logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவெங்கைக் கலம்பகம் குறிப்புரையுடன்

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இராமசாமிப் புலவர் குறிப்புரையுடன்


    [கலம்பகமாவது ஒருபோகும் வெண்பாவும் கலித்துறையும் முதற்கவியுறுப்பாக முறகூறப்பெற்றுப் புயவகுப்பு, மதங்கம், அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் இப்பதினெட்டுறுப்புக்களும் பொருந்த மடக்கு, மருட்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சிவிருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை யென்னுமிவற்றைக் கொண்டு இடையே வெண்பா, கலித்துறை விரவ அந்தாதித் தொடையால் பாடப் பெறும். இவ்வாறு பாடப்பெறும் இந்நூல் தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும், வைசியர்க்கு ஐம்பதும், வேளாளர்க்கு முப்பதுமாகப் பாடப்பெறும். இக்கலம்பகம் திருவெங்கையில் எழுந்தருளிய சிவபிரான் மீது இயற்றப்பட்ட படியால் நூறுபாடல்களைக் கொண்டது. கலம்பகத்திற்குரிய இலக்கணங்களும் சிறப்புக்களும் நன்கமைந்து விளங்குவது. கற்பார்க்குப் பெருமகிழ்ச்சியை அளிப்பது.]     

காப்பு

நேரிசைவெண்பா

பொன்னுலவும் வெங்கைப் புனிதற் கடியேனும்
உன்னுங் கலம்பகப்பாட் டோதுகேன் - தன்னைநிகர்
முத்திதரு மன்னோன் முழுதருளி னாற்பூத்த
அத்திதனைக் கண்டவத னால்.
    
ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

சீர்பூத்த நிறைமதிமான் றிருக்கரங்கொண் டம்மதியை
ஏர்பூத்த சடாமௌலிக் கியையவீர்ந் தனையிருத்தி
மற்றையவோர் பகவுமணி மார்பகத்திற் கிடந்திமைப்பக்
கொற்றவநீ யிருங்கேழற் கோடெனப்பூண் டருளினைகொல்
பூம்புனலோ பொன்முடிக்கட் புல்லோநஞ் சுமிழெயிற்றுப்
பாம்பினமோ கண்டுனது பாணியின்மான் றாவுவதே.

இது ஆறடித்தரவு

(காப்பு) பொன்-திருமகள், அழகு, செல்வம். முன்னும்-எண்ணும். அத்தி-ஆனைமுகக் கடவுள். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான்.

 

காமத்திற் படிலுமையாங் கடுநிரயத் திடுவமென
நாமத்திற் படவெமக்கு நவின்றொருவன் றூதாய்நீ
யாமத்திற் றனியிருட்க ணேந்திழைபா லெய்தியதென்.     

எனமிகு வளமுள வியலதி சயமொடு
முனிவரர் பலவகை மொழிதரு புகழினை
பலகலை வலபுல னிலைமல வலைமலை
சிலரல துலகலை கலர்சொல விலகிலை.

இவையிரண்டும் ஈரடியராகம்

எனவாங்கு, இது தனிச்சொல்     

ஒன்றொருயிர் தனைச்செகுப்பி னுமைநிரயத் திடுவமென
மன்றறைய வெமக்கியம்பி மைந்தனைமுன் றந்தைதனைக்
கொன்றவரை யுவந்தருளிக் கொடுத்தனைவா னுலகென்கொல்.

இவைமூன்றும் மூவடித்தாழிசை.     

நீவிர்புல வருந்திலெரி நிரயத்தி லிடுவமெனத்
தேவவெமக் கியம்பினைநீ சிலைவேட னிடும்பிசிதம்
ஆவலொடு மிசைந்தவனுக் கருளினைமெய்க் கதியென்கொல்.     

1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான். நாமத்திற்பட-அச்சத்தையடைய. ஏந்திழை-பரவை நாச்சியார். புலவு-ஊன். பிசிதம்-ஊன். செகுப்பின்-கொன்றால். மைந்தனை-சீராளனை. மலவலை-மலமாகிய வலையை. கலர்-கீழ்மக்கள். இலகிலை-விளங்காதவனே! எழிலி-முகில்கள். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான்.     


எழிலிகண் படுக்கும் பொழில்புடை சூழ்ந்த
வெங்கையம் பதிவா ழெங்க ணாயக
பழமலை நாதநிற் பரவுவன் விசும்பின்
அரையனுக் கரைய னாகுமந் நிலையும்
நினைகிலன் றமியே னின்னடி யவர்கட்
கென்று மடியவ னாகும்
ஒன்றொரு வரமு முதவுதி யெனவே.     (1)

நேரிசைவெண்பா

எவ்வா றளித்த திமையப் புதுமலைதன்
ஓவ்வா விளமை யொருமகளை - அவ்வான்
பரவுதிரு வெங்கைப் பழமலையே நிற்கு
விரவுகிளை யோடும் விழைந்து.       (2)

கட்டளைக்கலித்துறை

விழக்க மலங்களை மோதிவல் வாளை வியன்படுகர்
உழக்க மலங்களை போய்ப்புகும் வெங்கை யொருவவிண்ணோர்
தொழக்க மலங்களை மாமதி வேணி சுமந்தருள்வோய்
பழக்க மலங்களை யான்பவ வேரைப் பறிப்பதற்கே.        (3)

1. எழிலி-முகில்கள். விசும்பின் அரையன்-தேவர் கோமான். ஒன்று-பொருந்திய.2. ஒவ்வா-ஒப்பற்ற. வான்பரவு-விண்ணவர் போற்றுகிற. விரவு-சூழ்ந்த. கிளை-உறவினர். விழைந்து-விரும்பி. 3. வியன்படுகர்-ஆழ்ந்த குளங்கள். மலங்கு-விலாங்குமீன். அளை-சேறு. கமலம்-நீர். பழக்க மலங்களை-பழக்கமாகவுள்ள. மும்மலங்களை. பவவேர்-பிறவிவேர்.
    
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    பரந்தபுகழ்த் திருவெங்கைப் பழமலையார்
       தமைத்துதித்துப் பதத்து மென்பூச்
சொரிந்துபணிந் திரந்திடவு மெமக்கருளச்
       சிறிதுமுளந் துணிந்தா ரல்லர்
திருந்தவையிற் பித்தவென வைதுகல்லா
       லெறிந்துபொருஞ் சிலையான் மோதி
அரந்தையின்மெய்க் கதிதருதி யெனக்கேட்போர்க்
       கன்றியவ ரளித்தி டாரே.         (4)

மறம், எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

அளியாரு மலர்ப்பொழில்சூழ் வெங்கை யீச
       ரம்மலையி லெம்மூர்மான் பிடிப்போ மென்றுங்
களியாரும் வேடரியா மெம்ம கற்குக்
       கன்னிதனைத் தருகவெனக் கொடுத்த வெம்மை
எளியாரென் றொருதூதா மாது வேண்டி
       யிறைவர்திரு முகமெனமற் றொன்று தந்தாய்
ஒளியாம லுரையவன்யா ரியாங்க ளின்னே
       யுண்மையவன் றிருமுகங்கொண் டெய்து வோமே.         (5)

நேரிசைவெண்பா

மேதகைய வில்லிறைவன் வில்லிளவல் வல்வீரர்
காதனிக மற்றுங் கருதெவையும் - பாதத்
தொருவிரலாம் வெங்கையர னொன்றுமை யாசைப்
பருவரலாற் காணப் படும்.
    (6)
    4. பதத்து-திருவடிகளில், பித்தவென வைதவர் சுந்தரர். சிலையால் மோதி-கல்லால் அடித்து. வில்லால் அடித்து எனினுமாம். கல்லால் அடித்தவர் சாக்கிய நாயனார்; வில்லால் அடித்தவன் அருச்சுனன். அரந்தை இல்-துன்பமில்லாத. 5. அளி-வண்டுகள். எம்ஊர்மான்-எமது ஊரிலுள்ளமான்; மானைப் போன்ற பெண். எளியார்-எளிமையுள்ளவர்கள். 6. வில்லிறைவன்-இராமன். வில்லிளவல்-இலட்சுமணன். காது அனிகம்-கொலை செய்கிற படை. ஒருவிரலாம்-ஒருவிரலால் அடக்கியவன். பருவரல்-துன்பம்.     

 

மடக்கு தாழிசை

படுமத்தமிழுக் குவந்தவிறை விடுமத்தமிழுக் குவந்தவிறை
       பண்டங்கரிய வடிவாமன் கண்டங்கரிய வடிவாமன்
சடையற்படுமம் புயனிசையான் றொடையற்படுமம் புயனிசையான்
       சம்புவனமாக் குணர்வாக னம்புவனமாக் குணர்வாகன்
கடலைக்கலக்கு மலைவில்லா னுடலைக்கலக்கு மலைவில்லான்
       கங்கைப்பதியன் பரையானான் வெங்கைப்பதியன் பரையானான்
அடலைப்புரத்தங் கணையெய்தா னுடலைப்புரத்தங் கணையெய்தான்
       அன்பினிகழ வணங்கீரே துன்பினிகழ வணங்கீரே.
    (7)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

கீற்றுப் பிறையை யணிந்ததிரு வெங்கை விருத்த கிரிநாதன்
ஆற்றுப் பொருளைக் குளத்திலொரு புலவர்க் கழைத்தன் றருளினோன்
சோற்றுத் துறையுந் திருநெய்த்தா னமுமீங் குடையான் சுழலாமல்
தோற்றுப் பசிநோய் தொலைப்பனவன் றனையே துதியீர் புலவீரே.
    (8)
அம்மானை. மடக்கு. கலித்தாழிசை
    புண்ணியனம் வெங்கைப் புனிதனயன் மாலெதிரே
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னம்மானை
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னாமாகில்
கண்ணி லவரெளிதிற் காணாரோ வம்மானை
கண்ணின்றிக் காணுங் கதிரொளிகா ணம்மானை.
    (9)
    7. படும்-குறைந்த. இழுக்குவந்த-தவறு பொருந்திய. இறை-விடையும். விடும்-நீங்கிய. உவந்த இறை-விரும்பிய இறைவர். பண்தங்கு-குணம் பொருந்திய. சம்பு-நரி. வனமா-அழகிய குதிரை. அம்புவனம் ஆக்கு-அழகிய உலகங்களைப் படைக்கிற. உணர்வு ஆகன். ஞானவடிவன். உடலைக்கலக்கு மலைவு இல்லான்-உடலைக் கலங்கச் செய்கிற மயக்கமில்லாதவன். பரையானான் பராசத்தியாகவும் விளங்குபவன். வணங்கீர்-வணங்குவீர்களாக. அணங்கீர்-வருந்துதலடைய மாட்டீர். 8. ஆற்றுப்பொருள்-மணி மூத்தாநதியிலிட்ட பொருள். குளத்தில்-திருவாரூர்க் கமலாலய தடாகத்தில். ஒருபுலவர்-சுந்தரர். சோற்றுத்துறை-திருச்சோற்றுத்துறை என்னுஞ் சிவப்பதி; திருநெய்த்தானம்-திருநெய்த்தானம் என்னுஞ் சிவப்பதி. சுழலாமல்-எங்கும் போய் அலையாமல். 9. அயன்-நான்முகன். மால்-திருமால்.
    
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

அம்புமே லிருக்க நாரி யடற்சிலை கொண்ட வெங்கை
எம்பிரா னொடும்போர் செய்வ னென்றுதன் னிதயத் தெண்ணி
அம்பின்மே லிருக்கு நாரி யருஞ்சிலை கரங்கொண் டுற்றோன்
எம்பெறா வமுதன் னாளை யென்செயா னுலகிற் றானே.
    (10)

கலிநிலைத்துறை
தாமங் கமழு மொய்ம்புடை யன்பர் தமியேன்வெங்
காமங் கனலு மனமொடு துன்பக் கடல்வீழ
ஏமங் கருதிச் சென்றன ருமையன் றிதுகொண்டோ
வாமங் கலவெங் கைப்பர னோடொன் றானாளே.
    (11)

கலிவிருத்தம்
ஆயிழை மகளிர்வா ழகங்க டோறுமுன்
நீயிரும் பலிகொள நினைந்து வெங்கையில்
தூயநின் சடையினிற் சோமன் சுற்றியே
ஏயினை வெற்றரை யாகி யென்னையே.
    (12)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

என்றனை முகத்தின் வென்றா ளிவளெனும் பகையுட் கொண்டோ
பின்றலி லன்ப ரென்று பிரிவரென் றிருந்து வெங்கை
மின்றிகழ் சடிலத் தண்ணன் மேவலர் போல்வெண் டிங்காள்
வன்றுய ருழக்க வென்மேன் மலிதழல் சொரியும் வாறே.
    (13)

10. அம்பு-கணை. பெறா-பெறுதற்கரிய. சிவபெருமானுக்கு அம்பு திருமாலும் நாண் ஆதிசேடனுமாகலின் அம்புமேலிருக்கும் நாரி என்றும், காமனுக்க அம்பு மலரும் நாண் வண்டுமாகலின் அம்பின் மேலிருக்கும் நாரிநயன்றும் முரண்பட விதந்தபடி. 11. தாமம்-மாலை. மொய்ம்பு-தோள். கனலும்-வெதுப்பும். ஏமம்-பொன். வாமம்-இடப்பாகம். 12. ஆயிழை-ஆராய்ந்தெடுக்கப்பட்ட அணிகலன்கள். சோமன்-திங்கள்; ஆடை. ஏயினை-சென்றாய். 13. முகத்தில் வென்றாள்-முகத்தினால் தோற்கடித்தாள். பின்றலில்-மாறுதலில்லாத. மேவலர்-பகைவர்.
    
மேற்படிவேறு

வாசக் கமல மலர்த்திருவே மயிலே யென்கண் மணியேநின்
ஆசைக் குமுத மலர்வாயி னமுதம் பெறுதற் கரிதாயோ
ஓசைக் கடலைக் கடைந்துகடு வுமிழ விமையோ ரொடும்வெங்கை
ஈசற் கபய மபயமென விரிந்தான் மேனி கரிந்தானே.
    (14)

வண்ணம்
கன்றுக்கர மலராண்முக விந்துத்தவி சடைமீனிகர்
       கண்டத்தணி மணிமாலையள்             கயிலையங்கிரியார்
கங்கைச்சடை முடிநேடிய துங்கப்பற வையுநாடுறு
       கஞ்சத்திரு வடியீதென              நவில்சிலம்படியாள்
வென்றிச்சிலை மதன்வாள்களி னஞ்சைத்தட வுதல்போலமை
       விஞ்சப்புனை விழியாளொளி             பெருகுசெங்ழையாள்
விம்பப்பிறை யெனநீறிடு சந்தச்சிலை நுதலாடிரு
       வெங்கைப்பழ மலைநாயகர்             பவனிவந்திடவே
சென்றுற்றன டொழுதாளுமை தங்கப்படு புறநாடினள்
       செங்கைக்கவி னுழையீதிவள்             பயில்வதொன்றறியாள்
சிந்தித்தன ளொருமாதினி யிந்தப்புற முறமானொழி
       செங்கைக்கணு மிவரேகொளி             னனிசிறந்திடுமே
என்றித்தகை பலகூறினள் கொங்கைச்சுவ டுறுமார்பினை
       யின்பத்தொடு மெதிர்நாடின             ளெனையணைந்தருளா
லிந்தப்படி தனியேன்முலை சந்தத்திரு மணிமார்பழ
       கெஞ்சப்படு கிலர்பாரென             மதிமயங்கினளே.
    (15)

14. வாசக்கமலம்-மணம் பொருந்திய தாமரை. கடுஉமிழ-நஞ்சை வெளிப்படுத்த. இரிந்தான்-ஓடினான். மேனி கரிந்தான்-திருமால். 15. கன்று-வளையணிந்த, கன்றிய. முகஇந்து-முகமாகிய திங்கள். கஞ்சத் திருவடி-தாமரை மலரைப்போன்ற திருவடி. விஞ்ச-மிகவும். பிறை விம்பம்-பிறைவடிவம்.
    

           நேரிசையாசிரியப்பா
           மதிநுதற் பவள வாய்க்கருந் தடங்கட்
          குவிமுலைப் பசும்பொற் கொடிதனை யமையாக்
          காதன்மீ தூரக் கலவிசெய் திடுவான்
          புகும்பொழு தவளொரு பொறாமையுட் கிடப்பப்
5         படர்முதிர் வேனிற் பகற்கொடு பாலை
           நிலத்துநீர் வேட்டோ னீரரி தினிற்பெற்
          றுண்புழி யுண்ணா தொல்லையிற் றடுக்குஞ்
          செயலென வெனைநீ தீண்டே லென்று
          நின்மே லாணை நிகழ்த்திட நீங்கிப்
10        புணரியுண் டெழுந்த புயனிகர் வளர்குழல்
           அஃதுணா முகில்போன் றழகுறுங் காறுந்
          தீண்டா தொருபூஞ் சேக்கையிற் றுயின்று
          மாறா வன்பு வளர்மனத் தவனோ
          மிளிர்தரு தூர்த்த வேடமா தவனாய்
15        நீமுன் கற்பு நீங்கா மாதைத்
          தருகெனக் கொடுத்துத் தன்பெருங் கிளைஞர்
          மானமீக் கூர வந்தனர் சூழ
          ஒன்னலர் போல வுடன்றவர்ப் படுத்துக்
          கரையில்பே ருவகைக் கடல்படிந் தவனோ
20        திருமணக் கோலஞ் செய்துவீற் றிருந்த
          அருமகள் கூந்த லையநின் னுருவங்
          கரந்துசென் றிரப்பக் களித்தக மணப்பூம்
          பந்தரிற் கிளைஞர் பலருங் காண
          அரிந்து கொடுத்த வடியவன் றானோ
25        நின்னொரு விழிசெந் நீர்கொளக் கலங்கித்
          தன்னொரு விழிவெஞ் சரத்தினா லிடந்து
          சாத்தி மற்றைத் தடங்கணவ் வகைபெற
          இன்னமுண் டொருக ணென்றுளங் களித்து
          மற்றதுங் களைவான் வாளிநட் டவனோ
30        மருவலன் புணர்ப்பான் மாய்ப்பமெய்த் தவன்போல்
          வந்தனன் படையான் மார்பிடைத் தாக்கக்
          கண்டுட் கடைத்தலைக் காவல னொருவன்
          வெகுண்டவற் றுணிப்பான் விரைந்துசென் றெய்த
          ஆணையாற் றடுத்த வரச ரேறோ
35        பொருகளத் தொட்டலன் புனைநுத னீறு
          கண்டுனைப் போலக் கருதிமற் றவனைத்
          தன்படை சாய்த்தவன் றன்படை மார்பில்
          தாக்கக் கொடுத்த தளர்விலன் பினனோ
          அருஞ்சிறு மகனை யரிந்துநிற் கட்டுப்
40        படைத்துக் களிகூர் பரிவுடை யவனோ
          நின்சின கரத்து நீக்குபூ மோந்த
          மாதுமூக் கரிந்த மலிபெருந் தவனோ
          துணுக்கென வவள்கை துணித்தகொற் றவனோ
          சந்தன மாகச் சாத்தநின் றனக்கு
45        முன்கை தேய்த்து முகமலர்ந் தவனோ
          செயற்கருஞ் செய்கை செய்தவன் யார்கொல்
          பகருதி வெங்கைப் பழமலை நாத
          பராபர முக்கட் பகவசங் கரசிவ
           கருணா கரதிருக் கயிலை நாயக
50        என்றருந் தவர்க ளேத்தும்
           பின்றிகழ் சடிலப் பெருந்தகை யோனே.         (16)

16. அமையா-அளவுபடாத. உண்புழி-உண்ணும் பொழுது. ஒல்லை-விரைவு. புணரி-கடல். புயல்-முகில். சேக்கை-படுக்கை. தூர்த்த வேடம்-காமப்பித்தேறிய கோலம். ஒன்னலர்-பகைவர். கரந்து-ஒளித்து. அடியவன்-மானக்கஞ்சாற நாயனார். செந்நீர்-குருதி. சரம்-அம்புஇடந்து-தோண்டி. வாளிநட்டவன்-கண்ணப்ப நாயனார். புணர்ப்பு-வஞ்சனை. வந்தனை-முத்தி நாதன். காவலன் ஒருவன்-தத்தன். அரசர்ஏறு-மெய்ப்பொருணாயனார். பொருகளம்-போர்க்களம். ஒட்டலன்-பகைவன். தளர்விலன்பினன்-ஏனாதிநாத நாயனார். அட்டு-சமைத்து. பரிவுடையவன்-சிறுத்தொண்ட நாயனார். சினகரம்-கோயில். மலிபெருந்தவன்-செருத்துணை நாயனார். துணித்தகொற்றவன்-கழற்சிங்க நாயனார். முகமலர்ந்தவன்-மூர்த்தி நாயனார்.     

 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

பெருந்தகைமை தனக்கன்றி மற்றையபூ
       வினுக்கிலையென் பெற்றி யன்றோ
திருந்துதட மதிற்குவளை குமுதமொரோ
       ருறுப்பினையே சிவண நிற்ப
முருந்துநகை யுமைகணவன் றிருவெங்கை
       யானையாயுன் முகம்பொற் றாள்கை
புரைந்திடுதற் கரவிந்த மொருதாளி
       னின்றுதவம் புரித றானே.
    (17)

தாழிசை

தாராம லிருந்தாரெனை யாளாம லிருந்தார்
       தனிவெங்கையை யுள்ளார்மய றவிரும்படி யுள்ளார்
சீராரிசை வண்டேயொழி கிலவேள்கர வண்டே
       செறிகின்றிலை குருகேதுய ரறிகின்றிலை குருகே
வாராய்மட மயிலேமிகு தாய்மார்சொலு மயிலே
       வானூடெழு மதியேயெனை முனியாதருண் மதியே
ஊரார்புகல் வம்பேயென விழியோவில வம்பே
       யுரையாயவ ருழையேயென தகலாவிட ருழையே.
    (18)

வஞ்சிவிருத்தம்

உழையென வெங்கை யுவப்பானார்
தழலுரு வென்ற தரத்தாலோ
விழவெமை யின்று வெதுப்பாமே
எழுமதி யொன்றை யெடுத்தாரே.
    (19)
17. பெற்றி-பெருமை. சிவண-பொருந்த. முருந்து நகை-மயிலிறகின் அடிபோன்ற பல். புரைந்திடுதற்கு-ஒப்பாதற்கு. அரவிந்தம்-செந்தாமரை. 18. இரும்தார்-பெரியமாலை. உள்ளார்-உடையவர்; எண்ணாதவர். குருகு-வளையல்; நாரை. அயிலே-வேலுக்கு நிகரே. மதி-திங்கள்; என்னைமதிப்பாயாக. வம்பு-வம்பு மொழி. ஓவில அம்பு-கண்ணீர் ஒழியவில்லை. உழை-இடம்; மான். 19. உழை-இடம். தழல்உரு-தீவடிவம். தரம்-தன்மை. வெதுப்புதல்-சுடுதல். எடுத்தார்-தாங்கினார்.     

 

 

நேரிசை வெண்பா
எடுக்குமான் வெங்கையிறை யேந்திழாய் நின்னெஞ்
சடுக்குமால் பங்கினள்கே ளாமல் - கெடுக்கவே
காதின் மறையாய்நின் கண்போன்ற தாதலால்
ஓதுஞ் செயல்பா ருவந்து.
    (20)

கட்டளைக் கலித்துறை

துன்னாரை வென்ற சிலையாளர் வெங்கைச் சுடர்க்கிரிமேல்
என்னாவி கொள்ள வரிப்புள்ளி மானுக் கெளிதன்றென்றோ
பொன்னார் சுணங்குப் புகர்முக வேழம் புயனுணங்கும்
மின்னா மருங்கு லணங்கே தடாமல் விடுத்ததுவே.
    (21)

நேரிசை வெண்பா

வேலைக் கடுவயின்ற வெங்கையர னாரிவட்குச்
சாலத் திருமறுகிற் றந்துபோம் - மாலிப்
பெருமையாற் போக்கும் பிணியோ வவர்த்தாழ்ந்
தருமையாற் போக்கு மது.
    (22)

புயவகுப்பு
அத்தி யொடுமாறு பட்டுத் திகழ்ந்தன
       வன்று தமிழ்மூவர் வைப்பச் சுமந்தன
புந்தி மகிழ்மாது கட்டக் குழைந்தன
       புண்ட ரிகமாலை யுற்றுக் கிடந்தன
நந்து தலைமாலை யிட்டுச் சிறந்தன
       நன்றி மறைநாலு மற்பிற் புகழ்ந்தன
விந்த மகமேரு வொப்பக் கிளர்ந்தன
       வெங்கை புரிநாதர் வெற்றிப் புயங்களே.         (23)

20. எடுக்குமான்-கையிலேந்தியமான். அடுக்கும்மால்-பொருந்திய காமநோய். பங்கினள்-உமையவள். 21. துன்னாரை-பகைவர்களாகிய முப்புர அசுரர்களை. ஆவி-உயிர். பொன்னார் சுணங்கு-பொன் போன்ற தேமல். தடாமல்-தடுக்காமல். 22. வேலைக் கடுவயின்ற-கடலில் தோன்றிய நஞ்சையுண்ட. பெருமை-பெரிய ஆடு 23. அந்தி-மாலை. மாது-உமையவள். கட்ட-தழுவ. புண்டரிகம்-தாமரை. அற்பில்-அன்பில். விந்தம்-விந்தமலை. மகமேரு-மேருமலை. கிளர்ந்தன-சிறந்து விளங்கின.
    
கலிநிலைத்துறை

புயலே யுனையங் கெதிர்கண் டிடுமப் பொழுதேவன்
குயிலே யனையா ளென்வர வினைநீ கூறுங்கால்
மயிலே யனையாள் பழமலை வெங்கை வளமன்னாள்
வெயிலே யிழையா ணின்பகை நிற்றாழ் விப்பாளே.         (24)

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

விழியொன் றியநன் னுதற்பரமர்
       வெங்கை விரும்பும் விமலேசர்
எழிலொன் றிரதக் காலிரதக்
       காறெற் கெழுந்தே யோடுகினும்
பிழையொன் றிடினு மவர்வாளி
       வாளி பிறழா தியான்புகலும்
மொழியொன் றகலே னுனையெனமுன்
       மொழிந்தா ரென்னை யொழிந்தாரே.
    (25)

எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    ஒழியாத னங்க வொருகோடி வாளி
       யுளவேனு மெய்தி யினியென்
விழியான வுன்னை யுருவில்லி யென்ன
       வயலோர்கண் முன்செய் விமலன்
உழியான வெங்கை தனிலேநின் மாது
       முரு வில்லி யென்று நினையே
பழியாட வின்று செயுமன்பர் வந்த
       படியா லொழிந்த பயமே.
    (26)
    24. வெயில்ஏய்-ஒளிபொருந்திய. இழையாள்-அணிகலன்களையுடையவள். நின்பகை-உன்பகையாகிய கூந்தலை. நின்தாழ்விப்பாள்-உன்னைவணங்கச் செய்வாள். 25. இரதக்கால்-கதிரவனது தேருருளை. வாளி வாளி-சிவபிரானுடைய பாணமாகிய திருமாலின் (இராம பிரானின்) அம்பு. விமலேசர் எழிலொன்றிரதக்கால் என்றது சிவபிரான் கொண்டருளிய பூமியாகிய தேரின் உருளையாகிய கதிரவனை; பின்னர் இரதக்கால் என்றது அக்கதிரவனுடைய தேரின் உருளையை. வாளிவாளி என்றது அப்பெருமானுடைய பாணமாகிய திருமாலின் பாணத்தை. எனவே, என்றும் முறையாகக் கிழக்கே தோன்றி மேற்கே யோடுங்கதிரவனுடைய தேருருளை தெய்வகதியால் அந்நிலைமாறி தெற்கே தோன்றி வடக்கே யோடினும், சுட்டிவிடப் பட்டாரைத் தப்பாது கொன்றே மீளும் அத்திருமாலின்கணை தவறுதலடையினும் அக்காலத்தும் என்மொழி பிறழாதெனத் தலைமகன் இசைத்தான் என்க. 26. அனங்க-காமனே! எய்தி-எய்வாயாக. உழி-இடம். பழியாட-பழிகூற.

கலிவிருத்தம்
பரவும் வெங்கைப் பழமலை நாட்டுளேன்
வெருவ வெந்தழல் வீசுகின் றாய்மதீ
பரிவி லாருனைப் பாம்பு கடிக்கநீ
மருவு பெண்பழி மாற்றிட வல்லையோ.
    (27)

கட்டளைக் கலித்துறை
வல்லெனு மாமுலைக் கோதைய ராசை மறந்தவர்க்கே
ஒல்லையி னீகுவன் கம்புமுன் னாழி யுடையன்றங்கை
நெல்லிரு நாழி கொளக்கொடுத் தோனெடு வான்கதிரின்
பல்லுக மோதிய வெங்கைப் பிரான்றன் பதாம்புயமே.
    (28)

சம்பிரதம். எண்சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

பலவரைகள் கரத்தடக்கிக் காட்டுவோ நீர்
       பார்ப்பவநே கங்கடலை யருந்து வோநாம்
இலகுறநும் மனையிடத்தி னுலோக மெல்லா
       மிக்கணமே காட்டிடுவோ முலகி லெண்ணில்
கலையறிவோ மொருகாலும் பொய்ம்மைபகர்ந் தறியோங்
       கண்ணனெனு மவன்வாயின் மண்விழுமுன் னருளால்
அலையிலெழுங் கடுமிடற்றி னடக்கு மீச
       னமர்ந்ததிரு வெங்கையினின் றடைந்து ளோமே.
    (29)
    27. பரவும்-போற்றும். வெருவ-அஞ்ச. மதீ-திங்களே! பரிவு-அன்பு. மருவு-பொருந்திய. 28. வல்-சூதாடு கருவி. கம்பு-சங்கு. ஆழி-உருளைப்படை. கதிர்-கதிரவன். பல்லுக-பற்கள்சிந்த. பதாம்புயம்-திருவடித் தாமரை. 29. பலவரைகள்-பலமலைகள். இலகுற-விளங்க. உலோகம்-தாதுப்பொருள்கள். எண்ணில்கலை-அளவற்ற கலைகள்.

    
நேரிசை வெண்பா
    மேகத்தை யொத்துவளர் மென்குழலைச் சார்ந்திலைநின்
ஆகத்தை யொத்துவள ரந்திதனில் - வேகத்து
வேளிக் குவளையுமே வெங்கையம லாபடுமே
வாளிக் குவளையுமே வந்து.
    (30)

கைக்கிளை. மருட்பா
வம்புலவு மீர்ங்கோதை வாடுகின்ற தென்மனம்போல்
அம்புவியிற் றோய்ந்த வடித்தா மரையதனால்
செங்கமலை பேதையாச் செய்யு மடந்தையிவள்
வெங்கைநகர் மேவிய விமலன் திருவருளால்
விண்ணின் பெருமையும் வியனீர்
மண்ணின் சிறுமையு மறவரு மணங்கே.
    (31)

கட்டளைக் கலித்துறை
    அற்போ டமரர் குழாம்போற்றும் வெங்கை யமலர்வெற்பில்
நற்போ தகமன்ன மன்னநின் காத னலமறியாள்
பொற்போ டரவுமிழ் செங்கேழ் மணியைப் புனத்தில்வெறுங்
கற்போ லெறிந்து சுகம்போக்கி நிற்கின்ற கன்னிகையே.
    (32)

வஞ்சித் துறை
    கன்னனெ டுஞ்சிலைவேள்
தன்னதி ருங்கணைபோ
தென்னநம் வெங்கையுளாய்
மின்னைய ணைந்தருளே.
    (33)
    30. ஆகத்தை-உடலை. வேள் இக்குவளையும்-காமனுடைய கரும்புவில் வளையும். 31. வம்பு-மணம். செங்கமலை-திருமகள். 32. நற்போதகம்-நல்லயானை. பொற்பு-அழகு. செங்கேழ்மணி-செம்மையானநிறம் பொருந்திய பாம்புமணி. 33. கன்னல்-கரும்பு. போது-மலர். மின்னை-மின்னலையொத்த பெண்ணை.

    
எழுசீர்க்கழிநெடிலடி வண்ண விருத்தம்
    அருளாளர் வெங்கை புரமேவு கின்ற
       வரனாரை நம்பு கிலர்போல்
மருளா வயர்ந்து தமியே னிருந்து
       ம னா லழிந்து விடவோ
பொருளா தாங்கொ டகனா யகன்ற
       னொடு நா வணைந்து புகலாய்
உருளா விரைந்து திரைமோது கின்ற
       வொழியா வளங்கொள் கடலே.
    (34)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    கடகரி நரம டங்கல் காலன்வெண் மதிய ரக்கன்
அடுமுய லகன்பதை பவடர்த்தனை பதத்தாற் கஞ்சன்
நடுமுடி கரத்திற் கொண்டாய் நகைத்துமுப் புரமெ ரித்தாய்
படைகள்கைக் கொண்ட தென்கொல் பகருதி வெங்கை யோனே.
    (35)

கலிவிருத்தம்

    வெங்கைப் பதிமே வியவித் தகநின்
துங்கப் படுதேர் மிசையே சுடர்கால்
தங்குற் றவியங் குறுதன் மையெவன்
நங்கட் கதியம் புதிநன் குறவே.
    (36)

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

    நன்போது கொடுபுலவர் பரவுதிரு
       வெங்கைபுர நாதர் நாட்டில்
முன்போத வறிவனைத்து முயிர்மதவே
       ளெடுத்தசிலீ முகங்க டாக்கிப்
பின்போது மமயத்தோ வெமக்குமணி
       வாய்மருந்து பெறவ ளிப்பீர்
பொன்போல வடிவுபடைத் திரும்புபோன்
       மனம்படைத்த பொருவின் மாதே.
    (37)

    34. மருளா-மருண்டு. அயர்ந்து-சோர்ந்து. ஆதரம்-அன்பு. உருளா-உருண்டு. 35. கடகரி-மதயானை. நரமடங்கல்-நரசிங்கம். அடர்த்தனை-வருத்தினாய். கஞ்சன்-நான்முகன். 36. துங்கப்படு-தூய்மை பொருந்திய சுடர்கால்-ஞாயிறு திங்கள்களாகிய உருளைகள். எவன்-என்ன காரணம். 37. போது-மலர். முன்போத-முன்போக. சிலீமுகம்-கணை.போதும் அமயத்தோ-உயிர்போகுஞ் சமயத்திலோ. பொன்போல வடிவு என்றான். காட்சிக் கினிமையாய் விருப்பஞ் செய்தலினால். இரும்பு போல் மனம் : என்றது காதல் வேட்கைக் கினிதினிசையாத வன்மை கருதி. பொருவு இல்-ஒப்பில்லாத.     

நேரிசை வெண்பா

    பொன்னாண் கவினிமைக்கும் பூவையர்சொற் கண்கைவேள்
வின்னாண் கணைநிகர்க்கும் வெங்கைபுர - மன்னாமுன்
நீர்க்குப் பயந்தவடா னீநெருப்பா யன்றெழுந்த
சீர்க்குப் பயந்திலளோ செப்பு.
    (38)

தழை - கட்டளைக் கலித்துறை

    செவ்வா யிளந்திரு நீதந்த மாந்தழை சீறடிக்கும்
ஒவ்வா தெனநினை யாதுகண் ணோடொற்றி யோதிவைத்தாள்
அவ்வா னவர்புக ழெம்மான் றிருவெங்கை யன்பமதன்
வெவ்வா ளிகள்விலக் காமருந் தாக வியந்தனளே.
    (39)

நேரிசை வெண்பா

விழுமுருளு மேங்குமெழும் வெங்கைக்கோ விந்தா
எழுமதிய மென்னு மிரங்குந் - தொழுமிதழி
இன்றா மரைக்க ணிராமா வருளெனுநீர்
தன்றா மரைக்கண் டர.
    (40)

கட்டளைக் கலித்துறை

    தடுத்திலை யைம்புல வேழங்க டம்மைத் தவநெறியில்
அடுத்திலை யன்ப ரினமே மருவி யவலரினம்
விடுத்திலை யெங்க டிருவெங்கை வாணர் விரைமலர்த்தாள்
எடுத்திலை நெஞ்சக மேவிடு மோநம் மெழுபிறப்பே.
    (41)

    38. பொன்-திருமகள். நாண்-நாணுமாறு. கவின் இமைக்கும்-அழகு விளங்கும். நீர்க்குப் பயந்தவள்-கம்பைநதி பெருகி வந்தபோது அஞ்சியவள். 39. இளந்திரு-தலைவி. ஓதி வைத்தாள்-கூந்தலி லணிந்தாள்; புகழ்ந்து வைத்தாள். 40. இதழ்-இதழ்களைய. இன்-இனிய. தாமரைக்கண் இராமா அருள் எனும். வெங்கைகோ-வெங்கைக்குத் தலைவரே! இந்தா-வாரும். கோ-கண்ணை. இந்தா-திங்களாக உடையவரே. 41. அடுத்திலை-செல்லவில்லை. அவலர் இனம்-கீழ்மக்கள் கூட்டம். எடுத்திலை-எடுத்துப் புகழவில்லை.

    
எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    என்னடிகள் வெண்குறணே ரடியி ரண்டு
       மென்றலையி லிருத்துமிறை வெங்கை நாட்டில்
முன்னடிக ளிரண்டுநெடி லடிகள் பின்னர்
       முயங்கடிக ளிரண்டுநே ரடிக ளாகப்
பன்னடிக ளொருநான்கு கொடுந டக்கும்
       பழுதகல்வெண் டுறைபோலப் படர்த லாலே
பின்னடிக ளெங்கடிரு வடிகண் முன்னர்ப்
       பெயர்ந்தவடி யெழிலிளஞ்சே யடிக ளாமே.
    (42)
எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
    ஆர ணங்களு மோத ரும்புக ழாளர் வெங்கைபு ரேசனார்
பூர ணந்திரி யாது ணர்ந்திலர் போல வன்றுயர் கூடவே
வார ணங்கனி தானி ரும்பிடி வாயி னுங்குற வேகொடா
நேர ணைந்திடு கான கம்புகு நேயர் வந்திலர் மீளவே.
    (43)
கட்டளைக் கலித்துறை
    மீனக் கருங்கண்ணி வேள்கணை யாற்சிலை வேடர்வைத்த
கானக் கருங்கண்ணி மான்போற் பதைத்தனள் காரளிகள்
தேனக் கருங்கண்ணி யீந்தரு ளீர்திரு வெங்கைநகர்
மானக் கருங்கண்ணி மாறீர்ந் தவளுயிர் வாழ்வதற்கே.
    (44)
சித்து. எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    வாளா யொளிர்கட் பொனணைந் திடுமான்
       மாலா கவிளங் குறுபொன் னனையாள்
நீளா சையினுய்த் தகரும் பொனெலா
       நிகழ்செம் பொனெனப் புரிசித் தர்பெறும்
ஆளா யவர்வெங் கையிருப் பமவ
       ரருளப் பொடியா குமருந் துதனைக்
கேளா யெளிதா கவளித் திடுவேங்
       கிளர்நம் பசிதீ ரவனம் படையே.
    (45)
    42. என்னடிகள்-திருவள்ளுவர். 43. எங்கள் திருவடிகள்-எங்களுடைய திருமகளைப் போன்ற பெண்ணினுடைய அடிகள். எழில் இளம் சேயடி-அழகிய இளைய தலைமகன் அடிகள். 44. மீனக்கருங் கண்ணி-மீனைப் போன்ற கரிய கண்களையுடையவள். கரும்கண்ணி-பெரியவலை. தேன் நக்கு-தேனை நக்குகிற. அருங்கண்ணி-அரியமாலை. கரும் கண்ணி-கரிய கண்களையுடைய தலைவி. மால்-காம மயக்கம். 45. பொன்னனையாள்-திருப்பூவணத்துப் பொன்னனையாள். கரும் பொன்-இரும்பு. ஆள்-தொழில் புரிவோர்.

 

பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
 

   படத்தினிற் பொதிந்த குடத்துவெள் ளெலும்பு
       பரிந்துபெண் ணாக்கவு மறியா
பரவையிற் புணைபோன் மிதந்துவந் தணையப்
       பருங்கல்பண் ணாக்கவு மறியா
வடுத்துல கனைத்தும் பரவுற மறைந்த
       வரியகண் ணாக்கவு மறியா
அமலவென் கவிக ளடியனேன் மனத்தை
       யளிந்தபுண் ணாக்கவே யறியும்
எடுத்தசங் கதனை விடுத்திவற் றெதனை
       யெடுப்பமென் றரியுள மருள
விவர்ந்திடு மெகின்விட் டிவற்றெதை யூர்வ
       மெனவயன் கருதுறக் குவளை
விடுத்திவற் றெதனைப் பறிப்பமென் றுசாவ
       வின்மதன் பணிலம்வா லெகினம்
விரிந்ததண் குவளை பரந்தவொண் பழன
       வெங்கைவா ழெங்கணா யகனே.
    (46)

அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    நாடா வுழைகள் புனநாடு நாணுஞ் சுகமுஞ் சுகமாகும்
ஆடா மயிலு மரவுணவுண் டாடு மரவு மெலியுண்ணும்
பீடார் கயிலை மலைப்பெருமான் பிரியா வெங்கை புரநாட்டில்
கோடா விதணிற் புனத்திருந்த கொடியார் சென்ற படியாலே.
    (47)

மேற்படி வண்ணவிருத்தம்

    படியறு சிம்புள தெழநீடும் பயமொடு மங்கரி யினமோடப்
பிடியொடு மங்கரி யினமோடப் பெருவரி வெம்புலி பொருகேழல்
மடிமயி ரெண்கதிர் திசையோடும் வனவழி வெங்கையி லுறுமீசர்
அடிதவிர் நெஞ்சக மெனநீளு மகலிரு ளிங்குற லயநீயே.
    (48)

    46. படத்தினிற் பொதிந்த-துணியால் மூடப்பட்டிருந்த. பரவை-கடல். புணை-தெப்பம். பண்ணாக்கவும்-பண்பாகச் செய்யவும். அரியகண் ஆக்கவும்-அருமையான கண் மீண்டும் பார்வை பெறவும். எகின்-அன்னம். அரிஉளம் மருள-திருமால் மனம் மயங்க. 47. நாடா-வராத. உழைகள்-மான்கள்: சுகம்-கிளி. அரவுணவு-பாம்பாகிய உணவு. பீடார்-பெருமை பொருந்திய. கோடா-கோணுதலில்லாத. இதண்-பரண். கொடியார்-கொடிபோலும் இடையை உடையவர்; கொடியவர் என்னும் பொருளும் தொனிக்கிறது. 48. படி-ஒப்பு. சிம்புள்-சரபப்பறவை. அரி-சிங்கம். அம்கரி-அழகிய யானைகள். பொரு கேழல்-போர் செய்கிற பன்றி. மடிமயிர் எண்கு-மடிந்த மயிர்களையுடைய கரடி. அடிதவிர் நெஞ்சகம்-ஆணவ இருள் பொருந்திய மனம். அய-ஐய.

    

நேரிசை வெண்பா
    நீத்தவினை யார்புகழும் வெங்கையோய் நின்னடியால்
தேய்த்த மதியைத் திரும்பநீ - வாய்த்தநறுந்
தேனணைக்குங் கொன்றைமுடி சேர்த்தி யழல்விக்க
யானுனக்கச் செய்தகுறை யேது.
    (49)
கட்டளைக் கலித்துறை
    ஏட விழுங்குவ ளைத்தாரிற் றேனொ டிசைச்சுரும்புங்
கூட விழுங்குவ வுத்தோட் டிருவெங்கைக் கோன்றுணையாங்
கேட விழுங்குவரிப்புன லுண்பவன் கேழ்மதியம்
வாட விழுங்குவ தெய்தாமை நான்செய்த வல்வினையே.
    (50)
சொச்சகக்கலிப்பா
    வல்லங்க மானமுலை மாதுமையா ளென்றனிணை
இல்லங்க மானநுத வின்பகையென் றவண்முனியச்
சொல்லங்க மீதிற் சுமப்பதென்கொ னீயிந்த
வில்லங்க மாம்பிறையை வெங்கை புரத்தரனே.
    (51)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    புரந்தரனு மரியயனும் பரவுபரன்
       றிருவெங்கை புரமே யன்னாள்
இருந்தரள வடம்புரளு மிளமுலைக
       ணாடோறு மெழுந்து யர்ந்து
வருந்தமரை மலர்த்தாணூ லெனத்தினமுந்
       தேய்மருங்கை வருத்த நீருந்
திருந்துநெடுங் குழலிசைதல் வண்டினங்கா
       டகுதிகொலோ செப்பி டீரே.
    (52)
    49. நீத்தவினையார்-வினைகளைப் போக்கியவர்கள். அழல்விக்க-கொளுத்துவிக்க. 50. ஏடு-இதழ்கள். குவவு தோள்-திரண்டதோள். கோன்-தலைவன். கேடு அவிழும்-குற்றம் நீங்கிய. கேழ் மதியம்-நிறம் பொருந்திய திங்கள். விழுங்குவது எய்தாமை-விழுங்குதலைச் செய்யாமை. 51. வல்அங்கமான-சொக்கட்டான் காயின் உருவத்தைப் போன்ற. முனிய-சினக்க. வில்லங்கமாம்-துன்பந்தருவதான; வில்லின் வடிவத்தைப் போன்ற. 52. புரந்தரன்-இந்திரன். அரி-திருமால். அயன்-நான்முகன். பரவு-போற்றுகிற. தரளவடம்-முத்துமாலை. மரைமலர்த்தாள் நூல்-தாமரைத்தாள் நூல்.

 

 

கலிநிலைத்துறை
    செங்கையில் வில்லே றிடுகணை யோடுஞ் சினவேளை
இங்குற வாவா வென்ன விருந்தே குயில்கூவ
மங்கையர் நானே மாவை வளர்த்தேன் வடுவுற்றேன்
வெங்கையின் மேவுங் கண்ணுத லாரும் வினவாரே.
    (53)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    வில்வளைத்தைங் கணைகொடுபோர்த் தொழில்புரிய
       வரும்பொருவில் வீர வேளே
கல்வளைத்தன் றொருகணையான் முப்புரங்கண்
       முருக்குபெருங் கழற்கால் வீரன்
பல்வளைத்தெண் புனற்பழன வெங்கையாண்
       டகையொடுபோர் பயிலப் போதி
எல்வளைத்தண் டளிர்க்கையிளம் பெண்ணொடமர்
       செயலாண்மைக் கியன்றி டாதே.
    (54)
கலிவிருத்தம்
    இந்து வந்து வெதிர்ப்ப விருந்தமிழ்
வந்து வந்து மலைப்பதை யின்றொடை
தந்து வந்து தவிக்கிலர் செய்க்கரை
நந்து வந்துமன் வெங்கையி னாதரே.
    (55)
ஊசல். எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    நானக் குழலளிக ளெழுந்து பாட
       நாதித் தணியசைய வாடி ரூசல்
பானற் கமலவயல் வெங்கை வாணர்
       பதமுற் றிலர்பவமொத் தாடி ரூசல்
மானக் குமரருள மறுகி யாட
       வாட்கட் புடைபுரள வாடி ரூசல்
கூனற் பிறைவெயர்ப்ப வாடி ரூசல்
       கோவைக் கனியிதழீ ராடி ரூசல்.
    (56)
    53. சினவேள்-சினத்தையுடைய காமன். மா-மரம். வடு-குற்றம்; மாவடு என்னும் ஒரு பொருளுந் தொனிக்கின்றது. 54. பொருவில்-ஒப்பில்லாத. கல்-மேருமலை. முருக்குதல்-அழித்தல். வளை-சங்கு. தெண்புனல்-தெள்ளிய நீர். பழனம்-வயல். போர் பயில-போர் செய்ய. எல்வளை-ஒளிதங்கிய வளையல். 55. இந்து-திங்கள். வெதிர்ப்ப-வருத்த. தமிழ் வந்து வந்து-தமிழோடு பிறந்த தென்றற்காற்று வந்து. மலைப்பதை-வருத்துவதை. இன்தொடை தந்து-இனிய மாலையைக் கொடுத்து. செய்க்கரை-வயற்கரை. நந்து-சங்கு. மன்-பொருந்தும். 56. நானக்குழல்-கத்தூரிச் சாந்து தடவப் பெற்ற கூந்தல். நாதித்து-ஒலித்து. அணி-அணிகலன். பானல்-கருங்குவளை.     

 

 

கட்டளைக்கலித்துறை
    ஊனாகி யைம்புலக் கூட்டங்க ளாகி யுழல்கரணந்
தானாகி வெவ்வுயி ராய்க்குண மாகித் தனியிருளாய்
நானாகி நல்லருட் சத்தியு மாகி நலத்தவெங்கைக்
கோனாகி மற்றொன்று மாகா திருப்பக்கை கூடியதே.
    (57)
பன்னிருசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    கூடற் பதியிற் சமணிருளைக் குலைத்துத்
       திருவெண் ணீற்றதொளி
கொடுத்துக் கருத்திற் குடிபுகுந்தென் குலத்தைத்
       தொழும்பு கொளுங்கோவும்
ஆடற் பரியிற் சேரமா னணையக்
       கயிலைக் கிரிமீதி
லானைக் கழுத்தி லிவர்ந்தணையு மரசுந்
       திருநா வுக்கரசும்
நாடப் பசும்பொன் னிடைப்பதித்த நாக
      மணியிற் றமதுதமிழ்
நாட்டப் படுநின் றனதுதிரு நாமத்
       தினைப்புன் மதியாலென்
பாடற் பதிப்ப திரும்பிலதைப் பதிக்குந்
       தகைமை போலுங்காண்
பதியாய் வெங்கைப் பதியாளும் பகராக்
       கருணைப் பெருமாளே.
    (58)
    57. ஊன்-உடம்பு. கரணம்-அந்தக் கரணம். 58. தொழம்பு கொளுங்கோ-அடிமை கொள்ளுந் தெய்வமாகிய திருஞான சம்பந்தர். ஆனைக் கழுத்தில் இவர்ந்தணையும் அரசு-சுந்தரர். தகைமை-தன்மை.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    மாறா மலமொன் பதுவாயும் வழியு முடலை யுடலமிக
நாறா வகைநன் மணந்திமிரு நடலைக் கபட மாதர்தமைப்
பேறா நினைந்து கடலமுதே பிணையே மயிலே யெனப்பிதற்றித்
தேறா வெனையுந் தனைத்துதிக்கச் செயுமோ வெங்கைச் சிவன்றானே.
    (59)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    சிவனாலு மறையாலு முணர்வி னாலுந்
       தெரியாத பரன்வெங்கை யரசன் றன்மா
தவனாலு மயனாலு மலரி யாலுஞ்
       சசியாலுங் குருவாலு மமரர் கோவாம்
அவனாலுங் குகனாலு முனிவ ராலு
       மரவாலுஞ் சுரராலும் புலவ ராலும்
எவராலும் வெலற்கருமைம் புலன்கள் வென்ற
       வெழிலடியார் பெருமைதனை யியம்பொ ணாதே.
    (60)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    தேக்குறு கருணைப் பெரியநா யகிதன்
       றிருமுலை சுரந்தபான் மதுர
வாக்குறு மழகன் ஞானசம் பந்த
       வள்ளலுண் டிடவவன் கடைவாய்ப்
போக்குற வொழுகுந் திவலையொன் றடியேன்
       புண்ணிய வசத்தினாற் கிடைப்பில்
தாக்குறு புலன்வென் றுன்னடி யவருட்
       டங்குவன் வெங்கைகா வலனே.
    (61)
    59. பேறா-பெறற்கரிய பேறாக. பிணை-பெண்மான். தேறா-அறிவு தெளிவடையாத. 60. சிவநாலுமறை-மங்கலம் பொருந்திய நான்மறைகள். அலரி-கதிரவன். சசி-திங்கள். குரு-பிரகற்பதி. குகன்-முருகன். 61. தேக்குறு-நிறைந்த. மதுர வாக்கு-இனிய வாக்கு. போக்குற-போக. திவலை-துளி. தாக்குறு-தாக்கி வருத்துதலைச் செய்கின்ற.     

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    வருமதன் கொடிய னென்பாள் வரிக்குயிற் காற்றே னென்பாள்
குருமதி முனியே லுன்னைக் கும்பிடு கின்றே னென்பாள்
ஒருவரும் வெங்கை யீசற் குரைப்பவ ரிலையோ வென்பாள்
முருகல ரணைதீ தென்பாண் மொய்குழன் மையல் கொண்டே.
    (62)
களி. எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    கொண்டறவழ் மணிமாட மலிந்த வெங்கைக்
       கோவிடங்கொள் பெரியநா யகியெம் மன்னை
தண்டரள நகையுமையாள் கருணை தன்னாற்
       றாலத்து வந்தகுருக் களையுட் கொண்டு
கண்டவர்க ளதிசயிப்பப் பரமா னந்தக்
       களிப்படைந்து கரணமுடல் புலன்க ளெல்லாம்
உண்டெனவு மிலையெனவு முணர்ந்தி டாம
       லுணர்வுகடந் திருக்கின்ற களியர் யாமே.
    (63)
நேரிசை வெண்பா
    யாமேபோய் வெங்கை யிறைவன்பான் மெல்லியலீர்
மாமேவுந் தண்மாலை வாங்குவோம் - பூமேவும்
அன்னத்தாற் காண்டற் கரியவனைத் தூதுவிடும்
அன்னத்தாற் காண்டற் கரிது.
    (64)
கட்டளைக் கலித்துறை
    அரியானை வேதன் றலையரி வானை யரியமறைப்
பரியானை யெங்க ளிடைப்பரி வானைப் பழுதில்வெங்கைப்
புரியானை யெவ்வுல கும்புரி வானைப் பொதுநடனந்
திரியானை யையங் கொளத்திரி வானைச் செறிகுவனே.
    (65)
    62. குருமதி-நிறம் பொருந்திய திங்கள். முருகலர் அணை-மணம் பொருந்திய மலரணை. மொய் குழல்-நெருங்கிய கூந்தலையுடைய தலைவி; அன்மொழித் தொகை. 63. கொண்டல் தவழ்-முகில்கள் தவழுகின்ற. கோ-தலைவனாகிய கடவுளது. தாலத்து-உலகத்தில்; பனைமரத்தில். குருக்களை-குருவை; நிறமுள்ள கள்ளை. 64. மாமேவு-வண்டுகள் பொருந்தும். பூமேவும் அன்னம்-நான் முகன். 65. மறைப்பரியான்-மறைகளாகிய குதிரைகளையுடையவன். பரிவானை-அன்புடையவனை. புரியான்-ஊரையுடையவன். புரிவான்-படைப்பவன். திரியானை-மாறுபடாதவனை. திரிவானை-தெருவில் திரிந்தவனை.     

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    செறியிதழ் வனசப் பொன்னிற் சிறந்தமா தினையு நீங்கிப்
பொறிவழி மறத்து வெங்கை புரத்தனைப் பொருந்த நோக்கும்
அறிஞரு மிவளைக் கண்டோ மருந்தவப் பயனா லென்னும்
மறிவிழி யணங்கைக் கண்டு மறியுமோ மன்னர் கோவே.
    (66)
நேரிசையாசிரியப்பா
    கோதை தாழ்ந்த கொடிநிமிர் நெடுந்தேர்ப்
          பரிதி வானவன் பரவையிற் படியக்
          கடனிறக் கமலக் கட்பெருந் திருமால்
          மார்பிடைக் குங்கும மட்டித் தாங்கு
5         குரைகடற் றுகிர்ப்பூங் கொடிபடர்ந் தென்னச்
          செக்கர்வந் தெய்தத் தன்மனந் திரிந்து
          மணந்தவர்த் தணந்த மாதர்வீழ்ந் திறப்ப
          அமைத்த வழல்கொலோ வறைதி ரென்னுஞ்
          சேண்விசும் பெழுந்த திங்க ணோக்கிக்
10        கருங்கடு வுமிழ்ந்த கடன்ம றித்தொரு
          வெண்கடு வுமிழ்ந்த தெனவுளம் வெதும்பும்
          மந்த மாருதம் வந்தழல் வீசுற
          ஆற்றா ளாகியவ் வளக்கரி னின்றெழும்
          ஊழித் தீகொலென் றுன்னியே யயரும்
15        வேய்ங்குழல் காம வெவ்வழல் கொளுவ
           ஊதுங் குழலென் றுரைத்தக நெகிழும்
          மென்மல ரமளி மேல்விழும் புரளும்
          அசைந்தெழு முயிர்க்கு மந்தோ வென்னும்
          ஒள்ளிதழ் குவித்துயிர்ப் புமிழ்ந்திடு மவிழ்ந்த
20        கருங்குழல் வாமக் கரங்கொடு செருகித்
          தனிப்பொற் றூணிற் சாய்ந்திடும் பனிநீர்
          சந்தனக் கலவை தண்ணறுங் கோதை
          தரள வடங்க டரிப்பவந் திறைஞ்சும்
          பாங்கியர்ச் சுளிந்து பறித்தவை யெறியும்
25        மழவிடை மீதில்வந்துநீ யுலாவக்
          கண்டுநின் னழகுணுங் கருங்கட் பூங்கொடி
          விரைமலர்ப் பொழில்சூழ் வெங்கை காவல
          பொன்னவிர் புரிசடைப் புனித
          மன்னவ வவணோய் மருந்துநின் புயமே.
    (67)
    66. செறி-நெருங்கிய. வனசப்பொன்-தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள். மறுத்து-தடைசெய்து. மறிவிழி-மான்போன்ற கண். மறியுமோ-திரும்புவார்களோ? 67. கோதை-மாலைகள். பரிதி வானவன்-கதிரவன். பரவை-கடல். மட்டித்தாங்கு-பூசினாற்போல. குரைகடல்-ஒலிக்கின்ற கடல். துகிர்-பவழம். செக்கர்-செவ்வானம். மணந்தவர்-கலந்தவர். தணந்த-பிரிந்த. அமைத்த-மூட்டிய, சேண்விசும்பு-தொலைவான விண். அழல்-தீ. கருங்கடு-கரியநஞ்சு. மறித்து-திரும்பவும். வெண்கடு-வெண்நஞ்சு. வெதும்பும்-வருந்துவாள். மந்தமாருதம்-இளந்தென்றல். அளக்கர்-கடல். உன்னி-எண்ணி. அயரும்-சோர்வாள். வேய்ங்குழல்-புல்லாங்குழல். கொளுவ-கொளுத்த. ஊதுங்குழல்-நெருப்பூதுங்குழல். நெகிழும்-குழைவாள். அமளி-படுக்கை. உயிர்க்கும்-பெருமூச்சுவிடும். வாமக்கரம்-இடதுகை. தரளவடம்-முத்துமாலை. சுளிந்து-சினந்து. மழவிடை-இளங்காளை. விரைமலர்-மணம் பொருந்திய மலர். பொன் அவிர்-பொன் போல் விளங்கும். அவள் நோய்-அம்மங்கையின் காம நோய்.

 

 

எண்சீர்க்கழிநெடிலடி வண்ணவிருத்தம்
    புரளுந்திரை யெறியுங்குரை கடலும்பகை தமிழோன்
       பொதியம்பகை மதியம்பகை மதனன்பதை முலைசேர்
தரளம்பகை பனையன்றில்கள் பகையங்குயில் பகையே
       தமரும்பகை யனையும்பகை சகியும்பகை நகர்வாழ்
திரளும்பகை மலர்சிந்திய வணையும்பகை பனிநீர்
       திமிருங்குளிர் களபம்பகை யனிலென்செய வடியேன்
அருளுஞ்சுக மருள்கின்றிலர் பெயர்சங்கர ரெனவே
       யணிவெங்கையி லமர்கின்றவ ரதுமென்குறை யனமே.
    (68)
நேரிசை வெண்பா
    அந்துவா வென்று மறையே னினைத்தவர்க்கு
வந்துவா வென்று மருவல்போல் - இந்துவாழ்
என்றைக் கடுக்கு மிருஞ்சடைசேர் வெங்கையோய்
என்றைக் கடுக்கு மிதம்.
    (69)
    68. தமிழோன்-அகத்தியன். பனையன்றில்கள்-பனையில் வாழும் அன்றிற் பறவைகள். தமர்-உறவினர். அனை-அன்னை. சகி-தோழி. திரள்-மக்கள் கூட்டம், திமிரும்-பூசும். சங்கரர்-இன்பத்தைச் செய்பவர். இன்பஞ் செய்பவரென்னும் பெயர் தாங்கியவராயிருந்தும் செய்கின்றாரில்லை யென்பது கருத்து. 69. அம்-அழகிய. துவா-இரண்டு(சிவா). உவந்து-மகிழ்ந்து. இந்து-திங்கள். அடுக்கும்-உண்டாகும். இதம்-நன்மை.

 

 

வண்ணத்தாழிசை
    இதயங்கலங்க வினையம்புகன்ற வொருவஞ்சகன்ற னுடனே
       யெனையுந்துறந்து மனையுங்கடந்து தனியங்ககன்ற மகளே
மதியங்கிடந்த முடியன்றயங்க திருவெங்கைவந்து நெடுநாள்
       வரமுன்கிடந்து நினைமுன்பயந்த பயனின்றுகண்ட திதுவோ
புதிதங்கிலங்கு மணியன்றிநைந்த சுடரொன்றிருந்த மனையே
       புகவெம்புகின்ற வடிவம்பரந்த தழல்வெஞ் சுரஞ்செல் வுறுமோ
வதனம்பொலிந்த குமுதம்புலர்ந்து விடிலங்கிருந்த ழுவளோ
       மகள்சென்று முய்ந்திவ் வளவும்புலம்பு மனம்வல்லிரும்பின் வலிதே.
    (70)
ஆசிரியத்தாழிசை
    வலிய வடியேன் மனத்துவந் தெய்தினான்
மலியு மமுதுணும் வானவர் தேடியே
மெலிய வணுகலா வெங்கையி லீசனே.
    (71)
பன்னிருசீர்க்கழிநெடிலடி வண்ணவிருத்தம்
    ஈதற மன்று தனித்தே யானுறு கின்ற தலத்தே
       ஏகினை என்கை பிடித்தே யேதமி தெங்கள் குடிக்கே
மீதுறு கொன்றை மணத்தால் வேணியி லிந்து வுருப்போல்
       வீறுகிர் கொங்கை யுறுத்தால் வேல்விழி முந்து சிவத்தால்
கோதித ழின்று வெளுத்தாற் கோளனை கண்டு கறுப்பாள்
       கோதையர் வம்பு தொடுப்பார் கோடுர மஞ்ச ணிறத்தால்
மாதுமை கண்டு கொதிப்பாண் மாபுகழ் வெங்கை புரத்தோய்
       மாறுவை யன்பு பினைத்தான் மாழ்குவ னென்று மிளைத்தே.
    (72)
கட்டளைக் கலித்துறை
    இளையா திடைமென் முலைசுமந் தேயம் முலையுமின்னங்
கிளையா வுயிருண் டிடவறி யாவிரு கெண்டைகளும்
முளையா நகையிவண் மேல்வெங்கை வாணநின் மொய்ம்பிலன்றி
அளையா நறும்பொடி பட்டதன் றோமிகு மற்புதமே.
    (73)
    70. வினையம்புகன்ற-பணிமொழி கூறிய. மதியங்கிடந்ந-திங்கள் தங்கிய. தயங்கு-விளங்குகிற. பயந்த-பெற்ற. தழல் வெஞ்சுரம்-தழலைப் போன்ற பாலைநிலம். வதனம்-முகம். உய்ந்து-உயிரோடிருந்து. 71. வலிய-தானாகவே. மலியும்-சுவை நிறைந்த. அணுகலா-நெருங்க முடியாத. 72. அறமன்று-அறமல்ல. ஏதம்-குற்றம். வேணியில்-சடையில். வீறுகிர்-பெருமை பொருந்திய நகம். உறுத்தால்-உறுத்தியிருப்பதால். இதழ்-அதரம். கோளனை-கொடியதாய். கறுப்பாள்-சினப்பாள். வம்பு தொடுப்பார்-அலர்கூறுவார்கள். மாழ்குவன்-வருந்துவேன். 73. கிளையா-கிளைக்கவில்லை. கெண்டைகள்-கெண்டைகளைப் போன்ற விழிகள். மொய்ம்பு-தோள்.     

 


எண்சீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    அரவு முரிகளு மென்புமா லயனோ
       டமரர் தலைகளு முண்கபா லமுநீ
ஒருவி யறுவைபு னைந்துமா லிகைவா
       ளுமிழு மணியணி சந்துமான் மதமே
மருவ வுருவில ணிந்துமா லையிலே
       வருதி மலைதர வந்தநா யகிபோல்
வெருவி யிவளவை நிந்தியா ளலள்காண்
       விமல வெழின்மிகு வெங்கைவாழ் பவனே.
    (74)
நேரிசை வெண்பா
    வாட்டுபவங் கொல்புகலி வண்புலவன் பேரின்ப
வீட்டுபவங் கொள்ளைகொள விட்டநாள் - கேட்டுவரா
தெப்பிறப்பி லெங்ஙனிருந் தேதுபுரிந் தெய்த்தேனோ
ஒப்பிறப்பில் வெங்கையுடை யோய்.
    (75)
வண்ணக் கலித்துறை
    உடைய வினைகளை முடுகி யெனதுள மொன்றினோன்
அடைய வறிவெனு மறிவை யருளிடு மண்டர்கோன்
விடைய னரவணை துயிலு மரிதொழும் வெங்கையோன்
சடைய னுமையுறு புடைய னவனடி தஞ்சமே.
    (76)
வண்ணத் தாழிசை
    தழுவி யணையினு றங்குதாய் தனையு மருகுநெ ருங்கியா
       தரவி னொடுதுயில் கின்றமா தரையு மரிதின கன்றுபோய்
வழுவை யனையம றங்கொள்கா வலர்கள் பதறியெ ழுந்திடா
       வகைபல் கடைகடி றந்துறா மறுகு தொறுமிக வந்துசூழ்
ஒழிவின் ஞமலியி ரைந்திடா துணவு சிதறிய ணங்குபோ
       யுலவு மிருணிறை கங்குல்வா யுனது மருமமு யங்கவே
விழைவி னணையவ ணைந்திலாய் வெருவ விடுவத றங்கொலோ
       விழும மகறிரு வெங்கைவாழ் விமல விதனைவி ளம்பிடே.
    (77)
    74. உரிகள்-தோல்கள். கபாலம்-மண்டையோடு. ஒருவி-நீக்கி. அறுவை-ஆடை. சந்து-சந்தனம். மான்மதம்-கத்தூரி. வெருவி-அஞ்சி. 75. வாட்டு-வருத்துகிற. பவம்-பிறவி. புகலிவண் புலவன்-திருஞானசம்பந்தர். வீட்டுபவம்-வீடு பேறு. எய்த்தேனோ-இளைத்தேனோ. ஒப்பு இறப்பு-ஒப்பும் இறப்பும். 76. முடுகி-துரத்தி. அறிவெனும் அறிவை-அறிவே சிவமென்னும் அறிவை. விடையன்-காளையை உடையவன். அரவணை-பாம்புப் படுக்கை. புடையன்-இடப்பக்கத்தை யுடையவன். 77. ஆதரவினொடு-அன்போடு. அரிதில்-அருமையாக. வழுவையனைய மறங்கொள்-புலியைப்போன்ற வீரத்தைக்கொண்ட. கடைகள் திறந்து-கதவுகள் திறந்து. ஞமலி-நாய்கள். அணங்கு-பேய். மருமம்-மார்பு. விழைவின்-அவாவினால். அணைய-வர. வெருவ-அஞ்சுமாறு. விழுமம்-துன்பம்.

குறள்வெண் செந்துறை
    விண்ட பூமுடி வெங்கை புரத்தனைக்
கண்ட மாதர் பெறுவது காமமே.
    (78)
மதங்கு, எழுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
    காவி கொண்ட களத்தர் வெங்கை புரத்தர் தங்கழல் பாடியே
வாவி கொண்ட மலர்ப்ப தங்கள் சிவப்ப வாடு மதங்கிதான்
நீவி கொண்டு முலைத்த டங்கண் மறைத்தி லாளெனி னிற்குமோ
ஆவி கொண்டிடு மிங்கி தற்குமு னென்று காளைய ரயர்வரே.
    (79)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    அயன்கொளுங் கவின்கூர் வெங்கை
       யமலன்றன் வரத்தா லன்றி
வியன்கொளுங் கவினான் மற்றோர்
       மெல்லியல் சேர்வோ னன்றே
நயன்கொளுந் தவமென் செய்தா
       ணகமக ளெனத்தன் காதல்
பயன்கொளும் படிப கர்ந்து
       பரிகுவண் மாதர் மாதே.
    (80)
நேரிசை வெண்பா
    மாதா வயிராமன் மற்றோர் பொருள்குறித்து
வேதா வறியாத வெங்கைபுரத் - தாதாவை
அப்பாவா வீட்டிற் கடியேன்சொற் கம்பெறவென்
றிப்பாவை கூறு மிரந்து.
    (81)
    78. விண்ட-மலர்ந்த. பூமுடி-பூவை முடிக்கும். 79. காவி கொண்ட-கருங்குவளை மலரையொத்த. களத்தர்-கழுத்தையுடையவர். நீவி கொண்டு-ஆடையைக் கொண்டு. ஆவி-உயிர். அயர்வர்-சோர்வர். 80. அயன்கொளும்-நான்முகன் மற்றைய நகரங்களைப் படைப்பதற்கு மாதிரியாகக் கொள்ளும். கவின்கூர்-அழகு பொருந்திய. நயன்-விருப்பம். நகமகள்-மலைமகள். 81. அயிராமல்-ஐயப்படாமல். வேதா-நான்முகன். சொர்க்கம்-வீடு பேறு ; தனம். பாவை-பாவை போல்வாள்.

கட்டளைக் கலித்துறை
    இரவாம லொன்று மயலோ ரிடைச்சென் றிரப்பவர்க்குக்
கரவாம லென்று மிடரே புரியுங் கடும்புலனிற்
பரவாமல் வெங்கை புரிவாணற் கன்பறும் பாதகரை
விரவாம னின்றவர் தாமே பரகதி வேண்டினரே.
    (82)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    வேண்டுவார் வேண்டியதே யீவா னென்னும்
       வியன்றிருநா வுக்கரசின் மாற்றம் பொய்யோ
ஈண்டுவா வென்னைவலப் பாகந் தன்னி
       லிருந்துகென நினைவேண்டி யொழியா மையல்
பூண்டுவார் விழிததும்பு புனலோ டொன்றும்
       பொற்றொடிக்குந் திருவருள்செய் கின்றா யல்லை
நீண்டுவா னுலகளக்கும் பொழில்சூழ் வெங்கை
       நிமலனே யெமையாளு மமரர் கோவே.
    (83)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    கோபந் தோன்ற வதிர்ந்தெழுந்து கோக்க டொறுமின் வாள்வீசிச்
சாபந் தோன்ற வளைத்தொழியாச் சரமே பொழிந்து காரகிலின்
தூபந் தோன்று குழற்பகைதான் றோன்றிற் றிறைவன் றிருவெங்கைத்
தீபந் தோன்றும் புயனினைவைத் தீரா ரின்னும் வாராரே.
    (84)
மேற்படி வேறு
    வார்கொண்ட களபமுலை யுமைகணவன்
       றிருவெங்கை மகிழ்ந்த தேவே
ஏர்கொண்ட வுனதுமா ணிக்கமலைக்
       கருங்கொடியை யெரிப்ப தென்கொல்
கார்கொண்ட பசுங்காவின் மாவினிருந்
       தெங்கணமர் கடிய வந்தப்
போர்கொண்ட மதவேள்வந் துறக்கூவுங்
       கருங்குயிலைப் பொடித்தி டாதே.
    (85)
    82. கரவாமல்-ஒளிக்காமல். பரவாமல்-பொருந்தியிராமல். விரவாமல்-கலவாமல். 83. வியன்-வியக்கத்தக்க. “தூண்டு சுடரனைய சோதி கண்டாய்” என்னுந் திருத்தாண்டகம். மாற்றம்-மொழி. புனல்-கண்ணீர். 84. கோபம்-சினம்; பட்டுப்பூச்சி. கோக்கள்-திக்குகள்; பசுக்கள். மின் வாள் வீசு-மின்னலாகிய வாளை வீசி. சாபம்-அயலார் அலர் தூற்று; இந்திரவில். சரம்-அம்பு; நீர். தூபம்-புகை. குழற்பகை-முகில். புயல்நினைவு-கார்கால எண்ணம். 85. வார்-கச்சு. மாணிக்கமலை-இரத்தினகிரி யென்னும் வாட்போக்கி; இதில் பாலைக் கவிழ்த்த காகத்தை ஓர் இடையன் பொருட்டு இறைவன் எரித்தருளினார் என்பது தலபுராண வரலாறு. கொடி-காக்கை. அமர்கடிய-போரில் வருத்த. வந்துற-வருமாறு. பொடித்திடாது-எரிக்காமல்.     

கொச்சகக்கலிப்பா
    பொடித்தமத னுயிர்படைத்துப் பொருவதுவும் வெவ்வரவங்
கடித்தமதி பிழைத்தனலங் கால்வதுவு மாமுனிவன்
குடித்தகடன் மறித்தெழுந்து குமுறுவது முன்னமுன்னைப்
பிடித்தவினைச் செயலன்றோ பிரிவில்வெங்கைப் பெருமானே.
    (86)
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
    மான்கொண்ட கரத்தர்திரு வெங்கைபுரத்
       தவர்பலகை வழங்கப் பெற்ற
தேன்கொண்ட விசைப்பாண ரெனநினைப்ப
       லுனைப்பாண சிறப்பு நீத்த
கான்கொண்ட தொடைப்புயத்தர் பெயர்மொழியா
       யெனிலவர்பேர் கழற லாற்றால்
ஊன்கொண்ட மழுவலத்தோ ரிசைக்குடைந்த
       பாணனென வுள்கின் றேனே.
    (87)
கலிநிலைத்துறை
    உள்ளே னன்பர் தங்களொ டன்போ டுறும்வண்ணம்
விள்ளேன் வஞ்சம் பொய்கொலை காமம் விடுகில்லேன்
எள்ளே னங்கம் வெங்கைபு ரேசா வெனநேயங்
கொள்ளே னெவ்வா றுய்குவ னந்தோ கொடியேனே.
    (88)
    86. வெவ்வரவம்-கொடிய இராகு கேது, அனலம் கால்வதுவும்-தீயைக் கக்குவதும். மாமுனிவன்-அகத்தியர். 87. தேன் கொண்ட-தேனின் இனிமையைக் கொண்ட. கான்கொண்ட தொடை-மணத்தைக் கொண்ட மாலை. இசைக்குடைந்த பாணன்-ஏமநாதன். உள்குதல்-எண்ணுதல். 88. உள்ளேன்-நினையேன். விள்ளேன்-நீக்கேன். எள்ளேன்-இகழேன்.     

தவம் எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    கொடியவரை வனத்திருந்து நோற்கி னுந்தோட்
       கொற்றவரை யொத்தவரைத் துறந்து போகிப்
படியவரை மருட்டுதவ வேடந் தாங்கிப்
       படிமுழுது முலாவுகினு மறைக ளெல்லாம்
முடியவரை யறுத்துணர்ந்து புகலி னுந்தீ
       முளரிமலர்க் கரத்தெடுத்த வெங்கை வாணர்
அடியவரை வழுத்தியவ ரடிகள் சூடா
       வவலரையோர் பொருளாக வறிகி லோமே.
    (89)
மேற்படி வேறு
    அறிவினிலி லங்குதிரு வெங்கைநக ராள
       ரடியினின்மு யங்கியுறு மென்றனக வன்மை
எறியயிலை வென்றவிழி யின்கடையி னாலே
       யிமைவிழுமு னுங்கிமய றந்தமட மாதைப்
பொறியரவ ணைந்துதுயி லுங்கடவுள் கண்டாற்
       பொறியவனு ரந்தனிலி ருந்திடுவ ளோதான்
வெறிமலர்நெ டுஞ்சிலைய னங்கனெதிர் கண்டான்
       மிகுமிரதி கொங்கையவ னம்புயமு றாதே.
    (90)
கட்டளைக் கலித்துறை
    உறாதே சிறிய ரினம்பே ரருட்பய னுற்றவர்சொல்
மறாதே புலனிற் புகாதே திருவெங்கை வாணற்கன்பு
வெறாதே யுனக்கிடர் செய்கின்று ளோர்க்கிடர் மீண்டியற்றிக்
கறாதே யிருமன மேபிற வாநெறி காண்பதற்கே.
    (91)
    89. கொடியவரை-கொடியமலை. நோற்கினும்-தவஞ்செய்தாலும். படியவரை-உலகத்தார்களை. மருட்டு-மருளச் செய்கிற. வழுத்தி-போற்றி. அறிகிலோம்-மதிக்கமாட்டோம். 90. அகவன்மை-உள்ளத்தின் வலிமை. அயில்-வேல்.இமைவிழுமுன்-இமைக்குமுன். நுங்கி-கெடுத்து. பொறியரவு-புள்ளிகளையுடைய பாம்பு. பொறி-திருமகள். அம்புயம் உறாது-தோளைச் சேராது. 91. உறாது-பொருந்தாமல். கறாதே-சினவாதே. இரு-இவ்வாறிருப்பாயாக.     


எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    காணாம லயன்றேடு நின்மு டிக்கட்
       கண்ணப்பன் றொடுகழற்கால் வைத்தே போதில்
கோணாக முரிந்ததுவோ குளிர்வெண் டிங்கட்
       கொழுந்துபொறா தொதுங்கிற்றோ நீர்ப்பெ ணன்பு
பூணாம லருவருத்து நோக்கி னாள்கொல்
       பொன்னிதழித் தொடையல்சூழ்ந் திழுத்த தோசொல்
வீணாள்பட் டழியாத வன்பர்க் கன்பாம்
       விமலனே வெங்கைவரு மமர ரேறே.
    (92)
கொற்றியார், நேரிசை வெண்பா
    ஏறுவக்கும் வெங்கை யிறைவற் றொழுதுதவப்
பேறுவக்கு மின்னே பிடிக்கவோ - கோறுவக்குங்
கூடு குறைத்த கொடுமதனை மொய்த்தகுழற்
காடு குறைத்த கருத்து.
    (93)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    கரியவன் கமலக் கோயிற் கண்ணவன் கற்ப கக்கா
உரியவன் சுரர்குற் றேவ லுவந்துநா டொறும்ப யின்றும்
அரியவ னென்னத் தன்றா ளன்பிலா வெனக்கு வெங்கைப்
புரியவ னளித்தா னென்னாற் புரிதருங் கைம்மா றென்னே.
    (94)
கட்டளைக் கலித்துறை
    எந்தீ வரமதி மாழ்கிச்செவ் வான மெனுங்கொடிய
செந்தீ வரமதி யாகும்வெண் டீவரத் தேம்புமெம்மேல்
இந்தீ வரமதி ரேகவில் வேள்விடி னேதுசெய்வோம்
நந்தீ வரமதி னாடாளும் வெங்கை நயந்தவனே.
    (95)
    92. கோள்நாகம்-தீமையைச் செய்கின்ற பாம்பு. நீர்ப்பெண்-கங்கை. உரிந்ததுவோ-தோல் உரிபட்டதோ? அருவருத்து-வெறுத்து. 93. ஏறு-காளை. தவப்பேறு-தவப்பெருமை. கோல்-அம்பு. துவக்கும்-தொகுத்திருக்கும். கூடு-அம்புக்கூடு. 94. கரியவன்-திருமால். கமலக்கோயிற். கண்ணவன்-நான்முகன். கற்பகக்கா உரியவன்-இந்திரன். 95. எந்தீவர மதி-எமது சுறுசுறுப்பான அறிவு. மதி-திங்கள். தேம்பும்-வருந்தும். இந்தீவரம்-கருங்குவளை. அதிரேகவில்-புதுமையுள்ள வில். நந்தீ-சிவபெருமானே! வரமதில்-உயர்ந்தமதில்.     

பன்னிரு சீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

    நயன மிருண்டு போகாமுன் னடனப் பெருமான் றனைப்பாரார்
       நடக்கும் பதங்க டளராமுன் னடவா ரமலன் றிருக்கோயில்
பயனின் மொழிகள் குளறாமுன் பரம னடித்தா மரைதுதியார்
       பழுதில் செவிகள் செவிடாமுன் பரிந்த சிவன்மெய்ப் புகழ்கேளார்
செயலி னெடுங்கை நடுங்காமுன் றிருமா மகளுங் கலைமகளுஞ்
       செறியுந் திருவெங் கைக்கரசைச் செழுமென் மலர்கொண் டருச்சியார்
மயலி லழுந்தி யயராமுன் மனத்தி லவனை யிருத்திடார்
       மனித ருழன்று வாளாபோய் மறியா நரகின் மறிவாரே.
    (96)
பதினான்கு சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    மருக லம்பர்களர் நின்றி யூர்மிழலை வல்லம் வேதிகுடி சேய்ஞலூர்
       மறைசை காசிதிரு நாவ லூர்கயிலை மயிலை கற்குடிநல் லூர்நணா
அருணை பஞ்சநதி திங்க ளூர்பனசை யதிகை யொற்றிதிரு நாரையூ
       ரால வாய்திருநெல் வேலி வஞ்சிபழை யாறை கச்சிதிரு வாதவூர்
சிரபு ரங்கமலை முல்லை வாய்சுழிய றிருவ ரத்துறையு மேபுகார்
       திருவ லஞ்சுழிந ளாறு வேதகிரி தில்லை மாணிகுழி யாதியாய்
விரவு கின்றபதி பலவி னங்குடிகொள் விமலன் வந்துதன தருளினால்
       விமல சங்கரியொ டுறையும் வெங்கைநகர் மேவு வாரமர ராவரே.
    (97)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    ஆவியி னிடத்துற் றெம்முகப் பகையென்
       றம்புயத் தினைப்பிடித் திழுப்ப
மேவுவெண் பற்சொற் பகையெனு மணிகள்
       வெருவிவந் தடியின்மேல் வீழக்
காவியங் கருங்கட் பகையெனு மளிகள்
       கலங்கியெண் டிசைதொறு மிரியப்
பூவையர் மகிழ்வுற் றுலாவுறும் வெங்கை
       புரத்தனெங் கருத்தன்வே றிலையே.
    (98)
    96. நயனம்-கண். பதங்கள்-கால்கள். உழன்று-வருந்தி. மறியா-திரும்பாத. மறிவார்-சுழலுவார். 97. மருகல்-திருமருகல். பஞ்சநதி-திருவையாறு. புகார்-காவிரிப்பூம்பட்டினம். விமலசங்கரி-தூய்மை மிக்க இறைவி. 98. ஆவி-தடாகம். அம்புயம்-தாமரை. வெருவி-அஞ்சி. காவி-கருங்குவளை. இரிய-அஞ்சியோட.     

அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்

    இரையும் புனற்செஞ் சடைமுடியுங் கடுவார் மிடறு மிளமதியம்
புரையுங் கனலி மருப்பொளிருந் திருமார் பகமும் புலியதள்சூழ்
அரையுங் கரியின் றலைமிதித்த வழகார் வெங்கை யரன்றாளும்
நிரையுஞ் சுரர்கண் டுருவனைத்து மருளே யென்ன நினைவாரே.
    (99)
நேரிசை வெண்பா
    நினைகுவதுன் கோலமே நெஞ்சத் தடியேன்
புனைகுவதுன் செங்கமலப் பொற்றாள் - வினவுவது
கோவே யெனவிண் குழாம்புகழும் வெங்கைநகர்த்
தேவே யுனதொழிவில் சீர்.

அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

    துளங்குமொளித் திங்கடனை யம்புலியென்
       றுலகமெலாஞ் சொல்லக் கேட்டும்
பளிங்கனைய வயிற்றினது விழுங்கியமான்
       புறந்தோன்றப் பார்த்துங் கெட்டேன்
இளங்கொடிய புலியிதென வறிந்திலே
       னறிந்தேனே லென்பட் டாலுங்
களங்கனிமா மிடற்றிறையைத் திருவெங்கைக்
       காவலனைக் கைவி டேனே.
    (102)
    102.துளங்கும்-விளங்கும். அம்புலியென்றதற் கேற்ப மானை விழுங்கிய தென்றபடி. களங்கனி-களாக்கனியைப் போன்ற. மா-கரிய. மிடறு-கண்டம்.

 

Related Content