logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

திருவிளையாடற் புராணம் - படலம் 58-முதல் 61-வரை

பரஞ்சோதி முனிவர் அருளிய

(திருவாலவாய் மான்மியம்)

 

திருச்சிற்றம்பலம்

 

மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம்

(வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் முதல் மண்
சுமந்த படலம் வரை)

58. வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

 
2713.	கலைவீசு மதிச் சடையோன் கடல் துறைவன் தலைச் 
                  சென்று 
வலைவீசி அவன் பாச வலை வீசும் பரிசு இது மேல் 
அலை வீசும் புனல் வாதவூரரை வந்து அவிச்சை வலி 
நிலை வீசிப் பணி கொண்ட நெறி அறிந்த படி 
                  மொழிவாம். 	 
 
2714.	தொடுத்த வறுமையும் பயனும் தூக்கி வழங்குநர் போல 
அடுத்த வயல் குளம் நிரப்பி அறம் பெருக்கி அவனி 
                    எலாம் 
உடுத்த கடல் ஒருவர்க்கும் உதவாத உவரி என 
மடுத்து அறியாப் புனல் வைகைக் கரை உளது வாதவூர். 	 
 
2715.	விழவு அறா நகர் எங்கும் விருந்து அறா மனை எங்கும் 
மழ அறா மகிழ் எங்கும் மறை அறா கிடாஇ எங்கும் 
முழவு அறா அரங்கு எங்கும் முகில் அறா பொழில் எங்கும் 
உழவு அறா வயல் எங்கும் உடம்பு அறா உயிர் என்ன. 
 
2716.	ஆய வளம் பதியதனில் அமாத்தியரில் அரு மறையின் 
தூய சிவ ஆகம நெறியின் துறை விளங்க வஞ்சனையான் 
மாயன் இடும் புத்த இருள் உடைந்தோட வந்து ஒருவர் 
சேய இளம் பரிதி எனச் சிவன் அருளால் அவதரித்தார். 	 
 
2717.	பேர் வாத ஊரர் எனப் பெற்றுத் தம் பிறங்கு மறைச் 
சார்வாய நூல் வழியால் சடங்கு எல்லாம் நிலை வெய்தி 
நீர்வாய இளமதி போல் நிரம்புவார் வேத முதல் 
பார்வாய் எண் எண் கலையும் பதினாறு ஆண்டினில் 
                  பயின்றார். 	 
 
2718.	இத்தகை யோர் நிகழ் செய்தி அறிந்தவர் சென்று இயம்ப 
                    அரி 
மர்த்தன பாண்டியன் கேட்டு வரவழைத்து மற்று அவரைச் 
சித்தம் மகிழ் வரிசையினால் சிறப்பு அளித்துத் தன் 
                    கோயில் 
வித்தக நல் மதி அமைச்சின் தொழில் பூட்டி மேம் 
                    படுத்தான். 	 
 
2719.	செற்றம் மிகும் கருவிகளின் திறல் நூலும் மனு வேந்தன் 
சொற்ற பெரும் தொல் நூலும் துளக்கம் அற விளக்கம் 
                    உறக் 
கற்று அறிந்தோர் ஆதலினால் காவலற்குக் கண் போன்ற 
முற்றும் உணர்ந்த அமைச்சரினும் முதல் அமைச்சராய் 
                    நிகழ்வார். 	 
 
2720.	புல்லாதார் முரண் அடக்கிப் பொருள் கவர் வார் என்பது 
                    எவன் 
செல்லாத பல் வேறு தீபத்துச் செம் கோன்மை 
வல்லாரும் தத்தமதேத்து அரிய பொருள் வரவிடுத்து 
நல்லாராய் ஒப்புரவு நட்பு அடைய நடக்கின்றார். 	 
 
2721.	அண்ணல் அரிமருத்தனனுக்கு அடல் வாதவூர் அமைச்சர் 
கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து 
                   ஒழுகுவார் 
தண் அளி செய்து அவனி எலாம் தம் கிளைபோல் குளிர் 
                   தூங்க 
வண்ண மதிக் குடை நிழற்றி முறை செய்து வாழும் நாள். 	 
 
2722.	மெய்ம்மை ஆம் பொருள் விவேக மும் வேறு பாடு ஆய 
பொய்ம்மை ஆம் பொருள் விவேகமும் புந்தியுள் தோன்ற 
இம்மை ஆசையும் மறுமையில் ஆசையும் இகந்து 
செம்மை ஆகிய கருத்தராய்ப் பரகதி தேர்வார். 	 
 
2723.	புத்தர் ஆதியோர் புறவுரை நெறிகளும் பொய்யா 
நித்த வேத நூல் தழுவிய அகவுரை நெறியும் 
சித்தம் மாசு அறுத்து அரன் அருள் தௌ¤வியாது 
                  அதனான் 
மித்தை ஆணவத் தொடக்கு அறாதில்லை ஆம் வீடும். 	 
 
2724.	பத்தி செய்து அரன் அருள் பெரும் பத்தருக்கு அன்றி 
முத்தி எய்தரிது என மறை மொழிவது அப் பொது நூல் 
சத்தியாப் பொருள் தௌ¤வு எலாம் சத்திநி பாதர்க்கு 
உய்த்து உணர்த்துவது ஆகமம் என்பர் மெய் உணர்ந்தோர். 	 
 
2725.	வேத ஆகமச் சென்னியில் விளை பொருள் அப் பேதம் 
பேதம் ஆகிய பிணக்கு அறுத்து இருள் பிணி அவிழ்த்து 
நாதன் ஆகிய தன்னையும் என்னையும் நல்கும் 
போதன் ஆகிய குருபரன் வருவது எப்பொழுது ஆல். 	 
 
2726.	கரவு இலாத பேர் அன்பினுக்கு எளிவரும் கருணைக் 
குரவனார் அருள் அன்றி இக் கொடிய வெம் பாசம் 
புரை இல் கேள்வியால் கடப்பது புணையினால் அன்றி 
உரவு நீர்க்கடல் கரம் கொடு நீந்துவது ஒக்கும்.	 
 
2727.	என்று அவ் வாதவூர் மறையவர் இன்ப வீடு எய்தக் 
துன்றும் ஆசையால் தொடக்கு உண்டு சுருதி ஆகம நூல் 
ஒன்று கேள்வியோர் வருந்தொறும் உணர்ந்தவர் இடைத் 
                      தாம் 
சென்று காண் தொறும் அளவளாய்த் தேர்குவர் ஆனார். 	 
 
2728.	எண்ணிலார் இடத்து அளந்து அளந்து அறிபொருள் 
                 எல்லாம் 
உண்ணி நீர் விடாய்க்கு உவரி நீர் உண்டவர் ஒப்ப 
அண்ணலார் அகத்து அமைஉறாது அரசனுக்கு உயிரும் 
கண்ணுமாய் அமைச்சு உரிமையும் கை விடாது இயல்வார். 	 
 
2729.	கள்ளக் காதலன் இடத்து அன்பு கலந்து வைத்து ஒழுகும் 
உள்ளக் காரிகை மடந்தை போலும் உம்பரைக் காப்பான் 
பள்ளக் காரி உண்டவனிடத்து உள்ளன்பு பதிந்து 
கொள்ளக் காவலன் இடைப் புறத் தொழிலும் 
               உட்கொண்டார். 	 
 
2730.	இன்ன செய்கையின் ஒழுகுவார் ஒரு பொழுது ஏகித் 
தென்னர் தம்பிரான் அவை இடைச் சென்று எதிர் நின்றார் 
அன்னபோது அடு பரி நிரை காப்பவர் அரசன் 
முன்னர் வந்து தாழ்ந்து ஒரு சிறை நின்று அது மொழிவார். 	 
 
2731.	மறம் தவாத வேல் வலவ நம் வயப் பரி வெள்ளத்து 
இறந்தவாம் பரி போக நின்று எஞ்சிய எல்லாம் 
நிறைந்த நோயவும் நெடிது மூப்பு அடையவும் அன்றிச் 
சிறந்தவாம் பரி ஒன்று இலை தேர்ந்திடின் என்றார்.	 
 
2732.	மன்றல் வேம்பனும் வாதவூர் வள்ளலை நோக்கி 
இன்று நீர் நமது அறை திறந்து இருநிதி எடுத்துச் 
சென்று வேலை அம் துறையில் வந்து இறங்குவ தெரிந்து 
வென்றி வாம் பரி கொடு வரப் போம் என்று விடுத்தான். 	 
 
2733.	உள்ளம் வேறுபட்டு அமைச்சியல் நெறியில் நின்று ஒழுகும் 
வள்ளலார் நிதியறை திறந்து அரும் பெறல் வயமான் 
கொள்ள வேண்டிய பொருள் எலாம் கொண்டு தாழ் 
                    இறுக்கி 
வெள்ளை மா மதி வேந்தனை விடை கொடு போவார். 	 
 
2734.	எடுத்த பொன் சுமை ஒட்டகத்து இட்டு முன் ஏக 
விடுத்து விண் தொடு திண் திமில் விடையவன் கோயில் 
அடுத்த விழ்ந்த பொன் அம்புயத் தடம் படிந்து அனைய 
மடுத் தடம் கரைச் சித்தி ஐங்கரத்தனை வணங்கா. 	 
 
2735.	கருணை நாயகி அம் கயல் கண்ணி எம் பிராட்டி 
அருண நாள் மலர்ச் செய்ய சீற் அடித்தலம் இறைஞ்சி 
வருணனார் பெரு வயிற்று நோய் வலி கெடுத்து ஆண்ட 
தருண நாள் மதிச் சடை உடை அடிகள் முன் தாழா. 	 
 
2736.	ஒன்று வேண்டும் இப் பொருள் எலாம் உனக்கும் ஐயம் 
                    பொறியும் 
வென்று வேண்டும் நின் அன்பர்க்கும் ஆக்குக வெள்ளி 
மன்று வேண்டி நின்று ஆடிய வள்ளல் என் குறை ஈது 
என்று வேண்டிய நின்று ஏத்துவார்க்கு இறைவனின் அருள் 
                    போல். 
 
2737.	ஆதி சைவன் ஆம் அருச்சகன் ஒருவன் நேர் அணைந்து 
பூதி ஈந்தனன் நமக்கு இது போல் இலை நிமித்தம் 
ஈது நல் நெறிக்கு ஏது என்று இரு கை ஏற்று அணிந்து 
வேத நாதனை இறைஞ்சினார் விடை கொடு மீண்டார். 	 
 
2738.	இன்னியம் அதிர்ந்தன எழுந்தன பதாதி 
துன்னிய இணைக்கவரி துள்ளின துகில் கால் 
பொன் இயல் மதிக் குடை நிழன்றன பொலம் கொள் 
மின்னிய மணிச் சிவிகை மேல் கொடு நடந்தார்.	 
 
2739.	மற்று இவர் வழிப்படு முன் மாறி நடம் ஆடும் 
வெற்றி விடையார் இவர் வினைத் தொகையின் ஒப்பும் 
பற்றிய இருட்டு மல பக்குவமும் நோக்கா 
உற்று அடிமை கொண்டு பணி கொண்டு அருள உன்னா. 
 
2740.	சந்த மறை தீண்ட அரிய தம் கருணையால் ஓர் 
அந்தணர் குலக் குரவன் ஆகி அடி நீங்கா 
மைந்தர் பலர் தம்மொடு பெருந்துறையில் வந்தோர் 
கொந்து அலர் நெருங்கிய குருந்து அடி இருந்தார்.	 
 
2741.	பெரும் கடல் அனீகமொடு போய்ப் புற அடுத்த 
இரும் கடம் அளப்பு இல கடந்து எழு பிறப்பு ஆம் 
கரும் கடல் கடக்க வருவார் கருணை வெள்ளப் 
பெருங்கடல் நிறைந்து உறை பெரும் துறை அடைந்தார்.	 
 
2742.	அடுத்திட அடுத்திட அகத்து உவகை வெள்ளம் 
மடுத்திட முகிழ்த்த கைம் மலர் கமலம் உச்சி 
தொடுத்திட விழிப்புனல் துளித்திட வினைக்கே 
விடுத்திடும் மனத்து அருள் விளைந்திட நடந்தார்.	 
 
2743.	பித்து இது எனப் பிறர் நகைக்க வரு நாலாம் 
சத்தி பதியத் தமது சத்து அறிவு தன்னைப் 
பொத்திய மலத்தினும் வெரீஇச் சுமை பொறுத்தோன் 
ஒத்து இழி பிணிப்பு உறு ஒருத்தனையும் ஒத்தார்.	 
 
2744.	நெருப்பில் இடு வெண்ணெய் என நெஞ்சு உருக என்னை 
உருக்கும் இதனால் எனை ஒளித்த மல ஆற்றால் 
கருக்கும் அவன் ஆகி எனை ஆள் கருணை வெள்ளம் 
இருக்கும் இடனே இனிது என எண்ணி நகர் புக்கார். 	 
 
2745.	காய் இலை அடைந்த கழு முட் படை வலத்தார் 
கோயிலை அடைந்து குளிர் வான் புனல் குடைந்து 
வாயிலை அடைந்து உடலம் மண் உற விழுந்து 
வேயிலை அடைந்தவரை மெய்ப் புகழ் வழுத்தா.	 
 
2746.	ஆலய மருங்கு வலமாக வருவார் முன் 
மூல மறை ஓதி முடியாத பொருள் தன்னைச் 
சீல முனிவோர் தௌ¤ய மோனவழி தேற்றும் 
கோல முறைகின்ற ஒர் குருந்தை எதிர் கண்டார்.	 
 
 
2747.	வேத நூல் ஒரு மருங்கினும் மெய்வழிச் சைவப் 
போத நூல் ஒரு மருங்கினும் புராணத்துட் கிடந்த 
கீத நூல் ஒரு மருங்கினும் கிளை கெழு சமய 
போத நூல் ஒரு மருங்கினும் வாய்விட்டுப் பிறங்க.	 
 
2748.	சுருதி கூறிய அறம் முதல் நான்கும் அத் தொல் நூல் 
அரியது ஆம் கதிக்கு ஏது என்று ஆகமம் காட்டும் 
சரியை ஆதி நால் பதமும் தலை தெரிந்து உணர்ந்த 
பெரிய மாணவர் கழகமும் வினா விடை பேச.	 
 
2749.	சரியை வல்ல மெய்த் தொண்டரும் சம்புவுக்கு இனிய 
கிரியை செய்யும் நல் மைந்தரும் கிளர் சிவ யோகம் 
தெரியும் சாதகக் கேளிரும் தேசிகத் தன்மை 
புரியும் போதகச் செல்வரும் அளவு இலர் பொலிய.	 
 
2750.	ஒழிந்த நோன்பினர் ஆடலர் பாடலர் உலகம் 
பழித்த செய்கையர் அழுகையர் நகையினர் பாசம் 
கழித்த கண்ணினால் அரன் உருக் கண்டு கொண்டு 
                    உலகில் 
விழித்த கண் குருடாத் திரி வீரரும் பலர் ஆல். 	 
 
2751.	கரவு இல் உள்ளம் ஆம் விசும்பு இடைக் காசு அற 
                  விளங்கும் 
பரசிலா சுடர்க்கு உதயம் ஈறு இன்மையால் பகலும் 
இரவு நேர் படக் கண்டிலர் இயன்று செய் நித்த 
விரதம் ஆதி னோன்பு இழந்து உறை விஞ்சையர் பலர் 
                  ஆல். 	 
 
2752.	உடையும் கோவணம் உண்டியும் கைப்பலி உறவு என்று 
அடையும் கேளிரும் அரன் அடியார் கண்டிகலன் கண் 
படையும் பாரிடம் ஆயினும் பகல் இரா முதல் ஈறு 
இடை இன்று ஆம் இடத்து உறங்குவது இ•து அவர் 
                   வாழ்க்கை. 
 
2753.	இத்தகைப் பல தொண்டர் தம் குழத்து இடையால் அம் 
ஒத்த பைங் குருந்து அடியினில் யோக ஆசனத்தில் 
புத்தகத்து எழுதிய சிவஞான மெய்ப் போதம் 
கைத்தலம் தரித்து இருப்பது ஓர் கருணையைக் கண்டார். 	 
 
2754.	மன்றுள் ஆடிய ஆனந்த வடிவமும் வடவால் 
ஒன்றி நால்வருக்கு அசைவு அற உணர்த்திய உருவும் 
இன்று நாயினேற்கு எளிவந்த இவ் உரு என்னா 
அன்று நாயகன் குறிப்பு உளத்து உணர்த்திட அறிந்தார். 	 
 
2755.	முன்பு அணிந்தனர் அணிந்தனர் அஞ்சலி முடிமேல் 
என்பு நெக்கிட உருகினர் இனியார் எளி வந்து 
அன்பு எனும் வலைப் பட்டவர் அருள் வலைப் பட்டார் 
துன்ப வெம் பவ வலை அறுத்திட வந்த தொண்டர். 	 
 
2756.	காலமும் கனாக் காட்சியும் நிமித்தமும் கடிந்தார் 
சீல மாணவர் செவ்வி தேர் தேசிகன் என்ன 
மூல ஆகமம் ஓதினான் முறுக்கு அவிழ் கழுநீர் 
மாலை சாந்து அணிந்து அடியின் மேல் வன் கழல் வீக்கி. 	 
 
2757.	அண்ணல் வேதியர் ஒழுக்கமும் அன்பும் கண்டு யாக்கை 
உள் நிலா உயிர் பொருள் புனலுடன் கவர்ந்து உள்ளக் 
கண் இலான் மலம் கழீஇப் பத கமலமும் சூட்டி 
வண்ண மாமலர்ச் செம்கரம் சென்னி மேல் வையா. 	 
 
2758.	சூக்கம் ஆகும் ஐந்து எழுத்தினில் சுற்றிய பாச 
வீக்க நீக்கி மெய் ஆனந்தம் விளை நிலத்து உய்த்துப் 
போக்கு மீட்சியுள் புறம்பு இலாப் பூரண வடிவம் 
ஆக்கினான் ஒரு தீபகம் போல் வரும் அண்ணல்.	 
 
2759.	பார்த்த பார்வையால் இரும்பு உண்ட நீர் எனப் பருகும் 
தீர்த்தன் தன்மையும் குருமொழி செய்ததும் தம்மைப் 
போர்த்த பாசமும் தம்மையும் மறந்து மெய்ப் போத 
மூர்த்தியாய் ஒன்றும் அறிந்திலர் வாதவூர் முனிவர். 
 
2760.	தேனும் பாலும் தீம் கன்னலும் அமுதும் ஆய் தித்தித்து 
ஊனும் உள்ளம் உருக்க உள் ஒளி உணர்ந்து இன்பம் 
ஆனவாறு தேக்கிப் புறம் கசிவது ஒத்து அழியா 
ஞான வாணி வந்து இறுத்தனள் அன்பர் தம் நாவில்.	 
 
2761.	தொழுத கையினர் துளங்கிய முடியினர் துளும்ப 
அழுத கண்ணினர் பொடிப்புறும் யாக்கையர் நாக்குத் 
தழு தழுத்தவன் புரையினர் தமை இழந்து அழல் வாய் 
இழுதை அன்ன மெய்யினர் பணிந்து ஏத்துவார் ஆனார். 	 
 
2762.	பழுது இலாத சொல் மணியினைப் பத்தி செய்து அன்பு 
முழுதும் ஆகிய வடத்தினான் முறை தொடுத்து அலங்கல் 
அழுது சாத்தும் மெய் அன்பருக்கு அகம் மகிழ்ந்து ஐயர் 
வழு இலாத பேர் மாணிக்க வாசகன் என்றார். 	 
 
2763.	பாட்டிற்கு இன்புறு குருபரன் பாதம் மேல் கண்ணீர் 
ஆட்டிச் சொல் மலர் அணிந்து தற் போத இன் அமுதை 
ஊட்டித் தற்பர ஞானம் ஆம் ஓம வெம் கனலை 
மூட்டிச் சம்புவின் பூசை மேல் முயற்சியர் ஆனார். 	 
 
2764.	ஆசை வெம் பவ வாசனை அற்று மாணிக்க 
வாசகப் பிரான் தேசிகன் மாணவர் ஓதும் 
ஓசை ஆகம உபநிடத பொருள் எலாம் கேட்டு 
நேசம் அங்கு வைத்து இருந்தனர் அது கண்டு நிருத்தன். 	 
 
2765.	தித்திக்கும் மணி வார்த்தை இன்னம் சின்னாள் திருச் 
   செவியில் அருந்தவும் கைச் செம் பொன் எல்லாம் 
பத்திப் பேர் அன்பு அளித்துக் கவர்ந்து வேண்டும் பணி 
      கொடு பாண்டியனை இவர் பண்பு தேற்றி 
முத்திக்கே விடுத்திடவும் புத்தை வாது முடித்திடவும் 
           திருவுள்ளம் உன்னம் எய்தி 
எத்தித் தொண்டரைக் கருமம் சிறிது உண்டு இங்கே 
      இருத்தி என உருக்கரந்தான் அடிய ரோடும். 	 
 
2766.	கனவில் வரும் காட்சி எனக் கருணை மூர்த்தி காட்டி 
     மறைத்தலும் அன்பர் கலக்கத்து ஆழ்ந்து 
நனவு கொல்லோ கனவு கொல்லோ இன்று நாதன் 
     ஞமலிக்குத் தவிசு இட்ட நலம் போல் என்னை 
நினைவரிய திருமேனி காட்டி ஆண்டு நீத்ததை என்று 
             ஐயுற்று நெஞ்சம் தேறி 
இன அடியாருடன் கூட்டாது ஏகினாயோ என்னையும் என் 
         வினையையும் இங்கு இருத்தி எந்தாய். 	 
 
2767.	வஞ்ச வினைக் கொள் கலனாம் உடலைத் தீவாய் 
  மடுக்கிலேன் வரை உருண்டு மாய்ப் பேன் அல்லேன் 
நஞ்சு ஒழுகு வாளாலும் குறைப்பேன் அல்லேன் ஆதனே 
          அதுவும் நினது உடைமை என்றே 
அஞ்சினேன் தனேயும் அழியாது ஆவி ஐயனே நினைப் 
          பிரிந்து ஆற்ற கில்லேன் 
என் செய்கோ எந்தாயோ எந்தாயோ என்று இரங்கினார் 
        புரண்டு அழுதார் இனைய சொல்வார். 	 
 
2768.	வறியவனாம் ஒரு பிறவிக் குறுடன் கையில் வந்த பெரு 
        விலை மணி போல் மழலை தேறாச் 
சிறியவனாம் ஒரு மதலை கையில் கொண்ட செம் பொன் 
        மணி வள்ளம் போல் தேவர் யார்க்கும் 
அறிவரியாய் சிறியேனை எளிவந்து ஆண்ட அருமை 
        அறியேன் துன்பத்து அழுவத்து ஆழாப் 
பிறிவறியா அன்பரொடு அகன்றாய் கல்லாப் பேதையேன் 
        குறை அலது எம்பிரானால் என்னே. 	 
 
2769.	மண் ஆதி ஆறு ஆறு மனம் துழாவித் தடு மாறிப் 
புண் ஆகி எனைக் காணாது உழல் கின்றேனைப் போத 
                     அருள் 
கண்ணால் அவை முழுதும் கரைய நோக்கி யான் யான் 
                     என்று 
எண்ணா எனைத் தந்தாய் எங்கு உற்றாயோ என் தாயோ. 
 
2770.	வான் ஆதி ஐந்து முதல் வகுத்த ஓசை முதல் ஐந்தும் 
ஆனாதி அங்கு மனம் ஆதி நான்கும் வழி அடைப்பத் 
தேன் ஆதி அறு சுவையும் கழிய ஊறும் தௌ¢ அமுதம் 
யான் ஆர நல்கினையால் எங்கு உற்றாயோ என் தாயே. 	 
 
2771.	மாசாய் மறைக்கும் மல வலியும் நானும் வேறு இன்றி 
ஆசா விகார மலம் ஆயினேனைப் பொருள் படுத்திப் 
பேசாத இன்பு உருவின் ஒடு என்னைப் பின் வைத்த 
ஈசா எனை இங்கு இட்டு எங்கு உற்றாயோ என்தாயே.	 
 
2772.	என்று வாய் திறந்து அரற்றினார் இரங்கினார் புனிற்றுக் 
கன்று நீங்கிய ஆன் எனக் கரைந்த நெஞ்சினராய்ச் 
சென்று கோபுர வாயிலின் புறம்பு போய்த் திரண்டு 
நின்ற காவலன் தமர்களை நேர்ந்தனர் நோக்கா.	 
 
2773.	துங்க வாரியில் கடும் பரித் தொகை எலாம் ஆடித் 
திங்களின் தலைவரும் என முன்பு போய்த் தென்னர் 
புங்கவன் தனக்கு உணர்த்துமின் போம் என விடுத்தார் 
அம் கண் நாயகன் பெருந்துறை நாயகன் அன்பர்.	 
 
2774.	புரசை மா வயப் புரவிதேர் பொருநர் போய்ப் பொறி 
                  வண்டு 
இரை செய்தார் முடி வேந்தன் முன் இறைஞ்சினார் 
                  உள்ளது 
உரை செய்தார் அது கேட்டு ஒன்றும் உரைத்திலன் 
                  இருந்தான் 
நிரை செய்து தார்ப் பரி வரவினை நோக்கிய நிருபன். 	 
 
2775.	வள்ளல் வாதவூர் முனிகளும் மன்னவன் பரிமாக் 
கொள்ள நல்கிய பொருள் எலாம் குருந்தில் வந்து ஆண்ட 
பிள்ளை வாண் மதிச் சடை முடிப் பெருந்துறை 
                 மறையோர்க்கு 
உள்ள ஆதரம் பெருக முன் வேண்டியாங்கு உய்ப்பார். 	 
 
2776.	சிறந்த பூசைக்கும் திருவிழாச் சிறப்புக்கும் செல்வம் 
நிறைந்த ஆலயத் திருப்பணித் திறத்துக்கும் நிரப்பி 
அறந்த வாத பேர் அன்பர்க்கும் செலுத்தி அத்தலத்தே 
உறைந்த தவாவற இன்னணம் ஒழுகு நாள் கழிப்பார்.	 
 
2777.	எல்லை கூறிய குளிர் மதி அடுக்கம் வந்து எய்த 
வல்லல் யானையான் இன்னமும் வயப்பரி வந்தது 
இல்லையால் இது என் என ஓலையும் எழுதிச் 
செல்ல உய்த்தனன் வாதவூர் அமைச்சர் திருமுன்.	 
 
2778.	மன்னவன் திரு முகம் கண்டு முறைமையால் வாங்கி 
அன்ன வாசகம் தெரிந்து கொண்டு ஆதி ஈது இல்லா 
முன்னவன் திரு அருள் கடல் மூழ்கிய முனிவர் 
என்னை வேறு இனிச் செய்யுமாறு என்று நின்று அயர்வார். 	 
 
2779.	சிந்தை ஆகிய செறுவினுள் சிவ முதல் ஓங்கப் 
பந்த பாசம் வேர் அறக் களைந்து அருள் புனல் பாய்ச்சி 
அந்தம் ஆதியின்று ஆகிய ஆனந்த போகம் 
தந்த தேசிக உழவன் தன் கோயிலைச் சார்ந்தார். 	 
 
2780.	என் நாயகனே பொன் நாடர் ஏறே ஏறு கொடி உயர்த்த 
மன்னா தென்னா பெருந்துறை எம் மணியேவழுதி பொருள் 
                   எல்லாம் 
நின் ஆலயத்து நின் அடியார் இடத்தும் செலுத்தும் நெறி 
                   அளித்தாய் 
பின் நான் அவனுக்கு என் கொண்டு பரிமாச் செலுத்தப் 
                   பெறுமாறே. 	 
 
2781.	என்னா இறைஞ்சி எழுந்து ஏத்தி இரந்தார் எதிரே பெருந் 
                 துறையின் 
மின்னார் சடைமேல் பிழைமுடித் தோன் விசும்பின் நிறைந்த 
                 திருவாக் கான் 
மன்னா அவற்குப் பரி எல்லாம் வரும் என்று ஓலை விடுதி 
                 எனச் 
சொன்னான் அது கேட்டு அகத்து உவகை துளும்பி வரிந்து 
                 சுருள் விடுத்தார். 	 
 
2782.	அந்த ஓலைப் பாசுரமும் அறையக் கேட்டு நின்று ஆங்கு 
                    ஓர் 
சிந்தை ஆனா மகிழ் சிறப்ப இருந்தான் புரவித் தேரோடும் 
வந்த ஆதிச் செம் கதிரோன் மறைந்தான் அவனால் 
               வையம் எல்லாம் 
வெந்த வேடை தணிப்பான் போல் முளைத்தான் ஆதி 
               வெம் கதிரோன். 	 
 
2783.	அன்று துயிலும் வாதவூர் அடிகள் கனவில் சுடர் வெள்ளி 
மன்று கிழவர் குருந்து அடியில் வடிவம் காட்டி எழுந்து 
                 அருளி 
வென்றி வேந்தன் மனம் கவரும் விசயப் பரி கொண்டு 
                 அணைகின்றேம் 
இன்று நீ முன் ஏகுதி என்று அருளிச் செய்ய 
                 எழுந்திருந்தார். 	 
 
2784.	கனவின் இடத்தும் தேவர்க்கும் காண்டற்கு அரிய 
                 கருணை உரு 
நனவின் இடத்தும் கனவு இடத்தும் எளிதே அன்றோ 
                 நமக்கு என்ன 
நினைவின் இடைக் கொண்டு இருக்கின்றார் நிருத்தானந்தச் 
                 சுடர் உள்ளத்து 
தின இருளைத் தின்று எழுவது என எழுந்தான் இரவி 
                 இரவு ஒதுங்க. 	 
 
2785.	எழுந்தார் உடைய பெருந்துறையார் இருந்தாள் பணிந்தார் 
              இனி இப் பிறப்பில் 
அழுந்தார் வழிக் கொண்டார் அடைந்தார் அகன்றார் 
              நெறிகள் அவிர் திங்கள் 
கொழுந்தார் சடையார் விடையார் தென் கூடல் அடைந்தார் 
              பாடு அளி வண்டு 
உழும் தார் வேந்தன் பொன் கோயில் உற்றார் காணப் 
              பெற்றார் ஆல். 	 
 
2786.	மன்னர் பெருமான் எதிர் வந்த மறையோர் பெருமான் 
                   வழிபாடு 
முன்னர் முறையால் செய்து ஒழுகி முன்னே நிற்ப முகம் 
                   நோக்கித் 
தென்னர் பெருமான் எவ்வளவு செம் பொன்கொடுபோய் 
                   எவ்வளவு 
நன்னர் இவுளி கொண்டது எனக் கேட்டான் கேட்ட நால் 
                   மறையோர். 	 
 
2787.	பொன்னும் அளவோ விலை கொண்ட புரவித் தொகையும் 
               அனைத்து அவைதாம் 
பின்னர் வரக் கண்டு அருளுதி எம் பெருமான் இதனால் 
               துரங்க பதி 
என்னும் நாமம் பெறுதி மதி என்றார் என்ற மந்திரர்க்குத் 
தென்னன் சிறந்த வரிசை வளம் செய்து விடுப்பச் 
               செல்கின்றார். 	 
 
2788.	பொன் அம் கமலத் தடம் படிந்து புழைக்கை மதமா முகக் 
                  கடவுள் 
தன்னம் கமல சரண் இறைஞ்சித் தனியே முளைத்த சிவக் 
                  கொழுந்தை 
மின் அம் கயல் கண் கொடி மருங்கில் விளைந்த தேனை 
                  முகந்து உண்டு 
முன்னம் கருத்து மொழி உடம்பு மூன்றும் அன் பாய்த் 
                  தோன்றினார். 	 
 
2789.	மன்னே என்னை ஆட்கொண்ட மணியே வெள்ளி மன்று 
                ஆடும் 
அன்னே அடியேன் வேண்டியவாறு அரசன் ஈந்த நிதி 
                எல்லாம் 
முன்னே கொண்டு என் பணி கொண்டாய் முனியாது 
                அரசன் நனி மகிழ 
என்னே புரவி வரும் வண்ணம் என்று வேண்டி 
                நின்றிடலும். 	 
 
2790.	மெய் அன்பு உடையாய் அஞ்சலை நீ வேட்ட வண்ணம் 
                 விண் இரவி 
வையம் பரிக்கும் பரி அனைய வயமாக் கொண்டு 
                 வருதும் என 
ஐயன் திருவாக்கு அகல் விசும்பு ஆறு எழுந்தது ஆக 
                 அது கேட்டுப் 
பொய் அன்பு பகன்றார் சிவன் கருணை போற்றி 
              மனையில் போயினார். 	 
 
2791.	கடி மனை அடைந்த எல்லை வாதவூர்க் காவலோரை 
மடிமையில் சுற்றத் தோரும் கேளிரும் மாண்ட காதல் 
அடிமை உள்ளாரும் ஏதில் ஆளரும் பிறரும் ஈண்டி 
இடி மழை வாய் விட்டு என்னப் புந்திகள் இனைய 
                  சொல்வார். 	 
 
2792.	மந்திரக் கிழமை பூண்டு மன்னவர் கருமம் செய்வ 
அந்தணர்க்கு அறனே அல்ல அமைச்சியல் அறத்து 
                  நின்றால் 
வெம் திறல் அரசர்க்கு ஏற்ற செய்வதே வேண்டும் என்னத் 
தந்திரம் அது நூல் வல்லோர் சாற்றுவார் அன்றோ ஐயா. 	 
 
2793.	அரைசியல் அமைச்சு நீதி ஆய்ந்த நுங்கட்கு நாங்கள் 
உரை செய்வது எவன் நீர் செய்வது ஒன்று நன்று ஆவது 
                     இல்லை 
விரை செறி தாராற்கு இன்று வெம்பரி வருவது ஆக 
வரையறை செய்தீர் நாளை என சொல் வல்லீர் ஐயா. 	 
 
2794.	தழுவிய கிளைஞர் நட்டோர் சார் உளோர் தக்க 
                  சான்றோர் 
குழுவினைக் காக்க வேண்டும் குறிப்பு இலீர் போலும் 
                  நீவிர் 
ஒழுகு உறு செயலினாலே உம் செயல் உமக்கே சால 
அழகு இது போலும் என்னக் கழறினார் அது கேட்டு 
                  ஐயன். 
 
2795.	சுற்றமும் தொடர்பும் நீத்தேம் துன்பமும் இன்பும் அற்றேம் 
வெற்று உடல் மானம் தீர்ந்தேம் வெறுக்கை மேல் 
             வெறுக்கை வைத்தேம் 
செற்றமும் செருக்கும் காய்ந்தேம் தீவினை இரண்டும் 
                  தீர்ந்தேம் 
கற்றைவார் சடையான் கோலம் காட்டி ஆட் கொண்ட 
                  அன்றே. 	 
 
2796.	தந்தை தாய் குரவன் ஆசான் சங்கரன் நிராசை பெண்டிர் 
மைந்தர் பால் உயிரும் சுற்றம் மாசிலா ஈசன் அன்பர் 
அந்தம் இல் பிறவி ஏழும் அடு பகை என்பது தேர்ந்தோம் 
எந்தையார் கருணை காட்டி எம்மை ஆட் கொண்ட 
                    அன்றே. 	 
 
2797.	ஊர் எலாம் அட்ட சோறு நம்மதே உவரி சூழ்ந்த 
பார் எலாம் பாயல் துன்னல் கோவணம் பரிக்கும் ஆடை 
சீர் எலாம் சிறந்த சாந்தம் தெய்வ நீறு அணிபூண் கண்டி 
நீர் எலாம் சுமந்த வேணி நிருத்தன ஆட் கொண்ட 
                    அன்றே. 	 
 
2798.	இறக்கினும் இன்றே இறக்குக என்று இருக்கினும் இருக்குக 
                  வேந்தன் 
ஒறுக்கினும் ஒறுக்க உவகையும் உடனே ஊட்டினும் ஊட்டுக 
                  வானில் 
சிறக்கினும் சிறக்க கொடிய தீ நரகம் சேரினும் சேருக 
                  சிவனை 
மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தால் மாற்றுவார் 
                யார் என மறுத்தார். 	 
 
வாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் சுபம் 
	  
 

59. நரி பரியாக்கிய படலம்

 
 
2799.	அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில் 
தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி 
வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன் 
நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம். 	 
 
2800.	சுற்றம் ஆம் பாச நீவித் துகள் அறுத்து இருந்தார் தம்மை 
மற்றை நாள் அழைத்து வேந்தன் வந்தில போலும் இன்னம் 
கொற்றவாம் பரிகள் என்னக் குறுமதி முடித்தான் அன்பர் 
இற்றை நாண் முதனான் மூன்றில் ஈண்டுவ இறைவா என்னா. 	 
 
2801.	சிந்துர நுதன் மால் யானைச் செல்வப் பரிக்கு வேறு 
மந்துறை அகன்ற ஆக வகுக்க சூழ் தண்ணீர் ஊட்ட 
நந்து உறை தடங்கள் வேறு தொடுக நீள் நகரம் எங்கும் 
இந்து உறை மாடம் எல்லாம் அழகு செய்திடுக என்றார். 	 
 
2802.	காவலன் கருமம் செய்வோர் கந்துகப் பந்தி ஆற்றி 
ஓவற நகரம் எங்கும் ஒளி பெற அழகு செய்யத் 
தாவு தெண் கடல் ஏழ் கண்ட சகரர் போல் வைகல் 
                  மூன்றில் 
வாவியும் குளனும் தொட்டார் மண் தொடுகருவி மாக்கள். 	 
 
2803.	வரையறை செய்த மூன்று வைகளும் கழிந்த பின்னாள் 
கரையறு பரிமா வீண்டக் கண்டிலம் இன்னம் என்னா 
விரையறை வண்டார் தண்டார் வேம்பனும் விளித்து வந்த 
உரையறை நாவினாரை ஒறுப்பவன் ஒத்துச் சீறா. 	 
 
 
2804.	என் இவன் பரிமா கொண்டது என்று அவை வருவது 
                   என்னாத் 
தன் எதிர் நின்ற வஞ்சத் தறுகணார் சிலரை நோக்கிக் 
கொன்னும் இக் கள்வன் தன்னைக் கொண்டு போய் 
              தண்டம் செய்து எம் 
பொன் எலாம் மறுவு கொண்டு வாங்குமின் போமின் 
                   என்றான். 	 
 
2805.	கல் திணி தோளான் சீற்றம் கண்டு எதிர் நில்லாது அஞ்சிச் 
சுற்றிய பாசம் போலத் தொடர்ந்து கொண்டு ஏகி மன்னர் 
எற்று இனி வகைதான் பொன்னுக்கு இயம்பும் என்று 
                  எதிர்த்துச் சீறிச் 
செற்றம் இல் சிந்தையார் மேல் செறிந்த கல் ஏற்றினாரே. 	 
 
2806.	பொன் நெடும் சயிலம் கோட்டிப் புரம் பொடி படுத்த 
                  வீரர் 
சொல் நெடும் தாளை உள்கி நின்றனர் சுமந்த பாரம் 
அந் நெடும் தகையார் தாங்கி ஆற்றினார் அடைந்த 
                  அன்பன் 
தன் நெடும் பாரம் எல்லாம் தாங்குவார் அவரே 
                  அன்றோ. 	 
 
2807.	சிலை அது பொறை தோற்றாது சிவன் அடி நிழலில் 
                  நின்றார் 
நிலை அது நோக்கி மாய நெறி இது போலும் என்னாக் 
கொலை அது அஞ்சா வஞ்சர் கொடும் சினம் திருகி 
                  வேதத்து 
தலை அது தெரிந்தார் கையும் தாள்களும் கிட்டி 
                  ஆர்த்தார். 	 
 
2808.	அக் கொடும் தொழிலும் அஞ்சாது இருந்தனர் அரனை 
                  உள்கி 
இக் கொடும் தொழிலினார் தாம் இனி நனி ஒறுப்பர் 
                  என்னாப் 
புக்கு அது காண்டற்கு உள்ளம் பொறான் என இரவிப் 
                  புத்தேள் 
மிக்க தன் ஒளி கண் மாழ்கி விரிகடல் அழுவத்து 
                  ஆழ்ந்தான். 	 
 
2809.	சுந்தர விடங்கர் அன்பர் சூழ் துயர் அகற்ற நேரே 
வந்து எழு காட்சி போல வந்தது செக்கர் வானம் 
இந்தவர் மார்பம் தூங்கும் ஏன வெண் கோடு போன்ற 
அந்தர உடுக்கள் எல்லாம் அயன் தலை மாலை ஒத்த.	 
 
2810.	சுழிபடு பிறவித் துன்பத்து தொடு கடல் அழுவத்து ஆழ்ந்து 
கழிபடு தனையும் காப்பான் கண் நுதல் மூர்த்தி பாதம் 
வழிபடும் அவரைத் தேரான் வன் சிறை படுத்த தென்னன் 
பழி படு புகழ் போல் எங்கும் பரந்தது கங்குல் ஈட்டம். 	 
 
2811.	கங்குல் வந்து இறுத்த லோடும் அரும் சிறை அறையில் 
                  போக்கிச் 
சங்கிலி நிகளம் பூட்டித் தவத்தினைச் சிறை இட்டு 
                  என்னச் 
செம் கனல் சிதற நோக்கும் சினம் கெழு காவலாளர் 
மங்குலின் இருண்ட கண்டர் தொண்டரை மறுக்கம் 
                  செய்தார். 	 
 
2812.	மிடைந்தவர் தண்டம் செய்ய வெம் சிறை வெள்ளத்து 
                     ஆழ்ந்து 
கிடந்தவர் கிடந்தோன் பூ மேல் இருந்தவன் தேடக் கீழ் 
                     மேல் 
நடந்தவர் செம் பொன் பாத நகை மலர் புணையாய்ப் 
                     பற்றிக் 
கடந்தனர் துன்ப வேலை புலர்ந்தது கங்குல் வேலை. 	 
 
2813.	அந்தம் இல் அழகன் தன்னை அம் கயல் கண்ணியோடும் 
சுந்தர அமளிப் பள்ளி உணர்த்துவான் தொண்டர் சூழ 
வந்தனை செய்யும் ஆர்ப்பும் மங்கல சங்கம் ஆர்ப்பும் 
பந்த நால் மறையின் ஆர்ப்பும் பருகினார் செவிகள் ஆர. 	 
 
2814.	போதவா நந்தச் சோதி புனித மெய்த் தொண்டர்க்கு ஆக 
நாதம் ஆம் முரசம் ஆர்ப்ப நரிப் பரி வயவர் சூழ 
வேத வாம் பரிமேல் கொண்டு வீதியில் வரவு காணும் 
காதலன் போலத் தேர் மேல் கதிரவன் உதயம் செய்தான். 
 
2815.	கயல் நெடும் கண்ணியோடும் கட்டு அவிழ் கடிப் பூம் 
                  சேக்கைத் 
துயில் உணர்ந்து இருந்த சோம சுந்தரக் கருணை 
                  வெள்ளம் 
பயில் நெடும் சிகரம் நோக்கிப் பங்கயச் செம்கை கூப்பி 
நயன பங்கயம் நீர் சோர நாதனைப் பாடல் உற்றார். 	 
 
2816.	எந்தாய் அனைத்து உலகும் ஈன்றாய் எத் தேவர்க்கும் 
தந்தாய் செழும் குவளைத் தாராய் பெரும் துறையில் 
வந்தாய் மதுரைத் திரு ஆலவாய் உறையும் 
சிந்தா மணியே சிறியேற்கு இரங்காயோ.	 
 
2817.	மூவா முதலாய் முது மறையாய் அம் மறையும் 
தாவாத சோதித் தனி ஞான பூரணமாய்த் 
தேவாதி தேவாய்த் திரு ஆல்வாய் உறையும் 
ஆவார் கொடி யாய் அடியேற்கு இரங்காயோ.	 
 
2818.	முன்னா முது பொருட்கு முன்னா முது பொருளாய்ப் 
பின் ஆம் புதுமைக்கும் பின் ஆகும் பேர் ஒளியாய்த் 
தென்னா மதுரைத் திரு ஆலவாய் உறையும் 
என் நாயகனே எளியேற்கு இரங்காயோ.	 
 
2819.	மண்ணாய்ப் புனலாய்க் கனலய் வளி ஆகி 
விண்ணாய் இரு சுடராய் இத்தனையும் வேறு ஆகிப் 
பண்ணாய் இசையாய்ப் பனுவலாய் எங்கண்ணும் 
கண் ஆனாய் என்று கண் காணவாறு என் கொலோ.	 
 
2820.	பொங்கும் சின மடங்கல் போன்று உறுத்து வெம் கூற்றம் 
அங்கும் புரியா வரும் துன்பத்து ஆழ்ந்து நான் 
மங்கும் பதி அறிந்தும் வந்து அஞ்சல் என்கிலை ஆல் 
எங்கும் செவி உடையாய் கேளாயோ என் உரையே. 	 
 
2821.	பூட்டி அருள் பாசம் இரு பாதம் பொறித்து உடலில் 
கூட்டி அடியாருள் அகப்படுத்து ஆட் கொண்டு அருமை 
காட்டியவோ இன்று என்னைக் கைவிட்டாய் வெய்யர் 
                    எனை 
ஆட்டி ஒறுக்கு இடத்து ஆர் ஏன்று கொள்வாரே. 	 
 
2822.	ஊரார் உனைச் சிரிப்பது ஓராய் என்று உன் அடிமைக் 
காராய் அடியேன் அயர்வேன் அ•து அறிந்து 
வாராய் அரசன் தமர் இழைக்கும் வன் கண் நோய் 
பாராய் உன் தன்மை இதுவோ பரமேட்டி.	 
 
2823.	என்று இரங்குவோர் இரங்கு ஒலி இளம் சிறார் அழுகை 
சென்று தாயார் தம் செவித் துளை நுழைந்து எனச் 
                  செல்லக் 
குன்று இரும் சிலை கோட்டிய கூடல் நாயகன் கேட்டு 
அன்று வன் சிறை நீக்குவான் திரு உளத்து அமைத்தான். 	 
 
2824.	நந்தி ஆதி ஆம் பெரும் கண நாதரை விளித்தான் 
வந்து யாவரும் பணிந்தனர் மன்னவற்கு இன்று 
முந்தி ஆவணி மூலநாள் வந்தது முனிவு 
சிந்தியா முனம் பரி எலாம் செலுத்துவான் வேண்டும்.	 
 
2825.	யாவரும் புனத்து இயங்கு குறு நரி எலாம் ஈட்டித் 
தாவரும் பரி ஆக்கி அத் தாம் பரி நடாத்தும் 
சேவகம் செய்வோர் ஆகி முன் செல்லும் முன் யாமும் 
பாவகம் பட வருதும் அப்படியே எனப் பணித்தான். 
 
2826.	ஏக நாயகன் ஆணை பூண்டு எழு கணத்தவரும் 
நாக நாடரும் வியப்பு உற நரி எலாம் திரட்டி 
வேக வாம் பரி ஆக்கி அவ் வெம் பரி நடாத்தும் 
பாகர் ஆயினார் அவர் வரும் பரிசு அது பகர்வாம்.	 
 
2827.	தூக்கி ஆர்த்த செம் பட்டினர் சுரிகையர் தொடு தோல் 
வீக்கு காலினர் இருப்பு உடல் காப்பினர் வெருளின் 
நோக்கு பார்வையர் புண்டர நுதலினர் அடியில் 
தாக்கி ஆர்ப்பு எழு நகையினர் அழன்று எழு சினத்தோர். 	 
 
2828.	வட்டத் தோல் வரி புறம் கிடந்து அசைய வை வடிவாள் 
தொட்ட கையினர் சிலர் நெடும் தேமரம் சுழல 
விட்ட கையினர் சிலர் வெரிநிடை நெடுக விசிகப் 
புட்டில் வீக்கி வில் தூக்கிய புயத்தினர் சிலர் ஆல். 
 
2829.	செம் படாம் செய்த போர்வையர் சிலர் பசும் படத்தான் 
மொய்ம்பு வீக்கிய கவயத்தார் சிலர் கரு முகில் போல் 
அம்புயம் புதை காப்பினர் சிலர் சிலர் அவிரும் 
பைம் பொன் வாள் நிறப் படாம் செய்குப் பாயத்தார் 
                  சிலரால். 	 
 
2830.	பிச்ச ஒண் குடையார் பலர் கவரிபால் பிறங்கத் 
தைச்ச தண் குடையார் பலர் சல்லி சூழ் நாற்றி 
வைச்ச வண்குடையார் பலர் வாண் நிலா முத்தம் 
மொய்ச்ச வெண் குடையார் பலர் மொய்ம் பினர் இவருள். 	 
 
2831.	தருமம் ஆதி நால் பொருள் எனும் தாளது ஞான 
கரும காண்டம் ஆம் செவியது காட்சியைக் கடந்த 
ஒருமை ஆம் பரம பரமாம் உணர்வு எனும் கண்ணது 
அருமை ஆம் விதி முகத்தது நிடேத வால் அதுவால். 	 
 
2832.	தந்திரங்களால் புறவணி தரித்தது விரிந்த 
மந்திரங்களால் சதங்கை தார் மணிச் சிலம்பு அணிந்த 
அந்தரம் சுழல் சேமனும் அருக்கனும் மிதிக்கும் 
சுந்தரப் பதம் பொறை கொளத் தூங்கு இரு புடைத்தால்.	 
 
2833.	மாண்ட தாரகப் பிரமம் ஆம் கலினம் வாய் கிழியப் 
பூண்ட தாற் புறச் சமயம் ஆம் பொரு படை முரிய 
மூண்டு பேர் எதிர் விளைத்திகன் முடிப்பது முளரி 
ஆண்ட கோமுகம் அந்துரை ஆகம் மேவியதால்.	 
 
2834.	அண்ட கோடிகள் அனைத்தும் ஓர் பிண்டமா அடுக்கி 
உண்ட நீரதா முதுகின் மேல் உப நிடக் கலனை 
கொண்ட வாலிய வைதிகப் புரவி மேல் கொண்டான் 
தொண்டர் பாச வன் தொடர் அவிழ்த்திட வரும் சோதி. 	 
 
2835.	ஆன மந்திரக் கிழார் பொருட்டு அன்றியும் வென்றி 
மீனவன் பிறப்பு அறுக்கவும் வார் கழல் வீக்கி 
வான நாயகன் ஏந்திய மறையுறை கழித்த 
ஞான வாள் புற இருளையும் நக்கி வாள் எறிப்ப.	 
 
2836.	சாய்ந்த கொண்டையும் திரு முடிச் சாத்தும் வாள் வயிரம் 
வேய்ந்த கண்டியும் தொடிகளும் குழைகளும் வினையைக் 
காய்ந்த புண்டர நுதலும் வெண் கலிங்கமும் காப்பும் 
ஆய்ந்த தொண்டர் தம் அகம் பிரியாது அழகு எறிப்ப. 	 
 
2837.	பிறக்கும் ஆசையோர் மறந்தும் இங்கு அணுகன் மின் 
                  பிறப்பை 
மறக்கும் ஆசையோர் இம் என வம்மின் அன்பரை 
                  வேந்து 
ஒறுக்கும் நோய் களை வான் என ஒருவனும் பிறவி 
அறுக்க வந்தனன் என்ப போல் பரிச் சிலம்பு அலம்ப. 	 
 
2838.	கங்கையைச் சடை முடியின் மேல் கரந்தனை அவள் 
                   போல் 
எங்கள் தம்மையும் கரந்திடு என்று இரந்து காவேரி 
துங்கபத்திரை ஆதி ஆம் நதிகளும் சூழப் 
பொங்க வீழ்வ போல் ஒலியலும் கவரியும் புரள. 	 
 
2839.	வாவி நாறிய வால் இதழ்த் தாமரை மலரோன் 
நாவிநாள் உமை நாயகன் நால் மறை பரியா 
மேவினான் எனத் தான் ஒரு வெண் குடை ஆகிப் 
பாவினால் என முடியின் மேல் பால் நிலாக் கால.	 
 
2840.	முறையின் ஓதிய புராணம் மூ ஆறு நா மொழியும் 
இறைவன் ஆம் இவன் படைத்து அளித்து அழிப்பவன் 
                  இவனே 
மறை எலாம் முறையிடு பரம் பொருள் என வாய் விட்டு 
அறையு மாறுபோல் இயங்கள் ஈர் ஒன்பதும் ஆர்ப்ப. 	 
 
2841.	மிடைந்த மாயவாம் பரித்திரள் மேல் திசை நோக்கி 
நடந்த நாயகன் நான் மறைப் புரவியும் நாப்பண் 
அடைந்ததால் எழும் தூளிகள் அண்டமும் திசையும் 
படர்ந்த போம் வழி யாது என மயங்கினான் பரிதி.	 
 
2842.	பள்ளம் ஆக்குவ திடரினைப் பள்ளத்தை மேடு 
கொள்ள ஆக்குவ பார் எலாம் விலாழி கொப்பளித்து 
வெள்ளம் ஆக்குவ துளியால் வெள்ளத்தை வெறிதாய் 
உள்ளது ஆக்குவ புள்ளுவ உருக் கொண்ட பரிமா.	 
 
2843.	கொய்யுளைப் பரி எழுந்த தூள் கோப்ப வான் கங்கை 
வையை ஒத்த ஏழ் பசும் பரி செம்பரி மாவாச் 
செய்தது ஒத்தது சிந்துரம் திசைக் கய முகத்துப் 
பெய்தது ஒத்தது ஆல் ஒத்தது பெரும் பகல் மாலை.	 
 
2844.	விளம்பு கின்ற அச் சம்பு வெம் பரித்திரள் மிதிக்கும் 
குளம்பு கிண்டிய எழுந்த தூள் குன்று இறகு அரிந்தோன் 
வளம் புகுந்து அடைவார் குர வழி புரி வேள்விக் 
களம் புகைந்து எழு தோற்றமே அல்லது கடாதால். 	 
 
2845.	மட்புலம் திசை வான் புதை பூழியுள் மறைந்து 
கொட் புறும் பரி சதங்கை தார் ஒலியினும் குளிர் வான் 
பெட்புறும் குரல் ஒலியினும் செவியினில் பிறிது 
கட் புலங்களால் கண்டிலர் வழி வரக் கண்டோர். 	 
 
2846.	தரங்கம் எறி முத்திவை விலாழி அல தார்மா 
இரங்கும் ஒலி அல்ல திரை ஓங்கு ஒலி இன்ன 
துரங்கம் அல மற்று இவை சுரர்க்கு அரசன் இன்றும் 
புரம் கொல விடுத்திட வரும் புணரி என்பார்.	 
 
2847.	இம்பர் உலகு உள்ள வல பண்டினைய பாய்மா 
உம்பர் உலகு ஆளி பரியே கொல் அது ஒன்றே 
வெம் பரிதி வெம் பரிகொல் ஏழ் அவைகள் ஏழும் 
பைம் பரிகள் யா இனைய பாய் பரிகள் என் பார். 	 
 
2848.	வெம் பணிகளைப் பொர வெகுண்டு எழுவதே யோ 
பைம் புனல் உடுத்த முது பார் முதுகு கீறும் 
உம்பர் உலகைப் பொர உருத்து எழுவதே யோ 
அம்பர முகட்டள வடிக்கும் அழுத்தும்.	 
 
2849.	உத்தர திசைப் புரவி தெற்கு அடையுமாறும் 
அத்தகைய தெற்கு உள வடக்கு அடையு மாறும் 
அத்தகை குடக் கொடு குணக்கு அடையு மாறும் 
சித்தர் விளையாடலின் வெளிப் படுதல் செய்யா.	 
 
2850.	மறை மரபு சாலவரும் வன்னி இவை பொன்னித் 
துறைவன் உளமும் சுடும் இரும் பனை தொடுக்கும் 
அறைவன் உளமும் சுடும் அமைச்சரை ஒறுக்கும் 
இறைவழுதி உள்ளமும் இனிச் சுடுவது என்பார்.	 
 
2851.	முந்தை ஒரு மந்திரி பொருட்டு அரசன் முன்னா 
அந்தம் இல் அனீக மொடு அரும் பரியில் வந்து ஆங்கு 
இந்தமறை மந்திரி இடும்பை தணிவிப்பான் 
வந்தனர் கொல் இப் பரி வரும் பொருநர் என்பார். 	 
 
2852.	காமன் இவனே கொல் அறு கல் உழு கடப்பந் 
தாமன் இவனே கொல் பொரு தாரகனை வென்றோன் 
மாமன் இவனே கொல் மலை வன் சிறகு அரிந்த 
நாமன் இவனே கொல் என நாரியர் அயிர்த்தார்.	 
 
2853.	அடுத்திடுவர் கண் நிறைய அண்ணல் அழகு எல்லாம் 
மடுத்திடுவர் கை வளையை மாலை விலை என்னக் 
கொடுத்திடுவர் மாலைகள் கொடுத்திடுதி அன்றேல் 
எடுத்திடுதி எங்கள் வளை எங்கள் கையில் என்பார்.	 
 
2854.	ஏந்தல் முடி மாலை மலர் சிந்தின எடுத்துக் 
கூந்தலில் மிலைந்து மதன் வாகை மலர் கொள்வார் 
சாந்து அனைய சிந்தின தனம் தடவி அண்ணல் 
தோய்ந்து அளவு இலா மகிழ் துளும் பினவர் ஆவார்.	 
 
2855.	பொட்டு அழகன் மார்பில் இடு போர்வை கவசப் பேர் 
இட்டது மெய் நம் உயிர் தடுத்தமையின் என்பார் 
கட்டழகன் மாலையது கண்ணி என ஓதப் 
பட்டது மெய் நம் உயிர் படுத்தமையின் என்பார்.	 
 
2856.	இச்சையால் வடிவு எடுப்பவன் இந்திர சால 
விச்சை காட்டுவான் எனப் பரி வீரனில் உலகைப் 
பிச்சது ஏற்றிட மயக்கியும் காமனில் பெரிது 
நச்சு மாதரை மயக்கியும் இங்ஙனம் நடந்தான்.	 
 
2857.	தாவு கந்துகம் இந்தியம் ஒத்தன சயமா 
வாவு திண் கண மள்ளர் கண் மனங்களை ஒத்தார் 
மேவி அம் மனந் தொறும் இடை விடாது நின்று இயக்கும் 
ஆவி ஒத்தது நடு வரும் அரு மறைப் பரியே. 	 
 
2858.	துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும் 
அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக் 
கன்னி மா மதில் சூழ் கடி நகர்க் கரைக் காதம் 
என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.	 
 
2859.	கண்டவர் கடிது ஓடிக் கடி நகர் குறுகிக் கார் 
விண் தவழ் மணி மாடத்து அடு சிறை மிடைகின்ற 
கொண்டலின் அனையார் முன் குறுகினர் மலர் செவ்வி 
முண்டக வதனத்தார் முகிழ் நகையினர் சொல்வார்.	 
 
2860.	மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே 
பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல் 
துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம் 
பொன் எயில் மணிவாயில் புகுவன இது போதில்.	 
 
2861.	ஒல்லையில் அது மன்னற்கு உரையுமின் என மேரு 
வில்லவன் அருள் பெற்ற வேதியர் பெருமான் போய்ச் 
செல்லது தளை இட்ட திரு மகன் அருகு எய்தி 
மல் அணி திணி தோளாய் வருவன பரி என்றார்.	 
 
2862.	மருத்து என வருகின்ற மாக் கடல் என மன்னன் 
திருத்தணி கடகப் பூண் தெரித்திட உடல் வீங்கிப் 
பெருத்து எழு மகிழ் தூங்கிப் பெருவிலை மணி ஆரம் 
அருத்தி கொள் கலை நல்கி அமைச்சரை மகிழ்வித்தான். 	 
 
2863.	ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில் 
போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக் 
காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச 
ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான். 	 
 
2864.	பரன் அருள் விளையாடல் காட்டிய பரி வெள்ளம் 
வருவன சிறு காலம் தாழ்த்தலும் மதி வேந்தர் 
புரவலன் மனம் வெள்கிப் பொய் இது என உள்கி 
அருகு அணை உழை யோரைக் குறித்தனன் அழல் 
                 கண்ணான். 	 
 
2865.	மன்னவர் நினைவாற்றான் மந்திரர் பெருமானைத் 
துன்னினர் கொடு போய் அத் தோள் வலி மற மள்ளர் 
உன்ன அரிது என அஞ்சாது ஒறுத்தனர் உரவோர் தம் 
தென்னவர் தமை உள்கிச் சேவடி துதி செய்வார்.	 
 
2866.	பூவார் முளரிப் புத்தேள் அறியா நெறி தந்தாய் 
பாவார் தென் சொல் பனுவல் மாலைப் பணி கொண்டாய் 
தேவா தேவர்க்கு அரசே சிறியேன் உறு துன்பம் 
ஆவா என்னாய் அஞ்சேல் என்னாய் அறனேயோ. 	 
 
2867.	நெஞ்சே உரையே செயலே எல்லா நின வென்றாய் 
வஞ்சே போலும் அ•தேல் இன்று வாராயோ 
பஞ்சேர் அடியாள் பாகா கூடல் பரமேட்டீ 
அஞ்சேல் என்னாய் இது வோ அருளுக்கு அழகு ஐயா.	 
 
2868.	காவி நேரும் கண்டா நாயில் கடையான 
பாவி ஏனைப் பொருளாக் கொண்டு என் பணி 
                  கொண்டாய் 
ஆவி யோடு இவ் உடலும் நினதே அன்றோ இன்று 
ஓவி வாளாது இருந்தால் யார் என் உடையானே. 	 
 
2869.	என்று இரந்து இரங்கும் அன்பர் இரு செவி ஊடே ஏங்கும் 
கன்று இளம் செவியின் நல் ஆன் கனை குரல் ஒசை 
                    போல 
ஒன்றிய சின்னம் காளம் காகளம் ஒலிக்கும் ஓசை 
வென்றி கொள் புரவிச் செந்தூள் திசை எலாம் விழுங்கக் 
                    கண்டார். 	 
 
2870.	வழுதியும் அரிந்து வாதவூரரை விளித்து வந்த 
தொழுகுல அமைச்சர் தம் பாற்று கடவி அன்பு கூர்ந்து 
                     எம் 
பழுதறு கருமம் நும் போல் பரிக்குநர் யாரை என்னா 
எழுதரு மகிழ்ச்சி மேல் கொண்டு அளவளாய் இருக்கும் 
                     எல்லை. 	 
 
2871.	பாய் இருள் படலம் கீறிப் பல் கதிர் பரப்பித் தோன்றும் 
சேய் இளம் பரிதி வானோன் அனையராய்ச் சிறந்த காட்சி 
மேயின பகரோடும் விலாழியால் பரவை செய்யும் 
வாயின ஆகி வந்த மாய வாம் பரிகள் எல்லாம். 	 
 
2872.	வண்டு உழு தாரினான் தன் மரபின் மன்னவரும் முன் 
                    நாள் 
கண்டு அறியாத காட்சிக் கவனவாம் பரியை நோக்கி 
அண்டர் நாயகன் போல் நாமும் ஆயிரம் கண் பெற்றாலும் 
உண்டமை அரவென்று உள்ளக் குறிப் பொடும் உவகை 
                    பூத்தான். 	 
 
2873.	தான் என மகிழ்ச்சி என்னத் தலை தடுமாறி வேந்தன் 
மான வெம் பரிமேல் வந்த வயவரை வியந்து மிக்கார் 
ஆனவர் இவருள் யார் என்று அமைச்சரை வினவ ஐயா 
யான் அது அறியேன் என்றார் யாவையும் அறிய வல்லார். 	 
 
2874.	அண்டம் எலாம் ஆதாரம் ஆகத் தாங்கும் ஆனந்தத் 
           தனிச் சோதி அண்டம் தாங்கும் 
சண்ட மறைப் பரிதனக்கு ஆதாரம் ஆகித் தரிக்க ஒரு 
           காலத்து அசைவு இலாத 
புண்ட ரிகத் தாள் அசையப் பாசம் நீக்கும் புனை கரத்தால் 
           பரி பூண்ட பாசம் பற்றிக் 
கொண்டு அரசன் எதிர் போந்து மன்னா எங்கள் குதிரை 
           ஏற்றம் சிறிது காண்டி என்றார். 	 
 
2875.	இசைத்த ஐம் கதி ஐம் சாரி ஒன்பதில் இரட்டி ஆன 
விசித்திர விகற்பும் தோன்ற வேந்தனும் அவையும் அன்றித் 
திசைப் புலத்தவரும் மேலைத் தேவரும் மருள 
               மேற்கொண்டு 
அசைத்தனர் அசைவு அற்று எல்லா உலகமும் 
               அசைக்கவல்லார். 	 
 
2876.	ஆண் தகை அவர் போல் நின்ற அடு கணத்தவரும் தம் 
                     தம் 
காண் தகு புரவி எல்லா நடத்தினர் காட்டாக் கண்டு 
பாண்டியன் அவரை நோக்கி நுங்களில் பதி ஆம் தன்மை 
பூண்டவர் யாவர் என்றான் இவர் என்றார் புரவி வீரர். 	 
 
2877.	சுட்டுதற்கு அரிய சோதி சுருதி வாம் புரவியோடு 
மட்டு அவிழ் தாரினான் முன் வருதலும் கருணை நாட்டம் 
பட்டுள மயங்கித் தன்னை மறந்து எழீஇப் பாண்டி 
                  வேந்தன் 
தட்டு அவிழ் கமலச் செங்கை தலை மிசைக் கூப்பி 
                  நின்றான். 	 
 
2878.	பின் அவன் ஆணையாலே மறைப்பு உண்ட பெரு நீர்க் 
                     கூடல் 
மன்னவன் அறிவு தோன்ற இன்று ஒரு வயமா வீரன் 
தன்னை நாம் கண்டு எழுந்து தடம் கரம் கூப்பி நின்ற 
என் எனத் தவிசின் மீள இருந்திட நாணி நின்றான். 	 
 
2879.	நிற்கின்றான் முகத்தை நோக்கி நேர் நின்ற மறை மா வீரர் 
பொன் குன்று ஆம் புயத்தாய் உன் தன் பொருள் எலாம் 
               கொண்டு பேந்து உன் 
சொல் குன்ற அமைச்சன் தானே நமக்கு நம் சூழல் நீங்கா 
மற்குன்ற நமர்க்கும் ஆர வழங்கினான் வழங்கலாலே. 	 
 
2880.	வானவர் தமக்கே அன்றி மனிதருக்கு இசையத் தக்க 
வானவன் அறிஞர் இட்ட விலை வரம்பு அகன்ற நூலின் 
மானம் உள்ளவனாய் நல்ல வாசிகன் உனக்கு வந்த 
ஊனம் இல் பரிமா விற்கும் வாணிகம் உரைப்பக் கேட்டி.	 
 
2881.	இன்ன ஆம் பரிகள் என்பால் இன்று நீ கயிறு மாறி 
நின்னவாக் கொள்ளும் நீரான் இன்ன ஆம் பரியே நாளை 
என்னவாய் இருந்த வேனும் எனக்கும் உன் தனக்கும் 
                  கொண்டு 
மன்னவா கருமம் இல்லை பரிவிலை வழக்கு ஈது 
                  என்றார். 	 
 
2882.	அப்பொழுது அரசன் தானும் அகம் மகிழ்ந்து அதற்கு 
                 நேர்ந்து எம் 
மெய்ப் புகழ் அமைச்சர் தம்மின் மேம்படு வாத வூரர் 
ஒப்புரும் திறத்தர் ஆகியும் இடை நட்பான் மிக்க 
துப்புர உடையர் ஆனார் என நனி சொல்லினானே. 	 
 
2883.	உரகத வாரந் தோற்றாது உயர் மறைப் பரிமேல் வந்தார் 
மரகத நிறத்து நிம்ப மாலை தாழ் மார்பினார்க்குக் 
குரகதம் கயிறு மாறிக் கொடுப்பவர் பொதுமை ஆய 
துரகத இலக்கணங்கள் சொல்லுவான் தொடங்கினாரே. 	 
 
2884.	காயும் வேல் மன்ன ஒரிக் கடும் பரி அமையம் வந்தான் 
ஞாயிலும் தாண்டிச் செல்லும் நாட்டமும் நுழையாச் சால 
வாயிலும் நுழையும் கண்ட வெளி எலாம் வழியாச் 
                    செல்லும் 
தீய வெம் பசி வந்து உற்றால் தின்னாத எனினும் தின்னும். 	 
 
2885.	பொருவில் சீர் இலக்கணப் புரவி ஒன்று தான் 
ஒருவனது இடை வதிந்து உறையின் ஒல் என 
மருவுறும் திருமகன் மல்லல் செல்வமும் 
பெருகுறும் கீர்த்திகள் பல்கும் பெற்றியால்.	 
 
2886.	நெய்த்திடு மாந்தளிர் நிறத்த நாவின 
வைத்திடு குளம்புகள் உயர்ந்த வார்ந்து நேர் 
ஒத்திடு எயிற்றின உரமும் கண்டமும் 
பைத்திடு அராப் படம் போன்ற பாடலம்.	 
 
2887.	அகலிய நுதலின வாய்ந்த குஞ்சி போல் 
நிகர் அறு கொய்யுளை நிறம் ஒன்று ஆயின 
புகரறு கோண மூன்றாகிப் பொற்புறு 
முகம் உடையன வயமொய் கொள் கோடகம். 
 
2888.	முட்டிய சமர் இடை முகத்தில் வாளினால் 
வெட்டினும் எதிர்ப்பதாய்க் குரங்கு வேங்கை தோல் 
பட்டிமை நரி அரி சரபம் பாய் முயல் 
எட்டிய கதியின இவுளி என்பவே.	 
 
2889.	உன்னத நீளம் உண்டாகிச் சங்கு வெண் 
கன்னலின் வாலிய விலாழி கால்வதாய்ப் 
பின்னம் ஆகிய தனி வன்னம் பெற்றுமை 
வன்னமும் உடையது வன்னி ஆவதே.	 
 
2890.	திணி தரு கழுத்தினில் சிறந்த தெய்வதம் 
அணி உளது ஆகி எண் மங்கலத்து ஆய் 
அணி தரு பஞ்சகல்யாணம் உள்ளதாய்க் 
குனிதரு நீரது குதிரை ஆவதே.	 
 
2891.	குங்குமம் கருப்புரம் கொழும் திண் கார் அகில் 
பங்க மான் மதம் எனக் கமழும் பாலதாய்ச் 
சங்கமும் மேகமும் சரபமும் கொடும் 
சிங்கமும் போல் ஒலி செய்வதாம் பரி.	 
 
2892.	நாலு கால்களும் கடைந்து எடுத்து நாட்டினால் 
போல் வதாய்க் கொட்புறும் போது சுற்று தீக் 
கோலை ஒப்பாகி மேற்கொண்ட சேவகன் 
காலினுள் அடங்குவது ஆகும் கந்துகம்.	 
 
2893.	அரணமும் துருக்கமும் ஆரும் தாண்டிடும் 
முரண் அது ஆகி இம் முற்றிலக்கணப் 
புரணம் எல்லாம் நிறை புரவி போந்தன 
இரண வேலாய் வயது எட்டுச் சென்ற ஆல்.	 
 
2894.	பகைத் திறம் உருக்கும் இப் பரிகள் மன்ன நீ 
உகைத் திடத் தக்க என்று ஓதி வேத நூல் 
சிகைத் தனிச் சேவகர் திரும்பித் தம்மனோர் 
முகத்தினை நோக்கினார் மொய்த்த வீரரும்.	 
 
2895.	வாம்பரி மறைக்கு எலாம் வரம்பு காட்டுவது 
ஆம் படி கண்டவர் அறிவும் பிற்படப் 
போம் படி முடுக்கினார் புரவி யாவையும் 
வேம் பணி தோளினான் வியப்பும் எய்தியே.	 
 
2896.	ஆத்தராய் மருங்கு உறை அமைச்சர் யாரையும் 
பார்த்து அசையா முடி அசைத்துப் பைப்பயப் 
பூத்த வாள் நகையொடு மகிழ்ச்சி பொங்கினான் 
தீர்த்தனு நடத்தினான் தெய்வ மாவினை.	 
 
2897.	இருவகைச் சாரியும் எதிர்ந்து வட்டமாய் 
வருவழி ஞெகிழிபோல் மறுகு எலாம் ஒரு 
துரகதமே நிலை நின்ற தோற்றம் ஒத்து 
ஒருவற நடத்தினான் ஒரு கணத்தினே.	 
 
2898.	இந்நிலை அலமரும் இவுளி மேல் ஒரு 
மின்னிலை வேலினான் வினவத் தம் கையின் 
மன்னிய கங்கணம் விடுத்து மா நகர் 
தன் நிலை காட்டிய தன்மை ஒத்ததே.	 
 
2899.	பல் நிறம் உடையவாம் பரியும் வீதியுள் 
பின்னிவா எனப் பின்னி வட்டமாய்த் 
தன் நிகர் மதுரை ஆம் தையல் கை அணி 
துன்னிய பல் மணித் தொடியும் போன்றவே.	 
 
2900.	இந்திய நுதலினார் இடித்த பொன் சுணம் 
சிந்திய மருகிடை நடக்கும் திண் பரிப் 
பந்தியின் எழும் துள் சுவணப் பாரின் மா 
உந்திய எழுந்த பொன் பூழி ஒத்ததே.	 
 
2901.	தேவரும் மனிதரும் திருந்து கூடலார் 
யாவரும் உவப்பு உற இவுளி விட்டு மண் 
காவலன் முன் குறீஇக் கருணை மாக் கடல் 
மா வரும் திறன் எல்லாம் வகுத்துத் தோற்றும் ஆல். 	 
 
2902.	வளம் கொள் காம் போசம் இப்பரி இம்மா மந்தரம் 
             இந்தவாம் புரவி 
விளங்கு காந்தாரம் இக் குரங்கு உளை வான்மீக மிக் 
             கந்துகம் சிந்து 
துளங்கு இல் பாஞ்சலம் இக் கன வட்டம் துளுவம் 
             இக் குதிரை இத்துரகம் 
களங்கம் இல் இமயம் பருப்பதம் இந்த கற்கி இம் 
             மண்டிலம் கலிங்கம். 	 
 
2903.	ஆரியம் இந்தப் பாடலம் இந்த அச்சுவம் கூர்ச்சரம் இந்தச் 
சீரிய துரங்கள் கேகயம் இந்த திறல் உறு கொய் உளை 
                 யவனம் 
வேரி அம் பணை சூழ் மக்கம் இக் கொக்கு விரி பொழில் 
                 வனாயுசம் இந்தப் 
போர் இயல் இவுளி பல்லவம் இந்தப் பொலம் புனை தார் 
                 நெடும் பாய் மா. 	 
 
2904.	கற்றவர் புகழ் சவ்வீரம் இக் கோரம் கன்னி மாராட்டம் 
                   இவ் வன்னி 
கொற்றவர் பயில் வாசந்திகம் இந்தக் கோடகம் காடகம் 
                   கன்னல் 
உற்ற கான்மீரம் இவ் வயம் வயந்தம் இந்த உத்தம 
             கோணம் மாளவம் இவ் 
வெற்றி சேர் குந்தம் கந்தரம் இந்த விறல் புனை அரி சவு 
                   ராட்டம். 	 
 
2905.	விரி பொழில் சாலி வேய் மிகு கிள்ளை வேறு தீவந்தரம் 
                  இந்தக் 
துரகதம் இந்தக் குரகதம் கொண்டல் சூழ் குருக் 
                கேத்திரம் இன்ன 
பரவு பல் வேறு தேயமும் உள்ள பரி எலாம் இவன் தரு 
                  பொருளின் 
விரவிய நசையால் கொணர்ந்து இவர் வந்தார் வேந்த 
            கேள் இந்த வாம் பரியுள். 	 
 
2906.	வெண்ணிறம் சிவப்பு பொன் நிறம் கறுப்பு வேறு அற 
              விரவிய நான்கு 
வண்ணம் உள்ளனவும் வேறு வேறு ஆய மரபு மை 
              வண்ணமும் வந்த 
எண்ணிய இவற்றின் சிறப்பு இலக்கணத்தை இயம்புதும் 
              கேள் என இகல் காய் 
அண்ணல் அம் களிற்றார் அரு மறை பரிமேல் அழகியார் 
              அடைவு உற விரிப்பார். 	 
 
2907.	வெள்ளி நித்திலம் பால் சந்திரன் சங்கு வெண் பனி 
               போல்வது வெள்ளைத் 
துள்ளிய புரவி மாதுளம் போது சுகிர்ந்த செம் பஞ்சியின் 
                குழம்பில் 
தௌ¢ளிய நிறுத்த செம் பரி மாமை சிறைக் குயில் வண்டு 
                கார் முகில் போல் 
ஒள்ளிய கரிய பரி எரி அழலான் உரோசனை நிறத்த 
                பொன் பரியே. 	 
 
2908.	தெரிதர வகுத்த இந் நிறம் நான்கும் செறிந்தது மிச்சிரம் 
                   எனப் பேர் 
உரை செய்வர் முகமார் புச்சிவால் கால் என்று உரைத்த 
            எட்டு உறுப்பினும் வெண்மை 
விரவியது அட்ட மங்கலம் தலை வால் வியன் உரம் என்ற 
                   இம் மூன்றும் 
ஒருவிய உறுப்பு ஓர் ஐந்தினும் வெள்ளை உள்ளது பஞ்ச 
                   கல்யாணி. 	 
 
2909.	அணி கிளர் கழுத்தில் வலம் சுழித்து இருந்தால் அறிந்தவர் 
               அதனையே தெய்வ 
மணி என இசைப்பர் முகம் தலை நாசி மார்பம் இந் 
               நான்கும் இவ் இரண்டு 
பணி தரு சுழியும் நுதல் நடுப் பின்னைப் பக்கமும் 
               ஒவ்வொரு சுழியும் 
துணி தர இருப்பது இலக்கணம் உளது இச் சுழி இலது 
               இலக்கண வழுவே. 
 
2910.	பிரிஉற உரத்தில் ஐஞ்சுழி உளது பேர் சிரீ வற் சமா 
                 நுதலில் 
இரு சுழி ஆதல் முச்சுழி ஆதல் இருக்கினும் நன்று அது 
                 அன்றேல் 
ஒருவற நான்கு சுழி வலம்புரியா உள்ளது நல்லது அன்றி 
இருசுழி முன்னம் கால்களின் மூலத்து இருக்கினும் நல்லது 
                 என்று இசைப்பார். 	 
 
2911.	கள நடு இரட்டைச் சுழி உடைப் பரிதன் கருத்தினுக்கு 
              அற இடி காட்டும் 
அளவறு துன்ப மரணம் உண்டாக்கும் அவை 
             கணைக்காலில் உள ஆகில் 
உள பயம் துன்பம் நிகள பந்தனம் மேல் உதடு முன் 
              காலடி கபோலம் 
வளர் முழந்தாள் இந் நான்கினும் சுழிகள் மன்னினும் 
              தலைவனை வதைக்கும். 	 
 
2912.	இச் சுழி உடைய புரவி பந்தியில் யாத்து இருக்கினும் 
              பழுது இவை கிடக்க 
அச்சம் இல் பரிக்குப் பிராயம் நால் எட்டாம் அவத்தை 
              பத்தாகும் ஒவ் வொன்றில் 
வைச்சது மூன்று வருடமும் இரண்டு மதியமும் பன்னிரு 
                    நாளும் 
நிச்சயித்து அளந்தார் இன்னமும் ஒரு சார் நிகழ்த்திடும் 
              இலக்கணம் அதுகேள். 
 
2913.	எவ்வண்ண பேதம் மிகுந்து இருந்தாலும் வெள்ளை 
            கலந்து இருந்தது ஆனால் 
அவ்வண்ணப் பரி நன்று கரும்புரவிக்கு அக டேனும் 
            அகன் மார்பேனும் 
செவ்வண்ணம் இருக்கின் அது சயம் உளது அப்படி 
            வெண்மை சேர்ந்தால் அந்த 
மைவ் வண்ணப் பரியின் பேர் வாருணம் ஆம் சயம் 
            கொடுக்கும் மாற்றார் போரில். 	 
 
2914.	மகவு அளிக்கும் பிடர் வெளுப்பு மகிழ்வு அளிக்கும் உரம் 
        வெளுப்பு மணி தார்க் கண்டத்து 
அக வெளுப்புப் பொருள் கொடுக்கும் முக வெளுப்புச் 
        சயம் கொடுக்கும் அதன் பின் பக்கத்து 
அக வெளுப்புச் சுகம் பயக்கும் இட வெளுப்புச் சந்தானம் 
                தழைக்கும் செல்வம் 
மிக வளர்க்கும் தனம் பலதானியம் நல்கும் வலப் புறத்து 
                வெள்ளை மாதோ. 
 
2915.	நல் புறம் வான் முக மூன்றும் வெளுத்த பரி வென்றி 
               தரும் நாபி தொட்டு 
முன் புறம் எலாம் பரிதி எனச் சிவந்து மதி எனப் பின் 
               முழுதும் வெள்கும் 
பொற்புடைய வயப் பரிக்குப் பகல் விசய மதி என முற் 
               புறம்பு வெள்கிப் 
பின் புறம் எல்லாம் கதிர் போல் சிவந்த பரிக்கு இரா 
             விசயம் பெருகும் அன்றே. 	 
 
2916.	வந்தனவால் இவ்விரண்டு வகைப் பரியும் புரவி 
                அடிவைத்தால் ஒத்த 
பந்து எனவும் நின்றாலோ மலை எனவும் ஒலித்தாலோ 
                பகடு சீறும் 
வெம் தறுகண் அரி எனவும் வேகத்தால் காற்று எனவும் 
                மிதிக்கும் கூத்தால் 
சந்த நடமகன் எனவும் நடக்கில் அரி களிறு எனவும் 
                தகையது ஆகி. 	 
 
2917.	குல மகள் போல் கவிழ் முகமும் கரு நெய்தல் எனக் 
           கண்ணும் கொண்டு கார் போல் 
நிலவி சீர் வண்ணமும் கார் நெய்தல் எனக் கடிமணமும் 
                  நிறைந்து நாற்ற 
மலர் அகில் சந்தெரி மணிப் பூண் அலங்கரிக்கில் ஆனாத 
                  மகிழ்ச்சி எய்தி 
இலகுவதுத் தமவாசி என்று உரைப்பர் பரிவேதம் எல்லை 
                  கண்டோர். 	 
 
2918.	நூறு விரல் உத்தமம் ஆம் பரிக்கு உயர் ஈர் எட்டு வில் 
                 நூறு நீக்கிக் 
கூறு விரல் மத்திமம் ஆம் பரிக்கு அறுபத்து ஒன்று தமக் 
                 குதிரைக்கு என்ப 
ஈறு இல் புகழாய் பொரு நரிப் பரியைப் பூசனம் செய்து 
                 இறைஞ்சிப் பாசம் 
மாறுவார் என மணித்தார் சதங்கை சிலம்பு அணிவித்து 
                 மதிக்கோ மாறன். 	 
 
2919.	கொத்து அவிழ் தார் நறும் சாந்தம் கொண்டு செழும் புகை 
              தீபம் கொடுத்துப் பூசை 
பத்திமையால் செய்து இறைஞ்சி எதிர் நிற்ப ஆலவாய்ப் 
              பரனை நோக்கிக் 
கைத்தலம் தன் சிரம் முகிழ்த்து வாழி எனப் பரி 
              கொடுத்தான் கயிறு மாறி 
முத் தொழிலின் மூவராய் மூவர்க்கும் தெரியாத முக் 
              கண் மூர்த்தி. 	 
 
2920.	உவநிடக் கலணை வாசி ஒன்று அலால் நின்ற மாயக் 
கனவாம் புரவி எல்லாம் கொடுத்திடக் கவர்ந்து வீறு 
தவனன் இல் விளங்கும் தென்னன் தன் பெரும் கோயில் 
                    உய்ப்பப் 
பவனமும் கடலும் போலக் கொண்டு போய்ப் பந்தி 
                    சேர்த்தார். 	 
 
2921.	வாசி வாணிகர்க்குத் தென்னன் வெண் துகில் வரிசையாக 
வீசினான் பாணற்கு ஏவல் செய்தவர் வெள்கு வாரோ 
கூசிலா நேசர்க் காப்பான் குதிரையின் இழிந்து ஏற்றம் தத் 
தூசினை இரண்டாம் கங்கை என முடி சூடி நின்றார். 	 
 
2922.	இனைய தூசு இவன் பால் ஊர்தி இழிந்து நின்று ஏற்றுச் 
                   சென்னி 
புனைவது என் இவர் கை யோடும் புனைந்த திக்கு 
                 உடையும் பூண்ட 
கனல் அராப் பூணு மன்னன் கவருமோ என்று தம்மின் 
வினவினர் வெகுண்டு சொன்னார் கணத் தனி வீரர் 
                   எல்லாம். 	 
 
2923.	அறம் தரு கோலான் வெவ்வேறு அடுபரி வயவர் 
                  யார்க்கும் 
நிறம் தரு கலிங்கம் ஈந்தான் நேர்ந்து அவை வாங்கி 
                  அன்பில் 
சிறந்து அருள் வடிவாய் வந்தார் செழு மறைப் புரவி 
                  யோடு 
மறைந்தனர் மறைந்தார் ஒக்க மாய வாம் பரிமேல் 
                  வந்தார். 	 
 
2924.	இருமைக்கும் துணையாய் நின்ற இரு பிறப்பாளர்க்கு ஏற்ப 
அருமை தாம் சிறப்பு நல்கி அவர் இடத்து அவரை 
                   உய்த்துப் 
பருமத்த யானை வேந்தன் பகல் கதிர் வானத்து உச்சி 
வரும் அப்போது எழுந்து செம் பொன் மாட நீள் கோயில் 
                   புக்கான். 	 
 
2925.	ஏனை மந்திரரும் தம் தம் இல் புகப் புரவி பார்த்த 
மா நகராரும் தம்தம் மனை புகப் பரியின் பாகர் 
ஆனவர் தாமும் கோயில் அடைந்து தம் விளையாட்டு 
                  எல்லாம் 
மீன் நெடும் கண்ணி னாட்கு விளம்பினர் இருந்தார் 
                  அன்றே. 	 
நரி பரியாக்கிய படலம் சுபம் 	 	 
 
 

60. பரி நரியாக்கி வைகை அழைத்த படலம்

 
 
2926	ஞான நாயகன் அணையா நரி பரி வெள்ளம் 
ஆன வாரு உரை செய்து மீண்டு அப் பரி நரியாய்ப் 
போன வாறு கண்டு அமைச்சரைப் புரவலன் கறுப்ப 
வான ஆறு போல் வைகை நீர் வந்தவாறு உரைப்பாம். 	 
 
2927.	நெருங்கு தூரிய முழக்கமும் தானையும் நிமிர 
மருங்கு இலாதவர் வந்து எதிர் மங்கலம் ஏந்த 
அரம் கொல் வேலினான் அருளிய வரிசை யோடு 
                   அணைந்து 
புரம் கொல் வேதியர்க்கு அன்பர் தம் திரு மனை 
                   புகுந்தார். 
 
2928.	உடுத்த சுற்றமும் கழகமும் ஒட்டிய நட்பும் 
அடுத்த கேண்மையால் வினவுவார் அவர் அவர்க்கு இசைய 
எடுத்த வாய்மையான் முகமனும் மகிழ்ச்சியும் ஈந்து 
விடுத்த வாதவூர் ஆளிகள் வேறு இடத்து இருந்து. 	 
 
2929.	கரந்தை சூடிய ஆலவாய்க் கண் நுதல் ஆம் அன்று 
இரந்த வண்ணமே யாம் கொடு போகிய எல்லாம் 
பரந்த அன்பரும் தானும் கொண்டு எம்மையும் பணி 
                  கொண்டு 
அரந்தை தீர்த்தனன் அன்றியும் அரசனுக்கு இசைய. 	 
 
2930.	நல்ல வாம்பரி செலுத்தினன் நமக்கு இனிக் கவலை 
இல்ல வாம்படி ஆக்கினன் இன்னம் ஒன்று உலகை 
வெல்ல வாம் படி தன் அருள் விளைக்கும் ஆனந்தம் 
புல்லவாம் பதி எமைத் தவம் பூட்டுவான் வேண்டும்.	 
 
2931.	என்ற ஆதரம் தலைக் கொள இக பரத்து ஆசை 
ஒன்றும் இன்றியே உணர் வினுக்கு உள் உணர்வாகத் 
துன்று பூரணம் ஆகிய சுந்தரச் சோதி 
மன்றுள் ஆடிய சேவடி மனம் புதைத்து இருந்தார்.	 
 
2932.	நாளையும் திரு ஆலவாய் நாயகன் தமரை 
ஆள மண் சுமந்து அருளும் என்று அதனையும் காண்பான் 
ஊளை வெம்பரிப் பூழிப் போர்ப்பு உண்ட மெய் கழுவி 
மீள வேண்டுவான் போல் கடல் குளித்தனன் வெய்யோன். 	 
 
2933.	ஈசன் ஆடல் வெம் பரிக் குழாத்து எழுந்த செம் தூளான் 
மாசு மூழ்கிய அண்டத்தை வான் நிலா என்னும் 
தூசினால் அறத் துடைப் பவன் என மணித் தொகுதி 
வீசும் ஆழியுள் முளைத்தனன் வெண் மதிக் கடவுள். 	 
 
2934.	சேய தாரகை வருணம் ஆம் தீட்டிய வானம் 
ஆய வேட்டினை இருள் எனும் அஞ்சனம் தடவித் 
தூய வாணிலா என்னும் வெண் தூசினால் துடைப்பான் 
பாய வேலையின் முளைத்தனன் பனி மதிக் கடவுள்.	 
 
2935.	கள் ஒழுக்கு தார் மீனவன் கடி மனை புகுந்த 
புள்ளுவ அப் பரி நள் இருள் போது வந்து எய்தப் 
பிள்ளை ஆகிய மதி முடிப் பிரான் விளை யாட்டால் 
உள்ளவாறு தம் வடிவு எடுத்து ஒன்றொடு ஒன்று சாவும்.	 
 
2936.	சங்கின் ஓசையும் பிணப் பறை ஓசையும் சரிந்த 
மங்குல் ஓதிய அழுகுரல் ஒசையும் வடம் தாழ் 
கொங்கை சேப்புறக் கை எறி ஓசையும் குளிர 
எங்கு நாஞ்செவி பருகுவ இன் அமுது என்ன. 
 
2937.	வாம் பரித்திரள் ஆகி நாம் மனித்தரைச் சுமந்து 
தாம்பு சங்கிலி தொடக்கு உண்டு மத்திகை தாக்க 
ஏம்பல் உற்றனம் பகல் எலாம் இப்பொழுது ஈண்டு 
நாம் படைத்தன நம் உரு நம் விதி வலத்தால்.	 
 
2938.	கானகம் தனில் ஒழுகு நாள் முதல் இந்தக் கவலை 
ஆன துன்பம் நாம் அறிந்தில இன்னமும் ஆர்த்த 
மான வன் தொடர் வடுக்களும் மத்திகைத் தழும்பும் 
போன அன்றின் இப் புலருமுன் போவதே கருமம்.	 
 
2939.	உள்ளம் ஆர நாம் தின் பதற்கு கூன் சரிந்து ஒழுகும் 
நொள்ளை நாகில நந்தில நுழைந்தளை ஒதுங்கும் 
கள்ள நீள் சுவைக் கான ஞெண்டும் இலவினில் கடலை 
கொள்ளின் ஓடும் பைம் பயறு புல் கொள்வதை அடாதால். 	 
 
2940.	நாடிக் காவலன் தமர் உளார் நகர் உளார் கண்டால் 
சாடிக் காய்வரே புலரும் முன் சங்கிலித் தொடர் நீத்து 
ஓடிப் போவதே சூழ்ச்சி என்று ஊக்கம் உற்று ஒருங்கே 
கூடிப் பேசின ஊளை வாய்க் குறு நரிக் குழாங்கள்.	 
 
2941.	வெறுத்த காணமும் கடலையும் விரும்பின கோழ் ஊன் 
துறுத்த நாகு நம் தலைவனைச் சங்கிலித் தொடரை 
முறித்த கால்களில் கட்டிய கயிற்றொடு முளையைப் 
பறித்த ஊளை இட்டு எழுந்தன போம் வழி பார்ப்ப.	 
 
2942.	நின்ற நீள் நிலை பந்தியுள் நெருங்கு மா நிரையைச் 
சென்று தாவி வாள் எயிறு உறச் சிதை படக் கடித்து 
மென்று சோரியைக் குடிப்பன வீக்கிய முளையோடு 
ஒன்ற ஓடவே அண்டத்தில் ஊறு செய்வன ஆல்.	 
 
2943.	ஊளை ஓசை கேட்டு இம் என உறக்கம் நீத்து எழுந்து 
காளை வீரராம் மந்துரை காப்பவர் நெரு நல் 
ஆளி போல் வரு பரி எலாம் நரிகளாய் மற்றை 
ஒளி மா நிரை குடர் பறித்து உண்பன கண்டார்.	 
 
2944.	காண்டலும் சில வலியுள் கடிய உள் அரணம் 
தாண்டி ஓடின சில நரி சாளர முழையைத் 
தூண்டி ஓடின சில நரி சுருங்கையின் வழியால் 
ஈண்டி ஓடின நூழில் புக்கு ஏகின சிலவே.	 
 
2945.	முடங்கு கால் உடைச் சம்புவும் மூப்பு அடைந்து ஆற்றல் 
அடங்கும் ஓரியும் கண் குருடாகிய நரியும் 
ஒடுங்கி நோய் உழந்து அலமரும் இகலனும் ஓடும் 
இடங்கள் கண்டில பந்தியில் கிடந்தன ஏங்கி. 	 
 
2946.	கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத் 
தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ் 
ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும் 
குட்டியோடு அணைத்து எயில் இறக் குதிப்பன சிலவே.	 
 
2947.	மறம் புனைந்த வேல் மீனவன் மாளிகை தள்ளிப் 
புறம்பு அடைந்த இந் நரி எலாம் பொய்கையும்யானம் 
அறம் பயின்ற நீள் மனை மறு கால் அங் கவலைத் 
திறம் படர்ந்த பல் மாட நீள் நகர் எல்லாம் செறிந்த.	 
 
2948.	மன்றும் சித்திர கூடமும் மாடமும் மணி செய் 
குன்றும் தெற்றியும் முற்றமும் நாளோடு கோள்வந்து 
என்றும் சுற்றிய பொங்கரும் எங்கணும் நிரம்பி 
ஒன்றும் சுற்றமோடு ஊளை இட்டு உழல்வன நரிகள்.	 
 
2949.	கரியின் ஓசையும் பல்லிய ஓசையும் கடும் தேர்ப் 
பரியின் ஓசையும் இன் தமிழ் ஓசையும் பாணர் 
வரியின் ஓசையும் நிரம்பிய மணி நகர் எங்கும் 
நரியின் ஓசையாய்க் கிடந்தது விழித்தது நகரம்.	 
 
2950.	விழித்த ஞாளிகள் விழித்தன கேகயம் வெருவி 
விழித்த கோழிகள் விழித்தன மதுகரம் வெருண்டு 
விழித்த ஓதிமம் விழித்தன குருகினம் விரைய 
விழித்த வாரணம் விழித்தன கரும் கொடி வெள்ளம். 
 
2951.	அட்டில் புக்கன நிணத்தினை அழல் பசி உருக்கப் 
பட்டு அடுக்கிய கரும் கலம் உருட்டுவ பாகு 
சுட்ட சோறு பல் உணவு வாய் மடுப்பன சூழ்ந்த 
குட்டி உண்ணவும் கொடுப்பன கூவிளி கொள்வ.	 
 
2952.	புறவு பூவை பைங் கிள்ளைகள் பூத் தலைச் சேவல் 
பிறவும் ஆருவ உறங்கிய பிள்ளையைக் கொடுபோய் 
நறவு நாறிய குமுதவாய் நகை எழ நக்கி 
உறவு போல் விளையாடுவ ஊறு செய்யாவால்.	 
 
2953.	பறிப்ப வேரொடு முன்றில் வாய்ப் படர் பசும் கொடியைக் 
கறிப்ப நாகு இளம் காய் எலாம் கரும்பு தேன் கவிழ 
முறிப்ப வாய் இட்டுக் குதட்டுவ வண்டு வாய் மொய்ப்பத் 
தெறிப்ப ஊளை இட்டு ஆடுவ திரிவன பலவே. 	 
 
2954.	ஆயிரம் பொரி திரி மருப் படல் கெழு மேடம் 
ஆயிரம் கரும் தாது நேர் ஆக்கையை ஏனம் 
ஆயிரம் கவிர் அனைய சூட்டவிர் தலைக் கோழி 
ஆயிரம் குறும் பார்ப் பொடும் ஆருயிர் செகுப்ப.	 
 
2955.	பின் தொடர்ந்து நாய் குரைப் பொடு துரந்திடப் பெயர்ந்து 
முன் தொடர்ந்து உயிர் செகுப்பன வெம் சினம் ஊட்டி 
வன் தடம் புய மள்ளர் போய் வலி செயப் பொறாது 
கன்றி வந்து செம் புனல் உகக் கடிப்பன அனந்தம். 	 
 
2956.	பன்றி வாய் விடும் இரக்கமும் பல் பொறி முள்வாய் 
வென்றி வாரணச் சும்மையும் ஏழகத்து ஒலியும் 
அன்றி நாய் குரைப்பு ஓசையும் ஆடவர் ஆர்ப்பும் 
ஒன்றி ஊளை வாய் நரிக்குரற்கு ஒப்பது உண்டு ஒருசார். 
 
2957.	கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு 
மங்குல் தோய் பெரு வாயில்கள் திறந்தலும் மாறா 
தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப் 
பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம்.	 
 
2958.	ஈறு இலாச் சிவ பரம் சுடர் இரவி வந்து எறிப்பத் 
தேறு வார் இடைத் தோன்றிய சிறு தெய்வம் போல 
மறு இலாத பல் செம் கதிர் மலர்ந்து வாள் எறிப்ப 
வீறு போய் ஒளி மழுங்கின மீன் கணம் எல்லாம்.	 
 
2959.	அண்டருக்கு அரிதாகிய மறைப் பொருள் அழுகைத் 
தொண்டருக்கு எளிதாகிய மண் சுமந்து அருள வருத்தம் 
கண்டு அருட்கழல் வருடுவான் கைகள் ஆயிரமும் 
கொண்டு அருக்க வெம் கடவுளும் குண கடல் உதித்தான். 	 
 
2960.	கவன வெம்பரி செலுத்தி மேல் கவலை தீர்ந்து உள்ளே 
சிவம் உணர்ந்தவர் சிந்தை போல் மலர்ந்த செம் கமலம் 
உவமையில் பரம் பொருள் உணர்ந்து உரை இறந்து 
                  இருந்தோர் 
மவுன வாய் என அடங்கின மலர்ந்த பைம் குமுதம். 	 
 
2961.	பந்தியாளர்கள் யாது எனப் பகர்தும் என்று அச்சம் 
சிந்தியா எழும் தொல்லை போய்த் திரள் மதம் கவிழ்க்கும் 
தந்தியான் அரசு இறை கொளும் இருக்கையைச் சார்ந்து 
வந்தியா உடல் பனிப்பு உற வந்தது மொழிவார். 	 
 
2962.	காற்றினும் கடும் கதிய வாய்க் கண்களுக்கு இனிதாய் 
நேற்று வந்த வாம் பரி எலாம் நின்றவாம் பரிக்குக் 
கூற்று எனும் படி நரிகளாய் நகர் எலாம் குழுமி 
ஊற்றம் செய்து போய் காட்டகத்து ஓடிய என்றார். 
 
2963.	கருத்துறாத இச் சொல் எனும் கடிய கால் செவியாம் 
துருத்தி ஊடு போய்க் கோபம் ஆம் சுடுதழல் மூட்டி 
எரித்த தீப் பொறி சிதறிடக் கண் சிவந்து இறைவன் 
உருத்த வாறு கண்டு அமைச்சரும் வெருவினார் ஒதுங்கி. 	 
 
2964.	அமுதம் உண்டவன் நஞ்சம் உண்டால் என முதல் நாள் 
சமர வெம்பரி மகிழ்ச்சியுள் ஆழ்ந்தவன் அவையே 
திமிர வெம் குறு நரிகளாய்ச் சென்றவே என்னா 
அமரர் அஞ்சிய ஆணையான் ஆர் அஞர் ஆழ்ந்தான். 	 
 
2965.	அருகு இருக்கும் தொல் அமைச்சர் தமை நோக்கி 
             வாதவூர் ஆளி என்னும் 
கருகு இருட்டு மனக்கள்வன் நம் முடைய பொருள் 
             முழுதும் கவர்ந்து காட்டில் 
குருதி நிணக் குடர் பிடுங்கித் தின்று திரி நரிகன் எல்லம் 
                குதிரை ஆக்கி 
வரவிடுத்தான் இவன் செய்த மாயம் இது கண்டீரோ மதி 
                நூல் வல்லீர். 	 
 
2966.	இம் மாயம் செய்தானை என் செய்வது என உலகில் 
                 எமருக்கு எல்லாம் 
வெம் மாசு படு பாவம் பழி இரண்டும் பட இழுக்கு 
                 விளைத்துத் தீய 
கைம் மாறு கொன்றான் தன் பொருட்டு இனியாம் ஏது 
             உரைக்கக் கடவேம் என்று 
சும்மாது சிரம் தூக்கி எதிர் ஆடாது இருந்தார் அச் சூழ் 
                 வல்லோர்கள். 	 
 
2967.	அவ் வேலை மனக்கு இனிய பரி செலுத்தி அரச காரியம் 
              நன்று ஆக்கி 
வெவ் வேலை மனக் கவலை விடுத்தனம் என்று அக 
              மகிழ்ச்சி விளைவு கூர 
மைவ் வேலை விடம் உண்ட வானவனை நினைந்து அறிவு 
              மயமாம் இன்ப 
மெய் வேலை இடை வீழ்ந்தார் விளைந்தது அறியார் 
              வந்தார் வேந்தன் மாடே. 	 
 
2968.	வந்தவரைச் சிவந்த விழிப் பொறி சிதறக் கடுகடுத்து 
              மறவோன் நோக்கி 
அந்தம் இலாப் பொருள் கொடுபோய் நல்ல வயப் பரி 
             கொடு வந்த அழகு இதாகத் 
தந்தனை அன்றோ அரச கருமம் முடித்து இசை நிறுத்த 
              தக்கோர் நின்போல் 
எந்த உலகு உளரேயோ என வெகுண்டான் அது 
              கேட்ட ஈசன் தொண்டர். 	 
 
2969.	குற்றம் ஏது அப் புரவிக்கு எனக் கேட்டார் கோமகனும் 
                  குற்ற மேதும் 
அற்றத்தால் அரை இரவில் நரியாகி அயல் நின்ற புரவி 
                  எல்லாம் 
செற்றுவார் குருதி உக நிணம் சிதறக் குடர் பிடுங்கித்தின்று 
                  நேர்வந்து 
உற்ற பேர்க்கு ஊற்றம் இழைத்து ஊர் கலங்க காட்டகத்தில் 
                  ஓடிற்று அன்றே. 	 
 
2970.	கண்ணும் இடும் கவசமும் போல் காரியம் செய்து 
           ஒழுகியதும் காலம் பார்த்து எம் 
எண்ணரிய நிதி ஈட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் 
               இயற்கை நன்று ஆல் 
புண்ணிய வேதியர் மரபில் பிறந்தன என்று ஒரு பெருமை 
               பூண்டாயே நீ 
பண்ணிய காரியம் பழுது பிறரால் தண்டிக்கப் படுவர் 
               என்றான். 	 
 
2971.	தண்ட லாளர்கள் இவனைக் கொடுபோய் நம் பொருள் 
             முழுதும் தடுத்தும் ஈர்த்தும் 
மிண்டினால் வலி செய்தும் வாங்கும் என வெகுண்டு 
             அரசன் விளம்பக் கூற்றும் 
அண்டுமேன் மறம் செய்யும் வலி உடையார் கதிரை 
              இருள் அடுத்துப் பற்றிக் 
கொண்டு போனால் என்னக் கொடு புறம் போய் 
          அறவோரைக் கொடுமை செய்வார். 	 
 
2972.	கதிர் நோக்கிக் கனல் மூட்டும் கடும் பகல் உச்சியில் 
            இரவிக் கடவுள் நேர் நின்று 
எதிர் நோக்க நிலை நிறுத்திக் கரங்களினும் நுதலினும் 
            கல் ஏற்றிச் செம் தீப் 
பிதிர் நோக்கத்து அவர் ஒறுப்ப ஆற்றார் ஆய் வீழ்ந்து 
            இருளைப் பிளப்போன் செந்தீ 
மதி நோக்கத் தனிச் சுடரை அழைத்து அழுது துதி 
            செய்வார் வாதவூரர். 	 
 
2973.	நாதவோ நாத முடிவு இறந்த நாடகம் செய் 
பாதவோ பாதகனாம் என்னைப் பணி கொண்ட 
வேதவோ வேதமுடிவின் விளைந்த தனிப் 
போதவோ போத நெறி கடந்த பூரணவோ.	 
 
2974.	ஐயவோ என்னுடைய அன்பவோ அன்பர்க்கு 
மெய்யவோ மெய்யில் வினையேன் தலை வைத்த 
கையவோ செய்ய கழல் காலவோ காலனைக் காய் 
செய்யவோ வேதப் பரியேறும் சேவகவோ.	 
 
2975.	அத்தவோ கல்லாக் கடையேனை ஆட் கொண்ட 
பித்தவோ பொய் உலகை மெய்யாகப் பேதிக்கும் 
சித்தவோ சித்தம் தௌ¤வித்து எனைத் தந்த 
முத்தவோ மோன மயம் ஆன மூர்த்தியவோ.	 
 
2976.	என்று ஏறிய புகழ் வேதியர் இரங்கும் துதி செவியில் 
சென்று ஏறலும் விடை ஏறு சுந்தரன் மற்று இவர் செயலை 
மன்று ஏறவும் முடிமேல் நதி மண் ஏறவும் முதியாள் 
அன்று ஏறிய தேரோடும் விண் அடைந்து ஏறவும் நினைந்தான். 	 
 
2977.	கங்கைப் புனல் வடிவாகிய கவ்வைத் திரை வைகைச் 
சங்கச்சரி அறல் ஆம் மலர்த் தார் ஓதியை நோக்கா 
வங்கக் கடல் பேர் ஊழியில் வருமாறு என எவரும் 
இங்கு அற்புதம் அடையப் பெருக என்றான் அருள் 
                  குன்றான். 	 
 
2978.	தும்பைச் சடை முடியான் ஒரு சொல்லாடவும் முன்னாள் 
வம்பைப் பெரு முலையால் வரி வளையால் வடு அழுத்தும் 
கொம்பைத் தவம் குலைப்பான் கடும் கோபம் கொடு 
                  நடக்கும் 
கம்பை பெரு நதியில் கடும் கதியால் வரும் வைகை. 	 
 
2979.	பத்திக் குளிர் கமுகின் குலை பரியக் கரை முரியக் 
குத்திப் பழம் சிதறச் சேறி கோட்டங்களை வீட்டி 
முத்திக் கொடு கதலிப் புதன் முது சாலிகள் அரித்துக் 
தத்திப் பல தருவேரொடும் தள்ளிக் கடுகியதே.	 
 
2980.	பல்லாயிரம் செந்தாமரை பரப்பிக் கொடு வரலால் 
நல் ஆயிரம் கண்ணான் எழில் நயக்கும் குளிர் நளினம் 
கல் ஆரமும் கடி முல்லையும் கரும்பும் கொடு வரலால் 
வில் ஆயிரம் கொடு போர் செயும் வேள் வீரனும் மானும். 	 
 
2981.	மணிமாலையும் மலர் மாலையும் சிதறா இறு மருங்கே 
அணி காஞ்சியும் ஒளிர் சங்கமும் மலறப் புடை எறியாக் 
கணியால் எழில் முகத்தாமரை கண்ணீரொடும் கவிழாத் 
தணியா முனிவுடன் ஊடிய தடம் கண்ணியர் போலும். 	 
 
2982.	வரை உந்திய மது முல்லையின் எய்பாற அயிர் மருதத் 
தரை உந்திய கரும்பின் குறை சாறு ஓடு உவர் ஆறோடு 
இரையும் தெழு தூர் நிர் வைகை இந் நகர் வைகும் 
திரையும் தெழு கடல் தம்மிடம் சென்றால் அவை போலும். 	 
 
2983.	கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில் புறம் 
                   போய் 
இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல் 
                   வாய்ச் 
செல்லும் கல நாவாய் பல திமில் போல் சுமந்து ஏகிப் 
புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே. 	 
 
2984.	மறுகும் பல பொருள் ஆவண மணிவீதியும் மன்றும் 
சிறுகும் கண மதமா நிரை சேரும் தெருவும் போய் 
முறுகும் சினமொடு தெண் திரை மூரிப் புனல் தாவிக் 
குறுகும் படி கண்டு அஞ்சினர் கொடி மா நகர் உள்ளார். 	 
 
2985.	சிலர் மைந்தரை எடுப்பார்களும் சிலர் மைந்தரைக் 
                  காணாது 
அலமந்து அழுவாரும் சிலர் அம் கைத் தளிர் பற்றிக் 
குல மங்கையர் தமைக் கொண்டுயப் போவார்களும் 
                  குறுகும் 
தலம் எங்கு எனத் திகைப்பார் களும் தடுமாறு கின்றாரும். 	 
 
2986.	பொன் உள்ளன பணி உள்ளன பொருள் பேணல் 
                  செய்வாரும் 
மன்னும் சில பொருள் கைக்கொள மறப்பார்களும் மாடம் 
மின்னும் கொடி நெடு மாளிகை மேல் ஏறுகின்றாரும் 
இந் நன்னகர் துயர் மூழ்குதற்கு ஏது ஏது என்பாரும். 	 
 
2987.	நேற்றும் பரி நரியாயின நெடு மாநகர் எங்கும் 
ஊற்றம் செய்த என்பார்களும் ஒரு காலமும் இந்த 
ஆற்றின் பெருக்கு இலை என்று அயர்வாரும் கடல் 
                   அரசன் 
சீற்றம் கொடு முன்போல்வாரும் செயலே கொல் என் 
                   பாரும். 	 
 
2988.	நம் கோமகன் செம் கோல் பிழைத் தனனோ என 
                 நவில்வார் 
அம் கோல் வளை பங்கன் விளையாட்டோ என 
                 அறைவார் 
இங்கு ஆர் இது தணிப்பார் என இசைப்பார் இது 
                 தணிப்பான் 
பொங்கு ஆலம் உண்டு அருள் சுந்தரன் அலது யார் 
                 எனப் புகல்வார். 	 
 
2989.	அடுத்து ஆயிரம் குண்டோதரர் எதிர் ஏற்று இருந்து 
                 அகல் வாய் 
மடுத்தாலும் அடங்காது என மதிப்பார் இது தனையும் 
எடுத்து ஆயிரம் முக கங்கையின் இறைவன் சடை ஏறக் 
கொடுத்தால் அலது அடங்காது இதன் கொடும் கோபமது 
                 என்பார். 	 
 
2990.	வான் ஆறு இழி நதி ஆயிர முகத்தால் வருவது போல் 
ஆனாது எழு நீத்தம் தணியாவாறு கண்டு அன்பு 
தான் ஆகிய சிவன் அன்பரை ஒறுக்கும் தறு கண்ணர் 
போனார் தமது அகத்தே உள பொருள் பேணுதல் கருதா. 	 
 
2991.	வழுதி தன் தமர் விட்டு ஏக மதுரை நாயகன் பால் ஏகி 
அழுது இசை பாடும் தொண்டில் அகப்படும் பாதம் 
                    போற்றித் 
தொழுது கொண்டு அறிவாய் ஊறும் சுகப் பெரும் கடலின் 
                    மூழ்கி 
எழுது சித்திரம் போல் மன்னி இருந்தனர் வாத ஊரர். 	 
 
பரி நரியாக்கி வைகை அழைத்த படலம் சுபம் 
 
 	  
 

61. மண் சுமந்த படலம் சுபம்

 
 
2992.	பண் சுமந்த மறை நாடரும் பொருள் பதம் சுமந்த 
                  முடியார் மனம் 
புண் சுமந்த துயர் தீர வந்த பரி நரிகளாய் அடவி 
                  போன பின் 
விண் சுமந்த சுர நதி எனப் பெருகு வித்த வைகை இது 
                  விடையவன் 
மண் சுமந்து திரு மேனிமேல் அடி வடுச் சுமந்த கதை 
                  ஓதுவாம். 	 
 
2993.	கரும் கடல் திரை இடைக் கிடந்து சுழல் கலம் எனக் கன 
                   முகடளாய் 
வரும் புனல் பரவை உட் கிடந்து நகர் மறுகி உள் கமற 
                   வேலினான் 
ஒருங்கு அமைச்சரை விளித்து நீர் கரை சுமந்து ஒருங்கி 
               வரும் ஓத நீர்ப் 
பொருங் கதத்தினை அடக்குவீர் என அமைச்சரும் 
               தொழுது போயினார். 	 
 
2994.	வெறித் தடக்கை மத யானை மந்திரிகள் வேறு வேறு 
               பல குடிகளும் 
குறித்து எடுத்து எழுதி எல்லை இட்டு அளவு கோல் 
               கிடத்தி வரை கீறியே 
அறுத்து விட்டு நகர் எங்கணும் பறை அறைந்து அழைத்து 
               விடும் ஆள் எலாம் 
செறித்து விட்டு அவர்க்கு அளந்த படி செய்மின் என்று 
               வருவித்தனர். 
 
2995.	மண் தொடும் கருவி கூடை யாளரும் மரம் சுமந்து 
                  வருவார் களும் 
விண் தொடும் படி நிமிர்ந்து வண் படு விரி பசும் தழையல் 
                  ஆலமும் 
கொண்டு அதிர்ந்து வருவாரும் வேறு பல கோடி கூடிய 
                  குழாமும் நீர் 
மொண்டு அருந்த வரும் ஏக காலம் என வருபுனல் 
               கரையின் மொய்த்தனர். 	 
 
2996.	கிட்டுவார் பரி நிறுத்துவார் அரவு உருட்டுவார் அடி 
                   கிடத்துவார் 
இட்டுவார் தழை நிரப்பு வார் விளி எழுப்புவார் பறை 
                   இரட்டுவார் 
வெட்டுவார் மணல் எடுத்துவார் செல வெருட்டுவார் கடிது 
                   துடும் எனக் 
கொட்டுவார் கரை பரப்புவார் உவகை கூருவார் குரவை 
                   குழறுவார். 	 
 
2997.	கட்டுவார் கரை உடைப்பு நீர் கடுகல் கண்டு நெஞ்சது 
                 கலங்குவார் 
மட்டிலாத முனிவு என்னை அன்னை இனி ஆறுக என்று 
                 எதிர் வணங்குவார் 
கொட்டுவார் மணல் உடைப்பு அடங்க மகிழ் கொள்ளுவார் 
                 குரவை துள்ளுவார் 
எட்டு மாதிரமும் எட்ட வாய் ஒலி எழுப்புவார் பறை 
                 இரட்டுவார். 	 
 
2998.	இந் நிலை ஊரில் உள்ளார் யாவர்க்கும் கூலி யாளர் 
துன்னி முன் அளந்த எல்லைத் தொழில் முறை மூண்டு 
                  செய்வார் 
அந்நிலை நகரின் தென் கீழ்த் திசை உளாள் அளவில் 
                  ஆண்டு 
மன்னிய நரை மூதாட்டி ஒருத்தி பேர் வந்தி என்பாள். 	 
 
2999.	செவி உணவு ஆன வேதசிரப் பொருள் உணர்ந்து செந்தீ 
அவி உணவு ஊட்டும் ஈசன் அன்பரின் ஆற்ற நோற்ற 
தவ நிறை பேறு துய்ப்பாள் தாய் இலார்க்கு அன்னை 
                  ஒப்பாள் 
சுவை உறு பிட்டு விற்று உண் தொழிலினாள் தமியள் 
                  ஆவாள். 	 
 
3000.	வைகலும் அவித்த செவ்விப் பிட்டினை மருங்கு நான்கு 
கைகளாய் முளைத்த முக்கண் கரும்பினை அரும்பு மூரல் 
செய்கதிர் முகத்தான் அந்தத் தேறலை ஆலவாய் எம் 
ஐயனை அகத்தான் நோக்கி அன்பினால் அருத்தி 
                  விற்பாள். 	 
 
3001.	வளைந்த மெய் உடைய அந்த மாதவ நரை மூதாட்டிக்கு 
அளந்த பங்கு அடைப்பான் கூலி ஆள் கிடையாமல் 
               ஆற்றத் 
தளர்ந்து இனி என்னே மன்னன் தண்டிக்கின் என் 
               செய்கேன் என்று 
உளம் தடுமாறிக் கூடல் உடைய நாயகனை உன்னா. 	 
 
3002.	பிட்டு விற்று உண்டு வாழும் பேதையேன் இடும்பை 
                    என்பது 
எள் துணை யேனும் இன்றி இரவி எங்கு எழுகென்று இந் 
                    நாள் 
மட்டு நின் அருளால் இங்கு வைகினேற்கு இன்று வந்து 
விட்டது ஓர் இடையூறு ஐய மீனவன் ஆணை யாலே. 	 
 
3003.	துணை இன்றி மக்கள் இன்றித் தமர் இன்றி சுற்றம் ஆகும் 
பணை இன்றி ஏன்று கொள்வார் பிறர் இன்றிப் பற்றுக் 
                  கோடாம் 
புணை இன்றித் துன்பத்து ஆழ்ந்து புலம்பு உறு 
              பாவியேற்கு இன்று 
இணை இன்றித் இந்தத் துன்பம் எய்துவது அறனோ 
                   எந்தாய். 	 
 
3004.	தேவர்க்கும் அரியன் ஆகும் தேவனே அன்பர் ஆவார் 
யாவர்க்கும் எளியன் ஆகும் ஈசனே வேந்தன் ஆணைக் 
காவல் செங்கோலார் சீற்றம் கடுகுமுன் கூலி ஆளாய் 
ஏவல் செய்வாரைக் காணேன் ஏழையேன் இனி என் 
                  செய்கேன். 	 
 
3005.	கூலியாள் வருவது உண்டோ என்று தன் கொங்கை முற்றத் 
தாலி போல் கண்ணீர் சோர்வாள் குறித்து முன்பு 
               அருத்தும் பிட்டை 
வேலை நீர் ஞாலம் காண மிசைந்தவள் இடும்பை 
                  தீர்ப்பான் 
பாலின் நேர் மொழியாள் பாக மறைத்து அருள் படிவம் 
                  கொள்வார். 	 
 
3006.	குறட்கு நீர் அருத்தி வைகைக் குடிஞையாய் ஒழுகும் 
                  கங்கை 
அறம் குழல் பிரிவின் ஆற்றாது அன்பினால் அவளைக் 
                  காண்பான் 
மறக் கயல் நெடும் கணாளை வஞ்சித்து வடிவம் மாறிப் 
புறப்படு வாரைப் போலப் போதுவார் போத மூர்த்தி. 	 
 
3007.	அழுக்கு அடைந்த பழந்துணி ஒன்று அரைக்கு அசைத்து 
                  விழுத்தொண்டர் 
குழுக் கடந்த இண்டை நிகர் சுமை அடை மேல் கூடை 
                  கவிழ்த்து 
எழுக் கடாந்து திசை கடந்திட்டு இணை கடந்த 
                 திருத்தோள் மேல் 
மழுக்கடைந்து விளங்கிய வாய் மண் தொடு திண் படை 
                  ஏந்தி. 	 
 
3008.	திடம் காதல் கொண்ட அறவோர் திரு வேள்வி தரும் 
                 அமுதும் 
இடம் காவல் கொண்டு உறைவாள் அருத்த அமுதும் 
                 இனிது உண்டும் 
அடங்காத பசியினர் போல் அன்னை முலைப் பால் 
                 அருந்த 
அடங்காத பெரு வேட்கை மகவு போல் புறப்பட்டார். 	 
 
3009.	ஆலு மறைச் சிரமுடியார் அடிக்கமலம் நிலம் சூடக் 
கூலி கொடுத்து எனை வேலை கொள்வார் உண்டோ 
               என்று என்று 
ஓல மறைத் திருமொழி போல் உரை பரப்பிக் கலுழ் 
               கண்ணீர் 
வேலை இடைப் படிந்து அயர்வாள் வீதி இடத்து 
               அணைகின்றார். 	 
 
3010.	தந்தை தாய் பிறர் இன்றி வருகின்ற தனிக் கூலி 
மைந்தனார் வாய் மலரும் குரல் கேட்டு வந்தி உந்தன் 
சிந்தை ஆகுலம் இழந்து நல் கூர்ந்தார் செல்ல மகத் 
தந்தபோது எழு மகிழ்ச்சி தலைக் கொள்ளப் புறம் 
                  போந்தாள். 	 
 
3011.	அன்னை எனத் தன் பாலின் அருள் சுரந்து வருகாளை 
தன்னை அழைத்து எனக்கு அளந்த கரை அடைத்துத் 
                  தருவாயோ 
என்ன இசைத்தனள் ஆக அடைக்கின்றேன் எனக்கு 
                  அன்னை 
பின்னை அதற்கு இடும் கூலி யாது என்றார் பெரு 
                  முதியாள். 	 
 
3012.	பிட்டு இடுவேன் உனக்கு என்றான் அதற்கு இசைந்து 
                  பெரும் பசியால் 
சுட்டிட நான் மிக மெலிந்தேன் சுவைப் பிட்டில் உதிர்ந்த 
                  எலாம் 
இட்டிடுவாய் அது முந்தத் தின்று நான் இளைப்பாறிக் 
கட்டிடு வேன் நின்னுடைய கரை என்றார் கரை இல்லார். 	 
 
3013.	தௌ¢ளி அடு சிற்றுண்டி சிக்கடைந்த பொதி நீக்கி 
அள்ளி எடுத்து அருந்தப்பா என்று இட்டாள் அரைக்கு 
                  அசைத்த 
புள்ளி உடைத் துகில் நீத்தார் புறத்தானை விரித்து ஏந்தி 
ஒள்ளியது என்று அவன் அன்பும் உடன் கூட்டி அழுது 
                  செய்வார். 	 
 
3014.	அன்னை முலைத் தீம் பாலின் அரிய சுவைத்து இ•து 
                    அந்தத் 
தென்னவனாய் உலகு ஆண்ட திரு ஆல வாய் உடைய 
மன்னர் பிரான் தனக்கே ஆம் என்று என்று வாய்ப் 
                    பெய்து 
சென்னி அசைத்து அழுது செய்தார் தீவாய் நஞ்சு அமுத 
                    செய்தார். 	 
 
3015.	தந்தை யொடு தாய் இன்றித் தனிக் கூலி ஆளாக 
வந்த எனக்கு ஒரு தாயாய் அருள் சுரந்து மாறாத 
இந்த இளைப்பு ஒழித்தனையே இனி வேலைத் தலைச் 
                   சென்று உன் 
சிந்தை களிப்பு எழவேலை செய்வேன் என்று இசைத்து 
                   எழுந்தார். 	 
 
3016.	தந்தி வாய் மருப் பிடறி வரும் குடிஞைத் தடம் கரையில் 
வந்தியான் வந்தியாள் என்று ஏட்டில் வரை வித்துப் 
புந்தியால் உரையான் நூல் பொருளினான் அளப்பு அரிய 
அந்தி வான் மதிச் சடையார் கரை அடைப்பார் ஆயினார். 	 
 
3017.	வெட்டுவார் மண்ணை முடி மேல் வைப்பார் பாரம் எனக் 
கொட்டுவார் குறைத்து எடுத்துக் கொடு போவார் சுமடு 
                  விழத் 
தட்டுவார் சுமை இறக்கி எடுத்து அதனைத் தலை படியக் 
கட்டுவார் உடன் சுமந்து கொடு போவார் கரை சொரிவார். 
 
3018.	இவ் வண்ணம் இவர் ஒருகால் இருகால் மண் சுமந்து 
                  இளைத்துக் 
கை வண்ண மலர் கன்றக் கதிர் முடிமேல் வடு அழுந்த 
மை வண்ணன் அறியாத மலர் அடி செம் புனல் சுரந்து 
செவ் வண்ணம் படைப்ப ஒரு செழும் தருவின் மருங்கு 
                  அணைந்தார். 
 
3019.	தரு மேவும் மலை மகளும் சலமகளும் அறியாமல் 
திரு மேனி முழுது நிலமகள் தீண்டித் திளைப்பு எய்தக் 
குரு மேவு மதி முடியைக் கூடை அணை மேல் கிடத்தி 
வரும் மேரு அனையார் தம் வடிவு உணர்ந்து துயில் கின்றார். 	 
 
3020.	அத்தருவே ஆல நெடும் தருவாக அலை புரட்டித் 
தத்தி வரும் புனல் அடைப்பார் சனகாதி முழுது உணர்ந்த 
மெய்த் தவராய்க் கண் களிப்ப மெய் உணர்ச்சி மோன மயச் 
சுத்த உருத் தெளிவிப்பார் எனத்துயிலும் துயில் உணர்ந்தார். 	 
 
3021.	ஆடுவார் சாமம் எனத் தித்திக்கும் அமுத இசை 
பாடுவார் நகை செய்வார் தொழில் செய்வார் பராக்கு அடையக் 
கோடுவார் மணல் குவிப்பார் குதிப்பார் தூள் எழ அடிபாய்ந்து 
ஓடுவார் உடன் மீள்வாள் உன் மத்தர் என இருப்பார். 	 
 
3022.	வேலையினால் அற வருந்தி இளைத்தார் போல் மெய் வேர்வை 
காலமிசை மூச்சு எறிந்து வாய் ஒலியால் காற்று அழைத்துச் 
சால நெடும் பசியினார் போல் தளர்ந்து அடியாள் இடும் பிட்டின் 
மேல் அடைந்த விருப்பினராய் மீண்டும் அவள் பால் அணைவார். 	 
 
3023.	இடும்பை நோய் வெள்ளம் நீந்தி இன்ப நீர் வெள்ளத்து 
                     ஆழ்ந்த 
கொடும் புற முதியாள் முன் போய்க் கூறுவார் கோலுக்கு 
                     ஏற 
இடம் படு கரைகள் எல்லாம் அடை படு கின்ற இன்னம் 
கடும்பசி உடையேன் அன்னே பிட்டு இடு கடிதின் என்றார். 	 
 
3024.	ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள் 
                    ஐயர் 
வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில் பெய்து 
பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக் 
                    கொண்டு 
நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் 
                    உற்றார். 
 
3025.	பிட்டு வாய் மிதப்ப உண்பார் பெருவலி உடையார் போல 
வெட்டுவார் எடுத்த மண்ணைக் கொண்டு போய் வேற்றுப் 
                   பங்கில் 
கொட்டுவார் உடைப்பு மாரும் கொள்கை கண்டு ஆர்த்துத் 
                   திண் தோள் 
தட்டுவார் அயல் நின்றாரைத் தழுவார் களிப்புத் தாங்கி. 	 
 
3026.	எடுத்த மண் கூடையோடு இடறி வீழ்வார் போல் ஆற்றில் 
மடுத்திட வீழ்வார் நீந்தி வல்லை போய்க் கூடை தள்ளி 
எடுத்து அகன் கரை மேல் ஏறி அடித்து அடித்து ஈரம் 
                  போக்கித் 
தொடுத்த கட்டு அவிழ்ப் பார் மீளத் துன்னுவார் 
              தொடுவார் மண்ணை. 	 
 
3027.	கொட்டு மண் சுமந்து செல்வர் கூடையை உடைப்பில் 
                    வீழத் 
தட்டுவார் எடுப்பார் போலத் தாவி வீழ்ந்து அலையில் ஓட 
விட்டு ஒரு மரத்தைப் பற்றி மிதப்பார் திண் கரையில் ஏற 
முட்டுவார் சுழியில் ஆழ்வார் சேண் சென்று முளைப்பார் 
                    மீள்வர். 	 
 
3028.	கொட்டினைக் கழலப் பார்ப்பார் கோப்பர் கோல் இடை 
                  ஆப்பு இட்டுத் 
தட்டுவார் உயிர்ப்பு வீங்கித் தள்ள நின்று இளைப்பார் 
                  கச்சில் 
பிட்டினை நுகர்வார் வேலை வினை கெடப் பிறர்க்கும் 
                  அள்ளி 
இட்டு மாறு ஓச்ச நோக்கி நகைப்பர் கை இரண்டும் 
                  தாக்கி. 
 
3029.	வானத்தின் மண்ணில் பெண்ணின் மைந்தரில் பொருளில் 
                   ஆசை 
தான் அற்றுத் தமையும் நீத்துத் தத்துவம் உணர்ந்த 
                   யோகர் 
ஞானக் கண் கொண்டே அன்றி நாடரும் சோதி 
                   மண்ணோர் 
ஊனக் கண் கொண்டும் காண உடன் விளையாடல் 
                   செய்வார். 	 
 
3030.	அருளினால் உலகம் எல்லாம் ஆக்கியும் அளித்தும் 
                  நீத்தும் 
பெரு விளையாடல் செய்யும் பிறை முடிப் பெருமான் 
                  இங்ஙன் 
ஒரு விளையாடல் செய்ய ஓச்சு கோல் கையர் ஆகி 
அருகு நின்று ஏவல் கொள்வார் அடை கரை நோக்கப் 
                  புக்கார். 	 
 
3031.	நெட்டு அலை ஒதுங்கி ஓட நிவப்பு உற வரை போல் 
                  இட்டுக் 
கட்டிய கரைகள் எல்லாம் கண்டு கண்டு ஒப்பு நோக்கி 
அட்டமே செல்வார் திங்கள் ஆயிரம் தொழுதாள் பேரால் 
விட்ட பங்கு அடை படாமை கண்டனர் வெகுளி மூண்டார். 	 
 
3032.	வந்திக்குக் கூலி யாளய் வந்தவன் யார் என்று ஓடிக் 
கந்தர்ப்பன் என நேர் நின்ற காளையை நோக்கி ஏடா 
அந்தப் பங்கு உள்ள எல்லாம் அடை பட்டது எவன் நீ 
                  இன்னம் 
இந்தப் பங்கு அடையாய் வாளாது இருத்தியால் அம்பீ 
                  என்றார். 	 
 
3033.	வேறு உரையாது தம்மை உணர்ந்தவர் வீறு தோன்ற 
ஈறு இலான் இறுமாப்பு எய்தி இருந்தனன் ஆக மேல் 
                     இட்டு 
ஆறு வந்து அடுத்த பங்கில் அடை கரை கல்லிச் செல்ல 
மாறு கொண்டு ஓச்ச அஞ்சி மயங்கினார் வலிய கோலார். 	 
 
3034.	பித்தனோ இவன் தான் என்பார் அல்லது பேய் கோட் 
                    பட்ட 
மத்தனோ இவன் தான் என்பார் வந்தியை அலைப்பான் 
                    வந்த 
எத்தனோ இவன் தான் என்பார் இந்திர சாலம் காட்டும் 
சித்தனோ இவன் தான் என்பார் ஆர் என்றும் தௌ¤யோம் 
                    என்பார். 	 
 
3035.	பாடல் விஞ்சையனோ என்பார் பண்ணினால் பாணிக்கு 
                    ஏற 
ஆடல் விஞ்சையனோ என்பார் அரும் பெறல் செல்வத்து 
                    ஆழ்ந்து 
வாடிய மகனோ என்பார் இசை பட வாழ்ந்து கெட்ட 
ஏடு அவிழ் தாரினாருள் யார் மகன் இவன் கொல் என்பார். 	 
 
3036.	கரும்பனும் விரும்ப நின்ற கட்டழகு உடையான் என்பார் 
அரும் பெறல் இவன் தான் கூலிக்கு ஆள் செய்தது 
               எவனோ என்பார் 
இரும் பெரும் குரவர் அற்ற தமியனோ என்பார் வேலை 
புரிந்தவன் அல்லன் என்பார் அது மேனி புகலும் என்பார். 	 
 
3037.	கூலியும் கொண்டான் தானே கணக்கிலும் குறிக்கச் 
                   சொன்னான் 
வேலையும் செய்யான் இன் சொல் விளம்பினும் கேளான் 
                   கல்லின் 
பால் அறை முளையே ஆகிப் பராமுகம் பண்ணி 
                   நின்றான் 
ஏல நாம் இதனை வேந்தற்கு உணர்த்துதும் என்று 
                   போனார். 	 
 
3038.	தலைமகன் திருமுன் தாழ்ந்து சாற்றுவார் அடிகேள் இந்த 
அலை புனல் நகரார் தம் தம் பங்கு எலாம் அளந்த 
                   ஆற்றான் 
மலையினும் வலியவாகச் சுமந்தனர் வளைந்த சிற்றூண் 
விலை நரை யாட்டி தன் பங்கு அடைத்திலன் வென்றி 
                   வேலோய். 	 
 
3039.	வேளையும் வனப்பினாலே வென்றவன் ஒருவன் வந்தி 
ஆள் என ஆங்கே வந்து பதிந்தனன் அரசர் செல்வக் 
காளைபோல் களிப்பன் பாடும் ஆடுவான் காலம் போக்கி 
நீளுவான் வேலை ஒன்று நெஞ்சினும் நினைதல் செய்யான். 	 
 
3040.	ஆண் தகை வனப்பை நோக்கி அடிக்கவும் இல்லேம் 
                   அஞ்சி 
ஈண்டினேம் என்று கூற இம் என அமைச்ச ரோடும் 
பாண்டியன் எழுந்து நாம் போய்ப் பங்கு அடை பட்ட 
                   எல்லாம் 
காண்டும் என்று எறிநீர் வைகைக் குடிஞை அம் கரையைச் 
                   சார்ந்தான். 	 
 
3041.	எடுத்த திண் கரைகள் எல்லாம் இறை மகன் உள்ளத்து 
                    ஓகை 
மடுத்தனன் நோக்கிச் செல்வான் வந்தி பங்கு அடைப்பார் 
                    இன்றி 
அடுத்த நோன் கரையும் கல்லி அழித்து எழு வெள்ளம் 
                    நோக்கி 
கடுத்து நின்று எங் குற்றான் இக் கரை சுமந்து அடைப்பான் 
                    என்றான். 	 
 
3042.	வள்ளல் தன் கோபம் கண்ட மாறு கோல் கையர் அஞ்சித் 
தள்ளரும் சினத்தர் ஆகித் தடக்கை தொட்டு ஈர்த்துப் 
                   பற்றி 
உள்ளடு புறம் கீழ் மேலாய் உயிர் தொடும் ஒளித்து 
                   நின்ற 
கள் வனை இவன் தான் வந்தி ஆள் எனக் காட்டி 
                   நின்றார். 	 
 
3043.	கண்டனன் கனன்று வேந்தன் கையில் பொன் பிரம்பு 
                  வாங்கி 
அண்டமும் அளவு இலாத உயிர்களும் ஆகம் ஆகக் 
கொண்டவன் முதுகில் வீசிப் புடைத்தனன் கூடையோடு 
மண் தனை உடைப்பில் கொட்டி மறைந்தனன் நிறைந்த 
                  சோதி. 	 
 
3044.	பாண்டியன் முதுகில் பட்டது செழியன் பன்னியர் 
              உடம்பினில் பட்டது 
ஆண் தகை அமைச்சர் மேனி மெல் பட்டது அரசு இளம் 
              குமரர் மேல் பட்டது 
ஈண்டிய கழல் கால் வீரர் மேல் பட்டது இவுளி மேல் 
              பட்டது பருமம் 
பூண்ட வெம் கரிமேல் பட்டது எவ் உயிர்க்கும் போதன் 
              மேல் பட்ட அத் தழும்பு. 	 
 
3045.	பரிதியும் மதியும் பாம்பும் ஐங் கோளும் பல் நிறம் 
               படைத்த நாள் மீனும் 
இரு நிலம் புனல் கால் எரி கடும் கனல் வான் எனும் 
               ஐம் பூதமும் காரும் 
சுருதியும் ஆறு சமய வானவரும் சுரர்களும் முனிவரும் 
               தொண்டின் 
மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரை நாயகன் 
               அடித் தழும்பு. 	 
 
3046.	வானவர் மனிதர் நரகர் புள் விலங்கு மாசுணம் சிதல் 
                எறும்பு ஆதி 
ஆன பல் சரமும் மலை மரம் கொடி புல் ஆதி ஆம் 
                அசரமும் பட்ட 
ஊன் அடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிர் 
                இல் ஒவியமும் 
தான் அடி பட்ட சரா சர சடங்கள் தமக்கு உயிர் 
                ஆயினோன் தழும்பு. 	 
 
3047.	துண் என மாயோன் விழித்தனன் கமலச் சோதியும் யாது 
               என வியந்தான் 
விண்ணவர் பெருமான் வெருவினான் வானோர் வேறு 
        உளார் மெய் பனிப்பு அடைந்தார் 
வண்ண யாழ் இயக்கர் சித்தர் சாரணர் தம் வடுப் படா 
               உடம்பினில் பட்ட 
புண்ணை யாது என்று தத்தமில் காட்டி மயங்கினார் 
               புகுந்த வாறு அறியார். 	 
 
3048.	ஏக நாயகன் எவ் உயிர்களும் தானே என்பதும் 
              அன்பினுக்கு எளியன் 
ஆகிய திறனும் காட்டுவான் அடி பட்டு அங்கு ஒரு கூடை 
              மண் கொட்டி 
வேக நீர் சுருங்கக் கரையினை உயர்த்தி மிகுத்து உடன் 
              வேலை நீத்து ஒளித்துப் 
போகிய வாறு கண்டு கோல் கையர் போய் 
            நரையாட்டியைத் தொடர்ந்தார். 	 
 
3049.	வன்பு தாழ் மனத்தோர் வலி செய இன்ன மன்னான் 
              மறுக்கம் உண்டேயோ 
முன்பு போகிய ஆள் என் செய்தான் என்னாய் முடியுமோ 
              இனி எனத் திரங்கி 
என்பு போல் வெளுத்த குழலினாள் கூடல் இறைவனை 
              நோக்கி நின்று இரங்க 
அன்பு தேன் ஆக வருத்திய சிற்றூண் அமுது செய்து 
              அருளினார் அருளால். 	 
 
3050.	கண் நுதல் நந்தி கண்த்தவர் விசும்பில் கதிர் விடு திப்பிய 
               விமானம் 
மண் இடை இழிச்சி அன்னை வா என்று வல்லை வைத்து 
               அமரர் பூ மழையும் 
பண் நிறை கீத ஒதையும் வேதப் பனுவலும் துந்துபி ஐந்தும் 
விண் இடை நிமிரச் சிவன் அருள் அடைந்தோர் மேவிய 
               சிவபுரத்து உய்த்தார். 	 
 
3051.	மன்று உடையான் ஒர் கூடை மண் கொட்டி மறைந்ததும் 
               அடை கரை நீண்ட 
குன்று என உயர்ந்த தன்மையும் தம் மேல் கோல் அடி 
               பட்டது நோக்கி 
என்றன் மேல் பட்டது என்றன் மேல் பட்டது இது என 
               அது என அமைச்சர் 
நின்றவர் உணர்ந்து நிகழ்ச்சியும் பிறர் பால் நிகழ்ச்சியும் 
               நோக்கி அந் நிருபன். 	 
 
3052.	உள்ளத்தால் சங்கை பூண்டான் ஆக மண் உடைப்பில் 
                   கொட்டிக் 
கள்ளத்தார் ஆகிப் போனார் ககனத்தார் ஆகிச் சேனை 
வெள்ளத்தார் பிறரும் கேட்ப மீனவற்கு உவகை வெள்ளம் 
கொள்ளத் தாம் அழைத்து ஆகாய வாணியால் கூறல் 
                   உற்றார். 	 
 
3053.	மறத்து ஆறு கடந்த செம் கோல் வழுதி நின் பொருள்கள் 
                   எல்லாம் 
அறத்து ஆற்றின் ஈட்டப் பட்ட அனையவை புனிதமான 
திறத்தாலே நமக்கு நம்மைச் சேர்ந்தவர் தமக்கு ஆர்வம் 
உறத்தாவில் வாதவூரன் உதவினான் ஆதலாலே. 	 
 
3054.	அனையனை மறுக்கம் செய்தாய் அரும் பிணப் புலவுத் 
                  தீவாய் 
வன நரித் திரளை ஈட்டி வாம்பரி ஆக்கித் தந்தேம் 
கனை இருள் கங்குல் போதில் கழிந்தன பின்னும் தண்ட 
வினையர் பால் விடுத்துத் துன்பம் விளைத்தனை அது 
                  பொறாதேம். 	 
 
3055.	வருபுனல் பெருகப் பார்த்தேம் வந்திகைப் பிட்டு வாங்கிப் 
பருகிவந்து ஆளாய் மாறு பட்டன மண் போகட்டுப் 
பொருகரை உயரச் செய்து போகிய அவ் அன்னை 
                  போல்வாள் 
பெருகிய இடும்பை தீர்த்து எம் பேர் உலகு அடையச் 
                  செய்தோம். 	 
 
3056.	இத்தனை எல்லாம் செய்தது இவன் பொருட்டு இந்த வேத 
வித்தகன் தன்மை ஒன்றும் அறிந்திலை வேட்கை எம்பால் 
வைத்துனக்கு இம்மை யோடு மறுமையும் தேடித் தந்த 
உத்தமன் தொடை சந்து ஆதிப் புறப்பற்றும் ஒழிந்த நீரான். 	 
 
3057.	நிறை உடை இவனை இச்சை வழியினால் நிறுத்தி ஆன்ற 
மறை வழி நின்று நீதி மன்னவர்க்கு அளந்த வாழ் நாள் 
குறை படாது ஆனச் செல்வ வாரியுள் குளித்து வாழ்க 
                   என்று 
நிறையவன் மொழிந்த மாற்றம் இரு செவி நிரப்பத் 
                   தென்னன். 	 
 
3058.	அச்சம் உற்று உவகை ஈர்ப்ப அதிசய வெள்ளத்து ஆழ்ந்து 
பொச்சம் இல் அன்பர் எங்கு உற்றார் எனப் புகுந்து தேடி 
நச்சு அரவு அசைத்த கூடல் நாயகன் கோயில் நண்ணி 
இச்சையில் இருக்கின்றாரைக் கண்டு போய் இறைஞ்சி 
                    வீழ்ந்தான். 	 
 
3059.	தொல்லை நீர் உலகம் ஆண்டு சுடு துயர் நரகத்து ஆழ 
வல்ல என் அறிவுக்கு ஏற்ற வண்ணமே செய்தேன் நீர் என் 
எல்லை தீர் தவப் பேறாய் வந்து இக பர ஏது ஆகி 
அல்லல் வெம் பிறவி நோய்க்கு அருமருந்து ஆனிர் ஐயா. 	 
 
3060.	செறுத்து நான் உம்மை எண்ணாது இழைத்த இத் தீங்கு 
                   தன்னைப் 
பொறுத்து நீர் முன் போல் உங்கள் புவி எலாம் காவல் 
                   பூண்டு 
மறுத் துடைத்து ஆள்வதாக என்று இரந்தனன் மண்ணில் 
                   ஆசை 
வெறுத்தவர் நகை உள் தோன்ற வேந்தனை நோக்கிச் 
                   சொல்வார். 	 
 
3061.	பாய்திரை புரளும் முந்நீர்ப் படுகடல் உலகுக்கு எல்லாம் 
ஆயிரம் செம் கணான் போல் அரசு வீற்று இருப்பீர் 
                  உங்கள் 
நாயகன் அருளிச் செய்த வண்ணமே நயந்து செய்வீர் 
தூயவர் அன்றோ நுங்கள் சூழல் சேர்ந்து ஒழுக வல்லார். 
 
3062.	உம்மை நான் அடுத்த நீரால் உலகு இயல் வேத நீதி 
செம்மையால் இரண்டு நன்றாத் தௌ¤ந்தது தௌ¤ந்த நீரான் 
மெய்மை யான் சித்த சுத்தி விளைந்தது விளைந்த நீரால் 
பொய்ம்மை வானவரின் நீந்திப் போந்தது சிவன் பால் 
                     பத்தி. 	 
 
3063.	வந்த இப் பத்தியாலே மாயையின் விருத்தி ஆன 
பந்தம் ஆம் பஞ்சவ வாழ்க்கை விளைவினுள் பட்ட 
                    துன்பம் 
வெந்தது கருணை ஆகி மெய் உணர்வு இன்பம் தன்னைத் 
தந்தது பாதம் சூட்டித் தன் மயம் ஆக்கிற்று அன்றே. 	 
 
3064.	சச்சிதானந்தம் ஆம் அத் தனிப் பர சிவனே தன்னது 
இச்சையால் அகிலம் எல்லாம் படைத்து அளித்து ஈறு 
                   செய்யும் 
விச்சை வானவரைத் தந்த மேலவன் பிறவித் துன்பத்து 
அச்சம் உற்று அடைந்த்தோர்க்கு ஆனா இன்பவீடு 
             அளிக்கும் அன்னோன். 	 
 
3065.	மந்தரம் கயிலை மேருப் பருப்பதம் வாரணாசி 
இந்த நல் இடங்கள் தோறும் இக பர போகம் யார்க்கும் 
தந்து அருள் செய்து எம் போல்வார் தம் மனம் புறம் 
                  போகாமல் 
சிந்தனை திருத்தி ஞானத் திருஉரு ஆகி மன்னும். 	 
 
3066.	ஒப்பவர் மிக்கோர் வேறு அற்று ஒருவனாய் எங்கும் 
                    தங்கும் 
அப் பரம் சுடரே இந்த ஆலவாய் உறையும் சோதி 
கைப் படு கனிபோல் மேல் நாள் கண்ணுவன் ஆதி 
                    யோர்க்கு 
மெய்ப் பொருள் விளங்கித் தோன்றா வேதத்தை விருத்தி 
                    செய்தான். 	 
 
3067.	தன் அருளால் ஞானத் தபனியம் ஆகும் தில்லைப் 
பொன் நகர் இடத்தில் என்னைப் போகெனப் பணித்தான் 
                    நீரும் 
அன்னதற்கு இசைதிர் ஆக என்று ஆலவாய் அடிகள் 
                    தம்மைப் 
பன்னரும் துதியால் ஏத்தி விடை கொடு பணிந்து போவார். 	 
 
3068.	தன் தொடக்கு அறுத்த நாதன் தாள் தொடக்குண்டு 
                  போவார் 
பின் தொடர்ந்து அரசன் செல்லப் பெருந்தவர் நின்மின் 
                  நின்மின் 
என்றனர் செலவும் கூப்பி எல்லை சென்று அணியன் 
                  ஆகிச் 
சென்று அடி பணிந்து தென்னன் விடை கொடு 
                  திரும்பினானே. 	 
 
3069.	துறந்தவர் போக மீண்டு தொல் நகர் அடைந்து தென்னன் 
அறம் தரு பங்கினாரை அடைந்து தான் பிரம்பு நீட்டப் 
புறம் தரு கருணை வெள்ளம் பூரிப்பத் தாழ்ந்து நெஞ்சம் 
நிறைந்தது வாய் கொள்ளாமல் நின்று எதிர் துதிப்பது 
                    ஆனான். 	 
 
3070.	அடையாளம் பட ஒருவன் அடித்த கொடும் சிலைத் 
                    தழும்பும் 
தொடையாக ஒரு தொண்டன் தொடுத்து எறிந்த கல்லும் 
                    போல் 
கடையானேன் வெகுண்டு அடித்த கைப் பிரம்பு உலகம் 
                    எல்லாம் 
உடையானே பொறுத்ததோ உன் அருமைத் திருமேனி. 	 
 
3071.	கடியேறு மலர் மகன் மால் முதல் ஆய கடவுளரும் 
படி ஏழும் அளவு இறந்த பல் உயிரும் நீயேயோ 
முடி ஏற மண் சுமந்தாய் முதுகில் அடி வடுப்பட்டது 
அடியேனும் பட்டென் நின் திருமேனி ஆனேனோ.	 
 
3072.	கைக்கும் மருந்து இன் சுவையின் காட்டுமாறு என 
                  வினைக்கும் 
பொய்க்கும் அரும் கலன் ஆகி மண் ஆண்டு புலை 
                  நரகம் 
துய்க்கும் அரும் துயர் களைவான் மாறாய் நின் துணை 
                  அடிக்கே 
ய்க்கும் மருந்து அவர் என்று அறியாமை ஒறுத்தேனே. 	 
 
3073.	பாதி உமை உருவான பரமேட்டீ எனக்கு இம்மை 
ஊதியமும் பரகதியும் உறுதி பெற விளைவிக்கும் 
நீதியினான் மந்திரியாய் நின் அருளே அவதரித்த 
வேதியரை அறியாதே வெறுத்து நான் ஒறுத்தேனே.	 
 
3074.	மாயா விருத்தியில் நான் மாழாந்து மாதவரை 
ஆயாது ஒறுத்தேன் அரு நரகத்து ஆழ்ந்து நான் 
வீயமல் இன்று அனையார் மெய்ம்மை எலாம் தேற்றிய 
                     வெண் 
தாயானாய் தண்ணளிக் என் தமியேன் செய் கைம்மாறே. 	 
 
3075.	நின்னை உணர்ந்தவர் வேத நெறி வேள்வி செய்து 
                   ஊட்டும் 
இன் அமுதில் கழி சுவைத்தோ இவள் இடும் பிட்டு எவ் 
                   உயிர்க்கும் 
மன்னவனே செம் துவர் வாய் மல்ர்ந்து அமுது செய்தனை 
                   ஆல் 
அன்னை இலா உனக்கு இவள் ஓர் அன்னையாய் 
                   வந்தாளோ. 	 
 
3076.	அன்று சிறுத் தொண்டர் இடும் பிள்ளைக் கறி அமுதும் 
மென்று சுவை தெரிந்த வேடன் இட்ட ஊனும் போல் 
நன்று நரையாட்டி இடு பிட்டு நயந்து அருந்தி 
என்றும் அடியார்க்கு எளிவந்தாய் எம் தாயே.	 
 
3077.	நரி யாவும் பரி ஆக்கி நடத்தியும் அம்பரம் அன்றித் 
தரியா யான் தரு துகிலைத் திரு முடிமேல் தரித்து 
                  மறைக்கு 
அரியாய் நீ என் பாசம் அறுக்க வரும் திரு மேனி 
தெரியாதே பரி ஆசை திளைத்து இறுமாந்து இருந்தேனே. 	 
 
3078.	விண் சுமக்கும் புள்ளாய் விலங்காய்ச் சுழன்று மனம் 
புண் சுமக்கும் சூழ்ச்சி வலி உடைய புத்தேளிர் 
மண் சுமக்கும் மள்ளராய் வந்திலரே வந்தக் கால் 
பண் சுமக்கும் சொல்லின் பங்கன் பாத முடி காண்பாரே. 	 
 
3079.	என்று பல முறையாலே துதித்து அடைந்தோர்க்கு அன்பர் 
               இவர் இவரைத் தேறின் 
நன்று மிக பரபோகம் வீடு பெறல் எளிது என்று நகைத்தார் 
               வேந்தன் 
அன்று திருப்பணி பூசை பிறவும் நனி வளம் பெருக்கி 
               அழகார் வெள்ளி 
மன்றுடையான் அடிக்கு அன்பும் உயிர்க்கு அன்பும் சுரந்து 
               ஒழுகி வாழும் நாளில். 	 
 
3080.	முன்பு பெரும் துறையார்க்கும் அடியார்க்கும் அறம்  
             தெரிந்த முறையால் ஈட்டும் 
தன் பொருள் போய் உடன் பலவாய்த் தழைத்து 
          வருபயனே போல் தலை உவாவின் 
நன் பனி கான் மதி கண்ட உவரி எனப் பல செல்வம் 
             நாளும் ஓங்க 
இன் புறுவான் சக நாதன் எனும் மகப் பெற்று இன்பத்துள் 
             இன்பத்து ஆழ்ந்தான். 	 
 
3081.	அம் மகனை முடி சூட்டி அரசாக்கி வாதவூர் அமைச்சர் 
                   சார்பன் 
மெய்ம்மை நெறி விளக்கி இரு வினை ஒப்பில் அரன் 
            கருணை விளைந்த நோக்கான் 
மும்மை மலத் தொடர் நீந்திச் சிவானந்தக் கடல் படிந்து 
                முக்கண் மூர்த்தி 
செம் மலர்த்தாள் நிழல் அடைந்தான் திறல் அரிமர்த்தனன் 
            எனும் தென்பார் வேந்தன். 	 
 
3082.	வழுதியால் விடுக்கப் பட்ட வாதவூர் முனிகள் தம்மைப் 
பழுது இலாப் பாடல் கொள்வார் பதி பல பணிந்து போந்து 
முழுது உணர் மறையோர் வேள்விப் புகை அண்ட முடி 
                  கீண்டு ஊழி 
எழு வட வரை போல் தோன்றும் எழில் தில்லை மூதூர் சேர்ந்தார். 	 
 
3083.	வீதி தொறும் வீழ்ந்து வீழ்ந்து இறைஞ்சி ஆலயத்து 
              எய்தி மெய்மை ஆன 
கோதி அறிவு ஆனந்தச் சுடர் உரு ஆம் சிவகங்கை 
              தோய்ந்து மேனி 
பாதி பகிர்ந்தவள் காணப் பரானந்த தனிக் கூத்து 
              பயிலா நிற்கும் 
ஆதி அருள் ஆகிய அம்பலம் கண்டு காந்தம் நேர் 
              அயம் போல் சார்ந்தார். 
 
3084.	அன்று குருந்து அடியில் வைத்து ஆண்ட கோலமே 
                அருள் ஆனந்த 
மன்று இடத்து எதிர் தோன்றி வா என்பார் என மூரல் 
                மணிவாய் தோற்றி 
நின்ற தனிப் பெரும் கூத்தர் நிலை கண்டார் அஞ்சலித்தார் 
                நிலமேல் வீழ்ந்தார் 
ஒன்று அரிய புலன் கரண வழி நீந்தி மெய் அன்பின் 
                உருவம் ஆனார். 	 
 
3085.	வண்டு போல் புண்டரிக மலரில் விளை சிவ அனந்த 
                மதுவை வாரி 
உண்டு வாசகம் பாடி ஆடி அழல் வெண்ணெய் என 
                உருகும் தொண்டர் 
விண் துழாவிய குடுமி மன்று உடையான் திருவாக்கான் 
                மிகுந்த நேயம் 
கொண்டு போய்க் குணதிசையில் அரும் தவர் வாழ் 
          தபோவனத்தைக் குறுகி அம் கண். 	 
 
3086.	குறி குணங்கள் கடந்த தனிக் கூத்தன் உரு எழுத்து 
             ஐந்தின் கொடுவாள் ஓச்சிப் 
பொறி கரணக் காடு எறிந்து வீசி மனப் புலம் திருத்திப் 
             புனிதம் செய்து 
நிறை சிவமாம் விதை விதைத்துப் பசு போதம் களைந்து 
             அருணன் நீர் கால் பாய 
அறி உருவாய் விளைந்த தனிப் பார் ஆனந்த அமுது 
             அருந்தாது அருந்தி நின்றார். 	 
 
3087.	மான் நிரையும் குயவரியும் வந்து ஒருங்கு நின்று ரிஞ்சா 
                மயங்கு கானத்து 
ஆன் நிரைக கன்று என இரங்கி மோந்து நக்க ஆனந்த 
                அருள் கண்ணீரைக் 
கான் நிறை புள்ளினம் பருகக் கருணை நெடும் கடல் 
             இருக்கும் காட்சி போலப் 
பால் நிற வெண் நீற்று அன்பர் அசை வின்றிச் சிவயோகம் 
                பயிலும் நாளில். 	 
 
3088.	புத்தர் சிலர் இலங்கையினும் போந்து மூவாயிர மெய்ப் 
                போத வேத 
வித்தக ரோடு ஏழு நாள் வரை யறுத்துச் சூள் ஒட்டி 
                விவாதம் செய்வார் 
இத் தகைய நாள் ஏழில் யாம் இவரை வேறும் எனும் 
                எண்ணம் பூண்ட 
சித்தம் உடையவர் ஆக அவர் கனவில் எழுந்து அருளித் 
                தேவ தேவர். 	 
 
3089.	வாதவூரனை விடுத்து வாது செய்வீர் என விழித்து 
                மறையோர் அந்தப் 
போத வேதியரை வனம் புகுந்து அழைத்தார் அப்போது 
                பொதுவில் ஆடும் 
வேத நாயகன் பணித்த வழி நின்றார் எதிர் மறுப்ப மீண்டு 
                போந்து 
காதார குல மூழ்கி இருந்தார் தழல் நிமிர்த்துக் கலியைக் 
                காய்வார். 	 
 
3090.	பின்னும் அவர் கனவின் கண் மன்றுள் நடம் பிரியாத 
                பெருமான் வந்து 
முன்னவனைப் பெருந்துறையில் குருந்தடியில் ஆட் 
            கொண்ட முறையினாலும் 
இன் இசை வண் தமிழ் மணி போல் பாடும் காரணத்தாலும் 
                யாம் அன்று இட்ட 
மன்னிய பேர் மாணிக்க வாசகன் என்று அழை மின்கள் 
                வருவான் என்றார். 	 
 
3091.	உறக்கம் ஒழிந்த அறவோர் சென்றவர் நாமம் மொழிந்து 
             அழைப்ப உணர்ந்து நாதன் 
அறக் கருணை இதுவோ என்று அவரோடும் எழுந்து நகர் 
                அடைந்து மண்ணும் 
துறக்கமும் நீத்து அருவத்தார் மன்று ஆடும் துணைக் 
             கமலம் தொழுது மீண்டோர் 
நிறக் கனக மண்டபத்தில் புக்கு இருந்தார் அறிஞர் சூழா 
                நெருங்கிச் சூழ. 	 
 
3092.	தத்து நீர்க் கலத்தில் போந்த சீவரப் போர்வை தாங்கும் 
புத்தரை வேறு வைத்துப் புகன்மின் நும் இறையும் நூலும் 
அத்தலை நின்றோர் எய்தும் கதியும் என்று ஆய்ந்த 
                  கேள்வி 
மெய்த்தவ நெறி மாணிக்க வாசகர் வினவினாரே. 	 
 
3093.	கனவினும் நீறு காணாக் கைதவர் காட்சி யானும் 
மன அனுமானத் தானும் வாசகப் பெருமான் தம்மை 
வினவிய மூன்று முத்தே சாதியின் விரித்தார் வேதம் 
அனையவர் கேட்ட அம் மூன்று மனு வாதம் செய்து 
                உட்கொள்ளா. 	 
 
3094.	இன்று இவர்க்கு அனுமான் ஆதி எடுப்பது என் என்று 
                    காட்சி 
ஒன்று கொண்டு அவர்கள் தாமே உடம்படல் மறுத்தார் 
                    காட்சி 
அன்றி ஏது இன்மையாலே அனுமான அளவை யாலும் 
நின்றவன் நும் கோன் ஆதி நிறுத்திய மூன்றும் என்றார். 	 
 
3095.	பொன்று தன் முத்தி என்பார் பூசுரர் பிரானை நோக்கி 
இன்று எமைக் காட்சி ஒன்றால் வென்றனம் என்றீர் 
                   ஆனால் 
நன்று நும் கடவுள் தன்னை அளவையான் ஆட்சி எம்மை 
வென்றிடும் என்றார் ஐந்தும் வென்றவர் முறுவல் செய்யா. 	 
 
3096.	பிறவி அந்தகர்க்கு வெய்யோன் பேரொளி காட்டலாமோ 
மறைகளால் அளவை தன்னால் தேவரான் மனத்தால் 
                   வாக்கால் 
அறிவரும் சோதி எங்கோன் அவன் திரு நீற்றுத் 
                   தொண்டின் 
குறிவழி அன்றிக் காணும் கொள்கையான் அல்லன் 
                   என்றார். 	 
 
3097.	தோற்றம் இல்லாதவர் உங்கள் சிவனுக்கும் திரு நீற்றுக்கும் 
தோற்றம் எப்படித் திட்டாந்தம் சொல்லுமின் என்றார் 
                    தூயோர் 
வேற்றுமை அற நாம் இன்னே விளக்குதும் அதனை 
                    நீங்கள் 
தோற்ற பின் நுமக்குத் தண்டம் யாது கொல் சொல்மின் 
                    என்றார். 
 
3098.	செக்கு உரலிடை இட்டு எம்மைத் திரிப்பது தண்டம் 
                என்னா 
எக்கர் ஆம் தாமே இசைந்தனர் எரிவாய் நாகம் 
கொக்கு இறகு அணிந்தார் அன்பர் உலர்ந்த கோ 
                மயத்தை வாங்கிச் 
செக்கரம் தழல் வாய்ப் பெய்து சிவந்திட வெதுப்பி வாங்கி. 
 
3099.	இவ்வண்ணம் இருக்கும் எங்கள் இறை வண்ண வடிவு 
                  அந்தச் 
செவ் வண்ண மேனி பூத்த திரு வெண்ணீறு அதுவும் 
                  என்னா 
மெய் வண்ணம் உணர்ந்த வேத வித்தகர் அவை முன் 
                  காட்டா 
உய்வ் வண்ணம் அறியா மூடர் உள்ளமும் உயிரும் 
                  தோற்றார். 	 
 
 
3100.	இங்கு இவர் தோற்ற வண்ணம் கேட்டவர் இறப்ப இன்பம் 
தங்கு வீடு என்று தேற்றும் சமயத்தில் ஆழ்ந்த ஆத்திக் 
கொங்கு இவர் தாரான் மூங்கைக் குயில் பெடை 
               எனத்தான் ஈன்ற 
மங்கையைக் கொண்டு தில்லை மல்லன் மா நகரில் 
               வந்தான். 	 
 
3101.	யாவரே ஆக இன்று இங்கு என் மகன் மூங்கை தீர்த்தோர் 
ஆவரே வென்றோர் என்றன் ஆற்றவும் மானம் பூண்டு 
சாவதே முத்தி என்பார் மணி முதன் மூன்றும் தங்கள் 
தேவரே என்று என்று உள்கிச் செய்யவும் தீராதாக. 	 
 
3102.	அந்தணர் பெருமான் முன் போய் அரசன் மகளைப் 
                 போகட்டி 
இந்த நோய் நீரே தீர்க்க வேண்டும் என்று இரந்தான் 
                 ஐயன் 
சுந்தர நாதன் மன்றுள் துணைத்தாள் தன்னைத் 
சிந்தை செய்து அருட் கண் நோக்கால் திருந்து இழை 
                 அவளை நோக்கா. 	 
 
3103.	வேறு வேறு இறைவன் கீர்த்தி வினா உரையாகப் பாடி 
ஈறு இலா அன்பர் கேட்ப இறை மொழி கொடுத்து மூங்கை 
மாறினாள் வளவன் கன்னி மடவரல் வளவன் கண்டு 
தேறினான் சிவனே எல்லாத் தேவர்க்கும் தேவன் என்னா. 	 
 
3104.	பின்பு அரவு ஆரம் பூண்ட பிரான் அருள் விளையப் 
                  பாடும் 
அன்பரை முனிவர் மூவாயிரவரை அடியில் தாழ்ந்து 
முன்பு அவர் சொன்னவாறே மூர்க்கரைத் தடிந்து மன்றுள் 
இன்பரை நடம் கண்டு ஏத்தி இறைமகன் சைவன் ஆனான். 	 
 
3105.	மாசு அறு மணிபோல் பல் நாள் வாசக மாலை சாத்திப் 
பூசனை செய்து பல் நாள் புண்ணிய மன்றுள் ஆடும் 
ஈசனை அடிக் கீழ் எய்தி ஈறு இலா அறிவு ஆனந்தத் 
தேசொடு கலந்து நின்றார் சிவன் அருள் விளக்க வந்தார். 	 
மண் சுமந்த படலம் சுபம்	 	 
 

இப்பணியைச் செய்து அளித்த செல்வி. கலைவாணி கணேசன் (சிங்கப்பூர்) அவர்களுக்கு நன்றி.

Please send your comments and corrections

Back to Tamil Shaivite scripture Page
Back to Shaiva Sidhdhantha Home Page

Related Content

Discovery of the god to mortals

Thiruvilaiyadal puranam - The sacred sports of Siva

Thiruvilaiyatar puranam

திருவிளையாடற் புராணம்

திருவிளையாடற் புராணம் - படலம் 1-முதல் 5-வரை