logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருப்பனந்தாள் தாடகையீச்சரம்

திருச்சிற்றம்பலம்

சைவமாமணி வித்துவான் பொன். முருகையன்

திருப்பனந்தாள்

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]


      இத்தலம் சோழ நாட்டில் காவிரி ஆற்றின் வடபால் உள்ள தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற பெருமையினையுடையது. திருக்கயிலாய பரம்பரை திருத்தருமபுர ஆதினத்தின் பரிபாலனத்துக்குட்பட்ட இருபத்தேழு தேவஸ்தானங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.

      அமைவிடம்: - திருப்பனந்தாள் என்னும் பெயர் பெற்ற இவ்வூர், கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் பெரு வழியில் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 12 கல் தொலைவில் அமைந்துள்ளது. மாயூரத்திலிருந்து குத்தாலம், ஆடுதுறை வழியாகப் பேருந்து மூலம் இவ்வூரையடையலாம்.

      ஊர்ச்சிறப்பு: - “தண்பொழில் சூழ் பனந்தாள்” என்ற ஞானசம்பந்தர் திருவாக்கிற்கேற்ப நாற்புறங்களிலும் சோலைகள் சூழப் பெற்றது. காவிரியின் கிளை நதியாகிய மண்ணியாறு பாய்வதால் சிறந்த வளம் பெற்று விளங்குகிறது. இவ்வூரைச் சுற்றிலும் பனை மரங்கள் நிறைந்து உள்ளதால் இவ்வூருக்குத் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. திரு+பனை+தாள்= (அழகிய பனை மரத்தின் அடிப்பகுதி.) இவ்வூரில் பனைமரத்தின் கீழே சிவபெருமான் எழுந்தருளியதால் இப்பெயர் பெற்றது. வடமொழியில் தாலவனம் என்று சிறப்பிக்கப்படுகிறது. (தாலம் – பமை, வனம் – காடு) இத்தலம் ஏற்பட்ட காலத்தில் இவ்வூர் பனை மரங்கள் நிறைந்த காடாக இருந்தமை புலப்படுகிறது. இத்தலத்திற்குப் பனசை, பனந்தாள் என்ற பெயர்களும் வழங்கி வருகின்றன.

      ஊர்அமைப்பு: -     திருக்கோயில் ஊரின் நடுவில் அமைந்துள்ளது, தாடகை என்பவளால் வழிபாடு செய்யப்பட்ட தலம் ஆகையால் இக்கோயிலுக்கு ‘தாடகையீச்சரம்’ என்ற பெயர் வழங்கி வருகிறது. திருக்கோயிலைச் சுற்றி திருச்சுற்றுகளையடுத்து நான்கு புறங்களிலும் மடவிளாகங்கள் அமைந்துள்ளன. அவைகைளையடுத்து தேரோடும் பெரு வீதிகள் நான்கும் அமைந்துள்ளன. நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. மேலவீதி ‘இராசகம்பீரன் திருவீதி’ எனக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

      கோவில்அமைப்பு: -       ஊரின் நடுவில் அமைந்துள்ள இக்கோயிலின் பரப்பு ‘இருமா அரைக்காணி முந்திரிகைக் கீழ் நாலுமா நிலம்’ எனக் கல்வெட்டு கூறுகின்றது. மேற்கு நோக்கிய மிகப் பொலிவுடனும், சித்திர வேலைப்பாட்டுடனும், 7 அடுக்குகளுடனும் வானுற ஓங்கி நிற்கிறது. இராசகோபுரத்தையடுத்துள்ள பதினாறு கால் மண்டபமும், வடபால் உள்ள வாகனமண்டபமும் இரண்டாவது கோபுரத்தையடுத்துள்ள வெளவால் நெற்றி மண்டபமும் சிற்ப ஓவிய மேம்பாடு உடையனவாய்த் திகழ்கின்றன. கோவிலில் மேற்பால் ஒரு கோபுரமும் உண்டு. சுவாமி சந்நிதியைச் சுற்றி உள் பிராகாரங்களும், அதனை அடுத்து வெளிப் பிராகாரங்களும் செம்மையுற அமைக்கப் பெற்றுப் பொலிவுடன் விளங்குகின்றன.

      இறைவன் திருப்பெயர்: -  இறைவனின் பெயர் ஶ்ரீ அருணஜடேச்வரர். செஞ்சடையப்பர் என்றும் வழங்குவர்.

      இறைவி திருப்பெயர்: -    இறைவியின் பெயர் பிரகந்நாயகி, பெரியநாயகி என்றும் வழங்குவர்.

      தல வரலாறு: -    தாடகை மகப்பேறு விரும்பித் தவம் இயற்றுங்கால் பிரமதேவன் தோன்றி, ‘நீ தாலவனம் சென்று பூசித்து வழிபட்டால் விரும்பிய பேற்றைப் பெறுவாய்’ எனப் பணித்தனன். தாடகையும் அவ்வாறே இத்தலத்திற்கு வந்து நியமம் தவறாது விதிப்படி, இறைவனைப் பூசித்து வந்தாள். ஒரு நாள் பூஜை முடிவில் மாலையைச் சாத்த எழுந்த காலத்து அவள் அன்பை வெளிப்படுத்த இறைவன் அவளுடைய ஆடையை நெகிழச் செய்தனன். தாடகையும் ஆடையை இரு முழங்கைகளாலும் இடுக்கிக் கொண்டு அண்ணலே! யாது செய்வேன்; எவ்வாறாயினும் இம்மாலையை ஏற்று அடியேனை ஆதரித்தருள வேண்டும்’ என்று பிரார்த்தித்தாள். இறைவனும் தனது திருமுடி சாய்த்து மாலையினை ஏற்றுக் கொண்டனன். உடனே அவளுக்குப் பதினாறு கரங்கள் தோன்றின. அவளும் பெருமானது கருணையை வியந்து தோத்திரிக்கப் பெருமானும் இடபாரூடராய்க் காட்சி தந்தனன். அப்போது அவள் பணிந்து வணங்கி, ‘அடியேனுக்கு மகப்பேறு அளிப்பதோடு அடியேனுக்குத் தேவரீர் அருள் பாலித்ததை யாவரும் நினைவு கூர்தற்காக இத்தலத்துக்கு அடியேன் பெயர் வழங்கி வர வேண்டும்? என விண்ணப்பித்தனள், பரமனும் ‘அவ்வாறே ஆகுக’ எனப் பணித்து மறைந்தனன். தாடகையும் ஆலய்த்திற்கு வடபால் ஓர் தீர்த்தமைத்துத் தென் கரையிலே வீரியம்மனையும், கீழ்க்கரையில் வைரவரையும் காவலாகப் பிரதிட்டித்து வணங்கி மகப்பேற்றையும் அடைந்தாள்.

      இத்தலத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட சோழ அரசனாகிய வீரசேனனென்பவன், இத்தலத்திறைவன் தாடகையின் அன்புக்காகத் திருமுடி சாய்ந்திருப்பதைக் கேள்வியுற்று இறைவன் திருமுடியை நிமிர்த்தி வழிபட எண்ணினான். யானை குதிரை முதலியவைகளைக் கட்டி இழுப்பித்தான், முயற்சி பயனளிக்கவில்லை கவலைக்கடலில் ஆழ்ந்தான். இச்செய்தி திருக்கடவூர் குங்குலியக்கலய நாயனாருக்கு எட்டியது. அவரும் இத்தலத்திற்கு வந்தார்.

      தாமும் அத்திருப்பணியில் ஈடுபட விரும்பினார். யானைகளை அவிழ்க்கச் செய்து தம் கழுத்தில் அரிகண்டமும் இறைவர் கழுத்தில் மெல்லிய கயிறும் பூட்டி இழுத்தார். அரிகண்டம் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. உடனே பெருமான் தமது திருக்கரத்தைத் தோற்றி சிரசின் மீது வைத்தருள, அறுபட்ட சிரசும் பொருந்தியது. இறைவன் திருமுடியும் நிமிர்ந்தது. அது கண்ட அரசன் அன்புக் கயிற்றால் நாயனார் இழுத்து நிமிர்த்ததைக் கண்டான். வணங்கினான்.

      தன்னுடைய முயற்சிக்குத்தலை நிமிராது, குங்குலியக்கலயனார் அன்புக்குத் தலை நிமிர்ந்த இறைவனின் செயல் கண்ட சோழ மன்னன் மனம் வருத்தமடைந்தாகவும், அதனால் செஞ்சடையப்பரை வழிபடுதலைத் தவிர்த்து, திருப்பனந்தாளின் மேற்கே ஒரு இடத்தில் இதே போன்ற ஒரு பெருஞ் சிவாலயத்தை எழுப்பி வழிபட்டதாகவும் ஒரு செவிவழிக் கதை வழங்கி வருகிறது. பிறகாலத்தில் ஏற்பட்ட மண்மாரியால் அச்சிவாலயம் அழிந்ததாகவும் கூறப்படுகிறது. (இந்தக் கதைக்கு சேக்கிழார் பெரிய புராணத்தில் ஆதரவு இல்லை.)

      தலப்பெருமை: -    இத்தலம் உமையம்மையார் சிவ பூசையியற்றி ஞானோபதேசம் பெற்ற சிறப்புடையது. தாழை மலரைச் சான்று காட்டி சிவபெருமானின் திருமுடியைக் கண்டதாகப் பொய் கூறிய பிரமனுக்கு அதனாலேற்பட்ட பாதகத்தைப் போக்கியது. இந்திரனுக்கு விருத்திராசுரனைக் கொன்ற பாதகமும், கெளதமர் மனைவியைக் களவாற் சேர்ந்த தோஷமும் போக்கிய அருள் பாலித்தது. பிருந்தையைப்  புணர்ந்த திருமாலுக்கு அருள் செய்து. தக்கனுடன் கூடிச் சிவத்துரோகத்தில் ஈடுபட்ட சூரியனுக்கு அத்துரோகத்தால் உண்டான பாவத்தைத் தீர்த்தது.

      குருபத்தினியைக் கூடின சந்திரனுக்கு மாபாதகத்தை நீக்கியது. அகத்தியரால் பூசித்து வழிபடப் பெற்றது. ஆதிசேடனால் பூசிக்கப் பெற்றது. தாடகை சிவ பூசையின் போது அணிவித்த மாலையை ஏற்றுக் கொள்ளத் திருமுடிசாய்த்தருளிய இறைவனைக் குங்குலியக்கலய நாயனார் அன்புக் கயிற்றால் இழுத்து நிமிர்த்தி வழிபட்டது. வாசுகியின் மகளாகிய சுமதி என்னும் நாக கன்னிகையால் பூசிக்கப் பெற்றது. மேற்கூறிய ஒவ்வொருவரும் தத்தம் பெயரால் தீர்த்தங்கள் அமைத்து சிவலிங்கப் பிரதிட்டையும் செய்துள்ள பெருமை மிக்கது. அவ்வத் தீர்த்தங்களில் அன்போடு மூழ்கியவர்களின் பவப்பிணி மாய்த்துப் பெரும் பேறடையச் செய்வது இத்தலம்.

      வழிபட்டோர்கள்: - பிரமன், திருமால், இந்திரன், ஐராவதம் அகத்தியர், சந்திரன், சூரியன், ஆதிசேடன், நாககன்னிகை, தர்மசேனன், எக்ஞகுப்தன், தாடகை குங்குலியக்கலய நாயனார், சங்குகன்னன், நாகுன்னன் முதலியோர் பலரும் வழிபட்டுப் பேறு பெற்றார்கள்.

      அம்மையார் ஞானோபதேசம் பெற்றது: - முன்னொரு கற்பத்தில் அம்மையார் இறைவனை வணங்கி ஞானோபதேசம் புரிந்தருளல் வேண்டும்’ எனப் பிரார்த்திக்க, இறைவன் ‘நீ தாலவனம் சென்று எம்மை பூசித்தால் அருள் செய்வோம்’ என்று உரைத்தனர். அம்மையாரும் இறைவன் ஆணைப்படி இத்தலத்து வந்து எதிர்முகமாக வடபுறத்தமர்ந்து தவஞ் செய்தார். இறைவன் காட்சியளித்து அம்மையாருக்கு ஞானத்தை உபதேசித்து அருள் செய்தனர். இவ்வுண்மையினையே இறைவர் மேற்குமுகமாக எழுந்தருளியிருப்பதும் இறைவி கிழக்கு முகமாக எழுந்தருளி இருப்பதும் வலியுறுத்தும், அம்மையார் உபதேசம் பெறுமுன் பாலாம்பிகை எனவும், உபதேசம் பெற்றபின் பிரகந்நாயகி எனவும் பெயர் வழங்கப் பெறுகின்றார்.

      ஐராவதம்: - அசுரர்களின் அல்லலுக்கு ஆற்றாராகிய அமரர்கள் ஓடிவந்து இந்திரனிடம் முறையிட்டார்கள். செவியேற்ற இந்திரன் ‘போர் புரிதற்கு ஐராவதத்தைக் கொண்டு வருக’ எனக்கூறினான். ஐராவதம் போகத்தை விரும்பி மண்ணுகைத்துள்ள மந்தரமலையை அடைந்திருக்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், தனது சமயத்துக்கு உதவாத காரணத்தால் ‘தெய்வ வலிமையையிழந்து மண்ணுலகத்தில் காட்டானையாகத் திரிந்தது. தன் எதிர்பட்ட நாரதரை வணங்கி, அவராணைப்படியே இத்தலத்திற்கு வந்தது. தாலவனநாதரை வணங்கித் தன் சாபத்தைப் போக்கிக் கொண்டது. தன் பெயரினால் மேற்பால் ஓர் தடாகமும் சிவலிங்கப் பிரதிட்டையும் செய்து பூசித்துத் தன்னுலகடைந்தது (ஐராவது ஆனை தங்கி இறைவனை வணங்கிய இடம் “ஆனைகோயில்” என்று தற்போது வழங்கப் படுகிறது. இது செஞ்சரையப்பர் கோயிலுக்கு மேற்கே மண்ணியாற்றின் கரையில் உள்ளது.)

      குங்கிலியக்கலயனார்: - கலயனார் இவ்வூரில் தங்கியிருந்த காலத்தில் அவரது மகன் இறந்தான். தன் மகன் இறந்த செய்தி தெரிந்து வீடு சென்று இதுவும் திருவருட்செயல் போலும் என எண்ணி மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன் முடிக்கச் சென்றார். வழியில் உள்ள விநாயகர் அசரீரியாக அருளியபடி நாயனார் அவ்வுடலைக் கொண்டு வந்து நாக கன்னிகை தீர்த்தத்தில் நனைக்க, மகனும் உயிர் பெற்று எழுந்தான். (பெரியபுராணத்தில் இதற்கு ஆதரவு இல்லை) இவ்விநாயகர் இன்றும் பிணமீட்ட விநாயகர்’ என்ற திருநாமத்துடன் திரு வீதியின் வாயுமூலையில் எழுந்தருளியுள்ளார்.

      நாகன்னிகை: - நாகலோகத்தில் வாசுகி தன் மகன் சுமதிக்கு மணஞ் செய்விக்கக் கருதிய காலை ‘சுமதி அதைப் பற்றிய முயற்சி தங்கட்கு வேண்டாம்’ எனக் கூறி கன்னி மாடத்தமர்ந்திருந்தாள். இறைவன் அவளது கனவில் தோன்றி ‘நீ தாலவனமடைந்து பூசிப்பாய்’ என அருள் செய்தனன். சுமதியும் அவ்வாறே பிலத்தின் வழியாக வந்து அம்மையார் சந்நிதானத்திலுள்ள கூபத்தில் தோன்றி இறைவனை வழிபட்டு வந்தாள். தலயாத்திரை செய்து வரும் அரித்துவசன் என்னும் அரசனும் இத்தலத்தையடைந்தான். சுமதி அவனைக் கண்டு விருப்பமுற்று, நாகலோகத்திற்கு அழைத்துச் சென்று மணமுஞ் செய்து கொண்டாள். சில நாள் அங்கிருந்து மீண்டும் பிலத்தின் வழியாக வந்து அம்மையருக்கு மேல்புறம் ஓர் தடாகமைத்து நாடோறும் வழிபாடியற்றி வந்தாள். அரித்துவசனும் ஆலயத்திற்குத் தென்பால் ஓர் தடாகமும் இலிங்கமும் அமைத்தான். இவ்வாறு இருவரும் பூசித்துப் பல திருப்பணிகளும் செய்து முத்தியின்பம் பெற்றார்கள்.

      சங்குகன்னன்: -    இவன் வேடுவர் தலைவன். நாரதர் ஆணைப்படி இத்தலத்து வந்து, தீர்த்தங்களில் நீராடி, தாலவன நாதரைப் பூசித்து விரும்பியபடி மகப்பேற்றை அடைந்தாள்.

      நாகுன்னன்: -       இவன்  அந்தணர் குலத்தில் உதித்தவன் பிதிர்க்கடனுக்காக வைத்திருந்த பொருள்களை அபகரித்ததால் நரகத்துன்பமடைந்து இறுதியில் வேடுவனாகப் பிறந்தான். வழிப் போவார் பொருள்களைக் கவர்ந்து உயிர் வாழ்ந்து வந்தான். ஒரு நாள்  தலயாத்திரை செய்து வரும் முனிவர்களுடைய பொருள்களை அபகரிக்க எண்ணி அவர்களைப் பின்றொடர்ந்து வந்தான். இத்தலத்தெல்லைக்கு வந்ததும் தனது நல்வினைப் பயனாலே, வந்தகாரியத்தை மறந்து மூன்று நாட்கள் தாலவன நாதரைப் பூசித்துத் திருவாதிரைத் திருநாளன்று சிவலோகம் சார்ந்தான்.

      தீர்த்தங்கள்: -       பிரமதீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விட்டுணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூபதீர்த்தம், மண்ணியாறு முதலாகிய பல தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

நாககன்னிகை தீர்த்தம்: - இது சுவாமி சந்நிதியில் மேலை இராஜ கோபுரத்தின் வடபால் கோயிலுக்குள் அமைந்துள்ளது. நாக கன்னிகையால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் மூழ்கினோர் சகலபிணிகளும் நீங்கப் பெறுவர்.

மண்ணியாறு: -    அம்மையார் விருப்பத்தின்படி, முருகப்பெருமானால் அழைக்கப்பட்டது. இறைவனது சந்நிதானத்தின் இரண்டு பர்லாங் தொலைவில் வடக்கு நோக்கி ஓடிகின்றது. வடக்கு நோக்கி ஓடுவதால் உத்தரவாகினி என்ற சிறப்போடு போற்றப்படுகிறது.

தலவிருட்சம்: -    இது இரண்டாவது பிராகாரத்தில் அம்மையார் ஆலயத்தின் எதிரிலுள்ளது. இரண்டு மரங்கள் இருக்கின்றன. இவை தலம் தோன்றிய காலம் முதல் இன்றளவும் செழுமையாகவுள்ளன. இதன் பக்கல்பெருமான் தாடகையினது அன்புக்கு இரங்கி திருமுடி சாய்த்து அருள் பாலித்த (அவசரம்) மூர்த்தம் இருக்கிறது.

சுற்றுக் கோயில்கள்: -    ஆலயத்திற்குத் தென் மேற்கு மூலையில் ஊருடையப்பர் கோயில் இருக்கிறது. மேலும் ஐயனார், மாரியம்மன் முதலிய தெய்வங்களுக்கும் சிறு சிறு கோயில்கள் இருக்கின்றன. ஊருடையப்பர் ஆலயம் பிரமதேவன் வழிபட்டது. இது பிரமனால் அலங்கரிக்கப்பட்ட அலங்காரங்களை அகற்றி விட்டு சாப விமோசனத்தை விரும்பிய ஐராவதம் வழிபட்டு வந்து. அதனைக் கண்டு கலக்கமுற்றான் பிரமன், திருமாலைக் குறித்துத் தவம் இயற்றி அவன் அருளால் சிங்கமுகத்துடன் இம்மாடக கோயிலை அமைத்து வழிபட்டு வேண்டியன் பெற்றான். இந்த ஐதிகத்தில் இதன் மேற்கில் விஷ்ணு ஆலயம் ஒன்றும் அமைந்திருக்கிறது. ஊருடையப்பர் திருக்கோயில் தருமபுர ஆதினத்தாரால் நிர்வகிக்கப் படுகிறது.

நித்திய பூஜை: -    காரண, காமிக ஆகமப்படி ஆறுகால பூஜைகள் நாடோறும் நடைபெறுகின்றன.

விழாக்கள்: - சித்திரை மாதத்தில் பிரமோற்சவம் நடைபெறுகிறது. கந்த ஷஷ்டி, ஆடிப்பூரம், நவராத்திரி முதலிய விழாக்களும் நடத்தப் பெறுகின்றன.

கோயில் பராமரிப்பு: -    இக்கோயிலுக்கு நன்செய், புன் செய்யாக சுமார் ஆயிரம் ஏக்கர் நிலமும் இருக்கிறது. கால நிலைக்கேற்பவும், வருமானத்திற்கேற்பவும் அவ்வப்போது சில திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. திருவிழா காலங்களில் இறைவன் எழுந்தருளுபடிக்காக செய்யப்பட்ட வாகனங்கள் தனிச் சிறப்புடையன. இக்கோயிலிலுள்ள வெள்ளி இடபவாகனங்கள் இரண்டும், மரத்தால் செய்த யானை வாகனமும் தனிச் சிறப்பு வாய்ந்தன. இதுவன்றி கண்ணாடி பதித்த மயில் வாகனம் காண்போர் கண்ணைக் கவரும் தன்மையினை உடையது. இக்கோயிலுக்கு உரிமையாக உள்ள இரண்டு தேர்களும் ஶ்ரீ காசி மடத்தினரால் உபயமாக அளிக்கப்பட்டவையாகும்.

கல்வெட்டுக்கள்: - இக்கோயிலின் மண்டபங்களிலும், சுவர்களிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவைகளெல்லாம் சென்னை அரசு தொல்பொருள் துறையினரால் படியெடுக்கப் பெற்றுள்ளன.

கல்வெட்டு வரலாறு: - இத்திருக்கோயிலைக் கட்டியவன்  திருப்பனந்தாள் நக்கன் தரணி என்பவனாவான். அவனே இதனைக் கருங்கல்லால் அமைத்தவனாவான். இதனைக் கோயில் கருப்ப இல்லின் அடிப்புறச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் அறியலாம். சோழ மன்னன் இரண்டாம் இராசராசன் இத்திருக்கோயிலை எடுப்பித்ததாகத் தெரிகிறது.

கல்வெடுக்களில் இறைவன் பெயர், திருத்தாடகையீச்சரத்து மஹாதேவர், திருத்தாடகேச்சரத்துப் பெருமான், திருத்தாடகேச்சுரமுடைய நாயனார் என வழங்கப்படுகிறது. முதற் குலோத்துங்கசோழன் காலத்துக் கல்வெட்டிலிருந்து இறைவியின் பெயர் பெரிய நாச்சியார் என்பது தெரிய வருகிறது. இறைவியின் கோயிலைக் கட்டியவன் வெண்கூருடையார் அன்பர்க்கரசு மருத மாணிக்கமான வில்லவராசன் என்ற செய்தி, இக்கோயில் மஹா மண்டபத்து வாசலில் தென்பாலுள்ள கல்வெட்டால் புலனாகிறது. இக்கோயிலின் உள்நுழை வாயிலின் இரு புறங்களிலும் உள்ள துவாரபாலகர்கள் சிற்ப வேலைப்பாடுடையன. அவற்றின் பின் பக்கம் சுவரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறு கூறும் சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இக்கோயிலில், குங்குலியக் கலயநாயனாருக்கென தனிக் கோயில் உண்டு. அதனை எடுப்பித்தவர் அவர் பால் ஈடுபாடு கொண்டு விளங்கிய திருப்பனந்தாள் குங்கிலியக் கலயர் என்பவராவர். இக்கோயில் இரண்டாவது கோபுரத்தை அடுத்து உள்புறமு தென்பால் மண்டபத்துடன் அமைந்துள்ளது.

சோழ மன்னர்களின் கோயில் பராமரிப்பு முறை: - சோழ மன்னர்களும் அவர்களது சேனைத்தலைவர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி எழுந்தருளி கோயிலைச் சுற்றிப் பார்த்தும், பண்டாரத்தைச் சோதித்தும் வந்த செய்தி கல்வெட்டுக்களால் புலனாகிறது.

கோயில் திருட்டு: - சோழமன்னர்கள் அதிராசேந்திர தேவன், குலோத்துங்க சோழன் ஆகியோர் காலத்தில் கோயில் நன்கு போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த செய்தி புலனாகிறது. அக்காலத்தில் இக்கோயிலில் இருந்த தேவகன்மிகள் கோயில் பண்டாரத்திலிருந்த திருவாபரணம், பரிகலச் சின்னம் முதலியவைகளைத் திருடிக் கொண்டதாகவும், அதனைச் கண்டு பிடித்த மன்னன் அவர்களுக்கு அபராதம் விதித்ததாகவும் தெரிகிறது. அவர்களால் அபராதம் கட்ட முடியாமையால், அவர்கள் தங்கள் கோயில் உரிமையை விற்று அபராதம் செலுத்தியதாகவும் கல்வெட்டால் அறியலாம். இதனை ‘ஸ்வஸ்திஶ்ரீ யாண்டு கச (14) நாள் முந்நூற்றி …. திருபுவனச் சக்கரவர்த்திகள் ஶ்ரீ குலோத்துங்க சோழர் திருப்பனந்தாள் உடையாரைக் கும்பிட்டு திருச்சுற்று மாளிகையில் எழுந்தருள, நீலாயி குங்கிலியக் கலயர்க்கு … சாத்தியருளும் திருவாபரணமும் பரிகலச்சின்னமும் அழித்துக் கொண்டு கடமை செய்தியென திருவாய் மொழிந்தருள அவர்களுக்குக் காசு கொடுக்க உபாயமில்லாமையால்’ எனத்தொடங்கும் கல்வெட்டால் அறியலாம்.

இவ்வூரில் பாயும் மண்ணியாற்றிற்கு ‘குஞ்சர மல்லன்’ எனவும், ஊருடையப்பர் கோயிலுக்கு ‘அசனீச்சரம்’ எனவும், குங்கிலியக் கலயனார் மனைவி பெயர் ‘நீலாயி’ எனவும் பெயர் வழங்கியமை கல்வெட்டுக்களால் புலனாகிறது.

பாடல் சிறப்பு: - இத்தலம் திருஞானசம்பந்தரால் வழிபட்டுப் பாடப் பெற்ற பெருமையினையுடையது. ஞானசம்பந்தர் பாடிய பதிகம் 3-ம் திருமுறையிலுள்ளது. இதுவன்றி திருநாவுக்கரசர் பாடிய தலத் தொகுப்புப்பாடல் ஒன்றிலும், பதினோராம் திருமுறையில் ஐயடிகள் காடவர் கோன் நாயனார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய இரண்டு பாடல்களிலும், குங்குலியக் கலயநாயனார் புராணத்திலும், திருப்புகழிலும், க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத் தமிழிலும் இத்தலம் பற்றியும் இறைவனைப் பற்றியும் பல செய்திகள் குறிப்பிடப் பெற்றுள்ளன. காலமேகப் புலவர் பாடிய பாடல் ஒன்றிலிருந்து அக்காலத்தில் ‘திருப்பனந்தாள் பட்டன்’ என்ற பெயரினையுடைய ஒருவன் தண்ணீரும் சோறும் தடையின்றி வழங்கிய செய்தி தெரிய வருகிறது. செஞ்சடை வேதிய தேசிகர் அவர்களால் தலபுராணமும் பாடப் பெற்றுள்ளது.

திருஞானசம்பந்தர் பதிகம் ‘கண்பொலி நெற்றியினான்’ என்று தொடங்குகிறது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் தாடகையீச்சரத்தின் சிறப்புபேசப்படுகிறது. இரண்டாவது பாடலில் வல்வினையும் பல் பிணியும் பாழ்பட விரும்பினால் இறைவனை ஏத்துமின் என ஞானசம்பந்தர் அருளுகிறார். ‘ஞானசம்பந்தன் நல்ல பண்ணியல் பாடல் வல்லார் அவர் தம் வினை பற்றறுமே’ எனப் பாடுவார் பெறும் பயனும் பேசப்படுகிறது. இப்பதிகத்தின் முதல் பாடல் வருமாறு: -

       கண்பொலி நெற்றியினால் திகழ் கையிலோர்வெண் மழுவான்

       பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்

       விண்பொலி மாமதி சேர் தரு செஞ்சடை வேதியனூர்

       தண்பொழில் சூழ்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே.

 

      (இத்திருப்பதிகம் 11 பாடல்கட்கும் விரிவான உரை நமது மூவர் தமிழ் மாலையில் மாலை -8ல் காணலாம்.)

      சிற்பஓவிய மேம்பாடு: - சிற்பங்கள் பல்லவர் கால வேலைப்பாடுடையன இராச கோபுரத்தின் மீது சுதை வேலைப்பாட்டுடன் கூடிய கந்தர்வர், கிம்புருடர் உருவங்கள் அமைந்துள்ளன. பதினாறுகால் மண்டபத்தில் தாடகையினால் சாத்தப்பட்ட மாலையினை ஏற்றுக் கொள்ள பெருமான் தலை குனிந்ததும் அதனை நிமிர்த்த அரசன் யானைகளைக் கட்டி இழுத்ததும், கலயனார் அரிகண்டம் போட்டு நிமிர்ந்ததும், அப்போது சிவலிங்கத்திடையே இறைவரது திருக்கரம் தோன்றியதும், நாயனார் வழிபட்டதும் ஆகிய உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

      சிங்க வாயிலினுள் நுழைந்ததும் வடபுற மதியில் திருக்குறிப்புத் தொண்டர் வரலாற்றினையொட்டிச் சில உருவங்கள் அமைந்திருக்கின்றன.

      சுப்ரமண்யர் உற்சவருக்குப்பின் தாடகை பெருமானை வழிபட்டுப் பதினாறு கைகள் பெற்ற ஐதீகம் செதுக்கப் பெற்றிருக்கிறது. கோயில் கட்டிய தரணி நக்கனார் சிற்பமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

      வெளவால் நெற்றி மண்டபத்தில் சுதையினால் பஞ்ச மூர்த்திகளும் வேலை செய்யப் பட்டிருக்கின்றன. அலங்கார மண்டபத்தின் முன் மேலே விதானத்தில் தாடகை வரலாறு ஒவியமாக வரையப்பட்டுள்ளது. அறுபத்து மூவர் வரிசையில் சிலைகளுக்குப் பின் அந்த அந்த நாயனாரின் உருவங்கள் எழுதப் பெற்றுள்ளன. 1942-ல் திருப்பனந்தாளில் வாழ்ந்த துளசி ராஜா என்பவர் இவ்வோயித்தை வரைந்தவர் ஆவர்.

      வெளவால் நெற்றி மண்டபத்தில் உள்ள பஞ்ச மூர்த்திகளின் உருவத்திற்கு (சுதை) எதிரே பஞ்ச பூதத்தலங்களின் படமும் அதனையடுத்து இறைவனின் தாண்டவங்களும் தத்ரூபமாக வரையப் பெற்றுள்ளன. அதன் விபரம்.

1.     சிதம்பரம்ஆனந்த தாண்டவம்கனகசபை

2.     மதுரை சந்தியா தாண்டவம்இரசிதசபை

3.     திருக்குற்றாலம்திரிபுர தாண்டவம்சித்ரசபை

4.     திருவாலங்காடு ஊர்த்துவ தாண்டவம் (காளி தாண்டவம்)– இரத்தினசபை

5.     திருநெல்வேலிகாளிகா தாண்டவம் (முனி தாண்டவம்) – தாமிரசபை

      நிர்வாகம்: - திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீன பரிபாலனத்திற்குட்பட்ட 27 தேவஸ்தானங்களுள் இதுவும் ஒன்றாகும். தருமையாதீனக் கோயில் இது என்று கண்டவுடனேயே புலனாகும் வண்ணம் அழகும் தூய்மையும்பெற்று விளங்குகிறது. ஆதீன கர்த்தர் ஶ்ரீலஶ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அவர்கள் அருளாட்சியில் இவ்வாலயம் சிறந்த நித்திய பூசைகளும் திருவழாக்களும், நடத்தப் பெற்று விளங்கி வருகிறது.

      திருப்பனந்தாள் ஶ்ரீகாசிமடம்: - இவ்வூரின் கீழவீதியில் பீடுற அமைந்து விளங்குவது ஶ்ரீகாசிமடம் என்ற அறநிலையமாகும். இது 15-ஆம் நூற்றாண்டில் விளங்கிய தவமுனிவர் ஶ்ரீ குமரகுருபர் அடிகளின் வழிவந்தவர்களால் அமைக்கப் பெற்றதாகும். தென்னாட்டில் அவதரித்து, சைவமும் தமிழும் வளர்த்து, தருமையில் குருவருள் பெற்று, ஶ்ரீ காசிக்குச் சென்று, கலைமகளருளால் இந்துஸ்தானி பேசும் ஆற்றலைப் பெற்று, முகமதிய நவாபின் நன்மதிப்பைப் பெற்று, கங்கைக் கரையில் அவன் கொடுத்த இடத்தில் கேதாரநாதர் கோயிலை நிறுவி, ஆங்கே ஒரு திருமடமும் நிறுவி, சைவ சித்தாந்தத்தைப் பரப்பிய ஶ்ரீ குமரகுருபரரின் பெயரால் காசியிலுள்ள திருமடத்திற்குகுமாரசாமி மடம்என்ற பெயர் விளங்கி வருகிறது. அன்னாரது பின் வந்த முனிவர்களுள் ஒருவராகிய தில்லைநாயக சுவாமிகளால் 18-ம் நூற்றாண்டில் கி.பி. 1720ல் திருப்பனந்தாள் ஶ்ரீகாசிமடம் அமைக்கப் பெற்றது. 1880ல் மடத்தின் தலைவராக இருந்த இராமலிங்கத் தம்பிரான் சுவாமிகள் அவர்களால் கருங்கல் திருப்பணி செய்யப்பெற்றது. வடக்கே கேதாரம் முதல் தெற்கே குமரி வரை இம்மடத்தின் பொருளுதவி கொண்டு அன்னதானம் நடைபெற்று வருகிறது. 19-ம் பட்டத்தில் விளங்கிய ஶ்ரீ சுவாமிநாத சுவாமிகள் ஆட்சியில், மடத்தின் முகப்பில் இரயில் தண்டவாளங்கள் அமைத்து வாகன்களில் உணவுப் பொருள்களை நிரப்பி 1 கிலோமீட்டர் தூரம் அமைந்துள்ள பந்தியில் அமரந்திருக்கும் சாதுக்களுக்கு அன்னம்பாலிப்பு செய்யப் பெற்றதைப் பலரும் அறிவர். 20-ம் பட்டத்தில் விளங்கிய ஶ்ரீ அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆட்சியில் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அறக்கட்டளைகள் நாடெங்கிலும் நிறுவப் பெற்று, கல்வி, உணவு, மருத்துவ உதவிகள் செய்ய வழி வகுக்கப்பட்டது.

      இதுபொழுது இம்மடத்தின் தலைமைப் பொறுப்பேற்று அருளாட்சி செலுத்தி வருபவர்கள் ஶ்ரீலஶ்ரீ காசிவாசி முத்துக்குமார சாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஆவார்கள். இவர்கள் அருள் ஆட்சியில் கல்வி, மருத்துவ உதவி, அன்னம்பாலிப்பு ஆகியவை செவ்வனே நடைபெற்று வருகின்றன. கல்வி வளர்ச்சியில் ஈடுபாடு கொண்ட இவர்களது பரிபாலனத்தில் கலைக்கல்லூரி ஒன்றும், செந்தமிழ்க் கல்லூரி ஒன்றும், மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும், நடுநிலைப்பள்ளி ஒன்றும், தொடக்கப்பள்ளி ஒன்றும், சிறார் பள்ளி (English Medium School) ஒன்றும் உள்ளன. ‘ஶ்ரீ குமரகுருபரர்என்ற பெயரில் திங்கள் தோறும் வெளிவரும் இதழ் சைவ சமய விளக்கங்களையுடையதாகத் திகழ்கிறது. இதற்கென ஒரு அச்சகத்தையும் மடத்தில் நிறுவியிருக்கிறார்கள். ‘ஆலயபூசைப் படிக்காசுநிதிஎன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வருவாய் இல்லாத திருக்கோயில்களில் திருவிளக்கேற்றுவதற்கும், அர்ச்சகர் ஊதியத்திற்கும் போதிய பொருளுதவியைச் செய்து வருகிறார்கள்.

      இம்மடத்தின் உள்ளே மேற்பால் அமைந்து இருப்பது ஶ்ரீ காசி விசுவநாதர் ஆலயம் ஆகும். இது 1903ல் அமைக்கப்பெற்றது. மடத்தின் வடபால் பொய்மை (குளம்) அமைந்துள்ளது. அதன் நடுவில் ஶ்ரீ காசி விநாயகர் கோயில் அமைந்துள்ளது வடநாட்டிலிருந்து கொண்டு வரப்பெற்ற வெண்பளிங்கு விநாயகரை அங்கு பிரதிஷ்டை செய்து, தினந்தோறும் பூசைகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப் பெற்றுள்ளன. தினந்தோறும் மடத்தில் பூசை நடைபெறும் போதும், மடத்து அலுவலகம் துவங்கும் போதும் முரசு (நஹரா) அடிப்பது வழக்கத்திலிருந்து வருகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவின் போது, ஶ்ரீமடத்து அதிபர் அவர்கள் விசயதசமி பூசையை சிறப்புற நடத்தி, இரவில் சிவிகை ஏறி பட்டினப் பிரவேசமாக வந்து அருளும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. (இப்போது சிவிகை ஏறுதல் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.) நஹரா கொட்டுதல், சிவிகை ஏறி அம்பு போடும் விழாவினைக் காணல் ஆகியவை வடநாட்டு (காசி) அடிப்படையில் அமைந்தவை ஆகும்.

 

தனிப் பாடல்கள்

 

திருப்பனந்தாள் பட்டன

 

       விண்ணீரும் வற்றிப் புவிநீரும் வற்றி விரும்பியழக்

       கண்ணீரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற காலத்திலே

       உண்ணீர் உண்ணீரென்று உபசாரம் பேசி யுண்மையுடன்

       தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாட்பட்டனே.

 

தாடகை

 

       தருக்கிய வெம் மனமுடைய சரோருகனும் காணவொணாப்

       பெருக்கிதழி மாமுடியைப் பேரன்பின் பெற்றியினால்

       நெருக்குமலர் மாலைகொடு நேயமொடு வனைவித்த

       உருக்கமுடைத் தாடகையின் உபயபதம் சிரத்தணிவாம்.

 

குங்கிலியக்கலய நாயனார்

 

       கோணாக மணிந்த பிரான் கோடீரம் வளைந்ததென

       நாணாற்றி யிழுத்திளைத்த நரேந்திரனும் களிகூரக்

       காணாத அன்பென்னும் கயிற்றினால் நிமிர்த்திட்டுச்

       சேணாருந் தூபமிடுந் திருமறையோன் தாள்பணிவாம்.

 

       

  பதிப்பாசிரியர் குறிப்பு: தஞ்சை மாவட்டம் கணபதி அக்ரஹாரம் என்ற ஊரைச் சேர்ந்த கெளண்டின்ய கோத்திரத்து ஸ்மார்த்தப் பிராமணர்களுக்குத் திருப்பனந்தாள் அருணஜடேச்வரர் என்ற செஞ்சடையப்பர் குல தெய்வமாக இருக்கிறார். தமது பிரார்த்தனைகளையும் காணிக்கைகளையும் இங்கே செலுத்துகின்றனர். எந்த ஆண்டிலாவது கார்த்திகை மாதத்தில் ஐந்து திங்கட்கிழமைகள் (சோம வாரங்கள், வந்தால் ஐந்தாவது சோம வார அபிஷேகம், உற்சவம் ஆகியவற்றை இக்கணபதி அக்ரஹாரத்துக் கெளண்டின்ய கோத்திரத்து ஸ்மார்த்தப்பிராமணர்கள் தமது உபயமாகச் செய்கின்றனர். திருஞானசம்பந்தர் கெளண்டின்ய கோத்திரத்தில் அவதரித்த்வர் என்பது ஈண்டு நினைவு கொள்ளற்குரியது. சென்ற ரெளத்திரி ஆண்டு கார்த்திகை ஐந்தாவது சோமவார விழாவின் போது அடியேன் திருப்பனந்தாளில் இருந்தமையால் விழாவில் கலந்து கொள்ளும் பேறு கிடைத்தது. மிகச் சிறந்த முறையில் அபிஷேகம், சுவாமி புறப்பாடு, பிராமண சமாராதனை அன்னதானம் முதலானவற்றை மிகச் சிறப்புடன் செய்தனர். கணபதி அக்ரஹாரம் கெளண்டின்ய கோத்திர ஸ்மார்த்தப் பிராமணர்கள் பலர் வேறு இடங்களில் தொழில் நிமித்தம் வசிப்பவர்களுங்கூட வந்து இவ்விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத் தகுந்தது. சிவபக்தியிற் சிறந்த இவர்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஆங்கீரஸ சர்மா

 

திருப்பனந்தாள் க்ஷேத்திரத் திருவெண்பா

(ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடியது)

 

       கரம்ஊன்றிக் கண்ணிடுங்கிக் கால்குலைய மற்றோர்

       மரம்ஊன்றி வாய்க்குதட்டா முன்னம் புரம்மூன்றும்

       தீச்சரத்தாற் செற்றான் திருப்பனந்தாள் தாடகைய

       ஈச்சரத்தான் பாதமே ஏத்து.

 

      கையை ஊன்றிக், கண்கள் குழிந்து, கால்கள் தடுமாறி ஆதரவுக்கு மற்றும் ஒரு ஊன்றுகோலினைப் பற்றி ஊன்றி, வாய்குதட்டாத முன்னமே, முப்புரங்களையும் தீயம்பினால் எரித்த இறைவரும் திருப்பனந்தாளின்கண் தாடகையீச்சரம் என்ற கோயிலில் எழுந்தருளியவருமான சிவபெருமானது திருவடிகளையே போற்றி உய்தி பெறுக. இத்திருப்பாடலில் கரம் ஊன்றுதல் முதல் வாய்க்கு தட்டுதல் வரையுள்ள ஐந்தும் மூப்பின் குறிகள், மூப்புவருமுன்னேயே திருப்பனந்தாள் சென்று இறைவனை வழிபடுக எனக் கூறியதாகக் கொள்க.

Related Content