logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மகிழ்மாக் கலம்பகம்

Makizhmaak Kalampakam
of Thozuvur Velayutha Mutaliyar


  • Acknowledgements: 
    Our Sincere thanks go to the Digital Library of India for providing online a scanned image version of this work 
    This work was prepared using the Distributed Proof-reading Implementation and we thank the following volunteers for their help in the preparation of this etext: R. Aravind, R. Navaneethakrishnan, V. Ramasami, Thamizhagazhvan, N. Pasupathi, P. Thulasimani and N.D. Logasundaram.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 

    © Project Madurai, 1998-2014.
    Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
    Details of Project Madurai are available at the website 
    https://www.projectmadurai.org/  
    You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தொழுவூர் வேலாயுத முதலியாராற் 
செய்யப்பட்ட "மகிழ்மாக் கலம்பகம்"

  • Source:
    • திருச்சிற்றம்பலம்
      மகிழ்மாக் கலம்பகம்
      பிரஸிடென்சி காலேஜ் மாதெமெடிக புரொபேஸர்
      ம.கா.ரா.-ஸ்ரீ இராவ் பஹதூர்
      பூண்டி. அரங்கநாதர்முதலியாரற் கேட்டுக்கொண்டபடி
      மேற்படி பிரசிடென்ஸி காலேஜ் தமிழ்ப்புலவரும்
      ஒருவருமாகிய தொழுவூர் வேலாயுத முதலியாராற் செய்யப்பட்டு
      சென்னை: மெமோரியல் அச்சுக்கூடத்தில் பதிக்கப்பட்டது 
      துளுப - 1887.

                                                     -------- 


 

சிவமயம் 
இந்நூலைச் செய்தவரோடு ஒருங்குகற்ற ஒருசாலைமணாக்கராகிய 
ம-ரா-ரா-ஸ்ரீ காயாறு ஞாநசுந்தரவையரவர்கள் சொல்லிய

சிறப்புப் பாயிரம்

ஆசிரிய விருத்தம்

பேசுமறைப்பொருளன்பர்க்கின்பூட்ட
        மாமகிழ்க்கீழ்ப்பிரியாவாக்கம்
ஆசுகவிபொருந்தவருந்த தமிழ்மாலை
        யணிகென்னவறியாற்சான்ற 
வீசுபுகழ்ப்பூண்டிமகிழரங்கநாதன் 
        சொல்லவிளம்பினானால்
மாசிலருட்குரவன்வழியொழுகு 
        வேலாயதனாம்வாய்மையோனே. 

சுபமஸ்து
-------------


சிவமயம்
கணபதி துணை
திருச்சிற்றம்பலம்.
திருவொற்றியுங் கச்சியு மிடங்கொண்ட படம்பக்கந் 
திருவேகாம்பர முடையார். "மகிழ்மாக்கலம்பகம்".

 

காப்பு
வஞ்சித்துறை

 

திருவாரொற்றி
யொருவேகம்பம
மருமாத் தமிழைத்
தருமேரம்பனே.

 

கட்டளைக்கலித்துறை

 

கச்சிமலர்ந்ததொருகாமக் கோட்டத்துக்கற்புக்கரசி
நச்சியகம்பச் செழுந்தேனை நானுநயந்துளத்தே
வைச்சுவந்தொற்றியிருந்தேற்கு வான்சுவைதான் விளைத்த 
துச்சியிருந்தடிகாறுங் கலம்பகத்தோர்வேழமே.    1


ஒற்றியமர்ந்துயர்மாவடி வீழுமொருகனிக்கே 
பற்றினிருந்தேன்பரிசு பரிந்துகலம்பகமாக்
கொற்றமயிலோடுசேவலும் பெற்றோர்குறத்திபின்போம் 
வெற்றிவைவேலவ்விடலைதந்தான் சுவைமெய்யுறவே    2


ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.ஆறடித்தரவு இரண்டு

 

பொன்மகள் சொன்மகளேத்தும் பொலம்புரிசெஞ்சீறடியானின்
வின்மலைவேந்தொருபுதல்வி வியலிருக்குப்புகழ்முதல்வி 
தன்மலர்ச்செங்கைபற்றித் தீவேட்டபின்றனித்து
முன்மருவுநத்துப்பலிகொள்ளு முயலவொழித்து 
நன்மனைச்சீரறமோம்பு நயப்பெய்தியிருநாழி
நென்மலையாவித்தாக நிறைகற்பினாட்களித்தோய்.    1


பரிதிநெடுமண்டிலத்துப் பகல்விளக்கியின்னுழையும் 
விரிகதிரினணுப்புரைபல் விலகண்டமத்தனையும்
இருவிமிகைப்பசுக்கணத்தின் முற்றூட்டாவினிதமைத்துப்
தருவளனும்வரன்யாறும் வளம்படுத்தித்தரணிமிசை
யுருவளர்பூந்திருக்கச்சி யொருகம்பமுறாவரையா
மருமலர்ந்தண்மாமகிழின் வாழ்வாங்குவாழ்வோய்கேள்.    1

இடையிடையே தனிச்சொற் பெற்றுவந்த நான்கடித்தாழிசைகள் ஐந்து.
லெண்பகடுபசும்புரவிக் கருங்கடாமுதலவெலாம்
எண்பகலில்பாலகர்களினி துலவவிட்டருளி
நண்பகலாதொருகுண்டை வைத்ததூஉநற்புலின்றி
மண்பகலெலாமேய்ந்தால் வாய்க்குமோவுழவையா.    1


அதுநிற்க

 

அலைத்தெழுந்தபவவினையிற் கடலேழும்புயலேழும்
நிலைத்தெழுந்தவருட்கழனித் திருவூறனிலமுணங்கா
சிலைத்தெழுந்ததகராரன் மைந்தர்திருவூர்தியென்றால்
வலைத்தநிரைசாலாதே வாய்க்குமோவெருவையா.    2


ஈங்கிருக்க

 

பரந்ததிருப்பாற்கடலைப் புலிப்பறழ்க்குப்பரிந்தளித்துச்
சுரந்தசுரநதிசகரர் சோபமறத்துணிந்தளித்து
வரந்தரமண்ணெடுத்தடைத்துக் கொண்டதும்பாண்டியன்சார்பேல்
நிரந்தசடைப்பற்றாநீர்ப் பாய்ச்சலுக்கோநேருமையா.    3


அற்றாக

 

ஒருமகனார்பெருவயிற்ற ரொருமானாரிருமனையர்
மருமகனாருருவிலியர் மைத்துனர்வாங்கரவுறக்கர்
பெருமகமாமடிகளவர் மறித்தலையரடிபெயரார்
வருமகமைபார்ப்பவரோ பண்ணையாள்வளமையா.    4

 

எனினெங்ஙன

 

மறம்வளர்த்தபுலப்பட்டி மலக்கள்வர்மயங்காமே
திறம்வளர்த்தபாரிடங்கள் சேவலெனத்தெரிந்தவையும்
புறம்வளர்த்தபலிக்கோடும் புகலவொன்றோவெண்ணான்கா
மறம்வளர்த்திட்டெம்மன்னை யருட்போகமூட்டுவதே.    5

 

அராகங்கள் ஆறு

 

உழல்வரு திரிபுர மதுபொடி படவொரு
தழல்விழி யழல்கொடு தணலது புரிபுமுன்
விழலினி லிருவரொ டொருவரை யுறுகடை
கழலற வுயர்குட முழவுற நிறுவினை.    1


திருவுடைவிடைதரு முகனுடயறவடி
வொருவனையுறைமலை முழுவதுநிலைதரு
பரமொடுவிரியுல குயவருநெறிதரு
குருவெனவிருவினை தலைபெறவருளினை.    2


தகைபெறுமலகில கலையுணர்வுலகுணர்
வகையொடு முழுவல பிரமதகணரவர்
தொகையளவிலையவை யடையவுமிகைதரு
பகையிலைபடையென மிடைதரவிசையினை.    3


மனுவடி வுடையவர் மலிதவநிதியினர்
தனைநிகர்வடிவினர் தமையுணருணர்வினா
முனைவர்கண்மறைவல முனிவரரிருடிகள்
அனைவருமவரவ ரொருதொழிலுறுவர்கள்.    4


இருதுவுமதியென விணைதொகைபெறுகணர்
ஒருபயனுகர்வல ரலதொருதொழிலிலர்
தருகளனவையுறி னுறுபுகழ்;சிலசொல்வா
கருதருதலைவன வரவவைகருதலர்.    5


இவரனைவருமொரு புடையுறவிரிதிரை
அவனியின்மனைமக வருநிதியுடலுயிர்
தவநினவெனவெணி தகுபணிபுரிநரை
உவமனில்வகைபல வுளநிலைதுருவுதி.    6

 

பெயர்த்து மாறடித்தர விரண்டு

 

கால்பெற்றும்பெறாதும்வரு மாக்கோரை நாத்திகஞ்செய்
சால்பற்றசிறுபுற்கண் மாயாவாதப்பூண்டாங்
கிளைத்தகளைமூடாது கிறிசெய்துறைப்பட்டிகெடா
தளைத்தமயலலவன்மட மாம்விட்டிலழியாது
நெடுநீராதியகிள்ளைக்களிறெலிவன்சாரைபிற
கொடுநீர்மையவைபுரியா தளிக்குநர்யார்கூறுதியால்.    1


கடுங்காமவெள்ளம்பாய்ந் தாகரமேநீர்ச்சாலி
கொடுங்கோபவெயிலுறைப்பக் கதிர்ச்சாவிகூராமே
கொலைகளவுமுதற்பிணிக டவிர்த்தன்பினீர்ப்பாய்ச்சி
தலையளியாங்காப்புமிகத் தனிப்போகம்விளைவெய்த
பதமுணர்ந்துபாலுய்ப்பார் யாவரேபழமறைசொ
லிதமுணர்த்தவருட்கொண்ட வெந்தையெந்தாயியம்புதியால்.    2

 

பெயர்த்தும வந்த வீரடித்தாழிசை பன்னிரண்டு

 

உரையுணரும்பனவர்மட மாதரிடுபலிதேர்ந்துண்
டரையுடம்புமாதலினா னாகுமேயுழவுனக்கே.    1

ஒருங்காய வுலகெவற்று முயர்ந்தாருமொப்பாரு
மிருந்தாலுமுதவிசெய்வார் யாரையுநீபடைத்திலையே.    2

கருமானையுரித்தனைநாற் கம்மாளர்தலைகொய்தாய்
பெருமானிங்குழவுவினைக் கலப்பையெங்குப்பெற்றனையே.    3

வளங்களமைவுறப்புரிய நாலூருமயானமென்றால்
களஞ்செயிடமவையெங்கே கருதரியநிலையோயே.    4

பல்வேலிப்பயிர்தழைப்ப வைப்பரூர்தொறுநின்போல்
நெல்வேலிவைத்தாரை நீணிலத்திற்காணேமால்.    5

#சண்டியூர்வைத்ததற்பி னுறைவாகவாரூரும்
உற்றுமச்சோற்றுத்துறையொன் றுறுதிபெறவெத்ததென்னே.
#ஒற்றியூர்வைத்ததற்பி    6

நெய்வேள்விப்பிறர்செய்யப் பொறாதழித்தோரளவளவா
வைவேள்விசெயத்துணிந்த தழகறவோர்க்கறமுரைத்தே.    7

ஆளின்றிக்குற்றேவற் காவணஞ்செய்தடாவழக்கா
லாள்கொண்டங்கவறகேவ லாளாகித்திரிந்தனையே.    8

விளைவித்தவினைப்பாடு மெய்யுணர்ந்துமுணரார்போன்
முளைவித்துவறுத்தூட்ட முழுவிருந்துமாயினையே.    9

வைப்பார்போலோடுகோவ ணம்வைத்துக்கரவிற்கொண்
டிப்பாரில்வல்வழக்கிட்டது வொப்பதுண்டேயோ.    10

உடையானென்றொருபேரிங் கெவ்வாறோவுற்றததற்
கடையாளமறிந்துறைப்பார் யாரென்பாரவர்சிலரே.    11

படம்பக்கமிடங்கொண்ட பழம்புகழ்த்தியாகேசனென
உடங்கியையாரணமொழிகேட்டுவந்தடைந்தார்புலவரன்றே.    12

 

நாற்சீரீரடி யம்போதரங்கம் இரண்டு

 

உரைக்குமவ்வுரையெலாமுலகனைத்தையும்
வரைப்பினின் வான்புகழ்மாந்திநின்றதே
வள்ளனின்கருணைமாமடைதிறந்தன்றே
கள்ளவக்கூற்றுரங்கடந்துசென்றதே. 

 

நாற்சீரோரடி யம‌போதரங்கம் நான்கு

 

கையதுவில்லெனக்கனகமால்வரை
மெய்யதுவில்லெனவெள்ளிவீழ்வரை
யாவருமறிவர்காண்மன்றம்பொன்னது
மூவர்தந்திருவெலாமுடிவினின்னது.

 

முச்சீரோரடி யமபோதரங்கம் எட்டு

 

தனதனையிகுளைநசைத்தனை
சதமகனடிமையிசைத்தனை
மனுவழியுலகையசைத்தனை
மலையரசுற‌வுபசைத்தனை.
மணிவலனுடலினிறீஇயினை
வரிவளைபகர்செய்குறீஇயினை
கணியிறைகுருவினுறீஇயினை
கடமுயிர்பொருள்கள்பெறீஇயினை.   

 

இருசீரோரடி யம்போதரங்கம் பதினாறு

 

சித்தியெத்தனை
யுற்றதத்தனை
தெளிநர்கைத்துணை
பெறவும்வைத்தனை.
முத்தியாயினை
பத்திமேயினை
முதல்வனாயினை
முழுதுமேயினை.
தலைமைசான்றனை
புலமையான்றனை
தவமுமார்ந்தனை
நவமுமோர்ந்தனை
அலகிலாணையை
அளவில்கோணையை
ஆக்கவல்லையே
யார்க்கு நல்லையே.    

எனவாங்கு. இது தனிச்சொல்

 

ஆசிரியச்சுரிதகம்

 

முறைவெளிப்படுத்த மறைமொழிவழிதெரீஇப்
பழிச்சினர்பரசிப் படாகுறிற்பரிசில
நல்குதல்வேண்டு மல்லதையிவறுபு
காசிலைச்சிறிதுமெனக்கைவிரித்துத்
தேசுடைமன்றத்துச்செந்தீயேந்தி
மெய்வெளிகாட்டிவேண்டுநர்வேண்டியாங்
கையமின்மையாடினுமகலார்
காலைத்தூக்கிக்கொண்டதுசாலு
மாயினும்விடார்நேயமிக்குற்றார்
ஆதலினடி கேளாய்தலங்கமைத்து
மாதுகாதலியுமவள்ளனீரும்
காதலினளித்தகம்பஞ்சோறமையும்
குடிமுழுதுரிமையுமக்கேவழிவழி
யெமையாட்கொளினுமக்கெய்துமில்வாழ்க்கையே.    1

 

நேரிசைவெண்பா

 

இல்வாழ்க்கையாகா தினிதாகவில்வாழ்க்கை
செல்வாயறுதொழிலைச் செய்தருள்க - மெல்ல
வயதொழின் மேற்கொள்ளற்க யார்க்குமதிமேலோ
யுறுதியொற்றியூர்க்கே யுவந்து.    2

 

கட்டளைக்கலித்துறை

 

உவந்தாயொருகம்பமாயினு மென்னையுழைப்பொன்றின்றிச்
சவந்தாங்கிக்கச்சிமயானத்தி னாடுதறக்ககெரலாம்
நவந்தாங்கறஞ்செயிமவான் மகளுளநாணிப்பிலந்
தவந்தாங்க நாங்கள்பவந்தாங்கவிட்டையதாரணிக்கே.    3

 

நேரிசைவெண்பா

 

தாரணிக்கேதாரணித்தேர் தாரணியாநின்றக்காற்
பேரணிக்கேபேரணியாப் பேசுவதென் - னூரணிக்கே
வன்னிப்பெருஞ்சூழல்வைத் தொற்றிவந்தீரேல்
என்னினிப்போர்ச் சேவகமேற்றீர்.    4

 

கட்டளைக்கலித்துறை

 

ஏற்றீர்நகையிகல்பெற்றும் புரஞ்சுடவேறுமண்டேர்
காற்றீரவைப்பதன்முன் னச்சுமிற்றதுகைக்கணைக்குந்
தோற்றீர்வலவன்றறிதலை யாவன்றுணையுமிலீர்
சாற்றீரக்கச்சிசேர்மாவடிக் கீழக்குடிச்சார்பிதென்னே.    5

 

கொச்சகக்கலிப்பா

 

என்னொற்றிக்கொண்டாலும் யானொற்றிப்போவதிலை
முன்னொற்றிக்குறிவைத்தான் முளரிக்கைவண்டாலே
மின்னொற்றிவிளங்கிடைச்சி விழைதகுபாறயிர்பெய்து
பின்னொற்றித்தரணிக்கேன் பெருமவுனைக்காணுதற்கே.    6

 

கட்டளைக்கலிப்பா

 

காணுதற்கரிதாகுங் கள்ளக்கம்பன்
        காதல்செய்பவர்காசெலாங் கொள்ளைகொண்
டூணுறக்கமிலாதலமந்தவ
        ருள்ளவான்பொருள் யாவுங்கவர்ந்தரோ
பூணுகோவணம்வைத் தொளித்தங்கவர்
        பொதியெலாம்வஞ்சித்தோடு மோர்நாள்கள்ளி
நாணுமாதர்கலை வளைவவ்வித்தா
        னல்லகம்பனெனப் பெயர்பூண்டதே.    7

 

கலிநிலைத்துறை

 

பூண்டாராமைபொங்கரவென்புபொருகேழ
னீண்டார்கோடுபுன்றலைமாலைநிறைசெல்வ
மாண்டாரொற்றியார்பரமேசனவரென்பார்
வேண்டார்போலும்பேர்க்கமைவேடம்வியப்பம்மா.    8

 

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

வியந்தவரைவியப்பழிக்குமுரண்மறலி யுரங்கிழிந்துவிறலும் வீயப்,
பயந்தடைந்தபாலனுயிர்பரிந்தளித்துப் பயங்கரப்பேர்படைத்துவீர,
வயந்திகழுங்கழற்பதத்தர் மணியேகாம்பரமுடையார்மன்றவாணர்,
நயந்திருந்தாரொருகன்னிகாப்பினென நவிலும்வையநகையாமன்றே.    9

 

பிச்சியார், இதுவுமது

 

அன்றிருக்குமுதல்வர்சா ரூபத்தாலே         யணிசூலங்கையேந்தியாடுகின்றீர்,
நன்றிருக்குமொற்றிநெடுந்தெருவிற்பிச்சி         நகைமலர்சூடியபிச்சியாரேயன்பை,
நின்றிருக்குநுதனோக்கானேர்ந்தவேளை         நீர்விளித்தீரானாலுநினைவிங்கேதுந்,
துன்றிருக்குக்கரும்புகையேமிக்குச்சாலத்         துயர்செயுந்தீர்வகையினாதரஞ்சூழீரே.    10

 

அம்மானை-கலித்தாழிசை

 

ஆதரவாரேகாம்பரமுடையாரோரெட்டு
மாதர்தோளாசைமருவினர்காணம்மானை
மாதர்தோளாசைமருவினரேயாமாகிற்
காதல்வைப்பளேகாமக்கண்ணிகாணம்மானை
காணரும்போகியர்க்கியாரேகாதல்செயாரம்மானை.    11

 

கலிவிருத்தம்

 

மானைநோக்கிமகிழ்வலப்பாதியின்
ஞானநோக்கினர்பாதிநயந்ததை
யேனைப்பாதியிற்பாதிசெய்தேற்றிப்பின்
கானமாக்கினரொற்றிக்கண்டோல்கற்றே.    12

 

பஃறொடைவெண்பா

 

தோலுந்துகிலுங்குழையுஞ்சுருடோடும்
பால்வெள்ளைநீறும்பசுஞ்சாந்தும்பைங்கிளியுஞ்
சூலமுந்தொக்கவளையுமுடைத்தொன்மைக்
கோலமேயோக்கிக்குறித்ததிருநாமம்
போலுமேயம்மையப்பரென்னாப்பொய்யாகாமைச்
சாலவியலுமொருவரெனப்பாலமைத்த
சீலத்தமிழிற்றெரிந்திசினோர்சீரறிஞர்
மாலற்றசிந்தையிற்கச்சிவளம்பாடினார்
ஏலப்பேறாகவெமக்கு.    13

 

செவிலிகூறல், கட்டளைக்கலித்துறை

 

குடக்குட்டுவன்புனைபொன்வண்ணத்தார்மகிழ்வார்மகிழார்
இடக்குட்டுவன்றனையென்மகளேயினியாரினியார்
கடக்குட்டுவந்துவங்காட்டுநர்காதலுங்காதல்கொலாம்
படக்குட்டுவன்மோதிரக்கையென்றுள்ளம்பரித்தனையே.    14

 

புயவகுப்பு. வண்ணவிருத்தம்

 

தனனதனதனன, தனன தன தனன, தனன,தனதனன,
தத்தத்தனந்தன.

பரவுமுழையுறுவர், பரசுபதயுகள, பதுமமலர்முருகு,
        வைப்புற்றணங்கின
பறவைநிகர்நகர, மெரியமலைகுழைய, மகிழ்வின்மகளுதவ,
        வெற்பங்கிணங்கின
பகல்செயிருசுடர்க, ளுறுபுணகலவகழ், நயநவிறவுளர்கை,
        கைப்பற்றிநின்றன
பசியவளைநகிலி, னணைபுசுவடுபுரி, பருமமணியிடைகொ,
        டிச்சிக்கிசைந்தன (வ)

விரவுகிளிமொழிசெய், பனவர்மனைமயில்கள், விழைவினகமருவ,
        துப்பிற்பசைந்தன.
விரகினுளியநல, மணியவணிபுலிகொள், விபுதசடைமவுலி,
        யத்திக்கியன்றன
விரைசெய்நறுமதலை, வழியுமதுசகுன, வளியர்சிறுகுடியில்,
        விற்பெற்றுயர்ந்தன.
விமலமுறுபுகலி, முனிவர்தமிழ்மறையி, னமுதவருவியொடு,
        பொற்பிற்பொலிந்தன.    13

 

உரவுதொயில்வரையு, மிறைவிகரமலரோ, டகருமிருகமத,
        மொய்த்துக்கிடந்தன
உலகமுயமறையி, னடுவுண்டுவுண்டு, விலகுதிருவைவன,
        முற்றிப்பரந்தன
உடலொடுணர்வுரையு, மொருவவொருநல்வழி, யொழுகுமவரமல,
        முற்றுற்றதொண்டகம்
உறுவமலதிமிர, மகலவுயர்கயிலை, மலியும்வடநிழலி,
        றொட்டவ்விபஞ்சிய (தெ)    14

 

கரவிலருண்டந், நவிலுமிரவுரிய, கவுணிகுறளுரிய,
        படகுக்கிளர்ந்தன
கருவிரெழுவகைய, புணர்தலெமையுரிய, முதலதிணையியைப,
        வொத்துக்குறிஞ்சியைக்
களிறுதரளமன, முடையபரவவொளி, ரறிஞருடையதொரு,
        கச்சிப்பெரும்பதியர்
கனகசபையில்வெளி, யுருவுபெறுமமுதர், கருணைமொழியெழுது,
        கொற்றப்புயங்களே.    15

 

கொற்றியார். ஆசிரியவிருத்தம்

 

கொற்றியா ரேயெங்கண் மாமடிகள் குடமாடல்கும்பிட்டாங்கே
பெற்றனீர்போலுமெழிற்குடமாட லவர் போற்சங்காழிபெற்றீர்
ஒற்றியூரிறைவரிடமாலாயுற்றா ரவர்நீரொற்றியூரே
பற்றினே மிடமாலாயுற்றனிரேற் சாருபம்பலித்ததாமே.    16

 

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

 

பல்லார்வெண்டலையேந்தித்தோலுடுத்துப்
        பலிக்குழன்றபண்பாற்கச்சி,
வல்லாளாவலவிடத்தைக்கடல்வேந்த 
        னினக்களித்தான் மணிபொன்னாடை,
எல்லாமுங்கண்டந்தமாலுக்கு 
        மகட்கொடுத்தானில்லாதாரை,
எல்லாருமெள்ளுவர்செல்வரைச்சிறப்புச் 
        செய்வரென்றதியன்றவாரே.    17

 

நேரிசைவெண்பா

 

என்றதென்கொலொற்றியார் கையிலிரப்போடாக
அன்றுவணங்கா வயன்றலைதான் - நின்றதென்றால்
கோளில்பொறியிற்குணமிலவே யெண்குணத்தான்
றாளைவணங்காத் தலை.    18

 

இதுவும்நேரிசைவெண்பா

 

வணங்காத்தலைகச்சிவள்ளல்பலியோடா
விணங்காத்தலைசிறந்ததேற்கும் - அணங்கேகேள்
சொல்லப்பயன்படுவர்சான்றோர்கரும்புபோற்
கொல்லப்பயன்படுங்கீழ்.    19

 

கட்டளைக்கலித்துறை

 

கீழிடந்தும்மேற்பறந்து மக்கேழலும்புள்ளுமொரு
வாழிடந்துன்னிலமன்னுயிரத்தனைக்கும்புகலாச்
சூழிடமாமகிழ்வாயொற்றிநின்றதுதூப்பெயரா
வீழிடமேவவைத்தார்பொதுவார்க்கென்னவீறிதுவே.    20

 

மறம்-இரட்டையாசிரியவிருத்தம்

 

வீறுசெருக்கிற்சிறுவிதியால்வேட்டமகக் காதலின்வந்த விண்ணோர்பாடு
        விளம்புவதேன் விரிஞ்சன்பறந்தான்குட்டொன்றால்
சீறுமவன்றாதையர்தோள்கள்சிதைந்தமனைவிமருகிமணந்
        தேருநாசிவார்குழலுஞ்செவியும்போயவவண்மருக
னூறுபட்டானினங்குணமுற்றிலன்கண்பல்லுமொருங்கிழந்தா
        னுவனோர்தோழனொருவில்லியாலேயுணராய்போலுமது
தேறுமொருமாமகிழ்ப்பொருளையல்லாற்றேறாமறக்குடியேஞ்
        சிறுமிமதிக்குமவளோநுந்தேர்வேந்துரையைச்சிறுதூதே.    21

 

சித்து - சந்தத்தாழிசை

 

தேவரிற்பெரியமாமகிழ்ப்பரமர்செய்யதாண்மலர்சுமந்திடுஞ்
        சித்தரேமுடையவித்தையோபெரிதுசீர்மலைக்கிறைவன்மாமகள்
ஆவலுற்றபடிகந்திசூதமொடுகூட்டிலிங்கமதைவைப்புவைத்
        தருமனோசிலையிணக்கிவீரமுறுபூரயானியரிதாரமு
மேவவுப்புமுப்பூமுடிந்தவகையாவர்காணவலர்கண்டபின்
        வேறுபோக்கதைவிரும்பிலார்களெனயக்களங்குமுடிவாயிடும்
தாவறும்பழையலோகம்யாவுமுயராடகம்புரியலாமிதிற்
        றமனியக்கிரியுமுறவதாகவவடந்தையார்க்குமுனளித்ததே.    22

 

இதுவுமது - பதின்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

அளித்ததவள்கணவருக்குமுன்னநாமே
        யணியப்பொற்பணியாகச்சிறுகணாகங்
களித்துப்பொற்றலையாட்டிக்களங்கமாகக்
        காட்டுமிரும்பிறையேதானகத்திற்கூட்டி
யொளித்ததில்லையிங்கொன்றுமவர்தோழர்க்கன்
        றுறுசெங்கற்பொன்னானதுலகங்கண்ட
திளித்தவாய்மைத்துனர்க்கும்பொன்னைத்தந்தோ
        மினியூரொற்றியதுமகிழீதுமாதோ.    23

 

தழைவிருப்புரைத்தல் - கட்டளைக்கலித்துறை

 

மாதைக்கலம்பகத்துத்தழையாற்றும் வனப்பையெல்லாம்
தீதற்றசந்நுவநந்தனன்பின்னைந் திணையுரைத்தோன்
ஆதித்தன்முன்னோரகத்தியன் றக்கனுமாய்ந்துவப்பார்
வேதப்பொருள்கச்சியூர வெவன்கொல்விளம்புவதே.    24

 

சம்பிரதம். எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

 

விளம்பருமாமகிழ்வாய் மெய்ப்பொருளுணரெம்முடையார்
        வியவார்களொருபொருளா யணிமாதியாக
வளம்பெறவண்டங்க ளிந்திரசாலமென்னா
        மதித்தார்களானைக்கா வதனினீர்த்தம்பம்
உளங்கொளருணாபுரியி லக்கினித்தம்பத்தோ
        டுயர்வாயுத்தம்பங் காளத்தியிலத்துளுவிற்
களங்கமில்கோகரணமிக வியந்தார்களந்த
        கணபதிக்குங்கசகரணங் காட்டதுமெய்பெறவே.    25

 

இதுவுமது

 

மெய்யாவாகாயநடை யெவர்க்குங்கற்பிப்போம்
        வேண்டினெந்தமலைகளையுங் கனகமதாக்கிடுவோம்
பொய்யாதநூன்முறையே பற்பஞ்சுண்ணங்கள்
        பொருந்துசிந்தூரம்மெவரும் புனைந்துரைக்கப்புரிவோம்
நையாமேபுலவர்க்குச் சாவாநன்மருந்து
        நல்கினர்முன்மாமகிழ்வாய் நங்கள்குருநாமும்
ஐயாவஞ்சங் கற்பமெல்லாமுமுடித்தோ
        மானாலுங்கம்பஞ்சோ றாசையொழிந்திலதே.    26

 

நேரிசைவெண்பா

 

ஆசையடங்கக்கையாரும் வனமண்ணினகம்
ஆசையடங்கக் கைத்தாருமே-மாசறலிஞ்
சும்மாவிருக்குமுடிச் சோதியடிநிழனடுச்
சும்மாவிருக்குஞ் சுகம்.    27
 

இளவேனில். கட்டளைக்கலித்துறை

 

இரும்பிறைக்கும்பொன்னிதழிக்கு மாமுடியாரொற்றிசூழ்ந்
தரும்பிறைக்கும்பொழின்மாங் குயிலோடணியார்கடற்கும்
கரும்பிறைக்குங்குடை வெண்பிறைக்கும்வடக்காங்கதிக்கா
றிரும்பிறைக்கும்வலிக்கும் மிளவேனிற்றுணைசெய்ததே.    28

 

நேரிசைவெண்பா

 

செய்கைமுற்றுந்தவமே தீவகத்தாலானாலும்
உய்கைக்குறுதி யுன்கழலே - மெய்யுருவெட்
டாயினையேகச்சியரசே யெவன்வேறு
பேயனையேனெண்ணியது பேசு.    29

 

நேரிசைவெண்பா

 

பேசும்பொருளுக்கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின்மணியென்றமாணிக்க - வாசகமாந்
தெள்ளமிழ்தைச்சுவைத்தசீர்ச்செவிக் கென்னொற்றியப்பா
கள்ளமொழியேறுமோகாண்.    30

 

வெறிவிலக்கு - கட்டளைக்கலித்துறை

 

காணீரிவ்வேளைக் கரும்புகைமிக்குச் செய்கண்கலக்கம்
வீணீரம்மையை யழிப்பீ ரிதென்வெறி யாட்டன்னைமீர்
பூணீர்மகிழ்க்கம்பர் பூங்களவேனும்புனையுமவர்
தோணீர்வலம்புரி யேனுங்கொணர்மின்சுகந்தருமே.    31

 

மாலைகண்டிரங்கல் - வெளிவிருத்தம்

 

கருமேயிதழித்தார் கொடுவந்தத்தாராவே
அருமேகாம்பர முடையாரவரருளாராவே
லுருமேறென வேதாரிசைசெய்யுமூராவே
வருமேயளவியன் மலையெக்கொடுமைபின்வாராவே.    32

 

கார்கண்டுகவலல் - அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

கொடியார்வளராக் குயிலினத்து மயிலினினங்கள்குளிர்தூங்க
விடியார்வளராக்குயிலினத்தாலினைந்தநாள்போயினமும்பொற்
றொடியார்க்கிடுக்கண்செயத்தோன்றித் தோன்றிநின்றமாமகிழ்வாழ்
அடியார்க்கினியாரன்பர்பாசறைக்கு மாங்கொலவையம்மா.    33

 

களி - எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

 

அம்மாதர்கள்விருப்பாலாயப்பாடிக்குடியு
        மாகிமதுவாவிகுடித்தப்பெயர்மால்பூண்டான்
சும்மாவத்தேவர்சுரரானாரோவப்பா
        சுரையுண்ணப்பெறாவசுரர்துட்டரானாரானாற்
கம்மாளராதிகாரியக்காரரெல்லாங்
        களியரேயரகவுயர்மரமகிழ்வாய்முக்கட்
பெம்மனாரெங்கள்விருப்பாற்பெண்ணையென்றும்
        பிரியாமலுற்றனரேற்பேசுமதென்பிறர்க்கே.    34

 

இதுவுமது

 

பிறப்பிறப்பில்பெருந்தகையார்மாமகிழார்கருணைப்
        பெருக்கப்பாடுதலல்லாற்பிறிதறியாக்களியேம்
திறத்துரைப்பேமறைப் பொருளஃதுணர்வாரார்பசுவைத்
        தீவேட்டலறத்துளெலாஞ்சிறந்த தென்பர்திணைக்கே
இறைச்சிகருப்பொருளென்னவியலவல்லோர்வகுத்தா
        ரெவ்வுயிர்தானூன்விருப்பமிலாததந்தணராம்
அறத்துருவர்வேடனெச்சி லூனுண்டார்நிற்க
        வரகரவேறிலைநெறி வீடடைவதற்குமறியே.    35

 

இதுவுமது

 

அறிவுடையாரூன்வெறுக்கா ரகத்தியர்மார்க்கண்ட
        ராதிசிவஞாநிகள் சாகாநிலையரானார்
குறியுடையூனோம்பியன்றோ வெறுத்தவர்பாதகர்பேர்
        குறித்தவர்க்குங்கதியிலை சத்தியந்தக்கனவேள்விச்
செறிவுடையவவிப்பாகஞ் செருச்செய்தும்பெறாராய்த்
        தேவர்தமிலாதி வேதியருந்தலைக்கறியி
னுறுசுவையின்மாமகிழ்வா யுற்றெலும்போடாமை
        யோடேனக்கோடு கழுத்திட்டிருப்பாரினமே.    36

 

இதுவுமது

 

மேவுதேவரிற்பெரிய திருமாலாரின்றும்
விழைகடற்பள்ளியரானார் விண்ணவர்கூட்டத்துள்
யாவரவியூனுண்ணார் வசிட்டனுமவ்விருப்பா
லினியமாணவற் சபித்தான்மாணாமையாலே

வன்மறைமகமபிதிரா கருமமருந்ததிதி
கானவேட்டமைந்திடத்து மூனவேட்டல்விதித்த
வுலகிலிதனுண்மை யாருணர்வாருணர்ந்தாற்
புதுக்கலைஞரெல்லாரு மதுக்களிகொள்வர்களே.    37

 

நேரிசைவெண்பா

 

அருள்கருதியாறொழுகி யம்மாமகிழ்வாய்ப்
பொருள்கருதி நித்தம்புரிநர் - மருளின்
றவிசொரிந்தாயிரம் வேட்டலினொன்றின்
னுயிர்செகுத்துண்ணாமை நன்று.    38

 

கட்டளைக்கலித்துறை

 

உண்ணாமைநன்றூனுயிர் பிரித்துத்தனுடல்பெருக்கப்
பண்ணாமைநன்றென்றுஞ் சாகாநிலைமைபரிந்தவர்கள்
எண்ணாமைநன்றெலா மாயமா மகிழ்வாயிருப்பதன்றி
மண்ணாமைநன்றொன்றைவஞ்சநெஞ்சத்தைமறிக்குறினே.    39

 

நேரிசைவெண்பா

 

நெஞ்சக்குரங்களிப்ப னீபிழைக்கலாமாட்டி
யெஞ்சலின்மாமகிழ்வா யெந்தையெந்தாய் - விஞ்சுலகில்
ஆவிற்குநீரென் றுறைப்பினுமொல்லாதே
நாவிற்கிளிவந்த சொல்.    40
 

கலிவிருத்தம்

 

சொல்லுஞ்சொல்லும் பொருளுந்துணைவியு
நல்லநீயுமாய் மாமகிழநண்ணினை
வல்லவாறெனில் வையமதித்தென்
அல்லலுற்றதென கொல்லருளப்பனே.    41

 

இன்னிசைவெண்பா

 

கொல்லாவிரதியர் நோநின்றமுக்கட்குருவென்
றெல்லாமுணர்ந்தா ரிசைத்தாரேனமாமகிழ்வாய்க்
கொல்லான்புலாலை மறுத்தானைக்கைகூப்பி
எல்லாவுயிருந்தொழும்.    42

 

கட்டளைக்கலித்துறை

 

தொழுந்தகைத்தெய்வமும் வேந்துந்துணைதொகுசுற்றமுமன்
பெழுந்தகையமமையு மப்பனுந்தாரமுமின்மகவுஞ்
செழுந்தகைமாமகிழ் வாயமர்செல்வனுஞ்செல்வியுமேற்
கழுந்தகைப்பற்றென் சனனமரணங்கடப்பதற்கே.    43

 

குறிநாடல் - ஆசிரியவிருத்தம்

 

கடம்படுத்ததோண் முருகுகளிக்கவிழாவயர்வோங்
        களப்பச்சைவிட்டு வெறியாடல் காண்கிற்போம்
அடம்படர்த்தசடையாள ரருள்பொழிகண்ணாள
        ரணியவிடஞ் செழித்த களர்பொருள்விழுத்ததோளர்
இடம்பழுத்தமறைவாணர் நடம்பழுத்ததாளர்
        இசைபழுத்தமாமகிழா ரிதழிபலித்திடுமோ
குடம்படுத்தமுலைமலைப் பூங்குறத்திகுறிகூறாய்
        குடிபழுக்கவளம்படைத்துக் குறிச்சிபுகுவாயே.    44

 

குறம்- இதுவுமது

 

வாய்ந்தகுறங்கேளம்மே தூதவிலக்கணத்துன்
        வாயிசைந்தகேசாதி பாதமப்பாதத்துக்
கேய்ந்தவிருபுடையு நிலைத்தானங்களவற்று
        ளிறுதிநிலைத்தானமுழு மங்கலமேயாகும்
ஆய்ந்த‌வுனதெண்ண நல்லவெண்ணமதுபலிக்கு
        மன்புடையாய்வாமக் கண்ணாடியதாற்போகந்
தோய்ந்தனையாமைய மிலைமாமகிழ்வாயிறைவர்
        தூயவருட்கிலக்கானாய் சொல்லுதயநன்றே.    45

 

இதுவுமது. கட்டளைக்கலிப்பா

 

நன்றிருந்தகுற நிமித்தமம்மே
        நச்சினார்க்கினியார் கச்சிகாவலர்
வென்றிவேதப் பரிமேலழகனார்
        மெய்யுரைபொய்யா தென்றுமழைத்தலிக்
குன்றினான்வருங்கா லெதிர்நீகண்டாய்
        குக்கில்குக்கூவெனப் பேடைகூடலை
என்றுமின்பம் பெருகுமியல்பினா
        லினைசெயமாலைமுன்மாலையியையுமே.    46

 

தலைவிசினத்தல் . ஆசிரியவிருத்தம்

 

மாலழகரொருபாலே மலியழகரிருபாலே வயங்கப்பூண்ட
நூலழகர்மார்பாலே நுதலழகர்விழிப்பாலே நுவலற்கேற்ற
காலழகர்பொதுப்பாலே கருதழகரன்பாலே கச்சிவாழ்ந்த
மேலழகர்மறைப்பாலே விரும்பழகர்பெண்பாலே விழைதக்காரே.    47

 

இதுவுமது. தரவுக்கொச்சகக்கலிப்பா

 

பெண்ணழகரிடம்வலத்துப் பேரழகர்நெற்றியமர்
கண்ணழகர்தமிழ்சுவைக்குங் காதழகரினித்திருக்கும்
எண்ணழகர்திருவொற்றி யெழுத்தழகர்பொதுவிருந்த
விண்ணழகர்மண்ணழகர் விழைந்தெம்மையுடையவரே.    48

 

மடக்கு - வெளிவிருத்தம்

 

உடையாரெமையின்புடையார் புலித்தோலுடையாரே
சடையார்விலவிஞ்சடையார் தருமாகடையாரே
யிடையார்மகிழ்நூலிடையா ருமையாரிடையாரே
படையார்கருத்துன்படையார் மழுவாட்படையாரே.    49

 

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

 

ஏவண்ணங்கறுத்திருக்கு மில்வண்ணம்பசந்திருக்கு 
        மிலர்செவ்வண்ணம்,
தூவண்ணம்வெளுத்திருக்குஞ் சுடர்வண்ண மிருக்கிருக்குஞ் 
        சொல்வண்ணம்யா,
தோவண்ணமாமகிழ்வாயுறுவண்ணமொரு
        வண்ணவண்ணமாகப்,
பாவண்ணமொன்றல்லாற்பகர்வண்ணமிலை
        யெமக்கிப் பாரிற்றானே.    50

 

இரங்கல். கலித்துறை

 

பாராரெல்லாம்பார்த்தார் படும்பாடவைமுற்றும்
சேரார்போலச்சேர்ந்தா ரலரொடுதெருவூடே
வாரார்முலையார்வந் தாராய்மாமகிழ்வாணர்
தாரார்கொன்றைத்தந்தான் மாமகிழ்தானாமே.    51

 

சந்திரனைப்பழித்தல். - ஆசிரியவிருத்தம்

 

மாமடிகண்மகத்தன்று தாளிற்றேய்ப்புண்ட
        மதியம்பின்றம்முடிமேல் வைத்தாடன்மகிழ்ந்தார்
ஆமடிதோழீஇபித்தரலர் மகிழார்கடலி
        லாலம்வெண்மைகருமையெனப் பிறந்ததிரண்டுண்டே
தாமடியருயவொன்று கைதொட்டாரதுபோய்த்
        தமதுகண்டத்தொடுங்கியது தமக்காசைகொண்ட
நாமடியாவகைகாலாற் றேய்ததொழிப்பாரானார்
        நடுத்தலைமேலேறியதே னாடலென்மற்றதுவே.    52

 

இரங்கல்- ஆசிரியவிருத்தம்

 

நாவிருந்தநயந்தெரிவார் நயந்தபரிசானார்
        நடுவில்லாரெல்லாரு நச்சநடுவீதிச்
சேவிருந்தவழகர் விழிக்கலங்காரஞ்செய்தார்
        சிறியமதப்பயலொருவன் சிறுகால்விட்டோடி
யேவிருந்தபூநாற்றம் வீசப்பித்தேறி
        யினியபாலுங்குமட்டுந் தோழீஇயின்பஞ்செய்
மாவிருந்தும்பணியாரமளியாரங்கொன்றை
        மகிழிருந்தார்மாலிலரே மதிமேலார்காணே.    53

 

மதங்கியார் மடக்கு - ஆசிரியவிருத்தம்

 

மதிமுடியார்மேல்விலங்கா மிடையின்மந்தரமே
        மாமகிழ்பாடியவரு நின்னிடையுமந்தரமே
புதியமயல்விளைவிக்கும் புணர்முலைமந்தரமே
        புத்தமுதம்பொழிமொழியி னிசையுமந்தரமே
சதியிலகுநடைக்கு மனப்பெடைக்குமந்தரமே
        தனிவிழிக் கவ்விராம சரமினிச்சமந்தரமே
வதியமரர்திறையிடுவார் தினமுமந்தரமே
        மதங்கியிரங்கிலையெனிலென் னிலையுமந்தரமே.    54

 

நெய்தலிரங்கல் - மடக்கு-இரட்டையாசிரியவிருத்தம்

 

நிலையாவாழத்தலையுற்றாய் - நிலையாவாழத்தலையுற்றேன்
        நினையாரனையாரென்போன்றாய் - நினையாரணையார்நெடுங்கடலே
தலையாலங்காடுயர்பனையே - தலையாலங்காடுயரிறையே
        தருவார்மாலையளியாரே - தருவார்மாலையளியாரே
மலையாநிலமேயென்மேலே - மலையாநிலமஞ்சுறவிழுமே
        மகிழ்மாலிருந்தாரொருக்காலே - மகிழ்மாசெயுநாளிருக்காவே
சிலையாத்திரியுங்கொடியேசெஞ் - சிலையாத்திருவர்வரக்கரையே
        செழுந்தேனுகுக்குநெய்தால்விஞ் - செழுந்தேயுருக்கும்விடவிரவே.    55

 

வாடைகண்டு தோழிகவன்றது. கட்டளைக்கலித்துறை

 

விடந்தைக்குங்கண்டர் படந்தைக்கும்பாம்பர் வியந்தைக்குற்ற
கடந்தைக்குமந்த குடந்தைக்குங்கச்சிக்கு மாகப்பல்கால்
நடந்தைக்குநல்லுடந்தைப் பட்டன்னாயென னயமுரைக்கோ
மடந்தைக்குநெஞ்சழல் செய்வடந்தைக்கென் மருந்தினியே.    56

 

தென்றலைப்பழித்தல். சந்தவிருத்தம்

 

மருந்தீசனாரென்பர் மகிழீசனார்க்கச்சி மாவீசனார்
பொருந்தேசினார்போலு மவர்மேனியழலும் பொலந்தேசினால்
அருந்தேசினாற்றும் மணங்காறுதலையு ளாராவாவிதென்
திருந்தாசுகந்தெற் கிருந்தாவருங்கூற்று செற்றன்றுமே.    57

 

சிந்தியலொருபொருண்மேன் மூன்றடுக்கிய வெள்ளொத்தாளிசை

 

கூற்றங்குறுகுமுனநெஞ்சமே மாமகிழ்வாய்த்
தோற்றயனாயுலகங்காக்குமெஞ் சோதிகழல்
போற்றிச்சரணம்புகல்.
காலன்கடுகுமூனநெஞ்சமே மாமகிழச்
சீலவரியாயுலகங்காக்குமெஞ் செல்வர்கழல்
ஓலிச்சரணம்புகல். 

சண்டனவன்சாருமுன நெஞ்சமேமாமகிழ்க்கீ
ழண்டனரனாயுலகங் காக்குமெம்மாதிகழல்
தொண்டிற்சரணம்புகல்.    58

 

மடக்குவஞ்சித்துறை

 

புகலிகாவலர்
புகலினென்புகல்
மகிழமாவலார்
மகிழவாகுமே.    59

 

பூவைத்தூது- மடக்கு- கட்டளைக்கலிப்பா

 

ஆவணத்தாரறத்தையன்பர்க்கொளும்
        ஆவணத்தாரொளித்தவருமறைக்
கோவணத்தார்செந்தீவணத்தார்நெற்றிக்
        கோவணத்தார்முற்பாவணத்தார்க்கருள்
காவணத்தாரருட்கருவூலத்தார்
        காவணத்தார்புகழ்தேவணத்தார்தென்
பூவணத்தார்மகிழ்மாவலார்கொன்றைப்
        பூவணத்தார்தருதியெம்பூவையே.    60

 

எண்சீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

 

பூவிருந்தும்புல்லணிவ ரமுதநாகம்
        பொருந்தவைத்து நஞ்சுண்பர் புலவோர்மெச்சுங்
காவிருந்தும்புறங்காட்டி லாடல்செய்வர்
        கனிவிருந்துங்கனியாரே கச்சித்தாக
மாவிருந்தும்பணியார மளியாரொற்றி
        மன்னியிருந்தெமக்கொன்று மென்றும்பேராற்
பாவிருந்தபுகழாளர் பழிக்குநாணார்
        பழமறைபேசுவர் தமிழின்பரிசானாரே.    61

 

ஆய்ச்சியார்-வேற்றொலிவெண்டுறை

 

யரிசுடையார்மாமகிழ்வாய்ப்பாலாட்டுமைந்தர்க் காம்பள்ளித்தாமம், 
விரிசடையாரொருதிருவாய்ப் பாடிமேவியபொதுவர்விளங்கிழாய்கைக்.
கோல்வளை யோலிடக் குறுநகை வாளிடச்
சேல்விழி மேல்விழத் திரண்முலைப் பந்தெழ
நூலிடை நோய்செய நுதல்வியர் வரமொழிப்
பாலுளஞ் சுவைதரப் படுதயிர் கடைதலின்
மாலுமென் னெஞ்சுசெய் மாண்பேனே மாண்பேனே.    62

 

செவியறிவுறூஉ - மருட்பா

 

மாண்புறக்கற்றேங்கற்றேமென்றுமகிழ்ந்திருப்பீர்
வீண்பிற்கற்றதுமெய்யுறு -சாண்வயி
றோம்புதற்பொருட்டலாலுலகவர்நமையினிச்
சாம்பிணமெனப்பெயர்தரித்தழையாமுன்
றேம்பிழிமாமகிழ்ச்செல்வன்
பூங்கழல்கற்பதுபுலமையோர்கடனே.    63

 

கைக்கிளை- மருட்பா

 

புலவோர்க்கமுதளித்துப்போரவுணர்ச்சாய்த்து
வலமாழிசங்குவாள்வைத்துச் - சிலைபிரியா
தையர்மாமகிழாதியார்பாம்பணி
கையமர்கணையோவக்கணை
செய்யவுறையுளோதிருந்திழைவிழியே.    64

 

இடையிடைகுறைந்திடைமடக்காய்வந்தவாசிரியத்துறை

 

விழுத்தகுமாமகிழாரும்வேதியராரமுதர்
எழிற்கண்ணினுக்குக்கண்டிண்ணனாரேபோலும்
எழிற்கண்ணினுக்குக்கண்டிண்ணனார்சீர்த்
தொழப்பெற்றுடையதொழும்பர்பதத்தார்போலும்.    65

 

வெண்டுறை

 

போலாதபுன்னெஞ்சம்புகலாகாயாகாயேற்புகன்றவாய்மை
மாலாதோமறைகளெல்லாமாலுமேல்வையநிலைமன்னும்போலாம்
நோலாதேன்பலப்பலவுநுதல்கிற்பேனுதல்கிற்பேன்
மேலாயமாமகிழ்வாய்வேதியவோவேதியவோ.    66

 

ஒருபொருண் மேன்மூன்றடுக்கிய ஆசிரியத்தாழிசை

 

வேதமுடியின்விழுப்பொருளாமாமகிழார்
நாதங்கடந்தொளிருநாட்செங்கமலத்தாள்
போதமிலேன்புன்முடிக்குப்பொன்முடியேயாகுமால்
மாமறையின்சென்னி வான்பொருளாமாமகிழார்
சேமத்தனிவாழ்வாஞ் சீர்ச்செங்கமலத்தாள்
நாமுறுமென்னோய்கட்கு நன்மருந்தேயாகுமால்
ஆரணத்தின் சிரத்தார் பொருளாமாமகிழார்
பூரணவின்பாய பூஞ்செங்கமலத்தாள்
ஏரணமிலேனெஞ் சிருள்விளக்கேயாகுமால்.    67

 

ஊசல், கலித்தாழிசை

 

மாலாதுசிந்தைமலங்கழுவிநீறணிந்து
கோலாலமாகுமத்தத்துவரைக்கூட்டமறுத்
தாலாலமுண்டானடிசூட்டிமாமகிழ்வாழ்
போலாமானிடம்பாடிப்பொன்னூசலாடாமோ
பொற்றொடியீர்புகழ்பாடிப்பொன்னூசலாடாமோ.    68

 

இதுவுமது. சந்தத்தாழிசை

 

ஊசலாட்டிருவினைக்குளாய் மனநினைப்பினால்வருமறப்பினால்
        ஓவுறாத்துயர்பிறப்பிறப்பினி லலைந்துலைந்துகழிவானநாள்
பேசலாவதலகற்பமெத்தனை பினிட்டநந்தமையளித்தவப்
        பெரியமால்பிரமர்தலைசெயமாலை பலபேசியேசிமுடிவுற்றில
பூசலிட்டபரிகலமுமேதுவை வினாய்வினாயணிகலங்கடாம்
        பொதுவிருந்துகலகமதமகற்றும் வகைபுகலுமாமறைமுதற்கலை
ஈசர்மாமகிழின்வாசர்மார்பிலெனி லேழையோநிலைமையாவதே
        யினியவாரருளை நாடியாயதொடியிராடியுய்துமினியூசலே.    69

 

வலைச்சியார், குறளடிவஞ்சிப்பா, வஞ்சியடி

 

தொடித்தோள்வளை - வலைச்சியர்தரு
திருத்திகழ்நுதன் - மடப்பேட்டமை
வடிக்கூந்தலி - னிணைக்கூந்தலே
விழிக்கிணைகய - லிணைத்துவரிதழ்
இணைப்பவளம் - தெழிற்றரளம்
திசைத்திருநகை - மொழிக்கமுதது
கழுத்திணைவளை - முலைப்புளினம்
திடைக்கடம்படு - கொடிக்கிடம்பட
இயற்சுழியிணை - யறற்சுழியென
திரைக்கடலிணை - யகற்கடிதடம்
முழக்காலல - வனிற்கணைவரால்
புறக்காலுயர் - கமடத்திணை
இணைக்காமென - நிலக்கருநிகழ்
பொருட்பாலுரை - செயப்பெற்றனை - எனினும் - கூன்

தோணிணைக். இதுதனிச்சொல்

காம்படியொன்றுங்கண்டிலமவ்வயிற்
றேம்பிழிகோதாயுரியுமென்வயிற்றே
யென்வயினினக்குமஃதாயின்மன்ற
பொன்மலைவில்லியார்புனைமாமகிழ்விரி
கானலந்துறைபெறக்காட்டுது
மேனலம்புயத்துவியன்றிணைமயக்கினே. சுரிதகம்.    70

 

நேரிசைவெண்பா

 

திணை மயக்கமாமாற் சிறுவென்னெஞ்சக்கல்
லணையுமேயாசைக்கடலை - யிணையிலீர்
மாமகிழுற்றீரொருபான் மாலாசைவைத்தீருக்
காமகிழ்விற்காப்பாக்கலார்ந்து.    71

 

நிந்தாஸ்துதி - கட்டளைக்கலிப்பா

 

காடுகட்டிக்காத்தீரொர்சாண்கோவணங்
        கண்டதில்லைக்கடைகட்டிக்காத்திங்கோர்
மாடுகட்டிவைத்தீரதுபுல்லின்றி
        மண்ணைநக்கிற்றுவையத்துமக்கொரு
வீடுகட்டிக்கொண்டதிலையார்க்கேனும்
        வேண்டுமென்றொருகாசும்வழங்கிலீர்
ஈடுகட்டியதில்லைநும்வாழ்வொன்று
        மிசைவுடையீரம்மாமகிழ்வாயென்னே.    72

 

இதுவுமது

 

என்னைக்கொண்டனிரென்னபயன்கண்டீர்
        ஏழையான்காணிங்கெவ்வெவ்விதத்தினும்
பொன்னைக்கொண்டவர்பூக்கொண்டவர்முதற்
        புங்கவரெல்லாம்போற்றிக்கிடக்கவும்
பின்னைக்கண்டிலிரொப்பாரையொப்பிலாப்
        பெண்ணைக்கொண்டீர்போய்ப்பேச்சுத்துணைக்கங்கென்
றன்னைக்கொண்டதென்பேய்க்கூத்துக்காணவோ
        தகுந்தகுமாமகிழாளரல்லீரே.    73

 

நேரிசைவெண்பா

 

அல்லாருநெஞ்சை யடக்கமுயன்றலைவீர்
பல்லாயிரவழிகள் பார்த்தாலும் - ஒல்லாதே
மாமகிழ்வாணர் திருமங்கலநிறைவை
நாமதித்தலாலாங்கா ணன்கு.    74

 

ஒருபொருண்மேன் மூன்றடுக்கிய வஞ்சித்தாழிசை

 

நலநின்றமறைவேண்டா - வலங்கண்டிர்மகிழ்வாணர்ப்
புலம்வென்றசாதுள்ளார் - குலஞ்சென்றுபுணரீரே
ஏதுக்களவைவேண்டா - சோதிக்கமகிழ்வாணர்ச்
சாதுக்கடிருப்பாதப் - போதைப்போய்ப்புணரீரே
அளவைபல்பெறவேண்டா - வொளிர்கிற்பர்மகிழ்வாணர்
தளர்வற்றசாதுள்ளார் - களனன்பிற்புணரீரே.    75

 

தவம் - சந்தத்தாழிசை

 

புணரீரேபுணரீரே புணர்தவமுடையீரேற்
        பொருவின்மாமகிழ்வாணர்ப் புணரன்பர்ப்புணரீரே
கொணரீரேகொணரீரே யுமதன்போடெமதன்புங்
        கொடுகூட்டித்தமிழாசு கவிபாடக்கொணரீரே
உணரீரேயுணரீரே மறைநாலுமுணராத
        வுவரின்பநிலைதுன்ப மறநாடியுணரீரே
இணரீர்பூங்குழலீரே மலையார்மாமுலையீரே
        யினிவேறுதவமேனோ விதன்மேலேயுயநாமே.    76

 

வண்டுவிடுதூது. சொன்மடக்கு - இதுவுமது

 

நாமேதுமிலையெங்கு நாமேதமிலமெங்கு
        நகைமுல்லைநகையாரு மலரற்றார்மலர்வுற்றார்
பூமீதிலொருவர்க்கும் பூமீதிலிருவர்க்கும்
        புகலொண்ணாப்புகலாஞ்சீர் பொருவில்லார்பொருவில்லார்
மாமேருவரையென்று மாமேருதயமொன்று
        மாமகிழ்வாணனார் மாமகிழ்வாணனார்
தாமாயுமணமாலை தாமாயும்வணமாலை
        தருமின்பவண்டிர்காள் தருமின்கள்சென்றின்றே.    77

 

மேகவிடுதூது. அடிமடக்கு. வஞ்சிவிருத்தம்

 

சென்றுமாமகிழ்ச்செல்வனார்
கொன்றைத்தாரினைக்கொணர்தியே
கொன்றைத்தாருனைக்கொண்டுல
கென்றுமொன்றுமாலெழிலியே.    78

 

பனிகண்டிரங்கல் - கட்டளைக்கலித்துறை

 

ஒன்றலைக்குங்கலைவெண்மதிக்கும் முள்ளுடைந்தொதுங்கித்
தென்றலைக்கும்பிட்டுவாடைக் கிதஞ்செய்துசென்றுசென்றுங்
குன்றலைக்குன்றவின் மாமகிழார்க்குங்குறிப்பித்தனன்
இன்றலைக்கும்பனிக்கும்பனிக்குந் நெஞ்சமென்செய்வனே.    79

 

காலம்-மடக்கு-ஆசிரியவிருத்தம்

 

என்செய்கோமன்றிலையர் மாமகிழார்காலம்
        இசையாரேல்வெம் மன்றிலையமிசைகாலம்
பொன்செய்யுங்கலவ மாமையிலாலுங்காலம்
        புன்கணொடுயாமு மாமையிலாலுங்காலம்
கொன்செய்மாமதவேட்குங் கரும்புகையாங்காலம்
        கொடியார்களலருக்கங் கரும்புகையாங்காலம்
பின்செய்யச்சிலவெணுமென் பெண்மதிக்குங்காலம்
        பேதையார்பின்னிருந்துற வம்பெண்மதிக்குங்காலம்.    80

 

இரங்கல்- இரட்டையாசிரியவிருத்தம்

 

காதலறியாக்களவலரே - கண்டாயூர்க்குக்களவலரே
        கானமலர்ந்தபூங்கொன்றாய் - கவல்வேன்கருத்திற்கீங்கொன்றாய்
நாதர்முடிப்பர்மாலையினே - நாடாயென்றன்மாலையினே
        நாரிநாளுமிரங்காரே - நாரிமாருமிரங்காரே
சீதமளிக்குஞ்செயலையே - தேறாயுள்ளச்செயலையே
        செழித்தங்கெழுந்தமதியாலே - திகைத்தேன்பெண்மைமதியாலே
வேதமுடிமேனடத்தாரே - விழையார்க்கருளைநடத்தாரே
        வினைதீர்த்தருண்மாமகிழாரே - வினையேனுளமாமகிழாரே.    81

 

பாண் - இணைக்குறளாசிரியப்பா

 

ஆர்கலியுலகத்துப்பேர்கலிக்குடைந்து
பல்வழியுழந்துநல்லறமோம்புபு
கற்பியல்வழா அரிற்கடைநிலீஇயர்
இங்கிதம்பல்லவியல்விளியொடூஉம்
விளரியாழிசைபுதெருமந்துழன்று
கல்லேறுண்டுஞ்செல்லலோவின்றி
முளரியிற்பொலியாவடுமடைக்
கயிறுபுரிபுரிந்தவயிறாராது
பலப்பலவெல்லியும்படுதுயிலொழிகென
வாம்பிகால்பொரநோந்தலைமடுத்து
மக்களுமனையுமொக்கலொடுமுணங்கிய
வுளைநெஞ்சழிந்தகொளைவலபாண்மக
கேண்மதிகேண்மதி
பாண்மகார்பண்டும்பருவரற்கரையிலர்
அதனான்
முத்தமிழாரியன்மொழிமரபுணர்ந்த
வாறிருபுலவரும்வேறுவேறுதெரிந்து
பன்னிருபடலத்தும்பகர்ந்திசினோரே
தாவினல்லிசையெனூஉந்தமிழ்கிளத்தும்மே
அதான்று
பாணாற்றுப்படுத்தவிருமுதுபனுவலும்
ஏனோர்கூறியபாடாண்டுறையுளும்
இலம்படுநம்மரபேற்றங்கண்டனை
அல்லதூஉம்
அரசுவீற்றிருந்ததமிழாய்சங்க
மினிதுவீற்றிருந்தபழம்புகழ்க்கூடலுள்
இன்னிசைவீணையிலிசைந்தோன்காண்கவென்
றம்மறைகிளந்தமெய்ம்முறைதேற்றாக்
கோலஞ்சிறந்தவாலவாயில்
அழகமரந்தணனருட்புரிந்தேத்திய
அந்நாள்
பாணபத்திரனெனும்பண்பமர்நம்முனோன்

திருமுற்றத்துப்பலகைபெற்றதூஉம்
திருந்தலர்த்தேய்க்கும்பருந்துவீழ்நெடுவேல்
கடாங்கவிழ்கவுட்டுக்கூர்ங்கோட்டாம்பல்
எருத்தம்பொலிந்துவருதிருத்தகுநாளினும்
அடிச்சேரலனெனமுடித்தாழ்ந்தொருநாள்
நொடித்தான்மலையினுலாத்தனைப்படித்தான்
கோப்பெருமுதலிகேட்ப
மதிமலிபுரிசைநொதுமலில்லாப்
பாணாற்றுப்படையிற்பரிசுபெற்றதூஉம்
கேட்டனைபோலுமிந்நாள்
நின்னினமெலிந்தவென்னைநோக்கத்தை
அம்மையிம்மையும்மைவீடறியா
மம்மர்நோய்த்தெறூஉச்செம்மையுற்றனன்போல்
வெஃகாவுள்ளமுமஃகாவியல்பு
மிசைஇயகாண்டிநசைஇயினையெனினே
வாழியோபெரிதேவாழியோபெரிதே
பாழிமால்வரைப்பின்வாழியோபெரிதே
கள்ளங்கரந்தனையுள்ளஞ்சிறந்தனை
கடன்மடைதிறந்தவன்பிற்பொலிந்தனை
மெய்ம்மயிர்பொடிப்பக்கண்ணீர்வார
வியர்வரநகையெழநெக்குநெக்குற்றனை
தலையளிபழுத்தபத்தியி
னூற்றிருந்தன்னதோற்றஞ்சான்ற‌னை
கண்டனைகலுழ்ந்தனைவிண்டவாய்குழறினை
மலைமகள்கொழுநவலைமகண்மகிழ்ந
தனதனற்றோழதமிழ்மறைமுதலி
கடவுட்கண்ணுதற்புனிதமால்வரை
கோட்டியதோளமாட்டியசிந்தை
மைந்தர்தம்வெறுக்கைமதமலைமதமலை
சுந்தரவிருண்டகந்தரக்கந்தர
காலற்காய்ந்தகழற்கால்வீர
பாலற்காத்தபவளப்படிய
மூவுலகிற்கொருதாயகநாயக
பாவலர்பரிசாம்பால்வண்ணநாத
தேவரிற்பெரியதேவதேவ
மூவருக்கொருமுதல்சேவலந்தலைவ
யாவரும்பெறலருமிறைவவானவ
வருட்பிரகாசபொருட்கருவூல

விருளட்டதேசமருளட்டகாச
எந்தையெம்மனையீசநேச
சிந்தனைக்கினியசெல்வவாழ்க
பந்தனைதெறூவும்பகவவாழ்க
வச்சந்தவிர்த்தசேவகவாழ்க
நிச்சலுமீர்த்தாட்கொள்வோய்வாழ்க
சூழிருந்துன்பந்தொடைப்போய்வாழ்க
எய்தினர்க்காரமுதளிப்போய்வாழ்க
சிறுமதிதேய்த்தசேவடிவெல்க
பொருண்முடிவாய்பொலங்கழல்வெல்க
தோன்றாத்துணையாந்துணைத்தாள்வெல்க
சான்றாமெவைககுந்தனிப்பதம்வெல்க
வெல்கவெல்கவேதியவெல்க
ஐயபோற்றியாரியபோற்றி
சைவபோற்றிதயாபரபோற்றி
குலமுதலடிமைகொள்கொற்றவபோற்றி
நலமுழுதும்புனைநம்பபோற்றி
உள்ளக்கோயிலுரவோய்போற்றி
வெள்ளக்கருணைவிகிர்தாபோற்றி
போற்றிபோற்றிபுண்ணியபோற்றியென்
றியைந்தனவேத்திநயந்தனைபழிச்சிக்
கைதொழுஉப்பாவிக்கழலிணைவணங்கி
நின்றனையாயிற்பின்றையென்னா
தின்னேபெறுதிநீமுன்னியபலவும்
வாழியோபெரிதேவாழியோபெரிதே
யூழியூழியூழ்வலிசிதறி
வாழியோபெரிதேவாழியோபெரிதே
காரணங்கடந்தவாரணனாதலி
னேலவேலச்
சாலப்பெரிதுநல்கும்
காமக்கண்ணியோடு
மாமகிழ்கிழவோன்ஞாலமகிழ்செயவே.    82

 

மடக்கு - ஆசிரியவிருத்தம்

 

ஞாலங்காட்டும்படியான்மா மகிழின்னம்பியார்நம்பார்
கோலங்காட்டித்தேடிய கோலங்காட்டார்குளிர்மாணி
பாலங்காட்டப்பரிசளித்தார் பாலங்காட்டுமருள்விழியார்
ஆலங்காட்டிக்கண்டமட்டி லாலங்காட்டாரானாரே.    83

 

அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

 

ஆனார்கொடியாரெவர்க்குமிறை, ஆனார்கொடியாரிடைச்சிமய
மானார்கரவர்வொருபாலார், மானார்கரவர்மாமகிழார்
கானார்தரக்குவரித்தோலார், கானார்தரக்குவரித்தோலார்
வானார்மணிமன்றவர்மண்ணார், வானார்வணங்கும்வளத்தாரே.    84

 

தலைவிதோழியொடுகூறல்-கலித்துறை

 

தாரிற்பொலியுந்தாமந்தாராய்தந்தாயேற்
போரிற்பெரியார்மாமகிழெய்தப்பெறுகென்றேன்
போரிற்பொலிவேற்கண்ணான்மாமகிழ்மரனானால்
வாரிக்கொண்டாய்வந்ததுபோதும்வசையென்றாள்.    85

 

இதுவுமது-இன்னிசைவெண்பா

 

என்றுங்கருணையில்லானேற்றதிருக்குடந்தை
ஒன்றியதப்பிலியூர்பேருற்றாராருமிலி
இன்றிவற்காதலித்தாய் மாமகிழே-யென்றாளா
லன்னையிடக்காய்தொடியாயார்ந்து.    86

 

இரங்கல் -கட்டளைக்கலித்துறை

 

இடக்கருளன்னையுமாயினளேலினியாதினிக்கும்
சுடச்சுடவூரிலுஞ்சொல்லெழும்பிற்றுச்சிலபலவும்
படற்கரும்பாடுகள்பார்த்திருந்தீர்மகிழ்வாணரைக்கும்
பிடத்தகுமாறென்னையேந்திழையீர்தனித்தென்செய்வதே.    87

 

தலைவிகையறுநிலையாலிரங்கல்-நிலைமண்டில வாசிரியப்பா

 

என்செய்கோவேழையென்செய்கோவேழை
என்செய்கோவேழையென்செய்கோவேழை
பொன்செய்வான்வருமுன்சொன்மாமறையுங்
கொன்செய்மாலயனுமின்செயேழுலகும்
விஞ்சியார்பலருமெஞ்சினார்துருவி
நெஞ்சினாழ்துயரினஞ்சினார்காணார்
என்செய்கோவேழையென்செய்கோவேழை
என்செய்கோவேழையென்செய்கோவேழை
பன்னெடுஞ்சமயத்தண்சினைபரப்பி
மன்னறந்தழைப்பவின்னுயிர்நிழற்றி
மின்னொளிபூத்துநன்னலம்பலித்துத்
துன்னருள்பழுத்தபொன்னியன்மாமகிழ்
அண்ணலம்பராஅரைமண்ணுறுத்திருந்த
தவளவெண்பொடிமலிபவளமேனியர்
வெண்கலைசுற்றியசெஞ்சடைக்குழகர்

பித்தெமையகற்றியமத்தமுமிலைந்தவர்
கோவணநெற்றியர்வெற்றரைக்கோளினர்
சிலம்பணிகையர்பொலம்புனைபாதர்
ஆயினுமவரைப்பேயும்விட்டகலா
பாவணப்புகழராவணவழகர்
ஆதலின்வைப்பினெப்பூதமயங்கா
துவரையவரையேநல்விம்முதிரை
அமுதம்படுத்தநாட்டமதுமாலாக்கினர்
மாதரையுழலுமாதரைப்புரிவகை
யோதல்வேண்டுமதோஓதல்வேண்டும்
என்னினுமெண்ணுறினென்னினுமினியர்
நோவவுரையார்நொந்தகண்பாரார்
நாவலங்காரர்க்கென்னாவலங்காரச்
சொல்லியவிடுக்குவல்லவாவென்னத்
தூதுவேண்டிமேதகத்தெரிந்த
கொண்மூநாடினஃதெண்மூவெழுத்தீற்
றியைமெலியிடையின்முடிமிசைநின்ற
புயலினோடுமயர்வறப்புணர்மே
அன்னந்தன்னைமுன்னின்முன்னமோர்
அன்னந்தேடியின்னமுநிலைபெறா
தலமந்ததென்னாப்புலனுந்தப்போமே
அறுகாலஞ்சிறைச்சிறுபுளைச்செலுத்தின்
எண்காற்புள்ளுழையெங்ஙனஞ்செலுமே
சேறினுமதுநுகர்ந்துணர்வுமாறும்மே
வண்சிறையஞ்சுகமுய்ஞ்சிடப்போக்கெனில்
என்சுகநாடாதிடைமாணாக்கனே
குயிலைப்போக்கினதுபயில்கொடியாரி
னினத்ததிரங்காதலலதூஉமிறைக்குந்
தனக்கும்பேரொன்றெனத்தருக்கித்திரிமே
நாரையையேவநாடாதுள்ளம்
பேரியல்வீடுபெற்றலைவற்றது
முன்னொருநாரைப்பொன்னெயின்மதுரையிற்
பூவையத்திசைபொருந்தாதடல்விடந்
தேவர்முன்வைத்தசெல்வர்க்கவர்தினம்
ஏவுசொற்கேட்டதினினைநினைவிற்றே
தூதுணம்புறவோவுறவாந்தூதெண
மாலைத்தாராமாலைத்தாரா
மாலைத்தந்தேமாலைத்தருமே

அன்றிலோபேரினுமொன்றாதாமே
நின்றுநெஞ்சுளையநிந்தைகூறியற்றே
தென்றலோசென்றாற்றிரும்பிவாராதே
நன்றவரணிக்கோநாணுக்கோவிரையாம்
மற்றிவையொழிகபொற்றொடியாரை
வேண்டுகென்னின்மாண்டகுமுலாவிற்
கேட்டவையுள்ளநாட்டமுற்றதனாற்
பசையிலவென்னாவிசைவிலவினிநன்
னெஞ்சுதுணையிருந்ததென்றஞ்சறுத்துய்த்தனன்
செய்ய‌தாமரைகுழைத்துய்யவரவணைப்
பொய்யறுதமிழ்சுவைத்தபூந்தாட்கீழ்ப்படூஉ
மீளாவண்ணம்வாளாதேய்ந்ததால்
முன்னமம்மகத்தினம்மவம்மதி
மீண்டுறுமாயினீண்டுமிம்மதியு
மாவாவொருதமிதாவாவிருத்த
லவ்வளவின்றிச்செவ்விதினாடின்
என்செய்கோவேழையேவென்செய்கோவேழையே
என்செய்கோவேழையேவென்செய்கோவேழையே.    88

 

நேரிசைவெண்பா

 

கோமதிக்கும்வெம்மடையேகூமதிக்குந்தண்மடையாம்
மாமதிக்குந்தூய்மைசெயுமாமகிழே-வாமதிக்குப்
பச்சைபழுத்தார்பணிவாருளமிருக்க
விச்சைபழுத்தாரிடம்.    89

 

கட்டளைக்கலித்துறை

 

இடங்கொண்டமாமகிழ்க்கச்சியுமொற்றியுமென்னக்கல்லா
மடங்கொண்டவென்னுளம்வாழ்வரைத்தாழ்வரைக்கீழரக்க 
னடங்கொண்டநெஞ்சமுடங்கொண்டுபாடநடங்கொண்டதாட்
படங்கொண்டபாம்பர்விடங்கொண்டகண்டரைப்பாடுவனே.    90

 

தேவபாணி-நிலைமண்டிலவாசிரியப்பா

 

பாடுமின்பாடுமின்பாடுமின்பாடுமின்
பாடுமின்பாடுமின்பத்தருள்ளீரே
முத்தியைவேட்டுளமுழுதுணர்வீரே
பத்திநல்வலைபடப்பாடுமினீரே
ஆரருள்பாடுமின்னாரருள்பாடுமின் 
பேரருள்பதிவுறச்சீரருள்பாடுமின்
கள்ளவக்காதலிகாதல்கைவந்துணர்

உள்ளவக்கரவினனுறுதுயில்போலிய
நெஞ்சகஞ்சேந்து தஞ்சத்தினோக்குபு
வன்புகரைந்துக வென்புநெக்குருகி
மொய்ம்புமெலிந்துறப் பின்பெணம்பிறழ
வம்புபுலம்புகாத் தம்பரமாக
நடையுந்தளர்ந்திட வுடையுநெகிழ்ந்திட
வுடலங்குழையக் கடல்கவிழ்ந்தன்ன
மெய்வியர்வரும்பிடக் கையுநெகிழ்ந்து
செய்வகையின்றிப் பொய்வகையன்றிக்
கண்ணருவிகால வண்ணவாய்குழற
விண்மண்ணறியா துண்ணிறையார்வ
அன்புகனிந்தெங்க ளின்பனைப்பாடுமின்
முன்பனைப்பாடுமின் பின்பனைப்பாடுமின்
கம்பனைப்பாடுமின் செம்பொனினம்பலத்
தென்பொனைப்பாடுமின் றுன்பிறப்பாடுமின்
பாடுமின்பாடுமின் னாரருள்பாடுமின்
பாடுமின்பாடுமின்பாடுமின்பாடுமின்
நாரனைப்பாடுமின்பாடுமின்னாயிரம்
பேரனைப்பாடுமின்பித்தனைப்பாடுமின்
சீரனையன்பினல்வாரனைப்பாடுமின்
ஊரியற்சிவிகையாங்காரனைப்பாடுமின்
தேவனைப்பாடுமின்றேவர்சொல்லேவல்கொள்
வீரவிற்போர்வலமாரனைநீறுசெய்
கோவனைப்பாடுமின்கோவனைப்பாடுமின்
மூவனைப்பாடுமின்பாடுமின்முத்தமிழ்ப்
பாவனைப்பாடுமின்பகவனைப்பாடுமின்
பாவனைகட்கெட்டாத்தேவனைப்பாடுமின்
மூவருக்கும்மொருமுதல்வனைப்பாடுமின்
தேவருக்கும்பெருந்தேவனைப்பாடுமின்
பூமனைவாழ்வனையேமணிதலைதுமித்
தாமனைக்கடைதொறுமடுபலிக்கிடைகிலாக்
கோமனைக்கொன்றயந்தாமனைப்பாடுமின்
வாமனைக்கஞ்சுகமாக்கியைப்பாடுமின்
மாமனைமகமழிதரமறித்தலைபுனை
வீமனைப்பாடுமின்னீமனைப்பாடுமின்
மாற்றருந்திறலனாய்த்தொற்றமஞ்சுறவருங்
கூற்றினைக்குமைத்தவாற்றலனையேபாடுமின்
அந்தகன்கழுக்கடைசுழுக்கடையாக்கிய

மைந்தனைப்பாடுமின்வானனைப்பாடுமின்
மேருவைக்குழைத்தவல்வீரனைப்பாடுமின்
பாரினைத்தேர்செய்தபண்பனைப்பாடுமின்
முப்புரம்பொடித்தொருமூவரைக்காவல்கொள்
செப்பனைப்பாடுமின்செல்வனைப்பாடுமின்
அக்கதமிக்கெழுபக்கடல்புக்குட
றொக்கனைக்கீறுசக்கரத்தனைப்பாடுமின்
கக்குமக்கனல்விழியுக்கிரப்பெருவலி
மைக்கடகரியுரிநக்கனைப்பாடுமின்
கொக்கிறகணிசடைக்குழகனைப்பாடுமின்
சக்கரமரிக்கருடயவனைப்பாடுமின்
அண்ணலைப்பாடுமின்கண்ணுதற்பாடுமின்
எண்ணனைப்பாடுமின்னெழுத்தனைப்பாடுமின்
தண்ணனைப்பாடுமின்சதுமறைபாடிய
பண்ணனைப்பாடுமின்பரமனைப்பாடுமின்
கண்ணனையிடங்கொளங்கண்ணனையெம்மிரு
கண்ணனைப்பாடுமின்கண்வருசெவ்வந்தி
வண்ணனைப்பாடுமின்வரதனைப்பாடுமின்
தண்ணருளான்மிகுதாயனைப்பாடுமின்
நேயனைப்பாடுமினேயமிலார்க்கெலாஞ்
சேயனைப்பாடுமின்றேசனைப்பாடுமின்
றூயனைப்பாடுமின்றொன்மைப்பசுக்களி
னாயனைப்பாடுமினாயனைப்பாடுமின்
மாயனைப்பாடுமின்மாயமிலாவேத
வாயனைப்பாடுமின்வள்ளலைப்பாடுமின்
ஐயனைப்பாடுமினப்பனைப்பாடுமின்
மெய்யனைப்பாடுமின்விகிர்தனைப்பாடுமின்
றுய்யனைப்பாடுமின்சோதியைப்பாடுமின்
கைபெறுநெல்லியங்கனியனைப்பாடுமின்
செய்யனைப்பாடுமின்றிருவனைப்பாடுமின்
உய்யவந்துதவியவொருவனைப்பாடுமின்
ஒருவனையென்னுளக்குருவனைப்பாடுமின்
உருவனைப்பாடுமின்னருவனைப்பாடுமின்
அருளனைப்பாடுமின்பொருளனைப்பாடுமின்
அருவுருவகன்றவத்தெருளனைப்பாடுமின்
இருளனைப்பாடுமின்னொளியனைப்பாடுமின்
மருளறுத்தெழுமலைமருந்தனைப்பாடுமின்
அருந்தளையவிழ்த்தருளாதியைப்பாடுமின்

பொருந்துறுமதங்களின்விருந்தனைப்பாடுமின்
திருந்தடிமலரையென்கருந்தலையணியவிங்
கிருந்தனைப்பாடுமினெந்தையைப்பாடுமின்
றந்தையைப்பாடுமின்றமையனைப்பாடுமின்
கந்தமுற்றும்மருட்சிந்தனைப்பாடுமின்
சிந்தனைதிருத்தியதீர்த்தனைப்பாடுமின்
முந்தையேமுளைத்தவெம்மூர்த்தியைப்பாடுமின்
வம்பணிமலரினல்வாசனைப்பாடுமின்
நம்பனைப்பாடுமினாதனைப்பாடுமின்
நாதமுங்கடந்தவப்பாதனைப்பாடுமின்
வேதனையறுத்தவவ்வேதியைப்பாடுமின்
சீதளசந்திரசேகரற்பாடுமின்
போதமவ்வாலடியோதியைப்பாடுமின்
சூதளவிளமுலைச்சுவடுபோதப்புனை
மாதுமையாதரப்பாதியைப்பாடுமின்
பாடுமின்பாடுமின்பாடுமின்பாடுமின்
பாடுமின்னாரருள்பாடுமின்னாரருள்
ஆரருள்பெற்றுளார்யாருமாராய்ந்துமெய்
தேருமாறோர்ந்தபல்லாயிரம்பேர்களை
ஆரருள்பெற்றிலார்யாருமாராய்வரு
மாரிருள்போலியவாயிரம்பேர்களை
ஆரருள்பேணுவார்பேணுகின்றார்பெற
வோரியமுந்தையோரோதிவைத்தார்பல
சீரினிற்றேருமாதேரியகூரிதிற்
பேரியற்பேர்வுறாபேரவாவார்வுறா
வோருமினோர்ந்தவாவோதுமின்னோதநீர்
ஆரவாரம்பெருந்தூரமேசேரவே
பாரினிற்பலவழிப்பத்தருள்ளீரெலாம்
பேரினைப்பாடுமின்பாடினீர்பேரினை
ஊரினைப்பாடுகேமூரினைப்பாடுகேம்
ஆரமுதன்வளரூரினைப்பாடுகேம்
பாடுகேம்வம்மினோபாடுகேம்வம்மினோ
பத்தருள்ளீரெலாம்பாடுகேம்வம்மினோ
மெச்சுறுதமிழ்மறையிச்சையிற்பாடிய
பொச்சமில்பலதளிநச்சியபாடுமின்
கச்சியைப்பாடுமின்கச்சியைப்பாடுமின்
நச்சியைபாம்பரையச்சனற்கச்சியை
உச்சிகைவச்சனிரச்சறப்பாடுமின்

விச்சைமற்றதுவெனோகச்சியைப்பாடுமின்
ஒற்றியைப்பாடுமின்னொற்றியைப்பாடுமின்
பெற்றபேறாமுடலொற்றியைப்பாடுமின்
கற்றதன்பயனெனாவொற்றியைப்பாடுமின்
உற்றவாழ்விதுவெனாவொற்றியைப்பாடுமின்
வெற்றிவெள்விடையினானொற்றியைப்பாடுமின்
நற்றவமுற்றினாலொற்றியைப்பாடுமின்
வெற்றுடல்வீண்படாதொற்றியைப்பாடுமின்
பெற்றவாபெற்றவாவொற்றியைப்பாடுமின்
பாடுமின்பாடுமின்பாடுமின்பாடுமின்
ஆடலேறழகனார் கூடலைப்பாடுமின்
வம்பலநம்புபுகும்பிடச்செம்பத
நம்பலமெனுந்திருவம்பலம்பாடுமின்
பாடுமின்பாடுமின்பாடுமின்பாடுமின்
பாடுமின்பாடுமின்பத்தருள்ளீர்களே
நாத்திகம்பேசுவார்நாத்தாழுக்பேறித்தேன்
ஊற்றிருந்தாலெனவார்த்தைதேனூறிட
வேத்துமின்வாழ்த்துமின்சோத்தம்வாய்வாய்த்தவா
போற்றுமின்னாற்றலாற்சாற்றுமின்போற்றுமின்
பாடுமின்பாடுமின்பாடுமின்பாடுமின்
பாடுமின்பாடுமின்பத்தருள்ளீரே
முத்தியைவேட்டுளமுழுதுணர்ந்தீரே
பத்திநல்வலைபடப்பாடுமினீரே.    91

 

நேரிசைவெண்பா

 

பத்தருள்ளீர்வம்மினோபாடுகேமாமகிழைச்
சித்தவிகாரத்தியக்கமறு-முத்தியும்வே
றுற்றதூஉம்வேண்டாவுடையீர்நுமதுகழல்
பெற்றதாம்பேராத்திரு.    92

 

நேரிசையொத்தாழிசைக்கலிப்பா

 

ஐந்தடித்தரவு

 

திருச்சிற்றம்பலமென்னுஞ்செழுங்கனகசபையென்றும்
அருச்சித்தவருட்பேரம்பலமென்றுமண்டமெலாந்
தரிச்சுற்பொதுவென்றுந்தகுசித்ரமன்றென்றும்
விரிச்சுற்றநலங்கொழிக்கும்வெறுவெளியாம்பெருவெளிக்கே
பெருச்சுற்றமறைபேசும்பெரும்பற்றப்புலியூரே.

 

தாழிசைநான்கு

 

கரித்தோலின்றுருத்தியுற்றுக் காண்சித்ரகூடத்தன்
பெருக்காவலுறவொருவன் பிறங்கியபொன்மேய்ந்ததுவே. (1)

 

பூவிருந்தகனியனொடு பொன்னிருந்தகடற்பள்ளி
தாமிருந்தார்குடியெனினுந் தவத்தருக்குமிடமிதுவே. (2)

 

காலமகளமமலர்மகளிர் மருங்கிருப்பப்பெருங்கருணை
நிலைதருசைவத்தேனை நேசித்துநின்றனளே. (3)

 

ஆனாலுந்திரையுண்டிங்கமுதுண்டுதமதென்று
வானாடர்காப்பதுண்டு வறியோமுங்குறுகினமே. (4)

 

அவ்வளவில் - இதுதனிச்சொல்.

 

சுரிதகம்

 

உள்ளந்தழைப்ப வுடலங்குளிர்ப்பக்
கள்ளநிரப்புக் காணாதொளிப்பச்
சேமநல்வைப்பா மாமகிழடிக்கே
இன்பப்பெரும் பேறிசைந்தனம்
அன்பனாடலினாய்ந்திசினோரே.    93

 

நேரிசைவெண்பா

 

ஒரா துரைக்கலுற்றே னோர்மாமகிழின்சீர்
யாராலஃதுணர வற்றாகும் -பாரு
மானாகக்காணுமே மாலறறாலுற்ற
வரனாகக்காணுமே யாயந்து.    94

 

திருவடிவகுப்பு.- கட்டளைக்கலித்துறை

 

ஆய்ந்துசிவந்தபடியோவருமறையன்பருள்ளந்
தோய்ந்துசிவந்தபடியேரதொழும்பரைச்சூழ்நமனைக்
காய்ந்துசிவந்தபடியோவமமாமகிழ்க்கீழ்க்கருணை
வாய்ந்துசிவந்தபடியோவம்மானின்மலரடியே.    95

 

பஃறாழிசைக்கொச்சகக்கலிப்பா

தரவு

 

மலரடிக்குடிகிழாதம்மைத்துனனமைந்தனையழித்தீர்
சிலரடிக்கும்வில்லடிக்கும்பிரம்படிக்குஞ்சிலையடிக்கும்
மலரடிக்குஞ்சொல்லடிக்கும்பரிந்தருளிமாமகிழின்
பலரடிக்குமகிழ்ந்திருந்தவடிகேளோர்விண்ணப்பம்..

 

தாழிசைகள்

 

தாம்வீழ்வார்மென்றோளின்றுயிலினினிதாவகொலந்தத்
தாமரைக்கண்ணானுலகமென்றதமிழ்சுவைத்ததன்றே. (1)

 

திருமேனியணிந்தசெழுமணிகளொடுசேயிழையார்
உருமானவுவமானமுணர்வனொருமானமிலேன். (2)

 

தேன்மதுரைக்கூடல்செய்தசெஞ்சடைவரழெழிலியன்றி
யினமதுரவாயர்குழற்கேழெழிலியிணையிசையேன். (3)

 

தேயாதுவளராதுதிருமுடியார்பிறையன்றி
ஓயாமையுழலபிறையையுவாநுதலுக்குரைப்பேனே. (4)

 

கண்டத்துக்கொண்ட கடுக்கடவுளர்க் சாத்ததுவிவர்கணங்
கொண்டத்திண்கடு நெஞ்சுகுலைத்துக் கரப்பதுகாண்பேன். (5)

 

குமிழ்மாலையேன்மூக்காங் குலவள்ளைத் தழைமிலைந்தாற்
றமிழாருஞ்செவியாகு மில்லையெனிற் றரங்காணேன். (6)

 

அருண்மேனிப் பவளவொளி யல்லதுமற் றவர்துவர்வாய்
உருவாருங்கனியிதழுக் குவமையெந்தப் பவளமதே. (7)

 

கையேந்து தழைப்பீலி கவின்றமுருந்தலலாமே
யையேந்து முறுவலுக்கு மமையுமே பிறிதொன்றும். (8)

 

இடப்பாதி கரத்திருந்த வெழிற்சங்க மன்றிமற்றை
முடக்கூன்ற சங்கங்கொன் மிடற்றினுக்கு முற்றுவமை. (9)

 

தோட்கமைந்த கரியுரியிற் றுதிக்கையிவர் தோட்கன்றி
பூட்கைபிற தோற்கையே தோற்கையே புகுந்துதிக்கை. (10)

 

திருக்கைபடக் குழைந்தசெழு மலையன்றித் திரண்முலைக்குப்
பருக்கைபிற மலையாகப் பார்க்கெனினு நயமின்றே. (11)

 

இயல்பிறந்த துடியன்றே லியனடந விடனல்லால்
இயல்பிறந்த பொருளெதனை யிவரிடைநே ரியம்புவெனே. (12)

 

பூணியபொன் னாமையொடு மவ்வாமை புணர்கணையின்
றூணிபிறிதல்லாற் காற்றுணையுளதாக தகைமைத்தே. (13)

 

வாய்க்குமின்ப வுறுதிசொனும் வாய்மொழியா மறைமொழிபோ
னோய்க்குறுதிதரவலதே யிலாநொடிக்குநுண்ணொடியே. (14)

 

வல்லதெனின் - இதுதனிச்சொல்.

 

சுரிதகம்

 

யானேதவமுமின்னியநெஞ்சு
மானாவுடையனன்றி
மேனோர்விழைந்தமெய்ப்பித்திமேயினனே.    96

 

நேரிசைவெண்பா

 

இனக்கொன்றைசூடிய மாமகிழெம்மான்
எனக்கொன்றைவேண்டி யிரப்பல-கனக்குன்றை
வாங்கக்குழைத்தாய் வறிதமராககில்லிலென்னஞ்
சீங்கக்குழையுய கோவின்று.    97

 

செவிவி கவறல் - விருத்தக்கலித்துறை

 

இன்றுமாதரராயென்னினைன் தென்செய்தாயினைவாய்
ஒன்றுபாதியாய்ச்செய்வதில் வல்லமையுடையான்
என்றறிந்துனார்மாமகி ழாளிசீரிசைத்தல்
நன்றுகேட்டிலைபச்சை மாலுமைசெயனயந்தே.    98

 

செவிலிகவறல்-இரட்டையாசிரியவிருத்தம்-மடக்கு

 

பச்சைப்பெண்ணின்பங்குடையார்-பச்சைப்பெண்ணின்பங்குடையார்
        பணிவாரணியாரன்பாலே-பணிவாரணியாரின்பாலே.
விச்சைநட்டாருலகுயவ-விச்சைநட்டார்விட்டாரே
        வேழவுரியார்முன்வில்லாம்-வேழவுரியார்கிளிந்தாரே.
கச்சையரவமேபூணவாங்-கச்சையரவமேமாதர்
        கருத்துசுகமஞ்சவழகரெங்கள்-கருத்துக்கமஞ்சவருள்கண்ணார்
பிச்சையெடுப்பர்மனைதோறும்-பிச்சையெடுப்பரெம்முனைத்தே
        பேரிற்பெரியமாகிழார்-பேரிற்பெயராப்புகழாரே.    99

 

இரட்டையாசிரியவிருத்தம்

 

புகழமாமகிழாற்களவிருந்தார் புனைமரம்மலைவாழையைவாழப்
        பொருவில்காஞ்சிப்பலதளியும் போற்றநாகமாக்கமுகு
மிசைச்சேரிஞ்சிநொச்சியொரு மூன்றும்வேவமூவாசு
        மேவக்கடைகாலீர்க்குக்கோல் பிண்டுவங்கிச்சில்முகமாத்
தகவேவிருந்தார்மகத்தக்கன் றலையைக்கொய்யாநாரத்தைத்
        தலைமேற்றழைப்பவத்திய தடாங்கி யெமக்குக்கதலியதாம்
வகையானைக்காகுரக்குக்கரவைத்தீஞ்சமைத்தார்காடாடன்
        மதித்தார்விகிர்தவேடரன்றோ வாழியலர்பொன்வணப்புகழே.    100

 

வாழ்த்து

ஒருபொருண் மேன்மூன்றடுக்கிய வொள்ளத்தாழிசை

 

வாழியர்வாழியா வாழியர் வாழியா
ஏழுவர்மாமகிழீசர்கழலென்நும்
குழுமன்பரின்பத்துட்டொக்கு.
மங்களமங்களமங்களமங்களம்
இங்கிதமாமகிழீசர்கழலென்றும்
பொங்குலகமின்பம்பொலிந்து
சோபனஞ்சோபனஞ்சோபனஞ்சோபனம்
ஈபவின்பமாமகிழீசர்கழலென்றும்
தாபமற்றவான்வழக்கந்தந்து.    101

 

மங்களம்

இறுதியிற்கூன்பெற்றுவந்தவஞ்சித்துறைகள்

 

தந்திரச்சீர்மறை
செந்தமிழ்மாமுறை
சந்ததமேத்தெந்தை
சுந்தரத்தாளுக்கு-மங்களஞ்சுபமங்களம்.    102

 

தாளெனமுடிபுனைந்
தாளுநித்தமண
வாளனம்மாமகிழ்
ஆளன்பாதங்கட்கு-மங்களஞ்சுபமங்களம்.    103

 

பாதம்பணிந்தவர்
நோதலறப்புரி
போதனருட்குரு
நாதனந்தேசற்கு-மங்களஞ்சுபமங்களம்.    104

 

தேசனடியவர் 
நேசன்றிருவடல்
வாசனருட்பிர
காசன்பொன்னடிகட்கு-மங்களஞ்சுபமங்களம்.    105

 

குருவாழ்க.

 

---------------------------------

ஆக்குவித்தோர்க்கெய்திய புறநிலைவாழ்த்து.
சுபமஸ்து.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.

என்பாட்டிலிருந்தேனையென்பாட்டிலிச்சை
        யிசைந்தியல்வல்லோர்முன்
பொன்பாட்டிலாசுவைத்தானிலம்பாமாங்
        கலம்பகத்தைப்புனைந்துகேட்டான்.
அன்பாட்டுமரங்கினுக்குநாதனானா
        னரங்கநாதனன்றோ
இன்பாட்டுமென் கண்மணிமாமகிழா
        னீடூழியினிதுவாழ்க.

சுபமஸ்து.

 

மகிழ்மாக்கலம்பகம் முற்றுப்பெற்றது. 
 

Related Content