logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

   [குறுங்கழிநெடில் இதில் அமைந்துள்ள பாடல்கள் பத்தும் நெடுங்கழிநெடிலினுங் குறுகியதாகலின் குறுங்கழிநெடில் என்று பெயர் பெற்றது. இப்பாடல்களும் திருக்கையில் எழுந்தருளிய இட்டலிங்கத்தின்மீது பாடப்பட்டனவேயாம்.]    

எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

   பொன்செய்வா ணிகர்போ லெவ்வழி யானும்
     புண்ணிய மீட்டினு மறிஞர்
கொன்செய்பா தகமே புரிந்தன னின்றாள்
     குறுகுவ தென்றென விரங்க
முன்செய்தீ வினையோ கனவிலு மறமே
     மொழிகிலேன் களித்திருக் கின்றேன்
என்செய்கோ மறலிக் கென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
                                   (1)
   மென்னிழற் றருவை யாடைபவர் தம்மை
     விடாநிழல் விட்டிடு மாபோல்
நின்னடிக் கமல மடைந்திடிற் றொடர்ந்து
     நீங்கலா வினையுநீங் குறுமே
கன்னலிற் கனியிற் சுவைதரு மமுதே
     கண்மணி யேயருட் கடலே
என்னுயிர்த் துணையே யென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
                                   (2)

   1. பொன் செய் வாணிகர்-பொருள்தேடும் வணிகர்கள். கொன் செய்-தீமையைச் செய்கின்ற. என் செய்தோ-யாது செய்வேனோ. மறலிக்கு-நமனுக்கு. 2. விடாநிழல்-ஒருவரை எப்பொழுதும் விடாத அவர்களுடைய நிழல். நீங்கலா-நீங்காத. கன்னல்-கரும்பு.    

   முந்திரு வினையுந் தமவென விருப்பின்
     முற்றவற் றின்பயன் றருவாய்
வந்தவை நினவென் றிருப்பினங் கவற்றை
     மாற்றிவீ டுறவருள் குவையே
நிந்தையி லென்னெஞ் சுனதுநெஞ் சென்மெய்
     நினதுமெய் யென்றனிந் தியநின்
இந்திய மெனக்கொண் டென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (3)
   கண்ணுடைக் குறையாற் சுடர்பல வாகிக்
     காட்டல்போற் காரண முதலாப்
பண்ணுடற் றிறஞ்சே ரென்றிருக் கதனாற்
     பலவுரு வாயினை யொருநீ
பெண்ணுருப் படைத்த பேரரு ளிடப்பால்
     பெற்றிட வுகந்தளித் தவனே
எண்ணிடைப் படாம லென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (4)
   பிறவிமா மிடியன் றானெதிர் கண்ட
     பெறற்கரி தாயவைப் பென்ன
அறிவிலே னயன்மாற் கரியநின் றன்னை
     யம்மவோ வெளிதுகண் ணுற்றேன்
துறவினோ ருள்ளத் தெழுந்தொளி பரப்பித்
     தொல்லிருள் கடியுமெய்ச் சுடரே
இறைவிகூற் றுடையா யென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (5)
   நினக்குறு கூறா மென்மன மதனை
     நிரைவளைத் தளிர்க்கைநெட் டிலைவேற்
சினக்குறு மலர்க்கட் பேதையர் கொளாமற்
     செறிந்துநீ யேகவர்ந் தருள்வாய்
புனக்குற மகட்கு மயல்கொடு திரிந்த
     பொறிமயிற் குமரனைப் பயந்தோய்
எனக்குறு துணையா யென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (6)

   3. தமவென-தம்முடையவென. நின-நின்னுடையன. இந்தியம்-பொறி. 4. திருக்கு-அறிவு. பெண்ணுருப்படைத்த பேரருள்-உமாதேவியார் வடிவம் அருளே என்றபடி; அருட்டிருமேனி என்பதுங் காண்க, 5., பிறவிமா மிடியன்-பிறந்தது முதலே பெரிய வறிஞனாக இருப்பவன். வைப்பு-புதைபொருள். தொல்லிருள்-பழமை பொருந்திய ஆணவ இருள். 6., குரு பணிக்கு உடலும், சங்கம பூசைக்குப் பொருளும், சிவத்தியானத்திற்கு மனமும் உரியனவாகப் புரிதல் வேண்டுமென்னும் நூற்றுணிபுபற்றி நினக்குறு கூறாம் மனமென்றார்.

   அன்பினுக் கன்றி நான்புனை மலருக்
     கருளுவை யலைமலர்க் கருளின்
முன்பெடுத் தெறிந்த சாக்கியன் கல்லின்
     முருகலர் மிகவுமின் னாதோ
துன்பமுற் றிடுசிற் றின்பவெவ் விடயந்
     துறந்துளோர் மனத்தெழு தருபேர்
இன்பநற் கடலே யென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே,
   (7)
   ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ
     ரன்பன்வாய்ப் புனலுனக் காமோ
கூடையின் மலர்பித் தையிற்றரு மலரோ
     கூறுமென் கவியவன் மொழியோ
நாடரு மொருநீ யிறையெனும் வழக்கை
     ஞானசம் பந்தனாற் றிட்ட
ஏடுரை செய்ய வென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (8)
   மெய்யுறு பிணிக்கு விலக்குவ வொழித்து
     விதித்தன கொள்ளுவன் பிறவி
மையுறு பிணிக்கு மவ்வகை செயாமல்
     வருத்துமந் நோயிடைப் படுவேன்
பெய்யுறு வளைக்கைத் திருநுத லுமையாள்
     பெருவிழிக் கணைகொடு விடாமல்
எய்யுறு முரத்தோ யென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (9)
   சரிப்பினு மொருபா லிருப்பினு முறக்கச்
     சார்வினும் விழிப்பினு மொருசொல்
உரைப்பினும் போக நுகர்வினு மாவி
     யொழிவினு நின்னையான் மறவேன்
விருப்புறு மலரும் விரையுமே போல
     விம்மியெங் கணுமுறு பொருளாய்
இருப்பினு மரியோ யென்கரத் திருக்கு
     மீசனே மாசிலா மணியே.
   (10)


   7., அலை-அல்லை, முருகலர்-மணம் பொருந்திய மலர், 8. ஆடுற-நீராட. அன்பன்-கண்ணப்பன். பித்தை-கூந்தல். 9. மெய்-உடல். மையுறு-மயக்கம் பொருந்திய. பெய்யுறு-இடப்பட்ட. உரத்தோய்-மார்பையுடையவனே. 10. சரிப்பினும்-சுற்றித் திரிந்தாலும். ஆவி யொழிவு-சாக்காடு.    

நிரஞ்சனமாலை

   [நிரஞ்சனம் என்னும் வடசொல் நிறைவு இருளின்மை ஆகிய பொருள்களைக் குறிக்கும். ஈண்டு மெய்யறிவு நிறைவை உணர்த்தி நின்றது. கட்டளைக்கலித்துறையால் முப்பத்தொரு பாடல்களில் அமைந்த இம்மாலை அறிவின்மையைப் போக்கி மெய்யறிவைத்தர மேண்டுமென்று வேண்டுவது.]    

கட்டளைக்கலித்துறை

   நிரஞ்சன சூனிய நிட்கள மாகியந் நிட்களத்தின்
வருஞ்சிவ சித்துச்சின் னாதவிந் துக்களை மன்னியொன்றாய்
அருஞ்சுட ராயக ராதிப் பிரணவ மாகிநின்று
தருஞ்சகம் யாவுமென் கையா லயத்திற் றனிமுதலே.
   (1)
   குருவாகி முத்தனு விற்கிரி யாதிகள் கொண்டொருமூன்
றருவாய் மலமொழித் தாவிகண் மூவங்க மாவருளி
ஒருவாறு தான்முதன் முப்பொரு ளாகி யுவந்துநிற்குந்
திருவாரு மென்கைத் தவிசிடை மேவுஞ் சிவலிங்கமே.
   (2)
   என்னை யறித னினையறி கின்ற வியல்பதென்னா
துன்னை யெனைவிட் டறிவான் றொடர்த லொருவனிழல்
தன்னை யடியின் மிதிப்பான் றொடருந் தகைமைத்தன்றோ
பொன்னை நிகர்செஞ் சடைக்கற்றை யென்கைப் புராந்தகனே.
   (3)
   தன்பொரு ளென்ப நினைப்பிறர் தம்பொரு டாவரமாம்
என்ப னறிந்து முயிர்க்கே ளிருப்பவு மேதிலர்மெய்ப்
புன்புணர் வெஃகு மடமாதி னின்னிற் புறந்திரியும்
அன்பறு மென்பவம் போமேயென் னங்கை யமர்ந்தவனே.
   (4)


   1. சூனியம்-வெறும் பாழ். மன்னி-பொருந்தி. 2. முத்தனு-மூவுடல். மலம்-மும்மலம். 3. என்னையறிதல்-தன்னைத்தான் அறிதல். எனைவிட்டு-என்னை அறிவதை விட்டுவிட்டு. புராந்தகன்-புரங்களையழித்தவன்.4. புன்புணர்வு-இழிந்த சேர்க்கை.     
 

Related Content

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes

The Virasaiva Religion

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்