இது
திருக்கயிலாயபரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்திரண்டாவது குருமகாசந்நிதானம்
ஶ்ரீ-ல-ஶ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள்
கட்டளையிட்டருளியபடி
வெளியிடப்பெற்றது
திருவாவடுதுறை ஆதீனம்
1975
உ
கயிலாய பரம்பரையிற் சிவஞான
போதநெறி காட்டும் வெண்ணைப்
பயில்வாய்மை மெய்கண்டான் சந்ததிக்கோர்
மெய்ஞ்ஞான பாநு வாகிக்
குயிலாரும் பொழிற்ற்றிருவா வடுதுறைவாழ்
குருநமச்சி வாய தேவன்
சயிலாதி மரபுடையோன் திருமரபு
நீடுழி தழைக மாதோ.
- ஶ்ரீ மாதவச்சிவஞானயோகிகள்
உ
சிவமயம்
முன்னுரை
பாதிப் பெண்ணொரு பாகத்தன் பன்மறை
ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள்
ஆதி ஆவடு தண்டுறை மேவிய
சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.
- திருநாவுக்கரசர்.
திருச்சிற்றம்பலம்
உலகத்தில் சிறந்த பிறப்பெடுத்த மக்கள், தமக்குக் கிடைத்துள்ள உடம்பையும் அதன் சார்புகளையும் கொண்டு நல்லறங்களை ஒல்லும் வகையாற் செய்து தமக்கும் பிறர்க்கும் உறுதியினையும் இன்பத்தினையும் வளர்த்தல் வேண்டும். அறங்கள் பலவற்றுள்ளும் தலையாயதும், வேராக உள்ளதும் கடவுள் வழிபாடே ஆகும். ஆதலினாற்றான் திருவள்ளுவனார் தாம் இயற்றிய அறநூலின் பாயிரத்தில் முதற்கண் கடவுள் உண்மையை வலியுறுத்தி, அக்கடவுளைத் தொழுவது கற்றறிவின் பயன் எனவும், அக்கடவுளை அறவாழி அந்தணன் எனவும் அறிவுறுத்துவாராயினர். இவ்வழிபாட்டை ஒருவர் மேற்கொண்டு எளிதற் பயன்பெறுதற்குரிய முறையாவது அன்றாடம் குறிப்பிட்ட நேரங்களில் அமைதியுடன் இருந்து, சிலவகை நினைவுப்பயிற்சிகளை முறையாகச் செய்து வருவதே ஆகும். அப்பயிற்சிகள் அநுட்டானம், பாராயணம் எனும் இரண்டில் அடங்கும். ஏதேனும் ஓர் உருவில் இறைவனுக்கு மலர்தூவி வழிபடுதலும் வேண்டும். அநுட்டானமானது உடம்பைத் தூய்மை செய்து கொண்டு, தூயசூழ் நிலையில் திருநீறு அணிந்து, திருவைந்தெழுத்தைக் கணிப்பதே ஆகும். பாராயணம் என்பது தமிழ்மறைகளாகிய திருமுறைகளை, திருவைந்தெழுத்தும் திருமுறைகளும் முழுமுதற் கடவுளது மந்திர சரீரம் என்பது கடைப்பிடிக்கத்தக்கது. திருநீறு இறைவனது திருவருளாற்றலாகிய பராசத்தியார் திருவுரு; எல்லா ஐசுவரியங்களுக்கும் மூலமாயுள்ளது. திருநீற்றுப் பூச்சைக் கவசம் எனவும் திருவைந்தெழுத்தை வினைப்பகையை அழிக்கும் அத்திரம் எனவும் அருளாசிரியன்மார் கூறியுள்ளனர். (அநுட்டானம் – ஒழுக்கம்; பாராயணம் – நியதியாகப் படித்தல்.)
இவற்றை மேற்கொள்ளும் போது, வாழ்க்கையில் உடம்பிற்கும், உள்ளத்திற்கும் ஏற்படக்கூடிய இன்னல்களைத் தடுத்துக்கொண்டு, உயிர்க்கு உறுதி பயக்கும் நன்னெறியில் இனிது செல்வதற்கும், இவற்றினால் எய்தும் பயனை வலியுறுத்துதற்கும் கவசம் என்னும் பெயரில் உள்ள வேண்டுகொள் நூல்கள் பெரியோர்களாற் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் சிவகவசமும் ஒன்று.
கவசம் என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளுதல் இன்றியமையாதது. போர்வீரர்கள் பகைவர்கள் தம்மேல் எறியும் படைகளால் தம் உடம்பிற்கு ஊறுநேராதபடி பாதுகாப்பாக அணிந்துகொள்ளும் உலோகத்தினாலாகும் சட்டையே கவசம் எனப்படும். அதுபோல மக்களது உடம்பும் உள்ளமும் நோய், கவலை முதலியவற்றினால் தாக்கப்படாதபடி பாதுகாப்பு அளிக்கும் தோத்திரமே கவசமாகும். கவசத்தில் வரும் இறைவன் திருப்பெயர் ஒவ்வொன்றும் அவன் திருவருளின் ஒவ்வோரியல்பு, அவன் மேற்கொண்ட ஒவ்வோர் அவதர மூர்த்தம் என்பவற்றைக் குறித்து நின்று, நினைப்பவன் நினைந்த பயனை எய்து விப்பன. ஆதலால், இப்பெயர்கள் பொருள் உணர்ந்து நெஞ்சிற் பதியவைத்து உச்சரிக்கத்தக்கவை.
இங்கே விளக்கவுரையுடன் கொடுக்கப்படுவது பிரமோத்தர காண்டத்தில் பன்னிரண்டாவது அத்தியாயமாக வந்துள்ள சிவகவசம்.
சூதமுனிவர் நைமிசவனத்து முனிவர்களுக்குத் திருவைந்தெழுத்தின் பெருமை முதலாகச் சைவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கங்களின் இயல்பை இலக்கண வகையாலும், வரலாறு வகையாலும் உணர்த்தியதே பிரமோத்தர காண்டம். இதனை வரதுங்கராம பாண்டியன் என்னும் அரசகவி அழகிய தமிழ்ச் செய்யுளாக, மெய்யன்பையும் மெய்யுணர்வையும் வளர்க்கும் முறையில், மொழிபெயர்த் தருளிச் செய்துள்ளார். விடபயோகீசர் என்னும் ஒரு முனிவர் நோயுற்றிறந்த அரச குமாரனாகிய குழந்தையை, அதன் தாயின் கையறு நிலைக்கு இரங்கி, உயிர்ப்பிக்கின்றார். திருநீற்றை உடம்பின்மேல் தெளித்துத் திருவைந்தெழுத்தைச் செவியில் ஓதியதும் குழந்தை நோயும் மரணமும் நீங்கி எழுகின்றது. முனிவர் அக்குழவிக்குப்பத்திராயு எனப்பெயர் வைத்து வாழ்த்திச் சென்றுவிடுகிறார். (இடபமுனிவர் எனினும் வழுவாகாது.)
பத்திராயு பதினாறாண்டு இளங்குமரனாக வளர்ந்து பொதுவறிவு பெற்றுத் திகழும்போது, மீள அம்முனிவர் வந்து, அவனுக்கு அரசியல் துறையறிவைப் புலன்கொளுவி, உயர்ந்த வரங்களும் கொடுக்கின்றார், இவையெல்லாம், அவன் முன்பிறப்பில் தன் காதலியுடனிருந்து, அச்சிவயோகியரை ஓர் இரவு விருந்தாக ஏற்று உபசரித்ததன் பயனாக நிகழ்கின்றன. அவன் அரசாட்சி புரிந்து வாழும்போது, அவனுக்கும் அவன்றன குடிமக்களுக்கும் எவ்வகை இன்னலும் இடையூறும், வறுமை, நோய், முதலிய கவலைகளும் உண்டாகாமைப் பொருட்டுச் சிவகவசத்தை உபதேசித்து வாழ்த்தி நீங்குகிறார்.
இக்கவசத்திற்கு அவர் கூறிய முன்னுரை,
அவ்வண்ணம் நீயும் கடைப்பிடித தொழுகி
அரனடிக் கமலமே அரணாய்ப்
பவ்வநீர் உலகம் முழுவதுந் தனிவெண்
பனிமதிக் கவிகையிற் புரப்பாய்!
வெவ்வினை அகற்றும் சிவகவ சமும்யான்
விளம்புகேன்; உனக்கது விரவாத்
தெவ்வினை யொறுக்கும், சயந்தரும்,
பாவம் அறுத்திடும் என்றுசெப் பினனால்
என்பது;
யாம் கூறியபடி நல்லொழுக்கத்தை மேற்க்கொண்டு, சிவனடியைச் சிந்தையில் நிறுவி உலகம் முழுவதையும் ஒருங்கு ஆள்க! கொடிய தீவினைகளைப் போக்கவல்லது சிவகவசம்; அதனை யாம் உனக்கு உபதேசிப்போம்; அதை நியதியாக ஓதி வந்தால் உனக்குப் பகைவர் இரார்; வெற்றியே யாண்டும் உளதாகும்; எவ்வகைப் பாவத்தையும் நீக்கி இன்பத்தைப் பெருக்கும் என்று கூறினர். அக்கவசம் விளக்கவுரையுடன் இங்கே தரப்படுகின்றது.
நாள், கோள், வினை முதலியவற்றால் பேதிக்கப்படாத இவ்வைரக் கவசத்தை, நாடோறும் நியதியாக மனத்தில் தரிப்பவர் இன்னல் பலவும் நீங்கி, உறுதி பலவும் எய்தி இன்புறுவர் என்னும் திருவுள்ளக்கிடையால், திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 22-வது குருமகாசந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் கட்டளையிட்டருளியபடி, அவர்களது ஜன்ம நட்சத்திர மலராக, இஃது அச்சிட்டு வழங்கப்பெறுகின்றது. அன்பர்கள் ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களது அருளாசியோடு இதனைப்பெற்று நன்றிக்கடன் பாட்டு உணர்வுடன் நியதமாக ஓதி இம்மை, மறுமை நலன்களை எளிதிற்பெற்று இன்புறுவார்களாக.
அடியேனை நன்னெறிப் பாற்படுத்துப் பணி கொண்டு பரிபாவித்துவரும் ஶ்ரீலஶ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களது பொன்னார் திருவடிகளை மனமொழிமெய்களால் வந்திக்கின்றேன்.
இங்ஙனம்,
திருவாவடுதுறை, க. வச்சிரவேல் முதலியார்,
7-1-1975, ஆதின வித்துவான்.
உ
சிவமயம்
பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
அங்குநற் பூத சுத்தி அடைவுடன் செய்த பின்னர்க்
கங்கையைத் தரித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
கொங்கைவெற் பனைய பச்சைக் கொடியொடு முளத்தில் வைத்தே. 1
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,
துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம்
தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க. 2
குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்
தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்
நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய
விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க. 3
கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க. 4
தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள்
மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்அனைய தேகம்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க. 5
மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை
கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை
நான்முகம் முக்கண் நீல நல் இருள் வருணம் கொண்டே
ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க. 6
திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க
அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தோடு அபயம் தாங்கக்
கவின்நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்
தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க. 7
கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப்
பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற் மேனியோடும்
மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க. 8
அங்குசம் கபாலம் சூலம் அணிவதர அபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்
திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க. 9
சந்திர மவுலி சென்னி தனிநுதல் கண்ணன் நெற்றி
மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்
கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி
அந்தில் செங் கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும். 10
வளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்
களம் அடு பினாகபாணி கையினை தரும வாகு
கிளர்புயம் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவில்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன். 11
இடைஇப முகத்தோன் தாதை உந்தி நம் ஈசன் மன்னும்
புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில் வாமம்
படர்சக தீசன் சானு பாய்தரும் இடப கேது
விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க. 12
வருபவன் முதல்யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்
பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்
செருமலி மழுவான் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்
பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க. 13
கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க
தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க
பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க
பங்கமில் நாலாம் யாமம் கவுரிதன் பதியே காக்க. 14
அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்
தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புறமும் தாணு
வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்
நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க. 15
நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி
பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத
அற்புத வேத வேத்தியனும், துயில் கொள்ளும் ஆங்கண்
தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க. 16
மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்
சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க
கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்
பலபட நடிக்கும் வீர பத்திரன் முழுதும் காக்க. 17
பல்உனைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா
வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்திடும் எண்ணில் கோடி
கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை
வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க. 18
தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்
பைத்தலை நெடிய பாந்தன் பல்தலை அனைத்தும் தேய்ந்து
முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்
பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க. 19
முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கன்
அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்
திடம்பட நினைத்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை
உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குவவுத் தோளாய்! 20
பஞ்ச பாதகங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
அஞ்சலில் மறலியும் அஞ்சி ஆட்செயும்
வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்
தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால். 21
திருச்சிற்றம்பலம்
உ
சிவமயம்
சிவ கவசம் என்னும் பெயர் சிவமாகிய கவசம் என்னும் பொருளைத்தரும். சிவமாவது உண்மை, அறிவு, அளவுபடாமை, மாறுதல் இல்லாத பேரின்பம் (சத்தியம், ஞானம், அநந்தம், ஆனந்தம்) என்னும் நான்கு குணங்களையுடைய சோதிவடிவச் செம்பொருள். அப்பொருளின் நிறைவில் அடங்கியுள்ளவைதான் எல்லாவுயிர்களும், ஏனை மாயாகாரியப் பொருள்களும் அச்சிவப் பேரொளியில் அடங்கி, அதனால் செலுத்தப்பட்டு இயங்குவனவே ஆகும்.
உலகமே சிவனது வடிவம், உயிர்களெல்லாம் அவ்வடிவில் உள்ள உறுப்புக்களிற் பொருந்திய உணர்ச்சிமுனைகள்; பரசிவம் அவ்வடிவின் உயிர்; அப்பரம்பொருள் உயிர்கள் மூலமாகச் சராசரங்களையும் அண்டத்தையும் தொடர்புகொள்ளும் உட்கரணங்கள் அதன் அறிவு விழைவு செயல் ஆற்றல்கள். இங்ஙனம் பரமசிவன் உலகம் முழுவதையும் இடங்கொண்டு, அவற்றை நடத்திவருகிறான். இறைவனது இச்செயலே அதிசூக்கும பஞ்சகிருத்தியம் எனப்படும். இதனால் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பது எளிதின் விளங்கும். இவ்வாறு உலகப் பொருள்களை இடங்கொண்டு, அவற்றைத் தன் பெருநிறைவில் அடக்கி ஆளுதலால், முதல்வனுக்குத் தமிழில் இறைவன் என்ற பெயரும், ஆரியத்தில் ஈசன் என்ற பெயரும் உளவாயின. இவ்விரு பெயர்களும் சிவபிரானையே குறித்து வழங்கிவருதலைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் வரும் ஆட்சிபற்றி உணரல் ஆகும். இவ்விழுமிய கருத்தை அடிப்படையாகக் கொண்டு, சிவபிரானது திருவருளாற்றலின் கூறுகளை ஒவ்வொரு பெயரிட்டு ஒருவன் உடம்பிற்கும், உள்ளத்திற்கும், உயிர்க்கும் கவசமாக அமைத்துக்கொள்ளுதல் தான் சிவகவசத்தால் நாம் பெறும் பயன். ஆரியத்தில் இது “சர்வக்ஷாகரம் சிவமயம் வர்ம” எனக் குறிக்கப்படுகிறது. வர்ம – கவசம்:
சிவகவசத்தில் 21 செய்யுள்கள் உள்ளன. இவற்றில் முதற்செய்யுள் கவசத்தை ஓதப்புகும்போது மேற்கொள்ள வேண்டிய இருக்கை நிலையினையும் தியான முறையினையும் தெரிவிக்கின்றது. 21 ஆம் பாட்டு சிவ கவச பாராயணத்தால் வரும் பயன் உணர்த்துகின்றது. இடையில் உள்ள பாடல்கள் சிவன் திருவருளைக் கவசமாக அமைத்துக் கொள்ளும் நினைவுப்பயிற்சியைத் தருகின்றன. எல்லாப்பாடல்களும் அமைதியான உள்ள நிலையோடு, சொல்லும் பொருளும் பருந்தும் அதன் நிழலும் போல் மனத்தில் தோன்றிவிளங்கும்படி, அமைதியாக, விரையாது, வெகுளாது, உறங்காது உன்னத்தக்கவை.
சிவபிரானுக்கு அட்டமூர்த்தி என்பது சிறப்புப் பெயர். அவனுக்கு ஐம்பொருள் பூதமும், ஞாயிறும், திங்களும், வழிபடுவோனாகிய உயிரும் வடிவாக உள்ளன. அஷ்ட – எட்டு, மூர்த்தி – வடிவு. 2, 3 - வது செய்யுள்கள் பூத உருவினனாகிய சிவபிரான் நிலம் முதல் காற்றுவரை உள்ள பூதங்களால் வரக்கூடிய இன்னல்களைத் தடுத்துக் காக்கவேண்டும் என்று வேண்டுகின்றன. 5 முதல் 9 வரை உள்ள பாடல்கள் நாற்றிசையிலும் ஆகாயத்திலும் சிவன்றன் தற்புருட மூர்த்தம் முதலியவை முறையே காக்கவேண்டும் என்று வேண்டுகின்றன. 10 முதல் மூன்று பாடல்கள் முடிமுதல் அடிவரை உறுப்புக்களைக் காக்க வேண்டும் என வேண்டுகின்றன.
13, 14 ஆம் செய்யுள்கள் ஒரு நாளை எட்டு யாமமாக்கி அவை ஒவ்வொன்றிலும் தீங்கு நிகழாமற் காக்க என வேண்டுகின்றன. 15, 16 ஆம் செய்யுள்கள் முறையே இருப்பிடம் பற்றியும் மேற்கொள்ளும் செயல்கள் பற்றியும் தீங்கு வாராமையை வேண்டுகின்றன. வழிச்செலவில் இன்னல் வராமையை 17 – ஆம் பாட்டு விழைகின்றது. 18, 19, 20 ஆம் பாட்டுக்கள் முறையே பகைவரையும், கள்வரையும், கொடிய விலங்குகளையும் அழித்துத் தன்னைக் காக்குமாறு வேண்டுகின்றன.
1. ஒருவன் தூய்மையான இடத்தில், தன் உடலின்கண் பற்றை நீக்கித் தாமரை இருக்கையில் அமர்ந்து, முறையாகப் பூதசுத்தியைச் செய்க. பின் கங்கையாற்றினை முடியிற் கொண்டவனும் வேண்டியதை ஈயவல்லவனும் ஆகிய சிவபிரானை செம்பொன் கணங்கு பூத்த மலைபோன்று பருத்துக்கு விந்த முகைகளையுடைய பசுங்கொடி போன்ற உமையம்மையை ஒருபாகங் கொண்டவராகத் தியானிக்க என்றபடி.
சிவகவத்தைச் சொல்லப்புகும்போது, திருநீறு அணிந்து பிராணாயாமஞ் செய்து திருவைந்தெழுத்தை இயன்ற உருச்செபித்து மன அமைதியோடு இந்திரியங்களின் குறும்புகளையும் பிராணசத்தியின் சிதைவையும் அடக்கியிருத்தல் வேண்டும். தாமரை இருக்கை என்பது அடிகளைத் தொடைகளின் மேல் மாறிவைத்து உள்ளங்கால் மேலே தோன்றும்படி அடக்கி முதுகு எலும்பு வளையாதபடி நிமிர்ந்திருத்தல். கைகளை முழந்தாள்களின் மேல் இருத்தியோ, ஒன்றன்மேல் ஒன்று பொருந்த மடியின்மேல் வைத்தோ, உடம்பிற்கு வருத்தமின்றி அமரவேண்டும்; பூதசுத்தி என்பது ஐம்பூதங்களாகிய பருவுடம்பு சிவனொளியில் மறைந்து மீள உண்டானதாக எண்ணுதல்; பரவுடம்பு எனப்படும் முப்பத்தாறு தத்துவங்களின் ஒடுக்க முறையும் தோற்றமுறையும் நினைந்து எல்லாம் சிவமயம் ஆனதாக எண்ணுதல் வேண்டும். உடம்பு, உயிர்ப்பு, உள்ளம் மூன்றும் ஒன்றிச் சிவநினைவில் ஒன்றுபட வேண்டும் என்பது கருத்து.
2. எல்லாவற்றிற்கும் தலைவனும், அறிவின்பப்பிழம்பானவனும், மிகச்சிறிய அணுவாயும் மிகப்பெரிய மலையின் தோற்றமாயும் இருந்து உயிர்களைத் தக்கபடி தாங்கிநிற்கும் இறைவன் எங்களை இந்த உலகில் தீங்கு அடையா வண்ணம் காத்தருளக.
நில அதிர்ச்சி, நிலச்சரிவு, முதலியவற்றால் துன்புறாமல் காக்க; நீயே நிலவடிவில் உள்ளவன் என்றபடி, அன்னமய கோசம் எனப்படும் பருவுடலைக் காக்க என்றதும் ஆம்.
3. ஒலியோடு கூடிய தண்ணீர் வடிவில் எல்லா உயிர்களுக்கும் உணவும் உண்ண நீருமாகி அவை தளர்ச்சி அடையாதபடி காத்துவரும் முதல்வன் வெள்ளப்பெருக்கில் வீழ்ந்து இறவாதபடி எம்மைக் காக்க. இவ்வெள்ளம் மேகங்கள் வரிசை வரிசையாக, பெரிய மலைச்சரிவுகளில் மழையைப் பெய்தலால் பெருக் கெடுத்து வருகின்றது.
பிராணமயகோசம் எனப்படும் கனவுடலாகிய நுண்உடலைக் காத்தருள்க என்றதும் ஆம்.
4. ஊழிமுடிவில் எல்லா உலகங்களையும் தனது தெய்விகத்தீயால் நீறாக்குகின்றான் சிவபிரான்; அந்த முற்றழிப்பு நிலமாகிய சுடலையில் நின்று மாசற்ற உமையம்மை உடனிருந்து பாணி, சீர், தூக்கு என்னும் தாளவகைகளைக் காட்டித் தாளத்தைக் கொட்டுகிறாள். சிவன் அந்நள்ளிருளில் தன் ஒளியொன்றே இலக வீரநடனம் செய்கின்றான். சுடலையாடியாகிய இம் முதல்வன் எம்மை இவ்வுலகில் வழியிடை வளைத்துக் கொள்ளும் அங்கியினின்றும், சூறைக்காற்றினின்றும் எமக்குப் பாதுகாப்பளித்தருள்க.
அடலை – சாம்பர், நீறு; தாபம் – நெருப்பு, அமலை – மலம் இல்லாதவள், உமை. தாளம் அறைதர – தாளத்தை ஓற்றறுத்துக் காட்ட.
முற்றழிப்புக் காலத்திலும் சிவன் சும்மா இருப்பதில்லை; தலைமையாசிரியர் வேனிற்கால விடுமுறையிலும் சும்மா இருப்பதில்லை யல்லவா? அடுத்த ஆண்டில் வகுப்புக்கள் அமைப்பு, பாடத் திட்டம் முதலியவற்றை எண்ணித் துணிவார். அதுபோல, இறைவனும் உயிர்களின் வினைகளைப் பக்குவப்படுத்தி, புதுச்சிருட்டிக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறார். இது சூக்கும பஞ்சகிருத்தியம் என ஆகமங்களிற் பேசப்படுகின்றது.
இது மனோமய கோசமாகிய குண சரீரத்தை ஒழுங்கு செய்து காக்க என்றதும் ஆம்.
5. இதுமுதல் ஐந்துபாட்டுக்கள் சிவபிரானது போகாங்கம் எனப்படும் தத்புருடன் முதலிய ஐந்தொழில் மூர்த்திகளுடைய தியானவடிவம் கூறப்படுகின்றன.
தத்புருடமூர்த்தி நான்கு திருமுகங்களையும், முகங்கள் தோறும் மூன்று தூய திருக்கண்களையும் உடையவர்; திண்ணிய நான்கு புயங்களை உடையவர்; மின்னலை ஒத்த ஒளியுடையவர்; எடுத்த கைகளில் இடம் வலமாக மானையும் பரசுவையும் ஏந்தியவர்; அவற்றின் கீழே மார்பிற்குச் சமமாக உள்ள கைகளினால் வரதம் அஞ்சல் என்னும் அடையாளங்களைக் காட்டுபவர். இவர் எம்மைக் கிழக்குத்திசையில் காத்தருளக.
இதனால் இவர் கிழக்கு நோக்கி உள்ளனர் என்பது பெறப்படும். வரதம் – விரும்பியஹ்டைக் கொடுப்பேன் என விரல்களைக் கீழ்நோக்கி நீட்டி அமைத்துள்ல முத்திரை. வரம் – விரும்பியது. த – கொடுத்தல். அபயம் – அச்சம் வேண்டா எனக் குறிப்பிக்கும். விரல்களை மேல் நோக்கி நீட்டி அமைத்த வலக்கை தத்புருடன் – அவ்வப் பொரு தோறும் அதுவது வாய் மறைந்துள்ளவன்.
6. அகோரமூர்த்தி கறுப்பு நிறம் உடையவர்; நான்கு முகங்களும், எட்டுப் புயங்களும் முக்கண்ணும் உடையவர், திருக்கைகளில் மான், மழு, முத்தலைவேல் கோடரி, அழகிய அக்கமணிமாலை, வளைவாகிய அங்குசம், தீக்கொழுந்து, துடி என்னும் கருவிகளை ஏந்தி விடையின்மீது ஊர்ந்து வருபவர். இவர் தெற்குத் திசையில் காத்தருளக.
நோட்டி – கோடரி; நயனமாலை – அக்கமாலை; அக்ஷம் – கண். அகோரம் – கோரம் இல்லாதது; பாவத்தை அபகரித்து ஞானத்தைத் தருவது.
7. சத்தியோசாதமூர்த்தி வெண்மையான நிறம் உடையவர்; திருக்கைகளில் பாயும் மானையும் அக்க மாலையினையும் வரதம் அபயம் என்னும் முத்திரைகளையும் உடையவர். இவர் எம்மை மேற்குத் திசையில் காத்தருளக.
திவளுதல் – அசைதல், இங்குத் தாவுதல்; மறி – மான், வடமொழிச் சுலோகத்தில் வேதம் என வருதலின், மான் வேதத்தைக் குறிக்கும் எனக்கொள்க. சத்ய – விரைவு, சாதம் – தோன்றுதல், தோற்றுவித்தல்; இவற்றிலிருந்து சத்தியோசாதன் என்ற பெயர் வந்துள்ளது. இம்மூர்த்தி மந்திரங்களைக் கணிப்போர்க்கு உடனுக்குடன் மந்திர சரீரத்தைத் தோற்றுவிப்பவர்; புதுப்புது ஞானத்தைத் தோற்றுவிப்பவர். தந்தை நன்மகன்கண் தோன்றுவதுபோல, முதல்வன் தன் ஞானப்புதல்வர்களிடத்து இடையீடின்றி விளங்கி நிற்பன; இக்கருத்தையும் இம்மறைமொழி உணர்த்துவதாகக் கொள்வர். சனற்குமாரர், திருஞானசம்பந்தர் முதலிய ஆசிரியர்களிடத்து இறைமை தோன்றினமை எடுத்துக்காட்டாகக் கொள்ளப்படுகிறது. மூப்பில்லாத அறிவுத்தத்துவம் என்பர்.
8. வாமதேவமூர்த்தி செம்பொன் நிறம் உடையவர்; நான்கு திருமுகங்களும் முக்கண்களும் உடையவர்; தம் நான்கு திருக்கைகளில் மழுவும், அக்க மாலையும், வரதம், அஞ்சல் என்னும் முத்திரைகளையும் உடையவர்; இவர் வடதிசையில் காத்தருள்க.
வாமம் – இடப்பக்கம், அழகு; தேவன் – ஒளிஉருவினன், அழகின் திருவுருவாய் அம்மையின் ஆண் வடிவாய் இருந்து அறம் பொருள் இன்பங்களை உயிர்களுக்கு அருளும் மூர்த்தி, வாமம் என்பது தாழ்வு எனவும் பொருள்படும். உறுதிப்பொருள்கள் நான்கனுள் வீடு நீங்கிய ஏனைத்தாழ்ந்த உறுதிகளை அளிப்பவன் என மிருகேந்திரம் கூறுகின்றது.
கறைகெழு மழு – குருதிதோன்றும். பரசு, இன அடை.
9. ஈசானமூர்த்தி திங்கள்போன்ற ஒளி உள்ளவர்; ஐந்து திருமுகங்கள் பத்துத் திருக்கைகள் உடையவர்; கைகளில் அங்குசம், கபாலம், முத்தலைவேல், வரதம், அபயம், சங்கம், மான், பாசம், அக்கமாலை, துடி என்பவை உள்ளன. இவர் ஆகாயம் (மேல்வெளி) எங்கணும் காக்க!
அணி – அடைமொழி.
இனி முடிமுதல் அடிவரை பாதுகாப்பு வேண்டப்படுகிறது. 10, 11, 12; பிறைமுடித்தோன் சென்னியைக் காத்தருளக; கண்ணுதலோன் நெற்றியை, பகன் என்னும் பகலவன் கண்ணைப் பறித்தவன் கண்களை, அனைத்திற்கும் தலைவன் (விசுவநாதன்) மணம் கவரும் நாசியை, வேதம் சொன்னோன் செவிகளை, காபாலி செவ்விய கன்னங்களை, ஐம்முகங்களை உடையோன் முகத்தை (வாயை)க் காத்தருள்க!
மறைநவில் நாவன் நாவை, மணிமிடற்றந்தணன் கழுத்தை, பினாகபாணி இருகைகளை, அறத்தைக் காக்கும் புயமுடையோன், புயங்களை, தக்கன் வேள்வி தகர்த்தவன் மார்பை, பொன்மலை வில்லோன் வயிற்றினைக் காத்தருளக!
காமனை எரித்தோன் இடுப்பை, ஆனைமுகன் தாதை கொப்பூழை, நம்மை ஆள்வோன் புடைவளரும் அரையை, குபேரனது நண்பன் தொடைகளை, நிறைந்த உலகநாதன் முழந்தாள்களை, ஏற்றுக் கொடியோன் நெருங்கிய கணைக்கால்களை, நின்மலன் செவ்விய அடிகளைக் காத்தருள்க.
10. அந்தில் – அசைநிலை; கொந்து – பூங்கொத்து, இங்கு அதற்கு இயல்பாக உள்ள வாசத்தைக் குறிக்கின்றது. கபோலம் – கன்னம், பகன் – பன்னிரு பகலவர்களில் ஒருவன்; தக்கனின் யாகத்திற் கலந்துகொண்டமையால் வீரபத்திரால் கண்பறிக்கப்பட்டான்; பகநேத்ரபித் – என்பது சிவபிரானின் பெயர்களுள் ஒன்று. 11. களம் – கழுத்துல் பினாகம் – சிவபிரான் ஏந்தும் வில்லிற்குப் பெயர்; உதரம் – வயிறு, 12. இடபகேது – ஏற்றுக்கொடியோன், கேது – கொடி; சானு – முழ்ந்தாள். மிடைதரு என்பதற்குப் பதில்விடை நெறி என்பதும் பாடம்; அப்பாடத்திற்கு எருத்தின் முரிப்புப்போன்ற கணைக்கால் என்பது பொருள்; நெறி – திமில், முரிப்பு (கொண்டை). 11 – ஆம் பாட்டின் ‘மன்மதனைக் காய்ந்தோன்’ என்பதை அடுத்துவரும் பாட்டின் முதற்சொல் ‘இடை’ என்பதோடு கூட்டிப் பொருள்கொள்க.
அடுத்துவரும் மூன்று பாட்டுக்கள் காலம் இடம் என்பவற்றால் இன்னல் நேராதபடி காக்கப்படுதலை வேண்டுகின்றன.
13. பவன் என்னும் திருப்பெயரினன் பகலின் முதல் யாமத்தும், மகேசன் இரண்டாம் யாமத்தும், வாமதேவன் மூன்றாம் யாமத்தும், திரயம்பகன் நாலாம் யாமத்தும் ஆக, பெருவலியினனும் விடைஊர்வோனும் ஆகிய முதல்வன் எப்பிணியும் வாராமல் காக்க!
பவன் என்னும் பெயர் எக்காலத்தும் எவ்விடத்தும் உள்ளவன் என்னும் பொருளைத்தரும்: இச்சொல்லின் மூலம் பூ; ஸத் என்னும் பொருள் உடையது. மகேசன் – தொழப்படும் பெருமையுள்ள ஆண்டவன். திரயம்பகன் – முக்கண்ணன்; அம்பகம் – கண். அம்பிகை என்னும் சொல்லின் ஆடுஉ வறி சொல்லாகக் கொண்டு அம்பகன் என்பதைத் தந்தை எனவும் உரைப்பர்; அவர் கருத்தின்படி மூவுலகு. மூவுடல் என்பவற்றிற்குத் தந்தை சிவபிரான் என்பதும் உடன்கொள்ளப்படும். பெருவலியை இடபத்திற்கு அடையாக்கியும் உரைக்கலாம்.
14. இரவின் முதல் யாமத்தில் பிறைசூடிய முடியினன் காக்க! இரண்டாம் யாமத்தில் கங்கையைச் சடையிற் கரந்தோன் காக்க! மூன்றாம் யாமத்தில் சடைமுடிக்கடவுள் காக்க! நான்காம் யாமத்தில் அழிவற்ற உமாபதி காத்தருள்க!
சானவி – கங்கை; சன்னுமுனிவர் மகள் என்பது சொற்பொருட் காரணம்.
15. எல்லாக் காலங்களிலும் காலகாலனாகிய சிவபெருமான் காக்க! தனி முழுமுதலாகிய சங்கரன் யான் விட்டின் உள்ளிருக்கும் போதும், அசைவற்ற தாணுமூர்த்தி வீட்டின்புறத்தும், தூய பசுபதி எழுச்சியையுடைய இடைநிலைக் கண்ணும், மாற்றம் மனங்கழிய நின்ற சதாசிவனாகிய பழையோன் எவ்விடத்தும் காத்தருள்க!
தாணு – நிலைபேறுள்ளவன்; சிவன்.
செயற்படும் நிலைகளில் காத்தருள்க என்கிறது பின்வரும் பாட்டு.
16. நிற்கும்போது புவனபதியும், நடக்கும் போது நின்மலமூர்த்தியும், உடலை அழகுறுத்தும் போது பிரமதகண முதல்வனும், இருக்கும்போது வேதவேத்தியனும், எதையும் தெளிவாக அறிதற்கு அரிய துயில் கொள்ளும்போது தற்பர சிவனும், விழிக்கும் போது சாமளருத்திரனும் காத்தருள்க!
வேதவேத்தியன் – வேதத்தால் அறியத்தகுந்தவன்; சாமளருத்திரன் – பச்சைநிறமுள்ள உருத்திரன். தற்பர சிவன் – கட்டிறந்து நிற்கும் சிவன்.
17. மலைமுதலாகிய குறிஞ்சி நிலத்தில் முப்புராரி காக்க! முல்லை நிலத்தில் செல்லும்போது வில்லேந்திய வேடஉருவன் காக்க! மற்றெவ்விடத்தும் முற்றழிப்புக் காலத்தில் பெருஞ்சிரிப்பால் எவற்றையும் நடுங்கச்செய்து பலவகைக் கூத்துக்கள் இயற்றும் வீரபத்திரமூர்த்தி காத்தருள்க!
18. தேரும் யானையும் குதிரையும் மறவரும் என்னும் படைகள் பலவும் சூழப் போரில் எதிர்த்துவரும் கொலைத்தொழிலைப்பூண்ட கூரிய வேல் தாங்கிய பகைவர்களை மாதொருபாகன் திருக்கையில் உள்ள மழுதுணிசெய்து காக்க!
உளை – கழுத்தின்மேல் மயிர்; பல்புரவி – பல குதிரைகள் பூட்டிய. மதம்படுகளிறு என்க. பாய் மா – குதிரை. பதாதி – மறவர். போர்வீரர், எண்ணில் கோடியாக மிடைந்திடும் குறுகலர் என்க. குறுகலர் – பகைவர்.
19. ஆதிசேடனை ஒத்த வலியும் அழிக்கும் ஆற்றலும் பெற்றுள்ள முத்தலை வேல் பொய்யைத் தொழிலாகக் கொண்ட கள்வர்களைப் பொருது அழித்து எம்மை இனிது காத்தருள்க. அஃது ஊழித்தியினைத் தன்கண் அடங்கக்கொண்டது; ஆதிசேடனது ஆயிரத்தலைகள் நிலத்தைச் சுமத்தலால் தேய்ந்து இறுதியில் மூன்று தலைகளாக மாறியதைப் போல மூன்றுகவடு உள்ளது. நிலம் கடலாற் சூழப்பட்டது; அது நிலமகன் கடலாகிய ஆடையை உடுத்தது போல உள்ளது.
20. மடங்கிய கழுத்துமயிர் வரிசையை உடைய அரியேறு முதலிய விலங்குகள் எதிர்க்கும்போது பினாகம் என்னும் வில் கொல்லுக! இங்குக் கூறிய முறையானே முதல்வன் திருப்பெயர்களை எண்ணி உறுதியாக இச்சிவகவசத்தை உடம்பிற்கும் உள்ளத்திற்கும் உயிர்க்கும் காப்பாகக்கொண்டு இறுதியில் திருவைந்தெழுத்தோதித் திருநீறு அணிந்துவரின், திரண்ட புயங்களை உடைய பத்திராயுவே! பின் வரும் நற்பயன்கள் விளையும்.
21. கொலை, களவு, கள், பொய், காமம் என்னும் ஐம்பெரும் பாவமும் நீங்கும்; யாரையும் அஞ்சாத காலன் உன்னை அஞ்சி உனக்கு ஏவல் செய்வான்; மறைவாகவிருந்து ஆயுளைக் குறைக்கும் நோய்கள் வாரா; இருப்பின் நீங்கிவிடும்; வறுமை நீங்கிச் செல்வம் வளரும். இதுவே உறுதி பயப்பது என்று உள்ளத்திற் கொண்டு நாள்தோறும் இருமுறை நியதியாக ஓதிவருதல் வேண்டும்.
உ
வடதருக்கண் எழுந்தருளும் குருமுதல்வன்
காட்டுநெறி மரபிற் காத்துத்
திடமுறுக்கு சீர்த்துறைசை ஆதினச்
செம்மைநலஞ் செறிவிற் போற்றி
மடமுருக்கு கருத்தரங்கின் ஈசர்வழி
பாட்டினுயர் வான்தோய் கோயிற்
குடமுழுக்கின் மாநாட்டின் இசைநாட்டம்
பலவாண குரவன் வாழி.
- க. வச்சிரவேல் முதலியார்.