உ
சிவமயம்
தமிழ் உரை:
டாக்டர் ந. கங்காதரன் எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.
ஸம்ஸ்க்ருத விரிவுரையாளர், சென்னை ஸர்வகலாசாலை
காந்தா கச ப்ரசய புஷ்ப ஸுகந்தி கந்த –
லுப்தப்ரமத் ப்ரமர கர்புர கந்தராய |
கந்தர்வ யக்ஷ ஸுரஸித்த கிரீட கோடி –
ஸங்கட்ட க்ருஷ்ட சரணாய நமச்சிவாய || 1 ||
1. தன் மனைவியின் (பார்வதியின்) அடர்த்தியான கூந்தலின் நறுமணத்தின் மீது மோஹம் கொண்டு திரியும் பல்வேறு வண்ணங்களுடைய வண்டுகளையுடைய [வண்டுகளால் சூழப்பட்ட] கழுத்தை உடையவரும், கந்தர்வர், யக்ஷர், அமரர், சித்தர் முதலானவர்களின் கோடிக்கணக்கான கிரீடங்களின் உராய்தலினால் தேய்வு பெறும் காலடிகளை உடையவருமான சிவபெருமானுக்கு என் வணக்கம்.
உமையொரு பாகமுடைய சிவபெருமானுடைய வடிவைத் துதிக்கின்றார்.
தேவர் முதலானோர் பரமனை எப்பொழுதும் வணங்கிய வண்ணமிருக்கிறார்கள் என்னும் கருத்தை சிவானந்தலஹரீ பன்முறை கூறுகிறது.
ந ப்ரஹ்ம விஷ்ணு வசஸாமபி கோசரஸ்த்வ –
மஸ்மத் விதஸ்ய கிமஹோ ததவைமி ஸர்வம் |
பக்திஸ் ததாபி சிவ மாம் முகரீகரோதி
யுஷ்மத்ஸ்துதெள கதய கிம் கரவாணி தேவ || 2 ||
2. நான்முகன், நாரணன் முதலானவர்களாலும் விவரிக்க இயலாதவர் நீர். அந்தோ எம்மைப் போன்றவர் விஷயத்தில் அது அறவே முடியாது என்பதை நான் நன்கு அறிவேன். இருந்த போதிலும் ஓ சிவபெருமானே! பக்தியானது உங்களைத் துதிக்க என்னை ஊக்குவிக்கின்றது. ஓ தேவனே! உங்களை நான் துதிக்கட்டுமா?
பிரமன் முதலான தேவர்களாலேயே உம்மைப் பற்றி கூற முடியாத போது என்னால் எப்படி முடியும் என்கிறார் கவி.
யே த்வாம் மரீசி சய சாமர சாரு சந்த்ர –
சூடாமணே ச்ருதி வசோபிரிஹார்ச்சயந்தி |
மாயா ப்பரஞ்ச ரசநா நிசயம் விலங்க்ய
கச்சந்தி தே சிவபுரம் ருசிரைர்விமானை: || 3 ||
3. எண்ணற்ற கதிர்களைச் சாமரம் போலப் பெற்றுள்ள அழகிய சந்திரனை தலையில் சூடியவரே! வேதத்தின் சொற்களால் எவர்கள் உம்மை வழிபடுகின்றனரோ அவர்கள் இந்த மாயையான பிரபஞ்சத்தின் கூட்டத்தையெல்லாம் கடந்து அழகிய விமானங்களில் மூலம் சிவபிரானின் பட்டணத்தை அடைகின்றனர்.
தம்மை துதிப்பவரை இம்மாயா பிரபஞ்சத்திலிருந்து விடுவிக்கின்றார் சிவனார்.
உர்வீஸமீர யஜமான ஜலானலார்க்க –
ஸோமாம்பராதிபிரஹோ பவதஸ்தனூபி: |
வ்யாப்தம் ஸமஸ்தபுவனம் ஸமவேக்ஷ்ய வித்வான்
குர்யாந் ந கோ(அ)த்ர பகவன்ஸ்த்வயிபக்ஷபாத: || 4 ||
4. பூமி, காற்று, யாகம் செய்பவன், நீர், நெருப்பு, சூரியன், சந்திரன், ஆகாயம் முதலான உம்முடைய உடல்களினால் ஸகல லோகங்களிலும் பரவிநிற்கும் (வியாபித்திருக்கும்) உம்மைப் பார்த்து எந்த பண்டிதர்கள் தான் உம்மிடம் தனிப்பட்ட ஈடுபாடு கொள்ள மாட்டார்கள்?
ஈச்வரன் ஸர்வலோக வியாபியாக இருப்பதினால் மற்றெல்லா தெய்வங்களையும் விட்டு பண்டிதர்கள் ஈச்வரன் பால் ஈர்க்கப்படுகின்றார்கள். ஸர்வ வியாபியாகப் பரமன் இருப்பதை ‘அஷ்டமூர்த்தி’ என்னும் சொல்லால் குறிப்பிடுவது வழக்கம். இந்த வடிவை காளிதாஸன் தன்னுடைய சாகுந்தல நாடகத்தின் முதல் ச்லோகத்திலும் புஷ்பதந்தர் தன்னுடைய சிவமஹிம்நஸ்தவத்தின் 26வது ச்லோகத்தில் [த்வமர்க்க: த்வம்ஸோம: …] ஆதிசங்கரர் தக்ஷிணாமூர்த்யஷ்டகத்தின் 9வது ச்லோகத்திலும் [பூரம்பாம்ஸ்யநலோ…] விவரித்துள்ளனர்.
ப்ரஹ்மேந்த்ர விஷ்ணு ஸுரதானவ லோகபாலை –
ரன்யைச்ச ஸித்த முனிபி: பரிபூஜிதம் த்வா |
த்ருஷ்ட்வா யதத்ர புனரிச்சதி தேவமன்யம்
ஸம்ஸாரிணோ நரக ஹேதுரயம் விமோஹ: || 5 ||
5. நான்முகன், இந்திரன், திருமால், தேவர்கள், அரக்கர்கள், திசைக்காவலர்கள், மற்றும் சித்தர்கள் முனிவர்கள் முதலானவர்களால் வணங்கப்பட்ட உம்மைப் பார்த்து விட்டு பின்னர் மீண்டும் எவரொருவர் மற்ற தெய்வத்தை விரும்புகின்றார்களோ அது இல்வாழ்வில் ஈடுபட்டவர்களுக்கு நரகத்தைப்பெறக் காரணமானதொரு வேண்டாத மோஹம்.
எல்லாத் தெய்வங்களும் அவரவர் முறையில் சிவபெருமானை வழிபடுவதை சிவானந்தலஹரீ ச்லோகம் 30ல் கூறப்படுவதை இங்கு நினைவில் கொள்ளலாம்.
த்வம் பாஸி ஹம்ஸி விததாஸி திரஸ்கரோஷி
முக்திம் பராம் நயஸி நித்யமசேஷலோகான்
ஸர்வ ப்ரதோ(அ)ஸி சிவ ஸர்வகரஸ்த்வமேவம்
மத்வா விகல்பமிதி ஜந்துரலேபக: ஸ்யாத் || 6 ||
6. நீர் காப்பாற்றுகின்றீர், அழிக்கின்றீர், செயல்படுத்துகின்றீர், மறைக்கின்றீர், எப்பொழுதும் மிச்சமின்றி லோகமனைத்தையும் உயர்ந்த மோக்ஷத்திற்கு அழைத்துச் செல்கின்றீர் எல்லாம் கொடுப்பவராக இருக்கின்றீர். ஓ! சிவபிரானே! நீர் இவ்விதம் எல்லாம் செய்பவர் என்று எண்ணி ஜீவன் களங்கமின்றி இருக்கலாம்.
சிவபெருமானின் பல செயல்களை எண்ணி ஜீவன் தவறெதுவும் செய்யாமலிருக்கலாம்.
சாட்யேன யே(அ)பி பகவந்தமனந்த சக்திம்
சம்போ பவந்தமபவம் பவிநோ நமந்தி |
தே(அ) ப்யந்தகாரமதிகோர க்ருதாந்த தந்த –
யந்த்ராந்தரால கஹனம் ந புநர் விசந்தி || 7 ||
7. ஹே சம்புவே! எந்தக்கவிகளும் எல்லையற்ற சக்தியையுடையவரும் பிறப்பும் இறப்பும் அற்றவரும் பகவானும் ஆன உம்மை தங்களுடைய கபட்டுத்தன்மையுடன் வணங்குகின்றனரோ அவர்களும் இருள்சூழ்ந்ததும் மிகவும் கோரமானதுமான இயமனின் பற்களான இயந்திரத்தின் இடையேயுள்ள அடர்த்தியான காட்டில் மீண்டும் நுழைவதில்லை.
அளவிட முடியாத சக்தியையுடைய சிவபெருமானைத் தொழுதும் கபடர்களுக்கும் பிறப்பிலிருந்து விமோசனம் கிடைக்கிறது. புஷ்பகந்தியை நினைவில் கொண்டு சிவபெருமானைப் புகழ்ந்து பாட முனைந்த தன்னையே நினைவில் கொண்டு கவி இந்த ச்லோகத்தை கூறினார் போலும்.
கஸ்யாபரஸ்ய மகராஹத கோரநக்ர
சக்ரக்ரமாத் கமல்லோலஜலா ச கங்கா |
கண்டேந்து கோடி கர கோரக பாரபாஜி
பப்ராம பப்ருணி ஜடாபடலே விமூடா || 8 ||
8. வேறு எவருடைய பழுப்பு நிறமுள்ள சடைமுடியில் தான் மீன்களைக் கொல்லும் பயங்கரமான முதலைகளின் சக்கரம் போன்ற வரிசையினால் அசைந்தாடும் தாமரை மலர்களையுடைய நீரை உடைய கங்கையானது பிறைச்சந்திரனின் எண்ணற்ற கலைகளின் மொட்டுகளின் பாரத்தைத் தாங்கிக் கொண்டு மனம் குழம்பித்திரிந்தது?
மற்றெவராலும் முடியாத அருஞ்செயலை செய்தவர் சிவபெருமானன்றோ? புவியில் கங்கையின் தோற்றத்தைப் பற்றி வழங்கும் புராணக் கதையை நினைவூட்டுகிறது.
ப்ரோத்துங்க பீவர கனஸ்தன ஹாரபார –
வித்யாதரீ புஜ லதா யுக பாச பத்தா: |
தே பர்யடந்தி பகவன் ககநே விமானைர் –
யைரர்ச்சிதோ ஹர நரைருமயஸஹ த்வம் || 9 ||
9. ஓ ஹரனே! எந்த மானிடர்களால் உமையுடன் கூட நீர் தொழப்படுகின்றீரோ அவர்கள் எடுப்பான பருத்த கனமான ஸ்தனங்களின் பளுவை உடைய ‘வித்யாதர’ பெண்டிர்ன் கொடிபோன்ற புஜமாகின்ற கயிறுகளால் கட்டுண்டவர்களாய் விமானங்களின் மூலம் ஆகாயத்தில் இயங்கும் அங்கும் செல்கின்றார்கள்.
உமையுடன் கூடிய சிவபெருமானை வணங்குபவர்களுக்கு வித்யாதரர்களால் அனுபவிக்கப்படும் ஆனந்தம் கிடைக்கிறது.
பேரீ ம்ருதங்க ஸுரதுந்துபி சங்கநாதைர் –
தேவாங்கனா கல கலாகுலதிங்முகேஷு |
க்ரீடந்தி திவ்ய பவனேஷு ஸஹாப்ஸரோபிர் –
பக்த்யா க்ருதம் தவ புரோ முகவாதனம் யை: || 10 ||
10. எவர்களால் உம்முடைய முன்னர் பக்தியுடன் உங்கள் புகழ் பாடப்பெற்றதோ (அவர்கள்) பேரீ, மிருதங்கம், தேவ துந்துபி, சங்கு முதலியவற்றின் ஒலியினாலும் தே மடந்தையரின் கலகலவென்னும் ஒலியும் நிறைந்த நாற் திசையிலுமுள்ள தேவர்களின் மாளிகைகளில் அப்ஸர கன்னிகைகளுடன் விளையாடுகின்றனர்.
சிவபெருமானை பக்தியுடன் போற்றிப் புகழ்பவர்கள் தேலோக மாளிகைகளில் சுகத்தைப் பெறுகின்றனர்.
சம்போ பிரஸித்த விபுதாதிப ஸித்தஸாத்ய –
வித்யாதரா ஹரி பிதாமஹ லோகபாலா: |
அன்யே(அ)பி ஸாது விதிநா ஸுதியோ பவந்த –
மாராத்ய ஜக்முரமரா: பரமாமரத்வம் || 11 ||
11. ஓ சம்புவே! பிரஸித்தமான இந்திரன், சித்தர்கள், ஸாத்யர்கள், வித்தியாதரர்கள், திருமால், நான்முகன், திசைக்காவலர் முதலானவர்கள் மற்றும் நல்லறிவு படைத்தவர்கள் நல்லதொரு முறையில் உம்மை வழிபட்டு இறப்பில்லாத அவர்கள் அதனிலும் மேம்பட்ட நிலையை அடைந்தார்கள்.
தேவர்கள் முதலான எல்லா அமரர்களுக்கும் அதனிலும் மேம்பட்ட நிலை சிவவழிபாட்டினால் கிடைக்கின்றது.
‘வித்தியாதரர்’ என்பவர்கள் தெய்வீக சக்தி வாய்ந்த ஒரு வகையான தேவர்கள்.
கெளரீப்ரதானஸமயே கதிதே(அ) சலேன
கோத்ரம் தவேச கிமிதி க்ஷணஜாதசித்தம் |
தன்யை: பிதாமஹ புரந்தர லோகபாலைர் –
த்ருஷ்டம் நிருத்தர முகம் பவதோ ஹஸத்பி: || 12 ||
12. ஹே ஈசனே! கெளரியை விவாஹம் செய்து கொடுக்கும் பொழுது இமவானால உம்முடைய கோத்திரம் என்ன என்று கேட்கப்பட்டபொழுது சிந்தனையுடன் கூடிய உம்முடைய முகம், பாக்கியசாலிகளான நான்முகன், இந்திரன், மற்றும் திசைக் காவலர்கள் முதலியவர்களால் சிரித்தவண்ணம் பார்க்கப்பட்டது.
பரமனின் குலம் கோத்திரம் என்னவென்று யாரால் தான் கூறமுடியும்!
ஜங்கார டம்பர விராஜி ஜலா குலேஷு
கைலாஸ மேரு கிரி கஹ்வர நிர்ஜரேஷு |
தே ப்ராப்னுவந்தி ஸுரஸித்தவதூகுலானி
யே நீலகண்ட தவ பாதயுகம் நமந்தி || 13 ||
13. ஓ நீலகண்டனே! எவர்கள் உம்முடைய இருதிருவடிகளை வணங்குகின்றனரோ அவர்கள் கூட்டமான தேனீக்கள் எழுப்பும் ஒலியைப் போன்றதொரு ஒலி நிரம்பிய நீர் நிலைகளில் கைலாயம், மேருமலை போன்ற மலைகளிலுள்ள குகைகளிலிருந்து பெருகும் நீர்வீழ்ச்சிகளில் தேவர்கள், சித்தர்கள் முதலானவர்களின் மனைவி மக்களின் கூட்டங்களை அடைகிறார்கள்.
சிவபெருமானை வழிபடுபவர் தேவர்களிருக்கும் இடத்தை அடைகிறார்கள்.
அன்யே(அ)ரவிந்த மகரந்த ஹ்ருதாலிவ்ருந்த –
மந்தார குந்த தல தாமபிரிந்து மெளலே |
பூஜாம் விதாய பவதோ விலஸந்தி தேவ
தேவேந்த்ர மந்திரவரே ஸஹஸுந்தரீபி: || 14 ||
14. பிறை மதியைத் தலையில் தரித்தவனே! மற்றும் சிலர் தாமரை மலர்களின் மகரந்தத்துகள்களைக் கவரும் வண்டுகளையுடைய மந்தார, மல்லிகை மலர்களின் இதழ்களினாலும் உம்மை வழிபட்டு ஓ தேவனே! தேவேந்திரனின் மாளிகையில் அழகிய பெண்டிருடன் கூட மகிழ்கின்றனர்.
மலர்களால் சிவபெருமானுக்குச் செய்யும் வழிபாடு மிகவும் மேம்பட்ட பயனை அளிக்க வல்லது.
கர்ஜத் ப்ரசண்ட கன கர்கர மேகஸங்க –
ஸங்கட்ட கோஷ கன கோராவேண கோ(அ)ந்ய: |
ச்வேதம் நயந்த மதிகோர கரால காலம்
பஸ்மாவசேஷமகரோத்தர ஹுங்க்ருதேன || 15 ||
15. கர்ஜித்துக் கொண்டு மிகவும் பலத்த கனமான ஓசையுடன் கூடிய கூட்டமான மேகங்களின் மோதல்களினால் ஏற்படும் ஒலியைப் போன்று மிகவும் கோரமான ஓசையினால் சுவேத முனிவரை அழைத்துச் செல்லும் மிகவும் கொடிய அச்சுறுத்தும் காலனை சிவனார் தன்னுடைய ஹும்காரத்தினால் சாம்பலாகச் செய்தார். வேறெவர் தான் இதைச் செய்வர்.
சுவேத முனிவருக்காக சிவபெருமான் காலனை சாம்பலாகச் செய்த விஷயம் இலிங்கபுராணத்திலும் வருணிக்கப்பட்டுள்ளது. வழக்கிலுள்ள மார்க்கண்டேயரின் கதையை இக்கதை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது.
யே ஜீவநாய பவபஸ்ம ஜடாஸ்திமாலா
மாயாவினோ(அ)பி தததே ஹி பவந்தி சம்போ
கர்ணாட லாட பட ஹேம கிரீட கோடி –
ஸங்கட்ட க்ருஷ்ட சரணா யதி பூமிபாலா: || 16 ||
16. ஹே சம்புவே! உம்முடைய விபூதியையும் சடைமுடியையும் எலும்பு மாலையையும் எந்த செப்பிடு வித்தைக்காரர்களும் தங்கள் பிழைப்பிற்காக அணிகின்றனரோ, அவர்களும், கர்நாடகம், லாடம் இந்த தேசங்களின் பல போர் வீரர்களின் தங்கமயமான கிரீடங்களின் உராய்தலினால் தேய்வு பெறும் காலடிகளை உடைய மன்னவன் ஆகின்றனர்.
சிவபெருமானுக்குப் பிரியமான பொருள்களை எவனொருவன் அணிகின்றானோ அதனலேயே அவனுக்கு மிகுந்த உயர்வு ஏற்படுகிறது.
க்ரீடா ப்ரபஞ்ச நிரதாச்சிசவோ பவந்த –
மாராதயந்தி விவிதேஷு வனேஷு தேவா: |
ஸித்தா: ஸமஸ்தகுல சைல குஹாந்தரேஷு
வித்யாதரா: மலய மந்தர கந்தரேஷு || 17 ||
17. விளையாட்டைப் போன்ற பிரபஞ்சத்தில் ஈடுபாடுடையவர்களாகக் குழந்தைகள் போன்றும் காடுகளில் தேவர்களும், வசிக்குமிடங்களனைத்திலும் மலைகளின் குகைகள் இவைகளிலும் சித்தர்களும் ‘மலயம்’ என்னும் மலையின் குகைகளில் வித்யாதரர்களும் உம்மை வழிபடுகிறார்கள்.
ஹே தேவ ஹேமபுரரம்ய ரஸாதலேஷு
நாகாங்கனாபி ரஸுரேந்த்ர நிதம்பிநீபி: |
நித்யம் நிதம்ப பர மன்மத காமிநீபி –
ராராத்யஸே ச ஹர மன்மதவிஹ்வலாதி: || 18 ||
18. ஹே தேவனே! பாதாள லோகத்திலுள்ள ஹேமபுரமென்னும் அழகிய பட்டணத்திலுள்ளவரும், பருத்த பின் புறத்தை உடையவர்களானதால் மெதுவாகச் செல்பவர்களும், காமம் மேலிட்டு குழப்பமடைந்தவர்களுமான நாககுல பெண்டிராலும், அரக்க குல அரச பெண்டிராலும் நீர் நித்தியம் வழிபடப்படுகின்றீர்.
நீர் நித்யம் எல்லோராலும் வழிபடப்படுகின்றீர்.
திவ்யெளஷதீ ரஸ ரஸாயன தாது வாதா
யோகா வசீகரண காருட கன்யவாத: |
பாதால கட்க கடிகாஞ்சன ஸித்தி வாதா:
ஸித்யந்தி தஸ்ய சிவ யஸ்ய பவான் ப்ரஸன்ன: || 19 ||
19. ஹே சிவனே! எவருக்கு நீர் பிரஸன்னமாக இருக்கின்றீரோ அவருக்கு திவ்யமான மூலிகைகளின் ரஸங்களின் சேர்க்கையாலான மருந்துகளில் தேர்ச்சியும், வசீகரணம் செய்வது, கருடவித்யை, தாதுப்பொருள்கள் இவற்றில் தேர்ச்சியும், பலவிதமான ஸித்திகளும் கைகூடுகின்றன.
உம்மை வழிபடுபவர்களுக்கு எல்லாவிதமான ஸித்திகளிலும் தேர்ச்சி கிடைக்கின்றது.
பாதால தால தல தானவ ஸுந்தரீபி –
ராலிங்கிதா மகரகேது சராதுராபி: |
தே சேரதே த்வஜபடாகுல மந்திரேஷு
யேஷாம் த்வமேவ சிவ புண்யவதாம் ப்ரஸன்ன || 20 ||
20. ஹே சிவபெருமானே! புண்ணியம் செய்த எவர்களுக்கு நீங்கள் பிரஸன்னமாக இருக்கின்றீரோ அவர்கள் பாதாள லோகத்திலடியிலுள்ள கொடிகள் பறந்து கொண்டிருக்கும் மாளிகைகளில் உள்ள காமனின் கணைக்கிக்கானவரான அழகிய அரக்கப் பெண்டிரால் அணைத்துக் கொள்ளப் பட்டவர்களாக உறங்குகின்றார்கள்.
பரமன் எவருக்கு பிரஸன்னமோ அவர்கள் பொழுதை இன்பமகாக் கழிக்கின்றார்கள்.
ஸ்வர்கே விசித்ர ஸுர பாதப மஞ்சரீபிர் –
மந்தாகினீ கனக பங்கஜ யோஜிதாபி: |
இந்த்ராப்ஸ ரோபிரமரை ரஸுரைருபதே:
பூஜாம் விதாய பவத: ப்ரணதோ மஹேச || 21 ||
21. ஹே மஹேச்வரனே! உம்மைச் வழிபட்டு வணங்குபவர் ஸ்வர்க்க லோகத்தில் விசித்திரமான தெய்வீகமான செடிகளின் மலர்களுடனும் தேவலோக கங்கை நீரில் வளரும் தங்கமயமான தாமரை மலர்களுடனும் கூடிய இந்திரன் மற்றும் தேவர்கள், அப்ஸரஸ்ஸுகள், அரக்கர்கள், இவர்களுடன் கூடியவராக ஆகின்றார்.
இறைவனை வணங்குபவர்கள் தேவர்களுடன் கூட இன்பமாகக் காலத்தைக் கழிக்கின்றனர்.
த்வாம் தீப்யமான மகுடோத்கட சாருஹார -
கேயூர குண்டலதரா கிரி கஹ்வரேஷு |
கந்தர்வ லோக லலநா லலிதைர்வசோபி –
ருச்சை: க்ருதாஞ்ஜலிபுடம் பகவம்ஸ்துவந்தி || 22 ||
22. ஹே பகவானே! மிகவும் அழகாக அமைக்கப்பட்ட ஒளி வீசிக் கொண்டிருக்கும் மகுடங்களையும் அழகான மாலைகளையும், புஜத்தில் அணியும் கேயூரம் என்னும் ஆபரணத்தையும், காதில் குண்டலங்களையும் அணிந்து கொண்டவராய் மலைக்குகைகளில் கந்தர்வ லோகப் பெண்டிர் மிகவும் இனிமையான சொற்களால் உரத்த குரலில் கூப்பிய கைகளுடன் உம்மைப் புகழ்கின்றார்கள்.
நன்கு அலங்காரம் செய்து கொண்ட கந்தர்வ லோகப் பெண்டிர் சிவபெருமானைப் புகழ்ந்து பாடுகின்றனர்.
ஞானம் த்ரிகால விஷயம் ககநே சரத்வ –
மைச்வர்ய மஷ்ட குணிதம் ச்ரவணஞ்ச தூராத் |
உத்க்ராந்தி முக்தி பரகாயபரப்ரவேசெள
சம்போ பவந்தி பவிநாம் பவத: ப்ரஸாதாத் || 23 ||
23. ஹே சம்புவே! உம்முடைய அருளினால் கவிகளுக்கு முக்காலத்தைப் பற்றிய ஞானமும், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் தன்மையும், எட்டு வகையான ஐச்வர்யங்களும், தொலைவிலிருந்து கேட்கக் கூடிய திறமையும், மேலே எழும்பிச் செல்லும் சக்தியும் (விரும்பும் பொழுது) உடலைத் துறக்கும் சக்தியும், பிறருடலில் புகும் சக்தியும் கிடைக்கின்றன.
சிவபெருமானுடைய கருணையினால் எல்லாவித சக்திகளும் கிடைக்கின்றன.
எட்டு ஐச்வர்யங்கள் என்பவை – அணிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்யம், மஹிமா, ஈசத்வம், வசித்வம், காமாவஸாயிதா ஆகும். இவையாவன முறையே அணுவைப் போன்ற உருவைப் பெறுதல், நினைத்த மாத்திரம் மிகவும் லேசான உருவைப் பெறுதல், நினைத்த மாத்திரத்தில் விரும்பிய பொருளைப் பெறுதல், உறுதியான மனோதிடம், நினைத்த மாத்திரத்திலேயே மிகப் பெரிய உருவைப் பெறுதல், எல்லோரையும் விட மேம்பட்ட தன்மை, மற்றவரைக் கவரும் தன்மை, ஆசையை அடக்கும் தன்மை முதலியனவாகும்.
உக்தம் சிவேதி சிவ யேந திவாபி ராத்ரா –
வுத்கண்டனாத்தர ஹரேதி ஸக்ருந்ம்ருஷாபி |
ஸத்யம் ப்ரவீமி ஸுரநாத ந பக்ஷபாதம் –
முடோ(அ)பி கோர நரகாத் ஸ பிபேதி கஸ்மாத் || 24 ||
24. தேவர்களுக்குத் தலைவனே! எவனொருவனால் இரவிலோ அல்லது பகலிலோ சிவ! சிவ! என்றோ அல்லது ஒரு நோக்கமுமின்றி ஒரு தடவையேனும் ஹர! ஹர! என்றோ கூவப்பட்டதோ உண்மையாக ஒரு பக்ஷபாதமுமின்றிக் கூறினால் அறிவில்லாதவனும் கூட எந்தக் கொடிய நரகத்திலிருந்து பயப்படுவான்?
சர்யாவ போத ரஹிதோ பவபக்தி மாத்ராந் –
நீதஸ்த்வயா சிவபுரம் யதஹோ கிராத: |
யாத: ஸ்மரன் கபடகாபுருஷோ(அ)மரத்வம்
யத்யேவ முக்திரஸமா பவத: ப்ரஸாதாத் || 25 ||
25. முறைப்படி ஒரு குருவினிடமிருந்து வழிபடும் முறைகளை அறியாத வேடன் ஒருவனும்; உம்மிடமுள்ள பக்தியினால் மட்டுமே உம்மை நினைவில் கொண்டே உம்மால் கைலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். ஏமாற்றி பித்தலாட்டம் செய்பவனும் நிந்திக்கத் தகுந்த ஒருவனும் உம்முடைய அருளாலேயே ஈடு இணையற்ற தெய்வீகத் தன்மையையோ அல்லது மோக்ஷத்தையோ பெறுவர் என்பதில் ஒரு ஸந்தேஹமுமில்லை.
கண்ணப்பனின் வழிபாட்டு முறைகளை நினைவில் கொண்டு இறைவனின் வழிபாட்டில் பக்தியே மிகவும் அவசியமானது என்று கவி கூறுகிறார்.
தஸ்மாத் கரோமி யதபீகரமப்ரமேயம்
மூடேன சங்கர மயா யதகாரி பாபம் |
ஸ த்வம் பசுத்வ திமிரம் பவபாசமீச
சிந்தி ப்ரஸஹ்ய பகவந்நபுனர் பவாய || 26 ||
26. அதனால் ஹே சங்கரனே! பயத்தைப் பற்றி நினையாமல் அளவிட முடியாத எந்த பாவத்தைச் செய்கின்றேனோ, மூடனான என்னால் எந்தப் பாவம் செய்யப்பட்டதோ இவை யாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஹே ஈச்வரனே! ஹே இறைவனே எனக்கு மீண்டும் பிறப்பும் இறப்புமின்றி பசுத்தன்மையின் இருள் போன்ற பிறப்பிறப்பென்னும் பாசத்தை நீர் அறுத்து விடும்.
த்வத்பாத பூஜன ரதா முனயோ வனேஷு
திஷ்டந்தி மூலதல கந்த பலாசிநோ யே |
தே யாந்தி முக்தி பலமீச்வர தாவதாஸ்தாம்
தன்யாஸ்து தே தவ முகாந்யவலோகயந்தி || 27 ||
27. ஈசனே! எந்த முனிவர்கள் காடுகளில் வேர்கள், தளங்கள், கிழங்குகள், பழங்கள் இவைகளை உண்பவர்களாக உம்முடைய பாதங்களைத் தொழுவதில் ஈடுபட்டவர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் முக்தி என்னும் பழத்தை அடைகிறார்கள் என்பதிருக்கட்டும். அதைக் காட்டிலும் அவர்கள் பாக்கியசாலிகள். ஏனென்றால் அவர்கள் உம்முடைய முகத்தையே காண்கின்றார்கள்.
முக்தியைப் பெறுவது என்பதைக் காட்டிலும் இறைவனைக் காணக் கிடைப்பது என்பது போற்றத்தகுந்ததல்லவா.
ஸ்பீதே ப்ரதிமிநி ஜகனே கனபாடலிம்நி
பிம்பாதரே குசயுகே த்யுத பிஞ்ஜலிம்நி |
ஸ்த்ரீணாம் மஹேச விலஸந்தி குதோ நராச்ச
யைர் நார்சிதோ(அ)ஸி ந நதோ (அ)ஸி ந
ஸம்ஸ்துதோ(அ)ஸி || 28 ||
28. ஹே மஹேச்வரனே! பெண்களின் பருத்த விசாலமான பின்புறத்திலும், பிம்ப பழத்தைப் போன்று அடர்ந்த சிவப்பு நிறங்கொண்ட உதட்டிலும், பிரகாசிக்கும் சிவந்த மஞ்சள் நிறத்தில் உள்ள ஸ்தனங்களிலும் களிக்கும் மக்களால் ஏன் நீங்கள் வழிபடப்படுவதில்லை அல்லது வணங்கப்படுவதில்லை அல்லது துதிக்கப்படுவதில்லை?
ப்ரோத்தாம காம மதிரா மதலோல நேத்ரா
ரத்னாவலீ ஜண ஜணாரவ ரம்ய காத்ரா: |
தே யக்ஷலோக வனிதாஸு சிரம் ரமந்தே
யே த்வாம் ஸ்மரந்தி ஸததம் மகரத்வஜாரே || 29 ||
29. காமனின் பகைவனே! எவர்கள் இரத்தின மயமான மாலைகளையணிந்து கொண்டு ஜண ஜண என்று சப்தம் செய்யும் அழகிய உடலையுடைவர்களாகவும், மிகவும் அதிகமான காம வேட்கை கொண்டு போதை தரும் பானங்களினால் மயக்க முற்று சுழலும் கண்களையுடையவர்களாகவும் உம்மையே எப்பொழுதும் நினைக்கின்றார்களோ அவர்கள் யக்ஷலோக பெண்டிரின் மத்தியில் நீண்டகாலம் பொழுதை இன்பமாகக் கழிக்கின்றார்கள்.
சிற்றின்பத்தின் ஈடுபாடு கொண்ட பெண்டிரும் பக்தி செய்தால் மேம்பட்ட இடத்தை அடைகின்றனர்.
அந்தஸ்ய மே ஹதவிவேக மஹாதனஸ்ய
சோரை: ப்ரபோ பலிபிரிந்த்ரிய நாமதேயை: |
ஸம்ஸார கூப குஹரே விநிபாதிதஸ்ய
தேவேச தேஹி க்ருபணஸ்ய கராவலம்பம் || 30 ||
30. பிரபுவே! மிகவும் பலமுள்ள இந்திர்ரியங்கள் என்னும் திருடர்களால் அறிவு என்னும் பெருஞ்செல்வம் பறிமுதல் செய்யப்பட்டவனும், குருடனானவனும், வாழ்க்கை என்னும் மிகவும் ஆழமான கிணற்றில் தள்ளப்பட்டவனும் செய்வதறியாதவனுமான எனக்கு தேவர்களுக்குத் தலைவனே! கை கொடுத்துதவுங்கள்.
இந்திரியங்களால் தன்னறிவு இழந்தவனை உய்விக்க கை கொடுத்துதவ வேண்டுகின்றார் கவி.
மூடோ விவேக விகலோ(அ) ஸக்ருதூர்த்வபாஹு:
கின்ன ச்ருணோஷி யதஹம் ஹர ராரடாமி |
மாம் தத்ர கர்மணி நியோஜய தேவ யேந
ஸம்ஸார சக்ரஹனம் ந புனர்விசாமி || 31 ||
31. ஹே ஹரனே! பகுத்தறிவில்லாத முட்டாளான நான் கைகளை உயர்த்திய வண்ணம் பலமுறை உரக்கக் கூவுவதை நீங்கள் கேட்கவில்லையா என்ன? ஓ தேவனே! மிகவும் ஆழமான வாழ்க்கைச் சக்கரத்தில் எதனால் நான் மீண்டும் நுழைய மாட்டேனோ அவ்வித வேலையைச் செய்வதில் என்னை ஈடுபடுத்தும்.
பிறப்பிறப்புச் சக்கரத்தினின்று விடுதலை அளிக்க மிகவும் உருக்கமாக வேண்டுகிறார் கவி.
மாயாப்ரபஞ்ச ரசனா சதுரா ஸமஸ்த –
வஸ்து ப்ரபேத பிதுரா சிவ ஸர்வகர்த்ரீ |
ஸம்ஸார பாசவிஷமச்சிதுரா நராணாம்
மோஹாந்தகார பிதுரா ச தவைவ சக்தி: || 32 ||
32. ஹே சிவனே! மாயமான பிரபஞ்சத்தை உண்டாக்குவதில் திறமை, பலரகமான பொருள்களை சேர்த்து வைப்பது, எல்லாவற்றையும் செய்யும் திறமை, வாழ்க்கை என்னும் பாசமாகிற விஷத்தை பிளப்பது, மனிதர்களின் மோஹம் என்னும் இருளைப் பிளப்பது முதலானவற்றிற் கெல்லாம் உமக்குத்தான் சக்தி இருக்கிறது.
சித்வா ஸமஸ்தமசுபம் பவபாசராசிட
மீஷத் ப்ரகாசமவசம் ஸ்வபலாஸினா மே |
தேஜோ நிதானமமலம் பகவன் ப்ரயச்ச
ஸர்வக்ஞதாயுதமசேஷகரம் சிவத்வம் || 33 ||
33. ஹே பகவானே! வெளிப்படையாகக் கொஞ்சமே தெரிவதும் வசப்படுத்த முடியாததுமான எல்லாக் கெடுதல்களையும், பிறப்பு இறப்பு போன்ற பல குவியல்களையும் தன் பலம் என்னும் கத்தியால் களைந்து கொண்டு என்னுடைய தேஜஸின் இருப்பிடம் அழுக்கற்று இருக்க எல்லாவற்றையும் அறிதல், வேலை முழுவதையும் முடித்தல் போன்ற சிவபெருமானின் தன்மையைக் கொடும்.
பாலோ(அ)பி ஸம்ஸ்மரணமாத்ர மசேதனஸ்தே
லிங்கம் கரோதி ஹர பாம்ஸுமயம் வினோதாத் |
அத்யந்த தேச தன தான்ய ஸம்ருத்தி பாஜி
ராஜ்யம் கரோஷி ஹத கண்டகமுன்னதம் ச || 34 ||
34. ஹே ஹரனே! ஒரு சிறு குழந்தையும் பொழுது போக்காக மண்ணாலானதும் உயிரற்றுதுமான உம்முடைய லிங்க உருவைச் செய்கின்றான் எனில் நீர் (அவனை) இடையூறுகள் யாவும் அகற்றப்பட்டதாயும், மிகவும் மேம்பட்டதாகவும் உள்ளதும் பரந்த தேசம், பணம், தானியம் இவைகள் நிறைந்தும் உள்ல இராஜ்யத்தைப் பெறுபவனாகச் செய்கின்றீர்.
பொழுது போக்காக மண்ணால் ஒரு லிங்கம் செய்பவனும் அளவிட முடியாத பலனைப் பெறுகின்றான்.
யே பாபகர்ம குரு தல்பக ஹேம சோர –
ப்ரஹ்மக்ன கோக்ன சபலாதுர பாதகாச்ச |
தே நீலகண்ட பரமேச்வர பாதலக்ன –
நிர்தெளத பாப சசி நிர்மல சுத்த தேஹா: || 35 ||
35. ஹே நீலகண்டனே! எவர்கள் குருவிற்குத் துரோகம் செய்தல், பொன்னைத் திருடுதல், ஒரு அந்தணனைக் கொல்லுதல், பசுவைக் கொல்லுதல் போன்ற பாவச் செயல்களையும், சபலம் அல்லது ஆவல் மிகுதியால் ஏற்பட்ட பாவங்களையும் செய்தவர்களோ அவர்கள் பரமேச்வரனின் பாதத்தைப் பணிந்ததினால் கழுவப்பட்ட பாவங்களையுடையவர்களாய் அழுக்கற்ற சந்திரனைப் போன்ற சுத்தமான தேகத்தை உடையவர்களாக ஆகின்றனர்.
யே த்வாம் விபோ ஸவன காலன கல்பிதேஷு
ஸம்யக்யஜந்தி விவிதேஷு சிவவ்ரதேஷு |
தே சாதுரங்க கன குங்கும பிஞ்ஜரேஷு
வித்யாதரீஷு விலஸந்தி குசாந்தரேஷு || 36 ||
36. எல்லாம் வல்லவரே! எவர்கள் பூஜாகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட பல்வேறான சிவவிரதங்களினால் உம்மை நன்கு வழிபடுகின்றனரோ அவர்கள் அழகிய அங்க அமைப்பைப் பெற்றவரும் அடர்த்தியான குங்குமத்துடன் கூட சிவந்த மஞ்சள் நிறமுடைய ஸ்தனங்களுடன் கூடிய வித்யாதரப் பெண்டிரின் மத்தியில் மகிழ்கின்றார்கள்.
யத்பத்யதே கமல யோனிரபிஷ்டுவம்ஸ்தம்
ஸாக்ஷாத் சதுர்பிரதிநாத முகைர் பவந்தம் |
த்யக்தா வயம் து தன ஸம்ஸ்தவனக்ரியாஸு
பக்தி ப்ரமாணமிதி ஸர்வமிதம் க்ஷமஸ்வ || 37 ||
37. நான்முகனானவர் உம்மை துதித்து எதை அடைந்தாரோ, உண்மையாகச் சொன்னால், அது மிகவும் சக்திவாய்ந்த அவருடைய நான்கு முகங்களினால் உம்மைத் துதித்துப் பெற்றது என்பேன். நாங்களோவென்றால் செல்வத்தைப் புகழும் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள். பக்திதான் பிரமாணம் என்று இவை யாவற்றையும் மன்னித்தருள வேண்டும்.
கங்கா தரங்க ஜல தெளத ஜடாகலாப
காமாங்க தக்த ஸித பஸ்ம விபூஷிதாங்க |
சந்த்ரார்தசூல பணிராஜ விராஜிதாங்க
தேவாதி தேவ தவ பாதயுக்மம் நமாமி || 38 ||
38. கங்கை நதியின் அலைநீரால் கழுவப்பட்ட சடை முடியோனே, காமனின் உடலை எரித்த வெளுத்த சாம்பலால் அலங்கரிக்கப்பட்ட உடலையுடையோனே, பிறைமதி, சூலம், நாகப்பாம்பு இவைகள் அலங்கரிக்கும் உடலையுடையவனே, தேவர்களுக்கெல்லாம் பெருந்தலைவனே உம்முடைய இருபாதங்களை வணங்குகின்றேன்.
ஸ்தோத்ரம் மயா க்ருதமிதம் பவதோ கணேன
வ்ருத்தைர் வஸந்த திலகைச்சிவ மல்ஹணேன |
ஆயாஸமத்ர பகவன் கதிதம் துருக்தம்
பக்தி ப்ரமாணமிதி ஸர்வமிதம் க்ஷமஸ்வ || 39 ||
39. ஹே சிவபெருமானே! உம்முடைய கணமான மல்ஹணனான என்னால் இந்த துதியானது வஸந்த திலமெனும் விருத்தத்தில் செய்யப்பெற்றது. ஹே இறைவனே! இதில் (உங்களுக்கு) ஏற்பட்ட களைப்பையோ அல்லது கூறப்பட்ட கடுஞ்சொற்களையோ (என்) பக்தி தான் பிரமாணம் என்றெண்ணி இவை எல்லாவற்றையும் மன்னித்தருளும்.
உரையாசிரியர் குறிப்பு: -
சிவபெருமானின் ஸ்தோத்திரங்களின் தொகுப்பாக ‘சிவபஞ்சஸ்தவி’ என்று சிறப்பாகக் கூறப்படுபவைகளில் மல்ஹண கவியின் ‘மல்ஹணஸ்தவமும்’ ஒன்றாகும். இந்த ‘பஞ்சஸ்தவீ’யில் மற்ற நான்கும் முறையே புஷ்பதந்தரின் சிவ மஹிம்நஸ்தவமும், தண்டி மஹாகவியின் அநாமய ஸ்தவமும், ஹலாயுதரின் சிவஸ்தவமும், பில்ஹணரின் பில்ஹணஸ்தவமுமாகும். இம்மாதிரி சிறப்பான கெளரவத்தைப் பெற்ற இந்த மல்ஹணஸ்தவம் இது காறும் தேவ நாகரி எழுத்திலோ, அல்லது கிரந்த எழுத்திலோ அச்சிடப்பெற்றதாகத் தெரியவில்லை, தெலுங்கு எழுத்தில் அச்சிடப்பட்டுள்ள ‘பஞ்சஸ்தவீ’* [* சிகந்தராபாத், 1943, பக்கம் 63-98] என்னும் ஸ்தோத்திரத் தொகுப்பிலும், தெலுங்கு மொழி பெயர்ப்பிலும் கிடைக்கிறது. இது தவிர சென்னை கீழ்க்கலை சுவடி நூலகத்தில் ஓலையில் ஸமஸ்க்ருத உரையுடன் பல பிரதிகள் கிடைக்கின்றன.
ஆசிரியரின் வரலாறு:
காச்மீரத்திலுள்ள பாரதீபீட நகரத்தில் ஸுவர்ண பட்டாரகரின் மகனாகப் பிறந்தார் மல்ஹணர். தன் மகனுக்கு நிறைய செல்வத்தை விட்டு மரணமடைந்தார் அவர் தந்தை. ஒரு சமயம் மல்ஹணர் கோவிலுக்குச் செல்லும் பொழுது அங்கு ‘புஷ்பகந்தி’ என்று பெயர் கொண்ட ஒரு தேவதாசியிடம் தன் மனத்தைப் பறி கொடுத்தார். அவளை மல்ஹணி என்றழைத்து, பின்னர் அவளை மகிழ்விப்பதில் தன் செல்வம் யாவையும் இழந்தார். ஒரு நாள் மற்றொரு புதிய செல்வந்தரிடமிருந்து நிறைய பணம் பெற ஆசைகொண்ட அவளுடைய தாய் அவளை நாடி வந்த மல்ஹணரைத் துரத்தி விட்டாள். ஆனால் மல்ஹணரின்பால் உண்மையான அன்பு கொண்டிருந்த மல்ஹணி அந்தப் புதிய செல்வந்தன் அறியாத வண்ணம் நள்ளிரவில் மல்ஹணரைச் சந்திக்க ‘விஜயேசுவரரின்’ ஆலயத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டாள். அப்படி சந்திக்கும் பொழுதெல்லாம் தன்னை மகிழ்விப்பதை விட்டு சிவபெருமானைப் போற்றுவதில் ஈடுபடுமாறு மல்ஹணருக்கு அவள் அறிவுரை கூறினாள். மல்ஹணரும் அவள் கூற்று சரி என்று ஒப்புக்கொண்டார். இருப்பினும் தன் உள்ளம் பூராவும் கவர்ந்து அதிலே அவள் குடி கொண்டிருப்பதால் அவளைத்தவிர தன்னால் யாரையும் நினைக்கக்கூட முடியாது என்றும் ஒரு வேளை சிவலிங்கத்தினருகே அவள் நின்றால் அவரால் சிவனாரைத் துதித்துப் பாட முடியலாம் என்றும் கூறினார். இவ்விதமாகத்தான் 39 செய்யுட்களைக் கொண்ட இந்தத் தோத்திரமானது இயற்றப்பட்டது என்று கூறப்படுகிறது. கடைசியில் சிவனார் அவர் முன்தோன்றி அவரையும், மல்ஹணியையும், அவள் தாயையும், அவள் வளர்த்த கிளையையும் பிறவிக் கடலிலிருந்து உய்வித்ததாகக் கூறப்படுகிறது.
அவருடைய காலம்:
அவர் வாழ்ந்திருந்த காலத்தைப் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறுவதற்கில்லை. அவர் காச்மீரத்தைச் சார்ந்தவர் என்று முன்னரே கூறப்பட்டது. கி. பி. 1230-ல் வாழ்ந்த ‘பால் குரிக்கி ஸோமநாதர்’ என்னும் சைவர் தன்னுடைய ‘பண்டிதாராத்ய சரித்திரம்’ என்னும் சைவ வரலாற்று நூலில் மல்ஹணரின் வரலாற்றைப் பற்றி கூறியுள்ளார். பின்னர் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ‘விச்வாராத்யர்’ என்பவர் ஸம்ஸ்க்ருதத்தில் அதற்கு விரிவுரை ஒன்றை எழுதினார். ‘ஊரே தேசயாமாத்யர்’ என்பவருடைய ஸம்ஸ்க்ருத உரையும் ஓலைச் சுவடிகளில் கிடைக்கின்றன.
சிவமஹிம்நஸ்தவத்திற்கடுத்தபடியாக மிகவும் சிறப்பாகக் கூறப்படுவது இந்த ஸ்தோத்திரம். ‘புஷ்பதந்தி’ என்னும் பதம் இந்த ஸ்தோத்திரத்தில் முதல் செய்யுளில் காணப்படுவது அவருக்கு மனத்திற்கினிய ‘புஷ்பதந்தி’ என்னும் பெண்மணியினால் தான். இது விஷயத்தில் ‘சிந்தாமணி’ என்ற தனக்கு விருப்பமான பெண்மணியின் பெயரை தன் காவியத்தில் சேர்த்திருக்கும் ‘பில்வமங்கலரின்’ போக்கை ஒத்திருக்கிறது இவரது போக்கு.
இந்த ஸ்தோத்திரத்தில் செய்யுட்கள் யாவும் ‘வஸந்த திலகா’ விருத்தத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்று கவியே தன்னுடைய கடைசி செய்யுளில் கூறுகின்றார். சிவனைத் துதிப்பதாலேயே எல்லாவிதமான இன்பங்களும் கிடைக்கின்றன என்பதே இத்துதியின் ஸாரம்.
மல்ஹண ஸ்தோத்ரம் உரையுடன் முற்றிற்று.