logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவ பராக்ரம போற்றி அகவல்

வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய


Source: 
சிவ பராக்ரம போற்றி அகவல்

[த்ரிசதி- 300 போற்றி]

ஆக்கியோன்
தணிகைமணி


வ.சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ.
-----------------------------

திருச்சிற்றம்பலம்

     சிவலீலைகளைக் கூறி, வடமொழித் த்ரிசதியால் முந்நூறு முறை 'போற்றி' எனக் கூறிச் சிவபிரானை வணங்க வேண்டும் என்கின்ற ஆசை கொண்டு இந்நூல் ஆக்கப்பட்டது.

 

     இந்நூலை இனாமாகத் தமது 'ஜோதி' அச்சகத்தில் அழகாக அச்சேற்றிக் கொடுத்த அருந்தவச் செல்வரும், முருக பக்தியில் முன்அணியில் நின்று அப்பெருமானது திருவருட் பேற்றில் திளைத்து மகிழ்பவருமான திருவாளர் ராஜாபாதர் அவர்களுக்கும், இந்நூலின் வெளியீட்டுக்கு வேண்டிய பிற முயற்சிகளை மேற்கொண்ட நண்பர் சிவநேசச்செல்வர் திருப்புகழ்க் கடலில் திளைத்து விளையாடும் பக்தியாளர் திருவாளர் கா.ரா. முருகேசப் பிள்ளையவர்களுக்கும் எனது பெருநன்றி உரித்தாகும். திருத்தணிகை ஐயம்பெருமான் திருவருள் இவர்கள் இருவரிடமும் தழைத் தோங்க வேண்டி அப்பெருமானை எப்போதும் வணங்குகின்றேன்.

 

92, லிங்கசெட்டித்தெரு, சென்னை-1 
வ.சு.செங்கல்வராய பிள்ளை
11-11-1955. 
--------------------------------------------------------

 

சிவபராக்ரம போற்றி அகவல்


திருச்சிற்றம்பலம்

அட்டவீரத் தலங்கள் முறையே : கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருப்பறியலூர், திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர்.

 

1. அட்டவீரம்

அயன்தலை அறுத்த ஆதி போற்றி
அந்தகற் செற்ற அரசே போற்றி
திரிபுரம் எரித்த சேவக போற்றி
தக்கன் வேள்வி தகர்த்தாய் போற்றி
சலந்தரன் வலந்தனைச் சாய்த்தனை போற்றி.    5
களிறு பிளிறக் கண்டனை போற்றி
காமனை எரித்த கண்ணுதல் போற்றி
காலனை உதைத்த கடவுள் போற்றி.

 

2. பிறவீரம்

சேற்கண் இடந்த சேவக போற்றி
ஆமையோ டணிந்த அண்ணலே போற்றி    10
ஏனத் தெயிறுபூண் எந்தாய் போற்றி
சிங்க வுரிபுனை சேவக போற்றி
வாமனற் செற்ற வரத போற்றி
குரண்டா சுரனைக் குலைத்தனை போற்றி
காளியை அடக்கிய கர்த்தனே போற்றி    15
கரமிரு பத்தாற் கயிலையை அசைத்த
இலங்கை மன்னன் இருபது தோளிறக்
கலங்க ஊன்றலும் நலங்கெழு சிந்தையன்.
கீதம் பாடக் கிருபைபா லித்து
நாளொடு வாள்தரு நாத போற்றி    20


3. தக்கன் யாகம்

எச்சனை வீட்டிய என்பொனே போற்றி
இந்திரன் தோள்முறி எந்தாய் போற்றி
சூரியன் கண்பல் தொலைத்தனை போற்றி
குயில்சிற கரிந்த கொற்றவ போற்றி
திங்களைக் காற்கீழ்த் தேய்த்தனை போற்றி    25
கருடன் சிறகைக் கழித்தனை போற்றி
நாமகள் நாசி கொய்தனை போற்றி
அங்கியின் கரத்தை அட்டனை போற்றி.

 

4. தாருகாவனம்

அரவணி பூண்டஎன் அன்பே போற்றி
மான்மழு ஏந்திய வானவ போற்றி    30
அனலெரி ஏந்துகை அத்தா போற்றி
பூதர் வெண்டலை துடியைனப் புக்கவை
ஆற்றல் அடங்க அடக்கினை போற்றி
முயலகன் உரமிதி மொய்ம்பா போற்றி
புலித்தோல் அரைக்கணி பூசுர போற்றி    35


5. பிற பெருமைகள் - அருட்டிறங்கள்

இருவர்க் கரியனாய் இருந்தாய் போற்றி
கங்கை சூடிய கடவுள் போற்றி
பிறையணி சடையெம் பெருமான் போற்றி
விடமணி கண்டநின் மெய்யடி போற்றி
கல்லால் நீழலில் நல்லார் நால்வருக்    40
கரும்பொருள் உரைத்த பெரும்பொருள் போற்றி
விற்றிறல் விஜயற் கற்றைநாள் பாசு
பதங்கொடுத் தாண்ட சிதம்பர போற்றி.
ஒருபூக் குறைந்ததென் றொருகண் இடந்தங்
கருச்சனை புரிந்த அரிக்குச் சக்கரம்    45
தந்த பெருந்தகைத் தாணுவே போற்றி
வலம்புரம் அதனில் வலம்புரிச் சங்கம்
மாலவற் களித்த வரதனே போற்றி
வாஞ்சையாற் கேட்ட பாஞ்சசன் னியத்தைத்
தலைச்சங் காட்டில் தாமரைக் கண்ணன்    50
வழிபட அளித்த வள்ளலே போற்றி
வெள்ளங் காட்டி வெருட்டி உமையவள்
தழுவக் குழைந்த தயாபர போற்றி
நச்சர வாட்டிய நம்பா போற்றி
மறைவனத் தொருநாள் மணநெய் கவர்ந்த    55
எலியைமா வலியா யிருத்தினை போற்றி
இதஞ்சலிப் பெய்தாப் பதஞ்சலி ஏத்த
நிதம்புரி நடன நீதனே போற்றி
புலிக்காலண்ணல் போற்றத் திருநடம்
சலிக்கா மற்புரி சதாசிவ போற்றி    60
பாடுவார் இருவரைத் தோடதார் செவியிற்
பீடுடன் கொண்ட பிரானே போற்றி.

 

6. திருவிளையாடல் 64

இந்திரன் பழியொழி இறைவ போற்றி
ஐரா வதத்துக் கருளினை போற்றி
மதுரை நகரை வகுத்தனை போற்றி    65
தடாதகை வர அருள் தந்தனை போற்றி
அரசியை மணந்த அரசே போற்றி
*வெள்ளியம் பலத்தில் துள்ளினை போற்றி
குறளனுக் கரும்பசி கொடுத்தனை போற்றி
அன்னக் குழியவற் களித்தவன் தாகம் ---
'வெள்ளியம் பலத்துட் டுள்ளிய பெருமான்' - கல்லாடம்    70

தீர்த்த வைகையால் தீர்த்தனை போற்றி. 
எழுகடல் அழைத்த இறைவபோற்றி
மாமிமகிழ மாமனை அழைத்த
சாமிபோற்றி சதாசிவபோற்றி
உக்கிரகுமரனை உதவினை போற்றி    75
வேல்வளை செண்டவை விருப்புடன் அளித்துக்
குமரற் காத்த குழக போற்றி
கடலது சுவறக் காத்தனை போற்றி
இந்திரன் முடிவளை எற்ற இயற்றின
சுந்தரச் சோதிநின் துணைப்பதம் போற்றி    80
செண்டடி பெற்றுத் திருவார் மேரு
மண்டுபொன் தரும்படி வைத்தனை போற்றி
மறைப்பொருள் விளக்கின வானவ போற்றி (16)

மரமணி விற்ற தூமணி போற்றி
வருணன் நாண வாரிதி வற்றக்    85
காருத வுந்தனிக் கடவுள் போற்றி
நாடழி யாதுகார் நான்கும் மாடக்
கூடல் வகுக்கக் குறித்தனை போற்றி
எல்லாம் வல்ல சித்த ரெனவே
உல்லாச மாக உலவினை போற்றி    90
கல்லானை தின்னக் கரும்பளித் தன்று
வல்லான் எனவே வயங்கினை போற்றி
யானை எய்தகோ மானே போற்றி
விருத்த குமார பால னெனவிழை
ஆடல் புரிந்த அரசே போற்றி    95
மாறியாடின மணியே போற்றி (24)
பழியஞ்சி நின்ற பரசிவ போற்றி
மாபா விக்கருள் பூபா போற்றி
அங்கம் வெட்டின துங்க போற்றி
நாகம் எய்த நாயக போற்றி    100
மாயப் பசுவை மாய்த்தனை போற்றி
மெய்க்காட் டிட்ட மெய்ய போற்றி
உலவாக் கிழிதரும் உலப்பிலி போற்றி
வளையல் விற்ற மணாளா போற்றி (32)
அட்ட சித்திகள் அளித்தனை போற்றி    105
விடையின் பொறிபொறி சடைய போற்றி
தண்ணீர்ப் பந்தல் சமைத்தனை போற்றி
ரசவா தஞ்செய் ரஞ்சித போற்றி
சோழன் மடுவிழச் சுழ்ந்தனை போற்றி
உலவாக் கோட்டை உதவினை போற்றி    110
மாமனா வந்து வழக்கது வென்ற
தூமனா உன்றன் துணையடி போற்றி
வரகுணன் மகிழ மாசிவ லோகக்
காட்சியை யளித்த கடவுள் போற்றி (40)
விறகினை விற்ற விரக போற்றி    115
திருமுகங் கொடுத்த திருவ போற்றி
பலகை யிட்ட பரம போற்றி
இசைவாது வென்ற இன்ப போற்றி
பன்றிக் குட்டிகள் பருக பாலினைத்
தாயா யளித்த தயாபர போற்றி    120
ஏனமுந் நான்கும் இறையமைச் சாக
மீனவற் களித்த வானவ போற்றி
கரிக்குரு விக்குக் கருணை காட்டிய
கண்ணியங் கொண்ட புண்ணிய போற்றி
நாரைக்கு வீடு நல்கினை போற்றி 48    125
ஆலவா யெல்லை அமைத்தனை போற்றி
சுந்தரப் பேரம் பெய்த சோம
சுந்தர நீல கந்தர போற்றி
சங்கப் பலகை தந்தனை போற்றி
தருமி மணஞ்செய் அருமைய பொற்கிழி    130
அளிக்குங் கவியொன் றருளினை போற்றி
கீர னைக்கரை யேற்றிய கீர்த்தி
அரவனே ஆரா அமுதனே போற்றி
இலக்கணம் கீரற் ககத்தியர் மூலம்
நலக்க அளித்த நாயக போற்றி    135
சங்கப் புலவர்தம் சங்கையை ஊமன் 
தீர்க்க வைத்த திருவருள் போற்றி
இடைக்கா டன்கொள் பிணக்குட னேக
அவன்பின் சென்ற சிவனே போற்றி (56)
பரதர்கோன் மகள்மணம் பண் ணுதற்கன்று    140
வலைவீ சியதிறம் வாய்ந்தவ போற்றி 
வாதவூ ரர்ககுப் போதக போற்றி
நரிபரி யாக்கிய நாடக போற்றி
பரிநரி யாக்கிய பக்குவ போற்றி
பிட்டமு துக்கடி பட்டவ போற்றி    145
மீனவன் சுரந்தவிர் ஞானனே போற்றி
சமண்கழு வேற்றிய சதுர போற்றி
வன்னியுங் கிணறும் லிங்கமும் வந்து 
சான்று பகரச் சமைத்தனை போற்றி (64)

 

7.பிற ஆடல்கள்

கவிஞராய்ப் போந்த காரியார் நாரியார்    150
தடைபட வழிமறித் திடையனாய் நின்றவர்
பாப்பகுந் திட்ட பரமனே போற்றி 
நலிவுறு புல்வாய் நனிமகிழ் வெய்தப் 
புலிமுலை யளித்த புண்ணிய போற்றி
சாயா அன்பொடு தாயாய் வந்து    155
மருத்துவம் பார்த்த கருத்தனே போற்றி
ஐயா றதனிற் சைவா போற்றி
வழித்துணை நின்ற வள்ளால் போற்றி
தாடகைக் காத்தலை சாய்த்தனை போற்றி

 

8. அறுபத்து மூவரை ஆண்டது

திருநீல கண்டர்க் கொருநீதி காட்டிய    160
கருநீல கண்டநின் கழலிணை போற்றி
இல்லையென் னாத இயற்பகை இல்லை
ஈயெனக் கேட்ட நாயக போற்றி
மின்னிடி மழையிற்செந்நெல் கொணர்ந்துண
வளித்த மாறற் கருளினை போற்றி    165
பொய்வே டத்தில் மெய்யது கண்ட
மெய்ப்பொருட் குற்ற மெய்ப்பொருள் போற்றி
தொண்டத் தொகைசொலக் கண்டவிறல் சேர்
மிண்டர்க் கருளிருட் கண்டனே போற்றி
கோவணம் மறைத்தமர் நீதியைச்* குழப்பிய    170
பூவண நாத புராதன போற்றி
அடியரைக் காப்ப ததுகட னெனக்கொள்
அவ்வெறி பத்தர்க் கருந்துணை போற்றி (7)
நீற்றின் பெருமை நினைந்துயி ரிழந்த
ஏனாதி நாதர்க் கிறைவ போற்றி    175
கண்ணிடந் தப்பின கண்ணப் பர்க்கருள்
புண்ணிய முதல்வ புராண போற்றி
கலயற் கருள்புரி தலைவ போற்றி
மானக்கஞ் சாறர் பானற்கண் மகளின்
கூந்தலை விழைந்த ஏந்தலே போற்றி    180
தாயனார்க் கருள்புரி தூயனே போற்றி
ஆனாயர் குழலிசைக் கருளிணை போற்றி
சந்தனத் தொண்டுசெய் சிந்தனை மிக்க
மூர்த்திக் கருள்புரி தீர்த்தனே போற்றி (14)
மாலை புனைந்து மகிழ்ந்து பணிந்த    185
முருகனுக் குகந்த மூர்த்தி போற்றி
உருத்திர பசுபதி உறுஜெபத் திறங்கண்
டருத்தியோ டவர்க்கருள் ஒருத்தனே போற்றி
நாளைப் போவார் நற்றிறங் கண்டு 
தில்லைக் கழைத்த சிட்டனே போற்றி    190
தொண்டர் குறிப்பறி தொண்டரை யாண்ட 
தொண்டர் நாதநின் துணையடி போற்றி
தாதைதாள் அறஎறி சண்டே சர்க்கருள்
நீதிசேர் நிமலநின் நிரைகழல் போற்றி
ஒப்பிலா அப்பர்க் குறுதுணை போற்றி    195
குலச்சிறை தவமகிழ் குழகனே போற்றி (21)
சுந்தரர் நாமம் தூமனத் துற்ற 
மிழலைக் குறும்பர் விழைமுதல் போற்றி
மாம்பழங் கொண்ட மாதவச் செல்வி 
பேயுரு அம்மையைப் பேணினை போற்றி    200
நாவுக் கரசின் நாமம் போற்றின 
அப்பூ திக்கருள் அப்பனே போற்றி
நலந்திகழ் நீல நக்கர்க் கன்று
சிலந்தியைய் போக்கின சீர்மையை விளக்கின
*நலந்தி நிறத்து நாதனே போற்றி 205 

(பாடம் : *நல் அந்தி நிறம்)

எரியகல் நீர்கொண் டேற்றின மாத்திறல்
நமிநந் திக்கருள் நற்றவ போற்றி
எங்குலத் தெய்வம் எம்பிரான் பந்தன்
இசைத்தமிழ் நாடிய இறைவனே போற்றி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி நீக்க    210
நம்பியை அனுப்பிய நம்பனே போற்றி (28)
திருமந் திரநூல் செப்பிய மூலரின்
முன்னுடல் மறைத்த மூலனே போற்றி
கண்ணிலாத் தண்டி கண்பெற அருளிய
புண்ணிய பூத புராணனே போற்றி    215
சூதாட் டப்பொருள் தொல்லடி யார்க்கே
ஊக்கத் துடனளி மூர்க்கற் கருள்புரி
பரம யோகியெம் பரஞ்சுடர் போற்றி
ஆரூரர் நண்பர் சோமாசி அன்பர்க்
காடல் காட்டிய ஏடக போற்றி    220
சாக்கியர்க் கருள்புரி தீக்கர போற்றி
சிறப்புலிக் கருளின சிறப்பினை போற்றி
சிறுத்தொண்டர்க்கருள் செயவிழைந் தன்று
பிளைக்கறி பேணின பெரும போற்றி (35)
சேரமான் பூசைச் சிறப்பினை மகிழ்ந்து    225
வாரமாச் சிலம்பொலி வழங்கினை போற்றி
காழி வேந்தன் கழலிணை போற்றிய
கணநா தர்க்கருள் கண்மணி போற்றி
மாற்றலர் அஞ்சும் கூற்றுவர்க் கன்று
திருவடி சூட்டி ஆட்சிசெய அருள்    230
பொங்கழல் உருவநின் பூங்கழல் போற்றி
சடையின் பெருமை தன்னகங் கொண்ட
புகழ்ச்சோ ழற்கருள் புனித போற்றி
தூர்த்தனீ றணிந்திடில் தீர்த்தனே என்று
பார்க்கும்ஞா னத்துடன் பணிநர சிங்க    235
முனையர்க் கருள்புரி முன்னவ போற்றி
நவரத்ன மீனும் நாதற் கெனும்அதி
பத்தர்க் கருள்புரி வித்தக போற்றி
இவ்வடி யான்முனம் ஏவலா ளன்னெனும்
நினைவுகூ டாதென மனைவிகைத் தடிந்த    240
கலிக்கம் பற்கருள் கண்ணுதல் போற்றி (42)
எண்ணெ யிலாமையால் என்கழுத் தையரிந்
திரத்தம் பெய்திங் கேற்றுவன் தீபம்
எனத்துணிந் தெழுந்த கலியற் கிரங்கும்
எந்தை யீசன் எம்பிரான் போற்றி    245
சிவனடி யவரைச் செற்றிகழ் வோர்தம்
நாவை யறுக்கும் நற்றிறச் சத்தி
அடிகளுக் கருளும் ஆத்தனே போற்றி
சிவஸ்தலங் களுக்குச் சீரார் பெருமைப்
பண்பார் வெண்பாப் பாடிய காடவர்    250
கோனுக் கருள்புரி கோமான் போற்றி
முடியைத் தீபமா முன்னவற் கெரித்த
சுணம்புல் லர்க்கருள் கர்த்தனே போற்றி
பாடிய பரிசிலைப் பரன்பணிக் காக்கும்
காரிக் கருள்புரி கண்ணுதல் போற்றி    255
காழிப் பெருமான் கருணை யதனால்
திருநீ றணிந்த சீர்செடு மாறன்
உய்ய அருளிய உத்தம போற்றி
கோயிலா மனத்தைக் குறிநிய மத்தர்
வாயிலார்க் கருளும் வள்ளலே போற்றி (49)    260
போர்முனை வென்ற பொருளடி யார்க்கங்
கீந்து மகிழ்ந்த இதயத் திறங்கொள்
முனையடு வார்க்கருள் முதல்வ போற்றி
பூசைக் குரிய பூஎடுத் தாளெனக்
காதலி கரந்தெறி கழற்சிங் கற்கருள்    265
பூத புராணநின் பொற் கழல் போற்றி
சிவனடி யார்க்கெனச் செல்வ மனைத்தும்
கொள்ளை கொளவிடு குணப்பெருஞ் செல்வர்
இடங்கழி யார்க்கருள் விடங்க போற்றி
பூசைக் குரிய பூவைமோந் தாளெனக்    270
காரிகை துண்டந் துண்டங் கண்ட
செருத்துணைக் கருள்புரி செல்வா போற்றி
பூசைசெய் புகழ்த்துணைக் குறுபசி போக்கக்
காசது நல்கிய கடவுள் போற்றி
அடியவர்க் குரியநெல் லதையெடுத் தாரென    275
எடுத்தவர் தம்மை வாள்கொண் டெறிந்த
கோட்புலிக் கருள்புரி குணமணி போற்றி
மனக்கணே கோயில் வகுத்த பெருமான்
பூசலார்க் கருள்புரி புண்ணிய போற்றி (56)
சிவநெறி போற்றிய தெய்வப் பாவை    280
மங்கையர்க் கரசி மகிழ்தர உதவிய
கற்பகக் கனியெங் கண்ணுதல் போற்றி
சாலியர் நேசர் தம்பணி யுகந்த
மேலவர் மேலவ மெய்ப்பொருள் போற்றி
சிலம்பியாப் பந்தர் சிவபிராற் கமைத்த    285
கோச்செங் கணாற்கருள் கொற்றவ போற்றி
காழியர் பாடலை யாழினி லிட்ட
பாணற் கருள்புரி தாணுவே போற்றி
நம்பியா ரூரரை நலம்பெறப் பெற்ற
சடையற் கருள்புரி சடையாய் போற்றி    290
நம்பியா ரூரரின் நற்றாய் எனவரும்
இசைஞா னிக்கருள் ஈசனே போற்றி
தொண்டத் தொகைதரு தொண்டர்க் கதிபன்
சுந்தரன் தோழநின் சுடர்த்தாள் போற்றி (63)

 

9. தொகையடியார்கள்

தில்லை யந்தணர் நல்லகத் திலங்கும்    295
கூத்தமர் பெருமநின் குரைகழல் போற்றி
பொய்யடி மையிலாப் புலவர்க் கருள்புரி
மெய்யனே போற்றி விமலனே போற்றி
பத்தராய்ப் பணிவார் சித்தத் துறையும்
அத்தனே போற்றி அருத்தனே போற்றி    300
பரமனைப் பாடும் பண்பினர்க் கருளும்
கத்தனே போற்றி கருத்தனே போற்றி
சித்தம் சிவன்பாற்சேர் த்தவர்க் கருள்புரி
சித்தனே போற்றி திருத்தனே போற்றி
ஆரூர்ப் பிறந்தார் அவர்பிற வா அருள்    305
பாலித் தருளும் பரனே போற்றி
திருமேனி தீண்டும் பெரும்பேறு பெற்றோர்க்
கருள்புரி குருபர அரஹர போற்றி
முழுநீறு பூசும் முநிவர்க் கருள்புரி
விழுமிய கொள்கை விழுப்பொருள் போற்றி    310
அப்பா லும்மடிச் சாரும் அடியார்க்
கருள்புரி கருணைய அரஹர போற்றி (9)

 

10. பிற அடியார்கள்

மணிவா சகரருள் மணிவா சகங்களை
எழுதி மகிழ்ந்த எழிலே போற்றி
இசைப்பா பாடிய இசைப்புல வர்க்கருள்    315
திசைப்பார் போற்றும் தீர்த்தனே போற்றி
வகைப்படத் தொண்டத் தொகைவிரி நம்பி
யாண்டார் நம்பியை யாண்டவ போற்றி
மறுவற்ற பத்தி அறுபத்து மூவர்
அவர்சரி தஞ்சொலும் ஆரரு ளாளர்    320
சேக்கிழார்க் கருள்புரி தேவே போற்றி
பட்டினத்தார் தொழு பட்டனே போற்றி
சாத்திரஞ் சொன்ன சந்தான குரவர்க்
கொருகுரு எனத்திகழ் ஒருத்தனே போற்றி
தாயுமா னவர்க்கருள் தந்தையே போற்றி    325
குமர னருள்பெறு குமர குருபரர்
சிவப்பிர காசர் சிவஞான முநிவர்
ஆதிய அடியார்க் கருளினை போற்றி
கண்டிகை நீறணி கருத்தினர்க் கருளும்
அண்ட வாணநின் அடியிணை போற்றி    330
சிவாய நமஎனச் சிந்திப் பவர்க்கோர்
அபாயம் இலாவகை அருள்வாய் போற்றி
எப்பரி சேத்தினும் அப்பரி சேநின்
றருள் புரி பரசிவ அற்புத போற்றி.

 

11. திருக்கோலக் காட்சி

ஆணொடு பெண்வடி வாயினை போற்றி    335
மடப்பா வைக்கன் றிடப்பா கந்தரு
சடைப்பாற் பிறையணி சங்கர போற்றி
கயமுக னைத்தெறு கரிமுக னைத்தரு
வயவ போற்றி வரத போற்றி
மாயச் சூரை வீய வைத்த    340
அத்தனைத் தந்த தத்துவ போற்றி
இடபம தேறும் எந்தாய் போற்றி
சேவார் வெல்கொடித் தேவே போற்றி
கட்டங் கக்கொடி காட்டினை போற்றி
சூலக் கரத்துச் சுந்தர போற்றி    345
மாண்டா ரெலும்பணி மன்னவ போற்றி
புரிநூல் மார்பிற் பூண்டனை போற்றி
தீவண மேனிப் பூவண போற்றி
மின்னிகர் சடைமுடி விண்ணவ போற்றி

மானுரி கரியுரி மகிழ்ந்தனை போற்றி    350
தேளணி செஞ்சடைத் தேசிக போற்றி
கண்டி பூணுங் கருத்த போற்றி
தூயவெண் ணீறு துதைந்தனை போற்றி
தலையணி மாலை தரித்தனை போற்றி
வானம ருஞ்சடை வானவ போற்றி    355
கொன்றையுங் குரவுங் கோடலும் ஆத்தியும்
வன்னியும் தும்பையும் மத்தமும் எருக்கும்
கரந்தையும் பூளையும் கமலமும் கோங்கும்
வில்வமும் நொச்சியும் விரும்பினை போற்றி

 

12. இருபத்தைந்து வடிவு

வரோதய மூர்த்தியாய் வயங்கினை போற்றி    360
சுகாசன மூர்த்தியாய்த் துலங்கினை போற்றி
சுப கலியாண* சுந்தர போற்றி
உமாம கேசுர உத்தம போற்றி
கிரீச மூர்த்தியாம் கேடிலி போற்றி
சோமாஸ் கந்தராம் தூயவ போற்றி    365
சக்கர தான சதுரனே போற்றி
த்ரிமூர்த்தி யாமெந் தேவே போற்றி
ஹரிஹர மூர்த்தியே ஹரஹர போற்றி
தக்ஷிணா மூர்த்தியாம் தத்துவ போற்றி (10)
பிக்ஷா டனராம் பெரும போற்றி    370
கங்கா ளன்னெனும் கடவுள் போற்றி
காமசங் கார கண்ணுதல் போற்றி
காலசங் கார கழலாய் போற்றி
சலந்த ராசுர சங்கார போற்றி (15)
முப்பு ராரியாம் மூர்த்தி போற்றி    375
சரப மூர்த்தியாம் சங்கர போற்றி
நீல கண்டராம் நித்திய போற்றி
த்ரிபாத மூர்த்தியாம் தீர்த்த போற்றி (20)
ஏக பாத இறைவ போற்றி
வயிரவ மூர்த்தியாம் வானவ போற்றி    380
இடபா ரூடராம் எம்மான் போற்றி
சந்திர சேகர தற்பர போற்றி
நடன மூர்த்தியாம் நாத போற்றி
கங்கா தரராம் கற்பக போற்றி. (25)

 

13. பிற வடிவுகள்

இலிங்க ரூபத் திலகினை போற்றி    385
பாதியோர் மாதர் மாலுமோர் பாகர்
எனத்திகழ் வனப்புறும் இனித்தனே போற்றி
ஓங்கா ரத்துள் நீங்காய் போற்றி

 

14. தலவாசம்

பஞ்சபூ தத்தலம் பதிகளாக் கொண்ட
மஞ்சனே போற்றி மணாளனே போற்றி    390
ஆரூர் ஆனைக் காவுடன் அழகார்
அண்ணா மலைகா ளத்தி சிதம்பரம்
காசி ஆலவாய் ஏசிலா தார
யோகத் தலங்களிற் போகனே போற்றி
கஞ்ச னாதியர் கைதொழு தேத்தப்    395
பஞ்ச சபைகளிற் பண்பார் வகையில்
நட்ட மாடுஞ் சிட்டனே போற்றி
ஆரூர் ஆதிய ஏழு தலங்களில்
நடங் குலா வித்திகழ் விடங்கனே போற்றி
கயிலை மலைவாழ் கண்ணுதல் போற்றி    400
வடநாட் டிலகுறு வளமார் பதிகள்
ஐந்தினிற் றிகழும் மைந்தனே போற்றி
துளுவநா டதனில் துலங்குகோ கர்ணத்
திலங்கிடு நாதநின் பொலன் கழல் போற்றி
தொண்டை நாடதனிற் பண்டை நாள் முதலா    405
நலத்த எண் ணான்கு தலத்தனே போற்றி
இருபத் திரண்டெனும் இருப்பிடம் கொண்டு
நடுநாட் டிலகு நாயக போற்றி
கொங்கெழு பதிகளிற் புங்கவ போற்றி
மலைநாட் டொருபதி வாழ்வாய் போற்றி    410
இரண்டெழு பதிகள் இருப்பிடங் கொண்டு
பாண்டி நாட் டிலகும் ஆண்டவ போற்றி
ஈழத் திரண்டு வாழ்தற் கினிய
தலமெனக் கொண்ட தலைமைய போற்றி
காவிரி வடகரை காண்டகு தலங்கள்    415
ஏழொன் பதிலும் இலகினை போற்றி
காவிரித் தென்கரை கவினுறு தலங்கள்
இருபதும் நூறும் ஏழும் ஆனவை
இனிதாக் கொண்ட புனிதா போற்றி.
--------------
குக்கா; குரங்கணின் முட்டம், (23) சிறுகுடி (24) சீகாளத்தி, திரு ஆனைக்கா.

 

15. வழிபட்டோர்

1விண்ணவர் 2தானவர் 3மண்ணவ ரானோர்    420
பண்ணிய பூசனை பரிந்தனை போற்றி
4அணிலும் 5ஆமையும் 6ஆனையும் 7 காகமும்
8பசுவும் 9பாம்பும் 10பன்றியுங் 11குதிரையும்
12நண்டும் 13வண்டும் 14நாரையும் 15கழுகும்
16குயிலும் 17மயிலும் 18முயலுங் 19குருவியும்    425
20ஈயும் 21எறும்பும் 22குரங்கும் 23கருடனும்
24சிலந்தியும் பூசைசெய் சிற்பர போற்றி.

 

16. வேதமும் சிவனும்

சாமவே தப்ரிய சங்கர போற்றி
வேதம் பாடும் விகிர்தா போற்றி
வேதம் போற்றும் பாத போற்றி    430
வேதமுடிதிகழ் நாத போற்றி
வேத பீடிகை மேலோய் போற்றி
வேத பாதுகை வேந்தே போற்றி
வேத வாரண மேலோய் போற்றி.
வேத நூபுர விண்ணவ போற்றி    435
வேதஞ் சரடா வேய்ந்தனை போற்றி
வேதக் கோவண வேதிய போற்றி
வேதமே விழியாய் விளங்குவை போற்றி
வேதமே மொழியா விளம்புவை போற்றி
வேதமே வடிவா விரும்பினை போற்றி    440
வேதச் செங்கோல் மெய்யனே போற்றி
வேத ஆணைய விதியனே போற்றி
வேதம் நான்கும் தேர்ப்பரி யாகவும்
வேதம் பந்தல் நாற்கால் ஆகவும்
போத அமைத்த பூதிய போற்றி    445


17. பரம் பொருள்

பதுமனாய் நின்று படைப்பாய் போற்றி
அரியாய் நின்றங் களிப்பாய் போற்றி
அரனாய் நின்றங் கழிப்பாய் போற்றி
மூவர்கோ எனத்திகழ் தேவர்கோ போற்றி
பந்தமும் வீடும் படைப்போன் போற்றி    450
பஞ்சபூ தங்களிற் பரந்தனை போற்றி
அட்ட மூர்த்தியாய் அமர்ந்தனை போற்றி
ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல்
அனுக்கிர கித்தலென் றைவகைச் செயல்புரி
ஆற்ற லமைந்த அதிபனே போற்றி    455
பிறப்பிறப் பில்லாப் பெரியவ போற்றி
"பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்த சொன் மாலை கொண்டருள் போற்றி
*போற்றி போற்றி புராண காரண
*போற்றி போற்றி சயசய போற்றி".    460
திருச்சிற்றம்பலம்

(*திருவாசகம் : போற்றித்திருவகவல்)

-----------------------------------------------------------
(1) தேவர் பூசித்தது-திருக்காட்டுப்பள்ளி (கீழை, கோட்டூர் முதலிய 
(2) அசுரர் பூசித்தன இடும்பாவனம், திரிசிராப்பள்ளி முதலிய 
(3) மண்ணவர் அரசர் பூசித்தன திருவாரூர், திருவிடை மருதூர் முதலிய 
(4-24) அணில் முதல் சிலந்திவரை பூசித்த தலங்கள் முறையே 
(4) குரங்கணில் முட்டம் (5) திரு மணஞ்சேரி 
(6) திரு ஆனைக்கா, காளத்தி, கோட்டாறு, பெண்ணாகடம் 
(7) குரங்கணில் முட்டம் (8) திரு ஆமாத்தூர், ஆவூர், பெண்ணாகடம், ஆவடுதுறை 
(9) காளத்தி, பாம்புரம், நாகைக்காரோணம், திருநாகேச்சுரம், கும்பகோணம் 
நாகேசுர சாமிகோயில், பாதாளீச்சுரம் 
(10) சிவபுரம் (11) அயவந்தி- சாத்த மங்கை (12) திருந்து தேவன்குடி, திரு நீடூர் 
(13) திருவெண்டுறை (14) திரு நாரையூர், மதுரை 
(15) திருக்கழுக்குன்றம், புள்ளிருக்கு வேளூர் (16) திருக்கோழம்பம்
(17) மயிலாப்பூர், மயிலாடுதுறை (மாயூரம்) (18) திருப்பாதிரிப்புலியூர் 
(19) மதுரை வலிவலம் (20) ஈங்கோய்மலை (21) திரு எறும்பியூர் 
(22) குரங்காடு துறை- தென் வட ; குரக்குக்கா; குரங்கணின் முட்டம் 
(23) சிறுகுடி (24) சீகாளத்தி, திரு ஆனைக்கா.

 

நூல் வரலாறும் வாழ்த்தும்

 

போற்றி அகவல் புகலென் றெனக்கொர்பணி
சாற்றிய தம்பிபல சந்தஞ்சொல் - ஆற்றல் நிறை
ஆறு முகனெந்தை ஆறு முகனருளால்
வீறுடனே வாழ்கபுவி மேல்.

 

வாழ்க இந் நூலை வழங்க உதவினவர்
வாழ்கமயில் வேல்சேவல் மாதிருவர் - வாழ்கவே
செல்லாருந் தென்கணிகைச் சேயோன் அடியார்கள்
எல்லாரும் வாழ்க இனிது.
----------------------
நன்றி : Project Madurai.

 

Related Content

The Pilgrim's Progress

Thiruvasagam Part-1 - Romanized version

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப்பகுதியும்

திருவருட்பா - இராமலிங்க வள்ளலார் Part 6 Tiruvarutpa of ramal