logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

கோயிற்புராணம் பொழிப்புரையுடன் பாகம்-1

Koyil Puranam
with the notes of Umapathi Shivachariyar 
In tamil script


  • Acknowledgements: 
    Our Sincere thanks go to the Digital Library of India 
    for providing scanned images version of this work. 
    This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. 
    We thank the following volunteers for their assistance in the preparation of this etext:
    Anbu Jaya, V.Devarajan, S. Karthikeyan, Jeyapandian Kottalam, 
    G. Mahalingam, Nagavelu, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, P. Thulasimani, 
    V. Ramasami, R. Arvind and Thamizhagazhvan.
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 

    © Project Madurai, 1998-2013.
    Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
    Details of Project Madurai are available at the website 
    https://www.projectmadurai.org/  
    You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கோயிற்புராணம் - பாகம்-1
உமாபதி சிவாச்சாரியார் பொழிப்புரையுடன்

 

  • Source: 
    கோயிற்புராணம்

    கொற்றவன்குடி உமாபதிசிவாச்சாரியார்
    சைவாகம சாத்திரபுராண சம்பிரதாய அபியுக்தரொருவராற் 
    செய்யப்பட்ட பொழிப்புரையும் ஆதீனத்துப் பிரதிகளைக்கொண்டு
    வித்துவான் - காஞ்சீபுரம் சபாபதி முதலியாரவர்களால்
    பரிசோதிப்பித்து படங்களுடன் கி- சிங்காரவேலு முதலியாரால்
    கலாநிதி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன.
    பிரபவ வருடம் மாசி மாதம்
    -----------------------------------------------------------

    சிவமயம்

    சருக்க அட்டவணை. 
    சருக்கங்களின் பெயர் திருவிருத்தத்தொகை.
    1. பாயிரம் (1-28) -- 28 - (பாகம்-1)
    2. வியாக்கிரபாதச்சருக்கம் (29-58) -- 30 - (பாகம்-1)
    3. பதஞ்சலிச்சருக்கம் (59-156) -- 99 - (பாகம்-1)
    4. நடராசச்சருக்கம் (157-228) -- 71 - (பாகம்-1)
    5. இரணியவன்மச்சருக்கம் (229-360) -- 132 - (பாகம்-2)
    6. திருவிழாச்சருக்கம் (361-415) -- 53 - (பாகம்-2)
    பாயிரம் உட்பட சருக்கம்-6 - இதில் திருவிருத்தம் - 415.
                                             ---------------

    சிவமயம்
    சிவகணபதி துணை.
    திருச்சிற்றம்பலம்.
     

    கோயிற்புராண மூலமும் உரையும்

    காப்பு

    பொற்பதப்பொதுவார்புலியூர்புகழ்...*
    ரற்பகற்றொழவாழணிகோபுரக் ... ... *
    கற்பகத்தனியானைகழல்களே ... ... ... *
     

    இதன் பொருள்.
    சுத்தாத்மாக்கள் வாதனையால் மயக்க விகற்பமேலிடாமல் இரவும்பகலும் வணங்க விளங்கும் மேலைக்கோபுரமுன்புறத்து வாழ்ந்தருளும் ஒப்பற்றயானைமுகமுள்ள கற்பகவிநாயகருடைய திருவடிகள் கனகமயமாக அழகுள்ள ஞானசபைபொருந்திய பெரும் பற்றப்புலியூரின்மான்மியத்தைப் புகழுஞ் செய்யுட்பதங்கடோறும்பொருளாய் விளங்குவன--என்றவாறு.

    சிதம்பரமான்மியம்
    கூறுஞ்செய்யுட்பதங்களுக்குப் பொருளாய் நிகழ்வது
    அருளென்பதுதேற்றம்.

    பொற்பதப் பொருளென்பதற்கு நடேசமூர்த்தியின் செங்கமலப் பொற்பாதங்களுக்கு இடமாகிய ஞானசபையெனப் பொருள்கூறினும் அமையும். தேவர்கள் வேண்டும் பொருள்களைக் கொடுக்குங் கற்பக விருக்ஷம்போல் ஈண்டு அடியார்கள் வேண்டும் பொருள்களைப் பாலித்தருள்வதினால் கற்பக விநாயகரெனக் காரணப் பெயராய் நின்றது.

 

பாயிரம் - (1-28)

நடேசர்துதி

பூங்கமலத்தயனுமலர்ப் புண்டரிகக்கண்ணானுந்
தாங்குபலபுவனமுமேற் சகலமுமாயகலாத 
வோங்குமொளிவெளியேநின் றுலகுதொழநடமாடுந்
தேங்கமழும்பொழிற்றில்லைத் திருச்சிற்றம்பலம்போற்றி.

இதன்பொருள்.
பொலிவினையுடைத்தாகிய தாமரை மலர்மீதிலிருக்கும் பிரமனும் தாமரை மலர் போன்ற கண்ணினையுடைய மாயனும் (இவர்களாலே) சிருட்டித்துத் தாங்கப்படுகிற புவனங்களும் இதற்குமேலான புவனங்களும் (மந்திரபதவனன தத்துவ கலாரூபங்களுமாகிய இவைகளை) நீங்காம னிறைந்திருக்கிற மிக்க பிரகாசமான சிவம்* திரோதான நீங்கிநின்று சர்வாத்துமாக்களுங்கண்டு தொழும்படிக்கு நிருத்தஞ் செய்யும் மணங்கமழாநின்ற சோலைகளாற் சூழப்பட்ட தில்லைத் திருச்சிற்றம்பலத்தைப் போற்றுகின்றேன்--என்றவாறு. (1-1)
-----------
* திரோதானம் - மறைப்பு.

ஆரணங்கண் முடிந்தபதத் தானந்த வொளியுலகிற்
காரணங்கற் பனைகடந்த கருணைதிரு வுருவாகிப்
பேரணங்கி னுடனாடும் பெரும்பற்றப் புலியூர்சேர்
சீரணங்கு மணிமாடத் திருச்சிற்றம் பலம்போற்றி
 

இ-ள். பாசசால முடிந்த சிவபூமியில் ஒழியாத சுகப்பிரகாசமான சிவம் உலகத்திற்றனக்கு வோறொரு பிரதான காரணமும் நிமித்த காரணமுங் கடந்திருக்கிற காருண்ணியமே திருமேனியாகக் கொண்டு பரையினுடனே நிருத்தஞ் செய்யும் பெரும்பற்றப் புலியூரென்றுபொருந்தின அழகிய திவ்விய இரத்தினங்களினாலே குயிற்றிய மாடங்கள் சூழ்ந்த திருச்சிற்றம்பலத்தைப் போற்றுகின்றேன்-எ-று

சுகப்பிரகாசமான சிவங் காருண்யரூபியாய் பூரண ஞானத்தை யதிட்டித்து நிருத்தஞ் செய்யும் புலியூர்ச் சிற்றம்பலமெனக் கூட்டுக- பேரணங்கென்று மிகுத்துக் கூறியவதனாற் சத்தியினுடைய விருத்திமேலே யருளிச் செய்கிறார். (1-2)

தற்பரமாய்ப் பரபதமாய்த் தாவிலனு பூதியதா
யற்புதமா யாரமுதா யானந்த நிலயவொளிப்
பொற்பினதாய்ப் பிறிவிலதாய்ப் பொருளாகி யருளாகுஞ்
சிற்பரமா மம்பரமாந் திருச்சிற்றம் பலம்போற்றி.

இ-ள் அதிசூக்குமமாய் மேலான பதங்களுக்கு மேலானதாய் குற்றமில்லாத அனுபவசித்தமாதலால் க்ஷுமமாய் ஆச்சரிய விருத்தியினாலே பூரணமாய் நிறைந்தவமுதமாய் (திரோதானநீங்கின) ஆநந்த ருத்தப் பிரகாசமாய் நேயத்தைநீக்க மில்லாமையாற் சாந்தியாய் வஸ்துமாத்திரமாதலால் பொருளாகி ஆலசியமற்று ஆதியந்தமு மில்லாமையால்) அருளாகும் ஞானச் சொல்லுக்குமேலா மம்பரமாகி இப்படியே சொல்லுஞ் சத்திரூபமாகிய திருச்சிற்றம்பலத்தைப் போற்றுகின்றேன்-எ-று.

சிற்பரமா மம்பரமாமென்பது-சிதம்பரமென்றுகண்டுகொள்க, இதற்கு- ஆகம பிரமாணமுண்டு வருகிறபடிகேட்டறிக. (1-3)

வையகமின் புறநின்ற மருமலிபொற் பதம்போற்றி
கையமரு நிலைபோற்றி கருணைமுக மலர்போற்றி
மெய்யிலகு மொளிபோற்றி விரவியெனை யெடுத்தாண்ட
செய்யதிரு வடிபோற்றி திருச்சிற்றம் பலம்போற்றி

இ-ள் வையகத்தோர்க்கு மலபாக சுகப்பிராப்தியுண்டாக நின்றருளிய மணங்கமழ்ந்து பொலிவினையுடைத்தாகிய திருவடிகளைப் போற்றுகிறேன் (இதுசிருட்டி) ஆன்மாக்கள் கன்ம சீவனத்தில் மிகுதி குறைவறவமைத்தருளிய திருக்கரத்தைப் போற்றுகிறேன், (இது திதி) தரிசித்த மாத்திரத்திலே கரண சூனியம் பிறப்பிக்குங் காருண்ணியத்தையுடைய திருமுகமண்டலப் பிரசன்னத்தைப் போற்றுகிறேன், (இது சங்காரம்) அருளாகிய திருமேனியில் விளங்குகின்ற ஒளியைப் போற்றுகிறேன், (இது திரோபவம்) கேவல சகலத்திலும் பொருந்தி அவைகளிலாழாமல் என்னையெடுத்தாண்டு கொண்டருளிய சிவந்த திருவடிகளைப்போற்றுகிறேன், (இது அனுக்கிரகம்) ஸ்ரீபரமாதாயமான ஞானசபையைப் போற்றுகின்றேன்.- எ-று. (1-4)

சிவகாமியம்மை துதி

மன்றின்மணி விளக்கெனலா மருவுமுகங் கைபோற்றி
யொன்றியமங் கலநாணி னொளிபோற்றி யுலகும்பர்
சென்றுதொழ வருள்சுரக்குஞ் சிவகாம சுந்தரித
னின்றதிரு நிலைபோற்றி நிலவுதிரு வடிபோற்றி.

இ-ள் சிவகாமசுந்தரியின் கனகசபையிலிட்ட இரத்தின தீபம் போலப் பொருந்தின திருமுக மண்டலப் பிரசன்னத்தைப்போற்றியும் நித்தியமான திருமங்கலநாணின் பிரகாசத்தைப் போற்றியும் நரசுராதிகள் வந்து நமஸ்கரிக்க அவர்களிடத்துள்ள திரோபவத்தை நீக்கும் நின்றருளிய திருநிலையைப் போற்றியும் சடசித்துக்களிற் பூரணமாயிருக்கிற ஸ்ரீபாதங்களைப் போற்றுகின்றேன்- எ-று. (1-5)

கற்பகவிநாயகர் துதி

தன்னோங்கு மலரடியுந் தளிரோங்கு சாகைகளு
மின்னோங்கு முகக்கொம்பும் விரவியகண் மலர்களுமாய்
மன்னோங்க நடமாடு மன்றோங்கு மதிற்குடபாற்
பொன்னோங்கன் முன்னோங்கும் பொற்பமர்கற் பகம்போற்றி.

இ-ள் தனது மேலான செந்தாமரைமலர்போன்ற ஸ்ரீபாதமும் பல்லவங்களிலுஞ் சிறந்த செய்ய வொளிமிக்க ஸ்ரீயஸ்தங்களும் ஒளிசிறந்த முகத்திற் கொம்பும் பொருந்திய மூன்று திருக்கண் மலர்களுமாய் (பாசத்தைக் கீழ்ப்படுத்தி) பதியானது நிருத்தஞ் செய்யும் கனகசபையைச் சூழ்ந்துயர்ந்த மேலைக் கோபுரத்தின் முன்னே வாழ்ந்தருளும் அழகுவிளங்கின கற்பகப்பிள்ளையாரைப் போற்றுகின்றேன்-எ-று.

தன்னோங்கு மலரடியும் கற்பகம்போற்றி - தனது பெருக்க வகன்றவடிவையும் 
துளிர்நிறைந்த பக்கக்கிளைகளையுந் தடித்திலு மொளிமிகும்படி பணைகளையுந் 
தேன்பொருந்தின மலர்களையுமுடையதாகிய கற்பக விருட்சமென வேறு
மொருபொரு டோன்றியவாறு கண்டுகொள்க. (1-6)

சுப்பிரமண்ணிய சுவாமி துதி

தேராட்டிக் கயங்காட்டுந் திரண்மாக்கட் டயமூட்டிப்
போராட்டிப் புறங்காட்டிப் போங்காட்டிற் புலால்கமழு
நீராட்டிச் சூர்மாட்டி நிகழ்நாட்டிற் புகழ்நாட்டும்
பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல்போற்றி

இ-ள். தேர்-தேர்களும், ஆள்-காலாள்களும், திக்கயம்-அஷ்டதிக்குகளிலும் பொருந்திய யானைகளைப்போல-மேனிப்பொலிவுகாட்டும்-திரள்மா-யானைத் திரள்களும், கட்டுஅயம்-பாகரைப்பொறுத்த குதிரைகளும், மூட்டி-கூட்டி, போராட்டி -போர்செய்து, புறங்காட்டி-முதுகுகாட்டி, போங்காட்டில்-பகைவர் ஓடும்படியான யுத்தகளத்தில், புலால்கமழும்-புலால்நாற்றம் நாறுகின்ற நீராட்டி-உதிரப் பிரவாகத்தையுண்டாக்கி, சூர்மாட்டி-சூரபன்மனைக்கொன்று, நிகழ்நாட்டில்-பதினான்கு லோகங்களிலும், புகழ்நாட்டும்-தனது கீர்த்தியை நிலைநிறுத்திய, பேராட்டி சீராட்டும் பிள்ளையார் கழல்போற்றி- பார்வதியார் சீராட்டுதலுடன் வளர்த்த சுப்பிரமணியக் கடவுளின் திருவடிகளைப் போற்றுகின்றேன் -எ-று

மூள்வித்தற்கண் மூட்டியென்றாற்போல 
மாள்வித்தற்கண் மாட்டியெனநின்றது, 
மாட்டியென்றேயெம்மை யென்றார்பிறரும். (1-7)

மூவர்முதலிய அடியார்கள் துதி

திருஞான சம்பந்தர் செய்யதிரு வடிபோற்றி
யருணாவுக் கரசர்பிரா னலர்கமல பதம்போற்றி
கருமாள வெமையாளுங் கண்ணுதலோன் வலிந்தாண்ட
பெருமாள்பூங் கழல்போற்றி பிறங்கியவன் பர்கள்போற்றி.

இ-ள். திருஞானசம்பந்த சுவாமிகளுடைய சிவந்த திருவடிகளைப் போற்றியும், சிவத்தினருள்பெற்ற திருநாவுக்கரசு சுவாமிகளுடைய அலர்ந்த செந்தாமரை மலர்போன்ற திருவடிகளைப்போற்றியும், சனனமரணதுக்கம் நீங்கும்படி ஓரறிவுமில்லாதவெம்மை யாண்டருளின நெற்றிக்கண்ணுள்ள பரமசிவம் மணம்விலக்கி வலியஅடிமைகொண்ட வன்றொண்டராகிய சுந்தர மூர்த்தி சுவாமிகளினுடைய பொலிவுள்ள திருவடிகளைப்போற்றியும், மற்றுமுள்ள அடியார்களையும்போற்றுகின்றேன்-எ-று (1-8)

மாணிக்கவாசக சுவாமிகள் துதி

பேசுபுகழ் வாதவூர்ப் பிறந்துபெருந் துறைக்கடலுண்
டாசிலெழி றடித்துயர வஞ்செழுத்தா லதிர்த்தெழுந்து
தேசமலி தரப்பொதுவார் சிவபோக மிகவிளைவான்
வாசகமா மாணிக்க மழைபொழிமா முகில்போற்றி.

இ-ள். பெரியோர்களாற் சொல்லப்பட்ட புகழையுடைய திருவாதவூரிலே பிறந்தருளித் திருப்பெருந்துறையி லானந்த சமுத்திரத்தைப் பருகிப் பாச நீங்கின ஆன்மப் பிரகாசம் அருளைக்கூடி மிக்குச்செல்லப் பஞ்சாக்ஷரவுச் சரிப்பினால் ஆணவமல வாதனையைத்தள்ளி மேலிட்டு (அக்கனகசபையில் நிறைந்திருக்கிற*சிவானந்தமானது) தேசமெங்கும் நிறையும்படி திருவாசகமாகிய மாணிக்க மழையைப் பொழியும் பெரியமுகில் போன்ற திருவாதவூரடிகளைப் போற்றுகின்றேன்-- எ-று.

பேசுமழை பொழிமாமுகில்போற்றி சர்வாத்துமாக்களுஞ்சொல்லுதலாற் புகழுடைய வாயுமண்டலத்திலேதோன்றி பெரியபட்டினங்கள் சூழ்ந்த துறையினையுடைய கடலைப்பருகிக் குற்றமிலாத வொளிசிறந்த மின்னைப் பிறங்கிச் சலத்தினுடைய வளமையாகிய வதனாலே முழக்கமேலிட்டு இவ்வுலகத்தோர் சர்வ சம்பன்னராக யாவர்க்கும் பொதுவாகி நிறைந்துநிற்கிற சுத்தபோகம் விளையும் வண்ணம் மழைபெய்யு மேகமென வேறுமொரு பொருடொனறியவாறுமறிக. இதுவுங் கடவுள் வணக்கமெனக்கொள்க, எங்ஙனமென்னில் வீழ்க தண்புனலென்கின்ற-பிரமாணத்தாலெனக்கொள்க. (1-9)

தில்லை மூவாயிரவர் துதி

நாவிரவுமறையினராய் நாமிவரிலொருவரெனுந்
தேவர்கடேவன்செல்வச் செல்வர்களாய்த்திகழ்வேள்வி
பரவுநெறிபலசெய்யும் பான்மையராய் மேன்மையரா
மூவுலகுந்தொழுமூவா யிரமுனிவரடிபோற்றி.

இ-ள். நாவிலேயனவரதமும் பொருந்தின வேதத்தையுடையவர்களாயும் இவர்களில் நாமுமொருவரென்றருளிச் செய்யுந் தேவர்கள் தேவனையே தங்கள் செல்வமாகப்பெற்ற ஐசுவரியத்தையுடையவர்களாயும் விளங்கிய யாகாதிகன் மங்கள் பொருந்திய நெறிகளை வெகுவிதமாகச் செய்யும் பகுதியுடையவர்களாகியும் (பத்திஞான வயிராக்கியங்களினாலே யாவர்க்கும்) மேலானவர்களாயுமிருக்கிற பூமியந்தர சுவர்க்கத்தோர் நமஸ்கரிக்குந் தில்லையில் மூவாயிர முனிவர்களுடைய திருவடிகளைப்போற்றுகின்றேன்--எ.று. (1-10)
சண்டேசர்முதலிய திருக்கூட்டத்தார்துதி.

தந்தையெனாதிகழ்ந்தபுகழ்ச் சண்டேசர்விறற்குமெய்ச்
சிந்தையராயெல்லையிலாத் திருவேடத்தினராகி
யெந்தைபிரானருள்வளர்க்கு மியல்பினராய்முயறவங்க
ளந்தமிலாவடியவர்க டிருக்கூட்டமவைபோற்றி.

இ-ள். பிதாவென்று அங்கிகரியாமல் சிவத்துரோகங்கண்டு கால் தடிந்த கீர்த்தியையுடைய சண்டேசுர நாயனாரையும், ஞானவீரம் பொருந்திய உண்மையான சித்தத்தை யுடையவர்களும் எண்ணிறந்த திருவேடங்களை-யுடையவர்களும் எந்தை பிரானுடைய அருளினைவளர்க்கும் இயல்புள்ளவர்களும் செய்கிறதவங்களிலே முடிவில்லாதவர்களுமாயிருக்கிற அடியாரது திருக்கூட்டத்தையும் போற்றுகின்றேன்-- எ-று. (11)

புகழொன்றுமிகுத்துக் கூறியவதனாற் பிரமகத்தியாதிதோடமும் பிதாவைக் கொன்றதோடமுங் குருத்துரோகமுமாகிய பசுபாவஞ் சிவசந்நிதியில் நில்லாமல் அதுவுஞ் சிவபுண்ணியமாய்ச் சாருப்பிய பதமும் சிவாக்கினையும் அதிகாரமு முதலானவை கொடுத்தவை கண்டுகொள்க, எல்லையில்லாத் திருவேடமென்பதனாற் சடை முண்டிதம் சிகை முதலான பலவேடங்களில் முடிவில்லாமை கண்டுகொள்க. (1-11)

அநபாயச்சோழச்சக்கரவர்த்தி துதி

ஒன்றியசீரிரவிகுல முவந்தருளியுலகுய்யத்... 
துன்றுபுகழ்த்திருநீற்றுச் சோழனெனமுடிசூடி 
மன்றினடந்தொழுதெல்லை வளர்கனகமயமாக்கி 
வென்றிபுனையநபாயன் விளங்கியபூங்கழல்போற்றி.

இ - ள். சீர்பொருந்தியசூரியவம்சத்திலே விரும்பித்தோன்றி யருளிச் சர்வாத்மாக்களுமுய்யும் வண்ணம் மிகுந்த சிவகீர்த்தியையுடைய திருநீற்றுச் சோழனென் றபிஷேக நாமமும் பெற்றுக் கனகசபையில் நிருத்தத்தை வணங்கித் திருவம்பலமுந் திருக்கோபுரமுந் திருமண்டபங்களு மற்றுஞ் சூழ்ந்த வெல்லையை- மாற்றுமிக்க கனகசொரூபமாகப் பண்ணித்திக்கு விசயம்பொருந்தின அநபாயச் சக்கரவர்த்தியின் பிரகாசப் பொற்பை யுடைத்தான ஸ்ரீபாதங்களைப் போற்றுகின்றேன்-- எ-று (1-12)

அகம்படிமைப்பதி னாராயிரவர் துதி

மல்குபுகழ்நடராசன் வளர்கோயிலகலாது
பல்கிளைஞருடனுரிமைப் பணிசெய்யும்பரிவினராய்க் 
கல்விகளின்மிகுமெல்லைக் கருத்தினரைநிருத்தனருட் 
செல்வமலியகம்படிமைத் திரலினர்தம்பதம்போற்றி 

இ-ள். மிகுத்துச்சொல்லுஞ் சிவகீர்த்தியையுடைய நடேசமூர்த்தியின் சிவதர்மம் வளருந் திருக்கோயிலை நீங்காமல் பலகிளைஞருடைய தங்களுக்கமைத்த ஊழியன்களைப் பரிவுடனே செய்யும் பத்திமான்களும் கல்விகளினாலே மிகுந்த நிலையான கருத்தை யுடையவர்களும் தம்பிரானாருடைய அருளாகிய சம்பத்துமிகுந்த ஞானவீரத்தை யுடையவர்களுமாகிய திருவகம்படியரான பதினாறாயிரவர் திருவடிகளைப் போற்றுகின்றேன்-- எ-று. (1-13)

பிறவியை வியந்தது

மண்ணிலிருவினைக்குடலாய் வானிரயத்துயர்க்குடலா
யெண்ணிலுடலொழியமுய லிருந்தவத்தாலெழிற்றில்லைப்
புண்ணியமன்றினிலாடும் போதுசெயாநடங்காண
நண்ணுமுடலிதுவன்றோ நமக்குடலாய்நயந்தவுடல்.

இ-ள். பூமியிற்பொருந்தின புண்ணியபாவத்துக்குட்பட்ட பிரார்த்த சரீரமாய்ச் சுவர்கத்திலும் நரகத்திலும்போய் மீண்டு துக்கப்படும் யாதனா சரீரமாயிருக்கிற எண்ணிறந்த சரீரமொழியப் பண்ணப்பட்ட பெரிய நல்லினையால் அழகுபொருந்திய தில்லைவனஞ் சூழ்ந்த அனுக்கிரகமன்றினில் ஆடுகிகின்ற ஒருதன்மையான ஆனந்த நிருத்தத்தைத் தரிசிக்கப் பொருந்தின இந்தச் சரீரமன்றோ நமக்குச் சரீரமாகி நம்மளவில்விரும்பியசரீரம்-- எ-று. நமக்குடலென்பதற்கு நமக்குடைமையெனினு மமையும். (1-14)

தலவிசேடத்தையுரைத்தது

மறந்தாலுமினியிங்கு வாரோமென்றகல்பவர்போற்
சிறந்தாரநடமாடுந் திருவாளன்றிருவடிகண்
டிறந்தார்கள்பிறவாத விதிலென்னபயன்வந்து
பிறந்தாலுமிறவாத பேரின்பம்பெறலாமால்.

இ-ள். இவ்விடத்து எப்போதும் மறந்தேயாயினும் வரக்கடவ மல்லோமென்று சலித்து அவ்விடத் தகன்று போனவரைப்போல அருள்சிறந்து நிறைவுதக நிருத்தஞ் செய்யுந் திருவாளனது ஸ்ரீபாதந தரிசித்துச் சிவபூமியிற் சென்றவர்கள் பிறவாநெறியிருககு மிதில் மிகுந்தபிரயோசனமேது சிதம்பரத்திலே வந்துபிறநதாலு மொழியாத பேரின்பம்பெறுவது நிச்சயமாதலால்.

இது சிதம்பரத்திற்சநித்த வான்மாக்களுக்கு முத்தியுறுதியென்றமை கண்டுகொள்க. (1-15)

காதமருங்கொடுங்குழையான் கரத்தமருங்கொடுங்குழையான் 
பாதமுறவளைந்திரவும் பகலுமுறவளைந்திரவும் 
பேதமறவுடன்றீரும் பிணிபிறவியுடன்றீரு
மோதலுறுமருந்தில்லை யொழியவொருமருந்தில்லை.

இ-ள். திருச்செவியிறபொருநதின- கொடுங்குழையான்-வளைநத சங்கக்குழையை யுடையவனும், கரத்திலே மருங்கொடுங்கின- உழையான்-மான கன்றையுடையவனும், ஸ்ரீபாதத்திலே- உறவளைநது- சென்னியுறவணங்கி, இருபோதும், உறவுஅளைநது - அனபிலேமூழ்கி, வேண்டினவரம் - இரவும் - இரவுங்கள், இரண்டற நின்று வெகுண்டு குணங்களை - ஈரும - அரியும், பிணியும் பிறவியும் உடனே - தீரும்-தீரும், வேதாகம சாத்திரங்களும் நிச்சயித்தற்கரிதாகும் இந்தத் தில்லையெனனும் ஸ்தலம் நீங்கலாக வேறொருமருநதுமில்லை - எ-று. (1-16) 

பொன்றிகழ்பங்கயமூள்கிப் புனிதனபங்கயமூள்கிச் 
சென்றுதொழக்கருததுடையார்சிலரொழியக்கருத்துடையா
ரொன்றுமுளத்திருக்கூத்தை யுருவொழிகுந்திருக்கூத்தை 
மன்றமரப்பணியீரேன் மருவுமரப்பணியீரே.

இ-ள். பொலிவு விளங்கும் அழகிய பொற்றாமரையில் மூழ்கி நிர்மலனாகிய நடேசமூர்த்தி திருவடித்தாமரையை - ஊள்கி - தியானம்பண்ணி, (விகற்ப மறச்சென்று) ஸ்ரீபாதந்தரிசிக்கக் கருத்துடையாராகிய சித்தபாகமுடைய சிலரொழிய மற்றொருவரும் - கருத்துடையார் - கருவைத்துடைக்க மாட்டார்கள் ஆன்மாக்களுக்குச் சகசமாய்ப் பொய்யை மெய்யாகத் திருப்பும் மலமும் ஊத்தையாகிய கன்மமும் உருவாகிய மாயையும் இல்லையாகச் செய்யும் ஆநந்தத் திருக்கூத்தைச் சிதம்பரத்திலே தரிசித்தும் வணங்கீராகில் பொருந்தின மரப்பாவைக்கொப்பீர்--எ-று.

மூழ்கியென்றது ழகாரம் ளகாரமாய் மருவியது, உள்கி யெனற்பாலது
ஊள்கியென நீட்டல் விகாரமாயிற்று. (1-17)

பொருவிலரு ணெறிவாழ்க புரைநெறிகண் மிகவாழ்க
வரைவிறிருத் தொண்டரணி வளர்கதிருத் தொண்டரணி
யருள்விரவக் கற்றோர்க்கு மடர்புலன்போக் கற்றோர்க்கு
மருவுபுக லம்புலியூர் மாடமலி யம்புலியூர்.

இ-ள். ஒப்பில்லாத கிருபையினையுடைய சைவமார்க்கம் வாழ்வதாக, குற்றமிகுந்த லோகாயதன் புத்தன் சமணன் மீமாங்கிசன் மாயாவாதி பாஞ்சராத்திரி முதலான கபடமார்க்கம் மிக ஆழ்க - மிகவும் கீழ்ப்படுவதாக, வரைவில், நவகண்டமாக வரைந்து வில்வடிவாக-திருத்து-திருத்தப்பட்ட ஒள்தரணி நல்லபூமியில் திருத்தொண்டர் வர்க்கந்தழைப்பதாக, திருவருள் பொருந்தும்படி கற்றோர்க்கும் குருமுன்னிலையில் கற்றுணர்ந்தவர்களில்- போக்கு அற்றோர்க்கும்-குற்றமில்லாத பக்குவாத்துமாக்களுக்கும் பொருந்திய புகலிடமாவது-சந்திரன் தவழ்கிற மாடகூடங்கள் நிறைந்த அழகிய புலியூர். (1-18)

இரும்பொத்துச் சிறிதிடமு மின்றெனக்கின் றருளாலே
கரும்புற்ற நறையிதழித் தொடைமுடியோ னமரர்தொழக்
கரும்புற்ற வரவாடக் காரிகையி னுடனாடும்
பெரும்பற்றப் புலியூரா யிருந்ததுளம் பெரிதாயே.

இ-ள். எனக்கு இதற்குமுன் என்மனமானது இரும்பையொத்துச் சிறிது புரையுமற்று இருக்கும் இப்போது அருளினாலே வண்டமர்ந்த தேன் நிறைந்த கொன்றைமாலையணிந்த சடாமகுடமுள்ள நடேசமூர்த்தி அமரர் வணங்கப் பெரியபுற்றின் அரவாடக் காளியினுடனே நிருத்தஞ்செய்யும் பெரிய பெரும்பற்றப் புலியூராயிருந்ததுமிக --எ-று.

பெரும்பற்றப் புலியூர் என்றது ஆன்மாக்களுடைய உட்பற்றுப் புறப்பற்றாயிருக்கின்ற காணங்கள் சூனியம் பிறந்தவிடத்திலும் ஞானப்பற்றாய் நிற்றலால் ஞானசபையாகிய புலியூரை அந்தப் பெரும்பற்றப் புலியூரென்றார், பெரும்பற்றென நிறுத்தி அ-என்கிற சுட்டை இடையிட்டு ஒற்றுவருவித்துப் புலியூரென வருமொழிசெய்து பெரும்பற்றப் புலியூரென்றமை கண்டுகொள்க. (1-19)

தேசமலிபொதுஞானச் செவ்வொளியுந்திகழ்பதியா
மீசனதுநடத்தொழிலு மிலங்குபலவுயிர்த்தொகையும்
பாசமுமங்கதுகழியப் பண்ணுதிருவெண்ணீறு
மாசிறிருவெழுத்தஞ்சு மாநாதியிவையாறாக. 

இ-ள்: சிவபூமியிலேதழைத்த சுத்தஞானத்தினுடைய செம்மை பொருந்தின வொளியும், விளங்குகின்ற பதியாகிய பரமேசுரனுடைய பஞ்ச கிருத்தியமும், விளங்கிய சாவான்மாக்களும், ஆணவமுதலான பஞ்சபாசமும், அவ்விடத்தான்மாக்களை மேலிட்டுத் தன்வசமாக்கி நின்ற பாசத்தை நீங்கப் பண்ணுகிற திருவெண்ணீறும், திரோதானங் கடந்த அரிளஞ் செழுத்தும், இவையாறும் அநாதியாம்.-- எ-று. (1-20)

கற்பங்கடொறுநடஞ்செய கழலடைந்தோர்கணிப்பிலர்தஞ்
சிற்பங்கடரும்புகழுஞ் சென்றனவிச்செலகாலத்
தற்பங்கொடுதிக்குமிறை யருடருமென்றனரென்றார்
சொற்பந்தமுறுமனமே துணையாகத்தொடங்குதலும்.

இ-ள்: கற்பங்கடோறும் (அநுக்கிரக கிருத்தியத்திலேபொருந்தி) ஆநந்த நிருத்தஞ்செய்யும் திருவடிகளிற் பொருந்தினவர்கள் அளவிலா, தமது எண்ணிக்கைக்குப் பிரமாணமாகக் கற்பங்கடோறும் வகுத்துவகுத்துச் சொல்லப்பட்ட ஆகமப் பிரமாணமாகிய புராணங்களு மிறந்துபோயின, இந்தக் கலியுகவர்த்தமான காலத்தில் அற்பார்த்தமான துதிக்கும் பரமேசுவரன் அநுக்கிரகித்தருளுவனென்று வேதாகமம் போன்றவர்களருளினார்கள், என்று பொருந்திய சொல்லை அருளாற் பொருந்தின எனது மனமானதே யெனக்குத் துணையாகச் சிதம்பர மான்மியத்தைத் துதிசெய்யத் தொடங்குதலும்-எ-று (1-21)

ஆராதமனமினிய வாநந்தநடத்தளவுஞ்
சாராததன்மையினாற் றகுமொழிக்குச்சொற்படுத்த
வாராதென்றறிந்தாலு மற்றதுகட்புலப்படளலா
லோராதபேராசை யொருக்காலுமுலவாதால்.

இ-ள்: பூரணஞானத்தைப் பொருந்தாததாகியமனமானது ஆநந்தநிருத்த மளவாகச்செல்ல வியாத்தியில்லாத தன்மையினாலே அந்த ஆநந்த நிருத்தமான அருத்தத்துக்குத் தக்க சுலோகத்துக்குச் சொற்செய்யவரா தென்பதுஆகம சாஸ்திர சம்பிரதாய வனுபவங்களினாலே யறிந்தாலும் அந்த ஆநந்த நிருத்தமானது பதஞ்சலி மாகாருஷிக்கு அருளின வரப் பிரசாதத்தினாலே திஷ்ட்டி கோசரமாதலால் விசார ஈனமான மிகுந்த ஆசை ஒருக்காலு மொழியாதாதலா னென செய்வோம்- எ-று. (1-22)

காதரமார்தருமனமே கமலமலரயனல்லை
சீதரமாயனுமல்லை சிவனுமனற்றிரளல்லன்
நீதரமாவருளுடையை நிலைகலங்கேலினிமன்றி
லாதரமாதுடனாடு மண்டனடங்கண்டனையால்.

இ-ள். அச்சமிகுந்த மனமே நீ கமலமீதினிலிருக்கிற அயனுமல்லை, பூமகளை மார்பிற்றரிக்கும் அரியுமல்லை, சிதம்பர மூர்த்தியோ அவர்களாற் பறந்தும் இடந்துங் காண்பரிய சோதிசொரூபி யல்லன் நீஅவரகளிருவரினு மேலான அருளுடையை யாதலால் நிலை கலங்காதே, அதெங்ஙனமென்றுகேள் கனக சபையில் விரும்பின அருட்சத்தியைப் பொருத்தி ஆநந்த நிருத்தஞ் செய்யுஞ் சிவனுடைய நிருத்தங் கண்டனையாதலால்---- எ-று. (1-23)

இது சித்தசமாதானம்.

மேல்புராணவரலாறு கூறுகின்றது.

நாதனருள்பிரியாத நந்திதரச்சனற்குமரன்
வேதவியாதனுக்களிக்க மேன்மையெல்லாமவன்விளங்கிச்
சூதமுனிதனக்குதவச் சோபானவகைதொகுத்த
மூதறிவாலவன்மொழிந்த புராணமவைமூவாறில்.

இ-ள். ஸ்ரீநீலகண்ட பரமேசுவரனருளிச்செய்த பதினெண்புராண அர்த்தங்களை அவருடைய பிரதானசீஷரான நந்தீசுவரர் சனறகுமார பகவானுக் கருளிச்செய்ய அவர் தம்முடைய பிரதான சீஷரான வேதவியாசருக்கருளிச் செய்ய அவர் நன்றாக விசாரணை செய்து தம்முடைய பிரதான சீஷரான சூதமுனிவருக்கு அநுக்கிரகிக்க இப்படிக்குச் சோபானபாரம் பரியமாகவந்த சுருக்கமான அருத்தத்தைத் தம்முடைய முதிர்ந்தவறிவினாலே விரிந்துரைத்த பதினெண்புராணத்தில். 
சோபான பாரம்பரியமென்பது ஒருபடிவிட்டு ஒருபடியேறுதல். (1-24)

நலமலியுந்திருத்தில்லை நடராசன்புகழ்நவிலும்
பலகதியில்யானறிந்த படிபடியிற்பயிறாரிச்
செலவினர்போலெவ்வழியுஞ் செவ்வழியாச்சிறிதியங்கித்
தொலைவில்பெரும்பதியணையத் துணிந்தருளே துணையாக.

இ-ள். நன்மை மிகுந்திருக்குந் தில்லைவனத்து நிருத்தராசனது சிதம்பர மான்மியத்தைச் சொல்லும் வெகுவித மார்க்கத்தில் யானறிந்து கொண்டபடி எப்படியென்னில், பூமியில் முன்னடந்திருக்கும் வழியே நடக்குமவரைப்போல் சுற்று வழியெல்லாஞ் செவ்வை வழியாகத் துணிந்து அருளைக்கூடிச் சிறிது தள்ளி எடுத்துக்கொண்ட விசாரணையில் போக்குவரத்துப் பண்ணிச் சிவபூமியைக் கண்டுகொண்டேன்---- எ-று. (1-25)

மங்களமார்திருமன்றின் மன்னனடம்வளர்புலிக்காற்
பங்கமில்சீரருண்முனிக்கும் பதஞ்சலிக்கும்பணித்தருளிச்
சிங்கவருமன்றனக்குந் தெரிவித்துத்திருவருளா
லங்கவரைப்பணிகொண்ட வடைவறிந்தபடிபுகல்வாம்.

பாயிரம்

இ-ள். மங்களநிறைந்த கனகசபாபதி ஆநந்தநிருத்தத்தை அருள்வளரா நின்ற குற்றமில்லாத சீர்சிறந்த வியாக்கிரபாதமுனிக்கும் பதஞ்சலிமுனிக்குந் தரிசிப்பித்தருளி இரணியவன்மனுக்கும் புலப்படுத்திக் காருண்ணியத்தினாலே யிந்த மூவரையுஞ் சேர்வை கொண்ட அடைவறிந்தபடி சொல்லுகிறேன். (1-26)

சொல்லோடும்பொருளோடுந் துணிவுடையோர்சொற்றெனரென் 
றெல்லோருங்கொள்வெட்டு மிரண்டுமறியாதோமும்
வல்லோர்போலொருபனுவன் மதித்தோமானவைபொறுக்க
நல்லோரையிரந்தோமே னகையாமென்றுரையாமால்.

இ-ள். சொல்லுடனும் பொருளுடனு முறுதியுமுடைய புலவர் சொன்னார்கள் என்று கேட்ட ஞாதாககளெல்லோருங் கைககொள்ளும்படிக்கு எட்டும் இரண்டும் பத்தென்பதற்கு விபரமில்லாத யாமும் கவிவல்லவர்களைப்போலே யொருபனுவல் சொன்னதாகப் பண்ணிச் செய்யுட் குற்றம் பொறுக்கப் பெரியோரை வேண்டிக் கொண்டோமாகில் கேட்டவர்களுக்கு நகையை யுண்டாக்குமென்று உரைத்தோமில்லை - - எ-று. 

இதிலெல்லோருங் கொள எட்டு மிரண்டுமென்பதற்கு எட்டான சொல்லு மிரண்டான பொருளுமென்று பொருந்துஞ்-சொற்பொருளாமென்றும் அகார உகாரமென்றுந் தசகாரிய தசாவத்தையென்றும் சொல்லுவாருமுளர், இதிற் சொற்பொருளிலக்கண மோராதோர்க்குங் கவிவருதலானும், அகார உகார முதலானவை சிறுபான்மையான சம்பிரதாயவர்த்த மாகலினும், அவையடக்கத்துக்குப் பொருந்தாமையால் மறுக்கப்பட்டது, எட்டான சொல்லென்பது-நேமிநாதத்தில்-ஏற்ற திணையிரண்டும் பாலைந்து மேழ்வழுவும், வேற்றுமை யெட்டுந் தொகையாறும், மாற்றரிய, மூன்றிட முங்காலங்கண் மூன்றுமிரண்டிடத்தாற, றோன்றவுரைப்பதாஞ் சொல், இரண்டாகியபொருள் அகப்பொருள் புறப்பொருள். (1-27)

என்றுமருந்தவமுயல வினிவேண்டாயாவர்க்கும்
பொன்றுமுடல்கன்றுமுனிப் பொற்கோயில் புகழ்மாலை
சென்றுசெவிப்புலன்புகுமேற் றீவினைகளவைதீர்க்கு
மன்றினருள்புரிவிககுந் தெரிவிக்குமலர்ப்பாதம்.

இ-ள். இன்றுமுதல் பெரியதவசுகளை யாவர்க்கும் பண்ண வேண்டுவதில்லை நீர்க்குமிழிபோல இறக்குஞ் சரீரம் பார்த்தகண் மாறுதற்குமுன்னே இந்தச் சிதம்பரமான்மியஞ் செவிகளுக்கு விடயமாகுமாகில் அக்குற்றமுள்ள புண்ணிய பாவங்கள் தராசுமுள்ளுப்போல் சமப்படுத்தும் மலபாகத்தைப் பண்ணி
அருளைப் பிரகாசிப்பது வியாபகமாயிருக்கிற ஞேயத்திலே யழுத்துவிக்கும். (1-28)

இதனுள் கடவுள் வணக்கம்.
திருவிருத்தம்-20-பாயிரம்-8 
ஆக திருவிருத்தம்-28
--------------



2. வியாக்கிரபாதச் சருக்கம் - (29-58)


மன்னுமருந்தபோதனரின் மருவுமத்தியந்தின்னா
முன்னரியதிருமுனிபா லோங்குலகந்துயர்நீங்கப்
பன்னரியசிவஞானம் பத்திதரும்பான்மைதகத்
தன்னிகரிறிருவருளா லவதரித்தானொருதநயன்.

இ-ள்: நிலைபெற்ற பெரிய விருஷிகளிற் பொருந்திய மத்தியந்தினனென்று பேரையுடைய உன்னுதற்கரிதாகிய மகாவிருஷியினிடத்திலே பெரிய சர்வலோகங்களும் பிறவித் துன்பம் நீங்கும் வண்ணம் திரிலித கரணங்களுங் கடந்த சிவனிடத்தில் பத்திஞான வயிராக்கியத்திலுண்டான பகுதிமிகத் தனக்கொப்பில்லாத கடாக்ஷத்தினாலே ஒருகுமாரன் திருவவதாரஞ் செய்தான். (2-1)

தனிப்புதல்வன்றனையணைத்துத் தகவுச்சிமோந்துசடங்
கனைத்துமடைவினிலியற்றி யருமறைநூலவைகொடுத்து
மனத்துணையாந்திருநாம மருவுநெறியுபதேசித்
தினிச்செயவேண்டுவதென்கொ லெனமொழிந்தானெழின்முனிவன்.

இ-ள்: நல்லொழுக்கமுள்ள மத்தியந்தினமுனிவர் ஒப்பில்லாத குமாரனைத் தழுவிக்கொண்டு இலக்ஷணமுள்ள உச்சியை மோந்து உபநயன முடிவாயுள்ள கன்மங்களடைவே பண்ணி பதினாலு வித்தையையுங் கற்பித்து உயிர்த் துணையாகிய ஸ்ரீ பஞ்சாக்கர முறைமையிலே பொருந்தும்படி உபதேசித்துக் குமாரனைப் பார்த்து இனிநா முனக்குச் செய்யு முபகாரமேதென்று கேட்டருளினார்.

பதினாலு வித்தையாவது ஆறங்கம் நால்வேதம் மீமாஞ்சை புராணம் தருக்கம் தருமசாத்திரம் என்பவைகளாம். (2-2)

இந்தவகைச்சிவனருளா லிரவியெதிர்மணியுமிழ
வந்தவனலெனவிளங்கு மழமுனிவனடிவணங்கித்
தந்திரமுன்புகலுமருந் தவத்தொகையிற்றலையான்
வந்தமின்மாதவமடியேற்கருளு கெனவுரைசெய்தான்.

இ-ள்: இந்தக்கிரமத்தினால் கன்மம் சமமாய் அருள்மேலிட ஆதித்தன் சந்நிதியில் சூரியகாந்தஞ் சுவலிக்குமாறு போல் (ஞானஉதயமான) மழமுனி பிதாவை நமஸ்கரித்து வேதாகம முன்சொன்ன அரியதவசுகளில் மேலானத வசு அடியேனுக்கு அருளிச் செய்ய வேண்டும் என்றுசொன்னான்- எ-று. (2-3)

தவமெவையுமுணர்ந்தமுனி தநயன்முகமிகநோக்கிப்
புவனமலிபோகங்கள் பொருந்திமருந்தவம்புரிந்தாற்
சிவகதியுமிதுவன்று சிவார்ச்சனமார்ச்சனமாகிற
பவமகலும்பரபோகம் பெறலாகுமெனப்பகர்ந்தான்.

இ-ள். எல்லாத்தவசுகளுமறிந்த அந்தமுனிவர் குமாரனுடைய திருமுகத்தைமிகுந்த அனுக்கிரகத்தாலே பார்த்து அருளிச்செய்வார், உலகங்களில் அரியதவசுகள் பண்ணினால் மிகுதியான சுவர்க்காதி போகங்கள் பொருந்தும், இது சிவலோகத்துக்குப் போம் வழிஎங்ஙனமென்னில், சிவபூசையை அர்ச்சிப்பையானால் சனனம் விடும் பரலோகமும் சித்திக்குமென்று அனுக்கிரகித்தார்- எ-று. (2-4)

சொன்னமொழிகொண்டிறைவன் றோன்றிமகிழ்ந்துளதானம்
பின்னுகெனமழமுனிக்குப் பார்முழுதும்பரப்பிரம
சன்னிதிகாணதுகாணுந் தவக்குறைகாணென்றாலு
மன்னிடமாய்நிகழுமிட முளதென்றான்மாமுனிவன்.

இ-ள். குருவுபதேசத்தையுட்கொண்டு பரமேஸ்வரன் திரோபவியாமல் பிரகாசித்து ஆநந்த சத்தியுடனே யெழுந்தருளியிருக்கிற புண்ணிய ஸ்தல மருளிச்செய்யுமென இருநூற்றிருபத்துநாலு புவனங்களுஞ் சிவ சந்நிதியாம் (அப்படியன்றென்று) காணும்படி செய்த தவசுகளில் குறைவாகிலும் (சரீரமுழுதும் ஆன்மா வியாபியாய் நின்றாலும்) அந்த ஆன்மா இருக்குமிடம் ஒன்று உண்டாயிருப்பதுபோல் சிவன் எங்கு நிறைந்து நின்றாலும் சிவனுக்க திட்டானமாய் விளங்கும் புண்ணிய ஸ்தலமுமுளதென்று அம்முனிவர் அருளிச் செய்தார்- எ-று. 
அதேதென்னில். (2-5)

பாருயிர்கட்குபகரித்துப் பரப்பினடுப்படுவதொரு
மேருகிரியும்புடைசூழ் வெற்புமவற்றிடைநாடு
மாரயிர்கள்பயனருந்து ம்மருலகாமெனக்கழித்தான்
சீருலவுநாறுவளர் செறுவெனலாஞ்சிறுமையுற.

இ-ள். பதினாலுலோகத்திலுமுள்ள ஆன்மாக்களிக்குச் சலனம் வாராமல் பூமிக்குநடுவே நிற்கிற மகாமேருவும் அதன்பக்கஞ் சூழ்ந்த குல பருப்பதங்களும் அவைகளின் நடுவிலிருக்கும் இராச்சியங்களும் ஆன்மாக்களிந்தப் பூமியிலே யார் சித்தகன்ம்பலம் அனுபவிக்கிற சுவர்க்கத்துக்கொக்கும், அதிற்கன்மபலம் நாற்றங்கால் விளைவுக் கொக்குமெனக் கழித்தான்சிவன்- எ-று. (2-6)

எத்தகையபோகங்க ளெவற்றினுக்குங்காரணமாய்
வைத்தபடியிடம்போதா வகைநெருங்குமன்னுயிர்கண்
முத்திபெறத்திருவுள்ள முகிழ்த்தபெருங்கருணையினா
லத்தனுமித்தலநண்ணி யலகிலிடங்கைக்கொண்டான்.

இ-ள். எல்லாப் பெருமையுமுடைய போகபூமியான சுவர்க்காதிபத முதலான நரகாதி யெவைகளிலும் காரணமாக வைத்த கன்மபூமி இடம் போதாத படியாலே ஒன்றுக்கொன்று நெருங்கி நிற்கிற எண்ணிறந்த ஆன்மாக்களும் சிவ புண்ணியத்தினாலே கன்ம சாமியசத்திநி பாதமல பாகமாய முத்திபெறத் திருவுள்ளத்தில் குறித்த பெரிய கிருபாசக்தியைய திட்டித்துப் பரமேசுவரனும் அந்தக் கன்மபூமியைப் பொருந்தி எண்ணிறந்த திருப்படைவீடு இடமாகக் கொண்டிருந்தான்--எ-று.

இனி இதிலும் அதிகமருளிச் செய்கிறார். திருப்படைவீடுஎன்பதுஆலயம். (2-7)

ஞாலத்தாயிரகோடிநற்றானமுளவவற்றி
னேலத்தானலமார விடங்கொண்ட வெழிற்றில்லை
மூலத்தானத்தொளியாய் முளைத்தெழுந்தசிவலிங்கக்
கோலத்தானின்பூசை கொள்வானென்றுரைசெய்து.

இ-ள். இந்தக் கன்மபூமியி லெண்ணிறந்த திருப்படைவீட்டில் ஆயிரங்கோடி புண்ணிய ஸ்தலமுண்டு இத்தலங்களிலா நந்தநிருத்தஞ் செய்யப் பொருந்தின தில்லை வனத்து ஆலடியில் பிரகாசமான பாதாளத்தின்கீழ் சொல்லறிந்த சிவபூமியிலே நின்றும் குறிதோன்றின சிவலிங்கக் கோலத்தான் நினது பூசைகொள்ளு மவனென வாசக தீக்ஷைபண்ணினார். எ-று. (2-8)

திருநீறுநுதல்சேர்த்தித் திகழுச்சிதனைமோந்தெங்
கருநீறுபடவுதித்த காளையெனவணைத்துவிழி
தருநிர்மத்தியந்தின்னாந் தந்தையைவந்தனைசெய்து
வெருநீர்மையன்னையையு மடிபணிந்துவிடைகொண்டான்.

இ-ள். நெற்றியிலே திருநீறுசாத்திப் புத்திரவாஞ்சையாலே உச்சியை மோந்து எமது கருவாகிய பாசம் நீறுபட்டுப் போம்படிசனித்த பிள்ளையென்று ஆலிங்கனம் பண்ணி இந்தப் பிள்ளையை நீங்குகிறோமேயென்று விழி நீர்தர விருக்கிற பிதாவாகிய மத்தியந்தின மாமுனியையு நமஸ்கரித்து பிள்ளை நீங்குறானென்கிற பயத்தையுடைய மாதாவையும் நமஸ்கரித்து அனுமதி பெற்றான். (2-9)

வேறு.

மண்டானிடர்தீர்வகையாலருளால் வருவானிருளார்மகராலயநீர்
தண்டாரகைபோற்றரளம்புரளத் தள்ளுந்தடமாடுயர்தில்லைவனத்
தண்டாதிபனாமமதேதுணையா வரியுங்கரியுந்திரியுஞ்சரியுங்
கண்டானுழையாவுயர்கானமுமுன் காணாதனகண்டுகடந்தன்னே.

இ-ள். பூலோகம் பிறவித்துன்ப நீங்கும்படி அருளினாலே தெற்கு நோக்கி வருகின்றவன் கருங்கடற்றரங்க நீர் குளிர்ந்த தாரகைகளைப்போல் முத்துக்களை வாரி யொதுக்கும் கரைப் புறஞ்சூழும் பெரிய தில்லை வனத்து அண்டர் நாயகனது பஞ்சாக்கரமே வழித்துணையாகச் சிங்கமும் யானையும் சஞ்சரிக்கும் வழியும் கண்ணுக்கு நுழைய வொண்ணாத இருள்செறிந்து யர்ந்தகானமும் முன்காணாதவை யெல்லாத்தையுங் கண்டு நீங்கினான்-- எ-று. (2-10)

மொழியும்மொழியும்பரிசொன்றிலதாமுன்னான்மறையோதமுழங்கியகான்,
வழியும்வழியும்மதுவார்புதுவீ வாசந்தகவீசியவார்குவளைக், 
கழியுங்கழியும்படிவனந்தலர்பொற்கமலங் கண்மலங்களையுங்கயநீர், 
பொழியும்விழியும்மனமுங்குளிரப் புதுமாமுனிகண்டுபுகழ்ந்தனனே.

இ-ள். ஆனாதி காலத்திலே தொடங்கி வேதாகமங்களும் வாக்குக்கெட்டா தென்றெழியாமல் முழங்கிக் கூப்பிடும் வனமார்க்கமும் ஒழுங்குதேனை நிறையப்பருகின புதிய வண்டுகளும் மணம் பொருந்திவீசிய நீளிய நீலோற் பல மலர்ந்தகழியும் நீங்கும்படி வந்து அலர்ந்த பொற்றாமரைகளையும் பாசமறுக்குந் திருக்குளத்தையும் நீர்பொழியுங் கண்ணும் மனமுங் களிகூரக்கண்டு தோத்திரம் பண்ணினான் புதியமுனி-- எ-று. (2-11)

முற்பிறப்பில் இந்தத் தலத்தைத் தரிசித்தவரல்லர்- தரிசித்திருந்தால் முத்தியடைய வேண்டுமேயல்லது மறுசன்மம் வாராது இப்போது - மறுசன்மம் கொண்டுவந்து தரிசித்தாராதலால் புதிய முனியென்றார்.

சீரார்தருபொய்கைவணங்கியதன்றென்பான்மிகுமன்பொடுசேர்சரியே 
பேராவகைசெல்லவொராலநிழற்பிரியாதபிரானெதிற்நேர்படமுற்
பாரார்விழுந்துமெழுந்தும்விழிப்பயின்மாரிபொழிந்துமழிந்துமொழிந்
தாராவமுதேயெனையாளுடையா யறிவேயெனவோதின்னாரணமே.

இ-ள். வைபவமிகுந்த புண்டரீக பொய்கையை வணங்கி அதற்குத் தெற்காக மிகுந்த அன்பு துணையாகப் பொருந்தின சரிவழியே விலங்காமற் செல்லுமளவில் ஒரு ஆலடி நிழலைப் பிரியாத ஸ்ரீமூலத்தானமுடைய தமபிரானார் முன்னே வெளிப்படத் திருமுன்னே யேகாங்கமா விழுந்து தெண்டம் பண்ணியும் எழுந்திருந்தும் விழியிலே பயிலப்படா நின்ற நீர்மேகம்போல பொழியா நின்றும் தன்னையிழந்துந் தோத்திரங்கள் மொழிந்தும் தெவிட்டா வமுதேயென்னை யடிமையாக வுடையவனே யென்னறிவேயென்று வேதங்களாலே தோத்திரம் பண்ணினான்- எ-று. (2-12)

முன்னாள்பதியாயினுமேதகுசீர் மூலபதியாளுடைமுக்கணனே
பொன்னார்தருபொய்கையுடைப்புனிதாபொடிசேர்வடிமுடிவேயடியே 
னென்னாதரவார்தருபூசைகொள்வாயினியாய்முனியாதெனவோதிமடுப், 
பன்னாண்மலர்கொய்ததின்மூழ்கியருட்பாதங்களணைந்துபணிந்தனனே.

இ-ள். அனாதிகாலத்திலே தொடங்கிப் பெத்தமுத்தியிரண்டினுஞ் சுதந்தரத்தினாலே யாண்டருளிய பதியேயாயினும் பின்னையுஞ் சீரியவுனக் கொத்திருக்கிற மூலமான பதியை யாண்டு கொண்டருளிய மூன்று கண்ணினையுடையோனே, இதுவுமன்றி யுனக்கு மேலுமருளுமாயிருக்கிற புண்டரீ கப் பொய்கையையுடைய புனிதனே, இயல்பாகவே விபூதிதூளிதஞ் சேர்ந்த திருமேனியையுடையவனே, எல்லாப் பொருளுக்கும் முடிவே பேதையாகிய அடியேனுடைய ஆசைமிகுந்த அருச்சனையைக் கொண்டருளுவாய் யாவற்கு மினியானே தீதென்று திரோப வியாமற் கொண்டருளென்று திருக்குளத்திலே மூழ்கி அதிற் புதிதாக மலர்ந்த பலபூக்களையும் பொற்றாமரைப் பூவையுமெடுத்து வந்து அருட்பாதங்களையருச் சித்தான்--- எ-று. (2-13)

தடமாமலர்கொண்டுவணங்கியருந் தவமாமுனிதில்லைவனச்சரியே
குடபாலணைவான்மணமாமலருங்குளமுங்கரையுந்தளமுங்குறுகித்
திடமார்தருவே நிழலாவெழிலார் சிவலிங்கமிருத்தியருத்தியொடங்
கிடமாகவிரண்டிடமும்பணிவுற்றிறையே துணையாகவிருந்தமர்நாள்.

இ-ள். பெரிதாயலரந்த திவ்வியதாமரை மலர்கொண்டு பூசித்துப் பெரிய அருணீங்காதமுனி தில்லை வனத்தில் மேற்காகவொரு சரி வழியே செல்லுகையிலே பரிமளமிகுந்த பூவினையும் வாவியினையுங் கரையினையும் உள்ளாடு வெளியையும் பொருந்திச் சிக்கென்ற தொரு தில்லைச் செடிநிழலிலே சோதிரூபமான சிவலிங்கந்தா பித்து ஆசையுடனே பன்னசாலை யுமுண்டாகப் பண்ணி மூலத்தானத் துடனிரண்டிடமும் பணிவுற்று இறைவனே துணையாகத் திரிவித கரணமும் பொருந்தியிருக்கு நாளில்---எ-று.
திடமார்தருவேயென்பதற்கு--வலியமரமெனிலுமமையும். (2-14)

காலம்பெறநீறணிமாமுனிநீர் கமழ்குண்டிகைதண்டுகரண்டிகையுட்
சாலும்பலபோதுசமித்தொளிர்புற்சாகாதிபலாசிலைதாமிகமே
னாலுஞ்சடையெட்டுமுடித்தொருநாணண்ணித்திகழர்ச்சனைபண்ணமருப்
பாலொன்றலராய்பொழுதேபழுதார்பலமாமலர்கண்டுபகர்ந்தயர்வான்.

இ-ள். சந்தியாவந்தன காலங்கள் பொருந்த அனுட்டானம் பண்ணும் மழமுனியென்பவன் பரிமளமுள்ள சலம் பொருந்தின கமண்டலம் தண்டு திருப்பூக்குடை நிறைந்த பலபுட்பங்கள் சமிதை பசிய தருப்பை அறுகு முதலான புல்சாக மூலபலங்கள் பலாசிலை முதலானவை மிகக் கொண்டுவந்து அதற்குப் பின்பு தாழ்ந்த சடையை எட்டுமுடியாகக் கட்டிமுடித்து ஒருநாள் புட்ப விதிப்படி பொருந்தப் பூசிக்கப் பரிமளம் பொருந்தின புட்பம் ஆராயுமளவில் குற்றமிகுந்த பலபுட்பங்களைக் கண்டு விதனப்பட்டுச் சொல்லுவான். எ-று. (2-15)

வண்டூதும்விடிந்தெனிலல்லெனிலோர் வழியுந்தெரியாதுமரங்கண்மிகக்
கண்டூரவளர்ந்துகரஞ்சரணங்காலும்பனியால்வழுவுங்கழிதே
னுண்டூறுபடுத்தியசெம்மனல்வீயொத்தேறுமரும்புவிரும்பலரைப்
பண்டூரொடெரித்தபரம்பொருளார் பழுதென்றனரென்றுபகர்ந்தயர்வான்.

இ-ள்: புட்பம் -விடிந்தெடுக்கில் வண்டுகள் தீண்டும் இராத்திரியெடுக்கப் போனால் வழியுந் தெரியாது கோங்கு முதலான மரங்களிலே யெடுக்கலா மென்னில் அடிமரம் கண்ணுக்கும் எட்டாமல் உயர்ந்து வளர்ந்திருக்கிற படியால் கையுங்காலும் பனியால் வழுக்கும் மிகுந்த வண்டுகள் தேனையுண்டு ஊறுபடுத்திய பழமையாகிய நல்லபூவும் மலரும் பக்குவத்தைப்பொருந்தி வண்டுகள் ஏறத்தக்க அரும்புகளும் நாட்பூவும் முன்னே விரும்பாத முப்புராதிகளையூருடனே யெரித்தருளிய தம்பிரானார் ஆகமத்திலே பழுதென்றருளிச் செய்தார் இதற்கென் செய்வோமென்று விதனப் பட்டிருந்தார்.-எ-று (2-16)

தண்ணார்மதிசூடுசடாமகுடத்தலைவா 
      கடைவாழ்வுதவிர்ப்பவனே, 
கண்ணார்நிதலோயொருமான்மறிசேர்கரவா 
      வரவாகருமூலகரா, 
மண்ணார்புகழ்தில்லைவனம்பிரியா 
      மணியேயெனையாளமகிழ்ந்தனையே, 
லெண்ணாதுநினைந்தவைதந்தருண்மற்றின்பார்
      தருமன்பிலனென்றயர்வான்.

இ-ள்: குளிர்ச்சிபொருந்திய சந்திரனையணிந்த சடாமகுடத் தலைவனே
ஈனமான உலக வாதனையை அடியார்களுக்குத் தவிர்ப்பவனே நிறைந்த பாலலோசனனே ஒப்பற்ற மான்மறி பொருந்தின கரத்தையுடையானே பாம்பைப் பூணாக வுடையானே பவபாச மூலத்தைக் கெடுப்பவனே பூமியிலுள்ளோர் துதிக்குந் தில்லைவன நீங்காத சிந்தாமணியே என்னையாட்கொள்ளத் திருவுள்ள மகிழ்ச்சி யுண்டாகில் பத்திஞான வயிராக்கியமில்லா னென்றென்னை யெண்ணாமல் அடியேனினைத் தவரந்தந்தருள் வேறொரு சுகத்தி லாசையிலேனென்று சோர்வார். -எ-று (2-17)

அன்பூடுருகப்பணிவாரலரேலருளாயெனும்வாய்மையறிந்தும்விடா 
வென்பூசையுநேசமும்யானுமுனக்கெங்கேயெனநொந்தயர்வானெதிரே
வன்பூதமிகப்புடைசூழ்விடைமேன்மதிசூழ்சடைவானவர்கோன்வரநேர் 
முன்பூதலமேதுபணிந்திருகண்முகமார்புனலாடினன்மாமுனியே.

இ-ள்: பத்தியினால் நெஞ்சங்கரைந்து வணங்கார்களாகில் கடாட்சியா யென்கிற வேதாகம வாக்கியங்களை யுண்மையாகக் கண்டும் ஆசை விடாதவென தருச்சனையும் அகப்பட்ட நேசமுந்(தபோதனனாயிருக்கிற) யானும் (ஆத்தியந்த சூனியமாய்ப் பரிபூரணமாய்ப் பத்தவற்சலனா யுமிருக்கிற) உனக்குத் தகும்படி எப்படியென்று விதனப்பட்டு மோகிப்பவன் முன்னே வலிய பூதப்படை மிகச்சூழும் இடப வாகனத்தில் இளந்திங்களணிந்த சடையையுடைய தேவ தேவனெழுந்தருள அவர் சந்நிதிக்கு நேராகப் பூமியிலே சாட்டாங்கமாக நமஸ்கரித்து இரண்டு கண்களாலுந் தாரை கொள்ளுகிற சலத்தாலே மழமுனி ஸ்நானம் பண்ணினார்- எ-று. (2.18)
---------------------------------
* மூலகரர-ஹரா-வென்பது-கராவெனலாயிற்று.

ஆலந்தருவானமுதாமொழியாலருமாமுனி யர்ச்சனையிச்சையினின், 
சீலந்திகழ்வாய்மைமகிழ்ந்தனநீ சிந்தித்தவரம்பலசெப்பெனவென், 
காலுங்கரமும்புலியின்மலியக் கண்ணங்கவைதங்கவிரங்கிமுதற், 
கோலந்திகழ்பூசைகொளென்றுவரங் கொண்டானவையெந்தைகொடுத்தனனே.

இ-ள்: அழகுள்ள ஆலமர நீழலில் நீங்காத தம்பிரானார் அமுதசொரூபமாயிருக்கிற தமது திருவாக்கினாலே அரிய மழமுனியே நம்மையருசசிகப் பெருக ஆசைப்பட்ட நல்லசீலம் பொருந்தின வுன்னுடைய திரிவித கரணசுத்தியின் உண்மையைக்கண்டு சந்தோஷப்பட்டோம் நீ நினைத்த பலவாகிய வரங்களைச் செப்புவாயாகவென்றருள அடியேனுடைய கையுங்காலும் புலியைப்போலவலு வானநகப் பற்றுண்டாகவும் அவைகளில் கண்கள் பொருந்தவும் இரங்கியருளி முன்னே புட்ப விதிக்குத் தேவரீர் கற்பித்த நானாதிகர்ம அருச்சனை கொண்டருளுமென்று வேண்டிக்கொள்ள அந்த வரங்களைச் செகறபிதாவாகிய பரமேசுவரர் திருவுளம் பற்றினார்.- எ-று. (2-19)

விண்ணாடருநாடருமேலவனே விரவாவரமுந்தருவானெனநற், 
கண்ணாறுமரும்புபெரும்புனன்மெய்க்காலாறெனவார்தருகாதன்மையான், 
மண்ணாரவணங்கவணங்குடனே மறைவானிறைவான்வழிமேவியபின், 
பண்ணாரவியாககிரபாதனெனும் பாவார்பெயரோதினபாரிடமே.
br> இ-ள்: அரியயனிந்திராதிகளுஞ் சொப்பனத்திலுங் காண்பதற்கரிய பகிரண்டங்கடந்த மேலோனே என்பொருட்டாக இவ்விடத்தே திருமேனி கொண்டெழுந்தருளி வேண்டின வரந்தருவானென்று கண்களில் நின்றும் உண்டாகா நின்ற பெரும்புனல் உண்மையான ஆற்றங்கால்போல நீண்டொழியாமற் செல்லும் பத்திமையால் பூமியதிர ஏகாங்கமாக நமஸ்கரிக்க ஈசுவரியுடனே மறைந்தருளின சிவன் சிதம்பரத்திலே யெழுந்தருளின பின்பு பண்ணும் பாடலும் பொருந்த வியாக்கிரபாதனென்கிற திருநாமத்தைப் பூதகணத்தார் கூறினார்கள்.- எ-று. (2-20)

பாரிடம் பூலோகத்தாரெனினுமமையும்.

அறுகாலெழுகால்பிறகாமடுவுற் றமையாநியதிச்சமைவாதரியா, 
மறைகாதலினாலறைவானறவார் மந்தாரமரும்புசெருந்திகிரா,
நிறைபாதிரிகோங்குயர்சண்பகமே நீர்வாழ்மலாவல்லிகொணீண்மலர்கொண்,
டிறையானடியேமுறையால்வழிபட் டெண்ணார்தருகாலமிருந்தனனே.

இ-ள்: வண்டிகளெழுவதற்கு முன்னே பொய்கையினிடத்துச் சேர்ந்து முடியா நியதிமுடித்து அன்புடனே வேதங்களைப் பத்தியினா லுச்சரித்துச் சென்று பற்றியேற நகமும் பார்த்தெடுக்க விழியுங் கைகால்களிற் பெற்றலமையால் கோட்டுப்பூக் கொடிப்பூ நீர்ப்பூவிங் குற்றமறத் தெரிந்தெடுத்துக் கொண்டு நல்லதம்பிரானார் திருவடியிலே விதிப்படி யருச்சித்து எண்ணிறந்த காலமிருந்தனர் - எ-று. (2-21)

நற்றந்தைபுலிச்சரணங்கரநீ ணயனங்கள்பரித்தமைகாணநயந்
துற்றங்கெதிர்சென்றுவணங்கமகிழ்ந் தொளிர்மேனியின்வாய்மையுவந்துடனே,
பொற்றண்மலர்வாவிபடிந்திறையைப் பூசித்தருண்மேவுபுலீவச்சரமும், 
பற்றும்பெருமானையுமர்ச்சனைசெய்பயில்வாரவிருந்துபரிந்தொருநாள்.

இ-ள்: நல்லபிதாவாகிய மத்தியந்தின முனிவர் நம்முடையபுத்திரன் புலிக்காலுங் கையும் அவைகளில் கண்களும் பெற்றனனென்று சந்தோஷப்பட்டுக் காணும்படிக்கு வந்தவருக்கெதிரே சின்று பொருந்தி நமஸ்கரித்த வளவிலே வியாக்கிரபாதமான தேசோன்மயமாகிய சத்தி சரீரத்தை இன்புறக்கண்டு மகிழ்ந்து அப்பொழுதே பொன்மையுங் குளிர்ச்சியுமுள்ள மலர்கள் பொருந்திய சிவகங்கையிலே மூழ்கி ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானாரைரையும் நாடோறும் பூசை செய்து வியாக்கிரபாதருடைய பன்னசாலையிலேயிருந்து குமாரனுடைய சரீரத்தைக் கண்டு பிரியப்பட்டு ஒருநாளொரு வர்த்தை சொல்லுவார்.- எ-று. (2-22)

நற்பான்மிகுதந்தையரும்புதல்வர்நஞ்சந்ததியுய்ந்திடநண்ணினையே, 
லிற்பாலினியாகுதியாதிமறித் திடுவானுடை யானெடுவானடைவான், 
முற்பாலுனையானெனநீபெறுமா முனியாதுகொளென்றுவசிட்டமுனிக், 
கற்பார்தருபின்னியைமன்னுமணக் கடனாலுடனா நெறிகண்டனனே.

இ-ள்: நல்ல பகுதி மிக்க பிதாவானவர் யான் பெறுவதற்கரிய புதல்வனே நம்முடையசந்ததி தழைத்தோங்கப் பொருந்துவையாகில் இல்லறத்தின் பகுதிக்கு இனியொன்றுசொல்லக்கேள் பிதிர்களு மெதிர்கொள்ளும் சங்கிராந்தி காலத்தில் தருப்பணம் பிண்டோத நக்கிரியை முதலாகப் பண்ணுகின்றவனாகிய புத்திரனையுடையவனே பிதிர் லோகத்தை யடைவனென்று வேதஞ் சொல்லுகையால் முன்னம் உன்னை யான் புத்திரனாகப் பெற்றதுபோல நீயும் ஒரு புத்திரனைப்பெற வெறுத்து விடாமல் விவாகஞ் செய்து கொள்ளென்று சம்மதிக்கப் பண்ணி வசிட்டமாமுனி தங்கையான கற்பு மிகுங் கன்னியைபபேசிப் பொருத்த நிமித்தம் பார்த்து ௦# விரத சமாவர்த்தனம் பாணிக் கிரகணம் கர்பாதானம்-பும்ஸவனம்-சீமந்தம்-சாதகன்மாந்தமாகச் செய்வித்துப்போனார். (2-23)
-------------------
# விரதசமாவர்த்தநம்-என்பது முகூர்த்தத்திற்குமுன் செய்கிற சடங்கு.

பின்பக்கொடிமன்னுபமன்னியனைப் பெறவந்தவருந்ததிகொண்டுபெயர்ந், 
தின்பச்சுரபிப்பொழிபானுகர்வித் தெழிலாரவளர்த்திடுநாளிவர்தா,
மன்பிற்புணரக்கொணர்வித்துமகிழ்ந்தயிலென்றிடு முன்பயிலும்படிசேர், 
புன்பற்கமர்பண்டமுமுண்டறிபால்போலுய்த்தனவும்புகாதிகழ்வான்.

இ-ள். சிறிது காலத்துக்குப்பின் வியாக்கிரபாதருடைய தேவியார் திடசித்தனான உபமன்னிய பகவானைப்பெற சாதகன்மத்துக்கு வந்த அருந்ததியார் அந்தக் குழந்தையைத் தம்முடைய ஆச்சிரமத்துக்குக் கொண்டுபோய் இனிய காமதேனு சுரந்தபால் ஊட்டி அழகுபெற வளர்க்கு நாளில் வியாக்கிரபாதருந் தேவியாரும் புத்திர வாஞ்சையாலே தங்கள் பன்னசாலையிலே கொண்டுவரச் செய்து ஆசையுடனே உண்ணென்று முன்னேயிடப்பட்ட பாகஞ்செய்து சிறிய பல்லுக்கு மெத்தென்ற பதார்த்தமும் முன்னே புசித்தறிந்த பால்போலக் கற்பித்ததிர வியங்களையும் புசியாமலுமிழ்ந்து போடுவார் - எ-று. (2-24)

மணமேதகுபால்பெறுமாறழமா மகனார்முனியாம்வறியோமறியோ, 
முணவேயினிதாமவைதாமிவர்கா ணுடையாரெனவாழ்வுடையானெதிரே,
துணர்மேலெழுவெங்கன்றங்கிநடுத்துஞ்சுந்தொழிறஞ்செனநைஞ்சழுதக்,
கணமேயிறையானிறைபாலலையுங்கடல்பெற் றதுகண்டுகளித்திடுவான். 

இ-ள். திவ்விய பரிமளமிகுந்த காமதேனுவின் பாலைக்கருதி உபமன்னிய பகவானழ வியாக்கிரபாதமுனி யாங்கள் தரித்திர்கள் பாலும் பழமு மினிய பதார்த்தமுஞ் சொப்பனத்திலு மறியோம் புசிப்புக்கினிய பதார்த்தங்களை மிகுதியாகவுடையவர் இவர்தானென்று அழியாத சம்பத்துள்ள ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானார் சந்நிதியிலே வளரும்படிவிட சிகை விட்டெழுகின்ற ஜாடராக்கினியைப் பொருந்தி மத்தியிலிரறக்கும் செய்கை பொருந்த அழவுஞ் சீவனற்று அப்பொழுதே தம்பிரானார் திருவருளினாலே மிகுந்த அலை பொருந்தின திருப்பாற்கடல் வரப்பெற்றுப் பானம் பண்ணினதைருஷிகண்டுகொண்டு களித்தாடினார் - எ-று. (2-25)

ஆளும்பெருமானெதிரங்கொருநா ளலர்பங்கயவாதனமாயமரத்,
தாறொன்றுதலஞ்சகனந்தவிரச் சடரந்தொடர்மார்பெதிர் தள்ளவிழத்,
தோளங்கைபொரக்களமேனிமிரச்சுரிதந்தநிரைப்பிரியந்தரநா,
வாளொன்றுவிழிக்கடைதுண்டம்விடாவண்ணந்தகுதிண்ணியமாமுனியே.

இ-ள். ஒருநாள் தன்னையாண்டு கொண்டருளிய தம்பிரானார் சந்நிதியிலே பத்மாசனம் பொருந்த ஒருதாள் பூமியையும் **சகநத்தையும் பொருந்தாமல் வயிறு தொடர்ந்து மார்பை யெதிரே தள்ள இரண்டு தோளுந்தாழக் கையிரண்டும் புட்பம் போலக் கழுத்து மேனோக்கியுயரக் கீழ்வாய்மேல் வட்டப்பட்ட பல்லுக்கு நடுவே நாவை வைத்து ஒளிபொருந்தின விழிகளை மூக்கு நுனியிலே வைத்திருந்து நாலு வன்னத்திலே மேலான திடசித்தத்தையுடைய பிரமருஷி - எ-று. (2-26)
-----------------
** சகநமென்பது - புருஷ்டபாகம்.

சீரார்சிவயோகமகம்புணரச் செறியின்புணரக்குறியின்புறுமா
றேரார்தருதாருவனத்திடையாறெண்ணாயிரமாமுனிவர்க்கிறைவ
னோராதவர்மோகமொழித்தருளாலொருநாணடமாடலுகந்தனனென்
றாராவுணர்வாலறிவுற்றயராவந்தோவெனநொந்தயர்கின்றனனே.

இ-ள். அட்ட ஐசுவரியத்துக்கு மேலான சிவயோகமானது ஆன்ம சைதன்னியத்தைப் பொருந்த விளைந்த சுகானுபவத்தினாலே பார்த்தவிடக் குறியிலே பிரியா வதிசயமாக அழகு விளங்கின தேவதாருகா வனத்தில் நாற்பத்தெண்ணாயிர மகாருஷிகளுக்குத் தன்னையுணராதவருடைய மோகங்களையு நீக்கி யொருநாள் தேசோரூபமாக நிருத்தஞ் செய்யப் பொருந்தினனெனு மிதனைச் சிறிதறிவினாலே கண்ட மாத்திரத்திலே அயர்ந்து அந்தோவெனநொந்து வியாகுலத் தழுந்தினார் - எ-று. (2-27)

நன்மேனிகொடெந்தைபிரான்வெளியேநடமாடியநல்லிடமாயிடநா,
முன்னேயமராவகைமாமுனிவன்மூலப்பதிசேரமொழிந்தனனற், 
றன்னேருறுதாளருணாமுணரத் தகுமோமிகுமன்பகமோவிலதா, 
லென்னேபெருமானொருமானுடன்வந்தெங்கேபரதந்தருமென்றயர்வான்.

இ-ள். எம்முடைய தம்பிரானார் தேசோரூபியா யிருடிகள் யாவருங்காண நிருத்தஞ் செய்தருளிய தேவதாருவனம் நமக்குச் சிவபூசை பண்ணி யிருக்குமிடமாகக் கற்பியாமல் நம்முடைய பிதாவாகிய மத்தியந்தினமுனி ஸ்ரீமூலத்தானத்திலே சிவபூசை பண்ணி யிருவென்று கற்பித்தனர் தனக்குத்தானே ஒப்பாகிய ஸ்ரீபாதத்தினுண்மைப் பற்றுச் சற்றுமிலாத யாமுமறியுந் தகுதியோ உள்ளத்தில் மெய்யன்பு இல்லை எப்படியோ தம்பிரானார் ஈஸ்வரியுடனே யெழுந்தருளி நமக்கெவ்விடத்தே நிருத்தந் தரிசிப்பித்தருளுவாரென்று சோர்வார் - எ-று.

பின்புதெளிந்து சிதம்பரஸ்தலமே நிருத்தத்தைதருமென்கிறார். (2-28)

அத்தன்பரதத்டுவனித்தநடத்தமரும் பொதுவின்பெயர்மன்றமலம்
சத்தும்பரிரண்மயகோசமகந்தனிபுண்டரிகங்குகைவண்ககனஞ்
சுத்தம்பரமற்புதமெய்ப்பதமச்சுழுனாவழிஞானசுகோதயநற்
சித்தம்பரமுத்திபரப்பிரமந்திகழுஞ்சபைசத்திசிவாலயமே.

இ-ள், செகற்பிதாவாய்த் தத்துவாதீதனாய் நித்தனாயிருக்கிற சிவபெருமான் அநவரத தாண்டவம் பொருந்தின இந்தப்பொதுவின் பெயர் சர்வான் மாக்களுக்கும் பொதுவாய்ச் சங்கார வழக்கறுக்கிற அம்பலமாதலால் அநாதியே பரசாசுவதமாதலால் பெத்த முத்தியிரண்டிது நீங்காமல் உயிர்க்குயிராய் நீங்காமல் நிற்கிற சற்காரியமாதலால் மேலான பொருளாதலால் களங்கமற்ற கனகமயரூபமென்று வேதஞ் சொல்லுதலால் தன்னைத்தானே யறிந்திருக்குமாதலால் சுத்த கேவலமாதலால் பூமிக்கு இருதயக் கமலமாதலால் யாவர்க்கும் புகலிடமாதலால் – சுத்தபரமாகாசமாதலால் - சாக்கிராதீதங்கழன்ற சுத்தமாதலால் பரஞானமாதலால் காணுந்தோறுங் காணுந்தோறும் புதுமையாயிருத்தலால் சத்திய ஞானசொருபமாயிருத்தலால் சுழுமுனா மார்க்கத்திலெழுந்திருக்கிற பிரகாசமான ஞானமாதலால் தன்னைத் தரிசித்தவர்களுக்கு ஞானாநந்தத்தைத் தோற்றுவிக்கும் பொருளாதலால் பசுபாச ஞான நீக்கி யிருத்தலால் சர்வத்துக்குமிடங் கொடுத்திருத்தலால் பதமுத்திகளைக் கைவிட்ட விடமாதலால் பிரம சொரூபமான மகாமாயைக்கு மேலாதலால் எப்பொழுது மெல்லாப் பாதத்திலும் விளங்கும் ஞானமாகிய சபையாதலால் சிவசத்தி சொரூபமாதலால் ஆநந்த நிருத்தத்துக்கு அதிட்டானமுமாய் ஆலயமுமாதலால்,

என்றின்னமனேகமனேகமெடாவோரார்பொதுவின்பெயராரணநூ, 
னின்றென்றுமியம்பிடுமின்னுமிதினேரேயெனவிங்காரேயறிவா,
ரன்றந்நிலையத்தலைவன்னிலைகண்டவருண்டெனவின்றுணர்கின்றனமான்,
மன்றந்தெரியத்தருமென்றருளால்வளர்சிந்தைதெளிந்தனன்மாமுனியே.

இ-ள். என்று இப்படியே யின்னம்பல நாமங்களை யழகுவிளங்கும் பொதுவின் பெயராகக் கற்பித்து வேதாகம சாத்திரங்களிடை விடாமனின் றெக்காலமுங் கோஷியா நிற்கும் இந்தச் சிதம்பரத்தினுண்மையை யின்னதென்றள விட்டியார் தானறிவார் முற்காலத்திலே நிருத்த மூர்த்தியினுடைய சத்தியத்தைத் தரிசித்தவர்களுண்டென்று ஆகமப் பிரமாணத்திலேயின்று கண்டறிந்தோமாதலால் சிதம்பரந்தானே தரிசிப்பிக்குமென்று திருவருளினாலே தெளிந்தார் - எ-று. (2-30)

 

வியாக்கிரபாதச் சருக்கம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம் - 58 
-------------------


3. பதஞ்சலிச்சருக்கம் - (59-157)


இந்தவகைவளர்புலிக்காலெழின்முனிவன்றெளிந்தெந்தை
யந்தமிலாவாநந்த நிருத்தமளித்தருளென்று
பந்தமறப்பணிந்திருப்பப் பரவுபதஞ்சலியவன்பால்
வந்தபடியிருந்தபடிபோனபடி வகுத்துரைப்பாம்.

இ-ள். ஞானஞேயங்களுக்குப் பிறிவில்லாமையால் ஞானந்தானே ஞேயத்தைத் தரிசிப்பிக்குமென் றறிந்த வகையினாலே பெரிய தேசையுடைய வியாக்கிரபாத முனி சித்தந் தெளிந்து சுவாமியே முடிவில்லா வாநந்த நிருத்த முந்தரிசிப்பித் தருளுவாயாக வென்றுஅதுக்குவிலக் காயிருக்கும் பந்தபாச நீங்கச் சிவார்ச்சனை பண்ணியிருப்ப யாவரும் பரவும் பதஞ்சலிபோபலத்தினாலே வியாக்கிர பாதரருகேவந்தபடி நெடுநாள் தவசு பண்ணி யிருந்தபடி எமக்குத் தெரிந்த மரியாதைகூறு படுத்திச் சொல்லுவாம் - எ-று. (3-1)

பரந்தபெரும்பாற்கடலிற் பள்ளிகொள்வானொழிந்தொருநா
ளருந்தவமாரனந்தன்மிசை யரியசங்கரவென்று
கரங்கள்சிரமிசைமுகிழ்ப்பக் கணணருவிசொரியநிமிர்ந்
திருந்தனன்முன்சலியாத வெழுதுமணிவிளக்கென்ன.

இ-ள். அகன்று விசாலமாகிய பெரிய திருப்பாற்கடலிற் பெருந்தவமிக்க நாக சயனத்திற் பள்ளிகொள்ளுஞ் செய்கையை யொழிந்தொரு நாள் மகா விஷ்ணுவானவர் அரகர சங்கரவென் றுச்சரித்துக் கைகளானவை தலைமேலே யேறிக்குவியா நிற்பக் கண்களருவிபாய வாயுமுன் சலியாத சித்திர தீபம்போலப் பத்மாசனம் விளங்க இருந்தார்--- எ-று. (3-2)

திருமகளுமணுகாது திகைத்தயரத்திரந்துபணி
பரிசனமுமிகநடுங்கப் பராநந்தபராயணனாய்ப்
பொருவிலனுபவநீங்கிப் புவிமிடைந்ததிருளெனவந்
திருபரிதியெழுகிரிபோ லிருகண்மலர்தரவிருந்தான்.

இ-ள். இப்பரிசுகண்ட மகாலட்சுமியும் அணுகப் பயப்பட்டுத் திகைத்து நிற்பக் குற்றந் தீர்ந்த அடிமையானசேடனும் மற்றப் பரிசனங்களும் நம்பால் அபராத முண்டோவென்று மிகவும் நடுங்கப் பரமானந்தத்திலே பரவசராய் ஒப்பில்லாத சிவானுபவ நீங்கிப் பூமியில் அந்தகார மேலிட்டதென்ன இரண்டாதித்தர் கூடிவந்து திக்கும் உதய பருப்பதம்போல விழி மலர்ந்திருந்தார். எ-று. (3.3)

புண்டரிகவிழிமலர்ந்து புணரமளிகழிந்துபுனல்
கொண்டுநியதிகண்முடித்துக் குலவியமண்டபமேறித்
தண்டரளமணிப்பந்தர்த் தமனியப்பூந்தவிசின்மிசை
யண்டர்தொழவந்திருந்தா னாநந்தவனந்தலுடன்.

இ-ள்: செந்தாமரைக் கண்விழித்து நித்திரை பொருந்தின நாக சயன நீங்கி சுத்தசலங் கொண்டனுட்டானம் பண்ணி முடித்து நவரத்தினப் பிரகாசம் பரந்த மண்டபத்திலேறிக் குளிர்ந்த முத்தின்பந்தற்கீழிட்ட பொலிவினையுடைய பொற்சிங்காசனத்தின் மேலே பிரமாதி தேவர்கள்வந்து நமஸ்கரிக்கச் சுக நித்திரையுடனே சாக்கிரங் கலந்திருந்தார் - எ-று ( 3-4)

தாழ்ந்தமடையுடைபுனல்போற் றம்பிரானடங்கருதி
யாழ்ந்தவினைவழிமாற்றி யாநந்தபரவசனாய்
வாழ்ந்தளவில்பேரின்ப வாரிவழியேயொழுகி
வீழ்ந்தகருத்தினைமீட்டு மேட்டுமடைப்புலமேற்றான்.

இ-ள்: பள்ளமடையை யெடுத்தோடுஞ்சலம்போல் பரமசிவம் தாருகா வனத்தில் நடித்தருளிய நிருத்த நந்தத்தில் கருத்தைச் செலுத்தித்தாம் முன்பழுந்துந் துன்பக்குழியை மாற்றி ஒழியாத சுகபரவசராய் வாழ்ந்து அளவில்லாத ஞானங்களிலே கருத்தேறினார். - எ-று. (3-5)

தெள்ளுமனந்தெளிபொழுதிற் திருந்தநந்தனடிவணங்கி
வள்ளலேயடியேனா மலரமளிமிசைமுன்போற்
பள்ளிகொள்ளாதுணராதிப் பரிசிருந்தபடியடியேற்
கிள்ளபடியருள்செய்ய வேண்டுமெனவுரைசெய்தான்,.

இ-ள்: கலங்கின மனந்தெளிந்து வடய ஞானத்திலே யுறைந்தனவில் கிரகிரத்தியனாயிருக்கிற சேடனமஸ்கரித்து அபீஷடவரதனே அடியேனாகிய விரிந்தவமளிதனில் முன்புபோலப் பள்ளி கொள்ளாமலும் உணராமலும் இப்படி யொரு பிரகாரத்திலே யெழுந்தருளியிருந்தபடி அடியேனுக்குச் சத்தியமாக அருளிச் செய்ய வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்தான்.-எ- று. (3.6) 

ஆங்கவனுநகைத்தருள்கூர்ந் தநந்தனிருவலர்கமலப்
பூங்குழலுமிருவென்று புகன்றெனையாளுடைப்புனிதன்
றாங்கரியபெருங்கருணைத் தன்மையினாலெனக்களித்த
வோங்குதிருவருள்கேட்கி லுலவாதென்றுரைசெய்தான்.

இ-ள் அவ்விடத்து மகாவிட்டுணு நகைத்தருளி அதிக பிரியத்துடனே சேடனையும் பெரிய தாமரையிலிருக்குந் திருமகளையும் நோக்கியிருங்களென் றருளிச்செய்து என்னையாண்டுகொண்ட இயற்கையான சுத்தன் என்னாற் பெறுதற்கரிதாகிய பெரிய காருண்யத்தினியற்கையாலே எனக்குப் பிரசாதித்த மேலான அனுக்கிரகத்தை உள்ளபடி நீங்கள் கேட்கவென்னில் ஒருகாலத்திலு முடியாதென்றார்.- எ-று. (3-7)

மன்னுமொளிவளர்பொருவில் வடகயிலைமலைமருந்தைச்
சென்னியுறத்தொழநென்னற் றிருந்துதிருமுகமதனா
லென்னைவரவழைத்தருளி நகைத்தருள்கூர்ந்தென்கைமிசைத்
தன்னிகரில்கரமூன்றி யெழுந்திருந்தான்றனித்துணைவன்

இ-ள் வைகுந்தத்துக்கும் மநோவதிக்கும் நடுவாய் நிலைபெற்ற சோதிரூபமாயுயர்ந்த ஒப்பில்லாத உத்தர கயிலாசமலையில் சூக்மாவேஷ்டையான மருந்தை நேற்றியான்சென்று சிரசார வணங்கின மாத்திரத்திலே உயிர்களுக்குத் தோன்றாத்துணையாகிய அந்தப்பரமேசுவரர் பிரசன்னம் பொருந்தின திருமுகத்தினாலே என்னைத் தம்மருகே வரவழைத்தருளநகைத்து அருள் கூர்ந்து பவிஷயக்கிருத்தியத்தை நினைந்து அபயாஸ்தங்கொடுத்து என்கையின்மேலே தம்மொப்பில்லாத ஸ்ரீயத்தத்தையூன்றி யெழுந்தருளினார்-எ-று (3-8)

எழுந்தபொழுதொளிர்சங்கமெம்மருங்குமிகமுழங்கத்
தழங்குமருமறைபரவத்தாவில்கணம்புடைசூழச்
செழுந்தவர்கண்மிடைந்தேத்தத்தேவரணிதொழத்திங்கட்
கொழுந்தணியும்பெருமான்ககுலகிரியினடியணைந்தான்.

இ-ள் வீரசிங்காதனத்தில் நின்றும் இழிந்தெழுந்தருளினபொழுது பானுகம்பனால் ஊதப்படாநின்ற பிரகாசம் பொருந்திய சங்குகள் எத்திக்குஞ் செவிடுபட முழங்கவும் ஒலிக்கா நின்ற வேதங்கள் பரவுதல் செய்யவும் குற்றமிலாத கணநாதர்கள் சூழ்ந்து சேவிக்கவும் வளவிய நித்தியவனுட்டான தருப்பணரான தபோதனர் நெருங்கித் துதிக்கவும் தேவர்கள் கூட்டந்தொழவும் அர்த்தசந்திர சடாதரனாகிய எம்பெருமான் அந்தக்கயிலாயத்தின் அடிவாரத்தை யணைந்தார்- எ-று. (3-9)

மேயதொருமண்டபத்துவிரைந்தணைந்துதாருவனத்
தூயவருமுனிவருளஞ்சோதிப்போநமக்கிசைய
நீயரிவையுருவாகிநிலவுகெனவருள்செய்து
நாயகனுந்திருமேனிநயங்கிளரவலங்கரித்தான்.

இ-ள் அவ்விடத்துத் திருவுள்ளத்துக்குப் பொருந்தின தோரேகாந்த மண்டபத்தில் துரிதத்திலெழுந்தருளி தேவதாருவனத்திற் பரிசுத்தராயிருக்கிற நாற்பத்தெண்ணாயிரம் ருஷிகளான பெரியோருடைய சித்தபாகம் பரீட்சிப்போம் நாம் கொண்ட வேடத்துக்குப் பொருந்த நீயும் ஸ்திரீ ரூபத்தைக்கொண்டு நம்முடனே கூட வருவாயாக வென்றெனக்கருளிச்செய்து ஆத்தும நாயகனுந் தம்முடையதிருமேனி யழகுவிளங்க அலங்கரித்துக்கொண்டார்- அஃதெங்ஙனமென்னில்.(3-10)

திருவடியின்மிதியடியுந்திகழுடைவெண்கோவணமேன்
மருவரையும்புரிநூலும்வலஞ்சுழியுந்தியுமார்பு
மொருவரையுமிருவரையும்புரையாதவுயர்தோளும்
பரவருநற்பொக்கணமுந்தமருகமும்பலிக்கலனும்

இ-ள் ஸ்ரீபாதத்திலேமிதித் தருளின மிதியடியும் விளங்கப்பட்ட திருவுடையாடையும் உட்சாத்தும் இதுகள் பொருந்திய திருவரையும் முப்புரியான திருஎஞ்ஞோவீதமும் வலமாகச் சுழித்த திருவுந்தியும் திருமார்பும் அதிற்சா முத்திரிகா லக்ஷணம் பொருந்தின ஏகரேகையும் உதயாஸ்தமனமென்னும் இரண்டு பருவதங்களும் ஒவ்வாத உயர்ந்த திருத்தோள்களும் யாவர்க்கும் பரவுதற்கரிதாகிய நல்ல விபூதிப்பையும், தமருகமும் பிக்ஷா பாத்திரமும்- எ-று. (3-11)

சீராருந்திருமிடறுஞ்செங்கனிவாய்ப்புன்சிரிப்பு
மேராரும்வார்காதுமிலகுவிழித்தொழினயப்பும்
வேராருந்திருநுதற்கீழ்விருப்புருவத்திருப்புருவந்
தாராநிற்குங்கமலத்தனிமலர்போற்றிருமுகமும்.

இ-ள் சிறப்பு நிறைந்த நீலமணிபோல் விளங்கின கண்டமும் செய்ய கனிவாயிற் றோன்றுகின்ற சிறுமூரலும் அழகு நிறைந்தவார் காதும் ஒளி சிறந்த திருஷ்டியின் தொழில் நயமும் வேர்வு நிறைந்த திருநெற்றியிற் கீழாக விருப்பமே வடிவாயிருக்கிற திருப்புருவத்தைத் தன்னிடத்திலே தோற்றுவிக்கும் மலர்ந்ததொரு செங்கமலம் போன்ற திருமுகமண்டலமும்-எ-று (3-12)

பொட்டுமலிதிருநுதலும்புரிந்துமுரிந்திசைந்தசைந்த
மட்டுமலிகருங்குழலும்வளர்பவளவொளிமழுங்க
விட்டுவிளங்கியவெழிலார்மேனியுமாய்மெல்லியலார்
பட்டுவிழும்படியில்விழும்படியழகின்படிவமென

இ-ள் அகலிய பொட்டுப்பொருந்தின திருநெற்றியும், நெறித்துச்சுருண்டு தன்னிலொத்து அலைந்த மணமிகுத்திருக்கிற கரிய திருக்கேசமும் பவள வொளியுங்கருகச் செவ்வொளிவிட்டு விளங்கின அழகு நிறைந்த திருமேனி யுடையதுமாகிய இவ்வடிவைக்கண்டு மாதர்கள் மோகப்பட்டு விழுந்தன்மைபோல ஆடவர்களும் விழும்படி அழகின் உருவம்போல-எ-று (3-13)

மன்னனெதிருறுமளவில்வளரிருடாரகைகுழறிற்
றென்னமலர்மயிர்சொருகியிலகநுதற்றிலகமுகம்
பன்னரியதுகிலுடுத்துப்படர்தானைபின்போக்கித்
தன்னிகரிறலைமுலைமேற்றனிக்காறைதனிழற்றுவக்கி

இ-ள் என் சுவாமியான தேவராசனெனக்கெதிர்ப் படுமளவில் (யான் வடிவுகொண்ட தெவ்வண்ணமெனில்) நீண்டகங்குலுடனே நக்ஷத்திரங்கள் சலந்தாற்போல அகத்திலே பலமலருங்கலந்து திருகிமுடித்து அளகம் பிரகாசிக்கவும் நெற்றியிலிட்ட சிறு பொட்டினாலே மிக சோபையுண்டாகவும் விலையிடுதற்கரிய பட்டு வத்திரத்தை யுடுத்து அதன் முந்தானையை ஏகாசமாகப் போட்டு இந்த முந்தானையை வலக்கைக்குள்ளாலே வாங்கி முலை மீதணிந்த பதக்கத்தின்மேலே பிணித்துவைத்து -எ-று (3-14)

மாமணிநற்பாடகமுமலிவித்தோர்வல்லியெனப்
பூமலிசெங்கரத்துடனப்புண்ணியனேர்புணர்பொழுதிற்
காமனெழிலழித்தவனுங்காமுறுவோனெனவெனது
தீமைவிழிக்கடைநோக்கிச்சிறுமுறுவலிறைசெய்தான்.

இ-ள் பெரிய நவரத்தினப் பாடகமும் அழகுபெற மிகவணிந்து பூத்ததொருவல்லி சாதக் கொம்புபோலக் கையிலேயொரு பூங்கொத்தை மிகப்பிடித்துத் தருமமூர்த்தியான ஸ்ரீகண்ட பரமீசுரன் சந்நதியிலேசென்று பொருந்தின வளவிலே காமனழகை யெரித்த அந்தக் கடவுளும் காமவிருப்பங் கொண்டவன்போலே எனது கொலைத் தொழில் பொருந்தின பார்வையை மோகத்துடனே பார்த்து மந்தகாசமுஞ் சற்றே பண்ணினார் -எ-று (3-15)

அவ்வரையிலிமயமயிலமர்ந்திருப்பவகிலத்துப்
பொய்விரவாமுனிவரிவன்புகழியக்கனெனவுணரச்
செவ்வரைமேனியினடியேன்சேயிழையாய்ப்பின்செல்லச்
சைவமுனிவர்களிருக்குந்தாருவனமதுசார்ந்தான்

இ-ள் அந்தக் கயிலாசத்தில் ஈசுவரி தனித்தெழுந்தருளி யிருக்க உலகவாசனை யற்ற இருடிகள் இவன் கீர்த்திபொருந்தின இயக்கனாக வேண்டுமென்று யோசிக்கச் செம்பவளக்குன்று போலுந் திருமேனியுடையவர் அடிமையாகிய யான் ஸ்திரீயாகப் பின்செல்லச் சிவபத்தரான இருடிகள் தபசு பண்ணிக்கொண்டிருக்கிற தேவ தாருவனத்தை யணிகினார்-எ-று (3-16)

சென்றுமுனிவர்களிருக்குந்தெருத்தலைச்சேரியிற்சிறிந்து
முன்றிலிடைத்துடிமுழக்கிமுறுவன்மிகமுகமலர்த்தித்
துன்றுபலிகொணர்ந்தணையுஞ்சுரிகுழலாரெழினோக்கி
யன்றிறைவனின்றுபுரியபிநயமாயிரகோடி

இ-ள் ஆச்சிரமமளவாக எழுந்தருளி இருடிகளிருக்குந் தெருவில் முந்தின பன்னசாலையிலே புகுந்து நடுமுற்றத்திலே நின்று தமருகத்தை முழக்கி முகத்தினிடத்தி லொளிவிளங்க நகைத்தருளிக் கைநிறையப் பிக்ஷை கொண்டு வந்து அருகே நிற்கும் இருஷிபத்தினிகளுடைய அழகைக்கண்டு அப்போது தன்னுடைய வினோதத்தினாலே பண்ணின வபிநயம் ஆயிரகோடியாம்-எ-று (3-17) 

எண்ணரியவபிநயங்களிறைபுரியநிறைகற்பிற்
பண்ணமருமொழிமுனிவர்பார்ப்பனிகள்பலரீண்டி
நண்ணருநாண்மடமச்சம்பயிர்ப்பென்னுமிவைநழுவக்
கண்ணுதலோனிருமருங்குமொன்றாகக்கைக்கொண்டார்.

இ-ள் சுவாமியானவர் எண்ணிறந்த அபிநயங்களைப் பண்ண நிறைந்த கற்பும் இசைக்கொப்பான மொழியுமுடைய இருஷிபத்தினிகள் பலர் கூடிக் கிட்டுதற்கரிய இயல்பான நாணம், கொளுத்தக்கொண்டு கொண்டது விடாத மடப்பம் பேதைமையால் அச்சம் பயிலாதபொருளி லருவருப்பான பயிர்ப்பு என்னும் நாலுங் கைநழுவ விட்டுப் பாலலோசனனிரண்டு புறமுமொன்றாக வளைந்து கொண்டார்கள்-- எ-று. (3-18)

சாயவார்குழலொருகைகலையொருகையுறத்தாங்கிப்
பாயவாள்விழியருவிபரவசராயெதிர்பயில்வார்
தூயவாய்த்திருவாயிற்றுலங்குநகையெனமொழிவா
ராயவாவினியெம்மையணைந்தரளாயெனவயர்வார்

இ-ள். நீளியகுழல் சரியுஅதனை யொருகையினாலும் வீழும் மேகலையை யொருகையினாலும் இறுகப் பிடித்துக்கொண்டு வாளையொத்த கண்களில் நின்றும் அருவிபாய மோக வசத்தராகி கைஞ்ஞெகிழ எதிர்சென்று பொருந்துவார் சிலர், திருவாயினிடத்து நகையானது சுத்தமாய் விளங்குகின்றது என்பார்கள் சிலர், எங்களுக்கிசைந்தவனே மால் கொண்ட எம்மை இப்போது தழுவிக் கொண்டருளென்று மோகித்து விழுவார் சிலர்--- எ-று. (3-19)

ஐயமிடவென்றுகடிதரிசுகொடுபுறப்பட்டுக்
கையமரவமுதாக்கிக்கலத்திடுவார்நிலத்திடுவார்
கொய்யுமலரிலையுடனேகுவித்தகரத்துடன்கொணர்ந்து
நையுமடகெனவிடுவார்நாமுய்ந்தோமெனநவில்வார்

இ-ள். பிக்ஷையிடவேண்டுமென்று கடுக அரிசியள்ளிக்கொண்டு புறப்பட்டு மேலிட்ட காமாக்கினியாலும் விகாரவியர் வினாலுங் கையே பாத்திரமாக அதை அமுது சமைத்துப் பிக்ஷாபாத்திரத்தி லிடுமாறுபோலக் கண்ணும் மனமும் வேற்று விகாரப் படுகையால் நிலத்திடுவார் சிலர், ஸ்ரீபாதத்திலே அர்ச்சிக்கவெடுத்த பத்திர புட்பங்களை அஞ்சலியத்தத்துடனே கொண்டுவந்து மயங்கிப் பிட்சா பாத்திரத்திலே நன்றாக வெந்தசாதம் போலாக அதனை இடுவார்கள் சிலர் இப்படி வடிவுமிகுந்ததொரு நாயகனைப்பெற்றோ மாதலால் நாமே பிழைத்தோமென்பார்சிலர்-- எ-று. (3-20)

முன்பிச்சைவரைக்கண்டமுகமென்பார்முயங்கிரதி
மன் * பிச்சைவனப்பகழிமாரிசொரிந்திடுமென்பார்
பின்பிச்சைகொண்டுவரப்பெரும்பிச்சையளித்தகல்வா
ரென்பிச்சைகெடவுருகவெமக்கிரங்காரெனவயர்வார்

இ-ள். இந்த மகேஸ்வரரைப் பார்க்குமிடத்து முன்பு புகண்ட முகச்சாயலா யிருக்கின்றது என்பார் சிலர், பொருந்தப்பட்ட இரதிமணவாளனாகிய மன்மதன் தூணியில் நின்றும் அம்புகளை ஒவ்வொன்றாக வாங்கி சரவருஷமாக வருஷித்திடு மென்பார் சிலர் பின்னே யொரு பிடிப் பிச்சை கொண்டுவர எமக்குத் தாங்கரிய பித்தைத் தந்த கலப்பொம்இவர் என்புமிச்சையுங் கெடும்படி நாம் வருந்தவும் நமக்கு இரங்கியருளார் என்று சிலர்சொல்லுவார்கள். எ-று ( 3-21)
----------------------------*
* பிச்சு-ஐவனப்பகழிஎன்பதற்கு காமவெறியைத்தருகின்ற பஞ்சபாணங்களெனவும் ஒருபொருள்கொள்க.


நில்லுமினவளைதாருநீரென்றுதகைந்தொன்று
சொல்லிவிடுமெனவணைவார்துணைகொண்மணிமுலைகாட்டி
யில்லுமிதுவெனமொழிவாரெவ்விடமுமிடமென்பார்
புல்லியிடுமெல்லையுடன்போதுதுநாமெனப்புகல்வார்.

இ-ள் நீரிவ்விடத்திலே நில்லும் போவீராகி லெம்முடைய வளயலைத்தந்து போமென்று தடுத்துச் சம்மதியில்லாமையைச் சொல்லி விடுமென்று தொடர்வார்கள் சிலர், தம்மிலொத்து முத்துவடம் பொருந்தும் ஸ்தனங்கள் தோன்றநின்று எம்முடையமனையுமிது தூரமில்லையென மொழிவார்கள் சிலர், உமக்குப் பொருத்தமானவிடமே யெமக்கும் பொருத்தமான விடமென்பார்கள்
சிலர், நீர் சேரவேண்டுமென்று நினைத்திருக்கிற யிடத்தளவும் நாங்கள் வருகிறோமென்று சொல்லுவார்கள் சிலர்-எ-ற (3-22)

ஐயமுளதிலதிடையென்றறிவிப்பாரெனநிற்பா
ரையமுளதிலதுயிர்வந்தணைந்துகொளென்பவர்போல்வா
ரையமனாமெனக்கணைகொண்டநங்கனடர்ந்தலையாமை
யையமனாவெமைநோக்கியஞ்சலெனாயெனவயர்வார்

இ-ள் பிச்சையுண்டு இடையில்லையென்று அறிவிப்பாரைப்போல எதிரே வந்து நிற்பார் சிலர், எமதுடலில் உயிர் வாழ்க்கையுண்டு அது இல்லையென்கிற சந்தேகம் இல்லையாம்படி வந்தணைந்து பிழைப்பித்துக் கொள்ளென்பவரை யொப்பார் சிலர், ஐந்தியமன்போலப் பஞ்ச பாணங்களைக் கொண்டு காமராசன் மேலிட்டுப் பொருதாமல் தேவதேவனே பயப்படாதிருங்களென்று அருளிச் செய்யாமலிருக்கின்றீரென்று அயர்வார் சிலர்.- எ-று. (3-23)

ஆடுவாராடாதவபிநயங்கள்பலபுரிவா
ரோடுவாரோடாமோவுண்கலனிங்குமக்கென்பார்
கூடுவார்கூடாதகுழலலையக்குழன்மொழியாற்
பாடுவார்பாடாகமேல்விழுவார்பலராகி

இ-ள் (விஷய ஆநந்தக்கடல் மேலிட்டு) ஆடுவார்சிலர், உலகத்தில் நடவாத சேட்டா விதங்களைப் பலவாகப் பண்ணுவார்சிலர் (பலமுறை திரும்பிப் பார்க்கின்றாரென்று விரைந்து) ஓடுவார் சிலர், தலையோடாமோ உமக்குப் பிக்ஷா பாத்திரமென்பார்சிலர், பின்னும் சமீபத்திற் செல்லுவார்கள், வாரி முடிக்கக்கூடாத மயிரலையைக் குழலிசை போன்ற மொழியாற் பாடுவார்கள் சிலர், பலர்கூடித் தாங்கள் கொண்ட கோட்பாடு பொருந்தத் திருமேனியின் மேல் விழுவார்கள். (3-24)

பேதையர்கண்முதலாகப்பேரிளம்பெண்மையர்முடிவா
மாதரவரிருமருங்குமறுகுமறுகிடைநெருங்கி
யோதமெழுந்தெனநிலவுமொலியுயர்வானுறநகைத்து
நாதனெழுந்தருளவயனானணைந்தபடிநவிலவேன்.

இ-ள் பேதை பெதும்பை மங்கை மடந்தை அரிவைதெரிவை பேரிளம் பெண் என ஏழுவகைப் பருவமுள்ள மாதர்களி யாவரும் இரண்டுபக்கமும் மயங்குகிற நடுத்தெருவில் சத்த சமுத்திரமும் ஒன்றாய்க் கூடிச் சத்தித் தெழுந்ததுபோல ஒலிக்கும் ஓசை யண்டகோளகையைக் கடந்தப் பாலுஞ்செல்ல நகைத்தருளித் தம்பிரனார் மற்றொரு வீதியில் எழுந்தருள அவ்விடத்தி யான்சென்று பொருந்திச் செய்த பிரகாரஞ் சொல்லுவேன்-எ-று (3-25)

கற்புடையமடந்தையெனக்கருதரிதாய்க்கண்டவர்கள்
பொற்புடையபொதுமகளாப்புகல்வரிதாம்பொலிவினதா
யற்புதமாய்ச்சிவந்துநிமிர்ந்தகன்றவயில்விழிக்கண்கள்
விற்புருவத்துடன்முனிவர்விழியிலக்காவிடுமளவில்

இ-ள் உடையினாலும் நடையினாலும் கையிற்பிடித்த பூவினாலும் குல ஸ்திரீயென்று கருதக் கூடாமையாய்ப் பார்த்தவர்களுக்கு நாயகன் பின்னே நிழல் போலப் புறவடி பார்த்து நடக்கையால் அழகிய வேசிகளாகச் சொல்ல வொணாணாத தன்மையுமாயிருக்கின்ற கபட வேஷத்தைத் தரித்து ஆச்சரியத்தை யுடைத்தாய்ச் செவ்வரி பரந்து நீண்டு விசாலம் பொருந்திய கண்களாகிய கூர்மையுள்ள அம்பினைப் புருவமாகிய வில்லிலே தொடுத்து என்னைப்பார்த்த விருடிகள் கண்களே குறியாகவிட்ட மாத்திரத்திலே - எறு (3-26)

எண்ணரியதிறலினர்களிடுநூலேகுறியாகத்
திண்ணியநெஞ்சவைகுலையச்சிகையவிழவுடைநழுவப்
பண்ணலருமபிநயங்கள்பலபுரிந்துபரவசரா
யண்ணலெதிரேனைநோக்கியாதரித்தாரருமுனிவர்

இ-ள் மட்டிடவொண்ணாத ஞான வீரமிகுந்த முனிவர்கள் உபவீதமொன்றுமே அடையாளமாகத் திடச் சித்தங்கலங்கக் குடுமி குலைய உடுத்த மரவுரிகள் நழுவிவிழ வேறொருவர் பண்ணுதற்கரிய பல சிங்காரச் சேட்டைகளைப் பண்ணிக் காமமோகராய் என்னுடைய நாயகன் சந்நிதியிலே என்னைக்கண்டு மகாவிருடிகள் ஆசைப்பட்டார்கள்-எ-று (3-27)

எவராலுமென்னாலுமெய்தரியானேய்வுற்றுத்
தவராசிலிடங்கடொறுந்தாவில்பலிகொளநடந்தான்
சிவராகமடைவோரிற்சேயிழையாமெனநோக்கு
பவராகாரபராதபரம்பரையோராயினார்.

இ-ள் பிரமாதிகளாலும் என்னாலுஞ் சொப்பனத்திலுங் காண்பதற்கரியான் சுவேச்சையினாலே இயக்கவுருவத்தைக் கொண்டு மகாவிருடிகளுடைய குற்றமற்ற பன்னசாலை கடோறுஞ் சுத்தான பிச்சை கொள்வதற்கு நடந்தான் அந்தச் சிவத்தின் உண்மையை அறிந்து அன்புவைப்பவர்கள்போல் என் சொரூபத்தை எண்ணி யறியாமல் இவளொரு ஸ்திரீயென்றுகருதி விகாரங்கொண்ட முனிவர்கள் சோட்டைகளடைவே பண்ணி அபராதத்துக்குப் பழை யோராயினார்கள்-எ-று (3-28)

கோவமிகுமுதுமுனிவரொன்றாகக்குழுமியெழுந்
தாவதெனாமிவனிந்தவாச்சிரமத்தஞ்சாதே
காவன்மிகுங்கற்பழித்தகாபாலியெனக்கனன்று
தாவமிகும்படிபரவாச்சாபங்கள்பலவிட்டார்

இ-ள். இப்படியே ஆசாரவீனம் வரக்கண்டு கோபமிகுத்த விருத்தரான ருஷிகளெல்லாருங்கூடி வெட்கங்கொண்டு இப்படி வரலாமோவென்று எப்படிப்பட்ட அசுராகளி ராக்கதர் சித்த வித்தியாதரர்களாலும் அண்டொணாத சிவார்ச்சனை மிகுந்தநம்முடைய் வாச்சிரமத்தில் பயப்படாமல் இந்தக்கபாலி வந்து பதிவிர்தா பாவத்தை குலைத்தானென்று குரோதனராய் அக்கணத்திலே கோபமிகும்படி பூலோகத்திலே நடவாத எண்ணிறந்த சாபங்கள் அதியுக்கிரமாக இட்டார்கள் - எ-று. (3-29)

இட்டபலசாபங்களிறைவனயன்மேவாது
கெட்டபடிகண்டுசினங்கெடாதமனத்தினராகி
நட்டமளித்தருளென்றுதகைவார்போலெதிரநண்ணிச்
சிட்டமலிதருகுண்டந்திருமுன்னேதிகழ்வித்தார்

இ-ள். தாங்கள் சபித்த வெகுவித சாபங்களுந் தம்பிரானாரருகே செல்லாமல் வியாத்தமானது கண்டு மனத்தி லாறாதகோபத்தை யுடையவர்களாகி தேவரீரெங்களுக்கு ஆநந்த நிருத்தந் தெரிசிப்பித்தருளுமென்று தகையுவவர் போலே யெதிர்ப்பட்டு சுவாமிக்கு முன்னே பெருமை மிகுத்த குண்டத்தைச் சமைத்தார்கள்-எ.று. (3-30)

எஞ்சாதவழலிருத்தியெடுத்துமனுக்கணித்தோதி
நஞ்சானதிரவியங்கணாடியவைபலகோலி
நெஞ்சாலுநினைவரியநிருமலனேயிலக்காக
வஞ்சாதேயவிசாரமவிசாரத்தமைந்தார்கள்

இ-ள். அந்தக்குண்டத்தில் குறைவுபடாத அக்கினியைத்தாபித்து மந்திரம் உச்சரித்து அந்த யாகத்துக்குரிய விஷத்திர வியங்களை விசாரித்து அவை மிகுதியாகக் கொண்டு மனத்துக்கும் எட்டாத பரமசிவமே யிலட்சியமாகப் பயப்படாமல் விசார ஈனத்தினாலே அவிசார ஓமத்தைப்பண்ணினார்கள்-எ-று. விஷத்திரவியங்களாவன - எட்டி முதலியனவாம். (3-31)

கருத்தின்விழிசிவந்தமுனிக்கணத்திலுதிப்பித்த
வெரித்ததிருமுழுவையைநேரேவுதலுமெந்தைபிரான்
சிரித்தருளியதுபிடித்துத்திருகரத்தினகநுதியா
லுரித்தவுரிபசும்பட்டாவுடைதொடைமேலுறவுடுத்தான்

இ-ள். தெளிவுள்ள மனத்தினும் மிகச்சிவந்த கண்களையுடைய தாருகாவனத் திருடிகள் க்ஷணமாத்திரையில் அவிசார வோமத்திற பிறப்பித்த கோபித்துக் கெர்ச்சிக்கா நின்ற வியாக்கிரத்தைத் தம்பிரானார் முன்னே விடுதலும் எந்தைபிரானார் திருப்புன் முறுவல்செய்து எதிர்த்த அந்தப்புலியைப் பிடித்துத் திருக்கரத்தினுனி நகத்தாலே யுரித்துத் தோலைச் செவ்விய பட்டுவத்திரம் போலத் தொடையளவும் பொருந்த உடுத்தருளினார்--- எ-று. (3-32)

ஏரடங்கு குண்டத்தி னெரிவயிற்றிற் பிறந்தெழுந்த
பாரிடங்க ளாரிடமாம் பரிசனமா யினபயிலச்
சீரடைந்த மணிமுச்சிச் செய்யவிழி வெள்ளெயிற்றுக்
கார்விடங்கொ ளொருபுயங்கங் கடிதுவரக் கைக்கொண்டான்.

இ-ள். அழகு செறிந்த குண்டத்திலிட்ட அவிசாரவோமத் தீயினிடத்தில் உற்பத்தியான அனந்தபூதங்கள் ஏகாங்கியாயிருக்கிற தம்பிரானார்க்கு முனிவர்கள் வரக்காட்டின ஊழியக்காரரைப்போலப் பணிவிடைசெய்ய ஒளிமிகுத்த இரத்தினச் சுடிகையுஞ் சிவந்த விழியுமுடைய வெள்ளெயிற்றிற் கறுத்த விடம்பொருந்தின தொருபாம்பும் விரைவுடன்வர அதனை இடக் கரத்திலே முன்கைக் கடகமாக அணிந்துகொண்டார் -- எ-று. (3-33)

மைவிஞ்சு நெடுந்தடித்தின் வார்குழல்வார் சடையாகத்
தெவ்வன்ப ரெதிரிரண்டு திருக்கரங்க ளுருத்தெழமுற்
கைவந்த நிலியமலர்க் கால்வந்து கலந்திசைப்பப்
பவ்வங்கொண் முழுநஞ்சு நுதல்விழியும் பாரித்தான்

இ-ள். அந்தகாரத்தை நீக்கி மேலிட்ட நெடிய மின்னல்களைப்போலே முந்தி நீண்ட கரிய குழலானதே நீண்ட சடையாகவும், அஞ்ஞானத்திலே மாற்றாரான பத்தர்களாகிய அந்த இருடிகள் முன்னே முந்தின திருக்கரங்களுமன்றி இரண்டு திருக்கரங்களுண்டாகித் தோன்றவும், முன்னே திடமான தாண்டவம் செங்கமலம் போன்ற ஸ்ரீபாதத்திற் கூடிப்பொருந்தவும், திருப்பாற் கடலிலே தோன்றின குறைவற்ற விஷத்தைக் கண்டத்திலும் நெற்றியிலே கண்ணையும் வெளிப்படக் காட்டினார்-- எ-று. (3-34)

ஏய்ந்தவனன் முன்னுகர்ந்த விருளுமிழ்வ தெனவெரிவாய்ப்
போந்ததிரு மெரிமுச்சிப் பொறிவிழிவெண் பறகுறளன்
சீந்தரவத் துடனரவந் திகழவர வரனெதிரே
பாய்ந்தருளி வெரிநெரியும் படியடிமேற் பயில்வித்தான்

இ-ள். பொருந்தின அக்கினியானது இதற்குமுன் விழுங்கின இருளை இப்போது உமிழ்ந்தாற்போல குண்டத்தினக்கினியில்நின்றும் புறப்பட்டுப் பயங்கரமான ஆர்ப்பரவத்தையும் எரிகின்ற குஞ்சியையும் தீப்பொறி சிந்தும் விழிகளையும் வெண்மையுடைய பற்களையும் வாமன ரூபத்தையுமுடைய முயல்கள் சீந்தும் பாம்பைக் கையிலே கொண்டு கெர்ச்சித்து மிகவதிர்ந்து வரக்கண்டு தம்பிரானார் விரைவிலே யெதிர்ப்பட்டருளி முயல்கன் கீழ்ப்படப் பாய்ந்து அவன் முதுகு நெரியும்படி ஸ்ரீபதத்திலே மிதிதிதருளினார்---எ-று.(3-35)

மலங்கவெரி தரவேந்தி மந்திரங்கள் வரக்கரத்தா
லலம்புசிலம் பணியாகத் திருவடியி லமரவித்துத்
துலங்குபல சடைதாழத் துணங்கைகணந் துதைவிப்ப
வலங்கலணி தடந்தோளா னருநடமா டுதல்புரிந்தான்

இ-ள் அந்தமுனிவர்களேவின யாவும் தளர்ந்தபின் அக்கினிதன்னை வரவி- அந்த அக்கினியைத் திருக்கரத்திலேந்தியருளி உச்சாடனமான மந்திரங்கள் ஆகரிஷண கற்பனையால்வர அதை ஓசையுள்ள அழகிய திருச்சிலம்புக்குத் தரிசுமாக ஸ்ரீபாதத்திற் கரத்தாற்சாத்தி மின்போலத் துலங்கும் பலசடை தாழ்ந்தலையக் கணநாதர்கள் துணங்கைக் கூத்தை மிகச்செய்யக் கொன்றை மாலையை யணிந்த பெரிய தோளையுடையவர் அரிய நடனஞ்செய்ய விரும்பினார்-எ-று
தரிசுஎன்பது-சிலம்புக்குள்போடுஞ்சிறுபரல். (3-36)

தாகத்தா லலைந்துமிகத் தளர்ந்துதவ வலிசலித்த
மோகத்தா லிழந்தனலு மந்திரமும் விடமுடிந்த
சோகத்தா னிராயுதராய்த் துளங்குநட மிறைதொடங்கும்
வேகத்தா லருமுனிவ ரொன்றாக வீழ்ந்தார்கள்

இ-ள் ஒமாக்கினியுட்டினத்தாலுண்டாகிய தாகத்தினால்வாடி தபோபலங் குறைந்த மயக்கத்தினாலே மிகத் தளர்ந்து தங்கள் செயலற்று அக்கினியையும் மந்திரத்தையும் ஏவ அவைகள் பொன்விதனத்தினாலே தங்களுக்குரிய கருவியின்றிப் பயங்கரமான நடனத்தைத் தம்பிரானார் செய்யத் தொடங்குற வேகத்தினாலே பெரிய முனிவர்களெல்லாரும் *வியாமோகதராய் விழுந்தார்கள்- எ-று. (3-37)
----------------------
* வியாமோகமென்பது -ஆச்சரியத்தால் மோகித்தல்.

நடமுயலும் பொழுதஞ்சி நடுநடுங்கி நானயரக
கடகமென விடதரத்தைக் கட்டியவங் கைகவித்த
விடையில்விடை யுடனெடுவா னெய்தியிடத் தணைந்தகுல
மடவரலை மகிழ்ந்தவண்மேன் மலர்ந்தகடைக் கண்வைத்தான்.

இ-ள் அந்த நிருத்தவேகம் பொறுக்க மாட்டாமல் பயப்பட்டு நடுநடுங்கியானு மூர்ச்சிதனாகக்கண்டு சர்ப்பக்கடக தாரிதமான அழகிய திருக்கரத்தாலே யென்னை அஞ்சாதே யென்றமைத் தருளின அவதரத்தில் இடப வாகனத்துடன் ஆகாச மார்க்கத்தில் வந்து இடப்பக்கத்திலே பொருந்தின பார்வதியார் மீது பிரியப்பட்டு அவர்மேலே இடத்திருக்கைக்கண் வைத்தருளினார். (3-38

வேறு

அரிவை யணைந்தபி னெங்கணு மலர்மழை யண்டா பொழிந்தனர்
பிரம புரந்தரா வந்தனை பெருகினர் முன்புற வின்புறு
முருவ மொழிந்திக ழென்பழை யுடலது கொண்டு பணிந்தெதிர்
மரிவ நடுங்கியொ ருங்குதன் மலைமகள் கண்டு மகிழ்ந்தனள்.

இ-ள். பரமேசுவரி யெழுந்தருளினபின்பு தேவர்களெங்கும் புட்பவருஷம் வருஷித்தார்கள். பிரமேந்திராதியர்கள் அஷ்டாங்க பஞ்சாங்கங்களினாலே சந்நிதியிலே வந்தனையை வெகுவிதமாகப் பண்ணினார்கள். இருஷிகளின்புறும் மோகினி வேடத்தை நீங்கி அடியாரிகழுமென்னுடைய பழைய மாயா சரீரத்தைக் கொண்டு சர்வேசுரனைப் பணிந்து முன்புபோல கூசாமலெதிரே நிற்கப் பயப்பட்டுப் (பிரமேந்திராதிகளுக்குப் பின்னே) யொளித்து நிற்கிறதைக்கண்டு பரமேசுவரி மிகவு மகிழ்ந்தருளினார். -எ-று (3-39)

விரவிய வங்கண னெங்கணும் விரிசடை மண்டி யலைந்திட
வெரிவிரி செங்கை சுழன்றிட விடிதுடி கொண்டிட வெண்டிசை
பரிபுர புண்டரி கந்தகு பதயுக ளம்பல ருந்தொழ
வருள்புரி யெந்தை மடந்தையு மதிர நடங்க டொடங்கினன்.

இ-ள் நிருத்தத்தொழில் பொருந்தின பரமேசுவரன் விரிந்தசடை திக்கெங்கு மசையவும் சுவாலாக்கினியை ஏந்தின கரம் கொள்ளிவட்டம்போலே சுழன்றிடவும் எட்டுத்திக்கிலுமுள்ள யிடியோசையைத் துடியோசை கொள்ளவும் சிலம்பணிந்த செங்கமலம் போன்ற இரண்டு திருவடிகளையும் யாவருந் தொழவும் கிருபாகரராயிருக்கிற தம்பிரானார் பரமேசுவரியும் நடுங்க வெகுவிதமான நிருத்தத்துள் பயங்கர நிருத்தத்தைத் தொடங்கினார்-எ-று (3-40)

கரண மனந்த முயன்றொலி கலவு சிலம்பணி குஞ்சித
சரண மிலங்க வலம்புரி தருகர மும்பொலி வுந்தகு
திரணகின் மங்கை நெடுங்கய றிருநய னங்கள் செறிந்திடு
புரணமு மொன்றிய வென்றிகொள் பொருவில் புயங்க முயங்கினன்.

இ-ள் திருவிளையாட்டினால்அநந்தமான கரணங்களை நடித்து ஓசை பொருந்தின சிலம்பணிந்த குஞ்சித பாதங்கள் விளங்க சாமுத்திரிய இலக்கணத்திலுத்தமமான வலம்புரிச்சங்க ரேகைபொருந்திய செங்கையும் அழகும் இணையொத்துத் திரண்டதனமுமுள்ள பார்வதிதேவியின் கயனெடுங்கண்ணும் எந்தை திருநயங்கள் பொருந்தின பார்வையும் அதிலொருப்பட்ட மனமும் மனதொத்த பாவமும் பாவமொத்த ரசமும் பொருந்தின பாசத்தைத் தள்ளின சுத்த நிருத்தமான ஒப்பில்லாத புயங்ககரணத்தைப் பொருந்தினார்-எ-று

புனித புயங்க முயங்கிய பொழுத வனுந்த னடந்தரு
மினிமை நுகர்ந்த மடந்தையு மெழில்விடை யும்பெறு கென்றரு
ணனிமிக வென்கணு மங்கண னகைதர வுய்ந்து வணங்கினன்
மனமுரு கும்படி யன்புடன் வளர்விழி யின்பு வழங்கினன்.

இ-ள் சுத்தமாகிய நடனஞ்செய்யத் தொடங்கினபொழுது தம்பிரானாரும்
தம்முடைய நிருத்தத்திலுண்டான இன்பத்தை யனுபவித்த பரமேசுவரியை
அழகிய விடபவாகனமேற்கொள்ளென்று அருளி அருளுடனே மிகுதியாகத் தம்பிரானார் என்னைப்பார்த்து நகைத்தருள அப்போது கிருதார்த்தனாகி நான் வந்தனைசெய்தேன கல்லொத்த நெஞ்சுஞ் கரையும்படி பத்திமி குருஞானப் பார்வையைப் பிரசாதித்தருளினார் - எ - று.(3-42)

அயருமருந்தவர்தம்பழி யகலநினைந்தருளங்கண
சயசயசங்கரவென்றெதிர் தரையில்விழுந்துபணிந்தனர் 
நயநடனுந்தகுமங்கவர் நவையெவையுந்தொகவந்திருண்
முயலகனொன்றுகவென்றதன் முதுகதிரும்படிநின்றனன்.

இ- ள். மோகித்துக்கிடக்கிற அரிய தவத்தையுடைய விருடிகள் தம்பிரானார் ஞானக்கண்ணைக் கொடுத்தபின் கிருபாகரனே எங்கள் குற்றம் பொறுத்த ருள் சய சயசங்கரனேயென்று சந்நிதியிலேயே காங்கமாகப் பூமியில் விழுந்து நமஸ்கரித்தார்கள். அனுக்கிரக நிருத்த மூர்த்தியு மிரட்சிக்கத்தக்க அந்த விருடிகளை வியாபரித்த ஆணவசத்திகளெல்லாங் கூடிவந்து ஆணவமூலமாயிருக்கிற முயலகனைப் பொருந்துகவென்று ஆய்கஞாபித்து அதனுடைய (சத்திபொருந்தின) முதுகு நெரியும்படி மிதித்து நின்றருளினார் - எ - று (3-43)

பண்டையவிருள்பறியும்படி பங்கயபதமுதவும்பொழு 
தெண்டிகழிருடிகளகண்டன ரின்புறுதிருநடமன்பொடு
கண்டனர் வெருவினர்நுண்டுளி கண்டருமருவிசொரிந்தனர் 
குண்டிகைகுசையிசைதண்டுகள் கொண்டெதிர்குணலைமலிந்தனர்.

இ-ள். அநாதியே தம்மைமறைத்த ஆணவ நீங்கும்படி தம்பிரானார் திருவடித் தாமரையை அருளின பொழுது நாற்பத்தெண்ணாயிர மிருடிகளுங் கண்டார்கள் கண்டதே தென்னில் முன்பு நடனஞ்செய்த சவுககிய நிருத்தத்தை அன்புடனே கூடிக் கண்டார்கள் மிகுந்த பயங்கொண்டவர்களாகிக் கண்களி லிருந்தும் ஆநநத பாஷ்பத்தைப் பொழிந்து கமண்டலம் தெர்ப்பைப்புல் பொருந்தின தண்டு இவைகளைக் கைக்கொண்டு சந்நிதியிலே குணலைக் கூத்தைச் செய்தார்கள் - எ-று . (3-44)

சூடினர்கரமலரஞ்சலி சூழ்வுறவமரர்துதைந்தனர்
நாடியகருவிகொடும்புரு நாரதரிசைபடியும்படி 
பாடிலர்தெளிவிலர்நின்றனா பாரிடநிலவுதுனங்கைகொ
டாடினகரணமிடுந்தொழி லாயினர்கணபரநாதர்கள்.

இ-ள். சுற்றுநெருங்கின தேவர்களஞ்சலி யத்தராய் நின்றார்கள் தும்புரு நாரதர்கள் மனந்தெளிவிலராய் எண்ணப்பட்ட வீணை வாத்தியங்கொண்டு இசைபொருந்தும்படி பாடினா்களில்லை பூதகணங்கள் பொருந்தின துணங்கைக் கூத்தாடின உறுதிகரணம் இடுந்தொழிலே யாயினரெண்ணிறந்த கணநாதர்கள் - எ-று (3-45) 

காரணமென்பது கூத்தின் விகற்பம் 

அங்கரிபிரமபுரந்தரரண்டர்கண்முனிவர்கண்டமு
மிங்கெமதினியந‌டஞ்சிவலிங்கமதிசையநினைந்தொளிர்
கொங்கலர்பலமல‌ரன்பொடுகொண்டடிவழிபடுமென்றுயர்
மங்குலினிடைவிடைதங்கியமங்கையொடிறைவன்மறைந்தனன்.

இ-ள்.(இப்படியே நிகழும் அவ்விடத்து) அரி-பிரமன்-இந்திரன்-தேவர்கள் 
இருடிகள் பூதகண முதலானோர் யாவரும் எம்முடய ஆநந்த நிருத்தத்தையிப்போது இவ்விடத்து உண்டாகிய இந்தச் சிவலிங்கத்தினிடமாகத் தியானித்து - விளங்கும் மணம் விரிந்த பல புட்பங்களாலே திரிசந்தியு நாடோறும் பூசை பண்ணிப் போற்றுங்களென்று இடபத்திலே பொருந்தின பரமேசுவரியுடனே பரமேசுவரன் பரமாகாசத்திலே மறைந்தருளினார்- எ-று. (3-46)

இறைமறைதருதிசைமுன்றெழு தெவர்களுமகல்வுழிவென்றிகொ
ளறிவுறுமொருமையனந்தநின்னமளியினெருநலமர்ந்தொளிர்
கறைவளர்மிடறனடந்தொழுகலவியினலமொடுகண்படு
முறைதருதுயரமொழிந்தனனெனமுகமலரமொழிந்தனன்.

இ-ள் பரமசிவம் மறைந்தருளின திசையை நோக்கி நமஸ்கரித்து யாவருமகன்றபின் ஞான வீரத்திலே பொருந்து மொருப்பாடுடைய ஆதிசேஷனே நீயாகிய சயனத்தில் நேற்றுப் பொருந்தி நீலவொளி விளங்கின விடத்தைத் திருமிடற்றிலுடையவனது நிருத்தந்தொழுத இன்பத்தோடே சாக்கிரம் சொப்பனஞ் சுழுத்தி துரியந் துரியாதித மென்னும் பஞ்சாவத்தையிற் படுந் துக்கத்தை நீங்கி அருளால் அமிதமாக இருந்தனன் என்று முகாரவிந்த சேவை விளங்க மகாவிஷ்ணு அருளிச் செய்தார்-எ.று. (3-47)

அண்ட‌ன‌துய‌ர்ந‌ட‌ன‌மென்றலும‌ஞ்ச‌லிசிர‌முற‌வ‌ன்பொடு
க‌ண்ட‌வ‌ரென‌மிக‌நுண்டுளிகண்‌ட‌ர‌வுருகுத‌ல்க‌ண்ட‌ரி
தொண்டினரிவர்பணியென்பணிசுந்தரனடிபணியென்பணி,
பண்டெனதணையிவரென்றுகொள்பண்பொழிவினியெனநொந்தனன்.

இ-ள். ப‌கிர‌ண்ட ‌க‌ர்த்தாவினுடைய‌ ஆந‌ந்த‌ நிருத்த‌ மென்ற ‌மாத்திர‌த்திலே ப‌த்திமிகுதியினால் அஞ்ச‌லியான‌து சிர‌முற‌ ஆந‌ந்த ‌நிருத்த‌ங்க‌ண்டு க‌ளி கூர்ந்த‌வ‌ரைப்போலே க‌ண்ணாண‌து மிக‌வுநுண்டுளித் தாரைகொள்ள‌ ம‌ன‌து நீராளமா யுருகிப் புள‌க‌த்துட‌னே நின்ற‌ ப‌ர‌வ‌ச‌த்தை ம‌காவிஷ்ணு க‌ண்டு இவர் த‌ம்பிரானார்க்குரிய‌ தொண்ட‌ர் இவ‌ர்க்குப் ப‌ணியேதென்னில் எலும்பு மாலை ய‌ணிந்த‌ ப‌ர‌ம‌சிவ‌த்தின் திருவ‌டித் தொண்டாகும் என்ப‌ணியோவெனில் இன்று முத‌ல் இவ‌ரென‌க்குப் பாய‌லென்னும் புத்தியை யொழித்த‌லென்று சொன்ன ‌மாத்திர‌த்திலே சேட‌ன் மிக‌வும் வித‌ன‌ப்ப‌ட்டான்.- எ-று. (3-48) 

இனிய‌ணையென‌ந‌னிதுஞ்சுத‌லிசைவில‌தென‌துள‌நின்ப‌ணி
த‌ந‌ய‌னைமுய‌ல‌மொழிந்துயாத‌வ‌முய‌ல்வ‌துத‌குமென்ற‌லு
மனமிகவுருகியனந்தனும்வரதனதினியநடந்தொழு
துனைவினிதெனினுமகன்றிடுதொழினினைவரிதெனநொந்தனன்.

இ-ள் நீசயனமாயிருக்க நான் அந்த சயனத்தில் நித்திரை செய்ய என் மனதிற் பொருத்தமில்லை உன் பணியான பாயற்றொழில் செய்ய உன் பிள்ளையைக் கற்பித்து நீ மேலான தவங்களிலே முயலுகிறதே யுனக்குறுதியென்று மகாவிஷ்ணு சொல்லச் சேடனெஞ்சங் கரைந்து நெக்குருகி அபீஷ்ட வரதனுடைய இனிய நிருத்தஞ் சீக்கிரத்திலே தொழுமருட்பாடே மிகவு மினிதெனினுந் தேவரீர நீங்கும் வகை நினைக்கவும் போகாதென்று விதனப் பட்டான்- எ-று. (3-49)

மாதவன்மிகவுமகிழ்ந்திறைவாழ்வடகயிலைமருங்குற
நிதவமுயல்கயல்கொண்டகணேரிழையதிபனும்வந்துநி
னாதரவமரவரம்பலவாசறவருடருமென்றபி
னேதமில்பொருவிலனந்தனுமேசறுமரியையிறைஞ்சினன்.

இ-ள் சேடனுடைய அடிமைத்திறத்துக்குப் புருடோத்தமன் மிகவும் பிரியப்பட்டு ஸ்ரீகண்டபரமேசுரன் வாழ்ந்தெழுந்தருளுயிருக்கும் உத்தர கைலாய பாரிசத்திலே நீபோய்த் தவசு பண்ணு அங்கயற்கண்ணுமாபதியும் உன்னுடைய தபத்தலத்திலே யெழுந்தருளி உன்ஆசை தீர வேண்டின வரமெல்லாந்தந்து மலத்திரைய முநீக்கி அருளுண்டாக்குமென்று மகாவிஷ்ணு உபதேசித்தபின்பு குற்றமும் ஒப்புமில்லாத சேடனுங் குற்றமற்ற மகாவிஷ்ணுவை நமஸ்கரித்தான் -எ-று 

குற்றமில்லாத மகாவிஷ்ணுவென்றது தம்பிரானார் ஸ்ரீயத்தம்பற்றின பரிக்கிரகசத்தியாய் ஞானதிருஷ்டிபெற்றதனா லெனக்கொள்க. (3-50)

விரவரியருள்கொடனந்தனும்விரைவொடுதகவிடைகொண்டபின்
மருவருதலைவன்மகிழ்ந்துறைவளர்வடகயிலைமருங்குற
விரிபணமணிவெயில்சிந்திடவிரிவிழிகதிரைவிழுங்கிட
வெரியெரிதிசைதொறுமண்டிடவிகழ்வறுதவமதிசைந்தனன்.

இ-ள் தன்னை நீங்காத மகாவிஷ்ணுவினனுமதியுடனே சேடனும் சடுதியிலே தவம் பொருந்த விடைகொண்டபின்பு கனவிலுந் தேவர்க்குங்கிட்டு தற்கரியவனாகிய அரிபிரமாதிகளுக்குந் தலைவன் வாழ்ந்தருளியிருக்கிற உயர்ந்த உத்தர கயிலாய பாரிசத்திலே மகாவிஷ்ணு சொன்னவிடத்திலே வந்து அக்கினி கற்பித்து அகன்ற படங்களிலிருக்கிற ஆயிரமிரத்தினங்களும் ஆதித்திய கிரணங்களைத் தள்ளவும் பல்லாயிரம் விழிகள் ஆதித்தனைத் தன்னுடைய பிரகாரத்துள்ளே யடக்கவும் சுவாலிக்கிற பஞ்சாக்கினி எவ்விடத்தும் அன்னியமான திக்குகடோறும் போய் நிறையவும் பந்தபாசத்தை நீக்குகிற தபசைப் பண்ணினான்--எ-று (3-51)

வேறு

தவமிகமுயலும்போதுதன்னுயிர்ப்புமிழ்வதன்றிப்
பவனெனுமுணவுங்கொள்ளான்பலபகலகலவும்பாரான்
சிவனடிகாணுங்கண்கடிப்பியமாகுவான்போ
லுவமனில்கதிரோனுட்புக்குருகிநேரோடவைத்தான்.

இ-ள். தபசைப் பண்ணுங்காலத்தில் தன்னுடைய சுவாசமுமிரேச‌க‌ மொழிந்து பூர‌க‌ கும்ப‌ங்க‌ங்க‌ளும் ப‌ண்ணான் காற்றாகிய‌ த‌ன‌க்குரிய‌ உண‌வையுங் கொள்ளான் நெடுங்கால‌ஞ் செல்வ‌துஞ் சிந்தியான் த‌ம்பிரானார் ஸ்ரீபாத‌ங்க‌ளை இனிமேற்காண‌ப் போகிற‌ க‌ண்க‌ளைச் சுத்த‌மாக்குவான்போல‌ ஒப்பில்லாத‌ ஆதித்திய‌ ம‌ண்ட‌ல‌த்துக்குள்ளே சென்றுருகி இர‌ண்ட‌ற‌ப் ப‌ண்ணினான்- எ-று. (3-52)

இன்னவாற‌‌ருந்த‌வ‌ங்களிவ‌னியற்றிட‌ந‌ட‌ஞ்செய்
ம‌ன்ன‌ன்மாமுனிவ‌ரைப்போல்வாய்மைகள‌ள‌ப்பானாகி
முன்ன‌ய‌னாகிய‌ன்ன‌முதுகிட‌மாக‌வேறி
ய‌ன்ன‌வனெதிரேசென்றான‌வ‌னுமாத‌ர‌ங்க‌ள்செய்தான்.

இ-ள். இப்ப‌டியே ய‌திக‌க‌டூர‌மான‌ த‌ப‌சை யிவ‌ன்செய்ய‌ நிருத்த‌ கிருத்திய‌ஞ் செய்கிற‌ தேவ‌தேவ‌ன் தேவ‌தாருவ‌ன‌த்திலே இருடிகளுடைய‌ சித்த‌ சுத்த‌ம் ப‌ரீட்சிக்க ‌வ‌ந்தாற்போல‌ முந்த‌ப் பிர்மாவாகி அன்ன‌த்தின் மேற்கொண்டு சேட‌னுக்கெதிரே சென்றான் சேடனு மிந்தப் பிர்மாவைக்க‌ண்டு அங்கிகார‌ஞ் செய்தான்- எ-று. (3-53)

செய்த‌வ‌ன்ற‌ன்னைநோக்கிச்சின‌வ‌ர‌வுருவோய்செல்ல‌ன்
மெய்திக‌ழ்த‌வ‌ங்க‌ள்போதும்விர‌வுபோக‌ங்க‌ள்வீடு
பொய்த‌காவித்தைசித்திபொருந்துவ‌தொன்றெம‌க்குக்
கொய்துரைத‌ருதுமென்றுகூறினான்முனிவ‌ர்கோமான்.

இ-ள். பிர‌ம‌தேவ‌ன் த‌ப‌த்தை ப‌ண்ணுகிற‌ சேட‌னைப் பார்த்து க‌டூர‌மான‌ ச‌ர்ப்ப ‌வேட‌த்தையுடைய‌வ‌னே ச‌ரீர‌ம் வ‌ருந்த‌ப் ப‌ண்ணின‌ த‌பசு இதுவ‌ரைக்கும் போதும் பொருந்த‌ப்ப‌ட்ட‌ இந்திராதி போக‌ங்க‌ள் ந‌ம்முடைய‌ சாலோக‌ சாமீப‌சாரூப‌ சாயுச்சியாதி ப‌த‌ங்கள் அசத்தியம் பொருந்தாத வித்தைபதினாலு அட்டமாசித்தி என்னும் இவற்றில் வேண்டுவனவொன்றைத் தெரிந்தே எம்முன் சொல்லுவாயாக தருவோமென்று பிர்மா அருளிச்செய்தார்- எ-று. (3-54)

வாச‌க‌ங்கேட்ட‌ன‌ந்த‌ன்ம‌கிழ்ந்தியான்புக‌ழ்ந்த‌ழைத்த‌
தீச‌னையென்ன‌வேண்டிற்றெவ‌ர்த‌ரின‌ன்றுன‌க்குப்
பேசுகென்ற‌‌னைத்தும்வேண்டாப்பெற்றிக‌ண்ட‌ய‌னிக‌ழ்ந்திங்
கேச‌றுத‌வ‌ஞ்செய்வான்வேறென்ன‌பெற‌விய‌ம்புகென்ன‌.

இ-ள். இவ்வாறு சொன்ன பிர்மாவின் வார்த்தையைக் கேட்ட சேடன் காண விரும்பித்துதித்து யானழைத்தது பரமேசுரனை‌ அங்ங‌ன‌மிருக்க‌ நீ வ‌ந்ததே தென்ன‌ உன‌க்கு வேண்டின ‌தொன்றை யார் த‌ந்தால் ந‌ன்று அதனைச் சொல்லுவாய‌ாக‌வென வினவின யாவையும் அவனுக்கு வேண்டாத கருத்தறிந்து பிரமதேவன் அபேட்சித்து இவ்விட‌த்தில் குற்றிமில்லாத‌ த‌ப‌த்தைச் செய்யும‌து வேறினி யென்ன‌ ப‌ய‌னைப் பெற‌ச் சொல்லென்றார்- எ-று. (3-55)

முத்தியுமுடிவிலாதபோகமுநாலிரண்டாஞ்
சித்தியும்வித்தையாவுஞ்செய்வதென்றிகழ்வனத்தி
லத்தனன்றெவர்க்குநலகுமாநந்தநிருத்தங்காணும்
பித்தமேலிட்டதென்றுபேசினானேசிலர்தான்,

இ-ள் உன்னுடைய பதமுத்தியும் ஒழியாத இந்திராதி போகமும் அட்ட மாசித்தியும் வேதாதி சர்வகலையும் இவைகொண்டு செய்வதென்ன விளங்குந் தேவதாருவனத்தில் தம்பிரானாரப்போது யாவர்க்கும் அருளின ஆநந்த குற்றமில்லாத சேடன்-எ-று (3-56)

முந்தயனவனைநோக்கிமுடியநீமுடியாதொன்றைச்
சிந்தனைசெய்தபித்துத்தீர்தராதெனநகைத்தங்
கந்தமில்சுதந்தரத்தோனார்சொலவனத்திலன்று
வந்தருணடம்புரிந்தான்மதியிலாயெனவுரைத்தான்.

இ-ள் தேவருஷிகளுக்குப் பிரதானனான பிரமாசேடனைப் பார்த்து ஒரு காலுமுடியாத தொன்றை முடியவேண்டுமென்று கருதின உன்னுடைய பிராந்திஞானம் முடியப் போகிறதில்லை யென்று நகைத்தருளி அந்நாளந்த தேவதாருவனத்திலே முடிவிலாத சுதந்தர சத்திமானாயுள்ள பரமேசுரனார் யார் வேண்டவந்து அருள் நடமாடினார் புத்தியில்லாதவனே யென்றான்-எ-று (3-57)

ஆலவாயனந்தனென்று மாடுவானவனேயன்றோ
சாலவாதரித்தாற்றானே தருபவன்றாரானென்றா
லேலுமிங்கென்னவன்னத் திறையவனந்தோவந்தோ
காலமுமநேகஞ்சென்றுங் கழிந்திலதாசையென்றான்.

இ-ள் விஷமூறும் வாயினையுடைய அனந்தன் அனவரத தாண்டவஞ் செய்யுமவன் சிவனன்றோ தானே நடன தரிசனம் தந்தருளுமவன் அதனைத் தரிசிக்க வேண்டுமென்று மிகவும் விரும்பினால் தந்தருளானென்று சொன்னால் அந்த வார்த்தை பொருந்துவதோ என்றுசொல்ல அன்னவாகனனான இறைவன் விதனப்பட்டு ஐயொவையோ அனேகங் காலம் போயிருக்கையிலு மிவனாசை ஒழியவில்லை யென்றார்.-எ-று (3-58)

நொந்தபங்கயனைநோக்கி நுடங்குடலளவேயன்றோ
வந்தமில்காலஞ்சேய்த்தன் றதுவுமென்றயரக்கண்டு
மிந்தநீயிறந்தாற்பேறிங் கென்னெனவனந்தனின்றென்
சிந்தையிங்கிதுவாச்செத்துந் திருநடங்காண்பேனென்றான்.

இ-ள் இப்படி விதனப்பட்ட பிர்மாவைப்பார்த்துச் சேடன் என்னுடைய சரீரமுள்ள மட்டுமல்லவோ நீர் முடிவில்லாத காலமென்றது தூரமன்று அந்தச்சரீரமு மொழியக்கண்டு இப்படிக்கொத்த நீயிறந்தாலெந்த வுடலிலே யிங்கே நிருத்தங் காண்பாயென்ன சேடனானவனிப்போது என்னுடைய சித்தம் இந்த ஆநந்த நிருத்தத்திலே யாதலாலச் சரீரம் விட்டாலும் இந்தக் கருத்தே வித்தாக மற்றொரு சரீரமெடுத்துங் காண்பேனென்றான்-எ-று (3-59)

ஆங்கவனுறுதிகேளா வன்னமேயானாநல்கித்
தீங்கில்பங்கயனேமுன்னைத் தேவர்கண்மலர்கள்சிந்த
வோங்கிருங்கணங்கள்சூழ வொண்ணுதற்றிலகவல்லிப்
பூங்குழலுமையாள்பாகம் புரந்தரனாயிருந்தான்.

இ-ள் சேடனுடைய அலைவற்ற திடவார்த்தையைக் கேட்டு அன்னத்தை இடபமாக்கி பாசாதீதனாயுள்ள பிர்மாவே அரிபிரமாதிகள் புட்பவருஷம் வருஷிக்கவும் தேவர்களுக்கு மேலான ஏகாதசவுருர்திர கணங்கள் சூழவும் நல்ல நெற்றித் திலகத்தையுடைய ஒப்பற்ற வல்லிசாதக் கொம்பு போன்று புட்பகேசி யென்கிற திருநாமத்தையுடைய உமையவளை வாம பாகத்திலே வைத்தருளி ஸ்ரீகண்டபர மேசுவரனாகி யெழுந்தருளியிருந்தார் -எ-று (3-60)

கண்ட போதனந்தனஞ்சிக் கரசரணாதிகம்பித்
தண்டனேபோற்றியாண்டவமலனேபோற்றிதிங்கட்
டுண்டனேபோற்றிநாயேன் சொன்னவைபொறுப்பாய்போற்றி
கொண்டனேர்கண்டாபோற்றி கூத்தனேபோற்றிபோற்றி.

இ-ள் பிரமசொரூபத்தைச் சிவசொரூபமாகக் கண்ட போதுசேடன் பயப்பட்டுக் கரசரணாகதி அவயவங் கண்டுங்கி நின்று பகிரண்ட கர்த்தாவே யிரட்சி பெத்த முத்திகளிலெனக்குப் பிரணனாய நின்று ஆண்டுகொண்ட நிமலனே யிரட்சி அர்த்த சந்திரனைச் சடா மகுடத்திலே தரித்த சிவனே யிரட்சி நாயேன் புத்திபூர்வமாகச் சொன்ன பிரதியுத்தரங்களைப் பொறுத் தருளுவானே யிரட்சி காளமேகத்துக் கொத்த கண்டத்தை யுடையவனே யிரட்சி ஆடிய கூத்தனே யிரட்சி யிரட்சி-எ-று (3-61)

ஆண்டிடவேண்டிவந்தவமலனேபோற்றியென்று
மாண்டகுமனங்கரைந்துமண்மிசைவீழ்ந்திறைஞ்ச
நீண்டசெஞ்சடையானானைநோசெலவுகைத்தணைத்துக்
காண்டகுகருணைநல்கிக்கைத்தலமுடிமேல்வைத்து.

இ-ள் எனையாட் கொண்டருள நினைத்தருளி யித்தனைதூரம் எழுந்தருளின சுத்தனே யிரட்சியென்று திட சித்தம் நீராளமாயுருகிப் பூமியிலே விழுந்திறைஞ்சின வளவில் நீளிய செஞ்சடையோன் இடபத்தைச் சேடனுக் கெதிரே செல்ல வுகைத்தருளி அதன்பன் அவனை யணைத்தருளிக் காணத்தக்க பாவனா தீட்சை பண்ணி யிவனுடைய தலைமேலே ஸ்ரீயத்தம் வைத்து-எ-று

காண்டகு கருணை நல்கிக் கைத்தல முடிமேல் வைத்து என்பது பாவனா தீட்சையும் பரிச தீட்சையுமெனக் கொள்க (3-62)

இப்படித்தங்கள்செய்தாலன்றிநம்மினியகூத்து
மெய்ப்படத்தெரியாதன்று விளங்கிடக்கடவதுன்ற
னெய்ப்புறுதுயரந்தீர்கவெனவுரைத்தெம்மையுண்மை
செப்புதுமுணர்கவென்றுகூறினான்றேவதேவன்.

இ-ள் இவ்வண்ணந் திடமான தபசுகள்செய்தாலொழிய நம்முடைய ஆநந்த நிருத்தம் சத்தியமாகத் தெரியாது அந்நாள் வெளிப்படத்தோன்றக் கடவது தபசுசெய்து இளைத்த உன்னுடைய விதனத்தைத் தீர்வாயாகவென்று அருளிச்செய்து இனி நம்முடைய சத்தியத்தைச் சொல்லுவோம் அறிவாயாகவென்று தேவர்கள் தேவரருளிச் செய்தார் -எ-று

இதில் அன்று என்னுஞ் சுட்டு வருங்காலச் சுட்டெனக்கொள்க (3-63)

வையகமாயையின்கண்வினைவழிவருங்கடாதி
செய்பவனொழியத்தோன்றாச்சீலத்தவுயிர்கள்சேர்தற்
கெவ்வகையுணர்வுண்டெனனிலிலங்குமைந்தொழிலியாவு
முய்வகையாலியற்றற்கியாமுளோமெனவுரைத்து.

இ-ள் நாதாதி பிரிதிவி யந்த மானதத்துவமெல்லாஞ் சுத்தமாயை அசுத்தமாயை என்னும் இரண்டு காரணத்திலும் ஆன்மாவின் கனமசீவன மேதுவாகத் தோன்றும், அஃதெங்ஙனமெனில் குடஞ்-சால்-கரக முதலானவை நிமித்த காரணமான குலாலனை யொழிந்து உண்டாவன வல்லவென்கிற சீலத்தை ஒக்கும், கிஞ்சிக்கினனான ஆன்மா செடத்துவங்களைப் பொருந்திப் புசிக்க அறிவெப்டி யுண்டாமெனில் விளங்கிய பஞ்ச கிருத்திய பேதமெல்லாங் கன்மசாமியம் வரும்படி செய்தற்கு அநாதியே பிராணனாய நின்று நாம் நடத்து வோமென் றருளிச்செய்து - எ-று (3-64)

சகளநிடகளமெமக்குத்தஞ்சமாமேனியாநீ
யுகளமுமுணரிறசத்தியுபாதானமாகப்பாச
நிகளமதகற்றவன்பாநோநிகழுருவமொன்றொன்
றகளமாய்ஞானமேயாயகண்டமாயமாந்ததன்றே.

இ-ள் சகளநிட்களமும் நமக்குப் பரிக்கிரக ரூபமுஞ் சைவதந்திர ரூபமு மாயிருக்கும் இந்த இரண்டு ரூபங்களையும் நீயின்று விசாரிக்கில் அசுத்தமாயை சுத்தமாயைஎன்னு மிகைவளை யுபாதானமாகக் கொண்டு பாசவிலங்கை முறிக்கும்படிக்குச் சகலர் பிரளயாகலரிவர்களுடைய கனம சாமியத்திலே யிவர்களைப் போலத் தூலசூக்குமமாய் வந்து சத்திநிபாதம் பண்ணிப் பாசச்சேதம் பண்ணிச் சுத்த கேவலத்திலே கூட்டுகிற கிரியா சத்திய திட்டானமானரூபமொன்ற மற்றொன்று விஞ்ஞான கலரிற் பக்குவரில பரமுத்தறகு, நிராதிகாரமா யிரட்சிக்குமிடத்தில் கலாதீதமு மாய் ஞானமுமாய்க் கண்டிக்கப்படாத ஞா**கும் அபரமுத்தற்கு ரட்சிக்குமிடத்துச் சாதி காரண**ரூபமாயிருக்கும்- எ-று. (3-65)

இதற்குப்பிரமாணம் சிவம் சத்தி நாதம் விந்து என்கிற பிரமாணத்தையுங் கண்டுகொள்க. சகளநிட்களம் நமக்குத் தஞ்சமாமேனியென்பதற்குச் சிவசத்தி யென்பாருமுளர், கிருத்தியத்துக்குச் சுத்தமாயை அசுத்தமாயையை யதிட்டிக்கும் தொழியத்தான் செய்யாதாதலான் மறுக்கப்பட்டது. (3-65)

இருவகையிவைகடந்தவியல்புநம்மொளியாஞான
வுருவமாநந்தமானவுயிரியாம்பெயரெமக்குப்
பரபதம்பரமஞானம்பராற்பரமிலதுகாத்த
றிருமலியிச்சைசெய்திதிகழ்நடமாகுமன்றே.

இ-ள் முன்சொல்லப்பட்ட சகளம் நாலுக்கும் நிட்களம் நாலுக்குமப் பாலாகி நம்முடைய பிரகாசமான சுபாவசத்தியே நமக்குவடிவு இதற்கு ஞேயமான பிராணன்நாம் எமக்குப் பரபதம் பரமஞானம் பராற்பரமென்றுபெயர் சங்காரம் இரட்சை சிருட்டி திரோபவம் அநுக்கிரகம் என்கிற பஞ்சகிருத்தியம் நம்முடைய கூத்து.-எ-று (3-66)

ஆரணமனைத்துநாநின்றாடுதுமென்றுபோற்றுங்
காரணங்காலந்திக்குக்கருத்திடங்காணமாட்டா
சீரணிதேவதாருவுனத்திடைத்தெரியநின்று
நாரணன்முதலோர்காணநாடகநடித்தஞான்று.

இ-ள் அநந்தமான வேதங்களும் அநவரத தாண்டவம் நாம் பண்ணுவோமென்று துதியாநிற்கும் இன்ன காரணத்தினாலே யின்றும் இன்ன காலத்திலேயென்றும் இன்ன திக்கிலேயென்றும் இன்ன விடத்திலேயென்றும் அறியமாட்டா அழகு விளங்கின தேவாரு வனத்தினடுவே தெரியநின்று நாரணன் முதலோர் காண நிருத்தஞ் செய்தநாள்-எ-று (3-67)

அன்றவருனம்பொறாமையலைந்தமையறிந்துநாமும்
வென்றிகொண்டங்கணொய்தின்விட்டனமுனக்குமின்று
நின்றிடமிதுவாய்க்காட்டுநிலயமன்றதுபொறுக்கு
மன்றுளதென்றானிந்தவையகம்வாழ்வதாக.

இ-ள் அந்நாட்பெரிய தேவதாருவனம் பூமிக்கு மத்தியமல்லாத படியினாலே அசைந்த படியைக்கண்டு நாமும் வெற்றி யுடைத்தான நடங்கள் சிறிது பொழுதிற் றீர்ந்து விட்டோம் உனக்குமிப்போது இவ்விடத்திலே நின்று தெரிசிப்பிக்குங் கூத்தன்று சத்தியமான ஆநந்த நிருத்தத்துக்கு அதிட்டானமான ஞானசபை யொன்றுண்டென்றருளிச் செய்தார் இந்த வையகம் வாழ்வதாக. (3-68)

அனந்தனுந்தொழுதுபோற்றியடியனேனுய்யத்தேவ
ரினந்தருமறைகள்காணாதிலகுமன்றுலகிலுண்டாய்
நினந்தமிலருளாற்காட்டுநினைவுமுண்டாகிநீயே
வனந்தனில்வந்தாயென்றால்வாழ்ந்தனனன்றோவென்றான்.

இ-ள் சேடனும் வணங்கித் துதித்து யான் பிறவிக்கடலிலே யாழாமற் கரையேறிப் பிழைக்க அரிபிரமாதிகள் வேதங்கள் காண்பரிதாய்ப் பிரத்தியட்சம் அநுமானம் ஆகமமென்கிற பிரமாணங்களுக்கும் அப்பாலாய் எப்போதும் எல்லாப் பதார்த்தங்களிலும் விளங்கா நிற்கும் ஞானசபை இவ்வுலகத்திலே ஓரிடத்திலே யுண்டாய் தேவரீருடைய ஆதியந்தமில்லாத பூரண ஞானத்தினாலே காட்ட வேண்டுமென்கிற சுட்டறிவுமுண்டாகிச் சர்வ வியாபியாயிருக்கிற தேவரீரே ஏகதேசருமாய்ப் போக்குவரவு முடையருமாய் அத்தில்லைவனத்தில் வந்தீராகில் கிருதார்த்தனானேன் அன்றோவென்றான்- எ-று. (3-69)

வலங்கைமான் மழுவோன் போற்றும் வாளர வரசை நோக்கி
யலைந்திடும் பிண்ட மண்ட மவைசம மாத லாலே
யிலங்கைநே ரிடைபோ மற்றை யிலங்குபிங் கலையா நாடி
நலங்கிள ரிமய நேர்போ நடுவுபோஞ் சுழுனை நாடி.

இ-ள். வெற்றி பொருந்தின ஸ்ரீயத்தங்களிலே மானுமழுவுந்தரித்த பரமேசுரர்-புகழ்ந்து வினவுஞ் சேடனைப் பார்த்து தாபரமாயிரக்கிற அண்ட சிருட்டியும் சங்கமமான சரீரசிருட்டியுமொக்கு மாதலாலே சரீரத்தில் இடைநாடி யிடத்திலும் பிங்கலை நாடி வலத்திலுஞ் சுழுமுனைநாடி நடுவிலும் போமாறுபோல இந்தப்பரதகண்டத்தில் இடைநாடி யிலங்கைக்கு நேரேபோம் பிங்கலைநாடி நன்றாக வுயர்ந்த இமய பருவதத்துக்கு நேரேபோம் இந்த இரண்டு நாடிக்குநடுவே போஞ்சுழு முனைநாடி - எ-று. (3-70)

நாடரு நடுவி னாடி நலங்கிளர் தில்லை நேர்போய்க்
கூடுமங் கதனின் மூலக் குறியுள ததற்குத் தென்னர்
மாடுறு மறைகள் காணா மன்னுமம் பலமொன் றுண்டங்
காடுது மென்று மென்றா னென்னையா ளுடைய வையன்.

இ-ள் தாரணாதிகளாசை கூடாதவர்களுக்கு நாடுதற்கரிய சுழுமுனைநாடி நன்மை மிகுந்த தில்லைவனத்திற் செவ்வையே போய்க்கூடும் அந்தப் பதியில் ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானார் சுயம்புவான குறிகண்டு அந்தச் சிவலிங்கத்துக்குத் தெற்காக நாலு திக்கிலுஞ் சூழ்ந்து பொருந்தின வேதங்களுக் கெட்டாத நிலை பெற்ற அம்பலமொன்றுண்டு அவ்விடத்திலே அநவரத தாண்டவஞ் செய்வோமென்றார் என்னையாளுடைய ஐயர்-எ-று (3-71)

மற்றது சிதம்ப ரத்த வாய்மையான் மாயா நீர்மைப்
பற்றுட னழியா தென்றும் பயின்றுள துயிர்க ளெண்ணி
னற்றவஞ் செய்தா னீடு நாடரு ஞான நாட்டம்
பெற்றவர் காண்பர் காணப் பெறாதவர் பிறப்ப ரன்றே.

இ-ள். முன்சொன்ன அம்பலஞ் சத்தியமான ஞானாகாச மாதலால் நிவிர்த்தியாதி 
பஞ்சகலா சூநியம் பிறந்த மகாசங்கார காலத்தினுமழியாது ஆதியந்த சூநியமா யெக்காலமும் பொருந்தியுள்ளது சுத்தாத்துமாக்க ளெண்ணிறந்த சிவபுண்ணியத்தைச் செய்தால் முன்செய்த சிவ புண்ணியத்தினாலே கன்மசாமியம் பிறந்த அளவில் ஆசாரியனாலே சத்தி நிபாதமு மலபாகமு முண்டாகிப் பாசச்சேதம் பண்ணி யொழியாத ஞானக்கண்ணைப் பெற்றவரே அரிபிரமாதிகள் நாடுதற்கரிதான சிதம்பரத்தைக் காண்பார்கள் இப்படிக்காண ஞானதிருட்டி பெறாதவர் எண்பத்து நான்கு நூறாயிரமச்சிலும் பிறந்துழல்வர்.

மாயா நீர்மைப் பற்றென்றது மந்திரபதவன்ன புவனத்துவ கலைகள். (3-72)

நீயினிக்காளவாயுநுலவெரிகதிரார்கண்ணு
மாயிரஞ்சிரமுங்கண்டாலஞ்சிடுமகிலமுன்னே
தூயவத்திரியுந்தாரந்துலங்கநசூயைதானுஞ்
சேயெனநின்னைவேண்டித்திருந்தருந்தவம்புரிந்தார்.

இ-ள் நீயினி யோருபாயஞ் சொல்லக்கேள் நஞ்சுநிறைந்த பேழ் வாய்களும் சோமசூரியாக்கினி பிரகாசங்களிலும் மிகுந்த பிரகாசத்தையுடைய கண்களும் ஆயிரம்பணா மவுலிகளுமாயிருக்கக் கண்டால் உலகப் பிராணிகள் மிகப் பயப்படுவார்கள் நெடுநாளைக்கு முன்னே ஒருஇதியாசமுண்டு அஃதெங்ஙனமெனில் பரிசுத்தனான அத்திரியென்கிற ஓரிருடியும் அநசூயை யென்கிற பத்தினியும் பிள்ளையில்லாமல் தங்களுக்கு உன்னைப் பிள்ளையாகப் பெற வேண்டுமென்று விஷ்ணுவை நோக்கித் தவசு செய்தார்கள்- எ-று. (3-73)

அரியவர்க்குன்னையீந்தானன்றுநீபிறத்தலஞ்சி
யிருதுவாய்ப்பநிதையாய்வந்தேற்றவஞ்சலிப்பாலெய்தி
மருவுமைந்தலையோர்பாலமாசுணமாகக்கண்டு
பரிவினாற்பயத்தானீப்பப்பதஞ்சலியானபண்பால்.

இ-ள் விஷ்ணு உன்னை அவர்களுக்குப் புத்திரனாகக் கொடுத்தான் அப்போது நீ சனனமாகப் பயப்பட்டு ருதுவாய் ஸ்நானஞ்சிய்து பரிசுத்தையாய்க் கரையிலேவந்தேற்ற கையிலே வந்து நீ ஐந்துதலை பொருந்தின சிறுபாம்பாகக் கண்டு பரிவினாலும் பயத்தினாலுங் கைவிடப் பாதத்திலே விழுகையாலே பதஞ்சலியென்று பண்புபற்றிய பெயருனக்குண்டாதலால்- எ-று. (3-74)

ஆங்கதுவாகியிந்தவனந்தனாநினைவினோடும்
பாங்கினானீங்கலாகாப்பதஞ்சலியென்னுநாமந்
தாங்கிநீநாகலோகந்தகுவழிசார்கநாப்ப
ணோங்கலொன்றுளதுதென்பாலுயாபிலவழியுமுண்டால.

இ-ள் அந்தவுடலாகி இந்தச் சேஷபுத்தியுடனே சற்குணம் விடப்படாத பதஞ்சலியென்கிற நாமத்தைத் தரித்து நீ நாகலோகத்துக்குப் பொருந்தின வழியே போகக் கடவை நரகலோகத்துக்கு நடுவே யொருமலை யுண்டு அதற்குத் தென்புறமாக வுயர்ந்த பெலத்து வாரமுண்டு-எ-று (3-75)

திடமதன்முடிவுதில்லைத்திகழ்வனமாகும்வாய்தல்
விடவடபாலிலாலமென்னிழறன்னிலந்தத்
தடவரைக்கொழுந்துமூலத்தானமாங்குறியாயிந்தப
புடவியிலமராபோற்றும்பொற்பமரற்புதத்த.

இ-ள்.சத்தியமாக அந்த பிலத்துவாரத்தின் முடிவு விளங்குந் தில்லைக் காடாயிருக்கும் அந்தபெலத்து வாரத்தை நீங்கின அளவில் வடக்காக ஆல மரத்தின் குளிர்ந்தநிழலில் நாம் உனக்கு முன்னே சொன்ன பெரிய மலையின் கொழுந்து மூலத்தான லிங்க மூர்த்தியாய் இப்பூமியில் தேவர்கள் தொழும்படியான பொலிவுள்ள அற்புதத்தையு‌டையது.- எ-று. (3-76)

பூசைய‌ங்கியற்றிக்கூத்தும்புந்திசெய்தரும்புலிககா
லாசிலாமுனியிருந்தாவ‌னுட‌ன‌ம‌ர்க‌நாமு
மோசைகொள்பூச‌ம்பொன்னோடுடுறுதின‌ம்பொருந்துமுச்சி
தேசுறுந‌ட‌நீர்காண‌ச்செய்துமென்ற‌ருளிச்செய்தான்.

இ-ள். அவ்விட‌த்திலே ந‌ம்முடைய‌ நிருத்த‌ங்காண ‌வேண்டுமென்று ம‌ன‌சார ‌வேண்டிக்கொண்டு பூசைசெய்து அரிய‌ வியாக்கிர‌பாத‌னென்கிற‌ சுத்த‌ ருக்ஷி யிருக்கிறான் அவ‌னுட‌னே நீயும் போய்க் கூடுவாயாக‌ நாம் பிர‌சித்த‌மான‌ தைப்பூச‌த்தில் வியாழ‌க்கிழ‌மையுட‌னே கூடின‌ சித்த ‌யோக‌த்தில் ம‌த்தியான‌ கால‌த்திலே அவ்விட‌த்திலே பிர‌காச‌மான‌ ஆந‌ந்த ‌நிருத்த‌த்தை நீங்க‌ள் காண‌ப் ப‌ண்ணுவோ மென்ற‌‌ருளிச் செய்தார்.-ஏ-று- (3-77)

திருவ‌ருள் பெற்றும‌ற்றைத்திக‌ழ‌ன‌‌ந்த‌னும்விழுந்து
ப‌ரிவொடுப‌ணிந்தெழுந்துப‌ர‌வ‌ச‌னாகிநிற்பப்
புரிகுழ‌லுமையாளோடும்பூத‌முங்கணமும்போற்ற‌
விருவிசும்ப‌த‌னில‌விண்ணோரிறைய‌வ‌னுற‌ம‌றைந்தான்.

இ-ள். அநுக்கிர‌க‌ம் பெற்ற‌‌த‌னாலே விள‌ங்கின ‌சேட‌னும் பூமியிலே விழுந்து ப‌த்தியுட‌னே ந‌ம‌ஸ்க‌ரித்து எழுந்து ப‌ர‌வ‌ச‌னாகி நிற்ப‌ நெறித்த‌ கூந்த‌லினையுடைய‌ பார்வ‌தியாரோடு பூத‌ங்க‌ளுங் க‌ண நாத‌ர்க‌ளும் போற்ற‌ பெரிய‌ ஆகாய‌த்துக்கு ந‌டுவே தேவ‌தேவ‌னந்தர‌த்தான‌ம் ப‌ண்ணினா‌ர்-எ-று.

இதிற் பெரிய விசும்பென்றது நாலு பூதங்களுக்கும் இடங்கொடுத்து நிற்கையாலெனக் கொள்க. (3-78)

அண்ண‌லார்ம‌றைந்த‌போத‌ங்காசைநேராசையோடு
ம‌ண்ணிலேவீழ்ந்திறை‌ஞ்சிசிவான‌வ‌ன‌ருளால‌ந்தத‌
துண்ணெனுமுருவ‌நீங்கித்தொழுப‌த‌ஞ்ச‌லியாமேனித்
திண்ண‌மாரிலிங்க‌மாக‌ச்சில‌ப‌க‌ல்*சிந்தைசெய்தான்.

இ-ள்.அவ்விட‌த்தில் ப‌ர‌மேஸ்வ‌ர‌ர் ம‌றைந்த‌ அள‌வில் அத்திக்கை நோக்கி அன்புட‌ன் பூத‌ல‌த்திலே விழுந்து ப‌ணிந்து த‌ம்பிரானார் திருவ‌ருளினாலே க‌ண்டார் ப‌ய‌ப்ப‌டுகிற‌ சேட‌னுருவ‌ம் போய் க‌ண்ட‌வ‌ர்க‌ள் ந‌ம‌ஸ்க‌ரிக்கும் ப‌த‌ஞ்ச‌லி ரூப‌ம் பெற்றுச் சில‌ கால‌ம் ப‌ர‌மேஸ்வ‌ர‌ரைத் தியான‌ஞ் செய்தார் - எ-று. (3-79)

வேட்டுவ‌ற்குறித்த‌ப‌ச்சைமென்புழுப்போல‌நாத‌ன்
காட்டிய‌மேனிகொண்டுக‌ண்ட‌துதொழுதுப‌ண்டை
நாட்டெதி ரணைய வண்ண னயந்தவர் கேட்டு நாக
ரீட்டமுந் தலைவ ரானா ரியாவரு மெதிர்கொண் டார்கள்.

இ-ள். வேட்டுவனாகிய குளவியைக் குறித்திருந்த பச்சைப் புழுவானது குளவியின்மேனி கொண்டாற் போலப் பதஞ்சலி வேடத்தை நினைத்திருந்து தம்பிரானார் திருவுள்ளத்தினாலே கற்பித்த அந்த வேடத்தைக் கொண்டு தனக்குப் பதஞ்சலி வேஷமாகக் கண்டு இந்த சரீரத்தைக் கூட்டின அருளைத் தொழுது பழைய நாகலோகத்துக்குச் சமீபமாகச் சென்று பொருந்த நம்முடையிராசர் வந்தாரென்ற பிரிய வார்த்தையைக்கேட்டு வாசுகி தக்கன் கார்க்கோடன் பதுமன் மகாபதுமன் சங்கபாலன் குளிகன் அநந்தன் முதலான நாக ராசாக்களுமெதிர் கொண்டார்கள்--- எ-று.(3-80)

மண்டிவந் தெதிர்கொண் டார்க்கு மாசுண வரசர் சூழ
வண்டர்தம் பெருமா னல்கு மருவரை யமலன் மேனி
கண்டுவந் திறைஞ்ச நின்ற கார்க்கோடன் முதலோர் போற்றி
விண்டுநீ பணிவா னென்கொல் வேண்டிய தென்று ரைத்தார்

இ-ள். நெருங்கிவந் தெதிர்கொண்டு முழங்கப் பிரிய வார்த்தைகள் சொல்லுஞ் சர்ப்ப ராசாக்கள் சூழவந்து தேவதேவனருளிச் செய்த பெரிய மலையாக மூலத்தானமுடைய தம்பிரானார் திருமேனியைக் கண்டு பிரியத்துடனே நமஸ்கரிக்கச் சூழநின்ற சர்ப்ப ராசாக்களில் கார்க்கோடன் முதலான இராசாக்கள் இந்த மலையை ஒருபொருளாக எண்ணி நீர் விரும்ப வேண்டிய காரணம் என்ன என்றார்கள்- எ-று. (3-81)

காதலி னோக்கி யுள்ள கைப்பொருள் கண்டோர் யார்க்கும்
பாதிடு முரவோர் போலிப் பருப்பதம் பாத லக்கீழ்ப்
போதமார் தான மெல்லை தில்லையாய்ப் பொருந்தி வாழு
நாதனார் காணு மென்று கூறினா னாக ராசன்

இ-ள். தங்களிடத்துள்ள பொருள்களையெல்லாம் மிகுந்த ஆசையுடனே கண்டவர் எல்லார்க்கும் வரையாமற் பகுந்து கொடுக்கும் பெரியாரைப் போல இந்தப்பர்வதம் பாதாளம் ஏழுக்கும் கீழாகச் சொல்லப்பட்ட சொற்பொருள் முடிந்த விடமதிட்டானம் முடிவுக்கு எல்லை சிதம்பரமாகப் பொருந்தி விளங்கும் நம்முடைய சுவாமிதான் காணுமென்று நாக இராசன் சொன்னான்.

இதிற் பாதலக்கீழ் என்பதற்கு பாதாளமேழினுங்கீழ் சொற்கழிவு பாத மலரென்கிற பிரமாணத்தையும் கண்டுகொள்க. (3-82)

அலைபணத் தலைவா யாமு னறிந்தவா கேட்டி யாயிற்
றலைவனே மலையென் றெண்ணிச் சங்கித்து மிருந்து மிந்தப்
பிலவழி கீழுற் றெல்லை பெற்றில மேலுஞ் சாலச்
செலவரி தென்று மீண்டுந் தெளிவில மென்று செப்பி

இ-ள். அலைபோன்ற படத்தையுடைய அரசனே யாங்களறிந்த முறைமையை
நீ கேட்பாயாகில் இந்தச் சுவாமியே இந்த மலையென்றெண்ணிச் சந்தேகித் திருப்போம் பின்னையுமிது இன்னதென்றறியவென்று இந்த பிலத்து வாரத்திற் கீழ்நோக்கிப்போகிற வளைவழியே சென்றும் முடிந்திடங் காணப் பெற்றோமில்லை யிந்த வளைவழியே மேனோக்கிப் போகியும் போகப் படாமல் மீண்டு வருவோமாதலாலிது எங்களுக்குத் தெரியப் போகாதென்று சொல்லி - எ-று. (3-83)

அத்தகுவாய்மையாலேயவர்களாதரித்துப்போற்றிப்
பத்தியாலிறைஞ்சக்கண்டுபதஞ்சலியவரைநீங்கிச்
சுத்தமார்பிலம்வணங்கித்துணைவனேதுணையாவுன்னி
யித்தலந்துயரநீங்கவேறுவானேறலுற்றான்.

இ-ள். அவர்களப்படிச் சொன்னதினாலே யிந்தமலையைப் பெரிய சத்தியமான சிவரூபமென்று அறிந்து சர்ப்ப ராசாக்களெல்லாரும் ஆசையும் பத்தியும் பொருந்தி நமஸ்கரிக்கக் கற்பித்துப் பதஞ்சலி மகாருஷி சர்ப்ப ராசாக்களை நீங்கிச் சுத்தமான பிலத்துவாரத்தை நமஸ்கரித்து உயிர்த்துணைவனை வழித் துணைவனாகத் தியானித்து இந்த உலகத்தில் ஆன்மாக்கள் துக்கமான நரகலோகத்தினின்று சிவலோகத்துக் கேறும்படி நரகலோகத்தினின்று பூலோகத்தில் வர பிலத்துவார வழியாய் ஏறினார்- - எ-று. (3-84)

அரவரையாடவாடுமண்ணலஞ்செழுத்துங்கண்ணாக்
காவிலாவழியாலெண்ணில்காலங்கள்கழியவேறிக்
குரைகடன்மணியுமுத்தும்பவளமுங்கூலமுங்கொண்டு
திரைநிரைவணங்குந்தில்லைத்திருவெல்லைசேரவந்தான்.

இ-ள். திருவரையிற் பாம்பாடும்படி நிருத்தஞ்செய்யும் பரமேசுரன் பஞ்சாக்ஷரமே கண்ணாக வெளியான வழியா லெண்ணிறந்த காலங்கழிய ஏறி ஆரவாரஞ் செய்யுங் கடலானது மாணிக்கமும் முத்தும் பவளமும் மரக்கலங்களும் கொண்டுவந்து காணிக்கையிட்டுத் திரை நிரையாலே வணங்குந் தில்லைத் திருவெல்லைக்குச் சமீபமாக வந்தார் - எ-று. (3-85)

உருகிடவுள்ளங்கண்ணீரோவாமலொழுகவுச்சிக்
கரகமலங்கள்கூம்பக்கணபணமணிவிளங்கத்
திருவருள்வளரஞாலஞ்சிவமயமாகமாயா
விருள்கெடஞானபாநுவெனநிலமேலெழுந்தான்.

இ-ள். பூபாரந்தாங்குகிறோமென்கிற அகங்காரத்தாலும் பதினாலு லோகங்களையுஞ் சிருட்டித்த பிரமாவையுந் திருவுந்தியிற் றோற்றுவித்த விஷ்ணுவைத் தாங்குகிறோமென்கிற அகங்காரத்தாலும் சிக்கென்று வச்சிராகாரம் போன்றிருக்கின்ற அந்தகரணந் தேவதாருவனத்தில் நிருத்தம் விட்ணுவின் பக்கலிலே கேட்டு மெத்தென்று பின்பு கயிலாய பாரிசத்தில் ஶ்ரீகண்ட பரமேசுரன் தீக்கையினாலே நெகிழ்ந்துடைந்து பின்பு நாகலோகத்திற் சுயம்புலிங்க தரிசன காரணத்தினாலும் பெலத்து வாரத்திலுண்மையினாலுஞ் சத்திநிபாதம் உதித்தமையாலும் இதற்கு முன்காணாத வாச்சரியத்தைக் காண்கையினாலும் நீராளமாயுருக சிற்றூற்றில் பிரமப்பிரளயம் போலக்கரை புரண்டு கண்களாலே யொழியாத தாரைகொள்ள உச்சியிற்கு விந்த கராம்புயங்களிந்தத் தலத்தில் தாபர சங்கமாதிகள் சேரச் சிவமாகத் தோன்றுதலால் அநவரதமுங்குவிந்து செல்ல நெருங்கின பணாரத்தினங்கள் ஞானப் பிரகாசத்தினாலே விளங்க அநாதியே யாண வசத்தியைப் பிரேகரித்திடுந் தமோமயமாகிய திரோதனம் அருளாய்ப் பிரகாகிப்பிக்க இந்தப் பூலோகத்தில் ஆன்மாக்கள் சிவபத்திபெற ஒழியாத வாணவமொழிய இப்படியெழும் ஞான சூரியனைப்போலே அப்பெலத்து வாரத்திலே நின்று பூமியிலெழுந்தார். (3-86)

எழுந்தருள்வனமிறைஞ்சியிருந்தவர்கண்டுகாணாச்
செழுந்தவவுருவைநோக்கித்திருமுனிதிகைப்பத்திங்கட்
கொழுந்தணிவேணியண்ணலருளினாற்கொழும்புலிக்கா
லழுந்துமாதவனைநேர்சென்றாதரவதனாற்கண்டான்.

இ-ள் எழுந்திருந்த மாத்திரத்தில் நிட்களமான தில்லை வனத்தை நமஸ்கரித்து இருந்தபடியைக் கண்டு இதற்குமுன் கண்டறியாத திவ்வியமானதபோ வேடத்தைப்பார்த்து வியாக்கிர பாதர் இவர் யாரோஎன்று திகைப்ப இளம்பிறையை வேணியிலே பொருந்தின சுவாமியருளிச் செய்தபடியே கொழுவிய புலிக்கால் பொருந்தின முனியின் எதிரேசென்று மிகுந்த ஆதரத்தினாலே பதஞ்சலி கண்டார் -எ-று (3-87)

மங்கலவுருவாமேனிமாமுனியதிசயித்துச்
செங்கைகளேந்திமேனித்திகழவுகண்டுவந்துசெல்வா
வெங்குறைவாய்நீபோவதெவ்வளவேதுநாமஞ்
சங்கைகள்கலவெல்லாஞ்சாற்றுகவென்றுசெப்ப.

இ-ள் திவ்விய சரீரத்தையுடைய வியாக்கிரபாதமுனி மிகவும் ஆச்சரியப்பட்டு பதஞ்சலியினுடைய தேசசு மிகுந்த சரீரத்தைக்கண்டு இருகையுமே நதியுபசாரஞ் சொல்லி அருட்செல்வனே நீ யெங்கே யிருப்பாய் நீயெவ்விடங் குறித்துப் போகின்றாய் உனது பெயரேது என்னுடைய சந்தேகங்கெட இவைகளெல்லாம் வகுத்துச் சொல்வாயாகவென்று கேட்கச் சொல்லுவார்-எ-று (3-88)

அடுபுலித்தாளோய்கேள்யானனந்தனாநந்தமான
நடநெடுவனத்துளண்ணனயந்தவாநல்கியென்னை
நெடியவனமளிகொள்ளாநீர்மையானீப்பநீங்கித்
தடவரைமருங்கேயானுந்தவம்பலகாலஞ்சார

இ-ள் பாசச்சேதம் பண்ணியுள்ள வியாக்கிரபாதரே கேட்பீராக நான் ஆதிசேஷன் உயர்ந்த தேவதாருவனத்திலே தம்பிரானானந்த நிருத்தம் பண்ணின பிரகாரத்தை விஷ்டுணு எனக்கு அநுக்கிரகித்து என்னாதரத்தைக்கண்டு என்மேலே விஷ்டுணு பள்ளி கொள்ளாமற்ற பசு பண்ணக் கற்பிக்க யானும் போய்ப் பெரிய கயிலாய பாரிசத்திலே நெடுங்காலந்த பசுபண்ண- எ-று. (3-89)

வாசமாமலரோனாகி வாய்மைகளளந்துதானாந்
தேசினிலணைந்துவந்தென் சிரமிசைக்கரமிருத்திப்
பாசமதகலநாயேன் பதஞ்சலியாகநல்கி
யாசிலாவுபதேசங்களளவிலாவகையளித்து.

இ-ள். வாசனை பொருந்திய தாமரைப் பொகுட்டில் வீற்றிருக்கும் பிரமனாகி வந்து என்னுடைய சித்த சுத்தியறிந்து பின்னர் தம்முடைய திருமேனியைப் பொருந்தி எனக்கு நேரே இடபத்தையுகைத்தருளிப் பஞ்சபாச நீங்க என்தலையிற் சிவாஸ்தம் வைத்தருளி அடியேன் பதஞ்சலிரூபங் கொள்ளும்படி திருவுள்ளம் செய்தருளி குற்றமில்லாத உபதேசங்களினாலே யொன்றாலு மளவிடப்படாத தம்முடைய உண்மையு முணர்த்தி மேலும் ஒன்று அருளிச் செய்ததுங் கேட்பாயாக வென்றார்- எ-று. (3-90)

வேண்டிநங்கூத்துக்காண வியாக்கிரபாதனென்னு
மாண்டகுமுனியுந்தில்லைவனத்தின்னவனுநீயுந்
தாண்டவங்காண்டிர்நாகத்தலத்துயர்பிலத்தாலேறி
யாண்டிருவென்றானென்றானருமுனியயர்ந்துவீழ்ந்தான்.

இ-ள் நம்முடைய ஆநந்த நிருத்தங் காணவேண்டி வியாக்கிர பாதனென்னும் பேரையுடைய பெரிய முனியும் தில்லைவனத்திலே யிருக்கிறான் அந்த முனியும் நீயுமாகக்கூடி நம்முடைய தாண்டவத்தைக் காணக் கடவீர் நாகலோக வழியாகச் சென்று பில வழியாலேயேறி அவ்விடத்திலே யிருவென்று திருவுளம் பற்றினாரென்ற மாத்திரத்திலே வியாக்கிர பாதமுனி பரவசராய் வீழ்ந்தார்--எ-று (3-91)

அருள்புரிகருணைவெள்ளத்தழுத்தினானென்னையண்ண
றிருவுளம்பற்றயான்முன்செய்தவமென்னோவின்றென்
றுருகினான்கண்ணீர்வாரவுயர்பதஞ்சலிநீதந்த
கரவிலாவருளாமென்றுகைகளாற்கட்டிக்கொண்டான்.

இ-ள். தம்பிரானாரொளி பொருந்தின கருணை சாகரத்திலே என்னை யாழ்வித்தார் இவ்வாறு திருவுளம்பற்ற நான் முன்னேசெய்த சிவபுண்ணியமே தோவென்று பலகாலும் உரைத்து அருள் மேலிட்டுக் கண்ணீர் தாரைகொள்ள நின்றுருகினான் உருகி பெரிய பதஞ்சலியே நீ கொண்டுவந்து தந்த பிரிய வார்த்தைகள் மறைப்பில்லாத வருள்தானே யென்று வந்து கைகளினாலே கட்டிக் கொண்டார்-- எ-று. (3-92)

திண்ணமார்சிறியோன்பெற்றசெல்வமாமென்னஞானக்
கண்ணினாலமலன்கூத்துக்கண்டுளங்களித்தான்போன்றங்
கெண்ணிலாவின்பமுற்றங்கிலங்குபொற்கயத்துமூழ்கப்
பண்ணிநாண்மலரான்மூலப்பரமர்தாள்பணியவுய்த்தான்

இ-ள். வலிமை பொருந்திய வறுமையடைந்தவன் செல்வம் பெற்ற‌ தன்மை போலவும் ஞான திருஷ்டியினாலே சிவபெருமானுடய ஆநந்த நிருத்தங்கண்டு சித்தங்களித்தார் போலவும் எண்ணிலாதபர மாநந்தம் பொருந்தி அவ்விடத்தில் விளங்கும் புண்டரீகப் பொய்கையிலே மூழ்கப் பண்ணி நாட்பூவினாலே திருமூலத்தானமுடைய தம்பிரானார் ஸ்ரீபாதத்திலே நமஸ்கரிப்பித்தார் -- எ-று. (3-93)

வலங்கொண்டுகுடபாற்றெய்வவாவியின்மூழ்குவித்து
நலங்கிளர்தன்னையாண்டநாதனைவணங்கநல்கித்
தலம்புணர்பன்னசாலைதகுவித்துச்சாகமூல
பலங்களுமிலங்கப்பின்னாட்பரிந்தருள்விருந்தளித்தான்.

இ-ள். பிரதக்ஷனமாக வந்துசென்று மேற்புறத்திற் றிவ்விய பொய்கையில் மூழ்குவித்துக் கிருபையின் மிகுதியினாலே தம்மையாண்ட திருப்புலீச்சுரமுடைய தம்பிரானாரையும் வணங்குவித்து அவ்விடத்திற் பொருந்தின பன்னசாலையிலே கொண்டுபோய் அன்று கழித்து மறுநாள் மிகுந்த பரிவுடனே சாகமூல பலாதிகளினாலே விருந்திட்டார்-- எ-று. (3-94)

மனக்களிகூருநாளில்வனமதன்குடபாற்றெய்வப்
புனற்றடங்கண்டுமூழ்கிப்புணர்குணகரைமேற்போற்றத்
தனக்குமோர்நாயனாரைத்தாபித்துவணங்கித்தங்க
வனித்தமில்சாலைவாவியதன்வடபாலமைத்தான்.

இ-ள். இருவரும் அன்பினாலே களி கூர்ந்திருக்கும் நாளில் ஓர்நாள் அந்தப் புலீச்சுரத்துக்கு மேற் புறத்திற்போய்த் திவ்வியமாயிருக்கிற ஒரு பொய்கையைக் க‌ண்டு ஸ்நான‌ஞ் செய்து அந்த‌க் குள‌த்துக்குக் கீழ்கரையிலே தாம் வ‌ழிபட ‌த‌ம‌க்கும் ஒரு சிவ‌லிங்க‌ப் பெரும‌னைத் தாபித்துப் பூசித்து இருக்க‌ நித்த‌மான‌ ச‌லிப்பில்லாத‌ ப‌ன்ன‌சாலையைக் குள‌த்துக்கு வ‌ட‌க்கே க‌ட்டினார் ப‌த‌ஞ்ச‌லி ம‌காமுனி-- எ-று. (3-95)

ஆங்கிட‌மாக‌நாளும‌ம‌ர்ந்த‌ன‌ந்தேச்சுர‌த்துந்
தீங்கில்வ‌ன்புலீச்சுர‌த்துந்திக‌ழ்சீர்மூல‌த்தான‌த்து
மோங்கிய‌நாத‌ன்பாத‌முற‌வுற‌வ‌ண‌ங்கியாட‌
லீங்க‌ளித்த‌ருளுகென்ற‌ங்கிருவ‌ருமிருந்தார‌ன்றே.

இ-ள். அந்த‌ப் ப‌ன்ன‌சாலையே இருப்பிட‌மாக‌ப் பொருந்தி நாள்தோறும் திருவ‌ன‌ந்தேச்சுர‌த்திலும் குற்ற‌மில்லாத‌ வ‌ள‌ப்ப‌ம்பொருந்திய‌ திருப்புலீச்சுர‌த்திலும் விள‌ங்கும் ஸ்ரீமூல‌த்தான‌த்தும் விள‌ங்கிய‌ த‌ம்பிரானார் திருவ‌டிக‌ளைப் ப‌ற்றிப் பொருந்த‌ அருச்சித்து வ‌ண‌ங்கி ஆந‌ந்த‌ நிருத்த‌ம் இவ்விட‌த்திலே த‌ந்த‌ருளும்என்று பூசாந்த‌த்திலே வேண்டிக்கொண்டு அந்த‌த் த‌ல‌த்திலே இருவ‌ரும் த‌ப‌சு ப‌ண்ணிக் கொண்டு இருந்தார்க‌ள்-- எ-று. (3-96)

வெண்டிரையொலியார்தில்லைமிகுவனவிலங்கியாவும்
பண்டைநம்புலியனன்றிப்பாம்பனும்வந்தானென்று
திண்டிறற்களநிமிர்த்துச்செவிகளுஞ்சிலிர்த்தியேங்கி
மண்டியகாலஞ்செல்லமருங்குறவணைந்தவன்றே.

இ-ள். வெண்மையாகிய அலைகளயுடைய கடலோசை முழங்குந் தில்லை வனத்தில்நெருங்கின மிருகாதிகளெல்லாம் முன் நம்முடனே கூடித்திரிகிற புலியனுமன்றி இப்போது ஒரு பாம்பனும் வந்து இவனைக் கூடினான் அதேதோ வென்று பயப்பட்டுத் திண்ணிய திறலையுடைய கழுத்துயர வெறித்துப் பார்த்துச் செவிகளும் சிலிர்த்திப் பார்த்துப் பயப்பட்டு அகலநின்று நெடுங்காலஞ் சென்று பழகினபின் முன்போலவே கூடச் சஞ்சரித்தன-- எ-று. (3-97)

நாடொறுமையந்தோறுநவநவமாகவந்து
கூடினரநேகராகக்குழகனைவழிபட்டேத்தித்
தாடலையுறப்பணிந்தோர்தழைநிழற்சார்ந்திருந்தென்
பூடுருகிடுமாறண்ணலுரைத்தவாவிரித்தவாயில்.

இ-ள். இருவினை ஒப்புஞ் ச‌த்திநி பாத‌முமுடைய‌ ஆன்மாக்க‌ள் நாள் தோறும் கால‌ங்க‌ள் தோறும் புதுமை புதுமையாக‌ வ‌ந்து அநேக‌ம் பேர் கூட்ட‌மாகித் தம்பிரானாரை அருச்சித்துத் தோத்திர‌ஞ் செய்து சீர்பாத‌ஞ் சென்னியிற் பொருந்த‌ வ‌ண‌ங்கி ஒரு குளிர்ந்த‌ம‌ர‌ நிழ‌லைப் பொருந்தியிருக்க‌ என்புந்த‌சையும் நீராள‌ மாம்படி தம்பிரானா ரருளிச்செய்த பிரகாரத்தைப் பத‌ஞ்சலி சொல்லிப் பாராட்டிக் கொண்டிருந்த அவதரத்திலே-- எ-று. (3-98)

வந்தவர்சொல்லக்கேட்டமன்றுளதென்றவெல்லை
சிந்தையாலிறைஞ்சிச்சென்றுசிரமுறப்பணிந்துகூத்துப்
புந்தியால்வணங்கிமேனிபுளகமும்பொலியப்போந்தங்
கிந்தவாறெண்ணில்காலமிருவருமேகுவித்தார்.

இ-ள். வந்தமுனிவர்கள் ஒருஞானசபை இவ்விடத்திலுண்டென்று சொல்லக்கேட்டு அவ்வெல்லையைச் சித்தத்தினாலே நமஸ்கரித்து அவ்விடத்திலே போய்த் தலையாரவணங்கி ஆந‌ந்த‌ நிருத்த‌தையும் புந்தியினாலே வ‌ண‌ங்கிப் பாவனா த‌ரிச‌ன‌த்தினாலே தேக‌ம் புள‌க‌த்துடனே பொலிய மீண்டு இப்படியே அவ்விரண்டு பேருடனும் இருந்து எண்ணிறந்த காலத்தைப் போக்கினார்கள். (3-99)

பத‌ஞ்சலிச்சருக்கம் முற்றிற்று.
ஆக திருவிருத்தம்--157. 
------------------


4. நடராசச் சருக்கம் - (158-228)


காலமு மநேகஞ் சென்று கழிந்தபின் கடவுள் கூறுஞ்
சீலமார் சித்த யோகந் தெளிவுற நாடிச் சிந்தை
சாலவு மகிழ்ச்சி பொங்கத் தருக்குமிக் கிருக்கு மிக்குப்
பாலமு தனைய நாமம் பயில்வுமாய் முயலு நாளில்.

இ-ள். இப்படி அநேககாலஞ் சென்றபின் கடவுளருளிச்செய்த பரிசுத்தம் நிறைந்த சித்தயோகம் விளங்கக்கண்டு சித்த மிகவுங் களிகூர வளப்ப மிகுந்திருக்கிற கரும்புரசம் பால் அமிர்தம் இவைகளை ஒத்த ஐந்தெழுத் தருள் நிலையிலே பொருந்தித் தவமுயலு நாளில்- எ-று. (4-1)

இங்கிவர் தம்பா லன்பா லிறைநடக் கருத்த ராய்முற்
றங்கிய வாறைஞ் ஞூறு தாபத ரணைய நீரிம்
மங்கல தினத்து வாழ வம்மினென் றுரைத்துத் தாமும்
பங்கமி லதுக ணத்திற் பன்முறை யெண்ணி யெண்ணி.

இ-ள். இவ்விடத் திருந்தரிஷிகள் எதிரே அன்பினாலே கடவுள் நிருத்தங் காணும் கருத்தினராய் முன்னே வந்திருந்த மூவாயிரம் பிரமரிஷிகள் வந்தணைய நீங்களும் இந்த மங்கலமான சித்தயோகநாளிப் பெருவாழ்வு பெறவாருங்களென்று சொல்லித் தாமும் குறைவற்ற சித்தயோகத்தை ஒருகணப் போதில் பலகால் அலகிட்டு எண்ணை எண்ணிப் பார்த்துப் பார்த்து இருந்தார்கள். -எ.று. (4-2)

கறவையான் வரவு பார்க்குங் கற்றின மெனவுங் கார்சே
ருறையுண வுணர்ந்து நோக்கி யோய்ந்தபுள் ளெனவு மோங்கற்
செறிமுகின் முழவு கேட்குந் திகழ்மயிற் றிரளும் போல
விறையவ னடமே சிந்தித் திடைத்தினங் கடத்தி னார்கள்.

இ-ள். தாய்ப்பசு எப்போது வருமோவென்று பார்த்து நிற்கும் கன்று கூட்டம் போலவும் மேகத்தைப் பொருந்து மழைத்துளி யுணவைப் பார்த்து எப்போது மழை பெய்யும் என்று வாடியிருக்குஞ் சாதகப்புள்ளுப் போலவும் முழவினொளியை யொத்த மலைத்தலையிற் செறிந்த மேகத்தின் முழக்கங் கேட்க விரும்பும் விளங்கும் மயிற்கூட்டம் போலவும் தம்பிரானார் நடனத்தைச் சிந்தித்து நடுவுள்ள நாட்களைக் கழித்தார்கள்- எ-று. (4-3)

வென்றிகொ ளந்நாண் முன்னாள் வெய்யவன் விரைந்து வெள்ளிக்
குன்றினை நண்ணி யண்ணல் கூத்தயர் தரவ கன்றா
னென்றமை யறிந்தான் போலங் கிராவழி போந்து தில்லை
யொன்றிய கடற்பாற் றோன்றி யெழுந்துவந் துச்சி யுற்றான்.

இ-ள். வெற்றி பொருந்தி யெல்லா யோகங்களுக்கு மேலான அந்த வியாழக்கிழமை பூசமான சித்தயோகத்துக்கு முன்னாள் ஆதித்தன் விரைந்து சென்று கையிலாயத்தைப் பொருந்தித் தம்பிரானார் சிதம்பரத்திலே நிருத்தஞ் செய்ய எழுந்தருளுகிறார் என்கிற செய்தியை அறிந்தவனைப்போல அங்கு நின்றுங் கடுக இராவழிபோந்து தில்லைவனம் பொருந்தின கீழ்கடற்பால் தோன்றி ஆகாசமார்க்கமாக வந்து நடுப்பட்டான். - எ-று. (4-4)

இரவியு முச்சி யெய்த விருகர முச்சி யெய்த‌
வருபவ ரெதிரோம் வந்தான் றேவர்க டேவன் வந்தா
னரியயர் பெருமான் வந்தா னென்றெழு வதற்குப் பின்னே
பரவிய வொலியுங் கேளாப் பார்மிசை பதறி வீழ்ந்தார்.

இ-ள்.ஆதித்தனும் ஆகாயத்தின்மத்தியில்வர இரண்டுகைகளும் உச்சியிற் பொருந்தக் குவித்து வைத்துக்கொண்டு தற்காலத்திலே நிருத்த தெரிசனம் பண்ணவரும் ரிஷிகள் எதிரே ஓம்வந்தான் தேவர்கள் தேவன் வந்தான் இருவர் தேடுதற்கரியான் வந்தான் என்று தற்காலத்திலே சங்காதி வாதியங்கள் தொழிற்படுவதற்குப்பின்பாக வீசிய *தரங்கஞாயமாகப் பரந்துவருமொலிகேட்டு மூர்ச்சித்துத் தரையில் வீழ்ந்தார்கள்-எ-று- (4-5)
--------------
*தரங்கஞாயம் என்பது- ஒரு அலைக்குப்பின் மறுஅலைவருதல்

ஆயிர மதியு தித்த வருவரை போல வேத‌
மாயிரம் வகையா லோது மதுதகப் பானு கம்ப‌
ராயிர முகத்தி ரண்டா யிரங்கரத் தால ணைத்த‌
வாயிரஞ் சங்கு மோமென் றறைந்தன தழங்க வங்கண்.

இ-ள்.ஆயிரஞ் சந்திரர்களுதித்த பெரியமலைபோலவும் வேதம் ஆயிரம் முகமாகக் கோஷிக்கிறதுபோலவும் பானுகம்பரென்கிற கணேசுவரர் ஆயிர முகத்திலும் இரண்டாயிரங் கரங்களிலும் பொருந்தவைத்த ஆயிரம் சங்கும் எல்லாங் கேட்பப் பிரணவோச்சாரணம் பண்ணின அவ்விடத்து-எ-று.

மலை, பானுகம்பர் சரீரம்,மதி சங்கு,வேதம் ஓசையுமெனக்கொள்க. (4-6)

நடமுயல் விரகுந் தாள கதியுநல் லருளாற் பெற்ற‌
வடகுட வனைய தோள்க ளாயிர முடைய வாணன்
சுடர்விடு கடகக் கையாற் றெம்மெனப் பன்மு கத்த‌
குடமுழ வெழுமு ழக்கங் குரைகடன் முழக்கங் கொள்ள.

இ-ள்.தாண்டவாதி பேதங்களும் நடனத்திலுண்டான விசாரங்களும் அநந்தமான தாள பேதங்களும் தாளத்திலுண்டான வழிகளும் தம்பிரானாருடைய நல்லருளினாலே பெற்ற மேருவை ஒத்த தோள்கள் ஆயிரமுடைய வாணாசுரன் ஒளிவிடப்பட்ட கடகம் பொருந்தின கைகளினாலே முழக்கத்தொம் என்கிற அனுகரண ஓசையோடே கூடின பலமுகத்தினையு முடைத்தான குடமுழவிலே எழாநின்ற வோசை ஆரவாரம் பொருந்தின எழு கடலின் முழக்கத்தையும் கவுளீகரித்துக்கொள்ள-- எ-று. (4-7)

தாண்டவாதிபேதங்கள் பரதநூலும் அந்நூல்முற்றுணர்ந்தவர்களும்
இன்மையின் விவரித்து எழுதாதுவிடப்பட்டன.

ஐந்துதுந் துபியு மாசி லருமறை யொலியு நீடு
கந்தரு வஙகள் கூடுங் கானமுங் கேட்டா ரும்பர்
தந்தமி றிருச்சி லம்பி னரவமுங் கேட்டா ரும்பர்
சிந்திய மந்தா ரத்தின் செழுமலர் தெரியக் கண்டார்.

இ-ள். தோற்கருவி துளைக்கருவி நரம்புக்கருவி கஞ்சக்கருவி கண்டக் கருவி யென்கிற பஞ்ச வாத்தியங்களும் குற்றமில்லாத வேதகோஷமும் பெரியயாழிற் கூடுங்கானமும் தம்பிரானார் ஸ்ரீபாதத்திலே ஒழிவில்லாத திருச்சிலம்பினது ஓசையுங் கேட்டார்கள். தேவர்களால் வருஷிக்கப்பட்ட வளவிய மந்தாரத்தின் மலரைப் பூமியிலே தெரியக் கண்டார்கள்---எறு. (4-8)

தாகத்திற் றண்ணீ ரோசை தகவொலி செவிம டுத்து
மோகித்தா ரெழுந்தா ராற்றார் முகமெலாங் கண்ணீர் வாரச்
சோகித்தார் தொழுதார் போற்றி துணைவனே போற்றி தோன்றா
வாகத்தா யருளை யென்றென் றலறினார் வாய்க ளார.

இ-ள். பாலை நிலத்தில் நடப்போர் தண்ணீர் தாகமேலிட்டு அருவியோசை கேட்டு அருந்தியும் தாகந் தணியாமல் வருந்துமவர் விடாய்த்து விழுந்தது பொலத் தம்பிரானா ரெழுந்தருளுகிற ஆர்ப்பரவங்கேட்டுங் கட்புலன்பட நிருத்தங் காணாமல் மோகித்து விழுந்தார்கள் பரவசமாக எழுந்திருந்தார்கள் பொறையாற்றார் முகமெலாங் கண்ணீர் வாரப் பொருமினார் நமஸ்கரித்தார் தோத்திரம் பண்ணினார் உயிர்த்துணைவனே இரட்சி தோன்றாத் திருமேனியுடையவனே யருள்வாயாக வென்றென்று வாய்விட்டு அலறினார்கள்--- எ-று. (4-9)

எண்ணருங் காதல் கூரு மிருவருங் காண ஞானக்
கண்ணினை நல்க முன்னைக் காரிருள் கழிவுற் றின்ன
வண்ணமென் றறிய வாரா வளரொளி மன்றுண் மாதோ
டண்ணனின் றாடு கின்ற வாநந்த நிருத்தங் கண்டார்.

இ-ள். எண்ணிறந்த பத்திபொருந்தின வியாக்கிர பாதரும் பதஞ்சலியுங்காண இவர்களுடைய பரம குருவாய் ஸ்ரீகண்டபரமேசுவரர் ஞான திருட்டியை அனுக்கிரகிக்க அநாதியே சகசமான ஆணவத்தை நீங்கி இத்தன்மைய தென்று அறியக்கூடாத மிகுந்த ஞானப்பிரகாசமான மன்றில் ஞானசத்தியை அதிட்டித்துத்தம்பிரானார் நிருத்தஞ் செய்யக் கண்டார்கள்--- எ-று. (4-10)

திருவடி நிலையும் வீசுஞ் செய்யகா லுஞ்சி லம்பு
முருவள ரொளியும் வாய்ந்த வூருவு முடுத்த தோலு
மரைதரு புரிவுங் கச்சி னணிகளு மழகா ருந்தி
மருவிய வுதர பந்தக் கோப்புநூல் வாய்ப்பு மார்பும்

இ-ள். நின்றருளிய ஸ்ரீபாதமும் தூக்கியருளிய சிவந்தபாதமும் திருவடிகளிற் சாத்தியருளிய திருச்சிலம்பும் திருமேனியில் மிகுந்த பிரகாசமும் அழகிய திருத்தொடையுஞ் சாத்தியருளிய புலித்தோலாடையும் அதுதரித்த அரையும் அவ்வரையிற் சாத்தியருளிய கச்சினழகும் அழகுநிறைந்த திருவுந்தியிலே பொருந்தின உதரபந்தனச் சேவையும் திருஎக்கிஞோபவீதம் பொருந்தின திருமார்பும்- எ-று. (4-11)

வீசிய செய்ய கையும் விடதரக் கரங்க வித்த
தேசுவண் டுடியு மங்கிச் செறிவுமுன் றிரண்ட தோளுங்
காசுகொண் மிடறுந் தோடார் காதும்வெண் குழையுங் காண
மாசிலா மணிவாய் விட்டு வழங்கிடா நகைம யக்கும்

இ-ள். வீசியருளிய சிவந்த கரமும் புயங்கம் பொருந்தின ஸ்ரீயத்தத்தைக் கவித்தருளிய பிரகாசமும் பரநாதம் பொருந்தின வளவியதமருகமும் தீயகலும் முன்னே திரண்ட தோளும் நீலவொளி பொருந்தின திருமிடறும் திருத்தோடும் வெள்ளிய சங்கக் குழையும் பொருந்தின திருச்செவியும் வெளிப்படக் குற்றமற்ற திருவாய்ப் பவளமு நீக்கமறச் சிரித்தருளிய மோகனமும். எ-று. (4-12)

ஓங்கியகமலச்செவ்வியொளிமுகமலருங்கண்கள்
பூங்குழலுமையைநோக்கும்புரணமும்புருவப் பொற்பும்
பாங்கமர்நுதலும்பின்றாழ்படர்சடைப்பரப்பும்பாம்பு
நீங்கருந்தாருநீருநிலவுமேனிலவு நீறும்.


இ-ள். மேலான தாமரைமலரின் அழகுபோன்ற திருமுகப் பிரசன்னமும் மலர் அணிந்த குழலியார் என்கிறஉமையைப்பார்த்தருளுகிற திரு நயனங்களின் கடாட்ச விளக்கமும் திருப்புருவத்தின் அழகும் அழகிய திருநெற்றியும் பின்தாழ்ந்து விரிந்த கற்றைச் சடையும் சர்ப்பமும் நீங்காத கொன்றை மாலையும் கங்கையும் சந்திரனும் திருமேனியிற்பரம உத்தூளனமும்-- எ-று (4-13)

கடிமலரணையவாரிக்காரிருளளகஞ்சேர்த்த
முடியுநன்னுதலும்பொட்டுமுயங்கிருபுருவவில்லும்
வடிகொள்வேல்விழியுங்காதும்வளர்குமிழ்மலருந்தொண்டைப்
படிவவாயிதழுமுத்தநகையுமெய்ப்பசுமைவாய்ப்பும்.

இ-ள். இருண்ட மேகத்தை யொத்த திருக்குழலிலே மணம் பொருந்திய மலர்கள் சேர்த்திச் சொருகின திருமுடியும் நல்ல திருநெற்றியுந் திலதமும் பொருந்தின இரண்டு வில்லை ஒத்த திருப்புருவமும் வடித்த வேல்போன்ற விழியும் திருக்காதும் விளங்குங் குமிழ மலர்போன்ற திருமூக்கும் ஆதொண்டைக் கனிபோலும் திருவாயிதழும் முத்துப்போலு நகையும் பச்சென்ற திருமேனியழகும்-எ-று.

கடிமலரலைய வென்று பாடமாயின், கடிமலர் சரிய வாரிமுடித்த வென்றுரைக்க. (4-14)

பூங்கமுகமர்கழுத்திற்பொலிந்தமங்கலநாண்பொற்பும்
பாங்கமரமையார்தோளும்பங்கயச்செங்கைதாங்கு
மோங்குசெங்கழுநீர்ச்செவ்வியொளிதருமலருந்தாருங்
கோங்கரும்பவைபழித்தகொங்கையுங்குலவுபூணும்.

இ-ள். கன்னிக்கமுகு போன்ற திருக்கழுத்தில் நித்தியமான பொலிவினை யுடைய திருமங்கல நாண் அழகும் பக்கம்பொருந்தின மூங்கிலைப் பார்க்கிலும் அழகிய தோளும் கைத்தாமரையிலே ஏந்தும் மேலான அழகு விளங்கின செங்கழு நீர்ப்பூவும் செங்கழுநீர்த் திருமாலையுங் கோங்கு அரும்புகளை நிந்தித்த திருமுலைத் தளமு மொளி பொருந்தின திருவாபரணமும்-- எ-று. (4-15) 

துடியமரிடையும்பாந்தட்டொகுபணந்தகுநிதம்ப‌
வுடையமர்துகிலுமல்கவொல்கியநிலையுஞ்செய்ய‌
வடிமலர்மிசையணிந்தவாடகப்பாடகக்கீழ்
விடுசுடர்ச்சிலம்பும்வாய்ந்தமெல்லியல்வியந்துகாண‌

இ-ள். துடியையொத்த திருமருங்கும் பெரும் பாம்புகளின் விரிந்த படங் கூடியது ஒத்த நிதம்பலத்திற் சாத்தியருளிய பரிவட்டமும் மிகவும் அசைந்த நிலையும் சிவந்த ஸ்ரீபாதத்திற் சாத்தின பொற்பாடகத்துக்குக்கீழே ஒளி விளங்கும் திருச்சிலம்பும் பொருந்தின பரமேசுவரி அதிசயித்துக் கண்டருள. எ-று. (4-16)

ஆடியபெருமான்வெய்யோனலர்கதிராயிரத்துக்
கூடியமண்டலம்போற்குறைவிலாவகைநிறைந்து
நாடருஞானமன்றுணாமுய்யவயன்மான்முன்பு
தேடருமேனிகொண்டுதிருநடஞ்செய்யக்கண்டார்.

இ-ள்.சத்தியே திருமேனியாகக்கொண்டு சத்திகாண ஆடிய தம்பிரானார் ஆயிரமாதித்தப் பிரகாசம் ஒன்றாகக் கூடின மண்டலம்போல குறைவற நிறைந்து நாடுதற்கரிய ஞானசபையில் நம்போல்வாரை யிரட்சிக்கவேண்டி முன்பு பிர‌மா விட்டுணுக்கள் தேடக்காணாத சோதி சொரூபத்தை யதிட்டித்து நிருத்தஞ் செய்தருளக் கண்டார்கள்--எ-று-. (4-17)

வேறு

பொருவில்புயங்கப்புனிதன‌டங்கட்புலன்மேவத்
தெரிபொழுதங்கத்தொருசெயலின்றிச்சிரமேவக்
கரமலர்நுந்தப்புனல்விழிகம்பித்துரைகாணா
விருவருமின்பக்கடலுளலைந்தரென்செய்தார்

இ-ள். ஒப்பில்லாத அலைவற்ற தாண்டவத்தைப்பொருந்துஞ் சுத்தனது நிருத்தங் கண்ணுக்குப் புலப்படத் தெரிந்தவளவில் அவயவத்தில் யாதொரு சேட்டையுமற்றுச் சிரத்திலே கைம்மலர்பொருந்த விழிநீர்த் தாரை கொள்ள நடுக்கமுற்று உரைகுழறி வியாக்கிர பாதரும் பதஞ்சலியும் இன்பச் சாகரத்திலே மிதந்தார் இனிவேறே யென் செய்வார்-- எ-று. (4-18)

தற்பரமாகுந்தலைவனதுண்மைத்தன்மைப்பொற்
சிற்பரமாமம்பரவொளியிந்தன்றிருமேனிப்
பொற்புடனாடும்பொலிவும்விழுக்குட்புணராதா
லற்புதனேயிங்கார்கிலமென்றென்றயர்கின்றார்.

இ-ள். சுட்டுணர்வுக் கப்பாற்பட்ட முதல்வனது சத்தியமான சுபாவம் விளங்கின ஞானத்துக்குமேலான சிதம்பரப்பிரகாசமும் தேவரீருடைய திருமேனியின் பிரகாசத்துடனேயாடும் அந்தப் பிரகாசமும் பார்வைக் கடங்காத படியாலே ஆச்சரியமான திருமேனியையுடையவரே சத்தினிபாதக் குறைவினாலே எங்கள் நினைவு முடிக்கப் பெறுகின்றோ மில்லையென்று வருந்துகின்றார்கள்-- எ-று. 

தன்திருமேனி பொற்பு என்பதற்குத் தன்னுடைய திருமேனியிலே பொருந்தின பரமேசுவரியெனினு மமையும். (4-19)

காரணனேமுன்காமனைவேவக்கண்வைத்த
பூரணனேநின்புகழ்நடம்யாரும்புணர்வெய்தப்
பாரிருண்மோகந்தீர்ருண்ஞானம்பணியென்றென்
றாரணமோதுஞ்சாகைகளோராயிரமாக.

இ-ள். சர்வகாரணனே முன்னாள் மதனன்வெந்து வீழத் தீக்கண்ணாற் பார்த்தருளிய பரிபூரணனே தேவரீருடைய புகழ்பொருந்திய நிருத்த மெல்லாருங் காணக் கடாட்சிப்பீராக இருளையும் மயக்கத்தையும் நீக்குமபடியான உமது கிருபை பொருந்தின திருவடி ஞானம் பணித்தருள் வீராகவென்று வெகுவிதமாகச் சரகைகளினாலே விண்ணப்பஞ் செய்தன*வேதங்கள்-- எ-று. (4-20)
-------------------
* வேதமென்றது வேதகர்த்தர்களை.

ஒருவனைநேரேயிருவருமுன்னான்மறையஞ்சா
திரவுறுமாறேழையமினியெட்டும்படியின்பந்
தரைமுதலாறாறெனவருநாதாதியின்மீதே
பரதபராபரபரிபுரபாதாபணியென்றார்.

இ-ள். ஒப்பில்லாத முதல்வனைச் சந்நிதிப்பட்டு நின்று விட்டுணுவும் பிரமாவும் முன நான்குவேதங்களும் தேசோரூபத்துக்கஞ்சாமல் வேண்டிக் கொள்ளுகிற வழியை ஒன்றும் அறியாதயாங்களு மின்பம் பெறும்படி பிருதி விமுதல் முப்பத்தாறென்று சொல்லப்பட்டுவரும் பரநாதத்தின் மேலே நிருத்தஞ் செய்பவரே பராபரப் பொருளானவரே திருச்சிலம்பணிந்த ஸ்ரீபாதத்தையுடையவரே பணித்தருள்வீராக வென்றார் இந்திராதிகள்- எ-று (4-21)

கரணம னைத்தும் புலனிவை காணா கைவிட்டான்
மரணமெ மக்கிங் கிதுதமி யோம்வாழ் வருண்மாறிற்
றிரணமு மெய்ச்சஞ் சலமில தென்றா லொன்றாநின்
புரணமெ னக்கொண் டருளுக வென்றார் நின்றார்கள்.

இ-ள். தத்துவங்களெல்லாங் கூடினாலும் விஷயங்களை யறியமாட்டா தத்துவங்கள் கூடாதபொழுது எங்களுக்குக் கேவலம் பொருந்தும், இவ்விடத்து அருள் நீங்கித் தனித்தவிடத்து எங்கள் வாழ்விது, தேவரீர் அருளில்லா விடத்துத் துரும்பும் அசையாதென்று உண்மையாக வேதாகமங்கள் ஒன்றாகச் சொல்லுதலாலே அவ்விடம் உம்முடைய பூரண மொழியவில்லை ஆதலாலெங்கள் சுதந்தரமான கேவலக்காணியையும் பூரணமான தேவரீருடைய சுதந்தர சத்தியையுந் திருவுள்ளத்திலே கொண்டருளி எங்களையும் பிரேகரிப்பித் தருள்வீராக வென்றார்கள் அவ்விடத்து நின்ற ரிஷிகள் முதலானோர்-எ-று (4-22)

இவ்வகை யேநான் மறைமுத லேனோ ரிரவெய்தப்
பைவிர வாரப் பணியணி நாதன் பரிவாலிப்
பொய்விர வாமெயப் பொலிவினர் யாரும் புணர்வெய்தத்
திவ்விய மாமம் பரபத ஞானந் தெரிவித்தான்

இ-ள். இவ்வாறு வேதமுதலான தேவர்களும் இருடிகள் முதலானோர் யாவரும் வேண்டிக்கொள்ள படம் பொருந்திய சர்ப்பாபரணமணிந்த சிதம்பரநாதர் அநுக்கிரகத்தினாலே இப்படி சத்தியம்பொருந்தின திருமேனிப் பொலிவினையுடைய பக்குவராகிய வேதரிஷிகள் முதலான யாவரும் பொருந்துதலுறத் திவ்வியமாயிருக்கிற பரமாகாசப்பத்தி ஞானத்தைத் தெரிவித்தார்- எ-று. (4-23)

நாரணன் வேதா வாசவன் வானோர் நவைசேரா
வாரண மேலோர் தாபதர் மூவா யிரவோர்நற்
சாரணர் தாவா நாரதர் பூதா திகளாசைக்
காரண ரேனோ ராடலை நேரே கண்டார்கள்

இ-ள். அரிபிரமர் இந்திராதி தேவர்கள் குற்றமில்லாத வேதங்கள் முதலாக உயர்ந்தோராகச் சொல்லப்பட்ட பெரியோர்கள் மூவாயிரம் பிர்மரிஷிகள் நல்ல சாரணர் குற்றமில்லாத நாரதர் பூத முதலானோர் திக்குப் பாலர்கள் மற்றுமுண்டான இருடிகள் யாவருந் தம்பிரானார் நிருத்தத்தைப் பிரத்தியட்சமாகக் கண்டார்கள்- எ-று. 

எண்ணருங்காதல் கூருமென்கிற 10-வது திருவிருத்தந்து வக்கி நாரணன் வேதா என்கிற 24-வது திருவிருத்தம் அளவாகச் சொல்லியது ஏதென்னில், வியாக்கிரபாதர் பசஞ்சலிகளுக்குத் திரோதானத்தை நீக்கி ஆநந்த சுபாவ நிருத்தத்தைத் தரிசிப்பித்ததும் அரிபிரம இந்திராதி வேதங்களுக்கும் ஆணவளவை விந்து அவத்தை நீக்கித் திரோதானத்தில் அருளாநந்த நிருத்தந் தரிசிப்பித்ததும் மூவாயிரம் ருஷியாதி யானவர்களுக்குக் கலாபந்த நீக்கி வயிந்தவா நந்தந் தரிசிப்பித்ததுங் கண்டுகொள்க. (4-24)

கண்டனர்கண்ணுக்கின்புறமுன்னேகரமுச்சிக்
கொண்டனருள்ளக்கொள்கைததும்பக்குறியாரப்
பண்டருவேதப்பாடலோடாடிப்பரபோகந்
தண்டனதாமெய்க்கருணையினூடுற்றலைகின்றார்.

இ-ள். கண்களுக்குச் சுகம்வரப் பிரத்தியட்சமாகக் கண்டனர் கரங்களுச்சியிலே பொருந்தக் கொண்டார்கள் தங்கள் நினைவு நிரம்பி வழிகிறது போலக் கண்ணீரும் புளகமுமாகிய குறிகள் நிறைய இசைபொருந்திய வேதகீதத்தோடு ஆநந்தக் கூத்தாடி பரபோகந்தரும் தம்பிரானாருடைய காருண்ணிய சாகரத்திலே மிதந்தார்கள்-- எ-று. (4-25)

பரபதகங்காதரவரவிந்தாசனனச்சிச்
சிரமரிகண்டாவிருடருகண்டாமிகுதெவ்வர்
புரமெரிகண்டாபவமிரிகண்டாவெனவோதிக்
கரமலர்சிந்தாவரகரவென்றார்கணநாதர்.

இ-ள். மேலான பதமுள்ளவனே கங்காதரனே கமலாசனுடைய உச்சித்தலை யரிந்து துண்டப் படுத்தினவனே கறுப்பு நிறத்தைக்காட்டின கண்டத்தை யுடையவனே மிகுந்து மாறுபட்டோர் புரங்களை யெரித்தவீரனே சந்நத்தைக் கெடுக்கிற ஞானக் கண்ணை எங்களுக்குத் தந்தருளென்று விண்ணப்பஞ் செய்து புட்பாஞ்சலி பண்ணி அரகரா வென்றார் கணநாதர்கள்-- எ-று. (4-26)

ஆடினரெந்தாயாகமசிந்தாமணியேயென்
றோடினர்நின்றாரோகைமலிந்தாரொளிர்கண்ணீர்
வீடினர்குன்றாமூடியவெந்தீவினைதீரத்
தேடுமருந்தேதாவருளென்றார்சிலதேவர்.

இ-ள். பரவசராய் நின்று கூத்தாடினர் எந்தையே யாகமத்துக்குச் சிந்தாமணியேயென்று ஓடினர் பரவசராய் நின்றார் அதிப் பிரியப் பட்டார்கள் வெளிப்பட ஒளி பொருந்தின கண்ணீர்த் தாரை கொண்டார் மலைபோன்று எங்களை மேலிட்ட கொடிய தீவினைதீர யாவருந்தேடு மருந்தே யருளைத் தருவாயாக வென்றார்கள் சிலதேவர்கள்-- எ-று. (4-27)

மாலயன்மேலாவாசவனேசாமதியேசெங்
கோலநிலாவாபாலனநீறாகோவேதிண்
காலனிலாவாகாதியகாலாகதியேவண்
பாலநிலாவாகாவெனநேரேபணிவுற்றார்.

இ-ள். அரி பிரமர்களுக்கும் மேலானவனே இந்திரனுக்குச் சினேகிதனே சர்வாத்துமாக்க்களுக்கும் அறிவே செவ்வண்ண விளக்க முடையவனே பாலொத்த வெண்ணீற்றனே கோவே திண்ணிய காலன் இல்லையாகும்படி காய்ந்தருளிய ஸ்ரீபாதனே சமயிகளெல்லாரும் அறுதியிட்டுச் சொல்லும் வழியே வளவியபால சந்திரசேகரனே சமுசாரதாபத்தில் நாங்களழுந்தாமல் இரட்சியென்று சந்நிதியிலே பணிந்தார்கள் - எ-று. (4-28)

திகழ்தருசெம்புன்றலைதிரிமுண்டஞ்சோசங்கத
தகுகுழைநுண்கண்சிறுநகைதந்தந்தாழபண்டி
பகுசகனந்திண்தொகுசரணந்தண்பாரதங்கப்
புகழ்கரணங்கொண்டயாவவநந்தம்பூதங்கள்.

இ-ள். விளங்குகின்ற செங்குஞ்சித்தலை - நெற்றியிலே, திருபுரண்டாம்- சங்கங்குழைபொருந்தினகாதுகள் - சிறிய கண்கள் - புன்னகையையுடைய பற்கள் - தாழ்ந்த வயிறு - இரண்டுபிரிவாகிய பிருஷ்டபாகம் என்னு மிவைகளையுடைய பதங்கள் பலம்பொருந்தியகால்கள் பூமியிலேபொருந்த *உற்புலித கரணங்கொண்டு ஆடுவன- எ-று. (4-29)
---------
* உற்புலிதமென்பது கூத்தின் விகற்பம்.

மலரெரிமுச்சிக்குழிவிழியொட்டற்கவுளவாய்விட்
டிலகெயிறொடடைக்களமிருநெட்டைககரமீர
லுலருதரஞ்சிற்றரையுயர்தெற்றப்பதமோடும்
பலவலகைக்கொத்திடுகுணலைக்கொத்தினபாணி.

இ-ள். எரிபோல விரிந்த மயிரை யுடைய பெருந்தலையம் குழிந்த கண்களும் ஒட்டிய கன்னமும் வாய்க்கு வெளியில் புறப்பட்ட பற்களும் ஒட்டையின் கழுத்து போன்ற கழுத்தும் நீண்ட இரண்டு கைகளும் ஈரலுலாந்த வயிறும் சிறிய அசையுமுடையனவாய் உயர்ந்த தெற்றுதல் பொருந்திய முட்டிக் காலுடனே பலபேய்கள் குனித்திடுங் குணலைக் கூத்துக் குச்சரியாகக் கைகளைக் கொட்டின - எ-று. (4-30)

தோடிறையேவாய்வீடலரூடார்சுரிகூழைப்
பாடளியாழோடேழிசைகோடாவகைபாடத்
தாடகுமாடாரநூபுரம்வீடாவொலிசாரவித்
தாடினாபாடாவாடினாபீடாரர்மாதா.

இ-ள். இதழ்சற்றே நீங்கின் புட்பங்கள் நிறைய வுள்ளேவைத்துச் சொருகின கொண்டைப்புறத்தில் வண்டுகள் யாழோடுகூடச்சத்தசுரமும் மயங்கா மற்பாட தாளுக்குத் தகுதியாகக் கால் வடிம்பிற்பொருந்தின பொற்சிலம் போசையைக்கூட்டி ஆடினர் பாடாமல் மயங்கினர் பெருமையையுடைய தேவஸ்திரீகள்- எ-று. (4-31)

அண்டாகண்மிண்டப்பண்டெழுநஞ்சுண்டமுதீயுங்
கண்டனகண்டப்பண்டைநடங்கண்குளிர்வித்துக்
குண்டிகைகொண்டைத்தண்டொடுமண்டிக்குலைவேணி
முண்டமிலங்கக்கொண்டையாகின்றார்முதுவோர்கள்.

இ-ள். தேவர்கள் விஷவேகத்தைச் சகிக்க மாட்டாமல் திரண்டு வந்து விண்ணப்பஞ் செய்ய பண்டு சமுத்திரத்திலே தோன்றிய நஞ்சை அமுது செய்து அவர்களுக்கு அமிர்தத்தை யீந்தருளும் நீலகண்டனது அகண்ட பரிபூரணமான அநாதி நிருத்தத்தாலே கண்களைக் குளிர்வித்து கமண்டலம் சோமன் கட்டின தண்டுகள் ஒன்றுக்கொன்று நெருங்கிச் சடையவிழத் திரிபுண்டரம் விளங்க வெகுவிதமாக ஆடினார் பழைய மூவாயிர முனிவர்கள்- எ-று. (4-32)

வீரதராவான்மேருகராகான்விரிகொன்றைத்
தாரவராவாகர்வெனநேரேதகவாரா
நாரதரேரார்சாரணரேனோர்நசையாழின்
பாரகராராவார்வமொடாடும்பணியுற்றார்.

இ-ள். வெற்றியையுடையவனே பெரிய மகம்மேருவை வில்லாகக் கைக்கொண்டவனே வாசனை மிகுந்த கொன்றைமாலை யணிந்த பரமசிவமே நாகத்தை யாபரணமாகஉடையவனே எங்களை ரட்சியென்று சந்நிதியிலே முறைப்படிவந்து தும்புரு நாரதர்களும் அழகு பொருந்திய தேவதூதர்களும் மற்றைத் தேவர்களும் காந்தர்வ வேதபாரகராகிய வித்தியாதரர் முதலானவர்களும் நீங்காத ஆசையோடு ஆடுந்தொழிலைப் பொருந்தினார்கள் - எ-று. (4-33)

குடமுழவங்கொக்கரைபொருதாளங்குழல்வீணை
படகநெடுங்கத்திரிகைதடாரிபணிலங்க
டுடிகரடஞ்சச்சரிபலகொண்டோர்தொகவாரா
நெடுமுகிலஞ்சக்கடலொலியெஞ்சநிகழ்வித்தார்.

இ-ள். பிரதானவாத்தியமான குடமுழாக்கள்- கொக்கரையென்கிற வாத்தியங்கள்- சர்வ வாத்தியங்களுக்கும் சுருதியான தாளம்- வேய்ங்குழல்கள் வீணைகள்- தம்பட்டம்- பெரியகத்திரிகை- பம்பை- தவளச்சங்கங்கள்- தமருகம் கரடிகை- சச்சரி முதலான வாத்தியங்களைக் கைக்கொண்ட மேளத்தோர் *** கூடிவந்து மேகங்கள் திடுக்கிடவும் சமுத்திரவொலி குறையவும் முழக்குவித்தார்கள் - எ-று. (4-34)

பரிவுடனாடுந்தொழிலினராய்முன்பலர்வாழத்
தெரிவுறநீடும்புலிமுனியோனுந்திகழ்வெய்து
மரவரசோனும்பரவசமாய்நின்றழநேரே
வரமெவைகூறுந்தரவெனநாதன்மகிழ்வுற்றான்.

இ-ள். அன்புடன் கூத்தாடுந் தொழிலையுடையராய்ச் சந்நிதியிலே பொருந்தினோர் யாவரும் பெருவாழ்வு பெற்று வாழ உண்மையைத் தரிசித்துச் சுபாவ குணத்திலே யழுந்தின வியாக்கிரபாதரும் அந்த நிலையைப் பொருந்தின பதஞ்சலியும் பரவசமாய் நின்றழ அங்ஙனம் சந்நிதியிலே நின்றழும் வியாக்கர பாதரையும் பதஞ்சலியையும் பார்த்தருளி நாம் கொடுக்க உங்களுக்கு வேண்டிய வரங்களைக் கேளுங்களென்று மகிழ்ந்து திருவாய் மலர்ந்தருளினார்- எ-று. (4-35)

அண்டர்பிரான்முன்புண்டரிகத்தாண்முனியன்பிற்
கண்டுளிசோரக்கைதொழுதுள்ளங்கசிவெய்திப்
பண்டுனைநாளுங்கண்டிடுமாறென்பயிலபூசை
கொண்டருள்வேறிங்குண்டிலவேதுங்கொளவென்றான்.

இ-ள். தேவதேவன் திருமுன்பே வியாக்கிரபாதர் அன்பினாலே ஆநந்த பாஷ்பம் பெருக நின்று கைகூப்பித் தொழுது மனமுருகி முன்போலத் தேவரீரை நாள்தோறும் கிரியாவிதிப்படியான பண்ணுகிற பூசையை உண்மையாகக் கைக்கொண்டருள வேண்டும் இதுவே யன்றிப்பெறவேண்டிய குறை வேறொன்று மில்லையென்றார் - எ-று. (4-36)

ஆடுகவென்றங்காடுமரஞ்சீரருள்செய்யக்
கூடுமநந்தன்கூடுமநந்தங்கொடுவெம்மை
நீடுமநந்தங்கேதநினைந்தோநிலன்மேவுஞ்
சேடர்கடுன்பந்தீரநினைந்தோதெரியாது.

இ-ள். வேண்டும் வரத்தை உரையாடுங்களென்று அவ்விடத்தில் நிருத்தஞ்செய்யும் பரமேசுரர் அருளிச்செய்ய அன்புபொருந்திய பதஞ்சலி தன்னைக் கூடும் முடிவில்லாதகொடிய தீவினையில் நீட்டிக்கும் மனத்திற்றங்கும் ஏதுக்களாகிய துக்க வாதனையாலே இனனம் மனத்தை வந்து பொருந்துமோவென்று எண்ணியோ தெரியாது பூலோகத்தைப் பொருந்துஞ் சேஷமாயுள்ள ஆன்மாக்கள் பிறவித்துன்பந் தீர என்று எண்ணியோ தெரியாது. - எ-று.

தெற்குக்கயிலாச பாரிசத்தில் தவமுயலும் பொழுது பரமசிவஞ்சா நித்தியஞ்செய்து பிரமாவாக வெளிப்பட்டு இவர் வாய்மைகளைச் சோதித்துப் பின்பு தற்சொரூபமான போது வேண்டிய தென்னவென தாருகாவனத்தில் செய்த நிருததத்தைத் தரிசிக்க வேண்டுமென்றுசொல்ல இது இடம் அன்று அங்கு சிதம்பரத்தில் காணக்காட்டுது மென்றருளிச் செய்ய அவ்வண்ணம் அந்தன்னைப் பொருந்தும் அந்தமில்லாத கொடுமை உடைய தீவினையிற்றங்கு மனதுக்குத் தம்மிடத்திற் றங்கும் ஏதுக்களாகிய சுகதுக்க வாதனையிற்பட்டு மறைப்பு வருமென நினைந்தோ வெனினுமமையும்-பூமியிற் பொருந்தும் புண்ணிய பாவ சேஷமாயுள்ளவர் சேஷர்களென வடமொழித்திரிவு. இது என் சொல்லியவாறோவெனில் தனது சஞ்சிதப் பிரார்த்தவ ஆகாமியத்தாற் பிறவி வருமென நினைந்தோ பூலோகத்துப்பொருந்துஞ் சேஷமாயுள்ள புண்ணிய பாவமுடைய ஆன்மாக்கள் பிறவித் துன்பந்தீர நினைந்தோ இப்படி நிருத்தம் அநவரதஞ் செய்யவென்றது, தெரியாதெனவும் இரண்டும் வேண்டியென்பது பொருந்தும் - எ-று. (4-37)

சென்றுவணங்கித்திகழுமநந்தத்திறலோனு
மின்றிகழ்வாழ்வோர்விழிபுணர்காலந்தொறுமன்றந்
துன்றியஞானச்சோதியுணேசத்துணையோடு
மென்றுநடந்தந்தருளவிரங்காயினியென்றான்.

இ-ள். வந்துவணங்கி விளங்கும் அநந்தனாகிய வெற்றியுடையோனும் மின்போல விளங்கப்பட்ட உடம்பில் வாழும் ஆன்மாக்கள் வெளியாரக் காணும் அக்காலந் தோறும் அம்பலத்தில் பூரணமாய் நிறைந்த ஞானப் பிரகாசத்துள் காதலையுடைய துணையாகிய பராசக்தியுடனேகூட இன்று முதல் என்றும் நிருத்தத்தைப் புலப்படுத்தி அருளாயினி என்றான்- எ-று. (4-38)

தேவர்கடேவன்றிருவருளங்கப்படிசெய்ய
மேவியபோதங்கிருவருமிக்காடினர்மிக்கோ
ராவெனவேழெண்கடலொலிபோல்வைத்தலைவுற்றார்
பூவலயம்பூமலைதகவானோர்பொழிவுற்றார்.

இ-ள். தேவர்களுக்குத் தேவன் அவ்விடத்து அப்படித் திருவருள் செய்யப் பொருந்தினபோது வியாக்கிர பாதரும் பதஞ்சலியுமாகிய இருவரும் ஆநந்தக் களிப்பு மேலிட்டு ஆடினர். மற்றுமுள்ள தேவர்கள் இருடிகள் முதலாயினோர் ஏழென்று எண்ணப்பட்ட கடலோசைபோல ஆரவாரித்துச் சிரசின்மேல் கைவைத்துச் சுழலலுற்றார் பூமிவட்டத்தில் புஷ்பங்கள் மலைக்கு ஒப்பாக நிறையும்படித் தேவர்கள் புஷ்பமாரி பொழிந்தார்கள்-எ.று. (4-39)
-------------------------
* ஆ - என்பது அதிசயவிரக்கச்சொல்.

எங்குமுழங்கத்துந்துபிசங்கத்தொலிநீடச்
சங்கையின்புற்றும்பர்களேனோர்தாம்வாழப்
பங்கமிலின்பத்தொருபதேசம்பரிவான் மிக்
கங்கவர்தங்கட்கெங்கள் பிரானாரருள்செய்வார்.

இ-ள். திக்குகளெங்குந் துந்துமி முழங்கச் சங்கங்களின் ஓசைபெருக மயக்கமின்றிப் பேரின்பத் தழிந்தித் தேவர்கள் இருடிகள் முதலானோர் வாழப் பங்கமில்லாத இன்பமிகுந்த ஒப்பற்ற உபதேசம் அன்புடையார் தங்களுக்கு எம்மை அடிமையாக உடைய தம்பிரானார் அருளிச் செய்வார்- எ-று. (4-40)

ஞானநமக்குத்திகழ்விடநம்மிற்பிறிவின்றோன்
றானதுசிந்துச்சத்தமர்ஞாலத்தகலாது
தானுடலுட்பட்டிடுமுயிரிற்றங்குதல்போலவோம்
வானவர்சுற்றிக்கோலுமினென்றான்மன்றாடி.

இ-ள். நமக்கு ஞானமானதுவிளங்கப்பட்ட அதிட்டாநம்-நம்மிடத்தில் பிரிவின்றி ஒன்றானது சித்தாகிய ஞேயம் சத்தாகிய ஞானம் - அமரப்பட்ட இப்பூமியைவிட்டு அகலாதது எப்படியென்னில்-உடலில் உட்பட்டிருக்கும் உயிரினைப்போல அந்த ஞானத்திற்கு ஞேயமாகிய உயிராய்த்தங்குதல் செய்வோமாகையால் தேவர்களே இந்த இடத்தைச்சுற்றி அம்பலமாகக் கோலுமி னென்றார் அம்பலத்தாடினார்- எ-று. (4-41)

தொன்மையஞானம்பெற்றதுசுற்றும்பொருளாயவான்
முன்மலர்தூவித்தொழநடராசன்முதுநூலிற்
சின்மயமாமன்றிரண்மயமொன்றுண்டதுசேரப்
பொன்மயமாகுமபுவியினர்காணும்பொழுதென்றான்.

இ-ள். பழமையையுடைய ஞானமாகிய சிதம்பரத்தில் அத்தன்மையைத் தம்பிரானார் அருளினாலே சுட்டி அறிவுபெற்று ஸ்தலத்தை யாவருக்குந் திரவிய மேதாமென்று ஆராய்வான் காரணமாகித் தேவர்களெல்லாஞ் சந்நிதி முன்பு புஷ்பாஞ்சலி பண்ணி நமஸ்காரஞ் செய்ய நடேசர் சொல்வார் வேதத்தில் ஞானமயமாய் இம்மன்றினுக்கு இரண்மய கோசமென்றொரு பெயர்உண்டு அது விசுவத்திலுள்ளவர் கண்டித்துக் காணும்பொழுது அடங்கப் பொன்னின் சொரூபமாகுமென்றார்- எ-று. (4-42)

என்றருளுஞ்சீரருடலைமேல்கொண்டிமையோர்பொன்
சென்றழறங்கித்தேசுடனோடிச்செலவற்று
நின்றதுகொண்டங்கருள்படிமாவர்நிகழ்வித்தார
மன்றகுமென்றங்கதுபடிமாவாமலிவித்தார்.

இ-ள். என்றருளிச்செய்யுந் திருவருளைத் தேவர்கள் தலைமேற்கொண்டு கனகம் அழலிற்சென்று தங்கி களங்க மற்றுத் தன்னுடைய ஒளியுடன்கூடி ஓடி ஒட்டற்று நின்ற பொன்கொண்டு தம்பிரானார் அவ்விடத்து அருளியபடியே பெரிதாக அம்பலத்தைச் செய்வித்தரா அதற்கு நம்மன்னராகிய சிதம்பரேசுரர் பொன்னம்பலமாகத் தகுமென்று அவ்விடத்துச் சொன்னபடி மறைவாக நாமம் பொன்னம்பலம் என்று எல்லோரையுஞ் சொல்வித்தார்- எ-று. (4-43)

பொன்னசலஞ்சேர்பொருளள்முயக்கும்புற்போன்முற்
பன்னருஞேயப்பரபதஞானந்தருபானமைச்
சின்னிலைமன்றந்தேவர்கள்செய்யுந்திருமன்றந்
தன்னையுமன்றேசெய்ததுஞானந்தானாக.

இ-ள். பொன்னாகிய மகமேரு பருவதத்தைச் சேர்ந்த பொருள்பொன்னானாற் போலவும், அளத்திற் போடும்புல் உப்பானாற் போலவும், முற்சொல்லுதற்கு அருமையுடைய ஞேயாதிட்டானமான பரபதமென்னும் ஞான நிட்டையைத்தரும் முறைமையையுடைய ஞானநிலையாகிய மன்றம்-தேவர்களாற் செய்யப்படும் அழகிய கனக சபையையும் அப்போதே ஞானந்தானாகச் செய்தது- எ-று. (4-44)

அன்று தொடங்கித் தேவர்களுஞ்சீரரவோனுந்
துன்றுபுலிக்கான்முனிமுதலாகுந்தூயோருஞ்
சென்றுவணங்கித்திசைதொறும்வாழத்திருவாளன்
மன்றினடந்தந்தென்றுமகிழ்ந்தான்மாதோடும்.

இ-ள். அன்றுதொட்டு அரிபிரமேந்திராதி தேவர்களுஞ் சிறப்புடைய பதஞ்சலி பகவானும் திடசித்தமுடைய புலிக்கால் முனி முதலாகுஞ் சுத்த இருடிகளுந், திசைகளின் உள்ளவர்களும் வந்து வணங்கி முத்தியில் வாழ்வதாக மஹதைசுவரியமுடைய பரமேசுரன் பொன்னம்பலத்தில் எப்போதும் நடனஞ்செய்து பராசத்தியோடு மகிழ்ந்தருளினார்- எ-று. (4-45)

கரவினிருத்தம்புரியவிருத்தங்கழிகானின்
மிருகமனைத்தும்பறவைகண்முற்றுமிகுநாதப்
பரிபுரசத்தம்பருகிமதித்தம்பிகைபாத
மருவி * நிரக்கம்பெருகியிரக்கமலிவுற்று.

இ-ள். மறைப்பில்லாத நிருத்தத்தை ஈசுரன் செய்ய மாறுபாடு நீங்கிய காட்டில் வாழும் மிருகங்கள் அனைத்தும், பறவைகள் அனைத்தும், நாதமிகுந்த திருச்சிலம்பினது சத்தத்தைச் செவியாரப் பருகிச் சத்திநி பாதம் பொருந்தி அருளைக் குறித்துக் கண்ணீர் பெருகிச் சிவஞானத்திற் பொருந்தி வாழ்ந்தன. (4-46)
-------------------------------
* நீரக்கமெனற்பாலது - விகாரவகையால் நிரக்கமெனக் குறிகிநின்றது.

அரவரசன்சொற்றகவரமுன்பெற்றனனாகக்
கரவில்கணங்கட்புனன்மிகநுந்தக்கரநாலுந்
திரிநயனம்பொற்சுரிகைபிரம்பொப்பருசெம்மை
மருவியநந்தித்தலைவனைவந்தித்தெதிர்நின்றார்.

இ-ள். பணிக்கரசனாகிய பதஞ்சலி முன்புவேண்டிக்கொண்ட சொற்படியே திருவுள்ளம் வாழ்ந்தருளி அநவரத தாண்டவஞ்செய்ய வரங்கொடுத்தருளப் பெற்றனனாகக்கண்டு அசத்தியம் இல்லாத கணநாதர்கள் கண்ணீர் மிகத்ததும்ப நான்கு திருக்கரங்களும் திருநயனமும் பொற்சுரிகையும் பிரம்பும் ஒப்பில்லாத செம்மையாகிய சாரூபமும் பொருந்திய நந்திகேசுரனாகிய தலைவனை வணங்கி யெதிர் நின்றார்கள்- எ-று. (4-47)

பன்னுக ணத்தோர் தலைவன் வருத்தம் பாராதே
நின்னில யத்தின் னிலைதக நாளுந் நில்லென்றார்க்
கென்னையு ரைக்கோ மிதுபி ணிகைக்கு மெனிலெய்த்தோர்
தன்னைந ருக்கிச் சாறுகொள் வாருந் தகுமென்றார்.

இ-ள். இப்படிச் சொல்லப்படாநின்ற கணங்கள் நாயகனுடைய திருமேனி வருத்தத்தை விசாரியாதே நின்னுடைய ஆநந்த நிருத்தமாகிய புயங்கத்தினிலை பொருந்த அநவரதமு நில்லென்று வரம்பெற்றுக் கொண்டவர்களைக் குறித்து நாமென்ன சொல்வோம் இந்தமருந்து பிணியை யோட்டுமெனில் நோயினால் இளைத்தோர் அம்மருந்தினை வேருடன்பிடுங்கி நருக்கி அதன் சாற்றைப் பிழிந்து கொள்ளுதல்போலும் என்றார்கள்- எ-று. (4-48)

தாணுவை முன்னர்ச் சாருநர் கண்ணிற் றகநட்டம்
பேணுவ தாகப் பெருகு வரம்பெற் றனரென்றா
லாணையெ னாமென் றாரறி வார்நா மினியன்பிற
காணுநர் காணுங் காலம் வகுத்தல் கடனென்று. 

இ-ள். சிதம்பரேசுரர் சந்நிதி முன்னர் வந்தவர் கட்புலனுக்குக் காண அநவரத நிருத்தத்தைத் தொழுவதாகப் பெருத்தவரம் பதஞ்சலி முனிவர் பெற்றனர் என்றால் திவ்விய ஆக்கினை யேதாமென்று யாவரறிவார் அன்பினால் தரிசிப்பார்க்குத் தரிசிக்குங் காலங் கற்பித்தல் நமக்கு இனிக் கடனென்று குறித்து- எ-று. (4-49)

அங்கக முற்றுந் தங்கினர் காவல யற்காவ
லெங்கணு மொய்க்கும் பாரிட மும்ப ரிடைக்காவல்
பொங்குசி னத்திண் கூளிகள் காளி புறக்காவ
றங்குவ ருக்கந் தம்மினெ ருக்கந் தகுவித்து.

இ-ள். காலம் வகுக்கில் காவல்முதல வேண்டுமாதலில் அவ்விடத்தில் கெற்பகிரக முழுவதுந் அநந்தாதிகளாகிய தாங்களே காவலாகவும், அதற்கயலான இரண்டாமிடமெங்கணும் நிறையும் பூதாதிகள் காவலாகவும் அதற்கு மூன்றாவதாகிய இடையில் இந்திராதிகளாகிய தேவர்கள் காவலாகவும் அதற்கு நாலாவதாகிய புறத்தில் மிகுந்த சினத்தினையுடைய பேய்களுங் காளிகளுங் காவலாகவும் இப்படியிருக்கும் தங்கள் வருக்கத்தில் நெருக்கமாக விருக்கக் கற்பித்து- எ-று. (4-50)

காலையு முச்சிக் காலமும் வானோ ரேனோர்சீர்
மாலையின் மைக்கட் பூவையர் தாமே வளர்கங்குன்
ஞாலந ரர்க்கெக் காலமும் யாரு நணுகாத
வேலைக ளத்தற் கிச்சையி ருப்பா மிகுவித்தார்.

இ-ள். விடியற்காலமும் மத்தியானகாலமுந் தேவர்களும் இருடிகளுஞ் சிறப்புடைய சாயுங்காலத்தில் மைக்கண்ணுடைய தேவமாதரும் இருள் வளராநின்ற ராத்திரி காலங் கணநாதரும் பூலோகத்து மானிடருக்கு முன்சொன்ன நான்கு காலமும் தரிசிக்கவும் எவரும் வாராத காலங்கள் தம்பிரானார்க்கு இச்சையிலிருப்பாகவுங் கற்பித்தார்- எ-று. (4-51)

நிலையமிதற்கிங்கிதுநிலையென்றான்மன்றேறி
யலைவறநிற்கும்படியுமுவந்தானென்றான்முற்
கலைஞரைக்கும்பொருள்ளவன்றேவந்தோவித்
தலைவன்முயக்கஞ்சகலர்மயக்கந்தானாமால்.

இ-ள். தமது நிருத்தத்திற்கு சுழுமுனா ஸ்தானமானசிதம்பரமே இடமென்றார். அன்றியும் பொன்னம்பலத்தில நவரதமும் அசைவற நிற்கும்படி மகிழ்ந்தார் என்றால் அநாதியே வேதாகமங்களின் வழியே யாகாதிகள் முதலானவற்றில் வல்ல கலைஞானிகளுரைக்கும் பொருள் அதற்கு அளவன்று, ஆதலால் இந்தத் தம்பிரானார் திருவுள்ளப்பாங்கு சகலர்க்கு மயக்கமாம்- எ-று. (4-52)

பூவமர்வோனும்பொருகடலோனும்புத்தேளுந்
தேவர்கள்கோனுந்திருமுனிதானுந்திகழ்நாகர்
காவலனேயிக்கருணைநடங்காண்வரவைத்தாய்க்
கேவல்செய்வோமற்றென்செயவல்லோமென்றார்கள்.

இ-ள். பூவில் இருப்போனாகிய பிரமனும், அலைபொருதுங் கடலுடையோனாகிய விஷ்ணுவுந், தேவர்களும் தேவர்களுக் கரசனாகிய இந்திரனும், அழகியமுனியாகிய வியாக்கிரபாதரும், விளங்கப்பட்ட நாகராஜனாகிய பதஞ்சலி பகவானே-இந்தக் காருண்ணிய நிருத்தஞ் சருவான் மாக்களுக்குங் காட்சி பெறக் கற்பித்தாய் உனக்கு நாங்கள் ஏவல் செய்வோமல்லது வேறென செயக்கடவோ மென்றார்கள் - எ-று. (4-53)

இப்பரிசாமிங்கிவரொடுபூதம்பேய்காளி
முப்புரிநூலோர்பூமகள்விண்ணோர்முதலாகத்
தப்பருமெல்லைக்குடசிவலிங்கந்தாபித்துத்
துப்புறழ்மேனிச்சோதியைநாளுந்தொழுநாளில்.

இ-ள். இப்பரிசாகிய வியாக்கிரபரதமாமுனி பதஞ்சலிமாமுனி அரிபிரமேந்திராதிகளுடனே பூதம்-பேய்-காளி-தில்லை மூவாயிரவர் இலக்குமி தேவர் முதலானோர் முத்தி வழுவாத சிதம்பரத்தின் எல்லைக்குள்ளே சிவலிங்க ஸ்தாபனஞ்செய்து செம்பவளக் குன்றொத்த திருமேனியுடைய தம்பிரானாரை நாள்தோறும் பூசித்துத் தோத்திரஞ் செய்துகொண்டிருக்குங் காலத்தில். (4-54)

வீசிய கங்கைக் கங்கைவி டாவந் தர்வேதித்
தேசமி லங்கத் திசைமுகன் யாகஞ் செய்தற்குப்
பூசைவ ழங்கிப் புவியுழு தப்புப் பூரித்துற்
றாசறு துங்கச் சாலைக ளின்பத் தமைவித்து.

இ-ள். திரைவீசிய கங்கைக்கரை நீங்காத அந்தர் வேதிப் பிரதேசம் விளங்க பிரமா யாகஞ் செய்யக்கருதி அவ்விடத்தில் இந்திராதி முதலாயுள்ள தேவதைகளுக்கும் பூசை பண்ணி பூமியை யுழுது தண்ணீர் நிறையக்கட்டி ஒருப்பட்டு விதிமுறையில் குற்றமற்ற பெரிய யாகசாலைகளை மனோகரமாகச் செய்வித்து- எ-று. (4-55)

திருமலி வித்துப் பறவை படுத்துச் சிலகுண்டங்
கருதி நிறுத்திப் பசுநிரை கட்டப் பெறுகம்பஞ்
சருநெய் குசைப்புற் சமிதை சிருக்குச் சிருவந்தண்
பருதி பொரிப்பொற் குவைபழ வெற்புப் பலகொண்டு.

இ-ள். இலக்குமி முதலானோரை ஸ்தாபனம்பண்ணி பருந்துபடுத்து விதிப்படியிலுண்டான குண்டங்களைக் கருடன்மேல் அந்தந்தத் தானங்களில் விதிப்படி அமைத்துப் பசுக்கள்கட்டக் கம்பங்கள்-சரு-நெய்-குசைப்புல்-சமிதைகள் –சிருக்குச் சிருவம், குளிர்ந்த பருதி, பொரி பொற்குவியல், பழ முதலானவை எல்லாப் பதார்த்தங்களையும் பலமலைபோலக் குவித்துக்கொண்டு- எ-று. (4-56)

சிந்தைம கிழ்ந்தும் பரைவர வேள்விச் செயல்செய்வோர்
மந்திர மோதிப் பாவக சோமா வருணாவா
முந்துமு ராரி வாதிமி ராரி வாமூவா
விந்திரன் வாவா சங்கரன் வாவா வென்றார்கள்.

இ-ள். சித்தங்களிகூர்ந்து யாகத்தொழில் செய்வோர் தேவர்களை வரும்படிக்கு மந்திரம் ஓதி பின்னும் அவரவர் மந்திரங்களைச் சொல்லி அக்கினி தேவனே- சந்திரனே-வருணனே வா, எக்கியத்துக்கு முதலான விஷ்ணுவே வா, அந்தகார சத்துருவாகிய ஆதித்தனே வா, மூப்பு இளமையில்லாத இந்திரனே வாவா, சங்கரனே வாவா என்று ஆவாகனம் பண்ணினார்கள்- எ-று. (4-57)

யாரும ணைந்தா ரின்றினி யென்னா மிதுவென்றேன்
றோருமு னன்பார் யாவரு மின்பா ரொளிர்தில்லைச்
சேரவி ருந்தார் போதுமி னென்றே சென்றேயு
நாரத கொண்டே மீளுக வென்றான் மறைநாவான்.

இ-ள். ஆவாகனம் பண்ணின தேவர்கள் யாவரும் இங்குவந்து பொருந்தினார்களில்லை இனி யான் துடங்கின யாகம் ஏதாய் முடியும் என்றென்று பலகாலும் விசாரித்து உணருமுன் இங்கு வரவேண்டின அன்பையுடைய யாவரும் பிரியத்துடனே விளங்கிய சிதம்பரத்திலே கூடி இருக்கக் கண்டோம் யாகத்துக்கு வாருமென்று நீர்போயாகிலும் நாரதரே அழைத்துக் கொண்டு மீள்வாயாக வென்று சொன்னார் பிரமதேவர்-- எ-று. (4-58)

நயமுனியும்போய்நடவதிபன்றாடொழுதொல்லைச்
சயமலிதில்லைத்தாபதர்விண்ணோர்தமைநீர்காள்
பயன்மலியாகத்தனைவருமெய்தப்பணிநீயென்
றயனுரைசெய்தானென்றுரைசெய்தானனைவர்க்கும்.

இ-ள். நாரதமுனிவரும் சிதம்பரத்திலே சென்று நடராசன் ஸ்ரீபாதந் தரிசனம் பண்ணிச் சடுதியிலே வந்து ஞான வீரமிகுத்த தில்லைவாழ்ந்தணரையும் தேவர்களையுங் கண்டு நீங்கள் புத்தி முத்திப்பயன் மிகுந்த யாகத்துக்கு எல்லாரும் வரத்தக்கதாக நீ கற்பியென்று பிரமா சொல்லி என்னை வரவிட்டார் என்று அனைவர்க்கும் சொன்னார்-- எ-று. (4-59)

நாரதனார்சொற்றேவர்கள்கேளாநகைசெய்தெம்
பேரவிதீயிற்றூவுகயாமேபெறுவோமிப்
பாரினினாளும்பேரருளாளன்பரதத்தே
னாரமுதுண்போமினியவியுண்போமன்றென்றார்.

இ-ள். நாரதமுனிவர் வார்த்தையைக்கேட்டுத் தேவர்கள் நகைத்து எங்களுடைய அவிர்ப் பாகத்தை எங்கள் முகமாகிய அக்கினியிலே ஓமம் பண்ணக் கடவர் அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம் இந்தப் பூமியிலே நாள்தோறும் தம்பிரானுடைய நிருத்தா நந்தத் தேன் பருகுகின்றோம் அதை ஒழிந்து இனியுங்கள் அவிர்ப்பாகங் கொள்ளோம் என்றார்கள்- எ-று. 

உங்களவியை நெருப்பிலே போடும் எங்களுக்கு வேண்டாம் அந்தப் பதமென
ஒருபொருள் நிகழ்ந்தமை கண்டுகொள்க. (4-60) 

மற்றவர்தஞ்சொற்பெற்றவனும்போய்மலரோன்முன்
சொற்றனனந்தக்கொற்றவன்யாமுஞ்சொன்னால்வந்
திற்றைமகங்கைப்பற்றுவரென்றேயிறைவாழும்
பொற்றிகழ்தொல்லைத்தில்லையினெல்லைபுகுந்துற்றான்.

இ-ள். அந்தத்தேவர்கள் வார்த்தையைக் கேட்ட நாரதமுனிவரும் மீளப் போய்ப் பிரமாவின் முன்பே அவர்கள் சொன்னபடியே சொன்னார், அந்த வார்த்தையைக் கேட்ட பிரமாவானவர் நாரதர் போய் மீண்டதும் ஒழிய இரண்டாவது நாமும் சென்றால் இங்குவந்து இன்று நடத்துகிற யாகத்தைக்கொண் டு முடிப்பர் என்று யோசித்து அநாதியே தம்பிரானார் திருநடஞ் செய்யும் பொலிவு விளங்குந் பழைய தில்லை வனத்தினெல்லையைச் சென்று கிட்டினார்- எ-று. (4-61)

மலரவனுந்தாபதரெதிர்கொண்டாரெனவாழ்வுற்
றலைபுனல்சென்றாடியபினெழுந்தாரழலாடு
நிலயம்வணங்காநிகழ்சிவகங்காதரநீறார்
தலைவபுயங்காபரணவிரங்காய்தகவென்றான். 

இ-ள். பிரமாவைப் பிரமரிஷிகள்யாவரும் எதிர்கொண்டார்கள். எதிர்கொண்ட மாத்திரத்திலே நம்முடைய எண்ணம் முடியுமெனப் பிரமா மிகவும் பிரியமுற்றுப் பொற்றாமரைப் பொய்கையிலே ஸ்நானஞ்செய்து நியமம் முடித்து எழுந்துசென்று தீயாடுங் கூத்தனை நமஸ்கரித்து விளங்காநின்ற சுத்தனே, கங்காதரனே, நீறுசார்ந்த திருமேனித் தலைவனே, நாகாபரணனே, என்னையும் அடியாருடன்கூட இரங்கி அருள் என்று விண்ணப்பஞ் செய்தார்-எ-று.

இரங்காய் சரணென்று பாடமாகில் தேவரீர்பாதத்திலே சரண்புக இரங்கி அருள் வீரென்று பொருளுரைக்க. (4-62)

வேதனும்வேள்விக்கேதிகழ்வானாய்விடைகொண்டே
தீதறமூலத்தானமிறைஞ்சிச்சிவலிங்கச்
சோதியைமேவச்செய்யிடமெங்குந்தொழுதன்பிற்
போதுகவென்றப்புலிமுனிசாலைக்குள்புக்கான்.

இ-ள். பிரமாவும் யாகம் பண்ணி முடிக்கக் கருத்தராய் நடேசமூர்த்தியை நமஸ்கரித்து விடைபெற்றுக்கொண்டு யாகத்திற்கு விக்கினம் வராமல் ஸ்ரீமூலத்தானமுடைய தம்பிரானாரையும் நமஸ்கரித்து வேண்டிக்கொண்டு திருப்புலீச்சர முதலான எங்குமுள்ள சிவலிங்கத் தானமெல்லாந் தொழுது அன்பினாலே வாருமென்று அழைத்து வியாக்கிரபாதர் கைப்பற்றிக் கொண்டு அவர் பன்ன சாலைக்குள்ளே புகுந்தார்- எ-று. (4-63)

இந்திரன்விண்ணோர்புலிமுனிநாகர்க்கிறையோன்மெய்ச்
சிந்தையரேனோர்சூழவிருப்பத்திகழ்போத
னந்தமிலாதீர்மகமுயல்வேனானனைவீரும்
வந்தணைவானீர்தந்திடுவீரேவரமென்றான்.

இ-ள். இந்திரன் தேவர்கள் வியாக்கிரபாதர் பதஞ்சலி கேவல சகலம் நீங்கின சுத்த இருடிகள் மற்றுமுண்டானவர்கள் சூழ்ந்து இருப்ப நடுவே தேசஸ் உடனேவிளங்கின பிரமாவானவர் எல்லாரையும் பார்த்து முடிவில்லாத சிவபத்தியையுடைய நீங்கள் யாவரும் யான் பண்ணுகிற யாகத்துக்கு வந்து அநுக்கிரகம் பண்ணும்படி வரந்தருவீர் என்று கேட்டார்- எ-று. (4-64)

பூமகனெண்ணம்புகறருபோதுட்பொருளுன்னி
யோமெனவோதாதவனிதரானாரயனும்பர்
கோமகனீயுட்கொண்டதெனென்னக்குளிர்கஞ்சத்
தேமலிதாரோய்செப்பியதன்றோசெயலென்றான்.

இ-ள். பிரமதேவர் தாம் நினைத்து வந்த காரியம் சொன்னவளவில் அதில் பிரயோசனம் பொசிப்பு மாத்திரமே யாதலால் அதில் அபேட்சையற்றுப் பொருந்தாமல் தலை கவிழ்ந்திருந்தார்கள். பிரமா இந்திரனைப் பார்த்து உனது அபிப்பிராயம் என்னையென்று கேழ்க்கக் குளிர்ந்த பரிமளம் வீசிய தாமரைமாலையை யுடையவரே நீர் அநுக்கிரகித்த தன்றோ எனக்கும் பொருத்தமென்றான்- எ-று. (4-65)

அங்கவனின்சொற்கொண்டுதுவண்டுள்ளயன்வேள்விக்
கெங்கணுமின்பத்தாபதருண்டாயினுமெந்தைக்
குங்கடமன்புக்கொப்பவரின்றென்றன்றோயா
னிங்குவருந்திற்றின்றெனநின்றங்கிரவுற்று.

இ-ள். அவ்விடத்துத் தேவேந்திரன் அநுமதிபண்ணின பிரிய வார்த்தையை உட்கொண்டு தில்லை வாழந்தணர் அநுமதிபண்ணாத இதற்குச் சித்தங் கலங்கிப் பிரமா யாகத்துக்கு நன்றாக உபதரிசனம் பண்ண எவ்விடத்தும் நல்ல பிராமணருண்டாயினும் எம்முடைய தம்பிரானிடத்தில் உங்களைப்போலப் பக்தியை யுடையவர்கள் வேறில்லை என்பதினாலல்லவோ யான் இவ்விடத்திலே வந்து வருந்தி யுங்களை வேண்டிக் கொள்ளுகிறேன் என்று பலகாலும் இரந்துசொல்லி- எ-று. (4-66)

பூவமர்வோனப்புலிமுனிகைப்பொன்முகிழ்பற்றி
யாவதெனானேதூதனுமானாலமர்தில்லைத்
தாபதரனார்யாரையுமாவாழ்தருமவேள்விக்
கேவுதனீயேமேவுதலன்றோவியல்பென்றான்.

இ-ள். கமலாசனர் அந்த வியாக்கிரபாதருடைய முகிழ்போன்ற ஸ்ரீ அத்தத்தைப் பற்றிக்கொண்டு சொல்லுகிறார் நீரே பராமுகமாயிருந்தால் எந்தக் காரியம் நிறைவேறும். யானே தூதனுமாய் வந்தென் காரியஞ் சொல்லினமையால் தில்லை வனத்தில் பொருந்தின பிரமரிஷிகள் எல்லாரையும் பெரிய லட்சுமி கரமானயாகத்துக்கு என்னுடனே கூட வரவிடுதலை நீரேற்றுக் கொண்டு செய்வதன்றோ கிரமம் என்றார் - எ-று. (4-67)

கோகனதன்சொற்கொண்டுபுலிக்கான்முனிகோப
மோகமிலின்பத்தாபதர்மூவாயிரவோரு
மாகருமன்றத்தேகனையாமிங்கினிநுங்கட
காகவணங்கப்போய்வருவீரென்றறிவித்து.

இ-ள். பிரமாசொன்ன வார்த்தையை வியாக்கிரபாதர் உட்கொண்டு குரோதமோ காதிகளை நீங்கின சத்திய ஞானத்துடனே கூடியிருக்கிற பிரமரிஷிகள் மூவாயிரவோரும் இந்திராதி தேவர்களும் கேட்ப யாம் இன்று முதலாக உங்களுக்காக நீங்கள் போய் வருமளவும் ஒப்பில்லாத சிதம்பரமூர்த்தியைத் திரிசந்தியும் நமஸ்கரிப்போம் நமக்காகப் போய் வாருங்களென்று அறிவித்து. (4-68)

போதுகவென்றப்புலிமுனிபோதன்பொதுமேவுஞ்
சோதியைவந்தித்தருள்விரவெய்தத்தொழுதொல்லோர்
நாதனொடன்புற்றகலநினைப்போர்நமனோடு
மேதகுமெய்யும்போமினியென்றேவிடைகொண்டார்.

இ-ள். வருகவென்று வியாக்கிரபாதர் பிரமா இவர்கள் சிதம்பரமூர்த்தியை நமஸ்கரித்து நிகழ்ந்த காரியம் விண்ணப்பஞ் செய்து திருவருள் பெறத் தொழுகிற பழைய பிரமரிஷி தேவர்கள் ஆகிய இவர்கள் ஆத்ம நாயகனுடனே இரண்டற அன்புறக் கலந்து போகத் துணிவோர் யமனுடனே தூலசரீரமும் போவதுபோலப் போனார்கள் - எ-று. (4-69)

சென்றபினந்தத்திருமுனியுஞ்சீரரவோனும்
பின்றிகழ்வேணிப்பிஞ்ஞகன்மன்றம்பிரியாத
வொன்றியசிந்தைத்தாபதர்மீள்வுற்றுடன்வாழ்வ
தென்றுகொலோவந்திடுநெறியேதோவெனநொந்து.

இ-ள். மூவாயிரம் பிரமரிஷிகளும் பிரமா உடனே சென்றபின்பு வியாக்கிரபாதரும், பதஞ்சலியும், பின்தாழ்ந்து விளங்குகின்ற சடைக் கற்றையையுடைய பிஞ்ஞகனாடும் சிதம்பரத்திலே யொன்றி இருக்கிற சித்த பாகத்தையுடைய பிரமரிஷிகள் மூவாயிரவோரும் மீண்டு எம்முடனே களிகூர்ந்து வாழுநாள் என்று உண்டாமோ அவர்களை அழைக்கும் உபாயம் ஏதோவென்று விதனப்பட்டுக் கொண்டு-- எ-று. (4-70)

அந்தமிலின்பத்தெந்தைபிரானாரமர்நாளிற்
சிந்தைவிளங்கத்தில்லைவிளங்கத்தேனாருங்
கந்தவலங்கற்சுந்தரசிங்கக்கவுடேசன்
வந்தமைசந்தச்செந்தொடையான்மேல்வருவிப்பாம்.

இ-ள். முடிவில்லாத பேரின்பத்தையுடைய- எந்தை பிரானாகிய- வியாக்கிர பாதரும் பதஞ்சலியு மிவ்வாறிருக்கு நாளில் தனக்குச் சித்த சுத்தியுண்டாகவும் தில்லைத்தலம் விளங்கவும் தேனிறைந்த வாசனையையுடைய மாலை யணிந்த சுந்தரனாகிய சிங்கவன்மனெனும் கவுட தேசத்தான் சிதம்பரத்திற்கு வந்தமையை அழகு பொருந்திய செம்மையாகிய செய்யுட்களினாலே மேற் சொல்லுவாம்-- எ-று. (4-71)

நடராசச்சருக்க முற்றிற்று.
ஆக திருவிருத்தம்-228 
------------------------


 

Related Content

கோயிற்புராணம் பொழிப்புரையுடன் பாகம்-2