logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞானபாலையசுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி

   [திருப்பள்ளியெழுச்சியாவது கடவுளரையும் பெரியோர்களையும் படுக்கையில் இருந்து கண் விழித்தெழுமாறு பாடப் பெறுவதாகும். கடவுளர்மீது பத்துப் பாடல்கள் பாடுவது வழக்கம். இதற்கு இவ்வளவுதான் பாடல்கள் என்று எல்லையில்லை. இங்கு அடிகளார் நான்கு பாடல்கள் பாடுகின்றார்.]     
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
   நிறைந்தவொரு சச்சிதா னந்தபர சிவத்தி
      னிகழுமுயி ரிப்பியிடை வெள்ளிபோற் றோன்றி
அறிந்துமய லகன்றிடிலொன் றன்றிவே றிலையென்
      றறைவர்சிலர் பதியினைப்போ லாருயிர்நித் தியமே
இறந்துமல சத்திவிடிற் சிவசமா னதையா
      யிருக்குமென வறைவர்சில ரெதுவழக்கென் றடியேஞ்
செறிந்தனநின் றனைவினவ வெங்கள்சிவ ஞான
      தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
   (1)
   சகலரெனும் பசுக்களைமூ லாதார மென்னுந்
      தக்கதொழு விடைமலமாந் தாம்பினா லார்த்துப்
புகலுமொரு நுகர்வுமிலா துரைநிறுத்திப் பின்னர்ப்
      பொருந்துகலை யாங்கரத்தாற் கட்டவிழ்த்து விட்டே
அகலுநன வெனும்புரத்தி லோட்டியே விடய
      மாகியபுல் மேய்த்தெமக்கிங் கமுதமருள் பவனே
திகழுமலை மகள்நகரின் மருவுசிவ ஞான
      தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
   (2)
   காற்றுமறைப் பாயபடப் பாயலிடை மடங்கற்
      கனலருகி னரிசனப்பொற் றூசுமிசை போர்த்துக்
கோற்றொடிமென் முலைமடந்தை தனைமார்போ டணைத்துக்
      குளிர்குடையா னுததியிடைக் கண்டுயில்வோ னெழுந்து
போற்றிநின தெதிர்குறிப்பச் சங்கொடும்வந் துற்றான்
      புண்டரிகன் கரகநீர் கொண்டுதவ நின்றான்
சீற்றமறுந் தவக்களிறே யெங்கள்சிவ ஞான
      தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
   (3)
   1. நிறைந்த-எங்கும் நிறைந்த. இப்பி-கிளிஞ்சில். மயல்-மருளறிவு. சமானதை-ஒப்பு. 2. தொழு-கட்டுத்தறி. தாம்பு-கயிறு. ஆர்த்து-கட்டி. கரம்-கை. 3. படப்பாயலிடை-ஆதிசேடப் படுக்கையிடத்தில். அரிசனப் பொன் தூசு-பீதாம்பரம். மிசை-மேலே. கோல்தொடி-வளைந்த வளையல். மடந்தை-திருமகன்.உததி-கடல் குறிப்ப-ஊத. புண்டரிகன்-நான்முகன். தவக்களிறு-தவயானை.    

   தூதுவிடு நம்பிவரு கிலன்சிலையா லெறிந்த
      தொண்டனிலை விசயனும்வில் லோடும்வந்தா னில்லை
ஏதமறு மியற்பகையார் கிளைஞர்கள்வந் தடைந்தா
      ரில்லைநினை மண்சுமவென் றொருபிரம்பா லடித்தோன்
போதிலனின் றிருவடியிற் போதுகள் தூய்ப் பரவிப்
      போற்றலுறு மடியவரே பொருந்தினரெம் மருங்குஞ்
சீதமதி துறந்தமுடி மருவுசிவ ஞான
      தேசிகனே யருண்மலையே பள்ளியெழுந் தருளே.
   (4)


   4. தூதுவிடுநம்பி-சுந்தரர். சிலையால் எறிந்த தொண்டன்-சாக்கிய நாயனார். போதுகள் தூய்-மலர்களைத் தூவி. சீதமதி-குளிர்ந்த திங்கள்.
   

Related Content

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்