logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சீகாளத்திக் கலம்பகம்

                               இயற்றிய "சீகாளத்திக் கலம்பகம்"

 

cIkALattik kalampakam
of tiruevvaLUr irAmacAmi ceTTiyAr 
In tamil script, unicode/utf-8 format


  • Source: 
    சீகாளத்திக்கலம்பகம்.
    இது திருஎவ்வுளுர் இராமசாமி செட்டியாரவர்கள் இயற்றியது.

    மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில்
    பதிப்பிக்கப்பெற்றது.
    1908.
    விலை அணா 2. Copyright Registered.
    -------

    சிவமயம்,
    திருச்சிற்றம்பலம்.
    ஆக்கியோன் - குறள் வெண்பா.
    • கலைசால்கா ளத்திக் கலம்பகஞ்சொற் றான்பா
      வலராம சாமியெனு மால்.
    --------

    பொருளடக்கம்

    1. சீகாளத்திக்கலம்பகம் . 
    1. கடவுள் வாழ்த்து 
    2. வேண்டுகோள் . 
    3. அவையடக்கம் .
    4. ஆசிரியர்வணக்கம் 
    11. கலம்பகப்பாட்டியல் 
    3. இக்கலம்பகவுறுப்பகராதி
    1V. செய்யுள் முதற்குறிப்பகராதி 
    ---------
    சிவமயம்
    திருச்சிற்றம்பலம்.
     

    சீகாளத்திக்கலம்பகம்.


    பாயிரம் 
    கடவுள் வாழ்த்து

    விநாயகர் துதி. 
    காப்பு, நேரிசைவெண்பா. 

    நிலம்பகர்கா ளத்திவரை நித்தர்மலர்த் தாளிற் 
    கலம்பகப்பா மாலை கமழச்-* சொலம்பகருட் 
    கஞ்சந்த்தி யானநெறி காட்டி வரமளிக்கு 
    மஞ்சந்தி யானதுணை யாம். (1)
    ---
    * சொல் அம்பகர் -சொன்னோக்க முள்ளவர்.

    நடேசர் துதி, 
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

    கங்கைநீ ரறுகு மான்முன் காட்டுமம் புலிசேர் வேணித் 
    துங்கமார் காடு காட்டிச் சுடர்மழு மான்கை காட்டிப் 
    பங்கிலோர் மயிலைக் காட்டிப் பணியும்வெம் புவியுங் காட்டிப் 
    பொங்குசிற் சபைக்க ணிர்த்தம் புரிபிரான் றாடு திப்பாம். (2)

    சிவகாமசுந்தரியம்மை துதி.
    வேறு.

    தண்ணாரு நறுந்துளபத் தாமமுர கரிமகிழ்சோ 
          தரியின் புள்ள 
    பண்ணாரு மறைபயில்பண் ணவன்பணியு மணியணிப்பூண்
          பதித்தாய் தாயை 
    விண்ணாருந் தேவர்கட்குக் தீதகற்று நாதாந்த 
          விமலை யான
    தெண்ணாருஞ் சிவகாம சுந்திரியி னிணைமலர்த்தாள் 
          சென்னி சேர்ப்பாம். (3)

    குகப்பிரான் துதி, 
    குறள்வெண் செந்துறை. 

    நகப்பிராட் டிக்குள நயப்ப வருமொரு 
    குகப்பிரான் றாண்முடி கொண்டிறைஞ் சது,மே. (4)

    சரசுவதி துதி. 
    குறள்வெண்பா. 

    வெண்டா மரைக்கண் மிளிர்வெள்ளை மேனிநல்லா 
    டண்டா மரைத்தாள் சரண். (5)

    சமயரசாரியர் நால்வழி துதி 
    அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம.

    உருப்பவள நிறத்தானார்க் கினிமையுறத் திருக்கடைக்காப் 
          புரைத்தா ரன்பு 
    பெருப்பவளத் தமுதெனத்தே வாரங்கட் டுரைசெய்தார்
          பிறங்கு மேருப் 
    பொருப்பவள வாம்விருப்ப மேவியுயர் திருப்பாட்டுப்
          புகன்றார் * மெய்ச்ச 
    திரும்பவள முறுவாச கஞ்சொற்ரு ரிவர்கள்பொற்றாள்
          சிரமேற் கொள்வாம். (6)
    --------
    * மெய் சதிர்உப்ப வளம் எனப்பிரிக்க.

    கண்ணப்ப நாயனார் துதி.
    இதுவுமது. 

    திரமருவுங் கட்செவியைக் குண்டலமாக் கொண்டபரன்
          றிருச்செ விக்கட் 
    டரருவு முழுவலன்பார் மொழியமுத மூக்கமுடன்
          றழையச் சேர்த்துப் 
    பரமருவு மறைபகர்செம் பவளவாய் விடக்கமுதம்
          பரிக் து ரூட்டி 
    வரமருவு மெய்ப்பேறு பெற்றிடுகெண் ணப்பர்சரண்
          வணங்கி வாழ்வாம். (7)

    சிவகோசரியார் துதி
    கொச்சகக்கலிப்பா

    காசரியார் கங்கணக்கைக் காளத்தி யரனார்க்கு 
    மூசரியார் நறுமலர்கொண் டருச்சித்தின் முழுக்காட்டன் 
    மேசரியா ராமகத்தின் வித்தாரென் றோதுசிவ 
    கோசரியா ரெழிற்சரண கேரகநக நிதந்தொழுவாம். (8)

    நக்கீரர் துதி. 
    நேரிசைவெண்பா.

    கண்பார்த் தருள்கயிலைக் காளத்தி நாதர்தம்மேல் 
    வெண்பாவந் தாதி விரித்துரைத்த - வொண்பா 
    கலனென்னு நக்கீர மாதவவிந் நூற்சீர்
    நலமன்னித் துன்னிடவே நன்கு. (9)

    சேக்கிழார் சுவாமிகள் துதி. 
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்,

    ஒன்றத்து ரியலொலியு மறையொலியு மணவொலியு
          முயர்தில் லைப்பொன்
    மன்றத்தூர்ச் சிதநடஞ்செய் தருளெம்மான் பதமுளரி
          மனத்தே பூப்ப 
    நின் * றாத்தா ரரனடியார் புராணமியற் றிப்பேறு
          நிலவப் பெற்ற 
    குன்றத்தூர்த் தொண்டர்சீர் பரவுவார் சரண்சிரமேற்
          கொண்டு வாழ்வாம். (10)
    --------
    * அத்து - செவ்வை

    சிவப்பிரகாசர் வேலையர் கருணைப்பிரகாசர் துதி.
    இதுவுமது. 

    பொங்குறுந லாக்கச்சொ லுயர்செஞ்சொல் குறிப்புச்சொல்
          புகன்முச் சொல்லுந் 
    தங்கியபல் பிரபந்தஞ் சாற்றிச்சீ காளத்தித்
          தலபு ராண
    மங்குரைத்த சிவப்பிரகா சத்தேவர் வேலைய
          ரருள்வாய்ந் தோங்கு 
    நங்கருணைப் பிரகாச ரெனுஞ்சிவஞா னச்செல்வர்
          நற்றாள் போற்றி. (11)

    வேண்டுகோள்
    நேரிசைவெண்பா

    காளத்தி நாதா கலம்பகப்பா மாலைநின்பூந்
    தாளொத் திசைந்துறவே சாற்றுவதாற் - கோளைத் 
    திருத்தி யணிபெறச்சீர் செய்தேற்றுக் கொள்வாய் 
    குருத்துவங்கண் டும்பர்வணங் கும். (12)

    அவையடக்கம். 
    கலிவிருத்தம். 

    சிற்பநூல் வல்லுநர் சிறார்செய் மட்பணி 
    அற்பமாம் பணியதென் றவற்றை யெள்வரோ
    கற்பவ ரற்பொடு காணக் காட்டுதல் 
    விற்பனர்க் குரியதோர் விதிய தாகுமால். (13)

    ஆசிரியர் வணக்கம்.
    நேரிசை ஆசிரியப்பா.

    சொற்றவ மாண்பு சுகமொடு மல்கக் 
    கற்றுவல் லுநருங் கனிந்துள மேத்துந்
    தணிகை யம்பதிச் சரவணப் பெருமாண் 
    மணியருள் வித்துவ மணிகந்த சாமிப்
    பரமா சிரியன் பதமலர் 
    சிரமிசைச் சூட்டுதுந் தெளிவுறற் பொருட்டே. (14)

    பாயிர முற்றிற்று.
    ------------

    சீகாளத்திக்கலம்பகம் - நூல்.
    மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா.

    நீர்பூத்த கார்க்கடல்சூழ் நிலவுலக மேத்தெடுப்பச் 
    சீர்பூத்த மாமறைகள் சிந்தித்தஞ் சலிபுரியப் 
    பொன்புணரொண் மணித்திருமால் புகலயன்வெள் ளானையினன் 
    தென்பரிதி திங்களா தியவிபுதர் பணிகேட்பத் 
    தேர்வுறுமைந் தெழுத்தாமு சிதநமச்சி வாயமந்த்ர 
    மார்வமுட னந்தணர்சொ லக்கங்கை வைத்தோதப் 
    புகழ்பொன்மலை தருஞானப் பூங்கோதை யிடமருவக் 
    ககனமுஞ்சொல் காளத்திக் கவின்கோயி லமர்ந்தோய்கேள்!

    (இவை எட்டடித்தரவு)

    ஒத்தமிழ்தேர் சம்பந்த மூர்த்தியின்பா டற்கிாங்கி 
    முத்துவிதா னஞ்சிவிகை முதலியதந் தருளினையே !
    வயிரலவே டம்பூண்டோர் வள்ளல்சிறுத் தொண்டரொளிர் 
    வயிரவொட்டுக் காதணிந்த மதலையினூன் விழைந்தனேயே !
    பச்சைப்புன் மேய்ந்துறுமப் பசுநிரையைக் காத்தபசும் 
    பச்சைவண்ணத் திருமாற்குப் படையாழி யீந்தனையே ! 
    மாணிக்க மாமலைத்தேன் மானுமது ரிதச்செஞ்சொன் 
    மாணிக்க வாசகர்க்கா வைகையின்மண் சுமந்தனையே ! 
    செம்பரத்தை மலர்மறையத் திகழ்தும்பை பூத்ததொப்பச் 
    செம்பவள மேனியின்மேற் றிருநீறு பூத்தனையே !

    (இவை ஐந்தும் ஈரடித்தாழிசைகள்.)

    மலர்கதிர் மணிமுடி மருவிய விபுதர்கள் 
    குலமணி யெலுமுசை கொளுமுயர் பதவியை,
    பொலிகழ லடிகொடு புலியுரு வரவுரு 
    நலமுனி வரர்தொழ நடமிடு திருவினை.
    மலிபுக ழிருடியர் மகமுதி மறிமழு 
    நிலைதரு கரமிசை நிறுவிய கருணையை, 
    புலனுயர் கவிஞர்கள் புகலுமெ யவையிடை 
    யிலகுடு பதியென விசையுறு பதியினை..

    (இவை நான்கும் ஈரடி அராகங்கள்) 

    கள்ளமிலா நின்மனையாள் கச்சியினி லறம்வளர்க்க 
    வள்ளியிடும் பிச்சையென்றல் வறவரில்லி னிரந்ததென்னே ! 
    புனனாட னுரவடம் பொன்னியில்வீழ்ந் திடவதனைக் 
    கனவானைக் காவினின்கார்க் களமுறச்செய் ததும்வியப்பே !
    மலையுருவச் துறவயன்மால் வாலனமும் வன்றியுமாத் 
    தலையடிதே டிக்காணாத் தரம்புரிந்த திறும்பூதே ! 
    கடுஞ்சிலந்தி விடநாகங் கடநாக மன்பர்கள்செய் 
    திடுந்தொண்டிற் சிறந்ததுதா னெவைகாளத் திப்பெயரென் ! 
    உம்பளஞ்சம் பளம்பணங்கா சுண்டோதென் றில்லையிற்சிற் 
    றம்பலத்தோர் காறூக்கி யாடல்செய்த தெற்றினுக்கோ !

    (இவை ஐந்தும் பெயர்த்தும் வந்த ஈரடித்தாழிசைகள்.)

    மதனெரி படநுதல் விழியைத் திறந்தனை.
    வசிகனொண் மகவென முறையிற் செறிந்தனை
    பதகன்வன் பிழைமுழு வதுமுண் மறந்தனை
    பசுபதி யெனுமுயர் பெயரிற் சிறந்தனை.

    (இவை நான்கும் காற்சீரோாடி அம்போதரங்கம்.)

    அணிலவொண் பதியு நீ; அனகசிற் பானு நீ
    புனிதமெய்த் தவனு நீ; புகழ்கொள்சற் குருவு நீ 
    பனிவரைக் குறவு நீ; பழமறைப் பொருளு நீ
    முனிவசர்க் கிறையு நீ; முழுமுதற் பாரமு நீ.

    (இவை எட்டும் முச்சீசோடி அம்போதசங்கம்)

    மலைய ழுத்தினை; கலைவ ழுத்தினை
    மழுவி ரித்தனை; கழுவெ ரித்தனை 
    அலைய டுத்தனை; வலையெ டுத்தனை
    அணிகள் சொற்றனை; மணிகள் விற்றனை.

    (இவை எட்டும் இருசீரோரடி அம்போதரங்கம்.)

    என வாங்கு.
    (இது தனிச்சொல்.)

    பத்தர்க ளனுதினம் பராவிப் பணியுஞ் 
    சுத்த நிராமய சுமங்கல விசேட 
    இக்கு மிகவிரும் பிபமுகத் திறைக்குக் 
    கொக்குக் கனியுணக் கொடுத்த குணாகர
    உயர் * கிர வுஞ்ச முடைபட வடலுறு 5
    மயில்விடுத் திசைபெறு மறுமுகர்க் கத்த 
    அஞ்சா தகங்கொண் டணைந்தமுப் புரத்தை
    எஞ்சா தழித்த வெரிநகைப் பகவ
    மருளறு சுந்தார் வண்பா டற்கிடங் 
    கருடன் மதலையைக் கான்றிடப் புரிந்தவ 10
    நாரையுட் கொண்டு நற்பூசை யுஞற்றிய 
    சீருலா மிருகண்டு சேய்க்கரு ளனக 
    கெடித்தலப் பெருங்கோ கிலமறப் பிரம்பா 
    லடித்த வடித்தழும் பமர்திரு மேனிய 
    தரமுணர் பரிதிநேர் சக்கிரத் தாற்சலந் 15
    தரன்றனைத் தடிந்த சங்க்ராம வித்தக 
    விதிதலை யைக்கிளி மேதகு மலர்க்கரத் 
    ததிசய முறவேந் தனதியாந் தேவ 
    காவி மலர்நிகர் கருங்கணா ரவாவும் 
    பூவிருக் குங்குழற் பூங்கோதை நாயக 20
    மாகாள கண்ட வளர்கரு ணாலய
    சீகா ளத்தித் திருத்தல மேவா 
    வலிமைப் பிரபஞ்ச மாயையான் மயங்கி 
    நிலைதளர்ந் துளத்து ணெடி து வருந்திநின் 
    சரணார விந்தமே தஞ்சமென் றடைந்தனன் 25
    அரணார் பூந்தடத் தந்தண் மலரிடைச்
    சுரும்பார் தேன்பெற் றமைந்தெனப் 
    பெரும்பே ரின்பம் பெறுதற் பொருட்டே. (1)
    --
    * கிரவுஞ்சம் - அன்றில் பக்‌ஷி

    (இது இருபத்தெட்டடியால்வந்த நேரிசை யாசிரியச் சுரிதகம்)
    நேரிசைவெண்பா. 

    பொருளுணரா நாயேன்றன் புன்மைதவிர்த் தானாப் 
    பொருளுணர்த்தி யாட்கொள் புனிதா-தெருணிறைந்த 
    கங்கரா கங்கா கவினுறச்சேர் காளத்திச் 
    சங்கரா கங்கா தரா. (2.)

    கட்டளைக்கலித்துறை. 

    தராதல மேத்துநற் காளத்தி நாதர் தவாதவொண்சீர்ப் 
    புராதனர் வேதா கமங்க ளுரைத்தமெய்ப் புங்கவர்வா 
    ளராதரக் கையினிற் கங்கண மாக வணிந்தவர்வெங் 
    கிராதற்கு மாமுத்தி தந்தவர் நந்துணை கேடினெஞ்சே. (3)

    நற்றுயிரங்கல். 
    அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம், 

    சேலன்ன விழிமடவார் மயர்வுறவே வளைகூடற்
          றெருவில் விற்ற 
    பாலன்ன வடிவமுறும் பாமரே காளத்திப்
          பகவ னாசே 
    ஆலன்ன வெனதுசிறு வயிற்றுதித்த மிக்கெழிலா
          ரணங்க னாடன் 
    மாலன்ன தகலவின்னே வந்தணையின் யானுமிவண்
          வாழ்கு வேனே. (4)

    மடக்கு. 
    கட்டளைக் கலிப்பா. 

    வேளைத் தீய்ந்த நுதனெருப் பக்கமே
          மெய்யி னங்கைக் களித்ததோர் பக்கமே
    தாளி ணைக்கினை யாமா விந்தமே
          சடையி னேற்றது சாரா விந்தமே 
    தோளிற் கொண்டது பூந்தண் மதலையே
          தொண்ட னாரிட வுண்டார் மதலையே
    நாளும் வண்மையில் லண்டர்கா ளத்தியே
          கம்பர் வாழ்வு நலஞ்செய்கா ளத்தியே. (5)

    நேரிசை வெண்பா.

    * காளக் கடாவினில்லெங் காளச்ச ரீரநமன் 
    காளமொடு பாசங் கசத்தேந்திக் - காளம்போல் 
    வந்தக்கா லென்ன வகைசொல்வே னிதுணைசெய் 
    சந்தக்கா ளத்திவர தா. (6) 
    ---
    * காளம் - கருமை, மேகம், சூலம், கஞ்சு.

    எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம், 

    வரியளிப் பொதும்பர் சுலவு காளத்தி
          வரையிட முறையுமெம் பெருமான் 
    கிரியரு மருமா னெனச்சொல வுமைபாற்
          கிட்டுமெய்க் கல்விமா னெனும்பூந்
    தெரியலார் சேர மான்பு லுலாவிற் 
          றிருவுளங் கொளுமதி மானோ
    டரியசைம் மானுஞ் சமர்செயா வண்ண
          மறுகுநீர் தரவகத் தெணுமே. (7)

    கலிவிருத்தம். 

    எண்ணுறு மெண்ணுறு மியனெய் போற்புவிச் 
    ஈண்ணுறு நெடியகா ளத்தி நாதரைப்
    பண்ணுறு பாடலிற் பாடி யாடுவார் 
    நண்ணுறு விண்ணினி னலஞ்சு கிப்பரே. (8)

    புயவகுப்பு. 
    ஆசிரிய வண்ண விருத்தம்.

    சந்தக்குழிப்பு 
    தனன தனனதன தானத் தனானதன. 
    தனன தனனதன தனனத் தனந்தன.

    சுருதி நிலையுணரு ஞானத் தபோதனர்கள்
          சுசிகொ டிருமுறைக ளனியக் கிளர்ந்தன 
    சுடிகை மணிபெறுவி யாளத் தையேதுவொடு
          சுலவு கடகமென வனையப் பொருந்தின 
    சுரர்கண் மகிழ்வினொடு வாழக் குரோதமகல்
          சுகிர்த வபயகர முதவப் பரிந்தன 
    சுடுகை யமனர்கொடும் யாகத் தியானை முடி
          சுடர்செய் கணையடரு * நிலையிற் கடிந்தன 

    மருவு மலரிமரை சாதித் தமாலமகிழ்
          மதலை குரவுகொடை புனையத் துதைந்தன
    மறய நிலகுநர கேசித் t துராகிருத
          மடிய வுகிர்கள்கொடு கிளறச் சினந்தன 
    மதுரை மறுகிலுயர் மாணிக் கமாமணியின்
          மகிமை சொலியவைக ளுதவச் செறிந்தன 
    மயல்செய் புரமழிய மேருத் தராதரமு
          மலைவில் சிலையதென வளயத் திணிந்தன 

    தருண வெயிலுமிழுமோர்பத் மராகமணி
          தாள மணிவலய மிலகப் புனைந்தன 
    தகைகொண் மலையுதவு கோலக் குமாரியணி
          சரும குடமுலைக டழுவத் தழைந்தன
    தவறி லவிர்கிரன வாதித் தனார்தமது
          தசன நிரைமுழுது முதிரத் தடிந்தன
    தனுவில் வலவனெனும் #வீபற் சுநேயமுறு 
          தாய தொளிர்பகழி கருதற் கிசைந்தன

    கருது பனவர்குல மேவச் சிரோமணிமுன்
          கமழு முணவதிட வளவிப் பிசைந்தன 
    கனிவொ டொருதருமி யோதிப் பொனாசைசொல
          கவலை யகல்கிழிய துதவிச் சிறந்தன 
    கதிர்செய் விழிதருமல் வேடப் பிரானியல்கொள் 
          கணிச வணிகைமலர் கதுவத் தொடங்கின 
    கருணை திகழ்புனிதர் காளத் திநாதரணி
          கலன தொளிருனத களபப் புயங்களே. (9)

    ----
    * நிலை - தொழில்; t துராகிருதம் - தீத்தொழில்; # வீபற்சு - அருச்சுனன்

    இயமகம்
    கட்டளைக் கலித்துறை.

    புயங்கந் திரிகட மாதங்க மிக்கன்பு பூண்டுநல்லம் 
    புயங்கவி னார்பதம் பூசிக்க வந்தருள் பொன்முலைவார் 
    * புயங்கனை பாகனைக் காளத்தி நாதனைப் பூதனையெண் 
    புயங்கடுக் கைத்தார் புனைந்தானைப் பரவலிர் போற்றுவிரே. (10)
    ------- 
    * புய் - புய்க்கும்படியான; புய்த்தல் -பீறல்

    நித்தாஸ்துதி.
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்,

    போர்விசயன் வில்லடியுஞ் சாக்கியனார் கல்லடியும்
          புளிஞர் கோமான்
    பேர்வருகாற் செருப்படியு நனிபடவே மேற்பட்டீர்
          பெருங்க லேந்திச் 
    சீர்வதிவில் லாய்வளைத்தீ ரென்பதுவும் பொய்யோபின்
          றிடனற் றீரோ
    பார்வசையல் லாதுபுக ழாங்கொலேர் காளத்திப்
          பகவ னாரே. (11)

    கீரையார். 
    அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம், 

    பரவு மடியார் வினைதவிர்க்கும்
          பரன்கா ளத்தி நகர்த்தெருவில் 
    உருவண் கீரை வாங்குபவ
          ருண்டோ வெனக்கூ வொண்டொடியாய் 
    மருவும் வளைக்கை கொதிகலவை
          வையின் பாலா முன்னையுந்தா 
    கருது *பண்ணை சேர்பொன்னாங்
          காணி தருதுங் கொள்ளுவையே. (12)
    ---
    * பண்ணை - சமுசாரம்.

    வலைச்சீயார். 
    எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம். 

    வையகஞ்சொல் காளத்தி நகர்க்கண் மேலை
          மறுகினின்மீன் விற்கவந்த வலைச்சி யாரே 
    செய்யகுக னறுமீன்கா தலன்றாரு னென்றான்
          சிவன்வலைகொண் டன்று சுறா மீன்பி டித்தான் 
    பொய்யகன்ற குருமீன்றா னுயர்வீ டென்றான்
          புகலவன்சீ டனுக்குஞெண்டின் மிக்க விச்சை 
    கையுறவே வடமீனை வசிட்டன் கொண்டான்
          காசினிக்கண் மீனசையெவ் வெவர்க்கு முண்டே (13)

    இதுவுமது.

    உண்கணா மொளிர்சேலை யெடுத்துக் காட்டி
          யுளமலங்கு வகைதிருக்கைக் டுகளிறு காட்டி
    வண்கணைக்கால் வரால்காட்டி நடக்க மாலா
          வார்தொடர வேள்கருப்பஞ் சிலையெ டுப்பான் 
    கொண்கணாக் காளத்தி வரனக் கூடிக்
          குலவியமோ கினிமாதின் குணங்கை யாண்ட 
    பெண்களினும் போல்வசிய சாலங் கற்ற
          பேர்களையாங் கண்டறியேம் பிரிய மாதே. (14)

    கட்டளைக் கலித்துறை.

    மாவித் தகர்பலர் சூழ்திருக் கூட்ட மதித்துளன்பு 
    பாவித்தக் கத்தி னொடுநீ றணித்துநின் பங்கயத்தாள் 
    சேவித் தனுதினஞ் சிந்திக்கி லேனென்ன செய்குவன்பூங் 
    காவித் தடம்பொழில் சேர்திருக் காளத்திக் கண்ணுதலே. (15)

    நேரிசை வெண்பா,

    கன்மடமா னுக்கழலிற் கண்டவனு முண்டகனு 
    மன்மகா தெய்வமென வாழ்த்துதல்செய் - பொன்முகரி 
    யாறுகாட் டுந்த்திருக்கா ளத்தி வரைத்தெய்வம் 
    பேறு காட் டும்மெய் பெரிது. (16)

    கட்டளைக் கலித்துறை.

    பெரியா ருரைக்கு நெறிநின்று வஞ்சகப் பேய்கடம்பாற் 
    றிரியாதெஞ் ஞான்றும் பசித் துவந் தோருண்ணச் செய்துமத்த 
    கரியானை யீருரி போர்த்தநற் காளத்திக் கண்ணுதலைப் 
    பிரியாது ளத்திற்சிந் தித்திருப் பின்முத்திப் பேறுறுமே. (17)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

    முத்திருக்குங் கரிக்கோட்டு முலைமடவார் தம்முடனே 
          முயங்க நாடும்
    வித்திருக்கு மடநெஞ்சப் பேயனேன் மருலாம் 
          பேண லென்றோ
    ஈத்திருக்கு மலர்க்கரத்தான ளினத்தான் கரங்கூப்பி 
          நய்ந்து போற்றுங் 
    கொத்திருக்கும் பூம்பொழில்சூழ் காளத்திப் பதிமேவுங்
          குழக னாரே. (18)

    கலிவிருத்தம்

    குமுதமு நளினமுங் குலவு பூஞ்சுனை 
    யமைவொடு பலவுறு மணிகொள் காளத்தி 
    விமலரொண் டிருப்பணி விளங்கச் செய்குவோ
    ரெமபய மகன்றுபே ரின்ப மேற்பரே. (19)

    ஊர் சிலேடை 
    நேரிசை வெண்பா

    கம்பரநே ரும்முலையார் பார்வையிடை மாதவர்வாக் 
    * கம்பரங்காட் டுஞ்சீகா ளத்தியே - வெம்புகைநேர் 
    கூற்றுக் கொடியார் குவலயமுண் டாமரைவா 
    யேற்றுக் கோடியா ரிடம். (20)

    வினுவுந்தரம். 
    நேரிசை வெண்பா. 

    இடமார்சீர் வள்ளலிலோ ரேந்தலும்வெண் சோறும் 
    மடவார் நிறையும் வயினுந் - தடநாக 
    நாரிசார் காளத்தி நம்பரன்பா கேளுயர்பூம் 
    பாரிசா தங்கற் பகம். (21)

    அம்மானை
    கலித்தாழிசை.

    கற்றோர்க ளேத்து திருக் காளத்தி யீச்சுரனார் 
    வற்றாப் பெருங்கடல்போன் மாநிதியா ரம்மானை 
    வற்றாப் பெருங்கடல்போன் மாநிதியா ராமாயின் 
    பற்றாம ணேற்றடியும் பட்டதே னம்மானை 
    பதியேழை யாளெனமேற் பட்டனர்கா ணம்மானை. (22)
    ---
    ஆம்பரம் - கடல், ஆகாயம்; அம்-அழகு; பரம்-மோக்ஷம்,

    இாங்கல்
    மடக்குத்தாழிசை

    மான்கைபற்றின ரெனதுமெய்த்தவ மான்கைபற்றிலர் கூடலில் 
    வளைகணேர்ந்தவர் கனகமாமணி வளைகணேர்ந்திலர் சேரர்தங் 
    கோன்கொளக்கவி மாலைதந்தவர் கொன்றைமாலைகை தந்திலர் 
    கொம்பர்யானைமுன் வந்தணைந்தவர் கொங்கையானைய ணைந்திலர் 
    வான்குலாவமு தங்கொடுத்தவர் வாயினூறமு தங்கொடார் 
    வாரிநீசற வேசெய்தார்மிக வடிகணீரற வேசெயார் 
    நான்கறத்தவ ருய்யவீந்தவர் நங்கையாருய வீந்திலர்
    நாடுகாளத்தி நாதரிங்கன டத்துநீதிய நீதியே. (23)

    வஞ்சித்துறை

    நீதிர்கா ளத்திவாழ் 
    நாதர்சீ ரரர்சர
    ணோதுமெய்ப் பத்தர்க
    டீது தீர்ந் துய்வரால். (24)

    சுவடு கண்டிாங்கல்
    கட்டளைக் கலித்துறை.

    ஆலடி வைகிய காளத்தி நாதர்த மக்கினிக்கண் 
    போலடியைச் சுடும் பாலையிற் புல்லின்ம ருண்டுசென்மான் 
    சாலடி யாங்கது தோலடி யாமிவை சார்செம்மலின் 
    காலடி யாமவை யீதுநம் மாதின் கவினடியே. (25)

    கொச்சகக்கலிப்பா

    கல்விகலக் தேதராக் கசடர்கடம் வாயினின்று 
    பல்விதமுஞ் சொல்லிப் பரிதவிக்க வையாமல் 
    வல்லினையை நீக்கி வளம்பெறச்செய் மாரன்றன்
    வில்விளையும் பண்ணை வியன்காளத் திப்பரனே. (26)

    நேரிசை வெண்பா

    பரமன்கா ளத்திமலைப் பாங்கருறைக் தோங்கு 
    மரிவைகண் கண்டுமருண் டார்மா-னிருவிசும்பி 
    லொன்றம் புலிதன்பா லோடியாள் வாயபய
    மென்றொட்டி மேவுறுமெய்யே. (27)

    குறள்வெண்செத்துறை.

    மெய்யன் புடையோர் விழைகா ளத்தி 
    யையன் கழலுக் ககமாம் பூவே. (28)

    கட்டளைக்கலித்துறை.

    பூபாலர் நித்தமும் வாழ்த்துமொண் காளத்திப் புண்ணியனைக்
    காபாலங் கைக்கொண்ட கம்பீர னைக்கொன்றைக் கண்ணியனை
    மாபா லனநிறை லாவண் ணியனை வழுத்துமன்பர்
    கோபால மாதி யுறுப்புற் றிறையுருக் கொள்ளுவரே. (29)

    மேகவிடுதூது.
    நேரிசை வெண்பா.

    கொண்டல்கா ளும்போற் குறித்தபரு வத்துதவி 
    மண்டலத்திற் செய்குவோர் மற்றெவர்தாம்-விண்டெனுமான் 
    மேலிவருங் காளத்தி வித்தகசோ டெற்சேர்த்திங்
    காவி நிற்கச் செய்யி னறம். (30) 

    சம்பிாதம். 
    பன்னிருசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம். 

    அண்டுமண் ட்ங்கடமை முட்டையாக் கொண்டுசென்
          டாடிவல் லமைதெரிப்போம் 
    அவிருமெழு கடலையுள்ளங்கையின் மறைப்போ
          மடர்ந்தநீ ரமுதாக்குவோம் 

    கண்டருங் கனலைப் பிழிந்துசா றாக்கிக் 
          கனிந்தினிய வாய்மடுப்போம்
    கடிகொள்கா வலரைவன் னாரினிற் கட்டியே
          கண் கணீர் பொழிய லைப்போம் 

    புண்டரி மதனில்வெம் புண்டரிக மேறுமற்
          புடிமெவர்க் குங்காட்டுவோம் 
    புல்லையும் புவியாக்கு வோமெபிற் புலியையும்
          பூசையிந் பொலியவைப்போம் 

    தொண்டரென நம்பா லடுத்த சிறு வர்கள்செயுந்
          தொழில்களிவை பூங்கோதைசேர்
    தோளர்நங் சாளத்தி நாதர்போல் வேறொரு
          சொரூபமுருங் காண்பிப்பமே. (31)
    -------
    * புண்டரிகம் - கழுகு, புலி.

    மறம். 
    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம். 

    மேதகுசீர்க் காளத்தி மலைப்பு றச்தே
          விறலொடுவாழ் மறவர்கள்யா மெம்மி டத்திற் 
    பேதமின்றி யரையன்விடு தூத னென்றும்
          பிறங்குகும ரிக்காகத் திருமு கந்தா 
    னீதென்றஞ் சுருளோலை யொன்றை யெம்மு
          னெடுத்துவைத்த வொருதூதா வியம்பக் கேண்மெய்ப் 
    போதமென்ப திலையோநும் மரைய னுக்குப்
          புத்திமுழங் கான்மட்டோ புல்லன் றானோ. (32)

    இதுவுமது

    புல்லரையன் விருப்பத்தின் படியே நீதான்
          போய்த்தேடித் திரிந்தலைந்தாம் காட்ட கத்தே 
    நல்லகும ரியுங்கிடைக்கு மணமு மெய்து
          நவில்சோறும் பெறலாமேற் சுகமு முண்டாம் 
    செல்லுறுசீ காளத்தி வரையின் பாங்கர்ச்
          செல்லாவா னும்மரையன் செயல்கள் யாவும் 
    வில்லம்பு கொண்டுசிறா ரெதிர்த்துக் கொல்வார்
          மீண்டோடிச் சென்றிடினுன் வினைநன் காமே. (33)

    தழை,
    அறுசீர்க் கழிநெடிலடி பாசிரியவிருத்தம்.

    நங்கையா லிறைவநீ தந்ததழை யீதென்றே
          னளினக் கையா
    லங்கேற்று ண் மகிழ்கூர்ந்தாள் கொங்கையின்மீ தனைத்தாள் காத்துப்
          ரளகஞ் சேர்த்தாள்
    பொங்கொ ரிசேர் கண்ணிலொற்றிக் கொண்டாண்மே லெதித்தரை
          பூசிக் கொண்டாள்
    திங்கடவழ் காளத்தி வசைப்பெருமா னருளெனவே
          சேவித் தாளே. (34)

    நேரிசை வெண்பா.

    செவித்துப் பத்திரசந் தேங்க வடிவமுற்றும்
    பரவித்து முத்திப் பயன்பெறுவோங்-கோவித்து
    நீளந்ம் திரிந்துழன்ற நெஞ்சமே வஞ்சமறக் 
    காளத்தி நாதரைநாங் கண்டு. (35)

    வஞ்சிவிருத்தம்.

    கண்ட முச்சுடர் கண்களாக் 
    கொண்ட காளத்திக் கோன்பதப் 
    புண்ட ரீகப் பொலன்மலர் 
    தொண்ட ராம்வரி சூழுமே. (36)

    நேரிசை வெண்பா

    சூழ்செஞ் சடிலமிசை தும்பைமலர் வைத்தபிrஆன் 
    காழெயினன் கண்ணப்பக் கண்டபிரான்-தாழ்வதின்றி 
    யாளத் திருநடன மம்பலத்திற் செய்தபிரான் 
    காளத்தி மேவுபிரான் காண். (37)

    குயிற்பயிற்று.
    நேரிசைவெண்பா.

    காளகண்ட மென்றொருபேர் கண்டகுயி லேவயமார் 
    காளகண்டன் வந்தானொண் காளத்தி-யாளுமகா 
    தேவன்வந்தான் ஞானபர தேசிகன்வந் தானென்றே
    காவினின்று கூவுவைவா காய். (38)

    இடைச்சியார்
    அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்.

    காலோவா தொளிர்திருக்கா ளத்திநகர் மேற்றெருக்கட்
          காமர் வாய்ப்பப் 
    பாலோபா லெனக்கூவு மணிசேர்சிற் றிடைச்சீர்நும்
          பால்கொள் வார்க்குச் 
    சாலோரும் பசித்தழல தவிக்குமென்றீர் வெங்காமத்
          தழல விப்பின் 
    மேலோது முளங்சளிப்பப் பெறுவேநும் பாற்குடத்தை
          விசைவிற் றானே. (39)

    மதங்கியார். 
    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

    விரதவித் தகர்கணின தெழிலாற் காம
          வெறிபிடித்துத் தண்டையந்தா டஞ்ச மென்றே 
    பாதவித்து ளுழவக்கா ளத்தி யாஞ்சீர்ப்
          பதிக்கணா டிப்பாடு மதங்கி யாரே 
    சுரதவித்தை வல்லவளென் றுங்கை வாளுந்
          துணைவிழியா மைவாளுஞ் சொல்லு மென்றே 
    சாதவித்து வான்கண்மகிழ்ந் துரைப்ப ரென்னிற்
          சாற்றுவதற் கரிதாநுஞ் சமர்த்துத் தானே. (40)

    கட்டளைக்கலித்துறை.

    சம்போ சிவசங்கரதேவ தேவ தயாளவென்று 
    னம்போ ருகத்தா ளிறைஞ்சிடு வார்க்கு மறிவதில்லா 
    வெம்போ லியர்க்கு மிரங்குவ துன்ற னியற்கையன்றோ
    கும்போ தயமுனி யேத் துறுங் காளத்திக் கொற்றவனே. (41)

    இரங்கல். 
    அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம். 

    வரமேதக் தாட்கொள்ளுஞ் சீகாளத் திப்பரமர்
          மலைநாட்டின்க 
    ணுரமேவ வந்தணைந்த கண்ணாள ரன்றுரைத்த
          வுறுதி யாமுக் 
    தாமேயென் னுளத்தெண்ணி வரவுபார்த் திருந்தேன்சொற்
          றலிரிந்து விட்டார்
    திரமேயில் லாதவர்க ளென்பெறுவார் கிளியினங்காள்
          செப்பு வீரே. (42)

    இதுவுமது

    வீங்கோதைக் கடலுலகர் விண்ணுலகர் புகழ்வள்ளல்
          மிஞிறு மூசுந்
    தேங்கோதைக் கண்ணியன்சீ காளத்திப் பரனிமயச்
          செல்வி ஞானப் 
    பூங்கோதை நாயகன்மீ திவள் கொண்ட மோகமது
          பொருந்து மென்றல் 
    பாங்கோதை யலர்க்கழகோ நேரிங்க னுரைப்ப தெல்லாம்
          பயன்வ ராதே. (43)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

    வரமேவு முனிவர்க ணிதம்புகழ்கா ளத்தியான்
          வார்ச டைக்கட்
    பரமேவு மம்புலியு மிடைக்கண்மக வெம்புலியும்
          பரிந்திருக்க 
    வரமேவு கோட்புலியுஞ் சிறப்புலியுந் தாளடைந்த
          வுறுதி யாலே 
    தரமேவும் பொதுநாடி யோர்புலிகாத் திருப்பதுநேர்
          சாரத் தானே. (44)

    கலிநிலைத்துறை. 

    சாரதை கேள்வன் றாபமொழித்த தகையாளர்
    * தூரியர் காளத் தீசர்ப தத்தைத் தொழுவீரேற் 
    பாரிநன் மக்க ளாதியர் சுற்றம் பலர்சூழ 
    வாரியை நேர்சீர் மேவிந லாபுளும் வளர்வீரே. (45)
    ----
    * தூரியர்-கடவுள், இடபவாகனர்.

    வண்டுவிடுதூது.
    நேரிசைவெண்பா

    வண்டேகா ளத்தி வரைப்பிரான் வீதிவரக் 
    கண்மெயல் கொண்டுட் கலங்குகின்றேன்-செண்டுநிக 
    ரெந்தனஞெ முங்கச்சேர்ந் தின்பந் தரச்செய்வாய் 
    வந்தனங்காண் முன்பூ மணம். (46)

    கட்டளைக்கலித்துறை. 

    மணமே யிலாவெவ் வெருக்கலர் கள்ளி மலர்களைப்போற் 
    குணமே யொருசிறி தேனும் பெறாத்துட்டர் கூட்டமொன்றிப் 
    பணமே பரமென் றலைநாயி னேற்கருள் பாலிப்பையோ 
    வணமேவு கீர னிடர்தீர்த்த காளத்தி மாதவனே. (47)

    நேரிசை வெண்பா. 

    மாதவனுக் திச்சீர் மதலை தொழுமதலைக் 
    கோதையன்கா ளத்திக் குவட்டிடத்திம் - மாதின்றோள் 
    வேய்விழிநீ லம்பன் மிளிர்முத் ததரமுருக் 
    கேய்கொங்கை வேண்மகுட மே. (48)

    கொச்சசக் கலிப்பா.

    மண்ணளந்த மால்விடைமேல் வந்தன்பர்க் கருள்புரியுங்
    கண்ணளந்த காளத்திக் கடவுளுறை வரைசூழ்ந்த 
    தண்ணளந்த பொழிலின்மயிற் சாயலா டொனிகேட்ட 
    பண்ணளந்த சுரும்பரறு பதமாகி யகலாவே. (49) 

    நேரிசைவெண்பா

    அடியரினங் கூட்டு மவிச்சையெலா மோட்டுங்
    கடினமற வீட்டின்பங் காட்டும்-வடிவமொளிர் 
    துப்பனார் வேதந் துதிக்குஞ்சீ காாளத்தி
    யப்பனார் மெய்த்தண் ணருள். (50)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருக்கம். 

    அருள்விரவு மலர்க்கண்ணு மதிமுகமுஞ் செஞ்சடையு
          மலிர்செவ் வாயும்
    பிரசம்வழி பூமதலைப் பூங்கோதை சேர்புயமும்
          பிறங்கு மார்பும் 
    பரசொடுமா னொளிர்காமும் விளங்குதிருக் காளத்திப்
          பசரனென் றோதுங் 
    கரிசகல்சற் குருநாதன் சரணார விந்த முமென்
          கணினீங் காவே. (51)

    நேரிசை வெண்பா

    காலன் றனையுதைக்க கஞ்சத்தா ளெங்கோனைக் 
    கோலமுயர் ஞானப்பூங் கோசைமின்னைக்-தோலுரத்தோல் 
    மாகலிங்க மாக வனைந் தொளிருங் காளத்தி 
    நாகலிங்க மாகனையுண் ணாடு. (52)

    கலி நிலைத்துறை

    நாடுபொன் முகரியென்றோதுநன் னதியினி னனைவேனே 
    பூடணச் சிவமணி மாலைவெண் பொடிமெயிற் புனைவேனே 
    மாடுயர் மதிலுறு கோயிலை நனிவலம் வனைவேனே 
    நீடரு டருதிருக் காளத்தி யிறைபத நினைவேனே. (53)

    கட்டளைக்கலித்துறை

    நினைத்தண் கடல்பெறு நற்பிள்ளை யென்றென்ற னெஞ்சிலுன்னச் 
    சினத்தங் கசனுடன் சேர்ந்தழும் பேமிகச் செய்கின்றனை 
    யனைத்தினுக் கும்முத லாவுள்ள காளத்தி யாண்டவர்தாந்
    தினத்துணை யும்பொறுக் கார்குரங் கீவருந் தீங்குனக்கே. (54) 

    நேரிசை வெண்பா

    தீங்கல் விடமுண்டு சேரமர மாதருக்கு 
    மாங்கல்ய மீந்த மகதேவா-வோங்கலுமை 
    நாயகா நாயே னலிவகற்றி யாண்டருள்செய் 
    சேயகா ளத்தியர சே. (55)

    கட்டளைக்கலித்துறை. 

    அருஞா யிறுமதி செவ்வாய் புதனொண் வியாழநற்சுக் 
    கிரன்வெஞ் சனியிரு பாம்பா மிராகுகே தென்துறுரைசெ 
    யொருநவக் கோட்களின் வேதையுந் தாழுமொன் னாரொம்மலுங் 
    கரிசறக் கண்பார்த் தருடிருக் காளத்திக் கற்பகமே. (56)

    அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.

    பகரருங்கா ளத்திவரைத் தேசிகன்ற னருள்பெற்ற
          பன்னெண் சித்தர் 
    ககனசித்த னென்றுரைப்பா ரிரும்பையெலா நாகமதாக்
          காட்டிப் பின்னர் 
    திகழுறுவா னவர்மேவப் பொன்னாடாச் செய்திவைத்தோஞ்
          சேர்கூழ் போது 
    மிகழ்வடையோ மடுத்தவரு மாசைகொள்வார் குறைவில்லை
          யென்றுங் காணே. (57)

    நேரிசை வெண்பா

    காண வரிதெயினக் கண்ணப்பர் மிச்சிலூன் 
    தாணுவுண் டின்பமுத்தி தந்திட்ட-மாணிதுவென் 
    றண்பருரை தென்கயிலை யாங்காளத் திப்பதியை 
    யின்பமுறக் கண்டவர்கட் கீடு. (58)

    நிந்தாஸ்துதி.
    தாய்க்கூற்று. 
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். 

    ஈட்டுக்கொவ் வாததlஐ யோட்டிலிரந் திட்டான்சீ
          ரியைந்த பாண்டி 
    நாட்டுள்வைகை மண் சுமந்தா னடிபட்டான் காளத்தி
          நகர்க்க ணுற்றான் 
    காட்டெயின கெனச்சிலுண்டு கண்பறித்த தீக்கண்ணன்
          காசுப் பைமேற் 
    போட்டெங்குக் திரிவானன் னவன் காதன் மின்னேநீ
          பூணல் வீணே. (59)

    பாண்
    கொச்சகக்கலிப்பா

    வீணா டவர்களொடு மெல்லியர்கள் சேர்ந்தணையப் 
    பாணாநீ தூது படிந்து றலா பரசமதாஞ்
    சேணார்கா ளத்திவரைத் தேவனா ரன்பர்முறை 
    மாணாரும் வீணையினில் வைத்திசையுண் டாந்திருவே. (60)

    நற்றாயிரங்கல். 
    அறுசிர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம். 

    திருமானொண் படிகமா னும்படிவங் திகழ்ந்துவளர்
          செழுமான் போற்றுங் 
    குருமான்மெய்ஞ் ஞானப்பூங் கோதைமா னொடுகுலவுங்
          கோமா னேயான் 
    தருமானின் மயல்கொண்டு மகன்கரத்திற் காற்றாமற்
          றகுகா ளத்திப் 
    பெருமானே யெனக் கண்ணீர் பெருக்குகின்றா னனைந்து சுகம் 
          பெறக்கண் பாரே. (61)

    ஒருவிகற்ப நேரிசைவெண்பா

    பாவிற்குட் டேவர் பகர்செந் தமிழ்க்குறட்பா 
    காவிற்குட் கற்பகப்பூங் காவாமே- தூவைக்கொ 
    ளாவிற் கருமுனியா வன்பிற்குக் கண்ணப்பர் 
    தேவிற்குட் காளத்தித் தே. (62)

    குறள்வெண்பா, 

    காளத்தி நாதன் கழற்கன்பு செய்மனனே 
    * கோளத்தி யோடுங் குமைந்து, (63)
    --------
    * கோள் -நவக்கிரகம் 

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருக்கம்.

    குமரனைப் பொருளென் றாருக் குவலய மிருளென் றாகு
    மமர்மழு வேந்தி னாரு மாலத்தை மாந்தி னாரு
    மமதையைப் பிரியென் றாரு மாமறை பரியென் றாரு
    f கமையுயர் போத னாருங் காளத்தி நாத னாரே. (64)
    ------ 
    f கமை-பொறுமை, போதன்-ஞானசொரூபி.

    கிள்ளைவிடுதூது
    கட்டளைக் கலித்துறை.

    நாதஞ் செறிகங்கஞ் சூழ்வயற் காளத்தி நாதர்தம்பாற் 
    சூதக் குயிலை முன் றாதுவிட் டேனது சூதமுற்றுப் 
    பேதகஞ் செய்தது நீயப் படிக்கலை பேசியென்னை
    யாதரத் தோடணை யச்செய்நின் பேர்வரு மஞ்சுகமே. (65) 

    குறம்
    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 

    சுகம்விரவ தக்கினகை லாச மேவுஞ்
          சுந்தரனா ரருள்பெற்ற பூங்கு றத்தி 
    சகமதனி லுயரிரைசேர்ந் தோங்குங் கண்ண
          சயசாலி மகிழு மருச் சுனனென் போலும்
    பகரரிய குறத்தியுருத் தாங்கிக் கூடை
          பங்கயக்கை யாலணைத்துப் பலனுஞ் சொல்லி
    யிகலறவோ ரொண்டொடிக்கை யிசையப் பெற்ற
          தெவரறியா செங்குறியிங் கியம்பக் கேளே. (66)

    இதுவுமது. 

    கேளம்மே யிருநாழி நெல்லுந் தூசுங்
          கிட்டவைத்தே யிருந்துன்றன் வலக்கை நீட்டிங் 
    கேளனமா வெண்ணாதே யாசை கொண்ட
          வெழிலாளர் காளத்தி நாத ரன்றோ
    நாளையே வந்தணைந்துன் மயலைத் தீர்ப்பார்
          நல்லவரோ ராண்பிள்ளை பிறக்கு மெய்பார்
    மீளியா மப்பிள்ளை வேல னென்றே
          வியன் பேர்கொண் டோங்கிடுவான் மெய்ச்சும் பாரே, (67)

    பிச்சியார்
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிப விருக்கம். 

    மெய்ச்சியா ரணங்கள் போற்றம் விரைமலர்ப் பதத்தார் வேதத்
    துச்சியார் சீகா ளத்தி யும்பனார் நாட்டி டத்தே
    பிச்சியார் குழலுஞ் சேல்போற் பிறழு நும் விழியுங் காணி
    னிச்சியா ரெவர்தா நூல்போ லிடையுடைப் பிச்சி யாரே. (68)

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய வி ருக்கம், 

    பிச்சாடன ராகிக்கெரு வீச்சார்முலை கொன்றீர்
          பிச்சாவெனு மத்தூய்றவ டுத்தேவர வென்றீர் 
    பொச்சாப்பகன் மச்சானையண் மெய்ச்சாதெரு தென்றீர் 
          பொற்பாரெயி னக்காளை தரத்தூத்தசை தின்றீர்
    விச்சாதார் சொற்காமுறு நற்காளத்தி நின்றீர்
          மெய்ப்போதவி டைக்காடன்பி னெய்ப்பாடுபு சென்றீ 
    ரெச்சால்புமி லாமத்தனை பச்சாத்தப மொன்றி
          யெப்போதுவந் தருள்செய்குவீர் முப்பார்தொழும் பரரே. (69)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

    பருணித ருளக்க டத்திற் பதுமம்போ லலர்ந்து ளாரு 
    மருணிறை யுமைக் கறத்தி னாறொழுக் கறிவித் தாருங்
    தெருணிக மாக மத்தின் செல்வமாத் திகழ்ந்துற் றாருங் 
    கருணைக்கோர் கடலன் னாருங் காளத்தித் தலைவ னாரே. (70)

    தவம்
    நேரிசை வெண்பா

    தகுந்தவக்க ரென்னத் தடமலைகான் மேவி 
    மிகுந்தவத்தை யுற்றலைய வேண்டா-முகுந்தவத்த 
    னுந்திவந்தோ னோது முயர்காளத் திப்பதியை 
    வந்தித்தன் மாதவமம் மா. (71)

    மடக்கு
    கட்டளைக்கலிப்பா.

    அஞ்செ ழுத் துண காரம்பம் பாதியே
          யமலைக் கீந்த தவிருடத் பாதியே 
    வெஞ்ச மர்த்தனு மேருவே தண்டமே
          மிக்க தந்திரத் தந்தம்வே தண்டமே 
    மஞ்சு மானக்கஞ் சாறர்பா லோதியே
          மாம ணத்தி னிறைகொண்ட தோதியே 
    பஞ்ச பூதத் தலத்துளொன் றானதே
          பாந்த ளத்திப் பதியிலொன் றானதே. (72)

    களி. 
    எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

    ஆலத்கை யுண்டமார்க் கமுக ளித்தங்
          காண்டதிருக் காளத்த யப்பன் றாட்சீர்
    தாலத்திற் பாடிவருங் களியர் யாஞ்சொல்
          சங்கதிகள் கேளப்பா வாண்பெண் கூடிக் 
    காலத்தில் யோனியின் வாய் வந்தி டாமே
          கலயத்திற் பிறந்தோன்வெண் கல்லிற் சம்பு 
    பாலத்துக் கண்ணொன்றிற் பிறக்த சேயைப்
          பகர் * முறத்திற் பிரிந்தவெங்கள் பரனென் றானே.(73)
    --------
    * முறம் - விசாக நஷத்திரம்

    இதுவுமிது. 

    பரிவாக விதிவுங்கேள் விந்தை யாமாற்
          பாரறியப் பெண்கொடுத்த மாமி யாரை 
    யுரிமையொடு மணைந்துபெருங் குடிய னானா
          னொருசாலுண் டிருகாலங் கற்றோ னானா 
    வரியவுர சரசு மிஃ தறியும் பொய்ச்சொ
          லறிந்திடோ மெமக்குக் கண் மயக்க மில்லை 
    வரர்பரவுங் காளத்தி நாதர் தோள்சேர்
          வஞ்சியைப்பூங் கோதையென வழுத்தல் சால்பே. (74)

    இதுவுமதி. 

    சாதியிலே யுயர்ந்தோர்யா மிருக்கச் சைவச்
          சாதியென்று மாதிசைவ ரெனப்பேர் கொண்டு 
    நீதிசே ராரியர்தாம் பணிகள் செய்ய
          நிட்களவ நாதிசைவச் சாதி தானென் 
    றோதியசீ காளத்தி யப்பன் பின்ன
          ருண்டானூ னதுவுமெச்சி லவன் குமாரன் 
    காதலுடன் சட்டியினிற் கொக்க வித்தான்
          கண்கூடாக் கண்டவரைக் காண்பிப் போமே, (75)


    நேரிசை வெண்பா,

    காளத்தி யின்னமுதாக் கண்டுட்கொண் டாண்டதெய்வக்
    காளத்தி நாதா கனனேகங்-காள 
    திரிசூல பாணியெனச் சிந்திப்பார்க் குண்டோ 
    பரிசூல கால பயம். (76)

    கொச்சகக்கலிப்பா

    பஞ்சமமார் மேனி பசந்துள்ளம் வாடுகின்றேன் 
    வஞ்சகமா யென்னை மறந்திருத்தன் மாட்சிமையோ 
    கஞ்சமலர்க் கண்ணாயென் கண்ணாளா காதலித்தா 
    ளிஞ்சியைமஞ் சாளு மெழிற்காளத் திர்த்தவனே. (77)

    நேரிசைவெண்பா

    தளர்ந்தவர்கட் கீயாத் தனமுநூன் மாட்சி 
    யளந்துனர்க் தார்பா லளாவி - யுளந்திருந்தா 
    மாந்த ரறிவும் வரன்காளத் திப்போற்றார் 
    சாந்தமுமோர் பேறின்மை தாம். (78)

    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

    இன்னறருங் கொடும்பிணியா லுள்ளம் வாடி
          யிளைக்கின்றே னென்செய்வே னேழை யந்தோ 
    யுன்னியடி யிறைஞ்சுபவர்க் கருள்கா ளத்தி
          யோங்கலில்வாழ் மருத்துவமா வாரி யாநீ
    தன்னவனில் வடிமையெனத் திருவு ளத்திற்
          சற்றெண்ணிற் பிணிக்குழாஞ் சலித்தி டாதிங் 
    கின்னமுந்தா னிருந்திடுமோ கடைக் கணித்தா
          ளேறுமீக் கூறுனக்கிவ் விருநி லத்தே. (79 )

    அறுசீர்க்கழி நெடிலடி யாசிரியவிருத்தம்.

    இரு நாகஞ் செவிக்கணியாக் கொண்டதன்றிச் சிரங்கரமே
          லிடையி டத்தும்
    பெருநாகஞ் சேர்த்துள்ளீர் முனி நாகங் காத்துளது
          பிறங்கும் பூசை
    யொரு நாகஞ் செயலினத் சாற் காளத்திப் பெயர்வாய்ந்த
          வூர்ப்பா னீருந்
    திருநாத லிங்கரெனி லுமையஞ்சா தடுத்தெவர்தாஞ்,
          சேவிப் பாரே. (80)

    மேகவிடு தூது. 
    நேரிசை வெண்பா

    பார்சொல் முகில்காள் பழமறைசொல் காளத்திப் 
    பேர்சொல் வரைப்பாற் பெருமான்முன்-னீர்சொல்லுஞ் 
    செப்போது மென்முலைமான் சேர்ந்தணைய நின்வரவுக் 
    கெப்போது நோக்குகின்றா ளென்று. (81)

    சவலை வெண்பா.

    என்றுாழ்பற் பேர்த்த விறைவ னிருடிமைந்தற் 
    கன்றூ ழகற்றுகா லாந்தகன்முன் 
    மாகாளக் திப்பரமன் மாமகிமை கண்டாரே 
    சாகாத மெய்ம்மா தவர். (82)

    ஊசல்
    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

    தகைபெறு நான் முகன்மாலும் வணங்கிப் போற்றச்
          சதமகனா தியவிபுதர் மலர்கள் தூற்றச் 
    சுகவாணி கமலைரதி சசியா மாதர்
          சொல்லுறுசாம் பூனதப்பொன் வடந்தொட் டாட்ட 
    அகமகிழ்பல் வாத்தியங்கண் முழக்க மார்ப்ப 
          வானந்த முடன் கவிஞர் விருது பாடத் 
    திகழ்ஞானப் பூங்கோதை யொருபான் மேவச்
          சீகாளத் திக்காசே யாடீருசல். (83)

    பாங்கி தலைவன் வரவைத் தலைவிக் குணர்த்தல். 
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்,

    ஆடு மயிற் சாயலுறு மணங்கனையா ரிருவர் தமக்
          கருள்செய் தாண்ட 
    நீடுபுக ழரனாரொண் டிருக்காளத் திப்பதிவாழ்
          நேரி ழாய்நீ 
    வாடு தனீத் துளங்களிகூர் மைக்கடலி லுதித்தபெரு
          வலம்பு ரிச்சங் 
    கீடுபெறு நின்னன்பர் கொடிக்கேரி லொலிக்கின்ற
          திருவானத்தே. (84)

    கசிர்காலம்
    எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்.

    வானமின்னி யறலைகனி வழங்குங் காலம்
          வளமல்கு பரிதியொளி மழுங்குங் காலம் 
    ஈனமறு முடுக்கள்குழா மிடையுங் காலம்
          எண்டிசையும் பெருவாடை யெறியுங் காலம் 
    கோனனங்கன் மணக்கோலஞ் செய்யுங் காலம்
          குயிலினந்தான் குரலெடுத்துக் கூவாக் காலம் 
    மானனையார் விரகத்தான் மறுகுங் காலம்
          வண்காளத் திப்பரமர் மருவாக் சாலம். (85)

    கைக்கிளை
    மருட்பா

    காமர்மத னம்பு கடுக்கும் விழியிமைக்கும் 
    தேமலர்த்தார் வாகிந் திருநுதற்கட் - டாமவெயர் 
    வார்தலா லணங்கல ளிவன்
    சீர்கா ளத்திச் சிலம்பவிர் மாதே. (86)

    உயிர் வருக்க மோனை
    நிலைமண்டிலவாசிரியப்பா. 

    அவிருல கெலாஞ்சொல் சிவபாஞ் சுடரை 
    ஆகற விளங்குப தேசசற் குருவை 
    இசைபெறு மறைமுடி மிசையுறு மாதியை 
    ஈனந்தம் போக்குபே ரானந்த மூர்த்தியை 
    உடுவினக் கவிஞர்த மிடைமதி மதியினை 
    ஊனமென் றென்றுமில் ஞானவா ரிதியை 
    எவனமிக் கொளிரும் பவளா சலத்தை 
    ஏகமா நிறைந்தசி வோகமாம் பொருளை 
    ஐவகைக் கிர்த்தியஞ் செய்மாட் சிமையை 
    ஒலிகட னஞ்சுண் டிலகுநித் தியத்தை 
    ஓமெனுங் காளத்தி மாமலை மருநதை 
    ஒளவிய மறத்துதி செவ்வக னுறவே. (87)

    சீர்பாதப் புகழ்ச்சி 
    எழடிப்பஃறொடை வெண்பா

    வேளைத் தருமால் விழியொன் றாமர்ந்ததுவு
    நாளத்தொண் கஞ்ச னயந்திருச் சித்த துவுந்
    தாளத்த னப்பரவை தன்னி லுழன்றதுவு
    நீளத்த போதனர்த நெஞ்சத் திருத்துவதும்
    வாளொத்த கூற்றன் மடிய வுதைத்ததுவுங் 
    கோளைத் தெறுமன்றிற் கோநடஞ் செய்ததுவுங் 
    காளத்தி யப்பன் கழல். (88)

    இனியவை, 
    கலிவிருக்தம். 

    கல்லார்க் கறிவுறவே கற்பித் திடலினிதே 
    இல்லார்க் கியாதேனு மீந்தின் புறவினிதே 
    நல்லார் வலர்சொ னயத்தொழுக றானினிதே
    தொல்லார்கா ளத்திச் சுகனைத் தொழலினிதே. (89)

    நேரிசைவெண்பா

    இனமணிக ளார்கடற்பா ரிற்பொல்லா நாயேன் 
    வினையினுற் சால மெலிந்தே-னனைபோல்வந்
    தாண்டருள்செய் காளத்தி யப்பனே சிற்சபையிற் 
    றாண்டவஞ்செய் தோங்கும்வர தா. (90)

    கட்டளைக்கலித்துறை. 

    தாளத் தனம்பெறுந் தையலர் காமத் தளையிற்சிக்கி 
    நீளத் தவித்துழன் றேங்குநெஞ் சேயவர் நேயமெல்லாஞ் 
    சோளத்தட் டைத்தினு மாமா நிகர்க்குக் தொடர்பொ ழித்திங் 
    கானத் தகுந்திருக் காளத்தி யப்பனுக் கன்புசெய்யே. (91) 

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம். 

    செய்யனே சுடரார் முக்கட் டேவனே போற்றி மான்கொள் 
    கையனே கடனஞ் சுண்ட கண்டனே போற்றி விண்ணோ 
    ரையனே சுடுக்கை யந்தா ரணிந்தவா போற்றி மாதார் 
    மெய்யனே சீகா ளத்தி வெற்பனே போற்றி போற்றி. (92)

    நேரிசை வெண்பா

    வெயில்வீசு நீண்மேரு வில்லான்கா வில்லான் 
    வியனார்த நனாதுபுகழ் வில்லா - னியலார்பூங் 
    கோதையெனு மாது குலவில்லான் கற்றோர்சொல் 
    மேதைகா ளத்தி விபு. (93)

    நேரிசைச் சிந்தியல் வெண்பா

    விபசர்துதிக் கும்பெருமான் மெதகுநல் லன்பர்க் 
    கபயந் தரும்பெருமா னன்றிக் 
    காளத்திக் கும்பெருமான் காண். (94)

    குயிலை யிரத்தல். 
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்,

    காண்டீப தரற்கடல்சேர் பாசுபத மளித்தாண்ட
          கடவுண் மேவு
    நீண்ட சீர்க் காளத்தி வரை சூழ்மாஞ் சோலையினி
          னினந்து லாவி
    யாண்டிலகுந் தளிர்சோதி யாப்பியஞ்செய் குயிற்பிள்ளா
          யான்க ளிக்க
    கோண்டரா தின்னேவா வாவென்றெ னன்பர்வரக்
          கூவு வாயே!. (95)

    எண்சீர்க் கழிநெடிலடி பாசிரிய விருக்கம்,

    கூரானைக் கிக் கருத்திக் கருத்தி லின்பங்
          கூர்ந்தானை யண்டங்கள் கண்டு மாயை
    சாரானைப் பற்பலவாஞ் சமயந் சோறுஞ்
          சார்ந்தாளை வேள்விக்கா லையிலோ ராழிக்
    தேரானைப் பற்றகர்த்து விண்ணோர் கூற்றுந்
          தேர்ந்தானைச் சீர் வளருஞ் சீகா ளத்தி 
    யூாானை வையமுண்மால் விடையை யன்பா
          யூர்ந்தானைப் பத்திசெய்யா ரொதிபோல் வாரே. (96)

    கலிவிருத்தம். 

    வாவிநீ ரோடைகள் வகுத்து மாமண 
    மேவுநந் தனங்களு மிகவைத் தர்ச்சனை 
    பாவனை யொடுசெயும் பத்தர் காளத்தித்
    தேவர்தாட் பூவன்றிச் செகப்பூ மேவிடார். (97)

    தேரிசை வெண்பா.

    பூதப் படையான் புகழ்ந்துபா டன்பர்தமைச்
    சாகப் படையான் சகத்துளெவன்- கீதமிகப்
    டாடும்வண் டீர்புகன்மின் பங்கயன்மாற் கெட்டாத 
    கோடுயர்கா ளத்திலரைக் கோ. (98)

    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருக்கம், 

    கோகனகந் தவழெயில் சூழ் காளத்தி நகர்மேவுங்
          குழக னார்க்குக்
    கோகனக னுரங்கீண்ட நெடுமாலு மடிமையிருட்
          குழல்வெண் மேனிக் 
    கோகனக வாணிவளர் நாவயனு மடிமையெனிற்
          குலவு மா *முக் 
    கோகனக முளவெவரு மடிமையெனற் கையமுன்டோ
          குலமன் றோரே. (99)
    ------------
    * முக்கோ - மூன்றுலகம். கனம்-மேன்மை, கம் - கூட்டம்.

    இதுவுமிது. 

    மண்ணப்பங் கிவளிவிண்ணா மைம்பூத மாகியென்றூழ்
          மதியு மாகி 
    நண்ணப்பங் கயன்மாலு மறிவரிய பொருளாகி
          நவின் மெய்ஞ் ஞானக் 
    கண்ணப்பற் கிரங்கியமா தேவான காளத்திக்
          கடவு ளேமால் 
    வண்ணப்பம் பரமுலையார் மயனீக்கி முத்திநெறி
          வழங்கு வாயே. (100)

    வேறு.

    விசாருஞ் சீகாளத்தி மாத லத்தேவ ரீர் நும் 
    வாராரு மம்பு யத்தாள் வனைந்தனன் கலம்ப கத்தார்
    போருங் கடைக்க ணித்தென் பிறப்பொழித் தவிர்வீ டெய்தப் 
    போர்த வினைகள் யாவும் பிரித்த்ருள் புரிவீர் நீரே. (101)

    சீகாளத்திக் கலம்பகம் முற்றிற்று

    தனியன்
    அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருக்கம்.

    சாலிலா கனச காப்தந் தக்கவா
          யிரத் தெண் ணூற்றின் 
    மேலிகு பத்தே ழாண்டாம் வியன்குரோ
          தியிற்சீ ராடி 
    மாலெனும் வாரத் தன்று மாதுமா
          பதிக டாட்சச் 
    தாலுயர் சீகா ளத்தித் தலக்கலம்
          பகஞ் சொற் றேனே. 102

    வாழ்த்து.
    எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 

    அமரர்தொழு நாகலிங்கப் பெருமான் வாழி 
          ஆதிசத்தி ஞானப்பூங் கோதை வாழி 
    சமயமே லாஞ்சைவ சமயம் வாழி
          சாற்றரும்வெண் ணீறுருத்தி ராக்கம் வாழி 
    திமிரமகற் றமுதகு ண நால்வர் வாழி
          திருக்கடைக்காப் பாதிதமிழ் முறைகள் வாழி 
    யிமகிரி நேர் காளத்தி மலையும் வாழி
          யேர்கார்நீர் பார்வாழி யென்று மாதோ. 103

    கலம்பகப் பாட்டியல்

    சொல்லிய கலம்பகஞ் சொல்லியவொருபோகு 
    முதற்கண் வெண்பா கலித்துறை புயமே 
    யம்மானை யூகல் யமகங் களிமறம் 
    சித்துக் காலந் தீங்கே வண்டே 
    கொண்டல் மருள் சம்பிரதம் வெண்டுறை 
    தவசு வஞ்சித் துறையே யின்னிசை 
    புறமே யகவல் விருத்த மெனவருஞ் 
    செய்யுட் கலந்துட னெய்திய வந்தமு 
    மாதி யாக வருமென மொழிப. 104

    பன்னிருபாட்டியல்

    கலம்பகத் துட்புயங் கைக்கிளை தவமே 
    காலம் வண்டம் மானை காற்றுப் பாணன் 
    குறஞ்சித் திரங்கல் குளிர்தழை சம்பிரதம் 
    மறந்தூ தூசன் மதங்கம் மடக்கென 
    விரவிமூ வாறும் வேண்டு முறுப்பா 
    மொருபோகு வெண்பா வுடன் கலித் துறையிவை 
    நிரையே முதற்க ணின்று பிற் கலந்தவைம் 
    பாத்துறை விருத்தமந் தாதி வருமே 
    வந்தா லீசற்கு வருநூறு முனிமெய்யர்க் 
    கைந்த ஃகு தாசர்க் காக்தொண் ணூறு 
    மமைச்சர்க் கெழுப தைம்பது வணிகர்க் 
    கமைந்த வேனையோர்க் காறைந் தறவே.

    தொன்னூல் விளக்கம்
    ---------------------

    செய்யுள் முதற்குறிப்பகராதி. 
    செய்யுளும் செய்யுள் எண்ணும்

    அஞ்செழுத் - 72
    அடியரினங் - 50
    அண்டுமண் - 31
    அமரர்தொழும் - 103
    அரு ஞாயிறு - 56
    அருள்விரவு - 51
    அவிருலகெ - 87
    ஆடுமயிற் - 84
    ஆலடி - 25
    ஆலத்தை - 73
    இடமார் - 21
    இரு நாகஞ் - 80
    இனமணி - 90
    இன்னறரு - 79
    ஈட்டுக் - 59
    உண்கணா - 14
    உருப்பவள - 6
    எண்ணுறு - 8
    என்றூழ் - 82
    ஒன்றத்து - 10
    கங்கை நீர் - 2
    கண்டமுச்சுடர் - 36
    கண்பார்த் - 9
    கல்வி நல - 26
    கற்றோர் - 22
    கல்லார்க்கறி - 89
    கன்மடமா - 16
    காசரியார் - 8
    காணவரி - 58
    காண்டீப - 95
    காமர்மதன்பு - 86
    காலன்றனி - 52
    காலோவா - 39
    காளகண்ட - 38
    காளக்கடா - 6
    காளத்தி நாதன் - 63
    காளத்தி நாதா - 12
    காளத்தியின் -76
    குமரனைப் - 64
    குமுதமு - 19
    கூரானைக் - 96
    கேளம்மே - 68
    கொண்டல்கா - 30
    கோகனக - 99
    சம்போசிவ - 41
    சாதியிலே - 75
    சாரதை - 45
    சாலிவாக - 102
    சிற்ப நூல் - 13
    சுகம்விரவு - 66
    சுருதி - 9
    சூழ்செஞ் - 37
    செய்யனே - 91
    சேலன்ன - 4
    சேவித்து - 35
    சொற்றவ - 14
    தகுந்தவத்த - 71
    தகைபெறு -83
    தண்ணாரு - 3
    தராதல - 3
    தளர்ந்தவர்க் - 78
    தாளத்தன - 91
    திரமருவு - 7
    திருமானென் - 61
    தீங்கல் - 55
    நகப்பிராட்டி - 4
    நங்கைபால் - 34
    நாடுபொன் - 53
    நாதஞ்செறி - 65
    நிலம்பகர் - 1
    நினைத்தண் - 54
    நீதர்காளத்தி - 24
    நீர்பூத்த - 15
    பகரருங் - 57
    பஞ்சமமார் - 77
    பம்பரனேர் - 20
    பரவுமடியார் - 12
    பரமன்கா 27
    பரிவாக - 74
    பருணிதர் - 70
    பாவிற்குட் - 62
    பார்சொல் - 81
    பிச்சாடன - 69
    புயங்கந் - 10
    புல்லரை - 33
    பூதப்படையான் - 98
    பூபாலார் - 29
    பெரியார் - 17
    பொங்குறு -11 
    பொருளுணரா 2
    போர்விசயன் - 11
    மணமே - 47
    மண்ணளந்த - 49
    மண்ணப்ப - 100
    மாதவனுந்தி - 48
    மாவித்தகர் - 16
    மான்கை - 23
    முத்திருக்கும் 18
    மெச்சியார் - 69
    மெய்யன்புடை - 28
    மேதகுசீர் - 32
    வண்டேகா - 46
    வரமேதந் - 42
    வரமேவு - 44
    வரியளி - 7
    வாராரும் - 101
    வானமின்னி - 85
    வாவி நீர் - 97
    விபுதர் - 94
    விரதவித்த - 40
    வீங்கோதை - 43
    வீணாடவர் - 60
    வேளைத்தரு - 88
    வேளைத்தீய்ந்த - 5
    வையகஞ் - 13
    ----------------
    3.
    இக்கலம்பக உறுப்பகராதி.
    பாட்டு பாட்டு எண்
    அம்மானை
    இடைச்சியார்
    இரங்கல் 
    இனியவை
    உயிர்வருக்கமோனை
    ஊசல்
    ஊர்சிலேடை
    களி
    கார்காலம் 
    கிள்ளைவிடுதூது
    குயிற்பயிற்று 
    குயிலை இரத்தல்
    குறம் 
    கைக்கிளை
    சம்பிரதம் 
    சித்து
    சீர்பாதப் புகழ்ச்சி 
    சுவடுகண்டிரங்கல் .
    தவம் 
    தமை
    தாய்க் கூற்று 
    நற்றாயிரங்கல்
    நிந்தாஸ் துதி
    பாங்கி தலைவன் வரவை தலைவிக் குணர்த்தல்
    பாண்
    பிச்சியார்
    புயவகுப்பு
    மடக்கு
    மதங்கியார் 
    மறம் 
    வண்டுவிடுதூது
    வலைச்சியார்

    -------
    ஸ்ரீ காளத்திநாதர் சகடபந்தம்

    வஞ்சிவிருத்தம்

    கா ந மா ப ர மா சு கா
    கா சு மா சு ண நா ணா கா
    கா ணா நா டு று மா ள கா
    கா ள மா தி ர மா ந கா


    ஸ்ரீ காளத்திநாதர்.

    நேரிசை வெண்பா

    காளத்தியப்பா கடையேன் படுமிடர்தீர்க் 
    தாளத் தயையு ளமையாதென் - தாளத் 
    தனத்தென்முய் ஞானம்மை சாற்முது மென்மீ 
    வினைத்திறமோ வென்செய்குவேன்.

    ஸ்ரீஞானப்பூங்கோதையம்மை 
    நேரிசைவெண்பா. 
    தென்கயில் பென்முெளிரொண் சீகாளத்திப்பதிவாழ் 
    மன்கருனே ஞானமா மாதேவி:மென்சுழற்பூக் 
    தாமரையைச் சிந்திக்குக் தக்கோ ரூயர்கல்வி 
    மாமருகல் விடுறவாழ்வார். 
    ----------------

  •  

This file was last updated on 4 Nov. 2017 
Feel free to send corrections to the Webmaster. 

Related Content

Sundaramurthy Swamigal - Thevaram - Thiruchchorruththurai

Sundaramurthy Swamigal - Thevaram - Thirukkazumalam

श्री दशिणामूर्ति स्तोत्रम - Shri daxinamurti stotram

ਸ਼੍ਰਿਇ ਕਾਲਭੈਰਵਾਸ਼੍ਹ੍ਟਕਂ - Kaalabhairavaashtakam

आर्तिहर स्तोत्रम - Artihara stotram