logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிதம்பர வெண்பா

(குருநமசிவாயர்)

காப்பு 
மன்னும் சிதம்பரதே வாவென்று வெண்பாவிற் 
பன்னும் தமிழ்மாலை பாடவே - உன்னும் 
கருத்தக் கணமுதவக் கண்பார்த் தருள்வாய் 
நிருத்தக் கணபதியே நீ.

நூல் 
முத்திக்கு மூலம் மொழியில் உனையடைந்தோர் 
பத்தித் தவத்தோர் பரிவன்றோ - தித்திக்கும் 
பாகா மொழியமையாள் பாகா பணியணிந்த 
வாகா சிதம்பரதே வா. (1)

தூக்கிய பொற் றாளிற் சுவைகாட்டித் தொல்வினையை 
நீக்கியெனை யாள நினைகண்டாய்-- பாக்கியமும் 
மின்னார் சிவலோக வீடும் தரும்புலியூர் 
மன்னா சிதம்பரதே வா. (2)

அருவுருவ மாகியொளி யாகிநீ யார்க்கும் 
கருவுருவ மாகியகண் காணத் - திருவுருவ 
மாயம் பலத்தினட மாடுந் திறமிதென்ன 
மாயம் சிதம்பரதே வா. (3)

பீடேந்தி நின்னாடியைப் பேணுவார் உண்டுடுத்து 
நாடேந்தி வாழ்வதற்கு நாணாமல் – ஓடேந்தி 
நேயம் பெறத்துணிந்து நீசென் றிரப்பதென்ன 
மாயம் சிதம்பரதே வா. (4)

நாவிருக்கப் பாவிருக்க நல்லதிரு நீறிருக்கப் 
பூவிருக்க வெங்கும் புனலிருக்கச் - சேவிருக்க 
நீயம் பலத்திருக்க நெஞ்சொருமி யாததென்ன 
மாயம் சிதம்பரதே வா. (5)

தொளைத்தமணி முத்திலகு துய்யபணி பூட்டி
உளத்தினிமை யானவெல்லா மூட்டி வளர்த்தெடுத்த 
காயங் கிடக்கவுயிர் காணாமற் போனதென்ன 
மாயம் சிதம்பரதே வா. (6)

தழைத்திடுசீ ராளன் தனைக்கறிக ளாக்கி 
விழைத்தலினா லேபடைத்து மீள-அழைத்திடவே 
காயங் கொடுநடந்து கண்காண வந்ததென்ன 
மாயம் சிதம்பரதே வா. (7) 

மாறுபடு மாடகனை வல்லுகிரி னாற்கிழித்துக் 
கூறுபடக் கொன்றுகடுங் கோபமாய்-வீறுபடும் 
சீயம் தனையடக்கச் சிம்புள்வடி வானதென்ன 
மாயம் சிதம்பரதே வா. (8) 

பங்கயமின் சேரும் பகீரதனென் பான்புரியும் 
துங்கமிகு நற்றவத்தால் தோன்றவே - கங்கைநதி 
தோயும் சடைக்கே சுவறக் கரந்ததென்ன 
மாயம் சிதம்பரதே வா. (9)

தன்றகப்ப னென்றுமொரு தன்மையுமி லாமறையோன் 
என்றுசற்று நெஞ்சகத்தில் எண்ணாமல் - கொன்றவற்கு 
நீயங் கவற்குரிய நீடுதந்தை யானதென்ன 
மாயஞ் சிதம்பரதே வா. (10) 

சாதல் பிறவி தனிலிளைத்த நாயேற்குன் 
பாத மலர்வீடு பாலிப்பாய்---நாத 
முடிவே யழியா முழுமுதலே முத்தி 
வடிவே சிதம்பரதே வா. (11) 

எப்போது நாயடியேன் இந்தவுடல் போடுவேன் 
அப்போது முன்னின் றருளுவாய் -- முப்போதும் 
பொன்னாடர் வந்திறைஞ்சிப் போற்றும் கனகசபை 
மன்னா சிதம்பரதே வா. (12) 

மோகக் கடல்கடந்து முத்திக் கரைகாண்கைக் 
கேகப் புனைபெறுவ தெந்தநாள் - நாகப் 
பணியே அணியும் பரஞ்சுடரே கண்ணின் 
மணியே சிதம்பரதே வா. (13) 

தானவரும் மாலும் சதுமுகனும் மற்றுமுள்ள 
வானவரும் தேடி மயங்கவே - ஞானமுடன் 
நேயம் பெறுமடியார் நெஞ்சினுள்ளே நிற்பதென்ன 
மாயம் சிதம்பரதே வா. (14) 

குலங்கடந்து முன்னைக் குணங்கடந்து பொல்லாச் 
சலங்கடந்து தர்க்கங் கடந்து - மலங்கடந்து 
நின்றார் கருத்திலுறை நித்தனே நீள்கனக 
மன்றார் சிதம்பர தேவா. (15) 

அங்கப் பலுக்குவிலை அங்கனையார் அல்குல்மலப் 
பங்கத் தழுந்துவதோ பாவியேன் -- சங்கக் 
குழையாய் பழையாய் குளிர்கருணை வெள்ள 
மழையாய் சிதம்பர தேவா. (16) 

இன்றுன் பதங்ககண்டேன் ஈடேறி னேன்பிறந்தே 
பொன்றும் துயரனைத்தும் போக்கினேன்-என்றும் 
திரனே பரனே தெரிசனா முத்தி 
வரனே சிதம்பரதே வா. (17) 

வஞ்சத் தமியேனின் வாய்த்தமலர்ச் சேவடிக்கே 
நெஞ்சிற் கனிவாய் நினைந்திடேன் - பஞ்சாக் 
கரனே யரனே கருதரிய முத்தி 
வரனே சிதம்பரதே வா. (18) 

பச்சிலைக்கு நேரான பங்கயக்கண் மாலறியா 
நிச்சயத்தைப் பாலிக்கும் நேசமாம் - இச்சை 
தருவாய் உனைவணங்கச் சங்கரியோ டிங்கே
வருவாய் சிதம்பரதே வா. (19) 

வெந்நிட்டுத் தோற்றபடை வெல்லுமே யேதுமுனை 
முன்னிட்டுக் கொண்டான் முடியுமே --- நின்னிட்டம் 
அல்லா ரறிவதனுக் கப்புறத்தே நின்றுவிட 
வல்லாய் சிதம்பரதே வா. (20)

பேறிளமை இன்பம் பிணிமூப்புச் சாக்காடென் 
றாறினையும் மாற்றியெனை ஆளுவாய் -- ஈறு முதல் 
இல்லாப் பொருளினுமுண் டில்லையுமாய் நின்றுவிட
வல்லாய் சிதம்பரதே வா. (21) 

வன்பு செயுமறலி வந்தழைத்த போதமும் 
அன்பும் உயிர்த்துணையே அல்லாமல் -- இன்பம் 
தருமோக மாதும் தமனியமும் கூட 
வருமோ சிதம்பரதே வா. (22) 

ஆரணமும் போற்றி அளவிட் டறியாத 
பூரணமெய்ஞ் ஞானநெறி போதிப்பாய் --- நாரணனும்
காணா மலரடியைக் காட்டும் கனகசபை 
வாணா சிதம்பரதே வா. (23) 

பொய்யென்று சொல்லாமல் பொல்லாப் புலாலுடம்பை
மெய்யென்று பேரிட்டார் வீணிலே ---மையொன்று 
கண்ணாள் ஒருபாகம் கைக்கொண்ட செம்பவள
வண்ணா சிதம்பரதே வா. (24)

என்றுனது தில்லைநகர் எல்லைதனில் எய்துவேன் 
என்றுனது முன்புமின் றேத்துவேன் - என்றுனது 
பொன்னார் சபைகுறுகிப் போற்றுவேன் பூதியணி 
மன்னா சிதம்பரதே வா. (25)

சந்ததமும் நின் பாத தாமரையைச் சிந்தித்துச் 
சந்ததமும் பாடவரம் தாகண்டாய்---சந்ததமும் 
பன்னாக மும்புலியும் பார்த்துநிற்கக் கூத்தாடும் 
மன்னா சிதம்பரதே வா. (26) 

நாடி யுனைப்பு காலம் நல்லோரை யும்பொதுவில் 
ஆடி மகிழ்னையும் அல்லாமல் - கூடி 
இணங்கேன் பிறரோ டினியொருதெய் வத்தை 
வணங்கேன் சிதம்பரதே வா. (27) 

செற்றம் பகையாசை தீராத நாயேன்றன் 
குற்றம் பொறுத்தடிமை கொள்ளுவாய்- நித்தம் 
பரிந்தே நினைவார் பவப்பிகைக்கு வாய்த்த 
மருந்தே சிதம்பரதே வா. (28) 

பற்றியயா வக்கடலுள் பாவமெனும் சம்பரனைச் 
சுற்றிய காகம்போல் தோன்றினேன்-- வெற்றியுற 
முன்னாள் அவுணர்புரம் மூன்றும் சிரித்தெரித்த 
மன்னா சிதம்பரதே வா. (29) 

விரித்த சபாடவியும் வெண்ணீறும் மெய்யும் 
தரித்த சிலம்புரிரு தாளும் -- சிரித்த 
திருவாய் முகிழ்மலரும் தீவினையேன் காண 
வருவாய் சிதம்பர தேவா. (30)

மேதி யுடன்மீது வீறுந் தறுவாயில் 
காதல் பெறுமடியேன் கண்காண- ஓதும்
குருமா னெயா கண்ட கோலமே கொண்டு 
வருவாய் சிதம்பரதே வா. (31) 

துன்மதனுக் கின்பம் தொலையாக் கதிகொடுத்த 
நன்மைதனைக் கண்டடியேன் நம்பினேன் - மன்மதனைக் 
கண்ணால் எரிந்துவிழக் காய்ந்தருளும் செம்பவள
வண்ணா சிதம்பரதே வா. (32) 

அன்றுமா லானார்க் கரிதாகி நீயுலகில் 
இன்றுமா லானார்க் கெளிதன்றோ- கொன்றைசேர் 
பொன்னார் சடாமகுடப் புண்ணியா பொற்சபையின் 
மன்னா சிதம்பரதே வா. (33)

ஐயா உனையடியேன் ஐயா வெனவழைத்தால் 
ஐயா வெனைநீ அழைகண்டாய் - மெய்யாம் 
சரதா அனவரத தாண்டவா ஞான 
வரதா சிதம்பரதே வா. (34)

செஞ்சடையில் திங்கட் சிறுகுழவி சிந்துகின்ற 
அஞ்சுதலைப் பாம்பினைக்கண் டஞ்சாத - கஞ்சமலர்த் 
தாளா மலைபயந்த சங்கரிக்கு வாய்த்தமண 
வாளா சிதம்பரதே வா. (35) 

தனக்குவமை இல்லாநின் தாளிணையைச் சேர்ந்தேன் 
மனக்கவலை மாற்றினேன் வாழ்ந்தேன் -- எனக்குலகில் 
உன்னா விரந்துகொள்ள ஒன்றுமினிக் கண்டிலேன் 
மன்னா சிதம்பரதே வா. (36) 

நேசமுடன் பல்கால் நினைந்துருகி நின்னுடைய 
வாசமலர்த் தாளிணையை வாழ்த்தியே - பூசனையுஞ் 
செய்வேன் எனக்கருளைச் செய்யாத போதுனையான் 
வைவேன் சிதம்பரதே வா. (37) 

கறுத்த முழு நீலக் கடுமிடறன் பிள்ளை 
அறுத்தகறி தன்னைவிருப் பானோன்- ஒறுத்தசிலைக் 
கைவேள் வடிவழியக் காய்கண்ணன் என்றுனையான் 
வைவேன் சிதம்பரதே வா. (38) 

தேரத் தெளியத் தெரிந்துன் றிருவருளைக் 
சாரத் தவசித்தி தாகண்டாய் -- மேருச் 
சிலையால் புரமெரித்த சேவகா வெள்ளி 
மலையா சிதம்பரதே வா. (39) 

என்பு தசைதோல் இவையால் எடுத்தவுடல் 
வன்பு தருஞ்சுவையை மாசறுவாய்- அன்பர் 
இனாத்தாய் பெரியோர் இனதுறையும் தில்லை 
வனத்தாய் சிதம்பர தேவா. (40)

வெள்ளை எருத்தின் மிசையே உனைக்காண 
உள்ளி ஒருத்தி உருகுவாள் --- தெள்ளி
அறிவால் அறியும் அரும்பொருளே செங்கை 
மறியாய் சிதம்பர தேவா. (41) 

வெள்ளிமலை மீதே விளங்குஞ்செம் பொன்மலைமேற் 
துள்ளுமெரு தேறிவந்து தோன்றுவாய்- உள்ளமுறப் 
பன்னாள் நினைந்துருகிப் பாடுவார் பங்கிலுறை 
மன்னாசிதம்பரதே வா. (42)

காவென் றுனையடைர்ந்து கண்டுகொண்ட நாயேனை 
வாவென் றருகழைத்து வாழ்விப்பாய்--- சேவொன்று 
மின்னாள் தவளவுரு வெள்ளிமலை மேலுறையும் 
மன்னா சிதம்பரதே வா. (43) 

உறையும் பதியே துரைத்தருள வேண்டும் 
நிறையந் தவத்தோர் நினைவோ- மறையின் 
தலையோ கனகசபை தானோ கயிலை 
மலையோ சிதம்பரதே வா. (44) 

வீடு புகுத வினையேற்கு வெம்பிறவிக் 
காடு கடக்கநெறி காட்டுவாய் --- தேடும் 
விதியால் அறிவரிய வேணியா பாதி 
மதியா சிதம்பரதே வா. (45) 

கண்ணுடையர் உன் கோலங் காணுஞ் சிவஞானக் 
கண்ணுடையார் தாமன்றோ காணுங்கால் - மண்ணுலகுஞ் 
சேணா டரும்புகழுந் தில்லைக் கனகசபை 
வாணா சிதம்பரதே வா. (48) 

பெறுவானும் பேறுமுயர் பேரின்ப வீடும் 
உறுவானும் உன்னையன்றி உண்டோ - மறவாமல் 
எந்நாளுஞ் சொல்வார்இதயந் தனிலுறையும் 
மன்னா சிதம்பரதே வா. (47) 

அறியும் அறிவாம் அரும்பொருளாம் உன்னை 
அறியும் அறிவே தறியேன் - மறையின் 
முடிவா முகுந்தனுக்கும் முண்டகற்கும் எட்டா 
வடிவாஞ் சிதம்பரதே வா. (48) 

சும்மாடு கட்டிச் சுமந்துழலு வார்சிலரை 
இம்மா நிலத்தினிலே எண்ணுங்கால் - அம்மா நின் 
பொன்னார் அடிமுடியைப் போற்றாத பேரன்றோ 
மன்னா சிதம்பரதே வா. (49) 

ஐந்து புலனும் அடையப் பொறிகலங்கி 
முந்து வினைத்துயர மூடியே - சிந்தை 
அறவே தளர்ந்தவத்தை ஆனாலும் உன்னை 
மறவேன் சிதம்பரதே வா. (50) 

ஆன பெருந்துறையில் ஆயிரக்கான் மண்டபத்தின் 
ஞான முனிவருடன் நண்ணியே - மோனம் 
உறவே கருதி உனைப்புகழ்வேன் என்றும் 
மறவேன் சிதம்பரதே வா. (51) 

மாத்திரைப்போ தாயினுநின் வாய்த்தமலர்ச் சேவடிக்கே 
நேத்திரத்தை நெஞ்சில் நிறுத்தாமற் - சாத்திரத்தை 
எல்லாம் அறிந்து பயன் ஏதுமினிக் கண்டிலேன் 
வல்லாய் சிதம்பரதே வா. (52) 

செப்பையொத்த பூண்முலையார் சிங்கிதனி லேயகப்பட்
டிப்பிறப்பும் வீண்போகு தென்செய்வேன் --- எப்பிறப்பும் 
பெண்ணான் அலியாகும் பெற்றியா செம்பவள 
வண்ணா சிதம்பரதே வா. (53) 

சேரின்ப மாகவுனைச் சிந்தைசெயும் இன்பம் போல் 
ஓரின்பம் உண்டோ உணருங்கால் - பேரின்பத் 
தேனே அமுதே திருவம் பலத்தாடு 
வானே சிதம்பரதே வா. (54) 

மாதர் தமக்குருகும் மாப்போல நின்னுடைய 
பாத மலர்க்குருகேன் பாவியேன் - வேத 
முடிவே உரைக்கரிய மோனஉப தேச 
வடிவே சிதம்பரதே வா. (55) 

அஞ்செழுத்தை ஓதாமல் அன்பாய் அனுதினமும் 
நெஞ்சகத்திற் சற்று நினையாமல் -- வஞ்சமுற்ற 
இன்னா வினைப்பிறவி எப்படிப்போம் இப்புவிமேல் 
மன்னா சிதம்பரதே வா. (56) 

இந்த வுலகத் தொழுந்தருளி என்னுடைய 
சிந்தை குடிபுகுந்த தேசிகா - பந்தம் 
அறவே கருணை அளித்தாண்ட உன்னை 
மறவேன் சிதம்பரதே வா. (57) 

துன்ப நெறியைத் தொலைத்துச் சிவஞான 
இன்ப நெறிதந் திரட்சிப்பாய்---அன்பர் 
இனத்தாய் பெரியோர் இனிதுறையும் தில்லை 
வனத்தாய் சிதம்பரதே வா. (58) 

வெத்தருடன் கூடும் வினையேன் எழுபிறப்பை 
முத்தருடன் கூட்டி முனிகுவாய் - பத்தரிட 
நேசா விசும்பவளவாய் நீளுங் கயிலாச 
…சா சிதம்பரதே வா. (52) 

சத்தவித பாதாளம் தானுந் தரைவானும் 
அத்தனையு மின்மேனி ஆனக்கால் - நித்தமிடப் 
பொன்னார் சபையுனக்குப் போதுமோ பொற்புலியூர் 
மன்னா சிதம்பரதே வா. (60) 

மோனமுற நின்பாத முண்டகத்தே தூங்குமொரு 
ஞானவரம் என்றனக்கு நல்குவாய் - வானமுகில் 
ஏழும் பயில்பொழில்சூழ் இன்பப் புலியூரில் 
வாழுஞ் சிதம்பரதே வா. (61) 

ஒருத்தியுடன் சால உயர்ந்ததொரு வெள்ளை 
எருத்தின்மிசை வந்தெனைவா என்பாய் - கருத்திசைய 
உன்னுந் தவமுடையோர் உள்ளமே ஆலயமாம் 
மன்னுஞ் சிதம்பரதே வா. (62) 

அளிக்குமொரு பல்கோடி அண்டாண்டம் எல்லாம் 
விளிக்குமொரு மாத்திரையின் மீள - அளிக்குமொரு 
சித்தா புலியூர்ச் சிவகாம சுந்தரிவா 
மத்தா சிதம்பரதே வா. (63) 

தழைத்த திருப் பாற்கடலைச் சந்நிதிக்கே உள்ளங் 
குழைத்தமுனி பாலகன்பால் கொள்ள - அழைத்துதவும் 
அத்தா புலியூர் அமர்ந்தருளுங் கொன்றைத்தா 
மத்தா சிதம்பரதே வா. (64) 

படுத்தமக மேருவுடன் பாம்புசிலை நாணாத் 
தரித்தநெடு மாலே சரமாச் - சிரித்தருளி 
ஒன்னார் புரமூன் றொருநொடியி லேயெரித்த 
மன்னா சிதம்பரதே வா. (65) 

சற்குருவைப் போற்றாமற் சற்குருவைச் சாற்றாமல் 
சற்குருவைச் சந்ததமுஞ் சாராமல் - சற்குருவை 
நின்றா தரியாமல் நீள்பிறவி நீங்கிடுமோ 
மன்றா சிதம்பரதே வா. (66) 

சங்கமத்தை நின்கோலந் தன்னைக் குருபாத 
பங்கயத்தை நம்பாத பாவியேன் - பங்கிலுறை 
இன்னாப் பிறவியொழித் தெப்படிஈ டேறுவேன் 
மன்னா சிதம்பரதே வா. (67) 

எந்தவகை யாலுலகில் ஈடேறு வேன்அடியேன் 
பந்தமற நின்பாதம் பற்றியே - சிந்தையுற 
நாட்டேன் பலகாலும் நாமந் தனைத்துதிக்க 
மாட்டேன் சிதம்பரதே வா. (68) 

குருபதத்தை நம்பிக் குறித்துருகுந் தொண்டர் 
இருபதத்தை யான் பெறுவ தெந்நாள் - ஒரு பதத்தைத் 
தூக்கா நடம்புரியுஞ் சோதியே தாயமறை 
வாக்கா சிதம்பரதே வா. (69) 

தேடிப் பலகாலுஞ் சிந்தித் துனைப்புகழ்ந்து 
பாடிப் பரவவரம் பாலிப்பாய்-நாடித் 
தொழுவார் வினையைத் துணிக்குமொரு வென்றி 
மழுவா சிதம்பரதே வா. (70) 

பன்றிவடி வாகிப் படியிடந்து மாலறியா 
நன்றிபுனை தாளெனக்கு நல்குவாய் - வென்றிபுனை 
ஆனேறு வந்தேறும் அத்தனே அண்டர் பெரு 
மானே சிதம்பரதே வா. (71) 

அன்னைவயிற் றின்னம் அடையாமல் அம்புவிமேல் 
என்னையினிக் கண்பார்த் திரட்சிப்பாய் - பொன்னிதழித் 
தாமா சிவகாமித் தாயார் தமக்களித்த 
வாமா சிதம்பரதே வா. (72) 

அண்டமுழு துந்தாக்கி அம்பரத்தி லேமிதித்த 
புண்டரிகச் சீர்பாதம் போற்றிலேன் - கொண்டபடி 
செப்பா யன திரண்டு சேவடியி லேதிலனை 
வைப்பாய் சிதம்பரதே வா. (73) 

அனவரதங் கண்டடியேன் ஆதரித்துப் போற்றில் 
அனவரதம் முன்னின் றருள்வாய் - அனவரதம் 
பொன்னார் சபைக்கே புனித நடம்புரியும் 
மன்னா சிதம்பரதே வா. (74) 

பொன்னான சேவடியைப் போற்றாமற் பாவியேன் 
எந்நாளும் பாழுக் கிறைத்தேனே - மின்னாளும் 
பாகா பிறப்பறுக்கும் பால்வெள்ளை நீறுபுனை 
வாகா சிதம்பரதே வா. (75) 

மறையவரைத் தேசிகரை மாதவத்தோர் தம்மைக் 
குறையமதிப் பாரையினிக் கொள்ளேன் - இறையிழித் 
தாராய் திருநாமஞ் சாற்றுமடி யாரிடத்து 
வாராய் சிதம்பரதே வா. (76)

யானோர் பொருளாக என்றும் பழவடிமை 
ஆனோ ருடன்கூட்டி ஆண்டவா - வானோர் 
பலரா தரித்திறைஞ்சும் பங்கயப்பொற் பாத 
மலரா சிதம்பரதே வா. (77)

விழியிரண்டுந் துஞ்சி வெளுத்துடலுங் கூனி 
மொழி தளர்ந்து கோலூன்று முன்னம் - பழிதவிர்ந்து 
நின்னாமம் உச்சரிக்க நேயந் தரவேண்டும் 
மன்னா சிதம்பரதே வா. (78) 

சிந்தை களிக்கத் தெரிசிக்கக் கண்ணினைவாய் 
வந்தவடி வைப்புகழ்ந்து வாழ்த்தவே - என்றன் 
கரந்தா மரைத்தாளைக் கற்பொடுபூ சிக்க 
வரந்தா சிதம்பரதே வா. (79) 

ஒன்றோடுங் கூடா துனைக்கருத்தி லேகூடி 
நின்றால் ஒழிந்துவினை நீங்குமே - மன்றா
பரதா சரதாப வானியிடப் பாகா 
வரதா சிதம்பரதே வா. (80) 

என்றும் பெருந்துறையில் ஏழையேன் கண்காண 
நின்றஞ் சிவலோக நித்தனே - என்றும் 
தரையா னது தழைக்கத் தானுயர்ந்த வெள்ளி 
வரையாய் சிதம்பரதே வா. (81) 

திருப்பா திருப்புலியூர்ச் சென்றடைந்து நின்னை 
விருப்பாய் அடிவணங்க வேண்டுங் - கருப்புச் 
சிலையான் தனையெரித்த சேவகா வெள்ளி 
மலையாய் சிதம்பரதே வா. (82) 

ஓகைவந்த சோணகிரி ஓம்நமசி வாயகுரு 
ஆகிவந்து நாயேனை ஆண்டவா - பாகுவந்த 
சொல்லாள் உடனேயும் தோன்றிக் கருணை செய்ய 
வல்லாய் சிதம்பரதே வா. (83) 

உனையடைந்து பாவியே னோகெட்டேன் ஐவர் 
தனையடைந்து மாயத் தகுமோ - மனையடைந்து 
முன்னாள் அறுபத்து மூவர்க்கு முன்னின்ற 
மன்னா சிதம்பரதே வா. (84) 

வாவா சிதம்பரதே வாவாஎன அழைத்தால் 
வாவா எனஅழைத்து வாழ்விப்பாய் - வாவா 
குருவே உருவே குணங்குறிகள் இல்லா 
வருவே சிதம்பரதே வா. (85) 

உண்டு துணையருணை யோநமசி வாயகுரு 
மண்டு மறலிபடை வந்தாலுங் - கண்டு 
வெருவேன் இனியுலகில் வெறொருதெய் வத்தை 
மருவேன் சிதம்பரதே வா. (86) 

காம வெகுளியைக் கங்கடமை வேரறுத்துன் 
நாம எழுத்தோதி நாள்தோறும் - சேம 
நிதியாம் உனைக்காண நேயந்தா வேணி 
மதியா சிதம்பரதேவா. (87) 

ஐந்துவித்துக் காமாதி அற்றுன் அடியிணைக்கே 
சிந்தைவைத்து வாழும் திரமென்றோ-சுந்திரப்பொன் 
தாளா மலையந்த சங்கரிக்கு வாய்த்தமண 
வாளா சிதம்பரதே வா. (88) 

என்னநெறி சென்றாலும் என்ன நெறி நின்றாலும் 
என்ன மொழி பேசி இருந்தாலும் - உன்னுடைய 
தாளே நினைவேன் தரைமேல் இனிப்பிறந்து 
மாளேன் சிதம்பரதே வா. (89) 

எடுத்தபிறப் பெல்லாம் எனக்கு வந்து தாய்மார் 
கொடுத்தமுலைப் பாலனைத்துங் கூட்டில் - அடுத்தவிரற் 
பன்னா கணைத்துயின்மால் பாலாழி யுஞ்சிறிதாம் 
மன்னா சிதம்பரதே வா. (90) 

துய்ய திருநாமஞ் சொல்லித் தொழுதேத்தி 
மையல் உறு வேனை வாவென்று - செய்ய 
திருவாய் மலர்ந்தருளித் தேவியுடன் சேவில் 
வருவாய் சிதம்பரதே வா. (91) 

பரிவாய்உனைப் புகழ்ந்து பாடுவார் பங்கில் 
திரிவோம் எனவருளிச் செய்தாய் - குருவாய் 
எனையாள் அருணகிரி எந்தாய் அமுதம் 
அனையாய் சிதம்பரதே வா. (92)

எந்த வடிவாய் எனைவந் திரட்சிப்பாய் 
அந்தவடிவை அசையாமல் - சிந்தை 
இணங்குந் தவமே எனக்களிப்பாய் வானோர் 
வணங்குஞ் சிதம்பரதே வா. (93) 

அருண கிரிக்குகையில் ஐந்தெழுத்த னாகிச் 
சரணமலர் தந்தருளிச் சார்வாய் - கருணை புரி 
எந்தாய் புவிமேல் எனையோர் பொருளாக 
வந்தாய் சிதம்பரதே வா. (94) 

நரம்புதிரந் தோலெலும்பு நாறுதசை மூளை 
இரம்புவினை சுக்கிலத்தோ டேழுங் - குரம்பையுறு 
காமந் தனிலடைத்துக் கண்கலக்கஞ் செய்ததென்ன 
மாயஞ் சிதம்பரதே வா. (95) 

துன்னிமித்தஞ் செய்யினுநின் தொண்டருக்குத் தொல்லுலகில் 
நன்னிமித்தம் ஆகுமே நாடுங்கால் - வன்னிமத்தம் 
புன்னாகங் கொன்றைதும்பை பூளையெருக் குப்புனைந்த 
மன்னா சிதம்பரதே வா. (96) 

சமையக் கவலை தனையொழித்துச் சிந்தை 
சமையத் தவநெறி தந்தாள்வாய் - இமையக் 
கொடிவாள் நுதல்பாகங் கொண்ட பரஞ் சோதி 
வடிவா சிதம்பரதே வா. (97)

நற்றியனைச் சிந்தையுற நாடுமடி யாருளத்தின் 
மற்றுமொரு தெய்வ மதிப்பரோ- நெற்றிதனிற் 
கண்ணா திருநீல கண்டா கனிபவள் 
வண்ணா சிதம்பரதே வா. (98)

பொன்றுந் தசையுடலம் போடுந் தறுவாயில் 
அன்றுன் பதந்தந் தருளுவாய் - என்றுஞ் 
சிரத்தா திருப்புலியூர்த் தேசிகா வெற்றி 
வரத்தா சிதம்பரதே வா. (99) 

உரையிறந்த மெய்ஞ்ஞான உண்மையார் அன்றோ 
கரையிறந்த பேரின்பங் காண்பார் - புரையிறந்த 
வேதா கமப்பொருளே மெய்தா னொருபாதி 
மாதா சிதம்பரதே வா. (100) 

சிதம்பர வெண்பா முற்றிற்று. 

Related Content

பரமராசியமாலை