logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

வீரசைவ வினா விடை

கணபதி துணை

காப்புவெண்பா

 

      பாரிலுயர் முன்னோர் பகர்நதசுரு திப்படியே

      வீரசைவ ருக்கோர் வினாவிடையைத்தீரமுடன்

      செய்யவரம் பாலிக்குஞ் சிந்துரத்தி னானனவைங்

      கையனருட் செம்பொற் கழல்

 

 

முகவுரை.

      ஒரு வீரசைவன் தான் மேற்கொண் டுள்ள வீரசைவ நிலைமைக ளனைத்தையும் தெளிவாய்க்கேட்டறிய விரும்பி, அவற்றைத் தனக்குப் போதிக்கததக்க ஒரு ஆசிரியரை நெடுநாளாகத் தேடிக்கொண்டிருக்கையில், அவனது பரிபக்குவகாலம் சமீபித்தமையால் சிவபெருமான் திருவருளே திருமேனியாகக் கொண்டெழுந்தருளியது போன்று ஒரு வீரசைவவாசாரியர் எதிர்பட, பிறவி தரித்திரன் பெரும்புதையல் கண்டதுபோல மனமகிழ்ந்து, அவரை எதிர்கொண்டழைத்து வந்து, அவரது பாதங்களை விளக்கிச் சந்தன புஷ்பாதிகளால் அருச்சித்து, அப்பாததீர்த்ததைப் பருகி, ஓராதனத்தில் எழுந்தருளச் செய்து, “சுவாமீ! நெடுநாளாக அடியேன் வீரசைவசமயாசார நிலைமைகளனைத்தையும் விளங்க அறிந்து கொள்ள விருப்புற்றிருந்தும் தேவரீரைப் போன்ற தேசிகர் கிடையாமையால் எனதெண்ணம் நிறைவேறவில்லை; இன்று தேவரீரைக் கண்டபொழுதே என தெண்ணம் நிறைவேறுங்காலம் சமீபித்ததெனத் தெளிந்தேன்; ஆதலால் உணர்த்த வேண்டுவன வனைத்தும் உபதேசித்தருளல் வேண்டும்.” என விண்ணப்பித்தனன். அது கேட்ட ஆசிரியர், திருவுள மகிழ்ந்துஅன்பனே! இப்பூவுலகத்திலே நினக்கு இத்தன்மையவாகிய அரிய விஷயங்களை ஆராய வேண்டு மென்னுங் காதலுதித்தமைபற்றி மிக வியக்கின்றோம்,. இனி உனக்குள்ள சந்தேகங்களை யெல்லாம் முறைப்பட வினவுவாயாயின் அநுக்கிரகிப்போம்.” எனக் கட்டளையிட்டவுடன் சீடன் வினாவத்தொடங்கினான்.

 

                           

நூல்.

1.     வினா. -   சுவாமீ! உலகத்தின் கண்ணே சைவம் வீரசைவமென்னும் இரண்டிற்கும் பேதமுண்டோ?

      விடை. -   சைவமென்பதற்குப் பொருள் இன்னதென்றும், அதன் இலக்கணம் இப்படிப்பட்டதென்றும், முன்னர் அறிந்துகொண்டால் பின்னர் வீரசைவ நிலைமை உனக்கு எளிதில் விளங்கும்.

2.     வினா. -   அப்படியானால் சைவ மென்பதற்குப் பொருளென்னை? அதன் இலக்கணமென்னை? இவற்றை யருளல் வேண்டும்.

      விடை. -   சிவசம்பந்தம் சைவம். அச்சிவனுக்குரிய பூஜை நைமித்திக முதலியவைகளை ஆகமவிதி தவறாது செய்தலே அதனிலக்கணம்.

3.     வினா. -   சிவசம்பந்த மென்ப தென்னை?

      விடை. -   ஆன்மாவுக்கும் சிவத்துக்கும் உள்ள சம்பந்தந்தான் சிவசம்பந்தம்.

4.     வினா. -   இச்சிவசம்பந்தம் எவற்றாலுதிக்கும்?

      விடை. -   அகப்பத்தி புறப்பத்தி என்னும் இரண்டாலும் உதிக்கும்.

5.     வினா. -   அப்பத்திகளின் இலக்கணமென்னை?

      விடை. -   சிவபிரானைப் பேதமாயர்ச்சித்தல் புறப்பத்தியென்றும், அபேதமாயர்ச்சித்தல் அகப்பத்தியென்றும் கூறப்படும்.

6.     வினா. -   மேற்சொன்ன புறப்பத்தி அகப்பத்திகளில் உட்பிரிவுக ளுண்டோ?

      விடை. -   புறப்பத்திசரியை கிரியை என இரண்டாகவும், அகப்பத்தியோகம் ஞானமென இரண்டாகவும் பிரிவுபட்டு, இந்நான்கும் முறையே தாதமார்க்கம் சற்புத்திரமார்க்கம் சகமார்க்கம் சனமார்க்கம் எனப் பெயர் பெறும்.

7.     வினா.     சரியையாவது யாது?

      விடை. -   இயம நியமங்களைக் கடைப்பிடித்து, அருணோதயத்திற்கு ஐங்கடிகைக்கு முன் எழுந்து, விபூதிதரித்து, சிவபிரானைத் தியானித்து, ஆகமப்பிரகாரம் சவுசம் தந்ததாவள்யம் ஸ்நானம் அநுஷ்டான முதலியவற்றைச் செய்து, தனது நந்த வனத்திற் புகுந்து, மலர் முதலியன கொய்து, மாலைகளாகக் கட்டிக் கொடுத்தலோடு சிவாலயம் புகுந்து, திருவலகு திருமெழுக் கிட்டு, பூஜா திரவியங்களை அர்ச்சகர்கள் கையில் கொடுத்து, அபிஷேக அஷ்டவிதார்ச்சனை சோடசோபசாரங்களுடன் செய்வித்து, பிரதக்ஷிஅண நமஸ்கார தோத்திரங்களுஞ் செய்து, தனதிஷ்டம் நிறைவேறப் பிரார்த்தித்துக் கொண்டு, ஆலயத்தை விட்டரிதினீங்கி, ஆசாரியரையும் அடியார்களையும் வழிபட்டு, அதிதிபூசையும் பண்ணி, இந்நியமந்தவறாம லொழுகுவது.

8.    வினா. -   கிரியையாவது யாது?

      விடை. -   மேற்சொல்லிய சரியையில் வழுவாமையோடு சிவ தீக்ஷையும் ஆன்மார்த்த சிவ லிங்கமும் ஞானாசாரியரால் அநுக்கிரகிக்கப்பெற்று, பூஜைக்கு வேண்டிய உபகரணங்களெல்லாம் அமைத்துக்கொண்டு, நித்திய நியமங்களை முறையே செய்து, பின்பு ஓராதனத்தி லிருந்து பூதசுத்தி அந்தரியாகமுஞ் செய்து கொண்டு, சவுரமுதல் சண்டாந்தமாக மந்திரக்கிரியா பாவனைகளில் உலோப மில்லாமற் சிவபெருமானைப் பூசித்து, பெட்டகத்தி லெழுந்தருளப் பண்ணியபின்; சிவாக்கினியை யுண்டுபண்ணி அதனையும் ஆசாரியரையும் சிவாகமங்களையும் பூசித்து அதிதிபூசையும் செய்வது.

9.     வினா. -   யோகமாவது யாது?

      விடை. -   மேற்சொல்லியபடி சிவலிங்கப்பெருமானை வேறாகவைத்துப் பூசியாது, அப்பெருமான் சித்துஞ் சடமுமாகிய சாவத்திலும் உள்ளும் புறம்பும் நிறைந்திருத்தல் போலவே தனது உள்ளும் புறம்பும் நிறைந்திருத்தலை யுணர்ந்து, அதற்கடையாளமாகத் தனது சரீரத்தில் இடைவிடாமல் தரித்துக் கொண்டு அத்துவிதமாகப் பூசிப்பது.

10.    வினா. -   அத்துவித மென்பதற்குப் பொருளென்னை?

      விடை. -   சிவத்தோ டிரண்டறக் கலத்தலென்பது பொருள், இது பற்றியே சிவாத்துவிதமென்னும் பெயரும் இதற்குண்டு.

11.    வினா. -   அத்துவித மென்பதற்கு வேறுபொருளுண்டோ? உண்டேல் அவற்றையும் அருளல் வேண்டும்.

      விடை. -   பாடாணவாதிகள்சிவனுக்கும் ஆன்மாவுக்கும் இருளுக்கும் வெளியாகிய ஆகாயத்துக்கும் எப்படியோ அப்படி பேதமென்பர்; அப்படி கொண்டால், ஒன்றுக்கொன்று பிரயோசன மில்லாமற் போம்; ஆகையால் அது அத்துவிதமாகாது, மாயாவாதிகள்பொன்னுக்கும் ஆபரணத்திற்கும் போல் அபேதமென்பர்; அவ்வாறு கொள்ளின், பெறுவானும் பேறுமில்லாமற்போம்; ஆகையால் அதுவும் அத்துவிதமாகாது. சிவாவேசவாதிகள்சொல்லும் பொருளும் போல் பேதாபேதமென்பர்; இவ்வாறு கொள்ளின் நிஷ்பிரயோசமாதலால் இதுவும் அத்துவிதமாகாது.

12.    வினா. -   ஆனால் இந்த சிவாத்துவித சம்பந்தம் எத்தன்மையது?

      விடை. -   கண்ணொளியும் ஆதித்தனொளியும் போல் இரண்டற் றிருப்பதாம். இதில் மேற்கூறியவைகளிலுள்ள ஆக்ஷேபனைகள் செய்தற் கிடமில்லையாதலால் இதுவே சித்தாந்தம்.

13.   வினா. -   இவ்வத்துவித சம்பந்தம் உடலுக்கோ உயிருக்கோ?

      விடை. -   ஆன்மா பெத்தாவத்தையில் உடலோடுடலாய்க் கலந்து பிரிவுபடா திருக்கையால் இவ்வுடலுக்கே முந்தச் சிவசம்பந்தம் வேண்டும். ஏனெனில்; இத்தூலதேகம் பிரகிருதி வழித்தாகிய பஞ்சபூதசையோக சுக்கில சுரோணித மூல சப்ததாதுமயமாகிய கன்மவேதுவாய, ஆகாராதிகளுடனே கூடி அசுத்தமாய், நரை திரை மூப்புக் கிடமாய், அவலமாய்ப் பிறந்திறந்து வருகையால், ஆன்மாவும் இவ்வுடலோடுகூட இரண்டறக்கலந்து தேகானமாவாயிருத்தலாலே, இத்தூலவுடறகுநோநத ஆசூசமறும்படியாக இத்தூலவுடலிற்றானே எக்காலமும் நின்மல பரசிவ சகளமூர்த்தமாகிய இஷ்டலிங்கத்தை அன்புடன் சிரசு முதலிய தானங்களில் தரித்து வழிபடுதல் வேண்டும். இவ்வாறு தரிப்பதே சிவசம்பந்தம். மற்றையவை பேத சம்பந்தமாகு மல்லாது சிவசம்பந்த மாகா.

14.    வினா. -   ஆனால் இச்சம்பந்தம் தூல தேகத்திற்கு மாத்திரம் போதுமோ? சூக்கும காரண தேகங்கட்கும் வேண்டுமோ?

      விடை. -   இலயம் போகம் அதிகாரம் என்றும், சக்தி யுக்தன் பிரவர்த்தன் என்றும், சிவன் சதாசிவன் ஈசன் என்றும், நிட்களம் சகளநிட்களம் சகளம் என்றும் பெயர் பெற்ற இஷ்ட பிராண பாவ மென்னும் மூவகை இலிங்கங்களையும் முறையே தூல சூக்கும காரண சரீரங்களிலே தரித்தல் வேண்டும்.

15.    வினா. -   இம்மூவகை இலிங்கங்களைத் தரித்தலினால் வரும் பிரயோசன மென்னை?

      விடை. -   இம்மூவகை இலிங்கசம்பந்தத்தால் தத்துவசுத்தி வரும்; அதனோடு ஆணவமல சுத்தியுமாம்; இவ்வாணவமல சுத்திவரவே ஆன்மசுத்தி பிறந்து ஆன்மலாபமான சிவ அந்நியசம்பந்த வாழ்வு பெறுவதாம்.

 

 

16.    வினா. -   ஆயின் இவற்றைத் தரித்தபின் யாதுசெய்தல் வேண்டும்?

      விடை. -   அவ்விலிங்கங்களை வழிபடுவ தன்றியும், தனக்குப் புசிப்பாக வரும் பஞ்ச தன்மாத்திரையின் போகங்களை, அவ்வவ் விலிங்கங்களுக்கு அர்ப்பிதஞ் செய்து புசித்தல் வேண்டும்.

17.    வினா. -   இவற்றை எப்படி அர்ப்பிதஞ் செய்தல் வேண்டும்?

      விடை. -   அதிகார லிங்கமாய்ப் புறம்பிலே சகள உருக்கொண்டு விளங்கும் இஷ்டலிங்கத்திற்கு ரூபத்தையும், போகலிங்கமாய் உள்ளும் புறம்பும் நிட்கள சகள உருக்கொண்டு விளங்கும் பிராணலிங்கத்திற்கு உருசியையும், இலயலிங்கமாய் உள்ளே நிட்கள உருக்கொண்டு விளங்கும் பாவலிங்கத்திற்குத் திருப்தியையும் அர்ப்பித்தல் வேண்டும். இவ்வாறு அர்ப்பிதஞ் செய்து புசிப்பவனே வீரசைவனாவன்.

18.    வினா. -   அவ்வாறு அர்ப்பிதஞ் செய்தலால் வரும் பயன் யாது?

      விடை. -   அர்ப்பிதஞ்செய்வதனால் ஜனனமரணங்கட் கேதுவாகிய கன்மம் நாசமாம், நாச மாகவே இதாகிதமறும், அறவே இருவினையொப்பு வரும், வரவே மலபரிபாகம், பிறக்கும், பிறத்தலால் சத்திநிபாதத் தன்மையுண்டாம், அதனால் சிவானந்தாநுபவங் கிடைக்குமென்று சிவபெருமா னருளிய சிவாகமங்கள் கூறும்.

19.    வினா. -   சிவலிங்கதாரணம் புரிந்த தேகம் எவ்வாறாம்?

      விடை. -   இவ்வண்டத்திலே சிலையாதி உருவங்களில் சிவபெருமானை விதிப்படி தாபிக்கின், அவ்வுருவம் அந்த க்ஷணந்தொடங்கிச் சிவலிங்கமெனவும் அத்தானம் சிவாலய மெனவும் பெயர்பெறுவ தன்றியும், சிவபெருமான் சாநித்தியராக விளங்கவும் பெறுவதுபோல், பிண்டமாகிய இவ்வங்கமும் சிவலிங்கந்தரித்தது முதல் சிவலிங்கத்தல மெனவும், சிவாலயமெனவும் பெயர் பெற்றுச் சிவபெருமான் சாநித்தியராக விளங்கப் பெறும்.

20.    வினா. -   ஆனால் அண்டமும் பிணடமுமாகிய இரண்டிடத்திலும் தாபிக்கும் இலிங்கங்களுக்குப் பெயர் வெவ்வே றுண்டோ?

      விடை. -   அண்டத்திலே யுள்ள சுயம்பு முதலிய இலிங்கங்களுக்குத் தாபரலிங்கமென்றும், பிண்டத்திலே தரிக்கப்படும் இலிங்கங்களுக்குச் சரலிங்கமென்றும் சிவாகமங்கள் விதிக்கும்.

21.    வினா. -   மேற்கூறிய தாபரலிங்கதத்திற்கும் சரலிங்கத்திற்கும் தாரதம்மிய முண்டோ?

      விடை. -   பொதுவகையால் ஆன்வமர்க்க மெல்லாம் ஓர்ஜாதியேயாயினும், சிறப்பு வகையால் தேவர் முதலிய சங்கமங்கள் சிறந்தாற்போல், யாவர்க்கும் ஆன்மார்த்தமாய் நின்று இஷ்ட காமியங்களைக் கொடுத்தலால் தாபரலிங்கத்திலும் சங்கமலிங்கமே சிறந்தது.

22.    வினா. -   அண்டம் பிண்டம் இரண்டும் சடமாக, பிண்டத்தை மாத்திரம் சரமென்று கூறுவானேன்?

      விடை. -   சீவசையோகத்தால் வளர்ச்சி முதலிய குணத்தையுடைய இப்பிண்டத்தில் சதா ஞானாதிக்கமான சிவலிங்கத்தைத் தாபிக்க, அச்சிவலிங்கத் தேகாபிமானியாகிய சீவனை இரண்டறக்கலந்து, அவ்வுயிர்ச் செயலைக் காட்டாது தன்னுள் அடக்கி, அச்சீவனது அபிமானத் தலமாகிய தேகத்தைத் தனது கோயிலாகக் கொண்டு, தன்னுள் அடங்கியிருக்குஞ் சீவனானவன் தன்னைப் பூசிக்க, தான் அப்பூசையினைக் கொள்ளலானும், அச்சீவனுக்குத் தான் சீவனாக இருக்கையானும், அத்தேகத்துக்குச் சரமெனப் பெயராயிற்று.

23.    வினா. -   இவ்வாறான அங்கலிங்களுக்குத் தேகபந்த மில்லையோ?

      விடை. -   சிவநேசர்கள் தம்முடைய சுகதுக்கபோகங்களை அநுபவித்தற் காதாரமான மூவகைத்தேகங்களையும் மூவகை இலிங்கங்களுக்கும் ஆலயமாக்கி, ஆசாரியரால் தேகாதாரத்தைவிட்டு இலிங்காதாரத்தைப்பற்றி, முன்னேதே தேக முன்னிலையாக விடயபோகங்களைப் புசித்ததுபோலவே, சிவலிங்க முன்னிலை யாகச் சிவப்பிரசாதத்தை உட் கொள்ளுதலால் அவர்கட்குச் சரீரபந்தங் கிடையாது.

24.    வினா. -   ஆயின் மேற்கூறிய பேறுபெறுவதற்குச் சிவசம்பந்தமாகிய திருவெண்ணீறு தரித்தலும் உருத்திராக்கமணி யணிதலுமே போதாவோ?

      விடை. -   விபூதி உருத்திராக்கங்கள் சிவனது ஏகதேச சொரூபக்குறியே யல்லது சாட்சாத் சிவசொரூபமன்று; ஆகையால் அவ்விரண்டும் அவரவர்கள் பரிபக்குவத்திற்குத் தக்கபடி பதமுத்தியைக் கொடுக்கவல்லன வன்றி மேலான முத்தியைக் கொடுக்க மாட்டா.

25.    வினா. -   ஆனால் இலிங்க தாரணஞ் செய்து கொண்டவர்களுக்கு விபூதி உருத்திராக்கங்கள் வேண்டுவதில்லையோ?

      விடை. -   ஓர் கன்னிகைக்குத் தனது கணவனது ஆக்கினாசொரூபமாகிய திருமங்கிலியதாரணமே முக்கியமாயினும், மஞ்சட்பூச்சும் ஆபரணங்களும் இன்றியமையாதனவாக வேண்டி யிருத்தல் போல, சிவ சொரூபமாகிய இலிங்கதாரணம் முக்கியமேயாயினும், விபூதி உருத்திராக்கங்களும் ஆவசியகம் வேண்டற் பாலனவே.

26.   வினா. -   சிவலிங்கதாரணம்போல் விபூதி உருத்திராக்கங்கள் சைவரென்பதைப்புலப்படுத்தாவோ?

      விடை. -   அவையும் புலப்படுத்துமாயினும், ஓர்கன்னிகை ஆபரணாதிகள் அணிந்திருப்பினும் அவை இவள் ஒருவன் மனைவி என்பதைப் புலப்படுத்தாமல், மங்கிலியம் ஒன்றுமே புலப்படுத்துவது போல, விபூதி உருத்திராக்கங்களினும் சிவலிங்கத்தாரணமே சைவனென்பதைத் தெளிவாகப் புலப்படுத்தும்.

27.    வினா. -   சிவசம்பந்த முடையவனைச் சைவனெனாது வீரசைவனென்பது என்னை?

      விடை. -   ஜனனமரண முதலிய கற்பனைகளைக் கடப்பிப்பவர் சிவபெருமான் ஒருவரேயென அப்பெருமானையன்றிப் பிறிதொரு கடவுளரையும் வழிபடாமையும்; வேதாகமங்களிற்கூறும் குரு லிங்க சங்கமமென்னும் மூன்றினிடத்தும் முறையே அநுக்கிரக நிமித்தமாக உண்டாகும் சுத்தம் சித்தம் பிரசித்தமென்னும் முப்பிரசாதத்தையே யன்றிப் பிறவற்றைக் கொள்ளாமையும்; கற்புடையாள் தன் கணவனிடத்துப் போக விதங்களைப் புசித் தின்புறுதலேயன்றிப் பிறபுருஷ ரின்பத்தை இச்சியாமைபோல், இஷ்டலிங்கத்தினது பூசை தரிசனம் தீர்த்தம் பிரசாதம் நிஷ்டை தியானம் இவைகளால் மகிழ்வதன்றி மற்றை மூர்த்தங்களின் பூசை முதலியவற்றில் மகிழாமையும்; அங்கலிங்கிகளோடு பரிசித்தல் புசித்தல் வசித்தலாதிக ளியற்றுவதன்றி ஏனையோர்களிடத்து அவை இயற்றாமையும்; ஆகிய கோட்பாட்டை யுடைமையால் இவனுக்கு வீரசைவனெனப் பெயராயிற்று. அன்றியும் இன்னும் அனேக ஏதுக்களுள.

28.    வினா. -   இஷ்டலிங்கத்தை எக்காலத்திலும் இடைவிடாமல் தரிக்கவேண்டுவ தென்னை?

      விடை. -   பிரவாகம் அதிகரித்துக் கரை தெரியாது நிலையழிந்துவரும் ஓர் பெரிய ஆற்றைக் கடக்க வேண்டிய ஒருவன், ஓர் தெப்பத்தைக் கைவிடாது பற்றி நீந்துதல் வேண்டும்; அவ்வாறு நீந்துபவன இடையில் அத்தெப்பத்தைக் கைவிடுவானாயின் அப்பிரவாகத்தில் முழுதி அதோகதியாய்ப் போய்விடுவானவல்வா? அதுபோல் ஜனனமாகிய பெரிய பிரவாகத்தைக்கடந்து செல்ல வேண்டி அதைக் கடத்தும் தெப்பமாகச் சிவலிங்கதாரணம் செய்துகொண்டவன், அதை ஒரு கணப்பொழுது விட்டு நீங்கினானாயினும் அத ஜனனப்பிரவாகத்தில் அழுந்தி அதோகதியாய்ப் போய்விடுவா னென்பதற்குச் சந்தேகமில்லையாதலால், சதா தரித்திருக்கவே வேண்டும்.

29.    வினா. -   ஆனால் தூலதேகத்தில் இஷ்டலிங்க தாரணமில்லாமல் சூக்கும காரண தேகங்களில் பிராண பாவ லிங்கங்களை மாத்திரம் தரித்துக்கொண்டா லென்னை?

      விடை. -   அப்படியன்று, தூலதேகத்தில் இஷ்டலிங்க தாரணமும் முக்கியமா யிருத்தல் வேண்டும். ஏனெனில்; தூலதேகம் பிடித்த தெப்பத்தைக்கொண்டுதான் அரூபமாகிய சூக்கும காரண தேகங்களும் கரைசேர வேண்டும்; அதுபோல தூலதேகம் இஷ்டலிங்க தாரணத்தைப் பெற்றுப் பரிசுத்தத்தினை யடைந்தால்தான மன முதலிய சூக்கும காரண தேகங்கள் பரிசுத்தத்தினை யடையும், வேறு விதத்தா லடையா.

30.    வினா. -   அப்படியாயின் தூலதேகத்தில் இஷ்டலிங்கத்தைத் தரித்தலே போதாதோ?
     
விடை. -   போதாது, ஏனெனில்; காயத்தாற் செய்த கருமம் மனத்தாலும் மனத்தாற்செய்த கருமம் காயத்தாலும் நீங்காது. வாக்காற் செய்ததும் அப்படியே, ஆகையால் தூல சூக்கும காரணமாகிய முத்தேகத்தும் மூவிலிங்கங்ளையும் முறையே தரித்தல் வேண்டும்.

31.    வினா. -   இப்படிப்பட்ட வீரசைவத்திற்குப் புறம்பான நடைகளெவை?

      விடை. -   தனக்கு விதித்த நித்திய நியமங்களைக் கைவிட்டு, ஆகாராதிகளாற் காலங்கழித்து, பாவகன்மத்துக்கீடாக நரகயாதனையில் வருந்தி, ஈனயோனிகளிற் பிறந்து, சிவப்பிரசாதமல்லாத மாயாவிடய ரூபமாகும் இந்திரிய உச்சிட்டங்களைப் புசிக்கின்றதும்; மாயா சம்பந்தமாகிய இத்தேகத்தைத் தீக்ஷாகாலத்தில் மந்திரங்களினாற் சுத்திபண்ணி, இஷ்டலிங்கம் எழுந்தருளியிருக்கச் சிவாலயமாகச் செய்வியாததும்; சுரோத்திராதி ஞானேந்திரிய வழித்தாகவரும் சத்தாதிவிடயங்களை, அந்தந்த தானத்தினின்றும் பஞ்சசாதாக்கிய வடிவமாய்ப் பிரசாதலிங்க முதல் ஆசாரலிங்க மீறாகவுள்ள ஐவகை இலிங்கங்களுக்கும் அர்ப்பித்து, இலிங்கப் பிரசாதமாகப் புசியாததும்தன்கணவனையே வழிபடுகடவுளெனக் கொண்ட ஓர்கற்புடைய மனைவியானவள்சகல போகங்களையும் தன்னாயகனுக் குரிமையாக்கித் தான் அநுபவிப்பது போல, சகல விடயசுகங்களையும் தானாகப் புசியாமல் தனது நாயகனாகிய இஷ்டலிங்கத்துக்கு அர்ப்பித்து, அவ்விலிங்கப் பிரசாதமாகப் புசியாததும்; நாவி பாஷாணம் முதலிய விஷபதார்த்தங்களைப் புசிக்கின் இத்தேகத்தினின்றும் சீவன் நீங்கிப்போமெனக் கருதி அவைகளைப் புசியாததுபோல, இஷ்டலிங்கத்துக்கு அர்ப்பிக்க யோக்கியமல்லாத தீய பதார்த்தங்களைப் புசித்தால் சிவபிரான் நிலைபெறாரெனத் துணியாது, அவற்றை யுண்டு நரகத்தில் அழுந்துவதும்; பாலுண்ணும் சிறுகுழந்தைக்கு மாந்தமுதலிய பிணிகள் நேர்ந்தபோது, அப்பிணிக்குத்தக்க மருந்தைக் கொடுத்தால் அது சகியாதென்றுணர்ந்து, தாயானவள்அம்மருந்தைத் தான்புசித்துத் தன்முலைப் பாலால் அக்குழந்தையின் நோயைத் தணித்தல் போல, சிவபெருமான் ஆன்மாவிற்கு நேர்ந்த ஆணவமுதலிய பிணிநீங்க மாயா போகங்களாகிய ஒளஷதத்தைத் தான் அங்கீகரித்து, அப்பிரசாதத்தை யருளி அப்பிணியை அகற்றுவாரென்ப துணராது, அவைகளை மாயாபோகமாகவே புசிப்பதும்; இவ்வுலகத்தின் கண்ணே எவனாயினும் தன்னை ஒத்தவரோடிருந்து உண்ணும் போது, தனக்கொருவிதமும் அவர்க் கொருவிதமுமாக உணவுகளை வேறுபடுத்தினும் கடுநர கடைவன் என்பதைக் கேட்டிருந்தும், தன்னுயிர்க்குயிராயிருக்கும் சிவனுக்கொரு பதார்த்தமும் தனக்கொரு பதார்த்தமுமாகச் செய்து கொள்வதும்; ஆதிய இவை போன்றவைகளே வீரசைவத்திற்குப் புறம்பான நடைகள்.

32.    வினா. -   வீரசைவன் இஷ்டலிங்கப் பிரசாதமே புசிக்க வேண்டுமென்னும் நியதி என்னை?

      விடை. -   தனக்கு இன்னவனே கணவனென்னும் ஓர் நியமமில்லாத பொதுமாதானவள் திரவிய வாஞ்சையால் அருந்தல் பொருந்தல் முதலியனவற்றைப் பலரிடத்தும் அங்கீகரிப்பள்; கற்பனையுடைய ஓர் மங்கையோ பரபுருஷனைக் கண்ணினாலேயும் பாராது தன் கணவனையே தெய்வமெனக் கொண்டு எப்போதும் அவன் வசப்பட்டு அவனிடத் துண்டாகிய போகவிதங்களையே அநுபவிப்பள். அதுபோல வீரசைவனும் பரார்த்த முதலிய அந்நிய தேவதாப் பிரசாதங்களை அங்கீகரியாமல் தனது இஷ்டலிங்க பிரசாதமே உட்கொள்ளல் வேண்டும்.

33.    வினா. -   ஆயின், வீரசைவன் மூர்த்தி தலம் தீர்த்தம் என்னும் மூன்றையும் அநுஷ்டிக்க வேண்டிய தில்லையோ?

      விடை. -   அம்மூன்றும் அநுஷ்டிக்க வேண்டியவைகளே யாயினும், அநிஷ்டமாகிய மலமாயாகன்மங்களைப் போக்கி இஷ்டமாகிய சிவானந்தாநுபூதியைக் கொடுக்குங் காரணத்தால் இஷ்டலிங்கம் எனப்படும் சிவலிங்கத்தைத் தூலதேகத்தில் தரித்த தன்றியும் சூக்கும காரண தேகங்களில் பிராண பாவ லிங்கமூர்த்திகளைத் தரித்தும், அவற்றிற்கு இத்தேகங்களைச் சந்நிதானமாக்கியும், அறுபத்தாறுகோடி தீர்த்தங்களையும் இத்தேகங்களிலே யொடுக்கியும், ஞானாசாரியர் மூர்த்தி தலம் தீர்த்தமென்னும் மூன்றையும் சாநித்தியமாக விளங்கும்படி செய்திருத்தலால்; இவற்றால் முறையே தரிசித்தும் வசித்தும் மூழ்கியும் எளிதிலே தமது வினைகளை ஒழித்துக் கொள்ளுதலாகிய அநுபவ நிலையை விட்டுப் புறத்திலே பெரும்பாலும் அவற்றை நாடிச் சஞ்சரிக்க வேண்டிய தில்லை.

34.   வினா. -   வீரசைவர்களுக்குப் பஞ்சசூதகங்களும் உண்டோ?

      விடை. -   ஞானாசாரியர் சுவஸ்திகாரோகண முதலிய தீக்ஷைகளால் மாயா காரியமாகிய இத்தேகத்தைச் சுத்தீகரித்துச் சகல சூதகங்களையும் ஒழித்து மந்திர சொரூபமாக்கி, நின்மலமாகிய இஷ்டலிங்கத்தைப் பிரசன்னமாய்ப் பஞ்சாவத்தையினும் இவனுடைய அர்ப்பண அவதானங்களை அங்கீகரித்து அநுக்கிரகம் பண்ணிக் கொண்டு எழுந்தருளி யிருக்கும்படி தாபிக்க இவனும் சந்நிதானம் விட்டுப் பிரியாம லிருத்தலால், வீரசைவனுக்குப் பஞ்ச சூதகங்களு மில்லை.

35.    வினா. -   வீரசைவர்களுக்குச் சாதிகன்மமும் குலாசாரப் பற்றும் உண்டோ?    விடை. -      பலவித விறகுகளும் அக்கினியிற்பட்டெரிந்த போது நெருப்பெனப் பெயர்பெற்ற வாறுபோல, முன்வினைக் கீடாகச் சனித்த பிரம க்ஷத்திரிய வைசிய வைசிய சூத்திர அநுலோம பிரதிலோமர்களில் யாவரேயாயினும் மலபரிபாக மிகுதியினால் ஞானாசாரியரை யடைந்து ஞானதீக்ஷை பெற்றவுடன் முன்சொன்ன சாதிதர்மங்கள் போய் சிவசாதியா யிருத்தலால், இவர்களுக்கு அவ்விரண்டு மில்லை.

36.    வினா. -   வீரசைவன் தன் ஆசாரியரை எவ்வாறு கொள்ளல் வேண்டும்?

      விடை. -   சிவபெருமானே தன்னைக் குறித்து ஆசாரிய மூர்த்தமாய் எழுந்தருளி வந்து, இடைவிடாது தொடர்ந்து வரும் ஜனன மரணங்களைத் தீர்த்து, சிவாநுபூதியைத் தரும்பொருட்டுத் தீக்ஷாகாலத்தில் தனது தூல சூக்கும காரணமென்னும் தனுத்திரயங்களையும் சோதித்து, பின்பு ஆன்மா எங்கும் வியாபியா யிருந்தாலும் அதனது விளக்கம் இருதயமாகையால் இருதயத் தானத்தைப் பற்றியிருக்கும் அவ்வான்மாவை நாராசமுத்திரையினால் வாங்கித் தமதிருதயத்தில் வைத்து, மலத்திரயங்களும் மாறச் சுத்தனாய் நினைந்து, பின்னும் தமது கரதலத்தினாலே அவனுடைய இருதயகமலத்தில் தாபித்துத் தமது புத்திரனாகப் பிறப்பித்தலால்; அவ்வாசிரியரைப் பிதாவெனவே கொள்ளல் வேண்டும். இதுபற்றியே இவனுக்குக் குருசர சாதகனென்னும் பெயரும் உண்டு.

37.    வினா. -   இத்தகைய ஆசிரியரால் வீரசைவருக்கு உபதேசிக்கப்படும் மஹா வாக்கியங்கள் எவை?

      விடை. -   அவை பல உண்டேனும் அங்கலிங்க ஐக்கியத்தைக் கரதலாமலகம் போல விளக்கலால் தத்தொமசி மஹா வாக்கியமே முக்கியமாக உபதேசிக்கப் படுவதாம்.

38.    வினா. -   ஆனால், தத்தொமசி என்னும் வாக்கியத்திற்குப் பொருளென்னை?

      விடை. -   தத் என்பது சிவம், தொம் என்பது சீவன், அசி என்பது இவ்விரண்டினது ஐக்யம். அது நீ ஆனாய் என்பதற்கும் இதுவே பொருள்.

39.    வினா. -   இத் தத்தொமசி வாக்கியத்திற்கு வேறுபொருள் கொள்வதும் உண்டோ?

      விடை. -   அனேகம் உண்டேனும் இன்னும் ஒர் முக்கியப்பொருள் உண்டு, எப்படி யென்னில், - தத் பதம் என்பதற்குப் பொருள் பிரமமாதலின் அருளே திருமேனிகொண்டு வருதலால், பிரமமென்பதற்குக் குரு என்பது தெளிவாம்; தொம்பதம் என்பதற்குப் பொருள் ஆன்மா, அது இலிங்கவடிவாதனலின் இலிங்கமென்பது தெளிவாம்; அசிபதம் என்பதற்குப் பொருள் ஆனாய் என்பதாகலின், சங்கமம் என்பது தெளிவாம். எனவே இலிங்கமே உடல், சங்கமமே உயிர், குருவே அறிவு. இவ்வாறிருத்தலால் உடலில் உயிரும் உயிரில் அறிவும் கலந்திருத்தல் போல, இம்மூன்றும் ஒற்றுமைப்பட்டே யிருக்கும். இவ்வாறன்றி இவ்வான்மாவை இரக்ஷிக்க வேண்டும் என்னும் சுத்த சிவத்தின் நினைவு இலயம், இதுதான் சங்கமம். அந்நினைவின்படி இரக்ஷிக்க வேண்டியது இவ்வாறெனப் பகுத்தது போகம், இது தான் இலிங்கம், அப்பகுப்பின்படி அநுக்கிரகம் பண்ணினது அதிகாரம், இதுதான் குரு. இதனால் சங்கமத்திற்கு இருப்பிடம் இலிங்க மென்றும், சங்கம வியாபாரம் குரு வென்றும் கொள்வதும் உண்டு.

40.   வினா. -   ஆன்மா விற்குச் சிவலிங்க அத்துவிதசம்பந்தம் இல்லாவிடின் மற்றை இரண்டும் அத்துவித சம்பந்த மாகாவோ?

      விடை. -   ஒரு போதும் ஆகா, எப்படி யெனில் தேகத்திற்கு ஆசூசம் இருக்கு மளவும் உயிருக்கும் அறிவுக்கும் ஆசூசம் உண்டு. அதுபோல இலிங்க சம்பந்தம் இல்லாதபோது, சங்கம சம்பந்தமும் சற்குரு சம்பந்தமும் அவரால் அருளும் பிரசாத சம்பந்தமும் அற்றுப்போம்.

41.    வினா. -   குரு லிங்க சங்கம சம்பந்த மன்றிப் பிரசாத சம்பந்தமும் வேண்டுவானேன்?

      விடை. -   பிரசாத சம்பந்தம் இல்லா விடின் சிவஞானம் உதயமாகாது. சிவ ஞானம் உதயமாகாவிடின் தன்னை முதலாகக் காட்டாது அநாதியே ஆன்மாவினுடன் சகசமாய்க் கூடி நின்று ஜனன மரணத்தை உண்டாக்கும் ஆணவமல சம்பந்தம். மாறாதென்று சிவாகமங்கள் சொல்லும்.

42.    வினா. -   ஆகமங்களிற் கூறும் சைவம் எத்தனை வகைப்படும்?

      விடை. -   சாமானியசைவம், மிசிரசைவம், சுத்தசைவம், வீரசைவம் என்னும் நான்குமே ஆகமசித்தாந்தத்திற்கு ஒத்தவை. ஏனைச் சைவங்களெல்லாம் இவற்றுள் அடங்கும்.

43.    வினா. -   சைவம் நான்கு வகைப்படும் என்பதற்கு ஆகமப் பிரமாணம் உண்டோ?

      விடை. -   உண்டு. வாதுளாகமத்தில், “சைவஞ் சதுர்விதஞ் ஞேயம், சாமான்யம் சுருணுஷன்முகா, சாமான்யம் மிஸ்ருதஞ்சைவா சுத்தவீரம் யதாக்கிரமம்என்பதே.

44.    வினா. -   ஆயின், அந்நான்கு சைவங்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்?

      விடை. -   சாமானிய சைவமாவதுஆசாரியரால் சமயதீக்ஷைபெற்று, விபூதி உருத்திராக்கம் தண்டு கமண்டலம் என்று சொல்லப்பட்ட உபாங்கங்களை மேற் கொண்டு, திரிகால ஸ்நானாநுஷ்டானம் முடித்துக் கொண்டு சிவாலயஞ் சென்று திருவலகு திருமெழுக்கிட்டுத் தனக்கு இயன்றன கொடுத்து நிவேதிக்கச் செய்து, பிரதக்ஷிணம் நமஸ்காரம் தரிசனம் தோத்திரம் முதலியவற்றை என்பு நெக்கு விட உருகி அன்பினாற் பலகாலுஞ் செய்து வருவதாம்.

45.    வினா. -   இவர்க்குச் சாமானியசைவர் எனப் பெயர் வருவானேன்?

      விடை. -   சிவலிங்கம் கண்டவிடத்துப்போய், வழிபட்டு வருவதே யல்லாமல் இவர்களால் பூசிக்கப்படும் சிவலிங்கம் இதுவென ஓர் நியமம் இல்லாமையால், இவர்கட்குச் சாமானியசைவர் எனப் பெயராயிற்று.

46.    வினா. -   மிசிர சைவத்தின் இலக்கண மென்னை>?

      விடை. -   மேற் சொல்லியது போலவே விபூதிமுதலியன தரித்துக் கொண்டு, ஞானாசாரியரால் விசேடதீக்ஷைபெற்று, அவ்வாசாரியரால் தனக்கென ஓர் சிவலிங்கப் பெருமானை எழுந்தருளச் செய்துகொண்டு, சூரியன் முதற் சண்டேசுராந்தமாகிய ஆவரணதேவதைகளை அவரவர்க் குரித்தான மந்திரங்களினால் அருச்சித்து, பின்பு அம்மூர்த்திகளை யெல்லாம் தன்னாற் பூசிக்கப்படும் அச்சிவனுடனே ஒன்றாகக்கூட்டி ஏகமாய்ப் பாவிப்பது தான் மிசிரசைவம்.

47.    வினா. -   இதற்கு மிசிரசைவம் என்னும் பெயர் ஏன் வந்தது?

      விடை. -   சிவதீக்ஷை மாத்திரமே செய்துகொண்டு சிவபூஜை செய்யாம லிருப்பவர்களுடைய கிருகத்திலேயும், அன்னாதிகளை வாச்சியாமற் புசிக்கையால், இவர்களுக்கு மிசிரசைவர் எனப் பெயர்வந்தது.

48.    வினா. -   சுத்த சைவத்தின் இலக்கணம் என்னை?

      விடை. -   சமய விசேட நிருவாணமென்னும் மூவகைத் தீக்ஷைகளைப்பெற்று, விபூதி முதலிய சாதனங்களையும் தரித்துக் கொண்டு, ஆசன மூர்த்தி மூலங்களை விஸ்தாரமாக அறிந்து, சவுராதி சண்டாந்தமான தேவதைகளை மிசிரமாகக்கலந்து பூசியாது அத்தேவதைகளின் சொரூபத்தையும் சிவலிங்கத்தின் சொரூபத்தையும் குருமுகமாகக் கேட்டறிந்து, அந்த ஆவரண தேவதைகளையும் சிவலிங்கத்தினையும் பூசித்தற்கு வேண்டுவனவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு, மந்திரக்கிரியா பாவனைகளில் வழுவாமல் சிவலிங்கப் பிரதிஷ்டை பண்ணி, பரார்த்த கிரியையாயின் கருஷணாதி பிரதிஷ்டாந்தம் பிரதிஷ்டாதி யுச்சவாநதம் உச்சவாதி பிராயச்சித்தாந்தம் செய்தும்ஆன்மார்த்த பூஜையின் அதற்குரிய கிரியைகளோடு ஆன்மசக்தி முதலிய ஐவகைச் சுத்திகளை யியற்றியும் விதிப்படி, சிவபெருமானைப் பூசிப்பது.

49.    வினா. – இதற்குச் சுத்தசைவமென்ப பெயர் வருவானேன்

      விடை. -   மேற்கூறிய சாமானியமும் மிசிரமும் போல்வ தன்றி இங்கே கூறிய விதிப்படி, அநுஷ்டிப்பதாதலின் இதற்குச் சுத்தசைவம் எனப் பெயராயிற்று.

50.    வினா. -   வீரசைவத்தின் இலக்கணமென்னை?

      விடை -   பக்குவவிசேடமுற்ற ஒருவனுக்குச் சிவனை விட்டு நீங்காமலிருப்பதுவே உண்மைமுத்தி என்னும் அறிவு உண்டாகும். அப்போது மலபரிபாக மிகுதியால் சிவன் ஶ்ரீபாதசத்தி அவ்வான்மாவிற் பதிய அச்சிவசத்தி விளக்கத்தால் தேகாதி பிரபஞ்சத்தில் உபரதிஜனித்து, பதிபசுபாசு இலக்கணங்களைப் பிரித்தறியும் எண்ணத்துடன் சிவகமங்களை யோதி, அச்சிவாகம் விளக்கத்தால் அச்சத்திக்கு மேலாகிய சற்பத்தி பிறக்க, அச் சற்பத்தியால் பொன்னாற் சமைத்த மதயானையின் உருவத்தை ஓர் கம்மியன் குகையில் அடைத்து அழலில வைத்து உருக்கி யானையென்னும் பெயரைமாற்றிச் சிங்கத்தினது உருவாகச் செய்தமை போலவும் வேட்டுவனென்னும் குளவியானது புழுவைத் தன் உருவாக்குதல் போலவும்ஞானாசாரியரானவர்பிரமன் தனது மனச் சங்கற்பத்தினால் கன்மத்திற்கு ஈடாகப் பூதபரிணாமமாய் அநுசிதமாகச் செய்யப்பட்டிருக்கும்இத்தேகத்தை ஞானாக்கினியால் தகிதது திவ்விய தேகமாக்கி, அத் திவ்விய தேகத்தினிடமாக இருக்கும் ஆன்மாவைச் சிவ சொரூபமாகத் தீக்ஷிக்கப் பெறுவதாம்.

51.    வினா. -   இத்தீக்ஷை எவ்வாறு பெயர்பெறும்?

      விடை. -   அபேதஞான சாம்பவதீக்ஷை எனப் பெயர் பெறும்.

52.    வினா. -   இவ்வித தீக்ஷை பெற்ற வீரசைவர்கள் சிவனை வழிபட்டுக்கொண்டு எவ்வாறிருத்தல் வேண்டும்?

      விடை. -   தனக்கென ஓர் அறிவற்றுச் சடமாயிருக்கும் உடலானது சித்தாயிருக்கும் உயிரைக்கலந்து அவ்வுயிர்போன்ற அவ்வுயிர் வேண்டிய கருமங்களையெல்லாம் செய்யினும் சுதந்தரம் முதலிய சுகதுக்காநுபவம் அவ்வுடலுக் கில்லாததுபோல, இச்சிவலிங்கமும் சுதந்தர வீனனாகிய ஆன்மாவைக்கலந்து அவனைக்கொண்டு பூஜையான அர்ப்பண அவதானம் முதலிய எல்லாம் அங்கீகரித்துக் கொள்ளுதலால், இவ்வீரசைவர்கள் கவலை யொழிந்து தற்சுதந்தரமின்றிப் பேதமற் றிருக்கவேண்டும்.

53.    வினா. -   வீரசைவர்களுக்குப் பூஜையில் தவறு நேரிடில் பிராயச்சித்த மென்னை?

      விடை. -   வீரசைவர்கள் மன வாக்குக் காயங்களை அசைத்துச் சிவனுக்கு ஆசன மூர்த்தி மூலங்களைக் கற்பித்துப் பேதமாய் அர்ச்சியாமல் யான் எனதென்னும் செருக்ககன்று அபேதமாய் அர்ச்சிக்க வேண்டுமாதலால், மந்திரக்கிரியா பாவனையால் வரும் லோபங்கள் அவர்கட்கு நேரா; நேராதபோது குற்றமில்லை; குற்றமில்லையாகவே பிராயச்சித்தமு மில்லை.

54.    வினா. -   இவ்வாறு அபேதபூஜை செய்வதாற் பயனென்னை?

      விடை. – தேகாதிபிரபஞ்சம் மெய்யாய் சர்வவிடயமுந் தானாய்த் தனக்கு மேலொரு கர்த்தாவில்லை யெனச் சர்வ சுதந்தரனா யிருந்தவன், பரிபாக விசேடத்தால் தேகாதி பிரபஞ்சத்தைப் பொய்யெனக் கண்டு, சர்வவிடயத்தினின்றும் பிரிந்து, தனக்குமேலொரு கர்த்தா உண்டெனக் கண்டு, தன் சுதந்தர வீனத்தையும் அறிந்து, தன்னை முழுவதும் சிவனுக்குக் கொடுத்துச் சிவசம்பந்தமுற் றிருத்தலால்; இத்தன்மையுடைய வீரசைவனுக்கு அச்சிவன் பிரதியுபகாரமாகத் தம்மையே கொடுப்பர்.

55.   வினா. -   ஆயின் இவ்வீரசைவ பூஜைக்கு ஆவாகனமும் விசர்ச்சனமும் உண்டோ?

      விடை.. -  ஆவாகனம் விசர்ச்சனம் முதலியவெல்லாம் ஏகதேசப் பொருளுக்கே யல்லது பரிபூரணப் பொருளுக் கில்லையென்பது நூற்றுணிபாகலின், சிவாத்துவிதமாக வழிபடும் வீரசைவ பூஜைக்கு அவை இரண்டுமில்லை. இது சிவாத்துவிதமாக இருத்தல்பற்றியே சிவபெருமானும் இதில் மிகுந்த விருப்பமுடையோம் எனவும், இதை அநுஷ்டிப்பவரே மற்றை மூவகைச் சமயத்திற்கும் ஆசிரியத்துவம் பூணுதற்குரியவ ரெனவும், இதுவே நமக்கு உயிராகும் மற்றை சாமானியம் மிசிரம் சுத்தம் என்னும் மூன்றும் உடலாகும் எனவும் சிவாகமங்களில் அருளிச் செய்திருக்கின்றனர்.

56.   வினா. -   ஆசிரியர் தம்மை யடைந்த வீரசைவனுக்கு முன்னர் எவ்வாறு கற்பித்து அநுக்கிரகிக்க வேண்டும்?

      விடை. -   வீரசைவ சமயாசாரத்திற்கு விதித்த சடுஸ்தல ஆசாரம் பற்றி அங்கத் தலம் ஆறும் இலிங்கத் தலம் ஆறும் அறிந்து, அர்ப்பித அவதானங்களிலே அயர்ச்சி யில்லாமல் நடப்பது சமயாசாரமாம் அது சதாசாரம், நியதாசாரம், கணாசாரம் என்று மூவகைப்படும். இவற்றுள் சதாசாரமாவதுதீக்ஷையினாலே பூர்வஜன்மம்போய்க் குருரூபமாவது: நியதாசாரமாவதுஇலிங்கத்தினாலே மனோ சஞ்சலத்தை யொழித்து இலிங்கவிரதமாக நிற்பது; கணாசாரமாவதுசங்கம் பத்தியினாலே யான் எனது என்பதொழிய நிற்பது: இந்த நியமங்களில் வழுவுநேரிடில் இரெளரவாதி நரகங்களில் விழுதற் கேதுவாமென்று ஆகமங்கள் கூறுதலால் வழுக்கள் வந்தனவாயின் உடனே பிராணனை விடவேண்டும் என்னும் இத்தன்மையவாகிய உறுதி வாக்கியங்களைக் கற்பித்து, அதற்குடன் பட்டுத் தொண்டுபூண் டொழுகும் பரிபாகமுடையவனுக்கே அநுக்கிரகம் புரிதல் வேண்டும்.

57.    வினா. -   இவ்வாறு தீக்ஷைபெறும் வீரசைவர்கள் எத்தனை வகைப் படுவார்கள்?

      விடை. -   வீரசாமானியர், வீரவிசேடர், வீரநிராபாரர் என மூவகைப்படுவர்.

58.    வினா. -   இம்மூவர்க்கும் முறையே செய்யப்படும் தீக்ஷைகள் எவை?        விடை. -      கிரியா தீக்ஷை, மந்திர தீக்ஷை, வேத தீக்ஷை என்பனவாம்.

59.    வினா. -     ஆயின், வீர சாமானியருக்குக் கிரியாதீக்ஷை எவ்வாறு புரிதல் வேண்டும்?

      விடை. -   மந்ததரம் மந்த மென்னும் சத்திநிபாதத்தையுடைய வீரசாமானியருக்கு ஆசிரியர் சிவாகம விதிப்படி தீக்ஷா மண்டபம் வகுத்து, அதற்குரிய கிரியைகள் அனைத்தும் தவறாதியற்றி, அஸ்த மத்தக சையோகத்தாலும் சுத்தீகரித்தற்குரிய மந்திரங்களாலும் தேகசுத்தி புரிவித்து இஷ்டலிங்கந் தரித்து அவனை நோக்கி, “திரிகாலமாயினும் ஏக காலமாயினும் நியமமாறாது சிவபூசை செய்என்பது முதலிய உறுதி வசனங்களைப் போதிக்க வேண்டும் இது இஷ்ட லிங்க தீக்ஷை யெனவும் பெயர் பெறும் இது தூல சரீரத்திலே கன்மமல நீக்கத்தின் பொருட்டுச் செய்யப்படுவது.

60.    வினா. -   வீர விசேடருக்கு மந்திர தீக்ஷை எவ்வாறு புரிதல் வேண்டும்? விடை. -      தீவிரமென்னும் சத்திநிபாதத்தையுடைய வீரவிசேடருக்கு விதிப்படி தீக்ஷாமண்டபமும் அதற்குரிய கிரியைகளும் இயற்றிக் கலசோதகத்தால் அபிடேகம் புரிந்து, நின்மலமாக மந்திரங்களினால் சீவசுத்தி புரிவித்துச் சூக்குமதேகத்திலே பிராணலிங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணி, இந்திரிய வழித்தாகச் செல்லும் நினைவைப் பிராணலிங்க நினைவாய்க் காணவும் – அவ்விலிங்கத்திற்கும் தனக்கும் பேதமறநிற்கவும் – உடல் பொருள் ஆவி மூன்றையும் குரு லிங்க சங்கமங்கட்கே உரியனவாக்கவும் – எத்தன்மைய வியாதிகள் அணுகினும் வேறொன்றையும் நாடாது உருத்திராக்க பஞ்சாக்கர விபூதிகளையே மணி மந்திர ஒளஷதங்களாகக் கைக்கொள்ளவும் உபதேசித்தல் வேண்டும். இதுவும் முற்கூறிய வீரசாமானியதீக்ஷையும் கிருகஸ்தர்களுக்குரியன. இது பிராணலிங்க தீக்ஷை எனவும் பெயர்பெறும். இது சூக்கும சரீரத்திலே மாயாமல நீக்கத்தின் பொருட்டுச் செய்யப்படுவது.

61.    வினா. -   வேததீக்ஷை எவர்க்குரியது?

      விடை. -   தீவிரதர சத்திநிபாதம் பிறந்து, அரத்தேஷணை புத்திரேஷணை தாரேஷணை என்னும் ஈஷணாத்திரயங்களை வெறுத்து, தேகாதி பிரபஞ்சங்களைக் கானற்சோறெனக் கண்டு அனைத்தையுந் துறந்து, ஞானாசாரியரையடைந்து, அவருடைய திருவடிகளில் பல முறை பணிந்தெழுந்து, கண்ணீர் பெருக நெஞ்சம் நெக்குருக அஞ்சலியஸ்தனாய் நெருப்பிலிட்ட அரக்கெனவுருகி, சுவாமீ! அடியேன் இத்தேகாதிபிரபஞ்சத்திலே கிடந்து எத்தனை காலம் வருந்துவேன். இப்போதுதானே சங்கம தீக்ஷையை எனக்குச் செய்ய வேண்டுமென்று பரிதபித்து நிற்கத்தக்க பரிபாகமுடைய வீர நிராபாரருக்கே யுரியது இது பரம சர்மசுயம் என மூவகைப்பட்டுப் பாவலிங்கதீக்ஷை எனவும் பெயர்பெறும் இது காரண சரீரத்திலே ஆணவ மல நீக்கத்தின் பொருட்டுச் செய்யப்படுவது.

62.    வினா. -   ஆயின் அவற்றுள் பரம் என்பது யாது?

      விடை. -   அவ்வாறு நிற்கக்கண்ட ஆசாரியர் மாணாக்கனைக் கிருபையோடு நோக்கி அபயாஸ்தமளித்து நல்ல சுபதினத்திலே முன்பு போலத் தீக்ஷாமண்டபம் முதலியன வகுத்து மேற்கூறிய கிரியா தீக்ஷை மந்திரதீக்ஷை யென்னும் இருவகைத் தீக்ஷாக் கிரியைகளையும் செய்வித்து மந்திர விதிப்படி ஆன்மசுத்தி புரிந்து, காரண தேகத்திலே உட்புறம்பில்லாமல் எங்கும் பரிபூரணமாய் விளங்கும் சரலிங்கமாகிய பாவலிங்கத்தை ஞானாஸ்தத்தினாற் கொண்டுபோய்த் தாபித்து, அவ்விலிங்கத்துடன் மாணாக்கனது அறிவினை ஏகீ பாவம் பண்ணி அதை அவனுக்குணர்த்தி, பின்னர் அவனறிவு அக்கணமே இத்தேகாதி பிரபஞ்சத்தினது பற்றறச் சிவமேயாய் நிற்கை கண்டு தமது ஞானதிருஷ்டியினாலே அவ்வறிவுக்குள்ள அகண்டாகாரம் விளங்கநோக்கி அவனுக்குத் தற்போதம் நீங்கிச் சிவபோகம் விளையச் சிவ அபயாஸ்தங் கொடுத்து அவனுடைய சாட்குணணியாபி வியக்தியின் பொருட்டுத் திருவடிகளை அவ்வறிவாகிய சிரசின் மேல் வைத்து அநுக்கிரகிப்பதாம்.

63.    வினா. -   பின்பு என்ன செய்ய வேண்டும்?

      விடை. -   நாமே நீ என்னும் மகாவாக்கியப்பொருளை உபதேசித்து, இப்பிரபஞ்சத்துள் வாழும் உயிர்களது ஆணவாதி பாசமாகிய அவலம் நீங்கும்பொருட்டு தவத்திற் கங்கமாகிய காவிவஸ்திரம் மரவுரி கந்தை கெளபீனம் இவற்றுள் ஒன்றைப்புனைந்து சடை முடியேனும் முண்டிதமேனும் மேற்கொண்டு இவ்வுலகத்துள்ளோர் அஞ்ஞானம் நீங்கும் நிமித்தம் அவரிடும் பிச்சையினை மகிழ்ந்து உட்கொண்டு அநேக ஜன்மங்களில் ஏறிய பழக்கமும் அபிமானமுங் கெட பல தலங்கடோறும் சஞ்சரிப்பா யென்று கட்டளையிட்டு, சங்கம் பிரசாத பாதோதகங்களால் யாவும் சிததியாக வேண்டுதலின் அவற்றின் நிலைமையினையும் போதித்து; எங்கும் பரிபூர்ணமாய் விளங்கும் சிவத்துடன் கலந்து பிறிதொன்றுந் தோன்றாது சிவமாய்நிற்கச் செய்தல் வேண்டும்.

64.    வினா. -   சரதீக்ஷை என்பது யாது?  

      விடை. -   மேற்கூறியபடியே தீக்ஷைபெற்றும் அவ்வளவு அநுபவ முதிர்ச்சி யில்லாமல் எப்போதும் சாத்துவிககுணம் சாந்தம் தயை ஈதல் மெய்ம்மை கூறுதல் நல்லொழுக்கம் முதலிய ஞானாசாரத்தைப் பேணி, அவற்றிற்குரிய அநுஷ்டானத்துடன் எங்கும் சிவ பாவனையேயாய்க் காவி முதலிய முத்திரைகளையுந் தரித்துக்கொண்டு தேசங்களிலே சஞ்சரிப்பது.

65.    வினா. -   சுயதீக்ஷை என்பது யாது?

      விடை. -   முற் கூறிய பரம் சரங்களின் அநுபவ இலக்கணங்கள் இயல்பாக வாராதபடியினாலே அவ்வநுபவத்தை வேண்டிச் சதாசார முதலியவைகளையும் விரதகற்பனைகளாகிய சீலாசார முதலியவைகளையும் நியமமாக அநுஷ்டித்துக் கொண்டு புண்ணிய தலங்களிலே சிவபக்தர்கள் கட்டிக்கொடுத்த மடங்களில் வாசமாயிருந்து இச்சை அநிச்சை பரேச்சையாக வருபவைகளைச் சிவார்ப்பணம் பண்ணிக் கொண்டு சுயேச்சையாக விருப்பதே சுயதீக்ஷையாம்.

66.    வினா. -   மேற்கூறிய மூவகைத் தீக்ஷையினால் மும்மலம் நீங்குதற்கு அநுபவம் எப்படி?

      விடை. -   கான்றசோறுபோல உலகப்பற் றொழிதலே ஆணவமல நீக்கத்திற்கு ஏதுவென்றும், சகல இச்சைகளையும் ஒழித்துக் கனமத்திற் கீடாகவரும் போகங்களை அவன் அவள் அது என்னும் முன்னிலை நாடாது விருப்பு வெறுப்பின்றி அநுபவித்திருத்தலே கன்மமல நீக்கத்திற்கு ஏதுவென்றும், குரு லிங்க சங்கமங்களே பொருளென வழிபடவருதலே மாயாமல நீக்கத்திற்கு ஏதுவென்றும் கொள்ளல் வேண்டும்.

67.    வினா. -   இனி ஞானமாவது யாது?

      விடை. -   பர சீவ பந்த மென்னும் பதி பசு பாச இலக்கணங்களை உணர்த்தும் ஞான நூல்களை ஆசிரியரிடத்துக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடலாம்.

68.    வினா. -   அங்ஙனமாயின், அப் பதி பசு பாச இலக்கணங்களை அடியேனுக்கு அருளல் வேண்டும்?

      விடை. -   அநாதி மல ரகிதமா யுள்ளது பதி, அதுவே சிவம், அநாதி மல சகிதமா யுள்ளது பசு, அதுவே ஆன்மா, அநாதி யாகவே யுள்ள ஆணவம் காமியம் மாயை என்னும் மூன்றுமே பாசம், அதுவே பிரபஞ்சம்.

69.    வினா. -   ஆயின், அப் பதி இலக்கணத்தை விளங்க உரைத்தல் வேண்டும்?

      விடை. -   அப் பதியாகிய சிவம் சர்வஞ்ஞத்துவம் சர்வ கர்த்தத்துவம் முதலிய குணங்களை யுடையராய் நாமரூபக் கிரியைக ளில்லாதிருந்தும் ஆன்மாக்களை ஆட் கொள்ளும் நிமித்தம் சிற்சத்தியோடு கலந்து நாம ரூபங்களை உடையராய்ப் பஞ்ச கிர்த்தியங்களை நடத்தா நிற்பர்.

70.    வினா. -   நாமரூபங்கள் என்பன எவை?

      விடை. -   நிட்களம் நிட்களசகளம் சகளம் என்பனவே ரூபம், இவை முறையே அருவம் அருவுருவம் உருவம் ஆம். அருவத் திருமேனியை யுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், அங்கம் பிரத்தியாங்கம் சாங்கம் உபாங்கம் என்னும் நான்கு உறுப்புக்க ளமைந்த உருவத் திருமேனியை யுடைய பொழுது மகேஸ்வரன் எனவும் பெயராம். அவ்வங்களின் விவரம் எவ்வாறெனில் – சிரம் முகம் இதயம் என்னும் இவை அங்கம், மார்பு கண்டம் தனம் வாகு நாபி உதரம் நேத்திரம் நாசி கன்னம் அஸ்தம் பாதம் தொடை முழந்தாள் பாதாங்குலி முதலியவை பிரத்தியாங்கம், சூலம் பரசு சுடர் வாளவயிரம் பணி பாசாங்குசம் மணி அபயம் வரதம் முதலியவை சாங்கம், வஸ்திரம் ஆபரணம் மாலை முதலியவை உபாங்கமாம்.

71.    வினா. -   பஞ்சகிர்த்தியங்களாவன யாவை?

      விடை. -   சிருட்டி திதி சங்காரம் திரோபவம் அநுக்கிரகம் என்பவைகளாம்.

72.    வினா. -   சிருட்டி என்பது யாது?

      விடை. -   இலய போக அதிகாரமூர்த்திகளால் ஆன்மாக்கட்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணமாகிய மாயையினின்றும் உண்டாக்குதலாம்.

73.    வினா. -   திதி என்பது யாது?

      விடை. -   அங்ஙனம் உண்டானவைகளை அவ்வான்மாக்கள் புசிக்கும் காலபரியந்தம் நிறுத்துதலாம்.

74.    வினா. -   சங்காரம் என்பது யாது?

      விடை. -   அவைகளை மாயையி னிடத்து ஒடுக்குதலாம்.

75.    வினா. -   திரோபவம் என்பது யாது? 

      விடை. -   அப்போகங்களை இன்பமாக மயக்கி உருசிப்பித்துப் புசிப்பித்தலாம்.

76. -  வினா. -   அநுக்கிரகம் என்பது யாது?

      விடை. -   அவைகளை ஆன்மாக்களுக்குப் பகுத்தறிவித்தலாம்.

77.    வினா. -   தனு கரண புவன போகங்கள் என்பன எவை?

      விடை. -   தனு சரீரம், கரணம் மனமுதலியகருவிகள், புவனம் சரீரங்கட்கு ஆதாரமாகிய உலகம், போகம் அப்புவனங்களில் அநுபவிக்கப்படும் பொருள்.

78.    வினா. -   சிருட்டிக்கு மாயை முதற் காரணமென்று அருளிச்செய்தீரே; அதற்கு இன்னும் வேறு காரணங்களும் உண்டோ?

      விடை. -   ஒரு காரியத்திற்குக் காரணங்கள் முதற் காரணம் துணைக்காரணம் நிமித்தகாரணம் என மூன்றாம். குடமாகிய காரியத்திற்கு முதற் காரணம் மண், துணைக்காரணம் தண்டசக்கரம் முதலியவை, நிமித்த காரணம் குயவன். இதுபோலவே சிருட்டிக்கு முதற்காரணம் சுத்தமாயை அசுத்தமாயை பிரகிருதிமாயை என மூன்று, துணைக் காரணம் சிவசத்தி, நிமித்தகாரணம் சிவபெருமான்.

79.    வினா. -   சிவபெருமான் நம்மைப்போலவே உருக் கொண்டுதான் பஞ்ச கிர்த்தியங்களை இயற்றுவரோ?

      விடை. -   சப்த தாதுக்களாலாகிய நம்முடைய உருவம்போல்வதன்றி சிவசத்தியாகிய திருவருட் குணங்களுள் இன்ன இன்னவை இன்ன இன்ன அவயவ மென்று பாவிக்கப்படும் உரு வுடையவராய்த் தன் சந்நிதி மாத்திரத்தினாலேயே அப் பஞ்ச கிர்த்தியங்களை இயற்றா நிற்பர்.

80.    வினா. -   சிவசத்தி என்றது யாது?

      விடை. -   அக்கினியிற் சூடுபோல அபின்னமாயுள்ள வலிமை, அது இலிங்கத்திலே சத்தியென நிற்பதேயன்றி அங்கத்திலே பத்தி யெனவும் நிற்கும். [அங்கம்-ஆன்மா] இலிங்கம் தேகியாதலால் அதற்கு நிலைக்களமாகிய ஆன்மாவை அங்கமென்பர்.

81.    வினா. -   பத்தி எத்தனை வகைப்படும்?

      விடை. -   சமரசபத்தி, ஆனந்தபத்தி, அநுபவபத்தி, அவதானபத்தி, நைஷ்டாபத்தி, சற்பத்தி என அறுவகைப்படும்.

82.    வினா. -   இவைகளில் ஒன்றற்கொன்று தாரதம்மியம் உண்டோ?

      விடை. -   சமரசபத்தியினது ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது ஆனந்தபத்தி, அதில் ஆயிரத்தில் ஒரம்சமாயுள்ளது அநுபவபத்தி, அதில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது அவதானபத்தி, அதில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது நைஷ்டாபத்தி, அதில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது சற்பத்தி, இவற்றின் நிலைமையைப் பின்னர் உரைப்போம்.

83.    வினா. -   சத்தி எத்தனை வகைப்படும்?

      விடை. -   பராசத்தி, திரோதானசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி, என ஐவகைப்பட்டுக் கலையெனவும் பெயர் பெறும்.

84.    வினா. -   இவைகளில் ஒன்றற்கொன்று தாரதம்மியம் உண்டோ?

      விடை. -   சிவசத்தியில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது பராசத்தி, பராசத்தியில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது திரோதானசத்தி, திரோதானசத்தியில் ஆயிரத்தில் ஓராமசமாயுள்ளது இச்சாசத்தி, இச்சாசத்தியில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது ஞானசத்தி, ஞானசத்தியில் ஆயிரத்தில் ஓரம்சமாயுள்ளது கிரியா சத்தியாம். இவற்றுள் பராசத்தியோடு கூடிப் பராபர னென்றும், திரோதான சத்தியோடு கூடி, ஈஸ்வரனென்றும், இச்சாசத்தியோடு கூடி இச்சிதாவென்றும், ஞானசத்தியோடு கூடிக் கர்த்தா வென்றும், சிவ பெருமான் பெயர் பெறுவர். இவ்வைந்து சத்திகளிற்றான் பஞ்சசாதாக்கியந் தோன்றும்

85.    வினா -    பஞ்ச சாதாக்கியங்கள் எவை?

      விடை. -   சிவசாதாக்கியம், அமூர்த்திசாதாக்கியம், மூர்த்திசாதாக்கியம், காத்துருசாதாக்கியம், கன்மசாதாக்கியம் என்பவைகளாம். இவ்வைந்தும் சதா சிவ ரூபமாம்.

86.    வினா. -   இச் சாதாக்கியங்களினும் தாரதம்மியம் உண்டோ?

      விடை. -   சிற்சத்தியின் தோற்றமாகிய பராசத்தியிற் பத்திலொருகூறு வலியினையுடையது சிவசாதாக்கியம், ஆதிசத்தியிற் பத்திலொருகூறு வலியினையுடையது அமூர்த்திசாதாக்கியம், இச்சாசத்தியிற் பத்திலொருகூறு வலியினையுடையது மூர்த்திசாதாக்கியம், ஞானசத்தியிற் பத்திலொருகூறு வலியினையுடையது கர்த்துருசாதாக்கியம், கிரியாசத்தியிற் பத்திலொருகூறு வலியினை யுடையது கன்மசாதாக்கியம் என்றறிக.

87.    வினா. -   சிவசாதாக்கியம் எத்தன்மையது?  

      விடை. -   சாந்தியாதீதகலை யென்னும் பெயரையுடைய பராசத்தி சுத்தமாதலால் சுத்தசிவமென்னும் பெயரையுடையதாய்க் கரண வியாத்திக் கெட்டாத அதிசூக்குமமாய் அளவுபடாத பிரகாசமாய் தியான ரூபமாய் விளங்கிச் சர்வ வியாபியாயிருப்பது.

88.    வினா. -   அமூர்த்தி சாதாக்கியம் எத்தன்மையது?

      விடை. -   சாந்திகலை யென்னும் பெயரை யுடைய திரோதானசத்தி அரூபையாதலால், வடிவறுதியாய், அமூர்த்திசாதாக்கிய மென்னும் பெயரை யுடையதாய், விகற்பமான கலைகளுக் கப்பாற்பட்டுத் தம்பாகாரமான ஒப்பற்ற இலிங்கமாய், கோடி சூரியப் பிரமாசமா யிருப்பது.

89.    வினா. -   மூர்த்தி சாதாக்கியம் எத்தன்மையது?    

      விடை. -   வித்தியாகலை யென்னும் பெயரையுடைய இச்சாசத்தியிற்றோற்றுதலால் மூர்த்தியென்னும் பெயரோடு காணப்பட்ட வடிவையுடையதாய், காலாக்கினி போலும் பிரகாசத்தினை யுடையதாய், இலிங்கவடிவாய், தனது ஊரத்தத்திலே ஒரு திருமுகமும் மூன்று கண்களும் இரண்டு கைகளும் உடையதா யிருப்பது.

90.    வினா. -   கர்த்துரு சாதாக்கியம் எத்தன்மையது?

      விடை. -   பிரதிஷ்டாகலை யென்னும் பெயரையுடைய ஞானசத்தியிற் றோற்றுதலால் கர்த்துருவென்னும் பெயரை யுடையதாய், சுத்த படிகப்பிரகாசமான திவ்விய லிங்கமாய், தனது உச்சியில் நான்கு திருமுகமும் பன்னிரண்டு திருநயனமும் எட்டு அஸ்தங்களும், இவற்றுள் வலப்புறத்து அஸ்தத்திலே சூலம் மழு வாள் அபயமும், இடப்புறத்து அஸ்தத்திலே பாம்பு பாசம் மணி வரதமும், ஆகிய ஆயுதங்களைத் தரித்துக் குறைவில்லாத இலக்கணங்களுடனே கூடியிருப்பது.

91.    வினா. -   கன்மசாதாக்கியம் எத்தன்மையது?

      விடை. -   நிவர்த்தி கலையென்னும் பெயரையுடைய கிரியா சத்தியிற் றோற்றுகையால் கன்மசாதாக்கியமென்னும் பெயரையுடையதாய், நாதமயமாகிய ஞானலிங்கமும் விந்துமயமாகிய கிரியாபீடமும் பஞ்சகிர்த்தியமும் உடையதா யிருப்பது, இவ்வைந்தும் தத்துவ மெனப்படும்.

92.    வினா. -   இத் தத்துவ மூர்த்திகள் யாவர்?

      விடை. -   சதாசிவன், ஈசன், பிரமீசன், ஈசுரன், ஈசானன் என்பவர்களாம். மேற்கூறிய சாதாக்கிய தத்துவங்களும் இத்தத்துவ மூர்த்திகளும் ஒருங்கு கூடியிருப்பன பஞ்சமுகங்களாம்.

93.    வினா. -   அம்முகங்கள் யாவை?    

      விடை. -   சிவ சாதாக்கியமென்னும் தத்துவத்தையும் சதாசிவ மென்னும் மூர்த்தியையும் பொருந்தியது ஈசான முகம், அமூர்த்தி சாதாக்கிய மென்னும் தத்துவத்தையும் ஈசனென்னும் மூர்த்தியையும் பொருந்தியது சத்தியோசாதமுகம், மூர்த்தி சாதாக்கிய மென்னும் தத்துவத்தையும் பிரமீச னென்னும் மூர்த்தியையும் பொருந்தியது வாமதேவ முகம், காத்துரு சாதாக்கிய மென்னும் தத்துவத்தையும் ஈசுரனென்னும் மூர்த்தியையும் பொருந்தியது அகோரமுகம், கன்மசாதாக்கிய மென்னும் தத்துவத்தையும்  ஈசான னென்னும் மூர்த்தியையும் பொருந்தியது தற்புருடமுகம். இவை ஐந்தும் பிரபாவ மெனவும் பெயர் பெறும்.

94.    வினா. -   இம்மூர்த்திகள் எவ்வாறு கூடியிருப்பார்கள்?

      விடை. -   உடலும் உயிரும்போலக் கூடி ஒருவரை யொருவர் அந்தர்க்கதமாய் வழிபட்டுக்கொண்டிருப்பார்கள்.

95.    வினா. -   எவ்வாறு வழிபடுவர்கள்?  

      விடை. -   கன்மசாதாக்கியர் – கர்த்துருசாதாக்கியரையும், கர்த்துருசாதாக்கியா மூர்த்திசாதாக்கியரையும், மூர்த்திசாதாக்கியர் அமூர்த்தி சாதாக்கியரையும், அமூர்த்தி சாதாக்கியர் சிவசாதாக்கியரையும் வழிபடுவர்கள்.

96.    வினா. -   சாதாக்கியர்கள் ஐவருமே ஆன்மாக்களுக்கு எதிர்நின்று அநுக்கிரகம் செய்வரோ?

      விடை. -   இவர்கள் ஐவரும் ஒருங்குகூடிச் சமஷ்டி ரூபமா யிருக்கும் கன்மசாதாக்கியரே பீடமும் இலிங்கமுமா யிருப்பதன்றியும், ஐந்து திருமுகங்களும் பத்து அஸ்தங்களு முடையராய்த் தியானரூபியுமாய் நின்று அநுக்கிரகிப்பர். [பீடம் – சிவசத்தி, இலிங்கம் – சிவம்.]

97.    வினா. -   இலிங்கம் என்பதற்குப் பொருள் என்னை?

      விடை. -   படைத்தல் காத்தல் முதலியவைகளினாலே உலகத்தைச்சித்திரிப்பது. [லிங்க – சித்திரித்தல்.]

98.    வினா. -   சிற்சத்தியில் சாதாக்கிய தோற்றமில்லையோ?

      விடை. -   சாந்தியாதீ தோத்தர கலை யென்னும் பெயரையுடைய சிற்சத்தியிலே மகா சாதாக்கியமென்னும் தத்துவத் தோற்றம் உண்டு. ஆனால் அச்சாதாக்கிய மூர்த்தியை யுடைய அதோமுகத்தில் சிவபெருமானுக்கு நித்திரையாதலானும் அம்முகத்திலே பூஜாங்கீகாரமும் அநுக்கிரக நிக்கிரகமும் இல்லையாதலானும் அதனை இங்கே விரிக்கவில்லை.

99.    வினா. -   மேற்சொன்ன ஐந்துசாதாக்கியப் பெயர்களும் இடுகுறியோ காரணமோ?

      விடை. -   முன் சொன்னவாறே கிரியாசத்தியிற் றோன்றிப் பஞ்சகிர்த்தியமும் பண்ணுகையால் கன்மசாதாக்கியமென்றும், ஞானசத்தியிற் றோன்றிச் சர்வமுதன்மையும் உடைமையால் கர்த்துருசாதாக்கியமென்றும், இச்சாசத்தியிற் றோன்றித் தம்பாகிருதியாயிருக்கின்ற இலிங்க ரூபமாய் ஒரு திருமுகம் உடைமையால் மூர்த்திசாதாக்கியமென்றும், திரோதான சத்தியிற்றோன்றி அருவமாயிருத்தலால் அமூர்த்தி சாதாக்கிய மென்றும், பராசத்தியிற் றோன்றிப் பேரொளிப் பிழம்பாய்ப் பரமானந்த சொரூபமா யிருக்கையால் சிவசாதாக்கிய மென்றும் சொல்லப்படுதலின் காரணப் பெயர்களேயாம். இதல்லாமலும் கன்மசாதாக்கியருக்கு ஆசாரலிங்கமென்றும், காத்துருசாதாக்கியருக்குக் குருலிங்க மென்றும், மூர்த்திசாதாக்கியருக்குச் சிவலிங்கமென்றும், அமூர்த்திசாதாக்கியருக்குச் சங்கமலிங்கமென்றும், சிவசாதாக்கியருக்குப் பிரசாதலிங்க மென்றும், மகாசாதாக்கியருக்கு மகாலிங்கமென்றும் பெயருண்டு.

100.   வினா. -   ஆயின் மற்றை மூர்த்திகள் எங்கே உற்பவிப்பர்?

      விடை. -   கன்மசாதாக்கிய ரிடத்திலேயே மயேஸ்வரமூர்த்தியும் இருபத்தைந்து மூர்த்திகளும் உற்பவமாவர்.

101.   வினா. -   இருபத்தைந்து மூர்த்திகள் யாவர்?

      விடை. -   சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர், சபாபதி, கலியாணசுந்தரர், பிக்ஷாடனர், காமாரி, காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர், ஹரியர்த்தர், அர்த்தநாரீசுரர், கிராதர், கங்காளர், சண்டேசாநுக்கிரகர், நீலகண்டர், சக்கரப்பிரதா, கஜமுகாநுக்கிரகர், சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசீனர், தக்ஷிணாமூர்த்தி, இலிங்கோற்பவர் என்பவர்களாம்.

102.   வினா. -   இனி முற்கூறிய பத்தியில் ஏதேனும் தோற்றங்கள் உண்டோ?

      விடை. -   சுசித்தம், சுபுத்தி, நிராங்காரம், சுமனம், சுஞ்ஞானம், சற்பாவம் என ஆறு அஸ்தங்கள் உண்டாம்.

103.   வினா. -   இவைகளும் காரணப் பெயர்களோ?

      விடை. -   பிரபஞ்சமாகிய மாயா பதார்த்தங்களைச் சிந்தியாமல் சிவனையே சிந்தித்தலால் சுசித்தமென்றும், மாயாபதார்த்தங்களை நிச்சயம் பண்ணாது சிவனையே நிச்சயம் பண்ணுகையால் சுபுத்தியென்றும், பிரபஞ்ச பதார்த்தங்களை அபிமானியாமல் சிவனிடத்தே அபிமானம் பண்ணுகையால் நிராங்காரமென்றும், கண்டவற்றையெல்லாம் பற்றாமல் சிவனையே பற்றுகையால் சுமன மென்றும் ஏகதேசமற்று வியாபக மாகையால் சுஞ்ஞான மென்றும், உண்மையாதலால் சற்பாவ மென்றும் வழங்குதலின் காரணப் பெயர்களே.

104.   வினா. -   பத்தியின் வியாபாரம் என்னை?  

      விடை. -   இருவினை யொப்பு மலபரிபாகம் பிறந்த ஆன்மாக்கள் ஞானாசாரியரை யடைந்து ஞானதீக்ஷையைப்பெற்று ஞானசாத்திரங்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து நிட்டைபண்ணுங் காலத்து, ஆன்மபோதம் சற்றும் சீவியாமல் சிவத்துடன் ஏகபாவமாய் ஞாதுரு ஞான ஞேயமென்னும் திரிபுடியும் தோன்றாமல் நிற்கின்ற அந்த நின்மல துரியாதீத நிட்டையை விட்டுப் பிரியாமல் சிவானந்தாநுபூதியைத் திளைத்திருக்கப் பண்ணுவதுதான்.

105.   வினா. -   சத்தியின் வியாபரம் என்னை?

      விடை. -   ஆணவமலத்தினாலே மறைபட்டு ஒன்றுந் தோன்றாமல் கேவலமாகக் கிடக்கும் ஆன்மாவில் இச்சிவஞானக் கிரியைகளைக் கலையாதி தத்துவங்களினால் விளக்கி, மாயாதேக போக சம்பந்தத்தினால் மலபரிபாகம் வரச்செய்து, பின்பு சிவபெருமான் ஒருவர் உண்டென்று தோன்றச் செய்து, சரியாபாதம் கிரியாபாதம் யோகபாதம் ஞானபாதங்களைக் கிரமமாக வருவித்து, இடைவிடாமற் சிவனை வழிபடச் செய்விப்பதாம். இவ்வாறு செய்விக்கையால் வரும் சத்தி நிபாதத்தையுடைய ஆன்மாக்கட்கே பத்தி உபகரிக்கும்.

106.   வினா. -   இன்னும் அச்சத்தி என்ன செய்யும்?

      விடை. -   ஆன்மாக்களை மயக்கும் பொல்லாததாக்கிய ஆணவமலத்துக்குப் பரிபாகத்தினை வரச்செய்யும்.

107.   வினா. -   உயிர்கட்குப் பத்தி சத்தி என்னு மிரண்டும் எவ்வாறு கூறப்படும்?

      விடை. -   பத்தி அந்தரங்கமென்றும், சத்தி பகிரங்கமென்றும் கூறப்படும்.

108.   வினா. -   சிவபிரானுக்கும் தூல சூக்கும காரணம் என்னும் திருமேனிகள் உளவோ?

      விடை. -   மேற்சொன்ன முப்பத்தொரு மூர்த்திகளில் இலிங்கோற்பவர் முதலிய இருபத்தைந்து மூர்த்திகளும் சிவபிரானுக்குத் தூலரூபமாகவும், சாதாக்கியமூர்த்திகள் அறுவரும் சூக்குமரூபமாகவும், சத்திகள் அறுவரும் காரணரூபமாகவும் கற்பிப்பதுண்டு.

109.   வினா. -   சிருட்டி எத்தனை வகைப்படும்?  

      விடை. -   சங்கற்பசிருட்டி, விகற்பசிருட்டி என இருவகையாம்.

110.   வினா. -   சங்கற்ப சிருட்டி என்பது யாது?   

      விடை. -   நினைவுமாத்திரமாச் செய்கை; அது சிவசிருட்டி, சத்திசிருட்டி, சாதாக்கிய சிருட்டி என மூன்று பிரிவா யிருக்கும்.

111.   வினா. -   விகற்பசிருட்டி என்பது யாது?

      விடை. -   பிரமா விஷ்ணு உருத்திரன் மயேசுரன் சதாசிவன் ஆகிய அதிகாரம் பெற்ற அணுபக்ஷ அதிகார கர்த்தர்களாற் செய்யும் சிருட்டியாம். மனவாக்குக்காயங்களாற் செய்கையால் இதற்கு விகற்பச்சிருட்டி எனப்பெயராயிற்று.

112.   வினா. -   ஆன்மாக்களாவார் யாவர்?

      விடை. -   நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தடை யுடையோராய், சார்ந்ததின் வண்ணமாய், சரீரந்தோறும் வெவ்வேறாய், வினைகளைச் செய்து வினைப்பயன்களை அநுபவிப்போராய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையோராய், தமக்கு ஒருதலைவனை உடையவராய் இருப்பவர்.

113.   வினா. -   இவ்வான்மாக்கள் எத்தனை வகைப்படுவர்?

      விடை. -   விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படுவர்.

114.   வினா. -   இம் மூவர்களுடைய இலக்கணம் என்னை?

      விடை. -   விசேஷ ஞானத்தினாலும் சந்நியாசத்தினாலும் தீக்ஷையிலே நிவர்த்தி பிரதிஷ்டை வித்தை என்னும் மூன்று கலைகள் சோதிக்கப்பட்டு, மாயாகாரியமாகிய தூல சூக்கும காரண தேகங்களையும் அத்தேகாநிஷ்டமாகிய கன்மங்களையும் நீங்கி, ஆணவமலம் ஒன்றினாலே மறைப்புண்டு, சுத்த வித்தைக்குக் கீழ் சுத்தமாயைக்குமேல் இருக்குமவர்கள் விஞ்ஞானகலர், பிரளயகாலத்திலே கலை நீங்குகையால் தீக்ஷையினாலே நிவர்த்தி பிரதிஷ்டை என்னும் இரண்டு கலைகள் சோதிக்கப்பட்ட்தனால் தாம் பிரளயாகலரென்று பெயர் பெற்று, ஆணவம் கன்மம் என்னும் இரு மலபந்திகளாய், பிரகிருதிக்கு மேல் அசுத்தமாயா வனத்திலே மாயைவசப்படாமல் மாயையைத் தம் வசப்படுத்தி வசிப்பவர்கள் பிரளயாகலர் மூன்றும் மலபந்திகளாய் சிருட்டிகாலத்தில் கலையாதிகளுடன் கூடி பிரகிருதிக்குக் கீழுள்ள புவனங்களில் நால்வகைத் தோற்றம் எழுவகைப் பிறவிகளினும் சுழலுமவர்கள் சகலர்.

115.   வினா. -   இவ்வான்மாக்கட்கு வேறுபெயர்களும் உண்டோ?

      விடை. -   ஆணவமலம் ஒன்றினால் இச்சா ஞானக் கிரியைகள் மறைபட்டு அறிவும் செயலும் போகமும் குறிமுதலியனவும் அற்று மலம் தானாயிருக்கும் ஆன்மாவுக்குக் கேவலனென்றும் விகலனென்றும் பெயர். அக்கேவலக் கிடையை விட்டுத் தூல சூக்கும காரணமாகிய மாயாதேகத்தைப் பெற்றுச் சுகதுக்க போகங்களை அநுபவித்துக்கொண்டு புண்ணியபாவங்களை ஆர்ச்சித்திருக்கும் ஆன்மாவுக்குச் சகலனென்றும் பெத்தனென்றும் பெயர். கேவல சகலங்களை நீங்கிச் சிவாநுக்கிரகத்தினாலே சுத்தாவத்தையைப் பெற்றிருக்கும் ஆன்மாவுக்கு நின்மலனென்றும் ஆதிமுத்தனென்றும் பெயர் உண்டு.

116.   வினா. -   மேற்சொன்ன மூவருக்கும் தாரகம் எவை?

      விடை. -     கேவலனுக்கு மலம் தாரகம், சகலனுக்கு மாயை தாரகம், சுத்தனுக்கு அருளே தாரகம்.

117.   வினா. -   கேவலாவத்தை எத்தன்மையது?

      விடை. -   ஆதித்தனை இராகு வந்து மறைத்தகாலத்தில் அவனுடைய பிரகாச சத்திகள் ஒன்றுந்தோன்றாது எப்படி மறைபடுமோ அப்படி, ஆணவமலம் மறைக்க ஆன்மாவினது இச்சா ஞானக்கிரியைகள் மறைபட்டு யாதொரு வியாபாரமும் அற்றுக் கிடப்பது.

118.   வினா. -   சகலாவத்தை எத்தன்மையது?    

      விடை. -   அவ்வான்மா பரிபக்குவமுற்று ஆதித்தனை மேகமானது வந்து மறைத்தபோது, நெய்யினை உருக்கவும் சேற்றினை இறுகச்செய்யவும் உஷ்ணசத்தி தோன்றாமல் பிரகாசசத்தி மாத்திரம் சிறிது விளங்குவது போல, கன்மத்துக் கீடாக வந்து பொருந்திய மாயாகாரியமாகிய பெளதிக தூல சரீரத்தில் சிவசக்தி பிரேரகத்தினால் அசுத்த மாயாகாரியமான கலை வித்தை ராகம் முதலிய தத்துவங்கள் அவ்வான்மாவினது இச்சா ஞானக் கிரியைகளின் வியாபாரத்தைத் தடுக்கின்ற மலசத்தியினது வியாபாரத்தை அவ்விடத்துச் சிறிது நீக்க, அப்போது இது நித்தியம் இது அநித்தியம் என்னும் வஸ்து விவேகத்தையும் பூத பெளஷிய வர்த்தமானங்களையும் பிரித்து அறியும் ஞானந் தோன்றாமலிருந்து கொண்டு தனக்கு அமைத்த போக்கிய பதார்த்தங்களை வஸ்து ரூபமாக அறியாமல் மோக, ரூப மாயத் தத்துவங்கள் தானாக நின்றறிவது.

119.   வினா. -   சுத்தாவத்தை எத்தனைமயது?

      விடை. -   இங்ஙனம் சகலாவத்தையைப் பற்றிச் சனன மரணத்தை யுற்றுச் சுகதுக்கமாகிய கன்ம போகங்களை அநுபவித்து வருங்காலத்தில் இருவினையொப்பு மலபரிபாகம் வரும் அக்காலத்தில் சிவபெருமான் தாமே ஞானாசாரியரை அதிஷ்டித்துப் பொல்லாத ஆணவமலத்தைத் தீக்ஷையினாற் போக்க அப்போது அவ்வான்மா தற்போதம் நீங்கி நின்மலானந்த பரசிவ சொரூபத்தை அந்நியமாய்க்கலந்து அச்சொரூபமேயாய் நிற்பது.

120.   வினா. -   ஆன்மாவிற்குப் பொது வியல்பாவது யாது?

      விடை. -   தன்னை விட்டு நீங்காது அந்நியமாயிருக்கும் சிவபெருமானையும் அறியாது மலத்தினால் மறைபட்டுத் தன்னையும் மறந்து, இவ்வுலகத்தில் வந்து பிறந்தும் இறந்தும் இருவினைக் கீடாகிய சுகதுக்க போகங்களை அநுபவித்துக் கொண்டு திரிவதாம்.

121.   வினா. -   அவ்வான்மா விற்குச் சிறப்பியல்பாவது யாது?

      விடை. -   இங்ஙனம் சகலாவத்தையைப் பற்றிச் சனன மரணப்படுங் காலத்து மாயாதேக போக சம்பந்தத்தினால் இருவினை யொப்பும் மலபரி பாகமும் வர, அப்பொழுது சத்திநிபாதம் உண்டாம். அச்சத்திநிபாதம் உண்டாகவே மெய்ம்மையாகிய பத்தி வந்து பதியும், அப்பத்தி பதிந்து இவன் அறிவும் தானும் ஒன்றுபடுங் காலம் உயிர்க்குயிராய்ப் பிரியாமலும் இவனுக்கு விளங்காமலும் நித்தியமாய்ப் பூரணமாய் நின்ற சிவம் பிரிந்து தோன்ற அச்சிவமே தானாய்ச் சிவானந்தாநு பூதியைத் திளைத்திருப்பதாம்.

122.   வினா. -   இவ்வித ஆன்மாக்கட்குச் சிவபெருமான் எவ்வாறு நின்று அருள்புரிவர்?   

      விடை. -   முன்சொன்ன அணுபட்ச பிரமாதி சதாசிவாந்தமான மூர்த்திகளில் இலய போக அதிகாரத்தையுடைய பசுபதியாகிய சிவபெருமான் சிருஷ்டி காலத்தில் ஒரு மலமுடைய விஞ்ஞானகலரிற் பக்குவருக்கு நிராதாரமாக அறிவுக்கறிவாய் நின்று சாம்பவ தீக்ஷையைப் பண்ணி அவ்வாணவ மலத்தைப் போக்கி முத்தி யோக்கியரை முத்தியிலே விடுவா. முத்தி யோக்கிய ரல்லாதவர்களை அதிகாரமலாநு குணமாகச் சுத்த மாயையிலே தனு கரண புவன போகங்களை உண்டாக்கிச் சுத்த போகபந்தமாகக் கொடுத்துச் சுத்த வித்தை முதலிய தானங்களில் வைத்து அச்சுத்த போகத்திலே வைராக்கியம் வரும் பொருட்டுப் பிரேரிப்பர். இவர்களுக்கு அபரமுத்தாக னென்று பெயர், பின்னும் அச்சுத்த சிவன் மயேசுர புவனத்திலிருக்கும் அனந்தேசுர மூர்த்தியை அதிஷ்டித்து அசுத்த மாயையை ஒரு பிரதேசத்திற் கலக்கித் தனு கரண புவன போகங்களை உண்டாக்கிப் பிரளயாகலருக்குப் பந்தமாகக் கொடுத்து பிரகிருதிக்கு மேலுள்ள போகங்களில் வெறுப்புவரும் பொருட்டுச் சனன மரணங்களை யுண்டாக்குவா. பின்னும் அனந்தேசுரர் மூலமாக உருத்திர மூர்த்தியை அதிஷ்டித்து பிரகிருதியைக் கலக்கித் தனு கரண புவன போகங்களை உண்டாக்கிச் சகலருக்குப் பந்தமாகக் கொடுத்து சுக துக்கங்களை அநுபவிக்கச் செய்வர்.

123.   வினா. -   ஆணவ மலத்தினது இலக்கணம் என்னை?

      விடை. -   செம்பிற் களிம்புபோல் ஆன்மாக்களில் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், தான் ஒன்றும் ஆன்மாக்கள் பலவும் ஆகையால் அப் பற்பல ஆன்மாக்களுடைய அறிவையும் தொழிலையும் மறைக்கும் பற்பல விசித்திர சத்திகளை யுடையதாய்ச் சடமாயிருப்பது.

124.   வினா. -   ஒருவனை மறைத்த சத்தியே மற்றொருவனை மறையாதோ?

      விடை. -   அங்ஙனம் மறைக்குமாயின் ஒருவனுக்கு மலசத்தி பரிபாகப்பட்டு நீங்குங்காலத்தில் சாவான்மாக்களுக்கும் நீங்கி மோக்ஷம் வர வேண்டும். அப்படி சாவான்மாக்க ளுக்கும் ஏககாலத்தில் மோக்ஷம் இன்மையால், ஒருவனை மறைத்தசத்தி மற்றொருவனை மறையாதென்பதே நிச்சயம் இது ஆன்மாக்களுக்குச் சகலாவத்தையில் அராக முதலிய கருவிகளுடன் கூட நின்று அறிவித்து மோகமுதலிய அறுவகைக் குணத்தினையுஞ் செய்விக்கும்.

125.   வினா. -   மோக முதலியவற்றின் நிலைமை என்னை?

      விடை. -   சிவத்திரவிய அபகார முதலியவை அதிபாதக மென்று ஆசாரியரால் அறிந்தாலும் அவ்வுணர்ச்சி சிறிதும் விளங்காமல் அறிவை மயக்கி அதிபாத காதியைச் செய்விப்பது மோகம், யாதாமொருவன் தான் மோகித்துப் புணர்ந்த பொதுமடநதையைப் பார்த்து இவள் தெய்வமடநதை இவளினும் அரியபேறு எனக்கில்லை யென்று மதிக்கச் செய்வது மதம்’ அவளைப் பெறாத போது மிகவும் வருந்தித் தேடிச்செல்ல வாஞ்சையை விளைவிப்பது அராகம் சுற்றத்தை விட்டு எப்படி நீங்குவோம் நாம் இறந்தால் இதை எவர் தாங்குவர் என்கின்ற மனோதுக்கத்தினாலே உடல் உலரும்படி செய்விப்பது சோஷம். சிவம் நமக்குள்ள இருவினைப் பலன்களை ஆதிதெய்வீகம் முதலிய மூவிதத்தால் தரும் என்னும் உணர்வை இழப்பித்து இவன் என்னைக் கெடுத்தான், இவன் என்னை எடுத்தான், நானும் என்னை வணங்கினரை வாழ்வித்தேன், என நினைப்பிப்பது வைசித்திரியம். புத்திர மித்திராதிகளைக் கண்டு களித்து இனி நமக்கொன்றும் குறைவில்லை என மகிழ்விப்பது அரிஷம். இவை ஆணவமல சத்திகளின் காரியம் எனப்படும்.

126.   வினா. -   கன்ம மலத்தின் இலக்கண மென்னை?

      விடை. -   மாறுபாடில்லாமல் தனது வியாபகத்தினாலே ஆணவமலத்திற்குப் பரிபாகத்தை வருவிப்பதாய், ஒன்றற்கொன்று மாறுபாடா யிருக்கும் சுகத்தினையுந் துக்கத்தினையுந் தருவதாய், நல்வினை யென்றும் தீவினை யென்றும் இருவகைப்பட்டு மாயையினினறுந் தனு கரண புவன போகங்கள் உண்டாதற்குக் காரணமாய், ஆன்மாக்களுக்கு இருவினை யொப்பு வந்த காலத்தில் நீங்குவதாய் நிற்பது இது எடுத்த ஜனனத்திலே இயற்றுங்கால் ஆகாமியம் எனவும், ஜனனங்கடோறும் ஈட்டப்பட்டுப் பக்குவப்படாது நிற்குங்கால் சஞ்சிதமெனவும், இச்சஞ்சித கனமங்களுள்ளே பக்குவப்பட்டவை உடம்பையும் அதனால் அநுபவிக்கும் இன்பதுன்பங்களையும் உபகரிக்குங்கால் பிராரத்தமெனவும் பெயர்பெறும்.

127.   வினா. -   சுத்த மாயையினது இலக்கணம் என்னை?

      விடை. -   முற்கூறிய சத்தி மூர்த்திகளாகிய சாதாக்கியங்களால் அவ்வப் புவனவாசிகளுக்குத் தக்க தனுவாதிகளையும் சரியை கிரியை யோகங்களில் நின்றோர்க்குச் சாலோகாதி பதமுத்திகளையும் உண்டாக்குவது. இதற்கு வயிந்தவம் மாயை சிவம் விந்து எனப் பலபெயர் உண்டு.

128.   வினா. -   அசுத்த மாயையினது இலக்கணம் என்னை?

      விடை. -   நித்தியமாகி அநாதியாயிருக்கும் உயிர்கட்கு அவ்வுயிர்களாற் செய்யப்பட்ட வினைக்கீடாக வந்து பொருந்தும் தனு கரண புவன போகமாகிய நான்கும் வெவ்வேறா யுண்டாதற்கு இடமாகி அவ்வான்மாக்கள் இருவினையொப்பு மலபரிபாகம் பிறந்து முத்தியை யடையுமளவும் பொய்யைமெய்யாகக் கருதும்படி மயக்குவதாயும், அவ்வுயிர்கள் முத்தி அடையுங்காலத்துத் தனது காரியமாகிய தனு கரண புவன போகம் முதலியயாவும் தோன்றாமால் நீங்கிப் போவதாயும், ஈசுரத்தத்துவத்தி லிருக்கும் மகேசுரர் என்னும் அனந்தேசுரர் வசப்பட்டு அவர்க்குப் பரிக்கிரக சடசத்தியாயு மிருப்பது.

129.   வினா. -   மாயை ஒன்றென்று சிலர் கூறுகின்றார்களே, தேவரீர் இரண்டென்ற தென்னை?

      விடை. -   சுத்த மாயை போதம், அசுத்த மாயை மோகம், ஆகையால் இரண்டென்பதே துணிவு. இவ்விரண்டும் நித்தியமே. இவ்விரண்டேயன்றி அசுத்த மாயையிற் றோன்றிப் பிரகிருதிமாயை எனவும் ஒன்றுண்டு, இதுவே அநித்தியம்.

130.   வினா. -   ஆயின் பஞ்சமலங்க ளென்று வழங்குவ தென்னை?

      விடை. -   மேற்கூறிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மூன்றோடு மாயேயம் திரோதானம் என்னும் இரண்டையுங்கூட்டி ஐந்தென வழங்குவர்.

131.   வினா. -   மாயேயம் என்பன யாவை?

      விடை. -   மாயையால் உண்டாகிய தத்துவங்களும் அவைகளாலாகிய தனு கரண புவன போகங்களுமாம்.

132.   வினா. -   திரோதான மென்பது யாது?

      விடை. -   சுத்தசிவத்தினது சிற்சத்தி பராசத்தி வழித்தாகிய ஆதிசத்தி தானே திரோதான சத்தியென்னும் பெயருடையதாய், நித்தியமாயிருக்கு முயிரை அநாதியே பற்றி உபாதியினைச் செய்யும் பொல்லாத ஆணவமலமாகிய வியாதியைப் போக்குதற்குரிய ஒளஷதமாகிய வினைப்போகங்களைப் புசிப்பித்து உண்மையாகிய பரிபாகத்தை வரச்செய்யும். இது மலத்தைச் செலுத்துகையால் மலமென உபசரிக்கப்பட்டது.

133.   வினா. -   சுத்தமாயையி னின்றும் தோன்றுவன யாவை?

      விடை. -   அம்மாயையினின்றும் சிவபிரேரகத்தால் முன்னர் சப்தரூபமாகிய சிவதத்துவமும், சிவதத்துவத்தில் சத்தித்தத்துவமும், சத்தித்ததுவத்தில் சாதாக்கியதத்துவமும், சாதாக்கியதத்துவதில் ஈசுரதத்துவமும், ஈசுரதத்துவத்தில் சுத்தவித்தியாதத்துவமும் தோன்றும், இவ்வைந்தும் சிவதத்துவமெனப் பெயர்பெறும். பின்னர் அகாராதி க்ஷகாராந்தமாகிய அக்ஷரம் ஐம்பத்தொன்றும், ஈசானமுதல் அஸ்திரம் ஈறாக மந்திரம் பதினொன்றும், பிரணவ முதல் நமோ நமாந்தமாகப் பத மந்திரம் எண்பத்தொன்றும், நம: சுதா சுவாகா வஷடு வவுஷடு உமபடு என்னும் வர்க்கத்துக்கு ஒரு கோடியாகச் சப்தகோடி மகாமந்திரங்களும், காலாக்கினி உருத்திர புவன முதல் அனுசிருக புவனாந்தமாகவுள்ள புவனங்கள் இருநூற்றிருபத்து நான்கும், ஆகிய இவைகளும் தோன்றும்.

134.   வினா. -   அசுத்தமாயையினின்றும் தோன்றுவன யாவை?

      விடை. -   கிருத்திய கர்த்தாவாகிய அனந்தேசுர மூர்த்தியினுடைய கிரியாசத்தியினால் அசுத்தமாயையின் ஒர் பிரதேசத்தினின்றும் காலமும் நியதியும் கலையும் ஒருகொத்தா யுண்டாகும். அக்கலையினின்றும் வித்தையும், வித்தையினின்றும் இராகமும் தோன்றும், இங்ஙனம் கூறிய இவ்வைந்தும் ஆன்மாவுக்கு ஓர் சட்டையாகும். நெய் திரி நெருப்பு இம்மூன்றுங் கூடினவிடத்து ஓர் பிரகாசம் உண்டாவது போலவும், மஞ்சள் சுண்ணம் இவ்விரண்டும் கூடினவிடத்து ஓர் செந்நிறம் உண்டாவது போலவும், இவ்வைந்துங் கூடினவிடத்துப் புருடதத்துவந் தோன்றும். இவற்றோடு மாயையைக் கலக்கிய பிரதேசமாயையும் ஒருங்குசேர இவ்வேழும் வித்தியாதத்துவமெனப் பெயர் பெறும்.

135.   வினா. -     ஏனைத் தத்துவங்கள் எவ்வாறு தோன்றும்?

      விடை. -    கலாதத்துவத்தில் பிரகிருதிதத்துவமும் அதினின்றும் முக்குணமுந் தோன்றும். அம்முக்குணமும் ஒத்தவிடமே அவ்வியக்தம், அதுவே சித்தம், அந்த அவ்வியக்தத்தில் புத்தியும், புத்தியில் அகங்காரமும் தோன்றும். அவ்வகங்காரம் தைசதாங்காரம், வைகையாங்காரம், பூதாதியாங்காரம், என மூவிதப்படும். சாத்துவிக குணத்தினையுடைய அத்தைசதவாங்காரத்தில் மனமும், ஞானேந்திரியமாகிய சுரோத்திராதிகளைந்தும் தோன்றும். இராசதகுணத்தினையுடைய வைகரியாங்காரத்தில் கன்மேந்திரியமாகிய வாக்காதிகள் ஐந்தும் தோன்றும். தாமதகுணத்தினையுடைய பூதாதியாங்காரத்தில் சத்தபரிச ரூப ரச கந்தமென்னும் தன்மாத்திரைகளைந்தும் தோன்றும். அத்தன்மாத்திரைகளுள்ளே சத்தத்தில் ஆகாயமும், பரிசத்தில் வாயுவும், ரூபத்தில் தேயுவும், ரசத்தில் அப்புவும், கந்தத்தில் பிருதிவியும் தோன்றும். இவைகள் வியக்தி ரூபமாகத் தோற்றுவதே சிருஷ்டியெனவும், முன்தோன்றிய முறையே சத்திரூபமாக ஓடுங்குவதே சங்காரமெனவும் கூறப்படும்.

136.   வினா. -     ஆன்மா எப்பொழுதும் ஒரு தன்மையாகவே யிருக்குமோ?

      விடை. -    சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், என்னும் ஐந்தவஸ்தைகளாலும் மாறி மாறி வேறுபட்டே யிருக்கும்.

137.   வினா. -     ஆயின் – அப்பஞ்சா வஸ்தைகளில் எவ்வாறு வேறுபட்டு நின்று அநுபவிக்கும்?

      விடை. -    சாக்கிராவஸ்தையில் நெற்றியிலே சுரோத்திராதிஐந்தும், வாக்காதிஐந்தும், சத்தாதி ஐந்தும், வசனாதி ஐந்தும், பிராணாதி பத்தும், மனமாதி நான்கும், ஆகிய முப்பத்து நான்கு தத்துவங்களுடனும் தானும் ஒருவனாகக்கூடிச் சகலவிடயங்களையும்; சொப்பனாவஸ்தையில் கண்டத்திலே சத்தாதிகளும், வசனாதிகளும், வாயுக்களும், அந்தக்கரணங்களும், ஆகிய இருபத்துநான்கு தத்துவங்களுடனும் தானும் ஒருவனாகக் கூடி வியவகாரிக விடய போக வாசனையுடன் அக்காலத்தில் உண்டாகும் தோற்றங்களையும்; சுழுத்தியவஸ்தையில் இதயத்திலே சித்தம், பிராணவாயு, என்னும் இரண்டுடனே தானும் ஒருவனாகக்கூடிய தேகபோக ஒழிவையும்; துரியாவஸ்தையில் நாபியிலே பிராணவாயு ஒன்றுடனே தானும் கூடியும், துரியாதீத அவஸ்தையில் மூலத்திலே மூலமாகிய ஆணவமலத்துடனே தனித்திருந்தும் சுகதுக்கங்களை அநுபவிக்கும்.

138.   வினா. -     ஆன்மா ஒரே வகையாகத்தான் பிறந்துழலுமோ?

      விடை. -    அப்படி யன்று, நால்வகைத் தோற்றம், எழுவகைப்பிறப்பு எண்பத்துநான்கு லக்ஷம் யோனி பேதம் என்னும் இவற்றுள் ஒவ்வொன்றிலும் மாறி மாறி அநேகமுறை பிறக்கும். பிறக்குங்கால் புண்ணியகன்மத்துக் கீடாக பூதசார மென்னுஞ் சரீரத்தை எடுத்துச் சுவாக்கத்தினும், பாவகன்மத்துக் கீடாக பூதசரீரத்தை எடுத்து நரகங்களிலும், மிசிரகன்மத்துக் கீடாக பூதபரிணாம சரீரத்தை எடுத்துப் பூமியினும் சுகதுக்கங்களை அநுபவித் துழலும்.

139.   வினா. -     அப்படியா; நால்வகைத் தோற்றமாவன எவை?

      விடை. -    அண்டசம் சுவேதசம் உற்பிச்சம் சராயுசம் என்பவையாம். இவற்றுள் முட்டையிற் பிறப்பன அண்டசம், வியர்வையில் பிறப்பன சுவேதசம், பூமியைப்பிளந்து கொண்டுவித்து வேர் கிழங்கு முதலியவைகளிற் பிறப்பன உற்பிச்சம், கருப்பாசயப்பையிற் பிறப்பன சராயுசம், என்று சொல்லப்படும்.

140.  வினா. -     எழுவகைப் பிறவிகள் எவை?   

      விடை. -    தாவரம் ஊர்வன நீர்வாழ்வன பறவை விலங்கு தேவர் மனிதர் என்னும் இவைகளே.

141.   வினா. -     எண்பத்துநான்கு லக்ஷம் யோனி பேதங்கள் எவை?

      விடை. -    முன்சொன்ன விருக்ஷமுதலிய தாவரவர்க்கத்தில் பத்தொன்பதுலக்ஷம், ஊர்வனவர்க்கத்தில் பதினைந்துலக்ஷம், நீர்வாழ்வன வர்கத்தில் பத்துலக்ஷம், பறவை வர்க்கத்தில் பத்துலக்ஷம், விலங்கு வர்க்கத்தில் பத்துலக்ஷம், தேவ வர்க்கத்தில் பதினொருலக்ஷம், மானிட வர்க்கத்தில் ஒன்பதுலக்ஷம், என்னும் இவைகளேயாம்.

142.   வினா. -     இவ்வாறு பிறந்துழலும் சீவனைச் சிவன் எவ்வாறு ஆட்கொள் கின்றனர்?

      விடை. -    அந்தந்த யோனிகளில் அனந்தம் பிறவி எடுக்கச்செய்து முடிவில் மானுடயோனியிற் சனிப்பித்து, அதிலும் பிரம்ம க்ஷத்திரிய வைசிய சூத்திரர் என்னும் உயர்ந்த வருணங்களிற் பிறந்து அவற்றிற்குரிய ஆசாரங்களை அநுஷ்டித்துப் பரிபாக மேலிடச் செய்வித்து, முன்னர் உலகாயதம் பெளத்தம் அருகம் மீமாஞ்சம் பாஞ்சராத்திரம் மாயாவாதம் என்னும் புறச்சமயங்களினும் – பின்னர் சைவம் பாசுபதம் மகாவிரதம் காளாமுகம் வாமம் வைரவம் என்னும் உட்சமயங்களினும் கிரமமாகப் புகுவித்து, அவ்வவற்றிற்குள்ள மூர்த்திகளை அவற்றிற்குரிய சாதனங்களால் வழிபடப் புரிவித்து, அதன் பின்னர் சித்தாந்த சைவத்துட் புகுந்து சமய விசேஷ தீக்ஷைகளைப் பெற்றுச் சரியை கிரியை யோகங்களை அநுஷ்டிக்கும் பொருட்டு அச்சிவபிரான் தமது காருணியத்தினால் அதற்கேற்ற தனுவாதிகளைக் கூட்டி அத்தனுவாதிகளைக் கொண்டு சரியாதிகளை அநுஷ்டிக்கச் செய்து, இறுதியிலே வீரசைவ சமயத்துட் புகுவித்துப் பிண்டத்தல முடையனாக்கிச் சத்தி நிபாதம் உதிப்பித்துத் தமது தீக்ஷாசத்தியினால் ஆட்கொள்ளுவர். [சத்தி – சிற்சத்தி – நிபாதம் – பதிதல்.]

143.   வினா. -     பிண்டத்தலமாவது யாது?

      விடை. -    அநேக ஜனனங்களிலே செய்துள்ள புண்ணிய மேலீட்டினாலே உண்மை விளங்க அந்தக் கரணசுத்தியுடையனாதல் இது ஆன்மவிவேகம் உயிர் விளக்கம் எனவும் பெயர் பெறும்.

144.   வினா. -     சத்தி நிபாதத்தின் இலக்கண மென்னை?

      விடை. -    தானென்னுஞ் சுட்டற விதேகமுத்தி சாடசாத்காரத்தைப் பெறவேண்டு மென்கிற வாஞ்சை மேன்மேலும் உத்தரோத்தரமாய் அடங்காமல் எழுதலும், தேகாதிபிரபஞ்சங்களைக் கான்றசோறென அருவருத்துச் சிவராகமே பித்தாய் மேலிடுதலும், சுத்த சிவசொரூபமே யாகும் குருலிங்கசங்கமம் என சற்றுஞ் சலனமின்றி நினைத்தற் கரிய அப்பொருளுடன் ஏகீபாவமாகச் செய்கின்ற சமரசபத்தி சத்திய உருவமாக வந்து பதிதலும், ஜனனமரணத்திற் கேதுவாகிய புத்திரமித்திர களத்திராதிகளான சமுசாரத்தைக்கண்டு இந்தச்சமுசாரத்தில் விழுந்து அழுந்தவோ என்று இலச்சைப்பட் டழிதலும், வாயினாற் சமுசாரமென்று சொல்லவும் அருவருத்தலும், மனத்தின் கண்ணே சமுசாரமென்று நினைக்குபொழுது அதனால் வரும் பயத்தினால் பிராண வாயு இயங்காமல் மூர்ச்சித்து அயர்ச்சியினை யடைதலும், பிறவுமாகிய நிலைமைகளோடு சீவன் முக்தர்களை யடைந்து அவர்களை வழிபடுதல் முதலிய உத்தம குணங்களைப் பெறுதலாம்.

145.   வினா. -     அச் சத்திநிபாதம் எத்தனை வகைப்படும்?    

      விடை. -    மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம், என நான்கு வகைப்படும். இவற்றை யுடையவர்கட்குச் செய்யும் தீக்ஷை முறையே வாழைத்தண்டில் அக்கினிபற்றுதலையும், பச்சைவிறகில் அக்கினிபற்றுதலையும், உலாந்தவிறகில் அக்கினிபற்றுதலையும், கரியில் அக்கினிபற்றுதலையும் ஒப்பாம்.

146. வினா. -     ஆயின் அச் சத்தி நிபாதர்க்கு அநுக்கிரகஞ் செய்யும் முறைமை எங்ஙனம்?

      விடை. -    தீவிரதரம், தீவிரம் என்னும் சத்திநிபாதத்தை யுடைய விஞ்ஞானகலர்க்கும் பிரளயாகலர்க்கும் தேகமின்மையால் சிவபெருமான் நிராதாரமாக எழுந்தருளி விஞ்ஞானகலர்க்கு அறிவுக்கறிவாக நின்று ஆணவமலத்தினையும், பிரளயாகலர்க்கு இடபவாகனா ரூடராய் எழுந்தருளி ஆணவ மலத்தோடு கன்மமலத்தினையும், மந்தம் மந்ததரம் என்னும் சத்திநிபாதத்தினை யுடைய சகலர்க்கு மானைக் காட்டி மான்பிடிக்கு மாறுபோல் அவர்களைப்போலவே சாதாரமாக மானுடச்சட்டை சாத்தி எழுந்தருளி ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் போக்கி அநுக்கிரகிப்பர்.

147.   வினா. -     மேலே தீக்ஷாசத்தியென்றது யாது?

      விடை. -    மாணாக்கனைப் பற்றிய மும் மலங்களையும் நீக்கிச் சிவசொரூபம் ஆக்கும்படி சற்குருவினது அறிவையும், அவரை வழிபட்டு தீக்ஷையினால் மும்மலங்களையும் ஒழித்துச் சிவானந்தாநுபூதியைப் பெறும் பொருட்டு மாணாக்கனது அறிவையும், காகத்தினது இருகண்களினிடத்தும் ஒரு மணியே நின்று அறிவது போல் நின்று செலுத்தும் சத்தியாம்.

148.   வினா. -     ஆசிரியர் சிவலிங்கதாரணம் எதன் பொருட்டுச் செய்வர்?

      விடை. -    பசுவிற்கு வரும் வியாதியை நிவர்த்திக்கும் மருந்து பசுவின் பாலென அறிந்தவன் அப்பசுவினிடத்துண்டாகிய பாலைக்கறந்து காய்ச்சி அப்பசுவிற்கு ஊட்டுவது போல், ஆசாரியர் மாணாக்கனது ஆணவமலமென்னும் வியாதியை நீக்கி இலிங்கரூபமாக்குவது சிவ மென்றறிந்தா ராகலின் அச்சிவத்தையே சிவலிங்கமாக்கித் தரிப்பரென்றறிக.

149.   வினா. -     இச்சிவலிங்க தாரணத்தாற் பெறப்படும் பேறு யாது?

      விடை. -    ஏனைச் சமயிகளாற் பெறப்படும் சாலோகாதி சதேகமுத்திகளுக் கதீதமாகிய விதேகமுத்தியேயாம்.

150. வினா. -     சிவலிங்கதாரணத்திற்கும் விதேகமுத்திக்கும் ஒற்றுமை எப்படி?

      விடை. -    தத்தொமசி மகா வாக்கியார்த்தப்படி தீக்ஷாபலத்தினால் இலிங்காங்க சையோகியாகி நிற்றலின், சிவலிங்கதாரண முடையவர்க்கே விதேகமுத்தி யுரித்தாம்.

151. வினா. -     தீக்ஷையினாலேயே விதேகமுத்தி சித்திப்பதாயின் மேற் கூறிய தீக்ஷையின் கூறுபாட்டையும் கருணைகூர்ந்து விரித்தருளல் வேண்டும்.

      விடை. -    அன்பனே! நீ வினவியது நன்று, இதுமுக்கியமாக உணரற்பாலதாகிய விஷயமே, முற்கூறிய மூவகைத்தீக்ஷையும் விரிக்குங்கால் தனித்தனி ஏழு வகைப்படும்.

152.   வினா. -     ஆயின் கிரியா தீக்ஷையின் பிரிவுகள் எவை?

      விடை. -    ஆக்கினாதீக்ஷை, உவமாதீக்ஷை, சுவஸ்திகாரோகணதீக்ஷை, கலசாபிஷேகதீக்ஷை, விபூதிப்பட்டதீக்ஷை, இலிங்காயித்த தீக்ஷை, இலிங்கசுவாபித்ததீக்ஷை   என்பனவாம்.

153.   வினா. -     ஆக்கினாதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    ஆசாரியர் மாணாக்க னுடைய அறிவு தாம் விதித்த விதியினைக் கடவாமலும், விகற்பத்தினைச் செய்யும் பஞ்சேந்திரிய அந்தக்கரண வழிச்செல்லாமலும், தம்முன் யானென்னும் மறுமாற்றஞ் சொல்லாமலுமிருக்க; ஆக்கினாசத்தியை நிறுத்தித் தமது ஆக்கினைப்படி செய்விப்பது.

154.   வினா. -     உவமாதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    ஆசாரியர் மாணாக்கனிடத்துச் சமயாசார சத்தியைத்தாபித்து, இச்சமயத்தில் முன்னோர்களான வசவாதி கணங்கள் குருலிங்க சங்கமங்களினிடத்திலே வழிபட்ட திறத்தினையும் அஷ்டாபரண பஞ்சாசார விதத்தினையும் அறிவித்துச் சமயாசார முறைமையிலே நிறுத்துவது.

155.   வினா. -     சுவஸ்திகாரோகண தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    நிறைந்த அந்தகாரத்தினால் மறைபட்டுத் தோன்றாத ஆகாயம் சூரியோதயமான வுடனே அவ்வந்தகாரம் நீங்கித் தோன்றுமாறுபோல, ஆசாரியரும் மாணாக்கனைச் சுவஸ்திகாசனத்தில் இருத்தி நிவிர்த்தி முதலிய பஞ்சகலைகளில் வியாபித்திருக்கும் மந்திர பத வன்ன புவன தத்துவங்களிற் கட்டுண்டிருக்கும் கன்மங்களைப்போக்கி அவ்வத்துவாக்களைச் சுத்திபண்ணவே அவனது அறிவு விளங்கும். அதன்பொருட்டு அவனது உடலை மந்திரசொரூபமாக்க, மந்திரங்களினால் நியாசம் பண்ணுவது.

156.   வினா. -     கலசாபிஷேக தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    ஆசாரியர் முன்னரே மாணாக்கனுடைய மாயாதேகத்தைச் சுவஸ்தி காரோகண தீக்ஷையினால் மந்திரதேகமாகச் செய்து, பின்னர்ச் சிவ லிங்கத்தைத் தரிக்கத் தபனகலசமாகிய சிவகும்ப ஜலத்தை யெடுத்து மாணாக்கன் சிவரூப மாமாறு பாவித்துச் சிரசின்மீது அபிஷேகஞ் செய்வது.

157.   வினா. -     விபூதிப்பட்ட தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    முற்கூறிய சுவஸ்தி காரோகண தீக்ஷையில் ஆசாரியர் மாணாக்கனது தூல சூக்கும காரண தேகங்களையும் அத்தேகாதாரமாகிய புவனங்களையும் அத்தேக பிரேரகமாகிய மந்திர பத முதலியவற்றையும் சோதித்து, அத்துவாக்களிற் கட்டுப்பட்டிருகும் கன்மங்களையும் போக்கி, “இனிமேல் கன்மபந்தம் ஏறாதபடி இருவகை மாயாகன்ம பந்தங்களையும் போக்கிவிட்டோ மாகையால் நீ மாயையாகிய சத்துருவைச் செயித்தாய்” என்று தமது திருக்கரத்தாலே திருவருள் பிரகாசிக்கக் கடவதென மாணாக்கன் நெற்றியில் திருவெண்ணீற்றைத் தரிப்பது.

158.   வினா. -     இலிங்காயித்த தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    இவ்வுலகத்தில் காமுகனெருவன் செளந்தரியமுடையவளாய்த் தருணியாயிருக்கும் ஓர்கன்னிகையைக்கண்டு, அவளிடத்து அதிமோகத்தையடைந்து தன்வசமழிந்து, தன்னால் அவளை வசப்படுத்திக் கூடுதற்கு முடியாமையால் மானத்தைவிடுத்து, பனைமடலால் ஒரு குதிரையைச்செய்து அக்குதிரையின்மே லேறிக்கொண்டு, அவளைப்போல் ஒருபடத்திலெழுதிக் கையிலேந்திச் சென்று, அவள் ஊரினையும் பெயரினையும் உரைத்து அரசனிருக்கும் நகரில் அக்குதிரையை நடத்துங்கால்; அந்த நகரத்தரசன் அவனது காமக்குறியைக் கண்டு, அக்கன்னிகையை அழைப்பித்து, அவளுக்கு வேண்டுவன கொடுத்து, அக்காமுகன் வசமாக்குமாறு போல; பரிபாகத்தையுடைய மாணாக்கனும் சிவபெருமானால் தரும்பேரின்பத்தினைப் பரோக்ஷ ஞானமா யறிந்து, பின்பு அபரோக்ஷமாக அச்சுகத்தினை அநுபவிக்க வேண்டி, தேகாதி பிரபஞ்சத்தினைக் கைவிட்டு, சிவதாக மேலிட்டு, கண்ணீருங் கம்பலையுமாகக் கதறிக் கொண்டு, நாணத்தினை விடுத்து, அன்புமேற்கொண்டு, சிவாகமங்களைக் கைவிடாது ஆசாரியரைத் தேடி வருங்காலத்தில்; அவ்வாசாரியரும் தமது சொரூபமாகிய ஓர் சிவலிங்கத்தை ஆகமவிதிப்படி பூசித்து, உயர்வொப் பில்லாத அவ்விஷ்ட லிங்கத்தை அக்கினியை அக்கினிதேவன் எடுத்ததுபோலக் கையிலெடுத்து, தமது அங்கையில் வைத்து, அம்மாணாக்கன் களிகூர அவனுக்குத் தரிசனஞ் செய்விப்பது.

159.   வினா. -     இலிங்க சுவாயித்த தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    கொல்லன் இருப்புப் பாளத்தை உலையில் நெருப்பெழக் காய்ச்சி ஒரு பாத்திரத்தி லுள்ள ஜலத்திலே அதைத் தோய்க்க அந்த ஜலத்தை அப்பாளம் தனக்குள் சுவறப் பண்ணிக்கொள்ளு மாறு போல, ஆசாரியரும் மாணாக்கனுக்குச் சிவலிங்கத்தை அவனது தற்போதத்தை விழுங்கிச் சிவபோதத்தைத் தரும்பொருட்டு அவனுடைய தூலாங்கத்தில் உத்தமாங்கமான சிரசு முதலிய தானங்களில் தாரணம் பண்ணுவது. இது சற்குரு சாயித்தியம் எனவும் பெயர்பெறும்.

160.   வினா. -     மந்திரதீக்ஷை யின் பிரிவுகள் எவை?

      விடை. -    சமயதீக்ஷை நிர்ச்சமசாரதீக்ஷை, நிஷ்பிராணதீக்ஷை, தத்துவதீக்ஷை, அத்யாதமிகதீக்ஷை, அநுக்கிரகதீக்ஷை, சத்திய சுத்த வித்யா தீக்ஷை என்பனவாம்.

161.   வினா. -     சமயதீக்ஷை என்பது என்னை?  

      விடை. -    பதினெட்டு ஜாதிபேதங்களையும் களைந்து சங்கமகுலமாக்கி வைப்பது.

162.   வினா. -     நிர்ச்சம்சார தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    தனு கரண புவனபோக சம்சாரம் அநித்தியமென விடுவித்துச் சிவபூசையே சம்சாரமாகக் கொள்விப்பது.

163.   வினா. -     நிஷ்பிராண திக்ஷை என்பது என்னை>

      விடை. -    மண் பெண் பொன் என்னும் மூவாசைகளினும் மனம் செல்லாமல் பற்றறுத்தல்.

164.   வினா. -     தத்துவ தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    முப்பத்தாறு தத்துவங்களையும் பிரகிருதியையும் இலிங்கமயமாகத் தெளிவிப்பது.

165.   வினா. -     அத்யாத்மிகதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    சுயம்புலிங்க சொரூபமே நீ, பயப்படாதே, உணர்ந்தறிவாய்; என விளக்குவது.

166.   வினா. -     அநுக்கிரகதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    சிவபெருமான் தானே ஆறு லிங்கமாயும் மிருக்குமென் றுணர்த்துவது.

167.   வினா. -     சத்திய சுத்த வித்யாதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    சச்சிதானந்த பிரம்மமே இலிங்காங்கசையோகமாய் இருக்கின்றதென்று விளங்க உணர்த்துவது.

168.   வினா. -     வேததீக்ஷையின் பிரிவுகள் எவை?    

      விடை. -    ஏகாக்கிரதீக்ஷை, திடவிரததீக்ஷை,பஞ்சேந்திரியாரப்பணதீக்ஷை, அஹிம்ஸாதீக்ஷை, இலிங்கநிசதீக்ஷை, மனோலயதீக்ஷை,சத்தியோன்முத்திதீக்ஷை என்பனவாம்.

169.   வினா. -     ஏகாக்கிரதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    தனது கரத்திலுள்ள இஷ்ட லிங்கமே தெய்வ மென்று வேறு தெய்வம் ஒன்றையும் நாடாமலிருப்பது.

170.   வினா. -     திடவிரத தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    தான் இவ்வாறு மேற்கொண்ட விரதநியமங்களைச் சரீரபரியந்தம் விடாம லிருப்பது.

171.   வினா. -     பஞ்சேந்திரியார்பணதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    சிவலிங்கமேபதி தானேசதியாக எண்ணி, நிஜகாய கரண பாவங்களால் சாக்கிர சொப்பன சுழுத்திகளில் சர்வகாலமும் வந்த விடயங்களை இஷ்ட பிராண பாவலிங்கங்களுக்கு அர்ப்பிப்பது.

172.   வினா. -     அஹிம்ஸாதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    அபராதஞ்செய்யாத சீவன்களையும் மற்ற சீவன்களையும் கொல்லாதிருப்பது.

173.   வினா. -     இலிங்கநிச தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    ஆதிமத்யாந்த ரகிதமாகிய சிவனே தானென் றறிவது.

174.   வினா. -     மனோலயதீக்ஷை என்பது என்னை?

      விடை. -    சமாதியாய அந்த இலிங்கத்தில் பாவனைலயித்து மனம் திரும்பாம லிருப்பது.

175.   வினா. -     சத்தியோனமுத்தி தீக்ஷை என்பது என்னை?

      விடை. -    பாவனை யொழிந்து அந்த இலிங்கமும் தானும் அத்துவிதமாய் இரண்டறக் கலந்து ஐக்யமாவது. இங்ஙனம் கூறிய இருபத்தொரு தீக்ஷைகளும் ஆன்மாவை ஞானமயமாக்கலால் சின்மயதீக்ஷை எனப் பெயர் பெற்றது, ஆசிரியரால் உணர்த்தப்படுவனவும் இயற்றப் படுவனவும் மாணாக்கனால் அநுஷ்டிக்கப் படுவனவுமா யிருக்கும்.

176.   வினா. -     அற்றேல், இவ்வாறு தீக்ஷித்துச் சிவலிங்கதாரணஞ் செய்யப்பெற்ற ஆன்மா எவ்வாறாம்?

      விடை. -    நல்ல சர்ப்பமானது ஒருவனைக் கடித்த அந்த க்ஷணமே அவனது உட லுயிர் இரண்டும் அவ்விஷமய மானவாறு போலவும், ஒரு கடத்திற் சலத்தைப்பூரித்து அடுப்பிலேற்றி விறகில் தீக்கொளுவி எரிக்க அச்சூடு அக்கடத்தினையும் அக்கடத்திற் பூரித்திருந்த சலத்தினையுங் கலந்து தற்சொரூபமாகச் செய்யுமாறு போலவும், ஆசாரியர் மாணாக்கனது உடலில் தமது சொரூபமாகிய இஷ்டலிங்கத்தைத் தரிக்கவே, அவனுடைய தேகத்தினது உள்ளும் புறம்பும் அத்தேகத்தைப் பற்றிய சீவனும் சிவசொரூபமாம்.

177.   வினா. -     மேற்கூறிய தீக்ஷைகள் யாவருக்கும் பலிக்குமோ?

      விடை. -    ஐப்பசித்திங்களில் ஆதித்தவாரத்தில் சுவாதி நக்ஷத்திரங்கூடிய சுபதினத்தில் மேகம் நீரைச் சொரிவதறிந்து சமுத்திரத்தில் வாழும் சிப்பிகளெலாம் அச்சலத்தில் மிதந்து வாயைத் திறந்துகொண்டிருந்து அம்மழைத்துளியை அருந்திக் கருக்கொண்டு முத்துக்களை ஈணுவதன்றி, கடலுள் வாழும் மற்ற ஜீவராசிகள் உண்டதனாற் பிரயோசன மில்லாததுபோல; நமக்கெப்போது அத்துவிதானந்த முத்தி கிடைக்குமென்று சிவராகங் கொண்டு வாய்விட்டலறி வருந்திப் பிரபஞ்சத்தையும் போகங்களையும் வெறுத்துக் கைவிட விரும்பும் அறிவுடையனாகிய சற் சீடனுக்கு ஞானாசாரியன் தீக்ஷையினைப் பண்ணி, பின்பு ஞானக்கிரியா அபிவியக்த பரப்பிரமச்சொரூபமே தானாக விளங்கும் சிவலிங்கத்தைத் தரிக்கவே, அச் சிவசொரூபங் கிடைக்கும். அவ் வாஞ்சையற்ற அபக்குவர்களுக்கு அத்தீக்ஷையாற் பிரயோசனம் இல்லையென்றறிக.

178.   வினா. -     தீக்ஷை என்னும் சொல்லுக்குப் பொருள் என்னை?

      விடை. -    ஒன்றைக் கெடுத்து ஒன்றைக் கொடுத்தல் எனப் பொருள்படுதலால் நெல்லுக்குத் தவிடு உமி முளையைப் போல அநாதி சையோகமா யிருக்கும் ஆணவாதி மலத்திரயங்களைப் போக்கி, ஒரு போதும் நீங்காததாகிய சிவத்துவ அபிவியக்தியைக் கொடுத்தல் என்பதாம். [தீ-ஞானத்தைக் கொடுத்தல். க்ஷா – பாசத்தைக் கெடுத்தல்.]

179.   வினா. -     இவ்வாறு தீக்ஷைபெற்ற வீரசைவர் சிவலிங்கத்தை எவ்வாறு வழிபடுவர்?

      விடை. -    முற்கூறிய சற்பத்தி முதலிய அறுவகைப் பத்திகளிலும் அடியேனுக்கு உணர்த்தல் வேண்டும்.

180.   வினா. -     சற்பத்தி முதலியவற்றின் இலக்கணங்களையும் அடியேனுக்கு உணர்த்தல் வேண்டும்:

      விடை. -    அப்படியே அப்பத்திகளின் இலக்கணங்களையும் அவற்றிற்குரிய அவஸ்தைகளையும் தனித்தனி உணர்த்துவோம் கேட்பாயாக.

181.   வினா. -     சற்பத்தியையும் அதனது அவஸ்தையையும் அருளல் வேண்டும்:

      விடை. -    சிற்சத்தியே தனது அறிவுக் கறிவாய் விளங்கிக் கொண்டு தனக்கு வடிவமாயிருக்கும் என்பதை யுணர்ந்து, அச்சிற்சத்தியை யன்றி யானே அறிவெனென்னும் மமதை தோன்றா துணர்த்துவது சற்பத்தி இச்சற்பத்தியையும் அச்சிற்சத்தியையும் தனக்கு வடிவமென்று நின்ற நிட்டையே நின்மல சாக்கிரம்.

182.   வினா. -     நைட்டா பத்தியையும் அதனது அவஸ்தையையும் அருளல் வேண்டும்:  

      விடை. -    அச் சிற்சத்தி எனக்கு வடிவமன்று, என்று அறிவை விளக்குவதாய்ப் பகுப்பற்றிருக்கும் அவ்வறிவாலே யான் அறிவதல்லது யானாக ஒன்றையும் அறியமாட்டான்; என்னும் நிச்சயத்தினை அறிவித்துக்கொண் டிருப்பது நைட்டாபத்தி. இவ்வநுபவமே நின்மல சொப்பனம்.

183.   வினா. -     அவதான பத்தியையும் அதனது அவஸ்தையையும் அருளல் வேண்டும்:

      விடை. -    சிற்சத்தி அறிவிக்க யாம் அறிகின்றோம் என்னும் பகுப்புமின்றிப் பிரிவற்று நிற்கும் அநுபவத்தை விளக்குவது அவதானபத்தி, இவ்வநுபவமே நின்மல சுழுத்தி.

184.   வினா. -     அநுபவபத்தியையும் அதனது அவஸ்தையையும் அருளல் வேண்டும்:

      விடை. -    சிற்சத்தியும் தன் அறிவும் இரண்டல்லவென்னும் சுட்டுமற்று, அச்சிற்சத்தி தானாய் நிற்கும் அநுபவத்தை விளக்குவது அநுபவபத்தி. இவ்வநுபவமே நின்மலதுரியம்.

185.   வினா. -     ஆனந்தபத்தியையும் அதனது அவஸ்தையையும் அருளல் வேண்டும்:

      விடை. -    சிற்சத்தி பேரறிவு பெருந்தொழி லெல்லா முடையதாகையால் அதனையுங் குறியாது, அதனுளழுந்தும் அநுபவத்தை விளக்குவது ஆனந்த பத்தி இவ்வநுபவமே நின்மல துரியாதீதம்.

186.   வினா. -     சமரசபத்தியையும் அதனது அவஸ்தை முதலிய வற்றையும் அருளல் வேண்டும்:

      விடை. -    இதயந் தொடங்கித் துவாதசாந்த மாகிய உன்மனை கலைபரியந்தம் நின்மல சாக்கிரமுதல் நின்மல துரியாதீதமாம். இம்மட்டுமே நிட்டை, இங்ஙனம் நிட்டைகூடி நிற்குமளவில் உன்மனாந்தம் பராவத்தை, அவற்றின் விளக்குவது தான் சமரசபத்தி, அவ்விடத்து நின்மலானந்த அகண்டாகார பரசிவசாட்சாத்காரமாம் அச்சிவ சாட்சாத் காரத்தைப் பெறுவதே ஆன்மலாபமாகிய சீவன் முத்தி.

187.   வினா. -     இச்சீவன் முத்தர்கள் பரசிவத்தோ டெவ்வாறு கலப்பர்?

      விடை. -    அவாங்மன கோசரமாகிய பரசிவத்தோடொன்றாய்க் கலந்து வியாபியாய் அத்து விதமேயாகி, (நீரோடு நீர் சேர்நது ஒன்றாய்ப் போவதும் இருளும் ஒளியும் போல இரண்டாகி நிற்பது மல்லாமல்) தேனும் அதனது உருசியும் எங்ஙனம் பிரியாதிருக்குமோ அங்ஙனம் சிவத்தோடு அத்துவிதமாகக் கலந்து நிற்பர் இதுவே பரமுத்தி.

188.   வினா. -     சிவபெருமான் அப்பரமுத்தியில் எவ்வாறு சேர்த்துக்கொள்ளுவர்?  

      விடை. -    செம்பினிடத்து இரதகுளிகை கொடுக்க அக்குளிகை அச்செம்பினிடத்துள்ள காளித்ததை யெல்லாம் போக்கி மீண்டும் அது அச்செம்பிலூறிப் பரவக்கொடாமல் வேதித்து அச்செம்பினிடத்து ஒன்றாய்க்கலந்து அதனைப் பொன்னாக்கித் தானும் அப்பொன்னைவிட்டு நீங்காது நிற்குமாறுபோல், சிவபெருமானும் தமது சிற்சத்தியால் ஆன்மாவினது ஆணவாதி மலங்களை யெல்லாம் போக்கி மீண்டும் அவை அவ்வான்மாவினது ஞானசத்தியை ஆவரியாதபடி அச்சத்தி வியக்தி ரூபமாய் அவ்வான்ம சிற்சத்தியிற் கலந்து நின்று அத்துவிதமாகச் சேர்த்துக் கொள்ளுவர் [ஆவரித்தல் – மறைத்தல்]

189.   வினா. -     சீவன் முத்தர்கள் பரமுத்தியடையுமளவும் எவ்வாறு பிரார்த்த கன்மத்தை அநுபவித்தல் வேண்டும்?

      விடை. -    சீவன்முத்தன் தனது சரீரம் வெந்தவஸ்திரம் போலத் தோற்ற மாத்திரமா யிருந்துகொண்டு இதற்கு முன்னர் பெத்தாவஸ்தையிலே இந்திரிய முகமாய்ப் புசித்த பழக்கமாற, கந்தமுதலிய திரவியங்களை ஆசாராதி அறுவகை இலிங்கங்களுக்கும் அர்ப்பித்துப் பிரசாத போகமாய்ப் புசித்தல் வேண்டும்.

190.   வினா. -     அப்படியாயின் அர்ப்பிக்கும் முறைமையையும் அதற்குரிய காமாதிகளையும் விளங்க அடியேனுக்கு உணர்த்தியருளல் வேண்டும்:

      விடை. -    அன்பனே! இவற்றை யெல்லாம் நின்னைப்போன்ற பரிபக்குவர்களுக் குணர்ததாது வேறு யாவர்க்குணர்த்துவோம். நன்கு கேட்பாயாக. பிருதிவியாகிய அங்கத்தினிடமாக, சுசித்தமாகிய அஸ்தத்தால், கிரியாசத்தியிற்றோற்றிய கன்மசாதாக்கிய வடிவமாய், நாசியில் எழுந்தருளி யிருக்கும் ஆசாரலிங்கத்திற்கு, நிவிர்த்திகலையிற் றோற்றிய கந்தவிடயத்தை, சத்தியோசாத முகமாகச் சற்பத்தியால் அர்ப்பித்துப் பிரசாதமாக்க் கொள்ளுமவனே பத்தன்.

      அப்புவாகிய அங்கத்தினிடமாக, சுபுத்தியாகிய அஸ்தத்தால், ஞானசத்தியிற் றோற்றிய கர்த்துரு சாதாக்கிய வடிவாய், சிங்ஙுவையில் எழுந்தருளியிருக்கும் குரு லிங்கத்திற்கு, பிரதிஷ்டா கலையிற்றோற்றிய இரத விடயத்தை, வாமதேவ முகமாக நைஷ்டாபத்தியால் அர்ப்பித்துப் பிரசாதமாகக்கொள்ளுமவனே மயேசுரன்.

      தேயுவாகிய அங்கத்தினிடமாக, நிராங்கார அஸ்தத்தால், இச்சா சத்தியிற் றோற்றிய மூர்த்திசாதாக்கிய வடிவமாய், நேத்திரத்தில் எழுந்தருளி யிருக்கும் சிவலிங்கத்திற்கும், வித்தியாகலையிற் றோற்றிய உருவ விடயத்தை, அகோர முகமாக அவதான் பத்தியால் அர்ப்பித்துப் பிரசாதமாகக் கொள்ளுவனே பிரசாதி.

      வாயுவாகிய அங்கத்தி னிடமாக, சுமனமாகிய அஸ்தத்தால், ஆதிசத்தியிற் றோற்றிய அமூர்த்திசாதாக்கிய வடிவமாய், தொக்கில் எழுந்தருளி யிருக்கும் சரலிங்கத்திற்கு, சாந்திகலையிற்றோற்றிய பரிசவிடயத்தை, தற்புருடமுகமாக அநுபவபத்தியால் அர்ப்பித்துப் பிரசாதமாகக் கொள்ளுமவனே பிராணலிங்கி.

      ஆகாயமாகிய அங்கத்தினிடமாக, சுஞ்ஞானமாகிய அஸ்தத்தால், பராசத்தியிற்றோற்றிய சிவசாதாக்கிய வடிவமாய், சுரோத்திரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரசாதலிங்கத்திற்கு, சாந்தியாதீத கலையிற் றோற்றிய சத்தவிடயத்தை, ஈசானமுகமாக ஆனந்தபத்தியால் அர்ப்பித்துப் பிரசாதமாகக் கொள்ளுமவனே சரணன்.

      சீவனாகிய அங்கத்தினிடமாக, சற்பாவமாகிய அஸ்தத்தால், சிற்சத்தியிற் றோற்றிய மகாசாதாக்கிய வடிவமாய், இருதயத்தில் எழுந்தருளியிருக்கும் மகாலிங்கத்திற்கு, சாந்தியாதீ தோத்தர கலையிற் றோற்றிய பரிணாமமென்னும் விடயத்தை, பாவனாமுகமாகச் சமரசபத்தியால் அர்ப்பித்துப் பிரசாதமாகக் கொள்ளுமவனே ஐக்யன்.

      இங்ஙனம் கூறிய ஆசாராதி அறுவகை இலிங்கங்களும் முறையே, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினை என்னும் ஆறாதாரங்களையும் பற்றி நிற்கும் எனவும்; பத்தன் முதல் ஐக்யன் ஈறாகிய அறுவரும் முறையே, பிரமன், விஷ்ணு உருத்திரன் மகேசுரன் சதாசிவன் உமாபதி எனப் பரியாய நாமம் பெறுவர் எனவும் கூறுவதும் உண்டு.

191.   வினா. -     சிவபெருமான் மேற்கூறிய விடயப்பிரயோசனங்களை ஒரு தன்மைத்தாக நின்று அங்கீகரியாமற் பலதிறப் படுவானேன்?

      விடை. -    ஒவ்வொரு பதார்த்தங்களும் ரூபம் உருசி திருப்தி என மூவகைப்படுதலால் சிவபெருமான் தூலதேகத்தில் இஷ்டலிங்கமாய் நின்று ரூபத்தையும், சூக்குமதேகத்தில் பிராணலிங்கமாய் நின்று உருசியையும், காரணதேகத்தில் பாவலிங்கமாய் நின்று திருப்தியையும் அங்கீகரித்தருளுவர். இவ்வாறு அங்கீகரிக்குங்கால் இஷ்டலிங்கமே ஆசாரலிங்கம் குருலிங்கமெனவும், பிராணலிங்கமே சிவலிங்கம் சங்கமலிங்கமெனவும், பாவலிங்கமே பிரசாதலிங்கம் மஹாலிங்கமெனவும் பிரிவுபட்டு நவலிங்கங்களாம்.

192.   வினா. -     இலிங்கம் ஒன்பது வகைப்படுமேல், ஆன்மாவாகிய அங்கமும் அதற்கியைய ஒன்பது வகைப்படுமோ?

      விடை. -    இஷ்ட பிராண பாவலிங்கமாய் நிற்குங்கால் முறையே, தியாகாங்கம் போகாங்கம் யோகாங்கம் எனத் தூல சூக்கும காரணமாய மூவகைப்பட்டும், அம் மூவிலிங்கமும் அறுவகைப் படும்பொழுது தியாகாங்கமே பத்தாங்கம் மகேஸ்வராங்கம் எனவும், போகாங்கமே பிரசாதாங்கம் பிராண லிங்காங்கம் எனவும், யோகாங்கமெ சரணாங்கம் ஐக்கியாங்கம் எனவும் அறுவகைப்பட்டும்; அங்கமும் ஒன்பது வகையாம்.

193.   வினா. -     இத்தன்மைய சீவன்முத்தர் அநுபவம் எத்தன்மையது?

      விடை. -    அவர்கள் யாதொன்றினைச் செய்யுமிடத்தும் அதன் வசப்படாமல் அதிற்றோயாமல் தமது நிலைதவறாமல் அயராமல், (எழுக்கம்பிமேல் ஏறிச்சென்று கால்கட்டி யாடுகின்றவன் பிறரறிய எத்தனை விநோதம் செய்யினும் அவன் நினைவு அக்காலின் கண்ணே நிற்குமாறு போல) அவர்களறிவு அச்சிவத்தை விட்டுப் பிரியாத வகையால் அவர்கள் ஒன்றை நினைப்பினும் அது நினைவன்று – நினையாநினைவு. தூங்கினும் அது துக்கமன்று – தூங்காத்தூக்கம். துணியினும் அது துணிவன்று – துணியாத்துணிவு. அறியினும் அது அறிவன்று – அறியாவறிவு என்று அவர்கள் நடையைச் சிவாகமங்கள் விசேடித்துச் சொல்லும்.

194.   வினா. -     ஆசாரலிங்கம் எப்பொழுது தரிப்பது?

      விடை. -    தேகமுதலிய அநித்தியப் பொருள்களை மெய்யெனக் கருதும் மனப்பிராந்தி முதலியவற்றையும் கொலை களவுகள் காமம் பரநிந்தை முதலிய பாதகங்களையும் முற்றும் விடுத்து அவைகட்கு மிகப்பயந்தவனாகி வந்தடைந்த மாணாக்கனுக்கு, எப்போதும் ஞானப் பிரகாசத்தைத் தரும் விபூதி உருத்திராக்ஷ பஞ்சாக்ஷரங்களும் குரு லிங்க சங்கமங்களும் கிருபா சொரூபமாகிய பாதோதகமும் பிரசாதமும் ஆகிய அஷ்டாபரணங்களையும் சதாசார முதலிய ஆசாரங்களையும் விட்டு நீங்காமல் அறிவுபற்றி நிற்கும்படி சற்பத்தியானது விளக்கி நிற்க, அதனால் விளங்கி நிற்கும் அறிவின்கண்ணே சுசித்த வஸத்தில் தரிப்பது.

195.   வினா. -     குருலிங்கம் எப்பொழுது தரிப்பது?

      விடை. -    ஒருவன் சதாசார முதலியவற்றின் நிலைதவறின் விடத்தும், அக்குற்றத்தைக் கிருபையினாலே போக்கும் சதாசார முதலியவற்றின் சொரூபமாகிய குரு லிங்க சங்கமத்தை வேறொருவன் நிந்தித்த வார்த்தையினைக் காதினாலே கேட்டவிடத்தும், அத் தோஷந் தீரத் தன்னுடைய சரீரத்தைவிட்டு அதைத் தீர்த்துக் கொள்வதாகிய நிலைபெற்ற வைராக்கிய பத்தியை, முன் பெத்தாவஸ்தையில் தன் பிதா மாதாக்கள் முதலிய பெயர்களை ஒருவன் நிந்தித்த விடத்துத் தனக்கெப்படி அபிமானம் உண்டாகியதோ அப்படி அபிமானிக்கப் பண்ணும் நைஷ்டா பத்தி அதிஷ்டானமான சுபுத்தி யஸ்தத்தில் தரிப்பது.

196.   வினா. -     சிவலிங்கம் எப்பொழுது தரிப்பது?

      விடை. -    பெத்த காலத்துத் தன் தேகத்துள்ள இந்திரிய அந்தக்கரண முதலியவற்றின் வியாபாரங்கள் அபேதமாய் நடக்குமாங் போல, தன் சரீரமெல்லாம் இலிங்க வியாபகமாய் அப்படியே சகசமாகச் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீத முதலிய அவஸ்தைகள் ஒன்றும் இந்திரிய வியாபாரங்கள் வந்து தாக்காமல் சற்றும் சந்தேகமில்லாமல் நிற்கப்பண்ணும் அவதானபத்தியினால், வீரசைவாசார நிலைமைபற்றிய அறிவிலே நிராங்கார அஸ்தத்தில் தரிப்பது.

197.   வினா. -     சங்கமலிங்கம் எப்பொழுது தரிப்பது?

      விடை. -    தனக்கு முற்கூறிய இலிங்கமே உருவமாய்ச் சிற்சத்தியே தானாய் நின்று விளங்கும் விளக்கம் வழுவாது தற்போதம் சுட்டாது நிற்கப் பண்ணும் அநுபவபத்தி யதிஷ்டானமாகிய சுமனமென்னும் அஸ்தத்தில் தரிப்பது.

198.   வினா. -     பிரசாதலிங்கம் எப்பொழுது தரிப்பது?

      விடை. -    இலிங்கத்தை உயிராகவும் அறிவை உடலாகவும் உடையதாய் நிகழும் அநுபவத்தை விளக்குகின்ற ஆனந்தபத்தி, யதிஷ்டானமாகிய சுஞ்ஞானமென்னும் அஸ்தத்தில் தரிப்பது.

199.   வினா. -     மகாலிங்கம் எப்பொழுது தரிப்பது?

      விடை. -    சச்சிதானந்த நித்திய பரிபூரண சிவத்துக்கும் சீவனுக்கும் அநுபவத்தில் சிறிது பேதங்கண்டு அப்பேதந் தோன்றாமல் அவ்விரண்டையும் ஒன்றாகச் சமரசப்படுத்தும் சமரசபத்தியினால், சகல பற்றுக்களையும் அகற்றிச் சிவாநுபவத்தை விளைவித்து ஆன்மபோத வியாபாரத்தை அறச்செய்து கொண்டிருக்கும் சற்பாவ அஸ்தத்திலே தரிப்பது.

200.   வினா. -     இச் சடுத்தல் லிங்க விரதத்திற்கு மேற்பட்டது உண்டோ?

      விடை. -    இல்லை ஏனெனில் – உள்ளும் புறம்பும் நீக்க மற்றுச் சர்வ வியாபியா யிருக்கும் சுத்த சிவமே சடுத்தல்லிங்க மாகையால் அவ்விலிங்கத்தைக் கலந்து வராநின்ற விடயங்க ளெல்லாம் அவ்விலிங்கார்ப்பிதமாக்கி அவ்விலிங்கப் பிரசாதாமாய்ப் புசிப்பதே ஞானவிரதம். அதுவே மேலாகிய அநுபவம். அதுவே மகத்தாகிய சீலம். இம் மகத்தாகிய அநுபவமின்றித் தனக்கன்னியமாகிய சடபதார்த்தங்களுக்குச் சீலம் உண்டென்பது கூடாது. இவ்வாறிருக்க அச் சடபதார்த்தங்களுக்கு ஆசாரம் கற்பித்துச் சங்கற்ப விகற்பத்துடன் கூடிக்கொண்டிருக்கும் புத்தியை யுடையவர்கட்கு, ஒருகாலும் சிவஞானம் பிரகாசியாது. ஆகலின், அவற்றை விடுத்து யாம் கூறிய வீரசைவ நெறியில் நின்று சிவஞானம் உதிக்கப் பெற்றுச் சிவசாயுச்சியம் பெறக்கடவாய்.

      அது கேட்ட சீடன் – அஞ்ஞான ஐய விபரீதங்களை யகற்றி எனது உள்ளத்தைத் தெளிவித்தருளிய ஐயனே! எனது உடல் பொருள் ஆவி மூன்றும் முன்போ லன்றித் தேவரீருடைய பொருள்களாய் விட்டமையால், யான் செய்யும் கைம்மாறாக யாது உளது? இன்னும் அடியேன் உய்யுமாறு தீக்ஷை புரிந்து ஆட்கொண்டருள வேண்டுமென வேண்டிக் கொள்ளலும், ஆசிரியர் கருணை கூர்ந்து அப்படியே அநுக்கிரகிப்போம் நமது அருகே இருக்கக்கடவாய் என்று கட்டளையிட்டுத் தீக்ஷைபுரிந்து அடிமை கொண்டருளினார்.

திருச்சிற்றமபலம்.

வீரசைவ வினா விடை முற்றிற்று.

சிவப்பிரகாசதேசிகர் திருவடி வாழ்க.

 

Related Content

Eclectic Vedantism By The Rev. Thomas Foulkes

The Virasaiva Religion

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

கைத்தலமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

நிரஞ்சனமாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்