logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

(மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

பாயிரம்

விநாயகர்

  தேர்மருவு தேவரிரு கைவிரன் முடக்கிச் சிரத்துமும் முறைதகர்த்துச்-
      செஞ்செவியை யிருகைமா றித்தொட் டிருந்தெழச் செய்யுமசு ரக்களிற்றை,
யார்மருவு மோருலவை யாற்குமைத் தூர்தியே யாக்கியவ் வணக்க முந்தற்-
      காக்கியருள் பொழியுமொரு தெய்வக் களிற்றின்மல ரஞ்சரண நெஞ்சுள் வைப்பா,
மேர்மருவு மகிழ்நர்கை தொடக்குழை தலாலவர்க் கிகனஞ்சருத்தலால் வெச்-
      சென்றகுண மின்மையாற் சற்றும் பசப்புறுத லின்மையால் வின்மைதவழும்,
பேர்மருவு மேருமந் தரமிமயம் வெள்ளிப் பிறங்கலைச் செற்றகொங்கைப்-
      பெருமாட்டி நற்றவத் துறைவளர் பெருந்திருப் பெண்டமிழ்க் கவிதழையவே.    (1)

சிவபெருமான்

பரவாண வத்திடை யழுந்திக் கிடக்கும் பசுக்களை யெடுத்துடன்முதற்-
      பகர்நான்கு மாயையி னளித்துவினை யொப்புவரல் பார்த்தருட் குரவனாகி,
விரவாவிருக்குமப் பாசங் கெடச்சின்மொழி விள்ளலா லப்பாசநம்-
      வீறுதப மொழிவதெவ் வாறிவ ரெனக்கோபம் விஞ்சப் பிடித்துறைதல்போ,
லரவா லுமிழ்ந்தவிட மொளிசெயுங் கண்டனையெம் மண்டனைக் கண்டுபணிவா-
      மாவி வெண்டாமரை மலர்ந்ததன் பாசடையி லதன்முத் தொளிர்ந்து தோன்றல்,
குரவார் கதுப்பினர்க டனிகுடையு நாண்முகக் கோலமீ னொடுமதிவிராய்க்,
      கூட்டுண விருந்தசெயல் காட்டுந்தவத்துறைக் கோமாட்டி தமிழ்தழையவே.    (2)

உமாதேவியார்

அளவில்பல வலியுடைய வாணவ மகன்றவா லறிவன்றி யுருவமில்லா -
      வையனெத் திறநிற்கு மத்திறம் மணியொளியு மலர்மணமு முறழநின்று,
தளர்வறு படைப்பாதி யைந்தொழிலு மாற்றியொளிர் சன்மார்க்க நெறியினிறுவித் -
      தாயாயெடுத்தணைத் தெவ்வுயிர்க் குஞ்சுகந் தருபரையை யஞ்சலிப்பாங்,
களமலியு மென்பகை கரப்பவிடனுதவுமைக் காயாது விடுவலோயான் -
      காணுமென்றேழ்பரியி னோனா யிரஞ்செங் கரங்களை நிறீஇயதொப்ப,
வளமலி படப்பையிற் பொரியரைத்தேமா மரப்பொழி றளிர்த்தெழிறரும் -
      வயிரவி வனங்குடி யிருந்தபெரு மாட்டிதன் வண்டமிழ்க் கவிதழையவே.    (3)

விநாயகர்.

மூத்தமைந் தன்பா லளித்தவற் கார்வமெனு மூதுரை வழக்குடைமையான் -
      முப்புர முருக்குந் திறற்றந்தை தந்தருள முறைமையிற் கொண்டதேபோற்,
பூத்தவெண் டிங்களும் பாசறுகு மிதழியும் பொரியரவு மொண்கங்கையும் -
      பொற்புற வணிந்தருள் கொழிக்குமொரு கோட்டுப் புராதனனை யஞ்சலிப்பா,
மீத்திகழ் துகிற்கொடிகள் பொன்னுலகை யுரிஞலால் வீழ்பராகத்தின் மூழ்கி,
      விச்சுவா மித்திரன் கண்டபொன்னுலகென வியந்தமர ரம்பர் நீங்கித்,
தாத்திரி வரப்பிரபை கொண்டொளிரு மாடத் தவத்துறை யிருந்தகருணைத் -
      தாயாம் பெருந்திருப் பெருமாட்டி யைப்புகழ் தருந்தமிழ்க் கவிதழையவே.    (4)

சுப்பிரமணியர்

பாற்கடலின் மீமிசைக் கார்க்கட லெனக்கண்வளர் பைந்துழாய்ப் படலைமார்பன் -
      பயோதர வுருக்கொள்ள மேற்கொண் டுலாவரும் பண்புடைத் தாதையேபோ,
னாற்கடல் வளாகமறை யச்சிறை விரித்தசவி நந்துபோழ்ந்தன்ன வாயின் -
      ஞாலங்கொ ணாகங்கொண் மாமயி னடாவுமெழி னாயகனை யேத்தெடுப்பா,
மாற்கடல் கடந்தவர் மனத்துறுஞ் சிவபிரான் மண்ணவரும் விண்ணவருமோர் -
      மாத்திரையி னிற்கூட மேருவைவளைத்தல்போன் மாளிகையின் மீதேறிவை,
வேற்கண்மட வார்குழலின் மட்பூவும் விட்பூவும் விரவிடக் கற்பகத்தின் -
      விடபங்கை யால்வளைக் குந்தவத் துறையமரும் விமலைசொற்றமிழ் தழையவே.    (5)

திருநந்திதேவர்

 பொங்குபடை தங்கவரு சுவடுமட வார்கொங்கை பொருதவரு சுவடுமின்பம் -
      புரிதலில நீதருஞ் சுவடர னடிச்சுவடு பூணமிக் கின்புதவலாற்,
றுங்கமுடன் வாழிய வெனப்பிரமன் மான்முதற் சுரரேத் தெடுப்பவொளிருஞ் -
      சு·றொலிச் சூரற் படைக்கைப் பிரான்பொற் றுணைத்தாண் முடிக்கணிகுவாந்,
தங்குமறி ஞோர்நபம் புகைநிற மெனக்கரை தரக்காடி யுண்டுகிர்க்குந் -
      தடங்கண்மட வார்குழற் குங்கழும வூட்டுபுகை தாவிலட் டிற்படுபுகை,
மங்குதலி லாமகத் தெழுபுகை யொடுங்கலவி மண்ணின்று மீதெழுந்து -
      மாறா துலாவுமள கைப்பெருந் திருவம்மை வண்டமிழ்க் கவிதழையவே.    (6)

திருஞானசம்பந்தமூர்த்திநாயனார்

தெளியா வமண்கைய ருள்ளம்வெப் பேறவுந் தென்னர்கோன் வெப்பொழியவுந் -
      தீயிலவ ரேடுமிக வுங்கருக வுந்தமது திருவேடு செழுமையுறவு,
நளியார் புனற்கணே டெதிரேற வும்மவர்க ணடுகழுத் தறியேறவு -
      நறுமுலைப் பான்மணங் கமழ்வாய் மலர்ந்தசிவ ஞானபா னுவையுள்குவா,
மளியார் நறுஞ்சந் தனந்தன் னொடும்பிறந் தன்புற வளர்ந்துபின்னா -
      ளந்நலார் கொங்கையினு மாடவர் புயத்தினு மடைந்துறவு கொண்டுறைதலாற்,
களியார் விருப்பினொடு நாடிவரல் போன்மணங் கான்றுதண் ணென்றதென்றற் -
      கன்றுவந் துலவுமறு காருமள காபுரிக் கன்னிநற் றமிழ்தழையவே.    (7)

திருநாவுக்கரசுநாயனார்

செந்தா மரைப்பொய்கை நடுவிருந் தாலெனச் செந்தழல் பழுத்தொழுகும்வெந் -
      தீயநீற் றறைநடு விருந்துமமு துண்டெனச் செம்மாந்து நஞ்சமுண்டு,
நந்தாத புணைகொடு கடந்தா லெனக்கட னகங்கொடு கடந்துமுலக -
      நாடும்வான் சைவமே பொருளெனத் தெரிவித்த நாவலவனைப் பரசுவான்,
கந்தார் மதக்களிறு போற்றமது காரேறு கட்டியுழு தாக்கிவையே -
      களமரிடல் கண்டுகொளல் போலநெற் கதிர்மென்று கடைவாய் குதட்டிமேதி,
மந்தா நிலந்தைவர வொண்டளி ரரும்புதே மாம்பொழிற் கண்ணுறங்கும் -
      வயலுடுத் தோங்குந் தவத்துறைப் பெருமாட்டி வண்டமிழ்க் கவிதழையவே. (8)

ஸ்ரீ சுந்தரமூர்த்திநாயனார்.

பொருவிலாத் தருமவெள் விடையே றுகைக்கும் புராதனனை யொப்பநட்பிற் -
      பொறையர்முன் பரியுகைத் தருளப் பெருந்தேவர் புரிவொடும் போற்றிசைப்ப,
வெருவிலா மும்மதக் கழைசுளி நெடுங்கோட்டு வெள்ளைக் களிற்றெருத்த -
      மேற்கொண்டு கைலைக் குகைத்திட்ட நாவலூர் வேந்தன்மல ரடிபணிகுவாங்,
குருவிரா வியசெழுங் கோழரை யரம்பைகள் குருத்தைமீப் போக்கிநாளுங் -
      கூடுபெய ரொப்புமை யறிந்துதவல் போல்வளி குதித்தெழ வசைத்தசைத்துக்,
கருவிமா முகில்பொரு கதுப்பரம் பையர்கொண்ட கலவியெய்ப் பாற்றிநல்குங் -
      கழனிசூழ் தெய்வத் திருத்தவத் துறைமேவு கன்னிசொற் றமிழ்தழையவே.(9)

திருவாதவூரடிகள்.

பைங்கண்வெடி வாற்குறு நரிக்குழாந் தாவும் பரிக்குழா மாகவுநெடும் -
      பரிக்குழா ஞெண்டுணு நரிக்குழா மாகவும் பயில்பிடக முரைசெய்தோர்,
தங்கறி விழந்துமூங் கைமையுறவு மூங்கைமை தவிர்ந்தொருபெ ணனிபேசவுந் -
      தம்பிரா னருள்பெற்ற வெம்பிரா னம்புயத் தாட்டுணை முடிக்கணிகுவாஞ்,
செங்கயல் பொருங்கரு நெடுங்கண்மட மங்கையர் திளைத்தாடும் வாவிபூத்த -
      செந்தா மரைத்தண்மலர் நடுவன்னம் வதிதலோர் திருமக டவம்புரிந்து,
துங்கமிகு பேறுபெற் றதையறிந் தொருகலைத் தோகையழ னடுவணின்று -
      தூத்தவம் புரிவது கடுக்கமள கையில்வளர் சுமங்கலி தமிழ்க்குதவவே. (10)

ஸ்ரீ சண்டேசுவரநாயனாரும் மற்றநாயன்மார்களும்.

புண்ணியஞ் செய்துபா தகமாக்கு தக்கனார் போலாது மாபாதகம்
      புரிந்துசிவ புண்ணியம தாக்குசண் டீசரிரு பொற்றா மரைப்பாதமு
மெண்ணரிய பிறவிக் கொடுங்கோடை நீங்குமா றெம்பிரா னடிநிழற்கீ
      ழெய்தியின் புற்றவறு பான்மூவர் பாதமு மெப்போது மேத்தெடுப்பாம்
வண்ணமுறு மல்குற் பகைப்பாற் பிறந்தது மதித்தெறிதல் போலமடவார்
      மண்ணிய மணித்தொகை குயிற்றுமே கலைபுலவி மலியமறு கிடையெறிதலா
னண்ணிய விருட்படல நக்கிநிமி ரும்பிரபை நாளுந் தழைத்தமரர்கோ
      னகரெனச் செய்யுந் தவத்துறைப் பெருமாட்டி நற்றமிழ்க் கவிதழையவே.(10)

1 காப்புப்பருவம்.

திருமால்.

திருவளர் சதக்கிருது முற்றுமா றுதவிய திறத்தையுண ராதூர்தியாஞ் -
      செழுமுகிலி னாலிட ருறுத்திமுன் னோன்கொண்ட செம்மாப் படங்கநரலை,
யுருவளர் திருப்பெணொடு வருசுரபி யினமென்ப தோர்ந்தளித் தாங்கவன்ற -
      னுறுபகைகொ டவ்விட ரகற்றிநிரை காத்தமல ருந்திப் பிரான்புரக்க,
மருவளர் கடுக்கைத் தொடைக்குழக னார்தனது மாண்கொங்கை யன்றிமற்றோர் -
      மாதர்கொங் கைகடழுவ வொட்டே னெனக்கொண்ட வகைமைபோ லப்பரமனார்,
குருவளர்நன் மேனியிற் செம்பாதி கொண்டுமகிழ் கோதையைத் தாதுகமழுங் -
      குளிர்பொங்கர் சூழ்தவத் துறைவளர் பெருந்திருக் கோமளப் பெண்ணமுதையே.(1)

வேறு 

அழைத்து வாழ்வித்த பெருமான்.

மேருவை வளைத்தரவு நாணென லியைத்தவிரி டக்கைமேவக்கொள்பிர தாபச்சமர்த்தனை -
      வேடுருவெடுத்துவல னாகியவருச்சுனனில் வெற்றியே பெற்றவிரு நான்மற்புயத்தனை -
      வீமலிமதுத்துளப வேனமுவரிப்புவிகி ளைத்துமேவற்கரிய சோதிப்பதத்தனை -
      மேன்மைமுனிவர்க்கொருகல் லானிழலிலற்பொடுவி ரித்துவேதப்பொருள்சொல் யோகுத்தவத்தனை,
மாருதமெனப்படரு மால்விடையனைப்பவள வெற்பையேயொத்ததிரு மேனிச்சிவப்பனை -
      வானவர்தமக்குரிய மாதர்கள்களத்தணித ழைப்பமேவுற்றொளிசெய் பானற்களத்தனை -
      வாரணமுகக்குரிசின் மாமயினடத்தியெனு மொப்பிலாவிப்புதல்வர் பான்மிக்குவப்பனை -
      மாசிலவருக்குளொளி யாய்நிறையுமப்பனைய ழைத்துவாழ்வித்தபெரு மானைப்பழிச்சுதுங்,
காருருவிளர்ப்பவற னீர்புகவிருட்படும ணத்தவோதிக்குயிலை வேழச்சிலைக்கையோர் -
      காமனையெரித்தவர வாவுசெவிதழ்க்கொடியை முத்தமேயொத்தநகை யாளைப்பலப்பல -
      காமருலகத்தளவி லாவுயிர்களுக்குமரு ளைத்தராநிற்கும்விழி யாளைத்தருப்பொலி -
      காழிமழவுக்கினிய ஞானமதளித்தளவில் பொற்பின்மூழ்குற்றமுலை யாளைச்சுடர்த்தழல்,
சாருமெழுகொத்துருகு மாதவர் மனத்திடைநி றுத்துபாதத்தளிரி னாளைப்பனிக்குலஞ் -
      சால்வரையிறைக்குமக ளாகியமடக்கொடியை முற்றுநூல்கற்றபெரி யோர்சொற்றொடைக்கியை -
      தாழ்செவியிலற்பவெளி யேன்மொழியும்வைத்தினிது வப்பினாடற்குரிய தாயைக்கதிர்த்தெழு -
      தாவில்கனகப்புரிசை சூழ்தருதவத்துறை யிருக்குமேன்மைத்திருமி னாளைப்புரக்கவே.(2)

வேறு

 திருவாளப்பிள்ளையார்.

கருமுகில் விளராகத் துண்ணெனத் தோற்றிய
      கனிவிட மமுதாகக் கொள்விதத் தாற்றவர்
மருவிய கயிலாயத் தையனைப் போற்றனி
      வருமொரு திருவாளப் பிள்ளையைப் போற்றுதுங்
குருமல ரணிமாலைக் கள்ளுடைத் தூற்றெழு
      குழலியை யடியாருட் செல்லனப் பேட்டினை
யருமறை முதலாமெய்க் கிள்ளையைக் காப்பொலி
      யளகையில் வளர்ஞானச் செல்வியைக் காக்கவே.(3)

வேறு

முருகக்கடவுள்.

அளிமிடைந்தொழுகு நறவருந்தியிசை யயர்கடம்பணிபு னைந்தபொற்சீர்ப்புய -
      வழகுதங்குபெரு வரைதொறுங்குறவ ரரிவைகொங்கையெனு மும்பலைச் சேர்த்துறு,
களிபொருந்துமுரு கனையடங்கலர்கள் கதறவெங்குரல்செய் செஞ்சிறைக்காற்படை -
      கரமிலங்கமயில் வெரிநிவர்ந்தடியர் கருதுமங்குவரு கந்தனைப் போற்றுதுங்,
குளிரரும்புமலர் வதியுமங்கையர்கள் குவிகரங்கொடும ருங்கிறக்கூட்டிய -
      குயிலையென்புன்மொழி யையுமுவந்தினிது கொளுமிளங்கொடியை யுஞ்சுகப்பேட்டினைத்,
தளிர்துவன்றியிருள் படநிழன்றுமதி தவழநின்றுமலர் பொங்கரிற்றேத்துளி -
      தடநிரம்பும்வயி ரவிவனங்குடிகொ டகுபெருந்திருநன் மங்கையைக் காக்கவே. (4)

வேறு

 பிரமதேவன்.

தண்ணந் துழாய்ப்படலை துயல்வரு தடம்புயத் தாதைக்கு நீழல்செய்யத் -
      தந்தவரை யின்பறை யரிந்தபகை கண்டரி தங்குதற் கிடமிலாம,
லெண்ணுந் தனக்குமனை யாய்க்குமனை யிற்குமனை யிளவலுக் கேதியுறையு -
      ளெகினுறையு ளாகமரு தத்திணையி லாக்கிமகி ழெண்கைப் பிரான்புரக்க,
கண்ணொன்று நுதலாளர் பலியேற்ற தன்மையைக் காட்டியாங் கிருநாழிநெற் -
      கவினுற வளிப்பப் பெருந்திரு வெனும்பெயர்க் கருதுபொருள் காட்டியாங்குத்,
திண்ணங்கொண் முப்பத் திரண்டறமு முலகஞ் செழிப்புற வளர்த்துநாளுந் -
      திருத்தவத் துறையினில் வளர்ந்தோங்கு தெய்வதச் செந்தார்ப் பசுங்கிளியையே.(5)

இந்திரன்.

அங்கனிந் தொழுகுமயி ராணியுட னீராட் டமர்ந்துவிளை யாடுபொழுதி -
      னந்நலா ணுண்டுகி னனைந்தல்கு றோன்றலா லதுகாண நாணிவளைசேர்,
செங்கைகொடு தன்கண் புதைத்திடா தவளுடைய செங்கண்பு தைக்குமாறே -
      செய்யதா மரைமலர்க் கண்ணாயிரம்பெற்ற தேவர்பெரு மான்புரக்க,
திங்கண்முடி மகிழ்நரெத் திறநிற்ப ரத்திறந் திகழ்யாமு நிற்பமெனவே -
      சீவகோ டிகளறி தரத்தெரிப் பதுபோற் றிருக்கயிலை விண்டுவின்கட்,
டங்கியவர் தாமரை யிருக்கைகொ டிருந்தநாட் டருவிமய விண்டுவின்கட் -
      டாமரை யிருக்கைகொ டிருந்தரு டவத்துறைச் சைவச் செழுங் கொடியையே.(6)

திருமகள்.

 மன்னுமாய்ப் பாடியிற் பாறயிர்நெய் வெளவிநெடு மத்தின்மொத் துண்டுமகிழ்நன் -
      வருந்தாம லவைபெற்று விழிவளர வுங்கொண்ட மனைவழிச் சார்ந்துவாழ்ந்தா,
னென்னுமொரு பழிமொழி விலங்கவும் பாற்புணரி யினிதுறையு ளாக்கொடுத்து -
      மியைதனக் குறையுளம் மகிழ்நன்மார் பாக்கியு மிருக்குமொரு பெண்புரக்க,
பன்னகா பரணரோ ரிடமின்றி யெங்கும் பலிக்குழன் றிடலுநீங்கிப் -
      பகர்மனைத் தந்தைவழி யுறையுளென வுரைதரும் பழிமொழியு நீங்கவோங்கி,
மின்னுபொன் மலைவெள்ளி மலைமுதற் பன்மலைகண் மேவுறையு ளாக்கியன்னார் -
      மேனியொரு பாதியைத் தற்குறையு ளாக்கிமகிழ் மெய்த்தவத் துறையுமையையே.(7)

கலைமகள்.

தேனா றுவட்டெழப் பாய்தரு மடுக்கிதழ் செறிந்தசெம் பொற்றாமரைச் -
      செழுமலரின் மேற்றனது பொன்மேனி யொப்புமை தெரிந்துறையு மகிழ்நனேய்ப்பக்,
கானாறு வெண்டா மரைப்போதின் மேற்றனது கவின்மேனி யொப்புமை தெரீஇக் -
      காதலி னமர்ந்தருள் கொழிக்குமறை முதலளவில் கலைஞான வல்லிகாக்க,
வானாறு தாழ்சடைக் கூத்தனார் வெஞ்சூல மழுமுதற் படைசுமந்து -
      மணிமூரல் விழியுகிரி னாற்பகை குமைத்தல்போல் வளைதிகிரி ஞாங்கர்முதலா,
வூனாறு பல்படை சுமந்துந் துதிப்பவர்க் குறுமல விருட்பகையைமெல் -
      லோதியிரு ளாற்குமைத் தருள்பொழி தவத்துறையி லோங்கெழிற் பெண்ணமுதையே.(8)

வேறு.

துர்க்கை.

பொன்னங் கடுக்கை மதியணிந்த புரிபுன் சடையெம் பெருமான்றீப்
      புகைக்கட் குறளன் வெரினெரியப் பொற்றாள் பதித்து நடிப்பதுபோன்
மன்னு மமரர் குழாமுருக்கு மகிடக் கூற்றின் முடிநெரிய
      மலர்த்தாள் பதித்து நடம்புரிந்த மாறா வீரப் பெருஞ்செல்வி
கன்னிக் கமுகின் மிடறொடியக் கதலிக் குலைகள் சாய்ந்திடப்பா
      கற்றீங் கனிகள் கிழியவிலாங் கலிமுப் புடைக்காய் விழமோதி
யன்னப் பழனத் தோங்குதகட் டகட்டுப் பகட்டு வாளைகள்பா
      யணிசேர் செல்லத் தவத்துறையி லமரும் பரையைக் காக்கவே.(9)

வேறு.

சத்தமாதர்.

மலர்பல பொதுள்பா சடைப்பொற் றடத்தினும் -
      வரியளி புருமோடை யுச்சக் குலைக்கணு,
மழைமுகி றொடுபோர் நிரைச்சொற் களத்தினும் -
      வயலணி மடமா தரப்புக் கடத்தினு,
மலர்கதிர் வயறோறு மற்றைத் தலத்தினு -
      மணிவளை மணியீன மொய்த்துச் சரித்திடு,
மளவில்பல வளம்வாய்பு கழ்ச்சித் தவத்துறை -
      யமலர்த மிடமேவு பொற்புத் துரைப்பெணை,
நிலவெழு சிறையோதி மத்தைச் செலுத்துந -
      ணிகரறு மடலேறு கைத்துக்களிப்பவ,
ணெடுவலி மயில்வா கனத்திற் சிறப்பவ -
      ணிகழரவுணுமூர் தியைப்பெற் றுகைப்பவ,
ளிலகிய வரிமர் நடத்தச் சமர்த்தின -
      ளிமிழ்மத வயிராவ தத்தைப் புரப்பவ,
ளெழுமல கையினேறு வெற்றிக் குணத்தின -
      ளெனுமிவ ரெழுவோரு மற்பிற் புரக்கவே.(10)

வேறு.

முப்பத்துமூவர்.

கானமர்குழற்கொளிசெய் நித்தில மிழைத்தபொ னார்பிறைமு கிற்கணொர் மதிப்பிறைமு
      ளைத்தது சிவணவி ருத்தித்தி ருத்தாளில் வானவர் -
      காதல்செய் மடக்கொடிகண் மைக்குழன் மணிப்பிறை நாடொறு மதிப்பரி
தெனப்பல்பல மொய்த்திட வருள்பொழி மைக்கட் டுணைச்சீர்கொ டேவியை,
      வானமர் தவத்தர்புக ழச்சிர புரத்துறு மாமறை மழக்குழவு மெய்ப்பொரு
      ளினைப்பெற வமுதருள் செப்புத் தனக்கோல மாதினை -
      வால்வளை யெனச்சுனை யிடைக்குளிர் நிலப்பிறை யூரிமய வெற்பிறை
      தவத்தினி லுதித்தருள் பிடியை மயக்கற்ற வுட்பாவு சோதியை,
யூனம ருடற்பொறைய வெற்கு மருளைப்புரி ஞானவ முதைப்பசு மலர்க்கொடியை
      யற்புத மயிலினை நத்துக்க ளத்தூய பூவையை -
      யூரெழு வயப்புரவி கட்டுமிர தக்கதிர் மீமிசை தடுத்தரிய கற்பக மலர்த்தரு
      நலிய வருத்திச் சுரர்க்கார்வ மீதரு,
தேனமர் மலர்ப்பொழில்கள் சுற்றிய தவத்துறை யேழிருடி யர்க்கிறை யிடத்தினமர்
      சத்தியை யினிதி னளித்தற் குரித்தான காவலர் -
      தேரிடப மத்திபரி பொற்புற வுகைத்தருள் சூரிய ருருத்திரர் வசுக்கணன்
      மருத்துவ ரெனுமிவர் முப்பத்து முக்கோடி தேவரே.(11)

1 - காப்புப்பருவம் முற்றிற்று.

2  செங்கீரைப்பருவம்.

நீர்பூத்த புண்டரிக நிகராகு மாறுள நினைந்திருமி னாரையீன்று -
      நிறையழகு கூட்டுண்டு வருமாறு செயவவரு நின்பணி விடைக்கணின்று,
பேர்பூத்த செங்கையுந் தாங்குகின் றார்தமைப் பெற்றதாய்க் குதவவென்று -
      பெருமுலைச் சிற்றிடை யரம்பையர்கள் பேசப் பிறங்குமக கரமிரண்டு,
மேர்பூத்த நிலனிற் பதித்தொரு மலர்த்தா ளிருத்தியொர் மலர்த்தாளெடுத் -
      தெழின்முக நிமிர்த்தசைத் திரவிமண் டிலமானு மிருகுழைவில் வீசியாடத்,
தேர்பூத்தவீதித் தவத்துறைப் பெருமாட்டி செங்கீரை யாடியருளே -
      தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது செங்கீரை யாடியருளே.(1)

குருவார் துகிர்ச்சடை திசைத்தட வரக்கங்கை குழமதியி னோடுதுள்ளக் -
      குழையசை தரத்திருப் புருவமுரி தரவெழுங் குறுமூர னிலவெறிப்ப,
மருவார் கடுக்கைவெண் டலையரவு திண்டோள் வயிற்றுயல் வரக்கதிர்த்து -
      மணிநூ புரங்குமு றிடப்படைப் பேற்றதுடி வாய்த்ததிதி யபயமாய்த்த,
லுருவார் கொழுந்தழ றிரோதமூன் றியதா ளுவப்பரு ளெடுத்ததாளி -
      லோங்கத் தெரித்துமன் றிடையென்று நின்றாட வொருவர்தமை யாட்டுமயிலே,
திருவார் தவத்துறைக் கருணைப் பிராட்டிநீ செங்கீரை யாடியருளே -
      தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது செங்கீரை யாடியருளே.(2)

ஒன்னார்த மும்மதி லொருங்கவிய வாங்குபொன் னோங்கல்விற் பழமையறிவா -
      ருற்றதனை யன்றியேத் தொழிலையெஞ் ஞான்றும் முஞற்றவல் லாமைக்கண்டு,
கொன்னார் வளைக்கையுல குண்டமுன் னோனிமிற் கொல்லேற தாயதான்மேற் -
      கொள்பொழுது வேறுறைய நாணியோ ருடல்செய்த கொள்கைபோ லம்மகிழ்நனார்,
பொன்னாரு மேனியிற் பாதிகொண் டாளும் பொருப்பரைய னீன்றபிடியே -
      புண்டரத் திருநீறு கண்டோ ருளத்தையொண் புனலாக்கி நெற்றியொளிரத்,
தென்னார் திருத்தவத் துறைவளரு மென்னம்மை செங்கீரை யாடியருளே -
      தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது செங்கீரை யாடியருளே.(3)

 மைவைத்த கண்டரை வணங்கவரு தேவர்கள் வயங்குசா ரூபமுற்று -
      மன்னுவார் தங்குழுவி னின்றும் பிரித்துணர வைத்தகுறியே போலவும்,
பொய்வைத்த நுண்ணிடை யரம்பையர்கள் பேரெழிற் பொலிவுகா ணூஉமயங்கிப் -
      புணரவரி னவரஞ்சி யகலும்வண் ணம்பொறித் திடுமிலச் சினைபோலவும்,
பைவைத்த துத்தியுர கப்பணி யணிந்தவப் பரமனார் திருமார்பினிற் -
      பைம்பொற் படாமுலைச் சுவடுசெய் தகமகிழ் படைத்துக் களிக்குமயிலே,
தெய்வத் தவத்துறைச் சைவச் செழுங்கொம்பு செங்கீரை யாடியருளே -
      தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது செங்கீரை யாடியருளே.(4)

பாங்கினுறு செம்பதும பீடமொப் பப்பதும ராகபீ டத்தினேற்றிப் -
      பாணிவரு மேன்மைகண் டுயர்கங்கை மஞ்சனம் பரிவினாட் டிப்பொய்கைநள்,
ளாங்கொடியை நுரைபொதிந் தாலென வெணுண்டுகிலி னாலீர மொற்றியொளிரு,
      மம்பிறையு ரோணியென நெற்றிவயி ரப்பொட் டணிந்தரக் காம்பன்மலரி,
லோங்குமதி யமுதுகுத் தாலென்ன முத்தணிந் தொளிர்வட்ட முலையமுதுவா -
      யூட்டித் திருப்பணிகள் பூட்டியிம வான்மனை யுவந்துகொண் டாடுமயிலே,
தேங்கொளிய மாடத் தவத்துறைத் திருமங்கை செங்கீரை யாடியருளே -
      தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது செங்கீரை யாடியருளே.(5)

வேறு.

கடிமலர் முளரியி லெகினம் வதிந்து கலித்தா டுதல்பொருவக்
      காமரு சீறடி வயிரத் தண்டை கஞன்று கலித்தாடக்
கொடிவிடை யார்திரு மேனிச்சுவடு கொடுத்த திறங்கூறிக்
      கூறிக் குமுறுதல் போல வொலிக்குங் கோலவளை களுமாட
முடியுறு சூழிய மாட வெழுங்குறு முறுவன் மலர்ந்தாட
      முழுமதி முத்தென முகமதி நுண்டுளி மொய்குறு வியராட
வடிய ருளங்குடி புகுமொரு சுந்தரி யாடுக செங்கீரை
      யவத்துறை மாற்று தவத்துறை நாயடி யாடுக செங்கீரை.(6)

சூழி முடித்த மணிப்பணி யடருஞ் சுடர்கான் றிருண்மேயத்
      தொட்டிடு பொட்டொடு பட்டமும் வயிரச் சுட்டியும் வில்வீசத்
தாழிரு செங்குழை யோரிரு செங்கதிர் தம்முத யஞ்செய்யத்
      தளவு முகைத்தவிர் குமுதத் தமுது ததும்பி வழிந்தோட
வேழிரு புவனமு முய்ந்தன முய்ந்தன மென்று களித்தாட
      விழைபொரு மிடையிற் றழைசிறு கலையொடு மெழின்மே கலையாட
வாழிய வன்பின ருள்ள மிருப்பவ ளாடுக செங்கீரை
      யவத்துறை மாற்று தவத்துறை நாயகி யாடுக செங்கீரை.(7)

 பமர முழக்க நறப்பொழி யுஞ்செம் பதும மருட்டியநின்
      பாதப் புணைபற் றாகப் பற்றிப் பற்றற நிற்பார்த
முமல விருட்பகை சாய்க்கு நறுங்குழன் மொய்த்தெழு புகழ்மான
      முத்தம் பத்தி நிரைத்த மணிப்பிறை முழுமதி யொளிசாய்ப்பக்
குமரி யனம்பயில் வயல்சூழ் காழிக் குழவுக் கமுதருளுங்
      கொங்கைப் புகழென முத்தா ரம்பல குழுமப் பொலிவாயென்
றமரர் தொழுந்தொறு மருள்செயு மம்பிகை யாடுக செங்கீரை
      யவத்துறை மாற்று தவத்துறை நாயகி யாடுக செங்கீரை.(8)

வேறு.

 கந்தர நெடுமுடி துஞ்சிம யந்தரு கன்றே மன்றாடுங்
      கண்டர்த மொருபுற நண்பின்வ திந்தக ரும்பே யன்பாளர்
சிந்தையி னினிதுத ழைந்துவி ளங்கறி றம்பா வின்பாகே
      திண்கையி லுலவைகொண் மைந்தர்வி லங்கல்சி வந்தார் தந்தாயே
யந்தரர் பணிபத பங்கய மென்கணு மஞ்சே வென்றீவா
      யஞ்சுக மொருகைய ணிந்திய லஞ்சம மர்ந்தூ ரும்பாவாய்
செந்திரு மகள்கலை மங்கைதொ ழும்பரை செங்கோ செங்கீரை
      செந்தமி ழளகை யிருந்த பசுங்கிளி செங்கோ செங்கீரை.(9)

வேறு.

 தாவின் மணிக்குழை தாவு கடைக்கண் மடந்தாய் சந்தாரஞ்
      சால்பொதி யத்தவர் தேற வியற்றமிழ் விண்டார் தந்தாயே
பூவி னிருக்குமி னார்பர வற்புத நங்காய் வெங்காதல்
      போயற வற்பினுள் வார்த முளத்தில் வதிந்தூ றுந்தேனே
கூவு கடற்படு மால விடத்தை யயின்றா ரின்பாய
      கூர்சுவை முற்றித ழார்சுதை துய்ப்ப வுவந்தீ யுந்தோகாய்
தேவர் முடிக்கணி யான பதக்குயில் செங்கோ செங்கீரை
      சீர்கொட வத்துறை மேவு மடப்பிடி செங்கோ செங்கீரை.(10)

2. செங்கீரைப்பருவம் முற்றிற்று.

3.  தாலப்பருவம்

 தன்பா டொருவேன் மழவிளஞ்சேய் சதுமா முகத்துப் புத்தேளைத்
      தகைந்து சிறைசெய் ததுநோக்கித் தாயென் முறைத்தண் புனற்கங்கை
யன்பாற் றடமா யப்பிரமற் கனையென் முறைகொண் டொழுகுமவை
      யனைத்துந் தன்பா டவ்வணஞ்செய் தமைந்த தேய்ப்ப வாவிதொறும்
பொன்பா யிதழ்த்தா மரைகள்பல பொருந்தப் பொருந்துந் துணையாவப்
      போதன் றன்னூர் தியையமைத்தாற் போலோ திமங்க ளுறல்கண்டு
மன்பார் புகழுந் தவத்துறைவாழ் மணியே தாலோ தாலேலோ
      வளருங் கருணைப் பெருந்திருமா மயிலே தாலோ தாலேலோ.(1)

 விண்ணிற் படரு முகிற்படலம் விறந்து கரைகொன் றிரங்கிமறி
      வெள்ளத் திரைவா ரிதிபடிந்து வீங்கும் புலவு மணநாறி
யுண்ணற் கரிய வுவர்த்தோய முண்டு கதறி யெதிரெடுப்ப
      துன்னி யவைநின் மகிழ்நன்முகி லூர்திக் கினமா கியதுநினைந்
தெண்ணற் கரிய விளநீருண் டெம்பா லுண்மின் முகில்காளென்
      றெட்டிக் கொடுத்து நிற்பதுபோ லெங்குந் தெங்கம் பொழிலுயரும்
வண்ணப் பணைசூழ் தவத்துறைவாழ் மணியே தாலோ தாலேலோ
      வளருங் கருணைப் பெருந்திருமா மயிலே தாலோ தாலேலோ.(2)

மின்னும் வயிர மிருள்சீத்து மிளிரும் பதும ராகமலை
      வீச நிறைந்த வெள்வளையும் வேழக் கரும்பு முத்துதிர்ப்பத்
துன்னுங் கமுகு செம்பவளந் தூர்ப்ப நிறைந்த தாமரையுந்
      துதிக்கு மிருமா நிதிபோன்று தோன்ற வெங்கு மள்ளரவை
யுன்ன லின்றி யொட்டொடுபொன் னொப்பக் கண்ட ஞானியர்போ
      லுள்ளங் களித்துத் திரிவதுகண் டும்பர் பெருமான் றலைசாய்க்கு
மன்னும் பழனத் தவத்துறைவாழ் மணியே தாலோ தாலேலோ
      வளருங் கருணைப் பெருந்திருமா மயிலே தாலோ தாலேலோ.(3)

காளைச்சுரும்ப ரடைகிடக்குங் கமலக் காட்டிற் பிணர்மருப்புக்
      கவைத்தாட் கவரி புகவெருவிக் கனிந்த வருக்கைச் சுளையுதிரப்
பாளைக் கமுகு மிடறொடியப் பருமுப் புடைக்காய் பலசிந்தப்
      பைஞ்சூற் கொண்டல் கருக்கலங்கப் படர்மா மதியத் துடல்கிழிய
வாளைக் குமைக்கும் வரிநெடுங்க ணரம்பை மடவா ரூசலிடு
      மந்தண் டருக்கோ டுகண்முறிய வண்டத்தளவு மெழும்போத்து
வாளைப் பழனத் தவத்துறைவாழ் மணியே தாலோ தாலேலோ
      வளருங் கருணைப் பெருந்திருமா மயிலே தாலோ தாலேலோ.(4)

ஏற்றி னுரிமங் கலமுரச மிரங்கும் வயிர்யாழ் கோடுமுத
      லியம்பு மொலியு மங்கலவாழ்த் தெடுக்கு மொலியு மிரும்புலவி
யாற்று மடவார் கொழுநர்சிரத் தம்பஞ் சடிக ளோச்சவெழு
      மலம்பு சிலம்பி னொலியுமவ ரல்குன் மணிமே கலையொலியு
மூற்றுங் கரடக் கடாமலைக ளுரறு மொலியும் வயப்பரித்தா
      ரொலிக்கு மொலியு மிளைஞர்பொற்றே ருருட்டு மொலியு முகிலொலியை
மாற்றி முழங்குந் தவத்துறைவாழ் மணியே தாலோ தாலேலோ
      வளருங் கருணைப் பெருந்திருமா மயிலே தாலோ தாலேலோ.(5)

வேறு.

செய்ய கரும்பு விரும்புவில் வாங்கிச் செறியளி நாணேற்றித்
      தெண்ணீ ரருவி யிரங்கும் பொதியத் தென்றற் றேரேறி
யைய மலர்க்கணை யொன்று தொடுத்திடு மங்கச னங்கமற
      வழல்கெழு நுதல்விழி யாற்பொடி யாக்கிய வாண்டகை யோகிகளை
மையமர் வள்விழி யாலம ராடி மருட்டிப் பணிகொண்ட
      மாமயி லேகலை நாமகள் பூமகள் வாழயி ராணிமுதற்
றைய லருக்கர சாய பசுங்கிளி தாலோ தாலேலோ
      தமிழ்ச்சுவை கண்ட தவத்துறை யம்பிகை தாலோ தாலேலோ.(6)

 வந்திக் குந்திரு மாலயன் முதலிய வானவர் துயர்நீங்க
      மைநா கம்பொரு மேனித் தகுவ வயப்படை யுள்ளவெலா
முந்திக் கட்கடை சிந்தழல் வாளியு மொருகைப் புழைவருபே
      ருலவைக் கணையும் மிருகவுள் வாக்கு முகாந்தப் புனலம்பு
நந்தச் சிந்தி யழித்துத் தலைமை நடாத்திய யானையையு
      நாடிக் கூடி யுடன்று தொலைத்தெழு நற்புக ழொருகோட்டுத்
தந்திக் கன்றை யுயிர்த்த விளம்பிடி தாலோ தாலேலோ
      தமிழ்ச்சுவை கண்ட தவத்துறை யம்பிகை தாலோ தாலேலோ.(7)

 முதிர்சுவை யமுத மொழுக்கிய தேயென மொய்த்த சிறைக்கிளிகண்
      மூவர் திருப்பதி கம்பல பாட முழங்கி யெழுந்தழல்போற்
புதிய நறுந்தளி ரீன்று விளங்கிய பொற்சூ தக்குழையிற்
      பொருந்து கருங்குயில் வாசக முழுதும் பொக்க மறப்புகல
கதிரும் பூவைகள் சாமம் பாடக் காமரு சோலையெலாங்
      கஞலுதல் கண்டொரு வண்டுஞ் சேராக் கற்பச் சோலைவளந்
தெதிர்தொழு மளகா புரியிற் குடிகொளு மெந்தாய் தாலேலோ
      வெவ்வுல கங்களு மெவ்வகை யுயிர்களு மீன்றாய் தாலேலோ.(8)

வேறு.

மழவனுடற்பிணி தபவருள் வைத்தபி ரானா ரானூரு
      மகிழ்நர்குணப்பொரு ளெனவறி விற்பெரி யோர்பே சோர்மானே
தழன்மெழு கொத்துரு குவர்தமு ளத்திடை வாழ்வாய் தாழ்வான
      தமியன்மொழிக்குமி னருள்புரி யத்தகு தாயே மாயாத
குழகுருவச்சர வணபவ னைத்தரு பாவா யோவாத
      குமரியிருட்படு நறுமண மொய்த்தவிர் கோதாய் வேதாதா
ழழகுபழுத்தவி ரளகை யிருப்பவ டாலோ தாலேலோ
      வரியமறைக்கும்வி ளரிய புகழ்க்கொடி தாலோ தாலேலோ.(9)

வேறு.

 வாரார் முலைக்கொடி மானே தேனே யூனேய
      மாறா வெனக்கரு ளீவாய் பாவாய் தாவாத
காரார் முடிக்கிரி மாதே தாதேய் போதேறு
      கானார் குழற்குயி னாவார் மூவா மாவாழும்
பேரா ருரத்தினர் தாழ்வார் சூழ்வார் வாழ்வாராய்ப்
      பேரா மலற்புற மாசார் மூசா தேசாரு
சீரார் தவத்துறை வாழ்வே தாலோ தாலேலோ
      சேவே றுவர்க்கிட மானாய் தாலோ தாலேலோ.(10)

3. தாலப்பருவம் முற்றிற்று.

4  சப்பாணிப்பருவம்

 செம்மைதரு மொளிகளுள் ளனவெலா மொப்பிலாச் சிவனுருத்தேசதென்றே -
      சீவகோ டிகளறிய வப்பரம யோகிக டிருக்கண் புதைத்த ஞான்று,
வெம்மைதரு கட்குறவு கொண்டொழுகும் யாமென்று மேவுமொப் பாகேமெனா -
      வில்வீசு பவளச் சரோருக மகன்றஞ்சி மேலுமய லாதடங்க,
மும்மையுல குந்தொழும் வரைக்குமக ளாகியதை முன்னியத் திணையிலுற்று -
      மொய்யழகு கூட்டுணச் சமயந் தெரிந்தினு முயன்றுசெங் காந்த ணிற்பத்,
தம்மைநிக ராயவிரு கைகண்முகிழ் செய்தம்மை சப்பாணி கொட்டியருளே -
      சதுமறைகள் கதறுந் தவத்துறைப் பூங்கொம்பு சப்பாணி கொட்டியருளே.(1)

 பந்தந் தனக்குடைந் தஞ்சிவந் தடையும் பசுக்களைப் பாதுகாக்கும் -
      பண்புபோற் பரமரிரு கட்குடையு நீலமும் பங்கயமு மெய்யொளிக்கு,
நந்திய வசோகும்வெண் ணீற்றொளிக் குடைதளவு நற்சடைக் கவிழ்தொழிற்கு -
      நாணியுடை மாந்துணரு மான்முதற் றேவர்தொழ நாடுபிர ணவவேழமாய்,
வந்தகாலத்துடையும் வேழமும் வந்தடைய வாளிவில் லாக்கியென்று -
      மலர்வாளி வேழவிற் குமரனைப் போலாதம் மகிழ்நரொடு பொருதுவெல்லச்,
சந்தமுற வைத்தொளிர் தருங்கர தலங்கொண்டொர் சப்பாணி கொட்டியருளே -
      சதுமறைகள் கதறுந் தவத்துறைப் பூங்கொம்பு சப்பாணி கொட்டியருளே.(2)

 பைவளர் மணித்தீப மேற்றிக் கிடக்கும்வெம் பாம்பிற் கிடந்துறங்கும் -
      பகவனுந் திப்பவள வம்புய மிசைக்குடிகொள் பனவனுள் ளஞ்சிநாணச்,
சைவர்முத லறுவருட் டாமரைதொ றுங்குடிகொ டந்தையாரே யொப்பநீ -
      தங்கிவளர் தாமரை தனக்குமுண் டென்றினிது தங்கியது போன்முருகவே,
டெய்வமண நாறுசெந் தாமரைப் பூவிற் சிறந்தாறு மழவுருவமாய்ச் -
      சேர்ந்துறைய வவ்வுருவ மாறுமோ ருருவமாய்த் திகழ்தரத் தழுவிமுதுகு,
தைவந்தணைக்குங் கரத்தொளி ததும்பவொரு சப்பாணி கொட்டியருளே -
      சதுமறைகள் கதறுந் தவத்துறைப் பூங்கொம்பு சப்பாணி கொட்டியருளே.(3)

 மீனாமை கேழனர சிங்கம்வா மனனஞ்ச மிக்கதண் டம்புரிந்தும் -
      வேதனெச் சன்றக்க னிவர்தலை யறுத்துமத வேள்புரிசை மூன்றெரித்து,
மூனாறு பகுவாய்ச் சலந்தரனை மாட்டியு முடல்கூற் றுதைத்தும்வெந்தீ -
      யுறழந்த கனைநுனைச் சூலமேற் றுந்தும்பி யுழுவைமுதல் வென்றுமென்று,
மானாத வலியுடைய வாண்டகைக டோற்பநெட் டரவிற் படுக்குமாயோ -
      னரவுருவ மாய்க்கழிய மூண்டகவ றாட்டத் தடிக்கடி பிடித்தெறிந்து,
தானாடி வென்றசெங் கையொடுகை சேர்த்தம்மை சப்பாணிக் கொட்டியருளே -
      சதுமறைகள் கதறுந் தவத்துறைப் பூங்கொம்பு சப்பாணிக் கொட்டியருளே.(4)

ஏற்றபுன லரவுமுத லாங்கலனை யீர்த்தொடு மென்றுள மதித்த மைத்தாங் -
      கெழில்வட்ட வடிவா முடித்ததெற் றற்சடை யிருக்குமந் நீரறுகுகண்,
டாற்றுபசி தீர்வா னருந்தமல ரயனென வடுத்தெட்டி யெட்டிமுயலு -
      மாண்டகை கரத்துழை கடுப்பநின் செவ்வா யமைந்ததொண் டைக்கனியெனா,
மாற்றரிய நசைகொண்டு கவர்வா னினைந்திதழி மாலையணி யெம்பிரான்போல் -
      வாயூறு பைங்கிளிப் பேட்டினஞ்சிறைதடவி மகிழ்வினகை செய்துதருவின்,
சாற்றுகனி கொண்டூட்டி மகிழ்விக்கு மங்கைகொடு சப்பாணி கொட்டியருளே -
      சதுமறைகள் கதறுந் தவத்துறைப் பூங்கொம்பு சப்பாணி கொட்டியருளே.(5)

வேறு.

 பொன்புரி செஞ்சடை யையர் பசித்த புலிச்சிறு குழமகவைப்
      போரா ழிப்படை யேந்திய செங்கைப் புத்தே ணனிதுயர
மன்புரி பாற்கடல் கூயினி தூட்டி வளர்த்தது போலாது
      மலர்தலை யுலகத் தெவ்வுயி ருஞ்சுகம் வாய்த்த தெனத்துள்ள
மின்புரி மாட நெருங்கிய காழியில் விழைசொற் குழமகவை
      மென்முலை வழிபால் வள்ளத் தூட்டி விழித்துளி மாற்றியநின்
கொன்புரி செங்கை முகிழ்த்தெனை யாள்பவள் கொட்டுக சப்பாணி
      கொடிகொ டவத்துறை யடிக ளிடத்தவள் கொட்டுக சப்பாணி.(6)

உன்னத மால்வரை பல்ல வணங்க வொளிர்ந்தெழு மெழுவாயா
      யுற்றத னுருவு குழைத்து வருத்த முஞற்றிய பகைகண்டு
பொன்னக மிகலொரு வன்பா லிருபேர் பொரின்வரும் வெற்றியெனாப்
      புந்தி மதித்திரு கூறாய் நேரே பொருதுறு மாறேபோற்
கன்னவில் கொங்கைக ளெம்மான் மார்பு கவின்சுவ டுறமோதக்
      கம்பா நதியிற் கட்டித் தழுவு கரங்கள் சிவப்பூறக்
கொன்னுனை யிணைவேல் வென்ற கருங்கணி கொட்டுக சப்பாணி
      கொடிகொ டவத்துறை யடிக ளிடத்தவள் கொட்டுக சப்பாணி.(7)

நனியுயர் வான மணப்பந் தரின்மறை நாதன் மகம்புரிய
      நாரணன் முதலியர் பணிதலை நிற்ப நயம்பெறு கணநாதர்
முனிவர ரரவொலி செய்திரு கைகண் முகிழ்ப்பப் பல்லியமேழ்
      முகிலொலி சாய்ப்ப வரம்பையர் வாழ்த்து முழக்கக் கடிமலர்வாழ்
வனிதையர் நின்னை யணிந்து பணிந்து மணத்தவி சேற்றவவண்
      மங்கல மாமுனி பன்னி யொடும்புனல் வாக்க மகிழ்ந்தேற்றுக்
குனிமதி வேணியர் தொட்ட கரங்கொடு கொட்டுக சப்பாணி
      கொடிகொ டவத்துறை யடிக ளிடத்தவள் கொட்டுக சப்பாணி.(8)

வேறு.

 பவத்துயர் பாற வெனக்கரு ளைச்செ யருட்பாவாய்
      பனிக்குல மால்வரை பெற்று வளர்த்த சுவைப்பாகே
சிவத்திரு வாள னிடத்தி லிருக்கு மியற்றோகாய்
      திருப்பெணி லாவு கலைப்பெ ணிவர்க்கி ரசத்தேனே
நவத்தளிர் வேர்மலர் மொய்த்தவிர் மைத்த குழற்றாயே
      நயப்ப வெணாலற முற்றும் வளர்த்த கரத்தாலே
தவத்துயர் வார்க ளுளத்தவள் கரங்கொடு கொட்டுக சப்பாணி
      தவத்துறை வாழு மடப்பிடி கொட்டுக சப்பாணி.(9)

வேறு.

 கனத்த மலர்க்குழ லுச்சியின் முச்சி யிசைத்தாருங்
      கதிர்த்த மணிப்பிறை பொட்டொடு சுட்டி தரித்தாரு
முனக்கித மெப்படி யப்படி தொட்டி லசைத்தாரு
      முவப்பி னினித்த கனிப்பல் வருக்க மளித்தாரு
மனப்பெடை யைக்கிளி யைப்புற வைக்கொணர் வித்தாரு
      மடுத்த விருட்பொழு துற்றக ணெச்சி லொழித்தாரு
மனத்தின் விருப்பொடு சுற்றினர் கொட்டுக சப்பாணி
      மணத்த தவத்துறை யுத்தமி கொட்டுக சப்பாணி.(10)

4. சப்பாணிப்பருவம் முற்றிற்று.

5. முத்தப்பருவம்.

ஒருமூ வகையா யெண்ணிலவா யுணர்த்த வுணர்சிற் றறிவினவா
      யுண்மை யினவாய்ச் சதசத்தா யுறுகண் ணியல்பா யுழல்பசுக்க
ளருமா தவசன் மார்க்கநெறி யடைந்த னாதி யாயளவி
      லாற்ற லுடைத்தாய்ச் செம்புறுமா சான மூல மலநீங்கி
யுருவோ டருவங் குணங்குறியற் றொளியாய் நிறைந்த பதியையுணர்
      வுணர்வா னுணரும் பொருளொழியா தொழிந்து கதிர்மீன் போற்கலந்து
திருவா ரின்ப முறவருள்வாய் செவ்வாய் முத்தந் தருகவே
      தேவா திபர்சூழ் தென்னளகைத் திருவே முத்தந் தருகவே.(1)

 தொன்றாய்ப் புதிதாய்ப் பேருணர்வாய்ச் சுடரா யிருளா யுயிர்க்குயிராந்
      துரியா தீத வாழ்வினுக்குத் துணையாய் நின்ற பெருவாழ்வே
யொன்றாப் பஞ்சப் பொறிவழித்த முள்ளஞ் செலுத்தா துண்ணிறைந்த
      வொழியா வன்பு வழிவதுபோ லொழுகுங் கண்ணீ ரிடைமுழுகி
நின்றா ருள்ளத் தமுதூற நிறைந்த கருணைப் பெருக்காறே
      நிலவு ஞானச் செழுஞ்சுடரே நீங்கா வினிய சுவைக்கரும்பே
தென்றாழ் நறுந்தே னுவட்டெடுக்குஞ் செவ்வாய் முத்தந் தருகவே
      தேவா திபர்சூழ் தென்னளகைத் திருவே முத்தந் தருகவே.(2)

 வெள்ளிப் பொருப்பும் வெள்விடையும் வெள்ளை யிரண்டா யிரமருப்பு -
      வெள்ளைக் களிறும் வெண்பிறையும் வெள்ளே றுயர்த்த வெண்கொடியுந்,
தள்ளித் தரளங் கொழித்துமறி தருவெண் புனலும் வெண்ணீறுஞ் -
      சங்கிற் புரிந்த வெண்குழையுந் தகுவெண் மனவு மணிவடமுந்,
துள்ளிச் சுவைத்தே னுவட்டெடுக்குந் தும்பைப் புதுவெண் மலர்த்தொடையுந் -
      தொலையா வுடைமை யாப்படைந்த தூயவடிகண் முடிவணங்கத்,
தெள்ளிச் சிறுவெண் ணகையரும்புஞ் செவ்வாய் முத்தந் தருகவே -
      தேவா திபர்சூழ் தென்னளகைத் திருவே முத்தந்தருகவே.(3)

 மஞ்சிற் பொலிந்த திருமேனி மாலை யயனை யிந்திரனை
      மற்றைச் சுரரை முனிவாரை மடவார் வலையிற் புகுத்துமெனை
யஞ்சப் பொடித்த நெற்றிவிழி யடிக டமையப் பகைதீர
      வமைந்த தளவுக் கணையாலு மங்கைக் கருப்புச் சிலையாலும்
விஞ்சத் திறல்வென் றேனென்று மீனக் கொடியோன் களிபொருந்த
      விமலப் பெருமான் பெருங்காதல் வெள்ளத் தழுந்த வெண்முறுவல்
செஞ்சொற் கிளவி யினிதரும்புஞ் செவ்வாய் முத்தந் தருகவே.
      தேவா திபர்சூழ் தென்னளகைத் திருவே முத்தந் தருகவே.(4)

 நெய்தல் கமழுங் கடல்கிழிய நெடுமான் முதல்வா னவர்பறம்பு
      நிறுவிக் கொடிய பணிக்கயிறு நிகழப் பூட்டிக் கடைகாலை
வெய்தென் றெவரும் விதிர்ப்பவரு விடத்தை யருந்து மெம்பெருமான்
      மிடற்றிற் கருமை யன்றிமறை விரிவாய் கருமை மேவாம
லைது பொருந்தப் பொருத்தியினி தரும்பு மமுதச் சுவையூற
      லருத்தியுடனன் கருத்தியென்று மழகிற் டொலிதன் சாருபஞ்
செய்து விளங்கும் பவளநறுஞ் செவ்வாய் முத்தந் தருகவே.
      தேவா திபர்சூழ் தென்னளகைத் திருவே முத்தந் தருகவே.(5)

வேறு.

 வெண்பிறை யலங்கலணி செஞ்சடைக் கார்க்கரிய மிடறுடைப் பரமயோகி
      வெள்வளைச் செவியங்கை மறிமான் முழக்கொலி விலங்கியின் படையுமாறு
தண்புனற் றடமலருமிந்தீ வரத்தைத் தடிந்துபொற் குழைகிழித்துத்
      தாவில்குமிழ் மேர்பாயு மரிமதர் மழைக்கணாற் றவுமம் மானைவென்று
கண்பயில் சிலைக்கரும் புஞ்சிறைக் கிள்ளையுங் காமர்யா ழுங்கரத்திற்
      கவிழ்தலைக் கொள்ளவமிர் தூறிமென் குதலையொடு கனிமழலை யுங்கலந்து
பண்பழுத் தொழுகுமது ரக்கிளவி தோன்றுசெம் பவளவாய் முத்தமருளே
      பங்கயத் திறைபரசு மங்கலர்க் கொருபுதல்வி பவளவாய் முத்தமருளே.(6)

 குறியுடுத் திரளனைய முத்தமெல் லாங்குழுக் கூடிமிக் கொளிருமழகு -
      கூட்டுண்டு கீர்த்திநனி கூடுமா றெண்ணியுயர் கோட்டைக் குமைத்திரங்கு,
மறிதிரைக் கார்க்கடல் புகுந்தகடு விம்மவறல் வாய்மடுத் துண்டமேகம் -
      வயிறுளைந் தீனுமுத் தென்னக் கருங்குழல் வயங்குபிறை யெனவடைந்து,
செறியுமூக் கனியென வடைந்துநீ சமயந்தெரிந் துவாவென வொர்முத்தைச் -
      செலுத்தவந் தின்னுமெட் டிப்பார்த்து நின்றிடத் திகழுமுத் தங்கள் கொண்டு,
பறியனைய வேணியடி கட்கினிய தானநின் பவளவாய் முத்தமருளே -
      பங்கயத் திரைபரசு மங்கலர்க் கொருபுதல்வி பவளவாய் முத்தமருளே.(7)

  ஊனாறு நுதிவைப் படைக்கைநவ வீரரொ டுருத்தெழுந் திந்த்ரஞால -
      முருட்டிவரு சூர்முதற் சேனா சமுத்திரத் துழைநுழைந் துடல்பிளந்து,
வானாறு பைந்தடி சுவைத்துநெய் யொழுகீருள் வாய்ப்பெய்து குருதிமாந்த -
      வன்சிலை குனித்தடுங் கணைபல பணித்தமரர் வாழுநக ரம்புதுக்கித்,
தேனாறு கூந்தலர மங்கையர்கள் புருவமென் சிலைகுனித் தொளிர்கணம்பு -
      திரள்புயத் தெய்யக் கலாபமயின் மீதுவரு செவ்வே ளெனுங்குழவிதன்,
பானாறு மழலைவாய் முத்தங்கொ ணினதுசெம் பவளவாய் முத்தமருளே -
      பங்கயத் திறைபரசு மங்கலர்க் கொருபுதல்வி பவளவாய் முத்தமருளே.(8)

வேறு.

 உருகியு ளுடைபழ வடியர்த மனநிறை வுற்ற விளக்கொளியே
      யுதயம தெழுகதி ரெதிரெழு பலகதி ரொத்த சுடர்க்கதிரே
மருமல ரிதழிய ருளமெனு மடுவின் மணத்த மலர்க்கொடியே
      மதிதவழ் தருமடி யிமவரை மகிழ்வின் வளர்த்த மடப்பிடியே
யருமறை குறுமுனி பெறவருள் கனியை யளித்த சுவைக்கனியே
      யளவில்ப லுயிர்தழை தரநனி யுதவு மருட்பெரு மைக்குயிலே
முருகவிழ் புதுமலர் செருகிய குழலினண் முத்த மளித்தருளே
      முனிவரர் குழுவிய வளகையில் வளர்பவண் முத்த மளித்தருளே.(9)

வேறு.

வெச்சென மொய்த்த பவக்கட லுட்பல் விதத்துய ரத்தொடுமாழ்
      வெப்ப மனத்தென் மொழிக்கு மளிக்கும் விருப்ப முடைக்குயிலே
கொச்சை மறைக்குரு ளைக்கமு துய்த்த குடப்பொன் முலைக்கொடியே
      கொட்பக னற்றவ ருட்பொலி தட்ப குணத்த மதிக்கலையே
நச்சர வப்புரி கச்சை யரைக்கசை நக்க ரிருப்பிடமே
      நத்தம் விளர்த்திட மைத்து மணத்த நறப்பெய் குழற்றிருவே
முச்சக நச்சு மருட்பெரு மைக்கிளி முத்த மளித்தருளே
      முத்தமிழ் மொய்த்த தவத்துறை யுத்தமி முத்த மளித்தருளே.(10)

5. முத்தப்பருவம் முற்றிற்று.

6. வாராவனப்பருவம்.

மாமலர் நறுங்குழற் கொண்டலிடை நித்தில மணிப்பிறை நிலாவெறிப்ப -
      வதனவம் போருகத் திடவல மணிக்குழைகண் மழஞாயி றுதயஞ்செயக்,
காமரு புரந்தரவின் மின்கலந் தாலெனக் கவினுதற் பட்டமொளிரக் -
      கழுத்தணி பழுத்தவிருண் மேயவளை யிலகவிடை கட்டுமே கலையொலிப்ப,
வாமமிகு புன்னகை யரும்பமென் சாயற்கு மடநடைக் குந்தொடர்ந்து -
      மயிலனம் வரச்சுருதி மொய்த்திடுஞ் சிற்றடி மணத்தமல ரோடளாவித்,
தேமலி சிலம்புகள் கலின்கலி னெனப்பெருந் திருமடந் தாய்வருகவே -
      செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர் தெய்வதக் கொடிவருகவே.(1)

அள்ளிதழ்த் தாமரை யிடைக்கல்வி செல்வமரு ளந்நலார் தோற்றமென்ப -
      ரறியா ரறிந்தபெரி யோர்கணின் பொற்சீ றடித்தா மரைக்கணென்பர்,
விள்ளுமி வுரைச்சான்ற தாகுமத் தாமரையை மேவினர் பெறாமனின்றாண் -
      மென்மரைப்போது மேவியம் மாதரை விருப்பொடும் பெறுதல்பின்னு,
மிள்ளுமிவ் விருவரைத் தோற்றுதல் வியப்பன் றொலிக்குநூ புரமணிமினா -
      ரொன்பதின் மரைத்தருத லாலென வரம்பைய ருவந்தேத்து தாள்பெயர்த்துத்,
தெள்ளுமறை யோலிட்டு மறிவரிய வொருபெருந் திருமடந் தாய்வருகவே -
      செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர் தெய்வதக் கொடிவருகவே.(2)

அம்மையிக பரமுத்தி யருளுநின் பொன்னடி யடிக்கடி பெயர்த்திடு தொறு -
      மவிருஞ் சடாமகுடர் தந்தே ரிடைப்பல்வி லமைத்துக் கிடத்தியதுபோல்,
வெம்மையக றண்பூம் பராகம் பரப்பிமெத் தென்றலிய னன்னிலத்தில் -
      வெண்பிறைச் சுவடுபல தோன்றவர மாதர்தம் மிளிர்பிறை யணிந்த குழலின்,
மும்மையுல குந்தொழு பதம்பதித் திடவுறு முழுச்சுவட தாய்ந்து வரவு -
      மொய்த்தலிவை களிலெது வெனக்கொழுநர் தம்பிறை முழுச்சுவட தாய்ந்துவரவுஞ்,
செம்மையா யிரமறை தொடர்ந்துவர வும்பெருந் திருமடந் தாய்வருகவே -
      செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர் தெய்வதக் கொடிவருகவே.    (3)

 சந்தமுற மாடமரும் வெண்ணிறக் கலைமக டழைந்துகஞ லித்தோன்றுநின் -
      றன்னுருப் பச்சொளியி னனிமூழ்கி வேற்றுமை தபத்தோன்ற லால்விரைந்து,
கந்தமல ராளிநீ யேயென மதித்துக் கதிர்த்துவள மிக்ககாரைக் -
      காற்புனித வதியம்மை பொன்னடியில் வீழ்பதி கடுப்பப் பணிந்தெழுந்து,
வந்தடி யரைப்பரம னேயென மதித்தேத்து வார்போற் றுதித்துநிற்ப -
      மற்றது தெரிந்துமா னீளைமய னீங்கியி வணந்தொழப் பெறுவமென்று,
செந்திரு மடந்தையு ளுவந்துபர வும்பெருந் திருமடந் தாய்வருகவே -
      செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர் தெய்வதக் கொடிவருகவே.(4)

 நந்தாத க·றொலிக் கானிற் சரித்தவொரு நன்பிணை வழுத்தியலர்மே -
      னங்கையா யுழையாதல் கண்டுதா மும்பெற நயந்தபல பிணைகளும்பொற்,
பந்தார் விரற்கர மமர்ந்தொரு சிறைக்கிள்ளை பகருமஞ் சுகமெனும்பேர்ப் -
      பண்புறப் பயிறலாற் றாமும் பெறக்கருது பைஞ்சிறைக் கிள்ளைகளுமொய்,
யந்தா ரடித்தல மடுத்தொரோ திமமூர்தி யாயஞ்ச மென்றுறைதலா -
      லறிந்துதா மும்பெற மதித்தவன் னங்களு மடுத்துத் தொடர்ந்துவரநற்,
செந்தார்ப் பசுங்கிளி கருந்தார்க் குழற்பெருந் திருமடந் தாய்வருகவே -
      செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர் தெய்வதக் கொடிவருகவே.(5)

வேறு.

 ஐயர் முடியை நேடியுங்கா ணரிய வனநே டியுமவர்தா
      ளறியான் றந்தை யாதலினின் னடியை யறிவான் றொடர்ந்துவர
வெய்ய கடுவுண் மிடற்றவர்தேர் மேவிநடத்து நாட்பரியாய்
      விரைந்து முன்சென் மறையாவும் விரும்பி நின்பின் படர்ந்துவரப்
பொய்யில் பரம ரிடத்திருவர் போன்மென் னடையைச் சில்லோதிப்
      பொலிவைக் கவர்வா னடிமுடிகாண் புலங்கூர் மயில்க ளடர்ந்துவர
வையம் புகழுந் தவத்துறையில் வாழ்வே வருக வருகவே
      வான்றோய் குடுமி வரைமுளைத்த மருந்தே வருக வருகவே.(6)

 செந்தா மரைமெல் லிதழ்மருட்டித் தேமர் நறுந்தண் டளிர்வருத்திச்
      செயலை மலர்நன் னலங்கவற்றிச் செம்பஞ் சினையும் விளரியற்றி
யந்தார் புனையு முழுவலன்பர்க் கழியா வின்ப மளித்துமண
      வம்மி யிடத்தும் பயின்றதனா லடியேன் மனத்திற் குடியிருந்த
பைந்தாள் பெயர்த்து மேகலையும் பாத சாலங் களுமொலிப்பப்
      பவள வாய்ப்புன் னகையரும்பப் பயின்மா லையின்முன் றில்கடோறு
மந்தா நிலஞ்சேர் தவத்துறையில் வாழ்வே வருக வருகவே
      வான்றோய் குடுமி வரைமுளைத்த மருந்தே வருக வருகவே.(7)

ஆக்கன் முதலா வைந்தொழிலு மவிரு மதியஞ் சடைமுடித்த
      வமலப் பெருமாற் குடனிருந்தன் பாக முடித்து வரும்பாவாய்
தாக்கு மலமூன் றறச்சவட்டித் தாவா விருவல் வினைமுருக்கித்
      தகுமொன் றடைய வெளியேற்குந் தண்ணங் கருணை புரிதாயே
மேக்கு நிவந்த செழும்பொழிலின் விடபத் தலரு நறுமலர்கள்
      விரைத்த சுவைத்தே னசும்பூறி விசும்பி னெவர்க்கு மிசும்புபட
வாக்கும் வளஞ்சேர் தவத்துறையில் வாழ்வே வருக வருகவே
      வான்றோய் குடுமி வரைமுளைத்த மருந்தே வருக வருகவே.(8)

அருவ முருவ மருவுருவ மமையு மொருநான் கொருநான்கொன்
      றாக வொன்பான் றிருமேனி யடிக ணிலைக்குத் தகவுயிர்கள்
பொருமும் மலப்பா தகக்குழிசிப் புலைப்புன் றொடக்கைப் பெறலருவான்
      பொருளா கியசத் திநிபாதம் பொருந்தியகன்று சிவாநந்தத்
தொருவா துறையச் சத்திமுத லொளிரும் வாணி யீறாக
      வோரேழ் பேத மாய்நிற்கு முமையே யமையா வளமிக்க
மருவார் சோலைத் தவத்துறையில் வாழ்வே வருக வருகவே
      வான்றோய் குடுமி வரைமுளைத்த மருந்தே வருக வருகவே.(9)

அரும்பே புரையு மிளமுலைப்பெண் ணரசே வருக வன்பருளத்
      தமுதே வருக வெவ்வுயிர்க்கு மனையே வருக வினியசுவைக்
கரும்பே வருக பெருங்கருணைக் கடலே வருக பரஞானக்
      கனியே வருக வோங்கொளியாங் கடவுட் குறையு ளேவருக
விரும்பே தைமையென் னுயிர்த்துணையா மின்பப் பெருக்கே வருகமுரு
      கேந்துங் குழற்பூங் கொடிவருக யாருந் துதிக்குஞ் சைவநெறி
வரும்பேர் மருவுந் தவத்துறையில் வாழ்வே வருக வருகவே
      வான்றோய் குடுமி வரைமுளைத்த மருந்தே வருக வருகவே.(10)

6. வாரானைப் பருவம் முற்றிற்று.

7. அம்புலிப்பருவம்.

மங்கலப் பேரருட் சுகுணவத் திரியென்னு மாமுனிவ ரன்றனக்கு -
      மகவாத லான்மலைவின் மெய்ப்பொரு டலைக்கொண்ட மன்னுமா தீர்த்தமாகிப்,
பொங்குசிவ கங்கையிற் பைங்கதிரின் மழவுருப் பொலியவுற் றுறைதலால்வெம் -
      புரமுனி யிருந்தவர் வலஞ்சூழ்த லால்விண்டு பொன்னெய்த லுறவருளலால்,
வெங்கணுறு கோழிக் கொடித்தமர விற்கொள்கர வேட்கினிமை யேபுரிதலான் -
      மின்னுடுக் கணவிடை பொருந்தலா னின்செய்கை மேவுதன் செய்கையென்றே,
யங்கலுழு மேனிப் பிராட்டிநிற் கூவினா ளம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(1)

பலவுயிர்ப் பயிர்தழைத் திடவரவ மணியம் பரத்திடைத் தோன்றி வந்தாய் -
      பரசமய விருளறப் புரிவெங் குருப்புலவர் பாலமிர்து கொளவளித்தாய்,
குலவுமுட் பாதக மலங்கவற் றிச்சுகங் குவலயம் பெறவுதவுவாய் -
      குளிருந் தசக்கங்கை மானப் பரந்தெழு கொழுங்கரங் கொண்டுபொலிவாய்,
நலமருவு மிறையுருப் பாதிகொண் டன்புற நயந்துநின் றாயாதலா -
      னண்ணுமெம் பெருமாட்டி தன்னையொவ் வாதிராய் நாடிவிளை யாடிடநினக்,
கலகில்புவ னத்துமிவள் போலுமோர் துணையில்லை யம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(2)

 ஏற்றநின் வாயினில வமுதஞ் சகோரமெனு மிருகாற்பு ளுண்டுமகிழு -
      மிவள்வாயி னிலவமுத நரமடங் கலைவென்ற வெண்காற்பு ளுண்டுமகிழும்,
போற்றநீ மாலவ னெனச்சொல்லு மொருமுகப் புலவனைப் பெற்றெடுத்தாய்,
      புலவர்க்கு மேலவ னெனச்சொல்லு மறுமுகப் புலவனைப் பெற்றாளிவ,
டேற்றமீன் மாதரிரு பானெழுவ ருளைநீ சிறக்குமிவ ளோங்குகல்வி -
      செல்வமீன் மாதர்முத லளவிலா மாதர்பணி செய்யவுள் ளாளாதலா,
லாற்றவு நினக்கதிக மென்றவரு மறிவர்கா ணம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(3)

வண்டமர் நறுந்துளப மாலைப் பிரான்றுயிலு மறிதிரைக் கடலுதித்து -
      மற்றவ ணிருக்கையமை யாதுவெறு வெளியோடி வந்துகா ரிருள்விளைத்து,
மண்டமரர் பிழிதரச் சுதையிழந் துடறேய்ந்து மாய்ந்தலையு மொருநினக்கம் -
      மாயனா லறியப் படாதபே ரானந்த மாக்கட லிடைப்பிறந்து,
கொண்டவ ணிருக்கையடி யார்க்குமும் மலவிருள் குமைத்தமர ரேத்தநாளுங் -
      குணவமுத மோங்கநித் தியமாகி நிற்குமிக் கொடியதிக மெனல்லியப்போ,
வண்டபகி ரண்டமு மனைத்துமிவள் பெருமைகா ணம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(4)

வஞ்சக மனக்கொடிய தக்கன்செய் வேள்வியிடை மாறிலவ மானமுற்று -
      மன்னிய வருட்குரவ னுக்குரிய கற்பின்மட மங்கைமென் றோள்புணர்ந்து,
நஞ்சுமி ழெயிற்றரவு விக்கிட விழுங்கிச்சி னாழிகை குதட்டியுமிழ -
      நபவழி யலைந்துமிவை முதன்மற்று நிற்குள்ள நன்றில வெலாமறிந்து,
மஞ்சனைய மேனிநெடு மான்முதற் பலகோடி வானவர்கள் சூழ்நிற்பவு -
      மலர்கடைக் கண்ணின்மேற் சாத்திப் பிராட்டிதிரு வாய்மலர்ந் ததுகருணைகா,
ணஞ்சிலம் படியென் றலைக்கண்ணும் வைப்பவளொ டம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(5)

மக்கட் புரோகிதன் மனைக்கற் பழித்துமழ வன்பெற்ற வெண்குட்டநோய் -
      மாற்றவுல கெங்குந் திரிந்தித் தலத்துவர மாற்றிச் சிறப்புமுதலிச்
செக்கர்ச் சடாமகுடர் தாண்மலர்க் கன்புந் திருந்தக் கொடுத்ததீர்த்தந் -
      தெய்வப் புரோகிதன் மனைக்கற் பழித்தலிற் சேர்ந்துவெண் குட்டநோயே,
மிக்குற் றெழுந்ததென வுலகுரைத் திடவுடல் விளர்த்துக் குறைந்தலையுநின் -
      வினையொடு களங்கமு மிமைப்பொழுதின் மாற்றியுயர் மேன்மையு மளித்தம்மைதன்,
னக்கக் கடைக்குமொ ரிலக்காக்கு மாதலா லம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(6)

 நினையாமன் முன்னிவளை யவமதித் தவனுமவ னேருமவி யுண்ணமொய்த்த -
      நெடுமான் முதற்பல்வா னவருமவ ருடனின்ற நீயுநனி பட்டபாட்டைத்,
தினையார் நொடிப்பொழுது நினைகின்றி லாயினுஞ் செங்கதிர்ச் செல்வனொடுவெண் -
      செறிகதிரி னீயுமொளி வட்கியுட் கிடவிவ டிருக்கைசெய் ததுவுமுணரா,
யுனையாவு மாமிவ ளழைத்திட விழைத்ததவ மொன்றல்ல வெனவு முணரா -
      யுனைக்கலை மதிக்கடவு ளென்றழைக் குநருநல் லுணர்வுடைய ரேபிரானுக்,
கனையாகி மகளாகி மனையாகி நின்றவளொ டம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(7)

 இமையாத பவளச் சரோருகக் கண்ணனு மிருநிதிக் குரியகோவு
      மிருடியர்க ளெழுவரும் வயிரவியு நன்புக ழிலக்குமியு மின்னுமளவில்
கமையார் தவத்தினரு மாகமப் படிபூசை கடவுளை யியற்றியுள்ளங்
      கருதரும் பேறெண்ணி யாங்குறப் பெற்றவிக் கரிசருந் தெய்வத்தல
மெமையா டரும்பஞ்ச புண்ணியத் தலமென வியம்புநான் மறையாதலா
      லிங்குவந் துன்களங் கங்கழிந் தின்பினின் றிடுதலே நன்றுரைக்க
வமையாத திருவருட் சூற்கொண்ட வம்பிகையொ டம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(8)

 பொற்புற விளங்கும் பனிக்கலைக ளொவ்வொன்று புதையிருள் சவட்டுங்கதிர்ப் -
      புத்தே ளிடத்துநா டொறுமடைய மெலிகுவாய் பொன்னஞ் சிலம்புசூழ்ந்து,
பற்பக றிரிந்துமோ ரதகங் கிடைத்துடற் பரவிய முயற்களங்கம் -
      பாற்றிலாய் துருவன்விடு சூத்திரப் பிணியுண்டு படருண்டு படருமதியே,
மற்புய விருந்தேவர் சூழுமிவ டிருமுன்பு வந்திறைஞ் சிடுவையேனின் -
      மலமாயை கன்மங் குமைத்துச் சிவானந்த வாரியிற் படியவிடுவா,
ளற்புதனை யம்பலத் தாட்டும் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(9)

வாவா வெனச்சொலி யழைப்பவும் பாணித்து வருதல்செய் யாதுநின்றாய் -
      மாற்றவ ளொடுங்கலவி யிறைவனார் முடிவாழும் வாழ்வினை மதித்துக்கொலோ,
மூவாத வவர்முடி யராக்களிலொ ராவுண்ண முன்னுவா ள·தன்றியு -
      முளைக்குமூ டலினினது குடர்குழம் பிடவும் முடிக்கணடி யாலெற்றுவாள்,
பூவாரு மங்கைப் படைத்தொகையி லொன்றினைப் பொள்ளெனப் பார்வைசெயினீ -
      போனவிட மெங்குந் தொடர்ந்திடுங் கருதினிப் பூவைசற் றேமுனிந்தா,
லாவா நினைப்பரிவி னாதரிப் பாரில்லை யம்புலீ யாடவாவே -
      யமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.(10)

7. அம்புலிப்பருவம் முற்றிற்று.

8. அம்மானைப்பருவம்.

 இலகுநிற வம்போ ருகச்சேக்கை யம்மைமுன் னென்னுரு வெடுத்தமர்ந்த -
      வினியகோ லங்கண்டு வாழ்ந்தன மெனாத்தேவ ரேத்தெடுப் பக்கரத்து,
நலமருவு படையா வெனைக்கொண்ட நன்மையா னானுயர்வு பெற்றேனெனா -
      நகைச்சங்க மீமிசை யெழீயெழீஇத் துள்ளிய நயம்பொருவ வோகைகொண்டு,
மலர்புனை கருங்குழற் சேடியர்க ளாடவெள் வளைகலித் தாடமென்மை -
      வண்கையி னெடுத்திடை யெடுத்தெடுத் துயரவரி மதர்விழிப் பார்வைசெல்ல,
வலர்நிலவு பொழியுமணி முத்திட் டிழைத்ததிரு வம்மானை யாடியருளே -
      யருந்தவ ருளம்புகு பெருந்திரு மடந்தையினி தம்மானை யாடியருளே.(1)

கம்பமத வானையுரி போர்த்ததிரு வாளருயிர் கட்குரிய போகமருள்வான் -
      கருதிய நினைப்புணர் தருங்காலை யவர்முகக் கண்ணா யிருந்துநோக்கி,
வம்பவிழு முவளகத் துளநாணு மாறுபுரி வகையறிந் திருகதிரையு -
      மலர்க்கரங் களிலெடுத் தும்பர்மோ திடமாறி மாறிமா றாதெறிதல்போற்,
செம்பதுமை முதலோர் கருங்குழலின் மேற்றம்ம செங்கைகள் குவித்துநிற்பச் -
      செறிகுழலின் மேனின்ன கைமலர்கள் மலரவெண் செழுநித் திலத்தினாலு,
மம்பவள நற்றிரளி னாலுஞ்செய் தனவெடுத் தம்மானை யாடியருளே -
      யருந்தவ ருளம்புகு பெருந்திரு மடந்தையினி தம்மானை யாடியருளே.(2)

 கருணைபொழி திருமுகக் கொப்பெனத் தோன்றுபல் கலைமதித் திரளையுங்கொங் -
      கைக்கொப் பெனத்தோன்று முட்டாட் குரூஉச்செங் கவின்கமல முகைகளையுமா,
மருவுமரி மதர்விழிக் கொப்பெனத் தோன்றுகரு வண்டர்களை யுங்கைபற்றி -
      வானகத் துறவெறிந் திட்டுப் பிடித்துமறு வலுமெறிந் திடல்கடுப்ப,
விருவில் வயிரத்தா லிழைத்தனவு மண்ணுறு மெழிற்பதும ராகத்தினா -
      லிழைத்தனவு மிந்திரப் பெயர்கொணீ லத்தா லிழைத்தனவு மான பலவு,
மருள்பொழி யறங்குடிகொ ளங்கையி னெடுத்தெடுத் தம்மானை யாடியருளே -
      யருந்தவ ருளம்புகு பெருந்திரு மடந்தையினி தம்மானை யாடியருளே.(3)

 சத்துவ குணந்திரண் டெனநித்தி லத்தாற் சமைத்தவைகள் பல்லவுஞ்செந் -
      தடக்கைக் கொளும்பொழுது சேயொளி விராயிரா சதகுணம தாகியும்பூங்,
கொத்துமலி மென்குழற் காரொளி விராவிமேற் கொள்பொழுது தாமதமெனுங்,
      குணமதா கியுமுயிர்கள் கோதிலா வொளியினைக் கூடியொளியே யாகியு,
மொத்துமரு விருளோடு கூடியிரு ளாகியு மும்பரை யடைந்துமீண்டு -
      முழல்கின்ற தன்மையைக் காட்டிடச் சூட்டரவை யொக்குநுண் ணிடையினையெடுத்,
தத்துறு சடைப்பழமை யறிவார் களிப்படைய வம்மானை யாடியருளே -
      யருந்தவ ருளம்புகு பெருந்திரு மடந்தையினி தம்மானை யாடியருளே.(4)

ஓதிபடர் சைவலம் மிருசெவிகள் வள்ளைகண் ணுற்பலம் பொற்பிதழ்கிடை -
      யொளிருநகை முத்தங் கபோலநீர் நிலையமுத மூறுவாய் செய்யகுமுதஞ்,
சோதிவளர் கண்டஞ் சலஞ்சலந் திதலைத் துணைக்கொங்கை பங்கயமுகிழ் -
      துவளுமிடை வல்லியழ கியமடிப் பலையுந்தி சுழியா யிருத்தலாலிக்,
கோதில்வா வியின்முளரி மலரென வனங்கரங் குடிகொளப் புக்கன்மையைக் -
      குறித்துமே லெழுவது கடுப்பநித் திலமே குயிற்றியன பலவும்மெடுத்,
தாதிநா யகரிட மமர்ந்தநா யகிமகிழ்வி னம்மானை யாடியருளே -
      யருந்தவ ருளம்புகு பெருந்திரு மடந்தையினி தம்மானை யாடியருளே.(5)

வேறு.

பூத்த செழும்பூங் கற்பக மேவும் பொற்பமர் பைங்கிளிகள்
      புண்ணிய மலருஞ் செங்கைகள் யாரும் புகல்கற் பகமெனவு
மேத்த வமர்ந்த பசுங்கிளி தம்மின மெனவு மதித்தடைய
      வெம்மையுறு தவமிக் கிளியொன் றாற்றிய தேது நுமக்கென்னா
மாத்தட வங்கைக ளவையத் தருவடை வண்ணம் விதிர்த்தலென
      மண்ணிய மரகத மாமணி கொண்டு வகுத்தன பலவுமெடுத்
தாத்தி முடிப்பெரு மானிடம் வாழ்பவ ளாடுக வம்மனையே
      யன்னப் பழனத் தென்னள கைப்பரை யாடுக வம்மனையே.(6)

 குரைகடல் சூழு நிலத்துயிர் யாவுங் குறைவற் றுவகைபெறக்
      கோதறு நாலெட் டாய வறங்கள் குலாவ வளர்த்தமையா
னிரைவளை புனைதரு செங்கை களின்புகழ் நேரெழு மாறெனவு
      நெடிய திறற்பிர தாபமு மொக்க நிமிர்ந்தெழு மாறெனவுந்
திரையெறி முத்த மிழைத்தன வுங்கதிர் செறிநால் வகைமருவுஞ்
      செம்மா ணிக்க மிழைத்தன வும்பல சேண்வழி நோக்கியெழ
வரைமணி மேகலை யசைதர வம்மனை யாடுக வம்மனையே
      யன்னப் பழனத் தென்னள கைப்பரை யாடுக வம்மனையே.(7)

தேமரு வியசெந் தாமரை மருவுஞ் செல்வத் திருமகளுஞ்
      சீதப் புண்டரி கத்தினி துறையுந் தெய்வக் கலைமகளுங்
காமர் வலத்து மிடத்தினும் வரநீ கசியன் புடையடியார்
      கண்குளிர் காட்சி பெறத்தோன் றிடுதல் கடுப்பக் குருவிந்த
மாமணி யால்வயி ரத்தா லாக்கிய வையிரு பாலுமெழ
      மரகத மாமணி கொண்டு சமைத்தது மற்றத னடுவெழவே
யாமரு வுங்கொடி யைய ரிடக்கொடி யாடுக வம்மனையே
      யன்னப் பழனத் தென்னள கைப்பரை யாடுக வம்மனையே.(8)

வேறு.

 ஏடு மலிதார்க் குழன்மடவா ரெண்ணி லவர்கள் குடைந்தாட
      வெழிலோ திமங்கள் சேடியரே யென்ன வுடனா டிடுந்துறைக்க
ணீடு கொழுஞ்செந் தழனாப்ப ணீங்கா தமர்ந்தோ ரைந்தடக்கி
      நிறைமா தவஞ்செய் பெரியவரை நிகர்ப்ப நறுந்தே னுவட்டெடுக்குங்
காடு மலியு மெல்லிதழ்ச்செங் கமல மலர்க டொறும்பெரிய
      கமடம் படுத்தோ ரைந்தடக்கிக் கண்டுங் குதல்கண் டியாவருங்கொண்
டாடு மருதத் தவத்துறைப்பெண் ணரசா டுகபொன் னம்மனையே
      யன்ன முகைக்கு நன்னயவின் னமுதா டுகபொன் னம்மனையே.(9)

 நளிபாய் புனல்வெண் மணகீற நாணற மழங்கு முளைக்கலப்பை
      நளின நாளச் சிற்றேர்க்கா னண்ணு நுகமே ழியுமியைத்தே
யொளிபாய் நீல வுற்பலத்தண் டொருகைத் தார்க்கோ லாகவெடுத்
      துற்ற வலவப் பகடுகட்டி யுழுது கமடப் பரம்படித்துத்
தெளிபாய் தரள வெண்சாலி செறிய வித்தி நறுங்கமலச்
      செந்தேன் பாய்ச்சி யுழவுதொழி றிருந்தக் களமர் சிறார்பயிலு
மளிபாய் மருதத் தவத்துறைப்பெண் ணரசா டுகபொன் னம்மனையே
      யன்ன முகைக்கு நன்னயவின் னமுதா டுகபொன் னம்மனையே.(10)

8. அம்மானைப்பருவம் முற்றிற்று.

9. நீராடற்பருவம்.

பொன்னிமய மால்வரை முளைத்துமுழு வெள்ளிப் பொருப்பிற் செழுங்கற்பகப் -
      பூந்தருவி னொருபாற் படர்ந்தளவில் புண்ணியம் பூத்தருள் பழுத்தகொடியே,
முன்னியொரு வெள்ளைக் களிற்றொடு கருங்களிறு முட்டமதி வளர்மானொடு -
      முல்லையங் கொல்லைமான் மோதவுடு மீன்களொடு மொய்த்தபல மீன்கலப்ப,
மன்னிய வரம்பைக ளரம்பைக ளொடுங்கூட வானத் தெடுத்தெறிந்து -
      வாரிதி யகட்டைக் கிழித்துச் சுழித்துநெடு வையமகிழ் செய்ய வொழுகு,
மின்னிய பெரும்புகழ்க் கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே -
      மெய்த்தவத் துறைமேவு முத்தமக் கௌமாரி வெள்ளநீ ராடியருளே.(1)

பள்ளமடை வாய்திறந் தனையகட் புனலிற் படிந்துநெக் குருகுமுழுவற் -
      பழவடிய ருள்ளத் தடத்தமுத மழைபொழி பசுத்தகரு ணைக்கொண்டலே,
தள்ளரிய விருகுலைச் சார்பின்மே திகள்வெரீஇத் தாள்பெயர்த் தோட்டெடுப்பத் -
      தாழைமுதிர் முப்புடைக் கனியுடைய மீமுட் டசும்புறழ் வருக்கைகிழிய,
வுள்ளகமு கின்கழுத் தொடியநறு மாங்கனிக ளுதிரமுழு நீலம்வயிர -
      மொள்ளொளிச் செம்மணி திரைக்கையின் முகந்தெறிந் தொலிகட லகங்கலக்கும்,
விள்ளவரி தாம்புகழ்க் கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே -
      மெய்த்தவத் துறைமேவு முத்தமக் கௌமாரி வெள்ளநீ ராடியருளே.(2)

 கைவளை கலிப்பக் கருங்கண் சிவப்பவங் கனிவாய் விளர்ப்பநீலக் -
      கார்க்குழ லவிழ்ந்துசை வலமெனத் திகழக் கவின்பழுத் தொளிரன்னமே,
மைவளர் நெடுங்கணர மங்கையர் குடைந்தாடும் வானகக் கங்கையாற்றை -
      மடங்குந் திரைக்கொழுந் தாற்றடவி யவ்விண் மடங்கலை மடங்கல்பாய,
மொய்வலியினொடுமீ தெடுத்தெறிந் தார்த்தவிர் முழுப்பதும ராகம்வயிர -
      முத்தமிரு கோட்டினு மிகக்கொழித் தொலிகடன் முகங்கிழித் துப்பாய்தரு,
மெய்வளர் பெரும்புகழ்க் கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே -
      மெய்த்தவத் துறைமேவு முத்தமக் கௌமாரி வெள்ளநீ ராடியருளே.(3)

 நயந்தரும் பழவடியர் திருவுளத் தினும்வஞ்ச நாயினே னுள்ளத்தினு -
      நால்வேத முடியினும் பொலிபத யுகச்செழு நறும்பங் கயப்பெ ணமுதே,
வயந்தரு புரந்தர னடாவுமெழி லூர்தியான் மாண்புதற் குறலறிந்து -
      வரைவளமு நெடிபடு செழும்புறவின் வளமுநனி வாரிக் கொணர்ந்தன்னவன்,
பயந்தரு மிருந்திணை நிரப்பியவ் வூர்தி பாற்றுள தெரிந்துதுடைய -
      பாவைக்கு மன்னை மளித்துக் களித்து நற்பண் புடைச் சான்றோர் பலர்
வியந்தருமை யென்னநிகழ் கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே -
      மெய்த்தவத் துறைமேவு முத்தமக் கௌமாரி வெள்ளநீ ராடியருளே.(4)

சுரும்புளர் கடிக்கோதை மலர்மகளிர் முதலளவில் சுரமகளிர் சூழ்ந்துநிற்பத் -
      தூவியன் னக்குழா நடுவண்மயி லென்னவத் தோகையர்க ணடுவணின்று,
வரும்பெருமை தற்குதவு மங்குன்மக வானூரும் வாகனம தாகையாலவ் -
      வானவன் பகைவரையம் முகிலையும் பகையா மதிக்குமென் றுள்ளகநினைந்,
திரும்பய னளிக்குமவ னுக்குரிய திணையிலவ் வெழிலிதங் கிடமமைத்தாங் -
      கீர்ஞ்சோலை முதலொரறி வுயிர்கடங் கிடநாளுமின்புற வளர்த்து நல்லோர்,
விரும்புபுகழ் நனிபெறுங் கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே -
      மெய்த்தவத் துறைமேவு முத்தமக் கௌமாரி வெள்ளநீ ராடியருளே.(5)

வேறு.

 அண்டர் பெருமாற் குரியதிணை யகத்துப் பொலியு முரிமையினை
      யறிந்தன் னவனூர் முகிலினங்க ளடைய வணைந்து கண்படுத்தல்
கண்ட மயில்க டணவாது கலாபம் விரித்து நனிநடித்துக்
      களிக்கும் பொழிலிற் செழுமலர்த்தேன் கண்ணாற் றமைவென் றுறுவெற்றி
கொண்ட மடமங் கையரையவர் குழற்பூ வுறுங்காற் றுரப்பாரைக்
      குனிவிற் குமர னெய்யில்விரற் கோதை வழுக்கா வணஞ்செயல்போல்
வண்டு படிந்துண் டவத்துறைவாழ் மாதர்ப் பிடிநீ ராடுகவே
      மறையா யிரமுந் தொடர்வரும்பெண் வடகா விரிநீ ராடுகவே.(6)

 மூரிப் பகட்டு நெடுவாளை முழங்கிப் பாய வெரீஇயெழுந்து
      முடத்தாட் கைதைப் பெருவேலி முட்டாட் கமலக் காடுழக்கி
வேரிக் குவளை மலர்மேய்ந்து வெண்ணெற் பசுஞ்சூற் கதிர்குதட்டி
      வேழக் கரும்பு பலகறித்து மென்று கவைத்தாட் கருமேதி
யூரிற் பயிலும் புனிற்றிளங்கன் றுள்ளிப் பொழிபா லுவட்டெடுப்ப
      வுழவர் கழனி புகப்பாய்த்தி யுறுநெல் விளைவித் தறுத்தடித்து
வாரிக் குவிக்குந் தவத்துறைவாழ் மாதர்ப் பிடிநீ ராடுகவே
      மறையா யிரமுந் தொடர்வரும்பெண் வடகா விரிநீ ராடுகவே.(7)

மீனத் தடங்க ணரமாதர் விளையாட் டயர்கற் பகநீழன்
      மேவுஞ் சுரபி மடித்தலத்து வெடிகொண் டெழுந்த வரான்முட்டத்
தானற் புனிற்றுக் கன்றெனவான் றவழுங் குடுமி நந்திவரை
      தனின்முன் சுரந்து பொழிந்ததெனத் தாரை கொள்ளப் பொழிதீம்பால்
பானற் றடங்க ணனிமூழ்கப் படர்கோட் டெருமை நீந்திவரப்
      பலநெற் கதிர்ப்போர் மிசைமிதப்பப் படுகர் முழுதும் பாற்கடலை
மானப் பெருகுந் தவத்துறைவாழ் மாதர்ப் பிடிநீ ராடுகவே
      மறையா யிரமுந் தொடர்வரும்பெண் வடகா விரிநீ ராடுகவே.(8)

 கனகக் கலமும் வெள்ளியபொற் கலமு மலது சக்கிரிமட்
      கலந்தோ யாப்ப லீர்ந்துறையுங் காம ரனங்கள் பலபயிலும்
வனசத் தடமுந் தெய்வதக்கா மானப் பொலியு மலர்ப்பொழிலு
      மஞ்சு தவழிஞ் சியும்புறத்து வளைவா ரிதியை நிகர்கிடங்கு
மினனைத் தடவு மாளிகையு மேலக் குழலா ராடரங்கு
      மிருந்தே ரோடு மணிமறுகு மெழில்செய் திடலாற் றுறந்தோரு
மனநெக் குருகுந் தவத்துறைவாழ் மாதர்ப் பிடிநீ ராடுகவே
      மறையா யிரமுந் தொடர்வரும்பெண் வடகா விரிநீ ராடுகவே.(9)

வேதா கமங்கண் முழுதுணர்ந்து மேன்மைத் திருநீற் றரியநெறி
      விளக்குஞ் சைவ முனிவரர்கள் விருப்பி னிருப்பு மருப்பயிலுந்
தாதார் கமலத தாரணியுஞ் சதுமா முகத்தோ னிகர்மறையோர்
      தங்க ளிருப்புந் திருநெடுமா றனைநே ரரசர் குடியிருப்பும்
வாதா சனப்பூ ணவன்றோழன் மானும் வணிக ரிருப்புநயம்
      வாய்ந்த தரும நிகர்வேளாண் மாக்க ளிருப்புங் கொண்டெவர்க்கும்
மாதா வனைய தவத்துறைவாழ் மாதர்ப் பிடிநீ ராடுகவே
      மறையா யிரமுந் தொடர்வரும்பெண் வடகா விரிநீ ராடுகவே.(10)

9. நீராடற்பருவம் முற்றிற்று.

10. பொன்னூசற்பருவம்.

 மின்பூத்த வெள்ளிப் பிறங்கலிரு கூறாய் வியப்பத் திரண்ட தென்ன -
      வெள்ளொளி விரிக்கும்வயி ரத்தூண நிறுவிப்பொன் வெற்பைத் திரட்டிநீட்டிக்,
கொன்பூத்த வத்தூண மிசையிட்ட தென்னக் கொழும்பவள விட்டமிட்டுக் -
      குரூஉப்பொலியு மவ்வரைத் தவழ்முழு மதிக்கதிர்க் கூரமுத மொழுகிற்றெனத்,
தென்பூத்த நித்திலத் தாழ்வடம் பூட்டியொண் செம்மணிப் பலகைமாட்டித் -
      திருந்துமப் பலகைமேற் செய்யதா மரைவளர் சிறப்பையொத் திடவிருந்து,
பொன்பூத்த திருமுகங் கருணைபொழி தரவம்மை பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(1)

 செழுமலர் ததைந்தபொழி லிடைநினது நகைகண்ட தேந்தள வரும்புவிள்ளல் -
      செவ்வாய்வெ ணகையெழிலி னூற்றிலொரு கூறியாஞ் சேரவருள் புரியவேண்டு,
முழுமதி முகத்திருப் பெண்ணமுத மென்னநின் முன்னம்வாய் விண்டுகேட்கு -
      முறைமையினை யேய்ப்பவெள் ளொளிவீசு தெண்ணிலா மொய்த்தமுழு முத்தமுழுதுந்,
தழுவுபல கையின்மிசைப் பொற்றூவி வெள்ளனத் தாவிலூர் தியின்மேல்கொளாத் -
      தண்ணளி சுரந்தடியர் கண்ணுறக் காட்சிநீ தருவதை நிகர்ப்பவேறிப்,
புழுகொழுகு குழன்மாலை நறவொழுக வழகொழுகு பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(2)

 அன்னஞ் சிலம்புகுரன் மானச் சிலம்புமணி யவிருஞ் சிலம்படிகளா -
      லஞ்சிலம் பீன்றபிடி செயலையை யுதைந்துதைந் தாடுதோ றுந்தளிர்த்து,
வன்னஞ் சிறந்திட மலர்ந்துகண் ணீரொழுக மன்னிநின் றிடுதனினது -
      மாண்படியர் செயலையே காட்டலன் றியுநறிய மலரால் வளைக்கையுற்றோ,
முன்னஞ் செழுங்கலை மறைக்குமெட் டாததாண் முளரியின் றுற்றோமெனா -
      முன்னியெமை யொப்புடையர் யாரெனக் களிதூங்கி முகமலர் வதுந்தெரிப்பப்,
பொன்னம் பலத்தெங்கண் முன்னவனை யாட்டுபெண் பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(3)

 அரிமதர் மழைக்கண்க ளென்னுமட வார்கட் கமைத்தபொன் னூசலென்ன -
      வழகொழுகு வள்ளைக் குழைச்செவித் துணைநன் கசைந்தாட வளவறுகலைக்,
குரியமட மாதர்பல ரிருபாலு நின்றுதிரு வூசலிசை பாடியாட -
      வுத்தரிய மாடவிரு கொங்கைமுத் தாரமொழு கொள்ளொளி பரப்பியாட,
வரியளி கருங்குழற் பிணையன்மது வுண்டாட வண்டாட வங்கையேந்து,
      மதுரவின் சொற்கிள்ளை யாடமணி மேகலை வயங்கிடை துவண்டாடவம்,
புரிசடைப் பரமருங் கொண்டாட வம்மைநீ பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(4)

 தகரமொழு குங்கருங் கூந்தற் பிராட்டிநின் றன்பணிகள் சில்லிடத்துத் -
      தயங்குசெம் மணிகளால் வெயிலாகி யுங்குளிர் தரச்சில் லிடத்துமுத்தாற்,
சிகரவட வரைமிசைத் தவழுநில வாகியுஞ் சிலவிடத் திந்த்ரநீலத் -
      திரளினா லிருளாகி யும்பொலிதல் பரமனார் சிலவுயிர்க் கினனாகியும்,
பகர்சில வுயிர்க்குமுன் மதியாகி யுஞ்சில படிற்றுமூழ் கியவுயிர்க்குப் -
      பாயுமிரு ளாகியும் பொலிவது தெரிப்பவெம் பந்தத் தொடக்கினெனையும்,
புகர்மல மறுத்தடிமை யாக்குமரு ளம்பிகை பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(5)

 சீராழி யங்கையிற் பச்சிளங் கிளியொன்று சேர்ந்துறைய விருள்குமைக்குஞ் -
      செம்மணிக ளான்முழுப் பணிகளும் பூண்டவிர் திருக்கோல நினதுகாட்சி,
யோராழி யெழுபரிப் போகுயர் முடித்தேரி லுதயமெழு கதிருநாண -
      வொளிர்பவள மேனிப் பெருந்தகை யுடன்கலந் துறையுநின் றன்மைகாட்டப்,
பேராழி சூழுலகி லளவறு முயிர்ப்பயிர் பெருங்களி மகிழ்ச்சிதூங்கப் -
      பெரிதுவட் டெழநாளும் விளராது கருணைமழை பெய்துவாழ் விக்குமுகிலே,
போராழி சங்கங்கை யேந்தும் பிராட்டிநீ பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(6)

 தேமலி யலங்கற் கருங்குழ லுடைப்பெருந் திருமங்கை பொங்குமெழிலின் -
      றிருமேனி வீசுபச் சொளிமூழ்கி மரகதச் சேற்றின்மூழ் கியனபோன்று,
மாமலி தரும்பலண் டங்களும வண்டங்கண் மருவுமிரு திணையுயிர்களும் -
      வயங்கிடுங் காட்சிமறை முதனூல்கள் யாவுநின் மயமெனுந் தன்மைகாட்டப்,
பாமலி கலைக்குரிய மங்கைமா ரிசையொடும் பல்லாண் டெடுப்பமுனிவர் -
      பன்னியர்கள் சோபனம் பாடவர மங்கையர்கள் பங்கயக் கைகுவிப்பப்,
பூமலி செழுங்தவி சிருக்குமம் பெண்ணரசு பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(7)

 தார்செய்த மார்பகச் சுரரூ ருடைத்துத் தனித்துண்டு மகிழ்சிறக்குந் -
      தறுகண் புகுந்துறை யுலஞ்செய்த தோளுடைத் தாரகப் பெயரினவுணன்,
கார்செய்த வுடலம் பிளந்தொழுகு குருதியங் கடல்வாய் மடுத்து மாந்திக் -
      கருந்தடி குதட்டியும் பசியடங் காதுகடை வாயைநாக் கொண்டு நக்குங்,
கூர்செய்த கொலைபழுத் தொழுகுவெள் வேற்கரக் குழவியைத் தழுவிவாசங் -
      கூட்டிநீ ராட்டிமுலை யூட்டியிரு ளோட்டியொரு கோட்டில்வரு செங்கதிரொடும்,
போர்செய்த செம்மணித் தொட்டில்வைத் தாட்டுபெண் பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(8)

 மலர்நறு விரைக்கருங் குழலுமொண் ணுதலுமருண் மடைதிறந் தொழுகுகண்ணும் -
      வயங்குநா சியுமுத்த மூரலுஞ்செம்பவள வாயுங் குழைச்செவிகளு,
நலமருவு முகமுமங் கலமிடறு முத்தரிய நற்றோளும் வளைகலிக்கு -
      நளினச் செழுங்கையுந் தரளவடம் வில்லிடு நகிற்றுணையு நவமணியிழைத்,
திலகுமே கலையொடுஞ் செம்பட் டணிந்ததிரு விடையும்ப லுயிர்களையும்வைத் -
      தீன்றசிற் றுதரமு மறைமுடிக் கணியாகி யெம்முளத் தும்புகுந்த,
பொலநிறத் தளிரடியு மழகுபொலி தரவம்மை பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(9)

 மறைமுதற் பலகலைகள் வாழவந் தணர்வாழ மாமகத் தழலும்வாழ -
      மன்னுமா னிரைவாழ மழைபொழியு முகில்வாழ மற்றுமெவ் வுயிரும்வாழ,
நிறைதரு பெரும்புகழ் விளங்குசை வமும்வாழ நீடுவை திகழும்வாழ -
      நெக்குருகி நின்னன்பர் துதிசெய்த சொற்பொரு ணிலாவுபா மாலைவாழ,
விறையவ ரழைத்துவாழ் வித்தவர் திருப்புகழு மெஞ்ஞான்று நன்குவாழ -
      யார்க்குமினி தாம்பெருந் திருவென்னு நின்பெய ரிலங்கிநனி வாழவுலகிற்,
பொறையரு டவந்தானம் வாழவெம் பெருமாட்டி பொன்னூச லாடியருளே -
      பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே.(10)

10. பொன்னூசற்பருவம் முற்றிற்று.

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ் முற்றிற்று.

Related Content

திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்

திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்

திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்