logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

மதுரைச் சொக்கநாதர் உலா புராணத்திருமலைநாதர்

புராணத்திருமலைநாதர் எழுதியது

(உ.வே. சாமிநாதையர் குறிப்புரையுடன்)

 

Source: 
புராணத்திருமலைநாதர் இயற்றிய
மதுரைச் சொக்கநாதருலா.
இது திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர்களாகிய
கௌரவம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகளவர்கள்
விருப்பத்தின்படி மகாமகோதாத்தியாய தாக்‌ஷிணாத்ய கலாநிதி
உத்தமதானபுரம் வே. சாமிநாதையரால்
நூதனமாக எழுதிய குறிப்புரை முதலியவற்றுடன்
சென்னை: கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
(முதற் பதிப்பு)
பிரமோதூத *வருடம் பங்குனி *மாதம், 1931
Copyright Registered. (விலை அணா 6.)
-----------------------------------------------------------
PURNATIRUMALAI NATHAR
MATURAI CHOKKANATHAR ULA
MADRAS, 1931
National Bibliography of Indian Literature (NBIL) Microfilm 
NBIL record number 40836
-----------------------------------------------------------

இப்புத்தகத்திலடங்கியவை 

1. இந்நூற் குறிப்புரையில் எடுத்துக்காட்டிய நூற்பெயர்கள்
முதலியவற்றின் முதற் குறிப்பகராதி ...
2. முகவுரை 
3. நூலாசிரியர் வரலாறு 
4. இந்நூலின் பொருட் சுருக்கம் 
5. நூற்பாயிரம் 
6. மதுரைச் சொக்கநாதருலா மூலமும் குறிப்புரையும் இந்நூற் குறிப்புரையில் எடுத்துக்காட்டிய
நூற்பெயர்கள் முதலியவற்றின் முதற்குறிப்பகராதி.

 

அழகர்கலம் - அழகர் கலம்பகம்.
திருநா - திருநாவுக்கரசு நாயனார்.
இராச. உலா - இராசராச சோழனுலா.
திருவரங்கக் - திருவரங்கக் கலம்பகம்.
கந்த - கந்தபுராணம்.
திருவரங்கத் - திருவரங்கத்தந்தாதி.
கந்தரலங் - கந்தரலங்காரம்.
திருவள்ளுவ - திருவள்ளுவமாலை.
கந்தரனு - கந்தரனுபூதி.
திருவா - திருவாசகம்.
கம்ப - கம்பராமாயணம்.
திருவாரூர்ப் - திருவாரூர்ப் புராணம்.
கல் - கல்லாடம்.
கலி - கலித்தொகை.
திருவால - திருவாலவாயிடையார் திருவிளையாடற்புராணம்.
காஞ்சி, காஞ்சிப் - காஞ்சிப் புராணம்.
திருவிளை - திருவிளையாடற்புராணம்.
குறுந் - குறுந்தொகை.
சிதம்பர - சிதம்பர புராணம்.
சிதம்பரப், சிதம்பரப்பாட் - சிதம்பரப்பாட்டியல்.
தே - தேவாரம்.
சிலப் - சிலப்பதிகாரம்.
தொல் - தொல்காப்பியம்.
சிறப்புப் - சிறப்புப்பாயிரம்.
ந - நச்சினார்க்கினியருரை.
சிறுபாண் - சிறுபாணாற்றுப்படை.
நன் - நன்னூல்.
சீவக - சீவகசிந்தாமணி.
நெடுதல் - நெடுநல்வாடை.
சூ - சூத்திரம்.
பதிற் - பதிற்றுப்பத்து.
தக்க - தக்கயாகப்பரணி.
பரி - பரிபாடல்.
தமிழ்விடு - தமிழ்விடுதூது.
புறநா - புறநானூறு.
தனிப் - தனிப்பாடல்.
பெரிய - பெரியபுராணம்.
திருக்குற்றாலப் - திருக்குற்றாலப் புராணம்.
மதுரை - மதுரைக்காஞ்சி.
திருஞா - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
மேற் - மேற்கோள்.
திருவிளையாடற் பயகர - திருவிளையாடற் பயகரமாலை.    
திருச்சிற் - திருச்சிற்றம்பலக் கோவையார்.    
மீ.பிள்ளை,மீனாட்சி.பிள்ளை - மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
-----------------------------------------------------------


கணபதி துணை.

முகவுரை

திருநாவுக்கரசுநாயனார் தேவாரம்.

திருச்சிற்றம்பலம்.

 

மூளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேன் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தாளை வல்லசுரர் புரங்கண் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவ லுமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவால வாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றே னானே.

 

திருச்சிற்றம்பலம்.
-------------------

     தமிழ்மொழிக்கு உரியனவாகக் கூறப்படும் 96-வகைப்பிரபந்தங்களுள் உலாவென்பது ஒன்று. இஃது உலாப்புறமெனவும் வழங்கும். பேதைமுதற் பேரிளம்பெண் ஈறாகவுள்ள ஏழு பருவமாதர்களும் மால்கொள்ளும் வண்ணம் தலைவன் வீதியிற் பவனி போந்தானென்று கலிவெண்பாவாற் பாடப்படுவது இது. இதன் இலக்கணம் பன்னிருபாட்டியல் முதலியவற்றால் விளங்கும். "ஊரொடு தோற்றமு முரித்தென மொழிப' (தொல். புறத். சூ.30) என்பதன் உரையில்,'பக்கு நின்ற காமம் ஊரிற் பொது மகளிரோடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்று கூறுவர் ஆசிரியர்; அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலி வெண்பாட்டாகச் செய்யும் உலாச் செய்யுளாம்' என்று நச்சினார்க்கினியர் எழுதியிருத்தலால், இது பாடாண்டிணையின் பாற்படுமென்பதும் இவ்வேழு பருவ மகளிரும் பொதுமகளிரென்பதும் பெறப்படும். இந்நூல் போன்ற சைவப் பிரபந்தங்களிற் கூறப்பட்டுள்ள இம்மாதர்கள் உருத்திர கணிகையராவர். இவர்கள் தனிப்பெண்டுகளெனவும் வழங்கப் பெறுவர். சில பழைய சிவஸ்தலங்களில் உருத்திர கணிகையர் இறைவன் திருமுன்னர் அவற்றிற்குரிய திருவுலாப் பகுதியைப் பாடி வருதல் இந்நூல் அவ்வகையாரோடு பொருத்தமுடைய தென்பதைப் புலப்படுத்தும். 

 

    "பேதைமுத லேழ்பருவப் பெண்கள் மயக்கமுற
    ஓதுமறு குற்றானொள் வேலோனென் - றேதம் 
    அறக்கலி வெண்பாவி னாக்கலுலாவாம் 
    புறத்தசாங் கந்தாங்கிப் போற்று" (பிரபந்தத்திரட்டு)
 

என்பதனால் உலாக்களில் தலைவனுடைய தசாங்கங்கள் கூறப்பட வேண்டுமென்பதும், பன்னிருபாட்டியல், 234-ஆம் சூத்திரத்தில் சிற்றில், பாவை, கழங்கு, அம்மனை, ஊசல், கிளி, நாழ், புனலாட்டு, பொழில் விளையாட்டு முதலியன இவ்வேழு பருவமாதர்களின் செயல்களென்று கூறப்படுவதால் அவற்றைப்பற்றிய செய்திகளும் அமையவேண்டுமென்பதும் அறியப்படுகின்றன.

     சொக்கநாதருலாவென்பது மதுரையிற் கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ சொக்கநாதக்கடவுள் விஷயமாக இற்றைக்கு ஏறக்குறைய 400 வருஷங்களுக்கு முன்பிருந்த புராணத் திருமலைநாதரென்னுங் கவிஞர்பெருமானால் மதுரையில் அக்காலத்தில் அரசாட்சி செய்துவந்த வீரமாறனென்னும் அரசனது விருப்பத்தின்படி இயற்றப்பெற்றது. இது மதுரையுலாவெனவும் வழங்கும்.

     இந்நூலிலுள்ள கண்ணிகள், 516.

     ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளுடைய திருநாமங்கள் பலவற்றுள் சொக்கர் அல்லது சொக்கநாதரென்னும் திருநாமம் பண்டைக் காலத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலியவர்களாலும் தமிழ்ப்புலவர்கள் பலராலும் பெரும்பான்மையாக எடுத்தாளப் பெற்றுள்ளது. திருமுறைகள், திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், திருவிளையாடற் பயகரமாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக்கலம்பகம் முதலிய நூல்களிலுள்ள பிரயோகங்களும் சொக்கரப்பம் முதலிய வழக்குச்சொற்களும் இதனை வலியுறுத்தும். அவ்வாறே இந்நூலுள்ளும் அத்திருநாமம், 'சொக்கன்', 'அழகிய சொக்கன்'. 'அபிடேகச் சொக்கன்', 'பழியஞ்சிச் சொக்கன்' எனத்தனித்தும் அடையெடுத்தும் வந்துள்ளது. "திருவால வாய்ச் சொக்கநாதர்க் குலாப்பாடினான்" என்று இந்நூற் சிறப்புப்பாயிரச் செய்யுளும் இத்திருநாமத்தையே கூறும்.

     பிற சிவஸ்தல உலாக்களில், 'சிவபெருமான் திருவிழாவில் ஒருநாள் தேரில் உலாவந்தனர்; அன்றே ஏழு பருவ மாதர்களும் முறையே அக்காட்சியைக் கண்டு மால்கொண்டார்கள்' என்று கூறப்பட்டுள்ளது. இவ்வுலாவோ, 'ஸ்ரீ சொக்கநாதர் ஏழுநாட்கள் பவனி போந்தனர்; ஒவ்வொருநாளும் வேறு வேறான ஊர்தியில் எழுந்தருளினர்; ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு பருவப்பெண் முறையே தரிசித்தனள்' என்று கூறும். மதுரையிற் பண்டைக் காலத்தே ஏழுநாளில் ஒருதிருவிழா நடந்த்தென்று, "கழுநீர் கொண்ட வெழுநா ளந்தி" (427) என்ற மதுரைக்காஞ்சிப் பகுதியால் தெரிகின்றது. இவ்வாறே திருக்குறுக்கை வீரட்டத்திலும் ஏழுநாளில் ஒரு திருவிழா நடைபெற்றதை, "ஆத்தமா மயனுமாலு மன்றிமற் றொழிந்த்தேவர், சோத்தமெம் பெருமானென்று தொழுது தோத்திரங்கள் சொல்லத், தீர்த்தமா மட்ட மீமுன் சீருடை யேழு நாளுங், கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்ட னாரே" (தே. திருநா.) என்ற தேவாரத்தாலறியலாகும்.

     இங்ஙனம் நடைபெறும் திருவிழா, பவுநம் எனப்படும்; 

 

    "சவுரஞ்சாந் திரஞ்சா வித்திரங் கவுமா ரந்தைவீ கந்தழை பவுநம், 
    பவுதிகங் கணஞ்சை வம்மென முறையே யிருபத்தேழ் பதினேழு பதினைந், 
    துவமையில் பதின்மூன் றொன்பதே ழைந்தா மொரு 
    மூன்றொன் றியாற்றுநா ளென்னுந், 
    தவமுளார் புகழு மாகமஞ் சிறந்த தவுமிய முனிவன்மா ணாக்க" 
    திருப்பெருந்துறைப் புராணம், புரூரவன் திருவிழாச் செய்த படலம், 50.
 

     இந்நூலுள், சொக்கநாதர் இயற்றிய 64 திருவிளையாடல்களும் ஒன்பது பகுதிகாளாகப் பிரிக்கப்பட்டு முதல் மூன்று திருவிளையாடல்கள் முதற்பகுதியிலும், அடுத்த ஐந்து திருவிளையாடல் குழாங்களின் கூற்றிலும், ஏனையவை பின்னர் எவ்வெட்டாக ஒவ்வொரு பருவத்திலும் அமைக்கப்பெற்றிருக்கின்றன. இவ்வாறமைந்த திருவிளையாடல்களின் முறை, பரஞ்சோதி முனிவரியற்றிய திருவிளையாடற் புராணத்திலுள்ளதை ஒத்துள்ளது. அம்முனிவர் இந்நூலாசிரியருக்குப் பிற்காலத்தவரென்று தெரிகின்றமையின் அவருடைய புராணத்திற்கு முதனூலாகிய வடமொழி நூலிலிருந்தோ அன்றி வேறொன்றிலிருந்தோ இம்முறை இந்நூலாசிரியரால் அறிந்து அமைக்கப் பெற்றதெனக் கொள்ளவேண்டும்.

     ஆனாலும், "தென்பாற், குலவு வடபாற் குடபாற் - கலையூரும், சூலிக்குங் காளிக்குந் துய்ய சுடராழி, மாலுக்குங் கோயில் வகுத்தமைத்து" (கண்ணி, 26-7). "பதஞ்சலிக்குச் சீர்க்கூத் தருள் வார்" (119-20). "நல்லபணி, நிற்கவெள்ளி மன்றாடு நித்தர்" (165-6) என வருவனவும், "செந்தமிழை யூமை தெரிவித்ததும்" (411) என்பது முதலிய இடங்களில் திருவிளையாடல்களைக் குறிப்பிக்கும் தொடர்மொழிகளும், "அபிடேகச் சொக்கன்' என்பது முதலியவையும் இவ்வாசிரியர், திருவாலவாயுடையார் திருவிளையாடற்- புராணத்தை அறிந்து அதிலிருந்து சில செய்திகளையும் சொல்வழக்காறுகளையும் அமைத்துள்ளாரென்று சொல்ல இடந்தருகின்றன.

     இதனுள் ஏழுவகைப் பருவங்கட்கேற்ப மாதர்களுடைய செயல்களையும் மனநிலைகளையும் ஆசிரியர் கூறிச்செல்லும் முறையும் உவமைகளும், சிவபெருமானுடைய ஏற்றத்தைக்கூறும் பகுதிகளும் படிப்போர்க்கு மிக்க இன்பத்தை அளிக்கும்.

     ஏழு பருவ மகளிருடைய உணர்ச்சிகளின் நிலையைப் புலப்படுத்தும் பகுதிகள் ஆதியுலா, மூவருலா என்பவற்றைப் பின்பற்றியும், தலவிருட்சங்களைப் பற்றிக்கூறும் பகுதி திருவானைக்காவுலாவைப் பின்பற்றியும் அமைந்துள்ளன.

     மேலேகாட்டிய உலாவின் இலக்கணங்களுள், தசாங்கம் 7-ஆம் கண்ணி முதலியவற்றிலும், சிற்றில் பாவை கழங்குமுதலியன 145 முதலியவற்றிலும், ஊசல் 25 முதலியவற்றிலும்,கிளியைத் தூதுவிடுதல் 302 முதலியவற்றிலும், யாழ் 477 முதலியவற்றிலும், புனலாட்டு 198 முதலியவற்றிலும், பொழில் விளையாட்டு 354 முதலியவற்றிலும் கூறப்பட்டுள்ளன.
-----------

இந்நூலில் வந்துள்ள மதுரைத்தல சம்பந்தமான குறிப்புக்களும் பிறவும். 
விநாயகர்: கற்பகவிநாயகர், கண்ணி, 97.

ஸ்ரீ சொக்கநாதர் திருநாமங்கள்: அட்டாலைச் சேவகன், 276;
அபிடேகச்சொக்கன், 157; அழகிய சொக்கர், 19, 21, 244;
எண்ணெண்டிருவிளையாட்டண்ணல், 263-4; கடம்ப வனத்தான், 473; கான்மாறியாடுகின்ற காரணன், 434; கூடலமலர், 424-5; சித்தர், 334; 
சுந்தரமாறன், 516; செந்தமிழாகரன், 496; 
சேவிக்க வாழ்விக்குந் தெய்வப்பெருமான், 245; சொக்கன், 210,334, 362;
திருவாலவாயான், 215, 231, 301, 352; பழியஞ்சிச்சொக்கன், 275; 
பாண்டித் திருநாடன், 9; பொதியப் பொருப்பன்,7; மணாளன், 379,438;
மதுராபுரிவேந்தன், 10; மதுராபுரேசன், 32,195, 438, 494; மதுரேசன், 381, 516; 
மாணிக்கவல்லி மணவாளன், 130; வெள்ளிமணி மன்றுடையான், 447;
வெள்ளிமன்றாடு நித்தர், 166; வைகைத்துறைவன், 8, 157. 
அம்பிகையின் திருநாமங்கள்: அங்கயற்கண்ணியம்மை, 6,23, 39, 243, 516; 
அருட்பெண், 149-50; தமிழறியும் பேராட்டி, 5; மரகதவல்லி, 5; மாணிக்கவல்லி, 5, 180.
ஆலயத்தின் திருநாமம்: திருவாலவாய், 71, 362. 
மதுரையின் திருநாமங்கள்: ஆலவாய், 334, 362, 407; கடம்பவனம், 210, 232, 414, 473; கூடல், 424; திருவாலவாய், 126, 215, 231, 301, 352; நான்மாடக்கூடல், 204, 434;மதுராபுரி, 10, 30, 110, 362; வாலவாய், 408. 

தீர்த்தங்கள்: எழுகடல், 186; பொற்றாமரை, 414; வைகை, 8, 85, 248, 269. 

தலவிருட்சம்: கடம்பு, 361. 

விமானம்: இந்திரவிமானம், 18, 195, 506. 

மன்றம்: வெள்ளிமன்று, 166, 447.

மண்டபம்: மண்டபங்கணாபன், 48. 

வாயில்: முத்தளக்குந் திருவாயில், 144. 

ஸ்ரீசொக்கநாதர் தசாங்கம்: (1) மலை - பொதியில், (2) ஆறு - வைகை, (3) நாடு - பாண்டிநாடு, (4) நகர் - மதுரை, (5) மாலை -கொன்றை, (6) குதிரை - இடபம், (7) யானை - இடபம் (8) கொடி - இடபம், (9) முரசு - மறை, (10) செங்கோல் - கருணை. 

தெய்வங்கள்: அரம்பையர், 114; இந்திரன், 18-ஆம் கண்ணி முதலியன; இரதி, 452; கலைமகள், 426, 431; காமன், 120 முதலியன; காலன் , 178 முதலியன; காளி, 27; சூரியர், முதலானோர், 100; சூலி, 27; திருமகள், திருமால், 1 முதலியன; நந்தி தேவர், 66; பதினெண் கணம், 101; பிரமன், 1 முதலியன; முருகக்கடவுள், 98. 

வேறு தலங்களும் தலங்களில் நிகழ்ந்த அருட் செயல்களும்:
அருணாசலம், 314; காஞ்சியில் இறைவன் உமாதேவியார் தழுவக் குழைந்தது, 356-8; சிதம்பரம், 92; திருவாரூரில் இறைவன் செம்பொற்றியாகம் அளித்தது, 507-8. 

பிறதல விருட்சங்கள்: ஆத்தி, ஆல், கடம்பு, குரா, கொன்றை, தில்லை, பலா, பாடலம், பாலை, மகிழ், மருது, மா, வெண்ணாவல், 356 - 61. 

சிவபெருமானுடைய வீரச் செயல்கள்: அந்தகாசுர வதம், 259; இராவணனை நெரித்தது, 261, 436; காம தகனம், 262; காலசங்காரம், 260, 437; சரபாவதாரம், 16; தக்கயாக சங்காரம், 502; திரிபுரசங்காரம், 17, 143, 260-61; பிரமன் சிரங்கொய்தது, 260; யானையை உரித்தது, 260-62. 

நாயன்மார்களும் ஏனையடியார்களும் : கண்ணப்ப நாயனார், 380-81; குலச்சிறை நாயனார், 95; சண்டீசர், 91; சுந்தரமூர்த்தி நாயனார், 89, 93; சேரமான் பெருமணாயனார், 93; திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், 87, 94; திருநாவுக்கரசு-நாயனார், 88; திருநீற்றுச் சோழர், 92; நின்றசீர் நெடுமாறநாயனார், 94; மாணிக்கவாசகர், 90, 478. 

சற்றேறக்குறைய 40 வருஷங்களுக்கு முன்பு இந்நூலின் ஏட்டுப்பிரதி ஒன்று திருநெல்வேலியிலிருந்த வித்வான் ஸ்ரீ சாலிவாடீசுவர ஓதுவாரவர்கள் வீட்டிற் கிடைத்தது. அப்பிரதி மிகவும் பழமையானது. அதன் முதலில் ஏகாம்பரநாதருலாவும் அப்பால் இந்த உலாவும், இதற்குப் பின் திரிசிரகிரியுலாவின் இறுதிப் பகுதியுள்ள ஓரேடும் இருந்தன. அவ்வொற்றையேட்டிற் காணப்பட்ட கண்ணிகள் வருமாறு: 

 

    "................ மட்டு வார்குழலாம்
    நல்லாளோ டின்ப நகைமேவிச் - சொல்லார்ந்த
    மூவர் முதலோர் முழுத்தமிழு மன்புடையார்
    யாவர் தமிழு மணிந்தருள்வோன் - ஆவியாய்
    அத்தனு மாவதன்றி யன்னையுந்தா னாயபிரான்
    சித்த மகிழ்தென் சிரகிரியான் - சுத்த
    நிலாவும் பகீரதியு நீண்ட சடைமேல்
    உலாவவே போந்தா னுலா."


இந்நூலின் முதற் பகுதி கிடைக்கவில்லை. 

     இந்தச் சொக்கநாதருலாப் பிரதிகள் வேறு கிடைக்குமோவென்று இதுகாறும் தேடிப்பார்த்தும் அகப்படாமையால், இதுவும் வீணாய்விடுமே யென்னும் அச்சத்தாலும், இது தக்கவச்**கள் வீட்டிலிருந்து கிடைத்த பிரதி யென்னும் துணிவாலும் இப்பொழுது இதனை ஆராய்ந்து வெளியிடலானேன். 

     இப்போது திருப்பனந்தாட்காசிமடத்துத் தலைவர்களாக விளங்கும் கௌரவம் பொருந்திய ஸ்ரீலஸ்ரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகளவர்களு தமிழ்க் கல்விகேள்விகளிற் சிறந்தவர்களென்பதும், முத்தமிழ்ப்புலமைவாய்ந்து பிரசித்திபெற்று விளங்கிய கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகரவர்களுடையமரபில் உதித்தவர்களென்பதும், தமிழ்க்கல்வி பரவவேண்டுமென்னும் நோக்கத்துடன் பல நற்காரியங்களைச் செய்துவருகிறார்களென்பதும் அநேகருக்குத்தெரிந்திருக்கலாம்; *மேற்படி மடத்து மூல புருஷர்களாகிய ஸ்ரீலஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகளவர்கள் இயற்றிய பிரபந்தங்களைக் குறிப்புரையுடன்வள்ளியிட்டு யாருக்கும் இலவசமாக வழங்கச்செய்யவேண்டுமென்று எண்ணிச் சிலமாதங்களுக்கு முன், கந்தர் கலிவெண்பாவை முதலில் வெளியிடச் செய்தார்கள். 

     சொற்சுவை பொருட்சுவை நிறைந்த மதுரைச்சொக்கநாதர் தமிழ்விடுதூது என்னும் பிரபந்தத்தை முன்பு நான் வெளியிட்டபோது அதுவிஷயத்தில் பொருட்கவலை சிறிதும் உண்டாகாதபடி செய்வித்து இந்த இராசதானியிலுள்ள கலாசாலைகளுக்கும் புத்தகசாலைகளுக்கும் வேறு வகையான கல்வி நிலையங்களுக்கும் *மேற்படி பிரபந்தத்தின் பிரதிகளை இலவசமாக வழங்கி உபகரித்தார்கள். அதே நோக்கத்துடன் இந்தச் சொக்க நாதருலாவை வெளியிடும்விஷயத்திலும் எனக்குச் சிறிதும் பொருட்கவலை உண்டாகாதபடி செய்து ஊக்கமளித்தார்கள். இவ்விஷயமாக அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன். நான் பரிசோதித்து வெளியிடக் கருதியிருக்கும் மற்றப் பிரபந்தங்களும் இத்தகைய ஆதரவினால் முறையே ஒவ்வொன்றாக வெளிவருமென்று எண்ணுகிறேன். 

     சென்னை ஸர்வகலா சங்கத்தாரால் சடத்தப்பெறும் ஓரியண்டல் டைடில் என்னும் வித்வான்பரீக்ஷை ஸம்பந்தமாக *மேற்படி ஸ்வாமிகளவர்கள் ஏற்படுத்தியிருக்கும் பரிசின் விவரத்தை யாவரும் தெரிந்துகொள்ளும்படி இங்கே தெரிவிக்கிறேன்.

     *மேற்படி பரீட்சையில் வருடந்தோறும் தமிழில் முதல்வகுப்பில் முதலவராகத் தேர்ச்சிபெறும் மாணாக்கருக்கு ஆயிரம் ரூபாய்ப் பரிசு சென்ற இரண்டுவருஷங்களாக அளித்துவருகிறார்கள். இந்தப் பரிசை 1929-ஆம் வருஷத்தில், சென்னைக் கிறிஸ்டியன் காலேஜில் தமிழ்ப் பண்டிதராகவுள்ள வித்வான் சிரஞ்சீவி வி. மு. சுப்பிரமணிய ஐயரும், 1930-ஆம் வருஷத்தில், சிதம்பரம் அண்ணாமலை ஸர்வகலாசாலையல் தமிழ்ப்பண்டிதராகவுள்ள வித்வான் சிரஞ்சீவி ஆ. பூவாராகபிள்ளையும் முறையே பெற்றார்கள். இந்தப் பரிசளிப்பு சாசுவதமாக நடைபெறும் பொருட்டு *மேற்படி காசி மடத்துத் தலைவரவர்கள் 1928-ஆம் வருஷம் ஆகஸ்டு மாத்த்தில் அமெரிக்கா கண்டத்து டாரண்டோ என்னும் நகரத்திலுள்ள 'தி மானுபாக்ச்சரர்ஸ் லைப்இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி" (The Manufacturers Life Insurance Company)-யில் தங்கள் ஆயுளை ரூபாய் நாற்பதி னாயிரத்துக்கு இன்ஷ்யூர் செய்து, 4,46,416 என்னும் எண்ணுள்ள பாலிஸியை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த மூலதனம் 15 வருஷங்களில் நிறைவடையும். அது வரையில் இப்பரிசை வேறு வரும்படியிலிருந்தே வருடந்தோறும் அவர்கள் தவறாமல் அளித்து வர நிச்சயித்திருக்கிறார்கள். தமிழ்படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயை ஒரேகாலத்திற் பெறும்படியான அதிர்ஷ்டம் பெரும்பாலும் இருந்ததில்லை. ஆதலின் இதனைக் கண்ணுறும் தமிழ் மாணாக்கர்கள் விசேடமான ஊக்கத்துடன் தமிழை நன்றாகப் படித்து இப்பரிசைப் பெறுவதற்குரியவழியைத் தேடிக் கொள்ளுவார்களென்று நம்புகிறேன். 

     தமிழின் வளர்ச்சியின் பொருட்டு அருங்கலை விநோதர்களாகிய *மேற்படி ஸ்வாமிகளவர்கள் செய்யக் கருதியிருக்கும் நற்காரியங்கள் இன்னும் பல. வித்தியா பரிபாலனத்தை அவர்கள் செய்து கொண்டு அரோக திடகாத்திரத்துடன் நெடுங்காலம் விளங்கும்படி செய்வித்தருளும் வண்ணம் ஸ்ரீசொக்கலிங்கப் பெருமானைப் பிரார்த்திக்கின்றேன். 

     இந்நூலை ஆராயுங்காலத்தும் பதிப்பிக்குங்காலத்தும் உடனிருந்து உதவிசெய்தவர்கள் சென்னை விமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிஞ்சீவி வித்வான், சு. கோதண்டராமையரும், மேலேகூறிய வித்வான் சிரஞ்சீவி வி. மு. சுப்பிரமணிய ஐயரும், மோகனூர்த்தமிழ்ப் பண்டிதர் சிரஞ்சீவி கி. வா. ஜகந்நாதையரும் ஆவர்.

              இங்ஙனம், 
திருவேட்டீசுவரன் பேட்டை, 27-3-1931.       வே. சாமிநாதையர்.
-----------------------------------------------------------

நூலாசிரியர் வரலாறு

     இந்நூலாசிரியரது இயற்பெயர் திருமலைநாதரென்பது. இவர் காஞ்சீபுரம் ஞானப்பிரகாசமடத்துச் சிஷ்ய பரம்பரையைச் சார்ந்தவர். திருமுறைகளிலும் பழைய தமிழ் நூல்களிலும் ஸ்தல புராணங்களிலும் பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் பயிற்சியுள்ளவர். இவருடைய பக்தியையும் செய்யுள்செய்யும் நயத்தையும் அறிந்த தில்லைமூவாயிரவரும் * யதிகளும் மற்றப் பெரியோர்களும் சைவபுராணத்தின் ஒரு பகுதியாகிய சிதம்பரபுராணத்தைத் தமிழிற் செய்யுள் நடையாக மொழிபெயர்க்கும்படி சொன்னமையால் அங்ஙனமே செய்ய உடன்பட்டனர். மலைநாட்டிலிருந்து வடமொழிப் பிரதியொன்றை வருவித்து அதனைக் கொண்டு அவர்கள் கூறியவண்ணம் மொழிபெயர்த்தனரென்றும், அப்பிரதியில் அப்புராணத்தின் பிற்பகுதி இல்லையென்றும், பின்பு அகப்படாமையால் அப்பகுதி இவராற் செய்யப்படவில்லையென்றும், அது கிடைக்கவில்லையேயென்ற வருத்தம் இவருக்கு இருந்ததென்றும் தெரிகின்றது. 

     அப்புராணத்தைக்கேட்டு அதன்சொற்சுவை பொருட்சுவைகளை நன்றாக அறிந்த பெரியோர்கள் இன்புற்று இவரைப்புராணத் திருமலைநாதரென்று சிறப்பித்து வழங்குவாராயினர். அப்புராணத்திலுள்ள, "முற்றுமுணர்" என்னும் செய்யுளால் இவர் உமாபதி சிவாச்சாரியாரிடத்திற் பேரன்பு பூண்டொழுகியவரென்பதும் அவர் காலத்திற்குப் பிற்பட்டவரென்பதும் அறியப்படுகின்றன. 

     இன்னும், அப்புராணத்திலுள்ள, "சூழுமாகடல்" என்னும் செய்யுள் இவர் சாலிவாகன சகாப்தம் 1430 (**௧௪௩0) (கி.பி. 1507)- ஆம் வருடத்தில் அந்தப் புராணத்தைச் செய்யத் தொடங்கியதாகக் கூறுதலால் இவர் காலம் இற்றைக்கு 400 வருடங்களுக்கு முற்பட்டதென்று தெரிகின்றது. 

     சொக்கநாதருலாவிலுள்ள, "மன்னன்குடைவீர மாறன குலதிலகன்" (33) என்னுங்கண்ணியாலும், "வேதநூற் றென்முழைசை" என்னும் சிறப்புப்பாயிரச் செய்யுளாலும் இவர், மதுரையில் அரசாண்டுகொண்டிருந்த வீரமாறனென்பவனால் ஆதரிக்கப்பெற்றவரென்றும் அவனது வேண்டுகோளின்மேல் இந்நூல் செய்து அரங்கேற்றப்பெற்றதென்றும் விளங்குகின்றது.
---------------------
* சந்நியாசிகள்


     பின்னும், இவ்வுலாவில் வந்துள்ள மண்டபங்கணாயன், முத்தளக்குந்திருவாசல் என்னும் இரண்டும் மதுரைத்திருப்பணி மாலையிலுள்ள, "தென்னவனடத்தாவணி மூலத்தின்" என்னும் செய்யுள் முதலியவற்றால் மல்லைய சின்னப்ப நாயக்கரென்பவரால் சகவருடம் 1448**(கி.பி.1526) - இல் செய்விக்கப்பெற்றனவென்று தெரிதலால் அக்காலத்தின் பின்னர் இவ்வுலா இயற்றப் பெற்றதென்று விளங்குகின்றது. அச்செய்யுளிற் குறிப்பிடப்பட்ட தென்னவன் இவ்வீரமாறன்றானோ வேறு யாரோ தெரியவில்லை. 

     இவருக்குப் பரஞ்ஜோதியென்ற பெயருள்ள குமாரர் ஒருவர் இருந்தார். அவர் இவரிடத்தே தமிழ்க் கல்வி கற்றவர்; இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; சிதம்பரத்தில் தந்தையாரைப்போலவே விசேடப் பற்றுடையவராக இருந்தார். பொருத்த இலக்கணமும் பிரபந்த இலக்கணமும் அமைந்த சிதம்பரப் பாட்டியலென்னும் நூலொன்று அவராற் செய்யப்பெற்றது. 

     இந்நூலாசிரியர் செய்த நூல்களாக இப்பொழுது தெரிந்தவை சிதம்பர புராணமும் இந்தச் சொக்கநாதருலாவுமே. "சிதம்பர புராணமுதனூலும் மதுரையுலாவும் பகர்ந்தோன்" (சிதம்பரப்பாட். சிறப்புப்.) என்பதனால் இவ்விரண்டையன்றி வேறு சில நூல்களும் இவராற் செய்யப்பெற்றனவென்று சொல்வதற்கிடமுண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை. 

     இவர் செய்த நூல்களை ஆராயும்பொழுது இவர் சைவ சமயத்திலும் சிவ ஸ்தலங்களிலும் மிக்க பற்றுடையவரென்றும் பல ஸ்தலங்களுடைய சரித்திரங்களையறிந்து அவற்றைப்பற்றிய செய்திகளை அழகுபெற அமைக்கும் தன்மை வாய்ந்தவரென்றும் சிவஞானத்தைப் பெறவேண்டுமென்னும் நோக்கமுடையவராக இருந்தாரென்றும் யாவர்க்கும் புலப்படும்படி எளிய சொற்களையும் சொற்றொடர்களையும் அமைத்துச் சந்தக்கவி செய்தலில் ஆற்றலுடையவரென்றும் சிவபெருமானுடைய குண விசேடங்களையும் திருவிளையாடல்களையும் பாராட்டித் துதிப்பதில் பெருவேட்கையுடையவரென்றும் தமிழ்மொழியிடத்து மிக்க அன்புடையவராக இருந்தாரென்றும் தெரிகின்றது. 

     இந்நூலில், சைவசமயத்தை, வைதிகசைவம் (கண்ணி, 32), சைவச்சலதி (70), சுத்தநெறி (96) எனச்சிறப்பித்தலும், "சைவ சவுராதி சண்டாந்த வர்ச்சனைகள்" (47) எனலும் இவருடைய சைவசமயப்பற்றையும், தேவாரங்களை, "அருட்பாடல்" (8),"மறைத்தண்டமிழ்" (35-6), "முத்திதருஞ்சொல்"(154), "சுத்தத்திருப்பதிகம்"(154-5), "அரியநெறிச் செய்கைத்தமிழ்" (247-8) எனப் பாராட்டுதல் இவருக்கு அவற்றின்பாலுள்ள அன்பையும், சொக்கநாதர் திருவுலாப் போதுகையில் உடன் வந்தவர்களைப்பற்றிச் சொல்லும் பகுதியில் முதலில், சைவ சமயாரியர்களையும் பிற பெரியார்களையும் கூறிப் பின்பு கடவுளர்களைக் கூறுதல் இவருக்குச் சிவனடியார் மாட்டுள்ள பக்தியையும் புலப்படுத்தும். 

     இவர் இந்நூலுள் இடையிடையே உவமை, உருவகம், சிலேடை, சொற்பொருட் பின்வருநிலை முதலிய அணிகளமையப் பாடியுள்ளார். அவ்வணிகளோடு நீதிகள் சிலவற்றையும் விளக்கியிருக்கின்றனர்: 

     உவமை: 52-8, 60, 63-4, 78-83, 113-6, 138-42, 176-84, 190-96, 218, 237, 250, 293-5, 299-300, 319-20, 322-5, 341-5, 348-51, 374-8, 393-7, 400, 431-2, 441-6, 454-6, 462-8, 508. 

     உருவகம்: 133-7, 230-32, 243, 245, 290-91, 321, 338-9, 449-50, 497-9. 

     சிலேடை: 239-40, 296-8, 398-400, 416-9, 505. 

     சொற்பொருட் பின்வருநிலை: 86-7, 178, 181-2. 

     நீதிகள்: "பொய்வாழ் வடைந்தோர் புலன்கள்போ லொன்றோடொன், றொவ்வா தலைகின்ற வோதியான் - பவ்வத், துலக மயக்க மொழிந்தோர் மனம்போற், கலகஞ் சிறிதறியாக் கண்ணாள்" (141-2), "தவமடைந்தோர் வெவ்வினைபோ னாறும், இளைக்கவடிக் கொண்ட விடையான்" (179), "செங்கோ லொழித்தெவர்க்குந் தீது புரிவேந்தர், வெங்கோ லினுங்கொடிய வேற்கண்ணாள்*" (295), "வஞ்சம் புரிவேந்தர் மண்டலத்துள் வாழ்வோர்தம், நெஞ்சம்போ னின்றலையு நேரிடையாள்*" 299. 

     அரும்பதங்கள்: கட்டாண்மை, 256, 290; *கான்-இசை, 9, 87; குனிப்பம், 73; சொற்பாடு-புகழ், 259; பணிலம் -ஒருவகைவளை, 171; மகுடி - ஒருவகை *வாத்தியம், 103; முகிழ்த்தம் - முகூர்த்தம், 75; வாறு - விதம், 328, 432. 

     ஒரு பொருள்தரும் இரண்டு சொற்களைச் சேர்த்து வழங்குதல்: கடலாழி, 88; திங்கண்மதி, 229; வல்லிக்கொடி, 113. 

     இந்நூலாசிரியர் வரலாற்றை அறிந்துகொள்வதற்குக் கருவியாக இருந்த செய்யுட்கள்.

 

    1. முற்றுமுணர் மெய்ண்கட சந்ததிக்கோர் தீபமென முதன்மை கொண்ட
    கொற்றவன்றன் குடிமருவு குலவுமுமா பதிசிவன்பொற் கோயி லுண்மை
    சொற்றபுரா ணமுமிருக்கப் பின்னுமொரு வகையானுஞ் சொல்வான் புக்கேன்
    மற்றவன்றன் றிருவடியின் வழிவந்தோர்க் கடியனெனும்வழக்கான் மன்னோ.

 

    2. ஆற்றல் சான்றமூ வாயிர மறையவ ரரனுக்
    கேற்ற தொண்டர்கண் மறைநெறி யெதிகளா யுள்ளோர்
    போற்ற ருஞ்சிதம் பரத்திடைப் புகழினைத் திகழச்
    சாற்று வாய்வட மொழிவழித் தமிழினா லென்றார்.

 

    3. மறுவி லிங்கிது கூறயான் வல்லனோ புலத்தைச்
    செறுநர் கேட்டிடச் சிதம்பர புராணமென் றருட்பேர்
    நிறுவி யிப்பவ நீத்தற்கு நிமித்தமெய்ஞ் ஞானம்
    பெறுது மென்பதோர் கருத்தினாற் றுணிந்தனன் பெரிதும்.

 

    4. குழு மாகடற் புடவியான் சுடர்முடிச் சகற்கீ
    ரேழு நூறுடன் முப்பஃ தியைந்தவாண் டெல்லைத்
    தாழு மாமதிச் சடைமுடித் தனிமுத லென்றும்
    வாழு மம்பலப் பெருமையை வழுத்தலுற் றனன்யான்.
    (சிதம்பர புராணம், பாயிரம், 13, 15, 17-8.)

 

    5. இந்த வெல்லை மலைநாட் டிடத்தினும்
    வந்த தெய்வ வடமொழி யின்படிச்
    செந்த மிழ்த்தொடை நூற்பாற் றெரித்தனம்
    முந்து மற்றதும் வந்தான் மொழிதுமால்.
    (மேற்படி - துற்றரிசனச்சருக்கம், 98)
    
    6. பூமன்னு பொழில்வெண்ணை மெய்கண்டான் கச்சிப் 
               புகழ்புனைதத் துவஞான ப்ரகாசமாய் வந்து
    பாமன்ன வுரையென்ன வவனருளா லவன்றன்
               பதம்பரவிச் சிதம்பரப்பாட் டியலெனப்பேர் வகுத்தான்
    மாமன்னு சிதம்பரபு ராணமுத னூலும்
               மதுரையுலா வும்பகர்ந்தோன் மருவுகுல மைந்தன்
    தேமன்னு புராணகலை பலதெரிபு ராணத்
               திருமலைநா யகனருளின் றே*சுபூண்டோனே.
    
    7. சிதம்பரப் பாட்டியலைச் செய்தான் றமிழாற்
    சிதம்பரபு ராணமுதற் செய்து - விதம்பெறுசீர்
    சேர்ந்த புராணத் திருமலைநா தன்றவத்தாற்
    சார்ந்தபரஞ் சோதியென்பான் றான். (சிதம்பரப். சிறப்புப்.)
    
    8. திருமிகுதென் னவனடத்தா வணிமூ லத்தின்
    திருநாட்குத் தேர்புதிதா வீதி யூர்கள்
    மருவியசொக் கருக்கினிதாம் **சை சந்தி
    மண்டபங்க ணாயகனா யகத்துப் பத்தி
    அருண்மிகுசின் னீச்சுரமுத் தனக்கும் வாயில்
    அகவணைகள் புறவணைக ளன்பாற் செய்தான்
    ஒருமைதிகழ் மல்லையசின் னப்ப பூபன்
    ஓங்குபுகழ் சேர்குத்தி யூரன் றானே.
    (மதுரைத் திருப்பணிமாலை, 87.)
-----------------

இந்நூலின் பொருட்சுருக்கம்

 

     திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசொக்கநாதக்கடவுள் திருவுலாப் போதத்திருவுளங்கொண்டு, பூசைமுதலியாவற்றை ஏற்று மண்டபங்கணாயனென்னும் மண்டபத்தில் வீற்றிருந்து திருவாபரணங்களை அணிந்து திருத்தேரில் எழுந்தருளிச் சைவசமயாசாரியரும் பிற பெரியோர்களும் தேவர்களும் சூழ்ந்துவர மறுகிற் பவனி வருவராயினர். அப்பொழுது, கின்னர மகளிர் முதலிய பலவகைமாதர்கள் குழாங்கொண்டு அவருடைய திருமேனியழகிலே ஈடுபட்டு மயங்கி நின்றார்கள்.

     அவர்களில், பேதைப்பருவப் பெண்ணொருத்தி, சிற்றில் அமைத்துச் சிறுசோறட்டு விளையாடிப் பின், சொக்கநாதர் திருவிளையாடல்களைக் கிளிகள் கூறக்கேட்டு மகிழ்வுற்றுத் தாய்மாருடன் இருக்கும்பொழுது, அவர் எழுந்தருளுவதையறிந்த தாய்மார் தரிசிக்கச்செல்லத் தானும் உடன்சென்று தரிசித்தாள். தரிசித்துத் திருக்கரங்களில் உள்ள மான் முதலியவற்றைப்பார்த்து அவர் தன்னுடன் விளையாடுவதற்கு வந்தாரென நினைத்துத் தாயர்களை வினாவ, அவர்கள் அவருடைய அருமை பெருமைகளை எடுத்துரைத்தானர். உடனே பேதை, அவருடைய திருத்தேரின் மீது தன்னை ஏற்றவேண்டுமென்று சொல்லிக் கண்ணீர் பெருக உள்ளந்தளர்ந்தாள். தாயர் இவள்நிலையை அறிந்து இவளை அணைத்தெடுத்து வீட்டிற்குச்சென்றனர். 

 

     திருவிழாவின் இரண்டாவது நாளில் சொக்கநாதப் பெருமான் வெள்ளையானையின் மீது உலாப்போந்தனர். அன்று, பெதும்பைப்பருவப் பெண் ஒருத்தி, பாங்கியர்களுடன் சென்று ஏழுகடலென்னும் தீர்த்தத்தில் நீராடி அருகிலுள்ள சுரபுன்னைக்காவில் இருப்ப, பாங்கியருள் ஒருத்தி மதுரேசர் திருவிளையாடல்கள் சிலவற்றை விரித்துரைக்கக் கேட்டு மகிழ்ந்து அவரது திருவுலாவைத் தரிசித்தற்கு விரும்பி இருக்கையில் அவர் எழுந்தருளுதளையறிந்து உடனே சென்று தரிசித்து வணங்கினாள். அப்பொழுது அதுகாறும் பெற்றறியாத ஒரு விருப்ப உணர்ச்சி இவளுக்கு உண்டாகவே அணிகள் முதலியன கழன்று நிறை யழிந்து நிற்க, தாயர் இவளைக்கொண்டு தம்முடைய மாடத்தை அடைந்தனர். 

     மூன்றாவது நாள் திருவாலவாய்ப்பெருமாள் வேதக்குதிரையிற் பவனிவந்தார். அன்று, மங்கைப் பருவத்தாளொருத்தி, பாங்கியர்களுடன் சென்று வைகைந்திக்கரையில் உள்ள ஒரு சோலையில் ஊசலாட்டயர்ந்து தன் பாங்கியர்கள் சிவபெருமானுடைய வீரச் செயல்களைப் பாடத் தானும் அவருடைய திருவிளையாடல்கள் சிலவற்றைப்பாடி மகிழ்ந்து வைகையாற்றில் நீராடிவிட்டு ஓரிடத்து இருந்து அவர் உலாவருதலை அறிந்து சென்று தரிசித்து வணங்கினாள், வழுத்தினாள், மாலோடு இணங்கினாள், சிந்தை இளைத்தாள். அவர் அவ்வீதியைக் கடந்து செல்ல, உடனிருந்தவர்கள் இவளைகெகொண்டுசென்று மாளிகையிற் புகந்து பாயலிற் கிடத்தினார்கள். பின்னர் இரவுவரலும் சந்திரனையும் தென்றல் முதலியவற்றையும் கண்டு மிகத் துன்புற்றழுங்கினள்; தாயர் அதனைக்கண்டு, "நாளை இறைவர்பாற் சென்று உனக்கு அருள்புரியுமாறு வேண்டிக்கொள்வோம்; இப்பொழுது வருந்தாதே" என்று சொல்லி ஆற்ற ஒருவாறு ஆறினாள்.

     மடந்தைப்பருவத்தினளொருத்தி, சுந்தரேசப் பெருமானைவிரும்பி அவர்பால் தூதுசெல்லும்படி ஒரு கிளியை அனுப்பிவிட்டு, இராப்பொழுதுவரவே உள்ளம் புழுங்கியிருந்தாள். அக்காலத்தில், பாங்கியருள் யாழ்வல்லா ளொருத்தி அவருடைய திருவிளையாடல்களிற் சிலவற்றைப் பாடினாள். அவற்றைக்கேட்டு இன்புற்றிருக்கையில் பொழுது புலர்ந்தது. புலரவே நீராடி ஆடையணிகளை அணிந்திருப்பச் சொக்கநாதர் நான்காம் திருநாளாகிய அன்று திருமாலாகிய இடபத்தில் எழுந்தருளினர். அப்பொழுது, முன் தாதுவிடப்பட்ட கிளிவந்து அவர் எழுந்தருளுதலை அறிவிக்கவே, உடனேஇவள் சென்று திருவுலாவைக்கண்டாள்; திருமேனி அழகில்ஈடுபட்டாள்; உருகினாள், உள்ளம் உடைந்தாள். அருகிருந்த பாங்கியொருத்தி அவரிடம் இவளுடைய குறைகளைக்கூறி முறையிடலும் அவர் அவளுக்குத் திருக்கண் பார்வையீந்தருள இவளும் சிந்தைகளிகூர்ந்து மீண்டனள்.


     ஐந்தாம்நாள் மீனாட்சி சுந்தரேசர் தருமரிஷபத்தில் திருவுலா வந்தனர். அன்று, அவர்பால் மையல்கொண்ட அரிவைப்பருவத்தாளொருத்தி, சேடியர்சூழ ஒரு பூஞ்சோலைக்கு வந்து அங்குள்ள மாமரம் ஒன்றின்கீழ் இருத்தற்கு விரும்பச் சேடியருள் ஒருத்தி அம்மரமே காஞ்சித் தலத்தில் உமாதேவியார் தழுவக் குழைந்த திருவேகம்பருக்கு நிழலளிக்கும் பெருமைவாய்ந்ததென்று கூற, அரிவை பின்னும் சிவபெருமான் எழுந்தருளிய விருட்சங்கள் சிலவற்றை அச்சேடிவாயிலாக அறிந்து மதுரைத் தலத்திற்குரிய கடம்பொன்றை அங்கே கண்டு வணங்கித் துதித்துச் சொக்கநாதர் கைம்மாறு கருதாமல் இயற்றிய திருவிளையாடல்கள் சிலவற்றை எடுத்துப் பாராட்டிக் கொண்டிருக்கையில் அவர் திருவுலா வந்ததை அறிந்து சென்று தரிசித்துக் குறைகளை விண்ணப்பஞ் செய்து நின்றாள். நிற்கையில் அவர் அவ்வீதியைக் கடந்துசென்றார்.

     தெரிவைப் பருவத்தாள் ஒருத்தி, இராப்பொழுதுவரச் சொக்க நாதரிடத்தே மையல் வளர இருந்து, நாகணவாய்ப் பறவைக்குக் கற்பிப்பாள் போல அவருடைய திருவிளையாடல்களைச் சொல்லி இராப் பொழுதைப் போக்கிவிட்டு, விடிந்தவுடன் தோழியர்களோடு பொற்றாமரைப் பொய்கைக்குச் சென்று நீராடி ஆடை முதலியவற்றை அணிந்து நிற்ப, ஒருபாணன் அன்றும் சொக்கநாதருடைய திருவுலா உண்டென்று கூறக்கேட்டு மகிழ்ந்து இருந்தாள். உடனே தோழியருள் ஒருத்தி இவளுக்கு மரகதத்தாற் செய்த அணிகளையணிய, பாணன் இவளுடைய தோற்றத்தை உமாதேவியாருடைய தோற்றமாகப் பாராட்டினான். அப்பொழுது மதுரேசர் ஆறாம் திருநாளாகிய அன்று கற்பக விருட்ச வாகனத்திற் பவனி வருதலை யறிந்து விரைந்தணைந்து கண்டாள்; இருகண்களிகூர்ந்தாள். அவர் இவளை நோக்கிப் புன்னகை புரிந்தருளினார். அதனால் இவள் தருக்கிப் புளகம் தழைத்தாள்.

     பேரிளம்பெண் ஒருத்தி இரவில் நிலாமுற்றத்திற் சுந்தரேசர்பாலுள்ள விருப்பத்தால் வருந்தியிருப்ப, விறலியொருத்தி தன்பாலுள்ள யாழை இவள்பாலீந்து அதனை வாசிக்குமாறு வேண்ட, இவள் சொக்க நாதருடைய திருவிளையாடல்கள் சிலவற்றைப் பாடிப் பாராட்டிக் கொண்டிருந்தாள். பொழுது புலர்ந்தது. புலர்ந்தவுடன் அவர் ஏழாந் திருநாளாகிய அன்று இந்திரவிமானத்தில் திருவுலாவருதலையறிந்து சென்று இறைஞ்சி மயங்கி நின்றாள். அப்பொழுது சேடியொருத்தி இவளுடைய காமமயக்கத்தைப்பற்றி அவர்பால் முறையிட்டனள். அதனால் இவள் ஒருவாறு மயக்கம் ஒழிந்து அருள்செய்யவேண்டுமென்று பிரார்த்திப்பாளாயினள். 

     இங்ஙனம் பேதை முதலிய எழுவகை மாதர்களும் மால்கொள்ள ஸ்ரீ சொக்கநாதப் பெருமான் உலாப் போந்தருளினார்.

-----------------------------------------------------------

நூற் சிறப்புப் பாயிரம்* 
*இச் சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் ஏட்டுப் பிரதியில் இவ்வுலாவின் இறுதியில் எழுதப்பட்டிருந்தன. 
இவற்றையியற்றியவர் பெயர் அப்பிரதியிற் காணப்படவில்லை. 

வெண்பா

    1. சீரார் புராணத் திருமலைநா தன்கருணைப்
    பாராளன் மெய்ஞ்ஞானப் பால்விளங்க - ஆராய்ந்து
    வேதக் குலாவால் விரித்தால வாய்ச்சொக்க
    நாதர்க் குலாப்பாடி னான்.
    
    2. வேதநூற் றென்முழைசை வீரமா றன்கடல்சூழ்
    பூதலங்க ளன்பாய்ப் புரக்குநாள் - ஆதிநெறித்
    தெய்வ மதுரைத் திருவால வாயுறைந்த
    ஐயருலாக் கொண்டருளி னார்.
    
    3. வாழி மறைவாழி மன்னன் புகழ்வாழி
    வாழி மதுரை நகர்வாழி - வாழியே
    தண்ணளிகூர் வைகைத் தமிழ்நாடு வாழியே
    கண்ணுதலோன் சைவா கமம்.

-------------------------------------------------------


கணபதி துணை.

மதுரைச் சொக்கநாதருலா.

கலிவெண்பா.

பூமேவு செல்வி புணருந் திருமாலும்
தேமேவு கஞ்சத் திசை முகனும் - தாமேவி

இன்னநெறி யின்னசெய லின்னவுரு வென்றறிவால்
உன்ன வரிய வொருமுதல்வன் - தன்னிகராம்

ஆதி யதாதி யடிமுடியொன் றில்லாத
சோதி யளவுபடாத் தோற்றத்தான் - ஓதும்

இமய முதல்வி யிறைவி மறைதேர்
சமய முதல்வி தலைவி - உமைகௌரி

மாணிக்க வல்லி மரகத வல்லியிசை
பேணித் தமிழறியும் பேராட்டி - காணரிய

பங்கயற்கண் ணான்கனக பங்கயக்கண் ணான்புகழ்ந்த
அங்கயற்க ணம்மைபுண ராகத்தான் - பொங்கும்

செழுந்தண் டமிழ்வெள்ளந் திண்*முனிமா மேகம்
பொழிந்த பொதியப் பொருப்பன் - மொழிந்த

இறைமுனருட் பாட லெதிரேற்று நன்னூற்
றுறைபுகழ்ந்த வைகைத் துறைவன் - நறைகமழும்

வான்பாயுஞ் சோலை வயற்செந்நெல் கன்னலுக்குத்
தேன்பாயும் பாண்டித்திருநாடன் - கான்பாடல்

10.
தங்கு மறையோசை ஈங்கத் தமிழோசை
பொங்கு மதுரா புரிவேந்தன் - எங்கும்

கருதுங் கனகக் கதிர்தயங்க வாசம்
மருவுந் தொடையிதழி மார்பன் - பொருவில்

துரகங் கறிறு துவசங் கதிகள்
விரவுங் கடிய விடையன் - பரவரிய

எங்கோன் மறைமுரச னெவ்வுயிர்க்குந் தன்கருணைச்
செங்கோ னடாத்துஞ் சிவானந்தன் - துங்கப்

பனுவன் மறைகள் பரவு முனைவன்
அனக னசல னகண்டன்-வனசப்

15. 
பதியா ரணன்படைக்கப் பாலித்தோன் காக்கும்
அதிகார மாலுக் களித்தோன்-பதியாய்

நரமடங்க லாங்கார நீங்கி நடுங்கச்
சரபவுரு வங்கொண்ட தாணு -வெருவாமல்

எப்புவன மும்புரப்பா ரெவ்வெவரு மேத்துதலால்
முப்புரமுஞ் சுட்டவிள முரலான்-ஒப்பிலா

ஐந்தருநாட் டண்ண லரும்பழிக்கா வன்றுதனக்
கிந்திரவி மான மினிதமைத்து-வந்தித்

தழகிய சொக்கரென வானதிரு நாமம்
குழைவுதரு நேசமுடன் கொண்டோன்-பிழையகல

20 
மன்னு கடவுட் கணிறுவினை மாற்றியதன்
பின்ன ரடைந்த பெருவணிகன்-தன்னால்

அறிந்த வழுதி யழகிய சொக்கர்
உறைந்த திருவெல்லை யுற்று-நிறந்தயங்கும்

மண்டபமுஞ் சூளிகையு மாளிகையு நீளுமணித்
தண்டரள பீடிகையுஞ் சாளரமும்-மண்டுமெழில்

அங்கயற்க ணம்மைதிரு வாலயமு மாமதிகளும்
பொங்குமணிக் கோபுரமும் பூங்கிடங்கும்-எங்கணும்

நீடுபல வீதிகளு நேரின்றித் தாரகையைக்
கூடி வளர்மாட கூடமுடன்-ஆடகத்

25 
தெற்றியுந் தோரணமுஞ் செய்குன்றுந் தேர்நிரையும்
சுற்று மலர்த்தடமுஞ் சோலைகளும்-மற்றும்

நலமுடைய வெல்லா நகரமைத்துத் தென்பாற்
குலவு வடபாற் குடபாற்-கலையூரும்

சூலிக்குங் காளிக்குந் துய்ய சுடராழி
மாலுக்குங் கோயில் வகுத்தமைத்துக்-கோலரிய

பாசப் பகையாம் படர்சடைமேற் கங்கைநீர்
வீசிப் புனித மிகவருளித் - தேசு

மதியி னமிர்தத் துளியான் மதுரம்
பதிமுழுது மெய்தப் பணிப்பப் - புதுமை

30.
மருவு புரியு மதுரா புரியென்
றிருநலமு மேத்துபெய ரேற்க - அருமறையோர்

ஆதிபல சாதிகளு மண்ணல் பணிவிடைக்கங்
கோது பரிகரமு முற்றமர்த்திப் - போத

மதுரா புரேசற்கு வைதிக சைவ
விதியாரப் பூசை விளக்கிப் - பதியுறையும்

மன்னன் குடைவீர மாறன் குலதிலகன்
தென்னன் செழியன் செகதீரன் - முன்னை

ஒருநாள் மறைவிதியா லுற்றருளாற் கண்ட
திருநாளி லங்கோர் தினத்தில் - உரியவரால்

35.
குற்றமிலா மெய்பூசை கொண்டருளி மிண்டுநவை
அற்ற விழாச்சிறப்பு மானதற்பின் - கொற்றமறைத்

தண்டமிழும் வாசகமுஞ் சங்கத் தமிழமுதம்
மண்டுந் திருவிசையு மந்திரமும் - தொண்டர்

அருள்விரித்த சேக்கிழா ரான்றதமிழ்ப் பாடற்
றிருவிருத்தச் செய்யுட் சிறப்பும் - இருமருங்கும்

பொங்க மகளிர் புரியாடம் பஃறீபம்
கங்குற் பொழுதைக் கடிதகற்ற - எங்களிடத்

தல்லற் பவந்தொலைக்கு மங்கயற்க ணம்மையுறை
செலவத் திருக்கோயில் சேர்ந்தருளி - எல்லோர்க்கும்

40. 
நீங்கா விடையருளி நீங்கா வுரிமைபுரி
பாங்கா மடவார் பணிபுரியத் - தேங்குமணம்

சேர்ந்த மலர்த்தொடையுந் தெண்ணித் திலத்தொடையும்
ஆர்ந்ததிருப் பள்ளி யறையின்கண் - போந்து

மலயத் தனிக்கால் வரசர*னந் தைவந்
துலவப் பரிமளங்க னோங்கப் - பலவுயிரும்

முன்னை யகில முழுதும் பயந்தவொரு
கன்னிகையுந் தாமுங் கலந்தருளி - இன்னருளால்

ஈருருவு மோருருவா யெவ்வுயிரு மீடேற
ஓருருவு மீருருவா யுற்றுணர்ந்து - சீருதவும்

45. 
வேதவொலி சங்கவொலி வீணையொலி யாழுதவும்
கீதவொலி யெங்குங் கிளர்ந்திசைப்பப் - போதின்

மருவிரித்த தெய்வ மலரணையை நீங்கித்
திருவிருப்பி லன்பருடன் சேர்ந்து - பெருவிருப்பிற்

சைவ சவுராதி சண்டாந்த வர்ச்சனைகள்
மெய்வளரக் கொண்டு விளக்கமுறக் - கைவளரும்

மாறின்மணி மண்டபங்க ணாயனெனு மண்டபத்தின்
ஏறிமணிப் பீடத் திருந்தருள - ஏறுடையான்

தன்பா லலகில்பணி சாத்துமறை யோரிறைஞ்சி 
அன்பா லணிபுனைவா ராயினார் - ஒன்பதுகோள்

50. 
ஏற்க வணங்கு மெழில்சேர் நவமணிசூழ்
காற்கமல வீரக் கழல்விளங்க – ஆர்க்கும்

புகற்கரிய பேரொளிகூர் பொன்னாடை யாதி
உகத்திருளை யெல்லா மொழிக்க - மிகுத்த

திகழ்வாள் வயிரமணி சேருதா பந்தம்
அகல்வான் கதிரைமதி யாக்கப் - புகலளிகள்

சாலத் திரண்டுசூழ் தாமரைபோற் செங்கைமேல்
நீலக் கடகவொளி நின்றிலங்க - கோலமணிச்

சுந்தரமார் திண்புயமேற் சோதிமணிக் கேயூரம்
மந்தரஞ்சூழ் வாசுகியின் வாய்ப்புதவ - எந்தைமுடி

55. 
வைத்தநதி கைபரப்பி மார்பத்தைத் தைவரல்போல்
நித்தில மாலை நிலவெறிப்ப - முத்தம்.

கதித்த திருமார்பிற் கதிரார மேரு
உதித்தகதிர் மண்டில மொப்ப - மதிக்கரிய

தற்படியொன் றில்லாத சாம்பு நதநிதியம்
விற்பவள வெற்பினிடை வீழ்வதெனக் - கற்பகத்தின்

பொற்பூண் மலர்மாலை பூங்கொன்றை நாண்மாலை
சொற்பூ தரமார்பிற் றோற்றமெழக் - கற்பூரச்

சுண்ணம் பனிநீரிற் றோயும் பசுங்களபம்
விண்ணும் புவியும் விடாயாற்ற - அண்ணலருட்

60. 
கண்ட மரகதக் கோவை கடுவமைத்த
ஒண்டொடி மெல்விரல்க ளொத்திலங்கத் - தண்டத்

துருகா தவரு முருகக் குழைகள்
இருகாதின் மீதி லிலங்கக் - கருதினர்தம்

எண்ணிலாப் பாவ விருளகற்றும் வெண்ணீறு
வெண்ணிலா நன்னுதலின் மேல்விளங்க - வண்ணப்

புதிய மணிமுடிமேற் பொற்பே ரொளியின்
திதலைத் திருவாசிச் சேவை-உதயகிரி

வந்தெழுந்த செஞ்சுடர்மேற் கால்கொண்டு வானிட்ட
இந்திரவில் போல வினிதிலங்கச்-சுந்தரத்துக்

65 
கொப்பனைபோற் சாத்தியபின் னொப்பிலான் பேரருட்கு
வைப்பனையான் தேவர் வரவருள-மெய்ப்பதிவாய்

நந்தி விரைவி னணுகிக் கடவுளர்கள்
வந்துதொழக் காலம் வருகவெனச்-செந்திருமால்

வந்திறைஞ்சி நான்முகனும் வாசவனும் வானவரும்
எந்தை யிவனிவனென் றேத்தெடுப்ப-ஐந்தொழிற்கும்

போக்காங் கலாதி மனாதி புலாதியுடன்
வாக்காதி சத்தாதி வானாதி-தாக்கா

தடலே யுதவு மரனே பரனே
உடலே யுயிரே யுணர்வே-நடமருவு

70 
தெய்வச்சுடரே சிவானந்த போகமே
சைவச் சலதி தருமமுதே-மொய்வார்

மருவார் குழலாண் மகிழ்வே மதுரைத்
திருவால வாயுறையுந் தேவே-அருடா

எனவரிய தொண்ட ரிருமருங்குஞ் சூழ்ந்து
மனமுருகி மெய்யுருகி வாழ்த்தக்-கனமருவு

தும்புருவு நாரதனுஞ் சுத்த விசைபாடக்
கொம்பனைய மாதர் குனிப்பமிட-நம்பன்

புனித விமயமலைப் பொற்றொடியுந் தானும்
இனிதி னிருந்தருளு மெல்லை-நனிகூர்

75. 
பொருவி றிருவுலாப் போத முகிழ்த்தம்
மருமலரோன் கூறிவணங்க-அருளால்

எழுந்து கனக வெழிற்கோ புரத்துச்
செழுந்தண் டிருவாயில் சேர்ந்து-தொழுமடியார்

பல்லாண்டு கூற விமையோர் பரவமறை
வல்லாரு மாதவரும் வாழ்த்தெடுப்பச்-சொல்லரிய

மாணிக்க ரச்சி வயக்குந் தமனியத்திற்
பூணப் பதித்துப் பொலிதலாற்-காணரிய

பன்னிரண்டு கோடி பருதியரும் வந்துதித்த
பொன்னசல நேர்தேர் புகுந்தருளி-நன்னெறியால்

80. 
மிக்க திருநீற்று மெய்த்தொண்டர் வெள்ளவொளி
புக்கதிருப் பாற்கடலே போல்விளங்க-அக்கடலில்

அம்பொற் கிரிமே லலைகளெனத் தேர்மீது
பைம்பொற் கவரி பணிமாற-அம்புவிக்கண்

மூன்றுடையா னைச்சேர்ந்து முன்னைந்தன் மெய்க்களங்கம்
கான்றொழுகு தெய்வக் கலைத்திங்கள் -போன்றணிந்த

நீல மணிவயங்கு நீள்காம்பு பற்றியவெண்
கோலமணி முத்துக் குடைவிளங்க- ஞாலங்கள்

முற்றுஞ் சுருதி முழுதுங் கருணையாற்
பெற்றமடக் கன்னிதேர் பின்போதப்-பற்றியதன்

85- 
செய்கை யழிந்தயலே சேவைக் கயர்வோர்தம்
கைகடலையேறக் கண்பனிப்ப-வைகையெதிர்

ஏடேற்றித் தென்னவனை யீடேற்றி வெஞ்சழ**ணக்
காடேற்ற மேறக் கழுவேற்றி-நீடேற்றம்

தானேற்ற புத்தன் றலையி லிடியேற்றும்
கானேற்ற பாடற் கவுணியனும்-மேனாள்

நிலைகடந்த கற்றுணா னீண்ட கடலாழி
அலைகடந்த நாவுக் கரசும் - மலரடைந்த

புள்ளவாம் பொய்கையிடைப் புக்க முதலைவாய்ப்
பிள்ளைவா வென்ற பெருமாளும் - தள்ளரிய

90. 
போதிநழற் புத்தன் பொன்னம் பலத்திட்ட
வாதழித்த மாணிக்க வாசகனும் - மூதுணர்வால்

முந்தை வினைகண் முழுதுஞ் செழுமறைநூற்
றந்தையிரு தாளுந் தடிந்தோனும் - எந்தைமகிழ்ந்

தாடுந் திருப்பெரும்பே ரம்பலம்பொன் மேய்ந்தருளைச்
சூடுந் திருநீற்றுச் சோழனும் - நீடருளால்

விண்புகழச் சுந்தரர்தம் வெள்ளானை முன்செல்லத்
திண்புரவி மேற்கொண்ட சேரலனும் - வண்புகலி

வேந்தரா லாருயிர்க்கூன் மெய்க்கூன் தவிர்ந்தருளே
சேர்ந்துவாழ் நின்றசீர்த் தென்னவனும் - காந்துமனச்
95.
செற்றம் புனையமணர் தீத்தொழிலை மாய்த்தடர்த்துக்
கொற்றம் புனைந்த குலச்சிறையும் - சொற்றகைய

இத்தகைய ரென்னு மிவர்முதலா வெண்ணிறந்த
சுத்தநெறி நின்றமெய்த் தொண்டர்களும்-மெய்த்திறமை

கோலும் படையசுரர் கொற்றமெலா முற்றிமதம்
காலுங் களிற்றுமுகக் கற்பகமும்-மேலோர்

குறைமீட்டு வெஞ்சூர் குடிமடியத் தேவர்
சிறைமீட்ட வேற்றடக்கைத் தேவும்-பொறைகூர்

திருமகளு மாலுந் திருநெடுமா லுந்தி
தருசதுர் வேத தரனும்--பருதியர்கள்

100. 
பன்னிருவ ரீசர் பதினொருவ ரெண்வசுக்கள்
மன்னு மிருவர் மருத்துவர்கள்-இன்னவரும்

இந்திரனு மற்றெவரு மீரொன் பதுகணமும்
தந்தம வாகனங்க டாம்புகுத -அந்தர

துந்துபிக ளார்ப்பச் சுரரார்ப்பப் பூமாரி
வந்து பொழிய மழைதுனிப்ப-நந்து

வளைகண் முரல மருடி வயிர்கள்
கிளைக லொலிகள் கிளர -அளவில்

முரச மதிர முழவு துடிகள் 
பரசு பதலை பணவம் - விரசு

105 
வலம்புரி யெங்கு முழங்க வயங்கு
சலஞ்சல நின்று தழங்க - நலம்புரியும்

சின்னங்க ளார்ப்பச் செழுநான் மறைமுழுதும்
முன்னெங்கும் பின்னெங்கு மொய்த்தொலிப்ப - இந்நிலமேல்

மானிடருங் கின்னரரும் வானவரும் விஞ்சையரும்
தானவருங் கூடித் தலைமயங்க - ஆன 

படியுந் திசையும் பகிரண்ட கூட
முடியு மயக்க முயக்கக் - கொடிகள்

இரவி கிரண மெறியாத வண்ணம்
விரவு விசும்பை விழுங்கத் - தரைமேல்

110 
முதிரா முதல்வியுடன் முக்கட் பெருமான் 
மதுரா புரிவீதி வந்தான் - பதியிலாக் 

குழாங்கள்.

கின்னரர்தங் கன்னியருங் கிஞ்சுவாய் விஞ்சையர்தம் 
கன்னியருங் கந்திருவக் கன்னியரும் - பொன்னடைந்த

விண்ணுலக மங்கையரும் வின்னொருங்கத் தண்ணனிகூர்
மண்ணுலக மங்கையரும் வந்தீண்டி - எண்ணரிய 

செல்வக் கனகநிலைச் செய்குன்றிற் பொன்வரைமேல்
வல்லிக் கொடியின் வயங்குவார் - அல்லற்

பளிக்குநிலா முன்றின்மேற் பாலாழி முன்னம்
அளிக்கு மரம்பையர்நே ராவார் - விளிக்கரிய

115.
வீர மடவார் விமானத் தடைவதுபோல்
பாரநிலைத் தேரிற் படருவார் - ஆர்வமுடன்

பற்றிய வோவம் பரன்பவனி பார்க்கவுயிர்
பெற்றதென மாடம் பெயர்குவார் - சுற்றும்

விரிந்தமணி வீதி மிடைவா ரிறைதாள்
பரிந்து புகழ்வார் பணிவார் - பிரிந்துமையாள்

மும்முலைகொண்டுற்பவிக்க முன்முனிந்தார் தோள்விரும்பி
நம்முலைகள் விம்ம னகையென்பார் - செம்மை

விதம்பயின்ற வம்மடவாள் வேட்கையுற வேட்டார்
இதம்புரிவா ரெங்கட்கு மென்பார் - பதஞ்சலிக்குச்

120.
சீர்க்கூத் தருள்வார் திருவுலா நாமதனன்
போர்க்கூத்துக் காணப் புரிந்ததென்பார் - தார்க்கவிகைக்

குண்டோ தரற்குத்தா கம்பசிபோற் கொள்காதல்
கண்டோர்க்கு மீகை கடனென்பார் - கொண்டபசிக்

கன்னக் குழியா றழைத்தா ரவற்கெமக்கும்
இன்னற் றுயரொழிப்பா ரின்றென்பார் - முன்னோன்

திருமுறுவல் போற்றுவார் செய்ய முறுவல்
தருநிலவா லுள்ளந் தளர்வார் - முருகு

செறியுந் திருமார்பஞ் சேவிப்பார் கொங்கைக்
குறிகண்டு நாணமால் கொள்வார் - அறிவுடையாற்

125.
கெங்க டுகிலு மெழிற்றொடியும் வேண்டிற்றோ
தங்கநறு மாலை தரவென்பார் - கங்கை

மருவார் மலரமுதால் வாசவனார் பேணும்
திருவால வாயுறையுந் தேவற் - கிருகண்ணீர்

மஞ்சனமோ வெங்கை வளைபள்ளித் தாமமோ
நெஞ்சமமு தோவென்று நின்றுரைப்பார் - அஞ்சாமற்

செல்வார் நகைப்பார் திகைப்பார் மதனனெமைக்
கொல்வான் வருமென்று கூறுவார் - சொல்வார்போல்

நிற்பார்தஞ் சேடியர்பா னித்தற் குரைக்குமொழி
கற்பார் மறப்பார் கலங்குவார் - அற்புதமாம்

130.
மாணிக்க வல்லி மணவாளற் கியாங்கொடுக்கும்
காணிக்கை யோநங் கலனென்பார் - நாணமுறச்

சாத்துந் துகிலிழப்பார் தம்மானம் வின்மாரன்
கோத்த மலர்மறைப்பக் கூசுவார் - பாத்து

விதமருவு மாத ரவர்நிற்க வேளுக்
குதவவரு பேதை யொருத்தி - மதனூல்

பேதை.

படியாத பூவை படராத வல்லி
வடியா மதுமலரா மாலை - கடியாரப்

பூவாத சூதம் புனையாத மாணிக்கம்
கூவாத செல்வக் குயிற்பின்னை - மேவிக்

135.
கவடுபடா வஞ்சி கலைமலயத் தென்றற்
சுவடுபடாக் கன்னிநறுஞ் சோலை - கவினத்

தெளியுந் தெளியாத செய்கையுந் தாங்கித்
தளருங் குதலைமொழித் தத்தை-ஒளிகள்

நிறையா விளந்திங்க ணீருடன்பால் பேதித்
தறியாத பேடையிள வன்னம்- இறுதிநாள்

துற்ற பருதியர்தந் தோற்றத்து முன்னாக
உற்ற வருணத் துதயம்போற்-பற்றிய

வான்றா ரணிமுழுதும் வந்தழிக்குந் தம்பெருமை
தோன்றாமற் றோன்றுந் துணைநகிலாள்-ஆன்ற

140 
விடையா னுடையான் விளங்கு மழுவாட்
படையா னிருகமல பாதம்-அடையாமற்

பொய்வாழ் வடைந்தோர் புலன்கள்போ லொன்றோடொன்
றொவ்வா தலைகின்ற வோதியான்* -பவ்வத்

துலக மயக்க மொழிந்தோர் மனம்போற்
கலகஞ் சிறிதறியாக் கண்ணாள்-உலவுமதிற்

செற்றார் புரமெரித்த தெய்வங்க ணாயகற்குக்
கற்றார் புகள்மதுரைக் கண்ணுதற்கு-வெற்றி

மருவார் தொடைத்தென்னன் மாமுத் தளக்கும்
திருவாயின் மாதருடன் சேர்ந்து-பொருவிலா

145 
நித்திலத்தின் கூட்ட நிறையக் கொணர்ந்தேகி
வித்துருமக் காற்பந்தர் வீதிக்கண்-முத்தினத்தாற்

சிற்றி லிழைத்துச் சிறுசோறம் முத்தத்தாற்
சற்று முணராள் சமைத்தனள்போற்-பற்றிவரும்

கிள்ளைக்குந் நாயர் கிளைக்குந்தன் கைப்பாவைப்
பிள்ளைக்கு மூட்டுகின்ற பெற்றியான்-புள்ளினத்துள்

அற்புதமாம் பூவைக் கதன்வார்த்தை தான்மகிழ்ந்து
கற்பதுபோற் றன்வார்த்தை கற்பிப்பாள்-மற்றொருநாள்

மாதவிப் பந்தர் மருங்கேதன் கைத்தாயர்
போத வுடன்றானும் போயிருந்து-காதலருட்

150 
பெண்களிக்க வாரி யழைத்ததுவும்-மண்களிக்க
உக்கிரனார் தோன்றியது முக்கிரற்கு வேல்வளைசெண்

டக்கணிவோ னல்கி யகன்றதுவும்-மைக்கடன்மேல்
மிக்கவயில் தொட்டதுவும் விண்ணோர் பிரான்முடியைத்

தக்க வளையாற் றகர்த்ததுவும்-அக்கனகத்
திண்மை வடகிரியிற் சேலிட் டதுமறைநூல்

உண்மை முனிவர்க் குணர்த்தியதும்-வண்மையால்
தத்தையினஞ் சாற்றவயல் சார்பூ வைகளிருந்து
முத்திதருஞ் சொற்பொழிந்த முப்புலவோர்-சுத்தத்

155.
திருப்பதிகத் தோசை செவியூடு தேக்க
விருப்பமுடன் கேட்டிருக்கும் வேலை - நிருத்தன்

சரத னிமலன் சதானந்தன் மாறா
விரதன் வடமேரு வெற்பன் - வரதன்

அறவ னமல னருளாளன் வைகைத்
துறைவ னபிடேகச் சொக்கன் - நிறைவீதி

வந்தா னெனச்சின்னம் வாழ்த்தெடுப்பத் தாயாருடன்
செந்தா மரைசேப்பச் சென்ற‌டைந்து - சிந்தைமகிழ்ந்

தன்னையரைக் கண்டு மயலார் தமைக்கண்டும்
முன்ன ரிருகை முகிழ்த்திறைஞ்சி - அன்னமே

160.
பூவையே மானே புனமயிலே பூங்கிளியே
பாவையே யிங்கிவரைப் பார்த்திடீர் - மேவுமான்

கன்றுமொரு பாற்கிளியுங் காதலித்தார் நம்முடனே
யொன்றிவிளை யாடற் கொருப்பட்டோ - அன்றியுநம்

சிற்றில்வாய் வந்தார் சிறுசோ றுகந்தோயாம்
கற்ற கழங்காடல் கற்கவோ - சொற்றகைய 

அண்ணல் கருத்தை யறையுமென வன்னையர்கேட்
டுண்ணெகிழப் புல்லி யுரைசெய்வார் - எண்ணெண்

திருவிளையாட் டண்ணனீ செய்விளையா டற்கு
வருவரெனச் சொன்னால் வழக்கோ - அருமறைநூல்

165.
வல்ல முனிவோர் மகத்தவியுங் கொள்ளார்நின்
சில்லடிசிற் காவின்று சேர்வரோ - நல்லபணி

நிற்கவெள்ளி மன்றாடு நித்தர் கழங்காடல்
கற்கவந் தாரென்றுரைத்தல் கற்பாமோ - அற்புதமென்

றிந்த மொழியுரைக்குந் தாயர்க் கிவரிங்கு
வந்ததுதா னேதென்று மான்வினவப் - பைந்தொடியே

எல்லா வுயிருமகிழ்ந் தீடேற வைந்தொழிலும்
வல்லா னுலாவந்த வாறென்னச் - சொல்லுதலும்

நீரேற்ற செய்யசடை நித்த னுறையுமணித்
தேரேற்று மென்னையெனச் சென்றுரைத்துக் - காரேற்ற

170.
கண்ணீர் வழிந்திழியக் காமந் தலைப்பட்டோர்
உண்ணீர்மை போல வுளந்தளர்ந்தாள் - பெண்ணீர்மை

இப்படியுண் டோவென்று தாய ரியம்புதலும்
கைப்பணிலந் தன்னைக் கழற்றிவிடுத் - தொப்பனைசெய்

பொன்னணியிற் சில்லணிகள் போக்கிப் பொழிநீரால்
தன்னயனந் தீட்டஞ் சனமொழித்து - மின்னனையாள்

பேரிளம்பெண் ணீதிதனைப் பேதைப் பருவத்தே
யாரு மதிசயிப்ப வெய்தினன்போல் - ஓர்வின்றி

நிற்பதனைக் கைத்தாயர் நேர்கண் டெடுத்தணைத்துப்
பொற்புவளர் மாளிகையிற் போய்ப்புகுந்தார் - மற்றொருத்தி

பெதும்பை.

175.
பேதைப் பருவம் பிரிந்து பெதும்பையெனும்
காதற் பருவத்துக் காட்சியாள் - மேதக

முற்றாத வல்லி முளரி முகிழிரண்டு
பெற்றா லெனவழியாப் பேருலகம் - செற்றழிக்க

வேண்டிப் பிறக்குமெழில் வெள்ளத் துடன்வடவை
மூண்டிங் கிரண்டாய் முகிழ்த்ததென - மாண்டவத்தோர்

கைமுகிழ்க்க வெங்காலன் கண்முகிழ்க்கக் காமுகர்தம்
மெய்முகிழ்க்க மேன்முகிழ்க்கு மென்னகிலாள் - தண்மை

விளைக்குந் தவமடைந்தோர் வெவ்வினைபோ னாளும்
இளைக்கவடிக் கொண்ட விடையான் - விளைத்த

180.
அளவிலரும் பாலாழி யாலால மென்னக்
களவு பிறந்துடைய கண்ணாள் - அனிகள்

கடியாத தார்முடிக்க்க் காமன் றனக்கு
முடியாத வெல்லா முடிக்கப் - படிமுழுதும்

கூடி முடிக்குங் கொடியவிருள் போலமுடிக்
கூடி முடிக்குங் குழலினாள் - நீடிவளர்

முல்லையரும் புக்கும் முருந்துக்கும் பேரொளிகள்
இல்லையென வீறு மிளநகையாள் - தொல்லுலகில்

மின்னுக் கொருவடிவ மேன்மேல் வளர்ந்தேறல்
என்னப் பொலிந்துவளர் வெய்தினாள் - பன்னும்

185.
மலர்ச்சயன நீங்கி வரவுதய காலத்
தலர்க்கை குவித்தோ ரணங்கு - கொலைக்கிங்

கிடம்பார்த்த கண்ணா யெழுகடலாந் தெய்வத்
தடம்பார்க்க வாவென்று சாற்ற - விடம்புறர்த்த

செங்கட் கருங்கூந்தற் சேடியர் கோடியர்
அங்கட் புடைமிடைய வாயிழையும் - எங்கும்

மருவுதவு சோலை வளர்வு கிளரத்
திருமருவு வாவி செறிய - அருகொருத்தி

மின்னே யமிர்த விளைவே செழுங்கமலப் 
பொன்னேயிப் பொய்கைதனைப் போற்றிடாய் - பன்னும்

190.
பரன்றன் பவனிதொழும் பாவையர்க்குட் காதல்
அரும்பும் பருவத் தவர்போல் - திருந்து

வலம்புரி யேறி மகிழ்ந்தர சன்னம்
கலந்து பணிலங் கலிப்ப - நலங்கோள்

அளித்து வரவெதி ரன்னத்தோ டேகிக்
களிக்கு மிளம்பேடை காணாய் - தளிர்த்து

விரிந்தசடை யண்ணலுலா மேவுமவ ருள்ளம்
புரிந்து நெகிழ்வது போலத் - தெரிந்த

இரவிச் சுடர்கண் டிதழவிழ்ந்து சேந்த
பருவக் கமலமுகை பாராய் - அருமறைதேர்

195.
மாக விமான மதுரா புரேசன்றன்
ஆக முறவெண்ணு மன்னவர்போல் - நாகத்

தடர்ந்து படர்வா னணிமென் பவளம்
நுடங்குகொடி நோக்கி னோக்காய் - தடங்கடல்கள்

வந்தடைந்த வாவி மகிழ்ந்தாடா யென்றியம்பப்
புந்திபெரு நாணமுறப் புன்மூரல் - தந்தருகு

நேசச் செவிலியர்க ணீராட்ட நீராடி
ஓசைக் கடலொன் றுதவுதிருக் - கூச

எழுகட றந்த விளந்திரு வென்னத் 
தொழுது மகளிர் துதிப்பச் - செழுமைக்

200.
கரையிற் சுரபுன்னைக் காவினிடை மேவி
விரைமெய்த் தவிசின் விளங்கப் - புரைதீர்

கலனணிந்து நன்னீற்றுக் காப்பு மணிந்து
மலர்வதனக் கைத்தாயர் வாழ்த்தும் - பொலனிழைமுன்

ஆதி திருவிளை யாடலிவ் வாவிநலம்
ஓதுமவள் பின்னு முரைக்கின்றாள் - பூதலங்கள்

வாழிபெற மாணிக்கம் விற்றுது*வு மாகமுகில்
ஆழி பருக வருளியதும் - சூழுமியற்

கோநகரை நான்மாடக் கூடலென வைத்ததுவும்
மானநெறிச் சித்தரென வந்ததுவும் - மீனவன்றன்

205.
கன்னலணி கல்லானை வாங்கியதுங் காரமணர்
துன்னுமத யானை துணித்ததுவும் - உன்னரிய

ஓர்விருத்த வால குமாரனுரு வுற்றதுவும்
ஆர்முடித்தோன் கான்மாறி யாடியதும் - பாரித்

துரைத்தா னவளை யுகந்தருளிச் செந்தா
மரைததான மாதிலுயர் மாதும் - உரைத்தவற்றுப்

பூணுங் கருத்தும் புனிதன் றிருவுலாக்
காணும் பெருவிருப்புங் கைக்கொண்டாள் - சேணடைந்து 

தோற்றும் பொழிலூடு துய்யசீ தேவியினும்
ஏற்றம் புனைவா ளிருந்திடலும் - நீற்றுக்

210.
கவச னுமையாள் கணவ னிடபத்
துவசன் கடம்பவனச் சொக்கன் - தவள

மதவா ரணமீது வந்தா னெனவற்
புதவா ரணமுரசம் பொங்க - இதயநிகர்

பாங்கியர்முன் செல்லப் பதறியுடன் பின்சென்று
தாங்கரிய பேருவகை தானெய்தி - நீங்காத

மல்லற் கருணை மலையாண் முலைத்தடங்கள்
புல்லக் குழைந்த புயத்தாளைத் - தொல்லைமறை

கூறா தரமடந்தை கொங்கைக் குறியென்றும்
மாறா தழகெறிக்கு மார்பானை - வேறின்றித்

215.
தோற்றுமிகு தாளானைத் தொல்லைக் கொடும்பாசம்
மாற்றுந் திருவால வாயானை - ஏற்றமுறப்

பார்த்தாள் பணிந்தாள் பறிபோந் தனிநெஞ்சம்
காத்தாடன் னாணங் கடைபிடித்தாள் - வேர்த்தாண்முன்

காணாத காட்சியாற் கண்ணுக்குஞ் சிந்தைக்கும்
பேணாத நல்விருந்து பேணினாள் - நாணயந்து

விண்டலருஞ் செம்முகையின் மேவு முருகென்னக்
கண்டறியாக் காமமுங் கைகலப்பக் - கெண்டைவிழி

பாராத பார்வை படைப்ப மனத்துக்கும்
வாரா மகிழ்ச்சியும் வந்தெய்த - ஓராமல்

220.
நின்றதோர் முன்னை நிறையுங் கரையழிந்து
சென்றதோ வென்னென்று செப்புகேன் - ஒன்றிமால்

ஆளுந் தனிநெஞ்சத் தாதரவா லானனமும்
தோளுந் தனமுஞ் சுரிகுழலும் - வேளைப்

பொரவழைத்தல் போலப் பொலிந்தாலும் வேளும்
விரைமலர்ப் பாணம் விடுரே - பரவிநாம் 

கட்டிய காஞ்சியின் கட்டுவிடச் செங்கைமேல்
இட்ட வளையி னினமுரியக் - கிட்டா

உருவமிகப் பேதித் தொளிபடைத்து மற்றைப்
பருவ மெனப்புளகம் பாரித் - தொருவாத

225.
பேரழகு நந்தம் பெருமாட்டிக் கெய்தியதிங்
காரறிய வல்லாரென் றன்னையரும் - மாரன்

சிறுநா ணெறிந்து சிலைபார்க்கு முன்னே
முறுகாமான் மேல்வளரு முன்னே - அறுகால்சேர்

தாமஞ் சரிகுழலா டன்னைக் கரத்தணைத்துச் 
சேமம் பெறமாடஞ் சென்றடைந்து - பூமலர்கள்

ஏறுந் திருப்பாய லேற்றி யவண்மோகம்
ஆறும் படியொருவா றாற்றினார் - கூறுமதன்

மங்கை

செங்கண் சிவப்பக் கருங்கண் சிவப்பூறும்
மங்கைப் பருவத்து மற்றொருத்தி - திங்கண்மதி

230.
சூழுஞ் சடையான் றுணைத்திண் புயாசலமேல்
வாழுங் கருத்தே வளர்தோகை - ஆழித்

திருவால வாயண்ண றேங்கருணை வெள்ளப்
பெருவாவி தேடன்னப் பேடை - வருதென்றல்

கால்கொண் டுலவுங் கடம்பவனச் சோலைக்கு
மால்கொண் டுருகு மனத்தத்தை - கோலம்

படரு மதனன் படையுலகை யெல்லாம்
அடர வடர வடர்ந்து - புடவி

தளர மதனன் றனியாண்மை யெங்கும்
வளர வளர வளரக் - களவு

235.
பெருகத் தபோதனர்மேற் பேரநங்க னெஞ்சம்
கருகக் கருகக் கருகிப் - பொருதவியல்

பென்னப் புனைந்துலகத் தெய்தாத வெற்றிமதன்
தன்னைப் புனைவித்த தாழ்குழலாள் - முன்னொருவேல்

உந்து கடல்குடித்த தென்ன வுயிர்குடிக்க
வந்தவிட வேலனைய வாட்கண்ணாள் - முந்தைநிறம்

பேதித்து வேட்கை பெருத்தழகு பெற்றிலகும்
சோதிக் கனகவளைத் தோளினாள் - மோதிக்

கரையழியா வாவி கலக்கிக் கமல
விரைமுகையைச் சாடிவிழ வீழ்த்திப் - பரவும்

240.
மலைக்கோட்டை யெற்றி வருமத்த யானைக்
கொலைக்கோட்டை யொப்பக் குலாவிச் - சொலற்கரிய

முத்தத் தொடைகண் முயங்குகிர ணப்பத்தி
தத்துங் களபத் தனக்குவட்டாள் - பத்திதரும்

தேர்த்தட் டினுக்குஞ் சிறுமை கொடுத்தகன்ற
ஆர்த்த மணிக்காஞ்சி யல்குலாள் - ஏத்தரிய

அங்கயற்க ணம்மைமுலை யானைக் கிடங்கொடுக்கும்
செங்கனகக் குன்றைச் சிவக்கொழுந்தை - எங்கள்

அழகிய செக்கனைநா லாரணமுங் கூடப்
பழகியுங் காணாப் பரனைத் - தொழுதெவரும்

245.
சேவிக்க வாழ்விக்குந் தெய்வப் பெருமானை
ஆவித் துணையா மருமருந்தை - மேவி

ஒருநாட் பவனியிற்கண் டுள்ளந் தனக்குத்
திருநாட் பொலிவுதனைச் செய்து - வருநாள்

திருமடந்தை போலத் தெரிவையர்கள் கோடி
இருமருங்குஞ் சேவிக்க வேகி - அரியநெறிச்

செய்கைத் தமிழேடு செல்ல யெதிரேற்றும்
வைகைக்கரையின் மருங்குவளர்-பொய்கைப்

புடைமருவசுந் தெய்வப் புதுமலர்ப்பூங் காவின்
இடைமருவு மண்டபத்தி லெய்தி-அடர்கனகத்

250 
தண்டரளப் பத்தித் தனிவே திகைத்தவளப்
புண்டரிகத் தன்னமெனப் போயிருப்பக்-கண்டொருத்தி

ஊசல் விளையாட் டுளமகிழ்ச்சி நல்குமெனப்
பேச வுடனே பெயர்ந்தெழுந்து - நேசக்

கலக மதவேள்* களிகூர மின்போல்
இலகு மணியூ லேறிக் -குலமதியம்

தக்க வமிர்தந் ததும்பித் துளிப்பதுபோல்
மிக்க முகத்துல் வெயர்வரும்பத்-திக்கின்

வழிபோய் முனிவர் மனமடைய வாரி
விழிவேல்க டாவடிபோய் மீளப்-பொழிபுயலைக்

255 
காந்திருளை வென்று களிவென்றி பாடுவபோல்
ஏந்து குழல்வண் டிசைபரப்ப-மாந்தளிரைக்

காந்தளைக் கட்டுரைத்த கட்டாண்மை போற்செங்கை
ஏந்து வளைக ளினிதொலிப்பப்-பாந்தளை

மின்னைப் புறங்கண்ட வீரப் புகழ்பாடல்
என்னக் கலைக்காஞ்சி யேத்தெடுப்ப - அன்னத்தை

அம்பதுமந் தன்னை யடர்த்த வடலெனக்காற்
செம்பதுமந் தம்மிற் சிலம்பலம்ப - நம்பெருமான்

மாலந் தகவசுரன் மாறா வயமாறச்
சூலந் தனிலிட்ட சொற்பாடும் - காலன்

260.
உரத்தி லுதைத்த வுரமும் பிரமன்
சிரத்தை யறுத்த திறனும் - புரத்தை

எரித்த புகழு மிராவணனை வெற்பில்
நெரித்த சயத்து நிலையும் - உரித்துக்

கரியுரி போர்த்த கணக்குங் கணைவேள்
எரியெழப் பார்த்த வியல்பும் - விரியா

மொழியும் பரிசனமுன் மூதண்ட மெங்கும்
ஒழிவின்றி நின்ற வொருவன் - பழியஞ்சி

வெங்கால தூதுவரால் வேந்தற் குணர்த்தியதும்
மங்காத பாதகத்தை மாற்றியதும் - அங்கம்போய்

265.
வெட்டியதும் பொய்யமணர் விட்டபணி மாய்த்ததுவும்
பட்டுவிழ வானைப் பணித்ததுவும் - கிட்டி

எழிலார மெய்க்காட்டங் கிட்டதுவுந் தென்னற்
கழியாக் கிழிகொடுத்த வன்பும் - மொழியும்

திருமா தனையார் தியங்கிவளை விற்ற
பெருவாழ்வும் பாடிப் பெயர்ந்தாள் - அருகொருத்தி

வந்திறைஞ்சி மஞ்சன மாட வருகவென
உந்துமணி யூச லுடனிழிந்து - சந்ததமும்

விசுந் திரைவகை மேவிநீர் நாவிமலர்
வாசம் புணர மகிழ்ந்தாடித் - தூசும்

270.
களபமும் பூந்தொடையுங் காந்திமணிப் பூணும்
புளகமுங் கூடப் புனைந்து - தளவ

முறவன் மடமகளிர் மொய்த்தீண்டக் கண்டோர்
மறுக மதவேண் மகிழ - இறைமார்பில்

சிந்தையுற நின்றாண்முன் றெய்வமறைப் பாய்பரிமேல்
இந்திரனு மாலயனு மேத்தெடுப்ப - வந்தான்

அருவா யுருவா யருவுருவ மில்லா
உருவா யளியா யொளியாய் - மருவிலயன்

ஆடும் பெருமா னகிலம் புரக்கமுடி
சூடும் பழியஞ்சிச் சொக்கனென - நாடி

275.
உருகி யொருத்தி யுரைக்க மகிழ்வே
பெருகிப் பிடிபோற் பெயர்ந்து - கருணைக்கோர்

ஆகரனைப் பூரணனை யானந் தனைச்சந்த்ர
சேகரனை யட்டாலைச் சேவகன் - ஏகி

வணங்கினாள் பார்த்தாள் வழுத்தினாண் மாலோ
டிணங்கினாள் சிந்தை யிளைத்தாள் - அணங்குடையான்

வேதப் புரவியுடன் வீதி தனைக்கடந்தான்
மாதுக் கரசனைய மாமயிலைத் - தாதியர்கள்

கண்டவர்க ணின்றிரங்கக் கையணையிற் கொண்டேகிப்
புண்டரிக மாளிகையிற் போய்ப்புகுந்து - வண்டலர்த்தும்

280.
பாயன்மே லேற்றப் பகற்செங் கதிர்க்கடவுள்
ஆய குடதிசைவா யாழிபுக - மாயப்

பெருமாலை நல்கும் பெருங்கங்குன் முன்னே
மருண்மாலை வந்து மருட்டத் - திருமாலை

தாங்குந் தனக்குவட்டுத் தையலுங் கண்டுமனம்
ஏங்குந் தவிக்கு மிரங்கியிடும் - பாங்கிலெழும்

வெண்மதியப் பாவி விடுக்கின்ற செந்தீக்கென்
பெண்மதிய மாற்றப் பெறாதென்னும் - கண்ணீர்

துளிக்கு மனமயங்குஞ் சோருங் குயிலை
விளிக்கு முடலம் வெதும்பும் - அளிக்கரசை***

285.
வாவென்னும் போவென்னும் வண்கிளியை வாய்முத்தம்
தாவென்னு மாலை தருகென்னும் - கோவென்னும்

இப்படி வாடு மிவடன்னை யன்னையரும்
அப்பரிசை யாற்றுவா ராயிழாய் - ஒப்பிலான்

மாலையுந் தோளு மணிமார்பு நீதோயக்
காலையில் யாஞ்சென்று கட்டுரைப்பம் - வேலையெனத்

தோற்றுமா மையற் றுயரொழியென் றின்சொல்லால்
ஆற்றினா ராறினா ளங்கொருத்தி - சாற்றும்

மடந்தை

சலம்புரி காமன் றழைத்தோங்க வெற்றி
வலம்புரி ந‌ல்கு மடந்தை - தலம்புகழும்

290.
காம ரதக்கரும்பு காமச் சுவையமிர்தம்
காமன் றனக்குள்ள கட்டாண்மை - காமன்றன்

சேமத் தனஞ்செல்வஞ் செங்கோ லவன்கொற்றத்
தாமத் தரளத் தனிமவுலி - தேமுற்றுத்

தாது நெகிழுஞ் சதகோடி செங்குமுதம்
வாதிலழி யச்சிவந்த வாயினாள் - பூதலத்தோர்

முன்னூசல் கொண்டுமன மோக முறவேண்டும்
பொன்னூச லன்னமணிப் பொற்குழையாள் - மன்னும்

அலகின் மறையோ ரறிவி னுயர்வோர்
உலைய வுலக முலைய - நலமகலச்

295.
செங்கோ லொழித்தெவர்க்குந் தீங்கு புரிவேந்தர்
வெங்கோ லினுங்கொடிய வேற்கண்ணாள் - பொங்கி

மலையைக் கடிந்தெடுத்து வச்சிரத்தா லோங்கி
உலைவின் மகத்துக் குரித்தாய்ப் - பலகண்

படைத்துக் கருகிப் பணைக்களிற்றின் மேலாய்
மடற்கொத்து மாலை வளைந்து - திடத்தால்

புரந்தரனைப் போலப் பொலிந்து முனிவோர்
முரண்கெடுக்க விம்மு முலையாள் - நிரந்தரமும்

வஞ்சம் புரிவேந்தர் மண்டலத்துள் வாழ்வோர்தம்
நெஞ்சம்போ னின்றலையு நேரிடையாள் - அஞ்சிவரும்

300.
கோகனகந் தண்டரளக் கோவைதனைப் பூத்ததென
மோகந் தருவதன மூரலாள் - தோகை

ஒருபாக னெங்கோ னுலகே ழுடையான்
திருவால வாயான் றிருத்தோள் - மருவுவான்

சிந்தித்துத் தூதுநீ செல்லென்று பைங்கிளியை
வந்தித்துப் பாயன் மருங்கேறி - அந்திப்

பொழுதுவர வுள்ளம் புழுங்கி யழுங்கி
எழுதியே மின்போ லிருந்து - தெழுதாற்றா

ளாகித் தமியேனை யாற்றுவா ராரென்று
மோகித் தரிவையர்த முன்மொழிய - *ஓகைபெற

305. 
இன்னிசையாழ் வல்லாளோ ரேந்திழை யாழ்வாங்கித்
தென்னதென வென்றெடுத்துச் செந்தமிழாற் - பன்னியிசை

ஆக்கியவெண் சித்தி மடவார்க் கருளியதும்
மாக்கனக வாசல் வளவற்கு - நீக்கியதும்

வேட்டவர்க்குத் தண்ணீர் வினைமுகத்து நல்கியதும்
வாட்ட மறவிரத வாதத்தைக் - காட்டியதும்

வந்துபரி யாளாய் வளவற் குணர்த்தியதும்
எந்தையுல வாக்கோட்டை யீந்ததுவும் - முந்தைவழக்

கேறி வணிகற்கு மாதுலரா யெய்தியதும்
மாறன் பிரமகத்தி மாற்றியதும் - கூற

310. 
மனத்துயரும் போக மதியிருளும் போகத்
தினத்தை விளைப்பான் றிகழ - அனத்தை

அனையநடை வல்லிநீ ராடினா ளாடை
புனைகலன் வாசம் பொறுத்தாள் - தனைநேர்

இலகுமணிச் செங்கண்மா லேற்றின் முனிவோர்
மலர்பொழிய மாமறைகள் வாழ்த்தப் - பலமுகிலிற்

பல்லிய மார்ப்பப் பணிலத் திரண்முழங்க
எல்லையி றேவரினி தேத்தெடுப்பத் - தொல்லை

அருண சயில னசல னமலன்
ஒருவ னருவ னுருவன் - இருவர்

315.
மகிழு முதல்வன் மதுரை யிறைவன்
அகில புவன வதிபன் - இகலின்

இலகு மதன வயிரி யிமய
மலையின் வனிதை மகிழ்நன் - அலகிலாப்

பேத தபேதன் பெருமான் பிறப்பறுக்கும்
பாதன் பரமன் பரானந்தன் - நாதனணி

வீதிபுகுந் தானென்று மெல்லியலாண் முன்விட்ட
தூதுபோய் மீண்டகிளி சொல்லுதலும் - போதக்

களியுதவு தென்றலெனக் காமருபூ மாலை
அளிசிறந்த காற்றங் கசைய - ஒளிவிரியும்

320.
பாதவங்கொள்* பல்லவத்தை மெல்விரல்கள் பாரிப்பச்
சூத மலர்போற் சுணங்கெறிப்பச் - சாதி

விளையு மதுச்செருந்தி மிக்கமல ரெல்லாம்
அளகமலர்க் காவி னலரப் - புளகக்

கமுகத்திற் பாலையெனக் கண்டத்திற் கொண்ட
சமுகத் தரளந் தயங்க - அமுத

வளநீர்மை தாங்கி வளர்கனகக் கொங்கை
இளநீர்க் குலம்போ லிலங்க - உளமகிழச்

சாற்றுமொழி கோகிலத்தின் றன்மைபெற வெந்நிலமும்
மாற்ற வரிய மகிழ்ச்சியுறத் - தோற்ற

325.
உருவ மதனுக் குடையானை வேண்டி
வருவசந்த காலம்போல் வந்தாள் - பெருமான்

திருவுலாக் கண்டா டிருவழகுங் கண்டாள்
உருகினா ளுள்ள முடைந்தாள் - அருகொருத்தி

ஆங்கதனைக் கண்டொழிய வானந்த வாரிதிமுன்
பாங்கியொருத்தி பகருவாள் - தாங்கிநீர்

ஏந்து மலையோ விவண்முலையோ நன்றென்று
சேந்துணரும் வாறின்று சேர்ந்திடீர் - வேய்ந்த

இளம்பிறையோ வல்லி யிவணுதலோ செவ்வி
வளம்புனைவ தென்ற்றிய வாரீர் - விளங்கநீர்

330.
துய்த்த கடுவிடமோ தோகைக்கருங் கூந்தலோ
மைத்த தெனவறிய வந்திடீர் - கைத்தலத்தில்

தங்கு முழைவிழியோ தையன் மதர்விழியோ
பொங்குநல மென்ற்றியப் போந்திடீர் - செங்கைதனிற்

சேர்ந்த துடியிடையோ தேமொழியாள் சிற்றிடையோ
நேர்ந்த தெனவறிய நீர்வாரீர் - காந்தியொளிர்

போதணியுங் கொன்றையோ பொற்கொடியாள் பொற்சுணங்கோ
ஏதுநிற மென்றறிய வெய்திடீர் - ஓதரிய

சித்தரே நித்தரே சிற்பரா நந்தரே 
சுத்தரே யாலவாய்ச் சொக்கரே - இத்தகைமை

335.
செய்யு மெனமடவாள் செப்ப வவளருகே
மையன் மடந்தையும் வந்திறைஞ்ச - ஐயன்

திருப்பார்வை யீந்தருளச் சிந்தைகளி கூர்ந்து
விருப்பா யிவள்பெற்று மீண்டாள் - ஒருத்தி

அரிவை

புடவி முனிவோர் புகழ மதவேளுக்
*கடர்மௌலி சூட்டு மரிவை - கடையும்

உவரி தருமமிர்த மன்றி யுலகோர்க்
கவனி யுதவு மமிர்தம் - புவனிவலை

போதாத முத்தம் புகரொழிந்த மாணிக்கம்
சீதார விந்தத் திருச்செல்வம் - யாதும்

340.
புகன்ற திசையும் புவியுஞ் சுருங்க
அகன்ற நிதம்பத் தணங்கு - முகந்தவிசை

வண்டி னொழுங்கும் வளையு நுதற்சிலையும்
கொண்ட னிறமுங் குளிர்மலரும் - கண்டுமருள்

மாலைக் கடுத்த வழகும் படைத்துமதன்
கோலத்தை யொத்தகருங் கூந்தலாள் - ஞாலத்துள்

நற்கனகப் பூணை நயந்தக்கா லோரிரண்டு
பொற்கனக மேருப் பொருப்பாயும் - சொற்குலவும்

கொள்ளைத் தரளமணிக் கோவைத் திரளணிந்தால்
வெள்ளித் துணைக்கிரியின் மேம்பட்டும் - உள்ளம்

345.
புதையவொளிர் மாணிக்கம் பூண்டக்கால் வெய்யோன்
உதைய வரையிணையை யொத்தும் - இதையம்

பனித்து முனிவர் பதைப்ப மதனன் 
குனிப்ப மறலி குலைய - மனத்தை

உருக்கி யிடையை யொதுக்கி மிகவும்
தருக்கி வளருந் தனத்தாள்* - செருக்கண்

உறுசமர வீர ருரங்கிழித்து மீண்ட
நிறவலகு போல நிமிர்ந்து - கறுவி

விலகி மறலி விடுதூதர் போல
உலக மடைய வுலாவிக் - கலகம்

350.
விளைத்துக் கடுவை வெறுத்துயிரைச் சேர
வளைத்துப் பருகி மதர்த்துத் - திளைத்துக்

கொடுங்கால காலன் குவலயத்தைச் சாடும்
கடுங்கால தண்டநிகர் கண்ணாள் - தொடர்ந்து

திருவால வாயான் றிருமாலை வேண்டி
வருமால் வளர வருந்தும் - ஒருநாள்

படைமதனும் பல்கோடி பாவையருஞ் சூழ
மடலவிழும் பூங்காவில் வந்து -புடைமருவும்

தேமாவைப் பார்த்துகந்தித் தேமா நறுநிழலில்
நாமா தரித்திருத்த னன்றென்னப் - பூமடந்தை

355.
அன்னா ளொருத்தி யடியிறைஞ்சி யாரணங்கே
என்னா ருயிரேயெ னின்னமுதே - முன்னாளில்

இந்தமா நீழல்கா ணீரேழு பேருலகும்
தந்தமா னன்பாய்த் தழுவுதலும் - எந்தை

மறுவகன்ற செய்ய வடிவத்திற் கொங்கைக்
குறியும் வளைத்தழும்புங் கொண்டான் - அறிகிலை நீ

கள்ளுதவுந் தேமாவிற் காரணமீ தென்றுரைப்ப
உள்ளமே னாணத்தை யுள்ளடக்கி - வள்ளல்

செறிந்த திதுவன்றித் தெய்வ மரங்கள்
அறிந்ததிலை யோவென் றறைய - நறுங்குழலாய்

360.
ஆல மகிழ்தில்லை யாத்தி குராமருது
பாலைபலா வெண்ணாவல் பாடலம் - கோல

மருக்கொன்றை போலு மரங்களுள வண்ணல்
இருக்குமிட மிங்குவற்று ளிந்தத் - திருக்கடம்பு

போற்று மதுரா புரியால வாய்ச்சொக்கர்
வீற்றிருப்ப தென்று விளம்புதலும் - கோற்றொடியும்

நெஞ்சங் களிப்பமிக நீண்டகன்ற தூண்டுவிழிக்
கஞ்சங் களிப்பக் கடிதணைந்து - தஞ்சமென

நேர்வந் திறைஞ்சினா ணீபந் தனைநோக்கி
ஆர்வந் திகழ வறைகின்றாள் - சேரும்

365.
அரியயனு மேத்த வருமறைகள் போற்ற
உரிய முனிவ ருவப்ப்ப் - புரியும்

விரியுமலர் வேணியான் வீற்றிருக்கப் பெற்றாய்
உரிய சிவலோக மொப்பாய் - பெரிய

தனியான் மதனன் சரத்தான் மயலால்
துனியாற் றளந்தேனென் சொல்கேன் - முனிவகலத்

தீதன்றி முன்விறகு விற்றதுவுஞ் சேரலற்கு
நாதன் றிருமுகத்தை நல்கியதும் - ஓதல்

உறுபலகை பாணற் குதவிதுந் தூய
விறலி யிசைவியந்த வீறும் - மறுகியுழல்

370.
ஏனக் குருளைக் கிரங்கிமுலை யீந்ததுவும்
மான வரசமைச்சா வைத்ததுவும் - ஆனபயம்

தீரத் திறல்வலியா னுக்குபதே சித்ததுவும் 
நாரைக்கு முத்திதனை நல்கியதும் - தேரிற் 

கருணையது வன்றியொரு கைம்மாற்றுக் கன்றே 
அருளுடையா னாளுமோ வாளா - தொருவுமோ

என்றுரைக்கும் போதி லிறைவன் றிருவெழுச்சி
துன்று பணைக டுவைத்திடலும் - வென்றி

இருபுருவ மாக மெடுத்ததனு வென்னத்
தருகலன்கண் மின்னிற் றயங்கக் - கருகிநிறம்

375. 
கொண்ட மலரளகங் கொண்டற் குழாமென்ன 
மண்டி வழிதேன் மழைகாட்டத் - துண்டமும்

கண்ணுங் கரமுங் குமிழுங் கருவினையும்
தண்ணென்ற காந்தளுந் தாநேர - வண்ண

முலைமே லணிதரள மொய்வடங்கள் செய்ய 
மலைமே லருவிகண் மான - அலர்மேவும்

கந்தமிகுங் கார்காலங் காமப் பயிர்விளைக்க
வந்த தெனவீதி வந்தணைந்தாள் - எந்தை

கலாதி யிலாதி கலாமதி சூடி
வலாரி பராவு மணாளன் - நிலாவு 

380.
சுராரி முராரி சுபால கபாலி
புராரி பராதி புராணன் - கிராதனணி

கண்ணன் கருணைபொழி கண்ணன் செழும்பவள
வண்ணன் சதுரன் மதுரேசன் - எண்ணெண்

கலையா னிறைபரமன் கங்காளன் வெள்ளி
மலையான் மழவிடைமேல் வந்தான் - குலவிப்

பணிந்தாண் மடவாள் படர்மயலைச் சொல்லத்
துணிந்தாள் சிலவார்த்தை சொல்வாள் - கொணர்ந்தயலார்

பாரக் குவளைமலர்ப் பாயன் மலர்த்தொடையென்
றீரப் புழுகெனவ றிமசலமென் - றோராமற்

385.
பேசும் பொழுதும் பெருமானே யென்னெஞ்சம்
கூசும் படியென்னோ கூ*றிடீர் - ஆசைமால்

தந்தக்கான் மந்தக்கா றாழாம னென்னல்போல்
வந்தக்கா னானாற்ற வல்லேனோ - அந்தி

மதிக்குட் தழலு மலைச்சந் தனத்திற்
கொதிப்புந் தரளக் கொதிப்பும் - விதித்ததுதான்

என்னளவே வந்ததோ வெல்லார்க்கு மொக்குமோ
பொன்னளவு கொன்றையாற் பொன்படைத்த- தன்ன

படியே வருளீரேற் பாரீர் நகையீர்
அடியேன் மதன் போருக் காளோ - தொடியோ 

360 
கலையோ மனமோ கவர்ந்தீ ரளித்தீர்
அலையோ வலரோ வயர்வோ - தொலையாதோ

என்மயக்க மென்னென் றியம்பு மிவணிற்க
மின்மயக்கும் பெண்ணமுதம் வேறொருத்தி - மன்னும்

தெரிவை.

உலகுபதி னாலு மொருகுடைக்கீ ழாளச்
சிலைமதனக் கீந்த தெரிவை - பலவுயிரைப்

பட்டுப் பறியும் படைவே லனவரற்கு 
மட்டுப் படாத கடு வல்விடம்போல் - கிட்டரிய 

கூற்றந் தனக்குங் கொலைநூல் படிப்பித்தும்
சாற்று மதனூ றலைகண்டும்- ஆற்றா

365 
தடல்போ யகில மழிய வுகாந்தக்
கடல்போ லுலாப்போதுங் கண்ணாள் - புடவி

மருளக் கொடுமை வளர வளர்ந்த
இருளும் வெளிபோ லிரியக் - கருமையுற

வீசி யுயிரை வெருட்டிப் பிணித்தயம
பாசநிகர் கொந்தனக பந்தியான் - தேசம்

பணியப் பணியிற் பயின்று திருவை
மணியைப் புணர்ந்து மணந்து - தணிய

உலகை யளவிட் டுலகை விழுங்கி
உலகுக் கினிமை யுதவி - இலகி

400.
அரியிற் குலவி யமுதிற் சமைத்த
கிரியிற் பொலிவு கிளர - உரிய

புழுகு பனிநீர் புணர்களபச் சேற்றில்
முழுகி வளரு முலையாள் - எழுதும்

பழுதற்ற வோவியரும் பண்பாற் றெரிந்தும்
எழுதக் கிடையா விடையாள் - மொழியும்

குடபா லிரவி குதிப்பக் கலைகள்
உடையான் குணபா லுதிப்ப - இடையாடும்

தென்றற் கொழுந்துலவுந் தெய்வமணி மண்டபத்தின்
முன்றிற் றிருமாதர் மொய்த்திறைஞ்ச - நின்று

405.
மனங்கவரு மையல் வளர விருப்பாள்
அனங்கன் கொடுஞ்சமருக் கஞ்சி - இனம்பயிலும்

கோவைக் கனித்துவர்வாய்க் கோதையர்க்குக் கூறாமல்
பூவையர்க்குக் கற்பிப்பாள் போலிருந்து - தேவர்க்

கதிபன் முதல்வ னணியால வாயின்
முதல்வ னிசைகண் மொழிவாள் - மதுரைதிரு

வாலவா யானதுவும் வாள்வளவன் சேனையொளி
கோலுமட லம்பாற் குலைத்ததுவும் - சீலமுறச்

சங்கப் பலகை புலவர்பெறத் தந்ததுவும்
கொங்குதேர் வேதியற்காக் கூறியதும் - கொங்குதேர்

410.
சோராவற்குத் தீதகலச் சொற்றதுவும் பற்றியநக்
கீரர் தமிழ்முனிபாற் கேட்டதுவும் - சீருடைய

செந்தமிழை யூமை தெரிவித் ததுவும்வடபால் 
எந்தையிடைக் காடற்கா வெய்தியதும் - சிந்தை

மகிழ்ந்துரைக்கும் போது வனசப் பதியும்
புகழ்ந்த வுதயகிரி போத - மிகுந்துலகம்

மொய்த்த விருளு மகல முகமலர்ந்து
சித்திர மன்ன திருவெழுந்து - முத்தமிழும்

கற்றார் புகழுங் கடம்பவனத் தாலயத்துள்
பொற்றா மரைப்பொய்கை போயணுகிச் - சுற்றும்

415.
விரிந்ததடங் கண்டு வியந்து நயந்து
பரிந்து சிலதியரைப் பார்த்துத் - திருந்துமணி

நீலக் கருங்கெண்டை யங்க ணிறைவுதரும்
கோலத்தோ டுள்ளங் குளிர்ச்சியடைந் - தேல

முளரி முகமலர்ந்து முத்தந் தரித்து
வளைகள் செறிந்து வயங்கி - அளிசேர்ந்

துகளு மிருப்பா லுடையான் றிருத்தார்
அகமகிழப் பெற்றுமய லாற்றும் - மகளிர்

தமைப்பொருவு மிந்தத் தடமென்று நேசத்
திமைக்குமணிப் பூணா ளியம்பி - அமைத்தவிழி

420.
ஓரா யிரக்கடவு ளுற்றபெருந் தீவினைபோல்
தீராத வென்மயலைத் தீர்த்திரென - நீராடி

ஆடை யணிமுற் றணிந்தான் கரையணையப்
பாடலிசைப் பாணன் பணிந்திறைஞ்சி - ஆடல்வேள்

வெற்றித் திருவளைய மின்னே யரன்பவனி
இற்றைக்கு முண்டென் றியம்பினான் - சொற்றகைய

பாணற்குப் பைம்பூணும் பட்டா டையுமுதவி
யாணர்த் திருமா ளிகையெய்தி - ஆணிமணிப்

பீடத் திருக்கவொரு பெய்வளையாள் வந்திறைஞ்சி
ஆடகப் பொற்பூ ணணிந்தக்கால் - கூடல்

425 
அமலர் பவனி யருகி னெடுமால் 
கமல வனிதையெனக் காணும் - அமையும்

வயிர மணிபுனைந்தான் மாமலரோ னன்னூல்
பயிலு மரிவையெனப் பார்க்கும் - செயிரில்

கதிருதய பானு கதிர்கரப்ப வீசும்
புதிய மரகதப் பூணான் - மதிமுகத்து

வல்லிக் கலங்காரஞ் செய்து மலர்க்கரத்தில்
அல்லிக் குவளை அளித்தயல்சூழ் - மெல்லியர்க்கு

வைத்த கனகம் வயிரந் தரளமணிப்
பத்தி யணியணிந்து பன்மாதர் - மொய்த்திறைஞ்சப்

430 
பக்க முறநிறுத்திப் பாணன் றனைநோக்கி 
மிக்க வுவமை விளம்பென்றாள் - தக்கமலர்ச்

செந்தா மரையாளும் வெண்டா மரையாளும் 
மந்தா கினியு மருங்கெய்த - வந்தித் 

தரமகளிர் சூழ வகிலாண்டம் பெற்ற 
வரைமகடான் வீற்றிருந்த வாறு - பொருவுமெனச்

கன்னி யெதிர்நின்று கைகுவிய மெய்குழைய
இன்னிசையாழ்ப் பாண னியம்பினான் - தென்னவற்காக்

கான்மாறி யாடுகின்ற காரணனை யாரணனை
நான்மாடக் கூடலுக்கு நாயகனைத் - தான்மால்கொண்

435.
டாவியப் பூணா யழுத்தி நினைந்துருகி
ஓவியப் பாவையை யொத்திருந்தாள் - மேவா

அரக்க னுரத்தை யடுக்க லெடுக்க
நெரித்த வொருத்த னிருத்தன் - விரித்த

விதிப்படி யுற்ற விற‌ற்சமன் வெற்றி
பதைக்க வுதைத்த பதத்தன் - மதித்த

சதுரான னன்கண்ணன் சங்கார காலன்
மதுரா புரேசன் மணாளன் - கதுவுமலர்ப் 

போதுதிர்க்குங் கற்பகப்பூம் பொன்விருக் கத்தின்மேல்
வீதி மறைபரவ மேவுதலும் - ஆதரவு

440.
கொண்டாள் விரைந்தணைந்தாள் - வண்டு

மருக்கமழுங் கொன்றையான் மாமூர லீந்தான்
தருக்கிப் புளகந் தழைத்தாள் - கருப்புச்

சிலையி னுதறிகழச் செங்கமல வாச
மலரின் வதனம் வயங்க - நிலவு

தளவ முறுவ றயங்க வசோகத்
தொளியும் வடிவு மொளிர - மிளிர்சூதப்

போதிற் சுணங்கு பொலியக் கழுநீரிற்
காதிற் பொருகண் களிசிறப்ப - ஓதும்

445.
மகரக் கொடியின் மணிக்குழைகள் வாய்ப்ப
இகலிப் பொருமதன னேற்றம் - அகலவெதிர்

வென்றிறைவன் றன்னருளால் வேளரசு கைக்கொண்டு
நின்றனன்போ லாயிழையு நேர்நின்றாள் - குன்றாத

மெய்ப்பா லணங்குடையான் வெள்ளிமணி மன்றுடையான்
அப்பா லுலாவந்தா னாங்கொருத்தி - இப்பாரில்

பேரிளம்பெண்.

மாறாத வெற்றிபுனை மாரவேண் மாதவத்தின்
பேறா மெனவந்த பேரிளம்பெண் - கூறின்

வருத்தி யுடனே மகிழு மதனூல்
விருத்தி யதுராக வெள்ளம் - திருத்தும்

450. 
அமுத முதவ வவதரித்த மூரற்
குமுத வதனநறுங் கொம்பு - தமரம்

பழகு முத்திப் படிபுதுமை யேற
அழகு பயந்த வணங்கு - விழையும்

சுரத மதனச் சுருதி யறிவுக்
கிரதி பரவ விருப்பாள் - மருவு

திருவா லுருவாற் றிருப்பாற் கடன்மேல்
வருவாள் புகழ வருவாள் - பெரியோர்

நிறைகழிக்க மையொழித்து நேரெதிர்த்த வேந்தர்
உறைகழித்த வேலொத் துலாவி - இறையெடுத்த

455.
முத்தலைவே லென்னவுயிர் முற்று முடித்தறவோர்
சத்தியவெஞெ சாபந் தனையொத்து - வித்தகமாம்

விற்றே ரநங்கனையும் வேற்றடக்கைக் கூற்றினையும்
குற்றேவல் கொண்டகொடுங் கூர்விழியாள் - துற்றணிந்த

வேரித்தா மப்பளித மென்சந் தனக்குழம்பாற்
பூரிப்பாற் செய்யமணிப் பூணாரப் - பாரிப்பால்

எண்பார்த் தலத்துளிடை யில்லையென்று போகாமல்
கண்பார்த்த வன்ன கனதனத்தாள் - நண்பால்

இறைப்பொழுது நீங்கா திறைதிருமே னிக்கண்
உறைக்குந் தகையுமென வுற்றோ - மறைத்ததற்கு

460.
மெய்வளையு மாமை மிகவெறுக்கு மென்றோமுன்
கைவளையுந் தோள்வளையுங் காதலியாள் - மைவளையும்

விண்படைத்த மாடத்தின் மீதே மதிள்புடைசூழ்
வண்பளிங்கிற் செய்தமைத்த மண்டபத்துக் - கண்களிப்ப

வெண்ணிலா முன்றிலிடை மீதேறி நீர்வெள்ளம்
தண்ணிலா வெள்ளமெனத் தையலார்-எண்ணிலார்

தங்க டிருமுகமுந் தாழ்குழலும் பங்கயத்திற்
பொங்கி யெழுமளிகள் போற்பொலியத்-தங்கம்

செறியு மணிக்குழையுஞ் செங்கண்ணும் வள்ளை
மறியுங் கயற்செயல்கண் மானக்-குறியாத்

465 
தளரிடையுங் கொங்கைகளுந் தாமரைநா ளத்து
வளரு மிருமுகையின் வாய்ப்பக்-களமும்

நகையு மணிபணில நன்முத்த மென்னத்
துகில்க டிரைபோலத் தோற்றத்-திகழும்

புலராத செவ்விப் பொலிவா லொளிகூர்
மலர்வாவி யைமுன்றின் மான-மலர்வாவிச்

செம்பதுமப் பீடத்துச் சேரோ திமமென்ன
அம்பவளப் பீடத் தமர்ந்திருந்து-நம்பன்

ஒருவ னெமையா ளுடையான் புயங்கள்
கருதி யயர்கென்ற காலை-முருகியலும்

470 
அம்புயமும் பாற்கடலு மைந்தருவுஞ் சிந்தித்தோர்
தம்பதங்க ளாக்கொள்ளத் தந்தருளும்-நம்பெருமான்

திங்க டனையொழித்துச் செங்கதிராம் வெங்கதிரைக்
கங்குலுக்குங் கற்பித்த காரணத்தை-மங்கைமீர்

சாற்றுமென யாழ்த்தடக்கைத் தைய லொருவிறலி
கோற்றொடியஞ் செங்கை குவித்திறைஞ்சித்-தோற்றம்


கருனா கரனைக் கடம்பவனத் தானை
மருவாமல் வாடு மகளிர் – திருவாயாம்

செங்குமுதத் துக்குந் திகழ்முரன் முல்லைக்கும்
அங்கட் சகோதர மவைதமக்கும் - திங்கள்

475
பரிதியெனத் தோன்றும் பரமன் புயத்துக் 
குரிய நினக்கிவ் வுரையேன் - தெரியிழாய்

ஓசை ய‌மிர்த‌டியே முற்ற‌ருந்த‌ யாழ்சிறிது
வாசியென‌ நின்று வ‌ண‌ங்குத‌லும் - மாசிலாத்

த‌ந்திரியாழ் வாங்கிச் சராசரங்க ணின்றுருகக்
கந்திருவக் கன்னியருங் கண்டுவப்ப - அந்தமிசை

ஆதி வ‌லைவீசி ய‌ன்புற் ற‌த‌வுமுண்மை
வாதவூ ர‌ர்க்கு வ‌ழ‌ங்கிய‌தும் - பேத‌ம‌ற‌ 

வெம்ப‌ரியைப் பாண்டிய‌ற்கு விற்ற‌துவு ம‌ற்றைநாள் 
அம்புவியெண் வையை ய‌ழைத்த‌துவும் - எம்பெருமான்

480 
பிட்டுக்கு ம‌ண்சும‌ந்த‌ பேர‌ருளுந் தென்ன‌வ‌னை 
அட்ட‌த‌ழ‌ல் வெப்பை ய‌க‌ற்றிய‌தும் - ம‌ட்டில‌ம‌ண்

வெங்க‌ழுவி லேற விடுத்த‌துவும் வ‌ன்னிகிண‌
ற‌‌ங்க‌ளை க‌ற்பா ல‌ழைத்த‌துவும் - த‌ங்கும்

இருந்தண் டமிழ்பாடி யாழ்கலனே யாகக்
கருங்கங்கு லாழிகரை கண்டாள் - பெருங்கவர்க்கால்

வாரண மார்ப்ப மலர்வண் டொலியெழுப்பக்
காரிரு ளோடக் கடிக்கமல - வேரி

அலர நிருத ரழியக் கதிர்கள்
மலரத் தொழில்கள் வளர - விரகால்

485.
இரவி குணபா லெழுபுரவித் தேர்மேல்
வரும்பி ராம மழுங்கப் - பரவும்

மதவா ரணமு மணிவா ரணமும்
விதவார வாரம் விளைக்கக் - கதுவு

முறைச்சுருதி யாழொலியு மூவாத தெய்வ 
மறைச்சுருதி சூழொலியு மல்கத் - திறத்தடையும்

பல்லுயிரிற் பேரிருளும் பாரிற் கலியிருளும்
ஒல்லை யடையா துடைந்திரிய - நல்லோர்

முகத்தா மரையு முனிவொன் ற்றியா
அகத்தா மரையு மலரப் - பகைத்தமொழி

490.
ஈனச் சமயத் திகலழிய வெல்லையிலா
ஞானக் கதிர்க ணலமுதவத் - தானே

தருமந்த மில்லாச் சராசரங்கட் கெல்லாம்
பருவம் பெறஞான பானு - ஒருவனெழில்

எட்டானை பூண்டெழுந்த விந்திரவி மானத்து
மட்டார் மலர்வீதி வந்தணையத் - தொட்டாரேல்

முன்னமய லைத்தீர்க்க மோகம் வடிவுடைய
தன்ன மடப்பாவை யாயத்தார் - தன்னருகு

போற்ற மதுரா புரேசன் பவனியெதிர்
ஏற்று நடந்தா ளிறைஞ்சினாள் - ஆற்றாப்

495.
பெருமா மயக்கத்தைப் பெற்றுவந்த தன்மை
ஒருநாவா லோத லுறுமே - அருகொரு

சேடி யிவணிற்கச் செந்தமி ழா*கரனை
ஓடி வணங்கி யுடையானே - நீடி

வளமதியத் தீயால் வதன மதியும்
உளமதியும் வாட லுணரேம் - அளவில்

ஒருமைக் கடலொலியா லுற்றதுயி னீங்கி
இருமைக் கடலுலைவ தென்னே - ஒருமலயக்

காற்றா லிரண்டு களபவரை முத்தாரம்
ஆற்றாத தென்னோ வறிகிலேம் - கூற்றின்

500.
விளங்கியவே யோசையால் வேய்த்தோ ளிரண்டும்
துளங்குவகை யென்னென்று சொல்கேம் - விளிந்தால்

மறுகு மிவளென்று வாழ்த்த வவளும்
சிறிது மயக்கந் தெளிந்து - முறைகடந்து

புக்க கடவுளர்தம் பொற்பழியத் தற்போத்த்
தக்க னியாகந் தனை யழிப்பாய் - மிக்க

உருவிலாக் காம னுயர்தோ ணெரித்தும்
திருவிலா மாலைச் சிதைத்தும் - இருமருங்கும்

யாமத்து மாதரவா மாமதிதேய்த் திட்டழித்தும் 
காமக் கொடுங்கனலின் கைகுறைத்தும் - சேமித்துப்

505.
பாத்துரையா மித்தரைத் பல்லுதிர்த்து மாமடலிற்
சாய்த்த விதியைத் தலைகெடுத்துஞ் - சாத்தியொளிர்

மாக விமான மனம்வளர்த்த வென்றுயரம்
யோக மளித்தொழிக்க வொண்ணாதோ - மோகமுற

வாரூ டறுத்து வளர்முலைக்குந் தோளுக்கும்
சீரூரு மானிடர்க்குந் தேவர்க்கும் - ஆரூரில்

செம்பொற் றியாக மளிப்பதுபோற் செம்பசலை
அம்பொற் றியாக‌ ம‌ளிப்ப‌தேன் - அம்பிகை
ஆர‌த் த‌ழுவு ம‌ரிய‌ திருமேனி
சேய‌க் குழைத்த‌ செய‌றீர‌ப் - பாரில்

510
அரிவைய‌ர்த‌ நெஞ்ச‌முட னாகங் குழைத்தால்
புரிவுதரு மத்தழும்பு போமே – விரியும்

ச‌டைப்பா‌ல் விள‌ங்க‌த் த‌கும்பூந் தொடையும்
இட‌ப்பாக‌ப் பூந்தொடையு மீந்தால் - ப‌டைத்த‌ 

குலப்பாவை யாரூடல் கொள்வரேன் மற்றை
வலப்பாகத் தாமம் வழங்காய் - முலைத்தடத்திற்

சேர்ந்தா ளெனநின்று செப்பினா டன்னெஞ்சம்
சோர்ந்தா ளுடலந் துள‌ங்கினாள் - போந்தணுகி

இப்படி மாத ரெழுவகையு மால்கொள்ள‌
முப்புவன‌ங் காக்க‌ முடிபுனைந் - தொப்பிலாச்

515 
சுந்த‌ர‌ மாற‌ன் சுருதி சுர‌நாட‌ர்
வ‌ந்து ப‌ர‌வு ம‌துரேச‌ன் - எந்தை

அருள்பாவு கோன்க‌ருனை ய‌ங்க‌யற்க ண‌ம்மை
ஒருபாக‌ன் போந்தா னுலா.

----------------------------------------------------------- 
 

குறிப்புரை1. தாம் மேவி.

4. சமய முதல்வி: "அறுவகை நெறிகளும் பிறவு மாக்கிய, விறைவி" கந்த. கடவுள். 7.

5. மாணிக்கவல்லி - அங்கயற்கணம்மையின் திருநாமங்களுள் ஒன்று; கண்ணி, 130. மாணிக்கவல்லி, மரகதவல்லி : "மாணிக்க வல்லிமர கதவல்லி யபிடேக வல்லிசொற்றமிழ் தழையவே" (மீ. பிள்ளை, காப்பு.) இசை - இசைத்தமிழை. காணரிய - பிறர் தன்னைக் காணுதற்கு அரிய.
6. பங்கயற்கு அண்ணான் - பிரமதேவரால் அணுகப்படாதவர் "பங்கயற்க ணரியபரம் பரன்" (திருவிளை. கடவுள். 4.) பங்கயம் கண்ணான் - திருமால்.

7. இது முதல் 13 - ஆங்கண்ணி இறுதியாகத் தசாங்கம் கூறப்படும்.
தமிழ் வெள்ளம் - தமிழாகிய நீரை. திண்முனி - அகத்தியர், பூமியைச் சமன்செய்தல் விந்தத்தை அடக்குதல் கடலைக்குடித்தல் முதலியன செய்தமையின் திண்முனியென்றார்.

8. இறைமுகன் - பாண்டியன் முன்பு. அருட்பாடலென்றது திருஞான சம்பந்தமூர்த்தியின் தேவாரத்தை. நன்னூல் துறை – சங்கச் செய்யுட்களின் வகைகள். எதிரேற்றும் வைகை யென்க; வைகை: வேகவதி யென்பதின் மரூஉ.

9. சோலையினின்றும், செந்நெலுக்கும் கன்னலுக்கும் தேன் பாயும் என்க. கான் - இசை; "கானேற்ற பாடற் கவுணியனும்" என்பர் பின் (87); புகழுமாம்; தக்க. 448, உரை.

10. மதுரையில் மறையோசையும் சங்கத்தமிழோசையும் இருந்தன வென்பது, "ஓத லந்தணர் வேதம் பாட" (மதுரை. 656), "நான் மன்றக் கேள்வி நவில்குர லெடுப்ப, வேம வின்றுயி லெழுத லல்லதை, வாழிய வஞ்சியுங் கோழியும் போலக், கோழியினெழாதெம் பேரூர்துயில" (பரி.), "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின், மகிழ்நனை மறுகின் மதுரை" (சிறுபாண். 66-7) என்ற சான்றோர் வாக்குக்களால் உணரப்படும். 

11. இதழி - கொன்றைப்பூ; கொன்றை பொன்னிறமுடையது; "தங்கந‌று மாலை", "பொன்னளவு கொன்றை" என்பர் பின்; 125, 388.

12. கதிகள் - நடைவகைகள். விடையே அவருக்குத் துரகமும் களிறும் துவசமுமாக உள்ளதென்பது ஈண்டுஅறியற்பாலது.

13. மறைமுரசன் - வேதமாகிய முரசத்தையுடையவன்; "ஆரண முரசம் பொங்க" என்பவர் பின்; 211.

14. அநகன்-பாவமில்லாதவன். அகலன்: "அசல னமலன்" கண்ணி, 314

14.-5. வனசப்பதி ஆரணன் -தாமரை மலரை இடமாக உடைய பிரமதேவன். காக்கும் அதிகாரத்தை.

16. நரமடங்கல்-நரசிங்கமூர்த்தி. ஆங்காரம்-அகங்காரம்.

17. இனமூரல்-புன்சிரிப்பு.

18-அண்ணல்-இந்திரன். அரும்பழி-தீர்த்தற்கரிய விருத்திராசுரனைக்கொன்ற பழி.
இக்கண்ணிமுதல் இந்திரன் பழிதீர்த்தது முதலிய மூன்று திரு விளையாடல்லள் கூறப்படும்.

16. அழகிய சொக்கர்:"அழகிய சொக்கர், உறைந்த திருவெல்லை யுற்று". "அழகிய சொக்கனை" (கண்ணி, 21, 244); "அழகிய சொக்க னாமம்", "அழகிய சொக்கெனத் தேறி", "அழகிய சொக்க னென்னுந், துணிவுடைத் தோலாக் கையும்" (திருவால-
23: 19, 25: 25, 35: 32); "ஆனேறும் வலனுயர்த்த வழகிய சொக்கர்:,"அழகிய சொக்கர் கடம்ப வனச்சொக்கர்", "மதுரை யழகிய சொக்கர்" (மதுரைக்கலம், 4,53,94.) என-என்று சொல்ல

18-9 "மெய்ப்படு சிற்பம் வல்ல வுத்தம விரைந்து நீபோய், ஒப்பில்காஞ் சனவி மான மும்பலிற் கொணர்தி யென்ன, அப்பொழுதவன்போ யாசை யானையிற் கொணர்ந்து காட்டத், தப்பிலா விதியினோங்கச் சாத்தினான் குளிர்வி மானம்". "சிந்தைவாழ்ந் திறைஞ்சியேத்திச் சிறந்தசெய் தியாரும் போற்ற", அந்தநீ டால யத்துக் கணியுற வியைந்திருந்த, சுந்தர வடிவங் கண்டே சொக்கெனு நாம மிக்க, தந்தையே நினக்கல்லாதோர் தேவர்க்கு மிகையா தென்றான்" திருவால. 1: 25-6

20. கடவுட் களிறு-ஐராவதம். அதன் பின்னர்-அக்காலத்தின் பின்பு. பெருவணிகன்: இவன் பெயர் தனஞ்சயனென்று தெரிகின்றது. திருவிளை. 3:8

21; வழுதி-குலசேகரபாண்டியன். திருவெல்லையென்றது கடம்ப வனத்தை.

22 சூனி** கை- மாளிகையின் உச்சியிலுள்ள கட்டிடம்; இது சூடிகா என்பதன் திரிபு. பீடிகை -பீடம்.

23 கிடங்கு- அகழு

24 தாரகையை- நட்சத்திர மண்டலத்தை.

25 தெற்றி- திண்ணை. தோரணம்- தோரணவாயில். தேர் நிரை - நிலைத்தேர்களின் வரிசை.

26 -7 கலை- கலைமானை. சூலி- சூலாயுதத்தையுடையாள்; துர்க்கை. சூழி- சக்ராயுதம். தென்பாற் சூலிக்கும், வடபாற் காளிக்கும்,குடபால் மாலுக்குமென நிரனிறையாகக் கொள்க. இம் மூவரும் இந்நகரத்தைக் காக்கும் தெய்வங்களாவார்; திருவால. திருநகர். 12-4, 53: 16, பயன் முதலியன்: 5.

28. பாசப்பகையாம் கங்கை. அருளி - நகரத்திற்கு அருளி.

29. மதி - சந்திரன்.

31. பரிகாரம் - கோயிற்பணிவிடைக்கு உரியோர்.

33. வீரமாறன் - இந்நூலை ஆக்குவித்த ஓரரசன். இவன் "முழைசை வீரமாறன்" என்றுங் கூறப்படுவான்; சிறப்புப். 2. வீரமாறன் குலதிலகனென்றது, முன்பு திருநகரங்கண்ட குலசேகர பாண்டியனை; திருவிளை. 3: 2.

35. விழாவாகிய சிறப்பு.
35-6. மறைத்தண்டமிழ் - தேவாரம். வாசகம் - திருவாசகம். திருவிசை - திருவிசைப்பா. மந்திரம் - திருமூலர் திருமந்திரம்.

36-7. 'தொண்டரருள்விரித்த சேக்கிழார்' என்பது, தொண்டர்சீர் பரவுவாரேன்னும் அவரது திருநாமத்தை நினைப்பிக்கின்றது. செய்யுள் - பெரியபுராணம்.

38. பொங்க - மிகுந்த ஒலிப்ப, நடம்புரிய. கடிது - விரைவில்.

40. பாங்கம் மடவார் - தேவிக்கு அகம்படிமைத் தொழில் செய்யும் மகளிர்; "அடையாள முளரித் தலைவியாதி மடவார், உடையாடிருவகம் படியில்யோ கிளிகளே" தக்க. 95.

41. ஆர்ந்த - நிறைந்த.

42. மலயத்தனிக்கால் - பொதியின்மலையிலிருந்து வரும் ஒப்பற்ற தென்றற்காற்று. வர சரன*ம் - மேன்மையான பல்கணி; இப்பெயர் சாலமெனவும் வழங்கும்; இது சரள மென்றும் படித்தற்கு இடமுண்டு.

43. அகில முழுதும் பயந்த கன்னிகை - அங்கயற்கணம்மை; கண்ணி, 84, 356, 432.

45. வீணை வேறு யாழ் வேறு; "வேய்குழல் விளிகொ ணல் யாழ் வீணையென் றினைய காண". கம்ப.கிட்கிந்தை. அரசியல், 8.

46-7. திரு இருப்பில். சவுராதி - சூரியன் முதலாக. சண்டாந்தம் - சண்டேசுரர் இறுதியாக உள்ள.

48: மண்டபங்கணாயன்: இஃது இப்பொழுது மண்டபங்கணாயகனென்று வழங்கும்; இது சின்னப்ப நாயக்கர் என்பவராற் செய்யப் பெற்றதாக மதுரைத் திருப்பணிமாலை கூறும்; அந்நூல், 37-ஆம் செய்யுளைப் பார்க்க.

41. பணிசாத்து மறையோர் - திருவாபரணம் முதலியவற்றைச் சாத்தும் அந்தணர்கள். ஒன்பது கோள் - நவக்கிரகங்கள்.

51. புகற்கு அரிய - சொல்லுதற்கரிய. பொன் ஆடை - பீதாம்பரம். உகத்து இருளை - யுகாந்த காலத்தில் தோன்றும் பேரிருளை.

52. வான் - ஒளி. வயிரமணி - வயிரமாகிய இரத்தினம். உதரபந்தம் - வயிற்றின் மேற்கட்டும் ஓரணி.

52 - 3. அளிகள் - வண்டுகள். "தாமரைமலர் கைக்கும், அதனைச்சூழ்ந்த வண்டுகள் நீலக்கடகத்துக்கும் உவமை.

54. கேயூரம் - வாகுவலயம். மந்தரம் - மந்தரமலை. வாய்ப்பு உதவ.

55. நதி - கங்கை. கை - தாமரை. முத்துமாலைக்கு நதி உவமை: "காவிரி, மாதர்மண் மடந்தைபொன் மார்பிற் றாழ்ந்ததோர், ஓதநீர் நித்திலத் தாம மொக்குமால்" (பெரிய. திருநாட்டு 2); தக்க. 106, 280.

56. ஆரம் - மாணிக்கமாலை. கதிர் மண்டிலம் - சூரிய மண்டலம். மேரு திருரிமார்பிற்கும், கதிர் மண்டிலம் ஆரத்துக்கும் உவமை.

57. தற்படி - தனக்கு ஒப்பு; படி: பிரதி யென்பதன் திரிபு. தற்படி......சாம்புநதநிதியம்: "பொன்னுக்குச் சாம்புநதம்" (திருவள்ளுவ. 36.) வில் - ஒளி.

57-8.57-8.கற்பகத்தின் பொற்பூண்மாலை மலர்மாலை - கற்பகத்தில் உண்டாகிய பொன்னணியும் பூமாலையும். பூதர மார்பு - மலை போன்ற மார்பு.

58-*. கற்பூரச் சுண்ணம் - பச்சைக் கற்பூரப்பொடி. விடாய் - வெப்பம்.

60. கடு அமைத்த ஒண்டொடி: இறைவன் விடம் உண்டபொழுது அஞ்சி உமாதேவியார் தமது திருக்கரத்தை இறைவன் கண்டத்திற் சேர்த்து அவ் விடத்தை அடக்கினாரேன்பது புராண வரலாறு. தண்டத்து - தண்டைப் போல.

60-61. உருகாதவருக்குத் தண்டு உவமை.

62. பாவவிருளகற்றும் வெண்ணீறு: "வினைவள நீறெழ நீறணியம்பலவன்" (திருச்சிற். 118.) நிலாநுதல் - பிறையையணிந்த நுதல்; "பிறைநுதல் வண்ண மாகின்றது", "பிறைநுதல் விளங்கு மொருகண்" புறநா. 1:9, 55:5.

63 திதலை-பொற்பிதிர்வு சேவை -காட்சி

64 செஞ்சுடர்-சூரியன்

63-64 திருமுடிக்குச் சூரியனும் திருவாசுக்கு இந்திரவில்லும் உவமைகள்

64 -5 சுந்தரம்-அழகு. ஒப்பனை-அலங்காரம். சுந்தரத்துக் கொப்பனை; "அழகினுக் கழகு செய்தார்" (கம்ப. கோலங்காண். 3) பதிவாய்-சிவபிரானிடத்து; மண்டபத்தின் வாயிலென்றுமாம். 

66 காலம் வருக என-இது தரிசித்தற்கு உரியகாலமாகும், நீவிர் வருவீராகவென்று திருமால் முதலியோரை நோக்கி நந்திதேவர் கூற.

67 என்று-என்று திருமால் சொல்லி

68 கலாதி-கலாதத்துவ முதலியன. மனாதி-மனம் முதலிய நான்கு அந்தக்கரணங்கள். புலாதி-ஐம்பொறி முதலியன. புலம்: ஆகுபெயர். வாக்காதி-வாக்கு முதலிய கன்மேந்திரியங்கள். சத்தாதி-சப்தம் முதலிய புலன்கள். வானாதி-வான் முதலிய ஐம்பூதங்கள். கலாதி புலாதி: "கலாதி நீங்கின குணங்களு மிரிந்தன கரணங்கடணிச்சாய்ந்த, புலாதி மாறின" சிதம்பர. சமாதிச் 4 1/2

66. நடம்-தாண்டவம். 

70 சலதி-கடல்

71. மதுரைத் திருவாலவாய்: மதுரையென்றது நகரத்தை; திருவாலவாயென்றது திருக்கோயிலை; "கூடலாலவாய்", "மதுரையால வாயிலாய்"(தே. திருஞா.); "தென்கூடற் றிருவாலவாய்"(மேற்படி. திருநா) அருள் தா.

73 சுத்த இசை -இயல்பான நடையுள்ள இசை: "சுத்தசாளரசங் கீதம்"(திருவால. 54:13-40) குனிப்பம்- ஆடல்: அம்: சாரியை.

75 போத-எழுந்தருளுதற்கு. முகிழ்த்தம்- முகூர்த்தத்தை "பெரியோரைச்சேர்ந்த முகிழ்த்தத்தினால்" திருவிளையாடற்பயகா. 63

78 ராசி-கூட்டம். தமனியம்-பொன்.

78-79 பொன்னசலம்-மேருமலை. மாணிக்க ராசிகளுக்குச் சூரியர்களும் தேருக்கு மேருவும் உவமை 

80 தொண்டர்-வெள்ள. ஒளி-அடியார். கூட்டத்தின் ஒளி திருநீறணிந்த தொண்டர் ஒளிக்குப் பாடற்கடல் உவமை; "புரமெரிந்து விழந கைத்த புனித னன்ப ரளவிலார், வரமி ருந்த மேனி நீறு மறுகி லங்கு மொளிகள்பாற், பரவை முன்பி ரிந்த மெய்ப்ப தஞ்சலிக்க ணேயமே விரவி வந்து காண வெங்கு மேவி சேட லொக்குமே" (சிதம்பர. துன்மதச். 48); "அரந்தை தீர்க்கு மடியவர் மேனிமே,னிரந்தநீற்றொளியால்......பரந்த வாயிரம் பாற்கடல் போல்வது" பெரிய. திருக்கூடள்டச் சிறப்பு,3


80-81 அக்கடலில் அம்பொன்கிரி-அந்தப் பாற்கடலில் மத்தாக நாட்டிய மேருமலை; "மேருமத்தார்த்து" (மீ. பிள்ளைத். காப்பு. 4) பணிமாற-அசைக்கப்பட. கவரிக்குப் பாற்கடற்றிரை உவமை: "பாலின் வெண்பர வைத்திரை......பரந்தெனச் சாமரை பதைப்ப" (கம்ப. நிந்தனை. 16) "திரண்டு வந்த வராமிர்த சீகரஞ் சிதற வீசித்திருப்பாற் கடற்றிரை, யிரண்டு வந்தன வெங்கும் விடாவென விருமருங்குங் கவரி யிரட்டவே" தக்க. 284.

81-83 அம்புவி-பூமியில். கண் மூன்றுடையானை-சொக்க நாதரை. குடைக்காம்பிற்குக் களங்கத்தின் ஒழுக்கும் குடைக்குத் திங்களும் உவமை.

84 கன்னி-அங்கயற்கணம்மை.

85- கைகள் தலை ஏற- பனிப்ப-துலிப்ப

86-7 நீடு ஏற்றம் தான் ஏற்ற புத்தன்-மிக்க உயர்வைத் தானே ஏறட்டுக்கொண்ட பௌத்தன். கான் - இசை; 9 – ஆங்கண்ணியின் குறிப்பைப் பார்க்க. கவுணியன் - திருஞான சம்பந்தர்.

89. பெருமாள் - சுந்தரமூர்த்தி நாயனார்; "திருத்தொண்டத் தொகைவிரித்த பேரருளின் பெருமா ளென்னுந், திருமணக்கோலப் பெருமாண் மறைப்பெருமா ளெமதுகுல தெய்வ மாமால்" காஞ்சீப். கடவுள். 12.

90. போதி - அரசமரம். 91. தடிந்தோன் - சண்டேசர்.

91-92. எந்தை - ஸ்ரீ நடராசமூர்த்தி. திருநீற்றுச்சோழன் - இரண்டாங் குலோத்துங்க சோழதேவர்; "பருதிகுலந் தனிலுதித்துப் பரசமய விருளகற்றிப் பரம னாடும், பொருவருபே ரம்பலமுங் கோபுரமு மாலயமும் பொன்மேய்ந் துண்மைச், சுருதியுடன் சைவநெறி தழைத்தோங்கத் திருநீற்றுச் சோழ னென்று, குருமணிமா முடிபுனைந்த குலோத்துங்க வளவனருள் குறித்து வாழ்வாம்" (சிதம்பர. கடவுள்.11);
"நாயகன், சிற்றம் பலமுந் திருப்பெரும்பே ரம்பலமும்.....பொன்னிற் குயிற்றி.......மூழ்குவித்த சென்னி" இராச.உல.

93. சேரலன் - சேரமான் பெருமாணாயனார்.

93-4. புகலி வேந்தரால் - திருஞான சம்பந்தமூர்த்தியால்.
நின்ற சீர்த்தென்னவன் - நின்றசீர் நெடுமாறநாயனார்.

97. அசுரர்-கயமுகாசுரன் முதலியோர். முற்றி –முடியச் செய்து; அழியச்செய்து. களிற்றுமுகக் கற்பகம்-கற்பக வுநாயகர் இவர் மதுரைத் திருக்கோயிலில் எழுந்தருளியிருந்த மூர்த்தியாவார். இவர் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்திலும், சுந்தரபாண்டியத்திலும், திருவிளையாடற்பயகாமாலையிலும், துதிக்கப் பெற்றுள்ளார்.

98 தேவு-முருகக்கடவுள்; தேவு ,தெய்வத்திற்கு ஒரு பெயரென்பர்; சீவக. 1. ந.

99 சதுர் வேத தரன்- பிரமதேவர்

100 ஈசர் பதினொருவர்-ஏகாதச ருத்திரர்கள்

101 ஈரொன்பது கணம்-பதினெண்கணங்கள்; "பதினெண்கணனு மேத்தவும் படுமே" (புறநா. 1: 10) தந்தம-தங்கள் தங்களுக்குரிய.

102 -3 நந்து வளைகள்- இடம்புரிச் சங்கங்லள். மருடி-ஒருவகை வாத்தியம். வயிர்கள்-ஊது கொம்புகள். கிளைகள்-மூங்கில்கள்; என்றது வேய்ங்குழல்களை.

104 பரசு பதலை - புகழப்படுகின்ற ஒரு கண்மாக்கிணை: "பதலைப் பரணிப் பரிசிலார்" ( குறுந்.59:1) பணவம் - ஒரு வகைப் பறை.

104-5 விரசு வலம்புரி - முரசோடு கலந்து முழங்குகின்ற வலம்புரிச் சங்கம். சலஞ்சலம் - ஒரு வகைச் சங்கு. தழங்க - முழங்க.

106- சின்னங்கள் - திருச்சின்னங்கள்.
107 - படி - பூமி. பகிரண்டம் - வெளியேயுள்ள அண்டங்கள். முயக்க - முயங்கச் செய்ய 

108 - எறியாத: வெயிலெறித்தலென்பது வழக்கம்; "எறித்தரு கதிர் தாங்கி" கலி 9.1

108 - 9 கொடிகள் விசும்பை மறைத்தல்: "வாள் விசும்பைக் கொடி மறைத்தன" சிதம்பர, துச்சக. 40.

110 பதி - கணவன்.

111- கிஞ்சகம் - முள்ளு முருங்கைப்பூ 

112. விண் ஒருங்க - ஆகாயத்தில் ஒரு மிக்க; ஒருங்க வந்தீண்டி.

113. செய்குன்றிற்குப் பொன்மலையும் மகளிருக்குப் பூங்கொடிகளும் உவமை.

114. பளிக்கு நிலா முன்றின்மேல் - பளிங்கினாற் செய்யப்பெற்ற நிலாமுற்றத்தின் மேலே. பளிக்கு முற்றத்திற்குப் பாற்கடல் உவமை: "பந்த மாட வீதியிற் பளிங்கிழைத்த முன்றில்வாய், முந்துசெம் மணிக்கணத்தின் முறையிழைத்த நிறைகுடம், அந்தமற்ற பெருமைகொண்ட வாசிலா திலங்குபாற், சித்துவின்க ணிரவிவந் துதித்தசெய்கை சிவணுமே" சிதம்பர. துன்மத. 48.

115. வீரமடவார் - போரில் இறந்த வீரர்களை அடைதற்குரிய வீரசுவர்க்கத்துத் தெய்வமங்கையர். விமானம் - வீரர்களை அழைத்துச் செல்லுதற்கு விண்ணில் வரும் விமானம். *

116. ஓவம் - சித்திரம். மாடங்களிற் சித்திரமெழுதப்படுதல் இயல்பு; "மாடக்குச் சித்திரமும்" (நன்.) மாடம் பெயர்குவார் - மாடத்தினின்றும் வருவார்.

117. பரிந்து - விரும்பி. 
இக்கண்ணி முதல் தடாதகைப் பிராட்டியார் திருவவதாரம் முதலிய ஐந்து திருவிளையாடல்கள், கூறப்படும்.

118. முனிந்தாரென்றது தடாதகைப் பிராட்டியோரோடு இறைவர் கைலையிற் போர்செய்தற்கு வந்ததைக் குறித்தது போலும். இக்கண்ணி, தடை.

119. முன் கண்ணியில் எழுந்த தடைக்கு இதுவிடை. இவ்வாறே

122 - ஆம் கண்ணி இறுதியாக தடைவிடைகளாகச் சில கூறப்படும்.

119-20. - பதஞ்சலிக்குச் சீர்க்கூத்தருள்வார்: திருமணத்தின் பின்னர்ப் பதஞ்சலிக்குமட்டும் நடனமிட்டாரென்று பழைய திருவிளையாடல் கூறும்; "பதஞ்சலிக் காடிய பரம நாடக" (திருவா.) சீர் - தாளவொற்று. திருவுலாப் புரிந்தது, கூத்தைக் காணவே புரிந்ததெனக் கூட்டுக, கவிகை - கூடை.

121. குண்டோதரனுக்குத் தாகத்தையும் பசியையும் கொடுத்தாற்போல. பசிக்கு - பசியைப் போக்குதற்கு.

122. ஆறு - வைகைநதி. குழியையும் ஆற்றையும் அழைத்தார். அவற்கு - அக் குண்டோதரனுக்கு. துயரென்றது காமத்தை.

123. முறுவல் - புன்சிரிப்பு.

124. கொங்கைக்குறி: இது, காஞ்சித்தலத்தில் அம்பிகைதழுவ உண்டாய குறி; 214, 354 - 8 - ஆம் கண்ணிகளாலும் காஞ்சிப் புராணம் தழுவக்குழைத்த படலத்தாலும் இவ்வரலாறு அறியப்படும். காணத்தையும் மாலையும்.

125. தங்கநறுமாலை தர - கொன்றை மாலையை அளித்தற்கு. தர வேண்டிற்றோ வென்க.

125-6. கங்கையாலும் மலராலும் அமுதாலும். வாசவனார் - இந்திரன். இருகண்ணீர் - நம்முடைய அருகண்ணீர்.

127. பள்ளித்தாமம் - பூசைக்குரிய மலர். அமுது - நைவேத்தியம்

178. வரும் - வருவான்.

129. சேடியர் - தோழியர். நித்தற்கு - நித்தனுக்கு. சேடியர் பால் மொழியைக் கற்பார். அற்புதம் - ஞானம்.

130. காணிக்கை - கையுறை. கலன் - ஆபரணம்.

131. துகில் - ஆடை. மானம்; இடக்கரடக்கு. பாத்து - பருத்து.

133. பூவை - நாகணவாய்ப்புள். வல்லி - கொடி. வடியா மது - வடித்தல் செய்யாத தேன். கடி ஆர் - வாசனை, நிறைய.

134. சூதம் - மாமரம்.

135. கவடு - கிளை, கபடம்; "கவடார் மருதிடந்தானே" (அழகர் கலம். 2.) வஞ்சி - வஞ்சிக்கொடி. கலைமலயம் - தமிழ்க்கலைக்கு இருப்பிடமாகிய பொதியில். கன்னி - இளமை. கவின் - அழகுபெற.

135 -6 கவினத்தாங்கி. குதலை-எழுத்து வடுவுடைய சொல்.

137 இறுதிநாள்-யுகாந்தகாலம்.

138- துற்ற-நெருங்கிய. அருணத்து உதயம்- அருணோதயம்.

141 புலன்கள்-பொறிகள். ஓதி-தலைமயிர். பவ்வம்-கடல்.

142-3 சிறிதும் அறியாத. உலவு மதிற் செற்றார்-உலவுகின்ற மூன்று மதில்களிலுள்ள பகைவர்களுடைய. புரம்-ஊர்களை

143 -4 வெற்றி மருவார். தொடை-வெற்றிமாலை; மரு-மணம்.

145 வித்துருமக்கால்- பவளக்கா*ல்.

147 தாயர்கிளை-ஐவகைத் தாயர்; அவராவார் ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயென்பார். சீவக. 363,ந.

149 மாதவி-குருக்கத்தி. கைத்தாயர்-செவிலித்தாயர் 
இக்கண்ணி முதல் எழுகடலழைத்தது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும்.

149-50 அருட்பெண்-அருளுருவமாகிய தடாதகாதேவியார். வாரி அழைத்தது-எழுகடலழைத்த திருவிளையாடல். தந்தைதனை-மலையத்துவச பாண்டியனை.

151 உக்கிரனார்-உக்கிரப் பெருவழுதியார். அக்கு அணிவோன் - அக்கு மாலையை அணிந்த சோமசுந்தரக் கடவுள்.

151-2 அயில்-வேல். மைக்கடல்......தொட்டது – கடல் சுவறவேலெறிந்தது. விண்ணோர் பிரான் முடியை-இந்திரனுடைய கிரிடத்தை. வளை-ஒருவகை ஆயுதம்.

153 வடகிரியில்- மேருமலையில். சேல் இட்டது- தங்கள் இலச்சினையாகிய கயல்மீன் வடிவத்தைப் பொறித்தது.

154 தத்தை இனம்- கிளிச்சாதி. முப்புலவோர்- திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய மூவர்.

155. செவியூடு - கேட்பவர்கள் செவியில். தேக்க - நிறையச் செய்ய.

156. சரதன் - உண்மைப் பொருளானவன்.

157. அபிடேகம் - கிரீடம்.அபிடேகச் சொக்கன்: "அகிலம் புரக்கமுடி, சூடும்.......சொக்கன்", "முடிபுனைந் - தொப்பிலாச் சுந்தரமாறன்" என்பர் பின் (274, 514 - 5); "ஆண்டகை தெய்வ வீரெட் டாண்டணி மவுலி சூடித், தூண்டுமா வரசர் போகந் துய்த்துல கான லாலே,பூண்டபி டேகச் சொக்கன் புழுகுநெய்ச் சொக்க னென்னும், ஈண்டுயர் நன்னா மங்க ளெங்கணும் பிறங்கு மாலோ" திருவால. 11:4.

158. செந்தாமரையென்றது பாதங்களை.

159. முகிழ்த்து - குவித்து. அன்னமேயென்பது முதல் பேதை கூற்று.

161. கிளியென்றது அம்பிகை கரத்துள்ள கிளியை.

162. சிறுசோறு உகந்தோ - சிற்சோற்றை உண்பதற்கு விரும்பியோ. கழங்கு - கழற்சிக்காய்.

163. அறையும் என - சொல்லுங்களென்று பேதை கூற.

164. வழக்கோ - நியாயமோ.

165. மகத்து அவி - யாகத்திற் கொடுக்கப்படும் அவிர்ப்பாகம். கொள்ளாரென்றது அவரதருமையைக் குறிப்பித்து நின்றது. சில் அடி சிற்கா - சிறுசோற்றை உண்பதற்காக; சின்மை - சிறுமை. பணி - பதஞ்சலி; தொழிலுமாம்.

166. கற்பு - கல்வியறிவு. அற்புதம் - ஆச்சரியம்.

167. மான் - பேதை.

168. வந்தவாறு ஈடேறுதற்கென்க.

169. தேர் ஏற்றும் என்னை - என்னைத் தேரில் ஏற்றுங்கள்.

169-70. மையைக் கரைத்துக் கொண்டு வருவதாதலின், காரேற்ற கண்ணீரென்றார்; 172 -ஆங்கண்ணியைப் பார்க்க.

171. கைப்பணிலம் - கைவளை; பணிலம் - பணிலமென்னும் ஒரு வகைச் சங்கை அறுத்துப் பண்ணிய வளை; காரணவாகுபெயர்; "வலம்புரி வளையொடு" (நெடுதல். 142.) ஒப்பனை - அலங்காரம். வளையைக் கழற்றி விடுத்தல் முதலியன பேதை செயல்.

172. நயனம் - கண் தீட்டு அஞ்சனம். 

173. நீதி - இயல்பு

171-3. கைவளைகள், ஆபரணங்கள், அஞ்சனம் முதலியவற்றை ஒழித்துவிடுதல் பேரிளம்பெண்ணின் இயல்பு; "நிறைகழிக்க மையொழித்து..... கொண்ட கொடுங் கூர்விழியாள்", "கைவளையுந் தோள்வளையுங் காதலியாள்" (454 - 6, 460)என்று 
இந்நூலிற் பேரிளம்பெண் கூறப்படுதலும், "கைக்குவளை மைக்குவளைக்
கண்ணுக் கிடாள்" (சிவந்தெழுந்தபல்லவராயனுலா) எனப் பிறர் கூறுதலும் இங்கே அறிதற்குரியன. ஓர்வு - உணர்வு.

176. முளரி முகிழ் - தாமரை அரும்பு.

177. முகிழ்த்தது - தோன்றியது.

178. மெய் முகிழ்க்க - மெய்யிற் புளகரும்ப

179. அடிக்கொண்ட - தொடங்கிய.

180. ஆலாலம் - விஷம்.

182. முடி - தலையின்கண்.

183. முருந்து - மயிலிறகின் அடிக்குருத்து. என - என்று கண்டோர் சொல்ல.

185. நீங்கி வர - நீங்கி வராநிற்க. காலத்து - காலத்தில். ஓர் அணங்கு - ஒரு பெண்ணானவாள்; எழுவாய்.

186. எழுகடலாம் தடம் - ஒரு தீர்த்தம்; காஞ்சனமாலை ஆடுவதற்கு இறைவன் வருவித்த ஏழுகடலுக்கும் இடமாயிருந்ததுபற்றி இஃது இப்பெயர் பெற்றது.

187. கோடியர்: பன்மை குறித்துநின்றது.

188. மரு - வாசனை. வளர்வு (வளர்ச்சி) கிளர் அ வாவி. செறிய - பெதும்பையானவள் அடைய. 

189. பொன்னே - திருமகளே. பொய்கை - மானிடராக்காத நீர்நிலை; என்றது எழுகடலை.

190. பாவையர்க்குள் - பெண்களுக்குள்ளே.

191. வலம்புரி ஏறி - வலம்புரிச் சங்கத்தின்மேல் ஏறி. அரசன்னம் ஏறி.

192. வர - வாராநிற்க. அன்னத்தோடு - பிற அன்னப்பறவைகளோடு. பேடை - அன்னப்பேடையை.

190-2. வலம்புரிக்குச் சிவபிரான் ஊர்ந்துவரும் வெள்ளையானையும் அரசன்னத்திற்குச் சிவபிரானும் அன்னங்களுக்குக் பவனி தொழும் பாவையர்களும் பேடைக்குக் காதலரும்புபவளும் உவமை.

193. உலா மேவுமவர் - திருவுலாவைத் திரிசித்தற்கு விருப்பும் அடியார்களுடைய.

194. இரவிச்சுடர் - சூரிய கிரணத்தை. சேந்த - சிவந்த. முகை - அரும்பு.

195. மாக விமானம் - இந்திர விமானத்தையுடைய; கண்ணி 507. ஆகம் - திருமேனியை. நாகத்து - சுரபுன்னையில்மேல். 

196. பவளம் நுடங்கு கொடி - நுடங்கு பவளக்கொடி; கடலென்பதற் கேற்பப் பவளக்கொடி கூறப்பட்டது. நோக்கின் - கண்களால்.

196-7. தடங்கடல்கள் வந்து அடைந்த வாவி : சொக்கநாதர் கட்டளையின்படி ஏழுகடல்கள் வந்து ஒரு தடாகத்துட் புகுந்தனவென்பது வரலாறு; திருவால. 8:9, பார்க்க.

198. கடலொன்று - பாற்கடல்; ஓசைக்க்கடல்; "ஓசை பெற்றுயர் பாற்கடல்" (கம்ப.) திரு - திருமகள்.

200. கா - சோலை.

201 - கலன் - ஆபரணம். நீற்றுக் காப்பும் அணிந்து - திருநீற்றையும் அணிந்து;
காப்பென்பது திருநீற்றின் திருநாமம்; ரக்ஷையென்று வடமொழியில் வழங்கும்.
பொலனிழைமுன் - பெதும்பையின் முன். 

202. ஆதி - சொக்கநாதக்கடவுள். இவ்வாவியென்றது, ஏழு கடலை. திருவிளையாடலை உரைக்கிறாறென்க.

203. வாழி - வாழ்வு. முகில் ஆழி பருக - மேகங்கள். வருணன் விட்ட கடலைக் குடிக்கும்படி. இக்கண்ணி முதல் மாணிக்கம் விற்றது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும்.

204. கோநகரை - மதுரையை. சித்தரென - எல்லாம்வல்ல சித்தராக. மீனவன் - பாண்டியன்.

205. கன்னல் - கரும்பை. கார் அமணர் - கரிய நிறத்தையுடைய சைனர்கள். யானை - சைனர்கள் விடுத்த யானையை. உன்னரிய - நினைத்தற்கு அரிய.

206. விருத்தவால குமாரன் உரு - விருத்த குமார பால வடிவத்தை. ஆர்முடித்தோன் - ஆத்திமாலையை அணிந்த சொக்கநாதர். பாரித்து - விரித்து; "பயனில‌ பாரித் துரைக்கு முரை" குறள். 193.

207. உகந்தருளி - விரும்பி. தானம் - இடம். திருமகளிலும் உயர்ச்சி பெற்ற பெதும்பையானவள். உரைத்தவற்று - கூறிய திருவிளையாடல்களில்.

208. கருத்தையும் விருப்பையுங் கைக்கொண்டாளென்க . சேண் - நெடுந்தூரம்.

209. பொழிலூடு - சோலையினுள்ளே. துய்ய - தூய்மையுள்ள ; தூயவென்பது துய்யவெனவும் செய்யுட்களில் வழங்கும்.

210. சொக்கன் - எழுவாய்.

210-11. தவளமத வாரணமீது - வெள்ளையானை வாகனத்தின் மேல். ஆரணமுரசம் - வேதமாகிய முரசம்; "மறை முரசன்" (13) என்றார் முன்னும்; வாரணம் - சங்கமுமாம்.

212. பின் செல்லல் பெதும்பையின் தொழில்.

213. மல்லல் - வளம். மலையாள் - இமயமலையின் புத்திரியாகிய உமாதேவியார்.

214. ஆதாரத்தையுடைய மடந்தை; என்றது உமாதேவியாரை.

213-4. இவற்றிற் கூறப்படும் வரலாறு காஞ்சிப் புராணம் தழுவக்குழைந்த
படலத்தாலுணரலாகும்.

216. பறிபோம் - தன்னைவிட்டு நீங்குகின்ற; "கதையும் பறிபோச்சோ" தனிப்.

217. விருந்தென்றது இறைவன் காட்சியை. நாள் நயந்து.

218. அலரும் செம்முகையில் - மலரும் பருவமுள்ள அரும்பில். முருகு - நறுமணம்.

217-9. இக்கண்ணிகளிற் கூறப்பட்ட பெதும்பையின் நிலையும், விக்கிரம சோழனுலாவில், "தையலுங், கண்டகண் வாங்கா டொழ முகிழ்த்த கைவிடாள்,
மண்டு மனமீட்கு மாறறியாள், பண்டறியாக்காமங் கலக்கக் கலங்கிக் குழல் சரியத், தாமஞ் சரியத் தனிநின்றாள்" என்று கூறப்படும் பெதும்பையின் நிலையும் ஒப்பிடற்பாலன.

220. நிறை - பொறிவழியே செல்லாமல் மனத்தை நிறுத்தல். செப்புகேனென்றது கவியின் கூற்று. மால் - மயக்கத்தை.

221. ஆனனம் - முகம். வேளை - மன்மதனை.

222. பொர - போர்செய்தற்கு. விடுமே; ஏகாரம்: எதிர்மறை.

223. காஞ்சி - மேகலைவகையுள் ஒன்று.

224. மற்றைப் பருவம் - மங்கைப் பருவம். புளகம் - மயிர் சிலிர்த்தல். பாரித்து - மிகுத்து.

225. தாய்மார் ஐவராதலின் அன்னையரெனப் பன்மையாகக் கூறினார்.

218-25. பெதும்பையின் நிலைமையை இந்நூலாசிரியர் இங்கே விரித்துரைத்ததனோடும், "நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்டோற்று,
நின்றறிவு தோற்று நிறைதோற்று - நன்றாகக், கைவண்டுங் கண்வண்டு
மோடக் கலையோட, நெய்விண்ட பூங்குழலா ணின்றொழிந்தாள்" (பெதும்மை)
என்ற ஆதியுலாப் பகுதியும், "மல்கு முவகைக் கலுழி வரவரப், பில்கு.......கொங்கைப் புதுவரவுந் தோளுங் குறை நிரம்ப, மங்கைப் பருவத்தே வாங்கினான்" (பெதும்பை) என்ற இராசராசச் சோழனுலாப் பகுதியும் ஒப்புநோக்கற்பாலன.

224. முறுகா - முறுகி, கனத்து; "முறகித் தாழ்ந்து"; (காஞ்சீ. நகரப். 1.) மால் - மயக்கம். அறுகால் - வண்டு; "சிறுகாலுடனே யறுகால் பயிலுஞ் சீதப்பொழில்" சிதம்பர். திருச்சிற்றம்பல. 78.

227. தாமம் - மாலை. சேமம் - பாதுகாப்பு.

228. பாயல் - படுக்கை. அவள் மோகம் - அவளுடைய காம மயக்கமானது.

229. திங்கண்மதி - திங்களாகிய பிறை: "திங்கண்மதிக் கண்ணி யானை" திருநா. தே. ஐயாறு.

230. புயாசலம் - தோள்களாகிய மலைகள். தோகை - மயில்; மயில் மலையில் இருத்தற்குரியது. ஆழி - ஆக்ஞாசக்கரம்; வட்டமுமாம்.

231. வாவி - குளம்.

232. கால்கொண்டு - இடங்கொண்டு, தத்தை - கிளி.

231-2. தென்றல் கால் கொண்டுலவும் கடம்பவனம்; "மதுரைத் தென்றலு வந்தது" சிலப். 13;132.

233. புடவி - பூமி.

235. கருக - கோபிக்க, கருகி - கறுத்து.

236. மதன்றன்னை வெற்றி புனைவித்தவென இயைக்க.

237. வேல் கடல் குடித்ததென்றது உக்கிரப் பெருவழுதியார் கடல் கவற வேலெறிந்த்தை. விடவேல்: வேலில் விடம் பூசுவதுண்டு; விடம் மைக்கு உவமை. வாட்கண்: கண்ணென்னுந் துணையாய் நின்றது.

239. ஆவி - உயிர், தடாகம். கலக்கி - வருத்தமுறச்செய்து, கலங்கச்செய்து.

240. மலைக்கோட்டை - மலையின் சிகரத்தை. யானைக்கோட்டை – யானைக் கொம்பை.

241. பத்தி - வரிசை. களபம் - கலவைச் சந்தனம்.

244. அழகிய சொக்கன்: 19- ஆங்கண்ணியின் குறிப்பைப் பார்க்க.

245. சேவிக்க வாழ்விக்கும்: "சேவிக்க வாழ்விக்கு மெங்கோன்" (திருவரங்கக். 68)ஆவித்துணையாம் - உயிர்த்துணையாகிய.

245-9. மருந்தைக் கண்டு. 

247. கோடித் தெரிவையர்கள்; கோடி: பன்மை குறித்து நின்றது.

247-8 அரிய நெறிச் செய்கைத்தமிழ் ஏடு செல்ல- திருஞான சம்பந்த மூர்த்தியின் தேவாரம் வரைந்த ஏடு செல்லும்படி

250 தண் தரளப்பத்தி-முத்து வரிசையையுடைய. வேதிகை- ஒருவகைத் திண்ணை. தவளப் புண்டரிகம்: செஞ்ஞாயிறு போல நினைத்து. இருப்ப-மங்கை இருப்ப.

252- குலம்-மேன்மை

253 வெயர்வு அரும்ப- வேர்;வை தோன்ற

254 தாவடிபோய்- தாண்டிப்போய்; "வேந்தன்.... தாவடி வந்திப் படியென தாவி தளர்வித்ததே" (புகலூரந்தாதி) "தாவடி யோட்டு மயிலிலும்" கந்தரலங் 15.

255 குழல்- கூந்லில். பிரதியில் மாந்துளிரென்று காணப்படுகுறது.

256 கட்டுரைத்த-வஞ்சினங்கூறிய. கட்டாண்மை-பேராற்றல்; "காமன் தனக்குள்ள கட்டாண்மை" என்பர்பின்; 290

257. வீரப்புகழ்: "மறம் வீங்கு பல்புகழ்" பதிற். 12:8.

257-8. நடையால் அன்னத்தையும் உருவால் தாமரைப்பூவையும் அடர்த்த. அலம்ப - ஒலிக்க.

259. மால் அந்தகவசுரன் - மயக்கத்தைச் செய்யும் அந்தகாசுரன்; அந்தகவசுரன் : தமிழ் முடிபு. வயம் - வெற்றி. சொற்பாடு - புகழ். காலன் - கூற்றுவன்.

260. உரம் - மார்பு, வலி.

261. வெற்பு - கைலாயமலை.

262. கணக்கு - இயல்பு. விரியா - விரித்து.

259*-62. இக்கண்ணிகளில், சிவபெருமான் பராக்கிரமங்கள் கூறப்பட்டன; இங்ஙனம் பராக்கிரமங்களைத் தனித்தெடுத்தோதிப் புகழ்தல் மரபு; திருவா. திருப்பொற்சுண்ணம், 18; பெரிய. திருநீலகண்ட யாழ்ப். 5; திருவால. 54: 9, பார்க்க; "புரமெரித்த துங்கதித்த புண்டரீக வந்தணன், சிரமறுத்த துஞ்சிலைக்கை வேளையன்று செற்றதும், நரமடங்க லைத்தொலைத்த நன்குமின்ன வாதியாம், வரமிகும் புராணமே வழுத்துவார்க ளெங்கணும்" (சிதம்பர. துன்மத. 56) என்று பிறவிடத்தும் இவ்வாசிரியர்
கூறியுள்ளார்.

263. பரிசனம் - சூழ்ந்துள்ளோர்; என்றது பாங்கியரை. பரிசனத்தின் முன்பு.

இக்கண்ணி முதலியவற்றிற் பழியஞ்சியது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும்.

264. வேந்தற்கு - பாண்டினுக்கு. மங்காத பாதகத்தை - மா பாதகத்தை.

265. பணி - பாம்பு. ஆனை - பசுவை. பணித்தது - தாழச்செய்தது.

266. கிழி - பொன்முடிப்பு; இங்கே உலவாக்கிழி.

267. திருமாதனையார் - வணிகமகளிர். பெயர்ந்தாள் : பெயர்ந்தவள் மங்கை.

268. மஞ்சனம் ஆட - நீராட. உந்தும் - செலுத்தும். உடன் - உடனே. ஊசலிலின்றும் இழிந்து.

269. நீர் - வைகைநீர். நாவி மலர் வாசம் - புழுகின் மணமும் மலரின் மணமும்.

270. காந்தி - ஒளி. தளவம் - முல்லையரும்பு.

271. இறை - சொக்கநாதருடைய.

272. மறைப்பாய்பரி - வேதக்குதிரை; "வேதப் புறவி" (கண்ணி, 278); "சண்டமறைப் பரிதனக்கா தார மாகித் தரிக்க" (திருவிளை. நரிபரி. 76) மாலும் அயனும்.

273. அளியாய் - அன்பாகி; "அன்பே சிவமாவ தாரு மறிகிலார்" (திருமந்திரம்.)
இலயன் - முடிவைச் செய்பவன்; இலயம் - முடிவு; கூத்திற்குரிய தாளமுமாம்.

274. பழியஞ்சிச் சொக்கன்: "அத்தனப் படுப ழிக்கே யஞ்சியக் கணத்துத் தோன்ற, உத்தமப் பத்தி மாறற் குணர்வுற வுணர்த்தலாலே, பத்தர்கள் பத்த னுக்குப் பழியஞ்சுஞ் சொக்க னென்றோர், வித்தகப் பெரிய நாமம் விளங்கிய தவனி மீது", "அரும்பழிக் கஞ்சு 
சொக்கன்" (திருவால. 33:29, 62:34); "பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே" (மதுரைக்கலம்.29); "பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி யென்றுலகின், மேவும் பெயரினிமேல் வேண்டாவோ" தமிழ்விடு. 254.

275. பிடிபோல் - பெண்யானையைப்போல்.

276. ஆகரம் - இருப்பிடம். அட்டாலைச் சேவகன் – யானையெய்த பொழுது சொக்கநாதர் கொண்டருளிய திருநாமம்; அட்டாலை - மதின்மேல் மண்டபம்; "செல்லம ரெயிலட் டாலைச் சேவகன்", "ஊனெழுகுன்றை யானை மலையென வொழிந்த குன்றை, ஈனமி லாவி லத்தி மலையென வெய்த கோவைத், தேனலர்த் தொடையட் டாலைச் சேவகனென்ன நாமம், மாநிலத் தன்று முன்னா மன்னிட வழங்கு மன்றே",
"தெள்ளிய வில்லி யழகனட் டாலைச் சேவகன்" (திருவால.24 : 17, 28, 49: 15); "பரசமய கோளாரி எழுந்தருளியதற்குக் காரணம் அட்டாலைச் சேவகரை நினைத்து" தக்க.172, உரை.

277. மாலோடு - மயக்கத்தோடு. அணங்குடையான் - சிவபெருமான்; அணங்கு - உமாதேவியார்.

279. கையணை - கையாகிய அணை; "கையணை முகந்து செல்ல" (மீனாட்சி. பிள்ளை.2) புண்டரிகமென்பது வெண்டாமரைக்குப் பெயரெனினும் செந்தாமரைக்கும் வழங்கும். இவளைத் திருமகளென்பார் இவளிருக்கும் மாளிகையையப் புண்டரிகமாளிகை யென்றார். வண்டு அலர்த்தும் - வண்டால் மலர்த்தப்படுகின்ற.

279-80. பாயல் - படுக்கை. வண்டலர்த்தும் பாயல் - மலரணை. பகற் செங்கதிர்க்கடவுள் - சூரியன். குடதிசை - மேற்றிசை. ஆழி -கடல். சூரியன் கடலிற்புகுகின்றானென்பது கவிமதம்.

281. பெரு மாலை - பெரிய மயக்கத்தை. மருள்மாலை – மயக்கந் தரும் அந்திப்பொழுது; "இரவு பகலென்று வரையறுக்கப்படாத மருட்சியையுடைய மாலைக் காலம்" என்பர் அடியார்க்குநல்லார்; சிலப். 19:88, உரை. திருமாலை - அழகிய பூமாலை.

282. ஏங்கும் - ஏங்குவாள்.

283. செந்தீயென்றது நிலாவை. பெண்மதியம் - பெண்புத்தி. ஆற்றப்பெறாது - பொறுக்கமாட்டாது.

284. அளிக்கரசு - தலைமையான வண்டு; "ஒண்டரங்க விசைபாடு மணியரசே" தே. திருஞா.

285. போவென்னும் - தூதுபோவென்பான். கோவென்னும் : "அம்ம கோவெனும்" மதுரைக்கலம்.14.

286. ஆற்றுவாராகி.

287. கட்டுரைப்பம் - உறுதியாகச் சொல்வோம்.

287-8. வேலையென - கடல்போல. மையல் - காமமயக்கம். வேலையெனத் தோற்றுமா மையல்: "கடலன்ன காமம்" குறள். 1137.

289. சலம் - தணியாக்கோபம். வெற்றிவலம்புரி - வெற்றிச்சங்கத்தை.

290. காமரதக் கரும்பு - காமனுடைய தேரிற்கட்டும் கரும்பு; காம ரஸத்தைக் கொடுக்கும் கரும்புமாம்.

291. சேமத்தனம் - வைப்புத் திரவியம். தரளத் தாமத்தனி மவுலியென மாறுக: முத்துமாலையையுடைய கிரீடமென்க.

291. செங்குமுதம் - செவ்வல்லி.

293. ஊசல்கொண்டு - அசைவுகொண்டு.

294. அலகு - அளவு. உலகம் - ஓழுக்கம். உலைய - கெட.

295. வெங்கோல் - கொடுங்கோல்

296*-8. **கிலுக்கும் இந்திரனுக்கும் சிலேடை. வச்சிரம் – வயிர மணிமாலை, வச்சிராயுதம். மகத்துக்கு - குழந்தைக்கு, யாகத்திற்கு. பணை - கொம்பு. களிற்றின் மேலாய் - யானையினுமுயர்ந்து, ஐராவதத்தின் மேலாகி. மடற்கு ஒத்து - ஆடவர்கள் மடலேறுதற்குக் காரண‌மாகப் பொருந்தி; மடல்கொத்து - மடலையுடைய கொத்து; பூங்
கொத்து. மாலை - மயக்கத்தை, ஆரத்தை. நிரந்தரமும் - எக்காலத்தும்.

300. கோகனகம் முகத்திற்கும், முத்துவரிசை பற்களுக்கும் உவமை. தோகை - மயில்போன்ற உமாதேவியார்.

301. மருவுவான் - அணைதற்கு.

302. பாயல் மருங்கு - படுக்கையின் மேல்.

304. மோகித்து - மயங்கி. மொழிய - மடந்தை மொழிய.

305. ஏந்திழை : எழுவாய். தென்னதெனவென்றது ஒருவகை இசைக் குறிப்பு. இசை பன்னி - இசையை விளங்கப்பாடி.

306. வளவற்கு - சோழனுக்கு. இக்கண்ணி முதல் அட்டமாசித்தியுபதேசித்தது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும்.

307. வினைமுகத்து - போர்க்களத்தின்கண்.

308. உணர்த்தியது - ஆயிரம் பரிக்கு ஒரு சேவகனென்று உணர்த்தியது. கோட்டை - நெற்கோட்டையை.

309. மாதுலராய் - அம்மானாகி. மாறன் - வரகுண பாண்டியருடைய.
310. மதி - புத்தி. இருள் - அஞ்ஞானம். தினத்தை விளைப்பான் - 
சூரியன்; தினகரன்; "பகற்செய்யுஞ் செஞ்ஞாயிறும்" மதுரைக்.7.

311. வல்லி - கொடிபோல்வாளாகிய மடந்தை. கலன் - ஆபரணம். வாசம் - சந்தனம் முதலியவற்றை.

312. மாலேற்றின் - திருமாலாகிய இடபவாகனத்தின்மீது.

312-3. முகிலின் - மேகத்தைப்போல. பணிலம் - ஒருவகைச் சங்கு.

314. அருணாசயிலன் - அருணாசலத்தை யுடையவன். இருவர் - உமாதேவியும் கங்கையும்.

315. அகிலபுவனம் - எல்லா உலகத்திற்கும்.

316. மதனவயிரி - மன்மதனுக்குப் பகைவன்; வயிரம் – தணியாக் கோபம். மகிழ்நன் - கணவன்.

317. பிறப்பறுக்கும் பாதன் : "மறுபிறப் பறுக்கு மாசில் சேவடி" பரி. 3:2.

318. முன் கிளியைத் தூது விட்டது, 302 - ஆங் கண்ணியாலுணரப்படும்.

319. இது முதல் 325-ஆங் கண்ணிவரை மடந்தைக்கு வேனிற்காலம் உவமை. அளி சிறந்த காற்று - அளித்தல் சிறந்த காற்று.

320. பாதவம் - மரம். பல்லவம் - தளிர். பாரிப்ப - ஒப்ப. "காந்தளைப் பாரித் தலர்ந்தனவே" (திருச்சிற். *824.) சூதமலர் - மாம்பூ. சுணங்கு - தேமல். சாதி - சாதிப்பூ.

321. மதுவிளையும் செருந்தி மரத்தின். மலர்க்கா - பூஞெசோலை. கூந்தலுக்குக்காடு உவமை; "குழற்காவில்" (திருவால. 3:2); "ஐம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே" சகலகலாவல்லிமாலை, 2.

321-2. புளகக்கமுகு - கண்ணாடிபோன்ற ஒளியுள்ள பாக்கு மரம். சமுகம் - கூட்டம். கழுத்திற்குக் கமுகும் முத்துமாலைக்குப் பாளையும் உவமை.

324-5. கோகிலம் - குயில். தோற்ற உருவமதன் – உருவத்தை இழந்த மன்மதன். உடையானை - சொக்கநாதரை.

327. பாங்கியொருத்தி - பக்கத்திலுள்ள மற்றொருத்தி.

328. மலையோ - மேருமலையோ. சேந்து - தங்கி. வாறு - விதம்; "வரைமகடான் வீற்றிருந்த வாறு" (கண்ணி, 432.) வேய்ந்த - சூடிய.

329. இவள் நுதலோ. 

330. மைத்தது - கறுத்தது. 

331. உழைவிழியோ - மானினுடைய கண்ணோ. தையல் - இளமைப் பருவத்தையுடையவள்.

332. துடியிடையோ - உடுக்கையின் நடுவிடமோ. நேர்ந்தது - நுண்ணியது. காந்தி - ஒளி.

333. ஏது - எது.

334. சித்தரே - எல்லாம் வல்ல சித்தரே.

335. மடவாள் - பாங்கி.

337. மௌலி - கிரீடம்.

338. உவரி: கடலென்னும் பெயர் மாத்திரையாய் நின்று பாற் கடலையுணர்த்திற்று. உவர்க்கடலில் அமுதம் தோன்றியதென்பதும் ஒரு சாரார் கொள்கை; தக்க.284, உரை.

339. புகர் - குற்றம். சீதாரவிந்தம் - சீத அரவிந்தம்; குளிர்ந்த
தாமரைப்பூ; "சீதார விந்தபுயன்" (தனிப்.) திருச்செல்வம் - திருமகள்.

341-2. கூர்தலுக்கு மன்மதன் உவமை. மன்மதனுக்கு: வண்டின் ஒழுங்கு - நாண்; 
வளை - சங்கம்; நுதற்சிலை - கருதுதலையுடையவில்; மாலைக்கடுத்த அழகு - திருமாலையொத்த அழகு; மாலைக்காலத் துக்குப் பொருந்திய அழகுமாம். கூந்தலுக்கு: வளை - சங்க வடிவையுடைய ஆபரணம்; நுதற்சிலை - நெற்றியாகிவில்; 
மாலை கடுத்த - மேகத்தை ஒத்த.

344. துணை - இரண்டு.

345. இணையை - இரண்டை.

346. குனிப்ப - கூத்தாட. மறலி - யமன்.

348. சமரவீர்ர் - போர்வீரருடைய. உரம் - மார்பை. அலகு – ஒரு வகை யம்பு. கறுவி - கோபித்து.

350. கடு - விடம்.

351. கால காலன் - முடிவைச் செய்கின்ற காலன்; காலம் - முடிவு.

352. திருமாலை - அழகிய மாலையை.

354. பார்த்து உகந்து. என்ன - என்று அரிவை சொல்ல.

356. தந்தமான் - உமாதேவியார். எந்தை - சிவபெருமான்.

357. கொண்டான்: கொண்டது காஞ்சித்தலத்தில்.

358. கள் - தேனை. தேமாவிற் காரணம் – தேமாவினிடத்து உனக்கு விருப்பம் உண்டாதற்குக் காரணம். உள்ளம் ஏல் - உள்ளம் ஏற்ற. வள்ளல் - சிவபெருமான்.

359. செறிந்தது - எழுந்தருளி யிருக்கப்பெற்றது. அறிந்தது - நீ தெரிந்துகொண்டது. என்று அறைய - என்று அரிவை கூற.

360-61. சிவபெருமானுக்கு நிழலளிக்கும் தல விருட்சங்கள் கூறப்படுகின்றன. ஆலமரம்: திருவாலங்காடு முதலிய தலங்களில் உள்ளது; மகிழ மரம்: திருவொற்றியூர் முதலியன; தில்லைமரம்: சிதம்பரம். ஆத்தி மரம்: திருவாப்பாடி; குராமரம்: திருவிடைக்கழி; மருத மரம்: திருவிடைமருதூர் முதலாயன; பாலைமரம்: திருப்பாலைத்துறை; பலாமரம்: திருக்குற்றாலம்; வெண்ணாவல் மரம்: திருவானைக்கா;
பாடலம் - பாதிரிமரம்: திருப்பாதிரிப்புலியூர்; கொன்றைமரம்: திருக் கொள்ளம்பூதூர், திருப்புத்தூர் முதலியன.

363. கடிது - விரைவில். தஞ்சம் - பற்றுக்கோடு.

364. நீபந்தனை - கடம்பமரத்தை. ஆர்வம் - விருப்பம்.

367. தனியால் - தனிமையால். துனியால் - துன்பத்தால்.

368. சேரலற்கு - சேரமான் பெரிமாணாயனாருக்கு. நாதன் - சொக்கநாதர்.

இது முதல் விறகு விற்றது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும்.

369. பாணற்கு - பாணபத்திரனுக்கு. விறலி - பாணபத்திரன் மனைவியினுடைய.

370. ஏனக்குருளைக்கு - பன்றிக்குட்டிகளுக்கு. மான அரசு அமைச்சா - பெருமையையிடைய பாண்டியனுக்கு மந்திரிகளாக.

371. வலியானுக்கு - கரிக்குருவிக்கு. 

372. ஆளுமோ - ஆண்டருளுவாரோ. ஒருவுமோ - நீங்குவாரோ.

373. எழுச்சி - புறப்பாட்டை. பணைகள் - முரசங்கள். துவைத் திடலும் - முழங்கித் தெரிவிக்கவும்.

374. புருவம் மாகம் எடுத்த தனுவென்ன; மாகம் - ஆகாயம். இந்திரவில் இரண்டென்பர்; "எழிலியுந்; தளிதளித்திரு தனுவெடுத்தன", "வாளில்வந், திட்டலிர்களிரண்டு" (தக்க. 159 - 60, குறிப்பு.) கலன்கள் - ஆபரணங்கள். மின்னின் - மின்னலைப்போல. 
இதுமுதல் 378 - ஆம் கண்ணிவரையில் அரிவைக்குக் கார்காலம் உவமை.

375 - 6. அளகம் - கூந்தல். மண்டி - மிக்கு. துண்டம் - மூக்கு. குமிழ் - குமிழம்பூ. துண்டம் முதலியவற்றிற்கு குமிழ் முதலியன. உவமை; நிரனிறை. இவை கார்காலத்துக்குரியன. தாம் நேர.

377. வடங்கள் அருவிகளை மான.

378. கந்தம் - நறுமணம்.

379. கலாதி இல் ஆதி - கலாதத்துவங்கள் முதலியன இல்லாத. ஆதியாக உள்ளார். கலாமதி - கலையையுடைய பிறை. வலாரி - இந்திரன். மணாளன் - கலியாணசுந்தரர்.

380. சுராரி முராரி - தேவர்களுக்குப் பகைஞனாகிய முரனுக்குப் பகைஞன்; திருமால்; இது, "வலாரி தலாரியெனுஞ் சூர்மா" (கந்தரனு.10) என்றாற் போல்வது. சுபாலம் - நல்ல நெற்றி; இது கபாலத்திற்கு அடை. பர ஆதி; பரம் - மேல்.

380-81. கிராதன் அணி கண்ணன் – கண்ணப்பநாயனார் அணிந்த கண்ணையுடையார். சதுரன் - திறமையையுடையவன்.

381-2. எண்ணெண் கலையான் - அறுபத்துநான்கு கலைகளுக்குத் தலைவன்; கலையால் நிறைந்த பரமனுமாம். மழவிடை - தர்மமாகிய இடபம்.

383. மடவாள் - அரிவை. மயலை - தன்னுடைய மயக்கத்தை. கொணர்ந்த*-யலாரென்பது முதலியன‌ அரிவையின் கூற்று.

384. என்றென்பதைப் பாயலோடுங் கூட்டுக. இமசலம் - பனிநீர்.

385. கூசும்படியென்னோ - கூசும்விதத்திற்குக் காரணம் யாதோ.

386. மந்தக்கால் - தென்றல்; "மந்தக்கான் மகிமைசொல்ல வைத்திருந்தோம்" (திருக்குற்றாலப். மந்த. 127.) நென்னல் - நேற்று.

387. மலை - பொதியின் மலையிலுள்ள.

388. கொன்றையால் - கொன்றைமாலை மேலுள்ள‌ விருப்ப‌த்தால்

389. பாரீர்- பார்த்த‌ருள்வீராக‌.

390. அலை - தாய் முத‌லிய‌வ‌ர்க‌ளால் அலைக்க‌ப்ப‌டுத‌ல்.

389-390 தொடி முத‌லிய‌வ‌ற்றைக் க‌வ‌ர்ந்தீர். அலைத்த‌ல் முத‌லிய‌வ‌ற்றை அளித்தீர்.

313. ப‌றியும் ப‌டைவேல் - ஊடுருவிச் செல்லும் வேற்ப‌டை. அர‌ற்கு - சிவ‌பெருமானுக்கு. ம‌ட்டுப்ப‌டாத‌- அள‌வு ப‌டாத‌

394. மதனூல் தலை கண்டும் - மதனூலை முற்ற அறிந்தும்.

395. உகாந்த‌ம் - யுக‌த்தின் முடிவு.

397. பிணித்த‌ - க‌ட்டிய‌.

398. இதுமுதல் 400-ஆங் கண்ணிவரையில் திருமாலுக்கும் நகிலுக்கும் சிலேடை.
பணி - பாம்பு, ஆபரணம். திரு - திருமகள், வீற்றுத்தெய்வம். மணி - கௌத்துபம், இரத்தினம்.

399. உலகை விழுங்கி - உலகத்தையுண்டு, ஒழுக்கத்தை அழித்து. 

400. அரி - திருமால். அமுதிற்சமைத்த கிரி: இல்பொருளுவமை.

401. களபச் சேற்றில் - கலவைச்சந்தனக் குழம்பில்.

402. ஓவியர் - சித்திரக்காரர்.

403. குடபால் - மேற்றிசையில். இரவி - சூரியன். கலைகளுடைய, யான் - பதினாறு கலைகளையுடைய சந்திரன்.

404. கோதையர்க்குக் கூறாமைக்குக் காரணம் நாணம்.

407. முதல்வன்: "முளைத்தானை யெல்லார்க்கு முன்னே தோன்றி" (திருநா. தே. மதுரை.) இசைகள் - கீர்த்திகளை.

408. வாலவாய்; வாலம் - வால்; தன் வாலை வாயில்வைத்துப் பாம்பு எல்லை காட்டினமையின் இந்நகர் இப்பெயர் பெற்றது; "வாலவாய் வதிந்த மதிமுடித் தனிமுதல்" (கல்) அம்பு - சுந்தரப் பேரம்பு.

இதுமுதல் திருவாலவாயானது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும்.

409. புலவர் - சங்கப்புலவர். கொங்குதேர் – கொங்குதேர் வாழ்க்கையென்னுஞ் செய்யுளை. வேதியற்கா - தருமியென்னும் அந்தணப் பிரமசாரிக்காக.

410. சோர் அவற்கு - சோரவிட்ட அத்தருமிக்கு. சொற்றது - நக்கீர்ருடன் வாதுசெய்தது. தமிழ் முனி - அகத்திய முனிவர்.

411. ஊமை - உருத்திரசன்மர். வடபால் - வடமதுரையில்.

412. வனசப்பதி - சூரியன்.

413. திரு - தெரிவை.

415. தடம் - பொற்றாமரையை. சிலதியரை - தோழியரை.

416. இதுமுதல், 419 வரை சிவபெருமான் அணிந்த மாலையைப்பெற்ற மகளிர் பொற்றாமரைக்கு உவமை. கெண்டையங்கண் - கெண்டையைப்போன்ற அழகிய விழி;
கெண்டை - ஒருவகை மீன். பொற்றாமரைக்குக் கெண்டை கூறியது தடாகமென்னும் பொதுமைபற்றிப் போலும். உள்ளம் - மனம்; உள் அம் - கீழே யுள்ளநீர்.

417. முளரிமுகம் - தாமரைமலர் போன்ற முகம், தாமரையாகிய முகம். முத்தம் - வாய்முத்தத்தை, முத்தை. வளைகள் - கைவளைகள், சங்கங்கள். அளி - அன்பு, வண்டு.

418. இருப்பு - இருத்தல்.

419. பூணாள் - தெரிவை.

419-20. விழி ஓராயிரக்கடவுள் - இந்திரன். தீவினை – விருத்திரனைக் கொன்றபழி.

421. முற்றும் அணிந்தாள். கரைஅணைய - கரைக்கு வந்தவுடன். ஆடல் வேள் - வெற்றியையுடைய மன்மதனுடைய.

422. வெற்றித்திரு - வீரலட்சுமி.

423. யாணர் - புதுவருவாய்.

424. பொற்பூண் - பொன்னணியை.

425. கமலவனிதையென - திருமகளென்று. காணும் - பார்ப்பார்; நெடுமால் காணுமென்க.

426.வயிரமணி - வயிரமாகிய இரத்தினாபரணத்தை; ஆகுபெயர்.
அரிவை - கலைமகள். பார்க்குமென்பதன்பின் எனவென்றொரு சொல் வருவித்து என்றெண்ணியெனப் பொருள் கொள்க. செயிர் இல் - குற்றம் இல்லாத

427. கரப்ப - மறைப்ப

428. வல்லிக்கு - தெரிவைக்கு. அல்லிக்குவளை - அகவிதழையுடைய குவளைப் பூவை. உமாதேவியாரைப்போலத் தோன்றுமாறு அலங்கரிக்கப் புகுந்தாளாதலின் கையிற் குவளையளித்தாள். உமாதேவியார் திருக்கரத்தில் குவளை மலர் இருத்தல் "கழுநீர்க் கையும், பொருவருமங்கல நாணும் ........ திருவருளு முலாவுமெழிற் சிவகாமசுந்தரி" (சிதம் பா. கடவுள்.4) என்பதனாலும் அறியப்படும்.

431. மந்தாகினி - கங்கை

432. வரைமகள் - பார்வதி. வாறு - விதம்; 228 ஆம் கண்ணிக் குறிப்பைப் பார்க்க

433. தென்னவற்கா - பாண்டியனுக்காக.

435. ஆவி - உயிர். அப்பூண் - அந்த ஆபரணம்; அ : அழகென்னலுமாம்; "அணியு மமிழ்துமென் னாவியு மாயவன்" (திருச்சிற்.5); மேவா - விரும்பாத.

436. அரக்கன் - இராவணன். அடுக்கல் - கைலை மலையை.

437. சமன் - கூற்றுவன்.

438. சங்காரகாலன் - உருத்திரன். மும்மூர்த்திகளுமானவரென்றபடி.

439. கற்பகப்பூம்பொன் விருக்கத்தின்மேல் - கற்பகவிருட்சமாகிய வாகனத்தின்மேல். வீதி - வீதியில்.

441. முரல் - புன்சிரிப்பை.

441-2. கருப்புச்சிலையின் - கரும்பாகிய சிலையைப்போல. நுதல் - நெற்றி. செங்கமலம் - மன்மதன் அம்புகளுள் ஒன்று.

443. தளவம் - முல்லையைப்போன்ற. முறுவல் - பற்கள். அசோக கத்து - அசோகந்தளிரைப்போல.

443-4. சூதப்போதின் - மாம்பூவைப்போல. சுணங்கு - தேமல். கழுநீரின் - கருங்குவளையைப்போல; "கழுநீர்க் கையும்....உலாவு மெழிற் சிவகாமசுந்தரி" (சிதம்பர. உடவுள்.4) என்று இந்நூலாசிரியர் பிறவிடத்தும் கருங்குவளையைக் கழுநீரென்றல் இங்கு அறிதற்குரியது.

445. மகரக்கொடியின் - மன்மதனுடைய மகரத்துவசத்தைப் போல. மணிக்குழை - மணிகளையணிந்த காது. காதிற்கு மகரக்கொடி உவமை, "இளமயி லனைய சாயலேந்திழை குழைகொள் காது, வளமிகு வனப்பி னாலும் வடிந்ததா ளுடைமை யாலும், கிளரொளி மகர வேறு கெழுமிய தன்மை யாலும், அளவில்சீ ரனங்கன் வென்றிக் கொடி யிரண்டனைய வாக" (பெரிய. திருஞா. 1100); குழை - மகரக்குழைகளுமாம்.

449. மகிழும் - மகிழ்தற்குக் காரணமான. அநுராகம் - ஒத்த அன்பு.

450. மூரற்குமுதம் - புன்னகையையுடைய குமுதம் போன்ற வாய். தமரம் - ஓசை.

451. உத்தி - கடல். படி - பூமி.

453. திருப்பாற் கடல்மேல் வருவாள் - திருமகள்.

454. நிறை - மனத்தை நிறுத்தும் தன்மை. இறை - சிவப்ருமான்.

455. முத்தலைவேல் - சூலாயுதம். சாபம் - சபித்தல்.

456. வில் தேர் - ஒளியையுடையதேர். துற்று - நெருங்கி.

457. பளிதம் - பச்சைக் கருப்பூரம். பாரிப்பால் - நிறைவினால்.

460. மாமை - பேரழகு. மை - மேகம்.

459-60. சிவபெருமான் திருமேனியின்கண் உறுத்தி வருத்தும் எனக் கைவளைகளையும், தன்னைமறைத்துக் கிடந்தததற்காக மாமை வெறுக்குமென்று தோள் வளைகளையும் விரும்பாள்.

462 நிலாவெள்ளம் நீர் வெள்ளமாக; இதுமுதல் 467- ஆங்
கண்ணிவரை முன்றிலுக்கு நீர்வாவி உவமை

463 திருமிகத்துக்குப் பங்கயமும் குழலுக்கு வண்டும் உவமை

464 வள்ளை-வள்ளைக்கொடி

465 நாளம்-தண்டு. களம்- கழுத்து

468 ஓதிமம்-அன்னப்பறவை

469 முருகு-நறுமணம்

470 சிந்தித்தவர்கள் பிரமபதத்தையும், திருமால் பதத்தையும், இந்திரபதத்தையும் பெறுமாறு அருள்பவர்

472 சாற்றுமென- சொல்லுங்களென்று பேரிளம்பெண் சொல்ல

474. க‌ட்ச‌கோர‌ம் - க‌ண்ணாகிய‌ ச‌கோர‌ப் ப‌ற‌வை

475. ஏன் - எத‌ற்கு; வேண்டாமென்ற‌ப‌டி.

476. வ‌ண‌ங்குத‌லும்: வ‌ண‌ங்கிய‌வ‌ன் விற‌லி

477. த‌ந்திரி - ந‌ர‌ம்பு கந்திருவ‌ர்: க‌ந்த‌ர்வ‌ரென்னும் சொல் இவ்வாறு வ‌ழ‌ங்குத‌லும் உண்டு; "முந்திருவ‌ர் க‌ண்ட‌ முனிவறு தண் காட்சிக், கந்திருவர் கண்ட கலப்பு" (தொல்.களவு. சூ. 1,ந. மேற்) 
"கந், திருவரங் காதரித் தின்னிசை பாடத் திருக்கண்வளர், திருவரங்கா" திருவரங்கத். 1

இது முதல் வலைவீசியது முதலிய எட்டுத் திருவிளையாடல்கள் கூறப்படும். 

478.ஆதி - சொக்க‌நாத‌ர்.

480. தென்ன‌வ‌னை - கூன்பாண்டிய‌னை. வெப்பை - சுர‌ நோயை. ம‌ட்டு - எல்லை.

481. அங்கனை - வ‌னிக‌ப்பெண்.

482. கலன் - கப்பல். கங்குலாழி - இருளாகிய கடலை; "கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே" (குறுந். 387: 5.) கவர்க்கால் - கவடுபட்ட கால்.

483. வாரணம் - கோழி. கடி - நறுமணம். வேரி - தேன்.

484. அலர - பரக்க. நிருதர் - மந்தேகர். விரகு - தந்திரம்.

485. அபிராமம் - அழகு.

486. மதவாரணம் - யானை. மணிவாரணம் - சங்கு; மணி -முத்து. விதம் ஆரவாரம்: விதம் - பலவகையான.

487. சுருதியாழ் - சுருதியையுடைய வீணை. மறைச்சுருதி -வேதம். திறம் - வகை.

488. உயிரிற் பேரிருள் - அஞ்ஞானம்.

489. முனிவு - வெறுப்பு. 490. இகல் - வலி.

491-3. ஞானபானு - ஞானசூரியன். இந்திரவிமானம் - இந்திர விமானமாகிய வாகனம். பெற வந்தணையவென்க. தொட்டாரேல் - தீண்டுவராயின். மடப்பாவை - பேரிளம்பெண்; எழுவாய்.

494. பவனி - பவனியை.

495. உறுமே: ஏகாரம் எதிர்மறை.

496. இவள் - பேரிளம்பெண். உடையானேயென்பது முதல் சேடியின் கூற்று.

497. உளமதி - புத்தி.

498. இருமைக்கடலென்றது கண்களை. மலயம் - பொதியின்மலை.

499. வரை யென்றது நகிலை. கூற்றின் - யமனைப்போல.

500. வேய் - புல்லாங்குழல். விளிந்தால் - இவளைக் கடந்து சென்றால்.

501. மறுகும் - வருந்துவாள். வாழ்த்த - சேடி வாழ்த்த. முறை கடந்தென்பதுமுதற் பேரிளம்பெண் கூற்று.

502. தற்போதம் - அகங்காரம்.

இது முதல் 505 - ஆங்கண்ணி வரை தக்கயாகசங்காரத்தில் இறைவன் செய்த பராக்கிரமங்களை நினைத்து கூறுவாள்.

503. உருவிலாக்காமன் - மன்மதன். திருவிலாமால் - காம மயக்கம். உருவுடைய காமனாகிய இந்திரனுடைய தோளை நெரித்துத் திருவுடைய மாலைச் சிதைத்தவரென்பதை நினைந்து இவ்வாறு கூறினாள்.

504. யாமத்து மாதர் அவா மா மதி - இராக்காலத்து என்னைக்குறை கூறும் மாதர்களுடைய ஆசையையுடைய பெரிய புத்தியை; யாமத்தும் ஆதரவாம் மாமதியெனக் கொண்டு இரவில் ஆதரவாகின்ற பெரிய சந்திரனையென மற்றொரு பொருள் தோற்றுவது காண்க. காமக் கொடுங்கனல் - காமாக்கினி. சந்திரனைத் தேய்த்து அக்கினியின் கையைக் குறைத்தவரென்பதை நினைந்து இவ்வாறு கூறினாள்.

505. பாத்து உரையா மித்திரரை - பகுத்தறிந்து கூறாத நண்பர்களை. மித்திரரை - சூரியரையென மற்றொரு பொருள் தோன்றியது. மாமடலிற் சாய்த்த விதியை - அழகிய பூவிதழ்களில் வெம்மையாற்றாது கிடத்தப்படுமாறு செய்த ஊழ்வினையை; விதி - பிரமாவென மற்றொரு பொருள் தோற்றியது. பகனென்னுமாதித்தனைப் பல்லுதிர்த்துப் பிரமாவின் தலையைக் கெடுத்தவரென்பதை நினைந்து இவ்வாறு கூறினாள்.

506. மாக விமானம் - இந்திர விமானம் (கண்ணி, ***) யோகம் - கலத்தல்; மருந்தென்பது மற்றொரு பொருள்.

507-8. திருவாரூரில் பொன்னின் தியாக‌மளித்த‌து. இத‌னால் ஸ்ரீ தியாக‌ராச‌ மூர்த்தி அடிக்கோராயிர‌ம் பொன்னிறைக்குமைய‌ரென்னும் திருநாம‌த்தால் வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌ர்; "க‌ன‌க‌ மோர‌டிக் காயிர‌ ந‌ல்குமென் க‌ட‌வுள்" (திருவாரூர்ப். திருந‌க‌ர‌. 47); " அடியொன்றுக் குய்யும் ப‌டிப‌சும்பொ னோரா யிரமுகந்து, பெய்யுந் தியாகப் பெருமானே" "பெய்யுமடிக் காயிரம் பொன்னெனப் பேற‌ளிக்குங், கையு மிரப்புங் **கலந்தீரே"(திருவாரூருலா); "ஓரடிக்கோர், ஆயிரம் பொன்னிறைக்கு **மையரை வீதியிலே, போயிரந்து தூதுசொல்லப் போக்கினோய்" "தமிழ் **தூது 99-100.

511. போமே - போகுமா. குலப்பாவையர் - **கங்கையும் உமா தேவியாரும்

512. சேர்ந்து ஆள் - க‌ல‌ந்து ஆள்வீராக‌.

515. சுருதி - வேத‌மும். சுர‌நாட‌ர் - வான‌வ‌ர்களும்.

-------------------------------------------------------

Related Content