திருச்சிற்றம்பலம்
3106. வான அமுத மதி முடிமேல் மதுரைப் பெருமான் மண் சுமந்து தேன் அமுத வாசகரைக் கதியில் விடுத்த திறன் இது மேல் பால் நன் மணிவாய்க் கவுணியனை விதுத்துச் சமணர் படிற்றெழுகும் கூனல் வழுதி சுரம் தணித்து ஆட் கொண்ட கொள்கை கூறுவாம். 3107. வாகு வலத்தான் சகநாத வழுதி வேந்தன் மகன் விர வாகு அவன் சேய் விக்கிரம வாகு அவன் சேய் பராக்கிரம வாகு அனையான் மகன் சுரபி மாறன் அனையான் திருமைந்தன் வாகு வலத்தான் மறம் கடிந்து மண் ஆளும் குங்குமத் தென்னன். 3108. அன்னான் குமரன் கருப்புர பாண்டியன் ஆம் அவன் சேய் காருணிய மன்னாம் அவன் தன் மகன் புருடோத்தமனாம் அவன் தன் மகன் ஆகும் மின்னார் மௌலிச் சத்துரு சாதன பாண்டியன் ஆம் விறல் வேந்தன் இன்னான் மகன் கூன் பாண்டியன் ஆம் இவன் தோள் வலியால் இசைமிக் கான். 3109. திண் தோள் வலியால் குட நாடர் செம் அறனையும் மார் அலங்கல் வண் தோல் இடு தார் இரவி குல மருமான் தனையும் மலைந்து புறம் கண்டு ஓர் குடைக் கீழ் நிலம் முன்றும் காவல் புரிந்து கோல் ஓச்சிப் புண் தோய் குருதி மறக் கன்னிப் புகழ் வேல் வழுதி நிகழ் நாளில். 3110. துண் துழாவும் கைம்மாவும் வெறுக்கைக் குவையும் மணிக் குவையும் வண்டு வீழும் தார் அளக வல்லி ஆய மொடு நல்கிக் கண்டு கூடல் கோமகனைக் காலில் வீழ்ந்து தன்னாடு பண்டு போலக் கைக் கொண்டு போனான் தேன் ஆர் பனம் தாரான். 3111. சென்னிக் கோனும் தான் ஈன்ற திலகப் பிடியை உலகம் எலாம் மின்னிக் கோது இல் புகழ் ஒளியால் விளக்கும் சைவ மணி விளக்கை கன்னிக் கோல மங்கையருக்கு அரசி தன்னைக் கௌரியற்கு வன்னிக் கோமுன் மணம் புணர்த்தி வாங்கினான் தன் வள நாடு. 3112. வளவர் கோன் செழியன் கற்பின் மங்கையர்க்கு அரசியார்க்கு அளவு அறு நிதியும் செம் பொன் கலிங்கமும் மணியும் போகம் விளை நிலம் அனைய ஆய வெள்ளமும் பிறவும் தென்னன் உளம் மகிழ் சிறப்ப வேந்தர் வரிசையால் உதவிப் பின்னர். 3113. கோது அறு குணத்தின் மிக்க குலச்சிறை என்பான் அங்கு ஓர் மேதகு கேள்வியானை விடுத்தனன் ஈண்டு தென்னன் காதலியோடு காவல் கடவுள் செம் பதுமக் கோயில் மாதரை மணந்து செல்வான் போல் வந்து மதுரை சேர்ந்தான். 3114. மலர் மகள் மார்பன் பொன்னி மன்னவன் பயந்த தெய்வக் குல மகள் உடனே வந்த குலச் சிறை குணனும் கேள்வித் தலைமையும் மதியின் மிக்க தன்மையும் தூக்கி நோக்கி நலம் மலி அமைச்சன் ஆக்கி நால் நிலம் புரக்கும் நாளில். 3115. வல்வினை வலியான் மெய்யில் வலிய கூன் அடைந்தன் போலக் கொல் வினை இலராய் வஞ்சம் கொண்டு உழன்று உடுத்த பாசம் வெல் வினை அறியா நக்க வேடர் சொல் வலையில் பட்டு நல் வினை உதவாத் தென்ன நால் மறை ஒழுக்கம் நீத்தான். 3116. போது அவிழ் தாரான் அக்கர் புன் நெறி ஒழுக்கம் பூண்டோன் ஆதலில் கன்னி நாடும் அமண் இருள் மூழ்கிப் பூதி சாதன நெறி ஆம் சைவ சமயமும் முத்திச் செல்வ மாதவ நெறியும் குன்ற மறைந்தது வேத நீதி. 3117. பறி படு தலையும் பாயின் உடுக்கையும் பாசிப் பல்லும் உறி பொதி கலனும் அத்தி நாத்தி என்று உரைக்கும் நாவும் அறி வழி உளம் போல் நாண் அற்று அழிந்த வெற்றரையும் கொண்டு குறிகெடு அணங்கு சூழ்ந்து ஆங்கு அமண் இறை கொண்டது எங்கும். 3118. அரும் தமிழ்ப் பாண்டி வேந்தற்கு உறுதி ஆக்கம் செய்யும் மருந்தினில் சிறந்த கற்பின் மங்கையர்க்கு அரசி யாரும் பெருந்தகை அமைச்சு நீரில் குழைத்து அன்றி பிறங்கப் பேறு தரும் திரு நீறு இடாராய் சிவ அடிச் சார்பில் நின்றார். 3119. பொய் உரை பிதற்றும் இந்தப் புன் சமண் களைகட்டு ஈண்டு மெய் உரை வேத நீதி வியன் பயிர் தலைச் செய்து ஓங்கச் செய்யுநர் எவரோ என்று சிந்தையில் கவலை பூண்டு நையுநர் ஆகிக் கூடல் நாதனை வணங்கப் போனார். 3120. பேது உற்ற முனிவர்க்கு அன்று பெரு மறை விளக்கம் செய்த வேதத்தின் பொருளே இந்த வெம் சமண் வலையில் பட்டு போதத்தை இழந்த வேந்தன் புந்தியை மீட்டு இப்போது உன் பாதத்தில் அடிமை கொள்வாய் என்று அடி பணியும் எல்லை. 3121. வேதியன் ஒருவன் கண்டி வேடமும் பூண்டோன் மெய்யில் பூதியன் புண்டரிக புரத்தினும் போந்தோன் கூடல் ஆதியைப் பணிவான் வந்தான் மங்கையர்க்கு அரசியாரும் நீதிய அமைச்சர் ஏறு நேர்பட அவனை நோக்கா. 3122. எங்கு இருந்து அந்தணாளீர் வந்தனிர் என்றார் ஆய்ந்த புங்கவன் சென்னி பொன்னி நாட்டினும் போந்தேன் என்றான் அங்கு அவர் அங்கு உண்டான புதுமை யாது அறைதிர் என்றார் சங்கரற்கு அன்பு பூண்டோன் உண்டு என்று சாற்று கின்றான். 3123. ஏழ் இசை மறை வல்லாளர் சிவபாத இதயர் என்னக் காழியில் ஒருவர் உள்ளார் கார் அமண் கங்குல சீப்ப ஆழியில் இரவி என்ன ஒரு மகவு அளித்தி என்னா ஊழியில் ஒருவன் தாளை உள்கி நோற்று ஒழுகி நின்றார். 3124. ஆய மாதவர் பால் ஈசர் அருளினால் உலகம் உய்யச் சேய் இளம் கதிர் போல் வந்தான் செல்வனுக்கு இரண்டு ஆண்டு எல்லை போய பின் மூன்றாம் ஆண்டில் பொரு கடல் மிதந்த தோணி நாயகன் பிராட்டியோடும் விடையின் மேல் நடந்து நங்கை. 3125. திருமுலைப் பாலினோடு ஞானமும் திரட்டிச் செம் பொன் குரு மணி வள்ளத்து ஏந்திக் கொடுப்ப அப் பாலன் வாங்கிப் பருகி எண் இறந்த வேத ஆகமம் இவை பற்றிச் சார்வாய் விரிகலை பிறவும் ஒதாது உணர்ந்தனன் விளைந்த ஞானம். 3126. நம் பந்தம் அறுப்போன் ஞான நாயகன் ஞானத் தோடு சம்பந்தம் செய்து ஞான சம்பந்தன் ஆகி நாவில் வம் பந்த முலை மெய்ஞ்ஞான வாணியும் காணி கொள்ள அம் பந்த மறைகள் எல்லாம் அரும் தமிழாகக் கூறும். 3127. கரும் பினில் கோது நீத்துச் சாறு அடு கட்டியே போல் வரம்பு இலா மறையின் மாண்ட பொருள் எலாம் மாணத் தௌ¢ளிச் சுரும்பு இவர் கொன்றை வேணிப் பிரான் இடம் தோறும் போகி விரும்பிய தென் சொல் மாலை சிவ மணம் விளையச் சாத்தி. 3128. பருமுத்த முலையாள் பங்கன் அருளினால் பசும் பொன் தாளம் திரு முத்தின் சிவிகை காளம் தௌ¢ முத்தின் பந்தர் இன்ன நிருமித்த வகைபோல் பெற்றுப் பாலையை நெய்தல் ஆக்கி பொரு முத்த நதி சூழ் வீழிப் பொன் படிக்காசு பெற்று. 3129. அருமறை வணங்கும் கோயில் கதவினை அடைக்கப் பாடிப் பரன் உறை பதிகள் எங்கும் தொழுதனர் பாடிப் பாடி வரும் அவர் நுங்கள் நாட்டு வணங்கவும் வருவார் என்னத் தரும நூல் அணிந்த தெய்வத் தாபதன் சாற்றலோடும். 3130. கற்பு அலர் கொடி அன்னாரும் தென்னவன் கண் போல்வாரும் அற்புரை அமண் பேய் ஓட்டி அன்று தம் கோமான் மெய்யில் பொற்பு உறு நீறு கண்டு பூதி சாதனத்தால் எய்தும் சிறபர வீடு கண்ட மகிழ்சியுள் திளைத்தோர் ஆனார். 3131. தங்கள் பேர் தீட்டி ஓலை விண்ணப்பம் சண்பை நாடர் புங்கவர்க்கு உணர்த்த அந்தப் பூசுரன் கையில் போக்கி மங்கையர்க்கு அரசியாரும் அரசர்க்கு மருந்து அன்னானும் அம் கயல் கண்ணி கோனைப் பணிந்து தம் அகத்தில் புக்கார். 3132. பண் படு வேதச் செல்வன் வல்லை போய்ப் பழன வேலிச் சண்பையர் பிரானைக் கண்டு பறியுண்டு தலைகள் எல்லாம் புண் படத் திரியும் கையர் பொய் இருள் கடந்தார் தந்த எண் படும் ஓலை காட்டிப் பாசுரம் எடுத்துச் சொன்னான். 3133. வெம் குரு வேந்தர் அடி பணிந்து அடியேன் குலச் சிறை விளம்பும் விண்ணப்பம் இங்கு எழுந்து அருளிச் சமண் இருள் ஒதுக்கி எம் இறை மகற்கு நீறு அளித்துப் பொங்கி வரும் பணை சூழ் தென் தமிழ் நாட்டைப் பூதி சாதன வழி நிறுத்தி எங்களைக் காக்க என்ற பாசுரம் கேட்டு எழுந்தனர் கவுணியர்க்கு இறைவர். 3134. ஆதகாது இது என்று ஓதுவார் நாவுக் கரையர் நீர் சிறியர் அவரோ பாதகம் அஞ்சார் தம் மொடும் பல் நாள் பழகிய எனை அவர் செய்த வேதனை அளந்து கூறுவது என்னை விடுகதில் அம்மவோ உமக்கு இப் போது நாள் கோள்கள் வலி இல என்னப் புகலியர் வேந்தரும் புகல்வார். 3135. எந்தை எம் பெருமான் அருள் இலார் போல இன்னணம் இசைப்ப தென்னவர் செய் வெந்த வேதனையின் உய்த்த நீர் நாள் கோள் விளங்கு புள் அவுணர் பேய் பூதம் அந்தம் இல் பலவும் அம்மையோடு அப்பன் ஆணையால் நடப்பன அவர் நம் சிந்தையே கோயில் கொண்டு வீற்று இருப்பத் தீங்கு இழையா என எழுந்தார். 3136. மா முரசு ஒலிப்பச் சங்கம் காகளம் வாய்விட்டு ஏங்கச் சாமரை பனிப்ப முத்தின் பந்தரில் தரளத் தெய்வக் காமரு சிவிகை மேல் கொண்டு அமண் இருள் கழுவும் சோதி யாம் என நெறிக் கொண்டு ஈசன் இடம் தொறும் அடைந்து பாடி. 3137. செம்பியன் நாடு நீந்தித் தென்னவன் நாடு நண்ணி வெம்பிய சுரமும் முல்லைப் புறவமும் மேக வில்லைத் தும்பிகை நீட்டி வாங்கும் மலைகளும் துறந்து பாகத் தம்பி கையுடையான் கூடல் நகர்ப் புறம் அனுகச் செல்வார். 3138. புண்ணிய நீற்றுத் தொண்டர் குழாத்தினுள் புகலி வேந்தர் நண்ணிய சிவிகை மீது நகைவிடு தரளப் பந்தர் கண்ணிய தோற்றம் தீம் பால் கடல் வயிறு உதித்து தீர்ந்து விண் இயல் முழு வெண் திங்கள் விளக்கமே ஒத்தது அன்றே. 3139. தேம் படு குமுதச் செவ்வாய் சிர புரச் செல்வர் முன்னம் போம் பரி கனத்தார் தம்மில் பொன் நெடும் சின்னம் ஆர்ப்போர் தாம் பர சமய சிங்கம் சமண் இருள் கிழியப் பானு ஆம் படி வந்தான் என்று என்று ஆர்த்து எழும் ஒசை கேளா. 3140. நின்று உண்டு திரியும் கையர் எதிர் வந்து நீவிர் நுங்கள் கொன்று அறம் சொன்ன தேவைக் கும்பிட வந்தால் இந்த வென்றி கொள் சின்னம் என் கொல் வீறு என் கொல் யாரை வென்றீர் என்றனர் தடுத்தார் என்று ஈறு இலா அடியார் தம்மை. 3141. மா மதம் ஒழுகச் செல்லும் திண் திறல் மத்த வேழம் தாமரை நூலால் கட்டத் தடைபட அற்றோ கொற்றக் காமனை முனிந்தார் மைந்தர் கயவர் தம் தடையை நீத்துக் கோமணி மாட மூதூர் அடைந்து அரன் கோயில் புக்கார். 3142. கைம் மலைச் சாபம் தீர்த்த கருணை அம் கடலைத் தாழ்ந்து மும்முறை வளைந்து ஞான முகிழ் முலைப் பாலினோடு செம் மணி வள்ளத்து ஈந்த திரு வொடும் தொழுதான் அந்த மெய்ம் மய வெள்ளத்து ஆழ்ந்து நின்றனர் வேதச் செல்வர். 3143. மறை வழி நின்று நின்னை வந்தி செய்து உய்ய மாட்டா நிறை வழி வஞ்ச நெஞ்சச் சமணரை நெறிகள் எல்லாம் சிறை பட வாது செய்யத் திருவுளம் செய்தி கூற்றைக் குறைபட உதைத் தோய் என்று குறித்து உரை பதிகம் படி. 3144. வேண்டு கொண்டு அருளைப் பெற்று மீளும் அப்போது கண்டு மூண்ட ஐம் பொறியும் வென்று வாகீச முனிகள் என்ன ஆண்டு ஊளார் ஒருவர் வேண்ட அவர் திரு மடத்தில் அன்பு பூண்டு எழு காத லோடும் போயினார் புகலி வேந்தர். 3145. அங்கு எழுந்து அருளி எல்லின் அமுது செய்து இருப்பவற்றைக் கங்குல் வாய் அமணர் செய்யும் கருது அரும் செயலும் தங்கள் மங்கல மரபில் வந்தாள் வருத்தமும் காண அஞ்சிச் செங் கதிரவன் போல் மேலைச் செழும் கடல் வெள்ளத்து ஆழ்ந்தான். 3146. மாறு கொள் அமணர் செய்யும் வஞ்சனைக்கு இடனாய் ஒத்து வேறு அற நட்புச் செய்வான் வந்து என விரிந்த கங்குல் ஈறு அற முளைத்த வான் மீன் இனம் அவர் பறித்த சென்னி ஊறு பட்டு எழுந்த மொக்குள் ஒத்த அக் கங்குல் எல்லை. 3147. வைதிகத்து தனி இளம் சிறு மடங்கலேறு அடைந்த செய்தியைத் தெரிந்து அயன் மலை இடங்களில் திரண்ட கை தவத்த எண்ணாயிரம் கயவரும் ஒருங்கே எய்தி முத்தமிழ் விரகர் மேல் பழித்தல் இழைத்தார். 3148. மெய்யில் சிந்தையார் அத் தழல் கடவுளை விளத்து ஆங்கு எய்தி எம் பகை ஆயினோர் இருக்கையை அமுது செய்து வா எனப் பணித்தனர் சிறு விதி மகத்துக் கை இழந்தவன் செல்லுமோ அஞ்சினான் கலங்கி. 3149. ஈனர் தாம் சடத் தீயினை எடுத்தனர் ஏகி ஞான போனகர் மடத்தினில் செருகினர் நந்தாது ஆன தீப் புகை எழுவதை அடியவர் கண்டு வான நாயகன் மைந்தருக்கு உணர்த்தினார் வல்லை. 3150. சிட்டர் நோக்கி அத் தீயினை தென் தமிழ்க் கூடல் அட்ட மூர்த்தியை அங்கு இருந்து அரு மறைப் பதிகம் துட்டர் பொய் உரை மேற் கொண்டு தொல் முறை துறந்து விட்ட வேந்தனைப் பற்று எனப் பாடினார் விடுத்தார். 3151. அடுத்தது அக்கணத்து அரசனை வெப்பு நோய் ஆகித் தொடுத்ததிட்ட பல் கலன்களும் துகள் எழப் பனி நீர் மடுத்த சாந்தமும் கலவையும் மாலையும் கருகப் படுத்த பாயலும் சருகு எழப் புரவலன் பதைத்தான். 3152. வளவர் கோன் திரு மடந்தையும் மந்திரர் ஏறும் தளர்வு அடைந்து நல் மருத்து நூல் விஞ்சையர் தமைக் கூஉய்ப் பளகில் பல் மருந்து அருத்தவும் பார்வையினாலும் விளைவதே அன்றி வெம் சுரம் தணிவது காணார். 3153. சவலை நோன்பு உழந்து இம்மையும் மறுமையும் சாரா அவல மாசரை விடுத்தனர் அனைவரும் பார்த்துத் தவ வலத்தினும் மருந்தினும் தணிந்திலது ஆகத் கவலை எய்தினார் இருந்தனர் விடிந்தது கங்குல். 3154. வட்ட ஆழி ஒன்று உடைய தேர் பரிதி தன் மருமான் பெட்ட காதல் கூர் மருகனைப் பற்றிய பிணி கேட்டு இட்ட கார் இருள் எழினியை எடுத்து எடுத்து அம் கை தொட்டு நோக்குவான் வந்து எனத் தொடு கடல் முளைத்தான். 3155. வாலிது ஆகிய சைவ வான் பயிரினை வளர்ப்பான் வேலி ஆகி ஓர் இருவரும் வேந்தனை நோக்கி கால பாசமும் சுடும் இந் நோய் அரு மறைக் காழிப் பாலர் அன்றித் தீர்த்திடப் படாது எனப் பகர்ந்தார். 3156. பொய்யர் சார்பினை விடாதவன் ஈங்கு நீர் புகன்ற சைவர் நீறு இட்டுப் பார்ப்பது தகுவதோ என்ன ஐய நீ எனைத் திறத்தினால் ஆயினும் நோய் தீர்ந்து உய்ய வேண்டுமே இதின் இல்யாது உறுதி என்று உரைத்தார். 3157. அழைமின் ஈண்டு என அரசனும் இசைந்தனன் ஆர்வம் தழையும் மந்திரத் தலை மகன் தனி நகர் எங்கும் விழவு தூங்க நல் மங்கல வினைகளால் விளக்கி மழலை இன் தமிழ் விரகர் தம் மடாத்தில் வந்து எய்தா. 3158. அன்று கேள்வியால் அருந்திய ஞானவார் அமுதை இன்று கண்களால் உண்டு கண் பெற்ற பேறு எய்திச் சென்று இறைஞ்சினான் எழுந்திரும் தீ அமண் சூழ்ச்சி வென்ற சிந்தையீர் என்றனர் பூந்தராய் வேந்தர். 3159. நன்று இருந்தனிரே என நகை மலர்த் தடம் தார் வென்றி மீனவன் கற்பினார் தம்மையும் வினவ என்று நும் அருள் உடையவர்க்கு வென் குறை என்னா ஒன்று கேண்மை கூர் அன்பினார் இதனையும் உரைப்பார். 3160. கையர் மாளவும் நீற்றினால் கவுரியன் தேயம் உய்வது ஆகவும் இன்று நும் அருளினால் ஒலி நீர் வைகை நாடன் மேல் வெப்பு நோய் வந்ததால் அதனை ஐய தீர்த்திடல் வேண்டும் என்று அடியில் வீழ்ந்து இரந்தார். 3161. இரந்த அன்பருக்கு அன்னது ஆக என்று அருள் சுரந்து பரந்த நித்தில யானமேல் பனிக் கதிர் மருமான் சுரம் தணிப்பல் என்று ஏகுவன் ஒத்து மெய்ச் சுருதி புரந்து அளிப்பவர் பாண்டியன் கோயிலில் புகுவார். 3162. வாயில் எங்கணும் தூபமும் மங்கல விளக்கும் தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச் சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக் கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார். 3163. காவலன் மருங்கு இட்ட ஓர் கதிர் மணித் தவிசின் மேவினார் அவர் நோக்கினான் மீனவன் தௌ¤ந்து வாவி தாழ் செழும் தாமரை என முகம் மலர்ந்து பாவியேன் பிணி தணித்து எனைப் பணி கொள் மின் என்றான். 3164. புலைத் தொழிற்கு வித்து ஆயினோர் கேட்டு உளம் புழுங்கிக் கலைத் தடம் கடல் நீந்திய காவலோய் உன் தன் வலப் புறத்து நோய் இவரையும் மற்றை நோய் எமையும் தொலைத்திடப் பணி என்றனர் கைதவன் சொல்வான். 3165. அனைய செய்திர் என்று இசையுமுன் சமணரும் அசோகன் தனை நினைந்து கைப் பீலியால் தடவியும் கரத்துக் கனை கொளாலி நீர் சிதறியும் நெய் சொரி கனல் போல் சினவி மேல் இடக் கண்டனர் தீர்ந்திடக் காணார். 3166. தீயர் மானம் மிக்கு உடையராய்க் செருக்கு அழிந்து இருப்பப் பாய கேள்வியோர் புண்ணியப் பையுள் நீறு அள்ளிக் காயும் நோய் அது தணித்திடக் கருதினார் அதனை மாய நீறு என விலக்கினார் மாயை செய்து அழிவார். 3167. அண்ட நாயகன் திரு மடைப் பள்ளி நீறு அள்ளிக் கொண்டு வாரும் என்று அருமறைக் கவுணியர் கூறக் கண்டு காவலன் ஏவலர் கைக் கொடு வந்தார் வண்டு உலாவு தார் வழுதி நோய் தணிப்பவர் வாங்கி. 3168. மருந்து மந்திரம் யாவையும் மறை உரைப்பதுவும் பொருந்து இன்ப வீடு அளிப்பதும் போகமும் பொருளும் திருந்து ஆலவாயான் திரு நீறு எனச் சிறப்பித்து அருந்து இன் அமுது அனைய சொல் பதிகம் பாடி அறைந்து. 3169. மெய்யில் இட்டனர் வருடலும் வெம் சுரம் துறந்த மை இல் சிந்தையோர் வெகுளியில் தணிந்தது வாசம் செய்த தண் பனி நீர் விரைச் சந்தனம் திமிர்ந்தால் எய்து தண்மையது ஆயினது இறை வலப் பாகம். 3170. பொழிந்த தண் மதுத் தார் புனை பூழியர் கோனுக் கிழிந்த செய்கையர் கைதொட வெரி இடு சுரத்தால் கழிந்த துன்பமும் கவுணியர் கை தொடச் சுரம் தீர்ந்து ஒழிந்த இன்பமும் இருவினை ஒத்தபோல் ஒத்த. 3171. ஐய இச்சுரம் ஆற்றரிது ஆற்றரிது என்னா வைகை நாடவன் வல் அமண் மாசு தீர்ந்து அடியேன் உய்ய வேண்டுமேல் அதனையும் அடிகளே ஒழித்தல் செய்ய வேண்டும் என்று இரந்தனன் சிரபுரக் கோனை. 3172. பிள்ளையார் இடப் பாகமும் பண்டு போல் பெருமான் வெள்ளை நீறு தொட்டு அம்கையால் நீவும் முன் மேல் நாள் உள்ள கூனோடு வெப்பு நோய் ஒழிந்து மீன் உயர்த்த வள்ளல் மாசு அறக் கடைந்த விண் மணி எனப் பொலிந்தான். 3173. அன்னது ஒரு காரணத்தால் சவுந்தரிய பாண்டியன் என்று ஆகி அன்ன தென்னவர் கோன் கவுணியர் கோன் திரு நோக்கால் பரிசத்தால் தெருட்டும் வாக்கால் பொன் அடி தாழ்ந்து ஐந்து எழுத்து உபதேசப் பேறு அடைந்த பொலிவால் வஞ்சம் துன் அமணர் நெறி இகழ்ந்து தொல் வேத நெறி அடைந்து துயன் ஆனான். பாண்டியன் சுரம் தீர்த்த படலம் சுபம்
3174. பஞ்சவன் அடைந்த நோயைப் பால் அறா வாயர் தீர்த்து நஞ்சு அணி கண்டன் நீறு நல்கிய வண்ணம் சொன்னேம் அஞ்சலர் ஆகிப் பின்னும் வாது செய்து அடங்கத் தோற்ற வஞ்சரைக் கழு வேறிட்ட வண்ணமும் சிறிது சொல்வாம். 3175. தென்னவன் தேவியாரும் அமைச்சருள் சிறந்த சிங்கம் அன்னவன் தானும் காழி அந்தணர் அடியில் வீழ்ந்து எம் மன்னவன் வெப்பும் கூனும் பாசமும் மாற்றி நீரே இன்னமும் அடியேம் வேண்டும் குறை செயத் தக்கது என்றார். 3176. கன்னி நாடு எங்கும் இந்தக் கார் அமண் காடு மூடித் துன்னின இதனை இன்னே துணித்திடல் வேண்டும் என்றார் அன்னவர் ஆலவாயர் திரு உள்ளம் அறிவேன் என்னா உன்னிய மனத்தர் ஆகி ஒய் எனக் கோயில் புக்கார். 3177. அவ் இருவோரும் கூட அடைந்து பொன் கமலம் பூத்த திவ்விய தீர்த்தம் தோய்ந்து சேல் நெடும் கண்ணி பாக நவ்வி அம் கமலச் செம்கை நாதனைத் தாழ்ந்து வேந்தன் வெவ்விய வெப்பு நீத்தார் தொழுது இது வினவு கின்றார். 3178. காயமே ஒறுத்து நாளும் கைதவம் பெருக நோற்கும் போயரை இம்மை யோடு மறுமையும் பேறு அற்றாரை நீ உரை செய்த வேத வேள்வியை நிந்தை செய்யும் தீயரை ஒறுத்தல் செய்யத் திருஉளம் செய்தி என்றார். 3179. வெம் மத வேழம் காய்ந்த விடையவர் விசும்பில் சொல்வார் எம்மனோர் அவிர் நுங்கட்கு இசைந்ததே எமக்கும் வேண்டும் சம்மதம் ஆனால் வெல்லத் தக்கவர் ஆக நீரே அம் மதம் உடையார் தேற்கத் தக்கவர் ஆக என்றே. 3180. எம் மொழி தேறினீர் போய் இறை மகன் அவையத்து எய்திச் செம்மை இலாரை வாது செய்திர் நீர் அனையார் தோற்று வெம் முனைக் கழுவில் ஏறி விளகுவர் என்னக் கேட்டு மைம் மலி களத்தான் மைந்தர் தொழுது தம் மடத்தில் போனார். 3181. இருவரும் மீண்டு தத்தம் இருக்கையில் போகி அற்றைப் பருவம் அங்கு அகலப் பின் நாள் பாண்டிமா தேவியாரும் பெரு மதி அமைச்சர் ஏரும் பிள்ளையார் மடத்தில் போகி அருகரை வெல்லும் சூழ்ச்சி யாது என அளந்து தேர்வார். 3182. பேர் அருள் நிறைந்த காழிப் பெருந்தகை உடன் போய்த் தம்கோன் சீர் அவை குறுகி ஈது செப்புவார் செய்ய கோலாய் கார் அமண் காடே எங்கும் கழியவும் இடைந்த இன்ன வேரோடும் களைந்தார் சைவ விளைபயிர் ஓங்கும் என்றார். 3183. அவ்வண்ணம் செய்வதே என்று அரசனும் அனுச்சை செய்யச் செவ் வண்ண வெண் நீற்று அண்ணல் அனுச்சையும் தெரிந்த தேயம் உய் வண்ணம் இது என்று அங்கண் உள் மகிழ்ந்து இருந்தார் நீண்ட பை வண்ண ஆரம் பூண்டார் புகழ் எங்கும் பரப்ப வல்லார். 3184. அந்த வேலை அருகந்தக் கையரைக் குந்த வேல் கண் குல மட மாதரும் மைந்தர் ஆகிய மக்களும் கண் அழல் சிந்த நோக்கி இகழ்ந்து இவை செப்புவார். 3185. செழியர் கோமகன் மூழ்கிய தீப் பிணி கழிய மாற்றும் வலியின்றிக் கற்றிலா மழலை வாய் ஒரு மைந்தற்குத் தோற்று வெம் பழி விளைத் தீர் பகவன் தமர்க்கு எலாம். 3186. சாம்பர் ஆடும் சமயம் புகுந்து வெம் பாம்பு அணிந்தவனே பகவான் என வேம்பன் உங்கள் விரத நெறி எலாம் சோம்பல் எய்தத் துறந்தான் இகழ்ந்து அரோ. 3187. ஏது உமக்கு நிலை இனி என்ற அப் போது மற்றவர் தம்மைப் புறகிட வாது செய்தற்கு எழுந்தனர் வஞ்சகர் போதும் என்னத் தடுத்தனர் பூவை மார். 3188. செல்லன் மின் கண் உமக்கு இது செவ்வி அன்று அல்லல் கூர வரும் துன்பத்து ஆழ நாம் எல்லி கண்ட கனவு உண்டு அதனை யாம் சொல்லு கேம் இன்று கேண்ம் எனச் சொல்லுவார். 3189. இடையறாது நம் பாழியும் பள்ளியும் எங்கும் சடையர் முஞ்சியர் சாம்பலர் தாங்கிய சூலப் படையர் தீவிழிப் புலவு வாய்ப் பாய் பெரும் புலித்தோல் உடையராய்ச் சிலர் வந்து வந்து உலவுதல் கண்டேம். 3190. கன்னியில் துறவு அன்னங்கள் கணவனின் துறவின் மன்னும் ஆரியாங் கனைகள் நுல் வாங்கும் அக் குசைகள் என்ன மூவகைப் பெண் தவப் பள்ளிகள் எல்லாம் சின்ன வெண் பிறைக் கோட்டுமா சிதைக்கவும் கண்டேம். 3191. முண்டிதம் செய்த தலையராய் முறுக்கு உறி தூங்கும் குண்டிகை கைத் தடம் கையராய்க் கோவணம் பிணித்த தண்டு தாங்கிய சுவலராய்ச் சடையன் பேர் நாவில் கொண்டு அசைத்தனராய் எங்கும் குலாவவும் கண்டேம். 3192. காந்து வெங்கதம் உடையது ஓர் கயம் தலை வந்து சூழ்ந்து கொண்டு நம் அடிகள் மார் கணம் எலாம் துரத்தி ஏந்து பூம் சினை அலைந்திட இரங்கி வண்டு இரியப் பாய்ந்து பிண்டியை வேரொடும் பறிக்கவும் கண்டேம். 3193. அந்த மூவிலை வேலினும் மயில் முனைக் கழுவின் பந்தி மீது நீர் ஏறவும் கண்டு உளம் பனிப்பச் சந்த மார்பகம் சேப்ப அம் தளிர்க்கரம் புடைத்துக் கந்த வார் குழல் சோரவும் கலுழவும் கண்டேம். 3194. தள் அரும் திறல் இந்திர சாலமோ காதி உள்ள விஞ்சை இவ் எல்லை வந்து உதவிலா ஒன்றும் கள்ளரால் பறி பட்டவோ கனவில் வெந்தனவோ வெள்ளம் கொண்டவோ சேமத்தில் கிடப்பவோ விளம்பீர். 3195. தாவு தீ வளர்த்து எழு கரி தன்னை ஆடு அரவை ஆவையேவி முன் நம்மனோர் பட்டது மறந்தீர் காவலன் பிணி தணித் திலீர் இனிச் செய்யும் கருமம் யாவது ஆகுமோ அதனையும் எண்ணுமின் என்றார். 3196. இற்றை வைகலுக்கு ஏகன் மின் என்றனர் அறத்தைச் செற்ற வஞ்சகர் செல்லுவார் திரும்பவும் கையைப் பற்றி ஈர்த்தனர் பெண்டிர் சொல் கேட்பது பழுது என்று உற்ற தீவினை வழிச் செல்வார் ஒளித்தனர் செல்வார். 3197. கொங்கலர்க் குழல் சரிந்திடக் குரத்தியர் பின்னும் எங்கள் சொல் கொளது ஏகுவிர் பரிபவம் எய்தி உங்களுக்கு இடையூறு வந்து உறுக எனச் சபித்தார் அங்கு அதற்கும் அஞ்சார் செல்வார் அழியும் நாள் அடுத்தார். 3198. புட்களும் பல விரிச்சியும் போகல் என்று எதிரே தட்கவும் கடந்து ஏகுவார் தடம் கயல் உகைப்பக் கட் கவிழ்ந்து அலர் கிடங்கர் சூழ் கடி நகர்ப் புறம் போய் உட்கு நெஞ்சராய் யாவரும் ஓர் இடத்து ஈண்டி. 3199. யாது சூழ்ச்சி என்று எண்ணுவார் இறைவனைக் கண்டு ஈது ஓதி நாம் அவன் அனுமதி உறுதி கொண்டு அனைய ஏதிலாளனை வாதினால் வென்றும் இசைந்து போதுவார் நகர் புகுந்து வேத்து அவைக் களம் புகுவார். 3200. ஆய போது இளம் காலையில் கவுணியர் ஆல வாயர் சேவடி பணிந்து தம் மடத்தினில் செல்லக் காயும் மாதவச் செல்வனைக் கங்குல் சூழ்ந்தாங்கு மாய வஞ்சகர் வந்து இடை வழித் தலை மறித்தார். 3201. மறித்த கையர் பின் செல்ல முன் மன் அவைக் குறுகிக் குறித்த வாளரித் தவிசின் மேல் கொச்சையர் பெருமான் எறிந்த சேய் இளம் பரிதியின் ஏறி வீற்று இருந்தார் பறித்த சீத்தலை புலையர்கள் பொறாது இவை பகர்வார். 3202. மழலை இன்னமும் தௌ¤கிலா மைந்த கண் மணி ஒன்று உழல் கருங்கொடி இருந்திடக் கனி உதிர்ந்தாங்கு உன் கழல் கொள் விஞ்சையின் அன்மையான் மன்னனைத் தொடுத்த அழல இத்தனம் என்று நீ தருக்குறத் தகுமோ. 3203. நந்து நாகு நீர் வண்டு செல் நடை வழி எழுந்தாய் வந்து வீழினும் வீழும் அவ் வழக்கு நின் கையற்று சிந்து சாம்பரும் சிறு சொலும் மருந்து மந்திரம் போல் சந்து சூழ் மலையான் சுரம் தணிந்தன கண்டாய். 3204. உங்கள் மந்திரம் ஏடு ஒன்றில் தீட்டுக ஓர் ஏட்டு எங்கள் மந்திரம் தன்னையும் தீட்டுக இரண்டும் அங்கி வாய் இடின் வெந்தது தோற்றது அவ் அங்கி நுங்கிடாது வென்றது என்று ஒட்டியே நுவலா. 3205. செக்கர் அம் சடையான் உறை பதிகளில் செய்யத் தக்க தன் தவநிலை பிழைத்தும் நும் சார்வாய் விக்க எம் மனோர்க்கு இயற்றுவான் வேறு ஒரு தலத்தில் புக்கு அமர்ந்து தவம் செயப் போதுகம் என்னா. 3206. வென்றி மா முரசு உறங்கிட வியன் நகர்ப் புறம் போய் மன்றல் வேம்பன் முன் கதழ் எரி மடுத்திடில் பிழைப்ப தொன்று வேவது ஒன்று ஈது கொண்டு உமர்களும் எமரும் இன்று வெல்வதும் தோற் பதும் காண்டும் என்று எழுந்தார். 3207. ஈட்டு வஞ்ச நெஞ்சரே எழீ நகர்ப் புறம்பு போய்க் கீழ் திசைக்கண் ஓர் அழல் கிடங்கு தொட்டு எழுந்து வான் நீட்டு கோடு அரம் குறைத்து நிறைய விட்டு நெட்டு எரி மூட்டினார் மாதரார் வயிற்றும் இட்டு மூட்டினார். 3208. ஞானம் உண்ட முனிவர் தம்மை எள்ளி எள்ளி நாயினும் ஈனர் அங்கியை அடுத்து இருப்ப எண்ணாராயிரர் ஆன தொண்டர் உடன் எழுந்து சண்பை வேந்தும் அரசனும் மானன் ஆர் மந்திரக் கிழானும் வந்து வைகினார். 3209. உள் அவிழ்ந்த முலை சுரந்து ஒழுக்கு பால் அருந்தியே துள்ளி ஓடும் கன்று பின் தொடர்ந்து செல்லும் ஆன் என வெள்ளி அம்பலத்துள் ஆடும் வேதகீதர் காதல் கூர் பிள்ளை போன வாறு தம் பிராட்டி யோடும் எய்தினார். 3210. ஆறினோடு இரண்டு அடுத்த ஆயிரம் சமணரும் வேறு வேறு தாம் முயன்ற மந்திரங்கள் வேறு வேறு நீர் சுந்தர ஒலையில் பொறித்து ஒருங்கு போய்ச் சீறி வான் நிமிர்ந்து எழுந்த தீயின் வாய் நிரப்பினார். 3211. அக்கி வாய் மகுத்த ஏடு அனைத்தும் அக் கணத்தினே இக்கு வாய் உலர்ந்த தோடு எனக் கரிந்து சாம்பராய் உக்க வாறு கண்டு நீசர் உட்கிடந்து பொங்கவே திக்கு உளார்கள் கண்டபேர் சிரித்து உளார்கள் ஆயினார். 3212. விரிந்த வேத நாவர் தாம் விரித்த வேத மெய்ப் பொருள் வரைந்த புத்தகத்தை வண் கயிற்றினால் வகிர்ந்து தாம் அருந்த ஞான அமுது அளித்த அம்மை போகப் படத் தெரிந்த ஏடு எடுத்து அடுத்த தீயின் வாயில் இட்டனர். 3213. மறைப் புலப் படுத்த நூல் வரைந்த ஏடு அனந்த நாள் அறை புனல் கிடந்ததாம் எனப் பசந்த அரசனும் நிறை அமைச்சும் அரசியாரும் நின்றபேரும் அந்தணர்க் இறைவரை புகழ்ந்து அளப்பு இல் இன்ப வெள்ளம் மூழ்கினார். 3214. வெந்த சிந்தை அமணர் வாது வெல்வதற்கு வேறு இடம் புந்தி செய்து வந்த அப் பொதுத் தலம் பொதுக் கடிந்து அந்தணாளர் வாது வென்ற அன்று தொட்டு ஞானசம் பந்தன் என்ற நாமமே படைத்து உயர்ந்த இன்றுமே. 3215. அன்ன ஏடு முறையினோடு இறுக்கி அந்தணாளர் கோன் மன்னை நோக்க வினையினோடு பாய் உடுத்த மாசர் தாம் சொன்ன சூள் புலப்படத் துணிந்தும் வாய்மை நாண் ஓரி இக் கன்னி நாடன் அவை சிரிக்க ஆற்றலாது கத்துவார். 3216. ஏட நாங்கள் எழுதி இட்ட பச்சை ஏடு எணாயிரம் வீட வந்த நீ வரைந்து விட்ட ஓலை ஒன்றும் என் வாடல் இன்றி நீரில் இட்ட வண்ணம் ஆனது ஆல் இது உன் பாடவம் செய் விஞ்சை கொண்டு பாவ கல் பிணித்ததே. 3217. உங்களேடும் எங்கள் ஏடும் உம்பர் வானளாய் விரைஇப் பொங்கி ஓடும் வைகை நீரில் இடுக இட்ட போது தான் அங்கு நீர் எதிர்க்கும் ஓலை வெல்லும் ஓலை அன்றியே துங்க வேலை செல்லும் ஓலை தோற்கும் ஓலை யாவதே. 3218. வென்று வீறு அடைந்தவர்க்கு வீறு அழிந்து தோற்றபேர் என்றும் ஏவல் அடிமை ஆவது என்று இசைந்து கைதவக் குன்று போலும் நின்ற குண்டர் கூறலோடும் ஈறு இலா மன்று ஆடும் அடிகள் மைந்தர் வாய் மல்ர்ந்து பேசுவார். 3219. அடியார் பதினாறாயிரவர் உள்ளார் சிவனை அவமதித்த கொடியார் நீவிர் உமக்கு ஏற்ற தண்டம் இதுவோ கொன்றை மதி முடியார் அருளாள் உங்களை நாம் வென்றேம் ஆயின் மூ இலை வேல் வடிவான் நிரைத்த கழு முனை இடுவேம் அதுவே வழக்கு என்றார். 3220. ஊழின் வலியால் அமணர் அதற்கு உடன் பட்டார்கள் அ·து அறிந்து சூழி யானைக் குலைச் சிறையும் தச்சர் பலரைத் தொகுவித்துக் காழின் நெடிய பழு மரத்தில் சூல வடிவாய்க் கழு நிறுவிப் பாழி நெடிய தோள் வேந்தன் முன்னே கொடு போய் பரப்பினார். 3221. தேறலாதார் தமைக் காழிச் செம்மல் நோக்கி இனி வம்மின் நீறு பூசிக் கண்டிகையும் பூண்டு நிருத்தர் எழுத்து ஐந்தும் ஊற ஒதிப் பாசம் ஒழித்து உய்மின் என்னா அற நோக்கிக் கூறினார் மற்று அது கேட்டுக் குண்டர் எரியில் கொதித்து உரைப்பார். 3222. முன்பு தீயில் வென்றனமே நீரில் யாதாய் முடியும் என அன்பு பேசி எமை இணக்கி அகல நினைத்தாய் அல்லதை நீ பின்பு வாது செயத் துணியும் பெற்றி உரைத்தாய் அல்லை புலால் என்பு பூணி அடி அடைந்த ஏழாய் போதி என மறுத்தார். 3223. ஊகம் தவமும் பழு மரத்தை உதைத்துக் கரை மாறிட ஒதுக்கிப் பூகம் தடவி வேர் கீண்டு பொருப்பைப் பறித்துப் புடை பரப்பி மாகம் துழாவிக் கடுகிவரும் வைகைப் புனலை மந்திரத்தால் வேகம் தணிவித்து ஏடு எழுதி விடுத்தார் முன் போல் வெள்காதார். 3224. சிறை ஏய் புனல் சூழ் வேணுபுரச் செல்வர் யாரும் தௌ¤வு எய்த மறையே வாய்மை உரையாய் இன் மறைக் கண் முழுதும் துணி பொருள் தான் பிறையேய் வேணிப் பிரான் ஆகில் பெரு நீர் எதிரே செல்க என முறையே பதிகம் எடுத்து எழுதி விட்டார் முழங்கி வருபுனலில். 3225. தேசம் பரவும் கவுணியர் கோன் விடுத்த ஏடு செழுமதுரை ஈசன் அருள் ஆம் கயிறு பிணித்து ஈர்ப்ப நதியில் எதிர் ஏற நாசம் செய்யும் பொறிவழியே நடக்கும் உள்ளம் எனச் சென்று நீசரே எண்ணாயிரம் நீத்த வழியே ஒழுகிய ஆல். 3226. சிங்கம் அனையார் எழுது முறை எதிர் ஆற்று ஏற தெரிந்தமரர் அம் கண் நறும் பூமழை பொழிந்தார் அறவோர் துகில் விண் எறிது ஆர்த்தார் கங்கை அணிந்தார் திருத்தொண்டர் கண்ணீர்க் கடலில் அமிழ்ந்தினார் வெம் கண் அமணர் நடுங்கி உடல் வெயர்வைக் கடலில் அமிழ்ந்தினார். 3227. வேமே என்பது அறியாதே வெல்வேம் என்றெ சூள் ஒட்டி நாமே இட்ட ஏடு எரியில் வேவக் கண்டு நதிக்கு எதிரே போமே இன்னம் வெல்வேம் என்று இட்ட ஏடும் புணரி புகத் தாமே தம்மைச் சுட நாணி நின்றார் அமணர் தலை தூக்கி. 3228. பொருப்பே சிலையாய் புரம் கடந்த புனிதனே எத்தேவர்க்கும் விருப்பேய் போகம் வீடுதரும் மேலாம் கடவுள் என நான்கு மருப்பேய் களிற்றான் முடி தகர்த்தான் மருமான் அறியக் குருமொழி போல் நெருப்பே அன்றி வேகவதி நீரும் பின்னர்த் தேற்றியதால். 3229. பொய்யின் மறையின் புறத்து அமணர் புத்தர்க்கு அன்றி வாய்மை உரை செய்யும் மறை நூல் பல தெரிந்தும் சிவனே பரம் என்பது அறியாதே கையில் விளக்கினொடும் கிடங்கில் வீழ்வார் கலங்கி மனம் ஐயம் அடைந்த பேதையர்க்கும் அறிவித்தனவே அவை அன்றோ. 3230. கண்டு கூடல் கோமகனும் கற்பும் நிறைந்த பொற்புடைய வண்டு கூடும் தார் அளக வளவன் மகளும் மந்திரியும் தொண்டு கூடி மடியாரும் காழிக்கு அரசைத் தொழுது துதி விண்டு கூடற்கு அரிய மகிழ் வெள்ளத்து அழுந்தி வியந்தனர் ஆல். 3231. நன்றிதேறார் பின்பு உள்ள மானம் இழந்து நாண் அழிந்து குன்று போலும் தோணி புரக் கோமான் எதிரே யாங்களும் உமக்கு இன்று தோற்றேம் எமை ஈண்டு நீரே வென்றீர் என நேர்ந்து நின்று கூறக் கவுணியர் கோன் அனையார் உய்யும் நெறி நோக்கா. 3232. இன்னம் அறத்தாறு இசைக்கின்றே நீர் ஏன் வாள இறக்கின்றீர் அன்னை அனையான் எம் இறைவன் அவனுக்கு ஆளாய் உய்மின்கள் என்ன ஏட சிறியாய் நீ எவ்வாறு எங்கட்கு அடாத மொழி சொன்னது என்று மானம் உளார் கழுவில் ஏறத் தொடங்கினார். 3233. மதத்தினின் மான மிக்கார் தாங்களே வலிய ஏறிப் பதைத்திட இருந்தார் ஏனைப் பறி தலை அவரைச் சைவ விதத்தினால் ஒழுக்கம் பூண்ட வேடத்தார் பற்றிப் பற்றிச் சிதைத்து இடர் செய்து ஏறிட்டார் திரி தலைக் கழுக்கோல் தன்னில். 3234. வழி வழி வரும் மாணக்கர் சாதற்கு வருந்தி நெஞ்சம் அழிபவர் திரு நீறு இட்டார் அது கிட்டாது அயர் வார் ஆவின் இழிவு இல் கோமயத்தை அள்ளிப் பூசினார் இதுவும் கிட்டாது ஒழிபவர் ஆவின் கன்றைத் தோளில் இட்டு உயிரைப் பெற்றார். 3235. கூறிட்ட மூன்றும் கிட்டாது அயர்பவர் குற்றம் தீர நீறு இட்டார் நெற்றியோடு நிருமல கோமயத்தின் சேறு இட்டார் நெற்றியோடு நெற்றியைச் செறியத் தாக்கி மாறிட்ட பாசம் தன்னை மறித்திட்டுப் பிறப்பை வெல்வார். 3236. மற்று இவர் தம்மை ஊற்றம் செய்திலர் மடிந்தோர் யாரும் சுற்றிய சேனம் காக நரிகள் நாய் தொடர்ந்து கௌவிப் பற்றி நின்று ஈர்த்துத் தின்னக் கிடந்தனர் பரும யானை வெற்றி கொள் வேந்தன் காழி வேந்தரைத் தொழுது நோக்கா. 3237. இன்று நீர் இட்ட ஏடு இங்கு யாவரும் காண நேரே சென்றதே எங்கே என்றான் அதனை யாம் செம்பொன் கூடல் மன்றவர் அருளால் இன்னே வருவிப்பம் என்று வாது வென்றவர் நதியின் மாடே மேல் திசை நோக்கிச் செல்வார். 3238. செல்லு நர் காண ஓலை காவதம் செல்வது அப்பால் ஒல்லை அங்கு ஒளித்தலோடும் வியந்து அவண் ஒருங்கு கூடிக் கொல்லையான் மேய்த்து நின்றார் சிலர் தமைக் குறித்து நீர் இவ் எல்லையுள் விசேடம் உண்டோ இவண் கண்டதிசை மினென்றார். 3239. அவ் இடைச் சிறார்கள் யாங்கள் ஒன்றையும் அறியேம் என்ன இவ்விடை விசேடம் காணல் வேண்டும் எத்திறத்தும் என்னாத் தெவ்விடை வாது செய்யத் திரு உளக் கருணை செய்த வெவ்விடைக் கொடியினாரைப் பாடினார் வேத நாவார். 3240. பாட்டின் மேல் கருணை வைத்தார் சயம்பு வாய்ப் பராரை வில்லக் காட்டினுள் இருப்ப நேரே கண்டு தாழ்ந்து எழுந்து சண்பை நாட்டினர் வலம் கொண்டு ஏத்தி எதிர் நின்றார் நகைத்தார் நிம்பத் தோட்டினான் அது கேட்டு அங்கே தோன்றினான் தானை யோடும். 3241. அந்த மா இலிங்கத்து ஈசன் ஆயிரம் மதியம் கண்ட முந்தை வேதியராய்த் தோன்றி முத் தமிழுக்கு அரசை நீ என் மைந்தன் ஆம் இளையோன் ஒப்பாய் வருக என நீறு சாத்திச் சிந்தை நீள் ஆர்வம் கூரத் திரு அருள் சுரந்து நின்றார். 3242. நின்ற அந்தணரை அன்று நிருமல ஞானம் ஈந்தார் என்று கண்டு இறைஞ்சி ஐய நீரில் யான் இட்ட ஏடு சென்றது இங்கு எடுத்தீர் நீரே அ·து நும் செல்வர்க்கு ஏற்ற அன்று அதைத் தருதி என்றார் அறுமுகச் செம்மல் அன்னார். 3243. இன்னமும் பல் நாள் எம்மை இடம் தொறும் பாடி எஞ்சும் புன் நெறி ஒழுகுவாரை வென்று நம் புனித வீடு பின்னர் நீ பெறுதி என்னா ஏடு தந்து ஆசி பேசி மின் என மறைந்து நின்றார் வேதியர் ஆய வேடர். 3244. தாதையார் கவர்ந்து மீளத் தந்த ஏடு அதனை வாங்கிப் போதையார் ஞானம் உண்டார் புரிசடைப் பிரானார் வெளவி ஈதை யாம் இரந்து வேண்டத் தந்தனர் என்று கூறிக் கோதை ஆர் வேலினார்க்குக் காட்ட அக் கொற்கை வேந்தன். 3245. கச்சு ஆன அரவம் ஆர்த்த கருணை அம் கடலில் தோன்றும் விச்சான ஞானம் உண்டீர் ஆற்றலின் விளைவு தேறாது அச்சான வலியான் உம்மை அளந்தனன் அடியேன் இந்தக் துச்சான பிழைதீர்த்து ஆள்க என்று இறைஞ்சினான் துணர்த்தார் வேம்பன். 3246. அந் நெடு மேரு ஆகும் ஆடகச் சிலையினார்க்குப் பொன் நெடும் சிகரக் கோயின் மண்டபம் புயலைக் கீண்டு மின் நெடும் மதியம் சூடும் கோபுர மேகம் தாவும் கல் நெடும் புரிசை வீதி யாவையும் களிப்பக் கண்டான். 3247. அற்றை நாள் ஆதி ஆக வேடகம் என்னும் நாமம் பெற்றதால் ஏடகத்தின் மேவிய பிரானைப் பாண்டிக் கொற்றவன் சமண ரோடும் கூடிய பாவம் எல்லாம் பற்று அறப் பூசை செய்து பாசமும் கழியப் பெற்றான். 3248. நறை கெழு துழாயினானும் கலுழனும் நாகர் வேந்தும் முறையினால் உகங்கள் மூன்றும் பூசித்து முடியா இன்ப நிறை அருள் பெற்றார் அன்ன நிரா மய இலிங்கம் தன்னை இறுதியா முகத்தில் பாண்டி இறை மகன் பூசை செய்தான். 3249. அம் கண் மா நகர் கண்டு ஆங்கு ஓர் ஆண்டு இறை கொண்டு காழிப் புங்கவ ரோடும் பின் நாள் பூழியர் பெருமான் மீண்டு மங்கல மதுரை சேர்ந்து வைகும் நாள் நீற்றுச் செல்வம் எங்கணும் விளங்கச் சின்னாள் இருந்து பின் ஞானச் செல்வர். 3250. வட புலது உள்ள ஈசன் பதிகளும் வணங்கிப் பாடக் கடவம் என்று எழுந்து கூடல் கண் நுதல் பெருமான் தன்னை இடன் உறை கயல் கண்ணாளை இறைஞ்சிப் பல்வரனும் பெற்று விடை கொடு தமிழ் நாடு எங்கும் பணிந்தனர் மீண்டு போவார். 3251. தன் பெரும் கற்பினாளும் அமைச்சனும் தமிழ் நர் கோனும் பின்பு முனம் தண் காழிப் பிரான் அடி பிரிவு ஆற்றார் ஆய் அன்பு தந்தவர் பால் நட்ட அன்று தொட்டு ஆனாக் கேண்மை இன்பமும் துன்பம் ஆகி விளைந்து முன் ஈர்ப்பப் போனார். 3252. சண்பையர் தலைவர் தாமும் அனையராய்த் தம்பின் செல்லும் நன்புடையவரை நோக்கி நம் இடத்து அன்பு நீங்காப் பண்பினர் ஆகி நீறு பாதுகாத்து ஈசன் கீர்த்தி மண் பட வாழ்மின் இது மறுக்கன் மின் நின்மின் என்றார். 3253. ஆள்உடைப் புகலி வேந்தர் அருண்மொழி மறுக்க அஞ்சித் தாள் உடைப் பதுமச் செந்தாள் தலை உறப் பணிந்து மீண்டு வாள் உடைத் தானைத் தென்னன் மதுரையில் வந்தான் கஞ்சத் தோள் உடைச் சிங்கம் அன்னார் சோழர் கோன் நாடு புக்கார். 3254. ஞானமா மதநீர் சோர ஞான சம்பந்தர் என்னும் மானமா யானை வந்து கடம்பமா வனத்தில் துன்னும் ஊனம் ஆம் சமணர் என்னும் தருக்களை ஒடித்து வெண்ணீறு ஆன மாப் பூழி அள்ளித் தூற்றியது அவனி எங்கும். 3255. ஆதி ஆலயத்து அடலை கொண்டு ஆழி சூழ் காழிச் சோதி வேதியர் பாண்டியன் சுரம் தணித்து உடலில் பேதியாத கூன் நிமிர்த்தலால் பிறங்கு கற்பாதிப் பூதி யாவினும் சிறந்தது அவ் வட்டில் வாய்ப் பூதி. சமணரைக் கழுவேற்றிய படலம் சுபம்
3256. சென்னி வெண் திங்கள் மிலைச்சிய சிவன் அருள் அடைந்த சம்பந்தர் துன் இரும் சமணனைக் கழுமுனை ஏற்றித் துணித்த வாறு இசைத்தனம் வணிகக் கன்னிதன் மன்றல் கரியினை மாற்றாள் காண அக் கண் நுதல் அருளால் வன்னியும் கிணறும் இலிங்கமும் ஆங்கு வந்தவாறு அடுத்தினி உரைப்பாம். 3257. பொன் மலர்க் கைதை வேலி சூழ் வேலைப் புறத்து ஒரு பட்டினத்து உள்ளான் மின் மணிக் கொடும் பூண் ஒரு குல வணிகன் வேறு வேறு ஆம் பல செல்வத் தன்மையில் சிறந்தோன் மகவு இலன் ஆகித் தன் மனக்கு இனியது ஓர் காட்சி நன் மனைக் கொடியோடு அறம் பல புரிந்தோர் நகை மதிக் கொம்பை ஈன்று எடுத்தான். 3258. அத்தன வணிகற்கு உரிய நன் மருகன் அவன் முதற் கடிமணம் முடித்தோன் முத்தமிழ் மதுரைப் பதி உளான் அவற்கே முறையினால் நோற்று நான் பயந்த வித்தக மயிலைக் கொடுப்பல் என்று அனைய இயற் குல வணிகர் கோன் தன்னோடு ஒத்த பல் கிளைஞர் யாவரும் அறிய உணர்த்தினான் சில பகல் ஒழிய. 3259. ஊழ்வினை வலியால் ஆருயிர் இழந்தான் உயிர்க்கு உடம்பு அனைய தன் கற்பின் சூழ் கதிர் மணிப் பூண் மனைவியும் இறப்பத் துணிந்தனள் அவர் இருவோர்க்கும் ஆழ் கடல் கிளைஞர் செயத் தகு கடன்கள் ஆற்றியச் செய்தியை மதுரை வாழ்தரு மருகற்கு உணர்த்துவான் ஓலை விடுத்தனர் மருமகன் வாங்கா. 3260. தன் அருள் மாமன் துஞ்சினான் கூடத் தாரமும் துஞ்சியது இப்பால் அன்னவற்கு அளவு இன்று ஆகிய தனம் உண்டு அவனனி நாண் மகவு இன்றிப் பின் ஒரு பெண்ணைப் பெற்றனன் அவளைத் தனக்கு எனப் பேசினான் அனைய கன்னியை மணந்து செல்க என முடங்கல் கழறிய பாசுரம் தெரியா. 3261. வீழ்ந்தனன் தரை மேல் புரண்டனன் உயிர்ப்பு வீங்கினன் விழிப்புனல் வெள்ளத்து ஆழ்ந்தனன் விம்முற்று அம்மவோ என்று என்று அரற்றினான் கிளைஞர் நட்பு அடைந்து வாழ்ந்தவர் தழுவத் தழீஇத் தழீஇக் கரைந்தான் மற்றவர் தேற்றிடத் தௌ¤ந்து சூழ்ந்த வெம் துயர் நீத்து ஒரு தலை மாமன் தொல் நகர்க்கு கேகுவான் துணிந்தான். 3262. அங்கு உள கிளைஞர் சிலரொடும் கூடி அரும் கடி மதுரை நீத்து ஏகிப் பொங்கிரும் காழி சூழ் பட்டினம் குறுகிப் புகுதுவான் வரவு அறிந்து அங்குத் தங்கு தம் கிளைஞர் வினவ நேர் வாரைத் தழீஇத் தழீஇச் செலவிடுத்து ஏகிக் கொங்கு இவர் தளவத் தாரினான் மாமன் கோயில் புக்கு இருந்தனன் ஆக. 3263. நாள் சில கழிந்த பின்னர் நாய்கர் ஏறு அனையான் அன்ன வாள் புரை கண்ணியானை மதுரையில் கொடுபோய் அங்கு என் கேளிர் முன் வேட்பல் என்று கிளந்து தன் மாமன் ஈட்டு நீள் பெரும் பொருள்கள் மற்றும் கைக் கொண்டு நெறியில் செல்வான். 3264. வழிவிட வருவார் தம்மை நிறுத்திப் பின் மதுரை மூதூர்க்கு எழுதரு சுற்றத்தாரை முன் சென் மின் என்று போக்கித் தொழு பரிசனமும் தானும் தோகையும் வைகல் ஒன்றில் கழி வழி அரைமேல் பெய்த காவதம் ஆகப் போவான். 3265. வெம் கதிர் வேலை செல்லும் வேலை வந்து அணையும் முன்னம் இங்கிருந்து ஒழிகம் என்னாப் புறம் பய மூதுர் எய்தி அங்கு இறை கோயில் முன்னிக் கூவல் நீராடி அங்குத் தங்கிய வன்னி மாடே போனகம் சமைத்து உண்டு எல் வாய். 3266. மலை வைத்த சிலையான் கோயில் மருங்கு ஒரு படியின் உம்பர் தலை வைத்துத் துயிலும் எல்லை விதிவழிச் சார வந்தோர் கொலை வைத்த விடவாய் நாகம் கடித்தது கொதித்து நீண்ட விலை வைத்த கொடும் பூண்நாயகன் விடம் தலைக் கொண்டு மாய்ந்தான். 3267. அங்குள பரிசனங்கள் ஆவலித்து இரங்கிச் சூழக் கொங்கைகள் புடைத்துச் சேடிக் குற்றிடை மகளிர் ஏங்கச் சிங்க ஏறு அனையான் ஆகந் தீண்டிடாது ஒதுங்கிப் போந்த பங்கய மலர்க் கொம்பு அன்னாள் பாவை போல் புறம்பு நின்றாள். 3268. ஆளி ஏறு அன்ன அரவின் வாய்ப் பட்டதும் அவிந்ததும் மீள வேல் உண் கணார் கை குலைத்து அழுவதும் விழுவதும் கேளிர் சூழ்ந்து அயர்வதும் சோர்வதும் கண்டு இளம் கிகினாள் வாளியேறு உண்டதோர் மயிலின் வீழ்ந்து உயங்கினாள் மயங்கினாள். 3269. வடிக்கண் உள் செருகின அருகின உயிர்ப்பு அழல் வாய்ப் படும் தொடுத்த பூம் கோதைபோல் சோர்ந்தது ஆக கரம் சோர்ந்தன அடித்தளிர் சோர்ந்தன கன்னி அன்னப் பெடை அன்னவள் இடிக்கு எதிர் பட்டு வீழ்ந்தாள் எனக் கிடந்தனள் என் செய்வாள். 3270. சாயும் பூம் கொம்பரில் சூழ்ந்து இறந்தான் புறம் சார்ந்து அழூஉம் ஆய மென் மகளிர் மீண்டு அன்பனோடு எங்கை தன் ஆவியும் போயதே கொல் என மடியுறக் கொடும் கையால் புறம் தழீஇத் தூய தூ செறிந்து இளைப் பாற்றினார் சிறிது உயிர் தோற்றவே. 3271. மெய் கழிந்து இன்னுயிர் மீண்டு தன் யாக்கையின் மெல்லவே கை கலந்தாங்கு இரு காலி அங்கு உற்றன கண்களும் பொய்கை நீலம் சிறிது அவிழ்ந்து என அலர்ந்தன பூவையை மை கழி நாள் முதல் நான்கு நால் வேலியாய் வளைந்தவே. 3272. கை யெறியும் குழல் கற்றை சோரும் திரி காறுளி நெய் எனக் கண் புனல் கொங்கை முற்றத்து உக நெஞ்சுகும் பைய வாய் விடும் புறம் பார்க்கும் நாண் நெடும் தளைபடும் சிறு தெய்வம் தொட்டாள் எனத் தேம்பி விம்மாந்து ஒளிதேயுமால். 3273. வணங்கில் செல்வம் தழீஇப் பிறந்த நாள் தொட்டு தொகு வைகலும் அணங்கு எனக் கனவிலும் கண்டிலாள் அன்பன் மேல் அன்பு எனும் இணங்கு தன் உருவமாய் நிறைவரம் பிற்றென இருந்த ஒர் பெண் அணங்கு வாய் விட்டு அழுதால் எனப் புலம்பல் உற்றாள் அரோ. 3274. என் நாயகனேயோ என் இரு கண்மணி யே யோ என்னை ஈன்றான் தன் ஆவி அன்ன தனி மருகாவோ முருகாவோ தார் ஆர் முல்லை மன்னாவோ வணிகர் குல மணியே யோ விடி அரவின் வாய்ப் பட்டாயோ உன்னாக நிழலான என்னை விடுத்து எவ்வண்ணம் ஒளிப்ப தேயோ. 3275. பொன்னாட்டின் மட வாரைப் புணர் வதற்கோ நம் அளகா புரத்து வேந்தன் நன் நாட்டின் மடவாரை மணப்பதற்கோ உனைக் கடித்த நாகர் வேந்தன் தன் நாட்டின் மடவாரைத் தழுவுதற்கோ என் ஆவித் தலைவா என்னை இந் நாட்டில் இருத்தி எனை வஞ்சித்துப் போயின வாறு என்னே என்னே. 3276. தென் உலகில் புகுந்தனையோ பணிந்தனையோ மாதுலனைத் தேவியோடும் தன் இரு தோள் உற ஆரத் தழுவினனோ நானும் உடன் சார்ந்தேன் ஆகில் என்னுரிய குரவரையும் கண்ணாரக் காணேனோ எனை ஈங்கு இட்டாய் பின்னுரிய பரிசனமும் கைவிட்டாய் தனி போய் என் பெற்றாய் ஐயா. 3277. வரிசை மருமகன் அரவால் விளிந்தது நான் அறை போய மனத்தோடு இங்குப் பரிவுறலும் எனைப் பயந்தார் நோற்ற பயன் நன்றாகப் பலித்ததே யோ பெரித வரிக் கண் கலக்கம் காணாமுன் இறந்து அன்றோ பிழைத்தார் அந்தோ அரியதிலும் அரிய பயன் இது அன்றோ எவர் பெற்றார் அவர் போல் அம்மா. 3278. உன் காதல் மாமன் எனைப் பயந்த அன்றே உறவு அறிய உனக்கே பேசிப் பின் காதல் மனைவியொடும் உயிர் இழந்தான் யனும் அந்தப் பெற்றியாலே என் காதல் உயிர் போக வெற்று உடம்போ இருக்கும் உடன் இறப்பேன் என்னாத் தன் காதல் துணை இழந்த அன்றில் என விழுந்து அழுதாள் தமியள் ஆனாள். 3279. நன் நகர் உறக்கம் நீங்கி நடுக்கம் உற்று அழுங்கக் காழித் தென்னகர் ஞானச் செல்வர் சிவன் நகர் தொறும் போய்ப் பாடி அந் நகர் அடைந்தார் ஆங்கு ஓர் அணி மடத்து இருந்தார் கேட்டு ஈது என் என ஆள் விட்டு ஆய்ந்து கோயிலின் இடை வந்து எய்தி. 3280. கன்னி நீ யாரை உற்றது என் எனக் கன்னி தாழ்ந்து தன் அரு மரபும் ஈன்றார் தம்மையும் மருகற்கு என்றே உன்னினர் மன்றல் பேசியிறந்தது உயிர் அன்னானோடு இந் நெறி அடைந்து ஈங்கு உற்ற நிகழ்ச்சியும் எடுத்துச் சொன்னாள். 3281. தந்தையும் தாயும் அன்னார் தமியளாய் இரங்கும் பேதைப் பைந் தொடி ஆவி காப்பான் பாம்பு கோள் பட்டான் மாடே வந்தவன் ஆகம் எல்லாம் மருந்து உருவாகும் வண்ணம் சிந்தை செய்து அருட்கண் வைத்தார் குதித்தது தீவாய் நஞ்சம். 3282. எழுந்தனன் உறங்கினான் போல் இறந்தவன் யாரும் கண்டு தொழும் தகை ஞான வேந்தைத் தொழுதனர் துதி செய்து ஆர்வத்து அழுந்தினர் கன்னி அன்ன மனையவள் இன்பத் தீம்தேன் பொழிந்து ஒரு புறத்தே கஞ்சம் பூத்த ஓர் கொம்பின் நின்றாள். 3283. தலைவனை இறந்த போதும் தனி உயிர் பெற்ற போதும் சிலை நுதல் காதல் மாமன் செல்வியாய் இருந்தும் தீண்டா நிலைமையும் அன்பும் கற்பின் நீர்மையும் வியந்து நோக்கி மலைமகள் ஞானம் உண்டார் வணிகனை நோக்கிச் சொல்வார். 3284. வருதி நின் மரபுக்கு எல்லாம் மணிஅனாய் உன்றன் மாமன் தரு திரு அனையாள் இன்பம் சாருநாள் துன்பம் வந்து பெருகு நாள் அன்றி என்று உன் மெய் தொடப் பெருவள் ஈண்டே திருமணம் முடித்துக் கொண்டு பேக எனச் செப்பலோடும். 3285. செம் கண் ஏரு அனையான் ஐயன் திரு மொழி தலைமேல் கொண்டு பங்கயன் படைத்த சாதி நான்கையும் பாது காப்பீர் எம் குல வணிகர் இன்றிக் கரிகளும் இன்றி ஈங்கே மங்கலம் முடிக்கும் வண்ணம் யாது என வணங்கிச் சொன்னான். 3286. கன்னியை ஈன்ற ஞான்றே உனக்கு என்று உன் காதல் மாமன் உன்னிய உறவின் உள்ளார் அறிவரே உனக்கு ஈது அன்றி வன்னியும் கிணறும் இந்த இலிங்கமும் கரிகண் மைந்தா இந் நிலை வதுவை செய்தி எம் உரை கடவாது என்றார். 3287. மாசு அறு மனத்தான் காழி வள்ளலைப் பணிந்து நீரே தேசிகர் குரவர் நட்டோர் தெய்வமும் கிளையும் என்னாப் பேசிய வாறே வேள்வி பெற்றியான் இறீ இத்தான் வேட்ட பாசிழையோடு தாழ்ந்து விடை கொடு பரவிப் போனான். 3288. ஏவல் செய் ஆயத்தாரும் அடியரும் ஈண்ட ஈண்டிக் காவல் செய் மதுரை மூதூர் குறுகித் தன் காதல் மாமன் பூவையை மணந்த வண்ணம் கேட்டு அங்குப் புடைசூழ் சுற்றம் யவரும் உவப்ப இன் புற்று இருந்தனன் இளங்கோ மன்னன். 3289. தன் பெரும் தனமும் மாமன் ஈட்டிய தனமும் ஈட்டி மன் பெரு நிதிக் கோன் என்ன வாணிகம் பெருக்கி நாய்கன் இன் புறு காதலார்கள் இருவரும் ஈன்றகாதல் நன் பொருள் மகிழ்ச்சி செய்ய நலம் பெற வாழும் நாளில். 3290. மூத்தவள் சிறுவர் சால மூர்க்கராய் உள்ளார் ஏனை மாத்தளிர் இயலினாட்கு ஓர் மைந்தன் உண்டு இவனும் அன்ன தீத் தொழின் ஆக மன்ன சிறார்களும் அல்லல் செல்வம் பூத்த நீள் நியமத்தூடு போய் விளையாடல் செய்வார். 3291. முந்திய மணாட்டி மைந்தர் முகிழ் முலை இளைய பாவை மைந்தனை ஒரு நாள் சீறி அடித்தனர் வருந்தி ஈன்ற சந்தணி முலையாள் மாற்றாள் தனையரை வைதாள் ஈன்ற பைந்தொடி தானும் சீறி இளையளை பழித்து வைவாள். 3292. எந்தவூர் எந்தச் சாதி யார் மகள் யாவர் காணச் செந்தழல் சான்றா எங்கோன் கடி மணம் செய்து வந்த கொந்தவிழ் கோதை நீ என் கொழுநனுக்கு ஆசைப்பட்டு வந்தவள் ஆன காமக்கிழத்திக்கு ஏன் வாயும் வீறும். 3293. உரியவன் தீ முன்னாக உன்னை வேட்டதற்கு வேறு கரி உளதாகில் கூறிக் காட்டு எனக் கழற லோடும் எரி சுட வாடிச் சாய்ந்த இணர் மலர் கொம்பில் சாம்பித் தெரி இழை நாணம் சாய்ப்ப நின்று இது செப்புகின்றாள். 3294. அரவின் வாய்ப் பட்ட வைகல் ஆர் உயிர் அளித்த ஞானப் புரவலர் அருளால் எம் கோன் புறம் பய நாதன் வன்னித் தரு வொடு கிணறு காணச் செய்தனன் சாறு அம் மூன்று கரிகளும் உள்ள என்றாள் கற்பினாள் ஒப்பிலாதாள். 3295. மாற்று அவள் நகைத்து நன்று நின் மன்றல் வேள்விக் ஏற்றன கரியே சொன்னாய் இங்கு உமக்கு கரிகள் மூன்றும் தோற்ற மேல் அதுவும் மெய்யே என்றன தோகை யோடும் வேற்றுமை இலாத சாயல் இளையவள் விழுமம் கூரா. 3296. வெவ் உயிர்ப்பு எறிய இல் போய் மெல் விரல் நெரிக்கும் கையால் அவ் வயிறதுக்கும் வீழும் கண்புனல் வெள்ளத்து ஆழும் கொவ்வை வாய் துடிக்கு நாணம் தலைக் கொளும் கூசும் மன்னோ தெய்வமே ஆவாய் என்னும் என் செய் கேன் சிறியேன் என்னும். 3297. தாதை தாய் இறந்த அன்றே தமியளாய் இங்குப் போந்த பேதையேற்கு யார் உண்டு ஐய பேதுறும் வணிகற்கு அன்று மாதுலன் ஆகி ஞாதி வழக்கு அறுத்து உரிமை ஈந்த நாதனே ஏது இலாள் வாய் நகையினில் காத்தி என்னா. 3298. அன்று இரவு உண்டி இன்றித் துயில் இன்றி அழுங்கிப் பின் நாள் பொன் திணி கமல வாவிப் புண்ணியப் புனல் தோய்ந்து அண்டர் நின்று இழி விமானக் கோயில் நிரம் பிய அழகர் முன்னாச் சென்று இரு தாளில் வீழ்ந்து தன் குறை செப்பி வேண்டும். 3299. அன்று எனைக் கணவன் வேட்ட இடத்தினில் அதற்குச் சான்றாய் நின்ற பைந்தருவும் நீயும் கிணறும் அந்நிலையே இங்கும் இன்று வந்து ஏது இலாள் வாய் நகை துடைத்து எனைக் காவாயேல் பொன்றுவல் என்றாள் கற்பின் புகழினை நிறுத்த வந்தாள். 3300. அல்லல் உற்று அழுங்கி நின்றாள் பரிவு கண்டு அம் தண் கூடல் எல்லை இல் கருணை மூர்த்தி அருளினால் எவரும் காணத் தொல்லையின் படியே அன்னாள் சொல்லிய கரிகள் மூன்றும் ஒல்லை வந்து இறுத்த கோயில் உத்தர குணபால் எல்லை. 3301. அன்ன போது இளையாள் மூத்தாள் கொண்டுபோய் ஆலவாய் எம் முன்னவன் திருமுன் தாழ்ந்து காட்டுவாள் முகில் தோய் சென்னி வன்னி ஈது இலிங்கம் ஈது கிணறு ஈது என்று மன்றல் சான்றாய்த் துன்னிய என்றாள் கண்டாள் முடித்தலை தூக்கி நின்றாள். 3302. அவ் இடைத் தருவும் நீரும் அன்றுபோல் இன்றும் சான்றாய் இவ்விடைப் பட்ட என்ன அதிசயம் எவர்க்கும் தேறாத் தெய்வமும் எளிவந்து அங்கைக் கனி இனித் திருவின் அன்னாள் கைவ் வசப் பட்டது என்றால் கற்பினுக்கு அரிதே அம்மா. 3303. மங்கை தன் கற்பும் ஈசன் இடத்து அவள் வைத்த அன்பும் அங்கணன் அவட்குச் செய்த அருளையும் வியந்து நோக்கி மங்கல நகரார் எல்லாம் மகிழ்ச்சியுள் ஆழ்ந்தார் முல்லைத் தொங்கலான் முது மணாட்டி ஒருத்தியும் துன்பத்து ஆழ்ந்தாள். 3304. மேதகு வணிகர் மூத்த வினைக் கொடியாளைப் பொல்லாப் பாதகி இவளாம் என்று பழித்தனர் படிறு பேசிக் கோது அறு குணத்தினாளைக் குடிப் பழுது உரைத்தாய் நீ என் காதலி ஆகாய் என்று கணவனும் தள்ளி விட்டான். 3305. அந்நிலை இளையாள் கேள்வன் அடியில் வீழ்ந்து இரப்பாள் ஐய என்னது கற்பை இன்று நிறுத்தினாள் இவண் மாற்றாளன் அன்னை இலாதேற்கு அன்னை ஆயினாள் இவளும் யானும் இன் உயிர் உடல் போல் வாழ்வோம் எனத் தழீத் தம்மின் நட்டார். 3306. உடம்பினால் இரண்டே அன்றி உயிர்ப் பொருள் இரண்டு அற்று உள்ளம் மடம் படு அழுக்காறு அற்று மைந்தரும் அனையர் ஆக விடம் படு மைவாய் நாகம் விழுங்கிரை ஒத்துத் தம்மில் இடம் படு அன்புற்று இன்புற்று இருவரும் இருந்தார் மன்னோ. 3307. அருந்ததி அனையாள் கேள்வற்கு ஆயுளும் ஆனாச் செல்வம் பெருந்தன நிறைவும் சீரும் ஒழுக்கமும் பீடும் பேறு அரும்தவ நெறியும் குன்றத் தருமமும் புகழும் பல்க இருந்தனள் கமலச் செல்வி என்ன வீற்று இருந்து மன்னோ. 3308. பொன் அவிர் கமலம் பூத்த பொய்கை சூழ் ஆலவாய் எம் முன்னவன் விளையாட்டு எல்லை கண்டு யார் மொழிய வல்லார் இன்னமும் அளவின்று என்ப எம் குரு நாத சாமி சொன்னவாறு உங்கட்கு எண் எண் காதையும் சொன்னேன் அம்ம. 3309. என்று தென் மலை மேல் இருந்த மாதவத் தோன் இன் அருள் குருபரன் தனையும் அன்று அவன் திருவாய் மலர்ந்த வாசகமும் அருள் கனிந்து ஒழுக உள்ளடக்கித் தென்தமிழ் ஆலவாய்த் தனிப் பதியைச் சென்னிமேல் பன்னிரண்டு உம்பர் ஒன்ற வைத்து இமையா அம் கயல் கண்ணி உடன் உறை ஒருவனை நினைந்தான். 3310. பரவசம் அடைந்து வழி கவர்ந்து உண்ணும் பழிப் புல வேடர் போய் ஒளிப்ப இருள் வெளி கடந்து திருவருள் வழிச் சென்று எண் இலாச் சரா சரம் அனைத்தும் புரை அற நிறைந்து காட்சி காண் பான் புதைபடத் தனித்த பூரணமாய் உரை உணர்வு இறந்த உண்மை ஆனந்த உணர்வினை உணர்வற உணர்ந்தான். வன்னியும் கிணறும் இலிங்கமும் அழைத்த படலம் சுபம்
3311. கன்னிதன் வதுவைக் கரிகளாய் இலிங்கக் கடவுளும் கவைக்கரும் கோட்டு வன்னியும் படுநீர்க் கூவலும் வந்த வழி இது மதுரை நாயகனைக் சென்னியில் வைத்த முனிவனைச் பூசை செய்து மாதவரொடு ஒருங்கு எய்திப் பன்னிற மலர் தூஉய் ஆலவா யானைப் பரவிய பரிசு அது பகர்வாம். 3312. போத ஆனந்தத் தனிக் கடல் பருகும் புயல் புரை முனிவனை வசிட்ட மாதவன் ஆதி முனிவரும் உலோபா முத்திரை தன் னொடும் வரித்துப் போதொடு சாந்த மான் மதம் தீபம் புகை முதல் கருவிகைக் கொண்டு மேதகு சிறப்பால் அருச்சனை செய்து பின்னும் ஓர் வினாவுரை செய்வார். 3313. கோட்டம் சிலை குனித்த கூடல் பிரான் ஆடல் கேட்ட அம் செவி படைத்த பேறு அடைந்தேம் கெட்ட படி நாட்டம் களிப்ப நறுமலர் தூஉய்க் கண்டு இறைஞ்ச வேட்டங்கள் யாங்கள் என ஓதினார் மெய்த் தவரே. 3314. என்ற அறவோர் எதிரே முகம் மலர்ந்து குன்றம் அடக்கும் குறு முனிவன் கூறுவான் நன்று முனிகாள் இதனை நான் உள்ளத்து எண்ணியாங்கு ஒன்ற மொழிந்தீர் என்றான் பின்னும் வியந்து ஓதுவான். 3315. பண்ணான் மறை முடியும் தேறாப் பரசிவனை எண்ணால் அளவு இறந்த எக் கலையால் கண்டு உளக் கண்ணால் அறியாதார் வீட்டு இன்பம் காண்பரோ மண் ஆதி ஆறு ஆறு நீத்த தனி மாதவரே. 3316. அம் செவியில் ஊறு படக் கேட்டபடி ஆலவாய்ப் பஞ்ச முகச் சோதி பரனைப் போய் அர்ச்சித்து நெஞ்சம் நெகக் கண்டு நினையா வழி நினைந்து வஞ்ச வினை வேர் களைவான் வம்மின்கள் என்றானே. 3317. மங்கல ஓரை வருதினத்தில் வான் இழிந்த கங்கை படிந்து உலக நாயகனைக் கை தொழுது புங்கவர் முன் சங்கற்பம் செய்து அனுச்சை பூண்டு ஒழுகி அங்கு அவர் வாய் ஆசி மொழி கேட்டு அகம் மகிழ்ந்தே. 3318. ஐம் புலனும் கூடல் பெருமான் அடி ஒதுக்கி நம்பன் உரு ஐந்து எழுத்து நாவாடக் கை கூப்பித் தம் புனித சைவ தவத் தெய்வத் தேர் மேல் கொண்டு உம்பர் வழி நடக்கல் உற்றார்கள் நற்றவரே. 3319. செய்ய சடையர் திரு நீறு சண்ணித்த மெய்யர் தவம் நோற்று இளைத்த மேனியின் அருட் புறம்பும் துய்யர் அணி கண்டிகையர் தோலும் மருங்குடையர் ஐயர் தவத்துக்கு அணிகலம் போல் போதுவார். 3320. புண்ணியம் தழைக்கும் தெய்வத் தலங்களும் புலன்கள் வென்றோர் நண்ணிய வனமும் தீர்த்த நதிகளும் தவத்தோர் நோற்கும் வண்ணமும் நோக்கி நோக்கி மலயமா முனிவன் காட்டக் கண் இணை களிப்ப நோக்கிக் கை தொழுது இறைஞ்சிச் செல்வார். 3321. சீறு கொள் இலங்கை வேந்தைச் செகுத்திட இராமன் பூசித்து ஆறு அணி விருபக் கண்ணருள் பெறுதலம் மீது உம்பர் ஏறி வீழ்ந்து இறந்தோர் முன்னம் எண்ணிய எண்ணி ஆங்கே மாறிய பிறப்பின் நல்கு மலை இது காண்மின் காண்மின். 3322. சுரபி நீள் செவியில் இலிங்கச் சுடர் உரு ஆயினான் தன் இரவினில் திருத்தேர் மன்ற நடக்கும் ஊர் மேலை உரவு நீர்க் கரைத் தேள் மாதத்து உயர்ந்த கார்த்திகையில்தேர் ஊர்ந்து தரவு நீர்ச் சடையான் வேள்வி நடக்கும் ஊர் அவ்வூர் காண்மின். 3323. வில் பயில் தடக்கை வேடன் மென்ற ஊன் பாகம் பார்த்தோன் பொற்பு உறு கிரி ஈது அண்டம் புழை பட விடத்தாள் நீட்டி அற்புதன் காளி தோற்க ஆதியது இது மா நீழல் கற்புடை ஒருத்தி நோற்கும் பிலம் இது காண்மின் காண்மின். 3324. திருமறு மார்பன் கவல் செயல் பெற அரனைப் பூசித்து இருகரம் முகிழ்த்து நேர் நின்று ஏத்திட இதுவாம் ஓத்தின் உரைவரம்பு அகன்ற முக்கண் உத்தமன் சந்தை கூட்டி அருமறை அறவோர்க்கு ஓது வித்த இடம் அதனைக் காண்மின். 3325. அடி முடி விலங்கும் புள்ளும் அளந்திடாது அண்டம் கீண்டு நெடுகிய நெருப்பு நின்ற நிலை இது முள்வாய்க் கங்க வடிவு எடுத்து இருவர் நோற்கும் மலை இது பல்வேறு ஊழி இடை உற முன்னும் பின்னும் இருக்கும் இக் குன்றைக் காண்மின். 3326. அவுணரில் கள்வனான அந்தகன் காய்ந்து மூன்று புவனமும் கவலை தீர்த்த புண்ணியன் புரம் ஈது ஆகும் தவலரும் புரங்கள் மூன்றும் தழல் நுதல் திருக் கண் சாத்திப் பவம் அறு மூவர் அன்பில் பட்டவன் பதியைக் காண்மின். 3327. சத்திய ஞான ஆனந்த தத்துவம் அசைவற்று ஆடும் நித்திய பரமானந்த நிறை அருள் மன்றம் ஈது முத்தி அங்கு உதித்தோர் எய்தும் பதி அது முதல்நூல் நான்கும் பத்தியில் பூசித்து ஏத்தும் பதி இதுவாகும் பார்மின். 3328. பிரமன் மால் முதல் ஆம் தேவர் பிரளயத்து இறவா வண்ணம் பரமனார் தோணி யேற்றும் பன்னிருநாமம் பெற்ற புரம் இது சடாயு சம்பாதிகள் பெரும் பூசை செய்ய வரம் அளித்து இருள் நோய் தீர்க்கும் மருத்துறைபதி ஈது ஆகும். 3329. மதி நுதல் இமயச் செல்வி மஞ்சையாய் வழிபட்டு ஏத்தும் இது துலாப் பொன்னித்தானம் எம்மனோர் மூன்று கோடி மதி பெறு முனிவர் வந்து வழிபடு மூதூர் இது இப் பதி அறக் கடவுள் பூசை பண்ணிய தானம் காண்மின். 3330. கோடு நான்கு உடைய வேழம் தானவன் குறைத்த கோட்டைப் பாடு அற நோற்றுப் பெற்ற பதி இது மாலை சாத்தும் தாடகை மானம் காப்பான் தாழ்ந்து பூம் கச்சு இட்டு ஈர்க்கும் பீடு உறு கலயன் அன்பின் நிமிர்ந்த எம் பிரான் ஊர் ஈதல். 3331. கரி முகத்து அவுணற் காய்ந்து கரி முகத்து அண்ணல் பூசை புரிசிவ நகரம் ஈது தாரகற் பொருது செவ்வேள் அரனை அர்ச்சித்தார்க் கீழ் மணல் குறியான் பால் ஆட்டிப் பரன் முடி மாலை சூடும் சேய் வளம் பதி ஈது ஆகும். 3332. கறுவி வீழ் காலன் மார்பில் சேவடிக் கமலம் சாத்திச் சிறுவனுக்கு ஆயுள் ஈந்த சேவகப் பெருமான் மேய அறைபுனல் பழன மூதூர் அது இது வானை தந்த குறை உடல் போர்வை போர்த்த கொற்றவன் கோயில் காண்மின். 3333. பங்கயக் கடவுள் ஈந்த பரிகலம் வாங்கிக் கொண்ட அம் கண் இடம் மீது ஆட அனங்கனை அமுது செய்த செம் கணான் இருக்கை ஈது ஏழகச் சென்னி தன்னை மங்கல மாமற்கு ஈந்த மருகனார் இருக்கை காண்மின். 3334. திண் திறல் அவுணன் தன்னைப் பெருவிரல் தீட்டு நேமி உண்டிட விருந்தக் கொண்டோன் உறை அதாம் ஒருத்தி மன்றல் கண்டிடு கரியாய்க் கூவல் கண்ணுதல் லிங்கம் வன்னி எண் திசை அறியக் காட்ட நின்றிடம் இதனைக் காண்மின். 3335. சாம கண்டத்தன் தன்னைத் தான் அருச்சித்த தென்னர் கோமகன் பிரம சாயை குறைத்தது இப் பதியாம் கங்கை மா மகம் தோறும் வந்து வந்துதல் படிந்தோர் விட்டுப் போ மகம் போக மூழ்கும் புனித நீர்ப் பதியைக் காண்மின். 3336. குருமொழி நந்தைக்கு ஈந்த எங் குரு உறை மலை ஈது எம் கோன் கரு முகில் வண்ணத்து அண்ணல் கண்ணிடந்து அடியில் சாத்தப் பொருவிறல் ஆழி ஈந்த புரம் இது நந்தி எந்தை திருவுரு அடைய நோற்ற தலம் இது தெரிந்து காண்மின். 3337. முடங்கு கால் சிலந்தி யானை மலை மகள் முளரி நாட்டத்து தடங்கடல் வண்ணன் நோற்ற தவ நகர் இது முச் சென்னி மடங்கல் ஏறு அனையான் நாம வரை இது குடைந்தோர் பாவம் அடங்கலும் பருகும் பொன்னி ஆறு இது காண்மின் காண்மின். 3338. இந் நதி வெண் முத்து ஆரம் எனக் கிடந்து இலங்கும் சென்னி மன்னவன் நாடு ஈது என்ப தமிழ் அறி வைகைப் பேர்யாறு அந்நதி துறக்க மண்மேல் வழுக்கி வீழ்ந்தாங்குத் தோற்றித் தென்னவன் நாடு சேய்த்தாத் தெரிவதே காண்மின் என்றான். 3339. பொங்கர் மென் புதல்கள் என்னப் பொரு நதி சிறு கால் என்னக் கொங்கு அலர் தடம் சிற்றுறல் குழி எனப் பழனம் சில்லி தங்கு மென் பாத்தி என்னத் தாழை தாழ் சிறுபுல் என்னப் பைம் குலைக் கதலி மஞ்சள் பாத்தி போல் தோற்றக் கண்டார். 3340. பல் நிற மாட மாலை உபரிகைப் பந்தி செய் குன்று அன்னம் வெண் குருகு செம் போத்து அளகு பைம் கிள்ளை மஞ்சை இன்ன புள் வேறு வேறாய் ஒழுங்கு பட்டு இருப்பது ஒப்ப மின்னு பூம் கொடியப் புட்கள் சிறகு என விதிர்ப்பக் கண்டார். 3341. கண்டு நாட்டு நகர் வளங்கள் நடந்து நடந்து கண்கள் விருந்து உண்டு மீள அகல் விசும்பு ஆறு ஒழுகி வலமா வருமுனிவர் விண் துழாவும் கொடும் குன்றும் தளிப் புத்தூரும் விரிபொழில் வாய் வண்டு பாட மயில் ஆடல் பயில் ஆடானை வள நகரும். 3342. சரத வேதம் பரவு புனவாயில் நகரும் தவ சித்தர் இரத வாதம் செய்து சிவன் உருவம் கண்ட எழில் நகரும் வரதன் ஆகி அரன் உறையும் கானப் பேரு மலை மகளை வரத யோக நெறி நின்று மணந்தார் சுழியல் வியன் நகரும். 3343. மறவாள் இலங்கை இறை மகனை வதைத்த பழியான் மருண்டு அரியன் அறவாண் நேமி அளித்தவனை அர்ச்சித்து அகன்ற அணிநகரும் நிறவாள் முத்தும் வயிடூரிய நிறையும் பொன்னும் விளை பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொல் நகரும். 3344. துளபக் குன்றைக் கொன்றை முடிக் குன்றம் ஆக்கும் தொல் நகரும் அளகைப் பொரித்த கொடி இளையோன் மான் நேர் நோக்கின் ஆனைமகள் புளகக் குன்றை மணந்து முதல் இருந்த பொருப்பும் போர்விசயன் வளை வில் தாக்க வடுக்கிடந்த முடியோன் மேய வள நகரும். 3345. கொண்டல் படியும் திருவாப்பனூரும் தொழுது குளிர்திரைக்கை வண்டு படியும் கமலமுக வைகைப் பிராட்டி எதிர் வண்ங்கிக் கண்டு பணிந்து திசை எட்டும் விழுங்கி அண்டம் கடந்து உலகம் உண்ட நெடியோன் என உயர் கோபுரம் முன் இறைஞ்சி உள்புகுதா. 3346. மறுகு தோறும் பணிந்து எழுந்து வளைந்து வளந்து பொன் கோயில் குறுகி விதியால் பொன் கமலம் குடைந்து செய்யும் குறை நிறுவி உறுதி பெற ஐந்து எழுத்து எண்ணி ஊற்று மதத்து நால்தடம் தோள் சிறுகு கண்ண ஐங்கரத்துச் சித்தியானை அடி வணங்கா. 3347. மும்மை உலகு நான் மறையும் முறையன் ஈன்ற அம் கயல் கண் அம்மை அடிகண் முடியுறத் தாழ்ந்து அன்பு கொடுத்து இன் அருள் வாங்கி வெம்மை ஒளிகான் மணிக் கனக விமானத்து அமர்ந்ததனிச்சுடரின் செம்மை அடித்தாமரை மரை வேணிச் சிரமேல் மலர்ப் பணிந்து ஏத்தா. 3348. அன்று இரு போது உண்டி துறந்து இரா அறுக்கும் தீவாள் என்று எழு முன்னீர் ஆடி நியதிகள் இயற்றி ஐந்தும் வென்று உளத்து அன்பு பாய விளை முதலைப் பார்மேல் மின் திரண்டு என்ன நின்ற விமானம் மீது இருப்பக் கண்டார். 3349. வாச மஞ்சனம் தேன் கன்னல் பைங்கனி மறு இல் ஆன் ஐந்து ஆசறு அமுதம் ஐந்து தென் மலை ஆரம் வாசம் வீசு தண் பனி நீர் வெள்ள மான் மதம் விரை மென் போது துசணி மணிப்பூண் நல்ல சுவை அமுது இன்ன தாங்கா. 3350. சத உருத் திரத்தால் ஆட்டி மட்டித்துச் சாத்தி பூட்டிப் பதம் உற மனுவால் அட்ட பால் அமுது அருத்திப் பஞ்ச விதம் உறு வாசம் பாகு வெள்ளிலை அளித்துப் போகம் உத உறு தூப தீபா ஆதிகள் பல உவப்ப நல்கா. 3351. ஐம் முகச் சைவச் செம் தீ அகத்தினும் துடுவை ஆர நெய்ம் முகந்து அருத்திப் பூசை நிரப்பி நால் வேதம் சொன்ன மெய்ம் மனு நூற்றுப் பத்தான் மூவிலை வில்ல நீலம் கைம்மலர் ஏந்திச் சாத்திக் கடவுளை உவப்பச் செய்து. 3352. வாச மஞ்சன நீரோடு மந்திர மலர் கைக் கொண்டு பூசையின் பயனை முக்கண் புண்ணியன் கையில் நல்கி நேச நெஞ் சூறக் கண்கள் நிறைய நீர் ஊறிச் சோர ஈசனை இறைஞ்சி யாரும் அஞ்சலித்து ஏத்தல் செய்வார். 3353. பழியொடு பாசம் மாறு கெட வாசவன் செய் பணி கொண்ட வண்ட சரணம் வழிபடு தொண்டர் கொண்ட நிலை கண்டு வெள்ளி மணி மன்றுள் ஆடி சரணம் செழியன் விளிந்திடாத படி மாறி ஆட தௌ¤வித்த சோதி சரணம் எழு கடல் கூவி மாமியுடன் மாமன் ஆட இசைவித்த வாதி சரணம். 3354. வெம் கரி ஆவி சோர நரசிங்க வாளி விடு வேடர் ஏறு சரணம் புங்கவர் தேற ஆதி மறையுள் கிடந்த பொருள் ஓது போத சரணம் வங்கம் தேறி வேலை மகரம் பிடித்த வலையாள் மணாள சரணம் கங்கண நாகம் விசி நகர் எல்லை கண்ட கறை கொண்ட கண்ட சரணம். 3355. மைந்தனி ஆழி மேரு மகவான் அகந்தை மடிவித்த நித்த சரணம் சுந்தர நாம வாளி பணி கொண்டு கிள்ளி தொகை வென்ற வீர சரணம் வெம் திறல் மாறன் முன் கல் உரு ஆனை கன்னல் மிசைவித்த சித்த சரணம் முந்திய கல்லின் மாதர் பெற அட்ட சித்த முயல் வித்த யோகி சரணம். 3356. திரு மணி மைந்தன் மைந்தன் முடி சூட விற்ற திருமல்கு செல்வ சரணம் மருமகன் என்று மாமன் உருவாய் வழக்கு வலிபேசு மைந்த சரணம் குரு மொழி தந்து நாரை குருவிக்கு வீடு குடி தந்த எந்தை சரணம் வரு பழி அஞ்சி வேட மகனுக்கு இரங்கு மதுரா புரேச சரணம். 3357. விருத்த குமார பால அருள் மேனி கொண்டு விளையாதும் அண்ணல் சரணம் குரத்தியை நச்சு பாவி உயிர் உண்டு சோரி குடை வாகை வேல சரணம் கருத்திசை பாணன் ஆளி இசை பாடி மாறு களை வேத கீத சரணம் நரித்திரள் மாவை மீள நகரம் கலங்க நரிசெய்த நம்ப சரணம். 3358. முற்பகல் ஆறில் இரண்டு சிறு பன்றி உண்ண முலை தந்த அன்னை சரணம் பொற்புறு மாய ஆவை அடல் ஏறு கொண்டு பொருது அட்ட சிட்ட சரணம் பற்பல ஞாலம் எங்கும் அடையப் பிரம்பு படு அட்ட மூர்த்தி சரணம் கற்பின் ஒருத்தி மன்றல் அறிவிக்க மூன்று கரி தந்த வள்ளல் சரணம். 3359. அளவை களாலும் வேத முதல் நூல் களாலும் அயன் மாயனாலும் அளவாக் களவை உனக்கு நாம குண சின்ன சாதி கதி செய்தி இல்லை அவையும் உள என யாம் அறிந்து துதி செய்யவே கொல் உலகம் செயன் பின் எளிதாய் விளை அருள் மேனி கொண்டு இவ் அறுபத்து நாலு விளையாடல் செய்த படியே. 3360. எனத் துதித்த வசிட்டாதி இருடிகளைக் குரு முனியை எறிதேன் நீப வனத்து உறையும் சிவ பெருமான் இலிங்கத்தின் மூர்த்தியாய் வந்து நோக்கிச் சினத்தினை வென்று அகம் தௌ¤ந்தீர் நீர் செய்த பூசை துதி தெய்வத் தானம் அனைத்தினுக்கும் எனைத்தும் உயிர்க்கும் நிறைந்து நமக்கு ஆனந்தம் ஆயிற்று என்னா. 3361. சிறந்த அருள் சுரந்து குறு முனியை வருக கரம் சிரம் மேல் வைத்து புறம் தடவி எமை ஒப்பாய் நீயே நின் கற்பு உடைய பொலம் கொம்பு அன்னாள் அறம் தழையும் உமை ஒப்பாள் ஆதலினால் உமையும் ஒப்பவர் அகிலத்து யாரே நிறைந்ததவம் புரிந்தோனும் தவத்து உறுதி பெற்றோனும் நீயே அன்றோ. 3362. உனக்கு அரிய வரம் இனி யாம் தருவது எவன் உனக்கு அரிதாம் ஒன்றும் காணேம் எனக் கருணை செய்து இலிங்கத்து இடை இச்சை வடிவாய்ச் சென்று இருந்தான் ஆகத் தனக்கு அரிய வரம் நல்கும் சிவலிங்கம் தன் பெயரால் தாபித்தான் தன் இனக்கருணை வசிட்டாதி முனிவர்களும் தம் பெயரால் இலிங்கம் கண்டார். 3363. ஏத்தி அருச்சனை செய்து நினைவில் அரிதாய் அன்பின் எளிய அட்ட மூர்த்தியை அம் கயல் கண்ணி அன்பனை முப் போதும் போய் முடி தாழ்ந்து இன்பம் பூத்த மனத்தினர் ஆகிக் கருவித் தேன் பொதிந்த சிறு புட் போல் அந்த மாத் தலனில் வசிட்டாதி முனிவர் தபோ வனம் செய்து வதிந்தார் மன்னோ. அருச்சனைப் படலம் சுபம் திருவிளையாடல் புராணம் முற்றிற்று.
இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.
Please send your comments and corrections
Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page