logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவாஷ்டகம் - உரை

சிவமயம்

தமிழ் உரை:

Dr. S. கங்காதரன் M.A., M.Litt., Ph.D.


சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]


       ப்ரபும் ப்ராணநாதம் விபும் விச்வநாதம்

              ஜகந்நாதநாதம் ஸதாநந்தபாஜம்,

       பவத்பவ்யபூதேச்வரம் பூதநாதம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               1

 

1.     பிரபுவானவரும், ஆருயிர்த் தலைவரும், பெருந்தகையும், உலகனைத்தையும் ஆள்பவரும் உலகின் தலைவரான திருமாலுக்கும் தலைவரும், எப்பொழுதும் ஆனந்தத்துக்கு உறைவிடமானவரும், முக்காலத்திற்கும் அதிபதியானவரும், பூத கணங்களின் தலைவரும், மங்களமானவரும், நன்மை பயப்பவரும், சம்புவெனப்படுபவருமான ஈசானரை (சிவபிரானை) வணங்குகின்றேன்.

      சிவம் என்றால் மங்களஸ்வரூபி, சங்கரன் என்பது நன்மையைச் செய்பவர் என்ற பொருள் தரும், சம்பு என்றால் சுகத்துக்கு இருப்பிடமானவர். பிரபு என்னும் சொல்லிற்கு வல்லமையுள்ளவர் அல்லது காப்பவர் என்று பொருள். விபு என்னும் சொல்லற்கும் ஏறக்குறைய அதே பொருளாகும். மேலும் வருமிடங்களில் இச்சொற்களுக்கு இவ்வாறே பொருள் கொள்க.

       கலே ருண்டமாலம் தநெள ஸர்ப்பஜாலம்

              மஹாகாலகாலம் கணேசாதிபாலம்,

       ஜடாஜூடபங்கோத்தரங்கைர் விசாலம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               2

 

2.     தலையற்ற உடலைக் கழுத்தில் மாலையாயணிந்தவரும், அரவக் கூட்டங்களைத் தன்னுடலில் அணிந்தவரும், காலனுக்கும் காலனானவரும், ஆனைமுகத்தோனுக்குத் தலைவனும், சடை முடியில் தடையுற்ற அலைகளினால் (கங்கையின் அலைகள்) சிறந்து விளங்குபவரும், மங்களமானவரும், நன்மை பயப்பவரும், சம்பு எனப்படுபவருமான ஈசானரை வணங்குகின்றேன்.

      “மஹாகாலகால” என்னும் சொல்லை, பிரளய காலத்தில் சிவனைக் குறிக்கும் மஹாகாலராகவும் மற்றும் கால வடிவானவர் என்றும் கொள்ளலாம்.   

       முதாமாகரம் மண்டனம் மண்டயந்தம்

              மஹாமண்டலம் பஸ்மபூஷாதரம் தம்,

       அநாதிம் ஹ்யபாரம் மஹாமோஹமாரம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               3

 

3.     மகிழ்ச்சிக்கு உறைவிடமானவரும், அழகுக்கு அழகூட்டுபவரும், சிறந்து ஒளிர்பவரும், சாம்பலை அணிகலனாக அணிந்தவரும், தொன்று தொட்டு இருப்பவரும், முடிவற்றவரும், கொடிய மயக்கத்தைக் களைபவரும், மங்களமான வரும் நன்மை பயப்பவரும், சம்பு எனப்படுபவருமான ஈசானரை வணங்குகின்றேன்.

      “மண்டனம் மண்டயந்தம்” என்னும் இரு சொற்களுக்கு அணிகலன்களை அணிந்து சிறந்து காட்சி அளிப்பவர் என்று பொருள். தோற்றம், முடிவு இவ்விரண்டு மற்றவர் சிவனார். உலகப்பொருள்களின் மீது பற்று என்னும் மிக்க கொடிய மயக்கத்தைக் களைபவரும் அவரே.

       தடாதோநிவாஸம் மஹாட்டாட்டஹாஸம்

              மஹாபாபநாசம் ஸதாஸுப்ரகாசம்,

       கிரீசம் கணேசம் ஸுரேசம் மஹேசம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               4

 

4.     தடத்தினடியில் வசிப்பவரும், மிகவும் அச்சுறுத்தும் சிரிப்பை உடையவரும், பெரும் பாவங்களை அழிப்பவரும், எப்பொழுதும் நன்கு ஒளிர்பவரும், மலைக்கரசனும், கணங்களுக்குத் தலைவரும், தேவர்களுக்கு அதிபரும், மிகச்சிறந்த தலைவரும், மங்களமானவரும், நன்மை பயப்பவரும் சம்பு எனப்படுபவருமான ஈசானரைப் போற்றுகின்றேன்.

      ‘தடம்’ என்னும் சொல்லிற்கு மலைச் சரிவு, ஆகாயம், கரை முதலிய பொருள்கள் உண்டு. சிவனார் கைலாயத்தில் வசிப்பவராதலாலும் கைலாசம் வானளாவி நிற்பதாலும் வானத்தின் முகட்டில் கைலையில் வசிப்பாவ்ர் என்று கொள்ளலாம்.

       கிரீந்த்ராத்மஜா ஸங்க்ருஹீதார்த்த தேஹம்

              கிரெள ஸம்ஸ்தித்டம் ஸர்வதாஸன்னகேஹம்,

       பரப்ரஹ்ம ப்ரஹ்மாதிபிர் வந்த்யமானம்

              சிவம் சங்கரம் சம்புமீடானமீடே.              5

 

 

5.     மலைமகளினால் தன் உடலில் ஒரு பகுதி ஆக்ரமிக்கப்பட்டவரும், மலையில் உறைபவரும், எப்பொழுதும் மயானத்தில் இருப்பவரும், பரப்ரம்ம வடிவினரும், நான்முகன் முதலானவர்களால் வணங்கப் பெற்றவரும், மங்களமானவரும், நன்மை பயப்பவரும், சம்புவெனப்படுபவருமான ஈசானரைப் போற்றுகின்றேன்.

      ‘ஸர்வதாஸன்ன கேஹம்’ என்னும் சொற்றொடரில் ஆஸன்ன என்னும் சொல் சாகப்போகிறவனைக் குறிக்கிறது; கேஹம் என்றால் வீடு என்று பொருள் ஆகையால் மயானத்தில் இருப்பவர் என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

கபாலம் த்ரிசூலம் கராப்யாம் ததானம்

              பதாம்போஜநம்ராய காமம் ததானம்,

       பலீவர்தயானம் ஸுராணாம் ப்ரதானம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               6

 

6.     மண்டை ஓட்டையும், திரிசூலத்தையும் தனது கைகளில் தாங்குபவரும், திருவடித் தாமரைகளை வணங்குபவருக்கு விரும்பியதைக் கொடுப்பவரும், எருதை வாகனமாக உடையவரும், தேவர்களில் முதன்மையானவரும், மங்களமானவரும், நன்மை பயப்பவரும், சம்புவெனப்படுபவருமான ஈசானரைப் போற்றுகின்றேன்.

       சரச்சந்த்ரகாத்ரம் குணானந்தபாத்ரம்

              த்ரிநேத்ரம் பவித்ரம் தனேசஸ்ய மித்ரம்,

       அபர்ணாகலத்ரம் சரித்ரம் விசித்ரம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               7

 

7.     சரத்ருதுவின் (இலையுதிர் கால) நிலவையொத்த உடலை உடையவரும், குணங்களுக்கு உறைவிடமானவரும், முக்கண்ணரும், புனிதமானவரும், குபேரனுக்கு நண்பரும், அபர்ணையை மனைவியாய் உடையவரும், வினோதமான நடத்தை உடையவரும், மங்களமானவரும், நன்மை பயப்பவரும், சம்புவெனப்படுபவருமான ஈசானரைப் போற்றுகின்றேன்.

      சரத்ருது என்பது ஐப்பசி, கார்த்திகை என்ற இரண்டு மாதங்கள் அடங்கிய காலத்தைக் குறிக்கும். இதனை இலையுதிர் காலம் எனவும் கூறுவர்.

      ‘அபர்ணை’ என்பது மலைமகளின் ஒரு பெயர். சிவனாரை அடையத் தவமியற்றியபொழுது தானாகக் கிடைத்த காய், கனி, சருகுகளைக் கொண்டு உயிர்வாழ்ந்த மலைமகள் பின்னர் அதையும் துறந்தமையால் ‘அபர்ணை’ என்றழைக்கப்பட்டாள். ‘பர்ணம்’ என்றால் இலை ‘அபர்ணம்’ என்றால் அதுவுமற்ற என்று பொருள்.

 

ஹரம் ஸர்ப்பஹாரம் சிதாபூவிஹாரம்

              பவம் வேதஸாரம் ஸதாநிர்விகாரம்,

       ச்மசானே வஸந்தம் மனோஜம் தஹந்தம்

              சிவம் சங்கரம் சம்புமீசானமீடே.               8

 

8.     (இன்னல்களைப்) போக்குபவரும், அரவத்தை அணிகலனாக உடையவரும், சிதையினின்று தோன்றிய (சாம்பலை) அணிந்தவரும், வாழ்க்கைச் சுழலைத் தோற்றுவிப்பவரும், மறைகளின் ஸாரமானவரும், எப்பொழுதும் மாறுதல் எதுவுமற்றவரும், மயானத்தில் வசிப்பவரும், காமனை எரித்தவரும், மங்களமானவரும், நன்மைபயப்பவரும், சம்புவெனப்படுபவருமான ஈசானரைப் போற்றுகின்றேன்.

       ஸ்தவம் : ப்ரபாதே நர: சூலபாணே:

              படேத்ஸர்வதா பர்க்க பாவானுரக்த:

       புத்ரம் தனம் தான்யமித்ரம் கலத்ரம்

              விசித்ர: ஸமாஸாத்ய மோக்ஷம் ப்ரயாதி.            9

 

9.     சூலத்தைக் கையில் தரித்தவரின் மீதான இந்தத் துதியை எவனொருவன் சிவனாரிடம் ஈடுபாடு கொண்டவனாக விடியற்காலையில் படிக்கின்றானோ, அவன் புத்திரப் பேறு, செல்வம், தானியம், நண்பர்கள், அழகிய மனைவி முதலியனயாவும் பெற்றுப் பின்னர் மோக்ஷத்தை அடைகின்றான்.

      ‘பர்க்கன்’ என்பது சிவபிரானின் திருப்பெயர்களின் ஒன்று. (தன்னை வழிபடுவோர்களது) பாவங்களை வறுத்தெடுத்து அழிப்பவர் என்பது பொருள்.

      குறிப்பு – பாம்பின் நடையை ஒத்த அமைப்புடைய புஜங்க பிரயாதம் என்னும் விருத்தத்தில் அமைந்துள்ள இந்த அரிய ஸ்தோத்திரத்தை அருளியது யார் எனத்தெரியவில்லை.

சிவாஷ்டகம் முற்றிற்று.

Related Content