உ
சிவமயம்
அர்த்தநாரீச்வர ஸ்தோத்திரம்
தமிழ் உரை:
டாக்டர் ந. கங்காதரன் எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.
ஸம்ஸ்க்ருத விரிவுரையாளர், சென்னை ஸர்வகலாசாலை
பாலம் வஹ்நி சிகாங்கிதம்
ததததிச்ரோத்ரம் வஹன்ஸம்ப்ருத –
க்ரீடத் குண்டலி ஜ்ரும்பிதம்
ஜலதிஜச்சாயாச்ச கண்டச்சவி: |
வக்ஷோ பிப்ரதஹீன கஞ்சுகசிதம்
பத்தாங்கனார்த்தஸ்ய வோ
பாக: புங்கவலக்ஷ்மணோ(அ)ஸ்து
யசஸே வாமோ (அ)தவா தக்ஷிண: || 1 ||
1. காளை மாட்டை சின்னமாக உடையவரும் உமையை ஒரு பாதியாக உடையவருமான அந்தப் பரமனின் இடதோ அல்லது வலது புறமோ உங்களுக்குப் புகழைக் கொடுக்கட்டும். (அந்த இடப்புறம்) நெற்றியில் குங்குமப் பொட்டுடனும், செவியிலணிந்து ஒளிரும் காதணியுடனும், கழுத்துப் பகுதி சிப்பி போன்ற நிறத்துடன் ஒளிவிட்டும், மார்பகம் மறைக்கும் சிறந்த உடையுடனும் (விளங்குகிறது). (அந்த வலப்புறம்) நெற்றியில் சுடரும் ஒளியுடனும், காதுக்கு மேல் விளையாட்டாக அசையும் பாம்புடன் ஒளிவிட்டும், நஞ்சின் கருமையினால் குன்றாது ஒளிரும் கழுத்துடனும், கவசம் போன்று அரவமன்னனால் மறைக்கப்பட்ட மார்பகத்துடனும் (விளங்குகிறது).
கல்ஹணரின் இராஜதரங்கிணியின் முதல் தரங்கத்தில் இரண்டாவதாகக் காணப்படும் இந்த செய்யுளில் சிவனின் உமையொரு பாகமுடைய வடிவைக்குறித்து இருவருக்கும் பொருந்துமாறு பொருள் கொடுக்கும் ஒரே சொற்களைக் கொண்டு துதித்து அருள் கோருகின்றார்.
வஹ்னி சிகாங்கிதம் என்பது குங்குமம் அணிந்த என்றும் பொருள்படும். சிவனைக் குறிக்கும் பொழுது நெற்றிக் கண் என்று பொருள்படும். அதுபோலவே இங்குள்ள ஜலதிஜச்சாயாச்ச கண்டச்சவி: என்பது சிப்பியைப் போன்ற நிறமுள்ள கழுத்தையும், நஞ்சின் கருமையின் காரணத்தினால் குன்றாது ஒளிரும் கழுத்தையும், அஹின கஞ்சுகசிதம் என்பது சிறந்த உடை மறைக்கும் தனபாகமுடைய என்றும், கவசம் போன்று பாம்பினால் மறைக்கப்பட்ட மார்பகமுடைய என்றும் இரு பொருள் உமையொருபாகனின் இரு புறத்தையும் குறிக்கின்றன.
இங்குள்ள ‘பாலம்’ என்னும் சொல் வடநாட்டில் நான்காவது ‘பா’ என்னும் எழுத்துடனும் தென்னாட்டில் ‘பா’ என்னும் இரண்டாவது எழுத்துடனும் வழக்கில் உள்ளது.
வாமே ஸாஞ்ஜனமக்ஷி தக்ஷிணதிசி
ச்யா மாயமானோ கல:
பாணெள திஷ்டதி தர்ப்பணோ (அ)த்ர
முகுடே(அ)முத்ர ஸ்திதச்சந்த்ரமா: |
தன்மாதேயமயம் பிதேதி
ஸுசிராத்ஸப்ரத்யபிக்ஞம் சனை:
யஸ்யோத்ஸங்கமகாத் குஹோ
பவது வ: ப்ரீத்யை ஸ கெளரீச்வர: || 2 ||
2. இடப்புறம் மையிட்ட கண். வலப்புறம் கருமை நிறமான கழுத்து. இங்கே கையிலே பிடித்திருப்பதோ கண்ணாடி. அந்தப் பக்கம் தலைமுடியிலே வீற்றிருப்பது சந்திரன் இது தாய், அது தந்தை என்று அடையாளம் கண்டு கொண்டு மெள்ள யாருடைய மடிமீது குஹன் (குமரன்) அமர்ந்தானோ அந்த கெளரீ மணாளன் உங்களுக்கு இன்பத்தைக் கொடுக்கட்டும்.
உமையொருபாக வடிவைக் கண்ட குமரனுக்கே திகைப்பேற்பட்டுப் பின்னர் மெள்ள தயக்கத்துடன் மடிமீதமர்ந்ததாகக் கவி காண்கிறார்.
முஞ்சேபாஜிநமஸ்ய கும்பகுஹரே
முக்தா: குசாக்ரோசிதா:
கிம் பாலஜ்வலநேந கஜ்ஜலமத:
கார்யம் தவாக்ஷ்ணோ: க்ருதே |
ஸந்தாநே வபுரர்த்தயோர் பகவதோ –
ரித்தம் நிஷேதே (அ)ப்யஹோ
கர்த்தவ்யே ப்ரியயோத்தராநு –
ஸரணோத்யுக்தோ ஹர: பாது வள் || 3 ||
3. ‘அந்த யானைத் தோலைக் களைந்துவிடும்’ என்று கூறும் பார்வதிக்கு, ‘அந்த யானையின் உயர்ந்த முன் பக்கத்தில் உன் மார்பகத்தை அலங்கரிக்கத்தக்க முத்துகள் உள்ளன’, என்றூம், ‘உம்முடைய நெற்றியில் உள்ள நெருப்பினால் என்ன பயன்’ என்று கேட்கும் பொழுது, ‘உன்னுடைய கண்களுக்குப் பூச மையைப் பெறுவதற்கு,’ என்றும், விந்தையிலும் விந்தை இவ்விதமாக எந்த ஆட்சேபம் எழுப்பினாலும் அதற்கும் உகந்த பதிலளிப்பதில் ஈடுபட்ட பரமன் உங்களைக் காக்கட்டும்.
தன்னிடம் குறையாகக் கூறப்படுவதையும் தன் நாவன்மையால் குணமாகக் கூறும் திறமையையுடைய உமையொருபாகனைத் துதிக்கின்றார். இது இராஜதரங்க்கிணியில் மூன்றாம் தரங்கிணியில் முதல் செய்யுளாகக் காணப்படுகின்றது.
உமையொரு பாகவடிவில், பரமனின் உருவைக் கண்டு அவர் அணியும் உடை, தோற்றம் இவற்றை அவரிடம் உள்ள குறைபாடாக எண்ணி அன்னை கேள்வி கேட்கவும் பரமன் அதற்குத் தக்க பதிலளிப்பதாகக் கவி இச்செய்யுளில் காண்கிறார்.
விஹிதமஜகோச்ருங்காக்ராப்யாம்
தநுர்கடிதம் ததா
நரகரடினோர் தேஹார்த்தாப்யாம்
கணம் ப்ரதிக்ருஹ்ணத: |
த்விவித ரசனாவால்லப்யானாம்
நிதேருசிதா விபோ:
ஜயதி லடபாபும்பாகாப்யாம்
சரீரவிநிர்மிதி: || 4 ||
4. இருவிதமான அமைப்பைக் கொண்டிருக்க சக்தி உடையவரும், ஆட்டினுடையதும், எருதினுடையதுமான கொம்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வில்லை உடையவரும், ஒரு புறம் யானை வடிவின் ஒரு பாதியும், மனித வடிவின் ஒரு பாதியும் சேர்ந்த உருவுடைய கணத்தையும் (கணபதியையும்) உடையவருமான அந்த ஆண் பெண் உருவுடைய பரமனுக்கு ஐயம் உண்டாகட்டும்.
இராஜதரங்கிணியில் இரண்டாம் தரங்கிணியில் முதல் செய்யுளாகக் காணப்படும் இந்த செய்யுளில் பரமனின் ‘அஜகவ’ என்னும் வில்லும், கணபதியும் அவருடன் துணை நின்று வெற்றியைக் கொடுக்கின்றது என்ற கருத்து விளக்கப்பட்டுள்ளது.
‘அஜகவ’ என்னும் பரமனின் வில்லானது ஆடு, எருது இவைகளுடைய கொம்புகளைக் கொண்டு ஆக்கப்பட்டதாகும். ‘நடகரடி’ என்னும் சொல்லில் ‘நா’ என்றால் மனித உருவு என்றும், ‘கரடி’ என்றால் ஆனை உருவு என்றும் பொருள். அம்மாதிடியான உருவு கொண்ட ஆனை முகத்தோனும், ‘அஜகவ’ என்னும் வில்லைத்தாங்கி நின்று இரு விதமான உருவுடன் இருக்க சக்தியுடைய பரமனுடன் துணை நிற்க பரமனார் வெற்றிவாகை சூடித் திகழ்கின்றார் என்கிறார் மஹாகவி கல்ஹணர்.
நேதம் பர்ணஸமீரணாசநதபோ
மாஹாத்ம்ய முக்ஷோரகெள
பச்யைதாவத ஏவ ஸம்ப்ரதி
க்ருதெள தன்மாத்ரவ்ருத்தீ பஹி: |
ப்ரேம்ணைவார்தமிதம் சராசரகுரோ:
ப்ராப்தேயமாத்மஸ்துதீரித்தம்
தேவவதூமுகாச்ச்ருதிஸுகா:
ச்ருண்வத்யபர்ணாவதாத் || 5 ||
5. பார்வதீ! இலைகளைப் புசித்தோ அல்லது காற்றை உட்கொண்டோ நீ செய்த தவத்தின் பயனாக அல்ல இது (சிவனுடன் சேர்க்கை) இதோ பார்! இந்த இரண்டு பொருள்களைக் கொண்டே உயிர் வாழும் காளைமட்டும் பாம்பும் இப்பொழுது புறக்கணிக்கப்பட்டுள்ளன. அவருடைய அன்பினால் தான் அந்தப் பரமனின் உடலின் ஒரு பாதியை நீ பெற்றுள்ளாய்! இவ்விதம் அவளைப் புகழும் தேவ மடந்தையரின் சொற்களைக் கேட்கும் ‘அபர்ணா’ (இலையைக் கூட புசிக்காதவள்) நம்மை காக்கட்டும்.
இராஜதரங்கிணி ஆறாவது தரங்கிணியில் முதலாவதாகக் காணப்படும் இந்த செய்யுளில் சிவனின் அன்பின் காரணமாய்த்தான் பார்வதி அவருடைய உடலில் ஒரு பாதியைப் பெற்றாள் என்று கவி கூறுகின்றார்.
பரமனை அடைய பார்வதி தவம் செய்யும் பொழுது கொஞ்சம் காலம் ஒரே ஒரு இலையை மட்டுமே புசித்து வந்ததினால் அவளை ‘ஏகபர்ணா” என்றும், பின்னர் அதையும் விட்டதினால், ‘அபர்ணா’ அதாவது ஒரு இலையைக் கூட புசிக்காதவள் என்றும் யாவரும் அழைத்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
காப்யேதேஷு ருசி: கசேஷு பணிநாம்
பும்ஸ்கோகிலஸ்யேவ தே
கோபி: கண்டதடஸ்ய ஹ்ருஷ்யதி புரோ
த்ருக்பச்ய சக்ஷு: ச்ருதே: |
ஸந்தானே (அ)பிநவே மிதோ
பகவதோர்ஜிஹ்வா ப்ருதக்ஸ்பர்தினீ
பிந்நார்த்தாம் ஸத்ருசாக்ஷராமபி
வதந்த்யேவம் கிரம் பாது வ: || 6 ||
6. வினோதமனா சேர்க்கையில் தனித்தனியே போட்டியுடன் வெவ்வேறு கருத்துக்களைத் தெரிவிக்கும் ஒரே சொற்களைப் பின்வருமாறு கூறும் அந்த தெய்வங்கள் இருவரின் (பார்வதி பரமேச்வரின்) நாக்கு உங்களை காக்கட்டும். (சிவன் பார்வதியிடம் சொல்கிறார்) – பாம்பினை ஒத்ததொரு விவரிக்க இயலாத கவர்ச்சி உன் கூந்தலில் இருக்கிறது. உன் எதிரில் பார்! ஒரு ஆண் குயிலானது போன்று உன் குரல்வளையினின்று எழும்பும் ஒலியானது தன் கண்ணினால் கேட்கும் (பாம்பின்) கண்ணை மகிழ்விக்கின்றது. (பார்வதி சிவனிடம் கூறுகிறாள்) – உம்முடைய (உடலில்) பாம்புகளாலான முடிச்சுகளைப் போட உமக்கு விருப்பமுள்ளது. உம் எதிரில் தான் பாரும்! கண்ணினால் கேட்கும் (பாம்பின்) கண் உம்முடைய தொண்டையினின்று (ஒளிரும்) கதிர்களினால் ஆண் குயிலென எண்ணி மகிழ்ச்சி அடைகின்றது.
இராஜதரங்கிணியில் ஐந்தாம் தரங்கத்தில் முதல் செய்யுளான இதில் முதல் பாதியில் இருவருக்கும் பொருந்தும் பொருள்படும் ஒரே சொற்களைக் கொண்டு உமையொரு பாகனின் வடிவழகை கவி வருணித்துள்ளார்.
பாம்பிற்கு இசையில் விருப்பம். இசையைக் கண்களால் அனுபவிக்கின்றது என்றொரு நம்பிக்கை. பார்வதியின் கூந்தலை பாம்பிற் கொப்பிட்டு அது ஆண் குயிலினை ஒத்த பார்வதியின் குரலை கண்ணால் பருகி மகிழ்கின்றது என்று முதல் கருத்தை கூறுகிறார். குளிரினால் சுருங்கிய கண்கள் குயிலின் முதன் குரலைக் கேட்டு விரிகின்றன.
சிவனின் உடல் மீது தவழும் பாம்பு அவர் கழுத்தில் நஞ்சினால் ஏற்பட்ட கருமையை ஆண் குயிலென எண்ணி மகிழ்ச்சி அடைகின்றது என்று இரண்டாவது கருத்து.
தாதும் வாஞ்சதி தக்ஷிணே (அ)பி
நயனே வாம: கர: கஜ்ஜலம்
பெளஜங்கம் ச புஜே (அ)ங்கதம்
கடயிதும் வாமே(அ)பி வாமேதர: |
இத்தம் ஸ்வம் ஸ்வமசிக்ஷிதம்
பகவதோரர்தம் வபு: பச்யதோ:
ஸாதாரஸ்மிதலாஞ்சிதம் திசது
வோ வக்த்ரம் மனோவாஞ்சிதம் || 7 ||
7. வலப்புறக் கண்ணிற்கும் இடது கை மைதீட்ட விரும்புகிறது. இடது கையிலும் பாம்பினாலான அணிகலனை அணிவிக்க விரும்புகிறது வலக்கை. இவ்விதமாக இன்னமும் பழக்கப்படாத தம் தம் உடலைக் கண்டு தக்க காரணத்துடன் புன்னகையுடன் கூடிய முகம் உங்கள் மனம் விரும்பியதைக் கொடுக்கட்டும்.
காடாலிங்கந மங்கலம் பவது தே
ஸ்வஸ்த்யஸ்து வச்சாடவ:
கிம் ப்ரூம: ப்ரியயா விலாஸகலஹ
ச்ரத்தேய ஏவாஸி ந: |
இத்யுக்தே நிபிடப்ரவாஸ
சகிதைர்யாவத்கணை: ஸ்தீயதே
ஸங்கட்ட: சிவயோ: ஸ
தாவததிகஸ்பஷ்ட: சிவாயாஸ்து வ: || 8 ||
8. ஓ! இறுகிய தழுவலே! உனக்கு மங்களம் உண்டாகட்டும். இனிய சொற்களே! உங்களுக்கு நலம் உண்டாகட்டும். நாம் என்ன சொல்வோம். பிரியமானவளுடன் ஊடலைச் செய்பவரே! எங்கள் (சொற்களை) கேட்கத்தான் வேண்டும். இவ்விதம் சொல்லும்பொழுது தங்கள் இருக்கை உகந்ததல்ல என்று திகைத்து கணங்கள் நிற்க நிற்க சிவ பார்வதியின் நெருக்கம் இன்னம் அதிகமானது உங்களுக்கு மங்களத்தைக் கொடுக்கட்டும்.
கணங்கள் இனியும் இருப்பதற்கு உகந்ததல்ல என்று எண்ணும் வண்ணம் சிவ பார்வதியின் இணக்கம் இன்னம் நெருக்கமாக இருந்தது. அவ்வித இணக்கம் உங்களுக்கு நன்மை பயக்கட்டும் என்று கவி கூறுகின்றார்.
ததர்தநாரீச்வர மூர்தரத்ன-
மர்தம் விதோரஸ்து ஸம்ருத்தயே வ: |
யதத்ரிகன்யாவதனாதிரிக்த
த்விதீயபாக பரமமாதனோதி || 9 ||
9. மலைமகளின் முகத்தின் இன்னொரு பாதி இருப்பதாக பிரமையை உண்டாக்கும் உமையொருபாக வடிவின் தலை மீதுள்ள அந்த பிறைச் சந்திரனான இரத்தினம் உமக்கு செழிப்பை கொடுக்கட்டும்.
பரமனின் தலைமீதுள்ள பிறைச்சந்திரன் உமையின் முகத்தின் இன்னொரு பாதியாகக் கூறப்படுகிறது.
தத்வீதவ்யதிரேகமத்ரிதநயா
தேஹேன மிஶ்ரீபவந் –
நிஷ்ப்ரத்யூஹமிஹ வ்யபோஹது
வபு: ஸ்தாணோரபத்ராணி வ: || 10 ||
10. எவ்விடத்தில் சடைமுடிமீதிருக்கும் பாம்பிற்கும் இணையான பெண் வடிவு போன்று வளைந்தும் கருத்தும் உள்ள கூந்தலால் சூழப்பட்டுள்ளதோ அவ்விதமான நிலையானவரின் (சிவனின்) உடல் பார்வதியின் உடலுடன் இணைந்திருப்பதாயும், அதனின்று தனித்தின்றி இருப்பதாயும், இடையூறுகளால் பாதிக்கப்படாததுமானது உங்களுடைய இன்னல்கள் களையட்டும்.
பரமனின் சடைமுடிமீதுள்ள பாம்புக்கு இணையாக பெண் பாம்பென பார்வதியின் கூந்தலைக் கூறும் இது நான்காவது தரங்கிணியில் முதல் செய்யுளகக் காணப்படுகிறது.
ப்ரெளடா: கஞ்சுகினோ ஜரத்வ்ருஷவர:
குப்ஜஸ்துஷாரத்யுதிர்நித்யாப்தோ (அ)பி
பஹிஷ்க்ருத: பரிகர: ஸோ (அ)யம்
ஸமஸ்தோ (அ)ப்யஹோ |
அர்தாத்யத்வஸதீக்ருதா
பகவதா சாரித்ரசர்யாவிதா
ஸா பிந்த்யாத்துரிதம்
சராசரகுரோரந்த:புரம் பார்வதீ || 11 ||
11. தனக்கு மிகவும் பிரியமான சுற்றமான வயது முதிர்ந்த காவலர்களும் (பாம்புகளும்), கிழமான சிறந்த பேடியும் (காளைமாடும்), கூனியும் (கூனிய சந்திரனும்) வெளியே வைக்கப்பட்டு விட்டன. விந்தையிலும் விந்தை! எல்லோருடைய நடத்தையையும் அறிந்த பரமனால் ஒரு பாதியிலிருந்து யார் ஒரு குடியிருப்பாகச் செய்து கொள்ளப்பட்டாரோ, அசைவன அசைவற்றன இவற்றிற்குத் தலைவரின் அந்தப்புரமான அந்த பார்வதி (நம்முடைய) இன்னல்களை நாசம் செய்யட்டும்.
சிவன் பார்வதியை தன் உடலில் ஒரு பாதியாகச் செய்து கொண்டார். சிவனுக்குப் பிரியமானவை – பாம்புகள், காளைமாடு, சந்திரன் இவைகளாகும். இந்த செய்யுளில் இவைகளைக் குறிக்கும் சொற்கள் அந்தப்புரத்தின் கிழக்காவலர்களையும், ஒரு பேடியையும், ஒரு கிழவியையும் குறிக்கும். இம்மாதிரி உருவம் கொண்ட பார்வதி நம் இன்னல்களை போக்கட்டும் என்று கவி வேண்டுகின்றார். இது இராஜதரங்கிணியில் தரங்கிணி எட்டில் முதல் செய்யுளாகக் காணப்படுகிறது.
லீலோத்யானவனச்மசானகமனே
ஸ்வேச்சாபராதீனயோ:
ஸம்யக்ஸாம்பரதா – திகம்பரதசா
ஸவ்ரீடநிர்வ்ரீடயோ: |
பர்யாப்தாதுலராமணீயகமஹா –
ச்ரீபைரவாகாரயோ:
க்ஷேமம் வ: சிவயோ: ஸமாஸமத்ருசோர் –
திச்யாதசிந்த்யம் வபு: || 12 ||
12. நந்தவனத்திற்கும் மயானத்திற்கும் செல்லுவதில் விருப்பமுள்ளவர்களும், ஒருவருக்கொருவர் தன்னிச்சையாக மற்றவருக்கு கட்டுப்பட்டவர்களும், நல்ல உடையை உடுத்திக் கொண்டும், நிர்வானமாகவும் உள்ளவர்களும், நாணத்துடன் கூடியும், நாணமின்றியும் இருப்பவர்களும், நிறைந்த இணையற்ற அழகெனும் செல்வத்தையும், அச்சுறுத்தும் உருவையும் உடையவர்களும், சீரானதும், ஒழுங்கற்றதுமான கண்களையுடையவர்களுமான எண்ணிப் பார்க்கமுடியாத சிவ பார்வதியின் உடல் உங்களுக்கு நன்மை (பயக்கட்டும்).
சிவ பார்வதியின் இருவரின் முற்றிலும் மாறுபட்ட நடை உடை பாவனைகளை கவி இங்கு விவரித்து நன்மையைக் கோருகின்றார்.
சூடேந்தோரிவ ரோசிஷா
முகுலிதம் வாதாயனாபம் ச்ரிய:
பானார்த்தம் பரிஷேவிதம்
மதுகராகாரை: குமாரானனை: |
ஒளந்நத்யாததிவாஸ்ய வக்த்ர பவனைர் –
க்ராணோபயோகீக்ருதம்
கஸ்யோரோஜஸரோஜமஸ்தி ந
மனஸ்தோஷாய கெளரீசயோ: || 13 ||
13. முடியில் தரித்த சந்திரனின் ஒளியினால் மூடப்பட்டதும், செல்வத்திற்கு ஜன்னலைப் போன்றதும், வண்டு போன்ற குமரனின் முகங்களால் பருகுவதற்காக அணுகப்படுகிறதும், உயரத்தே இருப்பதினால் ஏறமுயன்று வாய் காற்றினால் முகர்ந்து பார்க்கப்படுவதுமான கெளரீசரின் முலையாகின்ற தாமரையானது யாருக்குத்தான் மனமகிழ்ச்சியைக் கொடுக்காது.
அன்னையின் முலை தாமரைக் கொப்பாகக் கூறப்பட்டுள்ளது. அதை அடைய முயலும் குமரன் முகர்ந்து பார்த்தே திருப்தி அடைகிறான். அது நிறைந்த செல்வத்திற்கு ஜன்னல் போல உள்ளது. மேலும் சிவன் தன் தலையிலணிந்த மதியின் ஒளியினால் மறைக்கப்பட்டும் உள்ளது.
அர்தம் ஸ்நிக்த விமுக்தமித்த
ஹுதபுக்திக்தம் ததார்தம் ஜகத் –
பாயாதீச்வரயோஸ்ததக்ஷி
திலகஸ்தானஸ்திதம் வீக்ஷ்ய யத் |
க்ரீடாகர்மணி கார்முகம் கரதஸே
கர்த்தும் கிரீடேந்துநா
ஸோத்ஸேகச்ச நிருத்ஸுகச்ச
யுகபத்தேவ ஸ்மரோ ஜாயதே || 14 ||
14. ஒரு பாதி அழகாயும் கபடமின்றியும், மற்றொருபாதி தூண்டிவிடப்பட்ட நெருப்புடனும் இருக்கிறது. இவ்விதமான சிவபார்வதியின் நெற்றி பொட்டின் இடத்தில் இருக்கும் அந்தக் கண் உலகைக் காக்கட்டும். அந்தக் கண்ணைப் பார்த்து காமதேவன் கிரீடத்தில் உள்ள சந்திரனை கையில் வில்லாகச் செய்து விளையாட்டு வேலையில் ஈடுபட உத்ஸாகத்துடனும் அதே ஸமயத்தில் உத்ஸாக மின்றியும் ஆகின்றான்.
கபடமின்றி இருக்கும் அழகான கண்ணைப் பார்த்த காமன் தன் வேலையைச் செய்ய உத்ஸாகத்துடன் இருக்கின்றான். அதே ஸமயம் நெருப்புடைய இன்னொரு பாதி கண்ணைப் பார்த்து உத்ஸாகமற்றவனாகின்றான். ஏனென்றால் அந்தக் கண் தானே அவனை முன்னர் சுட்டெரித்தது.
வ்யாலா வாயுபு ஜாஸ்த்ருணேடி ச
த்ருணாந்யுக்ஷா புபுக்ஷாதுரோ
நிஷ்கெளபீனபட: குடும்பபரணே
கிம் த்வஸ்மி சிந்தாகுல: |
தெளர்கத்யாதிதி பிண்டமேக –
மகரோத் கெளரீசரூபேண யோ
யச்சாபீஷ்ட பலப்ரதஸ்த்ரிஜகத:
கஸ்மைசிதஸ்மை நம: || 15 ||
15. பாம்புகள் காற்றைப் புசிக்கின்றன. பசியால் வருந்தும் காளைமாடு புல்லை மேய்கிறது. நானோ கெளபீன துணியுமின்றி ஒரு குடும்பத்தைத் தாங்குபவனாக எவர் கெளரீசன் உருவில் ஒரு தேகம் எடுத்துக் கொண்டாரோ எவர் மூவுலுகிற்கும் விரும்பிய பலனைக் கொடுப்பவரோ அந்த ஒருவருக்கு வணக்கம்.
பாம்புகளும், காளைமாடும் தம் பசியைப் போக்கிக் கொள்ள தாமே கவனித்துக் கொள்கின்றன. அவற்றைக் குறித்து சிவனுக்குக் கவலை எதுவும் கிடையாது. ஆனாலும் உலகில் மற்ற உயிர்வாழ்வனவைகளுக்காக கெளரீசனாக உருவெடுத்தார் போலும் என்று கவி கற்பனை செய்து அந்த பரமனை அடிபணிகின்றார்.
ஜ்யாகோஷைர் – பதிரீகரோதி
ககுபோ பாஹூ முஹு: பச்யதி
ஸ்வஸ்ய ஸவேன விகத்ததே
ரசயதி ப்ரோச்சைஸ்தராம் தர்ஜனீம் |
யஸ்மின் கேவலமேவ கேலிரபஸா –
ஜ்ஜாதே (அ)ர்தநாரீச்வரே
வீரம் மந்யதயா ஸ மன்மதபடோ
வாதூலிதஸ்தம் ஸ்தும: || 16 ||
16. நாணோசையினால் திசையெங்கும் செவிடாகும்படிச் செய்கின்றான். மீண்டும் மீண்டும் தன் புஜங்களைப் பார்க்கின்றான். தன்னுடையதைத் தானே பெருமைப் படுத்திக் கொள்கின்றான். ஆட்காட்டி விரலை உயரத் தூக்கிக் காட்டுகின்றான். வெறும் விளையாட்டிற்காக எந்த அர்த்தநாரீச்வரர் கேளிக்கைகள் செய்யும் பொழுது தன்னைத் தானே வீரனாக எண்ணிக் கொண்டு மன்மதன் அறியாமையினால் நடந்து கொண்டானோ அந்த (பரமனை) வணங்குகின்றோம்.
வெறும் விளையாட்டிற்காக கணப்பொழுது கேளிக்கைகளில் ஈடுபட்டது போன்று அர்த்தநாரீச்வரர் இருக்கையில் அந்தக் காமன் பலவிதமாக இறுமாப்புடன் நடந்து கொள்கின்றான். அம்மாதிரியான உமையொருபாக வடிவை கவி வணங்குகின்றார்.
வபு: கண்டே கண்ட: ப்ரதிவஸதி
சைலேந்த்ரதுஹிது:
சிகண்டே கண்டேந்து:
ஸ்வயமபி விபு: கண்டபரசு: |
ததாபி ப்ரத்யக்ரம் சரணமுபயாதம்
ப்ரதி விபோ –
ரகண்டோ வ்யாபாரோ ஜகதி
கருணாயா விஜயதே || 17 ||
17. உடலின் ஒரு பாதியில் மலையரசனின் மகள் (பார்வதி) பாதி உடலுடன் வசிக்கின்றாள். முடி மீது பிறைசந்திரன். அந்தப் பரமனும் பிளவுபட்ட கோடாலியை (பிடித்திருப்பவர்). அப்படி இருப்பினும் உலகில் முழுமையாகச் சரண் அடைந்தவர்களிடம் பரமனின் கருணை குறைவற்று விளங்குகிறது.
‘கண்ட’ என்றால் பிளவுபட்டது என்று பொருள். ‘அகண்ட’ என்றால் முழுமையானது, நிறைந்த என்று பொருள். பரமனிடம் இருப்பவை யாவும் ‘கண்டமாக’ அதாவது பிளவுபட்டதாக அல்லது குறைவுடையதாக இருப்பினும் அவரது கருணை ‘அகண்டமாக’ அதாவது குறைவற்று விளங்குகின்றது.
ப்ரேம்ணார்தம் வபுஷோ விலோக்ய
மிலிதம் தேவ்யா ஸமம் ஸ்வாமினோ
மெளலெள யஸ்ய நிசாபதிர் –
நகஸுதா வேணீ நிசாமிச்ரித: |
ஆஸ்தே ஸ்வாம்யநுவர்த்தனார்த்த
மிவ தத்க்ருத்வா வபு: கண்டிதம்
தேயாதத்வயபாவனாம் ஸ பகவான்
தேவோ (அ)ர்த்தநாரீச்வர: || 18 ||
18. தன் எஜமானின் ஒரு பாதி உடல் அன்பினால் தேவியுடன் இணைந்திருப்பதைக் கண்டு எவர் முடியில் மலை மகளுடைய கூந்தலெனும் இருளுடன் ஒன்றிய சந்திரன் தன் எஜமானரைப் பின்பற்றுவதற்காகத் தன் உடலில் ஒரு பகுதியுடன் இருக்கிறதோ அந்த பரமனான உமையொருபாகன் ஒன்றிய பாவனையைக் கொடுக்கட்டும்.
சிவனின் முடி மீதுள்ள சந்திரன் பிறையாய் உள்ளதற்கு காரணம் அதுவும் சிவனைப் பின்பற்றி தன்னுடலின் ஒரு பாதியை மலைமகளின் கூந்தலுடன் ஒன்றியதாலே தான் என்று கொண்டு அவ்விதமான சந்திரனைச் சூடிய உமையொரு பாகனிடம் ஒன்றிய பாவனையைக் கோருகிறார் கவி.
உரை ஆசிரியர் குறிப்பு:
கி. பி. 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த காச்மீர மன்னர் ஹர்ஷரது அமைச்சர் சம்பகரின் புதல்வரும், அலகதத்தர் என்பவரின் மாணாக்கருமான கல்ஹண கவியின் பல நூல்களில் இந்த அர்த்த நாரீச்வர துதியும் ஒன்றாகும். ‘கல்யாண’ என்னும் ஸம்ஸ்க்ருத சொல்லின் மறுவிய வடிவமே ‘கல்ஹண’ என்பதாகும் என்று காச்மீர தேசத்து மங்ககவி தன் ஶ்ரீகண்ட சரிதம் என்னும் நூலில் (XXV. 78-80) கூறியுள்ளார்.
‘தரங்கணி’ என்னும் பெயர் கொண்ட எட்டு அத்தியாயங்களைக் கொண்ட ‘இராஜ தரங்கிணி’ என்னும் நூலில் காச்மீர மன்னர்களின் வரலாற்றை விவரித்துள்ளார். இவருக்குப் பின் ஜோனராஜர், ஶ்ரீவரர் என்னும் இரு கவிகளும் மேற் கொண்டு தொடர்ந்து இந்த வரலாற்றை எழுதியுள்ளார்.
என் உரையில் அங்கங்கே குறிப்பிட்டுள்ளபடி இந்த ‘அர்த்த நாரீச்வர துதி’யின் 18 செய்யுட்களில் 7 செய்யுட்கள் இவருடைய இராஜதரங்கிணியின் ஏழு அத்தியாயங்களுக்கு காப்புச் செய்யுளாக உள்ளவை. பரமனின் உமையொரு பாக வடிவைப் போற்றுவதாக இந்த துதி இயற்றப்பட்டுள்ளதிலிருந்து இக்கவிக்கு இவ்வடிவின்பால் உள்ள ஈடுபாட்டை அறியலாம். இந்த செய்யுட்களில் 1 முதல் 3 வரையிலும், 5 முதல் 8 வரையிலும், 10 முதல் 16 வரையிலும், 18 ம் ‘சார்த்தூல விக்ரீடிதம்’ என்னும் விருத்தத்திலும், 4ம் 17ம் ‘சிகரிணீ’ என்னும் விருத்தத்திலும், செய்யுள் 9 உபஜாதியிலும் இயற்றப்பட்டுள்ளன.
பரமனின் உமையொருபகா வடிவைப் போற்றும் இம்மாதிரியான பல துதிகள் உள்ளன. ஶ்ரீ ரங்கம் வாணீவிலாஸ அச்சுகூடத்தில் அச்சிடப்பட்டதும் ஶ்ரீ சங்கர பகவத் பாதர் இயற்றியதுமான, அர்த நாரீச்வர ஸ்தோத்திரத்தைத் தவிர உபம்ன்யு செய்ததாகக் கூறப்படும் ‘அம்போருஹ ச்யாமல’ என்று துவங்கும் ‘சிவஸ்தோத்திரம்’ அல்லது ‘அர்த நாரீச்வராஷ்டகம்’ பம்பாய் நிர்ணயஸாகர அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
பூனாவில் பண்டார்கர் ஆராய்ச்சி நிலையத்தில் ஓலைச் சுவடியிலும், பம்பாய் நிர்ணய ஸாகர அச்சுக்கூடம் வெளியிட்டுள்ள ‘காவ்யமாலா’ என்னும் தொகுப்பிலும் மட்டும் காணப்படும் இந்தத் துதியை யாவரும் பயன்பெற என்னால் இயன்ற மட்டில் தக்க விளக்க உரையுடன் இங்கு கொடுத்துள்ளேன்.
இப்பணியில் என்னை ஊக்குவித்து உலகனைத்திலும் உள்ள சிவஸ்தோத்திரங்கள் யாவையும் மொழி பெயர்ப்புடன் வெளியிட வேண்டும் என்று பேரவாக் கொண்ட அன்பர் ஶ்ரீ ஆங்கீரஸ வேங்கடேச சர்மா அவர்களின் தொண்டு பூர்த்தி பெற உமையொரு பாகன் அருள் செய்யட்டும்.
- சிவம் –