logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிடைமருதூர் மருதவாணர் தோத்திரப்பதிகம்

(மஹாவித்வான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை)

திருவார் நினது திருநீறே தீர்க்கு மார்க்கு முடற்பிணியுங்
கருவார் பிறந்தை யடற்பிணியு மெனல்கண் டடைந்தேன் கருதுருவோ
டருவார் கருணைப் பெருங்கடலே யடியார்க் கெய்ப்பில் வைப்பேநன்
மருவார் மலர்சா ரிடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 1

ஏழைத் திருமாலயனாதி யிமையோர் பலரு மிறவாது
பாழைக் கருதா லாலநுகர் பரமா பரம கருணையனே
யூழைப் புறங்காண் வலியர்நினை யுணருந் திறலி னாரன்றே
வாழைப் படப்பை யிடைமருதா வாணா வடியேற் கிரங்காயே. 2

ஊன மளக்குந் திறந்தொழும்பி னொருப்பட் டார்பாற் சிறிதுமிலாய்
நான மளக்கும் பெருநலமா முலையோர் பாக நயந்தவனே
யேன மளக்கும் திறமரிதா யிசைப்பார்க் கெளிதாந் திருவடியாய்
வான மளக்கு மிடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 3

நீறு புனைவே னைந்தெழுத்து நெஞ்சங் கணிப்பே னின்னாமம்
பேறு பிறிதில் லெனப்புகல்வேன் பிணிக்காட் பட்டு வருந்துவனோ
சீறு பகைவர் புரம்வேவச் சிரித்தாய் தரித்தாய் சூலமழு
மாறு வளமி லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 4

கூற்றஞ் சிதைய விறைநீண்ட கோக னகத்தா ளாயமர
ரேற்றஞ் சிதைய வெழுந்தவிடத் தேற்றஞ் சிதைய வெடுத்தயின்றாய்
தோற்றஞ் சிதையப் பல்லுயிருந் தொழுது போற்றித் துதிக்குமுயர்
மாற்றஞ் சிதையா விடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 5

ஆயா நினையே சரணடைந்தார்க் கன்றி யவ்வா றடையார்க்கு
மேயா தோநின் னருள்பெருவா னிழிந்த களர்க்கும் பொழிதருமே
தாயா யளிசெய் தலைவாமுத் தலைவேல் பரித்தா யெஞ்ஞான்று
மாயா வளங்கூ ரிடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 6

உணங்கன் மீனுக் குயிருதவி யுயர்நின் னுலகம் புகப்புரிந்தாய்
சுணங்க னரியா தியர்க்கரிய தூமுத் தியிற்சார் தரல்குறித்தா
யணங்கல் லவர்க்கு முறல்கருதா வண்ணா வமுதே யருட்கடலே
வணங்கல் புரிவே னிடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 7

அந்தோ நினக்கு வரகுணனி லன்பு புரிவா ரொருவரிலர்
முந்தோ தனையற் கருள்வதலான் முயலும் பிறருக் கருளாயோ
நந்தோ வருநீ ரெறும்பளையு நண்ணு நறுவா சனைப்பொதியில்
வந்தோ வரிய விடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 8

அண்டர் பரவு நிராமயனீ யதனாற் றரணி யெனுனாமங்
கொண்டதுனுக்குத் தகுமெனலுட் குறித்தே நின்னைச் சரணடைந்தேன்
றொண்டர் துயரஞ் சகியாத தூயா நேயா தாயானாய்
வண்டர் மலர்க்கா விடைமருத வாணா வடியேற் கிரங்காயே.  9

ஆழி புடைசூ ழுலகினினை யன்றித் தெய்வம் பிறிதுளதோ
பாழி யமைநின் னருட்ககலாப் படரு முளதோ பனிவரைவாய்
வீழி புரையும் பெருனலமா முலையாண் மேய விடப்பாகா
வாழி வளஞ்சா லிடைமருத வாணா வடியேற் கிரங்காயே. 10

Related Content

உறையூர் திருமூக்கீச்சரம் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

திருக்குடந்தை ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்

திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்

திருப்பெருமணநல்லூர்த் திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்