logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 29-முதல் 39-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

இரண்டாவது - கூடற் காண்டம்

(மாயப் பசுவை வதைத்த படலம் முதல்
உலவாக்கோட்டை அருளிய படலம் வரை)

29. மாயப் பசுவை வதைத்த படலம்

1626.	சுருதி இன்புறத்து அவர் விடு அராவினைச் சுருதி 
கருதரும் பரன் அருள் உடைக் கௌரியன் துணித்த 
பரிசிதங்கது பொறாத அமண் படிறர் பின் விடுப்ப 
வரு பெரும் பசு விடையினான் மாய்த்ததும் பகர்வாம். 	

1627.	பணப் பெரும் பகுவாய் உடைப் பாந்தளை அனந்த 
குணப் பெருந்தகை துணித்த பின் பின் வரு குண்டர் 
தணப் பரும் குழாம் காலினால் தள்ளுண்டு செல்லும் 
கணப் பெரும் புயல் போல் உடைந்து ஓடின கலங்கி. 	

1628.	உடைந்து போனவர் அனைவரும் ஓர் இடத்து இருள்போல் 
அடைந்து நாமுன்பு விடுத்த மால் யானை போல் இன்று 
தொடர்ந்த பாம்பையும் தொலைத்தனர் மேலினிச் சூழ்ச்சி 
மிடைந்து செய்வதை யாது என வினயம் ஒன்று ஓர்வார். 	

1629.	ஆவை ஊறு செய்யார் பழி அஞ்சுவார் அதனை 
ஏதுவாம் இதுவே புணர்ப்பு என்று சூழ்ந்து இசைந்து 
பாவ காரிகள் பண்டு போல் பழித்து அழல் வளர்த்தார் 
தாவிலா உரு ஆகி ஓர் தானவன் முளைத்தான். 	

1630.	குண்டு அழல் கணின் எழுந்த அக் கொடிய வெம் பசுவைப் 
பண்டு போல் அவர் விடுத்தனர் கூடல் அம் பதிமேல் 
உண்டு இல்லையும் எனத் தடுமாற்ற நூல் உரைத்த 
பிண்டியான் உரை கொண்டு உழல் பேய் அமண் குண்டர். 	

1631.	மாட மலி மாளிகையில் ஆடு கொடி மானக் 
கோடுகளி னோடு முகில் குத்தி மிசை கோத்துச் 
சேடன் முடியும் கதிர் கொள் சென்னி வரையும் தூள் 
ஆட அடி இட்டு அலவை அஞ்சிட உயிர்த்தே. 	

1632.	விடுத்திடும் உயிர்ப்பின் எதிர் பூளை நறை வீபோல் 
அடுத்திடும் சரா சரம் அனைத்தும் இரிவு எய்தக் 
கடுத்திடும் சினக் கனலிக்கு உலகம் எல்லாம் 
மடுத்திடும் அழல் கடவுள் வார் புனலை மான. 	

1633.	உடன்றி இறை கொள் புள்ளடு விலங்கு அலறி ஓட 
மிடைந்த பழுவத்தொடு விலங்கலை மருப்பால் 
இடம் தெறி மருத்து என வெறிந்து அளவி லோரைத் 
தொடர்ந்து உடல் சிதைத்து உயிர் தொலைத்து இடியின் ஆர்த்தே. 	

1634.	மறலி வரும் ஆரு என மறப் பசு வழிக் கொண்ட 
அறலிவர் தடம் பொருனை ஆறு உடைய மாறன் 
திறலி மலர் மங்கை உறை தென் மதுரை முன்னா 
விறலி வாலி வருகின்றதது மீனவன் அறிந்தான். 	

1635.	மீனவனும் மா நகருள் மிக்கவரும் முக்கண் 
வானவனை மாமதுரை மன்னவனை முன்னோர் 
தானவனை ஆழிகொடு சாய்த்தவனை ஏத்தா 
ஆனது உரை செய்தும் என ஆலயம் அடைந்தார். 

1636.	நாத முறையோ பொதுவின் மாறி நடமாடும் 
பாத முறையோ பல உயிர்க்கும் அறிவிக்கும் 
போத முறையோ புனித பூரண புராண 
வேத முறையோ என விளித்து முறை இட்டார். 	

1637.	நின்று முறை இட்டவரை நித்தன் அருள் நோக்கால் 
நன்று அருள் சுரந்து இடப நந்தியை விளித்துச் 
சென்ற அமணர் ஏவ வரு தீப் பசுவை நீ போய் 
வென்று வருவாய் என விளம்பினன் விடுத்தான். 	

1638.	தண்டம் கெழு குற்றமும் அஞ்ச தறுகண் செம்கண் 
குண்டம் தழன்று கொதிப்பக் கொடு நாக்கு எறிந்து 
துண்டம் துழாவக் கடைவாய் நுரை சோர்ந்து சென்னி 
அண்டம் துழாவ எழுந்தன்று அடல் ஏறு மாதோ. 	

1639.	நெற்றித் தனி ஒடை நிமிர்ந்து மறிந்த கோட்டில் 
பற்றிச் சுடர் செம் மணிப் பூண் பிறை பைய நாகம் 
சுற்றிக் கிடந்தால் எனத் தோன்று வெள் ஆழி ஈன்ற 
கற்றைக் கதிர் போல் பருமம் புறம் கௌவி மின்ன. 	

1640.	கோட்டுப் பிறைகால் குளிர் வெண் கதிர்க் கற்றை போலச் 
சூட்டுக் கவரித் தொடைத் தொடங்கலும் நெற்றி முன்னாப் 
பூட்டுத் தரள முகவட்டும் பொலியப் பின்னல் 
மாட்டுச் சதங்கைத் தொடை கல் என வாய் விட்டு ஆர்ப்ப. 	

1641.	பணி நா அசைக்கும் படி என்னக் கழுத்தில் வீர 
மணி நா அசைப்ப நகைமுத்தின் வகுத்த தண்டை 
பிணி நாண் சிறு கிண் கிணி பிப்பல மாலைத் தொங்கல் 
அணி நாண் அலம்பச் சிலம்பு ஆர்ப்ப வடிகண் நான்கும். 	

1642.	அடி இட்டு நிலம் கிளைத்து அண்டம் எண் திக்கும் போர்ப்பப் 
பொடி இட்டு உயிர்த்துப் பொரு கோட்டினில் குத்திக் கோத்திட்டு 
அடி இட்டு அதிர் கார் எதிர் ஏற்று எழுந்தாங்கு நோக்கிச் 
செடி இட்டு இரு கண் அழல் சிந்த நடந்தது அன்றே. 	

1643.	பால் கொண்ட நிழல் வெண் திங்கள் பகிர் கொண்ட மருப்பில் கொண்மூச் 
சூல் கொண்ட வயிற்றைக் கீண்டு துள்ளி ஓர் வெள்ளிக் குன்றம் 
கால் கொண்டு நடந்தால் என்ன கடிந்து உடன்று ஆவைச் சீற்றம் 
மேல் கொண்டு நாற்றம் பற்றி வீங்கு உயிர்ப்பு எறிந்து கிட்டா. 	

1644.	குடக்கது குணக்கது என்னக் குணக்கது குடக்கது என்ன 
வடக்கது தெற்கது என்னத் தெற்கது வடக்கது என்ன 
முடுக்குறு மருப்பில் கோத்து முதுகு கீழாகத் தள்ளும் 
எடுக்குறு மலையைக் கால் போர்த்து எனத் திசை புறத்து வீசும். 	

1645.	கொழு மணிச் சிகர கோடி சிதை படக் குவட்டில் வீசும் 
பழுமரச் செறிவில் வான்தோய் பணை இற எறியும் வானின் 
விழும் அறப் பசு போல் வீழ வேலை வாய் வீசும் இங்ஙன் 
செழு மதிக் கோட்டு நந்தித் தேவிளையாடல் செய்து. 	

1646.	பூரியர் எண்ணி ஆங்கே பொருது உயிர் ஊற்றம் செய்யாது 
ஆரிய விடைதன் மாண்ட அழகினைக் காட்டக் காமுற்று 
ஈரிய நறும் பூ வாளி ஏறு பட்டு ஆவியோடும் 
வீரியம் விடுத்து வீழ்ந்து வெற்பு உரு ஆயிற்று அன்றெ. 	

1647.	வாங்கின புரிசை மாட மா நகர் ஆனா இன்பம் 
தூங்கின வரவாய் வேம்பின் தோடு அவிழ் தாரான் திண் தோள் 
வீங்கின இரவி தோன்ற வீங்கு இருள் உடைந்தது என்ன 
நீங்கின நாணமோடு நிரை அமண் குழாங்கள் எல்லாம். 	

1648.	உலகு அறி கரியாத் தன் பேர் உருவினை இடபக் குன்றாக் 
குல உற நிறுவிச் சூக்க வடிவினால் குறுகிக் கூடல் 
தலைவனை வணங்க ஈசன் தண் அருள் சுரந்து பண்டை 
இலகு உரு ஆகி இங்ஙன் இருக்க என இருத்தினானே. 	

1649.	அந் நிலை நகர் உளாரும் அரசனும் மகிழ்ச்சி தூங்கிச் 
சந்நிதி இருந்த நந்தி தாள் அடைந்து இறைஞ்சிப் போக 
மின் அவிர் சடையான் நந்தி வென்றி சால் வீறு நோக்கி 
இன் அமுது அனையா ளோடும் களி சிறந்து இருக்கும் நாளில். 	

1650.	அவ் இடை வரை மேல் முந்நீர் ஆர்கலி இலங்கைக்கு ஏகும் 
தெவ் அடு சிலையில் இராமன் வானர சேனை சூழ 
மை வரை அனைய தம்பி மாருதி சுக்கிரீவன் 
இவ் அடல் வீரரோடும் எய்தி அங்கு இறுத்தான் மன்னோ. 	

1651.	அன்னது தெரிந்து விந்தம் அடக்கிய முனி அங்கு எய்தி 
மன்னவற்கு ஆக்கம் கூறி மழவிடைக் கொடியோன் கூடல் 
பன்னரும் புகழ்மை ஓது பனு வலை அருளிச் செய்ய 
முன்னவன் பெருமை கேட்டு முகிழ்த்தகை முடியோன் ஆகி. 	

1652.	முனியொடு குறுகிச் செம் பொன் முளரி உள் மூழ்கி ஆதித் 
தனிமுதல் அடியை வேணி முடி உறத் தாழ்ந்து வேத 
மனு முறை சிவ ஆகமத்தின் வழி வழாது அருகித்து ஏத்திக் 
கனி உறும் அன்பில் ஆழ்ந்து முடிமிசைக் கரங்கள் கூப்பி. 	

1653.	புங்கவ சிவன் முத்தி புராதிப புனித போக 
மங்கலம் எவற்றினுக்குங் காரண வடிவம் ஆன 
சங்கர நினது தெய்வத் தானங்கள் அனந்தம் இந்த 
அங்கண் மா ஞாலம் வட்டத்து உள்ளன வைக தம்மில். 	

1654.	அற்புதப் பெரும் பதி இந்த மதுரை ஈது ஆற்றப் 
பொற்பு உடைத்து என்பது எவன் பல புவனமும் நின்பாற் 
கற்பு வைத்துய நீ செய்த கருமத்தின் விருத்தம் 
வெற்பு உருக்களாய்ப் புடை நின்று விளங்கலான் மன்னோ. 	

1655.	கண்ட எல்லையில் துன்பங்கள் களைதற்கும் அளவை 
கண்டரும் பெரும் செல்வங்கள் அளித்தற்கும் கருணை 
கொண்டு நீ உறை சிறப்பினால் குளிர் மதிக் கண்ணி 
அண்ட வாண இவ் இலிங்கதுக்கு ஒப்பு வேறு ஆமோ. 	

1656.	தோய்ந்திடும் பொழுது தீட்டிய தொல்வினைப் படலம் 
மாய்ந்திடும் படி மாய்த்து நின் மங்கல போகம் 
ஈந்திடும் படிக்கு இருந்த மா தீர்த்தத்தின் இயல்பை 
ஆய்ந்திடும் பொழுது அதற்கு ஒரு தீர்த்தம் ஒப்பு ஆமோ. 	

1657.	எத் தலத்தினும் ஒவ் வொன்று விழுமிதாம் இந்த 
மெய்த் தலத்தில் இம் மூவகை விழுப்பமும் விளங்கும் 
அத்த ஆதலால் இத்தலம் அடைந்தவர் எவர்க்கும் 
சித்த சுத்தியும் பலவகைச் சித்தியும் பயக்கும். 	

1658.	அடியனேன் எண்ணும் கருமமும் சரதமே ஆக 
முடியும் மா அரிது அச்செயன் முடியும் எப்படி அப் 
படி புரிந்து அருள் கடிது என பணிந்தனன் பரனும் 
நெடிய வான் படும் அமுது என எதிர் மொழி நிகழ்த்தும். 	
1659.	இரவி தன் மரபின் வந்த இராம கேள் எமக்குத் தென் கீழ் 
விரவிய திசையில் போகி விரிகடல் சேதுக் கட்டிக் 
கரவிய உள்ளக் கள்வன் கதிர் முடி பத்தும் சிந்தி 
அரவ மேகலை யினாளை அரும் சிறை அழுவம் நீக்கி. 	

1660.	மீண்டு நின் அயோத்தி எய்தி வரிகடல் உலகம் பல்நாள் 
ஆண்டு இனிது இருந்து மேல் நாள் வைகுண்டம் அடைவாயாக 
ஈண்டு நீ கவலை கொள்ளேல் எனும் அசரீரி கேட்டு 
நீண்டவன் மகிழ்ந்து தாழ்ந்து நிருத்தனை விடை கொண்டு ஏகி. 	
1661.	மறைப் பொருள் உரைத் தோன் சொன்ன வண்ணமே இலங்கை எய்தி 
அறத்தினைத் தின்ற பாவி ஆவி தின்றனை யான் செல்வத்து 
திறத்தினை இளவற்கு ஈந்து திரு விரா மேசம் கண்டு 
கறைப்படு மிடற்றினானை அருச்சித்துக் கருணை வாங்கி. 	

1662.	பற்றிய பழியின் நீந்தி இந்திரன் பழியைத்தீர்த்த 
வெற்றிகொள் விடையினானை மீளவும் வந்து போற்றி 
அல் திரள் அனைய கோதைக் கற்பினுக்கு அரசி யோடும் 
சுற்றிய சடையின் இராமன் தொல் நகர் அடைந்தான் இப்பால். 	

1663.	செங்கோல் அனந்த குண மீனவள் தேயம் காப்பக் 
கொங்கோடு அவிழ்தார்க் குல பூடனன் தன்னை ஈன்று 
பொங்கு ஓத ஞாலப் பொறை மற்றவன் பால் இறக்கி 
எம் கோன் அருளால் சிவமா நகர் ஏறினானே.

மாயப் பசுவை வதைத்த படலம் சுபம் 

30. மெய்க் காட்டிட்ட படலம்

1664.	பாவம் என வடிவு எடுத்த படிற்று அமணர் பழித்து அழல் செய் 
தேவ வரு மறப்பசுவை ஏறு உயர்த்தோன் விடை நந்திக் 
காவலனை விடுத்து அழித்த கதை உரைத்தும் அட்டாலைச் 
சேவகன் மெய்க் காட்டிட்டு விளையாடும் திறம் உரைப்பாம். 	

1665.	வெவ்வியமும் மதயானை விறல் குல பூடணன் சமணர் 
அவ்வியம் வஞ்சனை கடந்த அனந்த குணச் செழியன் பால் 
செவ்விய செம் கோல் வாங்கித் திகிரி திசை செல உருட்டி 
வவ்விய வெம் கலி துரந்து மண் காத்து வருகின்றான். 	

1666.	சவுந்தர சாமந்தன் எனத் தானை காவலன் ஒருவன் 
சிவந்த சடை முடி அண்ணல் அடியவரே சிவம் ஆகக் 
கவர்ந்து ஒழுகி அருச்சிக்கும் கடப்பாட்டின் நெறி நின்றோன் 
உவந்து அரசற்கு இருமைக்கும் துணை ஆகி ஒழுகு நாள். 

1667.	வல் வேடர்க்கு அதி பதியாய் வரு சேதி ராயன் எனும் 
வில் வேடன் ஒருவன் அவன் விறல் வலியான் மேல் இட்டுப் 
பல் வேறு பரிமான் தேர்ப் பஞ்சவன் மேல் படை எடுத்துச் 
செல்வேன் என்று உற வலித்தான் தென்னர் பிரான் அ•து அறிந்தான். 	

1668.	தன்னு தாள் நிழல் நின்ற சாமந்தன் தனைப் பார்த்து எம் 
பொன் அறை தாழ் திறந்து நிதி முகந்து அளித்துப் புதிதாக 
இன்னமும் நீ சில சேனை எடுத்து எழுதிக் கொள்க என்றான் 
அன்னது கேட்டு ஈசன் அடிக்கு அன்பு உளான் என் செய்வான். 	

1669.	தென்னவர் கோன் பணித்த பணி பின் தள்ளச் சிந்தையில் 
                                         அன்பு 
உன்ன அரன் அருள் வந்து முன் ஈர்ப்ப ஒல்லை போய்ப் 
பொன் அறை தாழ் திறந்து அறத்து ஆறு ஈட்டி இடும் 
                             பொன் குவையுள் 
அன்ன உள்ளத்து அவா அமையத்து தக்க நிதி கைக்கவரா. 	

1670.	எண் இறந்த களிப்பினொடும் திருக் கோயில் இடத்து அணைந்து 
கண் நிறைந்த பொன் முளரிக் கயந்தலை நீர் படிந்து தனது 
உள் நிறைந்த மெய் அன்பின் ஒளி உருவாய் முளைத்து எழுந்த 
பண் நிறைந்த மறைப் பொருளைப் பணிந்து இறைஞ்சி இது வேண்டும். 	

1671.	பண்ணியன் ஆன் மறை விரித்த பரமேட்டி எம் கோமான் 
எண்ணிய காரியம் முடிப்பாய் இவை உனக்கும் உன் அடிக்கீழ் 
அண்ணிய மெய் அடியவர்க்கு மா தக்க என இரந்து அப் 
புண்ணிய மா நிதி முழுதும் அவ்வழியே புலப்படுப்பான். 	

1672.	அண்ட முகடு உரிஞ்சி நிமிர் கோபுரமும் ஆயிரக்கால் 
மண்டபமும் கண்டிகையும் வயிர மணிக் கோளகையும் 
குண்டலமும் தண் தரளக் குடை நிரையும் கொடி நிரையும் 
கண்டனன் முன் அவன் அருளால் பிறப்பு ஏழும் கரை கண்டோன். 	

1673.	வான் நாடர்க்கு அவி உணவின் வகை முந்நூல் மன்றல் முதல் 
நானா ஆம் சிறு வேள்வி நான் மறையோர்க்கு அறுசுவையின் 
ஆனாத பேர் உண்டி துறவு அடைந்தோர்க்கு அருத்துபலி 
தான் ஆதி பல வேறு தருமம் நனி தழைவித்தான். 

1674.	எவரேனும் உருத்திர சாதனம் கண்டால் எதிர் வணங்கி 
அவரே நம் பிறப்பு அறுக்க வடிவு எடுத்த அரன் என்று 
கவராத அன்பு உள்ளம் கசிந்து ஒழுக அருச்சித்துச் 
சுவை ஆறின் அமுது அருத்தி எஞ்சிய இன் சுவை தெரிவான். 	

1675.	இன்றைக்கு ஆயிரம் நாளைக்கு இரு மடங்கு வரு நாட்கும் 
அன்றைக்கு அன்று இரு மடங்கா அரசனது பொருள் எல்லாம் 
கொன்றைச் செம் சடையார்க்கும் அடியார்க்கும் கொடுப்பதனைத் 
தென்றல் கோன் கெவிமடுத்தார் சேனைக்கோன் இது செய்வான். 	

1676.	காவலன் அவையத்து எய்திக் காரியம் செய்வா ரோடு 
மேவினன் பிற நாட்டு உள்ள வீரர்க்கு வெறுக்கைப் போக்கிச் 
சேவகம் பதிய ஒலை செலவிடுத்து அழைப்பான் போலப் 
பாவகம் செய்து தீட்டிப் பட்டிமை ஓலை உய்ப்பான். 	

1677.	எழுதுக தெலுங்கர்க்கு ஓலை எழுதுக கலிங்கர்க்கு ஓலை 
எழுதுக விராடர்க்கு ஓலை எழுதுக மராடர்க்கு ஓலை 
எழுதுக கொங்கர்க்கு ஓலை எழுதுக வங்கர்க்கு ஓலை 
எழுதுக துருக்கர்க்கு ஓலை என்று பொய் ஓலை விட்டான். 	
1678.	எங்கும் இப்படியே ஓலை செலவிடுத்து இருப்ப ஆறு 
திங்களின் அளவு அந்தச் சேவகர் வரவு காணா 
தம் கதிர் வேலோன் சேனைக்கு அரசனை அழைத்து நாளை 
வெம் கதிர் படு முன் சேனை யாவையும் விளித்தி என்றான். 	

1679.	என்ற மன்னவனுக்கு ஏற்கச் சாமந்தன் இசைந்து வெள்ளி 
மன்றவன் அடிக்கீழ் வீழ்ந்து வள்ளலே அரசன் ஈந்த 
குன்று உறழ் நிதியம் எல்லாம் கொண்டு எனைப் பணிகொண்டாயே 
வன்திறல் சேனை ஈட்டும் வண்ணம் யாது என்ன நின்றான். 

1680.	அடியவர் குறைவு தீர்த்து ஆண்டு அருள்வதே விரதம் பூண்ட 
கொடி அணி மாடக் கூடல் கோ மகன் காமன் காய்ந்த 
பொடி அணி புராணப் புத்தேள் புண்ணியன் அருளினாலே 
இடி அதிர்விசும்பு கீறி எழுந்தது ஓர் தெய்வ வாக்கு. 	
1681.	சூழ்ந்து எழும் சேனை யோடும் தோற்றுதும் நாளை நீயும் 
வீழ்ந்து அரச அவையை எய்தி மேவுதி என்ன விண்ணம் 
போழ்ந்து எழு மாற்றம் கேட்டுப் பொருநரே உவகை வெள்ளத்து 
தாழ்ந்தனன் முந்நீர் வெள்ளது அலர் கதிரவனும் ஆழ்ந்தான். 	

1682.	மீனவன் காண மேரு வில்லி தன் தமரை வன்கண் 
மான வேல் மறவர் ஆக்கி வாம் பரி வீரன் ஆகத் 
தானும் ஓர் கூத்துக் கோலம் சமைந்து வந்து ஆடவிட்ட 
நீல் நிற எழினி போலக் கார் இருள் வந்தது எங்கும். 	

1683.	புண்ணிய மனையில் போகிப் புலர்வது எப்போழ்து என்று எண்ணி 
அண்ணல் சாமந்தன் துஞ்சான் அடிகடி எழுந்து வானத்து 
எண் நிறை மீனம் நோக்கி நாழிகை எண்ணி எண்ணிக் 
கண்ணிதல் எழுச்சி காண்பான் அளந்தனன் கங்குல் எல்லாம். 	

1684.	தெருட்டு அரு மறைகள் தேறா சிவபரம் சுடரோர் அன்பன் 
பொருட்டு ஒரு வடிவம் கொண்டு புரவி மேல் கொண்டு போதும் 
அருள் படை எழுச்சி காண்பான் போல ஆர் கலியின் மூழ்கி 
இருட்டுகள் கழுவித் தூய இரவி வந்து உதயம் செய்தான். 	

1685.	பொருநரே அனையான் நேர்ந்து போந்து நான் மாடக் 
                                   கூடல் 
கருணை நாயகனைத் தாழ்ந்து கை தொழுது இரந்து 
                                   வேண்டிப் 
பரவி மீண்டு ஒளி வெண் திங்கள் பல் மணிக் குடைக்கீழ் 
                                   ஏகிக் 
குரு மதி மருமான் கோயில் குறுகுவான் குறுகும் எல்லை. 	

1686.	கரை மதி எயிற்றுச் சங்கு கன்னன் முன் ஆன வென்றிப் 
பிரமத கணமும் குண்டப் பெரு வயிற்று ஒருவன் ஆதி 
வரை புரை குறும் தாள் பூத மறவரும் குழுமி வீக்கு 
குரை கழல் வலிய நோன் தாள் கோள் உடை வயவர் ஆகி. 

1687.	நெட்டு இலை வடிவாள் குந்தம் தோமர நேமி நெய்த்தோர் 
ஒட்டிய கணிச்சி சாபம் உடம் பிடி முதலா எண்ணப் 
பட்ட வெம் படை மூ ஆரும் பரித்த செம் கையர் காலில் 
கட்டிய கழலர் காலில் கடியராய்ப் புறம்பு காப்ப. 

1688.	வார் கெழு கழல்கால் நந்தி மாகாளன் பிருங்கி வென்றித் 
தார் கெழு நிகும்பன் கும் போதரன் முதல் தலைவர் யாரும் 
போர் கெழு கவசம் தொட்டுப் புண்டரம் நுதலில் திட்டிக் 
கூர் கெழு வடிவாள் ஏந்தி குதிரைச் சேவகராய்ச் சூழ. 	
1689.	கற்றைச் சாமரைகள் பிச்சம் கவிகை பூம் கொடிக்காடு எங்கும் 
துற்றக்கார் ஒலியும் நாணத் தூரியும் முழுதும் ஏங்கக் 
கொற்றப் போர் விடையைத் தானே குரங்கு உளைப் பரியா மேல் கொண்டு 
ஒற்றைச் சேவகராய் மாறி ஆடிய ஒருவர் வந்தார். 	
1690.	பல்லியம் ஒலிக்கும் மார்பும் பாய் பரி கலிக்கும் மார்ப்பும் 
சொல் ஒலி மழுங்க மள்ளர் தெழித்திடும் மார்பும் ஒன்றிக் 
கல் எனும் சும்மைத்து ஆகிக் கலந்து எழு சேனை மேனாள் 
மல்லன் மா நகர் மேல் சீறி வருகடல் போன்றது அன்றே. 
1691.	சேனையின் வரவு நோக்கித் திருமகன் திருமுன் ஏகும் 
தானை அம் தலைவன் தென்னன் தாள் நிழல் குறுகிக் கூற 
மீனவன் உவகை பூத்து வெயில் மணி கடையில் போந்து அங்கு 
கான மண்டபத்தில் செம் பொன் அரியணை மீது வைகி. 	

1692.	தெவ் அடு மகிழ்ச்சி பொங்கச் சேனையின் செல்வ நோக்கி 
எவ் எவ் தேயத்து உள்ளோர் இவர் என எதிரே நின்று 
கௌவையின் மனச் சாமந்தன் கையில் பொன் பிரம்பு நீட்டி 
அவ் அவர் தொகுதி எல்லாம் மணி அணி நிறுவிக் கூறும். 	

1693.	கொங்கர் இவர் ஐய குரு நாடர் இவர் ஐய 
கங்கர் இவர் ஐய கருநாடர் இவர் ஐய 
அங்கர் இவர் ஐய இவர் ஆரியர்கள் ஐய 
வங்கர் இவர் ஐய இவர் மாளவர்கள் ஐய. 	

1694.	குலிங்கர் இவர் ஐய இவர் கொங்கணர்கள் ஐய 
தெலுங்கர் இவர் ஐய இவர் சிங்களர்கள் ஐய 
கலிங்கர் இவர் ஐய கவுடத்தர் இவர் ஐய 
உலங்கெழு புயத்து இவர்கள் ஒட்டியர்கள் ஐய. 	

1695.	கொல்லர் இவர் ஐய இவர் கூர்ச்சர்கள் ஐய 
பல்லவர் இவர் ஐய இவர் பப்பரர்கள் ஐய 
வில்லர் இவர் ஐய இவர் விதேகர் இவர் ஐய 
கல் ஒலி கழல் புனை கடாரர் இவர் ஐய. 	

1696.	கேகயர்கள் இவர்கள் கேழ் கிளர் மணிப் பூண் 
மாகதர் ஆல் இவர் மராடர் இவர் காஞ்சி 
நாகர் இகரால் இவர்கள் நம்முடைய நாட்டோர் 
ஆகும் இவர் தாம் என மெய்க் காட்டி அறிவித்தான். 	

1697.	இத்தகைய சேட் புலன் உளாரை இவண் உய்த்த 
இத்தகைமை என் என வினாவி அருள் செய்யேல் 
அத்த நின்னரும் பொருள் அனைத்தும் வரையாதே 
உய்த்தலின் அடைந்தனர்கள் என உரைத்தான். 	

1698.	அந் நெடும் சேனை தன்னுள் சேண் இடை அடல் மா ஊர்ந்து 
பின் உற நிற்கும் ஒற்றைச் சேவகப் பிரானை நோக்கி 
மன்னவன் அவர் யார் என்னச் சாமந்தன் வணங்கி ஐய 
இன்னவர் சேனை வெள்ளத்து யாரை என் அறிவது என்றான். 	

1699.	அவரை இங்கு அழைத்தி என்றான் அரசன்தன் வழிச செல்வார் போல் 
கவயம் இட்டவரும் போந்தார் காவலன் களி கூர்ந்து அம் பொன் 
நவமணிக் கலன் பொன் ஆடை நல்கினான் உள்ளத்து அன்பு 
தவறிலான் பொருட்டு வாங்கித் தரித்து தன் தமர்க்கும் ஈந்தார். 	

1700.	ஆய்ந்த வெம் பரிமாத் தூண்டி ஐங்கதி நடத்திக் காட்டி 
ஏய்ந்த தம் சேனை வெள்ளத்து எய்தினார் எய்தும் எல்லை 
வேய்ந்த தார்ச் சேதிராயன் வேட்டை போய்ப் புலி கோட் பட்டு 
மாய்ந்தனன் என்று ஓர் ஒற்றன் வேந்தன் முன் வந்து சொன்னான். 

1701.	முரசு அதிர் அனிகம் நோக்கி முகம் மலர்ந்து உவகை பூத்த 
அரசனும் அனிக வேந்தற்கு அளவு இல் சீர்த் தலைமை யோடும் 
வரிசை கண் மிதப்ப நல்கி வந்து மெய்க் காட்டுத் தந்து 
பரசிய பதாதி தத்தம் பதி புகச் செலுத்துக என்றான். 	

1702.	அறைந்தவர் கழல் கால் சேனை காவலன் அனிகம் தம்தம் 
சிறந்த சேண் நாட்டில் செல்லத் செலுத்துவான் போன்று நிற்ப 
நிறைந்த நான் மாடக் கூடல் நிருத்தன் அந் நிலை நின்று ஆங்கே 
மறைந்தனன் மனித்த வேடம் காட்டிய மறவ ரோடும். 	

1703.	கண்டனன் பொருனை நாடன் வியந்தனன் கருத்தா சங்கை 
கொண்டனன் குறித்து நோக்கி ஈது நம் கூடல் மேய 
அண்டர் தம் பெருமான் செய்த ஆடல் என்று எண்ணிக் 
                                    கண்ணீர் 
விண்டனன் புளகம் போர்ப்ப மெய்யன்பு வடிவம் ஆனான். 	
1704.	தனக்கு உயிர்த் துணையா நின்ற சாமந்தன் தன்னை நோக்கி 
உனக்கு எளி வந்தார் கூடல் உடைய நாயகரே என்றால் 
எனக்கு அவர் ஆவார் நீயே என்று அவற்கு யாவும் நல்கி 
மனக்கவல்பு இன்றி வாழ்ந்தான் மதி வழி வந்த மைந்தன். 

மெய்க் காட்டிட்ட படலம் சுபம் 

31. உலவாக்கிழி அருளிய படலம்

1705.	அடியார் பொருட்டுப் பரிவயவர் ஆகிச் செழியன் காண விடைக் 
கொடியார் வந்து மெய்க் காட்டுக் கொடுத்த வண்ணம் எடுத்து உரைத்தும் 
கடியார் கொன்றை முடியார் அக் கன்னி நாடன் தனக்கு இசைந்த 
படியால் உலவாக் கிழி கொடுத்த படியை அறிந்தபடி பகர்வாம். 	

1706.	வள்ளல் குல பூடணன் திங்கள் வாரம் தொடுத்து சிவதருமம் 
உள்ள எல்லாம் வழாது நோற்று ஒழுகும் வலியால் தன் நாட்டில் 
எள்லல் இல்லா வேதியரை இகழ்ந்தான் அதனான் மழை மறுத்து 
வெள்ளம் அருக வளம் குன்றி விளைவு அ•கியது நாடு எல்லாம். 	

1707.	அறவோர் எல்லாம் நிரப்பு எய்தி ஆகம் இடந்த நூல் அன்றி 
மறை நூல் இழந்து முனி வேள்வி வானோர் வேள்வி தென் புலத்தின் 
உறைவோர் வேள்வி இழந்து இழிந்த தொழில் செய்து ஆற்றாது உயிர் வளர்ப்பான் 
புற நாடு அணைந்தார் பசியாலே புழுங்கி ஒழிந்த குடி எல்லாம். 

1708.	எந்த நாடு அணைவோம் என இரங்க இரங்கி மதிக்கோன் மதிநாளில் 
பொன் நாண் முளரித் தடம் குடைந்து சித்திக் களிற்றைப் பூசித்துத் 
தன் ஆதரவால் கயல் கண்ணி தலைவன் தன்னை அருச்சித்து 
முன்னா வீழ்ந்து கரம் முகிழ்த்துப் பழிச்சி மகிழ்ந்து மொழி கின்றான். 

1709.	அந்த உலகில் உயிர்க்கு உயிர் நீ அல்லையோ அவ் உயிர் உயிர் பசியால் 
எய்த்த வருத்தம் அடியேனை வருத்தும் மாறு என் யான் ஈட்டி 
வைத்த நிதியம் தருமத்தின் வழியே சென்றது இளியடிகள் 
சித்த மலர்ந்து என் இடும் பை வினை தீர அருள்கண் செய்க என. 	

1710.	கோளா அரவம் அரைக்கு அசைத்த கூடல் பெருமான் குறை இரக்கும் 
ஆளாம் அரசன் தவறு சிறிது அகம் கொண்டு அதனைத் திருச் செவியில் 
கேளர் போல வாளாதே இருப்ப மனையில் கிடைத்த அமலன் 
தாள் ஆதரவு பெற நினைந்து தரையில் கிடந்து துயில் கின்றான். 	

1711.	அம்கண் வெள்ளி அம் பலத்துள் ஆடும் அடிகள் அவன் கனவில் 
சங்கக் குழையும் வெண்ணிறும் சரிகோவணமும் தயங்க உரன் 
சிங்க நாதம் கிடந்து அசையச் சித்த வடிவா எழுந்து அருளி 
வெம் கண் யானைத் தென்னவர் கோன் முன் நின்று இதனை விளம்புவார். 	

1712.	ஏடார் அலங்கல் வரை மார்ப வெம்பால் என்றும அன்பு உடைமை 
வாடா விரத விழுச் செல்வம் உடையாய் வைய மறம் கடிந்து 
கோடாது அளிக்கும் செம் கோன்மை உடையாய் உனக்கு ஓர் குறை உளது உன் 
வீடா வளம் சேர் நாட்டி இந் நாள் வேள்விச் செல்வம் அருகியதால். 	

1713.	மமறையே நமது பீடிகையாய் மறையே நமது பாதுகையாம் 
மறையே நமது வாகனம் மா மறையே நமது நூபுரம் ஆம் 
மறையே நமது கோவணம் ஆம் மறையே நமது விழியாகும் 
மறையே நமது மொழியாகும் மறையே நமது வடிவாகும். 	

1714.	வேதம் தானே நமது ஆணைச் சத்தி வடிவாய் விதிவிலக்காய் 
போதம் கொளுத்தி நிலை நிறுத்திப் போகம்                      
கொடுத்துப் பல் உயிர்க்கும் 
பேதம் செய்யும் பிணி அவிழ்த்து எம் பிரியா வீடு தருவது ஏன் 
நாதம் செய்யும் தார் வேந்தே நமது செம் கோல் அது ஆகும். 	
1715.	
அந்த மறைகள் தமக்கு உறுதி ஆவார் அந்நூல் வழி கலி நோய் 
சிந்த மகத் தீ வளர்த்து எம்பால் சிந்தை செலுத்தும் அந்தணரால் 
இந்த மறையோர் வேள்வி மழைக்கு ஏது வாகும் இவர் தம்மை 
மைந்த இகழ்ந்து கை விட்டாய் அதனான் மாரி மறுத்தன்று ஆல். 

1716.	
மும்மைப் புவனங்களும் உய்ய முத்தீ வேட்கும் இவர் தம்மை 
நம்மைப் போலக் கண்டு ஒழுகி நாளும் நானா வறம் பெருக்கிச் 
செம்மைத்தருமக் கோல் ஓச்சித் திகிரி உருட்டி வாழ்தி என 
உம்மைப் பயன் போல் எளி வந்தார் உலவாக் கிழி ஒன்று உதவுவார். 	

1717.	
இந்தக் கிழியில் எத்துணைப் பொன் எடுத்து வழங்கும் தொறும் நாங்கள் 
தந்த அளவில் குறையாத தன்மைத்து ஆகும் இது கொண்டு 
வந்த விலம்பாது அகற்று என்று கொடுத்து வேந்தன் மனக் கவலை 
சிந்தத் திரு நீறு சாத்தி மறைந்தார் ஐயர் திரு உருவம். 	

1718.	
கண்ட கனவு நனவு ஆகத் தொழுதான் எழுந்து எளரியர் கோன் 
அண்டர் பெருமான் திருவடிபோல் அம் பொன் கிழியை முடித்தலை மேல் 
கொண்டு மகிழ்ச்சி தலை சிறப்ப நின்றோர் முகூர்த்தம் கூத்தாடித் 
தண்டா அமைச்சர் படைத் தலைவர் தமக்கும் காட்டி அறிவித்தான். 	

1719.	
செம் கண் அரி மான் பிடர் சுமந்த தெய்வ மணிப் பூந்தவிசு ஏற்றிச் 
சங்கம் முழங்க மறை முழங்கச் சாந்தம் திமிர்ந்து தாது ஒழுகத் 
தொங்கல் அணிந்து தசாங்க விரைத் தூப நறு நெய்ச் சுடர் வளைத்து 
கங்கை மிலைந்த கடவுள் எனக் கருதிப் பூசை வினை முடித்தான். 	

1720.	
அடுத்து வணங்கி வலம் செய்திட்டு அம் பொன் கிழியைப் பொதி நீக்கி 
எடுத்து முத்தீ வினைஞர்க்கும் யாகங்களுக்கும் யாவர்க்கும் 
மடுத்து நாளும் வரையாது வழங்க வழங்க அடியார்க்குக் 
கொடுக்கக் குறையா வீட்டு இன்பம் ஆயிற்று ஐயர் கொடுத்த கிழி. 	

1721.	
ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து 
                              விசும்பு இழிந்த 
கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக் 
                              கொழுந்து அனையது 
ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய 
                                    பெரு 
வாயில் பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின் 
                              வரம்பு அறிந்தான். 	

1722.	
முந்திக்குறையா நிதிக்கடலை முகந்து முகந்து நாள் தோறும் 
சிந்திக் குலபூடணக் கொண்ட தெய்வ தரும்ப பயிர் வளர்ப்பப் 
பந்தித் திரை முந் நீர் மேகம் பருகிச் சொரியப் பல வளனும் 
நந்திக் கன்னி நாடு அளகை நகர் போல் செல்வம் தழைத்தன்றே. 	

1723.	
வையா கரணர்கணையா இகர் மறை வல்லோர் மறை முடி சொல்லாய் ஓர் 
மெய்யா மிருதிகள் பொய்யா விரதிகள் வேள்வித் தழல்களை வாழ்விப் போர் 
பை ஆடு அரவு அணி ஐயா னனனுரை பகர் வோர் உலகியல் அகல் வோர்கள் 
எய்யாது உறைதலின் ஐயா தளகையது என்னப் பொலிவது தென்னாடு.

உலவாக்கிழி அருளிய படலம் சுபம் 

32. வளையல் விற்ற படலம்

1724.	வேதம் தனது வடிவு என்று விண்ணின்று இழிந்த விமான மறைக் 
கீதன் செழியன் தனக்கு உலவாக் கிழி தந்து அளித்த வழி இது அப் 
போதம் கடந்த பொருள் வணிகப் புத்தேள் மாட மணி மறுகு 
பாதம் தடவ நடந்து வளை பகர்ந்த பரிசு பகர் கிற்பாம். 	

1725.	இறைவன் குல பூடணன் திகிரி இவ்வாரு உருட்டு நாள் முன்னாள் 
சிறை வண்டு அறையும் தாருவன தெய்வ முனிவர் பன்னியர் தம் 
நிறை அன்று அளந்து கட்டுக என நெடியோன் மகனைப் பொடி ஆக்கும் 
அறவன் தானோர் காபாலி ஆகிப் பலிக்கு வரு கின்றான். 	

1726.	வேதம் அசைக்கும் கோவணமும் மெய்யில் நீறும் உள் ஆகக் 
கீதம் இசைக்கும் கனிவாயும் உள்ளே நகையும் கிண்கிணி சூழ் 
பாதமலரும் பாதுகையும் பலி கொள் கலனும் கொண்டு ரதி 
மாதர் கணவன் தவ வேடம் எடுத்தால் ஒத்து வரும்  எல்லை. 	

1727.	விள்ளும் கமலச் சேவடி சூழ் சிலம்பின் ஒலியும் மிடறு அதிரத் 
துள்ளும் கீத ஒலியும் கைத்துடியின் ஒலியும் துளைச் செவிக் கீண்டு 
உள்ளம் பிளந்து நிறை களைந்து ஈர்த் தொல்லைவரும் முன் வல்லியர்கள் 
பள்ளம் கண்டு வருபுனல் போல் பலிகொண்டு இல்லின புறம் போந்தார். 	

1728.	ஐயம் கொண்டு அணைவார் ஐயர் பரிகலத்து ஐயம் அன்றிக் 
கை அம் பொன் வளையும் பெய்வார் கருத்து நாண் அன்றிக் காசு 
செய்யும் பொன் மருங்கு நாணும் இழப்பர் வேள் சிலை அம் பன்றிச் 
கொய்யும் தண் மலர்க் கண் அம்பும் கொங்கையில் சொரியச் சோர்வார். 	

1729.	மட மயில் அனையார் எங்கள் வளையினைத் தருதிர் என்றார் 
கடல் விடம் அயின்றான் உங்கள் கந்தரத்து உள்ளது என்றான் 
தடமதி கொம்பு அனார் எம் கலையினத் தருதிர் என்றார் 
முட மதி மிலைந்தான் உங்கள் முகமதி இடத்தது என்றான். 	

1730.	இடை அறிந்து எம்மைச் சேர்மின் என்றனர் இளையர் எம் கோன் 
கடல் அமுது அனையீர் நுங்கள் இடை இனிக் காணாது என்றான் 
மட நலார் அ•தேல் பண்டை வண்ணம் ஈந்து இல்லில் செல்ல 
விடை அளித்து அருண் மின் என்றார் வேலைபுக்கு உறங்கும் என்றான். 	

1731.	நங்கையர் கபாலிக்கு என்று நடு இலை போலும் என்றார் 
அம் கண் நடுவு இலாமை நும்மனோர்க் அடுத்தது என்றான் 
மங்கையர் அடிகள் நெஞ்சம் வலிய கல் போலும் என்றார் 
கொங்கு அலர் கொன்றை யானும் கொங்கையே வன் கல் என்றான். 	

1732.	காது வேல் அன்ன கண்ணார் கங்கை நீர் சுமந்தது ஏதுக்கு 
ஓதுமின் என்றார் நும்பால் உண் பலி ஏற்க என்றான் 
ஏது போல் இருந்தது ஐய இசைத்த செப்பு என்றார் ஈசன் 
கோது உறா அமுது அன்னீர் நும் கொங்கை போல இருந்தது என்றான். 	

1733.	கறுத்ததை எவன் கொல் ஐய கந்தரம் என்றர் வேளை 
வெறுத்தவன் மாரி பெய்தற்கு என்றனன் விழியால் வேலை 
ஒறுத்தவர் ஆவது என்றீர் உத்தரம் என்றார் கூற்றைச் 
செறுத்தவன் தென்பால் நின்று நோக்கினால் தெரிவது என்றான். 	

1734.	செக்கர் அம் சடையான் கண்ணில் தம் உருத் தெரிய நோக்கி 
இக் கொடியார் போல் கண் உள் எம்மையும் இருத்திர என்றார் 
நக்கன் உம் தனை அன்னார் கண் இடைக் கண்டு நகைத்து நம்மின் 
மிக்கவர் நும் கண் உள்ளார் விழித்து அவர்க் காண்மின் என்றான். 	
1735.	அஞ்சலிப் போது பெய்வார் சரணம் என்று அடியில வீழ்வார் 
தஞ்சு எனத் தளிர்க்கை நீட்டித் தழுவிய கிடைக்கும் தோறும் 
எஞ்சுவான் எஞ்சாது ஏத்தி எதிர் மறை எட்டும் தோறும் 
வஞ்சனாய் அகல்வான் மையல் வஞ்சியர்க்கு அணியன் ஆமோ. 	
1736.	அடுத்து எமைத் தழாதிர் ஏனீர் அவிழ்த்த பூம் கலையை மீள 
உடுத்துமின் உம்பால் யாங்கள் மையல் நோய் உழப்ப நோக்கிக் 
அடுத்து எமர் முனியா முன்னம் கழற்றிய வளையும் கையில் 
எடுத்து இடும் என்றார் நாளை இடுதும் என்று ஏகினானே. 	

1737.	பிள்ளை வெண் திங்கள் வேய்ந்த பிரான் கொண்டு போன நாணும் 
உள்ளம் மீட்கல் ஆற்றாது உயங்கினார் கலையும் சங்கும் 
துள்ள ஐம் கணையான் வாளி துளைப்ப வெம் பசலை யாகம் 
கொள்ளை கொண்டு உண்ண நின்றார் அந்நிலை கொழுநர் கண்டார். 

1738.	பொய் தவ வடிவாய் வந்து நம் மனைப் பொன்னின் அன்னார் 
மெய் தழை கற்பை நாண வேரொடும் களைந்து போன 
கைதவன் மாடக் கூடல் கடவுள் என்று எண்ணித் தேர்ந்தார் 
செய் தவவலியால் காலம் மூன்றையும் தெரிய வல்லார். 	
1739.	கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி 
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர கன்னியராய்ப் 
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு 
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர். 	

1740.	அந்த மாட மதுரை நகர்க்கு அரசு ஆகிய சுந்தரக் கடவுள் 
வந்து நும்மைக் கைதீண்டும் வழி இச்சாபம் கழியும் எனச் 
சிந்தை தளர்ந்த பன்னியரும் தென்னர் மதுரைத் தொல் நகரில் 
கந்த முல்லைத் தார் வணிகர் காதல் மகளிராய்ப் பிறந்தார். 	

1741.	வளர்ந்து பேதை இளம் பருவ மாறி அல்குல் புடை அகன்று 
தளர்ந்து காஞ்சி மருங்கு ஒசியத் ததும்பி அண்ணாந்து அரும்பு முலை 
கிளர்ந்து செல்லும் பருவத்தில் கிடைத்தார் ஆக இப்பான்மண் 
அளந்த விடையான் வந்து வளை பகரும் வண்ணம் அறைகிற்பாம். 	

1742.	கங்கை கரந்து மணி கண்டம் கரந்து நுதல் கண் கரந்து  ஒரு பால் 
மங்கை வடிவம் கரந்து உழையும் மழுவும் கரந்து மழ விடை ஊர் 
அம் கண் அழகர் வளை வணிகர் ஆகி ஏனம் அளந்து அறியாச் 
செம் கமலச் சேவடி இரண்டும் திரை நீர் ஞால மகள் சூட. 	

1743.	பண்டு முனிவர் பன்னியர் பால் கவர்ந்த வளையே பட்டு வடம் 
கொண்டு தொடுத்து மீண்டு அவர்க்கே இடுவோம்                     
 என உள் கோளினர் போல் 
தொண்டர் தொடுத்த கை வண்ணத்து உணர்ந்தார போலத் தோள் சுமந்து 
மண்டு வளையை விலை பகர்ந்து வணிக மறுகில் வருகின்றார். 

1744.	மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின் 
என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை கேட்டு எழில் மயில் போல் 
துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர் 
மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார். 	

1745.	வளைகள் இடுவார் எனத்தங்கள் மனம் எல்லாம் தம் புடை ஒதுங்கத் 
தளைகள் இடுவார் வருகின்றர் தம்மைக் கொம்மை வெம் முலையார் 
துளைகள் இடும் தீம் குழல் இசை போல் சுரும்பு பாடக் கரும் குழல் மேல் 
விளை கள் ஒழுக நுடங்கி வரு மின் போல் அடைந்து கண்டார்கள். 	

1746.	கண்ட வடிவால் இளைப்பதற்குக் கழிபேர் அன்பு காதல்வழிக் 
கொண்டு செல்ல ஒருசார் தம் குணனா நாணமுதல் நான்கும் 
மண்டி ஒரு சார் மறு தலைப்ப மனமும் உழன்று தடுமாற 
அண்டர் பெருமான் விளையாடற்க் அமையச் சூழ்ந்து ஆர் அமுது அனையார். 	

1747.	இரங்கும் மேகலை சிலம்பு அன்றி ஏனைய 
விரும்பிய குழை தொடி மின் செய் கண்டிகை 
மருங்கு இறச் சுமப்பினும் வளைகைக்கு இல் எனின் 
அரும்பிய முலையினார்க்கு அழகு உண்டாகுமோ. 	

1748.	செல்வ நல் வணிகிர் எம் செம் கைக்கு ஏற்பன 
நல் வளை தெரிந்திடும் என்று நாய்கர் முன் 
வல்வளர் இள முலை மகளிர் மின் உமிழ் 
கல்வளர் கடக மெல் காந்தள் நீட்டினார். 	

1749.	பண் தரும் கிளவி அம் கயல் கண் பாவை கைத் 
தண் தளிர் பற்றிய தடக்கை மாடர் கைம் 
முண்டகம் பற்றியே முகிழ்த்துப் பல் வரி 
வண்டுகள் ஏற்றுவார் மையல் ஏற்றுவார். 	

1750.	புங்கவன் இடுவளை புடைத்து மீள வந்து 
எங்களுக்கு இடவிலை இடுதி ரால் எனக் 
கொங்கு அவிழ் பைங்குழல் எருத்தம் கோட்தி நின்று 
அம் கரம் நீட்டுவார் ஆசை நீட்டுவார். 	

1751.	எமக்கு இடும் எமக்கு இடும் எனப் பின் பற்றியே 
அமைத் தடம் தோளினார் அனங்கள் பூம் களை 
தமைத் துளை படுத்த ஒர் சார்பு இலாமையால் 
அமைப்புறு நாண் முதல் காப்பு நீங்கினார். 	

1752.	முன் இடும் வளை எலாம் கழல முன்பு சூழ்ந்து 
இன்னவை பெரிய வேறு இடும் என்று இட்டபின் 
அன்னவும் அனையவே ஆக மீள வந்து 
இன்னமும் சிறிய வா விடும் என்று ஏந்துவார். 	

1753.	பின் இடும் வளைகளும் சரியப் பேது உறா 
முன் எதிர் குறுகி நீர் செறித்த மொய்வளை 
தன்னொடு கலைகளும் சரிவதே என 
மின் என நுடங்கினார் வேல் நெடும் கணார். 

1754.	இவ்வளை போல் வளையாம் முன் கண்டிலேம் 
மெய்வளை வணிகிர் இவ் அரிய வெள் வளை 
எவ்வயின் உள்ள இன்று இனிய ஆகி எம் 
மெய்ம் மயிர் பொடிப்பு எழ வீக்கம் செய்தவே. 	

1755.	நாளையும் வளை இட நண்ணும் இங்கு என்பார் 
கோள்வளை விலை இது கொண்டு போம் என்பார் 
வாள் விழி ஈர் பினாள் வாங்கிக் கோடும் என்று 
ஆள் அரி யேறு அனார் ஆடிப் போயினார். 	

1756.	போயின வணிகர் தம் புடையின் மின் எனப் 
பாயின மகளிரும் பலரும் காண முன் 
மேயின விண் இழி விமானத்து உள் ஒளி 
ஆயின திரு உரு ஆகித் தோன்றினார். 	

1757.	மட்டு அலம்பு கோதையார் முன் வளை பகர்ந்த வணிகர் தாம் 
பட்டு அசைந்த அல்குல் நங்கை பாகர் ஆகும் என வியந்து 
உட்ட தும்பு உவகை வெள்ளம் உற்று எழுந்த குமிழி போல் 
சுட்ட தும்பு புனலில் ஆழ்ந்த களி அடைந்த நகர் எலாம். 	
1758.	உருவிலாளி உடல் பொடித்த ஒருவர் கூட இருவரான் 
மரு இலார் திருக் கை தொட்டு வளை செறித்த நீர்மையால் 
கருவின் மாதர் ஆகி நாய்கர் கன்னிமார் கண் மின்னு வேல் 
பொருவில் காளை என வரம்பில் புதல் வரைப் பயந்தனர். 	

1759.	பிறந்த மைந்தர் அளவு இறந்த பெருமை கொண்ட பெருமிதம் 
சிறந்த வீரம் ஆற்றல் ஏற்ற திறல் புனைந்து வைகினார் 
மறந்த தும்பு வேல் நெடும் கண் வணிக மாதர் சிறிது நாள் 
துறந்து அன்று அருள் அடைந்து துணை அடிக்கண் வைகினார். 	

வளையல் விற்ற படலம் சுபம் 

33. அட்டமா சித்தி உபதேசித்த படலம்

1760.	கொத்து இலங்கு கொன்றை வேய்ந்த கூடல் ஆதி மாட நீள் 
பத்தியம் பொன் மருகு அணைந்து வளைபகர்ந்த பரிசு முன் 
வைத்து இயம்பினாம் இயக்க மாதர் வேண்ட அட்டமா 
சித்தி தந்த திறம் இனித் தெரிந்த வாறு செப்புவாம். 
1761.	மின் அலங்கள் வாகை வேல் விழுப் பெரும் குலத்தினில் 
தென்னவன் தன் ஆணை நேமி திசை எலாம் உருட்டும் நாள் 
முன்னை வைகல் ஊழி தோறும் ஒங்கும் மொய்வரைக்கணே 
மன்னு தண் பராரை ஆல நிழல் மருங்கு மறை முதல். 	

1762.	அடுப்ப மாசு இல் வெள்ளி வெற்பின் அருகு இருக்கும் மரகதம் 
கடுப்ப வாம மிசை இருந்து கனக வெற்பன் மகள் எனும் 
வடுப்படாத கற்பினாள் மடித்து வெள் இலைச் சுருள் 
கொடுப்ப நேசம் ஊறு போக குரவன் ஆகி வைகினான். 	

1763.	பிருங்கி நந்தியே முதல் பெரும் தகைக் கணத்தரும் 
மருங்கு இருந்த சனகாதி மா தவத்தர் நால்வரும் 
ஒருங்கு இறைஞ்சி உண்ண உண்ண அமுதம் ஊறு சிவ கதைக் 
கரும்பு அருந்த வாய் மலர்ந்து கருணை செய்யும் எல்லை வாய். 	

1764.	பௌவம் மூழ்கு சூர் தடிந்த பாலனுக்கு முலை கொடுத்து 
தெவ்வம் ஆய வினைகள் தீர் இயக்க மாதர் அறுவரும் 
தெய்வ நீறு முழுதும் அணிந்து செய்ய வேணி கண்டிகைச் 
சைவ வேட மாதவம் தரித்து வந்து தோன்றினார். 	

1765.	மந்திரச் சிலம்பு அலம்பும் மலரடிக் கண் வந்தி செய்து 
எந்தை அட்ட சித்தி வேண்டும் எங்களுக்கு எனத் தொழா 
அம் தளிர்க் கையவர் இரப்ப அண்ணல் தன் மடித்தலம் 
தந்திருக்கும் மாதை அங்கை சுட்டி ஈது சாற்றும் ஆல். 	

1766.	அலர் பசும் பொலங் கொம்பு அன்ன வணங்கி இவண் நிறைவால் எங்கும் 
மலர் பரா சத்தி ஆகி மகேசையாய் அணிமா ஆதிப் 
பலர் புகழ் சித்தி எட்டும் பணிந்து குற்றேவல் செய்யும் 
சிலதியர் ஆகிச் சூழ்ந்து சேவகம் செய்ய வைகும். 	

1767.	இவளை நீர் சிந்தித் தான் முன் நீட்டிய வினையை நீக்கித் 
தவலரும் சித்தி எட்டும் தரும் எனக் கருணை பூத்துச் 
சிவபரம் சோதி எட்டுச் சித்தியும் தௌ¤த்தல் செய்தான் 
அவர் அது மறந்தார் உம்மை ஆழ் வினை வலத்தான் மன்னோ. 	

1768.	செழுமதிப் பிளவு வேய்ந்த தேவும் அக் குற்றம் நோக்கி 
முழுமதி முகத்தினாரை முனிந்து நீர் பட்ட மங்கைப் 
பழுமரம் முதலாம் ஞானப் பாறையாய் கிடமின் என்னக் 
கழுமல் உற்று அவர் தாழ்ந்து கழிவது இச் சாபம் என்றார். 	

1769.	இப்படிக் கரும் கலாகிக் கிடத்தி ஆயிரம் ஆண்டு எல்லைக் 
அப்புறம் மதுரை நின்று அடுத்து உமை தொடுத்த சாபத்து 
உப்பற நோக்கி நுங்கள் தொல் உரு நல்கிச் சித்தி 
கைப்படு கனிபோல் காணக் காட்டுதும் போதிர் என்றான். 	

1770.	கொடி அனார்கள் அறுவரும் 
நெடிய வான் நிமிர்ந்து கார் 
படியும் பட்ட மங்கையால் 
அடியில் பாறை ஆயினார். 	

1771.	கதிர் கலம் பெய் காட்சி போல் 
உதிர் பழத்தின் உடல் எலாம் 
புதை படக் கிடந்தனர் 
மத அரித் தடம் கணார். 	

1772.	பருவம் ஆயிரம் கழிந்து 
ஒருவ மாட மதுரை எம் 
குரவன் எண்குணத்தினான் 
திரு உளம் திரும்பினான். 

1773.	தன்னது இச்சை கொண்டது ஓர் 
இன் அருள் குரவனாய் 
அந் நெடும் கல் ஆயினார் 
முன்னர் வந்து தோன்றினான். 	

1774.	இருட்ட தும்பு கோதையார் 
மருட்ட தும்பு வினை கெட 
அருள்ததும்பு கண்ணினால் 
தெருள்ததும்ப நோக்கினான். 	

1775.	அடிகள் நோக்க அம்புயம் 
கடிகொள் நெய்தல் காந்தள் பைங் 
கொடி கொள் முல்லை குமுத மேல் 
படியப் பூத்த பாறையே. 	

1776.	தாக்க வேத கத் திரும் 
பாக்கம் உற்ற பொன் என 
நீக்கம் அற்ற இருள் மல 
வீக்கம் அற்று விட்டதே. 	

1777.	நிறையும் அன்பு எனும் நதி 
பொறை எனும் கரை கடந்து 
இறைவனின் அருள் கடல் 
துறையின் வாய் மடுப்ப வே. 	

1778.	எழுந்து இறை அடிக் கணே 
அழுந்து நேச மொடு தவக் 
கொழுந்து அனார்கள் அறுவரும் 
விழுந்து இறைஞ்சினார் அரோ. 

1779.	குமரற்கு ஊட்டும் இள முலை 
உமை ஒப்பார்கள் சென்னி மேல் 
அமலச் சோதி அம்கை ஆங்கு 
கமலப் போது சூட்டினான். 	

1780.	சித்தி எட்டும் அந் நலார் 
புத்தியில் கொளுந்தவே 
கைத்தலத்தில் வைத்தது ஒர் 
முத்து எனத் தெருட்டுவான். 	

1781.	அணிமா மகிமா இலகிமா அரிய கரிமாப் பிராத்திமலப் 
பிணி மாசு உடையோர்க்கு அரிய பிர காமியம ஈசத்துவம் மெய் 
துணிமா யோகர்க்கு எளிய வசித்துவம் என்று எட்டாம் இவை உளக் கண் 
மணி மாசு அறுத்தோர் விளையாட்டின் வகையாம் அவற்றின் மரபு உரைப்பாம். 	

1782.	அறவும் சிறிய உயிர் தொறும் தான் பரம காட்டை அணுவாய்ச் சென்று 
உறையும் சிறுமை அணி மா ஆம் உவரி ஞாலம் முதல் மேல் என்று 
அறையும் சிவா அந்தம் ஆறா ஆறும் முள்ளும் புறனும் அகலாதே 
நிறையும் பெருமை தனை அன்றோ மகிமா என்னும் நிரம்பிய நூல். 	

1783.	இலகு மேரு பாரம் போல் இருக்கும் யோகி தனை எடுத்தால் 
இலகுவான பர அணுப் போல் இருப்பது இலகிமா ஆகும் 
இலகு வான பர அணுப் போல் இருக்கும் யோகி தனை எடுத்தால் 
இலகு மேரு பாரம் என இருப்பது அன்றோ கரி மாவாம். 	

1784.	பிலத்தில் இருந்தோன் அயன் உலகில் புகுதன் மீண்டும் பிலம் அடைதல் 
பலத்தின் மிகுந்த பிராத்திய தாம் பரகாயத்தின் நண்ணுதல் வான் 
புலத்தின் இயங்கல் இச் சித்த போகம் அனைத்தும் தான் இருக்கும் 
தலத்தின் இனைந்த படிவருதல் பிரகாமியம் ஆம் தவக் கொடியீர். 	

1785.	விண்ணில் இரவி தன் உடம்பின் வெயிலால் அனைத்தும் விளக்குதல் போல் 
மண்ணில் உள ஆம் பொருள் பலவும் காலம் மூன்றும் வானத்தின் 
கண்ணில் உள ஆம் பொருளும் தன் காயத்து தௌ¤யாது இருந்து அறிதல் 
எண்ணில் இதுவும் மறை ஒரு சார் பிரகாயம் என்று இயம்பும் ஆல். 	

1786.	ஈசன் என முத் தொழிலும் தன் இச்சை வழி செய்து எழு புரவித் 
தேசன் முதல் கோள் பணி கேட்பத் திகழ்வது தீசத்துவம் ஆகும் 
பூசல் அவுணர் புள் விலங்கு பூத மனிதர் முதல் உலகும் 
வாச வாதி எண் மருந்தன் வசமாக் கொள்கை வசித்துவம் ஆம். 	
1787.	எம்மை உணர்ந்த யோகியர்கள் இவற்றை விரும்பார் எனினும் அவர் 
தம்மை நிழல் போல் அடைந்து உலகர்க்கு அனையார பெருமை தனை உணர்த்தும் 
செம்மை உடைய இவை என்னச் சித்தி எட்டும் தௌ¤வு எய்தக் 
கொம்மை முலையார் அறுவருக்கும் கொளுத்தினான் எண் குணச் செல்வன். 	

1788.	தேவதேவு உபதேசித்த சித்தியைச் சிலம்பன் செல்வி 
பாவனை வலத்தால் நன்கு பயின்றுவான் வழிக் கொண்டு ஏகிப் 
பூவலர் கதுப்பின் நல்லார் அறுவரும் புரம் மூன்று  அட்ட 
காவலன் விரும்பி வைகும் கயிலை மால் வரையில் புக்கார். 	
	 	 
அட்டமா சித்தி உபதேசித்த படலம் சுபம் 

34. விடை இலச்சினை இட்ட படலம்

1789.	சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க் 
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா 
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து 
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம். 	

1790.	தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை விழிக்குயில் இள முளை 
கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங் 
காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன் என்று 
ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில் கொள் கச்சி உளான் அவன். 	

1791.	உத்தம சிவ பத்திரில் பெரிது உத்தமன் புது விரைகலன் 
மித்தை என்று வெண் நீறு கண்டிகை ஆரம் என்று அணி மெய்யினான் 
நித்த வேத புராணம் ஆதி நிகழ்த்திடும் பொருள் கண்ணுதல் 
அத்தனனே பர தத்துவப் பொருள் என்று அளந்து அறி கேள்வியான். 	

1792.	அங்கம் ஆறோடு வேதம் நான்கும் அறிந்து மெய்ப்பொருள் ஆய்ந்து உளம் 
சங்கை கொண்டு அனுதினம் அரன்புகழ் சாற்று சைவ புராண நூல் 
பொங்கும் இன் சுவை அமுது தன் செவி வாய் திறந்து புகட்டி உண்டு 
எங்கள் நாயகன் அடி இணைகண் இருத்தும் அன்பு கருத்துளான். 	

1793.	முக்கண் நாயகன் முப்புரத்தை முனிந்த நாயகன் மங்கை ஓர் 
பக்க நாயகன் மிக்க வானவர் பரவு நாயகன் அரவு அணிச் 
சொக்க நாயகன் உடலும் செவியான் முகந்து சுவைத் தரும் 
தக்க பாலோடு தேன் கலந்து தருக்கி உண்பவன் ஆயினான். 	

1794.	அம் கயல் கண் மடந்தை பாகன் அடித்தலம் தொழும் ஆசை மேல் 
பொங்கி மிக்கு எழும் அன்பனாய் மது ரேசன் மின்னு  பொலங்கழல் 
பங்கயப் பதம் என்று நான் பணிவேன் எனப் பரிவு எய்தியே 
கங்குலில் துயில்வான் கயல் புரை கண்ணி பங்கனை உன்னியே. 	

1795.	அன்று செம்பியர் கோமகன் கனவின் கணே அருள் வெள்ளிமா 
மன்றுள் நின்றவர் சித்தராய் எதிர்வந்து மன்னவ நின் உளத்து 
ஒன்றும் அஞ்சல் ஒருத்தனாகி உருத்திரிந்து தனித்து வந்து 
இன்று வந்தனை செய்து போதி எனப் புகன்றனர் ஏகினார். 	

1796.	கேட்டு வேந்தன் விழித்து உணர்ந்து கிளர்ந்த அற்புதன் ஆகிய 
ஈட்டு சேனை அமைச்சுளார் பிறர் யாரும் இன்றி வழிக் கொளீஇ 
நாட்டம் மூன்றவன் ஆம்வாள் கொடு நல் அருட்  துணையாய் வழி 
காட்ட அன்பு எனும் இவுளி மேல் கொடு கங்குல் வாய் வருவான் அரோ. 	

1797.	கல்லும் ஆர் அழல் அத்தமும் பல கலுழியும் குண கனை கடல் 
செல்லும் மா நதி பலவும் வான் நிமிர் கன்னலும் செறி செந் நெலும் 
புல்லு மாநிலனும் கழிந்து புறம் கிடக்க நடந்து போய் 
வல்லு மா முலையார் கணம் பயில் வைகை அம் துறை எய்தினான். 

1798.	குறுகு முன்னர் அதிர்ந்து வைகை கொதித்து அகன் கரை குத்திவேர் 
பறிய வன் சினை முறிய விண் தொடு பைந் தருக்களை உந்தியே 
மறுகி வெள்ளம் எடுத்து அலைத்தர மன்னவன் கரை தன்னில் நின்று 
இறுதியில் அவனைத் தொழற்கு இடையூறு இது என்று அஞர் எய்துவான். 

1799.	இழுதொடும் சுவை அமுது பென் கலன் இட்டு உணாது இரு கண் கணீர் 
வழிய வந்து விலக்குவாரின் வளைந்தது ஆறு பகல் செய்யும் 
பொழுது எழும் பொழுதோ மறுக்கம் விளைக்குமே இகல் பூழியன் 
வழுதி அன்றியும் வைகையும் பகை ஆனது என்று  வருந்தினான். 	

1800.	வெள்ளம் நோக்கி அழுங்கு செம்பியன் மெலிவு நோக்கி விரைந்தெழீஇக் 
கள்ள நோக்கில் அகப்படாதவர் கனவு போல் அவன் நனவில் வந்து 
துள்ள நோக்கு உடை அன்பருக்கு அருள் உருவம் ஆகியசித்தர்தாம் 
பள்ளம் நோக்கி வரும் பெரும் புனல் வற்ற நோக்கினர் பார்த்தரோ. 

1801.	வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில் திறந்து போய் 
நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர் வேந்தனைச் 
சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து 
அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம் புகுவித்தரோ. 	

1802.	வெம்மை செய் கதிர்கால் செம்பொன் விமான சேகரத்தின் மேய 
தம்மையும் பணிவித்து எண் இல் சராசரம் அனைத்தும் ஈன்ற 
அம்மை அம் கயல் கணாளம் அணங்கையும் பணிவித்து உள்ளம் 
செம்மை செய் இன்ப வெள்ளத்து அழுத்தினார சித்தசாமி. 	
1803.	எண்ணிய எண்ணி ஆங்கே யான் பெற முடித்தாய் போற்றி 
பண்ணியன் மறைகள் தேறா பால்மொழி மணாள போற்றி 
புண்ணியர் தமக்கு வேதப் பொருள் உரை பொருளே போற்றி 
விண் இழி விமான மேய சுந்தர விடங்க போற்றி. 	

1804.	எவ்வுடல் எடுத்தேன் மேல் நாள் எண் இலாப் பிறவி தோறும் 
அவ் உடல் எல்லாம் பாவம் மறம் பொருட்டாக அன்றோ 
தெவ் உடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட 
இவ் உடல் ஒன்றே அன்றோ எனக்கு உடல் ஆனது ஐயா. 	
1805.	இன்னன பலவும் ஏத்தி இறைஞ்சி இப் பல் வரமும் வேண்டும் 
மின் நகு வேலினானை வேந்த நீ போந்த வண்ணம் 
தென்னவன் அறிந்தால் ஏதம் செய்யும் என்று ஆர்த்தார்க் கண்ணி 
மன்னைச் சித்த சாமி உத்தர வழிக் கொண்டு ஏகா. 

1806.	மண்ணினை வளர்க்கும் வைகை வடகரை அளவு நண்ணிப் 
புண்நிய நீற்றுக் காப்புப் புண்டர நுதலில் சாத்தி 
உள் நிறை கருத்துக்கு ஏற்ப உறுதுணை உனக்கு உண்டாகி 
நண்ணுக என்று பொன்னி நாடனை விடுத்து மீண்டு. 	

1807.	காப்புச் செய்த கதவில் விடைக்குறி 
யாப்புச் செய்து அமைத்து ஈர்ஞ்சடைச் சித்தர் போய்த் 
துப்புக் கைவரை சுழ் வட மேருவில் 
கோப்புச் செய்த பொன் கோயிலின் மேயினார். 	
1808.	கங்குலின் அரும் கை குறைப்பான் எனச் 
செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும் 
எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து 
அங்கண் வாயில் திறப்பவர் ஐயுறா. 	
1809.	மற்றை வாயில் கண் மூன்றினும் வல்லை போய் 
உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய 
கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு 
எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார். 	

1810.	போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி 
மாற்றி உத்தர வாயில் கதவு அதில் 
ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று 
ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார். 	
1811.	வையை நாடனும் வந்து அது நோக்கு உறீஇ 
ஐய இன்னது ஓர் அற்புத மாயையைச் 
செய்ய வல்லவர் யார் எனத் தேர் இலன் 
ஐயம் எய்தி அகன் மனை நண்ணினான். 	
1812.	மறுத்த உண்டியன் மா மலர்ப் பாயலை 
வெறுத்து அகன்று தரை மேல் பள்ளி கொள்ளவும் 
பொறுத்தனன் அன்று துயின்றான் இன் அருள் போழ்தினில் 
கறுத்த கண்டர் கன வினில் கூறுவார். 	

1813.	மட்டது அலம்பிய தாதகி மாலையான் 
உட்ட தும்பி ஒழுகிய அன்பினால் 
கட்டு இல் அங்கு எயில் கச்சியில் காடு எலாம் 
வெட்டி நம் புடை வித்திய பத்தியான். 	

1814.	வந்து நமை வழி பட வேண்டினான் 
இந்த வாயில் திறந்து அழைத்து இன் அருள் 
தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ 
நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா. 	

1815.	அருளினான் ஐயம் தேற்றி அகன்றபின் 
மருளின் நீங்கி மலர்க்கண் விழித்து எழீஇ 
வெருளினான் வெயர்த்தான் விம்மினான் பல 
பொருளின் ஆற்றுதித்தான் குல பூடணன். 	

1816.	வள்ளல் அன்புக்கு எளிவந்த மாண்பு கண்டு 
உள்ள உள்ள நின்று நூற்று எழும் அற்புத 
வெள்ளமும் பரமானந்த வெள்ளமும் 
கொள்ளை கொண்டு தன் கோமனை நீங்கினான். 	
1817.	அளி அறா மனத்து அன்புடைய அன்பருக்கு 
எளியர் ஆடலை யார்க்கும் வெளிப்படத் 
தௌ¤யு மாறு தௌ¤வித்துத் தன்னைப் போல் 
விளி இலா இன்ப வெள்ளத்து அழுத்தினான். 	

1818.	கோடாத செங்கோலும் வெண் குடையும் கோ முடியும் 
ஏடார் அலங்கல் இரா சேந்திரற்கு அளித்துத் 
தோடார் இதழியான் தாள் கமலம் சூடி வான் 
நாடாள அரசு உரிமை பெற்றான் னரபதியே. 	

விடை இலச்சனை இட்ட படலம் சுபம் 
	 	 

35. தண்ணீர்ப் பந்தர் வைத்த படலம்

1819.	சம்பு மதுரைப் பரன் இரவு தனியே வந்து தனைப பணிந்த 
வெம்பு கதிரோன் மருமானை விடுத்து மீண்டும் தாழ இறுக்கி 
அம் பொன் கதவின் விடை பொறித்தது அறைந்தும் தென்னன் அடு படைக்கு 
வம்பு மலர் தோய் புனல் பந்தர் வைத்துக் காத்த வகை சொல்வாம். 	

1820.	தென்னன் அரச புரந்தரன் கோல் செலுத்த நாளில் காடு எறிந்த 
மன்னன் பின்னர் வெளிப்படையாப் போந்து போந்து  மது ரேசன் 
பொன் அம் கமலத் தாள் வணங்கிப் போவான் முன்னிப் பொரும் பொருனைக் 
கன்னி நாடன் கேண்மை பெற விடுத்தான் வரிசைக் கையுறையே. 	

1821.	பொன்னி நாடன் வர விடுத்த பொலம் பூண் ஆடை முதல் பிறவும் 
கன்னி நாடன் கை கவர்ந்து தானும் கலக்கும் தொடர் பினால் 
உன்னி வேறு கையுறையாய்த் துறவு செய்ய உவப்பு எய்திச் 
சென்னி காதல் மகல் கொடுப்பான் இசைந்தான் அந்தச் செழியற்கு. 	

1822.	செழியன் தனக்கு வரையறுத்த செய்தி கேட்டுச் செம்பியர் கோன் 
கழி அன்புடை குலமகளைத் தான் போய்க் கொள்வான் கருதிமதி 
வழிவந்தவற்குத் தம்பி என வந்த அரச சிங்கம் எனும் 
பழி அஞ்சாதான் வஞ்சித்துப் பழனக் காஞ்சிப் பதி  புகுவான். 	

1823.	காஞ்சிப் பதிமுன் குறுகும் இளம் காவலோனைக் கடல் சேனை 
தாம் சுற்றிய வந்து எதிர் கொடு போய்த் தன் முன் தனக்கு என்று இருந்த மகள் 
ஆம் சிற்றிடையை மணம் புணர்த்தி அந்த மருகற்கு அரசு நிலை 
வாஞ்சித்து அரச புரந்தரனைப் பிடிக்க மதித்தான் வனம் எறிந்தான். 	

1824.	மருமகன் தன்னுடன் எழுந்து மாமனான வளவர் கோன் 
பொரும் அகன்ற சேனை யானை புடை நெருங்க மதி வழித் 
திரு மகன் தன் மேல் அமர்த் திறம் குறித்து முரசு அறைந்து 
உரும் அகன்ற பல்லியம் ஒலிப்ப வந்துளான் அரோ. 	

1825.	திரண்டு அதிர்ந்து எழுந்து வந்த சென்னி சேனை தன் நகர்க் 
இரண்டு யோசனைப் புறத்து இறுக்கும் முன்னர் ஒற்றரால் 
தெருண்டு தென்னனை மாட நீ கூடல் மேய சிவன் தாள் 
சரண் புகுந்து வேண்டுக என்று சார்ந்து தாழ்ந்து கூறுவான். 	

1826.	அன்று பாதி இரவில் வந்து அடி பணிந்து தமியனாய்ச் 
சென்ற சென்னி என்னும் நின்ன திருவடிக் கண் அன்பினான் 
இன்றும் அந் நிலையனாய் எனக்கு வேண்டுவன விடுத்து 
ஒன்று கேண்மை புரிகுவான் உளத்தில் ஒன்றை உன்னினான். 	

1827.	அறத்தினுக்கு உள்ளாகி அன்று நின்ற நீ அவன் செயும் 
மறத்தினுக்கு உள்ளாகி இன்று வன்மை செய்வதே அறப் 
புறத்தினார் புரம் பொடித்த புண்ணியா எனக் கரைந்து 
உறைத்து வேண்டினான் வேலை உம்பர் நாதன் அருளினால். 	

1828.	மெய் துறந்த வாய்மை ஒன்று விண்ணின் நின்று அண்ணலே 
ஐது நுங்கள் சேனையேனும் மாகவத்து நாளைநீ 
எய்தி வந்த தெவ்வரோடு எதிர்ந்து உருத்து நின்று போர் 
செய்தி வென்றி நின்னது ஆல் செய்தும் என்று  எழுந்தது ஆல். 	

1829.	காய வாணி செவி நுழைந்த காலை வேந்தர் இந்திரன் 
நாயனார் அடிக்கணே நயந்த அன்பு முவகையும் 
ஆய வேலை வீழ்ந்து தாழ்ந்து அகன்று தன் இருக்கை போய் 
மேயினான் நிமிர்ந்த கங்குல் விடியும் எல்லை நோக்குவாள். 	

1830.	கழிந்த கங்குல் இற விசும்பு கண் விழிக்கும் முன்னரே 
விழித்து எழுந்து சந்தி ஆதி வினை முடித்து வானநீர் 
சுழித்து அலம்பு வேணி அண்ணல் தூய பூசை செய்து எழீ இத் 
தெழித்து எழுந்த சேனை யோடு செரு நிலத்தை நண்ணினான். 	
1831.	அலை சிறந்த சலதி மீது ஒரு ஆறு செல்லு மாறு போல் 
மலைசிறந்த நேரி வெற்பன் மள்ளர் சேனை வெள்ள மேல் 
கலை சிறந்த மதி நிறைந்த கன்னி நாடு காவலன் 
சிலை சிறந்த சிறிய சேனை சென்று அலைத்து நின்றதே. 

1832.	உருமு அன்ன குரலினார் உலவை அன்ன செலவினார் 
வெருவுதீயின் வெகுளியார் வெடித்த வீர நகையினார் 
செரு வின் மான அணியினார் சினஇ மடித்த வாயினார் 
இருவர் சேனை மள்ளரும் எதிர்ந்து கை கலந்தனர். 	

1833.	மன்றல் அம் தெரியல் நேரி மலையவன் தமர்க்கு எலாம் 
தென்றல் அம் பொருப்பினான் திரண்டநான்கு கருவியும் 
மின் தயங்கு செய்ய வேணி விடையவன் தன் அருளினால் 
ஒன்று அனந்தம் ஆக வந்து உருத்து எதிர்ந்து தோன்றும் ஆல். 	

1834.	தேரின் ஓதை கந்துகம் சிரிக்கும் ஓதை சொரிமதக் 
காரின் ஓதை பேரியம் கறங்கும் ஓதை மறவர் தம் 
போரின் ஒதை வீரர்தோள் புடைக்கும் ஒதை யோடு முந் 
நீர் ஓதை ஒன்று எனக் கலந்து ஒடுங்கி நின்றதே. 	

1835.	சிலை பயின்ற வீரரோடு சிலை பயின்ற வீரரே 
கலை பயின்ற வாளரோடு கலை பயின்ற வாளரே 
கொலை பயின்ற வேல ரோடு கொலை பயின்ற வேலரே 
மலை பயின்ற மல்லரோடு மலை பயின்ற மல்லரே. 	
1836.	கரி உகைத்த பாகரோடு கரி உகைத்த பாகரே 
பரி உகைத்த மறவரோடு பகை உகைத்த மறவரே 
கிரி உகைத்த வலவரோடு கிரி உகைத்த வலவரே 
எரி உகைத்து எதிர்ந்த கால் எனக் கலந்து மலை வரால். 	

1837.	விடுக்கும் வாளி எதிர் பிழைப்பர் வெய்ய வாளி எய்து பின் 
தொடுக்கும் வாளி வில் லொடும் துணிப்பர் பின் கணிப்பு அற 
மடுக்கும் வாளி மார் புதைப்ப வாங்கி மற்று அவ் வாளி கொண்டு 
அடுக்கும் ஏவலரை எய்து அடர்ப்பர் கிள்ளி மள்ளரே. 	

1838.	சோனை மாரியில் சரம் சொரிந்து நின்று துள்ளுவார் 
ஆன வாளி எதிர் பிழைத்து ஒதுங்கி நின்று அழல் சரம் 
கூனல் வாளி சிலை இறத் தொடுத்து எறிந்து கூவுவார் 
மீன கேதனத்து வேந்தன் வீரர் சென்னி வீரர் மேல். 

1839.	தறிந்த தாள் தகர்ந்த சென்னி தரை உருண்ட வரை எனச் 
செறிந்த தோள் சரிந்த தேர் சிதைந்த பல் படைக்கலம் 
முறிந்த யானை கையிறா முழங்கி வீழ்ந்த செம்புனல் 
பறிந்த பாரு பார் இடங்கள் பைத்த கூளி மொய்த்தவே. 	
1840.	மடலின் நீடு தார் அலங்கன் மன்னர் சேனை இன்னவாறு 
உடலின் நீழல் அடி அகத்து ஒடுங்க உம்பர் உச்சியில் 
கடலின் நீடு கதிர் பரப்பு கடவுள் எய்தும் அளவு நின்று 
அடலின் நீடி இடைவிடாமல் அமர் உழந்ததால் அரோ. 	

1841.	அந்தம் நாள் அனைத்தையும் அழிக்க நின்ற அரன் நுதல் 
சிந்தும் தீ எனக் கனன்று உருத்து நின்று தெறுதலால் 
எந்த ஆறும் அற வறப்ப இம்பர் அன்றி உம்பரும் 
வெந்து வான ஆறும் வற்ற வேனில் வந்து இறுத்ததால். 	
1842.	மண் பிளந்து பிலம் நுழைந்து வரை பிளந்து நிரைய வாய் 
எண் பிளந்து நின்ற பொங்கர் இலை உகப் பிளந்து மேல் 
விண் பிளந்து பரிதி நீடு வெம் கரங்கள் யாரையும் 
கண் பிளந்து அழன்று வீசு கானல் எங்கும் ஆனதே. 	

1843.	ஆயிடை அலகைத் தேரும் அடைந்தவர் வெயர்வும் அன்றித் 
தூய நீர் வறந்த அந்தச் சுடுபுலம் தோய்ந்த காலும் 
மீ உயர் மதி நிலவும் வெய்ய வாய்ச் சுடு நல் லோரும் 
தீயவர் தம்மைச் சேர்ந்தால் தீயவர் ஆவர் அன்றோ. 	

1844.	விளை மத ஊற்று மாறி வெகுளியும் செருக்கும் மாறித் 
துளை உடைக் கைமான் தூங்கு நடைய வாய்ச் சாம்பிச் சோர்ந்த 
உளர் தரு ஊழிக் காலினோடும் ஆம் புரவி எய்த்துத் 
தளர் நடை உடைய வாகித் தைவரும் தென்றல் போன்ற. 

1845.	கானல் அம் தேர் மேல் சூறைக் கால் எனும் பாகன் தூண்ட 
வேனில் வேந்து ஏறிச் சீறி வெப்பம் ஆம் படைகள் வீச 
மாநிலம் காவல் பூண்ட மன்னவர் இருவர் தங்கள் 
தானையும் உடைந்து தண்ணீர் நசை சுடச் சாம்பிற்று அன்றே. 

1846.	இரக்கம் இல் கொடிய செல்வர் மருங்கு போய் இரப்பார் போல 
உருப்பம் மொண்டு இறைக்கும் கள்ளி நீழல் புக்கு ஒதுங்குவாரும் 
தருக்கு அற நிரப்பால் எய்த்தோர் தம்மினும் வறியர் பால் சென்று 
இரப்ப போல் இலை தீந்து துக்க மரநிழல் எய்துவாரும். 	

1847.	கொல் இபம் பரி மான் தேரின் குறு நிழல் ஒதுங்கு வாரும் 
அல் இருள் வட்டத் தோல் வெண் கவிகையுள் அடங்கு வாரும் 
செல் இடம் பிறிது காணார் வீரவான் சென்றோர் நின்ற 
கல்லுடன் நிழல் சேர்வாரும் ஆயினார் களமர் எல்லாம். 	

1848.	ஆயது ஓர் அமையம் தன்னில் அளவு இலா உயிர்க்கும் ஈன்ற 
தாயனார் துலை போல் யார்க்கும் சமநிலை ஆய கூடல் 
நாயனார் செழியன் தானை நனந்தலை வேத நாற்கால் 
பாயதோர் தண்ணீர்ப் பந்தர் பரப்பி அப் பந்தர நாப்பண். 	

1849.	புண்டர நுதலும் காதின் புறத்து அணி மலரும் பாத 
முண்டக மலர் மேல் ஒற்றைக் கிண் கிணி முழக்கும் கச்சியாப்பு 
உண்ட தோல் உடையும் கண்டோர் உள்ளமும கண்ணும் கொள்ளை 
கொண்ட புன்னகையும் உள்ளக் கருணையின் குறிப்பும தோன்ற. 	

1850.	அரு மறை அகத்து நின்றாங்கு அருந்தவர் ஆகி வேணிப் 
பொரு புனல் பூரித்து ஆங்கு ஓர் புண்ணியச் சிரகம் தாங்கி 
ஒருவருக்கு ஒன்றெ ஆகி இலக்கருக்கு இலக்கம் ஆகித் 
அருகுறும் புழையால் வாக்கித் தணித்தனர் தண்ணீர்த் தாகம். 	

1851.	சுந்தரப் புத்தேள் வைத்த துறு மலர் வாசத் தெண்ணீர்ப் 
பந்தர் புக்கு அடைந்து நன்னீர் பருகி எய்ப்பு அகல ஆற்றல் 
வந்தபின் செழியன் தன்னோர் வளவன் மேல் ஏறிச்சீறி 
அந்தம் இல் அனிகம் சிந்தித் தும்பை வேய்ந்து அடு போர் செய்தார். 	

1852.	கடல் உடைத்து என்னப் பொன்னி காவலன் தானை சாய 
மடல் உடை வாகை வேய்ந்து வளவனை மருக னோடும் 
மிடல் உடைத் தறுகண் சேனை வீரர் வெம் கையால் பற்றி 
அடல் உடைக் கன்னி நாடர்க் அரசன் முன் கொண்டு போந்தார். 	

1853.	கொடுவந்த வளவன் தன்னைக் கோப் பெரும் செழியர் கோமான் 
வடுவந்த தம்பி யோடு மாட நீள் கூடன் மேய 
கடு வந்த மிடற்றார் முன்போய் விடுத்து எந்தை கருதியது யாது என்ன 
நடுவந்த நிலையான் கேட்ப நாயகன் இகழ்த்து மன்னோ. 	

1854.	அறவன் நீ அல்லையோ உன் அகத்தினுக்கு இசைந்த செய்கென 
இறைவனது அருளால் வானின் எழுமொழி கேட்டு வைகைத் 
துறைவனும் அறத்தின் ஆற்றால் சோழனைச் சிலமால் யானை 
மற வயப் பரிபூண் மற்றும் வழங்கினான் விடுத்தான் பின்னர். 	

1855.	வள்ளல் தன் தம்பி என்னும் மன்னவர் சிங்கம் தன்னைத் 
தள்ளரும் தறுகண் ஆண்மைத் தருக்கு அறத்து ஆனாள் செல்வம் 
உள்ளன சிறிது மாற்றி ஒதுக்கி எவ் உயிர்க்கும் தாயாய்ப் 
பள்ள நீர் அகலம் காத்து பல்வளம் பழுக்க வாழ்ந்தான். 	

தண்ணீர்ப் பந்தர் வைத்த படலம் சுபம் 


36. இரச வாதம் செய்த படலம்

1856.	வரதன் மீனவன் படை இடை வந்து நீர்ப் பந்தர் 
விரதன் ஆகி நீர் அருந்திய வினை செய்ததும் 
பரத நூலியன் நாடகப் பாவையாள் ஒருத்திக் 
இரத வாதம் செய்து அருளிய ஆடலை இசைப்பாம். 	

1857.	பரும் கை மால்வரைப் பூமியன் பைந்தமிழ் நாட்டின் 
இரங்கு தெண் திரைக் கரங்களால் ஈர்ம் புனல் வைகை 
மருங்கில் நந்தனம் மலர்ந்த பன் மலர் தூ உய்ப் பணியப் 
புரம் கடந்தவன் இருப்பது பூவண நகரம். 	

1858.	எண்ணில் அங்கு உறை சராசரம் இலிங்கம் என்று எண்ணி 
விண்ணின் நால்களும் கோள்களும் விலங்குவது யாக்கைக் 
கண்ணினான் கதிர் முதல் பல கடவுளர் பூசை 
பண்ணி வேண்டிய நல்வரம் அடைந்தது அப்பதியில். 	

1859.	கிளிஉளார் பொழில் பூவணக் கிழவர் தம் கோயில் 
தளி உளார் தவப் பேறு எனா அடாது கு பூந்தார் 
அளி உளார் குழல் அணங்கு அனாள் அந்தரத்தவர்க்கும்
களி உளார் தர மயக்கு உறூம் கடல் அமுது அனையாள். 	

1860.	நரம்பின் ஏழ் இசை யாழ் இசைப் பாடலும் நடநூல் 
நிரம்பும் ஆடலும் பெண்ணல நீர்மையும் பிறவும் 
அரம்பை மாதரை ஒத்தனள் அறநெறி ஒழுகும் 
வரம்பினால் அவர் தமக்கு மேல் ஆயினாள் மன்னோ. 	

1861.	ஆய மாதர் பேர் பொன் அனையாள் என்பவள் தன் 
நேய ஆய மோடு இரவின் இருள் நீங்கு முன் எழுந்து 
தூய நீர் குடைந்து உயிர் புரை சுடர் மதிக் கண்ணி 
நாயனார் அடி அருச்சனை நியமும் நடாத்தி. 	

1862.	திருத்தர் பூவண வாணரைச் சேவித்துச் சுத்த 
நிருத்தம் ஆடி வந்து அடியரைப் பொருள் என நினையும் 
கருத்தளாய் அருச்சித்து அவர் களிப்ப இன் சுவை ஊண் 
அருத்தி எஞ்சியது அருந்துவாள் அ•து அவள் நியமம். 	

1863.	மாதர் இந் நெறி வழங்கும் நாள் மற்று அவள் அன்பை 
பூதலத்து இடைத் தெருட்டு வான் பொன் மலை வல்லி 
காதல் நாயகன் திரு உருக் காணிய உள்ளத்து 
ஆதரம் கொடுத்து அருளினார் பூவணத்து ஐயர். 	

1864.	ஐயர் தந்த பேர் அன்பு உரு ஆயினாள் மழுமான் 
கையர் தன் திரு உருவினைக் கருவினால் கண்டு 
மைய கண்ணினாள் வைகலும் வரு பொருள் எல்லாம் 
பொய் இல் அன்பு கொண்டு அன்பர்தம் பூசையின் நேர் வாள். 	
1865.	அடியர் பூசனைக்கு அன்றி எஞ்சாமையால் அடிகள் 
வடிவு காண்பது எப்படி என்று மடி இலாச் செழியற்கு 
கொடிவில் பொன் கிழி நல்கிய வள்ளலை உன்னிப் 
பிடி அனாள் இருந்தாள் அ•து அறிந்தனன் பெருமான். 

1866.	துய்ய நீறு அணி மெய்யினர் கட்டங்கம் தொட்ட 
கையர் யோகப் பட்டத்து இடைக் கட்டினர் பூதிப் 
பையர் கோவணம் மிசை அசை உடையினர் பவளச் 
செய்ய வேணியர் அங்கு ஒரு சித்தராய் வருவார். 

1867.	வந்து பொன் அனையாள் மணி மாளிகை குறுகி 
அந்தம் இன்றி வந்து அமுது செய்வா ரொடும் அணுகிச் 
சிந்தை வேறு கொண்டு அடைந்தவர் திருவமுது அருந்தாது 
உந்து மாளிகைப் புறம் கடை ஒரு சிறை இருந்தார். 	

1868.	அமுது செய் அரும் தவர் எலாம் அகல வேறு இருந்த 
அமுத வாரியை அடிபணிந்து அடிச்சியர் ஐய 
அமுது செய்வதற்கு உள் எழுந்து அருள்க என உங்கள் 
அமுது அனாளை இங்கு அழை மின் என்று அருளலும் அனையார். 	

1869.	முத்தரா முகிழ் வாள் நகை அல்குலாய் முக்கண் 
அத்தவர் ஆனவர் தமர் எலாம் அமுது செய்து அகன்றார் 
சித்தராய் ஒருதம் பிரான் சிறு நகையின ராய் 
இத் தரா தலத்து யார் இருக்கின்றார் என்றார். 	

1870.	நவ மணிக் கலன் பூத்த பூம் கெம்பரின் நடந்து 
துவர் இதழ்க் கணி வாயினாள் சுவா கதம் அங்கு இல என்று 
உவமை அற்றவர்க்கு அருக்கிய ஆசனம் உதவிப் 
பவம் அகற்றிய வடிமலர் முடிஉறப் பணிந்தாள். 	

1871.	எத்தவம் செய்தேன் இங்கு எழுந்து அருளுதற்கு என்னாச் 
சித்தர் மேனியும் படி எழில் செல்வமும் நோக்கி 
முத்த வாள் நகை அரும்ப நின்று அஞ்சலி முகிழ்ப்ப 
அத்தர் நோக்கினார் அருள் கணார் அருள் வலைப் பட்டாள். 	
1872.	ஐய உள் எழுந்து அருளுக அடிகள் நீர் அடியேன் 
உய்ய வேண்டிய பணி திரு உளத்தினுக்கு இசையச் 
செய்ய வல்லன் என்று அஞ்சலி செய்ய உள் நகையா 
மையள் நோக்கியை நோக்கி மீன் நோக்கிதன் மணாளன். 	

1873.	வடியை நேர் விழியாய் பெருவனப் பினை சிறிது உன் 
கொடியை நேரிடை என விளைத்தனை எனக் கொன்றை 
முடியினான் அடி ஆரம் மென் முகிழ் முலைக் கொடி தாழ்ந்து 
அடிய னேற்கு வேறாய் ஒரு மெலிவு இலை ஐயா. 	

1874.	எங்கள் நாயகர் திரு உருக் காண்பதற்கு இதயம் 
தங்கும் ஆசையால் கரு உருச் சமைத்தனன் முடிப் பேற்கு 
இங்கு நாள் தொறும் என் கையில் வரும் பொருள் எல்லாம் 
உங்கள் பூசைக்கே அல்லதை ஒழிந்தில என்றாள். 	

1875.	அருந்து நல் அமுது அனையாள் அன்பு தித்திக்கத் 
திருந்து தேன் என இரங்கு சொல் செவி மடுத்து ஐயர் 
முருந்து மூரலாய் செல்வ மெய் இளமை நீர் மொக்குள் 
இருந்த எல்லையும் நிலை சில என்பது துணிந்தாய். 	

1876.	அதிக நல் அறம் நிற்பது என்று அறிந்தனை அறத்துள் 
அதிகம் ஆம் சிவ புண்ணியம் சிவ அர்ச்சனை அவற்றுள் 
அதிகம் ஆம் சிவ பூசையுள் அடியவர் பூசை 
அதிகம் என்று அறிந்து அன்பரை அருச்சனை செய்வாய். 
1877.	உறுதி எய்தினை இருமையும் உன் பெயர்க்கு ஏற்ப 
இறுதி இல்லவன் திரு உரு ஈகையால் காணப் 
பெறுதியாக நின் மனைக் கிடை பித்தளை ஈயம் 
அறுதியான பல் கலன்களும் கொணர்தி என்று அறைந்தார். 	

1878.	ஈயம் செம்பு இரும்பிர சிதம் என்பவும் புணர்ப்பால் 
தோயும் பித்தளை வெண்கலம் தரா முதல் தொடக்கத்து 
ஆயும் பல் வகை உலோகமும் கல் என அலம்பத் 
தேயும் சிற்றிடை கொண்டு போய்ச் சித்தர் முன் வைத்தாள். 	
1879.	வைத்த வேறு வேறு உலோகமும் மழு உழை கரந்த 
சித்த சாமிகள் நீற்றினைச் சிதறினர் பார்த்தே 
இத்தை நீ இரா எரியில் இட்டு எடுக்கின் பொன் ஆம் 
அத்தை நாயகன் திருஉக் கொள்க என அறைந்தார். 	

1880.	மங்கை பாகரை மடந்தையும் இங்கு நீர் வதிந்து 
கங்குல் வாய் அமுது அருந்தி இக் காரியம் முடித்துப் 
பொங்கு கார் இருள் புலரும் முன் போம் எனப் புகன்றாள் 
அம் கயல் கண் ஆள் தனைப் பிரியார் அதற்கு இசையார். 

1881.	சிறந்த மாட நீள் மதுரையில் சித்தர் யாம் என்று 
மறைந்து போயினார் மறைந்த பின் சித்தராய் வந்தார் 
அறைந்த வார் கழல் வலம்பிட வெள்ளி மன்று ஆடி 
நிறைந்த பேர் ஒளியாய் உறை நிருத்தர் என்று அறிந்தாள். 	
1882.	மறைந்து போயினார் எனச் சிறிது அயர்ச்சியும் மனத்தில் 
நிறைந்த ஓர் பெரும் கவர்ச்சியை நீக்கினார் என்னச் 
சிறந்து ஓர் பெரும் மகிழ்ச்சியும் உடைய வளாய்ச் சித்தர் 
அறைந்தவாறு தீப் பெய் தனன் உலோகங்கள் அனைத்தும். 	
1883.	அழல் அடைந்த பின் இருள் மல வலி திரிந்து அரன் தாள் 
நிழல் அடைந்தவர் காட்சி போல் நீப்பரும் களங்கம் 
கழல வாடகம் ஆனதால் அது கொண்டு கனிந்த 
மழலை ஈர்ஞ் சொலாள் கண்டனள் வடிவு இலான் வடிவம். 	

1884.	மழ விடை உடையான் மேனி வனப் பினை நோக்கி அச்சோ 
அழகிய பிரானோ என்னா அள்ளி முத்தம் கொண்டு அன்பில் 
பழகிய பரனை ஆனாப் பரிவினால் பதிட்டை செய்து 
விழவு தேர் நடாத்திச் சில் நாள் கழிந்த பின் வீடு பெற்றாள். 	

1885.	நையும் நுண் இடையினாள் அந் நாயகன் கபோலத்து இட்ட 
கை உகிர்க் குறியும் சொன்ன காரணக் குறியும் கொண்டு 
வெய்ய வெம் கதிர் கால் செம் பொன் மேனி வேறு ஆகி நாலாம் 
பொய் உகத்தவருக்குத் தக்க பொருந்து உருவு ஆகி மன்னும். 

இரச வாதம் செய்த படலம் சுபம் 	 	 


37. சோழனை மடுவில் வீட்டிய படலம்

1886.	அழல் அடைந்த பின் இருள் மல வலி திரிந்து அரன் தாள் 
நிழல் அடைந்தவர் காட்சி போல் நீப்பரும் களங்கம் 
கழல வாடகம் ஆனதால் அது கொண்டு கனிந்த 
மழலை ஈர்ஞ் சொலாள் கண்டனள் வடிவு இலான் வடிவம். 	

1887.	பொன் நெடும் தேரி ராச புரந்தரன் புரந்தர் ஆதி 
பல் நெடும் தேவர் ஏத்தப் பரன் உலகு அடைந்தான் இப்பால் 
அந் நெடும் தகையோன் மைந்தன் அடல் இரா சேச என்பான் 
இந் நெடும் தகையோன் மைந்தன் இராசகம் பீரன் என்போன். 	

1888.	மற்று இவன் குமரன் பாண்டி வங்கிய தீபன் அன்னான் 
பொன் திணி தடம் தோள் மைந்தன் புரந்தர சித்தாம் அன்னான் 
வெற்றிகொள் குமரன் பாண்டி வங்கிய பதாகன் வீரம் 
பற்றிய சுந்தரேச பாத சேகரன் அவன் சேய். 	

1889.	பலர் புகழ் சுந்தரேச பாத சேகரன் ஆம் தென்னன் 
அலை புனல் உடுத்த கூடல் அடிகளுக்கு அன்பன் ஆகிக் 
கொலை புணர் வேலால் வெம் கோல் குறும்பு எனும் களைகள் தீர்த்து 
மலர் தலை உலகம் என்னும் வான் பயிர் வளர்க்கும் நாளில். 	

1890.	பத்துமான் தடம் தேர் நூறு பனைக்கை மா நூற்றுப் பத்துத் 
தத்துமான் அயுத மள்ளர் தானை இவ் அளவே ஈட்டி 
இத்துணைக்கு ஏற்ப நல்கி எஞ்சிய பொருள்கள் எல்லாம் 
சித்து உரு ஆன கூடல் சிவனுக்கே செலுத்தும் மன்னோ. 	

1891.	கண்டிகை மகுடம் ஆதிக் கலன் நிரை குயின்றும் திங்கள் 
மண்டலம் மிடறும் சென்னிக் கோபுர மாடம் ஆதி 
எண் திசை இருள் கால் சீப்ப எரி மணி இழைத்து வேய்ந்தும் 
திண் திறல் உடையான் இன்ன திருப்பணி பிறவும் செய்தான். 	

1892.	கல்லு மாறு அகன்ற மார்பன் கருவியின் சிறுமை நோக்கி 
மல்லு மாறாத திண்தோள் வளவர் கோன் ஒருவன் காலில் 
செல்லும் ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் என் போன் தானே 
வெல்லும் மாறு எண்ணி வஞ்சி வேய்ந்து கொண்டு எழுந்து போந்தான். 	

1893.	பல்வகைக் கருவி ஈட்டப் படையொடும் பரவை சீறிச் 
செல்வது போலக் கன்னித் தீம் புனல் நாடு நோக்கி 
மல்வரையாத தோளான் வரவு அறிந்து எழுந்து மேருக் 
கல்வரி சிலையான் முன் போய்க் கைதவன் தாழ்ந்து கூறும். 	

1894.	பொன்னது அனைய வேணிப் புனித இப் பூமி நேமி 
உன்னது வலத்தினாலே உருட்டும் என் வலத்தை நோக்கான் 
தன்னது வலத்தினால்என் தானையின் சிறுமை நோக்கி 
என்னது தேயம் கொள்வான் எண்ணினான் போலும் மன்னோ. 	

1895.	காவிரி நாடன் சேனைக் கடல் இடை எரி போல் மூண்டு 
மேவினன் என்று கூறி மீனவன் வேண்ட வானில் 
பூவிரி வாகை நீயே புனைய நாம் பொருதும் என்னா 
நாவிரியாத மாற்ற நாயகன் கூறக் கேட்டான். 

1896.	எல்லி அம் கமலச் செவ்வி எனமுகம் மலர்ந்து நாதன் 
அல்லி அம் கமலச் செம் தாள் அகம் தழீஇப் புறம்பு போந்து 
பல்லியம் துவைப்பத் தானைப் பரவையுள் பரிமா ஊர்ந்து 
கொல்லி அம் பொருப்பன் சேனை கடல் எதிர் குறுகினானே. 	

1897.	பண்ணுதல் இசை வண்டு ஆர்க்கும் பசும் தொடைச் செழியன் தானை 
எண்ணுதல் இல ஆம் சென்னி இரும் படைக் கடல நேர் ஆறாய் 
நண்ணுதல் எனப் போய்ப் பொன்னி நாடவன் தமர் கட்கு எல்லாம் 
கண்ணுதல் அருளால் ஆங்கு ஓர் கடல் எனத் தோன்றிற்று அம்ம. 	

1898.	கடல் என வருமா ஊர்ந்து கைதவன் சேனை முன்போய் 
அடல் அணி மேருக் கோட்டி ஆலவாய் நெடு நாண் பூட்டி 
மடல் அவிழ் துழாய்க் கோன் ஆட்டி வாய் எரி புரத்தில் ஊட்டி 
மிடல் அணி கூடல் கோமான் வேடு உருவாகி நின்றான். 	

1899.	கங்குல் வாய்த் திங்கள் போலக் காது அணி தந்தத் தோடும் 
கங்குல் வாய் முளைத்த மீன் போல் கதிர் முத்த வடமும் குஞ்சிச் 
கங்குல் வாய்ச் சிலை போல் வெட்சிக் கண்ணிசூழ் கலாபச் சூட்டும் 
கங்குல் வாய் கிழிக்கும் தந்தக் கடகமும் மின்னுக் கால. 	

1900.	அண்டத்தார் அமரர் நாமம் அன்று தொட்டு அடையத தோற்று 
கண்டத்தார் இருளே எங்கும் கலந்து எனக் கறுத்த மேனி 
கொண்டத்தார் ஆரினார்கு ஓர் கூற்று என கொல் வேல் ஏந்திச் 
சண்டத் தீ என்ன நின்றான் காவிரித் தலைவன் காணா. 	

1901.	சீறி ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன் வந்தேன் என்னாக் 
கூறினான் எதிர்த்தான் வெள்ளிக் குன்றவன் பத்து நூறு 
மாறு இலாப் பரிக்கு மட்டு ஓர் வயவன் நீ அன்றோ எண்ணில் 
ஈறு இலாப் பரிக்கும் ஒற்றைச் சேவகன் யானே என்றான். 

1902.	என்ற சொல் இடி ஏறு என்ன இரு செவி துளைப்பக் கேட்டு 
நின்றவன் எதிரே மின்னு நீட்டிச் செல் மேகம் போலச் 
சென்று வேல் வலம் திரித்துச் செயிர்த்தனன் அதிர்த்துச் சீற 
வன் திறன் நூற்றுப் பத்து வயப்பரிக்கு ஒருவன் அஞ்சா. 

1903.	யாம் இனி இந்த வேலால் இறப்பதற்கு ஐயம் இல்லை 
யாம் என அகன்றான் மாவோடு ஆயிரம் பரிக்கு ஓர் மள்ளன் 
காமனை வெகுண்ட வேடன் மறைந்தனன் கங்குல் சோதி 
மா மகன் அது கண்டு ஓடும் வளவனைத் துரத்திச சென்றான். 	
1904.	துரந்திடும் அளவில் ஓடும் சோழனும் திரும்பி நோக்கிக் 
கரும் தடம் கண்ணி பாகம் கரந்த வேடு வனைக் காணான் 
வரும் துயர் அச்சம் தீர்ந்தான் மதுரையின் அளவும் பற்றிப் 
புரந்தரற் புறம் கண்டானைப் புறம் கண்டு முடுக்கிப் போனான். 	

1905.	கால் ஒன்று முடுக்கப் பட்ட கனல் ஒன்று நடந்தால் ஒத்து 
வேல் ஒன்று தடக்கை நேரி வேந்தனால் முடுக்கு உண்டு ஒடும் 
சேல் ஒன்று கொடியினான் தன் செழு நகர் விரைந்து செல்வான் 
மால் ஒன்று களிற்றின் ஆங்கு ஓர் மது மலர்க் கிடங்கில் வீழ்ந்தான். 	

1906.	மீனவன் மதுரை மூதுர் மேல் திசைக் கிடங்கில் வீழ 
மான வெம் புரவி யோடும் வளவனும் வீழ்ந்தான் கூடல் 
கோன் அவன் அருளால் வானோர் குரை கடல் கடையத் தோன்றும் 
ஆனையின் எழுந்தான் தென்னன் கோழிவேந்து ஆழ்ந்து போனான். 	

1907.	
பிலத்து அளவு ஆழ்ந்த கடி மலர்க் கிடங்கில்              
 பெருந்தகை அவிந்தவன் துகில் பூண் 
கலம் தரும் பேழை படை பரி மான் தேர் கரி எலாம் கவர்ந்து தண் பொருனைத் 
தலத்தவன் தங்கள் நாயகர் அணியத் தக்க தூசு அணி கலன் நல்கி 
நலத்தகையவர் பேர் அருள் கடற்கு அன்பு நதி எனப் பெருகி வீற்று இருந்தான். 	

சோழனை மடுவில் வீட்டிய படலம் சுபம் 
 

38. உலவாக்கோட்டை அருளிய படலம்

1908.	மின் பனிக் கதிர் வேணி வானவன் மீனவன் தனை மான வேல் 
முன் பனிக்க வலம் திரிந்து முடுக்கி நேரி அடுக்கலான் 
பின் பனிக் கமலத் தடத்து இற விட்ட வாறு இது பெருமைசால் 
அன்பனுக்கு உலவாத கோட்டை அளித்தவாறு  கிளத்துவாம். 	

1909.	பொடி ஆர்க்கும் மேனிப் புனிதர்க்குப் புனித ஏற்றுத் 
கொடியார்க்கு வேதக் குடுமிக்கு இணையான கூடல் 
படியார்க்கும் சீர்த்திப் பதி யேர் உழவோருள் நல்லான் 
அடியார்க்கு நல்லான் அறத்திற்கும் புகழ்க்கும் நல்லான். 	

1910.	அனையான் அறத்திற்கு அருள் போன்றவள் ஆன்ற கற்பின் 
மனையாள் மரபின் வழுவாத தரும சீலை 
எனையாரும் நன்கு மதிக்கும் இருக்கும் நீராள் 
தனை ஆள் பதிக்குக் கதிக்குத் தனிச் சார்பு போல்வாள். 	

1911.	பல்லேர் உழவின் தொழில் பூண்டு பயன்கள் கொள்வான் 
வில்லேர் உழவன் கடன்கொண்டு மிகுந்த எல்லாம் 
இல்லேர் உழத்தி மடைச் செல்வம் இயற்றி ஏந்த 
அல் ஏறு கண்ட அடியாரை அருத்து நீரான். 	

1912.	தொகை மாண்ட தொண்டர் சுவை ஆறு தழீஇய நான்கு 
வகைமாண்ட மாறுபடும் உண்டி மறுத்து அருந்த 
நகை மாண்ட அன்பின் தலை ஆயவன் நல்க நல்கப் 
பகைமாண்ட செல்வ மணல் கேணியில் பல்கு நாளின். 	

1913.	இந்நீர வாய வளம் குன்றினும் இன்மை கூறாத் 
தன்னீர்மை குன்றான் எனும் தன்மை பிறர்க்குத் தேற்ற 
நன்னீர் வயலின் விளைவு அ•கி நலிவு செய்ய 
மின்னீர வேணி மதுரேசர் விலக்கினாரே. 	

1914.	குன்றா விருத்திக் கடன் கொண்டு கொண்டு அன்பர் பூசை 
நன்ற நடாத்தத் தொடுத்தான் கடன் தானும் கிட்டாது 
ஒன்றாலும் கொண்ட விரதத்துக்கு உறுதி இன்றி 
நின்றான் உடம்பை ஒறுக்கின்ற நியமம் பூண்டான். 	

1915.	கொடுப்பார் அவரே விளைவும் கடன் கோளும் மாற்றி 
தடுப்பார் எனின் மற்று அதை யாவர் தடுக்க வல்லார் 
அடுப்பார் விழுமம் களைவார் அடியார்க்கு நல் ஊண் 
மடுப்பான் நியமம் தடைபட்டு வருந்து கின்றான். 	

1916.	விண் ஆறு சூடும் விடையான் தமர்க் கூட்டி அன்றி 
உண்ணாதவன் தன் உயிர்க்குத் துணை ஆய கற்பில் 
பண்ணார் மொழி தன்னொடும் பட்டினி விட்டு நெஞ்சம் 
புண்ணாக ஆகம் பசித்தீயில் புழுங்கப் பட்டான். 	

1917.	இறக்கும் உடம்பால் பெறும் பேறு இனி ஆவது என்னா 
அறக் குன்று அனையான் மனையோடும் அடைந்து இச் 
                                    செய்தி 
நிறக் கின்ற செம் பொன் சிலையார்க்கு நிகழ்த்தி ஆவி 
துறக் கின்றது வே துணிவு என்று துணிந்து போனான். 	

1918.	ஐயன் திரு முன்னர் அடைந்து அடி தாழ்ந்து வானோர் 
உய்யும் படி நஞ்சு அமுது உண்ட வொருவ உன் தன் 
மெய் அன்பர் பூசைக்கு இடையூறு விளைய என்றன் 
செய்யும் புலமும் விளைவு இன்றிச் சிதைந்த என்னா. 	

1919.	விடம் நல்கு சூலப் படையாய் கடன் வேறு காணேன் 
கடன் நல்க வல்லார் தமைக் காட்டுதி காட்டு இலா யேல் 
மடம் நல்கும் இந்த உடம்பின் சுமை மாற்று வேன் என்று 
உடன் நல்கு கற்புக்கு உரியா ளடும் வேண்டும் எல்லை. 	

1920.	பஞ்சாதி வேதப் பொருள் சொன்ன பரமன் வாக்கு ஒன்று 
அஞ்சாதி வேளாண் தலை வாவு உனது அகத்தில் இன்று  ஓர் 
செஞ்சாதி ஆய செழு வால் அரிக் கோட்டை உய்த்தேம் 
எஞ்சாது இருக்கும் எடுக்கும் தொறும் என்றும் மாதோ. 	

1921.	நீ நாளும் பூசித்து அதில் வேண்டிய கொண்டு நித்தம் 
ஆனாத அன்பர்க்கு அமுது ஊட்டி எவர்க்கும் அன்ன 
தானாதி நானா தருமங்களும் செய்தி வீடு 
மேல் நாள் அளிக்கின்றனம் என்று விசும்பில் கூற. 	

1922.	கேட்டு இன்பம் எய்தி கிளர் விம்மிதன் ஆகி வேதப் 
பாட்டின் பயனை பணிந்து இல்லம் அடைந்து பண்டை 
ஈட்டும் தவப் பேறு எனக் கண்டனன் தொண்டர்க்கு 
                                    எந்தை 
கூட்டும் கதி போல் உலவாமல் கொடுத்த கோட்டை. 	

1923.	வான் ஆறு சூடி தரு கோட்டையை வைகல் தோறும் 
பூ நாறும் சாந்தம் புகை ஒண் சுடர் கொண்டு அருச்சித்து 
ஆனாத செவ்வி அடிசிற்கும் அதற்கு வேண்டும் 
நானா கருவி விலைக்கும் அது நல்க வாங்கா. 	

1924.	மின் ஆர் சடையான் தமர் ஆய்ந்தவர் வேதச் செல்வர் 
தென் நாடர் தெய்வம் விருந்து ஒக்கல் செறிந்து நட்டோர் 
முன் ஆம் எவர்க்கும் முகில் போல் வரையாமல் நல்கி 
எந்நாளும் நோய் இன்றி அளகாபதி என்ன வாழ்ந்தான். 	

1925.	
அன்பன் அடியார்க்கு இனியான் அனி நாள் அளந்து 
                                   அல்கித் 
தன் பன்னி யொடும் அயலார் சுற்றம் தமரோடும் 
பின்பு அந்நிலையே இமவான் மகனைப் பிரியாத 
இன்பன் உருவாய் சிவ மா நகர் சென்று இறை 
                                 கொண்டான். 	

உலவாக்கோட்டை அருளிய படலம் சுபம் 
	 	 

39. மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம்

1926.	தாமம் நார் இதழியார்தம் தமர்க்கு அன்பன் வறுமைப் 
                                   பட்டோன் 
ஆம நாள் உலவாக் கோட்டை அருளிய முறை ஈது ஐயன் 
தே மன் நாள் முல்லைத் தீம் தார் சிறு தகை வணிகற்கு ஆக 
மாமன் ஆம் படிவம் கொண்டு வழக்கு உரை வண்ணம் 
                                   சொல்வாம். 	

1927.	கன்னி நான் மாடக் கூடல் கடி நகர் வணிக மாக்கள் 
தன்னின் மா நிதிக் கோன் அன்னான் தனபதி என்னும் 
                                    பேரான் 
மன்னினான் அனையான் கற்பின் மடவரல் சுசீலை 
                                    என்பாள் 
பொன்னி நாள் முளரிச் சேக்கைப் புண்ணியத் திருவின் 
                                    அன்னாள். 	

1928.	என இவர் தமக்கு மைந்தற் பேறு இன்றி இரங்கும் நாளில் 
தனபதி மருமகன் தன்னைத் தகவுசால் மகவாக்கொண்டு 
மன மகிழ் சிறப்பால் நல்க மனைவியும் தொழுது வாங்கிப் 
புனைவன புனைந்து போற்றிப் பொலிவு உற வளர்த்துக் 
                                  கொண்டாள். 	

1929.	தனபதி மகப்பேறு அற்றான் ஆயினும் தணவாக் காதல் 
மனைவிமேல் வைத்த ஆசை மயக்கினால் வருந்தி ஈன்ற 
தனையனை மகவாத் தந்த தங்கை மேல் தீராப் பூசல் 
வினை விளைத்து ஒழுக ஓர் நாள் இளையாளும் வெகுண்டு சொல்வாள். 	

1930.	பெருமிதம் உனக்கு ஏன் பிள்ளைப் பேறு அற்ற பாவி நீ என் 
அருமை நல் மகனால் அன்றோ இருமையும் அடைவாய் என்னப் 
பெரிது நாண் அடைந்து மேலைக்கு ஆயினும் பிள்ளைப் பேறு 
தரு தவம் புரிவேன் என்னாத் தனபதி தவம் மேல்  செல்வான். 	

1931.	தன் பெரும் செல்வம் எல்லாம் மருமகன் தனக்கே ஆக்கி 
அன்பு கொள் மனைவி யோடு அரும் தவ நெறியில் சென்றான் 
பின்பு அவன் வரவு தாழ்ப்ப மருமகன் பெற்ற எல்லாம் 
வன்பினால் வழக்குப் பேசி வெளவினார் தாய மாக்கள். 	

1932.	விளை நிலன் அடிமை பைம் பூண் வெறுக்கை நல் பசுக்கள்
                                          ஏனை 
வளனும் மாற்றவர் கைக் கொள்ள வன் சிறை இழந்த புள் 
                                          போல் 
தளர் உறு மகனும் தாயும் சார்பு இலாத் தம்மனோர்க்கு ஓர் 
களை கணாய் இருக்கும் கூடல் கடவுளே சரணம் என்னா. 	

1933.	வந்து வான் அகடு போழ்ந்த மணி முடி விமானக் கோயில் 
சுந்தர நாதன் பாதத் துணை தொழுது இறைஞ்சி யார்க்கும் 
தந்தையும் தாயும் ஆகும் தம்பிரான் நீரே எங்கள் 
எந்தையும் யாயும் என்னா இரங்கி நின்று இனைய 
                                      சொல்வாள். 	

1934.	என் மகன் தன்னை மைந்தன் இன்மையால் எவரும் காணத் 
தன் மகனாகக் கொண்டு தகுதியால் அன்றே காணி 
பொன் மனை பிறவும் நல்கிப் போயினான் என் முன் இப்பால் 
வன்மையால் தாயத்தார்கள் அவை எலாம் வெளவிக் கொண்டார். 	

1935.	ஒருத்தி நான் ஒருத்திக்கு இந்த ஒரு மகன் இவனும் தேரும் 
கருத்து இலாச் சிறியன் வேறு களைகணும் காணேன் ஐய 
அருத்தி சால் அறவோர் தேறு அருட் பெரும் கடலே 
                                   எங்கும் 
இருத்தி நீ அறியாய் கொல்லோ என்று பார் படிய 
                                   வீழ்ந்தாள். 	

1936.	மாறு கொள் வழக்குத் தீர்க்க வல்லவர் அருளினாலே 
சீறு கொள் வடிவேல் கண்ணாள் சிறு துயில் அடைந்தாள் மெய்யில் 
ஊறு கொள் கரணம் ஐந்தும் உற்று அறி கனவில் கங்கை 
ஆறு கொள் சடையார் வேதச் செல்வராய் அடுத்துச் சொல்வார். 	

1937.	புலர்ந்தபின் தாயத்தோரை புரவலன் ஆணை ஆற்றால் 
வலம் தரு மன்றத்து ஏற்றி மறித்து அனை இருத்தி 
                                 யாம் போந்து 
தலம் தரும் அறிவான் மூத்தோர் அனைவரும் இசைய 
                                   வந்து அச் 
சலம் தரு வழக்குத் தீர்த்துத் தருகுவம் போதி என்றார். 

1938.	வேரி அம் குவளை உண்கண் விழித்தனள் வியந்து 
                                  கெட்டேன் 
ஆரும் இல்லார்க்குத் தெய்வம் துணை என்பது 
                         அறிந்தேன் என்னாத் 
கார் இரும் கயல் உண் கண்ணாள் கணவனைத் 
                          தொழுது வாழ்த்திச் 
சீர் இளம் குமரனோடும் தெரிவை தன் மனையில் 
                                  சென்றாள். 	

1939.	சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி 
மன்றவன் கோயில் வாயில் வந்து வந்தனை செய்து அம் 
                                          பொன் 
குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி 
வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப. 

1940.	அட்டில் வாய் நெருப்பு இடேல் ஓர் அடி இடேல் 
                                 அறத்தான்றிப் 
பட்டிமை வழக்கால் வென்று போக ஒட்டேன் பலரும் 
                                    கேட்க 
இட்டனன் அரசன் ஆணை அறத்தவிசு ஏறி ஆன்றோர் 
ஒட்டிய படி கேட்டு எங்கள் உரிப் பொருள்தந்து போமின். 	

1941.	என்றனள் மறித்தலோடும் இழுக்கு உரையாடி வைது 
வன்திறல் வலியார் தள்ளி அடித்தனர் மைந்தனோடும் 
சென்றனள் முறையோ என்னாது இருந்த அறத்தவினோர் முன் 
நின்று உரையாடினாள் கேட்டு அறிந்தனர் நீதி நூலோர். 	

1942.	அறத்து தவிச்சு இருப்போர் ஏவல் ஆடவரோடும் போந்து 
மறித்து அவைக் களத்தில் கூட்டி வந்தனள் வந்த எல்லை 
அறக் கொடி பாகர் வெள்ளி அம்பல வாணர் தாம் அத் 
திறத்து தனபதியே என ஈத் திரு உருக்கொண்டு செல்வார். 

1943.	பெரு விலைக் குண்டலம் பிடரில் பத்தி பாய்ந்து 
எரிகதிர் கவிழ்ப்ப வாள் எறிக்கும் அங்கதம் 
அருவரைத் தோள் கிடந்து இமைப்ப ஆகம் மேல் 
குருமணிக் கண்டிகை குலாய்ப் பின் கோட்டவே. 	

1944.	முரல் அளி புற இதழ் மொய்ப்பச் செய்ய தா 
மரை சிறிது அலர்ந்து என அணி செய் மோதிரக் 
கரதலம் வீசி ஓர் கடும் கண் ஏறு எனப் 
பெருமித நடை கொடு நடக்கும் பெற்றியார். 	

1945.	வாடிய முளரிபோல் மாறு இட்டார் இடத்து 
ஊடியும் மலர்ந்த போது ஒப்ப மைந்தன் மேல் 
நாடிய தண் அளி நயந்து உட்கிடை 
கூடிய முகத்தினர் குறுகுவார் அவை. 	

1946.	அரசன் இங்கு இல்லை கொல்லோ ஆன்றவர் இல்லை 
                                  கொல்லோ 
குரை கழல் வேந்தன் செங்கோல் கொடியதோ கோது 
                                 இல் நூல்கள் 
உரை செயும் தெய்வம் தானும் இல்லை கொல் 
                                  உறுதியான 
தருமம் எங்கு ஒளித்ததே கொல் என்று அறத் தவிசில் 
                                  சார்வார். 	

1947.	தனபதி வரவு நோக்கி வஞ்சனைத் தாயத்தார்கள் 
இனை உறு மனத்தர் ஆகி விம்மிதம் எய்தி வெல்லும் 
மனவலி இழந்து பண்டு வழக்கு அலா வழக்கால் வென்ற 
வினை நினைந்து உள்ளம் அச்சம் நாணினால் விழுங்கப் பட்டார். 	

1948.	மாதுலர் ஆகி வந்தோர் மருகனைத் தம்பின் வந்த 
தாது உலராத கோதை தன் னொடும் தழீஇத் தம் கண்டம் 
மீது உலராத சாம வேதம் ஆர்ப்பவர் போல் வாய் விட்டு 
ஆதுலர் ஆனீர் அந்தோ ஐய என்று அழுது நைந்தார். 	

1949.	குடங்கையின் நெடும் கணாளும் குமரனும் வணிகர் தாளில் 
தடங்கணீர் ஆட்ட வீழ்ந்தார் தடக்கையால் எடுத்துப் புல்லி 
மடங்கல் ஏறு அனையார் தாமும் மற்று அவர் தம்மைத் தம் கண்ணீர் 
நெடும்கடல் வெள்ளத்து ஆழ்த்திக் குமரனை நேர்ந்து நைவார். 	

1950.	ஐம் படை மார்பில் காணேன் சிறு சிலம்பு அடியில் 
                                    காணேன் 
மொய்ம்பு இடை மதாணி காணேன் முகத்து அசை 
                               சுட்டி காணேன் 
மின் படு குழைகள் காணேன் வெற்று உடல் கண்டேன் 
                                    அப்பா 
என் பெறும் என்று பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார் 
                                    என்னா. 	

1951.	அனைவரும் இரங்க வாய்விட்டு அழுதவர் இளையாள் தன்னைத் 
தனையனைக் கண்ணீர் மாற்றித் தடக்கையான் முதுகு தைவந்து 
இனையன் மின் என் முன் வேறு ஒன்று எண்ணன் மின் எண்ணாவஞ்ச 
வினைஞர் வல் வழக்குச் சோர்ந்து விடுவது காண்மின் என்னா. 	

1952.	நட்பு இடை வஞ்சம் செய்து நம்பினார்க்கு ஊன் மாறாட்டத்து 
உட்பட கவர்ந்து ஏற்றோர்க்கு இம்மியும் உதவார் ஆயும் 
வட்டியின் மிதப்பக் கூறி வாங்கியும் சிலர் போல் ஈட்டப் 
பட்டதோர் அறத்தாறு ஈட்டு நம் பொருள் படுமோ என்னா. 	

1953.	மங்கல மாடம் ஓங்கு மதுரை நாயகனை நோக்கிச் 
செம் கரம் சிரமேல் கூப்பி மாணிக்கம் தேற்றி விற்கும் 
எம் குல வணிகர் ஏறே எம்மனோர் வழக்கை இந்தப் 
புங்கவர் இடனாத் தீர்த்துத் தருக எனப் புலம்பி ஆர்த்தார். 	

1954.	ஆவலித்து அழுத கள்வர் வஞ்சரை வெகுண்டு நோக்கிக் 
காவலன் செங்கோன் உண்நூல் கட்டிய தருமத்தட்டில் 
நா எனும் துலை நா விட்டு எம் வழக்கையும் நமராய் வந்த 
மேவலர் வழக்கும் தூக்கித் தெரிகென விதந்து சொன்னார். 

1955.	நரை முது புலி அன்னான் சொல் கேட்டலும் நடுங்கிச் 
                                    சான்றோர் 
இருவர் சொல் வழக்கு மேல்கொண்டு அநுவதித்து 
                            இரண்டும் நோக்கித் 
தெரி வழி இழுக்கும் ஞாதி வழக்கு எனச் செப்பக் கேட்டு 
வெருவினர் தாயத்தார்கள் வலியரின் வேறு சொல்வார். 	

1956.	தவலரும் சிறப்பின் ஆன்ற தனபதி வணிகர் அல்லர் 
இவர் என அவையம் கேட்ப இருகையும் புடைத்து நக்குக் 
கவள மான் உரித்துப் போர்த்த கண்ணுதல் வணிகர் 
                                    கோமான் 
அவரவர் குடிப்பேர் பட்டம் காணி மற்று அனைத்தும் 
                                    கூறும். 	

1957.	தந்தை தாய் மாமன் மாமி தாயத்தார் அவரை ஈன்றார் 
மைந்தர்கள் உடன் பிறந்தார் மனைவியர் கிளைஞர் மற்றும் 
அந்தம் இல் குணங்கள் செய்கை ஆதிய அடையாளங்கள் 
முந்தையின் வழுவா வண்ணம் முறையினான் மொழிந்தான் 
                                      முன்னோன். 	
1958.	அனையது கேட்ட ஆன்றோர் அனைவரும் நோக்கி 
                                    அந்தத் 
தனபதி வணிகர் தாமே இவர் எனச்சாற்ற லோடும் 
மனவலித் தாயத்தார் தம் வழக்கு இழுக்கு அடைந்த ஈது 
நனை வழி வேம்பன் தேரின் தண்டிக்கும் நம்மை என்னா. 	

1959.	இல்லினுக்கு ஏகி மீள்வன் யான் என்றும் குளத்திற்கு ஏகி 
ஒல்லையில் வருவேன் என்று ஒவ்வொரு வார்த்தை இட்டு 
வல் எழு அனைய தோளார் அனைவரும் வன் கால் 
                                    தள்ளச் 
செல் எழு முகில்போல் கூட்டம் சிதைந்தனர் ஒளித்துப் 
                                    போனார். 	
1960.	அனை அவர் போக நின்ற அறன் நவில் மன்றத்து 
                                    உள்ளோர் 
தனபதி வணிகர் தந்த தனம் எலாம் தந்த மைந்தற்கு 
என மனை எழுதி வாங்கி ஈந்தனர் ஈந்த எல்லை 
மனம் மொழி கடந்த நாய்கர் மறைந்து தம் கோயில் 
                                    புக்கார். 	

1961.	இம் எனப் பலரும் காண மறைந்தவர் இரும் தண் கூடல் 
செம்மல் என்று அறிந்து நாய்கச் சிறுவனுக்கு உவகை தூங்க 
விம்மிதம் அடைந்து வேந்தன் வரிசைகள் வெறுப்ப நல்கிக் 
கைம் மறி வணிகர் கோயில் புதுக்கினான் கனகம் கொண்டு. 	

1962.	பூத நாயகன் பூரண சுந்தரப் புத்தேள் 
பாத சேகரன் வரகுண பாண்டியன் புயத்தில் 
ஓத நீர் உலகின் பொறை சுமக்க வைத்து உம்பர் 
நாதர் சேவடித் தாமரை நகை நிழல் அடைந்தான். 	

உலவாக்கோட்டை அருளிய படலம் சுபம் 	 	 

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Discovery of the god to mortals

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Thiruvilaiyatar puranam

தல புராணங்கள்

திருவிளையாடற் புராணம்