logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவெங்கையுலா

    [உலா என்பது, பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்னும் எழுவகைப்பருவ மாதர்களும் கண்டு காதல்கூரும் வண்ணம் தலைவன் ஒருவன் தெருவில் உலாவந்தான் என்று கலிவெண்பாவாற் பாடப்படுவதாகும். உலாவின் தொடக்கத்தில் பாட்டுடைத் தலைவனுடைய சிறப்பு, நீராடல், அழகு செய்துகொள்ளல், உறுதிச் சுற்றம் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறித்தெருவில் வருதல் என்னுமிவை கூறப்படும். இவ்வுலாநூல் உலாப்புறம் எனவும் பெயர் பெறும். பாட்டுடைத் தலைவனுடைய இயற்பெயர் கூறப்படுகிறபடியாலும், அவனைக் கண்டு மாதர்கள் காமுற்றதாகக் கூறுவதல்லாமல் அம்மாதர்களைப் பார்த்துப் பாட்டுடைத் தலைவன் காமுற்றதாக எங்குங் கூறப்படாமை யானும் இது புறப்பொருளைச் சார்ந்த பெண்பாற் கைக்கிளையாய்ப் பாடாண் திணையுள் அடங்கும். இதனால் இதற்கு உலாப்புறம் என்னும் பெயரும் வழங்கலாயிற்று. இவ்வுலாநூலைப் புலவர்கள் தம்மைப் பேணிய அரசர்கள் மீதும் கடவுளர் மீதும் அறிவாசிரியர்கள் மீதும் பாடுவது வழக்கமாக இருக்கிறது. நமது தமிழ் மொழியில் திருக்கைலாயஞானவுலா முதலிய பல உலாநூல்கள் உள்ளன. இவ்வுலாநூல் திருவெங்கையில் எழுந்தருளிய சிவபிரான் மீது பாடப் பெற்றது.] 

காப்பு

நேரிசை வெண்பா

நாவலர்தம் வாய்வீதி நாளு முலாவருமே
தாவருநம் வெங்கையிறை தன்னுலாப் - பாவெனுமோர்
அம்பொற் றளைபூண வாழத் தகப்பட்ட
கும்பக் கடாக்களிற்றைக் கொண்டு.

தலவிசேடம்     

1   பூமேவு செம்மற் புகழ்வடிவங் கொண்டன்ன
     பாமேவு மங்கைபுகழ் பண்பினான் - ஏமேவு
     வில்லிற் கருந்தடங்கண் மேவுஞ் சிறியநுதல்
     வல்லிக் கிடங்கொடுத்த வண்மையினான் -அல்லிமலர்
     யாணர்த் தவிசி னெகினவர சின்றளவுங்
     காணக் கிடையாத கங்கையான் - மாணப்
     பொருவரிய பூங்கட் பொறியரியாற் சென்று
     மருவரிய நற்றாண் மலரான் - விரவுசடைக்    (1)

 

    (காப்பு) தா அரும்-கெடுதலற்ற. ஆழத்தகப்பட்ட பிள்ளையார் என்பது தலப்பிள்ளையார் பெயர். 1.0-5.

    

5   கானிருக்க விவ்வீர்ங் கதிர்க்கியைபென் னென்றுமறி
     மானிருக்குங் கைத்தா மரையினான் - யானிருக்குங்
     காயத் திருப்பதுபுன் காரேனக் கொம்போவென்
     றேயப் பிறையிருக்கு மீர்ஞ்சடையான் - தூயமுக்
     கண்ணுமெழின் மூக்கொடுவார் காம்புபுணர் கூவிளமென்
     வண்ணவிலை காட்டும் வதனத்தான் - அண்ணல்
     வழுவை யடர்த்து வயங்கொளெறி பத்தர்
     மழுவை யுவக்கு மழுவான் - பழவடிமைக்
     கண்ணனையுஞ் சில்லோர் கடவுளெனத் தன்னொடும்வைத்
     தெண்ணவழ னஞ்சயின்ற வெம்பிரான் - பெண்ணுருவம்    (6)

 

10  பெற்ற வருளொடும்போய்ப் பெண்வலைப்பட் டுற்றதுயர்
     அற்ற வறிஞ ரகம்புகுவோன் - முற்றவிரி
     தத்துவமென் றாறாறுந் தாங்கடந்து போயறத்தில்
     எய்த்தவர்க்குக் காட்டு மியல்பினான் -முத்தமணி
     ஆற்றிற் பொருடிருவா ரூர்க்குளத்தி லன்றுசென்று
     தோற்றப் புரியந் தொழிற்சித்தன் - ஏற்றுங்
     கணையைமல ரென்று கருதா மதனைத்
     துணையை விடுத்தெரித்த தோன்றல் - அணையும்
     பிறப்புக் கிறப்புப் பெருமருந்து செய்யுங்
     குறிப்புக் கரியமுது குன்றோன் - சிறப்பப்    (11)

 

    15    பெரியவரைச் சங்கம் பெறப்பந்தி சேர்த்து
     விரிய விலைமுன் விரித்து - வரிசைபட
     அன்னம் படைத்துமிசை யாங்கிடுவ விட்டருத்தி
     மன்னும் பழுக்காய் வரவளித்துந் - தன்னந்
     துறைபடுநர் சென்னியிற்றன் றோழமைவான் கங்கை
     பொறைபடநன் றேறல் புரிந்து - முறைபடுமிம்
     மண்ணின்மேல் வெற்பு வளமுடையே மிம்மடவார்
     விண்ணின்மேல் வெற்பதுநா மேவுவமென் - றெண்ணிமேல்
     கொங்கைக் கலவைக் குளிர்சந் தழித்தலைத்துக்
     கங்கைப் புனலைக் கடுத்தெழுந்துங் - கங்கைக்குத்    (16)


    20    தானா யகமென்று தானதனா லெஞ்ஞான்றும்
     ஆனா வினைக ளழித்திட்டும் - மானாகக்
     கோடுங் கழையுங் குடவளையும் விண்முகடும்
     நாடுங் கழையு நளினமலர்க் - காடுங்
     கொடுத்த மணிபலவுங் கொண்டு தனக்கிங்
     கடுத்த பெயரை யளித்தும் - படைத்த
     பழகு புகழிப் படிமுழுதும் போர்ப்ப
     ஒழுகுமணி முத்தா றுடையான் - முழுகுபவஞ்
     சிந்தும் விவசித்துச் செய்பணிக்குக் காரணமாய்
     வந்துமுத னின்றெழுங்காய் வன்னியான் - எந்தை    (21)


6.5-10. பூமேவு செம்மல்-நான்முகன். பாமேவு மங்கை-கலைமகள். ஏ-அம்பு. யாணர்த் தவிசு-அழகிய இருக்கை. எகின் அரசு-நான்முகன். பொறி அரி-திருமகளையுடைய திருமால். மருவரிய-சேர்தற்கரிய. ஏய்-பொருந்தி. அ-அந்த. வழுவை-யானை. அடர்த்து-கொன்று. 11.10-15. ஆறாறும்-முப்பத்தாறும். முத்தமணியாறு-மணிமுத்த ஆறு. மதனை-காமனை. துணையை-இரதியை. 16.15-20. வரை-கீற்றமைந்த. சங்கம்-சங்குகளை. பெற-கூட்டமாக. பந்தி-வரிசை. அன்னம்-அன்னம் பறவை. வெற்பு-மலை. கடுத்து-ஒத்து. 21.20-25. நாயகம்-தலைமை. ஆனா-நீங்காத. கழை-கரும்பு. முகடு-முகட்டை. கழை-மூங்கில். காடு-தொகுதி. பழகு புகழ்-நீங்காத புகழ். படி-பூமி. விவசித்து-இவன் கோசலை நாட்டிலே மணிபிங்கலை நகரத்தில் அந்தண குலத்தில் தோன்றியவன். வறுமை மேலீட்டால் எங்குந் திரிந்தான். ஒரு காலத்தில் ஒரு தெய்வீகச் சுனையில் மூழ்கினான். அங்கே குபேரனுடைய தங்கையாற் கிடைத்த அணிகலன்களைக்கொண்டு கணநாதர் ஒருவர் உணர்த்தியவாறு, முதுகுன்றை யடைந்து உருவிலி வாக்கின்படி உரோமச முனிவருடைய அருளைப்பெற்றான். அருந்தவம் புரிந்து பழமலைநாதருடைய கட்டளையின்படி அணிகலன்கள் வைக்கப்பட்டிருந்த வன்னி மரம் வேண்டிய பொருளைக் கொடுக்க அரிய திருப்பணிகள் பலவும் செய்து வீடுபேற்றையடைந்தான் என்பது விருத்தாசல புராணம்.     


    25    அருந்தவர்க ளென்று மமரரென்றும் பேரிட்
     டிருந்தவர்க ளெல்லா மிரப்பப் - பொருந்தி
     முனியா தவர்க்குவர முற்றங் கொடுத்திங்
     கினியார் வரவென் றிருப்பான் - நினையாமல்
     வேத வுணவு வெறுத்துப் புகழ்மூவர்
     ஒதுதமி ழூணுக் குழல்செவியான் - தாதையிகழ்
     காலிற்குத் தக்க கணிச்சிகைச் சண்டிசொரி
     பாலிற்குத் தக்க பழமலையான் - சாலிக்குக்
     கைக்கரகத் துற்றிழியுங் காவிரிபோற் சென்றுநறுஞ்
     செக்கரிதழ்த் தாமரையின் றேன்பாய - வக்கமல    (26)


    30    ஏடு கனலா யிடுபசும்பொ னொண்பொகுட்டாய்
      மூடு கரியரியாய் மொய்த்ததடம் - பீடுபெற
     ஞாலங் கருதுஞ்செஞ் ஞாயிற் றிரும்பகன்மால்
     கோலங் கருதுங் குளிர்பொழில்வாய்க் - காலங்
     கருதி யிருளிருப்பக் கட்செவிமா ணிக்கம்
     பரிதியென நின்று பருகக் - குருதிபுரை
     சேயொளிய பூண்மணிசூழ் திண்சுவர்முற் றுங்கவரின்
     வாயி றெரிபளிக்கு மாடமுறத் - தூயசுதை
     மாடநம் பிக்கு வழிவிடுவான் விண்ணெழுந்து
     நீடு புனல்போல நின்றிலங்கப் - பாடநகர்    (31)


26.25-30. அமரர்-தேவர்கள். முனியாது-சினவாமல். இனையாமல்-வருந்தாமல். தமிழ்ஊண்-தேவாரப் பாடல்கள். உழல் செவியான்-ஏங்குகிற காதுகளையுடையவன். கணிச்சி-மழு. சண்டி-சண்டேசுரர். சாலி-நெற்பயிர். செக்கர் இதழ்-சிவந்த இதழ். கமலம்-தாமரை.31.30-35. பொகுட்டு-தாமரை மொட்டு. அரி-வண்டு. பீடுபெற-பெருமையை அடைய. கருதும்-எண்ணும். பரிதி-கதிரவன். குருதிபுரை-உதிரத்தைப்போன்ற. சேயொளி-செந்நிற வொளி.     

 

    35    இந்திரனுக் கன்றிங் கெனக்கென்று வேளசைத்த
     பைந்தழைய தோரணம்விண் பாலசைய - வந்தணையில்
     நாயகனா னீக்குதுயி னங்கை விளக்கவிப்ப
     மேய மணிப்பூண் விளக்கேற்றச் - சேயிழையார்
     முன்றிற் றுகண்மாற்ற மொய்குழலிற் பூந்தொடைகள்
     அன்றித் துகளா லதுநிரப்ப - மன்றில்
     கொழுநன்சொன் மாதுகிளி கூறா தடக்கப்
     பழகுமயற் பூவை பகர - வெழிலி
     மறைத்திருந்து செல்லமணி மாளிகையை வேத
     முறைத்திருந்து தீப்புகைபோய் மூட - நறைத்திருந்து    (36)


    40    செந்தா மரைநாதன் றேரிற் பதாகையொடு
     நந்தா மதிற்கொடிக ணட்பாடப் - பந்தாடும்
     மங்கையர்கள் செங்கை வளையொலிப்ப வேர்மலியும்
     வெங்கை நகரிருப்பு வேண்டியே - பங்குபடு
     பெண்ணாசை நம்பிபசும் பொன்னாசை பெற்றவுளம்
     மண்ணாசை தானு மருவுதலால் - விண்ணாசை
     கொள்ளுஞ் சிறப்புக் கொடுப்பத் திருவுளங்கொண்
     டெள்ளுங் குறியவுரு வின்றுபொய்த் - தெள்ளுங்
     கனவு நனவுபோற் காட்டி யிரந்து
     மனைவியுமை யோடு மணந்து - வினவினர்க்குப்    (41)


    45    பண்டை யறத்தின் படிவமிது வென்னவுருக்
     கொண்டவிலிங் கையன் குலமைந்தன் - உண்ட
     படிதாங்கி மாயன்றேர்ப் பார்தாங்கி யாங்கெம்
     குடிதாங்கி நல்லிசைமென் கோதை - முடிதாங்கு
     கல்வி யுறநீல கண்டன் றுணைவனலர்ச்
     செல்வி யுறையுந் திருமார்பன் - வல்விரகம்
     பூண்ட மடந்தையரே பொல்லா னெனுநல்லான்
     தூண்டு திகிரிச் சுமைதுறந்தான் - யாண்டும்
     இலையென்றல் கேட்பவுமின் னாதென் றிரப்போர்
     நிலைகண்டாங் கெப்பொருளு நேர்வோன் - அலையுண்டு    (46)


36.35-40. பைந்தழைய-பசிய தழைகளாலாகிய. பூண் விளக்கு-அணிகலன்களின் ஒளியே விளக்காக. அன்றுதல்-பகைத்தல். 41.40-45. செந்தாமரைநாதன்-கதிரவன். நந்தா-கெடாத. ஏர்மலியும்-அழகு மிகும். பங்குபடு-பழுது பொருந்திய. படிவம்-வடிவம். 46.45-50. நீலகண்டன்-கரிய கழுத்தையுடைய சிவபிரான்-விரகம்-காதல்.     


    50    பாலாழிக் கின்றுநிலை பான்மதிக்கென் றொப்பிகந்து
     தோலா துலகனைத்துஞ் சூழ்புகழான் - மேலாய
     செங்கமல வாணற்கே செந்நாவின் மேவுதல்வெண்
     மங்கையெனு மவ்வுரையை மாற்றியே - சங்கையற
     மூவுலகு ளோர்க்குமுதுசீர்த்தி வெண்மங்கை
     நாவுறைய வைத்த நலத்தினான் - தேவிகலி
     வந்துதன்சீர் பாடுநரை மண்மீதி லந்நிலையே
     இந்திரன்றா னாக்கு மியல்பினான் - நிந்தையற
     உண்டு பணையலரென் றொண்காவைக் கீழ்ப்படுத்திக்
     கொண்டு புரைதீர் கொடையினான் - கண்டுபுகழ்    (51)


    55    பண்பு மலாது பயனும் புணர்ந்துநிதித்
     தண்பதுமம் வென்ற தடக்கையான் - வண்புலவர்
     தம்மைவிழி காக்குந் தகவி னிமைபோலச்
     செம்மை பெறக்காக்குஞ் சீருடையான் - மெய்ம்மைபெற
     நல்லா ரொருவ ருளரே லவர்பொருட்டால்
     எல்லார்க்கும் பெய்யுமழை யென்றுமுனஞ் - சொல்லாடும்
     ஐய மகல வகிலமெலாந் தற்சுட்டிப்
     பெய்யுமழை யென்னும் பெயராளன் - துய்ய
     மறையோர் மிடிப்பகைஞன் வாய்மைநா மென்றும்
     அறையோ மெனப்பொய் யறைவான் - முறையோதி    (56)


    60    வேலிபுறஞ் செய்ய விளைத்துக் கரும்பயிலக்
     கூலி கொடுக்குங் குலத்தோன்றல் - மாலிரவும்
     ஆர்த்தி விருந்தா லடையாக் கதவழகு
     மாத்திரையாய் நின்றொளிரும் வாய்தலான் - பூத்தபொருள்
     ஏதப் படாம விருந்துதவ நல்லறமென்
     பூதப் படியுட் புதைக்கின்றோன் - வேதன்
     நிலம்பெயர்த்து வைத்த நெடுவேரிற் சென்னி
     குலம்பெயர்த்து வைத்த குணத்தான் - தலம்படைத்தோன்
     கண்ட குலத்திற் கருதி னிரட்டியாம்
      பண்ட குலத்தின் பயனானான் - மண்டலிகர்    (61)


    65    நல்லகோ லின்று நவைக்கோ லெனச்செயுங்கோல்
     வல்லகோ லண்ணா மலைவள்ளல் - மல்லலுறச்
     சந்தி பொருத்தித் தகுஞ்சீர் கெடாதடுக்கிப்
     புந்தி மகிழற்புதவணித்தா - முந்தையோர்
     செய்யுள்போற் செய்த திருக்கோயி லுள்ளிருந்தெம்
     பையுள்போக் கிற்கும் பரஞ்சோதி - மையுள்
     இருந்தபுன் மாக்கடமை யென்றுந் துதியா
     வரந்தரவென் முன்னின்ற வள்ளல் - வரைந்தவிடை

     பவனி

     தன்மதியி லென்றூழ் தனதுமதி காட்டியறப்
     பொன்மலியுங் கப்பம் புகவேற்றிச் - சொன்மலியும்    (66)


51.50-55. பாலாழி-பாற்கடல். தோலாது-தோற்காமல். செங்கமலவாணன்-நான்முகன். பணை-கிளை. புரைதீர்-குற்றம் போக்கிய. 56.55-60. நிதித்தண்பதுமம்-பதுமநிதி. தடக்கை-பெரிய கை. மிடிப்பகைஞன்-வறுமைக்குப் பகையாக இருப்பவன். 61.60-65. அயில-தின்ன. ஆர்த்திவிருந்து. மகிழ்ச்சியை உண்டாக்கும் விருந்து. சென்னி-சோழன். வாய்தல்-வாசல். ஏதம்-குற்றம். 66.65-70. பையுள்-துன்பம். மையுள்-மயலுக்குள்.     

 


    70    இந்திரனு மேனோரு மேத்தத் திருவுலா
     வந்தருளு நல்விழவுண் மற்றொருநாள் - சந்தமறை
     முன்னூல் வடிவுகொடு முந்நூல் புனைந்தன்ன
     பொய்ந்நூ றருமறையோர் போந்தெள்ளின் - நெய்ந்நூறு
     மாமஞ்ச ணெல்லி வருமானைந் தையமுதம்
     ஏமந் தருநெய் யிளவெந்நீர் - தேமுந்து
     வில்வநீர் கர்ப்புரம்பால் வெண்டயிர்செந் தேன்கரும்பின்
     செல்வநீர் பல்கனியின் றீஞ்சாறு - நல்லிளநீர்
     சந்தன மென்பனிநீர் சங்கப் புனன் முதலா
     வந்தன கொண்டுதிரு மஞ்சனத்தோ - டுந்துதிரைக்    (71)


    75    கங்கை நிறந்திரியக் கன்னிப் பிறைதிகைப்பப்
     பொங்கி யலைத்துப் புறம்போந்து - செங்கயல்கள்
     பாயுந் தடமாப் படர்சடைமீ தாட்டியபின்
     ஏயுங்கற் பான்மலைமா னெள்ளாத - மாயும்
     புலியுரி மாற்றிப் புனைமணிய பாம்பின்
     மெலியுரி யன்னதுகில் தேய்ந்து - வலிகெழுநற்
     பஞ்சவ னென்ன முடிசூட்டிப் பார்வைக்கீழ்ச்
     செஞ்சுடர்ப்பொற் றட்டிற் றிலகமுமிட் - டுஞ்சனிகர்
     காதிற்குந் தோளிற்குங் கண்டமணிப் பூணென்னச்
     சோதிக் குழைகள் சுமப்பித்து - வாதிப்பில்    (76)


    80   உண்ட வழனஞ் சொழுகிப் பரந்ததெனக்
      கண்ட முழுதுங் கருஞ்சாந்து - கொண்டணிந்து
     பொன்னனையார் நெஞ்சியங்கப் பூங்கலவைச் சேற்றிலிடுங்
     கன்னிரைபோன் முத்தவடங் கைபுனைந்து - தந்நிகர்மைந்
     நாக நினைவுவர நாறு மலர்த்தாமம்
     ஆக முழுது மணிந்திட்டுப் - பாக
     மதிய மணியிழைத்து வைத்தன்ன செம்பொற்
     புதிய மதாணி புனைந்து - நிதியவணி
     மாத்திரைதா னன்றி வளைவடுவுங் காக்குமெனச்
     சேர்த்தினர்கே யூரந் திகழ்வித்துச் - சாத்தியபூண்    (81)


71.70-75. சந்தமறை-இசைவடிவான மறை. முந்நூல்-முப்புரிநூல். ஆனைந்து-ஆக்களின் ஐந்து பொருள். ஐயமுதம்-பஞ்சாமிர்தம். சங்கப்புனல்-சங்குநீர். 76.75-80. வேய்ந்து-உடுத்து, குழைகள்-குண்டலங்கள். 81.80-85. அழல்நஞ்சு-தீயைப்போன்ற நஞ்சு. முத்தவடம்-முத்துமாலை. கைபுனைந்து-அழகு செய்து. பைந்நாகம்-படத்தையுடைய பாம்பு. மலர்த்தாமம்-மலர்மாலை. ஆகம்-உடல். மதாணி-மார்புப்பதக்கம். கேயூரம்-தோளணி.

 

    85    என்ன மழுமா னியைந்த விரலல்ல
     மன்னமணி யாழி மலிவித்துத் - தன்னொழியக்
     கைசெய்த வீரக்குக் கட்டியதாய் முற்றாமல்
     மொய்செய்த காலன் முரண்முருக்கி - மைசெய்த
     மேனி யரக்கன் விறலோர் கணத்தழித்து
     வானி னடுத்த மதிதேய்த்துத் - தானுடைய
     வென்றிக் கணிந்ததென வீரக் கழனோன்றாள்
     ஒன்றிக் கிடப்ப வொளிர்வித்து - மன்றற்
     புகைமுதனின் றேந்திநறும் பூங்குவளைத் தீப
     வகைமுதல் கொண்டுபணி மாறித் - தகைமை    (86)


    90    வலக்க ணிடப்பா லிடக்கண் வலப்பாற்
     கலக்க நிழலாடி காட்டி - நிலக்கலமும்
     பொற்கலமு மன்ன மறையும் புகழ்மூவர்
     சொற்களையு மொத்துத் துதிப்பவிருந் - தற்கதிர்தன்
     அங்கந் திரண்டமுத தாரையொழுக் கானதெனத்
     தங்கு மணிப்பிடிய சாமரைகள் - அங்கசையச்
     சாந்தாற்றி பேர்முரணித் தாமரைமுத் தன்னவெயர்
     போந்தாற்றி ஞாங்கர்ப் பொலிவெய்த - வேந்தாற்றற்
     பிள்ளை மதியினைமுன் பெற்றெடுத்த தாய்மதிபோல்
     வெள்ளை மணிக்கவிகை மேனிழற்றத் - தொள்ளைவளை    (91)


    95    ஒன்றா யிரம்வா யொலிக்கு மவைபோன்று
     சென்றா யிரமெண் டிசைவிழுங்கக் - குன்றாத்
     திரண்டா யிரங்கை தெழிக்குமது போற்கை
     இரண்டான் முழவொன் றிரங்க - மருண்டார்நல்
     தந்திகரங் கொண்டதென நற்றண் ணுமைமுழங்கச்
     சந்தமறை யோன்விழையுந் தாளங்கள் - முந்ததிரக்
     கண்ணன் மலர்வாய்க் கழையெறிந்து பின்றொடர
     வண்ண விசைக்குழல்கள் வாய்த்தொலிப்ப - மண்ணியங்கள்
     ஏனையபா தாளத் திறையரவும் விண்ணரவும்
     வானுருமே றென்ன மலிந்தார்ப்ப - மீன    (96)


86.85-90. மன்ன-பொருந்த. முரண் முருக்கி-வலிமையை அழித்து. மதி-திங்கள். நோன்றாள்-வலிமை பொருந்திய திருவடி. 91.90-95. நிழலாடி-கண்ணாடி; நிலக்கலம்-மண்ணாற் செய்தகலம். பொற்கலம்-பொன்னாற் செய்த கலம். மறை மண்பாத்திரமும் தேவாரம் பொன் பாத்திரமும் போன்றதென்க. “பூசுரர் நான்மறை மட்கலநிகர்க்கும்” என்பது நால்வர் நான்மணிமாலை. கவிகை-குடை. நிழற்ற-நிழலைச் செய்ய. 96.95-100. முழவு-மத்தளம். தண்ணுமை-ஒலிக் கருவிகளில் ஒன்று. கழை-வேய்ங்குழல். உருமேறு-பேரிடி.

 

    100   அலைப்புதல்வி போற்றபெரி யம்மைப் பெயர்கொள்
     மலைப்புதல்வி தன்கொழுநன் வந்தான் - தொலைப்பில்
     முதுகுன்றம் வெங்கையென முன்னுங் கருணை
     மதகென்ற கண்ணுடையான் வந்தான் - இதுகுன்றம்
     என்னு மழவிடையான் வந்தா னெனக்கோடி
     சின்ன மமுதஞ் செவிக்குகுப்ப - மன்னுசிவ
     செந்துவர்வாய் மங்கைபங்க தேவாதி தேவவென
     வந்திகர்நின் றார்க்குமொலி வானளப்பப் - பந்திமணி
     மாடக் கரைசேர் மறுகிலஞ்சி மன்பதையா
     நீடப் புதுநீர் நிறைந்தொலிப்ப - ஆடச்    (101)


    105   சிலர்செந் தழற்கொழுந்து சேட்போய் விழல்போற்
     பலர்செந் துகிலெறிந்து பற்ற - மலர்சிந்தி
     உம்பர்மே னிற்ப வுலகநெருக் கரலுயர்த்த
     தம்பதுமக் கையெளிதிற் றாங்குவிப்பச் - செம்பொனெடுந்
     தண்டுமிசை கொண்டு சகமீன்றா டன்னையுடன்
     கொண்டுமணி வீதி குறுகியே - பண்டு
     சிலையாகி நொய்துபட்ட தீதகல மேரு
     மலையாகி நின்றவா வந்த - நிலையாகி
     நாரணனாய் விண்ணுயர்வா னன்னிறத்தாற் செங்கமல
     ஆரணனாய் மிக்க வணியினால் - வாரணனாய்    (106)


    110   நின்ற பசும்பொ னெடுந்திருத்தேர்க் கண்டுவந்து
     மன்ற விளங்கதிர்போல் வந்தேறி - வென்றிதரு
     தந்தி முகன்முருகன் சங்கரிநற் சண்டியிவர்
     தந்த மரபிரதந் தாங்கடவி - வந்தணையக்
     கட்டளைக்கற் பொன்னுரைபோற் காற்பொன் மறுகுரிஞ்ச
     முட்டிமுடிப் பொன்விண் முகடுரிஞ்சப் - பட்டுடைத்தேர்
     கண்டோர் விழிகள் களிப்ப நிலைபெயர்த்துத்
     திண்டோ ளிறைவன் செலுத்துதலும் - பண்டோர்

     குழாங்கள்

     சிரந்துணித்தா னோடமர்ப்பச் சென்மதற்கு வேதன்
     இருந்து படைத்தபடை யென்னத் - திருந்திழையார்    (111)


101.100-105. 106.105-110. சேண்போய்-தொலைவிற்போய். உம்பர்-தேவர்கள். சிலை-வில். நாரணன்-திருமால். செங்கமல ஆரணன்-நான்முகன். வாரணன்-இந்திரன். 111.10-115. கட்டளைக்கல்-பொன்னுரைகல். காற்பொன்-தேர் உருளையின் பொன். மறுகு-தெரு. முடிப்பொன்-தேர்முடியின் பொன். முகடு-விண்முகடு. சிரந்துணித்தான்-நான்முகனுடைய தலையைக் கிள்ளியவன். அமர்ப்ப-போர் செய்ய. இருந்து-எண்ணி.

 

    115   முற்றினர்முற் றாதமுலையிற் பெருவாழ்வுஞ்
     சிற்றிடையி னல்குரவுஞ் சேர்ந்துளார் - முற்றும்
     அமைக்க நிகர்தோ ளணங்கா தலைத்தம்
     பிமைக்கம் விழியா லிறுப்பார் - சுமைக்கு
     வருந்து நுசுப்பென்று வாணுதலிற் றீட்டுந்
     திருந்து திலகஞ் சிதைப்பார் - பரந்தஞிமி
     றூதித் திரியும் பலமலரி னொண்மணம்போல்
     பேதித் தமையுமிகு பேரழகார் - மோதிக்
     கிழியா முகில்சிதைக்குங் கேதனப்பொற் றேரோன்
     அழியா வெரிதீ யழகை - விழியால்    (116)


    120   விழுங்கினா ரேது விளையா தினிமெய்
     புழுங்கினார் மாலை பொரிந்தார் - செழுந்தரள
     மாலை பொடிந்துவிழி வார்நீர் கலந்தொழுகிப்
     பாலைபொழி யார்பா ரதிபோன்றார் - மேலைநாட்
     கூற்றை முனிந்த குரைகழலு முப்புரத்தின்
     ஆற்றல் களைந்த வணிநகையும் - போற்றிலராய்த்
     தம்மைநோய் செய்த தறுகட் சிலைமதற்காய்
     வெம்மை விழியே வியந்திடுவார் - செம்மைத்
     தவங்கொண்டோ மாதுமையா டன்னழகு கொண்டோ
     எவன்கொண் டிடமளித்த தென்பார் - தவங்கொண்டேல்    (121)


    125   ஆக வழகா லளித்த திடமாகில்
     போகவிடே மென்றெதிர்தாம் போகுவார் - ஆகம்
     மருவு மதினெண் மடங்கு பிறைப்பேர்
     இரவி தனைமறைப்பி னென்பார் - பரவுறுபீர்
     கன்றுபயிர் மேயக் கடாவின் செவியரிந்தாங்
     கின்றுதலை வற்கா ணிணைவிழிகள் - நன்றிருப்பக்
     கொங்கை யழகழியக் கொண்டதென்பார் கொல்பவர்க்குச்
     சங்கரனென் னும்பேர் தகாதென்பார் - மங்கையுமை
     கொங்கைவடுக் கண்டுங் குழியவுரம் பாயாத
      எங்கண் முலைக்குவலி யில்லென்பார் - செங்குதலைப்    (126)


116.15-120. முற்றினர்-வந்து திரண்டனர். அமை-மூங்கில். அம்பு இமைக்கும்-அம்பைப்போல் விளங்கும். இறுப்பார்-ஆடவரை வருத்துவார்கள். நுசுப்பு-இடை. ஞிமிறு-வண்டு. 121.120-125 பொரிந்தார்-தீயப்பெற்றார். பாரதி-கலைமகள். மெய்புழுங்கினார்-உடல் வருந்தினார். அணிநகை-அழகிய பல். 126.125-130. ஆகம்-மார்பு. இரவி-கதிரவன். குழிய-குழி விழுமாறு. உரம்-மார்பு.

 

    130    பிள்ளைப் பழியாளர் பெண்பழியை யஞ்சுவரோ
     எள்ளத் தனையேனு மின்றென்பார் - உள்ளுக்
     குருகுவார் நெற்றிபுடைத் தோவிதியே யென்பார்
     பருகுவார் போலிறையைப் பார்ப்பார் - முருகுவாய்
     தங்கமுத மும்பெறார் தாழ்குழலிற் பூப்புனையார்
     எங்கள் விழிக்கிவர்தாம் யாரென்பார் - பங்குவரும்
     ஆர மணிமார் பணையக் கிடைத்தாலும்
     பார முலைக்ககலம் பற்றுமோ - நேருகினுங்
     கங்கையறி யாமற் கலக்கு மிமையமலை
     மங்கையறி யாமல் வருவரோ - மங்கை    (131)


    135   அறியாமற் கங்கை யணையு மவரென்
     நெறியால் வராரென்று நிற்பார் - குறியா
     இணைவிழியா னோக்கா ரெனினு நுதன்மேல்
     அணைவிழியா னோக்கினமா மென்பார் - கணைவிழியார்
     ஏந்திளங் கொங்கை யிடைவருத்தன் மாத்திரையாய்ப்
     போந்தன வென்று பொருமுவார் - நாந்தவஞ்செய்
     தில்லோ மதனா லினையாம லென்செய்ய
     வல்லோ மெனத்திகைத்தார் மற்றொருத்தி - நல்லோர்

     பேதை

     பொதும்பர் வனம்யாம் புகவோ மிவடான்
     பெதும்பையா முன்னமெனும் பேதை - குதம்பை    (136)


    140   விழிமேவுங் காதுதோண் மேவப் புனைவாள்
     மொழிமேவும் வீணை முனிவாள் - பழிமேவுங்
     கல்லார் பரன்முற் கரத்தல்போற் றன்கண்மூய்
     எல்லார் முனுங்கரந்தே னென்றிருப்பாள் - பொல்லாத
     வெம்பு பகையாகி மேல்விளைவ தோராமல்
     அம்புலியை வாவா வெனவழைப்பாள் - செம்பொனுயர்
     தெற்றிமிசை மென்னடைய தென்றல் வரவேற்றுச்
     சற்றுமுள மஞ்சாது தங்குவாள் - பற்றுதவு
     தன்பெருமை பொன்னறியாத் தன்மைபோற் பெண்ணரசாந்
     தன்பெருமை தானறியாத் தன்மையாள் - பொன்பரிவின்    (141)


131.130-135. பிள்ளைப்பழியாளர்-சீராளனைக் கொன்று பழி தேடியவர். பருகுவார்-எடுத்து விழுங்குபவர். ஆரம் மணிமார்பர் - மாலைகளையணிந்த அழகிய மார்பையுடையவர். அகலம்-இறைவருடைய மார்பகலம். 136.135-140. கணைவிழியார்-அம்பைப்போன்ற விழியை உடையவர்கள். பொருமுவார்-மனங்குமுறுவார்கள். இனையாமல்-வருந்தாமல். பொதும்பர்-மரச்செறிவு; மரப்பொந்து. குதம்பை-காதணி. 141.140-145. பரன்-கடவுள். கரத்தல்-மறைத்தல். மூய்-மூடிக் கொண்டு. தெற்றி-திண்ணை.

 

    145   ஒக்கலையிற் கொள்ளி னொளிர்பொன் மணியிருப்பிற்
     றக்கவளல் லாரெடுக்கத் தக்ககிலாள் - மிக்க
     வடிவழகுக் கேற்ற மணவாளன் றானெப்
     படியுளனென் றாராயும் பண்பாள் - முடிவில்
     உருவழிந்த வேளை யுரியனெனக் கூறும்
     பொருவழிந்த வோர்கறையும் பூண்பாள் - திருவழங்கு
     பொன்னே யெழின்முளையே பூங்கொடியே பெண்ணரசே
     மின்னே மயிலே விழிமணியே - அன்னே
     வருக வருகவென வாராது தாய்நெஞ்
     சுருக வுருக வுழல்வாள் - பெருகறிஞர்    (146)


    150   நெஞ்சம் புரைய நிகழ்வுற் றொருசிறிதும்
     வஞ்சம் புகாத மதர்விழியாள் - துஞ்சி
     விழுந்த கதிரே யெழல்போல் விழுந்த
     தெழுந்ததென வொக்கு மெயிற்றாள் - அழுங்கவுரம்
     மீக்கா ணளவும் வெளிப்படா வுட்பகையை
     நோக்காது வாழு நுசுப்பினாள் - சீர்க்காமன்
     மாதரழுக் காற்றால் வடிவிழிவு காணாமல்
     பேதை யெனவிகழும் பெண்பெருமாள் - காதலுளந்
     தள்ளத் தமர்போற் றமரலா ரும்மகண்மை
     கொள்ளக் கருதுங் குறியினாள் - பிள்ளைப்    (151)


    155   பருவத்தா லொத்துப் பகல்விளக்குப் பட்டாங்
     குருவத்தா லொவ்வா ரொடுதான் - தெருவிற்போய்ச்
     செங்கணெடு மாலுந் திசைமுகனு மீசனெனப்
     பங்கமொழி கூறும் படியென்னச் - சங்கம்
     பழிக்கும் வழுச்சொற் பதர்சேர்த்து வைத்த
     இழுக்குங் கலியென்ப தென்னக் - கொழிக்கும்
     புழுதியளைந் தில்லமெனப் போற்றிவிரற் கோலம்
     எழுதிவிளை யாடி யிருக்கும் - பொழுதிலிசை
     வேதச் சிலம்பு மிளிர்பதத்தான் மூவெயிலும்
     காதச் சிலம்பு கரங்கொண்டான் - நாதப்    (156)


    160   பணையா னறிய பசுந்துழாய் நாக
      அணையா னறிய வரியான் - துணையாய்
     அடியவரைக் காக்கு மருளான் பனைக்கைக்
     கொடியவரைக் காக்குங் கொலையான் -கடிகொள்
     பனியிதழி மாலைப் படர்சடையான் வெற்பின்
     கனியிதழி மாலைக் கழியான் - இனியநறுங்
     காவிக் கரிய களத்தினா னெம்முடைய
     ஆவிக் கரிய வமுதானான் - பாவித்
     துருகு மகத்தை யுவப்பா னிகழ்வால்
     அருகு மகத்தை யழிப்பான் - பெருகும்    (161)


146.145-150. ஒக்கலை-மருங்கு. தக்ககிலாள்- தகுதியற்றவள். பொருவு-ஒப்பு. விழிமணி-கண்மணி. 151.150-155. புரைய-ஒப்ப. துஞ்சி-மறைந்து. எயிற்றாள்-பற்களையுடையவள். உரம் மீக்காண் அளவும்-மார்பின் மேலே காணும் வரையிலும். நுசுப்பு-இடை. காமன்மாதர்-இரதி. தமரலார்-உறவினரல்லாதவர். மகண்மை-மகளாந்தன்மை. 156.155-160. புழுதியளைந் தில்லமென-மணலாற் சிற்றில் இழைத்து. மூவெயிலுங்காத-முப்புரங்களையும் அழிக்க. சிலம்பு-மலைவில். 161.160-165. நாதப்பணையான்-இசை பாடும் வேய்ங்குழலையுடைய திருமால். துழாய்- துளசி. பனைக்கை-பனை போன்ற கைகளையுடையானை. கடிகொள்-மணங்கொண்ட. காவி-கருங்குவளை. பாவித்து-உள்ளத்தில் எண்ணி. உவப்பான்-மகிழ்வான். மகம்-தக்கனது வேள்வி.     

 

    165   உருப்பவள மாய வொருவ னிரதி
     விருப்பவள மாய விழித்தான் - பொருப்புவளர்
     மங்கைக் குழையாய் மழுத்தனக்கென் றேந்துவோன்
     சங்கைக் குழையாச் சமைத்தபிரான் - வெங்கைப்
     பழமலையா னாளும் பதியிலான் சீற்றம்
     எழமலையா னாளு மிறைவன் - தொழமலையான்
     வாழி யரம்பையர் தார் வண்டலயர் பேதையராப்
     பூழி யெழுந்தளகம் போய்ப்படிய - ஆழிநெடுஞ்
     செம்பொற் கொடித்தேர் திருமறுகி னூர்ந்துவர
     அம்பொற் கொடிகுறுகு மன்னையரோ - டும்பர்க்    (166)


    170    கரியா னெதிர்சென் றவர்தாழத் தாழ்ந்து
     பெரியா னிலைசிறிதும் பேதை - தெரியாமல்
     அன்னைமீ ரித்தே ரமர்பவன்யார் மைந்தனிது
     பன்னுகவென் றாடைமுதல் பற்றுதலும் - மின்னனையார்
     வற்புறுத்த வோர்பொருளை வள்ளுவனார் பத்துமுறை
     சொற்பொருத்தி யோதுந் துணிவுபோல் - தற்பதத்தால்
     ஓதும் பிரமமொரு தானென்ப தொன்றனைமால்
     காதுபவம் பத்தெடுத்துக் காட்டினோன் - சாதம்
     இவட்குநா மேதென் றியம்புவமென் றெண்ணித்
     துவக்கும் வினைவழியாற் றோன்றும் - எவர்க்குமிவன்    (171)


    175   தந்தையே யன்றித் தனையனா காதவன்காண்
     அந்தமில்சீர்க் காரைக்கா லம்மைதனை - முந்தொருநாள்
     தப்பா வருளாற் றனக்கம்மை யென்றவன்காண்
     அப்பா வெனுமொழியு மன்பினால் -துப்பார்
     அயிலேர் மகன்மாட் டறிந்தவன்கா ணெங்கள்
     மயிலே யெனவுரைப்ப மற்றும் - வெயிலேர்
     இழையா ளிவனூ ரெவணுரையு மென்ன
     உழையா ரிவனூர்நம் மூர்தான் - அழையாய்
     விளையாட வென்று நகைத்து விளம்ப
     முளையா முலையிளையாண் மோகங் - கிளையாள்    (176)


166.165-170. விருப்ப-விருப்பத்தையுடைய. வளம்-காமன். குழையா-காதணியா. பதியிலான்- தனக்கொரு தலைவனில்லாதவன். மலையான்-போர் புரியாதவன். தொழ மலையான்-தன்னை வணங்குவோரிடம் மாறுபடாமலிருப்பவன். பூழி-புழுதி. 171.170-175. பெரியான்-பெரியவனாகிய கடவுள். பன்னுக-கூறுக. காதுபவம்-வருத்துகிற பிறவி. சாதம்-உண்மை. துவக்கம்-வலிக்கின்ற. 176.175-180. துப்பார்-வலிமை பொருந்திய. வெயில்ஏர் இழையாள்-ஒளிதங்கிய அழகிய அணிகலன்களை அணிந்த பேதை. எவண்-எவ்விடத்தது. உழையார்-பக்கத்திலுள்ளவர்கள். முளையா-தோன்றாத. கிளையாள்-தோன்றாதவளாகி. படிவம்-வடிவம்.     


    180   படிவ நனிநன்கு பார்த்தா டவழும்
     முடியி லிளம்பிறையு முன்னாள் - வடிவழகன்
     கையி லளமானுங் காதலியா ளெம்பெருமான்
     மொய்யகலம் வேய்ந்து முருகுயிர்க்குஞ் - செய்ய
     கடுக்கையினப் போதே கருத்தூழ் நடாத்த
     மடக்கொடியிவ் வீசர்தோண் மாலை - அடுத்தெனக்கு
     வாங்கி யுதவுமென மைக்கண் கலுழ்ந்துருகத்
     தீங்கிலுமை பங்கன் றிருவிழவுள் - யாங்களிளம்
     பேதையென வைப்பப் பெதும்பைச் செயலுமலால்
     மாதிவளோர் மங்கைசெயன் மன்னினாள் - யாதினியாஞ்    (181)


    185   செய்யுஞ் செயலென்று சிந்தித் துளங்கலங்கிப்
     பெய்யுஞ் சிறுவளைக்கைப் பெண்ணமுதே - ஐயன்
     திருத்தார் நினைக்கிரத்தல் செய்தும் புனைதற்
     குரித்தா மூலைவந் துரத்திற் - பருத்தாலென்
     றோதிக் கலுழ்கை யொழித்தா ரிவளன்று
     பேதைப் பருவம் பெறுகையால் - ஆதிப்
     பெருமான் விடுத்தகன்றான் பேரருளால் பாகத்
     தொருமா னிவட்பார்த் துவந்தாள் - பொருமாரன்
     நூறடுத்த கோடி நுனைப்பகழி கொண்டாலும்
     மாறிவட்கென் செய்வான் வறிதகன்றான் - வேறொருத்தி    (186)

     பெதும்பை

    190   சீர்க்கு மிறைஞராந் தேன்முரலும் போதாகப்
      பார்க்கும் பெதும்பைப் பருவத்தாள் - யார்க்குந்
     தனைக்காணில் வாய்நீர் தரும்புளியி னுண்மால்
     தனைக்காணி னல்குமொரு தையல் - நனைக்காமம்
     உள்ள மரும்ப வுணர்வுடைய யோகிகட்குங்
     கள்ள மரும்புகயற் கண்ணினாள் - கொள்ளுந்
     தகவையிரு பங்காக்கித் தாமிருப்பக் கண்கள்
     முகவினடு விட்டசுவர் மூக்காள் - மிகவும்
     புரிந்தநெடுங் கூந்தற் பொறைவருமுன் னாணால்
     வருந்துநறுஞ் சந்த வளையாள் - திருந்த    (191)


181.180-185. மொய் அகலம்-வலிய மார்பு. வேய்ந்து-அணிந்து. முருகுயிர்க்கும்-மணத்தை வெள்ப்படுத்தும். கடுக்கையில்-கொன்றை மாலையில். கருத்து-கருத்தை. ஊழ்-ஊழ்வலி. மடக்கொடி-பேதை. கலுழ்ந்து-அழுது. மன்னினாள்-பொருத்தினாள். 186.185-190. செய்தும்-செய்கிறோம். உரத்தில்-மார்பில். கலுழ்கை-அழுகை. ஒருமான்-மானைப்போன்ற பெரிய நாயகி. நுனைப்பகழி-கூரையுடைய கணை. மாறு-மாறுபாடு. வறிது-வீண். 191.190-195. முரலும்-ஒலிக்கும். கொள்ளுந்தகவை-எல்லோரையும் வருத்துதல் முதலிய பெருமையை. வளையாள்-கழுத்துடையவள்.

 

    195   மனங்குழைக்கும் பெண்வளர்த்தான் மானக் குதம்பை
     கனங்குழைக்கு நல்கும்வார் காதாள் - முனங்குழைக்கும்
     மண்விடுத்துப் பூசு மணங்குழைப்பாண் முன்பிறழ்ந்த
     எண்விடுத்துச் செவ்வ னியம்புவாள் - பெண்விடுத்துப்
     பூமங்கை யாணவாம் பொற்பினாள் கல்விகொடு
     பாமங்கை தாளிற் பணிகுவாள் - காமன்றன்
     வல்லியிவள் போலுமவள் வாட்போலுங் கண்ணினள
     வில்லைபுகுந் தாயி னெனப்படுவாள் - மெல்ல
     இடையயிரா தாழி யெழுங்கதிர்முன் றோன்றும்
     முடி நுனிபோற் றோன்று முலையாள் - அடியழகு    (196)


    200   பூழி யழிப்பப் புறந்திரியா டற்போற்றுந்
     தோழியர்நூ றாயிரவர் சூழ்ந்துவரக் - கேழின்
     நிலைய வுறுப்பு நிகரா தவற்றின்
     வலைய மலைப்ப மனங்கொண் - டிலகிலஞ்சி
     சென்று புகுந்துவளர் சில்லோதி தன்பகையாம்
     என்றுநெடும் பாசி யிடையொதுங்க - மன்றனறுங்
     காவிவிழி கண்டுகுப்பக் கண்ணீர் குழைபகைத்த
     ஆவிபடர் வள்ளை யடிதுடக்கத் - தூவிதழ
     ஆம்பன் மலர்வா யதுகண்டு வாய்திறப்ப
     மேம்பல் வளைகழுத்தால் வீழ்ந்தொளிப்பக் - கூம்பல்    (201)


    205   முகைகண்டு தாழ முலையை முழந்தாட்
     பகைகண்டு ஞெண்டளைகள் பார்ப்பத் - தகைகொண்டு
     வாய்ந்தகணைக் காற்கு வராலிரியத் தாட்புறக்குப்
     போந்த கமடம் புறங்காட்டக் - காந்தளுடை
     தன்னெதிர்கஞ் சஞ்சிவந்து சாயாது நிற்பக்கை
     அந்நிலையிற் கொய்தாங் கதுபற்ற - மின்னனையாள்
     ஆடவரோ டாடினா ளாகப் புனலாடி
     மாட மணிமறுகில் வந்துறலும் - நீடு
     கரும்பு மலருங் கலந்துவிழை வாக்க
     விரும்புமதன் போன்மூலை வீதி - திரும்பிப்    (206)


196.195-200. முனம்-பேதைப் பருவத்தில். பூமங்கை-திருமகள். ஆணவாம்-ஆண் தன்மையை விரும்பும். பாமங்கை-கலைமகள். அயிராது-ஐயப்படாமல். 201.200-205. கேழில்-உவமையில்லாத. இலஞ்சி-தடாகம். சில்லோதி-சிலவாகிய கூந்தல். காவி-கருங்குவளை. உகுப்ப-சிந்த. வள்ளை-வள்ளைக்கொடி. ஆம்பல்-செவ்வல்லி. 206.205-210. ஞெண்டு-நண்டுகள். அளைகள்-வளைகள். வராலிரிய-வரால் மீன்கள் அஞ்சியோட. தாட்புறக்கு-புறவடிக்கு. கமடம்-ஆமை. புறங்காட்ட-தோற்றோட. காந்தள்-காந்தள் மலரும். உடை-தோல்வியடைய. கஞ்சம்-தாமரை. சாயாது-தோல்வியடையாமல். ஆடினாளாக-கலந்தவளைப்போல. மணிமறுகு-அழகிய தெரு.

 

    210   பரிதிநெடுந் தேர்வருதல் பார்த்தவக லல்குல்
     இரதியெனத் தானுமெதி ரேற்றாள் - கருதின்
     அரிய நுதற்க ணரசையருள் காட்டுங்
     கரிய மிடற்றமுதைக் கண்டாள் - உரிய
     இறைவற்குத் தக்காங் கிறைஞ்சினா ணூலின்
     முறைமுற் றிரத முதல - குறைவற்ற
     மல்கு விழிவார வாரத் தகப்படா
     தொல்கு மருங்கி லுமைமங்கை புல்குந்
     திருத்தோளிற் கண்வழிதன் சிந்தைபோய்க் காம
     எரித்தோற்ற மெய்துறுமவ் வெல்லை - உருத்தோர்    (211)


    215   பெருநாண் டடுத்துப் பிணைவிழியு ணீருங்
     குருநாண் மலர்க்கைக் குருகும் - அரநாண்
     அகல்கின்ற வல்குலிற்பட் டாடையுநிற் பிக்கப்
     புகல்கின்றா ளிம்முளரிப் பூவைப் - பகல்குன்றச்
     சோதி தருமிவற்குச் சூட்டியக்கான் மற்றிவன்றான்
     ஏதுதரு நல்கு மெனக்கென்ன - ஓதி
     பெருகொருத்தி சென்றருகு பெண்ணணங்கே யின்பம்
     பருகற் கிரண்டாம் பதமாம் - அருகிருத்தல்
     ஈந்தருளு மென்ன விறைவி யருகிருப்பு
     வாய்ந்த முதற்பதமா வைத்தெண்ணிப் - போந்த    (216)


    220   மனக்களிப்பு மல்கிமலை மாதையஞ்சி யீசன்
     தனக்களிப்ப வெண்ணுமலர் தன்னை - நினக்களிப்பன்
     என்ன வவடா னிவண்மனம்பே தித்ததெனாக்
     கன்ன லனையமொழிக் காரிகையே - பொன்னிரதம்
     மங்கை முலைகளோ வள்ளறடந் தோள்களோ
     இங்கிவையி னல்ல வியம்பென்ன - அங்கவளுங்
     கூறாது தன்கடைக்கண் கோமான் புயத்துறுப்ப
     வேறான துள்ளமெனன் மெய்யென்று - தேறாக்
     கொலைமாலை வேற்கணாட் கொண்டுமட மாதர்
     தலைமாட வீதியய னீங்கச் - சிலைமாரன்    (221)


211.10-215. எதிரேற்றாள்-எதிரே சென்றாள். விழவு-திருவிழாவின். ஆரவாரத்து-ஆரவாரத்தில். ஒல்கும்-அசையும். புல்கும்-தழுவும். காமஎரி-காமத்தீ. உருத்து-சினந்து. 216.15-220. குரு-செந்நிறமமைந்த. குருகு-வளையல். அர-பாம்பும். நாண்-நாணுகின்ற. முளரிப்பூவை-தாமரை மலரை. ஓதி-அறிவு. 221.20-225. மல்கி-மிகுந்து. பேதித்தது-மாறுபாட்டையடைந்தது. கன்னல்-கரும்பு. உறுப்ப-தாக்க. கொலைமாலை வேற்கணாள்-கொலை செய்யுந் தன்மையையுடைய மாலையணிந்த வேற்படை போலுங் கண்ணையுடையவள். எய்ய-கணை செலுத்த.

 

    225   கிட்டிக்கொண் டெந்தைமுன்செல் கின்ற விநாயகற்குக்
     குட்டிக்கொண் டெய்யநாட் கொண்டகன்றான் - சுட்டிக்கொண்
     டொப்பாக வோதற் கொருபொருளு மில்லான்றேர்
     அப்பான் மறுகி னடைந்ததால் - இப்பால்

     மங்கை

     இலர்போ லவாவி யிசையளிக ளுண்ணாண்
     மலர்போன் மலர்செவ்வி மங்கை - அலர்போ
     தலைமங்கை செய்யா ளறவுங் கரியாள்
     மலைமங்கை சாலவுமென் மங்கை - கலைமங்கை
     வெள்ளை யவட்கருத வேண்டா வெனுமங்கை
     கள்ளை விடுத்துமதங் காண்மங்கை - கிள்ளைமொழிச்    (226)


    230   செந்திருமென் கொங்கை திருமா றிளைக்குங்கால்
     புந்திதனிற் கொள்ளும் பொலிவினாள் - இந்திரன்றன்
     ஆக்கத் தினைவிழையா வாற்று மருந்தவங்கள்
     நீக்கித் தனைநினையு நீர்மையாள் - சீர்க்கமல
     ஆதியயன் மீக்கூ ரரம்பையரை யாக்குங்கால்
     மாதிரிகை யாகவுனும் வாய்ப்பினாள் - சோதிமணி
     அன்று சுடரொன் றமைந்த மனைபுகினுங்
     கன்று தளிர்மெய்க் கவினுடையாள் - இன்று
     திருத்தேர் விழாவென்று சேடியர்க ளீண்டி
     மருத்தே ரளிசூழ் மலருந் - திருத்தேர்    (231)


    235   இழையுந் துகிலு மெனைத்துங் கொணர்ந்து
     விழையும் படியணிய வேண்டக் - குழையும்
     மனத்தொடுமென் றூசு மணிமே கலையாம்
     இனத்தொடு சேரவுடுத் திட்டுச் - சனித்தவிடம்
     முற்றுங் கவரா முகிண்முலைமுன் றானையால்
     முற்றுங் கருணைகொடு மூடினாள் - முற்றும்
     புருவவணி மாறாப் பொருவிழிக்கு மையிட்டு
     உருவ மதியை யுவந்து - மருவுமொரு
     பைத்த நெடியகரும் பாம்பென்னப் பின்னுபுமுன்
     வைத்த குழலின் மலர்புனைந்தாள் - மொய்த்தபுகழ்    (236)


226.25-230. இலர்-வறுமையுடையவர். நாள் மலர்-அன்றலர்ந்த மலர். அலைமங்கை-திருமகள். அறவுங்கரியாள்-மிகவுங் கருமையானவள். 231.230-235. ஆக்கம்-செல்வம் ஆற்றும்-செய்யும். நீர்மையாள்-தன்மையுடையவள். ஆதி-எண்ணிக்கையில் முதலாகிய. மீக்கூர்-தெய்வலோகத்துள்ள அழகுமிகுந்த. மாதிரிகை-மாதிரி. உனும்-எண்ணுகின்ற வாய்ப்பினாள்-மாட்சிமையுடையவள். கன்று-கைகின்ற மருத்தேர்-நறுமணத்தை ஆராய்கின்ற 236.235-240. இழை-அணிகலம். துகில்-ஆடை. விழையும்படி-விரும்புமாறு. குழையும் மனம்-கனிந்த உள்ளம். முகிள்-முகிழையொத்த. பொருவிழி-காதோடு போர் செய்கின்ற விழி. பைத்த-படத்தையுடைய.     

 

    240   ஈசற்குத் திங்களொன்றே யென்றுகதி ரும்பிறையும்
     வாசக் குழன்முன் வகுத்தணிந்தாள் - நேசத்
     திலக மதிக்கிழிந்த சிற்றரவ மென்ன
     இலகமணிச் சுட்டிபுனைந் திட்டாள் - கலகமிடக்
     கண்ணிற்கு வேள்விடுத்த வோலையெனக் காதிற்கு
     வண்ணப்பொன் னோலை வதிவித்தாள் - நண்ணி
     முயங்கு முரோணி முழுமதியோ டென்ன
     வயங்குகொடி மூக்கார மாட்டி - உயங்கியயல்
     ஏனை மதிமாத ரெல்லா மிருப்பதென
     ஆனமணி மாலைகழுத் தார்வித்தாள் - மானவளை    (241)


    245   காக்க மணிபொற் கடகங் கரஞ்செறித்துச்
     சேக்க வடியிற் சிலம்பணிந்தாள் - நோக்கமுதம்
     அன்னா ளொழிந்த வணிபலவுந் தாங்கினாள்
     பொன்னா லியன்றவுருப் போன்றமைந்தாள் - பின்னால்
     உருப்பசி யன்ன வொருத்தி யளிப்பக்
     கருப்புரமென் பாகு கவுட்கொண் - டிருப்பவொரு
     மாது குறுதி மயிலேபொற் றேரொடுநம்
     வீதிதனில் வந்தான் விமலனென யாதும்
     வருவதுண ராமன் மகிழ்ந்தெழுந்து நங்கை
     பொருவதரும் வீதி புறப்பட் - டுருவதிலி    (246)


    250   உற்றபெருந் தானையென வுண்கண்ணு மொண்கவுளும்
     பற்றுபுகர் வாளும் பரிசையுமாம் - முற்றிழையார்
     எண்ணிலா ரீண்டி யிருமருங்கும் போற்றிவரத்
     தண்ணிலா வேணியரன் றன்னெதிர்போய் - அண்ணல்மேல்
     வண்டு மலரென்னும் வார்சிலையி னேர்தொடுத்துப்
     பண்டுமத னெய்த பரிசென்னக் - கொண்டு
     விலங்க விழிப்பகழி விற்புருவ மேற்றி
     இலங்க வருமிறைதோ ளெய்தாள் - கலங்கலரும்
      அண்ணறான் யோகநிலை யன்மையாற் றன்பரிதிக்
     கண்ணினா னோக்கவெரி காமத்தீ - ஒண்ணுதலாள்    (251)


241.240-245. கதிரும் பிறையும்-சூரியப் பிறையையும் சந்திரப் பிறையையும். வேள்-காமன். மூக்காரம்-மூக்குத் தளுக்க, மூக்குத்தியென்பர். ஆர்வித்தாள்-சேரச் செய்தாள். 246.245-250. சேக்க-சிவக்குமாறு. நோக்கமுதம்-பார்த்தற்குரிய அமுதம். அன்னாள்-ஒத்தவள். கருப்புரமென்பாகு-பச்சைக் கற்பூரங்கலந்த பாகடை. உருவதிவி-காமன். 251.250-255. உண்கண்-மையுண்டகண். ஒண்கவுளும்-ஒள்ளிய கன்னமும். முற்றிழையார்-வேலைப்பாடு முற்றிய அணிகலன்களை அணிந்தவர்கள். விழிப்பகழி-விழிக்கணை. விற்புருவம்-புருவமாகிய வில். பரிதிக்கண்-கதிரவனாகிய கண்.     

 

 

    255   ஆகநீ றாகா வளவுபோய்ப் பற்றுதலும்
     போகமார் மாலை பொடிந்தொழியப் - பாகவாஞ்
     சொல்லாள் பணியுட் டொலைந்தன வன்றியுள
     எல்லா முருகி யிலையாக - நல்லார்
     இதுவந்த தெம்மா லெனவுள்ள மாழ்கி
     மதுவந்த கொன்றையந்தார் வள்ளல் - எதிர்வந்து
     நின்று தொழுவா னினையிங் கியாங்கொணர
     என்று மறியா விடும்பையெலாம் - அன்றிவட்குத்
     தந்தா யுலகியல்பு தானுமலாற் புன்மாலை
     வந்தால் வருத்தும் வளர்பிறையை - அந்தோ    (256)


    260   சுமந்துவந்திப் போதே சுடுவித்தா யீதுன்
     அமைந்த திருவருளுக் காமோ - சமைந்தவொரு
     கோதை யனையாள் குழலிசைய வண்டுறலால்
     மேதைதரு கல்யாணர் வேண்டுதலால் - போதுபல
     பூத்த வவயவமாம் பொற்பினா லூறினிமை
     வாய்த்தமையான் மாறா மணத்தினால் - சீர்த்திபுனை
     நின்றிருத்தோட் கேற்ற நிலையா ளணைந்தருளாய்
     என்றுரைத்து வேண்டுதலு மெம்பிரா - னன்றடுத்த
     பங்குமையை யஞ்சிப் படர்சடையில் வைத்தொளித்தாம்
     கங்கையினை யிவ்விருவர் காணாமல் - எங்கிவளை    (261)


    265   நாமொளிப்ப மென்னா நடாத்தினான் பொற்றிருத்தேர்
     காம னடுத்துக் கணைமாரி - கோமளப்பொன்
     வஞ்சிமிசை தூர்த்து வருந்திக்கை விட்டகன்றான்
     அஞ்சனவேற் கண்ணா ளவட்கப்பால் - கஞ்சம்

     மடந்தை

     அடங்கு பொகுட்டி னமர்திருவிற் கோடி
     மடங்கு கவின்கூர் மடந்தை - நுடங்கு
     கொடிமின் னொழுக்காக் குளிர்புயன்மே னின்ற
     படிமன்னு கூந்தலுடைப் பாவை - தொடிமன்னு
     செங்கைக் குமாரவேள் செவ்வேலை யொப்பாக்கச்
     சங்கப் புலவர்க்குத் தானுரைப்ப - அங்கடுத்து    (266)


256.255-260. ஆகம்-உடல். பொடிந்தொழிய-தூளாக. பாகு அவாம்-இனிமை பொருந்திய பாகும் விரும்புகின்ற. இலையாக-இல்லையாக. மாழ்கி-வருந்தி. இடும்பை-துன்பம். புன்மாலை-இழிந்த மாலைக்காலம். 261.260-265. கோதை அனையாள்-மாலையைப் போன்றவள். மேதை தரு-மேன்மைபெற்ற. ஊறினிமை-பரிசவின்பம். 266.265-270. கோமளம்-இளமை. வஞ்சி-வஞ்சிக் கொடி. அஞ்சணம்-மை. பொகுட்டு-தாமரைக் கொட்டை. நுடங்கு-அசைகிற. தொடி-கடகம்.     

 

 

    280   மாரவே ளம்பாக்கின் வார்புருவக் கென்சிலையும்
     நேருமே யென்னு நெடுங்கண்ணாள் - சீருலாங்
     காரளகம் வின்னுதல்வேற் கண்குமிழ்மூக் கூசல்கா
     தாரமெயி றாம்பலித ழாடிகவுள் - வேரறோள்
     காந்தளங்கை யோதிகொங்கை காயமிடை வாழைதொடை
     மாந்தளிர்செந் தாளென்று மாதரெனப் - போந்தவர்கள்
     எல்லார்க்கு மொப்ப விசைப்பவற்றை யொப்பாக்கல்
     பொல்லா தெனவுயர்ந்த புத்தமுதம் - நில்லாமல்
     மாதவர்கண் மால்கொள்ள மால்கொண்ட பெண்ணுருவும்
     யாதுமழ கில்லை யெனவந்தாள் - கோதில்    (271)


    285   துறவறமொன் றுண்டென்று சொல்லுமுறை தற்கண்
     ணுறுமளவு மென்னு முருவாள் - பொறியரவும்
     மந்தர வெற்பு மறிகடலு மின்றமுதந்
     தந்தருளுஞ் செவ்வாய்த் தளிரியலாள் - செந்திருவோ
     டொத்தக லாத வுயிர்ப்பாங் கியைவிளித்து
     முத்த மணல்பரந்த முன்றில்வாய் - இத்தலையில்
     வென்றா ளுடைந்தாள் விரிபசும்பொற் பூண்கொள்க
     என்றாள் பொருந்தி யிளந்தளிர்க்கைக் - கன்றாடக்
     காமர் மணிமே கலைகலிப்பப் பூணொலிப்பச்
     சேமவிடை யின்றென்று தேராத - தாம    (276)


    290   முலைமேற் றுகினுடங்க முண்டகச்செம் போதில்
     சிலைமேற் சிறுவியர்வு சேரத் - தலைமேல்
     சுரும்பரெழுந் தார்ப்பத் துகண்மாலை தூர்ப்பக்
     கருங்குவளைக் கண்பிறழ்வு காட்டப் - பெரும்புவியில்
     முந்தடித்துச் செல்வ முறையாற் றொடர்வதென
     அந்தரத்து மங்கை யடுத்தெழுவான் - பந்தடித்துப்
     பூவை விளையாடும் போதி லொருமூவர்
     பாவை விழையும் பழமலையான் - கோவை
     எழுதுந் திருக்கரத்தா னெய்யாமல் வேதம்
      முழுதும் புகழு முதல்வன் - தொழுதுந்    (281)

 

271.270-275. நேரும்-ஒப்பாகும் கார் அளகம்-கூந்தல் முகில். வில்நுதல்-நெற்றிவில். வேல் கண்-கண்வேல். ஓதி-மலை. காயம்-ஆகாயம். மால்கொண்ட-திருமால்கொண்ட. கோதில்-குற்றமற்ற. 276.275-280. இத்தலையில்-இவ்விடத்தில். உடைந்தாள்-தோற்றாள். கன்று-வளையல். கலிப்ப-ஒலிக்க.சேமம்-காவல். 281.280-285. முண்டகச் செம்போது-செந்தாமரை மலரைப்போன்ற முகம். சிலை-நெற்றி. தூர்ப்ப-சிந்த. பிறழ்வு-பிறழ்தல். முந்து-முன்னர். முறையால்-ஊழின் முறையால். பூவை-பெண். மூவர்பா-தேவாரம். கோவை-திருக்கோவையார்.

 

 

    285    துதித்து முழுநாட் டொலைப்போ ருளத்தான்
     விதித்து வருமோர் வினையுந் - திதிததொழிலும்
     கொள்ளுமவ ரோடுலகங் கோறற் றொழில்புரிந்துந்
     தெள்ளுமரு ளாண்மை சிதையா தான் - உள்ளுமறை
     கற்றும் பிறரைக் கடவுளென்பார்க் காண்கைமுதற்
     குற்றம் பொறுத்தெனையாட் கொள்ளுவான் - முற்றுந்
     தனக்கடிமை யென்னுமாற் றம்பிரான் பூட்கைச்
     சினக்கடிய வேழவுரிச் செல்வன் - மனக்கினிய
     துங்க மணிநெடுந்தேர் தோன்றுதலும் வல்விரைந்து
     நங்கைவரிப் பந்தொடும்போய் நண்ணினாள் - எங்கள்    (286)


    290   கருத்தனைமுன் கண்டாள் கருநெடுங்கண் ணீரோ
     பருத்த முலையின் பசப்போ - தெரித்தமலர்ப்
     பைந்தெரிய லின்புலர்வோ பல்வளைக டஞ்செலவோ
     வந்துவளர் நாற்குணத்தின் மாய்தலோ - முந்தியதிங்
     கேதோ வறியோ மிவையெலா மெய்தினாள்
     காதோ டமர்செய் கயற்கண்ணாள் - மாதோர்
     புறத்திருப்பக் கண்டுதான் புல்லியமேற் சேறல்
     மறுத்தடுத்தோர் சூழ்ச்சி மனத்துள் - குறித்து
     நினக்குவென்றி யாயி னினக்கே யிவர்தோள்
     எனக்குவென்றி யாயி னெனக்கே - இனக்கரியுங்    (291)


    295   கோடாத நின்பாற் கொழநனே யென்னொடுபந்
     தாடா யெனவுரைப்ப வப்பாங்கி - ஓடா
     அணங்கே யெனப்போ லவளைமதித் தாய்கொல்
     இணங்கே ருனக்கொவ்வா ளேனுங் - குணங்கூர்
     இறைவி யலளோ விதுதகுமோ வென்ன
     மறைவி யலனிவ் வழக்குப் - பெறவிவ்
     விருவர்க்கு மோது மியற்கைத்தன் றென்னா
     உருவக் கொடிநெடுந்தே ரூர்ந்து - விரைவில்
     திருத்து மிவள்பொற் றெருக்கடந்து சென்றான்
     வருத்துமத னாண்டொழிய மற்றும் - ஒருத்தி    (296)

     அரிவை

286.285-290. முழுநாள் தொலைப்போர்-முழுநாளையும் போக்குபவர். திதித்தொழில்-காத்தற்றொழில். கோறல்-கொல்லுதல். தெள்ளும்-தெளிந்த. அருளாண்மை-திருவருளையாட்சி செய்யுந்தன்மை. வல்விரைந்து-மிகவிரைந்து. நங்கை-மடந்தை. 291.290-295. கருத்தன்-தலைவன். பசப்பு-பசலை. புலர்வு-வாடுதல். செலவோ-கழலுதலோ. வளைகள்-வளையல்கள். மாய்தலோ-அழிதலோ. இவையெலாம்-இச் செயலெலாம். அமர்-போர். புல்லிய-தழுவ. மறுத்து-நீக்கி. இனக்கரி-ஒத்தசாட்சி. 296.295-300. கோடாத-மாறுபடாத. அவளை-அவளையும். ஏர்-அழகு. மறவி-மறதி. இயற்கைத் தன்று-இயல்புடைய தன்று. மதன்-காமன். ஆண் டொழிய-அவ்விடமே நிற்க.

 

    300   தருமுத்தி வேறென்போர் தாமுந்தற் சேரல்
     அருமுத்தி யென்னு மரிவை - ஒருமுத்தி
     வேண்டியுகங் கோடி விளைத்த தவங்கொடுத்துக்
     காண்டலுந்தற் கொள்ளக் கருதுவான் - ஈண்டிமதி
     நள்ளிருள்சென் றுச்சி நணுகிற் குழலொடொவ்வா
     ஒள்ளெழில் வாண்முகத்தோ டொப்பாவாள் - விள்ளலற
     நேர்ந்த விளைஞருறு நெஞ்சியங்கு மாறென்ன
     வார்ந்தநெடுங் கூந்தல் வகிரினாள் - சேர்ந்த
     கயலிரண் டொத்துக் கிடைசிவந்து நாப்பண்
     அயலிருண்டு வெண்ணிறத்த வாகி - மயல்புரிந்து    (301)


    305   நீண்ட வடிவகன்று நேர்வள்ளை மீதோடிக்
     காண்டகைய வாயினிகர் கண்ணினாள் - தூண்டுசுடர்
     அன்ன மணிக்குழைக ளஞ்சனவேற் கண்டள்ள
     மன்னவிருந் தாடூசல் வார்செவியாள் - தன்னுள்
     நிலவை விரித்தொடுக்கி நிற்குங் குமுத
     மலருளதே லொக்குநகை வாயாள் - இலகவரி
     மூன்றெய்தி யொள்வளைவெண் முத்து வடமாகக்
     கான்றெய்தி னொக்குங் களத்தினாள் - ஈன்றெய்து
     மாந்தளிர் முன்னாள் வரையன்றி யொவ்வாத
     வேய்ந்தொளிர் பல்வளைய மென்கையாள் - ஏந்திடைமேல்    (306)


    310   ஏயு மிருவா ரெழிலொருவா மிக்கவலி
     வீயு மெனவெழுந்த வெம்முலையாள் - காயமெனப்
     பொய்கூ றியவறியேம் புண்டரிகத் தாளிழையின்
     செய்கூறென் றெண்ணவுள சிற்றிடையாள் - மைகூர
     நேர்ந்த வெறும்புகுழி நின்றெழல்போ லுந்திமிசை
     வார்ந்த வுரோமமெனும் வல்லியினாள் - கூர்ந்தமணி
     நேமி வளைகொ ணெடியோன் றிருவுந்தித்
     தாமரையை வென்றிகழுந் தாளினாள் - சோமமுடி
     காண நடக்குங் கருத்தாற் பறந்தவன்னம்
      நாண நடக்கு நடையினாள் - வீணை    (311)


301.300-305. ஒரு முத்தி-ஒப்பற்ற வீடுபேறு. ஒவ்வா-ஒப்பாகாத. ஒள்-ஒள்ளிய. வார்ந்த-ஒழுகிய. வகிர்தல்-பங்குசெய்தல். 306.305-310. வள்ளை-காது. மன்ன-நிலைபெற. கான்று-கக்கி. வேய்ந்து-பொன்னாலு மணியாலும் அழகு செய்யப்பட்டு. வளைய-வளையல்களையுடைய. 311.10-315. இரு-பெரிய. வார்-கச்சு. எழில்-அழகு. ஒருவா-நீங்காத. வீயும்-அழியும். கூறிய-கூற. மைகூர-கருமைபொருந்த. உந்தி-கொப்பூழ். நேமி-உருளை. வளை-சங்கு. சோமமுடி-திங்களையணிந்த முடி.     

 

 

    315   கரங்கொண்டு செம்பவளக் கான்மணிமா டத்து
     வரங்கொண்ட பொற்றவிசின் வைகி - மரங்கொண்ட
     கோடு குழைந்து குழைப்பச் சிலைவன்மைப்
     பாடு குழைந்து பழமாகப் - பாடும்
     இசையால் விளர்ப்பெஞ்சா தெய்துகலை மான்கை
     அசையா வியவர வயர - நசையால்
     நரம்புமொழி கற்க நவிற்றுங் குருவின்
     இரங்கு மிசைபாடி யேற்றி - விரும்பமுதம்
     அன்னா ளிருப்ப வவள்பாங்கி சென்றுமலை
     முன்னா ளுருக்கு முனிநிகர்வை - இந்நாள்    (316)


    320   அசையா தடுத்த பழமலையை யன்ன
     இசையா லுருக்குவா யென்ன - இசையா
     எளிய திதுவென் றிசைவீணை யோடும்
     அளிய னெதிர்சென் றடைந்தாள் - ஒளிகொள்
     மதியூர் முடியு மரைமே வடியுங்
     கதிர்வேல் விழிகளிப்பக் கண்டாள் - கொதியா
     வெருவுறுப்பச் சென்று வெருவுற்றாங் கென்னே
     மருவுறுக்குங் கொன்றை மலையை - உருகுவிப்பச்
     சார்ந்தாள் பழமலையாற் றானே யுருகுற்றாள்
     சோர்ந்தாள் விழியருவி தூங்கினாள் - தேர்ந்தாள்    (321)


    325   மொழிகற்ற வீணை முறையென்ன வீழ்ந்து
     பழியற்ற தாளிற் பணிய - ஒழிவற்ற
     கோல்வளைக டோற்றாள் குவிமுலைகள் பீர்பூத்தாள்
     நால்வகைய பண்பு நழுவினாள் - சூல்வளையின்
     நொந்தா ளதுபாங்கி நோக்கி யருண்மலைமுன்
     வந்தாடன் யாழான் மகிழ்வித்து - நந்தா
     இசைபெறுவா னெண்ணி யிழந்தாண் முதலுந்
     திசைபெறுவான் வந்தெழுந்து தீரா - வசைபெறுவான்
     நின்றா ளெனக்கொண்டு நில்லாது போயினாள்
     குன்றாத வன்பினொடு கூடவே - நன்றாளும்    (326)


316.15-320. வரம் கொண்ட-மேன்மையைக் கொண்ட. கோடு-கிளை. சிலைவன்மை-மலையாற்றல். பாடு-பெருமை. குழைந்து-கெட்டு. விளர்ப்பு-மேனி வெளுத்தல். கலைமான்-நாமகள். வியவா-வியந்து. அயர-சோர. நரம்பு-வீணை நரம்பு. நவிற்றும்-கற்பிக்கும். குருவின்-குருவைப்போல. மலை முன்னாள் உருக்கு-இராவணன் பொருட்டு முன் காலத்தில் அகத்தியர் இசைபாடி மலையை உருகச் செய்த செய்தி கூறப்படுகிறது. 321.20-325. இசையா-இசைந்து. அளியன்-அருளையுடையவன். மதியூர்முடி-திங்கள் தவழும் முடி. மரைமேவு அடி-தாமரை மலரைப்போலப் பொருந்திய திருவடி. வெருவுறுப்ப-அஞ்சுதலைச் செய்ய. மருவுறுக்கும்-வாசனை பொருந்தும். கொன்றைமலை-சிவபெருமான். உருகுவிப்பச் சார்ந்தாள்-உருக்குவிக்குமாறு சென்றாள். உருகுற்றாள்-அம்மலையால் தானே உருகினாள். தேர்ந்தாள்-இசையில் தேர்ச்சி பெற்றாள். 326.25-330. கோல் வளைகள் தோற்றாள்-வளைந்த வளையல்களை இழந்தாள். பீர்-பசலை. நால்வகைய பண்பு-நாற்குணங்கள். சூல்வளை-சூல் கொண்ட சங்கு. அருள்மலை-மலைபோன்ற அருளையுடைய சிவபிரான். நந்தா-கெடாத. முதலும்-யாழையும். நன்றாளும்-நன்கு அடிமைகொண்ட.     

 

 

    330   ஆனாய னார்த மரியவிசைக் கல்லாமல்
     காணார் மலர்க்குழலாள் காமமொடு - தானாளும்
     இன்னிசைகேட் டுள்ளுருகற் கிம்மலைதா னம்மலையோ
     என்னிசையச் சொல்கென் றெடுத்தியம்பிப் - பொன்னவிர்செம்
     பூண்டயங்கு மென்முலையா ரேனையர்பின் போயினார்
     காண்டகுநம் வெங்கைநகர்க் காவலான் - நீண்ட
     கருமா லுலகங் கடந்தான்றன் கண்கள்
     திருமா மலரென்ற றேற்றம் - வருமாறு
     தொள்ளா யிரத்துத்தொண் ணூற்றொன்ப தொண்மலரும்
     எள்ளா விழியொன்று மிட்டவடி - உள்ளான்    (331)


    335   மதனன் மலர்ப்பகழி மாறா மறுகில்
     புதுநன் மணித்தேரிற் போனான் - அதனில்

     தெரிவை

     இருந்த பதினா யிரவரம்பை மாருள்
     தெரிந்துமதன் வைத்த தெரிவை - திருந்த
     நடந்தா லரசவன்ன நச்சப் படாத
     தடந்தா மரைவென்ற தாட்கும் - அடைந்தார்க்கும்
     வண்டமை யாது வரியாழ் பயிலாது
     தண்டளிர் தோல்வி தருகைக்குங் - கொண்டமணிக்
     கண்ணின் றிருக்குங் கனக மலைவணங்க
     எண்ணின் றிருக்கு மிளமுலைக்கும் - புண்ணின்    (336)


    340   றணங்குறுவ தன்றி யருள்புரியா வேலின்
     இணங்கெறியு முண்க ணிணைக்கும் - வணங்கி
     ஒடியும் வரிசிலைநா ணுற்றிருப்ப தென்று
     கடியு முரிபுருவங் கட்கும் - நெடியமணி
     வள்ளைக் கொடிபான் மருவிலகண் ணோட்டமெனக்
     கொள்ளைக் கவின்கூர் குழைகட்குந் - தெள்ளுற்
     றுவமைகூ றக்கருதி னொன்றற்கொன் றல்லா
     துவமைவே றில்லா வுருவாள் - உவமை
     கரியகுழ லாகக் கமஞ்சூன் முகிறான்
     உரியபொரு ளாக வுரைப்பாள் - அரியமலர்    (341)


331.30-335. நச்சப்படாத-விரும்பப்படாத. வண்டு-வளையல். வரியாழ்-இசை பொருந்திய யாழ். கண்-முலைக்கண்; சூசுகம். கனகமலை-மேருமலை.336.35-340. 341.340-345. அணங்குறுவதன்றி-துன்பத்தையடைவதல்லாமல். வேலின் இணங்க-வேலின் இணங்குாலை. உண்கண்-மையுண்டகண். வரிசிலை-வரிந்து கட்டப்பெற்ற வில். நாண்-நாணம். கடியும்-வெறுக்கும். முரி-வளைந்த. கமஞ்சூல்-நிறைந்த சூல்.

 

 

    345   கொள்ளைகொள வெண்ணிக் குயில்கூவ நல்லாய
     வெள்ளமொடு சென்றுபொழின் மேவினாள் - கள்ளழியப்
     பூத்தகொடி தான்வருமுன் பூம்பணைகண் மீதேற
     வார்த்தைகொடு கிள்ளை மருங்கிரியக் - கூத்தரென
     ஓதி முகில்கண் டுவந்து மயிலாடத்
     தீதில் விழிகண்டு தேனினங்கள் - தாதில்
     விழுந்து படிந்துவரும் வேறாகப் பல்வண்
     டெழுந்துமலர் வாய்கண் டெதிரச் - செழுந்தாள
     வெண்ணகையாள் கண்டு விடுத்துத்தன் மூக்கையெதிர்
     ஒண்ணகைய சண்பகங்க ளுள்ளவெலாம் - பெண்ணரசு    (346)


    350   சென்று கவர்ந்துநனி சிக்கயாத் திட்டுமுலை
     என்று பெயரியவெற் பேற்றினாள் - மன்றங்
     குறுகியிளந் தென்றலெதிர் கொண்டிருப்பச் சேணில்
     உறுகொடிய தேர்தோன் றுதலும் - மறகில்
     நிரம்பு கதிர்நேர் நெருஞ்சியெனத் தன்பால்
     திரும்புவிழி யாயமொடு சென்றாள் - குரும்பைநிகர்
     கொங்கநீ லுண்கட் கொடிமென் றளிர்போன்ற
     அங்கைநீள் கூந்தலின்மே லஞ்சலித்தாள் - கங்கைநீர்
     பாய்ந்துதளி ராது பவள நிறக்கொழுந்தில்
     சாய்ந்துபடர் வஞ்சிச் சடையழகும் - வாய்ந்தசிலை    (351)

 

    355   ஆக்கந் தருமதவே ளஞ்சத் திலகமென
     நோக்கங் கிடந்த நுதலழகும் - பார்க்கும்
     விழியாய்க் கிடந்தசுடர் மேல்வா சிகைபோன்
     றழியாப் புருவத் தழகும் - பழியாப்
     பரசு வருங்கை பழித்தருள்வந் தெய்தி
     அரசு செயுங்கண் ணழகும் - வரிசைபடு
     தொண்ட ரகத்தமருஞ் சூளா மணிவதன
     முண்டகத்துக் கேற்றகொடி மூக்கழகும் - மண்டுகருத்
     தோடிமலை வேந்த னுலாவமுதுண் டென்கவிப்புன்
      காடிமுனி யாதகுழைக் காதழகும் - பீடிசைய    (356)

346.345-350. மருங்கிரிய-பக்கத்திலே ஓட. ஓதிமுகில்-கூந்தலாகிய முகில். தரளவெண்ணகையாள் முத்தைப் போன்ற வெள்ளிய பற்களையுடையவள். 351.350-355. சிக்கயாத்திட்டு-நன்கு அகப்படுமாறு கட்டி. சேணில்-தொலைவில். அங்கை-அழகிய கையை. 356.355-360. பரசுவருங்கை-மழுப்படை பொருந்திய கை. வரிசைபடு-முறைமை பொருந்திய. வதனமுண்டகம்-முகத்தாமரை. மலைவேந்தன்உலா-சேரமான் பாடிய திருக்கைலாய உலா. பீடிசைய-பெருமை பொருந்த.

 

 

    360   ஆத்தமொழி யாகவனைத்தும் பயில்வேத
     வார்த்தை மொழியுமலர் வாயழகும் - ஏத்துறுதன்
     ஏவ லிருக்கு மினையவர்மேற் சென்றவிடங்
     காவ லிருக்குங் கழுத்தழகும் - நாவல்
     விலங்கறான் றிண்மை விடுத்து வணங்கும்
     அலங்கறாழ் திண்டோ ளழகும் - இலங்க
     எடுத்தமழு மானபய மேனை வரதம்
     அடுத்தமல ரங்கை யழகும் - வடித்தகதிர்
     வேறா மெனுங்கண் விளங்கிழைகொங் கைத்தழும்பு
     மாறா வணியினுறு மார்பழகும் - நூறாய    (361)


    365   எண்ணிற் சிறந்த விதழ்மலரா டாழுநெடுங்
      கண்ணிக் கணையாங் கவானழகும் - நண்ணிக்
     குடித்தாவி கூற்றெங் குடிமுழுது மாட்கொள்
     அடித்தா மரையி னழகுங் - கடித்தாம
     மென்முலைகண் ணிற்கு விருந்திட் டமையாது
     நன்மணிமுத் தும்புனைய நல்கினாள் - பொன்மலையை
     வாரொழுகுங் கொங்கைபெறும் வண்ணத்தா னுங்கடந்தாள்
     போரொழுகும் வேளாற் பொலிவழிந்தாள் - சீரொழுகும்
     வைத்தமணி கண்டன் வதனத் தொடுவதனம்
     வைத்துமுலை வேழமலை மார்புபொர - நெய்த்தகுழல்    (366)


    370   மாது தழுவ மனங்கொண்டு பித்தளையச்
     சூதுபொரு சந்தமுலைத் தோழிமார் - மூதுலகில்
     ஆடவர்க டம்மி லழகனா மாயோனும்
     பீடமையு மைத்தடங்கட் பெண்ணுருவாய்க் - கூட
     இருந்த பெருந்தகையை யெங்குலப்பெண் வேட்டு
     வருந்தறகு மென்று மதித்து - விரைந்து
     மனையிற் கொடுபோய் மலரணையிற் சேர்த்த
     வினைவுற் றுயிருண் டிலையென் - றனைவர்க்கும்
     ஐயம் விளைய வவள்சோர்ந்து பின்றெளிவுற்
     றுய்யும் வகையே துரைமினென்றாள் - ஐயன்    (371)


375    உருவெளியைக் கண்டா ளுழையரைச்செல் கென்றாள்
    அருவெளியைப் புல்கி யுயர்ந்தாள் - பொருவெளியர்
    அல்லரா மாத ரறிஞர்க்குத் தாமல்ல
     தில்லரா யாண்டு மெதிர்நிற்க - வல்லராம்
     ஈச ரிவட்கு மெதிர்நின்றா ரென்றிருப்பப்
     பாசமில னாதி பகவன்றேர் - வாசவன்றான்
     முன்னிறுத்த வஞ்சிறகர் மூரிவரை யூர்வதெனத்
     தன்னிலைப்பொன் வீதிதனிற் சார்ந்ததால் - பின்னொருத்தி

     பேரிளம்பெண்

      கண்ணிற் சிறந்த கருமணிபோல் வானவர்தம்
      பெண்ணிற் சிறந்தவொரு பேரிளம்பெண் - விண்ணிற்    (376)


361.360-365. ஆத்த மொழி-உறுதி மொழி. இமையவர்-தேவர். நாவல்-நாவலந் தீவு. விலங்கல்-மலை. அலங்கல்-மாலை. மடுத்த-பொருந்திய. வடித்த கதிர்வேல்-கூராக்கப்பட்ட ஒளி தங்கிய வேல். மாறா-நீங்காமல். 366.365-370. கவான்-தொடை. வார் ஒழுகும்-கச்சுப் பொருந்தும். மைத்தமணி-நீலமணி. 371.370-375. சூது-சொக்கட்டான் காய். வேட்டு-விரும்பி. 376.375-380. உருவெளி-பொய்யான தோற்றம். உழையரை-அண்மையில் உள்ள தோழியரை. வாசவன்-இந்திரன் பெண்ணில்-பெண்களுக்குள்.     

 

    380   குருமதிதா னொக்குமெழில் கூர்முகத்தை யொக்குந்
     திருமலரி னாண்மலர்வு தீர்த்துப் - பொருமதர்வாட்
     கண்ணொக்கு நீலக் கடிமலரை வாழ்விக்கப்
     பண்ணொக்கு மின்சொற் படியிலாள் - விண்ணிற்
     கிருசுடரின் மற்றொன் றெழின்முகமொவ் வாமல்
     ஒருசுடர் மன்பொற் பழிப்பவுள்ளாள் - பொருசுடர்வேல்
     மாவடியை நோக்கி வரலொத்துக் காதளவுந்
     தாவடிபோய் மீளுந் தடங்கண்ணாள் - காவடிபோல்
     கண்ணுங் குழைதூங்கு காதுமுறத் தங்குநரின்
     நண்ணுங் குமிழ்வென்ற நாசியாள் - எண்ணும்    (381)

 

    385   முகைமுதல வெல்லா முறையொத் துவமைத்
     தகைதவிர முற்றுந் தனத்தாள் - பகைமலரின்
     உற்றமட வாரு ளொருவரே கல்விகவின்
     பெற்றிடினன் றொவ்வாப் பெருமையாள் - பொற்றகடு
     வேய்ந்தபவ ளக்கால் வியன்மா ளிகையொன்றில்
     ஆய்ந்த புராணநூ லந்தணனை - வாய்ந்த
     மடங்கலணை யுய்த்து வணங்கி மருங்குற்
     றடங்கலரூர் தீமூட்டு மண்ணல் - தொடங்குகதை
     ஒன்றோ துகவென் றுரைப்பவவ னோதுவான்
     அன்றோர் பகன்முக்க ணாண்டகைதான் - குன்றோ    (386)

 

    390   டிணங்குமுலைப் பெண்ணாத லேலாமை யின்மால்
     அணங்குருவப் பெண்வடிவ மாகிக் - கணங்கொள்
     முனைவர் தவமிழந்து மோகிப்பான் செல்ல
     அனையர் மகளீ ரமர்ந்த - மனையில்
     பலிமுகத்தா னாகிப் பலிக்கெய்த வானம்
     புலிமுகத்தா ரெம்மான்முன் போந்தார் - கலிமுகத்துப்
     புன்றுரும்பு போன்றலைந்தார் போற்றுமவி காரிமுனஞ்
     சென்று வருசொற் றிரிதல்போல் - மென்றளிராம்
     மேனி திரிந்தார்கை வெள்வளைகள் போக்கினார்
     வேனின் மதன்கணையால் வெய்துயிர்த்தார் - பானுரைபோல்    (391)


381.380-385. திருமலரின் நாண் மலர்வு தீர்த்து-செந்தாமரை மலரின் அன்றலர்தலை யொழித்து. பொற் பழிப்ப-அழகைக் கெடுக்க. தாவடிபோய்-போருக்குச் சென்று. தடம்-பெரிய. 386.385-390. வியன் மாளிகை-சிறந்த மாளிகை. மடங்கலணை-அரியணை. அடங்கலர்-அடங்காதவர்களாகிய பகைவர்கள். 391.390-395. ஏலாமையின்-முடியாதபடியினால்.முனைவர்-முனிவர். போற்றும்-யாவரும் புகழும். வெள் வளைகள்-வெள்ளிய வளையல்கள். வெய்துயிர்த்தார்-பெருமூச்சு விட்டார்.     

 

 

    395   ஆடை குலைந்தா ரணைந்தாவி தாரீரென்
     றேடவிழ்பூந் தாண்முன் னிறைஞ்சினார் - நீடழலில்
     காட்டு மரக்கிற் கருத்துக்கா ரென்னவுயிர்
     கூட்டுண் மலர்க்கட் கொடியிடையாள் - கேட்டு
     மடவார்கட் கெல்லாம் வசைவிளைத்தா ரென்றச்
     சடைவா னவன்றானென் றன்பால் - அடைவானேல்
     நாவனகர் நம்பிபெரு நன்மணப்பூம் பந்தரிடைப்
     பாவலர்முற் கூறும் பழிமொழியை - யாவர்களும்
     கூற வெருக்கணிந்த கோல முதவியா
     ஏறமடன் மாவையெளி தேற்றுவலென் - றூறமுதம்    (396)


    400   அன்ன மொழியா லறைதலுமுக் கட்கனிமுன்
     சின்ன முனிமகளிர் சிந்தைகவர் - தன்னனையான்
     வந்தா னெனமுழங்க மாதெண்ண முற்றியதென்
     றந்தா மரைத்தா ளணிசிலம்ப - முந்தா
     இறைவனெதி ரேற்றா ளெழிற்பெருக்கங் கண்ணால்
     குறைவ தறமுகந்து கொண்டாள் - கறைமிடற்றுப்
     பண்ண வனைமொழிந்த பாவ முடன்பலித்து
     வண்ணநறுந் தூசு வளையொழியக் - கண்ணிணையுள்
     நீர்பெருக நெஞ்ச நிறையழிய மென்முலைகள்
     பீர்பெருகச் செவ்வாய் பிழைபிதற்ற - ஏர்பெருகு    (401)


    405   மாதவர்த மாதருற்ற வாறுமின்றிக் கயைாற்றில்
     சாதலுறு வார்போற் றனைமறந்தாள் - கோதையாள்
     தானோ பழமலையைச் சார்ந்தசைப்பா ளென்றுமொழித்
     தேனோ வெனுஞ்சொற் றிருமுகத்தில் - வானோர்
     தனிநா யகன்முடியிற் றண்புனலீ தென்று
     பனிநீர் தெளித்தணிப்பப் பாவை - முனியாள்
     உணர்ந்தவச நீங்கி யொழிந்தாள் வளைகள்
     புணர்ந்த முலைபசலை பூத்தாள் - கொணர்ந்த
     தொடைபொடிப்ப வெண்டரளஞ் சுண்ணம் படமெய்
     யிடையடுத்தார் நீங்குவெதுப் பேற்றாள் - சடையடக்கக்    (406)


396.395-400. குலைந்தார்-கலையப் பெற்றார்கள். அணைந்து-சேர்ந்து. ஆவி-உயிர். நாவல்நகர்-திருநாவலூர். நம்பி-சுந்தரர். மடன்மா-பனங்கருக்காற் செய்த குதிரை. 401.400-405. கறைமிடற்றுப் பண்ணவன்-சிவபிரான். வண்ண நறுந்தூசு-அழகிய நல்ல ஆடை. பிழை பிதற்ற-பிழையான சொற்களைப் பேச. 406.405-410. மாதவர்தம் மாதர்-தாருகாவன முனிவர்களின் மனைவிமார். அவசம்-மயக்கம். புணர்ந்த-நெருங்கிய. வெதுப்பு-வெப்பம்.

 

 

    410   கங்கைநீ ரன்றேயிக் கண்ணீ ரெனவழுதாள்
     பொங்கெரியின் வீழ்பறவை போன்றினைந்தாள் -மங்கையர்கள்
     சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
     சொல்லிய வண்ணஞ் செயலென்று - மெல்லியலைக்
     கொண்டு மனையிற் குறுக மலருண்டு
     வண்டுபடுங் கூந்தன் மலர்விழியாள் - பண்டு
     திருமாலு நான்முகனுந் தேடும் பொருளைக்
     கருமா மிடற்றெங் கரும்பைப் - பெருமானைத்
     தெள்ளமுதைத் தெய்வ சிகாமணியைத் தன்னடியார்
     உள்ளுயிரைத் தோன்றா வுறுதுணையைக் - கள்ளவிழுங்    (411)

 

    415   கொன்றைப் பவளநெடுங் குன்றைப் பழமலையை
     மன்றிற் குனிக்குமொரு மாமணியைச் - சென்றுற்
     றுளத்துப் புணர்ந்துவிடா தோங்கின்ப முற்றாள்
     கிளத்தற் கரியபெருங் கீர்த்தி - வளத்தொடுறும்
     நாடு நிலைநிற்ப நம்பன் செலுத்தப்போய்
     நீடுதிருத் தேர்நிலையி னின்றதால் - ஆடு
     படைக்கண் மகளிர் பலரிவ்வா றாகக்
     கடைக்க ணருள்சிறிது காட்டிச் - சடைக்கண்    (416)

    416   நிலாவினான் வெங்கை நிலையினா னாதி
      யுலாவினான் போந்தா னுலா.

 

     நேரிசைவெண்பா

     பேதை முதலாகப் பேரிளம்பெண் ணீறாக
     ஓதை யெழுகடல்போ லோங்கினோர் - காதலுறச்
     சிந்தா மணிநெடும்பொற் றேரிற் றிருவுலாத்
     தந்தான் பழமலைநா தன்.    (421)

 

சிறப்புப்பாயிரம்

நேரிசைவெண்பா

வெங்கைப் பதிப்பழய வெற்புக் கணிமுழுதுந்
தங்கத் திருவுலாச் சாற்றினான் - சங்கத்துப்
போற்றுந் தமிழ்நூல் பொதுக்கடிந்தா னென்றுலகஞ்
சாற்றுஞ் சிவப்பிரகா சன்.   (422)

திருவெங்கையுலா முற்றிற்று.     

    411.410-415. இனைந்தாள்-வருந்தினாள். கருமா மிடறு-மிகக்கரிய கழுத்து. மன்றில் குனிக்கும்-பொன்னம்பலத்தில் ஆடும். கிளத்தற்கு-கூறுதற்கு. நிலாவினான்-திங்களை யணிந்தவன். ஆதியுலாவினான்-சேரமான் பெருமாளால் பாடப்பெற்ற ஆதியுலாவை யுடைய சிவபெருமான்.
 

Related Content

Aindham Thanthiram

Aram Thandhiram

Ettam Thandhiram

Experience

Gurugyanasambandhar Aruliya Sotasakalap Pirasatasatkam