logo

|

Home >

Scripture >

scripture >

Tamil

சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய சீகாளத்திப் புராணம் கண்ணப்பச் சருக்கம்

சீகாளத்திப் புராணம்

கண்ணப்பச் சருக்கம்

				கலித்துறை

		மதியின் மானிளங் கன்றினை வரிசிலைக் குறவர்க் 
		குதலை மென்மொழிப் பேதையர் பச்சிளங் கொடிப்புல் 
		பதும மென்கையா னீட்டுபு பரிவுட னழைக்கும் 
		புதுமை கொண்டவெற் புடுத்தது போத்தப்பி நாடு. 				1 

		தாவி லத்திரு நாட்டசீ றூர்களிற் றலைமை 
		மேவி நீணறுஞ் சந்தன நிரைத்துவெண் கவரி 
		மாவின் மென்மயிர்க் கற்றைவேய் சிற்றில்கள் வயங்கி 
		யோவில் சீருடுப் பூரெனக் குறிச்சியொன் றுண்டால். 				2 

		வேடர் மங்கையர் முன்றிலி னின்றபூ வேங்கை 
		யாடு கொம்பரிற் றொடுத்தபூந் தொட்டிலி னமர்ந்த 
		தேட ரும்பசுங் குழவிதா லாட்டுசெவ் வழியின் 
		பாடல் கேட்டுமா மயிலுறங் குவமலைப் பக்கம். 				3 

		இரும்பிற் செய்தன திண்புயத் திறவுளர் மைந்தர் 
		விரும்பப் பின்றிரிந் திளம்புலி கற்குமால் வீரம் 
		பெருங்கைச் செம்புகர் முகத்திளம் பிடியினம் பிணைபோற் 
		கருங்கட் செய்யவாய்க் குறத்திய ரணிநடை கற்கும். 				4 

		வென்றிக் குஞ்சர மத்தக முத்தமும் வேயிற் 
		பன்றிக் கோட்டிடை வருமொளி முத்தமும் பரப்பி 
		முன்றிற் பற்பல சிற்றில்கள் செய்யுமான் முனியாக் 
		குன்றிச் செம்மணி யணியுடைப் பேதையர் குலமே. 				5 

		நெடிய சந்தனக் காற்கரி மருப்பித ணின்று 
		கடிகொள் பைந்தினை கவர்பசுங் கிளியினங் கடியு 
		மடநல் லாரிசை கேட்டலு மாடக நல்யாழ் 
		தடவல் விட்டுவிச் சாதரர் செவித்துணை தாழ்ப்பார். 				6 

		இனைய பற்பல பெருவள மெய்துமவ் வூரிற் 
		குனியு நோன்சிலைக் குறவர்தங் குஞ்சிதோய் கழற்கால் 
		வனச ராதிப னாகனென் பானிகல் வாட்கண் 
		மனைவி தத்தையென் பாளொடு வாழ்ந்தினி திருந்தான். 			7 

		வாழு நாளின்மென் மழலையஞ் சொன்மக வின்மைத் 
		தாழ்வி னானனி மனங்கவன் றிறவுளர் தலைவன் 
		வீழி வாய்க்கய லரிமதர் நெடுங்கண்வேய் மென்றோ 
		ளேழை நுண்ணிடை மனைவியோ டின்னண மெண்ணும். 			8 

		கண்ணில் யாக்கையுந் திங்களில் கங்குலுங் கண்போ 
		வண்ணன் மந்திரி யில்லர சாட்சியு மருளிற் 
		றிண்ணெ ணெஞ்சமும் புலவரி லவையுமொண் டீம்பால் 
		வண்ண வாயிள மக்களில் வாழ்வுமொப் பாமால். 				9 

		சேற ளைந்தமென் சீறடித் தளிரொடு தீம்பாற் 
		சோற ளைந்தகைத் தாமரை யோடுசெந் துகிர்வா 
		யூறு நீர்நனை மார்பினோ டிளமகா ருந்தி 
		யேறு மின்பமுள் ளதனையே யுடம்பென விசைப்பார். 				10 

		அரிகொள் பொன்புனை கிண்கிணி தண்டையோ டணிந்த 
		தருண மென்றளிர்ச் சீறடித் தளர்நடைச் சிறுவர் 
		மருவ றாதசெவ் வாம்பல்வாய் மழலையா ரமுதம் 
		பருகி லாச்செவி பாவையின் செவியெனப் படுமால். 				11 

		இம்மை யின்பொடு மறுமையி னின்பமென் றிரண்டு 
		மம்மென் மைந்தரை யில்லவர்க் கில்லைமற் றதனா 
		லெம்மை யாளுடை முருகவே ளடிமல ரிறைஞ்சிச் 
		செம்மை நன்மகற் பெருகுவ மெனச்சிந்தை செய்தான். 				12 

		சிந்தை செய்தவன் வரைபக வெறிசுடர்ச் செவ்வே 
		லெந்தை வாழ்வதற் கேற்றதோர் சினகர மியற்றி 
		நந்து பூசனை நடத்துபு நடிக்குமா மயிலும் 
		வெந்தி றற்கொழுஞ் சூட்டுவா ரணங்களும் விடுத்தான். 			13 

		இரலை தொண்டகந் துடிமுதற் பறையொலி யீண்டத் 
		திருவி ழாவயர்ந் திலங்குசெங் காந்தளந் தெரிய 
		லுருவ வேலனைக் கூயகன் களனணி யுறுத்து 
		வெருவ ருந்தகை வெறியயர் வித்தனன் விழைவால். 				14 

		கடிகொ ளவ்வெறி யாட்டிடை யாவருங் காணச் 
		சுடர்செய் வேற்படைக் குருசிலவ் வேலன்மேற் றோன்றி 
		யொடிவி லன்பொடு செய்தவிச் சிறப்பினுக் குவந்தேம் 
		படியெ லாம்புகழ் மகற்றரு குவமெனப் பகர்ந்தான். 				15 

		பகர்ந்த சொல்லமு தந்துணைச் செவிகளாற் பருகி 
		யுகந்து மாமகிழ் வெய்திய தத்தையு முவகை 
		மிகுந்த நாகனுந் திருவடி மலர்மிசை வீழ்ந்து 
		புகழ்ந்து நின்றனர் மறைந்தன னருட்கடற் புனிதன். 				16 


			அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

		பின்னரவ் வெறியாட் டாளன் பெறப்பெருஞ் சிறப்புச் செய்து 
		துன்னிநின் றகலாச் சுற்றத் தொகைக்கெலா மகிழ்ச்சி செய்து 
		தன்னமர் மனையுந் தானுந் தளிர்த்துள மினிதி ருந்தா 
		ரன்னமன் னவள்சின் னாளி லரும்பெறற் கருப்ப முற்றாள். 			17 

		உண்டுகொ லென்னு மைய மொழிந்தது மருங்குட கோங்கின் 
		வண்டுறு முகுள மென்ன வனமுலை முகங்க றுத்த 
		பண்டுவ மைக்கு டைந்த பசியவேய்க் குலமு வப்பத் 
		துண்டவெண் மதிநு தற்குத் தோட்டுணை மெலிந்தவன்றே. 			18 

		மகவுடன் வயிற்றி ருந்து வளர்புகழ் பரந்த தென்ன 
		மிகவுடல் விளர்த்த துண்டி வெறுப்புவந் ததுபு ளிங்கூ 
		ழகனமர்ந் துண்ணும் வேட்கை யடைந்தது நடையோய்ந் தன்று 
		தகைமலர் மென்பூங் கோதை தான்பெருஞ் சுமையா யிற்றால். 			19 


			கலிவிருத்தம்

		இன்ன வாறு வயாநலி வெய்திய 
		கன்ன லின்மொழிக் காரிகை பெற்றனண் 
		மன்னு தங்குல மாசு துடைத்திடும் 
		பொன்னி னன்ன புதல்வனை யென்பவே. 					20 

		பெறல ருஞ்சேய் பிறந்தெனக் கானவ 
		ரிறைம கிழ்ச்சி யிருங்கடன் மூழ்கினான் 
		பொறையு யிர்த்தவப் பொற்றொடி யெய்திய 
		வுறும கிழ்ச்சி யுரைப்பவர் யாவரே. 						21 

		நண்ணு மோகையி னாகன் பெருஞ்சிறப் 
		பண்ணல் வேற்படை யையனுக் காற்றினான் 
		பெண்ணு மாணும் பெருமகிழ் வெய்தலா 
		னெண்ணெ யாட்டணி யெங்குநி கழ்ந்ததே. 					22 


				தரவுகொச்சகக் கலிப்பா

		மணியினைமண் ணுறுத்தாங்கு வாசவான் புனலாட்டிப் 
		பணைகொள்குவி முலைபிலிற்றும் பால்பெய்து நிலந்தேய்த்த 
		வணிதிலகஞ் சிறுநுதலி லணிந்துமுலைப் பாலூட்டி 
		பிணையில்கரி மருப்பினிய லெழிற்றொட்டி லேற்றினார். 			23 

		பூஞ்குழல்வே னெடுங்கண்ணாள் புனலாட்டிப் புனைந்துதர 
		வாங்குசிலை மறவர்கோன் மணிமகனைத் தடக்கையாற் 
		றாங்குபுதிண் ணென்றிருந்த தன்மையாற் றிண்ணனெனத் 
		தேங்கியபே ருவகையொடுந் திருநாமஞ் சாத்தினான். 				24 

		திண்வளருங் கரிமருப்பாற் செய்யசைபூந் தொட்டிலின்மேல் 
		விண்வளரும் புனிற்றுநிலா வெண்மதியின் வளர்மைந்தன் 
		றண்வளரும் பாலாழித் தரங்கமிசை நாகணையிற் 
		கண்வளருந் துழாயலங்கற் கதிர்மணிவண் ணனைப்போலும். 			25 

		மலயமா ருதம்புகுந்த மடுக்கமல மெனநீரிற் 
		கலைகெழுமா மதியமெனக் கவின்கொடிரு முகமசைய 
		விலவிதழ்வா யமுதொழுக வெழின்மார்ப மிசையெடுத்துச் 
		சிலைமறவர் குலதிலகஞ் செஞ்கீரை யாடிற்றே. 				26 

		தருணமதி நிலத்தினிடைத் தவழ்வதெனத் தவழ்தந்து 
		பொருதிரைவார் கடலாடைப் புவிமகள்செய் புண்ணியத்தாற் 
		றிருவடிமா மலர்சுமப்பச் சேர்த்திளமென் னடைபயின்றான் 
		குருதிவடி யிலங்கிலைவேற் குகனருளாற் பெறுமைந்தன். 			27 

		குன்றிவட மரைதயங்கக் கொடுவரிவள் ளுகிர்க்கோவை 
		நன்றுகழுத் தினிலிலங்க நனந்தலைச்சீ றூர்முழுது 
		மொன்றுசிறா ரொடுசிறுதே ருருட்டியும்பே தையரிழைத்த 
		துன்றுமணிச் சிற்றில்லந் துடைத்தும்விளை யாட்டயர்ந்தான். 			28 

		ஆர்நாரின் றிண்கயிற்றா லமைச்சிறுகோல் வளைத்தவிலுங் 
		கூர்வாய்முண் ணுனிபதித்த கோற்கோலுங் கைக்கொண்டு 
		கார்மேனி மைந்தரொடு கான்புகுந்து கொடுவிலங்கி 
		னேர்வாய்மென் குருளைபல வெய்தல்செய்தான் விளையாட்டால். 		29 

		வாமிளமான் கன்றுகளும் வள்ளுகிர்நோன் றாட்புலியின் 
		கோமளநற் குருளைகளுங் குடாவடியின் குட்டிகளுந் 
		தாமிழைத்த முற்றவத்தாற் சவரர்குலா திபன்பயந்த 
		மாமகனார் கைப்பட்டு வளர்ந்தவற்றிற் களவில்லை. 				30 

		இவ்வகைய விளையாட்டோ டிளமைந்தன் வளரும்நாட் 
		கைவலிய சிலைவிஞ்சை கற்பிக்கும் பருவம்வரத் 
		தெவ்வடுதோட் குன்றவர்கோன் றேயத்து மறவரெலா 
		மவ்வுழிவந் துறக்கூட்டி யடர்சிலையின் விழாநடத்தி. 				31 

		பின்புசிலை யாசாற்குப் பெருஞ்சிறப்புச் செய்தடிக 
		ளென்பழைய குடிநிறுத்திவ் விளையோற்குச் சிலைக்கல்வி 
		யன்பினொடு கொடுக்கவென்றா னதற்கிதொல் லாசிரிய 
		னன்பகலில் வரன்முறையே நற்சிலைகைப் பிடிப்பித்தான். 			32 

		முற்பிறப்பிற் பல்பெரும்போல் முடித்தசிலை விஞ்சையெல்லா 
		மற்பழுத்த குவவுத்தோள் வனசார்தம் பெருமாற்கு 
		விற்பிடித்த காலத்தே விளங்கியதஞ் சனம்விழியிற் 
		பொற்பவிட்ட பொழுதேகீழ்ப் பொருள்வைப்புக் காண்பதுபோல். 		33 


			அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்

		கொள்வலிச் சிலையின் விஞ்சை குறைவற நிரம்பிக் காளை 
		முள்ளெயிற் றரவு யர்த்தோன் முரட்படை முழுதுங் கொன்ற 
		வெள்வயப் புரவித் திண்டேர் விசயன்வேட் டுவக்கு லத்தி 
		னுள்ளவ தரித்தான் கொல்லென் றுரைதர வொழுகு நாளில். 			34 

		சேட்டிளஞ் சிங்க மன்ன செம்மலைத் தந்தை கன்னி 
		வேட்டமா டுவித்த லாற்ற விழைந்தன னதனை நன்கு 
		கூட்டக்காட் டுறைதெய் வங்கள் கொள்பலி கொடுப்ப வுன்னிக் 
		கோட்டுறு வரிவில் வேடர் குழுவொடு வனத்திற் புக்கான். 			35 


			கலிவிருத்தம்

		புக்கவன் குழைசிலைப் புளிநர் யாரையு 
		மைக்கருங் கயல்புரை வாட்கண் ணாரொடு 
		தொக்கிருஞ் சுனைப்புன றோய்ந்து வம்மெனா 
		வக்கணந் தானுநீ ராடப் போயினான். 					36 

		குரைகட லின்னுமக் குறிய மாதவன் 
		பருகினும் பருகுமென் றஞ்சிப் பாழிமால் 
		வரையரண் புகுந்தென வயங்கு பூஞ்சுனை 
		தெரிவைய ரொடுமறச் செல்வ ரெய்தினார். 					37 

		ஒலிவளைக் கையினா ருற்ற போதிரி 
		பலவிதப் பறவையின் பறையின் காற்றினான் 
		மலிசுனைக் குவளைக ளசைதன் மாதர்கண் 
		ணலிபகைக் குடனனி நடுங்கல் போலும்.					38 

		மற்றவர் புகுதலின் மணங்கொள் பூவினுட் 
		டுற்றவண் டிரிதர றூய நீர்ச்சுனை 
		யற்றைநாள் வரையும்புக் காடு வார்ப்பெறா 
		துற்றநீள் பழிவிடுத் தோடல் போலுமே. 					39 


			மேற்படி வேறு

		செய்ய தாமரைத் தேமல ரன்னலா 
		ரைய வாண்முகத் தோடுற வாடின 
		மொய்ய ரும்புகண் முத்தந் துயல்வரூஉம் 
		வெய்ய கொங்கை விருந்தெதிர் கொண்டவே. 				40 


			எழுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்

		தாமரை முகத்தர் குவளையங் கண்ணர் சைவலக் கூந்தலர் வள்ளைக் 
		காமரு குழைய ரன்னமென் னடையர் கமலநீர் வளையமென் றோளர் 
		நேமியம் பறவைக் குவிமுலைத் தடத்தர் நிறையித ழாம்பலம் வாய 
		ராமட மகளிர் நீரைவிட் டகலா ததினமர்ந் தாடின ரன்றே. 			41 

		இவ்வுழி மூழ்கி வேறிடத் தெழுவ லென்னைநீர் காண்கென மூழ்கி 
		யவ்வகை யெழுந்த சிற்றிடைப் பெருந்தோ ளணியிழை யளகவாண் முகத்தைச் 
		சைவலத் தருகு மலர்ந்தசெங் கமலத் தனிமல ரெனமனத் தெண்ணிக் 
		கொவ்வைவாய் மகளி ரெழுந்தில ளென்று குளிர்புனற் பரப்பெலாம் பார்ப்பார். 	42 


			கலிவிருத்தம்

		முரிதி ரைப்புனன் மூழ்கி யெழுதரு 
		மரிம தர்க்கணா ளங்கலுழ் வாண்முக 
		மிரைதி ரைக்கட லின்கண் ணெழுதல்செய் 
		விரிக திர்க்கலை வெண்மதி யொத்ததே. 					43 

		அன்ன மென்னவந் தீம்புன லாடிய 
		பொன்னி னன்ன பொறிசுணங் கம்முலைக் 
		கன்ன லின்மொழி யார்கரை யேறினார் 
		துன்னு பைந்தழைத் தூசுடுத் தாரரோ. 					44 

		அங்கு நின்றக லங்கையற் கண்ணினார் 
		மங்குல் கண்படு மாமலர்ச் சோலையுட் 
		பொங்கு மோகையிற் போய்க்கட வுட்கலர் 
		கொங்கு நாண்மலர் கொய்யத் தொடங்கினார். 				45 

		தம்மை மஞ்ஞை தழைசிறை மென்குயி 
		லம்மென் பூவை கிளியென் றறைந்திடன் 
		மெய்ம்மை யாக விளங்கிழை யார்விரை 
		விம்மு பூந்தரு மீமிசை யேறினார். 						46 

		கொங்கு தங்கிய கோங்கலர் கொய்யுமோர் 
		மங்கை கொம்பின் மறைந்து நின்றாளெழில் 
		பொங்கு வெம்முலை பூமுகி ழாமென 
		வங்கை கொண்டுதொட் டன்மையின் வெள்கினாள். 				47 

		கிராதர் தங்குலக் கிஞ்சுக வாய்மலர் 
		விராய வோதியர் வேங்கைமே னின்றனர் 
		குராவ லாமற் குடைந்தளி பாடுபூம் 
		பராரை வேங்கையும் பாவைகள் பூத்தென. 					48 

		மைய கண்ணியோர் மங்கையோ ராடவன் 
		கைய டிக்கவின் காணிய மாதுநீ 
		செய்ய விச்சினைத் தேமல ரெட்டுபு 
		கொய்ய வல்லைகொ லென்றதுங் கூசினாள். 					49 

		வீவி லாற்றலோர் மீளி யொருநடை 
		யோவ மன்னா ளுயர்சினைப் பூப்பெறத் 
		தாவல் கண்டதைத் தாழ்வித் தனனவ 
		னாவி யன்னவ ளாய்மலர் சிந்தினாள். 					50 

		மாதர் தம்மடி வைத்தலிற் பற்பல 
		வீத தைந்த விதமறிந் தாரல 
		ரீத சோகநா மேறிய பின்மிகப் 
		போது கொண்ட புதுமையென் னென்றனர். 					51 

		வடுவ கிர்க்கணாற் றம்மொடு மாறுகொள் 
		படியி னாலிடம் பார்த்து வளைந்தெனக் 
		கடிகொள் வண்டின் கணங்கள் மணங்கமழ் 
		துடிகொ ணுண்ணிடைத் தோகையர்ச் சூழ்ந்தவே. 				52 

		தாத ளைந்தளி தாழிசை பாடுதண் 
		போது கொய்த புதுத்தளிர் மேனியார் 
		காத லன்பிற் கணவரோ டெய்தினார் 
		தீது தீர்க்குமத் தெய்வ நிலையமே. 						53 

		கந்த மாறாக் கடிமலர்ப் பைஞ்சுனை 
		யந்த ணீர்படிந் தவ்வுழி யெய்தினான் 
		மந்த ராசல மென்ன வளர்ந்ததோ 
		ணந்து பேரிசை நாகன் கிராதர்கோன். 					54 


			அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 

		விரிமலர்த் தொடைக ளானும் விளங்குவெண் கவரி யானும் 
		வெருவரு தெய்வம் வாழும் வீழுடை விலங்கு நீள்கோட் 
		டிருள்படத் தழைந்த கோளி யெழில்பெற வணிந்து பூசை 
		புரிபவற் கூவிப் பூசை புரிவித்தான் வரிவி னாகன். 				55 

		கானக முழுதும் வாசங் கமழ்தரக் குக்கி லத்தி 
		னீனறும் புகையெ ழுப்பி நெடுநிலங் குருதி பாய 
		நானெடுஞ் செவிய கோட்ட நண்ணிய திரிம ருப்பி 
		னூனமொன் றானு மில்லா வுயர் விடை பலப டுத்தான். 			56 

		தேன்பழங் கிழங்கு தொப்பி செறியமை யரிசி யட்ட 
		வான்பதந் தினையின் மாவை வனத்தின்வா லரிய நன்மா 
		மான்பயம் பெய்த மைத்த வல்சிதேக் கிலையிற் பெய்து 
		கான்பயில் கடவுட் கேற்றிக் களித்தனன் றேவ ராளன். 				57 

		மறவமெல் லணங்க னாரும் வனதெய்வம் பராய்வ ணங்கி 
		முறையறி தேவ ராளன் முழுவிடைக் குருதி தோய்செந் 
		நிறமுறு சேடை சாத்து நெற்றியர் தெய்வ முண்ட 
		வுறுசுவை யுண்டி யெல்லா முண்டுளங் களித்தா ரன்றே. 			58 

		வெடிகுரற் சிலைக்கைச் செங்கண் வேடரும் பவளச் செவ்வாய்த் 
		தடமலர்க் கருங்க ணாருந் தசும்பினு ணிறைத்து வைத்த 
		வடிகொள்ட் டேற லங்கை மடக்குபு நிறைய வுண்டா 
		ருடைநடை சொற்கள் சோரா வொருவர்மே லொருவர் வீழ்ந்தார். 		59 

		சிற்றிடை யொருத்தி தைத்த தேக்கிலைத் தேற லேந்தி 
		மற்றத னகந்தோன் றுந்தன் மதிமுக நோக்கி யுண்டாள் 
		கற்றையங் கதிர்வெண் டிங்கள் கள்ளொடென் வயிறு புக்கின் 
		றிற்றது நிலவு நம்மூர்க் கினியிலை யுண்மை யென்றாள். 			60 

		களிதரு தேற லுண்டு களித்தியேற் பருதிச் செல்வ 
		விளிவினின் வெம்மை யாறி வெண்ணிலாத் திங்கள் போலக் 
		குளிர்கதிர் பெறுவை யீவல் கொள்கெனப் பிழிய லேந்தி 
		யிளிமொழி யொருத்தி வானத் தியல்சுட ரழைத்து நின்றாள். 			61 

		செறிதொடி யொருத்தி யுண்ட தேம்பிழி மயக்கந் தன்னாற் 
		பிறனொரு வனைத்தன் காதற் பிரிவருங் கொழுந னென்றே 
		யிறுகிள முலையழுந்த விறுகுறத் தழுவி னாளக் 
		கறைகெழு வேலி னானக் கள்ளினைப் பலவு கழ்ந்தான். 			62 

		கருங்கணா ளொருத்தி தன்வாய்க் கடைவழி நுரைவேட் டெய்துஞ் 
		சுரும்பினை வளைக ளார்ப்பத் தோன்றியங் கையா னோச்சி 
		விரும்புநின் பெண்டிர் பாற்போய் விம்மவாய் பருகென் றூடி 
		வருந்தலை மகனோ டூடி வைதல்போல் வைது நின்றாள். 			63 

		மணங்கமழ் மலர்து தைந்த வஞ்சியங் கொடியி னைத்தன் 
		வணங்கிடை யவளென் றுன்பூ வாயைத்தே னொழுக லஞ்சி 
		யணங்குநீ திறந்தி டாயே லளியனே னுய்வ னோவென் 
		றுணங்கிய மனத்தான் றாழ வுறுதவன் களிப்பு மிக்கான். 			64 

		உண்கடுங் கண்ம யக்க மொழிந்தபிற் கணவ ராட்டப் 
		பண்படு கிளவி நல்லார் படர்முலை வடம்பி ணங்கக் 
		கண்கொள லருநு சுப்புக் கவன்றழ நுதல்வி யர்ப்ப 
		விண்பொரு சினைய வாலின் வீழூச லாடி னாரால். 				65 

		பொரிமல ரனைய புன்கம் புதுநிறற் புளினற் தோறும் 
		விரிகதிர்ச் செஞ்ஞா யிற்றின் வெயில்புகாப் பொதும்பர் தோறுந் 
		தருமிடை யடுக்க றோறுந் தமாலநீ ளரங்கந் தோறும் 
		வரிசிலை மறவர் செவ்வாய் மறத்தியர் போக முண்டார். 			66 

		மீமிசை நின்ற சைற்து விழுமணி யருவி பார்த்துங் 
		காமரு மணிக்க  லாபக் களிமயி லாடல் கண்டுந் 
		தேமலர் வனத்து லாயுஞ் சிலம்பெதிர் கூய ழைத்து 
		மாமதி முகத்தி னார்தம் மகிழ்நரோ டாடி னாரே. 				67 

		இன்னண மெங்கு மாடி யெய்திய சிலைவல் லாரு 
		மின்னிடை யழுதி ரங்க வீங்கிய குவவுக் கொங்கைப் 
		பொன்னார் தாமுஞ் சூழ்ந்து போதர வனத்தி னீங்கித் 
		தன்னம ருடுப்பூர் புக்கான் றடக்கைமால் யானையன்னான். 			68 

		மற்றைஞான் றருக ழைத்து மைந்தனை யைய கேட்டி 
		யிற்றைநாண் முதலா நீயே யிறவுளர்க் கிறைவ னாகிப் 
		பற்றலர் முனைமு ருக்கிப் பகைப்புலங் கவர்ந்து கொற்றம் 
		பெற்றுமா வேட்டை யாடிப் பெரிதுவாழ்ந் திருத்தி யென்றே. 			69 

		வழிவழி வந்த வெற்றி வரிசிலை கைக்கொ டுத்துக் 
		கழிபெருங் காத றன்னாற் கன்னவி றோண்ஞெ முங்கத் 
		தழுவிநங் கடவுட் செவ்வே டன்னரு டுணையாச் சென்று 
		மழவிடை கன்னி வேட்டம் வாய்த்துடன் வருக வென்றான். 			70 

		என்றதன் றாதை பொற்றா ளிறைஞ்சுபு விடைகொண் டன்னை 
		தன்றிரு வடிப ணிற்தான் றாயெனைப் பெற்ற தாயே 
		மன்றலங் களிறே யிங்கு வருகென வெடுத்துப் புல்லிக் 
		குன்றுறழ் முலைப்பால் சோரக் குழைந்துநெஞ் சுச்சி மோந்தாள். 		71 

		போகுகா னெறிக ளெல்லாம் புதுமலர்த் தண்ணென் சோலை 
		யாகவே புகுந்து வேட்ட மாடிமுட் கிழியு மின்றிச் 
		சேகுநோன் சிலையா ரோடுந திரம்புக கண்ணே றின்றி 
		மேகமே யனையா யென்று வெண்பொடி சாத்தி னாளால். 			72 

		தாயடி மறித்துந் தாழ்ந்து தரும்விடை கொண்டு நீங்கி 
		மேயநீ னிறங்கொள் கச்சை விசித்துடை வாளும் யாத்திட் 
		டாயிளந் தளிர்தொ டுத்த வலங்கலங் கண்ணி வேய்ந்து 
		மாயவன் றொடுதோ றொட்டு வரிசிலை யெடுத்துக் கொண்டான். 		73 

		மலர்தலை யுலகில் யார்க்கும் வணங்கிலாக் கொடும ரத்தைக் 
		குலவரை யனைய தோளான் குணங்கொளீஇ வணங்கு வித்தான் 
		வலிகெழு சிலைகு ழைக்கும் வன்மைவான் குடிப்பி றந்தார் 
		சிலர்கொடு மரம்வ ணக்குஞ் செயலிறும் பூது கொல்லோ. 			74 

		இருமுது குரவர கேளா வீண்டிய மயிர்பொ டிப்பத் 
		தருமிசைப் பறவை யெல்லாந் தனித்தனி வெருவி யோட 
		வெருள்கொடு விலங்கி னீட்டம் வேறுவே றிரிதல் செய்ய 
		வரைபொரு தோளி னான்றை வந்துநா ணொலிசெய் தானால். 			75 

		வில்லின ரம்பி னார்வெவ் வெடிபடு குரலர காலிற் 
		செல்பவர் மின்னு வாளர் செறிமழை மேக மன்னார் 
		கொல்லெறி பிடிது ரத்து குத்துவெட் டரியெய் யென்னுஞ் 
		சொல்லினர் தணியாச் சீற்றத் துப்பினர் சூழச் சென்றான். 			76 

		கணைபிற கொழிய வோடுங் கடுப்பின கொடுங்கூர்ம் பல்ல 
		தணிவரு சினத்த வேட்டந் தனித்தனி யான வல்ல 
		வணியெயிற் றழல்வெஞ் சீற்றத் தரியின்மேல் விடினுஞ் செல்வ 
		பிணிதொடர் பாசத் தோடு பெருவலி நாய்கள் சென்ற. 			77 

		வலத்தினு மிடத்து முன்னும் பின்னரு மாறி மாறிக் 
		கொலைத்தொழற் சுருள்வர னீணாக் கொடுஞ் செவிஞமலி செல்ல 
		வுலப்பில்பே ராற்றல் வேட ரொடுவிரை துவலைக் கண்ணி 
		மிலைச்சிய வேடர் வேந்தன் வேட்டையங் காடு புக்கான். 			78 

		பலபல விலங்கி னீட்டம் பயிலிட மறிந்து சுற்றும் 
		வலிவலை சூழ்ந்து சேணில் வழியொதுக் கியபின் வேடர் 
		கலிகெழு துடிகள் பம்பை கடுங்குர லிரலை யாதி 
		யொலியெழு வித்து மாக்க ளுறுவலை புகத்து ரந்தார். 				79 

		புக்கபிற் றாமும் புக்குப் புகுவழி யொடியெ றிந்து 
		மிக்கவல் லுழுவை கேழல் மிடைமயிர்க் கரடி முன்னாத் 
		தொக்கபல் விலங்கின் பார்வை சூழ்வலைப் பரப்புள் விட்டார் 
		மைக்கருஞ் சிலைக்கை வேடர் வயின்வயின் மறைந்து நின்றார். 			80 


			கலிவிருத்தம்

		விட்ட பார்வையின் விளியி னாலவண் 
		கிட்டி வந்தமான் கிளையெ லாமுடன் 
		பட்டு வீழதரப் பகழி தூவினார் 
		மட்டி லாவலி வல்வில் வேடரே. 						81 

		காலிற் செல்லுநாய்க் கணந்த டுத்தலாற் 
		சாலச் சீறுபு தடையுட் பட்டமா 
		நீலக் குன்றொடு நிகர்க ளிற்றினம் 
		வேலிற் குத்தினார் சிலவர் வேடரே. 					82 


				மேற்படி வேறு

		மிடைசெடியிடை மறைமறவர்கள் விடுகணையுட லுருவப் 
		படுதலுமய லுறுகொடுவரி பாய்தந்ததென் றதனைச் 
		சுடுதழலடு வெகுளியினொடு தொடர்குடர்சரி தரவெண் 
		டடமுனை வளர் பிறையெயிறுறத் தாக்கியதொரு கருமா. 			83 

		பரியரைமர நிரைமறைவரி படுசிலைமுர ணுரவோர் 
		பொருவிரைசர முருவியவுடற் பொருவருமொரு கருமா 
		வெரிபுரைதரு பெருவெகுளியோ டெய்கணைவழி போயவ் 
		விருடருமர முரிதரவுரு மெனத்தராக்கிய தன்றே. 				84 

		எழுவுடனெழின் முழவிழிவுசெய் தழுபெருவலி கெழுதோண் 
		முழுமறவரி னொழுகியகணை முழுகியவுட லுழுவை 
		வழைகுழைகழை விழைநிழலிடு மழைதவழ்மலை யதிரத் 
		தழைசெவிமழ வழுவைகள்விழத் தாக்கியதுறு விசையால். 			85 

		வெய்யவர்குல முய்வகைவரு மெய்யருள்பெறு திண்ண 
		னையமிறுணை மொய்வலிகெழு மையலில்வல சில்லர் 
		மையொடுநிகர் மெய்யுருவிய வையுறுமுனை முள்ளை 
		யெய்யுதறின வொய்யெனவெதி ரெய்யடுகணை யென்ன. 			86 


				மேற்படி வேறு

		கனைமாமழை யிடிபோலதிர் கடுவாய்மரை யாமா 
		வினையாவலி யுடைமாகளி றெழுவாய்வனம் வாழ்மா 
		வனைவார்கழன் மதயானைகண் மலைவார்விடு வார்கோன் 
		முனைவாளிக ளுடன்மூழ்கலின் முளவாயின மாதோ. 				87 


			அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

		இவ்வகை பலவி லங்கி னீட்டமு நூழி லாட்டித் 
		தெவ்வடு வரிசி லைக்கைத் திண்ணன்மா வேட்ட முற்றிக் 
		கௌவைகொள் கான நீங்கிக் கடுந்திறன் மறவ ரோடு 
		மெவ்வமி றனதூர் புக்கா னீன்றவர்க் குவகை பொங்க. 				88 

		பின்னரும் பலகால் வேட்டம் பெருவலிக் காளை யாடி 
		யன்னையு மத்த னுங்கண் டகமகிழ் பூப்ப வைகிக் 
		கொன்னுனைப் பகழி வேடர் குலத்தொடும் வாழ்த்த வோர்நாட் 
		டன்னுளம் வேட்ட மூக்கச் சரம்புகா வனம்பு குற்தான். 			89 

		புகுந்தவன் கான மெங்கும் புக்குலாய் மிகவி ளைத்து 
		மிகுந்தழை மிடைம ரத்தின் மென்னிழ றனிது யின்றான் 
		முகுந்தனை வாளி யாக்கி முரணின ரரணம் வேவ 
		நகுந்தனி முதல்வ னன்னான் கனவிடை நண்ணி னானே. 			90 

		பூசிய திருவெண் ணீறும் புலியத ளுடையுஞ் செக்கர் 
		கூசுபொன் சடையுங் கொண்ட கோலத்தோ டெதிர்நின் றொன்று 
		மேசுத லிலாத மைந்த விவ்வரை வடமூ லத்திற் 
		காசில்பொன் முகலி யாற்றங் கரையிலோ ரிலிங்க முண்டால். 			91 

		அதுதுய ரனைத்தும் வீட்டி யரும்பெற லின்ப நல்கு 
		மதவலி யதைநீ சென்று வணங்குதி யென்று ரைத்துக் 
		கதுமென மறைந்தா னாங்கே கண்விழித் திறும்பூ தெய்தி 
		யெதிரில்போ ராற்ற லான்றிக் கெங்கணு நோக்கி நின்றான். 			92 

		ஆயகா லையில்வில் வேட ரார்ப்பினா லெழுந்து கான்சூழ் 
		போயவல் வலைப ரித்துப் பொருகடுங் காலிற் பொங்கி 
		மாயிருங் கேழ லொன்று மலைபுகப் போதல் கண்டான் 
		காயழல் வெகுளி யான்பின் கையில்வில் லொடு துரந்தான். 			93 

		துரந்துபின் செல்லச் செல்லத் துணைவிற்பொ யெறுழி யாற்கீ
		ழிருந்தரு ளிலிங்கத் தின்பா லெய்தலு மறைந்த தண்ணல் 
		வரம்பில்விம் மிதத்த னாகி மற்றிது மறைந்த தென்னோ 
		தெரிந்தில மென்று நின்றான் சிவலிங்க மிருத்தல் கண்டான்.			94 

		காண்டலுங் கடவு ளார்தங் கருணைநோக் கினிது பெற்ற 
		மாண்டகு மிரதந் தோய்ந்த வல்லிரும் புருவ மாறி 
		யீண்டொளி கெழுபொன் னாவ தென்னமுற் குணங் கண்மாறி 
		யாண்டகை யிறைவன் றன்பா லன்பொரு வடிவ மானான். 			95 

		நாள்பல பிரிந்தி ருந்து நண்ணிய சிறுச தங்கைத் 
		தாளிள மகனைக் கண்ட தாயெனத் தாழா தோடி 
		நீளெழு வனைய தோள்கள் ஞெமுங்குறத் தழுவி மோந்து 
		வாளழ லரக்கி னன்ன மனத்தினான் முத்தங்கொண்டான். 			96 

		செய்யகண் ணீரரும்பச் செறி மயிர் பொடிப்ப வாதன் 
		கையகப் பட்ட தெய்வக் கதிர்விடு மணியி னாயேற் 
		கையன்வந் தகப்பட் டானென் றணியெயி றிலங்க நக்கு 
		மெய்யெலா மெய்யன் பாய விடலைமற் றின்ன சொல்வான். 			97 

		ஆனையும் புலியு மெண்கும் யாளியு முளவுங் கூர்ங்கோட் 
		டேனமுந் திரியுங காட்டு ளெந்தைநீ துணையு மின்றிக் 
		கூனல்விற் றடக்கை வேடர் குலமென விருப்ப தென்னே 
		யூனுண வுனக்கி யாவ ருண்கெனத் தருவா ரந்தோ. 				98 

		தேனொடு தினையின் பிண்டி தீம்பழங் காய்கி ழங்கு 
		மானொடு முயலெய் கேழல் வல்லுடும் பழுங்கி வற்றி 
		னூனுண வென்றிவ் வெல்லா முதவுவல் யானே நல்ல 
		கானவர் துணையுண் டெம்மூர்க் காண்டிவா வென்று நின்றான். 			99 

		சாமிநீ தனியே யீண்டுத் தங்குத றரித்த லாற்றே 
		னேமநல் லுடுப்பூர்க் கின்னே யென்னொடு வருதல் வேண்டும் 
		நீமன மிரங்கா யெந்தா யெனப்பல நிகழ்த்தி னானக் 
		கார்மழை யனையா னற்புக் கடலினுக் கெல்லை யுண்டோ. 			100 

		மறுமொழி யிறைவ னொன்றும் வழங்கல னிருப்ப மீளி 
		யிறைதிரு வுளத்தி னெண்ண மிவ்வயி ணிருத்தல் போலுஞ் 
		சிறியனே னினியித் தெய்வ சிகாமணி தன்னி னீங்கி 
		லுறுவனோ வுயிரி னோடென் றுரைத்தன னின்றா னாங்கே. 			101 

		அண்ணறன் மூடியிற் றூய்நீ ராட்டுபு முருகு விம்மூ 
		தண்ணுறு மலர் மாலூரத் தளிர்சூட்டி யிருத்தல் காணூஉப் 
		பண்ணவன் றனக்கீ தேற்ற பணியெனத் தேறி யுள்ள 
		மண்ணெழு வனைய தோளான் மற்றது கடைப்பி டித்தான். 			102 

		பின்புவேட் டுவர்தங் கோமான் பெரும்பக லாயிற் றன்னோ 
		வென்பெருந் துணையாய் நின்ற விறைவனார் மிகப்ப சித்தா 
		ரின்சுவை யூன்கொ ணர்ந்திங் கிடல்வேண்டு மென்ன நீங்கிற் 
		கொன்சின விலங்கி னீட்டங் குறுகிலென் செயுமோ கெட்டேன். 			103 

		என்றுசா லவுமி ரங்கி யெரிபசி மிகாத முன்னஞ் 
		சென்றொரு கணத்தூன் கொண்டு திரும்புவ மெனத்து ணிந்து 
		குன்றிடை யெனக்கு வாய்த்த குலமணி விளக்கே யெந்தா 
		யுன்றழற் பசித ணிப்ப வுறுசுவை யிறைச்சி கொண்டே. 			104 

		உழுந்துருள் பொழுதின் மீள்வே னொருகண மேனுந் தாழேன் 
		வழங்குறு கொடுவி லங்கு வருமென வஞ்சே லைய
		வெழுந்துமேல் வந்த தாயி லென்னையொய் யெனக்கூ வென்று 
		குழைந்தவிற் றடக்கை கூப்பிக் குறவர்கோ னரிதி னீங்கி. 			105 

		கடிக்கடி மனையு ணின்ற கன்றகல் புனிற்றாப் போல 
		வடிக்கடி திரும்பி நின்றே யையர்தந் தனிமைக் கேங்கி 
		வடிக்கடி யம்பு பட்டு மழைமுகி லெனக்கி டக்குங் 
		கிடிக்கிடி வேட்டைக் கானங் கிளர்கடுங் காலிற் சென்றான். 			106 

		கொழுந்தளை மோழ லொன்று குரவர்கோன் றானே யேந்தி 
		முழங்கலை யெறியு நன்னீர் முகலியின் றீரஞ் சார்ந்தோர் 
		செழுந்தரு நிழலின் வைத்துத் தீயர ணியினா லாக்கி 
		யெழுந்துறு மயிர்க் டிந்தவ் வெறுழியை வாளி னீர்ந்தான். 			107 

		ஈர்ந்துசெந் தசையுட் சால வின்சுவை யுடைய வெல்லாந் 
		தேர்ந்துவே றெடுத் தெடுத்துத் தேக்கிலை யதனுட் பெய்து 
		கூர்ந்தவா யம்பிற் கோத்துக் கொந்தழற் பதத்திற் காய்ச்சி 
		யார்ந்தபே ரன்பன் வாய்ப்பெய் தருஞ்சுவை பார்க்க லுற்றான். 			108 

		பல்லினான் மெல்ல மெல்லப் பன்முறை யதுக்கிப் பார்த்து 
		நல்லன விறைச்சி யெல்லா நவையிறேக் கிலையிற் றைத்த 
		கல்லையுள் வாங்கி வைத்துக் கழிசுவை யிலாத வெல்லாம் 
		வல்லைவெள் ளிடையு மிழ்ந்தான் வருபவக் கடலமிழ்ந்தான். 			109 

		பூந்தளி ரோடு கொய்த புதுமலர் தலையிற் பெய்து 
		தாந்திர விதியின் றாட்டுந் தண்புனல் வாய்மு கந்து 
		தீந்தசை யமுது பெய்த தேக்கிலைத் தளிகை யோர்கை 
		யேந்தியம் பொடுவில் லோர்கை யெடுத்துவல் விரைவிற் போந்தான். 		110 


				மேற்படி வேறு

		என்னா ருயிர்க்குத் துணையாவா ரெரிவெம் பசியா லிளைத்தாரோ 
		வன்னோ கொடிய விலங்கினத்தா லச்சுற் றாரோ வெனப்பதைத்துத் 
		தன்னா தரவிற் பார்ப்ப ருந்தத் தாழா தோடும்பறவையென 
		முன்னா மனமும் பின்னாக முதல்வன் றன்பா லோடினான். 			111 

		சென்று குறுகி யெம்பெருமான் றீயேன் வரவு தாழ்த்தலினாற் 
		கன்று பசியால் வருந்தினையே யென்று கரைந்து திருமுடிமேல் 
		றுன்று தளிருஞ் செழும்போதுந் தொடுதோ லடியான் மாற்றிவா 
		யொன்று நீராற் பிரானுடலோ டுள்ளங்குளிர வாட்டடினான். 			112 

		ஆட்டித் தலையி லிருந்தகம ழருந் தளிருமெடுத் திறைஞ்சிச் 
		சூட்டித் திருமுன் னிலைக்கலத்திற் றூய விறைச்சிப் போனகம்வைத் 
		தீட்டற் கரிய பெரும்பொருளே யெந்தா யுண்கென் றினியசொலி 
		யூட்டிப் பிரியா தருகுநின்றா னுவகைக் கடற்குக் கரைகாணான். 			113 


				கலித்துறை

		காட மங்கதில் வேடர்தந் தலைவனைக் காணார் 
		சால வச்சுறீஇக் காடெலாந் தேடியத் தடங்கோட் 
		டால மூலத்தி னிருந்தரு ளண்ணறன் னருகு 
		நீட மால்வரை நின்றென நிற்பவற் கண்டான். 				114 

		அருகு சென்றடைந் தையநீ யெங்களை யகன்றிப் 
		பெரிய மால்வரை யடைந்ததென் பிழைத்தனங் கொல்லோ 
		பருதி வானவ னண்பகல் கடந்தனன் பசித்தாய் 
		முருக விவ்வுழி நிற்பதென் வருகென மொழிந்தார். 				115 

		கரைந்த சொற்கெலா மெதிர்மொழி கொடாமையிற் கவன்று 
		பெருந்த காயுனக் கெங்கண்மேன் முனிவென்கொல் பேசாய் 
		வருந்தி நீயிவண் வந்தமை யறிந்திலம் வள்ளா 
		லிரங்கு வார்கழ னின்னடி யறியவென் றிசைத்தார். 				116 

		மற்ற தற்குமொன் றுரைத்தில னிற்பவம் மறவர் 
		கொற்ற வில்லுடைக் குரிசினீ யுளத்திலென் கொண்டாய் 
		சற்று மெம்மிடத் தன்பிலை யாயினை தலைவ 
		குற்ற மெம்வயிற் கண்டதுண் டேற்பிற கூறாய். 				117 

		என்று பற்பல திறத்தினா லுரைக்கவு மினையோ 
		னொன்றும் வாய்ந்திறந் தானல னோவியம் போலக் 
		குன்ற வில்லியை நோக்கிநின் றானவர் குறித்து 
		மன்ற வெஞ்சின மன்றிது வென்னென மருண்டார். 				118 

		இங்கு நின்றவித் தெய்வத மிவனிடத் தேறித் 
		தங்கி நின்தோ வென்கொலோ வறிகிலந் தமியே 
		மங்கு நம்மொடு வருகுவ னலனிவ னந்தோ 
		நங்க டொல்குலத் தலைவனா நாகற்கென் னுரைப்போம். 			119 

		தத்தை யாகிய தத்தையந் தேமொழித் தையன் 
		மத்த யானைபோ லென்மக னெங்கெனின் மறுசொ 
		லெத்தி றத்தினாற் சொல்லுது மெனப்பல விரங்கி 
		யெய்த்து நின்றனர் வசிக்கவோ ருபாயமு மில்லார். 				120 

		குழைக்கு நோன்சிலை நாகனோ டிச்செயல் கூறி 
		யழைத்து வந்தன மெனிலவ னெத்திறத் தானும் 
		பிழைக்கு மாறியற் றுவனெனத் துணிந்தனர் பெயர்ந்தார் 
		தழைத்த லைப்புலா னாறும்வாய்ச் செய்யகட் சவரர். 				121 

		அன்ன காலையி லாயிரங் கதிர்ச்சுட ரரசன் 
		மன்னு திண்ணனன் பப்புறத் துலகெலாம் வழங்கப் 
		பன்னு வேமெனப் போதல்போற் குடதிசைப் பராரைச் 
		சென்னி வான்றொடு மலைமறைந் தானிருள் செறிய. 				122 

		அரவு மிழ்ந்தசெம் மணிக்கண மிமைத்தலி னலரி 
		யிரைதி ரைக்கடன் மூழ்கியுங் கங்குலங் கில்லை 
		யிருள்கெ டச்சுடர் விரிதரு விலைவரம் பில்லா 
		வுருவ மாமணி பலவுள விடத்திர வுண்டோ. 					123 

		அண்ண லைக்கொடு விலங்கினங் குறுகுத லஞ்சி 
		வண்ணு திக்கணை தொடுத்தகூன் வில்லொடு மறந்துங் 
		கண்ணி மைத்தில னாகியே வைகறை காறு 
		மண்ணெ ழுப்புரை தோளனின் றானிறை மருங்கு. 				124 

		அன்ப ரன்பினுக் ககப்படு பேரரு ளாழிக் 
		கின்ப வூன்றிரு வமுதமாக் கியவுளத் தெண்ணி 
		வன்பெ ருஞ்சிலைத் தடக்கையான் வைகறைப் போது 
		பொன்ப ரந்தொளிர் மால்வரைச் சாரலிற் போந்தான். 				125 

		வீட்ட வாவுடை யார்க்கரு டருமொரு விமல 
		னாட்ட மாகிய தான்கொள்புண் ணாற்றிடு நம்பி 
		வேட்ட மாடுதல் காணிய விரும்பிவந் தென்னக் 
		கோட்ட வார்திரைக் கடலெழுந் தான்சுடர்க் கோமான். 				126 


				கலிவிருத்தம்

		பொங்கு வெஞ்சினப் புண்கமழ் வாளுகிர்ச் 
		சிங்க மன்னான் செயனிற்க மற்றினிக் 
		கங்கை வார்சடைக் கண்ணுத றாண்முத 
		றங்கு நெஞ்சத் தவன்செயல் சாற்றுவாம். 					127 

		அருளு மானாப் பொறையு மறிவொடு 
		தெருளு நோன்புஞ் சிவனிடத் தன்பினோ 
		டிருளிற் றீரவா வின்மையுங் கல்வியு 
		மருளின் மெய்ம்மையு மாணுரு வாயினான். 					128 

		வெறுப்பில் சந்தன மெய்யெலாம் பூசிநின் 
		றிறப்ப வின்ப மியற்றுநர் தங்கணும் 
		கறுத்தெ ழுந்தெதிர் காயழற் பெய்துதுன் 
		புறுத்து வார்கணு மொத்த வுளத்தினான். 					129 

		நீடுங் கார்க்குழ னீளரி வாள்விணி 
		வாடுஞ் சிற்றிடை மாதர்கள் புல்லினு 
		நாடுந் த

Related Content

Thayumanavar Padalkal - part-3

Tiruvarutpa of ramalingka atikal palvakaiya tanippatalkal

இட்டலிங்க அபிடேக மாலை - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

இட்டலிங்க அகவல் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்

குறுங்கழிநெடில் - துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்