logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கச்சிக்கலம்பகம் உரையுடன்

உரையுடன்

கச்சிக்கலம்பக நூலாசிரியராகிய
பூண்டி அரங்கநாத முதலியார்.

கச்சிக்கலம்பக உரையாசிரியர்
மோசூர் கந்தசாமி முதலியார், B.A., M.R.A.S. அவர்கள்

கலம்பகச் செய்யுள் விளக்கம்

    கலம்பகமாவது, ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா, செவியறிவுறூஉ மருட்பா முதலிய பாவினங்கள் பெற்று, அம்மானை, வலைச்சியார், தூது (கிளி), இரங்கல், இளவேனில், தூது (மேகம்), கைக்கிளை (மருட்பா), மறம், சித்து, பாண், தூது (நெஞ்சு), ஊசல், மதங்கி, இடைச்சியார், தூது (வண்டு), வெறி விலக்கு, சம்பிரதம், கொற்றியார், தழை, குறம் முதலிய துறைகள் விரவி வர, ஒருவனைத் தலைவனாகக்கொண்டு பாடப்படுவதாம்.

    கலம்பகத்தின் இலக்கணம், தொல்காப்பியச் செய்யுளியலில் “விருந்தே தானும், புதுவது கிளந்த யாப்பின் மேற்றே” என்று குறித்ததனுள் அடங்கும்.  “விருந்து தானும் பழங்கதை மேலது அன்றிப், புதிதாகத் தாம் வேண்டியவாற்றால் பல செய்யுளும் தொடர்ந்துவரத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேலது” என்று விளக்கப்பெறுகின்றது.  ஆகவே, கச்சிக்கலம்பகம் விருந்தாகும் என்க.

    அம்மானை. - மூன்று பெண்கள் கூடி, பிரபந்தத் தலைவனது நன்மைகளைப்பற்றி நயம்படப் பேசிக்கொண்டே அம்மானை ஆடுவது. அம்மானை என்றது, அம்மனங்காய் என்று வழங்கும்.

    வலைச்சியார். - வலையன் ஆண்பால்; அவன் மகள் வலைச்சி. அவ் வலைச்சியைக் கண்டு விரும்பிய ஒருவன், அவ்வலைச்சியை முன்னிலைப்படுத்திக் காதல் புலப்படும் மொழிகளைப் பேசியதாகப் புலவர் செய்யுள் இயற்றுவது, வலைச்சியார் ஆகும்.  பெயரிடை நிலை; இகரம், பெயர் விகுதி; பெண்பாலைக் குறிக்கும்.

இரங்கல். - இரங்கல் - (நெஞ்சு) இரங்குதல். தலைவனைப் பிரிந்து தனியே இருக்கும் தலைமகள் தன் பிரிவை எண்ணிக் கடலோரத்திலுள்ள பொருள்களைப் பார்த்து இரங்கிக் கூறுவது.

தூது (கிளி). - கிள்ளைவிடு தூது (கிள்ளை - கிளி). தலைவி தலைவனிடம் கிளியைத் தூதாக அனுப்பியது.

மேகவிடு தூது. - தலைவி தலைவன்பால் மேகத்தைத் தூதாக அனுப்பியது.

கைக்கிளை மருட்பா. - பொழில் அகத்தே தலைமகளோடு வந்த தோழியர் நீங்கத் தனித்துநின்ற தலைமகளைத் தலைமகன் கண்ணுறுவான். வேட்டையாடும் நோக்கத்தோடு உடன்வந்த தோழர்கள் தலைவனைவிட்டுப் பிரிவர்.  தனித்துநின்ற தலைவன் தனித்துநின்ற தலைமகளை எதிர்ப்பட்டு, இவள் தெய்வப் பெண்ணோ? என்று ஐயுற்றுப் பின்பு மாலை வாடுதலால் நில உலகத்து மகளே என்று தெளிவான்.  இது தெளிதலைக் கூறும் ஒருதலைக் காமம். கைக்கிளை, ஒரு பக்கம்.

மறம். - ஓர் அரசன் மறவர் மகளைத் தனக்கு மணம் பேசி முடிக்கும்படி ஒரு தூதனை அனுப்ப, மறவர்கள் அத் தூதுவனைப் பார்த்து மணவினை மறுத்தும், தூதனுப்பிய அவ்வரசனை இகழ்ந்து பேசியும், தூதனை அனுப்பிவிடுவதாகப் புலவர் பாடுவது.

சித்து. - இரசவாதம் செய்பவர்கள் தமது ஆற்றலை ஒருவனிடத்து எடுத்து விளக்குவதாகச் செய்யுளியற்றுதல்.  இரசவாதம் என்பது இரும்பு செம்பு முதலியவற்றைப் பச்சிலைகளால் புகையிட்டுப் பொன்னாக மாற்றுதல்.

செவியறிவுறூஉ. - அரசாட்சி செய்யும் அரசன் செங்கோன் முறைமை தவறாது நடத்துதல் வேண்டித் தான் ஆளுகின்ற நாட்டிற்கு நன்மை தரும் அறத்தின் நிலையை ஆராய்ந்துகொண்டிருப்பான்.  அத்தகைய உள்ளப்பான்மை வாய்ந்த அரசனுக்கு அன்புடைய பெரியோர், உலக நன்மையைக் கருதி தான் உணர்ந்த பெரிய நிலைத்த அருங் கருத்துக்களை, அவன் உள்ளத்தில் பதியும்படி அவன் காதின் வழியாக அறிவுறுத்தி வற்புறுத்துவது.

மருட்பா. - செவியறிவுறூஉ இயற்றுவதற்கு அமைந்த செய்யுள் இலக்கணம். ஒரு செய்யுளிலேயே வெண்பா முற்பகுதியாகவும், அகவல் பிற்பகுதியாகவும் அமைத்துப் பாடுவது.

பாண். - தலைவி பாணனோடு வெகுளுதல்.  தலைவன் பரத்தையர்பால் சேர்தற்பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிவான்.  பிரிந்தவன் சிலநாட் கழித்தபின் தலைவியிடம் வரக் கருதித் தன் ஊடல் (சினம்) கொண்டிருக்கும் தலைவியிடம் பாணனை அனுப்புவான்.  அப்பாணன் அத்தலைவியினிடத்து அவள் தலைவன்பால் நெஞ்சு உருகும்படி எடுத்துப் பேசி அவள் சினத்தைத் தணிப்பன்.  தலைவி பாணனை வெகுண்டு கூறுதல் பாண் எனப்படும்.

நெஞ்சுவிடு தூது. - தலைவனிடத்துத் தூது செல்லும்படி நெஞ்சை முன்னிலைப்படுத்திக் கூறுவது.

ஊசல். - ஊசல் - ஊஞ்சல். மகளிர் ஊசலாடிக் கொண்டே தலைவன் பெருமைகளை எடுத்துப் பாடுவதாகக் கூறுவது.  இது ஆசிரிய விருத்தத்தினாலாவது கலித்தாழிசையினாலாவது ஆடீர் ஊசல், ஆடாமோ ஊசல், ஆடுக ஊசல் எனுமாறு செய்யுளின் முடிவில் அமையக் கூறுவது.

மதங்கி. - ஒரு இளமாது தன் இரண்டு கைகளிலும் வாளாயுதத்தை ஏந்திச் சுழற்றிக்கொண்டே தானும் சுழன்று ஆடும் போது, அம்மாதிடத்து ஒருவன் காமங்கொண்டு, தனக்குண்டான காமத்தை வெளிப்படுத்திக் கூறுவதாக அமைத்துப் புலவர் செய்யுள் இயற்றுவது.

இடைச்சியார். - தெருவிலே பால் தயிர் விற்று வரும் ஆயர் குலத்து மகளை நோக்கி, ஒருவன் கண்டு  காதல் கொண்டவனாய்த் தனது காதலை வெளிப்படுத்தி, அம் மங்கையை முன்னிலையாக்கிச் சொன்னதாகச் செய்யுள் அமைப்பது.  குறிஞ்சி நிலத்திற்கும் மருதநிலத்திற்கும் இடையிலே யுள்ள முல்லைநிலத்தில் வாழ்ந்த மக்கள் இடையரெனப்படுவர்.

வண்டுவிடு தூது. - தலைவனைப் பிரிந்த தலைவி தன் காதல் துன்பத்தைத் தெரிவிக்கத் தலைமகனிடம் தூதாகச் செல்லும்படி வண்டைப் பார்த்துச் சொல்லுவது.  வண்டு, தலைவன் தோளிலுள்ள மாலையில் சொரியும் தேனை உண்ணச் செல்லும். உண்டு மகிழ்ந்து தலைவியினது குறையைத் தலைவனது செவியிலே பொருந்தக் கூறும் என்பது.


வெறி விலக்கு. - பொழிலகத்தே தனித்துநின்ற ஒரு மங்கையைக் கண்டு, தனிப்பட்டு வந்த தலைவன் காதல்கொண்டு இன்புற்றனனாக, அவன் பிரிவை ஆற்றாமல் வருந்தி, உடல் நோயுற்றதாகக் கண்டார் நினைக்கும்படி, அவள் வாடியிருப்பதைக் கண்ட செவிலித் தாய், (வளர்ப்புத் தாய்) தெய்வக் குற்றமென நம்பி, வேலனை (வேல் ஏந்தி முருகக்கடவுளை வழிபடுபவனை) வரவழைத்து, அவனைக்கொண்டு ஆடு பலியிடுதல் முதலியன செய்வள்; நோய் தீராது.  காதல் கொண்டமையே மேனி வாடியதற்குக் காரணமாதலால், வேலன் வெறியாடுதலைத் தோழி விலக்குவள்.  வெறி - வேலன் ஆவேசங்கொண்டு ஆடுதல். விலக்கல் - விலக்கி விடுதல்.

சம்பிரதம். - இந்திரசாலம்.

கொற்றியார். - தலை மொட்டையடித்துக்கொண்டு, வைணவர் சின்னம் அணிந்து, சூலம் முதலிய கையில் தாங்கிக் கொண்டு, தெருவில் பிச்சை எடுத்துக்கொண்டே வருகிற மகளிரை நோக்கி, வேட்கையுற்றான் ஒருவன் தன் வேட்கையைப் புலப்படுத்திக் கூறுவது. கொற்றி - துர்க்கை. இம் மகளிரும் சூலம் முதலிய ஏந்தி வருவதால், துர்க்கைபோல் உள்ளார் ஆதலின், கொற்றியார் எனக் கூறப்பெற்றார்.

தழை. - தலைமகன் பூந்தழை யுடை (கதம்பம் போன்றது) ஏந்திக்கொண்டு, தோழியிடம் குறைகூறித் தழையைக் கொடுப்பான்.  தோழி அதனை ஏற்றுக்கொண்டு தலைமகளிடம் சென்று அத்தழையின் அருமையைப் பாராட்டித் தலைவியை ஏற்றுக் கொள்ளும்படி செய்வாள்.  தோழி தலைவனிடம் வந்து தலைமகளது விருப்பத்தைத் தெரிவிப்பாள்.

குறம். - குறத்தி தலைவிக்கு அவள் காதலித்த தலைமகனது வாய்ப்பைக் குறி தேர்ந்து கூறுவது; குறத்தி மணம் முதலிய செயல்களைக் குறித்துக் குறிபார்த்துச் சொல்லுவது இப்பொழுதும் வழக்கம்.

--------------------------------------------------

கச்சிக் கலம்பகம்

மூலமும் உரையும்

உரைப் பாயிரம்

    இது காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர்மீது பாடிய கலம்பகம் என்னும் நூல்.  கலம்பகம் கலப்பாகிய செய்யுட்களை உடையது.  கச்சி என்பது காஞ்சிபுரம்; மரூஉ. காஞ்சிபுரம்: காஞ்சி மரங்கள் மிகுதியாக உள்ள ஊர்.1

    ஒரு போகு, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்பனவற்றை முதலில் கொண்டு பின்னர்ப் புயவகுப்பு, அம்மானை, சம்பிரதம், மறம், பாண், சித்து முதலிய உறுப்புக்களைப் பெற்று முடியும் நூல் கலம்பகம் என்பதாம்.  மடக்கு, சந்தம் முதலியனவும் கலம்பகத்தில் வரும்.  நூல் அந்தாதித் தொடையாகச் செல்லும்.

    காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரம் உடையாரைப் பற்றியது ஆகலின், கச்சிக் கலம்பகம் என்பது கச்சியைப் பற்றிய கலம்பகம் என இரண்டாம் வேற்றுமை யுருபும் பொருளும் உடன் தொக்கதொகை மொழியாய் நூலை உணர்த்தி நின்றது.

    இனிக் காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதர் மீது பாடிய கலம்பகம் என ஏழாம் வேற்றுமை உருபும் பொருளும் உடன் தொக்க தொகை யன்மொழி யெனலும் ஆம்.

    தில்லைக் கலம்பகம், வெங்கைக் கலம்பகம், புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்பனவும் இங்ஙனமே விரிதல் காண்க.

    கலம்பகம் - கலப்பு + அகம். கலப்பு என்பது மெலிந்து கலம்பு என நின்றது. (கலம்பகத்திற்கு உறுப்பாக அமைந்த) பல துறைகள் கலத்தலைத் தன்னகத்தே கொண்டநூல் என்பது பொருள்.

1 காஞ்சி என்பது கஞ்சி என வடமொழியில் திரிந்து வழங்கிப் பின்னர் கஞ்சி என்பது கச்சி எனத் திரிந்தது எனலாம். கடம்ப வனம் கடம்ப மரங்கள், மிகுதியாக உள்ள ஊர் மதுரை.  தில்லை மரங்கள் மிக்குள்ளது, தில்லை (சிதம்பரம்). திரு ஆலங்காடு, திருவேற்காடு (வேல் - வேலமரம்), திருப்பனங்காடு, ஆர்க்காடு, ஆர் - ஆத்திமரம் முதலியன காண்க.  பழையனூர் என்பதை ழகர எழுத்தில்லாத வடமொழியில் புராதனபுரம் என்று தவறாக வழங்கினர்.  பழையன் என்னும் சிற்றரசன் நிறுவிய ஊர்.  நிறுவிய புராதனபுரம் - பழைய ஊர்.

காப்பு

நேரிசை வெண்பா

தங்கச் சிலையேடுந் தந்தவெழுத் தாணியுங்கொள்
துங்கக் கரிமுகத்துத் தூயவனென் - சங்கையொழித்
தேடெழுத் தாணி யெடுத்தறியேன் இந்நூலைப்
பாடஅளிப் பான்நற் பதம்.                               1

இதன் பொருள்: தங்கச் சிலையேடும் - மேருமலையாகிய ஏட்டையும், தந்த எழுத்தாணியும் - தந்தம் ஆகிய எழுத்தாணியையும், கொள் - கொண்ட, துங்கம் - பெருமைபொருந்திய, கரிமுகத்துத் தூயவன் - யானை முகத்தையுடைய தூயோனாகிய மூத்த பிள்ளையார், என் சங்கை - எனது ஐயம் (திரிபு முதலியவற்றை) ஒழித்து - முழுவதும் போக்கி, ஏடு எழுத்தாணி - யேட்டினையும், எழுத்தாணியையும், எடுத்தறியேன் - எடுத்தறியேனாகிய யான், இந்நூலைப் பாட - இந் நூலை நன்கு பாடும்பொருட்டு, நல் பதம் - தன்னுடைய நல்ல திருவடிகளின் துணையை, அளிப்பான் - தருவான்.

மூத்த பிள்ளையார் தம் முகத்தில் உள்ள தந்தங்களில் ஒன்றனை ஒடித்து, அதனை எழுத்தாணியாகக் கொண்டு, மேருமலையாகிய ஏட்டில், பாரதத்தை வியாசர் கூறிவருங்கால் எழுதிக்கொண்டே வந்தனர் என்பது கதை.

சங்கை - ஐயம். அஃது இனம்பற்றி திரிபு மயக்கத்தையும் உணர்த்தும். பிறவிக் கடலினின்றும் எடுத்து வீடு பேற்றைத் தருவதாகிய நன்மையைச் செய்யும் அடிகளாதலால் நற்பதம் என்றார்.

தூயவன் நற்பதம் அளிப்பான் என்க.  கொள் என்னும் பெயரெச்சப் பகுதி தூயவன் என்னும் பெயரைக் கொண்டது.

பதம் - செய்யுட்களில் புலவர் தம் கருத்துக்களை வைத்துப் பாடுங்கால், கருத்தைத் தெளிவாகத் தோற்றி திட்பம் நுட்பம் இசையின்பம் தோன்ற (பிற சொற்களால் அமைத்துக் கூற முடியாததாக) பொருட்செறிவு கொண்ட சொற்களாலே புலனாக அமைத்துப் பாடும் பக்குவம் எனலுமாம்.

கரிமுகத்தை யுடையவனே பிரணவ வடிவமாய்த் திகழ்கின்ற தூயனாய் விளங்குபவன் ஆதலின், அவனைப் பாடும் என்னையும் தூய்மைப் படுத்துவான் என்றபடி.

கொடுப்பான் முதலியன கூறாது, அளிப்பான் என்றதனால் பிள்ளையாரது பேரருளுடைமையும் நூல் ஆக்கியோரது எளிமையும் விளங்கக் கிடக்கும்.

ஏடு எழுத்தாணி: இந்தச் சொற்களால் பொத்தகம் என்னும் சொல், புத்தகம் எனத் திரிந்து வடமொழியிற் சென்று புஸ்தகம் எனத் திரிந்து வழங்குகின்றது என்பது புலனாகும். பொத்து அகம் - பொத்தலை (துளை யிடுதலை)த் தன் அகத்தே கொண்டது. பனை ஏடுகளைத் திருகு ஊசியால் துளையிட்டுக் கயிறு சார்த்திக் கோத்துச் சட்டம் அமைத்துக் கட்டப் படுதலின் ஏட்டுச் சுவடி, ‘பொத்தகம்’ எனப் பெயர்பெற்றது. “நிறை நூற் பொத்தகம் நெடுமணை யேற்றி” - பெருங்கதை, உஞ்சைக், 34 : 26)

பொத்தகம் என்ற வடிவமே மிகப் பழங்காலத்ததாகிய அகத்தியச் சூத்திரத்திலும் வந்துள்ளமை நன்னூல் 261 ம் சூத்திரத்தின் மேற்கோளில் காண்க.

கச்சிக் கலம்பகம் என்னும் நூலின் பெருமை பாராட்டுவோர் காப்புச் செய்யுளே தங்கமாய் இருக்கிறதே என்பர்.  தங்கச் சிலை ஏடும் என்று தொடங்குவது காண்க.

நால்வர் துதி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

தறையின்மிசைத் தமிழ்பெருகச் சைவநெறி
தழைப்பஅவ தரித்த சால்பின்
மறையுறைவாம் ஒருநால்வர் பதமலரைச்
சிரங்கொண்டு, மடத்தைப் போக்கிக்,
குறைவறுநால் தோற்றத்தின் உளதாய
துயரகலக் குறிப்பன்; அன்னோர்
பிறைசுமந்த சடையாரென் பிழைசுமந்த
கலம்பகத்தைப் பெறச்செய் வாரே.                   2

(இ-ள்.) தறையின் மிசை - நிலவுலகில், தமிழ் பெருக - தமிழ் மொழி தழைக்கவும், சைவ நெறி - சைவத் திருநெறி, தழைப்ப - செழித்தோங்கவும், அவதரித்த-அவதாரம் செய்த, சால்பின்-நிறைந்த தன்மையை யுடைய, மறை - தமிழ் வேதத்திற்கு, உறைவு ஆகும் - இருப்பிடமாகிய, ஒரு - ஒப்பற்ற, நால்வர் - ஞானசம்பந்தர் முதலிய நால்வருடைய, பத மலரை - திருவடியாகிய மலர்களை, சிரம் கொண்டு - தலைமேற் கொண்டு, மடத்தைப் போக்கி - (எனது) அறியாமையை நீக்கி, குறைவு அறு - குறைவற்ற, நால் தோற்றத்தின் - நால்வகைப் பிறப்பினிடத்து, உளது ஆய - உண்டாகிய, துயர் அகல - துன்பம் நீங்க, குறிப்பன் - எண்ணுவன். (அங்ஙனம் நினைத்தலாலே) அன்னோர் - அத்தகைய பெருமை வாய்ந்த நால்வர்கள், பிறை சுமந்த சடையார் - பிறைச் சந்திரனை அணிந்த சடையுடைய சிவபிரான், என், பிழை - குற்றம், சுமந்த-நிறைந்த, கலம்பகத்தை - கலம்பகம் என்னும் இந்த நூலை, பெறச் செய்வார் - ஏற்றுக் கொள்ளும்படி செய்வார்கள்.

தரை எனற்பாலது எதுகை நோக்கித் தறை எனத் திரிந்து நின்றது.  இனிக் கடலிலிருந்து தறிக்கப்பட்ட நிலப்பகுதி தறையென்று வழங்கி நிற்கின்றது.  எனலும் ஆம். அவதரித்த நால்வர் என்றமையால் எண்ணடியாகப் பிறந்த நால்வர் என வாளா பொருளாகாது செந்தமிழ்ப் பரமாசாரியராகிய சம்பந்தர் முதலிய நால்வரைக் குறிக்கும்.  நால்வர் என்பது தொகைக் குறிப்புச் சொல்.  ஐவரோடு குந்தி வந்தாள் என்புழிப்போல.  ஐவர் என்பது பாண்டவர்.  நால்தோற்றம் - நால்வகைத் தோற்றம்; முட்டையிற் பிறப்பது, வெயர்வையிற் பிறப்பது, கருப்பையிற் பிறப்பது, வித்திலிருந்து முளைப்பது.  நால் வகைத் தோற்றத்தில் பிறந்த உயிர்களின் துன்பம் நீங்குமாறு அவர் திருவடியை நான் என் மனத்தின்கண் கொள்வேன். அன்னோர் - அந்த நால்வர்.  பிறை - பிறை நிலா: ஒற்றைக் கலை சுமையா யிரா தெனினும் தக்கனது சாபத்தை ஏற்று வந்தமையால் அது சுமையாகத் தோன்றியது என்று குறிப்பித்தார்.  திங்களின் குறைபோக்குவதற் காகவே கலையை ஏந்தினா ரன்றித் தமக்குக் குளிர்ச்சி தரும்பொருட்டு ஏந்தினா ரல்ல ராகலின் பிறை சுமந்தார் என்றார்.  பிழை சுமந்த - சொல் வழு, பொருள் வழு, இலக்கண வழு, இலக்கிய வழு, இட வழு, கால வழு, மரபு வழு, முதலியனவாக மிகப் பல செறிந்துள்ள வழுச் சொல் உள்ளமையின் ‘பிழை சுமந்த’ கலம்பகம் என்றார்.

சடையார் என் கலம்பகத்தைப்பெற அன்னோர் செய்வர் என இயைக்க.

நூல்

(ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)

இது தரவு.

பூமேவு நான்முகனும் புயங்கவணை மாதவனு
மாமேவு நினதுமுடி மலரடிகா ணாத்திறத்தை
ஆராயும் அறிவினரே? அம்பலக்கூத் தாட்டினையும்,
வாரார்ந்த தனத்துமையாள் மகிழ்ந்துறையு மாட்டினையும்,
கழையிழைத்த வில்லானின் கண்ணினுறு கேட்டினையும்,
பிழையிழைத்த முப்புரத்தார் பீடழிந்த பாட்டினையும்,
அறமேய மால்விடையா யம்புதமா யம்பாகித்
திறமேய தேவியுமாய்ச் சேர்ந்தவருங் கூட்டினையும்,
கல்லடித்தார் சிலையடித்தார் கண்பறித்தார் முதலடியர்
தொல்லைநிலம் பிறவாமே துயரறுத்த பீட்டினையும்,
பாற்கடலி னமுதெழுமுன் பகைத்தெழுந்த ஆலத்திற்
கேற்கவிடம் அமைத்தமரர்க் கின்புறச்செ யூட்டினையும்,
கிழக்குவடக் கறியாத கீழ்மையருஞ் சிறப்பெய்தி
வழக்குமிடப் புரியுணர்வு வாய்ப்பளித்த தீட்டினையும்,
அறிபவராம் அன்றியெம்போல் அறிவற்ற சிறியவர்வீ
டுறுவகைமற் றில்லையென உணர்ந்தெளிது காட்சிதரீஇ
மாகம்பத் தொடுமிறைஞ்சி வழிபாடு செயவுமையோ
டேகம்பத் தொருமாவின் இனிதுவீற் றிருந்தருள்வோய்!       (3)

    (இ-ள்.) பூ மேவும்-தாமரை மலரில் விரும்பி யுறையும், நான்முகனும்-பிரமனும், புயங்க அணை மாதவனும் - பாம்பாகிய படுக்கையில் விரும்பி யுறையும் திருமாலும், மா மேவும் - பெருமைக் குணம் விரும்பி யுறையும், நினது முடி - உனது தலையையும், மலரடி - தாமரை மலர் போன்ற திருவடிகளையும், காணா - காண மாட்டாத திறத்தை - வரலாற்றினை, ஆராயும் அறிவினரே-ஆராய்ந்து பார்க்கும் அறிவுடையவர்களே, அம்பலக் கூத்தாட்டினையும்-திரு அம்பலத்தில் கூத்து நிகழ்த்துதலையும், வார் ஆர்ந்த-கச்சு இறுகக் கட்டிய, தனத்து உமையாள் - கொங்கைகளை யுடைய உமை யம்மை, மகிழ்ந்து - உறையும் - தங்கும், மாட்டினையும் - (இடப்) பக்கத்தினையும், கழை வில் இழைத்தான் - கரும்பாகிய வில்லை வளைத்துத் தவறு செய்தவனாகிய மன்மதன், கண்ணின் உறு - நினது நெற்றிக் கண்ணால் உற்ற, கேட்டினையும் - கெடுதியையும், பிழை இழைத்த - தேவர்களுக்குத் தவறு செய்த, முப் புரத்தார் - திரி புராதிகள்,  பீடு அழிந்த பாட்டினையும் - பெருமை குலைந்த இயல்பினையும், மால் - திருமால், அறம் மேய வடிவாய் - தரும விடையாகியும், அம்புமாய் - மேக வாகனமாகியும், அம்பாகி - திரிபுரம் எரிக்க அம்பு வடிவாகியும், திறம் மேய - ஆற்றலோடு பொருந்திய, தேவியுமாய் - தேவியுமாகியும், சேர்ந்த-பொருந்திய, அருங் கூட்டினையும்-அருமையாகக் கூடி யிருத்தலையும்,

கல் அடித்தார் - கல் எடுத்து எறிந்த சாக்கியனாரும், சிலை அடித்தார் - வில்லால் அடித்த அருச்சுனனாரும், கண் பறித்தார் முதல் - காளத்தியில் சிவலிங்கத்தின் கண்ணில் குருதி வருவது கண்டு தன் கண்ணைப் பிடுங்கி அப்பிய கண்ணப்ப நாயனாரும் முதலிய, அடியார் - தொண்டர்கள், தொல்லை நிலம் - பழைய நிலவுலகில், பிறவாமே - பிறவாமல், துயர் அறுத்தப் பீட்டினையும் - துன்பத்தை ஒழித்த பெருமையினையும்,

பாற் கடலின் - திருப்பாற்கடலிடத்து, அமுதெழுமுன் - அமுர்தம் தோன்றுவதற்கு முன் (அவ் வமுதத்தோடு) பகைத்து எழுந்த -, ஆலத்திற்கு - நஞ்சினுக்கு, ஏற்க - பொருந்த, இடம்.  அமைத்து -, அமரர்க்கு - வானவர்க்கு, இன்புறச் செய் - இன்பம் உண்டாகும்படி செய்கின்ற, ஊட்டினையும் - அமுதத்தை உண்பித்தலையும்,

கிழக்கு வடக்கு, என்னும் திசைகளின் நிலை வேறுபாடுகளை, அறியாத -, கீழ்மையரும் - கீழ் மக்களும், சிறப்பு எய்தி - சிறப்படைந்து, வழக்கும் இட - தங்கள் கொள்கைகளைக் குறித்துப் போரிடவும், புரி - செய்கின்ற, உணர்வு - அறிவு, வாய்ப்ப அளித்த - வாய்க்கும்படி அளித்த, தீட்டினையும் - கைச்சாத்தினையும்,

(அறிவினரே 3-ம் அடி). அறிபவராம் -, அன்றி - இன்னவாறு என்று நிலைகண்டு தெளியக் கூடியவர்களாவார் அல்லாமல், எம்போல் அறிவற்ற சிறியவர் -, வீடு உறு வகை - பேரின்பம் பெறும் வகை, மற்று இல்லை என்று உணர்ந்து - வேறு இல்லை என்று அறிந்து, எளிது - எளிதாக, காட்சி தரீஇ - காட்சி தந்து, மா கம்பத்தொடும் - மிக்க (உடல்) நடுக்கத்துடன் இறைஞ்சி வழிபாடு செய்ய -, உமையோடு - காமக் கண்ணியாருடன், ஏகம்பத்து - திரு ஏகம்பம் என்னும் தலத்தில், ஒரு மாவின் - ஒற்றை மாமரத்தின் கீழ். இனிது வீற்றிருந் தருள்வோய்!

“பூமேவு” நான்முகன் என்று தொடங்கியது, நூல் மங்கல மொழியால் தொடங்கவேண்டும் என்பது பற்றி. பிரமன் நினது முடியையும் திருமால் நினது அடியையும் தேடியும் காணாத என நிரலே கொள்க.  இது நிரல்நிறை.  திறம் - வரலாறு (ஆபுத்திரன் திறம் என்பது போல) மேவும் - விரும்பி யுறையும். 1 ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது சூத்திரம். ஆட்டினையும் - கூத்து ஆடுதலையும்; ஆடுதல் ஆட்டு (ஆடு முதனிலைத் தொழிற் பெயர்) உறையும் மாட்டினையும் = மாடு - பக்கம் (தலைமாடு, கால்மாடு).

1(தொல். சொல் 329)

நம் கழை இழைத்த வில்லான் என்பது விகுதி பிரித்துக் கூட்டாமல் கழை வில் இழைத்தான் என நின்றது.

அறம் மேய மால் விடை: சிவனார் திரிபுரம் எரிக்கச் சென்ற போது தேரின் அச்சு முறியவே, திருமால் அறத்தின் வடிவமான இடபமாக நின்று சிவபிரானைத் தாங்கினர் என்பது புராணம்.  சிவனுக்குத் திருமால் சத்தி வடிவம் ஆவார்: ‘அரியலாற் றேவி யில்லை ஐயனை யாற னார்க்கே’. ஐயாறு - திருவையாறு. அம்புதம்: மேகம். - மேக வாகன கற்பத்தில் திருமால் சிவனை மேக உருக்கொண்டு தாங்கினர்.  (அபிதான சிந்தாமணி) பாற் கடலின் அமுது எழுமுன் - பாற் கடலினின்று தோன்றிய இனிய அமுது அப் பாற்கடலினின்று தோன்றுமுன்.

ஆலத்திற்கு ஏற்ற இடம்: மிடறு, மிடறு என்பது மிணறு என்று திரிந்து வழங்குகின்றது. ஒரு மிணறு தண்ணீர் குடி.

வாய்ப்பும் ஆம். வாய்ப்ப அளித்த: அகரம் தொக்கது. தரீஇ - சொல்லிசை அளபெடை: வினையெச்சப் பொருளது. ஆராயும் அறிவினர் (எழுவாய்), கூத்தாட்டினையும் ......... வாய்ப்பளித்தத் தீட்டினையும் அறிபவராம் அன்றி, சிறியவர் உணர்ந்து தரீஇ இறைஞ்சி வழிபாடு செய்ய மாவின் வீற்றிருந்தருள்வோய்! (கேள்) என வினை முடிபு செய்க.

இது 18 அடித் தரவு.

அமுதம் உயிரைக் காப்பதாகலின், உயிரைப் போக்குவதாகிய ஆலம் எழுந்ததைப் ‘பகைத் தெழுந்த’ என்றார்.

ஈரடித் தாழிசைகள் - 8

இடங்கர்வாய்ப் பட்டகளிற் றின்னுயிரைப் புரந்தசெயல்
கடல்வீழ்த்த நாவரையன் கன்மிதத்தற் கொப்பாமோ.     1

கைகைக்குக் கானடந்த காகுத்தன் பொறையினுநீ
வைகைக்கு மண்சுமந்த வண்மைமிகப் பெரிதன்றோ.     2

கம்பத்தன் உயிர்மாயக் கடுஞ்சமர்செய் கைவலியென்
கம்பத்தன் சிலையெடுக்கத் தலைநெரித்த கால்வலிக்கே.     3

கொம்பனையாள் கல்லுருவிட் டின்னுருவங் கொண்டதினும்
சம்பந்தன் என்பைப்பெண் ணாக்கியது சால்புடைத்தே.     4

அம்பொன்றாற் புணரிநீர் சுவறச்செய் ஆற்றலினும்
நம்பொன்றாப் புரமூன்றை நகைத்தழித்தல் மேன்மையதே.     5

எழுவிடையைத் தழுவிமணம் எய்துமொரு செயலினுஞ்சீர்
மொழியரையன் அமணர்கரி முனிவொழித்த தற்புதமே.     6

அண்டரிள மடவாரை அணைந்தவபி ராமமெனோ
பண்டிருடி மனைவியர்கள் பாடழிந்த வனப்பினுக்கே.     7

பற்குனற்கு மாயன்சு பத்திரையைத் தந்தவகை
சற்குணற்குப் பரவைதரு தண்ணளிக்குநேராமோ.     8

(இ-ள்.) (1) இடங்கர் வாய்ப்பட்ட - முதலையின் வாயில் அகப்பட்ட, களிற்றின் - கசேந்திரன் என்னும் யானையினது, உயிரை -, புரந்த - திருமால் பாதுகாத்த, செயல் - செயலானது, கடல் வீழ்த்த - கடலில் சமணரால் தள்ளப்பட்ட, நா அரையன்கல் - திருநாவுக்கரசரைக் கட்டிய கருங்கல்லானது, மிதத்தற்கு - மிதக்கச் செய்து கரை சேர்த்த செயலுக்கு, ஒப்பாகுமோ-,

திருமால் கசேந்திரன் இடரை நேரில் வந்து தீர்த்தது, சிவபிரான் நேரில் வராமலிருந்தும் அவரது திரு ஐந்தெழுத்தினை ஓதிய நாவுக்கரசருக்கு அவரைக் கட்டியிருந்த கல் மிதக்கச் செய்ததற்கு ஒப்பாகுமோ?

திருமால் சக்கரத்தைச் செலுத்தி முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றினார்.  சிவனாரது ஐந்தெழுத்தினை வட்டமிட்ட அளவில் அது சமணருக்கும் தீங்கில்லாமலும் அப்பருக்கும் தீங்கில்லாமலும் கல்லைக் கரையில் கொண்டுவந்து சேர்த்தது.

திருமால் செய்கையால் யானை ஒன்றுதான் வீடுபேறு அடைந்தது.  சிவனார் செயலால் அப்பர் பிழைத்து வந்து பல அற்புதங்களும் பல ஆயிரம் பாசுரங்களும் அருளினபடியால் உலகில் உள்ள யாவரும் அருள்நலம் பெற்றனர்.

ஆகவே திருமாலின் செயல் சிவபிரான் செயலுக்கு ஒப்பாகாது என்பது தெளிவாகும்.

(2) கைகைக்கு - சிற்றன்னையாகிய கைகேயியின் பொருட்டு கான் நடந்த - காலால் காட்டிற்குச் சென்ற, காகுத்தன் - இராமனது, பொறையினும் - பொறுமையினும், நீ வைகைக்கு - வைகைக் கரையில், (வந்தியின் பொருட்டு) மண்சுமந்த. -, வண்மை - வள்ளல் தன்மை. மிகப் பெரிது அன்றோ -.  தந்தை சொன்னதாகச் சிறிய தாய் கைகேயி சொன்ன சொற்படி காட்டிற்குச் சென்றது நன்மகனாவான் தந்தைசொல் போற்ற வேண்டின கடமை.  மனைவியும் தம்பியும் உடன் சென்றனர்.  இராமன் பொறை, நெஞ்சு பொறுத்தல் ஒன்றே. இராமன் முகம் அன்று அலர்ந்த தாமரையை வென்றது.  ஆகவே, பட்ட துன்பம் சிறிதே; பயனும் பெரிதன்று தன்மை, தன் தம்பியாகிய பரதனுக்குக் கொடுத்தமை வள்ளல் தன்மை எனவே படாது; வள்ளல் தன்மையாயினும் அது சிறிதேயாம்.  திக்கற்றவளாகிய வந்தியின் பொருட்டுக் கூலியாளாகச் சென்று மண் சுமந்து அரசன் ஓச்சிய பிரம்படியும் பெற்று, அடைந்த துன்பம் மிகப் பெரிது.  பயன் - வள்ளல் தன்மை: மணிவாசகர் திருவாசகம் அருளிச்செய்ய ஈடுபடுத்தியமை.  வைகை - வைகைக் கரை; விடாத ஆகு பெயர்.  தொடர்பில்லாத மணிவாசகர் பொருட்டு வைகையாற்றினைப் பெருக்கெடுக்கச் செய்து, அவருடன் திக்கற்றவளாகி யாதொரு தொடர்புமில்லாத வந்தியையும் ஆட்கொள்ள பெருந்துன்ப மெல்லாம் ஏற்று அவற்றுள் மணிவாசகரால் உலகமெல்லாம் உய்யுமாறு திருவாசகத்தினை அருளிச்செய்ததே வள்ளல் தன்மையாம்.  எனவே, காகுத்தன் வண்மையினும் இறைவன் வண்மை, மிகப் பெரிது என்றார்.

அ. இராமன் காலால் நடந்து செல்லுதல் அவ்வளவு துன்பந் தருவதொன்றன்று.  மக்களுக்கு நடந்து செல்லுதல் இயல்பான செயலே.  சிவபெருமான் காலால் நடந்து செல்லுதல் மட்டுமன்றித் தலையில் மண்சுமந்து பணிசெய்தது துன்பந் தருவதொன்று.  எனவே காகுத்தன் பொறையினும் சிவபெருமான் பொறை, மிக்கது என்க.

ஆ. இராமன் காட்டிற்குக் காலால் நடந்து சென்றதால் குகப் பெருமாள் முதலியவருடைய தோழமை பெற்றும் மனைவியைப் பிரிய நேர்ந்ததால் அத்துன்பத்தை ஒழிக்க அகத்தியனார் சிவகீதை உபதேசித்தும் பெருமுயற்சியால் மனைவியை மீட்டும், விளைந்த பயன் ஒன்று மிலதாய் முடிந்தது.

வந்தியின் ஆள் பிரம்படி பெற்றது, தனக்கு ஊறு நேராது அரசன் முதலிய யாவர்க்கும் ஊறு நேர்வித்தது; தான் இறைவனாந் தன்மை விளக்கியதோடு மணி மொழியாரது உள்ளத்தின் அருள் வாய்ந்த நிலையையும் புலப்படுத்தியதாம்.

(3) கம்பத்தன் - பத்துத்தலைகளையுடைய இராவணன், (கம் - தலை) உயிர் மாய - அழிய, கடும் சமர் - கொடிய போர் நிகழ்த்திய, கைவலி என் - கையின் வலிமை என்ன சிறப்புடையது? கம்பத்தன் - ஏகம்பம் உடையானது, சிலை எடுக்க - (கயிலை) மலையை எடுக்க, தலை நெரித்த - தலையை நெரித்த, கால் வலிக்கு முன் - காலினது வல்லமையை நோக்க.

சிவபிரான் காலின் விரலை ஊன்றிய வல்லமையினாலேயே கைலாய மலையைத் தூக்க முயன்ற இராவணன் தலைகள் நசுக்குண்டன. இராமன் நால்வகைப் படையுடனும் இலக்குமணன், அநுமான், சுக்கிரீவன், விபீடணன் முதலியோர் உதவியுடனும் இராவணனிடம் சென்று போர்புரிந்த கைவல்லமை எவ்வளவினது? எனவே, சிவபெருமான் கால் வலிமைக்குமுன் இராமன் கைவலிமை, பெரிதன்று என்க.

சிவப்பிரகாசசுவாமிகள்: வெங்கைக் கலம்பகம் 6. மேதகைய வில்லிறைவன் வில்லிளவல் வல்வீரர், காதனிக மற்றுங்கால் தெவையும் - பாதத், தொருவிரலாம் வெங்கையா னொன்றாவையாசைப், பருவரலாற் காணப் படும்.

கம்பத்தன் என்பது ஏகம்பத்தன் என்பதன் முதற்குறை கம்+பத்தன் எனப் பிரித்து கங்கை நீரைச் சடையில் கட்டினவன் என்றும் பொருள் கொள்ளலாம்.  கம்பு அத்தன் எனப் பிரித்து  இதே பொருள் கொள்ளுதலும் ஆம்.  கம்பு கட்டி என்ற வழக்கில் கம்பு - நீர் என்று வழங்குதல் காண்க.

(4) கொம்பனையார் - பூங்கொம்புபோன்ற அகலிகை. கம்பர் கூறியபடி அவள் வடிவம் கல்லாயிருந்தது.  இராமனது காலின் துகள் அவ்வடிவத்தின் மீது பட்டவுடன் அந்தக்கல் வடிவம் பழைய அகலிகை யாயிற்று.

திருமயிலையில் பூம்பாவையின் எலும்பு மட்டும் ஒரு குடத்தில் இட்டு வைத்ததைத் திருமதிற்புறத்திற் கொண்டுவந்து சேர்த்தவுடன் சம்பந்தர் தேவாரம் பாடினார்.

அ. பூம்பாவை வடிவம் சிதைந்த எலும்பினின்று வெளிவந்தது.  இராமன் காலிலுள்ள மண்பட்டு அகலிகை எழுந்தாள். இராமன் கால் தூசு பட்டால் சாபம் நீங்கி எழுவாள் என்ற கௌதம கழுவாய் அறிவித்தபடி இந்தக்கல் அகலிகையாயிற்று. இராமன் கால் தூசுபட்ட கருங்கற்பாறைகளெல்லாம் பாறைகளாகவே இருந்தன.

ஆ. வான்மீகத்தின்படி அகலிகை, கௌதமர்தம் சாபப்படிச் சாம்பலில் புரண்டு கொண்டிருந்தாள் என்று விளங்குவதால் அகலிகை இராமன் கால்களின் துகளால் உயிர் பெற்றெழுந்தாள் என்பதே உண்மையாயிற்று.

சம்பந்தர் பாடல் கட்டளையிட்ட அளவிலேயே பூம்பாவை எழுந்தாள்.  கற்புநிலை கெட்டவளை எழுப்பியது பிறர் பேசுவதற்கு இடம் தரும். சம்பந்தர் தூய்மை வாய்ந்த பெண்ணைத் தகப்பன்வேண்டுகோட்கு இணங்கி எழுப்பியது வியப்பு.  தமிழ் மொழி திருஅருள் வலம் நிரம்பிய மொழி என்பதும் விளங்கும்.

கொம்பனையாள் - பூங்கொம்பை ஒத்தவளாகிய அகலிகை, கல் உரு விட்டு - கல் உருவினின்றும் நீங்கி, இன் உருவம் கொண்டதினும் - இனிய பழைய வடிவம் பெற்றதைப் பார்க்கிலும், சம்பந்தன் -; என் பை - பூம்பாவையின் எலும்பை, பெண் ஆக்கியது -, சால்பு - சிறப்பு, உடைத்து - உடையது.

(5) அம்பு ஒன்றால் - ஒர் அம்பாகிய துணையைக்கொண்டு, புணரி நீரை - (சேது பந்தனம் செய்த காலத்தில்) கடல் நீரை, சுவறச் செய் - வற்றச் செய்த, ஆற்றலினும் - வல்லமையைக் காட்டியும், நம்பு ஒன்றா - நம்புதல் பொருந்தாத - பகைகொண்ட -, புரம் ஒன்றை - திரிபுரத்தை, நகைத்து - ஒரு பொருளின் துணை இன்றி வெறும் சிரித்தலினாலேயே, அழித்தல் -, மேன்மையது.

சேதுவைப் பந்தனப் படுத்த வருணன் இடங்கொடாமையால் இராமன் கடலின்மீது கோபத்தோடு ஓர் அம்பு எறிந்தான்.  ஓர் அம்பு எறிதலின்றி, கோபமின்றி நகைத்த அளவிலே முப்புரம் அழிந்தது சிறப்பு.

முப்புரத்திலிருந்தவர்களது நம்புதல் பொருந்தாமையைப் புரத்தின் மேலேற்றிக் கூறினது இலக்கணை.

“ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே கண்டன முந்தீபற
ஒன்றும் பெருமிகை யுந்தீபற”

                                                             என்பது திருவாசகம்.

ஓர் அம்பு - சிவபெருமான் கையில் கொண்ட திருமாலின் உருவமாகிய அம்பு.  அஃது எய்யப்படாது சிவபெருமான் கையில் மிகையாயிற்று.

(6)   எழு விடையை - ஏழு எருதுகளை, (கண்ணன்), தழுவி - இறுகத் தழுவி, மணம் எய்தும் ஒரு செயலினும் -, சீர் - சிறப்பு வாய்ந்த, மொழி அரையன் - நாவுக்கு அரசர், அமணர் - சமணர், (தம்மீது ஏவிய,) கரி - யானையினது, முனிவு - கோபத்தை, ஒழித்தது அற்புதம் -

எருதுகளிடம் பலகால் பழகியவனாய், எருது அடக்குவது மக்களுள் உடல் வல்லமையுள்ளவரும் செய்வர். கடவுள் அவதாரம் என்று பாராட்டப் பெறுவோர் எருது அடக்கினது பெரிதோ.

நாவுக்கரசரைக் கொல்லும்படி அனுப்பிய யானை கடுஞ்சினத்துடன் அவருக்கு முன்பு வந்தும் யாதொரு ஊறும் செய்யாமல் அவரை வலம் வந்து அடிபணிந்து சென்றது வியப்பு.

(7)   பண்டு - முற்காலத்து, இருடி மனைவியர்கள் - தாருகவனத்து மகளிர், பாடு அழிந்த - கற்புநிலை அழிந்த, வனப்பினுக்கு அழகினுக்குமுன், இளம் - இளமை வாய்ந்த, அண்டர் மடவாரை - ஆயர் மகளிரை, அணைந்த -, அபிராமம் - அழகு, என்னோ - எப்படிப்பட்டது?

இடையருடைய இளம் பெண்கள் நாள்தோறும் காணும் பழக்கத்தால் காமுறும்படி அமைந்த கண்ணனுடைய அழகினைக் காட்டிலும் தாருகவனத்து இருடியாரின் மனைவியர், தாம் கற்பினால் மேம்பட்டோர் என்று இறுமாப்புற்றிருந்த மனவல்லமையின் நிலையையும் குலைத்த, சிவபிரான் அழகு சிறந்ததன்றோ என்றார்.

அன்றியும் ஆடை, அணிகலன்களை அணிந்து சென்ற கண்ணனை விடப் பிச்சாடனர் கோலத்துடன் சென்ற சிவனார் நிகழ்த்தியது வியப்பு.

(8)   பற்குனற்கு - அருச்சுனனுக்கு, மாயன் - கண்ணன், சுபத்திரையை - தன் தங்கையாகிய சுபத்திரையை, தந்த வகை - மனைவியாகத்தந்த வகையானது, சற்குணற்கு - நற்குணம் வாய்ந்த சுந்தரமூர்த்திகளுக்கு, பரவை - பரவை நாச்சியாரை, தரு - மணம்செய்வித்த, தண் அளிக்கு - கருணை மேலீட்டிற்கு, நேராமோ - ஒப்பாகுமோ?

பலராமன் சுபத்திரையைத் துரியோதனாதியருள் ஒருவனுக்கு மணஞ் செய்ய விரும்பியிருந்தபோது கண்ணன் அருச்சுனனுக்குத் தானே சுபத்திரையை மணஞ் செய்துகொடுக்கச் சூழ்ச்சியுடையனாக விரும்பிச் செய்த விதத்தைக் காட்டிலும், சிவபிரான் நற்குணம் வாய்ந்த சுந்தரருக்குப் பரவைநாச்சியார் மணத்தோடு அவர் தம் ஊடலையும் தணித்துத் தம் அடியவர் நெஞ்சம் தழைக்கச் செய்தது அரிய செயலாகும்.

அராகம் - 4.

உரையிட அரியதொர் அனலுரு ஒளிதர
வரைமகள் இடமுறு வகைபுரி அளியினை.  1

நிழலிடு தருவடி நிலைபெறு கருணையை
வழிபடு மவர்பெற அருள்பர வெளியினை.   2

பகலவன் அனலவன் நிறைமதி பரிவுறு
தகவமை உரைமிகு தமனிய ஒளியினை.     3

பழமறை ஒலிகெழு பலதலம் அருள்பயன்
அழகுற அருளிவண் அமர்தரு களியினை.   4

(இ-ள்.) (1) உரையிட - சொற்களினால் பிறர் வரையறுத்துக் கூற, அரியது - இயலாதது ஆகிய, ஓர் - ஒப்பற்ற, அனலுரு - தீவண்ணமாகிய வடிவம், ஒளிதர - தீக்குரிய சுடுந்தன்மையும் விளங்கும் தன்மையும் ஆகிய இரண்டனுள் சுடுந்தன்மை நீங்கி விளங்குந் தன்மை யொன்றுமே நிற்க, வரை மகள் - மலை மகளாகிய பார்வதி, இடம் உறு வகை - இடப்பக்கம் பொருந்தும்படி, புரிஅளியினை - அவளன்பு கருதிச் செய்த அருளை உடையாய். பிறரால் அளவிட்டுச் சொல்ல முடியாததாகிய அனல் வடிவாயிருந்தும், பார்வதிக்கு அவளன்பு கருதி சுடுந்தன்மை நீக்கி உன் இடப்பாகத்தைத் தந்தருளும் குளிர்ச்சி உடையாய்.

(2)  நிழல் இடு - நிழலைச் செய்கின்ற, தரு அடி - (மா) மரத்தின் அடியில், நிலைபெறு - நிலைபெற்றிருக்கின்ற, கருணையை - அருளை உடையாய், வழிபடு மவர் - (நின்னை) வழிபடும் அவர், பெற - அடைய, அருள் - அருளுகின்ற, பரவெளியினை - பர வெளியினை உடையாய், பர வெளி1 என்றது சிதாகாசத்தை.

(3)   பகலவன் - சூரியன், அனலவன் - நெருப்பு, நிறை மதி - நிறை நிலா, (ஆகிய இவைகள்) பரிவுறு - விரும்பத்தக்க, தகவு அமை - பெருமை வாய்ந்த, உரை மிகு - மாற்று உயர்ந்த, தமனிய ஒளியினை - பொன்னின் ஒளிபோலும் ஒளியை உடையாய்.

சூரியன், அக்கினி, சந்திரன் இவை மூன்றும், தம் மொளியினும் சிறந்த ஒளியை உடையன் கடவுள் ஆதலால் நின்னை விரும்பும் ஒளியையுடையாய் என்றார்.

இனிச் சூரியன், அக்கினி, சந்திரன் இவை மூன்றும் மூன்று கண்களாக நின் முகத்தில் விரும்பி அமையப்பெற்ற தகுதி அமைந்த பொன்னார் மேனியை உடையாய் எனலுமாம்.

(4)   பழ மறை - பழைய வேதங்களின், ஒலி கெழு - முழக்கம் நிறைந்த, பல தலம் - பல தலங்கள், அருள் பயன் - அருள் செய்யும் பயனை எல்லாம், அழகுற - அழகாக, இவண் - இந்தக் காஞ்சியாகிய ஒரு தலத்தில் ஒரு மாமரத்தின் அடியில், அமர் அருள் தரு - விரும்பி எழுந்தருளி அருளுகின்ற, களியினை - ஆநந்தக் களிப்புடையாய்.

எல்லாத் தலங்களும் தரும் எல்லாப் பயன்களும் ஒரு சேரக் காஞ்சிமா நகரம் தரும் என்றபடி.          

‘கச்சி படுவ கடல்படா; கச்சி
கடல் படுவ எல்லாம் படும்’

என்பதும் காண்க. (தண்டி மேற்கோள் வேற்றுமையணி)

காஞ்சியில் கிடைக்கும் பொருள்கள் கடலிற் கிடைக்கமாட்டா, ஆனால் கடலில் கிடைக்கும் பொருள்களெல்லாம் காஞ்சியில் கிடைக்கும். எனவே காஞ்சி சிறந்தது என்றபடி.

1 பர வெளி: அறிவு அடங்கிய நிறைவுடைய மேலான இடம்.

பெயர்த்தும் வந்த ஈரடித்தாழிசைகள் - 8

நறைபூத்த மலர்க்கொன்றை நளினத்தின் மாண்டதுவே
பிறைபூத்த செஞ்சடையாய்! பிறங்குபுயம் உற்றபினே.     1

பணியணிந்தாய் மற்றதைவிற் பற்றியிசைத் தாய்கயிறாத்
திணியவைத்தாய் மந்தரத்தே நஞ்சுணவும் சிறப்பாமோ.     2

மாலுலகங் காக்கநர மடங்கலுருக் கொளஅம்மா
லாலுலகுக் கானதுயர் அகற்றவலார் வேறுளரோ.     3

மகிழிருந்தாய் மனையென்றோ மாசுண துயின்றானுக்
ககங்கனியச் சங்காழி ஆண்டகைமுன் அருளியதே.     4

கவுணியருக் கணிமுத்தங் காதலினீந் தருள்செயலக்
கவுணியருக் கணிமுத்தங் கனிந்திட்ட பரிசன்றோ.     5

மதிவேணி மிசைமேவ மலர்விழியு மதியான
விதிசாற்ற அறியேமுன் மேனியழ கியம்புவதே.     6

முலைக்குறியும் வளைக்குறியும் கொண்டதற்பின் முதலவனே!
இலைக்குறியும் குணமுமெனல் எவ்வண்ணம் இயைந்திடுமே.     7

மாவடிக்கீழ் உற்றாயுன் மலரடிக்கே மங்கலச்சொற்
பாவடுக்க நாவளிப்பாய் பழமறைசொல் பரமேட்டி!     8

(இ-ள்.) (1) பிறை பூத்த - பிறை மலர்ச்சி (விளக்கம்) பெற்ற, செஞ்சடையாய் - சிவந்த சடையை உடையவனே, நறை பூத்த - மணம் நிறைந்த, மலர்க்கொன்றை - கொன்றைமலர், பிறங்கு புயம் - பருத்து விளங்குகின்ற நினது தோளின்கண், உற்றபின் - அடைந்த பிறகு, நளினத்தின் - தாமரை மலரின் அழகினைவிட, மாண்டதுவே - சிறந்ததுவே.

பிறைச் சந்திரன் குறைநிலாவாக இருந்தும் அதனை நின் சடையில் ஏற்றுக் கொண்டதனால் அது வளர்ந்து நிறைநிலா வாகும் சிறப்புப் பெற்றது. பிறை பெரியோன் சூடப்பெற்றதால் அடைந்த சிறப்புப் பெருந்தேவரும் வணங்கப் பெறுதல்:
“பிறைநுதல் வண்ணமாகின்று: அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும்படுமே”.

                                                                                                                                          - (புற நானூறு, கடவுள் வாழ்த்து)

‘கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த்
தாரன் மாலையன் மிலைந்த கண்ணியன்’

                                                                                                                                          - (அக நானூறு, கடவுள் வாழ்த்து)

என்றதால், சிவபெருமான் ஏனைய மலர்களை அணியாமல் கொன்றை மலரையே அடையாள மாலையாகவும், அழகு மாலையாகவும், தலை மாலையாகவும் அணிந்துள்ளமை பெறப்படும். பூவினுள் சிறந்தது ‘பொறி (இலக்குமி) வாழ் பூவே’ (தாமரை) என்றாலும் அதனை நீ அணியாமல் நின் தோளில் கொன்றை மலரைத் தரித்தமையால் கொன்றைமலர் தாமரையினும் சிறந்தது.  மாண்டது என்பது மாட்சிமைப்பட்டது என்ற பொருளில்: மாண்பகுதி. இறந்தது என்ற பொருளில்: மாள் பகுதி.  இவ் வேறுபாடு நோக்குக.

(2) பணி அணிந்தாய் - அச்சுறுத்தும் பாம்பினை அணிகலன்களாக அணிந்தாய், அதை அந்தப் பாம்பினை, விற் பற்றி - மேருமலையை வில்லாகக் கையில் பற்றி, கயிறாக - அவ் வில்லை வளைத்தற்கு நாணாக, இசைத்தாய் - அமைத்துக் கொண்டாய். மந்தரத்தே - மந்தரமலையை , (மந்தரமலையை மத்தாகக் கொண்டு பாற் கடலைக் கடைய அந்த மத்தில்) திணியவைத்தாய் - கயிறாகச் சுற்றிக் கொள்ளச் செய்தாய். இவையெல்லாம் செய்த உனக்கு, நஞ்சுணவும் - (அப்பாம்பு) கக்கிய நஞ்சை உணவாகக் கொள்ளுதலும், சிறப்பாமோ-நினக்குச் சிறப்புடையதாகுமோ?

அந்தப் பாம்பு நஞ்சு கக்கியதால் சூழ இருந்த வானவர் ஓடினர். நீ நஞ்சை உட்கொண்டனை: நஞ்சினைத் தரும் பாம்பினையே நீ விரும்பியபடியெல்லாம் ஆண்ட நினக்கு அது கக்கிய நஞ்சினை உட்கொள்ளல் எளிதே.

உணவும் - உண்ணுதலும்: தொழிற்பெயர் உம்மை யேற்று நின்றது.

ஓகாரம் வினாவோடு எதிர்மறை.

(3) மால் - திருமால் ஆனவர், உலகங் காக்க - உலகத்தைக் காக்கும்படி, நரமடங்கல் - (இரணியன் பொருட்டு) நரசிங்கமாக உருக்கொள - வடிவங்கொள்ள, அம்மாலால் - (பிறகு) அத்திருமாலால், உலகுக்கு - உலகத்திற்கு, ஆன துயர் - உண்டாகிய துயரத்தை, அகற்ற வல்லார் - நீக்க வல்லவர்கள், வேறு உளரோ - நின்னையன்றி வேறு இருக்கின்றனரோ? (இல்லையன்றே)

 

நரமடங்கல் - நரசிங்கம்: நரசிங்கமூர்த்தி இரணியனைக் கொன்று அவன் குருதியை உண்டமையால் வெறிகொள்ள, அதனால் உலகத்திற்கு நிகழ்ந்த துயரத்தை நீக்க நின்னை யன்றி வேறு யார் உளர்?

 

(4) மகிழிருந்தாய் - மகிழ்ச்சியோ டிருந்தவனே, மனை என்றோ - மனைவி என்று கருதியோ, மாசுணம் - பாம்பாகிய ஆதிசேடன் மீது, துயின்றானுக்கு - பள்ளிகொண்ட திருமாலுக்கு அகங்கனிய - மனம் குழையும்படி, சங்கு ஆழி-சங்கும் சக்கரமும், ஆண்தகை - ஆண் தன்மையை உடையவனே, முன் அருளியது - முன் கொடுத்தது. (மனைவி-சக்தி) [சங்கு சக்கு? (கண்). திருமால், தன் கண்ணைப் பிடுங்கிச் சிவனை அருச்சித்தபோது சிவபிரான் சக்கரம் அளித்தனர். இது நிகழ்ந்த தலம் திருவீழிமிழலையாகும். சங்கு-சக்கின் பொருட்டு.]

தேவாரம்.

திருவீழி மிழலையில் தன்னை அருச்சித்த திருமாலுக்குச் சக்கரம் அளித்தான் என்பதே வரலாறாக, சங்கும் அளித்தான் என்றது, தன்னை அருச்சித்தற்குப் பிடுங்கிய கண்ணாகிய சக்கு (சக்ஷு-கண்) வினையும் மீண்டு அளித்துக் காப்பாற்றினான் என்றவாறு.

 

மகிழிருந்தாய் என்றதும் மகிழமரத்தின் கீழ் இருந்தவரே என்றும் பொருள்படும். இது சுந்தரர் பொருட்டு நிகிழ்ந்தது.

 

மகிழ், மகிழ்ச்சி என்ற பொருளில் முதனிலைத் தொழிற் பெயர்.

 

(5) கவுணியருக்கு - கவுண்டிணீய குடிமரபிற் பிறந்த ஞானசம்பந்தருக்கு, அணிமுத்தம் - அழகிய முத்துப் பந்தலும், முத்துப் பல்லக்கும், காதலின் - விருப்பத்தோடு, ஈந்தருள் செயல் - கொடுத்தருளிய செய்கை, அக்கவுணியருக்கு - அத்திருஞானசம்பந்தரது தாடையில், அணிமுத்தம் - அழகிய முத்தம், கனிந்து இட்ட - அன்பு கொண்டு கொடுத்த, பரிசன்றோ - கருணையன்றோ.

 

சிவபிரான் சம்பந்தருக்கு வாய் முத்தங் கொடுத்த பரிசினால் அல்லவோ முத்துப் பந்தலும் முத்துப் பல்லக்கும் அருளினாரென்க. முத்தம் என்பது கருவி ஆகுபெயராய் முத்துப் பந்தலையும், முத்துப் பல்லக்கையும் உணர்த்திற்று

 

(6) மதி - பிறைச்சந்திரன், வேணிமிசை - சடையினிடத்து, மேவ - பொருந்த, மலர்விழியும் - மலர்ந்த கண்ணும், மதியான. அச்சந்திரன் ஆன, விதிசாற்ற - முறைமையை (உண்மையை) எடுத்துச் சொல்ல, அறியேம் - அறியேங்களாகிய யாம், உன் மேனி அழகு - தேவரீருடைய திருமேனி யழகை, இயம்புவதே - இத்தகையது என்று சொல்ல முடியுமோ. ஏகாரம் வினாவோடு எதிர்மறை.

 

மதி ஒன்றே சடையிலும் முகத்திலும் இரண்டாகப் பொருந்தி யிருத்தலின் முறைமையை அறியமாட்டாத யாம், உன் திருமேனி முற்றும் உள்ள எல்லா உறுப்புக்களின் அழகையும் பாராட்டி எங்ஙனம் சொல்லமாட்டுவேம் என்பதாம். (சந்திரன் தலையில் இருப்பதும், கண்ணாக இருப்பதும் ஆகிய உண்மையை அறியமாட்டாதேம் உன் மேனி முழுவதும் ஆன அழகைச் சொல்ல முடியுமோ முடியாது).

 

(7) முலைக்குறியும் - உமாதேவியினது முலைத்தழும்பும் வளைக்குறியும் - வளைத்தழும்பும், கொண்டதன்பின் - அடைந்ததற்பின், முதல்வனே - முன்னவனே, குறியும் குணமும் - பெயரும் குணமும், இலையெனல் - உனக்கு இல்லை என்று சொல்லுதல், எவ்வண்ணம் - எவ்விதமாக, இயைந்திடுமே - பொருந்திடும்? (பொருந்தாது) ஏகாரம் எதிர்மறை.

 

கம்பையாறு பெருக்கெடுத்து வருவதைக் கண்ட காமக் கண்ணியார் அஞ்சித் தாம் வழிபாடாற்றும் மணல் இலிங்கத்தைத் தழுவிக்கொண்டபோது, அம்மையாரது கொங்கைகளும் வளையல்களும் இலிங்கத்தின்மீது (குறிகள்) அடையாளங்கள் செய்தன. உண்மை இங்ஙனமாகக் குறியும் (மனக்கோளுக்கு அடங்குதலும்) ‘சுட்டப்பட்ட’ குணமும் உனக்கு இலை (இல்லை) எனல் எவ்வாறு பொருந்தும்?

 

இலை என்பது இல்லையென்பதன் இடைக் குறை. இலை என்ற குறிப்புமுற்றின்முன் எதுகை நோக்கி வலிமிகல் செய்யுள் விகாரமாம்.

“துடிகொள் நேரிடையாள் சுரிகுழல் மடந்தை
துணைமுலைக் கண்கள் தோய்சுவடு
பொடிகொள்வான் தழலில் புள்ளிபோல் இரண்டு
பொங்கொளி தங்குமார் பினனே”

                                                                            - என்பது திருவாசகம்.

 

(8) மாவடிக்கீழ் - மாமரத்தின் அடிமரத்தின் கீழ், உற்றாய் - எழுந்தருளினவனே, பழமறை - பழமறையான வேதங்களாலே, சொல் - புகழ்ந்து சொல்லப்பட்ட, பரமேட்டி - பரம்பொருளே (சிவனே) உன் மலரடிக்கு - உன் மலர்போன்ற திருவடிக்கு, மங்கலச் சொற்பா - மங்கலச் சொற்களாலாகிய பாட்டை, அடுக்க - வளமாக அடுக்க, நா அளிப்பாய் - நாவில் நின்று அருள்புரிவாய்.

 

சொற்பா - சொற்களாலாகிய பாட்டு, நா - நாவளமுமாம். பரமேட்டி - பரம்பொருள் (சிவன்)

 

மாவடிக்கீழ் உற்றாய்! சொல் பரமேட்டி! உன் மலர்போன்ற அடிக்கும் பாக்கள் பொருந்த நாவில் நின்று அளிப்பாய் என இயைக்க; நாவளத்தை அளிப்பாய் என்றுமாம். உன் மலரடிக்கே என்புழி ஏகாரம் பிரிநிலை:

 

தேற்றமுமாம், நா, சொல் (கருவியாகு பெயர்)
மலரடி - உவமத்தொகை நிலைத்தொடர்.
மலரடி - எங்கும் மலர்ந்த அடிஎனலுமாம்.
இப்பொருளில் வினைத்தொகையாம்.

 

வேதங்கள் உன்னால் பாடப்பெற்றன. அவைகளே உன்னைப் புகழ்ந்து கூறவல்லன. எனவே உன் மலரடிக்குரிய மங்கலப்பாக்களை என்னால் கூறல் இயலாது; நீயே என் நாவில் நின்று உன்புகழை இசைக்கவேண்டும். எனவே என் நாவில் நின்று அருள்புரிவாய் என்றார்.

 

நாற்சீர் ஈரடி அம்போதரங்கம் - 2

கரந்தயங் கனன்மழு வேந்தி நெற்றியிற்
புரந்தெறு சுடர்க்கணும் பூண்ட மேன்மையை     1
கூற்றினைக் குமைத்திடு கோலத் தாளினை
யாற்றினை அருள்நடம் ஆடும் பான்மையை     2

 

(இ-ள்.) (1) கரம்தயங்கு - கையின்கண் நின்று ஒளி செய்கின்ற, அனல் மழு - அக்கினியும் மழுவாளும், ஏந்தி - தாங்கிநின்றோய், நெற்றியில் - நெற்றியினிடத்தில், புரம்தெறு - திரிபுரத்தை அழிக்கும், சுடர்க்கணும் - அக்கினியாகிய கண்ணும், பூண்ட - அழகாக மேற்கொண்ட, மேன்மையை - மேன்மையை உடையை, அனல்மழு - உம்மைத்தொகை; அனலுகின்ற (கொழுந்துவிட்டெரிகின்ற) மழு என வினைத்தொகையாகவும் கொள்ளலாம். மழு - மழு என்னும் வாள். மேன்மையாவது வெறுங்கையில் நெருப்பு மழுவை ஏந்தலும் மெத்தென்ற தன்மையுள்ள கண் நெருப்பினால் அமைந்திருத்தலும் ஆகும். ஏந்தி - வினையாலணையும் பெயர். இயல்பு விளியாக நின்றது. ஏந்திப் பூண்டாய் என வினை யெச்சமாகக் கொள்ளுதலுமாம்.

மழுவான வலனேந்தி மறைஓதி மங்கை பங்கா
தொழுவா ரவர் துயராயின தீர்த்தலுன தொழிலே

                                                                             என்பது - ஆளுடைய நம்பி தேவாம்.


(2) கூற்றினை - எமனை, குமைத்திடு - உதைத்துக் கொன்றிட்ட, கோலம் - அழகிய, தாளினை - தாளை உடையாய், (நீ அந்தத் தாளினால்) அருள்நடம் - அருள் செய்யும் நடனத்தை, ஆடும் பான்மையை - ஆடும் தன்மையை, ஆற்றினை - செய்தாய்.

 

கூற்று என்றது எமனை. சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை. “காலம் உலகம் உயிரே உடம்பே” என்பது தொல்காப்பியம். உடலையும் உயிரையும் கூறு (வேறு) படுத்தலால் எமன், கூற்று எனப் பட்டான்: காரணப்பெயர். குமைத்தல் - உதைத்து அழித்தல். கோலம் - அழகு. உயிர்களை அழிக்கும் எமனை அழிக்கும் தாளையுடைய நீ அந்தத் தாளினால் அருள் செய்யும் நடனம் ஆடும் தன்மையைச் செய்தாய். குமைத்திடு ஆற்றினை - அழித்தல் செய்யும் ஆற்றலை உடையை. தாளினை - முன்னிலை வினைமுற்று. தாளினை - தாளை உடைய நீ என முன்னிலை வினையாலணையும் பெயராகக் கொண்டு, தாளினை, நடமாடும் பான்மையை ஆற்றினை என முடித்தலுமாம்.

 

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்.

ஈரேழ் புவனம் பரிந்து ணேற்றினை.     1
காரூர் சடையிற் கரக்கு மாற்றினை     2
பாரார் பெரியோர் பணியுஞ் சாற்றினை.     3
தேரார் தெளிவறு செருக்கை மாற்றினை.     4

 

(இ-ள்.) (1) ஈர் ஏழ் புவனம் - பதினான்கு உலகமும், பரிந்து (பிரளயத்தில்) விரும்பி, உண் ஏற்றினை - உட்கொண்ட திருமாலாகிய இடபத்தினை உடையை.

 

(2) காரூர் - மேகம் தங்கிய, சடையில் - சடையினிடத்து, கரக்கும் - அடக்கிய, ஆற்றினை - கங்கையை உடையை.
திரு ஆலவாயைப் பெருமழை பொழிந்து அழிக்க வந்த மேகங்களைச் சிவபெருமானார் சடையில் அடக்கிக் கொண்டனராதலின், ‘காரூர் சடை’ என்றார். கார் மேகத்திற்குப் பண்பாகுபெயர்.

 

சடையில் மறைக்கும் கங்கையை உடையை.

 

(3) பாரார் - உலகத்திற் பொருந்திய, பெரியோர் - ஆன்றோர்கள், பணியும் - வணங்கிக் கூறும், சாற்றினை - துதிகளை உடையை. சாற்றினை - சாற்றுதல்களை உடையாய்; சாற்று - துதி, முதனிலைத் தொழிற்பெயர்.

 

(4) தேரார் - பகைவரது, தெளிவறு - தெளிவற்ற, செருக்கை - இறுமாப்பை, மாற்றினை - ஒழித்தாய். தேரார் - பகைவர்; ஈண்டுப் பாணாசுரர் முதலியோர்.

 

முச்சீர் ஓரடி அம்போதரங்கம் - 8

புரமெரி படநகை கொண்டனை     1
புரிதவ றழிவகை கண்டனை     2
புரையறு தசைமிகை உண்டனை     3
புணர்வுற வருமறை விண்டனை     4
மணிமிட றார்தரும் இருளினை     5
மலைவளர் காதலி மருளினை     6
மறையொளிர் தோமறு பொருளினை     7
மகிழொடு மாவமர் அருளினை     8

 

(இ-ள்.) (1) புரம் - திரிபுரம். எரிபட - தீப்பட, நகை கொண்டனை - புன் முறுவல் செய்தனை.
புரம் - திரிபுரம்: முன் மொழிகெட்ட பின்மொழி நிலையல்.

 

(2) புரிதவறு - (திரிபுரத்தார்) செய்த தவறு, அழிவகை - அழியும்படி, கண்டனை - உண்டாக்கினை.
புரி தவறு - வினைத்தொகை.

 

(3) புரையறு - குற்றமற்ற, தசை - (கண்ணப்பர் படைத்த) இறைச்சியை, மிகை - மிகுதியாக, உண்டனை - உண்டாய்.

 

(4) புணர்வுற - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்று நான்காகக் கலந்து கிடக்க.

 

அருமறை - அரிய வேதங்களை. விண்டனை - வெளியிட்டனை. (தெளிவுபடுத்தினை)

 

வியாசர் நான்காகப் பிரித்ததற்குமுன் எல்லாம் ஒருங்கே யிருந்தனவாதலால் ‘புணர்மறை’என்றார்.

 

(5) மணிமிடறு - அழகிய கழுத்தில், ஆர்தரும் - பொருந்திய, இருளினை - நஞ்சினது இருள் நிறம் உடையை.

 

மணிமிடறு - நீலமணி போலும் மிடறு எனினுமாம். ஆர்தரும் - பொருந்திய; ஆர்தா பகுதி.

இருள் பண்பாகுபெயராய் விடம் எனினும் அமையும்.
‘மணிமிடற் றெண்கையாய் கேளினி’          - என்பது கலித்தொகை.

 

(6) மலைவளர் - மலையரையன் பெற்று வளர்க்கின்ற, காதலி - மகளாகிய பார்வதியிடத்து, மருளினை - காதல் மயக்கம் கொண்டனை.

 

(7)மறையொளிர் - வேதத்தில் விளங்குகின்ற, தோம்அறு - குற்றமற்ற, பொருளினை - பொருளையுடையை. (மறை - நான்குவேதம்) அவையாவன. ருக், எசூர், சாமம், அதர்வணம் என்பன.

 

(8) மகிழொடு - மகிழ்ச்சியுடன், மா - மாமரத்தின் அடியில், அமர் - தங்கிய, அருளினை - அருளை உடையை.

 

இரட்டுற மொழிதலால்,

 

மகிழொடு - ஒற்றியூரில் மகிழமரத்தின் அடியிலும், மா - காஞ்சியில் மாமரத்தின் அடியிலும் தங்கியவர் எனினும் அமையும்.

   

இருசீர் ஓரடி அம்போதரங்கம் - 16

சடையுறு செல்லினை     1
விடையுறு மெல்லினை     2
கலையளை சொல்லினை     3
சிலைவளை வில்லினை     4
மலைவலி புல்லினை     5
வழிபெறு மல்லினை     6
களமில கல்லினை     7
பரவெளி இல்லினை     8
அமுதுகு பாவினை     9
அனலுறு கோவினை     10
சிலையில வாவினை     11
தலைநதி மேவினை     12
மறைபடு நாவினை     13
உலகுணு மேவினை     14
கரிவளர் காவினை     15
கதிதரு மாவினை     16.

 

(இ-ள்.) (1) சடையுறு - சடையில் பொருந்திய, செல்லினை - மேகத்தை உடையாய், செல் - மேகம். செறுநர்த்தேய்த்த செல் உறழ் தடக்கை - திருமுருகாற்றுப்படை. செல் என்பது இடியையும் மேகத்தையும் உணர்த்தும். பகைவரை ஒழிப்பதில் இடிபோன்றும் அடியவரைக் காப்பதில் மேகம் போன்றும் உள்ளனை.

 

(2) விடையுறும் - எருத்து மாட்டின் மீது அமரும், எல்லினை - ஒளியினை உடையாய். ‘எல்லே இலக்கம்’ - தொல்காப்பியம். இடையியல்.

 

(3) கலைஅணை - நூல்களைத் தழுவிய, சொல்லினை - சொற்களை உடையை.

 

(4) சிலை - மலையை, வளை - வளைத்த, வில்லினை - வில்லாக உடையை.

 

சிலை - கல். சிலை, மலைக்குச் சினையாகு பெயர். கருவியாகு பெயரெனினுமாம். வளைவில் - வினைத்தொகை. வளை, பிறவினைப் பொருளில் நின்றது.

 

(5) மலைவலி - பார்வதியை, புல்லினை = தழுவினை. வல்லி என்பது வலி என நின்றது. இடைக்குறை விகாரம். வல்லி என்பது வல்லிக் கொடிபோன்றவளாகிய உமாதேவிக்கு உவமையாகு பெயர்.

 

(6) வழிபெறு - இடம்பெற்ற, மல்லினை - வளப்பங்களை உடையை.

 

மல் - வளப்பம்: ‘மல்லல் வளனே’ - தொல்காப்பியம். வழி - வழிபாடு. (வையங் காவலர் வழிமொழிந் தொழுக - புற நா. 8) வழிபாடு செய்யும் அருச்சுனனிடத்து மல் போர் செய்தனை என்று கொண்டு மல் என்பது மல் போர் எனினும் ஆம்.

 

(7) களம் - கழுத்தில், இலகு - விளங்கும், அல்லினை - நஞ்சின் இருளை உடையை. இனிக், களம் இல - குற்றமிலதாகிய, கல்லினை - கைலைமலையை உடையை எனினும் அமையும்.

களம், குற்றம் என்ற பொருளில் கள்ளம் என்பதன் இடைக் குறைவிகாரம். இல என்பது இலது என்பதன் கடைக்குறை.

 

(8) பரவெளி - பரவெளியாகிய, இல்லினை - வீட்டை உடையை. பரவெளி - சிதாகாசம்.

 

(9) அமுது உகு - (நினைப்பவர் பாடும்) அமுது ஒழுகும். பாவினை - இனிய பாட்டுக்களை உடையை. பாவாவது தேவாரப்பா.

 

(10) அனல் உறு - நெருப்புப் பொருந்திய, கோவினை - கண்ணினை உடையாய். இனிக், (கையில்) அனலை ஏந்திய பெருமையிற் சிறந்தோனாயினை, (கோ - பெருமையிற் சிறந்தோன்) எனலுமாம். அன்றியும், நெருப்பின் கண் உற்ற கிரண வடிவாயினை (கோ - கிரணம்) எனலும் ஆகும்.

 

(11) சிலையில் - (கைலாய) மலையாகிய வீட்டில், அவாவினை -விருப்பம் உடையாய். சிலையில் அவாவினை - கல் வடிவமாயிருந்து அடியார்க்கு அருள்புரிதலில் அவாவினை என்றும்,

சாக்கிய நாயனார் எறிந்த கல்லின்கண் விருப்பம் உடையாய் என்றுமாம்.

 

“ஈசற்கு நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு” என்பது காண்க.

 

சிலையில் அவாவினை - மலைகளில் விருப்பம் உடையாய் (மேரு மலையை வளைத்தல், கைலாய மலையை உறைவிடமாகக் கொள்ளல், மலைமகளை மணத்தல், கல்லை மலராக ஏற்றல் முதலியவற்றால் மலையினிடத்துத் தோன்றும் விருப்பம் உடையை.)

 

(12) தலைநதி - தலையில் கங்கையை, மேவினை - விரும்பி ஏற்றனை. (பகீரதன் பொருட்டுக் கங்கையைத் தாங்கினை)

 

‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தொல்காப்பிய உரியியலாதலால் மேவினை என்பதற்கு விரும்பி ஏற்றனை என்ற பொருள் காண்க.

 

(13) மறைபடு - வேதத்தைச் சொல்லிய, நாவினை - நாவை உடையாய்.

 

(14) உலகு உணும் - உலகங்களை ஊழிக் காலத்தில் உட்கொள்ளும், ஏவினை - திருமாலாகிய அம்பினைக் கொண்டனை. (ஏ - அம்பு.) உலகு உண்ணும் ஏ - திருமால். (குறிப்பு)

 

(15) கரிவளர் - யானையினிடத்து மண்ணாத தோலை, (பசுந்தோலை) காவினை - போர்வையாகக் கொண்டனை.

 

(கா - பாதுகாப்பு: போர்வை) மண்ணாத - கழுவாத; உப்பு முதலியன பெய்து தூய்மை எய்தலிலாத பசுந்தோல் 2 கரி-சாட்சிக்கு, வளர் - பொருந்துகின்ற, காவினை - பாதுகாப்பாக உள்ளனை. பொருட்சான்றாய் அமைந்தனை 3 இனிக் கரிவளர்காவினை - திருவானைக் காவினை உடையை.

 

(16) கதிதரு - நிலைத்தலை (வீடுபேற்றை)த் தருகின்ற, மாவினை - மாமரத்தினை இடமாகக் கொண்டனை.

 

(மா - மாமரம்) கதிதரு - விரைவினைக் கொண்ட, மாவினை - (மாணிக்கவாசகர் பொருட்டு) குதிரையைக் கொண்டாய். (மா - குதிரை)

 

கதிதரும் - நல்ல இயல்பு (அறத்தின் கடவுள் எருதாக அமைந்து) வாய்ந்த, ஆவினை - எருதினைக் கொண்டனை.

 

கதிதரும் - போற்றுவார் விரும்புவனவற்றை அளிக்கும் ஆற்றலை உடைய, மாவினை - மாமரத்தை உடையாய்.

 

கதித்தல் - பருத்தல்.

 

மிகவும் பருத்த (நெடுங்காலமாய் உள்ள) மாமரத்தை இடமாகக் கொண்டனை.

 

மா - ஆண் யானை:

 

அடியார்க்கு நற்கதி அளிக்கும் யானை முகமுடைய பிள்ளையாரை (மூத்த மகனாக)க் கொண்டனை.

 

மா - அன்னம்:

 

வீடு தரும் அன்னம் போன்ற உமையைக் கொண்டனை.

 

மா - அழகு: நிலைத்துள்ள அழகுடையாய்.

 

(தனிச் சொல்,) என ஆங்கு

(இ-ள்.) என ஆங்கு - (தனிச் சொல்,) அசை நிலை என்பர் உரையாசிரியர் பலரும். எனினும், மேலே அம்போதரங்கங்களில் கூறப்பெற்றுள்ள கருத்துக்களை ஒருவகை இசையால் (ஓசையால்) கூறிப் பின் வேறுவகை நடையைத் தொடங்குதற்கு இடையில் இந்த என ஆங்கு வருதலால், இருவகை இசைகளையும் இசைக்கும் பொருளுள்ள அசையே என்று கொள்ளுதல் கூடும்.

 

நேரிசை ஆசிரியச் சுரிதகம்.

ஆரண, அகில காரண, பூரண,
நாரணன் அறியா நாயக, வேயக
முத்தே, அறத்தின் வித்தே, முக்கட்
சித்தே, சத்தே, எத்தே வரும்பணி
அத்தா, அன்னாய், அளிக்கொரு வைப்பே,
கத்தா எனக்கூய்க் கண்ணீர் ததும்ப
உள்ளநெக் குருக உரோமம் சிலிர்ப்ப
விள்ளற் கருநின் மேன்மையைப் புகழும்
பாவலர் தமக்குப் பழவநு கூல,
மேவலர் வேரற வீறிய சீல,
மாதுமை பங்குறு மாண்புடைச் சீரிய,
தீதெமை அணுகாத் திறமருள் ஆரிய,
நால்வர் இசைத்தமிழ் நலனறி நாத,
மால்வரை மங்கை மணாள, நீத,
கொன்றைத் தொடையணி கோனே, பசுபதி,
குன்றைக் குழைத்த கோதறு குணநிதி!
கல்லாப் புல்லேன் கனிவறு மனத்தேன்
எல்லாப் பிழையும் இயற்றும் ஏழையாற்
சொல்லப் படுமோ சொலற்கரு நின்புகழ்;
புல்லப் படுமோ புரையறு நின்பதம்;
உன்னப் படுமோ உத்தம! நின்எழில்;
பன்னப் படுமோ பகவ! நின் அருள்;
பாடப் படுமோ பண்ணவ! நின்சீர்;
தேடப் படுமோ சேவடி; எனினும்
அல்லுறு நஞ்சர வக்கு மத்தமும்
புல்லும் உவப்புடன் புனைந்தெனக் கனிந்து
சிற்றறி வினனுரை செய்யுளை
முற்றும் நயப்பாய் மூவர்க் கையனே!

 

(இ-ள்.) ஆரண - மறை வடிவனே.  அகில காரண - எல்லாவற்றிற்கும் பொருளானவனே, பூரண - எங்கும் நிறைந்துள்ள இன்பப் பொருளே. (எங்கும் நிறைந்திருப்பவனே)

 

நாரணன் அறியா - திருமாலால் அறியப்படாத, நாயக - தலைவனே, வேய் அகம் முத்தே - மூங்கிலிடத்தே தோன்றிய முத்தே, வேய் - மாடம் - மாடக்கோயில். வேய் அகம் - மாடக்கோயிலில் விளங்கும், முத்தே - முத்தே. (எண்டோள் ஈசற்கு எழின் மாடம் எழுபது செய்து (பெரிய திருமொழி) 6-6-8.

 

வேய் வனத்தில் முளைத்த முத்தே - (வேய் வனம் - திருநெல்வேலித், திருவூர்)

 

முத்து - மேலானது. மேலான பொருளே!
முத்து - அழகு. சிவபிரான். நித்தம் அழகியார்
நிரம்ப அழகியார்
சித்தம் அழகியார்.     (திருவாசகம்)

 

அறத்தின் வித்தே - தருமம் முளைத்தற்கு விதையாக உள்ளவனே. (இன் - சாரியை) முக்கட் சித்தே - சோமசூரியாக்கினிகளாகிய மூன்று கண்களையுடைய அறிவுடைப்பொருளே! சத்தே - உண்மை உலவுத் திண்மைப் பொருளே. எத்தேவரும் - எவ்வகைப்பட்ட தேவர்களும், பணி - வணங்குகின்ற, அத்தா - தலைவனே; (அத்தன் - குரு; சிவன் - சிவகுரு) உடலில் அரைப்பகுதி உடையவனே, அன்னாய் - தாயே, அளிக்கு ஒரு வைப்பே - கருணைக்கு ஓர் இருப்பிடமாக உள்ளவனே, கத்தா என - கடவுளே என்று (கத்தா-கர்த்தா) கூய் - கூவி, கண்ணீர்த் ததும்ப - கண்களினின்றும் நீர் தேங்க, உள்ளம் நெக்கு உருக - மனம் நெகிழ்தலையடைய, உரோமம் சிலிர்ப்ப - மயிர் சிலிர்க்க.

 

விள்ளற்கு அரு - சொல்லுதற்கு அரிய, நின் மேன்மையை - நினது மேன்மையை, புகழும் - புகழுகின்ற, பாவலர் தமக்கு - பாக்களில் வல்ல வித்துவான்களுக்கு, பழ அனுகூல - பழமையாகிய நன்மை மிகுப்பவரே (அனுகூலன் - இதமாக நடப்பவன்: உதவி செய்பவன்) மேவலர் - பகைவர், வேர்அற - அடியோடு ஒழிய, வீறிய - கோபித்து ஒறுத்த, சீல - ஒழுக்க முடையவனே, (வீறியசீல - மேம்பட்ட ஒழுக்கமுடையவனே எனினும் அமையும்) மாது உமை - உமா தேவியானவள், பங்குறு - இடப்பாகத்தை உற்ற, மாண்புடைச் சீரிய - மாட்சிமையுடைய சிறப்புடையோனே, தீது எம்மை - எம்மைக்கெடுதி, அணுகாத்திறம் - சேராதபடி, அருள் - அருளிய, ஆரிய - மேன்மையுடையவனே; அழகுடையவனே. நால்வர் - திருஞானசம்பந்தர் முதலிய நால்வரின், இசைத்தமிழ் - இசையை உடைய தமிழ்ப் பாக்களது, நலனறி - நன்மையை அறிந்த, நாத - தலைவனே, (ஆரியன் - பெரியோன்: ஆசிரியன்)

 

மால்வரை மங்கை - பெருமை வாய்ந்த மலையரையன் மகளாகிய உமாதேவியின், மணாள - நாயகனே. நீத - நீதியை உடையவனே (நீதம் - நீதி) கொன்றைத் தொடை - கொன்றைப் பூவாலாகிய மாலையை, அணிகோனே - அணிந்த தலைவனே, கொன்றை, முதல் ஆகுபெயர். பசுபதி - உயிர்களுக்குத் தலைவனே, குன்றைக் குழைத்த - மலையை (மேருமலையை) வில்லாக வளையச்செய்த, கோது அறு - குற்றமற்ற, குணநிதி - எல்லாப் பண்புகளுக்கும் இருப்பிடமான பெருமானே!

 

கல்லாப் புல்லேன் - நூல்களைக் கல்லாத அற்பத் தன்மையை யுடையேன், கனிவரு மனத்தேன் - நெகிழ்தல் இளகுதலற்ற மனத்தை உடையேன், எல்லாப் பிழையும் - எல்லாத் தவற்றையும், இயற்றும் - செய்யும், ஏழையால் - ஏழையாகிய என்னால், சொலற்கு அரு - சொல்லுதற்கு அரிய, நின்புகழ் சொல்லப்படுமோ - எடுத்துப் பேசப்படுமோ, புரையறு - குற்றமற்ற, நின்பதம் - நின் திருவடி, புல்லப்படுமோ - பொருந்தப் படுமோ.

 

உத்தம - உயர்வு அமைந்த நற்பண்புகளுக்கு உறைவிடம், நின் எழில் - நினது அழகு, உன்னப் படுமோ - நினைக்கப்படுமோ, பகவ - பகவனே, நின் அருள் - நினது கருணை, பன்னப்படுமோ - துதிக்கப்படுமோ, பண்ணவ - பண்ணவனே, நின்சீர் - நின்சிறப்பு, பாடப்படுமோ - பாடப்படுமோ (பண்ணவன் - கடவுள்). (பண்ணவன் எண்குணன் - சிலப். 10. 188.)

 

சேவடி - நினது சிவந்த திருவடி, தேடப்படுமோ எனினும், தேடப்படுமோ என்றாலும், அல்உறு நஞ்சு - இருள் போன்றுள்ள கரிய விடமும், அரவு - பாம்பும், அக்கு - சிவக் கண் மணியும், மத்தமும் - கரு ஊமத்தையும், புல்லும் - அறுகம் புல்லும், உவப்புடன் - மகிழ்ச்சியோடு, புனைந்தென - புனைந்தாற்போல (புனைந்தென - புனைந்தாலென) கனிந்து - மனமிளகி, சிறு அறிவினன் - சிறிய அறிவை யுடையோனாகிய நான், உரை செய்யுளை - சொல்லிய பாட்டுக்களை மூவர்க்கு 1ஐயனே - அயன், அரி, அரன் மூவர்க்கும் தலைவனே, முற்றும் நயப்பாய் - முழுமையும் விரும்புவாய்.

 

முதற் செய்யுள் முற்றும்.


1மூவர் என்பார் அயன் அரி அரன் என்க.  அரன் கால தத்துவத்திற் குட்பட்டவனாதலால் அரன் சிவனல்லன்.  உருத்திரகோடி என்பர்.  ஆதலால் சிவன் உருத்திரனாகான்.  சிவம் சாந்தம் அத்துவைதம் சதுர்த்தம் மன்யந்தே. என்பது வேதம். சிவம் - மங்கலம் என்பர் வடமொழியாளர்.

 

நேரிசை வெண்பா

ஐயம் உறுமனமே! அண்ணறிருக் கச்சியரன்
செய்ய மலரடியைச் சிந்தித்தி - நையாமே
இன்மையறி யாவீகை எச்சமறி யாவாய்மை
புன்மையறி யாப்பொறையைப் பூண்.                         (2)

 

(இ-ள்) ஐயம் உறு மனமே - சந்தேகம் உறுகின்ற மனமே! அண்ணல் - பெருமையினையுடைய, திருக் கச்சி - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய, அரன் - சிவபெருமானது (ஏகாம்பரநாதரது), செய்ய மலரடியை - சிவந்த தாமரையைப் போன்ற திருவடியை, சிந்தித்தி - நீ நினைப்பாய். (சிந்தித்தல் - நினைத்தல்) சிந்தித்தி: சிந்தி, பகுதி. த் சந்தி, த் எழுத்துப்பேறு. இ முன்னிலை ஒருமை எதிர்கால விகுதி. நையாமே - வருந்தாமல், இன்மை அறியா - இல்லையென்று சொல்லாத, ஈகை - ஈதலையும், (கொடுத்தலும்) எச்சம் அறியா - குறைவு இல்லாத, வாய்மை - சத்தியத்தையும், புன்மை யறியா - கீழ்மை அறியாத, பொறையை - பொறுமைக் குணத்தையும், பூண் - பூண்பாய், மனமே (நீ) எண்ணி நீ பூண் என இயையும். ‘ஐய முறு மனமே’ என்றது யாம் இறைவன் திருவருளைப் பெறுவேமோ பெறமாட்டேமோ என்று ஐயப்பாடு அடைகின்ற மனமே என்பதாம்.

 

இறைவன் மலரடியை நினைத்தலாலும், ஈகை, வாய்மை, பொறை என்ற குணங்களைப் பூணாகக் கொள்ளுதலாலும் இறைவன் திருவருளை அடையலாம் என்று நெஞ்சிற்கு அறிவுறுத்தும் பண்பு பாராட்டத்தக்கது.

 

கட்டளைக் கலித்துறை.

பூண்ட அரவ மதியை உணாது புரந்தருளும்
ஆண்ட வரவம் புரிவார் செயலை அழித்துவக்கும்
தாண்ட வரவர் இணையடித் தாமரை தஞ்சமென
வேண்ட வரமளிப் பார்கச்சி அன்பர்க்கு மெய்யரணே.                  (3)

 

(இ-ள்) பூண்ட அரவம் - சடையில் அணிந்த பாம்பானது, மதியை - (அச் சடையில் அணிந்த) பிறைத் திங்களை, உணாது - விழுங்காதபடி, புரந்தருளும் - பாதுகாக்கும், ஆண்டவர் - நம்மை அடிமையாகக் கொண்டவர், அவம் புரிவார் - தீமை செய்பவரது, செயலை அழித்து - செய்கையை ஒழித்து, உவக்கும் - மகிழ்கின்ற, தாண்டவர் - நடனஞ் செய்பவர் ஆவர்; அவர் - அவரது, இணையடித் தாமரை - இரண்டு திருவடிகளாகிய தாமரைகளை, தஞ்சமென - அடைக்கலமாக, வேண்ட - வேண்டிக்கொள்ள, வர மளிப்பார் - வரத்தை அளிப்பாரது, கச்சி - கச்சியானது, அன்பர்க்கு - அன்புடைய அடியவர்கட்கு, மெய் அரண் - உண்மையான பாதுகாவலாம்; (‘தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே’. தொல்-இடை-கஅ. எண்மையாவது எளிமை; ஆவது அடைக்கலம்) அடித்தாமரை என்றது அடிகளாகிய தாமரை மலர் என்ற பொருளில் உருவகமாம்.  தாமரை அடி எனமாற்றித் தாமரைமலர் போன்ற அடி என்று பொருள் கொள்ளுங்கால் உவமையாம்.  உவமையணியாகக் கொள்ளுங்கால் அடிகளைப் போற்றுதல் என்று வருதலால் நேராக அடிகளுக்கு அடைக்கலம் என்ற பொருட் சிறப்பு உண்டு என்பர்; உருவகமாகக் கொள்ளுதலால் தாமரைகட்கு அடைக்கலம் என்று வருதலால் பொருட் சிறப்பு இல்லை என்பர்.  இவர், “உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்(து) ஒன்றென மாட்டினஃ(து) உருவகமாகும்” என்பதை உணர்வார்களாயின் உருவகத்திலும் அடிகளுக்கே அடைக்கலம் என்பது பொருந்தும் என உணர்வார்கள்.

 

புய வகுப்பு.

இரட்டை ஆசிரியச் சந்த விருத்தம்.

(முப்பத்திரண்டு சீர்கொண்டது)

தனதனன தந்தனத் தனதனன தந்தனத்
தனதனன தந்தனத் தனதான தந்தன.

     அரணெரிய அந்தரத் தமரர்துயர் சிந்தவெற்
     பினையொருது ரும்பெனச் சிலைகோலி விஞ்சின
     அரவமரி கந்துசெக் கரினிலகு செஞ்சடைப்
     பனிமதிய நண்புறப் புரியாம கிழ்ந்தன,
     அகிலபுவ னங்களுக் கமுதிடுநி ரந்தரிக்
     கிடமமர்வ ரங்கொடுத் தகலாத ணைந்தன,
     அழலுருவ மன்றுபெற் றொருபுறவ மைந்தனுக்
     கொளிவடிவு தந்தருட் பொலிவானி மிர்ந்தன,
     கரடமத கும்பமத் தககபட தந்தியைச்
     சமர்பொருது வென்றுரித் ததளாடை கொண்டன,
     கடலமுதை உம்பருக் குதவஎழில் கந்தரத்
     திலகுகறை கொண்டுதிக் கிருநால ளந்தன,
     களபமணி அம்பிகைக் கனகதன மின்புறத்
     தழுவிவரு மங்கலச் சுவடால்வி ளங்கின,
     கதிர்மதிய மங்கிமுக் கணினொளித யங்கிடக்
     கடுவுடைய திண்சினத் தகவாட நின்றன,
     சரமழைபொ ழிந்தபற் குனனருள்பொ ருந்திடப்
     பகைவர்கெடு வன்படைக் கொடையாலு வந்தன,
     சமரபுரி கந்தனைப் புலவருய மண்டமர்த்
     திறலவுணர் பங்கமுற் றிடுமாறு தந்தன,
     சததளம லர்ந்தபொற் றவசினிலி ருந்தவச்
     சதுமுகன்ம றங்கெடத் தலையோட ணிந்தன,
     சலமிசைது யின்றசக் கரதரன லம்பெறத்
     தருமவிடை யம்புறப் பரிவோ டிணங்கின,
     இரவினவிர் திங்களிற் செலுமொளிபெ றுங்குழைக்
     கவுரியிட மன்பினுற் றிடவாசை மிஞ்சின,
     இரணியனு ரந்தொலைத் தெழுநரம டங்கலைச்
     சரபவுரு வந்தரித் தமராடி வென்றன,
     இடபமிசை வந்துபொற் பதநசைகொ ளன்பருக்
     குயர்பதவி தந்திசைப் பருமோகை கொண்டன,
     இனிமைதரு கம்பமுற் றருளநக எந்தைநித்
     தியநிமல சுந்தரப் பரனார்பு யங்களே.                   (4)

     இந்தச் செய்யுளின் கடைசியில் உள்ள புயங்களே எழுவாய்.

 

           அரணெரிய  .  .  .  .  கிழ்ந்தன,

 

(இ-ள்) அரண் எரிய - முப்புரங்கள் எரிந்து அழியவும், அந்தரத்து அமரர் - பொன்னுலகத்தில் வசிக்கின்ற விண்ணவர்களது, துயர் சிந்த-துக்கம் ஒழியவும், வெற்பினை - (மேரு) மலையை, ஒரு துரும்பு என - ஒரு துரும்புபோல, சிலை கோலி - வில்லாக வளைத்து, விஞ்சின - மேலாயின. (புயங்கள் - தோள்கள் என்க)

 

அரவு - பாம்பு, அமர் இகந்து - போரை வெறுத்து, (பகை கொள்ளாமல்), செக்கரின் - செவ்வானம் போல, இலகு - விளங்குகின்ற, செஞ்சடை - சிவந்த சடையிலுள்ள, பனி மதியம் - குளிர்ந்த பிறைச் சந்திரனிடத்து, நண்பு உற - நட்புமிகக்கொள்ள, புரியா - புரிந்து (செய்து), மகிழ்ந்தன - மகிழ்ச்சி யடைந்தன.  (புயங்கள்)

 

சடையிலுள்ள பாம்பு அச்சடையிலுள்ள குளிர்ந்த திங்களினிடம் பகை கொள்ளாமல் நண்பு உறப் புரியா, தோள்கள் மகிழ்ந்தன என இயையும். உற - உறு என்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்த வினையெச்சம். ‘உறுதவ நனியென வரூஉம் மூன்றும் மிகுதிசெய்யும் பொருள என்ப’ (தொல். சொல். உரி. 783.)

 

அகிலபுவ    .   .   .   . ணைந்தன,

 

(இ-ள்) அகில புவனங்களுக்கு - எல்லா உலகங்களிலுள்ள உயிர்கட்கும், அமுதிடும் - உணவு கொடுத்த, நிரந்தரிக்கு - ஒன்றாய் நிலைத்த நல்லறம் ஆற்றும் உமாதேவிக்கு, இடம் அமர் - இடப்பாகத்தே விரும்பி உறையும்படியான, வரங் கொடுத்து - வரத்தைக் கொடுத்து, அகலாது - அவளை விட்டுப் பிரியாது, அணைந்தன - தழுவிக் கொண்டன (புயங்கள்). புவனம், இட ஆகுபெயர். அமுதம் இடுதலாவது, இருநாழி நெல்லைப் பெற்று அறம் வளர்த்து அதன் காரணமாக உணவளித்தல்.

 

நிரந்தரி - அந்தரமின்றி எங்கும் நிறைந்தவள். ‘அமர்தல் மேவல்’ (தொல். சொல். உரி 892) ஆகலின் ‘அமர்’ என்பதற்கு விரும்பி யுறையும் என்ற பொருள் கொள்ளப்பட்டது.

 

அழலுருவ    .     .   .   .  மிர்ந்தன,

 

(இ-ள்) அழலுருவம் - கனல் உருவத்தை, அன்று பெற்று - திருமணக்காலத்தில் பெற்ற, ஒரு புறவம் மைந்தனுக்கு - ஒப்பற்ற சீகாழியில் தோன்றியருளிய திருஞான சம்பந்தருக்கு, ஒளிவடிவம் தந்து - ஒளி வடிவைத் தந்து, அருட் பொலிவான் - கருணைப் பொலிவால், நிமிர்ந்தன - விளங்கின.

 

புறவம், சீகாழி:புறா பூசித்தமையால் சீகாழிக்குப் புறவம் என்ற பெயர் ஏற்பட்டது. புறா, புறவு என்று ஆகி அம் சாரியை பெற்றுப் புறவம் என நின்றது.

 

குறியதன் கீழ்ஆக் குறுகலும் அதனோ
டுகர மேற்றலும் இயல்புமாந் தூக்கின்’

                                                           என்பது நன்னூல் (172)

 

கரடமத    .    .   .   .  கொண்டன,

 

(இ-ள்) கரட மதம் - மதம் பாய்கின்ற சுவட்டையும், கும்பம் மத்தகம் - குடம் போன்ற மத்தகத்தையும், கபடம் - வஞ்சகத்தையும் உடைய, தந்தியை - யானையை, சமர் பொருது - போரில் பொருது, வென்று - வெற்றி கொண்டு, அதள் உரித்து - அதன் தோலை உரித்து, ஆடை கொண்டன - போர்வையாகப் போர்த்தன.

 

தந்தி: தந்தத்தை உடையது தந்தி; யானை: கயாசுரன் என்னும் யானை. அன்றித் தாருகாவனத்து இருடியர் ஏவிய யானையுமாம்.

 

           “அத்தி யுரித்து அதுபோர்த் தருளும் பெருந்துறையான்”

                                                                                       (திருவாசகம்: திருப்பூவல்லி: 19)

 

கடலமுதை  .   .   .   .  ளந்தன,

 

(இ-ள்) கடல் அமுதை - திருப்பாற் கடலில் தோன்றிய அமுதத்தை, உம்பருக்கு உதவ - மேலிடத்தவராகிய தேவர்களுக்கு உதவும் பொருட்டு, எழில் கந்தரத்து - தனது அழகிய மிடற்றில், இலகு கறை கொண்டு - அவ்வமிர்தத்திற்குமுன் தோன்றி விளங்குகின்ற நஞ்சைக்கொண்டு, திக்கு இருநாலும் - எட்டுத்திசைகளையும், அளந்தன - அளந்தன (புயங்கள்.)

 

கறை - கறுப்பு என்னும் நிறப்பெயர்; நஞ்சுக்குப் பண்பாகு பெயர்.

 

களபமணி     .   .   .   .   ளங்கின,

 

(இ-ள்.) களபம் அணி - கலவைச் சாந்து அணிந்த, அம்பிகை - உமாதேவியினது, கனகதனம் - பொற்குடம் போன்ற முலை, இன்புற - இன்பமடைய, தழுவி வரும் - தழுவுதலால் உண்டாகும், மங்கலச் சுவடால் - அன்பும் பண்பும் பொருந்திய (முலைத்) தழும்பால், விளங்கின - காணப்பட்டன (புயங்கள்).

 

காமக்கண்ணியார் கம்பாநதியின் வெள்ளங்கண்டு அஞ்சி ஏகம்ப முடையாரைத் தழுவியபோது முலைத்தழும்பும் வளையற்றழும்பும் அவர்பால் விளங்கின.

 

      “துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
           துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
      பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
           பொங்கொளி தங்குமார் பினனே”

                                                                    (திருவா. அருட்பத்து: 5).

 

கதிர்மதிய   .   .   .   . நின்றன,

 

(இ-ள்.) கதிர்-சூரியன், மதியம்-திங்கள், அங்கி-அக்கினி ஆகிய, முக்கண்ணின்-தன் கண்களால், ஒளி தயங்கிட-ஒளி விளங்கவும், கடுவுடைய - நஞ்சுடைய, திண்-திண்ணிய, சினத்து - கோபத்தையுடைய, அரவு ஆட - பாம்பு படமெடுத்து ஆடவும், நின்றன - நிலை பெற்றன (புயங்கள்).

 

கதிர் என்னும் சினைப்பெயர் சூரியனுக்குச் சினையாகு பெயர்.

 

மதி என்பது அம் சாரியை பெற்று மதியம் என நின்றது. அக்கினி என்பது அங்கி எனத் திரிந்து நின்றது.

 

சரமழைபொ  .  .   .   .  வந்தன,

 

(இ-ள்) சரம் மழை பொழிந்த - அம்பு மழை பொழிந்த, பற்குனன் - அருச்சுனனிடத்து, அருள் பொருந்திட - அருள் வாய்க்க, பகைவர் கெடு - பகைவரை அழிக்கக்கூடிய, வன்படைக் கொடையால் -  வலிய படையினது கொடையால், (வில்லும் கணையும் பெறுதலில்) உவந்தன - மகிழ்ந்தன (புயங்கள்).

 

சமரபுரி    .    .    .   .  தந்தன,

 

(இ-ள்) சமரம் புரி - போர் செய்தற்கு இடமாகிய சமரபுரியில் எழுந்தருளிய, கந்தனை - முருகனை, புலவர் உய்ய - தேவர்கள் பிழைக்கும்படி, மண்டு அமர்த் திறல் - நெருங்கிய போர்த் தொழிலில் வல்லமையுடைய, அவுணர் - அசுரர்கள், பங்கம் உற்றிடுமாறு - புறங்கொடுத்து அழியும்படி, தந்தன - கொடுத்தன.

 

சமரபுரிக் கந்தனை - திருப்போரூரில் எழுந்தருளிய முருகனை, சமரபுரி - திருப்போரூர் (சென்னைக்கு 30 கல் தொலைவில் உள்ளது.)

 

கந்தனைத் தந்தன என முடிக்க.

 

புலவர் - தேவர். புலம் உடையவர் புலவர்.  புலமாவது அறிவு.

 

சததளம்   .   .   .   .  ணிந்தன,

 

(இ-ள்) சத தளம் - நூறு இதழ்கள், அலர்ந்த-விரிந்த, பொன் தவிசினில் - அழகிய தாமரையாகிய இருக்கையில், இருந்த - தங்கிய, அச் சதுமுகன் - அந்த நான்கு திருமுகங்களையுடைய பிரமனது, மறங்கெட - வலிகெட, தலை யோடு - தலையாகிய ஓட்டை, அணிந்தன - தரித்தன.  சத தளம் - நூறு இதழ்.  பொற் றவிசு - பொற்றாமரைப் பீடம் எனினுமாம்.  மறம் - வலிமை.  அநேக பிரமர்களுடைய தலை ஓட்டினைத் தொடுத்துப் புயங்களில் மாலையாகச் சிவபிரானார் அணிந்தனர் என்க.

 

    (இ-ள்) சலமிசை - திருப்பாற்கடலில், துயின்ற - அறிதுயில் அமர்ந்த, சக்கரதரன் - சக்கரப் படையை உடைய திருமால், நலம் பெற - நன்மை அடையும்படி, தரும விடை - தரும இடப வடிவமாகவும், அம்பு-மேரு வில்லுக்கு அம்பாகவும், உற - அமைய, பரிவோடு-அன்போடு, இணங்கின-பொருந்தின.

 

சக்கரதரன் - திருமால். நன்மை பெற அம்பாகப் பொருந்தத் தோள்கள் இணங்கின.

 

தருமவிடையின் அழகிய புறத்து (முதுகில்) கை வைத்து இணங்கின எனினுமாம்.

 

இரவினவிர்   .   .   .   .   மிஞ்சின,

 

(இ-ள்) இரவின் அவிர் திங்களின் - இராக்காலத்தே விளங்குகின்ற சந்திரனைப்போல, செலும் - (எங்கும்) பரவும், ஒளி பெறும் - ஒளியைப் பெற்ற, குழை - குழையை உடைய, கவுரியிடம் - உமாதேவியிடம், அன்பின் உற்றிட - அன்பின் இடமாக (அன்பு காரணமாகப்) பொருந்துதலாலே, ஆசை மிஞ்சின - ஆசை மிகப் பெற்றன (புயங்கள்.) செலும் - செல்லும். (எங்கும் பரவும்.) செலும் திங்கள் எனினுமாம்.  குழை - காதணி. கவுரி-பொன்நிற முடையாள்.  கவுரியானவள் தன் இடப்பக்கத்தே அன்பினோடு பொருந்துதலால் அவளிடம் ஆசை மிஞ்சின எனினுமாம்.

 

இரணியனு  .   .   .   .   வென்றன,

 

(இ-ள்) இரணியன் - பொன்னனைய வடிவுடையான், உரம் - மார்பை, தொலைத்து - அழித்து (பிளந்து), எழு நர மடங்கலை - எழுகின்ற நரசிங்கமூர்த்தியை, சரபம் உருவம் தரித்து - சரபப் பறவையின் வடிவு கொண்டு, அமராடி வென்றன - போர் செய்து அதன் செருக்கை அடக்கின (புயங்கள்).

 

சரபம் என்பது சிங்கத்தைக் கொல்ல வல்லதாகக் கூறப்படும் எட்டுக் கால்களையுடைய பறவை.

 

இடபமிசை  .  .   .   .  கொண்டன,

 

    (இ-ள்) இடபம் மிசை வந்து - எருதின்மீது தோன்றி, பொன்பதம்-தன் அழகிய திருவடியினிடத்து, நசைகொள் - அன்புகொண்டுள்ள, அன்பருக்கு-அன்பராகிய அடியவர்கட்கு, உயர் பதவி தந்து-உயர்ந்த பதவியாகிய முத்தியைக் கொடுத்து, இசைப்ப அரும் - சொல்லுதற்கு அரிய, ஓகை கொண்டன - மகிழ்ச்சி கொண்டன (புயங்கள்).

 

ஓகை, உவகை என்பதன் மரூஉ. பதவியைத் தருதலால் தோள் பூரித்தது என்க.

 

இனிமைதரு   .   .   .   .  யங்களே,

 

    (இ-ள்) இனிமை தரு - இன்பத்தைத் தருகின்ற, கம்பம் உற்று - திருவேகம்பத்தில் அமர்ந்து, அருள் அநகன் - அருள் செய்யும் குற்றமற்ற சிவனாரும், எந்தை-என் தந்தையாரும், நித்திய நிமலன்-ஒன்றும் குற்றமற்றுத் தூயவடிவனாய்த் திகழும் நித்திய நிமலருமாகிய, சுந்தரப் பரனார் புயங்கள் - அழகிய பரனாருடைய புயங்கள். ஏ-அசை. அநகரும் எந்தையும் நிமலரும் ஆகிய சுந்தரப் பரனாரது புயங்கள் என்க.

 

‘புயங்கள்’ என்னும் சொல்லை விஞ்சின, மகிழ்ந்தன, அணைந்தன, நிமிர்ந்தன என்று நிரலே கூட்டுக.

 
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

37

   


இடும்பை போம் வழி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     புயங்கப் பணியார், புவியுண்ட
           புனித விடையார், புரையின்மதி
     தயங்கப் பணியார் சடையாளர்,
           தயையின் சாலை தனைநிகர்வார்
     இயங்கப் பணியார் புரமெரித்த
           ஈசர், கச்சி யிடையமர்ந்தார்;
     மயங்கப் பணியார் அவர்திருத்தாள்
           வணங்கீர் இடும்பை வற்றிடவே.            (5)

(இ-ள்) புயங்கம் - பாம்பை, பணியார் - அணிகலனாக உடைய வரும், புவி உண்ட - உலகத்தைப் பிரளயகாலத்தில் விழுங்குகின்ற, புனித விடையார் - தூய திருமாலான இடபத்தை உடையவரும், புரையில் மதி - குற்றமில்லாத சந்திரனும், தயங்கு - விளங்குகின்ற, அப்பு - கங்கையும், அணி ஆர் - (ஆகிய இவற்றாலான) அழகுநிறைந்த, சடையாளர் - சடையை உடையவரும், தயையின் சாலைதனை - கருணையோடுகூடிய (உணவு அளிக்கும்) அறச்சாலையை, நிகர்வார்-ஒத்தவரும், பணியார் - பகைவரது, இயங்கு - உலவுகின்ற, அ புரம் எரித்த - அந்தத் திரிபுரங்களை எரித்த, ஈசர் - தலைவரும், கச்சியிடை யமர்ந்தார் - காஞ்சி எனும் பதியில் எழுந்தருளி யுள்ளவரும், மயங்கப் பணியார் - தம் அடியார்கள் செய்திகளில் மயங்கும்படி செய்யாதவருமாகிய, அவர் - அவ்வேகாம்பரநாதரது, திருத் தாள் - அழகிய திருவடியை, இடும்பை வற்றிட - (பிறவித்) துன்பம் நீங்கிட, வணங்கீர் - வணங்குங்கள் (எ-று.)

புரையின் மதி என்பது புரையினையுடைய (குற்றத்தினையுடைய) சந்திரன் எனினுமாம். குற்றத்தினையுடைய மதியைக் குற்றம் போக அணிந்தான் என்க.

வணங்கீர் - வணங்கமாட்டீர்; என்ன மதியீனம் எனினுமாம். வணங்கீர் - எதிர்மறை ஆகாரம் புணர்ந்து கெட்டது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

38

   


அம்மானை கலித்தாழிசை.

வற்றா வளக்காஞ்சி வாழ்ந்தருளே காம்பரனார்
செற்றார் புரமெரித்த தீயர்காண் அம்மானை.
செற்றார் புரமெரித்த தீயரே யாமாயின்
கற்றார்கள் அந்தணராக் கழறுவதேன் அம்மானை
கழறல் அறுதொழில்சேர் காரணத்தால் அம்மானை.          (6)

(இ-ள்) வற்றா - குறையாத, வளம் - வளங்களையுடைய, காஞ்சி - காஞ்சியம் பதியில், வாழ்ந்தருள் - வாழ்ந்தருளிய, ஏகாம்பரனார் - ஏகாம்பரநாதனார், செற்றார் - பகைவரது, புரம் - முப்புரத்தை, எரித்த - அழித்த, தீயர் காண் அம்மானை - கொடியவர்காண் அம்மானை, (தீயர் - தீயை யுடையவர்) செற்றார் புரம் எரித்த - பகைவரது முப்புரம் அழித்த, தீயரே ஆமாயின் - கொடியவரே ஆமாயின், கற்றார்கள் - வேதநூல்களைக் கற்ற அந்தணர்கள், அந்தணராக - அழகிய குளிர்ந்த கருணையை உடையவராக, கழறுவதேன் அம்மானை - சொல்லுவது ஏன் அம்மானை, (அந்தணர் - பிராமணர்; அழகிய தட்பத்தை யுடையவர்) கழறல் - அங்ஙனஞ் சொல்லுதல், அறுதொழில் சேர் - ஆறு தொழில் சேர்ந்த, (அறு தொழில் - அழிக்கும் தொழில், அழித்து யாவரையும் ஒழித்தல்,) காரணத்தால் - காரணத்தால், அம்மானை - அம்மானை.

அறு தொழில் என்பன ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன.  ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ (தொல். 1020).

மறுத்துக் கேட்பவள் (4-ம் அடி) அந்தணர் - அழகிய குளிர்ந்த கருணையை உடையவர் எனக் கொண்டாள்.

மற்றொருத்தி - (மூன்றாமவள்) அந்தணர் பார்ப்பனர் எனக் கொண்டு பார்ப்பனர்க்கு ஆறு தொழில் உண்டு என்று சமாதானம் கூறினள்.  அறு தொழில் - அறுக்கும் தொழில் (சருவ சங்காரம்.)

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

39

   


நலம் வரும் வழி

நேரிசை வெண்பா.

அம்மானைக் கையமைத்தான் அக்காளை ஓடவைத்தான்
சும்மா விருந்துமதற் சுட்டெரித்தான் - பெம்மான்
பதிக்கச்சி மேய பரமன் பணிந்து
துதிக்கத் தருவன் சுகம்.                      (7)

(இ-ள்) அம்மானை - (தாருகாவனத்து முனிவர்கள் செலுத்திய) அந்த மானை, கை யமைத்தான் - கையில் எந்திக்கொண்டவரும், அக் காளை - அந்தத் திருமாலாகிய இடபத்தை, ஓடவைத்தான் - ஓடும்படி செய்தவரும், சும்மா இருந்தும் - ஆலமர்செல்வனாக யோக நிலையில் அமர்ந்திருந்தும், மதன் - மன்மதனை, சுட்டு எரித்தான் - சுட்டெரித்தவரும், பெம்மான் - பெருமானும், பதிக்கச்சி மேய பரமன் - கச்சிப்பதியில் எழுந்தருளிய சிறந்தவருமாகிய ஏகாம்பரநாதரை, பணிந்து துதிக்க - வணங்கித் துதிக்க, சுகம் தருவன் - சுகத்தைக் கொடுப்பர். அமைத்தானும் ஓடவைத்தானும் எரித்தானும் பெம்மானும் ஆகிய பரமன், தன்னைப் பணிந்து துதிக்கச், சுகம் தருவன் என இயைக்க.

அம்மான், தாயோடு பிறந்தவன் என்றும், அக்காள், கூடப் பிறந்தவள் என்றும் பொருள் தோன்றுதலும் காண்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

40

   


பாதகந்தரு துன்பொழி வகை.

கட்டளைக் கலித்துறை.

சுகந்தரு கச்சிப் பதிவந் தடியர் துயர்களைவோர்
நகந்தரு மெல்லியற் காம விழியிரு நாழிநெல்லால்
உகந்தரு முப்பத் திரண்டறம் ஓம்பச்செய் உத்தமர்பா
தகந்தரு துன்பொழிப் பார்பணி வீரவர் தாண்மலரே.             (8)

இ-ள்.) சுகம் தரு - இன்பத்தைத் தருகின்ற, கச்சிப் பதி வந்து - திருக்கச்சிப் பதியில் எழுந்தருளி, அடியர் துயர்களைவோர் - அடியார் துக்கங்களை ஒழிப்பவரும், நகம் தரு மெல்லியல் காம விழி - மலையரையன் பெற்ற மகளாகிய மேன்மையான சாயலையுடைய காமாட்சி, இருநாழி நெல்லால் - இரண்டு படி நெல்லாலே, உகந்து - மகிழ்ந்து உயர்ந்து, அரு - அரிய, முப்பத்து இரண்டு அறம் ஓம்ப - முப்பத்திரண்டு அறங்களையும் செய்யும்படி, செய் உத்தமர் - செய்த உத்தமரும், பாதகந் தரு - தாம் அடியார்க்குப் பாதகத்தைத் தருகின்ற, துன்பு ஒழிப்பார் - துன்பத்தை ஒழிப்பவருமாகிய, அவர் தாள்மலர் - அந்த ஏகாம்பர நாதரின் திருவடித் தாமரையை, பணிவீர் - வணங்குவீர் (எ-று.)

காமக் கண்ணியார் வேளாளர்க்கு இருநாழி நெல்லைக் கொடுத்து அதைக் கொண்டு நெல்லைப் பெருக்கி உலகில் 32-அறம் செய்யும்படி உதவினர்.

பாதகம் தரு துன்பு (துன்பம்) ஒழிப்பார்; அவர் தாள் மலரே பணிவீர் என இயைக்க.

நகம் - போகாதது என்ற காரணப் பொருளுடைய மலை.

(உகப்பு - தொல் - சொல். உரி, 3) உகந்து, உவந்து என்னும் பொருட்டு.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

41

   

நிமல வாழ்வினைப் புகழ்ந்தடைதல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

மலர்க்கஞ்சன் சிரமிழந்தான்; கோப்புரக்க
     மலையெடுத்தான், வன்றி யானான்;
சிலைக்கரும்பன் உருவழிந்தான; சேணியங்கும்
     இருகதிருஞ் சிதைந்து நொந்த;
கலக்கரிய பகைப்புரங்கள் நீறுபட்ட
     கச்சியே கம்பர் மேன்மை
நிலைப்படவா யாமையினன் றோமனமே
     புகழ்ந்தடைதி நிமல வாழ்வே.                     (9)

(இ-ள்.) மலர்க்கஞ்சன் - தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமன், சிரம் இழந்தான் - ஐந்து தலைகளில் (நடுத்) தலையை இழந்தான், கோ புரக்க - பசுக்களைப் பாதுகாக்க, மலையெடுத்தான் - கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்த திருமால், வன்றியானான் - பன்றி ஆனான், சிலைக் கரும்பன் - கருப்பு (கரும்பு) வில்லினையுடைய மன்மதன், உருஅழிந்தான் - தன் வடிவு அழிந்தான். சேண் இயங்கும் - ஆகாயத்தில் சஞ்சரிக்கும், இரு கதிரும் - ஞாயிறுந் திங்களும், சிதைந்து - (தக்கனுடைய வேள்வியில்) அழிந்து, நொந்த - நொந்தன, கலக்கு அரிய - கலங்குத லில்லாத, பகைப் புரங்கள் - பகைவர்களுடைய முப்புரங்கள், நீறுபட்டன - அழிந்தன, கச்சி ஏகம்பர் மேன்மை - திருக்கச்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரது மேன்மையானது, நிலைப்பட - நிலையாக, வாயாமையின் அன்றோ - கிடைக்காமையினாலன்றோ (ஆகையால்) மனமே - மனமே, புகழ்ந்து - அவரைப் புகழ்ந்து, நிமல வாழ்வு - அழுக்கில்லாத் தூய வாழ்வை, அடைதி - அடைவாய். மலர்க் கஞ்சன் - கஞ்சமலரன் என விகுதி பிரித்துக் கூட்டுக.  கஞ்சம் - நீரில் தோன்றுவது எனக் காரணப் பெயர். சிலைக் கரும்பன் - கரும்புச் சிலையன் என விகுதி பிரித்துக் கூட்டுக.

ஏகம்பர் மேன்மை நிலையாகக் கிடைக்காமையினாலன்றோ பிரமன் முதலாயினோர் இவ்வாறாயினர்.  ஆகையால் மனமே அவனைப் புகழ்ந்து நிமல வாழ்வை அடைதி. நொந்த, நீறுபட்ட - அன் சாரியையின்றி வந்த வினைமுற்றுக்கள்.

நிலைப்பட - நிலையாக, வாயாமையின் - கிடைக்காமையினால்.

கலக்கு என்பது கலங்கு என்பதன் வலித்தல் விகாரம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

42

   


வலைச்சியார்

ஆசிரிய விருத்தம்.

(பன்னிரு சீர்கொண்டது)

     வாளைக் கயலை நிகர்த்தவெங்கண்
             வலைச்சி யீர்! நும் வனப்பெவரான்
          மதிக்க அமையும்; அரன்கச்சி
             வந்தீர்; அளவா மயறந்தீர்;
     தோளைத் தழுவிற் சுகம்பெறலாம்;
             ஊடல் ஒழிவீர்; நீர்க்குமிழி
          சுழிதேம் புளினந் தோன்றிடுமால்;
             துயரம் உறுவேன் நடைகிழங்கான்
     நாளைக் கழியா திறாலிதழின்
             நறவைப் பருக நச்சுறக்கொள்
          நானக் கருப்பஞ் சிலைவேளை
             நாணச் செய்வேன் மலங்குறேன்
     கோளைப் போக்கற் குறவைமட
             வைப்பாம் அகத்தைக் குழைத்தென்மேற்
          கொள்வீர் இரதத் தென்காலான்
             கொடிய பகழிக் குடையேனே.             (10)

(இ-ள்.) வாளைக் கயலை நிகர்த்த - கூர்மையாகிய வாட்படையையும் சேல்மீனையும் ஒத்த, வெங் கண் வலைச்சியீர் - விரும்பத்தக்க கண்களையுடைய வலைச்சியாரே, நும் வனப்பு - உம் அழகு, எவரான் - யாரால், மதிக்க அமையும் - மதிப்பிட முடியும், (ஒருவரானும் மதிப்பிடமுடியாது) அரன் கச்சி வந்தீர் - சிவபெருமான் எழுந்தருளியுள்ள காஞ்சிபுரத்தில் வந்தீர், அளவா - அளவில்லாத, மயல் தந்தீர் - (எனக்கு) மயக்கத்தைக் கொடுத்தீர்.

தோளைத் தழுவின் - உமது தோளைத் தழுவினால், சுகம் பெறலாம் - இன்பத்தைத் துய்க்கலாம், ஊடல் ஒழிவீர் - என்னிடத்துக் கொண்ட பிணக்கை ஒழிப்பீர், நீர்க்குமிழி - நீர்க்குமிழியும், சுழி - நீர்ச்சுழியும், தேம் புளினம் - இனிய மணல் மேடும், தோன்றிடும் - உம்மிடத்தே காணப்படும், ஆல் - ஆதலால், துயரம் உறுவேன் - துன்பம் அடைவேன், நடை கிழம் கால் - நடை கிழவன் கால் போன்றது. (தளர்ச்சி அடைந்தது)

நாளைக் கழியாது - நாளைப் போக்காது, இறால் இதழின் நறவைப் பருக - நும் வாய் இதழ்களின் தேன் இறாலிலிருந்துப் பெறுவதை ஒத்த இனிய தேனை உண்ண (இறால் மீன்போல் குவிந்துள்ள வாயிதழ் எனினுமாம்) நச்சு உறக்கொள் - விரும்புதலை மிகக்கொண்டுள்ள, நான் - யான், (நீர் என் விருப்பத்தை நிறைவேற்றின்) அக் கருப்பஞ் சிலைவேளை - அந்தக் கரும்பு வில்லையுடைய மன்மதனை, நாணச் செய்வேன் - (என்னை வெற்றி கொள்ளாமல்) நாணும்படி செய்வேன், மலங்குறேன் - (மனம்) கலங்கமாட்டேன், கோளைப் போக்கற்கு - மன்மதன் வலிமையைப் போக்குவதற்கு, மடம் - அறியாமைக்கு, வைப்பாம் - இருப்பிடமாகும், அகத்தை - நெஞ்சினை, குழைத்து - நெகிழச்செய்து, என் உறவைக்கொள்வீர் - என்மீது உரிமை கொள்வீர் (உரிமை - நட்பு). (கொள்வீராயின்) இரதத் தென்காலான் - தென்றற் காற்றினைத் தேராக உடைய மன்மதன், கொடிய பகழிக்கு - (செலுத்தும்) கொடிய அம்புக்கு, உடையேன் - நெஞ்சம் நிலைகெடேன்.

நடை கிழங்கான் - விரைவாக ஓடும் கிழங்கான் மீன். நாளைக்கு அழியாது - நாளைக்குள் கெடாது. இறால் - இறால் மீன். நச்சுற - நல்ல சுறாமீன். சுறா - சுற, சுறவு (புறா, புற, புறவு): குறியதன்கீழ் ஆகார ஈறு இவ்வாறு திரிவதை முன்னும் காட்டினாம். கருப்பஞ்சிலை - சினையைக் கொண்ட பஞ்சிலை மீன் (பஞ்சிலை - ஒரு மீன்) மலங்கு - விலாங்கு என்னும் மீன். மடவை, குறவை - மீன்களின் பெயர். காலான் - ஒருவகை மீன்.

நீர் குமிழி - மூக்கு நீர்மையையுடைய (அழகுடைய) குமிழ்ந்து தோன்றும் மூக்கு. (நீரில் முட்டை முட்டையாகத் தோன்றுவது). சுழி - நீர்ச்சுழி (நீரில் சுழியாகத் தோன்றுவது); உந்தி.  புளினம் - மணற்குன்று - முலை: இவற்றைக் கண்டு மயக்கம் அடைவேன், ஊடல் - புலவி (பிணக்கு).

நாளைப் போக்காது, இதழில் ஊறுகின்ற இனிய நீர் பருக விருப்பத்தைக் கொண்ட நான் நீர் இயையின் மன்மதனை நாணச் செய்வேன் என்க.

இரதத் தென்காலான் - தென்கால் இரதத்தான் என விகுதி பிரித்துக் கூட்டுக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

43

   


கலிநிலைத்துறை
ஏனங் கொன்றார்; ஏனக் குருளைகள் இடர்தீர்த்தார்,
மானங் கொன்றை வலன்வைத் துமைமா னிடம்வைத்தார்,
தானங் குறைவார் தானத் துறையார், தமிழ்வல்லார்
கானத் துறவார் கம்பத் திடையே மகிழ்வாரே.             (11)

(இ-ள்) ஏனங் கொன்றார் - (அருச்சுனன் பொருட்டுப்) பன்றியைக் கொன்றார், ஏனக் குருளைகள் - அப் பன்றிக்குட்டிகளினுடைய, இடர் தீர்த்தார் - பசித் துன்பத்தைத் தாம் பன்றியாக உருக்கொண்டு அவைகளுக்கு முலைப்பால் கொடுத்துத் தீர்த்தார். மான் அங்கு ஒன்றை - தாருகாவனத்து முனிவர் ஏவ, அங்கு வந்த மான் ஒன்றை, வலன்வைத்து - தம் வலக் கையிலே தாங்கி, உமைமான் - உமாதேவியாகிய மானினை, இடம் வைத்தார் - இடப் பாகத்தே வைத்தார், தானம் குறைவார் தானத்து - தானம் குறைவோரிடத்து, உறையார் - தங்கமாட்டார், தமிழ் வல்லார் - தமிழில் வல்லவராகிய மூவருடைய, கானத்து - இசைப்பாட்டாகிய தேவாரங்களின்கண், உறவார் - உறவு கொள்வார். (இவையெல்லாம் செய்த அவர் யாரெனில்), கம்பத்திடையே மகிழ்வாரே - திரு ஏகம்பத்திடத்து மகிழ்வாராகிய திரு ஏகாம்பரநாதர் ஆவார். தானம் - தரும வழியான் வந்த பொருள்களைத் தக்கார்க்கு உவகையோடுங் கொடுத்தல். (திருக்குறள்:9.பரி.) தானம் - இடம். தமிழ் வல்லார் கானத்து உறவார்-மூவர் தேவாரமாகிய இசைப் பாட்டில் உறவு கொள்வார்.

இனித் தமிழ்க்கானத்து வல்லார் உறவார் என மாற்றிக் கூட்டித் தமிழிசைப் பாட்டில் வல்ல வர்களான தேவார திருவாசக முதலிய பாடிய நாயன்மார்களோடு உறவு கொள்வார் என்று கூறலுமாம்.  கம்பத்திடை - திரு ஏகம்பத்திடத்து.  தமிழ் வல்லார் எனவும் கானத்து உறவார் எனவும் பிரித்துத் தமிழ் வல்லார் - அடியர் பொருட்டுப் பாசுரங்கள் எழுதிக்கொடுத்தவர் என்றும், கானத்து உறவார் - காட்டினிடத்து உறவுகொண்டு வாழ்பவர்என்றும் கூறலுமாம்.

கானத்து உறவார் - சுடலையாடி.

கம்பத்திடை - திரு ஏகம்பத்திடை: ஆவது எந்தை மாமரத் தடியில் என்பது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

44

   


எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை.
மகிழார மாவாரை மணமேவ விழைவாய்
     மணியார மரவேயின் மலைபச்சை உடையே,
இகழீம மிசைபாடி நடமாடும் இடமாம்,
     இகவாத தொழிலையம், இல்வாழ்வார் மலையின்
மகவாய ஒருநீலி, மறைவுற்ற சலத்தாள்,
     வரமைந்தன் ஒருமாதின் வழிநின்ற திருடன்,
தகவீது தெரிகாதல் ஒழிவாயென் உரைகேள்
     தரைமீதெந் நலமெய்தி மகிழ்வாய்மின் னரசே.          (12)

(இ-ள்) மகிழ் ஆர - மகிழ்ச்சி நிறையும்படி, மாவாரை - மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரை, மணம் மேவ - கூடியிருக்க, விழைவாய் - விரும்புவாய், மணி - மாணிக்கமாலையும், ஆரம் - முத்துமாலையும் உடைய, மர வேயின் மலைபச்சை உடைய - மரங்களையும் மூங்கிலையும் உடைய பசுமையான மலைமகளை உடைய தான், இகழ் ஈமம்மிசை பாடி - இகழத்தக்க சுடுகாட்டில் பாடுபவன், நடமாம் இடமாம் - அச்சுடுகாடே அவனுக்கு நடனஞ்செய்கின்ற இடமாம், இகவாத தொழில் - நீங்காத ஐந்தொழில், ஐயம் - பிச்சை எடுத்தல், இல் வாழ்வோர் - இல்லற வாழ்க்கை நடத்துவோர், மலையின் மகவாய ஒரு நீலி - மலையரையன் மகள் ஆகிய ஒரு நீலியும் மறைவுற்ற சலத்தாள் - சடையினுள் மறைவாக வாழும் நீர் வடிவமான கங்கையும் ஆவர்.

மணி ஆரம் மரம் வேயின் மலை பச்சை உடையே என்பதற்கு மாணிக்கமும் முத்தும் மரமும் மூங்கிலும் நிறைந்த மலைபோன்ற யானையின் பசுந்தோல் உடையாம் என்று பொருள் கூறினுமாம்.

“மலைப் பச்சையுடையாம்; இகழ் ஈமம் பாடி நடமாடும் இடமாம்; தொழில் ஐயமாம்; இல்வாழ்வோர் ஒரு நீலியும், மறைவுற்ற சலத்தாளும் ஆவர்; மைந்தன் ஒரு திருடன்; இவையே அவனுக்குள்ள தகுதிகளாம். இவற்றைத் தெரிந்து காதல் ஒழி. என் உரைகேள்; கேட்பின், “யான் பெற்ற இன்பம் நீயும் பெறுவாய்” என்றாள் நற்றாய் என்க.

ஈது என்பது தொகுதி யொருமைச் சொல்.

இவை என்பது பொருள்.

மகவாய ஒரு நீலி மறைவுற்ற சலத்தாள் - சன்னு முனிவரின் மகளாகிய ஒரு நீலிக்குணமுடையாள்; மறைவாகப் புணர்தற்குரிய தீயொழுக்க முடையாள் எனினுமாம்.

“மாமரத்தின்கீழ் வாழ்வாரை நற்குணமுடையவர் என்று மணம்புரிந்துகொள்ள விரும்புகின்ற மகளே. மின்னற்கொடி போன்ற மகளிர்க்கெல்லாம் சிறந்தவளாகிய நீ அவன் உனக்குத் தகுதியுடையவனோ என்பதை நான் கூறுவேன், கேள்.

அவன் உடை யானையின் பசுந்தோல்; பாடி நடமாடும் இடம், இகழத்தக்க சுடுகாடு; தொழில், ஐயமேற்றல்; இல்வாழ்விடம் ஒரு மலையின்கண்.  சன்னு முனிவன் மகளாகிய நீலி அவன் மறைவில் புணர்வதற்குரிய தீயொழுக்க முடையவள்.  அவளுக்கு வரத்தால் தோன்றிய மைந்தன் திருடன்.  இவையெல்லாம் அவனுடைய தகுதிகள். இவற்றைத் தெரிவாயாக.  அவனிடத்துக் கொண்ட ஆசையை விடுவாயாக. என் வார்த்தையைக் கேட்பாயாக. கேட்டால் தரைமீது யான் பெற்ற இன்பம் நீ பெறுவாய் என்றாள் நற்றாய் என்க.

இது பழிப்பது போல் புகழ்தல் என்னும் அணிபெற்ற நிந்தாத் துதியாகும்.

வரமைந்தன் - மேலான மகன் (முருகன்), ஒரு மாதின் வழி - வேடர் குலத்தே தோன்றிய வள்ளி என்னும் ஒருத்தியினிடத்து. நின்ற திருடன் - களவொழுக்கம் பூண்டு நிலை பெற்ற திருடனாகும், தகவு ஈது - அச் சிவபெருமானிடத்து நீ விருப்பங் கொள்வதற்கு உரிய தகுதிக் குணம் இவையாம்; தெரி - இவற்றை அறிவாயாக. காதல் - (எனவே, அவனிடத்துக் கொண்ட) ஆசையை, ஒழிவாய் - ஒழித்துவிடு, என் உரை கேள் - நற்றாயாகிய எனது சொல்லைத் தட்டாமல் கேட்பாய், மின் னரசே - மின்னற் கொடிபோன்ற பெண்களுக்குள் தலை சிறந்தவளே! (என் உரையைக் கேட்காமல் விரும்பு வாயானால்) தரைமீது - இப்பூமியில், எந் நல மெய்தி மகிழ்வாய் - என்ன இன்பத்தை அடைந்து மகிழ்ச்சி யுறுவாய்?

மாவாரை மகிழார மணமேவ விழைவாய் எனக் கூட்டினுமாம்.

தெரி காதல் - மேற்கூறிய குடும்பத்தின் மீதுவைத்த ஆசை எனினுமாம். (நீலியும் மறைந்திருப்பவளுமாகிய கங்கையும்) மறைவுற்ற சலத்தாள் - வெளியே காட்டாமல் உள்ளே மறைத்துக் கொண்டிருக்கின்ற கோபமுடையாள்: கோபம், உமையை இடப்பக்கத்தில் அணைத்துக்கொண்டு தன்னைப் பராமுகமாகச் சும்மாடு போலத் தலையில் வைத்துள்ளமை குறித்து ஏற்பட்டது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

45

   


எண்சீர் ஆசிரிய விருத்தம் மடக்கு
அரசுக விதையாரும் பரசுக விதையாரும்
அடையமை மானாரும் புடையமை மானாரும்
வரமா சடையாரும் உரமா சடையாரும்
வயமா திரத்தாரும் புயமா திரத்தாரும்
கரமணி வடத்தாரும் சிரமணி வடத்தாரும்
களிமறைப் பரியாரும் ஒளிமறைப் பரியாரும்
அரிபதி யானாரும் கிரிபதி யானாரும்
அடியார் மாவாரும் கடியார் மாவாரே.                  (13)

(இ-ள்) அரசு கவிதை யாரும் - திருநாவுக்கரசின் தேவாரத்தை உடையாரும்,

தலைமை வாய்ந்த தோத்திரப் பாக்களை உடையாரும். (எனினுமாம்)

பர சுக விதையாரும் - மேலான இன்பத்திற்கு விதையாயிருப்பவரும்.

அடை அமை மானாரும் - அடைக்கலமாகக் கையில் அமைந்த மானை உடையவரும், புடை அமை மானாரும் - (இடப்) பக்கத்தே அமர்ந்த (மான் போன்ற) பார்வதியை உடையவரும்.

வரம் மா சடையாரும் - மேலான பெரிய சடையை யுடைய வரும்.

உரம் மாசு அடையாரும் - வலிமை மிகுந்த மும்மலங்கள் அடையப்பெறாதவரும், வய - வலி பொருந்திய, மாதிரத்தாரும் - யானைத்தோலைப் போர்வையாக உடையாரும், புயமாதிரத்தாரும் - எட்டுத் திக்குகளைத் தோள்களாக உடையவரும் (திகம்பரரும்), கரம் அணி வடத்தாரும் - கையைச் சின் முத்திரையாகக் காட்டிக் கல்லால மரத்தின் கீழ் இருந்தவரும் (வடம் - கல்லாலமரம்.) (கல்லாலமரத்தின்கீழ் இருப்பவர் தட்சிணாமூர்த்தி)

சிரம் அணி வடத்தாரும் - தலையில் சிவக் கண்மணிவடத்தை உடையாரும்,

களி மறைப் பரியாரும் - செருக்குடைய வேதங்களின் (உருவடைந்த) குதிரையை உடையாரும்.  திரிபுரத்தை எரித்தபோதும், மணிமொழியார் பொருட்டுத் தாம் ஏறிவந்தபோதும் வேதங்கள் குதிரைகளாயின.

ஒளி மறைப்ப அரியாரும் - பிறரால் மறைத்தற்கு அரிய ஒளியுடையாரும். மறைப்ப என்புழி அகரம் தொக்கது.

அரிபதிஆனாரும் - சத்தியாகிய திருமாலுக்குச் சத்தனாயிருப்பவரும்.

கிரி பதி ஆனாரும் - வெள்ளி மலையை உறைவிடமாகக் கொண்ட வரும்.

அடியார் மாவாரும் - அடியார்களின் செல்வமா யிருப்பவரும் (மா - செல்வம்) கடியார் மாவார் - (ஆகிய அவர் யாரெனில்) மணம் நிறைந்த மாமரத்தை இடமாக உடையாராகிய ஏகாம்பரநாதர் ஆவர்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

46

   


கல்மனத்தைக் குழைவித்தல் கம்பற்குக் கூடும்

இரட்டை ஆசிரிய விருத்தம்.
மாதுமையாள் பனிமலையில் வளர்ந்தாள்நின்
        மதலையரிற் கயமு கத்தோன்
    வரமுனிவன் வேண்டவட வரையேட்டிற்
        பாரதப்போர் வரைந்தான்; நீபப்
போதலங்கல் அணிகுமரன் குன்றுதொறும்    
        பேருவகை பூப்ப மேவிப்
    புனிதவிளை யாட்டயர்ந்தான்; கச்சியமர்
        புண்ணியநீ கயிலை மேரு
மாதிரத்தே வதிந்தனை; யென் கல்லனைய
        மனத்தூடுன் குடும்பத் தோடு
    மருவவொரு தடையுமிலை மலைசிலையா
        வளைத்த நினக் கெளிதே, என்றன்
கோதுடைய மனச்சிலையைக் குழைத்தன்பின்
        நெகிழ்வித்தல் ஐய முன்னாட்
    குருகுய்ய உபதேசங் கூறியநீ
        எனக்குரைத்தாற் குறைமட் டாமே.                 (14)

(இ-ள்) பனிமலையில்-இமயமலையில், மாது உமையாள்-உமாதேவி, வளர்ந்தாள்-வளர்ந்தாள், நின் மதலையரில்-நின் புதல்வருள், கயமுகத்தோன் - யானைமுகத்தையுடைய விநாயகன், வரமுனிவன் - மேலான வியாச முனிவன், வேண்ட-வேண்டிக்கொள்ள, வடவரை யேட்டில் வடக்கேயுள்ள மேருமலையை ஏடாகக்கொண்டு அதில், பாரதப்போர் - பாரதப்போரை, வரைந்தான்-எழுதினான், நீபப் போது அலங்கல் - செங்கடம்பு மலராலாகிய மாலையை, அணி - அணிந்த, குமரன்-முருகன், குன்றுதொறும் - மலைகள் தோறும், பேர் உவகை பூப்ப - பெரிய மகிழ்ச்சி உண்டாக, மேவி - தங்கி, புனிதம் விளையாட்டயர்ந்தான் - தூய திருவிளையாடலைச் செய்தான்.

கச்சியமர் புண்ணிய - காஞ்சியில் எழுந்தருளிய நல்வினையை நற்றவம் புரிவார்க்கு ஈந்து விளங்கும் நல்லவரே! நீ கயிலை மேரு மாதிரத்தே - தேவரீர் கயிலை மலையிலும், மேருமலையிலுமே, வதிந்தனை - வசித்தனை, (ஆதலால்) என் கல்லனைய - எனது கல்லையொத்த, மனத்தூடு - மனத்தில், உன் குடும்பத்தோடு - உனது குடும்பத்துடன்,

மருவ ஒரு தடையுமிலை - பொருந்தி வாழ்வு புரிந்தருள ஒரு தடையுமில்லை, மலை - பொன்மலையாகிய மேருமலையை, சிலையா(க) வளைத்த - வில்லாக வளைத்த, நினக்கு - தேவரீருக்கு, என்றன் - எனது, கோது உடைய - குற்றமுடைய, மனச்சிலையை - மனமாகிய மலையை, குழைத்து - குழையச் செய்து, அன்பின் நெகிழ்வித்தல் - அன்போடு நெகிழச் செய்தல், எளிதே - எளிதாகும், ஐய - ஐயனே, முன் நாள் - முற்காலத்து, குருகு உய்ய - நாரை உய்ய, உபதேசங் கூறிய - மெய்யறிவுரை மொழியைச் சொல்லிய, நீ - தேவரீர், எனக்கு உரைத்தால் - எனக்குச் சொன்னால், குறைமட்டாமே - குறை அதிகம் ஏற்படாதன்றே.

கஜம் - கயம் - யானை. முனிவன் - வியாசன். போது - மலர் (பொழுதில் மலர்வது, காலவாகுபெயர்.) மலரும் பருவத்தில் உள்ள பேரரும்பு. மாதிரம் - மலை.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரு மிந்நோய் (குறள்: 1237).

குறை மட்டாமே - குறைவு அளவு படுமோ? ஏகாரம் வினாப் பொருளது. (ஆகுமோ - குறை ஆகாது.)

உன் மனைவி மலையில் வளர்ந்தாள்; உன் மூத்த மகன் மலையில் எழுதினான்; உன் இளைய மகன் மலைதோறும் ஆடுகின்றான்; நீ கயிலைமலையில் வாழ்கின்றாய். எனவே, உன்குடும்பம் மலையை விருப்பம்கொண்டிருத்தலால் மனமாகிய மலையில் நீ குடும்பத்தோடு வாழ்வாய்.

அங்ஙனம் நீ வாழ என் மனமாகிய மலையை நெகிழ்ச்சி அடையச் செய்வாய்; அவ்வாறு செய்வது எளிதானதே. எவ்வாறெனில் (முன் ஒரு திண்ணிய பொன்மலையாகிய மேரு மலையை வளைத்தாயாதலால் என்க.) அஃறிணைப் பிறப்பினதாகிய ஒரு நாரைக்கு அறமுரைத்த நீ ஆறறிவு உடைய எனக்கு அறநெறி காட்டிப் பக்குவம் வருவித்தல் குறையாகாது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

47

   


கட்டளைக் கலித்துறை
மட்டிக்குட் டங்கும் கணுநிகர் கஞ்ச மலரனைய
தட்டிக்குட் டங்கை முருகனத் தாகச்சிச் சங்கரனே
பெட்டிக்குட் டம்பணம் இட்டுவப் பார்குணம் பெட்டுவினை
கட்டிக்குட் டன் றுயர் எல்லாம் அகன்றிடக் கண்டருளே.       (15)

(இ-ள்) மட்டு இக்கு உள் தங்கும்-தேன்போலும் சாற்றையுடைய கரும்பில் தங்கும், கணு நிகர் - கணுவை ஒத்த, கஞ்ச மலரனை - தாமரை மலரில் தங்கிய பிரமனை, அதட்டி குட்டு - அதட்டி அவன் தலையில் குட்டிய, அங்கை முருகன் அத்தா - அழகிய கையையுடைய முருகனுடைய தந்தையே, கச்சிச் சங்கரனே - கச்சியில் எழுந்தருளிய சங்கரன் என்னும் திருப்பெயரை யுடையவனே, பெட்டிக்குள் - பெட்டியிலே, தம் பணம் இட்டு - தம் பணத்தை இட்டு, உவப்பார் குணம் பெட்டு - மகிழ்வாருடைய குணத்தை விரும்பி, வினை கட்டு இக் குட்டன் - (உன்னை அடைதற்குரிய) நல்வினையை விட்டிருக்கின்ற இந்தச் சிறுபிள்ளையினது, துயர் எல்லாம் - துக்கம் முழுமையும், அகன்றிடக் கண்டருள் - நீங்கிடச் செய்தருள்வாய்.

பெட்டிக்குட்டம் பணம் இட்டு - பெட்டிக்குள் தம் பணம் இட்டு. பெட்டி - பெட்டியிலே, பணம் குட்டம் இட்டு - பணத்தின் கூட்டத்தை இட்டு; குட்டம் பெட்டி பணம் இட்டு - பெரிய பெட்டியில் பணம் இட்டு (குட்டம் - ஆழம்) ஈண்டுப் பெருமையை உணர்த்திற்று.

மட்டு - ஆலையிலிட்டு முறிக்கப்பெறும், இக்குள் - கரும்பினுள். மட்டு - சாதி அடை. மட்டு இக்கு ஈண்டு வினைத்தொகை.

தங்கும் கணு நிகர் (கை) வடிவு பற்றி கஞ்ச மலரனை - பிரமனை.

கரும்பின் கணுவை ஒத்த பிரமன் என்பது: சிவப்பிரகாச சுவாமிகள் மறைந்தபோது வேலையசுவாமிகள் கூறிய செய்யுளில், கரும்பு சிவப்பிரகாசர்; கணு: வேலையசுவாமிகள்; பொகுட்டு: கருணைப் பிரகாசர் என்று கூறியுள்ளார். அங்ஙனமே கணுவை நிகர்த்தவன் பிரமன். வினைகட்டு: கட்டு, வினைத்தொகை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

48

   


நேரிசை வெண்பா
கண்டவளை மேவிக் கலந்துண்ட கள்வனொலி
கொண்டவளை நீர்க்கச்சிக் கோமானே! - பண்டுனது
தாளை மருவுந் தகைமையிலான் உற்றதெவன்
தோளை மருவுஞ் சுகம்.                              (16)

(இ-ள்) கண்ட அளை மேவி - (ஆயர்ச் சேரியில்) கண்ட வெண்ணெயைப்பொருந்தி, கலந்துண்ட-சேர்ந்து உண்ட, கள்வன்-திருமாலினது, ஒலிகொண்ட - முழக்கத்தைக் கொண்ட, வளை - சங்குகளை யுடைய, நீர்க்கச்சி - கம்பாநதி சூழப்பெற்ற காஞ்சியில் எழுந்தருளிய, கோமானே - தலைவனே (ஏகாம்பரநாதனே), பண்டு - முற்காலத்தில், உனது தாளை மருவும் தகைமையிலான் - உன் திருவடியைத் தேடிக் கண்டு அடைய முடியாத நிலைமையை யுடையவன் (பின்) தோளை மருவும் சுகம் - உன் தோளைத் தழுவும் இன்புறலை, உற்றது எவன் - அடைந்தது எப்படி?

கோமானே - கள்வன் பண்டு உனது தாளை மருவும் தகைமையிலான் பின் சத்தி வடிவமாக நின்பா லமர்ந்து உன் தோளைத் தழுவும் சுகம் உற்றது எந்த விதத்தால் (எ-று.)

கண்டவளை - கண்ட கண்ட மாதரை, (ஆயர்குலமகளிரை) மேவிக் கலந்து - சேர்ந்து கலந்து, உண் கள்வன் - வெண்ணெயை உண்ட
திருடன் (இது கிருட்டினாவதாரத்தில்). பண் டுனது தாளை மருவுந்தகைமையிலான் என்றது “திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை” என்ற கதையை உட்கொண்டு என்க.

எவன் - அஃறிணை வினாவினைக் குறிப்புமுற்று. “எவனென் வினாவினைக் குறிப்பு இழி இரு பால்” (நன்னூல்)

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

49

   


தூது (கிளி)

எண்சீர் ஆசிரிய விருத்தம்
சுகமே! மறைமா வடிமே வியவென்
     துணைவற் கெளியேன் துயரைப் பகர்வாய்
மகமே ருசிலைக் குனிவா னலனென்
     மதனன் கழையே வையம் புகைக்குஞ்
சகமேழ் அயின்றோன் பெயர்கொள் எளியேன்
     சரணா கதிசேர் தலைவேண் டினனென்
றகமே குழையப் புரிவா யெனில்யான்
     அயர்தீ தகலத் தருவாய் சுகமே.                    (17)

(இ-ள்) சுகமே - கிளியே, மறைமா அடி - வேதமாகிய மாமரத்தின் அடியில், மேவிய என் துணைவற்கு - விரும்பித் தங்கிய என் நாயகனுக்கு, எளியேன் துயரைப் பகர்வாய் - எளியேனது துக்கத்தைச் சொல்லுவாய்.

மகமேரு சிலை-அவன் வளைத்த மகமேரு மலையினது, குனிவால் - வளைவால், நலன் என் - எனக்குற்ற நன்மை யாது, மதனன் கழையே - மன்மதனுடைய கருப்பு வில்லே, வையம் புகைக்கும் - உலகத்திலுள்ள உயிர்களின் அறிவை மயக்கும்,

சகம் ஏழ் அயின்றோன் பெயர் - ஏழு உலகங்களையும் உண்டவன் பெயர் (மால்), கொள் எளியேன் - கொண்ட எளியேனாகிய யான், சரணாகதி - அவனது திருவடியை அடைதலை, வேண்டினென் என்று - விரும்பினேன் என்று சொல்லி, அகம் குழைய - அவனது மனம் குழையும்படி, புரிவாயெனில் - விருப்பத்தோடு செய்வாயானால், யான் - நான், அயர் தீது - தளர்தற்குக் காரணமாகிய தீமை, அகல - நீங்க, சுகமே தருவாய் - இன்பமே தருவாய் ஆவாய்.

என் - எவன் என்பதன் மரூஉ மொழி. சகம் ஏழ் அயின்றோன். பெயர் - மால் (திருமால்); மயக்கம்; பெயர்கொள் - மால் (மயக்கம்) கொண்ட (பரியாயபதம்) தீது - தலைவனைப் பிரிந்திருப்பது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

50

   


கலிநிலைத் துறை

தீதறு நூலுணர் தெள்ளிய சிந்தையர் மனமூடே
காதலின் வாழே காம்பரர் முடியைக் காணவயன்
ஏத முறக்கோ எகினம் எனப்போய் முடிகாணா
வேதனை பெற்றோ வேதனை யுற்றாள் வெளியானாள்.           (18)

(இ-ள்) தீது அறு - குற்றமற்ற, நூல் உணர் - நூல்களை உணர்ந்த, தெள்ளிய சிந்தையர் - தெளிந்த கருத்தை உடையவரது, மனம் ஊடே - மனத்துள், காதலின் - விருப்பத்தோடு, வாழ் - வாழ்கின்ற, ஏகாம்பரர் - ஏகாம்பரநாதரது, முடியைக்காண - தலைமுடியைக் காணும்படி, அயன் - பிரமன், ஏதமுற - துன்பமுற, கோ - ஆகாயத்தில், எகினம் எனப்போய் - அன்னப்பறவையாய்ச் சென்று, முடி காணா - முடியைக் காணாத, வேதனை - வேதப்பொருளாகிய சிவனை, பெற்றோ - கூடியோ, வேதனை யுற்றாள் - துன்பப்பட்டிருந்த என் மகள், வெளியானாள் - வீட்டை விட்டு வெளிச் சென்றாள்,  இஃது உடன் போக்கு.

மனமூடு - ஊடு ஏழனுருபு, கோ - ஆகாயம், எகினம் - அன்னப்புள், வேதனை - மறையின் வடிவாகிய சிவபெருமானை: பெற்றோ என் புழி, பெறுதல் கூடுதல், வேதனை உற்றாள் - துன்பம் உற்றவளாகிய என் மகள் (வினையாலணையும் பெயர்). வேதனைப் பெற்றோ எனற்பாலது வேதனை பெற்றோ என நின்றது செய்யுள் விகார மென்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

51

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்
வெளிவீட் டாரைக் காட்டாரை
     வியன்மா வாரைச் சேவாரை
ஒளிவிட் டோங்குங் கச்சியரை
     உயர்மா மறையின் உச்சியரைக்
களியுற் றாடுங் கூத்தாரை
     அகிலம் அனைத்துங் காத்தாரை
அளியுற் றினிது புணர்ந்திடுதற்
     கநங்கன் செயலொன் றிலைமானே.                   (19)

(இ-ள்) வெளி வீட்டாரை - சிதாகாச முடையவரும், காட்டாரை - திருவாலங்காட்டில் ஆடுபவரும், வியன்மாவாரை - பெருமை வாய்ந்த மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரும், சேவாரை - இடபவாகனத்தை உடையவரும், ஒளி விட்டு ஓங்கும் - ஒளிப்பிழம்பாய் உயர்ந்து எழும், கச்சியரை - காஞ்சிபுரத்தை உடையவரும், உயர்மாமறையின் - மிகச் சிறந்த வேதத்தின், உச்சியரை - உச்சியில் உள்ளவரும், களியுற்று ஆடும் - மகிழ்ச்சியுற்று ஆடுகின்ற, கூத்தரை - கூத்தை உடையவரும், அகிலம் அனைத்தும் - உலகம் முழுதும், காத்தாரை - காத்தவருமாகிய ஏகாம்பரநாதரை, அளியுற்று - அன்புற்று, இனிது புணர்ந்திடுதற்கு - இனிதாய்ச் சேர்ந்திடுதற்கு, அநங்கன் செயல் - மன்மதனது செய்கை. மானே - தோழியே, ஒன்றிலை - அவரிடத்தில் சிறிதும் இல்லை.

மா - மாமரம், சே - எருது, அநங்கன் - அங்கமில்லாதான் (உருவிலான் - மன்மதன்) மன்மதன் கச்சிப்பதியாருக்கு இச்சை உண்டாக்கவில்லை.  ஆதலின், அச்சிவபிரான் என்னை விரும்பவில்லை.  தோழியைப் பார்த்துத் தலைவி கூறியது. மான் - மான்போன்றவளாகிய தோழி - உவமை யாகுபெயர்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

52

   


இரங்கல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்
மாமையை அடைந்தாய் வானக முற்றாய்
     மழைக்கணீர் உகுத்திடப் பெற்றாய்
காமுற வணஞ்சேர் வில்வளை விட்டாய்
     கலைமதி ஒளித்தலைப் பெட்டாய்
நாமுற விடிக்க மின்னிடை யானாய்
     நள்ளிருள் அம்பரம் போனாய்
ஏமுறு மென்போற் கொண்டலே கச்சி
     ஈசனை விழைந்தனை சிறப்பே.                      (20)

மேகம்

(1) (இ-ள்) மாமையை அடைந்தாய் - கருநிறத்தை அடைந்தாய்.

தலைவி

மாமைநிறத்தை (பசலை) அடைந்தேன்.

மேகம்

(2) வான் அகம் உற்றாய் - ஆகாயத்தில் பரவினாய்

தலைவி

சிறந்த வீட்டில் ஓரிடத்தில் வருத்தத்துடன் இருக்கின்றேன்.

மேகம்

(3) மழைக் கண் நீர் உகுத்திடப் பெற்றாய் - நின்னிடமிருந்து
   மழை நீரைப் பொழிந்திடப் பெற்றாய்.

தலைவி

கண்ணீர் மழைபோலே சொரிந்திடப் பெற்றேன்.

மேகம்

(4) காமுற வண்ணஞ் சேர் விரும்பத்தக்க பல வண்ணங்களோடு கூடிய,
   வில் வளை விட்டாய் - இந்திரவில்லை வளைவாக வெளிப் படுத்தினாய்.

தலைவி

விரும்பத்தக்க அழகுவாய்ந்த ஒளியையுடைய வளையல்களை நீக்கினேன்      (கையினின்றும் தளர விட்டேன்)

மேகம்

(5) கலைமதி ஒளித்தலைப் பெட்டாய் - மேகமாகிய நீ திரிதலின் நிறை நிலா          மறைந்துபோதலை விரும்புகின்றாய்.

தலைவி

(1) நூலறிவு குறைதலைப் பெற்றேன். (2) நானும் நிறை நிலா மறைந்து விடுவதை     விரும்புகின்றேன்.

மேகம்

(6) நா முற இடிக்க - உலகத்தார் அஞ்சும்படி இடி உண்டாக.

தலைவி

நாம் உறவு இடிக்க - நாம் அச்சமடைய, உறவு - பெற்றோர் முதலிய உறவினர்.     இடிக்க - இடித்துப் பேச.

மேகம்

(7) மின்னிடையானாய் - நின்னிடத்து மின்னலைக் கொண்டிருக்கின்றாய்.

தலைவி

மின்னல் போன்ற இடை மெலிந்து விட்டேன்.

மேகம்

(8) நள்ளிருள் அம்பரம் போனாய் - நடு இரவில் நீ நீரைக்குடித்தற்காகக் கடலில்     செல்கின்றாய் (நீரைக்குடித்தற்கு மிக்க இருளையுடைய கடலிற்குச் சென்றாய்)

தலைவி

நான் இருளில் ஆடை நீங்கப் பெற்றிருக்கின்றேன்.

மேகம்

(9) கொண்டலே - மேகமே, ஏமுறு - கலக்கமுற்ற, என்போல் - என்னைப்போல,    கச்சி ஈசனை - காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதனை, விழைந்தனை - நீ    விரும்பினாய், சிறப்பே - (மிக்க) சிறப்புடையது! (குறிப்பு நிலை)

நான் விரும்பினேன்; எனக்கு அவர் ஒன்றும் செய்திலார். நீயும் விரும்பினையே;

என்போல் துன்புறுவதற்காகவா?

வணம் என்பது வண்ணம் என்பதனுடைய இடைக்குறை.

 “பே நா முருமென வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள” என்றதால்    நாம் அச்சம் எனப் பொருளாதல் காண்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

53

   


மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்
சிறுகாலின் மணமளவுந் திருக்காஞ்சி யுள்ளீர்
     சேயிழையாட் ககலுமிடைத் திருக்காஞ்சி யுள்ளீர்
மறியோடு மழுவிடமார் மாசுணந்துன் புடையீர்
     மங்கையணிந் திடுமுத்தம் மாசுணந்துன் புடையீர்
வெறிதாசை கூடன் மணத் துறவாலங் காட்டீர்
     விதிவிழைவு கண்டவிடத் துறவாலங் காட்டீர்
அறிவேனுஞ் செயலிட்டீர் அம்பரங்கா வணமே
     அளிப்பீரங் கொன்றைமல ரம்பரங்கா வணமே.             (21)

(இ-ள்) சிறுகாலின் - தென்றற்காற்றின், மணம் அளவும் - வாசனை வீசும், திருக்காஞ்சி யுள்ளீர் - அழகிய காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கின்றவரே, சேயிழையாட்கு - செம்மையான அணிகலன் உடையாளாகிய தலைவியின், இடை அகலும் - இடையினின்று நீங்கு தலையுடைய, திருக்காஞ்சி
- அழகினையுடைய ஏழு கோவையுடைய, காஞ்சி என்னும் அணிகலனை, உள்ளீர் - நினைக்கமாட்டீர் (கழலுதலைக் கவனிக்கமாட்டீர் என்பது கருத்து).

மறியோடு - மானோடு, மழு - மழுப்படையும், விடம் ஆர் - நஞ்சு பொருந்திய, மாசுணம் - பாம்பும், (ஆகிய இவைகள்) துன் - நெருங்கிய, புடையீர் - பக்கத்தை உடையவரே.

மங்கை - இப்பெண், அணிந்திடு முத்தம் - பூண்டிருக்கும் முத்து மாலையும், மாசு உண் துன்பு - குற்றம் அடைதற்குக் காரணமான துன்பத்தை, உடையீர் - (போக்கீர்) உடைக்க மாட்டீர்.

முத்து - முத்துமாலையும், மாசுண்ணம் - சிறந்த கலவைச் சாந்தும் உண்டாக்குகின்ற, துன்பு - துன்பத்தை, உடையீர் - போக்க மாட்டீர், (துன்பமாவது - காமவெப்பத்தால் அணிந்த முத்து மாலை கரிதலினாலும் பூசிய சாந்து பொரிப் பொரியாகப் போதலினாலும் உண்டாதல்) எனினுமாம், வெறிது ஆசை - வீணான ஆசையால், கூடல் - கூடுதலை மேற்கொண்டு, மணத்துற - மணம் செய்துகொள்ள, ஆலங்காட்டீர் - திருவாலங்காட்டில் எழுந்தருளியுள்ளவரே (ஆலங்காட்டிற்கு அடுத்த ஊர் மணவூர்); மணம் நிறைந்த ஊர் மணவூர்.

விதி விழைவு - விதியின் முறைமையால், கண்டவிடத்து - மணம் புரிதல் காலத்து, உறவு ஆல் - உறவினாலே, அம்காட்டீர் - அழகினைக் (தலைவிக்கு) காட்ட மாட்டீர், தலைவியைக் கண்ட விடத்து உறவோடு, விதிவிழை - திருமண விழைவு, ஆட்டீர் - செய்யீர்.

1.     அறிவேன் - அறிவை உடைய என்னிடத்து, அம்பரம் - ஆடையை, காவண்ணம் - தடுக்கும் வண்ணம் (போக்கும் வண்ணம்), செயல் இட்டீர் - நும் செய்கையைச் செய்தவரே.

2.    அம்பரம் காவணம்:- காவணம் - மானத்தைக் காத்தற்கு உரிய அம்பரம் - ஆடை.

3.    நும் செயல் இட்டீர் - நிர்வாணமாயிருக்கும் நும் செயலை இட்டீர் - என்னையும் நிர்வாணம் ஆக்கினீர் - இந்த உண்மையை அறிவேன், அம்பரம் - ஆடையை, காவண்ணம் - காத்தல் செய்தவண்ணம் அறிவேன், நும் செயலைச் செய்தீர் - நும் செயலைச் செய்தீர், நும் செயலாவது நிர்வாண கோலத்தோடு இருத்தல், அம்பு அரங்காவண்ணம் - மன்மதன் அம்பு (மனத்தை) கலக்காதபடி, அம்கொன்றை மலர் - அழகிய கொன்றை மலராகிய மாலையை, அளிப்பீர் - கொடுப்பீர்.  சேயிழையாட்கு - சேயிழையாளின் (உருபு மயக்கம்)

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

54

   


எண்சீர் ஆசிரிய விருத்தம்
     காரானைத் தோலுரித்த கறுப்பி னானைக்
           களித்துடல நீறணிந்த வெண்மை யானை
     வாரானை யூர்ந்திலங்கு செம்மை யானை
           வலத்தானை இடப்பாகப் பச்சை யானை
     நீரானைச் செஞ்சடையின் நெற்றி யுற்ற
           நெருப்பானைப் பொருப்பானைச் சகத்தி ரச்சீர்ப்
     பேரானைப் பெரியானைக் கம்பத் தானைப்
           பெம்மானை எம்மானைப் பேசு மாறே.            (22)

(இ-ள்) காரானை - கரிய யானையின், தோல் உரித்த - தோலை உரித்துக் கொண்டதனால் உண்டான, கறுப்பினானை - கோபத்தை உடையானை, களித்து - மகிழ்ந்து, உடலம் - தம்முடலில், நீறணிந்த - விபூதி அணிந்ததனால் உண்டான, வெண்மையானை - வெண்மை நிறத்தை உடையானை, வார்ஆனை - நேர்மை உடைய ஏற்றை, ஊர்ந்து - செலுத்தி, இலங்கு - விளங்குகின்ற, செம்மை யானை - செந்நிறம் உடையானை, வலத்தானை - (அம்மையார்) தன் வடிவின் வலப்பக்கத்தை இடமாகக் கொண்டானை, இடப்பாகப் பச்சை யானை - இடப் பாகத்தில் பச்சை நிறங்கொண்ட மலைமயிலை உடையானை, செஞ்சடையின் நீரானை - சிவந்த சடையில் கங்கையை உடையானை, நெற்றியுற்ற நெருப்பானை - நெற்றியினிடத்து அமைந்த அக்கினிக் கண்ணை உடையானை, பொருப்பானை - வெள்ளிமலையை உடையானை, சீர் சகத்திரப் பேரானை - சிறப்புப் பொருந்திய ஆயிரம் பெயர் உடையவனை, பெரியானை - பெருமையுடையோனை, கம்பத்தானை - ஏகம்பம் உடையானை, பெம்மானை - பெருமானை, எம்மானை - எம்முடைய இறைவனை, பேசும் ஆறே - பேசும்விதம் (அமைந்தது என்ன நல்வினையோ!) எ - று.

‘பேராயிரமுடைப் பெம்மான் போற்றி’ என்றதால் சீர்சகத்திரப் பேரானை என்றார்.

‘கறுப்புஞ் சிவப்பும் வெகுளிப் பொருள’ (தொல்காப்பியம் உரியியல்) ஆனை - இடபத்தை, ‘ஆமா கோனவ் வணையவும் பெறுமே’ என்ற விதியால் ஆ வென் பெயர் ‘ன’ கரச்சாரியை பெற்று இரண்டன்’ உருபேற்று நின்றது.

வாரானை என்புழிப் பெரிய யானை எனப் பொருள்கொண்டு ஐராவணம் எனினும் அமையும். ஐராவணம் இரண்டாயிரம் கொம்பு உடைய யானை.  இது சிவபெருமானுக்கு உரித்து. பச்சை,  பண்பாகு பெயராய் உமையம்மையை உணர்த்திற்று.  சடை பொன் வண்ணமாதலின், ‘செஞ்சடை’ என்றார்.  சகத்திரம் - ஆயிரம்.  பெம்மான் - பெருமான் என்பதன் சிதைவு.  எம்மான் - எம்மகான் என்பதின் சிதைவு.  அமைந்தது என்ன புண்ணியமோ என்றது இசை யெச்சம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

55

   


கலி விருத்தம்
மாறி யாடு மலரடி மாமறை
கூற வாடுங் குவலயத் தின்னறந்
தேற வாடுந் தெளிதமிழ்க் கச்சியின்
பூற வாடும் உளமகிழ் பொங்கவே              (23)

(இ-ள்.) மாறி ஆடும் மலரடி - மதுரையில் வெள்ளியம்பலத்தில் ஊன்றியகாலைத் தூக்கியும், தூக்கிய காலை ஊன்றியும் மாறியாடின தாமரை மலர்போலும் திருவடி.

தெளி தமிழ் கச்சி - நெஞ்சு நிலைக்கும் அமைதி தரும்
தமிழ் மொழியினைக் கற்றுத் துறைபோய பெரும் புலவர் வாழ்கின்ற காஞ்சிப் பதியில், உளம் மகிழ் பொங்க - (கண்டோர்க்கு) உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக, இன்பு ஊற - இன்பம் ஊற்றெடுக்கவும், ஆடும் - ஆடும், மா மறை கூற - சிறந்த வேதம் புகழ, ஆடும் - ஆடும், குவலயத்தின் அறம் தேற ஆடும் - உலகத்தின்கண் ஆன்மாக்கள் அறப்பயனைத் தெளியும்படி ஆடும். தெளிதமிழ் ஆவது தெளிவினை (நெஞ்சுநிலைக்கும் அமைதியை)த்தரும் தமிழ்.  ஈண்டுத் தெளி என்பது முதனிலைத் தொழிற்பெயர்.  தமிழ் - ஆகு பெயர்.  தமிழ் மொழிகற்ற பெரும்புலவரைக் குறித்தது.  தெளிவைத் தரும் தமிழ் கற்ற புலவர் தீயனசெய்தற்கு நாணமுறுதலும் பிறர்க்கு மாறாது கொடுத்தலும் உடையராவர் என்பதும், அவர் காஞ்சி வளம் பதியில் உளர் என்பதும், “பூண்டாங்கு கொங்கை பொரவே குழை பொருப்பும், தூண்டாத தெய்வச்சுடர் விளக்கும் - நாண்டாங்கு, வன்மைசால் சான்றவரும் காஞ்சிவளம் பதியின், உண்மையால் உண்டிவ்வுலகு” என்ற தண்டியலங்காரப் பாடலால் அறியலாம்.  (தண்டி: ஒப்புமைக் கூட்டவணி)

மாறியாடும் மலரடி என்றது, பதஞ்சலி வியாக்கிரபாதர் இவர்கள் பொருட்டு வெள்ளியம்பலத்துள் நடனக்கவினாய வடிவுடன் நின்ற பெருமானார் வலக்கால் ஊன்றி இடக்கால் தூக்கியிருத்தலைக் கண்டு, நடனங்கற்று அதில் உள்ள வருத்த மிகுதியை யுணர்ந்த இராசசேகரப் பாண்டியன், பலநாள் வலக்காலொன்றையே ஊன்றி நடனம் செய்யும் சிவபெருமானுக்கு வருத்தம் மிகுமே யென்று நெஞ்சு நெக்குருகிக் கால் மாறியாடும்படி அப்பெருமானை வேண்ட, அப்பாண்டியன் வேண்டினபடியே மாறியாடினன் என்ற வரலாற்றை உட்கொண்டுள்ளது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

56

   


கைக்கிளை

மருட்பா

பொங்கும் அருணயனப் பூவின் இதழ்குவியும்
இங்கு மலர்க்கோதை இதழ்வாடு - மங்குறவழ்
மாடக் கச்சியில் வாழுமெம் பெருமான்
குறையா வளக்கழுக் குன்றில்
உறைவா ளிவள்பூ வுதித்ததூ யவளே.(24)

(இ-ள்.) பொங்கும் அருள் - மிக்க அருளையுடைய, நயனம்
பூவின் - கண்ணாகிய பூவினது, இதழ்குவியும் - இமைகள் இமைக்கும்.  இங்கு - இவ்விடத்து, மலர்க்கோதை - இவள் அணிந்த பூ மாலையிலுள்ள, இதழ் வாடும் - மலர்களின் இதழ்கள் வாடும், மங்குல் தவழ் - மேகங்கள் தவழ்கின்ற, மாடம் - மாடங்களையுடைய, கச்சியில் வாழும் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய, எம்பெருமான் - எம்பெருமானாகிய ஏகாம்பரநாதரது, குறையா - குறையாத, வளம் கழுக் குன்றில் - வளப்பங்களையுடைய திருக்கழுக்குன்றத்தில், உறைவாள் - உறைபவளாகிய இத்தலைவி, பூ உதித்த - பூமியில் வந்து பிறந்த, தூயவள் - தூய்மை உடையாள்.

(மானிடப் பெண்ணேயாவள்.)

இமை குவிதலானும், கோதை வாடுதலாலும், மானிட மகள் என்று அறிந்து, தலைவன் ‘பொங்கும் அருள் நயனம்’ என்றதால் அவள் தன்னிடம் அருட்பார்வையுடையவளாய் இருக்கின்றாள் என்று உட்கொண்டமையால், ஒருதலைக் காமமாகிய கைக்கிளையாயிற்று.  ஒரு நோக்கு அந்நோய் மருந்து என்ற குறிப்புக் கொண்டு அருள் நயனம் என்றான் என்க.

முன்னிரண்டடிகளும் வெண்பா வடிகளாகவும் பின் மூன்றடிகளும் ஆசிரிய அடிகளாகவும் வந்தமையின் இது மருட்பாவாம்.

கைக்கிளை - ஒரு தலைக் காமம்.

எம்பெருமான் என்றது பாட்டுடைத் தலைவனை.

இவன் கண்ட பெண்ணின் கண் இமைத்தலும் மாலை வாடுதலும் ஆகிய செயல்களால் இவள் தெய்வ மகளல்லள்; மானிட மகளே எனத் தெளிந்தான் இத்தலைவன்.

(இத்தலைவன் - கிளவித் தலைவன்.)

கவி நாயகனுக்குத் தன் மலையையே யன்றிப் பிற மலைகளையும், பிற பதிகளையும் உரிமையாகக் கூறுதல் கவி மரபு ஆதலால் ‘கழுக்குன்று’ என்றார்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

57

   


மறம்

எண்சீர் ஆசிரிய விருத்தம்
தூதுவந்த தொழிலிலாத வாவழக்கை அறிதியோ
தொல்லைநந்த மரபினோர்கொ டுந்தரக்கு வாரணம்
பூதலத்தி னிலையெனக்க லைவிழைத்த சிலையரே
பொன்றிணிந்த கொங்கைமான்ம கட்குறத்தி வள்ளிமுன்
போதகத்தை யேவியந்த மாதகத்தை யச்சுறப்
புரிந்தசெய்கை சாலுநுங்கு லம்புலப்ப டுத்திடச்
சூதவாழ்க்கை யார்துடிப்பி னாகம்வைத்த ஆண்மையார்
சொன்மறைக்க வாயதாங்கொ றோற்புணர்ந்தி சைத்ததே.             (25)

(இ-ள்.) தூதுவந்த தொழில் இலாதவா - தூதாக வருந்தொழிலுக்கு இயைபு இல்லாதவனே, வழக்கை அறிதியோ - எங்கள் வழக்கை (மரபை) அறிவையோ.

தொல்லை நம் தம் மரபினோர் - பழமையாக உள்ள நம்முடைய மரபில் உள்ள பெரியோர் அணிந்த, கொடுந்தரக்கு வாரணம் - கொடியபுலி, யானை (இவற்றின் தோலை அணியாது) பூதலத்தில் - உலகத்திலே, இலை கலை யென - இலையை ஆடையாக, விழைத்த - இச்சித்த, சிலையரே - வில்லேந்திய வேடரே, பொன் திணிந்த - பொன் அணிகலன் செறிந்த, கொங்கை - முலையை யுடைய, மான் மகள் குறத்தி வள்ளிமுன் - மானின் மகளாகிய குறத்தியாகிய வள்ளிநாயகி முன், போதகத்தை ஏவி - பிள்ளையாராகிய யானையைச் செலுத்தி, அந்த மாது அகத்தை - அந்தப் பெண்ணின் மனத்தை, அச்சுறப் புரிந்த செய்கை - அஞ்சும்படி செய்த செய்கை, சாலும் - போதும், நும் குலம் புலப்படுத்திட - (இவையே) நும் மரபின் பெருமையை விளங்கிடச்செய்ய, சூத வாழ்க்கையார் - மாமரத்தின் அடியில் வாழ்பவர், துடி பினாகம் வைத்த ஆண்மையார் - துடியையும் பினாகம் என்னும் வில்லினையும் உடையவர், ஆகிய தோற்பு உணர்ந்து - இவருடைய தோல்வியை உணர்ந்து, இசைத்தது - சொன்னதாகிய, சொல் மறைக்க - எங்கள் சொல்லை மறைக்க, வாயது ஆம் கொல் - வாயுண்டாகுமோ? (வேறு சொல் உண்டோ?)

இலாதவா, விளி வேற்றுமை.  இதற்கு முதல் வேற்றுமை இலாதவன்.  தரக்கு, வாரணம் - ஆகுபெயர்.  சூத வாழ்க்கையர் - சூதாடுவதில் மனமுடையவர்; வஞ்சனை செய்யும் வாழ்க்கையை உடையவர்.

துடிப்பினோடு கூடிய ஆகம் (மனத்தைக்) கொண்ட ஆண்மையார் எனினும் அமையும்.

ஆகம் - மார்பு: (மனம்) ஆகுபெயர்.

ஆண்மை: இகழ்ச்சிக் குறிப்பு.

வாயது: அது பகுதிப் பொருள் விகுதி.

சூதம் - மாமரம்.

புரிந்த செய்கையாவது: முருகன் விநாயகனைக் காட்டு யானையாக வள்ளிமுன் வரும்படி செய்தமை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

58

   


கட்டளைக் கலித்துறை
இசையா ரணத்தின் முடியார் திருக்கச்சி யீசரன்பிற்
பசையா ரணங்கொரு பங்குடை யாரரி பங்கயத்தன்
மிசையா ரணங்கொழித் தோருள மேவிய மெய்யருத்தி
நசையா ரணங்குறு நானவர் நற்பத நாடுவதே.                   (26)

(இ-ள்.) இசை ஆரணத்தின் முடியார் - இசையுடன் ஓதப்பெறும் வேதத்தின் உச்சியில் விளங்குபவர், திருக் கச்சி ஈசர் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், அன்பின் பசையார் - அன்பு என்னும் செல்வத்தை உடையார், அணங்கு ஒரு பங்குடையார் - உமாதேவியை ஒரு பாகத்தில் உடையவர், அரி பங்கயத்தன் மிசையார் - திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும் மேற்பட்டவர், அணங்கு ஒழித்தோர் உளம் - உலக ஆசையை ஒழித்தோரது உள்ளத்தில், மேவிய - பொருந்திய, மெய் அருத்தி - உண்மையான அன்பில், நசையார் - விருப்பங்கொண்டவர், அணங்கு உறு நான் - துன்பத்தையுற்ற யான், அவர் நற் பதம் - அக்கச்சி ஈசர்தம் திருவடியை, நாடுவதே - நாடுதலே யாகும்.

(வி. உ.) பசை - பற்று. உளம் மேவிய மெய்யருத்தி நசையார் - உள்ளத்தில் பொருந்திய பொருளமைந்த நடனத்தில் விருப்பங் கொண்டவர்.

அருத்தி - கூத்து: மன்றுளாட்டு (உள்ளத்தில் உணர்வொடு மறை ஓதுங்காலை நிகழும் நடனம்) எனினும் அமையும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

59

   


பாட்டால் பழையவினை துடைத்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     நாடுந் தொண்டர் மகிழ்வெய்த
           நறுமா நீழ லமர்ந்தானைப்
     பாடும் பணியே பணியாகப்
           படைத்தேன் பழைய வினை துடைத்தேன்
     ஓடுந் துடியுங் கரத்தமைத் தோன்
           ஓங்கா ரத்தின் உட்பொருளைத்
     தேடுந் திறத்தோர்க் கறிவித்தோன்
           தேவி உமையாள் காதலனே.                      (27)

(இ-ள்.) நாடுந் தொண்டர் - தன்னை அடைய விரும்பும் அடியவர்கள், மகிழ்வு எய்த - மகிழ்ச்சியடைய, நறு மா நீழல் அமர்ந்தானை - நறுமணங் கமழ்கின்ற பூக்களையுடைய மாமரத்தின் நிழலில் எழுந்தருளினான்; அவனை, பாடும் பணியே - பாடுகின்ற தொண்டினையே, பணியாகப் படைத்தேன் - தொண்டாகப் பெற்றேன்; (அதனால்) பழைய வினை துடைத்தேன் - தொடக்கமில்லாத தீவினையை ஒழித்தேன்.

ஓடும் துடியும் - நான் முகனது மண்டையோட்டையும், உடுக்கையையும், கரத்து அமைத்தோன் - கையிற் கொண்டவனும், ஓங்காரத்தின் - பிரணவத்தின், உட்பொருளை - உள்ளப் பொருளை, தேடும் திறத்தோர்க்கு - ஆராய்கின்ற அடியார்கட்கு, அறிவித்தோன் - அறிவித்தவனும், தேவி உமையாள் காதலனே - உமாதேவியின் நாயகனும் ஆய அவனே. அமைத்தோனும், அறிவித்தோனும், காதலனும் ஆகிய நீழலமர்ந்தானைப் பாடும் பணியே படைத்தேன்.  ஆதலால், பழைய வினை துடைத்தேன் எனக் கூட்டுக.

(வி.உ.) ‘ஓடும் துடியும் கரத்தமைத்தோன்’ என்றதால் பெருந் தேவனாகிய நான்முகனினும் பெருந்தேவன் இறைவன் என்பதும், அப்பிரமன் உலகைப்படைக்கும் பெருந்தேவனாயது, அவ்விறைவன் தன் கரத்தேந்தும் துடியிடத்தெழுப்பிய இனிய ஒலியால் உலகங்களைப் படைத்த பின் அப்படைப்புத் தொழிலை அப்பிரமனுக்குக் கருணையுடன் அளித்த நாள் தொடங்கி என்பதும் அறியலாம். அத்துடியிடத்து எழுந்த நாதவெழுத்துக்களுள் ஓங்காரவடிவம் அவ்விறைவனுடைய வடிவம் என்பதும் அவ்வெழுத்தினுட்பொருளை அவன் உணர்த்தினனன்றிப் பிறர் உணர்த்த உணர முடியாதாதலால் அவ்விறைவனை அன்பு கொண்டு பூசித்துத் தேடுவோர்க்கு அவனே உணர்த்தியருளுவான் என்பதும் ‘ஓங்காரத்தி னுட்பொருளைத் தேடுந் திறத்தோர்க்குக் கூறுவித்தோன்’ என்றதால் பெறக்கிடக்கின்றன.

அன்புடைய பச்சை மயிலுக்கு எளிவந்த காதலனானான் என்பது தேவி உமையாள் காதலன் என்றதால் அறிவிக்கப்பட்டது.

பெருந்தலைமையோ, உண்மைப் பொருளை உணரும் ஆற்றலோ, உளங்கசிந்துருகும் ‘காதலோ இல்லாது’ ‘எம் கடன் பணிசெய்து கிடப்பதே’ எனத் தொண்டு பூண்டொழுகும் தொண்டர்கள் மகிழ்ச்சியடையக் கச்சியில் நறுமா நீழலில் கோயில் கொண்டு எழுந்தருளினான் என்பதும், அத்தொண்டினுள் பாடுந்தொண்டே சிறப்புடைய தென்பதும், ஆதலால் அப்பாடுந் தொண்டினையே கலம்பக ஆசிரியர் மேற்கொண்டார் என்பதும் அங்ஙனம் தாம் மேற்கொண்டதனால் இல்லாமல் வந்த ஆணவ முதலிய மலங்களை வேரோடு ஒழித்தார் என்பதும், ஏனையவரும் அங்ஙனம் ஒழிக்க அவர் தாம் பாடும் ஆற்றல் பெறாராயினும் தாம் பாடிய கலம்பகத்தைப் பாடித் தம் வினைகளைத் துடைக்கவேண்டி நிற்கிறார் என்பதும் முன்னிரண்டு அடிகளால் அறியலாம்.

       
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

60

   


ஒரு பொருள் மூன்றடுக்கி வந்த

ஆசிரியத் தாழிசை.

1.     காதங் கமழுங் கடியாரு மாந்தருக்கீழ்
     நாதன் அருளாளன் நண்ணியசீர்ச் செவ்வி
     காதிற் பண்ணாருங் கவியின்ப மானுமே.

2.    பூவின் மணமார் புனிதநறு மாந்தருக்கீழ்ச்
     சேவின் மிசைத்திகழுந் தேசனமை செவ்வி
     நாவின் னமுதூறு நற்சுவையை மானுமே.

3.    மண்ணிற் சிறந்த வளமளிக்கு மாந்தருக்கீழ்
     விண்ணிற் பொலிந்தான் விளங்கியுறு செவ்வி
     கண்ணிணையிற் காண்பரிய காட்சியினை மானுமே          (28)


(இ-ள்.) காதம் கமழும் - காத தூரம் பரிமளிக்கின்ற, கடி ஆரும் - பூக்கள் நிரம்பப் பூத்திருத்தலால் மணம் பொருந்திய, மா தருக் கீழ் - மா மரத்தின் கீழ், நாதன் அருளாளன் - தலைவனாயிருந்தும் அருளுடையனாதலால், நண்ணிய - காண விழைவார்க்கு எளியனாக வந்து பொருந்திய, சீர் - சிறப்பை உடைய, செவ்வி - காட்சி, (விளைவிக்கும் இன்பம்).

காதில் - காதுகளாகிய பொறியிடத்து, பண்ணாரும் - இசை நிறைந்த, கவி இன்பம் - பாடல் விளைவிக்கும் இன்பத்திற்கு, மானும் - ஒப்பாகும்.

2.    பூவின் மணம் ஆர் - பூவின் வாசனை பொருந்திய, புனிதம் - தூய்மைவாய்ந்த, நறு மா தருக் கீழ் - நல்ல மா மரத்தின் அடியில் எழுந்தருளிய,

சேவின் மிசைத்திகழுந் தேசன் - இடபத்தின் மீது விளங்குகின்ற ஒளி உருவினன், அமை செவ்வி - அமைந்து எழுந்தருளி அருளும் காட்சி, காணுவார் கண்ணிற்கு உண்டாக்குகின்ற சுவை; நாவின் - நாவில், அமுது ஊறு - அமுதத்திலிருந்து ஊற்றெடுத்துச் சுரக்கின்ற, நற் சுவையை - நல்ல சுவையை, மானும் . ஒக்கும்.

3.    மண்ணிற் சிறந்து - பூவுலகத்தில் சிறப்புற்ற, வளம் அளிக்கும் - வளத்தைக் கொடுக்கின்ற, மா தருக் கீழ் - மா மரத்தின் கீழ் எழுந்தருளிய, விண்ணில் பொலிந்தான் சிவன் - உலகத்தில் விளங்குபவனாகிய சிவபெருமான், விளங்கியுறு - எல்லோரும் காணக் கோயில் கொண்டினிது விளங்கியுறுகின்ற, செவ்வி - அழகிய காட்சி, கண் இணையால் - இரண்டு ஊனக் கண்களால், காண்பு அரிய - காணுதற்கு முடியாது அகக் கண்ணால் கண்டு களித்தற்குரிய, காட்சியினை மானும் - தோற்றத்தினையே ஒக்கும்.

கடவுளுடைய ஒளி ஊனக்கண்ணால் பார்க்க இயலாது; மெய்யறிவுக் கண்ணாலேதான் பார்க்க இயலும் என்றதால் இங்ஙனம் உணர்த்தப்பட்டது.

(வி.உ.) நாதவடிவினனான இறைவன் நிறைந்த இயற்கை அருளுடையவன் என்பதும், அவ்வருளான், எல்லோரும் தன்னைக்கண்டு களிப்புற வேண்டும் என்று விரும்பி மாமரத்தின் கீழ்க் கோயில் கொண்டு எழுந்தருளினன் என்பதும், அத்தருக்கீழ் உள்ள சிவலிங்க வடிவின் காட்சி தரும் இன்பம் அவ்விறைவன் அருளைக் கொண்டு காணுவார்க்குப் பண்ணமைந்த கவி செவிக்களிக்கும் இன்பம் போன்றும், அமுதூறும் நற்சுவை நாவிற்களிக்கும் சுவைபோன்றும், தவ நிலையுற முயலுநர் முடையார் ஊனக் கண்மூடித் தம் அகக்கண்ணால் காணும் காட்சியே போன்றும் இன்பம் அளிக்கும் என்பதும் இம் மூன்று தாழிசைகளால் உணர்த்தப் பெற்றன.  செவ்வி காட்சி யென்னும் பொருளில் வருதலைச் “செவ்வியும் கொடான் இவ்வியல் புரிந்தனன்” என்னும் பெருங் - இலாவாண 9-198 அடியால் உணர்க.
 

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

61

   


வெளி விருத்தம்
     மாக்கைக் குருகின் தழும்புற் றாரு மாவாரே
ஆக்கைக் கயனை அமைத்திட் டாரு மாவாரே
காக்கைக் கரியைக் கனிவித் தாரு மாவாரே
போக்கைக் கனலைப் பொலிவித் தாரு மாவாரே.          (29)

(இ-ள்.)  மாக் கை - தம் பெரிய தோளில், குருகின் தழும்பு - கைகளில் அமைந்த வளையல்களின் தழும்பு, உற்றாரும் - ஏற்றவரும், ஆவார் - சிவபெருமானாகிய தாமே ஆவார், மாவார் - மாமரத்தின் அடியில் இருப்பவராகிய சிவபெருமானார், ஆக்கைக்கு - உலகத்தையும் உயிர்களையும் படைத்தற்றொழிலுக்கு, அயனை அமைத்திட்டவரும் ஆவார் - பிரமனைப் படைத்து அப்படைப்புத் தொழில் தந்து அமைத்திட்டவரும் ஆவார், காக்கைக்கு - அவ்வுலகையும் உயிர்களையும் காத்தற்றொழிலுக்கு, அரியை - திருமாலைப் படைத்து, கனிவித்தாரும் ஆவார் - அத்தொழில் செய்வதற்குப் பதப்படுத்தினவரும் ஆவார், போக்கைக்கு - அவ்வுலகையும் உயிர்களையும் அழித்தற்றொழிலுக்கு, அனலை - நெருப்பினை, பொலிவித்தாரும் ஆவார் - தம் கரத்தே பொலியச் செய்தவரும் ஆவார்.  தழும்புற்றாரும் ஆவார், அமைத்திட்டாரும் ஆவார், கனிவித்தாரும் ஆவார், பொலிவித்தாரும் ஆவார் ‘என்றும், தழும்புற்றாரும் மாவார் என்றும், அமைத்திட்டாரும் மாவார் என்றும், கனிவித்தாரும் மாவார் என்றும், பொலிவித்தாரும் மாவார் என்றும் இயைத்துப் பொருள் காண்க.  படைத்தல் காத்தல் அழித்தல் ஆய முத்தொழிலிற்கும் சிவபெருமானாரே உரிமையுடையார் என்பதும், அவ்வுரிமையைத் தாமே பிறர்க்கு அளிக்கும் அருளாளர் என்பதும், அங்ஙனம் அவர் அளித்தற்குரிய எளியராதலை அன்புகொண்டு தழுவிய உமாதேவியின் வளையல்களின் தழும்பை ஏற்குமாறு தாம் குழைந்தமையே காட்டும் என்பதும் இப்பாடலால் உணரலாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

62

   


களி

கட்டளைக் கலிப்பா

    மாவின் நீழல் வதிந்தருள் வார்கச்சி
           வாழும் இன்ப மருவு களியரே
     தேவர் அன்று; சிதைந்தவ ரே; மது
           வாவி சீதரன் உண்ண மயங்குறின்
     நாவ லர்ந்துமெய் பேசுவர; இன்னறை
           யுண்ட நன்மையர்; நற்பனை தெங்குசேர்
     காவி டைப்பாடி ஆடுவர் மண்டரு
           கண்ணி றைந்த அமுதை அருந்தவே.               (30)

(இ-ள்.) மாவின் நீழல் - மாமரத்தின் நிழலில், வதிந்தருள்வார் - எளி வந்து வீற்றிருந்து யாவருக்கும் அருளுபவராகிய சிவபெருமானாரது, கச்சி - திருக்காஞ்சியில், வாழும் - வாழ்ந்துவரும், இன்பம் மருவும் - (மண்ணுலகம் தரும் கள்ளாகிய நிறைந்த அமுதை அருந்துதலால்) இன்பம் பொருந்திய, களியரேம் - களிப்புடையேம், யாங்கள் - நாங்கள் (அருந்திய கள்ளின் சிறப்பைக் கூறுவோம் கேட்பீராக) அன்று - தக்கன் வேள்வி செய்த அக்காலத்தில், தேவர் - (அவன் தரும் மது வுண்ணும்படி சென்ற) தேவர்கள், சிதைந்தவரே - (வீரபத்திரக் கடவுளால்) அழிந்தனரேயாக, மது - (அவன் தந்த) மதுவினை, வாவி சீதரன் உண்ண - திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமகள் கணவனாகிய திருமால் உண்டலால், மயங்குறின் - மயக்கத்தையே உற்றான் எனினும், மண் தரு கள் நிறைந்த அமுதை அருந்த - மண்ணுலகம் தருகின்ற (யாங்கள் உண்ணும்) கள்ளாகிய நிறைந்த அமுதினை உண்டால், (உண்டவர்), நா அலர்ந்து - நாக்குழறுதல் இன்றிச் செவ்வையாக, மெய் பேசுவர் - உண்மையே பேசும் இயல்பினரா யிருப்பர், இன்நறை உண்ட நன்மையர் - அத்தகைய இனிய கள்ளினை உண்ட நன்மையையுடையார், நல் பனை தெங்கு சேர் காஇடை - சிறந்த பனை, தென்னை வளர்ந்துள்ள சோலையில், பாடி ஆடுவர் - இன்பமாகப்பாடி ஆடிக் காலங்கழிப்பர். (ஆதலால் இத்தகைய கள்ளினை நீங்கள் உண்டு யாம் பெற்ற இன்பத்தைப் பெறுவீராக.)

கச்சியில் சிவபெருமான் வீற்றிருக்க, அச்சிவபெருமான் அருளமுதைப் பருகியவர்கள் களிப்புற்று, அக்களிப்புத் தமக்கு வந்தது சிவபெருமானாகிய கள்ளினை உண்டபடியால் என்று கூறுமுகத்தானே, அக கள், தன்னை உண்டாரை அழிவிக்காமலும், மயக்கமுறுவிக்காமலும் நிலைபெறச் செய்து, மெய்யே பேசுவித்து, அவ்விறைவன் புகழையே பாடியாடும்படிச் செய்யும் என்னும் பொருள் புலப்படுத்தல் இப்பாட்டில் அமைந்திருத்தல் காண்க.  தக்க யாகத்தில் சிவபெருமான் இல்லாத குறையால் தேவரெல்லாரும் அழியவும், திருமாலும் மயக்க மெய்தவும், கச்சியில் சிவபெருமான் இருக்கும் நிறைவால் யாவரும் நிலைகுலையாமையும், மெய்யே பேசுதலும், பாடியாடுதலும் ஆகிய சிறப்புப் பெறுவர் என்றதால் சிவபெருமானது தலைமைச் சிறப்பு விளங்குவதைக் காணலாம்.

“தக்கனையும் எச்சனையும் தலையறுத்துத் தேவர்கணம் தொக்கனவந் தவர் தம்மைத் தொலைத்ததுதா னென்னேடி” (திருவாசகம் திருச்சாழல்) என்பதால் தேவர்களைத் தக்க யாகத்தில் அழித்தமை காணலாம்.

‘ஆவா திருமா லவிபட கங் கொண்டன்று
சாவா திருந்தானென் றுந்தீபற
சதுர்முகன் றாதையென் றுந்தீபற’

என்பதால் திருமால் சாவாமல் மயக்கமட்டும் அடைந்தான் என்பதை உணர்க.

மண்தரு கண்நிறைந்த அமுதை யருந்தவே: மண்ணுலகத்தே கச்சியம்பதியில் மாமரத்தின் கீழே கண்ணுக்கு நிறைவைத் தரும் சிவபெருமானாகிய அமுதினை அருந்த என்ற பொருள் கொண்டு சிவபெருமான் கள்ளாக உருவகம் செய்யப் பெற்றிருத்தலை யறிக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

63

   


களி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     அரவிந்த மலரின்கட் குடியனயன்
           அமரர்சுரா பானத் தாரே,
     வரமுறுகா விரிநதிக்கட் குடியனே
           திருமருவு மார்பி னானும்,
     தரணியின்கட் குடியர்பெருந் தவமுனிவர்
           சித்தரும்விண் ணவர்க டாமும்,
     கரவடமேன் திருக்கச்சிக் கண்ணுதலார்
           பனையின்கட் குடியர் தாமே.                     (31)

(இ-ள்.) அயன் - பிரமன், அரவிந்த மலரின்கண் - தாமரை மலரினிடத்து,  குடியன் - குடியிருப்பவன் (அரவிந்தமலரின் - தாமரை மலரில் பதுங்கிக்கொண்டு, கள் குடியன் - கள் குடிக்கும் இயல்புடையவன்.) அமரர் - தேவர்கள், சுராபானத்தாரே - தேவலோகத்திலிருந்துகொண்டு அமுதத்தைக் குடிப்பவரே ஆவர். (கள் குடிப்பவரே ஆவர்.) திரு மருவு மார்பினானும் - திருமகள் உறைகின்ற மார்பை உடைய திருமாலும், வரமுறு - மேன்மையுடைய, காவிரிநதிக்கண் - காவிரிநதிசூழ்ந்த (ஆற்றிடைக்குறையாகிய) திருவரங்கத்தில், குடியன் - குடியிருப்புக் கொண்டவன் (மார்பினானும் காவிரிநதியின் கிளைகளிடைத் தெளிந்துண்ணும் கட்குடியன்) பெருந்தவ முனிவரும் - பெரியதவமுடைய முனிவர்களும், சித்தரும் - சித்தர்களும், விண்ணவர்க டாமும் - ஆகாய வீதியே செல்லும் வேணாவியரும், தரணியின் கண் - பூமியில், குடியர் - குடியிருப்பவர், (தரணியில் பொய் வேடங் கொண்டு கள்குடிப்பவரே யாவர்,) கரவடமேன் - வஞ்சகமேன், திருக்கச்சி கண்ணுதலார் - திருக்கச்சியில் எழுந்தருளியுள்ள நெற்றிக் கண்களையுடைய ஏகாம்பரர், பனையின் கட் குடியர்தாமே - திருப்பனங்காடு என்னும் பதியில் குடியிருப்பவர்.  (பனந்தோப்பினிடத்துக் குடியிருப்பு உடையவர்.  பனையின் கள்குடியரே - பனைமரத்திலிருந்து பெறும் கள்ளை வஞ்சகமாகக்குடிப்பவரே யாவர்.)

சுரா - கள், சுரை - அமுதம்.  சுரா - சுரை.

கர வடம் எனப் பிரித்துக் கரத்தில் உருத்திராக்க மாலை ஏந்திக் கொண்டு, இரு கச்சிக் கண்ணுதலார் - கச்சியில் நுதற்கண்ணுடைய சிவபெருமானார், கட்குடியர் தாமே எனவும் பொருள் கூறலாம்.

திருப்பனையின்கண் எழுந்தருளும் சிவபெருமானார் இன்ப வடிவினர்.  அவ்வடிவினரை நான்முகனும், ஏனைய தேவரும், திருமாலும், முனிவரும், சித்தரும், வேணாவியரும் தியானித்து இன்ப முறுவர்.  ஆதலால் ‘நமரங்காள், நீவிரும் அவ்வின்பவடிவினரை நினைவு செய்து இன்பமடைவீராக’ என்று இன்பமுற்ற ஒருவன் கூறுவதாக அமைந்துள்ளது இப்பாடல் என்க.

குடியிருத்தல், குடிப்பது என்று இரட்டுறமொழிதற் பொருளில் குடி யென்னும் சொல் ஆளப்பெற்றுள்ள நயம் பாராட்டத்தக்கது.

மண்ணுலக விண்ணுலகங்களில் வாழ்வோர் யாவரும் குடிப்பவர்களே யாதலால் குடித்தல் இழுக்காகாது என்று களிமகன் தன்பால் இழுக்கின்மையைத் தெளிவித்து மற்றவர்களையும் கள்ளுண்ணும்படி அழைக்கும் உபாயம் இப்பாட்டில் நன்கு அமைந்துள்ளது.

முதலடியில் அமரர் என்னும் சொல் தேவரென்னும் பொருள் பட வந்திருத்தலால், மூன்றாம் அடியில் விண்ணவர் என்னும் சொல் சூரியனோடு ஆகாய வீதியே சென்று அச்சூரியனுடைய ஒளி முழுவதும் மக்கள்மீது படாதவாறு தடுத்துக்காக்கும் வேணாவியோர் என்று பொருள் கூறப்பட்டது.  ‘விண்செலன் மரபினையர்க் கேந்திய தொருகை’ என்ற திருமுருகாற்றுப்படை யடிக்கு நச்சினார்க்கினியர் கூறியுள்ள பொருளை யுற்று நோக்குக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

64

   


கட்டளைக் கலிப்பா

    கட்ட தும்புமி தழித்தெ ரியலைக்
           கச்சி நாதர் தருவ திலையெனில்
     துட்ட மன்மதன் ஐங்கணை யாமணச்
           சூத முல்லைய சோகம ரவிந்தம்
     கெட்ட உற்பலம் அஞ்செரி போல்வருங்
           கிளிய னீர்மட நாணமச் சம்பயிர்ப்
     புட்ட யங்குயி ரைந்தும வைக்கிரை
           யோவென் றோதிரச் செம்மழு வாளர்க்கே.          (32)

(இ-ள்.) கள் ததும்பும் - தேன் ததும்பும், இதழித் தெரியலை - கொன்றை மலர் மாலையை, கச்சிநாதர் - காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பர நாதர், தருவ திலை யெனில் - எமக்குக் கொடுப்பது இல்லையானால், துட்ட மன்மதன் - கொடிய மன்மதனுடைய, ஐங்கணையாம் - ஐந்து அம்பாகிய, மணச்சூதம் - மணம் பொருந்திய மாம்பூ, முல்லை - முல்லை மலர், அசோகம் - அசோக மலர், அரவிந்தம் - தாமரை மலர், கெட்ட உற்பலம் - சாவினை உண்டாக்கும் நீலோற் பல மலர், (கரு நெய்தல் மலர்) அஞ்சும் - ஆகிய இவ்வைந்தும், எரி போல் வரும் - நெருப்புப் போல் வரும், கிளி அனீர் - கிளிமொழி போன்ற இனிய மொழியுடைய தோழியரே, மடம் நாணம் அச்சம் பயிர்ப்பு உள் தயங்கும் உயிர் ஐந்தும் - மடமும் நாணமும் அச்சமும் பயிர்ப்பும் உடம்புள் கரந்து ஊசலாடும் உயிர் ஆகிய ஐந்தும், அவைக்கு இரையோ என்று - அவ் வைந்து அம்புகளுக்கும் இரையாக வேண்டுமோ என்று, அச்செம்மழு வாளர்க்கு ஓதிர் - அந்தச் சிவந்த மழுப்படை ஏந்திய ஏகாம்பரநாதருக்குச் சொல்லுவீர்.

தன்பால் காதலுற்றவளிடத்தே தானும் காதலுற்று, அதற்கறிகுறியாக தன் மார்பிடத்துப் பூணும் கொன்றை மாலையைச் சிவபெருமான் தருவானானால் தலைவி ஆறியிருத்தலமையும்.  சிவபெருமான் காதலி என்பதையும் அறிந்து மன்மதன் தன் கணைகளை ஏவமாட்டான். தலைவியின் நாற்குணங்களும் உயிரும் அவற்றிற்கு இரையாகமாட்டா.  இல்லையெனின், ஐங்கணைகட்குக் குணமும் உயிரும் இரையாகும்.  தன்னைக் காதலித்த தலைவியைத் தான் காதலித்து இன்பம் பெறாது, தன் கண்ணீறுபட்டுச் சாம்பரான ஒருவன் (மன்மதன்) எளிதான நாசமுறுவித்தலைத் தான் கண்டுகொண்டு எரியிருப்புப் படையை (மழுவினை) ஏந்தியிருத்தலால் தனக்குண்டாகும் சிறப்பென்னையோ, என்று தலைவி தோழியின் மூலமாகத் தூதுரை கூறி, அம்மழுப்படை கொண்டு அம் மன்மதனை நீறாக்கித் தன்னைச் சேரும்படி வேண்டுவதாக இச்செய்யுள் அமைந்துள்ளது. சூதம், முல்லை, அசோகம் அரவிந்தம் உற்பலம் என்பன முதலாகு பெயர்களாய்ப் பூவை உணர்த்தின.

ஐந்து - அஞ்சு என்று போலியாயிற்று, செம்மழுவாளர் என்பதனால் மன்மதனை மீண்டுமொருமுறை நீறாக்கிவிட வல்ல கருவி வல்லமை யுடையர் என்பது குறிக்கப்பட்டது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

65

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்

     மழுவேந்து வலக்கரத்தர், மழை யேந்து
           சடைச்சிரத்தர், வான்பு ரத்தர்,
     விழவாங்கு பூதரத்தர், வேளெரித்த
           மாவுரத்தர், ஆத ரத்தர்,
     தொழவாழு மாதிரத்தர், நடமாடும்
           எரிசுரத்தர், தூவ ரத்தர்,
     குழையாடு செவியரத்தர் கச்சியெனு
           மாகரத்தர் குணக்குன் றாரே.                       (33)

(இ-ள்.) மழு ஏந்து - மழுப்படையை (எரியிருப்புப் படையை)த் தாங்கிய, வலம் கரத்தர் - வலக்கையை உடையவர், (வல்லமை பொருந்திய கையை உடையவருமாம்) மழை ஏந்து சடை சிரத்தர் - மேகம் தங்கிய சடையோடுகூடிய தலையை உடையவர் (கங்கையைத் தாங்கும் சடையோடுகூடிய தலையையுடையவருமாம்), வான் புரத்தர் - ஆகாயத்தை இடமாகக் கொண்டவர் (சிதாகாச இடத்தர்), விழவாங்கு பூதரத்தர் - தனக்கு அடங்க வளைத்த மேருமலையை உடையார், வேள் எரித்த - மன்மதனை எரித்த, மா உரத்தர் - சிறந்த மன வலிமையை யுடையவர், ஆதரத்தர் - (எல்லா உயிர்களுக்கும்) ஆதாரமாகக் கருணை பொருந்தி இருப்பவர், (எல்லா உயிர்களிடமும் அன்புடையவர்) தொழ வாழும் - (எல்லா ஆன்மாக்களும்) தொழும்படி வாழும், மாதிரத்தர் - (கயிலாய மலையை உடையவர், நடமாடும் எரிசுரத்தர் - கூத்தாடும் அனலை வீசுகின்ற காட்டை உடையவர், தூ வரத்தர் - தூய்மை உள்ள வரத்தை அளிப்பவர், குழையாடு செவியர் அத்தர் - குழைகள் அசைகின்ற செவியை உடையவராகிய தலைவர், கச்சியெனும் ஆகரத்தர் - காஞ்சி என்னும் உறைவிடத்தை உடையார். (அவர் யாரெனில்), குணக்குன்றாரே - எண் குணங்களாகிய மலையாரான ஏகாம்பரநாதரே.

வான்புரத்தர் - தேவர்களைப் பாதுகாப்பவர் எனினுமாம். வான் ஆகுபெயர்.

பூதரத்தர் என்புழி, பூதரம், மலை.  விழவாங்கு என்ற குறிப்பால் மேருமலையை உணர்த்திற்று.

ஆதரத்தர், ஊர் தோறும் இருப்பவர் எனினும் அமையும். (ஆதரம் - ஊர்)

மாதிரத்தர் - திக்குகளை உடையவர் எனினுமாம்.

எரிசுரம் - பேரூழிக் காலத்தில் நெருப்பு நெருங்கிப் பிறங்க எரிகின்ற காடு.

தூவரம் - தூய்மை வரும்.

அத்தர் - அர்த்த பாகத்தை உடையவர்.

அத்தம் - சிவப்பு; செந்நிறத்தை உடையவர்.

அத்தர் - தலைவர்; அடைக்கலம் அளிக்கும் கையை உடையவர்.

குணக்குன்று - உருவகமாம். எண்குணமாவன: தன் வயத்தனாதல், தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல் முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

66

   


சித்து

அறுசீர் ஆசிரிய விருத்தம்

குன்றைக்கு னித்தகச்சிக் கோமானார் சித்தவுருக்
     கொண்ட நாள்யாம்
என்றைக்கும் சிறப்பெய்த விச்சையுடன் கற்றவித்தை
     இற்றென் றாமோ
மின்றைக்கு முடிவேந்தர் விரும்பவொரு தினத்திரும்பு
     தனைப்பொன் செய்வேம்                  
இன்றைக்குப் பொன்னளித்து நாளைவெள்ளி இயற்றினும் பின்
     சனிய தாமே.                            (34)

(இ-ள்.) குன்றைக் குனித்த - மேரு மலையை வில்லாக வளைத்த, கச்சிக் கோமானார் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், சித்த உருக் கொண்ட நாள் - (மதுரையில்) சித்தர் வடிவாக வந்த நாளில், யாம் - யாங்கள், என்றைக்கும் - எந்நாளும், சிறப் பெய்த - சிறப்படைய, இச்சையுடன் - அன்போடு, கற்ற வித்தை - கற்ற படிப்பு, இற்று என்று ஆமோ - இவ்வளவினது என்று சொல்ல முடியுமோ, மின் தைக்கும் முடிவேந்தர் - மின்னல் போல ஒளிவீசும் முடியையுடைய அரசர்கள், விரும்ப - விரும்பும்படி, ஒரு தினத்து - ஒரு நாளைக்குள்ளே, இரும்பு தனை - இரும்பினை, பொன் செய்வேம் - பொன்னாகச் செய்வோம், இன்றைக்கு - இற்றைப்பொழுது, பொன் னளித்து - பொன்னைக் கொடுத்து, நாளை - நாளைப் பொழுதில், வெள்ளி இயற்றினும் - வெள்ளி செய்தாலும், பின் சனியது ஆம் - பிற்காலத்தில் அது இரும்பே யாகும்.

சித்த உருக் கொண்ட நாள் - சோமசுந்தரக்கடவுள் மதுரையில் சித்தராய் வேடங்கொண்டு எண்வகைப் பேறுகள் செய்த நாளில்.

விச்சையுடன் - மந்திரத்துடன் எனினுமாம்.

ஒரு நாளில் இரும் புதனைப் பொன் செய்வேம். புதன் கிழமையை மாற்றிப் பொன் (வியாழன் - வியாழக்கிழமை) ஆக்கிவிடுவோம் என்றுமாம்.

இன்றைக்குப் பொன் அளித்து என்றது, இன்றைக்கு வியாழக்கிழமையாய், நாளை வெள்ளிக்கிழமையாயினும், அதற்குப் பின் சனிக்கிழமையாம் என்பது மற்றொரு பொருள்.

மின் தைக்கும் முடி என்றது - தன்னொளி மின்னலொளியையும் தைத்துப் பின்னிடச் செய்யும் முடி என்பதாம்.

இரும்புதனை - இரும்பு+தனை யென்றும், இரும்+புதனை என்றும் பிரித்துப் பொருள்கொள்ளக் கிடத்தலால் பிரிமொழிச் சிலேடை.

பொன் - செம்பொன்; வியாழன். வெள்ளி - வெண் பொன்; வெள்ளி நாள். சனி - கரும் பொன்; சனி நாள். சனி - இரும்பு என்றது, சனியினது நிறம்போலும் கருநிறமுடையதுபற்றியாதல், பொன்னும் வெள்ளியும் பிறத்தற்கு (சனித்தற்கு)க் கருவாந்தன்மைபற்றியாதல் என்க.

இனிச் சனியதாமே என்றது, சித்தினால் இரும்பைப் பொன்னாக்கும் தொழிலுடையார்க்குப் பிற்காலத்தில் சனி பிடித்தது போல் வறுமையே உண்டாகும் என்றுமாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

67

   


(இதுவும் சித்து)

அறுசீர் ஆசிரிய விருத்தம்

சனியாகும் ஊழ்வலியாற் சகலகலை யறிவுணர்ச்சி
     தகைபெ றாதால்
தனியாகும் எங்களுத வியைப்பெற்றுச் சாற்றும்பர்
     அடைந்தார் பொன்னில்
கனியாரும் பொழிற்கச்சிக் கண்ணுதலார் கைச்சி லம்பைக்
     கனக மாக்கிப்                             
பனியாருங் கடல்வண்ணன் மார்பினைப்பொன் னிருப்பா கப்
     பண்ணி னோமே.                             (35)


(இ-ள்.) சனியாகும் - அறிவையே யன்றி அறியாமையையும் தோற்றுவித்தலுக்கு முதலாகும், ஊழ் வலியால் - முன்னைய பிறப்புக்களில் செய்த தீவினை நல்வினை வலியால், சகலகலை - எல்லா வகை நூல்களையும், அறி உணர்ச்சி - அறிதலையுடைய உணர்ச்சி ஏற்படினும், அறியாமையும் கூடியிருத்தலால் அவ்வுணர்ச்சி, தகை பெறாது - பெருமையைப் பெறாது, ஆல் - ஆதலால், (ஊழின் துணைவலியை விடுத்து) தனியாகும் - ஒப்பில்லாத துணையாகும், எங்கள் உதவியைப் பெற்று - எங்களுடைய துணையைப் பெற்று, சாற்று உம்பர் - உயர்ந்தோரால் உயர்த்துச் சொல்லப்பட்ட தேவர்களும், பொன்னில் அடைந்தார் - பொன்னுலகத்தில் இருந்து உரிமை ஆற்றலைச் செலுத்தும் உயர்வினை அடைந்தார்கள், அவர்களுள் கனி ஆரும் பொழில் - கனிகள் நிறைந்த சோலை சூழ்ந்த, கச்சி கண்ணுதலார் - காஞ்சி புரத்தில் எழுந்தருளிய நெற்றிக்கண்ணினையுடைய ஏகாம்பர நாதரது, கைச் சிலம்பை - கையிலுள்ள கல் மலையை, கனகமாக்கி - பொன்மலையாக்கிக் கொடுத்து, பனி ஆரும் - குளிர்ச்சி பொருந்திய, கடல் வண்ணன் - கடல் நிறம்போலும் கரிய நிறத்தை உடைய திருமாலினது, மார்பினை - மார்பை, பொன் - பொன்னாகவும், இருப்பு ஆகவும் - இரும்பாகவும், பண்ணினோம் - செய்தோம்.

கண்ணுதலார் காலில் அணியவேண்டிய சிலம்பைக் கையில் அணிந்திருந்தார்கள்; அச் சிலம்பைக் கையில் அணிதற்குரிய பொன் தொடியாக்கித் தந்தோம் எனவும் கையிலுள்ள மேருமலையைப் பொன்னாக்கித் தந்தோம் எனவும் சித்தர் கூறினார் என்க.  சிவபெருமான் கையில் உள்ள மேருமலை இயற்கையாகவே பொன்மலையாக இருந்ததன்றோ வெனின், சித்தர், பொன் செய்தோம் யாம் என்று கூறுதல் வாயிலாக முன்னர் அம்மலை ஏனைய மலைகள்போலக் கல் மலையாகவே இருந்தது; பின்னர்த் தம்முடைய சித்தினால்தான் பொன்னாயிற்று என விளக்கினமையும் கொள்க.

கடல் வண்ணன் மார்பினைப் பொன் இருப்பாகப் பண்ணினோம் என்றது, திருமால் கடல் வண்ணனாதலால் மார்பும் கடல் நிறமே என்பது போதருதலால், அவனுடைய நீலநிறம் பொருந்திய மார்பினைப் பொன்னுக்கு (அழகிய நிறத்திற்கு) இருப்பிடமாகப் பண்ணினோம் என்றும் ‘பொன்’ என்னும் திருமகளுக்கு இருப்பிடமாகப் பண்ணினோம் என்றும், பொன் அழகிய மார்பினை இருப்பாக (இரும்பு+ஆக) கருநிறமுடைய மார்பாகப் பண்ணினோம் என்றும் பொருள் தருதல் காண்க.  இங்கே கூறப்பெற்ற மூன்றாம் பொருளுக்குப் பொன் மார்பினை இருப்பாகப் பண்ணினோம் என இயைக்க.  இங்ஙனம் இயைத்துப் பொருள் காண்டலே மிக்க சிறப்புத் தருவதாம்.  இரும்பு என்றது, இருப்பு என வலித்தல் விகாரம் பெற்றது. இப்பொருளில் ‘பனியாரும் கடல் வண்ணன்’ என்றது, கடல் வண்ணன் பனி (நடுக்கம்) அடையும் வண்ணம் என இயைந்து பொருள் தரும்.  இப்பாட்டில் சனியாகும் ஊழ்வலி என்றது, சனியன்போல் துன்பத்தையே செய்வதாகிய ஊழ்வலி என்றும் பொருளாம்.

‘ஊழ் வலியால் பல பல கலைகளும் அறியும் உணர்ச்சி பெற்றாலும், அவ் வூழ்வலியால் அறியாமையும் கூடவே தொடர்ந்து நிற்கும் ஆதலால், அறியும் உணர்ச்சி பெருமை பெறுவதில்லை.  ஆகவே, எங்கள் உதவியைப் பெற்றுத் தேவர்களும் பெருமை பெற்றனர்.  ஊழ்வலியை விட்டு எங்கள் உதவியை நாடிய கச்சிக் கண்ணுதலார்க்கு அவர் ஏந்திய கைச்சிலையையும் பொன்னாக்கிக் கொடுத்தோம்.  ஊழ் வலியையே நாடி எங்கள் வலியை நாடாத கடல் வண்ணன் பொன் மார்பினை இரும்பு மார்பாகப் பண்ணிவிட்டோம்.  எங்கள் சித்தின் வலிமை இருந்தவாறு இதுவாம் எனச் சித்தர் தம் சித்தினால் எதையும் செய்ய வல்லவர் என்பதைப் புலப்படுத்துந் திறம் இப்பாட்டால் அறியலாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

68

   


கலிநிலைத்துறை

    இருப்புக்கு வெண்பொன் பசும்பொன்
           னகங்கொண்ட இறைவா! எனைக்
     கருப்புக் குழன்றெய்க்க வையாமல்
           அருள்கூர்ந்து காப்பாய்கொலோ
     பொருப்புக்கு வீழப் புவிக்காடை
           பொங்கப் புரஞ்செற்றசெந்
     நெருப்புக்கு வதனத் திடந்தந்த
           ஒருமா நிழற்சோ தியே!                    (36)


(இ-ள்.) பொருப்பு உக்கு வீழ - மலைகளெல்லாம் பொடியாகிக் கடலில் வீழ, புவிக்கு ஆடை - அதனால் பூமிக்கு ஆடையாகிய கடல், பொங்க - பொங்குமாறு, புரஞ் செற்ற - வான வீதியில் செல்லுதலையுடைய முப்புரத்தை அழித்த, செந் நெருப்புக்கு - சிவந்த செருப்புக்கு, வதனத்து இடந் தந்த - நின் முகத்தில் இடங் கொடுத்த, ஒரு மா நிழல் சோதியே - ஒரு மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும் பெருமானாகிய ஒளி வடிவினனே, இருப்புக்கு - இருப்பிடத்துக்கு, வெண் பொன் நகம் - வெள்ளி மலையையும், பசு பொன் நகம் - பசும் பொன் மலையையும் இடமாகக்கொண்ட, இறைவா - இறைவனே, எனை - அடியேனை, கரு புக்கு - தாயின் கருப்பையில் புகுந்து, உழன்று - வருந்தி, எய்க்க - இளைக்க, வையாமல் - வைக்காமல், அருள் கூர்ந்து - கருணை மிகுதியாகச் செய்து, காப்பாய் - காக்கக்கடவாய், (கொல்ஒ, அசை.)

பசும்பொன் னகங்கொண்ட என்பதைப் பசும்பொன் அகம் கொண்ட எனப் பிரித்துப் பசும் பொன் நிறமுடைய உமா தேவியை உன் உள்ளத்தே கொண்ட இறைவனே எனப் பொருள் கூறலுமாம்.

“உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி” என்பது திருவாசகமாதலால், இறைவன் இறைவியை உள்ளத்தே வைத்திருத்தல் பொருத்தமுடையதாதல் காண்க.

யான் என தென்னும் செருக்கும், முப்புரத்தாருடைய முப்புரமும் அழிந்தொழியச் செய்தாய்; நீ எழுந்தருளும் இருப்பிடமாக வெள்ளிமலையையுடையாய்.  ஆகவே, உன்னால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை.  அருளே  வடிவமான அம்பிகையை உன் உள்ளத்தே கொண்டிருக்கின்றாய்; நானோ யான் என தென்னும் செருக்குகள் அற்றவனாக இருந்துகொண்டு உன் அருளொன்றையே நாடி நிற்கின்றேன்; ‘வேண்டத்தக்கது அறிவோனாகிய நின்னை’ என்னைக் கருவில் புகுந்து வருந்தி இளைக்க வைக்காமல் அருள் மிகச் செய்து காப்பாயோ என்று கேட்கவும் வேண்டுமோ? வேண்டாவன்றே! நீயே காப்பாய்; ஆதலால், உன் கருணை இருந்தவாறு என்னே! என்று ஆசிரியர் இறைவன் அருளில் தோய்ந்து நிற்றலை இப்பாடலில் காணலாம். இப்பொருளில் கொல், அசை. ஒ, வினா.

நெருப்புக்கு வதனத் திடந் தந்தவன் என்றதனால் இறைவனால் இயற்றலாகாத காரியம் ஒன்றுமில்லை என்பதைத் தெற்றென உணரலாம்.

இடந் தந்த சோதியே எனக் கூட்டுக.

கருப்புக்கு என்பதைக் கரும்புக்கு என்பதன் வலித்தல் விகாரமாகக்கொண்டு மன்மதனுடைய கரும்பு வில்லுக்கு இலக்காகி வருந்தி யிளைக்காதபடி அருள் செய்வாயாக எனப் பொருள் கூறுதலும் ஒன்று.

கரும்பு, கரும்புவில்லிற்குக் கருவியாகுபெயர்.  இருப்புக்கு வெண் பொன் கொண்டது வெள்ளி மலையாகிய கயிலை மலையை வெளிப்படையாக உணர்த்துவதாம்.

பசும் பொன் அகம் கொண்ட என்றது, அவ் வெள்ளி மலையாகிய கயிலையின்மீது பசும்பொன்னாலாகிய கோயிலைக் கொண்டது என்க.

இனிப் பசும் பொன் அகம் கொண்ட என்றதற்கு, பசும் பொன்னாலாகிய மேரு மலையை அகங் கையில் கொண்ட என்று பொருளுரைத்தலுமாம்.

செந்நெருப்பு என்றது, நெற்றிக்கண்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

69

   


நேரிசை வெண்பா

சோதிப் பரம்பொருள்வாழ் தூயவிடந் தொண்டர்நெஞ்சோ
வேதத் தனிமுடியோ வேள்விபுரி - மாதவர்வாழ்
தில்லையோ கூடலோ சீர்க்கயிலை மாமலையோ
தொல்லையே கம்பமோ சொல்.                          (37)


(இ-ள்.) சோதிப் பரம்பொருள் - ஒளிப் பிழம்பாயுள்ள மேலான சிறந்த பொருளே, வாழ் தூய இடம் - நீ வாழ்கின்ற பரிசுத்தமான இடமும், தொண்டர் நெஞ்சோ - அடியார் மனமோ, வேதத் தனிமுடியோ - வேதத்தினது ஒப்பில்லாத உச்சியோ, வேள்விபுரி மாதவர்வாழ் தில்லையோ - (நாள்தோறும்) வேள்வியைச் செய்கின்ற மிக்க தவத்தையுடைய முனிவர்கள் வாழ்கின்ற தில்லைவனமாகிய சிதம்பரமோ, கூடலோ - நான்மாடக்கூடலாகிய மதுரையோ, சீர் கயிலை மாமலையோ - சிறப்பு வாய்ந்த கயிலை மாமலையோ, தொல்லை ஏகம்பமோ - பழைமையான கச்சிப்பதியோ, சொல் - நீ சொல்.

தில்லை - தில்லை மரங்கள் மிக்குள்ள இடம் (சிதம்பரம்). கூடல் - சிவபெருமானுடைய சடையில் உள்ள நான்கு மேகங்களும், இந்திரன் ஏவிய மழையைத் தடுக்க நான்கு மாடங்களாக விரிந்த இடமாகிய மதுரை.  தொல்லை ஏகம்பம் - பழைமையையுடைய ஒற்றை மாமரத்தினை உடைய கச்சிப் பதி.  ஏக+ஆம்ரம் - ஏகாம்ரம் என்பது ஏகம்பம் என்று மருவிற்றாதலால் ஏகம்பம் என்பது ஒற்றை மாமரத்தையே குறிப்பது.  ஈண்டு அவ் வொற்றை மாமரத்தடியை இறைவன் எழுந்தருளுதற்கு இடமாக உடைய கச்சிப்பதியைக் குறித்துநின்றது.  ‘தொல்லை ஏகம்பமோ’ என்று கூறிய குறிப்பால், நெஞ்சும், முடியும், தில்லையும், கூடலும், கயிலைமலையும் இறைவன் வாழ்தற்கு உரிய இடமாம் எனினும், அவன் வாழ்தற்குரிய பழைமையான இடம் கச்சிப்பதி என்று கச்சிப் பெருமையை ஆசிரியர் வெளிப்படுமாறு செய்துள்ளார்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

70

   


இளவேனில்

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

பனிக்கால மேகப்ப லம்பூவி றைக்கும்
           பருவத்த ருட்கச்சி இறையிங்கு வாரான்
     குனிக்கோல நம்பன்ற ணிப்பென்ன சொல்வான்
           குன்றத்தி ருத்தானை மன்றத்து வைத்தே
     தனிப்பாக என்னைப்ப சப்பிக்க லந்த
           சமயத்து ரைச்சத்தி யங்கூறி யரவை
     இனிப்பாரு மொழியாளன் இதுசெய்தல் அழகோ
           என்றேயு டன்கேட்பன் இனியென்ன குணமே.          (38)


(இ-ள்.) பனிக் காலம் ஏக - பனிக்காலம் ஒழியவந்த, பல் அம் பூ இறைக்கும் - பலவாகிய அழகிய மலர்களைச் சொரியும், பருவத்து - இளவேனிற் காலத்து, அருட் கச்சி இறை - கருணையையுடைய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், இங்கு வாரான் - இவ்விடத்து வாராராயினார், (இனி வருவாராயின்) குனிக் கோல நம்பன் - (அன்பர் என்பும் உருக) நடிக்கும் அழகிய நம் பரமன் (சிவன்), தணிப்ப - (என்) ஊடலைத் தணிப்பதற்கு, என்ன சொல்வான் - என்ன காரணம் சொல்வார்? குன்றத்து இருந்தானை - கச்சியை விடுத்துப் போய்க் கயிலைக் குன்றில் ஒளித்து நின்ற அவரை, மன்றத்து வைத்து - யாவரும் காணும் சபையில் கொண்டுவந்து இருக்கச் செய்து, தனிப்பாக - யாவருங் காணாதபடி தனிமையாக, என்னைப் பசப்பி - எனக்குப் பசப்பான வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றி, கலந்த சமயத்து - கூடிய காலத்தில், சத்தியம் உரை கூறி - (தெய்வங்காட்டி) ‘நின்னைப் பிரியேன்; பிரிந்தால் உயிர் தரியேன்’ என்று உண்மை மொழிகளைக் கூறி, அரவை இனிப்பு ஆரும் மொழியாளன் - ஆரவாரத்தோடு கூடிய இனிமை நிறைந்துள்ள சொற்களையுடையவரே, இது செய்தல் அழகோ - நீர் பிரிவு நீட்டித்து வாராமையாகிய இதனைச் செய்தல் அழகாகுமோ, என்றே - என்று, உடன் கேட்பன் - உடனே கேட்பேன், இனி என்ன குணம் - பொறுத்துக்கொண்டிருத்தல் முதலிய குணங்களால் இனி என்ன பயன்?

மன்றம் - யாவரும் காணும் பொதுவிடம்.

மன்றம் - சபை; ஐந்து அம்பலங்கள்.
     (1) திருவாலங்காடு,
     (2) தில்லை,
     (3) மதுரை,
     (4) திருநெல்வேலி,
     (5) திருக்குற்றாலம்

என்பன ஐந்து பொது இடங்கள்.

தனிமையாக என்பது, களவைக் குறித்தது.  பசப்பி என்பதற்கு மகளிர்க்குத் தலைவரைப் பிரிதல் ஆற்றாமையால் தோன்றும் நிறவேறுபாடு எனினுமாம்.

தலைவி தோழிக்குப் பிரிவாற்றாமையால் தோன்றிய ஊடலால் கூறிய கூற்றாக அமைந்துள்ளது இச் செய்யுள்.

குன்றத்திலே இருக்கின்ற அவனை நியாய சபையிலே இழுத்து வைத்துத் தனியாக என்னைக் கூடிய காலத்தில் இனிய மொழிகளையும் உண்மை உரையையும் கூறியவன் இப்படி நான் வருந்தும்படி விட்டிருத்தல் அழகாமோ என்று உடனே கேட்பேன்.  நமக்குப் பொறுத்துக்கொண்டிருத்தலால் இனி என்ன பயன் உண்டாம்.  ஒரு பயனும் உண்டாகாது என்பதாம்.

என்ன குணம் என்பதற்கு, அவன் பித்தனாதலால், மன்றத்தில் வைத்துக் கேள்வி கேட்டாலும் தக்க பதில் சொல்லிக் கட்டுப்படான்.  ஆதலால், என்ன பயன் உண்டாம் எனினுமாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

71

   


மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

குணதிசைவெய் யோற்கலரும் அரவிந்தம் பானலமே
     குலைந்திடுந்தென் பொதியில்வரும் அரவிந்தம் பானலமே
கணமிகுவெண் முத்துயிர்க்கு நந்தனந்தங் கயலாமே
     கச்சியிறை தணத்தலின்வார் நந்தனந்தங் கயலாமே
அணங்குறவின் மதன்முளரி முலையெய்திடு மாசுகமே
     ஆசற்றா ரிதழ்பருக முலையெய்திடு மாசுகமே
வணமணியின் பரஞ்சுமந்த வாழிதயங் கருங்கலமே
     வஞ்சருக்கென் நெஞ்சரங்க வாழிதயங் கருங்கலமே.       (39)

(இ-ள்.) குணதிசை வெய்யோற்கு - கிழக்குத் திசையில் உதயமாகும் வெப்பம் மிக்க சூரியனுக்கு, அரவிந்தம் அலரும் - தாமரையானது மலரும், பானல் குலைந்திடும் - குளிர்ச்சி மிக்க சந்திரனுக்கு அலரும் நீலோற்பலம் (குவளை) சீரழிந்திடும்; (சந்திரன்போன்ற தண்ணளியுடைய தலைவர் பிரிவால்) தென் பொதியில் வரும் அரவு - தெற்கேயுள்ள பொதியமலையிலிருந்து வருகின்ற பாம்பு போன்ற தென்றற்காற்றும், இந்து - சந்திரனும், அம்பு - மன்மதன் எய்கின்ற அம்புகளும், ஆன் -ஆகிய இவற்றான், அலமே - நமக்குத் துன்பமே, கணம் மிகு - கூட்டம் மிகுந்த, வெண் முத்து - வெள்ளிய முத்துக்களை, உயிர்க்கும் - ஈனுகின்ற, நந்து - சங்குகளும், அனந்தம் கயல் - அளவில்லாத கயல் மீன்களும், ஆம் - வளப்பமாதற்கு இடமாகிய, கச்சி - கச்சியில் தங்கிய, இறை தணத்தலின் - இறைவர் பிரிதலினாலே, நம் தனம் வார் தங்க அயலாம் - நமது முலைகள் கச்சுத் தங்குவதற்கு வேறுபட்டவாம் (விட்டு நீங்கும்), அணங்கு உற - பிரிவினால் எனக்கு வருத்தம் உண்டாக, வில் மதன் - வில்லையுடைய மன்மதன், எய்திடும் - எய்கின்ற, முளரி - தாமரை மலரும், முலை - முல்லை மலரும், ஆசுகமே - அம்பே, ஆசற்றார் - குற்றம் நீங்கினவராகிய தலைவர், இதழ் பருக - என் இதழைப் பருகுதலால், முலை - எயிற்றுநீர் ஊறுவதற்கு இடமாகிய முல்லை அரும்பு போன்ற பற்கள், மாசுகம் - பெரிய இன்பத்தினை, எய்திடும் - அடைந்திடும், வணமணியின் - அழகிய இரத்தினங்களின், பரம் - சுமையினை, சுமந்த - தாங்கியுள்ள, ஆழி - கடலில், தயங்கு - விளங்குகின்ற, அருங் கலமே - அரிய மரக்கலமே, வஞ்சருக்கு - வஞ்சகராகிய தலைவர்பொருட்டு என் நெஞ்சு அரங்க - என் மனம் வருந்த, வாழ் - பொருந்திய, இதயம் - (அவர்) இருதயமானது, கருங்கல் அமே - கருங்கல்லின் அழகு உடையதே! கருங்கல்போல் வன்மை உடையதோ?

தலைவனது பிரிவால் தலைவிக்கு உண்டான வருத்தம் கூறப்பட்டது.  பொதியமலையில் இருந்துவரும் தென்றற்காற்று அரவாக (பாம்பாக) உருவகப்படுத்தப்பட்டது. நம் தனம் வார் தயங்க அயலாம் என்பது - தலைவனது பிரிவால் தலைவிக்கு உண்டான உடல் மெலிவு கூறப்பட்டது.  ஆசற்றார் நம் இதழ் பருக, முலையைத் தழுவுவாராயின் அம் முலை பெரிய நலமடையும் எனினுமாம்.

பாரம் என்பது பரம் எனக் குறுகிற்று.  கருங்கல் அழகு; ஈண்டு வன்மைமேற்று. தலைவி இரங்கலாதலின் நெய்தல் நிலக் கருப்பொருளாகிய மரக்கலத்தைப் பார்த்து இரங்குகின்றாள்.

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்” ஆதலால், இதழ் பருக மு(ல்)லை (பற்கள்) மாசுகம் எய்திடும் என்று கூறப்பட்டது.

“வேனில்வேள் மலர்க்கணைக்கும் வெண்ணகைச்செவ் வாய்க்கரிய பானல்வாய்க் கண்ணியர்க்கும்” (திருவாசகம்). பானல் - கருங்குவளை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

72

   


பாண்

நேரிசை ஆசிரியப்பா

    கலன்பணி உடைதோல் கலம்பலி ஓடுகொண்
     டிலந்தொறும் இரந்து ணிறைதரும் ஒற்ற!
     மலைவளர் காதலி மங்கள வல்லி
     சிலைவேட் களித்த சிற்சுக மங்களை
5     இழைவகிர் நுண்ணிடை யேந்திழை பங்கன்
     பழைய கள்வன் பண்பினை ஓர்ந்தேன்
     பாணனே! நின்னைப் பண்ணிசை கூட்டி
     வீணையிற் பாடி விழைவை ஊட்டித்
     தன்வயப் படுத்தத் தந்திரம் கற்பித்
10    தென்வயிற் செலுத்தும் இங்கிதம் தோன்றப்
     பாடினை; இன்புறப் பாடல்கேட் டாங்குக்
     கூடிய கொற்றவன் குணமறி வாயோ?
     மலைப்பெணந் தரியை மகிழ்வாய் மணந்தும்
     அலைப்பெணைச் சடையில் அமைத்த தேன்உரை
15    கம்பை நதியயல் காம நயனியாம்
     அம்பை அருச்சனை ஆற்றல்கண் டவளை
     உள்ளங் கலங்க ஓங்குநீர் அழைத்துக்
     கள்ளப் புணர்ச்சி கலந்து வடுப்பட்
     டின்னமும் மாறா தேய்ந்த தன்மை
20    என்னவென் றுரைப்பன் இதுவலா தொருநாள்
     தாரு வனஞ்செலீஇத் தாபதப் பன்னியர்
     தெருமரல் உற்றுப் பருவரல் எய்தக்
     கோவண நீத்துத் தீவணம் பூத்தம்
     மின்னிடை யாருடன் விருப்புறப் பேசித்
25    துன்னிய தன்மை சொல்லுந் தகைத்தோ!
     வனிதையர் மயங்க வளைகொணர்ந் தன்று
     மதுரையில் வந்த வசையே சாலும்
     சாலும் பாண! சாலும் பாண!
     யாதும் கேளேன் யான்இனி மயங்கேன்
30    போகென உரைத்தும் போகாய் அந்தோ!
     அன்னை யறியா தணைந்தேன் அவனைப்
     பின்னை உற்றிடும் பீழை நினைத்திலன்;
     அகலுதி பாணா! அனையறி வாளேல்
     தகரும் நின்சிரம்; தமரும் வெகுளுவர்
35    நெஞ்சில் இட்ட நெருப்பின் வெப்பினை
     வஞ்சகன் அறிய வழுத்துவை பாணா!
     மறந்தேன் அன்னையை; மன்னனைப் புணர்ந்து
     சிறந்தனம் என்றே திகைத்தேன்; இத்துணை
     பட்டது சாலும் பாணனே! மடவார்க்
40    கிட்டது தானே இயலும் பரமனை
     வெறுத்தலும் வீணே; விழைவு
     பொறுத்தலும் இலன்; இனிப் புரிவனற் றொண்டே.             (40)

           1 - 4. கலன்பணி ... ... மங்களை.

(இ-ள்.)  கலன் பணி - பாம்பாகிய அணிகலனையும், உடைதோல் - யானைத் தோலாகிய உடையையும், ஓடு - மண்டை ஓடாகிய, பலிக் கலம் - பலியேற்கும் கலத்தையும், கொண்டு - கொண்டு, இலந் தொறும் - இல்லந்தோறும், இரந்து உண் - இரந்து உண்ணுகின்ற (ஏற்று உண்கின்ற), இறை தரும் ஒற்ற - இறைவன் அனுப்பிய தூதனே (பாணனே) மலைவளர் காதலி - பனிமலை யரையன் மகளாகியும், மங்கள வல்லி - மங்களகரமான வல்லிக்கொடி போன்றவளும், வேட்கு சிலை அளித்த - மன்மதனுக்குக் கரும்பு வில்லைக் கொடுத்த, சிற்சுக மங்களை - அறிவுமிக்க கிளிபோன்ற மங்கள வடிவமுள்ளவளும்,

           5 - 9.  இழை வகிர் ... ... கற்பித்(து)

(இ-ள்.) வகிர் இழை - பிளவு செய்த நூல்போன்ற, நுண்ணிடை ஏந்து இழை பங்கன் - நுட்பமாகிய இடையையும் கலன் தாங்கிய ஆபரணங்களையும் உடையாளாகிய பார்வதியை இடப்பாகமாகிய ஒரு பங்கிலே கொண்டவன் (சிவன்), பழைய கள்வன் - பழைமையாகிய திருடனாவான், பண்பினை ஓர்ந்தேன் - அவனது நற்குண நற்செய்கைகளை உணர்ந்தேன், பாணனே - பாடுந் தொழிலுடையவனே, நின்னை - உன்னை, பண்ணிசை கூட்டி - பண்ணோடு கூடிய இசையைச் சேர்த்து, வீணையிற் பாடி - வீணையால் பாடி, விழைவை ஊட்டி - விருப்பத்தை உண்டாக்கி, தன்வயப் படுத்த - தன்வசமாக்க, தந்திரம் கற்பித்து - உனக்குச் சூழ்ச்சி கற்பித்து,

           10 - 14. என்வயிற் ......... உரை

(இ-ள்.) என் வயிற் செலுத்தும் - என்னிடத்து அனுப்பிய, இங்கிதம் தோன்ற - குறிப்பு வெளிப்பட, இன்புறப் பாடல் பாடினை - இன்பம் உண்டாகும்படி பாடலைப் பாடினாய், கேட்டு - அதனைக் கேட்டு, ஆங்கு - அப்பொழுதே (அவன் குணமறிந்தது போல), கூடிய கொற்றவன் - என்னைக் கூடிய தலைவரது, குணம் அறிவாயோ - குணத்தை நீ அறிவையோ, மலைப் பெணை அந்தரியை - மலையரையன் புதல்வியாகிய அந்தரியை (பார்வதியை), மகிழ்வாய் - மகிழ்ச்சியோடு, மணந்தும் - கலந்தும், அலைப் பெணை - அலைகளையுடைய கங்கையை, சடையில் - சடையினிடத்து, அமைத்த தேன் - வைத்ததேன், உரை - சொல்லுவாய்,

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

73

   


           15 - 19. கம்பை ... ... தன்மை

(இ-ள்.) கம்பை நதி அயல் - கம்பை ஆற்றின் அருகே, காம நயனியாம் அம்பை - காமாட்சியாகிய அம்மையார், அருச்சனை ஆற்றல் கண்டு - வழிபாடு செய்தல் பார்த்து, அவளை உள்ளங் கலங்க - அவளை அவளது மனங் கலங்க, ஓங்கு நீர் அழைத்து - உயர்ந்த அக் கம்பாநதியில் வெள்ளத்தை அழைத்து, கள்ளப் புணர்ச்சி கலந்து - வஞ்சகமாக அவளுடன் புணர்ச்சி செய்து, வடுப் பட்டு - அவளது முலைத்தழும்பும், வளைத்தழும்பும் பொருந்தி, இன்னமும் மாறாது - இன்றும் நீங்காது, ஏய்ந்த தன்மை - பொருந்திய தன்மையை,

           20 - 24. என்னவென் ... ... பேசி

(இ-ள்.) என்ன என்று உரைப்பன் - யாதென்று சொல்லுவேன், இதுவலாது - இதுவல்லாமல், ஒரு நாள் - முன்னொரு நாள், தாரு வனஞ் செலீஇ - தாருகாவனத்திற்குச் சென்று, தாபதப் பன்னியர் - முனிவர் மனைவிமார், தெரு மரல் உற்று - மனக் கவர்ச்சியடைந்து, பரு வரல் எய்த - துன்பமடைய, கோவணம் நீத்து - ஆடை நீங்கி, தீ வண்ணம் பூத்து - சென்னிறமான மேனி அழகு சிறந்து, அம் மின்னிடையாருடன் விருப்புறப் பேசி - அந்த மின்னல் போன்ற இடையுடைய மகளிருடன் விருப்பமுறப் பேசி,

           25 - 29.  துன்னிய ... ... மயங்கேன்

(இ-ள்.) துன்னிய தன்மை - பொருந்திய தன்மை, சொல்லுந் தகைத்தோ - சொல்லுந் தன்மையதோ, வனிதையர் மயங்க (கூடலில்) - செட்டிப் பெண்கள் மயங்கும்படி, வளை கொணர்ந்து - வளைகளைக் கொண்டுவந்து விற்று, அன்று மதுரையில் - அக்காலையில் மதுரையில், வந்த வசையே சாலும் - வந்த பழியே போதும், சாலும் பாண! சாலும் பாண! - போதும் பாண! போதும் பாண!, யாதும் கேளேன் - நீ கூறும் எதனையும் கேட்க மாட்டேன், இனி யான் மயங்கேன்! - இனி நான் மயங்க மாட்டேன்!

           30 - 34.  போகென ... ... வெகுளுவர்

(இ-ள்.) போக என உரைத்தும் - போகக்கடவாய் என்று சொல்லியும், போகாய் - போகமாட்டாய், அந்தோ - ஐயோ, அன்னை அறியாது - (என்) தாய் அறியாமல், அவனை அணைந்தேன் - அத் தலைவனைச் சேர்ந்தேன், பின்னை - பிறகு, உற்றிடும் பீழை - அடைந்திடும் துன்பத்தை, நினைத்திலன் - நினைத்தேன் இல்லை, அகலுதி பாணா - (ஆதலால், இவ்விடத்து நின்றும்) அகலுவாய் பாணனே, அன்னை அறிவளேல் - தாய் அறிவாளாயின், தகரும் நின் சிரம் - நின் தலை பொடிப் பொடியாக உடையும், தமரும் வெகுளுவர் - உறவினரும் சினம் கொள்வர்,

           35 - 40. நெஞ்சில் ... ... தொண்டே

(இ-ள்.) நெஞ்சில் இட்ட - என் மனத்தில் (அவ் வஞ்சகன்) வைத்த, நெருப்பின் வெப்பினை - நெருப்பின் வெப்பத்தை, வஞ்சகன் அறிய - அவனறிய, வழுத்துவை பாணா - பாணனே சொல்லுவாயாக, மன்னனைப் புணர்ந்து - தலைவரைக் கூடி, அன்னையை மறந்தேன் - தாயை மறந்துவிட்டேன், சிறந்தனம் என்றே - சிறந்தோம் என்றே, திகைத்தேன் - மயங்கினேன், இத்துணைப் பட்டது சாலும் - இவ்வளவு அடைந்தது போதும், பாணனே - பாணனே, மடவார்க்கு - பெண்களுக்கு, இட்டதுதானே - (ஊழால்) அமைந்ததுதானே, இயலும் - பொருந்தும், பரமனை - கடவுளை, வெறுத்தலும் - வெறுப்பதிலும், வீணே - வீணான செயலே, விழைவு பொறுத்தலும் இலன் - விருப்பம் கொள்ளுதலும் இலன், இனி நல் தொண்டே புரிவன் - இனி நல்ல சிவத்தொண்டினையே செய்வேன்.

இல்லம் - (வீடு) இலம் எனத் தொகுத்தலாயிற்று.  சிலை வேட்கு அளித்த - குன்றுதோறும் ஆடுபவனாகிய முருகனுக்கு அருள் செய்த எனினுமாம். (சிலை - மலை).

மங்களை - மணமுடைய அழியாச் செல்வியினள்; உமா தேவி.

பழைய கள்வன்: ஓருடம்பிலேயே ஒருகூறாக இருக்கும் உமையையும் விட்டுப் பிரிந்து, மற்றொரு பெண்ணை (கங்கையை)க் கூடியிருக்கும் கள்வன்.

இங்கிதம்: உள்ளத்தின் கருத்தினை வெளிப்படுத்திக் குறிப்பினால் நிகழும் உறுப்பின் தொழில். கூடிய கொற்றவன் - சேர்ந்த தலைவன்.  மலைப்பெண் ஆகிய அந்தரியை (பார்வதியை).

அலைப் பெண்ணை என்பது அலைப் பெணை எனத் தொகுத்தலாயிற்று.

அம்பா என்பது, மாலா மாலை என்பதுபோல அம்பை என ஆகார ஈறு ஐகார ஈறாயிற்று.

செலீஇ - சொல்லிசை அளபெடை.

தெருமரல் - தெருமா பகுதி. “அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி” (தொல்காப்பியம், உரியியல்).

தீ வண்ணம் என்பது, தீ வணம் எனத் தொகுத்தலாயிற்று.

அன்னை என்பது அனை எனத் தொகுத்தலாயிற்று.

வஞ்சகன் - அவன் எனச் சுட்டாய் நின்றது.
“ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
... ... நமக்கு இட்டபடி என்றென்றிரு”

                                                                 -s பட்டினத்தார்.

விருப்பு வெறுப்பு அற்றுத் தொண்டு செய்வது பெரும் பயனைத் தருமென்பதுணர்ந்த தலைவி ‘செய்வனற் றொண்டே’ என்று தொண்டுபூண் டொழுகுதலில் தலைப்படலாயினாள் என்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

74

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்

     தொண்டர்க் குறவே யானாரைத்
           தூய மறைமா நிழலாரை
     அண்டர்க் கிறையா மடலாரை
           அக்கும் எலும்பும் அணிவாரைக்
     கொண்டல் வண்ணன் எண்கண்ணன்
           கூறற் கருஞ்சீர் கொண்டாரைக்
     கண்டத் துறையு  மாறுகடற்
           கடுவுண் டாரைத் துதிப்பாமே.                      (41)

(இ-ள்.) தொண்டர்க்கு - அடியவர்க்கு, உறவே ஆனாரை - உறவாக ஆனவரை, தூய - மறுவற்ற, மறைமா நிழலாரை - வேதமாகிய மாமரத்தின் நிழலில் எழுந்தருளியவரை, அண்டர்க்கு - வானவர்க்கு, இறை ஆம் - தலைவராகிய, அடலாரை - வல்லமை உடையாரை, அக்கும் எலும்பும் அணிவாரை - சங்கு மணியையும் எலும்பையும் அணிபவரை, கொண்டல் வண்ணன் - முகில் போன்ற கருநிறமுடைய திருமாலும், எண் கண்ணன் - எட்டுக் கண்களையுடைய நான்முகனும், கூறற்கு - இத்தன்மையன் என்று சொல்லுதற்கு, அருஞ் சீர் கொண்டாரை - அரிய சிறப்புக் கொண்டவரை, கண்டத்து உறையுமாறு - கழுத்தில் தங்கும்படி, கடல் கடு உண்டாரை - கடலின்கண் தோன்றிய நஞ்சை உண்டவரை, துதிப்பாமே - யாம் துதிப்போம், ஏ நெஞ்சே நீயும் வருவாயாக.

துதிப்பாம் - தன்மைப்பன்மை.

எலும்பு அணிவார்: “கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ” என்பதனாலும் அறியலாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

75

   


தூது (மேகம்)

நேரிசை வெண்பா

     கடுக்கைத் தொடைநயந்தேன் காதலுடை யார்யான்
     நடுக்கை யுறுமா நயந்தார் - கொடுக்கைக்குச்
     செல்லே! சிறந்தாய் திருக்கச்சி வாணர்பால்
     வல்லே தொடையிரந்து வா.                            (42)

(இ-ள்.)  கொடுக்கைக்கு - கொடைத் தொழிலுக்கு, செல்லே - மேகமே, சிறந்தாய் - நீ சிறப்புற்றாய், ஆதலால், திருக்கச்சி வாணர்பால் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரிடத்துச் சென்று, தொடை யிரந்து - மேலே கூறிய கொன்றைமாலையை வேண்டிப் பெற்று, வல்லே வா - விரைந்து வா.s

நடுக்கை - நடுங்குதல். நடுக்கமுறும் விதம்: கொன்றை மாலையைப் பெறாததால் துன்பம் உண்டாகும் விதம்.

கொடைத் தொழிலுக்கு உரிய மேகம்தான் கொடுத்தற்குரிய நீரைக் கடலிலிருந்துகொள்ளுந் தொழிலிலும் வல்லமையையுடையதாதல் கண்டு, இறைவன்பால் கொன்றைத் தொடையல் பெற்றுக்கொண்டுவருமாறு ஏவின நயம் பாராட்டற்குரியது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

76

   


கட்டளைக் கலித்துறை
இரந்துயிர் ஓம்பிட ஏழை மனங்கொதித் தின்னலுற
உரந்தொலைந் தோயப் பலநோய் உடற்ற உறுபசியால்
வருந்துபு மானமும் தீரமும் மங்கி மடிந்தொழிவீர்!
திரந்தரும் ஏகம்ப வாணரை நீரென்கொல் சேர்கிலிரே.                (43)

(இ-ள்.) இரந்து உயிர் ஓம்பிட - யாசித்து உயிரைப் பாதுகாக்கவும், ஏழை மனங் கொதித்து - அறியாமையை உடைய மனம் கொதிப்புண்டு, இன்ன லுற - துன்பமுறவும், உரந்தொலைந்து ஓய - வலிவு கெட்டுச் சோர்த லடையவும், பல நோய் உடற்ற - பல நோய் வருத்தவும், உறு பசியால் - மிக்க பசியினாலே, வருந்துபு - வருந்தி, மானமும் தீரமும் மங்கி - பெருமையும் ஊக்கமும் குறைந்து, மடிந்து ஒழிவீர் - இறந்து ஒழிகின்றவர்களே, திரந் தரும் - நிலைபேறான வீட்டின்பத்தினைத் தரவல்ல, ஏகம்ப வாணரை - திரு ஏகம்ப நாதரை, நீர் சேர்கிலீர் - நீர் இடைவிடாது நினைக்கமாட்டீர், என் - அதற்கு என்ன காரணம்?

மடிந்தொழிவீர் - வினையாலணையும் பெயர்; விளியாக நின்றது.

என்ன காரணத்தினால் சேரமாட்டீர் எனினுமாம்.

சேர்தல் - இடைவிடாது நினைத்தல் (தியானித்தல்). “மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்” என்ற குறளில், ‘சேர்ந்தார்’ என்ற சொற்குப் பரிமேலழகர் இடைவிடாது ‘நினைந்தார்’ என்ற பொருள் கூறியிருத்தல் காண்க.  “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” ஆதலால், இறைவன் பொருள்சேர் புகழை விரும்புவாரும், மாணடியை இடைவிடாது நினைப்பாரும் இருவினையிலிருந்து நீங்குதலுறுவாராதலால், முன்னைய பிறப்புக்களில் இறைவனை நினைவு செய்யாத குறையால் இரந்து உயிர் ஓம்புதல் முதலிய இழிதொழில்களைச் செய்ய நேர்ந்தமை கண்டு இப்பிறப்பிலாயினும் அவ்விறைவனைத் தியானம் செய்யமாட்டாது காலங்கழித்தற்குக் காரணம் என்னையோ என்று ஆசிரியர் உலகினரைப் பார்த்து இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது இப் பாட்டு.

இரந்தாயினும் உயிர் ஓம்ப வேண்டுவது அறம்.  ஆதலால், அறவொழுக்கமுடையவரும் உயிர் ஓம்புதலை மட்டும் குறித்து ‘ஈ யென இரத்தல் இழிந்தன்று’ ஆயினும், இரக்க முற்படுவாராதலால் ‘இரந்து உயிர் ஓம்பிட’ என்றும், அங்ஙனம் இரக்குங்கால் நேரும் இழிவை நினைந்து ஓரோர் காலத்துத் துன்பமுறுவராதலால், ‘ஏழை மனங் கொதித்து இன்னலுற’ என்றும், அங்ஙனம் ஏற்படும் இழிவை நினைத்து இரக்குந் தொழிலின் நீங்கிச் சிலகால் நின்றாலும், பசித்துன்பத்தால் மனவலியில்லாது போவாராதலால் ‘உரந் தொலைந்து ஓய’ என்றும், அங்ஙனம் மனவலியும் உடல் வலியும் குறைதலால் பல நோய் உண்டாகி வருத்துமாதலால் ‘பலநோய் உடற்ற’ என்றும், அங்ஙனம் பசித்துன்பம் ஏற்படும்போது “பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்” என்னும் பழமொழிப்படி மானம், நெஞ்சின் திட்பம் யாவும் இழப்பாராதலால் ‘மானமும் மனத்திண்மையும் மங்கி, என்றும், அங்ஙனம் பசித்துன்பத்திற்கு அஞ்சி, மானம் மனவுறுதி யாவும் விடுத்து உடலைப் பேணினும் அவ்வுடல் ஒருநாள் இறந்தொழியுமே யன்றி, நிலையாக நில்லாது; ஆதலால், ‘மடிந்தொழிவீர்’ என்றும், நில்லாத வுடல்கொண்டு நிலைபேறுடைய வீட்டின்பம் பெறுவதே மக்களுடம்பு எடுத்தார் மேற்கொள்ளத்தகுவதாதலின் ‘திரந்தரும் ஏகம்பவாணரை நீரென்கொல் சேர்கிலீரே’ என்றும் முறையாகக் கூறியிருக்கும் நயம் பாராட்டத்தக்கது.

‘சேர்கிலீர்’ என்ற சொல்லில், ‘கில்’ ஆற்றலுணர்த்தும் இடைச்சொல்.  இழிதொழில்களை யெல்லாம் செய்யும் ஆற்றலுடைய நீர், உயர் தொழிலாகிய இறைவனை நினைத்தற்கு ஆற்றல் ஏன் இல்லாதிருக்கின்றீர்? அங்ஙனம் இல்லாதிருப்பதற்கு வாயில் உங்கள் அறியாமையே யன்றி வேறின்று.

‘என்கொல்’ என்றதில், கொல் அசைநிலை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

77

   


தூது (நெஞ்சு)

நேரிசை வெண்பா

     என்னெஞ் சினுமினியார் இல்லையென எண்ணியதைத்
     துன்னற் கருங்கச்சித் தூயவர்பால் - இன்னலறப்
     பூங்கொன்றைத் தாரிரக்கப் போதி யெனவிடுத்தேன்
     தீங்கொன்றைச் சூழ்ந்திலா தேன்.                        (44)

(இ-ள்.) என்னெஞ்சினும் - என் நெஞ்சைக் காட்டிலும், இனியார் - எனக்கு இனிமையைச் செய்பவர், இல்லை என எண்ணி - இல்லை என்று நினைந்து, அதை - அந்த நெஞ்சினை, துன்னற்கு அரு - நெருங்குதற்கரிய, கச்சித் தூயவர்பால் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய குற்றமற்ற நற்றிறம் உற்றாராகிய ஏகாம்பரநாதரிடத்து, இன்னல் அற - எனது துன்பம் ஒழிய, கொன்றை பூ தார் - கொன்றைப் பூவால் ஆகிய மாலையை, இரக்கப் போதியென - பணிந்து வாங்கி வரப்போவாய் என்று, தீங்கு ஒன்றைச் சூழ்ந்திலாதேன் - அங்ஙனம் அனுப்புவதால் வரும் தீங்கு ஒன்றையும் ஆராய்ந்தறியாத யான், விடுத்தேன் - அதனை அனுப்பினேன் (என் அறியாமை இருந்தவாறு என்னே!)

கொன்றை மாலை: திருவரங்கக் கலம்பகம் (24) நோக்குக.

‘இன்னல் அற’ என்றது, தலைவனைப் பிரிந்து வருந்தி நின்ற தலைவிக்கு அத்தலைவன் அணியும் மாலையைப் பெற்று அணிவதால் வருத்தம் தீரும் ஆதலால், அவ் வருத்தம் அற என்றவாறு.

‘ஒன்று’ என்ற இனைத்தென்றறி பொருளில் வந்த எண்ணுப் பெயர் வினைப்படுத்து உரைக்குங்கால் பெறுதற்குரிய உம்மை, விகாரத்தால் தொக்குநின்றது.  அதனை விரித்துரைத்துக் கொள்க.

அத் தீங்கு யாதெனில்: நெஞ்சானது பெருமானிடத்திலேயே பதிந்து விடும்; திரும்பி வாராது என்பது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

78

   


கலிநிலைத்துறை
ஒன்று சூழின்வே றொன்றுமுந் துறவுணர் வுலைந்து
பின்றை எய்திடும் பெற்றியுய்த் துணர்கிலாப் பேயேன்
என்று நின்னரு ளிருங்கடல் குளிப்பதென் அரசே!
மன்றி லாடிய குழகமா நீழல்வாழ் மணியே!                   (45)

(இ-ள்.) ஒன்று சூழின் - ஒன்றை நினைக்கின், வேறொன்று முந்துற - வேறொன்று முற்பட்டு வர, உணர்வு உலைந்து - அறிவு கெட்டு, பின்றை எய்திடும் பெற்றி - பிறகு அடையும் தன்மையை; உய்த்து உணர்கிலா - ஆராய்ந்தறியமாட்டாத, பேயேன் - பேயேனாகிய யான், என் அரசே - எனது இறைவனே, மன்றில் ஆடிய குழக - பொன்னம்பலத்தில் நடனம் ஆடிய குழகனே!, மா நீழல் வாழ் மணியே - மாமரத்தின் நீழலில் வாழ்கின்ற விலையில் மணியே!, நின் அருள் இருங் கடல் - நினது அருளாகிய பெரிய கடலில், குளிப்பது என்று - குளிப்பது என்றைக்கு?

ஒன்று: எண்ணல் அளவை ஆகுபெயர்.

குழகன் - இளமை யழகுடையவன். “மழவும் குழவும் இளமைப் பொருள” (தொல்காப்பியம், உரியியல்.)

உலைந்து - கெட்டு.

என் அரசே! மன்றிலாடிய மணியே! குழக! மாநீழல் மாமணியே! நின் அருள் இருங் கடல் குளிப்பது என்று என இயைக்க. ‘உணர்கிலாத’ என்பது ‘உணர்கிலா’ எனத் தொக்கு நின்றது தொகுத்தல் விகாரம். ‘கில்’ ஆற்றலுணர்த்தும் இடை நிலை.

நின் அருள் இருங்கடலில் குளிப்பது என்றது, நின் அருளை முழுவதும் பெறுவது என்றவாறு.

‘அரசு’ - சொல்லால் அஃறிணை; பொருளால் உயர்திணை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

79

   


வஞ்சித்துறை

மாநீழல் நல்லார்
ஆனேறு தொல்லார்
தேனேறு சொல்லார்
வானேறு கல்லார்.                          (46)

 

(இ-ள்.) மா நீழல் நல்லார் - மாமரத்தின் நிழலின்கண் எழுந்தருளிய நற்குண நற்செய்கையை உடையாரே, ஆன் ஏறு தொல்லார் - காளையை ஊர்தியாகக்கொண்டு ஏறுகின்ற பழைமையானவரும், தேனேறு சொல்லார் - தேன்போலும் இனிமை பொருந்திய சொற்களை உடையவரும், வானேறு கல்லார் - வானளவும் ஓங்கிய (வெள்ளி) மலையை உடையவரும் ஆவர்.

கச்சியம்பதியில் மாமரத்தின் நிழலில் கோயில்கொண்டு எழுந்தருளியவரே, காளையை ஊர்தியாகக்கொண்டு இன்சொல் கூறி அடியாரை மகிழ்விக்கும் கயிலையெம்பெருமான் ஆவார் என்பது கருத்து.


   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

80

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்

    கல்லாலின் கீழிருந்து கலைவிரித்துப் புணர்வளித்த
           கள்வ னார்க்குச்
     சொல்லாலா யிரமுகமன் கூறுவையக் கச்சியர்க்குச்
           சுகுணம் உண்டேல்
     வில்லாரும் புயவிதழி விரும்புவையின் றேலின்றே
           விழையப் பெற்றாள்
     அல்லோடக் கண்டவிட மாயும்வகை அறிவளென
           அறைதி மாதே.                    (47)

(இ-ள்.) கல்லாலின் கீழ் இருந்து - கல்லாலமரத்தின் கீழே தங்கி, கலை விரித்து - சிவம் ஞானம் போதம் என்பவற்றினை விரித்து விளக்கி, புணர்வு அளித்த கள்வனார்க்கு - (ஆன்மா கடவுளோடு இரண்டறக்) கலத்தலாகிய நன்னெறியை அளித்த, கள்வனார்க்கு - இன்னதன்மையர் என்று சுட்டி உணரப்படாதவருக்கு, சொல்லால் - சொற்களால், ஆயிர முகமன் கூறுவை-  பல பணிமொழிகளைச் சொல்லுவாய், அக் கச்சியர்க்கு - அக் கச்சியம்பதியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதருக்கு, சுகுணம் உண்டேல் - நற்குணம் உண்டானால், வில்லாரும் புயம் - ஒளிவாய்ந்த புயத்திலணிந்த, இதழி விரும்புவை - கொன்றை மாலையைத் தருமாறு வேண்டிப் பெறுவாய், இன்றேல் - (சிவபிரான் தாம் அணிந்த கொன்றைமாலையைத் தருவது) இல்லையாயின், விழையப் பெற்றாள் - சிவபிரானால் விரும்பப்பட்ட தலைவி, அல் ஓடக் கண்ட விடம் - இருளானது தோற்று ஓடும்படி செய்த நஞ்சால், மாயும் வகை - இறக்கும் வகையை, இன்றே அறிவள் என - இப்பொழுதே அறிவாளென்று, மாதே - தோழியே!, அறைதி - அவரிடத்துச் சொல்லுவாய்.

அல் ஓடு - இருளும் நஞ்சின் கருநிறத்தைக் கண்டு அஞ்சி ஓடும்படியான.

கண்ட விடம் ஆயும் வகை எனப் பிரித்துக் கழுத்தின்கண் நஞ்சு தங்கிய வரலாற்றை ஆயும் வகை அறிவளென அறைதி என்று கூறலுமாம்.

தம்மால் அன்றிப் பிறவகையால் பிறர்க்கு உண்டான துன்பத்தினை நீக்குவதற்குத் தமக்கு வரும் தீங்கினையும் கருதாது நஞ்சு உண்டவர், தம்மால் உண்டாக்கப்பட்ட தலைவியின் உயிர் நீக்கத்தைத் தடுக்காமலிருந்தால் தகுதியோ எனப் பலர் அறியக் கூறி வா என்று தோழியைத் தலைவனிடம் தூது அனுப்புவதாக அமைந்துள்ளது இப் பாடல்.  வில் - ஒளி. திருவில்லிட்டுத் திகழ்தரு மேனியள் என்பது மணிமேகலை. ‘மாதே! முகமன் கூறித் தலைவனை அழைத்து வா; வாராதொழியின், அவன் தோளிலணியும் மாலையைப் பெற்று வா. அம்மாலையும் தர இயையானாயின், தலைவி ‘இறப்பாள்!’ என்பதைக் கூறி வா’ என்று தனக்குத் தலைவன்பால் உள்ள அன்பு மிகுதியையும் பிரிவாற்றாமையையும் தலைவி உணர்த்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது காண்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

81

   


நேரிசைச் சிந்தியல் வெண்பா

மாவுடையான் வெள்ளி மலையுடையான் எண்டிசையாம்
தூவுடையான் நால்வேதச் சொல்லுடையான் - தாவிலறச்
சேவுடையான் எங்கள் குலத் தே.                        (48)

 

(இ-ள்.) மா வுடையான் - மாமரத்தின் நிழலை இருப்பிடமாக உடையவன், வெள்ளி மலையுடையான் - கயிலைமலையை இருப்பிடமாக உடையவன், எண் திசையாம் - எட்டுத் திக்குகளாகிய, தூ உடையான் - தூய உடையை உடையவன், நால்வேதச் சொல்லுடையான் - நான்கு மறைகளாகிய சொற்களை உடையவன், தா இல் அறம் சேவுடையான் - கெடுதலில்லாத தரும விடையை உடையவன், (யாவனெனில்), எங்கள் குலம் தே - எங்கள் குலத் தெய்வம்.

தூய்மை உடை - தூ உடை; உடை - ஆடை.

மாவுடையான், மலையுடையான், தூவுடையான், சொல்லுடையான், சேவுடையான் என ஒரு பொருள் பல பெயர் வந்தடுக்கித் ‘தே’ என ஒரு பெயர்கொண்டு முடிந்தன.

     “தாவே வருத்தமும் கேடும் ஆகும்” என்பது (தொல்காப்பியம், உரியியல்.)

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

82

   


ஊசல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

தேவார முதலியவைந் துறுப்பும் வாழச்
           சிறந்தமறை ஆகமங்கள் செழித்து வாழத்
     தாவாத சித்தாந்த சைவம் வாழச்
           சந்தவரைச் செந்தமிழ்நூல் தழைத்து வாழ
     நாவாரும் புகழ்க்கச்சி நகரிற் காம
           நயனியொடு முறையிறைசீர் நன்கு பாடிப்
     பூவாரு மலர்விழியீர்! ஆடீர் ஊசல்
           புத்தமுத நிகர்மொழியீர்! ஆடீர் ஊசல்.           (49)

(இ-ள்.) தேவாரம் முதலிய - தேவாரம் முதலிய, ஐந்து உறுப்பும் வாழ - ஐந்து அங்கங்களும் வாழவும், சிறந்த மறை ஆகமங்கள் - சிறந்த நான்கு வேதங்களும் இருபத்தெட்டு ஆகமங்களும், செழித்து வாழ - செழிப்புற்று வாழவும், தாவாத - புறச்சமய வழக்குகளால் கெடுதல் இல்லாத, சித்தாந்த சைவம் வாழ - சித்தாந்தம் என்னும் பெருநெறியால் தழுவப்பெற்ற சைவசமயம் வாழவும், சந்த வரைச் செந்தமிழ் நூல் - சந்தன மரங்கள் நிறைந்த பொதிய மலையில் அகத்தியரால் வளர்க்கப்பட்ட செந்தமிழ்  மொழி, தழைத்து வாழ - செழிப்படைந்து வாழவும், நா ஆரும் - புலவர் நாக்களில் பொருந்திய, புகழ் - புகழையுடைய, கச்சி நகரில் - கச்சி நகரில் எழுந்தருளிய, காம நயனியொடு - காமாட்சியாரோடு, முறை இறை - முறையாக எழுந்தருளிய ஏகாம்பரநாதரது, சீர் நன்கு பாடி - சிறப்பை நன்றாகப் பாடி, பூ ஆரும் மலர் விழியீர் - அழகுபொருந்திய தாமரை மலர்களைப் போன்ற கண்களை உடையவரே, ஆடீர் ஊசல் - ஊசலாடுவீர், புத்தமுதம் நிகர் - புதிய அமிர்தத்தை ஒத்த, மொழியீர் - சொற்களை உடையவர்களே, ஆடீர் ஊசல் - ஊசலாடுவீர்.

புதுமை அமுதம் - புத்தமுதம்.

தேவாரம் முதலிய ஐந்துறுப்பும் வாழ என்றது, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருத்தொண்டர் புராணம் என்னும் ஐந்துறுப்புக்களும் வாழ என்றவாறு.

சைவர், தாம் நாடோறும் செய்யும் பூசைக்காலத்துப் பன்னிரண்டு திருமுறைகளுள் இவ்வைந்துறுப்புக்களை மனப்பாடம் செய்வாராதல்பற்றி ‘ஐந்துறுப்பும் வாழ’ என்றார்.

     ‘ஆடுவீர்’ என்பது, ‘ஆடீர்’ என மருவிநின்றது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

83

   


மதங்கி

அறுசீர் ஆசிரிய விருத்தம்

    ஆடரவம் அரைக்கசைத்த அமலர் திருக் கச்சிமறு
           காடி மைந்தர்
     ஊடுருவு பிணைவிழியோ டிணைவாளும்
           ஓச்சிவரும் ஒரும தங்கீர்!
     நாடவரும் இவைக்கிலக்கம் யாதோநும் மொழியமுத
           நல்கீர் விண்ணோர்
     பாடமையப் பயவாரி கடைந்துகரம் வருந்தியதென்
           பண்டு தானே.                   (50)

(இ-ள்.) ஆடு அரவம் -படம் எடுத்து ஆடுகின்ற பாம்பை, அரைக்கு அசைத்த - அரையில் கச்சாகக் கட்டிய, அமலர் - தூயோராகிய சிவபெருமான் எழுந்தருளிய, திருக்கச்சி மறுகு - அழகிய காஞ்சிபுரத்தின் தெருவில், ஆடி - அசைந்து, மைந்தர் ஊடு உருவு - ஆடவரது (உள்ளத்தை) உள் துளைத்துக்கொண்டு செல்லும், பிணை விழியோடு - பெண்மான் கண்போன்ற கண்களுடன், இணை வாளும் - இரண்டு வாள்களையும், ஓச்சி வரும் - வீசி வரும், ஒரு மதங்கீர் - ஒப்பற்ற மதங்கீர், இவை - இவைகள், நாட வரும் - நாடும்படி வருகின்ற, இலக்கம் யாதோ - கருத்து (குறிக்கோள்; உட்கிடை) யாதோ, நும் மொழி அமுதம் நல்கீர் - நும் சொற்களாகிய அமிர்தத்தைக் கொடுப்பீர் (சொல்லுவீர்), விண்ணோர் - தேவர்கள், பாடு அமைய - (மெய்) வருத்தம் பொருந்த, பய வாரி - திருப்பாற்கடலை, கடைந்து - கடைந்து, பண்டு - முற்காலத்தில், கரம் வருந்திய தென் - கை வருந்தியது என்ன காரணம்.

அசைத்த - சாத்திய (தொல். சொல். 250, சேனா.)

“புலித்தோலை அரைக்கு அசைத்து” (சுந். தேவா.)

இலக்கம் - குறிப்பொருள் (இலக்க முடம்பிடும்பைக்கு. குறள், 627.)

பாடு அமைய - பெருமையடைய எனவுமாம்.

பயவாரி: பயம் - பால்; வாரி - கடல்.

திருப்பாற்கடலைக் கடைந்து கை வருந்தியது எதற்கு? அமுதம் பெறுவதற்காக உன் மொழி யமுதம் விண்ணோர் பெற்றிருப்பரேல், அவ்வாறு  கடல் கடைந்து வருந்தியிரார்.  தான், ஏ - அசை.

 


முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

84


இடைச்சியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

பண்டுமலை கொண்டுபயோ தரத்திகலை வென்றிடுமைம்
           படையா னுக்கு
மண்டுபயோ தரகிரியைக் காணிக்கை இட்டீரால்
           வள்ளல் கச்சிக்
கண்டயங்கும் இடைச்சியீர்! ஆடைநீக் காதுருசி
           காண்பின் என்பீர்
கொண்டவளை உருக்காமே கொளஇணங்கீர் ததியெண்ணீர்
           நயமோர் விற்றே.                    (51)

(இ-ள்.) பண்டு - முற்காலத்து, மலை கொண்டு - மந்தர மலையைக்கொண்டு, பயோதரத்து - பாலைக்கொண்டதாகிய கடலின், இகலை வென்றிடும் - வலிமையை வெற்றிகொள்ளும், ஐம்படையானுக்கு - ஐந்து போர்க்கருவிகளையுடைய திருமாலுக்கு (கண்ணனுக்கு), மண்டு - நெருங்கிய, பயோதர கிரியை - பாலைக் கொண்ட முலையாகிய மலையை, காணிக்கை இட்டீர் - காணிக்கையாகக் கொடுத்தீர், வள்ளல் கச்சிக்கண் - வரையாது கொடுக்கும் வள்ளலாகிய ஏகாம்பரநாதர் எழுந்தருளிய காஞ்சியினிடத்து, தயங்கும் இடைச்சியீர் - விளங்குகின்ற இடைச்சியாரே, ஆடை நீக்காது - பால் முதலியவற்றின் உண்டாகும் ஏட்டினை எடுத்து விடாமல், ருசி காண்மின் என்பீர் - பாலின் முழுத்த சுவையைத் துய்த்துப் பாருங்கள் என்பீர், கொண்ட அளை - கொண்ட வெண்ணெயை, உருக்காமே கொள - உருக்காமலே நாங்கள் கொள்ள, இணங்கீர் - சம்மதிப்பீர், நயம் மோர் விற்று - நயமான மோரை விற்று, ததி யெண்ணீர் - (மிக்க பொருள் தரும்) தயிரைக் கருதமாட்டீர் (நும் இயல்பு இருந்தவாறு என்னே!)

இட்டீர் - விரும்பிக்கொடுக்கும் பொருளாகக் கொடுத்தீர்; உங்கள் முலைநலம் கண்ணன் துய்க்க இடங்கொடுத்தீர்.

‘ஆடை நீக்காது உருசி காண்மின் என்பீர்’ என்பதற்குச் ‘சேலையை நீக்காமல் புணர்ச்சி இன்பச் சுவை பார்ப்பீர்’ என்பது போக்குரை.

கொண்ட வளை உரு காமே கொள இணங்கீர் - நிறையைக் கவர்ந்து கொள்ள, அதனால் வளையல்களின் (கழன்றிருக்கும்) உருவத்தால் கா(ம)மே மேலிட, (புணர்வதற்கு) இணங்க மாட்டீர்.

சிறிது இச்சையை ஊட்டி முற்றிலும் அதனை நிறைவேற்ற மாட்டீர்.

நயம் மோர் விற்று ததி எண்ணீர் - நயமாக மோரை விற்றுத் தயிரை விற்க எண்ணாமல் இருக்கின்றீர்.

ததி எண்ணீர் - சமயம் கருதமாட்டீர்.

உங்கள் நயம் ஓர் விற்று - உங்கள் நயப்புத்தன்மை ஆராயத் தக்கது.

கொண்ட அளை உருக்காமே கொள இணங்கீர் - கொண்ட அளை (வெண்ணெயை) உருக்காமல் நாங்கள் வாங்கிக்கொள்ள இணங்கமாட்டீர்,

ஐம்படை - சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்பன,

பயோதரம் - பாற்கடல், முலை.

பயோதர கிரி - பாற்கடலில் கிடத்திய மந்தரமலை; முலையாகிய மலை.

ஆடை - பாலேடு; துகில்; புடைவை. வளை - வளையல்.

 

முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

85

   


தூது (வண்டு)

நேரிசை வெண்பா

ஓர்காற் செலினறுகால் உற்றனையென் பார்வளமை
ஆர்காஞ்சி மேய அமலர்திரு - மார்பாருந்
தாராய கொன்றை தரச்சேறி வண்டே! யான்
பேராத இன்பம் பெற.               (52)

(இ-ள்.) வண்டே! ஓர்கால் செலின் - (நீ) ஒரு தடவை தூது சென்றால், அறு கால் உற்றனை என்பார் - கண்டோர்கள் ஆறு தடவை தூது சென்றாய் என்பார்கள், (ஆதலால்) வளமை ஆர் காஞ்சி மேய - வளம்பொருந்திய காஞ்சி நகரத்தில் எழுந்தருளிய, அமலர் திரு மார்பு ஆரும் - தூயவரான ஏகாம்பரநாதரது அழகிய மார்பில் பொருந்திய, தாராய கொன்றை தர - மாலையாக உள்ள கொன்றையைத் தரவும், யான் பேராத இன்பம் பெற - நான் நீங்காத இன்பத்தை அடையவும், சேறி - செல்லுவாய்.

‘அறு கால் உற்றனை என்பார்’ என்பதற்கு, ஆறு கால்களை அடைந்தனை என்பதே நேர் பொருள்.

ஆறு கால்களை உடையது வண்டு (அறுகாற் சிறு பறவை).

ஒரு தடவை தூது சென்றால், கண்டோர்கள், நீ ஆறு தடவை தூது சென்றாய் என்பார்கள் என்பது போக்குரை, வண்டே! யான் பேராத இன்பம் பெற, கொன்றை தரச் சேறி எனவுமாம்.

சேறி - செல்லுதி (போவாய்). பெற - காரியப்பொருட்டு.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

86

   


எண்சீர் ஆசிரிய விருத்தம்

     பெரியானைப் பேரின்ப நிறைவீட் டானைப்
           பிறைமதியம் பிறங்குசடா தரனை யார்க்கும்
     அரியானை அடலவுணர் புரநீ றாக்க
           அழலூற்று நகையானை அரனை வேழ
     வுரியானைத் திருக்கச்சி யுடையான் றன்னை
           உன்னரிய குணநிதியை ஒப்பில் வேதப்
     பரியானை அகநிறுவித் துதிப்பார் அன்றே
           பவத்துவக்கைப் பாற்றுறுமா டவர்க ளாவார்.       (53)

(இ-ள்.)  பெரியானை - பெருமை உடையவனை, பேரின்ப நிறைவீட் டானை - பேரின்பம் நிறைந்த வீட்டுலகத்தை உடையவனை, பிறை மதியம் - பிறைத்திங்கள், பிறங்கு - விளங்குகின்ற சடாதரனை - சடையைத் தரித்தவனை, யார்க்கும் அரியானை - எத்தன்மையர்க்கும் அருமை உடையவனை, அடல் அவுணர் புரம் - வலிமை பொருந்திய அவுணர்களாகிய திரிபுராதிகளுடைய முப்புரம், நீறாக்க - சாம்பலாகும்படி, அழல் ஊற்று நகையானை - தீச்சொரிகின்ற சிரிப்பை உடையவனை, அரனை - அரன் என்னும் திருநாமத்தை உடையவனை, வேழ உரியானை, யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனை, திருக்கச்சி யுடையான் தன்னை - அழகிய காஞ்சிநகரத்தை இருப்பிடமாக உடையவனை, உன்னரிய - நினைத்தற்கரிய, குண நிதியை - எண் குணங்களுக்கு உறைவிடமானவனை, ஒப்பில் - ஒப்பில்லாத, வேதப் பரியானை - மறைகளாகிய குதிரைகளைக் கொண்டவனை, அகம் நிறுவி - மனத்தில் நிறுத்தி, துதிப்பார் அன்றே - துதிப்பவர் அல்லவா, பவத் துவக்கை - பிறவிச் சங்கிலியை, பாற்றுறும் - அழிவுறு தலைச்செய்யும், ஆடவர்களாவார் - ஆண்தன்மையுடைய மக்களாவார்கள்.

அரன் - பெரியானை முதலிய ஒரு பொருள் வந்த பல பெயரடுக்கித் ‘துதிப்பார்’ என்ற ஒருவினைகொண்டு முடிந்தன.

“ஒரு பொருள் பலபெயர் வரின், இறுதி ஒருவினை கொடுப்பர்” என்பது நன்னூல்.

சிற்றின்பத்திற்கு மறுதலை என்பார், ‘பேரின்பம்’ என்றார்.

மக்கள் வாழும் வீடு சிற்றின்பமும் பெருந்துன்பமும் நிறைந்ததாதலால், பேரின்பம் நிறை வீடு என்றது, புத்தேள் உலகத்தை.

பிறை மதியம் என்றவிடத்து, அம் சாரியை.

அரன் - உள்ளத்துறவுடையாரின் வினைகளை அழித்தருளுபவன்.

வேதங்களைக் குதிரையாகக்கொண்டது.

திரிபுரம் எரித்தபோது உலகமே தேராக அமைய, அதில் பூட்டப்பெறுங் குதிரைகளாக வேதங்கள் அமைந்தன என்னும் கதையை உட்கொண்டது.

பவத்துவக்கு - பிறவிக்கட்டு ஆம்; பிறவித் தளை.

ஆடவர்களின் இலக்கணம் இஃது என்று உணர்த்துவது போன்று இப்பாடல் அமைந்திருக்கும் நயம் போற்றத்தக்கது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

87

   


வெறி விலக்கு

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     ஆடவரும் பெண்மைவிரும் பபிராமர்க் கணங்குற்ற
           அறிவி லேனைச்
     சாடவருஞ் சிறுகாலுந் தழன்மதியுஞ் சாகரத்தின்
           ஒலியு நெஞ்சம்
     வாடவரு மலர்க்கணையும் மறிவீய இரிந்திடுமோ!
           வனசத் தானுந்
     தேடவரும் ஏகம்பர் தாமத்தைக் கொணர்வீரேல்
           தேறு வேனே.          (54)

(இ-ள்.) ஆடவரும் - ஆண் மக்களும், பெண்மை விரும்பு - பெண்ணாய் இருக்கும் தன்மையை விரும்பும், அபிராமர்க்கு - அழகுடைய ஏகாம்பரநாதரிடத்து, அணங்குற்ற அறிவிலேனை - ஆசையுற்றுத் துன்பமடைந்த அறிவில்லேனாகிய என்னை, சாடவரும் - கொல்ல வரும், சிறு காலும் - தென்றற்காற்றும், தழன் மதியும் - நெருப்பின் வடிவமான நிறை மதியமும், சாகரத்தின் ஒலியும் - கடலின் (ஓயாத) ஓசையும், நெஞ்சம் வாட வரும் - மனம் வாடுமாறு வருகின்ற, மலர் கணையும் - (மதன் எய்யும்) மலராகிய அம்புகளும், (ஆகிய இவை) மறி வீய - ஆட்டுக்கடாவைப் பலிகொடுத்து அதனை இறக்கச் செய்தலால், இரிந்திடுமோ - நீங்கி விடுமோ (நீங்கா), வனசத்தானும் - (திருமாலன்றிப்) பிரமனும், தேட அரு - தேடுதற்கரிய, ஏகம்பர் தாமத்தை - ஏகம்பநாதரது தோளில் உள்ள கொன்றை மாலையை, கொணர் வீரேல் - கொண்டு வருவீராயின், தேறுவேன் - இவையெல்லாம் கெட்டோடும்; (யான்) தெளிவடைவேன்.

ஆட்டுக் கிடாயைப் பலி கொடுத்தலால், இவையெல்லாம் (தென்றல், தழல் மதி, கடல் ஓசை, மலர்க்கணை) நீங்கி விடுமோ? நீங்கா.  இவை நீங்குதற்கு உரிய பொருள் ஏகம்பர் கொன்றை மாலை (தாமம்). ஆண் மக்களும் ஏகம்பர் என்னும் தலைவரைக் கண்ட காலத்து, அவரது பேரழகைக் கண்டு அதில் ஈடுபட்டு அதனைக் துய்ப்பதற்குப் பெண்மைத் தன்மை அடைந்தால் நல முறலாம் என்று பாராட்டும்படியான சிறப்புவாய்ந்த அழகுடையார் தலைவர் என்க.  அத்தகையார்மீது ஆசை கொண்டேன். நமக்குக் கிட்டாதது என்று உணராமையால் ‘அறிவிலேன்’ என்றாள்.  ‘ஆடவர் பெண்மையை அவாவுந் தோளினான்’ கம்பராமாயணம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

88

   

கட்டளைக் கலித்துறை

   தேறா மனத்தைத் திருப்பித் தெளிவுறச் செய்துபின்னர்
   ஆறாத மும்மை மலப்பிணி நீங்கநல் லாற்றினுய்ப்பர்
   மாறா வளக்கச்சி மாநிழ லாரு வணன்றனக்குப்
   பாறா தரவம் அணிந்தவர் பேரருள் பாடுதுமே.                   (55)

(இ-ள்.) மாறா வளம் கச்சி - மாறுபடாத வளங்களையுடைய காஞ்சி நகரத்தில், மா நிழலார் - மாமரத்தின் நிழலில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரும், தேறா மனத்தை - தெளியாத என் மனத்தை, திருப்பி - (பொறி வழிகளில் செல்லாவண்ணம்) திருப்பி, தெளிவுறச் செய்து - தெளிவு அடையச் செய்து, பின்னர் - பிறகு, ஆறாத - நீங்காத, மும்மை மலப் பிணி - ஆணவம், மாயை, கன்மம் என்னும் மூன்றாகிய மலநோய், நீங்க - ஒழியும்படி செய்து, நல் ஆற்றி னுய்ப்பர் - நல்ல வழியில் செலுத்துபவரும், உவணன் தனக்கு - கருடனுக்கு, பாறாது - அழிவு அடையாதபடி, அரவம் அணிந்தவர் - பாம்பை அணிந்தவருமான சிவபெருமானது, பேரருள் பாடுதும் - பெருமை வாய்ந்த அருளைப் பாடுவோம்.

சிவபிரான் அணிந்த பாம்பு கருடனுக்கு அஞ்சாது.  சிவபிரான் சடையில் இருக்கும் பாம்பு ‘ஏன் கருடா நலமா?’ என்று கேட்கும் என்பது பழமொழி. (காஞ்சிப்புராணம், மணிகண்டீச்சரப்படலம்.)

“பலியேல் - கடவுள் அவிர்சடை கட்செவி அஞ்சாதே, படர்சிறைஅப் புள்ளரசைப் பார்த்து” என்பது நோக்குக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

89

   

கட்டளைக் கலிப்பா

     பயன்றரு கச்சிவாழ்
           பண்ண வன்னடிப் பத்தியில் பாவிகாள்!
     கூடு விட்டுயிர்  தொன்றையுங்
           கொண்டு லாமையை உன்னிலீர்;
     வீடு கட்டுவீர்; வெள்ளிபொன் ஈட்டுவீர்;
           வேண்டு நன்மணி ஆடையும் பூணுவீர்;
     ஏடு கட்டிய பால்தயிர் உண்ணுவீர்;
           எப்ப டிப்பெறு வீர்பொற்ப தத்தையே.             (56)

பட்டும் - வருத்தப் பட்டும், பயன் தரு - பயனைக் கொடுக்கின்ற, கச்சி வாழ் - காஞ்சியில் வாழ்கின்ற, பண்ணவன் - அண்ணலென எண்ணுங் கடவுளது, அடி - திருவடியினிடத்து, பத்தி இல் - காதல் இல்லாத, பாவிகாள் - பாவிகளே!, கூடு விட்டு - உடம்பை விட்டு, உயிர் போம் பொழுது - உயிர் நீங்கும் காலத்து, ஒன்றையும் - ஒரு பொருளையும், கொண்டு  இலாமையை - உங்களுடன் கொண்டு  இல்லாமையை, உன்னிலீர் - நினையீர், வீடு கட்டுவீர் - வீட்டைக் கட்டுவீர், வெள்ளி பொன் ஈட்டுவீர் - வெள்ளியையும்  தேடிக் குவிப்பீர், வேண்டு நன் மணி ஆடையும் - வேண்டும் வயிரக் கலன்களையும் ஆடையையும், பூணுவீர் - அணிவீர், ஏடு கட்டிய - ஏடு பொருந்திய, பால் தயிர் உண்ணுவீர் - பாலும் தயிரும் உண்பீர், (இங்ஙனம் வாழ்நாளை வீணாளாகப் போக்குவீராயின்)  பதத்தை - அவ் வேகாம்பரநாதரது அழகிய திருவடிப்பேற்றை, எப்படிப் - எப்படி அடைவீர்?

பண்ணவன் - கடவுள். (பண்ணவன் - எண்குணன்; சிலப். 10:108).

என்றது, சிறந்த வீட்டை.

வீடு - விருப்புக்களைக் கொடுக்கும் பற்றுக்களினின்று விடுதலை பெற்று இளைப்பாறும் இறைவன் அருள் நீழல்.

ஒன்று - ஆகுபெயர். நன்மணி என்றவிடத்து எண்ணும்மை விகாரத்தாற்

மணி - ஆகுபெயர்.

''பண்ணவன் னடி’ என்றவிடத்து, னகரம் விரித்தல் விகாரம்.

“கூடுவிட் டிங்கு ஆவிதான்  பின்பு” (வாக்குண்டாம்). கூடு - உடல்.

வருத்தப்பட்டும் பயன் தரும் இறைவனடிப்பேற்றை விரும்பாது பயன் தாராத நுகர்ச்சிப் பொருள்களையே விரும்பும் அறியாமை என்னே என்பது கருத்து.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

90

   

கட்டளைக் கலித்துறை

     பதஞ்சேர்த்துப் பாடியென்? பாசத் தொடர்ப்பட்டுப்
                 பாவையரிங்
     கிதஞ்சேர்த்துக் கொஞ்ச மயங்கி இடர்ப்பட்
                 டிரங்குவனங்
     கதஞ்சேர்த் தரைக்கசைத் தாய்கச்சி வாண!
                 கடையனெந்த
     விதஞ்சேர்தல் நின்பதம் தாயனை யாய்கதி
                 வேறிலையே.       (57)

(இ-ள்.) பதம் சேர்த்துப் பாடி - மொழிகளை ஒன்று சேர்த்துப் பாடினால், என் - என்ன பயன்?, பாசத் தொடர்பட்டு - உலகப்பற்றுக்களாகிய தொடரில் அகப்பட்டு, பாவையர் - பெண்கள், இங்கிதஞ் சேர்த்து - தங்கள் எண்ணக் குறிப்புப் பொருத்தி, கொஞ்ச - கொஞ்சுதலால், மயங்கி - மயக்கமுற்று, இடர்ப்பட்டு - துன்பப்பட்டு, இரங்குவன் - வருந்துவேன், அங்கதம் சேர்த்து - பாம்புகளை ஒன்றாகச் சேர்த்து, அரைக்கு அசைத்தாய் - அரையின்கண் கச்சாகக் கட்டினவனே!, கச்சிவாண - கச்சியின்கண் வாழ்பவனே!, கடையன் - கீழ்மகனாகிய யான், நின் பதம் - நின் திருவடிகளை, எந்தவிதம் சேர்தல் - எந்தவிதம் அடைதலாகும்?, தாயனையாய் - அன்னையை ஒத்தவனே!, கதி வேறிலை - நின்னை யன்றி எனக்கு வேறு கதியில்லை.

நெஞ்சு உண்மைவழிச் சார்தலின்றிச் சொற்களை அடுக்கிப் பாடினால் என்ன பயன் உண்டாம் என்பதாம்.

பாவையர் இங்கு இதம் சேர்த்துக் கொஞ்ச - பெண்கள் இனிமையான மொழிகளைக் கூட்டிக் கொஞ்சுதலால் எனப் பொருள் கூறினும் அமையும்.

இங்கிதம் - எண்ணக்குறிப்பு.

பதஞ்சேர்த்துப் பாடி - உருக்களைச் சேர்த்துப் பாடி எனினுமாம்.

என் என்பது, எவன் என்ற வினாவின் மரூஉ.

வாண என்பது ‘வாழ்ந’ என்பதன் மரூஉ.

‘விடலேறு படநாகம் அரைக்கசைத்து’ என்பது தேவாரம்.

‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என்பது திருவாசகம் ஆதலால், அவனருளால் அவனை அடைதல் கூடுமேயன்றிப் பிறிதாற்றால் கூடா தென்பது கருத்து.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

91

   

கலி விருத்தம்

   அனைத்திடமும் ஒளிமருவ அமைந்ததொரு விழியே
   மனத்துயரை மாய்க்கவருண் மலர்ந்ததொரு விழியே
   சினத்துலகைச் சிதைக்கவழல் சிறந்ததொரு விழியே
   நினைத்துலகந் தொழுகச்சி நின் மலர்மூ விழியே.              (58)

(இ-ள்.)உலகம் நினைத்துத் தொழும் - உலகினர் தன்னை நினைத்து வணங்குகின்ற, கச்சி நின்மலர் - காஞ்சியில் எழுந்தருளிய மறுவிலாத் தெருளினரான ஏகாம்பரநாதருடைய, மூ விழியே - கண்கள் மூன்றே, (அவற்றுள்) அனைத்திடமும் - எல்லா இடங்களும், ஒளி மருவ - ஒளி பொருந்தும்படி, அமைந்தது - பொருந்தியது, ஒரு விழியே - வலப்பக்கத்து அமைந்த விழியாகிய ஞாயிறே, மனத்துயரை - மனத்துன்பத்தை, மாய்க்க - ஒழிக்க, அருள் மலர்ந்தது - கருணை செய்தது, ஒரு விழியே - இடப்பக்கத்து அமைந்த விழியாகிய திங்களே, சினத்து - வெகுண்டு, உலகைச் சிதைக்க - உலகத்தை அழிக்க, அழல் சிறந்தது - அனலைச் (சொரிந்து) சிறந்தது, ஒரு விழியே - நெற்றி விழியாகிய நெருப்பே.

மூ விழியே என்றதை, விழி மூன்றே எனப் பிரித்துக் கூட்டுக. ஈண்டு ஏகாரம் தேற்றம்.

ஏனைய ஏகாரங்கள் பிரிநிலையோடு தேற்றமாம்.  சினந்து என்பது சினத்து என வலித்தல் விகாரம் பெற்றது.  ஆக்கல் அருளல் அழித்தல் ஆகிய முத்தொழிலும் உடையவர் ஏகாம்பரநாதர் என்று விளக்கியவாறு.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

92

   

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

     விழியால், விழியுறு பிறழ்வால், விதுநிகர்
           நுதலால், நுதலுறு சிலையான், மென்
     மொழியான், மொழியுறு சுவையான், முழுநல
           முலையான், முலையுறு பொலிவாற், பல்
     வழியாற் கணிகைய ருறவால் வலிகெட
           அயர்வேன் இனிமருண் மரு வாமே
     ஒழியா நலனுற ஒருமா நிழலுடை
           ஒளியார் சடையவர் அருள் வாரே.                (59)

(இ-ள்.)விழியால் - கண்களின் நோக்கினாலும், விழி - அக் கண்கள், உறு பிறழ்வால் - (இரு பக்கமும்), உற்றுப் புடை பெயர்தலாலும், விது நிகர் - பிறைத் திங்களைப்போன்ற, நுதலால் - நெற்றியாலும், நுதலுறு சிலையான் - நெற்றியில் பொருந்திய வில்போன்ற புருவங்களாலும், மென் மொழியால் - மெல்லிய மொழியாலும், மொழி உறு சுவையால் - மொழிதலுறுஞ் சுவையாலும், முழு நலம் முலையான் - முழுநலத்தையுடைய முலையாலும், முலையுறு பொலிவால் - அம்முலை நலம் உற்றுப் பருத்து மார்பிடங்கொண்டு நெருக்கமாகப் பொருந்திய துணைமுலைகளின் இளமை வனப்பின் விளக்கத்தாலும், பல் வழியால் - சூதாட்டம் முதலிய பல வழிகளாலும், நேரும் கணிகையர் உறவால் - நேர்கின்ற பொருட்பெண்டிரது உறவாலும், வலி கெட - உடலின் வலிமையும் நெஞ்சின் வலிமையும் கெட, அயர்வேன் - மயங்குவேனாகிய யான், இனி மருள் மருவாமே - இனி மயக்கமடையாமல்; ஒழியா நலன் உற - நீங்காத அருட்பேறு அடையும்படி, ஒரு மா நிழலுடை ஒளியார் - ஒப்பற்ற மாநிழலை உடைய ஒளிப்பிழம்பராகிய, சடையவர் - சடையை உடைய ஏகாம்பரநாதர், அருள்வாரே - அருள் செய்வாரோ.

விழியால் - கண்களின் நோக்கினால்; (விழி, கருவியாகு பெயர்.)

நுதலுறு சிலை - சிலை, வில், புருவம்; உவமையாகு பெயர்.

‘பல் வழி’ என்றது, சூதாட்டம் முதலியவற்றை.

மென்மொழி, என்புழி மென்மை இனிமைமேற்று.

வலி என்பதற்கு, உடலின் வலி, நெஞ்சின் வலி எனக் கூறிக் கொள்க.

மருவாமே - மே எதிர்மறை வினை எச்ச விகுதி.

ஒளியார் - ஒளிவண்ணர்.

பற்பல தீய வழிகளால் கெட்டொழிந்த என்னை ஆட்கொண்டு அருளுதல் தக்க தன்றேனும், அருளே வடிவமாக இருப்பவர் அருளுவர் என்பது குறிப்பு.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

93

   

எண்சீர் ஆசிரியச் சந்த விருத்தம்

   சடைகரந்த அரவமிந்து பகைமைமாறு தகைமையார்,
         தரமறிந்து கருணைநல்கு தனையிறந்த மகிமையார்
   மடைதிறந்த கடலையொத்த மருளகற்றும் அருளினார்
         மகிழ்சிறந்த முதல்வர் தங்க மலைகுழைத்தென்? விறல்மதன்
   படைதுரந்து நெஞ்சிருப்பு வஞ்சரேன் குழைத்திலர்?
         பகரொணாத பண்பமர்ந்த பரமரின்னும் அருகுறா
   திடைமறந்த தென்கொலோ? வென் இளமைநன் னலம் பெறற்
         கெனையணைந்த கச்சிமேவும் இணையிகந்த போதரே.            (60)

(இ-ள்.) சடை கரந்த - சடையில் மறைந்த, அரவம் - பாம்பு, இந்து பகைமை - அந்தச் சடையிலே உள்ள பிறையைப் பகைத்தலை, மாறு தகைமையர் - மாற்றும் தன்மையையுடையார், தர மறிந்து - (உயிர்களின்) உயர்வு தாழ்வு அறிந்து, கருணை நல்கு - கருணை செய்தலில், தனை இறந்த மகிமையார் - தம்மை மறந்த பெருமையை உடையவர், மடை திறந்த - மடையைத் திறந்த, கடலை யொத்த - கடலை ஒத்த, மரு ளகற்றும் - மயக்கத்தை ஒழிக்கும் அருளினார் - கருணையுடையவர், மகிழ் சிறந்த முதல்வர் - மகிழ்ச்சி மிக்க முதன்மை உடையவர், தங்க மலை - மேரு மலையை, குழைத்தென் - வில்லாக வளைத்து, அதனைக் குழைவித்தலால் எனக் கென்ன பயன்? ஒன்றுமில்லை, விறல் மதன் - வெற்றியையுடைய மன்மதன், படை துரந்து - அம்புகளை எய்து, நெஞ்சிருப்பு - நெஞ்சில் வந்து தங்கியிருத்தலை, ஏன் குழைத்திலர் - ஏன் போக்கிலர் (நெஞ்சிருப்பைப் போக்கினால் எனக்குப் பயன் பெரிதும் செய்தவராவர்) (ஆகவே), வஞ்சர் - வஞ்சகராவர், பகரொணாத சொல்லொண்ணாத, பண்பமர்ந்த - நற்குண நற்செய்கைகள் வாய்ந்த, பரமர் - நலம்புரி வீடு நல்கும் அருளினர், என் இளமை நன்னலம் - என் இளமைப் பருவத்தின் நன்னலத்தை, பெறற்கு - அடைதற்கு, எனை அணைந்த - எனைச் சேர்ந்த, கச்சி மேவும் - காஞ்சியில் எழுந் தருளிய, இணை யிகந்த - ஒப்பில்லாத, போதர் ஞானச் சொரூபர், இன்னும் அருகுறாது - இன்னமும் என் அருகில் வாராமல், இடை மறந்தது - (முதலில் அன்பு காட்டி) இடையே என்னை மறந்தது, என் - என்ன காரணம்?

தகைமையாரும், மகிமையாரும், அருளினாரும், முதல்வருமாகிய என் இளமை ... ... போதர் தங்க மலை குழைத்து என் நெஞ்சிருப்பு ஏன் குழைத்திலர்? இடை மறந்தது என்? ஆதலின், அவர் வஞ்சர் என முடிக்க.

கொல், ஓ - அசைநிலைகள். ‘கற்றதனாலாய பயனென் கொல்’ என்றவிடத்துக் கொல் அசைநிலை யெனப் பரிமேலழகர் குறித்திருத்தல் காண்க.  ‘என்’ என்பதே வினாவைக் குறிக்குஞ் சொல். ‘ஓ’ என்பன பொருளிலவாய் நின்றனவாதலின் அவை அசைகள்.  கருணை நல்கு மகிமையார், தனை இறந்த மகிமையார்.

தனை - தன்னை (ஒருமை), இறந்த மகிமையார் (பன்மை); ஒருமை பன்மை மயக்கம். தனை, அளவு எனலுமாம்.  (எத்தனை - எவ்வளவு).

தர மறிந்து கருணை நல்கு தனை இறந்த மகிமையார் - உயிர்களின் உயர்வு தாழ்வு அறிந்து கருணை நல்குதலில் மிகுதி குறைவு காட்டுதல் இல்லாதுத் தம்மை மறந்து யாவர்க்கும் ஒரே பெற்றியாக, பரிசாக, தன்மையாக, நிலையாக அருள் செய்யும் பெருமை யுடையவர்.  அவ்விதப் பெருமையுடையவராயிருந்தும் மலையைக் குழைக்கும் வன்மை பெற்றும் மன்மதன் என் நெஞ்சிலிருந்து துன்பத்தைச் செய்தலைப் போக்கவில்லையாதலால், ‘வஞ்சரே’ என்னப் பெற்றார்.

மடை - நீர் பாயு மடை.

ஒத்த என்னும் பெயரெச்சம் அருளினார் என்பதனோடு இயையும்.

தங்க மலை - பொன் மலை, (மேரு மலை).

விறல் மதன் நெஞ்சிருப்பு - வெற்றி மதன் என் நெஞ்சில் இருத்தலை.

‘விறல் மதன் நெஞ்சிருப்பு’ என்பதற்கு, விறல் மதனுடைய இரும்புபோன்ற நெஞ்சினை ஏன் குழைத்திலர் என்ற பொருள் கூறினும் அமையும்.  பொன் மலையைக் குழைத்தவர் இரும்பு நெஞ்சினைக் குழைத் திலராதற்குக் காரணம் என்னையோ?

ஏன் குழைத்திலர் - ஏன் போக்கிலர் என்க.

ஒணாத - ஒன்றாத என்பதன் மரூஉ.

பரமர் போதர் - மேன்மையான வாலறிவாம் முற்றுணர்வு பெற்ற முதல்வர் என இயைக்க.
 

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

94

   

கட்டளைக் கலித்துறை

போதவித் தேபுக லேயற வோர்க்குநம் புந்தகையார்
தீதவித் தேற்குநற் செவ்விய னேபுலத் தெவ்வடர
வேதவித் தேமிக வேசறு வேற்கு விரைந்தருணீங்
காதவித் தேன்சுர ருண்கச்சி வாழன்பர்க் கண்ணியனே.           (61)

(இ-ள்.) போத வித்தே - ஞானப் பயிர் தழைவிக்கும் விதையே, அறவோர்க்கு புகலே - அறநெறியில் நிற்போர்க்குச் சரணே (அடைக்கலப் பொருளே), நம்புந் தகையார் - நின்னை விரும்பும் தகுதி உடையாரது, தீது அவித்து - தீமையை ஒழித்து, ஏற்கும் - அவர்களை ஏற்றுக்கொள்ளும், நற் செவ்வியனே - மிக்க செம்மை நலம் வாய்ந்தவனே!,வேத வித்தே - வேதத்திற்கு மூலகாரணனே!, புலத்தெவ் - ஐம்புலன்களாகிய பகைவர், அடர - என்னோடு போர் செய்தலால், மிக வேசறு வேற்கு - மிக்க அயர்ச்சியால் மயர்வு மிக்கு, நின்னை யடைந்த எனக்கு, விரைந்து அருள் - விரைந்தருள்வாய், நீங்காது - நீங்காமல், அவி தேன் - வேள்வி யுணவாந் தேனைக் கொண்டு, சுரர் உண் - உம்பர்களை உண்பிக்கின்ற, கச்சி வாழ் - காஞ்சியில் வாழ்கின்ற அன்பர்க்கு, அண்ணியனே - அன்பருக்கு நெருங்கி அருள் செய்பவனே!்

அன்பர்க்கு அண்ணியனே அருள் என இயையும்.

‘அன்பர் கண்ணியனே’ என்று பிரித்து, ‘அன்பரைப் பெருமைப்படுத்துபவனே’ என்று பொருள் கூறினும் அமையும். இப்பொருள் கொள்ளுங்கால் மோனை இன்பம் ஆய பயனுள்ளது. வேசறல் - இளைப்புற்றுத் தாழ்ந்திருத்தல். (திருவா. கோயில் மூத்த திருப்பதிகம், 5 பார்க்க.) அடர்தல் - போர் செய்தல்.

‘எண்ணுறு படைகளிவ்வா றெதிர்தழீஇ யடரும் வேலை’ (கந்தபுரா. தாரக. 39)

அவி தேன் சுரர் உண் கச்சி வாழன்பர் - அவிசாகிய தேன் கொண்டு தேவர்களை உண்பிக்கின்ற கச்சிப்பதியில் வாழும் அன்பர், உண் அன்பர் என இயைந்து பிறவினைப் பொருள்படும் வினைத்தொகையாம்.

‘தெவ்வுப் பகையாகும்’ - தொல். உரியியல்.  ஈண்டுத் தெவ்வென்னுஞ் சொல் பண்பாகு பெயராய்ப் பகைவர்களை உணர்த்திநின்றது.

‘நம்பும் மேவும் நசையா கும்மே’ - தொல்காப்பியம். உரி. எனவே, ஈண்டு நம்பும் தகையார் என்பதற்கு, விரும்பும் தகுதியுடையார் என்று பொருள் கூறப்பட்டது.

போத வித்தே! புகலே! செவ்வியனே! வேத வித்தே! நீங்காது அவித்தேனை சுரர் உண் கச்சிவாழ் அன்பர்க்கு அண்ணியனே விரைந்தருள் என முடிக்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

95

   

நேரிசை வெண்பா

அண்ணியரா னார் அறவோர்க் கத்தர் அலரிதழிக்
கண்ணியர்பூங் கச்சிநகர்க் கத்தரடி - மண்ணியமுத்
தந்தம்பற் பந்தாந் தனந்தந் தனவிடையார்
தொந்தங்கொள் என்றன் துணை.                            (62)

(இ-ள்.) அத்தர் - தலைவரும், அறவோர்க்கு - அறநெறியில் நிற்கும் முனிவோர்க்கு, அண்ணியரானார் - அவரை நெருங்கி அருள் செய்பவர் ஆனாரும், அலர் இதழ்க் கண்ணியர் - மலர்ந்த கொன்றை இதழ்களால் ஆகிய தலை மாலையை உடையாரும், பூங்கச்சி நகர் கத்தர் அடி - அழகிய கச்சிப்பதியில் எழுந்தருளிய கர்த்தரும் ஆய சிவபெருமானார் திருவடி, மண்ணிய - கழுவப் பெற்ற, முத்தம் தம் பல் - முத்துக்கள் தங்களுடைய பற்கள், பந்து ஆம் தனம் - பந்தை ஒத்த முலை, தந்து அன்ன இடையார் - தாமரை நூலை ஒத்த இடை ஆகிய இவற்றை உடைய பெண்களது, தொந்தங் கொள் என்றன் - தொடர்புகொண்டு அழியும் என்றனுடைய, துணை - சம்பந்தத்தைப் போக்கிக் காக்கும் சிறந்த துணையாம், இனி மண்ணிய - செப்பமிடப்பெற்ற, முத்தம் - மோட்சமும், தம் பற்பம் தாம் - தாம் அருளும் திருநீறும். தனம் - அருட் செல்வமும், தந்தனம் - எவருக்கும் பட்டுப்பட்டு இயங்காது வெறுத்து ஒதுக்கிடுமாறு யாண்டும் செல்லவல்ல, விடையார் - இடப ஊர்தியையும் உடைய சிவபெருமானிடத்து, தொந்தங் கொள் - தொடர்புகொண்ட, என் துணை - எனக்கு உரிய துணையாகும்.

அடி என்றன் துணை எனக் கூட்டுக.

கர்த்தர் என்பது கத்தர் என இடைக்குறையாய் நின்றது. வடமொழி திரிந்து நின்றதெனினும் ஆம்.

அடி, மகளிரிடத்துக்கொண்ட தொந்தம் போக்கும் துணையாம் என்க.

அடி இடையார் கொள் தொந்தம் துணை என இயைத்துத் தொந்தம் துணை என்பதற்குப் பிணிக்கு மருந்து என்புழிப் போலப் பொருள் கூறுக.

இனித் திருவடிகள், முத்தமும், பற்பமும், தனமும் தந்தன.  ஆகவே, அந்த அடிகள் விடையாரிடத்துத் தொந்தங்கொள் என்றன் துணையாகும் என்றுமாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

96

   

அறுசீர் ஆசிரிய விருத்தம்

   துன்னிமித்தங் கண்டுமஞ்சா தொருதுணையும் பிணையாது
               துனைந்து சென்று
   பொன்னிமித்தஞ் சிலைசுமந்து முறுவலித்துப் புரமெரித்த
               புரைதீர் எந்தாய்!
   என்னிமித்தம் என்னகத்தே குடிபுகுந்தாய் திருக்கச்சி
               இறைவா! ஏழை
   தன்னிமித்தந் திருவுள்ளங் கனிந்ததன்றித் தகுதிமற்றென்
               தருக்கி னேற்கே.                                              (63)

(இ-ள்.) துன் னிமித்தங் கண்டும் - கெட்ட சகுனம் நேரிடப் பார்த்தபொழுதும், அஞ்சாது - பயப்படாது, ஒரு துணையும் பிணையாது - ஒருவரையும் துணையாகச் சேர்த்துக் கொள்ளாமலும், துனைந்து சென்று - விரைந்து போய், பொன் நிமித்தஞ் சிலை - பொன்னால் ஆகிய மேருமலையை, சுமந்து - வில்லாகத் தாங்கியும், முறு வலித்து - (அவ் வில்லை வளைக்காமலேயே) வெறும் புன்சிரிப்புச் செய்து, புர மெரித்த - (அச்சிரிப்பிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால்) திரிபுரத்தை அழித்த, புரைதீர் - (திரிபுரத்தாரால் மக்களுக்கு ஏற்பட்ட) துன்பத்தைத் தீர்த்த, எந்தாய் - என் தந்தையே, என்னிமித்தம் - என்னிடத்துக் கண்ட எத்தகுதி காரணமாக, என் அகத்தே குடி புகுந்தாய் - என் மனத்திலே குடியேறினாயோ (அறியேன்), திருக்கச்சி இறைவா - திருக்கச்சியில் எழுந்தருளிய இறைவனே!, ஏழைதன் நிமித்தம் - ஏழை எளியேனாகிய என்பொருட்டு, திரு உள்ளம் கனிந்ததன்றி - (நீயே ஒன்றும் எதிர்பாராமல்) திருவுள்ளம் உருகி அன்பு பாராட்டினதல்லாமல், தருக்கினேற்கு - (உன் அன்பைப் பெற்றதால் உற்ற) செருக்கை உடைய எனக்கு, தகுதி மற்றென் - உன் அன்பைப் பெறுதற்குரிய தகுதி எளியேனிடத்துண்டான எளிமையேயன்றி வேறு என்ன உண்டு! (இறைவன் அன்பைப் பெறுதற்கு அவன்பால் காட்டும் பணிவுடைமையாலாகும் எளிமையே யன்றி வேறில்லை  என்றபடி.)

துர்நிமித்தம் - சிவபிரான் திரிபுரம் எரிக்கத் தேரில் அடியிட்டு ஏறினபோது, அத்தேர் அச்சு முறிந்து வீழ்ந்தது.  (அவ்விடம் அச்சிறு பாக்கம், அச்சிறபாக்கம், அச்சிரவாக்கம் என வழங்குகிறது.)

பொன்னிமித்தமாக மலையைச் சுமந்து என்பது சொற் போக்குரை. (பொன் நிமித்தம் - பொன்னாகிய கூலி பெறும் பொருட்டு).

எந்தாய் - எந்தை என்பதன் விளி; எந்தை என்பது என் தந்தை என்பதன் மரூஉ.  என் தாய் என்றதன் மரூஉ எனினும் அமையும்.

“தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும், அச்சு முறிந்ததென்றுந்தீ பற, அழிந்தன முப்புர முந்தீ பற” (திருவாசகம், திருவுந்தியார் 3).

புரமெரித்த எந்தாய்; புரை தீ ரெந்தாய் எனத் தனியே கூட்டுக. தீ ரெந்தாய் என்பது பிறவினைப் பொருட்டாகிய வினைத்தொகை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

97

   

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     தருக்குறு தெரிவையர் செருக்கிலே
           தளையிடு மவர்மொழி யுருக்கிலே
     மருக்கமழ் குழலணி சொருக்கிலே
           மனமிவ ரிளமுலை நெருக்கிலே
     பெருக்குறு விழைவமர் திருக்கினேன்
           பிசிதரு மறைமுதல் பிறையினோ
     டெருக்கணி கச்சியின் இறைவனார்
           இரங்குறு வகையெது புகல்வனே.                  (64)

(இ-ள்.) தருக்குறு - கண்டார் மயங்கிக் களிப்புறுதற்குக் காரணமான, தெரிவையர் - பெண்களது, செருக்கிலே - மயக்குந் தொழிலிலும், தளை யிடும் - கேட்டாரைப் பந்தப்படுத்துகின்ற, அவர் மொழி - அவர் மொழியின், உருக்கிலே - உருக்கத்திலும், மரு கமழ் - மணம் வீசுகின்ற, குழல் - கூந்தலினை, அணி சொருக்கிலே - அழகு தாக்கிச் சொருகும் சொருகிலும், மனம் - மனம், இவர் - சென்று சேருதற்குக் காரணமான, இளமுலை நெருக்கிலே - இளமை வாய்ந்த தனத்தின் நெருக்கத்திலும், பெருக்குறு - அதிகரித்த, விழை வமர் - ஆசை பொருந்திய, திருக்கினேன் - மாறுபாடுடைய யான், பிசி தரும் - அரும் பொருளைக் கொடுக்கின்ற, மறை முதல் - வேத முதல்வராகிய, பிறையினோடு - இளந் திங்களோடு, எருக்கு அணி - எருக்க மாலையை அணிந்த, கச்சியின் இறைவனார் - கச்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதனார், இரங்குறு வகை - மாறுபாடுற்ற என்பால் இரக்கம் உற்ற வகை, எது புகல்வன் - யாதென்று கூறுவேன்!

பிசி - அரும் பொருள். பொருளை உவமைப்பொருளாற் கூறுவது. பிசி தரும் முதல் (முதற் பொருள்) பிசிதரும் மறை.

எருக்கு - எருக்கமாலை ஆகுபெயர்.

பெண்கள் மயக்கிலேயே விருப்புற்றுத் திரிந்த என்பால் கச்சிப்பெருமானார் இரக்கங் கொள்ளுதற்கு உற்ற வகை இன்னதென்று புகலவல்லேன் அல்லேன்; என்போன்றவரிடத்தும் இரக்கமுற்ற அவனுடைய அருளின் பெருமை என்னே!’ என்று வியந்து கூறுகின்றார் ஆசிரியர்.

     “தெட்டிலே வலியமட மாதர்வாய் வெட்டிலே
              சிற்றிடையிலே நடையிலே
          சேலொத்த விழியிலே பாலொத்த மொழியிலே
              சிறுபிறைநுதற் கீற்றிலே
     பொட்டிலே யவர்கட்டு பட்டிலே புனைகந்த
              பொடியிலே அடியிலே
          பூரித்த முலையிலே நிற்கின்ற நிலையிலே
              புந்திதனை நுழையவிட்டு
     நெட்டிலே யலையாமல் அறிவிலே பொறையிலே
              நின்னடியர் கூட்டத்திலே
          நிலைபெற்ற அன்பிலே மலைவற்ற மெய்ஞ்ஞான
              நேயத்திலே உனிருதாள்
     மட்டிலே மனதுசெல நினதருளும் அருள்வையோ?
              வளமருவு தேவையரசே ... ...”
     எனத் தாயுமானாரும் இக் கருத்துப்படக் கூறியிருத்தல் காணலாம்.


   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

98

   

 

(மடக்கு) தலைவி யிரங்கல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

     கற்றரு மாதின் பங்குடையார்
           கச்சியர் எனதின் பங்குடையார்
     சிற்றளை யுள்ளுறை வாயலவா!
           தென்வளி காதுறை வாயலவா?
     சுற்றுமு டைந்து வருந்திடரே!
           தோற்றுமி டைந்து வருந்திடரே
     பெற்றிடு முத்தம ருங்கழையே!
           பேசரி யாரைம ருங்கழையே.              (65)

(இ-ள்.) கல் தரு மாதின் பங்கு உடையார் - மலை பெற்ற மகளைத் தம் இடப்பக்கத்தே கொண்டவரும், கச்சியர் - கச்சிப் பதியை இருப்பிடமாக உடையவரும் ஆகிய என்னுடைய தலைவர், எனது இன்பம் குடையார் - எனது இன்பத்தில் தோயார் (ஆதலால் யான் வருந்துகின்றேன்), அலவா - நண்டே, சிறு அளை யுள் - வெளியே இன்பமாக உலவாது சிறிய வளைக்குள்ளே நாணிப் பதுங்கி, உறைவாய் - வாழ்கின்றாய், (நீயும் என்போல் உன் நாயகனைப் பிரிந்து வாழ்கின்றாயோ?), தென் வளி - தென்றற்காற்றும், கா - சோலைக் காட்சியும், துறை - நீர்த்துறையும், வாய் அலவா - பிரிந்திருப்பாரைத் துன்புறுவிக்கும் காமத்தீயை மூட்டும் பொருள்கள் அல்லவா?, சுற்றும் - நாலாபக்கத்திலும், உடைந்து - சரிந்து, வரும் - தோற்றுகின்ற, திடரே - மணல் மேடே, மிடைந்து - நெருங்கி, வருந்து இடரே - வருந்துகின்ற துன்பமே, தோற்றும் - உன்பால் தோற்றுகின்றது, (நீயும் உன் நாயகனைப் பிரிந்து பிரிவாற்றாது துன்புறுகின்றனையோ?), முத்தம் பெற்றிடும் - முத்துக்களைத் தோற்றுவித்து வெளியிடுகின்ற, அரு கழை - காண்பதற்கரிய அழகு வாய்ந்த மூங்கிலே! நீ முத்துக்கள் (கண்ணீர்) சிந்துதலால் நீயும் நாயகனைப் பிரிந்திருக்கின்றாய்போலும்! இங்ஙனம் வாய்மூடி வருந்துதலால் பயனென்னை? பேசரியாரை - பேசுதற்கரிய உன் நாயகரை, மருங்கு - உன் பக்கத்தில் வந்து சேருமாறு, அழை - கூவி அழைப்பாயாக; நானும் கூவி யழைப்பேன்.

நாயகனைப் பிரிந்து வருந்துகின்ற தலைவிக்கு எதிரே காணப்படும் உயி ரில் பொருள்களும், உயி ருள் பொருள்களும் தன்னைப்போலவே பிரிந்து வருந்துவன போலத் தோன்றுமாதல்பற்றி, இங்ஙனம் கூறிப் பின் அவற்றிற்கும் தேறுதல் கூறித் தானும் தெளிவு பெறுவாளாதல்பற்றி இங்ஙனம் பாடல் எழுந்தது என்க.

இது,  தலைவி இரங்குதலாகையால் நண்டு, மணல் மேடு, மூங்கில் என்னும் நெய்தல் நிலத்துப் பொருள்களை நோக்கித் தலைவி தன் துன்பத்தைத் தெரிவித்தமையைக் காட்டும், இரங்குதல் நெய்தல் நிலத்திற்கு உரிய உரிப்பொருளாகலின்.  மூங்கில் குறிஞ்சிநிலக் கருப்பொருள், திணை மயக்கமாக நெய்தல் நிலக் கருப்பொருளாக வந்தது.  மருதநிலத்தைச் சார்ந்தது நெய்தல்நிலம் ஆதலின், கழை என்பதைக் கரும்பு எனப் பொருள் கொண்டு, அம் மருத மயக்கங் கூறினும் அமையும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

99

   

 

பனிக்காலம்

எண்சீர் ஆசிரியச் சந்தத் தாழிசை

அழைக்காமல் அணுகார்வெவ் வலர்கூர மாய்வேன்
     ஐயோஎன் ஐயர்க்கு ரைப்பாரும் இல்லை
கழைக்காமன் எய்யுஞ்ச ரந்தைக்க நொந்தேன்
     கண்ணாளர் இந்தப்ப னிக்காலம் ஓரார்
குழைத்தார்பொ ழிற்கச்சி வாழண்ண லாரைக்
     கும்பிட்ட ழைப்பீர்கு ழைப்பீர்ம னத்தைப்
பிழைத்தேன லேனென்று பிச்சர்க்கி யம்பீர்
     பெண்பேதை உய்யுந்தி றம்பாங்கி மாரே.            (66)

(இ-ள்.) வெம்மை அலர் கூர - கொடிய பழி மிகுதலால், மாய்வேன் - நான் அழிவேன், அழைக்காமல் அணுகார் - தலைவரோ அழைக்காமல் வரமாட்டார், ஐயோ - அந்தோ!, என் ஐயர்க்கு - என் தலைவருக்கு, உரைப்பாரும் இல்லை - (என் நிலைமையைச்) சொல்பவரும் இல்லை, கழைக் காமன் - கரும்பின் கழையை வில்லாக உடைய மன்மதன், எய்யும் - செலுத்தும், சரம் - அம்பு, தைக்க - தாக்க, நொந்தேன் - வருந்தினேன்; கண்ணாளர் - கணவர், இந்தப் பனிக்காலம் ஓரார் - இந்தப் பனிக் காலத்தின் கொடுமையை ஆராயார், குழைத்து - தளிர்களை விட்டு, ஆர் - பொருந்திய, பொழில் - சோலை சூழ்ந்த, கச்சி வாழ் அண்ணலாரை - காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரை (தலைவரை), கும்பிட்டு அழைப்பீர் - (என்பொருட்டு) வணங்கி அழைப்பீர், குழைப்பீர் மனத்தை - அவர் மனத்தை இளகச் செய்வீர், பிச்சர்க்கு - இரந்துண்ணிக்கு, பிழைத்தேன் அலேன் என்று - உயிர் பிழைத்திலன் என்று, பாங்கிமாரே - தோழிமார்களே, பெண் பேதை - பெண் பேதையாகிய யான், உய்யும் திறம் - பிழைக்கும் வழியை, இயம்பீர் - சொல்லுங்கள்.

கண்ணாளர் - கணவர் (மது மலராள் கண்ணாளர் திவ். பெரிய திருமொழி.)

குழைத்து - தளிர்த்து; குழை என்னும் சினைப்பெயரடியாகப் பிறந்த குறிப்பு வினையெச்சம்.

(குழை+த்+த்+உ)

பிச்சாடனர் - ஐயம் எடுப்பவர்; பிச்சா + அடனர்.

“பாங்கிமாரே! அண்ணலாரை அழைப்பீர்; மனத்தைக் குழைப்பீர்; பிச்சர்க்குப் பிழைத்திலேன்; என்று பேதை உய்யும் திறம் இயம்பீர்” என முடிக்க.

பனிக்காலத்திலே தலைவன் பிரிந்திருப்பதனால் தனக்குத் (தலைவிக்குத்) துன்பம் மிகும் என்பதை அவர் அறியாமலிருக்கின்றார்.  அவர்க்குத் தன் துன்பத்தை யுணர்த்தி அழைத்து வரவேண்டும் என்று தலைவி தோழியரிடத்துக் கூறுகின்றதாக இச் செய்யுள் அமைந்துள்ளது.

‘பிழைத்தேன் அலேன்’ என்பதற்கு, ‘நான் அவருக்கு ஒரு தவறும் செய்திலேன்’ என்று பொருள் கூறினும் அமையும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

100

   

 

மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

மாதரையிற் றருநறும்பூ விரைவிடுக்குங் காலம்
     மதன்சினந்து மங்கையரை விரைவிடுக்குங் காலம்
காதமணங் கமழ்சோலை பண்புணருங் காலம்
     கணவரிளங் கோதையர் தம் பண்புணருங் காலம்
சீதமுறு கழைக்கரும்பின் கண்டழைக்குங் காலம்
     சிற்றிடையார் தந்தலைவர்க் கண்டழைக்குங் காலம்
கோதறுசங் கினம்பழனப் பங்கமுறுங் காலம்
     குலவுகச்சி யார்பிரியப் பங்கமுறுங் காலம்.                 (67)

(இ - ள்.)  மா தரையில் தரு - பெரிய நிலத்தில் உள்ள மரங்கள், நறும்பூ - நல்ல பூக்களால், விரை விடுக்கும் காலம் - மணம் வீசும் காலம் (இக் காலமாகும்), மதன் சினந்து - மன் மதன் வெகுண்டு, மங்கையரை - பெண்களை, விரைவு - விரைவில், இடுக்கும் - வருத்தும், காலம் - காலம், காதம் மணம் கமழ் - காத தூரம் மணம் வீசுகின்ற, சோலை - சோலையில், பண்புணருங் காலம் - வண்டுகள் பாடும் பண்கள் சேர்ந்துள்ள காலம், கணவர் - தலைவர், இளங் கோதையர்தம் - இளம் பெண்களுடைய, பண்பு - இன்ப நிலைகளை, உணருங் காலம் - தெரிந்து கொள்ளுங் காலம், சீத முறு - குளிர்ச்சி பொருந்திய, கழைக்கரும்பின் - கழையாகிய கரும்பின், கண் - கணுக்கள், தழைக்குங் காலம் - செழிக்குங் காலம், சிற்றிடையார்-சிறிய இடையை உடைய மாதர்கள், தம் தலைவர்க் கண்டு - தம் நாயகரைப் பார்த்து, அழைக்குங் காலம் - கூப்பிடுங் காலம், கோது அறு - குற்றமற்ற, சங்கினம் - சங்குக் கூட்டங்கள், பழனப் பங்கம் - வயல்களின் சேற்றில், உறுங் காலம் - அடையுங் காலம், குலவு கச்சியார் விளங்குகின்ற காஞ்சியில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், பிரிய - பிரிதலால், பங்கம் உறுங் காலம் - (நான்) துன்பம் அடையுங் காலம்.

விரை - தேனுமாம்.

கழைக் கரும்பு - இருபெயரொட்டு; கழைக் கரும்பின் விசேடமுமாம்.

கண் - கணுக்கள்.  பழனம் - வயல்.

‘காலம்’ என்ற சொற்களுக்குப் பின் ‘இக் காலமாகும்’ எனக் கூட்டி யுரைக்க.

‘பழனப் பங்கமுறும் காலம்’ என்பதற்கு, பழனப் பக்கத்தில் அழகாகச் சென்று அடையும் காலம் எனவும் பொருள் கூறலாம்.  (பழனம் + பங்கு + அம் + உறும் + காலம்.)

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

101

   


வஞ்சி விருத்தம்

உறுமன் கச்சி யுத்தம! யான்
துறவுங் கொள்ளேன்; தூய்மையிலேன்;
அறமும் புரியேன்; அமைவில்லேன்;
பெறவுந் தகுமோ பேரின்பே.                      (68)

(இ - ள்.)  உறுமன் - (இறுதிக் காலத்தும்) அழியாமல் நிலைபெற்ற, கச்சி உத்தம - காஞ்சியம்பதியில் எழுந்தருளிய உத்தமனே, யான் துறவுங் கொள்ளேன் - நான் துறவற நிலையுங் கொள்ளேன், தூய்மை யிலேன் - துப்புரவான நிலைமையும் இல்லேன், அறமும் புரியேன் - நன்மைகளையும் விரும்பிச் செய்யேன், அமைவு இல்லேன் - மன அடக்கம் இல்லேன் (இங்ஙனம் இருத்தலால்),பேரின்பு - பேரின்பத்தைக் பெறவுந் தகுமோ - பெறுவதும் - தகுதியாகுமோ?  ஆகாதன்றே.

தூய்மை - உடம்பின் தூய்மை முதலாயின.

அமைவு - மன அமைவு.

உறுமன் கச்சி: “ஈறுசேர் பொழுதினும் இறுதி இன்றியே, மாறிலா திருந்திடும் வளங்கொள் காஞ்சி” (கந்த புராணம்.)

‘பேரின்பு ஆகிய வீட்டினை அடைதற்கு நிலையாமை, துறவு, மெய்யுணர்வு, அவாவறுத்தல் என்ற நான்கு வழிகள் இன்றியமையாதன.  அவற்றுள், ஒன்றேனும் இல்லாத நான், பேரின்பத்தினைப் பெறுவதும் தகுதியாகுமோ? ஆகாதன்றே! அங்ஙன மாயினும் பேரின்பத்தினைத் தந்து என்னை யாண்ட உன் அருட்டிறம் இருந்தவாறு என்னே!’ என்று ஆசிரியர், கச்சி யெம்பெருமானுடைய அருட்டிறத்தினை வியந்து கூறுந் திறன் நோக்கி யின்புறுதற் குரியது.

‘உறுமன் கச்சி உத்தம’ என்றதால், கச்சியில் எழுந்தருளியுள்ள சிறந்தோனாகிய இறைவ னொருவனே நிலைபேறுடையன் என்பதும், ஏனைய வடிவெல்லாம் நிலையாமை யுடையன என்பதும் விளங்கின.  ‘மன்’ என்பதே நிலைபேற்றை விளக்குவதாக இருக்க, ‘உறுமன்’ என்ற சிறப்பால், பதி, பசு, பாசம் என்னும் மூன்றனுள் மிகவும் நிலைபேறுடையதாக விளங்குவது பதி யொன்றுமே என்பது போதரும்.

‘துறவும் கொள்ளேன்’ என்றதால், “மற்றும் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக் கலுற்றார்க்கு உடம்பு மிகை” யாதலால், நிலையாமை யுணர்வால் துறவு எய்தாமையும் கூறப்பட்டது.

‘தூய்மை யிலேன்’ என்றதால், நீரால் அமைவதாய புறந்தூய்மையும், வாய்மையான் காணப்படுவதாகிய அகந் தூய்மையும் இல்லாமையால் மெய்யுணர்வு எய்தாமை உணர்த்தப்பட்டது.

‘அறமும் புரியேன்’ என்றதால், அவாவறுத்த லில்லாமை குறிக்கப்பட்டது.

‘அமை வில்லேன்’ என்றதால், இந்தத் தூய பெரிய நெறிகளால் வரும் அமைதித்தன்மை எய்தாமை பெறப்பட்டது.

இவற்றிற்குப் பிறவாறும் பொருள் கூறலாம்.  ‘இவ்வெல்லாத் துணைகளும் இல்லாதிருந்தும் பேரின்பம் பெறச் செய்தனையே! உன் அருட்டிறம் இருந்தவாறு என்னே!’ என்று ஆசிரியர் ஈடுபடுகின்றார் என்க.

“அன்ப ராகிமற் றருந்தவம் முயல்வார்
     அயனும் மாலும்மற் றழல்உறு மெழுகாம்
என்ப ராய்நினை வாரெ னைப்பலர்
     நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்”

(திருவா. செத்திலாப். 4)

என்பதும்,

   “புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
         உண்டியாய் அண்ட வாணரும் பிறரும்
   வற்றி யாருநின் மலரடி காணா
         மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
   பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்”

   (திருவா. செத்திலாப். 2)

என்பதும்,

   “கெடுவேன் கெடுமா கெடுகின்றேன்
         கேடி லாதாய் பழிகொண்டாய்
   படுவேன் படுவ தெல்லாம்நான்
         பட்டால் பின்னைப் பயனென்னே
   கொடுமா நரகத் தழுந்தாமே
         காத்தாட் கொள்ளுங் குருமணியே
   நடுவாய் நில்லா தொழிந்தக்கால்
         நன்றோ எங்கள் நாயகமே.”

   (திருவா. ஆனந்தமாலை 4)

என்பதும் இக் கலம்பகப் பாடலின் பொருளுணர்த்தும் கருவிகளாகக் கொள்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

102

   


இன்னிசை வெண்பா

இன்படைய வேண்டின் இகலற்க - வன்பிறவித்
துன்பொழிய வேண்டினவந் துன்னற்க - அன்புருவாம்
போதனருள் வேண்டுமெனிற் பொய்யற்க - சூதகலச்
சூதநிழ லான்கழலைச் சூழ்.                        (69)

(இ - ள்.) இன்பு அடைய வேண்டின்-இன்பத்தை அடைய விரும்பினால், இகலற்க - பிறரிடத்து மாறுபாடு கொள்ளற்க, வன் பிறவித் துன்பு - நீக்குதற்கரிய வலிமையையுடைய பிறப்பின் துன்பம், ஒழிய வேண்டின் - ஒழிய விரும்பினால், அவம் துன்னற்க - (வீட்டு நெறிக்குக் கேடுதரும்) பாவச்செயலைச் செய்யற்க, அன்பு உருவாம் - அன்பே வடிவமாகிய, போதன் - மெய்யறிவுருவனாஞ் சிவபிரானது, அருள் வேண்டு மெனில் - அருள் வேண்டுமே ஆனால், பொய்யற்க - பொய் பேசாது ஒழிக, சூது அகல - வஞ்சகம் நீங்க, சூதம் நிழலான் - மாமரத்தின் நிழலில் வீற்றிருக்கும் ஏகாம்பரநாதரது, கழலை - கழலணிந்த திருவடியை, சூழ் - எண்ணுக.

அன்புருவாம் போதன் - அன்பே வடிவாகிய (மெய்யுணர்ந் தோரால்) தெளியப்படுபவன். (போதம் - தெளிதல்.)

நெஞ்சு - முன்னிலை எச்சம்.

‘சூழ்க’ என்பது ‘சூழ்’ என விகாரமாயிற்று.

இகலென்ப எல்......பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய் ஆதலால் ‘இகலற்க’ என்றார்.

கழல், தானியாகுபெயராய்த் திருவடிகளை யுணர்த்தி நின்றது. வியங்கோளெல்லாம் வேண்டிக்கோடற்பொருளில் வந்தன; விதித்தற்பொருளில் வந்தனவெனவும் கொள்ளுப.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

103
s
   


நேரிசை வெண்பா
சூழுந் தளையாய தொல்லைப் பிறவியினைப்
போழு நவியமாம் புத்தேளிர் - தாழுநலம்
பொன்றா வளக்கச்சிப் பூங்கொன்றைக் கண்ணியர் தம்
இன்றாட் கிடும்பச் சிலை.                          (70)

(இ - ள்.) சூழும் தளையாய - நீங்காது சூழ்ந்து வந்துள்ள மும்மலத்தாலாய, தொல்லைப் பிறவியினை - பழைமையாகிய பிறப்பை, போழும் நவியமாம். பிளக்கும் கோடரியாம், (எது வெனில்), புத்தேளிர் - தேவர்கள், தாழும் - தங்கள் முடி தாழ்த்தி வணங்கும், நலம் பொன்றா - நன்மை நீங்காத, வளம் கச்சி - வளங்களையுடைய கச்சியம்பதியில் எழுந்தருளிய, பூங்கொன்றைக் கண்ணியர்தம் - அழகிய கொன்றை மலரால் ஆய மாலையைத் தரித்த ஏகாம்பரநாதருடைய, இன் தாட்கு - இனிய திருவடிகளில், இடும் பச்சிலை - இடுகின்ற வில்வ முதலிய பசிய இலையாம்.

அநாதியாக ஆணவம் முதலிய மலங்களால் பிறவி தொடர்ந்து வருதலால் ‘சூழுந் தளையாய தொல்லைப் பிறவி’ என்றார்.

தளை - கட்டு; விலங்கு.

நவியம் - கோடரி.

“யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை” (திருமந்திரம்.)

வீடு பேற்றைத் தரும் திருவடியாதலின் ‘இன்தாள்’ என்றார்.

புத்தேளிர் தாழும் கச்சி, நலம் பொன்றா வளக்கச்சிக் கண்ணியர் தாளுக்கு இட்ட பச்சிலை பிறவியினைப் போழும் நவியமாகும் என்க. தாழும் இன் தாள் எனக் கூட்டுக.

‘தேவர்கள் வணங்கும் தாளில் இடும் பச்சிலை நவியமாம்’ என்றதால், கச்சியெம்பெருமானுடைய தாளின் சிறப்பு விளங்குவதாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

104

   


கலிநிலைத்துறை

பச்சைநி றப்பைந் தொடிவல மேவிய பசுபதியுள்
நச்சின ரொன்றினும் எச்சமு றாதருள் நனிகூர்வான்
கச்சியு றைந்தருள் கண்ணுதன் மறலிக் கண்டகனால்
அச்சமு றாதடி யவர்முனம் அந்தத் தணுகுவனே.            (71)

(இ - ள்.) பச்சை நிறம் பைந் தொடி - பசிய நிறத்தையுடைய பார்வதி, வலம் மேவிய - தன் இடப்பக்கத்தே விரும்பியுறையத் தான் அவள் வலப்பக்கத்தே விரும்பி யுறைதலைப் பொருந்திய, பசுபதி - உயிர்களுக்குத் தலைவன், உள் நச்சினர் - தன்னை மனத்தில் எழுந்தருள வேண்டும் என விரும்பி வழிபாடு செய்தவர், ஒன்றினும் - அவ்விருப்பத்தில் சிறிதும், எச்ச முறாது-குறைவு அடையாது, நனி அருள் கூர்வான் - அவருள்ளத்தே எழுந்தருளிச் சாலவும் அருள் செய்பவனாய், கச்சியு றைந்தருள் கண்ணுதல் - காஞ்சியில் எழுந்தருளும் நெற்றிக் கண்ணனாகிய ஏகாம்பரநாதன் ஆவான், மறலிக் கண்டகன் - அவன் எமனுக்கும் எமனாவன், ஆல் - ஆகையால், அச்சம் உறாது - அச்சம் உறாது - அச்சம் அடையாதபடி, அடியவர் முனம் - அடியவரிடத்து, அந்தத்து - (எமன் உயிரைப் பற்ற) இறக்கும் நேரத்தில், அணுகுவன் - அடைந்து அவ் வெமனிடமிருந்து அவரை விடுவித்துத் தன்பால் சேர்த்துக்கொள்ளுவான்.

இனி, அருள் மிகுதியும் செய்யும் பொருட்டுக் கச்சியுள் உறையும் நெற்றிக்கண்ணன் எனினும் பொருந்தும்.

பைந்தொடி - பசும் பொன்னாலாகிய வளையலணிந்த பார்வதி (பண்புத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.)

மேவுதல் - விரும்பி யுறைதல். ‘நம்பும் மேவும் நசையாகும்மே’ என்பது தொல்காப்பியம்.

பார்வதி இடப்பாகத்தை விரும்ப அங்ஙனமே தந்த இறைவன், தன்னை நச்சினர் உள்ளெழுந் தருளவேண்டின் அங்ஙனமே எழுந்தருளிக் காப்பான்.  அவன் உள்ளிருக்குங்கால், எமன்வரின், அவன் காலகாலனாதலால் அவனிடமிருந்து காத்துத் தன்னடிகளில் சேர்த்துக்கொள்ளுவான் என்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

105

   


மடக்கு

எண்சீர் ஆசிரிய விருத்தம்

அணங்காறு தலையுள்ளார் அழகர் என்மான்
     அணங்காறு தலையுள்ளா ரானார் அந்தோ
வணங்கூடு தலனலைப்பற் றுற்று மின்னாள்
     வணங்கூடு தலனலைப்பற் றறுத்தல் ஓரார்
கணம்புரத்தைச் சாம்பருவந் திழைத்தார் கன்னற்
     கணம்புரத்தைச் சாம்பருவங்  குலைப்ப துன்னார்
பணமொளிக்கும் பணிதரித்தார் கச்சி யீசர்
     பணமொளிக்கும் பணிபரித்தார் பான்மை யுற்றே.        (72)

(இ-ள்.) அணங்கு ஆறு தலை யுள்ளார் - தெய்வத் தன்மையுள்ள கங்கையைச் (தலையில்) சடையில் பொருந்தப் பெற்றவர், அழகர் - அழகுடையவர், என் மான் - என் மான் போன்ற மகளின், அணங்கு - வருத்தம் (மையல் நோய்), ஆறுதலை - தணிதலை, உள்ளார் ஆனார் - நினைக்காதவராயிருந்தார், அந்தோ - ஐயோ, வணம் - நிறம், (ஒப்பனை குணம்), கூடுதல் - பொருந்துதலான, அனலைப் பற்று உற்று - நெருப்பு வடிவம் பொருந்தத் தாங்கி நின்று, மின்னாள் - மின்னல் போன்ற தலைவி, வணங்கு - வழிபாடு செய்தலால், ஊடுதல் - புலவியால், அனலை - காமமாகிய நெருப்பினை, பற்று அறுத்தல் - அடியோடு தணித்தலை, ஓரார் - உணரமாட்டார், கணம் புரத்தை - கூட்டமாகிய (திரி) புரங்களை, சாம்பர் - சாம்பராகும்படி, உவந்து இழைத்தார் - மகிழ்ந்து செய்தார், கன்னற்கண் - கரும்பாகிய வில்லிடத்தினிருந்து, அம்பு - (வெளிவரும்) அம்புகள், உரத்தை - தலைவியின் மாண்பினை, சாம் பருவங் குலைப்பது - சாகும்படியான நிலைமையில் வைத்து அழிப்பதனை, உன்னார் - நினைக்கமாட்டார், பண மொளிக்கும் - படத்தைக் குவிக்கும், பணி தரித்தார் - பாம்பை அணிகலனாகப் பூண்டவரும், கச்சி ஈசர் - காஞ்சியின் கண் உள்ள தலைவர், பான்மை உற்று - நல் அருள் பொருந்தி, பண மொளிக்கும் - விலைமதிக்கத்தக்க, பணி பரித்தார் - என் ஆபரணங்கள் கழலும்படிச் செய்தார்.

பண் அம் ஒளிக்கும் பணி - அழகோடு அமைவு விளங்கும் என் தொண்டினை, பான்மையுற்று - தகுதியுற்று, பரித்தார் - ஏற்றுக்கொண்டார் எனலுமாம்.

தான் தீ வண்ணராயிருந்தும் தலைவியினது காமத்தீயை ஒழித்தலை நினையார்.

கச்சி யீசர் பணி பரித்தார் பான்மையுற்று உள்ளார், ஆனார், ஓரார், உன்னார் எனக் கூட்டுக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

106

   


கட்டளைக் கலிப்பா

     உற்றுப் பார்க்கிலுன் வாழ்க்கையென் ஐயமே
           ஊரும் வெட்ட வெளியுடை தோலுனைப்
     பெற்றுப் பார்க்குள் உறுஞ்சுகம் இல்லையாற்
           பேதை நின்னையென் பெற்றிடப் பற்றினள்
     கற்றுத் தேர்ந்த பெரியவர் வாழ்திருக்
           கச்சி மாநகர்க் கத்த! வென் அத்தனே!
     பற்றி லாருளம் பற்றுறு பங்கயப்
           பாத னே! படப் பாம்பணி காதனே!            (73)

(இ - ள்.) கற்றுத் தேர்ந்த - கற்க வேண்டுவனவற்றைக் கசடறக் கற்றுத் தெளிந்த, பெரியவர் வாழ் - பெருமையையுடையார் வாழும், திருக்கச்சி மாநகர் - திருக் காஞ்சிமாநகரின் கண் வந்து குடிபுகுந்த, கத்த - தலைவனே!, என் அத்த - என் தந்தையே!, பற்று இலார் - அகப்பற்றுப் புறப்பற்று இல்லாதவருடைய, உளம் - மனம், பற்றுறு - பற்றுதலுக்குற்ற, பங்கயம் பாதனே - தாமரை மலர்போன்ற திருவடிகளை யுடையவனே!, படம் பாம்பு - படத்தோடு கூடிய பாம்பினை, அணி - காதணியாக அணிந்துள்ள, காதனே - காதினை யுடையவனே! ஐயமே உன் வாழ்க்கை - பிச்சை யெடுத்து உண்ணுதலே உன் வாழ்விற்குரிய தொழிலாகும், ஊரும் வெட்ட வெளி - நீ வாழ்வதற்கு உனக்குரிய இடமாகிய ஊரும் பாழிடமாம், உடை - நீ உடுப்பதற்கு அமைந்த உடையும் (ஆடையும்), தோல் - தோலால் ஆயதாம், உற்றுப் பார்க்கில் - இவற்றை நன்கு நோக்கிப் பார்க்குமிடத்து, என் - உன்னை ஒருவர் அடைந்து பெறுவதற்குரிய பொருள் என்ன இருக்கின்றது (ஒன்றுமில்லை), பெற்று - உன்னை அடைதலால், பார்க்குள் - இவ்வுலகத்தில் நுகர்தற்குரிய, சுகம் - உலக இன்பமும், இல்லை - இல்லையாம் (அங்ஙனமாகவும்), பேதை - என் அறிவில்லாத மகள், நின்னை - உன்னை, என் பெற்றிடப் பற்றினள் - என்ன நலத்தை அடைந்திடப் பற்றினளோ அறியேன் (இங்ஙனம் என் பேதை உன்னையே பற்றி நிற்றலால், நீ அவளை எப்படியோ வஞ்சித்தாய்; உன் வஞ்சனை இருந்தவாறு என்னே!)

படப் பாம்பணி காதனே - படத்தையுடைய பாம்புகளைக் காதிலே அணிந்தவனே!

உன் வாழ்க்கை என்பது ஐயமே - உன் வாழ்க்கை என்பது சந்தேகமே.

உடை தோல் என்பதற்கு நீ அணிந்துள்ள உடை புலித்தோல்; நீ போர்த்துள்ள போர்வை யானைத் தோல் என்க.

இத்தகைய நிலைமையை உடைய உன்னை நாயகனாகப் பெற எதற்காகப் பற்றுக்கொண்டாள் எனலுமாம்.

தாய் தன் மகளை வஞ்சித்த தலைவனைப் பார்த்து அவன் வஞ்சனையை எடுத்துக்கூறி இகழ்வதாக அமைந்துள்ளது இச் செய்யுள்.

இகழ்வதுபோல் புகழ்வதாக அமைந்துள்ள அணி இதன் பால் அமைந்துள்ளது.

இதனை வடநூலார் நித்தாத்துதி என்பர்.

தனக்கென ஓரூர் இல்லையாயினும் பெரியவர் வாழும் காஞ்சிமாநகரின்கண் வந்து குடிபுகுந்ததால் தனக்கொரு தலைமை வந்ததென்பார் ‘கத்த!’ என்றும், அந்தத் தலைமையைப் பெற்றதைப் புகழ்வது போலும் பழித்துரைப்பார் ‘என் அத்தனே!’ என்றும், திக்கற்றவரே அவனைப் பற்றுவ ரென்பார், ‘பற்றிலார் பற்று பாதனே’ என்றும், அவர் பற்றுவதற்கும் உரிய வல்லமையற்ற தென்பார் மென்மை வாய்ந்த ‘பங்கயப் பாதனே’ என்றும், அணி அணிய ஆசையுடையனாயும் அதற்குரிய பொருள் இலன் என்பார், ‘பாம்பணி காதனே’ என்றும், பிச்சை யல்லது ஊண் இலனென்பார் ‘ஐயமே உன் வாழ்க்கை’ என்றும், பாழிடமே தனக்குரிய வாழ்விடமென்பார் ‘ஊரும் வெட்ட வெளி’ என்றும், உடை, யானைத்தோலன்றி வேறு இல்லை என்பார், உடை தோலென்றும், இத்தகைய நிலையை யுடையனாயும் பேதை யாது பெற நினைந்து பற்றுதற்குரியளாயினாளோ என்றும், அங்ஙனம் பற்றுதற்கு அவன் செய்த வஞ்சகம் என்னையோ என்றும் வெளிப்போக்கில் இகழ்ந்து கூறுவதுபோல் பாடியிருப்பினும் உள்ளுறை யுணர்ந்து இன்புறற்குரியது இப்பாடல் என்க.

கற்றுத் தேர்ந்தவர் தம் கல்வியாலாய பயனாய வாலறிவன் நற்றாள் தொழுதலையே மேற்கொள்வர். ஆதலால், அத்தகைய பெரியோர் வாழும் கச்சியம்பதியில் இறைவன் குடியிருப்புக் கொண்டு அதற்குத் தலைவனாயினான் என்பதும், அத் தலைவனே தமக்குத் தந்தையாம் என்று ஆசிரியர் கொள்ளுகிறார் என்பதும், அத்தகையவன் அகப்பற்றுப் புறப்பற்று அற்றவருளத்தே போந்து வீற்றிருப்பன் என்பதும், பகைத்து வெறுத்தற்குரிய பொருளாயினும் அப் பகையைப் போக்கித் தனக்கும் அப் பொருளுக்கும் அழகு செய்விக்க வல்லவன் இறைவன் என்பதும், அவன் தானாக அடியாரிடம் போந்து, அவர் அறியாமையை இரந்து வாங்கிக்கொண்டு தன் பேரின்பத்தை அளிக்க வல்லவன் என்பதும், பேரறிவாம் வெட்ட வெளியில் ஆநந்தத் தாண்டவம் செய்வான் என்பதும், தாருகாவனத்து இருடியர் ஏவிய யானையினை அழித்து, அதன் தோலினையே ஆடையாக அணிந்துளான் என்பதும், இவையெல்லாம் உளத்தைக் கவர்தற்குரியவை யாதலால், உளமாகிய பேதை அவனைப் பற்றுதற் குரியளாயினள் என்பதும், அவ்வுளம் இவ்வுலக சுகத்தை ஒரு பொருளாகக் கொள்ள விழையாது நிலையான மறுமைப் பேரின்பத்தையே எய்துமென்பதும், பிறவும் உள்ளுறையாக இப் பாட்டில் அமைந்திருக்கும் நயத்தினைப் போற்றி யுணர்க. எனவே, உற்றுப் பார்க்கில், இறைவன் வாழ்க்கையும் பிறவும் மிக்க வியப்பினைத் தருவனவாம் என்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

107

   


எண்சீர் ஆசிரிய விருத்தம்

   படவரவம் அரைக்கசைத்த பரமர் வாழும்
         பதிக்கச்சி மேயவிளம் பாவை கொங்கை
   தடவரையே கரிக்கொம்பே சகோர மேமாந்
         தளிர்மேனி தமனியத்தின் ஒளியே கண்கள்
   விடவடிவே ஆசுகமே வேலே சேலே
         மென்மருங்குல் முயற்கோடே விழைந்தேன் நெஞ்சஞ்
   சுடவகைதேர் புருவமதன் சிலையே துண்டஞ்
         சுடர்க்குடையே சுந்தரிகந் தருவ மானே.                 (74)

(இ - ள்.) பட வரவம் - படத்தை உடைய பாம்பினை, அரைக்கு அசைத்த - அரையில் கச்சாகக் கட்டிய, பரமர் வாழும் - ஏகாம்பரநாதர் வாழுகின்ற, பதிக் கச்சி மேய - பதியாகிய காஞ்சியில் விரும்பித் தங்கிய, இளம் பாவை - இளமை வாய்ந்த பாவை போல்வாளாகிய தலைவியினது, கொங்கை - முலைகள், தட வரையே - பெரிய மலையும், கரிக் கொம்பே - யானையினது கொம்பும், சகோரமே - நிலாமுகிப் புள்ளுமாம், மாந்தளிர் மேனி - மாந்தளிர் போன்ற உடலின் நிறம், தமனியத்தின் ஒளியே - பொன் ஒளியின் நிறமாம், கண்கள் - கண்கள், விட வடிவே - நச்சுத்தன்மை வாய்ந்த வடிவமும், ஆ சுகமே - அம்பும், வேலே - வேலும், சேலே - சேல் கெண்டையும் ஆம், மென் மருங்குல் - மெல்லிய இடை, முயற் கோடே - முயலின் கொம்பாம், (இல்லையென்று சொல்லும்படி இருப்பது), விழைந்தேன் - அத் தலைவியை விரும்பினேனது, நெஞ்சஞ் சுட - மனம் சுடும்படி, வகை தேர் புருவம்-அவ் வகையைத் தேர்ந்த புருவம், மதன் சிலையே - மன்மதனது வில்லாம், துண்டம் - அத் தலைவியின் முகம், சுடர்க் குடையே - மன்மதனது திங்களாகிய குடையாம், சுந்தரி - அந்தப் பெண், கந்தருவ மானே - கந்தருவப் பெண்ணேயாம்.

தலைவன் பாங்கனுக்குத் தலைவியின் இயலிடங் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண் கந்தருவமானாகவும், அவள் கொங்கை வரை, கொம்பு, சகோரமாகவும், மேனி தமனியத்தின் ஒளியாகவும், கண்கள் விடம், அம்பு, வேல், சேல் ஆகவும், மருங்குல் முயற்கோடாகவும், புருவம் மதன் சிலையாகவும், துண்டம் (முகம்) திங்களாகிய குடையாகவும் உருவகம் செய்யப்பெற்றுள்ளன.

விழைந்தேன் நெஞ்சம் சுட வகை தேர்ந்த புருவம் - விழைந்தேனது நெஞ்சத்தை சுடும்படி விதவிதமாக ஆராய்ந்த புருவம் எனினும் அமையும்.

அரைக்கு அசைத்த என்பது அரையில் அசைத்த எனப் பொருள் படுவதால் வேற்றுமை மயக்கமாம். வரையே, கொம்பே, சகோரமே, ஒளியே முதலிய இடங்களில் வந்துள்ள ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. அசைத்தல் - கட்டுதல்; ‘விட வேறு பட நாகம் அரைக்கசைத்து’ என்று வரும் தேவார அடியும் நோக்குக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

108

   


தவம்

    மான்கொண்ட கண்ணியர் மையலற் றேதவ
           வன்மைமரீஇ
     ஊன்கொண்ட துன்பை யொழிக்கத் தலைப்படும்
           உத்தமர்காள!
     வான்கொண்ட வுச்சி வரைமுழை யுற்று
           மயர்வதெவன்
     கான்கொண்ட கொன்றையர் கச்சியை யெய்திற்
           கலியறுமே.                           (75)

(இ - ள்.) மான் கொண்ட கண்ணியர் - மானின் கண்கள் போன்ற கண்களையுடைய பெண்களின், மையல் அற்றே - காம மயக்கத்தை விட்ட பின்பே, தவ வன்மை மரீஇ - தவமாகிய வலிமையுள்ள நிலையைப் பொருந்தி, ஊன் கொண்ட துன்பை - உடலிடத்துத் தோன்றும் துன்பத்தை, ஒழிக்க - ஒழிக்கும்படி, தலைப்படும் உத்தமர்காள் - முயலும் சான்றோர்களே!, வான் கொண்ட-விசும்பளவும் ஓங்கிய, உச்சி வரை - உச்சியினையுடைய மலையிடத்துள்ள, முழை யுற்றும்-குகைகளில் தங்கியும், மயர்வது எவன் - மனம் மயங்குவது என்னை? கான் கொண்ட - மணத்தினைக் கொண்ட, கொன்றையர் - கொன்றை மாலையைச் சூடியருளிய ஏகாம்பரநாதர் எழுந்தருளியுள்ள, கச்சியை எய்தின் - காஞ்சிபுரத்தை அடையின், கலி யறுமே - உங்கள் துளக்கம் (துன்பம்) ஒழியுமே.

மரீஇ - மருவி என்பதன் சொல்லிசை அளபெடை. கலி - துளக்கமாம் (கலியி னெஞ்சினேம், பரிபா. 2. 74); துன்பமுமாம்.

மனைவியரிடத்துள்ள மையலைப் பிடிவாதத்தால் நீத்துத் தவ வலிமையைத் தாங்கி, முழைகளில் மறைந்துறையினும் அம் மையல் போகாதாதலால், அடைதற்கியலாத பேரின்பத்தை அம் மனைவியரிடத்து மையலுடனேயே வீட்டிலுறைந்து காஞ்சிபுரத்துக் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமானை வழிபடின், அம் மையல் தானாக ஒழியப் பேரின்பத்தை எளிதிலெய்தலாம் என்பது கருத்து.

‘மான்’ என்பது அதன் கண்ணிற்கு முதலாகுபெயர். ஊன் என்பது அதனாலாகிய உடம்பிற்குக் கருவியாகுபெயர்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

109

   

 

இரங்கல்

பதினான்கு சீர்கொண்ட ஆசிரியச் சந்த விருத்தம்.

     எய்த வம்பு தைக்கு முன்ன
           மற்றொர் பகழி தொட்டுவேள்
     ஏழை யங்க நைந்து தேய
           அப்பு மாரி பொழிகிறான்
     செய்த வம்பு ரிந்தி லாதெ
           னுய்யு மாறு முண்டுகொல்?
     திகழு மாட மதியு ரிஞ்சு
           கச்சி மேய செம்மலார்
     கைத வங்க ணங்கி யான்மன்
           மதனை வென்ற காதையென்
     காத னோக்கி யின்ப ளிக்க
           நேர்வ ரல்ல ரேலனை
     வைத வம்பு நோக்கி யேனு
           மனமு வக்க வந்திலர்
     மாதர் நோவ வெய்து செல்வ
           மென்ன வர்க்கு மங்கையே.                 (76)

(இ - ள்.) மங்கையே - தோழியே, எய்த அம்பு - தான் எய்த அம்பு, தைக்கும் முன்னம் - தைப்பதற்கும் முன்பே, மற்று ஓர் பகழி, வேறோர் அம்பினை, தொட்டு - தன் கரும்பு வில்லில் தொடுத்து, வேள் - மன்மதன், ஏழை அங்கம் - ஏழையாகிய எனது உடல், நைந்து தேய - சிதைந்து அழியும்படி, அம்பு மாரி பொழிகிறான் - அம்பு மழையைச் சொரிகின்றான், செய் தவம் - சிவபெருமானாரைக் கூடியிருத்தலால் அவன் அம்பினின்றும் பிழைத்து நிற்றற்குச் செய்யவேண்டிய தவத்தை, புரிந்திலா தென் - விரும்பிச் செய்யாத யான், உய்யுமாறு - அம் (மன்மதன் விளைக்கும் துன்பத்தினின்று) பிழைக்கும் திறம், உண்டு கொல்-உண்டோ, திகழ் மாடம் - விளங்குகின்ற மாடங்கள், மதியுரிஞ்சு - சந்திரன் தங்கள்பால் உராய்ந்து தன் தினவு தீர்த்துக் கொள்ளும்படி உயர்ந்த இடமாகிய, கச்சி மேய - கச்சியம்பதியில் எழுந்தருளிய, செம்மலார் - சிறப்புடையாராகிய சிவபெருமானார், கண் அங்கியான் - நெற்றிக் கண்ணின் நெருப்பால், மன்மதனை வென்ற காதை - மன்மதனை எரித்து வெற்றி கொண்டார் என்று கூறும் வரலாறு (மன்மதனை வென்றதாகச் சொல்லப்படும் கதைதான்), கைதவம் - பொய்யாகக் கட்டிச் சொன்னதே யன்றி வேறில்லை, என் காத னோக்கி - எனது காதலை அறிந்து, இன் பளிக்க - இன்பத்தைக் கொடுக்க, நேர்வர் அல்லரேல் - உடன்பட்டு எதிர்ப்படாவிடினும், அனை - என் தாயானவள், வைத வம்பு நோக்கி யேனும் - திட்டிய பழிச்சொற்களை நோக்கி என்பால் இரக்கங்கொண்டாயினும், மனம் உவக்க - என் மனம் மகிழும்படி, வந்திலர் - வந்தாரில்லையே, மாதர் நோவ - உண்மைக் காதலுடைய மாதர்களின் மனம் நோதலினால், அவர்க்கு-அத் தலைவர்க்கு, எய்து செல்வம் என் - உண்டாகும் பொருள் யாது? (நீ கூறுவாயாக.)

“மன்மதன் என் உடல் சிதைய அம்புகளை எய்துகொண்டே யிருத்தலால், அவன் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணால் எரியுண்டான் என்று கூறும் கதை பொய்க் கதையாம். அம் மன்மதன் தலைவனைப் பிரியாதவள்மீது தன் அம்பினை விடுவதில்லை. அங்ஙனம், சிவபெருமானாராகிய தலைவரைப் பிரியாது வாழும் தவத்தை நான் முன் பிறப்பில் செய்தேனில்லை. ஆகவே, மன்மதன் என்னை, இங்ஙனம் தன் அம்பால் துன்புறுத்துகின்றான். சிவபெருமானார் என் காதலை நன்கு அறிவார். ஒருவேளை என்பால் உண்மைக் காதலில்லை என்று கண்டு வரவில்லை யெனினும் தமக்கு உரிமையான என்னைத் தாய் பழி மொழி கூறித் தூற்றுதலை நோக்கியேனும் வருதல் வேண்டும். அப்படியும் வாராததால் தம்மை விரும்பும் மாதருடைய மனத்தை நோக வைக்க வேண்டுமென்பதே அப்பெருமானார்க்கு இயல்பாம். அவ்வியல்பினால் அவர்க்கு வரும் செல்வம் யாதோ?’ எனத் தலைவி வருந்துகின்றாள்.

அப்பு மாரி - சொற்போக்கிலே; நீர் மழை.

முந்தியதற்கு ‘அம்பு’ என்பது, ‘அப்பு’ என வலித்தல் விகாரம் பெற்றது.

‘அனை’ - ‘அன்னை’ என்பதன் இடைக்குறை.

புரிந்திலாதென் - விரும்பிச் செய்யாத யான் என்ற பொருள் தரும் தன்மை ஒருமை வினையாலணையும் பெயர்; ‘என்’ என்பது தன்மை ஒருமை விகுதி.

அங்கி - ‘அக்கினி’ என்ற வடமொழியின் சிதைவு.

கை தவம் - பொய். “கைதவங்களைச் சாத்திரம் சொல்லுமோ” (கைவல். சந். 49,)

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

110

   


நேரிசை வெண்பா

என்னபிழை செய்தாலும் ஏழையே னுக்கிரங்கு
மன்னுபுகழ்க் கச்சியுறை வள்ளறான் - துன்னுமயன்
கம்மாள னீசன் கடையன் பொதுவனென்பேன்
கைம்மாறென் செய்வனோ காண்.                         (77)

(இ - ள்.)  மன்னு புகழ் - நிலையான புகழையுடைய, கச்சியுறை - காஞ்சியம்பதியில் கோயில்கொண்டு எழுந்தருளி யிருக்கின்ற, தான் - சிவபெருமான், வள்ளல் - யார் எதனை எப்போது வேண்டினாலும் அவர் அதனை அப்போதே பெறுமாறு அருளும் வள்ளல் என்று உயர்ந்தோர் கூறக் கேட்டேன், (வள்ளல் தன்மையுடையவன் பிறர் தன்னைப் புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தான் என்பதனை அவனிடத்துக் காண வேண்டித்) துன்னும் மயன் - அவனைத் தச்ச வேலையில் நின்று பழகிய தச்சன், கம்மாளன் - தட்டான், நீசன் - கீழ்மகன், கடையன் - இறுதியில் வைக்கப்பெற்ற வேளாளன் (கடைசிச் சாதியினன்) பொதுவன் - இடையன், என்பேன் - என்று இவ்வாறெல்லாம் இகழ்ந்துரைக்கலானேன், என்ன பிழை செய்தாலும்-இவ்வாறு என்ன தவற்றைச் செய்தாலும் அத் தவற்றையெல்லாம் நோக்காது, ஏழையேனுக்கு இரங்கும் - அறிவில்லாத என்பால் இரக்கங்கொண்டு என் மனக் கருத்தறிந்து எனக்கு அருள் புரிவானானான், கைம்மாறு என் செய்வன் - அத்தகைய வள்ளலுக்கு நான் என்ன பதில் உதவி செய்யமாட்டுவேன்?

ஓ, கரண் - அசை.

சிவபெருமான் சிறந்த வள்ளல் தன்மை யுடையவன் ஆதலால், வழிபடுமடியார் தம் மனக் கருத்தறிந்து அவர் ஏசினும் அருள் செய்வான் என்பது கருத்து.  “ஈசற்கு நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு” என்றதை நோக்குக.

இனி, ஓருரை:-மன்னு புகழ் - நிலையான புகழையுடைய, கச்சி உறை - காஞ்சியம்பதியில் கோயில்கொண்டு எழுந்தருளியுள்ள, வள்ளல் தான் - வள்ளல் தன்மையுடைய சிவபெருமானே துன்னும் - படைப்புத் தொழிலின்கண் பொருந்திய, அயன் - பிரமனுடைய, கம் ஆளன் - (அப்பிரமன் செருக்குற்ற காலத்து அவன்) தலைகளுள் ஒன்றைக் கொய்து தன் கையில் ஏந்திக் கொண்டிருப்பவன், ஈசன் - (அப் பிரமனுக்கு மட்டுமன்றித் திருமாலுக்கும்) தலைவனா யிருப்பவன், கடையன் - அப் பிரமனும் அத் திருமாலும் அழிகின்ற கடையூழிக் காலத்தும் தான் மட்டும் அழிவின்றி யிருப்பவன்; பொதுவன் - உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடு கருதாது பொதுவாக யாவர்க்கும் அருள்புரியுமாறு பொதுவிடமான சிதம்பரத்தில் ஆநந்தக் கூத்தாடி அருள் செய்பவன், என்பேன் - என்று கூறுவேன்; என்ன பிழை செய்தாலும் - அத்தகைய சிறப்புடையனாதலால், அவன் தன் பெருமையொன்றையே கருதி, என் சிறுமை யொன்றையும் கருதாது, அறிவில்லாமையால் நான் என்ன தவற்றினைச் செய்வேனானாலும், ஏழையேனுக்கு - அறிவில்லாத என்பால், இரங்கும் - இரக்கங்கொண்டு அருள் செய்வான்; கைம்மாறு என் செய்வன் - அத்தகைய இறைவனுக்கு நான் என்ன பதிலுதவி செய்ய மாட்டுவேன்?

ஓ, காண் - அசைகள்.

‘கம் ஆளன்’ என்பதற்குத் திருப்பாற்கடலை இடமாகக் கொண்டு உறைபவனாகிய திருமால் என்று பொருள் கூறுதலுமாம்.  கம் - நீர் (கம்மிக்கு உலவும் கலைசையே - கலைசைக். 92) இப் பொருளின்படி சிவபெருமான் அயனாகவும், திருமாலாகவும், ஈசனாகவும் நின்று யுக முடிவில் நிலைபெறும் ஒருவனாகவும் பொதுவனாகவும் உள்ளவன் என்பேன் என்று கருத்து வேறுபாடு காண்க.  ‘என்பேன்’ என்பதற்கு ‘என்று கூறப்பெறுவேன்’ என்று பொருள் கொள்ளுதலும் ஒன்று.  உயர்ந்தோரால் இங்ஙனம் கூறப் பெற்றுளேன் என்பது கருத்து.  இப்பொருளில் ‘என்பேன்’ என்ற செய்வினை, செயப்பாட்டுவினைப் பொருளில் நின்றது என்று கொள்ளுக.

ஓ, காண் என்பனவற்றை அடையாக்காது, ஓ நீ இதனை யறிவாயாக என்று பொருள் கூறுவாரும் உண்டு.  ஏழையேனுக்கு வேற்றுமை மயக்கம்.

“ஏசினும் யானுன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்” (திருவா. நீத். விண். 50.)

‘என்ன பிழை செய்தாலும்’ எனத் தொடங்கும் வள்ளற் பெருமானார் பாடலினையும், “சிரிப்பிப்பன் சீறும் பிழைப்பை” என்ற மணிமொழியாராகிய பெருமானார் பாடலையும் கருத்தில் வைத்துக்கொண்டு பாடியிருக்கும் பாடல் இது வென்பதை நோக்கி யறிக.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

111

   

 

சம்பிரதம்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

காற்றைப் பிடித்தொர்சிறு கரகத்துண் மூடுவேம்
     கனலைவா னோங்கவிடுவேம்
சேற்றைப் பிசைந்துசில தேவரையும் ஆக்குவேம்
     சீதரனை மாலாக்குவேம்
ஆற்றைச் செலுத்தியரி யேறவைப் பேமமுதை
     ஆவலுடன் வாரியுண்பேம்
நீற்றைப் புனைந்தவர் திருக்கச்சி போன்றதல
     நேர்தருஞ் சத்தியெமதே.                         (78)

(எங்கள் சித்தின் பெருமையைக் கூறுவோம் கேளுங்கள்)

(இ - ள்.)  காற்றைப் பிடித்து - இடைவிடாது வீசும் காற்றைப் பிடித்து, ஓர் சிறு கரகத்துள் - ஒரு சிறிய குடுவையினிடத்து அடைத்து, மூடுவேம் - மூடி விடுவேம், கனலை-நெருப்பினை, வான் ஓங்க - வானில் உலவும்படி, விடுவேம் - அனுப்பிவிடுவேம், சேற்றைப் பிசைந்து - சேற்றினைப் பிசைந்து எடுத்து, சில தேவரையும் ஆக்குவேம் - சில தேவரையும் செய்வேம், சீதரனை மாலாக்குவேம் - திருமகளை மார்பிலே கொண்டு திகழும் திருமாலினை அத் திருமகளைக் கீழே விடாதபடி அவளிடத்து என்றும் மையல் கொள்ளும்படி செய்வேம், ஆற்றைச் செலுத்தி-ஆற்று நீரைக் கால்வாய்களின் வழியே செலுத்தி, அரி யேறவைப்பேம் - நெற்கதிர்களின் அரி வளம் பெற்று வளரும்படி செய்வேம், அமுதை ஆவலுடன் வாரி யுண்பேம் - அமுதத்தை ஆசையுடன் கடலிடத்துக் கடைந்தெடுத்து உண்பேம், நீற்றைப் புனைந்தவர் - விபூதியை அணிந்த ஏகாம்பரநாதரது, திருக்கச்சி போன்ற தலம்-திருக்கச்சியைப்போன்ற ஒரு தலம், நேர் தரும் - எங்கள் முயற்சியால் உண்டானதேயாம், எமது சத்தியே-இவையெல்லாம் எங்களுடைய சித்தின் (சம்பிரதத்தின்) ஆற்றலேயாம்.

சிறு கரகத்துள், காற்று இயற்கையிலேயே உள்ளது.  இவண் அடைப்பது என்பது இல்லை.  எனினும், காற்று வீசாதபோது, கரகத்துள் அடைப்பட்டதாக வழங்குவர்.  நெருப்பு இயல்பாகவே வானோங்கி உயரும்;  நெருப்பு வண்ணமாய் ஞாயிறு (சூரியன்) வானில் ஒளிர்கின்றான் என்பது இயற்கையே.  வானில் நெருப்பு வடிவினனான சூரியன் உலவுவது சித்தின் ஆற்றலால் என்பர்.  சேற்றினைப் பிசைந்து கையினால் பிடியாகப் பிடித்துக் கடவுள் வடிவமாக வைத்து வணங்குவது வழக்கமே.

பிள்ளையார் சதுர்த்தியில் பிள்ளையாரும், பிற காலங்களில் ஐயனார், முனீச்சுவரர் முதலியோரும் சேற்றினால் ஆய வடிவங்களில் வழிபடப் பெறுவதை நோக்குக.

திருமாலை இலக்குமியினிடத்து ஆசை உடையவராகவும், மால் என்னும் பெயரை உடையவராகவும் செய்வோம் என இரட்டுற மொழிதலுமாம்.

ஆற்றைச் செலுத்தி யரி யேற வைப்பேம்.  கழனியில் ஆற்று நீரால் விளைந்து நெற்கதிர் வளம் பெற்று வளர்வது இயற்கையே; ஆற்றைச் செலுத்திக் குதிரை மரம் ஏற வைப்போம்.  அரி - வைக்கோலுமாம்.  ஆற்றை மதகு வழியாகச் செலுத்தி நெல் அரிகளை அடித்துக்கொண்டு போகச் செய்வோம் என்றும் கூறலாம்.

அமுதை ஆவலுடன் வாரி யுண்பேம் - சோற்றினை ஆவலுடன் அள்ளி உண்பேம் எனவும் பொருள் தரும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

112

   


கட்டளைக் கலிப்பா

சட்டப் பட்டவு ளம்பெற்ற சால்பினோர்
     தங்கப் பெற்றகச் சிப்பதிச் செல்வவேள்
குட்டப் பட்ட தலைவிதி யென்றலை
     கொடுமை கூரெழுத் திட்டனன் மாதர்வார்
கட்டப் பட்டத னம்பிறை வாணுதல்
     கடுவ டங்கிய கண்ணின்ம மயங்குவேற்
கிட்டப் பட்டமட் டின்பமும் வாய்க்குமோ
     ஈச னேயரு ணேசவி லாசனே.                     (79)

(இ - ள்.)  சட்டம் பட்ட - செப்பம் அமைந்த, உளம் பெற்ற - மனம் அமைந்ததால், சால்பினோர் - நிறைவு உற்ற பெரியோர், தங்கப் பெற்ற - வசிக்கப் பெற்ற; கச்சிப்பதி காஞ்சிபுரத்தில் குமரக் கோட்டத்தில் எழுந்தருளிய, செல்வ வேள் - சிறப்புடைய முருகனாரால், குட்டப்பட்ட - குட்டுண்ட, தலை விதி - தலையை உடைய பிரமன், என் தலை - என் தலையில், கொடுமை கூர் எழுத் திட்டனன் - கொடுமை மிக்க எழுத்தை எழுதினான், (அதனால்), மாதர் வார் கட்டப்பட்ட தனம் - பெண்களுடைய கச்சால் கட்டப்பட்ட முலைகளிலும், பிறை வாள் நுதல் - எட்டாம் நாள் பிறை போன்ற ஒளி பொருந்திய நெற்றியினிடத்தும், கடு அடங்கிய கண்ணின் - நஞ்சு தங்கிய கண்களிடத்தும், மயங்கு வேற்கு - மனத்தைச் செலுத்தி மயங்குவேனாகிய எனக்கு, இட்டப் பட்ட மட்டு - விரும்பப்பட்ட அளவாக, இன்பமும் - அந்தப் பேரின்பமும், வாய்க்குமோ - கைகூடுமோ (கூடாதன்றே), ஈசனே - கடவுளே, அருள் நேச விலாசனே - அருளை உடைய நேசத்தால் அன்பரிடத்து இன்ப விளையாட்டுப் புரிபவனே அப் பேரின்பம் கிடைக்குமாறு நீ அருள் செய்வாயானால் தலைவிதிக்கு மாறாக நான் அடைவது கூடிடும்.

இன்பமும் உயர்வு சிறப்பு.

வாய்க்குமோ - ஓ எதிர்மறை வினாவோடு ஐயம்.  இனி, ஈசனே! நேச விலாசனே! அருள் அருள்வாய் எனவுமாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

113

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்

அருணைப் பதியின் அழலுருக்கொண்
     டமைந்த கச்சி அங்கணர்முன்
பெருமைப் புரத்தை அழிவெப்பும்
     பிழைத்த மதற்கொல் விழிவெப்பும்
கருமைப் பகடூர் காலனைக்காய்
     வெப்புந் தணியப் பழவடியார்
அருமைத் தமிழின் னமுதூறு
     மழையைச் சொரிந்தார் தெரிந்தாரே.               (80)

(இ - ள்.)  அருணைப் பதியின்-திருவருணைப் பதியின்கண், அழல் உருக் கொண்டு - நெருப்பு வடிவமே கொண்டு தங்கியவர், அமைந்த - அவ் வழலுரு விடுத்து அமுத வடிவமே கொண்டு அமைந்ததால், கச்சி அங்கணர் - காஞ்சியில் அருள் பெருகும் அழகிய கண்ணை யுடையராதற்கு, அவ் வழலுருவிலே நின்ற அழலேயன்றி, முன்-முற்காலத்தில், பெருமைப் புரத்தை-பெருமை பொருந்திய மூன்று எயில்களை, அழி வெப்பும் - அழித்த காலத்துத் தோன்றிய நகை வெப்பமும், பிழைத்த - தனக்குத் தவறு செய்த, மதன் கொல் - மன்மதனை எரித்த, விழி வெப்பும் - நெற்றிக்கண் வெப்பமும், கருமைப் பகடு ஊர் - கரிய எருமைக் கடாமீது ஊர்ந்து வந்த, காலனை - எமனை, காய் வெப்பும் - அழித்த காலத்துத் தோன்றிய கால் வெப்பமும், தணிய - தணியும்படி, பழ வடியார் - பழமையாகத் தொண்டு பூண்டு ஒழுகிய அடியார்கள், அருமைத் தமிழின் - தாம் பாடிய அருமையான தமிழ்ப் பாசுரங்களாகிய, அமுதூறு மழையை- அமுது சுரக்கின்ற மழையை, சொரிந்தார் - பெய்தனர், தெரிந்தாரே - (அந்த அடியார்களே தக்க விரகு) அறிந்தவர்கள்.

சிவபெருமானுடைய அழ லுருவமும், அழற் கண்ணும், அழல் நகையும், அழற் காலும் கொண்ட அழல் தணியத் தேவார ஆசிரியர்களாகிய பழைய அடியார்கள் தாங்கள் பாடிய அமுதமயமான தமிழ்ப் பாடல்கள் பாடினதா லன்றோ, இன்று யாவரும் அவ் வமுதமயமான இறைவனாகிய கச்சி யெம்பெருமானைப் பாடி எளிதில் பேரின்பத்தை யடையும் வழி பெற்றிருக்கின்றனர்.

தமிழின் இயற்கையான பண்பு இருந்தவாறு என்னே! என்ற கருத்து இப் பாடலின்கண் அமைந்துள்ளது.

பழைய அடியார் - மூவர் முதலிகள் முதலியோர்.  அமுது-இனிமை, முத்தி.

அங்கணர் - அமுதமூறும் அழகிய கண்ணையுடைய சிவபெருமானார்.  நகையும், விழியும், காலும் வெப்பு (அழல்) ஆகவும் தமிழ் மழையாகவும், முத்தி அமுதமாகவும் உருவகப்படுத்தியிருக்கும் நயம் அறிந்து இன்புறற்குரியது.  தமிழினிடத்து ஆசிரியர்க்குள்ள அளவில்லாத மதிப்பும் பற்றும் இப்பாடலின் கண் இனிது விளங்குவனவாம்.

கயிலையில் அமுதவடிவினராயிருந்த சிவபெருமானாரது அணுக்கத் தொண்டராக இருந்த அப்பர், சுந்தரர், சம்பந்தர் முதலியவர்கள் இவ்வுலகின்கண் வந்து அவதரித்ததால், அச் சிவபெருமானார் அழல் வடிவம் நீங்கி அமுதவடிவம் கொண்டுறையும் பேற்றினை நாமெல்லாரும் பெறுதல் நேர்ந்தது.  அதுவும் காஞ்சிப்பதியில் அவ் வடிவம் நிலைபெறுவதாயிற்று.  பழைய அடியவர்கள் வந்து தமிழால் பாசுரங்கள் பாடியிலரேல், நாம் முத்தியின்பமே பெறுதல் முடிந்திராது.  ஆகவே, அவ் வடியார்கட்கு நாம் என்ன தான் கைம்மாறு செலுத்தக்கடவேம் என்று அடியார் பால் ஆசிரியர் காட்டும் அன்பும் மதிப்பும் இப்பாடலில் பொங்கி வழிதலையும் காணலாம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

114

   


தரவு கொச்சகக் கலிப்பா

மழைகொண்ட வுச்சியினார் வளங்கொண்ட கச்சியினார்
உழைகொண்ட கரத்தொழிலும் உமைகொண்ட விடத் தெழிலும்
கழைகொண்ட மதனழியுங் கனல்கொண்ட நுதல்விழியும்
இழைகொண்ட உரத்தழகும் எமக்கினிய அமுதாமே.                     (81)

(இ - ள்.)  மழை கொண்ட உச்சியினார் - மேகங்களைத் தம் சடையில் ஒடுக்கிக்கொண்ட முடியை உடையாரும், வளங்கொண்ட கச்சியினார் - மூவளங்களையும் கொண்ட கச்சியம்பதியில் எழுந்தருளியவரும் ஆய ஏகாம்பரநாதனாரது, உழை கொண்ட கரத் தொழிலும் - மானை யேந்திய கையின் தொழிலும், உமை கொண்ட இடத் தெழிலும், உமாதேவியைக்கொண்ட இடப் பாகத்தின் அழகும், கழை கொண்ட மதன் - கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன், அழியுங் கனல் கொண்ட நுதல் விழியும் - அழியத்தக்க நெருப்பைக்கொண்ட நெற்றி விழியும், இழை கொண்ட உரத் தழகும் - பூணூலைக் கொண்ட மார்பினழகும் (ஆகிய இவையெல்லாம்), எமக்கு இனிய அமுதாமே - அமுதம்போல எமக்கு இன்பம் தருவனவாம்.

இழை - பூணூல்.

வளம் - நீர்வளம், நிலவளம், குடிவளம்.

‘உமை கொண்ட விடத் தெழிலும்’ என்பதற்கு, உமாதேவி செய்த விரகினால் மிடற்றில் நஞ்சு தங்க, ஏற்பட்ட அந் நஞ்சின் (விடத்தின்) அழகும் எனவும் பொருள் கொள்ளலாம்.

இழை - அணிகலமும் ஆம்.

மழை - மேகத்திற்குக் காரியவாகு பெயர்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

115

   

 

கொற்றியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

   ஆமைமீன் கோலமுறு மங்கமரீஇ அரவிடையால்
         அகடு மேவி
   மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும்
         வகையாற் குல்லைத்
   தாமனையொப் பீரைந்து சரஞ்செய்துயர் நீக்கியருள்
         தந்து காப்பீர்
   கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு துளவமணக்
         கொற்றி யாரே.                         (82)

(இ - ள்.) கோமளை வாழ் - அழகிய உமாதேவி தங்கிய, இடத்தர் - இடப்பாகத்தை உடையவராகிய ஏகாம்பரநாதர் வாழ்கின்ற, கச்சி மறுகு உலவு - காஞ்சிபுரத்தின் வீதியில் உலவுகின்ற, துளவம் மணம் கொற்றியாரே - துளசி மாலையின் நறுமணம் வீசுகின்ற தாசிரிச்சியாரே, ஆமை மீன் கோலம் உறும் அங்கமரீஇ - ஆமைபோலும் புறவடியும் வரால் மீன்போலும் கணைக்காலும் அழகுறும் உறுப்புக்கள் கொண்டு, அரவு இடை ஆல் அகடு மேவி - பாம்புபோலும் துவளும் இடையும் ஆலிலை போலும் வயிறும் அமையப்பெற்று, மாமை யுருவோடு - மாவின் தளிர்நிறம் போலும் நிறத்தோடு, வளை சக்கு அரம் ஏந்தி - சங்கு வளையல்களும் அரம்போலும் கண்ணும் ஏந்திக்கொண்டு, திகழும் வகையால் - விளங்கும் காரணத்தால், ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ - எங்கள் சிவபெருமானார் அருளால் கூர்மம் மீன் பன்றி இவற்றின் வடிவம் உற்ற அருள் தோற்றத்தைப் பொருந்தி, அரவு இடை - பாம்பணையில், ஆல் அகடு மேவி - ஆலிலையின் மேலே பள்ளிகொண்டு, மாமை உருவோடு - கரு நிறத்தோடு, வளை சக்கரம் ஏந்தி-சங்குச் சக்கரம் ஏந்திக்கொண்டு, திகழும் - விளங்கும், குல்லைத் தாமனை ஒப்பீர் - துளசிமாலையை அணிந்த திருமாலினை ஒப்பீர், ஐந்து சரம் செய் துயர் - மன்மத னது ஐந்து பகழிகள் செய்கின்ற துன்பத்தை, நீக்கி - ஒழித்து, அருள்தந்து - அருள்செய்து, காப்பீர் - என்னைக் காக்கக் கடவீர்.

சக்கரம் - சக்கு அரம்; அரம் சக்கு - அரம் போன்ற கண்.

கொற்றியார் - தாசிரிச்சி.

ஆமை - புறந்தாளுக்கு உவமை (புறந்தாள் - பாதத்தின் மேற்பாகம்.)

மீன் -வரால் மீன் (கணைக்காலுக்கு உவமை.)

கோலம் - அழகு.

திருமால் - ஆமை, கூர்மம்.

மீன் - மச்சம்; கோலம் - பன்றி (வராகம்) அவதாரங்கள்.

அரவு இடை - பாம்பினை ஒத்த இடையையும்; ஆல் இடை மேவி - ஆலிலைபோன்ற வயிற்றையும் பொருந்தி.

திருமால்: அரவிடை - பாம்பினிடத்திலும், அரவணை ஆல் அகடு மேவி - ஆலிலை நடுவிலும் தூங்கி.

கொற்றியார்: மாமை யுருவோடு வளை சக்கர மேந்தி - மாமை நிறம் (பொன் நிறம்) பொருந்திய உடம்போடு வளையலையும், (சக்கு அரம் - அரம் போன்ற கண்ணையும் தாங்கி) (கங்கையும் சக்கரத்தையும்) கையிற்கொண்டு.

திருமால்:  மா - கரிய, மை உருவுடன் - மேகம்போன்ற மேனியுடன்-பாஞ்சசன்னியம் என்னும் சங்கினையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்தி.

‘காப்பீர்’ என்றது, திருமாலை நீர் ஒப்பவராதலின், எம்மைக் காத்தற்றொழில் உமக்கு எளிதாகும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

116

   


தரவுகொச்சகக் கலிப்பா

மணக்கோலஞ் செய்ய மதனன் முடுகிநின்றான்
கணக்கோலங் கொங்கைக் கிடவந்தீர்! கட்செவிமால்
குணக்கோலன் கச்சிக் குழகன் றிருவுலா
வணக்கோலங் காண வருவீர் மனமகிழ்ந்தே.                    (83)

(இ - ள்.) மணக்கோல் அஞ்சு எய்ய-வாசனை பொருந்திய மலரம்புகள் ஐந்தை (உம்மை) எய்யும்படி, மதனன் முடுகி நின்றான் - மன்மதன் விரைந்து நின்றான், கணம் கோலம் - கூட்டமாகிய பலவகைப்பட்ட கோலங்களை, கொங்கைக்கு - முலைக்கு, இட வந்தீர் - இட வந்தவரே (தோழியரே), கட்செவிமால் - பாம்பின்மீது பள்ளிகொள்ளுந் திருமாலாகிய, குணக்கோலன் - மேன்மைக்குணம் பொருந்திய அம்பினை உடையவனாய, கச்சிக் குழகன் - கச்சிப்பதியிலுள்ள அழகனது, திருவுலா-அழகிய திருவுலாவினது, வணம் கோலம் - சிறந்த அழகினை, மன மகிழ்ந்து - மனமகிழ்ச்சி அடைந்து, காண வருவீர் - காணும்படி வருவீர்.

மன்மதன் மணக்கோலஞ் செய்கிறான்;  குழகன் ஊர்க்கோலம் வருகிறான்; நீர் கலியாண வீட்டில் மணப்பெண்ணை அலங்கரிக்க வந்தீர்போலும்.  இது போக்குரை.

இது தலைவி கூற்று.

ஐந்து பாணங்களாவன - மன்மதன் கரும்பு வில்லிற் றொடுத்துக் காமுகரை யெய்யும் ஐந்து மலர்க் கணைகள்.

அவை:  தாமரை, மா, அசோகு, முல்லை, நீலோற்பலம்.  அவை முறையே, சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரண மெனும் அவத்தைகளைச் செய்யும்.  இதனை, “வனசஞ் சூத மசோகு முல்லை, நீலமென மதன் பெய்கணையைந்தே”.  “சுப்பிர யோகம் விப்பிர யோகம், சோகம் மோகம் மரணமுந் தோற்றும், அவைதாம், சுப்பிர யோகஞ் சொல்லு நினைவும், விப்பிர யோகம் வெய்துயிர்த் திரங்கல், சோகம் வெதுப்புந் துய்ப்பன தெவிட்டலும், மோக மழுங்கலும் மொழி பல பிதற்றலும், மரண மயர்ப்பும் மயக்கமுஞ் செய்யும்” என வருவதனா லறிக.  அப் பாணங்களை “நெஞ்சி லரவிந்த நீள்சூதங் கொங்கையினில், துஞ்சும் விழியி லசோகமாம் - வஞ்சியர்தஞ், சென்னியிலே முல்லை திகழ்நீல மல்குலிலே, யென்னவே ளெய்யுமியல் பாம்” இம் முறையாக வெய்வனென நூல்கள் கூறும்.

கணக்கோலம் கொங்கைக் கிடுதலாவது - அணிகலம் அணிதல், தொய்யில் எழுதுதல் முதலியன.

கோல் - அம்பு.

அஞ்சு - ஐந்து என்பதன் மரூஉ.

கட் செவி - கண்ணினிடத்தே நெருங்கியிருக்கும் செவியையுடையது எனப் பாம்பிற்குக் காரணக்குறி.  கண்ணையே செவியாக உடையது என்பர் பழம் புலவர்.

வணக் கோலம், வண்ணம் கோலம் - ஒருபொருட் பன்மொழி; சிறந்த கோலம் என்பது பொருள்.

குழகன் - இளமை அழகுடையோன்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

117

   


கட்டளைக் கலித்துறை

மதுவிருந் தேயளி பாடுந் தொடைபுனை மன்னருமிங்
கெதுவிருந் தேனும் பெறுமின்ப மென்கச்சி ஈசனை வான்
புதுவிருந் தேபுண்ட ரீகன் முராரி புரந்தரனைப்
பொதுவிருந் தேவல் கொளும்பெரு மாவெனப் போற்றுவனே.     (84)

(இ - ள்.) மது இருந்தே - தேனை உண்டு அதிலிருந்தே, அளி பாடும் - வண்டுகள் பாடுகின்ற, தொடை புனை - மாலையணிந்த, மன்னரும் - அரசர்களும், இங்கு - இவ்வுலகத்தில், எது இருந்தேனும் - எவ்வளவு சிறந்த பொருள்கள் பெற்றிருந்தாலும், பெறும் இன்பம் என் - அடையக்கூடிய இன்பம் யாது?  (துன்பமே என்றபடி) ஆதலால், கச்சி ஈசனை - காஞ்சியம் பதியில் எழுந்தருளிய சிவபெருமானை, வான் புது விருந்தே (என) - தேவர்களுக்கு எப்பொழுதும் புதுமையாக இருக்கும் புதியோனே என்றும், புண்டரீகன் - தாமரைப்பூவில் உறை பிரமனையும், முராரி - திருமாலையும், புரந்தரனை - இந்திரனையும், பொது இருந்து - அவர்கட்கு நடு நிலைமையாக இருந்து (கனகசபையிலிருந்து), ஏவல் கொளும் - பணிவிடை செய்ய ஏவிக் கொள்ளும், பெருமா என - பெருமானே என்று, போற்றுவன் - யான் துதிப்பேன்.

அரசர் வாழ்வும் வாழ்வன்று என்று எண்ணிக் கச்சி எம்பெருமானைத் துதிப்பேன் என்பது கருத்து.

‘பொதுவிருந்து ஏவர் கொள்ளும் பெருமா’ என்பதற்கு, மும்மூர்த்திகளுக்கும் மேலாய்ப் பொதுநிலை வாய்ந்திருந்து, திருக் கூத்து நிகழ்த்தும் தில்லை அம்பலத்திலிருந்து ஏவல் கொள்ளும் பெருமானே! என்க.

தொடை - பூக்களால் தொடுக்கப்படுவது; மாலை.

‘என்’ என்பது, எவன் என்பதன் மரூஉ.

விருந்து - சொல்லால் அஃறிணை, பொருளால் உயர்திணை.  ‘விருந்தே புதுமை’ என்பது தொல்காப்பியம்.

‘இருந்தேனும்’ என்பது, ‘இருந்ததேனும்’ என்பதன் விகாரம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

118

   

 

நெஞ்சொடு கிளத்தல்

கட்டளைக் கலித்துறை

போற்றப்பல் பாவுண்டு கேட்கச் செவியுண்டு பூப்பறித்துத்
தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்கள்
ஆற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா
மாற்ற அருளுண்டு நெஞ்சே! துயரெவன் மற்றெனக்கே.          (85)

(இ - ள்.) போற்றப் பல் பாவுண்டு-துதிக்கப் பல பாக்களும் பாவினங்களும் உண்டு, கேட்கச் செவியுண்டு - அவற்றைக் கேட்கக் காதுண்டு, பூப் பறித்து - பூக்களைக் கொய்து, தூற்ற - தூவ, கர முண்டு - கை யுண்டு, தாழச் சிரமுண்டு - (அவரை) வணங்கத் தலையுண்டு, தோத்திரங்கள் ஆற்றச் செந் நாவுண்டு - தோத்திரங்கள் செய்யச் சிவந்த நாவுண்டு, (இவற்றை ஏற்றுக்கொள்ள), தென் கச்சி வாண ருண்டு - தெற்குத் திசையிலுள்ள காஞ்சியம் பதியில் கோயில்கொண்டு வாழ்வாராகிய ஏகாம்பரநாதருண்டு, அல்லல் எல்லாம் மாற்ற அருளுண்டு - நமக்கு உண்டான துன்பங்களை எல்லாம் ஒழிக்க அவரது கருணையுண்டு, நெஞ்சே - (ஆதலால்) மனமே!,எனக்கு-, துய ரெவன் - துக்கம் ஏது?

இக்கருத்துப்பற்றியே,

“நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசில
பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர்
தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட்
பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே.”

இது நெஞ்சொடு கிளத்தல்.

‘வாணர்’ என்பது, ‘வாழ்நர்’ என்பதன் மரூஉ.

எவன் என் வினா ஈண்டு இன்மை குறித்துநின்றது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

119

   


தரவுகொச்சகக் கலிப்பா

எனக்கே துன தருளை யெண்ணுமியல் என்துயரம்
உனக்கே தெரியுமகக் குற்ற துயரமெலாம்
அனைக்கே தெரியுமக வாயுங்கொல் அன்னைசெயல்
கனக்கேதந் தீர்த்தருள்பூங் கச்சிநகர்க் கண்ணுதலே!       (86)

(இ - ள்.) கனம் கேதம் தீர்த்தருள் - மிகுந்த துக்கத்தை (அடியாரிடத்து) ஒழித்தருள்கின்ற, பூங் கச்சி நகர்க் கண்ணுதலே - அழகிய காஞ்சி நகரத்தில் எழுந்தருளிய நெற்றிக்கண்ணுடைய சிவபெருமானாரே, உனது அருளை - உமது கருணையை, எண்ணும் இயல் - எண்ணும் தகுதி; எனக்கு ஏது - எனக்கு ஏது (எனக்கு இல்லை என்றபடி), என் துயரம் உனக்கே தெரியும் - என் துயரம் உமக்கே தெரியும் (என்னை!) மகக்கு உற்ற துயர மெலாம் - பிள்ளைக்கு உற்ற துக்க மெல்லாம், அனைக்கே தெரியும் - பெற்றத் தாய்க்கே தெரியவரும், அன்னை செயல் மகவு ஆயுங்கொல் - அன்புடைய அன்னையின் செயல்களைப் பிள்ளை ஆராயுமோ?

‘கனக்கேதந் தீர்த்தருள்’ என்பது, கேதம் - துக்கம் (கேதம் கெடுத்தென்னை ஆண்டருளும், திருவாசகம், 43 - 9.)

‘மகவும் குழவும் இளமைப் பொருள’ (தொல். 29.) ‘மக’ என்பது இளமையை முதலில் உணர்த்தி, ஈண்டுப் பிள்ளையை உணர்த்திநின்றது.

‘அனை’ என்பது, ‘அன்னை’ என்பதன் இடைக்குறை.  ‘எது’ என்னும் வினா, ஈண்டு இன்மை குறித்துநின்றது.

‘மகக்கு உற்ற துயரமெல்லாம் அனைக்கே தெரியும், அன்னை செயல் மகவு ஆயுங்கொல்’ என்பது, பிறிது மொழிதல் என்னும் அணிபெற்று நின்றது.  மகப்போன்றவன் நான்; அன்னை போன்றவன் நீ; எனக்குற்ற துயரமெல்லாம் உனக்குத் தெரியும்; உன் அருட்செயலெல்லாம் ஆராயும் தகுதி எனக்கில்லை என்ற பொருளை அது தருதலால்.  இனி, இப்பாடம் முழுதும் உவமையணி பெற்று நின்றதாகக் கொள்ளலும் ஒன்று.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

120

   


கட்டளைக் கலித்துறை

கணங்கொண்ட பாசத் தொடரறுத் துய்யுங்
     கருத்துடையீர்!
மணங்கொண்ட தண்டலை சூழுந் திருக்கச்சி
     மாநகர்வாழ்
நிணங்கொண்ட சூற்படை நின்மலன் தாளை
     நிதந்தொழுவீர்
பணங்கொண்ட பாம்பின் விடங்கொண்ட கண்ணியர்
     பற்றஞ்சியே.                              (87)

(இ - ள்.)  கணம் கொண்ட - கூட்டமாக உள்ள, பாசத் தொடர் அறுத்து - பாசமாகிய சங்கிலியை அறுத்து, உய்யுங் கருத்துடையீர் - பிழைக்கும் எண்ணம் உடையவர்களே, மணங்கொண்ட - வாசனை வீசப்பெற்ற, தண்டலை சூழ் - சோலை சூழ்ந்த, திருக்கச்சி மாநகர் வாழ் - அழகிய காஞ்சிமாநகரத்தில் வாழ்கின்ற, நிணங் கொண்ட - கொழுப்புப் பூசப்பெற்ற, சூற் படை - சூலாயுதத்தை உடைய, நின்மலன் தாளை - நின்மலராகிய ஏகாம்பரநாதரதுத் திருவடியை, பணங் கொண்ட - படத்தைக் கொண்ட, பாம்பின் - பாம்பினது, விடம் கொண்ட - விடம் போன்ற, கண்ணியர் - கண்களை உடைய மாதரது, பற்று அஞ்சி-ஆசைக்குப் பயந்து, நிதம் தொழுவீர் - நாள்தோறும் வணங்குவீர்களாக.

‘கருத்துடையீர்! கச்சிமாநகர்வாழ் நின்மலன் தாளைக் கண்ணியரது பற்று அஞ்சியே நிதந் தொழுவீர்’ என முடிக்க.

சூல்-சூலப்படை; சூலாயுதம்.  சூலம் என்பது அம் கடைக் குறையாய், சூல் என நின்றது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

121

   

 

மடக்கு

கட்டளைக் கலிப்பா

   பரவை யாலம் பருகிய அண்ணல்விண்
         பரவை யாலம் பயின்றொரு நால்வர்தந்
   தெரிவை யங்கடி செய்யர்ப ரவையாந்
         தெரிவை யங்கடி யர்க்கருள் செம்மலார்
   சிரமந் தாகினிச் செஞ்சடை யார்தொண்டர்
         சிரமந் தாக்கு திருக்கச்சி நாதர்தீ
   யரவ மாலை அழித்தெனைக் காப்பரால்
         அரவ மாலை அணிந்தருள் கத்தரே.                (88)

(இ - ள்.)  பரவை - கடலில் தோன்றிய, ஆலம் - ஆலகால நஞ்சை, பருகிய அண்ணல் - உண்ட சிவபெருமானார், விண் பரவு - விண்ணோர் துதிக்கும்படியான, ஐ - அழகிய, ஆலம் பயின்று - கல்லால மரத்தின்கீழ் இடைவிடாது வீற்றிருந்து, ஒரு நால்வர்தம் - சனகர் முதலிய நால்வருக்குத் தோன்றிய, தெரிவு ஐயம் - ஆராயக்கூடிய ஐயப்பாடுகளை, கடி - நீக்கும், செய்யர் - செம்மேனியர், பரவையாம் தெரிவை - (அவர் திருவாரூரிலுள்ள) பரவை என்னும் நாச்சியாரை, அங்கு - அத் திருவா ரூரில், அடியார்க்கு - சுந்தரமூர்த்திகளுக்கு, அருளிய செம்மலார் - அருளிய தலைவர்; சிரம் - மேன்மையுற்ற, மந்தாகினி - ஆகாய கங்கையை, செஞ்சடையார் - சிவந்த சடையிடத்துக் கொண்டவர், தொண்டர் சிரமம் - அடியார்களுடைய துயர்களை, தாக்கு - விரைந்து நீக்குகின்ற, திருக்கச்சி நாதர் - திருக்கச்சியில் எழுந்தருளிய தலைவர், தீயர் அவம் மாலை அழித்து - கொடியரால் உண்டாக்கப்பட்ட பயனில்லாத மனக்கலக்கத்தை ஒழித்து, எனைக் காப்பர் - என்னைக் காப்பார், அரவ மாலை - பாம்பணியை, அணிந்தருள் கத்தர் - அணிந்தருளிய தலைவர்.

அண்ணலும், செய்யரும், செம்மலாரும், சடையாரும், நாதருமாகிய கர்த்தர் மாலை அழித்துக் காப்பர் என முடிக்க.  ஆல் - அசை.

அண்ணல், செய்யர், செம்மலார், செஞ்சடையார், நாதர், கத்தர் என்பன ஒரு பொருள் பல பெயரடுக்கிக் காப்பர் என ஒருவினை கொண்டன.

‘கர்த்தர்’ என்பது, கத்தர் எனச் சிதைந்துநின்றது.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

122

   

 

தழை

எழுசீர் ஆசிரிய விருத்தம்

   கத்தனார் மகிழ்ந்த கச்சிவெற் புடையாய்!
         காமனு மயங்குறு கவினார்
   அத்தநீ அளித்த மாந்தழை அரிவைக்
         காருயிர் அளித்தகா ரணத்தால்
   சுத்தனாம் அநுமன் சானகிக் களித்த
         துணையமை ஆழியோ? இந்த்ர
   சித்தனான் மடிந்த கவிக்குலம் பிழைப்பச்
         செய்தசஞ் சீவியோ தானே.                       (89)

(இ - ள்.)  கத்தனார் - யாவருக்கும் தலைவராகிய ஏகாம்பரநாதர், மகிழ்ந்த - மகிழ்ச்சி கொண்ட, கச்சி வெற்புடையாய் - காஞ்சியினது வெற்பை இடமாக உடையோரே!, காமனும் - மன்மதனும், மயங்குறு - மயங்கத்தக்க, கவின் ஆர் - அழகு வாய்ந்த, அத்த - தலைவரே!, நீ அளித்த - நீர் கொடுத்த, மாந்தழை - மாந்தழையானது, அரிவைக்கு-என் தலைவிக்கு, ஆருயிர்-அரிய உயிரை, அளித்த காரணத்தால் - கொடுத்த காரணத்தால், சுத்தனாம் அநுமன் - பரிசுத்தனாகிய அநுமன், சானகிக்கு - சானகி என்பாளுக்கு, அளித்த - கொடுத்த, துணை யமை - பிரிவாற்றுந் துணையாகப் பொருந்திய, ஆழியோ - இராமனது அடையாள-மோதிரம் போன்றதோ?, (அன்றி) இந்தரசித்தனால் - இந்திரச் சித்தனால், மடிந்த - இறந்த, கவிக்குலம் பிழைப்பச் செய்த - குரங்கின் கூட்டம் உயிர் பிழைக்கும்படிச் செய்த, சஞ்சீவியோ - இறவாமையைத் தரும் சஞ்சீவி மருந்து போன்றதோ யானறியேன்.

இது, தோழி கூற்று.

சீதை உயிர் விடத் துணிந்தபோது, அனுமன் கொடுத்த மோதிரத்தை அவள் ஏற்றுக் கொண்டமையின் உயிர் பெற்றது போலவும், இந்திரச்சித்தனால் மடிந்த குரங்கின் கூட்டம் சஞ்சீவி மலையால் உயிர் பெற்றமை போலவும் நீ கொடுத்த தழையைத் தலைவி ஏற்றமையால் உயிர் பிழைத்தனள் என்றாள் தலைவனிடத்துத் தோழி என்க.

தான், ஏ அசை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

123

   

 

குறம்

எண்சீர்க் கழிநெடில் ஆசிரிய விருத்தம்

   தாளமிரண் டென்னுமுலைத் திருவனையாய்! தளரேல்
         தரணிபுகழ் கச்சிநகர்த் தலைவனைநீ புணரும்
   வேளையறிந் துரைத்திடுவன் விரைந்தொர்படி நெல்லும்
         வேறுந்தலைக்கெண் ணெயும்பழைய கந்தையையுங்
   காளவுருக் காமவிழிக் கன்னிதனக் கந்நாட்
         கருதியொரு குணங்குறியும் அரியவர்க்கோர் குணமுங்கொடுவா
   கோளகலக் குறியிரண்டுங் கொடுப்பையென மொழிந்தோள்
         குடியுதித்த குறமகள்யான் குறிக்கொளென்றன் மொழியே.        (90)

(இ - ள்.)  தாளம் இரண் டென்னும்-கைத் தாளம் இரண்டென்று சொல்லப்படும், முலைத் திருவனையாய் - தனத்தை உடைய திருமகளைப்போன்ற தலைவியே!, தளரேல் - நீ மனத் தளர்ச்சி அடையாதே, தரணி புகழ் - உலகத்தார் புகழும், கச்சிநகர்த் தலைவனை - கச்சி நகரில் எழுந்தருளிய நாயகனை (ஏகாம்பரநாதனை), நீ புணரும் வேளை யறிந்து - நீ கூடும் சமயத்தைக் குறியால் அறிந்து, உரைத்திடுவன் - சொல்லிடுவேன், விரைந்து-சீக்கிரமாகச் சென்று, ஓர் படி நெல்லும் - அதற்கு ஒரு படி நெல்லையும், வெறுந் தலைக்கு - வெறுந் தலையில் தேய்த்துக் கொள்ளுதற்கு, எண்ணெயும்-எண்ணெயையும், பழைய கந்தையையும் - அரையில் கட்டிக்கொள்ளுதற்குப் பழைய கந்தைத் துணியையும், கொடு வா - கொண்டு வா, காள வுரு - கருமை வடிவத்தை உடைய, காம விழிக் கன்னி தனக்கு - காமக் கண்ணியாருக்கு (காமாட்சியாருக்கு), அ நாள் - அந்த நாளில், கருதி - எண்ணி, ஒரு குணங் குறியும் அரியவர்க்கு - தனக்கென ஒரு குணமும் (சுட்டி அறியப்படும்) அடையாளமும் கொண்டிராத அருமை உடையவர்க்கு, ஓர் குணமும் - ஒரு மேன்மையும், கோள் அகலக் குறி யிரண்டும் - குற்றம் நீங்க முலைத்தழும்பும் வளைத்தழும்புமாகிய குறியிரண்டும், கொடுப்பை - கொடுப்பாய், என மொழிந்தோள் - எனச் சொன்னவள், குடி யுதித்த - பிறந்த குடும்பத்தில் தோன்றிய, குறமகள் யான் - குறப்பெண் யான், என்றன் மொழி குறிக்கோள் - எனது வார்த்தையை எண்ணிக்கொள்.

‘அந்நாள்’ என்பது, காஞ்சியிலே கம்பாநதிதீரத்தில் அம்பிகை பூசித்த நாள்.

‘ஓர் குணம்’ என்பது, தனக்கென விருப்பமில்லாராய் இருந்தும் காமக்கண்ணியார் தன்னைத் தழுவுவதற்கு இசைந்ததாகிய ஒப்பற்ற குணமாம்.

மொழிந்தோள் குடியுதித்த குறமகள் யான் - காமாட்சி அம்மையாருக்குக் குறி சொன்னவளது குடியிற் பிறந்த குறத்தி நான்.

தரணி - இடவாகுபெயர்.

   “துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
         துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
    பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோ லிரண்டு
         பொங்கொளி தங்குமார் பினனே”

என்பது திருவாசகம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

124

   

 

பிச்சியார்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

   என்னதவஞ் செய்தேனோ உமைக்கம்பர்
         திருக்கச்சி யிடையே காணத்
   துன்னவரும் உடனீறுங் கஞ்சுளியி
        னொடுசெங்கைச் சூல முஞ்செம்
   பொன்னனைய திருமேனிப் பொலிவுமே
        எனைமயங்கப் புரியுங் கண்டீர்!
   அன்னநடைக் கன்னன்மொழிப் பிச்சியீர்!
        அணிமுறுவல் அதிகம் அன்றோ?                       (91)

(இ - ள்.)  அன்ன நடை - அன்னத்தின் நடைபோலும் நடையும், கன்னல் மொழி - கருப்பஞ்சாற்றின் சுவைபோலும் சுவை வாய்ந்த மொழியும் உடைய, பிச்சியீர் - பிச்சியாரே, உமை - உம்மை, கம்பர் திருக்கச்சி இடையே - ஏகாம்பரநாதர் எழுந்தருளிய திருக்காஞ்சிபுரத்திலே, காண - பார்க்க, என்ன தவம் செய்தேனோ - நான் முற்பிறப்பில் யாது தவம் செய் தேனோ, உடல் துன்ன வரும் நீறும் - உம்முடைய உடல் முழுவதும் நெருங்கப் பூசப்பெற்ற விபூதியும், கஞ்சுளியினொடு - கஞ்சுளி என்னும் பரதேசியின் கோலத்துக்குப் பொருந்திய பொக்கணப் பையினோடு, செங் கைச் சூலமும் - சிவந்த கையிலேந்திய சூலப் படையும், செம்பொன் அனைய - சிவந்த பொன்னின் நிறம்போலும் நிறம் உடைய, திருமேனிப் பொலிவும், அழகிய உடலின் விளக்கமும் (ஆகிய இவைகளே), எனை மயங்கப் புரியும் - என்னை மயங்கச் செய்யும், அணி முறுவல் அதிகம் அன்றோ - ஆயின் உம்முடைய அழகிய புன்சிரிப்பு மிகையேயாம்.

பிச்சி - பெண்பால் ஒருத்தி சிவசின்னம் பூண்டு பிச்சை எடுப்பவள்.

கஞ்சுளி - பிச்சியார் தோளில் தொங்கும் பை;  (சோளினாப் பை என இப்பொழுது வழங்கும்.)

நீறும் கஞ்சுளியும் கையிலுள்ள சூலமும் மேனியின் பொலிவும் என்னை மயங்கச் செய்யும்.  இவற்றொடு உமது அழகிய புன்சிரிப்பு மிகையேயாம்.

முன், சிவபெருமான் திரிபுரங்களைச் சிரித்து எரித்தது போல நீர் புன்முறுவல் காட்டித் துயருறச் செய்தீர் என்பது குறிப்பெச்சம்.

இது, பிச்சியாரிடத்து நயமாகப் பேசிக் காமுற்றான் ஒருவன் கூறியது.

உமை - உம்மை என்பதன் தொகுத்தல்.

கண்டீர் - முன்னிலை யசை.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

125

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்

   அதிக மன்றெளி யேந்துயர் புரிந்திடும்
         அறக்கடை ஆயுங்கால்
   துதிகொள் ஏகம்ப வாணனார் தூயவர்
         இதயவா லயத்தூடு
   குதிகொள் இன்புரு வாயவர் மாதொரு
         கூறுடைக் கோமானார்
   நதிகொள் வேணியர் நாடுவோர் தமக்கமை
         நலத்தினைத் தெரிந்தாரே.                        (92)

(இ - ள்.)  துதி கொள் ஏகம்ப வாணனார் - அடியார்களது துதியைக்கொண்ட திருவேகம்பத்தில் வாழ்பவராய ஏகாம்பரநாதர், தூயவர் - அழுக்கற்றவரது, இதய ஆலயத் தூடு - மனமாகிய கோயிலினிடத்து, குதி கொள் இன்புருவாயவர் - பெருகுதல் கொண்ட இன்பமே வடிவமாய் உள்ளவர், மாதொரு கூறு உடைக் கோமானார் - உமையைத் தம் இடப்பக்கத்தே உடைய பெருமானார், நதி கொள் வேணியர் - கங்கையைத் தாங்கியிருக்குஞ் சடை முடியை உடையவர், நாடுவோர் தமக்கு - தம்மை நாடுபவர்க்கு, அமை நலத்தினை - அளித்தற்கு ஏற்ற நலத்தினை, தெரிந்தார் - தெரிந்தவராதலால், எளியேம்-அவரை நாடுகின்ற எளியேம், புரிந்திடும் அறக் கடை - செய்யும் தீவினைத் தொழிலை, ஆயுங்கால் - ஆராயுமிடத்து, துயர் அதிக மன்று - (அவர் தெரிந்து தர யாம்) நுகரும் துயர் அதிகம் அன்று.

எளியேம் என்பதால், ஆசிரியர் தம்மொடு முன்னிலையாரையும் படர்க்கையாரையும் கூட்டிக்கொண்டு கூறுகிறார் என்க.

இனி, ‘எளியேன்’ என ஒருமையிற் பன்மை வந்த மயக்கம் என்பாரு முளர்.  குதி கொளல் - குடி கொள்ளல்.

தூயவரும் இன்புரு வாயவரும் கோமானாரும் வேணியரும் ஆகிய ஏகம்பவாணனார் தம்மை நாடுபவருக்கு ஏற்ற நலத்தினைத் தெரிந்து அருள் செய்பவராதலால், அவரை நாடுகின்ற எளியேம் புரிந்திடும் அறக்கடையை ஆராயுங்கால் எளியேம் அனுபவிக்கும் துயர் அதிக மன்று.  ஆகவே, அவர் அருளுடையவரே.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

126

   

 

ஊர்

நேரிசை வெண்பா

தெரிந்தார் மலர்த்தடத்தின் தெண்ணீர் துலைக்கோல்
பரந்தாழுங் கச்சிப் பதியே - கரந்தாழ்வெண்
மாதங்கத் தானத்தன் வாரிசத்த னேடரிய
மாதங்கத் தானத்தன் வாழ்வு.                         (93)

(இ - ள்.)  தெரிந்து - (வண்டுகள் தேனை) ஆராய்ந்து, ஆர் -உண்ணுதற்கு இடமாகிய, மலர்த் தடத்தின் தெண்ணீர் - பூக்களை உடைய பொய்கையின் தெளிந்த நீர், துலைக் கோல் - ஏற்ற மரத்தின்கண், பரம் - பாரமாய், தாழும் - தாழ்ந்து ஓடும், கச்சிப் பதியே - கச்சிப் பதியே, கரம் தாழ் - தும்பிக்கை தொங்குகின்ற, வெண் மாதங்கத்தான் - வெள்ளை யானையை ஏறிச் செலுத்தும் இந்திரன், நத்தன் - சங்கேந்திய திருமால், வாரிசத்தன் - தாமரையில் இருக்கும் பிரமன், தேட அரிய மாது அங்கத்தான் - ஆகிய இவர் தேடுதற்கு அரிய உமையைத் தன் உடம்பின் (இடப்பாகத்தில்) கொண்டவனாகிய, அத்தன் - தலைவன், வாழ்வு - வாழுமிடமாம்.

நான்காம் அடி, மா - சிறந்த, தங்கத்தான் - பொன் மலையாகிய மேருவை (வில்லாக) உடையவன் எனினுமாம்.

துலைக்கோல் பாரந் தாழும் கச்சிப்பதி என்றமையால், நீர்வளமுடைய பதி எனக் குறிப்பிக்கலாயிற்று.

மற்ற வளம் குறிப்பிக்காமலே அமையும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 


முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

127

   


   ஓரொலி வெண்டுறை

   வாழ்வளிக்குந் திருவிழியார் மறையளிக்கும்
        அருமொழியார் வணங்கி னோர்தந்
   தாழ்வகற்று மலர்ப்பதத்தார் தளர்வகற்றும்
        ஐம்பதத்தார் தண்ணந் திங்கட்
   போழ்வதியும் புரிசடையார் புகழ்க்கச்சி மேய
        ஆழ்கருணை மாகடலை அடிபணிமின் கண்டீர்!                (94)

(இ - ள்.)  வாழ்வளிக்குந் திரு விழியார் - செல்வத்தை அளிக்கும் அருட் பார்வையை உடையார், மறை யளிக்கும் அரு மொழியர் - வேதத்தை அருளும் அருமையான சொற்களை உடையார், வணங்கினோர் தம்-தம்மை வணங்கினோரது, தாழ்வு அகற்றும் - கீழ்மையை அகற்றும், மலர்ப் பதத்தார் - தாமரை மலர்போன்ற திருவடியை உடையார், தளர் வகற்றும் - தம்மைப் பரவி வணங்குவோருடைய தளர்ச்சியை ஒழிக்கும், ஐம்பதத்தார் - ஐந்து இடங்களை உடையவர், தண்ணந் திங்கட் போழ் - குளிர்ந்த பிறைச்சந்திரன், வதியும் - தங்கும், புரிசடையார் - முறுக்குண்டச் சடையையுடையார் (ஆகிய), புகழ்க்கச்சி மேய - புகழை உடைய கச்சியில் தங்கிய, ஆழ் கருணை மா கடலை - ஆழ்ந்து பெரியதானக் கருணைக் கடலாகிய ஏகாம்பரநாதருடைய, அடி பணிமின் - திருவடிகளை வணங்குங்கள், (வணங்கின், பிறவிப் பிணி ஒழியும்.)

கண்டீர் - முன்னிலை அசை.

ஐம்பதத்தார் - ஐந்து இடங்களை உடையவர்.

ஐந்து இடங்களாவன:  பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் பஞ்சபூதங்கள்.  இவை, முறையே காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, சீகாளத்தி, சிதம்பர மென்னும் திருப்பதிகள்.

இரத்தின சபை முதலிய ஐந்து சபைகளை உடையவர் எனினும் அமையும்.

ஐம்பதத்தர், ஐ + பதத்தர் எனப் பிரித்து, வியக்கத்தக்க பதத்தை யுடையவர் எனினும் ஆம்.

போழ் - பிளவு.

திங்கள் போழ் - சந்திரனுடைய கீற்று; ஆவது - பிறைச் சந்திரன்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

128

   


பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்.

       கரத்தின் வளையுஞ் சுழிவளையுங்
           கனிந்த மொழியாற் புனைவளையுங்
       காலையு மணியு மேகலையுங்
           கல்வி பயின்ற கலையறிவும்
     புரத்தின் வனப்பு நூபுரமும்
           புரைதீ ரகத்தின் வற்புரமும்
       பொலன்றோ டணையும் பூவணையும்
           புரியும் பணியும் பொற்பணியும்
     வரத்தி னுதித்தா ளொழித்தாளம்
           மடமா னுடலம் ஒழித்தாறும்
       வளமா வடியீர்! உமைச்சரணா
          மருவப் பெற்றா ளாதலினாற்
     சிரத்தி னலைமான் வைத்தீர்! நுஞ்
          செந்தா மரைத்தாட் கீழேனுஞ்
       சேருந் திறத்தை யறிவாளே
          சிறியாண் மதனை வென்றிடவே.               (95)

(இ - ள்.)  கரத்தின் வளையும் - கையிலணிந்த வளையலும், சுழி வளையும் - சுழியைப் போலச் சுழிந்து நெஞ்சினைக் கவரும், கனிந்த மொழியால் - அன்பு முதிர்ந்தச் சொற்களால், புனை - சிறப்பித்துக் கூறுகின்ற, வளையும் - திருப்பித் திருப்பிப் பேசுதலும், கலையும் - ஆடையும், அணியும் மேகலையும் - அணிந்த மேகலாபரணமும், கல்வி பயின்ற கலை யறிவும் - கல்வி பயின்றதனால் உண்டான நூலறிவும், புரத்தின் வனப்பும் - உடலின் அழகும், நூபுரமும் - சிலம்பு என்னும் காலணியும், புரை தீர் - குற்றம் நீங்கிய, அகத்தின் - நெஞ்சின், வற்பு உரமும் - வலிய திடமும், பொன் தோடு அணையும் - பொன்னாற் செய்த தோடு என்னும் அணி காதுகளில் பொருந்துதலும், பூ அணையும் - மலர்கள் சொரிந்து கிடக்கும் படுக்கையும், புரியும் பணியும் - செய்யும் தொழிலும், பொற் பணியும் - பொன்னாற் செய்த அணிகலனும் (ஆகிய இவற்றை) வரத்தி னுதித்தாள் - வரத்தினால் பிறந்தவளாகிய என் மகள், ஒழித்தாள் - நீக்கிவிட்டாள், அம்மடமான் - அந்த மென்மை வாய்ந்த பெண்ணின், உடலம் ஒழித்தாலும் - உடல் நீக்கினாலும், வள மா அடியீர் - வளம் பொருந்திய மாமரத்தின் அடியில் வீற்றிருப்பவரே, உமைச்சரணாக - உம்மை அடைக்கலமாக மருவப் பெற்றாள் - அடையப் பெற்றாள், ஆதலினால் - ஆகையால், சிரத்தின் அலைமான் வைத்தீர் -நீர்,தலையில் அலையை உடைய கங்கையாகிய பெண்ணினை வைத்தீர், நும் செந்தாமரைத் தாட் கீழேனும் -நுமது செந்தாமரை போன்ற திருவடியின் கீழேயாயினும், சேரும் திறத்தை-அடையும் வகையை, அறிவாளே - அறிவாளோ, (அங்ஙனமறிந்தால்) சிறியாள் - சிறியாளாகிய என் மகள், மதனை வென்றிட - மன்மதனை வென்றுவிடக் கடவள்.

வற்பு - வன்பு.  வலித்தல் விகாரம் பெற்றது.

‘அணியும் மேகலை’ என்றவிடத்துக் கீழ் ‘பொற்பணி’ என்று கூறுதலால், அணி என்பதன் பெயரெச்சமாகக் கொள்ளுதல் பொருந்தும்.

வரத்தினால் பிறந்தவள்.

பொற்பணி - அழகுவாய்ந்த அணிகலன் எனினும் அமையும்.

அலை - சினையாகுபெயராய்க் கங்கையை உணர்த்திற்று.

வென்றிட - அகரவீற்று வியங்கோளாகக் கொள்ளுதலே யன்றி, வினையெச்சமாகக்கொண்டு வெல்ல அறிவளோ?  அறிவளே என்ற விடத்துள்ள ஏகாரம் எதிர்மறையோடு வினாவும் ஐயமுமாம்.

உடல் இவற்றை நீக்கினாலும் அவள் மனம் உம்மைப் பற்றுதலை ஒழிக்கவில்லை.

நீர் பெண்களை மிகவும் உயர்ந்த நிலையில் வைப்பவர் என்பார், ‘அலைமானைச் சிரத்தில் வைத்தீர்’ என்றார்.  அத்தகைய நீர், இவள் துன்புற விடுதல் ஆமோ என்பது இசையெச்சம்.

ஒரு தலைவியை இடப்பக்கத்தே வைத்துக்கொண்டும், மற்றொரு தலைவியைச் சடையில் வைத்துக்கொண்டும விளங்குகிற தலைவராகிய கச்சிப்பதியீர்! இந்தத் தலைவிக்கும் நும் திருவடியாகிய கீழ்ப்பாகத்தை இடமாகத் தரக்கூடாதா என்று மிகவும் இரங்கியதாகும்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

129

   


இரங்கல் (மடக்கு)

பதினான்கு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

மதனை வென்றவர் நஞ்ச மார்ந்தவர்
     வலியர் முண்டக முள்ளியே
  மகிழ்நர் வந்திலர் மாலை தந்திலர்
     துயர்வ துண்டக முள்ளியே
கதமி குந்தெழு மத்தி நீர்த்துறைப்
     பெடை பிரிந்தில கம்புளே
  கவலை கூரவு ஞற்றி மேவுறு
     நறைசொ ரிந்தில கம்புளே
மதியி னெற்றரு முத்த மேயவர்
     தருவ தென்றரு முத்தமே
  மணியு யிர்த்திரை சங்க மேயிர
     வொன்று பற்பல சங்கமே
நிதித ருந்தவ வங்க மேயினி
     அடைவ துந்தவ வங்கமே
  நெடிய னுந்தொழு கம்ப மேயுறை
     நிமலர் தீர்ப்பர்கொல் கம்பமே.                    (96)

(இ - ள்.)  மதனை வென்றவர் - மன்மதனை வென்றவர், நஞ்சம் ஆர்ந்தவர் - கடு உண்டவர், வலியர் - மனவலிமை உடையவர், முள்ளி முண்டகமே - முள்ளை உடையதாகிய தாமரையே, மகிழ்நர் வந்திலர் - மகிழ்நராகிய என் தலைவர் வந்தாரில்லை, மாலை தந்திலர் - தாம் அணிந்த மாலையும் தந்தாரில்லை, அகம் உள்ளியே - மனத்தில் அவர் வாராமையையே எண்ணி, துயர்வது உண்டு - துன்பப்படுவது உண்டு, கத மிகுந்து எழும் - சினம் என்பால் மிகுந்து எழும், அத்தி நீர்த் துறை - கடலின் நீர்த்துறையில், கம்புள் - சம்பங்கோழி, பெடை பிரிந்தில(து) - பெட்டைப் பறவையைப் பிரிந்திலது, நறை சொரிந்து - தேனைச் சொரிந்து, இலகு - விளங்குகின்ற, அம்பு - மதன் அம்பு, உள் - என் மனத்தில், கவலை கூர - கவலை மிக, உஞற்றி - செய்து, மேவுறும் - பொருந்தாநிற்கும், மதியின் - சந்திரனைப்போல வெண்மையாகிய, இயல் தரு முத்தமே - ஒளியை வீசுகின்ற முத்துக்களே, அவர் அரு முத்தம் தருவது என்று - அவர் அரிய முத்தம் தருதல் எப்பொழுது, மணி உயிர்த்து - முத்துக்களைச் சொரிந்து, இரை சங்கமே - ஒலிக்கின்ற சங்குகளே, இரவு ஒன்று - தலைவரைப் பிரிந்திருக்கும் ஓர் இரவும், பற்பல சங்கமே-பற்பலவாகிய சங்கம் என்னும் அளவாகத் தோன்றும், நிதி தருந் தவ வங்கமே - நிதியை மிகுதியாகத் தரும் நாவாயே!, இனி அடைவதும் - இனி யான் சேருவதும், தவ அங்கமே - தவத்தினர்க்கு உரிய வாடின உறுப்பேயாகும் (உடல் மெலிவேயாகும் ஆதலால், இனி), நெடியனுந் தொழும் - திருமாலும் வணங்குகின்ற, கம்பமே யுறை நிமலர் - திருவேகம்பத்திலே தங்கிய தூய்மையுடையவராகிய ஏகாம்பரநாதர், கம்பம் தீர்ப்பர் கொல் - எனது நடுக்கத்தைத் தீர்ப்பரோ (நானறியேன் என்றபடி.)

முண்டகம் முள்ளியே - முள்ளையுடையதாகிய நீர் முள்ளியே என்றும் பொருள் கொள்ளலாம்.

வலியர் - வாராமையை எண்ணி மனத்தில் துன்பப்படுவதுண்டு.  அப்படி இருந்தும்,

அம்மகிழ்நர் வந்திலர் - அம்மகிழ்நர் வந்திலர்.

மாலை தந்திலர் - மாலை தந்திலர்.

அவர் மதனை வென்றவராதலாலும்;  நஞ்சினை உண்டவராதலாலும்,

வலியர் - (வன்னெஞ்ச முடையவர்) மதனை வென்றவராதலின், என் விருப்பம் உண்டாகவில்லை.  என் துன்ப நிலையைக் கண்டாயினும் அவர் இரக்கங் கொள்ளலாம்.  ஆனால், நஞ்சோடு பழகியவராதலின், அவருக்கு இரக்கம் இலதாயிற்று.

அஃறிணைப் பொருள்களாகிய பறவைகளும், தாம் பிரிந்தால் பெண் பறவைகள் வருந்தும் என எண்ணி அவற்றைப் பிரியாமலிருக்க, அறிவே வடிவமாகிய அவர் என்னைப் பிரிந்திருப்பது தம்முடைய இயல்புக்கு ஏற்குமோ?

‘அவர் தருவது அரு முத்தம்’ என்பதற்கு: ‘அரு முத்தம்’ என்பது அரிய வீடுமாம் என்று பொருள் கோடலுமாம்.

‘சங்கம்’ என்பது, இலட்சங் கோடி (கோடி இலட்சம்).

கம்பம் - மனக் கலக்கமாம்.

இனித் துறந்து தவஞ்செய்யப் போவதுதான் முறை என்பது.

கொல், வினாப்பொருளது

கம்பமே - ஏ ஈற்றசை.

‘பிரிந்திலது’ என்பது ‘பிரிந்தில’ என விகாரமாயிற்று.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

130

   


செவியறிவுறூஉம் மருட்பா

கம்பத் திருந்துதவுங் கண்மணியைச் சிந்தித்து
நம்பத் திருந்துவீர் நானிலத்தீர் - வெம்பும்
பிணியு மூப்பும் பீடழி பழியுந்
தணியா வறுமைத் தாழ்வுந் தீரும்
திருவருள் நமக்குச் சிவணத்
திருவன் அன்னோன் சற்குரு வாயே.                     (97)

(இ - ள்.)  கம்பத்து - திருவேகம்பத்தில், இருந்து-எழுந்தருளி இருந்து, உதவும் கண்மணியை - அடியார்களுக்கு அவர்கள் வேண்டுவனவற்றை அருளி உதவி செய்யும் ஏகாம்பரநாதராகிய கண்மணியை, நானிலத்தீர் - பூமியில் உள்ளவர்களே!, சிந்தித்து - நினைவோடு (அவரே பற்றுக்கோடென்று எண்ணி), நம்ப - விரும்பி யொழுக, திருந்துவீர் - பிறவிப்பிணி நீங்கித் திருத்த மடைவீர்; (எங்ஙனமெனின்), வெம்பும் பிணியும்- வருத்துகின்ற நோயும், மூப்பும் - கிழத்தனமும், பீடு அழி பழியும் - குணப் பெருமைகளையெல்லாம் அழிக்கின்ற பழியும், தணியா - நீங்காத, வறுமைத் தாழ்வும் - வறுமையால் உண்டாகின்ற இழிவும், தீரும் - உங்களை விட்டு நீங்கும்; (இவை தீர்தலேயன்றி), அன்னோன் - அச் சிவபெருமானார், சற்குருவாய் - உண்மையை அறிவுறுத்து மாசிரியராகி வந்து, திரு வருள் - தம்முடைய சிறந்த அருள், நமக்கு சிவண-நம்மிடத்தில் பொருந்த, தருவன்-உண்மை அறிவுரை அருளுவார்; (மெய்யறம் பொருந்திய மொழியால் உண்மை யுணர்வு எய்துதலால், பிறவிப்பிணி நீங்க, வீட்டின்பம் பெறலாம்.)

பீடு - பெருமை.  (பீடு கெழு செல்வ மரீஇய கண்ணே - பதிற்றுப். 50: 26.)

சிவண - பொருந்த.  சற்குரு - உண்மையை உபதேசிக்கும் காரண குரு; காரண குருமணி.

“ஆடூஉ வறிசொல்......பல்லோ ரறியும் சொல்லொடு சிவணி” (தொல். சொல். 2.)  “தன்னோடு சிவணிய ஏனோர் சேறலும்” (தொல் பொருள். 27).  “ஐந்து கதியும் சிவணவே” (பாரதம், பத்தாம் போர், 20)

வாசகர் பொருட்டு வந்த குரு (ஞானாசிரியர்) மக்களுக்குச் சிவதீட்சை முதலியன செய்கின்ற சுத்த சைவர்; காரிய குரு.  சிறப்புப்பற்றிச் சிவபெருமானார் கண்மணியாக உருவகம் செய்யப்பெற்றமையால் ‘கண்மணியே’ என்றார்.

நானிலம் - நான்கு நிலப் பகுதிகளாலாகிய உலகம்.  நான்கு நிலமாவன: பாலை யொழிந்த குறிஞ்சி, முல்லை, நெய்தல் மருதம் என்பன.

       “     மாயோன் மேய காடுறை யுலகமும்
       சேயோன் மேய மைவரை யுலகமும்
       வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
       வருணன் மேய பெருமணல் உலகமும்
       முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
       சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”

என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் நானிலம் இவை யென அறியலாம்.

பாலையொடு கூட்ட நிலப் பகுதிகள் ஐவகைப்படும்.

ஆயின், பாலையை நீக்கியது என்னையோவெனின், “முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற் றிரிந்து, நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவம் கொள்ளும்” என இளங்கோவடிகள் கூறுவர் ஆதலின், குறிஞ்சி நிலப் பகுதிகளே சிதைந்து பாலை யென்னும் பெயர் பெறுவன வன்றிப் பாலையெனத் தனிநிலம் ஒன்று இன்றாதலின், பாலையை நீக்கி நிலப்பகுதிகள் நான்கென எண்ணப்பட்டன.

ஈண்டு, நான்கு நிலப் பகுதிகளால் ஆய உலகம் ‘நானிலம்’ எனப்பட்டது.  ‘பண்புத்தொகை அன்மொழி’ என்க.

“நம்பும் மேவும் நசையா கும்மே” என்பது தொல்.  உரியியல் சூத்திரமாதலின், ‘நம்ப’ என்பதற்கு, ‘விரும்பி யொழுக’ என்று பொருளுரைக்கப்பட்டது.  பிற்காலத்தில் இச்சொல் நம்பிக்கை கொள்ள என்ற பொருளில் வழங்கலாயிற்று.  விருப்பத்தால் நம்பிக்கை ஏற்படுவது இயற்கையேயாதலின், இங்ஙனம் திரிந்து வழங்கும் பொருளும் குற்றமற்றதேயாம்.

‘சற்குருவாய்’ என்பது உண்மையை அறிவால் ஊட்டும் குருவாய் என்ற பொருள் தருவதாயினும், “ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே” ஆதலின், சிற்குருவாய், ஆநந்த குருவாய் எனக் கூட்டி, அறிவாநந்தங்களையும் உபதேசிக்கும் குருவாய் என உரைத்துக்கொள்க.  எனவே, ‘சச்சிதானந்த குருவாய்’ அச் சிவபெருமானார் வந்து ‘சச்சிதாநந்த’ மயமான தம் உண்மை நிலையினை உபதேசம் செய்து ஆட்கொள்ளுவர் என்பதை ஆசிரியர் உணர்த்தியுள்ளமை வெளிப்படை.  ‘கு’ என்பது அறியாமை என்றும், ‘ரு’ என்பது ஒழிப்பது என்றும் பொருள் படும்.  எனவே, அறியாமையை ஒழிப்பவன் எவனோ, அவனே ‘குரு’ என்னும் தொடர்ச்சொல்லால் வழங்கற்குரியன்.  ஆன்மாக்கள் தங்களையும் தங்களை ஆண்டருளும் இறைவனையும் அறியாமையால் பிறவிப் பிணியிலாழ்ந்து வருந்துகின்றனராதலின், அவ் வறியாமைகளைப் போக்கி யாட்கொள்ளும் குருவாகி, ஆண்டவனே வருவன் என்ற நுட்பமான பொருளை ஆசிரியர் தெரிந்து கூறுவது பாராட்டத்தக்கது.

‘அவனருளாலே அவன்தாள் வணங்கி’ என மணிவாசகர் கூறுவதால், ‘சற்குருவாய்த் திருவருள் சிவண நமக்குத் தருவன்’ என்ற உண்மை புலப்படும்.  ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்’ என்பது சான்றோர் இயல்பாதலின், ஆசிரியர் ஏனையோரையும் ஆண்டாண்டு உளப்படுத்தி ‘நமக்கு’ என்றும் ‘நம்மையும்’ என்றும் கூறிச் செல்லுதல் காணலாம்.

ஈண்டு ‘நமக்கு’ என்பது ‘நம்மிடத்தில்’ எனப் பொருள்படுவதால் வேற்றுமை மயக்கம்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

131

   


இரங்கல்

பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

குருகு நெகிழுந் திறநவில்வாய்
     கழிசேர் குருகே குருகழியக்
  கொங்கை திதலை பூப்ப வுளங்
     குலைந்தே யுடைய வுடைசோரப்
பருகும் பாலு மருந்தனமும்
     பகைக்கு மருந்தென் றறையனமே
  பழுவ மனைய குழல்பூவைப்
     பரியா மையைச்சொல் பூவையே
அருகு பயின்ற கிளையே யென்.
     கிளையால் வந்த தத்தனையும்
  அளந்த படியே அளந்தாலும்
     அதுவே சாலும் அளியினமே
முருகு விரிபூம் பொழிற்கச்சி
     மூவா முதல்வர் அளியினமு
  முறையோ அளியேற் களியாமை
     கேளீர் இதனைக் கேளீரே.                     (98)

(இ - ள்.)  கழி சேர் குருகே - கழிக்கரையைச் சேர்ந்த நாரையே, (என் தலைவரிடத்தில்), குருகு நெகிழும் திறம் - (தலைவர் தம் பிரிவாற்றாமையால்) என் கை வளையல் கழன்று கீழே விழும் திறத்தை, நவில்வாய் - சொல்லுவாய், அனமே - அன்னமே, குரு கழிய - தலைவர்தம் (பிரிவாற்றாமையால்) என் மேனியின் நிறம் நீங்கவும், கொங்கை திதலை பூப்ப - தனம் தேமல் பூப்பவும், உளம் குலைந்தே - மனம் நிலை கெட்டே, உடைய - சிதையவும், உடை சோர - உடை சோர்வடையவும், பருகும் பாலும் - குடிக்கும் பாலும், அருந்து அனமும் - உண்ணும் சோறும், எனக்கு பகைக்கும் மருந்து என்று - வெறுக்கத்தக்க கைப்புடைய மருந்து போலாயினவென்று, அறை - (என்தலைவரிடத்தில்) சொல்வாய், பழுவம் அனைய - காட்டை ஒத்த, குழல் - கூந்தலில், பூவை - மலரை, பரியாமையை - (தலைவர் பிரிவாற்றாமையால்) நான் துணியாமையை, பூவையே - நாகண வாய்ப்புள்ளே, சொல் - என் தலைவரிடத்தில் சொல்வாய், அருகு - என் அருகில், பயின்ற - இருந்து பழகிய, கிளையே - கிள்ளையே (கிளியே), என் கிளையால் - என் சுற்றத்தாரால், வந்தது அத்தனையும் - வந்த துன்பங்கள் எல்லாம் (அவ்வளவு துன்பமும்), அளந்த படியே - (மிகுத்துச் சொல்லாமல்) எனக்கு நிகழ்ந்த அளவின்படியே, அளந்தாலும்-எடுத்துச் சொன்னாலும், அதுவே சாலும் - அதுவே போதும், அளி இனமே - வண்டின் கூட்டமே, முருகு விரி - வாசனையை வெளிப்படுத்தி மலர்கின்ற, பூம் பொழில் - அழகிய பூக்களையுடைய சோலை சூழ்ந்த, கச்சி மூவா முதல்வர் - காஞ்சியில் எழுந்தருளிய மூப்புற்று அழிதலில்லாத கடவுள், அளி - தம் கருணையை, அளியேற்கு - இரங்கத் தக்க எனக்கு, இனமும் அளியாமை - இப்போதும் அருளிச்செய்யாமை, முறையோ - முறையாகுமோ என்பதை, கேளீர் - கேட்பீர், இதனைக் கேளீர் - இதனை மறவாது கேட்பீர்.

திதலை - தேமல்.  (பொன்னுரை கடுக்கும் திதலையர். திருமுருகா. 145.)

‘அன்னம், கிள்ளை’ என்பன ‘அனம், கிளை’ யென இடைக் குறையாயின.

அளியினமே - வண்டின் கூட்டமே.  உங்களுக்கு அளி எனும் பெயர் வாய்ந்தமையால், நீங்களும் எனக்கு அளி செய்வீரென்பது திண்ணம்.  (அளி - கருணை.)

மூவா முதல்வர் - மூத்தலை இல்லாத முதல்வர்.

“கெழுவும் குருவும் நிறனா கும்மே” என்பது தொல். உரி ஆதலால், குரு கழிய என்பதற்கு, நிறன் அழிய என்ற பொருள் கூறப்பட்டது.

‘கேளீர்’ என இருமுறை கூறியது, மறந்து போகாமல் கேட்கவேண்டும் என எண்ணி என்க.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்


பன்னிரு சீர்கொண்ட இரட்டை ஆசிரிய விருத்தம்

கேளோ டுற்ற கிளையொ றுப்பீர்
     கேதம் உறுவீர் கெடுமதியாற்
  கிளிவாய் வரைவின் மகளிர்பாற்
     கிட்டி மயங்கித் தியங்குவீர்
வாளா கழிப்பீர் வாழ்நாளை
     வசையே பெறுவீர் வல்வினையீர்!
  வளமாந் தருவாய் உலகுய்ய
     வந்த கருணை ஆர்கலியைத்
தோளா மணியைப் பசும்பொன்னைத்
     தூண்டா விளக்கைத் தொழுவார் தந்
  துயரக் கடற்கோர் பெரும்புணையைத்
     துருவக் கிடையா நவநிதியை
வேளா டலைமுன் தீர்த்தானை
     வேழ வுரியைப் போர்த்தானை
  வெள்ளம் பாய்ந்த சடையானை
     வேண்டிப் புரிமின் தொண்டினையே.                (99)

(இ - ள்.)  கேளோடு - நண்பர்களோடு, உற்ற கிளை - பொருந்திய சுற்றத்தாரை, ஒறுப்பீர் - நும்முறை வறுமைத் துன்பத்தால் வெறுப்பீர், கேதம் உறுவீர் - துன்பம் அடைவீர், கெடு மதியால் - கெடு புத்தியால், கிளி வாய் - கிளிபோலும் இனிய சொற்களையுடைய, வரைவின் மகளிர்பால் - திருமணமில்லாத பொதுமகளிரிடத்து, கிட்டி - சேர்ந்து, மயங்கி-கலக்க முற்று, தியங்குவீர் - உள்ளம் சோர்வு கொள்ளுவீர், வாழ் நாளை-வாழ்கின்ற ஆயுள் நாளை, வாளா கழிப்பீர் - வீணாகக் கழிப்பீர், வல் வினையீர் - தீவினை உடையவர்களே, வசையே பெறுவீர் - பழியையே அடைவீர், வளமாந் தருவாய் - (காஞ்சிப்பதியில்) வளம் பொருந்திய மாமரத்தினிடத்து, உலகு உய்ய - உலகினர் பிழைக்கும்படி, வந்த - எழுந்தருளிய, கருணை ஆர்கலியை - கருணைக் கடலும், தோளா மணியை - துளை செய்யப்படாத முழு மணியும், பசும் பொன்னை - பசும் பொன்னும், தூண்டா விளக்கை - தூண்டப்படாத விளக்கும், தொழுவார் தம் - தம்மை வணங்குவாரது, துயரக் கடற்கு - துக்கமாகிய கடலைக் கடத்தற்கு, ஓர் பெரும் புணையை - ஒப்பற்ற பெரிய தெப்பமும், துருவக் கிடையா - தேடக் கிடையாத, நவநிதி - நவநிதியும், வேள் ஆடலை - மன்மதன் வலியை, முன் தீர்த்தானை - முன் தீர்த்தானும், வேழ வுரியை - யானைத் தோலை, போர்த்தானை - போர்த்தவனும், வெள்ளம் பாய்ந்த - கங்கை பாய்ந்து தங்கிய, சடையானை - சடையை உடையவனும் ஆய ஏகாம்பரநாதனை, வேண்டி - விரும்பி, தொண்டினை - அவனுக்குச் செய்யவேண்டும் தொண்டுகளை, புரிமின் - விரும்பிச் செய்யுங்கள்.

மயங்கி - நிலையழிந்து எனினுமாம்.  கெடுமதியால் தியங்குவீர் என இயையும்.  ‘சிந்தை கலங்கித் தியங்குகின்ற நாயேனை’ என்பது வள்ளலார் அருள் வாக்கு.     
நவநிதி:     பதுமம்,     மகாபதுமம்,     சங்கம்,     
     மகரம்,     கச்சபம்,     முகுந்தம்,     
     நந்தம்,     நீலம்,     கர்வம்    

என்னும் குபேரநிதி ஒன்பது.

ஆடல் - வெற்றியுமாம்.

கேள் - இன்ப துன்பங்களைக் கேட்பவர் என்னும் பொருளில் நண்பர்களை உணர்த்திநின்றது.

கிளை - மரக்கிளைபோல் சேர்ந்து தழுவி நிற்பவர் என்னும் பொருளில் சுற்றத்தாரை உணர்த்திநின்றது.

கிளி வாய் என்பதற்குக் கிளியின் சிவந்த அலகு போலும் சிவந்த வாயிதழ்களையுடைய என்றும் பொருள் கொள்ளலாம்.

வரைவில் மகளிர் என்பதற்கு, இன்னாரைக் கூடவேண்டும், இன்னாரைக் கூடலாகாது என்னும் வரைவு (கொள்ளுவது தள்ளுவது என்ற உணர்வு) இல்லாத மகளிர் என்றும் பொருள் கூறலாம்.

‘வாளா’ என்பது ‘வாளாது’ என்பதன் விகாரம்.

ஆர்கலி - நிறைந்த ஒலியை யுடையது என்னும் பொருளில் வினைத்தொகை யன்மொழியாய்க் கடலை உணர்த்திநின்றது.  ஈண்டு, ஏகாம்பரநாதனார், கடலாக உருவகம் செய்யப்பெற்றுள்ள நயம் பாராட்டத்தக்கது.

“அறவாழி யந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால், பிறவாழி நீந்த லரிது” ஆதலின், ‘துயரக் கடற்கோர் பெரும் புணை’ என்றார்.

துயரக் கடல் - பிறப் பிறப் பென்னும் துன்பமாகிய கடல்.

   
   
முன் பக்கம்     மேல்     அடுத்த பக்கம்

 

 

முகப்பு     பக்கம் எண் :     
   தொடக்கம்

133

   


அறுசீர் ஆசிரிய விருத்தம்

       தொண்டர் சிரத்தின் முடிக்கும்பூ
             தொழுவார் இதய நடிக்கும்பூ
       அண்டர் முடியிற் றுலங்கும்பூ
             அருமா மறையின் இலங்கும்பூ
       பண்டை வினைப்பற் றழிக்கும்பூ
             பணிவார் அல்லல் ஒழிக்கும்பூ
       தெண்டன் இடுவோர்க் கருள்கச்சித்
             திருவே கம்பர் பதப்பூவே.                     (100)

(இ - ள்.)  தெண்டன் இடுவோர்க்கு - தம்மைக் கும்பிடும் அடியார்கட்கு, அருள் - அருளுகின்ற, கச்சித் திரு ஏகம்பர் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய திருவேகம்பநாதரது, பதப் பூ - திருவடியாகிய தாமரைப் பூவே, தொண்டர் சிரத்தின் முடிக்கும் பூ - அடியார்களின் தலையில் முடிக்கும் பூவாகும், தொழுவார் இதயம் நடிக்கும் பூ - தம்மை வணங்குபவரது உள்ளத்தில் நடித்து மகிழ்ச்சித் தேனைத் துளித்து இன்பத்தைச் செய்யும் பூவாகும், அண்டர் முடியில் - தேவர்களது முடியில், துலங்கும் பூ - சூட்டப்பெற்று விளங்கும் பூவாகும், அருமா மறையின் - உணர்தற்கு அரிய சிறந்த வேதத்தின் துணையால், இலங்கும் பூ - அகப்பட்டு விளங்கும் பூவாகும், பண்டை வினைப் பற்று - பழைய தீவினைப்பற்றால் ஏற்படும் (தீ நாற்றத்தை) தீய எண்ணத்தை, அழிக்கும் பூ - அழிக்கும் பூவாகும், பணிவார் - தம்மை வணங்குபவரது, அல்லல் - பிறப்பிறப்புத் துன்பத்தை, ஒழிக்கும் பூ - ஒழித்து வீடளிக்கும் பூவாகும்; (ஆதலால்) அம் பூவினைத் தலை முடியிலும் உள்ளத்திலும் நாவிலும் புனைந்து வீட்டின்பம் பெறுவீர்களாக.

பூ - ஈண்டுத் தாமரைப்பூ.

‘பூவெனப் படுவது - பொறிவாழ் பூவே’ என்பதனால் ‘பூ’ என்பது தாமரைப்பூவை உணர்த்திற்று.

கலம்பகத்தை அந்தாதியாக மண்டலித்துப் பாட வேண்டுதல் மரபாகலின், இந்த ஆசிரியர் ‘பூமேவு நான் முகனும்’ என்று தொடங்கி, இந்தச் செய்யுளில் பதப்பூவே’ என்று முடித்தார்.

‘பதப்பூவே’ என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலையும் தேற்றமும் தரும் இடைநிலையாம்.

கச்சிக் கலம்பகம் மூலமும் உரையும்

முற்றுப்பெற்றது.
_____
 

Related Content

Kachchi Ekambam (Alandhan ukandhu)

Sundarar Thevaram - 7.061 - Kachiekambam - Alanthan Ugandhu

அருணாசல புராணக் கீர்த்தனைகள்

கச்சிக் கலம்பகம்

சிவகவசம் - வரதுங்கராம பாண்டியர்