்சிநீர் காண்மின்கள்
பூசுரரே யெனவிடைமேற் பூவையொடு தோன்றினான்
ஆசையறுந் தவரிதையத் தருள்வடிவப் பெருமானே (59)
சடைமுடியு மிளம்பிறையுஞ் சார்குழையிற் குண்டலமுஞ்
சுடர்மும்மைக் கட்பொலிவுந் தூளிதவெண் ணீற்றழகும்
உடைகிளரும் புலித்தோலு முரகமணிக் கங்கணமும்
படைபெருஞ்சூ லந்தரித்த பாணியுங்கண் டதிசயித்தார் (60)
சம்புமகே சுரவிமல சச்சிதா னந்ததிரி
யம்பகசங் கரபரம வகண்டபூ ரணவரத
நம்பநா காபரண நடராச கயிலாச
வம்பரதாண் டவஞான வாகார வெனத்தொழுதார் (61)
மாலயனுங் காணாத வடிவன்றோ நின்வடிவம்
ஏலவுனைத் தெரிசிக்க வெத்தவமுன் செய்தோமோ
நீலகண்ட சம்புவே நினைவேண்டும் வரமொன்று
சாலவுஞ்சிற் றடியேமுன் சரண்வணங்கிப் பகர்கின்றேம் (62)
இப்பிள்ளை யுனதுமைந்த னெமக்கவனே குருவாகும்
தப்பில்லை நீயிந்தத் தலத்திலிங்க வடிவாகி
லொப்பில்லை யெப்போது முனைத்தொழுது கதிபெறுது
மெய்ப்பொருணீ யீண்டுறைக வேண்டுமென வணங்கினார் (63)
தரவேண்டும் வரமீதுன் சந்ததியு மடியேமுந்
திரமாமுன் சன்னதியைத் தினந்தொழுது வணங்குகிற்பேம்
வரதவரந் தருகவென வந்தித்தா ரந்தணர்கள்
பரமேச னந்தவரம் பாலித்து விண்கரந்து (64)
சுயம்புலிங்கக் கோயிலுமச் சுயம்பாகித் தோன்றியதால்
இயம்புமண வூர்கயிலைக் கிணையாகி விளங்கியதே
வியம்பெறுமவ் வேதியரும் விப்பிரமைந் தனுநெடுநாள்
நயம்புகவாழ்ந் திருந்துசிவ னற்பதம்பெற் றனரன்றே (65)
ஈசுரன்பூ சுரமைந்தற் கிலங்குமணம் புரிந்ததனால்
காசினியோர் தொழுமவ்வூர் கலியாண புரமான
தாசறுமவ் விலிங்கப்பே ரகத்தியீச் சுரரென்று
பேசுமகத் தியன்வாக்கிற் பெயரிட்டு வணங்கினான் (66)
வணங்குகும்பன் மூன்று தினம் வசித்திருந்தந் நகர்நீங்கி
யிணங்குறுதஞ் சீடரொடு மெய்துநெறி யினிற்கண்ட
வணங்குமைக்கு மணவாளர் அருந்தலங்க டொழுதேத்தித்
தணங்கிளர்வே தாடவிசூழ் தமிழ்ப்பொதிய மலைசார்ந்தான் (67)
அகத்தியனப் பொதியமலை யதனிடை வந் திருத்தலுமே
சகத்தியைந்த பார்முழுதுஞ் சமம்பொருந்தி நின்றதா
லிகத்துள்ள மன்பதையி லிக்கதைகற் றவர்கேட்போர்
மகத்துவம்பெற் றிடவேண்டும் வரம்பலவும் பெறுவாரே (68)
நற்புனித மாதவஞ்செய் நயிமிசா டவிமுனிவர்
பொற்புநிக ழிக்கதையைப் புகழ்சூதன் வாக்கென்னும்
அற்புதத்தெள் ளமுதத்தை யவர்செவிக ளாற்பொசித்துச்
சொற்புளக வுடலோடுந் துறக்கம்பெற் றனமென்றார் (69)
திருச்சிற்றம்பலம்.
அகத்தியச் சருக்கம் முற்றும்.
25. தேவி திருமணவுற்சவச் சருக்கம்.
எழுசீர்க்கழிநெடிலடி.
என்செய லன்றி வேறிலை கருத்தன் யானென தெனுமல மொழித்துத்
தன்செயன் முழுது நடத்தருட் காட்சி தந்தெனைத் தன்னுளே கவர்ந்து
முன்செயுந் தொழிலிற் பலவணந் தருமும் மூவகை யுலோகமாற் றுயர்ந்த
பொன்செயுங் குளிகை போலவே திக்கும் புகழ்மரு தீசரைப் பணிவாம் (1)
பஞ்சவிஞ் சதிப்பேர்க் கடவுளர் மருதூர்ப் பண்ணவன் பதமலர் தொழுது
செஞ்சவே வேண்டி வரங்கள் பெற் றதுவுந் தீர்த்தப்பேர் நகரப்பேர் நும்பேர்
தஞ்சமென் றடைந்த வெங்கள்பே ராகத் தருகெனத் தரித்ததுஞ் சூதன்
விஞ்சைமா முனிவர் பாற்சில சொல்லிப் பின்னரும் விளம்புகின் றனனால் (2)
பெருந்தகை மருதூ ரீசர்வெற் பீன்ற பெண்ணொடு பேசுமுன் னொருநாள்
இருந்துநம் பூசை புரியுநம் பியர்க்கு ளெழில்பெறு நாகநம் பிக்குப்
பொருந்துநன் மனைவி தேவநங் கைப்பேர்ப் பூவைக்கென் னிணையொரு புதல்வி
தரும்பரி சுண்டே லந்தமின் னுமக்குத் தாரமாய்த் தருகுவே னென்றாள் (3)
ஆதலா லந்தப் பார்ப்பனி மகளா யவண்மனை வளர்கவென் றுரைத்தார்
நாகநா யகர்தந் தேவியார் தேவ நங்கைதன் மனையிடை நண்ணி
மாகமின் னென்னக் கட்டிலிற் கிடப்ப மறையவர் மடந்தைமார் கண்டு
தோகைநே ரிந்தக் குழந்தையெக் குலமோ சூத்திரப் பிள்ளையோ வென்றார் (4)
கோவிலிற் கொடுபோய்த் திருவருள் வசனங் கொடுக்குமேற் குழந்தையை வளர்ப்பேம்
மேவுநல் வாக்குத் தருகெனக் கிடத்தி வேதியர் மடந்தைமார் கேட்பத்
தேவநங் கைக்கு நாகநம் பிக்குஞ் சிவன்றந்த பிள்ளையீ துண்மை
யாவலின் வளர்ப்பீ ரென்றுவிண் வாணி யறைந்தன ளையுற வொழிந்தார் (5)
அகரவே தியர்க ளனைவர்க்கு மீச ரவ்வண்ணங் கனவிலு முரைப்பப்
பகரிதற் கைய மில்லையென் றன்பாற் பண்புற வளர்த்துமென் றிசைந்து
சிகரமே யாதி யந்தமா மைந்து திருவெழுத் தோதிநீ றிட்டார்
நிகரிலாத் தேவ நங்கைதன் கொங்கை நிறைந்தபால் சுரந்துணக் கொடுத்தாள் (6)
தேவநங் கைப்பெண் பிள்ளையொன் றிரண்டு திருவயிற் றீன்றவ ளல்ல
பாவையே தெருண்டு வருடமொன் றில்லை பால்சுரந் ததுமிகப் புதுமை
மேவருங் குழந்தை மானிடப் பிறப்போ விபுதலோ கத்தினிற் பிறந்த
தாவது சரத மென்றனர் மருதூர் அந்தணர் மடந்தையர் பலரும் (7)
திருவரு ளுணர்த்த வணுவுக்கு ஞானந் தெளிவுற விளங்குத லேய்ப்ப
வருகலை வளரு மிளம்பிறை கடுப்ப மாத்தரு மஞ்செயச் செல்வம்
பெருகுதல் பொருவ வளர்ந்தன ளம்மை பெண்ணர சிவளெனப் பேசி
யருமையாய் வளரும் பிள்ளைக்கு நாம மழகிய நாயகி யென்றார் (8)
விண்ணுல கிருக்குங் கடவுள ரந்த வேதபா ராயண முனிவர்
மண்ணுல கதனிற் பூசுர வடிவாய் வந்தனர் நாகநம் பிக்குப்
பெண்ணெனுங் குழந்தை வடிவுகொண் டுமையாள் பிள்ளையாய் வளர்கவுங் கண்டேம்
பண்ணருந் தவமிங் கிதற்குமே லுண்டோ பாக்கியம் பெற்றன மென்றார் (9)
பலபல வுலகங் காப்பிடுந் தாட்குப் பரிபுரம் பாடகங் காப்புக்
கலகலென் றலம்பு சலங்கையுந் தரித்துக் கமலைவந் தெடுத்தெடுத் தணைத்தாள்
குலவுபொற் சுடிகை முத்துமூக் குத்தி கொப்பொடு குழைக்குட்பொன் னோலை
யிலகயி ராணி கவின்பெறப் பூட்டி யிருகவுள் முத்தமிட் டெடுத்தாள் (10)
தள்ளைமார் போல வாஞ்சைவைத் தமரர் தம்மனை மடந்தைமார் பேதைப்
பிள்ளைக ளாகித் தென்மரு தூரிற் பிராமணி தேவநங் கைப்பெண்
பிள்ளைபோல் வளர்க்கு மழகிய நங்கை கிட்டவந் துடன்விளை யாட
வெள்ளையொண் கமலை யூசலு மசைத்து வேதங்கள் சொல்லித்தா லாட்டும் (11)
கைக்கிடு கடகங் குருகுநல் லாழி கந்தர சுந்தரக் கலன்கள்
மிக்கவெண் டரள மாலிகைக் கொத்து விளங்கரை ஞாண்முதற் பல்பூண்
சக்கரபாணி புனைந்தெழில் பார்க்கத் தமனியங் கதிர்மணிக் குவிய
லொக்கவே நிறைத்துத் தனதன்காத் திருப்ப னுமைதெரி சனம்பெற வேண்டி (12)
மறையவர் குழந்தைச் சடங்கெலா மந்த மறைமொழி திறம்பிடா தியற்ற
நிறைதருங் காப்பு மணங்கொள்செங் கீரை நித்திரை கொள்ளுந்தா லாட்டல்
அறைகொள்சப் பாணி முத்தம்வா ரானை யம்புலி யழைத்தல்கைக் கழங்கு
நறைகொளம் மனையென் னம்மனை பயின்று நன்மணி யூசலாட் டறிந்தாள் (13)
திரைக்கடல் சூழு முலகெலாந் தனது சிற்றிலென் றேவிளை யாடும்
பரைப்பெருங் குழந்தைப் பார்ப்பனப் பெண்கள் பண்ணையில் வண்டலாட் டயரும்
உரைப்பரு நாக நாயகர் தரித்த வொண்மணிக் குடுமியிற் சூடும்
விரைப்பெருங் கலவைச் சந்தன மீசன் மெய்யுறப் புனைந்ததே பூசும் (14)
தாயுடன் சென்று நாகநா யகர்தஞ் சன்னதி தொழுதுபின் மீளு
நேயமா மீசர் மருங்குவைத் தென்னை நிறைமணஞ் செய்கநன் றென்று
மேயுமோர் பக்கத் திருப்பவள் போலே யெனக்குமோர் பக்கமுண் டென்னு
நாயக ரெனக்கு வேறிலை யிந்த நன்மரு தீசரே யென்னும் (15)
பாவையிம் மழலை வாசக முரைப்பப் பார்ப்பன மடந்தைய ருடனே
தேவநங் கையுந்தன் செவிக்கமு தென்னச் செம்மலர் கைகொட்டிச் சிரிப்பர்
மாவடு வகிர்க்க ணழகிய நங்கை வயதொன்ப தாகவே வளர்ந்தாள்
யாவருன் மகளுக் கியைந்தமாப் பிளைநீ யெண்ணிய வெண்ணமென் னென்றார் (16).
அகிலமீன் றெடுத்துங் கன்னியம் பருவத் தழகிய நாயகிக் கிணையோர்
மகளெனக் கருள்கவளர்த்துநா னுமக்கே மன்றல்செய் தளிக்குவ னென்றேன்
மிகமகிழ்ந் தந்த நாகலிங்கேசர் விரும்பிநீ வளர்த்தவப் பெண்ணைத்
திகழ்மணம் புரிது மென்றசொ லிந்தத் திருமரு தூருளோ ரறிவார் (17)
என்றசொற் றேவ நங்கைநின் றுரைப்ப ளீசர்க்குத் தாரமாங் கவுரி
மன்றுளே யுனையு நாகநம் பியையு மாப்பிள்ளைச் சிவனையு மேற்றி
வென் றிகொண் டிடுவள் விடுவளோ வழக்கு விண்டுவின் சகோதரி யன்றோ
நன்றவர் மணந்தா னங்குலம் விளங்கு நாமெலாங் கடவுள ராவோம் (18)
ஆவதா மென்று பார்ப்பன மடவா ரவ்வுரை கூறலு மெழுந்து
தேவநங் கையுந்தன் னாகநம் பியும்போய்த் திருமரு தீசர்தாள் வணங்கி
மாவழ கிற்கு மாயிர மடங்கு வளம்பெற வளர்த்தநம் பெண்ணை
மேவுகல் யாண முடிப்பதென் றைக்கு விளம்புக வென்றவ ரிசைப்ப (19)
பொருந்துநல் லிடபத் திங்களின் முகூர்த்தம் பூருவ பக்கம்பஞ் சமியிற்
றிருந்துநற் பூசங் கடகலக் கினமாஞ் சிறந்தது சுக்கிர வாரந்
தருஞ்சுபக் கிரக மைந்துமூச் சமதாந் தழைத்துநும் முறவுளோர்க் கெல்லாம்
அருந்துதாம் பூல மிடுதிரென் றுரைத்தா ரையர்நா கேச்சுர ரன்றே (20)
அன்னையுந் தாரமாவது மீசற் கழகிய நாயகி யம்மை
தன்னையுங் கேட்கத் தகுமெனக் குறித்துச் சன்னதி சென்றிவை யுரைப்ப
வென்னையல் லாமை யிசைவரோ மணத்துக் கியைந்தது மென்மொழிப் படிக்கு
மன்னுகல் யாணங் கூட்டுதி ரென்றாள் மலைமக னனைவரும் மகிழ( 21)
ஆனைகா லையினிற் சன்னதி மேள மருந்தொழி லாளர்தீண் டாது
வானவ ருலகில் விஞ்சைய ரியல்பின் வளமுற முழக்கினர் மழைபோன்
மேனிலை யமரர் பூமழை பொழிந்தார் விப்பிரர் வேதங்க ளோதத்
தானுயர் கம்பத் தருச்சனை புரிந்து தனித்துசா ரோகண முடித்தார் (22)
சன்னதிப் பரிவார ங்களே யன்றிச் சாமிக்கா ரினஞ்சன மென்பார்
முன்னய னெடுமான் முதலிய ரைவர் முப்பத்து மூன்றெனுந் தேவர்
தன்னவை யுறவோ ரன்றிவே றுண்டோ சகலருஞ் சிவன்மணச் சடங்கு
நன்னலங் காண வருவர்தென் மருதூர் நம்பிமார் யோகமி தென்பார் (23)
திருமண முடிப்ப மருதவ னேசர் சிந்தையி னந்தியை நினைத்து
வருகென வவன்றான் வந்தடி வணங்கி வழங்குவ பணியென்கொ லென்னக்
குருவெனுந் தெய்வத் சச்சனை யழைத்துக் கேயிலுந் தென்மரு தூரு
மருவுநங் மயிலைக் கிணையலங் கார வளம்பெறப் புதுக்கவென் றளித்தார் (24)
அக்கண நந்தி யயன்றனை நினைப்ப வன்னவன் வந்தடி தொழலு
மைக்கருங் கண்டத் தெந்தைக்கு மன்றல் வளம்பெற முடிப்பது கருத்துத்
தக்கபொற் கோயி லணிகிளர் மருதூர் தடங்கயி லைக்கிணை விரைந்து
புக்குநீ முடிப்பை யென்றலும் பணிந்து புனைந்தனன் புவியெலாம் போற்ற (25)
வேறு
ஆயிரத் தெட்டுமாற் றாட கத்தினிற்
சேயிரும் பணிமுடித் திரண்ம ணிக்குழாந்
தூயன விழைத்தொளிர் துள்ளுங் கால்கதிர்
பாயினன் செஞ்சுடர் பரப்ப நாட்டியே (26)
செந்துகிர் வளைபல சேர்த்து வச்சிரந்
தந்தொளிர் கழிபல தான்ப ரப்பிமேற்
சுந்தர மயூரப்பைந் தோகை சாத்தியுட்
பைந்தரு மலர்களாற் பந்த ரிட்டரோ. (27)
காவணஞ் சதுக்கைமேற் கட்டி கட்டியே
மாவணம் பொலிதரு மரங்க ளைந்தினிற்
பூவணத் தொங்கல்கள் புனைந்து விண்ணுறை
தேவணங் கினர்களி சிறப்பச் செய்துபின் (28)
மாடமா ளிகைதெரு மண்ட பங்கள்போற்
கூடமுப் பரிகையொண் கொலுமு கப்புநல்
வாடக வரங்குவீ டன்ன சாலைமே
னீடுகோ புரனிரை நிரைம டம்பல (29)
அரண்மனை மேடையா சாரந் திண்ணைக
டிரமுறு லாகடஞ் சித்தி ரப்புரை
நிரைமணி யைந்தரு நிதிய ருச்சன
புரமுய ரிந்திர புரத்தை மானவே (30)
கண்கவர் வனப்பமை கமலை யொப்பவே
தண்கதிர் மணியினுந் தமனி யத்தினும்
பண்கனி மொழிமலைப் பாவை கொண்கர்வாழ்
விண்கவர் சன்னதி விளங்கக் கண்டனன் (31)
தேடருந் தேனுவின் பால்சி றந்தநெய்
கோடுறுந் தண்ணறாக் கொழுத்த வெண்டதி
நாடுமோர் செவிவிள நீர்ந யம்பட
நீடுபா ரேரிக ணிறையக் கட்டினர் (32)
ஆங்குமாப் பலவுநல் லரம்பை மாதளை
யோங்குமுந் திரிகைபே ரீச்சு டன்விளாத்
தீங்கனி நெல்லிபைந் தென்னை பூகமூர்
ஞாங்கர்தோப் பிடைபழம் பழுத்து நல்கவே (33)
கதிர்கெழுங் கற்பகங் காம தேனுவொண்
ணிதியினை யீதலே நிகர்சிந்தாமணி
முதுமரு தூர்மனை முன்றி லெங்கணும்
மெதிரெதிர் காத்திருந் தேவல் கேட்பவே (34)
குலவுசீர்க் கயிலைவை குண்டஞ் சத்திய
வுலகமந் திரபுரந் தனத னொண்ணகர்
நிலைகொள் சன்னதி மருதூர் நிகர்க்கப்பொன்
மலர்மகண் முகமென மயன்வ குத்தனன் (35)
உத்தமத் தென்மரு தூருங் கோயிலுஞ்
சித்திரம் பொலிதரச் செய்யு மத்தொழில்
இத்திறம் புதுமையென் றெண்ணி நந்திதான்
புத்திமான் மயனெனப் புகழ்ந்து பேசினான் (36)
செழுநதிச் சடையரன் தேவர் சூழ்வர
வழுவற வளனுற மயன்செய் மாண்புறும்
அழகிய நகரலங் காரங் கண்டடி
தொழுதநந் திக்கணி சூட்டி நீறிட்டு (37)
பேர்பெறு நந்திநீ பிரம வண்டத்திற்
சார்தரு முலகங்க டழைக்குந் தேவரைத்
தேர்மரு தூர்மன்றல் சேவை சேவை செய்கவே
யார்வமா தவரொடு மழைத்தி யின்னுங்கேள் (38)
பனிவரைப் பெண்கலி யாணம் பார்க்கமுன்
னினிதுவந் தனன்குட முனிவ னேத்துநற்
புனிதமா முத்தர் பூமி தாழ்ந்ததால்
உனிதமாந் தெக்கண முயர்ந்த போழ்திலே (39)
அக்குட முனிவனை யழைத்து நின்னிறை
யொக்குமே யண்டத்தி னுள்ள பேரெலாந்
தொக்கன கயிலையிற் சூழ்க வேகனம்
புக்கது வடதிசைப் பூமி தாழ்ந்ததால் (40)
தென்றிசை யுயர்ந்தது தென்ற லங்கிரி
நின்றதி லுறைந்தனை யென்னி னேர்பெறு
மென்றுநான் சொல்லவே யெம்பி ரான்மனம்
நன்றது காணவே நான்வந் தேனென்றான் (41)
தண்டமிழ் முனிவரன் சாற்று மவ்வுரை
கண்டுநாம் பகர்ந்தனம் பொதியக் கார்வரை
மண்டலஞ் சமம்பெற வசித்தி யென்றனங்
கொண்டநங் காட்சிநிற் குறுகிக் காட்டுதும் (42)
என்னநாங் குறுமுனிக் கிசைத்த துண்டுபண்
டன்னவன் றன்னையு மழைத்தி யென்றரன்
சொன்னவக் கணத்திலே தொன்மை யண்டத்தின்
மன்னிருங் கடவுளோர் மற்றை மாதவர் (43)
தென்மரு தூர்வயின் சிவன்ம ணம்பெறு
நன்மைநீர் காண்டற்கு நாளை வம்மின்கண்
முன்மகிழ்ச் சியினென முடங்கல் போக்கினான்
தொன்மறை தெளிந்தமா லிடபத் தோன்றலே (44)
வாணிமா மடந்தை பார்ப்பதி மயேச்சரி
யாணியா மனோன்மணி யைந்து மூர்த்தியர்
காணிரு கண்ணெனக் கற்பு மாதர்கள்
பூணுமைக் கணிகலம் போல வெய்தினார் (45)
பாலைநற் றிரிபுரை புவனை பண்பமை
சூலினி சாமளை துர்க்கை காளிப்பெண்
ணீலிமா மயிடசங் காரி நீடரன்
மாலைசூ டுமைதிரு மன்றற் கெய்தினார் (46)
இந்திரன் முதற்றிசை யெண்மர் தாம்பணர்
சுந்தரி மற்றுள சுரம டந்தைமா
ரந்தமே ருவைமுத லசல மாதர்கள்
வந்தன ருமைதிரு மன்றல் காணவே (47)
அருந்ததி மேனைகா யத்தி ரிப்பெயர்
பொருந்துமண் ணோடன சூயை பொற்பமைந்
திருந்தநல் லகலிகை கணவ னேவலால்
மருந்தன மொழியுமை மன்றல் செய்கிறார் (48)
நாணிறை கங்கைபன் னதிம டந்தைமார்
நீணில மங்கையேழ் நித்த கன்னியர்
காணயி ராணிமுற் கடவுண் மாதர்கள்
வேணியா லுமைமணங் காண மேவினார் (49)
வானுறை மங்கையர் மனிதப் பெண்கள் போல்
ஆன சீர் வடிவமைந் தவனி சார்ந்தனர்
ஞானமா னழகிய நங்கை மன்றலுக்
கானவை கொணர்ந்தவட் கணிசெய் தார்களே (50)
முடங்கலின் படியய னாதி மூர்த்திய
ருடன்சக மடங்கலி னும்பர் சூழ்வரக்
கடங்கிளர் கரியுரிக் கடவு ளானந்த
நடங்கிளர் கூவிள வனத்தை நண்ணினார் (51)
இந்திரன் முதலவெண் டிசைபு ரப்பவர்
அந்தர வசுக்கண மனந்த மாதவர்
விந்தைசால் கின்னரர் வித்தி யாதரர்
பந்திசால் கிரகரொன் பதின்மர் வந்தனர் (52)
வேறு
பஞ்ச வத்திர னிடபகே தனன்கணப் படைஞர்
அஞ்சு பத்துநூ றாயிர வெள்ளத்தர் சூழக்
கஞ்ச னச்சுறு காலருத் திரனுதற் கண்ணன்
விஞ்சு தென்மரு தூர்வயி னிறுத்தனன் வியந்து (53)
கடல்க லக்கினுங் கலக்குவர் வடவைநேர் கன்னர்
சுடர்கொ ழித்திடு நெட்டிலைச் சூலபா ணியினர்
அடர்கி ருத்திம மாயிரங் கோடிவெள் ளஞ்சூழ்
இடப வாகன மேறுகூர் மாண்டர்வந் திறுத்தார் (54)
பாத லத்துளோர் முக்கணர் சூலபா ணியினர்
ஓது சங்கமா யிரஞ்சத கோடிமே லுயர்ந்த
கோதில் பூதர்சூ ழுருத்திரர் பதினொரு கோடிக்
காதி யாட்டதி னால்மரு தாடவி யடைந்தார் (55)
மருத மாவன நாகநா யகர்திரு மன்றல்
கருதி வெள்ளமா யிரஞ்சத கோடியாய்க் கணங்கள்
அரிதிற் சூழ்படைக் கதிபதி சரபாவ தாரன்
ஒருதன் வந்தனன் வீரபத் திரவுருத் திரனே (56)
ஆங்கு நாகர்தாங் குலகுயி ரணிவிரற் கொண்டு
தாங்கு பூதமா யிரஞ்சத கோடிதற் சூழ
வோங்கு மாலர னிருவருக் கொருமகன் செண்டு
தாங்கு கையனா மெய்யனுஞ் சார்ந்தனன் மருதூர் (57)
உயிர வன்னெனு முலகெலா நிறைந்துபல் லுயிர்க்குஞ்
செயிரொ ழித்திடு தனிநிரு வாணிதெண் டிரைசார்
அயிரி னும்பல பாரிட மனந்தஞ்சூழ் தரவே
வயிர வன்மரு தாடவி யெல்லைவந் திறுத்தான் (58)
அடக்கொ ணாதவைம் பொறிபுலன் கரணங்க ளடக்கித்
திடக்க ணானமெய்ஞ் ஞானக்கண் விழித்தின்பச் சேக்கை
முடக்கி யானந்த நித்திரை கொள்கின்ற மோனி
வடக்க ணானிழற் றெக்கணா மூர்த்தியும் வந்தான் (59)
செஞ்ச வேசிவ னுருக்கொண்ட தெய்வங்க ளானோர்
பஞ்ச விஞ்சதி விக்கிர கத்தரும் பரிந்தே
யெஞ்ச லின்மரு தீசர்மா மணந்தொழு தேத்த
மஞ்சு சூழ்வரு கூவிள வனத்திடை வந்தார் (60)
அரன்ம கிழ்ச்சிகூ ரறுபத்தா றாயிரங் கோடி
பிரம தக்கணம் புடைவர வல்லவைப் பெண்ணைக்
கரத லத்தணைத் தவன்பகந் தொழுதுதிக் கையன்
வரமெ னக்கருள் கணேசன்வந் தனன்மரு தூர்க்கே (61)
வீர வாகுவே முதலிய தம்பிமார் மேவத்
தூர வெண்பதோ டொன்றெனுங்க கோடிசார் துறக்க
மார வேநிறை தேவசே னையினுடன் அமரின்
வாரி யுண்டவேற் கந்தன்வந் தனன்வில்வ வனத்தில் (62)
சண்ட மாருத மூச்சினிற் பிறந்தது சகத்தை
யுண்ட வூழிவெங் கனல்விழி யுதித்தது கையிற்
கொண்ட சூலமே மேருவைப் பிளந்தது கொண்டோன்
அண்ட முண்டபூ தேசன்வந் தனன்மரு தடவி (63)
கார்க்குண் டோவின் பேசிடு மொலிப்பெழு கடலி
னீர்க்குண் டோவிவன் றாகத்தை யடக்குநன் னீர்மை
யார்க்குண் டோவிவ னாண்மையென் பவனசு ரட்ட
போர்க்குண் டோதரன் வந்தனன் அருச்சுன புரத்தில் (64)
வேத நாயகர் திருமரு தீசர்தாள் விரும்பி
நாத வந்தமாஞ் சோதியிற் கரந்தமெய் ஞானி
பாத கம்மென வேசிவார்ச் சனையினைப் பழித்த
தாதை தாளற வீசிய தண்டியும் வந்தான் (65)
ஒவ்வொ ரண்டத்திற் பஞ்சமூர்த் தியருமும் பர்களும்
பௌவ மேழ்கரை மணலினும் பற்பல வுயிரு
மெவ்வெ வண்டத்து மிப்படி நிறைந்திடு மீச
ரவ்வ வண்டத்து மிப்படி மன்றல்வேட் டடைந்தார் (66)
அஞ்சு பூதமம் புலிகதி ரணுச்சதா சிவர்கள்
விஞ்சு மட்டவித் தேச்சுர ராதிமே லெவருஞ்
செஞ்ச டைச்சிவ னுமைதிரு மன்றல்சே விப்ப
மஞ்சு நீண்மதி லருச்சுன புரத்துவந் தனரால் (67)
அண்ட வீதியின் மாலய னிந்திர னமரர்
பண்டை மாமுனி வரர்முத லெவரையும் பார்த்துக்
கண்ட நந்திசென் றரனுடன் செப்பினன் களிகூர்ந்
தெண்டி சைப்புவி வருபவர்க் கிடமில தென்ன (68)
பால லோசனத் தெந்தையந் நந்தியைப் பார்த்து
ஞாலம் போதுமோ நம்பெருங் கணங்கட்கு நண்ண
மால யன்சசி மணவனே முதலிய வானோர்
மேல தாகிய தலைமையோர் வருகென விளம்பி (69)
மற்றை யோர்தமை யந்தர வீதியில் வைத்துச்
சொற்ற போதனற் றலைவர்கள் மானிட சொரூபம்
பெற்று வேதிய ராகவே வம்மெனப் பேசி
யிற்றை நாள்வர வழைத்தியென் றேவின னெம்மான் (70)
நந்தி சென்றுரைத் தலுமவ ரவ்வணம் நண்ணி
எந்தை நாகநா யகர்சமு கம்புகுந் திறைஞ்ச
வந்த வந்தவர் தங்களைக் கண்களான் வாக்கான்
முந்து பாணியா லுபசரித் தான்முக்கட் பெருமான் (71)
சார்ந்த வர்க்கெலாஞ் சந்தனம் புனைந்துதாம் பூலங்
கூர்ந்து நல்கினன் மாடமா ளிகைமணிக் கோயி
லார்ந்தி ருக்கவே பணித்தியென் றிறைசொல னந்தி
தேர்ந்து பூசைசெய் திருக்கையுந் தந்தனன் சிறப்ப (72)
வந்த வந்தவர்க் கன்னமுங் கறிபல வகையு
முந்து மாப்பலா வரம்பையிற் பழுத்தமுக் கனியுஞ்
சிந்து தேனொடு தேனுவின் பாறயிர் செழுநெய்
பந்தி வைத்தவர்க் கறுசுவை யுண்டியும் படைத்து (73)
பாய சம்பணி யாரமாம் வருக்கமும் பகுந்து
நேய மவ்வவர்க் கியைந்தன போனக நிறைத்துத்
தாயி னன்புசால் சுரபிசிந் தாமணி தருக்க
ளேயு மாறுகந் துபசரிக் கின்றன னெவர்க்கும் (74)
மாட மாளிகை யிருக்கைபொன் பஞ்சுமென் மெத்தை
யாட கங்கிளர் தழுவணை யமைத்ததி லிருத்தி
நீடு பொற்கலம் பூட்டியொண் புனைதுகி னிரப்பி
வாடை சந்தனம் பூசிநன் மலர்த்தொடை வனைந்து (75)
கந்தி வெள்ளிலை வந்தவர் தமதுளங் களிப்ப
நந்தி கட்டளை நற்றகு சிறப்பெலா நடாத்தப்
புந்தி கூர்ந்தயன் அணிகலம் புனைதுகில் வருக்க
மெந்தை முன்வைத்து வணங்கினன் விண்டுநின் றிசைப்பான் (76)
இறைவ நின்வயி னிசைப்பதோர் விண்ணப்ப மீண்டு
மறைய வன்முதற் கடவுளர் கேட்பதோர் வரமுண்
டறைகு வன்றரக் கடவைநீ யென்னெனி லதுகே
ணிறைபு விக்கணோர் மணம்புரி குதுமென நினைத்தி (77)
உருவு னக்கிலை யுருவெலா முனதுரு வாக
மருவி நிற்பைநீ பற்றுவீ டொன் றிலா மற்றான்
கருதி பச்சரு மம்புலித் தோலுடைக் கந்தை
தருபு னற்சடை வெண்டலை யென்பணித் தாமம் (78)
பாணி மான்மழு நெட்டிலைச் சூலம்பால் வண்ணம்
நீணி லாவுமிழ் சுடலைவெண் ணீறுடல் பூச
லூணி டும்பலி பூதம்பேய் சூழ்ந்திடு முன்னைக்
காணின் மானிடர் பயம்புகுந் தோடுவர் காட்டில் (79)
பார்ப்ப னச்சிறு பெண்ணுமக் கிணங்குமோ பார்க்கி
லார்ப்ப ரித்திடு பூதங்கண் டலறுமக் குழந்தை
ஏர்ப்ப தன்றிவை நகைதரு மந்தண ரெவர்க்குஞ்
சீர்ப்பு விக்கணே சவுந்தர வுருக்கொளல் சிறப்பாம் (80)
வேத வந்தண ருருக்கொடு பலகலன் மென்றூ
சாதி கொண்டுவந் தனமணி யணிகவென்ற றைந்தான்
மாத வன்பகர் மொழிமறுக் கிலமென மகிழ்வாற்
சோதி யம்பர வகளவே சகளமாய்த் தோன்றி (81)
சைவ வைதிக வடிவமுந் தரித்தமுந் நூலுந்
தெய்வச் சென்னிமேற் பூருவச் சிகைமுடிச் சிறப்புங்
கைவைக் கும்விரற் பவுத்திர வாழியுங் கமழும்
மெய்வைக் குந்திரு புண்டரக் கீற்றுவெண் ணீறு (82)
உருத்தி ராம்பகஞ் சென்னிமீ தைந்துநூ றோங்கப்
பருத்த கண்டிகை நாலெட்டிற் களமுறப் பதித்தே
யிருத்து பாணியொன் றினிற்பதி னொருமணி யிணைக்கை
பொருத்தி யங்குட்ட மோதிரத் தொன்பதும் பொலிக (83)
கன்ன மொன்றினுக் காறிணைக் காதிலும் தரித்து
மன்னு மார்பினுக் காயிரத் தெட்டொளி வளர்ப்ப
மின்னு பொன்மணி யரதன மிடையிடை விளங்கச்
சன்ன வீரமுந் தாழ்வடத் தொங்கலுந் தரித்து (84)
புயமுந் தொந்தியு மார்பமுந் திருமுகப் பொலிவு
மயலிற் கண்டமின் னார்விர கங்கொளு மழகுங்
கயம லர்ந்தபைந் தாமரை மலர்பொருங் கண்ணு
மியல்வி ளங்குமைந் திலக்கணம் பழுத்தசொல் லினிப்பும் (85)
ஆன பேரெழில் வடிவுகொண் டந்தண ராகி
ஞான தேசிக நம்பியா ரெனுந்திரு நாமந்
தான ணிந்துமுற் றோன்றினான் றமிழ்மரு தீசன்
வானு ளோரெலாந் தெண்டனிட் டிறைஞ்சினர் வாழ்த்தி (86)
மால யன்றிரு மணம்புரி முகூர்த்தம்வந் தடுத்த
கால மென்றனர் நாகதீர்த் தக்கரை மருங்கிற்
கோல மெய்துநீ வயிரநன் மண்டபங் குறுகிச்
சீல வந்தணர் வேதபா ராயணஞ் செய்ய (87)
ஞான தேசிக நம்பிநா கத்தட மூழ்கித்
தான மீரெட்டுஞ் செய்துகா யத்திரி சாற்றி
மான தார்ச்சனைத் தன்னைத்தான் பூசித்து வணங்கி
மேனி வந்தொளிர் மண்டபஞ் சார்ந்தனன் வியந்து (88)
பருதி யொன்பது மணியுருக் கொண்டெனப் பதித்துச்
சுருதி யொண்முடிச் சுடருக்குப் பொன்முடி சூட்டி
யிருதி ருச்செவிக் கவசகுண் டலங்களு மிட்டுக்
கருது நன்னுதற் றிலதமுங் கவினுறச் சாத்தி (89)
சித்தி ரம்பொலி மோதிரம் விரல்களிற் சேர்த்து
மத்த கங்கண மணிச்சர மெழில்பெற வணிந்து
வைத்த முன்கைமுத் தாரிபொற் கடகம்பொன் வரையை
யொத்த தோள்களிற் கனககே யூரமு மோங்க (90)
நாக மாணிக்க நாயக மணியெனப் பதித்த
மாக வெங்கதி ரொழுகுநற் பதக்கமு மகிழ்சார்
மேக மின்னிகர் சரப்பணித் தொங்கல்வெண் டரள
வோகை சார்கண்ட சரங்கிள ரட்டிகை யொளிர (91)
ஒன்ப தாகிய வரதன மாலிகை யொளிர்சால்
பொன்ப தித்தன கந்தா நிறைதரப் பூட்டி
மின்பொ லிந்தபொற் றிருவரை ஞாணது மிலைந்து
மன்ப தத்தண்டை சிலம்புபொன் மிஞ்சியும் வனைந்தார் (92)
தேவி யம்பிகை யழகிய நாயகி சிறந்த
வோவி யம்பெறு முந்திய தாரமா முமைக்குப்
பூவி யைந்தபைங் குழன்முதற் பதம்வரை பூப்பெண்
மாவி யன்கலம் பூட்டின ரணிதுயில் வனைந்தார் (93)
இமைய மால்வரை யதனிடை மன்றல்செய் திடுநாள்
அமைய மேனையா மன்னையா ளணிந்தபோ லணிந்தா
ருமையு டன்சிவ ஞானதே சிகநம்பி யுவந்து
சமையுந் தேர்மிசை யேறின ருலகெலாந் தழைப்ப (94)
நந்தி முன் செலக் கடவுளர் நமக்கரித் தேத்த
முந்தி ஞாயிறு ........................................................................
அந்த வாக்கியப் பிரசங்க மறைதர மருங்கில்
வந்த பூசுரர் வேதபா ராயணம் வழங்க (95)
மிக்க நாரதர் தும்புரு விஞ்சையர் பலரும்
பக்கந் தேகமு நீழலு மாமெனப் படர்ந்து
தொக்க வேழிசைக் கருவியைந் தினுமொலி சொலிப்பத்
தக்க பன்னிரு சூரியர் பகல்வத்தி தாங்க (96)
பாவ கன்சுடர் தீவர்த்தி தீபம்பற் பலவு
மேவ லுக்கியைந் தவரொடுந் திசைதிசை யேற்றி
மேவு மாணவ விருண்முதற் றுருசற விளக்கத்
தேவ வைங்கரத் தவனொடு கணங்கள்முன் செல்ல (97)
மயிலை யூர்திமுன் னெண்மருந் திசைதிசை போத
பயிலு மொன்பது வீரரு முன்னண படரப்
புயலை யூர்திமுன் னெண்மருந் திசைதிசை போத
வியலும் வீரனு ஞாளியூர் தியும்புடை யேக (98)
வாணி நாயகன் மலரய னுருத்திரன் மயேச
னாணி யாகிய சதாசிவ னருவநால் வகையோர்
பேணு மொன்பதாந் தலைமையோர் வடநிழற் பெருமான்
றாணு வாகிய நடேசரும் விமானமேற் சார (99)
இவரொடும் பஞ்ச விஞ்சதிப் பெயருடை யீசர்
புவனங் காப்புறு மட்டவித் தேச்சுரர் பொருவில்
தவமி குஞ்சத கோடியர் மந்திரத் தலைவர்
பவமொ ழிப்பவ ரணுச்சதா சிவர்களும் படர (100)
அண்ட கோடிய ரனைவரிற் றலைவரா மவர்க
ளெண்டி சைக்கணுந் தத்தமக் கியைந்தவூர் தியின்மேற்
கொண்டு சூழ்வர வாலவட் டங்குடை துவசம்
விண்ட லந்தெரிந் திலதென வீதியின் மிடைந்த (101)
தலைவ ராமும்பர் தென்மரு தூர்வயின் சார
வுலகின் மற்றையோ ரந்தர வீதியி னுற்றே
யலகி லவ்வவர் ஞானநேத் திரத்தினா லறிந்தார்
இலகு ஞானதே சிகநம்பி மன்றலி னியற்கை (102)
தேவர் பூமழை பொழிந்திடத் தேவதுந் துமிமேற்
கூவு காகளங் கொக்கரை சல்லிகை பீலி
வாவு பேரொலிக் காடிகை பேரிகை வயிரவான்
றாவு பூரிகை சாரிகை குடமுழாத் தடாரி (103)
மிக்க சச்சரி கிடுபிடி முரசுவீ ரானந்
தக்கை திண்டிம முடுக்கைமல் லாரிசல் லரிசீர்
பக்க மத்தளந் தாளந்துண் டியினொடு பம்பை
புக்க தூரிய முருடுதண் ணுமைபுகும் பதலை (104)
சாருந் தொண்டகந் தருணிகொ டணைதண்மி டக்கை
யாரு மாகுளி கிணைபட கங்குனி லமலை
கூரு மத்துடி யானக முதலியங் குமுறல்
காரு நீர்கெழு கடலும்போ லேயொலி காட்ட (105)
திறங்கொள் பாண்டியன் செம்பியன் சேரல னுலகி
லறங்கி ளர்ந்தமும் மண்டலத் ததிபருஞ் சூழ
விறங்கு தானையோர் நின்றிடத் தேதொழு திறைஞ்ச
லறங்கொள் சாதியோர் அரகரா வென்றடி வணங்க (106)
தம்பி ரான்கணற் றவசிமார் தானத்தார் தவத்தார்
நம்பி ஞானதே சிகர்வரு பவனியை நயந்து
சம்பு சங்கர தாண்டவ மயேசபாண் டரங்க
வும்பர் நாயக வென்றனர் தொழுதன ருவப்ப (107)
அரசு மாணிக்க மழகுமா ணிக்கமே முதலாம்
பரிக லப்பெண்கள் பரதசாத் திரநடம் பயில
வுருவ சித்திரு மேனகை திலோத்தமை யுடனே
வரும ரம்பையர் கேளிக்கை கண்டுள மகிழ்ந்தார் (108)
இன்ன தன்மையின் ஞானதே சிகநம்பி யிரதந்
தன்னி லேயிருந் தனைவர்க்குங் காட்சிதந் தருளி
நன்ன கர்த்திருச் சன்னதி வலமுற நண்ணிப்
பொன்னந் தேர்நிலை சேர்ந்தபின் விடைமிசைப் பொலிந்தான் (109)
பின்பு மந்நகர் சூழ்வந்து பிறைமுடிப் பெருமான்
அன்பு நன்மணம் புரிதரு மம்மனை முன்ன
ரின்ப மாலயன் கைதர விடையினின் றிழிந்து
பொன்ப தித்தொளிர் பாதுகை யிந்திரன் பொருத்த (110)
வேறு
வந்து நிற்றலு மாமறை சொன்முறை
கந்த மிட்டுபாற் கங்கைநன் னீர்க்குட
முந்து முப்பதி ரண்டுமு னந்தணச்
சந்த மங்கையர் தாங்கொடெ திர்ந்தனர் (111)
பார்ப்ப னப்பெண்கள் பன்னுமெண் மங்கல
சீர்ப்பொ ருட்பல செங்கரத் தேந்தினர்
ஆர்ப்ப நிம்ப வடகுமற் றுள்ளன
வேர்ப்ப வையவி யிட்டு மறுகரோ (112)
பஞ்சின் வித்துப் பசும்புனற் பள்ளையம்
மஞ்சி னேர்குழன் மாதர்கொண் டெய்தியே
தஞ்செ யற்படி தந்தொழின் முற்றிப்பின்
செஞ்சொன் மங்கல சோபனஞ் செப்பினார் (113)
முன்றி லெய்தி முளரிப்பொற் பீடமேல்
நின்ற காலை நிரம்பினர் தேவரு
மன்ற லங்குழன் மாதரும் வந்தரன்
றன்றி ருப்பதந் தாமருச் சித்தனர் (114)
தேவ நங்கைநற் றேவமின் னாரொடும்
ஆவின் பாலபி டேக மரனடிப்
பூவி னாட்டினள் பூசித்துத் தன்மனை
மேவி னாளின்ப மெய்புள கிக்கவே (115)
வேறு
பொன்னினு மணியி னுஞ்செய் பூப்பொலி மன்றற் சாலை
மன்னெழின் மாணிக் கத்தால் வனைந்தபொற் றவிசி னும்பர்
முன்னய னெடுமால் விண்ணோர் முனிவரர் தொழுது வாழ்த்தப்
பன்னிநல் லுமையாள் பாணிப் பதுமந்தொட் டிருந்தா னெந்தை (116)
எந்தைவீற் றிருந்தா னெந்தை யிருபத்தைந் துருவு கொண்டோ
ரைந்துமூர்த் தியர்பின் கூர்மாண் டேசனா டகன்மா வீரன்
சுந்தர னந்தி யிட்ட சுடர்மணித் தவிசு தோறும்
பந்தியுற் றிருந்தார் ஞானப் பசுபதி மருங்கிற் சூழ (117)
பண்டைநா ளிமைய வெற்புப் பாவையை மணந்த நாளிற்
றண்டமிழ் முனிவன் றன்னைச் சந்தன வரைசெல் லென்ன
வொண்டவன் மற்றைக் காட்சிக் குவப்புள தென்னுங் காலை
கண்டுகண் களிக்க நின்பாற் காட்டுது மிந்தக் கோலம் (118)
சேறிநீ பொதியத் தென்று செப்பினோம் அவன்பாற் சென்று
கூறிநீ யழைத்தி யென்ன நந்திபோய்க் குறிப்பிற் செப்பப்
பேறுள தென்று கும்பன் பிறைமுடி யடியி றைஞ்ச
வேறிய வுவகை மேற்கொண் டிருக்கென விருக்கை யீந்தான் (119)
நாகநம் பியுமற் றோரு ஞானதே சிகநம் பிக்கிங்
கோகையா லெங்க ளாவி யுடல்பொருள் மூன்றுந் தந்தே
மாகையா லெமக்கு நீரே யருட்குரு வென்று போற்றிப்
பாகுமென் மொழிகள் கூறிப் பதமல ரருச்சித் தாரே (120)
அருச்சனை செய்த பின்ன ரனைவர்க்கு மிருக்கை நல்கி
விருப்பொடு நெடுமால் விண்ணோர் முனிவரர் மேன்மை செய்து
பொருப்பிறை வர்க்கு வந்த புகழ்ச்சிநீர் பெற்றீர் மிக்க
திருப்புனை முகூர்த்த மீது செல்வியைத் தருதி ரென்றார் (121)
நன்னயம் பெற்ற சிந்தை நாகநம் பிகளு ரைப்பப்
பன்னியாந் தேவ நங்கை பார்ப்பன மடவார்க் கொத்த
வன்னையா முலகிற் கெல்லா மழகிய நாய கிப்பெண்
டன்னைமுற் கொண்டு மன்றற் சாலைக்கு நடந்தா ரன்றே (122)
விந்தையம் மின்னைக் காப்ப மிக்கயி ராணி மங்கை
வந்துநின் றடப்பை யேந்த மனோன்மணி முதலா மெண்மர்
கந்தமென் பன்னீர் குஞ்சங் கவரிபூங் கவிகை தாங்க
செந்திருப் பார திப்பெண் செங்கைமேற் செங்கை பற்ற (123)
கற்பக மலர்ப ரப்பிக் கடவுளர் மடவா ரம்மை
யற்புதப் பாத மர்ச்சித் தனைவருந் தொழுது வாழ்த்தப்
பற்பல விருடி மாதர் பல்லாண்டு கூறிச் செல்லக்
கற்புடை மடவா ரியாருங் கவின்பெறச் சூழ்ந்தங் கெய்த (124)
அன்னம்போ னடந்து வந்தா ளழகிய நாய கிப்பெண்
மன்னுமுற் றார மான மலைமக ளெதிரே வந்து
முன்னம்வெண் ணீறு சாத்தி முத்தமிட் டணைத்துக் கொண்டு
தன்னருங் கணவன் செம்பொற் றாளினை வணங்கச் செய்து (125)
தம்பிரா னிருக்குஞ் செம்பொற் றவிசதன் வலப்பால் வைத்தங்
கெம்பிராட் டியும ணைத்தங் கிருந்தன ளிவரை நோக்கி
யும்பருந் தேவி மாரு முற்பன மாகப் பார்த்து
நம்பியார் மகளாய் வந்த நங்கையு மவளே யென்றார் (126)
சதுர்மறை வேதன் மன்றற் சாத்திரஞ் சொன்ன வெல்லாம்
விதிமுறை கொணர்ந்து மிக்க வியாழமும் வெள்ளி யோனும்
முதுமறை முனிவர் தாமு முறைமுறை வந்து சூழ்த்து
புதுமண வோமஞ் செய்து புனைசடங் கியற்றி னாரே (127)
வேதியர் சாதிக் கேற்ற விதிமுறைக் கரும முற்றி
மாதிரு மங்க லம்பொன் மலிந்தநாண் கோவை செய்தே
யாதெழிற் செப்பி லேயிட்ட ருச்சனை புரிந்து பின்னர்
மாதர்கள் கொணர்ந்தார் தொட்டு வாழ்த்தினர் பெரியோர் யாரும் (128)
துணரிதழ்ப் போது சாந்தந் தூபதீ பந்தாம் பூல
மணமிகுங் கனிவ ருக்க மற்றவை யுங்கைக் கொண்டு
குணமிகும் பார்ப்பா ராதி சுமங்கலி குலவக் கூடி
மணமுறு மனைக்குப் பெண்ணை வரிசையோ டழைத்து வந்தார் (129)
தேசுதந் தொளிர்மெய் ஞான தேசிக நம்பி செய்த
பூசனை முறையி னந்தப் புதுமணப் பெண்ணின் கையா
னேசமுற் றயனு ரைத்து நிகழருச் சனைமு டித்து
வாசமென் கற்ப கப்பூ மாலிகை கொணர்க வென்றான் (130)
தேவதுந் துமிமு ழங்கத் திரண்டுபல் லியங்க றங்கப்
பூவைய ருடனே விண்ணோர் பூசுரர் முனிவர் வாழ்த்தக்
காவமர் கற்ப கப்பூங் கடிகமழ் மாலை தன்னை
மாவணங் குமையாள் வாங்கி மணவன்கந் தரத்திற் சூட்ட (131)
புனைந்தபூ மாலை தன்னைப் புதுமணப் பெண்ணுக் கன்பால்
வனைந்தனன் மணவன் பின்னு மகிணன்பா லவளுஞ் சூட்ட
முனந்தரு முறையின் வண்ண மும்முறை யிருவர் சூட்ட
வனந்தனை யூர்தி வேத வாசிகள் பகர்ந்தான் மாதோ (132)
திருத்துமங் கலிய ஞான தேசிக னுமையாள் கைக்கொண்
டருத்தியினருளே பெற்றாங் கழகிய நாய கிக்குப்
பொருத்தமா மமுத யோகம் புனைந்தனன் விண்ணோர் மண்ணோர்
கருத்துளே மகிழ்ச்சி பொங்கக் கண்களி கூர்ந்தா ரியாரும் (133)
நெடியமால் வேதன் வெள்ளை நீண்மருப் பியானை யூர்தி
வெடிகொள்வேற் குலிசன் விண்ணோர் மாதவா வாழ்த்தி நெல்லின்
கடிகிளர் மணிபு னைந்து கவின்மண மிட்ட பின்னணர்
அடிகள் சம் பந்த வர்க்க மவர்களு மணமிட் டாரே (134)
மாப்பிள்ளைச் சிவனும் பெண்ணும் மணம்புரி யோமந் தன்னிற்
பூப்பொரியிட்டு வேதன் புனைசடங் கியம்பச் செய்தார்
பாப்பகர் வாணி பொன்னம் பாவைபார்ப் பனமின் னார்கள்
காப்புறு கற்புத் தெய்வக் கன்னியர் பலருங் கூடி (135)
பாலிகை முளையென் னம்மை பாணியாற் றெளிப்பித் தார்பின்
னாலகந் தானே யெங்கள் அழகிய நாய கிப்பெண்
காலையர்ச் சனைபு ரிந்து கைகளால் வலது பாத
மேலமா ரம்மி மீதே மிதிப்பவைத் தருள்க வென்றார் (136)
சிந்தையின் மகிழ்ந்து ஞான தேசிக நம்பி யன்னோர்
தந்தசொற் படியே வைத்தான் சாலியுங் காட்டக் கண்டார்
முந்தனல் லோமகுண்ட மும்முறை வலஞ்சூழ் வித்தே
யிந்துவே ணியனைத் தார மிரண்டொடு மனையினுய்த்தார் (137)
ஆவின்பால் கனிவ ருக்க மதிரசம் பாய சந்தேன்
றேவருண் ணமுத மாதித் தீஞ்சுவை பலவுங் கொண்டே
மாவணத் தேவ நங்கை மாதுல நாக நம்பி
தேவமா தாதி மற்றுந் தெரிந்தவர் தமைச்சே வித்து (138)
என்னபுண் ணியஞ்செய் தேனோ யேழையேன் மனையி லீசன்
னின்னையிங் கெய்தப் பெற்றே னீதந்த வுணவு நீயே
மன்னுற வுண்க வென்று வணங்கின னாக நம்பி
யன்னசொற் கன்பு தோன்றி யவனுக்கங் கிருக்கை தந்து (139)
கையினா லளைந்து ஞானக் கண்ணினாற் பொசித்தா னெந்தை
துய்யநீர் கொண்டு பாணி சுத்தியுஞ் செய்து பின்னர்
செய்யுப சார மியாவுந் திருவுளத் தமைத்துக் கொண்டா
னையனுக் கமைந்த வெல்லா மன்னையற் கின்ப மன்றோ (140)
தேடரு மயன்கை யாரச் செய்தபே ரூஞ்சற் பீடத்
தாடகப் பாவை மன்னு மழகிய மின்னா மன்னப்
பேடன்ன பன்னி மாரைப் பிஞ்ஞகர்க் கிருபால் வைத்து
நீடரி யயன்விண் ணோர்க ணிறைந்திரு மருங்கு சூழ (141)
குலவுதண் செம்மை வெண்மைக் கோகன கக்கொம் பன்னார்
இலகயி ராணி யாதி யிமையவர் மடந்தை மார்கள்
அலகில்சோ பனங்கள் பாட வரம்பையர் வடந்தொட் டாட்ட
வுலகுயி ராட்டு வானை யூசல்வைத் தாட்டி னாரோ (142)
தும்புரு நார தன்சீர் துதிக்குங்காந் தருவர் மற்றைக்
கிம்புரு டருங்கை வீணை கின்னரி யிராக மாலைத்
தம்புரு முதல வாகச் சாதிக்கு மிசைம கிழந்து
நம்பரம் பையர்ந டிக்கு நாடக வுசிதங் கண்டார் (143)
மஞ்சநீ ராட லென்னு மற்றைநாட் சடங்கு முற்றி
விஞ்சையர் தங்கட் கெல்லாம் விளம்புசீர் வரிசை நல்கி
யுஞ்சன நாக நம்பி யுடல்பொரு ளாவி மூன்றுஞ்
செஞ்சவே நாகே சற்குச் சீதனந் தந்தோ மென்றார் (144)
ஆனபின் னெடுமா லீசற் கஞ்சலி செய்து பாரின்
மானிட வடிவம் பெற்று வந்தனர் விண்ணோர் முற்று
ஞானவா னந்த மாமுன் னன்மணக் கோலங் கண்டார்
போனகம் பொசிக்கச் செய்தல் பூவுல கியற்கை யென்றான் (145)
பூவுல கத்தோர்க் கெல்லாம் பூசுர வுண்டி நல்கத்
தேவுல கத்தோ ருண்ணுந் தேவபோ சனங்கொ டுப்ப
வேவலுக் கியைந்த சிந்தா மணியினை நிதியந் தேனு
காவமர் கற்ப கத்தாற் களிப்புற வமைதி யென்ன (146)
நந்திபா லீசன் செப்ப நந்திமுன் னமைந்த வண்ணம்
பந்திவைத் தவ்வ வர்க்குப் பகிர்விருந் தளித்த பின்னர்
சந்தந்தாம் பூல மாடை தக்கபூண் பலவு நல்கி
வந்தவந் தவரைத் தத்தம் வளம்பதி செல்க வென்றான் (147)
பைந்துழாய் மௌலி வேதன் பாகசா தனன்மற் றுள்ள
வந்தரத் தமரர் நீடு மருந்தவ ரவனி யுள்ளோர்
இந்துசே கரன்பா லெய்தி யிணையடி வணங்கிப் போற்றித்
தந்தருள் விடைபெற் றன்னோர் தம்பதிக் கேகி னாரே (148)
இலங்குதன் வெள்ளி வெற்பி லிணைமர கதப்பொ ருப்பின்
பலங்கிளர் நடுவட் செம்மைப் பவளவெற் பிருக்கும் வண்ணம்
தலங்கிளர் பார்ப்ப னப்பெண் சயிலப்பெண் மருங்கி ருப்ப
வலங்கரித் தொளிரும் வெள்ளை யழகிய விடைமேற் கொண்டு (149)
சொல்லிய நம்பி மார்கள் சூழ்வர நாக நாதர்
நல்லெழின் மருதூ ரென்னு நகர்வலம் புரிந்த பின்னர்
பல்லிய முகிலிற் பம்பப் பன்னிமா ரிருவ ரென்னும்
வல்லியர் பாணி தாங்க மன்றலங் கோயில் புக்கார் (150)
நாகநம் பிக்குந் தேவ நங்கைக்கும் பிள்ளை யானா
ளேகமா யுலக மீன்ற வென்னம்மை விளையாட் டன்றோ
மாகவான் பருதி யிற்கால் வளரொளி பொருவ வெம்மான்
பாகமுற் றிலங்கு கின்றாள் பண்ணைச்சூழ் மருதூர் வாழ்க (151)
தென்மரு தூர்வா ழீசன் றிருமணச் சரிதஞ் சொல்வார்
நன்மன மகிழ்ந்து கேட்பார் ஞாலமேற் செல்வ மோங்கிப்
பொன்மண வனைப்போல் வாழ்ந்து பொருவருஞ் சுவர்க்கம் பெற்றுச்
சொன்மனங் கடந்த ஞானச் சொரூபவா னந்த மாவார் (152)
வேறு
மலைமகள் மருதூர் நாகநம் பிக்கு மகளென வந்திளம் பிறையின்
கலையென் வளர நாகநா தர்தாங் களித்துமுன் மணம்புரி சரிதம்
நிலைபெற நயிமி சாடவி முனிவர் நெஞ்சக மகிழ்தரச் சூதன்
அலைகட லமுதிற் செவிமடுத் தானங் கவர்களா னந்தம தடைந்தார் (153)
திருச்சிற்றம்பலம்
தேவி திருமணத் திருவிழாச் சருக்கம் முற்றும்.
26. ஆதிசேடன் பூசித்த சருக்கம்,
திருந்து தென்மரு தூர்த்திரு நாகலிங் கேசர்
பொருந்து சச்சி தானந்த பூரண சிவபோக
மிருந்த பண்பினி லிருந்ததெற் களித்தன ரிதனுக்
கருந்து பாற்கட லமுதமு நிகர்படா தன்றே (1)
உலகை யீன்றதா யாகிய யுமையைநா கேசர்
நலமு றுந்திரு மன்றல்கூர் சரித்திர நவின்றா
யிலகு மாதவர் பேறுண்டே லின்னமு மிசைத்தி
குலவு சூதவென் றுரைத்தபுண் ணியர்க்கவன் கூறும் (2)
மாதி ரங்களிற் புயங்கமும் பாதலம் வதிந்த
சோதி மாமணிச் சுடர்முடி யுரகமுந் தொழுவோ
னோதி ருங்கலை மறைமுத லாகம முணர்ந்தோ
னாதி சேடனே யனந்தனே யெனும்பெய ரமைந்தோன் (3)
மருத்து வேந்தொடு மிகலிமா மேருவை வளைந்தே
யருத்தி யன்னதை யசைக்கினு மசைவுறா திருந்தோன்
கருத்து நொந்தன வுயிரெலாம் வளித்திறங் காட்ட
திருத்த னேவலி னோர்படம் விலக்குநன் னெறியோன் (4)
ஆகை யாற்பகை மாருத முணவென வருந்தி
யோக சாதனம் புரிந்துமூ லத்தழ லூதிப்
பாக ரேசகம் யூரகங் கும்பகம் பயின்று
நாக ரூபமாஞ் சுழிமுனை தெரிசித்த நல்லோன் (5)
அல்லி யந்தடந் தாமறைத் தவிசுறை யையன்
மெல்லி ருஞ்சுடர்க் கணபணி மாயிர மிலங்க
வில்லி யைந்தமால் பணிவடி வமைந்ததிம் மேலோன்
றொல்லி ருஞ்சுடர் முழுவதும் படைத்தநாட் சுமத்தல் (6)
கிரியை முற்றிட ஞானமுண் டாமெனக் கிளக்கு
முரிய நூன்முறை யுணர்ந்துமா னதத்திலே யுன்னி
யரிதி லிங்கமொன் றிதையபங் கேருகத் தமைத்துத்
தெரிக வர்ச்சனை சோடச விதிமுறை செய்தான் (7)
உரக பூபதி யந்தரி யாகந்தா னுமையோ
டரன ருச்சனை சதயுக மாற்றலு மன்பான்
மரக தக்கிரி சார்ந்தபொன் மேருவை மானப்
பரனு மம்மையு மெய்தினர் வெள்விடைப் பரிமேல் (8)
தேவர் வந்தனை செய்தனர் பூமழை சிந்தி
பூவை வண்ணனும் பிரமனு முறைமுறை புவியிற்
காவ லெண்மரும் வசுக்களு மிருடியர் கணமு
மேவி வேண்டினர் சேடனுக் கருள்கென வியந்து (9)
மிக்க மானத பூசனை முடிந்த பின் விழித்துச்
செக்கர் வேணியங் கடவுள்சே வடிமுடி சேர்த்திப்
புக்கி றைஞ்சின னிருமடங் காயிரம் பொலிந்த
வக்கம் பெற்றபே றடைந்தனன் பன்னக வரசன் (10)
வெய்யில் வெண்ணெய்போ லகமிகக் குழைந்துகும் விழிநீர்
பெய்யு மாரியிற் படிமிசை வார்ந்திடும் பேசு
மையில் வாய்மொழி குழறிடு மணியிதழ் குடிக்குஞ்
செய்ய மேனியிற் கம்பமும் புளகமுஞ் செறியும் (11)
சம்பு சங்கர வரகர சிவசிவா தாணு
நம்ப பூரண சச்சிதா னந்தநா தாந்த
வம்ப யோதர வம்பிகா தேவிகல் யாண
வெம்பு தொண்டனேற் கின்னருள் புரிகென வேண்டும் (12)
என்று வேண்டுவெம் பணியிறை துதிமகிழ்ந் தெம்மான்
நன்று நன்றுநின் றுதிமகிழ்ந் தேமென்கொ னயந்தா
யின்று செப்புதி யவ்வரந் தருதுமென் றிசைப்பக்
குன்ற வில்லிதாள் வணங்கிநின் றன்னவன் கூறும் (13)
காமங் கட்கொலை களவுசொற் பொய்கடுங் கோபந்
நீமை யிச்சைவெம் மதமுலோ பந்தெறு மோகம்
பாம ரம்புகு மச்சரம் பகையகங் கார
மாம ரந்தைக ளனந்தமுற் றனந்தனே யானேன் (14)
மும்ம லக்கருஞ் சேற்றிடை மூழ்கிமுற் பவத்தும்
மம்ம ருற்றிடு வினைச்சுழல் சூறையின் மருண்டு
விம்மி டார்பொறி நுழைகிற்கு மெலியென மெலிந்தேன்
செம்ம லர்ப்பத நீழலிற் சேர்த்தியீண் டெனவே (15)
இன்ன வாசக மரவினுக் கரசுநின் றியம்ப
வன்ன தன்மைநந் திருவருட் பேறுனக் களித்து
முன்னு ளத்தினிற் செயுமகப் பூசையீ துண்மை
யின்ன வாறுநீ புறத்தினும் பூசைசெய் திருத்தி (16)
அகம்பொ திந்தவா தாரங்கண் மூவிரண் டதன்கீழ்த்
திகழ்ந்த குண்டலி மூலத்திற் செழுஞ்சுட ருதித்துச்
சுகம்பொ லிந்திடுஞ் சுழிமுனை நாடியி னூடே
மிகுந்த சோதியா யாறிரண் டந்தமேல் விளங்கும் (17)
பிரம ரந்தரம் பேதிக்கும் பேரொளி யுனது
சிரமி ருந்தமே லுலகெலாந் தோன்றுந்தென் பாண்டி
யரசு நாட்டுறை வைகையந் துறைவடக் கமைந்த
புரம தொன்றுள மருதமா வனத்திடைப் பொலியும் (18)
சோதி லிங்கமிப் புவியுள்ள நாள்முதற் சுயம்பு
மாதி னோடுறைந் திடுதுமியா முலகுள்ள வரைக்கு
மாதி யம்பிகை முதலருச் சித்தபோ லனந்த
நீதி ருந்தவே யன்புவைத் தகங்கார நீங்கி (19)
ஏக வுள்ளமுற் றிருந்தெமைப் பூசைசெய் திருத்தி
நாக லிங்கமென் றுலகுளோர் நம்பெயர் நவில்வர்
மாக நந்தரு நம்பதம் பூசித்த மகிமை
சோக மின்றிநின் னிருவினைச் சமம்பெறுந் துலைபோல் (20)
மூல வாணவ மலபரி பாகமே முற்று
நீல ரூபமாந் திரோதைநல் லருளதாய் நின்று
பால னம்பதஞ் சேர்தரு பக்குவம் பதிக்குஞ்
சால வந்துநாம் ஞானபோ தம்பெறத் தருதும் (21)
என்ன வெள்விடைக் கிறைசொலச் சேடனீ திசைக்குஞ்
சொன்ன பூசையே புரிகுவன் படிச்சுமை சுமந்தேன்
மன்னு பார்புகுந் தருச்சனை செய்வதெவ் வண்ணம்
பன்னு கென்றலு மட்டமா சித்தியைப் பணித்தான் (22)
பின்னும் வேண்டுவ நல்வரந் தந்தருட் பெருமான்
மன்னு சிற்கக னத்திலே காந்தனன் மவுலி
துன்னு மைந்துநூற் றிரட்டிசேர் சென்னியன் றுதித்துப்
பன்னு பாரகஞ் சுமக்கத்தன் வடிவொன்று பதித்தான் (23)
பாந்தன் வெவ்வுருக் கொண்டுபார் புகுதுமேற் பயத்தான்
மாந்தர் துஞ்சுவ ரென்னவோர் வேதியன் வடிவிற்
போந்த கண்டனவ் வருச்சுன புரம்பொலி காட்சி
காந்து பன்மணிக் கணபணக் கட்செவிக் கடவுள் (24)
வில்வப் பைந்தரூ நீழலிற் பருதியின் விளங்கிச்
செல்வ மோங்குநற் சிவலிங்கங் கண்களிற் சிறப்பச்
சொல்வ ளம்பெறத் துதித்தெதிர் கண்டடி தொழுதான்
அல்வி ளக்குதண் பணமணி மாலிகை யணிந்து (25)
திருத்து சன்னதி மண்டபங் கோபுரத் திருத்தே
ரிருத்து தூண்கொடிக் கம்பநீ டெழிற்பெலி பீடம்
பொருத்து வேதிகை காவணம் புனைமணிச் சிகரங்
கருத்து வந்திடு மெழுவகை மதிட்பிர காரம் (26)
விலகி வில்லுமிழ் நவமணி விளங்குநீள் விமானங்
குலவு பற்பரி வாரமாங் கடவுளர் கோயி
லிலகு பொன்னினு மரதனக் குழுவினு மியற்றிப்
பலதி ருப்பணி முழுவதும் பதுக்கினன் பண்பால் (27)
நாக லிங்கர்க்கு மழகிய நாயகி தனக்குஞ்
சேகரங்களே முதலவா பரணமுந் திருத்தி
மாக மண்டல மொப்பதோர் கயிலையின் வண்ண
பாக வெம்பிராற் கழகிய சன்னதி யமைத்தான் (28)
வேறு
தெய்வமறை வேதியர்க்குப் பூதான மகரமனை திருத்தி ஞானச்
சைவநெறி யருந்தவர்க்குப் பூசைமடம் பொசிக்குமன்ன சாலை தொன்னூன்
மெய்வளருங் கலையறிஞர் வீற்றிருப்ப மணிமாடம் விளரி வண்டு
தைவருபூ நந்தவனந் தருமருத வில்வவனந் தழைப்பச் செய்து (29)
மருதீசர் சன்னதிமுற் றடநாக தீர்த்தப்பேர் வகுத்து மேலோர்
கருதுகங்கைக் கதிகமென மூழ்குவா ரிறங்குபடி ககனத் தேகும்
பருதிகண்டு கண்கூச மாணிக்க மணிவயிரம் பதித்துத் தேவர்
சுருதிமுனி வரர்பலரும் புண்ணியமாந் தீர்த்தமெனத் துதிப்பச் செய்தான் (30)
திருவனந்தல் வைகறைநற் காலசந்தி யுச்சிதிரு வந்திக் காப்பு
மருவுநடுச் சாமமெனு மூவிருகா லமும்பூசை வளம்பெற் றோங்க
வருமைதரு மருதீச ரழகியநா யகிநேச ரருளினாலே
பெருகுமருச் சனைபுரிந்து திங்கடொறுந் தேர்நடத்திப் பேறு பெற்றான் (31)
இப்படியிப் படிமீது சதுர்யுகமீ ரைஞ்ஞூற்றி னிரட்டி காலம்
மெய்ப்படிவங் கொண்டானைப் பூசித்தா னொருநான்கு வேதஞ் சொன்ன
வப்படியே நடப்பித்தா னாதிசே டன்மகிமைக் ககில மீதி
லொப்படியென் சொல்வதன்று ஞானமேல் வடிவாக வோங்கி னானே (32)
அரசடியிற் கயமுகனை யாத்திநிழ லைங்கரனை யரன்பொற் கோயிற்
பரவினர்க்கு வரமுதவும் மருதவனக் கணபதியைப் பணிந்து போற்றி
சிரதலத்திற் கங்கைபுனை மருதீசர் சன்னதியைத் தினஞ்சூழ் வந்து
கரமுகிழ்த்துத் தீபவா ராதனைசெய் திருவந்திக் காப்புங் கண்டான் (33)
பாடினான் கீர்த்தனங்கள் படிமீதிற் பணிந்தெழுந்தான் பாணி கொட்டி
யாடினான் பிறவாத நெறியடைந்தே னென்றுகண்க ளருவி சோர்ந்தா
னாடினான் மருதீச னசரீரி வாக்காக நாளு நாளுந்
தேடினான் முகனெடுமால் காணாத பூரணத்திற் சேர்த்து மென்றான் (34)
திருச்சிற்றம்பலம்.
ஆதிசேடன் பூசித்த சருக்கம் முற்றும்
27. ஆதிசேடனுக்கு ஞானம் போதித்த சருக்கம்,
வெள்ளைமால் விடையாய் போற்றி மேருவில் வளைத்தாய் போற்றி
யுள்ளெழுஞ் சுடரே போற்றி யுணர்வினுக் குணர்வே போற்றி
தெள்ளருட் கனியே போற்றி தித்திக்குந் தேனே போற்றி
வள்ளலே போற்றி ஞான மருதீச போற்றி போற்றி (1)
சிவனச ரீரி வாக்குச் சிவஞானந் தருது மென்றே
யவனியிற் சேடனுக்கங் கறைந்தன னென்று ரைத்தாய்
நவமிகு ஞான போத நவின்றது முரைத்தி யென்னத்
தவமுனிக் கணங்கள் கேட்பச் சாற்றுவன் சூதனன்றே (2)
மானவ நாக நம்பி மகட்கொரு கணவ னாகி
ஞானதே சிகனெ னும்பேர் நண்ணித்தென் மருதூ ரீசன்
றாணிலஞ் சுமக்குஞ் சேடன் றனக்கெதிர் வந்து தோன்றிக்
கானிலந் தோய நிற்பக் கண்டடி தெண்டனிட்டு (3)
உரகவேந் தைய னுந்தம் மூரெது பேரே தென்ன
திரமிது கேண்மின் ஞான தேசிக நம்பி நம்பேர்
பரவுநீ சகல னேனும் பண்பின னாத லாலே
வரமுயர் முத்தி நல்க மானிட வடிவாய் வந்தோம் (4)
அந்தமா முத்தி நல்க வசரீரி வாக்குஞ் சொன்னே
முந்துல கெங்கும் யாமே முழுமுத லாகி நின்றேம்
இந்தநன் னகர்க்குள் வாழும் ஈசனும் யாமே யென்றான்
சுந்தரச் சேட னன்பாற் சூழ்வந்து தொழுது போற்றி (5)
பஞ்சநாட் பசித்து வந்தோர் பசிக்கமு தளிப்பார் போன்று
அஞ்சிவந் தடைந்த பேரை யடைக்கலந் தந்து காப்பார்
நெஞ்சகம் பவத்திற் சிக்கி நிலையிலா துலைந்து நின்றேன்
செஞ்சவே யருள்வாய் வேறு சார்பிலே னென்றான் சேடன் (6)
அரவர சிந்த மாற்ற மறைதலுங் கருணை கூர்ந்து
புரவர னிந்த நாளே பொருந்துநன் முகூர்த்த மென்னத்
தரைமிசைப் போதசாலை சமைத்தியென் றெம்மான் செப்பி
யிரவலர்க் கிரவு தீர்க்கு மிலிங்கத்துட் கரந்தா னன்றே (7)
சொல்லிடச் சேடன் றச்சன் சுடர்கெழுங் கனகந் தன்னின்
னல்லெழில் பிறக்குஞ் சோதி நவமணிச் சாலை செய்து
மல்லிகை முல்லை மாலை மணம்பொலி பந்த ரிட்டு
வில்லுமிழ் படாம்பு துக்கி மேல்விதா னங்க ணாற்றி (8)
சந்தனக் குங்கு மத்தாற் றரைமிசை மெழுகிச் சோதி
சிந்துசிந் தாம ணிக்கற் சிறந்ததீ பங்க ளேற்றி
யிந்திர விமானத் துள்ளே யெழிற்சிங்கா சனமி ருத்திச்
சுந்தரப் போத சாலை சுகம்பெற முடித்த பின்னர் (9)
மயன்பெற வரிசை நல்கி மன்னுசன் னதிமுன் வாவி
வியன்பெறு நன்னீர் மூழ்கி வெண்ணீறு புனைந்து வேத
மியம்பனுட் டானஞ் செய்தஞ் செழுத்துமுச் சரித்துச் சோதி
சுயம்புலிங் கத்தை யேத்திச் சூழ்வந்து தெண்ட னிட்டு (10)
அரகர நாக நாத வருட்படி போதசாலை
திரமுறச் செய்தேன் வந்துன் றிருவடி சூட்ட வேண்டும்
வரமிது வென்றான் சேடன் வந்தனன் மரு தூரெந்தை
திரமிகு முண்மை ஞான தேசிகன் வடிவு கொண்டு (11)
நாகருக் கிறைகொ ணர்ந்த நன்மணிச் சிவிகை யேறிச்
சேகரப் போதசாலைத் திருப்பணிப் பொலிவை நோக்கி
யோகைகூர் சிங்கந் தாங்கு மொண் மணித் தவிசி ருப்ப
மாகஞ்சா ரிமையோர் சீட வர்க்கமாய்ச் சூழ்ந்து நிற்ப (12)
இருந்தனன் மருதூ ரீச னெழிற்றிசை முகற்கி யம்பும்
பொருந்துசே டனுக்கு ஞான போதத்தைச் செப்ப வேண்டும்
திருந்திடு நிருவா ணத்துத் தீக்கைக்குப் புரியு மோமந்
தருந்திரு வாக மத்திற் சாற்றிய படிசெய் கென்றான் (13)
விளங்குபொற் கமலத் தண்ணல் விதிப்படி யோமஞ் செய்ய
வளங்கொள்பூ ரணகும் பத்தில் வைத்தநீர் சேடன் சிந்தைக்
களங்கம தனைத்துந் தீரக் கைகொடு தெளித்துப் பின்னர்
துளங்கமா றத்து வாவுஞ் சோதனை செய்து நீக்கி (14)
சஞ்சித வினையை ஞானத் தனியருட் கண்ணாற் கண்டு
பஞ்சுதீப் பட்ட பண்பிற் பற்பம தாக்கி யீசன்
செஞ்சவே யான்மா நிற்பச் சிவமுன்னே பின்னே மாறி
யஞ்செழுத் தாக்கி யாதி யந்தமின் மாலை மாற்றாய் (15)
திருவெழுத் தைந்தி னுற்ற திரோதையு மலமு நீக்கி
மருவுவா சியைப்ப தித்த மந்திரங் கருத்துட் கொண்டு
குருபதம் மனம்பூ சிப்பக் குலவுநீ றிட்டுச் சேடன்
றருவலக் கரந்தாள் பற்றத் தகுமிடக் கைவாய் போர்ப்ப (16)
ஞானபஞ் சாக்க ரத்தை நாகர்கோன் வலக்கண் தானே
தானமாஞ் செவிய தாகச் சாற்றின னெம்மான் அப்பால்
ஈனம தகற்று மாவி னெருவுடன் றுகுநீ கார
வூனம தறவே நல்கென் றுடல்பொரு ளாவி கொண்டான் (17)
சென்னியிற் கைமுன் வைத்துத் திருவடி பின்பு சூட்டி
மன்னுதன் றொண்டாய்க் கொண்டான் மாசுண வரசன் றன்னை
முன்னரீண் டிருத்தி யென்று மும்முத லீசன் செப்பும்
பன்னுமுப் பணிக ணித்தம் பதிபசு பாச மென்ப (18)
பதிசிவம் பசுவ தான்மா பாசமோ காணச் சட்டை
பதியினச் சென்று கூடாப் பசுவுமப் பாசந் தானும்
பதிபசு வுக்கு ணர்த்தும் பசுவுணர்த் தியதைத் தானும்
பதியது விளங்குங் காலம் பசுபாசந் தோன்றா தன்றே (19)
குருவெனும் பதியின் பண்பு குணங்குறி யுருப ரூபம்
மருவிரு பாலு மன்றி மலமின்றி யேக மாகிப்
பெருகுயிர்க் குணர்வாய்ச் சத்தாய்ப் பிறங்குநற் சித்தா யாதும்
பொருவிலா னந்த மாகிப் பூரணப் பொருளாய் நிற்கும் (20)
மன்பசு விலக்க ணங்கேள் மலமறைப் பனாதி சார்ந்தே
யன்புசால் வினைகட் கீடா யளவிலா வுடம்பெ டுத்துத்
துன்பமின் பம்பொ சித்துச் சுதந்தர மின்றி யென்றேட்
டென்பொரு ளென்னுஞ் சார்ந்த தெவ்வடி வதுவா மன்றே (21)
ஏகமா யாண வந்தா னிருளொளி யெனவி ருண்ட
மூகமாய்க் கால வெல்லை முடிவிலே மீள்வ தாகித்
தேகவா ருயிர்ம றைத்துச் செம்பினிற் களிம்ப தேய்க்கும்
பாகமாம் படிதி ரோதம் பண்ணுமென் றறிவார் நல்லோர் (22)
சுத்தமா மாயை யாலே தோன்றுவ தசுத்த மாயை
யித்துணை மாயத் தன்மை யிருவினைத் தொடர்ச்சி யீட்டி
வைத்தது கரும மிந்த மலமைந்தும் பாக மென்ப
சத்திவை யன்ற சத்துச் சடமென வறிந்து கொள்ளே (23)
மலமைந்து முயிரைப் பற்ற வல்லவை யில்லை யந்த
மலமைந்துங் கேவ லத்தே மருவுயி ரறிந்த தில்லை
மலமைந்தோ டுயிரைக் கூட்டி வன்பவத் தழுத்திப் பின்னா
மலமைந்துந் தீர்க்கு நந்தம் மன்னரு ளறிதி மைந்தா (24)
என்றருட் பெருமான் செப்ப விருசெவிக் கமுத மாகப்
பொன்றிய திரிப தார்த்த வுண்மைபெற் றுவகை பொங்க
நன்றுணர் சேடன் செப்பும் ஞானபூ ரணத்தி னான்றா
னொன்றவே பாச நீக்கு முண்மையு முரைத்தி யென்ன (25)
நாகர்கோன் வதன நோக்கி ஞானதே சிகனு ரைக்குந்
தாகமே விளைக்கு மாயைத் தத்துவந் தொண்ணூற் றாறிற்
போகங்கூ றாறு பத்தும் புறக்கரு விகளாய் நிற்கு
மோகைசார் முப்பத் தாறு முட்படு கரண மன்றே (26)
மண்முத னாத வந்தம் வருகர ணங்கண் மாயை
கண்மயக் காமிம் மாயை காட்டுமக் கருமந் தன்னை
யுண்மறைப் பாகி நிற்கு முயிர்விழுங் காண வந்தான்
அண்மல மூன்று மல்லை யறிந்திட நீங்கிற் றன்றே (27)
அருளுனக் குணர்த்த லாலே யவதரந் தொறும றிந்தாய்
தெருடர வந்த தெல்லாந் திருவருட் கண்ண தன்றோ
மருளினிற் கலந்தாய் முன்ன மலமறச் செய்தேம் பின்னை
யிருளறக் கதிர்வந் தாற்க ணியாவையுங் காணு மாபோல் (28)
என்னவே சேடன் செப்பு மெல்லாமுங் கண்டேன் யானே
பின்னைமற் றொன்றுங் காணேன் பிர்மநா னன்றி யுண்டோ
யுன்னறி வென்றும் பார்மே லுயிருள வனைத்தி னுக்குந்
துன்னறி வென்றும் வேறோ சொல்லிலென் னறிவே யென்றான் (29)
சேடனீ தியம்ப ஞான தேசிக னுரைக்கும் பாப்பு
வேடனீ பசுஞா னத்தை விளம்பினை தோன்றா வண்ணம்
பீடுசார் பிரம நீயே பிறப்பிறப் புனக்குண் டாமோ
தேடருட் சத்தி நின்பாற் றெண்ணீரிற் சீதம் போல (30)
சிற்றறி வுண்டு னக்குத் திருவரு ளிருந்து ணர்த்தப்
பெற்றுநீ யறிந்து கொள்வை பிரமநா னென்ற மார்க்க
முற்றுறுந் தன்மை கேண்மோ மூலவா னந்தந் தோன்றச்
சற்றுநீ கண்டா லந்தச் சதானந்த ரூப மாவாய் (31)
கதிரவன் கிரணங் கண்ணுங் ககனமுங் கலந்த பண்பிற்
பதியருள் பிரகா சிக்கப் பசுமலப் பாசம் நீங்கித்
துதியருள் வடிவ மாகிச் சுகந்தரு மகண்டா னந்த
வதிசயந் தோன்று மந்த வருமையுஞ் சொல்லக் கேண்மின் (32)
சிவனிச்சை கிரியை ஞானஞ் சேர்ந்ததென் னென்னிற் பார்மேற்
பவநிச்ச யத்து யிர்க்குப் பகர்மல பாகம் பண்ண
விவனிச்சை கிரியை ஞானத் திவன்செய லுண்டோ வென்னில்
அவனிச்சை கிரியை ஞான மவ்வருட் செயலே முற்றும் (33)
இப்பரி சுணருந் தன்மைக் கிலக்கண மீரைந் துண்டு
தப்பற வுரைப்பன் கேண்மோ சத்திய மும்மை யீது
செப்புதத் துவசொ ரூபந் தெரிசனஞ் சுத்தி மூன்றே
யொப்பிலா வான்மா வுக்கு முருக்காட்சி சுத்தி யுண்டே (34)
சிவரூப முணர்ந்து பின்னைச் சிவதெரி சனந்தெ ளிந்து
சிவயோகஞ் செய்தே யந்த சிவபோக மனுப விக்கச்
சிவநேசம் பெற்ற பேர்க்குத் தேறுமிவ் விலக்க ணங்கள்
சிவஞான வானந் தந்தான் சேர்ந்திட நெறிவே றின்றே (35)
தரைமுத னாத வந்தந் தத்துவ முப்பத் தாறும்
நிரைபட வுதித்தொ டுங்கு நீர்மையு மவத்தை யைந்தும்
புரைபுரை விரிந்தொ டுங்கல் போதிப்ப தருளே மேலோ
ருரையொடு குருவின் வாக்கி லுற்றநூன் முறையிற் காண்டி (36)
தத்துவ நாம ரூபந் தருங்கிரி யையினைத் தேர்கை
தத்துவ ரூப மித்தை சடமல மென்றல் காட்சி
தத்துவ நாமென் றெண்ணச் சார்ந்தரு ளாலே நீக்கி
தத்துவ சுத்தி யீது சத்திய முணர்ந்து கொள்ளே (37)
மூன்றரை யாதி நாத முடிவெனுந் தத்து வங்க
ளென்றன வல்லை நீயிங் கிவைசட மென்று காட்டி
யொன்றொன்ற தாக நீக்கி யுணர்த்தநா முணர்ந்து ணர்ந்து
நின்றதோ ரறிவொன் றுண்டே நின்னுரு விண்ணுங் கேண்மின் (38)
ஆருயிர் மலப்பா லுற்றா லம்மல ரூப மாகுஞ்
சீரருள் சார்கி லந்தத் திருவருள் வடிவாய் நிற்குங்
கூர்மல விருளு மெங்குங் குலவுநல் லருளு நீங்கி
யோருயிர் தனித்த தில்லை யுலகினிற் கண்டோ ருண்டோ (39)
அந்தரத் தந்த கார மாதவன் கிரண மாங்கு
வந்தடைந் தேக மாக மன்னுமத் தன்மை போல
விந்தநல் லுயிருந் தன்பா லிருளருள் கூடுந் தன்மை
முந்தரு ளுணர்த்தக் கண்டு முற்றுறத் தெருளு மன்றே (40)
கண்ணினுள் ளொளியு மிந்தக் ககனமு மிடம தாகப்
பண்ணிரு ளொளியி ரண்டும் பார்க்கில்வே றவைபோ னீயும்
உண்ணிறை மலத்தி னுக்கு மோங்கரு ளினுக்கும் வேறு
நண்ணுவை யிரண்டி னுக்கு நடுநிலை நீயே யன்றோ (41)
அறிவதங் குயிரே யென்னி லவ்வுயிர்க் கேது காட்சி
செறிதரு மிருளை யந்தத் திருவரு ணீக்க நீங்கிப்
பிறிவிலா வருளா லந்தப் பேரரு டண்ணைச் சார்ந்து
நெறியுயிர் தன்னைக் கண்ட நிலையுயிர்க் காட்சி யாமே (42)
சாருயி ருணரா தொன்றைத் தனக்கறி வாகி நிற்கு
மோருயிர் தன்னைக் காட்ட வுற்றதி லடங்கிக் காணு
மாருயிர் தற்போ தம்விட் டருள்வடி வாகி நிற்கை
சீருறு மாத்ம சித்தி தெளிவர்சிற் சத்தி சேர்ந்தோர் (43)
கண்ணினுக் குருவு காட்டுங் கதிரவன் கிரணம் போல
நண்ணுயிர்க் குணர்வ தாகி நாளுமுற் றுடலின் பாலே
யெண்ணுறு கருவி கூட்டி யிகபரத் தின்ப துன்ப
முண்ணவே யருத்தல் காண்கை யுயர்சிவ ரூப மாதோ (44)
படரொளி யதனா லந்தப் பருதியை காண்கை போலிவ்
வுடலிடை யுனக்கு ணர்த்து முள்ளுணர் வெமது சத்தி
கடவரு ளாலே நம்மைக் கண்டுநின் னிடம்போ லெங்குந்
திடமுற நிறைவு காண்டல் சிவதரி சனம தாமால் (45)
நின்றுனக் குள்ளு மாகி நிகழ்ந்திடு புறம்பு மாகி
யென்றுபல் வண்ணஞ்சார்ந்து மியற்கையொன் றாகி நிற்பேம்
நன்றுநீ சத்துச் சித்தா னந்தநம் வடிவி னொன்றி
யொன்றினோ டிரண்டு மாகா வுண்மைநற் சிவயோ கங்காண் (46)
அருளறி விக்கும் போத மறிந்திடுஞ் சீவ போத
மிருவகைப் போத முஞ்சேர்ந் திரண்டன்றி யொன்று மன்றி
மருளற நிற்ப நின்பால் வந்து ரின்ப மோங்குந்
தேருடரு நிட்டை யீது சிவபோக மாகு மன்றே (47)
வேறு
மண்டான் முதலாய்ச் சிவமீறாய் வருதத் துவங்க ளாறாறுங்
கண்டான் சடமென் றவனிவனே கருணை யருளின் வடிவானோன்
றொண்டா னவனு மவனேநற் றுரியா தீதத் தெள்ளமுத
முண்டா னவனு மவனேயென் றுரைக்கும் வேத வுபநிடதம் (48)
சொல்லக் கேள்கே வலஞ்சகலஞ் சுத்த மெனமூன் றவத்தையிவை
புல்லு முதற்கா ரணவவத்தை புகுமொவ் வொன்றி லைந்தவத்தை
யல்ல லுறுஞ்சாக் கிரங்கனவு சுழுத்தி துரிய மதீதமிந்த
வெல்லை தருங்கா ரியவவத்தை பதினைந் தெல்லா மீரொன்பான் (49)
சூட்டுந் தனிக்கே வலஞ்சகலஞ் சுத்த மூன்றிற் சொல்லுயிர்க்கு
நாட்டு முண்மை கேவலமே நண்ணுங் கருவி கரணமிறை
கூட்டுங் காலை சகலத்திற் குலவு மலமும் மையுமகலக்
காட்டு மிடத்திற் சுத்தனாங் கருவுற் பவம்போய் முத்திபெறும் (50)
செறியுஞ் சகலத் துறுகருவி தீர நீங்கிற் கேவலம்வந்
தறிவை விழுங்கு மதிற்கூடா தகன்றே யருட்கே வலமூழ்கிக்
குறியுங் குணமுங் கடந்தின்பங் குலவு மகண்ட பூரணமா
நெறியி னிற்கை நிருவிகற்ப நிட்டை யிதனி னீயிருத்தி (51)
தன்னை யறியத் தலைவனையுந் தானே யறிய வுயிர்தனக்கிங்
கன்னை யனைய சிவசத்தி யருளுங் கால மவ்வுயிர்க்குப்
பின்னை யொழியுஞ் சகத்தாசை பெறுந்தா துண்டேற் காமுகர்க்கு
மின்னை நிகர் பெண் ணாசைதரும் விண்டா லில்லை யதுபோலும் (52)
கூலி யாளர் பொருள்வரவு குறிக்குந் தொழில்பொன் மெய்த்தொண்டு
பாலி யாமற் றவம்புரிவர் பற்ற தொழியா தனுபவிப்பார்
சோலி யாகு மியானெனது சுட்டா தருளின் பணிநிற்க
வேலி யாகக் காப்பதுநாம் மிக்கா னந்தம் விளைத்திடுதும் (53)
உலகிற் பெற்ற பொருளனைத்து முறுதி யுண்டோ விழப்பிதனைக்
குலவு கானற் றெண்ணீரிற் குறித்துக் கண்டோர் பேறிழப்பி
லலையு மின்ப துன்பவெள்ளத் தழுந்தார் மிதவா ரருள்வசத்திற்
சலன மற்று நிற்பரவர் தாமே நாமே தவறின்றே (54)
அனைத்தா முயிருந் திருவருளே யசைக்க வசையு மல்லாது
தினைத்தாம் பொழுது மசைவுண்டோ சீவச் செயலென் றேதுமில்லை
எனைத்தாம் பொழுது வுணர்த்திடினு மூடரெனதே யானென்பர்
தனைத்தா னுணரு மிடத்தந்தச் சத்திச் செயலே சகமனைத்தும் (55)
வாவு மாயை யிடத்திருந்து வந்தகரண பேதங்க
ளாவ வுயிருக் கருள்கூட்ட வறிந்து பொசிக்கு மதுவன்றிச்
சீவ போதம் பிரபஞ்சச் செயலைப் புரிதற் குணர்வுண்டோ
வோவில் வினைகள் அறிந்தருளே யூட்டப் பொசிக்கு முத்தமனே (56)
கிளக்கு மிச்சை ஞானமொடு கிரியை மூன்றுஞ் சிவன்சீவர்
துளக்க மின்றி யுடையோரே சுயம்பும் பிரதிட் டையும் போல்வர்
வளைக்கு மிருடீர்த் தக்கமுரு மருவக் காட்டும் பருதியென
விளக்கு மிருளிற் பொருள்காட்டும் விடிந்தால் விளக்கும் விளங்காவே (57)
விழியி னொளியைப் பருதியொளி விழுங்கி யுருவு காட்டுகைபோல்
மொழியு முயிர்கட் குயிராகி முன்னை வினையூண் பொசிப்பிப்ப
னொழிவி லிறைவ னெனவுணர்ந்தோ ருண்மை யருள்சார்ந் தவருலகம்
வழுவி விடினு நெறியுறினும் மன்னு மீசன் பணியாமே (58)
வேறு
திருந்துதவந் தருமநெறி விரதஞ் சீலஞ்
செய்கிரியைப் பயன்வேண்டிச் செய்வர் முற்றும்
வருந்தவரும் பிறப்பினனு பவிப்ப தாக
வயங்குமுயிர்ப் போதமவை யனைத்து நீங்கி
யருந்தகையெம் மிறைசெயலென் றுணர்ந்து ளாசை
யகன்றுமல விருளகல வருளைச் சேர்வோர்
பொருந்தருளி னவசமுற்ற வனந்த நின்னிற்
புகழ்மருதூ ரீசர்பதம் பூண்ப தாமே (59)
இன்பமிகுஞ் சிவஞான மிடைவி டாமல்
இருந்துநிரு விகற்பநிட்டை யெய்தி னோர்க்குத்
துன்பமில்லை யானந்தம் பெறுவர் பாணி
சுரக்குமணற் கேணியெனத் தோன்றுஞ் சித்தி
யன்பநெடுந் தட நிரம்பு மாழத் தெண்ணீர்
அமர்ந்தமீன் சுகமெய்து மதனை விட்டு
வன்பமருங் கரைமேவத் துள்ளி லென்னாம்
மனமடங்கா ரெழுபிறப்பு மயங்குவாரே (60)
முக்காலத் தினுமுயிர்க்கோ செயலொன் றில்லை
முந்துசிவன் செயலென்றே முழுதுங் கண்டோர்
சிக்காமற் சத்சிதா னந்த ஞானத்
திருவருளே வடிவானோர் சீவன் முத்தர்
மிக்கான நிருவிகற்ப நிட்டை சார்ந்தோர்
வேதாந்த சித்தாந்தம் வேறு காணார்
புக்காவ லொடுமவன்போற் பாவித் தென்னாம்
பொசித்தவர்போ னினைத்திருக்கப் பசிதான் போமோ (61)
ஞானமய மானவரு ளாற்றி னூடே
நண்ணியந்தப் பிரவாக நடந்த வாறே
யானவுயிர்ச் சங்கற்பம் விடுத்துச் சென்றா
லகண்டசச்சி தானந்தப் பிரம வேலை
தானணுகிச் சேர்ந்திடுமிந் திரியக் கள்வர்
சார்ந்துமனங் கிரகிக்கச் சமையம் பார்ப்பர்
ஈனமிகு மலவிருள்புக் குறங்கா வண்ண
மிமையாத நாட்டம்வைத் திருத்தி மைந்தா (62)
பரவியெழுந் தத்துவங்கண் முப்பத் தாறும்
படர்ந்திழுக்கும் பிரபஞ்சப் பற்று நீத்துக்
கரவுசெயுங் கேவலம்புக் கழுந்தி டாது
கலக்கமுறு முயிர்ப்போதக் கவர்ச்சி யின்றி
யரனருளிற் றனைமறந்து சுழுத்தி யன்போ
லகண்டபூ ரணபோத மாகி யின்பம்
வரவரவெண் பிறைபோல வளரப் பெற்று
மன்னுதிநந் தொண்டர்பதம் வணக்கஞ் செய்க (63)
தத்துவத்தை நீநடத்துந் தன்மை யில்லை
தத்துவங்கள் சடைமுன்வந் தடைந்த தில்லை
தத்துவங்க ளன்னியமென் றுணர்ந்து நீங்கத்
தன்னறிவிற் சுதந்தரமோ சற்றுமில்லை
தத்துவங்க ளுன்னையருள் கூட்டப் பின்னைத்
தற்போத முனதியற்கை தானே யுண்டாந்
தத்துவத்தைத் தானாகக் கருத லாலே
தனையின்றி வினையேறுஞ் சனிப்புஞ் சாரும் (64)
தேகமசை யாதிருத்திக் கண்ணை மூடிச்
செறிகரணம் பொறிபுலன்க ளடக்கிக் கற்போ
னாகமுழை யோடிருந்தங் கிலக்கி யத்தே
நாட்டமுறு நம்பிக்கை சீவ போத
மாகையினால் யோகமதிற் சித்தி யன்றி
யடர்மாயை தீரவதி லையம் நீநம்
பாகமுறை யருட்சத்தி நடத்தும் வண்ணம்
பார்த்தருந்தி லிருவினைபோம் பவங்க டீரும் (65)
கயிறற்ற வீசலொடு காற்றி லாத
கறங்கெழுது சித்திரமட் கலஞ்ச மைப்பான்
பயிலுற்ற திகிரிநா வசைந்தி டாது
பார்மீது வைத்தமணிப் பண்பு போல
வுயிருக்கு ளுயிரான பரபோ தத்தி
லொடுங்கியுயிர்க் கிரியையிச்சை ஞான மின்றிச்
செயிரற்றங் கிருந்தபடி யிருக்கை கண்ட
செய்தியரே சகசநிட்டை திருந்தி னோரே (66)
முற்பவத்திற் செய்தசிவ புண்ணி யத்தான்
முன்னூலைக் குருவுரைப்ப முயன்று கேட்டுப்
பொற்புறுநற் பதிபசுபா சந்தா னோர்ந்து
புலப்படவே யிதையத்திற் சிந்தை செய்து
சொற்பமுறு பசுவினுக்கோர் செயலு மில்லைச்
சுதந்தரமீ னங்காண்கை தெளிவ தாகு
நற்புனித வருள்வசத்தே நிற்கை நிட்டை
ஞானவா னந்தமுத்தி நான்குங் காண்டி (67)
சுருதிசாத் திரமிருதி கலைபு ராணந்
துடங்கியவை கிரியாதி பாச ஞானம்
பெருகியதத் துவங்கழன்ற விடத்து நானே
பிரமமென்கை பசுஞான மிவையி னாலே
கருதுமுத்தி முத்தியன்று பதிஞா னந்தான்
கலந்துயிர்ப்போ தம்விடுத்துக் கடவுள் பாதம்
மருவுபூ ரணவின்பச் சுகசொ ரூப
மன்னுதலே பதிஞான மகத்தர முத்தி (68)
புண்டரிகப் பத்திரநீர்த் துளியும் வெள்ளைப்
பொடிநீற்றிற் கழற்காயும் புகுந்து சேற்றைக்
கிண்டியெழுஞ் சிறுபிள்ளைப் புழுவு மண்சேர்
கேழ்கிளருந் தங்கமும்போற் பிரபஞ் சத்திற்
பண்டைவினைப் படிகிடந்து குடும்ப பாரம்
பதிந்திடினு ஞானியர்தம் பண்பு நீங்கார்
அண்டர்தொழுங் கறைக்கண்ட னருளை நோக்கி
யானந்தம் பெற்றிருப்ப ரறிந்து கொள்ளே (69)
என்றிந்த ஞானவுப தேசத் தன்மை
யிசைமருதூர் நாகேச னியம்பச் சேடன்
ஒன்றியுளங் களிசிறப்ப வுணர்ந்து முற்று
முளத்திருத்தித் தெளிந்துநிட்டை யுற்றுப் பின்னர்
மன்றன்மல ரிட்டிருதா ளருச்சித் தன்பால்
வழிந்துவிழி நீர்பூப்ப வணங்கி யெந்தா
யின்றுகண்ட குருவடிவா யென்றுங் காண்டற்
கெழுந்தருள்க வென்றுதுதி யியம்பு கின்றான் (70)
வேறு
அன்னந் தாவென வந்தவர்க் கன்பொடு மமுதளித் தறஞ்செய்க
முன்னந் தாவெனக் கதலிமூ லத்தெழு முளைபொரும் பவந்தீர்கச்
சொன்னந் தாதுரைத் திடவெனைப் பணித்தநற் சுந்தரப் பெண்பாகர்
பொன்னந் தாமரைத் திருவள ரருச்சுன புரத்துறை யெம்மானே (71)
மலிக டற்படு துரும்பெனக் கறங்கென மருண்டுனை வணங்காத
கலிது லைத்தகந் தீர்த்தனை யுனக்குநான் கருதுகைம் மாறென்கொல்
ஒலிதி ரைப்பகி ரதிநதிக் கோடமொத் தொளிர்பிறை சடைதாங்கிப்
புலிய தட்டிரு வரைபுனை யருச்சுன புரத்துறை யெம்மானே (72)
தீது மண்டுமென் சிந்தையைந் தெழுத்துமோர் தினத்தினு நினைத்தேனோ
வேது கண்டெனைத் தொண்டெனக் கொண்டுநின் னிணையடி முடிவைத்தா
யூது விண்டுவாய் விண்டொரு விண்டுநின் றுமிழிசை யெனக்கஞ்சப்
போதி லண்டுநால் வேதமோ தருச்சுன புரத்துறை யெம்மானே (73)
குருடெ னச்சுழன் மும்மலச் சூறையிற் குறுஞ்சரு கெனச்சுற்றித்
தெருட ரப்பெறா தலைந்தவென் முடிமிசை திருவடி பதித்தாண்டா
யருட ரித்துல கடங்கலுங் காப்புற வரசுதந் தனையென்று
புருட வுத்தமன் றொழுதிடு மச்சுன புரத்துறை யெம்மானே (74)
அங்கு வந்துநா னடைந்தது மில்லைநின் னருளெனைத் தடுத்தாள
விங்கு வந்தது மில்லையெஞ் ஞான்றுநா மிருந்தவா றிருந்தேமால்
சங்கி னம்பொழி நித்திலந் திங்கள்சூழ் தாரகைக் குழுவென்னப்
பொங்கு தெண்டிரைத் தடம்பொலி யருச்சுன புரத்துறை யெம்மானே (75)
ஆர ணத்துறை யாகமத் துறையிரண் டந்தமுஞ் சமம்பண்ண
நார ணற்குமுற் றிடுமதோ நீயன்றி ஞானமார் மொழிகிற்பார்
சார ணற்கரு ளின்பமே யகண்டமே சத்துச்சித் தானந்தப்
பூர ணப்பொருட் செல்வமே யருச்சுன புரத்துறை யெம்மானே (76)
கடிவி டங்கெழு பாம்புரு வமைந்துள்ளேன் கண்டவர் மருண்டோடி
யிடிபொ ரும்பெரும் பாவியென் றஞ்சுவ ரென்னையுந் தடுத்தாண்டாய்
அடிய டைந்திடப் பசுமல மைந்தையு மருட்கனற் புடமிட்டப்
பொடிய ணிந்தமெய்க் கடவுளே யருச்சுன புரத்துறை யெம்மானே (77)
தவர்து தித்தசிற் றம்பல நடம்புரி தன்மைபாண் டியன்செங்கோல்
அவனி மீதந்தச் சோதியம் பலத்துநின் னாடல்கண் டன்புற்றேன்
நவம ணிப்பணி யணிமுலை யழகிய நாயகி யுலகீன்ற
புவனை யுத்தமி மணவனே யருச்சுன புரத்துறை யெம்மானே (78)
எண்ணு றுஞ்சுத்த கேவலத் தடங்கிட விருவினை யவர்கில்லைப்
பண்ணு தீங்குறு மாயைபுக் கழுங்கிலர் பரமநின் னருட்பாலே
நண்ணு கின்றமெய்த் தொண்டர்க ளவர்களே நயந்துமுற் பவந்தோறும்
புண்ணி யங்களே புரிந்துளோ ரருச்சுன புரத்துறை யெம்மானே (79)
வள்ள லென்றுபார் மனிதரைத் துதிக்குனர் மடையரெப் பொருளேனுந்
தெள்ளு தொண்டர்கள் குறிப்பறிந் துதவுனைத் தேர்ந்துசெப் பிடவேண்டும்
உள்ள மொன்றிலே தர்க்கம சாத்திர மொன்றொடொன் றிகல்சார்ந்து
புள்ள லம்புதண் சோலைசூ ழருச்சுன புரத்துறை யெம்மானே (80)
திருந்து பாப்பிறை தோத்திரஞ் செய்ததிச் செந்தமிழ்ப் பதிகத்தை
யருந்து தெள்ளமு தாமெனக் கற்கின்றா ரன்புறக் கேட்கின்றா
ரிருந்து சொற்பொரு டெளிந்தபேர் செல்வம்பெற் றிருந்துறக் கமும்பெற்றுப்
பொருந்து முத்தியு முறச்செய்வ ரருச்சுன புரத்துறை யெம்மானே (81)
ஆதி சேடனுக் கருண்மரு தீசர்தந் தருளிய சிவஞானஞ்
சூத ரன்பொடு நயிமிசா டவியுறை தொன்முனிக் கணங்கேட்ப
வோத லுஞ்சிவ சச்சிதா னந்தத்தி லுறைதரு முயிரேபோற்
போத வேயுடல் புளகமுங் கம்பமும் பொருந்தின ரவர்தாமே (82)
திருச்சிற்றம்பலம்.
ஆதிசேடனுக்கு ஞானம் போதித்த சருக்கம் முற்றும்.
28. அட்டமா நாகங்கள் வரம்பெற்ற சருக்கம்
துதி.
பெண்டு பிள்ளை சுற்றமெனப் பெருகுங் காதல் மயக்குற்றுத்
தொண்டு போலே யலைந்துலைந்து சுழலா வண்ணந் தோன்றிரவி
கண்டு மலருந் தாமரைமேற் கமமுந்தேற லுண்டுகளி
வண்டு மறையி னிசைமுழங்கும் மருதூ ரீசன் பதம்பணிவாம் (1)
நாக வரசு மருதீசன் ஞான பாதம் பூசித்துத்
தேக மிருந்தும் பொய்யெனவே தேர்ந்து பரமா னந்தசிவ
போகம் பெற்ற கதை பகர்ந்தாய் பூமி சுமந்த பாந்தளெட்டு
மாகங் குளிர மருதூர்வந் தடைந்து சிவனைப் பூசித்து (2)
வரம்பெற் றதுவுஞ் சொல்கவென்று மகத்தா நயிமி சாடவியிற்
றிரம்பெற் றிருக்கு முனிவர்செப்பத் தேர்ந்து சூதன் பகர்கின்றான்
உரம்பெற் றிருக்கும் பார்சுமக்க வொருங்கு சேடன் சித்தியெட்டு
நிரம்பப் பெற்ற தன்மைகண்டு நினைந்து மனித வடிவாகி (3)
வில்வ வனத்தை வந்தெய்தி விளங்கு திசையி னாகமெட்டு
நல்வந் தனைகூர் சன்னதிமுன் னாக தீர்த்தத் தின்மூழ்கி
பல்வந் தனையா மனுட்டானம் பயின்று நியமத் துறைமுடித்தே
யெல்வந் தெழுபோ தஞ்செழுத்து மிசைந்தா யிரத்தெட் டுச்சரித்து (4)
கோவில் சூழும் வலம்புரிந்து கொன்றை மாலை வேணியனைத்
தீவ வாரா தனைவேளை சென்று பணிந்து கைதொழுது
காவி நயன வழகியமின் கமல பாத மஞ்சலித்துத்
தாவின் மருதூர் நகரிடத்துத் தவஞ்செய் திருந்தா ரோராண்டு (5)
இன்ன வாறு தவமியற்று மெட்டுத் திசையி னாகங்கண்
மன்னு மிதயத் தன்புகொண்டு வந்தார் விடையி னாகேசர்
கன்னி யுமையோர் பக்கமுறக் கண்டு களிகூர்ந் தெதிர்வணங்கிப்
பன்னு மலர்கொண் டருச்சித்துப் பணிந்தார் கம்பம் புளகமுற்றார் (6)
வாக்கு மனமுங் காணாத வடிவா மின்பச் சுயஞ்சோதி
கேக்கு மன்பு கூர்ந்தடியேந் தெரிசித் திடப்பெற் றேமிந்தப்
பாக்கி யம்போ லெவர்பெற்றார் பண்டு புரிந்த தவமென்று
நோக்குங் கண்கள் களிகூர்ந்தார் நுவலத் தகுமோ வவரன்பு (7)
மருத வனத்து நாகேசன் மகிழ்ச்சி கூர்ந்து செப்புகிற்குந்
தருமெண் டிசையி லரவங்கா டவம்நீர் செய்த ததிசயமாங்
கருதுங் கருத்தில் வேண்டுவன கழறு கென்றா ருரகங்க
டருமிப் பூமிப் பாரத்தைத் தாங்க மாட்டா திளைத்தனமியாம் (8)
சேடற் குதவு மட்டசித்தி திறம்பா தெமக்குந் தரவேண்டும்
ஆடற் பாதக் குஞ்சிதத்தா ளரசே யென்று தெண்டனிட்டார்
நாடற் கரிதா நாகேசர் நயந்து நுமக்குந் தந்தன மியாஞ்
சூடற் கமைந்த பூபாரந் துரும்பு நிகர்க்குஞ் சுமைதோன்றா (9)
நீங்கள் சுகமுற் றிருத்திரென நீங்கிக் கலந்தா ரிலிங்கத்தில்
ஆங்கு வரம்பெற் றகமகிழ்ச்சி யானா ரட்ட மாநாகர்
தாங்கிப் புவியைப் பரிக்கின்றார் தன்மை யீதென் றருட்சூதன்
ஓங்கு முனிவர்க் கியம்பலுமே யன்பா லன்னோ ருளமகிழ்ந்தார் (10)
திருச்சிற்றம்பலம்.
அட்டமா நாகங்கள் வரம்பெற்ற சருக்கம் முற்றும்.
29. மதிமான் வரம்பெற்ற சருக்கம்
சரியை கிரியை யோகமெனுந் தவங்கண் மூன்றுஞ் சங்கற்பம்
புரியு மவர்கள் சிவலோக போகம் பொசித்து மீளுவார்
தெரியு ஞானம் பெற்றுமுத்தி சேர்க வேண்டு வோர்மருத
புரியி லிருக்கு நாகேசர் பொன்னந் திருத்தாள் போற்றுகிற்பார் (1)
எட்டுத் திசையி னாகர்மரு தீச னிணைத்தாள் பூசித்தே
யட்ட சித்தி பெற்றாரென் றறைந்தே மின்னுங் கேண்மின்கள்
கெட்ட வறுமை தொலைந்தொருவன் கிளருந் திருவிற் பொலிந்தகதை
சுட்டி யுமக்குச் சொல்வனெனச் சூதன் முனிவர்க் கோதுவான் (2)
வேதா வன்ன வுத்தமனாம் வேத விரத னென்றொருவன்
கோதா விரியி னதிதீரங் குலவு கின்றோன் சகலகலை
மாதா விருதா ளருச்சித்து மகத்தாம் வேதா கமந்தெளிந்தோ
னாதா ரமதாம் நிலைமையின்றி யடங்கா வறுமைக் கிடமானான் (3)
சொல்லு மவனுக் கொருபிள்ளை துதிக்கு மதிமா னென்றொருவன்
புல்லு முன்னூ லுபநயனம் புனைந்த வந்நாள் முதலாக
வல்லும் பகலுஞ் சதுர்வேத வத்தி யயனங் கற்றுணர்ந்து
செல்லு மெனுங்கா வியம்படித்துத் தெளிந்தா னாறு சாத்திரமும் (4)
தந்தை பரம பதமடைந்தான் சார்ந்தா ளன்னை யனுமரணம்
இந்த மகவுக் கொருதுணையு மின்றித் தென்பாற் றிசைக்கேகி
வந்து மருதூர் தலஞ்சேர்ந்தான் மகத்தாம் விமல விருடிதனை
யந்தத் தவத்திற் கண்டவனை யன்பு கூர்ந்து தெண்டனிட்டான் (5)
தெண்ட னிட்ட மதிமானைத் திருந்த நோக்கி யவ்விருடி
மண்டு மன்ப னீயாரே வந்த தெங்கே யெனக்கேட்பப்
பண்டு தந்தை தாயிறந்த பண்புந் துணையங் கொருவரன்றித்
தொண்ட னேனித் தலமடைந்தேன் சுருதிப் பொருளென் றுனைக்கண்டேன் (6)
தந்தை யெனக்கு வேதங்கள் சாத்திரங்க ளாகமங்கள்
சிந்தை யறிந்து போதிப்பத் திருந்தக் கற்றேன் வறுமையுற்று
நொந்து தளர்ந்தே னுனைக்கண்டே னோத றீர்ந்தே னெனச்சொன்னான்
அந்த மகவுக் கருள்விமல னஞ்ச லஞ்ச லெனவுரைத்து (7)
பிரண வத்தை முன்வைத்துப் பின்னே நகர மாதியாம்
புரண பஞ்சாக் கரந்தன்னைப் போதித் தெமது மகவேநின்
முரண தகல மருதூரின் முளைத்த விலிங்க சன்னதிமுன்
கிரணப் பருதி யெழுமுன்னங் கிளரு நாகத் தடம்படிந்து (8)
சிறந்த சுத்தத் துகிலுடுத்துத் திருநீ றிட்டங் கனுட்டான
நிறைந்த நியமத் துறைமுடித்து நிகழுங் காயத் திரிநினைத்தே
யுறைந்த கருத்தி லஞ்செழுத்தை யுவந்தா யிரத்தெட் டுச்சரித்துப்
பிறந்த விலிங்க சன்னதியிற் பிரகா ரங்கள் வலம்புரிந்து (9)
தீவ வாரா தனைவேளை சேவித் திலிங்கந் தெரிசித்துப்
பாவை யழகு நாயகிபொற் பாதம் வணங்கித் தெண்டனிட்டு
மேவு மொருபோ தருந்தியிந்த விரதமூன்று திங்கள்செய்தால்
ஓவ லின்றி மருதீச ருமையுந் தாமும் வெளித்தோன்றி (10)
வேண்டுஞ் செல்வந் தருவரென விமல விருடி செப்பலுமே
பூண்ட விரதந் தப்பாமற் பொருந்த நடத்தி வருமந்நாள்
ஆண்ட வரசன் மருதீச னம்மை யுடனே வெளித்தோன்றி
யீண்டு செம்பொற் கிழியொன்றை யீந்தான் மதிமா னின்புறவே (11)
மன்னு மதிமான் பொற்கிழியை வாங்கித் தொழுதஞ் சலிசெய்யப்
பின்னு மையா யிரவருடம் பெரும்பார் மீது தருமங்க
ளென்னை நோக்கிச் செய்துசுகித் திருத்தி யெனவே யளித்திலிங்கந்
தன்னுண் மறைந்தா னாகேசன் றழைத்தான் மதிமா னின்புறவே (12)
என்று சூத னிக்கதையை யிருந்த முனிவ ருளங்களிப்பத்
துன்னு மன்பாற் சொல்லுதலுந் துதித்து வணங்கி யஞ்சலித்தார்
நன்றி தெனவே கற்பவரு நயந்து கேட்கு மவர்தாமும்
அன்றைத் தினம்போ லெஞ்ஞான்று மமைந்திந் திரன்போல் வாழ்வாரே (13)
திருச்சிற்றம்பலம்
மதிமான் வரம் பெற்ற சருக்கம் முற்றும்.
30. சிவநிசியில் வேடன் வரம்பெற்ற சருக்கம்,
எஞ்ச லின்றிச் செகம் நடத்த லெல்லா நமது செயலுனக்கு
வஞ்ச மில்லைப் பிணியில்லை வறுமை யில்லை மயக்குபிர
பஞ்ச மில்லைப் பவமில்லைப் பரமா னந்தச் சுகந்தருது
மஞ்ச லெனுந்தென் மருதூர்வா ழரனே நின்பா லடைக்கலமே (1)
மதிக்கு மதிமான் றனக்கின்ப வாழ்வு தந்தார் மருதவனப்
பதிக்கு ளிருக்கு மீசரென்று பகர்ந்தீர் பின்னுஞ் சிவசரிதைத்
துதிக்க வுளதேற் சொல்கவெனத் தொன்மா முனிவர் வினவுதலு
முதிக்கும் பருதி நிகர்சூத னுண்டென் றின்னும் விளம்புவான் (2)
சாக்க ளூர்வெங் காட்டிலுறை தனித்துற் றெரிச னெனும்வேடன்
றூக்குங் கால்க ணீண்டிருக்குந் துணைக்கை குறுகும் பெருவயிற்ற
னோக்கும் வாக்குப் பயந்தொன்று நோக்குங் கண்கள் கனலொழுகு
நீக்குங் கரிக்கட் டையைப்போலே நிறம்பெற் றுடைய சரீரத்தன் (3)
செய்ய குஞ்சி யரக்கரெனத் திரிவோ னூனே பொசிக்கின்றோன்
வைய மிசைதன் றொழிலெல்லா மனிதர் நடுங்கச் செய்கிற்போ
னைய வுயிர்கள் கொலைசெய்வோன் நவைகூர் களவு கட்காமம்
பொய்யே முதலைம் பாதகமும் புரிவோன் வார்த்தை யுதாசீனன் (4)
ஆர்க்குங் கேடு நினைக்கிற்போ னத்த வேட னிருப்பொழிந்து
சேர்க்கு மனையா ளோடிரண்டு சேயும் பஞ்ச காலத்திற்
போர்க்கும் வனங்க டொறுஞ்சென்று பொசிக்க வேட்டை கிடையாமற்
பார்க்குட் கிழங்கு காயிலைகள் பறித்தே யருந்திப் பசிதீர்ந்து (5)
மிக்க மருத வனத்தினுக்கு மேல்பால் வேடர் பட்டியிலே
புக்கங் கிருந்து பெண்டுபிள்ளை பொசிக்க வேட்டை யாடுகிற்பன்
கொக்குப் புறவு சிச்சரிப்புட் குறுகு முயல்மான் மயில்காடை
தக்க கொன்று தின்றுமற்றத் தசையை வற்ற லிட்டுவைப்பன் (6)
பறக்கும் பக்கி விலங்கெல்லாம் படரும் வனத்திற் சஞ்சரித்தே
யிறக்கும் படிக்கு வேட்டைசெய்வன் யாவு நசித்த பின்வேட
னுறக்கங் கொண்ட பசியாலே யுடம்புமெலிந்தா னூர்தொறும்பால்
கறக்கும் வயலிற் கிடையாட்டிற் களவு செய்து கொண்டிருப்பன் (7)
மிடியால் வாடி மிகமெலிந்து மேனி கருத்தூ னுணவின்றிக்
குடியேர் மிகும்பட் சேரியிலே கோழி திருடி யுதைபட்டான்
கடியேர் வனத்தில் வீழும்விளங் காய்கள் பொசித்துக் கால்வீங்கிச்
செடியே வீடாய்ப் பகலிரவு திரிந்தான் பொசிப்புக் கிடமின்றி (8)
பனிபெய் காலங் குளிர்சுரத்திற் பதைத்தான் சிறிது நாட்சுரம்போய்த்
துனிசூழ் பசியாற் றுற்றெரிசன் சூட்டுங் கண்ணி வலைகயிறும்
பினிய விசைச்சூத் தீரம்பலவும் பெருக்கி யெடுத்து மருதவனந்
தனியே புகுந்தா னவ்விடத்தோர் தடாகங் கண்டே யதிற்குளித்தான் (9)
தண்ணந் தடமெவ் விடத்துமிலை தடாகங் கண்டே னிவ்விடத்தி
லுண்ண வேண்டிக் கவரிபன்றி யோடுங் கரைமான் மரைபலவு
நண்ணு மதற்கு விசைகயிறு நாட்டும் பொறிசார் சூத்திரங்க
ளெண்ணிப் பதித்து வில்வவனத் திருந்தா னெவர்க்குந் தோன்றாமல் (10)
வேட்டை யாடுஞ் சாதனங்கள் வில்வ வனத்தி னிடைப்பதுக்கி
நாட்டம் வைத்துப் பார்த்திருந்தா னன்னீர்த் தடத்தை யெதிர்நோக்கி
காட்டில் மிருகம் வருமென்று காத்தங் கிருந்தான் பகல்முழுது
மீட்டுங் கங்குல் வேளைவரு மிதுவுங் காண்பே மெனவுன்னி (11)
வில்வ மரத்தின் கீழிருந்தான் வில்லிற் பகழி யதுபூட்டிச்
செல்வத் தடத்தை யெதிர்நோக்கிச் சினந்து மண்டி போட்டிருந்து
கொல்வ தன்றி விடுவேனோ குதித்து விலங்கு தப்புமதோ
வொல்கத் துறுமென் றேபருதி யுதிக்கு மளவு மொளித்திருந்தான் (12)
இருந்த வேடன் றடத்தைமறைந் திருந்த வில்வத் தழைகொய்தும்
பொருந்து முறக்கம் வாராமற் பொழுது போக்கச் சிலபறித்துந்
திருந்த வந்த மரத்திலைகள் சேர வுருவிக் கீழ்விடுத்து
வருந்தி யிருந்தான் விடிவளவும் வாட்டும் பசியான் மதிமயங்கி (13)
ஏது செய்வோ மிருகமொன்று மெய்தற் கமைந்த நிலையென்று
காதற் பன்னி மைந்தரெனைக் காணா திருக்கி லுய்வார்கொல்
ஆத லாலே யவர்படும்பா டதனைக் காண்பே னெனவெண்ணிச்
சீதத் தடநீர் மூழ்கிமெலச் சென்றான் கண்ணி வலையெடுத்து (14)
வேடன் வருமுன் னவன்பன்னி விரசாய் மைந்த ருடன்வனத்தி
னாடு கிற்பே மெனவெண்ணி நடந்தா ளெங்குங் கண்டிலா
ளோடி மக்காள் பார்மின்க ளுந்தை யங்கே யிறந்தனனோ
தேடி வருவீ ரெனவிடுத்துச் சிந்தை கலங்கிப் புலம்பலுற்றாள் (15)
கடிகை தொண்ணூ றாச்சும்மைக் காணேன் பெண்டு பிள்ளைவிட்டுச்
செடியி லெங்கே மரித்தீரோ சிந்தை யென்மேல் வைத்திருந்தீர்
வடியுங் கண்ணீ ரழுவத்து வாரிச் சுழியிற் றள்ளினீர்
கொடிய வேங்கை கரடிசிங்கங் கொல்லக் கூடு மோவும்மை (16)
விடந்தீண் டியதோ மூர்ச்சையாய் வீழ்ந்து கிடக்கின் றீரோநா
னுடந்தை யாக விருந்தேனே யும்மை விடுத்து முய்வேனோ
சடந்தான் உயிரை விட்டிருக்குந் தரமோ நானெங் கேபறப்பேன்
றுடர்ந்து வருவே னானென்று சோபித் தழுது கதறினாள் (17)
அந்த வழுகைச் சத்தங்கேட் டங்கே வேட னோடிவந்து
மைந்தர் தமையும் பன்னியையும் வாஞ்சை யாய்க்கண் டனன்கதறிச்
சிந்தை கலங்கி மூர்ச்சித்து சீவன் விடுத்தா னவ்வேளை
நந்திப் பரிமே னாகேச னங்கை யுமையா ளொடுத்தோன்றி (18)
பூவின் வேதன் மாலிமையோர் பொலங்கற் பகப்பூ மழைபொழியத்
தேவ ருலகிற் பலவியங்க டிரையும் புயலு மெனவொலிப்பப்
பாவை நிர்க்கும் அரமகளிர் பல்லாண் டிசைப்ப முனிவர் தொழ
மேவு கயிலைச் சிவகணங்கள் விமானங் கொடுவந் திறங்கினார் (19)
இறந்த வேடன் பழவினைதீர்ந் திமையோர் வடிவம் பெறவருளிச்
சிறந்த கயிலைக் கேகென்னச் செப்பி னார்தொன் மருதீசர்
துறந்த முனிவ ரொடுவிண்ணோர் சொல்லா நின்றா ரெங்கோவே
அறந்தா னொன்றுஞ் செய்யாத வாபா சனுக்குங் கயிலையுண்டோ (20)
என்ன முனிவர் விண்ணோர்க ளியம்ப நாகே சன்பகர்வார்
முன்னு நமது கலையிலிங்கத் தோரா யிரத்தெட் டுறைந்து நிற்கும்
பன்னு மருதூர் மகத்துவமிப் படிமே லுண்டோ சகத்திரம்பேர்
முன்னர் வந்து வேடவுரு முழுதுந் தீர்ந்த திவ்வூரில் (21)
தன்புத் தியினாற் செய்கின்ற தவப்பே றுண்டே யெவ்வுயிர்க்கு
முன்புற் றிடுமச் சென்மத்தின் முனிவர்க் கேவல் செய்திருந்தாற்
பின்புற் றனசென் மங்களிலே பேறு தருந்தன் முயற்சியின்றி
யன்புற் றிடுமித் தலமகிமை யடுத்த பேர்க்குங் கதியுண்டே (22)
பிறக்க முத்தி யிறக்கமுத்தி பேசமுத்தி கேட்கமுத்தி
சிறக்கு மனத்து ணினைக்கமுத்தி செழுந்தண் மருதூர் காண்கமுத்தி
மறக்கத் தரமோ நாகதட மலிநீர் மூழ்கத் தருமுத்தி
பறக்கும் பறவை குளித்திடினு பரமா னந்தக் கடல்குளிக்கும் (23
ஆகை யால்நற் றெரிசனத்தா லதிபா தகத்த னிவனேனு
மாக மாதம் பிறைமுந்து வளரும் பக்கஞ் சதுர்த்தசியி
லோகை கொடுக்குஞ் சிவநிசியி லுறக்க முணவு நீத்திருந்து
மேக முயர்கூ விளவிலைகண் மிக்கா மிலிங்க மிசைதூவி (24)
வீசுந் தரங்க நாகதடம் விழித்து நோக்கி யிருந்தபலன்
மாசம் படிந்த துடம்பென்று வந்து குளித்த தகண்டபலன்
பேசு மிந்தத் தலத்திருக்கப் பெற்ற பலன்வந் தெய்தியதாற்
பாசந் தீர்த்துப் பரிசுத்தப் பண்பு தந்தேம் பண்டைநாள் (25)
வீசுந் திரைப்பாற் கடல்கடைந்த வேலைப் பாம்பு கக்குவிட
மூசிப் பரந்து விண்ணவரை முடுகிக் கொல்ல வரக்கண்டே
யாசி லன்னோ ரடைக்கலமென் றடைந்தா ரவரை யஞ்சலென்று
மாசுண் கடுவை யாமுண்டே மாணப் படுவே மென்றெண்ணி (26)
ஆகா ரமுநித் திரையுமின்றி யங்கே யிமையோ ரருந்தவர்கள்
யோகா சனமுற் றஞ்செழுத்தை யுள்ளம் பொருந்த வுச்சரித்து
நாகா பரணர் சாவாமே நாளு மிருப்ப வெனக்கருதி
யேகா நந்த நிட்டை புரிந் திருந்தார் கடிககை தொண்ணூறு (27)
அவர்க்கு முன்னே யுமையொடுநா மங்கே தோன்றி யன்புடையீ
ரெவர்க்கு முதன்மை நாமன்றோ விந்த விடமோ நமைக்கொல்லும்
புவிக்குண் மனிதர் தமக்குவிடம் பொருந்தி லதனைப் பரிகரிப்பார்
தவத்தீர் நுந்த மன்பினுக்குத் தக்க வாறு காத்திருந்தீர் (28)
அதுகண் டுமது தவப்பெருமைக் கதிச யித்தேம் வேண்டும்வர
முதவு கிற்பேஞ் சொல்கவென வும்பர் முனிவ ருரைக்கின்றார்
முதல விந்தச் சிவநிசிக்கு முயலுங் கடிகை தொண்ணூறு
பதன மாக வுணவுறக்கம் பற்றா துறக்கம் பணிந்தெம்போல் (29)
எந்த வுலகி லிருப்பவரு மிந்த விரதம் புரிகுவரேற்
சிந்தை குறித்த வரந்தந்து திருந்தாள் சேர்த்துக் கொளவென்றார்
அந்த வரந்தந் தனமுன்னா ளதிக விரதஞ் சிவநிசியாம்
வந்த வேடன் முற்பவத்தில் வருமிவ் விரதற் கன்புசெய்தோன் (30)
செப்பு மிந்தப் பிறப்பிலன்பு செய்யா திருந்து மருதூர்வந்
திப்புண் ணியமாம் நாகதடத் தெய்தி மூழ்கிச் சிவநிசியி
லொப்பு முறக்க முணவிகந்திவ் வூரெல் லையிலே மரித்தமையால்
வெப்பந் தருபா தகந்தீர்ந்து மிக்காந் தவஞ்செய் தவனாகி (31)
பெண்டு மைந்த ரொடுவேடன் பிறந்த மனிதப் பிறப்பொழித்துக்
கொண்ட தேவ வுருப்பெற்றுக் கூர்ந்து விமானத் திடையேறி
மண்டுந் தெய்வ கணங்களொடும் வளருங் கயிலைக் கிரியடைந்தான்
கண்டு தேவர் முனிவர்கணங் களித்து மருதீ சரைவணங்கி (32)
-
சத்தா முலகிற் சென்றெய்தித் தழைத்தார் பின்பு நாகேசன்
சுத்த விலிங்கத் திடைகரந்தா னென்றே சூதன் சொலமகிழ்ந்து
முத்தா நயிமி சாடவியின் முனிவ ருள்ளங் களிகூர்ந்தார்
இத்தன் மையதாங் கதைபடித்தா ரிருந்து கேட்பார் பெறுவரின்பம் (33)
திருச்சிற்றம்பலம்.
சிவநிசியில் வேடன் வரம் பெற்ற சருக்கம் முற்றும்.
31 நாகையன் வரம்பெற்ற சருக்கம்
கள்ளது கொண்டோர் தன்மை பிதற்றுங் கயவீர்காள்
விள்ளுவ தென்னீர் நும்போ தத்தான் மெலிகின்றீர்
தெள்ளிய மருதூ ரீசர்ந டத்துஞ் செகலீலை
யுள்ளது போகா தில்லது வாரா தொருநாளும் (1)
மதியிலி கள்ளத் துற்றெரி சனனோர் வனவேடன்
கதிகிளர் கயிலைக் கிரியிடை செல்லுங் கதிகண்டே
மதிசய மிதுவா மின்னமு முளதே லறைகென்னத்
துதிதரு முனிவோர் வினவச் சூதன் சொல்கின்றான் (2)
நாகய னென்னும் வேதிய னொருவ னால்வேதச்
சேகர னாகுஞ் சுமதிச வையன் சேயானோன்
மாகன மாகும் பெரியவ ருக்கே மகிழ்கூரப்
பாகம தாகு மன்னம ளித்துப் பணிசெய்வோன் (3)
மன்னுமு பாதா னந்தரு வோர்தம் மனைதோறும்
அன்னவ ரேதுந் தந்தன கொண்டங் ககமெய்திப்
பன்னிச மைக்கத் திருவமு தறிஞர் பசிதீர
முன்னர்கொ டுத்தே பின்னுகர் கிற்பான் முறைதப்பான் (4)
அங்கவன் மனையிற் கபிலனெ னும்பே ரமைகின்றான்
சங்கர வுருவம் பெற்றிடு முனிவன் றானெய்த
நங்குல தெய்வம் மிவரென் றெதிரே நாகையன்
மங்கல மனையுந் தானுந் திருவடி வந்தித்தான் (5)
அருக்கிய முதலா முபசார ரஞ்செய் தன்பாகி
இருக்கவெ னத்தா னாதன முந்தந் தின்பூர
வுருக்குநெய் பாலோ டன்னம மைத்தே முண்கென்னப்
பெருக்கமு தம்போ லுண்டன னந்தப் பெரியோனே (6)
உண்டபின் னெஞ்ச முவந்தே முனிவ னுரைசெய்வான்
பண்டையி னிலைமை யுண்டோ வுணவின் பண்பேதோ
விண்டுரை யென்னவு பாதா னங்கொடு மெலிகின்றே
னெண்டவ முனியே நீவந் தனையென் னிடர்தீர்ந்தேன் (7)
என்னவு ரைக்கக் கபிலன் சொல்வா னிதமாக
முன்னவ னமுதப் பஞ்சாக் கரமது முறையாகப்
பொன்னரு ளுண்டா மெனவே காதிற் போதித்தே
தென்னமர் மருதூ ரென்னுந் திருநகர் சென்றெய்தி (8)
நாகத் தடம்மூழ் கிப்புரி நியமம் நாடோறு
மோகைப் பருதிக் கெதிர்கா யத்திரி யுருவேற்றி
யாகத் தணிவெண் ணீறிட் டேயக் கரமைந்து
தாகத் தீரா றாயிர முருவுஞ் சாதித்து (9)
பூவது கொண்டே பார்த்திப லிங்கம் பூசித்துக்
கோவில்வ லங்கொடு தீவா ராதனை கும்பிட்டு
மேவுமி லிங்கந் தெரிசனை செய்தால் வெற்பீன்ற
பாவையு டன்சிவ னெதிரே வந்தருள் பாலிப்பான் (10)
எனவே கபிலன் கட்டளை யிட்டா னிவைநாகன்
மனமுற நம்பிக் குருவிடை கொண்டே மருதூர்வந்
தனமுறை நாகத் தடமதின் மூழ்கிய னுட்டானந்
தினமுறை பார்த்திப லிங்கம் பூசனை செய்தானே (11)
திருவளர் சன்னதி சுற்றித் தீவந் தெரிசித்து
நிருமல னைக்கண் டடிதொழு தேத்தி நிழற்கீழே
யருள்பஞ் சாக்கர மீறா ராயிர முருவேற்றி
யொருபொழு துண்டோ ராண்டுத வஞ்செய் துறைந்தானே (12)
நாகைய னிப்படித் தவமுற் றிடவே நாகேசர்
மேகமெ னுங்குழல் அழகிய மின்னொடு வெளித்தோன்றி
யோகைமி குந்தவம் நீபுரி கின்றது வந்தேம்நாம்
ஆகையி னீவரம் வேண்டுவ துண்டே லறைகென்ன (13)
பூசுர நாகன் பகர்வா னுயர்புண் ணியமில்லேன்
மாசற வேநின் கோவிற் பணிகூர் வகைசெய்யென்
கூசுமு பாதா னங்கொண் டேனென் குலமீன
மீசுர நாளு மிரவா தருளுக வென்றானே (14)
விஞ்சைநி னைந்தே நாகன் சொல்லில் வியந்தீசன்
பஞ்சமு கக்குரு வெப்பந் தழையிற் படர்நீராம்
அஞ்சுத லென்கா ரீயமு ருக்கி யந்நீரிற்
செஞ்செவ் வெயதில் விட்டாற் பொன்னாந் தெளிகென்றான் (15)
அஞ்சுமு கக்குரு வால்வரும் வெம்பிலை யந்நீரின்
விஞ்சிய கருவங் கத்தையு ருக்கிவி டுத்தானே
நெஞ்ச முவந்தபொன் னாகத் தரும நிறைந்தேபின்
றுஞ்சுத லின்றிநல் விஞ்சையி னாகன் சுகமுற்றான் (16)
மாதவ னாகன் போலே மனிதர்க ளெவரேனும்
வேதஞ் சொன்முறை தருமச் செய்கை மிகுந்தோர்கள்
சீதள வேணித் திருமரு தீசன் செஞ்சோதிப்
பாதந் தொழரச வாதக் கிரியை பலிப்பாமே (17)
வாதக் குருமுறை யீசன் சொல்ல வரம்பெற்றே
பாதக் கமலந் தொழுதன னாகன் பண்பாக
வாதிச் சுடர்வடி வூடுக ரந்தா னரனென்றே
சூதப் பெருமுனி சொல்லினன் முனிவோர் துதிசெய்தார் (18)
திருச்சிற்றம் பலம்.
நாகையன் வரம்பெற்ற சருக்கம் முற்றும்.
32. சத்தகன்னியர் வரம்பெற்ற சருக்கம்.
எனக மென்பதி யென்மகா ரென்கிளை பெண்டு
கனக மென்னது நாண்முத லெனக்கரு தாமற்
சனக னாதியர்க் கருடர வடநிழற் சார்ந்தார்
பனகம் பூசித்த திருமரு தீசரைப் பணிவாம் (1)
வேத நாகையற் கிரதவா தஞ்சொலும் விமலர்
காதை செப்பினை களித்தன மின்னமு முளதே
னாதர் தென்மரு தூர்வயி னடந்தன வின்னுஞ்
சூத சொல்கென முனிவரர்க் காங்கவன் சொல்லும் (2)
வாளிற் கின்னர கன்னிய ரெழுவர்தென் மருதூர்
தானிப் பூமிசை கயிலையென் றறிந்தன்பு சார்ந்தார்
மேனிக் கின்னமு துண்டல்போற் பணிதுகில் மிலைச்சன்
கானிற் சந்தம்பூப் பரிமளம் புனைதலென் கண்டேம் (3)
முத்தி யில்லையிங் கிவையினா லுயிர்க்குமுக் கண்ணன்
பத்தி யும்பரை ஞானமுங் கிடைப்பதே பண்பாம்
சித்தி யல்லது முத்தியின் றெனமறை செப்புஞ்
சத்தி யந்தெளி தற்குற்ற தலமிந்தத் தரைமேல் (4)
ஆன தன்மையை யெண்ணியக் கன்னிய ரெழுவர்
ஞான மாமரு தூரிடஞ் சார்ந்தனர் நாகந்
தானம் பண்ணுமத் தடத்து நீர் மூழ்கினர் தவத்துக்
கான வஞ்செழுத் தோதினீ றிட்டன ரன்பால் (5)
மிக்க லிங்கத்தைத் தீபாவா ராதனை வேளை
புக்கி றைஞ்சினர் அழகிய மடந்தைபொற் பாத
நெக்கு நெஞ்சுரு கின்றனர் நின்றுசே வித்தார்
தக்க வாலைதன் சக்கர பூசனை முடித்தார் (6)
கோவில் சூழ்வலம் வந்தனர் கோவிலின் வடபான்
மேவு நற்பிர காரத்தோர் மண்டபம் வியப்புற்
றாவல் கொண்டவ ணிருந்தன ராண்டழ கியமின்
தேவ நங்கைமார் தம்மொடுங் கன்னிமார் திருமுன் (7)
வந்து காட்சிதந் தருளினள் கன்னிமார் வணங்கிச்
சிந்தை கூர்ந்துகண் களிப்பொடுந் தெண்டனிட் டிறைஞ்ச
விந்த வூர்வயின் வந்ததென் கன்னிமீ ரென்றா
ணந்த மக்கொரு வரம்பெற வந்தனம் நாங்கள் (8)
விரும்பு நல்வர மென்னென வினவலு மதற்குச்
சுரும்பு சூழ்குழல் கன்னிமா ரெழுவருந் துதித்துப்
பரும்பு கழ்ந்திருப் பருப்பத குமாரியுன் பாங்கில்
வரும்பு கழ்த்திருப் பாங்கிய ராகும்வாழ் வருள்வாய் (9)
என்று வேண்டிட வவ்வண மேயிருப் பீர்கள்
நன்று நன்றென நங்கைய ரன்றுதொட் டிறைவி
தன்றிரு வடிமலர்த் தொண்டுசெய் தம்மையால் சார்ந்து
இன்றும் பொன்றிடா திருக்கின்றா ரென்பர்மே லோரே (10)
திருச்சிற்றம்பலம்.
சத்தகன்னியர் வரம் பெற்ற சருக்கம் முற்றும்,
33. தலைமலைகண்ட மருதத்தேவர் வரம்பெற்ற சருக்கம்.
இவரூர் காரடர்ந்தகுடி யென்பது, இது சேது நாட்டு நயினார் கோயிலெனப்
பெயரிய மருதூரை யடுத்துள்ளது. இவர் சேது வேந்தர் குலத்தினர். பிறவிக்குருடர்.
நாகநாதக் கடவுளருளால் ஊனக் கண்ணும், ஞானக்கண்ணும்
பெற்று வரகவியாய் விளங்கினார்.
................................................. (1)
..................................................(2)
...................................................(3)
இந்த வண்ணமாய்த் தவம்புரிந் திருந்தனன் மருதன்
அந்த நாமமிட் டழைத்தன னருண்மரு தீசன்
வந்து நம்பியார் போலவே கனவினில் வரக்கண்
டெந்தை நீரெவ ரெனவெம்மை நீயறிந் திலையோ (4)
நாளுஞ் சாதநிற் களிக்கின்ற நம்பிபோல் வந்தே
நீளுந் தொன்மரு தீசனா முனக்குநெஞ் சகத்தின்
மூளு மிச்சைகூர் வரமென்கொன் மொழிதியென் றுரைப்ப
வாளுந் தெய்வமே கண்டர வேண்டுமென் றழுதான் (5)
அழுதி ரங்கலை யஞ்சலென் றருளிநா கேசன்
பழுது றாமலே நீறுசாத் தினன்விழிப் படல
முழுதுந் தீர்ந்தருட் கண்ணதாய்ப் பொலிந்தது முகத்திற்
றொழுது வந்தனை செய்தனன் மருதனாந் தூயோன் (6)
பன்னு தோத்திரஞ் செய்வதற் கருளிலேன் பாவி
முன்னெ ழுத்துவா சனையொன்று மறிந்திலேன் மூடன்
என்ன பேறுபெற் றேனென வழுதன னிரங்கிப்
பின்னுந் தந்தனன் கல்வியுங் கேள்வியும் பெருக (7)
பொருள் பொ லிந்திடச் சொன்மது ரம்பெறப் புளகந்
தருக வித்திரங் கடிகையிற் சதஞ்சொலத் தந்தான்
பெருகு மட்டவ தானமும் பிஞ்ஞகன் கொடுத்தே
யிருமை யாகிய யமகவந் தாதிசொல் கென்றான் (8)
அன்ன வண்ணமே யமகவந் தாதியைப் பாடப்
பன்னு முற்பதச் சீரெடுத் தோதினான் பரமன்
மன்னு கின்றவந் தாதியை முடித்தனன் மருதன்
றென்னன் சேரலன் வளவர்கோன் சிறப்பது செய்தார் (9)
மூவர் செப்புதே வாரம்போன் மொழிந்தவந் தாதி
தேவ ருஞ்சொலத் தென்மரு தூரில்வாழ்ந் திருந்து
பாவ லர்க்கெலா மன்புற நடந்தனன் பார்மேல்
வாவும் வெள்விடை யூர்திபா லிருக்கின்றான் மருதன் (10)
சூத மாமுனி தொன்மைகூர் முனிவரர் தமக்கு
வேதம் போற்பதி னெண்புரா ணப்பொருள் விரித்தான்
போத வக்கதை புகன்மரு தூர்ப்புரா ணத்தை
நாதன் நாகநா யகர்சொல நடப்பதிப் பார்மேல் (11)
திருச்சிற்றம்பலம்.
சிற்றம்பல ஐயரவர்கள் தமிழ்ப்படுத்தி யருளிச் செய்த மருதூர்ப் புராணம் முற்றும்.