logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கருணைப்பிரகாசசுவாமிகள்
அருளிச்செய்த


நேரிசையாசிரியப்பா
            விரிகட லாடைப் பெருநில மடந்தைக்
        கரும்பெற லாரம் புரைந்தினி தொழுகும்
        பொருதிரைப் பொன்னித் திருவரங் கத்துப்
        புதுவெயி லெறிக்குங் கதிர்மணி சுமந்த
5.        ஆயிரஞ் சுடிகை மாயிரும் பாந்தட்
   (1)
            பள்ளி மீமிசை யொள்ளொளி மின்னொடு
        கருமழை கிடந்த காட்சி போலப்
        பிறைநுதற் றிருவோ டறிதுயி லமர்ந்த
        புரிவளைத் தடக்கைப் பெரியோன் றானும்
10.       மலர்தலை யுலகம் பலவும் பயந்து
   (2)
            தெய்வத் தாமரைத் திருத்தவி சிருக்கும்
        அசைவில் காட்சித் திசைமுகத் தொருவனும்
        ஈண்டிதன் னடியுஞ் சேண்டொடு முடியுந்
        தனித்தனிக் காண்குது மெனத்தமி லிசையா
15.       இலங்குபிறை மருப்பின் விலங்குரு வெடுத்து
   (3)
            நெடுநிலங் கிளையா வுடன்மிகத் தளர்ந்தும்
        நிறைமதி நிறத்துப் பறவையுருப் பரித்து
        வானகம் பறந்து மேனிநொந் திளைத்துங்
        காண்டல் செல்லா தியாண்டுபல கழிய
20.       மண்டழற் பிழம்பாய்ப் பண்டு நின்றோன்
   (4)

1. புரைந்து-ஒத்து. பொருதிரை-கரையை மோதுகிற திரை. பொன்னி-காவிரி.
5. சுடிகை-உச்சிக் கொண்டை. மாஇரும்-மிகப்பெரும். பாந்தள்-ஆதிசேடன்.
2. கருமழை-கரிய முகில்.
8. திரு-திருமகள். அறிதுயில்-எல்லாவற்றையும் உணரத்தக்க மெய்யறிவுத்தூக்கம்.
9. வளை-சங்கு. பெரியோன்-திருமால்.
10. பயந்து-பெற்று.
3. தவிசு-இருக்கை. திசைமுகத்தொருவன்-நான்முகன்.
13. சேண்-மிகவுயர்ந்த விண்.
15. விலங்குரு-பன்றி வடிவம்.
4. கிளையா-தோண்டி.
17. பறவையுரு-அன்ன வடிவம். பரித்து-தாங்கி.
19. காண்டல் செல்லாது-காண முடியாமல்.
20. மண்டு-மிகுதியான.    

23. கருணைப்பிரகாசசுவாமிகள்
            பூசனை விடுத்த மாசுபுரி நெஞ்சத்து
        வீயா வஞ்சத் தீயோ ரிருந்த
        கடிகொண்மூ வெயிலும் பொடிபட நகைத்தோன்
        பொன்னி னியன்றன மென்னறுங் கொன்றையும்
25.       வெள்ளியிற் குயின்றன வெள்ளியொள் ளெருக்கும்
   (5)
            ஒழுகொளி மரகதத் தெழில்பெறச் செய்தன
        அறுகும் வில்வச் செறிபசுந் தழையுந்
        தும்பையு மத்தமும் வம்பவி ழாத்தியுங்
        கொழிக்கு மிருந்திரைக் குளிர்புனற் பெருக்கில்
30.       சிறுவெள் ளோதிமந் திரிதர லென்ன
   (6)
            வெண்ணில வொழுக்குந் தண்மதிக் கொழுந்து
        திரிதரச் சிறந்த செக்கரஞ் சடையோன்
        மன்றலம் பொதியிற் றென்றலந் திருத்தேர்த்
        திங்களங் கவிகை யைங்கணைக் கிழவனைப்
35.       பற்றிய செந்தீ நெற்றிநாட் டத்தோன்
   (7)
            அருடிரண் டெழுந்த வுருவமென் றுணர்த்தி
        இருள்குடி யிருந்த திருவமர் மிடற்றோன்
        ஏனையோர்க் கிறைமை யின்மை காட்டி
        முடங்குளை மடங்கன் முகனடுக் கோத்த
40.       வெண்டலை மாலை கண்டவர் வெருவத்
   (8)
            தண்டாது கிடக்குந் திண்டோட் பொருப்பினன்
        அண்டப் பித்திகை விண்டிட வதிர்க்குந்
        தீவாய்ப் பிணையும் பூவாய்க் கணிச்சியும்
        அன்ன முயர்த்தோன் சென்னிக் கடிஞையும்
45.       மணந்தரு தண்டுழாய்ப் பிணந்தலைச் சுமந்த
   (9)


5. வீயா-கெடாத.23. கடிகொள்-பாதுகாப்பைக் கொண்ட. மூவெயில்-முப்புரமதில். 24. இயன்றன-அமைந்தாற்போன்ற. 25. குயின்றன-செய்தாற் போன்ற. 6. செய்தன-செய்தாற் போன்ற. 28. வம்பவிழ்-மணம் வெளிப்படும். 30. ஓதிமம்-அன்னம். 7. செக்கர்-செவ்வானம். 34. ஐங்கணைக் கிழவன்-காமன். 35. நாட்டம்-கண். 8. இருள்-கருமை. மிடறு-கண்டம். 38. இறைமை-தலைமைத்தன்மை. 39. மடங்கல்-அரிமா. 40. வெருவ-அஞ்ச. 9. தண்டாது-நீங்காமல். தோட் பொருப்பினன்-தோளாகிய மலையை உடையவன். 42. பித்திகை-சுவர். விண்டிட-பிளக்க. அதிர்க்கும்-ஒலிக்கும். 43. கணிச்சி-மழு. 44. சென்னிக் கடிகை-தலையாகிய பாத்திரம். 45. துழாய்-துளசி.    

23. கருணைப்பிரகாசசுவாமிகள்

            முத்தலைச் சூலமும் வைத்தகைத் தலத்தோன்
        வான்றோய் செக்கரிற் றோன்றுபிறை யென்னப்
        பொன்வரைக் குவடு தன்வயிற் றுரிஞ்ச
        மேனிவந் தோங்கிய வெஞ்சினக் கேழலின்
50       கோடுகிடந் திமைக்கும் பீடுகெழு மார்போன்
   (10)
            பிறையுகிர் நோன்றாட் பொறியுடற் பேழ்வாய்
        உறுவலிப் புலியி னுரியுடை யுடீஇத்
        துத்திப் பைத்தலைச் சுடர்மணிச் சூட்டுக்
        கடுவொடுங் கெயிற்றுநாண் கட்டிய வரையோன்
55       திருகுவெஞ் சினத்தி னுருகெழு தோற்றத்
   (11)
            தெறுழ்வலித் தடந்தோட் டறுகட் கூற்றம்
        ஊழியி லெழுதரு முறுவளி சாய்த்த
        நீனிறக் குன்றம் போன்மெனச் சாய
        ஒருசிறிது நிமிர்ந்த முருகுவிரி கமலத்
60       தலர்நலங் கவற்று மறைகழ லடியோன்
   (12)
            வெள்ளி மால்வரை துள்ளிநடந் தன்ன
        கடுநடைச் செங்கண் விடைவல னுயர்த்தோன்
        இமய மீன்ற வமையுறழ் தடந்தோட்
        கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைக் குவிமுலைக்
65       கருங்குழற் பிறைநுதன் முருந்திள முறுவல்
   (13)
            திங்கள் வாண்முகப் பொங்கர வல்குல்
        தளிர்புரை மெல்லடி விளரியந் தீஞ்சொல்
        கயல்புரை யரிக்கட் கருணையங் கருங்கடல்
        இனிதுவீற் றிருக்கு மிடமருங் குடையோன்
70       இன்னண மிருப்பினுந் தன்னிலை யெவர்க்கும்
   (14)
            இற்றெனக் கிளக்கும் பெற்றிய னல்லோன்
        பெறுதலு மிழத்தலும் பிரிதலும் புணர்தலும்
        ஊணு முறக்கமு மூக்கமு மடிமையும்
        பிணியு மச்சமும் பிறபல குணனுந்
75       தோற்றமும் பருவமுந் தொலைவு மில்லோன்
   (15)


   10. பொன்வரைக்குவடு-மேருமலை உச்சி. 49. கேழல்-பன்றி. 50. கோடு-கொம்பு. பீடுகெழு-பெருமை பொருந்திய.11. உகிர்-நகம். நோன்றாள்-வலிய தாள். பொறி-புள்ளி. 52. உரியுடை-தோலாடை. உடீஇ-உடுத்து. 53. துத்தி-படப்பொறி. 54. கடு-நஞ்சு. நாண்-அரைக்கச்சு. 55. திருகு-மாறுபட்ட. 12. எறுழ்வலி-மிகுந்த வலி. 57. ஊழி-உலக முடிவுக்காலம். உறுவளி-பெருங்காற்று. 58. நீல் நிறக்குன்றம்-கரிய நிறமுடைய மலை. 59. முருகுவிரி-மணம் வெளிப்படும். 60. கவற்றும்-கவலச் செய்யும். 13. விடை-விடைக்கொடி. 63. அமைஉறழ்-மூங்கிலையொத்த. 65. முருந்திள முறுவல்-மயிலிறகினடி போன்ற இளம்பற்கள். 14. விளரி-விளரிப்பண்ணைப் போன்ற. 68. அரிக்கண்-ரேகை பொருந்திய கண். கருணையங் கருங்கடல்-உமாதேவி. 69. இடமருங்கு-இடப்பக்கம். 70. இன்னணம்-இவ்வாறு. 15. இற்று-இத்தன்மைத்து. கிளக்கும்-கூறும். பெற்றியன்-பெருமையை உடையவன். 73. மடிமை-சோம்பல்.

23. கருணைப்பிரகாசசுவாமிகள்
            சங்கர னமலன் றாணு சதாசிவன்
        முழுதொருங் குணர்ந்தோன் முன்னோன் றலைவன்
        தன்னருட் பெருமைக் குன்னரும் பிறவிக்
        கழிபெருந் துன்பமுற் றுழிதரு வோரை
80       ஈர்த்தாட் கோட லியற்கை யாகலின்
   (16)
            உடலெனப் பெயரிய விடலருஞ் சிறைப்பட்
        டாரஞர் மூன்று மானா தருந்தும்
        என்னையு மாளத் தன்னுளத் தெண்ணி
        மனமொழி மெய்களின் மருவரு மொருதான்
85       கருங்கட லுடுத்த விருங்கண்ஞா லத்துக்
   (17)
            குரவ னெனவோ ருருவொடு வந்து
        பெரிதுட் கிடந்த வருள்வெளிப் படுத்து
        நன்னர் நோக்கத் தென்னை நோக்கிய
        உலகம் விளக்கும் பலகதிர் பரப்பி
90       வாளர வென்னுமோர் தாளினிற் பூத்த
   (18)
            அங்கண்மா ஞாலப் பங்கய மலர்க்குப்
        பொன்னிறக் கொட்டையாய்ப் பொலிந்துநின் றுயர்ந்த
        விண்டொடு குடுமி மேருவலந் திரியும்
        ஆழியொன் றுடைய வேழ்பரி நெடுந்தேர்ப்
95       பரிதி வானவன் பரவையிற் றோன்றப்
   (19)
            பாயிரு டொலைத்துப் பகல்பிறந் தென்ன
        உள்ளிரு டுமித்தாங் கொளிசிறந் தன்றே-அவ்வழி
        அளியனுந் தற்பெறக் களிமிகுந் தினிதினே
        தன்னை யெனக்குத் தானீந் தருள்புரிந்
100      தென்னிடத் தொழிவின் றிருந்தனன் மன்னோ
   (20)


16. ஈர்த்தாட்கோடல்-இழுத்து ஆட்கொள்ளுதல். 17. ஆரஞர்-பொருந்திய துன்பம். ஆனாது-அமையாமல். 84. மருவரும்-பொருந்துதற்கரிய. 18. குரவன்-ஆசான். 19. ஆழி-உருளை. 95. பரவை-கடல். 20. பாயிருள்-பரவிய இருள். 97. துமித்து-கெடுத்து. 98. அளியனும்-எளியேனும். 100. ஒழிவின்று-நீங்காமல்.

கருணைப்பிரகாசசுவாமிகள்
            தன்னடைந் தவரை யின்னலம் பிறவிப்
        பெருந்தளை யகற்றி யரும்பெற லின்பத்
        தொருதனி வீட்டுல குய்த்த லானுந்
        துஞ்சினோ ரென்பு தோய்த லானும்
105      ஊன்கெட வுடம்பு நோன்புழந் திமயம்
   (21)
            ஈன்றகொம் பிடத்துத் தோன்றுத லானும்
        ஒப்புமை யின்றி யுயர்ந்தமை யானுந்
        தன்னை மானும் பன்னருஞ் சிறப்பிற்
        கங்கையென் றுரைக்குங் கடவுளா றுடுத்த
110      பேசரும் பெருமைக் காசியம் பதியும்
   (22)
            கரைமிசை நின்ற விரிதலைத் தாழையின்
        பூங்குலை சிதறித் தாங்கரும் பெருங்காய்
        அழனிறத் தாமரை யலரிதழ் சிதர்ந்து
        பொன்னிறக் கொட்டை சின்னமுற் றிடவுஞ்
115      சேயிதழ் மலரினும் பாசடை யிடத்தும்
   (23)
            இனிதிருந் தயர்வுயிர்த் திரைதேர் கமஞ்சூற்
        சங்கின மலறுபு சைவலத் தொளிப்பவுங்
        குரண்டமுங் கம்புளும் வெருண்ட நோக்கொடு
        தலைமீ தெடுத்தெடுத் தலைநீர் மூழ்கவும்
120      அஞ்சிறை யன்னமு மளியின் றொகுதியும்
   (24)
            வெள்ளியம் புயலுங் கரிய மங்குலும்
        பரந்தன வெழுந்து கரந்தன விரியவும்
        விரிகதிர் ஞாயிற்றின் வெயில்பெற வேட்டுக்
        கோட்டருகு கிடந்த கூன்முது காமை
125       கைய தெறிந்தென வொய்யென வீழ்ந்து
   (25)
            கீழ்நீர்ப் புகவுங் கிளர்பெருந் திரையெழுந்
        தோங்கிருங் கரைமிசைப் பாய்ந்தன புரளவுந்
        துடுமென வீழ்தரக் கடுவிசை வாள்புரை
        வாளை பாயுந் தாள தா மரைத்தடத்
130       தாடுநர் வீழ்த்த வவிரொளி மணிப்பூண்
   (26)


   21.01. இன்னல் அம்பிறவி-துன்பம் பொருந்திய அழகிய பிறப்பு. 102. தளை அகற்றி-விலங்கைப் போக்கி. 104. துஞ்சினோர்-இறந்தோர். 105. நோன்பு உழந்து-விரதங்களில் வருந்தி. இமயம்-இமயமலை. 22.07. ஒப்புமை-சமம். 108. பன்னரும்-சொல்லுதற்கரிய. 23.11. தாழை-தென்னையின்.113. அழனிறத்தாமரை-செந்தாமரை. சிதர்ந்து-சிதறி. 114. கொட்டை-தாமரையிலுள்ள தவிசு. சின்னமுற்றிட-பழுதடைய. 115. பாசடை-பசிய இலை. 24.16.கமம்சூல் சங்கினம்-நிறைந்த சூலையுடைய சங்குக் கூட்டம். 117. அலறுபு-அலறி. சைவலம்-பாசி. 118. குரண்டம்-நீர்க்காக்கை. கம்புள்-சம்பங்கோழி. 120. அளியின் தொகுதி-வண்டுகளின் கூட்டம். 25. வெள்ளியம்புயல்-வெள்ளியமுகில். மங்குல்-முகில். 123. வேட்டு-விரும்பி. 124. கோட்டருகு-கரையருகு. 26. துடுமென-திடீரென. வாள்புரை-வாளைப்போன்ற. 130. ஆடுநர்-நீராடுவோர். வீழ்த்த-போகட்டுவிட்ட.    

கருணைப்பிரகாசசுவாமிகள்
            நீர்க்கீழ்ப் படர்ந்த நெடுந்துகிர்க் கொடியென
        நனிகிடந் திமைக்கும் பனிபடு நறுமலர்
        மல்லலம் பசும்பொழிற் றில்லையம் பலமும்
        கவையடி வெடிவாற் குவிமுலை மேதி
135       மனையுழைக் கன்றை நினைதொறுஞ் சொரிந்த
   (27)
            வெண்பா லருந்திய செங்கா லன்னந்
        தாமரைத் தவிசின் மீமிசை யுறங்குங்
        கண்ணகன் கழனி விண்ணக டுரிஞ்சு
        நொச்சிசூழ் கிடந்த கச்சிமா நகரமும்
140       தண்டளிர்க் கோட்டுப் பிண்டிமுதல் பெயர்த்து
   (28)
            வெறிகமழ் சந்தனச் செறிவுகெட முருக்கி
        விண்புகு நெடுஞ்சினைச் சண்பகஞ் சாடிக்
        காழுடை யகிற்றிரள் வீழ்தர நூக்கி
        மங்குல்கண் படுக்குங் குங்குமஞ் சாய்த்து
145       மிளிர்மணி யருவிக் குளிர்புனன் முகந்து
   (29)
            தூம்புடை நெடுங்கையிற் றூய்விளை யாடும்
        ஈர்ங்கவுட் புகர்முகக் கூர்ங்கோட் டுரற்கால்
        வெஞ்சினக் குஞ்சர மஞ்சுவரு நெஞ்சொடு
        பசுந்தழை பொதுளிய விசும்புற நிமிர்ந்து
150       வாரியுண் டெழுதரு மழையொடு முரணும்
   (30)
            புதுவேய்ப் பொதும்பரிற் கதுமென வொளிக்க
        அடங்கருஞ் சினத்து முடங்குளை நோன்றாட்
        பெருவலி யரிமா னுருமென வதிர்க்கும்
        அணிகிள ரடுக்கத் தருணையங் கிரியும்
155       மணிவரன் றருவிவீழ் மல்லிகார்ச் சுனமும்
   (31)


   27. துகிர்க்கொடி-பவழக்கொடி. 132. பனிபடு-குளிர்ச்சி பொருந்திய. 133. மல்லல்-வளப்பம். 134. கவையடி-பிளவுபட்ட அடி. மேதி-எருமை. 135. மனையுழை-வீட்டிடத்துள்ள.28. நொச்சி-மதில். 140. கோடு-கிளை. பிண்டி-அசோகு. 29. வெறி-மணம். செறிவு-நெருக்கம். முருக்கி-அழித்து. 142. நெடுஞ்சினை-நீண்ட கிளை. 143. காழ்-வயிரம். நூக்கி-அழித்து. 144. மங்குல்-முகில். கண்படுக்கும்-உறங்கும். 30. தூம்பு-துளை. தூய்-தூவி. 147. ஈர்ங்கவுள்-மதத்தால் நனைந்த கன்னம். 148. குஞ்சரம்-யானை. 149. பொதுளிய-நெருங்கிய. 150. வாரி-கடல். மழை-முகில் . முரணும்-மாறுபடும். 31. பொதும்பர்-மரச்செறிவு. 153. உரும்என-இடியைப்போன்ற. 155. வரன்று அருவி-வாரிக்கொண்டு வரும் அருவி.    

கருணைப்பிரகாசசுவாமிகள்
            சோதி மாமரஞ் சுடுதழற் பிழம்பென்
        றிளமட மந்தி யேறா தகலுந்
        திருக்கா ளத்தியா முருக்கிளர் பொருப்பும்
        மீன்கணத் தகவயின் விளங்குவெண் டிங்களின்
160       ஒழுகொளி நித்திலக் குழுவினுள் வலம்புரிச்
   (32)
            சங்குகிடந் துறங்கும் பொங்குபுனற் பழனத்துக்
        கரும்படு களம ரிரும்பு கைவிடுத்
        தடிபெயர்த் தோடிக் குடவளை யிடறி
        எழுநீர்ப் பசுந்தாட் கழுநீர்க் குப்பையுள்
165       வண்டினம் வெரீ இயொலி கொண்டெழ வீழ
   (33)
            நெடுநெறிக் கரும்பி னெருக்கிடைக் கிடந்த
        கடுவரா லுகளுங் கம்பலை யவியா
        ஒருவாச் செல்வத் திருவா ரூரும்
        ஆரங் குங்கும மகில்கரி மருப்புப்
170      பொன்மணி முதலிய பொருதிரைக் கையால்
   (34)
            விரிபொழில் நிமிர்ந்ததன் னிருகரை மருங்கினும்
        வாழ்நர்க் குதவு மணிமுத் தாறெனும்
        பெருநதி யுடுத்த திருமுது குன்றமும்
        வரைபக வெறிந்து மாமுத றடிந்த
175      மணிநெடு வேலொடு வளர்பூங் குடுமி
   (35)
            முள்ளுடை நெடுந்தாட் புள்ளணி கொடியோன்
        வள்ளிபுரை மருங்குல் வள்ளிமா துக்குஞ்
        சேயரி நெடுங்கட் டெய்வயா னைக்குங்
        காணியென விளங்கும் பூணணி மார்போன்
180      அருணனி சுரக்கு மறுமுகத் தொருவன்
   (36)

32. தழற்பிழம்பு-தீச்செறிவு. 158. உருக்கிளர்-அழகு விளங்குகின்ற. 159. அகவயின்-நடுவிடத்தில். 33. குடவளை-குடம்போன்ற சங்கு. 165. வெரீஇ-அஞ்சி.34. கம்பலை அவியா-ஒலி நீங்காத. உகளும்-புரளும். 168. ஒருவா-நீங்காத. 35. வரைபக-மலை பிளக்க. 36. புள்ளணி கொடியோன்-சேவற் கொடியோன்.

கருணைப்பிரகாசசுவாமிகள்
            தன்னிக ரில்லாத் தனிமுதற் கடவுள்
        வெட்சிமலர் சூழ்ந்ததன் விரைமலர்த் திருவடி
        உள்ளுநர் தமக்குங் கள்ளவிழ் சேயிதழ்
        அல்லியந் தாமரைச் செல்வனும் வணங்கும்
185      பெறலரு மரசு பெறவினி தளிப்போன்
   (37)
            தேங்கமழ் கடம்பின் றெரிய றுயல்வரூஉம்
        பன்னிரு தடந்தோட் பண்ணவ னிருந்த
        பனியிரு விசும்புதோய் பரங்குன் றிழியும்
        மணியருவி கொழித்த மணிகிடந் திமைக்குந்
190      திருமலி மறுகிற் செந்தமிழ்க் கூடலும்
   (38)
            தமிழ்குடி யிருந்த தடவரைத் தோன்றி
        இமிழ்திரை ஞாலத் தமிழ்தெனக் கிடந்த
        தண்பொருநை யுடுத்த விண்பொரு நெடுமதில்
        நெல்லையு முதலிய பல்பெரும் பதிகள்
195      அனைத்தினுங் கண்டோர்க் ககற்றரும்
   (39)

196.      வினைத்தொடர் பகல வீற்றிருந் தெனவே.
   (40)

37. உள்ளுநர்-எண்ணுபவர். 38. துயல் வரூஉம்-அசையும். 39. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.40. தமிழ் குடியிருந்த தடவரை-பொதிய மலை. 192. இமிழ்திரை-ஒலிக்கின்ற அலை.
 

Related Content

A Thesis On The Veerasaiva Religion By H. K. V.

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes

The Virasaiva Religion

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்