logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு

   [தாலாட்டு என்பது குழந்தையைத் தொட்டிலிற் கிடத்தி அஃது உறங்குமாறு இனிய பாடல்களைப் பாடுவதாகும். தால் என்பது நா. நாவினை யசைத்துப் பாடுதலின் ‘தாலாட்டு’ என்று காரணப் பெயராயிற் றென்பர். பிற பாடல்களும் நாவினை யசைத்துப் பாடப்படுவனவேயாயினும் இப்பெயர் சிறப்பாகக் குழந்தைகளின் பாடல்களிலேயே பயன்படுத்தப்படுகிறது. தமிழில் கீதாசாரத் தாலாட்டு, தத்துவராய சுவாமிகள் திருத்தாலாட்டு முதலிய தாலாட்டு நூல்கள் உள்ளன. இத்தாலாட்டில் அடிகளார் சிவஞானபாலைய சுவாமிகளைக் குழந்தையாகப் பாவித்துத் தத்துவ ஞானப் பொருள்களை அமைத்துப் பாடியுள்ளார்.]     
காப்பு

நேரிசைவெண்பா
   அவஞானம் போக்கி யருண்ஞான மாக்கும்
சிவஞான தேவன் றிருமுன் - தவஞானத்
தாலாட் டெனுந்தமிழைச் சாற்றுதற்கு நற்றுணையாம்
மாலாட்டு மாமுகத்தன் வந்து.
   
   திருவருளா லென்னைத் தெரிவிக்க விளங்குந்
திருவுருவாய் வந்த சிவஞான தேசிகனோ.
   (1)
   என்றுநித்த பூரணமா யின்பவறி வுண்மையாய்
நின்றபடி நிற்கு நிகழ்பிரம மென்றானோ.
   (2)
   தன்சத்தி யாலாந் தலமங்க லிங்கமென
என்சத்தி பாதத் தெழுந்தருளிச் சொன்னானோ.
   (3)
   நண்பாகு மிட்டலிங்க நன்றாம் பிராணலிங்கம்
ஒண்பாவ லிங்கமா மோர்பொருளிங் கென்றானோ.
   (4)
   ஆசார லிங்கமுட னாருங் குருலிங்கந்
தேசாரு மிட்டலிங்கஞ் சேர்ந்தாகு மென்றானோ.
   (5)
   அந்தப் பிராணலிங்கத் தாகுஞ் சிவலிங்கம்
இந்தச் சரலிங்க மென்றசிவ ஞானியோ.
   (6)
   பாவலிங்கந் தன்னிற் பரமப் பிரசாதந்
தாவகன்ற மாலிங்கஞ் சார்ந்துவரு மென்றானோ.
   (7)
   ஏகாங்க மேயாகு மின்பத் தியாகாங்கம்
போகாங்கம் யோகாங்கம் போற்றியறி யென்றானோ.
   (8)
   பத்தனுமா கேசனுமாம் பன்னுந் தியாகாங்கம்
உய்த்துணரி னென்ன வுணர்த்தும் பெருமானோ.
   (9)
   பிரசாதி யோடு பிராணலிங்கி யாகும்
உரைசாரு போகாங்க மொன்றென்று சொன்னானோ
   (10)

   (காப்பு) அவஞனம்-வீணறிவு அருள்ஞானம்-மெய்யறிவு. மாலாட்டும்-மயக்கங்களையெல்லாம் ஆட்டுவிக்கின்ற.

1. என்னைத் தெரிவிக்க-நான்யார் என்பதை எனக்குப் புலப்படுத்த.
2. நித்த பூரணம்-என்றும் நிறைபொருளாகவிளங்குவது.
3. தன்சத்தி-தன்னுடைய மெய்யறிவுத் திறம்.
4. இஃது இலிங்கங்களெல்லாம் ஒன்றென்றது.
5.இவைகளும் சிவலிங்க வகைகளையே கூறுகின்றது.
6. இவைகளும் சிவலிங்க வகைகளையே கூறுகின்றது.
7. தாவகன்ற-குற்றமற்ற.
8. இஃது அங்கங்களைப்பற்றிக் கூறுகிறது.
9. பத்தன்-அடியவன். மாகேசன்-இறைவன்.
   
   சாற்றுமியோ காங்கஞ் சரண னயிக்கியனாம்
போற்றிநீ காணென்று போதித்த தேசிகனோ.
   (11)
   அங்க நவவிதமு மந்தநவ லிங்கமொடு
தங்கு மெனவெனக்குச் சாற்றும் பெருமானோ.
   (12)
   விழுங்கல் பருகலொடு மெல்லலா சாரம்
ஒழுங்கிற் குருசிவமு முற்றிடுமிங் கென்றானோ.
   (13)
   சோகிய லேகியமுஞ் சொன்ன விவற்றறிவும்
ஏகியுறும் பின்மூன் றிலிங்கத்து மென்றானோ.
   (14)
   இந்தக்கா யார்ப்பணங்க ளிட்டலிங்கத் தென்றெனக்குச்
சந்தப் படவுரைத்துத் தந்தசிவ ஞானியோ.
   (15)
   பீடமிடை வட்டம் பெருங்கோ முகநாளம்
ஆடலுறு கோளகமா சாராதிக் கென்றானோ.
   (16)
   நாற்றஞ் சுவையுருவ நல்லூ றொலிநிறைவு
சாற்றுஞ் சடுலிங்கஞ் சாருமெனச் சொன்னானோ.
   (17)
   வேர்முதலாங் கந்தம் விளங்கு மரமுதலாங்
கூர்மணமா சாரங் குருவினிலா மென்றானோ.
   (18)
   தளிராதி கந்தமுகை தான்முதலாங் கந்தம்
ஒளிரார் சிவசரத்தி னாற்றிடுமிங் கென்றானோ.
   (19)
   காய்முதலாங் கந்தமெலாங் காசில்பிர சாதத்துந்
தூய்மலிமா லிங்கத்துந் துன்னுமெனச் சொன்னானோ.
   (20)
   மதுரந் துவர்கார்ப்பு வண்புளிகைப் பெல்லாஞ்
சதுரென் றிருத்தியவா சாராதிக் கென்றானோ.
   (21)
   பொன்மைவெண்மை பச்சைசெம்மை போந்த கருமையெலாம்
நன்மையவா சாராதி நண்ணுமென்ற நாயகனோ.
   (22)


15. காயார்ப்பணம்-உடலை அர்ப்பித்தல்.
17. நாற்றம்-மணம். ஊறு-பரிசம்.
19.
20. தூய்மலி-தூய்மை மிகுந்த. துன்னும்-பொருந்தும்.

   வன்மைமென்மை வெம்மைதண்மை வாய்ந்த மிசிரமெலாஞ்
சின்மையவா சாராதி சேர்ந்துகொளு மென்றானோ.
   (23)
   கஞ்ச நரம்புதோல் கண்டகுழ லாதியொலி
அஞ்சொலிவை யெல்லாமவ் வாறுமுறு மென்றானோ.
   (24)
   மணமுதலா மைந்து வகைநிறைவெ லாமும்
நணுமுறையா சாராதி நாடிலெனச் சொன்னானோ.
   (25)
   இம்முறையா றாறா மிலங்குகர ணார்ப்பிதமென்
றெம்மறிவு கொள்ள வியம்புசிவ ஞானியோ.
   (26)
   தொட்டறிந்திங் கொன்றைத் துணிந்து நுகர்ந்துமகிழ்ந்
திட்டமைந்து நிற்கு மிலிங்கங்க ளென்றானோ.
   (27)
   கூறுமிவை யாவினுமிக் கொள்கை பெறுமிலிங்கம்
ஏறு மிரட்டுநூற் றெட்டாகு மென்றானோ.
   (28)
   உருவஞ் சுவைநிறைவா யோங்கர்ப் பிதங்கள்
மருவுந் திறஞ்சொன் மயிலை மலைவிளக்கோ.
   (29)
   சுத்தசித்த மோடுபிர தித்தமெனத் தோன்றுபுபா
சத்தமுத்த மாக்குபிர சாதமரு ணாயகனோ.
   (30)
   அங்கலிங்க சத்திபத்தி யத்தமுக வர்ப்பிதசே
டங்களிவை யட்ட சயிலமெனச் சொன்னானோ.
   (31)
   குசித்த மழிந்து குடும்பநோய் மாற்றுஞ்
சுசித்தமதி லாசாரந் தோன்றுமெனச் சொன்னானோ.
   (32)
   குபுத்தி யழிந்து குருநெறியி னிற்குஞ்
சுபுத்திதனி னிற்குஞ் சுடர்குருவிங் கென்றானோ.
   (33)
   ஆங்கார மில்லா நிராங்கார வத்தமதில்
நீங்கா திலகு நிகழ்த்துசிவ மென்றானோ.
   (34)

23. மிசிரம்- கலப்பு.
28. இரட்டும் நூற்றெட்டு-இருநூற்றுப் பதினாறு.
29. மயிலைமலை-மயிலம்.
32. குசித்தம்-நல்லதல்லாத மனம். சுசித்தம்-நல்லமனம்.
33. குபுத்தி-தீயஅறிவு. சுபுத்தி-நல்லறிவு.
34. ஆங்காரம்-அகங்காரம்: நான் என்னும் ஆணவம். நிராங்காரம்-அகங்காரமற்ற தன்மை.    

   கமன மழிந்து கறையற்று நிற்குஞ்
சுமனமதி னின்றிலகுந் தூயசர மென்றானோ.
   (35)
   மெய்ஞ்ஞான மாகி மிளிரும் பிரசாதஞ்
சுஞ்ஞான வத்தமதிற் றோன்றுமெனச் சொன்னானோ.
   (36)
   துற்பாவ நீங்கித் துணிவுபடு மத்துவித
சற்பாவ மாலிங்கஞ் சாருமெனச் சொன்னானோ.
   (37)
   ஆதார பீடங்க ளாறினுமவ் வாறிலிங்கம்
மீதாக வைத்து விளங்கச்செய் வித்தகனோ.
   (38)
   ஆறு முகங்களுமவ் வாறுசா தாக்கியமும்
ஆறு வருணமுமா மாறிலிங்க மென்றானோ.
   (39)
   பத்தனொடு மாயேசன் பார்ப்பரிய வாசாரம்
மெய்த்தகுரு நான்கும் விளங்குகுரு வென்றானோ.
   (40)
   பிரசா தியுமப் பிராணலிங்கி தானும்
உரைசால் சிவசரமு மோங்கிலிங்க மென்றானோ.
   (41)
   ஒழிந்தவங்க லிங்க மொருநான்கு நம்பால்
எழுந்தருளுஞ் சங்கமமென் றின்பந் தருவானோ.
   (42)
   உருவ முருவருவ முற்றறிதற் கெட்டா
அருவமென நின்றிடுமவ் வாறுமெனச் சொன்னானோ
   (43)
   மாசுதரு தூலாதி மானவிசு வாதியே
ஆசி றியாகாங்க மாதியா மென்றானோ.
   (44)
   விரிந்தன வெலாமும் விரிந்தமுறை சென்றே
ஒருங்கியங்க லிங்க வுபயமா மென்றானோ.
   (45)

35. கறையற்று-குற்றமற்று.
36. சுஞ்ஞானம்-நல்லஞானம்.
37. துற்பாவம்-தீயமன வியற்கை. சற்பாவம்-நல்ல மனவியற்கை.
38. மீதாக-மேலாக.
40. மெய்த்தகுரு-உண்மையான சற்குரு.
41. உரைசால் புகழமைந்த.
42.எட்டா-கண்டுணர முடியாத.
43. உற்றறிதற்கு-பொருந்தியறிதற்கு.
44. மாசு தரு-குற்றத்தைக் கொடுக்கிற. ஆசில்-குற்றமில்லாத.
45. ஒருங்கி-ஒடுங்கி.    

   கடத்தி னுபாதியா காயமுற்ற வாபோல்
அடுத்த வுபாதியா லங்கலிங்க மென்றானோ.
   (46)
   தங்கு மிலிங்கமாந் தற்பதமத் தொம்பதமே
அங்க மயிக்கிய மசிபதமென் றாண்டானோ.
   (47)
   ஆக முயிர்துரிய னாய்நின்ற போதெமைத்தான்
சோகமனத் தானாகத் தோன்றும் பெருமானோ.
   (48)
   அமைத்தபரஞ் சுத்தத் தசுத்தமதிற் சீவன்
தமப்பகுதி யிற்றோன்றுந் தத்துவங்க ளென்றானோ.
   (49)
   நிரஞ்சன சூனியமா நிட்களத்திற் சித்து
வருஞ்சுடர்சின் னாதாதி வாய்ப்பவெனச் சொன்னானோ.
   (50)
   மூலசித்து நாதாதி மூன்றும் புணர்ந்தாகு
மாலகற்றுஞ் சோதிமய மாலிங்க மென்றானோ.
   (51)
   அகராதி மாலிங்கத் தாகியவை கூடித்
தகவாமோங் கார சதாசிவமா மென்றானோ.
   (52)
   அந்தச் சதாசிவத்தி னைம்முகத்து மைம்பூதம்
வந்துற் றிதயத்தான் மாவருமிங் கென்றானோ.
   (53)
   அப்பூதம் பஞ்சீ கரித்திருபத் தைந்தாகி
மைப்பூணு மான்மாவை மன்னியிடு மென்றானோ.
   (54)
   ஆணவத்தான் மூடனா மாருயிர்க்கு முன்வினையால்
மாண வளிக்குமிறை மாயைவடி வென்றானோ.
   (55)
   மேலைவினை யாலுழலு மெய்யுயிர்க்குப் பாகமலக்
காலமுறச் சுத்தக் கரணமா மென்றானோ.
   (56)
   கூறுமனச் சுத்தமுறக் கொண்டுபிண்ட நாமத்தை
நூறு தலநெறியு நோக்குமெனச் சொன்னானோ.
   (57)

   46. கடம்-குடம். அடுத்த-பொருந்திய.
47. அசிபதம்-நீயாக விருக்கிறாய் என்னும் பதம்.
48. ஆகம்-உடல்.
49. பரஞ்சுத்தத்து-மேலான தூய்மையில். தமப்பகுதி-தமோகுணப்பகுதி.
50. நிரஞ்சனம்-ஒளியுடைமை.
51. மாலகற்றும்-மயக்கத்தைப் போக்கும்.
52. அகராதி-அகரமுதலான. தகவாம்-தகுதிவாய்ந்ததான.
53. வந்துற்று-வந்து பொருந்தி. இதயத்து ஆன்மா-உள்ளத்தில் உள்ள ஆன்மா.
54. பஞ்சீகரித்து-பஞ்சீகரணமாகி; அஃதாவது ஒன்றொன்று /304ஐவ்வைந்தாகி.
55. ஆணவம்-அகங்காரம். மாண-பெருமை பொருந்த.
56. மேலைவினை-முன்பிறப்புக்களின்வினை.
57. மனச்சுத்தமுற-மனந் தூய்மையை அடைய.    

   கிரியைமன பாவங் கிடைப்பரிய ஞானம்
மருவிவிடா தங்கம் வயங்குமெனச் சொன்னானோ.
   (58)
   ஞாதிருவு நின்றறியு ஞானஞே யங்களுமற்
றேதமற வென்று மிருந்தபடி வைப்பானோ.
   (59)
   வானேத்த வென்று மருவற் கரியபதம்
நானேத்த நல்குசிவ ஞானகுரு தேசிகனோ.
   (60)
   மிடியற் கெளிது விழியுற்ற பொன்போல்
அடியற்கு வந்திங் ககப்பட்ட வாரமுதோ.
   (61)
   கயிலைமலை மேவுங் கடைப்பிடியாற் சீர்சால்
மயிலைமலை மீதிங்கு வந்தமர்ந்த மாமணியோ.
   (62)
   எல்லாக் கலையுணர்ந்து மெய்தாப் பொருளையொரு
சொல்லாற் றிகழ்த்துதற்குத் தோன்றும் பெருமானோ.
   (63)
   சீலந் திகழ்ந்துமதிற் சின்னமின்றி யும்படியோர்
கோலஞ் சிவமெனவுட் கொள்ளுமருட் குன்றமோ.
   (64)
   மண்களிக்க நாயேன் மனங்களிக்கக் கண்டுகொண்டு
கண்களிக்க வந்த கருணைப் பெருங்கடலோ.
   (65)
   சம்பந்த னன்றொருநாட் டானுண்ட பானாளும்
எம்பந்த நீங்க வினிதமுது செய்தானோ.
   (66)
   வேண்டுவவெல் லாமுமாம் வெண்ணீ றளிப்பதற்குத்
தீண்டு மலர்க்கைச் சிவஞான தேசிகனோ.
   (67)
   இம்மை மறுமை யிரண்டும் பெறவெமக்குச்
செம்மைதர வந்த சிவஞான தேசிகனோ.
   (68)
   அரசமய மன்றி யகங்களித்தெஞ் ஞான்றும்
பரசமய மும்பணியும் பங்கயப்பொற் றாளானோ.
   (69)
   தானபங்க னென்னுமதன் றன்னாணை யைக்கடந்து
மானபங்கம் பண்ணும் வலியொன் றுடையானோ.
   (70)

58. மருவி-பொருந்தி. வயங்கும்-விளங்கும்.
59. ஞாதிரு-அறிவு; காண்போன். ஏதமற-குற்றம் நீங்க.
60. வான்ஏத்த-விண்ணுலகத்தவர் போற்ற.
61. மிடியன்-வறுமையுடையவன். ஆரமுது-சிறந்த அமுதம்.
62. மாமணி-சிறந்தமணி.
63. திகழ்த்துதற்கு-சுட்டிக்காட்டி உணர்த்துதற்கு.
64. சின்னம்-அறிகுறி. படியோர்-உலகத்தோர்.
65. மண்களிக்க-மண்ணுலகத்திலே உள்ளவர்கள் களிப்படைய.
66. எம்பந்தம்-எமது பாசத் தொடர்பு.
67. வேண்டுவ எல்லாமும்ஆம்-வேண்டியவைகள் எல்லாவற்றையும் அடைய.
68. செம்மை-சிறப்பு.
69. பரசமயம்-சைவ சமயமல்லாத பிறசமயம்.
70. மானபங்கம் பண்ணும்-பெருமைக்கிழிவுண்டாக்கும்.    

   அறியா தொருநா ளறையினும்வன் பாசஞ்
செறியா தருளுந் திருப்பே ருடையானோ.
   (71)
   பூதமுத லெல்லாமும் போக்கியவற் றுண்மறைந்து
ஞாதிருவா மென்னை நயந்தறிவித் திட்டானோ.
   (72)
   எந்தைசிவ சாதனங்கட் கெல்லாந் திருநீறு
முந்தியதென் றுண்மை மொழியும் பெருமானோ.
   (73)
   உருத்திரனே யையமிலை யோருருத்தி ராக்கந்
தரித்தவ னென்றெமக்குச் சாற்றும் பெருமானோ.
   (74)
   ஒண்மறையின் கண்ணா முருத்திரமவ் வஞ்செழுத்துங்
கண்மணியென் றையமறக் காட்டு மருட்கடலோ.
   (75)
   அருவாகி நின்றசச்சி தானந்த வீசன்
குருவாகித் தன்னைக் கொடுக்குமெனச் சொன்னானோ.
   (76)
   பரம சிவமெனவும் பண்டைமறை போற்றும்
பிரமமென வும்பேர் பெறுமிலிங்க மென்றானோ.
   (77)
   திரஞ்சரமென் றீசன் றிருவுருவி ரண்டுள்
பரஞ்சரமென் றோதும் பவளவா யண்ணலோ.
   (78)
   அங்கம் புனைவோ னடிப்புனலல் லாதுபவப்
பங்கங் கழுவப் படாதென்று சொன்னானோ.
   (79)
   அந்தக் கரணத் தழுக்கறுப்ப தெங்கள்பரன்
சந்தப் பிரசாதந் தானென்று சொன்னானோ.
   (80)

71. அறியாது-பலனூண்டாகுமென்று உணராமல். செறியாது-பொருந்தாமல்.
72. நயந்து-விரும்பி. அறிவித்திட்டானோ-உண்மைப் பொருளை உணரச் செய்தவனோ?
73. எந்தை-எம் தந்தையாகிய சிவபிரானுடைய. முந்தியது-முதன்மையானது.
74. ஓர் உருத்திராக்கம்-ஒரு சிவமணி.
75. ஒண்மறை-பெருமை பொருந்திய மறை.
76. அருவாகி-வடிவமற்றதாகி. தன்னைக் கொடுக்கும்-மெய்யறிவைத் தரும்.
77. பரமசிவம் பிரமம் எல்லாம் ஒன்றென்றபடி.
78. திரம்-நிலைபேறு. சரம்-போக்குவரவு
79. அடிப்புனல்-திருவடிநீர். பவப்பங்கம்-பிறவியாகிய அழுக்கு.
80. அந்தக்கரணம்-மனம் புத்தி சித்தம் அகங்காரம்.    

   தருணமதிற் சீறுந் தனிவிழிகாட் டாமல்
கருணை குடியிருக்குங் கண்களொடு வந்தானோ.
   (81)
   ஏரூருந் தான்வா ழிடமேநற் காசியுந்தென்
ஆரூரு மம்பலமு மாக்குசிவ ஞானியோ.
   (82)
   தன்பாத தாமரைதோய் தண்புனலே கங்கையாய்
வன்பாச நீக்க வழங்குசிவ ஞானியோ.
   (83)
   மண்படைத்த நான்முகனார் மானுடர்த மொண்முகத்தில்
கண்படைத்த பேறுபெறக் காட்டு முருவானோ.
   (84)
   ஆர்க்குங் கொடுநோ யனைத்துங் கடைக்கண்ணால்
தீர்க்குங் கருணைச் சிவஞான தேசிகனோ.
   (85)
   செப்ப முறவெனது சிந்தைவீட் டாசையெனுங்
குப்பை துகைத்துக் குடியிருக்க வல்லானோ.
   (86)
   தன்னையரு ளாளனெனுந் தன்மை யுலகறிய
என்னையடி யாரோ டெழுந்தருளிக் காத்தானோ.
   (87)
   மெய்த்த வறிவாம் விளக்குகதை யொன்றெடுத்துத்
தத்துவமா மட்கலத்தைத் தாக்கும் பெருமானோ.
   (88)
   வழுவின்றித் தன்மா வலியுலக மேத்த
மழுவின்றிப் பாவ மரமெறிய வந்தானோ.
   (89)
   இணையாது மில்லா விடர்ப்பவவே லைக்குப்
புணையாக வந்தருளும் புண்டரிகத் தாளானோ.
   (90)

81. தருணம்-சமயம்.
82. ஏர் ஊரும்-சிறப்புப் பொருந்தியிருக்கும். தென்ஆரூர்-அழகிய திருவாரூர்; தெற்குத் திக்கில் உள்ள திருவாரூருமாம். அம்பலம்-தில்லைமூதூர்.
83. வன்பாசம்-வலியபந்தம்.
84. கண் பெற்றதன்பலன் அடிகளாரைப்போற்றி வழிபடல் என்க. மண்-உலகம்.
85. ஆர்க்கும்-பிணித்து வருத்தும்.
86. ஆசையெனுங் குப்பை-அவாவென்னுங் குப்பை. துகைத்து-அழித்து.
87. அருளாளன்-திருவருளை ஆட்சிசெய்து அடியவர்கட்கு நன்மை விளைவிப்பவன்.
88. மெய்த்த-உண்மைத் தன்மை பொருந்திய. கதை-கதாயுதமென்னும் ஒரு படைக்கலம்.
89. மழு-கோடரி. பாவமரம்-தீவினையாகிய மரம்.
90. இடர்-துன்பம். பவவேலை-பிறவிக்கடல். புணை-தெப்பம். புண்டரிகம்-தாமரை    

   ஊனோ வுயிரோ வுயிர்க்குயிரோ வானந்தத்
தேனோ வமுதோ சிவஞான தேசிகனோ.
   (91)
   அண்ட முழுது மணுவிற் சிறியவாக்
கொண்ட பெருமைக் குணக்குன் றனையானோ
   (92)
   எங்கண் மலவிருளுக் கீண்டு மயிலைமிசைச்
செங்கதிர்போற் றோன்றுஞ் சிவஞான தேசிகனோ.
   (93)
   அற்பகலு மாறா தரனடியார்க் கீதலுறுங்
கற்பகமாய் வந்துதிருக் காஞ்சிநக ருற்றானோ.
   (94)
   பூணா மருள்வசவன் பூண்டசர பூசையன்று
காணா வெமக்கின்று காட்டுசிவ ஞானியோ.
   (95)
   விருப்புவெறுப் பின்மை விளக்கவென்புன் சொல்லைத்
திருப்பதங்கொள் கின்ற சிவஞான தேசிகனோ.
   (96)
   பொறியூடு செல்லுமனப் போர்க்களிற்றைத் தன்றாள்
தறியூடு நிற்பத் தளைந்தசிவ ஞானியோ.
   (97)
   பாடியுந்தன் சீர்த்தி பரவியுந்தன் பாதமலர்
சூடியுமிக் காலந் தொலைக்கவருள் செய்தானோ.
   (98)
   பொய்ம்மாயை யென்னும் புலியின்வாய்ப் பட்டேனைக்
கைம்மாறி லாமற் கருணைகொடு மீட்டானோ.
   (99)
   பத்தியுந்தன் பங்கயப்பொற் பாதமே பாடுகின்ற
சித்தியுந்தத் தாளுஞ் சிவஞான தேசிகனோ.
   (100)

91. உயிர்க்கு உயிர்-உயிர்களை வாழச் செய்பவன்.
92. அண்டம்-உலகம்.
93. மலஇருள்-ஆணவமல இருள்.
94. அல்-இரவு. ஈதலுறும் கொடுக்கும்.
95. அன்று காணா-வசவர் பூசை செய்த அஞ்ஞான்று பார்க்காத.
96. விருப்பு வெறுப்பு இன்மை விளக்க-மெய்யறிவாளர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள் என்னுந்தன்மையை விளக்கிக்காட்ட. 97. பொறி-மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்புலன். தறி-கட்டுத்தறி. தளைந்த-கட்டிய.
98. சீர்த்தி பரவியும்-புகழைப் பாடியும்.
99. பொய்ம்மாயை-உண்மையில் இல்லாத மாயை.
100. பத்தி-திருவடியில் அன்பு. சித்தி-காரியசித்தி.     
 

Related Content

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்