logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவெங்கைக்கோவை மூலமும் உரையும்

   [ தமிழில் வழங்குந் தொண்ணூற்றாறுவகை நூல்களில் கோவை யென்பதும் ஒன்று. இக்கோவை அகப்பொருளின் மீது வைத்துப் பாடப்பெறும். அகப்பொருள் என்பது அகத்தினாலாகிய பயன். அஃது ஒருவனும் ஒருத்தியும் அன்பினாற் கூடுங் கூட்டத்தைப் பொருளாகக் கொண்டது. அக்கூட்டத்தின்பின் இன்னவா றிருந்தது என்று வாயாற் கூறமுடியாது உள்ளத் துணர்வானே நுகரப்பெறுதலின் இஃது அகப்பொருள் என்று பெயர் பெற்றது. அகப்பொருள் இலக்கணத்திற்கு இலக்கியமாக விளங்கும் கோவை நூல் நம்தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு நூலாகும். ஓரின மணிகளை ஒழுங்குபெறக் கோத்தல் போல அகப்பொருட்கிளவிகளை ஒழுங்குபெறக் கோத்தலின் இது கோவை யென்று பெயர் பெற்றது. இக்கோவை களவு கற்பு என்னும் இரண்டியல்களில் இருபத்தாறு கிளவிக் கொத்துகளால் நானூறு துறைகளைக் கொண்டு முடிகிறது. 426 பாடல்களைக் கொண்டது. எல்லோரும் இந்நூலைப்பயின்று இன்புறுவார்களாக!]    

காப்பு
கட்டளைக் கலித்துறை

   பூவை மலர்நிறத் தெம்பெரு மாட்டி பொருப்பரையன்
பாவை வளர்க்குங் கிளிமுன்கை யாளொரு பான்மருவுந்
தேவை வளர்சடைத் தென்வெங்கை வாணனைச் சேர்ந்துவருங்
கோவை படர்வதற் குள்ளூன்று வாமொற்றைக் கொம்பரையே.
   
நூல்
களவியல்
கைக்கிளை
காட்சி
   பூவும் பழுத்த செழுந்தீங் கனியும் பொழியமுதம்
மேவுங் குடங்க ளிரண்டுட னேயிரு மீனுங்கொண்டு
சேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர்
தூவும் பொழிலி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே.
   (1)
ஐயம்
   மண்ணோ விரைச்சந் தனவரை யோமலர் மாளிகையோ
விண்ணோ வலைத்தண் புனலோ பழமலை வெங்கையன்ன
பெண்ணோ டிருக்கும் பொழுதிளஞ் சேலிற் பிறழுநெடுங்
கண்ணோ டிருக்கு முகம்போல்வ தாங்கது கண்டிலமே.         (2)

   பூவைமலர்-காயாம்பூ. பொருப்பரையன் பாவை-உமாதேவி. கோவை-கோவையென்னும் நூலையும், கோவைக் கொடியையும்; கொம்பர்-கொம்பையுடைய யானைமுகக் கடவுளையும், அர் இறுதி பெற்ற கொம்பையு முணர்த்தலின் சிலேடை.1. குடங்கள்-கொங்கைகள். இருமீன்-கண்கள். சேஉந்து-காளையைச் செலுத்துகிற. தூமணி-மாணிக்கம்; ஈண்டு மாணிக்கத்தைப்போன்ற தலைவி. முகமாகிய தாமரை முதலியன கொண்டு எதிர்ப்பட்டதென்க. 2. விரை சந்தன வரை-மணமுள்ள பொதியமலை. மலர்மாளிகை-தாமரை மலராகிய வீடு. பிறழும்-புரளும். பெண்ணோடிருக்கும்பொழுது கண்ணோடிருக்கும் முகம் போல்வதாகிய இடம், மண்ணாதியவற்றுள் எதுவோ அது கண்டிலம் என்பது. அவனிமங்கை வரையரமங்கை திருமங்கை தேவமங்கை நீரரமங்கையென்பவருள் எம்மங்கையோவென்பான் அவரவரிடஞ்சுட்டி ஐயுற்றவாறு, பிந்தியதும் இது.    

 

 

இதுவுமது
   முலைப்பகை யோகட் பகையோ வவர்தம் முகப்பகையோ
மலைப்பகை யாம்விண் முழுதாளி யென்றும் வணங்குமயன்
றலைப்பகை யாய கரமுடை யான்வெங்கை சார்ந்துநின்ற
சிலைப்பகை யாகு நறுநுத லார்தந் திருமனையே.         (3)

துணிவு
   சேணும் பிலமு மலர்மா ளிகையுஞ் செழுஞ்சிலம்பும்
நாணும் படிநம் படியே தவப்பய னண்ணியமை
பூணும் பணியரன் வெங்கையின் மாநிழற் பூம்பொழில்வாய்க்
காணும் பிறைநுத லாட்சும வாநின்று காட்டியதே.
   (4)
குறிப்பறிதல்
   பாயு மலர்த்தண் பொழில்சூழும் வெங்கைப் பழமலைசீர்
ஆயு முனிவரர் தாமே முனிவரு ளாக்குதல்போல்
நோயுமந் நோய்க்கு மருந்துந் தராநிற்கு நூற்பகவிற்
றேயு மருங்குற் பெருமுலை மாதர் திருக்கண்களே.
   (5)
   3. மலைப்பகையாளி-இந்திரன். அயன்-நான்முகன். ஒரு காலத்தில் மலைகள் சிறைகளையுடையனவாய்ப் பறந்து நகரங்களின் மீதமர்ந்து அந்நகரங்களைப் பாழ்படுத்த இந்திரன் அம்மலைகளின் சிறகுகளையறுத்துத் தள்ளினனாகையால் மலைப்பகையாளி என்றார். சிலை-வில். நறு-அழகிய. முலையும் கண்ணும் முகமுங் கூறுதலான், முறையே மலைமகளோ, கடல்மகளோ அன்றி மலர்மகளோவென ஐயப்பட்டவாறாயிற்று. நான்முகனுடைய தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்தபடியால் இறைவன் கை நான்முகன் தலைப்பகையாயது. 4. சேண்-விண்ணுலகம். பிலம்-பாதாளலோகம். மலர்மாளிகை-தாமரைவீடு. நம்படி-நமதுபூமி. நம்படியே சுமவாநின்று நண்ணியமை காட்டியது என்க. 5. நூல்பகவு-நூலிழையின்வகர். முனிவு-சினம்.“இருநோக் கிவளுண்கண் உள்ள தொருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து” என்னுந் திருக்குறட் கருத்தைக் கொண்டதிப்பாட்டு.

   

இயற்கைப்புணர்ச்சி

இரந்துபின்னிற்றற்கெண்ணல்

   புரந்தாடு மையர் திருவெங்கை வாணர் பொருப்பினின்ற
அரந்தா ழயிற்கண் மடமா திரத்தக்க ராதலினால்
இரந்தாய் குவமிவர் தந்தன நாமின் றினியநெஞ்சே
கரந்தா னமக்குப் பழியுள தாயிற் கழறுகவே.         (6)

 

இரந்துபின்னிலைநிற்றல்

   தாளுந் தரக்கன் றனைமீண் டெடுத்துய்யத் தண்ணளியால்
ஆளும் பழமலை வெங்கையன் னீரொன் றலாதுபல
வாளுங் கணையுங் கதிர்வேலு மானு மதர்விழியால்
நீளுந் துயர்செய்து வாளாநின் றீரிது நீதியன்றே.         (7)

 

முன்னிலையாக்கல்

   பாரக்கைச் சூலத்தர் வெங்கையி லேகண் பகைத்துநின்ற
வாரக்கட் பூஞ்சுனைப் போதையெல் லாமட லோடுமடல்
சேரக்கட் டிக்குழற காட்டிலி டாமற் சிறந்தவலங்
காரக்கட் பேதை தனித்துநின் றாயென்ன காரணமே.    (8)

 

மெய்தொட்டுப்பயிறல்

   மெய்கூ றிடும்வரை மங்கைம ணாளர்தம் வெங்கையினிற்
பொய்கூற றிலஞ்சிலர் போலிலை யேயெனப் புல்லிழையிற்
செய்கூ றதிலொன் றளவுள தேயிவள் சிற்றிடைதான்
மைகூர் குழலில் வெறிகொண் டுலாவு மதுகரமே.    (9)

 

   6. புரந்து-யாவரையும் காப்பாற்றி. அரந்தாழ்-அரத்தினால் அராவப்பட்ட. கரந்தால்-இல்லையென்று மறைத்தால்“இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று”என்னுந் திருக்குறளின் கருத்தது. 7. அரக்கன்-இராவணன். உய்ய-பிழைக்க. அன்னீர்-நிகர்த்தவரே. எனக்குத் துன்பஞ்செய்த நீர் அருள்புரியாமல் நிற்பது தக்கதன்று என்பது கருத்து. 8. கைபாரம் சூலத்தர்-கையிற்பாரம் பொருந்திய சூலப்படையை உடையவர். சுனைப்போது-சுனையிலுள்ள மலர்கள். குழல் காடு-கூந்தற்காடு. வார் கள் என்பதை கள் வார் என மாற்றுக. கள் வார்-தேனொழுகுகின்ற. கண்ணுக்குப் பகையாவது மலர். அது கண்ணை யொத்திருத்தலால் “கண் பகைத்து நின்ற வாரக்கட் பூ” என்றார் என்க. 9. புல்இழை-நுண்ணியநூல் இழை. மைகூர் குழல்-கருமை மிகுந்த கூந்தல். மை-கருமை. மதுகரம்-வண்டுகள். செய்-இங்கே வகிர்ந்த.
   
இதுவுமது
   மன்னிசை வெங்கை யுடையபி ரான்வரை மானுசுப்பைப்
பொன்னிசை கொங்கை யொடித்தாலு நிந்தை பொருந்துநுமை
மின்னிசை மென்குழ லேறன்மின் னீவிர் விளங்கிலிரோ
இன்னிசை வண்டினங் காள்காக தாலிய மென்பதுவே.
   (10)
பொய்பாராட்டல்
   முழுதலங் கார மழுவோன் றிருவெங்கை மொய்குழலுன்
பழுதறுங் கொங்கைக் குடைதுய ராற்பனி மாமலயம்
அழுதகண் ணீரைப் பொருநையென் பாரதன் வெய்துயிர்ப்பை
எழுதருந் தென்ற லெனவே யுலக ரியம்புவரே.
   (11)
இதுவுமது
   உன்மலை வார்முலை நல்லேர் கவர்ந்த துதவுதற்குப்
பொன்மலை நாணொண் கழுத்தொடு தாளுறப் பூட்டிவெங்கை
மன்மலை மாதுமை பங்காளன் முன்னம் வளைத்ததன்றி
வின்மலை யாக்குத லென்மிளிர் வேற்கண் விளங்கிழையே.
   (12)
இடம்பெற்றுத்தழால்
   வந்தாளு மையர் திருவெங்கை வாணர் வரையணங்கே
நந்தா மணிவிளக் குற்றுதிர் பூவணை நன்கமைந்த
பைந்தா துகுக்குங் கணியேறு மல்லிகைப் பந்தரிடஞ்
சிந்தா குலமற நாமிசை யோர்மணஞ் செய்வதற்கே.
   (13)
   10. மன்-நிலைபெற்ற. மான் போன்ற சாயலுடைய தலைவி. பொன் இசை கொங்கை-பொன் போலத் தேமல் பரவியதனம்; பொன்னணிகள் பொருந்து மெனினுமாம். நுசுப்பு-இடை. மென்குழல்-மெல்லிய கூந்தல். மின் இசை-மின்னுதலைப் பொருந்திய. காகதாலியம்: ஒரு நியாயம்; இது காக்கையேறப் பனம்பழம் விழுந்ததென்பது. இதனை அறிந்திலிரோ என்றபடி. 11. முழுதலங்காரம்-மிகுந்த அழகு. உடைதுயர்-தோற்றுப் போன துன்பம். வெய்துயிர்ப்பு-பெருமூச்சு. பொருநை-தாமிரபரணி நதி. 12. மலை-மலையைப் போன்ற. வார்முலை-கச்சணிந்த தனம். ஏர் கவர்ந்தது-அழகைக் கைப்பற்றிக் கொண்டது. உதவுதற்கே பொன்மலையை வளைத்தது; அல்லாமல் மலையை வில்லாக்குதல் யாண்டையதென்பது. 13. இசையோர்மணம்-காந்தருவமணம். பைந்தாது-பசிய மகரந்தப்பொடி. கணி-வேங்கை. காந்தருவ மணம் புரிதற்கு இடம் உற்று அமைந்தது என்பது.
   
வழிபாடுமறுத்தல்

   அகலா தடைக்கலம் புக்கபுட் காகத்தன் னாகமெல்லா
மிகலா வரிந்து புரந்தவற் காத்தவர் வெங்கையிலே
இகலா தயற்சந் தனம்படர்ந் தேறு மிளங்கொடியே
புகலா யெனக்குயிர் போலுநன் னாணைப் புரந்தருளே.
   (14)
   14. ஆகம்-உடல். இகலாய்-மனவுறுதியோடு. இகலாது-நீங்காது. மிகல்-மிகை. புரந்தவன்-சிபிச் சக்கரவர்த்தி. அயல் படர்ந்தேறல்-தனங்களிலணியப்பட்டுப் பரவி நிலவல்.
   
இடையூறு கிளத்தல்
   மதயானை யீருரி யூடே மறைந்து மழைமறைத்த
உதயா திபனென நின்றார்தம் வெங்கையி லுன்றனைப்போற்
கதையா லெனினு மறிந்திலம் வேள்கல கத்தணங்கே
புதையாது பைம்பொற் குடங்கதிர் வாளைப் புதைப்பதுவே.
   (15)
நீடுநினைந்திரங்கல்
   சூலக் கரத்தர் திருவெங்கை வாணர்முன் சுட்டமதன்
நீலக் கணையிற்கை வைத்தா னினிச்சற்று நேரநிற்பிற்
காலற் கிரையிடு மென்னா வியையிந்தக் காரிகையார்
கோலக் களபக்குன் றென்றோ மருவக் குறுகுவதே.
   (16)
மறுத்தெதிர்கோடல்
   சந்தாப வெந்தழ றன்னடி யார்க்குத் தணித்தருளுஞ்
செந்தா மரைமலர்த் தாளர்தம் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நந்தா மதுகை யொடுபிறப் பேழு நமைத்தொடர்ந்து
வந்தார் தமையிந் நிறையோ வராமன் மறிப்பதுவே.
   (17)
வறிதுநகைதோற்றல்
   புல்லார் பவர்கணெற் சோறுபெற் றாங்குப் பொருந்தியென்றும்
அல்லார் மதிய நிலவுண் சகோர மருந்தவுங்கல்
வில்லார் திருவெங்கை யன்பர் முகாம்புயம் வீறுதவும்
நல்லார் வதன மதியிடந் தோன்று நகைநிலவே.
   (18)
   15. மத யானை ஈருரி-கயா சுரனது தோல். வேள் கலகம்-காமப்போர். பைம்பொற்குடம்-கொங்கை. உதயாதிபன்-இளங்கதிரவன். உன்றனைப் போலப் புதைப்பது கதையாலும் அறிந்திலம் என்க. இத்துறை நாணிக் கண்புதைத்தலெனவும்படும். 16. நீலக்கணை-நீலமலராகிய அம்பு. களபக்குன்று-சந்தனமலை (கொங்கை.) இம்மலையரண் கிடைக்கின் மதனை வெல்லலாம் என்பது. 17. சந்தாபம்-பிறவிவெப்பம். நந்தா-கெடாத. மதுகை-வலி. நிறை-கற்பு. 18. புல்லார்பவர்-புல்ைலையுண்பவர்கள். அல் ஆர்-இரவிற் பொருந்தும். வீறு உதவும்-பெருமகிழ்ச்சியைக் கொடுக்கும். அருந்தவம் குறைவின்றித் தோன்றும் என்பது. முகாம்புயத்துக்கு என உருபு விரிக்க.

முறுவற்குறிப்புணர்தல்
   தனிவா னவர்நந் திருவெங்கை வாணர் தழலெறிப்ப
முனிவா னகைசெய் நகைபோல்வ தன்றிம் முகிண்முலையார்
பனிவாண் மதிமுகத் தேயெனை யாளப் பரிவின்மனக்
கனிவா லெழுநகை யீதம்பி காமக் கடலினுக்கே.
   (19)
முயங்குதலுறுத்தல்
   கொங்கைக் குவடு மணியல்குற் பாம்புங் குறுமுனிவன்
அங்கைத் தலமடங் காவிழி வாரியு மாங்கிருப்ப
வெங்கைப் பழமலை யாரரு ளாலவ் விசும்பறியா
மங்கைப் பருவத் திவள்வா யமுதிங்கு வாய்த்ததுவே.
   (20)
புணர்ச்சியின் மகிழ்தல்
   தாண்டுஞ் சினவிடை யெம்மான் றனிவெங்கைத் தண்சிலம்பில்
யாண்டும் பெறலரு மின்பமெல் லாமைம் புலனுமின்று
தூண்டுஞ் சுடரென நின்றவிம் மாதரிற் றுய்த்தனவால்
வேண்டும் பொருணமக் கேதோ வினியிந்த மேதினிக்கே.
   (21)
புகழ்தல்
   புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தர்வெற்பிற்
குறைந்தா லிவணுத லொவ்வாய் நினது குறைநிறைந்தாற்
சிறந்தா யிழைமுக மொவ்வாய் விளங்குஞ் செழுங்கலையால்
நிறைந்தாலென் னன்றிக் குறைந்தாலென் னெங்கட்கு நீமதியே.
   (22)
வன்புறை
அணிந்துழிநாணியதுணர்ந்து தெளிவித்தல்
   மன்றா டியதிரு வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நன்றா யணிகுவ னென்றாலு நின்பெரு நாணையஞ்சிக்
குன்றா ரெதிரொலி போலநின் பாங்கியர் கோலணியா
இன்றா யிழையணிந் தேன்வெரு வேனெஞ் சிளங்கொடியே.
   (23)
   19. தழல் எறிப்ப-அனல்வீச. முனிவால் நகைசெய்-சினத்தினால் நகைத்தலைச் செய்கின்ற. அம்பி-தெப்பம்; புணை. தனி-தனக்கு ஒப்பில்லாத. பனி-குளிர்ச்சி. பரிவு-இரக்கம். வாள்-ஒளி. மதி-இங்கே திங்கள். இவள் புன்முறுவல் காமக்கடலைக் கடப்பதற்குப் புணையாயிற்றாம். அம்முறுவல் பரிவொடு தோன்றுதலின் அவ்வாறாயிற்றென்க. 20. கொங்கைக்குவடு-கொங்கையாகியமலை. விழிவாரி-விழியாகிய கடல். குவடு-உச்சி; அங்கை என்பதை அகம் கை எனப்பிரிக்க. அங்கை என்பது உள்ளங்கை. ஆங்கிருப்ப-தொழிற்படாமல் வறிதே யிருக்கவும். 21. தாண்டும் சினவிடை-தாண்டிச் செல்லுதலையுடைய சினம் பொருந்திய காளை. “கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள.”என்பவாகலின் இவ்வாறு கூறினான். ஐந்திந்திரியங்களும் இன்பமெல்லாந் துய்த்தன என்க. 22. தாழ்-தொங்குகின்ற. திங்கள் கலை குறைந்தாலும் அன்றி வளர்ந்தாலும் இவள் முகத்துக் கொவ்வாது என்பதாம். இதனால் இவளது நலம் பாராட்டலாயிற்று. சிறந்த ஆயிழை-சிறந்தாயிழையென நிலைமொழி யீற்றகரந் தொகுத்தலாயிற்று. “புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை” என்ற விடத்துப் போல. 23. மன்று-பொன்னம்பலம். நாணை-வெட்கத்தை. கோல்-செய்கின்ற. வெருவேல்-அஞ்சாதே. வரை-இங்கே மலை; இது மூங்கில் வளரப் பெறுதலால் இப்பெயர் பெற்றது.
   
பெருநயப்புரைத்தல்
   கடக்கும் பவத்தர் திருவெங்கை வாணர் கனகவெற்பிற்
குடக்கங் குமமுலை யாண்மாட் டலாமற் குலவளிகாள்
நடக்குங் கமலமு நோக்குங் குவளையு நாணிலவை
அடக்குங் குமுதமுங் கண்டதுண் டோவுங்க ளாவியிலே,
   (24)
தெய்வத்திறம்பேசல்
   நதிவசத் தாய சடையார் திருவெங்கை நாட்டொருவர்
மதிவசத் தாலன்றி வான்கூன் மதிநுதல் வல்லிசதா
கதிவசத் தால்வரும் வள்ளிதழ்ப் போதின் கடிமணம்போல்
விதிவசத் தால்வரு நங்கேண்மை யாவர் விலக்குவரே.
   (25)
பிரியேனென்றல்
   பாவிடை வைத்த பெரும்புகழ் வெங்கைப் பழமலைகைம்
மாவிடை வைத்த விகல்வாள் விழியெழின் மாதர்தமை
நாவிடை வைத்தவன் மார்பிடை வைத்தவ னாணவகப்
பூவிடை வைத்த நினையோ பிரிகுவன் பூங்கொடியே.
   (26)
பிரித்துவருகென்றல்
   உழைதொட்ட வங்கையர் வெங்கையர் ஞான வொளியர்வெற்பில்
இழைதொட்டு விம்மி மலையோ டிகலு மிளமுலையாய்
மழைதொட்டு நின்றவிப் பூம்பொழிற் புக்கு மணிமகரக்
குழைதொட்டு மீளுநின் கண்போல் விரைந்து குறுகுவனே.
   (27)
   24. கடக்கும் பவத்தர்-பிறவியைக் கடந்தவர். நடக்குங் கமலம்-நடக்கின்ற தாமரை மலரைப் போன்ற காலடி. நோக்குங்குவளை-கண். நிலவு-ஈண்டு முறுவலொளி. ஆவி-தடாகம். 25. சதாகதி வசத்தால் வரும்-காற்றின் வசப்பட்டு வருகின்ற. வள் இதழ்-வளவிய இதழ். 26. பாவிடை வைத்த-பாக்களிலே அமைத்து வைக்கப்பட்ட. கைமா-கையிலுள்ள மான். அகப்பூ-மனமாகிய மலர். 27. இழைதொட்டு-அணிகலன்கள் அணியப்பெற்று. விம்மி-பெருத்து. இகலும்-மாறுபடும். மழை தொட்டு நின்ற-முகில்கள் தவழுகின்ற. குழை-காதணி.

இடமணித்தென்றல்
   சீறாக் கயல்விழி மாதேதென் வெங்கைச் செழும்பதியான்
கூறாய்த் திகழ்திரு மேனியு மாதுமை கூறுடலும்
வேறாய்ப் புணர்வதென் னோவந்துன் சாரல் வியன்பதியும்
மாறாப் பழனத் தெமதூரு மொன்றி மருவுறுமே.
   (28)
தெளிவு
   பழிமாற் றியபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
மொழிமாற் றெனும்பொருள் கோளினல் லாமன் மொழிபிறழார்
சுழிமாற் றியவுந்தி யாய்வரு வேனெனச் சொல்லியவவ்
வழிமாற்ற மும்பிறழ் மோபிற ழாது மறப்பினுமே.
   (29)
பிரிவுழிமகிழ்ச்சி
செல்லுங்கிழத்தி செலவுகண்டுளத்தொடு சொல்லல்
   உடையோர் சிறிதொரு கைதூக்கி வீசி யொருகையினைப்
புடையோ டரிக்க ணிலனோக்கிச் சிற்றொலிப் பூணுடனே
சடையோர் திருவெங்கை வெற்பினம் மாவி தனிநெஞ்சமே
நடையோ திமங்கள்கண் டென்னே பறக்க நடக்கின்றதே.
   (30)
பாகனொடுசொல்லல்
   பொன்னங் கிரிநிகர் திண்டேர் செலுத்தும் புகழ்வலவா
மின்னஞ் சடையர் திருவெங்கை வாணர்தம் வெள்ளருவித்
தென்னஞ் சிலம்பி லிடைமிடித் தார்தமைத் தேடியெதிர்
அன்னம் பிடியென வேநடந் தேகுநம் மாயிழையே.
   (31)
பிரிவுழிக்கலங்கல்
ஆயவெள்ளம்வழிபடக்கண்டிது மாயமோவென்றல்
   ஆயவெள் ளத்தி னடுவே யிருக்கு மரசவன்னம்
பாயவெள் ளத்தமு துற்றாங் கெனக்ககப் பட்டதுதான்
மேயவெள் ளச்சடை யம்மான் றிருவெங்கை வெற்பிலொரு
மாயவெள் ளக்கன வோவறி யேனெஞ்ச மாழ்குவதே.
   (32)
   28. சீறா-சினவாத. கூறு-பாகம். பழனம்-வயல்; அது சார்ந்த இடமும் கொள்க. 29. பழிமாற்றிய-பழியை நீக்கிய. சுழி-நீர்ச்சுழி. உந்தி-கொப்பூழ். வழிமாற்றம்-தாழ்ந்தசொல். பிறழ்மோ-தவறுமோ? பிறழாது-தவறாது. மொழிமாற்றுப் பொருள்கோள்-எண்வகைப் பொருள் கோளில் ஒன்று ; அது அவ்விடங்கட்கியைய மொழிகளை மாற்றிப் பொருள் கொள்வது. வழி-முறைமை. 30. உடை-ஆடை. அரி-செவ்வரி. பூண்-அணிகலம். சடையோர்-சடையை உடையவர். ஆவி-உயிரைப் போன்ற தலைமகள். ஓதிமங்கள்-அன்னங்கள். புடை-பக்கம். வெற்பு-மிக உயர்ந்த மலை. 31. வலவன்-தேர்ப்பாகன். இடைமிடித்தார்-இடை வறுமைப்பட்டவர் :அஃதாவது இடை சிறுத்தவர்கள். அன்னம் பிடி-அன்னமும் பெண் யானையும்; உணவு ஒருபிடி. இடைமிடித்தார் அன்னம்பிடி-என்பன சிலேடை. 32. ஆயவெள்ளம்-தோழியர் கூட்டம். வள்ளம்-கிண்ணம். பாயவெள்ளம்-பயவெள்ளம்; ஈண்டுப் பாற்கடல்.    

வாயில்பெற்றுய்தல்
   சேவை யுகைப்பவர் வெங்கைபு ரேசர் சிலம்பின்மயல்
நோவை யொழிப்ப மருந்துகண் டோமினி நோவனெஞ்சே
பூவை யுருத்த மொழியார் மழைக்கட் பொறிவண்டுதாம்
பாவை யொருத்தி முகாம்புயத் தேசென்று பாய்கின்றவே.
   (33)
பண்புபாராட்டல்
   நிதிமுன் மிடியர் மனம்போ லவாவி நிகரில்வெங்கைப்
பதிமுன் புகுமுது குன்றுடை யார்பதம் பண்டரைத்த
மதிமுன் மரையு மரைநா யகன்முன் மதியுங்கண்டோர்
விதிமுன் கொணரு மிவர்முகம் போல வியக்கிலரே.
   (34)
பயந்தோர்ப்பழிச்சல்
   செந்தா மரையு மரிமார்பு மென்னத் திருமகடான்
நந்தா மனையிடை யின்றிருந் தாங்கெந்த நாளுமுற
அந்தாழ் சடையவர் வெங்கையி லேநம தாவிநிற்ப
வந்தா ரமுதிகழ் தந்தாரைத் தந்தவர் வாழியவே.
   (35)
கண்படைபெறாதுகங்குனோதல்
   அரவாம் பணியினர் வெங்கைபு ரேச ரணியழகின்
வரவாங் கதிரென் றுறுமோ வுடுமொக்குள் வந்தெழவே
விரவாம் புயற்கர வோடவிர் மாமதி வெள்வளைசேர்
இரவாங் கடலில் விழுந்தமிழ் வேனை யெடுப்பதற்கே.
   (36)
   33. சே-காளை. நோவல்-வருந்தாதே. பூவை-நாகணவாய்ப் புள். உருத்த-வென்ற. சிலம்பு-மலை. இது எதிரொலித்தலால் இப்பெயர் பெற்றது. முகாம்புயம்-முகம் அம்புயம்; முகமாகிய தாமரை. பொறி-அறிவு. 34. நிதி-செல்வம். மிடி-வறுமை. மதி-ஈண்டு முழுத் திங்கள். மரை-முதற்குறை. தாமரையை மலர்த்துதலால் கதிரவனை மரை நாயகன் என்றார். தாமரையும் மதியும் ஒளியிழத்தலைக் கண்டவர் உவமியார் : காணாதவரே முகத்துக்கு உவமிப்பரென்பது. 35. அரிமார்பு-திருமாலின் மார்பு. நந்தாமனை-அழிவற்ற இல்லத்தில். எந்நாளும் பொருந்த வாழிய என்று கூட்டுக. 36. அரவாம் பணியினர்-பாம்பாகிய அணிகலன்களையுடையவர். உடு-விண்மீன். மொக்குள்-குமிழிகள். புயல் கரவோடு-முகிலாகிய முதலையோடு. வெள்வளை-வெள்ளிய சங்கம். வரவாங்கதிர்-வருதலையுடைய கதிரவன்.
   
இடந்தலைப்பாடு
தந்ததெய்வந்தருமெனச்சேறல்
   மின்றந்த வேணியர் வெங்கைபு ரேசர் மிகுமருளால்
அன்றந்த வாரி நடுவே யொருவ னகற்றியிட்ட
பொன்றந்த தெய்வமன் றோமலர் மாவைப் பொழிலிடத்தின்
முன்றந்த தின்றுந் தருநெஞ்ச மேசெலின் முந்துறவே .
   (37)
முந்துறக்காண்டல்
   அங்கஞ் சுமந்த திருமார் புடைவெங்கை யானருளால்
வங்கஞ் சுமந்த கடற்பிற வாமல் வருமமுதஞ்
சிங்கஞ் சுமந்த கரியுட னேயொண் செழுந்தரளச்
சங்கஞ் சுமந்தசெந் தாமரை தோன்றத் தனிவந்ததே.
   (38)
முயங்கல்
   மடலு மணமு மெனவே நிறைவெங்கை வாணர்தமைத்
தொடலு மடியர் பெறும்பே றெனவிவ டோண்மருவி
உடலு முயிரு மனமுமெ லாம்வளர்ந் தோங்குமின்பக்
கடலு ளழுந்தி யவசமுற் றேதையுங் கண்டிலமே.
   (39)
புகழ்தல்
   நாங்குழை யாம லருள்வோன் றிருவெங்கை நாயகன்கைத்
தாங்குழை யேயன்றி மென்முலை தாக்கித் தளருமிடைப்
பூங்குழை யாயெப் படிகுதித் தாலுமிப் புல்லறிவாய்
நீங்குழை யோநின் மதர்வே னெடுங்க ணிகர்ப்பதுவே.
   (40)
   37. மின்தந்த-மின்னலைப் போன்ற; மலர் மாவை-தாமரை மலரில் இருக்கின்ற திருமகளைப் போன்றவளை. ஏலேலசிங்கர் எறிந்து விட்ட பொன்னுருண்டை மீண்டுங் கரைக்குவந்த செய்தி இப்பாட்டிற் குறிப்பிடப்பட்டது. 38. அங்கம்-எலும்பு. வங்கம்-மரக்கலம். சிங்கம்-சிங்கத்தைப்போன்ற இடை. கரி-யானையைப் போன்ற கொங்கை. தரளச் சங்கம்-முத்துக்களையுடைய கழுத்து. செந்தாமரை-செந்தாமரை மலரைப்போன்ற முகம். 39. மடல்-பூவிதழ். அவசமுற்று-பரவசப்பட்டு. நெஞ்சு-முன்னிலையெச்சம். ஏ-வியப்பிடைச் சொல். 40. குழைதல்-பிறவித் துன்பத்தால் வருந்துதல். உழையேயன்றி-மானேயல்லாமல். நீங்கு உழையோ-ஓடிப்போகின்ற மானோ. மதர்-மதர்த்த.

ஆயத்துய்த்தல்
   வானோக்கி நிற்கும்பைங் கூழ்போ லவுமொரு மன்னவன்செங்
கோனோக்கி நிற்குங் குடிபோல வுந்தடங் கோட்டிமையத்
தேனோக்கி நிற்கு மெழிலுடை யான்வெங்கைச் செல்வியுனைத்
தானோக்கி நிற்குநல் லாயத்து ளேசென்று சார்ந்தருளே.
   (41)
பாங்கற்கூட்டம்
தலைவன் பாங்கனைச்சார்தல்
   கன்னியுந் தானுமொன் றானோன் றிருவெங்கைக் கண்ணுதல்போல்
வன்னியுங் காற்றுங் கலந்தே றியவெம் மதனைவெல்லச்
சென்னியுஞ் சேகர மும்போ னமக்குச் சிறந்தநண்பன்
மன்னியிங் கோர்துணை யாயினல் லாமல் வலியில்லையே.
   (42)
பாங்கன்றலைவனை யுற்றதுவினாதல்
   இலங்கா புரிமன்னன் றோளிற வூன்றிய வீசர்வெங்கை
உலங்கா தலிக்குந்திண் டோளுர வாகட லூர்ந்திடினும்
விலங்கா மறலி யொருகோடி தூதொடு மேல்வரினுங்
கலங்கா வுளமுங் கலங்கிநின் றாயென்ன காரணமே.
   (43)
   41. வான்-இடவாகு பெயர். தடங்கோடு-பெரிய சிகரம். இமயத்தேன் என்றது உமாதேவியை. இவள்இறைவற்கு மலைத்தேன்போல் இனிமை பயத்தலால் உவமையாகு பெயர். 42. வன்னி-கிளி. மதனை-காமனை. ஒன்று-ஓருரு. கண்ணுதல்-நெற்றிக் கண்ணையுடையவன். 43. உலம் காதலிக்கும்-திரள்கல்லானது விரும்பும். உரவா-அறிவுடையோனே. விலங்கா-விலக்கப்படாத.    

தலைவனுற்றதுரைத்தல்
   மலைவன் பணியரி வின்னாண் கணைசெய்து வந்துவெங்கைத்
தலைவன் புரமிரண் டொன்றே வெலவிச் சகமனைத்துஞ்
சிலைவன் குணங்கணை வேழஞ் சுரும்பலர் செய்துவென்றோன்
முலைவன் கிரியுற வந்தநண் பாவொரு மொய்குழலே.
   (44)
கற்றறிபாங்கன்கழறல்
   போதைப் பொதிந்திட் டிருடூங் களகப் பொருப்பிமைய
மாதைக் கலந்த திருவெங்கை வாணர் மதுரைச்சங்க
மேதைப் பசுந்தமிழ்ப் பாற்கட னீந்திய வீரமொரு
பேதைக் குடைந்துநின் றாய்தகு மோசொல் பெருந்தகையே.
   (45)
கிழவோன்கழற்றெதிர்மறுத்தல்
   ஊணா மெனநஞ் சுவந்தோன் றிருவெங்கை யூரிலுயர்
சேணா முலகம் வறிதாக வந்தவச் சேயிழையார்
பூணார மென்முலை யின்பெருங் காட்சியும் பொய்யிடையின்
காணாமை யுங்கண் டனையாயி னண்ப கழறலையே.
   (46)
கிழவோற்பழித்தல்
   அண்டா திபர்நந் திருவெங்கை நாயகர்க் கன்றியொரு
பெண்டா லிதய முருகினை யாயிற் பெருந்தகைநீ
விண்டா ரகைகண் டினியிந்து காந்தமு மெய்யுருகும்
வண்டா மரைகளு மின்மினி தோன்ற மலர்ந்திடுமே.
   (47)
   44. மலை-மேருமலை. வன்பணி-வலிய பாம்பு. அரி-திருமால். இரண்டொன்று-மூன்று. வன்குணம்-வலியநாண். மலை பணி அரி வில் நாண்கணை என்பனவும் சிலை குணம் கணை வேழம் சுரும்பு அலர் என்பனவும் நிரனிறை. வந்தணண்பா என்னும் பாடத்திற்கு மொய்குழல் வந்தனள் என்க ; வந்தனள் எனற்பாலது ஈண்டு அன் சாரியை தொக்கு நின்றதென்க. 45. போதை பொதிந்திட்டு-மலரைச் சூடி. மேதை-அறிவு பொருந்திய. உடைதல்-தோற்றல். 46. சேண் ஆம் உலகம்-விண்ணுலகம். சேயிழையார்-மாதரார். பொய்யிடை-நுண்ணிடை. 47. அண்டாதிபர்-தேவ நாயகராகிய சிவபெருமான். பெண்டால்-பெண்ணால். இந்து காந்தம்-சந்திரகாந்தக்கல். தாரகை-விண்மீன்கள்.
   
கிழவோன்வேட்கைதாங்கற்கருமைசாற்றல்
   பாலார் மொழியுமை பங்காளர் வெங்கையம் பாவைதந்த
மாலாழ் தருமெனை வெவ்வுரை யானண்ப வாட்டுகின்றாய்
காலாழ் களரி னமிழ்ந்தவெங் கோட்டுக் களிற்றையொரு
வேலா லெறிபவர் போலே யிதுவென் விதிவசமே.
   (48)
பாங்கன்றன்மனத்தழுங்கல்
   பெட்டுப்பட் டாவுரி கொண்டோன்றென் வெங்கைப் பிரான்வரையின்
மட்டுப்பட் டாவி மலர்வா ரிசமுக வல்லிமுகை
ஒட்டுப்பட் டானை யனையா னிடையெனு மோரிழையாற்
கட்டுப்பட் டானினி யென்செய்கு வேனிந்தக் காசினிக்கே.
   (49)
தலைவனோடழுங்கல்
   நாட்டு மலிபுகழ்ப் பெம்மான் றிருவெங்கை நாட்டிறைவ
கோட்டு வரிவிற் கொலைவேடர் தந்த கொடியிடையாள்
பூட்டு மயற்றொடர் நீயே படினெவர் போக்குறுவார்
காட்டு மிரவிக் கிரவியுண் டோவிருள் காய்வதற்கே.
   (50)
எவ்விடத்தெவ்வியற்றென்றல்
   தழைந்தார் மலிசடை யீசர்தம் மாதின் றடமுலைக்குக்
குழைந்தார் திருவெங்கை நாயக னாரிடங் கொண்டுதனி
விழைந்தார் நினதகத் திற்றிட்டி வாயிடை வேழமொடு
நுழைந்தா ரிடமிய லெல்லா மிறைவ நுவன்றருளே.
   (51)
   48. பாவை-பாவை போல்வாளாகிய தலைமகள். மால்ஆழ் தரும்-மயக்கத்தில் ஆழுகின்ற. வெவ்வுரை-கடுஞ்சொல். கோடு-கொம்பு. களிறு-ஆண்யானை. 49. பெட்டு-விரும்பி. பட்டுஆ-பட்டாடையாக. உரி-யானைத் தோலை. மட்டுப்பட்டு-தேன்பொருந்தி. முட்டுப்பட்டு-தடைப்பட்டு. ஆனை அனையான்-யானையைப் போன்றவன். 50. கோட்டு-வளைக்கப்பட்ட. பூட்டு-பூட்டிவிட்ட. மயல்தொடர்-மையல் விலங்கில். இரவிக்கு இரவி-கதிரவனுக்கு வேறொரு கதிரவன். 51. தழைந்த-செழித்த. மாது-உமாதேவி. குழைந்தார்-நெகிழ்ந்தார். திட்டிவாய்-கண்ணாகிய வழி. நுவலல்-சொல்லல்.    

அவனஃதிவ்விடத்திவ்வியற்றென்றல்
   நறையே யிதழி புனைவார் திருவெங்கை நாதர்சடைப்
பிறையே நுதலவர் மானே கருங்கண் பிடித்ததுடிப்
பறையே யிடையணி பாம்பே யகலல்குல் பற்றுமலை
இறையே முலைமலர்த் தண்டலை யேயிட மென்னுயிர்க்கே.
   (52)
பாங்கனிறைவனைத்தேற்றல்
   தடங்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைத் தண்டலையை
இடங்கொண்டு காமப் புனனீந்தி நீகரை யேறுதற்குக்
குடங்கொண்டு நின்ற வொருமாதைக் கண்டு குறுகுமட்டுந்
திடங்கொண்டு நெஞ்சந் தளராது நிற்றி திறலவனே.
   (53)
குறிவழிச்சேறல்
   காவியு மாம்பலும் பூத்தசெந் தாமரை கண்டளிகள்
வாவியு மோடையும் விட்டெய்த வேபொழில் வாய்நிற்குமோ
தேவியு மானும் விளையா டிடத்தர் திருவெங்கையில்
ஆவியு மாரமு தும்போன் றிறைகண்ட வாயிழையே.
   (54)
இறைவியைக்காண்டல்
   முகையே முலைசெழும் போதே முகமலர் மூசுவண்டின்
தொகையே குழல்செந் தளிரே யடிநற் சுவைக்கனியே
நகையே யிதழ்திரு வெங்கைபு ரேசர்கைந் நவ்விமிகும்
பகையே யெனுங்க ணிவரே யிறைசொன்ன பைங்கொடியே.
   (55)
இகழ்ந்ததற்கிரங்கல்
   புடையே யுமையொடுஞ் செங்கதிர் வேற்கைப் புதல்வனொடும்
விடையே யிவர்தரும் பெம்மான் றிருவெங்கை வெற்பிலன்னப்
பெடையே யெனவந் திளங்கா வுறுமிப் பெருந்தனத்தார்
இடையே யிலையெனி னைந்திளை யான்கொ லிறையவனே.
   (56)
   52. நறைஏய்-தேன் பொருந்திய. இதழி-கொன்றை. புனைவார்-அணிவார். துடிப்பறை-உடுக்கை. மலைஇறை-மேருமலை. தண்டலை-குளிர்ச்சியாகிய இடம். 53. திறலவன்-ஆற்றல்மிக்கவன். தடம்கொண்ட-அகற்சியைக் கொண்ட. குடம்-கும்பம்; அஃது ஈண்டுக் கொங்கையை உணர்த்திற்று. 54. காவி-கருங்குவளை. ஆம்பல்-செவ்வல்லி. அளிகள்-வண்டுகள். ஆம்பல் என்றது வாயை. இறை-பண்பாகு பெயர். 55. குழல்-கூந்தல். முகை-மொட்டு. நவ்வி-மான். கணிவர்-கண்இவர்-கண்களையுடைய இவர். 56. புடை-பக்கம். விடை-காளை. பெருந்தனத்தார்-பெரிய கொங்கைகளையுடையவர் ; பெருஞ்செல்வர்.

தலைவனைவியத்தல்
   சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுங் கவியு ளடங்காக் கவினுடைப் பாவையன்னார்
கூடுங் குவிமுலைக் குன்றுங்கண் வேலையுங் கூந்தனெடுங்
காடுங் கடந்துவந் தான்மிக வீரனங் காவலனே.
   (57)
தலைவியைவியத்தல்
   பருத்த குவிமுலைப் பாரத்தி னாற்கடற் பங்கயத்தில்
இருத்த லரிதென வந்துவன் பூவி லிருக்குமிவர்
விருத்த கிரிமகிழ் வெங்கைவெற் போன்மயல் வெள்ளங்கொண்ட
வருத்த விதய மலர்மீ திருந்திட வல்லவரே.
   (58)
தலைவன்றனக்குத்தலைவிநிலைகூறல்
   இயலாற் சிறந்த திருவெங்கை வாண ரிமையவெற்ப
மயலாற் புரிந்த முலையானை யின்முன் மதர்மழைக்கட்
கயலாற் கலக்குவித் துன்கலை வேலையைக் காரளகப்
புயலாற் பருகுவித் தார்நின்று ளார்தண் பொழிலிடத்தே.
   (59)
தலைவன்சேறல்
   ஏழா முலகும் புகழ்வெங்கை வாண ரிமையவெற்பில்
ஆழா தெனைநெடுங் காமக் கடனின் றணைத்தெடுப்பார்
தாழா திசையளி மூசுமென் பூந்துணர்த் தண்கொம்பரே
சூழாய மாக நடுநிற்ப ரோவிந்தச் சோலையிலே.
   (60)
தலைவியைக்காண்டல்
   தளைப்பாச நாசகர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பிற்
களைப்பான் மதிமுகக் காரிகை யீர்தண் களபமுலைக்
கிளைப்பார மென்பெருந் தோண்மே லிருத்திநை கின்றவிடை
இளைப்பாற வோதனி நின்றீரிக் காம ரிளம்பொழிற்கே.
   (61)
   57. கூடும்-ஒன்றோடொன்று நெருங்கிய. நந்தலைவன் மலையையுங் கடலையுங் காட்டையுங் கடந்து வந்தான் என்னும் நயங்காண்க. 58. கடல் பங்கயத்தில்-கடலில் தோன்றிய தாமரைப் பூவில். வன் பூவில்-வலிய நிலத்தில். 59. இயலால்-எல்லா இலக்கணங்களாலும். கலைவேலை-கலைக்கடல். கயல்-சேல்மீன். புயல்-முகில். பருகுவித்தல்-குடிப்பித்தல். 60. ஏழாம் உலகும்-ஏழுலகங்களும். பூந்துணர்-பூங்கொத்துக்கள். 61. களை-அழகுள்ள. காரிகையீர்-அழகையுடையவரே! காமர்-அழகிய.    

கலவியின்மகிழ்தல்
   துதிவாய் தொறுங்கொளு மென்மலர்ப் பூம்பொழில் சூழ்ந்தவெங்கைப்
பதிவாய் வரையிள மானோ டமர்ந்த பரனருளாற்
றிதிவாய் மதியமிர் தம்போ லலாமற் சிறந்தமுக
மதிவா யமிர்தமுண் டோம்வந்து கூடவிம் மங்கையரே.
   (62)
புகழ்தல்
   சங்கந் துறந்தன்ன மில்லாம லேயொரு தாளினின்று
பொங்கம் புனலிற் றவம்புரிந் தாலும் புரைகுவிரோ
அங்கம் பலவணிந் தார்வெங்கை வாண ரணிவரைமேல்
இங்கம் புயமுகை காளிந்த மாத ரிளமுலைக்கே.
   (63)
பாங்கியொடுவருகெனப்பகர்தல்
   பங்கே ருகத்திற் கடுத்தசெங் காவிப் பனிமலர்போல்
நுங்கே ளெனுமுயிர்ப் பாங்கியொ டேமறை நூன்முகத்திற்
சங்கேத மாம்பெயர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
இங்கே வருகவென் னெஞ்சா லயத்தி லிருப்பவரே.
   (64)
பாங்கிற்கூட்டல்
   கார்கண்ட மஞ்ஞையுஞ் செந்தே னிரம்பக் கடைதிறக்குந்
தார்கண்ட வண்டுந் திருவெங்கை நாயகர் தாண்மலரின்
சீர்கண்ட வன்பரும் போலேநிற் கண்டு சிறக்குமுளப்
போர்கண்ட வேற்கண் மடவாரை மேவுக பூங்கொடியே.
   (65)
பாங்கிமதியுடன்பாடு
தோற்றத்தாலாராய்தல்
   எனையா டியபதந் தாள்வோன் றிருவெங்கை யேந்திழைநீ
சினையா டியமணிப் பொன்னூச லாடிச் செழுங்குவளைச்
சுனையாடி வண்டல் விளையாடி முத்தந் துவன்றியவம்
மனையாடி வந்தனை யோதிரு மேனி வருந்தியதே.
   (66)
   62.2, துதி-முதனிலைத் தொழிற்பெயர். வரையிளமான்-இமயமலையில் தோன்றிய உமாதேவி. பரன்-மேலானவன். திதி-வளர்ச்சி. 63. சங்கம்-கூட்டம், சங்குகள். அன்னம்-சோறு, அன்னப் பறவைகள். புரைகுவிரோ-ஒப்பாவீரோ? அங்கம்-எலும்பு. அம்புயமுகைகள்-தாமரை மொட்டுகள். 64. சங்கேதம் ஆம்பெயர்-சங்கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலம்-உள்ளக்கோயில். கேதமாகிய பெயரையுடைய. நெஞ்சாலயம்-உள்ளக்கோயில். 65. கார்கண்ட-முகிலைக்கண்ட. தார்கண்ட-பூவரும்பைக்கண்ட. கடை திறக்கும்-வாயிலைத் திறக்கிற; ஈண்டு இதழ்க்கதவு. தார்-மலரும் பருவத்துப் பேரரும்பு. சிறத்தல்-மகிழ்தல். 66. சினையாடிய-மரக்கிளையிற் கட்டிய. முத்தம் துவன்றிய-முத்துக்கள் நெருங்கப் பதித்த. வண்டல்-மகளிர் விளையாட்டில் ஒன்று.    

ஒழுக்கத்தாலையந்தீர்தல்
   கொற்றிக் கிசைந்த புயத்தார் திருவெங்கைக் கோமளமே
நெற்றிக் குடைந்ததென் றெள்ளப் படாதந்த நெற்றியின்மேல்
வெற்றிக் கமலக் கரங்குவித் தேயின்று விண்ணினெழும்
மற்றிப் பிறைத்தெய்வங் கன்னியர் யாரும் வணங்குவதே.
   (67)
சுனைநயப்புரைத்தல்
   கடைக்கண் சிவந்தித ழொன்றே வெளுப்பக் கலவையினுள்
இடைக்கண் மெலிவு தருங்கொங்கை மேலது வேயழிய
விடைக்கண் விரும்பு யுறைவார் திருவெங்கை வெற்பிடத்திற்
றொடைக்கண் மலர்க்குழ லாய்சுனை யாதினுட் டோய்ந்தனையே.
   (68)
சுனைவியந்துரைத்தல்
   ஒளியார் குமுதநல் வெள்ளாம்ப லாக வொழிவருதண்
அளியார் கருநெய்தல் வந்துசெந் தாமரை யாகச் செய்யில்
எளியா ரடியவர்க் கானார்தம் வெங்கையில் யாரொருவர்
குளியார் மதிநுத னீயா டியவக் குளிர்சுனையே.
   (69)
தகையணங்குறுத்தல்
   பண்ணூடு மின்சொ லுமைபாகர் வெங்கைப் பனிவரைமேல்
விண்ணூ டிழிந்து வருந்தெய்வ மாது விளங்குறுமென்
கண்ணூ டிருந்தபெண் ணின்னீழ லாகக் கருத்திடைநீ
எண்ணூ டிருந்துக வேலிவ டானெங்க ளேந்திழையே.
   (70)
   67. கொற்றிக்கிசைந்த-துர்க்கைக்கேற்ற. உடைதல்-தோற்றல். எள்ளல்-இகழ்தல். 68. கடைக்கண்-கட்கடை. இதழ் ஒன்றே என்றது அதரத்தை. கலவி-புணர்ச்சி. 69. மதிநுதல்-பிறைபோலும் நெற்றியை உடையவள். ஒழிவு அறு-இடையறாத. 70. பண்-இந்தளம். பஞ்சுரம், பழம் பஞ்சுரம், குறிஞ்சி, கைசிகை, கேதாரம் முதலியன. ஊடுதல்-பிணங்குதல்.    

நடுங்கநாட்டம்
   எதிராக் கவினுமை பங்காளர் வெங்கை யிறைவர்சடை
முதிராப் பிறையைந் தலைநாக மீன்ற முழுமணியின்
கதிராற் சிவந்தது போற்சேந்த கோட்டுக் களிற்றைமலர்
உதிராக் கொடியனை யாயின்று நான்கண் டுடைந்தனனே.
   (71)
பெட்டவாயில்பெற்றிரவுவலியுறுத்தல்
   அருவா யுருவமு மாம்வெங்கை வாண ரரும்பதத்தைக்
குருவா லடைபவர் போலுயிர்ப் பாங்கியைக் கொண்டுமெல்லப்
பெருவா ரறநிமிர்ந் தோர்நூன் மருங்குற் பெரும்பழியை
வெருவா தெழுமுலைப் பெண்ணா ரமுதத்தை மேவுதுமே.
   (72)
ஊர்வினாதல்
   வலைநடு வந்த விளங்கலை போனும் மணிவடந்தாழ்
முலைநடு வென்ன விடமற வேவந்து முட்டுமிரு
மலைநடு வந்துநொந் தேனுரை யீர்நும் வளம்பதியா
தலைநடு வந்தனஞ் சுண்டபி ரான்வெங்கை யன்னவரே.
   (73)
பெயர்வினாதல்
   ஊரான திங்குரை யீரா யினுமென் னுளங்குளிரச்
சீரார் திருவெங்கை மாநக ரார்தந் திருப்பெயர்போற்
பாரார் பருவங்கண் டேமறை யாகப் பகர்வதன்றே
பேரா யினுமுரை யீர்பிறை வாணுதற் பேதையரே.
   (74)
கெடுதிவினாதல்
   பைங்காஞ் சனவரை வில்லாளர் வெங்கைப் பனிவரைமேற்
செங்காந்த ளன்னமென் கைம்மட வீர்செங் குருதிபொங்க
வங்காந்த தன்பகு வாய்போல வேல்பட் டழுந்துபுண்ணோ
டிங்காம்பு னத்தயல் வந்ததுண் டோநல் லிளங்களிறே.
   (75)
   71. எதிரா-நிகரற்ற. முதிராப்பிறை-இளம்பிறை. சேந்த-சிவந்த. கோடு-கொம்பு. 72. அருஆய்-உருவம் அற்று. மருங்குல்-இடை. வெருவாது-அஞ்சாமல். உயிர்ப்பாங்கி-உயிர் போன்ற பாங்கி. 73. இளங்கலை-இளமான். வந்து முட்டும்-வந்து நெருங்கின. 74. பாரார்-உலகத்தார். பேதையர்-பருவங்குறியாது மாதர் என்னுந் துணையாய் நின்றது. 75. பைங்காஞ்சனவரை-பசிய பொன்மலை. அங்காந்த-பிளந்த. பகுவாய்-திறந்த வாய்.

ஒழிந்ததுவினாதல்
   விழித்தே மதனைப் பொடித்தார்செவ் வாம்பன் மிஞிறுவப்பச்
சுழித்தே னுமிழ்வயல் வெங்கையி லேகடற் றோட்டலரை
யொழித்தே வருமட வீரளி யேனின் றுளம் வருந்த
மொழித்தே னிலாததென் னோவுங்கள் வாய்க்கு முதமலர்க்கே.
   (76)
யாரேயிவர்மனத்தெண்ணம்யாதெனத் தேர்தல்
   ஊரேதென் பாரதை விட்டே யருகுவந் தும்முடைய
பேரேதென் பார்கரி கண்டதுண் டோவெனப் பேசிநின்று
வாரேறு கொங்கைக் குடநோக்கு வார்வெங்கை வாணர்வெற்பில்
ஆரே யிவர்மனத் தெண்ணமென் னேயென் றறிந்திலமே.
   (77)
எண்ணந்தெளிதல்
   ஊர்கேட் கவுநம் பெயர்கேட் கவுநின் றுழல்பனைக்கைக்
கார்கேட் கவும்வந் தவரே யலரிவர் கன்னியுமை
சீர்கேட்கு மையர்தென் வெங்கையி லேயிவள் செய்யவிள
நீர்கேட்க வந்தவ ரேபற்று காம நெருப்பினுக்கே.
   (78)
தலைவன்கையுறையேந்திவருதல்
   கொடையாளர் கையிற் பொருள்போற் சிறுமென் கொடிபுரையும்
இடையா ளிகுளை யுடனிருந் தாளினி யேதுகுறை
விடையா னிணையிலி வெங்கைப் பிரான்றன் விழிக்குடைந்தோன்
படையான மெலிந்தவெல் லாநெஞ்ச மேமுன் பகருதுமே.
   (79)
   76. பொடித்தார்-நீறாக்கியவர். மிஞிறு-வண்டுகள். அளியேன்-ஏழையேன். 77. வார்ஏறு-கச்சணிந்த. கச்சினைக்கிழித்து வெளிப்பட்ட எனலுமாம். 78. நின்றுழல் பனைக்கைக்கார் என்றது யானையை. சீர்-அழகின் பெருக்கம். யானை பனைமரம் போன்ற கையை உடையதாகலின் “பனைக்கைக்கார்” என்றார். “பனைக்கை மும்மத வேழமுரித்தவன்” என்றார் பிறரும். 79. கொடையாளர்-வள்ளன்மையுடையவர். புரைதல்-நிகர்த்தல். விழி-நெற்றிக்கண். உடைதல்-தோற்றல். மெலிதல்-இளைத்தல்.
   
தலைவனவ்வகைவினாதல்
   கானைக் கலையொன் றெனதம்பு பாயக் கலைமதியின்
மானைப் புணர வெழல்போல வேதுள்ளி வந்ததுண்டோ
ஆனைத் தலைமகற் பெற்றோன் றிருவெங்கை யாவியிள
மீனைப் பொருதகன் றொள்வா ளிகலும் விழியவரே.
   (80)
எதிர்மொழிகொடுத்தல்
   மானக் கலைகளெட் டெட்டும்வல் லீர்கொன்றை வார்சடையிற்
கூனற் பிறைபுனை யெம்மான்றென் வெங்கைக் கொடிச்சியரேம்
ஏனற் புனத்திற் கிளிபார்த் திதணி னிருப்பதன்றிக்
கானக் கலையைத் தனிபார்த் திருக்குங் கருத்திலமே.
   (81)
இறைவனை நகுதல்
   தேனனை யாவரு மாமல ராலச் சிலைமதவேள்
மானனை யாரை வருத்துமென் பாரின்று மாந்தழையாற்
கூனனை யாமதி வார்சடை யார்வெங்கைக் குன்றில்விழி
மீனனை யாயிவ ரெய்தார் பெருங்கலை வீழ்ந்திடவே.
   (82)
பாங்கிமதியினவரவர் மனக்கருத்துணர்தல்
   மான்வேட்ட மீதும் புனங்காவன் மீதினும் வைத்தமனந்
தான்வேட்ட காதன் மறைப்பவெல் லாமயன் றாதையொடு
நான்வேட்ட செம்மலர்த் தாளான் றிருவெங்கை நாட்டிலிவர்
தேன்வேட்ட பூங்கண்க ளேயலர் தூற்றித் தெரிவிக்குமே.
   (83)
   80. கானைகலை ஒன்று-காட்டில் வாழ்கிற அழகிய மான் ஒன்று. ஆனைத் தலைமகன்-ஆனைமுகக் கடவுள். துள்ளல்-துடித்தல். இகலல்-பகைத்தல். 81. மானக்கலைகள்-பெருமை பொருந்திய கலைகள். எட்டெட்டும்-அறுபத்து நான்கும். ஏனல்புனம்-தினைப்புனம். 82. சிலைமதவேள்-கருப்பு வில்லையுடைய காமன். கூனனையா என்ற சிறப்பால் மதி இளம்பிறைக்காயிற்று. பெருங்கலை-பெரிய நூலறிவு. வீழ்ந்திட-விரும்ப என்றுமாம். 83. வேட்டம்-வேட்டை. புனம்-தினைப்புனம். அயன்-அஜன் என்னும் வடசொற்றிரிபு ; பிறவாதவன் என்பது பொருள்.

பாங்கியிற்கூட்டம்
தலைவனுட்கோள்சாற்றல்
   நற்றே மொழியுமை பங்கன் றிருவெங்கை நாடனையீர்
முதற்றே ரிழைமுலை மேனகை யாதியர் முற்றுநுங்கள்
குற்றேவல் செய்யு மடந்தைய ராகக் கொடுப்பனின்னே
சற்றே யருட்கடைக் கண்பார்த்தென் னாவியைத் தாங்குமினே.
   (84)
பாங்கிகுலமுறைகிளத்தல்
   பொய்ம்மே வரும்புனங் காவலர் யாங்கள் புனநடுவின்
வம்மே வுறுமது காப்பவ னீவளை சூழ்வதெம்மூர்
நம்மே லருள்வைத் தளிப்பார் திருவெங்கை நாட்டிலுன்னூர்
கும்மேல் வரும்வளை செய்காட்டு வதொண் குலோத்துங்கனே.
   (85)
தலைவன் றலைவிதன்னையுயர்த்தல்
   அலைமக ளன்ன விலங்கிலை வேற்க ணரிவைநல்லாய்
கலைமகள் வந்தனை செய்வெங்கை நாதற்குக் கைகொடுத்து
மலைமக ளண்ட முழுதாளி னுங்கண் மலையரையன்
தலைமக ணன்மைப் பெருமையை யாதென்று சாற்றுவனே.
   (86)
பாங்கியறியாள்போன்றுவினாதல்
   இஞ்சிப் புரமொரு மூன்றெரித் தார்வெங்கை யீர்ம்பொழில்வாய்ப்
பஞ்சிற் சிறுதளிர் மெல்லடி மாதர் பலரினுந்தான்
வஞ்சித் தெமையெம் முடனே யிருப்பினும் வந்துனது
நெஞ்சிற் புகுந்து மறைந்தவள் யார்சொன் னெடுந்தகையே.
   (87)
   84. முற்றுஏர்-முழுவனப்பமைந்த. மேநகை-மேநகை என்னுந் தேவதாசி. குற்றேவல்-சிறு பணிவிடைகள். 85. புனம்-தினைக்கொல்லை. புனநடுவே வமேவுறுவது புவனம்; கு மேல்வரும் வளை-குவளை. உத்துங்கம்-உயர்ச்சி. ஒட்பம்-வடுவின்மை. 86. அலை-அலைகளையுடைய கடலுக்காயினமையால் ஆகுபெயர் ; அலையெனவாளா கூறினாரேனும் திருமகளையீன்றமை பற்றிப் பாற்கடலெனக் கொள்க. 87. இஞ்சி-மதில். மறைந்தவள்-ஒளித்தவள். நெடுந்தகை-பெருங் குணமுள்ளவன்.    

இறையோ னிறைவி தன்மையியம்பல்
   போதே முகமிளஞ் சேலே விழிபசும் பொன்னுரைத்த
சூதே முலைசெந் தளிரே யடிகதிர்ச் சோதியொடு
வாதே புரியுந் திருமே னியர்வெங்கை மங்கையர்க்கு
மாதே யிடையொன்று மல்லாமற் பொய்யல்ல மற்றவையே.
   (88)
பாங்கி தலைவியருமை சாற்றல்
   ஒறுத்துப் புரஞ்சுடு மெம்மான் றிருவெங்கை யூரின்மலர்
பொறுத்துக் கொளும்பொனென் றெண்ணே லிராசிப் புதுத்துலையாற்
கறுத்துத் தழைந்த குழலோடு கொங்கைக் கனத்தசெம்பொன்
நிறுத்துக் கொளும்பொனன் றோவெளி தோசொ னெடுந்தகையே.
   (89)
தலைவ னின்றியமையாமை யியம்பல்
   பொங்கூ ழொளிநிகர் வெங்கைபு ரேசர் பொருப்பிடத்தில்
வங்கூழ் வழங்கும் வியன்ஞாலந் தன்னில் வளர்ந்தெழுந்த
பைங்கூழ் புயலின் றமையாத வாறெனப் பாவைநல்லாய்
இங்கூழ் தருமென் கொடியன்றி வாழ்தலின் றென்னுயிரே.
   (90)
பாங்கி நின்குறை நீயேசென்றுரை யென்றல்
   தீயே னுளங்குடி கொள்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
வீயேறு மென்றொடைத் தோளண்ண லேயயல் வெறொருவர்
போயே யுரைப்பின் மனமிரங் காளெங்கள் பூங்கொடிக்கு
நீயே வணங்கி மனமுளைந் தோதுக நின்குறையே.
   (91)
பாங்கியைத் தலைவன் பழித்தல்
   கல்லைக் குழைத்துப் பயின்றுள தாகிய கல்வியுடைத்
தில்லைப் பதியி னடமாடும் வெங்கைச் சிவனையல்லாற்
சொல்லைக் கொடுநின் மனநாங் குழைப்பத் துணிதலொரு
புல்லைக் கொடுதண் கடனீந்த வுன்னுதல் பூங்கொடியே.
   (92)
பாங்கி பேதைமையூட்டல்
   மானைக் கவர்வம் மழுவிலை யேல்வெங்கை வாணர்க்கந்த
வானைப் புணர்மதி கீள்வே மகப்படின் மானுக்கென்னுஞ்
சேனைக் குறவர் மகளா கியவித் திருந்திழையாள்
ஆனைத் திறலுடை யாயறி யாளுன் னருந்துயரே.
   (93)
   88. போது-தாமரைமலர். பசும்பொன் உரைத்த சூது-பசும் பொன்னுரைக்கப்பெற்ற சூதாடுகருவி. 89. மங்கையர் என்பது பருவங் குறியாது நின்றது. ஒறுத்து-வருத்தி. இராசிப்புதுத்துலையென்றது துலாராசியை. பொன்-தேமல். 90. ஊழ்-வெயிற் கற்றை. வங்கூழ்-காற்று. ஊழ்தரும்-ஊழினாற் கொணர்ந்துதரப்பெற்ற. இன்று-இல்லை. 91. வீஏறு-வண்டுகள் ஏறப்பெற்ற. உளைந்து-வருந்தி. 92.2 கல்லை குழைத்து-மேருமலையை வளைத்து. பயின்று-பழகி. கல்-கல்லாலமைந்த மலை. 93. கவர்வம்-பற்றுவோம். திருந்திழையாள்-திருத்தமாகிய அணிகலன்களையணிந்தவள். அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம்.    

காதலன்றலைவி மூதறிவுடைமை மொழிதல்
   விடுத்த மயலுடை யெம்மான் றிருவெங்கை வெற்பணங்கே
எடுத்த விடைமுறிக் குங்கொங்கை யேயன்றி யென்னையெய்யத்
தொடுத்த குவளைக் கணைவாங்கி வின்மதன் றூணியிட
அடுத்த கடைக்கண்வைத் தாரறி யாமை யறிந்திலரே.
   (94)
பாங்கி முன்னுறுபுணர்ச்சி முறையுறக்கூறல்
   மருவீர வெண்மதி வேணிப்பி ரான்வெங்கை வான்பொழில்வாய்
இருவீரு மொத்துப் புணர்ந்தாற் பயநுமக் கென்னையொன்னார்
பொருவீர வாள்விழிக் காப்பதி னாயிரம் பொய்யுரைத்து
வருவீ ரறிந்திலி ரேயுல கோதும் வழக்குரையே.
   (95)
தன்னிலைதலைவன்சாற்றல்
   மண்ணைக்கொண் டுண்ட பெருமான் றொழும்வெங்கை வாணர்வெற்பிற்
பண்ணைக்கொண் டுற்ற மொழியா யுனையன்றிப் பாரமுலைப்
பெண்ணைக்கொண் டின்பம் பெறநான் விரும்பப் பெறிலதுதான்
கண்ணைக்கொண் டன்றி வழிதா னடப்பக் கருதுதலே.
   (96)
பாங்கியுலகியலுரைத்தல்
   வெண்டாம ரைமுளைப் பாலிகை வாளர விந்தச்செந்தீக்
கொண்டாவி யிற்சங்க மார்ப்பக் குவளை மணம்புணர்ந்து
வண்டாடு நல்லிய லூரவெம் மான்வெங்கை மாதினைநீ
கண்டாசைப் பட்டனை யேல்வரைந் தேகொள் கடைப்பிடித்தே.
   (97)
தலைமகன்மறுத்தல்
   தாமக் குழலை வரைந்துகொண் டேவெங்கைத் தாணுவெற்பிற்
காமக் கனலைத் தணிப்பாயென் றோதிய காரிகைநீ
நாமக் கிணறகழ்ந் தந்நீர் கொடுநன் னகரிற்பற்றி
வேமக் கனலை யவிப்பாயென் பார்களின் வேறல்லையே.
   (98)
   94. விடுத்த மயலுடை-மையலைவிட்ட. தூணியிட-ஆவத்தில் வைக்குமாறு. தூணி-அம்பு வைக்குங்கூடு. அறியாமையறிந்திலர்-அறிவறிந்தவர். 95. மருவீர வெண்மதி-ஈரம்மருவு வெண்மதி. வேணி-சடை. ஒன்னார்-பகைவர் வழக்குரை-உலக வழக்கச்சொல். 96. மண்ணைக்கொண்டுண்ட பெருமான்-திருமால். பண்ணைக்கொண்டு-இசையைக்கொண்டு. 97. அரவிந்தம்-தாமரை. ஆவி-தடாகம். கடைப் பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல். 98. தாமம்-மாலை. குழல்-குழலையுடையவள். நாமம்-அச்சம். தாணு-சிவபிரான்.

பாங்கியச் சுறுத்தல்
   பால்கொண்ட வத்தி யெனவே யுடல்வடுப் பட்டவெமர்
வேல்கொண்ட தம்முடற் புண்ணிலிட் டேவளை வேனிமிர்ப்பார்
சேல்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைச் சேயிழைக்கு
மால்கொண்டு நின்றுழ லேல்விரைந் தேகுக மன்னவனே.
   (99)
தலைவன்கையுறைபுகழ்தல்
   கொண்டலங் கண்டர் திருவெங்கை வாணர் குளிர்சிலம்பிற்
றண்டளிர் வென்றசிசந் தாண்மட வீர்நுந் தடமுலையாம்
முண்டக மென்முகை மேல்வாழ வூசி முனையினின்று
வண்டவஞ் செய்திங்கு வந்தகண் டீரிம் மணிவடமே.
   (100)
பாங்கி கையுறைமறுத்தல்
   மல்லார்க்குந் தோளண்ணலேவெங்கை வாணர் வரையிற்பெண்கள்
எல்லார்க்கும் வந்த விடைபோல்வ தன்றிங் கிவட்கன்றியே
வில்லார்க்கு நின்னணி கொங்கையிற் காணிலெம் வேடரென்னும்
பொல்லார்க்கு றங்கும் புலிவா யிடறுதல் போன்றிடுமே.
   (101)
ஆற்றாநெஞ்சினோடவன்புலத்தல்
   பாமாலை கொண்ட திருவெங்கை வாணர் பனிவரைமேல்
மாமாலை நண்ணிய வென்னெஞ்ச மேயிவ் வரியளிகள்
தாமாலை மென்குழ லார்தமை வேண்டினந் தாண்முறித்த
பூமாலை யேறுங்கொ லோவவர் வார்முலைப் பொற்குன்றமே.
   (102)
   99. வளைவேல்-வளைந்த வேல். சேயிழை-அன்மொழித்தொகை. செவ்விய அணிகலன்களை அணிந்தவள் என்பது பொருள். மால்-காம மயக்கம். 100. கொண்டல்-முகில். முண்டகம்-தாமரை. முகை-மொட்டு. ஊசி முனையில் நிற்றலாவது ஊசி நுனியாற் கோக்கப்படுதல். 101.01. மல்ஆர்க்கும்-மற்போரின் பொருட்டு ஆரவாரித்துக் கொண்டிருக்கும். வில்ஆர்க்கும்-ஒளிவீசும். நின்னணி-நீ கையுறையாகத் தரும் அணிகலம். 102.02. மாமாலை-பெரிய மயக்கத்தை. தாம்-தாவுமென்பதன் விகாரம். வார்-கச்சு.    

பாங்கியாற்றுவித்தகற்றல்
   ஆனுக் களித்த கொடியாளர் வெங்கை யணிநகராய்
பானுக் களித்து வருங்காலை நீவரிற் பைந்தொடிக்கைத்
தேனுக் களிக்கு மலர்த்தொடை வார்குழற் றேமொழியெம்
மானுக் களித்துக் கலையாக் குவனுன்கை வண்டழையே.
   (103)
இரந்துகுறைபெறாதுவருந்தியகிழவோன் மடலேபொருளெனமதித்தல்
   எண்ணைவிட் டோங்கும் புகழாளர் வெங்கை யிமையவெற்பில்
விண்ணைவிட் டெய்து மிவட்டரு வாயென மேவியுழும்
பண்ணைவிட் டூர்தொறும் புக்கிரப் பாரிற் பசியமடற்
பெண்ணைவிட் டோர்பெண்ணை நாம்வேண்டி நிற்பது பேதைமையே.
   (104)
பாங்கிக்குலகின்மேல் வைத்துரைத்தல்
   வாமத் துமைமகிழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
தாமக் குவிமென் முலைமட்டு வார்குழற் றையனல்லாய்
நாமக் கடலைக் கலமிவர்ந் தேறுவர் நானிலத்தோர்
காமக் கடலை மடன்மா விவர்ந்து கடப்பர்களே.
   (105)
அதனைத்தன்மேல் வைத்துச்சாற்றல்
   பாவாக்கி யைப்பெண் பனையாக வாண்பனை பாட்டருளுந்
தேவாக்கி யாளுந் திருவெங்கை வாணரிற் றேர்ந்தெருக்கம்
பூவாக்கி மாலை யணிந்துபொன் னேயொரு பொற்பனையை
மாவாக்கி நாளையும் மூர்நடு வீதி வருகுவனே.
   (106)
   103.03. பானு-கதிரவன். தேனுக்கு-வண்டுகளுக்கு. எம்மான்-எம்முடைய தலைவி. 104.04. எண்ணை-எண்ணத்தை. பண்ணைவிட்டு-வயலைவிட்டு. பசிய மடற்பெண்ணை-பச்சையான மடலோடு கூடிய பனை; பனை மடல். ஓர் பெண்ணை-பாங்கிப்பெண்ணை. மடலேறுதலை விட்டு இரப்பது அறிவின்மையென்க. 105.05. மட்டுவார் குழல்-தேனொழுகுங் கூந்தல். நாமம்-அச்சம். கலம் இவர்ந்து-மரக்கலமேறி. மடன்மா-மடற்குதிரை. 106.06. தேவாக்கி-தெய்வத்தன்மை பொருந்திய வாக்கையுடையவரை. தேர்ந்து-ஆராய்ந்து. மாவாக்கி-குதிரையாகச் செய்து.
   
பாங்கி தலைமகளவயவத்தருமை சாற்றல்
   மந்தா கினியணி வேணிப்பி ரான்வெங்கை மன்னவநீ
கொந்தார் குழன்மணி மேகலை நூனுட்பங் கொள்வதெங்ஙன்
சிந்தா மணியுந் திருக்கோ வையுமெழு திக்கொளினும்
நந்தா வுரையை யெழுதலெவ் வாறு நவின்றருளே.
   (107)
தலைமகன்றன்னைத்தானேபுகழ்தல்
   ஐயா னனமுடை யார்வெங்கை வாண ரணிவரைமேற்
பொய்யா விளமுலை மங்கைநல் லாரிடை பொய்யென்பதை
மெய்யாகச் சாதித் தெழுதா விடிற்புகழ் வேண்டியயான்
கையா லெடுத்தது தூரிகை யேயன்று காரிகையே.
   (108)
பாங்கியருளியல்கிளத்தல்
   வென்றிப் படைநன் மழுவுடை யார்திரு வெங்கையிலே
குன்றிற் பொலியுங் குவிமுலை யாளொடு கூடவெண்ணி
நின்றிப் படிதளர் வேலண்ண லேயென்று நீக்கமற
அன்றிற் பெடையொடு வாழ்வதன் றோபனை யாவதுவே.
   (109)
பாங்கிகொண்டுநிலைகூறல்
   மூலத் தனிமுத லானார் திருவெங்கை மொய்வரையாய்
நீலத் தடங்கண்ணி னாட்குன் குறைசொல நேர்ந்திலளேற்
கோலத் தளிரியன் மாதின் கருங்கட் குடங்கவரத்
தாலத் திவர்க நினையாவர் பின்னைத் தடுப்பவரே.
   (110)
   107.07. மந்தாகினி-விண்ணகக் கங்கை. கொந்து-பூங்கொத்துகள். நுட்பம்-நுண்மை. நந்தா-கெடாத. ஆர்தல்-பொருந்தல். 108.08. ஐயானனம்-ஐந்து திருமுகம். அவை ஈசானம், தற்புருடம், அகோரம், வாமம், சத்தியோசாதம் என்பன. இவை ஐந்தும் ஐந்தொழில்களையும் நடத்துவன. தூரிகை-ஓவியமெழுதுங் கோல். 109.09. வென்றிப் படை-வெற்றியைத் தருகிற படை. அன்றில்-கிரௌஞ்சப் பறவை. நீ பனைமடலைக்கொண்டு மடலேறப் பனை மடலையழிப்பதாகக் கூறுகிறாய் ; எந்நாளும் இணைபிரியாதவைகளாகிய அன்றில்கள் அம்மரத்தில் வாழ் கின்றன. அவை மரத்தைப் பிரிய நேரும் என்றாள். 110.10. மொய்-வலிமை. நேர்ந்திலளேல்-உடன்படாளாயின். தாலத்து-பனை மரத்தின். கட்குடத்தைக் கவரப் பனையிலேறுக என்னும் பொருளுந் தொனிக்கின்றது.

தலைவி யிளைமைத்தன்மை பாங்கி தலைவற்குணர்த்தல்
   பொடிக்கின்ற கொங்கை யிடைவருத் தாமுனம் பூவிரவி
முடிக்கின்ற கங்குல் களம்வருத் தாமுன முத்தலைவேற்
பிடிக்கின்ற வங்கையர் வெங்கையி லேயிளம் பெண்ணினுக்கா
வடிக்கின்ற வேலண்ண லேயென்கொ லோசொல் வருந்துவதே.
   (111)
தலைவன் றலைவி வருத்தியவண்ண முரைத்தல்
   கருவுக்கு மாமருந் தானார்தென் வெங்கைக் கனகவெற்பிற்
பொருவுக்கு மாறொன்றி லாதெழுந் தோங்கிய பூண்முலையாய்
திருவுக்கு மாலைத் தருமெழில் கூர்நுந் திருந்திழைக்கு
மருவுக்கு வாசனை போல்வந்த தாலென்னை வாட்டுவதே.
   (112)
பாங்கி செவ்வியருமை செப்பல்
   கிளிக்குஞ் சுவையமு தூட்டாளக் கிள்ளைசொற் கேட்டுவவாள்
குளிக்குஞ் சுனையிற் குளியாள் சிலம்பெதிர் கூவுகிலாள்
அளிக்குந் தொழிலுடை யார்வெங்கை வாண ரணிவரைமேல்
துளிக்குஞ்செந் தேன்மலர்த் தாரா யவட்கென்ன சொல்லுவனே.
   (113)
தலைவன் செவ்வியெளிமைசெப்பல்
   தேன்வந்த கொன்றைச் சடையாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
கான்வந்த வேரிப் புனற்கோர் சிறுவழி காட்டுதல்போல்
யான்வந்த வாறு சிறிதுரைத் தாலிடை யீடின்றியே
தான்வந்து குங்குமக் கொங்கைக ளாரத் தழீஇக்கொளுமே.
   (114)
   111.11. பொடித்தல்-அரும்புதல். விரவல்-கலத்தல். கங்குல்-இரா; அஃது இரவைப்போலுங் கூந்தலையுணர்த்திற்று. வடித்தல்-கூர்மையாக்குதல். 112.12. பொருவுக்கு-ஒப்புச் சொல்வதற்கு. மால்-ஆசைப் பெருக்கம். கூர்தல்-மிகுதல். மரு-மணம். 113.13. அளிக்குந் தொழில் உடையார்-காக்குந் தொழிலையுடையவர். உவவாள்-மகிழாள். 114.14. கொன்றை-இருமடியாகு பெயர். கான்-காடு. ஏரி-பெருநீர்நிலை. இடையீடு-தடை.    

பாங்கி யென்னைமறைத்தபி னெளிதென நகுதல்
   குற்றா லமுந்தென் றிருவால வாயுங் குடியிருப்புப்
பெற்றார் பவர்திரு வெங்கையி லேயெங்கள் பெண்ணணங்கின்
முற்றா முலையை யெனைமறைத் தின்ப முயங்குறுதல்
கற்றா வினைமறைத் தேயதன் பாலைக் கறப்பதுவே.
   (115)
அந்நகைபொறாஅ தவன்புலம்பல்
   தடாது விளங்கொளி யானார் திருவெங்கைத் தையனல்லாய்
படாது வளர்முலை யால்வரு நோயைப் பரிகரித்து
விடாது நகைசெய் திகழ்வ தளற்றில் விழுந்தவரை
எடாது மரும முருவச்செவ் வேல்கொண் டெறிவதுவே.
   (116)
பாங்கி தலைவனைத் தேற்றல்
   தொடர்ந்தாளும் வெங்கைப் பழமலை வாணரச் சுந்தரர்சொற்
கடந்தாலு மென்சொற் கடவாள் வரிச்செங் கயன்மருட்டும்
விடந்தா ழயிற்கண் மடமான் றருமயல் வெள்ளத்திலே
கிடந்தா குலமுற்றி டேல்விடு வாயுன் கிலேசத்தையே.
   (117)
பாங்கி கையுறையேற்றல்
   ஏக நிலைத்த வுமைபாகன் வெங்கை யிமையவெற்பில்
மாக நிலத்தி லரிதாய வின்பம் வளர்ந்தெழுமே
பாக நிலப்பிறை வாணுத லாடன் பரவையல்குற்
போக நிலத்திலிட் டாளைய னேயுன்கைப் பூந்தழையே.
   (118)
   115.15. ஆர்தல்-வாழ்தல். பெண்ணணங்கு-பெண் தெய்வம். முயங்குறுதல்-புணரப்புகுதல். 116.16. தடாது விளங்கொளி-ஒரு பொருளாலுந் தடுக்கப்படாமல் விளங்குகிற ஒளி. பரிகரித்தல்-ஒழித்தல். அளறு-சேறு. மருமம்-மார்பு. 117.17. தொடர்ந்தாளல்-எழுமையுந் தொடர்ந்தாளுதல். மடமான்-உவமையாகுபெயர். மால்-மையல். வெள்ளம்-பெருக்கு. ஆகுலம்-வருத்தம். 118.18. ஏகம் நிலைத்த-ஒன்றாந்தன்மை நிலைபெற்ற. மாகநிலத்தில்-விண்ணுலகத்தில். மாகம்-விண்; மா-கம் எனப் பிரித்துப் பெரிய விண் எனினுமாம். பரவை-பரப்பு.    

கிழவோனாற்றல்
   வன்மொழி போல வுரைத்தவெல் லாமிந்த மங்கைநல்லாள்
இன்மொழி யேமனத் தன்புவி டாம லிசைத்தமையால்
மென்மொழி வாய்மைத் திருத்தொண்டர் தாமுனம் விட்டெறிந்த
கன்மொழி மாமல ரன்றோ திருவெங்கைக் கண்ணுதற்கே.
   (119)
குறையுணர்த்தல்
   வத்திர மைந்துடை யார்வெங்கை வாணர் வரையணங்கைப்
பத்திரங் கொண்டருச் சித்தே வரங்கொளும் பான்மையரை
ஒத்திரங் குள்ள மொடுபூந் தழைக்கை யொருவரின்று
சித்திர மொன்றனை யாயடைந் தார்நந் திருப்புனத்தே.
   (120)
இறைவி யறியாள்போன்று குறியாள்கூறல்
   வேலுக்கு மம்புக்கு மாறுகொண் டோடும் விழிமடவாய்
மாலுக்கு நன்மனை யாண்மனை யாகி வழங்கும்வல்ல
கோலுக்கு வல்லவண் ணாமலை யார்கட்டு கோயிலகப்
பாலுக்கு வந்தது கண்டாய்நம் வெங்கைப் பழமலையே.
   (121)
பாங்கி யிறையோற்கண்டமை பகர்தல்
   போரையும் வேளையு மாற்றிதன் வெங்கையிற் போதக்கண்டேன்
வாரையுங் கீள்பெருங் கொங்கையின் மேன்மனம் வைத்திருண்ட
காரையுஞ் சீறு மலர்க்குழ லாய்கரி யுங்கிரியும்
பேரையுஞ் சீரையுங் கேட்டுமுன் போந்த பெருந்தகையே.
   (122)
பாங்கியைத் தலைவிமறைத்தல்
   நாரண னான்முகன் காணார் சதானந்தர் ஞானபரி
பூரணர் வெங்கைப் பழமலை வாணர் பொருப்பின்மலர்த்
தாரணி வார்குழ லாய்நிந்தை கூறத் தகாதுகண்டாய்
காரண மின்றிக் கலுழ்வா ரொருவரைக் கண்டுகொண்டே.
   (123)
பாங்கி யென்னைமறைப்பதென்னெனத்தழால்
   மேலிலை யென்ன வுயர்ந்தார் திருவெங்கை வெற்பிலுள
மாலிலை யென்ன வெனைமறைத் தாய்திரு மாலுறங்கும்
ஆலிலை யன்ன வயிற்றணங் கேயருந் தாய்க்கொளித்த
சூலிலை நெஞ்சறி யாவஞ் சகமிலைச் சொல்லுதற்கே.
   (124)
   119.19. இசைத்தல்-சொல்லுதல். வாய்மை-உண்மை. 120. வத்திரம்-முகம். அணங்கு-தெய்வப்பெண். பத்திரம்-தழை. பான்மை-தன்மை. இரங்குள்ளம்-இரக்கங்கொண்ட மனம். 121. மாறு கொண்டு-பகைமைகொண்டு. வழங்கல்-கொடுத்தல். 122. இருண்ட கார்-இருண்ட முகில். கீள்-கிழிக்கின்ற. பெருந்தகை-பெருங் குணமுள்ளவன். 123. பொருப்பு-மலை. தார்-மாலை, வார்-நீட்சி. கலுழ்தல்-மனங் கலங்குதல். 124. மேல் இல்லை என்ன-தமக்குமேலொரு தெய்வம் இல்லையென்னுமாறு. மால்-ஆசை. என்னை மறைத்தாய்-எனக்கு ஒளித்தாய்.
   
பாங்கி கையுறைபுகழ்தல்
   நீரை யணியுந் திருச்சடை யார்வெங்கை நித்தர்வெற்பில்
தாரை யணியு மதன்றேர்கண் டம்ம தழைத்ததுகாண்
வாரை யணியு முகிண்முலை யாயணி வாய்த்தவல்குற்
றேரை யுணியுந் தகுதிய தாமிந்தச் செந்தழையே.
   (125)
தோழி கிழவோன் றுயர்நிலை கிளத்தல்
   வளங்கனி வெங்கைப் பழமலை வாணர் வரையினவர்
உளங்கனி வெண்மருப் போர்மத யானை யொளிர்நுதலாய்
களங்கனி யன்ன மடப்பிடி வாயிற் கனிந்துவிழும்
விளங்கனி நல்கக்கண் டானாரஃ துண்ணும் விளங்கனியே.
   (126)
மறுத்தற் கருமைமாட்டல்
   நந்தா வொளியர் திருவெங்கை நாட்டி னமக்களிப்பச்
சந்தா டவியு ளிறைவர்கொய் யாப்பைந் தழையுமில்லை
முந்தா வவர்க்கெதிர் நானுரை யாப்பொய்ம் மொழியுமில்லை
வந்தா லினியெனக் கில்லைபெண் ணேயொரு வார்த்தையுமே.
   (127)
தலைவன் குறிப்புவேறாக நெறிப்படக்கூறல்
   போருடை யானுடை யார்வெங்கை வாணர் பொருப்பின்மணித்
தேருடை யார்கருத் தேதோ வறிந்திலந் தேமொழியாய்
ஆருடை யானினும் வேம்புடை யானினு மையபனைத்
தாருடை யானல னோமதி மானெனச் சாற்றினரே.
   (128)
தலைவியை முனிதல்
   மறியே றியகைத் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
சிறியேனம் மெய்க ளிரண்டினும் வாழந்திடுஞ் செய்யவுயிர்
எறியே ரயில்விழி யாயின்று காறு மிரண்டென்பதை
அறியே னறிந்தன னேலுரை யேனிவ் வடாதனவே.
   (129)
   125. மதன்தேர்-தென்றற் காற்று. அணிவாய்த்த-அழகு பொருந்திய. 126. வளம்கனி-எல்லா வளங்களு மிகுந்த. களங்கனி-களாப்பழம். 127. நந்தா ஒளியர்-கெடாத ஒளியை உடையவர். சந்தாடவி-சந்தனக்காடு. 128. ஆன் உடையார்-காளையூர்தியை உடையவர். ஆருடையான்-சோழன். வேம்புடையான்-பாண்டியன். பனைத்தாருடையான்-சேரன். ஆருடையான் சிவபெருமான், வேம்புடையான் ஆனை முகக் கடவுள், பனைத்தாருடையான் பல தேவன் என்னும் பொருளுந் தோன்றுகின்றது. 129. மறி-மான்கன்று. மெய்-உடம்பு. அடாதன-தகாத வார்த்தைகள்.
    
தலைவி பாங்கியை முனிதல்
   நாட்டு மலிபுகழ் வெங்கைபு ரேசர் நயந்துகதி
காட்டு மமல ரருளான்முன் றெய்வங் கடைப்பிடித்துக்
கூட்டு மொருவரைத் தானே நடுநின்று கூட்டுதல்போல்
ஈட்டு மொழிகள் பலபகர்ந் தாளிவட் கென்சொல்வதே.
   (130)
தலைவி கையுறையேற்றல்
   பலர்செய்த மென்றுதி யாயினுங் கொச்சையம் பாலன்முதற்
சிலர்செய்த வின்றமி ழிச்சையி னார்திரு வெங்கையன்னாய்
அலர்செய்து நிற்பதொன் றாயினு மாக வனங்கனெய்யும்
மலர்செய்த நோய்மருந் தாமாயி னல்குக மாந்தழையே.
   (131)
இறைவி கையிறையேற்றமை பாங்கி இறைவற்குணர்த்தல்
   இரைத்துப் பொருகங்கை வேணியர் வெங்கை யிறைதழையென்
றுரைத்துக் கொடுத்தலு மோடிவந் தேற்ற துயிர்த்துமுத்தம்
நிரைத்துக் கிடக்கு முலைமே லழுத்தின ணேரிழைதான்
அரைத்துக் குடித்தில ளன்பசெய் யாதது மவ்வளவே.
   (132)
பாங்கி தலைமகற்குக் குறியிடங்கூறல்
   அகலி லிருக்குஞ் சுடரென வெங்கை யகத்திருக்கும்
புகலி லிருக்கும் பொருளனை யார்தம் பொருப்பருகே
இகலி லிருக்குங் கதிர்வே லிறைவ விரவுகடும்
பகலி லிருக்கும் பொழில்பகல் யாங்கள் பயிலிடமே.
   (133)
   130. அமலர்-தூயவர். நற்கதி-வீடுபேறு. தெய்வம்-ஊழ். 131. மென்துதி-இனியதுதி. கொச்சை-சீகாழி. அநங்கன்-உருவிலி. 132. பொருதல்-கரையை மோதுதல். உயிர்த்தல்-மூச்சு விடுதல். நேரிழை-அன்மொழித்தொகை. 133. புகலில் இருக்கும்-சொல்லினிடத்தே யிருக்கிற. இகலில் இருக்கும்-பகைவர் மீதே நாட்டமாயிருக்கிற.    

பாங்கி குறியிடத்திறைவியைக் கொண்டுசேறல்
   புணர்பூத்த வார்முலை யாய்மலர் தாங்கொய்யப் போதுவமந்
தணர்பூத்த சொன்மலர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
இணர்பூத்த கட்கவர் வண்டிசை கூரு மிளங்கொடிப்பெண்
துணர்பூத்த கொம்பர்க் கொழுநனொ டாடிய சோலையிலே.
   (134)
குறியிடத்துய்த்து நீங்கல்
   மானேநின் கண்ணிகல் பெற்றுள வாவி மருவலரை
யானே யளியினம் பின்றொடர்ந் தார்ப்பக்கொண் டிங்குறுவேன்
ஆனே றுடையர் திருவெங்கை வாண ரருண்முருகன்
தானே முறுமயி லாடல்கண் டேநிற்க தண்பொழிற்கே.
   (135)
இறையோனிடத்தெதிர்ப்படுதல்
   இயலோடு மல்குந் திருவெங்கை வாண ரிமயவெற்பிற்
கயலோடு வள்ளைக் கொடியோடு மோர்பைங் கமுகணங்கும்
புயலோடு நல்லிள நீரோடு நின்று புடைபெயருஞ்
செயலோடு நிற்பவிங் கின்றுகண் டேனொரு தீங்கரும்பே.
   (136)
புணர்ச்சியின் மகிழ்தல்
   மற்றின்ப முண்டென்ப தன்றா லிவடர வந்தவின்பஞ்
சிற்றின்ப மென்பது தென்வெங்கை வாணர் திருநடனம்
உற்றின்பஞ் செய்யுஞ் சிதாகாசந் தன்னை யுணர்வுடைமை
பெற்றின்ப மெய்தினர் சொல்வர்சிற் றம்பலப் பேர்புனைந்தே.
   (137)
புகழ்தல்
   வெங்கை பழமலை யெம்மா னுழையும் விளங்குமவன்
பங்கைப் பெறுமுமை செங்கா வியுமவள் பாலனொரு
செங்கைக் கதிர்வடி வேலுந் தரிப்பது செப்பிலிந்தக்
கொங்கைக் குடமுடை யாள்விழி காட்டுங் குறிப்பதுவே.
   (138)
   134. புணர்பூத்த-நெருக்கத்தைக் கொண்ட. இணர்பூத்த-பூங்கொத்துக்களில் உண்டாகிய. இசை கூரும்-இசையைப் பாடும். 135. இகல் பெற்றுள்ள-பகைமையைக் கொண்டிருக்கிற. ஆவி மருவலரை-தடாகத்தில் உள்ள மலர்களை. மருஅலர்-மணமுள்ள மலர். ஏமுறும்-மகிழும். 136. இயலோடு மல்கும்-இயலோடு பொருந்திய. அணங்கும்-வருத்துகிற. தீங்கரும்பு-தலைவி. கயல்-கண். வள்ளைக் கொடி-காது. பைங்கமுகு-கழுத்து. புயல்-கூந்தல். இளநீர்-தனம். 137. ஆன்றோர்கள் பேரின்பந்தரும் பேரம்பலத்தைச் சிற்றம்பலமென்று கூறுவார்கள். அதைப்போல இவள் தரும் பேரின்பமுஞ் சிற்றின்பம் என்று கூறப்படுகிறது. இதனினும் பேரின்பம் என்பது ஒன்று இல்லை யென்பதாம். 138. உழை-மான். பங்கு-பாகம். வடிவேல்-வடித்தவேல். செப்புதல்-சொல்லுதல்.
   
தலைமகளைத் தலைமகன்விடுத்தல்
   நீயாவி வந்தளித் தாய்தமி யேற்கு நிலாமலினிப்
போயாவி நல்கிநிற் காணா தலமரும் பூவையர்க்கு
மாயாவி னோதர் திருவெங்கை வாணர் வரையினெதிர்
கூயாவி மென்மலர் கொய்துநின் றாடுக கோமளமே.
   (139)
பாங்கி தலைவியைச்சார்ந்து கையுறைகாட்டல்
   நஞ்ச மமுதுசெய் வெங்கைபு ரேசர்நன் னாடனையாய்
அஞ்ச முறவளி யெல்லா மடக்கி யமுதவொளி
விஞ்சு மதிகண் டிதழ்மூடி யோகம் விளைத்ததனாற்
கஞ்ச மிதுமுக சாரூபம் பெற்றது கைக்கொள்கவே.
   (140)
தலைவியைப் பாங்கிற்கூட்டல்
   கங்கை விழியு முகமுஞ்செவ் வாயுங் கரந்துமைக்குச்
செங்கை யலுஞ்செங் கமலமு மாம்பலுஞ் செப்புமவர்
வெங்கை யனைய விலங்கிலை வேற்கண் விளங்கிழையாய்
மங்கை யரையடைந் தம்மனை யாடுகம் வந்தருளே.
   (141)
நீங்கித் தலைவற்கோம்படைசாற்றல்
   பிறவா வடிவன் றிருவெங்கை மேவும் பிரானொடுபோய்
உறவா ருயிருற வேயாக்குஞ் சத்தியை யொப்பவின்று
குறவாணர் தங்கண் மடமாதை நின்னொடு கூட்டுமெனை
மறவா திருமன் னவாவிது வேநல் வரமெனக்கே.
   (142)
   139. ஆவி-உயிர். அளித்தல்-கொடுத்தல். அலமரல்-மனங் கலங்கல். பூவையர்-பூவைபோல்வார். ஆவி மென்மலர்-நீர்ப்பூ. கோமளம்-இளமையும் அழகுமுடையவள். 140. வளியெல்லாம் அடக்கி-வாயு முழுவதையும்அடக்கி. முகசாரூபம் பெற்றது-உன் முகவடிவத்தைப் பெற்றது. அஞ்சம் உற-அன்னப் பறவை பொருந்த. 141. கரத்தல்-மறைத்தல். விளங்கிழை-வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகைக் காரணப்பெயர். 142. பிரான்-உபகார குணமுள்ளவன். குறவாணர் தங்கள் மடமாது-தலைவி. நல்வரம்-சிறந்த வரம்.
   
உலகியன்மேம்பட விருந்துவிலக்கல்
   மாயற் கரியர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
ஈயற் பொரியுங் குறும்பூழ்க் குழம்புட னேனமெல்லூன்
தீயற் கறியுந் தினைமூ ரலுமெஞ் சிறுகுடில்வாய்
நேயத் திவண்மிசைந் தேகிலென் னாகு நெடுந்தகையே.
   (143)
விருந்திறை விரும்பல்
   நானக் களப முலையீ ரெனக்கு நவில்வதென்னீர்
வானத் தவர்தொழு தேத்துறுஞ் சீர்வெங்கை வாணர்க்குங்கள்
கானக் குறவ ரிறைமகன் றான்முனங் கல்லையிற்பெய்
ஏனத் தசைக்கறி யன்றோ மிகவு மினியதுவே.
   (144)
பகற்குறி
கிழவோன்பிரிந்துழிக் கிழத்தி மாலையம்பொழுதுகண்டிரங்கல்
   நந்தா மதுகைப் பழமலை யார்வெங்கை நாடனையாய்
வந்தாவி யம்புயம் வாட்டுமுன் னாளிலம் மாலையன்று
சிந்தா குலமுற வேதனித் தாரைச் செறுக்குமதன்
செந்தா மரையை மலர்த்துமிம் மாலைச் சிறுபொழுதே.
   (145)
   143. மாயற்கரியர்-திருமாலுக்கும் அருமையானவர். ஈயல்-இந்திர கோபம். குறும்பூழ்-காடை. ஏனம்-பன்றி. மூரல்-சோறு. மிசைதல்-உண்டல். 144. நானம்-கத்தூரி. களபம்-கலவைச் சந்தனம். நவில்வது-சொல்வது. வானம்-இடவாகு பெயரால் விண்ணுலகத்தைக் குறித்து நின்றது. கல்லை-இலைக்கலம். ஏனம்-பன்றி. 145. நந்துதல்-கெடுத்தல். மதுகை-வலி. தனித்தார்-தனித்திருப்பவர்.
   
பாங்கிபுலம்பல்
   அருந்தா விடமு மருந்தியவ் வானவ ராருயிரைத்
தருந்தாரு வெங்கையி லெவ்வகை யானுந் தனைத்தப்பியே
இருந்தாலு மாவி கவர்வான் மதிப்பிள்ளை யீன்றுவைக்கும்
பெருந்தாப மாலைக் கிவளென்கொ லோபிழை செய்ததுவே.
   (146)
தலைவனீடத் தலைவிவருந்தல்
   கருமுன் படுந்துயர் தீர்ப்பார்நற் கட்செவிக் கங்கணவீ
ரிருமுன் கரமுடை யார்வெங்கை வாணரிமயவெற்பில்
அருமுன் மணியும் புனைபூந் துகிலுங்கொண் டாயவெள்ளம்
வருமுன்வந் தாரிலை யேயணை கோலநம் மன்னவரே.
   (147)
தலைவியைப் பாங்கிகழறல்
   புணர்ந்தாருள் வெங்கை புரநாதர் பாகம் புணர்ந்தநறு
மணந்தாழ் குழுலுமை மங்கையல் லாமன் மகிழ்நர்தமைத்
தணந்தா ரமைகிலர் நீதரி யாமற் றளர்ந்தனையேல்
பணந்தா ழகலல்கு லாய்நகு வார்நினைப் பார்த்தவரே.
   (148)
தலைவி முன்னிலைப்புறமொழி மொழிதல்
   உரையாத முன்ன முணர்வார் தமக்கன்றி யுற்றதன்னோய்
வரையாம லுள்ளவெல் லாமுரைத் தாலு மதித்துமனங்
கரையாத வர்கட் குரைப்பதின் வெங்கைக் கடிவுளுண்ட
திரையால முண்டுயிர் நீத்தாலு நன்று தெரிந்தவர்க்கே.
   (149)
பாங்கியொடு பகர்தல்
   வன்பந் தகனை யழைக்குநஞ் சூணின் மறைப்பவர்போல்
முன்பந் தனையிலர் வெங்கையின் மேவி முயங்குறுபேர்
இன்பந் தருமவ ரவ்வின்ப மூடுற வின்றுபிரி
துன்பங் கலந்தளித் தாரறிந் தேனிலைத் தூமொழியே.
   (150)
   146. தாரு-கற்பகருவை நிகர்த்த சிவபிரான். வானவர்-விண்ணுலகத்திலுள்ள தேவர்கள். தாபம்-வெப்பம். 147. கருமுன்-கருப்பத்தில். கட்செவி-பாம்பு. அணைகோல-அணைகட்ட. முன்மணி-முத்து. 148. புணர்ந்தார்-கூடியவர். தாழ்தல்-தங்குதல். தரித்தல்-ஆற்றியிருத்தல். நகுதல்-நகைத்தல். பணம்-பாம்பின் படம். தணத்தல்-பிரிதல். 149. உணர்வார்-குறிப்பறிவோர். வரைதல்-அளவு படுத்தல். கடவுள்-தொழிலாகு பெயர். திரை-அலை. அது கடலையுணர்த்தலாற் சினையாகு பெயர். 150. வன்பு-வன்மை. அந்தகனையழைத்தலாவது சாவுக்கேதுவாதல்.
   
பாங்கியக்சுறுத்தல்
   சுனைக்காவி யன்ன விழிநீ புனத்திற் சுகங்கடியா
துனைக்காதல் செய்தவர் தம்பொருட் டாக வுலைதல்கண்டு
வினைக்கா டெறியு மழுவார் திருவெங்கை வெற்பிலன்னை
தினைக்காவன் மற்றொரு வர்க்களித் தாலென்னை செய்குவையே.
   (151)
நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்
   தம்மா வியுந்தந் தலைவரும் வேறு தருமவரே
அம்மா வுலகிற் பிரிந்திருப் பாரளி மூசுமதக்
கைம்மா வுரியர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
எம்மா வியேயவ ரென்றாற் பிரிகுவ தெவ்வண்ணமே.
   (152)
தலைவிக்கவன்வரல் பாங்கிசாற்றல்
   கடிக்குங் கரும்பு மதவேள் சிலையவன் கைப்பகழி
முடிக்குங் கடிமல ராமினிக் கேள்வெம் முயலகன்மேல்
நடிக்குங் கமல பதத்தார் திருவெங்கை நாடனையாய்
வடிக்குஞ் சுடரிலை வேலன்பர் தேரின் மணிக்குரலே.
   (153)
சிறைப்புறமாகச் செறிப்பறிவுறுத்தல்
   தழலாற் கடிய வளியே நறுமென் றழைகள்கொய்யக்
கழலார்ப் புறுமென் பதத்தார் புனத்தினுங் காவகத்துஞ்
சுழலாத் திரியுங் கிளிகா ளினிவெங்கைச் சோதிவெற்பில்
நிழலாற் பொலிந்த விளம்பொழிற் கேயிரு நெஞ்சுவந்தே.
   (154)
முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்
   தொண்டா வெமையுடை யான்வெங்கை சூழிளஞ் சோலையிற்பூந்
தண்டா தளவு மளிகா ளுமக்குத் தகாதுகண்டீர்
கண்டா னினைந்துபின் காணாத போதெங் களைமறக்கும்
வண்டா ரிறைவ ரொடுகூடி யெம்மை மறப்பதுவே.
   (155)
முன்னின்றுணர்த்தல்
   நனைகாத்த பூமட வார்விழி யாக நயந்தருளங்
கனைகாத்த பாகர்தம் வெங்கையி லேவண்டு காவிமலர்ச்
சுனைகாத்த வெற்பெமர் வேலண்ண லேயிச் சுகங்கடிந்து
தினைகாத்த வெம்மைத் துயர்புகக் காப்பர் செறித்தினியே.
   (156)
   151. காவி-கருங்குவளை மலர். புனம்-தினைப்புனம். கடிதல்-ஓட்டுதல். உலைதல்-வருந்துதல். வினைக்காடு-தீவினைக்காடு. எறிதல்-அறக்களைதல். 152. அளி-வண்டு. மூசல்-மொய்த்தல். கைம்மா-யானை. உரி-தோல். கனகம்-பொன். ஆவி-உயிர். ஏ : இரங்கற் குறிப்பு. 153. கடிக்கும் கரும்பு-நீ கடித்துண்ணங் கரும்பாகும். முடிக்கும்-தலையில் அணிந்து கொள்ளும். 154. தழல்-கவண். கொய்தல்-பறித்தல். பதம்-பாதம். கா-சோலை. நெஞ்சு வந்து இரும் என இயைக்க. 155. வள்தார்-வளவிய பூமாலை. அளவுதல்-அளைதல். 156. அங்கனை-பெண். செறித்து-இற்செறித்து, காப்பர்-காவல்செய்வர். பூமடவார் என்றது திருமகள். கலைமகள், மண்மகள் என்பவரை.
   
முன்னின்றுணர்த்தி யோம்படைசாற்றல்
   அந்திப் பொழுதிற் பெடைதா மரையு ளகப்படநோம்
புந்திச் சுரும்பு கதிர்வருங் காறும் புறந்திரியும்
நந்திக் கொடிவலங் கொண்டோன் றிருவெங்கை நாட்டிறைவ
சிந்தித் தெமைமற வாதிரு நீநின் றிருவுளத்தே.
   (157)
கிழவோன்றஞ்சம் பெறாது நெஞ்சொடுகிளத்தல்
   தூற்றிக் கடிமலர்ப் பைந்தேன் கவர்ந்து சுரும்பினங்கள்
ஏற்றிக் குவடுற வைத்தாங் கிதணி னிருந்தவரை
நீற்றிற் றிகழ்வடி வார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்
போற்றிக் குறவர்வைத் தான்மன மேயென் புரிகுவமே.
   (158)
பகற் குறியிடையீடு
இறைவனைப்பாங்கி குறிவரல்விலக்கல்
   கானக் குறவர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
ஏனக் குரலரி வான்குறித் தாரன்னை யென்பவளும்
மானக் கயல்விழி யாள்குர லீர வருவதுபோற்
றேனக் கலர்தொடை யாய்வரு வாளித் தினைப்புனத்தே.
   (159)
இறைவியைக் குறிவரல்விலக்கல்
   மாடுண்ட வீரப் பிறையார்தென் வெங்கை வரையினிலுன்
சேடுண்ட கொங்கைப் பசலைகண் டேதினைக் காப்பயிர்த்துத்
தோடுண்ட காதுடை யாயன்னை தானுந் துணிந்திலளீ
யோடுண்ட கூழென வேமறு காநிற்கு முள்ளமுமே.
   (160)
   157., பெடை-பெண்வண்டு, அகப்பட-சிக்கிக்கொள்ள. சுரும்பு-ஆண்வண்டு. புறம்திரியும்-புறத்தே திரிகிற. 158. தூற்றுதல்-இறைத்தல். கடி-மணம். பரண்மீதிருந்தவர் என்றது தலைவியை. வடிவு-திருமேனி. போற்றுதல்-சிறைப்படுத்தல். புரிதல்-செய்தல். 159. கானம்-காடு. அரிவான்- அரிய. அரிதல்-கொய்தல். குறித்தல்-நினைத்தல். குரல்-தினைக்கதிர். ஈர்தல்- கொய்தல். நகுதல்-விளங்குதல். தொடை-மாலை; தொடுக்கப்பெறுவது தொழிலாகு பெயர். 160. தோடுண்ட-தோடணிந்த. மாடுண்ட-செல்வமாகக் கொண்ட. ஈரம்-குளிர்ச்சி. சேடு-அழகு; இளமை திரட்சி என்பனவுமாம். அயிர்த்தல்-ஐயுறல். துணிதல்-உறுதி செய்தல். மறுகுதல்-மயங்குதல்.    

இறைமகளாடிட நோக்கியழுங்கல்
   நீடுந் தினையிற் கிளிநோக் குதலென நின்றுநம்மோ
டாடுந் தலைவர் வரனோக் கிதணு மவருடனே
கூடுந் தொழின்மறைக் குஞ்சுனை யோடலர் கொய்யுமலர்க்
காடும் பிரிவுறச் செய்வதென் னோவெங்கைக் கண்ணுதலே.
   (161)
பாங்கியாடிடம் விடுத்துக்கொண்டகறல்
   வயிரோ சனனுக் குலகீந் தவர்வெங்கை மன்னனுக்குப்
பயிரோ டுறவற நீத்தாளென் றெண்ணிப் பழுதுரையல்
செயிரோ சிறிது மிலாக்கிளி காடன் சிறுகுடிலுக்
குயிரோ டரிவை நடந்துசென் றாளென் றுரைமின்களே.
   (162)
பின்னாணெடுந்தகை குறிவயினீடுசென்றிரங்கல்
   தன்னோ டிருந்த பொழுதிளஞ் சோலைசெய் தன்மைகண்டேற்
கன்னோ தனியிருந் தாற்செய்யு மாறு மறிவிக்கவோ
மின்னோ வெனநின் றவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
என்னோ வறிந்தருள் செய்வான் வராம லிருந்ததுவே.
   (163)
வறுங்கள நாடிமறுகல்
   பெறுங்கள நஞ்ச முடையா ரடியவர் பிள்ளைதனை
அறுங்கள மென்னு மொருவெங்கை வாண ரணிவரைமேல்
நறுங்கள வன்ன குழனீங்க மங்கல நாணிழந்த
வறுங்கள மென்ன விருந்ததந் தோவிம் மணியிதணே.
   (164)
   161. தினையில்-தினைப்புனத்தில். என்னோவென்னுமோகாரம் இரங்கல். 162. வயிரோசனன்-மகாபலி. இவன் விரோசனன் என்பவனுடைய மகனாகையால் வயிரோசனன் எனப்பட்டான். செயிர்-குற்றம். 163. தன்னோடு-தலைவியோடு. இளஞ்சோலை செய்தன்மை-இன்பம். தனியிருந்தாற் செய்யுமாறு-துன்பம். என்னோ: இரங்கற் குறிப்பு; வியப்பீடைச் சொல்லுமாம். 164. களம்-கழுத்து. அடியவர் என்றது சிறுத்தொண்டரை. பிள்ளையென்றது. சீராளனை. வறுங்களம்-வெறுங்கழுத்து. தலைவியிருந்தபோது மங்கலமாகக் காணப்பட்டது பின் தலைவி சென்றபிறகு அமங்கலமாகக் காணப்பட்டதென்பது கருத்து.    

குறுந்தொடிவாழு மூர்நோக்கி மதிமயங்கல்
   அறத்தா றுடையர் நுகர்பெரும் போக மறமறியா
மறத்தா றுடையர் விரும்புதல் போலும் வளர்சடையின்
புறத்தா றுடையர் திருவெங்கை வாணர் பொருப்படைந்த
குறத்தா றுடையர் மடமாதை மேவக் குறிப்பதுவே.
   (165)
இரவுக்குறி
இறையோ னிருட்குறிவேண்டல்
   பொருந்தா ரரணம் பொடித்தோர் பவப்பிணி போக்குதற்கு
மருந்தா மிறைவர் திருவெங்கை வாணர் வரையனையீர்
திருந்தார் கலியிற் புகுந்துநன் மீன்வரச் செய்துமக்கு
விருந்தாக வைத்தகன் றானளி யேனையவ் வெய்யவனே.
   (166)
பாங்கிநெறியின் தருமைகூறல்
   அங்க முழுவணி யானோன்றென் வெங்கை யரனருண்மா
தங்க முழுமத யானையன் றாடகற் சாடுமொரு
சிங்க முழுவரி யன்றென வேழமுஞ் சீயமுஞ்சேர்
துங்க முழுவன மெவ்வா றிருள்வரச் சொல்லுவதே.
   (167)
இறையோனெறியின தெளிமைகூறல்
   பங்கந் தனக்கிலன் வெங்கையி லேநும் பணைமுலைமா
தங்கந் தனக்குமம் மாதங்க பாரந் தரிக்குமிடைச்
சிங்கந் தனக்குத் தளர்வதல் லாமற் சினவிலங்கின்
சங்கந் தனக்கொரு நானோ தளர்குவன் றாழ்குழலே,
   (168)
   165. அறத்தாறு-அறநெறி. நுகர்தல்-அனுபவித்தல். பெரும்போகம்-பேரின்பம். உடையர்-பாவிகள். குறத்தாறு-குறவர் மரபு. 166. பொருந்தார்-பகைவர். அரணம்-மதில். ஆர்கலி-கடல். மீன்-உடுக்கள். 167. மாதங்கம்-யானை. ஆடகன்-இரணியன். முழு அரி-முழுச் சிங்கம். துங்கம்-உயர்ச்சி. முழுவனம்-பெருங்காடு. 168. எக்காலத்தும் அழிவற்றவனாகையால் இறைவனைப் பங்கந் தனக்கிலன் என்றார். பணைத்தல்-பருத்தல். சங்கம்-கூட்டம்.    

பாங்கி யவனாட்டணியியல் வினாதல்
   போதேது கொய்வ ரிழையே தணிவர் பொழில்விளையாட்
டேதேது செய்வர் புனலேது தோய்வ ரெமைத்துதிப்பிற்
றீதேது மில்லை யெனும்வெங்கை வாணர் செழுஞ்சிலம்ப
சூதே தெனுமுலை யாருங்க ணாட்டியற் சொல்லுகவே,
   (169)
கிழவோனவணாட் டணியியல் வினாதல்
   என்னாட் டணியிய லென்னாயி னென்னுனக் கென்றனக்குப்
பொன்னாட் டணியிய லெல்லாங் கவர்ந்து புகழ்மலிந்த
சொன்னாட் டணியியல் வெங்கைபு ரேசர் சுடர்கிரிசூழ்
நின்னாட் டணியிய லெல்லா முரைத்தரு ணேரிழையே,
   (170)
அவற்குத் தன்னாட்டணியியல் பாங்கிசாற்றல்
   பிறைக்கோலஞ் செய்யு நுதுற்சூட் டணிகுவர் பெய்வளையால்
இறைக்கோலஞ் செய்வர் சினையா டுவரவ் விரதிதனைச்
சிறைக்கோலஞ் செய்யும் விழியார்தம் வெங்கைச் சிலம்பமதன்
நறைக்கோலஞ் செய்ய நறைக்கோலஞ் செய்வரென் னாட்டவரே.
   (171)
இறைவிக் கிறையோன் குறையறிவுறுத்தல்
   வன்மானு மென்முலைச் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்
வின்மான் மதிக்கை யரவிந்தம் வாடவவ் வேள்விதரும்
நன்மான் கரத்தர்தம் வெங்கையி லேயிற்றை நாளிரவில்
நின்மான் மதிமுகங் காண்பான் விரும்பு நெடுந்தகையே,
   (172)
   169. இழை-அணிகலன். பொழில்-சோலை. தோய்தல்-மூழ்குதல். சூது-சூதாடு கருவி, 170. பொன்னாட்டு-தேவருலகத்தின். சொல் நாட்டு-சொல்லை நிலைநிறுத்தின. நேரிழை-அன்மொழித் தொகை. கவர்தல்-பற்றுதல்.171. நுதற் சூட்டு-நெற்றிச்சுட்டி. பெய்தல்-இடுதல். இறை-முன்கை. ஆடுதல்-குளித்தல். நறைக்கோல்-மணமுள்ள மலர்க்கணை. 172. வல்மானும்-சூதாடு கருவியை ஒக்கும். சேயரி-செவ்வரி. வில்-ஒளி.
   
நேராதிறைவி நெஞ்சொடுகிளத்தல்
   ஒலியா லசையச் சருகெழத் தோகை யுடன்குதிப்பப்
புலியா வெனவெழக் குஞ்சர மோடப் புளிநரெல்லாம்
மெலியா விரையும் வனத்தே யிறைதிரு வெங்கைவெற்பில்
மலியா ரிருள்வர நெஞ்சமெவ் வாறு வலிப்பதுவே.
   (173)
நேரிழை பாங்கியொடு நேர்ந்துரைத்தல்
   மின்னோடு வந்த விரிசடை யோன்றிரு வெங்கைவெற்பர்
மன்னோடு நீயிருள் வந்தே கெனச்சொன் மடந்தைநல்லாய்
என்னோடு கூடி யிருப்பது போல விருந்துமனம்
உன்னோடு கூடி னினியேது நானிங் குரைப்பதுவே.
   (174)
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக்குரைத்தல்
   கொலையைக் குறித்த விலைவே லவநின் குறிப்பிசைய
முலையைப் புணர்மென் கொடியிடை யாடன் முரணுமனச்
சிலையைக் கரைத்துவந் தேனொரு நான்வெங்கைச் செல்வரைப்போல்
மலையைக் குழைக்கவும் வல்லே னினியிந்த மாநிலத்தே,
   (175)
குறியிடைநிறீஇத் தாய்துயிலறிதல்
   விந்தா சலமுனி மாதவன் போற்றரன் வெங்கைவெற்பில்
சந்தா டவிகண் முறித்தெறி வேலொடு தண்புனத்தில்
வந்தா குலநமக் காக்கிய வாரணம் வந்துற்றதோ
நந்தா வனத்திற் பறவையெல் லாமு நரல்கின்றவே,
   (176)
   173. குஞ்சரம்-யானை. தோகை-சினையாகுபெயர். மலியார் இருள்-மிகப்பெரிய இருள். வலிப்பது-உறுதி கொண்டிருப்பது. 174. மின்னோடுவந்த-மின்னோடு கூடிவிளங்குகிற. மன்னோடு-தலைவனோடு: 175. ஒருநான்-ஒப்பற்ற நான். முரணும்-மாறுபட்ட-மனச்சிலை-மனமாகிய கல். 176. விந்தாசலம்-விந்தமலை. முனி-சினந்த. சந்தாடவிகள்-சந்தனக்காடுகள். ஆகுலம்-வருத்தம். நரலல்-ஒலித்தல்.    

இறைவிக் கிறைவன் வரவறிவுறித்தல்
   மேனைக் குரிய மருமக னார்திரு வெங்கைவெற்பில்
மானைக் கடந்து செவியள வோடு மதர்விழியாய்
யானைக் கரியு மரிக்குச் சரபமு மாகியிந்தக்
கானைக் கடந்துவந் தாருயிர் போலுநங் காவலரே,
   (177)
அவட்கொண்டு சேறல்
   முருந்தா நகையுமை பங்காளர் வெங்கை முதுகிரிமேல்
இருந்தா மரைகண் மறுத்தவிப் போதி லிதழ்திறந்து
விருந்தா மளிகட் கினிதூட்டு மல்லிகை மென்மலர்கொய்
தருந்தா ரணிகுவ னில்லா தெழுந்தரு ளாரணங்கே,
   (178)
குறியுய்த்தகறல்
   காதா ரமுதம் பெறவேண்டி யன்றொரு காரிகைபாற்
றூதாய் நடந்த திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
போதார் மலர்மல் லிகையொடு முல்லையும் போய்க்கொணர்வேன்
பாதார விந்தம் வருந்தா திவணிற்க பைங்கொடியே.
   (179)
வண்டுறைதாரோன் வந்தெதிர்ப்படுதல்
   தாட்டா மரையென் றலைக்கணி வோன்வெங்கைத் தண்சிலம்பிற்
றீட்டா வொருநடை யோவியம் போலுந் திருவுருவீர்
ஆட்டா னெனுங்கதி ரேடாங் கதவடைத் தாங்கதன்மேற்
பூட்டா மளியுறப் பூட்டிற்றன் றோவுங்கள் பூவகமே.
   (180)
பெருமகளாற்றின தருமைநினைந்திரங்கல்
   விண்டெரி யாது முகிலான் முகில்பொழி வெள்ளத்தினால்
மண்டெரி யாதெவ் வகையடைந் தாயன்ப மாறன்வயற்
கண்டெரி யாவிரு ளிற்போ மருமை கருதியன்றோ
பண்டெரி யாயொளிர் வெங்கைப் பிரான்பதம் பாலித்ததே.
   (181)
   177. மேனை-மேருமலையின் மகள்; மலையரசன் மனைவி; இவளுக்கு மநோரமை என்றும் பெயருண்டு. கங்கையும் உமாதேவியும் இவளுடைய பெண்கள். மானைக்கடந்து-மானைவென்று. கான்-காடு. 178. முருந்து-மயிலிறகின் அடி. பங்காளர்-இடப்பாகத்திலுள்ளவர். 179. காதாரமுதம்-சுந்தரருடைய தேவாரப்பாடல்கள். காரிகை-பரவையார். ஆர்தல்-உண்டல். போது-பேரரும்பு. 180. தாட்டாமரை-தாளாகிய தாமரை; தாமரை மலர்போலுந் தாள். தீட்டல்-எழுதுதல். நடை ஓவியம்-நடத்தலைச் செய்யும் ஓவியம். 181. வெள்ளம்-நீர்ப் பெருக்கு. மாறன்-இளையான் குடிமாறநாயனார். பதம்-திருவடி. பாலித்தல்-தந்தருளல்.

புரவலன் றேற்றல்
   முன்காட்டு பந்தமும் வீடுமுள் ளோன்வெங்கை மொய்வரைசூழ்
கொன்காட்டி லுன்குழல் போலே யிருண்டவிக் கூரிருள்வாய்
பொன்காட்டு நல்லெழி லுன்னிடை போலப் புயனுடங்கு
மின்காட்டி வந்ததிங் குன்னூர் வழியை விழியினுக்கே.
   (182)
புணர்தல்
   ஓர்போ தெனும்பிறை வேணியிற் சூடு மொருவர்வெங்கை
தேர்போ லகன்ற மணியல்கு லாயிரு செய்யவிள
நீர்போ லமைந்தின்ப மேதிரண் டாங்குறு நின்முலைகள்
மார்போ டழுந்தத் தழுவவென் னான்செய்த மாதவமே.
   (183)
புகழ்தல்
   பெண்காட் டியவொரு பங்குடை யாருதிர் பிட்டினுக்கா
மண்காட் டியபொன் முடியார் திருவெங்கை வாணர்வெற்பிற்
றண்காட் டியமலர்க் கோதாய் குரும்பைக டாமொருமுக்
கண்காட்டு மாயினு மொவ்வ நினதொரு கண்முலையே.
   (184)
இறைமகளிறைவனைக் குறிவரல்விலக்கல்
   அரவெளி தோவவ் வனமெளி தோவன்றி யாற்றின்மடுக்
கரவெளி தோநந் திருவெங்கை வாணர் களமருட்டும்
இரவெளி தோவிவை யெல்லாங் கடந்திங் கெனையளிப்ப
வரவெளி தோவென் னுயிர்க்கர ணாகிய மன்னவனே.
   (185)
அவனிறைவியை யில்வயின்விடுத்தல்
   வலம்பொலி வீர மழுவாளன் வெங்கை மணிவரைமேல்
நலம்பொலி வாணுதல் வேற்கணல் லாயுன் னடைவிரும்பி
அலம்பொலி யோடு தொடரோ திமமிலை யஞ்சலைதாட்
சிலம்பொலி யாமற் பரிகரித் தேகுன் றிருமனைக்கே.
   (186)
   182. பந்தம்-பிறவிப் பிணிப்பு. வீடு-திருவடிப்பேறு. மொய்-வலி. கொன்-பெருமை. கூர்-மிகுதி. பொன்-திருமகள். நுடங்கல்-அசைதல்; துவளல். 183. ஓர்போதெனும் பிறை-ஒருகலையை உடைய திங்கள். வேணி-சடை. தேர்-தேர்த்தட்டு. 184. மண்காட்டிய-மண்சுமந்த. பொன்முடி-அழகிய திருமுடி. 185. அரவு-பாம்பு. வனம்-காடு. கரவு-முதலை. எனை அளிப்ப-என்னைக் காக்க. 186. வலம்-வெற்றி. ஓதிமம்-அன்னம். பரிகரித்து-அடக்கி. அலம்புதல்-ஒலித்தல்.

இறைவியையெய்திப் பாங்கிகையுறைகாட்டல்
   முட்டுப் படாத திருவாளன் வெங்கை முளரிமுகை
நட்டுப் படாத விளமுலை யாயுன் னகையுடனே
மட்டுப் படாம லிகலுந் தளவின்று மட்டுப்பட்டுக்
கட்டுப் படாமலென் கைக்கேவந் துற்றது கண்டருளே.
   (187)
இற்கொண்டேகல்
   சூடுந் துளப மணிநீல வெற்புந் தொடர்ந்துமுனம்
நாடுந் திருவடி யெம்மான் றிருவெங்கை நாடனையாய்
ஆடுங் கலாப மயில்போ லுறங்குநம் மன்னையினாற்
றேடும் பொருளல்ல மோசெல்லு வோநந் திருமனைக்கே.
   (188)
பிற்சென்றிறைவன் வரவுவிலக்கல்
   தம்மேற் பணிபுனை வெங்கைபு ரேசரைச் சார்கிலர்போற்
கைம்மேற் பொருடெரி யாவிருள் வாய்வெங் கரியுடனே
தென்மேற் புலிதிரி யுங்காட்டி னீயிச் சிறுவழிவந்
தெம்மேற் பழிசுமத் தாதகல் வாயெம் மிறையவனே.
   (189)
பெருமகன்மயங்கல்
   ஆய்வா ரளவி னளவாகும் வெங்கை யமலர்வெற்பிற்
றேய்வா னுடங்கிடை யாயறிந் தாரைச் செலவிடுப்போர்
போய்வென் பாரிவ் வுலகினிற் போவென வேமுடித்து
நீவாவென் றாயிலை கண்ணோட்ட மில்லைகொ னின்றனக்கே.
   (190)
   187. முட்டுப்படாத-குறையுண்டாகாத. திருவாளன்-செல்வன். முளரி-தாமரை. நட்டல்-நட்புச் செய்தல். நகை-பல். மட்டு-அளவு. தளவு-முல்லை. மட்டு-தேன். 188. துளபம்-துளசிமாலை. நாடுதல்-தேடுதல். கலாபம்-தோகை. 189. சார்கிலர் போல் வந்து என இயையும். தெவ்-போர். பழி-பழிச்சொல். 190. ஆய்வார் என்றது பக்குவிகளை. அமலர்-தூயவர். செலவிடுத்தல்-அனுப்புதல்.    

தோழிதலைமகடுயர்கிளந்துவிடுத்தல்
   வம்பு குறித்து வருமா ரளியின மல்லிகைப்பூங்
கம்பு குறிக்கும் பொழுதில்வெங் கேசரைக் கைதொழுது
நம்பு குறிக்கண் வருமண்ண லேநின் னகரினிற்போய்க்
கொம்பு குறித்து வரக்காட் டொலியையெங் கொம்பினுக்கே.
   (191)
திருமகட் புணர்ந்தவன் சேறல்
   முப்போ தினுமந் தணர்தொழு தேத்துறு முத்தலைவேல்
அப்போ தகன்றிரு வெங்கையன் னாளல்குற் காடரவம்
ஒப்போ தெனவொண் மணிவிளக் கேற்றி யுதவிசெய்யுஞ்
செப்போ திளமுலை யாய்செல்லு வேனென் றிருநகர்க்கே.
   (192)
இரவுக்குறியிடையீடு
இறைவிக் கிகுளை யிறைவர வுணர்த்தல்
   வள்ளலம் பாகு மரியாளன் வெங்கை மணிவரைமேல்
விள்ளலம் பானல் விழியாய் துணைபுணர் மென்சிறகர்
உள்ளலம் பாது துயில்கூர் தருத லொழிந்தெழுந்து
புள்ளலம் பாநின்ற தென்னோ நமதிளம் பூம்பொழிற்கே.
   (193)
தான்குறி மருண்டமை தலைவி யவட்குணர்த்தல்
   கானலை வேனின் முதிர்வா லெதிருறக் கண்டுமறி
மானலை நீரென வோடுதல் போல்வெங்கை வாணர்வெற்பிற்
றேனலை வார்தொடை யார்குறி யாமெனச் சென்றுநைந்தேன்
பானலை வென்றகண் ணாய்குறி வேறுறப் பைம்பொழிற்கே.
   (194)
   191. வம்பு-மணம்; போராட்டமுமாம். குறித்தல்-ஊதுதல். குறி-குறித்தவிடம். கொம்பு-ஊதுகொம்பு. 192. ஏத்துறும்-போற்றுகின்ற. போதகன்-ஞானாசிரியன். செப்பு-செப்புக் கிண்ணம்.193. அரி-திருமால். வள்ள லம்பாகு மரியாளன்-திருமாலை வலிய அம்பாக வுடையவன். மணி-அழகு. விள்ளல்-மலர்தல். பானல்-கருங்குவளை. 194. கானல்-கானல்நீர். இது பேய்களுக்குத் தேராதலால் இதனைப் பேய்த்தேர் என்பர். மறிமான்-மான் கன்று. பானல்-கருங்குவளை.    

பாங்கிதலைவன் றீங்கெடுத்தியம்பல்
   மறிக்கும் புலனுடை யன்பர்தம் பாவ மரமுறியத்
தறிக்குங் கனன்மழு வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
வெறிக்குங் குமமுலை மெல்லிய லாயிந்த மேதினியோர்
குறிக்குங் குறிசெய்வ ரோநமை யாளக் குறித்தவரே.
   (195)
புலந்தவன் போதல்
   மறந்தடுக் குஞ்செயல் வெங்கைபு ரேசர் மறைவனத்தில்
அறந்தழைக் குந்திரு வாலயம் போலுல காரிருளைப்
பிறந்தழித் தென்று மொளியோ டுலாவரும் பேரிருவர்
திறந்தடைக் கின்றதன் றோநெஞ்ச மேநந் திருமனையே.
   (196)
புலர்ந்தபின் வறுங்களந் தலைவி கண்டிரங்கல்
   பணஞ்செய் பொறியிள நாகா பரணர் பகைதடிந்து
நிணஞ்செய் சுடர்மழு வெங்கைபு ரேசர் நெடுஞ்சிலம்பிற்
குணஞ்செய் கதிரிலை வேலன்பர் தாங்குளிர் மாலையிட்டு
மணஞ்செய் தனரென வோதழைந் தாய்மலர் மாதவியே.
   (197)
தலைமகள் பாங்கியோடுரைத்தல்
   நல்லார் தொடர்பிளங் காய்முதிர் வாமென நாடுரைப்ப
அல்லார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கை யாதிவெற்பில்
மல்லார் திணிபுயத் தன்பர்நம் பான்முனம் வைத்தநட்பு
வில்லார் சிறுமென் றளிர்முற்ற லாகி விளைந்ததுவே.
   (198)
தலைமகளவலம் பாங்கிதணித்தல்
   தீங்கையொன் றானு முறுகிலர் போற்றுந் திருவடியான்
காங்கையன் றாதைதன் வெங்கையி லேபைங் கனகநிறக்
கோங்கைவென் றோங்கு முலையாய்நம் மன்பர் குறிபிழையார்
வேங்கையென் றாயினும் பூத்ததுண் டோமுல்லை மென்மலரே.
   (199)
   195. மறிக்கும்-தடுக்கும். தறிக்கும்-வெட்டுகிற. குறித்தல்-செய்தல்; நினைத்தல். 196. மறம் தடுக்கும்-தீவினையைப் போக்கும். மறைவனம்-திருமறைக்காடு. 197. பணம்-படம். பொறி-புள்ளி. தடிதல்-வெட்டுதல், நிணம்-கொழுப்பு. சிலம்பு-மலை. மாதவி-குருக்கத்தி. 198. தொடர்பு-நட்பு. முதிர்வு-முதிர்தல். அல்-இருள். மணி-நீலமணி. மிடறு-கண்டம். மல்-மற்றொழில். திணி-திண்மை, வலி. வில்-ஒளி. 199. உறுகிலர்-அடையாதவர். காங்கையன்-முருகன். கோங்கு-கோங்கரும்பு.    

இறைவன்மேற்பாங்கி குறிபிழைப்பேற்றல்
   பொருவோ விலர்திரு வெங்கையி லேமுன் புனத்திலெமை
உருவோ டுயிரமு தென்றுபொய் கூறி யுழன்றவரே
வெருவோ மிரவும் பழியுமும் மூர்க்க வினவிவழி
வருவோம் வரினு மெமைநோக்கு றீரென வந்திலமே.
   (200)
இறைவிமே லிறைவன் குறிபிழைப் பேற்றல்
   நறவே யிதழியுங் கங்கையும் பாம்பு நகைமதியும்
உறவே யணியு மணிமுடி யார்வெங்கை யூரனைய
புறவே யிளமயி லேயமு தேபசும் பொற்கொடியே
மறவே னுனையென்று நீநினை யாமன் மறப்பினுமே.
   (201)
தலைவி குறிமருண்டமை பாங்கி தலைவற்குரைத்தல்
   ஈயா தவரைக்கண் டீவ ரெனச்செல் லிரவலர்போற்
போயாவி யிற்சிறு மாங்கனி வீழப் புரவலனே
நீயாவி யிற்செய் குறியென வேசென்று நித்தர்வெங்கை
வீயா மலர்க்குழ லாள்வறி தேநொந்து மீண்டனளே.
   (202)
அவன்மொழிக்கொடுமை பாங்கியவட்கியம்பல்
   கள்ளெழுங் கொன்றையர் வெங்கையி லேமைக் கடலின்மதி
நள்ளெழுங் காலம் பெறவே குறியிட நான்மருவி
உள்ளெழுங் காம மருந்து பெறாம லுழன்றுசென்றேன்
புள்ளெழுங் காலையென் றாரன்பர் தாமிளம் பூங்கொடியே.
   (203)
   200. உயிர் அமுது-சீவ அமுதம். உழன்றவர்-திரிந்தவர். வெருவோம்-அஞ்சோம். 201.01. நகைமதி-ஒளியுள்ள இளம்பிறை. உற-பொருந்த. 202.02. வீயாமலர்க் குழலாள்-மலர் நீங்காத கூந்தலையுடையவள். ஈயாதவர்-உலோபர். இரவலர்-இரப்போர். நித்தர்-அழியாதவர். வீஆம் மலர் என்று பிரிப்பின் வண்டுகள் மொய்க்கும் மலர் என்க. 203.03. கள்-தேன். எழுதல்-பெருகுதல். மை-கருமை. நள்-நடு. மதி-மதுவையுடையது. மருவல்-பொருந்தல்.

என்பிழைப்பன்றென் றிறைவி நோதல்
   அஞ்சா மதற்றெறும் வெங்கைபு ரேச ரணிமிடற்றில்
நஞ்சா மிருளிற் குறிபிழை யாதொரு நான்குறித்துத்
துஞ்சா திருந்துந்துஞ் சுற்றா ளெனவவர் தூற்றப்பட்டேன்
எஞ்சா வமுதனை யாயினி நானிதற் கென்செய்வதே.
   (204)
தாய் துஞ்சாமை
   கயிற்றா னிகழர வம்போற் சகந்தனிற் கற்பனையாக்
குயிற்றா நிகழிறை வெங்கையி லேயெழுங் கூன்பிறையோர்
எயிற்றா னிகழு மிளம்பேதை யாமிவ் விரவுவந்த
துயிற்றா வனைதனை வெங்கால தூதர் துயிற்றுகவே.
   (205)
நாய் துஞ்சாமை
   சுளைவாய் மடைதிறக் கும்பல வான்வயற் றோன்றுசெந்நெல்
விளைவாய் மலியுந் திருவெங்கை வாணர்தம் வெற்பிடைமா
தளைவாய் மடமயி லேதனி வேழந் தனையொருபுன்
வளைவாய் ஞமலி குரைத்திங் குறாமன் மறித்ததுவே.
   (206)
ஊர் துஞ்சாமை
   நீர்துஞ்சுஞ் செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பில்
வார்துஞ்சு மென்முலைக் கோமள மேவந்து மால்வரைமேற்
கார்துஞ்சு மாவின மெல்லாமுன் றுஞ்சக் கடலுந்துஞ்ச
ஊர்துஞ்சி லாததென் னோவிது நான்செய்த வூழ்வினையே.
   (207)
காவலர் கடுகுதல்
   தேவாதி தேவர் திருவெங்கை வாணர் சிலம்பர்நமை
மேவாத வண்ணங் கதிர்வேன் மருட்டும் விழிமடவாய்
கூவா மறுகிற் றிரிகா வலர்கையிற் கொட்டுபறை
வாவா வெனநெய்த லம்பறை கூவுநம் வாய்தலுக்கே.
   (208)
   204.04. தெறும்-வென்ற. துஞ்சுற்றாள்-தூங்கினாள். தேவர்கள் முதலானோரைக் காத்தமை நோக்கி ‘அணிமிடறு’ என்றார். எஞ்சாவமுது-குறையாத அமுதம். 205.05. கயீறு-பழுதை. அரவம்-பாம்பு. கற்பனை-இல்லதை உள்ளதுபோற் கற்பித்தல். குயிற்றல்-செய்தல். எயிறு-பல். 206.06. மாதளைவாய்-மாதுளங்கனிபோலும் வாய். மாதளை- மாதுளம் பூவுமாம். ஞமலி-நாய். மறித்தல்-தடுத்தல். 207.07. ஊர்-ஊரிலுள்ளாரை யுணர்த்தலால் ஆகபெயர். வார்-கச்சு. வரை-மூங்கில். கார்-முகில். மா-விலங்கு. வார் துஞ்சு மென்முலைக் கோமளம் என்றது பாங்கியை. 208.08. தேவாதி தேவர்-தேவர்களுக்கெல்லாம் முதல் தேவர். சிலம்பர்-வெற்பர். மேவல்-கூடல். மருட்டல்-வெருட்டல். நெய்தற்பறை-சாப்பறை. அறைகூவுதல்-வலிந்தழைத்தல்.    

நிலவு வெளிப்படுதல்
   ஒழுங்கி யிருந்த சடையாளர் வெங்கை யொருவர்வெற்பில்
புழுங்கி யிருந்த மனத்தன்பர் தாம்வந்து போமளவும்
மழுங்கி யிருந்து மிளிர்திங் களையொரு வாளரவம்
விழுங்கி யிருந்து விடாதுகொ லோதளிர் மெல்லியலே.
   (209)
கூகை குழறுதல்
   நாகா பரணர் திருவெங்கை நாயகர் நல்லடிக்கன்
பாகா தவரெனக் கூகூவென் றத்தி யதிலிருந்து
நீகா வலரை விலக்குகின் றாயுயிர் நீத்திலனேற்
கூகாய் நினதடல் காண்பேன் விடியிற் கொடிமுன்னமே.
   (210)
கோழி குரல்காட்டல்
   வாய்மை யெனினும் புலரியைக் கூறுதல் வாரணங்காள்
சேய்மை யறுநங் கொழுநர்தங் கூட்டஞ் சிதைத்தெமக்குத்
தீமை பயந்தமை யால்வெங்கை நாயகர் செய்தவறத்
தூய்மை யுணர்ந்தவர் வாய்மையன் றாமெனச் சொல்லுவரே.
   (211)
வரைதல் வேட்கை
தலைமகளைப்பாங்கி பருவரல் வினவல்
   என்னிடத் துற்ற குறையுள வோநம்மை யீன்றவன்னை
தன்னிடத் துற்ற முனிவோ வுலகந் தருமிமய
மின்னிடத் துற்ற பழமலை யார்திரு வெங்கையன்னாய்
நின்றிடத் துற்றதென் னோவுரை யாய்நின் னினைவினையே.
   (212)
அருமறை செவிலி யறிந்தமைகூறல்
   வேலையி லேவரு நஞ்சமுண் டார்திரு வெங்கைவெற்பில்
மாலையி லேவண் டிசைபாடு மென்குழல் வாணுதலாய்
சோலையி லேநங் கொழுநர்வந் தேகதிர் தோன்றுசிறு
காலையி லேதரு மாலையன் னோவன்னை கண்டனளே.
   (213)
   209.09. ஒழுங்கி-ஒழுங்காகி. புழுங்குதல்-வருந்துதல். மழுங்கி-ஒளிகுன்றி. மிளிர்தல்-விளங்குதல். 210.10. பிறவிப் பெருங்கடற்கொரு மரக்கலமாதல்பற்றி இறைவன் திருவடியை நல்லடி யென்றார். அன்பு-ஆகுபெயர். காவலர்-அரசர்(தலைவர்) அத்தி-ஒருமரம்; என்புக் குவியலுமாம். விலக்கல்-தடுத்தல். கூகாய்-கூகை; விளி. கொடி-காக்கை. 211.11. வாய்மை-உண்மை. புலநீ-வைகறை. சேய்மை-தொலை. கொழுநர்-கணவர். கூட்டம்-கூடுதல். 212.12. முனிவு-சினம். இமயமின்-மலையரையனீன்ற மின்கொடி போல்வாள். இடம்-இடப்பாகம். நினைவு-கருத்து. 213.13. வாணுதலாய்-ஒளி பொருந்திய நெற்றியை உடையவளே.சிறு காலை-கதிரவன் தோன்றுஞ் சமயம்.
   
தலைமகன் வருந்தொழிற் கருமைசாற்றல்
   தாயுஞ் சுணங்கனு மூரும்வெங் காவலுஞ் சந்திரனாந்
தீயுங் குடிஞையுஞ் சேவலுந் தப்புஞ் செயலெளிதோ
பாயுஞ் சினவிடை யார்வெங்கை வாணர் பனிவரைமேற்
காயுங் கதிரிலை வேல்வீரர் நம்மைக் கருதினுமே.
   (214)
தலைமகனூர்க்குச் செலவொருப்படுதல்
   அறிவே யொருவடி வாமீசர் வெங்கையி லன்னமன்னாய்
எறிவே லிறைவர்தம் மூர்க்கேகி யாங்கவ ரெண்ணமெல்லாம்
அறிவே மவரன் பிலாமைகண் டாலுரை யாடலமாய்
மறிவே மறிந்தபி னந்தக னூர்க்கு வழிக்கொள்வமே.
   (215)
பாங்கியிறைவனைப் பழித்தல்
   வன்பற் றவர்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
நின்பற் றிலர்கை விடுத்தா ரிறையவர் நீயவர்மேல்
அன்பற் றிலையணங் கேசிறி தேனுமன் பற்றவரைப்
பின்பற் றுவருள ரோவிது தான்மிகப் பேதைமையே.
   (216)
இறைவி யிறையோன்றன்னைநேர்ந் தியற்படமொழிதல்
   சுரும்பு களிக்கும் பொழில்வெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
அரும்பு கடுக்க முலையா யுலகுள வாவியெல்லாம்
விரும்பு கொடைத்தண் ணளிவேந்தர் நம்மை வெறுப்பவரோ
கரும்பு கசப்பது வாய்க்குறை யேயிந்தக் காசினிக்கே.
   (217)
   214.14. சுணங்கன்-நாய். குடிஞை-கூகை. பாயுஞ் சினவிடை-பகைவரைப் பாய்வதுஞ் சினப்பதுஞ் செய்யும் விடை. 215.15. இறைவர் அறிவே உருவாகப் பெற்றவராகையால் அறிவேயொரு வடிவாமீசர் என்னப் பெற்றார். மறிதல்-மீடல். அறிதல்-ஆராய்தல். 216.16. வன்பு-வன்மை. வலிய பற்று-மிக்க அன்பு. பின்பற்றுதல்-பின்தொடர்தல். 217.17. சுரும்பு-வண்டுகள். கடுத்தல்-நிகர்த்தல். தண்ணளி-அருள். காசினிக்கு-உருபுமயக்கம்.

கனவுநலிபுரைத்தல்
   ஓடுஞ் செயல்செயு மாசைத் தளையை யொடித்திருத்தல்
கூடும் படிசெயும் வெங்கைபு ரேசர் குவட்டில்விழி
மூடும் பொழுதெதிர் தோன்றிநிற் பார்கண் முகிழ்திறந்தால்
நீடும் புகழுடை யாரெதிர் தோன்றிலர் நேரிழையே.
   (218)
கவினழிபுரைத்தல்
   ஈயார் பொருளு மிறையாக் கிணறு மெனத்துணைவர்
தோயா முலைக ணலமிழந் தேன்மதி சூடுமொரு
மாயா மயமலர் வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
வேயாம் பணைபுரை மென்றோட் கருங்கண் விளங்கிழையே.
   (219)
தன்றுயர்தலைவற்குணர்த்தல் வேண்டல்
   விழிக்கிட னாகு நுதலார்தம் வெங்கையில் வேந்தொடுபெண்
பழிக்கலை யென்றொரு வார்த்தையை யாரும் பகர்ந்துமிகுஞ்
சுழிக்கிட னாகுந் திருப்பாற் கடலெனத் தோன்றுபுகழ்
மொழிக்கிட னாகுது மென்பாரைக் கண்டில மொய்குழலே.
   (220)
துன்புறுபாங்கி நீசொல்லெனச்சொல்லல்
   பொறியா லயம்பொய்கை சூழ்வெங்கை வாணர்தம் பூங்கரத்தில்
மறியா மெனப்பிறழ் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்
பிறியாதுன் னுள்ளத் திருப்பார்க் கயலவர் பேசுவதென்
அறியா தவர்தமக் கன்றோ வொருவ ரறிவிப்பதே.
   (221)
   218.18. ஓடுஞ் செயல்-மனத்தினை அலையச் செய்யுஞ் செயல். ஆசைத் துளை-அவாவாகிய விலங்கு. கூடும்படி-உண்டாகும்படி. குவடு-மலை. விழிமூடல்-கண்ணுறங்கல். 219.19. ஈயார்-உலோபர். துணைவர்-தலைவர். தோய்தல்-புணர்தல். நலம்-அழகு. மதி-திங்கள் துண்டம். மாயாமயமலர்-மாயையைக் கடந்தவர். 220.20. மொய்குழல்-அன்மொழித் தொகை. விழிக்கிடனாகு நுதலார் என்றது கண்ணுதலார் என்றபடி. வேந்து-ஆகுபெயர். 221.21. பொறி-திருமகள். ஆலயம்-இடம். திருமகள் இருப்பிடம் தாமரை மலராகையால் தாமரை மலருள்ள இடம் பொறியாலயப் பொய்கை யென்னப்பட்டது.

அலர்பார்த்துற்ற வச்சக்கிளவி
   கலரா லறிவரி யார்வெங்கை வாணர் கனகவெற்பிற்
பலரா லணியும் புகழார் பிறப்பொன்றிற் பாவிமதன்
மலரால் வருந்துயர் நீக்குவ ராயினு மண்ணுளர்வாய்
அலரால் வருந்துயர் நீக்குகிற் பாரை யறிந்திலமே.
   (222)
ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி
   ஒருகோடு தம்மிற் குறைந்தநல் வாரண மொன்றுமன்றி
இருகோடு வந்து மிகுங்களி றேனு மிகன்மதமா
அருகோடு வெவ்வத ரென்றாலும் வெங்கை யமலர்தரும்
முருகோ டுறழும் வடிவா ரிடைமன முந்துறுமே.
   (223)
காமமிக்க கழிபடர்கிளவி
   மாமாய னுந்தொழும் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
பாமா முனிவன் மலயா நிலமொரு பாலசைய
வேமாயர் வேய்ங்குழ லாலூத மேனி விறகிற்பற்றுங்
காமா னலமவி யாகட லேழுங் கவிப்பினுமே.
   (224)
தன்னுட்கையா றெய்திடுகிளவி
   வம்புற் றனைவெண் மதியா லொடுங்கினை வண்டிழந்தாய்
அம்புற் றனைமிகு கண்முத் துகுத்தனை யம்புயமே
நம்புற் றரவணி யெம்மான் றிருவெங்கை நாட்டிறையை
வெம்புற் றனையெனைப் போலென்ப தின்று வெளிப்பட்டதே.
   (225)
   222.22. கலர்-கீழ்மக்கள். மண்ணுளர்-மண்ணுலகில் உள்ளவர். வாயலர்-பழிச்சொல். 223.23. வெம் அதர்-கொடிய வழி. முருகோடு உறழும்- முருகரை நிகர்த்த. ஒருகோடு குறைந்த வாரணம்-ஆனைமுகக் கடவுள். 224.24. பாம்-எங்கும் பரவும், பாவும் என்பது பாம் என இடைக் குறையாயிற்று. மலயாநிலம்-தென்றற்காற்று. வேம்-வெந்த; வேவும் என்பது வேம் எனக் குறைந்து நின்றது. காமாநலம்-காமத்தீ. 225.25. வம்பு-தீச்சொல்; மணம். வெண்மதி-வெள்ளறிவு; வெள்ளிய திங்கள். வண்டு-வளையல்; வண்டுகள். இருகண்முத்து-இரு கண்ணீர். வெம்புறல்-விரும்பல்.
   
நெறி விலக்குவித்தல்
   நீரலை வேணியர் வெங்கையில் வாழு நெடுந்தகையைச்
சீரலை வாய்வருஞ் செவ்வேண் முருகனுஞ் சேறலருஞ்
சாரலை மேவு மொருபெருங் காட்டுத் தனிவழியில்
வாரலை நீயென் பவர்க்கே வருவன வண்புகழே.
   (226)
குறி விலக்குவித்தல்
   பிளவு மதிச்செஞ் சடையாளர் வெங்கைப் பெருந்தகைதான்
தளவு நகைக்கருங் கண்மட வாய்விண் டலமுகட்டை
அளவு பொழிற்குறி வந்தாற் றுயில்பொழு தார்க்கும்புள்ளாற்
களவு வெளிப்படி னென்னாய் முடியுநங் காரியமே.
   (227)
வெறி விலக்குவித்தல்
   மறிகொண்ட வங்கையர் வெங்கையி லேமென் மலர்ப்பொழில்வாய்க்
குறிகொண்ட வன்பர் தருநோயென் றன்னை குறித்திலளாய்
நெறிகொண்ட தெய்வ மணங்கிற்றென் றேதன் னினைவழிந்து
வெறிகொண்ட னண்மற் றொருவிதி யோவிது மெல்லியலே.
   (228)
பிற விலக்குவித்தல்
   அருங்கண்ணி வெண்மதி சூடும் பிரான்வெங்கை யாவிமலர்க்
கருங்கண்ணி கங்கையின் மென்றூவி யன்னங் கருதிவைத்த
பெருங்கண்ணி யிற்புனற் காக்கைபட் டாங்குப் பிறர்நமதில்
மருங்கண்ணி வந்தன ரென்பது கேட்டின்னு மாய்ந்திலமே.
   (229)
   226.26. சேறலரும்-செல்லுதற்கரிய. வாரலை-வராதே. வண்புகழ்-பெரும்புகழ். 227.27. தளவு-முல்லையரும்பு. நகை-பல். விண்டலம்-விண்ணாகிய தலம். ஆர்த்தல்-ஒலித்தல். 228.28. பொழில்-சோலை. குறி-குறியிடம். குறித்தல்-நினைத்தல். அணங்குதல்-வருத்துதல். வெறி-வெறியாடல். 229.29. கண்ணி-மாலை; கண்களையுடையவள்; வலை. அன்னம் கருதி-அன்னத்தைப் பிடிக்க எண்ணி. அண்ணல்-கிட்டல்.
   
குரவரை வரைவெதிர்கொள்ளுவித்தல்
   பூண்கொண்ட மென்முலை யாய்வெங்கை வாணர் பொதியவெற்பில்
ஏண்கொண்ட நங்கருத் தீன்றவர்க் கோது மிசைவுபெறா
நாண்கொண்டு நங்கற் பழிதனன் றோவன்றி நாணிழந்து
மாண்கொண்ட வங்கற் புறுதனன் றோநம் மரபினுக்கே.
   (230)
வரைவு கடாதல்
வினவியசெவிலிக்கு மறைத்தமைவிளம்பல்
   வண்டு கலிக்குந் தொடையாயெம் மன்னையிம் மாதுதுயில்
விண்டு தரித்தில ளென்கொலென் றாளரன் வெங்கைவெற்பிற்
பண்டு புனத்தில் வருமத வாரணம் பாய்கனவு
கண்டு பினைத்துயின் றாளிலை யென்று கரந்தனனே.
   (231)
அலரறிவுறுத்தல்
   கோட்டு மலைவில் விறலாளர் வெங்கைக் குளிர்சிலம்பிற்
றீட்டு மிலைமலி வேலண்ண லேநின் றிருக்கரத்தால்
வேட்டு மகிழ்செய் யணங்கென வேயிவண் மென்குழலிற்
சூட்டு மலர்கண் டுலகமெ லாமலர் சூட்டியதே.
   (232)
தாயறிவுணர்த்தல்
   நீர்பூத்த செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்
கார்பூத்த வண்மை மடங்கலன் னாயன்னை காலமன்றி
ஏர்பூத்த பைந்தளிர் மெல்லிய லாமிவ் விளங்கொடிமேற்
பீர்பூத்த தென்னைகொ லோவறி யேனெனப் பேசினளே.
   (233)
   230. பூண்-அணிகலம். இசைவு-உடன்பாடு. நாண்-நாணம். மாண்-பெருமை. 231. கலிக்கும்-ஒலிக்கும். துயில் விண்டு-துயில் நீங்கி. பாய்-பாய்ந்த. தரித்திலள்-ஆற்றிலள். கரத்தல்-மறைத்தல். 232. கோட்டும்-வளைத்த. விறல்-வெற்றி. தீட்டுதல்-கூராக்கல். அலர் இரண்டனுள் முன்னையது மலர், பின்னையது பழிதூற்றல். 233. பீர்-பசலை. வண்மை-வள்ளன்மை. மடங்கல்-சிங்கம்.
   
வெறியச்சுறுத்தல்
   அலைமேற் கிளர்பொறி வாழ்வெங்கை வாண ரணவரைமேற்
சிலைமேற் பயில்கைத் தலத்தைய நீயெமைச் செய்துயர்க்குத்
தலைமேற் படுமறிக் கோர்கான் முடக்குந் தகைமையென்னக்
கொலைமேற் பயிலு மெமர்வெறி யாடல் குறித்தனரே.
   (234)
பிறர்வரைவுணர்த்தல்
   மகவா னிறைஞ்சுந் திருவெங்கை வாணர் வரையணங்கின்
முகவா ரிசமு முலையுங்கண் டான்மிகு மோகமுறுஞ்
சகவாழ் வினரை யுரைப்பதென் யான்மறை சாற்றுகின்ற
சுகவாம தேவரு மின்றே விடுவர் துறவினையே.
   (235)
வரைவெதிர்வுணர்த்தல்
   கொன்னெறி வேற்கு மரன்போ லெமரெதிர் கொண்டுதரும்
நன்னெறி யாற்பெற லாகவுந் தென்வெங்கை நாதர்வெற்ப
செந்நெறி யாற்செல் பதிக்கோர் கொடுநெறி செல்பவர்போல்
மின்னெறி வேற்கண் ணியைக்கள வாற்பெற வேண்டினையே.
   (236)
வரையுநாளுணர்த்தல்
   பணிவாய் விரிசடைப் பெம்மான்றென் வெங்கைப் பனிவரைமேற்
கணிவாய் மலர்ந்து மணநா ளுரைப்பக் கடன்றரக்கிண்
கிணிவாய் மலரனை யாண்மறிப் பாயிடுங் கீற்றெனவொண்
மணிவாய் புயத்தன்ப வூர்கொண்ட தால்வெண் மதியமுமே.
   (237)
தலைமகளறி வறிவுறுத்தல்
   பிற்பழி யாது மிலரால சுந்தரர் பித்தவெனுஞ்
சொற்பழி யாளர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
றற்பழி யாகநின் றன்பழி நாணித் தலைவவறக்
கற்பழி யாது மடமா தெனையுங் கரந்தனளே.
   (238)
   234. கிளர்தல்-தோன்றல். சிலை-வில். பயிலல்-பழகுதல். வெறியாடல்-வேலனாடல். 235. மகவான்-இந்திரன். முகவாரிசம்-முகமாகிய தாமரை. மகவான் என்பதற்குப் பூசிக்கப் படுவோன் என்றும் வேள்வி செய்வோன் என்றும் பொருளுரைப்பர். 236. கொன்-பெருமை; அச்சமெனினுமாம். எறிதல்-வீசுதல். செந்நெறி-நேர்வழி. கொடு நெறி-கோணலாகிய வழி. 237. வாய்-பொருந்திய. கணி-வேங்கை. வாய்மலர்ந்து-வாய் திறந்து. கணி-சோதிடன். மறிப்பு-தடை. கீற்ற-கோடு. ஊர்-பரிவேடம். 238. யாதும்-சிறிதும். அறக்கற்பு-அறத்தோடு கூடிய கற்பு. கரத்தல்-தலைமகன் பிரிவால் பீர்பூத்தல் வளைகழலல் முதலியன புலப்படாவகை மறைத்தல்.
   
குறிபெயர்த்திடுதல்
   ஐயுற் றெமர்தெளி வானிருந் தார்நும் மடிச்சுவடு
கொய்யுற்ற பூம்பொழி லூடுகண் டேமென் குழலுமையாள்
மெய்யுற்ற வங்கணர் வெங்கையி லேகுறி வேறுகொண்டு
மையுற்ற கண்ணி யொடும்விளை யாடுக மன்னவனே.
   (239)
பகல்வருவானை யிரவுவருகென்றல்
   நந்தே டவிழ்ந்து நறவூற் றிருக்கு நளினமிசை
வந்தேறி மென்றுயில் கொள்வெங்கை வாணர் வரையின்மலர்க்
கொந்தேறு மென்குழ லாண்முக வாவிக் குமுதமலர்ச்
செந்தே னிரவினல் லாற்கிடை யாதென்ன செய்யினுமே.
   (240)
இரவுவருவானைப் பகல்வருகென்றல்
   சேல்கொண்ட தண்பணை சூழ்வெங்கை வாணர்தஞ் சேய்திருக்கை
வேல்கொண்ட கண்ணிளம் பெண்ணோடு கூட விருப்பமுறும்
மால்கொண்ட வெங்களி றன்னாய் மலர்மனை வாய்திறக்குங்
கோல்கொண்டு வந்திலை யேலரி தாலவட் கூடுதலே.
   (241)
பகலினுமிரவினும் பயின்றுவருகென்றல்
   சொல்லும் பொருளு மெனநிறை வாரிளஞ் சூன்மிடற்ற
நெல்லுங் கரும்பு நிறைவெங்கை வாணர் நெடுஞ்சிலம்ப
வில்லும் பிறையும் பணிவா ணுதற்றளிர் மெல்லியலை
அல்லும் பகலு மகலா திவண்வந் தடைந்தருளே.
   (242)
பகலினுமிரவினு மகலிவணென்றல்
   பாவலர் பாடும் புகழ்வெங்கை வாணர் பனிவரைமேல்
மேவல ராருயி ருண்டமை வேலவ வெம்பகலில்
ஏவல ராய நெருங்குமின் றேன்வண் டெனவிரவிற்
காவலர் சூழ்ந்து திரிவார்பொன் காத்த கடியெனவே.
   (243)
   239. சுவடு-அடையாளம். கொய்தல்-பறித்தல். மெய்-திருமேனி; இஃது இடப்பாகத்தைக் குறித்தது. அங்கணர்-அருளையுடைய கண்ணர். 240. நந்து-சங்கு. நறா-தேன். நளிநம்-தாமரை. குமுதம்-செவ்வல்லிமலர். இது தலைவியின் வாயை உணர்த்திற்று. 241. சேல்-மீன்வகைகளில் ஒன்று. பணை-வயல். சேய்-முருகக் கடவுள். மால் - மதமயக்கம். மலர்மனை வாய்திறக்குங் கோல் என்றது கதிரவன் ஒளிப்பிழம்பை. திறக்குங் கோல்-திறவு கோல். 242. இளம்சூல் மிடற்ற-இளஞ்சூலைக் கொண்ட கழுத்தினையுடைய. எங்கும் நிறைந்தவர் என்பார் சொல்லும் பொருளுமென நிறைவார் என்றார். 243. பாவலர்-சமயாசாரியர்கள் நால்வர். மேவலர்-பகைவர். ஆயம்-தோழியர் கூட்டம். காவலர்-ஊர்காவலர்.    

உரவோனாடு மூருங்குலனு மரபும்புகழும் வாய்மையுங்கூறல்
   துதியுந் தொடையும் புனைபுயத் தாய்மணஞ் சூழ்ந்திலையேல்
நதியும் பணியும் புனைவே ணியர்வெங்கை நாட்டினினின்
பதியுங் குலனு மரபுநல் வாய்மையும் பல்புகழும்
மதியுங் களங்கமும் போலொழி யாமன் மறுப்படுமே.
   (244)
ஆறுபார்த்துற்ற வச்சங்கூறல்
   அரியும் பணியுந் திருவெங்கை வாண ரடியரல்லார்
திரியும் பலநெறி போன்றொழி யாதிரை தேர்ந்துகொடு
வரியுங் கரியுஞ் செறியுஞ் சிறுவழி வாரலைநீ
புரியுங் கருங்குழ லாள்பொருட் டாகப் புரவலனே.
   (245)
ஆற்றாத்தன்மை யாற்றக்கூறல்
   அழுவாண் மொழிதளர் வாளைய கோவென் றலமருவாள்
விழுவாள் புரண்டெழு வாள்வெங்கை வாணரை வேண்டியடி
தொழுவா ளநங்கன் கொடியனென் பாளுயிர் சோர்ந்திடுவாள்
முழுவாள் விழிமட மாதெண்ண மன்ப முடித்தருளே.
   (246)
காவன்மிகவுரைத்தல்
   ஆக்குறுங் காரணர் வெங்கைபு ரேச ரணிவரையாய்
தாக்குறுஞ் சீயமும் வேழமும் வேங்கையுந் தப்பிவந்து
மாக்குறுஞ் சோலையெம் மூர்புகுந் தாலு மனையருகு
காக்குறுங் காவலர் தம்மையெவ் வாறு கடப்பதுவே.
   (247)
காமமிகவுரைத்தல்
   தாள்வலி கொண்டு பகடுந்து காலன் றனைமருட்டும்
ஆள்வலி கொண்டவர் வெங்கைவெற் பாநின் னணியலர்கற்
றோள்வலி கொண்டு தவிர்ப்பினல் லாமற் றுயர்விளைக்கும்
வேள்வலி கொள்ளுந் துணையெங்கள் பேதைக்கு வேறில்லையே.
   (248)
   244. மணஞ்சூழ்தல்-வரைதல். ஒழியாமல்-எப்பொழுதும் நீங்காமல். மறு-குற்றம்; களங்கம். படுதல்-உண்டாதல். 245. அரியும் என்ற உம்மை உயர்வு சிறப்பு. அடியரல்லார்-தீவினையாளர்கள். செறிதல்-நெருங்குதல். புரிதல்-விரும்புதல். 246. மொழிதளர்தல்-சொற்குழறுதல். அலம்வரல்-சுழலல். அநங்கன்-காமன். முழுவான்-பெரிய வான். 247. ஆக்குறும்-எல்லாவற்றையும் படைக்கின்ற. தாக்குறும்-ஒன்றோடொன்று முட்டிப் பொரும். சீயம்-சிங்கம். வேழம்-யானை. 248. பகடு-எருமைக் கடா. மருட்டல்-வெல்லல். ஆள்வலி-ஆளும் வலி. கொள்ளல்-கவர்தல். பகடுந்துகாலன் றன்னைத் தாள்வலி கொண்டு மருட்டும் எனக் கூட்டுக.
   
கனவுநலிபுரைத்தல்
   மனவே யணியுந் திருவெங்கை வாணர் வரையணங்கு
சினவே லிறைவநின் றோளொடு கொங்கை திளைக்கவருங்
கனவே யுயருந் துறக்கமென் பாணினைக் காண்பரிய
நனவே துயரந் தருகின்ற தீவெந் நரகென்பளே.
   (249)
கவினழிபுரைத்தல்
   கருவரை யெங்க டிருவெங்கை வாணர்தங் கண்ணழித்த
ஒருவரை யன்ன வெழிலுடை யீரிங் குமதருளால்
இருவரை பொன்னு மிருவேலை முத்தமு மீன்றனவாற்
குருவரை யன்னமென் றோளுடை யாட்குக் குறையென்னையே.
   (250)
ஒருவழித்தணத்தல்
தன்பதிக்ககற்சி தலைவன்சாற்றல்
   என்மன நல்லிளம் பூங்கொடி பால்வைத் திளங்கொடிதன்
நன்மன மென்னொடு கொண்டூர் புகுந்திங்கு நான்வருவேன்
வன்மனம் வந்து புகாவீசர் வெங்கை மருவலர்போல்
நின்மன மஞ்சலை செங்கயல் வாட்கண் ணிரைவளையே.
   (251)
பாங்கிவிலக்கல்
   ஊனா ருடலி னுயிர்போல வேயவ் வுயிரினுயிர்
தானா மொருவன் றிருவெங்கை வெற்பிலுன் றன்பதிக்குப்
போனால் விரைந்து வருவா யலையன்ப போகலைநீ
யானா யிழைதுயர் கண்டாவி கொண்டிங் கிருக்கிலனே.
   (252)
   249. மனவு-அக்குமணி. துறக்கம்-சுவர்க்கம். திளைத்தல்-அழுந்தல். காண்பு-காண்டல். 250. கருவரை-கருப்ப வேதனையை ஒழிக்கின்ற. அஃது இங்குப் பிறவியென்னும் பொருட்டு. கண்ணழித்த-கண்ணால் அழிக்கப்பட்ட. 251. இளம்பூங்கொடி என்றது தலைவியை. ஊர் புகுந்திங்கு நான் வருவேன் என்றது அங்குத் தாழ்க்காது விரைந்து வருவேன் என்றபடி. வன்மனம்-வன்னெஞ்சு. 252. ஊன்-ஆகு பெயர். ஒருவன்-ஒப்பிலி. பதி-ஊர். ஆவி-உயிர். ஆயிழை-அன்மொழித் தொகை.    

தலைவனீங்கல்வேண்டல்
   நீர்புக்கு வாழு நெடுமீனந் நீர்தனை நீங்கியுய்ந்தாற்
றார்புக்கு வாழு முலையாளை யானுந் தணந்துய்குவேன்
மார்புக்கு மாலை யரவா னவர்வெங்கை வாணர்வெற்பில்
ஊர்புக்கு நான்வர வேண்டுமின் னேநின் னுளத்திசையே.
   (253)
பாங்கிவிடுத்தல்
   கொந்தார் மலர்க்குழல் வெண்முத்த வாணகைக் கோமளத்தின்
சிந்தா குலமுற்று நீயறி வாயன்ப தேமொழிக்கு
நந்தா மணிவிளக் கன்னார்தம் வெங்கை நகரினிற்போய்
வந்தா ரெனச்சென்று நான்கூற நீசென்று வந்தருளே.
   (254)
பாங்கிதலைவிக் கவன்செலவுணர்த்தல்
   அம்மூல காரணர் வெங்கைபு ரேச ரணிவரைமேற்
செம்மூரி வேலவர் நீயா ரணங்கின்முன் செல்லுமுனம்
எம்மூர் புகுந்து வருவலென் றேகின ரேந்திழையாய்
நம்மூர் மருங்குற விந்தேரம் வந்து நணுகுவரே.
   (255)
தலைவிநெஞ்சொடு புலத்தல்
   விளித்தா ருயிரை யடிநீழல் வைப்பவர் வெங்கையிலே
அளித்தார் புனைகுழ லாயக லேனென் றகந்தெளியத்
தெளித்தா ரகன்றன ரேலவர் வார்த்தை தெளிந்துமனங்
களித்தார் தமக்குள தோபிழை தானிந்தக் காசினிக்கே.
   (256)
   253. உய்தல்-உயிர் வாழ்தல். தார்-முத்துமாலை, பூமாலை. தணத்தல்-பிரிதல். மின் : உவமையாகுபெயர். இசைதல்-உடன் படல். 254. கொத்து-கொந்து என மெலிந்து நின்றது. கோமளம்-பண்பாகு பெயர். சிந்தாகுலம்-வடநூன் முடிபு. 255. மூல காரணர்-உலகத் தோற்ற மறைவுகட்குக் காரணமாக இருப்பவர். மருங்கு-அருகு. நணுகல்-சேர்தல். 256. விளித்தார்-சாங் காலத்தில் கூப்பிட்டவர். விளிந்தார் என்பது விளித்தார் என வலித்தல் பெற்றதென்றலு மொன்று. விளிதல்-இறத்தல்.
   
சென்றோனீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி
   பூளை யணியுஞ் சடையாளர் வெங்கை புரேசர்வெற்பிற்
பாளை மணங்கமழ் மாதிருப் பாளெனப் பச்சைமயிற்
காளை யனையநங் காதலர் தாமலர்க் கால்வருந்த
நாளை வராம லிடம்போய் மறியுநன் னாரைகளே.
   (257)
தலைவியைப்பாங்கி யாற்றுவித்தல்
   பொலம்புரி வார்சடை யார்வெங்கை வாணர் பொருப்பணங்கே
கலம்புரி மேனியிற் குங்குமந் தோய்தண் களபமென்ன
நலம்புரி காதலர் தம்பதி நோக்கி நடந்தவழி
வலம்புரி தோன்று மடிப்பொடி பூசுக வந்தருளே.
   (258)
தலைவன்வந்தமை பாங்கியுணர்த்தல்
   மலையானை மாதுல னென்பார்தம் வெங்கை வரையிடைப்பூஞ்
சிலையானை வென்ற வெழிலுடை யார்நஞ் செழும்பதிக்குக்
கொலையானை மேற்பசும் பொன்னோடு வந்தனர் கோதைகமழ்
முலையானை மேற்பசும் பொன்னொழி வாய்மலர் மொய்குழலே.
   (259)
பாங்கிதலைவனொடு நொந்துவினாதல்
   காரார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கைக் காரிகைதன்
பீரார் நுதலு முடியாக் குழலும் பெருவிழியில்
நீரார் நிறைகுட முங்கண்ணு றாமைநன் னீதியென்றோ
வாரா தொழிந்தனை நின்கருத் தேதுசொன் மன்னவனே.
   (260)
   257. பூளை-பூளைப்பூ; ஆகுபெயர். பச்சை மயில் என்ற சிறப்பால் காளை முருகனை உணர்த்திற்று 258. பொலம்-பொன். பொலம் புரி வார்சடையென்றதனாற் பொன்னின் மிக்குப் பொலிவதிறைவர் சடையென்றவாறாயிற்று. கலம்-பூண். 259. மலையான்-மலையரையன். பூஞ்சிலையான்-மலர்வில்லையுடையவன். 260. மணி நவமணிக்கும் பொதுவாயினும் காரார் என்ற அடையால் நீலமணிஎனக் கொள்க. காரிகை-ஆகுபெயர். பீர்-பசலைநிறம். நுதல்-நெற்றி பெருவிழியினீரார் நிறைகுடம்-கொங்கை. கண்ணுறாமை-நோக்காமை.

தலைவன்பாங்கியொடுநொந்துவினாதல்
   அலையா நிலையர் திருவெங்கை வாண ரணிவரையீர்
கலையா னிறைமதி வேய்ங்குழல் சோலைக் கருங்குயில்யாழ்
மலையா னிலநல்ல வோவல்ல வோவம் மதனனெடுஞ்
சிலையா னுமிழ்வ தலரோவம் போவென்ன செப்புமினே.
   (261)
தலைவியையாற்றுவித்திருந்த வருமைசாற்றல்
   நீர்மல்கு கண்ணும் வளைதீர்ந்த கையும்வெந் நெட்டுயிர்ப்பும்
பீர்மல்கு கொங்கையு மாய்ப்பின்னை வேறு பிழைப்பிலதாய்
ஆர்மல்கு செஞ்சடை யார்வெங்கை வாண ரருளதனால்
தார்மல்கு தோளண்ண லேபுரந் தேனின் றனியுயிரே.
   (262)
வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிதல்
என்பொருட்பிரிவுணர்த் தேந்திழைக்கென்றல்
   இடைநிலை யாம்பொரு ளுண்டேன் முதனிலை யெய்தறமுங்
கடைநிலை யாமின் பமுமேவு மென்றனர் காதலரென்
றடைநிலை யாம்பதத் தெம்மான் றிருவெங்கை யாயிழைக்குத்
தொடைநிலை வார்குழற் பூங்கொடி யேசென்று சொல்லுகவே.
   (263)
நின்பொருட்பிரிவுரைநீயவட்கென்றல்
   என்னோடு சொல்லுக செல்லாமை யுண்டெனி னீரமதி
தன்னோடு மல்கு சடையாளர் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
பொன்னோடு சொல்லுக நீநின் செலவைப் பொருணினைந்து
முன்னோடு பின்னு மிழப்பான் கருதிய முன்னவனே.
   (264)
   261. அலையாநிலையர்-சலிக்காத நிலையை உடையவர். கலையால் நிறைமதி-முழுத்திங்கள். வேய்ங்குழல்-மூங்கிற்குழல். இதனைப் புள்ளாங்குழல் என்பர். பொள்ளாங்குழல் என்பது திரிந்தது. பொள்ளல்-தொளைத்தல். 262. வளை-வளையல். மல்கல்-நிறைதல். தீர்தல்-ஒழிதல். பிழைப்பு-உய்வு. புரத்தல்-காத்தல். 263. “வடுவிலா வையத்து மன்னிய மூன்றனுள், நடுவண தெய்த விருதலையு மெய்தும்” என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது. பூங்கொடி-உவமையாகு பெயர். 264. “செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின், வல்வரவு வாழ்வார்க் குரை” என்பது திருக்குறள். முன்-அறம். பின்-இன்பம். பொன்-ஆகுபெயர். முன்னவன்-தலைவன்.

நீடேனென்றவ னீங்கல்
   மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை மணக்குமுடி
வேணிக் கடவு ளிடமா கியதிரு வெங்கையன்னாய்
ஆணிக் கனக மனையாள் செயலிங் கறிந்துசெல்வேன்
பாணிக் குமாறிருந் தாலெனைப் போலிலைப் பாவிகளே.
   (265)
பாங்கி தலைவிக் கவன்செல வுணர்த்தல்
   இருளா லயமன்ன வார்குழ லாய்நம் மிறைவரின்று
வெருளா லமுண்ட திருவெங்கை வாணர்தம் மெல்லடியை
அருளா லலதெய்த லாகாத வாறென வானைமிசைப்
பொருளா லலதுனை யெய்தவொ ணாதென்று போயினரே.
   (266)
தலைவியிரங்கல்
   பொழியு மருளுடை யார்வெங்கை வாணர் பொருப்பருவி
விழியு மெலிவும் பசப்பூர் முலையுமவ் வின்மதனால்
அழியு மனமு நினைந்தில ராயினு மாவொருபெண்
பழியு நினைந்தில ரேபொருண் மேற்சென்ற பாதகரே.
   (267)
தலைவியைப்பாங்கி கொடுஞ்சொற்சொல்லல்
   அரியா ரறிதற் கரியார் திருவெங்கை யாயிழையாய்
பிரியார் பிரியப்பட் டாரிலை யோநின் பெருமணக்குக்
கரியார் பொருடரச் சென்றார் பொருட்டுக் கயன்மருட்டும்
வரியார்கண் ணீர்மல்க வென்னைகொ லோநின்று மாழ்குவதே.
   (268)
   265. மாணிக்க வாசகன் செந்தமிழ் மாலை-திருவாசகம். முடிவேணி-திருமுடிச்சடை. ஆணிக் கனகம்-உரையாணிக் கிளைக்காத பொன். பாணித்தல்-காலந் தாழ்த்தல். 266. இருள் ஆலயம் அன்னவார்குழலாய்-இருளுக்கிருப்பிடம் போன்ற நீண்ட கூந்தலையுடையவளே. ஆலம்-நஞ்சு. ஆனைமிசைப் பொருள்-யானைச்சுமையாக்கிக் கொணரும் பொருள். 267. இழிதல்-இறங்குதல். பாதகர்-தீவினையை உடையவர். பொருண்மேல்-பொருளீட்டத்தின்மேல். 268. ஆயிழை-அன்மொழித் தொகை. மணத்துக்கு எனற்பாலது அத்துச்சாரியைகுறைந்து மணக்கு என நின்றது. மாழ்கல்-மயங்கல்.    

தலைவி கொடுஞ்சொற் சொல்லல்
   நீடறி வாய்நின்ற வெம்மான் றிருவெங்கை நேரிழையாய்
பீடறி வாய்நம் முயிரனை யார்தம் பெரும்பணைநீர்
நாடறி வாய்பொரு ணச்சியிப் போது நடந்தகொடுங்
காடறி வாய்துணிந் தாயுனைப் போலிலைக் கன்னெஞ்சரே.
   (269)
வருகுவர்மீண்டெனப் பாங்கிவலித்தல்
   வலையிற் படுகலை கண்டிள மான்பிணை மாழ்கிநிற்கும்
நிலையிற் படர்வனஞ் சென்றனங் காதலர் நெஞ்சுருகிக்
கொலையிற் படுமழு வார்வெங்கை மாதுன் குளிர்தரள
மலையிற் படர்தனம் பீர்மீள மீண்டு வருகுவரே.
   (270)
பருவங்கண்டுபெருமகள் புலம்பல்
   பூட்டாத வில்வளைத் தார்த்தாங் கிடித்துப் புயலெழுந்து
தீட்டாத வம்பு பொழியுமிக் காலந் தெரிந்திலரோ
காட்டாத நன்னிலை யார்வெங்கை வாணர் கனகவெற்பில்
ஈட்டாத பொன்னனை யாயகன் றார்பொரு ளீட்டுதற்கே.
   (271)
இகுளைவம் பென்றல்
   வெயிலே யெனமணி கண்டிதழ் கூம்பி விரைக்குவளை
துயிலே புரியுஞ் சுனைவெங்கை வாணர் சுடர்க்கிரியின்
மயிலே யுளங்கவ லேலிது தான்மழை வம்பொடுங்கிக்
குயிலே மருபரு வத்தாற் பொழிதருங் கொண்டலன்றே.
   (272)
இறைமகண் மறுத்தல்
   கொங்கைப் பசப்பெனக் கொன்றைகள் பூத்த குருகொழிந்த
அங்கைத் தலமெனத் தோன்றியுந் தோன்றின வன்னவயல்
வெங்கைப் பதியிற் பழமலை நாதர் மிடறெனவே
மங்கைப் பருவத் தணங்கே முகிலெழும் வம்பலவே.
   (273)
   269. நீடறிவாய்-பேரறிவு வடிவமாய். பீடறிவாய்-பெருமையை அறிவாய். நச்சல்-விரும்பல். 270. கலை-கலைமான். மாழ்கி-மயங்கி. தரளம்-முத்துமாலை. வலை-கண்ணி. படுதல்-அகப்படுதல். படர்வனம்-பெருங்காடு. 271. பூட்டாத வில்-நாண்பூட்டாதவில். ஆர்த்து-முழங்கி. நாண்பூட்டாத வில்-வானவில். தீட்டாத அம்பு-நீர். ஈட்டல்-தேடுதல். 272. வெயிலே யென்னு மேகாரம் தேற்றம். கவலல்-கலங்கல். பருவத்தால்-உருபுமயக்கம். கொண்டல்-முகில். 273. கொங்கை-தனம். பசப்பு-பசலை. குருகு-பறவை. அங்கை-உள்ளங்கை. அழகிய கை யெனினுமாம். தோன்றி-செங்காந்தள். மிடறு-கழுத்து.
   
அவர்தூதாகிவந் தடைந்ததிப் பொழுதெனத் துணைவிசாற்றல்
   இணர்வார் சடைமுடி யார்வெங்கை வாண ரிமயவெற்பிற்
புணர்வார் முலையிள மென்கொடி யேநம் புலம்புறுநோய்
உணர்வார் பொருளொடும் வந்தாரென் றோகை யுரைத்துமுகில்
வணர்வார் குழலெழில் வாங்குதல் வேண்டிமுன் வந்ததுவே.
   (274)
தலைமகளாற்றல்
   பொருநாண் மதனை யழித்தே யிமயப் பொருப்பின்மணத்
திருநா ளதிற்றரும் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பிற்
கருநாண் மலர்விழி மாதேயென் றாயினுங் காதலரீங்
கொருநாள் வருவரென் றேநின்ற தாவி யுடலகத்தே.
   (275)
அவனவட்புலம்பல்
   ஓடுந் தடங்கண் மணற்கேணி யாகவவ் வூற்றிறைக்கும்
நீடும் புளின முலையாக் குறைவு நிறைவுமின்றிச்
சூடும் பிறையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
பாடுஞ் சுரும்பலர் மொய்குழ றேம்பிப் பதைத்திடுமே.
   (276)
பாகனொடுசொல்லல்
   வார்கொண்ட மென்முலை யாளிடை யேபோய் வருவலென்னுங்
கார்கொண்ட வென்னிடை யில்லைபொய் யென்னக் கடுக்கைநறுந்
தார்கொண்ட செஞ்சடை யார்வெங்கை வாணர் தடஞ்சிலம்பிற்
றேர்கொண்ட சீர்வல வாவிரைந் தேகச் செலுத்துகவே.
   (277)
மேகத்தொடு சொல்லல்
   சென்னிப் பிறையர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
மன்னிப் படருங் கொடிபோற் றழைத்து மலர்வதன்றெங்
கன்னிப் பசுங்கொடி வாடுங்கண் டீர்மெய் கருகிநின்று
மின்னிப் பொழியி லெனையன்று போய்க்கரு மேகங்களே.
   (278)
   274. இணர்-பூங்கொத்து. வார்-நீண்ட. புணர்-நெருங்கின. ஓகை-உவகை. புலம்பு-துன்பம். வாங்குதல்-பெறுதல். 275. பொருதல்-போர் செய்தல். அழித்தல்-நீறுபடுத்தல். தருதல்-படைத்தல். உடலகத்து-உடம்பினுள்ளே. 276. ஓடுதல்-காதளவோடுதல். தடங்கண்-விசாலமாகிய கண். புளினம்-மணற்றிடர். தேம்புதல்-வாடல். பதைத்தல்-துடித்தல். 277. வார்கொண்ட மென்முலையாள் என்றது தலைவியை. இடை-மருங்குல். கடுக்கை-ஆகுபெயர். செலுத்துக-வியங்கோள். 278. மன்னி-நிலைபெற்று. மெய்கருகி நின்று-உடல்கறுத்துநின்ற.    

பாங்கி வலம்புரிகேட் டவன்வர வறிவுறுத்தல்
   தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
புண்ணீர் முழுகு மிலைவே லிறைவர்பொற் றேரின்மிசைப்
பண்ணீர் மொழியணங் கேகிளர்ந் தார்க்கும் பணிலமுன்றன்
கண்ணீர் வழியடைத் தற்குரித் தாகிய கல்லெனவே.
   (279)
வலம்புரி கிழத்தி வாழ்த்தல்
   வேயின் கவின்புனை தோளுமை பங்கர்தம் வெங்கைநகர்க்
கோயின் முனம்புகுஞ் சங்கென வாழ்கநங் கொண்கர்சுரம்
போயின் றணைவ லெனவோ தியமொழிப் பொய்மைபடா
வாயின் புகழ்திரண் டாலென வார்க்கும் வலம்புரியே.
   (280)
தலைவன்வந்துழிப் பாங்கி நினைத்தமைவினாவல்
   அம்மை யிடத்தர் திருவெங்கை வாண ரணிவரையெங்
கொம்மை முலைத்தட மெல்லாம் பசலை கொளக்கொடுத்துச்
செம்மை மனத்திற் பொருள்விழைந் தார்தரச் சென்றவிடத்
தெம்மை நினைத்ததுண் டோவிலை யோசொல் லிறையவனே.
   (281)
தலைவ னினைத்தமை செப்பல்
   புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தரயன்
பறந்தாலு மென்னென் றிருக்கின்ற வேணிப் பரமர்தமைத்
துறந்தார் மனமென வெங்கொடுங் காட்டுச் சுரத்திடைநான்
மறந்தா னினைத்தலு முண்டுபொன் னேயுயங்கள் வஞ்சியையே.
   (282)
   279. தெண்ணீர் என்றதுவிண்ணகக்கங்கையை. முடி-சடை. புண்ணீர்-இரத்தம். பொற்றேர்-அழகிய தேர். 280. வேய்-மூங்கில். கவின்-அழகு. சுரம்-அருநெறி. பொய்மைபடுதல்-பொய்படுதல். 281. எங்கொம்மை முலைத்தடம் என்றாள் தனக்குந் தலைவிக்கும் ஒற்றுமையுண்மையான். சென்றவிடத்து-பொருள்தேடச் சென்றவிடத்து. 282. என்னென்றிருத்தல்-பராமுகமாயிருத்தல். பரமர்-மேலானவர். பறத்தல்-அன்னமாகப் பறந்த வரலாறு குறித்தது.

பாங்கி தலைவியை யாற்றுவித் திருந்தமைகூறல்
   விண்மணி பொய்ப்பினும் பொய்யாநின் வாய்மை விளம்பியெங்கள்
கண்மணி யொத்தசெவ் வேலிறை வாவுயிர் காத்தளித்தேன்
ஒண்மணி கண்டத் தொருவெங்கை வாண ருயர்சிலம்பிற்
பெண்மணி யைப்பிறை வாணுத லீர்ங்குழற் பேதையையே.
   (283)
வரைவியல்
வரைவுமலிவு
காதலன் முலைவிலைவிடுத்தமை பாங்கி காதலிக்குணர்த்தல்
   மலைவிலை யென்ற நிலைவெங்கை வாணர் மணிவரைமேல்
இலைவிலை யிந்த மணிக்கு முலைக்குமென் றெண்ணியொரு
கொலைவிலை வென்ற நுதன்மட வாய்நங் கொழுநர்முகிழ்
முலைவிலை நல்கின ரைந்தலை நாக முழுமணியே.
   (284)
காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சி யுள்ளல்
   நான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு
கான்ற குருதிக் குடர்மாலை வேலுடைக் காளையெழில்

போன்ற வுருவத் திறைவர்மென் றோளிடு பூந்தொடைகண்
டீன்ற பொழுதிற் பெரிதுவ வாநிற்கு மெம்மனையே.
   (285)
   283. கண்மணி-கட்பாவை. பெண்மணி யென்பதற்குப் பொருள் பெண்களுட் சிறந்தவள் என்பது.284. மலைவு-மயக்கம். மலைவிலை என்ற நிலை-அசையாத யோகநிலை. விலையிலை-மதிப்பில்லை. முழுமணி-பொள்ளா மணி. 285. நான்ற-தொங்குகிற. சடிலம்-சடாபாரம். கான்ற குருதி-உமிழ்ந்த இரத்தம். குடர்மாலை-குடராகிய மாலை.

பாங்கி தமர்வரைவெதிர்ந்தமை தலைவிக்குணர்த்தல்
   புரவல ரொக்குங் குடிவாழும் வெங்கை புரத்தரிந்தீ
வரவல ரொக்கு மிடற்றார்தங் கையிள மான்விழியாய்
இரவல ரொக்கு மிறையோன் முலைவிலை யின்மொழியாற்
றரவல ரொக்கு மெதிர்புகுந் தார்க்குந் தடமுரசே.
   (286)
தலைமக ளுவகையாற்றா துளத்தொடுகிளத்தல்
   வில்லுங் கணையு மதவேளு மாய விழித்தவரெஞ்
சொல்லும் புனையுந் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
கொல்லுந் துயர முலைமேற் பசப்பினைக் கொண்டுநெஞ்சே
செல்லுஞ் செலவை யுணர்த்திய தாமிச் செழுமுரசே.
   (287)
தலைவனைப் பாங்கிவாழ்த்தல்
   கணத்தி னிலங்கு மதிப்பிள்ளை யொன்றிளங் கட்செவியின்
பணத்தி னுறங்குஞ் சடையாளர் வெங்கைப் பனிவரைமேற்
குணத்தி னுயர்ந்த கொடியிடை யாவி கொடுப்பதற்கா
மணத்தி னலங்கல் புனையுநங் காதலர் வாழியவே.
   (288)
தலைவிமணம்பொருட்டாக வணங்கைப்பராநிலைகாட்டல்
   நிலமா தணிநிகர் வெங்கையு ளான்றரு நீமுனமெங்
குலமா தினைமணஞ் செய்தாங் கெனையுங் கொழுநர்வந்து
நலமா மணம்புணர்ந் தால்விழ வாற்றுவ னானெனவே
பலமா தருந்தொழும் பாவைசெவ் வேளைப் பரவுறுமே.
   (289)
அதுகண்டோன் மகிழ்தல்
   மால்பற் றியபொழில் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
சேல்பற் றியவிழி யாளுல கோர்முனஞ் செங்கையினாற்
கால்பற்றி யம்மியின் மீதே யிருத்தல் கடைப்பிடித்து
வேல்பற் றியதெய்வ சூளா மணியினை வேண்டுமென்னே.
   (290)
   286. இந்தீவரம் அலர் ஒக்கும்-கருங்குவளை மலரை நிகர்த்த. தடமுரசு-பெரிய முரச வாத்தியம். 287. கணை-அம்பு. மதவேள்-இருபெயரொட்டு. மாய்தல்-மடிதல். புனைதல்-தரித்தல். பசப்பு-பசலைநிறம். செலவு-போக்கு. 288. கணம்-விண்மீன். மதிப்பிள்ளை யொன்று-ஒருதலையாகிய திங்கள். கொடியிடை-அன்மொழித் தொகை. அலங்கல்-தொழிலாகு பெயர். 289. விழா-திருவிழா. ஆற்றல்-செய்தல். பாவை-ஆகுபெயர். பரவுறல்-வழிபடல். 290. மால்-மேகம். பற்றல்-தவழ்தல். கடைப்பிடித்தல்-உறுதியாகப் பற்றுதல்.

கையறுதோழி கண்ணீர்துடைத்தல்
   கோலம் புனைதலிற் குற்றமின் றான்மலர் கொய்துவருங்
காலந் தவறில பந்திடைத் தோல்வியுங் கண்டிலமால்
ஆலந் திகழ்மிடற் றார்வெங்கை நாட்டுன தம்புயத்தில்
நீலஞ் சிறுமுத் துதிர்ப்பதென் னோவுரை நேரிழையே.
   (291)
தலைமகள்கலுழ்தற் காரணங்கூறல்
   தெண்ணீர் முடியர் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பண்ணீர்மை மென்மொழிப் பாவைநல் லாயிப் படிமுழுதும்
எண்ணீர்மை யன்பரைக் கண்டன மால்வந்த தென்றெனது
கண்ணீர் கொடுமென் முலைமேற் பசப்பைக் கழுவுறவே.
   (292)
தலைவன்தெய்வங்காட்டித் தெளிப்பத் தெளிந்தமைகூறல்
   கொலைசூழ் குருகுமொன் றுண்டாற் கரிநெறு கூறுமெனில்
இலைசூழ் மனையின் முனிவரெல் லாந்தொழு மெங்கள்பழ
மலைசூழ் மறுகெழில் வெங்கைநன் னாடர் மனந்தெளியச்
சிலைசூழ் வனந்திகழ் தெய்வதங் காட்டித் தெளித்ததற்கே.
   (293)
பாங்கி யியற்பழித்தல்
   முனங்குழை யாத மலைகுழைத் தார்தம் முதல்விகன
தனங்குழை யாது குழைந்தார்தம் வெங்கைத் தடஞ்சிலம்பிற்
கனங்குழை யாயுனக் கீந்தா ரிலைகொனங் காவலனார்
மனங்குழை யாமன் முனந்தா மருந்து மருந்தினையே.
   (294)
   291. கோலம் புனைதல்-தலைப்பணி திருத்தல் முதலிய அழகு செய்தல். பந்து-பந்தாட்டம். தோல்வி-தோற்றல். ஆலாலம்-பாற்கடலில் தோன்றிய நஞ்சு. 292. பண்ணீர்மை-பண்ணின் குணம்; அஃதாவது இனிமை. பாவை-பொம்மை. கழுவுற-கழுவ 293. இலைசூழ்மனை-பர்ணசாலை. பர்ணம்-இலை. இதனை இலைக்குடில் என்பர். மறுகு-தெரு. வனந்திகழ் தெய்வதம்-வனதேவதை. தெளித்தல்-தேற்றுதல். கொலைசூழ்தல்-கொன்றுண்டல். 294. குழையாமை மலைக்கியல் யென்பது தோன்றக் குழையாத மலையென்றார். மலை யிங்கு மேருமலையைக் குறித்தது. கனதனம்-பெருங்கொங்கை.

தலைமக ளியற்படமொழிதல்
   உழைகா தலிக்குங் கரத்தார் நிறைமதி யொத்தசங்கக்
குழைகாதிற் பெய்பவர் தென்வெங்கை வாணர் குளிர்சிலம்பின்
மழைகா தலிக்குங் கொடையன்பர் மேற்பிறர் வாயுரைக்கும்
பிழைகாதிற் கேட்பவந் தோபடைத் தானயன் பெண்பிறப்பே.
   (295)
தெய்வம்பொறைகொளச் செல்குவமென்றல்
   புற்றங் கதமணி வெங்கைபு ரேசர் பொருப்பிலெங்கள்
சுற்றந் தொழுமெங் கொழுநர்நிற் காட்டிமுன் சூளுரைத்த
குற்றம் பொறுத்தரு ளென்றடி போற்றிக் கொழுமலர்தூய்ச்
செற்றந் தணிக்குதும் பெண்ணே யினிக்குல தெய்வத்தையே.
   (296)
தலைவி யில்வயிற்செறித்தமை யியம்பல்
   சுட்டா வறிவுரு வானாரவ் வானிற் சுரர்தமக்குங்
கிட்டா வமுதனை யார்வெங்கை வாணர் கிரியணங்கே
மொட்டா முலையிற் பசலைகண் டேமனை முன்றில்விடாள்
இட்டா ளிலைவிலங் கென்பதொன் றேகுறை யீன்றவட்கே.
   (297)
செவிலி கனையிரு ளவன்வரக் கண்டமைகூறல்
   மீனைக் கடந்த பொழில்சூ ழரன்றிரு வெங்கைவெற்பர்
கானைக் கடந்து குறிவா யிருள்வரக் கண்டனள்யாய்
மானைக் கடந்த விழியாய் தரள மணிவடத்த
ஆனைக் கடந்த விளஞ்சிங்க மோவென் றயிர்த்தனளே.
   (298)
   295. உழை காதலிக்கும் கரத்தார் என்றமையால் திருக்கையின் பேரழகு பெறப்படும். சங்கக்குழை-சங்கினாலியன்றதோடு. பெய்தல்-இடுதல். மழை காதலிக்கும் கொடையன்பர் என்றமையால் பெருங்கொடையார் என்பது பெறப்படும். அந்தோ-இரக்கக்குறிப்பு. பிறர் என்றது பாங்கியை. 296. அங்கதம்-பாம்பு. பொருப்பு-மலை. சுற்றம்-ஆகுபெயர். சூளுரைத்தல்-உறுதியாக ஆணையிடல். செற்றம்-கோபம். 297. மனோவாக்குக் காயங்களாற் சுட்டியறியப்படாதவராகலானும் ஞானவடிவாயிருப்பவராதலானும் இறைவர் சுட்டாவறிவுருவானார் என்று சுட்டப்பட்டார். மொட்டு-அரும்பு. 298. மான்விழி-ஆகு பெயர்கள். வெற்பர்-மலை நாடர். கான்-காடு. யாய்-தாய்.    

எறிவளைவேற்றுமைக் கேதுவினாதல்
   கனம்வேறு பட்ட மிடற்றார்தம் வெங்கைக் கனகவெற்பில்
புனம்வேறு பட்டிங்கு வந்தவன் றேநம் புரிகுழற்குத்
தனம்வேறு பட்டு விழிவேறு பட்டுத் தளர்ந்துமொழி
மனம்வேறு பட்டதென் னோவுரை யாய்செவ் வரிக்கண்ணியே.
   (299)
பாங்கி வெறிவிலக்கல்
   வீட்டை யுவந்து தருவார் திருவெங்கை வெற்படுத்த
காட்டை விரும்பி யுறைதெய்வ மேயெங்கள் கன்னிபடும்
பாட்டை நினைந்திலை வாளா வுலகிற் பலர்விரும்பும்
ஆட்டை விரும்பினை நன்றோ விதுசொல் லறிவினுக்கே.
   (300)
வெறிவிலக்கியவழி செவிலிவினாதல்
   மின்னோ டுவமிக்குஞ் செஞ்சடை யார்திரு வெங்கைவெற்பிற்
பொன்னோய் விலக்குவ மென்றெண்ணி யாங்கள் புகும்பொழுதில்
என்னோ வெறிவிலக் குற்றா யிளமுலை யேந்திழையாள்
தன்னோ யறிந்தனை யேலுரை யாய்மைத் தடங்கண்ணியே.
   (301)
பூத்தருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
   தடுக்க நிறைபுனற் பண்ணையிற் சூன்முதிர் சங்கம்வந்து
படுக்க நளின மலர்வெங்கை வாணர் பனிவரைமேல்
உடுக்க வுதவினன் மாந்தழை மாமல ரொண்ணுதற்குக்
கொடுக்க மதனை விடுத்தகன் றானொரு கோமகனே.
   (302)
புனறருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
   வான்கற்ற வண்புகழ் வெங்கைபு ரேசர் மணிவரைமேற்
றான்கற்ற கல்வி தளர்வூ டுதவுந் தகையெனவே
தேன்கற்ற மென்மொழி யாள்வரு நீரொடு செல்பொழுதில்
ஊன்கற்ற வேலுர வோனொரு வேந்த னுதவினனே.
   (303)
களிறுதருபுணர்ச்சியா லறத்தொடுநிற்றல்
   ஐங்கைக் களிறு தரும்வெங்கை வாண ரணிவரைமேல்
வெங்கைக் களிறு தனைப்பாய் வுறவர மெய்ந்நடுங்கிக்
கொங்கைக் களிறு புறம்பாய் வுறப்புல்லிக் கொண்டனள்வேற்
செங்கைக் குமரனை யன்னா னொருவனைத் தேமொழியே.
   (304)
   299. கனம்-முகில். வேறுபடல்-பகைத்தல். புரிகுழல்-அன்மொழித் தொகை. தனம்பேறு படல்-பசத்தல். செவ்வரிக்கண்ணி என்றது பாங்கியை. 300. வீடு-வீடுபேறு. காட்டை விரும்பியுறை தெய்வம்-வனதேவதை. பாடு-துன்பம். 301.01. பொன்னோய்-பொன்போன்றவளாகிய தலைவியினுடைய துன்பத்தை. வெறி-வெறியாடல். 302.02. பண்ணை-வயல். உதவல்-கொடுத்தல். ஒண்ணுதல்-அன்மொழித் தொகை. 303.03. வான்-ஆகு பெயர். உதவல்-கைகொடுத்தல். வருநீர்-புதுவெள்ளம். 304.04. தேமொழி என்றது செவிலியை. தலைவியை எனக்கொள்ளுதலும் அமையும். புல்லல்-தழுவல். தேமொழி-அன்மொழித் தொகை.

மணம் விலக்கல்
   வன்னித் திருவிழி யார்வெங்கை வாணர் மணிவரைமேல்
இந்தித் திலவட நல்கினற் கேயன்றி யேதிலர்க்குக்
கன்னிக் குமரி மணமுடை யாளல்லள் காண்டகைய
சென்னிக் கணிமுடி தாட்கணி யாகுஞ் செயலில்லையே.
   (305)
தலைமகள்வேற்றுமைகண்டு நற்றாய்செவிலியைவினாதல்
   நெடுங்கோ வளவயல் வெங்கைபு ரேசரை நெஞ்சிருத்தாக்
கொடுங்கோ லரசர் குடைக்கீ ழடங்குங் குடியெனவே
இடுங்கோல் வளைவிழி நீரொழி யாம லிருப்பதென்னோ
அடுங்கோல் புரைவிழி வெண்முத்த வாணகை யாயிழையே.
   (306)
செவிலிநற்றாய்க்கு முன்னிலைமொழியாலறத்தொடுநிற்றல்
   புலங்கண் டளவின் மறைவெங்கை வாணர் பொருப்பிடைச்செந்
நிலங்கண் டளவி லுறைதிரிந் தாங்கொர் நெடுந்தகைதன்
நலங்கண் டளவி னலந்திரிந் தாண்மென் னகின்மிசையோர்
கலங்கண் டளவின் மிகநோ மருங்குலுன் காரிகையே.
   (307)
நற்றாய் தமருக் கறத்தொடுநிற்றல்
   வேலோடு வாளும் பயினமர் காணம் விளங்கிழையைப்
பாலோடு தேன்கலந் தாங்கிள வாளை பணைமருதச்
சேலோடு பாயுந் திருவெங்கை வாணர் சிலம்பினெடும்
மாலோடு மான மொருவே லவற்கு மணஞ்செயுமே.
   (308)
   305.05. வன்னி-நெருப்பு. தேவர்களுக்கு அவியுணவு கொடுப்பவன் என்பது பொருள். ஏதிலர்-அயலார். தகை-அழகு. 306.06. கோ-ஆகாயம். கோல்வளை-அன்மொழித் தொகை. கோல்-புள்ளி. 307.07. பொருப்பு-மலை. செந்நிலம்-செந்தரை; உறைநீர். திரிதல்-வேறுபடல். நெடுந்தகை-பெரியோன். நலம்-அழகு. நலம்திரிதல்-நலம் வேறுபடுதல். 308.08. நெடுமால்-திருமால். மானல்-நிகர்த்தல். சிலம்பு-மலை.    

உடன்போக்கு
பாங்கி தலைவற்குடன்போக்குணர்த்தல்
   தாயிற் சிறந்த திருவெங்கை வாணர் தடஞ்சிலம்ப
போயிப் பொழுது வருவலென் றேகிற் பொறுக்கறியாள்
தீயிற் புழுவென வேபதைப் பாணின் றிருவருளால்
நீயித் திருவை யுடன்கொடு போநின் நெடுநகர்க்கே.
   (309)
தலைவ னுடன்போக்குமறுத்தல்
   அனிச்சமு மன்னத்தின் றூவியு மாத ரடிமலர்க்குச்
சனித்த நெருஞ்சிப் பழமென் றறிந்துந் தகுவரன்றி
மனித்தர் வழங்கரும் வெங்கொடும் பாலை வழியொருநான்
இனித்த மொழியுடை யாரையெவ் வாறுகொண் டேகுவனே.
   (310)
பாங்கி போக்குடன்படுத்தல்
   துணையிற் புணர்களி வண்டிளம் பூந்தண் டுணர்பொதுளும்
பணையிற் றுயில்பொழில் வெங்கைபு ரேசர் பனிவரையாய்
பிணையிற் பிறழ்கருங் கண்ணாட்கு நின்னைப் பிரிந்தமலர்
அணையிற் கொடியது வோவைய நீசெல் லழற்சுரமே.
   (311)
தலைவன் போக்குடன்படுதல்
   நாமொழி யாது புகழ்வா னருள்வெங்கை நாதரைச்சொற்
பாமொழி யானெய்த லாம்பாலை ஞானசம் பந்தனுக்குத்
தேமொழி யாயுன் னுயிரனை யாட்கருஞ் செம்பவள
வாய்மொழி யாளிளங் காவாகும் பட்ட மரங்களுமே.
   (312)
   309.09. சிலம்பன்-மலைநாடன். பதைத்தல்-துடித்தல். திருதிருவைப் போல்வாள்; உவமையாகு பெயர். 310.10. “அனிச்சமு மன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்” என்பது திருக்குறள். அனிச்சம்-அனிச்சமலர். அன்னத்தூவி-அன்னத்தின் மெல்லிய சிறகு. ஈற்றேகாரம்-இரங்கல். இனித்த மொழி-இன்சொல். 311.11. பொதுளும்-நிறைந்த. பனிவரை-குளிர்ந்த மலை. பிணை-பெண்மான். பிறழ் பிறழ்கின்ற. 312.12. புகழ்வான்-புகழ. பாமொழி-தேவாரத்திருப்பதிகம். பாலைநெய்தலாகப் பாடியது. திருநனி பள்ளியில்; தேமொழியாய் என்றது பாங்கியை.

பாங்கி தலைவிக்குடன்போக்குணர்த்தல்
   தேவியுஞ் சம்புவு நீங்காத வெங்கைச் செழுஞ்சிலம்பர்
காவியுங் கஞ்சமு மாம்பலும் பூத்துக் கவின்கனியும்
வாவியும் பெண்ணணங் கென்றார் கதிர்தெறும் வன்சுரத்திற்
காவியுங் கண்ணு மமுதமும் போன்றொளி ராரணங்கே.
   (313)
தலைவி நாணழிவிரங்கல்
   ஊணிலை யாகநஞ் சுண்டோன் றிருவெங்கை யூரனைய
வாணிலை யாகு மதர்விழி யாய்முன் வனைந்திருந்த
பூணிலை யாகு மவயவம் பொலிவழிவார்
நாணிலை யாகிற் றனுவாற் பயனென்னை நங்கையர்க்கே.
   (314)
கற்புமேம்பாடு பூண்முலைப்பாங்கி புகறல்
   சேண்போலு மேனியர் தென்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பிற்
பாண்போலு மென்மொழிச் செந்துவர் வாய்மலர்ப் பாவையன்னாய்
பூண்போலு நாண்முத லெல்லாமு மங்கலப் பூங்கழுத்தில்
நாண்போலு மாணுறுங் கற்பொன்று மேகுல நாரியர்க்கே.
   (315)
தலைவி யொருப்பட்டெழுதல்
   நரைப்பால் விடையர் பிறையார் சடையர்மெய்ஞ் ஞானமயர்
வரைப்பாவை பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
உரைப்பா ருரைப்பவை யெல்லா முரைக்க வுனக்கிசைவேற்
றிரைப்பாவை யேசெல்லு வேனன்ப ரோடருந் தீச்சுரமே.
   (316)
   313.13. சம்பு-சிவபெருமான். கவின் கனிதல்-அழகு முதிர்தல். தெறும்-வருத்தும். வன்சுரம்-வலிய பாலைநிலம். 314.14. வாள் நிலையாகும்-வாளினது தன்மையைப் போன்ற. மதர்-மதர்த்த.பொலிவு-அழகு. ஊண்-ஆகுபெயர். 315.15. சேண்-ஆகாயம். பாண்போலும்-இசையைப் போலும். செந்துவர்-செம்பவளம். மாண்உறும்-மாட்சிமை பொருந்திய. திகம்பரராகையால் சேண்போலு மேனியர் என்றார். 316.16. நரைப்பால்-மிகுவெண்மை. வரைப்பாவை-உமாதேவி. இசைவு-உடன்பாடு. திரைப்பாவையே என்றது பாங்கியை.    

பாங்கி சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல்
   மாவோ வெனுங்கறைக் கண்டர்வெங் கேசர் மணிவரைமேல்
ஏவோ வெனுங்கண் ணிளங்கொடி யேமத னெய்யுநறும்
பூவோ புயல்வெண் மதியோ கனிகொளும் பூங்குயில்வாழ்
காவோ விறைவ ருடனே புகுங்கள்ளிக் காடெனக்கே.
   (317)
பாங்கி கையடைகொடுத்தல்
   இறந்தார் பிறந்துழ லாதே முதுகுன் றியற்றுசெயல்
சிறந்தார் புகழ்வெங்கை செய்வா னருளுஞ் சிவனுமையை
அறந்தா னுருவுகொண் டன்னான் வசிட்ட னருந்ததியைத்
துறந்தாலு நீதுற வேலைய னேநின் றுணைவியையே.
   (318)
பாங்கி வைகிருள் விடுத்தல்
   வெங்கே தகைமுனி வார்வெங்கை வாணர்தம் வெற்பிலன்னை
எங்கே மகளென் றிருப்பா ளவட்குன் னியல்பதனை
இங்கே யிருந்துரைத் தோரிமைப் போதினு ளெப்படியும்
அங்கேவந் துன்னொடு கூடுவ னான்மல ராரணங்கே.
   (319)
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்
   கொடும்பா விகளு மொருமா தவப்பயன் கொள்வரென
நெடும்பார் மிசையின் றறிந்தாம் விழிபொழி நீர்பெருகச்
சுடும்பா லையிலுன் றிருவடித் தாமரை தோய்ந்தமையால்
அடும்பா தகநஞ்ச முண்டமை வார்வெங்கை யாரணங்கே.
   (320)
   317.17. மா-நீலமணி. கறை-விடம். ஏ-அம்பு. இளங்கொடியே என்றது பாங்கியை. கா-சோலை. 318.18. செய்வான்-செய்ய. ஐயனே யென்றது தலைமகனை. துணைவி-தலைவி. துறத்தல்-கைவிடுதல். கையடை-அடைக்கலம். 319.19. வெங்கேதகை-வெவ்விய தாழம்பூ. முனிவார்-வெறுப்பவர். இயல்பு-சுரத்திற் சென்ற செய்தி. 320.20. மாதவம்-பெருந்தவம். கொள்வர்-பெறுவர். தோய்தல்-படிதல். அடுதல்-கொல்லுதல்.
   
தலைமகன் பொழில்கண்டுவியத்தல்
   பிறப்பாம் வனம்புக் குழல்வார் தமக்குப் பெரிதுமுன்செய்
அறப்பா லுதவுந் திருவெங்கை வாண ரடிநிழல்போல்
உறப்பாலை செய்துய ரெல்லா மொழிய வொளியிழைதாழ்
நிறப்பார மென்முலை யாய்பொழி லோவொன்று நேர்ந்ததுவே.
   (321)
தலைமகன் றலைமக ளசைவறிந்திருத்தல்
   ஆடும் பதத்தர் திருவெங்கை வாண ரதிகபுகழ்
பாடுங் குமுதம் புனலூற வெய்ய பரிதியினால்
வாடுங் கமல முகவேர் புலர மலர்ந்துதென்றல்
ஓடுங் குளிர்தண் பொழிற்கே யிருந்தரு ளொண்ணுதலே.
   (322)
உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல்
   எண்ணிய வெண்ண முடிப்பார்தம் வெங்கை யிமயவெற்பில்
நுண்ணிய நூன்மருங் குற்கனி வாய்வின் னுதலியுன்றன்
மண்ணிய நீல மணிவார் குழலின் மலர்புனையப்
பண்ணிய புண்ணிய முன்னமென் னோவென்றன் பாணிகளே.
   (323)
கண்டோரயிர்த்தல்
   நந்தனும் வெள்ளை மதகரி வேந்து நறியவர
விந்தனு முள்ளங் கசிந்தேத்தும் வெங்கை விமலர்தருங்
கந்தனும் வள்ளியு மோவறி யேமிந்தக் காளையெழின்
மைந்தனும் வள்ளிதழ்ப் போதணி வார்குழன் மங்கையுமே.
   (324)
கண்டோர் காதலின்விலக்கல்
   தாதை யனைய திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
சீதை யொடுவரு மாலனை யாயித் திருந்திழையாள்
கோதை வெயிலிடைப் பட்டனை யாளெங் குடிலில்வைகி
மாதை யுடன்கொண்டு நாளையுன் னூர்க்கு வழிக்கொள்கவே.
   (325)
   321.21. அறப்பால்-அறப்பயன். உற-மிகுதியாக. பாரம்-பொறை. 322.22. ஆடும்பதத்தர்-திருக் கூத்தியற்றும் திருவடியை உடையவர். பாடுங்குமுதம்-வாய். வேர்-வியர்வை. ஓடுதல்-இயங்குதல். ஒண்ணுதல்-அன்மொழித்தொகை. 323.23. மண்ணிய-அலங்கரிக்கப்பட்ட. பாணிகள்-கைகள். என்னோ-யாதோ? 324.24. நந்தன்-சங்கையுடையவனாகிய திருமால். வெள்ளை மதகரி வேந்து-வெள்ளானையை உடைய இந்திரன். அரவிந்தம்- செந்தாமரை மலர். விமலர்-இயற்கையாகவே மலமற்றவர். 325.25. மால் அனையாய்-இராமபிரானைப் போன்றவனேகோதை-பூமாலை. வைகல்-தங்கல். வழிக்கோடல்-பயணப்படல்.
   
கண்டோர் தம்பதி யணிமைசாற்றல்
   பணியே றியசெஞ் சடைவெங்கை வாணர் பனிவரைமேல்
கணியேறு மாவிற் படர்கொடி மீது கழனிவளை
அணியேறு வேழம்பர் போலே தவழு மணிநகரம்
மணியேறு தோளண்ண லேயுங்கண் மாட வளநகரே.
   (326)
தலைவன் தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தல்
   பன்னகர் கின்னர மன்னவ ரென்றும் பரவுவெங்கை
நன்னகர் தன்னக ரென்னுமெம் மான்கிரி நன்னுதலாய்
பொன்னக ரென்னக ரிந்நகர் முன்னெனப் போற்றலுறும்
இந்நக ரென்னகர் நின்னக ராக வெழுந்தருளே.
   (327)
செவிலிபாங்கி யைவினாதல்
   சொன்மாது தன்புகழ் யாழிலிட் டேத்தித் தொழுமிமய
நன்மாது பங்கர் திருவெங்கை வாணர்நன் னாடனையாய்
என்மாது சென்ற விடமே தறிந்தில னின்முழுதும்
பொன்மாது சென்ற மனைபோற் பொலிவறப் புல்லென்றதே.
   (328)
பாங்கி செவிலிக்குணர்த்தல்
   சாந்தந் தருபவர் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
சேந்தங் கயல்விழி நீர்மல்க வேநின்று தேம்புமன்னே
காந்தந் தொடர்கரும் பொன்போல வின்றுதன் காந்தனைக்கண்
டேந்தங் கலமுலைச் செம்பொனன் னாடொடர்ந் தேகினளே.
   (329)
செவிலி யினையலென்போர்க் கெதிரழிந்துமொழிதல்
   அனையே யனைய வருளாளர் வெங்கை யணிவரைமேல்
இனையே லெனவெனக் கோதிநிற் பீரெனைப் போலவொரு
புனையே டவிழ்மலர்க் கோதையைப் பாலையிற் போக்கிநின்றால்
வினையே னுறுதுய ரெல்லா முமக்க வெளிப்படுமே.
   (330)
   326.26. பணி-பணத்தையுடையது பாம்பு. பணம்-பாம்பின்படம். கணி-வேங்கைமரம். வேழம்பர்-கழைக்கூத்தர். 327.27. பன்னகர்-பாம்பு வடிவமுடைய ஒரு தேவசாதியார். பரவு-வழிபடுகின்ற. 328.28. சொல்மாது-கலைமகள். பொன்மாது-திருமகள். பொலிவு-விளக்கம். புல்லெனல்-ஒளிமழுங்கல். 329.29. சாந்தம்-மௌனநிலை. சேந்து என்பதற்குப் பகுதி செம்மை. மல்கல்-தளும்பல். தேம்புதல்-அழுதல். கரும்பொன்-இரும்பு. காந்தன்-கணவன். செம்பொன்-திருமகள். 330.30. இனைதல்-வருந்துதல். புனையேடவிழ் மலர்க் கோதை-பெண். பாலை-கடுஞ்சுரம்.    

செவிலி தன்னறிவின்மை தன்னைநொந்துரைத்தல்
   புன்றோ லுடையர் திருவெங்கை வாணர் பொருப்பணங்கு
வன்றோ ளிராம னொடுசீதை தங்கண் மனைகடந்து
சென்றோர் வனம்புகுந் தாளென்பர் மாசி றெரிவையர்க்கு
நன்றோ வதுபிழை தானோவென் றாளது நாடிலனே.
   (331)
செவிலி தெய்வம்வாழ்த்தல்
   செடிமுழு தும்புலி துஞ்சுபொல் லாதவெந் தீச்சுரத்தில்
அடிமுழு துஞ்செம் புனல்பாயச் சென்ற வணங்குவந்தால்
படிமுழு தும்புகழ் வெங்கைபு ரேசர்தம் பாலனுக்கெங்
குடிமுழு துந்தொழும் பாளாக வோலை கொடுக்குதுமே.
   (332)
செவிலி நற்றாய்க்கறத்தொடுநிற்றல்
   வேலைத் தரளமு மைந்தலை நாக வியன்மணியுஞ்
சோலைச் செழுமல ரும்போல நம்மைத் துறந்துமெல்ல
மாலைக் குழலி தனக்குரி யானை மணந்துசென்றாள்
பாலைப் பொருமொழி பங்கர்வெங் கேசர் பனிவரைக்கே.
   (333)
நற்றா யயலார்தம்மொடு புலம்பல்
   பொன்போ லொருபெண் டிருவெங்கை யானருள் பூண்டுபெற்றோர்
என்போ லிலையுல கம்பதி னான்கினு மிப்பொழுது
துன்போ டழுங்கு மவருமென் போலிலைச் சோகமுறேல்
என்போ ரறிகுவ ரோவறி யாரிவ் விரண்டையுமே.
   (334)
நற்றாய் தலைமகள் பயிலிடந் தம்மொடுபுலம்பல்
   ஆவிக் குரியர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
மேவிக் குடையுஞ் சுனையே மலர்கொய்யு மென்பொழிலே
வாவிக் குமுத மலர்வாய் சிறிது மலர்ந்துபெற்ற
பாவிக் குரையுமென் றென்சொல்லிப் போயினள் பாதகியே.
   (335)
   331.31. புன்தோல்-இழிந்த தோல். நாடல்-ஆராய்தல். 332.32. படிமுழுதும்-உலகம் முழுவதும். செடி-சிறுதூறு. துஞ்சல்-உறங்கல். செம்புனல்-உதிரம். தொழும்பு-அடிமை. 333.33. வேலை-கடல். தரளம்-முத்து. வியல், வியன் இரண்டற்கும் பொருள் வேறுபாடின்று. மணத்தல்-கூடல். பாலைப்பொருமொழி-பாலை நிகர்த்த மொழியினையுடையாள். 334.34. அழுங்கல்-வருந்தல். சோகம்-துக்கம். இவ்விரண்டையும் என்றது இவளைப் பெற்ற பொழுதின் மகிழ்ச்சியும் இழந்தபொழுதில் துக்கமும் எனக் கொள்க. 335.35. ஆவி-உயிர்கள். குடைதல்-மூழ்குதல். பொழில்-சோலை. வாவி-தடாகம். குமுதம்-செவ்வல்லி மலர். பாதகி யென்றது தலைவியை.

நிமித்தம் போற்றல்
   பாவிரி மாபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
பூவிரி வான்பொழில் காப்பதற்-காகப் பொருதிரைத்தண்
காவிரி மாதை வருவித்த காக்கையுங் காக்குங்கொலோ
மாவிரி மாகுழ னன்மாதை யீங்கு வரவழைத்தே.
   (336)
சுரந்தணிவித்தல்
   சங்கலைத் தொண்புன லூர்வய னாவற் றலைவனுக்குச்
செங்கலைப் பொன்செய்த தென்வெங்கை வாணர் திருவருளால்
பொங்கலைத் தண்புனற் காவிரி நாட்டிற் பொலிகநிறை
அங்கலைத் திங்கண் முகமாது சென்ற வருஞ்சுரமே.
   (337)
தன்மகள் மென்மைத்தன்மைக் கிரங்கல்
   நோக்கக் குழையுஞ் சிலையாளர் வெங்கையி னுண்ணிடையார்
மோக்கக் குழையு மனிச்சமென் பூவின் முகந்தருத்தித்
தூக்கக் குழையும் பதங்கள்வெம் பாலைச் சுடுபரலில்
தாக்கக் குழையுங் கொலோகுழை யாதெங்க டையலுக்கே.
   (338)
இளமைத்தன்மைக் குளமெலிந்திரங்கல்
   பேதைப் பருவ மிறந்தே பெதும்பைப் பிராயமுறும்
போதைத் தொடங்கி மருண்மாலை போல்பவள் போனதென்னோ
மாதைக் கலந்த விடத்தார் திருவெங்கை வாணர்வெற்பில்
கோதைச் செழுங்கதிர் வேல்வேந் தொடுமக் கொடுஞ்சுரமே.
   (339)
   336.36. பாவிரி-பாக்களில் விரிந்துகிடக்கிற. மாவிரி-வண்டுக்கூட்டம் போல விரிந்த. மாகுழல்-நீண்டகூந்தலையுடைய. காவிரிமாது-காவிரியாறாகிய பெண். 337.37. ஒண்புனல்-ஒள்ளியநீர். நாவல் தலைவனுக்கு.-சுந்தரமூர்த்தியடிகளுக்கு. 338.38. நோக்கக் குழையுஞ்சிலை-பொன்மலை. சிவபிரானுடைய கண் நெருப்பாகையாலும் நெருப்பைக்காணிற் பொன் குழைதலியல்பாகலானும் ‘நோக்கக் குழையுஞ் சிலையாளர்’ என்றார். 339.39. பேதைப் பருவம்-ஏழுவயதுப் பருவம். பெதும்பைப் பருவம்-ஒன்பது வயதுப் பருவம். மருண்மாலை-மயக்கத்தைச் செய்கின்ற மாலைக்காலம்.

அச்சத்தன்மைக் கச்சமுற்றிரங்கல்
   ஆல மெழும்பொழு தவ்வெங்கை வாணர்க் கபயமென
ஓல மிடுஞ்சுரர் போலே யபயமென் றோடுங்கொலோ
ஞால மிடந்து திரிந்தவக் கோலமு நாணவொரு
கோல மெழும்பொழு தஞ்சிமுன் போந்த கொழுநனுக்கே.
   (340)
கண்டோரிரக்கம்
   துன்படு மையர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேல்
மின்படு நுண்ணிடை யாள்விளை யாடிய மென்பொழிலும்
பொன்படு மூசலும் வண்டலம் பாவையும் பூவையுங்கண்
டென்படு மோவறி யேம்பெற்ற தாயென் றிருப்பவளே.
   (341)
செவிலியாற்றாத்தாயைத் தேற்றல்
   வெல்லப் படாத வயில்விழி யாள்செயல் வேறொன்றன்றிச்
சொல்லப் படாத செயலாய் முடியிற் றுயர்தனன்றோ
அல்லற் படாதியன் னேவெங்கை வாண ரருள்கொடுநான்
செல்லப் படாத விடமேனுஞ் சென்று திருப்புவனே.
   (342)
ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்
   தன்னைத் தலைவனை நின்றாங் கறிந்து தவம்புணர்ந்து
முன்னைப் பவந்தொலைத் தீருண்மை கூறுமின் மூரிவெள்ளம்
மின்னைப் பொருசெஞ் சடையில்வைத் தார்வெங்கை வெற்பிலெங்கள்
பொன்னைக் கரந்தொரு காளைகொண் டேதனி போயினனே.
   (343)
   340. ஆலம்-பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சு. ஓலமிடல்-முறையிடல். சுரர்-தேவர். ஞாலம்-பூமி. இடத்தில்-பிளத்தல். கோலம்-பன்றி. கொழுநன்-கணவன். 341. துன்பு-துன்பம், (பிறவித்துன்பம்) மின்படும் என்பதில் படும் உவமஉருபு. பூவை-நாகணவாய்ப்புள். 342. அயில்-வேல் வெல்லப்படாத அயில் விழியாள் என்றது தலைவியை. துயர்தல்-துக்கித்தல். அல்லற்படல்-துன்பப்படல். திருப்புதல்-மீட்டல். 343.3, மூரிவெள்ளம்-பெருவெள்ளம். பொருதல்-நிகர்த்தல். பொன்-திருமகள். முக்கோற் பகவர்-மூன்று கோல்களையுடைய துறவிகள்.    

மிக்கோ ரேதுக்காட்டல்
   சேவிற் பிறங்குங் கொடிவெங்கை வாணர் சிலம்பணங்கே
பூவிற் பிறந்த பசுந்தேன் விரைவழி போந்தணுகும்
மாவிற் கலது மலர்க்கேது செய்யுமவ் வாறெனவே
ஏவிற் சிறந்த விழியா ணமக்குமென் றெண்ணுகவே.
   (344)
செவிலியெயிற்றியொடு புலம்பல்
   அள்ளி யளைந்து பசுந்தா தளியின மம்புயமென்
பள்ளி யுறங்குந் திருவெங்கை வாணர் பனிவரையாள்
வள்ளி நடந்த வழிதூர்ந் திடாதவ் வழிநடந்தாள்
கள்ளி படர்ந்த சுரத்தே வருமறக் காரிகையே.
   (345)
செவிலி குரவொடு புலம்பல்
   புரவே புரியுந் திருவெங்கை வாணர் புனையுமணி
அரவே புரையு மகலல்கு லாளொ டனைதுயர
வரவே தகுவதன் றென்றா யிலைமலர் வாய்திறக்குங்
குரவே மொழிநல் குரவே நினக்கிது கூறுதற்கே.
   (346)
சுவடு கண்டிரங்கல்
   புலியோ டரவு தொழுங்கூத் துடையவர் பூவையர்கைப்
பலியோ டுயிர்கவர் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
மலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி
கலியோ முனஞ்செலும் வெள்ளடி யோடு கலந்ததுவே.
   (347)
   344. சே-இடபம். பிறங்கல்-விளங்கல். சிலம்பு-மலை. அணங்கு-பெண். விரை-மணம். அணுகல்-சேர்தல். மா-வண்டு. ஏ-அம்பு. 345. அளைதல்-பூசுதல். தாது-மகரந்தம். பள்ளி-படுக்கை. மறக்காரிகை-மறப்பெண். 346. புரவு-புரத்தல், காத்தல். புனைதல்-தரித்தல். மணி-மாணிக்கம். துயர்தல்-துன்புறல். நல்குரவு-வறுமை. குர-குரா. 347. புலி-வியாக்கிரபாதர். அரவு-பதஞ்சலி முனிவர். ஓதி-கூந்தல்.    

செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டுகேட்டல்
   வேண்டா ருயிர்கவர் செவ்வே லிறைவனு மெல்லியலும்
மீண்டா ரெனவுண் மகிழ்ந்துநின் றேன்மலர் வேதன்முதல்
மாண்டா ரெலும்பணி வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
தூண்டா விருஞ்சுடர் போல்வரு வீரெதிர் தோன்றுறவே.
   (348)
அவர் புலம்பறேற்றல்
   என்னூர் பெயரவ் விளங்கா ளையுமிவ் விலங்கிழையாள்
தன்னூர் பெயர்நும் பிணைவிழி யாளுந் தனிவினவிப்
பொன்னூ புரவடி வஞ்சிபங் காளர் பொருந்துகொடி
மின்னூர் முகிலுறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.
   (349)
செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்
   சேணா டியமதில் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பில்
மாணா வலர்மொழி வார்க்கேது சொல்வனென் வாய்திறந்து
நாணா தினியெங்ஙன் மீண்டுட னன்னகர் நான்புகுவேன்
காணா மருங்கு லொருமாதை யாற்றிடைக் கண்டிலனே.
   (350)
மீட்சி
தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்
   கூனும் பிறையொன் றணிவார்தம் வெங்கைக் குளிர்சிலம்பில்
ஊனுங் குருதியுந் தோய்வடி வேல னொருவனொடு
மானுங் கயலும் பணிவிழி யாளரி மாவழங்கு
கானுங் கரைபொரு கான்யாறுங் குன்றுங் கடந்தனளே.
   (351)
   348. வேண்டார்-பகைவர். மீளல்-திரும்பல். உள்-மனம்; ஆகுபெயர். தூண்டா-தூண்ட வேண்டாத. இருஞ்சுடர்-பெருவிளக்கு. 349. பொன்நூபுரம்-பொன்னாலியன்ற சிலம்பு. இளங்காளை-என்றது தலைமகனை. இலங்கிழையாள் என்றது தன் மனைவியை. பிணைவிழியாள் என்றது தலைவியை. 350. சேண் ஆகுபெயர். நாடல்-தேடல். மாணாவலர் என்றபடியால் இழிவாகிய அலரெனலாயிற்று. 351. பணி-வணங்குதற்குரிய. அரிமாவழங்கு-சிங்கங்கள் இயங்குகின்ற. கான்யாறு-காட்டாறு, அரிமா இருபெயரொட்டு பண்புத் தொகை.    

தலைவன் றம்மூர்:சார்ந்தமை சாற்றல்
   சேய்விளை யாடுந் திருமார்பர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
நீவிளை யாடுஞ் சுனையீது நாண்மலர் நீபறிப்ப
மாவிளை யாடும் பொழிலது காணிள மந்திமுதிர்
வேய்விளை யாடுமவ் வெற்பேநம் வெற்பு விளங்கிழையே.
   (352)
தலைவி முன்செல்வோர் தம்மொடு தான்வரல் பாங்கியர்க்குணர்த்தி விடுத்தல்
   வேலையிற் றோன்றுநஞ் சுண்டோன் றிருவெங்கை வெற்பிலளி
சோலையிற் பாடுமெம் மூர்புகு வீரிது சொன்மினறு
மாலையிற் றோன்றுங் கதிர்வே லவனொடு மாவழங்கு
பாலையிற் போயின மாதுவந் தாளென்று பாங்கியர்க்கே.
   (353)
ஆங்கவர் பாங்கியர்க்குணர்த்தல்
   வெளிறுந் தரள நகையீ ரரன்றிரு வெங்கைவெற்பில்
களிறும் பிடியு முடங்குளைக் கோளரி கண்டுடைந்து
பிளிறுஞ் சுரத்திடைப் புக்கநும் மாது பிறழுமின்போல்
ஒளிறுங் கதிர்வடி வேலுடை யானொடிங் குற்றனளே.
   (354)
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குணர்த்தல்
   கீற்றுப் பிறையர் திருவெங்கை வாணர் கிரியிலன்னே
கூற்றுக் குடித்த வுயிர்மீண் டெனத்தன் கொழுநனொடு
வேற்றுப் புலத்தினின் றுற்றா ளெனச்சிலர் மெய்யுரைத்தார்
ஆற்றுப் படுத்துன் மனத்தே யிருந்த வருந்துயரே.
   (355)
நற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல்
   கைக்கா லசூலத்தர் வெங்கையி லேநற் கடவுடர
முக்கா லமுமுணர்ந் தீருல காளு முடிமன்னவன்.
மைக்கா வியங்கண் மடமா துடனெம் மனைவ ருமோ
தக்கார் புகழ்தன் மனைபுகு மோவென்று சாற்றுமினே.
   (356)
   352. சேய்-முருகக் கடவுள். நாள்-புதுமை. பறித்தல்-கொய்தல். மந்தி-குரங்கு. வேய்-மூங்கில். விளங்கிழை-அன்மொழித் தொகை. 353. நஞ்சு என மேல் வருதலால் வேலை ஈண்டு பாற்கடலை உணர்த்தியது. வேலை-கடல்; இது வேலா என்னும் வடசொல் திரிபென்பர். மா-விலங்கின் பொது. 354. வெளிறும்-வெளுத்த. முடங்கு-வளைத்த. நகை-பல். உளை-புறமயிர். கோளரி-ஆண் சிங்கம் உடைத்தல்-மனங்கலங்கல். பிளிறல்-பேரிரைச்சலிடல். பிறழ்தல்-மின்னுதல். ஒளிறல்-மிக்குவிளங்குதல். 355. வேற்றுப்புலம்-பாலைநிலம். நின்று ஐந்தாவதன் சொல்லுருபு. அருந்துயர்-பொறுத்தற்கரிய துன்பம். ஆற்றுப்படுத்து-தணிப்பாயாக. 356. கால குலம்-நமணைப் போன்று குலம். உவசாளு முடிமன்னவள் என்றதுதலைமகனை, மடமாது-தலைமகள்,
   
தன்மனை வரைதல்
நற்றாய் மணமயர்வேட்கையிற் செவிலியை வினாதல்
   மின்னைப் பயந்த வெனக்கோ கதிர்வடி வேலொருவன்
தன்னைப் பயந்த வினைக்கோ திருவடித் தாமரையில்
என்னைப் புரந்தவர் வெங்கையன் னாய்மண மேற்றுவக்கும்
முன்னைத் தவமெவர்க் கோவறி யேம்வந்து முற்றுவதே.
   (357)
செவிலிக்கிகுளை வரைந்தமையுணர்த்தல்
   செவ்வாய் மடமயி றன்னையின் னேமணஞ் செய்திருந்தார்
அவ்வா ளரியனை யாரென்று தூத ரறைந்தனரால்
சைவ கமந்திகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
எவ்வா றறைவ தறங்கோடி செய்துமுன் னீன்றவட்கே.
   (358)
வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல்
   பொன்னா ரிதழித் தொடையாளர் வெங்கைப் பொருப்பிலிந்த
நன்னா ளினிவருங் காலத் துறாதென நன்மணஞ்செய்
தன்னாய் வருகின் றனர்மட மாதுட னன்பரென்று
சொன்னார் மொழிபிற ழாதுண்மை கூறுநற் றூதுவரே.
   (359)
தலைவன் பாங்கிக்கியான்வரைந்தமை நுமர்க்கியம்பு சென்றென்றல்
   ஊனெழு வாய்மழு வெங்கைபு ரேச ருயர்சிலம்பில்
தேனெழு வார்குழ லாய்நுமர் தேறத் தெளித்தருள்வாய்
வானெழு மீர மதிவாண் முகத்துங்கள் வல்லிதனை
யானெழு நாவொன்று சான்றாகச் செய்த விருமணமே.
   (360)
பாங்கிதானதுமுன்னே சாற்றியதுரைத்தல்
   பன்னா ளருந்தவஞ் செய்ததன் மாதைப் பனியிமய
நன்னாக நல்க வரைந்தார் திருவெங்கை நாடளிக்கும்
மன்னாவெம் மேம வரைவளர் மாதை வரைந்தமைதான்
முன்னா வறிந்து பயந்தா டனக்கு மொழிந்தனனே.
   (361)
   357. மின்னை-மின்னற் கொடி போல்பவளாகிய தலைவியை. பயத்தல்-பெறல். கதிர்வடி வேலொருவன் என்றது தலைமகனை. உவத்தல்-மகிழ்தல். 358. செவ்வாய் மடமயில்-சிவந்த வாயினையுடைய இளமை தங்கிய மயில் போன்ற தலைவி. அறங்கோடி-பலவகையான அறங்கள். 359. பொன்னார் என்பதில் ஆர் உவம உருபு. இதழி : ஆகுபெயர். தொடை-மாலை. இனி வருங்காலம்-எதிர் காலம். 360. வாய்-மழுவின்கூர் பொருந்திய பக்கம் தேன்-வண்டுகள். தெளித்தல்-விவரித்துச் சொல்லல்-எழுநா-தீ. தீக்கு ஏழுநாக்களுண்மையால் இவ்வாறு பெயர் உண்டாகியது. 361. பன்னாள்-நெடுங்காலம். நாகம்-மலை. வரைதல்-மணஞ்செய்தல். அளித்தல்-காத்தல். ஏழம்-பொன். பயந்தாள்-ஈன்றவள்.
   
தீங்குங்கிழத்தி பாங்கியர்தமக்குத் தன் செலவுணர்த்தல்
   வெறிமேவு கொன்றையம் பூந்தொடை யார்திரு வெங்கைவெற்பில்
கறிமேவு முப்பென வன்பரிற் கூடிவெங் கானகத்தில்
நெறிமேவு மங்கை மகிழ்ந்துசென் றாளென நீருரைமின்
மறிமேவு முண்கண் மடக்கொடி மாதர்க்கு மாதவரே.
   (362)
தலைமகடன் செலவீன்றாட்குணர்த்தல்
   மின்னைத் திருத்து மவிர்சடை யார்திரு வெங்கைவெற்பில்
பொன்னைப் பரித்த திருமார்ப ரோடதர் போயினளென்
றென்னைக் கொடுத்துக் கலங்கவிழ் நாய்க னெனக்கவலும்
அன்னைக் குரைத்தரு ளீர்வழு வாநெறி யந்தணரே.
   (363)
நற்றாய்க்கந்தணர் மொழிதல்
   அல்லஞ்சு கண்டர் திருவெங்கை வாண ரணிவரையீர்
இல்லஞ் சுரமச் சுரமேதன் னில்ல மெனக்கருதி
வல்லஞ்சு மென்முலை யாணடந் தாளென் வழிச்செலவைச்
சொல்லந் தணவனைக் கென்றுவெம் பாலைச் சுரத்திடையே.
   (364)
நற்றாயறத்தொடு நிற்றலிற்றமர்பின் சேறலைத் தலைவிகண்டு தலைவற் குணர்த்தல்
   கல்வளைத் தன்று புரமெரித் தார்கருங் காவியங்கட்
பல்வளைச் செங்கைக் கொடிபாகர் வெங்கைப் பனிவரையாய்
வில்வளைத் தம்பு பொழிந்தார்த் தெழுந்து வியன்சிலம்பைச்
செல்வளைப் புற்றது போல்வளைந் தாரெமர் தேரினையே.
   (365)
   362. வெறிமேவு-மணம் பொருந்திய. வெங்கானகம்-பாலை நிலம். நெறி-கற்புநெறி. மறி-மான். உண்கண்-மையுண்டகன். 363. மின்னைத்திருத்தலாவது-மின் விளங்குமாறு செய்தல். பரித்தல்-தாங்குதல். அதர்-அருநெறி. கலம்-மரக்கலம். நாய்கர்-வணிகர். கவலல்-துன்புறல். வழுவாநெறி-துறவறநெறி 364. அல்லஞ்சு கண்டர்-இருளும் அஞ்சுமாறு மிகக் கறுத்த கண்டத்தையுடையவர். வல்-சூதாடு கருவி. 365. கல்-மேருமலை. இறைவர் வளைத்தது பொன்மலையாயினும் சாதியொப்புமை கருதிக் கல் என்றார். செல்-முகில்கள். வில் வளைத்து-வானவில்லை வளைத்து.
   
தலைமகடன்னைத்தலைமகன் விடுத்தல்
   செருகிக் கிடந்த மதிவே ணியர்திரு வெங்கைவெற்பில்
சருகிற் புகுஞ்சுழல் காற்றாகு வன்பகைச் சார்வினரேல்
குருகிற் சிறந்தகைத் தோசாய் நுமரைக் கொலாமையினால்
அருகிற் செலவஞ்சு வேனிற்க நீயிவ் வதரிடையே.
   (366)
தமருடன் செல்பவளவன்புறநோக்கிக் கவன்றரற்றல்
   கன்மலை யென்னினு மவ்வேடர் பெய்யுங் கணைமழைக்கிங்
கென்மலை யென்னும் பயத்தோர்க் கிடந்தரு மிம்மலைதான்
பன்மலை யென்னு மணிமாட வெங்கைப் பழமலைவாழ்
பொன்மலை வெள்ளி மலைபோற் பொலிக புகழ்படைத்தே.
   (367)
வரைதல்
சென்றோன் மீண்டுவந் தந்தணர்சான்றோரைமுன்னிட் டருங்கலந் தந்துவரைந்துழிக் கண்டோர்சாற்றல்
   கருவே ரறுக்குந் திருவெங்கை வாணர்க்குங் கற்புமைக்கும்
அருவேள்வி நன்மணஞ் செய்துசெம் பாதிமெய் யாயினவால்
வருவேத நன்னெறி தான்வழு வாமன் மணம்புணர்ந்து
பொருவே லிறைவற்கு நன்மா தினுக்குமெய் பூரித்தவே.
   (368)
   366. சுழற்காற்று-சூறைக்காற்று. குருகு-வளையல் நுமர்-நும்மவர். தோகை: இருமடியாகு பெயர். 367. மலையென்னும் புயத்தோர்-தலைவர். மணி மாடம்-மணிகள் பதிப்பிக்கப்பட்ட மாளிகைகள். 368. கரு-பிறவி. வேர் அறுத்தல்-அடியோடொழித்தல். மெய்-பொய்யாகிய உடலை மெய் என்றது மங்கலவழக்கு. புரித்தல்-நிரம்பல்

கற்பியல்
இல்வாழ்க்கை
தலைவன் றலைவிமுன்பாங்கியைப் புகழ்தல்
   கலைகா ணரும்புகழ் வெங்கைபு ரேசர் கனகவெற்பில்
குலைகா ணலைபுனற் பண்ணையி னாக்குபைங் கூழ்விளைவுற்
றுலைகா ணளவும் வருந்துகின் றாரினென் னொண்டொடைமின்
முலைகா ணளவும் வருந்தினை வாழி முகிண்முலையே.
   (369)
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்
   மால்போ லிருக்கு மிறைநீ யணிந்தநன் மங்கலநாண்
பால்போ லிருக்கு மொழியாட்கு வெங்கைப் பரனணிந்த
சேல்போ லிருக்கும் விழிமா துமையின் றிருக்கழுத்தின்
நூல்போ லிருக்கப் பெறுகதின் மாதவ நோக்கடைந்தே.
   (370)
பாங்கி தலைவியை வரையுநாளளவும் வருந்தாதிருந்தமை யுரையாயென்றல்
   போற்றலர் போற்றுங் கதிர்வே லவன்றொடை பூணளவும்
நீற்றலர் மேனியர் வெங்கையி லேயுண் ணிரம்புசெந்தேன்
ஊற்றல ரொன்றிற் கொடிநுசுப் பாயிவ் வுலகநிறை
தூற்றல ரெங்ஙன நீசுமந் தாற்றினை சொல்லுகவே.
   (371)
   369. இறை: வனுடைய புகழ் கலைகளால் அளவிடற்கரியதாகலின் கலைகாணரும் புகழ் என்றார். கனகம்-பொன். குலை-கொத்து. பண்ணை-வயல். 370. இறை பண்பாகு பெயர். அண்மைவிளியாதலின் இயல்பாயிற்று அணிதல்-பூட்டுதல். பால் போலிருக்கு மொழி-இன்மொழி. பரன்-மேலானவன்.மாதவன்-திருமகள் கொழுநன். 371. போற்றலர்-விரும்பாதவர். நீறு-திருவெண்ணீறு. ஊற்றுதல்-வார்த்தல். அலர்-மலர், பழிச்சொல். கொடி-பூங்கொடி. நுசுப்பு இடை.    

பெருமகளுரைத்தல்
   வினைக்கூறு செய்தன் றிருவடித் தாமரை மேவுறவென்
தனைக்கூவு மையர் திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
முனைக்கூ ரயில்விழி யாயின்று காறு முதல்வருடன்
எனைக்கூ றிடுமல ரேதுணை யாக விருந்தனனே.
   (372)
தலைவனைப் பாங்கி வரையுநாளளவுநிலைபெறவாற்றிய நிலைமைவினாதல்
   வேலை தருவிட முண்டோன் றிருவெங்கை வெற்பிலெழு
காலை யிரவி யனையாயெவ் வாறு கனலிமுனஞ்
சோலை யிளமயி லன்னாள் கழுத்திற் சுரும்புமுரல்
மாலை யிடுமள வும்பொறுத் தாய்மலர் வாளியையே.
   (373)
மன்றன்மனைவரு செவிலிக் கிகுளை யன்புறவுளர்த்தல்
   இலரு முளரு மலர்வெங்கை வாண ரிமயவெற்பில்
அலரு மலரு மலர்த்துவெய் யோனுமன் றொன்றற்கொன்று
மலரு மிருபொரு ளுண்டாயின் மங்கைக்கு மன்னவற்கும்
பலரு மிசையவொப் பாகுமன் னேயிப் படியகத்தே.
   (374)
பாங்கியில்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குரைத்தல்
   பல்லற மாற்றியு மெல்லா மொருங்கு படத்துறந்தோர்
நல்லற மாற்றுந் துணையாக வும்பெறு நன்மையினால்
அல்லற மாற்றுங் களத்தார் திருவெங்கை யாரணங்கின்
இல்லற மாற்றவு நன்றெனு மாலிவ் விருநிலமே.
   (375)
   372. வினை-நல்வினை, தீவினை. ஊறுசெய்தல்-கெடுத்தல். தீவினையையேயன்றி நல்வினையையுங் கெடுத்தல் எற்றுக்கெனின் இருவினைகளுமே பிறவிக்குக் காரணமாதல் பற்றியென்க. கூவுதல்-வலிந்தழைத்தல். 373. கனலி-தீ: வினையாலணையும் பெயர். கனலல்-சுடுதல். முரலல்-ஒலித்தல். பொறுத்தல்-ஆற்றியிருத்தல். 374. இலரும்-இல்லாதவரும். உளரும்-உள்ளவரும். அலரும் அலரும்-மலர்கின்ற மலரும். படி-உலகம். இசைய-உடன்பட. 375. ஒருங்கு பட-ஒருமிக்க. பல்லறம்-இல்லறத்தார்க்குரிய முப்பத்திரண்டறங்கள்.    

மணமனைச்சேன்றுவந்தசெவிலி பொற்றொடிகற்பிய னற்றாய்க்குணர்த்தல்
   மெய்யா மிறைவர் திருவெங்கை வாணர்தம் வெற்பில்வளைக்
கையா ளுடனவ் வருந்ததி மாதொப்பள் கற்பினென்றால்
பொய்யா மருங்கு லவள்வாழு மூர்க்குப் புயல்களென்றும்
பெய்யா விவளிடந் திங்கண்மும் மாரியும் பெய்திடுமே.
   (376)
நன்மனைவாழ்க்கைத் தன்மையுணர்த்தல்
   நூறாஞ் செறியிதழ்த் தாமரைத் தேனுமந் நுண்டுகளுஞ்
சேறாம் பழனத் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
பேறாம் பெருவிருந் தோடுதன் கேளைப் பிடிகடொறும்
வேறாஞ் சுவைபெற வூட்டிப்பின் றானுணு மெல்லியலே.
   (377)
செவிலி நற்றாய்க்கிருவர்காதலையு மறிவித்தல்
   கருமா மணிகண்டர் தென்வெங்கை வாணர்கைக் கார்முகமாய்
ஒருமா மலையை வலங்கொண்டு காலை யுதயவெற்பில்
வருமா தவன்றிருத் தேர்மெய்ம்மை போலப்புன் மாலையினில்
செருமா முகமுறச் சென்றாலு மன்பர்தந் தேர்வருமே.
   (378)
பரத்தையிற் பிரிவு
காதலன்பிரிவுழிக்கண்டோர்புலவிக்கேதுவிதாமவ்விறைவிக்கென்றல்
   வெண்டா மரைமனை யாள்புகழ்ந் தேத்தரன் வெங்கைவெற்பில்
தண்டா மரையை யிசைபாடி யாடித் தடவும்வரி
வண்டா மெனமட வார்பலர் சூழ்ந்தனர் மன்னவனைக்
கண்டா லனமனை யாளுடற் கீங்கிது காரணமே.
   (379)
தனித்துழியிறைவி துனித்தழுதிரங்கல்
   நினைப்போ ரகத்தி னடமாடும் வெங்கை நிமலர்வெற்பில்
தினைப்போ துமன்ப தொருவாத காதலர் தீர்ந்ததெண்ணிக்
கனைப்போ திருளின் புலர்ச்சியென் றென்று கருத்தழிந்திட்
டெனைப்போற் றுயினீத் திருப்பவர் யாரிவ் விருநிலத்தே.
   (380)
   376. மெய் ஆம்-உண்மையாகிய பொய்யா மருங்குல்-நுண்ணிய இடை. மாரி-மழை. பெய்தல்-பொழிதல். 377. நூறாஞ் செறியிதழ்த் தாமரை-நூறு இதழ்கள் பொருந்திய தாமரை. துகள்-பராகம். பழனம்-வயல். கேள்-கேளாந் தன்மை. 378. கருமாமணிகண்டர்-மிகக் கறுத்த கழுத்தை யுடையவர். கார்முகம்-வில். ஆதவம்-வெயில்; ஆதவத்தையுடையவன் ஆதவன். 379. வெண்டாமரை மனையாள்- கலைமகள்; வெண்டாமரையை இருப்பிடமாகக் கொண்டிருத்தலின் இவ்வாறு பெயரடைந்தாள். ஊடல்-பிணங்குதல்: 380. நினைப்போர்-இடைவிடாது எண்ணுவோர். நிமலர்-மலமற்றவர். புலர்ச்சி-புலர்வு.நீத்திருத்தல்-ஒழித்திருத்தல் ஒருவல்-நீங்கல். கனை-மிகுதி. இருட்போது-இராக்காலம்.

ஈங்கிதுவென்னெனப் பாங்கிவினாதல்
   திரியா வருநிலை யார்வெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
கரியா னுமார்பிற் றிருமாது மென்னக் கணவனுரம்
பிரியா தமையுமிக் காலத்தி லேமன் பிரிந்தவர்போல்
தரியா தழுங்கினை மாதே யுனக்கென்கொல் சார்ந்ததுவே.
   (381)
இறைமகள்புறத்தொழுக் கிறைமகளுணர்த்தல்
   செய்ச்சே தகத்திற் குளிர்நடந் தாங்குச் செறிந்தவடு
மெய்ச்சே யிழைக்கொடி யன்னார் கடைத்தலை மேயினதால்
கைச்சே ரிடபக் கொடியாளர் வெங்கைக் கனகவெற்பில்
மைச்சேல் விழிச்செந் திருவேநம் வாய்தன் மணிவையமே.
   (382)
தலைவியைப் பாங்கிகழறல்
   பலமா தருள்வெள் வளையூ டுயர்ந்த பழுதில்சலஞ்
சலமா மெனவுயர் மாதே திருவெங்கைத் தாணுவெற்பில்
நலமா மனையறஞ் செய்கடன் பூணு நயன்றிருந்து
குலமாதர் தங்கட் கியல்போதங் கேள்வர் குறைசொல்வதே.
   (383)
தலைவி செவ்வணியணிந்து சேடியைவிடுப்புழி யவ்வணி யுழையர்கண்டழுங்கிக்கூறல்
   நறுவாய் முருகுமிழ் வெண்டா மரையி னகைமதியம்
மறுவா யளிமுரல் செய்வெங்கை வாணர் வரைமடவீர்
வெறுவாய்மெல் வார்கட் கவல்கிடைத் தாங்குமுன் வீணிலிக
ழுறுவார் தமக்கிவ் வரத்தமெங் கேவந் துதவியதே.
   (384)
பரத்தையர்கண்டு பழித்தல்
   பரைகவர் பங்கர் மதிவார் சடையர் பணியணியர்
தரைகவர் வண்புகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
விரைகவர் வண்டு தொடர்வெட்சி சூடுமிம் மெல்லியலார்
நிரைகவர் கின்றவ ரோவறி யேமிவர் நெஞ்சகமே.
   (385)
   381. திரியாவருநிலை-ஒரு காலத்திலும் அழியாத அரியநிலை. அமைதல்-கூடியிருத்தல். மன்-கணவன். அழுங்கல்-வருந்தல். சார்தல்-நேர்தல். 382. செய்-வயல். சேதகம்-சேறு. குளிர்-நண்டு. செந்திரு-ஆகு பெயர். வாய்தல்-வாயில். வையம்-தேர். 383. வெள்வளை-வலம்புரிச் சங்கு. சலஞ்சலம்-ஆயிரம் வலம்புரிச்சங்கு சூழ நடுநாயகமாய் வீற்றிருப்பதாகிய சிறந்த சங்கு. தாணு-ஊழிச்சாலத்தினும் அழியாதிருப்பவன். மனையறம்-இல்லறம். கேள்வர்-கேளாந்தன்மையர். 384. விரை-நறுமணம். வாய்முகம்-முருகு-தேன். நகை-ஒளி. மறு-களங்கம். அரத்தம்-செந்நிறம். உதவல்-துணைசெய்தல் 385. பரை-மேலானவளாகிய உமாதேவி. மதி-மதுவையுடையது. வார்-நீட்சி.அணி-அணியப்படுவது. விரை-வாசனை. வெட்சி-செங்கடம்பு. நெஞ்சகம்-மனக்கருத்து.    

பரத்தையருலகியனோக்கிவிடுத்தலிற்றலைமகன் வரவுகண்டுவந்துவாயில்கண்மொழிதல்
   நாவல ரென்றும் புகழ்வெங்கை வாணர்நன் னாடனையாய்
ஏவலர் தம்மை யெதிர்கண்ட போதி லிரவியெதிர்
பூவலர் கின்ற தெனவே மகிழ்ந்து புவிபுரக்குங்
காவலர் வந்தனர் தாமே யுலகியல் காப்பதற்கே.
   (386)
வரவுணர்பாங்கி தலைவிக்குணர்த்தல்
   மின்னா கியசெஞ் சடையார் திருவெங்கை வெற்பிலுனை
உன்னா தகன்றவர் வந்தா ரவர்செய லுன்னலைநீ
இன்னாசெய் தாரை யொறுத்திடி னன்மை யியற்றுகெனச்
சொன்னார் புலவ ரறிந்திலை யோபொற் சுடர்த்தொடியே.
   (387)
தலைவனைத்தலைவியெதிர்கொண்டுபணிதல்
   அரவிடுங் கங்கணக் கையாளர் கொன்றையு மாத்தியுமே
விரவிடுஞ் செஞ்சடை வேதிய னார்திரு வெங்கைவெற்பில்
பரவிடு மெங்கள் விழியாரக் கண்டுன் பதம்பணிய
வரவிடு மங்கையர் பல்லாண் டிருந்துயிர் வாழியவே.
   (388)
புணர்ச்சியின் மகிழ்தல்
   நாவுண் கடலமு தொப்பா குவதன்று நல்லளிகள்
பூவுண் பொழில்புடை சூழ்வெங்கை வாணரைப் போற்றலுறும்
பாவுண் செவிச்சுவை யேயென லாமலர்ப் பாயலினில்
ஏவுண் கருங்கண் மடப்பாவை நல்கிய வின்பினையே.
   (389)
   386. நாவலர். அறிஞர்கள்; நால்வர் எனினுமாம். ஏவலர்-ஏவலாளர். இரவியெதிர் அலர்கின்றது என என்றமையால் பூவென்றது தாமரைப் பூவையே குறித்தது. புரத்தல்-காத்தல். காவலர்-அரசர். உலகியல்-உலகநடை. 387. உன்னாது-நினையாமல். உன்னலை-நினையற்க. அகலல்-பிரிதல். இன்னா-தீங்கு. ஒறுத்தல்-தண்டித்தல் “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்” என்பது திருக்குறள். 388. அரவு கங்கணம்-பாம்புக்காப்பு. ஆத்தி-ஆத்தி மலர். விரவிடும்-கலந்தணியும். பரவிடல்-பரத்தல். 389. ஏ-அம்பு. கடல் அமுது-பாற்கடலில் தோன்றிய அமுதம். பூ : ஆகு பெயர். பா-பாடல். பாயல்-படுக்கை. நல்கல்- கொடுத்தல்.

வெள்ளணியணிந்துவிடுத்துழித் தலைமகன்வாயில்வேண்டல்
   மலைமகள் பங்கர் திருவெங்கை வாணர் மணிவரைமேல்
அலைமக ளென்ன வருமட வார்வெள் ளணியணிந்து
கலைமக ளென்ன வடைந்தன ராலினிக் கானவர்தந்
தலைமகண் மெய்ந்நலங் காண்பா னெனையார் தருபவரே.
   (390)
தலைவிநெய்யாடியதிகுளைசாற்றல்
   மையா டியதடங் கண்ணா ளொருநன் மகவுயிர்த்து
மெய்யா டியதிரு வெண்ணீ றழகர்தம் வெங்கையிலே
செய்யா டியநல் வலம்புரி யீன்ற செழுமணிபோல்
நெய்யா டினணல் வினைப்பயன் மேவு நெடுந்தகையே.
   (391)
தலைவன்றன்மனத்துவகைகூர்தல்
   பத்திர தன்மக னின்றேத்தும் வெங்கைப் பழமலையார்க்
கத்திர மன்ன விழியுமை யாளயில் வேலவனைப்
புத்திர னென்னும் பொருள்பட வீன்றிலள் பொன்னுரைத்த
சித்திர மன்னவள் புத்திரற் பூத்துச் சிறந்தனளே.
   (392)
தலைவிக்கவன்வரல்பாங்கியுணர்த்தல்
   ஆடுந் தொழிலர் திருவெங்கை வாண ரணிவரைமேல்
பாடுஞ் சுரும்பு படர்ந்தலர் பூத்த பசுங்கொடியை
நேடும் பணியென நன்மக வீன்ற நினைவிரும்பிக்
கூடும் படிவந் தனர்பிரிந் தேகிய கொற்றவரே.
   (393)
   390. அலைமகள்-திருமகள். வெள்ளணி-வெள்ளாடை முதலியன. காண்பான்-காண. பான் : வினையெச்ச விகுதி. 391. மெய்யாடிய திருவெண்ணீற்றழகர்-உடல் முழுதும் திருவெண்ணீறு மிகுதியாகப் பூசப்பெற்றுச் செம்மேனியெம்மான் திருமேனி வெண்மேனி யாகிற்றாகையால் திருவெண்ணீற்றழகர் என்றார். மை-அஞ்சனம். நெய்யாடுதல்-நெய் பூசி மூழ்குதல்; இது பிள்ளைப்பேற்றுச் சடங்குகளில் ஒன்ற. 392. பத்திரதன்-தசரதன். அத்திரம்-அம்பு. அயில்-கூர்மை. பொன்னுரைத்தல்-பொன்னுருக்கு நீர்பூசல். 393. ஆடுந்தொழில்-கூத்தாடுந் தொழிலையுடையைவர். தேடும்பணி-தேடுந்தொழில். பணி-தொழில்.

தலைவியுணர்ந்து தலைவனொடுபுலத்தல்
   பண்கா ணுறுமென் மொழிப்பங்கர் வெங்கைப் பனிவரையாய்
கண்கா தளவுமக் காதேந் திளமுலை காறுமுள
பெண்கா ணெனமுன் புரைத்தது நீபெறும் பிள்ளைசுவைத்
துண்கால மென்முலை நுண்ணிடை காறு முறையென்றதே.
   (394)
தலைவிபாணனைமறுத்தல்
   பைத்தலை நாக மணிவோன்றென் வெங்கைப் பனிவரைமேல்
செய்த்தலை யூர னுனையீங்கு விட்டது தேரினொரு
மெய்த்தலை நீட்டி நுழைவான் கருதிமுன் வெங்கரவன்
பொய்த்தலை காட்டிய தன்றோபண் பாடும் புலைமகனே.
   (395)
வாயின்மறுக்கப்பட்ட பாணன்கூறல்
   வெல்வீர வாள்விழி மங்கைபங் காளர்தம் வெங்கைவெற்பில்
நல்வீ கமழ்புயத் துங்கா தலர்பெயர் நானுரைப்பில்
செல்வீ யுலக ரெனைவியந் தேகட் செவியுமிழ்செங்
கல்வீ சுவரின்று நீவீ சினைகருங் கல்லினையே.
   (396)
விருந்தொடு வந்துழிப்பொறுத்தல்கண்டிறையோன் மகிழ்தல்
   திருந்து மரவப் பணியாளர் வெங்கைச் செழுஞ்சிலம்பில்
அருந்து மமுத மருந்தாய்ப் பிணிகளைந் தாங்குமுத்தும்
முருந்து மனைய நகையா ளிதய முனிவகற்றும்
விருந்து வருகதில் லென்றுமெப் போதுமெம் வீட்டினுக்கே.
   (397)
   394. பண்-இந்தளம், காந்தாரம், பஞ்சுரம் முதலியவை; பைரவி. தோடி முதலிய இராகங்களெனினுமாம். காறும்-அளவும். உளை-உள்ளவளாவை. 395. பைத்தலை-படத்தோடு கூடிய தலை. தேர்தல்-ஆராய்தல். நுழைவான்-நுழைய. கரவன்-கள்ளன். புலைமகன்-நீசன். 396. வீரம்-வாளுக்கிலக்கணை. வீ-மலர். கமழ்தல்-மணம் வீசுதல். செல்வி-திருமகள். வியத்தல்-புகழ்தல். கட்செவியுமிழ் செங்கல்-மாணிக்கம். 397. பணி-அணிகலம். அமுதம்-பால். களைதல்-ஒழித்தல். முருந்து-மயிலிறகினடி. நகை-பல். இதயம்-மனம். விருந்து : ஆகுபெயராய் விருந்தினரை யுணர்த்திற்று.    

விருந்துகண்டொளித்தவூடலவெளிப்படநோக்கிச் சீறேலென்றவள்சீறடிதொழுதல்
   அறத்தா றறியுந் திருவெங்கை வாண ரணிவரைமேல்
வெறுத்தா லுனைமுனி வாற்றுநர் தாஞ்சிலர் வேறுளரோ
ஒறுத்தார் பெறுமின் பமுநினை யாம் வொருவர்பிழை
பொறுத்தார் புகழு மறிந்திலை யேமலர்ப் பூங்கொடியே.
   (398)
இஃதெங்கையர்காணி னன்றன்றென்றல்
   மையென்ற கண்டர்தம் வெங்கையி லேவண்டு வாரிசமென்
கையென் றலம்வரு நல்வய லூரகண் ணுற்றனரேல்
பொய்யென் றறிகில ரெங்கையர் நீசெயும் பொய்ம்மையினை
மெய்யென் றுளங்கொண் டொழியா ரெழுந்ததம் வெஞ்சினமே.
   (399)
நின்னலதியாரையு நினையேனென்றல்
   மின்னை யலாம லுவமையில் வேணிநம் வெங்கைபுரி
மன்னை யலாம லடியார் பிறரை மதிப்பரெனில்
நின்னை யலாம னினைவேன் பிறரையென் னெஞ்சகத்தில்
பொன்னை யலாம லெதிரிலை யாகிய பூங்கொடியே.
   (400)
காமகிழத்தியைக் கண்டமை பகர்தல்
   மறிந்தே தெருவிற் சிறுதே ருருட்டுறு மைந்தனைப்போய்ச்
செறிந்தே தழுவக்கண் டுன்மகன் காணெனச் செப்பவெள்கிப்
பிறிந்தே கினளொரு பெண்சோதி வெங்கைப் பெருந்தகையாய்
அறிந்தே னவளையிங் குன்மா மகன்றனக் கன்னையென்றே.
   (401)
   398. அறத்தாறு-அறநெறி. முனிவு ஆற்றுநர்-சினந்தணிப்பவர். 399. மை-முகில். மெல்கை-மெல்லிய கை. அலம்வரு-மயங்காநின்ற. வாரிசம்-தாமரை. வாரி-நீர், சம்-பிறப்பது; நீரிந் பிறப்பது. 400. எதிர்-ஒப்பு. மன்-இறைவன் ; நிலைபேறுடையவன் 401.01. செறித்தல்-கிட்டுதல். வெள்கல்-நாணல். பெருந்தகை. பெருங்குணம். இறைவன் எல்லா ஒளிகட்கும் மேற்பட்ட பரஞ்சோதியாகலின் சோதியென்று சுட்டப்பட்டார்.    

தாமக்குழலியைப் பாங்கி தணித்தல்
   ஏயே திலரை விடாதன்பர் தாம்வந் திறைஞ்சிடவும்
நீயே துமெண்ணலை யென்கொல்பொன் னேவிழி நீர்ப்பரவை
தூயேறு வந்தவர் தென்வெங்கை நாயகர் தூதுவராய்ப்
போயே யிரந்து கொளத்தீர்ந் தனடன் புலவியையே.
   (402)
தலைமகள் புலவிதணியாளாகத் தலைமகனூடல்
   விரும்பா மறவர் புரமூன் றெரித்தவர் வேணியினில்
அரும்பா மதியொன் றணிந்த பிரான்வெங்கை யன்னவயற்
கரும்பா மொழியென் மடமாதி னுக்கெந்தக் காலமுமிவ்
இரும்பா மனமிலை யாரே வறிதிங் கிருந்தவளே.
   (403)
பாங்கி யன்பிலைகொடியையெனத் தலைவனையிகழ்தல்
   தீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வர்க்குச் சிற்றெலும்பு
பூம்பா வையாக வருள்வோன்றென் வெங்கைப் பொருப்பிலிளங்
காம்பா னதோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம்
வேம்பா முனக்குக் கரும்பாயினு மின்று வேலவனே.
   (404)
ஆயிழைமைந்தனுமாற்றாமையுமேவாயில்களாகவரவெதிர்கோடல்
   அறந்தாங் குமையவள் கொங்கைத் தழும்பழி யாவுரத்தர்
பிறந்தாங் கறிகிலர் வெங்கைமன் னாதுப் பிலகுமொரு
நிறந்தாங் கரவிந்த வண்டோர்புன் முள்ளி நினைந்ததுபோல்
மறந்தாங் கிராம லெமைநீ நினைந்ததெம் மாதவமே.
   (405)
   402.02. ஏதிலர்-அயலார். விடல்-அனுப்பல். இறைஞ்சல்-வணங்கல். தூயேறு-வெள்விடை. புலவி-ஊடல். தீர்தல்-நீங்குதல். 403.03. மறவர்-பகைவர். வயலுக்கு அன்னம் அழகு செய்வதாதலால் அன்ன வயல் என்றார். 404.04. பூம்பாவை-அழகிய பெண். தீம்பால் கமழும் மணிவாய்ப் புதல்வர்-அழகிய திருவாயை உடைய திருஞானசம்பந்தர். காம்பு-மூங்கில். கழைக் கரும்பு-சிறந்த கரும்பு. இப்பாட்டில் திருமயிலையில் திருஞானசம்பந்தர் திருப்பதிக மோதி எலும்பைப் பெண்ணாக்கிய செய்தி கூறப்படுகிறது. 405.05. அறந்தாங்குமையவள்-எண்ணான்கறங்களையும் வளர்ப்பவள். தழும்பு-வடு. உரம்-மார்பு. துப்பு-பவளம். அரவிந்தம்.-செந்தாமரை மலர்.

மணந்தவன்போயபின் வந்தபாங்கியோ டிணங்கியமைந்தனை யினிதிற்புகழ்தல்
   பிறந்தவன் றேநன் மணிநேர் புதல்வன் பிறர்கடைத்தேர்
பறந்தடைந் தாங்குநம் வாய்தலி லேவரப் பண்ணினனால்
இறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி லிம்மையினுஞ்
சிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.
   (406)
தலைவி தலைவனைப் புகழ்தல்
   பண்ணுற்ற மென்மொழி யாய்தமிழ் நூலிசைப் பாவலர்தாம்
எண்ணுற்ற நம்முயிர்க் காதலர் போல்பவ ரில்லையெனப்
பெண்ணுற்ற பங்கர் தம் வெங்கையி லேதண் பெரும்பொழில்வாய்க்
கண்ணுற்ற காதலை யின்றள வாகவும் காட்டினரே.
   (407)
சிலைநுதற்பாங்கி தலைவியைப் புகழ்தல்
   கேளோர் பரத்தையிற் போகா திருத்தலிற் கீர்த்திபெற்று
நாளோ டிலங்கு மருந்ததி யோவொப்பு நாகமணி
தோளோ னொருதெய்வ சூளா மணிவெங்கைத் தொன்னகரில்
வாளோ வெனுங்கட் பிறைவா ணுதலெங்கண் மாதினுக்கே.
   (408)
ஓதற்பிரிவு
ஓதற்குப்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்ததோழி தலைமகட்குணர்த்தல்
   விண்ணுடை யார்புகழ் நூபுர பாதர்வெல் வேனெடுங்கண்
பெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண்ணணங்கே
கண்ணுடை யார்கற் றவரேகல் லார்கண் முகத்திரண்டு
புண்ணுடை யாரெனக் கூறிநங் காதலர் போயினரே.
   (409)
   406.06. வாய்தல்-வாயில். அங்கம்-எலும்பு. அஃது ஆகுபெயராய் அதனாலமைந்த மாலையை உணர்த்திற்று. இம்மை-இவ்வுலகம். தேறல்-தெளிதல். 407.07. எண்உற்ற-மதித்தற்குரிய. பண்ணுற்றமென்மொழியாய் என்றது தோழியை. கண்ணுறல்-காண்டல். 408.08. கேள்-கணவன். பரத்தை-விலைமாது. நாள்-நாள்மீன். எங்கள் மாதினுக்கு அருந்ததியோ ஒப்பு என்று முடிக்க. 409.09. விண்ணுடையார்-தேவர்கள். நூபுரம்-காற்சிலம்பு.

தலைமகள் கார்ப்பருவங்கண்டுவருந்தல்
   சிலையோடு வந்தன வென்செய்கு வேன்முகில் செங்கமலன்
தலையோடு கொண்டவர் வெங்கையி லேசெந் தமிழ்முதலாங்
கலையோது வான்விழைந் துற்றார்க்கக் கல்விக் கடலதனுள்
இலையோவொன் றேனு மருள்வேண்டு மென்ன விசைப்பதுவே.
   (410)
பாங்கியாற்றுவித்தல்
   என்போ டரவணி யெம்மான் றிருவெங்கை யேந்திழையாய்
நின்போ தகமன்ன மன்னவர் நாமின்றி நீகளிப்பத்
துன்போடு கல்விக் கடன்மேய்த்து செய்யுளஞ் சோனைபெய்து
தன்போல் தருவரென் றேவந்த தாலிச் சலதரமே.
   (411)
காவற்பிரிவு
காவற்குப்பிரிவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்
   கருமா முகிலுறங் குஞ்சோலை வெங்கைக் கடவுண்முக்கட்
பெருமா டொழிலை யொருநீ பெறினும் பெறுகவென்றே
ஒருமா நிலந்தனி னம்முயிர்க் காவல ரோங்குபுகழ்த்
திருமா றொழில்வை குதுமென்று போயினர் தேமொழியே.
   (412)
தலைமகள் கூதிர்ப்பருவங்கண்டு வருந்தல்
   கணையிலை வேலெனுங் கண்மாது பங்கர் கருப்பவில்லிற்
கிணையிலை யென்னுங் திருவெங்கை நாட்டி லிறைவரின்றோ
அணையிலை யென்செய்கு வேன்முறை யோவென் றரற்றுகினுந்
துணையிலை யென்பது கொண்டோவிவ் வாடை துயர்செய்வதே.
   (413)
தோழியாற்றுவித்தல்
   பனிபொரு செஞ்சுட ரன்னார் திருவெங்கைப் பாவைநல்லாய்
முனிபொரு விந்த மெனவே கணவர்தம் முன்புரத்தில்
கனிபொரு மெல்லிதழ் நன்மாதர் கொங்கை கரந்திடப்பன்
நுனிபொரு காலம் வரக்கா தலர்நமை நோக்குவரே.
   (414)
   410.10. சிலை-வானவில். தலையோடு-கபாலம். விழைதல்-விரும்புதல். இசைத்தல்-சொல்லுதல். 411.11. என்பு : ஆகுபெயர். போதகம்-யானை; யானைக் கன்றெனினுமாம். சோனை-விடாமழை. 412.12. கருமாமுகில் உறங்குஞ்சோலை என்றபடியால் சோலையின் உயர்ச்சி தோன்றிற்று. பெருமான்-பெருமையை உடையவன். 413.13. பங்கர் எனமேல் வருதலால். கணையிலை வேலெனுங் கண்மாது உமாதேவியைக் குறித்தது. அரற்றல்-பேரிரைச்சலிடல். வாடை-வடகாற்று. 414.14. பாவை-பொம்மை வடிவம். நல்லாய்-பெண்ணே. முனி-அகத்தியமுனி. உரம்-மார்பு. கனி-கோவைக்கனி. இதழ்-அதரம். கரத்தல்-மறைத்தல்.    

தூதிற்பிரிவு
தூதிற்குப் பிாவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்
   சடைநின்ற கங்கையர் வெங்கையி லேயொரு சந்துசென்றார்
படைநின்ற கண்ணிநங் காவல ரின்றுபற் றாசொன்றுதான்
தொடைநின்ற நேரிசை முன்குற ளுந்தனிச் சொல்லுமுற
இடைநின்று கூட்டுதல் போலிரு வேந்தை யிசைப்பதற்கே.
   (415)
தலைமகள் முன்பனிப்பருவங்கண்டு வருந்தல்
   கருங்காள கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
பொருங்கா வலர்தம் பகைதணிப் பான்முனம் போயினவர்
பெருங்கால முன்பனி நாள்வந்தும் வந்திலர் பேதையர்மேல்
வருங்காம வெஞ்சரந் தன்னையு மாற்ற மனமதித்தே.
   (416)
தோழியாற்றுவித்தல்
   போதாகி வந்த பிறைவே ணியர்வெங்கைப் பொன்னகரில்
காதாகி வந்தநல் வள்ளையிற் றூங்கு கனங்குழைசேர்
மாதாகி வந்தசெந் தேனே யவர்தம் வரவுசொலத்
தூதாகி வந்தது முன்பனி நாண்மன்னர் தூதுவர்க்கே.
   (417)
துணைவயிற்பிரிவு
துணைவயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழிதலைமகட்குணர்த்தல்
   கடுக்கை யணிந்த முடியோன் றிருவெங்கைக் காரிகையாய்
உடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை யொழித்ததனைத்
தடுக்கை விரைந்தது போனட்ட வேந்தன் றனக்குதவி
அடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே.
   (418)
   415.15. சந்து சென்றார்-தூதுசென்றவர். படைநின்ற கண்ணி-வேற்படைபோல் அமைந்த கண்ணையுடையவள். பற்றாசு-இரண்டை ஒன்று சேர்ப்பது. 416.16. காளம்-நஞ்சு. பொருதல்-போர் செய்தல். தணிப்பான்-தணிக்க. காமசரம்-காமன்கணை. 417.17. போது-அரும்பு. வள்ளை-வள்ளைத் தண்டு. தூங்குதல்-தொங்குதல். கனங்குழை-கனவிய குழை (இது காதணி.) 418.18. கடுக்கை-கொன்றைமாலை. உடுக்கை-ஆடை. விழைதல்-விரும்பல். விடுத்தல்-நீங்கல்.

தலைமகள் பின்பனிப்பருவங்கண்டு வருந்தல்
   நன்பனி வெண்மதி யொன்றுடை யோன்வெங்கை நாட்டொருதம்
அன்ப னிருந்துயர் தீர்துணை யாக வடலரிபோல்
முன்பனி கஞ்செலச் சென்றவர் காண்கிலர் மூடியெங்கும்
பின்பனி பெய்து பெருந்துயர் வேலை பெருகுவதே.
   (419)
தோழியாற்றுவித்தல்
   நின்பா லுதவி நினைந்துவந் தார்கைந் நிமிர்த்தலரும்
பின்பாய் பனிவரு நாளயில் வேற்கட் பிறைநுதலாய்
தன்பாத மென்றலைக் கீவோன் றிருவெங்கை தன்னிலொரு
மன்பா லுதவி நினைந்துமுன் போயின மன்னவரே.
   (420)
பொருள்வயிற்பிரிவு
பொருள்வயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழி தலைமகட்குணர்த்தல்
   திரைப்பா லெழுநஞ்ச முண்டோன் றிருவெங்கைத் தென்கயத்தின்
விரைப்பா னலங்கண் விளங்கிழை யாய்மக மேருவென்னும்
வரைப்பா னிதியந் தரற்கே கினர்கடன் மாநிலத்தில்
இரப்பார் மிடிகள் புகுமிடந் தேட விறையவரே.
   (421)
தலைவி யிளவேனிற்பருவங்கண்டு வருந்தல்
   போதந் திறைப்ப வழறென்றல் பற்றுதல் போலவிளஞ்
சூதந் தழைக்குமிந் நாள்கண்டி லார்கொ றுணிவொடுநால்
வேதந் துதிக்குந் தனிமூல காரணர் வெங்கைவெற்பில்
பாதஞ் சிவக்கப் பொருள்வயிற் போயின பாதகரே.
   (422)
   419.19. இருந்துயர்-பெருந்துன்பம். அடல்அரி-வலிமை மிகுந்த சிங்கம். அனிகம்-படை. 420.20. கைந்நிமிர்த்தல் அருமையாயது குளிர்மிகுதியால் என்க. பிறை-எட்டாம் நாட்பிறை. நுதல்-நெற்றி. 421.21. திரை-ஆகு பெயர். கயம்-ஓடை. விரை-வாசனை. பானல்-கருங்குவளை; ஆகு பெயர். வரை-மலை. புகுமிடம்-புகுந்தொளிக்குமிடம். 422.22. போதந்து வந்து. இறைத்தல்-வீசுதல். சூதம்-மாமரம்.    

சிறப்புப் பாயிரம்
   பிச்சா டனநவ ரத்தின மாலையைப் பீடுபெறத்
தைச்சான் றுறைமங் கலமுறை சீவ தயாபரனம்
பொய்ச்சார் பதனை யொழிக்குஞ் செழும்புலி யூர்ப்புனிதன்
நற்சார்பு சார்ந்த சிவப்பிர காச நவமணியே.     
தோழியாற்றுவித்தல்
   நாகூ ரரவணி வெங்கைபு ரேசர்நன் னாட்டிலொரு
பாகூர் மணிநெடுந் தேரன்பர் கேட்டுநின் பாலடைந்தார்
ஆகூழ் பெறுவலி வெஞ்சின வேள்வந் தமர்புரியக்
கூகூ வெனவிள மாவேறி யேகுயில் கூவுவதே.
   (423)
தலைமகன் றலைமகளதுஉருவெளிப்பாடுகண்டுள்ளே வியத்தல்
   கூர்க்குங் கனன்மழு வார்வெங்கை வாணர் குளிர்சிலம்பில்
சீர்க்குங் கயலுங் கரும்புய லுந்தொண்டைத் தீங்கனியும்
வார்க்குங் குமமுலை யுங்கொண்டு மாதெதிர் வந்துநின்றாள்
பார்க்குந் திசைதொறு மெங்கேயிம் மாயை பயின்றதுவே.
   (424)
பாசறைமுற்றி மீண்டூர்வயின்வந்த தலைமகன் பாகற்குப்பரிவொடு மொழிதல்
   கார்கண்ட கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
போர்கண்ட மன்னவர் நல்வலவாநம் புரவிநெடுந்
தேர்கண்ட போதி லிரிந்தா ரினிமணித் தேரெதிர்செந்
நீர்கண்ட மீனென வுண்மகிழ்ந் தேவரு நேரிழையே.
   (425)
தலைமகளோடு கலந்துறுந்தலைமகன் கார்ப்பருவங்கண்டு கனித்தியம்பல்
   கயலே யனைய விழியாளும் யானுங் கலந்துபுணர்
செயலே மருவி யிருக்கின் றனமலர்த் தேனொழுகி
வயலே விளையுந் திருவெங்கை வாணர் வரையில்வரும்
புயலே யினிமதி யொன்றின்முக் காலும் பொழிபொழியே.
   (426)
   26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.423.23. நாகு-இளமை. ஊர்தல்-தவழ்தல்; செலுத்துதல். பால்-ஏழனுருபு. ஆகூழ்-நல்வினைப்பயன். வேள்-காமன். 424.24. கூர்த்தல்-கூரிதாதல். கயல்-மீன். தொண்டை-கொவ்வை. பயிலல்-பழகல். 425.25. கார்கண்ட-கார்போலும்; கண்ட: உவமஉருபு. கனகம்-பொன். வெற்பு-மலை. வலவன்-தேர்ப்பாகன். இரிதல்-ஓடுதல். செந்நீர்-புதுவெள்ளம். 426.26. புணர்தல்-சேர்தல். செயல்-தொழில். மருவல்-பொருந்தல். ஒழுகல்-பாய்தல். முக்கால்-மூன்றுதரம். பொழி பொழி-மழையைப் பொழியக் கடவாய்; பொழியக் கடவாய்.     

Related Content

திருவெங்கையுலா