logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிதம்பர இரகசியமும் நடராஜ தத்துவமும்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

நடராஜ தத்துவமும்

 

இது

பிக்ஷாண்டார் கோவில் பெரும் பண்ணையார்

திரு. ஜி. இராஜகோபாலப் பிள்ளையவர்களின்

விருப்பத்திற்கிணங்க,

 

சென்னை

ஶ்ரீ குஹாநந்தமண்டலி ஸ்தாபகர்

பிரஹ்மஶ்ரீ என். சுப்பிரமண்ய அய்யரவர்களால்

இயற்றப்பட்டது.

 

குஹாநந்த மண்டலி

1955

முன்னுரை.

      வைதிகாத்வைதசிகாமணியும் தில்லைச் சிற்சபேரனது குஞ்சித சரணரவிந்தத்தில் யிடையறா வழுவலன்புடையவரும், சிதம்பர ஆலயத்தில் பல சாஸ்வத கைங்கர்யங்கள் ஈஸ்வரார்ப்பணமாயிற்றியுள்ள மெய்யடியார்களின் பரம்பரையிற் சேர்ந்தவரும் அடியேனது மனத்தைக் கவர்ந்த ஆப்தரும் பெருநிலப் பண்ணையாளருமாகிய ஶ்ரீமான் பிக்ஷாண்டார் கோயில் ஜி. இராஜகோபாலப் பிள்ளையவர்கள், சிதம்பர க்ஷேத்திரத்தில் நாளது 7-7-1955-ல் நடக்கவிருக்கும் மஹாகும்பாபிஷேக சந்தர்ப்பத்தில் ஆநந்தக்கூத்தனது சரணங்களில் சமர்ப்பிக்க வேண்டும்ன்னும் நல்விருப்பத்தைத் தெரிவித்தனர். திருவருளின் செயலால் இத்தகைய சிவபுண்ணியம் வலிவில் கிடைத்ததே யென்னும் பெருமகிழ்ச்சியால், ஆற்றலில்லாத யானும் துணிவுடன் ஒப்புக்கொண்டேன். பின்னர் என்ன செய்வதென்று திகைத்தேன். மனத்தில் அருவொளிக்கீற்று ஒன்று தோன்றியது. நெடுநாளைக்கு முன் 1923-ம் வருஷத்தில் ஶ்ரீ நடராஜ தத்துவம் என்னும் ஒரு சிறு நூலை யியற்றியது ஞாபகம் வந்தது. பிரதிகள் செலவழிந்து போய் ஒரு பிரதியே கிடைத்தது. அதையே ஆதாரமாக வைத்துக்கொண்டு சில பாகங்களைக் குறைத்தும் சிலவற்றைப் பெருக்கியும் நடராஜ தத்துவத்தை யொருவாறு பூர்த்தி செய்தேன். – “சிதம்பர ரஹஸ்யம்” என்னும் மற்றைய பாகத்தை யெழுதச் சிந்திக்கையில் அது உரைநடையில் எழுத முடியாதென்ற தீர்மானத்திற்கு வந்தேன். ஆயினும் மேனோக்காச் சிதம்பர மஹிமை, ஆலய அமைப்பு பொற்சபையின் அமைப்பு – சித்சபையின் உண்மை யென்னும் பல விஷயங்களை எனது நண்பர் திருவாளர் எஸ். தண்டபாணி தேசிகரவர்கள் இயற்றியுள்ள “சிதம்பரம்” என்னும் நூலையும், திரு. சோ. கந்தசாமி பிள்ளையவர்கள் இயற்றிய சிதம்பர ரகசியம் என்னும் ஒரு சிறு நூலையும் பார்த்துப் பயன்படுத்திக் கொண்டேன். பலநாள் பல பிரமாண நூல்களை நுண்ணுணர்வோடு ஆராய்ந்து எழுதவேண்டிய இந்நூலைக் குறுகிய காலத்தில் இயற்ற நேர்ந்ததால், அநேக குறைவுகளிருக்குமென்பதில் ஆட்சேபனையில்லை. சிதம்பர ரகசியமறிந்த மெய்ஞ் ஞானிகள் இக்குறையைப் பாராட்ட மாட்டார்கள் என்ற நம்பிக்கை அடியேனுகுண்டு. ஶ்ரீமான் பிள்ளையவர்களின் நல்லெண்ணத்தைப் பூர்த்தி செய்தேனேயென்னும் பெரு மகிழ்ச்சியைப் பெற்று அமைந்துள்ளேன்.

சிவம்!

குஹாநந்த மண்டலி,                                          இங்ஙனம்

பழவந்தாங்கல்,                                               விதேயன்

பரங்கிமலை P.O.,                                    என். சுப்பிரமண்ய அய்யர்.

சென்னை – 600 016

25-6-1955

முகவுரை

      உண்மையினிடமாக ஆனந்தம் இருக்கிறது. உண்மையும் அறிவும் ஒன்று கூடியபோது விளைவதே ஆனந்தம். உண்மை, அறிவு, ஆனந்தம் மூன்றும் இணைந்து ஒரே ஆஸனத்தில் இருக்கின்றன. அந்த நிலையே சோமாஸ்கந்தர், நடராஜா, தியாகராஜா என்றெல்லாம் பெயர் எய்துகின்றன. ஆனால் நடராஜ வடிவத்தில் தாண்டவ சிவமும், அதனைக்காமிக்கும் காமேஸ்வரியுமே உருவத் திருமேனி கொண்டு இணைந்திருக்கின்றனர். ஆனந்தம் காமேஸ்வரியின் கடைக் கண்களின் வழியாகவும், காமேஸ்வரரின் தூக்கிய திருவடியின் வழியாகவும் பக்குவான்மாக்களுக்கு வெளிப்படுகின்றது. அருவமாக இருக்கின்றது. இத்தகைய ஆனந்த வெள்ளத்தையே ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள கரணங்கள் எல்லாம் சிந்தையேயாகத் திளைத்தார் ஆளுடைய நம்பிகளாகிய சுந்தரர் பெருமான். மூர்த்தியையும், கீர்த்தியையுங்கொண்டு உண்மை ஞானத்தை உணர்தலே சிறந்த ஞானம். அதுவே மோக்ஷவாயில். இத்தகைய உண்மைகளை உள்ளவாறு வேத ஆகம, சாஸ்திர துணைக்கொண்டு நிரூபிக்கும் நூல்களே இன்று தேவை. உலகம் ஸ்தூலமான வரலாறுகளை வைத்துக் கொண்டு அவ்வளவில் அமைந்துவிடுகின்றன. அதனால் பக்குவமில்லாத பசுக்கள் தங்கள் பசுபோத ஞானத்தால் வாய்க்குவந்த வண்ணம் பேசத் தொடங்குகின்றன. அவைகளுக்கு வழிகாடியாகவும் பக்குவான்மாக்களுக்கு மேல்வரிச் சட்டமாகவும் தத்துவ விமரீசனத்தோடு கூடிய நூல்கள் மிகத் தேவைதான். அத்தேவையை நிறைவேற்ற, நிறைசெல்வத்தியாகேசப் பெருமானின் வழிவிழித் தொண்டரும், திருவாரூர்த் திருக்கூட்ட மரபில் உதித்தவர்களும், கல்வி, கேள்வி, ஒழுக்கங்களிற் சிறந்தவர்களும் ஆகிய பிக்ஷாண்டார் கோயில் பண்ணையார் கி. இராஜகோபால பிள்ளை அவர்கள், சமய வளர்ச்சி ஒன்றையே கருதி கமலாலய தத்வம், அஜபா ரகசியம், சைவசமயசாரம் முதலான தத்வ விமரிசன நூல்களை வெளியிடச் செய்தார்கள். மேலும் தியாகேசப் பிரபந்தங்கள், கமலாம்பிகை பிரபந்தங்கள், குருபாதுகா ஸ்தோத்திரம் முதலான ஸ்தோத்திர நூல்களையும் வெளியிட செய்தார்கள். தென்னிந்திய வேளாண்மை முதலான நூல்களையும் வெளியிட்டார்கள். ஶ்ரீ தியாகேசப்பெருமானிடம் எவ்வளவு ஈடுபாடும், ஆழ்ந்த பக்தியும் உண்டோ அவ்வளவு நடராசப் பெருமானிடமும் உண்டு. அதற்கு வாய்ப்பாக இப்போது மன்மத௵ ஆனி௴ 23உ வியாழக்கிழமை நடைபெறும் ஶ்ரீஆனந்த நடராஜப்பெருமான் மகாஸம்புரோக்ஷணத்தை முன்னிட்டு ஶ்ரீ நடராஜ தத்வம், சிதம்பர ரகசியம் என்னும் நூலையும் வெளியிடுகிறார்கள்.

      இந்நூலை யெழுதியவர்கள் உலகமாதாவின் உள்ளத்தில் இடம் பெற்றவர்களும் வரிவஸ்யா ரஹஸ்யம், ல்லிதா திரிசதி வியாக்யானம் முதலியவற்றை எழுதியவர்களும் ஆகிய பிரம்மஶ்ரீ குஹானந்த மண்டலி, என். சுப்பிரமணிய ஐயரவர்கள் ஆவார்கள். இவர்கள் எழுத்தில் எப்போதும் ஜீவகளை போக்கும் சிவகளை நிறைந்திருக்கும். வேத, உபநிஷத் ஸாரங்கள் அங்கங்கே நிறைந்து ஒளிதந்து கொண்டிருக்கும். அதிரஹஸ்யமான கருத்துக்களைத் தெள்ளத்தெளிய அறிய வாய்ப்பளிக்கும். இத்தகைய பெரியவர்கள் எழுதிய இந்நூலிலும் பல அருமைகளை அங்கங்கே கண்டு நான் மிக மகிழ்ந்து ஈடுபட்டேன்.

      இந்நூல் வெளியிட உதவிய ஶ்ரீமான் பிள்ளையவர்கள் பிக்ஷாண்டார் கோயில் பண்ணையார் ஆவுடையப்ப பிள்ளை பரம்பரையில் வந்தவர்கள். அந்தப் பண்ணை சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல அறப்பணிகளைச் செய்து வருகிறது. சிதம்பரம் கோயில் கீழ் முகப்பில் ஆவுடையப்ப பிள்ளை மண்டபம் என்ற ஒன்று இருக்கிறது. அது உண்டியல் மண்டபம் எனவும் வழங்கப் பெறும். இதனை ஆதியில் கட்டியவர்கள் அவர்களே, திருப்பாச்சிலாச்சிராமத்திலும் மகா மண்டபத்தைக் கட்டுவித்தவர்கள் இவர்களே. இங்ஙனமே திருவையாற்றில் பிரதோஷக்கட்டளை அபிஷேக நிபந்தங்களும், ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் நித்ய கல்யாண தீபம் அமைத்து நெய்வார்க்க நிபந்தமும் அளித்துள்ளார்கள். அம்மட்டோ! மதுரையில் ஆவுடையப்ப பிள்ளை கட்டளையும், ஶ்ரீ ரங்கத்தில் வழியுலா மண்டபப் படிகளும் அமைத்துள்ளார்கள். கங்கைகொண்ட சோழபுரத்தில், பள்ளிவாயிலிருந்த அம்மானைக் கொண்டுவந்து கோயில் கட்டிப் பிரதிஷ்டை செய்வித்தார்கள். சிதம்பரத்தில் பள்ளியறைக்கு எழுந்தருளும் ஶ்ரீபாதுகை, ஶ்ரீபலிநித்யோற்சவம், காலசந்தி உச்சிக்கால அபிஷேகக் கட்டளைகள் எல்லாம் இவர்கள் ஏற்படுத்தியனவே. சாத்தனார்ச் சத்திரம் இவர்கள் செய்த தருமமே. ஞான ஆதீனமாகிய திருவாவடுதுறை ஆதினத்தில் ஆதிகுருமூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் இடம் ஆவுடையப்ப பிள்ளை அவர்கள் அளித்த குருபாத காணிக்கையேயாகும். அதனாலேயே 16-வது பட்டத்திலிருந்த ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்கள் சேதனமும் ஆவுடையப்பப் பிள்ளை நிழலும் இருக்கும் போது நமக்கென்ன குறை என்பார்களாம்.

      இவ்வண்ணம் பல சிவ புண்ணியங்களைச் செய்துவந்த அவர்கள் மரபில் வந்த ஶ்ரீமான் ஜி. இராஜகோபால் பிள்ளை அவர்களும் அவர்கள் அருமை மனைவியார் ஶ்ரீமதி அகிலாண்ட்த்தம்மாள் அவர்களும், மகனார் ஶ்ரீமான் சொக்கலிங்கம் பிள்ளை, சந்திரசேகரம் பிள்ளை இருவரும் பரம்பரையில் செய்து வந்த தருமங்களை இடையீடின்றிப் பாதுகாத்து வருவதோடு பலவகையிலும் புண்யங்களை வளர்த்தும் வருகிறார்கள். அண்மையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஶ்ரீபாதுகையைப் பொன்னால் செய்வித்து மகாஸம்புரோக்ஷணம் செய்வித்தார்கள். இப்போது ஶ்ரீபலி பல்லக்கை வெள்ளித் தகடுலேய்ந்து புதுக்கியிருக்கிறார்கள்.

      பசுபுண்யங்களாக ராஜா நடுத்தரப் பள்ளி, ஹோமியோ வைத்யசாலை இவைகளை வைத்தும், பல தான தருமங்களைச் செய்தும் மாணவர்களுக்கு உபகார நிதிகளையுதவியும் வருகிறார்கள். இத்தகைய நற்குடும்பம் இன்று ஶ்ரீமந் நடராஜப் பெருமானையும் தத்துவம் அறிந்து தரிசிக்க இந்த நூற்கோயிலை மக்களுக்கு உதவுகிறார்கள்.

      இங்ஙனம் பெரும்பணி பல புரியும் ஶ்ரீமான் பிள்ளையவர்களும் அவர்கள் திருக்குமாரர்களும் எல்லா நலனும் பெற்று நீடுழி வாழ ஶ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராசப் பெருமான் திருவருள் புரிவாராக.

      அருமையான இந்த நூலைப் பெற்று மக்கட் சமுதாயம் சிவஞானத் துறையில் முன்னேறி உய்யுமாக.

      சேது அன்னம் – சேதுபதி கொடுத்த மாகேஸ்வர பூகை நிலம்.

இங்ஙனம்,

ச. தண்டபாணி

 

                                          

              

சிதம்பர இரகசியமும்

நடராஜ தத்துவமும்

விஷயஸூசிகை

      விஷயம்                                                           பக்கம்

பாயிரம்     ---     ---     ---     ---     ---     ---     ---     ---     ---

சிதம்பர இரகசியம்  ---     ---     ---     ---     ---     ---     ---     ---

நடராஜ சேவையின் சிறப்பு      ---     ---     ---     ---     ---     ---

நடராஜ கோலத்தின் இரகசிநம்   ---     ---     ---     ---     ---     ---

யஞ்சபூதஸ்தலங்கள்      ---     ---     ---     ---     ---     ---     ---

பஞ்சநடன சபைகள்      ---     ---     ---     ---     ---     ---     ---

நடராஜ வடிவமே பஞ்சாக்ஷரம்  ---     ---     ---     ---     ---     ---

நடராஜர் வடிவம்   ---     ---     ---     ---     ---     ---     ---     ---

ஆநந்த்தாண்டவ மூர்த்தித் திருவுருவத்தின் தத்துவம் ---     ---     ---

ஆநந்த்தாண்டவ தத்துவம் ---     ---     ---     ---     ---     ---     ---

பஞ்சகிருத்திய தத்துவம்   ---     ---     ---     ---     ---     ---     ---

சிவம் ஐந்தொழில் செய்தற்குக் காரணம் ---     ---     ---     ---

நடராஜமூர்த்தியின் அபிஷேக நாட்கள்  ---     ---     ---     ---     ---

நடராஜரை வழிபடும் முறை     ---     ---     ---     ---     ---     ---

விபூதி மஹிமை

விபூதியின் ஸ்வரூபம்    ---     ---     ---     ---     ---     ---     ---

விபூதியின் திரவியம்     ---     ---     ---     ---     ---     ---     ---

விபூதியின் வகைகள்     ---     ---     ---     ---     ---     ---     ---

விபூதிதாரணையின் பிரமாணங்கள்     ---     ---     ---     ---     ---

விபூதி தாரணை விதி     ---     ---     ---     ---     ---     ---     ---

விபூதி தத்துவம்    ---     ---     ---     ---     ---     ---     ---     ---

உருத்திராக்ஷத்தின் வகைகள்    ---     ---     ---     ---     ---     ---

உருத்திராக்ஷத்தின் ஜாதிகள்     ---     ---     ---     ---     ---     ---

உருத்திராக்ஷத்தின் முகநியமம்   ---     ---     ---     ---     ---     ---

உருத்திராக்ஷம் தரிக்கவேண்டிய இடங்கள்     ---     ---     ---     ---

உருத்திராக்ஷம் அணிதலின் பயனந்--    ---     ---     ---     ---     ---

உருத்திராக்ஷ தத்துவம்   ---     ---     ---     ---     ---     ---     ---    

திரிபுரசங்கர வரலாறு     ---     ---     ---     ---     ---     ---     ---

திரிபுரசங்கர தத்துவம்     ---     ---     ---     ---     ---     ---     ---

பஞ்சாக்ஷர இரகசியம்

பஞ்சாக்ஷரத்தின் வகைகள் ---     ---     ---     ---     ---     ---     ---

பஞ்சாக்ஷரத்தின் அர்த்த விசாரம் ---     ---     ---     ---     ---     ---

பஞ்சாக்ஷரத்தின் ஜப விதி ---     ---     ---     ---     ---     ---     ---

பஞ்சாக்ஷரத்தின் ஜப பலனந்--    ---     ---     ---     ---     ---     ---

 

சிதம்பர இரகசியமும்

நடராஜ தத்துவமும்

காப்பு

      சிற்சொரு பத்திருத் தில்லைசேர் கூத்தர்தம்

      பொற்யிலாத் தத்துவம் புகலுதற் காகுவ

      அற்புதஞ் சேர்திரு வருள்தரும் வல்லபைச்

      சிற்பரக் களிறுதன் திருவடி மலர்களே.

 

(வேறு)

 

      தண்மதி சடைக்கூத்தர் தத்துவ மியற்றப்

      பண்முக மறைச்சிரமும் பகருதற் கரிதாந்

      தண்முக சொரூபருறை தில்லையம் பதிவாழ்

      சண்முக சிவன்றனடி சந்ததம் நினைப்பாம்.

 

பாயிரம்

 

திருச்சிற்றம்பலம்

 

சிதம்பர நடேசன் துதி

 

      பெரியானைப் பிஞ்சகனைப் பெம்மான் றன்னைப்

            பேரின்ப வீட்டானைப் பிறவி நீக்கற்

      குரியானை யோங்காரத் துறைவான் றன்னை

            யுருவிலியைப் பரவெளியை யுமையா டன்னைப்

      பிரியானை யென்னுளத்தே பிரிவி லானைப்

            பேசரிய மெய்ஞ்ஞானப் பேற்றி னானை

      அரியானை யந்தில்லை யாடு வானை

            யாடிதுதித் தாடுவார் வீடு ளாரே.

 

(இதுவுமது)

 

      “இதந்தரு மடந்தையொ டியைந்துயி ருடம்புபோல்

      விதம்படு லகங்களில் விரிந்தொளி விளங்குவார்

      மதங்கமொடு துந்துபி வளங்கழ முழங்கவே

      சிதம்பர நடம்பயில் செழுங்கழல் இறைஞ்சுவாம்.”

(இதுவுமது)

 

      “உறுதி யாகிய சூக்குமந் தூலமென் றுரைக்கும்

      குறைவின் மூலமந் திரத்தையே திருவுருக் கொண்டு

      மறுவி லாமணி மன்றுநின் றிருவர்வாழ்த் தெடுப்பப்

      பிறவி நோய்கெட நடம்புரி பிரானடி பணிவாம்.”

 

சிவகாமியம்மை துதி

 

      “ஆடக சிதம்பர அணங்குமை யணங்கிலாள்

      நாடக னனந்தசுக நன்குபுனை பங்கினாள்

      ஏடக மணம்பொருவ வெங்கணு மியைந்துளாள்

      பாடக மிலங்குசிறு பங்கய மிறைஞ்சுவாம்.”

 

(இதுவுமது)

 

      “வளைத்த தெண்டிரை யுடுத்தபா ரிட்த்தருண் மகற்கா

      யளித்த தாய்முனம் புரிதொழில் மீட்டுமாற் றுதல் போல்

      துளித்த வாருயிர் பொருட்டருள் நடந்தனிக் காணுஉத்

      திளைத்தெக் காலமுங் கண்டருள் தேவிதாள் தொழுவாம்.”

 

திருச்சிற்றம்பலத் துதி

 

      “தற்பதமாய்ப் பரபதமாய்த் தாவிலது பூதியதா

      யற்புதமா யாரமுதா யாநந்த நிலயவொளிப்

      பொற்பினதாய்ப் பிரிவிலதாய்ப் பொருளாகி யருளாகும்

      சிற்பரமா மம்பரமாந் திருச்சிற்றம் பலம் போற்றி.”

 

பாயிரம் முற்றிற்று.

 

 

சிவமயம்.

திருச்சிற்றம்பலம்.

 

நூல்         

சிதம்பர இரகசியமும்

நடராஜ தத்துவமும்

 

நடராஜ ஸ்தோத்திரம்

      ஸத்யம் ஞான மனந்த மேகமமலம் |

            விக்ஞான மானந்தமோம்

      சந்தோகா: சமுபாஸதே யமநிசம்

            ஹ்ருத்பத்ம மத்யே ஸ்திதம் |

      தம் ஶ்ரீதப்ர ஸபாந்தரே ஸஹமஹா

            சக்த்யா க்ருபா கெளரவாத் |

      ந்ருத்யந்தம் நடராகமாதி புருஷம்

            வந்தே துரீயம் சிவம் ||

 

(இதன் பொருள்) – எவன், ஸச்சிதானந்தஸ்வரூபனும், ஏகனும், காலதேச வஸ்து பரிச்சேதமற்றவனும், பிரணவ லக்ஷ்யார்த்தஸ்வரூபனும், சாந்தோக்ய உபநிடதத்தில் தகர வித்தையால் உபாஸிக்கப்படுபவனும், ஹ்ருதயகமலத்தில் விளங்குபவனும், ஆதிபுருஷனும், துரீய சிவனுமாவனோ, அவனே, ஶ்ரீ சிதம்பரமென்னும் மஹா க்ஷேத்திரத்தில், ஹ்ருதய புண்டரீகமாகும் தஹராகாச சபையில், மஹா சக்தியாகும் ஶ்ரீ சிவகாமியம்மையாரோடு, ஆன்மாக்களிடமுள்ள கருணையால், ஆனந்த தாண்டவம் புரிகின்றனர். இத்தகைய ஶ்ரீ நடராஜ ஸ்வரூபத்தை நமஸ்கரிக்கின்றேன்.

      கடல்சூழ்ந்த இப்பூவுலகில், உத்தமோத்தமமான புண்ணிய பூமியென்று யாவராலும் புகழப்பெற்ற பரதகண்டத்தில், பாரதவர்ஷத்தின் ஹ்ருதயம் போன்ற சோழநாட்டின் மத்தியில், முத்துமாலையின் நடுநாயகம் போல் விளங்கும் சிதம்பரமென்னும் திவ்விய க்ஷேத்திரத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கா நிற்கும் ஶ்ரீ நடராஜப் பெருமான், கனகசபையில் உண்மைத் தொண்டர்களின் மீதுள்ள கருணையால் ஆனந்த தாண்டவம் புரிகின்றனர்; இது யாவர்க்கும் வெளிப்படையாய்த் தெரிந்த விஷயமேயாகும்.

      இத்தலத்தைப்பற்றிய வரலாறுகள், வடமொழி ஸ்காந்த புராணத்துள் அடங்கிய ஶ்ரீ சிதம்பர மஹாத்மியத்தில் வெகு விரிவாய்க் கூறப்பட்டுள்ளன. இது இருபத்தாறு அத்தியாங்கள் கொண்டதாகும்.

      புண்டரீகபுர மகாத்மியம், வியாக்கிரபுர மகாத்மியம், தில்வ வன மகாத்மியம், ஹேமஸபா மாகாத்மியம், பதஞ்சலி விஜயம் முதலிய வடமொழி நூல்களும் இத்தலத்தின் பெருமையை நன்கு விளக்குகின்றன. இங்ஙனமே தமிழ்ப் பாஷையிலும், சிதம்பரமான்மியம், கோயிற் புராணம், முதலிய நூல்கள் இத்தலத்தைப்பற்றி விசேஷமாய்க் கூறுகின்றன.

      சிதம்பரம் எல்லாச் சிவஷேத்திரங்களுள்ளும் முதன்மைபெற்று விளங்குவதாதலின் இத்தலத்திற்கு யாதொரு அடைமொழியுமில்லாமல் “கோயில்” என்னும் திருநாமம் ஏற்பட்டுள்ளது. இதற்குப் பல பெயர்களுள்; அவை தில்லைவனம், புலியூர் அல்லது வியாக்கிரபுரம் புண்டரீகபுரம், ஆகாச்க்ஷேத்திரம், சிற்றம்பலம், கனகசபை, சிற்சபை யென்பனவாகும்.

      சிதம்பர மஹாத்மியத்தையும், சிதம்பர ரஹஸ்யத்தையும் சுருக்கமாய்க் கூறுவோமாயின்; கருணைக்கடலாய் விளங்கும் பரமசிவம், ஸகல பிராணிகளும் பிறப்பிறப்பாம் பெருங் கடலினின்றுங் கரையேறி நித்தியானந்தப் பெருவாழ்வெய்தும் பொருட்டு இத்தலத்தில் கனகசபையில் முப்பட்டு முக்கோடி தேவர்களும் ஸகல ரிஷிகளும் தில்லை முவ்வாயிர முனிவர்களும் புடைசூழப் பற்பல வாத்தியங்கள் அநுஸரித்து முழங்க ஶ்ரீ நடராஜ கோலத்தோடு ஶ்ரீபதஞ்ஜலி வியாக்கிரபரதர், ஸிம்ஹவர்மனென்னும் ஹிரண்யவர்மன், இவர்கள் மிகக் களிப்புடன் தரிசிக்க ஆனந்த தாண்டவம் புரிந்தருளினாரென்பதேயாகும்.

      இவ்விஷயம், ஸுதஸம்ஹிதை, முக்தி கண்டம் எட்டாவது அத்தியாயம் முழுமையிலும் வெகு விஸ்தாரமாய்க் கூறப்பட்டுள்ளது. அன்றியும் அதிலேயே ஒன்பதாவது அத்தியாயத்தில் ஆனந்த தாண்டவ தரிசனமே முக்திக்குச் சுலபமான வுபாயமென்றுங் கூறுகின்றது. ஸம்ஸார ஸாகரத்தினின்றுங் கரையேறி நித்தியானந்தப் பெருவாழ்வெய்த வேண்டுமென்னும் தீவிரதர இச்சையுடைய முமுக்ஷூக்கள் மேற்படி அத்தியாயங்களை நன்குணர்தல் அவசியம்.

      சிதம்பரமாகும் புண்டரிகபுரத்தில் தகராசாசத்திற்குள் விளங்கும் சிற்சபையில் நிஷ்கள பரசிவம் பராசக்தியோடு ஸகளிகரித்து ஆனந்த தாண்டவம் புரிவதை அறிவுக் கண்ணால் தரிசனம் செய்தால், சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய மோக்ஷம் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தித்திக்கு மென்பது ஸகல வேதாந்த சித்தாந்த ஆகம, புராணாதிகளின் சிதையாத சித்தாந்தமும் பெரியோர்களது அனுபவமுமாகும்.

      இவ்விஷயம் கீழ்க்கண்ட விஷயங்களில் தத்துவ ஆராய்ச்சியால் நன்கு புலப்படும். அவையாவன: -

      1.     புண்டரீகபுரம் அல்லது பிரஹ்மபுரம்

      2.     தகராசாசம்

      3.     சிதம்பரம் அல்லது சிதாகாசம்

      4.     ரஹஸ்யம்

      5.     ஶ்ரீ நடராஜ மூர்த்தியின் தத்துவம் முதலியன.

      ஶ்ரீ ஸுதஸம்ஹிதை, யக்ஞவைபவ கண்டம் 29-ம் அத்தியாத்தில் சிவம் விளங்கும் ஸ்தானங்களின் விசாரம் விஸ்தாரமாய்ச் செய்யப்பட்டுள்ளது. அதில், புண்டரீகபுரமாகும் சிதம்பர க்ஷேத்திரம் சிவஸ்தானங்களிலெல்லாம் மிகவும் மேன்மை பொருந்தியதென்று புகழ்ந்து கூறப்பட்டுள்ளது; ஆங்கறியவும்.

      சிவம் எங்கும் வியாபகமாயிருத்தலின் அது விளங்கும் ஸ்தானங்கள் அண்டத்திலுமுண்டு, பிண்டமாகும் சரீரத்திலும் உண்டு. அண்டத்தில் விளங்குவது விராட்ஸ்வரூபம்; பிண்டத்தில் விளங்குவது ஆன்மசிவம். ஹ்ருதயம்லிங்க சரீரம் – இது ஸ்தூல சரீரத்தின் மத்தியிலுள்ளது. தாமரை மலரைப்போன்றுள்ளது. அண்ட வடிவஸ்தூல விராட்டின் ஹ்ருதயஸ்தானம் சிதம்பர க்ஷேத்திரமாமென்பது ரகசியம்.

      ஹ்ருதயத்திற்குள் மிகவும் அற்பமான ஆகாசம் விளங்குகின்றது. இதற்குத் தான் தகராகாசமென்று பெயர். இதற்குள் இருப்பது சிதாகாசமாகும். இவ்விஷயம்,

     

என்னும் உபநிஷத் பிரமாணத்தால் நன்கு வெளியாகின்றது.

(இதன் பொருள்) – “பாப வாசனைகளற்றதாயும், பரசிவத்திற்கு வாசஸ்தானமாயும் சரீரத்தின் மத்திய பாகத்தில் விளங்குவதாயுமுள்ள ஹ்ருதய கமலத்தில் தகராகாசம் இருக்கிறது. இது சோக (துக்க) மற்ற ஸ்தானமாகும். இது மிகவும் நுட்பமாயும் அற்பமாயுமுள்ளது. இதற்கும் ஆந்தரமாகச் சிதாகாசம் விளங்குகின்றது. இச்சிதாகாசத்தையே சரீரமாகவுடையவன் பரமாத்மா. இவனே முமுக்ஷூக்களால் உபாஸிக்கத்தக்கவன்.”

      மேற்கூறிய உபநிஷத் பிரமாணத்தால் புண்டரீகபுரத்தின் தத்துவமும் அதனுள் விளங்கும் சிற்றம்பலத் (தகராகாசத்)தின் தத்துவமும், அதற்கும் உள்ளீடாய் ஸ்வயம் பிரகாசமாய் விளங்கும் சிதாகாசத் (சிதம்பரத்)தின் தத்துவமும் நன்கு வெளியாகின்றன.

      1.     ஹ்ருதய புண்டரீகம்      -      சிதம்பர க்ஷேத்திரம்

      2.     தகராகாசம்              -      பொற்சபை

      3.     சிதாகாசம்               -      சித்சபை (ரஹஸ்யம்)

      கனகசபையாகும் தஹராகாசத்தில் ஶ்ரீ சிவகாமியம்மையாருடன் கூடி நடராஜ கோலத்தோடு பரசிவம் ஸகளீகரித்து விளங்குகின்றது.

      சிதாகாசமாகும் ரஹஸ்யத்தில் பரசிவம் சித்சக்தியபின்னமாய் விளங்குகின்றது. இது நிஷ்கள சிவமாகும்.

      சிதாகாசத்திலுள்ள ரகசியங்களை வெளிப்படையாய் கண்டு விவரித்துக் கூறுதல் கூடாதென்பது பரமேஸ்வரனது கட்டளை. இவ் விஷயங்கள் குருமுகமாய்த் தான் தெரிந்துகொள்ள வேண்டும்; ஆயினும் சில உத்தமாதிகாரிகளுக்குப் யோகமாக ஈண்டுச் சில விஷயங்கள் மிகவும் சுருக்கமாகக் கூறப்படுகின்றன.

சிதம்பர க்ஷேத்திர ஆலய அமைப்பும் அதன் தத்துவமும்

      பரமசிவம் எங்கும் வியாபகமாய் இருந்தாலும் ஆலயங்களில் விசேஷமாய் விளங்குகின்றனவென்பது வேதாகமங்களின் துணிபாகும். தேகமே கோயில். தேகத்தின் அமைப்பைப் போலவே கோயில்களின் அமைப்பும் இருக்கவேண்டுமென்று சிற்ப சாஸ்திரங் கூறுகின்றது. ஒவ்வொருவனும் தன் சரீரத்திற்குள் இதயக்குகையில் பரமசிவத்தைக் காணுதல் வேண்டும். இங்ஙனம் உண்ணோக்கமில்லாதவர்களின் பொருட்டுச் சரீர அமைப்பின்படியே ஆலயங்களையமைத்து உள்நோக்கமின்றிய மத்திமாதிகாரிகளும் பஹிர்முகத்தில் கடவுளைத் தரிசித்து வழிபடுதற்காகவே பெரியோர் ஆலயங்களையமைத்துள்ளார். சிதம்பரத்தின் கோயிலும் இவ்வண்ணம் அமைக்கப்பட்டதேயாகும். யோகசாஸ்திரவிற்பன்னரும் ஞானியுமான ஶ்ரீ பதஞ்ஜலி பகவான் தேவ சில்பியால் சிதம்பரம் கோயிலைக் கட்டுவித்தனரென்பது தக்க பிரமாணங்களாற் பெறப்படுகின்றது.

சிதம்பர ஆலயத்தின் தத்துவம்.

      சிதம்பரத்தில் ஶ்ரீ நடராஜப் பெருமான் தக்ஷிணாபி முகமாய் விளங்குவதால் ஒரு யோகியின் சரீரத்தை வடக்கே சிரசும் தெற்கே பாதமுமாக வைத்து நோக்கினால் அந்நிலையும் இவ்வாலய அமைப்பும் ஒத்திருக்கும்.

      ஆலய பாகங்கள்         -      (யோகியின்) சரீர பாகங்கள்

      ஆயிரக்கால் மண்டபம்    -      ஸஹஸ்ராரம்

      சிவகங்கை               -      அமிர்தவாபிகை

ஆக்ஞை                 -      ஶ்ரீ நடராஜமூர்த்திக்கு மார்கழி – ஆனி   மாதங்களில் நடக்கும் மஹாபிஷேக மண்டபம்.

ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தியும்        

ஜ்யோதிர்லிங்கமும்

எழுந்தருளியுள்ள

ஸ்தானம்                -      விசுத்தி

 

      திருச்சிற்றம்பலம்         -      அநாஹதம் (ஹ்ருதயம்)

      இதில் பிரஹ்ம, விஷ்ணு, ருத்திர, மகேஸ்வர ஸதாசிவ பீடங்களுள்ளன. பஞ்சக்ஷரப் படிகளும் உள்ளன; இவ்வம்பலம் தரை மட்டத்தைவிட உயர்ந்து நான்கு பக்கங்களிலும் கதவுகளைக் கொண்டதாய் இருக்கிறது. இக் கதவுகளே அக்ஞானமென்னும் மறைப்பாகும். 96 தத்துவங்களும் ஜன்னல்களாகும். நடுவேயுள்ள நான்கு கம்பங்கள் நான்கு வேதங்கள். சுற்றிலுமுள்ள 28 மரத் தூண்கள் காமிகாதி இருபத்தெட்டாகமங்கள். தரை மட்டத்திற்கு மேல் உயர்ந்திருக்கும் அம்பலம் விளங்கும் பிரதேசம் சுத்த வித்தையாகும். ஜகன்மாதாவாகிய ஶ்ரீ சிவகாமி அம்மையாரும், ஶ்ரீ ஆனந்த தாண்டவம் புரியும் நடராஜமூர்த்தியுமெழுந்தருளியுள்ள ஸ்தானமும், சிதாகாசமாகிய ரஹஸ்ய ஸ்தானமும் சிவ, சக்திப்பிரணவ பீடமாகும். பிரகாச விமர்சப் பிரணவங்களாகும் சிவ சக்திப் பிரணவங்களின் வாக்கியார்த்தம் ஶ்ரீ நடராஜமூர்த்தியும் சிவகாமியம்மையுமாகும். லக்ஷ்யார்த்தம். சிற்சக்தியபின்ன பரமசிவம். இது நிஷ்களம். ஸ்தூல நடராஜமூர்த்திற்கு ஸுக்ஷ்ம ஸ்வரூபமொன்றுண்டு. இதுதான் இரத்தின ஸபாபதியாகும். ஶ்ரீ நடராஜஸ்வரூபத்திற்கு ஒரு அவ்வியத்த வடிவமும் உண்டு. இதுதான் ஸ்படிகலிங்கம். இம்மூன்று ஸ்வரூபங்களுக்கும் பிரதி தினம் ஆறு காலங்களிலும் விசேஷ ஆராதனைகள் நடக்கின்றன. ஸ்யம்பிரகாசமாய் வெட்ட வெளியாய் விளங்கும் சிதாகாசத்தை ரஹஸ்யம் என்று கூற வேண்டுமாயின் அதற்கு ஒரு மறைப்பு இருத்தல் வேண்டும். இம்மறைப்புத் திரையின் முற்பாகம் கருப்பு நிறமாயும், பிற்பாகம் சிகப்பு நிறமாயும் அமைந்துள்ள காரணத்தால், அவித்தையே வித்தையாயும், மாயையே சித்சக்தியாயும் விளங்கும் தன்மை யுணரப்படுகின்றது. இத்திரைக்குப் பின் ஒளிர்வது செம்பொன்மயமான வில்வ ஹாரம், மூன்று தளங்களையுடைய பத்தரைமாற்றுப் பொன்னாலான வில்வம் சுத்தத் திரிபுடியைச் சூசிப்பிக்கின்றது. அஹம்ஸ:; ஸோஹம்; என்பது சுத்தத் திரிபுடி; அதற்குங்கீழ் விளங்குவது, சிவசக்தியைக்கிய பரப்பிரஹ்மஸ்வரூபம். இந்த நிலையையுணர்த்துவது சிவசக்தி ஸம்மேளன யந்திரமாகும். இதற்கும் பிரதி தினமும் ரஹஸ்ய பூஜை நடந்து வருகிறது. இதனையாராதிக்குங் கிரமம் ஶ்ரீ பதஞ்ஜலி பகவானால் அருளப்பட்டு ஆராதிக்கும் தீக்ஷிதர்களுக்குள்ளே மிகவும் ரகசியமாய்ப் போற்றப்படுகிறது.

      இத்தகைய மகிமைகளும் தத்துவமுங் கொண்டது சிதம்பர ஆலயமும் ரஹஸ்யமுமாகும்.

      சிதாகாசம் – தத்துவாதீதஸ்வரூபம்

      கனகசபை – ஸர்வ தத்துவாத்மக வடிவம் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத தத்துவாதீதஸ்வரூபமாயிருப்பதாற்றான் சித்ஸபையை ரகஹ்யம் என்று பெரியோர் கூறுகின்றனர். சபை, அம்பரம், அம்பலம், என்பன ஒரு பொருட் சொற்கள்.

      சிதம்பர ரகசியம் ஆன்மசிவ ஐக்கிய நிலையாகுமென்பது சிவஞான சிகா மணியாய் விளங்கிய ஶ்ரீ தாயுமான ஸ்வாமிகள் தாமியற்றியருளிய திருப்பாடல்களில் “சிதம்பர ரகசியம்” என்னும் தலைப்பின் கீழ் முப்பத்து மூன்று பாக்களில் விமர்சித்துள்ளார்.

                தானான தன்மயமே யல்லா லொன்றைத்

            தலையெடுக்க வொட்டாது தலைப்பட்டடாங்கே

      போனாலுங் கர்ப்பூர தீபம் போலப்

            போயொளிப்ப தல்லலாது புலம்வே றின்றாம்

      ஞானாகர ரத்தினொடு ஞேய மற்ற

            ஞாதுருவும் நழுவாமல் நழுவி நிற்கும்

      ஆனாலும் இதன்பெருமை யெவர்க்கார் சொல்வார்

            அதுவானால் அதுவாவர் அதுவே சொல்லும்.

 

      அதுவென்றால் எது வெனவொன்றடுக்குஞ் சங்கை

            யாதலினால் அதுவெனலும் அறவேவிட்டு

      மதுவுண்ட வண்டெனவும் ஜனகராதி

            மன்ன்வர்கள் சுகரிமுதலோர் வாழ்ந்தா ரென்றும்

      பதியிந்த நிலையெனவும் என்னையாண்ட

            படிக்கு நிருவிகற்பத்தால் பரமாநந்தக்

      கதிகண்டு கொள்ளவும் நின்னருள் கூரிந்தக்

            கதியன்றி புறங்கேன் மேற்கருமம் பாரேன்.

 

என்னும் திருப்பாக்களில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

      சிதம்பர ரகசியமென்னும் விஷயத்தைத் துருவியாராயின் அகண்டாகார விருத்தியில் பிரதிபலித்த சித்தே சிதம்பரமாகும் சிதாகாசமாமென்றும், அகண்டாகார விருத்தியே பொற்சபையாமென்றும் நன்கு புலனாகின்றன.

நடராஜ சேவையின் சிறப்பு.

      இந்நடராஜமூர்த்தி பதஞ்சலி வியாக்கிரபாதர் முதலிய மகாத்மாக்கள் பரமானந்த மயமாய் விளங்கும்படி பூலோகத்தின் கண் ஆனந்த நடனஞ் செய்தருளுகின்றராதலின் அம்மூர்த்தியினது பாதசேவையே நாம் பரமானந்த மடைவதற்குத் தக்கவேதுவாம். இது பற்றியன்றோ சான்றோர், “காதரமார் தருமனமே நிலைகலங்கே லினிமன்றி, லாதரமா துடனாடு மண்டனடங் கண்டனையால்” என்று கூறியிருக்கின்றனர்.

      கரண வியாபாரமுடைய ஒவ்வொரு பிராணியும் துக்க நீக்கத்தினையும் சுகப் பேற்றினையும் விரும்புவ தியல்பாயிருத்தலின், மெய், வாய், கண், மூக்குச் செவியென்னும் ஐம்புல வுணர்வோடு மனவுணர்வையும் உடைய மக்கள் துக்க நீக்கத்தினையும், சுகப்பேற்றினையும் விரும்பாதிரா ரென்பது நமதனுபவத்தினால் விளங்குதலின், துக்க நீக்கத்தினையும் சுகப்பேற்றினையும் கருதி ஶ்ரீ நடராஜ மூர்த்தியினது திருவடிகளைத் தஞ்சமாக வடைந்து அன்புமிக்குச் சேவித்தலே நமது முக்கியக் கடமையாகும்.

      பெருந்துன்ப முற்ற ஒருவன் தன் துன்பத்தை யொழித்து இன்பத்தை யடையப் பேராற்றலும் பெருங் கருணையு முடைய ஒருவனை ஆதாரமாகவடைந்து அவனது திருவடியில் விழுந்து பிரார்த்திப்பது போலப் பிறப்பென்னும் பெருந்துன்பமுடைய நாம் அத்துன்பத்தினை யொழித்து முத்தியென்னு மின்பத்தினை யடையுமாறு முடிவிலாற்றலும் பேர்ருளுமுடைய ஶ்ரீ நடராஜ மூர்த்தியைத் தஞ்சமாக வடைந்து அம்மூர்த்தியின் இன்பமணங்மகழும் பொற்பாத கமலங்களில் விழுந்து பிரார்த்தித்தல் வேண்டும். இதுவே நமக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உறுதியான துணையாகும்.

      பாதசேவையே பரமானந்தம் பெறுதற்குத் தக்க சாதனமாயிருப்பது பற்றி யன்றோ தெய்வப் புலமைத் திருவள்ளுவநாயனார் “கற்றதனா லாயபய னென் கொல் வாலறிவ, னற்றாடொழாஅ ரெனின்”, “மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார், நிலமிசை நீடுவாழ்வார்”, “வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்கியாண்டு மிடும்பையில்”, “பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா, ரிறைவனடிசேரா தார்” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

 

ஶ்ரீ நடராஜ கோலத்தின் ரகசியம்.

      பிரஹ்மபுரமாகிய சிதம்பரத்தில் (சிதாகாசத்தின்கண்) கண்ணுதற்பெருமான் நடராஜ கோலமாக லிருந்தாடுவது “அப்பெருமான் அசைந்தாலன்றி அணுவும் அசையாது; அப்பெருமான் ஆட்ட உயிருள்ல பொருள் உயிரில்லாத பொருளென்னு மிரண்டுமாடுகின்றன” என்பதை விளக்குவதாம். இதுபற்றித் தான் பெரியார் “ஆட்டுவித்தா லாரொருவராடாதாரே” என்று திருவாய் மலர்ந்தருளினர். இந்த நடராஜ கோலம் “உயிர்கட்கு இயல்பாக ஒரு சுதந்திரமுமில்லை. சிவத்தின் சன்னிதான விசேஷத்தால் அவை சுதந்தர முடையனபோற் காணப்படுகின்றன” வென்னுமிரகசியார்த்தத்தைக் குறிப்பித்து நிற்பதாம்.

பஞ்சபூத ஸ்தலங்கள்.

      பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்னும் பூத பஞ்சலிங்க ஸ்தலங்களில் சிதம்பரம் ஆகாயலிங்க ஸ்தலமாயிருத்தலால் அதன்கண்ணெழுந் தருளியானந்தத் தாண்டவஞ் செய்யும் எம்பெருமானது திருக்கைக்குறி ஆகாயம் போல ஒன்றோடும் பற்றாது “என்னையார் அடைக்கின்றார்களோ அவர்களை யான் எனதென்னும் இருவகைப் பற்றினின்றும் நீக்கிப் பரமானந்தமாய் விளங்கும்படி செய்கின்றேன்” என்று அறிவிப்பது போலவாம். இதுபற்றித் தான் திருநாவுக்கரசு சிவாமிகள் “கைந்நின்ற வாடல்கண்டாற் பின்னைகண் கொண்டு காண்பதென்னே” என்று திருவாய் மலர்ந்தனர்.

      காஞ்சிபுரத்தில் பிருதிவி லிங்கமும், திருவானைக்காலில் அப்புலிங்கமும், திருவண்ணாமலையில் தேயுலிங்கமும், சிகாளத்தியில் வாயுலிங்கமும், சிதம்பரத்தில் ஆகாயலிங்கமு மிருத்தலால் சிதம்பரநடனமூர்த்தி உண்மையாகத் தமக்கெனக் குறிக்கப்பட்ட ஓருருவு மில்லாதவ ரென்பதும் அன்பர்கள் விரும்பியவாறு பல்வேறு உருவங்களைக் கொள்ளுபவ ரென்பதும் அறியத்தக்கனவாம். “அங்ஙனமறிந்தவர்க்கே சித்தசாந்தி சிதம்பரமாத் தானேதிகழும் அனுபவமுண்டாம்.

பஞ்ச நடனசபைகள்.

      இந்நடராஜப்பிரான் நடனஞ் செய்யும் ஸ்தலங்கள் சிறப்பாகவைந்தாம். அவை திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலமென்பனவாம். இவற்றுள் நடனசபைகள் முறையே இரத்தினசபை, பொற்சபை, இரசித (வெள்ளி) சபை, தாமிர (செம்பு) சபை, சித்திரசபை யென்பனவாம். இவ்வைந்து சபையிலும் அன்புடன் சென்று அருள் நடங் கண்டு இன்புருவானவரே இனிப்பிறவா நிலையை யடைவரென்க.

நடராஜர் வடிவமே பஞ்சாக்ஷரமெனல்.

      அன்பரெல்லாம் என்புருகிப் பரவசமாகும் வண்ணம் ஶ்ரீ சந்திரசேகரன் சூக்கும பஞ்சாக்ஷர மென்றும், ஒருதலை மாணிக்கமென்றும் சொல்லப்படும் “சிவாயநம” என்னுந் திருவஞ்செழுத்தின் திருவுருக்கொண்டு உயிர்க்கு நேர்ந்துள்ள பிறவிப் பிணியென்னும் அபாய மற ஆநந்த நிருத்தஞ் செய்தலை அறிந்தவர்க்கன்றோ அநாதியாகத் தொடர்ந்து வந்துள்ள பிறப்பிளமை மூப்புப் பிணியோடாஞ் சாக்காடு ஒழியும். இதுபற்றியன்றோ ஒளவைப்பிராட்டியார் “சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க் கபாயமொருநாளு மில்லை” யென்றருளிச் செய்தனர்.

      மனம், வாக்குக் காயமென்னும் திரிகரணமும் மாறுபாடின்றி யொருமைப்பாடு பெற்றவிடத்துத்தான் சிவாநந்த நிலையுண்டாவதாயிருத்தலின், அதற்குரியசாதனம் மேற்கூறியவாறு பஞ்சாக்ஷர வடிவமாய் மலைமகள்காண மகிழ்வுடனாடும் ஶ்ரீ நடராஜ வடிவ்மேயாம். வாக்கால் பஞ்சாக்ஷர ஜபமும், மனத்தால் பஞ்சாக்ஷர தியானமும், செய்யுமிடத்துக் கண்ணாற் காணும் பஞ்சாக்ஷரம் ஶ்ரீ நடராஜ விக்கிரகமின்றி வேறொன்று இன்மையின் அம்மூர்த்தியைத் தரிசித்தல் அத்தியாவசியமாம்.

நடராஜமூர்த்தியே பஞ்சாக்ஷரவடிவ மென்பது.

      அந்நடராஜப்பெருமான், திருவடி ‘ந’காரமாகவும், திருவுந்தி ‘ம’காரமாகவும், திருத்தோள் ‘சி’காரமாகவும், திருமுகம் ‘வ’காரமாகவும், திருமுடி ‘ய’காரமாகவும் கொண்டு, ஹிருதய குகையாகிய தகராகாச மென்னும் சிதம்பரத்தின்கண் ஆநந்த தாண்டவஞ் செய்தலைச் சற்குரு மூலமாய்ச் சந்தேகவிபரீதங்களற வறிந்து அந்நடனத்தின் உண்மையை யாய்ந்து அறிபவர்க்கே இனிப் பிறவா நிலையுண்டாம்.

      ஆகாயமானது பூதாகாயமென்றும், மனாகாயமென்றும், சிதாகாயமென்றும் மூன்று வகைப்படும். இம் மூன்றாகாயங்களிலும் சச்சிதாநந்தப் பரம்பொருள் நடித்து ஜீவர்களுக்கு இம்மை, மறுமை, விடென்னு மூன்றையும் அருளிச் செய்கின்றார் என்பது வேதாகமங்களின் சித்தாந்தமாம்.

1.     பூதாகாய நடன சேவையானது ஆங்காங்குள்ள சிவதலங்கள் பலவற்றுற்றுஞ் சென்று குறிப்பிட்ட நாட்களில் ஆகம விதிப்படி ஶ்ரீ நடராஜப் பெருமானது திருக்கூத்தைத் தரிசித்தலேயாம்.

2.     மனாகாய நடன சேவையாவது பஞ்சாக்ஷர வடிவமாய் விளங்கும் ஶ்ரீ நடராஜமூர்த்தியை மனத்தால் நன்கு தியானித்தலேயாம். இது ஒருமுகப்பட்ட மனத்துக்கே சாத்தியமாம். இப்பஞ்சாக்கரமே சகளம், சகளநிஷ்களம். நிஷ்களம், ஆகிய முவ்வகை மூர்த்தங்களுக்குந் திருமேனியாம். இதன் விளக்கம் பின்னர் பஞ்சாக்ஷர மகிமையில் நன்கு கூறப்படும்.

3.     சிதாகாய நடன சேவையாவது “பஞ்சாக்ஷரத்தின் லக்ஷியார்த்தமாகிய சிவமே நான்” என்று ஸோஹம் பாவனை செய்வதாம். இதுவே சிவயோகமெனப்படும். பூதாகாய நடனசேவையால் இம்மைப்பயனும், மனாகாய நடன சேவையால் மறுமைப்பயனும், சிதாகாய நடனசேவையால் வீடும் சித்திக்கின்றன. ஆதலின், இம்மூன்று சேவையும் அவ்வவ்வதிகாரிகளுக்குத் தக்க வண்ணம் அதுவது அவரவர்க்கு அத்தியாவசியமாம்.

ஶ்ரீ நடராஜ மூர்த்தியின் வடிவம்.

      “திருவடி நிலையும் வீசுஞ் செய்யகா லுஞ்சி லம்பு

      முருவள ரொளியும் வாய்ந்த வூருவு முடுத்த தோலு

      மரைதரு புரிவுங் கச்சி னணிகளு மழகா ருந்தி

      மருளிய வுதர பந்தக் கோப்புநூல் வாய்ப்பு மார்பும்.

 

      வீசிய செய்யகையும் விடதரக் கரங்க வித்த

      தேசும்வண் டுடியு மங்கிச் செறிவுமுன் திரண்ட தோளுங்

      காசைகொண் மிடறுந் தோடார் காதும்வெண் குழையுங் காண

      மாசிலா மணிவாய் விட்டு வழங்கிடா நகைம யக்கும்.

 

      ஓங்கிய கமலச் செவ்வி யொளிமுக மலருங்கண்கள்

      பூங்குழ லுமையை நோக்கும் புரணமும் புருவப் பொற்பும்

      பாங்கமர் நுதலும் பின்றாழ் படர்சடைப் பரப்பும் பாம்பு

      நீங்கருந் தாரு நீரு நிலவுமே னிலவு நீறும்.”

 

அதாவது முயலகன்மேல் நின்றருளிய திருப்பாதமும், தூக்கியருளிய சிவந்த திருப்பாதமும், பாதங்களிற் சாத்தியருளிய திருச்சிலம்பும், திருமேனியிலே மிகுந்த பிரகாசமும், சிறந்த திருத்தொடையும், அணிந்தருளிய புலித்தோலாடையும், திருவரையிலே பொருந்திய நெறிப்பும், திருவரையிலே தரித்தருளிய கச்சின் அழகும், அழகு பொருந்திய திருவுந்தியிலே பொருந்திய உதரபந்தனச் சேர்வையும், உபவீதம் பொருந்துதலையுடைய திருமார்பும், வீசியருளிய சிவந்த திருக்கரமும், பாம்பைக் கங்கணமாகவுடைய திருக்கரத்தைக் கவித்தருளிய பிரகாசமும், வளவிய தமருகமும், தீயகலும், முன்திரண்ட தோள்களும், நீலகண்டமும், திருத்தோடு பொருந்திய காதுகளும், குற்றமில்லாத பவளம்போன்ற திருவாயிலே வெளிப்படும் திருமுறுவலினது மோகனமும், மேலாகிய செந்தாமரை மலர்போன்ற அழகையும் ஒளியையுமுடைய திருமுக மலர்ச்சியும், பூவைமுடிந்த அளகபாரத்தையுடைய உமாதேவியை அன்புடன் நோக்கும் திருநமனங்களின் அசைவும், புருவத்தின் அழகும், அழகுபொருந்திய நெற்றியும், பின்னே தாழ்ந்த விரிந்த சடைக்கற்றையும், சர்ப்பாபரணமும், கொன்றைப் பூமாலையும், தூயகங்கையும், பாலசந்திரனும், திருமேனியில் விளங்குகின்ற விபூதியும் உடையவராகிச் சத்தியாகிய சிவகாமியம்மையார் அதிசயத்துத் தரிசிக்கும்படி சிவபெருமான் நடனஞ் செய்தார்.

இவ்வானந்தத் தாண்டவமூர்த்தித் திருவுருவத்தின் தத்துவமாவது.

      ஒரு காலத்தில் தேவதாருவனத்தில் கர்மத்தையே பிரம்மாயெண்ணிச், சடமாகிய கர்மமே பலன் தருகின்றதென்று மயங்கி, ஈச்வரனை மறந்து நாஸ்திகர்களாய், கர்மத்தையே செய்து கொண்டு அவத்தில் நிற்கும் முனிவர்களின் சித்த பரிபாகத்தைச் சோதித்து அனுக்கிரக்ஞ் செய்யத் திருவுளங்கொண்டு, பரமசிவம்,

                “திருவடியின் மிதியடியுந் திகழுடைவெண் கோவணமேன்

      மருவரையும் புரிநூலும் வலஞ்சுழியுந் தியுமார்பும்

      *ஒருவரையும் இருவரையும் புரையாத வுயர்தோளும்

      பரவருதற் † பொக்கணமுந் தமருகமும் பலிக்கலனும்,     

      சீராருந் திருமிடறுஞ் செங்கனியாய்ப் புன்சிரிப்பு

      மேராரும் வார்காது மிலகுவிழித் தொழினயப்பும்

      வேராருந் திருநுதற்கீழ் விருப்புருவத் திருப்புருவத்

      தாராநிற் குங்கமலத் தனிமலர்போற் றிருமுகமும்.”

 

[* மார்பில் பொருந்திய உத்தம லக்ஷணமாகிய ஏகரேகையும்; † பானபாத்திரம் (கமண்டுலு)]

      அழகுவாய்ந்த சரீரமும் உடைய ஓரியக்க வுருவங்கொண்டு, திருவரியை முவ்வுலகங்களையும் மயக்கும் ஆற்றலையுடைய ஓர் மோகினிப் பெண்ணுருவங் கொள்ளப் பணித்து, இருவரும் அத்தேவதாரு வனஞ்சென்றனர். பின்னர் பிக்ஷாடன ரூபந்தரித்த எனதையன் ஒவ்வொரு ஆசிரமத்தின் வாயிலிலும் நின்று பாதச்சிலம்பை ஒலிக்கும்படி செய்து, கையிற்பிடித்த தமருகத்தை முழக்கி உல்லசமாய் நின்று பிக்ஷைக்கு வந்ததைக்குக்குறிப்பித்தருளினர். இதைக் கண்ட ரிஷிபத்தினிகள் பிக்ஷைகொண்டு அளிக்க வந்தவர்கள், பரமசிவங்கொண்டருளிய காபாலிக வடிவத்தைக் கண்டவுடன் மதிமயங்கிப் பரவசமானார்கள். இங்ஙனம் முனிபத்னிகள் பிக்ஷாடன மூர்த்தியால் மோகிக்கப்பட்டவர்களாய்க் கிடக்க, தாருகவனத்து முனிகள் மாதவன் கொண்டருளிய மங்கை வடிவத்தைக் கண்டு காமபரவசர்களாய், சடைகள் அவிழவும், அணிந்துகொண்டிருக்கும் மரவுரிகள் நழுவவும், கையிற்கொண்ட ஜபமாலை கீழேவிழவும் மோகினிபின்பின் சென்று மதிமயங்கிக் கிடந்தனர். இங்ஙனமிருக்கச் சில முது முனிவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து தங்கள் பத்தினிகளின் மத்தியில் பிக்ஷைவாங்கும் சாக்குக் கொண்டு அழகு வாய்ந்த சரீரத்துடன் உல்லாசமாய் நிற்குங் காபாலியைக் கண்டு, மிகுந்த கோபங்கொண்டவர்களாய், “ஒருவரும் நாடற் கரிய நமதாச்சிரமத்தில் இக்காபாலிகனும் மோகினியும் நுழைந்து மகாபதிவிரதைகளாகிய நமது பத்தினிகளையும் இந்திரிய நிக்கிரகம் செய்த நம்மையும் மயக்கிவருகின்றார்களே, இதென்ன அநியாயம்” என்று பெருமூச் செறிந்து மகாகோபமுற்றவர்களாய் அநேக கடூரமான சாபங்களை யிட்டனர். முனிவரிட்ட சாபங்களெல்லாம் முப்புரமெரித்த முழுமுதற் கடவுளிடத்தில் அணுகச் சக்தியற்று விருதாவாய்ப் போயின. இதைக்கண்ட தவசிகள் உடனே பிறப்பிறப்பற்ற பிஞ்ஞகனையும் மோகினியையும் கொல்லக்கருதி ‡ [‡ மாரண ஹோமம்] ஆபிசார ஹோமம் செய்ய எத்தனித்துக் குண்டமண்டலாதிகளை ஏற்படுத்தி, ஆபிசார மந்திரங்களை ஜபித்து ஹோமஞ் செய்தனர். உடனே அவ்வோமகுண்டத்தினின்றும் அதிபயங்கரமாகிய (1) வேங்கையொன்று எழுந்தது, அதை யம்முனிகள் சர்வசங்காரமூர்த்தியைச் சங்கரித்து வரும்படி ஏவினார்கள். ஏவவும், அதிக கோபமாய்த் தன்னை நோக்கி வருகின்ற வியாக்கிரத்தைப் பரம சிவம் கண்டு புன்முறுவல் செய்து அதனுடலைத் தமது நகத்தின் நுனியாற் கிழித்து அதன் தோலை வஸ்திரமாக வணிந்தார். இதைக்கண்ட முனிவர்கள் முன்னிலும் அதிக கோபங்கொண்டு ஒரு பெரிய (2) சர்ப்பத்தை யுண்டாக்கி ஏவ, அதைப் பரமேச்வரன் தமது வலது கையில் கங்கணமாகத் தரித்தருளினர். பின்னர் இருடிகள் தங்கள் தவவலிமையால், மலையை யொத்த கரிய உடலையும், நெருப்புப்பொறிகளைக் கக்குங் கண்களையும், எரிகின்ற சிவந்த தழலையொத்த மயிர்களையும், குறளாகிய சரீரத்தையும், பெருத்த வாயையும், நீண்ட பல்லையும், பெருத்த புஜத்தையும், தன்னை அநேக கருநாகங்கள் சூழ்ந்துவர ஒரு நீண்ட சர்ப்பத்தைக் கையிற் பொருத்தி பூமண்டலமுழுதும் அதிரும்படி கெர்ச்சித்து வரும்படியான (3) ‘முயலகன்’ என்னும் ஒரு பெரும் பூதத்தைச் சிருஷ்டித்து ஈசனைக் கொல்லுமாறு அனுப்பக் காலாந்தகரான வெம்மிறைவன் அப்பூதத்தைத் தமது பாதத்தின் கீழ் அடக்கியருளினர். இதைக்கண்ட தவசிகள் தங்களுடைய தவவலிமையாற் செய்த ஆபிசாரப் பிரயோகங்களெல்லாம் பயனற்றதை யுணர்ந்து மிக்க வருத்தத்துடன் ஹோமகுண்டத்திலுள்ள (4) அக்கினியை வாரிக் காபாலிகன் மேல் இறைத்துத் தங்களுக்குச் சித்தியாயிருக்கும் (5) மகா மந்திரங்களை ஆகர்ஷித்து உச்சாடனஞ் செய்தனர். பசுபதியும் அவ்வக்கினியைத் தன் கரத்திற்றரித்து, அம்மகா மந்திரங்களை நடனஞ்செய்யும் தமது பாதங்களுக்கு நூபுரங்களாகத் தரித்தருளினர். தாருகாவனத்து ரிஷிகளும் ஆயுத மிழந்த யுத்தவிரனைப்போல் முகவாட்டத்துடன் நிற்க, அவர்களைத் தடுத்தாட் கொள்ளத் திருவுளம்பற்றிய வெமதையன், பொன்நிறமுள்ள அழகிய சடைகளை அசைத்து ஒரு பாதத்தைத் தூக்கி ஆனந்த தாண்டவஞ் செய்யத் தொடங்கினர்.

               

“விரவிய வங்கண னெங்கணும்

      விரிசடை மண்டி யலைந்திட

வெரிவிரி செங்கை சுழன்றிட

      விடிதுடி கொண்டிட வெண்டிசை

பரிபுர புண்டரி கந்தகு

      பதயுக ளம்பல ருந்தொழ

வருள்புரி யெந்தை மடந்தையு

      மதிர நடங்கள் தொடங்கினன்.”

 

      இங்ஙனம் தேவதாருவனத்தில் மகாவிஷ்ணுவும் உடனிருந்து தரிசிக்க ஆனந்ததாண்டவஞ் செய்து தவசிகட்கு அருள் புரிந்தனர்.

இனியிதன் தத்துவத்தை யாராய்வாம்.

      (1)    வேங்கை         -      அஞ்ஞானதாலுண்டான குரோத குணம்.

      (2)    சர்ப்பம்            -      மாற்சரியம்.

      (3)    முயலகன்        -      அஞ்ஞானம்.

      (4)    நெருப்பு          -      கோபம்.

      (5)    மகாமந்திரங்கள்    -      (கெட்ட வெண்ணங்கள்). (நூபுரம்).

      மேற்கூறிய யாவும் அஞ்ஞானிகளாகிய தாருகவனத்துத் தவசிகள்பாலிருந்து அவர்களுடைய சொரூபத்தை மறைத்து நின்றன. இவற்றை யீசன் அவர்களிடமிருந்து நிவர்த்தித்து அவர்களுக்கு அருள்புரிந்தனர்.

ஆநந்த தாண்டவத்தின் தத்துவமாவது.

      மாயாமலத்தினா லுண்டான கர்மபாசத்தாற் கட்டுண்டு, சுகதுக்காதிகளால் மொத்துண்டு உழலும் ஜீவர்கள் தங்கட்கு இயல்பாயுள்ள சச்சிதானந்த நிலையையடையப் பரமசிவத்தின் ஆநந்த்தாண்டவ தரிசனமே சிறந்த சாதனமாம். ஈசனது பஞ்சகிருத்தியங்களும் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபவம் (மறைப்பு), அனுக்கிரகம் (அருள்புரிதல்) ஆகிய வைந்தொழிலும் அவரது நடனமேயாம். ஈசனது பஞ்சகிருத்தியங்களைச் செவ்வனே புணர்ந்தோர்க்கே “எமக்கென இவ்வுலகத்தில் ஒரு செயலுமில்லை. எல்லாம் ஈசனுடையதே” என்னும் திடமுண்டாய்ச் சுகம், துக்கம், இலாபம், நஷ்டம், ஜயம், அபஜயம், நன்மை, தீமை, முதலிய இருமைகளில் சிக்கிச் சுழலும் மனமானது பதைப் பற்றி உபசாந்தி நிலையை அடையும், ஆதலின் பஞ்சகிருத்தியங்களின் தத்துவ ஆராய்ச்சி அவசியம் செய்யத்தக்கது.

பஞ்ச கிருத்திய தத்துவம்.

      சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபவம், அனுக்கிரகம் என்பன பஞ்ச கிருத்தியங்களாம். இவை பரமசிவத்தின் தாண்டவ ஸ்வரூபமேவாம். தாண்டவ மென்பது ஒருவகைக் கூத்து. இது அசைதல் வடிவினது. இது பரமசிவத்தின் அபின்னாசத்தியான சிற்சத்தியின் வியாபகத்தால் அன்றிக் கூடாது. இது பற்றியன்றோ ஶ்ரீ சங்கரபகவத் பாதரும்,

      “சிவமெனும் பொருளு மாதி சத்தியொடு

            சேரினெத் தொழுலும் வல்லதா

      மிவள் பிரிந்திடி னியங்குதற் குமரி

            தரிதெனா மறை பிரைக்குமா

      வைபெரும் புவன மெவ்வகைத் தொழி

            னடத்தி யாவரும் வழுத்துதா

      வைனியின்க ணொரு தவமிலார் பணிய

            லாவதோ பரவலாவதோ.”

 

என்று செளந்தரியலகரியில் திருவாய் மலர்ந்தருளினர். இந்தச் சிவாபின்ன சிற்சத்தியே, தான் செய்யுந் தொழிலுக் கிணங்கப் பராசத்தி யென்றும், ஆதிசத்தியென்றும், இச்சாசத்தி யென்றும், ஞானசத்தி யென்றும், கிரியாசத்தி யென்றும் ஐவகையாகக் கூறப்படும்.

இவற்றின் விளக்கமாவது.

பராசத்தி: -        பரமசிவம் போல் எங்கும் வியாபித்துப் பக்குவமான ஜீவகோடிகளுக்கு          அனுக்கிரகஞ் செய்வதாம். இதுவே அனுக்கிரக கிருத்தியஞ் செய்யும்             அருட்சத்தியாம்.

ஆதிசத்தி: -        இது திரோதான சத்தியாம். இது சொரூபத்தை மறைப்பதாம். ஆன்மாக்களுக்குள்ள ஆணவமலம் பக்குவமாகும்படி போகத்தைக் கொடுப்பதாம்.

இச்சாசத்தி: -      இதுவே சங்காரசத்தி யெனப்படும். உயிர்களுக்கு, மலத்தை நீக்கிச் சிவானுபவம் தரும்பொருட்டு ஏற்பட்டதாம். இதுவும் கருணை வடிவமேயாம்.

ஞானசத்தி: -       இது ஸ்திதித் தொழிலைச் செய்யும் சத்தியாம். உயிர்களின் மலத்தை நீக்கி அவர்கள் சிவானுபவத்தைப் பெறும் பொருட்டுச் செய்ய வேண்டிய உபாயங்களையறியுஞ் சத்தியாம்.

கிரியாசத்தி: -      கன்மத்துக் கிடாக ஆன்மாக்களுக்குத் தேகாதிகளை (தனு, கரண புவன போகங்களை) யுண்டாக்குஞ் சத்தியாம்.

                            “பரந்தபரா பரையாதி பரன திச்சை

                        பரஞானங் கிரியைபர போக ரூபத்

                  தருங்கருணை யுருவாகி விசுத்தா சுத்தத்

                        தனுகரண புவனபோ கங்க டாங்க

                  விரிந்தவுபா தானங்கள் மேவி யொன்றால்

                        விமலமா யைந்தொழிற்கும் வித்தாய் ஞாலத்

                  தரந்தை கெடமணிமன்று ளாடல் காணு

                        மன்னையருட் பாதமலர் சென்னி வைப்பாம்.”

 

என்று உமாபதி சிவாசாரியார் சிவப்பிரகாசத்தில் அருளிச் செய்திருப்பது இங்குணர்தற்பாலது.

      இங்ஙனம் சச்சிதாநந்த சொரூப லக்ஷணமுடைய பரமசிவம், நிஷ்களம், நிஷ்களசகளம், சகளம் என்னும் முவ்வகைத் திருமேனிகளையும் ஐவகைச் சத்திகளோடு சேர்ந்து கொண்டருளுவர். இம்மூன்று திருமேனிகளும் பரமசிவனது தடத்த லக்ஷணமாம்.

இதன் விளக்கமாவது.

நிஷ்களம்: -       (அருவத்திருமேனி சிவம் ஞான சத்தியைப் பொருந்திய போது உண்டாவதாம். இது இலயஸ்தான மென்றும், சிவ தத்துவ மென்றும் கூறப்படும். இச்சிவம் நிஷ்கள சிவமெனப்படும்.

நிஷ்கள சகளம்: -  (அருவுருவத்திருமேனி) சிவம், ஞானசத்தியையும், கிரியா சத்தியையும் சமமாய்ப் பொருந்திய பொழுது உண்டாவதாம். இது போகத்தான மென்றும் சாதாக்கிய தத்துவ மென்றும் கூறப்படும். இச்சிவம் சதாசிவ மெனப்படும்.

சகளம்: -          (உருவத்திருமேனி) ஞானசக்தி குறைந்தும், கிரியா சக்தி ஏறியும் இருக்கும் அவசரம் சகளத் திருமேனியாம். இச்சிவம் மகேச்வரன் எனப்படும்.

      நிஷ்களசிவம், சதாசிவம், மகேச்வரம் ஆகிய இவை மூன்றுக்கும் தம்முட் பேதமில்லை. சத்திகளின் றொழில் வேறுபாட்டால் பேதங்கள் கற்பிக்கப்பட்டன.

      ஞானசக்தியோடு சேர்ந்த சுத்தசிவம் அல்லது நிஷ்கள சிவம் சுத்த மாயையைப் பொருந்துதலால் நாதமும், கிரியா சத்தியோடு சேந்த சிவம் அச்சுத்த மாயையைப் பொருந்துதலால் விந்துவும், தோன்றுகின்றன.

      மாயை, சுத்தமென்றூம், அசுத்தமென்றும், பிரகிருதி யென்றும் முவ்வகைப்படும். இம்மூவகை மாயைகளிலும் பஞ்சகிருத்தியங்கள் நடைபெறுகின்றன.

      சுத்தமாயையில் நிகழும் பஞ்சகிருத்தியங்களைப் பதியே, சிற்சத்தியோட்ய் சேர்ந்து செய்தருளுகின்றனர்.

      அசுத்த மாயையின்கண் நிகழும் பஞ்சகிருத்தியங்களைப் பதி தமது கிரியாசக்தியால், அனந்தேச்வரரை யதிட்டித்து, அவர் வாயிலாகச் செய்தருளுவர்.

      பிரகிருதி மாயையிற் படும் ஐந்தொழிலையும் பதியே, அவ்வனந் நேசர் வயிலாக ஶ்ரீகண்ட உருத்திரரை யதிட்டித்து நின்று செய்தருளுவர். இச்சிகண்ட உருத்திரரிடத்தில் ஜெனனி, ரோதயித்ரி, ஆரணி என்னும் மூன்று சிவசத்திகள் பதிந்து நின்று, ஐந்தொழிலையும் செய்யும்.

      இச்சத்திகளுள், ஜெனனி நான்முகப் பிரமனிடத்து நின்று சிருட்டித் தொழிலைப்புரியும், ரோதபித்திரி மகாவிஷ்ணுவிடத்து நின்று திதித்தொழிலையும், திரோதானத் தொழிலையும் செய்யும்.

      ஆரணி, உருத்திர மூர்த்தியின் சங்கார சத்தியாம். அனுக்கிரகமும் இதன் றொழிலேயாம்.

      இது பிராகிருத பஞ்சகிருத்திய மெனப்படும் – (பிரகிருதி மாயையில் நடை பெறுவதால்.)

சிவம் ஐந்தொழிலும் செய்தற்குக் காரணம்.

      “ஏற்றவிவை யரனருளின் றிருவிளை யாட்டாக

            வியம்புவர்க ளணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே

      ஊற்றுமிக வருள்புரித லேது வாக

            வுரைசெய்வ ரொடுக்கமிளைப் பொழித்தன் மற்றைத்

      தோற்றுமல பாகம்வரக் காத்தல் போகந்

            துய்ப்பித்தல் திரோதாயி நிறுத்த லாகும்

      போற்றலரும் அருளருளே யன்றி மற்றுப்

            புகன்றவையும் அருளொழியப் புகலொ ணாதே.”

 

என்னும் ஆன்றோர் திருவாக்கின்படிப் பரமசிவம், ஐந்தொழிலையும் திருவருளின் விளையாட்டாகவும், ஜீவான்மாக்களின் துன்பகாரணமான செனன மரண சாகரத்தினின்றும் அவர்களை எடுத்து அருள் புரிதற்காகவும் செய்கின்றனர். எங்ஙனமெனின், அழித்தல் ஆன்மாக்களின் இளைப்பை யொழித்தற்கும், படைத்தல் மலபரிபாகம் வருவித்தற் பொருட்டும், காத்தல் இருவினைப் போகங்களை யுண்பித்து அவ்வினைகள் யொழித்தற் பொருட்டும், மறைத்தல் அவ்வினைப் போகங்களின் அழுத்துதற் பொருட்டும், அருளல் மலத்தை நீக்கி அத்வைத சிவத்துவந்தையளித்தற் பொருட்டுமாம். ஆதலின் அருளல் நீங்கலாக மற்றைத் தொழிகளும் அருளுக்குத் துணையாபுன்ண்மையால், அருட்டொழில்களே யாமெனக் கூறத்தகும்.

      இங்ஙனம், “பதியேயான ஶ்ரீநடராஜப் பெருமான் ஐந்தொழிலையும் செய்யினும், விகாரப்படுவதில்லை” யென்று முன்னர் கூறப்பட்டது. அஃதெங்ஙனமெனின் ஆகாயத்தில் விளங்கும் ஆதித்தன் சன்னிதியிலே தாமரைகளில் ஒன்று அலரும், ஒன்று அலர்தற்குப் பக்குவமான மொக்காயிருக்கும், மற்றொன்று வாடி யுலரும்; இங்ஙனம் அலர்தல், அரும்புதல், உலர்தல் ஆகிய முத்தொழிலும் சூரியனின் சன்னிதான விசேஷத்தால் நிகழினும், சூரியன் விகாரப்படததே போலப் பதியின் சன்னிதான விசேஷத்தால் சடசேதனப் பிரபஞ்சமெல்லாம், ஐந்தொழிலின் பாற்படினுஞ் சிவம் நிர்விகாரியாகவேயிருப்பன். இதுபற்றியன்றோ தாயுமானவப் பெருந்தகையாரும் “அக்கியளித்துத்துடைக்குந் தொழிலத்தனை வைத்து மெள்ளத் தனையேனுந் தாக்கற நிற்குஞ் சமர்த்தன்” என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார்.

      இங்ஙனம் பஞ்ச கிருத்தியங்களின் ஸ்வரூபத்தை நன் குணர்ந்து “உலகத்தில் நிகழும் யாவும் அவனுடையதே; நாமொன்றுஞ் செய்தற்குச் சுதந்தர முடையவரல்லர்.” என்று பரமசிவத்தின் பாதார விந்தங்களில் தஞ்சமடைவதே நாம் பரமானந்த முறுதற்ௐஉச் செய்ய வேண்டிய காரியமாம்.

      ஆலயங்களில் ஶ்ரீ நடராஜ மூர்த்தியின் உற்சவ காலங்களில் மேற்கூறிய பஞ்ச கிருத்தியங்கள் கீழ்க்கண்ட ஐதிகங்களாற் குறிப்பாய்க் காட்டப்படுகின்றன. அவையாவன: -

சிருஷ்டி: -         (1)    ஶ்ரீ நடராஜ மூர்த்தி, சிற்சபையினின்று அபிஷேக                             மண்டபத்திற்கு எழுந்தருளுதல்.

ஸ்திதி: -          (2)    ஶ்ரீ நடராஜ மூர்த்திக்கு (அபய) ஹஸ்தத்தில் கங்கணம்                        (காப்பு) சாத்துதல். (இரக்ஷாபந்தனம்).

ஸம்ஹாரம்: -     (3)    மேற்படி மூர்த்தத்திற்குத் திருச்சாந்து சாத்துதல்.

திரோபவம்: -      (4)    பச்சைக் கற்பூரம் சாத்துதல். (மறைத்தல்) (தற்காலத்தில்                       வெள்ளை சாத்துபடி யென்று இது வழங்கப்படுகின்றது.)

அனுக்கிரகம்: -    (5)    தரிசனம். (அருளல்)

      இவ்வாறு குறிப்பாய் உணர்த்தும் ஐதிகங்களின் உண்மையை யாய்ந்துப் பரமசிவத்தின் பஞ்சகிருத்தியங்களை மனத்திற் பாவனை செய்து “எல்லாம் அவனுடைய தொழிலே” யென அகந்தை மமதைகளை யறவே யொழித்துப் பரமாநந்தமாய் விளங்க நாம் ஒவ்வொருவரும் முயலுதல் வேண்டும்.

ஶ்ரீ நடராஜமூர்த்தி யபிஷேக நாட்களாவன.

 

      (1) “தனுர்மாதத்தில் திருவாதிரையும், (2) மாகமாதத்தில் அதாவது எந்த மாதத்தில் பருவத்தோடு மக நக்ஷத்திரம் சேர்ந்து வருகின்றதோ அந்த மாதத்தில், சுக்கிலபக்ஷ சதுர்த்தசியும், (3) சைத்ர மாதத்தில் அதாவது சித்திரையோடு சேர்ந்து வரும் பருவமுள்ள மாதத்தில் திருவேணமும், (4) ஆனி மாதத்தில் உத்திர நக்ஷத்திரமும், (5) ஆவணி மாதத்தில் சுக்கிலபக்ஷ சதுர்த்தசியும், (6) புரட்டாசி மாதம் சுக்கிலபக்ஷ சதுர்த்தசியும் ஶ்ரீ நடராஜ மூர்த்திக்கு அபிஷேகாதிகள் நடத்துதற்குரிய நாட்களாம்,” என்று காமிகாகமங் கூறுகின்றது. ஆகவே மேற்கூறிய நாட்களில் ௸ நடராஜ மூர்த்தியைத் திரிகரண சுத்தியோடு வழிபடல் வேண்டும். இங்ஙனம் வழிபடுபவர், மனாகாய நடனத்தைத் தரிசிக்கும் பாக்கியமும், அதன் மூலமாய்ச் சிதாகாய நடன சேவையும், படிப்படியாய்ப் பெற்றுச் சித்தம் சிதம்பரமாய்த் தானே திகழும் நித்திய நிலையையடைவ ரென்பது திண்ணம்.

      ஶ்ரீ நடராஜப் பெருமானுக்கு இவ் வாறபிஷேகங்களே யன்றி, அந்தந்த ஆலய பிரம்மோற்சவத்தின் கடைத்தினமாகிய தீர்த்தத்தன்றும் அபிஷேக உற்சவாதிகள் நடத்தும்படி ஆகமாதிகளில் விதிக்கப்பட்டிருக்கின்றது. ஆதலின் அன்றும் அப்பெருமானுக்கு அபிஷேகம், உற்சவம் முதலியன செய்தற்குரிய தினமேயாம்.

 

 

 

மேற்கூறிய நாட்களில் ஶ்ரீ நடராஜப்பிரானை வழிபடும் முறை.

விருத்தம்.

     

      ஓதருஞ் சிறப்பு வாய்ந்த வுயர்மதில் தில்லை மூதூர்

      காதலி னடைந்து, கூத்தன் கருணை சித்திக்க வார்வின்

      மாதமா திரையே முன்னாய் வழுத்திய நாளிலாங்கே

      ஏதமெண் ணினர்க்கும் போக்கு மெழி;ல் சிவ கங்கை மூழ்கி

     

      மன்னிய நீறு பூசி வயங்கு கண்மணியும் பூண்டு

      தன்னிகர் சிதம்ப ரேசன் சந்நிதி யடைந்து தாழ்ந்து

      துன்னிய வன்பி னோடுஞ் சூழ்ந்துமுன் னிருந்து கொண்டு  

      மின்னிய வைந்தெ ழுத்தை விதியுளி யயுத மெண்ணி.

 

      அன்றுப வாசமே பூண் டடியருச் சனையுஞ் செய்து

      மன்றுநின் றாடல் செய்யும் வள்ளலார் தனை வணங்கி

      யென்று லாறாத வின்பவெழில் நலமருள்வாய் நாதா

      வென்றுகண் மாரி சோர வென்புநெக் குருதி வாயால்.

 

வேறு.

 

      “குன்றவார் சிலை கோலிய குழகனே போற்றி

      வென்றமால் விடைமீதிவர் வேதிய போற்றி

      யொன்றவெங்கனை யாட்கொளுமுத்தம போற்றி

      மன்றமார்தரு மாணிக்கக் கூத்தனே போற்ற்.”

 

      “கம்பமால்கடக் கரியுரி போர்த்தவ போற்றி

      வம்பறாமலர் வயங்குபொற் கொன்றையாய் போற்றி

      நம்பறாதுழ லெமக்குநல் கிறையவ போற்றி

      யம்பகம் பொன்மன் றற்புதக் கூத்தனே போற்றி.”

 

வேறு.

 

      “என்றுபல் விதமா யேத்தி, யீசன்றா ளித்யத் துன்னி

      யொன்றிய ஞானியர்கட் குறுபசி நோயகற்றின்

      மன்று ளானருணடத்தை மனமறக் காணலாகு

      மென்றுமா மறைகள் கூறு மிப்புவியுய்வ தற்கே.”

 

      (இதன் பொருள்) ஓதுதற் கரிய சிறப்பினை வாய்ந்ததும், ஆகாயத்தை யளாவிய உயர்ந்த மதில் சூழ்ந்ததுமான தில்லையம்பதியை, மார்கழித் திங்கள் திருவாதிரை முதலிய (அதாவது (1) மார்கழி – திருவாதிரை – (2) மாசி – சதுர்த்தசி – (3) சித்திரை திருவோணம், (4) ஆனி – உத்திரம், (5) ஆவணி – சதுர்த்தசி – (6) புரட்டாசி – சதுர்த்தசி – (7) பிரம்மோற்சவத்தில் – தீர்த்தவாரி -) நாட்களில், அம்பலகூத்தன் அருள் சித்திக்குமாறு, அன்புடன் சென்று, நினைத்த மாத்திரத்தே சகல பாவங்களையும் போக்கும் மகிமையுள்ள சிவகங்கையில் ஸ்நானம் செய்து, பரம்சிவத்தின் திருவருள் பொருந்திய திருநிறணிந்து, பிரகாசிக்கா நின்ற அக்கமாலையைத் தரித்து, தன்னைத்தானே நிகர்த்த அம்பலக் கூத்தனின் சன்னதியை யடைந்து, முறைப்படி வலம்வந்து, வணங்கி, முன் நின்று, புனிதனாமமா மைந்தெழுத்தை மனத்தால் பதினாயிரஞ் செபித்து, அன்று விரதம் பூண்டு, அகம விதிப்படி அருச்சனை புரிந்து, அம்பலத்தில் நின்று ஆனந்த தாண்டவஞ் செய்யும் ஶ்ரீ நடராஜ மூர்த்தியை வணங்கி, “என்றும் அழியா நிலைமைத்தாகிய பரமானந்த வடிவ முத்தியை யருள்வாய் ஆண்டவனே” யென்று பிரார்த்தித்துக் கண்களில் ஆநந்த வாரி பொழியவும், என்பு நெக்குருகவும் வாய்குழறவும், பன்முறை துதித்துச் சிவனடியார்க்குத் தம்மா லியன்றவளவு உண்டி, உடை முதலியன தந்தால், அம்பலவாணன் அருள் நடனத்தை (அதாவது பூதாகாய நடனத்தினையும், அதனால் மனாகாய நடனத்தினையும் அதனால் சிதாகாய நடனத்தினையும்) கண்டு, இம்மை, மறுமை, விடென்னு மூன்றினையும் அடையலாகும் என்று மறைகள் முழங்குகின்றன. ஆதலின் நாமும் அங்ஙனமே செய்துய்வோமாக.

ஆசிரியப்பா.

      மார்கழி மதியி லாதிரை நாளில்

      சீர்கெழு மதிலேய் சிற்றம் பலத்திலும்

      சீலமார் தவத்தோ ராலவா யதனிலும்

      கோலமார் கோபுரக் குற்றா லத்திலும்

      மாலயன் போற்று மாலங் காட்டிலும்

      கருப்பிணி யொழிக்குந் திருநெல் லையிலும்

      சென்றுசென் றுன்னித் திருக்கை கூப்பி

      நின்றுகை கட்டி நெக்குநெக் குடைந்து

      கண்ணீர் பெருகக் கசிந்துள முருக

      வெண்ணு கின்றோர்கட் கின்பு மளிக்குந்

      திப்பிய சிற்றம் பலநட ராஜனை

      முப்பொழு தேத்தி முறைபணி வோமே.

 

வேறு.

 

      மாசிமாதத்திற்  சதுர்த்தசி நாளில்

            மறைசொலு நெறியிலே சென்று

      ஆசிலாப்பழங்க ளான்றரு பானெய்

            அரிய செந்தேனோடு கரும்பு

      தேசுலாம்வெண்ணீ ராரமே முதலாச்

            செப்பிய யாவுமே கொணர்ந்து

      காகலாந் திருச்சிற்றம்பல வாணன்

            கண்ணுதற் காட்டலாம் வம்மின்.

 

வேறு.

 

      சித்திரையிற் றிருவோண நாளதனை நடராஜ

            தேவதேவன்,

      உத்தமமாய்க் கருதுவதென் றறிஞ்ரெலாங் கூறுகின்ற

            வுண்மையானே,

      பத்திநெறி யுடையவராய்ச் சைவநெறி வாழ்கின்ற

            பண்புமிக்கீர்,

      அத்தினத்திற் றிருத்தில்லை நகரிலவற் கபிடேக

            மன்பிற் செய்மின்.

 

வேறு.

 

      ஆனிமாதத்தி லுத்தர நாளி

            லன்புடன் பணிபவர்க் கெல்லா,

      நானிலமேத்துங் குறைவிலா வாழ்வு

            நற்றமிழ்ச் செல்வமுஞ் செய்ய

      வேனிலான் போலு மெய்யுறு மெழிலும்

            விமலமா மனமு மிந்தருள்வான்,

      வானிலாத் தவழுங் கோபுர மிளிரும்         

            மன்றிருத்தில்லை வானவனே.

 

வேறு.

 

      ஆவணியிற் சதுர்த்தசியி லன்புடனே நடராஜன்

      பூவடியிற் பூச்சொரிந்து போற்றுகின்ற பத்தருக்கே

      பாவலருங் காவலரும் பணிபுரிவா ரெனவறிந்தே

      தேவர்புகழ் சிதம்பரமாந் திருநகரன் றடைவீரே.

 

வேறு.

 

      கன்னியா மதியிற் சதுர்த்தசி திதியிற்

            கவின் மறை புகழ்தரு மெந்தை,

      யென்னையின் றருளுஞ் சிவகா மவல்லி

            பின்புற நடநவில் பரமன்,

      தன்னையே நிகர்த்துத் துடியொடு மங்கி

            தாங்கிய கரமுடை யீசன்,

      தன்னையே போற்றிப் பத்தி செய்திடறகாச்

            சச்சிதம்பரம் வருவீரே.

 

என்பன ஈங்குணர்தற் பாலனவாம்.

 

 

விபூதி மகிமை

                “கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை

      மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்,

      தங்கா வினைகளும்; சாருஞ்சிவகதி;

      சிங்காரமான திருவடி சேர்வரே.”

 

      “ஆனநீற் றுக் கவச மடையப் புகுமின்கள்

      வான நா டாள்வோ நாம் மாயப் படை வாராமே.”

 

விபூதி யென்பது திருநீறு. பஸ்மம், இரக்ஷை நீறு, விபூதி, ஸாரம், பஸிதம், கவசம் அல்லது காப்பு என்பன ஒருபொருட் கிளவியாம்.

      ஸகல பாவங்களையும் நீற்றலால் நீறு எனவும், எந்த ஐச்வரியத்தைக் காட்டிலும் மேலான ஐச்வரிய மில்லையோ, அப்படிப்பட்ட ஐச்வரியத்தைத் தருவதால் விபூதி யென்றும், உயிர்களின் மலத்தைப் போக்குவதால் ஸாரமென்றும், அறியாமையாகிய விருள் நீங்க விளங்குதலால் பஸிதம் என்றும், பூதாதிகளைப் போக்கிக் காத்தலால் காப்பு அல்லது இரக்ஷை யென்றும் கூறப்படும்.

      ஜீவர்களின் ஜெனன மரண வடிவ வியாதியை நீக்கப் பவரோக வயித்திய நாதனாகிய பரமசிவம், திருநீற்றை ஒளடதமாகவும் உருத்திராக்ஷத்தை மணியாகவும், பஞ்சாக்ஷரத்தை மந்திரமாகவும் அருளிச் செய்திருக்கின்றார் என்பது வேதாகமத் துணிபாம். ஆதலின் ஜெனன மரண வடிவ வியாதியினின்றும் நீங்க இச்சிக்கும் ஒவ்வொருவனும் ஒளடதமாகிய விபூதியின் ஸ்வரூபம், திரவியம், வகைகள், பிரமாணம், தாரணைவிதி, தரிக்க வேண்டிய இடங்கள், தரிக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம், ரேகைகள், சக்தி, தெய்வம், பலம் முதலிய விஷயங்களைச் செவ்வனே யாராய்ந்துணர்தல் அத்தியாவசியமாம்.

விபூதியின் ஸ்வரூபம்.

      விபூதியின் வடிவம் அல்லது ஸ்வரூபம், பிரகாசமாம். இது ஸாதனம் ஸாத்தியமென விருவகைப்படும். ஸாத்திய விபூதியின் ஸ்வரூபம் கேவலம் சச்சிதாநந்த சிவமாம். ஸாதன விபூதியாவது, சுருதிகளில் கேட்கப்பட்ட மந்த்ராதி ஸாதனங்களால், பசுவின் மலத்தைச் சுட்டு அதில் நாசமற்று மிஞ்சியுள்ள சுத்தத் தெளிவான நீறாம். “இதுவே சிவவடிமெ:னப் பாவித்து விதிப்படி தரிக்கின் சிவஸ்வரூபமாக வுயிர்களைச் செய்விப்பதால், இதற்குச் சாதன விபூதியெனப் பெயரிடப் பட்டது.

விபூதியின் திரவியம்.

      விபூதியின் திரவியம் கோமயமாம். “அசுத்தமாயும், வியாதியால் பீடிக்கப்படுவதாயும், அங்கவீன முள்ளதாயும், அதிக அங்கமுடையதாயும், மலட்டுத் தன்மையுடையதாயுமுள்ள பசுக்களை நீக்கி, நல்ல அழகமைந்த பசுக்களின் சாணத்தை யெடுத்து உருட்டி யுலர்த்தி, வைதிகாக்னியிலாவது, சமையல் செய்யும் அக்னியிலாவது தஹித்து, ளில்வக்கனி யளவுள்ள மட்பாத்திரத்தில் வைத்துக் கொண்டு ஈசானாதி பஞ்சப் பிரம்ம மந்திரஞ், செபித்து, வைத்துக் கொள்ளவும்” எனப் போதாயன கல்பஸூத்திரங் கூறுகின்றது.

விபூதியின் வகைகள்.

      விபூதி, இயற்கை, செய்ற்கையென விருவகைப்படும். இயற்கை விபூதியென்பது இடிவிழுந்த விடத்தில் உண்டாகிய நீறும், மலையுச்சியிலும், பூமியிலும் ஏதாவதொரு காரணாத்தினால் விளைந்த பஸ்பமுமாம்.

      செயற்கை விபூதியென்பது வைதிகமெனவும், லெளகிகமெனவும் இரு வகைப்படும், வைதிகமும், புராதனி, சத்தியோஜாதையென விருவகையாம்.

      லெளகிகமும், சைவம், அசைவம், என விருவகைப்படும். இதில் சைவ பஸ்மா, கல்பம், அநுகல்பம், உபகல்பம் என மூவகையாம். இவற்றின் விளக்கமாவது: -

      புராதனி: -         பிரமன் ஹோமகுண்டத்தில் விளங்குவது.

      சத்தியோஜாதை: - மறையவர்களின் ஹோம குண்டத்தில் உண்டாவது.

      கல்பம்: -          மேற்கூறிய போதாயன கல்ப ஸூத்ர விடுப்படி கோமயத்தைக்கிரகித்து, ஹோமாக்கினியிலாவது லெளகிகாக்கினியிலாவது இட்டு விளைவித்ததாம்.

      அநுகல்பம்: - வனத்தில் உலர்த்த கோமயத்தைக் கிரகித்து வந்து பொடித்து அதில் கோஜலம் பெய்து முற்கூறிய விதிப்படி விளைவித்ததாம்.

      உபகல்பம்: -       வனத்திலே மரத்தோடு மரமியைந்து தானேவுண்டாகிய அக்கினியினால் வெந்து விளைந்த பஸ்மாவை யெடுத்து அதில் பஞ்ச கவ்வியத்தைச் சேர்த்துப் பிசைந்து உருட்டிப் பதரின்மேல் புரட்டிச் சிவாக்கினியிலே தகனஞ் செய்ததாம்.

      அசைவம்: -       (1) திருக்கோயில் மடைப்பள்ளியில் விளைவது. (2) சிவனடியார் மடாலயத்து மடைப்பள்ளியில் விளைவது. (3) வனத்தில் வெந்து மேற்கூறிய உபகல்ப முறைப்படி செய்யாதது.

விபூதி தரிக்கவேண்டு மென்பதில் பிரமாணம்.

      விபூதியை, ஒவ்வொரு ஜீவனும், போக மோக்ஷங்களின் பொருட்டுத் தரிக்கவேண்டுமென்பதில் மோடிக் கணக்கான பிரமாணங்களுள், அவை பஸ்மஜாபாலம், காலாக்னிருத்ரம், தைத்திரியம், ஸாங்க்யானகிருஹ்யம், போதாயன கல்பஸூத்ரம், வாஸுதேவோபநிஷத்து, ஸூதஸம்ஹிதை, ஸ்காந்தம், ஆதித்திய புராணம், மச்சபுராணம், கூர்மபுராணம், வராகபுராணம், லிங்கபுராணம், மாநவபுராணம், மநுஸ்ம்ருதி, பராசரஸ்ம்ருதி, காமிகாகமம் முதலியனவாம். விரிவஞ்சி ஒவ்வொரு பிரமாணத்தையும் இங்கு விளக்காது விடுக்கப்பட்டது.

விருத்தம்.

      பொங்குமழன் முதலான புனிதமிகு பொருள்களினும் புனித மிக்க

      தங்குலவு நீறதனை முத்திவிருப் பினர்விடா தணிய வேண்டும்

      தங்குமுயி ரளித்தல்சுப நானம்விர தந்தானந் தவநல் யாக

      மங்குதலின் மற்றுநி றணிதலே யெனமறைகள் வகுக்குமாலோ.

 

என்று சூதசங்கிதை கூறுவது இங்குணரற்பாலது.

தாரணை விதி.

      விபூதிதாரணம் இருவகையாம். அவை, உத்தூளனம், திரிபுண்டரம் என்பனவாம்.

      உத்தூளனமாவது: - எல்லா அங்கங்களிலும் விபூதியை பூசிக் கொள்வதாம்.

      திரிபுண்டரமாவது: -      விபூதியை சலத்தால் குழைத்து நெற்றியிலும், மார்பிலும், இருபுயங்களிலும், கழுத்திலும், வயிற்றிலும், சிரசிலும், தரிப்பதாம்.

      உத்தூளனம் ஆக்நேயஸ்நானமென்றும் கூறப்படும். இது* பத்துவகை ஸ்நானங்களி லொன்றாம். அக்னி ஸம்பந்தமான விபூதியைச் சரீரம் முழுவதிலும் பூசிக்கொள்வதால் ஆக்நேயஸ்நானமென்று கூறப்படும்.

      திரிபுண்டரமாவது நடுவிரல், ஆள்காட்டி, விரல், பெருவிரல் இம்மூன்று விரல்களால் விபூதியை யெடுத்து ஜலஞ் சேர்த்துக் குழைத்து முற்கூறிய விடங்களில் வளையாமலும், இடையறாமலும் ஒன்றை யொன்று ஒட்டாமலும் தரிப்பதாம். திரிபுண்டரம் என்றால் மூன்று ரேகைகள் என்று பொருள்படும்.

[*     1.     வாருணஸ்நானம்: -      ஜலத்தில் மூழ்குவது.

      2.     ஆக்நேயஸ்நானம்: -      பஸ்மம் பூசிக்கொள்வது.

      3.     மந்த்ரஸ்நானம்: -        ஸத்யோஜாதாதி மந்த்ரங்களையாவது அல்லது அகமர்ஷண ஸூத்ரத்தையாவது உச்சரிப்பது.

      4.     மானஸஸ்நானம்: - பிரணவத்தியானம்.

      5.     திவ்யஸ்நானம்: -        வெயிலோடு பெய்யும் மழையில் ஸ்நானம் செய்வது.

      6.     மாருதஸ்நானம்: -        காற்றில் கலந்த பசுக்களின் பாததூளி சரீரத்தில் படியும்படி செல்லுதல்.

      7.     மிருத்திகாஸ்நானம்: -    சிவாலயம், நதி, முதலிய விடங்களிலுள்ள மண்ணைக்குழைத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ளுதல்.

      8.     கெளரவஸ்நானம்: -      குருவின் பாத தீர்த்தத்தில் மூழ்குதல், யுரோக்ஷணம் செய்து கொள்ளுதல்.

      9.     காபிலஸ்நானம்: -       ஈர வஸ்திரத்தினால் ஸர்வாங்கமும் துவட்டிக் கொள்ளுதல்.

      10.    பாரிசஸ்நானம்: -        கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களைச் சிரசில் புரோக்ஷித்துக் கொள்ளுதல்.]

அவற்றின் விளக்கமாவது.

                                                  3.------------------------------

      திரிபுண்டரம்.            2.------------------------------

                                                      1.-------------------------------

      இவற்றில் முதலாவது ரேகையில் பிரணவத்தில் “அ” காரமும் வேதத்தில் இருக்கும், குணத்தில் ராஜஸமும், சக்திகளில் கிரியாசக்தியும், தேவதைகளில் மஹா தேவரும், அக்கினியில் காருகபத்தியமும், இருப்பதாக வேதாகமங்கள் கூறுகின்றன; இரண்டாவது ரேகையில் “உ” காரமும், யஜுர்வேதமும், ஸத்துவகுணமும், இச்சாசக்தியும், மகேச்வரரும், தக்ஷிணாக்னியும் இருப்பதாகவும், மூன்றாவது ரேகையில் “ம” காரமும், ஸாமவேதமும், தாமத குணமும் ஞானசக்தியும், சிவமும், ஆஹவநீயமும் இருப்பதாகவும் கூறுகின்றன. ஆதலின் இங்ஙனம், விபூதி தரிக்கும்போது பாவிப்பது அத்தியாவசியமாம்.

விபூதியின் தத்துவம்.

      விபூதி யென்பது மேலான ஐச்வரியமாம்; அதாவது சிவஸ்வரூபமான பேராநந்த நிலையாம். இது பசுவாகிய ஜீவர்களின் மலமான அஞ்ஞான கர்ம நாசத்தில் சித்திப்பதாம். கோமய பிண்டங்கள் ஜீவர்களாம். மோமயமென்பது ஜீவர்களின் மலமாம். இதைச் சிவவடிவ அக்கினியிலிடுதல் ஸொஹம் பாவனையாகிய சிவயோக நிஷ்டையாம். இந்நிஷ்டையால் ஜீவனிடத்திலுள்ள உபாதிகள் நீங்கப், பரமசிவத்தோடு இரண்டறக் கலத்தலாகிய பரமைச்வரிய வடிவ விபூதி அதாவது நித்தியாநந்த நிலை யுண்டாகின்றது. அல்ல்து மாயா காரிய பிரபஞ்ச வடிவ நாமரூபங்களை அகண்டாகாரவிருத்தி வடிவத்தீயால் எரித்து மிஞ்சிய சச்சிதாநந்த வடிவ பரசிவ ஸ்வரூபமே விபூதியாம்.

      இதன் திரண்ட பொருளாவது சகல பிரபஞ்சங்களும் முடிவில் நீறியும் சிவம் ஒன்று மாத்திரம் நிறததாய் மிஞ்சுகின்றது. இங்ஙனம், மிஞ்சியதாயும், சுத்தமாயும், எல்லாவற்றின் முடிவான விரியமாயும், ஸ்வப்பிரகாசமாயும், ஸகல ஜகத்திற்கும் அபின்ன நிமித் தோபாதான விவர்த்த காரணமாயுமுள்ள பரமசிவத்தைக் குறிப்பாய் உணர்த்துவதே திருநீறாம். ஆதலாற்றான் விபூதியைப் பரமசிவத்தின் லிங்கமென்று வேதாகமங்கள் கூறுகின்றன.

      இங்ஙனம் சச்சிதாந்த சுபாவமாய், எங்கும் இடைவிடா நிறைவுடைய ஸர்வ தயாபரனான பரமசிவமே. விபூதியில் அபேதமாய்ப் பாவிக்கப்பட்டிருப்பதால், இதுவே, பஞ்ச பூதங்களும், தசேந்திரியங்களும், பஞ்ச விஷயங்களும், ஸர்வ ஜீவர்களுமா யிருக்கின்றது; பரமசிவமாம் விபூதியைத் தவிர அணுவும் வேறாகவில்லையெனவும் பாவித்து, அப்பரமசிவம் அகண்டமாவதால், கால் கட்டைவிடல் முதல் சிரசுவரை சரீரத்தில் வியாபித்திருப்பதாய் பாவித்து, உத்தூளனஞ் செய்து, அகண்ட பரமசிவத்தில் முக்குணம், மும்மூர்த்தி, முச்சத்தி, மூன்றக்கினி, முத்தொழில் முதலிய திரிபுடி வடிவமாய்த் தோன்றி விளங்குவதால் ஆதேய (கற்பித) மெனவும், முற்கூறிய பரமசிவமே ஆதார (அதிஷ்டான) மெனவும், முடிவில் எல்லாம் பரமசிவமாம் ஞானாக்கினியால் தகிக்கப்பட்டுப் போவதாகவும் பாவித்து, அத்தகைய சிவவடிவ திருநீற்றை, உத்தூளனத்தின் பேரில் திரிபுண்டரமாயணிதல் வேண்டும். இங்ஙனம் பக்தியோடு நான்கு சத்திகளிலும் அதாவது காலை, உச்சி, மாலை, அர்த்த ராத்திரிகளிலும், ஸ்நானம் செய்தவுடனும், பூஜா காலத்திற்கு முன்னும், பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், எவன் மேற்கூறியபடி ஐக்கிய பாவனை செய்து தரித்துக் கொள்ளுகிறானோ அவன் இம்மை, மறுமை, வீடென்னும் நான்கு புருடார்த்தங்களையும் பெறுகின்றான்.

      குறிப்பு: -    சுத்த வெண்ணிறமான விபூதியை அணிதல் வேண்டும். கருநிறம், புகைநிறம், செந்நிறம், பொன்னிறமுடைய விபூதியை தரிக்கின் முறையே நோய், ஆயுள்க்ஷீணம், கீர்த்திக்ஷயம், தரித்திரம் உண்டாகும்.

தேவாரம்.

திருச்சிற்றம்பலம்.

      “முத்தி தருவதுநீறு முனிவ ரணிவது நீறு

      சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

      பத்தி தருவது நீறு பரவவினியது நீறு

      சித்தி தருவது நீறு திரு வாலவாயான்றிறு நீறே.

 

      காணவினியது நீறு களினைத்தருவது நீறு

      பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு

      மரணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு

      சேணந்தருவது நீறு திருவால வாயான்றிரு நீறே.”

 

திருச்சிற்றம்பலம்.

 

இங்ஙனம் தேவாரங் கூறுகின்றது இங்குணர்தற்பாலது. அன்றியும்,

 

      “பகர்புனித நீறணியார் ஞானமடை யார்கோடி

            பவமா னாலுந்

      தகர்தலுறார் சமுசார மாபாவ முடையராய்த்

            தாழ்வார் கும்பி

      புகரில்வரு ணாச்சிரம பலமுறா ரவரியற்றும்

            புனித மான

      நிகரரிய புண்ணியமும் பாதகமா மென்றுமறை

            நிகழ்த்து மாலொ.

      பலபவப்பா வியருக்கே நீற்றில்வெறும் புண்டாகும்

            பண்பார் நீற்றைக்

      குலவவுவ வாரெல்லா மாபாவ ரெனத்தெரிந்து

            கொள்ள வேண்டும்

      நலமறிம்மான் மியஞ்சொலவெம் மாலுமற்றெம் முடையகுரு

            நாத னாலு

      மலர்புகழீர் முடியுமோ முடியாதெக் காலத்தும்

            வாய்மை யீதே.”

 

என்று சூதசங்கிதை கூறுவதைச் சற்று யோசிக்கின், விபூதியைத் தரிக்காதவர், ஆத்ம ஸாட்சாத் காரத்தினை யடையா ரென்றும், அவர்கள் என்றும் சமுசாரமாகிய “கும்பீபாக” நரகத்தில் ஆழ்ந்து வருந்துவரென்றும், அவர்களாலியற்றப்படும் புண்ணியங்கள் யாவும் பாவமாய் முடியுமென்றும் தெள்ளிதாய்ப் புலப்படுகின்றது. ஆதலின் விபூதியை அலக்ஷியஞ் செய்தல் கூடாது.

      என்று யஜூர்வேதம், தைத்திரீயோபநிஷத்து கூறுவதுமீங் குணர்தற்பாலதாம்.

      இங்ஙனம் சுருக்கமாக, விபூதியின் ஸ்வரூபம், திரவியம், வகைகள், பிரமாணம், தாரணைவிதி, தத்துவம் முதலியன கூறப்பட்டன. இவற்றை நன்குணர்ந்து ஶ்ரீ நடராஜமூர்த்தி வடிவ விபூதியைக் கனவிலும் மறவாது தரித்துவரின், பஞ்ச கிருத்திய வடிவ ஆனந்தத் தாண்டவத்தினைத் தரிசிக்கும் வாயிலாக நித்தியாநந்தப் பெருவாழ்வை யடைவரென்பது திண்ணம். பவநோயை நீக்க வல்ல மருந்து இதைக்காட்டிலும் மற்றொன்று இல்லவே யில்லையாம். இனி பவநோயை நீக்கவல்ல மணியாகிய உருத்திராக்ஷத்தைப்பற்றி யாராய்வாம். 

உருத்திராக்ஷ மகிமை

               

உருத்திராக்ஷ மென்பது ஒருவகை மணியாம். இது உருத்திரனது ஞானாக்கின் வடிவ நேத்திரங்களிலிருந்தும் (அதாவது ஸோம, ஸுர்ய, அக்னி நேத்திரங்களி லிருந்து), திரிபுர சங்காரகாலத்தில், ஆநந்தாமிருத விந்து பூமியில் விழ, அதினின்றும் உண்டானதாம். இதற்குப் பிரமாணமாவது: -

                உருத்திராக்ஷ மென்பதன் பொருள்: - ருக்கை - சமுஸார துக்கத்தை, திரம் – நீக்கும்படியான, அக்ஷம் – திருஷ்டி, அதாவது: - ஜனன மரண வடிவ சமுசார பந்தத்தை நீக்கும் அருட்பார்வையென்ப திதன் பொருளாம்.

வகைகள்.

      இத்தகைய மகிமை பொருந்திய உருத்திராக்ஷமானது ஸித்தம், ஸாத்தியம், ஸாதன மென மூன்று வகைப்படும்.

      ஸித்த ருத்திராக்ஷமாவது: - தேசத்தாலும், காலத்தாலும், வஸ்துவாலும் பரிச்சேதப்படாமல், ஸ்வய்ம் பிரகாச ஸதாநந்த வடிவாய் விளங்கும் அறிவாம்.

      ஸாத்திய ருத்திராக்ஷமாவது: -   அழிவில்லாமல் என்றும் ஒருபடித்தாய் சிதாநந்த வடிவ திருக்காம். இதன் விளக்கம் பின்னர் உருத்திராக்ஷ தத்துவத்தில் நன்கு கூறப்படும்.

      ஸாதன ருத்திராக்ஷமாவது: -    ஆன்மாக்கள் சிவ வடிவமாய் விளங்குவதற்குச் சாதனமானதாம். இச்சாதன ருத்திராக்ஷம் ஆக்னேயம், ஸெளரம், சாந்திர மென முவ்வகையாம்.

இதற்குப் பிரமாணம்.

                என்னும் வாதுளாகமப்பிரமாணப்படி, உருத்திராக்ஷம், முப்பத்தெட்டு வகையாம். அவற்றில் பரமசிவத்தின் சூரிய நேத்திரத்தின் உற்பத்தியானவை, கபில நிறமுடைய, பன்னிரண்டு வகையாம். சந்திர நேத்திரத்தில் உற்பத்தியானவை, வெண்மை நிறமுடைய பதினாறு வகையாம். அக்னி நேத்திரத்தில் உற்பத்தியானவை கறுப்பு நிறமுடைய, பத்து வகையாம்.

உருத்திராக்ஷத்தின் ஜாதிகளாவன.

      பிராமணஜாதி உருத்திராக்ஷம் வெண்மை நிறமுடையதாம்; க்ஷத்திரிய ஜாதி சிவப்பு நிறமுடையது; சிவப்பும் வெண்மையும் கலந்த பொன் நிறமுடையது வைசிய சேர்ந்த்தென்றும் கறுப்பு நிறமுடையது சூத்திர ஜாதியைச் சேர்ந்த தென்றும் கூறப்படும். அவ்வவ் வருணத்தார் அந்த அந்த ஜாதி உருத்திராக்ஷத்தைத் தரித்தல் வேண்டும்.

உருத்திராக்ஷங்களின் முக நியமம்.

      இவ்வுருத்திராக்ஷ மணிகள் ஒன்று முதல், பதினான்கு முகங்கள் வரையுடைய தென்று ஆகம புராணங்கள் கூறுகின்றன. இவற்றில் ஏகமுக உருத்திராக்ஷமே மிகவும் மேலானதாம். இப்பதினான்கு வகை உருத்திராக்ஷங்களுக்கும் அதிஷ்டானம் சிவஸ்வரூபமேயாம்; ஆயினும் ஒவ்வொன்றின் அதிதேவதைகள் மாத்திரம் பேதப்படும்.

      அவையாவன: -                            அதிதேவதைகள்

ஏகமுக உருத்திராக்ஷம்                      பரமசிவம்.

இரண்டுமுகம் உருத்திராக்ஷம்                தேவதேவன்.

மூன்றுமுகம் உருத்திராக்ஷம்                அக்கினி.

நான்குமுகம் உருத்திராக்ஷம்                 நான்முகப்பிரமன்.

ஐந்துமுகம் உருத்திராக்ஷம்                  காலாக்னி உருத்திரன்.

ஆறுமுகம் உருத்திராக்ஷம்            ஷண்முகன்.

ஏழுமுகம் உருத்திராக்ஷம்                   அநந்தன் (ஆதிசேடன்)

எட்டுமுகம் உருத்திராக்ஷம்                  விநாயகன்.

ஒன்பதுமுகம் உருத்திராக்ஷம்                பைரவர்.

பத்துமுகம் உருத்திராக்ஷம்            ஜநார்த்தனன் (விஷ்ணு).

பதினோருமுகம் உருத்திராக்ஷம்              ஏகாதச உருத்திரர்.

பன்னிரண்டுமுகம் உருத்திராக்ஷம்            பன்னிரண்டு ஆதித்தியர்கள்.

பதின்மூன்றுமுகம் உருத்திராக்ஷம்            மஹேச்வரன்.

பதினான்குமுகம் உருத்திராக்ஷம்             சதாசிவன்.

இப்பதினான்குமுக உருத்திராக்ஷங் கிடைப்பது அரிதினும் அரிதாம். ஏகமுக உருத்திராக்ஷமும் இங்ஙனமே.

உருத்திராக்ஷந் தரிக்கவேண்டிய அங்கங்கள்.

                சிரத்தி னுரத்திற் றிணிதோ டிரண்ட

      கரத்தினும்பூ ணாய்கண் டிகை.

 

என்னும் மறைஞான சம்பந்த நாயனார் திருவாக்கின்படிம் சிரம், சிகை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், உபவிதம் (பூணூல்) முதலிய இடங்களில் உருத்திராக்ஷம் தரிக்கத்தக்க தென்றேற்படுகின்றது.

      குறிப்பு: -    சிரமாலை, தலைப்பருமை யளவினதாயும், கைம்மாலை, கைப்பருமை யளவினதாயும், மார்புமாலை, கொப்பூழ் (நாபி) வரையினதாயும், இருத்தல் வேண்டும்.

அவ்வவ்விடங்களிற் றரிக்கவேண்டிய மாலையின் மணிகளின் சங்கியை.

      சிகையிலே ஒருமணியும், தலையிலே முப்பத்திரண்டு மணிகளும், காதுகளில் ஒவ்வொன்று அல்லது அவ்வாறு மணிகளும், கழுத்தில் முப்பத்திரண்டு மணிகளும், புயங்களில் தனித்தனி பதினாறு மணிகளும், கைகளில் தனித்தனி பன்னிரண்டு மணிகளும், மார்பிலே நூற்றெட்டு மணியுங் கொண்ட மாலை தரிக்கலாமென்று ஆகமங்கள் கூறுகின்றன.

      குறிப்பு: -    உருத்திராக்ஷங்களை வெள்ளி, பொன், முத்து, பவளம், முதலியவற்றை இடையிடையே யிட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரிப்பது நலம். மார்பிற்றரிக்கஞ் செபமாலை நூற்றெட்டு மணிகளானும், அல்லது ஐம்பத்திநான்கு மணிகளாலும், அல்ல்து இருபத்தேழு மணிகளானும் செய்யத்தகும். இம்மூன்றுவகை மாலைகளும் போகத்தை, அதாவது இம்மை மறுமைகளை இச்சிப்பவர்கள் தரிக்க்த் தக்கன; என்றும் அழியாப் பேராநந்த நிலையாகிய வீட்டையடைய இச்சிப்பவர் இருபத்தைந்து மணிகளைக் கொண்ட மாலையை யணிவது அவசியம். இதுவே அவர்கட்குரிய ஜபமாலையுமாம். உருத்திராக்ஷமாலைக்கு மணிகள் கொள்ளும்போது எல்லாம் ஒரே விதமான முகங்களையுடைனவாய்க் கொள்ளுதல் அவசியம். பலவிதமாகிய முகங்களையுடைய உருத்திராக்ஷங்களைக் கோத்த மாலையைத் தரித்தல் கூடாது. ஜெபமாலைக்கு இரண்டுமுகம், மூன்றுமுகம், பன்னிரண்டுமுகம், பதின்மூன்றுமுகம் உடைய உருத்திராக்ஷங்கள் ஆகாவாம்.

உருத்திராக்ஷ மணிதலின் பயன்.

      எங்ஙனம் விபூதியானது மேலாகிய ஐச்வரியத்தைத் தருவதாமோ, அங்ஙனமே உருத்திராக்ஷமும், ஜனன மரண வடிவ சமுஸார துக்கத்தை (வியாதியை) நீக்க வல்லதாம். இதனாற்றான் இதற்கு “உருத்திராக்ஷ” மென்னும் காரணப் பெயர் சுருதிகளில் கேட்கப்படுகின்றது. அன்றியும், உருத்திராக்ஷந் தரிப்பவர் இம்மையில் ஸகலவிதமான ஐச்வரியங்களையும், புகழையும் பெற்று மறுமையில் தேவர்போற்றும் சுவர்க்க வின்பத்தையும் பெறுவரென்பது வேதாகமத் துணிபாம். எந்த ஜீவனானவன் உருத்திராக்ஷத்தைத் தரிக்கயில்லையோ அவன் பரமேசுவரனுடைய அருளுக்குப் பாத்திரமாவதில்லையாம். இது “பூண்பதற்குக் கண்டியினைக் கூசியிடும் புல்லியரைக் காண்பதற்குக் கூசுமரன் கைத்து” என்னும் ஆன்றோர் திருவாக்கா ணுணர்க.

      அன்றியும் உருத்திராக்ஷ மணிகளில் மின்சாரசக்தி யதிகமாயிருப்பதால் அதைத் தரித்துக் கொள்வதால், தேகாரோக்கியமும், மனவலிமையும் உண்டாகுமென்பது அநேக புத்திமான்களுடைய தீர்மானமு மனுபவமுமாம்.

உருத்திராக்ஷ தத்துவம்.

      உருத்திராக்ஷமே ஶ்ரீ நடராஜ ஸ்வரூபமாம். கீழதிகாரிகளுக்கு உருத்திராக்ஷம், பரமசிவத்தின் குறியாக விளங்குகின்றது. எங்ஙனம் புகையைப் பார்த்து மலையில் மறைந்திருக்கும் நெருப்பை அனுமானஞ் செய்கின்றோமோ, அங்ஙனமே உருத்திராக்ஷத்தைக் கண்டமாத்திரத்தில் பரமசிவத்தின் அனுமான ஞானம் உண்டாகின்றன. ஆதலால் இது அவர்கட்குக் குறியாம். இது ஸித்தம். ஸாத்தியம் ஸாதனம் என மூன்று வகைப்படு மென்று முன்னர் கூறப்பட்டது. இம்மூன்று வகைகளும் முறையே உத்தம, மத்திம, அதம அதிகாரியின் பொருட்டேற்பட்டனவாம். உத்தமாதிகாரியானவன், ஸித்த உருத்திராக்ஷத்தை, அதாவது தேசத்தாலும், காலத்தாலும், வஸ்துவாலும் பரிசேதப்படாமல் ஸ்வயம்ப்ரகாசமாய் விளங்கும் பரமசிவத்தைச் சதா தானாக அனுபவதித்துக்கொண்டிருப்பன். இவ்வுருத்திராக்ஷம் சொல்லுக்கும் மனதுக்கும் எட்டாததாம். ஆதலின், இதன் தத்துவத்தைக் கேவலம் அனுபவத்தான்மாத்திரமே அறியத்தக்கதாம். சாத்திய உருத்திராக்ஷம், மத்திமாதிகாரிகட்கு ஏற்பட்டதாம். மத்திமாதிகாரிகளே அப்பியாசிகள் எனப்படுவர். இவர்கள் உருத்திராக்ஷத்தைத் திருக்கு வடிவமாய்ப் பாவித்தல் அவசியம்.

இதன் விளக்கமாவது.

      பரமசிவம், ஸகல ஜகத்தின் அவஸ்தாத்திரியங்களான ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்திகளாகிய முப்புரங்களை (ஸ்தூல, ஸுக்ஷும, காரண சரீரங்களை) த்தானே, ஸகுண ரூபமாயாவது அல்லது மானிடச் சட்டை பூண்ட குருமூர்த்தமாயாவது, அல்லது தன் அருட்சத்தியாலாவது, சருவசாக்ஷியான அகண்டாகார விருத்தி வடிவ ஞானத்தாலே, ஸம்ஸார துக்க நிவர்த்தி செய்விப்பதாய் வேதாந்தங்களில் காணப்படுவதால், இவ்வித அநுபூதியின் பொருட்டு, ஈசன், குரு, இவர்களின் திருஷ்டியே ஸாக்ஷாத் ஸாதனமாவதால், இதுவே ஸாத்திய உருத்திராக்ஷமாம். இதனாற்றான் உருத்திராக்ஷ மென்னுஞ் சொற்கு “ஸம்ஸார துக்கத்தை நிவர்த்திக்கும் அருட்பார்வை யென்பது பொருளென்று” முன்னர் கூறப்பட்டது.

     

திரிபுரசங்கார தத்துவம்.

      “திரிபுரசங்கார காலத்தில், பரமசிவனது மூன்று நேத்திரங்களிலிருந்தும் பூமியில் விழுந்த ஆநந்தக்கண்ணீரே உருத்திராக்ஷமாயிற்று” என்று முன்னர் கூறப்பட்டது. ஆதலின் திரிபுரசங்காரத்தின் தத்துவத்தையும் ஆராய்தல் அத்தியாவசியமாம்.

திரிபுர சங்கார வரலாற்றுச் சுருக்கமாவது.

      முன்னொரு காலத்தில், திரிபுரத் தசுரர்களாலே பீடிக்கப்பட்ட தேவர்கள், தங்கட்கு நிகழ்ந்த துன்பத்தைப் பரமசிவனிடத்தில் விண்ணப்பஞ் செய்து கொள்ளக், கைலாசபதியான மகாதேவன், தேவர்களுக்கு இரங்கி, அபயங் கொடுத்து, மந்தரம், கேசரி மலைகளை யச்சாகவும், சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாகவும், பதினான்கு லோகங்களையும் தேர்த்தட்டுகளாகவும், ஆகாயத்தை யாசனமாகவும், உதயாத்தமய மலைகள் தேர்க்கொடிஞ்சியாகவும், நதிகள் கொடிகளாகவும், நக்ஷத்திரங்கள் விதானமாகவும், ஸ்வர்க்கலோகம் மேல் விரிவாகவும், அஷ்டகுல பர்வதங்கள் குரண்களாகவும், நான்கு வேதங்கள் குதிரைகளாகவும் அமைக்கப்பட்ட ரதத்திலே யெழுந்தருளி, கங்கை முதலிய தேவமாதர்கள் சாமரமிரட்டவும், ஊர்வசி முதலிய கணிகை மாதர்கள் நடனஞ் செய்யவும், மகாமேரு மலையை வில்லாகவும், ஸரஸ்வதியை வில்லிற் கட்டிய மணியாகவும், வாசுகியை நாணாகவும், விஷ்ணுவைப் பாணமாகவும், அக்கினி தேவனை அவ்வம்பின் கூர்வாயாகவும், வாயுதேவனை அம்பிறகாகவும், கொண்டருளி, பிரமனாகிய ஸாரதி, பிரணவமாகிய தூண்டுகொல் கொண்டு செலுத்தத் திரிபுராசுரர்களைத் தம்முடைய புஞ்சிரிப்பாகிய அக்கினியால் நீறாக்கி யருளினர் என்பது புராணாதிகளில் பிரசித்தமாம்.

                மத்த ரத்தொடு கேசரி நெடுவரை வாங்கித்

      தந்து திண்டிற் லச்செனப் படுத்தினர் தழைக்குஞ்

      செந்த னிக்கதி ரினைத்தைவெண் டிங்களைத் திருத்தி

      யுந்து பேரெழி லாழிகொண் டவைக்கடை யுறுத்தி.

 

      ஏழி ரட்டியென் றுரைத்திடு மிருநிலப் பரப்பைச்

      சூழ்த ரப்படு நீலங்களீ ரேழெனத் தொகுத்தார்

      யாழி வாளரிப் பிடரிடு மாசனப் பரப்பை

      யாழி யொத்தலர் தட்டினோர் தட்டகத் தமைத்தார்.

 

      எழுது றாமறையனைத்தையும் பரியென வியற்றி

      வழுவ றக்குறை நீரப்பின ரரிமுதல் வானோ

      ரொழுகு மாயிரங் கொடுமுடி வடவரை யோங்கல்

      தழுவி செங்கையிற் பினாக மொத்தமத்தனர் தந்தார்.

 

      பொறிப்பணாடவி வாசுகி நாணெணப் பொருத்தி

      வெறிப்ப சுந்துழா யலங்கலோன் கணையென வியப்பக்

      குறித்த வெந்நுதி பாவகற் பொருத்தினர் குதைவாய்ச்

      செறித்த தூவலை வாயுவிற் செறித்தனர் திருத்தி.

 

      முன்னை மாதவர் கடைப்பிடி யிருந்தவா முளரி

      யன்ன வூர்தியும் வலவனொத் தமர்ந்தன னமையாத்

      தொன்ன லந்தருகுடிலை மத்திகையெனத் தொகுத்தார்

      பின்னர் வானவர் சேனையொத் தெழுந்தனர் பிரியார்.

 

என்று உபதேசகாண்டங் கூறுவது ஈங்குணர்தற் பாலதாம்.

இதன் தத்துவமாவது.

                “அப்பணி செஞ்சடை யாதி புராதனன்

      முப்புரஞ் செற்றன னென்பர் மூடர்கள்

      முப்புர மாவது மும்மல காரியம்

      அப்புர மெய்தமை யாரறி வாரே.”

 

என்று திருமூலர் திருமந்திரத்தி லுபதேசித் திருப்பதை நாம் சிறிதூகித்துப் பார்ப்போமாயின், காமம், வெகுளி, மயக்கமென்றும் மூன்று அசுரர்கள் தேவர்களாகிய ஜீவர்களின் சச்சிதாநந்த வடிவ ஆன்ம சொரூபத்தை மறைத்துச் சமுசார வடிவ துன்பத்தை யுண்டாக்கினரென்றும், காமாதிகளாகிய துர்வாஸனைகளால் மொத்துண்ட ஜீவர்கள், பரமசிவனாம் சற்குருவை யடைந்து பிரார்த்திக்க, அவர், ஜீவர்களாகிய தேவர்கள்மாட்டுக் கருணைகொண்டு, ஞான நேத்திரத் திருஷ்டியால், துர்வாஸனைகளகிய அசுரர்களை யெரித்தருளினர் என்றும் நன்கு புலப்படுகின்றது. இதுவே இதன் தத்துமாம். இதனால் சமுஸார பந்த நீக்கத்திற்கு ஞான விசாரமே சாதனம்; மற்றவை யன்றெனத் தெளிவாய் ஏற்படுகின்றது. வில்லாகிய மேருவும், நாணாகிய வாஸுகியும், அம்பாகிய விஷ்ணுவும், அம்பின் வாயாகிய அக்கினியும் திரிபுர ஸம்ஹார காரியத்திற்குச் சற்றும் பயன்படவில்லை; மற்றோ, பரமசிவம், தன்னுடைய மூன்று நேத்திரங்களையும் திறந்து புன்சிரிப்புடன் திருஷ்டித்த நோக்கே அஞ்ஞான காரியமாகிய துர்வாஸனைகளை யொழித்தது. இத் திருஷ்டியேதான் ஸாத்திய உருத்திராக்ஷமாம். ஆத்மாநு ஸந்தான அகண்டாகார விருத்தியும் ஸாத்திய உருத்திராக்ஷமாமென ஆன்றோர் கூறுவர். இவ்வுருத்திராக்ஷத்தை மத்திமாதிகாரி (அப்பியாசி)கள் பாவித்து அணிதல் அத்தியாவசியமாம்.

      ஸாதன உருத்திராக்ஷம்: - வேதாகமங்களிற் கூறிய விதிப்படி இதன் ஸ்வரூபம், வகைகள், உற்பத்திகாரணம், தரிக்கவேண்டிய இடங்கள் முதலியவற்றைச் செவ்வனே அறிந்து, இது பரமசிவத்தின் அருள் நோக்கமே யாமென்று பாவிக்கின், அது ஸமாதியாகிய ஸாத்திய உருத்திராக்ஷ நிலையையும், சிவ வடிவாகவே யிருக்கும் ஸித்த உருத்திராக்ஷ நிலையையும் அடைவிக்கும் என்பதில் ஒரையமு மின்றாம். இது வேதாகமங்களின் துணிபாம். இதுவே ஜனனமரண வடிவ நோயை நீக்கவல்ல மணியாம். ஆதலால் பிறப்பை யொழிக்க முயலும் ஒவ்வொருவரும் இதனைப் பக்தியோடு அணிதல் வேண்டும். இனிப் பவநோயை யொழிக்க வல்ல மந்திரமாகிய பஞ்சாக்ஷரத்தைப்பற்றிச் சற்று ஆராய்வோம்.

பஞ்சாக்ஷர ரகசியம்.

திருச்சிற்றம்பலம்.

      “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

      யோதுவார் தமை நன்னெறீக் குய்ப்பது

      வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது

      நாத னாம நமச்சி வாயவே.”

 

திருச்சிற்றம்பலம்.

      பஞ்சாக்ஷர மென்பது ஐந்தெழுத்துக்களைக் கொண்ட ஓர் மஹா மந்திரமாம். மந்திர மென்பது, தன்னைக் குருமுகமாய் விதிப்படி தெரிந்து, மனனஞ் செய்பவனைச், சகல துன்பங்களினின்றும் ரக்ஷிப்பதாம். இது ஸப்தகோடி மகா மந்திரங்களினும் சிறந்து விளங்குவதாம். அன்றியும், யஜுர் வேதத்தின் காண்டங்கள் ஏழுனுள் நடுக்காண்டத்தில் மத்தியில் ஶ்ரீ ருத்ராத்தியாயமென்னும் சதருத்ரிய மந்திரஞ் சிறந்து விளங்குகின்றது. அச் சதருத்திரீயத்தின் மத்தியில் நாயகத்தன்மை பூண்டு பிரகாசித்துக் கொண்டிருப்பதே “நமசிவாய” என்னும் சிவ பஞ்சாக்ஷரமாம். இது,

      “மும்மறையு ணடுமறையின் முனிவிலெழு காண்டத்துட்

      செம்மைதரு நடுக்காண்டஞ் சேர்ந்தவெழு சங்கிதையி

      லம்மநடுச் சங்கிதையி னாதியீறொ ழித்துநடுப்

      பெம்மலுற வுயர்மனுவின் பொருளாவா னெவன்மைந்த.”

 

என்னும் ஆன்றோர் திருவாக்காற் பெறப்படுவ துணர்க.

      அன்றியும், வேத புருஷனாகிய பரமேச்வரனுக்கு யஜூர் வேதம் சிரசாகவும், அதன் நடுவேயுள்ள ஶ்ரீ ருத்திரம் முகமாகவும், அந்த ஶ்ரீ ருத்திரத்தின் மத்தியிலேயுள்ள பஞ்சாக்ஷரம் கண்ணாகவும், அப் பஞ்சாக்ஷர மத்தியிலேயுள்ள “சிவ” என்பது கண்மணியாகவும் அமைந்து விளங்குகின்ற்ன. இது தான் உருத்திராக்ஷமாம். இத்தகைய மகிமை வாய்ந்த பஞ்சாக்ஷரத்தை யெந்த ஜீவனானவன் பக்தி, விசுவாசத்துடன் ஜெபிக்கின்றானோ அவன் பிறப்பென்னும் பெருவியாதியினின்றும், நீங்கிப், பேராநந்த நிலையை யடைவனென்பது வேதாகமப் பிரசித்தமாம். இத்தகைய பஞ்சாக்ஷர வடிவமே ஶ்ரீ நடராஜ மூர்த்தியின் ஸ்வரூபமாமென்று முன்னர்க் கூறப்பட்டது. ஆதலால் இப்பஞ்சாக்ஷரமே பரமசிவத்தின் வாசகமாகும்;

                “சேர்க்குந் துடிசிகரஞ் சிக்கெனவா விசுகரம்

      ஆர்க்கும் யகரமபயகரம் – பார்க்கிலிறைக்

      கங்கிநகர மடிக்கீழ் முயலகனாத்

      தங்கு மகரமது தான்.”

 

என்பதனால், ஶ்ரீ நடராஜ மூர்த்தியே பஞ்சாக்ஷரமாம்.

      பஞ்சாக்ஷரத்தின் நகார, மகார, சிகார, வகார, யகாரங்களாகிய ஐந்து யெழுத்துக்கள் ஆகாயம், வாயு, அக்கினி, ஜலம், பிரிதிவி என்னும் பஞ்ச பூதங்களையும், சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தமென்னும் பஞ்சதன் மாத்திரைகளையும், வாக்கு, பாதம், பாணி பாயு உபஸ்தமென்னும் பஞ்ச கன்மேந்திரியங்களையும், சுரோத்திரம், துவக்கு, சட்சு, சிங்குவை, ஆக்கிராணமாகிய பஞ்ச ஞானேந்திரியங்களையும், புத்தி, அகங்காரம், சித்தம், மனம், உள்ளம் ஆகிய அந்தக் கரண பஞ்சகத்தையும், நிவர்த்தி, பிரதிஷ்டை, வித்யை, சாந்தி, சாந்திய தீதையென்னும் பஞ்சகலைகளையும், கன்மசாதாக்கியம், கர்த்துருசாதாக்கியம், மூர்த்தி சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியம், சிவசாதாக்கியம் என்னும் பஞ்ச சாதாக்கியங்களையும், பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியா சத்தியாகிய பஞ்ச்சத்திகளையும் ஈசானம், தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோஜாதம் என்னும் பஞ்சப் பிரம்மங்களையும், பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன், ஸதாசிவம் என்னும் பஞ்சகர்த்தாக்களையும், சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோபம், அநுக்கிரகம் என்னும் பஞ்சகிருத்தியங்களையும், அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம், என்னும் பஞ்சவர்ணகங்களையும், தமக்குள் அந்தர்ப் பூதமாக்கிக் கொண்டு, சப்த நிஷ்டமாகிய பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஆதாரமாய் விளங்கிக் கொண்டிருக்கின்றன.

      குறிப்பு: -    இதன் ரகசியம் குருமுகமாய் அறிந்தாலொழியப் பயன் படுவதில்லை யென்றறியவும்.

பஞ்சாக்ஷரத்தின் வகைகள்.

      ஆன்மாக்களின் அதிகாரத்திற்குத் தக்கவாறும், அவரவர்கள் உத்தேசிக்கும் பயனுக்குத் தக்கவாறும் இப்பஞ்சாக்ஷரமே பலவகைகளாகக் குரவர்களால் உபதேசிக்கப்படும். இப்பஞ்சாக்ஷரத்தோடு பிரணவத்தைச் சேர்க்கின் “ஷடக்ஷர” மெனப்படும். இது (ஷடக்ஷரம்) சூதசங்கிதை முதலிய பிரமாண நூல்களில் மிகப் பிரசித்தமாம்.

      “பிரணவ மெழுவா யதன்பினர் நகாரம்

            பேசிடு மதன்பினம் மகாரம்

      வரமுறு மதன்பின் சிகாரமற் றதன்பின்

            வயங்கிடு வகர வாகார

      மூரவுறு மதன்பின் யகாரஞ் சாபால

            வுபநிடதஞ் சொலு மின்வா

      றரவணி சடையாற் கன்பர்காண் முறையி

            னறிகவிச் சடக்கர மனுவை.”

 

என்று சூதசங்கிதை கூறுவதிங் குணர்தற் பாலதாம்.

      பஞ்சாக்ஷரம்: -     ஸ்தூலம், ஸூக்ஷூமம்,   மகாகாரணம், மகாமனு வென ஐவகைப்படும். அவையாவன: -

      1.     ஸ்தூல பஞ்சாக்ஷரம்: -          “ந ம சி வா ய”

      2.     ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷரம்: -        “சி வா ய ந ம”

      3.     காரண பஞ்சாக்ஷரம்: -          “சிவயசிவ”

      4.     மஹகாரண பஞ்சாக்ஷரம்: -      “சிவ”

      5.     மஹா மனு: -                  “சி”

      குறிப்பு: -    ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷரமாகிய “சிவாயநம” வென்பது ‘ஒருதலை’ மாணிக்க’ மென்றும், காரண பஞ்சாக்ஷரமாகிய “சிவயசிவ” வென்பது “இருதலை மாணிக்க” மென்றும், மஹா மனுவாகிய “சி” யென்பது “நாயோட்டி மந்திர” மென்றும், முத்தி பஞ்சாக்கரமென்றும், பெரியோர் பரிபாஷையாகக் கூறுவர்.

      இவற்றில் ஸ்தூல பஞ்சாக்கரமாகிய “ந, ம, சி, வா, ய” வென்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு இம்மை, மறுமைகளைப் பயப்பதாகும். இது,

                “தம்முதலா யோதிலரு ணாடாது நாடுமருள்

      சிம்முதலா யோதுநீ சென்று.”

 

என்னும் பிரமாணத்தால் நன்கு விளங்குகின்றது. அன்றியும்,

                “அண்ணல் முதலா யழகா ரெழுத்தைந்து

      மெண்ணி லிராப்பக லற்றின்பத்தே – நண்ணி

      யருவா வதுசிவத்தே யாக்கு மணுவை

      யிருளா னதுதீர வின்று.”

 

“சிவ”, முதலாகி, யழகுபொருந்திய பஞ்சாக்ஷரமைந்தும், இடைவிடாதுச்சரிக்கில், சகல கேவலங்களற்று பேராநந்தத்தில், ஆன்மாக்களிடத்தில் தோற்றும்படியான ஆணவமானது நீங்க, அருட்சத்தியானது, (ஆத்மாக்களை) பொருத்திவிக்குமென்று ஆன்றோர் கூறியுள்ளார். ஆதலின் சூக்கும பஞ்சாக்ஷரமே பிறப்பாகிய பெருநோயை நீக்கவல்ல மந்திர மென்றேற் படுகின்றது. தூல பஞ்சாக்கரத்திற்குப் பந்த பஞ்சாக்ஷரமெனும் ஆகமங்களில் காணப்படுகிறது.

குறிப்பு: -    பஞ்சாக்ஷரத்தில், சிகாரம் சிவம்; வகாரம் அருள்; யகாரம் ஆன்மா; நகாரம் திரோதம்; மகாரம் மலம் என்று அறிக.

பஞ்சாக்ஷர அர்த்த விசாரம்.

      “சிவாயநம”: - சிவாய – (ஸகல, நிஷ்களவடிவமான சச்சிதாநந்த பிரமத்தின் பொருட்டு, நம, (ஜீவனது) வணக்கம்). “சிவத்தின் பொருட்டு நமஸ்காரம்” என்பது பஞ்சாக்ஷரத்தின் பொருளாம்.

      சிவத்திற்கு, ஆன்மா (ஜீவன்) தேகாபேக்ஷையால் தாஸனெனவும், சேதனாபேக்ஷையால் அச்சிவத்தைத் தவிர வேறல்ல வெனவும் உபநிஷத்துக்களில் பிரதிபாதிக்கப்பட்டிருக்கின்றன.

      ஆதலின், ஈண்டு (வியாவகரசிக தசையில்) “சிவன் பொருட்டு நமஸ்காரம்” என்பது பொருந்தும். ஆனால், பாரமார்த்திக தசையிலோ “நமஸ்கார” மென்பதன் பொருள் சிவ ஜீவ அபேத பாவனையேயாம். இதற்குப் பிரமாணமாவது.

                “தயங்குநம சத்தநமக் காரத்திற் குற்றவா

            சகமா மீச்சொற்

      பயங்குலவு மருத்தந்தான் வணங்குகிற தென்றுரைக்கப்

            படுமற் றிந்த

      நயங்குலவு வணக்கம்யா தெளின்மாயை யாற்பேத

            நடைய ராகி

      பியங்குறுசி வர்கள்சிவனோ டபேதமா வனைசெய்வ

            தென்பர் தக்கோர்.”

என்பதாம், மேலும்,

 

     

      (இதன் பொருள்): - “நம” வென்னும் பதம் ஜீவான்மாவையும், “சிவ” யென்னும் பதம், பரமான்மாவையும், “ஆய” வென்னும் பதம் ஐக்கியத்தையும் பொருளாக வுடையனவாம். ஆதலின், “சிவாயநம” வென்பது சாந்தோக்கிய உபநிடதத்தின் முடிபாகிய “தத்துவமஸி” யென்னும் மஹாவாக்கியத்தைப்போல, ஜீவப்பிரம்மைக்கியங் கூறும் மகாவாக்கியமேயாம்.

      இதனை விளக்கமாய் அறிய விரும்புபவர் உபதேச வாயிலாக அறிவதே முறையாம். ஆதலின் ஈண்டு இவ்வளவோடு நிறுத்தப்பட்டது.

பஞ்சாக்ஷர ஜெபவிதி.

      ஆசாரியன் மூலமாய் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டு அவருடைய அநுமதி பெற்று, ஸ்நானஞ் செய்து, விபூதுதரித்து, உருத்திராக்ஷமணிந்து, மலையுச்சி, நதிக்கரை, சமுத்திரக்கரை, சிவாலயம், வனம், பூந்தோட்டம், அல்லது நிர்மயமான சுத்த தேசத்தில் கிழக்கு அல்லது வடக்கு முகமாய்ச் சுகாஸனத்தில் உட்கார்ந்து முதலில் மூன்று * பிராணாயாமஞ் செய்து இம்மந்திரத்தின் ரிஷி, சந்தஸ், தேவதை, சக்தி, பீஜம், இவைகளை மனதில் தியானித்து, அங்கநியாஸ, கரநியாஸஞ் செய்து, குருவை ஸ்மரித்து, நமஸ்காரஞ் செய்து, பின்னர் தனது ஹிருதய கமலத்தின் மத்தியில் சூரிய, சந்திர, அக்கினி மண்டலத்தில் மின்னல் கொடிபோலப் பிரகாசமாயும், அக்கினி ரூபமாயும், மங்களமாயு மிருக்கிற சிவத்தைத் தியானித்துச் சஞ்சலமற்ற மனதுடன் பஞ்சாக்ஷரத்தை ஜெபஞ் செய்யவும்.

[* பிராணாயாமமாவது பிராணவாயுவைத் தடுத்தல்; இது இரேசக, பூரசு, கும்பகமென முவ்வகைப்படும். இரேசக மென்பது மூச்சைவிடுதல்; பூரகம், வாயுவை யுட்கொள்ளுதல்; கும்பகம் வாயுவை நிறுத்தல்.]

பஞ்சாக்ஷர ஜெபத்தின் பயன்.

      இங்ஙனம் விசுவாசத்தோடு இடைவிடாமல் தியானித்துவரின், ஶ்ரீ நடராஜ மூர்த்தியின், மனாகாம நடன சேவை (தியானம்) சித்திப்பதன் மூலமாய்ச் சிதாகாய நடன சேவையாகிய சிவயோக நிஷ்டை (ஸமாதி) சித்திக்கின்ற தென்பது சுருதிப் பிரசித்தமாம். அன்றியும்,

                “அஞ்செழுத்தே யாகமமு மண்ண லருமறையு

      மஞ்செழுத்தே யாதிபுரா ணம்மனைத்து – மஞ்செழுத்தே

      யாநந்த தாண்டவமும் யாவைக்கு மப்பாலா

      மோனந்த மாமுத்தி யும்.

     

      உரையுணர்வுக் கெட்டா வொருவன் மிகுபஞ்சாக்

      கரத்தால் வரைமகடான் பாதி – பரையிடமாய்க்

      காணும்படியே கருணை யுருக் கொண்டாடல்

      பேணுமவர்க் குண்டோ பிறப்பு.”

 

என்று மனவாகங் கடந்தார் திருவாய்மலர்ந்தருளிய உண்மை விளக்கங் கூறுவது நன்குணர்தற்பாலதாம்.

      இங்ஙனம் விபூதி, உருத்திராக்ஷம், பஞ்சாக்ஷரம் முதலிய சிவசின்னங்களின் ஸ்வரூபம், பாகுபாடுகள், தாரணைவிதி, ஜபவிதி, தத்துவம் முதலியன சுருக்கமாகக் கூறப்பட்டன. இவற்றை நுண்ணுணர்வால் நன்காராய்ந்து விபூதி, உருத்திராக்ஷ, பஞ்சாக்ஷரங்கள் ஶ்ரீ நடராஜ மூர்த்தியேயா மென்று சந்தேக விபரீதமறத் தெளிந்து சிதாகாய நடனமாஞ் சமாதியைப் பெற்று, இன்புருவானவரே இனிப் பிறவா நிலையை யடைவரென்க.

                “மோனந்த மாமுனிவர் மும்மலத்தை மோசித்துத்

      தானந்த மானிட்த்தே தங்கியிடு – மாநந்த

      மொண்டருந்தி நின்றாடல் காணுமருண் மூர்த்தியதாய்க்

      கொண்ட்திரு வம்பலத்தான் கூத்து.”

 

      “யகார மிலிங்கமா நாளம் வகாரஞ்

      சிகார மேற்பீடற் தெரிக்கின் – மகாரந்தான்

      கண்டமே யாகுங் கவினா ரடிப் பீடம்

      பண்டிகஜ நஃகரமே பார்.”

 

      “நானேயோ தவஞ் செய்தேன்

      சிவாயநம வெனப் பெற்றேன்.”

 

      “தெள்ளமு தூறச் சிவாய நமவென்று

      வுள்ளமு தூற வொருக்கா லுரைத்திடும்.”

 

      “சிவசிவ வென்கிலர் தீவினை யாளர்

      சிவசிவ வென்றிடத் தீவினை மாளும்

      சிவசிவ வென்றிடத் தேவரு மாவர்

      சிவசிவ வென்னச் சிவகதி தானே.”

     

      “நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம்

      நாயோட்டு மந்திரம் நாதனி ருப்பிடம்

      நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி

      நாயோட்டு மந்திரம் நாமரியோமே.”

 

      “நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்

      நமச்சி வாயவே நானறி விச்சையும்

      நமச்சி வாயவே நாநவின் றேத்துமே

      நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.”

 

      “கருப்பயோனியிற் சுழிப்படு பவக்கடல் கடப்பப்

      பொருப்பினெம் பிரானுயிர்க்கெலாம் புணையெனப் புகன்ற

      விருப்பஞான வஞ்செழுத்தினை யுளத்திடை வித்திற்

      றருப்பைசுட்டிடும் வேள்வியேன் றானமேன் றவமேன்.”

 

என்னும், பஞ்சாக்ஷர மகிமையைப்பற்றிய ஆன்றோர் வாக்கியங்கள் ஈண்டு நன்குணர்தற் பாலனவாம்.

ஶ்ரீ நடராஜ தத்துவம் முற்றிற்று.

Related Content

Chidambaram

The Symbology Of Sri Nataraja By Sri J. M. S.

சிவ கீர்த்தனைகள் - பலர் பாடிய சிவ கீர்த்தனங்கள் தொகுப்பு

சிதம்பர சபாநாத புராணம் (சபாபதி நாவலர்)

சிதம்பரேஶ்வர அஷ்டோத்தர ஶத நாமாவளி꞉ - Chidambareshwara Ashtot