காப்பு.
அகத்திய விநாயகர் துதி.
நந்தாதி யாற்றும் பணியணி ஆகிய நன்மையெலாம்
செந்தாதி யாணர் மலர்போற் சிதையும்; செழும்புவிக்கே
நந்தாதி யாண்டும் நலம்பெற மாயூர நாதரடிக்(கு)
அந்தாதி யாத்தற் ககத்தியக் கைம்மா அருள் தருமே.
ஆசிரிய வணக்கம்.
இருந்தமிழ் தன்னால் இருந்தே இமையோர்
விருந்தமிழ் தென்றாலும் வேண்டாப்-பெருந்தமிழ்ப்பேர்
ஆசிரியர் சாமிநாதைய ரடித்துணைச்சீர்
ஆசிரியர் சேம அரண்.
அவையடக்கம்.
புல்விலக் கில்லை அருச்சனைக்; கன்பர்முன் போந்தெறிந்த
கல்விக் கில்லை கடுக்கை முடிக்குக்; களத்தினுக்கும்
அல்விலக் கில்லை; நம் மாயூர நாதனுக் காதலிற்புன்
சொல்விலக் கில்லையாம் சூட்டுமந்தாதித்தொடையலினே.
நூல்.
1. திருவும் அறிவும் திறனும் பொறையும் திருந்தியால்
உருவும் ஒளியும் உறும் இவண்; பின்னர் உயர்விசும்பு
மருவும் அமரர் நல் வாழ்வுறும்; முத்தியும் வாய்த்
திடும் விண், பொருவும் மாயூரப் புனிதன் பதமலர் போற்றுநர்க்கே.
2. போற்றி வணங்குக மாயூரநாதன் புனைமலர்த்தாள்
சாற்றி மகிழ்க அச்சம்பு திருப்புகழ்; சார்ந்தரண்முன்
ஏற்றி வளர்க்க பலபல நெய் விளக்; கேற்ற அன்பே
ஆற்றி நினைக்கநெஞ் சண்ணலைச் சந்தியும் அந்தியுமே.
3. அந்திப் பிறையணி மாயூரநாதன் அருட் பெருக்கம்
சிந்திப் பரவுவ சீர்திகழ் பொன்னிச் செழும்புனல் போல்;
வந்திப் பவர்காள்! மகிழ்ந்தடி தஞ்சமா வந்தடைவீர்;
முந்திப் பவவினை போக்கும் மொய்ம் பாக்கும் முழுநலமே.
4. மேவலர் முப்புரம் வேவ நிலவிய வெண்ணகை யான்;
ஏவலர் மாரனைக் காய்ந்தான்; தென்பாண் டிக் கிறையவனா,
நாவலர் சூழ்தர நற்றமிழ்ச் சங்கம் நடவினன் மால்,
பூவலர் காணா உருவொளிர் மாயூரப் புண்ணியனே.
5. புண்ணிடைக் கோலிற் புகுதுயர் வாட்டம் புரிந்திடினும்,
பண்ணிடைக் கூத்திற் பலப்பல இன்பமே பாவிடினும்,
மண்ணிடைச் சிந்தை மருளா திருக்க வழியிதுகாண் ,
எண்ணிடைத் தொண்டர் இறைஞ்சு மாயூரனை ஏத்துகவே. !
6. உகவே டனைத்தீத் தொழிக்கினும் அம்ம! உல குவப்பக்,
குகவே டனைத்தந் தருளி அவுணர் குலமழித்தான்;
தகவே டனைத்தும் தகைபெற - முன்னர்த் தனஞ்சயன் முன்,
மிகவே டெனச் சென் றருளுமா யூரனை மேவுவமே.
7. வம்மின் புலவீர்! மனமுற மாயூர வள்ளலுக்கே
தம்மின் புகழ்க்கவி; சாலப் புனைந்து தருகுவிரேல்
அம்மின் புரை அபயாம்பிகை பங்கன் அருட்பொலிவால்
நும்மின்பு கைக்கனியாமிம்மை அம்மை நுகர்வுறவே.
8. உறத்தக்க தென்றுமே மாயூரநாதற் குருகுமுளம்;
தெறத்தக்க தென்றுமே ஐம்பொறித் தீயவர்செய் வினைகள்;
அறத்தக்க தென்றுமே மாதர்மண் பொன்மயல்; அஃதறவே,
பெறத்தக்க தென்று மே பேதைபங் காளன் தன் பேரருளே.
9. அருளாம் அருந்ததோர் கடலே! கடல் ஆர்த்தெ ழுந்த,
கருளாம் மருந்தம் களித்துண்டுகண் டம் கறுத்தவ! நின்,
தெருளாம் மருந்துளே சேர்த்துப் பவவினை தேய்த்தருள்;
செம், பொருளே ! அருந்தன மாயமா யூரத் தெம் புண்ணியனே!
10. இயலோடு நல்லிசை நாடக முத்தமிழ்க் கென்று மிறை,
செயலோடு காப்பழிப் பாம்முத்தொழிலும் திருத்து சிவம்;
இயலோடு சென்ற தெதிர்வு முக் காலத் திலங்கு முதல்,
கயலோடுங் காவிரி மாயூர! முக்கணங் கண்ணுதலே.
11. நுதனேர் கிலாத பிறையை யரன்முடி நோக்கி உமை,
கதநேர்ந் ’திதுவென்ன காட்சி கொலோ' எனக் கால் பணிவோர்க்(கு) ,
இதநேர் 'வபயாம் பிகை! உன் பெயருணர்த் திற்’ றென இவ் ,
வித நேர் உரைவிளை யாடுமெம் மாயூர வித்தகனே.
12. வித்தக மாய விழுப்பொருளே! பார் விளங்குமுயிர்
வித்தக மாய முதலே! வித் தில்லதோர் மென் முளையே!,
நத்தக மாதவ ஞானிகட் கென்றும் நலந்திகழும்
புத்தக மாம்புகழ் மாயூரநாத! உன் பொன்னடியே.
13. பொன்னிப் புனலாற் புறமும் அகமும் பொருந்துபவர்
மன்னிப் புனித மலிந்தொளிர் மாயூர வள்ளலடி
துன்னிப் புனைக நும் சென்னியில் தொல்கடல் சூழ் புவியீர்!,
முன்னிப் பணிபலர்க் கீந்தது சித்தியும் முத்தியுமே.
14. முத்தம் புரையிள மூரல் மடவார் மொழிக்கிளகிச்
சித்தம் புரைபடச் செவ்வினை யின்றிச் சிறுவினையே
நித்தம் புரிவது நீத்துமா யூர நிமலனடிப்
புத்தம் புதுமணப் போதுமுப் போதிலும் போற்றுவமே.
15. போற்றிய மார்க்கண்ட மாதவப் பிள்ளைக்குப் போந்தருள்நீ,
ஆற்றிய மார்க்கம் அறிவேன்; அவன் யா னலனெனினும்,
தேற்றிய மார்க்கச் சிறப்பெனக் கீந்ததிற் சீர்பெறலாம்,
சாற்றிய மார்க்கத் தயங்குமா யூரத் தனிமுதலே !
16. தனித்து விளங்கலெவ் வாறு மெய் ஆவியைச் சாரினல்லால்;
குனித்து வணங்கும் சிலைமலை மாயூரக் கோவினருள்,
இனித்து வயங்கு பால் தேனின் மிகுசுவைத்; திஃதவனே,
நுனித்து வழங்கினல் லாதுயிர்க் கேது நுவல் கதியே.
17. கதிரவை மூன்றமை கண்ணுடை யாய்! மலர்க் கண்ணிடந்தே,
எதிரவைத் துன்னடி யேத்துமாற் காழி பண்டீந்தனை; சீர்,
முதிரவை; வேத முழங் குமா யூர முதல்வ! புன் தோல்,
உதிரவைப் பாமிவ் வுடற்பற் றொழிய உவந்தருளே.
18. வந்தர ரோடு முனிவரர் மொய்த்து வணங்குத லால்,
அந்தரம் வந்தும் அணுகவொ ணாநெருக் கால் மிளிரும்,
சுந்தர மாயூரத் தோன்ற லடித்துணை தோன்று மென்றும்,
'நந்தரம் யா? எலாம் நம்பன் தரம்' என நம்பிடினே.
19. பிடியாம் நடையு மலராங் கரமும் பிரான் கரத்துத்
துடியாம் இடையும் சுவண முகையாம் துணை நகிலும்,
கடியா மதியாம் முகமும் கயல்களாம் கண்ணுமிளிர்,
படியா வருமிடப் பாகமா யூரன் பதம்சதமே.
20. சதமுறு மாண்டிற் றகவில்பன் மக்களோ? சார் பதினா(று),
இதமுறு மாண்டிறு மைந்தனோ? கேளென், றிறைவினவ,
நிதமுறு மாதவன் பின்னதே கேட்க நிலவுமகன்,
சதமுறு மாயுள்பத் தாறுறல் மாயூரன் தண்ணளியே.
21. அளியேற்கு நீயலா தார்துணை? ஐய! நிற் காட் செயவோ,
எளியேற்கு மேலெத் துணையரோ உள்ளார்! எனக்கதுவென்?,
துளியேற்கு நெற் பயிர் வானிற் பிறிது துணை கொளுமோ?,
அளி யேற்கு நாண் மலர் வான் பொழில் மாயூரத் தாண்டவனே!
22. தாண்டவ! தில்லைத் தமனிய மன்றுளத் தரணியெலாம்,
ஆண்டவ! அங்க மனைத்தும் தலையென் பரவவணி,
பூண்டவ! காண்டகு மாயூர நாத! புகழ் பரந்து, நீண்டவ!
நீண்டவன் நேரயன் நேடொணா நீர்மையெனே?
23. நீரார் சடைமுடி நின்மலன் பொன்வணன் நீடு கொன்றைத்,
தாரார் தடம்புயச் சங்கரன் தேவர் தழைக்கவிடக்,
காரார் அமுதுசெய் கருணா கரன் திருக் காவிரிசூழ்,
சீரார் நலமிகு மாயூர நாதனென் சிந்தையனே.
24. தையலோர் கூறுடை மெய்யவ! வெய்ய தழ லுருவ!,
ஐய! லோபக் குணம் அங்கணர்க் கிங்கழ கன்று; அருள் நீ,
செய்யலோ அன்றித் திறம் பலோ அச்செயல் சேர்ந்ததுயான்,
உய்யலோ அன்றி உணங்கலோ மாயூரத் துத்தமனே.
25. உத்தம நற்றவ ருள்ளத் தொளியா ஒளிருபவன்;
மத்த மனத்தவர் காணா முதல்வன்; மயிலுருவிற்,
சித்த மகிழ்ந்து மை செய்பூசை ஏற்பவன்; செய்த்தலை வெண்,
நத்த மலியெழில் மாயூர நாதன்சீர் நாடுளமே.
26. உளவாய ஏவ லிடம் பொருளா மிவ் உரிமை யெலாம்,
களவாய தீநெறி காட்டுமெக் காலும்; கதிதரற்குத் ,
தளவாய புன்னகை தவழ் அஞ்சல் நாயகி சார்ந்துயிர் கட்(கு),
அளவாய நல்லருள் ஆற்றுமா யூரன் அடி துணையே.
27. துணையே யென இனிச் சொல்லுவ தாரைச்? சொலற் கமைந்த,
இணையே யிலாதாய்! இருள் சேர் வினைக்கடல் ஏறுதற்குப்,
புணையே யனையவ! பொன்வளர் மார்பனைப் பொற்சிலைக்குக்,
கணையே யெனக் கொண்ட மாயூர நாத! நீ கைவிடினே.
28. கைக்கின்ற வேம்பணிந் தாய்தீந் தமிழ்ப்பாண்டிக் காவலனா;,
மைக்கின்ற கையனை ஆங்கதுபோல வழிக்கொளுவாய்,
தைக்கின்ற பூங்கணை தாங் காது தையலர் தங்கரத்தே,
வைக்கின்ற கிள்ளை யைத் தூதாக்கு மாயூர வாழ்முதலே!
29. முதலிடை யீறிலாப் பூரண! ஆரணம் முன்னறி யாய்!,
நுதலிடை வில்மின் னெனும் அஞ்சலையுற நோக்கி மகிழ்,
நுதலிடைக் கண்ணுடை மாயூர நாத! நுழைந்தொளிந்து,
புதலிடைப் புட்சிமிழ்க் குங்கடை யேனைப் புரந்தருளே.
30. புரந்தர னான்முகன் மால்முதற் தேவர்தம் போக மெலாம்,
நிரந்தர மன்றுன அருள்தரு வீடே நிலைப்பொருளாம்,
தரந்தர மென்றுணர்ந் துன்னிரு தாமரைத் தாள்பரவ,
வரந்தர வேண்டுவன் மாயூரநாத! வலம் குறிததே.
31. வலஞ்சுழி நல்லூர் வலிவலம் கோவல் மருகல் திரு
வலஞ்சுழி யல்மறைக் காடு கொடுமுடி வாழ்வு கப்பாய்!,
வலஞ்சுழி மாலயனிந் திரன்காணா மலரடியாய்!,
வலஞ்சுழி காவிரி மாயூர! வந்தருள் மாநிலத்தே .
32. தேனகு கொன்றை செறிசடைக் காட்டுச் சினந்துவிழும்,
வானகு கங்கை மறைத்தனை : தாட்கண் வணங்கிய வெண்,
கூனகு திங்களவ் வேணிமுன் கூட்டிக் குலவவைத்தாய்;
மீனகு காவிரி மாயூர நாத! விழுமிதிதே.
33. விழுவார் எழுவார் விரிகரம் கூப்புவார் மெய் யன்பினால்,
தொழுவார் துதிப்பார் துதிப்பார் பெரும்புகழ் சொல்லிநை வார் ,
அழுவார் சிரிப்பார்எம் மாயூர நாதன் அடித் தொழும்பர்;
வழுவார் மனமே! அவரடித் தொண்டே மருவுகவே.
34. உகரக் குறுக்கம் உயிர்முன் வரின் மெய்விட் டோடுதல் போல்,
மகரக் கருவிழி யார்பொன் புவிமயல் மாய்வுறுமால்,
சிகரக் கயிலைச் சிலம்பன் மாயூரத் திருவமிகு,
நகரக் கனக்கன் நம் நம்பன் அருள்முனே நண்ணிடினே.
35. இடியாற் ற ளரும் அரவெனத் தீவினை யீண் டுடற்றும்,
படியாற் றமியனேன் பாடு பட் டெய்த்தேன்; பரிந்தடியார்,
முடியாற் றரை மிசை முன்பணிந் தேத்து முழக்கொடுவெண்
பொடியாற் றிகழ்வுறு மாயூர நாத! புரந்தருளே.
36. தருவைந்து காமனும் மாமனும் பூமனும் சாற் றரியாய்!,
உருவைந்து பூதமும் பேதமுந் தானாம் ஒருமுதல்வா!,
மருவைந்து மாமுகா! மாயூர நாதா! வழுத்திடற்குன்,
திருவைந்து தெய்வ எழுத்து மென் சிந்தையும் சேர்த்தருளே.
37. உள்ளுவார் உள்ளத்து ளூறித்தித் திக்கும் உயர் மதுவே!,
நள்ளுவார் அந்தமில் வீடுறுக் குந்தனி நாயகமே!,
எள்ளுவார் உண்டெனை ஏழைமை கண்டு; நீ இன்றெவரே,
கொள்ளுவார் மாயூரத் தேழைபங் காள! குவலயத்தே.
38. அத்தி யுணும்விள வின்கனி யென்ன அரு வினையின்,
சத்தி முழுதும் தனி முதல் சங்கரன் தண்ணருளாம்,
சித்தி விழுங்கும் திறமுணர்ந் தேம்; இனிச் சென்னியிற் பூந்,
தொத்தி லகும் பொழில் மாயூரன் றாண்மலர் சூடுவமே.
39. உவமன்னுறாத உயர்பொரு ளென்பர்; உளத்தரிய
தவமன் னுவோர்சார் தனிப்பொரு ளென்பர்; மெய்ச் சத்தியொடு,
சிவமன்னு செம்பொரு ளென்பர்; அருட்சீர் திளைப்பவர்தாம்,
நவமன்னு பொற்புடைப் பொன்னிசூழ் மாயூர நாதனையே.
40. தனையனை வேண்டுவர் பற்பலர் நாளும் ; தகு நலம் சார்,
மனையனை ஆதிய வாழ்வினை வேண்டுவர்; வண்புகழும்,
பனையனை செல்வமும் வேண்டுவர்; அந்தோ! பவப்பிணியாம்,
வினை யனைத் தும்கெட மாயூர வள்ளலை வேண்டலரே.
41 அலருண் டருச்சிக்க ; நீருண் டரர்க்காட்ட; அன்பு செய்தார்,
பலருண் டடி பற்ற; நாடிப் பயிலவும் பக்குவமார்,
நலருண்டு; நா ளுமுண் டின்னவை நாடி நயப்பவர்க்கு,
மலருண்டு வண்டு கொண் டாடுமா யூரன் மனத்தருளே.
42 அருவா யினை யென ஆரண மோர்பால் அறையு மன்றி,
உருவா யினவெலா முன்னுரு வென்றும் உரைசெயும்; இவ்,
இருவா தமுமிசை மாயூர நாத! எளியனினிக்,
கருவா தனையே கதுவா வணம்நீ கடைக்கணியே.
43. கடைபோகு மட்டுங் கடையனைக் காக்கக் கருணைவைப்பாய்,
இடை போக வீட்டிடேல்; காவிரியாற்றி னிடைத் தருக்கும்,
விடைபோகவிட்ட விமலா! வளை நெல் விளைபுலத்து,
மடைபோக விட்ட நீர் தேங்கமழ் மாயூரம் வாழ்பரனே!
44. பராபர மான பழம்பொரு ளே!புதுப் பான்மை யனே!
தராதலத் தேரும் மறைமாவு மாலாம் சரமுமலைப்,
புராதன வில்லும் இருக்கச் சிரித்துப் புரமெரித்தாய் !
நிராதர வாயெனை நீவிடேல் மாயூர நித்தியனே!
45. தியக்கந் தர எனக் கைவர் அகப்பகை; செல்வ மண்பெண்,
முயக்கந் தரவரு மூவர் புறப்பகை ; மூண்டு நின்றார்;
உயக்கண் டருளற்கு மாயூர நாத! உனதருளின்,
இயக்கந் துணையலால் ஏதுந் துணையிலேன் ஏழையனே.
46 அநேகம் பிழைகளே யான் செய் கினும் அப
யாம்பிகை சேர், மனோகர! நீபொறுத் தாள்க;மா யூர வரத! இப்பார்,
சினேகனாம் சுந்தரற் காற்றும் பொறையும் சிறுமதிசேர் ,
தனேசனை நேசனாக் கொண்டருள் சீருந் தெரிந்ததன்றே.
47. தன்றேகம் பாதி யுமையாட் களித்தருள் தண் கருணைக்,
குன்றே! குணக்கடலே! எந்தநாளிலும் குன்றகிலா,
நன்றே ! வளம்செறி மாயூர நம்பா! நணுகுமெனை,
இன்றே யடிமைகொண் டீடேற்ற வேண்டும் இறையவனே!
48. இறையவன் காண்; அண்டமெங்கு மிறைவெற் றிடமுமின்றி,
நிறையவன்காண்; நீற் றொளியவன் காண்; சீர் நிலவுமறைத்,
துறையவன் காண் ; உல குய்யநஞ் சுண்டு துலங்கு கண்டக்,
கறையவன் காண்கதி; காட்டுமா யூரக் கடவுளனே.
49. கடவூர் துருத்தி வழுவூர்பூங் காமனைக் காய் குறுக்கை;
திடவூர் இவற்றி னடுவே திகழ்ந்து திருமகளின்,
நடவூர் என மிளிர் மாயூர நாதன் நகுபுரம் பாழ்,
படவூர் புவித்தேர்ப் பரமன் பதச்சீர் பரவுவமே.
50. பரவத் தகுவது யாரும் பகராப் பனுவல்மறை;
கரவத்தகுவது காமாதிகுற்றம்; களைந்து மெய்யே
விரவத் தகுவது வெண்ணீறு கண்மணி; வேண்டி நெஞ்சிற் ,
புரவத் தகுவது மாயூர நாதன் தன் பொன்னடியே.
51. அடியே நெடுமால் புவிகீண்டுங் காணான்; அயன் பறந்தும்,
முடியே உயர்விண் முடியிலும் காணான்; முழுவுருவம்.
படியே வருதொண்டர் பார்க்க நின் றாய்; நின் பரிவிருந்த,
படியே யிது ; படி யில்லாத மாயூரப் பண்ணவனே.
52. பண்ணும் பரதமு மார்தரும் உம்பர் பதிவிழை யேன் ,
எண்ணும் எழுத்தும் எனும் துறை ஆய்வும் இனியமையும்;
கண்ணும் கருத்துமுன் சேவடி. காணக் கருதுகண்டாய்;
விண்ணும் புவியும் விளங்கத் தென் மாயூர் மேயவனே!
53. மேயவன் வேடென முன்னாள் விசயன் வெகுண் டெதிர்ப்ப,
ஆயவன் போர்புரிந் தன்னார்க்கு வில்லோ டருளுதவும்,
மாயவன்; மாயவன் வேத னறியா மலர்முடித்தாள் (த்),
தூயவன்; மாயூரன் பாதார விந்தம் தொழுதுய்வமே..
54. துய்ப்பிவை கைப்பன் என்னும் ; பனிநீர் துதைந்த சந்தம்,
அப்பிடின் ஆ! ஆ! அனற் குழம் பென்னும்; அணிமதியம்,
வெப்பினில் நண்பக லோனெனும் இப்படி வேறுபடச்,
செப்பிடும் என் மகள் மாயூரன் தந்தமால் சேர்ந்தபினே.
55. சேருந் துதிநா வாரமுன் நால்வர் செயுமிசைத்தார்
ஆருந் தனிமுதற்றே வாகிவந்த அரும்பொருளைப்
பாரும் விசும்பும் காற்று நீர் தீயுமப் பாலுமெனத்
தேரும் பிரானெனும் மாயூர நாதனைச் சிந்திப்பமே.
56. சிந்திப் புறத்தெம தீமை யொழிப்பன; சீர்பரவி
வந்திப் பவர்க்குநல் வாழ்வை யளிப்பன், வந்து சந்தி
சந்திப்பி னொப்பிலாச் சாயுச்சியமும் தருவன; நாள்
அந்திப் புதுமலர் மாயூர நாதன் அடியிணையே.
57. அடிப்படை யாஅகி லாண்டங்கள் ஆட்டுவ; ஆட்டியன்பர்
படிப்படியா உயர் பக்குவ மூட்டுவ; பார்த்துறுதி
கடைப்பிடிப் பார்க்குக் கதிநலம் காட்டுவ; கள்ளமனத்
தடிப்புடை யார்தமை வாட்டு மாயூரன் தாள்மரையே,
58. தாமரை மாதரை யாவுருக் காட்டு; தண்கடுக்கைத்
தாமரை அன்பர்முன் நாட்டுவ; அன்னார் தளிர்க்கு மனத்
தாமரை யுட்கலைத் தேன் ஈட்டுவ; கரம் சாருமழுத்
தாமரை கூட்டுவ; மாயூர நாதன் பொற்றாளிணையே.
59. இணையும் எடுப்பு மிலா இன்ப மூட்டுவ; ஈண்டியெதிர்த்(து)
அணையும் பகைவர் அடுதிறல் வீட்டுவ; ஆர்த்துநமைப்
பிணையும் பிணிகடித் தோட்டுவ; சென்மப் பெருங்கடற்குப்
புணையும் பின் நீட்டுவ மாயூர வள்ளலார் பொன்னடியே.
60. பொன்னாளு மார்புசார் மால்கண் பொருந்துவ; போற்றடியார்
எந்நாளு மானாத இன்பம் அருந்துவ; எவ்விடத்தும்
கொன்னாளு நாத்திக வெம்மை வருந்துவ; கொம்பிடப்பால்
தன்னாளு மாயூர நாதன் மலர்த்தாள் தருநிழலே.
61. தருவன மைந்திடைத் தேவர் கோனாக்கும்; சரணடையின்
வருவன தீவினை போக்கும்; வினையின் வரம்பிகந்த
பெருவன மூக்கும்; பரம்பொருள் சேர்க்கும் பிறக்குதுறை
உருவன மார்க்கும் மாயூர வள்ளல் உயர்பதமே.
62 பதமாம் பொருளென நான்மறை பேசும் பராபர’ பல்
விதமா வழிபட வெவ்வே றுருவம் விளங்க எங்கும்
இதமா உறைந்தருள் வள்ளால்! எள்ளாதின் றெனக்கு வந்து
சதமாம் அருட்கதி மாயூர நாத! தருகுவையே.
63. குவையாம் பொருள்நனி கூட்டும் வழி இக் குவலயத்தே
எவையாம் எனக்கவன் றேங்கி நைந்தேன்; என தேழைமை என் ?
அவையாம் சுமையென் றறிவித் தெனக்குநின் அந்தமில் சீர்ச்
சுவையாம் அடிக்கன்பு தந்தருள் மாயூரத் தொல்பொருளே.
64. பொருநீர்மை வேற்கணார் பூண்முலைப் போகம் புணர்மதியீர்!
வருநீர்மை வாழ்வு மதியீர்; புனித மருவுகங்கைத்
திருநீர் துலாமதி யிற்பிற தூநீர் திகழுபொன்னி
தருநீர் படிந்துளம் சார்வீர் மாயூரன்பூந் தாள்தனையே.
65. தனஞ்சயன் தன் னுடனாற்றிய மற்போர் தகவுகந்தே
கனஞ்செயும் பாசு பதமீந் தனைமுன் மார்க் கண்டனுக்குச்
சினஞ்செயும் கூற்றம் குமைத்தாய்! எம் வல்வினை தீர்த்தரு
மனஞ்செய வேண்டுவம் மாண்புறு மாயூர வானவனே!
66. அவனே இவனே அலனே உளனே என் றாரணங்கள்
அவமே உழன்றும் அறியா திளைக்கும் அரும்பொருளாம்
சிவமே! கருணையின் நஞ்சமுதாக்கும் செயலிலென்றன்
தவநேர் புரையுளம் எற்க மாயூர நாதா! இனிதே.
67. நாதாந்த மான நலமென்பர்; நாளுநன் னாட்டமுறு
வேதாந்த மேவு விளக்கென்பர்; சிந்தையுள் மேவிமிளிர்
போதாந்த மாகும் பொருளென்பர் அன்பர்; புனித!உனை
யாதாந் தகுதியின் ஏத்துவேன்? மாயூரத் தீச்சுரனே!
68. தீச்சுர வெஞ்சுறா இல்லாமை யாம்கராச் சேர்த்தலைப்ப
மூச்சுறு சூக்குமக் காற்றாடு வாழ்வாம் முதுகடலில்
ஏச்சுறு மாறுழ லாதின்ப நற்கரை யேறுதற்குக்
காச்சுரும் பார்வள மாயூர நாதன் கழல்துணையே.
69. கழலும் இருவினைக் கட்டுமுன் னோய்ந்து; கழலவினை
சுழலும் சுவர்க்க நரகா னுபவத் தொடக்கழியும்;
உழலும் பிறவி யொழிந்திடும்; பேரின்ப ஊற்றும் அருள்
நிழலும் நிலைக்கும்;நம் மாயூரன் பாதம் நினைப்பவர்க்கே.
70. பவர்க்கத்து ளீகாரம் பட்ட வீயென்னப் பவமுழன்றே
கவர்க்கத்து ரூகார வாழ்விற் கடையேன் களித்தலின்றித்
தவர்க்கத்து ளாகாரம் நின்னருள் நண்ணருந் தண்ணறஞ்சார்
கவர்க்கத்து ளாகாரம் வேரிசூழ் மாயூரக் கண்ணுதலே!
71 கண்ணுறு மூன்றாம் கனியே! கழுத்திற் கருமணியே!
பெண்ணுறு கூறாப் பிறங்கமுதே! யெனப் பேசிநின்றன்
விண்ணுறு சீர்த்தி விரித்த லலாதுவின் மேலுலகம்
நண்ணுறு மென்னினும் வேண்டேன் மாயூர நகரவனே!
72. நகர்வரு மாந்தர்தம் நாகரி கத்தர் நலமுயல்வும்
பகர்வரு சிற்றூர் பயிலுநர் வம்பும் அப் பாற்படுத்து
நிகர்வற நாடு நகரெங்கு முற்றஉன் நீள்கருணை
நுகர்வுற வைத்தெமை ஆண்டருள் மாயூர நுண்மையனே!
73. மைவைத்த கண்டனே! மான்மழுக் கையனே ! வாமமங்கை,
மெய்வைத்த மெய்யனே! விண்ணவர் துய்யனே! மிக்கருளால்,
பொய்வைத்த இவ் வாழ்வு போக்கியுன் பொற்றாள் புகலளிப்பாய்,
செய்வைத்த நீள்வள மாயூர நாத! எம் சிந்தையனே! !
74. சிந்திக்க நெஞ்சம் திருவருள்; வான்புகழ் செப்புக வாய்,
வந்திக்க அங்கம் நம் மாயூர வள்ளலை மன் பதையீர்!
நிந்திக்க லாம்வினைப் பந்திக் கலாம்;முந்தி நீண்ட இன்பம்,
சந்திக்க லாம்;பிந்தி முத்தியுந் துய்க்கலாம்; சத்தியமே.
75. சத்திக் கிடப்புறந் தந்தமாயூரத் தலைவன்; அடற்
சத்திக் கரத்துக் குமரவேள் தாதை ; பார் தந் தளிக்கும்,
சத்திக் கயன்மாலிராக்கும் முதல்வன் ; சதுர்மறையின்,
சத்திக் குறுஞ்சாறு ; தித்திக்கும் செம்பொருள் சார்உளமே!
76. உளமே புவிக்கு பொறையாக; அந்தோ! உயிர் சுமந்து,
களமே புரிந்து நா ளவமே கழித் தென்ன காட்சிகண்டோர்?,
உளமே ! இனியா கிலுமிவ் வுலகெலாம் உய்ய நஞ்சு,
களமேவு கண்டனை மாயூர நாதனைக் கண்டுய்வமே.
77. கண்ணகல் ஞாலத் தனியரசாட்சியும் காவினிழல்
விண்ணர சாளும் புரந்தரன் மாட்சியும் மெய்யி னுன் பால்,
திண்ணக அன்பினர் சீயென நீத்திகழ் செத்தையன்றோ?,
வண்ணகர் யாதும் இணையிலா மாயூரம் வாழ்பவனே!
78. பவநேர் பிணிக்கு மருந்தாம் ; மலைவிலாப் பண் புடையார்,
தவநேர் செயலுக்கருளாம்; கருளாம் சகமயற்கா,
தவனேர் ஒளியாம் ; அடியார்க் கொளியாது தாம்விடைமேல்,
புவனேச் சுரியொடு. தோன்றுமா யூரப் பொருவிலியே.
79. வில்லாகு மேரு மலை சீர் குலைய விடுகணையாம்
அல்லாகு மேனித் திருமாலுறங்க அவைகுறித்தோ
அல்லார் புரத்தின் அரணெள்ளி யோபண் டரும்பியதும்,
எல்லார் முகமலர் மாயூர நாத! இள்நகையே
80. இளை யானை ஆருரிற் றூதா இருகால் இளைத்தவனை
முளையானை முன்பறு பத்துமூ வர்முன் முளைத் தவனை,
வளை யானைத் தென்பன சைப்பூசைப் பெண்முன் வளைந்தவனை,
விளையானைத் தோலானை மாயூரத் தோற்றனை மேவுகவே.
81. உகந்துமுன் சம்பந்தப் பிள்ளைக்கு ஞான உணர் வளித்தாய்,
சுகந்தவிர் அப்பர்க்குச் சூலைதந் தாண்டனை; சுந்தரர்க்குச்,
சகந்தனி லோர்மன்றல் தாக்கி யிரண்டு பின் தானளித்தாய்,
திகந்தம் புனையு மாயூரா அழகிதுன் சீரருளே.
82. அருவமென் றோர்பால் அறையும் மறை; அவ் வருமறையே,
உருவமென் றோதும் பிறிதொரு பால்; அவ் உயர்மறைபின்,
உருவரு வென்றுமற் றோர் பால் உரைக்கும்; இவ் உண்மையுள் நின்
பெருவளந் தேருவ தென்னோ ? மாயூர! இப் பேதையனே.
83. பேதை மருள, மாயூரப் பெதும்பை பெயராமனம்,
போதை யுறமங்கை, நைந்து மடந்தை புழுங்க, வரை,
மாதை அரிவை வெகுளத், தெரிவை வசமழிய,
வாதை யுறப்பேரிளம்பெண் இறை யுலா வந்தனனே.
84. வந்தனை மார்தம் வயிற்றிற் பிறந்து வழிவழியே
நிந்தனை யாகு மண் பெண் பொன் எனுமயல் நீங்கியுய்யச்,
சிந் தனை ஓர்ந்து செய் நெஞ்சே! துலாமதி சேர்ந்தடியார்,
வந்தனை யாற்படி காவிரி மாயூர வள்ளலையே.
85. வள்ளி மணாளனு மாமுகச் செல்வனும் வந்து தழீஇக்
கொள்ளும் பிதா ; ஒரு மாதா பிதாவும் குறிக்கவொணாக்,
கள்ள முதல்வன்; பூங் காவிரி வண்கரைக் காவிரி நீர்,
வெள்ளந் தவழுமா யூரப் பிரான் எம் விழுத்துணையே.
86. விழுவள் எழுவள் வியர்ப்பள் மெலிவள் விதிர் விதிர்ப்பாள்,
அழுவள் அயர்ப்பாள் அழுங்குவள் நின்னெழி லார்வதனம்,
தொழுவள் இவ் வண்ண மென் பெண்ணமு துற்ற துயர் வணங்காண் ,
கொழுவன் கொம் புய்வணம் நீயே மாயூர! இக் கொடியினுக்கே.
87. கொடிய கிராதக் குலத்தவன் அன்பூன் கொடுத்தலும் அக்,
குடியிற் கனிவிழை மைந்தன் குகன் போற் குறித்தனை ; இப்
படியிலடியேன் படிறா யின அப் படிகுணித்துன்,
அடியின் நிழலே அருள்கமா யூரத் தருமுதலே!
88. அருந்தா அமுதே! அணியே! அளியே! அருட் கடலே! ,
விருந்தே! விளைவே! விழியே! விளக்கே! வினை தவிர்க்கும்,
மருந்தே! மணியே! என உருகும் மணி வாசகர்க்கும்,
குருந்தே யமர்ந்த குருமணி மாயூரக் கொற்றவனே.
89. கொற்ற மழுக்கொடு தாதைதாள் செற்றுக் கொடுமைபுரி,
நற்றவச் சேய்ஞலூர்ப் பிள்ளைக்கு நாயகம் நல்கினை யால்,
சொற்ற அவ் வாறெனை யாளுதல் குற்றமோ? சொற்றிகழ் நீ;
குற்றம் குணமெலா மல்லையோ? மாயூரக் கோமகனே!
90. மகவான் அயன் மால் வழுத்து முதலான்; மய லறுக்கும்,
பகவான்; பகுவாய்ப் புலியதளான்; செழும் பத்தருளம்,
புகுவான்;புகுந்து பேரின்பம் புணர்ப்பான் புகலெவர்க்கும்,
மிகுவான் புனற்கா விரிசூழு மாயூர வித்தகனே
91. அகப்பொருள் ஆகுவ தன்பே சிவமுமவ் அன்பும் ஒன்றே,
சகப்பொருள் தேடி யலைவீர்! இது நனி தேர்கவென்றே,
தகப்பொருள் நூ லெமக் கன்பு தலைப்பெய்து சாற்றினை நீ,
மிகப்பொருள் வேறிலா மாயூர நாத!நல் வித்தகனே!
92. வித்துக்கு வித்தாத் தொடர் ஆதிமூல விதைப் பொருளே!,
எத்திக்குத் தோன்றும் புதுமை யெலாம் சார்ந்தியக் குவிப்பாய்!,
மத்துக் குடையுந் தயிர்போற் கலையென் மதியுனடி,
வைத்துப் புரந் தருள் மாயூர நாத! மதிதரனே!
93. தரக்கொன்றை மாலை நம் மாயூர வள்ளல் பால் சார்ந்திரந்து,
தரக்கொண்டு வாரும் சகிகாள்! அவரது தந்திலரேல்,
உருக்கன்றிக் காமநோய்ப் பட்டுழன்றின்றே உயிரழியும்,
பரக்கின்ற பெண் பழி பூண்பீர் என நீர் பகர்மின்களே.
94. மின்னும் முகிலும் முளரியும் மீனும் விளங்கிழை யார்,
துன்னும் இடையைம் பால் முகம் கண் ணெனச் சொல்லி நயம்,
தன்னைப் புகழ்ந்ததமை யும் அமையும்; தயாபரனாம்,
உன்னைப் புகழ் மதியருள் மாயூர உண்மையனே.
95. மையாருங் கண் மலை மாதொரு பாதியை வந்தருனை,
மெய்யாரும் சோதியை அப்பர்க்குக் கைலை விளக்கமருள்,
ஐயாற்று நீதியை ஆன்றவர் பூதியை அன்பரிரு ,
கையாற் றொழுதுய்யு மாயூர ஆதியைக் கண்டுய்வமே.
96. கண்மேவு மூன்றுடைக் கன்னல்; இரண்டு கழல் பணிவார்க்(கு),
எண்மேவு தன்னுட னொன்றாம் பதமருள் இன்ப வைப்புப்;
பண்மேவு நான்மறை தேர்முடிவு ; ஐந்தாப் பகரெழுத்தின்,
கண்மேவு செம்பொருள் கண்டோம்மா யூரக் கடிநகர்க்கே,
97. நகைசார் புரமூன் றெரித்தாய்; நுதலின் நடுவிழி யால்,
மிகைசார் மதனனைக் காய்ந்தாய்; தென் கூடலில் மேவமணப் ,
பகைசார் மடம்சுட் டழித் தாய்; பரம ! எம் பாழ்வினையின்,
தொகைசார் கனல்மடுத் தாள்க மாயூரச் சுடர்க்கொழுந்தே!
98. கொழுந்தே னுயர்கொம்பி னின்றோர் முடவன் குறிப்பிலன்கை ,
விழுந்தாலென இவ் வறிவு முடம்படு வீணனுக்குச்,
செழுந்தா மரையனும் கட்டா மரையனும் தேவர்களும்,
தொழுந்தாளுடையமா யூரன் தரிசனம் துன்றியதே.
99. துன்னல னாகியுன் கைலை துளக்கும் துகளனுக்கும்,
இன்னருள் ஈந்தனை; ஏய்ந்த அன் புன் பால் இலேனெனினும்,
நின்னிரு தாட்குப் பிழை நினைந் தாற்றிலேன்; நீத! எங்கும்,
மன்னரு சீர்திகழ் மாயூர நாத கண் பார்த்தருளே.
100. சோர்வந்து மைக்குயில் வாயடைப் பப்பைத் தோகைமயில்,
ஆர்வந் தழைத்திடக் கார்வந் ததுகாண் ; அகநிறைந்த,
நாருந்த நம்மிடை நேர் வந்து மாயூர நாதன் மணித்,
தேருந்தி முந்துறும் தீருந் துயரம் செழுந்திருவே!
மாயூரநாதர் திருவடிகளே சரணம்.
மாயூரநாதரந்தாதி முற்றுப்பெற்றது.