விரித்த செஞ் சடையாட வதனசந் திரனாட
விரிகமல நயனம் ஆட
வெண்முறுவல் நிலவாட நண்ணுதம ருகம்ஆட
வீசுமொரு செங்கை ஆடத்
தரித்தபுலி அதளாட அபயகரம் ஆடஇரு
தங்குதோ டூச லாடத்
தாங்குநூ லாடமே லோங்குநீ ராடவொளிர்
தண்பவள மேனீ யாட
உரித்தகரி யுரியாட உரக்கங் கணமாட
உபயபரி புரமும் ஆட
ஒருபதம் எடுத்தாட ஒருபதம் மிதித்தாட
உள்ளே மகிழ்ந்து சற்றே
சிரித்துமலை மங்கைகொண் டாடநின் றாடுமுன்
திருநடனம் என்று காண்பேன்
செகம்பணி திகம்பர சிதம்பர நடேசனே
சிற்சொரூ பாநந் தனே. (1)
உன்னுடைய நடனத்தை உள்ளபடி யொளியாமல்
ஒருநிமிட மாகி லுங்கண்(டு)
உத்தமர்கள் பெற்றிடுவர் முத்தியினை யென்றென்(று)
உரைக்குமறை உண்மை யானால்
முன்வந்த சன்னத்தி லேயெனக் குக்கண்டு
முடியக் கிடைத்த ததனால்
முற்பந்தம் ஓடிவிடும் இப்பந்தம் வாராது
முடியுமுன் இப்ப வத்தே
புன்மையறி வோடாகி லுங்காண வருகின்ற
பொலிவினால் மேற்பிறப்புப்
போனதே போவதற் கேதுவீ தாதலால்
புண்ணியம் மிகுந்த இந்தச்
சென்மமன் றோசென்மம் எண்பத்து நான்குநூ
றாயிரஞ் சென்மத் தினும்
செகம்பணி திகம்பர சிதம்பர நடேசனே
சிற்சொரூ பாநந் தனே.
பூங்கமல வதனமும் பொழிகருணை நயனமும்
புன்முறுவல் நிலவெ றிப்பும்
பொலிசடா டவியுமதில் உறைநிலா மதியுமொளி
புனைகுழை இலங்கு காதும்
தேங்குபர மானந்த சின்மயா காயமாம்
சித்தியருள் முத்திரையு மேல்
சிவாநுபவ நீங்கினோர் சேரவருள் செபமாலை
சிவஞான புத்தகமுமோர்
வேங்கையத ளுடையும் சரற்கால மதிகோடி
வெள்ளமென நிறைவடிவமும்
மேலான தெய்வம்நாம் அன்றி வேறில்லையிது
மெய்யென் றெடுத்த கனலும்
ஓங்கவட வாலடியில் உறைகின்ற தெய்வமே
உனையன்றி வேறு நினையேன்
ஒன்றாகி யானந்த உருவாகி யென்னுயிர்க் (கு)
உயிரான பரம சிவமே.