logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 6-முதல் 13-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

முதலாவது - மதுரை காண்டம்

(வெள்ளிஅம்பலத் திருக்கூத்தாடிய படலம் முதல் கடல் சுவற வேல் விட்ட படலம் வரை)

06. வெள்ளிஅம்பலத் திருக்கூத்தாடிய படலம்

 
799 
உலகியன் நிறுத்து வான் வந்து ஒரு பரம் சுடர்வான் திங்கள்  
குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண்டு  
இலகுறு தோற்றம் ஈதான் முனிவர் இருவர் தேற  
அலகிலா ஆனந்த கூத்துச் செய்தவாறு அறையல் உற்றாம். 
800 
உலகியன் நிறுத்து வான் வந்து ஒரு பரம் சுடர்வான் திங்கள்  
குலமணி விளக்கை வேட்டுக் கோமுடி கவித்துப் பாராண்டு  
இலகுறு தோற்றம் ஈதான் முனிவர் இருவர் தேற  
அலகிலா ஆனந்த கூத்துச் செய்தவாறு அறையல் உற்றாம். 
801 
பொன் அவிர் கமலம் பூத்த புனித நீராடித் தத்தம்  
நன்னெறி நியமம் முற்றி நண்ணினார் புலிக்காலோனும்  
பன்னக முனியும் தாழ்ந்து பரவி அம் பலத்துள் ஆடும்  
நின்னருள் நடம்கண்டு உண்பது அடியேங்கள் நியமம் என்£றர். 
802 
என்னலும் அந்தக் கூத்தை இங்குநாம் செய்தும் தில்லைப்  
பொன்னகர் உலகம் எல்லாம் உருவம் ஆம் புருடன் உள்ளம்  
இன்னது துவாத சாந்தம் என்று இறை அருளிச் செய்ய  
மன்னவ ஏனை அங்கம் ஆவென மன்னன் சொல்வான். 
803 
அரைக்கும் மேல் உலகு ஏழ் என்று அரைக்குக் கீழ் உலகு ஏழ் என்றும்  
உரைக்கலால் உலகம் எல்லா உருவம் ஆம் புருடற்கு இந்தத்  
தரைக்கு மேல் அனந்தம் தெய்வத் தானம் உண்டு அனைத்தும் கூறின்  
வரைக்கு உறா சில தானங்கள் வகுத்து உரை செய்யக் கேண்மின். 
804 
திருவளர் ஆரூர் மூலம் திருவானைக் காவே குய்யம்  
மருவளர் பொழில் சூழ் அண்ணாமலை மணி பூரம் நீவிர்  
இருவரும் கண்ட மன்றம் இதயம் ஆம் திருக்காளத்தி  
பொருவரும் கண்டம் ஆகும் புருவ மத்தியம் ஆம் காசி. 
805 
பிறை தவழ் கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம் வேதம்  
அறைதரு துவாத சாந்த மதுரை ஈது அதிகம் எந்த  
முறையினால் என்னின் முன்னர் தோன்றிய முறையால் என்றக்  
கறை அறு தவத்த ரோடு கவுரியன் கோயில் புக்கான். 
806 
தன் அருள் அதனால் நீத்த தன்னையே தேடிப் போந்த  
மின்னவிர் கயிலைதானோ விடை உரு மாறி மன்றாய்  
மன்னியது ஏயோ திங்கள் மண்டல மேயோ என்னப்  
பொன் அவிர் விமானக் கீழ்பால் வெள்ளி அம் பொது உண்டாக. 
807 
மின் பயில் பரிதிப் புத்தேள் பால் கடல் விளங்கி ஆங்குப்  
பின் பதன் இசை மாணிக்கப் பீடிகை தோன்றிற்று அன்னது  
அன்பர் தம் உளமே ஆகும் அல்லது வேதச் சென்னி  
என்பது ஆம் அ•தே அன்றி யாது என இசைகற் பாற்றே. 
808 
அன்னது ஓர் தவிசின் உம்பர் ஆயிரம் கரத்தால் அள்ளித்  
துன் இருள் விழுங்கும் கோடி சூரியர் ஒரு காலத்து  
மன்னினர் உதித்தால் ஒப்ப மன மொழி பக்கம் கீழ்மேல்  
பின் முதல் கடந்த ஞானப் பேர் ஒளி வடிவாய்த் தோன்றி. 
809 
முந்துறு கணங்கள் மொந்தை தண்ணுமை முழக்கம் செய்ய  
நந்தி மா முழவம் தாக்க நாரணன் இடக்கை ஆர்ப்ப  
வந்துகம் தருவ நூலின் மரபுளி இருவர் பாட  
ஐந்து துந்துபியும் கல்லென்று ஆர் கலி முழக்கம் காட்ட. 
810 
மது முகத்து அலர்ந்த வெண் தாமரைகள் சுருதிக் கூட்டச்  
சது முகத்து ஒருவன் சாமகீத யாழ் தடவிப் பாட  
விது முகத்து அருகு மொய்க்கும் மீன் என ஞான வெள்ளிப்  
பொது முகத்து அமரர் தூற்றும் பூமழை எங்கும் போர்ப்ப. 
811 
பொரும் கடல் நிறத்த செம் தீ பொங்குளை குறளன் மீது  
பெரும் கடல் வடவைச் செம்கண் பிதுங்க மேல் திரிந்து நோக்கி  
முரும் கடல் எரியில் சீற முதுகிற வலத்தாள் ஊன்றிக்  
கரும் கடல் முளைத்த வெய் யோன் காட்சியில் பொலிந்து நின்று. 
812 
கொய்யும் செம் கமலப் போது குவிந்து என எடுத்துக் கூத்துச்  
செய்யும் புண்டரிகத் தாளும் திசை கடந்து உள ஈர் ஐந்து  
கையும் திண் படையும் தெய்வ மகளிர் மங்கல நாண் காத்த  
மை உண்ட மிடரும் சங்க வார் குழை நுழைந்த காதும். 
813 
செக்கரம் சடையும் தேசு ஆர் வெண் திரு நீறும் தெய்வ  
முக்கணும் உரகக் கச்சும் முள் எயிறு இமைக்கும் மார்பும்  
மைக்கரும் கயல் கண் நங்கை வல்லியின் ஒதுங்கி நிற்கும்  
பக்கமும் அவள் மேல் வைத்த பார்வையும் நகையும் தோன்ற. 
814 
கங்கை ஆறு அலம்பும் ஓசை கடுக்கை வண்டு இரங்கும் ஓசை  
மங்கல முழவின் ஓசை மந்திர வேத ஓசை  
செம்கை ஆடு எரியின் ஓசை திருவடிச் சிலம்பின் ஓசை  
எங்கணும் நிரம்பி அன்பர் இரு செவிக்கு அமுதம் ஊற்ற. 
815 
ஆடினான் அமல மூர்த்தி அஞ்சலி முகிழ்த்துச் சென்னி  
சூடினார் அடியில் வீழ்ந்தார் சுருதி ஆயிரம் நாவாரப்  
பாடினார் பரமானந்தப் பரவையில் படிந்தார் அன்பு  
நீடினார் நிருத்த ஆனந்தம் காண்பது நியமம் பூண்டார். 
816 
முனிவர் கந்தருவர் வானோர் தானவர் மோன யோகர்  
புனித கிம்புருடர் ஆதிப் புலவரும் இறைஞ்சி அன்பில்  
கனிதரு இன்பத்து ஆழ்ந்தார் திருமணம் காணவந்த  
மனிதரும் காணப் பெற்றார் மாதவர் பொருட்டான் மன்னோ. 
817 
அனந்தனா முனிவர் வேந்தன் அளவு இல் ஆனந்தம் மூறி  
மனம் தனி நிரம்பி மேலும் வழிவது போல மார்பம்  
புனைந்த புண்ணிய வெண்ணீறு கரைந்திடப் பொழி கண் நீருள்  
நனைந்து இரு கரம் கூப்பி நாதனைப் பாடுகின்றான். 
818 
பராபர முதலே போற்றி பத்தியில் விளைவாய் போற்றி  
சராசரம் ஆகி வேறாய் நின்ற தற் பரனே போற்றி  
கராசல உரியாய் போற்றி கனக அம்பலத்துள் ஆடும்  
நிராமய பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி. 
819 
ஒன்று ஆகி ஐந்தாயை ஐந்து உருவாகி வருவாய் போற்றி  
இன்றாகிச் சென்ற நாளாய் எதிர் நாளாய் எழுவாய் போற்றி  
நன்றாகித் தீயது ஆகி நடுவாகி முடிவாய் மன்றுள்  
நின்றாடும் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி. 
820 
அடியரேம் பொருட்டு வெள்ளி அம்பலத்து ஆடல் போற்றி  
பொடி அணி தடம் தோள் போற்றி புரி சடை மகுடம் போற்றி  
கடி அவிழ் மலர் மென் கூந்தல் கயல் விழி பாகம் போற்றி  
நெடிய நல் பரமானந்த நிருத்தனே போற்றி போற்றி. 
821 
என்று நின்று ஏத்தினான் பின் இருவரை நோக்கி வெள்ளி  
மன்றுள் நின்று ஆடா நின்ற மறை முதல் கருணை கூர்ந்து  
நன்று நீர் வேட்டது என் என்று அருள் செய்ய நாதன் பாதம்  
துன்று மெய் அன்பில் தாழ்ந்து தொழுது நின்று இதனைச் சொல்வார். 
822 
எந்தையிருத் திருக்கூத்தென் றுமிந்நிலைநின் றியார்க்கும்  
பந்தவெம் பாசநீங்கப் பரித்தருள் செய்தி யென்னச்  
செந்தமிழ்க் கன்னி நாடுசெய்தமா தவப்பே றெய்தத்  
தந்தன மென்றான் வேந்தலை தடுமாறநின்றான். 
823 
அராமுனி ஈது வேண்டும் ஆதி எம் பெரும் இந்த  
நிராமய பரமானந்த நிருத்த நேர் கண்டோர் எல்லாம்  
தராதலம் மிசை வந்து எய்தாத் தனிக்கதி பெறுதல் வேண்டும்  
பராபர என்று தாழ்ந்தான் பகவனும் அதற்கு நேர்ந்தான். 
824 
ஆர்த்தனர் கணத்தோர் கை கோத்து ஆடினார் அலர் பூ மாரி  
தூர்த்தனர் விண்ணோர் கண்ணீர் துளும்பினர் முனிவர் ஆகம்  
போர்த்தனர் புளக அன்பில் புதைந்தனர் விழுங்குவார் போல்  
பார்த்தனர் புல்லிக் கொண்டார் பரவிய அவ் இருவர் தம்மை. 
 
825 
அனித்தம் ஆகிய பூத ஐம் பொறி புலன் ஆதி ஆறு ஆகி  
இனித்த மாயையோடு இருவினைத் தொடக்கினும் இருளினும் வேறு ஆகித்  
தனித்த யோகிகள் அகம் நிறைந்து ஆடிய தனிப்பெரும் திருக்கூத்தைக்  
குனித்த வண்ண மாக் கண்டவர்க்கு இகபரம் கொடுத்து அவண் உறை கின்றான். 
826 
குனிவில் ஆதிரைத் தினம் தொடுத்து எதிர் வரு கொடுவில் ஆதிரை எல்லை  
புனித ஆடக முளரி தோய்ந்து தனித்தனிப் பொது நடம் தரிசித்து அங்கு  
இனிது அமர்ந்து நூற்று எண் மடம் ஐந்து எழுத்து எண்ணி இந்நிலை நிற்கும்  
கனியும் அன்பினார் எண்ணியாங்கு எய்துவர் கருதிய வரம் எல்லாம். 
  
 
 
வெள்ளிஅம்பலத் திருக்கூத்தாடிய படலம் சுபம்  
 
 

07. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

 
 
827 
பன்ன கேசனும் அடு புலிப் பாதனும் பணிய  
மின்னுவார் சடை மன்னவன் வெள்ளி மன்று ஆடல்  
சொன்னவாறு இது பசித்து அழல் சுட ஒரு பூதம்  
அன்ன மாமலை தொலைத்த ஆறு எடுத்து இனி அறைவாம். 
828 
கன்னியர்க்கு அரசு ஆயினாள் கடிமனை புகுந்த  
மின் இயல் கடை மாதவர் வேதியர் ஏனோர்  
எந் நிலத்து உள மன்னவர் யாவர்க்கும் முறையே  
பொன் இயல் கலத்து அறு சுவைப் போனகம் அருத்தா. 
829 
பூசு கின்றவும் உடுப்பவும் பூண்பவும் பழுக்காய்  
வாச மெல்லிலை ஏனவும் அம் முறை வழங்காத்  
தேச மன்னவர் ஏனையோர் செல்லுநர்ச் செலுத்தி  
ஈசன் அன்புறு கற்பினாள் இருக்கும் அவ் வேலை. 
830 
மடை வளத் தொழில் புலவர் வந்து அடியிணை வணங்கி  
அடியரேம் அட்ட போனகம் ஆயிரத்து ஒன்றின்  
இடையது ஆயினும் தொலைந்திலது ஆம் கண் மேல் செய்யக்  
கடவது ஏது எனப் பிராட்டி தன் கணவர் முன் குறுகா. 
831 
பணிந்து ஒதுங்கி நின்று அடி கண் முப்பத்து முக்கோடி  
கணங்கள் தம்மொடும் இங்கு எழுந்து அருள்வது கருதி  
இணங்கும் இன் சுவைப் போனகம் எல்லை என்று ஆக்கி  
உணங்கு கின்றது உண்டு எஞ்சிய எனைத்து என உரைக்கின். 
832 
இமையக் குன்றமும் அடைகலாது இதன் புறம் கிடந்த  
சிமையக் குன்றுகள் ஈட்டமும் சேர்ந்து என நிமிரச்  
சமையக் கொட்டிய வால் அரிப் புழுக்கலும் சாதக்  
அமையக் கொட்டிய கறிகளின் வருக்கமும் அனைத்தே. 
833 
என்ற போது இறை எம்பிரான் தேவியார் இடத்தில்  
ஒன்றும் அன்பினால் ஒரு விளையாடலை நினைத்தோ  
தன் தனிக்குடைப் பாரிடத் தலைவனது ஆற்றல்  
அன்றி யாவரும் அறிந்திடக் காட்டாவோ அறியேம். 
834 
சிறிது வாள் நகை செய்து மூ வேந்தரில் சிறந்த  
மறுவில் மீனவன் அரும் பெறல் மகள் உனக்கு அரிதில்  
பெறுவது ஏது வான் தருவும் நின் பணி செயப் பெற்று இங்கு  
உறைவதேல் பிறர் திரு எலாம் உன்னதே அன்றோ. 
835 
அளவு இலாத நின் செல்வத்தின் பெருக்கை நாம் அறிய  
விளைவு செய்தனை போலும் நின் விருந்து உணப் பசியால்  
களை அடைந்தவர் ஆகி நம் கணத்தினுள் காணேம்  
தளவ மூரலாய் யாம் செய்ய தக்கது ஏது என்றான். 
836 
அடுக்க நின்ற குண்டோதரன் அகட்டிடை வடவை  
மடுக்க உன்னினான் அது வந்து வயிற்று எரி பசியாய்த்  
தொடுக்க ஆலம் உண்டாங்கு உடல் சோர்ந்து வேர்த்து ஆவி  
ஒடுக்கம் உற்று ஐய பசியினால் உயங்கினேன் என்றான். 
837 
குடை எடுக்கும் இக் குறிய தாள் குறட்கு ஒருபிடி சோறு  
இடுமின் அப்புறம் சோறுமால் எனத் தொழுது எல்லாம்  
உடைய நாயகி போயினாள் குறியனும் உடனே  
நடை தளர்ந்து கண் புதைந்து வாய் புலர்ந்திட நடந்தான். 
838 
படைக்கண் ஏவலர் இறைமகள் பணியினால் பசிநோய்  
தொடுத்தவன் தனைக் கொண்டு போய் சொன்றி முன் விடுத்தார்  
அடுத்து இருந்ததே கண்டனர் அன்ன மா மலையை  
எடுத்து அயின்றது அடிசில் அங்கு இருந்தது காணார். 
839 
சிலம்பு நூபுரச் சீறடிச் சேடியர் சில்லோர்  
அலம்பு வால் வளைக் கை நெரித்து அதிசயம் அடைந்தார்  
புலம்பு மேகலையார் சிலர் பொருக்கு என வெருண்டார்  
கலம் பெய் பூண் முலையார் சிலர் கண்புதைத்து திரிந்தார். 
840 
முரவை போகிய முரிவில் வான் மூரல் பால் வறையல்  
கருனை தீம் பயறு அடு துவையல் பல் வகைக் கறிகள்  
விரவு தேம்படு பால் தயிர் இழுது தேன் வெள்ளம்  
வரைவு இலாதன மிடாவொடு வாரி வாய் மடுத்தான். 
841 
பல் பழக் குவை வேற்று உருப் பண்ணியம் கன்னல்  
மெல் சுவைத் தண்டு தெங்கு இவை அன்றியும் ஏவா  
வல்சி காய்களின் வருக்கமும் நுகர்ந்து மாறாமல்  
எல்லைதீர் நவ பண்டமும் எடுத்து வாய் மடுத்தான். 
842 
பாரித்து உள்ள இப் பண்டமும் பரூ உக் குறும் கையால்  
வாரித் தன் பெரு வயிற்றிடை வைப்பவும் துடுவை  
பூரித்து ஆகுதி பண்ணிய தழல் எனப் பொங்கிக்  
கோரித்து ஒன்பது வாயிலும் பசித்தழல் கொளுத்த. 
843 
அலங்கல் ஓதி கண்டு அதிசயம் அடைந்து தன் அன்பின்  
நலம் கொள் நாயகன் முன்பு போய் நாணம் உள் கிடப்ப  
இலங்கு பூம்குழல் சுவல் மிசை இறக்கி இட்டு ஒல்கி  
நிலங் கிளைத்து நின்றாள் நிலை கண்டனர் நிருபன். 
844 
அஞ் சில் ஓதியை வினவுவான் அறிகலான் போலக்  
குஞ்சி ஆர் அழல் அன்ன அக் குட வயிற்றவன் உண்டு  
எஞ்சி உள்ளவேல் பூதங்கள் இன்னமும் விடுத்து உன்  
நெஞ்சு உவப்பவே அருத்துதும் என்னலும் நிமலை. 
845 
¢ ஐய இன்னும் இக் குறள் பசி அடங்கிடா வேறு  
வெய்ய பாரிட வீரரை விடுத்தி ஏல் எடுத்து  
வையம் யாவையும் வயிற்றிடை வைப்பரே அதனால்  
செய்ய கால ருத்திரப் பெயர் தேற்றம் ஆம் உனக்கே.. 
846 
சங்க வார் குழைக் குறண் மகன் தன் செயல் தானே  
இங்கு வந்து உரை செய்திட அறிதி என்று இறைமுன்  
மங்கை நாயகி குமுதவாய் மலர் பொழுது எயிற்றுத்  
திங்கள் வாய் முழையான் பசித் தீச்சுட வந்தான். 
847 
நட்டம் ஆடிய சுந்தர நங்கை எம் பிராட்டி  
அட்ட போனகம் பனி வரை அனையவாய்க் கிடந்த  
தொட்டு வாய் மடுத்திடவும் என் சுடு பசி தணியாது  
இட்டு உணாதவர் வயிறு போல் காந்துவது என்றான். 
848 
கையர் முப்புரத்து இட்ட தீக் கடும்பசி உருவாய்ப்  
பொய்யனேன் வயிற்று இடைக் குடி புகுந்ததோ என்னும்  
கை எறிந்திடும் அண்டங்கள் வெடி படக் கதறும்  
ஐய கோ எனும் உயிர்த்திடும் ஆவி சோர்ந்து அயரும். 
 
குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் சுபம்  
 
 

08. அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம்

 
 
849 
வேத நாயகன் பாரிட வேந்தனுக்கு அமையா  
ஓதன் ஆதிகன் அருத்திய தன்மை ஈது வையும்  
போத ராமையால் அமைவுறப் போனகக் குழிதந்து  
ஓத மாநதி அருத்திய செய்தியும் உரைப்பாம். 
850 
கவன மால் விடை ஆளியின் கடிகமழ் தென்றல்  
பவன மா மலை யாட்டியைப் பார்த்து உளே நகைத்துத்  
தவன மாப் பசி உடையவன் தன் பொருட்டு அன்ன  
புவன மாதினை நினைத்தனன் நினைக்கும் முன் போந்தாள். 
851 
நால் தடம் திசைத் தயிர்க்கடல் அனந்தன் தலை நிலம் ஈண்டு  
உற்று எழுந்து நால் கிடங்கராய் உதித்து எழுந்தாங்கு  
மாற்றரும் சுவைத் தீம் தயிர் வால் அரிப் பதத்தோடு  
ஏற்று எழுந்தது நால் குழி இடத்திலும் பொங்கி. 
852 
குரு மதிக்குல மன்னவன் மருகனக்கு உண்டப்  
பெருவயிற்றில் இரு பிறை எயிற்று எரி சிகைப் பேழ் வாய்  
ஒரு குறள் குடை வீரனை உன் பசி தணியப்  
பருக எனப் பணித்து அருளும் பாரிடத் தலைவன். 
853 
அத் தயிர்ப் பதக் கிடங்கரில் அலை கடல் கலக்கும்  
மத்து எனக் கரம் புதைத்து எடுத்து வாய் மடுத்துச்  
துய்த்திடப் பசி விடுத்தது சுருதி நாயகன் தாள்  
பத்தி வைத்து வீடு உணர்ந்தவர் பழவினைத் தொடர் போல். 
854 
வாங்கி வாங்கி வாய் மடுத்தலும் உடம்பு எலாம் வயிறாய்  
வீங்கினான் தரை கிழிபடப் பொருப்பு என வீழ்ந்தான்  
நீங்கு நீள் உயிர்ப்பு இலன் உடல் புரண்டனன் நீர் வேட்டு  
ஆங்கு நீர் நிலை தேடுவான் ஆயினான் எழுந்தான். 
855 
ஆவி அன்னவர்ப் பிரிந்து உறை அணங்கு அனார் போலக்  
காவி நாள் மலர் தாமரைக் கடிமலர் வாட  
வாவி ஓடையும் குளங்களும் வறப்ப வாய் வைத்துக்  
கூவ நீள் நிலை நீர்களும் பசை அறக் குடித்தான். 
 
856 
அனையன் ஆகியும் நீர் நசை ஆற்றலன் வருந்தும்  
வினையன் ஆகி வானதிச் சடை வேதியன் பாதத்து  
இனைய நாதனும் தன் திரு முடியின் மீது இருக்கும்  
நனைய நாள் மலர் ஓதியைப் பார்த்து ஒன்று நவில் வான். 
857 
தேங்கு நீர்த்திரை மாலிகைச் செல்வி நீ இந்த  
வாங்கு நீர்த்தடம் புரிசை சூழ் மதுரையின் மாடு ஒர்  
ஓங்கு நீத்தம் ஆய் ஒல் என வருதி என்று உரைத்தான்  
நீங்கு நீர்த்திரு மாது அவண் ஒரு மொழி நிகழ்த்தும். 
858 
அன்று எம் பிரான் ஆணையால் பகீரதன் பொருட்டுச்  
சென்று நீ ஒரு தீர்த்தம் ஆய்த் திளைப்பவர் களங்கம்  
ஒன்று தீவினைத் தொடக்கு அறுத்து எழுக எனப் பணித்தாய்  
இன்று ஓர் நதி ஆகெனப் பணித்தியேல் என்னை. 
859 
தெரிசித் தோர் படிந்து ஆடினோர் செம்கையால் ஏனும்  
பரிசித்தோர் பவத் தொடர்ச்சியின் பற்று விட்டு உள்ளத்து  
உருசித்தோர் உறு பத்தியும் விச்சையும் உணர்வாய்  
விரிசித்தோர் உறு மெய் உணர்வால் வரும் வீடும். 
860 
தந்திடப் பணித்து அருள் எனா தடம் புனல் செல்வி  
சுந்தரப் பெரும் கடவுளை வரம் கொண்டு தொழுது  
வந்த அளப்பு இலா வேகம் ஓடு எழுந்து மா நதியாய்  
அந்தரத்து நின்று இழிபவளாம் எனவரும் ஆல். 
861 
திரை வளை அணிகரம் உடையவள் செழு மணி நகை உடையாள்  
நுரை வளை துகில் உடையவள் கொடி நுணு இடையவள் அற நீள்  
விரை வளை குழல் உடையவள் கயல் விழி உடையவள் வருவாள்  
வரை வளை சிலையவன் முடி மட வரல்நதி வடிவினுமே. 
862 
விரை படும் அகிலரை பொரிதிமில் வெயில் விடு மணி வரை யோடு  
அரை பட முது சினை அலறிட வடியொடு கடிது அகழாக்  
குரைபடு கழல் இற உளர் சிறு குடி அடியொடு பறியாக்  
கரைபட எறிவது வருவது கடுவிசை வளி எனவே. 
863 
பிணையொடு கலை பிடியொடு கரி பிரிவில வொடு  பழுவப்  
பணையொடு கருமுசு வயிறு அணை பறழொடு தழுவி அதன்  
துணையொடு கவிபயில் மர நிரை தொகை யொடும் இற உளர் வெம்  
கணையொடு சிலை இதண் நெடும் எறி கவணொடு கொடு வரும் ஆல். 
864 
அடியிற நெடுவரை உதைவன அகழ்வன அகழ் மடுவைத்  
திடர் இடுவன மழை செருகிய சினை மர நிரை தலைகீழ்  
பட இடிகரை தொறும் நடுவன படுகடல் உடை முது பார்  
நெடு முதுகு இருபிளவு உற வரு நெடு நதி இன அலையே. 
865 
பிளிறொலி இனம் முது மரம் அகழ் பெருவலி இன வசையா  
வெளிறடி வனவெறி மணி இன விரை செலவின மதமோடு  
ஒளிறளி இனநுரை முக படம் உடையன என வரலால்  
களிறு அனையது மது இதழிகள் கவிழ் சடை அணி குடிஞை. 
866 
நீடிய பிலம் உறு நிலையின நிருமலன் மதி முடி மீது  
ஆடிய செயல் இன வெயில் உமிழ் உருமணி தலை இள நீள்  
கோடிய கதியின நிரை நிரை குறுகிய பல காலின்  
ஓடிய வலியின வளை உடல் உரகமும் என வரும் ஆல். 
867 
மண் அகழ்தலின் வளை அணி கரு மாவனையது மிசை போய்  
விண் உள வலின் அவுணர்கள் இறை விடு புனலொடு நெடுகும்  
அண்ணலை அனையது சுவை இழு தலை அளை உறு செயலால்  
கண்ணனை அனையது நெடுகிய கடுகிய கதி நதியே. 
868 
திகழ் தரு கரி பரி கவரிகள் செழு மணியொடு வருமாறு  
திகழ் தரு குடபுல அரசர்கள் நெறி செய்து கவர்  
                                  திருவோடு  
அகழ் தரு பதிபுகு மதிகுல அரசனை அதை அலதேல்  
புகழ் தரு திறை இட வரு குடபுல அரசனும் நிகரும். 
869 
ஆரொடு மடல் அவிழ் பனை யொடும் அர நிகர் இலை நிம்பத்  
தாரொடு புலியொடு சிலையொடு தகு கயலொடு தழுவாப்  
பாரொடு திசை பரவிய தமிழ் பயில் அரசர்கள் குழுமிச்  
சீரொடு பல திரு வொடு வரு செயல் அனையது நதியே. 
870 
கல்லார் கவி போல் கலங்கிக் கலை மாண்ட கேள்வி  
வல்லார் கவி போல் பலவான் துறை தோன்ற வாய்த்துச்  
செல்லாறு தோறும் பொருள் ஆழ்ந்து தௌ¤ந்து தேயத்து  
எல்லாறும் வீழ்ந்து பயன் கொள்ள இறுத்தது அன்றெ 
871 
வண்டு ஓதை மாறா மலர் வேணியின் வந்த நீத்தம்  
கண்டு ஓத நஞ்சு உண்டு அருள் கண் நுதன் மூர்த்தி பேழ்வாய்  
விண்டு ஓதம் அணியாது என் விடாய் என வெம்பி வீழ்ந்த  
குண்டு ஓதரனை விடுத்தான் அக் குடிஞை ஞாங்கர். 
872 
அடுத்தான் நதியின் இடை புக்கு இருந்து ஆற்றல் ஓடும்  
எடுத்தான் குறும்கை இரண்டும் கரை ஏற நீட்டித்  
தடுத்தான் மலைபோல் நிமிர் தண்புனல் வாய் அங்காந்து  
மடுத்தான் விடாயும் கடல் உண்ணும் மழையு நாண. 
873 
தீர்த்தன் சடை நின்று இழி தீர்த்தம் அருந்தி வாக்குக்  
கூர்த்து இன்பு கொண்டு குழகன் திரு முன்னர் எய்திப்  
பார்த்தன் பணிந்த பதம் முன் பணிந்து ஆடிப் பாடி  
ஆர்த்த அன்பு உருவாய்த் துதித்தான் அளவாத கீதம். 
874 
பாட்டின் பொருளான் அவன் பாரிட வீரன் பாடல்  
கேட்டு இன்பம் எய்திக் கணங்கட்குக் கிழமை நல்கி  
மோட்டு இன்புனன் மண் முறை செய்து இருந்தான் அளகக்  
காட்டின் புறம் போய் மடங்கும் கயல் கண்ணியோடும். 
875 
தீர்த்தன் இதழிச் சடை நின்றும் இழிந்து வரலால் சிவகங்கை  
தீர்த்தன் உருவம் தௌ¤ வோர்க்கு ஞானம் தரலால் சிவஞான  
தீர்த்தம் காலில் கடுகி வரும் செய்தியாலே வேகவதி  
தீர்த்தம் கிருத மாலை என வைகை நாமம் செப்புவர் ஆல். 
 
 
அன்னக் குழியும் வைகையும் அழைத்த படலம் சுபம்  
 
 

09. ஏழு கடல்அழைத்த படலம்

 
 
876 
முடங்கன் மதி முடி மறைத்த முடித் தென்னன் குறட்கு அன்னக்  
கிடங்கரொடு நதி அழைத்த கிளர் கருணைத் திறன் இது மேல்  
மடங்கல் வலி கவர்ந்தான் பொன் மாலை படிந்து ஆட ஏழு  
தடம் கடலும் ஒருங்கு அழைத்த தன்மை தனைச் சாற்றுவாம். 
877 
ஓத அரும் பொருள் வழுதி உருவாகி உலகம் எலாம்  
சீதள வெண் குடை நிழற்றி அறச் செம் கோல் செலுத்தும் நாள்  
போத அரும் பொருள் உணர்ந்த இருடிகளும் புனித முனி  
மாதவரும் வரன் முறையால் சந்தித்து வருகின்றார். 
878 
வேதமுனி கோத மனும் தலைப்பட்டு மீள்வான் ஓர்  
போது அளவில் கற்புடைய பொன் மாலை மனை புகுந்தான்  
மாது அவளும் வரவேற்று முகமன் உரை வழங்கிப் பொன்  
ஆதனம் இட்டு அஞ்சலி செய்து அரியதவத் திறம் கேட்பாள். 
879 
கள்ள வினைப் பொறி கடந்து கரை கடந்த மறைச் சென்னி  
உள்ள பொருள் பரசிவம் என்று உணர்ந்த பெருந்தகை அடிகேள்  
தள்ளரிய பவம் அகற்றும் தவம் அருள் செய்க எனக் கருணை  
வெள்ளம் என முகம் மலர்ந்து முனிவேந்தன் விளம்பும் ஆல். 
880 
 
தவ வலியான் உலகு ஈன்ற தடா தகைக்குத் தாய் ஆனாய்  
சிவ பெருமான் மருகன் எனும் சீர் பெற்றய் திறல் மலயத்  
துவசன் அரும் கற்பு உடையாய் நீ அறியாத் தொல் விரதம்  
அவனி இடத்து எவர் அறிவார் ஆனாலும் இயம் பக்கேள். 
881 
மானதமே வாசிகமே காயிகமே என வகுத்த  
ஈனம் இல் தவம் மூன்றம் இவற்றின் ஆனந்தம் தருமது  
தான மிசை மதி வைத்தறயவு பொறை மெய் சிவனை  
மோனம் உறத் தியானித்தல் ஐந்து அடக்கல் முதல் அனந்தம். 
882 
வாசிக ஐந்து எழுத்து ஓதன் மனுப் பஞ்ச சாந்தி மறை  
பேசுசத உருத்திரம் தோத்திரம் உரைத்தல் பெரும் தருமம்  
காசு அகல எடுத்து ஓதன் முதல் அனந்தம் ஆயிகங்கள்  
ஈசன் அருச்சனை கோயில் வலம் செய்கை எதிர்வணங்கல். 
883 
நிருத்தன் உறை பதிபலப் போய்ப் பணிதல் பணி நிறை  
                                   வேற்றல்  
திருத்தன் முடி நதி ஆதி தீர்த்த யாத்திரை போய் மெய்  
வருத்தமுற ஆடல் இவை முதல் பல அவ் வகை மூன்றில்  
பொருத்த முறு காயிகங்கள் சிறந்தன இப் புண்ணியத்துள். 
884 
திருத்த யாத்திரை அதிகம் அவற்ற அதிகம் சிவன் உருவாம்  
திருத்த ஆம் கங்கை முதல் திரு நதிகள் தனித் தனி போய்த்  
திருத்த மாடு அவதரித்த திரு நதிகள் தனித் தனி போய்த்  
திருத்தமாய் நிறைதலினால் அவற்று இகந்து திரை முந்நீர். 
885 
என்று முனி விளம்பக் கேட்டு இருந்த காஞ்சன மாலை  
துன்று திரைக் கடல் ஆடத் துணிவுடைய விருப்பினள் ஆய்த்  
தன் திருமா மகட்கு உரைத்தாள் சிறிது உள்ளம் தளர்வு எய்திச்  
சென்று இறைவற்கு உரைப்பல் எனச் செழியர் தவக் கொழுந்து அனையாள். 
886 
தன் தன்னை உடைய பெரும் தகை வேந்தர் பெருமான் முன்  
சென்று அன்னம் என நின்று செப்புவாள் குறள் வீரர்க்கு  
அன்று அன்னக் குழியு னொடு ஆறு அழைத்த அருட்கடலே  
இன்று அன்னை கடல் ஆட வேண்டினாள் என்று இரந்தாள். 
887 
தேவி திரு மொழி கேட்டுத் தென்னவராய் நிலம் புரக்கும்  
காவி திகழ் மணி கண்டர் கடல் ஒன்றோ எழு கடலும்  
கூவி வர அழைத்தும் என உன்னினார் குணபால் ஓர்  
வாவி இடை எழுவேறு வண்ணமொடும் வருவன ஆல். 
888 
துண்ட மதித் திரள் அனைய சுரிவளை வாய் விட உதைத்து  
வெண் தவள நுரை ததும்பச் சுறா ஏறு மிசைக்  கொட்பத்  
தண் தரள மணித் தொகுதி எடுத்து எறியும் தரங்க நிரை  
அண்ட நெடு முகடு உரிஞ்ச ஆர்த்து எழுந்த கடல் ஏழும். 
889 
காணும் மாநகர் பனிப்பக் கலி முடிவில் அயன் படைப்புக்  
கோணுமாறு எழுந்தது எனக் கொதித்து எழுந்த கடல் அரவம்  
பூணு நாயகன் அகில புவனம் எலாம் கடந்த திரு  
ஆணையால் அவன் அடி சென்று அடைந்தார் போல் அடங்கியது ஆல். 
890 
தன் வண்ணம் எழு கடலின் தனி வண்ணமொடு கலந்து  
பொன் வண்ண நறும் பொகுட்டுப் பூம் பொய்கை பொலிவு எய்தி  
மின் வண்ணச் சடைதாழ வெள்ளி மணி மன்று ஆடும்  
மன் வண்ணம் என எட்டு வண்ண மொடும் வயங்கியது ஆல். 
  
ஏழு கடல்அழைத்த படலம் சுபம்  
 

10. மலயத் துவசனை அழைத்த படலம்

 
 
891 
எழு கடல் அழைத்த வாறு இயம்பினாம் இனிச்  
செழு மதி மரபினோன் சேண் இழிந்து தன்  
பழுது இல் கற்பில் லொடும் பரவை தோய்ந்து அரன்  
அழகிய திரு உரு அடைந்தது ஓதுவாம். 
892 
புரவலன் தடாதகைப் பூவையோடும் வந்து  
உரவு நீர்க் கடல் மருங்கு உடுத்த சந்தனம்  
மரவ மந்தார மா வகுளம் பாடலம்  
விரவு நந்தனத்து அரி அணையின் மேவினான். 
893 
தாது அவிழ் மல்லிகை முல்லை சண்பகப்  
போது கொய்து இளையரும் சேடிப் பொன் தொடி  
மாதரும் கொடுத்திட வாங்கி மோந்து உயிர்த்து  
ஆதரம் இரண்டாற அமரும் எல்லையில். 
894 
தன்னமர் காதலி தன்னை நோக்கியே  
மன்னவன் உன் பொருட்டு ஏழு வாரியும்  
இந் நகர் அழைத்தனம் ஈண்டுப் போந்து நின்  
அன்னையை ஆடுவான் அழைத்தி ஆல் என. 
895 
மடந்தையும் அன்னையைக் கொணர்ந்து வாவி மாடு  
அடைந்தனள் ஆக மற்று அவள் புராண நூல்  
படர்ந்த கேள்வியர் தமை நோக்கிப் பௌவநீர்  
குடைந்திடும் விதி எவன் கூறும் என்னவே. 
896 
கோது அறு கற்பினாய் கொழுநன் கைத்தலம்  
காதலன் கைத்தலம் அன்றிக் கன்றின் வால்  
ஆதல் இம் மூன்றில் ஒன்று அம் கை பற்றியே  
ஓத நீர் ஆடுதல் மரபு என்று ஓதினார். 
897 
மறையவர் வாய்மை பொன் மாலை கேட்டு மேல்  
குறைவு அறத் தவம் செயாக் கொடிய பாவியேற்கு  
இறைவனும் சிறுவனும் இல்லையே இனிப்  
பெறுவது கன்று அலால் பிறிது உண்டாகுமோ. 
898 
ஆதலால் கன்றின் வால் பற்றி ஆடுகோ  
மாதராய் என்று தன் மகட்குக் கூறலும்  
வேதன் மால் பதவியும் வேண்டினார்க்கு அருள்  
நாதன் ஆருயிர்த் துணை ஆய நாயகி. 
899 
தன் உயிர்க் கிழவனை அடைந்து தாழ்ந்து தன்  
அன்னை தன் குறை உரை ஆட ஆண் தகை  
மன்னவன் வலாரியோடு ஒருங்கு வைகிய  
தென்னவன் மேல் மனம் செலுத்தினான் அரோ. 
900 
சிலையத் திரியார் திரு உள்ளம் உணர்ந்து  
தலையத் திரி அட்டவன் ஆதனம் நீத்து  
உலையத் திரி ஒத்த விமான மொடு  
மலையத் துவசச் செழியன் வரும் ஆல். 
901 
மண் பேறு அடைவான் வரும் ஏழ் கடல் வாய்  
எண் பேறு அடையா அருளின் அமுதைப்  
பெண் பேறு அதனால் பெறும் பேறு இது எனாக்  
கண் பேறு அடைவான் எதிர் கண்டனனே.  
 
902 
வந்தான் மருகன் சரணம் பணிவான்  
முந்தாமுனம் மாமன் எனும் முறையால்  
அந்தா மரை அம் கையமைத்து மகள்  
தந்தானை எதிர்ந்து தழீஇ யினன் ஆல். 
903 
ஆத்தன் திரு உள்ளம் மகிழ்ந்து அருளால்  
பார்த்து அன்பு நிரம்பிய பன்னியொடும்  
தீர்த்தம் புகுந்து ஆடிய செல்க எனப்  
பூத்தண் பொருநைப் புனல் நாடவனும். 
904 
முன்னைத் தவம் எய்தி முயன்று பெறும்  
அன்னப் பெடை அன்னவள் வந்து எதிரே  
தன்னைத் தழுவத் தழுவிக் கிரிவேந்து  
என்னக் குறையா மகிழ் எய்தினனே. 
905 
தண்டே மொழிவேள் விதவக் குறையால்  
கண்டேன் இலன் என்று கருத்து அவலம்  
உண்டே அ•து இவ் உவகைக் களிதேன்  
வண்டே என உண்டு மறந்தனன் ஆல். 
906 
சேண் உற்றவனைச் சிலநாள் கழியக்  
காண் உற்றவள் போல் நிறை கற்பு உடையாள்  
பூண் உற்று மலர்ந்த ஒர் பொன் கொடிபோல்  
நாண் உற்று எதிர் நண்ணி இறைஞ்சினள் ஆல். 
907 
மஞ்சு ஓதிய காஞ்சன மாலை கையில்  
பைஞ் சோதி விளங்குப இத் திரையாய்ச்  
செஞ் சோதி முடிச் சிவ நாம எழுத்து  
அஞ்சு ஓதி நெடும் கடல் ஆதும் அரோ. 
908 
துங்கக் கலை வேதியர் தொல் மறை நூல்  
சங்கற்ப விதிப்படி தன் துணைக்கை  
அம் கைத் தளிர் பற்றி அகத்து உவகை  
பொங்கப் புணரிப் புனல் ஆடினளே. 
909 
குடைந்தார் கரை ஏறினர் கொன்றை முடி  
மிடைந்தார் கருணைக் கண் விழிக் கமலம்  
உடைந்தார் அனைமாரும் உதரம் குருகாது  
அடைந்தார் உமை பாகர் அருள் படிவம். 
910 
ஒண் கொண்டல் மிடற்று ஒளியும் ஒருநால்  
எண் கொண்ட புயத்து எழிலும் அழல் சேர்  
கண் கொண்ட நுதல் கவினும் பொலியா  
மண் கண்டு வியப்ப வயங்கினர் ஆல். 
911 
விண்ணின்று வழுக்கி விழும் கதிர் போல்  
கண் நின்ற நுதல் கருணா கரன் வாழ்  
எண் நின்ற புரத்தின் இழிந்து இமையா  
மண் நின்றது ஓர் தெய்வ விமானம் அரோ. 
912 
அத் தெய்வ விமானம் அடுத்திடலும்  
முத் தெய்வதம் முக்கணவன் பணியால்  
நத் தெய்வ தருக் கரன் அம் கையொடும்  
எத் தெய்வதமும் தொழ ஏறினன் ஆல். 
913 
தேமாரி எனும் படி சிந்த நறும்  
பூ மாரி பொழிந்தது பொன் உலகம்  
தூமா மறை அந்தர துந்துபி கார்  
ஆம் ஆம் என எங்கும் அதிர்ந்தன ஆல். 
914 
எழுந்தது விமனம் வானம் எழுந்த துந்துபியும் நாணி  
விழுந்தது போலும் என்ன அர ஒலி எங்கும் விம்மத்  
தொழும் தகை முனிவர் ஏத்தச் சுராதிகள் பரவத் திங்கள்  
கொழுந்து அணி வேணிக் கூத்தர் கோ நகர் குறித்துச் செல்வார். 
915 
முன்பு தம் உருவாய் வைய முறைபுரி கோல் கைக்கொண்டு  
பின்பு தம் உருவம் தந்த மருகனும் பெருகு கேண்மை  
அன்பு தந்து அருகு நின்ற தடா தகை அணங்கு மீண்டு  
பொன் புனை குடுமிக் கோயில் புகுந்து நன்கு இருப்பக் கண்டார். 
916 
முன்னை வல் வினையால் யாக்கை முறை தடுமாறித் தோற்றம்  
மன்னிய மனிதர் போலப் பண்டைய வடிவம் மாறி  
அன்னையே மகளா ஈன்ற அப்பனே மருகன் ஆக  
என்னயா நோற்றேம் யார்க்கும் இயற்ற அரும் தவம்தான் என்ன. 
917 
கன்று அகலா ஆன் போல ஐயன் கனை கடல் விடாது பற்றி  
ஒன்றிய அன்பு பின்நின்று ஈர்த்து எழ உள்ளத்தோடும்  
சென்று இரு கண்ணும் முட்டி அடிக்கடி திரும்பி நோக்கக்  
குன்று உறழ் விமானத்து அன்னை அஞ்சலி கூப்பிச் செல்வார். 
918 
புவ லோகம் கடந்து போய்ப் புண்ணியருக்கு எண் இறந்த போகம் ஊட்டும்  
சுவலோகம் கடந்து போய் மகலோகம் சனலோகம் துறந்து மேலைத்  
தவலோகம் கடந்து போய்ச் சத்திய லோகம் கடந்து தண் துழாயோன்  
நவலோகம் கடந்து உலக நாயகம் ஆம் சிவலோகம் நண்ணினாரே. 
919 
அறக் கொடி பின் இறை மகனை அடி பணிந்து தனை ஈன்றார்க்கு ஆதி வேத  
மறைப் பொருள் தன் வடிவு அளித்த அருளின் மன நிறை மகிழ்ச்சி வாய் கொள்ளாமல்  
புறப்படுவது என இரண்டு திருச் செவிக்கும் செம்குமுதம் பொதிந்த தீம்தேன்  
நிறைப்பது எனப் பல் முறையால் துதி செய்து தொழுது ஒன்று நிகழ்த்தா நின்றாள். 
920 
எண் இறந்த தேவர்க்கும் யாவர்க்கும் பயன் சுரக்கும் இமையோர் நாட்டுப்  
புண்ணியவான் தன் புனிற்றுக் கன்றுக்குக் குறைவு ஏது என் பொருட்டு என் ஈன்றாள்  
எண்ணியது கடல் ஒன்றெ எழு கடலும் ஈண்டு அழைத்தாய் ஈன்றாள் ஆட  
விண் இருந்த கண வனையும் விளித்து உன் அருள் வடிவு அளித்து உன் மேனாடு ஈந்தாய். 
921 
 
தென்னர் மரபு இறந்தது எனப் படு பழியில் ஆழவரும் செவ்வி நோக்கிப்  
பொன் அவிர் தார் முடி புனைந்து கோல் ஒச்சி வருகின்றாய் போலும் மேலும்  
இந் நிலைமைக்கு இடையூறும் இனி இன்றே எனத் தலைவி இயம்ப லோடும்  
தன் இறைவி உட் கோளை அகம் கொண்டு மகிழ்ந்து இருந்தான் தமிழர் கோமான். 
 
மலயத் துவசனை அழைத்த படலம் சுபம்  
 
 

11. உக்கிர பாண்டியன் திருஅவதாரப் படலம்

 
 
922 
மன்னவன் குல சேகரன் திரு மகன் மனைவி  
தன்னொடும் கடல் ஆடிய தகுதி ஈது அந்தத்  
தென்னவன் தனித் திருமகள் திருஉளம் களிப்ப  
உன்னரும் திறல் உக்கிறன் உதித்தவாறு உரைப்பாம். 
923 
தண் நிலா மௌலி வேய்ந்த சுந்தர சாமி ஞாலத்து  
எண் இலா வைகல் அன்னது இணையடி நிழல் போல் யார்க்கும்  
தெண் நிலாக் கவிகை நீழல் செய்து அருள் செம்கோல் ஓச்சி  
உண்ணிலா உயிர் தானாகி முறை புரிந்து ஒழுகும் நாளில். 
924 
கரியவன் கமலச் செம்மன் மறை முதல் கலைகள் காண்டற்கு  
அரியவன் அன்பர்க்கு என்றும் எளியவன் ஆகும் மேன்மை  
தெரியவன் பகன்ற சிந்தைத் தென்னவன் தனக்கும் கற்பிற்கு  
உரியவள் தனக்கும் காதல் மகளென உமையைத் தந்தான். 
925 
மற்று அதற்கு இசையத் தானும் மருமகன் ஆகி வையம்  
முற்றும் வெண் குடைக் கீழ் வைக முறை செய்தான் ஆக மூன்று  
கொற்றவர் தம்மில் திங்கள் கோக்குடி விழுப்பம் எய்தப்  
பெற்றது போலும் இன்னும் பெறுவதோர் குறைவு தீர்ப்பான். 
926 
ஒன்றினைச் செய்கை செய்யாது ஒழிகை வேறு ஒன்று செய்கை  
என்று இவை உடையோன் ஆதி ஈறு இலாப் பரம யோகி  
நன்று தீது இகழ்ச்சி வேட்கை நட்பு இகல் விளைக்கும் மாயை  
வென்றவன் செய்யும் மாயை விருத்தி யார் அளக்க வல்லார். 
927 
இந்திர சால விச்சை காட்டுவான் என்னத் தன்பால்  
செம் தழல் நாட்டம் ஈன்ற செல்வனைக் கருப்பம் எய்தா  
தம் தமில் உயிரும் ஞாலம் அனைத்தையும் ஈன்ற தாயாம்  
சுந்தரவல்லி தன்பால் தோன்று மாறு உள்ளம் செய்தான். 
928 
அங்கு அவன் வரவுக்கு ஏற்ப ஆயமும் பிறரும் தாழ்ந்து  
மங்கை நின் வடிவுக்கு ஏற்பக் கருவுரு வனப்பும் சீரும்  
திங்கதோற் ஆற்று மன்றல் செவ்வியும் காண ஆசை  
பொங்கியது எங்கட்கு என்றார் புனிதை அப்படி போல் ஆனாள். 
929 
கரு மணிச் சிகரச் செம் பொன் கனவரை அனைய காட்சித்  
திரு முலை அமுதம் பெய்த செப்பு இரண்டு அனைய வாக  
வரு முலை சுமந்து மாய்ந்த மருங்குலும் வந்து தோன்ற  
அருள் கனிந்த அனையாள் நாவிற்கு இன் சுவை ஆர்வம் பொங்க. 
930 
என்னவும் எளிய வேனும் அரியன என்ன வேட்டாள்  
அன்னவும் போக பூமி அரும் பெறல் உணவு நல்கிப்  
பன்னகர் அமுதும் திங்கள் படுசுவை அமுதும் தெய்வப்  
பொன்னகர் அமுதும் ஆசை புதைபடக் கணங்கள் நல்க. 
931 
புண்ணிய முனிவர் வேத பண்டிதர் போந்து வேந்தர்க்கு  
கண்ணிய சடங்கு மூதூர் அரும் கடி வெள்ளத்து ஆழ  
எண்ணிய திங்கள் தோறும் இயற்ற இக் கன்னித் தேயம்  
பண்ணிய தருமச் சார்பால் படுபயன் தலைப்பாடு எய்த. 
932 
மாசு அறத் துறந்தோர் உள்ளம் ஆன வான் களங்கம் நீங்க  
ஈசர் தம் கிழமை என்னும் இந்து ஆதிரை நாள் செய்த  
பூசையின் பயன் தான் எய்த எரி பசும் பொன் கோள்வந்து  
தேசு ஒடு கேந்திரத்தில் சிறந்த நல் ஓரை வாய்ப்ப. 
933 
முந்தை நான் மறைகள் தாமே முழங்க மந்தார மாரி  
சிந்த நாள் மலர் பூத்து ஆடும் மின் எனத் திசைகள் தோறும்  
அந்தர மகளிர் ஆடத் துந்துபி ஐந்தும் ஆர்ப்ப  
விந்தையும் திருவும் வெள்ளைக் கிழத்தியும் வீறு வாய்ப்ப. 
934 
அந்தணர் மகிழ்ச்சி தூங்க அடுத்து அவர் வளர்க்கும் முன்னர்  
மந்திர வேள்விச் செந்தீ வலம் சுழித்து எழுந்து ஆர்த்து ஆடச்  
சிந்துர நுதல் மா எட்டும் சேடனும் பொறை எய்ப்பு ஆற  
இந்திரன் மேருப் புத்தேள் புனல் இறைக்கு இடம் தோள் ஆட. 
935 
ஆலத்தை அமுதம் ஆக்கும் அண்ணலும் அணங்கும் கொண்ட  
கோலத்துக்கு ஏற்பக் காலைக் குழந்தை வெம் கதிர் போல் அற்றைக்  
காலத்தில் உதித்த சேய்போல் கண் மழை பிலிற்று நிம்ப  
மாலை தோள் செழியன் செல்வ மகள் வயின் தோன்றினானே. 
936 
எடுத்தனள் மோந்து புல்லி ஏந்தினள் காந்தன் கையில்  
கொடுத்தனள் வாங்கி வீங்கு கொங்கை நின்று இழிபால் வெள்ளம்  
விடுத்தனள் குமுதப் போதில் வெண் நிலா வெள்ளம் போல்வாய்  
மடுத்தனள் அருத்தி னாள்தன் மைந்தனை எம் பிராட்டி. 
937 
சலத்தலைக் கிடக்கைப் புத்தேள் அருநிழல் வாழ்க்கைப் புத்தேள்  
அலர்த்தலை இருக்கைப் புத்தேள் ஆதி இப் புத்தேளிர் வேதப்  
புலத்தலைக் கேள்வி சான்ற புண்ணிய முனிவர் ஏனோர்  
குலத்தலை மகளி ரோடும் கோமகன் கோயில் புக்கார். 
938 
குட புலத்து அரசும் பொன்னிக் குளிர் புனல் கோழி வேந்தும்  
வடபுலத்து அரசர் யாரும் குறுநில வாழ்க்கைச் செல்வத்து  
அடல்கெழு தொண்டைத் தண்தார் அரசொடு மணிகம் சூழக்  
கடல்கள் நால் திசையும் பொங்கி வருவ போல் கலிப்ப வந்தார். 
939 
மன்னனைத் தேவிதன்னை முறையினால் வழுத்தி வாழ்த்தி  
நன்னர் கோளாகி ஓகை நவின்று வெண் மழு மான் நீத்த  
தென்னவர் பெருமான் தேவி திருமுகக் கருணை பெற்றுப்  
பொன்னடி பணிந்து தம் ஊர் போகுவார் இனைய சொல்வார். 
940 
வழுதியர் பெருமான் தன் பால் கந்தனே வந்தான் என்பார்  
பழுதறு கற்பினாள் தன் பாக்கியம் இதுவே என்பார்  
அழகினான் மதனும் பெண்மை அவா உறும் இவன் கோல் ஆணை  
எழுகடல் உலகோடு வையம் ஏழையும் காக்கும் என்பார். 
941 
மனிதர் வான் தவமோ தென்பார் வைகு வோர் தவமோ வானப்  
புனிதர் வான் தவமோ வேள்விப் பூசுரர் தவமோ கேள்வி  
முனிவர் வான் தவமோ ஈறு முதல் இலா முதல்வன் உள்ளக்  
கனிதரு கருணை போலிக் காதலன் தோற்றம் என்பார். 
942 
தரும மா தவத்தின் பேறோ வருத்த மாதவத்தின் பேறோ  
பெருமை சால் காமன் நோற்ற பெருந்தவப் பேறோ எய்தற்கு  
அருமை ஆம் வீடுநோற்ற அரும்தவப் பேறோ இந்தத்  
திருமகன் என்று தம்மில் வினாய் மகிழ் சிறப்பச் சென்றார். 
943 
அவ் அவர் மனைகள் தோறும் மங்கல அணிகளாகக்  
கௌவை மங்கலங்கள் ஆர்ப்பக் கடிநகர் எங்கும் பொங்க  
நெய் விழா எடுப்பக் கேள்வி நிரம்பிய மறையோர்க்கு ஈந்த  
தெய்வ மா தான நீத்து அந் திரைக் கடன் மடுத்தது அம்மா. 
944 
சுண்ணமும் பொரியும் தூ வெள் அரிசியும் தூர்வைக் காடும்  
தண் அறும் சிவிறி வீசு தண் பனி நீரும் சாந்தும்  
எண்ணெயும் நானச் சேறும் பசை அற எடுத்து வாரிக்  
கண்ணகன் நகரம் எங்கும் கழுவின தான வெள்ளம். 
945 
செம் பொன் செய் துருத்தி தூம்பு செய் குழல் வட்டம் ஆக  
அம் பொன் செய் சிவிறி வெண் பொன் அண்டை கொண்டாரம் தூங்கும்  
வம் பஞ்சு முலை யினாரும் மைந்தரும் மாறி ஆட  
அம் பஞ்சு மாறி மாறி அனங்கனும் ஆடல் செய்தான். 
946 
இன்னணம் களிப்ப மூதூர் இந்து ஆதிரை நல் நாளில்  
பொன்னவன் கேந்திரித்த புனித லக்கினத்தில் போந்த  
தென்னவர் பெருமான் சேய்க்குச் சாதகச் செய்தி ஆதி  
மன்னவர்க்கு இயன்ற வேத மரபினால் வயங்க ஆற்றி. 
947 
கரிய வெண் திரை நீர்ச் செல்வன் கல் இறகு அரிந்த வென்றித்  
தெரியலன் உலகம் தாங்கும் தெய்வதக் வரைக்கோன் ஆதித்  
தரியலர் வீரம் சிந்தத் தருக்கு அழிந்து அச்சம் தோற்றற்கு  
உரிய காரணத்து ஆனா உக்கிர வருமன் என்பார். 
948 
நால் ஆகும் மதியில் சந்தி மிதிப்பது நடாத்தி ஆறு ஆம்  
பாலாகும் மதியில் அன்ன மங்கலம் பயிற்றி ஆண்டின்  
மேல் ஆகும் மதியில் கேச வினை முடித்து ஐந்தாம் ஆண்டின்  
நூல் ஆறு தெரிந்து பூண நூல் கடி முடித்துப் பின்னர். 
949 
பத நிரை பாழி சாகை ஆரணம் பணைத்த வேத  
முதல் நிரை கலையும் வென்றி மூரி வில் கலையும் வாளும்  
மத நிரை ஒழுகும் ஐயன் மா நிரை வையம் பாய்மா  
வித நிரை ஏற்றம் மற்றும் உணர்த்தினான் வியாழப் புத்தேள். 
950 
குரு முகத்து அறிய வேண்டும் என்பது ஓர் கொள்கை ஆலே  
ஒரு முறை கேட்டு ஆங்கு எண் நான்கு கலைகளும் ஒருங்கு தேறி  
அரன் அல ஒருவராலும் தேற்றுவது அருமை ஆல் அப்  
பரன் இடைத் தௌ¤ந்தான் பாசு பதாத்திரப் படையும் மன்னோ. 
951 
எல்லை இல் கலைகள் எல்லாம் அகவை நால் இரண்டின் முற்றத்  
தொல் அறிவு உடையன் ஆகித் குரவரைத் தொழுது போற்ற  
வல்லவன் ஆகி அன்னார் மகிழ்ச்சி கொள் கனலாய் வென்றிச்  
செல்வ ஏற்று இளைய ரோடும் திரு விளையாடல் செய்வான். 
952 
புகர் மத வேழம் முட்டிப் போர் விளையாடி என்றும்  
தகரொடு தகரைத் தாக்கித் தருக்கு அமர் ஆடி வென்றும்  
வகிர் படு குருதிச் சூட்டு வாரணம் ஆடி வென்றும்  
நகை மணிப் பலகை செம் பொன்னால் குறுப் பாடி வென்றும். 
953 
காற்றினும் கடிய மாவில் காவதம் பல போய் மீண்டும்  
கூற்றினும் கொடிய சீற்றக் குஞ்சரம் உகைத்தும் வைகை  
ஆற்றின் உய்யானத்து ஆவி அகத்தின் உள் இன்பம் துய்த்தும்  
வேல் திறன் மைந்தரோடு மல் அமர் விளைத்து வென்றும். 
954 
சந்த வெற்பு அடைந்து வேட்டம் செய்து சைல வாழ்க்கை  
அந்தணர் ஆசி கூற அவர் தொழில் வினாயும் அன்னார்  
கந்த மென் கனி விருத்து ஊண் கை தழீக் களித்து மீண்டும்  
இந்தவாறு ஐம் மூ ஆண்டு கழிய மேல் எய்தும் ஆண்டில். 
955 
சூர் முதல் தடிந்த தங்கள் தோன்றலே இவன் என்று எண்ணிக்  
கார் முக மயிலும் வேலும் கை விடாக் காக்கு மா போல்  
வார் முக முலையினாரும் வடிக் கணும் மருங்கு மொய்ப்பக்  
கூர் முக வேலான் இன்ன கொள்கையன் ஆகத் தாதை. 
956 
பங்கயச் செவ்வித்து ஆகித் கண் மனம் பருகு காந்தி  
அங்கு அழல் காலும் சொன்ன அடைவினில் திரண்டு நீண்ட  
சங்கமும் வட்டம் தோன்றச் செழு முழந்தாளும் நால் வாய்த்  
துங்க ஈர்ங் கவுண் மால் யானைத் துதிக்கை போல் திரள் கவானும். 
957 
சிறுகிய வயிறும் தாழ்ந்த நாபியும் செவ்வி நோக்கும்  
மறு இல் கண்ணடியின் அன்ன கடிய கல் வரை கொள் மார்பும்  
எறி இசை வீணைக் தண்டின் இணைந்து நீண்டு இழிந்த கையும்  
வெறிய தார் கிடந்த மேரு வெற்பு இரண்டு அனைய தோளும். 
958 
வலம்புரி என்ன வாய்ந்த கண்டமும் மலராள் மன்னும்  
பொலம் புரி கமலம் அன்ன வதனமும் பொதுவான் நோக்கி  
நிலம் புரி தவப் பேறு அன்னான் வடிவு எலாம் நின்று நின்று  
நலம் புரி நூலோன் நோக்கிச் சோதிப்பான் அடிக்க வல்லான். 
959 
உன்னத ஆறு நீண்ட உறுப்பும் ஐந்து சூக்கம் தானும்  
அன்னது குறுக்க நான்காம் அகல் உறுப்பு இரண்டு ஏழ் ஆகச்  
சொன்னது சிவப்பு மூன்று கம்பிரம் தொகுத்த வாறே  
இன்னவை விரிக்கின் எண் நான்கின் இலக்கண உறுப்பாம் என்ப. 
960 
வயிறு தோள் நெற்றி நாசி மார்பு கை அடி இவ் ஆறும்  
உயிரில் வான் செல்வன் ஆகும் ஒளி கவர் கண் கபோலம்  
புயல் புரை வள்ளல் செம்கை புது மணம் கவரும் துண்டம்  
வியன் முலை நகுமார்பு ஐந்து நீண்ட வேல் விளைக்கும் நன்மை. 
961 
நறிய பூம் குஞ்சி தொக்கு விரல் கணு நகம் பல் ஐந்தும்  
சிறியவேல் ஆயுள் கோசம் சங்க நா முதுகு இந் நான்கும்  
குறியவேல் பாக்கியப் பேறாம் சிரம் குளம் என்று ஆய்ந்தோர்  
அறியும் இவ் உறுப்பு இரண்டும் அகன்றவேல் அதுவும் நன்றாம். 
962 
அகவடி அங்கை நாட்டக் கடை இதழ் அண்ணம் நாக்கு  
நகம் இவை ஏழும் சேந்த நன்மை நாற் பெறுமா இன்பம்  
இகல் வலி ஓசை நாபி என்று இவை மூன்றும் ஆழ்ந்த  
தகைமையால் எவர்க்கும் மேலாம் நன்மை சால் தக்கோன் என்ன. 
963 
எல்லை இன் மூர்த்தி மைந்தன் இலக்கண நிறைவினோடு  
நல்ல ஆம் குணனும் நோக்கிப் பொது அற ஞாலம்  
                                     காக்க  
வல்லவன் ஆகி வாழ் நாள் இனி பெற வல்லன் என்னா  
அல் அணி மிடற்றான் பின்னும் மனத்தினால் அளந்து  
                                    சூழும். 
964 
இத் தகு பண்பு சான்ற நீர்மையால் இசைமை நீதி  
வித்தக நல்ல உள்ளம் உடைமை மெய் வீறு தெய்வ  
பத்திமை உலகுக்கு எல்லாம் மகிழ்ச்சி செய் பண்பு சாந்த  
சித்தம் எவ் உயிர்க்கும் அன்பு செய்கை நல் ஈகை கல்வி. 
965 
வெல்லுதற்கு அரியார் தம்மை வெல்லுதல் தேவராலும்  
செல்லுதற்கு அரிய ஏத்தும் சென்றிடும் திறையும் கோடல்  
புல்லுதற்கு அரிய ஞாலம் மாலை போல் புயத்தில் ஏந்திச்  
சொல்லுதற்கு அரிய வீரம் உலகு எலாம் சுமப்ப வைத்தல். 
966 
என்று இவை ஆதி ஆய இயல் குணம் உடையன் ஆகி  
நன்றி செய்து உலகுக்கு எல்லாம் நாயகன் ஒருவன் ஆகி  
நின்றிடும் இவற்குப் பின்னர் நீள் முடி கவித்து முன்னர்  
மன்றல் செய்க என்று சூழ்ந்து மதிஞரோடு உசாவினானே. 
 
உக்கிர பாண்டியன் திருஅவதாரப் படலம் சுபம்  
 

12. உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை செண்டு கொடுத்த படலம்

 
 
967 
உருக்கும் திறல் உக்கிர குமரன் உதயம் இது வான் மதியும் நதிப்  
பெருக்கும் கரந்த சடைக் கற்றைப் பெரும் தேர்ச் செழியர் பிரான் அவற்குச்  
செருக்கும் செல்வ மணம் முடித்துச் செவ்வேல் வளை செண்டு அளித்து உள்ளம்  
தருக்கு முடி தந்து அரசு உரிமை தந்த செயலும் சாற்றுவாம். 
968 
வையைக் கிழவன் தன் அருமை குமரன் தனக்கு மணம் புணர்ச்சி  
செய்யக் கருதும் திறம் நோக்கி அறிஞரோடும் திரண்ட அமைச்சர்  
மை அற்று அழியா நிலத் திருவும் மரபும் குடியும் புகழ்மையும் நம்  
ஐயற்கு இசையத் தக்க குலத்து அரசர் யார் என்று அளக்கின்றார். 
969 
தீம் தண் புனல் சூழ் வடபுலத்து மணவூர் என்னும் திருநகர்க்கு  
வேந்தன் பரிதி திரு மரபின் விளங்கும் சோம சேகரன் என்று  
ஆய்ந்த கேள்வி அவனிடத்துத் திருமாது என்ன அவதரித்த  
காந்திமதியை மணம் பேச இருந்தார் அற்றைக் கனை  இருள்வாய். 
 
970 
வெள்ளைக் களிற்றின் பிடர் சுமந்த குடுமிக் கோயில் மேய இளம்  
பிள்ளைக் கதிர் வெண் மதி மௌலிப் பெருமான் இரவி மருமான் ஆம்  
வள்ளல் கரத்தான் கனவில் எழுந்து அருளி வானோர் நனவிற்கும்  
கள்ளத்து உருவாம் திருமேனி காட்டி இதனை விளம்புவார். 
971 
அன்னம் இறை கொள் வயன் மதுரைச் சிவன் யாம் அரச நீ ஈன்ற  
பொன்னை அனையாள் தனை மதுரா புரியில் கொடுபோய் மறு புலத்து  
மன்னர் மகுட மணி இடற மழுங்கும் கழல் கால் சுந்தரன் ஆம்  
தென்னர் பெருமான் குமரனுக்குக் கொடுத்தி என்று செப்புதலும். 
972 
உள்ளக் கமல முக கமலம் உடனே மலர இரு தடம் கண்  
அள்ளல் கமல மலர்ந்து தனது அம் கை கமல முகிழ்த்து எழுந்து  
வள்ளல் பரமன் கருணை எளி வந்த செயலை நினைந்து அதன் பின்  
வெள்ளத்து அழுந்தி எழுந்து இரவி வேளை முளைக்கும் வேலையினில். 
973 
நித்த நியமக் கடன் நிரப்பி நிருபன் அமைச்சரோடு நான்கு  
பைத்த கருவிப் படையினொடு பல்வேறு இயமும் கலிப்பத்தன்  
பொய்த்த மருங்கு உற்று திருமகளைப் பொன் அன்னாரோடு இரதமிசை  
வைத்து மணம் சேர் திருவினொடு மதுரை நோக்கி வழிக் கொண்டான். 
974 
நென்னல் எல்லை மணம் பேச நினைந்தவாறே அமைச்சர் மதி  
மன்னர் பெருமான் தமரோடு மணவூர் நோக்கி வழி வருவார்  
அன்ன வேந்தன் தனைக் கண்டார் அடல் வேல் குமரன் அனையான் எம்  
தென்னர் பெருமான் குமரனுக்கு உன் திருவைத் தருதி என அனையான். 
975 
குலனும் குடியும் கனவின் கண் கொன்றை முடியார் வந்து உரைத்த  
நலனும் கூறி மணம் நேர்ந்து நயப்ப அதனை நன் முதியோர்  
புலன் ஒன்று உழையர் தமை விடுத்துப் பொருனைத் துறைவர்க்கு உணர்த்தி வரு  
வலனும் அயில் வேல் மன்னனொடு மதுரை மூதுர் வந்து அணைந்தார். 
976 
இரவி மருமான் மதி மருமான் எதிரெ பணியத் தழீ இமுகமன்  
பரவி இருக்கை செல உய்த்துப் பாண்டி வேந்தன் இருந்தான் மேல்  
விரவி அமைச்சர் திரு முகங்கள் வேந்தர் யார்க்கும் விடுத்து நகர்  
வரைவு நாள் செய்து அணி செய்ய மன்றல் முரசு அறைவித்தார். 
977 
மாடம் புதுக்கிப் பூகதமும் கதலிக் காடும் மறுகு எங்கும்  
நீடு நிரைத்துப் பாலிகையும் நிறை பொன் குடமும் முறை நிறுத்தி  
ஆடு கொடியும் தோரணமும் புனைவித்து அழகுக்கு அழகு ஆகக்  
கூட நெருங்கு நகரை மணக் கோலம் பெருகக் கொளுத்தினார். 
978 
தென்றல் நாடன் திருமகளைத் தேவர் பெருமான் மணம் புரிய  
மன்றல் அழகால் ஒரு நகர் ஒப்ப அதிகம் இன்றி மதுரைநகர்  
அன்று தானே தனக்கு ஒப்பது ஆகும் வண்ணம் அணி அமைத்தார்  
இன்று தானே தனக்கு அதிகம் என்னும் வண்ணம் எழில் அமைத்தார். 
979 
முன்னர் மாலை முடி அணி சுந்தரத்  
தென்னர் ஏற்றின் திருமுகம் கண்டு தாழ்ந்து  
அன்ன வாசகம் உள் கொண்டு அயல் புல  
மன்னர் மாதவர் யாரும் வருவர் ஆல். 
980 
புரவி வெள்ளமும் போர்க் கரி வெள்ளமும்  
வரவில் கால் வலி மள்ளரின் வெள்ளமும்  
விரவி ஆழிய வெள்ளமும் உள் உற  
இரவி தன் வழித் தோன்றல் வந்து எய்தினான். 
981 
கோடு வில்லொடு மேகக் குழாங்கள் மின்  
நீடு வாளடு நேர்ந்து என மார்பு தாழ்ந்து  
ஆடு குண்டலக் காது உடை ஆடவர்  
சேடன் ஈகத்துச் சேரன் வந்து ஈண்டினான். 
982 
கடலும் உள்ளமும் காற்றும் பல் வண்ணமும்  
உடலம் கொண்டன வந்து உறு வாம் பரிப்  
படு கடல் உள் பரிதியில் தோன்றினான்  
அடு பரிப் பதி ஆகிய வேந்தனே. 
983 
அலகு இலா உதயம் ஒறு மாதவர்  
அலகு இலார் உதித்து என்னப் பொன் ஓடை சேர்  
அலகு இலானை அனீகமொடு எய்தினான்  
அலகு இலா ஆற்றல் கயபதி அண்ணலே. 
984 
தொக்க மள்ளர் அடிப்படு தூளி போய்த்  
திக்கு அடங்க விழுங்கித் திரைக் கடல்  
எக்கர் செய்ய எழுந்து இயம் கல் என  
நக்க வேல் கை நரபதி நண்ணினான். 
985 
மீன வேலையில் கந்துகம் மேல் கொடு  
கூனல் வார் சிலை வஞ்சக் கொடும் சமர்க்கு  
ஆன வாழ்க்கை அரட்டக் கரும் படை  
மான வேல் குறு மன்னவர் நண்ணினார். 
986 
சீனர் சோனகர் சிங்களர் கொங்கணர்  
மான வேல் வல மாளவர் சாளுவர்  
தான மா நிரைச் சாவகர் ஆதி ஆம்  
ஏனை நாட்டு உள மன்னரும் ஈண்டினர். 
987 
நூலொடும் துவக்குஉண்டு நுடங்கு மான்  
தோலர் தூங்கு சுருக்கு உடைத் தானையர்  
கோல முஞ்சியர் கிஞ்சுகக் கோலினர்  
நாலு நூல் நாவினர் நண்ணினார். 
988 
வட்ட நீர்க் கலக் கையினர் வார்ந்து தோள்  
விட்ட குண்டலக் காதினர் வேட்ட தீத்  
தொட்ட கோலினர் வேள்வியில் சுட்ட நீறு  
இட்ட நெற்றியர் இல்லொடு நண்ணினார். 
989 
முண்ட நெற்றியர் வெள் நிற மூரலர்  
குண்டி கைக் கையர் கோவணம் வீக்கிய  
தண்டு கையர் கல் தானையர் மெய்யினைக்  
கண்டு பொய்யினைக் காய்ந்தவர் நண்ணினார். 
990 
தீம் தண் பால் கடல் செம் துகிர்க் காட்டொடும்  
போந்த போல் மெய்யில் புண்ணியப் பூச்சினர்  
சேந்த வேணியர் வேதச் சிரப் பொருள்  
ஆய்ந்த கேள்வி அரும் தவர் எய்தினார். 
991 
ஆதி சைவர் முதல் சைவர் ஐவரும்  
கோது இலா அகச் சைவக் குழாங்களும்  
பூதி மேனியர் புண்ணிய ஐந்து எழுத்து  
ஓது நாவினர் ஒல்லை வந்து எய்தினார். 
992 
வெண் களிற்றவன் வேரி அம் தாமரைப்  
பெண் களிப்பு உறு மார்பன் பிரமனேடு  
ஒண் களிப்பு உற உம்பர் முதல் பதி  
நெண் கணத்தவர் யாவரும் ஈண்டினார். 
993 
அணைந்து கோயில் அடைந்து அரிச் சேக்கை மேல்  
குணம் கடந்தவன் கோமள வல்லியோடு  
இணங்கி வைகும் இருக்கை கண்டு ஏத்தினார்  
வணங்கினார் வணங்கும் முறை வாழ்த்தினார். 
994 
விரை செய் தார் முடிச் சுந்தர மீனவன்  
சுரர்கண் மாதவர் வேந்தர்க்குத் தொல் முறை  
வரிசை நல்கி இருந்தனன் மன்னவன்  
திரு மகன் மணம் செய் திறம் செப்புவாம். 
995 
சேம சேகரன் தோகை வனப்பு எலாம்  
கோமகன் கண்டு உவப்ப அக் கொள்கை கண்டு  
ஏம மேனிய நூல் வழி யார்க்கும் அத்  
தேமன் கோதை உறுப்பு இயல் தேற்றுவான். 
996 
பெருக நீண்டு அறவும் குறுகிடா தாகிப் பிளந்திடா கடைய வாய்த் தழைத்து  
கருவி வான் வண்டின் கணம் எனக் கறுத்துக் கடை குழன்றி இயல் மணம் கான்று  
புரை அறச் செறிந்து நெறித்து மெல் என்று புந்தி கண் கவர நெய்த்து இருண்ட  
மருமலர்க் குழலாள் தன் பதிக்கு இனிய மல்லல் வான் செல்வம் உண்டாகும். 
997 
திண் மத வேழ மத்தகம் போலத் திரண்டு உயர் சென்னியாள் அவள் தன்  
உள் மகிழ் கணவன் ஆயுள் நீண்டு அகில உலக அரசு உரியன் ஆம் எட்டு ஆம்  
தண் மதி போன்று மயிர் நரம்பு அகன்று அசைந்து மூவிரல் இடை அகன்ற  
ஒண் மதி நுதல் தன் பதிக்கு நல் திருவோடு உலப்பு இல் ஆரோக்கியம் உண்டாம். 
998 
கண் கடை சிவந்தான் பால் என வெளுத்து நடுவிழி கழியவும் கரிதாய்  
எண்கவின் அடைந்து கோமளம் ஆகி இமை கரு மயிர்த்து எனின் இனிய  
ஒண் கரும் புருவம் குனிசிலை ஒத்த தத்தமில் ஒத்த இரு தொளையும்  
பண் கொள உருண்டு துண்டம் எள் போது பதும மேல் பூத்தது போலும். 
999 
வள்ளை போல் வார்ந்து தாழ்ந்து இரு செவியும் மடல் சுழி நல்லவாய் முன்னர்த்  
தள்ளிய காது மனோ கரம் ஆகும் தன்மையான் நன்மையே தழைக்கும்  
ஒள்ளிய கபோலம் வட்டமாய்த் தசைந்திட்டு உயர்ந்து கண்ணாடி மண்டலம் போல்  
தௌ¢ளிய ஊற்றம் இனியது நன்று என்று ஓதினான் திரைக் கடல் செல்வன். 
 
1000 
கொவ்வை வாய் அதரம் திரண்டு இருபுடையும் குவிந்து சேந்து இரேகை நேர் கிடந்தால்  
அவ் அணி இழை தன் அன்பனுக்கு என்று நண்பு உருவாகும் எண் நான்கு  
வல்ல வாள் எயிறும் இடை வெளி இன்றி வார்ந்து மேல் கீழ் இரண்டு ஒழுங்கும்  
செவ்வன் நேர்ந்து ஆவின் பால் என வெள்கித் திகழின் நன்று என்பர் நூல் தௌ¤ந்தோர். 
1001 
மெல்லிதாய்ச் சிவந்து கோமளம் ஆன நாவினாள் வேட்ட வேட்டு ஆங்கே  
வல்லை வந்து எய்த நுகர்ந்திடும் தசைந்து வட்டமாய் அங்குலம் இரண்டின்  
எல்லையது ஆகி மஞ்சுளம் ஆகி இருப்பது சிபுக நன்று என்பர்  
அல்லி அம் கமலம் போல் மலர்ந்து இருள் தீர்ந்து அவிர் மதி போல்வது முகமே. 
1002 
திரை வளைக் கழுத்துத் தசைந்து நால் விரலின் அளவது ஆய்த் திரண்டு மூன்று இரேகை  
வரை படில் கொழுநன் அகில மன்ன வனாம் மார்பகம் தசைந்து மூ ஆறு  
விரல் அளவு அகன்று மயிர் நரம்பு அகன்று மிதந்தது ஏல் விழுமிது ஆம் வேய் தோள்  
புரை அறத் தசைந்து மயிர் அகன்று என்பு புலப்படா மொழிய கோமளம் ஆம். 
1003 
செம் கை நீண்டு உருண்டு கணுக்கள் பெற்று அடைவே சிறுத்திடில் செல்வமோடு இன்பம்  
தங்கும் வள் உகிர் சேந்து உருண்டு கண் உள்ளம் கவர்வதாய்ச் சர சரப்பு அகன்றால்  
அங்கு அவை நல்ல அகங்கை மெல் எனச் சேந்து இடை வெளி அகன்று இடை உயர்ந்து  
மங்கலமாய்ச் சில் வரைகளின் நல்ல இலக்கண வரை உள மாதோ. 
1004 
முத்து அணி தனங்கள் கடினம் ஆய் அசைந்து வட்டமாய் முகிழ்த்து இரு கட நேர்  
ஒத்து இருமாந்து ஈர்க்கு இடை அற நெருங்கி உள்ளன மெலிந்து அமர்ந்து உரோமம்  
பத்தி பெற்று அயலே மயிர் நரம்பு அகன்ற பண்டியாள் உண்டி வேட்டு ஆங்கே  
துய்த்திடும் நாபி வலம் சுழித்து ஆழ்ந்தால் தொலைவு இலாத் திருவளம் பெருகும். 
1005 
இடை மயிர் நரம்பு அற்று இருபதோடு ஒரு நான்கு எழில் விரல் அளவோடு வட்ட  
வடிவு அதாய்ச் சிறுகி மெலிவது நிதம்ப மத்தகம் ஆமையின் புறம் போல்  
படிவ நேர் ஒத்தல் நன்று இரு குறங்கும் படுமயிர் என்பு அகன்று யானைத்  
தட உடைக் கையும் கரபமும் கதலித் தண்டு ஒத்து இருக்கின் நன்று என்ப. 
1006 
அங்கம் உள் மறைந்து வட்டமாய்த் அசைவ அணி முழந்தாள் மயிர் நரம்பு  
தங்கிடாது அடைவே உருட்சியாய்ச் சிறுத்துச் சம வடிவாய் அழகு அடைந்த  
சங்கம் ஆம் சிரை என்பறத் அசைந்து ஆமை முதுகு எனத் திரண்டு உயர்ந்த அழகு  
மங்கலம் பொலிந்த புறவடி மடந்தை மன்னவன் பன்னி ஆம் மன்னோ. 
1007 
அல்லி அம் கமலக் கால் விரல் உயர்ந்து தூயவாய் அழகவாய்க் கழுநீர்  
மெல் இதழ் நிரைத்தாங்கு ஒழுங்கு உறத் திரண்டு வால் உகிர் வெண் மதிப் பிளவு  
புல்லிய போன்று மெல்லிய ஆகிப் புகர் அறத் தசைந்தன அகத்தாள்  
சொல்லியது அசைவும் மென்மையும் சமமும் துகள் அறப் படைத்தன நன்று ஆல். 
1008 
வண்ண மாந்தளிர் போல் சிவந்து எரி பொன்போல் வைகலும் வெயர்வை அற்று ஆகம்  
உண்ணம் ஆய் இருக்கின் செல்வம் உண்டாகும் ஒண் மணம் பாடலம் குவளை  
தண் அறா முளரி மல்லிகை நறும் தண் சண்பகம் போல்வன ஆகும்  
பண்ணவாம் கிளவி குயில் கிளி யாழின் படி வரும் பாக்கியம் என்னா. 
1009 
கரும் குழல் கற்றை தொட்டுச் செம்மலர்க் காலின் எல்லை  
மருங்கு நல் கூர்ந்து கன்னி வடிவு எலாம் வாக்கின் செல்வன்  
ஒருங்கு நூல் உணர்வால் தௌ¢ளி இம்பரின் உம்பர் தேத்தும்  
இரங்கும் இக் குயில் அன்னாள் மெய் இலக்கணம் அரியது என்றான். 
1010 
அங்கு அது கேடோர் யாரும் அகம் களி துளும்ப இப்பால்  
கொங்கு அலர் நறும் தார் குஞ்சி உக்கிர குமரன் போந்து  
மங்கல வரிசை மாண மத்த மான் சுமந்த வைகைச்  
சங்கு எறி துறை நீராடித் தகும் கடி வனப்புக் கொள்வான். 
1011 
கட்டு அவிழ் கண்ணி வேய்ந்து மான் மதக் கலவைச் சாந்தம்  
மட்டனம் செய்து முத்தான் மாண் கலன் முழுதும் தாங்கி  
விட்டவர் கலை வான் திங்கள் வெண் கதிர்ச் செல்வன் போல் வந்து  
இட்ட பூம் தவிசின் மேல் கொண்டு இருந்தனன் சங்கம் ஏங்க. 
1012 
அந்நிலை மண நீர் ஆதி அரும் கலப் போர்வை போர்த்த  
கன்னியைக் கொணர்ந்து நம்பி வல வயின் கவின வைத்தார்  
பன்னியொடு எழுந்து சோம சேகரன் பரனும் பங்கின்  
மன்னிய உமையும் ஆக மதித்து நீர்ச் சிரகம் தாங்கி. 
1013 
மங்கல நீரான் நம்பி மலரடி விளக்கி வாசக்  
கொங்கு அலர் மாலை சூட்டிக் குளிர் மது பருக்கம் ஊட்டி  
நங்கை தன் கையைப் பற்றி நம்பி தன் கையில் ஏற்றிப்  
புங்கவர் அறிய நன்னீர் மந்திரம் புகன்று பெய்வான். 
1014 
இரவி தன் மருமான் சோம சேகரன் என் பேர் திங்கள்  
மரபினை விளக்க வந்த சுந்தர மாறன் மைந்தன்  
உரவு நீர் ஞாலம் தாங்கும் உக்கிர வருமற்கு இன்று என்  
குரவு அலர்க் கோதை மாதைக் கொடுத்தனன் என நீர் வார்த்தான். 
1015 
மைந்து உறு மடங்கல் திண் கால் மணி வட வயிர ஊசல்  
ஐந்துடன் பதம் செய் பஞ்சி அணையினோடு அன்னத்தூவிப்  
பைந்துகில் அணை ஈர் ஐந்து பவளவாய்ப் பசும் பொன் மேனி  
இந்திர மணிக்கண் பாவை விளக்கு நான்கு இரட்டி என்ப. 
1016 
அட்டில் வாய் அடுக்கும் செம்பொன் கலங்கள் நூறு அம் பொன் ஆக்கி  
இட்டு இழை மணிக் களாஞ்சி ஏழு பொன் கவரி எட்டு  
விட்டு ஒளிர் பசும் பொன் கிண்ணப் பந்தி சூழ் விளங்க நாப்பண்  
நட்ட பொன் கலினோடு நகை மணிக் கலன் நூறு என்ப. 
1017 
பெரு விலை ஆரப் பேழை ஆயிரம் பெற்ற நுண் தூசு  
அரு விலைப் பட்டு வெவ் வேறு அமைந்தன பேழை முந்நூறு  
உரு அமுது எழுதிச் செய்த ஓவியப் பாவை அன்னார்  
திருமணிக் கலனோடு ஏவல் சேடியர் எழு நூற்று ஐவர். 
1018 
விளை வொடு மூன்று மூதூர் மின்னு விட்டு எறியும் செம்பொன்  
அளவு இருகோடி இன்ன அரும் பெறல் மகட்குச் செல்வ  
வளம் உற வரிசை ஆக வழங்கினான் முழங்கி வண்டு  
திளை மதுக் கண்ணிச் சேம சேகர மன்னன் மாதோ. 
1019 
ஆர்த்தன வியங்கள் எல்லாம் அமரர் மந்தார மாரி  
தூர்த்தனர் வேள்விச் செம் தீ சுழித்தது வலமாய்த் துள்ளி  
ஆர்த்தன மடவார் நாவின் முளைத்தன வாழ்த்து மன்றல்  
பார்த்தனர் கண்கள் எல்லாம் பெற்றன படைத்த பேறு. 
1020 
பொதி அவிழ் கடப்பந் தண் தார்ப் புயத்து இளம் காளை அன்னான்  
முதியவர் செந்தீ ஓம்ப இன்னியம் முழங்கக் காந்தி  
மதியை மங்கல நாண் பூட்டி வரி வளைச் செங்கைப் பற்றி  
விதி வழி ஏனை மன்றல் வினை எலாம் நிரம்பச் செய்தான். 
1021 
எண் இலாத வளத்தினொடும் இரவி மருமான் மடப்பிடியை  
பண் நிலாவு மறை ஒழுக்கம் பயப்ப வேள்வி வினை முடித்துக்  
தண் நிலா வெண் கலை மதியும் தாரா கணமும் தவழ்ந்து உலவ  
விண் நிலாவு மணி மாட வீதி வலமாய் வரும் எல்லை. 
1022 
மின் நேர் பொன் அம் தொடியினரும் மென் செம் பஞ்சி அடியினரும்  
பொன் நேர் மணிப்பூண் முலையினரும் புலம்பு மணிமேகலை யினரும்  
அன் நேர் ஓதித் தாரினரும் ஆகிக் கண்ணும் மனமும் அவன்  
முன்னே தூது நடப்பது என நடப்ப நடந்தார் முகிழ் முலையார். 
1023 
சுருங்கும் இடையார் தன் பவனி தொழுது வருவார் தமக்கு இரங்கி  
மருங்குல் பாரம் கழிப்பான் போல் கலையைக் கவர்ந்தும் வரைத் தோள் மேல்  
ஒருங்கு பாரம் கழிப்பான் போல் வளையைக் கவர்ந்தும் உள்ளத்துள்  
நெருங்கு பாரம் கழிப்பான் போல் நிறையைக் கவர்ந்து நெறிச் செல்வான். 
1024 
வான மதி சேர் முடி மறைத்த வழுதி மகனே இவன் என் என்றால்  
ஆனை எழுத்தில் சிங்க இள அடலேறு என்ன வயல் வேந்தர்  
செனை தழுவ வரும் பவனிக்கு ஒப்பு ஏது ஒப்புச் செப்பும் கால்  
யானை மகளை மணந்து வரும் இளையோன் பவனிச் செல்வமே. 
1025 
இம்மை தனிலும் நன்மை தரும் ஈசன் தனையும் வாசவற்கு  
வெம்மை தருவன் பழிதவிர்க்க விமலன் தனையும் அம் கயல் கண்  
அம்மை தனையும் பணிந்து மீண்டு அரசன் கோயில் அடைந்து ஈன்றோர்  
தம்மை முறையால் அடிக் கமலம் தலையில் பணிந்தான் தனிக்குமரன். 
1026 
ஆனாவறு சுவை அடிசில் அயில் வோர் தம்மை அயில் வித்து  
நானா வரிசை வரன் முறையா நல்கி விடையும் நல்கிப் பின்  
வான் நாடவர்க்கும் விடைகொடுத்து மதிக்கோன் ஒழுகி வைகும் நாள்  
தேனார் கண்ணித் திரு மகனுக்கு இதனைச் செப்பி இது செய்வான். 
1027 
மைந்த கேட்டி இந்திரனும் கடலும் உனக்கு வான் பகை ஆம்  
சந்த மேருத் தருக்கு அடையும் சத வேள்விக் கோன் முடி சிதற  
இந்த வளை கொண்டு எறி கடலில் இவ் வேல் விடுதி இச் செண்டால்  
அந்த மேரு தனைப் புடை என்று எடுத்தும் கொடுத்தான் அவை மூன்றும். 
1028 
அன்ன மூன்று படைக் கலமும் தொழுது வாங்கி அடல் ஏறு  
தன்னை நேரா எதிர்நிற்கும் தனயன் தனை உக்கிர வழுதி  
என்ன ஆதி மறை முழங்க வியங்கள் ஏங்க முடி கவித்துத்  
தன்னது ஆணை அரசு உரிமை தனிச் செங் கோலும் தான் நல்கா. 
1029 
சூட்சி வினையில் பொன் அனைய சுமதி தன்னைத் தொல் நூலின்  
மாட்சி அறிஞர் தமை நோக்கி வம்மின் இவனைக் கண் இமைபோல்  
காட்சி பயக்கும் கல்வியும் போல் காப்பீர் இது நும் கடன் இம் மண்  
ஆட்சி இவனது என்று இளைய அரி ஏறு அணையான் தனை நல்கா. 
1030 
வெய்ய வேல் காளை அன்னான் தன்னையும் வேறு நோக்கி  
ஐய இவ்வையும் தாங்கி அளித்தன நெடு நாள் இந்த  
மை அறு மனத்தார் சொல்லும் வாய்மை ஆறு ஒழுகி நீயும்  
செய்ய கோன் முறை செய்து ஆண்டு திருவொடும் பொலிக என்றான். 
1031 
பன்னரும் கணங்கள் எல்லாம் பண்டைய வடிவம் ஆகத்  
தன் அருள் துணையாய் வந்த தடாதகைப் பிராட்டி யோடும்  
பொன் நெடும் கோயில் புக்குப் பொலிந்தனன் இச்சை தன்னால்  
இன் அருள் படிவம் கொள்ளும் ஈறு இலா இன்ப மூர்த்தி. 
1032 
பின்னர் உக்கிர பெயர் தரித்த அத்  
தென்னர் கோ மகன் தெய்வ நால் மறை  
மன்னும் நல் அறம் வளர வையகம்  
தன்னது ஆணையால் தாங்கி வைகினான். 
 
உக்கிர பாண்டியனுக்கு வேல் வளை  
 செண்டு கொடுத்த படலம் சுபம்  
 

13. கடல் சுவற வேல் விட்ட படலம்

 
 
1033 
வளை யொடு செண்டு வேல் மைந்தற்கு அஞ்சுரும்  
பனைய வேம்பு அணிந்த கோன் அளித்த வாறிதத்  
தளை அவிழ் தாரினான் தனையன் வேலை மேல்  
இளையவன் என்ன வேல் எறிந்தது ஓதுவாம். 
1034 
திங்களின் உக்கிரச் செழியன் வெண் குடை  
எங்கணும் நிழற்ற வீற்று இருக்கும் நாள் வயில்  
சங்கை இல்லாத மா தரும வேள்விகள்  
புங்கவர் புடைதழீஇப் போற்ற ஆற்றும் நாள். 
1035 
அரும் பரி மகம் தொண்ணூற்று ஆறு செய்துழிச்  
சுரும்பு அரி பெரும் படைத் தோன்ற தண் அறா  
விரும்பரி முரன்று சூழ் வேம்பின் அம் குழைப்  
பொரும் பரி வீரன் மேல் பொறாது பொங்கினான். 
1036 
மன்னிய நாடு எலாம் வளம் சுரந்து வான்  
பொன்னிய நாடு போல் பொலிதலால் இந்த  
மின்னிய வேலினான் வேள்வி செய்வது என்று  
உன்னிய மனத்தன் ஓர் சூழ்ச்சி உன்னினான். 
1037 
பொரும் கடல் வேந்தனைக் கூவிப் பொன் என  
இரும் கடல் உடுத்த பார் ஏழும் ஊழிநாள்  
ஒருங்கு அடு வெள்ளம் ஒத்து உருத்துப் போய் வளைந்து  
அரும் கடி மதுரையை அழித்தியால் என்றான். 
1038 
விளைவது தெரிகிலன் வேலை வேந்தனும்  
வளவயன் மதுரையை வளைந்திட்டு இம் எனக்  
களைவது கருதினான் பேயும் கண் படை  
கொள் வரு நனந்தலைக் குருட்டுக் கங்குல் வாய். 
1039 
கொதித்தலைக் கரங்கள் அண்ட கூடம் எங்கும் ஊடு போய்  
அதிர்த்து அலைக்க ஊழி நாளில் ஆர்த்து அலைக்கும் நீத்தம் ஆய்  
மதித் தலத்தை எட்டி முட்டி வரும் ஓர் அஞ்சனப் பொருப்பு  
உதித்தல் ஒத்து மண்ணும் விண்ணும் உட்க வந்தது உத்தியே. 
1040 
வங்க வேலை வெள்ளம் மாட மதுரை மீது வரு செயல்  
கங்குல் வாய திங்கள் மீது காரி வாய கார் உடல்  
வெம் கண் வாள் அரா விழுங்க வீழ்வது ஒக்கும் அலது கார்  
அம் கண் மூட வருவது ஒக்கும் அல்லது ஏது சொல்வதே. 
1041 
வட்ட ஆமை பலகை வீசு வாளை வாள் கண் மகரமே  
பட்ட யானை பாய் திரைப் பரப்பு வாம் பரித்திரள்  
விட்ட தோணி இரதம் இன்ன விரவு தானை யொடு கடல்  
அட்டம் ஆக வழுதி மேல் அமர்க்கு எழுந்தது ஒக்குமே. 
1042 
இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்  
நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா  
மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்  
முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார். 
1043 
வழுதி உன் தன் நகர் அழிக்க வருவது ஆழி வல்லை நீ  
எழுதி போதி வென்றி வேல் எறிந்து வாகை பெறுக எனத்  
தொழுத செம் கரத்தினான் துதிக்கும் நாவினான் எழீஇக்  
கழுது உறங்கும் கங்குலில் கனா உணர்ந்து காவலான். 
1044 
கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில் பல கடந்து  
உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே  
மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு  
எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய். 
1045 
கனவில் வந்த சித்த வேடர் நனவில் வந்து காவலோன்  
நினைவு கண்டு பொழுது தாழ நிற்பது என் கொல் அப்பனே  
சினவி வேலை போல வந்த தெவ்வை மான வலிகெட  
முனைய வேல் எறிந்து ஞால முடிவு தீர்த்தி ஆல் என. 
1046 
எடுத்த வேல் வலம் திரித்து எறிந்த வேலை வேல் முனை  
மடுத்த வேலை சு•றெனவ் அறந்தும் ஆன வலி கெட  
அடுத்து வேரி வாகை இன்றி அடி வணங்கும் தெவ்வரைக்  
கடுத்த வேல் வலான் கணைக் காலின் மட்டது ஆனதே. 
1047 
சந்த வேத வேள்வியைத் தடுப்பது அன்றி உலகு எலாம்  
சிந்த வேறு சூழ்ச்சி செய்த தேவர் கோவின் ஏவலால்  
வந்த வேலை வலி அழிந்த வஞ்சர்க்கு நன்றி செய்து  
இந்த வேலை வலி இழப்பது என்றும் உள்ளதே கொலாம். 
1048 
புண் இடை நுழைந்த வேலால் புணரியைப் புறம் கண்டோன் பால்  
மண் இடை நின்ற சித்தர் வான் இடை மறைந்து ஞானக்  
கண் இடை நிறைந்து தோன்றும் கருணையால் வடிவம் கொண்டு  
விண் இடை அணங்கி னோடு விடை இடை விளங்கி நின்றார். 
1049 
முக்கணும் புயங்கள் நான்கும் முளை மதிக் கண்ணி வேய்ந்த  
செக்கர் அம் சடையும் காள கண்டமும் தெரிந்து தென்னன்  
பக்கமே பணிந்து எழுந்து பரந்த பேர் அன்பும் தானும்  
தக்க அஞ்சலி செய்து ஏத்தித் தரை மிசை நடந்து செல்வான். 
1050 
துந்துபி ஐந்தும் ஆர்ப்பப் பார் இடம் தொழுது போர்ப்பத்  
தந்திர வேத கீதம் ததும்பி எண் திசையும் தாக்க  
அந்தர நாடர் ஏத்த அகல் விசும்பு ஆறது ஆக  
வந்து தன் கோயில் புக்கான் வரவு போக்கு இறந்த வள்ளல். 
1051 
அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்  
இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்  
பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி  
மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ. 
1052 
வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண்  
விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள் ஆடும்  
தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்துக்  
களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல் வேந்தன். 
 
கடல் சுவற வேல் விட்ட படலம் சுபம் 
 

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Thiruvilaiyatar puranam

திருவிளையாடற் புராணம்

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Discovery of the god to mortals

தல புராணங்கள்