logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

   [கைத்தலம் என்பது கையாகிய இடம். சிவபிரானுடைய திருவுருவத்தைத் தாங்கப் பெற்ற கை மிகச் சிறப்புடையதாகலின் அக்கையைக் குறித்துப் பாடப்பெற்றது இக்கைத்தலமாலை. இம்மாலை கலிநிலைத்துறை என்னும் பாவால் பத்துப் பாடல்களால் அமைந்துள்ளது.]    

ஒருவிகற்பவெதுகைக் கலிநிலைத்துறை

   முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர்
பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன்
மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (1)
   அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயும்
முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன்
பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (2)
   தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பான்
உன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த
மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (3)
   தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தாரம்
அன்ன மார்வய லம்பல நமன்றமர் வராமல்
கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (4)
   கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பான்
உன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி
மன்னு மோர்பவப் பிணிமருந் தெளிதுவந் திருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (5)

1. பன்னும்-கூறும். மின்-மின்னல் போன்ற ஒளி. சடாடவி-சடைக்காடு.
2. ஏனம்-பன்றி. பீடம்-இருக்கை. கோடற்கு-கொள்ளுதலுக்கு.
3. வந்தனை புரிபவன்-மார்க்கண்டேயன்-உன்னி-உயிர்கவர எண்ணி. மன்னும்-நிலைபெற்ற.
4. அம்பலம். திருத்தில்லை. கன்னன்மாமதன்-கரும்பு வில்லையுடைய காமன்.
5. பவப்பிணி மருந்து-பிறவி நோய்க்கு மருந்தாயிருக்குங்கடவுள்.
   
   அன்னை யாகியின் னுயிர்க்குயி ராமரு ளாளன்
பொன்னு மாரமு மணியுமா ரமுதமும் போல்வான்
தன்னை நாடொறுங் கண்டுகண் களிப்பதாச் சார்தற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (6)
   அன்ன மூர்பவன் முதலியோ ரபயமென் றடைய
முன்ன மாலமுண் டவர்துயர் களைந்தருண் முதல்வன்
மின்னு மாமழு வலமுடைய வீரன்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (7)
   பன்னு மாமறை தமிழினாற் பாடுநம் பிக்குப்
பொன்னு மாடையு மணிகளு மூர்தியும் பொருளும்
இன்னு மீபவ னருளினான் மேவிவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (8)
   பின்னும் வார்திரைக் கடலின்வீழ்ந் தமிழ்கையிற் பிடிப்ப
முன்ன மோர்புணை யகப்படு முறைமைபோற் பிறப்பின்
இன்னல் கூர்பொழு தெம்பிரான் வந்துவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (9)
   தன்னை யோர்பொழு திறைஞ்சுவான் கருதியித் தரைமேல்
மன்னு மாலயம் யாண்டுள தெனவல மராமல்
டொன்ன வாமலர்ச் சடையுடைப் புனிதன்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
   (10)

6. அருளாளன்-அருளை ஆள்பவன். ஆர் அமுதம்-மிகுந்த சுவை பொருந்திய அமுதம்.
7. அன்னம் ஊர்பவன்-நான்முகன். ஆலம்-நஞ்சு. மழு-மழுப்படை.
8. நம்பி-சுந்தரா. ஈபவன்-கொடுப்பவன்.
9. ஓர் புணை-ஒரு தெப்பம். இன்னல்கூர்பொழுது-துன்பத்தையடையுஞ் சமயத்தில்.
10. மன்னுமாலயம்-நிலைபெற்ற திருக்கோயில்.    

Related Content

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes

The Virasaiva Religion

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்