logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவநாம மகிமை

   [சிவநாமம் என்பது சிவபெருமானுடைய திருப்பெயர். அப்பெயர்களுளெல்லாஞ் சிறந்து விளங்குவது சிவம் என்பது. இப்பெயரை இரட்டித்துச் ‘சிவசிவ’ என்பர். இவ்வாறு ‘சிவசிவ’ என்பதன் பெருமை செப்புதற்கரியது. இப்பெயரின் பெருமையிற் சிறிது கூறுவதால் இது சிவநாமமகிமை என்று பெயர் பெற்றது. இது பத்துக் கலிவிருத்தப் பாடலையும் இறுதியில் ஒர் அறுசீர் விருத்தப் பாடலையுங் கொண்டது.]     
கலிவிருத்தம்
   வேத மாகமம் வேறும் பலப்பல
ஓதி நாளு முளந்தடு மாறன்மின்
சோதி காணிருள் போலத் தொலைந்திடுந்
தீதெ லாமுஞ் சிவசிவ வென்மினே.
   (1)
   புல்ல ராயினும் போதக ராயினுஞ்
சொல்வ ராயிற் சுருதி விதித்திடும்
நல்ல வாகு நவையென் றகற்றிய
செல்ல றீருஞ் சிவசிவ வென்மினே.
   (2)
   நாக்கி னானு நயனங்க ளானுமிங்
வாக்கை யானு மருஞ்செவி யானுநம்
மூக்கி னானு முயங்கிய தீவினை
தீர்க்க லாகுஞ் சிவசிவ வென்மினே.
   (3)
   சாந்தி ராயண மாதி தவத்தினான்
வாய்ந்த மேனி வருத்த விறந்திடாப்
போந்த பாதக மேனும் பொருக்கெனத்
தீந்து போகுஞ் சிவசிவ வென்மினே.
   (4)
   வில்லி தென்ன விளங்குந் திருநுதல்
வல்லி பங்கன் மலரடி காணிய
கல்வி நல்குங் கருத்து மகிழ்வுறுஞ்
செல்வ நல்குஞ் சிவசிவ வென்மினே.
   (5)

   1. ஓதி-உரைத்து. தடுமாறன்மின்-தடுமாற்றத்தையடையாதீர்கள். சோதி-ஒளி. தீது-தீமை.

 2. புல்லர்-இழிந்தவர்கள். போதகர்-அறிவுடையவர். நவை-குற்றம். செல்லல்-துன்பம்.

 3. நயனங்கள்-கண்கள். முயங்கிய-தேடியடைந்த.

 4. சாந்தி ராயணம் முதலிய நோன்புகளால் தீராத தீவினையும் விரைவில் அழிந்து போகுமென்பது.

5.வல்லி-உமாதேவி. காணிய-காணும் பொருட்டு.    

   தீய நாளொடு கோளின் செயிர்தபும்
நோய கன்றிடு நூறெனக் கூறிய
ஆயுள் பல்கு மறம்வளர்ந் தோங்குறுந்
தீய தீருஞ் சிவசிவ வென்மினே.
   (6)
   வருந்தி யாற்றி வளர்த்த கதிர்த்தலை
பொருந்து வான்பயிர் போற்றுநர் போலவே
விரிந்த வேணியில் வெண்மதி சூடிபின்
திரிந்து காப்பன் சிவசிவ வென்மினே.
   (7)
   முந்தை யோர்சொன் மொழிந்து சிவனென
நிந்தை தானச் சிவனை நிகழ்த்தினும்
வந்த தீவினை மாற்றுவ னாதலால்
சிந்தை யோடு சிவசிவ வென்மினே.
   (8)
   நீச ரேனும்வா னீசர் நிகழ்த்தில்வான்
ஈச ரேனுஞ் சிவசிவ வென்கிலார்
நீச ரேயென் றியம்புறு நின்றுப
தேச நூல்கள் சிவசிவ வென்மினே.
   (9)
   எண்ணி நெஞ்சிற் சிவசிவ வென்பவர்
வண்ண மென்பதங் கிட்டி வணங்கவும்
உண்ண டுங்குவ னொண்டிறற் கூற்றுவன்
திண்ண மீது சிவசிவ வென்மினே.
   (10)
   இழிவுறுபுன் கருமநெறி யினனெனினுங்
     கொலைவேட னெனினும் பொல்லாப்
பழிமருவு பதகனெனி னும்பதிக
     னெனினுமிகப் பகரா நின்ற
மொழிகளுண்முற் றவசனாய்ச் சிவசிவவென்
     றொருமுறைதான் மொழியி லன்னோன்
செழியநறு மலரடியின் றுகளன்றோ
     வெங்கள்குல தெய்வ மென்ப.
   (11)

6. தீயநாள்-தீய கோள்கள் பொருந்தியநாள். செயிர்தபும்-குற்றம் நீங்கும். பல்கும்-மிகுதிப்படும்.
7. பின்திரிந்து-சிவ சிவ என்பவர்கட்குப்பின்னேதிரிந்து.
8. முந்தை-முன்பு. முன்பு சிவ சிவ என்று ஒருமுறை கூறியவர் பிறகு அப்பெருமானை இகழ்ந்தாலும் தீவிணையை மாற்றியருளுவர் என்றபடி.
9. நீசர்-இழிந்தவர். வானீசர்-தேவர்கள். இயம்புறும்-கூறும்.
10. வண்ணமென்பதம்-அழகிய மெல்லிய கால்கள். கிட்டி-நெருங்கி. ஒண்டிறல் கூற்றுவன்-மிகுந்த ஆற்றலமைந்த நமன். 11. புன்கரும நெறியினன்-இழிந்த செய்கைகளை மேற்கொண்டிருப்பவன். பழிமருவு-பழிபொருந்திய. பதகன்-பாதகன். பதிதன்-இழிந்தவன். துகள்-தூள்.    

Related Content

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்