உ
சிவமயம்
உரையாசிரியர்
‘செந்நெறிச் செல்வர்’, ‘மெய்ஞ்ஞான வள்ளல்’
இயக்குநர்.
திருவிடைமருதூர்
1992
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
“அ”
அகங்காரம் |
அந்தக்கரணங்களுள் ஒன்று. புத்தி நிச்சயித்தைச் செயற்படுத்த எழுகின்ற அகக்கருவி. |
அகச்சமயம் |
முப்பொருள் உண்மையையும் அவற்றின் பொது இயல்புகளையும் ஒப்புக்கொண்டு, சிறப்பு இயல்புகளைச் சித்தாந்த சைவத்திற்கு மாறுபடக் கொள்ளும் அறுவகைச் சைவம். |
அகண்டாகாரம் |
கண்டிக்கப்படாத வடிவம்; பெருவளி; வரம்பு இல்லாமை. |
அகப்புறச்சமயம் |
வேதாகமங்களைப் பொதுவாக ஒப்புக்கொண்டு, ஆணவமல உண்மையை மறுக்கும் அறுவகைச் சமயம். |
அகிதம் |
தீமை. |
அகோரம் |
சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுள் ஒன்று. |
அங்கம் |
உறுப்பு |
அங்கி |
உறுப்பி (முதல்); ஒமித்தலும் தியானித்தலும் அங்கம்; பூசித்தல் - அங்கி. |
அங்கித்தம்பனை |
தீயின் சூட்டைத் தடுத்தல் |
அங்குரம் |
முளை |
அசத்து |
பிரபஞ்சம் – உலகம் – நிலையில்லாதது. |
அசலம் |
அசைவற்றது. |
அசித்து |
அறிவற்றது. |
அசுத்தமாயை |
மலகன்மங்களோடு விரவி நின்று, இன்பத்துன்பம் இரண்டும் பயப்பது; அசுத்த உலகத்திற்குக் காரணமாய் நிற்பது; சுத்தமாயையின் கீழ் அடங்கி நிற்பது. |
அசேதனம் |
அறிவில்லாதது; சடம்; தானே இயங்கும் தன்மை இல்லாதது. |
அச்சு |
உடம்பு |
அஞ்சனம் |
இருளாய் இருப்பது |
அஞ்சவத்தை |
நனவு, கனவு, உறக்கம், பேரூறக்கம், உயிர்ப்படக்கம் என்னும் ஐந்து நிலைகள். |
அஞ்ஞானம் |
விபரீத உணர்வு; அறியாமை; அபச்சை, மயக்கம் |
அடைவு |
முறைமை |
அட்டசித்திகள் |
சித்தர்கள் கூறும் எட்டுவகையான முத்திகள். அவை வருமாறு: அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், மற்றும் வசித்துவம். |
அட்டபுட்பம் |
எண்வகை மலர்கள். அவை, கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறுமை, அறிவுடைமை, வாய்மை, தவமுடைமை, அன்புடைமை, மற்றும் அருளுடைமை. |
அட்டவித்தியேசுரர் |
விஞ்ஞானகலர் வகை ஆன்மாக்களிலிருந்து மலபரிபாகம் எய்தப் பெற்று, அதிகாரம் செய்ய வேண்டும் என்னும் இச்சையால், ஈசுவரத் தத்துவத்தில் அதிகாரம் செய்து கொண்டு இருக்கும் எண் வகை வித்தியேசுரர். அவர்கள் வருமாறு: அனந்தர், சூக்குமர்,சிவோத்மர்,ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தர், ஶ்ரீகண்டர், சிகண்டி என்பவர்கள். |
அணிமா |
அட்ட சித்திகளில் ஒன்று. மிகச் சிறிய உயிர்களில், தான் பரமாணுவாய்ச் சென்று இருக்கும் சித்தி. |
அணு |
ஆன்மா, உயிர், சூக்கும உடல், நண்ணுடல். |
அணுசதாசிவர் |
சாதாக்கிய தத்துவத்தில், சதாசிவ மூர்த்தியைச் சேவித்துக் கொண்டிருந்து போகங்களைப் புசிக்கும் அபரமுத்தர். |
அணைந்தோர் தன்மை |
சீவன்முத்தர் இயல்பு. |
அண்டசம் |
முட்டையில் பிறக்கும் உயிர்கள். |
அண்டம் |
உலகம். |
அண்டன் |
சுட்டுணர்வு இன்றி நின்ற கடவுள் |
அதர்வணம் |
வடமொழி வேதங்களுள் நான்காவது. வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாமால், பெரும்பாலும் உயிர்களுக்குக் கேடு சூழும் மந்திரங்களைக் கூறுவது. |
அதிகரணம் |
நிலைக்களம் – கூறு. |
அதிகார அவத்தை |
உலகத்தைப் படைக்கும் நிலை.
|
அதிகார சிவன் |
மகேசுரர், சுத்தமாயையில் தோற்றுவித்தலைச் செய்பவர். |
அதிகாரமுத்தர் |
விஞ்ஞானகலரில் மலபரிபாகம் எய்தப்பெற்று, அதிகாரம் செய்ய விரும்புபவர்கள். |
அதிகாரம் |
யோக்கியதை – உரிமை – தலைமை. |
அதி சூக்கும சித்து |
எல்லாவற்றையும் தானே அறியும் பரமசிவன். |
அதி சூக்கும பஞ்சாக்கரம் |
சீகார வகாரங்கள் இரண்டும் எதிர் நிரல நிறையாக நிற்க, யகாரம் நடுவே நிற்க அமைந்துள்ள பஞ்சாக்கரம், அஃதாவது “சிவயசிவ” என்பது. இதனை இருதலைக்கொள்ளி” என்றும் “இருதலைமாணிக்கம்” என்றும் கூறுவர். |
அதிசூக்குமம் |
மிக நுட்பமாக இருப்பது. |
அதிட்டான பக்கம் |
முதல்வன், குருவடிவை அதிட்டித்து நின்று உணர்த்துவன் எனக் கூறுதல். |
அதிட்டித்தல் |
நிலைக்களமாகக் கொண்டு செலுத்துதல். |
அதிட்டானம் |
இடம் – நிலையம். |
அதிதீவிரம் |
மிகுந்த விரைவு அல்லது வேகம். |
அதிமார்க்கம் |
பரசமயங்களுக்கு அப்பாற்பட்டும் உட்சமயமாய் நின்றும், சித்தாந்தசைவம் அல்லாததாய் உள்ள மதம். |
அதிமார்க்கவினை |
யோகம் செய்தல். |
அதிர்ஷ்ட கன்மம் |
காணப்ப்டாத பிறப்பில் அனுபவிக்கப்படும் வினை |
அதுஅதுவாய் நின்றறிதல் |
சார்ந்ததன் வண்ணமாய் நின்ற அறித அஃதாவது, ஆன்மா எதனைப் பற்றி நிற்கிறதோ, அதனதன் தன்மையே, தன் தன்மையாகும் இயல்பினை உடையதாகும். |
அதீத அபத்தை |
துரியாதீத நிலை – உயிர்ப்பு எனப்படும் பிராண வாயுவும் அடங்கி இருக்கின்ற நிலை. |
அதீதம் |
அப்பாற்பட்டது – கடந்த நிலை. |
அதோ மாயை |
சுத்த மாயையின் கீழ் அடங்கியுள்ள அசுத்தமாயை – (அதஸ் – கீழ்) |
அத்தன் |
இறைவன் – சிவபெருமான். |
அத்தாணி மண்டபம் |
அரசன் இருக்கும் மண்டபம். |
அத்தியாச வாதம் |
விபரீத வாதம். கயிற்றைப் பாம்பு என்று கொள்வது போலவும், இப்பியை வெள்ளி என்பது போலவும் ஒன்றை மற்றொன்றாகக் கூறும் விபரீத வாதம். |
அத்தியான்மிக வினை |
சிவபூசை, திருமுறைப்படனம் முதலிய தன் பொருட்டுச் செய்யும் ஆத்மார்த்த வழிபாடு. |
அத்துவசுத்தி |
ஆறு அத்துவாக்களிலும் சஞ்சிதமாய் இருந்த கன்மங்களை எல்லாம், ஏககாலத்திலே புசிப்பித்துத் தொலைத்து முத்தி கொடுத்தல். |
அத்துவா |
ஆன்மாக்களுக்குக் கன்மம் ஏறுவதற்கும், பரகதி அடைவதற்கும் காரணமாய் இருக்கும் வழி. |
அத்துவிதம் |
இரண்டன்மை – வேற்ன்மை – வேற்றுமையின்றி நிற்றல் – சிவமும் உயிரும் தம்முள் வேற்றுமை யின்றி ஒற்றுமைப்பட்டு நிற்றல்; அஃதாவது பொருள் இரண்டாக இருந்தும், வேறு அறக் கலந்து நிற்கும் தன்மை. |
அநந்தம் |
கேடு. |
அநந்தசக்தி |
அளவிலாற்றல் உடைமை; சிவபெருமானின் எண்குணங்களுள் ஒன்று. |
அநந்நியம் |
அந்நியம் இல்லாதது; ஒற்றுமை; அத்துவிதம். |
அநாகதம் |
ஆறு ஆதாரங்களுள் நான்காவது. |
அநாதி |
ஆதி அற்றது. ஆதி – முதல்; அஃதாவது தோற்றம். தோற்றம் இல்லாததால், இறுதியும் இல்லாதது. தோற்றமும் இறுதியும் இல்லாமல் என்றும் உள்ள பொருள் எதுவோ, அஃது ‘அநாதி’ எனப்படும். |
அநாதி கேவலம் |
ஐவகைக் கேவலங்களுள் ஒன்று. அஃதாவது, அறிவை மறைத்து மயக்கத்தைச் செய்யும் ஆணவமலத்தோடு, ஆன்மா அநாதியே கூடி அறிவினிறிக் கிடக்கும் நிலை. |
அநாதிபோதம் |
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல் – இஃது இறைவனின் எண்குணங்களுள் ஒன்று. |
அநாதி முத்த சித்துரு |
அநாதியே மலபந்தம் இன்றி இருக்கும் அறிவே வடிவாய் நிற்கும் சிவம். |
அநியமம் |
தகாத செயலைச் செய்ய விரும்புவது. |
அநாதி பெத்த சித்துரு |
அநாதியே பாசத்தோடு கூடிய உயிர். |
அநிருவசனம் |
சொல்லமுடியாதது. |
அநிர்த்தேசியம் |
சுட்டியறியப்படாதது. |
அநுக்கிரகம் |
அருள், இரக்கம். |
அநுபவம் |
அறிந்தபொருளில் அழுந்துதல். (Knowledge derived from personal observation or experiment) |
அநுபலத்தி |
அறியாமை, ‘இல்லை’ என்று அறியும் அறிவு; உபலத்தி – அறிதல். |
அநுபூதி |
பிறபொருளின் உதவி வேண்டாமல், தனக்குள்ள இயல்பைக்கொண்டு, பொருள்களை எதிர் உற்று உணரும் உணர்வு. மெய்யுணர்வு. |
அநுமானம் |
கருதல் அளவை. அஃதாவது, கண்ணால் காணப்படாத பொருளை, அதனை விட்டு என்றும் நீங்காது நிற்கும் ஏதுவைக் கொண்டு அறிவதாகிய ஆன்மாவின் அறிவாற்றல் ஆகும். புகையைக் கண்டு, காணப்படாத நெருப்பை, உண்டு என்று உணர்வதைப் போன்றது. |
அநுவாதம் |
முன்னர்க் கூறிய ஒரு பொருளை, ஒரு காரணத்தை முன்னிட்டுப் பின்னும் எடுத்துக்கூறுதல். ‘நீ இவ்வாறு கூறினை’ என்று வாதியைக் கண்டனம் செய்வதற்காக வாதி கூறியதையே பிரதிவாதியும் கூறுதல். |
அநேகாந்தவாதம் |
பல முடிவுகளைச் சொல்லுதல். |
அநைசுவரியம் |
ஐஸ்வரியம் இன்மை. |
அநேகேசுவரவாதி |
பல கடவுளர் உண்டு என்பவன். |
அந்தகாரம் |
இருள். |
அந்தக்கரண ஆன்மவாதி |
அகக்கருவிகள் ஆகிய அந்தக்கரணங்களுள் ஒன்றே ஆன்மா என்று சாதிக்கும் மதத்தவர் இவர் உலோகாயதருள் ஒரு சாரார். |
அந்தக்கரணம் |
மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்னும் நான்கு அகக்கருவிகள். |
அந்ததரம் |
சிறந்த சித்தாந்தம். |
அந்தப்புரம் |
அரசனுக்கு உரிமையுடைய மகளிர் உறையும் இடம். |
அந்தரங்க வழிபாடு |
மானத வழிபாடு – அகப்பூசை. |
அந்தரம் |
வான். |
அந்தராயம் |
தீக்குணம் எட்டனுள் ஒன்று. அஃதாவது இடையூறு. |
அந்தரியாகம் |
உட்பூசை – அகவழிபாடு. |
அந்தரியாமி |
உள்ளீடாய் இருப்பவன் – கடவுள். |
அந்நிய நாத்தி |
வேறு அன்மை. |
அந்நிய போக வியவச் சேதம் |
பிறிதின் இயைபு நீக்குதல்.
|
அபர ஞானம் |
பரஞானத்திற்குக் கீழ் உள்ளது. சாத்திரம் கற்பதால் வரும் ஞானம். |
அபரநாதம் |
பரநாதம் எனப்படும் ஞானசத்தி, சுத்தமாயையைப் பொருந்துவதால் உண்டாகும் அசைவினால் எழும் ஓசை; அபர சிவத்தத்துவம். |
அபரமுத்தி |
பரமுத்தி அல்லாதது, கேட்டல், சிந்தித்தல் தெளிதலிலே நின்று, அவ்வளவில் யாக்கை நீங்கப் பெற்ற நிலை; |
அபரவிந்து |
பரவிந்து எனப்படும் கிரியாசத்தி, சுத்தமாயையைப் பொருந்துவதால் உண்டாவது அபர சத்தி தத்துவம். |
அபாவம் |
இன்மை – விளங்காமை – தருக்க நூலில் கூறும் அளவைகளில் ஒன்று. |
அபானவாயு |
தசவாயுக்களில் ஒன்று. அது, குதத்திலிருந்து மலசலங்களைப் பிரித்து வெளியே விடும் வாயு. கீழ்ச் சுவாசம் மட்டுமே உடையது. |
அபிமுகம் |
சந்நிதி – நேர்முகம். |
அபுத்தி பூர்வம் |
அறியப்படாதது. |
அபூருவம் |
ஒருவன் செய்த நல்வினை தீவினைகள் ஒழிந்த இடத்திலே, அவற்றினால் மறைக்கப்பட்ட வடிவிலேயே தோன்றி நின்று, மறுபிறப்பில் பலன் கொடுப்பது. |
அபேதவாதம் |
சிவமும் ஆன்மாவும் ஒன்று என வாதிக்கும் மாயாவாதம். |
அப்பிரகாசம் |
ஒளி விளங்காமல் இருப்பது. வெளிப்படையாகத் தோன்றாமல் மறைந்திருப்பது. |
அப்பிரமேயம் |
அளவைகளால் அளக்கப்படாமை. |
அப்பு |
நீர், பஞ்சபூதங்களுள் ஒன்று. |
அயர்ச்சி |
அயர்வு – மறதி – கண்டதை மறந்து மயங்கி வருந்துதல். |
அரன் |
உயிர்களின் பாசத்தை அரிப்பவன். |
அராகம் |
வித்தியா தத்துவம் ஏழில் ஒன்று. விருப்பம். |
அருக்கன் |
சூரியன் – கதிரவன் – பகலவன். |
அருட்கேவலம் |
சாயுச்சியநிலை. |
அருத்தாபத்தி |
அளவகளில் ஒன்று. சொல்லப் பட்டதைக் கொன்டு, சொல்லப்படாத பொருளைப் பெறுதல். எடுத்துக்காட்டு; பகலில் உணவு உண்ணாத ஒருவன் பருத்திருப்பான் என்று சொல்லப்பட்ட கருத்தைக் கொண்டு, அவன் இரவில் உண்டான் என்ற பொருளைப் பெறுவது போன்றது. இஃது அருத்தாபத்தி நியாயம் எனப்படும். |
அருத்தி |
விருப்பம். |
அரூபசொரூபம் |
அருவுடம்பாகிய தத்துவ வடிவம். |
அரூபம் |
அருவுடம்பு; உருவற்றது. |
அவசித்தாந்தம் |
சித்தாந்தத்திற்குப் பொருந்தாவற்றைச் சொல்லி சித்தாந்தம் சாதிப்ப்து. |
அவத்திதன் |
அவத்தையுற்றவன். |
அவத்தை |
நிலை. |
அவத்தை ஐந்து |
ஆன்ம நிலைகள் ஐந்து வருமாறு: - சாக்கிரம் - நனவு சொப்பனம் - கனவு சுழுத்தி - உறக்கம் துரியம் - பேருறக்கம் துரியாதீதம் - உயிர்ப்படங்கல். |
அவயவப்பகுப்பு |
உறுப்பு உறுப்பாய்ப் பிரிக்கப்படும் தன்மை. |
அவயவம் |
உறுப்பு. |
அவாந்தகாரணம் |
இடைப்பட்ட காரணம். |
அவாந்தரம் |
இடையில் உள்ள காலம், இடையில் உள்ள இடம், இடையில் நிற்பது. |
அவாய்நிலை |
ஒரு சொல். எந்தச் சொல் இல்லாமல், வாக்கியப் பொருள் உணர்ச்சி கூடாதோ, அச்சொல்லை அவாவி நிற்றல். அஃதாவது அருத்தம் பூர்த்தியாகாமால் எஞ்சி நிற்பது. |
அவிச்சை |
அவித்தை,அஞ்ஞானம், நில்லாதவற்றை நிலையின என்றும், அசுத்தத்தைச் சுத்தம் என்றும், துன்பத்தை இன்பம் என்றும், தான் அல்லாத பொருளைத் தான் என்றும் காணும் புல்லறிவு. |
அவிச்சைக்காலம் |
அஞ்ஞானத்தை உடைய பெத்தகாலம்; அறியாமையோடு கூடிய கட்டுற்ற காலம். |
அவித்தை |
அஞ்ஞானம் ஆகிய அறியாமையைச் செய்வது. |
அவிநூபாவம் |
விட்டு நீங்காமை; பிரிவின்றி உடனிருத்தல்;நீக்கமின்றி உடன் நிகழ்வது. |
அவிநாவிருத்தி |
விட்டு நீங்காத் தன்மையின் வளர்ச்சி. |
அவிப்பாகம் |
(ஆவிர்ப்பாகம்) தேவர்களின் உணவில் ஒரு பங்கு. |
அவுத்திரி |
ஓமத்தோடு கூடச் செய்யும் தீட்சை. |
அவை |
சபை; கற்றோர் சபை. |
அவையடக்கம் |
ஒருவர் தாம் செய்த நூலில், குற்றம் ஏற்றாதபடி கற்றோரை வழிமொழிந்து அடக்குதல்; சபையை அடக்குதல். |
அவ்வியத்தம் |
பிரகிருதி மாயை; வெளிப்படாதது; பிரிந்து தெரியாதது; இதிலிருந்து வெளிப்படுவது குணத்தத்துவம். |
அவ்வியாப்பியம் |
எங்கும் நிறைந்திருக்காதது. |
அளவிலாற்றல் |
பரமசிவனது எண்குணங்களுள் ஒன்று. |
அளவை |
உலகத்துப் பாதார்த்தங்களை, எண்ணல், முகத்தல், நீட்டல், நிறுத்தல் என்னும் நால்வகை அளவினால் அளந்து அறிவதுபோல, பதி பசு முதலிய பொருள்களின் உண்மைகளையும் இயல்புகளையும் அளந்து அறிவதற்குக் கருவியாக உள்ள பிரமாணம். |
அளவை நூல் |
தருக்க சாத்திரம். |
அளாவுதல் |
தழுவுதல், கொண்டாடுதல். |
அறுவை |
வேட்டி, உடை. |
அற்புதம் |
சூனியம், பாழ். |
அனந்ததேவர் |
சுத்த தத்துவங்களுள் ஒன்று ஆகிய ஈசுர தத்துவத்தில் இருக்கும் அட்டவித்தியேசுரர்களுள் தலைமை பெற்றவர்; அசுத்தமாயா தத்துவங்களைத் தோற்றுவிப்பவர்; இவர் அசுத்தமாயைக்கு மேல் சுத்தவித்தைக்குக் கீழ் இருந்த விஞ்ஞான கலர்வகை ஆன்மாக்களுள் நின்று, மலபரிபாகத்துக்குத் தக்கபடி, ஈசுவரதத்துவத்திற்குப் போகப் பெற்றவர்; அசுத்தமாயையின் ஒரு பகுதியைக் கலக்கிக் கலை முதலியவற்றைத் தோற்றுவிப்பவர். அழிவில்லாதவர். |
அனர்த்தம் |
பயனற்றது; கேடு. |
அனன்னியம் |
அநந்நியம் பார்க்கவும். |
அனுபவஉணர்வு |
ஆராய்ச்சி அறிவின் பின் நிகழும் நுகர்வு. |
அனுமான அளவை |
அநுமானம் பார்க்கவும். |
அன்மொழித்தொகை |
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மைத் தொகைகளோடு பிறமொழியும் தொக்கு நின்றல். |
அன்றல் |
அன்றி – மாறுபடுதல். |
“ஆ”
ஆகந்துகம் |
இடையில் வந்து கூடியது; மாயையும் கன்மமும். |
ஆகமப்பிரமாணம் |
ஆகம அளவை. காட்சிப் பிரமாணத்தினாலும் அனுமானப் பிரமாணத்தினாலும் அறியப்படாத பொருளை அறிவிக்கும் ஆப்த வாக்கியம் ஆகிய தோத்திர மற்றும் சாத்திரப்பிரமாணம். |
ஆகமம் |
கடவுளிடத்திலிருந்து வந்தது. ஆன்மாக்களுக்கு, மலத்தை நாசம் செய்து, ஞானத்தை உதிப்பித்து, மோட்சம் கொடுப்பதற்காக உபதேசிக்கப்பட்ட நூல், சிவாகமம் ஆகும். பதி, பசு, பாசம் என்பவற்றின் இலக்கணங்களை விரித்து உணர்த்தும் நூல். |
ஆகாமியம் |
மூவகைக் கன்மங்களில் ஒன்று. பிராரத்தவினை (ஊழ்)க்கு இசைய எடுத்த தேகத்தில் அதன் பலனை நுகரும்போது, வந்து சேரும் விருப்பு – வெறுப்புகளால் உண்டாகும் நல்வினை –வினைகள். இது நிகழிவினை எனப்படும். இவ்வினை மறுபிறப்புக்கு வித்தாக அமையும். |
ஆகாசம் |
ஆகாயம், பஞ்சபூதங்களுள் ஒன்று. |
ஆகுதி |
ஓமாக்கினியில் நெய் முதலியவற்றைப் பெய்தல். |
ஆக்கிராணம் |
ஞானேந்திரியம் ஐந்த்ள் ஒன்று. மணக்கும் கருவி |
ஆசங்கை |
சந்தேகம் – ஆட்சேபம் – மறுப்பு. |
ஆசனம் |
அட்டாங்க யோகம் எட்டினுள் ஒன்று. இருக்கை |
ஆசாரம் |
ஒழுக்கம். |
ஆசரித்தல் |
அனுட்டித்தல், பழகுதல். |
ஆஞ்ஞை |
ஆறு ஆதாரங்களுள் ஆறாவதாக உள்ளது. புருவ மத்தியில் வட்ட வடிவமாய் இருக்கும். இரண்டு இதழ் உடையது. |
ஆணவம் |
உயிரறிவை அணுத்தன்மைப்படுத்துவது. மும்மலங்களுள் ஒன்று. |
ஆணை |
சிற்சத்தி, அருளாற்றல்; ‘ஆஞ்ஞை’ என்பது ‘ஆணை’ என மருவிற்று. |
ஆதிசத்தி |
ஆணவமலம் பக்குவம் ஆகும்படி உயிர்க்குப் போகத்தைக் கொடுப்பது. இது திரோதன சக்தி அல்லது மறைப்பாற்றல் எனவும் படும். |
ஆதி தைவிகம் |
தெய்வத்தால் வரும் துன்பம். கர்ப்பகால வேதனை, திரை, மூப்பால் வரும் துயரம், இயமனால் வரும் மரணம் முதலியன. |
ஆதி பெளதிகம் |
பூதத்தால் வரும் துன்பம். குளிரால் வரும் நடுக்கம், மின்னல், இடி முதலியவற்றால் வரும் பயம் முதலியன. சடப்பொருள் வாயிலாக வருவது. |
ஆத்தமானார் |
தோழர், நண்பர். |
ஆத்தவாக்கியம் |
உள்ளதை உள்ளபடி கூறும் ஆன்றோர் வாக்கு.நம்பிக்கைக்குரிய நல்லோர் வாக்கு. |
ஆத்தியான்மிகம் |
தன்னாலும் பிற ஆன்மாக்களாலும் வரும் துன்பம், உடலால் உறும்துயர், மனக்கவலை,பொறாமையால் வரும் துன்பம் முதலின. |
ஆமா |
காட்டுப் பசு. |
ஆய்தல் |
நுணுகுதல், ஆராய்தல். |
ஆய்ந்து ஆர்தல் |
நுணுகிவந்து சூடுதல். |
ஆரிணி |
சிவபெருமானின் பரிக்கிரக சக்தி மூன்றனுள் ஒன்று, பஞ்சக்கிருத்தியங்களுள் சங்காரம், அனுக்கிரகம் என்னும் இரண்டையும் செய்வது. மற்ற இரு பரிக்கிரக சத்திகள் “செநநி”யும் “உரோதயித்திரி”யும் ஆகும். |
ஆரவாரம் |
வெற்று ஒலி. |
ஆருகதம் |
மூவகை நாத்திக மதங்களில் ஒன்று, அருகனைக் கடவுளாக உடையது. |
ஆர்த்தி |
கிரியா சத்தியின் புற உருப் பஞ்ச சத்திகளில் ஒன்று; அழிக்கும் ஆற்றலை உடையது. |
ஆலய விஞ்ஞானம் |
உடல், பொறி முதலியவற்றைத் தனித்தனியாகக் காணாமல், ஒட்டு மொத்தமாகக் கண்டு அறியும் உணர்வு. |
ஆவரணம் |
ஆணவமலம்; மூடுதல், மறைத்தல். |
ஆவாரம் |
மயக்குவது, மறைப்பது. |
ஆவிருதி |
ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மறைப்பது – இருள் மலம். |
ஆவேசித்தல் |
ஆவேசம் – உட்புகுதல் – தெய்வம் ஏறுதல். |
ஆவேசபக்கம் |
சுத்த ஆன்ம அறிவையே தனக்கு வடிவமாகக் கொண்டு, இறைவன் தயிரில் நெய்போல் விளங்கி, குருவுருவை ஆவேசித்து நின்று, ஞானத்தை உணர்த்துவன் எனக் கூறுதல். |
ஆவேசவாதி |
காபால மதத்தவன்; சிவன் ஆவேசித்தலால், சிவனது குணங்கள் முத்தான்மாவிட த்துத் தோன்றும் என்று சொல்பவன். |
ஆறலைத்தல் |
வழிபறித்தல். |
ஆறாதாரம் |
உடம்பில் உள்ள ஆறு ஆதாரங்கள். அவை – மூலாதாரம் சுவதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்பன. |
ஆறுகோடி மாயா சத்திகள் |
ஆறு வகையான மயக்கும் ஆற்றல்கள், அவை – காமம், குரோதம், உலோபம், மோகம், மதம் மாற்சரியம் என்பன. இவற்றைத் தமிழில் ஆவா, வெகுளி, பற்றுள்ளம், மருள், செருக்கு, பொறாமை என்பர். |
ஆறு சென்ற வியர் |
வழி நடந்ததனால் ஆகிய வியர்வை. |
ஆற்றல் |
சொற்குப் பொருளோடு உளதாகிய இயைபு, வல்லமை, அறிவு, முயர்ச்சி. |
ஆனந்தரீயம் |
இவை ஆராய்ந்த பின், இது கேட்கப்பாற்று என்னும் யாப்பு. |
ஆனாமை |
நீங்காமை. |
ஆன்மசுத்தி |
தன் செயல் நீங்கித் திருவருட் செயலி அடங்கல். |
ஆன்ம தத்துவம் |
பிரகிருதித் தத்துவதத்திற்குக் கீழ் ஆகிய குணத் தத்துவம் முதலிய இருபத்து நான்கு தத்துவங்களும் ஆன்ம தத்துவம் எனப்படும். இந்த இருபத்துநான்கும், ஆன்மாவால் புசிக்கப்படும் வஸ்துக்களாக இருத்தலால், போக்கிய காண்டம்’ எனவும் படும், ஆன்ம சம்பந்தம் உடையதால், ஆன்ம தத்துவம் எனப்பட்டது. |
ஆன்ம தரிசனம் |
பாசம நீங்க, மெய்யுணர்வு பற்றித் தனது சிறப்பியல்பை ஆன்மா உணர்தல். |
ஆன்ம போதம் |
உயிர் உணர்வு; அஃது இஃது என்று சுட்டியறியும் ஆன்மாவின் சுட்டறிவு. |
ஆன்ம லாபம் |
இறைவன் அத்துவிதமாய் நின்று, உபகரித்து வரும் பெருங்கருணையினை நினைந்து, ஆன்மா நேயத்து அழுந்தல். |
ஆன்மா |
வியாபகம், சித்தசித்து, உயிர், சதசத்து, அறிவிக்க அறியும் இயல்பு உடையது; சார்ந்ததன் வண்ணமாய் நின்று அறியும் இயல்பினது; சகல கேவலப்படும் இயல்புடையது. |
ஆன்மிக கருடன் |
கருடமந்திரத்தின் இடமாக நின்று மாந்திரிகனுக்குப் பயன் கொடுக்கும் சிவசத்தி. |
ஆன்மீகம் |
ஆன்ம சம்பந்தம் உடையது. |
“இ”
இகலல் |
எதிர்த்தல், பகைத்தல். |
இங்கு, இங்குளி |
காயம். |
இச்சாசத்தி |
பராசத்தி |
இடத்திரிவு |
தான வேறுபாடு |
இடர்ப்படுதல் |
ஆற்றலைக் குறைத்தல். |
இட வழுவமைதி |
ஓர் இடத்திற்கு உரிய சொல் மற்றோர் இடத்திற்கு வருவது. வரு சொல் படர்க்கையில் வருதல் இடவழுவமைதி. |
இடை |
இடது மூக்கில் நிற்கும் நரம்பு. |
இடையீடு |
இடைவிடல். |
இட்டி |
ஒன்றை விரும்பிச் செய்வது. |
இதம் செய்தல் |
நன்மை செய்தல். |
இந்தனம் |
விறகு. |
இந்திரீயக்காட்சி |
ஞானேந்திரியம் கருவியாக, உருவம் முதலிய விடயங்களை அறியும் அறிவு. |
இந்திரியான்மவாதி |
ஞானேந்திரியமே ஆன்மா என வாதிக்கிறவன். உலோகாயதருள் ஒருவன். |
இயமம் |
அட்டாங்க யோகத்தில் ஒன்று. கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரையும் பொதுமகளிரையும் விரும்பாமை ஆகிய ஆண்தகைமை, இரக்கம், வஞ்சனையில்லாமை,பொறையுடைமை, மனங்கலங்காமை, அற்பாகாரம், சுசியுடைமை என்னும் பத்து வகை உடையது. |
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்: |
பரமசிவனின் எண்குணங்களுள் ஒன்று; அநாதி முத்தத் தன்மை. |
இயல்பு |
தன்மை முறைமை, பொருளுக்குப் பின் தோன்றாமல் உடன் நிகழ்வது. நீரின் தண்மைத் தன்மையும், தீயினது வெம்மைத் தன்மையும் போல்வது. |
இயல்பேது |
அனுமான அளவைக்கு உதவும் கருவிகளான மூன்று ஏதுக்களில் ஒன்று. |
இயற்கை உணர்வின ஆதல் |
இறைவனின் எண்குணங்களில் ஒன்று; நிராமய ஆன்மா. |
இரங்கல் |
ஒலித்தல், சொல்லல். |
இரட்டுறக் காண்டல் |
அஃதோ இஃதோ என இரண்டுபடக் காணும் ஐயக் காட்சி. |
இரட்டுற மொழிதல் |
ஒரு வாக்கியத்தை இரண்டு பொருள்படச் சொல்லுதல். முப்பத்திரண்டு உத்திகளில் ஓர் உத்தி. |
இரணியகருப்பன் |
பிரமன், அயன். |
இரணிய கருப்பமதம் |
பிரம்மாவையே பரம்பொருள் எனக் கொள்ளும் சமயம். |
இராகம் |
ஆசை, மோகம், (பார்க்கவும் அராகம்) |
இராசத குணம் |
பிரகிருதி மாயையிலிருந்து தோன்றிய முக்குணங்களுள் ஒன்று. கெளரவம் முதலிய குணங்களை உடையது. |
இரித்தல் |
பற்றறக் களைதல். |
இருக்கு |
வடமொழி வேதங்கள் நான்கனுள் முதலாவது. |
இருமடி ஆகுபெயர் |
இருமுறை ஆகுபெயர் ஆதல். கார் வந்தது – கார் என்னும் நிறப்பெயர் மேகத்திற்கு ஆகி, மேகத்தின் பெயர், அது பெய்யும் பருவத்திற்கு ஆதல். |
இருவகை அஞ்சவத்தை |
ஒருவகை, ஆன்ம த த்துவங்கள் கூடுதலும் நீங்குதலும் பற்றி நிகழும் நிலை; மற்றொரு வகை, விடயங்களை நுகரும் போது, ஏவுதல் கருவிகளின் தொழிற்பாடு பற்றி நிகழும் நிலை. |
இருதலைக் கொள்ளி |
‘சிவயசிவ’ என்னும் அதி சூக்கும பஞ்சாக்கரம். |
இருதலை மாணிக்கம் |
இது முத்தி பஞ்சாக்கரம் எனவும்படும். “சிவய” என்பதும் முத்தி பஞ்சாக்கரம் எனப்படுகிறது. |
இருவினை ஒப்பு |
ஒன்றில் விருப்பும் ஒன்றில் வெறுப்பும் ஆதல் இன்றிப், புண்ணிய பாவம் இரண்டிலும், அவற்றின் பயன்கள் ஆகிய இன்பத் துன்பங்களிலும், ஒப்ப உவர்ப்பு நிகழ்ந்து விடுலோனது அறிவின்கண், அந்த இருவினையும் அவ்வாறு ஒப்ப நிகழ்தல். |
இரேசகம் |
நாசியால், அகத்து உள்ள அசுத்த வாயுவைப் புறத்தே கழித்தல். |
இலக்கணம் |
இயல்பு. |
இலக்கு |
அவகாசம், ஒழிவு. |
இலகுதை |
நொய்மை, இலேசாம் தன்மை. |
இலயம் |
ஒடுங்குதல். |
இலயித்தது |
ஒடுங்கியது. |
இலய சிவன் |
இலயத்தானம் ஆகிய சிவதத்துவத்தில் நிற்கின்ற சிவன். இவர் சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களையும் ஒடுக்குபவர். |
இலயதத்துவம் |
சிவதத்துவம், சத்தி தத்துவம் என்பன. |
இலாடம் |
நெற்றி. |
இலிங்கம் |
ஆன்மாக்களின் தியான பாவனா நிமித்தம், சுத்த சிவம் அருவுருவத் திருவுருக் கொண்ட நிலை. |
இழை |
நூல். |
இறந்தது தழீஇ நிற்றல் |
முன் நிகழ்ந்ததைத் தழுவி நிற்றல். |
இறை |
விடை. |
இறைபணி |
அவனருளால் அன்றி, ஒன்றையும் செய்யான் ஆதல். உயிர் செய்வன எல்லாம் இறைவன் அருளின் வழி நின்று செய்தல். |
இறைஎழுத்து |
மகா மனு; இது நாயோட்டும் மந்திரம் ஆகிய ‘சி’ என்னும் பிரம பீஜம் ஆகும். |
இனைய |
இத்தன்மையானவை. |
|
|
|
|
|
|
“ஈ”
ஈசத்துவம் |
அட்ட சித்திகளில் ஒன்று |
ஈஷத்மலம் |
அற்பமலம். |
ஈசானம் |
சதாசிவ மூர்த்தியுடைய ஐந்து முகங்களுள் ஒன்று. சிவசாதாக்கியம் என்னும் தத்துவமும் சதாசிவம் என்னும் மூர்த்தியும் பொருந்தினது. |
ஈசானி |
சிவனுடைய கிரியா சத்தியின் பறவுருப் பஞ்ச சத்திகளில் ஒன்று. |
ஈசுவர விகாரவாதம் |
சித்து ஆகிய உயிர் முதல்வன் உபகாரத்தை நாடினால், முதல்வனும், பிறிதொன்றன் உபகாரத்தை அவாவுவன். அதுபற்றி விகாரம் அடைவான்; ஆதலின், உயிர் முதல்வன் உபகாரத்தை நாடாது எனக் கொள்ளும் அகச்சமயம். |
“உ”
உடம்படுப்பித்தல் |
உடன்படச் செய்தல். |
உடம்பொடுபுணர்த்தல் |
ஓர் உத்தி. அஃது ஒரு பொருளைச் சொல்லத் தொடங்கிய தொடரிலே, பின்னும் ஒரு பொருள் தோன்றச் சொல்லுதல். கருத்துடை அடைபோல வைத்து, ஒன்று கூறும்போது வேறொரு பொருளையும் அதன்பால் புணர்த்தி வைத்தல். |
உடல்வினை |
பிராரத்தம். |
உடல்திரிவு |
சரீரம் வேறுபடுதல். |
உணர்வு |
அறிவு, ஞானம். |
உணர்த்தும் தன்மை |
அறிவிக்கும் முறை. |
உண்மை |
உள்ளது; சிறப்பியல்பு; தத்துவம். |
உண்மை நிட்டை |
சகச நிட்டை |
உதானன் |
தச வாயுக்களுள் ஒன்று. பேச்சு உண்டாகும்படி, தேகத்திற்கு உள்ளிருக்கும் ஓசையை, வாக்கு இந்திரியத்தோடு கூட்டி, அக்கர ரூபமாய்ச் செய்தல் உதான வாயுவின் தொழில். இது கண்டத்தானத்தில் இருப்பது. |
உத்தியுத்தர் |
விந்துவின் காரியங்களில் முயன்றவர்; சதாசிவன். |
உத்தேசம் |
பெயரளவில் எடுத்து ஓதுதல். |
உநீதுதல் |
கடைதல். |
உபகரித்தல் |
உதவுதல், துணைசெய்தல் |
உபசாரம் |
அறிவிக்க அறியும் தன்மையுடைய ஆன்மா. |
உபத்தம் |
கன்மேந்திரியங்கள் ஐந்தனுள் ஒன்று; எருவாய். |
உபநிடதம், உபநிஷத் |
வேதத்தின் உட்பொருளைக்கூறும் நூல் – வேதாந்தம் – குருவின் பாதத்து அருகில் இருந்து கேட்கப்பட்ட நூல். |
உபமானம் |
தருக்கநூற் பிரமாணங்களுள் ஒன்று; உவமிக்கும் பொருள்; யாதேனும் ஒரு பொருளுக்கு ஒப்பாகச் சொல்லப்படுவது. ‘உவமானம்’ என்றும் கூறப்படும். |
உபமேயம் |
உவமிக்கப்படும் பொருள். யாதேனும் ஒரு பொருளோடு ஒப்பிட்டுச் சொல்லப்படுவது. |
உபலக்கணம் |
நால்வகைச் சொற்களுள் ஒரு சொல் நின்று, தன்னை உணர்த்துவதோடு, தனக்கு இனமாகிய சொற்களையும் தழுவிக் கொள்ளுதல்; இனப் பொருளையும் இணைத்துக் கொள்ளுதல். |
உபலத்தி |
உள்ளது என்று அறியும் அறிவு. |
உபாதானம் |
முதற்காரணம்; படைத்தலுக்குத் துணைக்கருவி. |
உபாதி |
காரியம். |
உபாயச்சரியை, கிரியா, யோகங்கள |
உலகப் பயனை நோக்கிச் செய்யும் சிவபுண்ணியங்கள். |
உபாய நிட்டை |
எளிதில் சித்தி அடையும் வழியைக் காட்டும் சிவாநந்த அனுபூதி. |
உபாயம் |
சித்தி அடையும் வழி. |
உயிர்க்குச் சிறப்பு இலக்கணம் |
சிவசத்தின் இயல்பு தன்மாட்டு விளங்கச் கெய்து, பேரின்பம் நுகர்தல். |
உயிர்க்குப் பக்குவம் |
அறிவித்தவாறே அறியும் செவ்வியுடைத்து ஆதல். |
உயிர்க்குப் பொது இயல்பு |
அந்தக் கரணங்களோடு கூடிநின்று, அஞ்சவத்தைப் படுதல். |
உயிர்த்தல் |
சுவாசித்தல்; மூச்சுவிடுதல். |
உய்த்தறிதல் |
புத்தியைச் செலுத்தி ஆராய்ந்து அறிதல். |
உரா |
பரந்து திரிதல். |
உராத்தனைத் தேர் |
பரந்து திரியாத வேகத்தை உடைய பேய்த் தேர்; பேய்த்தேர் – கானல்நீர். |
உருத்திரன் |
பிரம வீட்டுணுக்களோடும் கூடக் குணதத்துவத்தில் வைகி, பிரகிருதி புவனம் ஈறாகச் சங்கரிக்கும் கருத்தாவாகிய குணருத்திரன். இவர், பிரகிருதியின் மேற்பட்ட புவனங்களுக்குச் சங்காரகாரணர் அல்லர். |
உருபு மயக்கம் |
ஒரு வேற்றுமை உருபு, மற்றொரு வேற்றுமைப் பொருளில் வருவது. |
உருவகாந்தம் |
உடல், பொறி முதலியன. |
உருவம் |
உடம்பு, தூலசரீரம், வடிவம். |
உருவுவமை |
நிறம் காரணமாக வரும் உவமை. |
உம் |
கார்குழல் – மேகத்தின் நிறத்தைப் போன்ற கூந்தல். |
உரை |
வாயினால் சொல்லுதல். |
உரை அளவை |
ஆகமப் பிரமாணம்; நூல் அளவை. காட்சி, கருதல் அளவைகளால் அறியப்படாத பொருள்களை, ஆப்த வாக்கியங் கொண்டு உரை செய்வதாகிய ஆன்மாவினது ஞானசத்தி. |
உரோதயித்திரி |
சிவனுடைய பரிக்கிரக சத்திகள் மூன்றனுள் ஒன்று. பஞ்சக் கிருத்தியங்களுக்குள்ளே, காத்தலையும் மறைத்தலையும் செய்வது. |
உலகவினை |
உலகிற்கு உரிய வினை; கிணறுவெட்டுதல், தண்ணீர்ப் பந்தல் வைத்தல் முதலியன. |
உலோகாயதம் |
புறப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று. காண்டல் அளவை ஒன்றையே பிரமாணமாகக் கொள்ளுதல். ஆகாயம் நீங்கலாகப் பூதங்கள் நான்கு என வாதித்தல்; உடம்பே உயிர், கடவுள் பொய்; இருவினை பொய்; மங்கையுடன் வாழ்வதே; முடிந்த இன்பம்; வீடுபேறு பொய்; - இவைகள் உலோகாயதரின் கொள்கைகள். |
உலைவு |
கேடு. |
உவகை |
களிப்பு – யாக்கையின் பதினெண் குணங்களுள் ஒன்று. |
உவமானம் |
உவமிக்கும் பொருள். (உபமானம் – பார்க்கவும்) |
உவமேயம் |
உவமிக்கப்படும் பொருள். |
உவமை |
ஓர் அலங்காரம். பொருளோடு பொருள் இயைய வைத்து ஒப்புமை புலப்படச் சொல்வது. |
உவர்ப்பு |
வெறுப்பு. |
உழவாரம் |
புல் செதுக்கும் கருவி. |
உள்ளம் |
புருடதத்துவம் ஆகும் தன்மை. |
உள்அடைவு |
அனுபவித்தற்கு ஏதுவான முறை. |
உள் அந்தக்கரணம் |
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் – ஆகிய ஐந்தும், இவற்றைக் காலம், ஊழ், கலை, நினைப்பு, விருப்பு என்று முறையே தமிழில் கூறுவர். |
உள்ளத்தைக் காட்டல் |
உள்ளத்திற்குக் காட்டுதல், இரண்டன் உருபு நான்கன் பொருளில் வந்தது. |
உறக்கு |
நித்திரை. |
உறழல் |
ஒப்பிடுதல், உவமையாதல். |
உற்பத்திவாதி |
அகப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று ஆகிய மாவிரத சமயத்தோன். இவனுடைய குணங்கள் முத்தான் மாவிடத்திலே தோன்றும் என்று சொல்பவன். |
உற்பந்தம் |
ஆதிபெளதிகம்; பூத சம்பந்தம் உடையது. |
உற்பிச்சம் |
பூமியைப் பிளந்து தோன்றும் மரம், செடி முதலியன. |
உற்பூதம் |
இந்திரியங்களால் அறியப்படுவது. |
உற்றறிதல் |
பரிசித்து அறிதல்; தடவி அறிவது. |
உற்றுணர்தல் |
பொருந்தி அறிவது. |
உன்முகம் |
எழுச்சி. |
உன்மத்தர் |
அறிவில் மயக்கம் உடையவர். |
“ஊ”
ஊர்த்துவ மாயை |
மேலே நோக்கிய மாயை; சுத்தமாயை. |
ஊழ்வினை |
முற்பிறவியில் செய்த வினைப்பயன். |
ஊறு |
தொட்டால் உணரும் உணர்ச்சி. |
ஊற்றம் |
அசைவின்றி நிற்றல். |
ஊக்கண் |
குறைந்த அறிவு; பசு ஞானம். |
“எ”
எஞ்சாப் பொருண்மை |
மிஞ்சாமை ஆகிய பொருள். |
எஞ்சுதல் |
குறைதல். |
எடுத்துக்காட்டுவமை |
உவமான உவமேயங்களைத் தனித்தனி வாக்கியங்களாகக் கூறி, உவம உருபு இன்றி, இரண்டிற்கும் உள்ள் பொதுத் தன்மையைக் குறிப்பால் உணத்துவது. |
எண்குணங்கள் |
இறைவனுடைய எட்டுக் குணங்கள். அவை வருமாறு: - 1. தன் வயத்தன் ஆதல்; 2. தூய உடம்பினன் ஆதல்; 3. இயற்கை உணர்வினன் ஆதல்; 4. முற்றுணர்தல்; 5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்; 6. பேரருள் உடமை; 7. முடிவில் ஆற்றல் உடைமை; 8. வரம்பில் இன்பம் உடைமை. |
எதிரது தழீஇ நிற்றல் |
பின்வரும் பொருளைத் தழுவி நிற்றல். |
எதிர்நிரல் நிறை |
பொருள்கோள் முறைகளுள் ஒன்று; அஃதாவது முறை பிறழ்ந்து வரும் நிரல் நிறை. உம்: சாத்து விகத்தில் சாத்துவிகம், சாத்துவிகத்தில் இராசதம், சாத்துவிகத்தில் தாமசம் போன்று வருவன. |
எதிர்மறைமுகம் |
எதிர் மறுத்தல் ஆகிய வாயில். |
எரிசேர்வித்து |
வறுத்தவித்து; சஞ்சிதவினை அக்கினியில் சேர்ந்த வித்துப் போல. ஆசாரியனது திருநோக்கால், விரைவிலே நீங்கும். |
“ஏ”
ஏகதேசம் |
ஒரு பகுதி, சிறுபான்மை. |
ஏகதேசப்பட்டு |
சுருங்கி. |
ஏகதேச அறிவு |
சிலவற்றை மட்டும் அறியும் சிற்றறிவு. |
ஏகதேசம் |
ஒரு பக்க வியாபகம். |
ஏகாநேகம் |
ஒன்றும் வேறும். |
ஏகனாகி நிற்றல் |
ஒற்றுமைப்பட்டு நிற்றல். |
ஏகான்மவாதம் |
புறச்சமயம் ஆறனுள் ஓன்று. ஆன்மா எனப் பொருள் ஒன்றே உளது என வாதிக்கும் மதம். |
ஏதிலார் |
அந்நியர். |
எது |
காரணம் |
ஏய்தல் |
பொருந்துதல்; ஏலுதல். |
ஏலாமை |
பொருந்தாமை; இயையாமை. |
ஏற்புழிகோடல் |
இடத்திற்கு ஏற்பப் பொருள் கொள்ளுதல். |
ஏன்றவினை |
உடம்பு இடமாக வரும் பிராரத்தம்; ஊழ். |
-
“ஐ”
ஐக்கியவாதம் |
அகப்புறச் சமயங்கள் ஆறனுள் ஒன்று; நீரும் நீரும் சேர்தல் போல். உயிரும் சிவமும் ஒன்று சேரும் எனக் கொள்ளும்மதம். |
ஐஸ்வரியம் |
வல்லபம்; அதிகாரம்; ஆளும் தன்மை. |
ஐந்தவத்தை |
சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து நிலைகள். |
ஐந்தெழுத்துண்மை |
பஞ்சாக்கரத்தின் இயல்பு. |
ஐந்தொழில் |
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் அருட்செயல்கள் ஐந்தும். |
ஐந்துகந்தம் |
பார்க்கவும் பஞ்சகந்தம். |
ஐயக்காட்சி |
காட்சி அளவையின் ஒருவகை கண்ட பொருளை அஃதோ இஃதோ என ஒன்றில் துணிவு பிறவாமல், இரட டுறக் கருதி ஆராயும் அறிவாற்றல். |
ஐவகை சுத்தி |
ஐந்து விதமான தூய்மை. அவை வருமாறு: - பூதசுத்தி, தானசுத்தி, திரவியசுத்தி, மந்திரசுத்தி, இலிங்கசுத்தி. |
“ஒ”
ஒட்டு |
பிறிது மொழிதல் அணி. தான் கருதிய பொருளை மறைத்து, அதனை வெளிப்படுத்துதற்குரிய பிறிது ஒன்றைச் சொல்வது. |
ஒருதலை |
நிச்சயம்; உறுதி. |
ஒருங்கு |
ஒருசேர; முழுமையும். |
ஒருசாரான |
ஒரு பகுதியான; சில. |
ஒருமைப்பன்மை மயக்கம் |
ஒருமைப்பாலில் பன்மைச் சொல்லைத் தழுவிக் கூறுதல். |
ஒருவ |
நீங்க |
ஒழிபு |
மிச்சம்; எஞ்சியது. |
ஒன்றுதல் |
மனம் ஒருமைப்பட்டு ஆராய்தல்; பொருந்துதல். |
“ஓ”
ஓதும் |
வேதம் ஓதப்படுவது. |
ஓத்து |
ஓதப்பட்டவிதி, இயல். |
ஓமித்து |
ஓமஞ்செய்து, வேட்டு. |
“ஒள”
ஒளபட்சிலேடிக வியாபகம் |
தடை அற்ற தன்மையை உடைய முழு நிறைவு. |
ஒளபம் |
தடை; ஒளபச்சில் – தடையற்ற; ஏடிகம் – தன்மை; |
வியாபகம் |
முழு நிறைவு, ஆன்மாவின் உண்மை இயல்பு இஃது எனக் கூறுவது. |
(சிவஞானசித்தியார் பார்க்கவும்: - ‘அசித்து அரு வியாபகம் போல்’ சிவஞான சுவாமிகள் பொழிப்புரை: கழக வெளியிடு பக். 181)
“க”
கஞ்சுகம் |
சட்டை; போர்வை. |
கஞ்சுக சரீரம் |
மாயையிலிருந்து தோன்றும் கலை முதலிய தத்துவங்களோடு, ஆன்மா கூடித் தன் இச்சா ஞானக் கிரியைகள் வியட்டிரூபமாய் பிரிந்து தோன்றிச் சிறப்பு வகையால் விளங்கும் அவதரம்; வியட்டி - வேறுவேறாக. |
கஞ்சுகம் போலும் கலாதிகள் |
கலை, காலம், வித்தை, அராகம், நியதி – இவ்வைந்தும் ஆன்மாவின் உடனாய்க் கஞ்சுகம் போல், பதிந்து நிற்றலின் ‘பஞ்ச கஞ்சுகம்’ எனப்படும். இவை ஏனைக் கருவிகள் போல, அவத்தைப்படுதற்கு ஏதுவாய்க் கூடுதலும் நீங்குதலும் இல்லை. |
கடந்தை |
திருப்பெண்ணாகடம். |
கடன் |
காரணம், முறை. |
கடல் |
நீர்க்கு இடம் கொடுத்து நிற்கும் வெளி. |
கடவுள் |
தத்துவங்களைக் கடந்து நிற்பவன்; தத்துவாதீதன். |
கடா |
வினா. |
கட்டுரை |
புனைந்துரை. |
கணநாதர் |
பூதங்களின் தலைவர்; நந்தி. |
கணபங்கம் |
கணந்தோறும் தோன்றி அழிதல். கணம் – க்ஷணம். – கணம் இமைப்பொழுதில் நூலில் ஒன்று. |
கணம் |
சிவனைச் சேவிக்கும் பூதம். |
கணாதமுனிவர் |
வைசேடிகம் என்னும் தருக்க சாத்திர்த்தைச் செய்தவர். |
கணித்தல் |
அறிவால் எண்ணுதல். |
கண்கூடு |
பிரத்தியட்சம் – தெளிவு |
கண்டம் |
கழுத்து, மிடறு. |
கண்ணழித்தல் |
பிரித்தல். |
கண்ணழித்து உரைத்தல் |
சூத்திரத்தின் பொருட் கூறுகளைப் பிரித்து, வினா விடைகளாக உரைக்கும் அகல உரை. இதனை ‘வார்த்திகப் பொழிப்பு’ என்றும் கூறுவர். (Analytic Method) (பிண்டப்பொழிப்பு Synthetic Method) |
கண்ணிருள் |
கருதி உணரப்படும் அகஇருளாகிய ஆணவமலம். |
கண்ணுதல் |
கருதுதல். |
கண்படுதல் |
உறக்கம். |
கதம் |
சீற்றம். |
கதிநான்கு |
தேவகதி, மக்கட்கதி, விலங்கின் கதி, நரகர் கதி |
கதி |
பிறப்புவகை. |
கந்தித்தல் |
நாறுதல், மணத்தல். |
கபிலமுனி |
சாங்கியநூல் செய்த முனிவர். |
கப்பு |
கவர்ச்சி, பிரிவு.
|
கமண்டலம் |
பிரமசாரிகளும் சந்நியாசிகளும் வைத்திருக்கும் ஒருவகை நீர்ப்பாத்திரம். |
கமனம் |
நடை, போதல். |
கரணம் |
கருவி; அந்தக்கரணம். |
கலிமா |
அட்ட சித்திகளுள் ஒன்று. பாரமாய் இருக்கை. |
கருணை மறம் |
கருணைபற்றிச் செய்யும் நிக்கிரகம்; தண்டனை. |
கருமகாண்டம் |
கிரியைகளைக் கூறும் பாகம். |
கருமமலம் பரிபாகம் ஆதல் |
இருவினைகள் தத்தம் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல். |
கருவம் |
செருக்கு; கர்வம். |
கருவி |
துணைக்காரணம்; உபகரணம். |
கருவி அறிவு |
சுட்டறிவு; பாசஞானம். |
கர்த்திரு சாதாக்கியம் |
பஞ்ச சாதாக்கியங்களுள் ஒன்று; ஞானலிங்கம். |
கர்த்திருத்துவம் |
செய்பவன் தன்மை. |
கலவிகரணி |
அவயவமில்லாதவன்; ஆகாசமூர்த்தி. |
கலைகள் ஐந்து |
பஞ்சகலைகள். அவை வருமாறு; நிவர்த்திகலை, பிரதிட்டா கலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தீயதகலை. |
கவலை |
ஒரு பொருளின் பிரிவினால் உண்டாகிய துயர். |
களபம் |
கலவைச் சாந்து; கலப்பு. |
களி |
களிப்பு, மகிழ்ச்சி. |
களிம்பு |
செம்பு முதலியவற்றில் இருக்கும் கறை. |
களைகண் |
ஆதாரம்; பற்றுக்கோடு. |
கறங்கோலை |
காற்றாடி. |
கற்பம் |
சங்கற்பம்; நிண்ணயம். |
கன்மசாதாக்கியம் |
நாதமயம் என்று சொல்லப்பட்ட ஞான லிங்கமும், விந்துமயமான கிரியா பீடமும், ஏறாமல் குறையாமல் கூடிப் பஞ்சக் கிருத்தியம் என்னும் தொழிலை உடையது. |
கன்மம் |
செயல்; கருமம். |
“கா”
காட்சிப்பொருள் |
காணப்படும் பொருள் |
காட்சி அளவை |
காட்சிப் பிரமாணம்; பிரத்தியட்சப் பிரமாணம். எதிரில் கண்ட பொருளையே உள்பொருள் என ஏற்பது. |
காட்சி வாதி |
உலோகாயதன். |
காட்டம் |
விறகு. |
காட்டாக்கின் |
விறகிலிருந்து தீ தோன்றுமாறு போல. |
காண்டம் |
கூட்டம், திரள், கொத்து. |
காண்டல் |
ஐயுறவு இன்றித் தெளிதல். |
காட்டு |
விளக்கம். |
காபாலம் |
அகப்புறச் சமயம் ஆறனுள் ஒன்று. (கபாலம் – தலை). |
காப்பு |
நூல்களில் தெய்வ வணக்கம் கூறும் கவி. |
காமக்கிழத்தியர் |
இன்பத்திற்கு உரிமை உடையவர். |
காமிகம் |
சைவ ஆகமம் இருபத்தெட்டுள் ஒன்று. |
காமியம் |
கன்மம்; கான்மியம் என்பது காமியம் என மரீஇயிற்று; மூலவினையின் காரியமாகிய புண்ணியபாவங்கள். |
காமியப்பயன் |
விரும்பிய பேறு. |
காமுகர் |
காமம் உடையவர். |
காரணகேவலம் |
அனாதி கேவலம்; மருட்கேவலம்; அநாதியே ஆன்மா ஆணவமலம் மறைப்புக்கு உட்பட்டு அறிவிச்சை செயல்களை இழந்து நின்ற நிலை. |
காரணசகலம் |
ஆன்மாக்கள் தத்தம் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, பிறவிகள் தோறும், இன்பதுன்பங்களை அனுபவித்து வரும் நிலை. |
காரண சுத்தம் |
மலபரிபாகம் வந்து, ஆன்மாக்களுக்கு இருவினை ஒப்பும் சத்திநிபாதமும் உண்டானபோது, இறைவன் குருவடிவில் வந்து, அருளில் நிறுத்தும் நிலை. |
காரணாவத்தை |
காரியத்திற்கு முற்பட்ட அருவநிலை. |
காரண சரீரம் |
அசுத்த மாயையில், அனந்த தேவரால் கலக்குண்ட பாகமாகிய சரீரம்; கேவலப்படும் ஆன்மா இச் சரீரத்தைப் பொருந்திய போது, ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் பொதுவகையால் சமஷ்டி ரூபமாக (முழுமையாக)விளக்கப்பெறும். கஞ்சுகம் முதலிய சரீரங்களைப் பிறப்பிப்பதற்குக் காரணமாக, இஃது இருக்கின்றபடியால், காரண சரீரம் எனப்பட்டது. |
காரண தன்மாத்திரை |
இந்திரியங்கள் ஐந்தும் விடயங்களை விடயிக்குமாறு துணையாக நிற்பவை காரண தன் மாத்திரை. சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் ஐந்து விடய தன்மாத்திரைகளும், தத்தம் குண விசேடங்களைக் காட்டாமல், குணசமூகமாய்ச் சூக்குமாய் இருக்கும் நிலையில், காரண தன்மாத்திரை எனப்படுகின்றது. |
காரண பஞ்சாக்கரம் |
‘சி’ கார ‘வ’ காரங்கள் இரண்டும் முறையே எதிர் நிரல் நிறையாக நிற்க, ‘ய’ காரமானது நடுவே நிற்பது; இது ‘சிவயசிவ’ என்னும் இருதலைமாணிக்கம் ஆகும்; இதனை ‘இரு தலைக் கொள்ளி’ என்னும் கூறுவர். |
காரிய கேவலம் |
காரியாவத்தை பதினைந்தனுள், சகலத்தில் கேவலம் எனப்படும்; இதனைக் ‘கீழாலவத்தை’ என்றும் கூறுவர். |
காரிய சகலம் |
சாக்கிரத்தில் சாக்கிரம், சாக்கிரத்தில் சொப்பனம், சாக்கிரத்தில் சுழுத்தி, சாக்கிரத்தில் துரியம், சாக்கிரத்தில் துரியாதீதம் என்னும் ஐந்தும் ‘காரிய சகலம்’ எனப்படும். இதனை ‘மத்தியாலவத்தை’ என்றும் நிலையில்படும் அவத்தை’ என்றும் கூறுவர். |
காரிய சுத்தம் |
அருச்சார்பில் ஆன்மா நிலைபெற்று நிற்றல், ‘நின்மலாவத்தை’ எனப்படும். இந்த நின்மலாவத்தையில், நின்மல சாக்கிரம் நின்மல சொப்பனம், நின்மலசுழுத்தி, நின்மல துரியம், நின்மல துரியாதீதம் என்னும், ஐந்து நிலைகள் உண்டு, அவற்றின் விளக்கம் வருமாறு: - நின்மல சாக்கிரம் – இறை அருளால் தன்னி அறிவது. நின்மல சொப்பனம் - அதன்பின் எந்தவித அசைவுமின்றி அவ்வருளே தரிசிப்பது. நின்மல சுழுத்தி - ஆன்மாவின் அறிவு இச்சைகள் தோன்றாமல் அவ்வருளே தானாகி நிற்கும் நிலை. நின்மல துரியம் - மலவாசனை சிறுதுமின்றி அநந்தவெளி (சுக பிரபை) தோன்றும் இடம். நின்மல துரியாதீதம்- அந்த அநந்த அனுபவத்தை அறிந்த தானும், ஆநந்தமாய் நின்ற முதலும் இல்லாமல், அவ்வாநந்தமே தானாய் அதீதப்பட்டு நிற்கும் நிலை. |
காரிய தன்மாத்திரை |
(பார்க்கவும் – காரண தன்மாத்திரை) சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம் என்னும் விடய தன்மாத்திரைகள் ஐந்தும் தத்தம் குணவிசேடங்களை ஞானேந்திரியங்களுக்குக் காட்டி நிற்கும் நிலையில் ‘காரிய தன்மாத்திரை எனப்படும். |
காரிய பிரபஞ்சம் |
மாயையின் காரியம் ஆகிய உலகமே; மாயையின் விரிந்த நிலை. |
காரியாவத்தை |
உருவாக உண்டாக்கப்ப்ட்ட நிலை. |
காலத்தத்துவம் |
ஆன்மாக்களுக்குப் போகத்தை அனுபவிக்கும் ஒழுங்கில் கால அளவை நியமனம் செய்யும் பொருட்டு, அசுத்தமாயையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட தத்துவம். |
காலாந்தரம் |
காலத்தின் முடிவு. |
கான்மியம் |
பார்க்கவும் – காமியம். |
“கி”
கிஞ்சிஞ் ஞத்துவம் |
சிற்றறிவு உடைமை. கிஞ்சித் – அற்பம்; ஞ – அறிவு; துலம் – தன்மை; உடமை. |
கிஞ்சிக் கர்த்திருவம் |
அற்பத்தொழில் உடமை; சிறிதாகிய ஆற்றல்;வலுவற்றதன்மை. |
கிஞ்சித்துவம் |
சிறுமை. |
கிரந்தி |
முடிச்சு. |
கிரியாசத்தி |
தொழில் வடிவாகிய ஆற்றல்; பஞ்ச சத்திகளில் ஒன்று. |
கிரியாவதி |
கிரியைகளை உடைய தீட்சை; ஆன்மாக்களுக்கு உரிய இருவகை ஒளத்திரி தீட்சைகளில் ஒன்று. ஒளத்திரி – ஓமத்துடன் செய்வது) |
கிரீடப்பிரமவாதம் |
நால்வகை ஏகான்ம வாதங்களுள ஒன்று; ‘நானே பிரமம்’ என்னும் கொள்கை. |
கிரீடை |
விளையாட்டு. |
கிருகரன் |
தச வாயுக்களுள் ஒன்று; தும்மலை உண்டாக்குவது. |
“கீ”
கீழாலவத்தை |
கேவலாவத்தையின் காரியமாக ஆன்மாப்பெறும் நிலை. இலாட்த்தானத்திலிருந்து, கீழ் நோக்கிச் சென்று, சாக்கிரம் முதலிய ஐந்துவத்தைப்படுதல்; அப்போது கருவிகல் ஒன்றுமின்றி, மூலாதாரத்தில் ஆன்மா மட்டும் இருக்கும்.இதனைச் சகலத்தில் ‘கேவலம்’ என்றும் ‘காரிய கேவலம்’ என்றும் கூறுவர். |
“கு”
குடாகாயம் |
குடத்துள் ஒளி. |
குடாகாய உவமை |
குடம் உடைந்த போது, குடத்தின் உள்ளிருக்கும் வெளி, புறவெளியுடன் சேர்ந்தாற்போல, சூக்கும உடம்பு அழிந்த முத்திநிலையில்; ஆன்மா இறைநிறைவில் சேர்ந்து அடங்கும். |
குடிலை |
சுத்தமாயை. ‘குடிலம்’ என்பது விளைவை உடையது; சுத்தமாயை ஓங்காரவடிவமாய் இருத்தலால், குடிலை’ எனப்பட்டது. |
குணசரீரம் |
அந்தக்கரணம் முதலியவற்றைத் தம்முள் அடக்கி நிற்கும் முக்குணங்கள் ஆகிய சரீரம். |
குணதத்துவம் |
பிரகிருதியிலிருந்து முக்குணங்களும் பிரிந்து தோன்றிய தத்துவம். |
குணம் |
சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணம். |
குணி |
குணத்தை உடைய பொருள். |
குண்டம் |
ஓமாக்கினி வளர்ப்பதற்காக நிலத்தில் தோண்டப்பட்ட கிடங்கு. |
குண்டலி, குண்டலினி |
சுத்தமாயை, மூலாதாரம், வளைந்திருப்பது. |
குதம் |
மல வாயில். |
குரம்பை |
சிறுகுடில், துச்சில், உடம்பு. |
குரோதம் |
கோபம். |
குலம் |
கூட்டம். |
குறி |
சூக்கும சரீரம். |
குறிக்கந்தம் |
பஞ்ச கந்தங்களுள் ஒன்று. |
குறிப்பெச்சம் |
எஞ்சி நின்ற பொருளைக் குறிப்பால உணர்த்துவது. |
குறிப்பேது |
ஏதுப்பொருளைக் குறிப்பாகக் காட்டி நிற்பது. |
குறுக்கல் விகாரம் |
நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக மாற்றுதல் உம்: ஊரா உரா. |
குறை |
இன்றியமையாமைப் பொருள். |
குற்றி |
சிறு குடுவை; சிறுபானை. |
“கூ”
கூட்டுறவு |
கூட்டு உறவு – கலப்பு. |
கூர்மன் |
தச வாயுக்களுள் ஒன்று; இமைத்தலைச் செய்வது. |
கூவல் |
கிணறு. |
“கே”
கேசரம் |
பூந்தாது; தாமரைப் பொகுட்டின் புறத்தே தொங்கும். (பொகுட்டு – குமிழி; கொட்டை) |
கேசரி |
அட்டாங்கே யோகாசனத்துள் ஒன்று; சிங்காசனம் எனப்படும். |
கேட்டல் |
உண்மை ஞானம் நான்கனுள் ஒன்று; குருமுகமாக ஆகமப் பொருள்களைச் செவிமடுத்தல். |
கேதம் |
துன்பம்; கிலேசம். |
கேவலம் |
உயிர், அறிவு செயல்களின்றித் தனியே ஆணவமலத்தால் மறைந்து நிற்கும் நிலை; உயிரின் அறிவு இச்சை செயல்கள் சிறிதும் நிகழாமல், உயிர்மட்டும் தனியே பசுத்துவமாய் நிற்கும் நிலை. அந்நிலையில் ஆன்மா நுண்ணுடலோ, பருவுடலோ, முக்குணமோ எதுவுமே பெற்றிருக்கவில்லை இதனைக் ‘காரண கேவல்ம்’ என்றும் ‘கேவலாவத்தை’ என்றும் கூறுவர். |
“கை”
கைக்கொள்ளுதல் |
அங்கீகரித்தல், உடன்படுதல். |
“கொ”
கொண்டு |
முகில், மேகம், எழிலி. |
கொத்து |
கூட்டம். |
“கோ”
கோசரம்ஆதல் |
விடயமாதல்; அறியத்தக்கது ஆதல்; விளங்குதல், புலனாதல். |
கோட்டம் |
ஒருபால் கோடுதல், அநீதி, முறைவழு. |
கோதண்டம் |
புருவநடு. |
கோத்திரம் |
வம்சம் – இனம். |
கோமுகம் |
அட்டாங்க யோகாசனத்தில் ஒன்று. |
“கெள”
கெளரவம் |
மமதை; பாரம் உடைமை; தாமத குணத்தில் வெளிப்படும் ஒரு குணம். |
-
“ச”
சகச நிட்டை |
உண்மை நிட்டை; மவுனத்துடன் அருள் நிலையில் நிற்பது. |
சகசமலம் |
ஆன்மாவில் அநாதியே கூடியிருக்கும் ஆணவமலம்; உடன் தோன்றும் மலம்; ஒன்றி நிற்கும் மலம். |
சகசம் |
உண்மை; கூடப்பிறந்தது. |
சகமார்க்கம் |
தோழமைக்குரிய நெறியாகிய யோகமார்க்கம். |
சகலம் |
உயிரின் அறிவு இச்சை செயல்கள் தனு கரணாதி யோடும் கூடி, ஓரளவு விளங்கும் நிலை. |
சகலத்தில் கேவல்ம் |
இலாடத் தானத்திலிருந்து கீழ் நோக்கிச் சென்று, சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைப்படுத; இது கீழாலவத்தை எனவும் சொல்லப்படும். (பார்க்கவும் காரிய கேவலம்). |
சகலத்தில் சகலம் |
இலாடத்தானத்திலிருந்து அங்கங்கே அவத்தைப் பட்டுக் கீழ்ச்சென்று, மூலாதாரத்தை அடைந்து, அதன்பிறகு அவ்வாறே அங்கங்கே அவத்தைப்பட்டு மேற்சென்று, இலாடத் தானத்தை அடைந்த புருடன், சாக்கிர அவத்தையின் போது, சாக்கிர சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி, சாக்கிர துரியம், சாக்கிர துரியாதீதம் எனப்படும் ஐந்து அவத்தைகளும் சகலத்தில் சகலம் எனப்படும். இது ‘மத்தியாலவத்தை’ எனவும் படும். (பார்க்கவும் காரிய சகலம்). |
சகலத்தில் சுத்தம் |
(பார்க்கவும் காரிய சுத்தம்). |
சகலர் |
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூவகைப் பந்தங்களோடும் கூடியவர். இவர்க்கு இடம், மூலப்பகுதி முதல் நிலம் முடிய. இறைவன், இவர்க்குப் படர்க்கையில் குருவுருவை ஆவேசித்து நின்று ஞானத்தை உணர்த்துவன். |
சகள சிவன் |
உருவத்தோடு கூடிய சிவன், மகேசுவரர். |
சகள நிட்களம் |
அருவுருவம் சதாசிவம். |
சகன் |
நிலவுலகில் உள்ள குரவன். |
சகனம் |
நிதம்பம்; அல்குல்; தொடையின் உட்பக்கம். |
சங்கமம் |
இயங்கற்பொருள். |
சங்கம வடிவு |
சிவபத்தர் வடிவம். |
சங்கற்பம் |
எண்ணம்; இஃது இவ்வாறாக ஆகுக என எண்ணுதல்; சங்கற்பித்தல். |
சங்காரத்தொழில் |
அழித்தல் தொழில். |
சங்கரமித்தல் |
கலத்தல். |
சங்கிராந்தசமவாதி |
பாசுபத மதத்தோன். |
சங்கிராந்தம் |
ஒன்றிலிருந்து வேறொன்றுக்குப் போதல். |
சங்கேதம் |
சொல்லுக்கும் பொருளுக்கும் உள்ள உளதாகிய நியம ஆற்றல்; குழூஉக்குறி, பரிபாஷை. |
சச்சிதாநந்தம் |
உண்மை அறிவு இன்பம். |
சஞ்சிதவினை |
முற்பிறவிகளில் ஈட்டப்பட்டுப் புத்தி தத்துவத்திலும், பேரொடுக்கத்தில் மாயையிலும் கிடக்கின்ற வினைகளின் தொகுப்பு. |
சடம் |
அசேதனப்பொருள்; அசித்து. |
சட்சு |
ஞானேந்திரியங்களில் ஒன்று; கண்ணில் இருக்கும் இந்திரியம். |
சதசத்து |
சத்துப் பொருளாகிய சிவத்திலும், அசத்துப் பொருளாகிய பாசத்திலும், சார்ந்ததன் வண்ணமாய் அடங்கித் தோன்றும் உயிர். |
சதனம் |
இலை; உறை. அகச்சதனம் - கீழ் இலை;ஊர்த்துவச் சதனம் – மேல்இலை. |
சதாகதி |
ஓயாது அசைதல். |
சதாசிவம் |
சத்திகளைச் சிவன் பொருந்தியபொழுது, சத்திகாரியமான அருள்திருமேனி உண்டாகிறது; அவ்வாறு சத்தி காரியத்துடன் கூடிய வடிவுடைமை வடிவற்றும் தோன்றும் அருவுருவத் திருமேனி. |
சதுரப்பாடு |
வல்லமை, சாமர்த்தியம். |
சத்தகோடி மகாமந்திரர் |
சுத்தவித்தியா தத்துவத்தில் இருக்கும் ஏழுகோடி மந்திரேசுரர். |
சத்தப்பிரமவாதம் |
ஏகான்மவாதத்தில் ஒருவகை. சத்தமே பிரமம் என்று சொல்வது. |
சத்தர் |
சத்திகள் தம்முடைய வியாபாரங்களை விட்டுச் சிவனிடத்தில் இருப்பதால், சிவனுக்குச் ‘சத்தர்’ என்று பெயர். |
சத்தன் |
சுத்தமாயையின் காரியங்களை ஒடுக்கியிருப்பவன். |
சத்திநிபாதம் |
அருளினது வீழ்ச்சி. ஆணவமலம் பரிபாகம் ஆகும் பொருட்டு அதற்கு அனுகூலமாக நின்ற திரோதானசத்தி, அம்மலம், பரிபாகம் எய்தியதும், சிற்சத்தியாக மாறி, ஆன்மாவில் பதிவது. ஓர் அவைக்களத்தின் நடுவே, ஒரு கல் உயரே இருந்து விழுந்தால், அவ்வீழ்ச்சி அந்த அவைக்களத்து உள்ளாரை அந்த இடத்திலிருந்து அகல்விக்கும், அவ்வாறே சத்திநிபாதம் நிகழ்ந்ததும், ஆன்மாவை விட்டு, உலகப்பற்று அறவே நீங்கும். |
சத்திநிபாதம் நால்வகை |
மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம். |
சத்திமடங்கல் |
சத்தி வலி குன்றல். |
சத்தியோசாதனம் |
சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுள் ஒன்று. |
சத்தியோநிருவாணம் |
நிர்வாண தீக்கைவகை இரண்டனுள் ஒன்று; உடனே முத்தியைப் பயப்பது. |
சத்து |
உள்பொருள்; உண்மை. |
சந்ததி |
இடைவிடாத தொடர்ச்சி. |
சந்தானம் |
விரிவான தொடர்ச்சி. |
சந்நிதி |
திருமுன்; முன்னிலை. |
சந்நிதி மாத்திரையான் |
முன் நிற்றல் அளவிலே |
சமக்காரம் |
சமஸ்காரம்; மறைந்திருத்தல்; அடங்கியிருத்தல். |
சமட்டி |
எல்லாம் தொகுத்திருப்பது. |
சமயதீக்கை |
சமய நுழைவைப் பயக்கும் தீக்கை. |
சமயம் |
குறித்த பொருளை அடைவிக்கும் வழியைக் காட்டுவது. |
சமவாயம் |
நீக்கமின்றி நிற்றல்; ஒற்றுமை. |
சமவேதம் |
சமவாயத்தோடு கூடியது. |
சமாதி |
தியானிக்கப்படும் வழிபடு கடவுளின் வடிவத்தில், மனத்தை ஒருவழிப்படுத்தி, நன்கு நிலைபெறுத்திச் செய்யும் தியானம். அட்டாங்க யோகங்களில் ஒன்று. |
சமானன் |
தச வாயுக்களுள் ஒன்று. அன்னசாரத்தை நாடிதோறும் செலுத்துவது. |
சமுதாயம் |
கூட்டம். |
சமூகான்மவாதி |
உடல் முதலிய எல்லாக் கருவிகளின் கூட்டமே உயிர் என வாதிப்பவன். |
சராயிசம் |
கருப்பையிலே தோன்றுவது. |
சரியை |
உருவத் திருமேனியை வழிபடுவது. |
சருவவியாபி |
எங்கும் நிறைந்திருப்பவன். |
சர்வகர்த்திருத்துவம் |
எல்லாவற்றையும் செய்யும் தன்மை. |
சர்வஞ்ஞத்துவம் |
எல்லாவற்றையும் அறியும் தன்மை. |
சர்வஞ்ஞானோத்தரம் |
எல்லா ஆகமங்களிலும் சிறந்த ஆகமம். |
சர்வ பூத தமனி |
வாமை முதலிய அட்டசத்திகளுள் ஒன்று; ஆன்மாவினுடைய புண்ணிய பாவங்களை அடக்குவது. |
சலம் |
வஞ்சனை; கோட்டம்; நேர்மையின்மை. |
சலனம் |
அசைவு. |
சலித்தல் |
சலனமுறுதல். |
சவிகற்பம் |
ஒரு பொருளின் பெயர், இனம், தன்மை, செயல்,பயன் ஆகிய ஐந்தினையும் பகுத்தறிதல். |
சற்காரியவாதம் |
ஒரு பொருள் உண்டாவதற்கு முன்னும் அதன் காரியம், அதன் காரணத்தில் உள்ளது என்று கொள்வது; உள்ள பொருளிலிருந்து காரியம் தோன்றும் என்று வாதித்தல். உள்ளதே தோன்றும்; இல்லது தோன்றாது. |
சனகம் |
மூவகைக் கன்மங்களுள் ஒன்று. காரணமாய் நின்று, உடம்பு முதலியவைகளைப் பிறப்பிப்பது. |
சன்மார்க்கம் |
ஞானநெறி. சிவபெருமானின் சொரூபத் திருமேனியை, அறிவுத்தொழில் மாத்திரையானே வழிபடுவது. |
“சா”
சாக்கிரம் |
ஐந்து அவத்தைகளில் ஒன்று, விழிப்பு நிலை, நனவு நிலை. |
சாக்கிர தீக்கை |
ஆகமப்பொருளைச் சுருக்கி உபதேசித்தல். |
சாகாரம் |
வடிவோடு கூடியது. |
சாங்கியம் |
ஆத்தியான்மிக நூல் மூன்றனுள் ஒன்று. நிலம் முதல் பிரகிருதி ஈறாக உள்ள தத்துவங்களைக் கணக்கிட்டு அறிபவர், பகுத்தறிவாளர்கள், உயிரின் வேறாய் இறைவன் உண்டு என்பதை மறுப்பவர். |
சாதகம் |
கருவி. |
சாதனம் |
ஏது; கருவி; பயிற்சி. |
சாதாக்கியம் |
சதாசிவம். |
சாதி |
ஒரு நிகரவான பல பொருள்களுக்குள்ள பொதுவாம் தன்மை, குலம். |
சாதித்தல் |
சாதனத்தால் நிறுவுதல், வலியுறுத்திக் கூறல். |
சாதிஒருமை |
ஒரு சொல், ஒருமை ஈறு தோன்றியாவது தோன்றாமலாவது நின்று, பன்மைப் பொருளை உணர்த்துவது; ஓர்இனப் பொருளைப் பன்மையில் கூறல். உ-ம்: ஆன்மா. |
சாத்திரம் ஐந்து |
லெளகிக சாத்திரம் (உலகியல்), வைதிகசாத்திரம் (வேதம்), ஆத்தியான்மிகம் (உயிரியல்), அதிமார்க்கம், மாந்திரம் ஆகியன. |
சாத்துவிக குணம் |
முக்குணங்களுள் ஒன்று, இயற்கை நிறமாகிய வெண்மையை உடையது, நல்லதையே எப்போதும் கொண்டிருப்பது. |
சாது |
முழுந்தாள். |
சாந்தி |
பிராயச்சித்தம்; கழுவாய்; பரிகாரம். |
சாந்திகலை |
அநுபவ அறிவு பெற்ற அன்மாக்களுக்கு, விருப்பு வெறுப்பு சங்கற்பம் முதலிய எல்லாவற்றையும் சாந்தமாகச் செய்யும் சிவசத்தி. அந்த சத்திக்கு இடமாகிய சுத்தமாயையின் விருத்தி சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்கியம் என்னும் மூன்று தத்துவங்களையும் அடக்கி நிற்பது, பஞ்சகலைகளுள் ஒன்று. |
சாந்தியாதீதகலை |
பஞ்சகலைகளுள் ஒன்று. சத்தி தத்துவம் சிவதத்துவம் ஆகிய இரண்டு தத்துவங்களையும் அடக்கி நிற்பது. |
சாமம் |
வடமொழி வேதங்கள் நான்கனுள் ஒன்று மனதிற்குச் சமாதானத்தை (அமைதியை) உண்டாக்குவதால், அப்பெயர் பெற்றது. சதாசிவமூர்த்தியின் அதோமுகங்கள் நான்கனுள் ஒன்றாகிய வாமதேவ முகத்தினின்றும் தோன்றியது. |
சாமுசித்தர் |
முற்பிறப்பிலே சரியை கிரியை யோகங்களைச் செய்து நிர்மல அந்தக்கரணராகி, மீளப் பிறக்கும் போதும் அந்த ஞானத்தோடு பிறந்து, சிவபாவனை செய்பவர். |
சாயாக்கிரகம் |
நிழல் கிரகம்; இராகு, கேது. |
சார்ச்சி |
சார்ந்து நிற்றல். |
சார்ந்ததன் வண்ணம் ஆதல் |
ஆன்மா, தன்னால் சாரப்பட்ட பொருளின் தன்மையையே, தன் தன்மையாகக் கொண்டு, அது அது வாய் நின்று அறியும் ஆன்ம இயல்பு. |
சார்புநூல் |
முதல்நூல், வழிநூல்களுக்குச் சிறுபான்மை ஒத்துப் பெரும்பான்மை வேறுபட்டு இருக்கும் நூல். |
சாருவாக மதம் |
காட்சி ஒன்றே பிரமாணம் எனக்கூறும் உலோகாயதன் கொள்கை. |
சாலம்பம் |
ஆதாரத்தோடு கூடியது. |
சானம் |
தியானம் என்ற சொல்லின் சிதைவு. |
சான்று |
சாட்சி; கரி. |
“சி”
சிங்கநோக்கு |
முன்னும் பின்னும் பார்க்கின்ற சிங்கத்தின் (அரிமா) பார்வை. |
சிங்ஙவை |
நாக்கில் இருக்கும் இந்திரியம். ஞானேந்திரியங்களுள் ஒன்று. |
சிதசத்து |
விளக்கம் உள்ளபோது விளங்குவதும், விளக்கம் இல்லாத போது விளங்காததும் ஆகிய அறிவினை உடைய உயிர்; புருடதத்துவம்; உள்ளம். |
சித்தசாதனம் |
ஓர் இடத்து முடிவு கட்டுதற்கு உரிய பொருளை, மற்றோர் இடத்தும் கூறுதல். |
சித்தப்பகுதி |
வேதனை ஞானம்; குறி, வாசனை. |
சித்தம் |
அந்தக்கரணங்களுள் ஒன்று; |
சித்தாந்த மகா வாக்கியம் |
சிவதத்துவமசி; சிவம் நீ ஆனாய் – என்பது. |
சித்தாந்த முத்தி |
பெத்த நிலையில், ஆன்மா ஆணவமலத்தோடு பிரிவின்றி இருந்து, அவ்வாணவ மலம் ஒன்றே அன்றி, வேறொன்றும் இல்லை எனும்படி இருந்தால் போல, முத்திநிலையில், ஆன்மா சிவத்தோடு கூடி, அச்சிவத்தில் வேறு அற நின்று, சிவாநந்தத்தை நுகர்ந்து இருத்தல். மலமும் ஆன்மாவும் ஒன்று ஆகாமல், இரண்டு ஆகாமல், ஒன்றும் இரண்டும் ஆகாமல், இருக்கும் தன்மை போன்றது சித்தாந்த முத்தி. |
சித்தாந்தம் |
நிச்சயமான முடிவு; முடிந்த முடிவு. சிந்திக்கப்பட்டுப் பெறப்பட்ட முடிவு. |
சித்து |
அறிவு; ஞானம். |
சிந்திதன் |
சிந்தனைக்கு எட்டுபவன். (அசிந்திதன் – சிந்தனைக்கு எட்டாதவன்). |
சிந்தித்தல் |
உண்மை ஞானம் நான்கனுள் ஒன்று; குருமுகமாகக் கேட்ட பொருளைச் சிந்தித்து ஐயம் நீங்க ஆராய்தல். |
சிந்தனை |
கவலை. யாக்கையின் பதினெண் குற்றங்களுள் ஒன்று. |
சிருட்டி |
படைத்தல்; பஞ்சகிருத்தியங்களுள் ஒன்று. |
சிவசங்கிராந்த வாதி |
தனு கரண புவன போகங்களுள் ஒன்றாகிய கரணம், பெத்த நிலையில், ஆன்ம சந்நிதியில் அசத்தை அறியும்; முத்தி நிலையில் சிவசந்நிதியில் கண்ணாடியில் நிழல் உண்டாதல் போல, அறிவினைக் கலக்கும் என்னும் கொள்கையை உடையவன். |
சிவசத்தியின் இயல்பு |
ஞானப்பிரகாசமாய் இருக்கும்; சிவமின்றித் தனித்து ஒரு முதலாய் நிற்கமாட்டாது; ஆன்மாவைப் பந்தித்த மும்மலங்களையும் வாட்டிச், சிவத்தை ஆன்மாவுக்குத் தரிசிப்பிக்கும். எங்கும் நிறைந்த பேரிருளை நீக்கிச் சூரியனைக் காட்டும், அச்சூரியனை ஒளியின் இயல்பைப் போன்றது. |
சிவசத்து |
எல்லாவற்றாலும் சத்து ஆகிய உள்பொருளாகி நிற்கும் சிவம். |
சிவசமவாதம் |
அகச்சமயம் ஆறனுள் ஒன்று. முத்தியில் ஆன்மா, சிவத்துவம் பெற்றதும் ஐந்தொழில் ஆற்றும் என்னும் கொள்கை. |
சிவசாதாக்கியம் |
பஞ்ச சாதாக்கியங்களில் ஒன்று. பராசத்தியிடமாகத் தோன்றுவது. அதிசூக்குமமாய் அளவில்லாத ஒளியாய் நிற்பது. அரூபத்திலே தியானத்தால் விளங்கப்பட்டுச் சர்வ வியாபியாய் இருப்பது இஃது ‘இலயத்தானம்’ என்றும் சொல்லப்படும். |
சிவசைதன்யம் |
சிவனறிவு. |
சிவஞானம் |
ஆன்மாவின் மல இருளை நீக்கும் திருவருள்; பரஞானம், பதிஞானம்; அபரஞானம், இத்திருவருளைப் பெறுவதற்குரிய நெறியை, மயக்கமற உணர்த்தும் சிவாகமங்கள் ஆகும். பரஞானம் – அபரஞானம் ஆகிய இரண்டும் ‘சிவஞானம்’ ஆகும். |
சிவஞானபோதம் |
சைவ ஆகமங்களின் பொருள் நிச்சய்ம் உணர்த்தும் நூல். |
சிவதத்துவம் ஐந்து |
சிவம், சத்தி, சதாசிவம், ஈசுரம், சுத்தவித்தை என்பன. |
சிவதரிசனம் |
தசகாரியங்களுள் எட்டாவதாக உள்ளது. யான் – எனது என்னும் தற்போத முனைப்பின்றி நிற்கும் ஆன்மாவினிடத்தில் அருளாற்றல் – ஒளி விளங்கும் நிலை. |
சிவதத்துவமசி |
‘சிவம் நீ ஆகின்றாய்’ என்னும் பொருளைத் தரும் சித்தாந்த காவாக்கியம். (சிவமாய் ஆவது வேறு; சிவமாய் இருப்பது வேறு) |
சிவத்துவம் |
சிவமாம்தன்மை; |
சிவபுண்ணியம் நான்கு |
சரியை, கிரியை, யோகம், ஞானம், இதனைத் தமிழில் முறையே சீலம், நோன்பு செறிவு, அறிவு என்பார் மணிவாசகர். |
சிவபேதங்கள் ஏழு |
பரநாதன், அபரநாதன், சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன்; இவற்றிற்குச் சத்தி பேதங்கள் முறையே வருமாறு: - பரவாகீசுவரி, அபரவகீசுவரி, மனோன்மனி, மகேசை, உமை, திரு, வாணி. |
சிவப்பேறு |
சிவமாம் தன்மையைப் பெறுதல். அஃது ‘ஆன்மலாபம்’ எனப்படும். |
சிவமயம் |
சிவமாம் தன்மை. ‘மயம்’ என்னும் விகுதி ‘அழகு’ என்னும் பொருளை உடையது. ‘சிவமாம் தன்மை’ பெறுவதே ஆன்மாவுக்கு அழகு ஆகும்’ என்னும் உண்மையை உணர்த்தவே, தொடங்கும்போது சிவமயம் என எழுதப்படுகிறது. |
சிவரூபம் |
அருளைப் பெறுவது; ஞானதரிசனம். |
சிவலிங்கம் |
ஆன்மாக்களின் தியானம். பூசை முதலியவற்றின் பொருட்டுச் சிவபெருமான் கொண்ட திருவுரு. லிங் – லயம். சிவத்தில் ஆன்மா இலயித்து நிற்பதற்கு ஏற்றதோர் எழில் வடிவம். |
சிவனடியார் |
சிவஞானிகள். சிவபெருமானையே தம் இதயத்தானத்தில் எப்போதும் தியானித்து இருக்கும் அடியவர்கள். அடி – அருள். சிவனருளையன்றி வேறெதனையும் நினையாதவர். |
சிவன் |
அதிகாரசிவன்; இலயசிவன்; போக சிவன். மங்கலப் பொருள்; நன்மையையே செய்பவன். ஆன்மாக்கள் நினைந்த உருவில் அவற்றை நிறுத்துபவன்; பாச ஞான பசு ஞானங்களால் அறியப்படாதவன்; பஞ்சக்கிருத்தியம் செய்பவன்; பரம்பொருள். |
சிவாத்துவிதசைவம் |
இறைவன், மாயையோடும் கூடி உலகத்திற்கு முதற்காரணமாம் எனக் கூறும் அகச்சமயம். |
சிவாநுபவம் |
சிவாநந்தத்தை அநுபவித்தல். |
சிவானந்த இன்பம் |
சிவனிடத்துள்ள எண்குணங்களும் ஆன்மாவினிடத்து மேம்பட்டு விளங்கும் விளக்கம்; பேரின்பம்; திருவடி இன்பம். |
சிவோகம்பாவனை |
சிவம்+நான்=சிவோகம். சிவனே நான் என்று பாவித்தல். சிவன் உயிரோடு கலந்து நிற்றலை நினைந்து தன்னசி சிவமாகப் பாவிப்பது. |
சிவோயம் |
சிவன் இவன் எனக் கருதுவது. |
சிவார்ப்பணம் |
சிவனிடத்து ஒப்பித்தல்; சிவனிடத்துச் சேர்த்து விடுதல். |
சிறப்பிலக்கணம் |
ஒரு பொருள், வேற்றுச் சாதிப் பொருளிலும், தன் சாதிப் பொருளிலும் செல்லாமல், அதற்கு மாத்திரமே உரித்தரிய தன்னிலையில் நிலை பெறும் தன்மை. இதனை ‘சொரூப இலக்கணம்’ – ‘உண்மை இயல்பு’ என்றும் கூறுவர். |
சிறப்புப்பாயிரம் |
இருவகைப்பாயிரத்துள் ஒன்று. ஒரு நூலினுக்கே உரியதாய் ஆக்கியோன், பெயர், வழி, எல்லை, நூற்பெயர், யாப்பு, நுதலியபொருள், பயன் முதலிய எட்டினையும் கூறுவது. காலம், களன், காரணம் என்னும் மூன்றையும் சேர்த்துப் பதினொன்றனையும் கூறுவது என்பாரும் உளர். |
சிற்சங்கசித்து |
கலை முதலியன. அவை, சித்தாகிய ஆன்மாவுடன் சேர்தமையால் அப்பெயர் பெற்றன.(சங்க – சேர்). |
சிற்சக்தி |
ஞானசத்தி; அறிவாற்றல். |
“சீ”
சீகண்டவுருத்திரர் |
ஶ்ரீகண்ட உருத்திரர், பிரளயாகலரில் பக்குவம் உடையோராய்ப் பாசம் நீங்கிச் சிவனுக்குரிய பெயர், வடிவுகளைப் பெற்று, சைவ ஆகமங்களை அறிவுறுக்கும் குரவர் – ஆசிரியர். |
சீபஞ்சாக்கரம் |
முத்திப் பஞ்சாக்கரம். |
சீபாதம் |
திருவடி. |
சீலம் |
அறநூல்களில் விலக்கியவற்றை ஒழித்து, விதித்தனவற்றையே செய்தல் ஆகிய நல்லொழுக்கம். |
சீவன்முத்தர் |
உலகில் சீவித்திருக்கும்போதே, பாசத்தினின்றும் விடுபட்டவர். தநுகரணாதிகளோடு கூடியும், கூடாமல் நின்று சிவத்தில் அழுந்தி நிற்பவர். |
சீவன்முத்தி |
சீவத்தன்மை விட்டு இருத்தல்; ஞானம் அடைந்து பிறப்பு அறுத்து இருத்தல். |
சீவான்மா |
உடம்பினைப் பெரிதாகக் கருதும் உயிர்; தேகாபிமானம் உடையவன். |
சீற்றம்மிக்கு எரிதல் |
இணர்எரி; சுவாலித்து எரிதல்; கொழுந்து விட்டு எரிதல். (இணர் – பூங்கொத்து). |
“சு”
சுகப்பிரபை |
சுகவிளக்கம்; இன்பச்சுடர்; ஆனந்தஒளி. |
சுகரூபம் |
சுகாசனம்; இயல்பாக இருக்கை; கால்கள் இரண்டும் மடித்து, அட்டணைக் கால் ஏற்று இருத்தல். |
சுட்டியறிதல் |
ஒன்று ஒன்றாய். இது பொன், இது மண் என்று உயிரறிவால் குறித்து அறிதல். இஃது ‘ஏகதேசமாயறிதல்’ எனப்ப்டும். |
சுட்டிறந்து நின்று அறியப்ப்டுதல் |
முதல்வனோடு ஒற்றித்து நின்று, அருள் விளக்கம் கொண்டு, வியாபகமாய் அறியப்படுவது. |
சுதந்திரம் |
தன்வயம் உடைமை; உரிமை. |
சுதந்திர வடிவம் |
சுவாதீன சரீரம். |
சுத்த சைவர் |
முதல்வனைத் தலைப்பட்ட உயிர். முதல்வனோடு ஒன்றாம் போதில் அல்லாமல், முதல்வனை அறிந்து அநுபவிக்காது என்று கூறும் சமயத்தவர். |
சுத்த ஞானம் |
நின்மலமாய் உள்ள ‘பரை’ என்னும் அருள். ஆன்மாவின் அறிவிச்சை செயல்கள் தொழிற்படாது நின்ற இடத்தில், ஆன்மாவோடு கூடிய அருள், ‘சுத்த ஞானம்’ எனப்படும். |
சுத்த தத்துவம் |
சுத்த வித்தை முதல் சிவதத்துவம் ஈறாக உள்ள ஐந்தும். அவை அங்குள்ள ஆன்மாக்களுக்குச் சகல அறிவாற்றலையும் செயலாற்றலையும் உண்டாக்குகின்றன. இது, ‘பிரேரககாண்டம்’ எனவும் ‘சுத்தாத்துவா’ எனவும் கூறப்படும். |
சுத்தமாயா காரியங்கள் |
சுத்தமாயையில் தோன்றும் தநு கரண புவன போகங்கள்; கலை முதல் பிருதிவியீறாக முப்பத்தொரு தத்துவங்களும், இந்தச் சுத்தமாயையில் தோன்றி அங்கேயே காரியப்படும். இவை, அசுத்தமாயையில் தோன்றிய கலை முதலிய தத்துவங்களின் வேறாய்ச் சுத்தமாயா காரியமாகவே இருக்கும். சுத்த மாயா சரீரம், சுத்தமாயா இந்திரியம், சுத்தமாயா அந்தக்கரணம் முதலியவைகள் எல்லாம் அவற்றால் உண்டாகும். இவற்றுள ஆணவமலக் கலப்போ, கன்மமலக்கலப்போ இல்லை. ஒளிமயமான உலகம். |
சுத்தமாயை |
சுத்தப் பிரபஞ்சத்திற்குக் காரணமான மாயை; தூமாயை; அங்கு இன்பம் மட்டுமே உள்ளது;துன்பம் இல்லை. |
சுத்த வித்தை |
சுத்த வித்தியா தத்துவம். ஞானம் ஏறிக் கிரியை குறைப் பொருந்தி நிற்கும் தத்துவம் |
சுத்தாசுத்த தத்துவங்கள் |
சுத்தமாயைக்குக் கீழ் உள்ள மாயை முதலிய ஏழு தத்துவங்கள். ஆன்மாக்களுக்குள்ள சிற்றறிவையும் சிறு தொழில்களையும் விளக்குவதற்குச் சாதனமாக உள்ளவையாதலால் ‘சுத்தம்’ என்றும், சூக்கும தேகத்தின் வழியாக குணரூபம் ஆகிய சுக துக்க மோகங்களை உண்டாக்குவதற்குச் சாதனமாக உள்ளவையாதலால் ‘அசுத்தம்’ என்றும் கூறப்பட்டு ‘சுத்தாசுத்தம்’ எனப்படுகிறது.இவற்றை ‘வித்தியாதத்துவம்’ என்றும், ‘போக காண்டம்’ என்றும் கூறுவர். |
சுத்தாத்துவா |
சுத்தமாயையில் தோன்றிய மந்திரம், பதம், வன்னம் கலை, தத்துவம், புவனம் ஆகிய ஆறு அத்துவாக்கள். இவற்றைத் தமிழில் முறையே, மறைமொழி, சொல், எழுத்து, கலை, பொருள், உலகம் ஆகிய ஆறு வழிகள் என்பர். |
சுத்தாவத்தை |
பாசம் நீங்கிய நிலை, கன்ம ஒப்பும் மலபரிபாகமும் உண்டான நிலையில், ஞானாசிரியராலே ஞானதீபத்தைப் பெற்று, இறை உயிர் தளை ஆகிய முப்பொருளை உணர்ந்து அருள்பெறும் நிலை. |
சுத்தி |
பரிசுத்தம். |
சுருதி |
மந்திரம்; வேதம். |
சுரோத்திரம் |
ஞானேந்திரியங்களுள் ஒன்று; செவி இந்திரியம். |
சுவதந்திரத்துவம் |
பரமசிவனின் எண் குணங்களுள் ஒன்று; தன் வயத்தன் ஆதல், தன் விருப்பப்படி எதையும் செய்யும் இயல்பு. தனக்குமேல் தலைமை இல்லாமை. |
சுவத்திகம் |
ஆசனபேதம் ஒன்பதுள் ஒன்று. எந்தப் பக்கமும் சரியாமல் சமதேகத்தோடு இருத்தல். இருதலை மேழி (கலப்பை) போன்ற அடையாளம். |
சுவாதிட்டானம் |
ஆறு ஆதாரங்களில் இரண்டாவதாக உள்ளது. நாற்கோண வடிவில் உள்ளது. |
சுவாதீனம் |
சொந்தம். |
சுவாநுபூதி |
தனதாகக் கொண்டு அனுபவித்தல். |
சுழுத்தி |
அவத்தைகள் ஐந்தனுள் மூன்றாவதாக உள்ளது. உறக்க நிலை. |
சுழுமுனை |
நடுநாடி. மூலாதாரத்திலிருந்து உச்சித் துவாரம் வரை நிற்கும் நாடி. |
“சூ”
சூக்கும உடம்பு |
சூக்கும தேகம்; காரண தன்மாத்திரைகளாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டினாலும் ஆக்கப்பட்ட அருவுடம்பு. இது ‘புரியட்டகாயம்’ எனவும்படும். |
சூக்கும ஐந்தொழில் |
ஆன்மாக்களின் கேவலநிலையில் நிகழ்வது. அந்நிலையில், ஆன்மாக்களின் பரிபாகத்தை அறிவது, சிருட்டி; பரிபாகமில்லாத ஆன்மாக்களைக் கேவலத்தில் வைத்தல், திதி; பரிபாகம் உள்ள ஆன்மாக்களைக் கேவலத்தினின்றும் நீக்குதல், சங்காரம்; கேவலத்திலிருக்கும் பரிபாகம் இல்லாத ஆன்மாக்களுக்குக் கேவலம் எனத் தோன்றாதிருக்கச் செய்தல், மறைப்பு; பரிபாகமுள்ள ஆன்மாக்களைச் சகலத்தில் விடுதல் அனுக்கிரகம். |
சூக்குமபூதம் |
தன்மாத்திரை. |
சூக்கும பஞ்சாக்கரம் |
அ, உ, ம், நாதம், விந்து ஆகிய இவ்வைந்து எழுத்துக்கள் சேர்ந்த பிரணவம். |
சூத்திரப்பாவை |
கயிற்றில் கட்டி ஆட்டப்படும் பொம்மை. |
சூன்யம் |
பாழ்; வெறுமை. |
சூனியவாதி |
நீரீஸ்வரவாதி. |
“செ”
செம்பொருள் |
வெளிப்படைப் பொருள். |
செயற்கை |
இடையில் தோன்றியது. |
செந்நி |
பரிக்கிரக சத்திகள் மூன்றனுள் ஒன்று, பிரபஞ்சத்தைத் தோற்றுவிப்பது. |
செய் |
விளைநிலம். |
செவியறிவுறுத்தல் |
உபதேசித்தல். |
செறிந்தறிதல் |
அழுந்தியறிதல். |
“சே”
சேடம் |
எஞ்சியது; மீதி; குறை. |
சேடன் |
அடிமை. |
சேட்டித்தல் |
செயற்படுதல்; தொழிற்படுதல். |
சேட்டிப்பித்தல் |
செயற்படுத்தல். |
சேட்டை |
எண்வகைச் சத்திகளில் ஒன்று; வாமை. |
சேதனப்பிரபஞ்சம் |
சித்துப் பிரபஞ்சம்; உயிரினம். |
சேதனம் |
அறிவுடைப்பொருள். |
சேய்மை |
தூரம். |
சேர்வை |
கூட்டம், சேர்தல், கூடுதல். |
சேல், கயல் |
மீன்வகை. |
“சை”
சைதன்னியம் |
மாசு தீர்ந்த உயிர் அறிவு. |
சையுத்த சமவாயம் |
குடமும் குட வடிவம் போன்ற ஒற்றுமை. |
சையுத்த சமவேத சமவாயம் |
குடமும் குடவடிவும் குடத் தன்மையும் போன்ற ஒற்றுமை. |
சையோகம் |
கூட்டம்; சேர்க்கை, கண்ணால் குடத்தைக் காணும் போது ஏற்படுவது, சையோக சம்பந்தம். |
சைவ ஆகமம் |
அநாதி முத்தனாகிய முதல்வனால் தரப்பட்ட முதல்நூல். மெய்ந்நெறி ஆகிய சிவநெறி நூல். |
சைவசித்தாந்தம் |
வேதாந்தத் தெளிவாகிய சிவாகமக்கருத்தாகி வந்த முடிந்த முடிவு. |
சைவர் |
சிவசம்பந்தம் உடையவர்கள். இவர்களுள் சிவதீக்கை பெற்றுச் சிவனை வழிபடுபவர்கள் அறுவகைப்படுவர்; அவர்கள் வருமாறு: - ஆதி சைவர், மகா சைவர், அநுசைவர், அவாந்தர சைவர், பிரவரசைவர், அந்திய சைவர். |
“சொ”
சொப்பனம் |
சுவப்பனம் என்பதன் மரூஉ. கனவு நிலை. ஐந்தவத்தைகளில் ஒன்று. |
சொரூப இலக்கணம் |
சிறப்பு இலக்கணம்; அஃதாவது இயற்கையாய் உள்ள இலக்கணம். உண்மை இலக்கணம்; எஞ்ஞான்றும் நிலைத்திருப்பது. சொரூபம் தடத்தம் சிறப்பு பொது. |
சொல்லின் அண்மை |
சொற்கள் அடுத்து நிற்றல். |
சொல் எச்சம் |
ஒரு சொல் குறைந்து நிற்றல். |
சொல்லொணாது |
உள்ளதும் இல்லதும் அல்லாதது. |
சொற்பிரபஞ்சம் |
சுத்த மாயையில் உள்ள விந்துவிலிருந்து சூக்குமை, பைசந்தி, மத்திமை வைகரி என்னும் நான்கு வாக்குகளும், என்பத்தொரு பதங்களும், பதினொரு மந்திரங்களும் தோன்றும். வாக்குகள். வன்னம் (எழுத்து) எனப்படும். இந்த மந்திரம், பதம், வன்னம் ஆகிய மூன்றும் சொற் பிரபஞ்சம் ஆகும். |
சொற்பொருள் பின்வருநிலை |
ஓர் அணி. ஒரு சொல், ஒரே பொருளில் பலமுறை வருதல். |
“சோ”
சோகம் |
கூம்புதல். |
சோகமஸ்மி |
அது நானாகின்றேன். |
சோதகம் |
ஏவுவது.
|
சோதிடம் |
அறுபத்து நான்கு கலை ஞானங்களுள் ஒன்று. அஃது, இலெளகிக, வைதிக கன்மங்களுக்கு உபயோகமான நாழிகை, வினாடி, முதலிய கால விசேடங்களை, இதற்கு இஃது என்று அறுதியிட்டுக் கூறுவது. ஒளியினையுடைய கிரகங்கள், நட்சத்திரங்களைப்பற்றிக் கூறுவதால், சோதிடம் (ஜ்யோதி-ஒளி) எனப்பட்டது. |
சோத்திரம் |
ஞானேந்திரியங்களுள் ஒன்று; கேட்டல் கருவி. |
சோபான முறை |
படிமுறை, படிப்படியாக முன்னேறுதற்கான முறைகளை உடையது. |
“ஞா”
ஞாதா, ஞாதிரு |
அறிபவன்; ஆன்மா. |
ஞானகாண்டம் |
ஞானத்தைக் கூறும் பாகம். |
ஞானகுரு |
சரியா, கிரியை, யோகங்களைச் செய்து, அதிதவத்தால் முதிர்ச்சிபெற்ற ஆன்மாக்கள் இருவினை ஒப்பும் சத்தி நிபாதமும் வந்தெய்தும், அப்பொழுது, திருவருளே திருமேனியாகக் கொண்டு, பரமசிவன் குருமூர்த்தமாய் வெளிப்பட்டு வந்து, தீக்கை செய்து, உண்மை ஞானத்தை அருளி, ஆன்ம இயல்பை விளக்குவார். அவ்வாறு விளக்குபவரே ‘ஞானகுரு’ எனப்படுவார். |
ஞானக்கண் |
அருட்கண்; திருவடி ஞானம். |
ஞானசத்தி |
அறிவு வடிவாகிய அறிவாற்றல். |
ஞானதரிசனம் |
அருள் தரிசனம்; இதன்கண் ஆன்ம தரிசனமும் தத்துவசுத்தியும் நிகழும். |
ஞானதீக்கை |
பரமசிவன் ஞானகுருவாய் வந்து செய்யும் தீக்கை. (பார்க்கவும் ஞானகுரு). |
ஞானநிட்டை |
உண்மை ஞானம் நான்கனுள் ஒன்று; சிற்றறிவு நீங்கி வியாபக அறிவு விளங்கி இறைவனுடன் சேர்ந்து நிற்பது. |
ஞானம் |
திருவருள்; சிவசத்தி; அறிவு. |
ஞானவாய்மை |
ஞானத்தின் உண்மை; இயல்பு. |
ஞானேந்திரியம் |
சத்தாதி விடயங்களைக் கிரகிக்கும் இந்திரியங்கள். |
“ஞே”
ஞேயம் |
அறியப்படும் பொருள்; சிவம். |
“த”
தகவு |
தகுதி; நன்மை. |
தடத்த இல்க்கணம் |
பொது இயல்பு. பிறிதொரு பொருளின் சார்பு பற்றி, இலக்கியப் பொருளில் இருக்கும் இலக்கணம் அல்லது இயல்பு. |
தடத்தம் |
அயல் இடத்து இருப்பது. சைவசித்தாந்தம் கொள்ளும் முப்பொருளுக்கும் தடத்த இலக்கணமும் சிறப்பு இலக்கணமும் உண்டு. உயிர்களோடு ஒன்றாயும் வேறாயும் உடனாயும் நிற்றல் இறைவனுக்குத் தடத்த இலக்கணம் என்னும் பொது இயல்பு. சச்சிதானந்தமாய் நிற்றல் அவனுக்குச் சொரூப இலக்க்ணம் ஆகிய சிறப்பு இயல்பு. உயிர்க்குப் பொது இயல்பு, கருவி கரணங்களுடன் நிற்றல்; சிறப்பியல்பு, கருவி கரணங்களின்றும் நீங்கி, உடனாய் நிற்கும் சிவமாய் நிற்றல். பாசத்திற்குப் பொது இயல்பு காரியரூமாய் நிற்றல்; சிறப்பியல்பு காரணரூபமாய் நிற்றல். |
தத்திதம் |
வடமொழியில் சொல்லப்பட்ட சொற்பாகுபாடுகளுள் ஒன்று. பெயர்ப் பகுதியும் தத்தித விகுதியும் கூடிவருவது அதற்கு எடுத்துக்காட்டு வருமாறு: - பெயர்ப் பகுதி; ஏயம் – தத்திக விகுதி; இரண்டும் கூடியதால் வரும் சொல், ‘மாயேயம்’ என்பது. |
தத்துவம் |
உள்பொருள்; உளதாம் தன்மை. உண்மை. தத் – அஃது உள்ளது; துவம் – தன்மை. |
தத்துவசொரூபி |
தத்துவ வடினினன். |
தத்துவஞானம் |
தத்துவங்களை அறியும் ஞானம். மெய்ஞ்ஞானம்; மெய்யுணர்வு. |
தத்துவஞானி |
தத்துவங்களைப் பிரித்து அறிந்தோன்; உண்மையை அறிந்தவன். |
தத்துவமசி |
மகாவாக்கியத்துள் ஒன்று. ‘அது நீ ஆகிறாய்’ என்று பொருள். தத் – அது; துவம் – நீ, அசி – ஆகிறாய். ‘அசி’ என்ற சொற்கு ‘ஆகிறாய்’ என்பதே பொருள்; ‘இருக்கிறாய்’ என்று பொருள் கொள்வது.தத்துவத்துக்குப் பொருந்தாது. |
தத்பதம் |
‘அது’ என்னும் பொருளை உணர்த்தும் சொல். ‘அசிபதம்’ என்பது ‘தத்துவம்சி’ என்னும் மகாவாக்கியத்தின் மூன்றாவது சொல்; ‘ஆகிறாய்’ என்னும் பொருளை உடையது. |
தநு |
தனு; உடம்பு. |
தந்திரக்கலை |
ஆகமம். |
தமசு |
ஆணவமலம். |
தமம் |
அஞ்ஞானம். |
தமோகுணம் |
மூவகைக்குணங்களுள் ஒன்று; தாமசம். |
தரம் |
அதிகம் என்பதை உணர்த்தும் ஒரு விகுதி. உதாரணம்: மந்தம்; மந்ததரம். |
தரித்தல் |
தாங்குதல். |
தருக்கம் |
தருக்க சாத்திரம்; நியாய நூல். |
தர்ப்பணம் |
கண்ணாடி. |
தலைக்குறை |
சொல்லின் முதல் குறைதல். |
தலைப்படுதல் |
அடைதல்; கூடுதல். |
தலைமைப்பாடு |
முதன்மை. |
தவயாகம் |
தவவேள்வி. |
தவம் |
மனம், பொறிவழிப் போகாமல் நிற்றல் பொருட்டு மேற் கொள்ளப்படும் தூயமுயற்சி; அதனால், தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல். |
தற்பதம் |
அது என்னும் பொருளை உணர்த்தும் சொல். |
தற்கிழமை |
ஆறம் வேற்றுமைக்கிழமைப் பொருள்களுள் ஒன்று; அது தன்னோடு ஒற்றுமை உடையது. |
தற்பரம் |
ஆன்மாவுக்கு அதீதமாகிய சிவம். |
தன் |
ஆன்மா; பரம் – மேலானது. |
தற்போதம் |
ஆன்மபோதம்; உயிரறிவு யான் – எனது என்னும் முனைப்பு.. |
தற்புருடம் |
சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களுள் ஒன்று. |
தனஞ்சயன் |
தச வாயுக்களுள் ஒன்று; உடம்பைவிட்டுப் பிராணன் போன பின்பு, இஃது உடம்பைவிட்டுப் பிரியாமல் நின்று, உடலை வீங்குவித்தும், விரிவித்தும், புழுப்பித்தும் பழுது செய்து மூன்றாம் நாள் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். |
தனு |
(பார்க்கவும் – தநு). |
தன்பொருட்டு அனுமானம் |
தானாக விடயங்களை அநுமித்து (ஊகித்து) உணரும் உணர்வு. |
தன்மாத்திரை |
சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம் என்னும் ஐந்து. இவை முறையே சத்தம் முதலிய குணங்களில் ஒவ்வொன்றை ஏற்றமாகப் பொருந்தி இருக்கும் குணிப்பொருள்கள் ஆகும். எடுத்துக்காட்டு: - மரத்தின் வடிவம் எல்லாம் சத்தி ரூபமாக அதன்கண் அடங்கியிருக்கும்; அது போல அக் குணங்கள் எல்லாம் சத்தி ரூபமாக வெளியில் தெரியாமல் இருக்கும். அதன்தன் அளவில் அடங்கியிருப்பதால் தன்மாத்திரை எனப்ப்ட்டது. மாத்திரை – அளவு. |
தன்வயத்தன் ஆதல் |
பரமசிவனின் எண்குணங்களுள் ஒன்று; அது சுவதந்திரத்துவம் ஆகிய தானாக எல்லாம் செய்யும் தனி முதன்மை உடையன் ஆதல். |
தன் வயம் |
பிற துணை வேண்டாது, தானாக எல்லாம் செய்யும் தலைமை. |
தன் வேதனைக் காட்சி |
காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்து வித்தியா தத்துவங்களாலும் செலுத்தப்படும் இன்பத் துன்பங்களை அறியும் உயிரறிவு. தானாகிய ஆன்மா, சுகதுக்கம் ஆகிய வேதனையில் அழுந்துதலால், தன்வேதனைக் காட்சி எனப்பட்டது. |
தன்னியல்பு |
சிறப்பு இலக்கணம். |
“தா”
தாக்குதல் |
உறுத்தல். |
தாடலை |
ஈறும் முதலும் விகாரப்பட்டுப் புணர்ந்து, ஒரு சொல் போல் நிற்கும் சொற்றொடர். தாள் தலை – தாடலை. இரு சொற்கள் கூடி, ஒன்றுபோல் நிற்றலால் உவமையாக இதனைக் கொள்வர். இறைவனின் தாள் உயிரின் தலை மேல் நிற்றல். |
தாதமார்க்கம் |
அடிமைநெறி; சரியைத் தொண்டு. |
தாதான்மியம் |
அது தான் ஆதல்; முதல்வனின் ஆணை ஆகிய சிற்சத்தி, முதல்வனின் வேறன்று. முதல்வன் சத்தியாக ஆதல். |
தாத்துவிகம் |
தத்துவத் தொடர்புடையன. உடம்பு முதலியன. |
தாபத்திரயம் |
மூவகைத் துக்கம். அவை, ஆதிதைவிகம், ஆத்தியான்மிகம், ஆதி பெளதிகம் என்பன. |
தாபம் |
துக்கம், சுற்றத்தை விட்டுப் பிரிவதற்கும் பிரிந்த தற்கும் ஆற்றாமை. |
தாமசம் |
தாமதம்; முக்குணங்களுள் ஒன்று. |
தாரகம் |
ஆதாரம்; சரீர ரூபமாய் நின்று ஆன்மாவைத் தரித்திருக்கும் கன்மம். |
தாரதம்மியம் |
உயர்வு தாழ்வு. தரம் – உயர்ந்தது; தமம் – தாழ்ந்தது. |
தார்க்கிகர் |
தருக்க நூல் கொள்கை உடையவர். |
தாலபீச நியாயம் |
தாலம் – பனை; பீசம் – விதை. மரம் முந்தியதா அல்லது வித்து முந்தியதா என்னும் வினாவை எழுப்புவது; இதுபோல, ஆன்மாவை மாயா சரீரம் முந்திக் கூடியதா அல்லது கன்மத்துக் கீடாக சரீரம் கிடைப்பதால், கன்மம் முந்திக் கூடியதா என்னும் வினாவை எழுப்புவது. போற்றிப் பஃறொடையில், ‘மாயை’ முந்தியது என உமாபதிசிவம் குறிப்பிடுகிறார். |
தாவரம் |
நிலை இயல் பொருள். |
தாவரவடிவம் |
சிவலிங்க வடிவம். |
தாழ்வடம் |
உருத்திராக்கக் கண்டிகை. |
தாள் |
சத்தி; திருவருள். |
தாள் பணி நீத்தல் |
தனக்கொரு செயல் உண்டு என்பதை நீக்கி, எல்லாம் சிவன் செயல் எனக் கொள்ளுதல். |
“தி”
திக்கு பாலகர் |
எட்டுத் திசைக்காவலர். அவர்கள் – இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்பவர். |
திப்பியம் |
திவ்வியம்; தெய்வீகமானது; ஒளித்தன்மை உடையது. |
தியானம் |
அட்டாங்கயோகத்து ஒன்று. வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனதால் பாவித்துச் சிந்தித்தல். |
திரவையம் |
பொருள். |
திரியக்காண்டல் |
விபரீதக் காட்சி. |
திரிவு |
மாறுபாடு. |
திருஉத்திரம் |
உருத்ரம் – பதினொரு உருத்திரர்க்கும், ஏனைக் கடவுளர்க்கும், உயிரற்ற பொருள்களுக்கும், முழுமுதற்பொருள் ஆகிய இறைவன். அவற்றில் கலந்திருத்தல் பற்றி, வழிபாடு கூறும் வடமொழி வேதப் பகுதி. |
திருஷ்டஜன்மம் |
காணப்பட்ட பிறப்பு. |
திருஷ்டஜன்மோப போக்கிய கன்மம் |
காணப்படுகிற பிறப்பிலே அனுபவிக்கப்படும் கன்மம். |
திருப்தி |
இறைவனின் எண்குணங்களுள் ஒன்று. வரம்பிலின்பம் உடைமை. |
திரோதானசத்தி |
மறைப்பாற்றல்; திரோதகம், திரோதாயி; திரோதசத்தி, ஆதிசத்தி; ஆணவமலத்தைப் பரிபாகப்படுத்தும் பொருட்டு, மலத்தோடு கூடிநின்று, ஆன்மாவுக்கு வேண்டும் உபாயங்களைச் செய்கிறது. அந்நிலையில், மாயா காரியங்களைத் தோற்றுவித்து ஆன்ம அறிவை எழுப்புதலும், கன்மங்களை நுகர்வித்துக் கழிப்பித்தலும் செய்வதால், சிவசத்தியாகிய அது. திரோதான சத்தி எனப்படுகிறது. |
“தீ”
தீக்கை |
மந்திரோபதேசம்: குரு உபதேசம்; மலத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல். சிவசத்திக்கிரியை. ‘தீட்சை’ எனவும்படும். விஞ்ஞானகலர்க்கு அறிவுக்கு அறிவாய் நின்றும், பிரளயாகலர்க்கு நாற்புயம், முக்கண், நீலகண்டம் முதலிய உறுப்புக்களுடன் கூடி சீகண்ட மூர்த்தத்தில் குருவாய்க் காட்சி அளித்துத் தீக்கை அருளப்படுகிறது. சகலர் ஆகிய நமக்கு, மானுட வடிவாய்க் குருமூர்த்தியை இடமாகக் கொண்டு ஆவேசித்து நின்று தீக்கை அருளப்படுகிறது. மெய்கண்டதேவர் முதலிய குருமூர்த்திகளை நிலைக்களமாகக் கொள்ளுதல், ஆவேசித்து நிற்றல் ஆகும். |
தீவகம் |
பார்வை மிருகம். |
தீவிரம் |
உறைப்பு, கூர்மை. |
“து”
துடி |
நொடிபொழுது. |
துணைக்காரணம் |
முதற் காரணத்திற்குத் துணையாய், அது காரியப்படும் அளவும் உடன் நிகழ்வது. (பானை செய்வதற்குப் திரிகை போன்றது.) |
துண்டம் |
மூக்கு. |
துதைந்த |
நெருங்க; இடைவெளியின்றிப் பூசிய. |
துமி |
கெடு. |
துரத்தல் |
ஓட்டல். |
துரியம் |
பேருறக்கநிலை. நான்காம் அவத்தை. |
துரியாதீதம் |
உயிர்ப்படக்கம்; ஐந்தாம் அவத்தை. |
துலை |
தராசு. |
துவக்கு |
துவக்கு இந்திரியம்; தோல். |
துவம்பதம் |
வேதாந்தத்தில் சொல்லப்பட்ட ‘தத்துவமசி’ என்னும் மகா வாக்கியத்தில் உள்ள இரண்டாம் பதம் ‘துவம்’ என்னும் சொல்; அதற்குப் பொருள் ‘நீ; என்பதாகும். |
துவாதசாந்தம் |
பிரமரந்திரத்திலிருந்து பன்னிரண்டு அங்குலத்தில் மேல் உள்ள இடம். பிரமந்திரம் – உச்சித் துளை. துவா – இரண்டு; தச – பத்து; அந்தம் – முடிவு. |
துழனி |
ஆரவாரம்; வெற்றொலி. |
துனை |
அதிவேகம். |
துள்ளல் |
செறிதல். |
“தூ”
தூய உடம்பினன் ஆதல் |
இறைவனின் எண்குணங்களுள் ஒன்று; விசுத்த தேகம் உடைமை. |
தூல ஒளி |
விளங்கும் ஒளி. |
தூலசித்து |
ஆன்மா; தூலமாகிய பிற பொருள்களின் துணையால் அறியப்படுதலால், தூலசித்து எனப்பட்டது. |
தூலபஞ்சாக்கரம் |
‘நமசிவாய’ என்பது. |
தூலபூதம் |
பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதம். |
தூலம் |
பெரியது. |
தூல உடம்பு |
சாதி, குலம், பிறப்பு முதலியவைகளினால் அபிமானம் செய்தற்கு இடமாய்ப் பஞ்சபூதங்களும் கூடிப் பரிணமித்த உடம்பு. |
தூலாருந்ததி நியாயம் |
‘அருந்ததி’ என்னும் விண்மீனை (நட்சத்திரம்) அறியாதவனுக்கு, அம் மீன் மிகச் சிறியதாகவும், காண்பதற்கு அரியதாகவும் இருப்பதால், அதனுடன் தோன்றுகின்ற வேறோர் பெரிய நட்சட்திரத்தை, ‘இஃது அருந்ததி’ எனக் காட்டி, அதனை உற்று நோக்கி உணர்ந்த பின்னர், ‘அருந்ததி மீன்’ அஃது அன்று, அதன் அருகில் தோன்றுகிறது பார்; அதுதான் அருந்ததி மீன்’ எனக்காட்டி உணர்த்துதல் போன்றதோர் முறைமை. |
-
“தே”
தேகான்மவதி |
உலோகாயதரில் ஒரு சாரார்; பருஉடலே உயிர் எனக் கொள்பவர். |
தேயு |
அக்கினி; ஒளியுடையது. |
தேவதத்தன் |
தச வாயுக்களில் ஒன்று; கொட்டாவியைச் செய்வது. |
“தை”
தைசதம் |
சாத்துவிக சம்பந்தம் உடையது. |
தைவருதல் |
தடவுதல்; வருடுதல். |
தைவிகம் |
தெய்வ சம்பந்தம்; உலக கருடனுக்கு அதி தெய்வமாகிய மந்திரம். |
தைரியம் |
மனம் வேறுபடாமல் இருக்கும் உறுதியான நிலை. |
“தொ”
தொகை உவமம் |
பொதுத் தன்மை தொக்க உவமம். |
தொக்கு |
ஞானேந்திரியம் ஐந்தனுள் ஒன்று; தோல்; ‘துவக்கு’ என்பது ‘தொக்கு’ என்றாயிற்று. |
தொழும்பு |
அடிமை. |
தொன்று தொட்டுவருதல் |
பழைமையாகவே இருந்து வருதல். |
“தோ”
தோற்றமும் ஈறும் |
(சூத், 1 அதி, 3) உம்மைகள் எண்ணும்மை அல்ல; எதிரது தழீயன. பின்னரும் தோற்றமும் ஈறும உள்ளது. |
“ந”
நசித்தல் |
கெடுதல்; அழிதல். |
நயனம் |
கனி |
நலிதல் |
வருந்தல். |
நவக்கோள்கள் |
சூரியன்; சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு (கரும்பாம்பு), கேது (செம்பாம்பு) ஆகியன. |
நவை |
குற்றம். |
“நா”
நாகன் |
தசவாயுக்களில் ஒன்று; இருமல், தும்மல்களை உண்டாக்குவது. |
நாசோற்பத்தி |
அழிவில் தோன்றுதல்; விதை அழிய முளை 3 தோன்றுதல் போல. |
நாள்மீன் |
நட்சத்திரம்; உடு. |
நாதம் |
சுத்தமாயா தத்துவம் ஐந்தனுள் ஒன்று; சிவத்தத்துவம். |
நாத்திகர் |
கடவுள், சுவர்க்க நரகங்கள், மறுபிறப்பு முதலியன இல்லை என்பவர்கள். நாத்திகர் * ஆத்திகர் (இவை உண்டு என்பவர் ஆத்திகர்) |
நாபி |
கொப்பூழ். |
நாயோட்டும் மந்திரம் |
பஞ்சாக்கரத்துள் ‘சி’ என்னும் பதி எழுத்து மட்டும் தனித்து நிற்பது. இதனை ‘மகாமனு ‘இறைஎழுத்து’, ‘பெருவெழுத்து’, ‘பிரமபீஜம்’ என்றெல்லாம் கூறுவர். விகார சிகாரங்களுள், வகாரமாகி அருளைத் தன்னிடத்து இலயப்படுத்தி, அடக்கிக் கொண்டு நிற்கும் நிலையில் உள்ளது. |
“நி”
நிகண்டு |
வேத அங்கம் ஆறனுள் ஒன்று; சொற்பொருள் அறிவிப்பது. |
நிக்கிரகம் |
தண்டனை; நாசம். |
நிட்களம் |
அருவம். |
நிட்களசகளம் |
அருவுருவம். |
நிட்டை |
உண்மைஞானம் நான்கனுள் ஒன்று. கேட்டுச் சிந்த்தித்துத் துணிந்த பொருளுடன் பிரிவின்றி நிற்றல். சிவப்பேறு கூடுதல். |
நித்த வியாபகம் |
நித்தம் சரீரத் தோற்றக் கேடுகளின்மை, பிறப்பு இறப்பு இன்மை. |
நித்திய அநித்திய உணர்வு |
இப்பொருள் நிலையுள்ளது; இப்பொருள் நிலையில்லாதது என உணர்தல். |
நிமித்த காரணம் |
வினைமுதல் காரணம்; கருத்தா. (பானை வனைதற்குக் குயவன் போல்) |
நியதி தத்துவம் |
வித்தியாதத்துவம் ஏழனுள் ஒன்று; அவரவர் செய்த கன்மம் அவரவரே நுகருமாறு நியமிக்கும் முறை. நியமனம் செய்தலின் நியதி எனப்பட்டது. |
நியமம் |
அட்டாங்க யோகத்துள் ஒன்று. |
நிரதிசய இன்பம் |
ஈடும் எடுப்பும் இல்லாமல் ஏற்றமான இன்பம்; மிகவும் மேலான இன்பம். |
நிரந்தரம் |
இடையீடு இல்லாதது. |
நிரயம் |
நரகம்; இருள் உலகம். |
நிரனிறை |
நிரல் நிறை. முன்பு முறைமையாகச் சொல்லப்பட்ட பொருள்களுக்குச் சம்பந்தமுள்ளவைகளைப் பின்பு முறையே சொல்லுதல். |
நிராகாரம் |
உருவமின்மை; வடிவின்மை. |
நிராதாரம் |
ஆதாரமில்லாதது. |
நிராமயான்மா |
பரமசிவனது எண்குணங்களுள் ஒன்று; இயற்கை உணர்வினனாதல். |
நிராலம்பம் |
ஆதாரம் வேண்டாதது; வெளி; பற்றுக்கோடு இன்மை. |
நிரீச்சுர சாங்கியன் |
கடவுள் இல்லை என்று சொல்லும் சாங்கிய நூல் செய்த கபில முனிவன்; பகுத்தறிவுவாதி. |
நிருவிகற்பம் |
விகற்பம் இன்மை. பெயர், சாதி, குணம், கன்மம், பொருள் என்னும் இவற்றைப் பிரித்தறிதல் இன்றி, இஃது ஒன்று தோன்றா நின்றது எனப் பொருள். உண்மை மட்டுமே அறிதல். |
நிருவிகாரி |
விகாரம் இல்லாதவன். என்றும் ஓரியல்பினர். |
நிருவிசேடம் |
விசேடிக்கப்படாதது; அடைமொழி பெறப்படாதது. |
நிரூபித்தல் |
ஐயந்திரிபின்றி மாசறு காட்சியால் ஆராய்தல். |
நிர்அதிசயக்குணங்கள் |
முதலில் குறைவுற்றுப் பின்பு, புதிதாதா வளர்வதன்றி, குரைவிலா நிறைவாக விளங்கும் குணங்கள். |
நிலைக்களம் |
நிற்றற்குரிய இடம். |
நிலையில்படும் அவத்தை |
மத்தியால் அவத்தை. |
நிவிர்த்திக்கலை |
உயிர்களைக் கட்டினின்றும் நிவர்த்தி செய்யும் சிவசத்தி. அந்த சத்திக்கு இடமாகிய சுத்தமாயையின் விருத்தி. |
நின்மலன் |
மலகன்மம் இல்லாதவன்; சுத்தன்; சிவபெருமான். |
நிமல சாக்கிரம் |
அருளால் தன்னை அறிவது. |
நின்மல சொப்பனம் |
அவ்வருளே தனக்கு ஆதாரமாய், அவ்வருளிலே தான் அசைவற நின்று அவ்வருளைத் தரிசிப்பது. |
நினமல சுழுத்தி |
அவ்வருளே தானாகி எதிரீடு சிறிதும் இன்றி இருக்கும் நிலை. |
நின்மல துரியம் |
மலவாசனை சற்றுமின்றி ஆனந்தவெளி (சுகப்பிரபை) தோன்றும் இடம். |
நின்மல துரியாதீதம் |
ஆநந்த அனுபவத்தைப் பெற்று, அதனைப் பெற்ற தானும் இன்றி, ஆநந்தமாய் நின்ற முதலும் இன்றி, அவ்வாநந்தமே தானாய் அதீதப்பட்ட இடம். |
“நீ”
நீக்கம் |
இருவகைப்படும். ஒன்று, இயைபின்மை நீக்கம். அஃதாவது, சிவபூசை இருந்தே செய்தல் வேண்டும். நின்று செய்தல். இயைபு இன்மையின், இஃது இயைபின்மை நீக்கம் ஆகும். மற்றொன்று, பிறிதினியைபு நீக்கம். அஃதாவது, ‘சிவன்’ என்னும் நாமம் சிவனுக்கே உரித்து; ஏனை மங்கலப் பொருள்களில் சேர்த்தலை நீக்கலின், அது பிறிதின் இயைபு நீக்கம் ஆகும். வியாபகப் பொருட்டு நீக்கம், உணர்ச்சி விசேடமே (சிறப்பு) அன்றிப் பொருள் நீக்கம் அன்று என்க. |
“நு”
நுதலியபொருள் |
கருதிய பொருள். |
நுகலுதல் |
கருதியதைச் சொல்லுதல். |
“நூ”
நூல் |
சாத்திரம். |
நூன்முகம் |
முகவுரை; பாயிரம். |
“நெ”
நெல்லின் முளைதவிடுவமை |
நெல்லின் முளை கன்மத்துக்கம், தவிடு மாயைக்க்கும், உமி ஆணவத்துக்கும், அரிசி ஆன்மாவுக்கும் உவமை. அரிசியினிடத்து இம் மூன்றும் அநாதியே உள்ளன போன்று, ஆன்மாவினிடத்து மும்மலம் அநாதியே உள்ளன. |
“நே”
நேயம் |
நேயம்; அறியப்படும்பொருள். சிவன். |
“நை”
நையாயிகம் |
புறச்சமயத்தின் ஒன்று ஆகிய தருக்க மதத்தின் ஒரு பிரிவு. நையாயிக நூல் செய்தவர், அக்கமாத முனிவர். |
நையாகிகர் |
நியாயம் வல்லவர். |
“நோ”
நோக்கு |
கண் |
நோன்தாள் |
பொறுத்துக் கொள்ளும் திருவடி; தாங்கிக்கொள்ளும் திருவருள். |
“ப”
பகல் விளக்குவமை |
பகல் விளக்கு தான் கெடாமல், தன் ஒளி கெட்டு நிற்கும். அதுபோல, ஆன்மாவும் இறைவனோடு ஏகனாகி நிற்கும் போது, தான் கெடாமல், தற்போதம் கெட்டு நிற்றல். |
பகுதிப்பொருள்விகுதி |
பகுதிக்குரிய பொருள் அன்று வேறு பொருள் இல்லாதவிகுதி. |
பக்குவவிசேடம் |
சிறந்த பக்குவம். |
பக்குவம் |
பருவம்; முதிர்ச்சி, பாகமாதல். |
பக்கம் |
துணிபொருள் இருக்கும் இடம். |
பக்கிசைத்தல் |
வேறுபடுத்திக்கூறல். |
பங்கயம் |
சேற்றில் பிறந்தது; தாமரை. |
பசாசம் |
இரும்பு. |
பசு |
பாசத்தால் பந்திக்கப்பட்ட ஆன்மா. |
பசுஞானம் |
‘நான் பிரமம்’ என்னும் உணர்வு. |
பசுத்துவம் |
பாசத்தன்மை; பசுவின் தன்மை; பாசக்கட்டுடையது. பச் – கட்டு. |
பசுநீகாரம் |
உயிர் அறிவை மறைப்பது; உயிரைக் கீழ்படுத்தித் தள்ளுதல். |
பஞ்சகஞ்சுகன் |
புருடன், காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஆகிய ஐந்தையும் சட்டையாகக் கொள்வதால் பஞ்சகஞ்சுகன் எனப்பட்டான். |
பஞ்சகந்தசும் |
உருவம், வேதனை, குறிப்பு, பாவனை, விஞ்ஞானம் என்னும் ஐந்தன் சமூகம்; கூட்டம் (கந்தம் – சமூகம்). |
பஞ்சக்கிருத்தியம் |
ஐந்தொழில். |
பஞ்சக்கிலேசம் |
அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம் என்னும் ஐந்து துக்கங்கள். (அவிச்சை – அறியாமை; கிலேசம் – துயரம்) |
பஞ்சாக்கினி வித்தை |
தூல உடம்பிலிருந்து நீங்கியதும் உயிர், சூக்கும உடம்போடு மேகமண்டலத்தினை எய்தி, அங்கிருந்து மழைத்தாரையோடு கூடி நிலத்தை அடைந்து, நெல் முதலிய பயிர்களில் விரவி நின்று, அவை உணாவாய் மாறியதும், அவற்றோடு கூடித் தந்தை வயிற்றுள் சென்று அங்குச் சுக்கிலமாக மாறி, அதனோடு கூடித் தாய் வயிற்றில் சென்று கருவாய்க் கிடந்து, பிறிதொரு தூல உடலோடு நிலத்தில் பிறக்கும், இவ்வாறு மேகமண்டலம், மழை, நெல், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடங்களைத் தீயாகவும் இவற்றை எய்திய உயிர் ஆகுதியாகவும் தியானிப்பது ஒரு சாதகம் ஆதலின், இது பஞ்சாக்கினி வித்தை எனப்பட்டது. |
பஞ்சாத் |
ஐம்பது. |
பஞ்சாவத்திதன் |
ஐந்தவத்தை உடையவன். |
படர்தல் |
செறிதல். |
படிவழி |
படிமுறை; படிப்படியாக. |
பட்டாச்சாரியன் மதம் |
மீமாஞ்ச மதத்தின் ஒரு பிரிவு. |
பதஞ்சலி முனிவர் |
யோகநூல் செய்த முனிவர். |
பதமுத்தி |
சாலோகம், சாமீபம், சாரூபம் என்பன. |
பதம் |
சொல்; மொழி. |
பதி |
காப்பவன்; கடவுள். |
பதிஞானம் |
திருவரு:; திருவருளைக் கூடிச் சிவனை அறிவது “அவனருளாலே அவந்தாள் வணங்கி” என்றதும் அஃதே ஆகும். |
பதுமம், பதுமாசனம் |
அட்டாங்க யோக ஆசனங்களுள் ஒன்று. |
பத்திரம், பத்திராசனம் |
அட்டாங்க யோக ஆசனங்களும் ஒன்று. |
பயப்பித்தல் |
பெறுவித்தல். |
பயனிலை |
பொருள் முடிவு. |
பயிலல் |
நிகழ்தல்; தழைத்தல். |
பயிற்சி |
பழக்கம்; வாசனை. |
பயிற்றுதல் |
பழக்குதல். |
பரகாயம் |
பிறனுடைய சரீரம்; வேறு சரீரம். |
பரசரீரம் |
காரணசரீரம், கஞ்சுக சரீரம், குணசரீரம் என்னும் மூவகைச் சரீரம். |
பரடு |
கரடு, கணுக்கால். |
பரதந்திரம் |
சுதந்தரமின்மை; பிறர்வயமுற்று அவனைத் தலைவனாகக் கொண்டு நிற்றல். |
பரநாதம் |
ஞானசத்தி. |
பரநிந்தை |
பிறரை தூஷித்தல். |
பரபக்கம் |
பிறர் கொள்கை. |
பரமாணு |
மிக நுண்மையான அணு. |
பரமார்த்தம் |
மிக மேலான பொருள். |
பரமான்மா |
பரம்பொருள். |
பரம்பரை |
ஒன்றன்பின் ஒன்றாகவருதல். |
பரமுத்தி |
மேலான முத்தி; சாயுச்சியம். |
பரம்பொருள் |
சிவபெருமான். |
பரிகரித்தல் |
களைதல். |
பரிக்கிரகசத்தி |
தொழிற்குக் காரணமாய் நின்று, வேண்டும் போது உதவும் மாயா சத்தி. |
பரிசம் |
தொடுதலை அறியும் அறிவு; ஊறு. |
பரிசனம் |
பரிவாரம். |
பரிசித்தல் |
தொட்டு அறிதல். |
பரிணமித்தல் |
ஒன்று பிறிதொன்று ஆதல். |
பரிணாமம் |
இயற்கையினின்றும் திரிந்து தோன்றுதல். |
பரிணாமவாதி |
பிரமத்தினின்றும் உலகம் திரிந்து தோன்றும் என வாதிப்பவர். |
பரிதல் |
இரங்கல். |
பரிபாகம் அடைதல் |
முழுவதும் பக்குவம் அடைதல். |
பரியாயப் பெயர் |
ஒத்த பொருளுடைய பெயர்; ஒரு பொருட்கிளவி. |
பரை |
சுத்த ஞானம் (பரம் – மேலானது; தூய்மையானது). |
பலசாங்கியம் |
பல எண் உடையது. |
பவம் |
பிறப்பு; சம்பவம். |
பறவாக்குளவி |
மலைப்பச்சை. |
பற்றுக்கோடு |
கொழுகொம்பு; ஆதாரம். |
பனுவல் |
நூல். |
“பா”
பாகமடைதல் |
பக்குவமடைதல். |
பாங்கு |
அழகு; தகைமை; உரிமை. |
பாசஞானம் |
பாசம் வாயிலாக ஆன்மாவின் கண் நிகழும் ஞானம். |
பாசக்ஷயம் |
பாசநீக்கம்; பாசத்தைக் குறைத்தல். |
பாசம் |
மலபந்தம்; கட்டு. |
பாசுபதம் |
அகப்புறச் சமயங்கள் ஆறனுள் ஒன்று. |
பாஞ்சராத்திரம் |
புறச்சமயம் ஆறனுள் ஒன்று. விட்டுணுவே முத்தொழிற்கும் கருத்தா எனக் கூறும் மதம். அந்நூல் ஐந்து இரவுகளில் செய்யப்பட்டதால், பாஞ்சராத்திரம் எனப் பெயர் பெற்றது. இருபத்தைந்தாம் தத்துவத்தில் வைகும் வாசுதேவனே பரம்பொருள் என்றும் எல்லா உலகும் சுதேவனின் பரிணாமம் என்றும் கூறும் மதம். |
பாடாணவாதம் |
அகச்சமயம் ஆறனுள் ஒன்று; முத்தியில் உயிர் கல்போல் கிடக்கும் எனக் கூறும் மதம். |
பாடிகாவல் |
ஊர் காவல். அரசு ஊழியரைக் கொண்டு, அரசன் செய்விக்கும் தண்டனை. |
பாதம் |
கன்மேந்திரியம் ஐந்தில் ஒன்று, கால். |
பாணி |
மேற்படி; கை. |
பாயு |
மேற்படி; குதம். |
பாதஞ்சலம் |
பொன், வேங்கைமரம். |
பாரிசேடம் |
ஓழிபு; மிஞ்சியது. |
பாரிசேட அளவை |
ஒழிபு அளவை. மூவர் இருந்த இடத்தில், ஒரு பொருளைச் சிலர், ‘இது யார் பொருள்?’ என வினவ, இருவர் ‘அறியோம்’ எனக் கூற, இருப்பவர் ஒருவர் அதனை அறிந்தவராகக் கொள்வது. |
பாவகம் |
மனம் முதலியவற்றோடு கூடி நின்று பாவிப்பது; நாடகம். |
பாவனை |
வாதனை; அனுபவத்தால் தோன்றி நினைவுக்குக் காரணமாயிருப்பது. |
பாவனாதீதம் |
பாவனையைக் கடந்தது. |
பாற்கரிய வாதம் |
ஏகான்ம வாதத்தில் ஒரு பிரிவு. |
“பி”
பிங்கலை |
வலது மூக்கில் நிற்கும் நரம்பு. |
பிடகநூல் |
பெளத்த நூல். இது மூன்று வகையாகச் சேர்க்கப் பட்டமையால் அப்பெயர் பெற்றது. |
பிண்டம் |
உடல். |
பிரகாசம் |
ஒளி; ஞானம்; சித்து. |
பிரகிருதி |
மூலகாரணம்; மாறுபடாமல் இயல்பாக இருப்பது. |
பிரகிருதி மாயை |
அசுத்த மாயையின் தூல பரிமாணம். |
பிரணவம் |
வேதங்களில் முதலில் சொல்லப்படும் ஒரு மகா மந்திரம். |
பிரஞ்ஞை |
மெய்ஞ்ஞானம். |
பிரதிட்டாகலை |
பஞ்ச கலைகளில் ஒன்று. பிரபஞ்சப் பற்றுக்களினின்றும் நிவர்த்தி செய்யப்பட்ட ஆன்மாக்கள், மீண்டும் பிரபஞ்சத்தை நோக்கா வண்ணம், பிரதிட்டை செய்யும் (நிலைபெறச் செய்யும்) சிவசத்தி. |
பிரதிட்டை செய்தல் |
நிலைபெறுத்தல். |
பிரதி பிம்பம் |
பிரதி ரூபம்; சம வடிவம். |
பிரத்தியட்சம் |
எதிரே காண்டல். |
பிரத்தியட்சப் பிரமாணம் |
காட்சியளவை. |
பிரத்தியாகாரம் |
அட்டயோகத்துள் ஒன்று. அது, மனத்தை இந்திரிய விடயங்களில் செல்லவொட்டாமல் அடக்குதல். |
பிரபஞ்சம் |
உலகம்; விரிவானது என்று பொருள். |
பிரமாணம் |
அளக்கும் கருவி; அளவை. |
பிரமாதா |
அளப்பவன். |
பிரமிதி |
பிரமாணத்தால் உணர்ந்த மெய்யுணர்வு, அளந்தறிந்த உண்மை. |
பிரமேயம் |
அளக்கப்படுவது; பிரமாணத்தால் அளக்கப்படும் பொருள். |
பிரவர்த்தி |
முயற்சி. |
பிரவாகம் |
நீரோட்டம். |
பிரவாகாநாதி |
இடையறாது ஓடும் நீர்ப்பெருக்குப் போலத் தொடர்ச்சியாய்த் தொன்று தொட்டு வரும் வினைகள். |
பிரவிருத்தர் |
விந்துவின் காரியங்களைத் தொடங்கியவர்; மகேசுவரர். |
பிரவிருத்தி |
தொழில்; முயற்சி; வளர்ச்சி. |
பிரளயாகலர் |
பிரளய காலத்தில் முதல்வன் தானே குருவுமாய் முன் நின்று உணர்த்துவதால்; பந்தம் நீங்கியவர்; ஒடுக்கத்தில் கலை அற்றவர்; இவர்க்கு இடம் அசுத்த மாயை முதல் அராகத த்துவம் முடிய |
பிரகாமியம் |
அட்ட சித்திகளுள் ஒன்று. விரும்பியது சித்திக்கப் பெறுதல். |
பிராகிருதம் |
பிரகிருதி சம்பந்தமானது. |
பிராணவாயு |
தச வாயுக்களுள் ஒன்று. இதயத் தானத்தில் இருப்பது. சரீரத்திற்குள்ளிருந்து இடைகலை, பிங்கலை, நாடிகள் வழியாகக் கபாலத்தளவும் சென்று, நாசியில் பன்னிரண்டு அங்குலம் புறப்பட்டு, நாலங்குஅலம் வெளியேபோய், எட்டங்களும் உள்ளே அடங்கும். விடயங்களை விசாரிக்கும். புத்தியைப் பிரகாசிக்கும். பலத்தைச் செய்யும். |
பிராணாயாமம் |
அட்டாங்க யோகத்துள் ஒன்று. பிராணவாயுவைத் தடுத்தல். அகத்துள்ள அசுத்தவாயுவைப் புறத்தே தள்ளி, சுத்த வாயுவை உள்ளே வாங்கி சுவாசத்தைக் கட்டுதல். இப்பயிற்சியை “இரேசக, பூரக கும்பகம்” என்பர்; இதன் பயன் இரத்த சுத்தி. |
பிராணான்மவாதி |
பிராணவாயுவே உயிர் என வாதிப்பவர்; உலோகாயத்தில் ஒருவகை. |
பிராந்தி ஞானம் |
மயக்க உணர்வு. |
பிராமாணியம் |
பிரமாணம் உளதாம் தன்மை. |
பிராப்தி |
அட்ட சித்திகளுள் ஒன்று. |
பிராய்ச்சித்தம் |
சாந்தி செய்வதனால் பாவகன்மங்கள் நீங்கும் என்பது. |
பிராரத்தம் |
சஞ்சிதவினைக் களஞ்சியத்திலிருந்து, ஒரு பிறவியில், அநுபவிப்பதற்கு ஊட்டப்படும் வினைப்பயன். |
பிருகற்பதி |
தேவகுரு; வியாழன்; உலோகாயநூல் செய்தவர். |
பிருதிவி |
மண். |
பிரேரகாண்டம் |
சிவதத்துவம் முதலிய சுத்த தத்துவங்கள் ஐந்து இவை அசுத்த மாயா த த்துவங்களைப் பிரேரகம் செய்வன. பிரேரகம் – ஏவுதல். |
பிறர்பொருட்டு அனுமானம் |
தான் அறிந்ததனைப் பிறர் அறியும் படி போதித்தலை அறியும் அறிவு. |
பிறழதல் |
வேறாதல்; மாறுதல். |
பிறிதின் கிழமை |
ஆறாம் வேற்றுமைக்கிழமைப் பொருள்களுள் ஒன்று. அது தன்னின் வேறாயது. |
“பீ’
பீசம் |
வித்து. |
“பு”
புடைநூல் |
சார்பு நூல்.
|
புத்தமதம் |
‘புத்தனைத் தவிர வேறு கடவுள் இல்லை; ஞானமே ஆன்மா’ முதலிய கொள்கைகளை உடைய புறப்புறச் சமயம். |
புத்திபூர்வம் |
அறியப்பட்டது; முன்பாகவே அறிந்து செய்வது. |
புத்திரமார்க்கம் |
தந்தை – மகனுக்குரிய வழி; கிரியை மார்க்கம். |
பும்ஸ்த்துவ மலம் |
பிரகிருதி சம்பந்தமாகப் புருடனை அடைந்திருக்கும் அவித்தை முதலியன. |
புரியட்டகாயம் |
சூக்குமதேகம்; புரி – சரீரம் காரண தன்மாத்திரைகளாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகிய ஐந்தும் மனம், புத்தி, அகங்காரம் ஆகிய அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டுத் தத்துவத்தினால் ஆக்கப்பட்ட உடம்பு. |
புரிதல் |
எப்பொழுதும் மேற்கொள்ளல். |
புருடன் |
உடம்போடு கூடிய ஆன்மா. |
புரைதல் |
ஒப்பிடல். |
புள்ளு |
பறவை. |
புற்கலம் |
உடம்பு; சரீரம். |
புனிதன் நாமம் |
பஞ்சாக்கரம். |
புறனடை |
புறக்காப்பாய்ச் சொல்வது. |
புனர்உத்தி |
கூறியது கூறல். |
புனர் உற்பத்தி |
மீளத் தோன்றுதல். |
புனைந்துரை |
விதியை விளங்கிக் கொள்வதற்காக விதிப்பயனை உள்ளதனாலும் இல்லதனாலும், வருணித்துக் கூறுவது. |
புன்கணீர் |
அற்பம் ஆகிய கண்ணீர். |
“பூ”
பூசல்தரும் |
வெளிப்படுத்தும். |
பூசை |
வழிபாடு. |
பூட்டுவிற் பொருள்கோள் |
நாண் பூட்டிய வில்லின் நுனியும் அடியும் நாணினால் தொடர்புடையன ஆவதுபோல, ஒரு செய்யுளின் முதல் சொல்லும் ஈற்றுச் சொல்லும் பொருளில் தொடர்புடையனவாகக் கொள்வது. |
பூதாகார உடம்பு |
பஞ்ச பூதங்களின் சாரங்களால் ஆக்கப்பட்ட சரீரம்; தேவசரீரம். |
பூதபரிணாமம் |
பூதங்களின் உருத்திரிவு. |
பூதபரிணாம உடம்பு |
ஆன்மாக்கள் பூமியில் எடுக்கும் உடம்பு. |
பூதம் |
பிருதிவி முதலிய பஞ்சபூதங்கள். |
பூத உடம்பு |
ஆன்மாக்கள் நரகத்தில் எடுக்கும் உடம்பு; இதனை ‘யாதனாசரீரம்’ என்றும் கூறுவர். |
பூதாதி அகங்காரம் |
தமோகுணத்தொடர்புடைய அகங்காரம். |
பூரணநிலை |
எங்கும் நிறைந்த நிலை. |
பூரணி |
ஐவகை சத்திகளுள் ஒன்று. |
பூருவ பக்கம் |
சித்தாந்த விரோதமாக விடயாதிகளை நாட்டிப் பிறரால் கூறப்பட்ட வாதம். |
“பெ”
பெத்த காலம் |
கட்டுற்று நிற்கும் காலம். |
பெத்தநிலை |
பாசத்தால் கட்டுண்டு இருக்கும் நிலை. |
பெத்தம் |
பந்தம்; கட்டுண்டது. |
பெத்தான்மா |
பாசப்பிணைப்புக்கு உட்பட்டு இருக்கும் உயிர். |
பெரும்பெயர் |
மகாவாக்கியம்; சிவமாதல்; பெரும்பெயர்க் கடவுள் ஆவார். |
பெற்றி |
தன்மை. |
“பே”
பேதவாதி |
மாத்துவர். |
பேதாபேத வாதம் |
பாஞ்சராத்திரம். |
பேய்த்தேர் |
பாலைநிலத்தில் காணப்படுவதாகிய கானல். |
பேரருளுடைமை |
பெருங்கருணையுடைமை. |
பேராமல் |
பிறழாமல். |
பேரானந்தம் |
சிவானந்தம்; திருவடி; முதல்வனது எண்குணங்களும் ஆன்மாவினிடத்து மேம்பட்டு விளங்கும் விளக்கம். |
“பை”
பைசந்தி |
நால்வகை வாக்குகளுள் ஒன்று. சூக்குமை வாக்கு உந்தித்தானத்தை அடைந்து, அதன்பின் இதயத்தானத்திற்குச் செல்லும்; அந்த இடத்தில் மயில்முட்டையின் நீர் பஞ்சவன்னங்களையும் சூக்கும ரூபமாக அடக்கி இருப்பதுபோல, எழுத்துக்கள் பிரிந்து தோன்றாமல், மிகவும் சூக்குமமாயிருக்கும். அந்நிலையில் அவ்வாக்கு ‘பைசந்தி’ எனப்படும். |
பைசுந்நியம் |
குறளை; கோள் வார்த்தை. |
பை மறியாப் பார்த்தல் |
உட்பக்கத்தை வெளிப்பக்கம் ஆக்கும்படி, திருப்பி மாற்றப்பட்ட பையைப் போன்று பார்த்தல். |
“பொ”
பொகுட்டு |
காய். |
பொதுச் சிறப்புத் தத்துவங்கள் |
தூலதேக வடிவாகிய தத்துவங்கள், தனக்குப் போக நுகர்ச்சிக்கும், சந்தனம், பூமாலை போல மனைவி முதலியோர் அநுபவித்தற்கும், கருவி ஆதலின் பொதுச்சிறப்பு எனப்பட்டன. |
பொதுத்தத்துவங்கள் |
புவன வடிவாகிய தத்துவங்கள், எல்லார்க்கும் பயன் தருதலின் பொது எனப்பட்டன. |
பொது நீக்கல் |
ஒருவருக்கே உரிமை ஆக்குதல். |
பொதுவகையால் அறிவு நிகழ்தல் |
நிர்விகற்பமாய் அறிவு உண்டாகுதல்; பிரித்துப் பார்க்காமல் உள்ளதை மட்டும் அறிதல். |
பொது இலக்கணம் |
பொது இயல்பு. |
பொய் |
இடையே தோன்றி மறைவதாகிய பொது இயல்பு. |
பொருட் பிரபஞ்சம் |
பஞ்ச கலைகளும் முப்பத்தாறு தத்துவங்களும் இருநூற்றிருபத்து நான்கு புவனங்களும் பொருட் பிரபஞ்சம் ஆகும். |
பொருவுதல் |
ஒத்தல். |
பொருண்மை |
பொருளின் தன்மை. |
பொருளியல்பு உரைத்தல் |
வாழ்த்து, வணக்கம், பொருளியல்புரைத்தல் ஆகிய மூவகை வாழ்த்துக்களில் ஒன்று. எடுத்துக்கொண்ட நூற்பொருளுக்கு ஏற்ப, ஏற்புடைக் கடவுளை வாழ்த்துதல். |
பொற்பி |
பொலிவு. |
“போ”
போக காண்டம் |
சுத்தமாயைக்குக் கீழ் உள்ள மாயை முதலிய ஏழு தத்துவங்கள் போக காண்டம் எனப்படும். இது ‘வித்தியா தத்துவம்’ எனவும்படும். |
போக சிவன் |
சதாசிவன். |
போக தத்துவம் |
சிவதத்துவம். |
போகம் |
புசிப்பு; உண்ணல்; நுகர்வு. |
போகரூபம் |
அனுபவ வடிவம். |
போகாவத்தை |
உலகத்தைப் படைக்கக் கருத்தெழுந்த உள்முகப் பட்டநிலை. |
போக்கிய காண்டம் |
பிருதிவி முதலிய இருபத்துநான்கு அகத் தத்துவங்கள். இவை உயிர்க்கு நுகர்வை ஏற்படுத்துவதால், போக்கியம் எனப்பட்டன. |
போக்கியம் |
அனுபவம்; விடய வடிவமாய் நின்று அனுபவிக்கப்படும் கன்மம். |
போக்கிய ரூபம் |
அனுபவிக்கப்படும் பொருள் வடிவம். |
போக்தா |
புசிப்பவன்; அனுபவிப்பவன். |
போசயத்திரு |
புசிப்பிப்பவன். |
போசயத்திருகாண்டம் |
கலை முதலிய ஏழு சுத்தாசுத்தத் தத்துவங்கள்; இவை உயிர்க்குப் போகயங்களைக் கொடுத்துப் புசிப்பிக்கச் செய்வன. |
போத்திருத்துவம் |
போக நுகர்ச்சிக்கு வினை முதலாகும் தன்மை. |
“பெள”
பெளதிகம் |
பூத சம்பந்தம் உள்ளது. |
பெளதிக கருடன் |
உலகத்தில் காணப்படும் கருடன். |
பெளராணிகம் |
புராணமதம். |
பெளத்தம் |
புத்தமதம். |
“ம”
மகடூஉமுன்னிலை |
பெண்ணை முன்னிலைப்படுத்திக் கூறுதல். |
மகரத்துவசன் |
மகரக் கொடி உடையோனாகிய மன்மதன். |
மகா காயம் |
பெருவெளி. |
மகா சிருஷ்டி |
சுத்த மாயையில் நிகழும் படைப்பு. |
மகா பிரளயம் |
மகா சங்காரம். |
மகாமந்திர் |
சுத்த வித்தியா தத்துவத்தில் வசிக்கும் சப்தகோடி மந்திரமூர்த்திகள். |
மகாமனு |
வகார சிகாரம் இரண்டினுள் விகாரமாகிய அருளையும் தன்னிடத்து இலயப்படுமாறு அடக்கிக்கொண்டு, ‘சி’ காரமாகிய பதி எழுத்து மாத்திரமாய்த் தனித்து நிற்பது. இஃது இறை எழுத்து, பெருஎழுத்து, பிரமபீஜம், நாயோட்டு மந்திரம் எனப் பெயர் பெறும். |
மகாமாயை |
சுத்தமாயை. |
மகாருத்திரர் |
பரமசிவன். |
மகாவாக்கியம் |
வேதங்களில் சொல்லப்பட்ட நான்கு வாக்கியங்கள். அவையாவன: - இருக்குவேத வாக்கியம் :-பிரக்ஞானம் பிரமம் அறிவே பிரமம். யசுர்வேத வாக்கியம :- அகம்பிரமாஸ்மி நான் பிரமம் ஆகின்றேன். சாமவேத வாக்கியம்: - தத்துவமசி அது நீ ஆகின்றாய். அதர்வணவேத வாக்கியம் :-அயமான் மாப்பிரமம் இந்த ஆன்மாபிரமம் ஆகிறது. |
மகிமா |
அட்டசித்திகளில் ஒன்று; மகத்தாய் இருத்தல்; பெரிதாக இருத்தல். |
மகேசுர தத்த்வம் |
சுத்த தத்துவம் ஐந்தனுள் ஒன்று. |
மகேசுர மூர்த்தி |
சந்திரசேகரர் முதலிய இருபத்தைந்து வடிவம். |
மகேசை |
மகேசுரனுடைய சக்தி. |
மங்கல வாழ்த்து |
நன்மை பயக்கும் வாழ்த்து. |
மங்கிப் போதல் |
குறைந்து போவது. |
மணிபூரகம் |
ஆறாதாரங்களுள் மூன்றாவது. சுவாதிட்டானத்திற்ௐஉ மேல் நாபித்தானத்தில் இருப்பது. |
மண்டலம் |
வட்டம்; சக்கரம். |
மண்டுதல் |
நெருங்குதல்; மிகுதல். |
மதம் |
யாதொன்று சொல்லும் இடத்தும் செய்யுமிடத்தும் அகங்காரமாய் நிற்றல் களிப்பு. |
மதுகை |
வலி. |
மத்திம சிருட்டி |
இடையில் நிகழும் படைப்பு. |
மத்திமை |
நால்வகை வாக்குகளுள் ஒன்று. |
மந்தம் |
மெதுவான குரலில் எண்ணுவது. கூர்மையின்மை. |
மந்திரம் |
கடவுளை நினைத்தற்குக் கருவியாக உள்ள வாசகம்; நினைப்பவர்க்கு பத்தி, சுத்தி, சித்திகளைப் பயக்கும் வாசகம். நினைப்பவனைக் காப்பது. (மந் – நினைத்தல்; திர – காத்தல்). |
மந்திர சாந்நித்தியம் |
மந்திரத்தின் அண்மை. |
மந்திர மகேசர் |
விஞ்ஞானகலருள்ளே மலபரிபாகத்திற்கு ஏற்பச் சதாசிவ மூர்த்தியாலே, மந்திரருக்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பவர். இவருக்கு இடம் சுத்தாத்துவா. |
மந்திரவினை |
மந்திரம் கணித்தல், ஞானநூல் ஓதுதல் முதலியன. |
மமதை |
‘எனது’ என்னும் தன்மை. |
மயக்கம் |
தெளிவு பிறவாமை; மாறுபாடு. |
மயக்கவாசனை |
திரிபறிவு. |
மயங்கல் |
அறிவு கெடுதல். |
மயில் |
பிரணவ சொரூபம். |
மயூரம் |
அங்கயோகாசானத்தில் ஒன்று. அது, முழங்கை இரண்டும் உந்திப்புறத்தில் அழுந்தப். புவியில் கை ஊன்றிக் கால் நீட்டித் தலைநிமிர்ந்து இருத்தல். |
மருட்கேவலம் |
அனாதிகேவலம். கேவலாவத்தைத் துரியாதீதத்தில், ஆன்மா இருள் மலத்தோடு கூடி நிற்றல். |
மலத்திற்குத் தன்னியல்பு |
அறியாமையைச் செய்தல். |
மலத்திற்குப் பொது இயல்பு |
விபரீத உணர்வைச் செய்வது.
|
மலநடை |
செருக்கை வளர்க்கும் ஒழுக்கம். |
மலபரிபாகம் |
ஆணவ மலத்தினது ஆற்றல், ஆன்ம அறிவை மயக்க இயலாமல், வலிகுன்றி நிற்கும் நிலை; |
மலவாசனை |
ஞானிகளின் உடம்பிற்கு உரிய பிராரத்த வினையில் அனுபவம், மெலிதாக வந்து தாக்கும்போது, ஏழுகின்ற ‘யான் – எனது என்னும் உணர்வை விளைவிக்கும் ஆகாமியம். |
மலைவு |
மாறுபாடு. |
மல்குதல் |
அதிகப்படுதல். |
மறம் |
சினம்; கோபம் |
மனம் |
அந்தக்கரணங்களுள் ஒன்று. தைசத அகங்காரத்தினின்றும் தோன்றியது. |
மனு |
மந்திரம். |
மனோன்மணி |
உமை; சதாசிவரின் சத்தி. |
“மா”
மாட்டெறிதல் |
ஒரு பொருளுக்குச் சொல்லப்பட்ட இலக்கணத்தை அதனைப் பெறுதற்குரிய மற்றொரு பொருளுக்கும் மாட்டிவிடுதல். |
மாத்தியமிகர் |
பெளத்தரில் ஒரு சாரார். |
மாத்திரை |
எழுத்தின் உச்சாரண கால அளவு. |
மாத்துவர் |
பேதவாதிகள். |
மாந்திரநூல் |
சித்தாந்த சாத்திரம். |
மாமாயை |
சுத்தமாயை. |
மாயா |
மா – ஒடுங்குதல்; யா – வருதல். எல்லாக் காரியங்களும் தன்பால் வந்து ஒடுங்குவதற்கும், தன்னினின்று தோன்றுவதற்கும் காரணமாய் நின்றது மாயா. (மாயை) |
மாயாகாரியம் |
அசித்துப் பிரபஞ்சம். |
மாயாவாதம் |
ஏகான்மலாதத்தில் ஒரு பிரிவு. |
|